மு. குலசேகரன்
(“தலை மேல் மடு” என்னும் வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்)
தொழிற்சாலை எவ்வித தடங்கலுமில்லாமல் சீராக இயங்கிக்கொண்டிருக்க இயந்திரங்களின் சப்தங்களில் சிறு பிசகுமில்லை, தொழிலாளர்களின் கதை சொல்லும் குரல்களும் கேட்கவில்லை, யாரும் சுதந்திரமாக மைதானத்தில் திரியவுமில்லை. தூரத்துக் கொட்டகையில் பெண்கள் மௌனக் காட்சிகளைப்போல் தம் பாட்டில் மயிர்களை பறித்துக்கொண்டுமிருந்தார்கள். எல்லாமும் ஒழுங்காக நடக்கின்றன என்று எண்ணியபடி ஜீவன் பக்கவாட்டுக் கதவுக்கு முன்னால் மிதிவண்டியில் காலூன்றி நின்றார். புதிய காவலாளி கதவைத் திறக்கவும் அருகிலிருந்த பழைய காவலாளி கண்ணா எதையும் விசாரிக்காமல் புன்னகைத்தார். கால தாமதத்திலேற்பட்ட குற்றவுணர்வுடன் ஜீவன் தலைகுனிந்து மிதிவண்டியை தள்ளிச்சென்று நிறுத்தி உணவுப் பையை எடுத்துக்கொண்டு யாரையும் பார்க்காமல் அலுவலகத்தில் நுழைகையில் நீண்ட நேரமாகிவிட்டதை சுவர்க்கடிகாரம் காட்டியது. அவர் மின்விசிறிக் காற்றினடியில் கண்களை மூடி உட்கார்ந்த சுழல் நாற்காலியில்தான் உரிமையாளரும் அமர அப்போது மேற்பார்வையாளர்கள் எதிரில் நிற்க வேண்டும்.
சுழல் நாற்காலி சற்று மங்கியும் சக்கரங்கள் தேய்ந்துமிருந்தாலும் உட்காருவதின் கம்பீரத்தை இழக்கவில்லை. ஆஜானுபாகுவான உரிமையாளர் ஜெயா கால்மேல் கால்போட்டு அமர்ந்தால் இருக்கைச் சக்கரங்கள் திணறினாலும் அவர் அனைத்தையும் கண்காணிக்க நாற்காலியில் சுற்றுவார். எதிரில் பெரிய தேக்கு மேஜை பல இழுப்பறைகளுடன் கனத்த கால்களை ஊன்றி நின்றிருக்க மேலே கரிய தொலைபேசி அமைதியாயிருந்தது. அதை எடுத்தால் குரல்கள் ஒன்றாகக் கலந்து வெறும் இரைச்சலாகக் கேட்கும். மேஜைக் கண்ணாடியின் கீழ் ஜெயா, தானியங்கி தோல் பதனிடும், தோல் பொருள் உருவாக்கும் வெளிநாட்டு இயந்திரங்களின் பளபளக்கும் பல புகைப்படங்களை வைத்திருந்தார். கடைசியில் பதமாக்கும் இயந்திரம், முதலில் வண்ணம் பூசும் இயந்திரம், அடுத்து தைக்கும் இயந்திரம், வெட்டும் இயந்திரம், பிறகு ஊறப்போடும் உலோகப் பீப்பாய்கள் என்று முன்பின்னாயிருந்ததால் அவற்றை வரிசைக் கிரமமாக என்றைக்காவது அடுக்க வேண்டும் என ஜீவன் எண்ணிக்கொண்டார். நடுவில் படங்களாயிருந்த தோல் காலணிகள், கையுறைகள், மேலாடைகள், பைகள் போன்றவற்றை எதிர்காலத்தில் தயாரிக்க ஜெயா திட்டமிட்டுமிருக்கலாம். அவருடைய கனவு நிறைவேறுமா என்று தெரியவில்லை.
கண்ணாடி ஜன்னலுக்குப் பக்கத்தில் கிடந்த பழமையான சாய்விருக்கை உயர்ந்த மரத்தாலான, செயற்கை இழைகள் பின்னிய, நீண்ட கைப்பிடியுள்ள, இருவர் சாயுமளவுக்குப் பெரிது. மேலே போர்த்திய மென் மயிர்கள் படர்ந்த மஞ்சளான புலித்தோலில் பழுப்பு வரிகள் உயிர் பெற்று நெளிவதைப்போலிருந்தன. “இது முதலாளியின் தாத்தா வேட்டையாடின புலி. அந்தத் தோல் பழங்காலத்துல இயற்கையான முறையில பதப்படுத்தினது. பண்ணை வீட்டுல சும்மாயிருந்தத இங்கப் போட்டிருக்குது”, என்று தலைமை அலுவலர் ராம் முன்பு விளக்கியிருந்தார். கடும் தொழிற்சாலை வேலைகளுக்கிடையில் ஓய்வுக்கு எதிரான மனோபாவத்தைத் தூண்டுவதற்கு சாய்விருக்கை வைக்கப்பட்டிருக்கலாமெனவும் மூதாதை உரிமையாளர்கள் ஒன்று கூடி புலியின் ஓட்டைக் கண்கள் வழியாக பார்ப்பதைப்போலவும் ஜீவனுக்குத் தோன்றும். அதில் அயர்ந்து படுத்தால், செடிகொடிகள் அடர்ந்த, மரங்கள் உயர்ந்த, பாதைகளற்ற காட்டின் தனிமைக்கு புலி கவ்வி இழுத்துச் செல்வதைப்போல் அவர் தன்னை மறந்து கிடப்பார். ஓசையின் நடுவில் திடீரென எழும் ஓர் இயந்திரத்தின் வித்தியாசக் கிறீச்சொலி நனவுலகுக்கு இழுத்துவரும்.
