Homeஇதழ்கள்2026 இதழ்கள்இலவந்திகை சோலை

இலவந்திகை சோலை

G. சியாமளா கோபு

புகார் நகர், காதலனைத் தேடி ஓடி வந்து அடைக்கலமாகும் காதலியைப் போல தலைக்காவேரியில் உற்பத்தியாகும் காவேரி ஆறு நீண்ட தூரம் ஓடி, மிகுந்த ஆவலுடன் காதலனாம் கடலை வந்து சேரும் சங்குமுகப் பகுதியான கடற்கரையானது இந்திர விழாவின் இடைப்பட்ட நாட்களின் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும் என திருவிழா கோலம் பூண்டிருந்தது. 

இந்திரா விழா மருத நிலத்தில் மழை வேண்டி இந்திரனுக்கு சித்திரை மாதத்து பௌர்ணமி தொடங்கி இருபத்தி எட்டு நாட்கள் எடுப்பது. பூலோகத்தினர் மட்டுமன்றி இந்திர லோகத்திலிருந்தும் தேவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கூடியது. மனிதர்களின் ஆர்ப்பாட்டம் மட்டுமன்றி இந்திர லோகத்து தேவர்களும் சேர்ந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதை அவரவர் கற்பனைத் திறனால் மனக் கண்ணில் கண்டு களித்துக் கொள்ளவேண்டியது. 

இந்திர விழா என்பதால் இந்திர லோகத்தைப் போல இன்பத்தை மட்டும் கொடுத்தும் பெற்றும், பெற்றதை சிதறியும், சிதறியதை சேர்த்துப் பிடித்தும் என உற்சாகமாக இருந்தது. பெண்கள் பித்தளை அண்டாக்களில், மஞ்சள் கலந்து வைத்திருக்கும் நீரைத் தங்களை மணமுடிக்கும் முறையினரின் மீது பீய்ச்சி அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். எதிரில் அகப்பட்டுக் கொள்ளும் முறை மாப்பிள்ளைகளின் கன்னத்தில் வண்ணப்பொடியை கண்ணிமைக்கும் நேரத்தில் பூசி விட்டு மறைந்து நின்று போக்குக் காட்டி விளையாடினர். ஒரே சிரிப்பு, ஆர்ப்பாட்டம் அந்த இடமே இளமையின் வளமையால் நிறைந்திருந்தது. 

மருவூர்ப்பாக்கத்தின் பகல் பொழுதில் கூடும் நாளங்காடிகளிலும், இதோ இந்த அந்திப் பொழுதில் கூடும் அல்லங்காடியிலும் யவனர்களின் வணிக வீதிகளிலும் சங்கு, கண்ணாடி வளையல்களையும் சிப்பி, முத்து சங்கு என பல்வேறு மாலைகளையும் வாங்கி அணிந்திருந்த தங்கள் புத்தம் புது மனைவிமார்களின் மெல்லிய உடல் தன்னுடலுடன் லேசாக உரசி வர உடல் சிலிர்த்த புதிதாக திருமணமான இளம் காளையர்களுக்கு தங்களுக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பு இந்த கடற்காற்றினாலா அன்றி உடன் வரும் கற்புநிலைத் தவறா காதல் மனைவியினாலா என இனங்காண முடியாத ஒரு பரவசத்தில் இருந்தார்கள். 

அல்லங்காடியில், யவனர் ஒருவரின் கடையில் பணியிலிருக்கும் தன் தாயின் இளவலான நாகநாதனைக் காண வந்தாள் தேவகி. இவளைக் கண்டதும் முகம் மலர, முன்னே குவித்து வைக்கப்பட்டிருந்த முத்துக்குவியலை ஒரே தாண்டாக தாண்டிக் கொண்டு அவளருகில் குதித்தான். அவன் ஆட்டத்தையும் பாட்டத்தையும் கண்ட கடையின் முதலாளி நாகநாதனை கண்டு போ போ என்று சிரித்தவாறே ஜாடை செய்தான். ஒரு யவனராக இருந்த போதும் அவனும் இளம் ஆண்மகனல்லவா! காதலை அறியாதவனா என்ன! அவனை அழைத்து கொஞ்சம் பொற்கழஞ்சுகளைக் கொடுத்து விட்டான். இருவருக்குமிடையே பேச்சில்லாமலே ஜாடையிலே உரையாடல் நடப்பதைக் கண்டு புன்னகைத்தாள் தேவகி. 

இடையோடு கைக் கொடுத்து வேக வேகமாக கடற்கரை நோக்கி அவளை இழுத்துக் கொண்டு சென்றான் நாகநாதன். போகும் வழியில் சுட்ட மக்காச்சோளக் கதிர் ஒன்றை வாங்கிக் கொண்டார்கள் இருவரும். அவளுக்கு தான் வாங்கி வைத்திருந்த ரெண்டு ஜோடி முத்து வளையலை அவளிடம் கொடுத்தான். அவள் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த அதிரசம் முறுக்கு போன்ற தின்பண்டங்களை அவனுக்கு கொடுத்தாள்.

“எதற்கு இப்படி முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாய்?”, என்று கேட்டான் நாகன். 

“இதை யாருக்கும் தெரியாமல் உனக்கு கொண்டு வர எத்தனை இடைஞ்சல் தெரியுமா?”

“ஏன்?”, வாயில் ஒரு முறுக்கை எடுத்து கடித்து “யப்பா, என்ன சுவை”, என்று ரசித்து உண்டான்.

“என் தோழிகளிடம் இருந்து இதைக் காப்பாற்றிக் கொண்டு வருவது அத்தனை சுலபமா என்ன?”

“உன் மாமனுக்கு கொண்டு செல்கிறேன் என்று சொல்வது தானே”

“மாமனா. உக்கும்”, என்று கழுத்தை நொடித்தாள் அவள்.

வாயில் இருப்பதை அவசர அவசரமாக முழுங்கியவாறே கேட்டான். “ஏன்?”

“உன்னை பார்க்க போகிறேன் என்றால் வீட்டில் விடுவார்களா என்ன?”

“உன் அம்மா விட மறுத்து விட்டாளா?”, என்று ஆச்சரியத்துடன் கேட்டான். தமக்கையின் மீது அத்துணை நம்பிக்கை அவனுக்கு.

“அம்மா இல்லை. அப்பா தான்”, என்று சோகமானாள். அவளே மேற்கொண்டு சொல்லட்டும் என்று அவளையே பார்த்திருந்தான் நாகநாதன். அவன் வாய் மட்டும் அதன் வேலையை செய்து கொண்டிருந்தது.

“அம்மா, இந்த ஆவணியில் என் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று சொன்னார்கள்”, என்றவளின் கண்கள் கலங்கத் தொடங்கியிருந்தன.

“அய்”, என்று உற்சாகமானவன் “அடடா…இந்த ஆவணியிலா? அதற்குள் கல்யாணத்திற்கு உண்டான பொருளை சேகரித்து விட முடியுமா?”, என்று கவலைத் தோய விசனப்பட்டான்.

அவனுடைய விசனத்தைக் காண சகிக்கவில்லை தேவகிக்கு. “மாமா, உனக்கு என்னை தரவே கூடாது என்று அப்பா சொல்கிறார். அம்மா தான் நம் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்”

“எனக்கு உன்னை மணமுடித்து தருவதில் உன் தந்தைக்கு விருப்பமில்லாமல் போனது ஏனாம்?”, என்று லேசாக கோபப்பட்டான்.

“உனக்கு நிரந்தர வருமானம் இல்லையாம்”, என்று தந்தையின் தகவலை சொன்னவளின் குரல் அது உண்மை தானே என்று அவனைக் குற்றம் சொன்னது. பார்வையும் ஆமாம் என்றது.

“அதற்கு நான் என்ன செய்வேன்?”, என்றான் பரிதாபமாக. “யவன முதலாளி ஊரோடு போகப் போகிறானாம். அப்போது எங்கள் அங்காடியை எனக்கு தந்து செல்வேன் என்று சொல்லியிருக்கிறான்”

“உன் முதலாளி உனக்கு அங்காடியைத் தந்து செல்வானா.. அவன் சொன்னானாம். நீயும் அதை நம்புவாயா?”

“என்னை என்ன தான் செய்ய சொல்கிறாய் தேவகி?”

“உன்னை மாசாத்துவான் மாமா வீட்டில் கூப்பிட்டார்களாமே. நீ ஏன் போகவில்லை?” 

