“இதைவிடப் பெரிசோ? இது போனதுதானே! பிறகென்ன பிரச்சினை? உங்களை விட்டிட்டு இன்னொரு பொம்பிளையைத் தேடிக்கொண்டு அவர் போகப்போறார்.” ஏதோ ஒன்றைக் காட்டியவண்ணம், எரிச்சலுடன் குரலை உயர்த்திப் பேசினாள், அந்தத் தாதி.
உடலுறவு கொள்ளமுடியாமலிருப்பதற்கான பிரச்சினையை எப்படித் தீர்க்கலாமென அறிவதற்காக அந்தக் கிளினிக்குச் சென்றிருந்தவளின் கண்கள் நிறைந்தன. ஏமாற்றம் பேரலையாக அவளைத் தாக்கியது. வெளியில் காத்திருந்த கணவனிடம் சென்றவள் எதுவும் சொல்லாமல் அழுதாள். “என்ன பிரச்சினை? சரி, விடு, உடலுறவில்லாம ராமகிருஷ்ணரும் சாராதாதேவியும் குடும்பம் நடத்தேல்லையே. நானும் அப்பிடி இருப்பன்.”
“நான் உன்னைக் கலியாணம் செய்துகொள்ள விரும்புறன்,” தன் ஆசையை நேரடியாக அவன் அவளிடம் கூறியபோது, உங்களைவிட “நான் ரண்டு வயசு மூப்பு,” என்பதுதான் அவளின் பதிலாக இருந்தது. ஆண்களைவிட பெண்கள் வயது குறைந்தவர்களாக இருக்கவேண்டுமென்ற சமூக நியதிக்கு அவள் பயப்படவில்லை. ஆனால், பெண்களுக்கு வயதாக, வயதாகக் காமம் மெல்ல மெல்லக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலே போய்விடும், ஆனால், ஆண்களுக்கு அது இறக்கும்வரை அடங்காது என அவள் வாசித்திருந்ததுதான், அவளைக் கரிசனைகொள்ள வைத்திருந்தது. அவனோ 25 வயதிலேயே உடலுறவு தேவைப்படாதெனச் சொல்கிறானே, அது நடக்கக்கூடிய விடயமா என அவள் பலமாக யோசித்தாள்.
“மூண்டாம் வகுப்பிலை இங்கிலிஸ் படிக்கவெண்டு பக்கத்து வீட்டுக்கு ரியூசனுக்குப் போனனான். ஒரு நாள் அந்த மாஸ்ரர் என்னைத் தூக்கிக்கொண்டுபோய் தன்ரை கட்டிலிலை கிடத்திப்போட்டு என்ர யங்கியைக் கழட்டப் பாத்தார். நான் பெலத்துக் கத்த, அவற்ரை அம்மா குசினிக்கே நிண்டுகொண்டு என்ன சத்தமெண்டு உரத்துக் கேட்டார். அதாலை அவர் என்னை விட்டிட்டார். பிறகு அம்மா ரியூசனை நிப்பாட்டிப்போட்டா. உங்களோடை என்னாலை சேர முடியாமலிருக்கிறதுக்கு அது காரணமாயிருக்குமோ?”
அன்றிரவும் ஏதோ ஒரு புதுக் கிறீமைப் பயன்படுத்தி அவன் முயற்சித்து பார்த்தான். ஆனால், அதுவும் தோல்வியாகவே போய்விட்டது. மற்றப்பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். அறைக்குள் சுழன்றுகொண்டிருந்த காற்றாடியையும் மேவி, அவனின் முதுகு முழுவதும் வியர்வைத் துளிகள் மின்னிக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அவளுக்கு மிகவும் அசெளகரியமாக இருந்தது.
அடுத்த கிழமை, அப்பொன்ற்மென்ற் வைத்துப் பாடசாலையில் கவுன்சிலருடன் கதைத்தாள். விபரங்களைக் கேட்டவர், உடலுறவுப் பிரச்சினைக்கு அவள் மட்டும்தான் காரணமில்லை, அவனும் காரணமாக இருக்கிறான் என அவர் விளங்கப்படுத்தினார். பிணைப்பு என்பது இரவில் நிகழும் உடல்களின் சேர்க்கை மட்டுமல்ல. மனங்களின் சேர்க்கை என்றவர், இரவில் உடல்கள் சேர்வதற்கான அத்திவாரம் பகலில் போடப்பட வேண்டும் என்றார். முடிந்தவரையில் காதலுடன் ஒருவருடன் ஒருவர் பேசவேண்டும், அன்பான தொடுகைகள் இருவரிடையும் இருக்கவேண்டும் என்றும், உடலுறவுக்குத் தயாராகும் வகையில் அதற்கு முன்பான நேரம் செலவழிக்கப்பட வேண்டுமென்றும் கூறிய அவர், அதற்கான சில உத்திகளையும் கூறினார்.
அன்றிரவு, கட்டிலில் நேரம் செலவழிக்க வேண்டுமென்றும், அவள் சந்தோஷமாக இருக்காவிடில், உடல் ஒத்துழைக்காது என்றும் கவுன்சிலர் சொன்னதை பிரபுக்குச் சொன்னபோது அவனுக்குக் கோபம் வந்தது. அவளின் இயலாமையை அவன் கடந்துபோக முயற்சிக்கிறான், ஆனால் அவளோ அவனில் குற்றம்சாட்டுகிறாள், அது நியாயமற்றதென அவன் கொதித்தான். முடிவில் அந்த உரையாடல், அவர்களிடையே மேலும் விரிசலையே தோற்றுவித்தது.
அவளுக்கும் அவளின் அம்மாவுக்கும் ஒட்டுறவு இருந்ததில்லை. எப்போதும் நாயும் பூனையும் போலவே இருந்தார்கள். அப்பாவும் பெயரளவில்தான் அப்பாவாக இருந்தார். வெளியூரில் அவர் வேலைசெய்தமை, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவருடனான அருகாமையை இல்லாமல் செய்திருந்தது. கணவர் என்ற உறவு தன் ஆதங்கத்தையெல்லாம் தீர்த்துவைக்குமெனக் கனவு கண்டவளுக்கு எல்லாம் சூனியமாக இருந்தது. கலியாணம் கட்டினால் போதுமென அவசரப்படாமல் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவேண்டும், எங்களின் வாழ்க்கைப் பெறுமானங்கள் என்ன, நாங்கள் எப்படி எங்களின் உணர்ச்சிகளைக் கையாளுகிறோம் என எதுவுமே தெரியாமல் கட்டியிருக்கக் கூடாதென்ற சுயபச்சாதாபம், கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்தென்ன பயன் என்ற புரிதலினால் மறுகணமே வழமைபோல முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆசிரியப் பயிற்சிக்காகப் போயிருந்தபோதுதான் பிரபுவின் அறிமுகம் அவளுக்குக் கிடைத்திருந்தது. தனிமையையும், சோகத்தையும் மறப்பதற்கு ஒரு வழியாக ரேடியோவுடன் சேர்ந்து பாடிப் பாடி தன் குரலை அவள் மெருகேற்றி வைத்திருந்தாள். அவர்களின் ஆண்டுவிழாவில் அவள் பாடிய ‘செண்பகமே செண்பகமே’ பாட்டில், அவளின் இனிமையான அந்தக் குரலில் அவன் லயித்துப் போனான். தன் வருங்காலத் துணையை எண்ணி அவள் உருகி உருகிப் பாடியது, அவனை நோக்கிப் பாடப்பட்டது போல அவனை உணரவைத்தது. ‘சேர்ந்திருக்கச் சம்மதமா’ என அவள் பாடியபோது அவனின் கால்கள் தாளம்போட, அவனின் தலை மேலும் கீழும் ஆடியது. நிகழ்ச்சி முடிந்ததும் அவளைச் சந்தித்துப் பாராட்டினான். அவனின் கலகலத்த சிரிப்பும், கனிவான பாராட்டும் வாழ்வில் இதுவரை அவள் உணர்ந்திராத ஒட்டுதலை அவள் உணரச்செய்தன. நாளடைவில் அவன் அவளில் காட்டிய கரிசனையும் நேசமும், அவளை அவன் இரட்சிக்க வந்திருப்பதாக அவளைப் பேரானந்தம் அடையச்செய்தன.
