Homeஇதழ்கள்2026 இதழ்கள்செம்மையாக்கம் : அகலாது அணுகாது தீக்காய்வார் போல்

செம்மையாக்கம் : அகலாது அணுகாது தீக்காய்வார் போல்

யதார்த்தன்

ஆங்கிலத்தில் Editor என்ற சொல் நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஊடகவியல், சினிமா போன்ற பிற துறைகளைப் போலவே இலக்கியத்திலும் சிறப்பான அர்த்தப்பாடுகளுடன் பயன்பாட்டில் உள்ளது. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரையில் அதற்கு இணையாக விரிந்த பொருளுடைய நிகர்ச் சொல் இன்னும் உருவாகி வரவில்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் பெரியளவில் அப்பணியின் முக்கியத்துவமோ பயன்பாடோ இல்லை என்பதற்கும் அது பற்றிய விரிவான உரையாடல்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதற்குமான சான்று என்றே இதைக் கொள்ள வேண்டும். இப்பணிக்கென தமிழில் திருத்துனர், திருத்தர், பிரதி மேம்படுத்துனர், செம்மையாக்குனர் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கக் காண்கிறோம். தமிழ் இலக்கியச் சூழலில் இப்பணியைப் பற்றிய விரிவான உரையாடல்கள் நிகழ்ந்து முன்னகரும் போது அதற்கான பொருத்தமான கலைச்சொல் திரட்டி எடுக்கப்படும். பிரதி மேம்படுத்தல் அல்லது செம்மையாக்கம் இரண்டும் இப்பணிக்கு நெருக்கமான பொருளில் பயின்று வருவதால் ‘செம்மையாக்கம்’ என்ற சொல்லையே ஒரு நடுக்கோட்டை அச்சொல் மேல் இழுத்துக்கொண்டு பயன்படுத்துகிறேன்.

எழுத்தாளர் ஜெயமோகன் தன் கட்டுரை ஒன்றில் இவ்வகை இலக்கியப் பணி தொன்று தொட்டே தமிழ் இலக்கிய மரபில் இருந்து வருகிறது என்கிறார். அதையவர் ‘அரங்கேற்றம்’ என்று குறிப்பிட்டுச் சொல்கிறார். மரபிலக்கியங்கள் அவைக்கு வைக்கப்படும் முறைமையை இச்செயற்பாட்டின் முன் வடிவம் என்று இனங்காண்கிறார். ‘காவியம்’ முதலானவை அக்காலத்தில் அரங்கேற்றப்படும் போது அப்படைப்புகள் மீது கூட்டுத் திறனாய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டு அப்பிரதி மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குச் சான்றாக அப்படைப்பிற்கான ‘பாயிரம்’ அளிக்கப்படும். இப்பாயிரமளித்தல் மரபை செம்மையாக்கத்தின் முதல் வடிவம் என்கிறார். தொல்காப்பியம் அதங்கோட்டாசான் முன்னிலையிலும், கம்பராமாயணம் ஒட்டக்கூத்தர் முன்னிலையிலும் அரங்கு செய்யப்பட்டு பாயிரமளிக்கப்பட்டு பயில்விற்கு உகந்தது என்று அறிவிக்கப்பட்ட இலக்கியச் சான்றுகளை ஜெயமோகன் உதாரணங்களாகக் காட்டுகிறார். 

நவீன இலக்கியத்தில் இப்பிரதி மேம்படுத்தல் அல்லது செம்மையாக்கம் செய்தல் ஒரு விரிந்த பார்வையில் கூட்டுத்திறனாய்வாக அமைவதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சபையாக அல்லாமல் மிக அந்தரங்கமாக ஒரிருவருடன் மேற்கொள்ளப்படும் ஒருவகைக் கூட்டுத் திறனாய்வே அது. அடிப்படையில் திறனாய்வு அல்லது விமர்சனம் என்ற செயற்பாட்டில் மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை. அவை, இலக்கியத்தை அணுகவும் வாசிக்கவுமான பயில்வு, இலக்கியம் மீதான கூட்டு வாசிப்பு, இலக்கியம் மீதான மதிப்பீடு ஆகியவை. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் இப்பிரதி மேம்படுத்தும் செயற்பாட்டில் இம்மூன்று நிலைகளும் நிகழ்வதைக் கண்டிருக்கிறேன்.

