Homeஇதழ்கள்2026 இதழ்கள்ஒரு தொலைபேசி அழைப்பு

ஒரு தொலைபேசி அழைப்பு

டொரதி பார்க்கர் 

தமிழில்: சுபஶ்ரீ முரளிதரன்

ப்ளீஸ் கடவுளே, இப்பொழுது அவனிடமிருந்து எனக்கு டெலிஃபோன் அழைப்பு வரவேண்டும். அன்பான என் தேவனே, இப்பொழுது அவன் என்னை அழைக்கட்டும். இதைத் தவிர உம்மிடம் வேறு எதையும் நான் கேட்கமாட்டேன். சத்தியமாகக் கேட்கமாட்டேன். உமக்கு இது ஒரு அற்ப விஷயம்தான். கடவுளே இது உமக்கு சிறிய விஷயம்… மிகவும் சிறியது. இப்பொழுது அவன் என்னைத் டெலிஃபோனில் தொடர்புகொள்ளும்படி செய்துவிடுங்கள்.. ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்

நான் அதைப் பற்றி யோசிக்காவிட்டால், ஒருவேளை டெலிஃபோன் சிணுங்கலாம். சில சமயங்களில் அப்படி நடப்பதுண்டு. என்னால் வேறு எதைப் பற்றியாவது யோசிக்க முடிகிறதா? என்னால் வேறு எதையாவது யோசிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஐந்தைந்தாக ஐநூறுவரை எண்ணினால், ஒருவேளை அப்பொழுது டெலிஃபோன் மணி அடிக்கலாம். நான் மெதுவாகவே எண்ணுவேன். நிச்சயமாக நான் ஏமாற்றமாட்டேன். ஒருவேளை நான் முன்னூறை நெருங்கும்போது மணி அடித்தால் அப்பொழுதும் நான் எண்ணுவதை நிறுத்தமாட்டேன். நான் ஐநூறை எட்டும்வரை அதற்கு பதிலளிக்கமாட்டேன். ஐந்து, பத்து, பதினைந்து, இருபது, இருபத்தைந்து, முப்பது, முப்பத்தைந்து, நாற்பது, நாற்பத்தைந்து, ஐம்பது… ஓஹ்ஹ்.. கடவுளே, ப்ளீஸ் டெலிஃபோன் மணி அடிக்கவேண்டும். ப்ளீஸ்.

இதுதான் நான் கடிகாரத்தைப் பார்க்கப்போகும் கடைசி முறை. நான் திரும்பவும் பார்க்க மாட்டேன். இப்பொழுது மணி ஏழு பத்தாகிறது. அவன் என்னை ஐந்து மணிக்கு அழைப்பதாகக் கூறியிருந்தான். “நான் உன்னை ஐந்து மணிக்கு அழைக்கிறேன் டார்லிங்”, என்றான். அவன் அப்பொழுதுதான் என்னை “டார்லிங்”, என்று சொன்னான் என்று நினைக்கிறேன். ஆமாம். அவன் அப்பொழுது அப்படித்தான் சொன்னான் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவன் என்னை “டார்லிங்”, என்று இரண்டுமுறை குறிப்பிட்டான். இரண்டாவது முறை என்பது நான் குட் பை சொன்னபோது. அவன் மிகவும் பரபரப்பாக இருந்தான். அவனால் மற்றபடி வேறு எதுவும் பேச முடியாது, ஆனால், “குட் பை டார்லிங்”, என்றான். நான் அவனை டெலிஃபோனில் அழைத்துப் பேசுவதில் அவனுக்கு ஆட்சேபனை எதுவும் இருக்காது. அவர்களைத் தொலைபேசியில் அழைக்கக்கூடாது என்று எனக்குத் தெரியும். அப்படி செய்தால் நாம் அவர்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர்களை விரும்புகிறோம் என்றும் அவர்களுக்குத் தெரிந்துவிடும். அவர்களுக்கு அது பிடிக்காது என்றும் எனக்குத் தெரியும். அப்படிச் செய்வது அவர்களுக்கு நம் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். ஆனால், நான் அவனுடன் மூன்று நாட்களாகப் பேசவில்லை. மூன்று நாட்களாகிவிட்டது. அவன் எப்படி இருக்கிறான் என்று கேட்க மட்டும்தான் செய்தேன். யாராக இருந்தாலும் அதைத்தான் செய்வார்கள். அதை அவன் பொருட்படுத்தியிருக்கமாட்டான். நான் அவனை சங்கடப்படுத்திவிட்டதாக நினைத்திருக்க வாய்ப்பேயில்லை. “இல்லை. நிச்சயமாக நீ என்னை சங்கடப்படுத்தவில்லை”, என்றுதான் சொன்னான். அதைச் சொல்லிவிட்டு நான் உன்னை அழைத்துப் பேசுகிறேன் என்றும் சொன்னான். அப்படி அவன் சொல்லியிருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நான் அழைக்கச்சொல்லி கேட்கவில்லை. உண்மையாகவே நான் அப்படிக் கேட்கவே இல்லை. நிச்சயமாக இல்லை. அவன் அழைப்பதாகச் சொல்லிவிட்டு, அதை செய்யாமல் இருப்பான் என்று என்று எனக்குத் தோன்றவில்லை. அவனை அப்படி செய்ய வைத்துவிடாதே கடவுளே. ப்ளீஸ் அப்படி மட்டும் செய்துவிடாதே. 