“போனேன். அவர் என்னை அவர் மகன் கோவலனின் அங்காடிக்குப் போய் தொழில் கற்றுக் கொள்ள சொன்னார். நானும் கொஞ்ச நாட்கள் போனேன். ஆனால் தேவகி உனக்கே தெரியும். கோவலன் வியாபாரத்தை பார்ப்பதில்லை. அடியோடு அந்த மாதவியின் வீட்டிலேயே கதியெனக் கிடக்கிறான். அங்கே போகும் முன்பு அங்காடியிலிருந்து பொருளாகவோ கழஞ்சுகளாகவோ கொண்டு செல்கிறான். அவன் இல்லாத கடையில் நான் இருக்கப் போய் ஏதாவது காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும். எதற்கு இந்த வம்பு?” 

“உண்மை தான்”, என்றாள் யோசனையாக.

“என்ன யோசனை?”

“இல்லை. மாசாத்துவான் மாமாவை நினைத்துப் பார்த்தேன். எப்படிப்பட்ட மனிதர்! விளைந்த நெல்லை யானை கட்டி போரடிக்கும் நம் சோழ வளநாட்டின் பூம்புகார் துறைமுகத்தில் மேலை நாடுகளில் இருந்து வந்து இறங்கும் பொருட்களை வண்டிகளில் கொண்டு சென்று வியாபாரம் செய்யும் பெரும் சாத்து வணிகர். இந்த உலகு முழுவதும் ஆளும் கரிகாலச் சோழ மகாராஜாவுக்கு சமமாக அமரக் கூடிய தகுதி வாய்ந்தவர் இவர். தன் ஒரே மகன் கோவலன் இப்படி ஆவான் என்று கனவு கண்டாரா பாவம்”

“உண்மை தான் தேவகி. அவருக்கு பெண் கொடுத்தவரை நினைத்துப் பார். பெரிய பெரிய நாவாய்கள் மூலமாக கீழை நாடுகளுக்கு வியாபாரம் செய்யும் திரை மீளர் அவர். மாரியைப் போல வாரி வழங்குகின்ற வள்ளல் என்று இந்த நகரத்தாரால் போற்றப்படும் மாநாயக்கனின் மகள்”

“கண்ணகியை பன்னிரண்டு வயதில் இந்த பதினாறு வயது கோவலனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவனோ இப்போது இப்படி அந்த கணிகையின் வீட்டில் கிடப்பதை என்னவென்பது?”

“வீட்டிலும் கண்ணகியின் நிலை சொல்லத் தகாதது”

“ஏன் என்ன ஆயிற்று?”

“தினம் ஒரு பொருளை கொண்டு போய் மாதவிக்கு கொடுக்கிறார் அல்லது விற்று விடுகிறார். முன்பைப் போல வீட்டில் செல்வச் செழிப்பில்லை”

பூம்புகாரில் கணிகையர் தெருக்கள் சில இருந்தன. அவற்றில் ஒன்று முதல் தர நாடகக் கணிகையர் தெருவாகும். அத்தெருவில் இருந்த கணிகையருள் புகழ் பெற்றவள் சித்திராபதி. அவள் ஆடல் பாடல்களில் வல்லவள்; அவற்றில் நீண்ட காலம் பயிற்சி உடையவள், சாத்திர முறையில் அணுவளவேனும் தவறாதபடி நடிக்க வல்லவள். ஈடும் எடுப்பும் அற்ற நடிக மாதாக விளங்கிய சித்திராபதிக்குத் தவ மகள் பெயர் மாதவி என்பது. 

மாதவிக்கு வயது பன்னிரண்டு ஆனது. அவள் கட்டழகுடன் காணப்பட்டாள். அவளது கூந்தல், நிறத்தில் கருநாவல் பழத்தை ஒத்திருந்தது. அவளுடைய கண்கள் அகன்று சிவந்த ரேகைகளைப் பெற்றிருந்தன; புருவம் வான் வில்லைப் போல வளைந்து மயிர் அடர்ந்து இருந்தது. அம்மங்கையின் முகம் அகன்று மலர்ந்த தாமரை மலரை ஒத்திருந்தது. அவள் மூக்குக் குமிழம் பூவைப் போல இருந்தது; பல் வரிசைகள் முத்து வரிசைப் போலக் காணபபட்டன. அவளுடைய உதடுகள் கொவ்வைக் கனிபோலச் சிவந்து இருந்தன. அவள் பேச்சு கிளிகொஞ்சுவதுபோல இருந்தது. அவளது நடை அன்னப் பறவைகளின் அழகிய நடையை ஒத்திருந்தது.

அத்தகைய மாதவியின் நடன அரங்கேற்றம் சிறப்புற நடைப்பெற்றது. சோழன் மாதவியின் நடனத் திறமையைப் பாராட்டி ‘தலைக்கோல்’ என்ற மணிகள் பதித்த கோல் ஒன்றை அவளுக்குத் தந்தான். ஆயிரத்து எண் கழஞ்சு பொன்னையும் பரிசாக அளித்தான். பசும்பொன் மாலை ஒன்றையும் பரிசளித்தான். யாவரும் மாதவியின் நடனச் சிறப்பைப் பாராட்டி மகிழ்ந்தனர். அன்று முதல் மாதவி ‘நடன அரசி’ என மாநகரத்தாரால் பாராட்டப்பட்டாள்.

அரங்கேற்றம் நடந்த அன்று மாலை கோவலன் கடைத் தெருவில் தன் நண்பர்களுடன் மாதவியின் நடனச் சிறப்பைப் பாராட்டிப் பேசிக் கொண்டு இருந்தான். அப்பொழுது அங்குச் சித்திராபதி அனுப்பிய தோழி வயந்தமாலை வந்தாள். அவள் கையிற் சோழ அரசன் மாதவிக்குப் பரிசளித்த மாலை இருந்தது. அவள் “இதனை ஆயிரத்தெண்கழஞ்சு பொன் தந்து விலையாகப் பெறுபவர் மாதவிக்குக் கணவராகத் தகுவர்”, என்றாள். 

ஊழ்வினை வசத்தால் கோவலன் ஆயிரத்து எண் கழஞ்சு பொன்னைத் தந்து அந்த மாலையை வாங்கிக் கொண்டான்; அத்தோழியுடன் மாதவியின் மாளிகையை அடைந்தான்; தான் வாங்கிய மாலையை அவள் கழுத்தில் அணிவித்து மகிழ்ந்தான்; அன்றுமுதல் மாதவியுடன் உறைவான் ஆயினன். மாதவியின் அழகில் மயங்கிய கோவலன் அவளைக் காதலித்தான். மாதவி யாழ் வாசித்தும், நடனமாடியும் தனது திறமைகளை வெளிப்படுத்தி கோவலனைக் கவர்ந்தாள். கணிகையர் குலத்தில் பிறந்திருந்தாலும் மாதவி கோவலனை உள்ளன்போடு காதலித்து கூடி வாழ்ந்து வந்தாள். 

ஆனால் அவள் தாய் கோவலனிடம் பொன்னையும் பொருளையும் அதிகமாக எதிர்பார்த்தாள். அவளுக்கு கொடுப்பதற்கு தான் கோவலன் தன் சொத்துக்களை அளந்து கொண்டிருந்தான். வீட்டிற்கும் வருவதில்லை. கண்ணகி தனித்து சோகத்துடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு துணை தேவகி தான். 

“நீ இன்னும் கண்ணகியுடன் தான் இருக்கிறாயா? உங்கள் வீட்டில் ஒன்றும் சொல்வதில்லையா?”

“கண்ணகி எனக்கு சிற்றப்பன் மகள் தமக்கை முறையல்லவா! இருவரும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். இந்த சந்தர்ப்பத்தில் கண்ணகியை தனியே விட முடியாதல்லவா! என்னைத் தவிர வேறு யார் கூட இருந்தாலும் அவளுக்கு ரசிக்காது”

“ஆமாம். சோழ இளவரசியைப் போல எப்படி எல்லாம் ஆடம்பரமாக செல்வாக்குடன் வளர்க்கப்பட்டவள் கண்ணகி. எத்தனைப் படாடோபமான கல்யாணம். ஆனால்..”, அன்றைய நினைவில் பெருமூச்சு விட்டான் நாகநாதன். 

அவன் விட்டதை தேவகி தொடர்ந்தாள். “அன்று திருமணம் முடிந்து மணமேடையில் அக்கினி குண்டத்தை சுற்றி வருகையில் கண்ணகியின் மணமாலையின் அடியில் இருக்கும் பூ குஞ்சத்தில் தீப் பிடித்துக் கொண்டது. அதுவே திருஷ்டி பட்டதைப் போலாயிற்று”, என்றாள் தேவகி.

