சேவக்கத்தி

மாரி.கிருஷ்ணமூர்த்தி

1

அது மழைக்காலம். பூஞ்சையான காலைவேளையில், சுற்றிலும் ஈரபிசுபிசுப்பாக இருக்க, எழுந்திருக்க மனமில்லாமல் பாயில் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தான். ஓட்டுதாழ்வாரத்தில் இறங்கிவரும் பனிக்கு முகம் வரை போர்வையை இழுத்துப் போர்த்திய பிறகும் தூக்கம் வராததால், இரவெல்லாம் கண்ட கனவை ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்டிருந்தான். முன்னும் பின்னுமாக ஞாபகங்களில் சில காட்சிகள் மட்டுமே தீர்க்கமாகத் தெரிந்தன. சிறு வயதில் நண்பர்களோடு பனையேறிய நாட்களும், ஓரியாட்டம் போட்டு மத்தியானத்தில் கிணற்றில் விளையாடிய காட்சிகளும் ஓடிக்கொண்டிருந்தன.

 காலை வேளையில் கனவுகளைப் பின்தொடர்வது அவனுக்கு இப்போது வாடிக்கையாகிவிட்டது. சில நாட்கள் சுவற்றில் மாட்டிவைக்கக்கூடிய அளவுக்கு இருக்கும் காட்சிகளும், சில நாட்களில் அவமானத்தால் உடல் எரியும் காட்சிகளும் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க முடியாமல் இருந்தது. இது எப்பொழுதிலிருந்து ஆரம்பித்தது என அவன் யூகித்த போதெல்லாம், அவன் நெஞ்செலும்பு விண்ணென்று ஆவது போலாக, அதை யோசிப்பதையே விட்டுவிட்டான்.

மூன்று நாட்களுக்கு முன்புகூட, கடையில் மூக்குக்கு உள்ளே இருக்கிற முடியை வெட்டச் சொல்லிக் கஸ்டமர் கேட்டபோது, நெஞ்செலும்பு விண்ணென்று எழுந்தது. அதை முடிந்த மட்டும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு வெட்டிவிட்டு, கண்ணாடியின் முன் சவம் போல நின்றுகொண்டிருந்தான். அந்தாள் கடையைவிட்டு போகும் வரை விண்ணென்ற அதிர்வு அடங்காமல்தான் இருந்தது. இத்தனைக்கும் இதை எல்லோரும் செய்யச் சொல்வதுதான். அவனும் அதைத் தன் வேலை என்று செய்திருக்கிறான். ஆனால், அந்தாள் அப்படிக் கேட்கும்போது ஏதோ ஒன்று அழுத்துவது போல இருந்தது.

படுக்கையிலிருந்து எழுந்து முன்கட்டுக்குப் போனபோது, பழைய காலத்து ஆட்டுரலுக்குப் பக்கத்தில் ஒடுங்கிப்போன பித்தளைக் கிண்ணம் கிடப்பதைப் பார்த்தான். மணியின் அப்பா அந்த ஆட்டுரலுக்குப் பக்கத்தில்தான் வாழ்நாள் முழுக்க ஊர்க்காரர்களுக்குச் சவரம் பண்ணி வாழ்ந்துகிடந்தார். அவர் போன பிறகு, அவர் உபயோகித்த ஒவ்வொரு பொருளும் தானாகவே காணாமல் போனது. அவருக்கென்று இருந்த பழைய காலத்து இரும்புப் பெட்டியும், அதில் இருந்த மூன்று வேட்டி துணிகளும் இறந்த நாளில் அவர் கூடவே சுடுகாட்டுக்கு எடுத்துப்போய் சவத்தோடு புதைத்தார்கள்.

பெரியப்பாவோடு எடுத்த அவரின் புகைப்படம் ஒன்று மட்டும் அம்மாவின் பெட்டிக்குள் மாறியிருந்தது. ஒரே மாதிரி உடை, ஒரே மாதிரி மீசை என இளமையாக இருக்கும்போது ஸ்டூடியோவுக்குப் போய் எடுத்தது. அது ஞாபகம் வந்தவுடன் அந்தப் பெட்டியைத் தேடினான். பிள்ளைகளின் அடுக்கலமாரிக்குப் பின்னாடி ஒடுங்கிக் கிடந்தது அந்தப் பெட்டி. கல்யாணத்துக்குப் பச்சைக் கலர் பெட்டிதான் வேண்டும் என்று சொல்லிவிட, வேலூர் வரை தேடி வாங்கி வந்ததாக ஒருமுறை அம்மாவைப் பார்த்து அவன் அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறான். கொடி, இலைகளை வரைந்திருந்த பண்டுவப் பெட்டி பச்சை நிறம் மங்கிப்போய், மேல் பக்கத்தைச் சுற்றித் திட்டுத் திட்டாகத் துரு தெரிய, அவன் அம்மா பாலாத்தாளின் வயோதிக முகம் போலவே அந்தப் பெட்டி தெரிந்தது.

