கிருஷ்ணமூர்த்தி
இயல்பிலிருந்து மாற்றம் கொள்ளும் நிகழ்வை, நடத்தையை பிறழ்வு என்று அர்த்தப்படுத்துகின்றனர். படைப்பாளர்கள் தங்களது படைப்புச் செயல்பாட்டை பல நேரங்களில் பிறழ்வின் விளைவாக குறிப்பிடுகின்றனர். மரியா வர்கஸ் யோசா எழுதும் செயல்பாட்டையே Rebel என்று குறிப்பிடுகிறார். அதாவது வாழும் அல்லது வசிக்கும் அமைப்பின் கட்டுக்கோப்பான சட்டகத்தை சகிக்க இயலாமல், அங்கு உரையாடுவதற்கு வாய்ப்பு அமையாமல் செல்லும்போது அந்த சட்டகத்தை எதிர்த்து பொதுவில் பேசத் தொடங்கும் செயலாக வர்ணிக்கிறார். இங்கு படைப்பு செயல்பாடு புரட்சி (Rebel) அல்லது பிறழ்வு என்று இருவேறு விதமாக அர்த்தப்படுத்தப்படுகிறது.
சமூகத்தின், அமைப்பின் இயல்பு அதிகாரத்தால் தீர்மானிக்கப்படுகிறது. பல்வேறு கருத்தியல்களால் நிர்மாணிக்கப்படும் இயல்பு எல்லோருக்குமானதாக அமைவதில்லை. பலருடைய தனித்த இயல்பிற்கு முற்றிலும் முரணாக அமைப்பின் இயல்பு உருக்கொள்கிறது. அந்த நிலையில் தன்னுடைய அடையாளத்தை, இயல்பை, வாழ்வை தற்காத்துக்கொள்ள பொது நடத்தையிலிருந்து மாறுபட்டு நடந்துகொள்கின்றனர். சமூகம் அவர்களை அதிநாயகனாக கொண்டாடவோ அல்லது சமூக விதிகளுக்கு முரணாக இருப்பின் விலக்கி வைக்கவோ தயங்குவதில்லை. விலக்கி வைக்கப்படுபவர்களின் குரல்கள் காலத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் காணாமலாக்கப்படுகிறது. அவர்களுக்குள்ளாக இருக்கும் இயற்கையான சுயம் பேசப்படாமல் போகிறது. அவற்றைப் படைப்பு செயல்பாடு மட்டுமே வெளிக்கொணர்கிறது. சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களில் இருக்கும் பிறழ்வுகள் கருத்தியல்களால் அளக்க வேண்டியவையாகின்றன. படைப்பின் உட்கிடை இயல்பைப் பேசுவதன்று, இயல்பிற்கு முரணான அல்லது முரணாக சித்தரிக்கப்படும் சிக்கல்களை ஆராய்வது. உலகின் பல்வேறு முதன்மைப் படைப்பாளிகள் இதை சிரமேற்கொண்டு செய்திருக்கின்றனர். தமிழில் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் நிஜந்தன் ஒரே ஒரு நாவலை படைத்திருக்கிறார். சுய அனுபவங்களின் புனைவு வடிவமாக சித்தரித்திருப்பினும் இலக்கிய மதிப்பீடுகளில் குறைவின்றி சிறப்பான படைப்பாக “பிறழ்” அமைந்திருக்கிறது. அவருடைய இலக்கிய அலகை சிறப்பிக்கும் வகையில் சிறப்பிதழ் திட்டமிட்டோம். ஒரே படைப்பு வெளியிட்டிருக்கிறார் என்பதால் அவருடைய புனைவின் மையத்தை சிறப்பிதழின் நோக்கமாக தேர்ந்தெடுத்தோம். வேறு வேறு தளங்களில் பங்காற்றும் பிறழ்வை கொண்டுவருவதே திட்டம். பெருங்கனவுகள் உடைவதும் சிதிலங்கள் சிறப்புற வரலாற்றில் இடம்பெறுவதும் இவ்விதழுக்கும் நிகழ்ந்தது. மா.க. பாரதியின் கட்டுரை சமூக-பண்பாட்டு தளத்தில் பிறழ்வின் தடத்தை சிறப்பாக எடுத்துரைக்கிறது. அனுராதா ஆனந்தின் சில்வியா ப்ளாத் பற்றிய கட்டுரை இலக்கியத்தில் பிறழ்வின் இடத்தை அழகுற பேசுகிறது. இந்தத் திட்டம் நிறைவுறாத சிறப்புப் பகுதியாகவே எஞ்சுகிறது. எனினும் வெளியாகும் படைப்புகள் வாசகரின் மனதில் தீராத உரையாடலாக மாறும் என்று நம்புகிறோம். மறைந்த எழுத்தாளர் நிஜந்தனின் சகோதரர் எழுதியிருக்கும் அஞ்சலிக் குறிப்பு சிறப்புப் பகுதிக்கு அர்த்தம் கூட்டுகிறது.
***
கவிஞர் கார்த்திகா முகுந்த்தின் விரிவான நேர்காணல் கவிதை குறித்த பன்முகப் பார்வையை வழங்குகிறது. கவிதையாக்கம், கவிதையின் உட்கிடை ஆகிய விஷயங்கள் சார்ந்த உரையாடலை எழுப்பவல்லதாய் அமைந்திருப்பது வாசகர்களின் நல்லூழ். லாவண்யா சுந்தரராஜனின் செயலூக்கத்திற்கு அன்பும் நன்றியும்.
***
கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்புகள், மதிப்புரைகள் ஆகிய வகைமைகளில் சிறப்பாக பங்களித்திருக்கும் அனைத்து படைப்பாளிகளுக்கும் அன்பும் நன்றியும். சமகால இலக்கியப் போக்கின் தடத்தை இன்னமும் சற்று விரிவடையச் செய்திருக்கிறது இவ்விதழின் படைப்புகள்.