“மணமாலையில் தீ என்றதும் மணவாளனுக்குத் தான் ஏதோ விபரீதம் ஆகப் போகிறது என்று எல்லோருமே பேசிக் கொண்டார்கள்”, என்றான் நாகநாதன்.

“அன்றைக்கே கண்ணாத்தா ஆச்சி சொல்லியது. நிமித்தக்காரனை அழைத்து பரிகாரம் என்னவென்று கேட்கும்படி”, என்றாள் தேவகி.

“கேட்கவில்லையா?”

“பிரசித்தி பெற்ற சாமிநாத வள்ளுவனிடம் சோழி போட்டு கேட்டு அதற்கு பரிகாரமும் செய்து விட்டார்கள்”

“பிறகென்ன?”, என்று ஆசுவாசமாகிப் போனவனாக கேட்டான்.

“தனிக்குடித்தனம் வைப்பதில் தான் அவர்கள் கவனம் இருந்தது. காலப்போக்கில் இதை மறந்து விட்டார்கள்”, என்றவள் “கண்ணகியின் கல்யாணத்தையும் நினைத்துப் பார்த்தேன்”, என்று பெருமூச்செறிந்தாள் தேவகி. 

இருவரும் அமைதியாகவே இருந்தார்கள். கண்களில் கண்ணகியின் கல்யாணக் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. 

முதலில் இளம் பெண்களுடன் தேவகியும் யானையின் மீது அம்பாரி வைத்து ஏறி அமர்ந்து மாசாத்துவான் மகன் கோவலனுக்கும் மாநாயக்கனின் மகள் கண்ணகிக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட விஷயத்தை புகார் நகர் முழுவதும் சொல்லி சுற்றி வந்தார்கள். பின்பு திருமணத்தன்று இந்த பரந்துப்பட்ட சோழ தேசத்தின் மன்னன் நகர் உலா வருவதைப் போல் யானை மீதேறி முரசும் சங்கும் ஒலிக்க, மங்கள நாணை நகர்வலம் எடுத்து வந்து திருமண மண்டபத்தில் கொண்டு வந்து கொடுக்க ரோஹினி நட்சத்திரத்தில் அதை கோவலன் கண்ணகியின் சங்குக் கழுத்தில் பூட்டினான். 

“ஆமாம். எப்படியெல்லாம் ஊரே மெச்ச கல்யாணம் நடந்தது”, என்றான் நாகநாதன்.

பின்னர் மணமான இருவரும் தனிக்குடித்தனம் செய்ய இந்த சோழ தேசத்தின் மிக உயர்ந்த வணிகர்களான மாசாத்துவானும் மாநாயக்கணும் ஏழு அடுக்கு மாளிகை கட்டி சில பல வேலைக்காரர்களை நியமித்து அரசபோகமாக எல்லாம் செய்து வைத்தார்கள். நான்காம் அடுக்கில் இருவரின் பள்ளியறை இருந்தது. இருவரும் திருமணமான புதிதில் பாம்பைப் போல ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைந்து கிடந்தவர்கள் தான். 

“யார் கண் பட்டதோ?”, என்று வருத்தப்பட்டாள் தேவகி.

“இல்லாவிட்டாலும் கோவலன் கொஞ்சம் மனதில் உறுதியில்லாதவன். மனக்கிலேசம் கொண்டவன். ஆனாலும் திறமையான வணிகன். எல்லாவற்றையும் விட மிகப் பெரிய கலாரசிகன்”, என்றான் நாகநாதன். 

“அந்த கலாரசனை தானே அவரை வழி மாறிப் போக வைத்து விட்டது”, என்று பெருமூச்செறிந்தாள்.

“என்ன தேவகி, இன்று ஊரே திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. நாமும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கலாம் என நினைத்து உன்னை வர சொல்லி ஆள் விட்டிருந்தேன்”, அவன் இழுப்பை வெட்டி,

“அது தான் நானும் ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லி யாரும் அறியாவண்ணம் வந்து விட்டேனே”

“வந்து என்ன செய்ய? வந்த நேரம் முதல் கண்ணகியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய்”, என்று குறைப்பட்டுக் கொண்டான்.

“திருமணம் ஆன புதிதில் அக்காவும் மாமாவும் எப்படியெல்லாம் இந்த இந்திரவிழாவை சிறப்பாக கொண்டாடினார்கள் தெரியுமா?”

“ஆமாம். நம் வணிகர் இனத்தின் மூப்பர்கள் எல்லோருமே அவர்களைக் கண்டு எத்தனை சந்தோஷப்பட்டார்கள். ரதியும் மன்மதனையும் பார்த்தார் போல் என்றெல்லாம் சிலாகித்தார்கள்” 

“உனக்கு அவளைப் பற்றி வருத்தமில்லை என்று சொல் பார்ப்போம்”

“நீ என் உடன் பிறந்த அக்கா மகள். அவள் என் உறவின் முறையில் அக்கா மகள். அவளைப் பற்றி எனக்கும் தான் கவலையிருக்கிறது”, என்றான் உண்மையான கவலையுடன்.

“என்ன மாமா செய்வது?”

இருவரும் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்கள். இரவாகிப் போயிருந்தது. வானத்தின் நட்சத்திரங்கள் கண்களை சிமிட்டிக் கொண்டிருந்தன. ஒருவர் கரத்தை மற்றொருவர் பற்றியிருந்தனர். அங்கே ஒரு அம்மன் கோயில் இருந்தது. கோயில் கதவடைக்கும் நேரம். வெளியே இருந்தே வணங்கினார்கள்.

“இந்த கோயிலில் ஒரு மூதாட்டி இருக்கிறார்கள். தோஷம் கழிப்பது குறி சொல்வது, விஷக்கடிக்கு மந்திரிப்பது, தாயத்து மந்திரித்து கட்டுவது என மந்திர தந்திரங்களுடன் சிறு வைத்தியமும் செய்யக் கூடியவர்கள். நான் விரும்புகின்ற பெண்ணைத் தான் கட்டுவேன் என்றும் கடல் கடந்து வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டுவேன் என்றும் சொல்லியிருக்கிறார்கள்”

“அப்படியா?”, என்றாள் உண்மையான மகிழ்வுடன்.

“அவர்களிடம் அழைத்துப் போவோமா?”

“ஆ..அது நல்லது தான். நாளை அதிகாலை அழைத்துக் கொண்டு வரட்டுமா? அப்போது தான் கூட்டமில்லாமல் இருக்கும்”

“வா. நானும் உனக்காக காத்திருக்கிறேன்” 

மறுநாள் காலையில் தேவகியும் கண்ணகியும் கடற்கரை அம்மன் கோயிலுக்கு வந்தார்கள். நாகநாதனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். 

நெத்தியில் நெத்திசூடி, கழுத்தில் காசுமாலை, இடுப்பில் ஒட்டியாணம் கைவங்கி கை நிறைய தங்க வளையல்கள், காலில் சிலம்பு காதில் வைரத்தோடு என தங்கத்தேரு போல இருக்கும் பெண், ஆயிரம் நிலவின் சாந்தமும் குளுமையும் வெளிச்சமுமாக இருக்கும் கண்ணகி இன்று சோபை இழந்து காணப்பட்டாள். கவலையினாலா அன்றி கணவனின் பாராமுகத்தினாலா என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கண்ணகியைப் போல உத்தம பெண்கள் கணவனின் பாராமுகத்தினால் தான் நீரின்றி வாடிய பயிரைப் போல் இருப்பார்கள் என்று பதிலும் சொல்லிக் கொண்டான். 

கோயிலின் உள்ளே நாகநாதன் முதலில் செல்ல பின்னால் கண்ணகியும் தேவகியும் நுழைந்தார்கள். 

அப்போது..! 

யாரைக் காண, கண்டு தங்கள் எதிர்காலம் அறிய இந்த கோயிலுக்குள் வந்தாளோ அந்த மூதாட்டி விரைந்து எதிர்கொண்டு வந்து கண்ணகியின் காலில் விழுந்து வணங்கினாள். அதிர்ச்சியில் பின்னால் ஓரடி நகர்ந்து நின்றவள் அந்த மூதாட்டியை உற்றுப் பார்த்தாள். மீண்டும் கண்ணகியின் காலில் விழுந்து வணங்கினாள் அவள். கோயிலில் இருந்த பூசாரியும் நாகநாதனும் திகைத்து தான் போனார்கள். 

“தாயே நீ என்னைத் தேடி வரலாமா? நானல்லவா உன்னைப் பார்க்க வர வேண்டும்”, என்றாள் கண்ணீர் மல்க.