‘நகுலாத்தை’ (2022) என்ற என்னுடைய முதல் நாவலை எழுதுவதற்கு இரண்டு வருடங்களுக்கு மேலே எடுத்துக் கொண்டேன். அப்பொழுது என்னுடைய சிறுகதைத் தொகுப்பின் பதிப்பாளரும் ஆக்காட்டி இதழின் ஆசிரியருமாக இருந்த எழுத்தாளர் தர்மு பிரசாத் என்னுடன் எப்பொழுதும் இலக்கியம் சார்ந்த உரையாடலில் இருந்தவர். இலக்கியத்தால் மட்டும் அணுக்கமாகி இன்று வரைக்கும் அதனாலேயே நட்புடனும் உரையாடலிலும் இருப்பவர். என்னுடைய நாவல் பகுதிகள் சிலவற்றை ஆக்காட்டி இதழில் பிரசுரிக்கவும் செய்தார். அவர் என்னுடைய முதல் செம்மையாக்குனரும் கூட. அதே போல எழுத்தாளர் கிரிசாந் ஆரம்பத்தில் கவிதைகளிலும் சமூக செயற்பாட்டிலும் இணைந்து பயணித்தவர். இலக்கியமே எங்களுடைய நட்பின் அடிப்படை என்பதால் அவருடன் புனைவிலக்கியத்தில் செம்மையாக்கல் சார்ந்த தொடர்புகள் ஆரம்ப நாட்களில் குறைவு. சமூக செயற்பாட்டு அமைப்பு வேலைகள் சார்ந்து எழுதும் புனைவல்லாத கட்டுரைகள், பத்திகளில் அவர் என்னுடைய செம்மையாக்குனராக இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய இணையத்தளத்தில் ‘அழிகளம்’ என்ற நாவலை அவர் தொடராக எழுதத் தொடங்கும் போது அவர் எங்களுடன் நாவல், சிறுகதை போன்ற கதை சார் புனைவுகள் பற்றிய உரையாடலுடனும் இணைந்து கொண்டார். தர்மு பிரசாத், கிரிசாந், யதார்த்தன் மூவரும் புனைவிலக்கிய கூட்டு உரையாடலைப் போலவே, ஒருவருக்கு ஒருவர் செம்மையாக்குனராகவும் மாறியதும் ‘தன்னாலே நிகழ்தவை’ இவ் உரையாடல்களுக்கு இடையே கிரிசாந், ‘கொடிறோஸ்’ (2025) என்ற குறுநாவலை எழுதிப் பிரசுரித்தார். கொடிறோஸ் எங்களுடைய உரையாடலின் ஆரம்ப நாட்களைச் செழுமைப்படுத்தியது. இந்தக் கூட்டு உரையாடலை வளர்த்தெடுத்தது. அதன் பின்னர் நான் என்னுடைய புது நாவலை ‘காளம்’ என்று தலைப்பிட்டு என்னுடைய தளத்தில் தொடராக எழுதத் தொடங்கி ஒரு கட்டத்தில் அந்நாவல் என்னை வேறெங்கோ அழைத்துச் செல்லத் தொடங்கியது. காளத்தில் இருந்து தன்னை உதறி விடுவித்துக் கொண்டு வேறொரு பக்கம் இழுத்துச் சென்றது. அடிப்படையான கேள்வி, மாறியது அல்லது உருவாகி வந்தது. கிரிசாந்தும் தர்முவும் அவர்கள் திட்டமிட்டபடி அடுத்த நாவல்களை எழுதத்தொடங்கினார்கள். கிரிசாந் எழுதி முடித்து தற்பொழுது பிரசுரத்திற்கு தயாராகி இருக்கும் ‘தத்வமஸி’ என்ற நாவலும், தர்மு பிரசாத்தின் ‘சிறகை’ என்ற குறுநாவலும் சில மாதங்களுக்கு முன்பே இறுதி வடிவம் பெற்று நிறைந்தன. என்னுடைய ‘தோறை’ நாவலை ஒக்டோபர் மாதம் நிறைவு செய்து பிரசுரத்திற்கு அனுப்பி வைத்தேன். 

ஒரு எழுத்தாளரின் இரண்டாவது நாவல் என்பது அவர் எந்தச் சாட்டும் சொல்ல முடியாதபடிக்கு நாவலாக ஆகி இருக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்து அவர் சில பத்து வருடங்களைச் செலவழிக்க வேண்டியிருக்கும். அல்லது அதே போன்ற நாவல்களைப் படியெடுத்தது போல் சம்பவங்களை மாற்றி மாற்றி எழுதி சலித்துப் போய் எழுத்தையே கைவிடவும் கூடும். எங்கள் மூவருக்கும் நல்லூழாக இந்த முக்கோண உரையாடல் வெளி எங்களை ஒரே சரட்டில் நிறுத்தி அதற்கென உழைப்பைக் கோரி பெற்றுக் கொண்டது. அடிப்படைக் கேள்விகளை, வடிவங்களை எல்லாம் தெளிவித்து அளித்தது. முக்கியமாக எழுதுதலே அதன் முழு நிறைவும் நோக்கம் என்பதைத் தெளிவித்தது. அதில் ஒரு பகுதியாக எங்களுடைய பரஸ்பரமான செம்மையாக்கல் பணிகளே நாங்கள் விவாதிக்கும், கற்றுக்கொள்ளும் இடமாக மாறிக் கொண்டது. 