“நான் உன்னை ஐந்து மணிக்கு அழைக்கிறேன் டார்லிங். குட் பை, டார்லிங்”. அவன் வேலைப்பளுவிலும் பரபரப்பிலும் இருந்தான். அவனைச் சுற்றிலும் மனிதர்கள் இருந்தார்கள். இருந்தாலுமே என்னை இரண்டுமுறை டார்லிங் என்று குறிப்பிட்டான். அது எனக்கானது. அவன் என்னுடையவன். நான் மீண்டும் ஒருபோதும் அவனைப் பார்க்க முடியாமல் போனாலும்கூட அதுவே போதுமானது. ஓ அது மிகவும் கொஞ்சமானது. அது போதாது. ஓருவேளை இனி அவனை ஒருபோதும் பார்க்க முடியாதென்றாகிவிட்டால், எதுவுமே போதாது. தயவுசெய்து அவனைப் பார்க்க வைத்துவிடு. கடவுளே தயவு காட்டு. எனக்கு அவன் அந்த அளவிற்கு வேண்டும். எனக்கு அவன் அவ்வளவு தேவைப்படுகிறான். நான் நல்ல பிள்ளையாக இருப்பேன். நான் இன்னும் சிறப்பாக இருக்க முயற்சிப்பேன். நிச்சயமாக இருப்பேன். நீ என்னை மீண்டும் அவனைப் பார்க்கவைத்தால் நிச்சயம் நான் முயற்சி செய்வேன். நீங்கள் அவனை என்னிடம் டெலிஃபோனில் பேசவைத்துவிடுங்கள். ஓ, இப்பொழுதே அவனை எனக்கு டெலிஃபோன் செய்ய வையுங்கள்.

என்னுடைய பிரார்த்தனையை சிறுமையாக நினைத்துவிடாதீர்கள் கடவுளே. நீர் அங்கு மேலே, வெண்மையாகவும் முதுமை படர்ந்தவனாகவும், உம்மைச் சுற்றி தேவதைகள் சூழ, நட்சத்திரங்கள் கடந்து சென்றுகொண்டிருக்க அமர்ந்திருக்கிறீர்கள். நான் உங்களிடம் ஒரு டெலிஃபோன் அழைப்பிற்கான வேண்டுதலுடன் வந்திருக்கிறேன். ஐயோ கடவுளே, சிரிக்காதீர். இது எப்படி இருக்கும் என்று உங்களால் உணர முடியாது. உங்களுக்குக் கீழே நீலவானம் சுழன்றுகொண்டிருக்க, நீர் உன்னுடைய அரியாசனத்தில் பத்திரமாக அமர்ந்திருக்கிறீர். உம்மை எதுவும் தொடமுடியாது. யாரும் உம்முடைய இதயத்தை தங்கள் கைகளால் முறுக்க முடியாது. இது சித்திரவதை. கடவுளே இது கொடுமையானது. மிகவும் கொடுமையானது. நீர் எனக்கு உதவ மாட்டீரா? உம்முடைய மைந்தனுக்காக, எனக்கு உதவி செய்வீராக. அவரின் பெயரால் எதைக் கேட்டாலும் தருபவர் நீங்கள். ஓ கடவுளே, உமது பாசத்திற்குரிய ஒரே மகனும், எங்களின் ஆண்டவருமான ஏசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன். அவனை இப்போதே எனக்கு டெலிஃபோன் செய்ய வைப்பீராக. 