“பெரியம்மா, என்ன சொல்றீங்க?”, நாகநாதன் கேட்டான். தேவகியின் கண்களும் அதையே கேட்டன. 

அவர்களை தன்னுடைய இடத்தில் அமர வைத்து அந்த மூதாட்டி சொன்னாள் ஒரு சிறுகதை. அது கண்ணகியின் பூர்வ ஜென்மக் கதை. இனி கண்ணகிக்கு வரப் போகும் விபரீதத்தின் கதை. அதைப் புரிந்து கொள்ள கண்ணகியால் முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

“முன்னொரு பிறவியில் உங்கள் வணிகர் இனத்தின் சாதாரண நிலையில் ஜீவித்துக் கொண்டிருந்த கணவன் ஒருவன் தன் மனைவியுடன் பாண்டிய நாட்டில் எண்ணெய் விற்க சென்றான். ஊரெல்லையில் இருந்த காளி கோயிலில் ஒரு நிமிடம் நின்று வேண்டிக் கொண்டான். ”இந்த எண்ணெய் முழுவதையும் இன்றே விற்று விட்டேனானால் மாலையில் வீடு திரும்பும் போது உனக்கு ஒரு விளக்கு போடுகிறேன்” என்று வேண்டிக் கொண்டான்.

அந்த காலக் கட்டத்தில் மதுரையை ஆண்டுக் கொண்டிருந்த பாண்டிய மன்னன் தன் வேண்டுதல் பலிக்காததால் கோபம் கொண்டு மதுரை மாநகரில் இருக்கும் கோயில்களில் யாரும் விளக்கு பொருத்தக் கூடாது. மீறினால் சிரச்சேதம் செய்யப்படும் என்றும் ஆணையிட்டிருந்தான்.

இதையறியாத வெளியூர் வணிகனான இவன் அன்றைக்குள் தான் கொண்டு வந்திருந்த எண்ணெய்யை விற்று விட்டு வீடு திரும்பும் போது இந்த கோயிலில் தான் வேண்டிக் கொண்டு பொருத்தனை செய்ததைப் போல ஒரு சிறு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி விளக்கு பொருத்தினான்.

தன் கட்டளை மீறப்பட்ட விவரம் அறிந்து அந்த நாட்டு மன்னன் அந்த வணிகனை சிரச்சேதம் செய்து விட்டான். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு சாட்சியாக இருந்த காளி கோபம் கொண்டு அந்த மன்னனை அங்கேயே அப்போதே ஒரு சாபம் விட்டாள்.

“எந்த பெண்ணின் கணவனை சிரச்சேதம் செய்தாயோ, பிறிதொரு ஜென்மத்தில் இந்த கணவனின் மனைவியாக நானே வந்து உன்னையும் உன் நாட்டையும் தீக்கிரையாக்கி அழித்து நாசம் செய்து என் சபதம் முடிப்பேன். இதோ இந்த மனைவியானவள் பிறக்கும் போதே இவன் கைத்தாலியுடன் பிறந்து இவனையே மணம் முடிப்பாள். இவளால் இவன் வம்சம் விருத்தியடையும்”, என்று கதையை முடித்தாள்.

மூவரும் திகைத்து அமர்ந்திருந்தனர். இதற்கும் இன்றைய கண்ணகியின் நிலைக்கும் என்ன சம்பந்தம் என்று அவளிடம் கேட்கவும் பயம். அவளாகவே சொல்லட்டும். மூதாட்டி இந்த கதையை சொல்லும் போது அன்றைய நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போன்று உக்கிரத்துடன் சொன்னவள் அமைதியாக நேரம் பிடித்தது. 

பிறகு கண்களைத் திறந்தவள் எதிரில் அமர்ந்திருக்கும் கண்ணகியைக் கண்டு சொன்னாள். ”நீ தான் அந்த காளி தேவி. அது உன் கணவனுக்கு சமீபத்தில் தெரிய வந்ததால் தான் அவன் உன்னை விட்டு விலகி நிற்கிறான். அவன் கைத் தாலியுடன் பிறந்தவள் தான் மாதவி. அவன் மனைவி. அவளால் அவனுக்கு ஒரு பெண் பிறப்பாள். கணவன் மனைவியான கோவலன் கண்ணகியின் கதை இருக்கும் நாளெல்லாம் கோவலனின் மகள் மணிமேகலையின் புகழ் இருக்கும். தகப்பன் மகள் என இருவர் கதையும் இரு மாபெரும் இரட்டைக் காப்பியமாக வடிக்கப்படும்” 

“இவள் நிலை என்னாகும்?”, என்று கண்ணகியைக் காட்டி துணிந்து கேட்டே விட்டான் நாகநாதன்.

“காப்பியத் தலைவிகளின் நிலை என்னவாகும்?”, என்று பதில் கேள்வி கேட்டவள் “அவர்களுக்கே உண்டான பாடுகள் இருக்கும். வேறு என்ன? ஆனால் இறுதியில் காளி தன் சபதம் முடித்த பின்பு சாதாரண மானுட மங்கையாக மாறி தன் கணவனுடன் சேர்ந்து வானுலகம் செல்வாள். இவளால் இவள் கணவனுக்கு கிட்டும் மாபெரும் வரம். வேறு யாருக்கும் கிட்டாத பெரும் பேறு இது” 

கண்ணகிக்கு இனி வரும் காலங்கள் கடினமானதாக இருக்கும் என்றும் அவளால் மதுரை மாநகர் தீக்கிரையாக்கப்படும் என்றும் இறுதியில் தன் கணவனுடன் சேர்ந்து வானுலகம் செல்வாள் என்றதனால் முதலில் இவள் கணவன் வானுலகம் சென்று விடுவான் என்று புரிந்து கொண்டு விட்டான் நாகநாதன். மிகுந்த வருத்தமாக இருந்தது. இருந்தாலும் கண்ணகி ஒரு தெய்வப் பிறவி என்பதாலும் இறுதியில் மானிட மங்கையாக மாறி கணவனுடன் சேர்ந்து விடுவாள் என்பது ஆறுதலான விஷயம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான் நாகநாதன். 

தேவகிக்கு மூதாட்டி இறுதியில் சொன்ன விஷயங்களில் உள்ள விவரம் புரியவில்லை என்பதை விட ஒப்ப முடியவில்லை. கோவலனும் கண்ணகியும் காதலில் மூழ்கி திளைத்துக் கிடந்ததை தன் கண்களால் கண்டவள் அவள். ஒருவேளை இப்போது தான் கோவலனுக்கு கண்ணகி காளியின் மறு ரூபம் என அறிந்து விலகிச் சென்றானோ என்று குழப்பமாக இருந்தது. 

இருவரும் ஒன்றும் பேசாமல் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்திரனால் புகார் நகரில் எழுப்பட்டிருந்த ஏழு புத்த விகாரங்களில் பிரதானமான ராஜ விகாரத்தின் அருகில் வந்து கொண்டிருந்த போது விகாரத்தின் உள்ளேயிருந்து வெளியே வந்த ஒரு பழுத்த துறவி ஒருவர் இவர்கள் இருவரையும் கண்டு விட்டு அவர்கள் அருகில் வந்தார். அவரைக் கண்டதும் சகோதரிகள் இருவரும் வணங்கி நின்றனர். 

கண்ணகியையும் தேவகியும் மாறி மாறிப் பார்த்தவர் கண்ணகியிடம் “ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்”, என்று சொல்லி விட்டு நகர்ந்து போனார்.

சடுதியில் தன் கண் முன் தோன்றி ஏதோ சொல்லி சென்றவரை பார்த்துக் கொண்டு நின்றாள் கண்ணகி. அவளுக்கு எதுவும் புரியவில்லை. வாயைத் திறந்து உலக உருண்டையைக் காட்டிய மாயக் கண்ணனின் லீலா விநோதங்களைக் கண்டு மலைத்து நின்ற தாய் யசோதாவைப் போல மனம் மயங்கிக் கிடந்தது கண்ணகிக்கு.

மாலையில், வேலையாட்கள் மாளிகையின் விளக்குகளை பொருத்திக் கொண்டிருந்தார்கள். தேவகி, மாளிகை நந்தவனத்தில் இருந்து பறித்துக் கொண்டு வந்திருந்த பூக்களை மாலையாக கட்டிக் கொண்டிருந்தாள். யாரும் எதிர்பாராமல் முன்றிரவில் வந்து நின்றான் கோவலன். கண்ணகி பரபரத்துப் போனாள். நானாவித பழங்களும் பலகாரங்களும் பானங்களும் என கொண்டு வந்து வைத்து உண்ணக் கொடுத்தாள். குளித்தானா? உடை மாற்றினானா? உண்டானா? உறங்கினானா? எதுவும் இல்லை. தலையைக் குனிந்து அமர்ந்திருந்தவனைக் கண்டு மனம் கலங்க அருகில் போய் அவன் தலை கோதி நின்றாள் கண்ணகி. கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்து விட்டாள். 