“இந்த ஊருல இருக்கிற முக்காவாசிப் பேருக்குப் பண்டுவம் செய்து, குழந்தைகளுக்குத் தொப்புள் கொடி அறுத்ததே நான் தான்” என பாலாத்தா பெருமையாகச் சொல்வாள். அத்தோடு, “அந்த மகராசி கற்றுக்கொடுத்த கைப்பக்குவம்” என்று பண்டுவாத்தா சாமியிடம் கும்பிடுவது போலச் சொறட்டி ஆத்தாவை நினைத்துக் கும்பிடுவாள்.

சொறட்டி ஆத்தாவுக்கு களையான முகம். மஞ்சள் அரைத்து பூசிய கன்னத்தில், ‘இதோ நான் இருக்கிறேன்’, எனத் துருத்தித் தெரியும் பெரிய மச்சம். வகிட்டில் தெரியும் வெள்ளை முடியை மறைக்கும் குங்குமத் தீற்று. கருத்து அடர்த்தியாக இருக்கும் புருவ முடி. சிரிக்கும் பல் வரிசை என எப்பொழுதும் களையாகவே இருப்பாள்.

மணியின் அப்பாவோடு பிறந்தவர்கள் மூன்று பேர். பெரிய குடும்பம். பெரியவர்தான் குடும்பத்தை வழிநடத்தினார். நாவிதத் தொழில் என்பது பெயருக்குத்தான். மீதி நேரமெல்லாம் பெரியவர் பண்டிதம் பார்ப்பார். இரண்டாவது பெரியப்பாவும், சித்தப்பாவும் கல்யாணத்துக்கும், கோயில் திருவிழாவுக்கும் மேளமும், நாதஸ்வரமும் வாசிப்பார்கள்.

பாலும் பழமும் படத்தில்கூட ஒரு பாடலுக்கு மேளம், நாதஸ்வர வித்வான்களாக சிவாஜியோடு நடித்து ஊரில் பெயர் பெற்றார்கள். அதிலெல்லாம் ஓர்மையில்லாததால், நாவிதமும், இழவு வீட்டில் குளிப்பாட்டுச் சடங்குத் தொழிலும் மட்டுமே செய்துகொண்டிருந்தார் மணியின் அப்பா. தாண்டராயன் கூடப் பிறந்தவர்களின் புகழும் பணமும் தனக்கு இல்லையே என்று அவருக்கு இருந்த வருத்தத்தை நினைத்துப் பார்த்தான்.

ஊர் சாவு நாட்களில், அம்மிக்கல் ஓரம் கோழிப்படலையில் குடித்துவிட்டு புலம்பும் அப்பனின் சொற்களெல்லாம் இப்பொழுது கேட்டதுபோல இருந்தது. அந்நாட்களில் கோவத்தோடு இருக்கும் அம்மாவைச் சட்டை செய்யாமல், சொறட்டி ஆத்தா அப்பனுக்குச் சோறு கொண்டுவந்து கொடுத்ததை நினைத்துப் பார்த்தான். படலை திறப்போரம் கிடந்த பண்டுவ அரைப்புக்கல் ஞாபகம் வர, பெரியம்மாவைப் பற்றி அவன் அம்மா சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது.

பாலாத்தாவுக்கு புள்ளதாட்சிகளுக்குப் பண்டுவம் பார்த்து, பேறுகால முறைமைகளைச் சொறட்டிதான் சொல்லிக்கொடுத்தார். காடு, கழனியெனத் திரிந்து பச்சிலை பறித்துவந்து, இரவெல்லாம் அவன் அம்மாவும் பெரியம்மாவும் அரைத்த பச்சையம் அந்தக் கல்லின் ஓரங்களில் பூஞ்சையாக இன்னும் இருந்தது.