நான் இதை நிறுத்த வேண்டும். நான் இந்த மாதிரி இருக்கக்கூடாது. ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் நான் உன்னைக் கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு, ஏதோ நடந்துவிட்டக் காரணத்தினால், கூப்பிடாமல் போனால் எப்படி இருக்கும் தெரியுமா? இந்தக் கணத்தில் உலகம் முழுவதிலும் ஏன் இப்படி நடக்கிறது? ஐயோ, உலகம் முழுவதிலும் என்ன நடக்கிறது என்று நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? இந்த ஃபோன் ஏன் அடிக்கக்கூடாது? ஏன் கூடாது? ஏன் கூடாது? உம்மால் அடிக்க வைக்க முடியாதா? ஐயோ, உம்மால் முடியாதா? கேடுகெட்டவனே, அசிங்கமான ஜொலிக்கும் பொருளே. உமக்கு என்ன வலிக்கிறதா? ஆமாம். உமக்கு வலிக்கத்தான் செய்யும். கேடுகெட்டவனே. உம்முடைய அழுக்குப் பிடித்த வேர்களை சுவரிலிருந்து பிடுங்கி எறிந்துவிடுவேன். உம்முடைய திமிர் பிடித்த கறுத்த முகத்தை சுக்குநூறாக நொறுக்கி விடுவேன். நீர் நாசமாகத்தான் போவீர்.

இல்லை. இல்லை. கூடாது. நான் இதை நிறுத்த வேண்டும். நான் வேறு எதைப் பற்றியாவது யோசிக்க வேண்டும். இப்பொழுது நான் இதைத்தான் செய்யப்போகிறேன். நான் கடிகாரத்தை எடுத்து அடுத்த அறையில் வைக்கப்போகிறேன். அப்பொழுதுதான் நான் அதைப் பார்க்காமல் இருக்க முடியும். ஒருவேளை நான் பார்க்க நினைத்தால், அதற்காகப் படுக்கை அறைவரை செல்ல வேண்டும். அது ஒரு வேலையாகத் தோன்றிவிடும். நான் அடுத்தமுறை கடிகாரத்தைப் பார்ப்பதற்குமுன் அவன் என்னை அழைத்துவிடுவான். அவன் என்னை அழைத்தால், நான் அவனிடம் இனிமையாக பேசுவேன். அவன் இன்றிரவு என்னை சந்திக்க முடியாது என்று சொன்னால், “ஏன், அதனால் என்ன பரவாயில்லை டியர்; அதற்கென்ன, பரவாயில்லை”, என்று சொல்வேன். நான் அவனை முதலில் சந்தித்தபோது எப்படியிருந்தேனோ அதேபோலவே இருப்பேன். அப்படியானால் அவன் என்னை மீண்டும் விரும்பக்கூடும். நான் முதலில் இனிமையானவளாகத்தான் இருந்தேன். ஓ, ஒருவரைக் காதலிப்பதற்குமுன் இனிமையானவராக இருப்பதென்பது சுலபம். 