அன்பொழுக கண்டவளைக் கண்டு மனம் குத்துப்பட்டவனாக தேம்பியவாறு கேட்டான். “என்னிடம் கோபமில்லையா?”, என்று.

“கோபமா? உங்களிடமா? ஒருக்காலும் இல்லை. ஒருநாளுமில்லை. ஏன் இதைப் போல சோர்ந்திருக்கிறீர்கள்? செலவழிக்க பொருள் இல்லையே என கவலை வேண்டாம். இதோ என் நகைகளைத் தருகிறேன்”, என்றவாறு கழுத்தில் கிடந்த காசுமாலையை கழட்டினாள். 

அதை தடுத்தவனாக “என்னிடம் பொருளும் இல்லை. இனி பொருள் செலவழிக்க தேவையும் இல்லை”, என்றான் தீர்மானமாக.

“ஏன் அப்படி சொல்கிறீர்கள்? என் பொருட்களை தருகிறேன். போதவில்லை எனில் என் தந்தையிடம் கேட்டு வாங்கித் தருகிறேன்”, என்றாள் கண்ணகி மிகுந்த ஆதுரத்துடன்.

“உன் பேதமையால் இன்னும் என்னை குற்ற உணர்வடைய செய்கிறாய் கண்ணகி”, என்று கலங்கினான் கோவலன்.

“உங்கள் மனம் நோகும்படியாக பேசி இருந்தேனால் மன்னித்தருள வேண்டும்”

“மாதவியை பிரிந்து வந்து விட்டேன் கண்ணகி”, என்றான் நேரிடையாக.

ஏன் என்றோ என்ன ஏது என்றோ ஒரு வார்த்தைக் கேட்கவில்லை அவள். தன் சந்தோஷத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவுமில்லை. அடிப்பட்டுக் கொண்டு வந்து அமர்ந்திருக்கும் சிறுவனைப் போன்ற தன் கணவனின் வேதனை தான் அவளைக் கஷ்டப்படுத்தியது. இவன் வேதனை அவளைப் பிரிந்ததினாலா அன்றி பொருளின்மையா? தெரியவில்லை. அவன் சொல்வதை அப்படியே நம்புவது தானே ஒரு உத்தம மனைவியின் அடையாளம். அதையே செய்தாள் அவளும்.

“பெரும் வணிகம் செய்தவர்கள் என் தந்தையும் மாமனும். சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த இருவரையும் தலைக் குனிய வைத்து விட்டேன்”, என்றான் தவறு உணர்ந்து வருந்தியவனாக.

“நம்மிடம் மீதமிருக்கும் செல்வத்தைக் கொண்டு வணிகம் செய்து மீண்டு விடலாம்”, என்று தைரியம் சொன்னாள் அவன் மனைவி.

“அதை இங்கே செய்ய முடியாது. எனக்கு இங்கிருப்பது இனி முடியாது”, என்றான் மனதில் மாதவியை நினைத்தவனாக. 

“நான் மதுரைக்குப் போகிறேன் கண்ணகி. நீ உன் தாய் வீட்டிற்கு செல். பழைய செல்வ நிலைக்கு வந்த பின்பு நானே உன்னை வந்து அழைத்துப் போகிறேன் மதுரைக்கு”

“ஊஹூம். நீங்கள் இல்லாமல் என்னால் ஒருகணம் கூட இங்கேயிருக்க முடியாது. நீங்கள் எங்கே சென்றாலும் என்னையும் உடன் அழைத்து செல்லுங்கள்”

“நீ இந்த மாட மாளிகையில் கூட கோபுரத்தில் பிறந்தவள் வளர்ந்தவள் வாழ்ந்தவள். நானோ போக நினைப்பது மதுரை. நீ என் கூட வந்தால் மிகவும் கஷ்டப்படுவாய் கண்ணகி. சொல்வதைக் கேள். இத்தனை வருடங்கள் என்னைப் பொறுத்துக் கொண்டாயே. இன்னும் ரெண்டு மூன்று வருடங்கள் பொறுத்துக் கொள். நான் திரும்பி வந்து உன்னை அழைத்துக் கொள்வேன். என்னை நம்பு”

“உங்களை நம்புவதால் தான் என்னையும் உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்”

அப்போது அங்கே எட்டிப் பார்த்தாள் தேவகி. இறுக்கத் தொடுத்திருந்த மல்லிகைப் பூவை கண்ணகியின் தலையில் சூடிக் கொள்ள உதவியவள் மெல்ல ஆரம்பித்தாள். ”மாமா, நான் இடைப்பட்டதாக நினைக்கக் கூடாது”

“சொல் தேவகி. உன்னை விட எங்களுக்கு நன்மை நினைக்கக் கூடியவர்கள் யார் உண்டு?”, என்று உணர்ச்சிவசப்பட்டவனாக சொன்னான் கோவலன்.

“நீங்கள் உள்ளூரில் இருக்கும் போதே அக்கா உங்கள் நினைவில் அன்ன ஆகாரம் இல்லாமல் கிடப்பாள். இப்போது நீங்கள் அவளை இங்கே விட்டு சென்றால் அவள் உயிர் வாழ்வாள் என்ற நம்பிக்கை எனக்கில்லை”

 “என்ன தேவகி நீயும் இப்படிச் சொல்கிறாய்? நீ இருக்கிற தைரியத்தில் தானே நான் போகிறேன்”

“நான் இருப்பேன். ஆனால் அவள் இருக்க மாட்டாள்”

தன்னை முற்றிலும் அறிந்த தங்கையை நன்றியுடன் பார்த்தாள் கண்ணகி. “வாழ்விலும் சாவிலும் இணை பிரியாமல் இருப்போம் என்று வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். என்னைப் பிரிய வேண்டாம்”, என்று உருகி வேண்டிக் கொண்டாள்.

“உன் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது?”

“திருமணத்திற்குப் பின்பு ஒரு பெண்ணின் உயிரும் உடலும் உடமையும் கணவனை சார்ந்தது. யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை”, கறாராக பதில் வந்தது கண்ணகியிடமிருந்து.

“நான் இன்றே கிளம்புகிறேன். இப்போதே”, அப்படியாவது தன்னுடன் வர தயங்குவாள் என்று நினைத்து சொன்னான்.

“நானும் இப்போதே கிளம்புகிறேன்”, என்றாள் உறுதியாக.

“ஊரடங்கட்டும். நிலவு உச்சத்தில் வரும் நாழிகையில் கிளம்பினால் சரியாக இருக்கும்”

“பெற்றவர்களிடமும் பெரியவர்களிடமும் சொல்லிக் கொள்ள வேண்டாமா?”, தேவகி கேட்டாள். கண்ணகி கணவனுக்கு எதிராக ஒரு வார்த்தையும் கேட்க மாட்டாள் என்பதை அறிந்தவளாக.

“நாங்கள் கையறு நெஞ்சத்தினர்களாக கிளம்புகிறோம் தேவகி. பெரியவர்கள் எங்களை அனுப்ப சம்மதிக்க மாட்டார்கள்”

“இந்திர விழாவிற்கு காப்புக்கட்டி திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் காப்புக் களையவில்லை. காப்புக்களையும் வரை இந்த புகார் நகரை விட்டு வெளியே தங்கக் கூடாது என்பது தெரியாதா மாமா?”, தேவகியால் தெய்வ குற்றத்தை நினைத்து பயப்படாமல் இருக்க முடியவில்லை. 

அவள் கேள்வியில் ஒரு நிமிடம் தயங்கி நின்றவன் கண்முன் இன்றைய கடற்கரை காட்சி வந்து அவனை ரௌத்திரம் கொள்ள வைத்தது. மறக்க கூடியதா மாதவியின் ஏளனம்? 

“அப்படியாவது ஊரை விட்டு போக வேண்டுமா?”, கேட்ட தேவகியின் மனதில் கோயிலில் மூதாட்டி சொன்னது நினைவிற்கு வந்தது. போகும் வழியில் என்ன பாடு படுவாளோ? போகாதே என்று சொன்னால் கேட்க மாட்டாள் கண்ணகி என்பதை விட கணவனைப் பிரிந்து உயிர் வாழ மாட்டாள் என்பது தானே உண்மை.