மூன்றாம் மாதத்தில் தொடங்குகிற பண்டுவ வைத்தியம், குழந்தை பிறந்து தொப்புள் கொடி அறுத்து, ஏழாம் நாள் செலவு கொழம்பு வைப்பது வரை மொத்த ஊருக்கும் சொறட்டிதான் கைராசிக்காரி என்பார்கள். அவளோடு போய்த் தொண்டு செய்து, அதை கற்றபிறகு, “பண்டுவத்துல சொறட்டியையே மிஞ்சிட்டா பாலாத்தா”, என ஊர்க்காரர்களிடம் நல்ல பெயரை எடுத்திருந்தாள். அது தாண்டராயனுக்கு ஊரில் கொஞ்சம் மரியாதையைக் கூட்டியது.

சொறட்டி ஆத்தாளுக்கு இன்னொரு சிறப்பும் இருந்தது. “ஆச்சாரத்துல அவள மிஞ்சப் பாப்பாத்திங்களே தோற்பாங்க” என்பாள் பாலாத்தா. அவ்வளவு சுத்தமும் ஒவ்வொன்றிலும் பக்தியும் கலந்திருக்கும். அதுதான் பண்டுவ மருந்து சரியாக வேலை செய்கிறது என்பார்கள். மகன்கள் போன பிறகு, அவள் கையில் இருந்த சூத்திரப் பக்குவம் மங்கியது.

பெரியம்மாவின் ஞாபகம் வந்தவுடன், அவன் வீட்டுக்கு முன்னாடி இருந்த அவர்கள் வீட்டை நோக்கிப் போனான். சிதிலமடைந்த ஓட்டு வீட்டின் தாழ்வாரங்களில் சிலந்தி வலைகள் பின்னிக்கிடக்க, உள் அறையில் வௌவ்வால்கள் தொங்கிக்கிடந்தன. இடிந்த சுவர்களில் எருக்கை முளைத்து மரமாக வளர்ந்திருக்க, அதன் அடியில் நிழலுக்கு ஒரு தாய் நாய் படுத்துக்கொண்டிருந்தது. வெளித் தாழ்வாரத்தில் சொறட்டி ஆத்தா உட்கார்ந்து பண்டுவ சாமான்களைப் பிரிக்கும் திண்ணை மட்டும் நிறம் மங்காமல் அப்படியே இருந்தது. அந்தத் திண்ணைக்குப் பக்கத்தில் இருந்த விளக்கு மாடத்தில், கல் அகல் விளக்கிலிருந்து வெளியேறிய கரிச்சுடராலும் தீப எண்ணெய்யால் படிந்த மைப்பிசுபிசுப்பும் மாடம் முழுக்க அப்பிக்கிடக்க மாடத்துக்கு இடதுபுறம் இருந்த அலமாரியில் செல்லரித்த சில ஓலைச்சுவடிகளும், திருமூலர் புத்தகங்களும் கேட்பாரற்று கிடந்தன.

அவரைப் பற்றின முதல் சித்திரமே, அவனுக்கு கல் அகல் விளக்கொளியில் உட்கார்ந்து ஓலைச்சுவடியைப் படித்துக்கொண்டிருக்கும் பெரியப்பாவின் ஞாபகம்தான் வரும். அந்த நேரத்தில் வானமே இடிந்து விழுந்தாலும், அவர் காதுக்குள் விழாது என்பார்கள்.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு மட்டுமே பண்டிதம் சொல்வார். பொழுது சாய்ந்தால் யாராய் இருந்தாலும் பண்டிதம் சொல்லமாட்டார். அவர் யார் வீட்டுக்கும் போய்ப் பண்டிதம் சொல்லியதில்லை. தன்னைத் தேடி வருபவர்களுக்கு மட்டுமே சொல்வார். மற்ற நேரத்தில் சொறட்டி ஆத்தாளுக்கு பச்சிலைச் சாறுகளின் சூத்திரங்களைச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பார்.

ஆனால், அந்தப் புகழெல்லாம் அவனுடைய பெரியப்பா பண்டாரம் ஆகி வீட்டைவிட்டு ஓடிப்போகாத வரைதான்.

