இளங்கோ
ஈழம் சார்ந்த விவாதங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட அனுபவங்களால் கட்டியமைக்கப்பட்டிருப்பவை. தனிப்பட்ட அனுபவங்கள் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு அதைத்தாண்டி பொதுவான வெளிக்குள் ஈழம் சார்ந்த உரையாடல்களை நகர்த்தவும் வேண்டியிருக்கின்றது. தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்த விவாதங்கள் இரண்டு தரப்பினரை முதன்மையான எதிரிகளாகக் கட்டமைக்கின்றன. அவரவர்களின் தனிப்பட்ட அனுபவங்களின் நிமித்தம் அவர்கள் இலங்கையரசையோ அல்லது நீண்டகாலமாக போராட்ட களத்தில் இயங்கிய விடுதலைப்புலிகளையோ ஆதரிக்கவோ/எதிர்க்கவோ செய்வதாக விவாதங்கள் முடிந்து போகின்றன. ஆனால் அவ்வாறான ஒரு கறுப்பு வெள்ளைக்குள் ஈழம் சார்ந்த உரையாடல்கள் அமையமுடியாது என்பதுதான் யதார்த்தமாகும்.
ஆகவே ஈழம் சார்ந்த உரையாடல்களை எல்லாத் தரப்பினரும் பங்குபெறும் பொதுவான தளத்துக்குள் நகர்த்த வேண்டியிருக்கின்றது. அவ்வாறு நகர்த்தினால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கான சிந்தனைகளை முன்வைக்க முடியும். அதேவேளை தனிப்பட்ட அனுபவங்களினோடு கிடைக்கும் கசப்பான உண்மைகளையும் ஏற்றுக்கொள்ளுபவர்களாக அனைத்துத் தரப்பினரும் இருந்தாக வேண்டும்.
அதற்கு ஓர் உதாரணமாக ‘மாறிய நாட்களும் மாறாத சூரியனும்’ என்ற வயிரமுத்து திவ்வியராஜன் எழுதிய நூலைச் சொல்லலாம்.
இந்த நூலில் கடந்தகால கசப்பான உண்மைகளை, தனிப்பட்ட ஒருவரின் அனுபவங்களினூடாகப் பார்க்கின்றோம். அதேவேளை அந்தத் தனிப்பட்ட அனுபவங்களின் நீட்சியில் அதைப் பொதுத்துயரமாக ஆக்கி ஈழம் சார்ந்த உரையாடல்களை உருவாக்க முயல்கின்றதையும் இந்த நூலில் அவதானிக்க முடியும்.
*
திவ்வியராஜன் தனது சிறுவயது அனுபவத்தைச் சொல்லும்போது 1950களிலே இலங்கை இராணுவத்தால் ‘ஊரடங்குச் சட்டம்’ அமுல்படுத்தப்பட்டு மாலை ஆறுமணிக்குப் பிறகு வீட்டுக்குள் அடங்கிய தமிழ்ச் சமூகத்தின் சுவடுகளைப் பார்க்கின்றோம். அதன் பின்னர் தனிச்சிங்களச் சட்டத்தின் நிமித்தம் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குதல் நிகழ்ந்து, 1977 இல் ‘இனக்கலவரம்’ நிகழ்ந்தபோது ஒரு தமிழனாக கொழும்பில் அவர்பட்ட கஷ்டத்தின் அனுபவத்தை நாம் வாசிக்கின்றோம்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்து ஓர் அரசாங்க உத்தியோகத்தராக கொழும்பில் வேலை செய்யும்போது 1977 இல் இனக்கலவரம் நிகழ்கின்றது. தமிழராக இருந்து வேலைக்குப் போவது ஆபத்து என்று வீட்டுக்குள் அடங்கி இருக்கும்போது, இவரைத் தேடி அலுவலகம் வந்து நண்பரொருவரை அங்கே வேலை செய்தவர்களின் ஒருபகுதியினர் அறைக்குள் புகுத்தி அடித்துத் துவைக்கின்றது. இந்நிகழ்வை அறிந்த திவ்வியராஜன் அடுத்தநாள் அங்கே போய் இப்படிச் செய்வது நியாயமானதா என்று கேட்கும்போது, அந்த ‘காடையர்’ கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதைக் கண்டு அதிர்கின்றார்.