“எனக்கு இந்த ஊரில் இனி இருக்க முடியாது”, சொன்னவனின் முகம் அத்தனை வெறுப்பை உமிழ்ந்தது. அவனுக்கும் மாதவிக்கும் இடையில் நடந்த கசப்பான அனுபவத்தையும் தான் மதிப்பிழந்த சமயத்தையும் மனைவியிடம் சொல்வதற்கு அவன் தன்மானம் இடம் தரவில்லை. அவள் முகத்தில் இனி விழிப்பதில்லை என்ற கங்கணம் மறந்து போகுமா என்ன!

“எந்த ஊருக்குப் போகிறீர்கள்?”, என்ற தேவகியின் கேள்விக்கு ஏற்கனவே கண்ணகியிடம் சொல்லி வைத்திருந்த பதிலை சொன்னான் கோவலன். ”மதுரைக்கு”

அது எங்கே இருக்கிறது என்றோ எவ்வளவு தூரம் என்றோ இரு பெண்களும் அறிந்தவர்கள் இல்லையாதலால் ஏதோ பக்கத்தில் இருக்குமிடத்திற்குத் தான் போகிறான் போலும் என்று நினைத்து அமைதியானாள் தேவகி. ஊரை விட்டு போவது என்று முடிவான பின்பு அது எந்த ஊரானால் என்ன என்ற நிலை கண்ணகிக்கு. 

“நானும் உங்களுடன் ஊர் எல்லை வரை உடன் வருகிறேன்”, என்று கிளம்பினாள் தேவகி.

மாளிகையின் வாசல் மரக் கதவு மிகப் பிரம்மாண்டமானது. அதில் கவரிமான் ஆட்டுக் கிடாய், அன்ன பட்சிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. பித்தளையில் கனமான நாதாங்கியை எடுத்து பாரமான கதவை இழுத்து திறந்து கொண்டு வெளியேறினார்கள் இருவரும். உடன் வந்தாள் தேவகி. வாசலில் இவர்களுடன் சேர்ந்து கொண்டான் நாகநாதன். எதையோ பேச வாய் எடுத்தவனை அமைதியாக வா பிறகு எல்லாம் சொல்கிறேன் என்று ஜாடை செய்தாள் தேவகி.

எப்போதுமே ஊரை விட்டு பயணப்படுபவர்கள் அக்கம் பக்கம் வீட்டினரிடம் விடை பெற்று செல்கிறார்களோ இல்லையோ அந்த ஊர் எல்லை தெய்வத்திடம் சொல்லிக் கொண்டு தான் செல்வர். அதேப்போல கோவலனும் கண்ணகியும் புகார் நகரை விட்டு பயணம் கிளம்பிய அந்த நள்ளிரவில் முதலில் பாம்பின் மீது துயில் கொண்டிருக்கும் நீலமேகவர்ணன் ஆலயத்திற்கு வந்தார்கள். இரவு கதவு பூட்டியிருக்கவே கோயிலை வலம் வந்து வணங்கி விட்டு அங்கேயிருந்து ஐந்து கிளைகள் கொண்ட அரச மரத்தினடியில் வீற்றிருந்த புத்தர் பெருமானை வணங்கி விட்டு அருகதேவன் ஆலயம் சென்றார்கள். பிறகு சிலாதனக்கோவிலில் இந்திரனால் வழிப்படப்பட்ட ஒளி வீசும் கல்லை வணங்கினார்கள். 

நடு சாமம் ஆயிற்று. ஊரடங்கிப் போயிருந்தது. இவர்களை அடையாளம் கண்டு கொள்வார் யாருமில்லை. எல்லை தெய்வத்தின் கோயிலை வந்தடைந்தார்கள். இனி புகார் நகரை விட்டு வெளியே செல்ல வேண்டும். விடை பெறும் கட்டம். தேவகியும் கண்ணகியும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு கண்ணீருடன் விடைப் பெற்றார்கள். கண்ணகி தன் கழுத்தில் அணிந்திருந்த காசுமாலையைக் கழட்டி நாகநாதனிடம் தந்தாள். தேவகிக்கு பரியம் போடுகையில் இதைப் போட சொல்லி அன்பு கட்டளையிட்டுக் கொடுத்தாள். என்ன இருந்தாலும் வள்ளலின் மகள் அல்லவா! கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்று நெகிழ்ந்து நின்றான் நாகநாதன்.

புகார் நகரின் நுழைவாயில் மலையிலிருந்து பெருகி வரும் ஆற்றைப் போல அகன்று இருந்தது. நடக்கத் தொடங்கினார்கள். மணநாளில் தன் கரம் பற்றியவன் கரத்தை தான் பற்றி உடன் நடந்தாள் கண்ணகி. ஊரறியாள். உலகறியாள். தன் கணவனைத் தவிர வேறறியாள். இருவரும் புகார் நகரிலிருந்து மதுரைக்கு செல்லும் ராஜபாட்டையில் நடக்காமல் காவேரியின் வடகரையோரம் மேற்கு நோக்கி நடந்து சென்றார்கள். ராஜபாட்டையில் சென்றால் எங்கே யாரேனும் பின் தொடர்ந்து வந்து பிடித்து செல்வார்களோ என்று கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்த இயலாமல் இரவோடு இரவாக, யாருக்கும் தெரியாமல் மறைந்து ஊரை விட்டு செல்வதைப் போல் கோவலன் தன் மனைவியுடன் சென்றான்.

காவேரியின் வடகரையில் பலவகை பழ மரங்களும், மணம் வீசும் பூக்கள் நிறைந்த பூச்செடிகளும் நிறைந்த இலவந்திகை சோலை இருந்தது. அதன் மதில் சுவரை ஒட்டி நடந்தார்கள். காவேரியில் நீராட செல்பதற்கு ஏற்றார் போல ஒரு ஒற்றையடிப் பாதை போனது. அதன் வழி நடக்கையில் பூக்களின் மணம் நெஞ்சை நிறைத்தது. அவ்வளவு தூரம் நடந்த களைப்பு ஒருபுறம் நடந்ததினால் பாதத்தில் உண்டான கொப்புளங்களும் காயங்களும் ஒருபுறம் என சோர்ந்து போனாள் கண்ணகி. அங்கே மரத்தடியில் சாய்ந்து உறங்கி விட்டாள். அவள் கால்களை மெல்ல பிடித்து விட்டான் கோவலன். இது தான் நிரந்தரம். கட்டிய மனைவி மட்டுமே நிரந்தரம் என்று தனக்குத் தானே புத்தி சொல்லிக் கொண்டான் அவன்.

கீழ் வானம் சிவந்தது. புது விடியல் விடிந்தது. புள்ளினங்கள் இசையில் துயில் கலைந்த கண்ணகி மெல்ல கண் திறந்தாள். தன் பாதத்தை மடியின் மீது இருத்திக் கொண்டு கண் உறங்கிக் கொண்டிருந்த கணவனைக் கண்டாள். நெஞ்சம் நிறைந்தது. செல்வம் இழந்து செல்வாக்கு உதறி மக்கள் மனிதர்களை விட்டு விட்டு நிராதரவாக நாடு விட்டு நாடு பயணப்பட்டாலும் இதோ என் கணவன் என்னுடன் இருக்கிறானே இது ஒன்று தான் நிரந்தரம். இதுவே எந்நாளும் போதும் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.

கோவலன் கண் திறந்து கண்ணகியைப் பார்த்து புன்னகைத்தான். ”எழுந்து கொண்டாயா கண்ணகி?”, என்று அன்புடன் கேட்டான்.

“மதுரை புதூர் யாது?”

“என்ன கேட்டாய் கண்ணகி?”

“மதுரை வந்து விட்டோமா?”

உருகிப் போனான் கோவலன். புகார் தவிர வேறு எதுவும் தெரியாது. தன்னைத் தவிர வேறு எதுவும் வேண்டாது தன்னுடன் பயணப்பட்ட தன் மனைவி ஒரு நாள் இரவுப் பொழுது உறங்கி எழுந்து இது தான் மதுரையா என்று கேட்கிறாள் என்றால் அவள் எத்தனை பேதமையுடையவள் என்று மனதுருகிப் போனான் அவன். 

“ஆரைந்து காதம்”, என்றான் அவன். இன்னும் முப்பது காதம் என்று சொன்னால் அவள் சோர்வடையக் கூடும் என இரக்கப்பட்டான் கோவலன். எனவே சுலபமாக சொல்வதைப் போல் ஆறு ஐந்து காதம் என்றான்.