மூத்த மகன் விபத்தில் இறந்த ஆறாவது நாள், இரவெல்லாம் ஓலைச்சுவடிகளைப் புரட்டியபடியே இருந்துவிட்டு, காலையில் வெளியேறியவர், நான்கு மாதம் கழித்துப் பண்டாரக் கோலத்தில் வந்து நின்றார். சூடு கண்ட பூனை வீடு தங்காது என்பதுபோல, ஆறு மாதம் காட்டுக்கும் வீட்டுக்குமாக அவர் அலைந்துகொண்டிருந்தார். சொறட்டி ஆத்தாதான் வீட்டைப் பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கு இரண்டு மகன்கள், ஒரு பெண். எல்லோருக்குமே கல்யாணம் ஆகியிருந்தது. பண்டிதர் ஊரைவிட்டு போன பிறகு, அவர்களுக்கு எவ்வளவோ சொறட்டி ஆத்தா பண்டுவம் பார்த்தும் குழந்தை தங்காமல் இருக்க, பாலாத்தாளை கூப்பிட்டு பண்டுவம் பார்க்கச் சொன்னாள். அவள் கற்றுக்கொடுத்த பச்சைய கலப்பும் பாலாத்தாவின் கைராசியும் பொய்க்கவில்லை. அவள் மகளுக்கு மட்டும் ஆண் குழந்தை பிறந்தது.

பேரன் பிறந்த ஒரே மாதத்தில் கிணற்றில் விழுந்து இன்னொரு மகனும் இறந்துபோக, கலகலத்துப்போனாள் சொறட்டி. இங்கிருந்தால் என்ன நடக்குமோ என்று பயந்து, அவள் தாய்வீடான கரியமங்கலத்துக்கே பேரனையும் பொண்ணையும் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.

“பண்டுவம் முத்தினா பண்டிதம், பண்டிதம் முத்துனா பண்டாரம்”, என அவன் வேலை செய்யும் கடை ஓனர் ஒரண்டை இழுக்கும் போது சொலவடை சொல்லி வெறுப்பேத்துவார். அது சிடுக்கிட்டுப்போன குடும்பத்தைக் குத்திக்காட்டுவது போலவே இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல, பங்காளிகளின் வீட்டில் பிள்ளைகள் தலையெடுப்பதற்குள்ளேயே பெற்றோர்களை அகாலம் கொண்டுபோனது. அவர்கள் குடும்பத்தில் வயதானவர்கள் என்றால் மணியின் அம்மாவும் சித்தப்பாவும் மட்டுமே.

உருவேறியிருந்த ஞாபகங்களைக் கலைத்து அவன் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் அப்பன் படுத்துக்கிடந்த திண்ணையோரம் பாலாத்தா சுருண்டு படுத்துக்கிடந்தாள்.

அவள் மடியில் தொப்புள் கொடி அறுக்கும் சேவக்கத்தி சுருக்குப் பையோடு ஒட்டி முடிச்சிட்டு வயிற்றோடு ஒட்டியிருந்தது. அவளுக்குப் பக்கத்தில், முந்தாநாள் சொறட்டி ஆத்தாவின் பேரன் வந்து அவன் கல்யாணத்துக்குக் கொடுத்த பத்திரிக்கை கிடந்தது. அதை எடுத்து பார்த்தான் பெண்ணின் அப்பன் பெயர் இருந்த இடத்தில் ஊர் நாய்க்கன் பெயர் இருக்க அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

2

பத்து வருடமாகக் குழந்தையில்லாத ஊர் நாய்க்கனுக்குப் பண்டுவம் பார்த்து பெண் குழந்தை பிறந்த பிறகு, ஊரே பாலாத்தாளைத் தூக்கி வைத்துக் கொண்டாடியது. ஞாபகங்கள் ஒன்றோடு ஒன்று பின்னியிருக்க, வேலைக்குப் போகாமல் வீட்டில் படுத்திருந்துவிட்டு சாயங்காலம் நடந்து கழனிக் காட்டு பக்கம் போனான் மணி.

ஊர் நாய்க்கனின் நிலம் தூரத்தில் தெரிந்தது. மாமரங்களும் பனையும் சூழ்ந்திருந்த கொல்லைமேடு, இப்பொழுது ஊசி ஊசியாய் வளர்ந்து நிற்கும் தைல மரங்களால் சூழப்பட்டிருந்தது. அதற்கு நடுவே பெரிய வட்டக் கிணறு இன்னும் வற்றாமல் இருப்பதை, அதன் பக்கத்தில் இருந்த மரங்களின் பசுமையைப் பார்த்த உடனே அவனுக்குத் தெரிந்தது. சுற்றிலும் வீடுகளாய்ப் பெருகி, கோடிக்கணக்கில் போகும் அந்த நிலம் மட்டும் வேலியிட்டு மரம் வைக்கப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் துண்டு நிலமும், வீசிய ஓலைக்கீறுகள் போல விரிந்திருக்கும் துரிஞ்ச மரத்தடியில், அவன் அம்மா வைத்து வணங்கிய பண்டுவம்மன் கல் மட்டும் இன்னும் அப்படியே இருந்தது.