இப்படி ஒரு சிங்கள கம்யூனிஸ்ட் இனவாதியாக மாறினாலும், திவ்யராஜனையும் அவரது சகோதரரையும் கவனமாக பம்பலப்பிட்டி பிள்ளையார்கோயில் அகதிமுகாமிற்கு அனுப்பி யாழ்ப்பாணம் போகும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்பவர்களாக சிங்களவர்களே இருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணம் வந்து வடமராட்சியில் வாழும் திவ்வியராஜனை, 1984இல் இலங்கை இராணுவம் பல இளைஞர்களோடு சேர்த்து கைதுசெய்து பலாலி இராணுவமுகாமிற்கு அனுப்பி வைக்கின்றது. அப்போதே திவ்யராஜனுக்கு திருமணமாகி மகளும் பிறந்துவிட்டார். அப்படியான ஒரு குடும்பஸ்தவன் எப்படி இயக்கக்காரனாக இருப்பான், மேலும் தானொரு அரச உத்தியோகத்தன் என்று அனைத்து வகைகளிலும் ஆதாரம் காட்டியபோதும், திவ்வியராஜன் கைதுசெய்யப்படுகின்றார்.
அங்கே கைதியாக இருக்கும் காலத்தில் தப்பியோடும் முயற்சியைச் செய்ய விரும்பும்போதும், தப்பும்போது இறந்துவிட்டால் தன் மனைவி/பிள்ளைகள் நிலை என்னவாகும் என்கின்ற யோசனை அதைத் தடுக்கின்றது. அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்களை விசாரணையின்றி பூஸா முகாமிற்கு அனுப்பி வைக்கும்போது, ஓர் இராணுவ அதிகாரியின் கருணையில் இவர் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்புகின்றார்.
ஆனால் அந்த வீடு திரும்புதலும் நிம்மதியாக திவ்வியராஜனுக்கு இருப்பதில்லை. அவரது சகோதரர் அப்போது கிழக்கு மாகாணத்தில் நிலஅளவையாளராக வேலை செய்துகொண்டிருக்கின்றார். அவர் அங்கே ‘இனந்தெரியாத நபர்களால்’ கைதுசெய்யப்பட்டிருக்கின்றார் என்ற தகவல் இரண்டு வாரங்களுக்கு பின் திவ்வியராஜன் குடும்பத்தினருக்குக் கிடைக்கின்றது. தனது தம்பியைத் தேடி கிழக்கு மாகாணத்துக்குப் போகும் திவ்வியராஜன், அவரது தம்பியோடு பத்துப்பேர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிகின்றார். அப்படி ‘காணாமல் போன’ அந்தத் தம்பி பிறகு என்றென்றைக்குமாக திரும்பி வருவதில்லை என்பது அவ்வளவு துயரமானது.
*
இப்படியான துயரங்களோடு வாழும் திவ்வியராஜன் பிறகு 1987 ‘ஒபரேஷன் லிபரேஷன்’ என்ற இலங்கை இராணுவத்தின் யாழ் தீபகற்பகத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையால் மீண்டும் கைதுசெய்யப்படுகின்றார். வடமராட்சியில் பெருமளவு ஆளணியுடன் முன்னேறி வந்த இராணுவத்தைக் கண்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கி ஓடிவிட, இவரைப் போன்ற பல இளைஞர்கள் இராணுவத்தால் பிடிபடுகின்றார்கள். அங்கிருந்து இளைஞர்கள் பலரை சிங்களப் பகுதியில் இருந்த சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க, திவ்வியராஜனைக் கைதுசெய்து வைத்த இரண்டு இராணுவத்தின் கருணையாலும், திவ்வியராஜனுக்குத் தெரிந்திருந்த சிங்களத்தாலும் தப்பிச்செல்ல விடப்படுகின்றார் திவ்வியராஜன்.
பின்னர் இந்திய இராணுவத்தால் திவ்வியராஜனுக்கு ஏற்படும் துயரம் இன்னொருவகையானது. இந்திய இராணுவத்தினர் தமக்கு மரியாதையைக் காவலரணில் தரவில்லை என்பதற்காக இவரது சைக்கிளைத் தோளின் மீது சுமந்துகொண்டு ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாம்வரை போகச் சொன்ன சென்ற தண்டனைகள் எல்லாம் நடந்திருக்கின்றன.
இவ்வாறு ஒருபக்கம் இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் போன்றவற்றால் ஏற்பட்ட துயரத்தைச் சொல்கின்ற திவ்வியராஜன், இன்னொருபுறத்தில் நமது தமிழ் இயக்கங்கள் செய்த அட்டூழியங்களையும் அதே கசப்புடன் பதிவு செய்கின்றார். மாறி மாறி சகோதர இளைஞர்களைச் சுட்டுக் கொல்கின்றவை, போஸ்ட்கம்பங்களில் குற்றவாளிகள் என்று அறிவித்து மரண தண்டனை கொடுப்பது…அதுவும் ஒரு இயக்க இளைஞன் தப்பியோடும்போது அவனின் தாயின் முன்னாலே இன்னொரு இயக்கம் சுட்டுக் கொல்கின்றமை எல்லாம் இந்நூலில் குறிப்பிடப்படுகின்றது.
