இப்ராஹிம்
தமிழ் இலக்கியத்தில் கிராமிய வாழ்வையும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு பல நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஒரு சமூகத்தின் வெளிப்புற வாழ்க்கையை மட்டுமே பதிவு செய்கின்றன. மனிதர்களின் உடல் உழைப்புக்குள் புதைந்து கிடக்கும் வரலாறு, அவர்கள் சுமந்து வாழும் மனவலி, சாதியின் மறைமுக ஆதிக்கம், இயற்கையோடு கலந்த வாழ்வு, மறுக்கப்பட்ட காதல்கள், சாபங்களாக மாறிய நினைவுகள் ஆகியவற்றை ஒரே வாழ்வியல் ஓட்டமாகச் சொல்லும் படைப்புகள் அரிது. எஸ். செந்தில் குமாரின் “கழுதைப்பாதை” அந்த அரிதான இடத்தை நிரப்பும் முக்கியமான நாவலாகத் தோன்றுகிறது. இந்த நாவலை வாசித்து முடித்தபின் மனதில் நீண்ட நேரம் தங்குவது அதன் கதை அல்ல; அந்தக் கதையின் வழியாக நம்முள் தேங்கிவிடும் வாழ்க்கையின் கனம்தான். இந்த நாவல் ஒரு மலைப்பாதையின் கதையைச் சொல்லவில்லை; அந்த பாதையில் உடலும் உயிரும் தேய்ந்த மனிதர்களின் மௌன வரலாற்றை பதிவு செய்கிறது.
இந்த நாவலின் மிகப்பெரிய பலம் அதன் கதையாடல் முறையில் தான் இருக்கிறது. இது ஒரு நேர்கோட்டுக் கதையாக நகர்வதில்லை. மாறாக ஒரு கதைக்குள் இன்னொரு கதை, அதன் உள்ளே ஒரு புராணம், பின்னால் ஒரு நினைவு, அதற்குள் ஒரு மனிதத் துயரம் என்று கிளைகளாக விரிகிறது. ஆனால் அந்த எல்லா கிளைகளுக்கும் வேராக இருப்பது மனித வாழ்க்கைதான். முதல் அத்தியாயத்திலிருந்தே செந்தில் குமார் இந்த உலகிற்குள் வாசகனை அழைத்துச் செல்கிறார். காப்பி பொதிகளை சுமந்து மலையிறங்கும் கழுதைகள், அவற்றோடு வாழும் மனிதர்கள், பாதையைச் சுற்றிய கதைகள், குலதெய்வங்கள், முதுவான் மக்களின் வாழ்வியல் — இவை அனைத்தும் சேர்ந்து நாவலின் மைய உணர்வை உருவாக்குகின்றன. நல்ல நாவல்கள் கதை சொல்லுவதில்லை; ஒரு உலகத்தை வாழவைக்கின்றன. கழுதைப்பாதை நாவலும் அதையே செய்கிறது.
இந்த நாவலின் மைய உருவகம் “பாதை”. அந்தப் பாதை வெறும் மண்ணாலும் கல்லாலும் ஆன வழித்தடமல்ல; தலைமுறைகளின் உடல் உழைப்பால் உருவான வரலாறு. அந்த பாதையில் கழுதைகள் நடக்கின்றன, தலைச்சுமைக்காரர்கள் நடக்கின்றனர், உப்பு சுமக்கும் மாடுகள் நகர்கின்றன, காதலர்கள் அலைகின்றனர், நோயுற்றவர்கள் டோலியில் சுமக்கப்படுகின்றனர். எல்லோரும் ஏதோ ஒன்றைச் சுமந்தபடியே பயணிக்கிறார்கள். அந்த சுமை வெறும் உடல் சுமை அல்ல; வறுமை, அச்சம், ஆசை, சாதி, குற்றவுணர்வு, நினைவு ஆகிய அனைத்தும் அதற்குள் இருக்கின்றன. “எல்லாப் பாதையும் ஒண்ணுதான்டா; நடக்குறவன்தான் வேறவேற” என்ற வரி இந்த நாவலின் முழு தத்துவத்தையும் சுமக்கிறது. மனிதர்கள் மாறுகிறார்கள், காலங்கள் மாறுகின்றன, ஆனால் பாதை மட்டும் மாறாமல் கிடக்கிறது. அந்தப் பாதையை உருவாக்கியவர்கள் மறக்கப்படுகிறார்கள்; ஆனால் அவர்கள் நடந்த தடம் மட்டும் நிலைத்து நிற்கிறது.