பிரபுவுக்குத் தங்கை ஒருவர் இருந்ததால், அவவைக் கரைசேர்க்கிறதுக்குக் கொஞ்சம் பணம் இனாமாகக் கொடுத்தால் அவனின் அம்மா சம்மதிப்பா என்றும் அது சரிவருமோ என்றும் அவன் அவளைக் கேட்டிருந்தான். “எங்கை மாப்பிளை தேடுறது, சீதனத்துக்கு என்ன செய்யிறது?” என அப்பா அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்ததால், அவனின் கேள்வியில் விடிவெள்ளி ஒன்று அவளுக்குத் தெரிந்தது. அவன் கேட்டதைத் தயங்கித்தயங்கி அவள் அம்மாவுக்குச் சொன்னாள். “வீடு, வளவு, நகை எண்டு ஒண்டுமில்லாமல் கொஞ்சக் காசோடை கட்டுறதுக்கு இந்தக் காலத்திலை ஆர் வரப்போயினம். அதுவும் அப்படி ஒரு ரீச்சர் முன்வாறது நல்ல விசயம்தானே.” என்று அவ பச்சைக்கொடி காட்டியபோது அவளின் இதயம் விம்மியது.
அது அவளின் ‘அதிர்ஷ்டம்’ என்று உறவினர்கள் சற்றுப் பொறாமை பொங்க அவளுக்குச் சொன்னார்கள். அவளின் கையைத் தன் கைகளுக்குள் அவன் பொத்திப் பிடித்திருக்கும் விதமும், அவளுக்காக மாமிச உணவை உண்பதைத் தவிர்த்த பாங்கும் அவளைப் பரவசப்படுத்தின. எந்தப் புயலிலிருந்தும் அவன் தன்னைக் காப்பான், தனக்கொரு பாதுகாப்பான இடம் கிடைத்துவிட்டதென அவள் ஆசுவாசப்பட்டாள். ஆனால், அந்த மகிழ்ச்சிக்கும், ஆசுவாசத்துக்கும் ஆயுள் கெட்டியாக இருக்கவில்லை.
திருமண மாலை வாடிக்கொண்டிருந்தது. நண்பர்களும் உறவினர்களும் அவர்களை விருந்துக்கு அழைப்பது குறைந்திருந்தது. அவர்களின் இடைவெளி அதிகரித்துக் கொண்டிருந்தது. எதைப் பற்றிக் கதைத்தாலும் வாக்குவாதங்களே விடையாயின. சின்னச் சின்னப் பிரச்சினைகள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டன. ஒரு நாள் சனிக்கிழமை விரதத்துக்குப் பல்வேறு கறிகளுடன் நெடுநேரம் செலவழித்துச் சோறு சமைத்துவிட்டு, பசியுடன் அவனுக்காகக் காத்திருந்தாள்.
வந்தவன், வழியில் ஒரு நண்பரை எதிர்பாராமல் சந்தித்ததாகவும் அவனுடனேயே சாப்பிட்டுவிட்டதாகவும் சொன்னான். “நான் இங்கை பசியோடை காத்திருக்கிறன், நீங்க சுத்திப்போட்டு வாறியள்,” என்றாள், எரிச்சலுடன்.
“உன்னைச் சாப்பிட வேண்டாமெண்டு நான் சொன்னனானோ?” அவன் கேட்ட கேள்விப் பதிலாகத் தன் சாப்பாட்டுக் கோப்பைச் சத்தமெழுப்ப அவள் வைத்தாள். பக்கத்திலிருந்து தும்புத்தடியால் அவளை அடிக்குமளவுக்கு அது அவனின் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டுசென்றிருந்தது. அதன்பின் அவள் சில நாள்கள் அவனுடன் கதைக்கவில்லை. முடிவில் அவளின் உடுப்புக்களை அவன் தோய்த்துக் கொடுத்தான். அவளுக்குக் குளிக்கவார்த்தான். அப்படியாக அவளுடன் அவன் சமாதானமானான்.
இன்னொரு நாள் இரவு 10 மணியாகியும் அவன் வீட்டுக்கு வரவில்லை. என்ன நடந்திருக்குமோ என்ற பயத்தில் இருட்டுக்குள் அவள் முன்னொழுங்கையில் காத்திருந்தாள். அவனின் மோட்டார்சயிக்கிள் அவளருகே வந்துநின்றது. “ஒரு யோசனையும் உங்களுக்குக் கிடையாதோ?” எனத் தன் பயமெல்லாம் கோபமாகமாற அவன்மீது அவள் பாய்ந்தாள். “என்ன நடந்துதெண்டு கேட்டியோ? வழியிலை அடிபட்டுக் கிடந்த ஒருத்தனை ஆஸ்பத்திரியிலை சேத்துப் போட்டுவாறன்,” என்றவன் அவள் கன்னத்தைப் பொத்தி அடித்தான். அவளின் முரசால் இரத்தம் கொட்டியது. உதடு வீங்கிப்போனது.
“எந்த உறவுடனும் என்னால் ஒத்துப்போக ஏலவில்லையே. இதுவும் பிழைச்சால் அது என்ர பிழைதானே, அது பெரும் தோல்விதானே.” அவள் தனக்குள் குமுறினாள். என்ன செய்வதென அவளுக்குத் தெரியவில்லை. உறவினருக்கு முன்னால் பெயருக்குச் சிரித்தாள், பக்கத்து வீட்டுக்காரரின் பகிடிக்கு ஏனோதானோ என்று புன்னகைத்தாள், தாலிக்கொடியை உறவின் இலச்சனைபோல தினமும் மறக்காமல் அணிந்துகொண்டாள். ஆனால், ஒவ்வொரு இரவிலும் அவனுடனான அந்தியத்தன்மை அதிகரித்துக்கொண்டே இருந்தது
ஒரு கட்டத்தில் காசு உழைப்பதை அவன் குறிக்கோளாகக் கொண்டான். பிஸியாக இருப்பது தன் மனதுக்கு ஆசுவாசமாக இருக்கின்றது என்றான். ஆனால், அவன் முதலிட்ட பங்குச்சந்தை அவன் காலைவாரிவிட்டது. முதலீட்டுக்காக அவளுக்குத் தெரியாமல் அவளின் தாலிக்கொடியை அடகுவைத்திருக்கின்றான் என்பது அவளுக்குத் தெரியவந்தபோது அவளுக்குக் கோபத்தை அடக்கமுடியவில்லை. இருந்தாலும், உறவில் மகிழ்ச்சியில்லை என்று ஏதோவொரு சந்தோஷத்தைத் தேடி அலைகிறான், துன்பங்களையும் வேதனைகளையும் சகித்துக்கொள்ளவது தன் கடமையென அவள் நினைத்தாள். அத்துடன், ஆண் துணையில்லாமல் வாழமுடியாது, அப்படியானதொரு நிலைவந்தால் தனக்கு எந்த மதிப்புமிருக்காது எனவும் நம்பினாள்.
திருமணத்துக்கு ஒப்புக்கொண்ட அம்மாவுக்கு, அவர்கள் இருவரும் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் ஒரே காலத்தில் இருந்ததால், காதலித்துப்போட்டு, காசு வாங்குறதுக்காக நாடகம் ஆடியிருக்கிறார்களெனத் திடீரெனச் சந்தேகம் வந்திருந்தது. அதனால், “எல்லாத்தையும் நீ கொண்டுபோறாய், மற்றப் பிள்ளையள் நடு ரோட்டிலை நிக்கப்போயினம்,” எனத் திட்டித்தான் கலியாணம் கட்டிப்போகும்போது அவளைப் பயணம் அனுப்பியிருந்தா.