சுழல் நாற்காலியிலிருந்து கையெட்டும் தூரத்தில் விசுவாச ஊழியர்களைப்போல் காத்திருந்த மர அலமாரிகளில் இயந்திர விளக்கங்களும் தொழிலாளர் படிவங்களும் கூலிச் சீட்டுகளும் கோப்புகளும் கணக்கு நோட்டுகளும் இரசாயனக் குறிப்புகளும் நிரம்பி வழிந்தன. எல்லாவற்றுக்கும் மேலுள்ள ஜீவனின் தூசு படிந்த சாப்பாட்டுத் தட்டும் தம்ளரும் கிடப்பதை ஜெயா கண்டால் ஒவ்வாமையில் புருவங்கள் உயர “இது சாப்பிடற சமையலறையில்ல, அலுவலகம்தான்னு ஞாபகத்தில எப்பவுமிருக்கணும்”, என்பார். அலமாரிகளின் பக்கத்தில் போட்டிருந்த புதை குழியைப்போன்ற ஓராள் சோபாவில் உட்கார்ந்தால் கை கால்கள் விரிந்து ஆகிருதி கூடி பெருமிதம் எழும். பெரிய முதலாளி நெடுங்காலம் உட்கார்ந்து நடுவில் உருவாகியிருந்த சிறிய பள்ளத்தில் அவருடைய சூடு இன்னும் தணியாததைப்போலவும் படும். அதில் இரவு வேலை நேரங்களில் ஜீவன் அரையுறக்கத்தில் அமிழ்கையில் சிறு வயதில் அடிக்கடி போய் குளிக்கும் தன் சொந்த ஊரின் அருகாமையிலுள்ள குளிர்ந்த சிற்றருவி கனவில் வரும். அப்போது ஓர் இயந்திரம் நிஜத்தில் திடீரென நின்றாலும் திடுக்கிட்டு எழுந்து “நா எங்கிருக்கேன்?”, என்பார். சுற்றி சுழல் நாற்காலி, மேஜை, சோபா, சாய்விருக்கை, அலமாரி, பெட்டகங்களைக் கண்டு வெட்கமுடன் முகத்தைத் துடைத்தும்கொள்வார்.
அறை மூலையை காலம் உறைந்துவிட்டாற்போல் அடைத்துக்கொண்டிருந்த பழைய கனத்த இரும்புப் பெட்டகத்தின் நிறம் மங்கி, கைப்பிடிகள் தேய்ந்து, மரத்தாலான அடிப்பகுதி வெளிர்ந்திருந்தாலும் ஒவ்வொரு ஆயுதபூஜைக்கும் பூசும் திருநீறின் தடம் அழிந்திருக்கவில்லை. ஜீவன் வேலைக்கு சேர்கையில் முதலில் பெட்டகத்தைத் திறக்கத்தான் அலுவலர் ராம் கற்றுக்கொடுத்தார். தொழிற்சாலை பிரம்மாண்டமும் புதிர் பெட்டகமும் பெரும் இயந்திரங்களின் ஓட்டமும் தந்த திகைப்பில் ஜீவனிருந்தார். சில முறை பெட்டகத்தைத் திறந்து காட்டிய ராம், ஒரு தரம் தவறுதலாக சாவியை மாற்றி நுழைத்ததில் பெட்டகம் தன் கதவை திறவாமல் இறுக மூடிக்கொண்டது. அவர் மனதை ஒருமுகப்படுத்தி மீண்டும் தொடங்கி சுக்கான் வடிவக் கைப்பிடியை கடிகார திசையில் திருப்பி மறுபடியும் எதிர்ப்புறம் சுற்றி சிறுத்தை முகமூடியை விலக்கி நீண்ட சாவியை துவாரத்தில் விட்டுத் திருகி கீழே பூமுக வடிவ மூடியைத் தள்ளி மற்றொரு சாவியால் துளையிலிட்டுத் திருப்பினார். பெட்டகமும் சிக்கலான ஓர் இயந்திரம் போலிருந்தது. அதன் ஆழத்தில் மெல்லிய சப்தங்களுடன் பிடிப்புகள் விடுபட்ட பிறகு அடியிலுள்ள கனத்த தாழைத் தள்ளி கை வடிவ பிடியை இழுத்து கதவைத் திறந்ததும் உள்ளே இரட்டைக் கதவுகள் இறுக மூடியிருந்தன. அதன் மேற்புறம் மறைந்திருந்த துவாரத்தில் மற்றொரு சாவியைவிட்டு மூன்று முறை திருப்பவும் கனத்த கதவு விரியத் திறந்தது. பெட்டகத்தில் வரிசையாக பிரிவுகளும் பின்னால் ரகசிய அறைகளும் நடுவறையில் இன்னொரு அறையுமிருந்தன. அப்போதுதான் பெட்டகத்தில் ஒரு மர்ம சிற்றறையைப் பார்த்து ராம் அதிர்ச்சியுமடைந்து “இதுல கூலிப் பணத்த ரொம்பப் பத்திரமா வச்சுக்கலாம். ஒவ்வொரு முறையும் வரிசைப்படி திறக்கணும். கொஞ்சம் தவறினாலும் கதவுங்க மூடிக்கும். திரும்ப பணத்த எடுக்க முடியாது”, என்று சாவிகளை ஜீவனிடம் ஒப்படைத்தார். குறுங்கத்திகளைப்போல் மின்னிய கனமான சாவிகளுள்ள கொத்தை ஜீவன் பணிவுடன் பெற்றுக்கொண்டு ராம் சென்றதும் முதல் வேலையாக இரும்புப் பெட்டகத்தை திறந்து மூடுகையில் மந்திரம் சொல்லி குகையைத் திறந்து மூடுவதுபோல் சாகச உணர்வு ஏற்பட்டது. அடுத்த முறை தலைமை அலுவலகத்திலிருந்து வாங்கிவந்த கூலிப் பணத்துடன் பெட்டகத்தை அணுகி பலமுறை சாவிகளை நுழைத்துத் திருப்பியும் பெட்டகம் திறக்காமல் பெரும் பாறையைப்போல் மூடிக்கிடந்தது. அடியில் சாவிகளை போட்டு வைக்கும் மர இழுப்பறைகள் மட்டும் பூட்டப்படாமல் வெறும் சாவிகளால் பெட்டகத்தை திறக்க முடியாது என்று காட்டுவதைப்போலிருந்தன. மிகவும் பழகியவர்களுக்குதான் பெட்டகம் திறக்கும் என்று ஜீவன் சமாதனமடைந்து பணத்தை மர இழுப்பறையில் வைத்து பூட்டினார். அது களவு போனால் தன் பல வருட சம்பாத்தியத்தை இழக்க நேரிடுமென்று கொத்துச் சாவிகளை கால்சட்டைப் பையில் பத்திரமாக வைத்தும்கொண்டார்.