அவன் என்னை இன்னமும் கொஞ்சம் விரும்பத்தான் செய்கிறான். இல்லாவிட்டால் அவனால் இன்று இரண்டுமுறை என்னை “டார்லிங்’ என்று அழைத்திருக்க முடியாது. எல்லாம் முடிந்து போய்விடவில்லை. அவனுக்கு என்மீது கொஞ்சம் பிரியம் இருந்தாலும், அவன் கொஞ்சமே கொஞ்சமாக என்னை விரும்புவதாக இருந்தாலும், இங்கே பாருங்கள் கடவுளே, நீர் அவனை எனக்கு டெலிஃபோன் செய்ய வைக்க வேண்டும். அதற்குமேல் நான் உம்மிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை. நான் அவனிடம் இனிமையாக நடந்துகொள்வேன். எனக்கு மிகவும் குதூகலமாக இருக்கும். நான் முன்பு இருந்ததைப் போலவே இருப்பேன். அவனும் என்னை மீண்டும் காதலிக்கத் தொடங்கி விடுவான். அதற்குப் பிறகு நான் உம்மிடம் கேட்பதற்கு எதுவும் இருக்காது. உமக்கு இது புரியவில்லையா கடவுளே? அதனால் நீர் அவனை எனக்கு டெலிஃபோன் செய்ய வைக்கமாட்டீரா? செய்ய மாட்டீரா? ப்ளீஸ், ப்ளீஸ்?

நான் பைத்தியமாக இருப்பதால் நீங்கள் என்னை தண்டிக்கிறீர்களா கடவுளே? நான் அப்படி செய்தேன் என்று உமக்கு என்மேல் கோபமா? ஆனால் பாருங்கள் கடவுளே, இங்கு நிறைய தீயவர்கள் இருக்கிறார்கள். நீர் என்னிடம் மட்டும் இவ்வளவு கடினமாக நடந்துகொள்ளக் கூடாது. அது அப்படி ஒன்றும் தீய விஷயம் கிடையாது. அது ஒன்றும் கெட்ட விஷயமாக இருந்திருக்கவே முடியாது. நாம் யாரையும் துன்புறுத்தவில்லை கடவுளே. எந்த மனிதரையாவது துன்புறுத்தினால்தான் அது கெட்டதாகக் கருத முடியும். நாங்கள் ஒரு ஜீவனையும் துன்புறுத்தவில்லை என்பது உங்களுக்கே தெரியும். அது தவறானதில்லை என்றும் உங்களுக்குத் தெரியும். தெரியாதா கடவுளே? ஆக, நீர் இப்பொழுது அவனை எனக்கு டெலிஃபோன் செய்ய வைக்க மாட்டீர்கள்? 

` அவன் எனக்கு டெலிஃபோன் செய்யவில்லை என்றால் கடவுள் என்மீது கோபமாக இருக்கிறார் என்று எனக்குத் தெரிந்துவிடும். நான் இப்பொழுது ஐந்தைந்தாக ஐநூறு வரை எண்ணத்தொடங்குவேன். அதற்குள் அவன் என்னை அழைக்கவில்லை என்றால், கடவுள் இனிமேல் எனக்கு உதவமாட்டார் என்று தெரிந்துவிடும். அதுதான் சமிக்ஞை. ஐந்து, பத்து, பதினைந்து, இருபது, இருபத்தைந்து, முப்பது, முப்பத்தைந்து, நாற்பது, நாற்பத்தைந்து, ஐம்பது, ஐம்பத்தைந்து… அது தவறுதான். அது தவறுதான் என்று எனக்குத் தெரியும். சரி, கடவுளே என்னை நரகத்திற்கு அனுப்பிவிடுங்கள். நீங்கள் உங்கள் நரகத்தைக் காட்டி என்னை அச்சுறுத்தப் பார்க்கிறீர்கள். அப்படித்தானே? உங்களுடைய நரகம் என்னுடையதைவிட கொடுமையானது என்று நினைக்கிறீர்களா? 