அது நினைவுக்கு வந்ததும். அவ போட்ட சாபம் தன்னைத்தான் நடுரோட்டில் நிறுத்தப் போகின்றதோ என அவளுக்குப் பயமாகவிருந்தது. அவனுடனான உறவை எப்படியும் சரிசெய்துவிட வேண்டுமென பிரயாசைப்பட்டாள். அன்று அவனின் பாடசாலைத் தோழி விமலாவை இருவரும் கடை ஒன்றில் சந்தித்திருந்தனர். “பிரபுவை நம்பி எங்கேயும் போகலாம். என்ன உதவியும் துணிஞ்சு கேட்கலாம். பொம்பிளைப் பிள்ளையளுக்கு அந்தக் காலத்திலை பிரபு எண்டால் காணும். கலகலப்பான ஆள் வேறை. ஆள் கதைக்கிறதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம், நீங்க சரியான லக்கி,” என விமலா அவளுக்கு அவன் புகழ் பாடித் தீர்த்தாள்.
அந்த உரையாடல், எதிலும் முரண்படாமல் தான் இருந்தால் அவன் தன்னை மீளவும் நேசிப்பான் என அவளை மீளவும் எதிர்பார்க்கச் செய்தது. ஆனால், நாளடைவில், அந்த நம்பிக்கையும் காலத்துடன் கரைந்துபோனது. பிரச்சினைகள் பெரிதானால் உடலுறவு சிரமமாகிறதா அல்லது உடலுறவில்லாததால் பிரச்சினைகள் பெரிதாகின்றனவா என அவளுக்கு விளங்கவில்லை. உடலுறவு கொடுக்கும் அசெளகரியத்திலிருந்தும், வலியிலிருந்தும் தப்புவதற்காக அவனின் கோரிக்கைகளை அவள் நிராகரித்தாள். அல்லது ஏனோ தானோ என்று விருப்பமின்றி இயங்கினாள். அது அவனை மேலும் கோபப்படுத்தியது. வீட்டிலிருந்த பொருள்கள் அவ்வப்போது அவனின் கோபத்துக்குப் பலியாயின.
முடிவில் உக்கிரமடைந்த போர் அவர்களின் மூன்று வருடக் கொழும்பு வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஜேர்மனியில் சரணடைந்தார்கள். மொழி புரியாத நாட்டில் தொழிற்சாலையில்தான் அவனால் வேலையெடுக்க முடிந்தது. அவளுக்கு வேலை எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
X X X
அடுத்த ஐந்து வருடங்கள் சென்றன. வேலைக் களைப்பெனக் குடிக்க ஆரம்பித்தவன் குடிகாரனாகவே மாறிவிட்டான். ஒரு குளிர்கால இரவில், அவன் குடிக்குமளவு பற்றி அவனுக்கும் அவளுக்கும் ஏற்பட்ட சண்டையால், ஆத்திரமுற்ற அவன் வீட்டுக்கு வெளியில் அவளைத் தள்ளிவிட்டுக் கதவைச் சாத்தினான். அவள் போட்ட கூச்சலில் பக்கத்து வீட்டார் வந்து கதைவைத்தட்டி அவள் உள்ளுக்குப் போக வழிசெய்தார்கள்.
உடலில் கண்டல்களையும், வீக்கங்களையும் வைத்துக்கொண்டு இப்படி வாழத்தான் வேண்டுமா என இரவு பூராவும் யோசித்தவள் விடிவதற்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே போவதென முடிவெடுத்தாள். தொடர்ந்து அங்கு வாழ்ந்தால், அவன் மட்டுமன்றி, தானும் தன்னைத் துன்புறுத்துவதாகவும், ஏமாற்றுவதாகவும், புறக்கணிப்பதாகவும்தான் முடியுமென்பதை அவள் உணர்ந்துகொண்டாள். வெட்டக்கூடிய விதத்தில் கத்தி இருக்கும்போது காயங்கள் வராமலிருக்குமென நினைப்பது பைத்தியக்காரத்தனமென அவளுக்குப் புரிந்தது. அருகிலிருந்த மைத்துனி உதயாவின் வீட்டுக் கதவைத் தட்டினாள். “நீ எதுவும் கேட்கிறதுக்கு முதல் நான் சொல்றன். அரசாங்க உதவிப் பணத்தில் ஒரு சின்ன இடத்தை எடுத்துக்கொண்டு விரைவில போயிடுவன். ரண்டு நாளைக்கு இருக்க இடம்தா” என்றாள்.
அடுத்த நாள் என்ன நடந்ததென விடுத்துக்கேட்ட உதயா, துணையின் அவசியம்பற்றி அவளுக்கு வகுப்பெடுத்தாள். அன்புக்கும், பாசத்துக்கும் அவள் ஏங்கியதால் அவனுக்கு அவள் அதிக அழுத்தம் கொடுத்திருக்கக்கூடுமென விளக்கம் சொன்னாள். சிறுவயதில் அவனின் பெற்றோர் அவனுடன் வன்முறையாக நடந்திருக்கக்கூடும். அதனால் அவனும் அதைக் கையாளுகிறானோ என்னவோ என யோசிக்கச் சொன்னாள். யார்தான் பெண்ணைத் திருப்திப்படுத்துகிறார்கள், ஒழுங்கான உடலுறவு இல்லாமல்தான் நானும் வாழ்கிறேன் எனச் சமாதானம் சொன்னாள்.
உதயாவின் நியாயங்களும் விளக்கங்களும் அவளுக்குக் குழப்பத்தைக் கொடுத்தன. வீட்டுக் கதையை வெளியில் கதைப்பது அவனுக்குப் பிடிக்காதென காலத்தை வீணாக்கி விட்டேனோ, அன்புடனும் ஆதரவுடனும் நடந்திருந்தால் அவனின் குடியை, பண இழப்பையெல்லாம் தடுத்திருக்க முடிந்திருக்குமோ என்றெல்லாம் அவளுக்குக் கவலையாக இருந்தது. ஒரு கட்டத்தில் கவுன்சிலிங்குக்கு போவமோ என அவனைக் கேட்டபோது அவளுக்குத்தான் அது தேவை, தனக்கில்லை என அவன் மறுத்திருந்தது நினைவுக்கு வந்தபோது, அவனுடன் இனியும் தன்னால் சேர்ந்து வாழமுடியுமென அவளுக்குத் தோன்றவில்லை. உதயாவுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள், எனக்கு அந்தப் பாக்கியமும் இல்லையே என அவள் குமைந்தாள்.
“நாங்க சேந்திருக்கிறதாலை எந்தப் பயனுமில்லை. இனியாவது விரும்பினமாரி அவர் வாழட்டும். அதுக்குத் தடையா நான் இல்லையெண்ட திருப்தியாவது எனக்குக் கிடைக்கட்டும்,” கண்ணீரைப் பெருக்கெடுக்க அவள் சொன்னாள்.
“சரி, ஏதோ உன்ரை விருப்பப்படி செய். நாங்க என்னத்தைத்தான் செய்யேலும்,” என்றாள், உதயா.