பண்டுவம் பார்த்தும், குளிப்பாட்டுச் சடங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய நிலம் அது. அந்நிலம் வாங்கிய நாள் இன்னும் மணியின் ஞாபகத்தில் பசுமையாக இருந்தது. அப்பொழுது மணிக்குப் பத்து வயது.

அவனுடைய அக்கா வயதுக்கு வந்து ஆறாவது மாதத்தில், தென்னைப் பூ போலச் சிரித்த முகத்துடன் அம்மாவும் அப்பாவும் அந்த நிலத்தை வாங்கிவிட்டு வீடு வந்த தினம் அது. ஐந்து வருடம் அந்த நிலத்தில் அப்பனின் உழைப்பையெல்லாம் போட்டு, விளைச்சல் வந்த பணத்தில் செல்வச் செழிப்போடு வீடு கட்டிக்கொடுத்து, ஊரோடு கூட்டிவந்து குடிவைத்த அக்கா, தீக்குளித்து இறந்த ஆறாவது மாதத்தில்தான் அந்த நிலமும் விற்கப்பட்டது.

அன்று இரவு ராச்சாப்பாட்டுக்கு ஊர் சோறுக்குப் போய்வந்தவள் சட்டியை விசிறிவிட்ட சோற்றுப் பருக்கைகள் வீடு முழுக்கச் சிதறிக்கிடக்க, எரிக்கோலத்தில் கதறிய கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்களெல்லாம் ஓடினார்கள்.

கோணிப்பையைப் போட்டு தீயை அமுக்கிய அமுக்கத்தில் முகமெல்லாம் சிதைந்து எரிந்து, ரத்தம் கசிந்திருந்த வாயிலிருந்து உள் ஒடுங்கிய ஒரு சொல்லை மட்டும் தீனமாய்ப் பிடித்துக் கொண்டிருந்தவளைத் தூக்கிக்கொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். மூன்று நாட்கள் அச்சொல்லை மட்டும் அடிதொண்டையில் பிடித்திருந்தவள், சொறட்டி ஆத்தாவிடம் கைமாற்றியவுடன் இறந்துபோனாள்.

குளியல் சடங்கு இல்லாமல் தாண்டராய பண்டிதன் எரித்த முதல் பிணம் அது.

ஊர் நாய்க்கனின் ஒரு சொல் அன்றி உள் நுழையாத போலீஸ்காரர்கள், வயிற்றுவலியால் எரித்துக்கொண்டாள் என்று கேஸ் கட்டில் எழுதிய சொல்தான் ஊருக்குள்ளும் உலவியது.

பாலாத்தா பண்டுவத்தையும், தாண்டராயன் நாவிதத்தையும் ஊர் நாய்க்கனின் தம்பி வீட்டுக்கு மட்டும் நிறுத்திய நாளில், புகை போலப் பகை அவர்கள் வீட்டைச் சூழ்ந்தது. பண்டுவத்தையும் நாவிதத்தையும் நிறுத்திய சரியாக மூன்றாவது மாதம்தான் மணியின் பெரியப்பா மகனும் விபத்தில் இறந்துபோனான்

3

பண்டுவம்மன் மரத்தை நோக்கி மணி போக மேற்கிலிருந்து குளிச்சியான காற்று அவனைத் தழுவி விட்டு போனது அவன் ஓடி,ஆடிய நிலத்தில் கால் பட்டதும் உடல் சிலிர்ப்பேற சுற்றி முற்றி பார்த்தான் வேலியில் இருக்கும் பனைச்சாரையும், களத்து மேட்டில் இருக்கும் புங்கையும் தவிர, அந்த நிலம் முழுக்கக் அருவதா குறுஞ்செடிகளாய் வளர்ந்திருந்தது. பெரண்டை கொடி பூத்து நாராய் நாராய் பாவி, பண்டுவம்மனின் மரத்தில் ஏறி மூடியிருந்தது.