ஏன் இவ்வகைச் செம்மையாக்கம் எழுத்தாளருக்கும் படைப்பிற்கும் தேவை என்பதை இப்படிச் சொல்லிப்பார்க்கிறேன். இலக்கியம் என்பது கண்டுபிடித்து எழுதுவது கிடையாது. எழுதிக் கண்டுபிடிப்பது. முழுக்க முழுக்க எழுத்தாளரின் அகப்பயணம் சார்ந்தது. நல்ல எழுத்தாளர் தான் எழுதும் காலத்தில் அப்பிரதியுடனே வாழ்கிறார். அவருடைய ஆன்மா அங்கேயே அலைந்து திரிந்து படைப்பைத் தேடித்திரிகிறது. அவருடைய புற வாழ்வு சிறுத்து அர்த்தமற்றதாகிப் போகிறது. ஏறக்குறையப் பித்து நிலை. கொந்தளிப்புக் காலம். குறுந்தொகைப் பாட்டு ஒன்று, சூர்கொண்ட மலைத் தெய்வத்திற்குப் படைத்த பொன் போன்ற தினையை மயிலொன்று அறியாது உண்டு விட்டு ‘தெய்வமாட்டியைப்’ போல் வெய்துற்று நடுங்குகிறது என்கிறது. கிட்டத்தட்ட அதே நிலைதான். 

படைப்பை முடித்த பிறகும் அதில் இருந்து வெளிவரும் நிகழ்வில் இச்செம்மையாக்கல் செயற்பாடும் இணைகிறது. குறிப்பாகச் சொன்னால் படைப்பில் உள்ள இடைவெளிகளைச், சாத்தியங்களை முக்கியமாக அதன் வடிவத்தைக் கவனித்துச் சீர் செய்ய வேண்டி இருக்கும். வெட்டித்தள்ளவோ, சேர்த்துக் கொள்ளவோ, திரும்ப எழுதி அளிக்கவோ சாத்தியங்களும் தேவைகளும் இருக்கும். அப்பித்திலிருந்து மீண்டு கொண்டிருக்கும் போது இவற்றைக் கவனித்துத் திருத்துவதில் படைப்பாளிக்கு உளம் கூடுவதில்லை. ஏனென்றால் எழுதப்பட்டிருப்பது அவருடைய அகம். அதை அதே அகத்தின் விலக்கம் இல்லாமல் பார்த்தறிய முடியாது. எளிய எழுத்தாளருக்கு வேண்டுமானால் அது சாத்தியமாகலாம். முழுக்க முழுக்க மூளைச் செயற்பாட்டின் தனக்கே மேம்படுத்திக் கொண்ட ‘pattern’ வகை எழுத்தில் உள்ள இரண்டாம் தர எழுத்தாளருக்கு, வணிக எழுத்தாளருக்கு சாத்தியப்படும். ஆனால் முற்றிலும் தன் நனவோடும் உள்ளுணர்வோடும் ‘தெய்வமாட்டி’ மீழும் படைப்பாளிக்கு தன் படைப்பை மூன்றாம் தரப்பாக நின்று காண்பதில் சிக்கல்கள் உள்ளன. நகுலாத்தையை எழுதும் போது நான் அதை உணரவில்லை. நகுலாத்தையின் முதல் வரைவை வாசித்த தர்மு பிரசாத் ‘பாத்திரங்களின் உரையாடல் பேச்சு மொழியில் இருப்பது பிரச்சினையில்லை’ ஆனால் ஆசிரியரின் சொல்லும் மொழியும் அதே வட்டார வழக்கின் பிரயோகம் செறிந்திருப்பது நாவலைக் குலைக்கிறது, என்றார். நாவலின் முதலாவது அத்தியாயத்தை சீர் செய்து அனுப்பி, ‘இதை வாசித்துப் பாருங்கள், இந்த வகையான திருத்தங்களையும் மேம்படுத்தல்களையும் செய்ய முடியுமா பாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அப்பொழுது என்னால் அந்த வேறுபாட்டை மனம் கொள்ளவோ அதன் பிரச்சினையைச் சென்றடையவோ முடியவில்லை. என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அதை அப்படியே விட்டேன். நகுலாத்தை நாவலின் மொழி சிதறிய வடிவையும், தனக்கே உரித்தான தனிச் சீர்மையையும் தவற விட்டது அதனால் தான் என்பதை வெகுகாலம் கழித்து அந்நாவலை விட்டு விலகி மூன்றாம் தரப்பைப் போல் நின்று வாசிக்கும் போதுதான் அறிந்து கொண்டேன். அதன் ஆதாரமான பிரச்சினையே அதன் மொழியைச் சீர் செய்யாமல் விட்டதுதான் என்று புரிந்தது. இத்தனைக்கும் அது பரவலாக வாசிக்கப்பட்ட படைப்பு. பொருத்தமான எடிட்டிங் செய்யப்பட்டிருந்தால் அது இன்னும் மகத்தான இடத்தைத் தொட்டிருக்கும். விரிந்து ஆழம் சென்றிருக்கும். முதல் நாவலே எனக்கு அவ்வளவு தூரம் நல்ல நாவலாக அமைந்தது. அதில் இருந்து கற்றுக் கொள்ளவும் முடிந்தது. நாவல் எழுதுவதற்குரிய பயிற்சி என்பதன் முதல் பாடம், யோசிக்காமல் அதை எழுதத் தொடங்குவதுதான். 