முதுவான் மக்களின் வாழ்க்கையை செந்தில் குமார் பதிவு செய்திருக்கும் விதம் இந்த நாவலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. அவர்கள் ஆய்வுப் பொருள்களாக இல்லாமல் உயிருள்ள மனிதர்களாக நமக்கு முன்னால் நிற்கிறார்கள். உணவைப் பகிர்ந்து உண்ணும் பழக்கம், கூவல் வைத்து எல்லோரையும் அழைக்கும் முறை, திருமணச் சடங்குகள், இயற்கையோடு இணைந்த நம்பிக்கைகள் — இவை அனைத்தும் கூட்டுவாழ்வு மையமாக இருந்த ஒரு சமூகத்தை நினைவூட்டுகின்றன. இன்றைய உலகில் மனிதர்கள் தனிமனித வாழ்க்கைக்குள் சுருங்கிக்கொண்டிருக்கும்போது, இந்த சமூகத்தில் “நான்” என்பதைக் காட்டிலும் “நாம்” என்ற உணர்வே அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவர்களுடைய வாழ்க்கை இயற்கையோடும் மற்ற மனிதர்களோடும் ஆழமாக இணைந்திருக்கிறது.
குறிப்பாக இந்த நாவலில் இயற்கை கையாளப்படும் விதம் மிகவும் தனித்துவமானது. மலை, ஆறு, காடு, மழை, காற்று, விலங்குகள் — இவை அனைத்தும் பின்னணியாக மட்டும் இல்லாமல் உயிருள்ள பாத்திரங்களாக இயங்குகின்றன. இந்த நாவலில் ஆறு வெறும் நீரல்ல; அது நினைவு. மலை வெறும் நிலப்பரப்பு அல்ல; அது வாழ்வு. காடு வெறும் இடமல்ல; அது பயமும் பாதுகாப்பும் சேர்ந்த உலகம். முதுவான் மக்களின் தெய்வங்களும் இதே இயற்கையோடு கலந்திருக்கின்றன. அவர்களின் கடவுள் கோவில்களுக்குள் அடைக்கப்படவில்லை; ஆற்றில், கல்லில், காட்டில், பாதையில் இருக்கிறார். இயற்கையோடு மனிதன் ஒன்றிணைந்து வாழ்ந்த காலத்தின் எச்சமாக இந்த நாவல் தோன்றுகிறது.
இந்த நாவலில் காதல் மிக மென்மையாகவும் அதே சமயம் மனதை தொந்தரவுக்குள் தள்ளவும் வைக்கிறது. காதல் இங்கு ஒருபோதும் முழுமையான சுதந்திரம் பெறுவதில்லை. அது எப்போதும் சாதி, குடும்பம், மரியாதை, சமூக அச்சம் போன்றவற்றின் கண்காணிப்புக்குள் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. செல்வம் – கோமதி உறவு இதற்கான முக்கியமான உதாரணம். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிராய் நேசித்தாலும், அந்தக் காதலுக்குள் சாதியின் அச்சம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களின் காதல் தனிப்பட்ட உணர்வாக இல்லாமல் சமூக கட்டமைப்புக்கு எதிரான போராட்டமாக மாறுகிறது. “நாம் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் மரணம் தான் வழி” என்ற மனநிலை காதலின் தீவிரத்தை மட்டும் அல்ல; சமூகத்தின் கொடுமையையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் அப்படி எல்லாம் அவர்கள் இருந்தாலும் இறுதியில் என்ன நடக்கிறது என்பது முற்றிலும் வேறு ஒன்றாக இருக்கிறது, இது தான் எதார்த்ததின் இயல்பாகவும் இருக்கிறது.
அதேபோல் மணிப்பயல் – சரசு உறவு இந்த நாவலின் மிக முக்கியப் பார்வையை வைக்கிறது. இந்த நாவல் நடக்கும் காலம் ஓர் இடத்தில் மட்டும் கூறப்படுகிறது. அதாவது வெள்ளையர்கள் நாட்டை விட்டு சென்று ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கிறது. அப்போதைய காலத்தில் கணவனை இழந்து இருக்கும் சரசுவிடம் உடலுக்காக பலரும் விருப்பப்பட்டு வருவதும், அதை அவள் நிராகரிப்பதும், மணி தன்னை மனதால் நேசிக்கிறான் என்று அவனுடன் தொடர்பில் இருப்பது மிகவும் நுட்பமானது. ஆனால் சமூக மரியாதை, குடும்ப அச்சம், சாதி, சுற்றத்தாரின் பார்வை போன்றவை அந்த உறவை உடைத்துவிடுகின்றன. சரசுவின் வாழ்க்கை உடைந்து போகும் தருணங்களில் அது வெறும் காதல் தோல்வி அல்ல; ஒரு பெண்ணின் நம்பிக்கை சிதைவாக மாறுகிறது. இந்த நாவலில் பெண்கள் வெறும் துணைப் பாத்திரங்களாக இல்லை; அவர்கள் நினைவுகளின் சுமப்பாளர்கள். நாகவள்ளி, வெள்ளம்மா, அக்கம்மாள், கோமதி, சரசு — ஒவ்வொருவரும் தங்களுடைய காதல், துயரம், சாபம், காத்திருப்பு ஆகியவற்றோடு வாழ்கிறார்கள்.