நான் செய்யக்கூடாது. நான் செய்துவிடக்கூடாது. அவன் என்னை அழைப்பதற்கு சற்று தாமதமாகிறது என்று நினைக்கிறேன். அதற்காக நான் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. ஒருவேளை அவன் டெலிஃபோனில் அழைக்கவே மாட்டானாக இருக்கலாம். ஒருவேளை டெலிஃபோனில் அழைக்காமல் நேரில் வந்துவிடக்கூடும். நான் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து அவன் மன்னிப்புக் கேட்கலாம். அவர்களுக்கு அழுவது பிடிக்காது. அவன் அழமாட்டான். அவனை நான் அழவைக்கவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். அவன் அழுது , தரையில் புரண்டு, மனம் கனத்து, நொந்துபோகவேண்டும். அப்படியாக அவனை நரக வேதனையில் வீழ்த்தவேண்டும் என்று விரும்புகிறேன்.

அவன் எனக்கு அப்படி எதுவும் நினைக்கமாட்டான். நான் எப்படி உணர்கிறேன் என்றுகூட அவனுக்குத் தெரியாது என்றுதான் நினைக்கிறேன், நானாக சொல்லாமல், அவனுக்குத் தெரியவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களால்தான் அழுகிறோம் என்று சொல்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்களால்தான் நீ மகிழ்ச்சியாக இல்லை என்று சொல்வதையும் அவர்கள் விரும்பமாட்டார்கள். அப்படிச் சொன்னால், அவர்கள் உன்னை அதீத பற்றீடுபாடும் எதிர்பார்ப்பும் உடையவள் என்று எண்ணிவிடுவார்கள். பிறகு அவர்கள் உன்னை வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். எப்பொழுதெல்லாம் நீ உண்மையாகவே என்ன நினைக்கிறாய் என்பதை சொல்கிறாயோ அப்போதெல்லாம் அவர்கள் உன்னை வெறுப்பார்கள். நீ எப்பொழுதும் சிறுசிறு விளையாட்டுகளை விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும். நான் அப்படியெல்லாம் தேவையில்லை என்று நினைத்துவிட்டேன். இது ஏதோ பெரிய விஷயம், நாம் நினைப்பதையெல்லாம் சொல்லிவிடலாம் என்று நினைத்திருந்தேன். அப்படி ஒருபோதும் செய்துவிடமுடியாது என்பதுதான் என் கணிப்பு. ஒருபோதுமே அந்த அளவிற்குப் பெரிதாக எதுவும் இருந்துவிட முடியாது என்றுதான் கருதுகிறேன். அவன் என்னை இப்பொழுது தொலைபேசியில் தொடர்புகொண்டால், நான் அவன்மீது வருத்தத்தில் இருந்ததாக சொல்லமாட்டேன். அவர்களுக்கு சோகமாக இருப்பவர்களைப் பிடிக்காது. நான் இனிமையானவளாகவும் குதூகலமானவளாகவும்தான் இருப்பேன். அவனுக்கு வேறு வழியே இல்லை. என்னை விரும்பித்தான் ஆகவேண்டும். இதெல்லாம் அவன் என்னை டெலிஃபோனில் அழைத்தால் மட்டுமே. அவன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் மட்டுமே சாத்தியம்.

அவன் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறான் போலிருக்கிறது. என்னை டெலிஃபோனில் அழைக்காமல் நேரில் வந்துகொண்டிருக்கிறான் போலிருக்கிறது. ஒருவேளை அவன் இப்பொழுது வந்துகொண்டிருக்கக்கூடும். அவனுக்கு ஏதாவது நடந்திருக்கும். ஒருபோதும் அவனுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது. அவனுக்கு ஏதாவது நடந்திருக்கக்கூடும் என்று என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அவனை வாகனம் எதுவும் மோதிவிடும் என்று கற்பனை செய்ய மாட்டேன். அவன் அசைவற்று இறந்துக் கிடப்பதாக என்னால் யோசிக்கவே முடியாது. அவன் இறந்துபோகவேண்டும் என்று விரும்புகிறேன். இது மோசமான ஆசை. மிகவும் மோசமான ஆசை. அவன் இறந்து போய்விட்டானென்றால், அவன் என்னுடையதாகிவிடுவான். அவன் இறந்துவிட்டால், நான் இன்றைய நாளையோ, கடந்த சில வாரங்களையோ ஒருபோதும் நினைத்துப் பார்க்க மாட்டேன். நான் அருமையாக கழிந்த நாட்களைத்தான் நினைவில் கொள்வேன். அவை அனைத்துமே அழகானதாக இருக்கும். அவன் இறந்துபோகவேண்டும் என்று விரும்புகிறேன். அவன் இறந்துபோகவேண்டும். இறந்து, இறந்துபோக வேண்டும்.