அதன் பின்னர் நாவல் எழுதுவது பற்றி பயின்றேன். சில நாவல்களை எழுதிக் கைவிட்டேன். சரியான கேள்வியும் கருவும் திரண்டு வரக் காத்திருக்கும் போதுதான் ஓர் அடிப்படைக் கேள்வியை எதிர் கொள்ள நேர்ந்தது. அதைக் கொண்டு காளத்தை தொடராக எழுதி அது வேறொன்றாக ஆகி கடைசியில் ‘தோறை’ என்று பெயரிடப்பட்டு பிரசுரத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் என்னுடைய இரண்டாவது நாவலாக ஆகியது. தோறையை எழுதிய நாட்களையும், முதல் வரைபை திருத்தி எடுத்த நாட்களையும் இப்பொழுது மீட்டிப் பார்க்க முடிகிறது. 350 பக்கத்தையும் எழுதி முடித்தவுடன், தினையை உண்ட மயிலின் நடுக்கோடும் மிதப்போடும் கிரிசாந்திற்கும் தர்முவிற்கும் அனுப்பிவிட்டு காத்திருந்தேன். இருவரும் வாசித்து, தங்களுக்குள் மந்திராலோசனைகளை முடித்துக் கொண்டு தனித்தனியாக என்னுடன் உரையாடினார்கள். இம்முறை நான் தயாராக இருந்தேன். மனதை விரிவாக்கிக் கொண்டிருந்தேன். கொடிரோசிலும் தத்வமஸியிலும் கற்றுக் கொண்டவை, விவாதித்தவை காத்திருந்தன.