அதுபோல அவ்வளவு சித்திரவதைகொடுத்து ‘துரோகி’ என்று நாற்சந்தியில் எழுதி வைத்துவிட்டு, சரி இத்தோடு அந்த இளைஞனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்து முகம் திரும்பும்பொழுதில் நெற்றிப்பொட்டில் அந்த இளைஞனைச் சுட்டுக்கொல்ல, ‘அய்யோ’ என்று அருகிலிருந்த ஒரு பெண் தரையில் விழுவதும், இந்தக் கொலையை ஒரு பத்துவயதுச் சிறுவன் பார்த்துக்கொண்டிருப்பதுமென எமது இயக்கங்களின் இரத்தம் தோய்ந்த கரங்களின் வரலாற்றையும் இதில் திவ்வியராஜன் சொல்கின்றார்.
இந்திய இராணுவ காலங்களில் தெற்கில் எப்படி ஜேவிபியினர் ஒடுக்கப்பட்டனர் என்றும், சிங்களப் பேரினவாதம் தனது சொந்தமொழி பேசும் சிங்கள இளைஞர்களைக் கூட சும்மா விடாது என்பதற்கான சாட்சியங்கள் இவை என்று சொல்லும் திவ்வியராஜன், எப்படி அதற்கு முன்னர் 1970களில் இதே ஜேவிபியினரை ஒடுக்க சிறிமா அரசுக்கும் இந்திய இந்திராகாந்தி அரசு உதவியது என்பதையும் நினைவூட்டுகின்றார்.
இப்படி தனது சொந்த நலன்கள் என்று வரும்போது தமது உரிமைகளுக்காகப் போராடுபவர்களை துச்சம் என நினைக்கின்ற வல்லரசான இந்தியாவிடந்தான் நமது இயக்கங்கள் ஆயுதப்பயிற்சியை எடுக்கப் போயிருந்தார்கள், அதே இந்திய அரசு தீர்வைத் தருவார்கள் என்று எப்படி நம்பினார்கள் என்றும் திவ்வியராஜன் இடைநடுவில் கேள்விகளை எழுப்புகிறார்.
*
இலங்கையில் இந்திய இராணுவ வெளியேற்றத்தின்பின், பிரேமதாசா அரசுடன் மீண்டும் போர் தொடங்கியபின், திவ்வியராஜன் இனி இலங்கையில் இருப்பது சாத்தியமில்லை என்று தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்குப் படகில் இரகசியமாக ஏறுகின்றார். சாதாரணமாக இரண்டு/மூன்று மணித்தியாலங்களில் முடிந்துவிடும் படகுப் பயணம், கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் கடலுக்குள் நீடித்து திவ்வியராஜனும் அவரது குடும்பத்தினரும் எப்படியோ தப்பிப் பிழைத்து இந்தியாவின் கரைகளை அடைகின்றனர்.
அங்கிருந்து தமிழ்நாடு-கேரளா எல்லையில் அமைந்த தக்கலை அகதிமுகாமில் இவர்கள் (1990களில்) தங்க வைக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அந்த அகதிமுகாமில் இருந்த அனுபவங்களை திவ்வியராஜன் விபரிக்கும்போது, இதற்காகவா இந்தியாவுக்கு இவர்கள் தப்பிவந்தார்கள் என்கின்ற மனோநிலையே வாசிப்பவர்க்கு வரும். பிறகு ஒருமாதிரியாக அகதிமுகாமில் இருந்து வெளியேறி, 1994இல் திவ்வியராஜனும் அவரது குடும்பத்தினரும் கனடாவுக்கு வந்து சேர்கின்றனர்.
அப்போதும் இந்திய இமிக்கிரேஷன் அலுவலகர்கள் திமிர்த்தனமாகவே நடந்துகொள்கின்றார்கள். கனடாவுக்கு உரிய விஸாவுடன் (ஏற்கனவே அவரது தமக்கை முறையானர் கனடாவிலிருந்து ஸ்பான்ஸர் செய்கின்றார்) விமானநிலையம் போனபோதும், இது உரிய விஸாவல்ல என்று அந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். கிட்டத்தட சில வாரங்களுக்குப் பிறகே அது அசலான விஸா ஆவணம் என்று ஏற்றுக்கொண்டு இவர்களைக் கனடாவுக்கு அனுப்பிவைக்கின்றனர். அந்தளவுக்கு அந்த அதிகாரிகள் ஈழத்தமிழர் மீது வெறுப்புற்றிருந்தாலும், தனது தாய்/தந்தையரைப் போல தமிழகத்தில் பேணிக்காத்த சில குடும்பத்தவர்களையும், திவ்வியராஜன் பங்குபெற்ற தமிழ்நாடு முற்போக்கு சங்க கலையிரவுகள் பற்றியும், பல தமிழ்நாட்டு இனிய மனிதர்கள் பற்றியும் இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார்.