பெண்களின் சாபங்கள் இந்த நாவலில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. ஆனால் அவை வெறும் மூடநம்பிக்கைகளாக வருவதில்லை. அதிகாரமற்ற மனிதர்களின் நீதிக்குரலாகவே அவை உருவாகின்றன. நேரடியாக பழிவாங்க முடியாதவர்கள் சாபத்தின் வழியாக தங்களுடைய வலியை வெளிப்படுத்துகிறார்கள். அந்த சாபங்கள் தலைமுறைகளைத் துரத்துகின்றன. குறிப்பாக பெண்களின் சாபங்கள் இந்த நாவலில் பெரும் அதிர்வை உருவாக்குகின்றன. அவர்கள் அனுபவித்த அநீதிக்கு எதிரான கடைசி குரலாகவே அந்த சாபங்கள் மாறுகின்றன. அதனால்தான் இந்த நாவலில் தெய்வங்களும் மனிதர்களும், சாபங்களும் வாழ்வும் ஒன்றோடொன்று கலந்துபோய் கிடக்கின்றன.
சாதி இந்த நாவலின் அடிநரம்பாக இயங்கிக்கொண்டே இருக்கிறது. வெளிப்படையாக இணக்கமாக வாழும் சமூகங்களுக்குள்ளும் திருமணம், உறவு, உரிமை போன்ற இடங்களில் சாதியின் உண்மையான முகம் வெளிப்படுகிறது. தானே ஒடுக்கப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்தாலும், இன்னொருவரை ஒடுக்க முயலும் மனநிலை இந்த நாவலில் தொடர்ந்து தெரிகிறது. சுப்பண்ணா போன்ற பாத்திரங்களின் வழியாக சாதி என்பது வெறும் வெளிப்புற ஆதிக்கம் மட்டும் அல்ல; அது மனிதர்களின் மனநிலையாக மாறிவிட்டது என்பதை நாவல் காட்டுகிறது. அதனால் இந்த நாவல் சாதியை வெறும் அரசியல் கோஷமாக பேசாமல், அது மனிதர்களின் உள்ளுக்குள் எப்படி ஊறியிருக்கிறது என்பதை இயல்பாக வெளிப்படுத்துகிறது.
உழைக்கும் மக்களின் வாழ்க்கையை இந்த நாவல் மிக ஆழமாக பதிவு செய்கிறது. ஒரு குவளை பால்காப்பி, ஒரு கரண்டி நெய், சாம்பார், சிறிது மரியாதை — இவையே அவர்களின் ஆசைகள். காப்பி தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கே காப்பி எட்டாத ஒன்றாக இருப்பது அந்த சமூக முரண்பாட்டின் உச்சம். தலைச்சுமைக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றிய அத்தியாயங்கள் இந்த நாவலின் இதயமாகவே இருக்கின்றன. அவர்கள் சுமந்த சுமைகள், அடைந்த அவமானங்கள், ஏமாற்றங்கள், ஒடுக்குமுறைகள் — இவை அனைத்தும் சேர்ந்து தான் அந்த “கழுதைப்பாதை” உருவாகியுள்ளது. இன்று அந்த பாதையில் கழுதைகள் நடக்கின்றன; ஆனால் அதன் அடியில் நூறு மனிதர்களின் வலி புதைந்து கிடக்கிறது.