முடிவில், அவள் எடுத்திருந்த சிறிய அறையின் கூரையிலிருந்த மின்விசிறி போடும் சத்தம் மட்டுமே தினமும் அவளுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. அமைதியாக நித்திரை கொள்ளலாம், எதற்கும் பயப்படத் தேவையில்லை என்பதே அவளுக்குப் போதுமானதாக, ஆசுவாசமானதாக இருந்தது. மீண்டும் காலைநேரங்கள் அவளுக்குப் பிடித்தவையாக மாறியிருந்தன. பிரபு என்ன மனநிலையில் எழும்புவான், எதற்காகக் கத்துவான், எதை உடைப்பான் என்ற பயமின்றி, அவனின் நடத்தைகளுக்கான நியாயப்படுத்தல்களைத் தேடிச் சமாதானம் அடையவேண்டிய தேவையின்றி, யன்னலுக்கூடாக எட்டிப்பார்க்கும் சூரிய ஒளியை, கேத்தல் போடும் சத்தத்தை, தேநீரின் வாசத்தை எல்லாம் அவள் ரசித்தாள்.
தையல் கடை ஒன்றில் கிடைத்திருந்த வேலை அவள் தனியாக வாழ்வதற்கு உதவியது. வேலைமுடிந்து வந்து விரும்பியதைச் சமைத்து, அதை ரசித்துச் சாப்பிட்டாள். அல்லது வரும்வழியில் விரும்பிய உணவை வாங்கிவந்தாள். தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்துச் சிரித்தாள். எவராலும் அவளின் சிரிப்புக்கோ, அமைதிக்கோ குந்தகம் செய்ய முடியவில்லை.
X X X
அடுத்த எட்டு ஆண்டுகள் சென்றன. வேலைமுடிந்து வரும் வழியில் திடீரென மழை கொட்டத்தொடங்கியது. குடையை எடுத்துச் சென்றிராததால் பஸ் நிறுத்துமிடத்தில் ஒதுங்கிக் கொண்டாள். ‘தர்சி’ எனக் கூப்பிடும் சத்தம்கேட்டுத் திரும்பிப்பார்த்தாள். அங்கே தலை சற்று நரைத்திருந்த பிரபு, சற்றுப் பருத்த தேகத்துடன் நிறம் மங்கி நின்றிருந்தான்.
“எப்படியிருக்கிறாய், தர்ஷி? உன்னைக் காணுவனெண்டு நினைக்கவேயில்லை. இங்கை ஒரு வேலையா வந்தனான். கார் பழுதாய்ப்போச்சுது, காலம்பிறைக்குத்தான் திருத்தலாமாம். அதுதான் எங்கை போகலாமெண்டு யோசிச்சுக்கொண்டு நிக்கிறன்,” நிறுத்தாமல் பேசினான். ஒருகாலத்தில் தான் நேசித்த மனிதன் தன்னுடன் மீளவும் இயல்பாகக் கதைப்பதைக் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றாள், அவள்.
அடுத்த நிமிடத்தில், “என்ர வீடு பக்கத்திலைதான் இருக்கு, வேணுமெண்டா நீங்க அங்கை வரலாம்,” என்றாள் இயல்பாக. மழை ஓய்ந்ததும், அவளின் வீட்டுக்கு இருவரும் சேர்ந்து நடந்து சென்றார்கள்.
அவனை இருக்கச் சொல்லிவிட்டு, தன் அறைக் கதவை இறுகச் சாத்திவிட்டு அவள் உடுப்பை மாற்றினாள். பின்னர் கறுவாவும் ஏலக்காயும் சேர்த்து அவனுக்கு விருப்பமான முறையில் பால்தேநீர் தயார்செய்து கொடுத்துவிட்டு, “தோசை சுடப்போறன், சுடச்சுடச் சாப்பிடலாம் வாங்கோ,” எனக் கூப்பிட்டாள். தோசையும், உருளைக்கிழங்குக் கறியும், செத்தல்மிளகாய்ச் சம்பலும் அவனுக்குப் பிடித்ததொரு சாப்பாடு. ஒரு நல்லெண்ணைய்த் தோசை, ஒரு பட்டர் தோசை, ஒரு நெய்த் தோசை என விதம்விதமாய்ச் சுட்டுக்கொடுத்தாள்.
சாப்பிட்ட பின்னர் அவளின் வரவேற்பறையில் இருந்த சோபாவில் அவன் ஆயாசமாக அமர்ந்துகொண்டான். அவளுக்குத் தன் வீடு திடீரெனச் சிறிதாகப் போனமாதிரி இருந்தது. எங்கிருப்பதெனத் தெரியவில்லை. படுக்கையறைக்குள் சென்றவள் போர்வை ஒன்றையும் தலையணை ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தாள். சோபாவில் படுப்பீர்கள்தானே எனக் கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல், தன் அறையைப் பூட்டிக்கொண்டாள்.
தனக்கு யாதுமாக இருப்பானென நம்பியவன், இன்று உறவேதுமற்ற ஒருவனாக அவளுடன் ஒரே வீட்டில் இரவைக் கழிக்கின்றான் என்பது அவளுக்கே அதிசயமாக இருந்தது. நான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ என மனதுக்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும் குற்றவுணர்வு அன்று சற்று அதிகமாகவே எட்டிப்பார்த்தது. எவ்வளவு பேர், எத்தனையெல்லாம் இழந்து, எதையெல்லாமோ விட்டுக்கொடுத்து வாழ்கின்றனர். அவனின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாமல் தான் எப்போதும் சண்டைபோட்டதுதான் அவனின் கோபத்துக்குக் காரணாமாயிருந்திருக்கும் என நினைத்தபோது அவளின் கண்கள் நிறைந்தன.
நேரத்துடன் காலையில் எழுந்தவள் இரவு உடுப்புடன் வெளியில் வர விரும்பாது, முதலில் உடுப்பை மாற்றினாள். கடையில் வாங்கி வைத்திருந்த இடியாப்பத்தைச் சூடாக்கி, பால் சொதியுடனும், முட்டைப் பொரியலுடனும் அவனுக்குக் கொடுத்தாள். சாப்பிட்டுவிட்டு அவன் வெளியேறியதும் கதவைப் பூட்டிவிட்டு அவள் தன் வேலைக்குச் சென்றாள்.
வேலையிடத்தில் கணவனுக்கு முத்தமிட்டுவிட்டு அவனின் காரிலிருந்து இறங்கும் மேலதிகாரியைப் பார்க்கப் பொறமையாக இருந்தது. மாலையில் அவர் வந்திடுவார், போய்ச் சமைக்கவேண்டுமென ஓடிய சக பணியாளர் மாலதி அவளின் மனதைக் குத்தினாள். “பாவம், பிரபு,” எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
இரண்டு மாதங்களின் பின் ஒரு நாள் இரவு அவனிடமிருந்து அவளுக்கு அழைப்பொன்று வந்தது. “நான் உன்னோட கொஞ்சம் சீரியசாக் கதைக்கலாமோ?”
“ஓ, சொல்லுங்கோ. என்ன விஷயம்?”
“நடந்ததெல்லாம் நடந்து முடிஞ்சிட்டுது. அண்டைக்கு என்னை நீ அன்பாய்க் கவனிச்சதை யோசித்துப் பாத்தன்… நாங்க ஏன் திரும்பவும் சேந்து வாழக்கூடாது?”
ஒரு கணம் அவள் ஆழமாக மூச்செடுத்தாள். அவனே தொடர்ந்தான்.
“எங்களுக்கு வயசும் முதிர்ச்சியும் வந்திருக்கு. ஆளுக்கு ஆள் துணையாய் இருக்கலாமெண்டு நான் நினைக்கிறன். நீ என்ன சொல்றாய்? யோசிக்கலாமெண்டு நினைச்சியண்டா நாங்க சந்திச்சு அதைப் பத்திக் கதைக்கலாம்.”
“எனக்கு உங்களிலை வெறுப்பில்லை,” அவள் மென்மையாகச் சொன்னாள். பின் ஒரு நிமிடம் அமைதி காத்தாள். அதன் பின்னர் மிகவும் அமைதியான குரலில் தொடர்ந்தாள்.