சுழல் நாற்காலி, மேஜை, சோபா, இரும்புப் பெட்டகம், மர அலமாரிகளெல்லாம் முதலாளிகளின் பண்ணை வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்று ஜீவன் கேள்விப்பட்டிருந்தார். அவை பழைய பாணியானதாலோ, சிறிது சேதமானதாலோ, வேறு புதிதாக வாங்கியதாலோ கைவிடப்பட்டவை. தொழிற்சாலை அலுவலகத்தின் வெற்றிடத்தை நிரப்பினாலும் முழுமையாகப் பொருந்தாமல் முதலாளிகளின் புராதனத்தை விடாமல் நினைவூட்டிக்கொண்டிருந்தன. பெட்டகக் கைப்பிடியில் மறைவாக ஒட்டியுள்ள பெரிய முதலாளியின் ரேகைகளை அழுந்தத் துடைத்தாலும் போகாதெனப்பட்டது. அவர் மனைவி ராணியின் விலைமதிப்பற்ற பழைய நகைகளை நெடுங்காலம் பாதுகாத்திருந்ததின் ஞாபகமாக பெட்டக இருட்டு அறையொன்றில் ஒரு மோதிரம் மறந்து விடப்பட்டிருக்கலாம் என்றும் அதிகப்படியான செல்வத்தின் அடையாளமாக அதன் மூலையில் ஒரு வைரமும் ஒட்டியிருக்கலாம் என்றும் ஜீவனுக்குத் தோன்றியது. மேஜை மேலுள்ள கண்ணாடியின் கீழே இயந்திரங்களின் படங்களுடன் உரிமையாளருடைய குடும்பத்தின் முகங்களும் தெரிந்து பயமுறுத்தும். பெரிய முதலாளியைப்போல் கால் விரித்து அமர்ந்து சோபா நோக்குவதாகப் பட்டு அவருடைய வயோதிக உடலின் உயர் சோப்பு வாசனையை சில சமயம் ஜீவன் அதில் உட்காருகையில் உணர்வார். தொழிற்சாலையைச் சுற்றிவிட்டு அலுவலகத்துக்குள் நுழைகையில் ஜெயா நாற்காலியில் சுழல்வதாக பிரமையுண்டாகி அவர் கண்ணாடி சன்னல் வழியாக நிரந்தரமாகக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார் என்ற நினைப்பில் ஜீவன் மீண்டும் தொழிற்கூடத்துக்குப் பின்வாங்குவார்.
சுழல் நாற்காலியில் ஜெயாவைப்போல் ஜீவன் வட்டமிட்டு எழுந்து வெளியே வருகையில் தொழிற்கூடத்தின் மூலையில் குவிந்திருந்த உற்பத்தியான பொருட்கள் கண்ணில் பட்டன. அவர் காலதாமதமாக வந்ததை பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ஜெயாவுக்குத் தெரிந்தால் “நாமதான் வழிகாட்டியாயிருக்கணும். நீ கொஞ்சம் நேரத்த விரயமாக்கினா அதை மத்தவங்க கூடுதலாப் பண்ணுவாங்க. அப்படி நடக்க விடக் கூடாது”, என அறிவுரைப்பார். ஆனால் இந்தத் தாமதத்தை யாரும் அவருக்குத் தெரிவிக்கவும் மாட்டார்கள். தொழிலாளர்களின் மேல் கண்காணிப்பு விதிக்கப்படாவிட்டால் தாமாக சுயக்கட்டுப்பாடு எழுமென்றும் மனமொன்றிய செயல்களுக்கு எந்த மேற்பார்வையும் தேவையில்லை எனவும் நினைத்தபடி தொழிலாளர்களுக்கும் இயந்திரங்களுக்குமிடையில் அவர் வெறுமனே சுற்றிக்கொண்டிருந்தார்.
ஜீவனை தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்திருந்த தம்பியும் பொறியாளருமான விஜி அன்று அதிகாலையில் கட்டட அடிக்கல் பூஜைக்குக் கிளம்பியிருந்தான். அம்மா நேரங்கழிந்து எழுந்து காலை, மதிய உணவுகளை தயாரிக்கும் பழக்கமுள்ளவள் என்பதால் ஜீவன் குளித்துவிட்டுப் புறப்படுகையில் அம்மா “உனக்காகத்தான் சமைக்கிறேன், சாப்பிட்டுப் போ”, என்று வருத்தமுடன் சொல்ல அவர் அவசரமாக சாப்பிட்டு மதிய உணவையும் எடுத்துக்கொண்டார். அதிலிருக்கும் ரசச் சோறையும் தொட்டுக்கொள்ளும் தேங்காய் துண்டுகளையும்தான் தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் அனைவரும் விரும்பி உண்பார்கள். அங்கு வீட்டுக்கொல்லைகளில் தென்னைகள் காய்த்துக் குலுங்குவதை அம்மா புதிய இடத்துக்கு வந்து நீண்ட காலமாகியும் மறக்கவில்லை.