குறிப்பாக கழுதைகள் இந்த நாவலில் மிக முக்கியமானக் குறியீடாக வருகின்றன. அவை வெறும் சுமை சுமக்கும் உயிர்கள் அல்ல; உழைக்கும் மக்களின் இன்னொரு உருவம். மூவண்ணா தன்னுடைய கழுதைகளைப் பிள்ளைகளைப் போல நேசிப்பது, அவற்றோடு பேசுவது, அவற்றின் துயரத்தை உணர்வது – இவை அனைத்தும் மனிதன் மற்றும் மற்ற உயிர்கள் இடையேயான ஆழமான உறவை நினைவூட்டுகின்றன. இது கழுதைகளோடு மட்டுமல்லாமல் ராவுத்தரின் மாடுகளும் அதனின் வாழ்வும் அந்த காற்றில் சுமந்து திரியும் அதனின் வாழ்வியல் எச்சமும் பல வருடங்கள் கடந்தும் அந்த பாதையில் நடப்பவர்களால் உணரப்படுகிறது, உரையாடவும் செய்கிறது.
இந்த நாவலில் குற்றவுணர்வு மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. மனிதர்கள் தாங்கள் செய்த செயல்களை விட, தங்களால் நிகழ்ந்துவிட்ட விஷயங்களின் சுமையோடு வாழ்கிறார்கள். கடந்தகாலம் அவர்களை விடுவதில்லை. நினைவுகள் இந்த நாவலில் ஒரு தண்டனையாகவே செயல்படுகின்றன. அதனால்தான் பல பாத்திரங்கள் பிராயச்சித்தத்தை தேடி அலைகின்றன. மனித வாழ்க்கை என்பது வெறும் நிகழ்கால அனுபவம் அல்ல; அது நினைவுகளின் தொடர்ச்சி என்பதை இந்த நாவல் மிக ஆழமாக உணர்த்துகிறது.
செந்தில் குமார் இந்த நாவலை வெறும் சமூக நாவலாக எழுதவில்லை; ஒரு வாழ்வியல் ஆவணமாக உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக அவரின் மொழி இந்த நாவலின் மிகப்பெரிய பலம். செயற்கையான இலக்கிய மொழியைத் தேடாமல், மண்ணின் வாசனை கொண்ட மொழியில் அவர் கதையை நகர்த்துகிறார். நாட்டுப்புறக் கதைகள், பழமொழிகள், நம்பிக்கைகள், வாய்மொழி மரபுகள் அனைத்தும் அந்த மொழிக்குள் கலந்திருக்கின்றன. அதனால் இந்த நாவல் வாசிக்கப்படுவதில்லை; கேட்கப்படுகிறது என்ற உணர்வு உருவாகிறது. ராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்கதைகளில் இடமில்லாத மக்களே தங்களுக்கான கதைகளையும் தெய்வங்களையும் உருவாக்கிக்கொண்டார்கள் என்பதை இந்த நாவல் ஆழமாக உணர்த்துகிறது.
இவ்வளவு நிறைகள் இருந்தாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், என்னுடைய வாசிப்பனுவத்தில் பார்த்தபோது நாவலின் கதையாடலுக்கு அதில் உள்ள கிளைக்கதைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல அந்தக் கதைகளும் அந்த நாவலின் மய்ய நீரோட்டதில் பயணித்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதில் உள்ள சில கிளைக்கதைகள் அந்த நாவலின் மய்ய நீரோட்டலிருந்து விலகிச் செல்வது போல இருந்தது. அதேபோல் முதுவான் இன மக்களின் வாழ்வியலை படிக்கும்போது இன்னும் சற்று விரிவாக எழுதி இருக்கலாம் என்றும் தோன்றாமல் இல்லை.
கழுதைப்பாதை வெறும் மலைவாழ் மக்களின் கதை அல்ல; வரலாற்றில் பதிவு செய்யப்படாத உழைப்பாளிகளின் நினைவகம். பாதைகளை உருவாக்கியவர்கள் மறக்கப்பட்டுவிடுகிறார்கள்; ஆனால் அவர்கள் நடந்த பாதைகள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அந்த பாதையில் இன்னும் வியர்வை, கண்ணீர், காதல், சாபம், குற்றவுணர்வு அனைத்தும் புதைந்து கிடக்கிறது. அந்த மௌனமான வாழ்க்கைகளை இலக்கியமாக மாற்றியிருப்பதில்தான் இந்த நாவலின் பெரும் பங்கு இருக்கிறது.
***
இப்ராஹிம் – முழுப்பெயர் முகமது இப்ராஹிம் அலி. சென்னையில் பட்டூர் என்ற கிராமத்தில் வசிப்பவர். ஐடி துறையில் பணிபுரிபவர். தொடர்ந்து நூல் மதிப்புரைகள் எழுதி வருபவர். மின்னஞ்சல்: tech.ibrahim@outlook.com