“ஆனா, என்னாலை திரும்பவும் உங்களை நேசிக்கேலாது… எங்களுக்கிடையிலை இருந்த பாசத்தை, காதலை நாங்க அழிச்சிட்டம்… வேணுமண்டா நண்பர்களா இருந்துகொள்ளுவமன். ஏதாவது உதவி உங்களுக்குத் தேவையெண்டாக் கேளுங்கோ, ஏலுமெண்டால் செய்கிறன். அப்பிடி எனக்கும் ஏதும் தேவையெண்டால் உங்களைக் கேட்கிறன். ஆனா, இனி ஒரு கூரைக்குக் கீழை நாங்க வாழுறது சாத்தியமில்லை.”
“சரி, எதுக்கும், திரும்பவும் ஒருக்கா யோசிச்சுப் பாத்திட்டுப் சொல்லு. உன்ர நன்மைக்காகவும்தான் சொல்றன்.”
அவளின் கண்கள் ஈரமாயின. தொலைபேசியை மெதுவாகக் கீழே வைத்தாள். கோபமோ, வெற்றியோ வேறெந்த உணர்வோ அவள் மனதில் தோன்றவில்லை. படுக்கையில் போய்ச் சாய்ந்தாள். அவளின் இதயம் அவளுக்காக மட்டும் துடித்தது.
‘நான் எவ்வளவுதான் மோசமான ஒரு பொம்பிழையாக இருந்திருந்தாலும், நீங்க என்னை நினைச்சபாட்டுக்கு அடிச்சுச் சிறுமைப்படுத்தியிருக்கக்கூடாது,’ வாய்விட்டுச் சொன்னாள்.
அவளின் முன் சிறுமியாக இருந்த தர்ஷி நிழலாடினாள்.
“அன்பை எதிர்பாத்து, எதிர்பாத்துத் தோல்வியடைஞ்சிட்டனே எண்டு கவலைப்படாதை தர்ஷி. பாசத்தைத் தேடித்தேடி அலைஞ்சது போதும். உனக்கு நான் இருக்கிறன். உன்னை நான் நேசிக்கிறன், அது போதும். சேந்துவாழுறதாலை அல்லது உடலுறவாலை கிடைக்கிற மகிழ்ச்சி மட்டும்தான் மகிழ்ச்சி எண்டில்லை,” என்றவள் கண்களை மூடினாள். கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தது.
***
ஶ்ரீரஞ்சனி – இலங்கையில் தெல்லிப்பழையைச் சேர்ந்த ஶ்ரீரஞ்சனி தற்போது ரொறன்ரோ, கனடாவில் வசிக்கின்றார். ‘நான் நிழலானால்’, ‘உதிர்தலில்லை இனி’, ‘ஒன்றே வேறே’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இரண்டுக்கு இலங்கையில் விருதுகள் கிடைத்துள்ளன. சிறுவர்களுக்கான கதைகளையும் ஶ்ரீரஞ்சனி தற்போது எழுதிவருகிறார். மின்னஞ்சல் : sri.vije@gmail.com
‘பிறந்தநாள் கேக் வெட்டுறதுக்காக எல்லாரும் மேல வந்துட்டாங்க. நம்ம சிட்டுவ காணோமேன்னு கீழ தேடிட்டு வந்தேன். டெகரேட் பண்ணினது போக மீதி இருந்த பலூன் எல்லாத்தையும், ஈவன்ட் மேனேஜ்மெண்ட் பசங்க ஊதிஊதி தரையில கட்டிப் போட்டிருந்தாங்க. இவன் எப்படியும் பலூன் பொறுக்கத்தான் வந்திருப்பான்னு நினைச்சேன். அந்த F4 வீட்டுப் பையன் இருக்கான்ல, நம்ம சிட்டு முன்னாடி முட்டிபோட்டு நின்னு அவனோட பேண்ட்ட கழட்டிட்டு முகத்த கிட்டக்க வச்சிட்டு இருந்தான். நான் பார்த்துட்டேன். சட்டுன்னு இவனப் பிடிச்சி இழுத்தேன். இவன் ஜட்டி எலாஸ்டிக் மட்டும் ஒரு பக்கம் இறங்கியிருந்தது. அப்போதைக்கு, அவன்கிட்ட ‘மேலப்போடா’ன்னு மட்டும் சொல்லிட்டு விட்டுட்டேன். மூணாவதோ நாலாவதோ படிக்கிறான்னு நெனைக்கிறேன். இவனே கீழ வந்தானா இல்ல, அவன் கூட்டிட்டு வந்தானானு தெரியல. எனக்கு ஒருமாதிரி நடுக்கமாகிடுச்சி. ஒருவாரமா சரியா தூங்க முடியல. நீ இத எப்படி எடுத்துப்ப? உனக்கு இது என்னவா புரியும்? நாம அந்தப் பையனோட அம்மா அப்பாகிட்ட சொல்லிப் புரிய வைக்கனுமா? என்ன பையன் வளர்க்குறீங்கன்னு சண்டை போடனுமா? அவன் இத எப்படி எங்க பார்த்திருப்பான்? இவனை எப்படி இதுக்கு அப்புறம் விளையாட அனுப்புறது. சிட்டுவுக்கு என்னவா அது பதிஞ்சிருக்கும்? இவனுக்கு, அவன் என்ன பண்ண முயற்சி பண்ணினான்னாவது புரிஞ்சிருக்குமா? ஆனா ஒரு விசயம் மட்டும் உறுதியா நம்பினேன். இது தான் முதல் தடவையா இருக்கும்.’.
*
கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்த ரூபாலினியை அப்படியே இருக்கச் சொல்லிவிட்டு, ஏற்கனவே சாத்தியிருந்த அறையின் கதவை தாழ்ப்பாளிட்டான். அந்திவானம் காட்டும் சன்னலையும், சன்னலின் திரையையும் இழுத்து மூடிவிட்டு விளக்கை அணைத்தான். முகத்தின் பாவனைகளை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அறைக்குள் இருள் ஏறியிருந்தது. முயலின் காதினைப்பிடித்துத் தூக்குவதுபோல அவளின் கால் பெருவிரல்களைப் பிடித்துத் தூக்கி கீழ் நோக்கி இழுக்க முயற்சித்தான். என்னவென அவள் தலைதூக்கிக் கேட்கவும், கால்களை தரையில் தொங்கப்போட்டபடி அமரச்சொன்னான். ஐந்து நாட்களாக இருவருக்குள்ளும் தெரிந்தோ தெரியாமலோகூட உடலுரசல் இல்லை. இருவருக்கும் காரணம் தெரியுமென்பதால் எதிர்க்கும் குணம் தன் பிறப்பிலேயே இல்லாதவள் போல, அவன் இழுப்பிற்கு நகர்ந்தாள். என்ன முயற்சி செய்கிறான் என்ற குழப்பத்தினூடே, ’இந்த இருட்டையும் தாண்டி நான் கண்ண மூடனுமா’ என்றாள்.
அவளின் புதிர் நிறைந்த மனநிலையும், அறைக்குள் பரவிக்கிடந்த வெப்பமும் அவன் காமத்தையும், கழிவிரக்கத்தையும் ஒன்றாகக் கையாண்டது. பதிலேதும் பேசாமல் தரையில் சம்மணமிட்டிருந்தான். அவளது கால்களை கொஞ்சம் தூக்கி தாங்கிப் பிடித்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் கட்டிலோடு நெருங்கி வந்து, மடியில் போட்டுக்கொண்டான். உள்ளங்காலின் மிருதும், குதிகாலின் சொரசொரப்பும் அந்தச் சூழலை பிரதிபலித்தது. மனதின் இரைச்சலுக்கு நடுவே சொற்களற்று அமர்ந்திருந்தவனுக்கு அதைப் பகடியாகவோ, உரையாடலுக்கான வழியாகவோ மாற்றத்தெரியவில்லை. அலுவலகத்திலிருந்து வரும் வழியெங்கும் கோர்வையாக சொல்லிப் பார்த்துகொண்ட ஒத்திகையும் கைகொடுக்கவில்லை. அல்லது வாயைத் திறந்து சொல்ல முடியவில்லை. அவனுக்கே இதில் எதை நம்புவதென்றும் தெரியவில்லை. பால்யத்தில் விழுந்த சிறு கீறல்.