தோல்களை அழுத்தும் இயந்திரத்திடம் சென்று ஜீவன் குறிப்பு நோட்டைப் புரட்டி பிச்சையின் கிறுக்கல் எழுத்துகள் புரியாததால் “பதமானத் தோலுங்க குறைஞ்சிருக்கேடா”, எனவும் பிச்சை பற்கள் தெரிய சிரித்து “நல்லாப் பாருங்க சார் எப்பவும் பண்ணுற அதே வேலைதான்”, என்றான். முன்பு மதிய சாப்பாட்டை ஜீவனின் வீட்டிலிருந்து பிச்சை போய் எடுத்து வந்துகொண்டிருந்ததால் வேலை கெடுகிறதென சிறியவனான ஜான் சென்றான். அவர்கள் வழியில் நேரம் போக்கிவிட்டு வந்தும் தூக்கைத் திறந்து ரசம் தேங்காயைக் கண்டுபிடித்து அனைவருக்கும் தெரிவித்துமிருந்தார்கள். இங்கு ஆடு, கோழிக் கறி தின்பதுதான் கௌரவமென்பதால் ஜீவனின் உணவு கேலிப்பொருளான பிறகுதான் அவர் தானே சாப்பாட்டை எடுத்துவரத் தொடங்கினார்.
பிச்சை தன்னுடைய உரிமையாக எண்ணுவதும் தொழிற்சாலை போராட்ட வரலாற்றில் கிடைத்த முதல் வெற்றியுமான தேநீரைத் தயாரிக்கத் தொடங்கினான். அவனும் தனாவும் கன்னத்தில் அறை வாங்கியதும் தொழிலாளர்கள் அனைவரும் பயந்துவிட்டாலும் “கம்பெனி முதலாளி அண்ணன் மாதிரிதான். அவர் எவ்வள அடிச்சாலும் தாங்கிப்போம். ஆனா எங்களுக்கு டீயக் கொடுக்கச் சொல்லுங்க”, என்று பிச்சை மட்டும் உறுதியாயிருந்தான். சில நாட்களுக்குப் பிறகு தொழிற்சாலைக்குள் தேநீரைத் தயாரிக்க ஜெயா அனுமதி தந்து “தேவையான பால், சர்க்கரை, மண்ணெண்ணெய் செலவுகளைக் கொடுத்திடு” என்று உத்தரவிட ஜீவன் தினமும் தேநீர் செலவுக்குரிய பணத்தை வழங்கத் தொடங்கினார். தொழிலாளர்கள் கேட்டதால் தேநீரை கொடுக்கவில்லையென்றும் அறைந்த குற்றவுணர்வால்தான் உரிமையாளர் தருகிறார் என்றும் ஜீவன் எண்ணிக்கொண்டார். இப்போது தேநீருக்குப் பதிலாக பிச்சை தந்த பாலை அங்கேயே தொழிலாளர்களுடன் சேர்ந்து குடித்தது தனிச் சுவையாயிருந்தது. மீண்டும் அலுவலகத்துக்குச் சென்று பல நாள் இருப்புக் கணக்கை எடுத்து விருப்பமில்லாமல் எழுத ஆரம்பித்தார்.
அப்போது தவறான இடத்துக்கு வந்துவிட்டதைப்போல் ஓர் இளைஞன் தயக்கத்துடன் அலுவலகத்துக்குள் நுழைந்தான். மற்றொரு மேற்பார்வையாளரை நியமிப்பது பற்றி தலைமை அலுவலகத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் கடுமையான கண்காணிப்புதான் தொழிலாளர்களை ஒழுங்காக வேலை செய்விக்குமென்பதால் தொழிற்சாலைக்கு பற்பல மேற்பார்வையாளர்கள் தேவையென்று ராம் வலியுறுத்தியிருந்தார். “உனக்குத் துணையா கணக்குப் படிச்ச ஆள் போட்டிருக்குது. அங்க வந்ததும் எல்லாக் கணக்கயும் எழுதட்டும்”, என்று ராம் தொலைபேசியில் தெரிவித்துமிருந்தார். மனோ மெத்தப் படித்தும் மிகவும் பயந்துமிருந்ததால் ஜீவனுக்கு பரிதாபமும் பொறாமையும் சேர்ந்து தோன்றியது. இந்த பொருட்கள் நிரம்பிய புது இடம் பீதியுண்டாக்குமெனவும் இயந்திரங்கள் உயிரற்றவை, வெளியுலகில் வேறு மாபெரும் இயந்திரங்களுமுள்ளன, வேறு மின்னணுப் பொருட்களுமிருக்கின்றன என்று ஆறுதலளிக்கவும் விரும்பினார். தனது விதிப்படி தேடி வந்துள்ள அவன் பிறகு இயந்திரங்களில் சிக்கி அல்லலுறுவான் என்பதை நினைத்து வருத்தமுமுண்டானது. தினமும் தொழிற்சாலைக்கு உரிய நேரத்துக்கு வந்து தொழிலாளர்களை கட்டாய வேலை வாங்க சலித்ததால் தனக்குத் துணையாக ஒருவன் வேலைக்கு வந்தது பொருத்தமெனவும் ஜீவன் எண்ணினார். தம்பி விஜியும் சிறிய மேற்பார்வையாளர் வேலையை துறந்துவிட்டு தன் கட்டுமான தொழிலில் பங்கெடுக்க வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தினான். ஜீவன் சுயமாக சம்பாதித்து திருமணம் செய்துகொள்ள விரும்பியதுடன் தான் இழந்துவிட்ட பூர்வீக மண்ணில் அம்மாவுக்கும் துணையாக பொருத்தமான பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கவும் நினைத்தார்.