‘தோறை’ கதையாக நன்றாகவே வந்திருந்தது என்பது இருவரினதும் கருத்து. ஆனால் எதோவொன்று அதை மூடி கதையை இணைந்து திரண்டு செல்லவிடாமல் வைத்திருக்கிறது என்றார்கள். இடை வெளிகளைச் சாத்தியங்களை விவாதித்தார்கள். முக்கியமான இடங்களில் நாவலின் ‘சொல்லாமல் காட்டு’ என்ற அடிப்படை மந்திரம் நிகழாமல் இருப்பதே நாவலின் அடிப்படைக் கேள்வியும் விரித்தெடுக்கப்பட வேண்டிய கருப்பொருளும் நிகழ்வதை சருகுகள் பாசனப் பாத்தியை அடைப்பது போல் அடைத்துக் கொண்டு நிற்பதைப் போலுள்ளது என்றார்கள். அத்தியாயங்கள் இயல்பெனக் கோரப்படாமல் நாவலின் ‘shift’ என்ற பொறிமுறையில் சிடுக்குகள் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். தேய் வழக்குகளை, சரியாக கடத்தும் வகையில் இருக்காத உருவகங்கள், படிமங்களைப் பற்றியெல்லாம் விவாதித்தோம். அதன் பிறகு என்னால் நாவலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இரண்டு மாதங்கள் நாவலோடு இருந்தேன். நீர்ப்பாத்தியை மூடியிருந்த சருகுகளை வெட்டி அகற்றினேன். என்னுடைய கேள்வியை தீண்டி மொழியில் ஓட விட்டேன். வளர்த்தெடுத்தேன். கல்லைப் பொழிந்து சிலையை மீட்டெடுப்பதைப் போல நாவலை மீட்டெடுத்தேன். வடிவம் சார்ந்தும் கதை சார்ந்தும் எளிய உறவுச்சிக்கல்களுக்குள் சிக்கியிருந்த நாவல் தன்னுடைய நுண்மையை கண்டடைந்தது. பேருருவாக விரிந்து சென்றது. வெவ்வேறு படிமங்களை நிகழ்த்த இடமளித்தது. ஒவ்வொரு அத்தியாயமும் நானா எழுதியெடுத்தேன் என்று நானே மலைத்து நிற்கும் அளவிற்கு எனக்குள் அறியாத இடங்களை எழுதி எடுத்தது. மீண்டும் மெய்யான பித்து நிலை. நாவலின் இரண்டாவது Draft நாவலாக ஆகி விட்டது என்று எனக்கே புரிந்தது. அல்லது அகம் நன்கறிந்தது. ஏனென்றால் நானே அதைப் பயின்றேன். கதைகளின் முன், அதன் நாடகத் தருணங்களின் உச்சிகளின் முன் திகைத்து நின்றேன். கிரிசாந் வாசித்து விட்டு ‘நான் நினைக்கவே இல்லை நீ இப்பிடி ஒண்டை அந்த முதல் வடிவத்திலை இருந்து மீட்டுக் கொண்டு வருவாய் எண்டு, எப்படிச் சாத்தியப்பட்டது என்ன செய்தாய்?’ என்று கேட்டார். அப்பொழுது அவர் தன்னுடைய இரண்டாவது குறுநாவலைத் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தார். தத்வமஸியை முடித்த கையோடு அதைத் தொடங்கி விட்டார். கொடிறோசிலும் தத்வமஸியிலும் அவருடைய எடிட்டர்களில் ஒருவராக அவருடனும் தர்முவுடனும் நிகழ்த்திய உரையாடல்களும் விவாதங்களும் எப்படி நாவலைப் புரிந்து கொள்ள, அடிப்படைக் கேள்வியை தெளிவாக்க உதவியது என்று விளக்கினேன். வடிவம் , தரிசனம், அதன் படிம உருவாக்கம், உரையாடல் உச்சங்கள், பண்பாட்டு பின்புலம், வரலாற்றுப் பின்புலம் பற்றிய அடிப்படைகளை புனைவாக நிகழ்த்திக் கொள்ள எங்ஙனம் உதவியது என்பதை அவருக்கு நானே கண்டடைந்த என்னுடைய சொந்த உதாரணங்களுடன் விளக்கினேன். என்னால் அப்பொழுது அவருக்கு அவற்றைத் தொகுத்துச் சொல்ல முடிந்தது. அவரும் தர்முவும் கூட தங்களுக்கான புரிதல்களைப் பகிர்ந்து கொண்டனர். ஏற்கனவே முன்னோடிகளின், வழியாக அறிந்திருந்தாலும். சொல்லெனக் காதில் விழுந்திருந்தாலும். சொந்த உதாரணங்களைக் கண்டடைந்து அவற்றை முன் வைத்து விவாதிக்கும் போது அத்தனை புரிதலும் நிறைவும் நிகழ்கிறது. மெய்யான கற்றுக்கொள்ளல் அதுதான் என்று சொல்வேன். நாவல் என்று வரும் போது செம்மையாக்குனர் வரலாறு, தத்துவம் போன்றவற்றிலும் செவ்வியல் இலக்கியம், சமகால இலக்கியம் குறித்தும் அதனோடு இயங்கும் சக அறிவுத்துறைகள் குறித்தும் அறிதலும், சொந்த அபிப்பிராயங்களைச் சொல்லத் தக்கவராயும் இருப்பது சேமம். எனக்கு வாய்த்த இருவரும் மேம்பட்ட வாசகர்கள். நல்ல அணுக்கர்கள்.

நம்முடைய செம்மையாக்குனர்கள் அடிப்படையில் தேர்ந்த வாசகராக இருக்க வேண்டும். எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல் அவரொரு ‘இலட்சிய வாசகராக’ இருக்க வேண்டும். தன் வாசிப்பினாலும் விரிந்த மனதினாலும் வாழ்க்கையை தனக்கே உண்டான பார்வையால் அணுகக் கூடியவராகவும், விமர்சனப் பார்வையும் அழகியல் சார்ந்த அடிப்படைகளும் கொண்டிருக்க வேண்டும். முக்கியமாக இலக்கியத்தில் சமரசமில்லாமல் முகத்துக்கு அஞ்சவோ, பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டவோ தயங்கக் கூடாது. 