பொழுது முற்றிலும் விடிந்து விட்டது. ஆனால் அவர்களுக்கு விடிந்ததா? 

மதுரைக்கான வழிப் பயணத்தில் கவுந்தியடிகள் என்னும் சமண பெண் துறவியை சந்தித்தார்கள். கோவலன் தான் கெட்டழிந்த கதையை சொல்லி மதுரைக்குப் போகும் வழியை கேட்க, தானும் மதுரைக்கு தான் செல்வதாக சொல்லி தன்னுடன் அவர்களை அழைத்துச் சென்றார். சோர்ந்து போகும் போதெல்லாம் ஆறுதல் கூறுகிறார். “தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி”, என்றும் கற்புக்கரசி என்றும் கண்ணகியை போற்றுகிறார். மூவரும் உறையூர் வந்து சேர்கின்றனர். அங்கே சமணப் பள்ளியான நிகந்த மடத்தில் தங்குகிறார்கள். 

அப்போது திருவரங்கத்திலிருந்து திருவேங்கடம் செல்லும் மாங்காட்டு மறையோனை சந்திக்கிறார்கள். 

‘மாமறை முதல்வ மதுரைச் செல் நெறி கூறு நீ’, எனக் கேட்கிறான் கோவலன். 

அதற்கு விடையிறுக்கும் வகையில் கொடிய பாலை நிலத்தில் வேனிற் காலத்தில் நடந்து வரும் அவர்களைக் கண்டு மனம் கலங்கி, அவர்களிடம்,

‘கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்

பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய

அறைவாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும்’ (காடுகாண். வரி 71-73) என விடை கூறுகிறான். 

மாங்காட்டு மறையோன் கோவலனுக்கு நிமித்தம் சரியில்லை என்றும் இப்போது மதுரைக்குச் செல்வது அவனுக்கு ஆபத்தாக முடியும் என்று பூம்புகார் திரும்பிச் செல்லும்படியும் அறிவுரை கூறுகிறார். ஆனால் அதை மறுத்து தங்களுக்கு மதுரைக்குச் செல்லும் வழியை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறான் கோவலன். 

உறையூரிலிருந்து கொடும்பாளூர் சென்று விட வேண்டும். அங்கிருந்து திரிசூலத்தின் மூன்று முனைகள் போல மதுரைக்கு மூன்று வழிகள் செல்லும். ஒன்று காட்டு வழி ஒன்று பாறைகள் நிறைந்த வழி மற்றொன்று நல்ல பாதை அதாவது கொடும்பாளூரிலிருந்து மதுரைக்கு கிழக்கு புறமாக அழகர் மலை வழியாக நுழைவதற்கான வழி சிறந்தது என்று சொல்கிறார். மேலும் உறையூரிலிருந்து கொடும்பாளூர் செல்லும் வழியில் அடர்ந்த காடுகள் இருப்பதால் அங்கே வன தேவதைகள் உண்டு என்றும் அவை நமக்கு வேண்டியவர்களை போன்ற உருவத்தில் வந்து நம்ம திசை திருப்பி விடும் என்றும் சொல்லி சொல்கிறான். 

காட்டுப் பாதையில் மாதவியின் தோழி வயந்தமாலையை சந்திக்கிறார்கள். மாதவி கருவுற்றிருப்பதையும் கோவலன் நினைவாகவே இருக்கிறாள் என்றும் மாதவியின் துயர் கண்டு வருந்தி அமளிமிசை வருந்து நின்றவளாக மாதவியின் தாய் ஊருக்கு திரும்பி வரும் படியும் சொன்னதாக சொல்லி அவனைப் புகார் நகரத்திற்கு அழைக்கிறாள். ஆனால் கோவலன் அதை மறுத்து விட்டான். வன தேவதை தான் வயந்தமாலையின் வடிவில் வந்தவள். வழியில் கோசிகமணி மாதவியிடமிருந்து கடிதம் கொண்டு வருகிறான்; புகார் நகரத்துச் செய்திகளைக் கோவலனிடம் பகர்கின்றான். கோவலனைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சென்று அவன் பெற்றோர்களிடம் சேர்ப்பிக்கிறான். கோவலனைத் திருத்துகிறான். “மாதவி தீதிலள்”, என்பதை அறிய வைக்கிறான். தன் தீமையை உணர வைக்கிறான். அவன் கோவலனுக்கு ஊர்ச் செய்திகளை உரைத்து ஆறுதல் தருகிறான். மாதவி கருவுற்று இருப்பதை சொல்கிறான். 

கொடும்பாளூர் வந்த மூவரும் அங்கிருந்து கிழக்கு கோட்டைக்குள்ளே நுழைகிறார்கள். 

கவுந்தியடிகள் இருவரையும் மதுரையின் புறச்சேரியில் தன் மகள் மாதரியிடமும் ஐயையிடமும் அவர்களை ஒப்படைக்கிறாள். அறத்துடன் வணிகம் செய்திட வேண்டும் என்று கோவலனுக்கு அறிவுரை கூறுகிறாள். அங்கே கோவலனும் கண்ணகியும் இன்புற்று வாழ்கின்றனர். கண்ணகி கோவலனுக்கு அறுசுவை உணவு சமைத்து அருகில் அமர்ந்து விருந்து படைக்கிறாள். இருவரும் அங்கே கூடி வாழ்ந்தனர். 

மதுரையை சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன் என்று போன கோவலன் மிகுந்த உற்சாகத்துடன் திரும்பி வந்து கூட கோபுரங்கள் நிறைந்த மதுரையின் மாட்சிமையை விளக்கி கோவலன் வணிகம் செய்திட சிறந்த ஊர் என்று மதுரையை புகழ்ந்து சொல்கிறான். அவளும் தன் காலில் அணிந்திருந்த சிலம்பு ஒன்றை கழட்டி அதை விற்று முதலாக கொண்டு வணிகம் செய்ய அனுப்புகிறாள். 

கோவலன் ஆபரண அங்காடி தெருவில் சிலம்பை விற்க முயன்றான். அத்துணை விலையுயர்ந்த சிலம்பை கொள்வார் யாருமில்லை. அப்போது அங்காடித் தெருவில் தன் படை பட்டாளத்துடன் வந்து கொண்டிருந்த அரண்மனை தலைமை பொற்கொல்லனை காட்டி அவனிடம் உன் சிலம்பை காட்டினால் அவன் அதை அரண்மனை பெண்டிரிடம் விற்று கொடுப்பான் என்று சொல்லவே கோவலன் கண்ணகியின் காற் சிலம்பை பொற்கொல்லனிடம் காட்டினான். அதைப் பார்த்ததும் அரண்மனை பொற்கொல்லனின் மனதில் தீய எண்ணம் உண்டானது. 

அரசி கோப்பெருந்தேவியின் கால் சிலம்பு ஒன்றை அரண்மனை பொற்கொல்லன் திருடியிருந்தான். அரண்மனையின் அரசவையில் அன்று நடந்த ஆடல் பெண்டிர்களின் ஆடலில் பாண்டியன் தன்னை மறந்து கிடந்ததில் கோபம் கொண்டு அரசி கோப்பெருந்தேவி கோபித்துக் கொண்டு அந்தப்புரம் சென்று விட்டாள். அவளை சமாதானம் செய்ய எண்ணினான் பாண்டியன். திருடு போன அரசியாரின் சிலம்பை கண்டு பிடித்து கொண்டு வந்து தந்தால் அவள் மகிழ்வாள் என்று எண்ணி பொற்கொல்லனிடம் உடனடியாக சிலம்பை மீட்டு எடுத்து வரும்படி ஆணையிடுகிறான்.

அதைக் கோவலன் திருடி விட்டான் என்று வீண்பழி சுமத்த அரசன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன் கோவலனிடமிருந்து கொண்டு வா என்று சொல்ல இங்கே கோவலனின் ஊழ்வினை ஊடு வந்து உறுத்த கோவலனைக் கொன்று சிலம்பை கொண்டு வர ஆணையிடுகிறான். 

பாண்டியனை அரங்கத்தில் விட்டுச் சென்ற அரச மாதேவி தன் பள்ளியிற் படுத்தாள். மதிய வேளையில் ஒரு கனவு கண்டாள், அவள் கனவில், பாண்டியனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் தரையில் விழக் கண்டாள். அரண்மனை வாயிலில் கட்டியிருந்த மணியின் குரல் அதிரக் கேட்டாள். எட்டுத் திசைகளும் அதிரக் கண்டாள். சூரியனை இருள் விழுங்கக் கண்டாள். இரவில் இந்திர வில் வானத்தில் தோன்றக் கண்டாள். பகலில் விண்மீன் விழக் கண்டாள். இக்கொடிய காட்சி, பாண்டியனுக்கு வர இருக்கும் துன்பத்தை அறிவிப்பது என்பதை உணர்ந்தாள்.