ஜீவன் உட்கார சொல்லவும் மனோ உரிமையாளர்களுக்கு சொந்தமான மெத்தென்ற சோபாவில் அமர வெட்கப்பட்டு தலையாட்டி மறுக்க பின் தொடர்ந்து வந்த கண்ணா இரும்பு நாற்காலியை எடுத்துப் போட அவன் இயல்பாகி உட்கார்ந்தான். பாதி எழுதிய கணக்கு நோட்டை ஜீவன் நீட்டி “இத விடாம எழுது. ஒவ்வொரு பொருளோட இருப்பும் துல்லியமாயிருக்கணும். அப்பத்தான் கம்பெனி நிக்காம ஓடும்”, என்றார். அவர் மேலும் அலமாரியிலிருந்து எடுத்து மேஜையில் வைத்த பல நாட்களாக எழுதப்படாத கனத்த நோட்டுகளால் அலுவலகத்தில் தூசு நிரம்பியது. மனோவின் படிப்பை மறைமுகமாக அவமானப்படுத்துவதைப்போல் ஜீவன் “எனக்கு நிஜமா நடந்ததைப்போல கணக்கு எழுத முடியல. இதெல்லாம் வெறுங் காகிதக் குப்பைங்க”, என்றவர் அருகில் ஆமோதிப்பதைப்போல் புன்னகைத்த கண்ணாவை போகச் சொன்னார்.
உரிமையாளர் ஜெயாவைப்போல் ஜீவன் நாற்காலியில் சுழன்று திரும்பி “முதல்ல இரசாயனக் கணக்க எழுது. அதத்தான் முதலாளி விரும்பிப் படிப்பார்”, என்றார். மனோ தேடியெடுத்த இரசாயனச் சீட்டு ஒட்டிய பெரிய நோட்டில் உயர்ந்த கடும் இரசாயனப் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரிசையாயிருந்தன. “அமில இருப்பு கணக்கை முடி. அது இல்லாட்டித் தோல்கள ஒண்ணும் பண்ண முடியாது”, என்று மீண்டும் ஜீவன் கூறவும் ஒவ்வொரு நாள் அமிலத்தின் வரவையும் செலவையும் மனோ ஏற்கெனவே அதிலிருந்ததைப்போலவே விரைவாக எழுதி முடித்தான். ஜீவன் “கடைசில வரும் இருப்ப நல்லா ஞாபகத்துல வச்சுக்க. முதலாளி பரீட்சை நடத்துற மாதிரி கேட்டா கணக்கு மறந்துட்டாலும் எதையாவது தயங்காம சொல்லு”, என்றார். மனோ அமிலக் கணக்கின் இருப்பை மனப்பாடமும் செய்துகொண்டதும் “நீ எப்படி இங்க வந்து வேலைக்கு சேர்ந்த?”, என்றார் ஜீவன். மனோ நோட்டை திறந்து வைத்தபடி சொல்லத் தொடங்க அவர் கண்களை மூடி கைகளை ஊன்றி விரல்களை கோர்த்துக்கொண்டார். அப்படித்தான் தலைமை அலுவலகத்தில் கடிதத்தை தட்டச்சிடச் சொல்கையில் ஜெயா உட்கார்ந்திருக்கிறார்.
அப்போது கொல்லையில் வெல்லம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் வீடுகளில் மாடுகளில்லாத அல்லது அவை செயற்கை உணவைத் தின்று பழகிவிட்ட காரணத்தால் யாரும் சோகை கழிக்கவும் கரும்பு வெட்டி ஆலையில் போடவும் வரவில்லை. கூலியாட்களுடன் சேர்ந்து கரும்பு வெட்டி, சாறு பிழிந்து, வெல்லம் காய்ச்சி, உருண்டை பிடிக்கும் வேலைகளை மனோ செய்துகொண்டிருந்தான். அன்று வெல்ல அடுப்பில் காய்ந்த கரும்புச் சக்கைகளை தொடர்ந்து தள்ள உலைக்களம் போல் பெரிய கொப்பரை கொதித்து கரும்புப் பாகின் இனிய மணம் ஆலைக் கொட்டகையிலும் கரும்புத் தோட்டத்திலும் பக்கத்து நெடுஞ்சாலையிலும் பரவியது. வாசனையால் ஈர்க்கப்பட்டவரைப்போல் சாலையிலிருந்து ஒருவர் வந்து கொண்டிருந்ததைக் கண்டு கரும்புச் சாறு பருக வரும் வழிப்போக்கர் என்று முதலில் மனோ நினைத்தான். அப்பாவின் நெருங்கிய நண்பரும் தூரத்து உறவினருமான ராமன் வெல்லக் கொப்பரையில் எழும் ஆவிக்கு அப்பால் நின்றாலும் அவருடைய மூக்குக் கண்ணாடியின் தங்கச் சட்டமும் முழுக்கைச் சட்டையின் தங்கப் பொத்தான்களும் தோள் துண்டின் தங்கக் கரையும் பளபளத்தன. “அப்பா இல்லயா?”, என்று அவர் மெல்லிய குரலில் கேட்டது காதில் விழாததால் மனோ தானாக ஊகித்து “அப்பா உடம்புக்கு முடியாம வரல”, என்றான். கரும்புப் பாகு கொதித்து, அடுப்பை அணைத்து, கொப்பரையை மரத்தொட்டியில் கவிழ்க்கும் வரை ராமன் பின்னால் கை கட்டியபடி காத்திருந்தார். அவனுடைய அழுக்கு உடையை உற்றுப் பார்த்தவாறு “இந்த விவசாய வேலையில ஒண்ணும் கெடைக்காது. உன் படிப்பை வீணாக்காம வேற வேலைக்குப் போ”, என்ற அவரிடம் தன்னுடைய அப்பாதான் ஆலோசனையை சொல்லி அனுப்பியிருப்பாரென நினைத்தான். “நீ பெரியவர் கணேசன போய் பாரு. நா சொன்னதா சொல்லு” என்று மீண்டும் ராமன் அழுத்தமாக சொல்லவும் அவன் ஆர்வமுடன் தலையாட்டினான். “அப்பாவ விசாரிச்சதா சொல்லு” என்று அவர் சொல்லிவிட்டு திரும்பச் செல்கையில் தான் கரும்பு, அடுப்பு, வெல்லம் போன்றவற்றைத் துறந்து, முழு ஆடை, கழுத்துப் பட்டி, காலணிகளுடன் கண்ணாடி அலுவலகத்தில் நுழைவதாக கற்பனை செய்துகொண்டான். அந்தத் தோற்றத்தில் அவன் தனக்கே அடையாளம் தெரியாதவனாக மாறிவிட்டிருந்தான்.
எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளரும் தோல் தொழிற்சாலை பங்குதாரருமான கணேசனின் பண்ணைக்கு மனோ முதன்முறை தேடிப் போகையில் அவர் நகரத்து வீட்டிலிருந்து வந்திருக்கவில்லை. களத்தில் குன்றைப்போல் குவிந்திருந்த பெரும் சொம்புகளைப் போன்ற தேங்காய்களும் பக்கத்துக் கொட்டகையில் நிராகரிக்கப்பட்ட பழைய வீட்டுப் பொருட்களும் கிடந்தன. கணேசன் வழக்கமாக வரும் நேரத்தை பண்ணையாட்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு மற்றொரு முறை போனபோதும் அவரில்லை. அவர் வழக்கம்போல் தலைநகரிலுள்ள வீட்டுக்குப்போயிருக்கலாம் என்று ஆட்கள் தெரிவிக்கவும் அடுத்த முறை எப்படியாவது சந்தித்து வேலை பெற வேண்டுமென நினைத்துக்கொண்டான். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து பண்ணைக்கு வெளியில் அரச மரத்தடியிலுள்ள கோயிலில் நீண்ட நேரமாகக் காத்திருந்தான். கடைசியில் கொக்கின் தூவிகளைப்போல் மினுங்கும் தலையுடன் கணேசன் முன்னிருக்கையில் உட்கார்ந்திருக்க கார் நுழைந்தது. அவர் திரும்பிப் பார்க்காமல் காரைவிட்டு மெல்ல இறங்கி உள்ளே காத்திருந்தவருடன் நிதானமாக பேசியபடி தென்னை மரத் தோப்புக்குள் சென்றார்.
சற்று நேரம் கழித்து மனோ பண்ணைக்குள் நுழைந்தபோது அவர்கள் அடர்ந்த தென்னை மரங்களுக்கிடையில் மாயமாக மறைந்துவிட்டிருந்தார்கள். அவன் நீண்ட வரப்பில் நடக்கையில் தோப்பு பெரிதாக விரிந்து சுற்றிலும் பசிய நிழல் கவிந்து ஆழ்ந்த அமைதி நிலவியது. தொலைவில் மூச்சிரைக்கும் முதிர்ந்த குரல்கள் மெலிதாகக் கேட்கவும் அவற்றை நோக்கி சென்றபோது இரு வயோதிகர்களும் அந்நியோன்யமாகப் பேசியபடி ஏரோட்டிய மேடுபள்ளமான தடங்களில் தடுமாற்றத்துடன் நடப்பதைக் கண்டான். அவர்கள் அப்படியே கடைசி எல்லை வரைக்கும் போகவும் விரும்பலாமென்பதால் அதைக் குலைக்காமல் வீட்டுக்குத் திரும்பிவிட நினைத்தான். பிறகு அவனையறியாமல் “வணக்கம்”, என்றதும் அவர்கள் காதுகளில் விழாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மீண்டும் உரக்கச் சொல்லவும் கணேசன் திடுக்கிட்டுத் திரும்ப மற்றவரும் பார்க்க அவன் வரப்பிலிருந்து இறங்கி நெருங்கிச் சென்று “உங்கள ராமன் அப்பாதான் பாக்கச் சொன்னாரு, எனக்கு வேலை வேணும்”, என்றான். கணேசன் கால்களை ஊன்றி நின்று காற்சட்டைப் பைகளில் கைகளைவிட்டு சிரித்தவாறு “நம்ம ராமன்தான் சொல்லியிருக்காரு” என்று மற்றவரிடமும் அறிமுகப்படுத்தினார். அங்கேயே சிறு நேர்காணல் ஒன்றை நடத்தி பெயர், அப்பா பெயர், ஊர், படிப்பைக் கேட்டறிந்த பிறகு கனமான தோல் பர்சை உருவி அதில் வரிசையாக எல்லா இலக்கங்களிலுமிருந்த ரூபாய் நோட்டுகளில் கடைசிக்கு முன்னாலுள்ளதை எடுத்தார். அவனுடைய தாமாக நீண்ட இரு கைகளில் பணத்தைப் போட்டு “நாளைக்கு நல்ல நாளு, உடனே வேலையில சேந்துடு”, என்றார்.