*
அப்போது அவள் ஆறு அல்லது ஏழாவது படித்துக்கொண்டிருக்கலாம். மறுவீடு செல்வதற்கு வரிசையாக வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்த வேனிற்குள்ளிருந்து முதலில் அவன் இறங்கினான். அடுத்து அந்த சிறுமி இறங்கி தெருவைத்தாண்டிப் போனாள். பார்த்தவுடன் புரிந்தது. எவ்வளவு யோசித்தாலும், நான் என்ன கேள்வி கேட்டேனென்று ஞாபகமில்லை. கேள்வி கேட்டேனா என்றும் சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அவனோ சிரித்துக்கொண்டே ’வாய்ல கொடுத்தேன்’ என்று சொன்னது மட்டும் இப்போதும் குரல் மாறாமல் அப்படியே எனக்குள் பதிந்திருக்கிறது. நான் துணைபோகவும் இல்லை. உடந்தையாகவும் இல்லை. உள்ளே இருவர் போனதும் தெரியாது. தற்செயலாகத்தான் அங்கு சென்றேன். ஆனால் இறங்கிப்போகும்போது, அவன் பெருமையாக சொல்லிச்சென்றதும் ’நமக்கு தைரியமில்லை’ என்று நினைத்திருப்பேனோ என்றும் குழப்பமாக இருக்கிறது. கடந்த ஒருவாரமாகவே அது என்னை தூங்கவிடவில்லை. காலப்போக்கில் என்னை இப்படி நம்ப வைத்தது எது என்றும் தெரியவில்லை.
சிட்டுவுக்கு அன்றைக்கு நடந்ததை வைத்து அவனை வீட்டிற்குள் அடைத்து வைக்காமல், அந்தச்சிறுவனின் சார்பாகவும் இதற்கு காரணமானவனை கண்டுபிடித்து காவல்நிலையம் வரை கொண்டுசென்று, அபார்ட்மெண்டிலிருந்து வெளியேற்றின உன் துணிச்சல் என்னை மேலும்மேலும் குற்றவுணர்வில் தள்ளுகிறது. ஆணின் தைரியமின்மையும், பெண்ணின் தன்னிச்சையான முடிவும் எதிரெதிர் முனை. ஆனால் ’வாய்ல கொடுத்தேன்’ என்ற கர்வத்தின் குரல் ஒருவாரமாகவே துரத்துகிறது. உன்னுடைய தெளிவான முகமோ உன்னை எதிர்கொள்ளவிடாமல் விரட்டுகிறது.
*
தன்னுடைய முகத்தை கற்பனை செய்துபார்த்தான். மிகவும் அசூயையாக இருந்தது. இத்தனை வருடத்தில் அவளாகவே உறவுக்கு அழைக்க நேர்ந்தது இதுவே முதல்முறை. கண்முன் படிந்திருந்த, சொல்ல முன்வந்து தோற்ற காட்சியை, அந்தப் புகைமண்டலத்தை ஊதித் தள்ளிவிட்டு உடலை வெல்ல முடிவெடுத்தான்.
இயங்குகையில் மூச்சுவிடும் தன்மை வைத்து அன்றைய அவனுக்குத் தான் யாராக இருக்கவேண்டுமெனப் புரிந்து வைத்திருப்பவளிடம், மனமும் உடலும் வெவ்வேறு திசையில் ஓடிக்கொண்டிருப்பதை காட்டிக்கொள்ளாமலிருக்க விளக்கை அணைத்திருப்பதே மடத்தனம் என்பது உறைத்தது.
பாவாடைக்குள் கை நுழைத்து, கால்களின்மேலே குழந்தையைக் கிடத்தி குளிப்பாட்டுவதுபோல அவ்வளவு பதமாக அவளின் ஆடுதசையை வருடினான். மேலிருந்து கை கீழ்நோக்கி வரும்பொழுது தன்னை இழப்பவளாகவும் கீழ் இருந்து மேல்நோக்கிப் போகையில், அவனது பீடிகை என்னவாக இருக்குமென யோசனையிலும் வீழ்ந்தாள். இதை மிகச்சரியாக கணித்தவன்போல, கணுக்காலை நெருங்கியதும், மீண்டும் மேலிருந்தே தொடங்கினான். தோற்க மனமின்றி நிழலாடிக்கொண்டிருந்த மெளனத்தைக் கலைத்தாள்.
அவளின் இந்த சீண்டலோடு இணங்கிவிடுவதா, உண்மையிலே இலகுவாகத்தான் இருக்கிறாளா? அல்லது இத்தனை வருடமாக சுமந்து வரும் குற்றவுணர்ச்சியை இறக்கி வைத்துவிடுவதா என்ற தெளிவின்மையோடு அவளின் பாதமேட்டில் உதட்டை ஒத்தியெடுத்தான். ஒருவாரமாக தனக்குள் குமையும் கழிவிரக்கத்தை அப்படியே சொல்லிவிட்டால் இருவருமாக வந்து சேர்ந்திருக்கும் இந்த இணக்கம் குறைந்து உறவுக்குள் விரிசல் விழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் திலீபனோ கடந்த ஐந்து நாட்களாக இதை எப்படி அவளிடம் சொல்லி வெளியேறுவது என்று யோசித்தானே தவிர, சொல்லாமல் கடந்து போவதைப்பற்றி ஒருநொடி கூட யோசிக்கவே இல்லை. சொல்லிவிடுவதன் மூலம் ’சிட்டு’வுக்கு நடந்ததை சொன்னபொழுது தான் ஏன் அப்படிச்சொன்னேன் என்பதற்கான பதிலீடாக இருக்குமென நம்பினான்.
அவள் தன்னை தண்டிக்க வேண்டுமென்று விரும்புகிறாளா என்றும் இவனுக்குத் தெரியாது. இந்த உண்மையை யாரும் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்பதால் தானே ரகசியமானது? இப்போது ஏன் அதை உடைக்க வேண்டும். தனக்குள் நிகழும் இந்த தர்க்கத்தை வெல்லும்முன், காலைக் கட்டிக்கிடந்தவனின் தலையை, தன் மடியில் சாய்த்தாள். அவ்வளவு தான். பிரக்ஞையற்று அவள்மேல் படர்ந்தான். ’டேய் புல்அவுட் மரியாதையா எடுத்துட்டு வா’வென்று மொத்த பலம் கொண்டு உந்தித்தள்ளினாள். இல்லை இல்லை இது சொல்வதற்கான விசயமே இல்லை. குடும்பம் பாழாகிவிடும். அவள் போக்கிலேயே போவதென தீர்மானித்தான். மனம் உண்மையோடும், உடல் காமத்தோடும் கூடி அடங்கியதும், நிதானமானான்.
அவளுக்கும் சேர்த்து காபி எடுத்து வந்தான். காபிக் கோப்பையை வாங்கிய கையோடு அலைபேசியில் மணியைப் பார்த்தாள். உன் பையன் வர எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகுமென்றாள்.
‘விளையாடப் போறான்னு தான சொன்ன?’