ஓர் சம்பவம், 

அண்மையில் தமிழ்நாட்டில் வெளியாகி கணிசமாக வாசிக்கப்பட்ட நாவல் ஒன்றைப் பற்றிய கூட்டு உரையாடலில் கலந்து கொள்வதற்காக அதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடும் போது அந்த நாவலுக்கு வந்திருந்த விமர்சனங்களைக் கவனித்தேன். அதை எழுதி இருந்தவர்கள் அந்நாவல் ஆசிரியரின் நண்பர்கள். அவர்களில் சிலரை நானும் அறிவேன். எல்லோரும் சகட்டு மேனிக்கு புகழ்ந்து மட்டும் வைத்திருந்தார்கள். நாவலில் உள்ள நல்ல விசயங்களை மட்டும் சுட்டி எழுதியிருந்தார்கள். நானோ அந்த நாவல் நன்றாக வந்திருக்க வேண்டும் என்ற உச்சுக் கொட்டலுடனேயே வாசித்து முடித்தேன். அந்த நாவலாசிரியருக்கு நல்ல ‘எடிட்டர்’ஒருவர் வாய்த்திருந்தால் அந்த நாவல் மேம்பட்ட ஒன்றாக வந்திருக்கும் என்று தோன்றியது. ஏனெனில் அதில் புறவயமாக இருந்து அவதானிக்க கூடிய விசயங்களில் தான் அந்த நாவலின் சீரைக் குலைத்துக் கொண்டிருந்தன. நாவலின் முன்னுரையில் இவர்களிடம் எல்லாம் நாவலைக் காட்டினேன் என்று சிலரைக் குறிப்பிட்டிருந்தார். அதில் ஏறக்குறைய அனைவருமே அறியப்பட்ட இளம், மூத்த எழுத்தாளர்கள். அதில் சிலருக்கு அவ் இடைவெளிகள், சாத்தியங்கள் கண்ணில் படாமல் இருந்திராது. ஆனால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று என்னால் பார்க்க முடிந்தது. சக படைப்பாளிகளை நண்பர்களாக கொள்ளும் போது அவர்கள் பல சமயங்களில் தங்களின் எல்லைகளுக்குள்ளே நிற்க விரும்புவர். தங்களின் சொற்கள், சுட்டிக்காட்டும் இடங்கள் படைப்பாளியின் தன்னகங்காரத்தைத் சீண்டி கசப்பைத் தருமோ என்று ஒரு கணம் தயங்கக் கூடும். அதனால் ‘நல்லாருக்கு’ என்பதுடனோ, சில மேலோட்டமான அபிப்பிராயங்களுடனோ ஒதுங்கிக் கொள்ளக் கூடும். இவ்விடத்தில் எல்லா மூத்த ஆசிரியர்களும் செம்மையாக்கம் பற்றி முன்வைக்கும் எச்சரிக்கை ஒன்று உண்டு. இரு பக்கங்களைக் கொண்டது அது. ஒன்று சக படைப்பாளியின் மேற்சொன்ன தயக்கம். எல்லைப்பாடு. இரண்டாவது தன்னுடைய சிந்தனை, பார்வை, என்பவற்றைத் திணிக்கக்கூடிய அல்லது அவரே அறியாது அதைச் செய்யவோ கூடும். எனவே செம்மைப்படுத்துனரின் எல்லை என்ன என்பதை வரையறுத்துக் கொள்வது முக்கியம்.

செம்மையாக்கம் செய்பவர் பிரதியின் மொழி, வடிவச்சீர்மை, நுண்தகவல்கள் போன்ற புறவயமாக அவதானித்துச் சுட்டக் கூடிய இடங்களில் தன் கவனத்தைச் செலுத்தினால் போதுமானது. படைப்பின் கருவிலோ, கருப்பொருளிலோ, அது எதிர் கொள்ளும் கேள்விகளிலோ தலையீடுகள் செய்யக் கூடாது. கூடவே கூடாது. ஏனெனில் அவை எழுத்தாளருடைய அகத்தில் நிகழும் முழு அந்தரங்கமான நிகழ்வு. அந்தப் படைப்பின் மையமான ஆன்மா. அதன் தரிசனத்தின் வழி. சொல்லப் போனால் அதை எழுத்தாளரே கண்டுபிடித்து வளர்த்தெடுப்பது. அதுவே எழுத்தின் முதன்மையான பணி. எனவே அதில் செம்மையாக்குனருக்கு எந்தப் பங்களிப்பும், தலையீடும் இருக்க அவசியமில்லை. அத்தோடு மொழி, வடிவம், நுண்தகவல்கள் என்று வரும் போதும் கூட தன்னுடைய கருத்தை. நேர்மையுடனும் பிரதி மேம்பட வேண்டும் என்ற முழு அக்கறையுடனும் கறாராகவும், தர்க்கங்களுடனும் செம்மைப்படுத்துனர் எழுத்தாளரிடம் சொல்லிவிடவேண்டும். தேவைப்பட்டால் விவாதிக்கவும் செய்யலாம். ஆனால் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் எழுத்தாளரே! அவ்வுரையாடலின் பின்னர் பிரதியில் அது இடம் பெறாமலோ திருத்தப்படாமலோ இருக்கும் போது அவரே அதற்கான காரணங்களைச் சொன்னாலும் சொல்லா விட்டாலும் அது பற்றி எதுவும் எண்ணாது விட்டு விட வேண்டும். இது இயல்பென நிகழக்கூடிய புரிதலும் இணக்கமும் கொண்ட உளத்தினாலும்; கொஞ்சம் உயர்த்திச் சொல்லப்போனால் மேலான அன்பினாலும் இலக்கியத்தை வாழ்க்கையாக ஆக்கிக் கொள்வதன் வழியாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய ‘உறவுத்தன்மை’ ஒன்றினாலேயே சாத்தியம். குறளின் சொல்லில் சொன்னால் ‘அகலாது அணுகாது தீய்க்காய்பவரின்’ இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இச்செம்மையாக்கல் பயணத்தில் கிரிசாந், தர்முவைத் தவிர எனக்கு அணுக்கமான வாசிக்கக் கூடிய நண்பர்கள் சிலரிடமும் நாவலைக் கொடுத்து வாசிக்கச் சொல்லி அபிப்பிராயங்கள் கேட்டுக் கொள்வேன். சிறிய நுண்மையான அவர்களின் தனிப்பட்ட கவனப்படுத்தல்கள் சார்ந்த அவதானங்கள் பயனளித்ததுண்டு. நண்பர்களில் கனிஷா, கமலாபரன், ரொனால்ட், ஆகியோருக்கு வாசிக்கக் கொடுப்பேன். கனிஷா பெண்கள் சார்ந்தும், நாவலில் தேய் வழக்குகள் மொழி இடறல்கள் சார்ந்தும் நுட்பமாகக் கவனித்துச் சொல்வார். தோறை நாவலில் அவருடைய நுட்பமான கவனப்படுத்தல்கள் முக்கியமானதாக அமைந்தன. அதைப் போல் கமலாபரன் உள்ளூர் மரபுகள், வழக்கங்கள், சார்ந்த என்னுடைய களங்கள் தொடர்பிலும், மொழி அடையக் கூடிய கவிதைத் தன்மை பற்றியும் கவனிக்கக் கூடியவர், ரொனால்ட் நுண் தகவல்கள் சார்ந்து விவாதிக்கக் கூடியவர். வசிகரனைச் சந்திக்கும் போது நாவலின் சில பகுதிகளை வாசித்துக் காட்டுவேன். அவர் சொற்தேர்வுகள் சார்ந்த அபிப்பிராயங்களைப் பகிர்வார். 