இது மிகவும் அற்பமானது. ஒருவர் அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அழைக்காமல் போனால் உடனே அவர்கள் இறந்துபோய்விடவேண்டும் என்று நினைப்பது மிகவும் அற்பமானது. ஒருவேளை கடிகாரம் விரைவாக இருக்கலாம். எனக்கு அது சரியா என்று தெரியவில்லை. அவன் தாமதப்படுத்தவே இல்லையோ என்னவோ. ஏதாவது ஒன்று அவனைத் தாமத்தப்படுத்தியிருக்கலாம். ஒருவேளை அலுவலகத்தில் தங்கிவிட நேர்ந்திருக்கலாம். ஒருவேளை வீட்டிற்குச் சென்று அங்கிருந்து என்னிடம் தொலைபேசியில் பேசலாம் என்று நினைத்திருக்கலாம். அதற்குள் யாராவது வீட்டிற்கு வந்திருக்கலாம். மற்றவர்கள் முன்பாக அவன் என்னுடன் பேச விரும்பமாட்டான். ஒருவேளை அவனுக்கு என்னைக் காக்க வைப்பதில் சற்று, சற்றே சற்று வருத்தமாக இருக்கலாம். ஒருவேளை நான் அவனை அழைப்பேன் என்று நினைத்திருக்கலாம். நானே அதைச் செய்யாலாம். 

நான் செய்யக்கூடாது. நான் செய்யக்கூடாது. நான் செய்துவிடவே கூடாது. ஐயோ கடவுளே, என்னை அவனுக்கு டெலிஃபோன் செய்ய வைத்துவிடாதீர். என்னை அப்படி செய்வதிலிருந்துக் காப்பாற்றிவிடுவீராக. உமக்குத் தெரிந்ததைப்போலவே எனக்கும் தெரியும். அவனுக்கு என்மேல் அக்கறை இருந்திருந்தால், அவன் எங்கிருந்தாலும், எத்தனைபேர் அவனைச் சுற்றி இருந்திருந்தாலும் அவன் என்னை அழைத்திருக்க முடியும். எனக்கு அதை புரியவைத்துவிடுங்கள். கடவுளே, நான் உங்களை எல்லாவற்றையும் சுலபமாக்கிவிடச் சொல்லிக் கேட்கவில்லை. உலகத்தை படைக்க முடிந்த உங்களால் அதை செய்ய முடியாது. என்னைப் புரிந்துகொள்ள செய்யுங்கள். கடவுளே என்னைத் தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கவிடாதீர்கள். எனக்கு நானே ஆறுதல்படுத்திக்கொள்ள விடாதீர்கள். தயவுசெய்து என்னை நம்பிக்கையுடன் இருக்க விடாதீர்கள். என் அன்பான கடவுளே, தயவுசெய்து என்னை அப்படி இருக்கவிட வேண்டாம்.

நான் அவனுக்கு டெலிஃபோன் செய்யமாட்டேன். நான் உயிரோடு இருக்கும்வரை ஒருபோதும் அவனுக்கு டெலிஃப்ஃபொன் செய்யமாட்டேன். நான் அவனை அழைப்பதற்கு முன், அவன் நரகத்தில் அழுகட்டும். கடவுளே, நீர் எனக்கு வலிமை கொடுக்க வேண்டிய அவசியமில்லை; அந்த வலிமை என்னிடமே இருக்கிறது. அவனுக்கு நான் உண்மையிலேயே வேண்டுமென்றால், அவன் என்னைத் தேடி வந்திருப்பான். நான் எங்கே இருக்கிறேன் என்பது அவனுக்குத் தெரியும். நான் இங்கே அவனுக்காகக் காத்திருக்கிறேன் என்பதும் அவனுக்குத் தெரியும். அவன் என்னைப் பற்றி மிகவும் உறுதியாக இருக்கிறான், மிக மிக உறுதியாக இருக்கிறான். அப்படி அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்தபின் ஏன் வெறுக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அது நிச்சயமாக இனிமையானதாகத்தான் கருத வேண்டியிருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. 