ஊர் நாய்க்கன் எவ்வளவோ செய்தும் அந்த நிலத்தில் ஒரு பயிர்கூடச் சரியாக வைக்க முடியவில்லை. அகால நேரத்தில் அந்தப் பக்கம் போனால் மெய் அமுக்கும் ஊமைச் சத்தம் கேட்பதாக ஊரில் சொல்ல ஆரம்பித்தார்கள்.

விளைச்சல் இல்லாமல் கடன் மேல் கடன் வர, அந்நிலத்தை மட்டும் விட்டுவிட்டு மீதி இடத்தை விற்றுவிட்டு வெளியூருக்கு ஊர் நாய்க்கன் குடும்பம் போய்விட்ட பிறகு, வாங்கியவர்கள் அந்நிலத்தை மட்டும் வேலியிட்டிருந்தார்கள். ஓனான் கொடி மூடியிருந்த வரப்பை தாண்டும் போது பொழுது துணங்கியிருந்தது

அந்நேரம் அருவதா செடியிலிருந்து வந்த வாசம் அவள் அக்காவின் மேனி வாசத்தை ஞாபகம்படுத்த. காலவோட்டத்தில் இருளிட்டிருந்த இடமெல்லாம் துலக்கமாகத் தெரிய, வீடு திரும்பினான் மணி.

பாலாத்தாவுக்குப் பக்கத்தில் இருந்த பத்திரிகையை எடுத்து இன்னொரு முறை படிக்க ஆரம்பித்தான்.

“மேன்மை பொருந்திய ஆடையூர் நாட்டு ஊர் நாய்க்கனின் ஏக புதல்வியும், குழந்தைப் பேறு டாக்டருமான திருமதிக்கும்’’,

‘’மேன்மை பொருந்திய ஆடையூர் நாட்டு பண்டிதர் ஐராணன் பேரனும், உடற்கூறு டாக்டருமான திருவாளனுக்கும்’’, பெரிய கோயிலில் தை ஏழாம் நாள் திருபோகத் திருமணம்.”, என்றிருந்ததையே பார்த்துக்கொண்டிருந்தான்.

4

காலையில் உற்சாகமாகப் பெரியம்மாவின் பேரன் கல்யாணத்துக்குப் பாலாத்தாளைக் கூட்டிக்கொண்டு கிளம்பினான் மணி. உள்ளொடுங்கிப் பஞ்சு பொதிந்திருந்த அவள் கண்களில் ஏதோ ஒளி வந்ததுபோல இருந்தது. அப்பொழுதும் அவள் பண்டுவம் பார்த்துத் தொப்புள் கொடி அருக்கும் சேவக்கத்தி முனை மங்காமல், அவள் இடுப்பில் தொங்கியபடிதான் இருந்தது.

மணப்பந்தலில் திருக்கோலம் பூண்டிருந்த மணப்பெண்ணின் பக்கத்தில் ஒடுங்கியபடி நின்றிருந்தான் ஊர் நாய்க்கன். அதிகாரம் இற்றுப்போன கண்களில் பூஞ்சான்கள் மஞ்சளாய்ப் பூத்திருந்தன. பாலாத்தா சுற்றிப்பார்த்தாள். கல்யாண பந்தலில் “தான்” பண்டுவம் செய்து பிறந்தவர்கள் பாதி பேருக்கு மேல் நின்றிருக்க அவள் நெஞ்சு குளிர்ந்தது.

தாலி கட்டு முடிந்து, அம்மி சுற்றி வந்து பாலாத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய மணப்பெண்ணுக்குப் பரிசாக, முனை மங்காத தொப்புள் கொடி அருக்கும் சேவக்கத்தியை பரிசாகக் கொடுத்தாள். அதைப் பார்த்தவுடனே உடல் நடுங்கி, கண்ணீர் பெருக பாலாத்தாளின் காலில் விழுந்து கைகூப்பினான் ஊர் நாய்க்கன்.

***

மாரி.கிருஷ்ணமூர்த்தி: திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர்  தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். தளம்”சமூக உறையாடல் மையம் வழியாக இலக்கிய கூட்டங்களும்,ஊர் பொது கிணறு புணரமப்பு இயக்கம் வழியாக மூன்று பொது கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார்.அத்தோடு சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார். தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார்.  திண்டுக்கல் இலக்கிய கூடல் விருதும் பிடிமானம் சிறுகதைத் தொகுப்பிற்காக சௌமா இலக்கிய விருதும் வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: Krishnamoorthi973@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here