செம்மையாக்குனரின் பக்கத்தில் இருந்து கொண்டு படைப்பை அணுகும் போது அவர் , தன்னை ஒரு வாசகராக, படைப்பிற்குப் பணிந்து அதை இலக்கியப் பிரதியாகக் கற்பனையில் விரித்துக் கொண்டு அதன் படிமங்கள், உருவகங்கள், விவரணைகள், தருணங்களை பொருள் கூட்டி வாசித்து அனுபவப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் தான் ஏதோ பிழை பிடிக்க வந்துள்ளோம் என்ற எண்ணத்தோடு படைப்பினுள் இறங்கும் போது அதுவொரு வறட்டுத்தனமான ‘மெய்ப்புப் பார்க்கும்’ பணியாகவோ, உச்சமாக முரணாகவோ கசப்பாகவோ கூட எஞ்சலாம். 

சகபடைப்பாளியை குறிப்பாக, மொழி சார்ந்து இயங்கக் கூடிய ஒருவரை செம்மையாக்குனராக கொள்ளக் கூடாது என்று மூத்த படைப்பாளிகள் பலரும் எச்சரிப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அவருடைய நோக்கும் படைப்பு மனமும் இந்தப்படைப்பை தன்னுடைய நோக்கினால் வளைக்கவோ அவரே அறியாமல் சிதைக்கவோ கூடும். அதே போல் கொள்கைகள், சித்தாந்தங்கள் மீது இயங்கும் கடும் நம்பிக்கையாளர்கள், வழிபாட்டு உணர்வுள்ளவர்களையும் விலக்கி விட வேண்டும். அதனால் தான் ‘விரிந்த உள்ளமும் அணுக்கமும் கொண்ட தன் எல்லைகளை உணர்ந்த அணுக்கமான ஒருவர்’ என்பதை அழுத்திச் சொல்கிறோம். 

மேலை நாடுகளில் இலக்கியத்தில் இயங்குபவர்கள் தங்களின் பதிப்பாளரையே எடிட்டராகவும் கொண்டிருக்கும் போது அவர்கள் சந்தை நிலவரங்கள், பொது அபிப்பிராயங்கள் சார்ந்து ‘இப்படி எழுது’ என்பதான trend set களை அவதானித்துச் சொல்லி அதை முறைசெய்து படைப்புகளை மெய்ப்புப்பார்க்கும் முறை தமிழிலிலும் இருக்கிறது. அவ்வகையான பதிப்பாளர்கள் அணுக்கமாக இருந்தாலும், படைப்பாளியின் மேல் அக்கறையும் கொண்டு இருந்தாலும் கூட அது செம்மையாக்கம் அன்று. அது ஒரு வகையில் படைப்பாளி தன் உணர் கொம்புகளை ஒடித்துக் கொள்வது. புகழையோ நலன்களையோ நோக்கி ஓடுவது. அவரால் வெகுதூரம் ஓடமுடியாது. அது வெறும் தன்னழிவு. 