அனைத்தையும் மனோ சொல்லி முடிக்க ஜீவன் தூக்கத்திலிருந்து விழிப்பவரைப்போல் அனுதாபப் பெருமூச்சுடன் எழுந்தார். அவனுடன் தொழிற்சாலை இருப்பறைக்குள் புகுகையில் அதற்குப் பொறுப்பான பிச்சை துணையாக வந்தான். உள்ளே வீசிய நெடியில் மூச்சடைத்து மயக்கம் வரும் போலிருக்க கீழே மெத்தென கம்பளத்தைப்போல் இரசாயனப் பொடி இறைந்தும் ஆதிவாசிகளின் ஓவியங்களைப்போல் சுவர்களிலும் விதானத்திலும் பல வண்ணங்களில் கை அடையாளங்கள் பதிந்துமிருந்தன. அறையெங்கும் பிரிக்காத மூட்டைகளுடன், பிரித்து மேலே சுருட்டிய மூட்டைகளும் நிறைந்திருந்ததுடன் சுவர் அடுக்குகள் முழுக்க கொள்கலன்கள் அடுக்கப்பட்டு அங்கங்கே இரத்தத்தைப்போல் திரவங்கள் ஒழுகியுமிருந்தன. சுற்றிலும் தாறுமாறாகக் கிடந்த அளவைக் குடுவைகளுடன் எதிரே எடை இயந்திரத்தில் இரசாயனம் ஊற்றப்பட்ட கலன் தயாராகக் காத்திருந்தது. இருப்பறையின் அடைசலுக்குள் யாராலும் சுலபத்தில் நுழையவும் முடியாது, துல்லியமாகக் கணக்கிடுவதும் சாத்தியமில்லை. அவற்றை உத்தேசமாகத்தான் அளவிட முடியுமென்பதால் திருடு போனாலும் கண்டுபிடிப்பதும் கடினம். பிச்சையிடம் ஜீவன் “எல்லாம் எவ்வளயிருக்குதுன்னு பாரு”, என்றதும் அவன் நின்ற இடத்திலிருந்தபடி பொருட்களின் இருப்புகளை சொல்ல மனோ நோட்டில் வேகமாக குறித்துக்கொண்டான். பிச்சையின் பட்டறிவு வியப்பூட்ட அவனை சோதிப்பதைப்போல் “அத எண்ணிச் சொல்லு” என்று உப்பு மூட்டைகளைக் காட்டவும் கழைக் கூத்தாடியைப் போல் பொருட்களினூடே பிச்சை கால் வைத்துப் புகுந்து கணக்கிட்டுச் சொன்னான். காகிதத்திலுள்ள இருப்புக்கும் உண்மை இருப்புக்கும் சற்று வித்தியாசமிருந்ததால் “நீ கவலைப்படாத சார். கடைசில எல்லாம் ஒண்ணாயிடும்”, என்று பிச்சை தெரிவிக்க “ஆனா, பொருளோட விலை அவங்க வாங்குற மொத்தக் கூலிய விட ரொம்ப அதிகம்”, என்றார் ஜீவன்.
மூவரும் ஒதுக்கப்பட்டதைப்போல் தனியாயிருந்த மற்றொரு சரக்குக் கொட்டகைக்கு செல்கையில் வெளியே வரிசையாயிருந்த பீப்பாய்களை பிச்சை திறந்து காட்டி “சார், இந்த கணக்க சரியா எழுதி வச்சுக்க. அடிக்கடி காணாமப் போகும்”, என்றான். ஒவ்வொரு பீப்பாயிலும் கணிசமாக மீந்திருந்த டீசலை மொத்தமாகக் கூட்டி மனோ குறித்துக்கொள்ள, தூரத்தில் டிராக்டர் மேல் நீர் பீய்ச்சிக்கொண்டிருந்த ஓட்டுநர் “சார் டீசல் காலியாயிடுச்சு. உடனே அனுப்பச் சொல்லுங்க”, என்று ஜீவனிடம் கத்தினான். “இன்னும் நிறையிருக்குது”, என்று மனோ பதிலுக்கு சைகை செய்தான். அவர்கள் சரக்குக் கொட்டகையில் நுழைந்து பிச்சை விளக்கைப் போட்டும் அது அரையிருட்டாக மட்கிய நாற்றத்துடன் குகையைப் போலிருந்தது. அங்கிருந்த ஆங்கிலப் பெயர்களுள்ள பொருட்களை பிச்சை வாய்க்கு வந்தவாறு உச்சரித்து “இத நாங்களே வந்து எடுத்துக்குவோம். எல்லாத்தையும் கொஞ்சம் கூட்டிப் போட்டா தோலு நல்லா வரும்” என்றான் பெருமையோடு. “இன்னும் உனக்குப் பேரே சரியாத் தெரியல” என்று ஜீவன் சிரிக்கவும் “அதெல்லாம் நாங்களா வச்சுகிட்டது, வேலதான் முக்கியம்” என்றான் பிச்சை. இருண்ட மூலையிலிருந்த பீப்பாய்களை மனோ எண்ண “இது மேலப் பட்டா ஓட்டையாகும்”, என்று கைகளைக் காண்பித்தான் பிச்சை. அவை முழுக்க மையால் கரும் புள்ளி குத்தினாற்போல் தீய்ந்த புண்களாயிருக்க “இதெல்லாம் மண்ணுலக் கலந்தா பயிருங்களும் முளைக்காது”, என்றார் ஜீவன் எச்சரிப்பதைப்போல்.
கடைசியாக சிறிய குன்றுகளைப்போல் பதனிடப்பட்ட தோல்கள் அடுக்கியிருந்த தொழிற்கூடத்தின் மூலைக்கு வந்ததும் பாணி “இது முழுசா முடிஞ்சது. அது பாதியளவு பண்ணது. அங்கிருக்கத இன்னும் நைப்பாக்கணும்”, என்று வெவ்வேறு குவியல்களைக் காட்டினான். அவற்றின் வித்தியாசங்களை தொட்டுப் பார்த்து அறிய மனோ முயலவும் “எங்களாலும் சரியாக் கண்டுபிடிக்க முடியாது. இத வெளிநாடுங்களோடத் தேவைக்கு தொடர்ந்து தயாரிக்கணும். அங்க ஒவ்வொரு பருவகாலத்துக்கும் ஏத்த மாதிரி உபயோகிப்பாங்க. அப்பப்ப புதுசும் பழசுமா மாறி வரும்”, என்றார் ஜீவன். அவர்கள் பல வகைத் தோல் குன்றுகளிடையில் சிறிதாகிவிட்டவர்களைப்போல் நின்றிருக்கையில் “ஒவ்வொரு தரம் எண்ணும்போதும் குழம்பும். அப்பப்ப கணக்கெடுத்தாதான் தெரியும்” என்று பாணி சொன்ன தோல் கணக்குகளையும் மனோ நோட்டில் எழுதிக்கொண்டான்.