 நான் அவனை தொலைபேசியில் அழைப்பது என்பது மிகவும் சுலபமானது. அப்படி செய்தால் நிலைமை எனக்குத் தெரிந்துவிடும். அது ஒன்றும் முட்டாள்தனமான காரியம் இல்லை. அவனும் அதைப் பொருட்படுத்தமாட்டான். ஒருவேளை அவன் அதை விரும்பக்கூடும். ஒருவேளை அவன் என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கலாம். சில சமயம் மக்கள் மேலும் மேலும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பார்கள், கடைசியில் அந்த எண் பதிலளிக்கவில்லை என்று வருவதுண்டு. ஓ கடவுளே, அந்த டெலிஃபோனிலிருந்து என்னைத் தொலைவில் இருக்க வையுங்கள். என்னை தள்ளியிருக்க வையுங்கள். என்னுடைய பெருமிததத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றிக் கொள்கிறேன். எனக்கு அது தேவைப்படும் என்று நினைக்கிறேன். கடவுளே அது ஒன்று மட்டும்தான் என்னிடம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். 

என்னால் அவனுடன் பேசமால் இருக்க முடியவில்லையென்றால் என் பெருமிதத்தினால் என்ன பயன்? அப்படிப்பட்ட பெருமிதம் என்பது மட்டமான கேவலமான ஒன்று. உண்மையான பெருமிதம், உயர்வான பெருமிதம் என்பது அப்படி ஒன்று இல்லாமலே இருப்பதுதான். நான் இதைச் சொல்வது அவனைத் தொலைபேசியில் அழைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அப்படியில்லை. அது உண்மைதான் என்று எனக்குத் தெரியும். நான் உயர்ந்த மனம் கொண்டவளாக இருப்பேன். இந்த அற்பமான பெருமிதங்களையெல்லாம் கடந்துவிடுவேன்.

கடவுளே தயவு செய்து அவனுக்கு டெலிஃபோன் செய்வதிலிருந்து என்னைக் காப்பாற்றிவிடுங்கள். ப்ளீஸ் கடவுளே.

பெருமிதத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. இது ஒரு சிறிய விஷயம். இதில் எதற்காக நான் பெருமிதத்தையெல்லாம் கொண்டுவருகிறேன். எதற்காக இவ்வளவு அலட்டிக்கொள்கிறேன். நான் அவனைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். அவன் என்னைத்தான் ஐந்து மணிக்கு அழைக்கும்படி சொல்லியிருப்பான். அவன் அப்படித்தான் சொல்லியிருக்கக்கூடும். நான்தான் சரியாகக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. “ஐந்து மணிக்கு எனக்கு ஃபோன் செய் டார்லிங்”, எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவன் அப்படித்தான் சொன்னான். ஐயோ கடவுளே, நான் இப்படி பேசி, என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விடாதீர்கள். எனக்கு புரிய வையுங்கள். தயவுசெய்து என்னை புரிந்துகொள்ள வையுங்கள்.