தன் கணவன் வீண் பழி சுமத்தப்பட்டு இறந்து விட்ட செய்தியறிந்த கண்ணகி சினம் கொண்டு தன் கையில் தன்னுடைய மற்றொரு சிலம்பை ஏந்தி அரண்மனை சென்று காவலனிடம் அரசனைக் காண வேண்டும் என்று வாதிடுகிறாள். 

காவலன் உள்ளே விரைந்து சென்றான். “அரசே, நின் கொற்றம் வாழ்க! கொற்கை வேந்தே, வாழ்க பொதிய மலைத் தலைவனே வாழ்க! பழியற்ற பெருமானே, வாழ்க! நமது வாயிலில் இள மங்கை ஒருத்தி வந்து நிற்கின்றாள். அவள் எருமைத் தலை அசுரனைக் கொன்ற கொற்றவை அல்லள். ஏழு தேவதைகளில் ஒருத்தியாகிய பிடாரி அல்லள், சிவ பிரானை நடனம் செய்வித்த பத்திர காளி அல்லள், அச்சம் தரத் தக்க காட்டையே வாழ் இடமாகக் கொண்ட காளி அல்லள்; தாருகன் என்று அசுரன் பெரிய மார்பைக் கிழித்த பெண்ணும் அல்லள்; அவள் மிக்க கோபம் உடையவள் போலவும் மாற்சர்யம் உண்டயவள் போலவும் காணப்படுகிறாள். அழகிய பொன் வேலைப்பாடு அமைந்த சிலம்பு ஒன்றைக கையில் பிடித்திருக்கிறாள். அவள் தன் கணவனை இழந்தவளாம். நின்னைக் காண வந்திருக்கிறாள், மன்ன, நினது. வாழ்நாள் சிறப்பதாகும்!”, என்று கூறிப் பணிந்தான். 

கண்ணகி வழக்குரைத்தாள். “அரசே என் கணவன் கள்வன் அல்லன். அவன் என் கால் சிலம்புகளில் ஒன்றை விற்கவே வந்தான்; அதனை விற்று வரும் பணத்தை வாணிக முதலாகக் கொண்டு வாணிகம் செய்ய வந்தான் ; நீ தீர விசாரியாமல் அவனைக் கொலை செய்யக் கட்டளையிட்டனை இதோ. இருக்கிறது எனது மற்றொரு சிலம்பு. மாணிக்க பரலையுடைய  சிலம்பு” என்றாள்.

அரசன், “அப்படியா! உனது சிலம்பு மாணிக்கப் பரலை உடையதா? எங்கள சிலம்பு முத்துப் பரலை உடையது அன்றோ? உன் சிலம்பை உடைத்துக் காட்டு, பார்ப்போம்”, என்றான். உடனே கண்ணகி தான் வைத்திருந்த சிலம்பை உடைத்தாள். அதனுள் இருந்த மாணிக்கமணிகள் வெளியே சிதறின.

தன் தவறை உணர்ந்த பாண்டியன் “யானோ அரசன், யானே கள்வன்”, என்று அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறக்கிறான். 

அவன் மனைவியும் “கணவனை இழந்தோருக்கு காட்டுவது இல்”, என்று தானும் கணவன் பாதம் விழுந்து இறந்து போகிறாள். 

சினம் தணியாத கண்ணகி தன் இடது முலையை திருகி மதுரையை மூன்று முறை வலம் வந்து எறிந்து மதுரை எரிந்து போகட்டும் என்று சாபமிடுகிறாள். 

அதே சினத்துடன் செல்லும் திசையறியாது நடப்பவளை மதுரை மாநகரின் வனதேவதை ஒரு மங்கை வடிவம் கொண்டு கண்ணகியின் பின்புறம் வந்து நின்றது. அந்த வன தேவதை சடை முடி தரித்திருந்தாள். சிவனைப் போல் பிறை தரித்திருந்தாள். குவளை மலர் போன்ற கண்கள்; ஒளி படைத்த முகத்தினள், கடைவாயில் பல் வளைந்து வெளிப்பட்டுத் தோன்றியது; பவள வாயள்; முத்துப் போன்ற பற்கள்; இடப் பக்கம் கருப்பு: வலப் புறம் சிவப்புப் பொன்னிறம் பெற்றிருந்தாள். உமைபாகன் வடிவம் அவளுடையது. இடக்கையில் தாமரை மலர் வலக் கையில் கொடுவாள்; வலக் காலில் வீரக்கழல், இடக் காலில் கால்சிலம்பு, பாண்டியனின் குல முதல்வி அவள். அவள் வருத்தத்துடன் கண்ணகி முன் நிற்க அஞ்சிப் பின் தொடர்ந்தாள்.

“நங்கையே! என் குறை கேட்பாயாக!”, என்று அம் மங்கை விளித்துப் பேசினாள். வாட்டமுற்ற நங்கை கண்ணகி வலப் பக்கமாகத் திரும்பிக் “கோட்டமுற்றுக் கேட்ட நீ யார்? ஏன் என்பின் வருகிறாய்? என் துயரம் முழுதும் நீ அறிவாயோ!”, என்று கேட்டாள்.

“துயரம் அறிந்தே உன்னைத் தொடர்கிறேன்; மதுரைப் பெண் யான், கட்டுரை கூற வந்திருக்கிறேன். உன் கணவனுக்காக இரங்குகின்றேன் என் அரசனுக்கு வந்தது தீ விதி; அது போல் உன் கணவனுக்கும் ஒரு தீ வினை வந்தது. இருவருக்கும் கேடுகள் நேர்ந்தன; அவர்கள் செய்த தீ வினைகளின் விளைவே இவை யாகும்.”, என்று பல பல விதமாக பாண்டியர்களின் பெருமையும் அவர்களின் நீதி பரிபாலனையும் விவரித்தது சினம் கொண்டு எரித்த மதுரையை ஒருமுறை திரும்பி பார்த்து செல்ல வேண்டுகிறாள். அப்படி செய்தால் மதுரை மீண்டும் தழைக்கும் என்றும் ஆற்றுப் படுத்தி பதினான்கு நாட்களுக்குப் பிறகு அவள் கோவலனுடன் சேர்ந்து விடுவாள் என்று சொன்னது அந்த வன தேவதை. 

கண்ணகி, நெடுவேல் குன்றம் சென்று மலர் நிறைந்த ஒரு வேங்கை மரத்தின் அடியிலே நின்றனள், மதுரை மா தெய்வம் கூறியதைப் போலவே, வானுலகத்திலிருந்து தேவருடன் கோவலன் வர, அவனுடன் அவளும் விமானம் ஏறி வானகம் நோக்கிச் சென்றனள். 

அக் காட்சியைக் குறவர் குடியினர் கண்டனர். அவர்கள் அடந்த வியப்போ பெரிது! அதனால், அவளைத் தம் குல தெய்வமாகவே கொண்டு வழிபட்டுப் பணிந்து போற்றலாயினர்.

கோவலனும் கண்ணகியும் இறந்து விட்ட செய்தி அறிந்த அவர்கள் இருவரின் பெற்றோர் தங்கள் சொத்துக்களை விற்று ஏழை எளியோருக்கு தானம் செய்தனர். கவுந்தியடிகளின் மகள்கள் இருவரும் கண்ணகியின் தோழியும் கண்ணகியின் மங்கல தேவி கோயிலை நிர்வகித்து வந்தனர்.

இலவந்திகை சோலையில் தொடங்கிய கோவலன் கண்ணகியின் கதை நெடுவேல் குன்றத்தில் முடிந்தது.

G.சியாமளா கோபு  – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) 36 வருடங்கள் சமூக செவிலியாக பணி ஓய்விற்குப் பிறகு இப்போது முழு நேர எழுத்தாளர். அநேக சிறுகதைகள் வல்லினம் திண்ணை பதாகை குட் புக் My vikatan Pustaka கல்கி குவிகம் நுகர் இ மேகசின் வெளி வந்திருக்கிறது. வானதி பதிப்பகம் ஒரு வரலாற்று நாவல் அருணோதயம் 16 நாவல்கள் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கலைமகள் ராணிமுத்து மற்றும் இதழ்களில் என் சிறுகதைகள் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல்: naviragopu@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here