அன்றைய வேலை முடியும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கையில் வெளியே உரிமையாளர் ஜெயாவின் கார் ஒலிப்பானின் இசை எழுந்தது. இயந்திரங்களின் ஓசைகளை மீறிக் கேட்டு தொழிலாளர்கள் எச்சரிக்கையடைந்து வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள். காவலாளி இரும்புக் கதவுகளை விரியத் திறக்க கார் உள்ளே நுழைந்தது. ஜீவனும் மனோவும் வணங்க உரிமையாளர் ஜெயா அவர்களையும் தொழிலாளர்களையும் திரும்பியும் பார்க்காமல் நடந்தார். அலுவலக அறைக்குச் சென்று குளிர் கண்ணாடியைக் கழற்றியபடி சுழல் நாற்காலியில் அமர்ந்து மேஜை மேலிருந்து இரசாயன இருப்பு நோட்டைத் தேடி எடுத்து அமில இருப்பில் கண்களையோட்டிவிட்டு நாற்காலியில் சுழன்று திரும்பி மனோவை ஏறிட்டுப் பார்த்து “உன்னத்தான ராமன் சொல்லியனுப்பினது? ஒழுங்கா கணக்குங்களை எழுதியிருக்க. அதனால வேலையில சேத்துக்கறோம்”, என்றார். மனோ நிம்மதியடைவுடம் அவர் உற்பத்திக் கணக்கை ஒருமுறை புரட்டிவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தார்.
வேலை நேரம் முடிந்தும் தொழிலாளர்கள் பயத்தில் வேலையை தொடர்ந்துகொண்டிருந்தார்கள். மனோவை வேலையில் நியமிக்க மட்டும்தான் ஜெயா வந்திருந்தாற்போல் அவர் காரை நோக்கி வேகமாக செல்ல ஜீவனும் மனோவும் பின்தொடர்ந்தார்கள். “வேலையாட்கள் மேல அதிகாரம் செலுத்தணும். அப்பதான் உற்பத்தியும் அதிகமாகும். ஆனா ஜீவா செய்றதில்ல”, என்று ஜெயா சொல்ல பின்னாலிருந்த ஜீவனால் பதிலளிக்க முடியவில்லை. அவர் காரில் ஏறியதும் நினைவு வந்தவராக முன் கதவைத் திறந்து “வேலை முடிஞ்சதும் ஆபிசுக்கு வா” என்றார் மனோவிடம். அவன் காரில் கையை வைத்து குனிந்து “சரிங்க சார்” என்றதும் அவர் கதவை இழுத்துச் சாத்தியதில் அவனுடைய கட்டை விரல் சிக்கி உயிர் போவதைப்போல் துடித்தான். மீண்டும் கதவு திறக்கப்பட்டு விரலை விடுவித்துக்கொண்டதும் கார் புறப்பட்டு சாலைக்குச் சென்றது. விரல் துண்டாகிவிட்டதைப்போல் அதை மற்றொரு கையால் இறுகப் பற்றிக்கொண்டிருந்தான் மனோ.
ஜீவனும் மனோவும் அலுவலகத்துக்கு திரும்பியதும் ஜீவன் வீட்டுக்குப் போக ஆயத்தமாக மனோ நோவைத் தாங்க முடியாமல் தவித்தபடி சுழல் நாற்காலியில் உட்கார்ந்தான். அவனையறியாமல் கண்ணீர் வழிய வேதனையை மறக்க முயன்று பல்லைக் கடித்தபடி மெல்ல சுழன்றான். ஜீவன் “இதே மாதிரி ஒரு தரம் என் விரலும் துண்டாகற மாதிரி நசுங்கிடுச்சு. அவர் தன்னோட அதிகாரத்தைக் காட்ட வேணுன்னுதான் கார் கதவ சாத்தறார்”, என்று கட்டைவிரலைக் காட்டினார். எப்போதோ அடிபட்டு ரத்தம் உறைந்து இன்னும் நகத்தில் கறுத்த தடம் மறையாதிருந்ததைப் பார்த்தபடி மனோ சுழல் நாற்காலியிலிருந்து எழுந்து மெத்தென்ற சோபாவுக்கு மாறி விழுந்தான். அதில் சற்று நேரம் புதைந்து கிடந்ததில் வலி சற்று குறைந்தாற்போலிருக்க பிறகு சோபாவிலிருந்தும் எழுந்து மென்மையான புலித்தோல் போர்த்திய சாய்விருக்கையில் சாய்ந்தான். அதன் அணைப்பில் கடும் வலியை மறக்க முயலுவதைப்போல் கண்களையும் இறுக மூடிக்கொண்டான். அவனிடம் விடையும் பெறாமல் சாப்பாட்டுப் பையுடன் ஜீவன் புறப்பட்டு சென்றார்.
***
மு.குலசேகரன் – முழுப்பெயர் மு.குலசேகரபாண்டியன். திருப்பத்தூர் மாவட்டம், பாலாற்றங்கரையோரமுள்ள, பாபனபள்ளி பிறந்து வளர்ந்த ஊர். வாணியம்பாடி அருகில், புதூர் நகரில் வசிக்கிறார். ‘ஒரு பிடி மண்’, ‘ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி’ (உயிர்மைப் பதிப்பகம்) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘அருகில் வந்த கடல்’, ‘புலி உலவும் தடம்’ (காலச்சுவடு பதிப்பகம்), “உள்ளே மாட்டிய சாவி” (எதிர் வெளியீடு) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், “உற்ற சொல்லைத் தேடி” (காலச்சுவடு பதிப்பகம்) என்ற கட்டுரைத் தொகுப்பும், “தங்க நகைப் பாதை” (காலச்சுவடு பதிப்பகம்) என்ற நாவலும் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: kulasekaranvnb@gmail.com