புதிதாக எழுத வருபவர்கள் ஒரே படைப்போடு விடைபெறுவதும். அல்லது முதல் படைப்பின் ‘pattern’ சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும் இதனாலேயே. அதேவேளை தங்களுடைய கதையையோ, தன்வரலாறு போன்றவற்றையோ, அபபுனைவுகளையோ எழுதுவதற்கு விரும்பும் ஒருவர். அதை தான் அறிந்த வரையில் முதற் பிரதியாக எழுதிக் கொண்ட ஒருவர், ஏற்கனவே இலக்கியத்தில் இயங்கும் படைப்பாளியையோ வாசகரையோ அணுகும் போது அதில் செம்மையாக்குனர் என்ற பாத்திரத்தின் பணி எத்தகையது என்ற கேள்வி உள்ளது. 

செம்மையாக்கம் நிகழும் போது எந்தவகைச் சூழ்நிலை என்றாலும் அது படைப்பாளியையும், செம்மைப்படுத்துபவரையும் சார்ந்தது. அவர்களுடைய அந்தரங்கமான உரையாடல். அதில் உள்ள கொடுக்கல் வாங்கல்கள் இருவரும் செய்து கொள்ளக் கூடிய ஒரு வகை இணக்கம். நாம் வாசிக்கும் போது பொருட்படுத்த வேண்டியது படைப்பையும் அதன் அழகியலையும் அது அளிக்கும் நம்முடைய வாசிப்பையும் மட்டும் தான். நாம் கேள்வியை படைப்பை முன்னிட்டே கேட்க முடியும். தற்புனைவோ தன்வரலாறோ அது அதை எழுதுபவர் அதை எப்படி வரையறுக்கிறார். என்னவாக முன்வைக்கிறார் என்பதை மட்டுமே பொருட்படுத்த வேண்டியிருக்கும். நீ பொய் சொல்கிறாய் உண்மை சொல்கிறாயா என்ற கேள்விகள் எல்லாம் அபத்தம். செம்மையாகுனர் தன்னளவில் படைப்பாளி தெரிவு செய்து கொள்ளும் நபர் மட்டுமே. அத்தெரிவும் உறவும் அந்தரங்கமானது. அவர்களின் எல்லைகளும் கொண்டு கொடுத்தல்களும் அவர்களுடைய தெரிவுகள். அதில் தலையிடுவது போல் அதை தீர்ப்பிடுவது போல் அயோக்கியத்தனம் வேறில்லை.

சமூக வலைத்தள மாந்தர்களை இலக்கிய உரையாடல்களுக்குள் எடுக்கத் தேவையில்லை. அவர்கள் நடத்தும் பெரும்பாலான தாக்குதல்கள் இடுப்பிற்கு கீழே அடிப்பவை. விவாத அடிப்படைகளோ, அறமோ, நாகரீகமோ அற்றவை. சராசரிகளுடன் விவாதத்திற்கு இறங்குவது தற்கொலைக்கு சமானம். தமிழில் இன்னும் முறையாகக் கலைச்சொல் கூட அடையப் பெறாமல் இருக்கும் செம்மையாக்கம். அல்லது பிரதி மேம்படுத்தும் பணி தொடர்பில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்கள் போலில்லாமல் பொறுப்புடன் தொடர்ச்சியாக இயங்கும் தங்களுக்கென்று விவாத முறைகளை, விமர்சன முறைகளை வளர்த்துக் கொண்டவர்களுடனும், அவற்றை அடைவதற்கு நேர்மையான விழைவுள்ளவர்களின், பங்குபற்றுவோரின் கூட்டு உழைப்பினாலும் உருவாகி வரும் அறிவியக்கத்துடன் இவ் விவாதங்கள் இணைய வேண்டும். புனைவு புனைவல்லாத இரண்டு வெளிகளிலும் அதன் பங்களிப்பு நிகழ வேண்டும். 

***

யதார்த்தன்: இயற்பெயர் பிரதீப் குணரட்ணம். இலங்கையைச் சேர்ந்தவர். மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் என்ற கட்டுரைத் தொகுப்பும், நகுலாத்தை எனும் நாவலும், வெளியாகியிருக்கிறது. புதிய நாவல் தோறை வெளியாகவிருக்கிறது. தொடர்ச்சியாக இலக்கியத்தில் விமர்சன மரபு குறித்தும், பண்பாட்டு அசைவுகள் குறித்தும் விரிவாக எழுதி வருபவர். சமகாலத்தில் சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருவதுடன் தற்பொழுது இவருடைய இணையத்தளமான yatharthan.com இல் தொடர்ந்து எழுதி வருகிறார். மின்னஞ்சல்: pratheepkunaradnum@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here