இறுதியில் கனடா ‘வேற்றுமையில் ஒற்றுமை காணும்’ தன்மை இருப்பது போலவோ, அல்லது யார் முதலில் வந்தோம் என்ற தூய இனக்கூச்சல் இல்லாது எல்லோரும் அமைதியாக வாழ முடிவதைப் போல, ஏன் மூன்று/நான்கு இனங்கள் மட்டும் வாழும் இலங்கையில் அது சாத்தியமில்லாது போய்க்கொண்டிருக்கின்றது என்றும் யோசிக்கின்றார்.
அதேவேளை நாம் எமது உரிமைகளைக் கேட்கின்றபோது, நம்மளவில் சரியானவர்களாக இருக்கின்றோமா என்ற கேள்விகளையும் இந்த நூலில் திவ்வியராஜன் சுட்டிக்காட்டுகின்றார். முக்கியமாக வடமாகாணத்தில் இருந்து 70,000 இற்கு மேற்பட்ட முஸ்லிம்களை ஒரே நாளில் நாம் அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியதையும், கோயில்களில் அகதிகளாக மக்கள் தங்கியபோது நுழைவாயில் கதவுகளைத் திறந்துவிட மறுத்ததையும், அகதிகளாக தங்கிய தங்கள் கிணறுகளில் வந்து தண்ணீர் குடித்துவிடக்கூடாது என்று சாதிவெறியுடன் குப்பைகளை அந்தக் கிணற்றுக்குள் நிரப்பிய நிகழ்வுகளையும் கவனப்படுத்துகின்றார். நாம் தமிழர்களாக சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதேவேளை இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களைத் துரத்துவதும், நமக்குள்ளே சாதிய அடிப்படையில் மற்றவர்களையும் ஒடுக்கிக்கொண்டும் இருக்கின்றோம் என்றால், நாம் நம்மை நோக்கியும் பெருமளவான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கின்றது என்பதையும் இந்த நூல் கவனமாக பரிசீலனை செய்யச் சொல்கின்றது.
இந்த நூல் 2014இல் வெளிவந்திருக்கின்றது. இப்போது ஆயுதப்போராட்டம் முடிந்தே கிட்டத்தட்ட 17 வருடங்கள் கடந்துவிட்டன. நாம் இத்தனை ஆண்டுகளுக்குள் புதிய உரையாடல்களை நிகழ்த்தி அரசியல்/சமூகம் சார்ந்து எங்கேயோ நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் பழைய கதைபேசி புகழ்ந்து அல்லது திட்டி கடந்தகாலத்தில் மட்டுமாக உறைந்துவிட்டிருக்கின்றோம். அப்படி ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்தால், நாம் இப்போதும் அதே பழையபாணி அரசியல் சிந்தனைகளுக்குள்ளோ/ அரசியல் கட்சிகளுக்குள்ளோ அடைக்கலம் ஆகியிருக்கமாட்டோம்.
அதே பழைய கோஷம்! அதே பழைய பெருமிதம்! அதே பழைய இயக்கங்களின் ‘ஒற்றை’ அரசியல் பாதைகள்! ஆக நாம் அப்போதும் இப்போதும் ஏதோ ஓன்றுக்கான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோமே தவிர, ஒருபோதும் புதிய அரசியல் செல்நெறிகளை தொடங்கவோ, புதிய grass roots movements பற்றிச் சிந்திக்கவோ இல்லை என்பதே கசப்பான யதார்த்தம்.
ஆகக்குறைந்தது ஒற்றைக்கதையாடல்களினால் ஈழப்போராட்ட வரலாற்றைக் கட்டமைக்கும் ஆபத்தை, ஒருபக்க அரசியல் சார்பாக மட்டும் நின்று பேசுவதன் அபத்தத்தை, நமக்கு மென்குரலில் மறுத்து சொல்வதற்காகவேனும் இப்படி திவ்வியராஜன் போன்றோர் கடந்துவந்த அனுபவங்களினூடாக எழுதிய சில பனுவல்களாவது நம் கைகளில் இருக்கின்றன என்று இப்போதைக்கு நாம் கொஞ்சம் நிம்மதியடைய வேண்டியதுதான்.
***
இளங்கோ – யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் தவிர, ‘டிசே தமிழன்’ என்னும் பெயரில் கட்டுரைகளும், விமர்சனங்களும், பத்திகளும் பல்வேறு இதழ்களிலும், இணையத்தளங்களிலும் எழுதி வருகின்றார். இதுவரை ஒன்பது நூல்கள் வெளியாகியுள்ளன. ‘மெக்ஸிக்கோ’ நாவல் பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டியில் 2019 -இல் பரிசையும், ‘நாடற்றவனின் குறிப்புகள்’ தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘ஏலாதி’ இலக்கிய விருதை 2008 -இலும் பெற்றிருக்கிறது. மின்னஞ்சல்: elanko@rogers.com