‘குட்டிஸ் எல்லாருமா மேல்வீட்ல ’லயன் கிங்’ படம் பார்க்க போறாங்களாம்’
பையன் வர இன்னும் தாமதம் ஆகுமென்ற அநாவசிய தகவல், அவனை மீண்டும் தயார் செய்தது. ரூபாலினியும் இன்னொருமுறை முயங்கிச்சரிய விரும்பினாள். கூடவே குரோதத்தின் விளைச்சலை, காமத்தில் அறுவடை செய்யவும் மனம் ஒப்பாமல் இருந்தது. புல்-அவுட் பெயர் காரணத்தைச்சொல்லி, அந்த மனநிலையின் ஆயுளை சோதிக்க விரும்பினாள்.
*
திருமணமான முதல் மாதத்திலேயே மாதாந்திர சுழற்சி தள்ளிப்போனது. கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள். அவனிடம் கடிந்து கொள்ளாமல், முகத்திலும் வெளிப்படுத்தாமல், எப்படியெல்லாமோ போராடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். ஒருவேளை உண்டாகியிருந்தால்? அதென்ன குற்றத்தின் கீழா வரும்? அதன் பொருட்டே எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. உண்டாவதை ஆறு மாதமாவது தள்ளிப்போட திட்டமிட்டு வைத்திருந்ததை கெடுத்துவிட்டானே பாவி! என்ற பொருமலைத் தவிர ஒன்றுமில்லை. 49வது நாள் காலையில் திலீபன் அந்தப் பாவத்திலிருந்து விடுதலையானான்.
’ஏண்டா அதிகபட்சம் 30 நொடி பிடிச்சிட்டு நிப்பியா? அதுவரைக்கும் பொறுமை இல்லாம ஃபோன கையில எடுத்துட்ட?’ – சீனியர் அப்படிச்சொன்னது தாம்பத்திய வாழ்வையே நக்கலடிப்பது போலப் பட்டது. இருந்தும் காட்டிக்கொள்ளாமல், notification bar-ஐ கீழே இழுத்து, செய்தி என்னவென்று மட்டும் பார்த்தான்.
’மிஸ்டர் புல்-அவுட் நீ ஜெயிச்சிட்ட’
மீட்டிங் அறைக்குள் வந்து வீடியோகாலில் அழைத்து, புல்-அவுட் பெருமையை ரூபாலினி வெறுப்பாகும் அளவிற்குப் பேசிவிட்டு, கேபினுக்குச் செல்வதாகச் சொல்லி அழைப்பைத் தூண்டித்தான். ’மிஸ்டர் புல்-அவுட் நீ ஜெயிச்சிட்ட’ செய்தியை இடமிருந்து வலமிழுத்து உணவு இடைவேளையின்போது வாங்கி வந்திருந்த ’ஆணுறை’ டப்பாவை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தான்.
‘கேடி நாயே! நீயும் உயிர கையில பிடிச்சிட்டு தான் இருந்திருக்க. அப்டித் தான?’
சுடிதாரை குறுக்கே மாராப்பாக்கி அக்குளுக்குள் வைத்துப் பிடித்திருந்தவள், ஒரு மிடறு பருகியபடி கேட்டாள். “சரி சொல்லு… வந்ததும் கவனிச்சேன். இருட்டுக்குள்ளயும் அப்பட்டமா தெரிஞ்சது. இன்னும் ஏன் என்னவோ மாதிரி இருக்க?”
ரகசியத்தை சொல்லியே தீரவேண்டுமென்ற அவசரகதியிலிருந்து வெளியேறியிருந்தாலும், மனம் தத்தளித்துக்கொண்டிருந்தது. கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருந்த காட்சியைத் தாண்டி திலீபனால் அவளோடு உரையாடலில் ஒன்றமுடியவில்லை. அவளிடம் சொல்வது போல நினைத்துக்கொண்ட தோற்றுப்போன பாவனையும் அதிலிருந்தது.
“நீ எப்படி இவ்வளவு வேகமாக வெளில வந்த? எங்கிட்டயும் சொல்லல. அந்த வாரம் முழுக்கவே சிட்டுவ குளிக்கக்கூட வைக்கல. நான்தான் ரெடி பண்ணினேன். ருசியா சமைச்சிப்போட பிறந்தவ மாதிரியே வகை வகையா எனக்கு சமைச்சி கொடுத்த! அந்த அளவுக்கு நீ கிச்சன விட்டு வெளில வராம ஒடுங்கியிருந்த. அப்புறம் திடீர்னு ஒருநாள், தம்பி, அப்பா காபி குடிச்சதும் மாடியில இருக்கிற எல்லா செடிக்கும் தண்ணி ஊத்திட்டு, நீ விளையாடி முடிச்சதும் கீழ வருவோமா’ன்னு கூட்டிட்டுப் போய் நடந்தத எல்லாம் சொல்ல ஆரம்பிச்ச… அப்றம் இப்ப இவ்வளவு தெளிவா இருக்க!.”
“நான் தெளிவா இருக்கேனா? அன்னைக்கு நீ என்ன பதில் சொன்னன்னு ஞாபகம் இருக்கா? – தொடர்ந்தாள். “அட பைத்தியமே, உனக்கென்ன இப்பவும் வியர்க்குது? இவனுக்குதான பண்ணப்போனான்? இவனை பண்ண வைக்கலேல்ல? அந்தப் பையனைத்தான் யாரோ இதுக்கு முன்ன இப்படி பண்ண வச்சிருக்காங்க. அதுவும் வாய் வைக்கிறதுக்கு முன்னாடி பார்த்துட்ட. அதனால தனக்கு என்ன நடக்குதுன்னு கூட சிட்டுவுக்கு தெரிஞ்சிருக்காது. இதப்போட்டு தேவையில்லாம குழப்பிக்காத. நம்ம பையனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியத நாம சொல்லிக் குடுத்தாபோதும்.”
“நடந்தது child abuse. அத நீ எப்படி ரிசீவ் பண்ணிண பாரு? – இந்த ஜென்மத்துக்கு போதும்ங்ற அளவுக்கு மானங்கெட்டத்தனமா உன்ன கேட்டுட்டமேன்னு ஒருவாரமா எனக்குள்ள போராடி இன்னைக்கு இறங்கி வந்திருக்கேன். அது உனக்காகவோ, எனக்காகவோ, ஏன் நம்ம பையனுக்காகவோ இல்ல. ”
அப்படியெனில் மூவரைத்தாண்டி யாருமில்லா நம் உலகில் யாருக்காக இந்த இரக்கம்? இந்த கருணை!
கருணையின்பால் பகிரப்பட்ட காமம் கசந்தது. அதைக்கூட அறியாமல், பணிந்த தன்னுடலை வெறுத்தான். இச்சை ஓர் உருவமாகப் பிடிபட்டால் அதை நிச்சயமாக கொன்றுவிடலாம் என நினைத்தான். சந்தேகமும் அகங்காரமும் தனக்குள் சல்லாபிப்பதை நிறுத்தமுடியாமல் அல்லலுற்றான். இரண்டுமே அவனாக இருப்பது போய், அவனையும் மீறி அதில் ரூபாலினி பங்கெடுப்பதை வெறுத்தான். ஆட்டத்தைக் கலைக்க நினைத்தான். இருளுக்குள் என்னவென கேட்டதற்கும் இப்போது என்னவென கேட்பதற்கும் உள்ள அர்த்தம் பிடிபட்டது. தன்னை ஆற்றுப்படுத்த சொற்ப நொடிகளேனும் அவளின் அவமானகரமான முகம் தேவைப்பட்டது. உடலுக்குள் முடுக்கி விடப்பட்டிருந்த இரத்த நாளங்கள் வன்முறையைக் கேவியது. வெடுக்கென சுடிதாரைப்பிடித்து இழுத்தான். அனிச்சையிலிருந்து எப்போதோ விடுபட்டிருந்தவள் குழந்தையை எடுப்பது போல அவனை நோக்கி இரு கைகளை நீட்டினாள். அந்த வெளியில் முலைமேடு மறைந்து, முலை வட்டம் மறைந்து, முலைக்காம்பு மறைந்து அவனது பற்தடங்கள் மட்டும் எஞ்சியிருந்தன. ஒருவேளை தன்னை அறியாமலே எல்லாவற்றையும் சொல்லிவிட்டோமோ என்று பயந்தான். வேகவேகமாக தலையணையெடுத்து முலைகளை மூடினான். அவனுக்கு அது அவளது முகமாகவும் தெரிந்தது.