நான் வேறு எதைப் பற்றியாவது யோசிக்கிறேன். நான் வெறுமனே அமைதியாக அமர்ந்திருப்பேன். என்னால் அப்படி இருக்க முடிந்தால், என்னால் அப்படி அமைதியாக உட்கார முடிந்தால், நான் ஏதாவது புத்தகத்தைப் படிக்கலாம். ஐயோ, எல்லாப் புத்தகங்களும் மக்கள் ஒருவரையொருவர் காதலிப்பது, உண்மையாக, இனிமையாக காதலிப்பதைப் பற்றியதாகத்தான் இருக்கின்றன. இதையெல்லாம் எதற்காக எழுதுகிறார்கள்? அது உண்மையில்லை என்று அவர்களுக்குத் தெரியாதா? அவர்களுக்கு இது பொய் என்று தெரியாதா, கடவுளே, இது சுத்தப் பொய் என்று தெரியாதா? இது எத்தகைய வேதனையை அளிக்கிறது என்று தெரிந்தும் எதற்காக இதைப் பற்றி அவர்கள் சொல்ல வேண்டும்? நாசமாய் போகட்டும். நாசமாகப் போகட்டும். போய்த் தொலையட்டும். 

மாட்டேன். நான் அமைதியாக இருப்பேன். இதில் பரபரப்படைய ஒன்றுமேயில்லை. இருக்கட்டும். ஒருவேளை அவன் எனக்கு அவ்வளவு பழக்கமில்லாத ஒருவனாக இருந்திருந்தால், ஓருவேளை அவன் இன்னொரு பெண்ணாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும். நான் சாதாரணமாக டெலிஃபோனில் அழைத்து, “உனக்கு என்னவாயிற்று?”, என்றுதானே கேட்டிருப்பேன். நான் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பேன். இப்படியெல்லாம் யோசித்திருக்கவே மாட்டேன். நான் அவனைக் காதலிக்கிறேன் என்பதால் மட்டும் ஏன் என்னால் அவனிடம் இயல்பாகவும் சாதாரணமாகவும் இருக்க முடியவில்லை. என்னால் முடியும். உண்மையாகவே என்னால் முடியும். அவனுக்கு டெலிஃபோன் செய்து நான் இயல்பாகவும் இனிமையாகவும் அவனிடம் பேசுவேன். வேண்டுமானால் நான் அப்படி செய்கிறேனா என்று பாருங்கள். கடவுளே, என்னை டெலிஃபோன் செய்ய வைத்துவிடாதீர்கள். வேண்டாம். வேண்டாம். வேண்டாம்.

கடவுளே, அவன் என்னை அழைக்கவைக்க மாட்டீர்களா? உறுதியாகத்தான் இருக்கிறீர்களா கடவுளே? உங்களால் அதை மாற்றிக்கொள்ள முடியாதா? உங்களால் முடியாதா? நான் ஒன்றும் அவனை இப்பொழுதே என்னை அழைக்க வைக்கும்படிக் கேட்கவில்லை, கடவுளே. சற்று நேரம் கழித்து செய்ய வைத்தால் போதும். நான் ஐந்தைந்தாக ஐநூறுவரை எண்ணுகிறேன். நான் அதை நிதானமாகவும் நேர்மையாகவும் செய்கிறேன். அதற்குள் அவன் என்னை அழைக்காவிட்டால், நான் அவனை அழைக்கிறேன். நான் செய்வேன். ஒஹ்ஹ், கடவுளே, என் அன்பான கடவுளே, அன்பும் கருணையுமான கடவுளே, சொர்கத்தில் ஆசிர்வதிக்கப்பட்ட என் தந்தையே, அதற்குள் அவனை எனக்கு டெலிஃபோன் செய்ய வையுங்கள். கடவுளே, கருணை காட்டுங்கள். ப்ளீஸ். 

ஐந்து, பத்து, பதினைந்து, இருபது, இருபத்தைந்து, முப்பது, முப்பத்தைந்து…. 

***

டொரதி பார்க்கர் (1893 – 1967) (Dorothy Parker) – அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர் மற்றும் நகைச்சுவை எழுத்தாளர் ஆவார். கூர்மையான நகைச்சுவை, கிண்டல் கலந்த எழுத்து, மனித உறவுகள் மற்றும் நகர வாழ்க்கையின் சிக்கல்களை நுட்பமாகச் சித்தரிக்கும் திறன் ஆகியவற்றால் அவர் பெரிதும் அறியப்படுபவர்.

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. காஃப்காவின் “உருமாற்றம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here