***
ரமேஷ் ரக்சன் : திருநெல்வேலி மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்தவர். NBFC துறையில் பணி செய்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு நாவல்களும் வெளியாகியிருக்கின்றன. “16” சிறுகதைத் தொகுப்பிற்கு ’கலகம்’ விருதும், “ரகசியம் இருப்பதாய்” சிறுகதைத் தொகுப்பிற்கு ’ஜெயந்தன் விருது’ம் வென்றிருக்கிறார். மின்னஞ்சல் : rameshrackson@gmail.com
முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகளை அடைந்தபோது அதன் முகப்பிலேயே முகத்தைச் சுளிக்க வைக்கிற அளவுக்கு ஏதோ துர்நாற்றம் கிளம்பியது. அது என்ன துர்நாற்றம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
முன்னதாக முத்துப்பேட்டை தெருக்களில் நடந்த போது அங்கு கிடந்த கழிவுகள் சங்கடப்படுத்தின. கோழிக் கழிவுகள் பல இடங்களில் கொட்டிக் கிடந்தன.
அவற்றுக்கு மேலாக பருந்துகள் பறந்து கொண்டு இருந்தன. அவை நம் தலையில் வந்து எப்போது உட்காரும், பிறாண்டும் என்று பயமாக இருந்தது. ஏதாவது பறவை நம் மீது வந்து உட்கார்ந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் பருந்து என்றால் பயம்தானே. முத்துப்பேட்டை பகுதியில் இருக்கும் இறால் பண்ணைகள் காரணமாக அந்தப் பகுதி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்குப் பலன் இல்லாமல் போய்விட்டது. பல பணக்காரர்களுக்கும், முதலாளிகளுக்கும் செல்வம் கொழிக்கும் இடமாகிவிட்டது.
முத்துப்பேட்டை நகரத்தின் வீதிகளில் காணப்படும் கடைகள், அங்கு கொட்டிக்கிடக்கிற வெளிநாட்டுப் பொருட்களைக் கண்டுகொள்ள முடிந்தது. அதிலும் வெளிநாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் சில பிரத்யேகக்கடைகளின் முகப்புகள் அதிர வைத்தன. ஓரிரு கடைகளுக்கு சென்று பார்த்தபோது வழக்கமான வெளிநாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள் என்பது தெரிந்து கொண்டேன். அத்தனை வெளிநாட்டுப் பொருட்கள் குவிந்து கிடந்தன. அந்தக் கடைக்காரர் என்ன வேண்டுமென்று திரும்பத் திரும்ப கேட்டார். நான் லுங்கி இருக்குமா, வெளிநாட்டு லுங்கி என்றேன். எதிரில் புடவைகள் உட்பட முஸ்லிம் பெண்களுக்கான பிரத்தியே கோஷா உடைகள் உட்பட பல இருந்தன. சாக்லேட் முதல் மின்சாதன பொருட்கள் வரை நிறைய இருந்தன. அவர் வர்ண லுங்கி மட்டும் இல்லை என்றார். இன்னொரு நாள் வாருங்கள் என்றார். கடையை விட்டு வெளியே வந்த பிறகு நகர வீதிகளைச் சுற்றிய போது இன்னும் ஒரு முறை இங்கு வர வேண்டுமா என்ற கேள்வி வந்தது முத்துப்பேட்டை என்றால் இப்படி வெளிநாட்டு பொருட்கள் சாதாரணமாக விற்கிற கடைகள் இருக்கின்றன. வெளிநாட்டுக்காரர்கள் வந்து இங்கே இறால் பண்ணை முதல் பிற கடைகள் வரைக்கும் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். சிங்கப்பூர் முஸ்தபா ஞாபகம் வந்தார். அவர் சிங்கப்பூரில் நடத்திய புத்தக கடைக்குப் போயிருக்கிறேன். பலமுறை அவரை சந்தித்திருக்கிறேன் ஆனால் அவருடைய ஞாபகத்தில் எனது பெயர் நிற்கவில்லை என்பதை ஒவ்வொரு முறையும் நான் சந்திக்கிற போது பெயரை சொல்லுகிற போது தெரிந்து கொண்டேன். அவர் முத்துப்பேட்டையில் ஒரு பெண்கள் பள்ளி நடத்துகிறார். அந்தப் பள்ளியின் கல்வி சாதனைகள் பற்றிய பல விளம்பரங்களை முத்துப்பேட்டையில் கண்டேன். பல சமயங்களில் செய்தித்தாள்களில் அந்த மாதிரி விளம்பரங்களைப் பார்த்திருக்கிறேன். முஸ்தபா அவர்கள் நடத்தும் பள்ளியின் சாதனைகளாக அவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் நடத்தும் பள்ளியில் ஆண்கள் சாதாரணமாக நுழைய முடியாது என்ற சொல்வார்கள். ஒரு முறை ஒரு விழாவின் போது ஆண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அழைப்பிதழிலேயே அறிவித்து இருந்தார்கள். அந்த விழாவில் முக்கிய விருந்தினராக பரீட்சை ஞாநி போன்றவர்கள் இருந்தார்கள். அப்போது அது முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டது.
சதுப்பு நிலக்காடுகளின் முகப்பில் தென்பட்ட துர்நாற்றம் அந்த ஊரில் கழிவுகள் அங்கு வந்து சேர்வதால் உண்டான இடைஞ்சல் என்று பக்கத்தில் இருந்தவர் சொன்னார். கோழிக் கழிவுகளும் வீட்டுக் கழிவுகளும் இறால் கழிவுகளும் என்று எங்கிருந்தோ வந்து இங்கு அடைக்கலம் ஆகி விடுகின்றன. இதற்குள்ளே மக்கள் வாழப் பழகிக் கொண்டார்கள் என்றார். நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார். நான் திருப்பூர் என்றேன் திருப்பூர் என்றால் சாயக் கழிவுகள், சாயப்பட்டறைகள். நதியில் சாயக் கழிவுகள் ஓடுவது சாதாரணம்தானே. அதற்கு மத்தியில் நீங்கள் இருக்க, வாழப் பழகிக் கொண்டீர்கள். அதுபோலத்தான் நாங்களும் இந்த கழிவுகளின் மத்தியில் வாழப் பழகிக் கொண்டோம். எந்த ஆட்சி வந்தாலும் எந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வந்தாலும் எந்த மாறுதலும் இல்லை ஏன் அவர்களெல்லாம் இதையெல்லாம் கண்டு கொள்ள மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினராக நான்கு முறை பொதுவுடைமைக் கட்சியின் செல்வராஜ் அவர்கள் இருந்திருக்கிறார். அவருடைய பார்வையில் படாத விஷயம் இல்லை. ஆனால் எந்த விஷயமும் இங்கே மாறவில்லை என்றார். அலையாத்தி காடுகள் எங்களுடைய காவல் தெய்வம். பல சமயங்களில் எங்களை அழிவில் இருந்தும் பெரும் புயலில் இருந்தும் காப்பாற்றி இருக்கின்றன. கடலில் வேர்கள், மழைக்காடுகள், அலையாத்தி காடுகள், தில்லைவனம் சுரபுனைக் காடுகள் என்று பல பெயர்கள் இருந்தாலும் காவல் தெய்வம் என்ற ஒரு பெயர் அவர்களுக்கெல்லாம் பிடித்து போய் இருக்கிறது. மண் அரிப்பு, வெள்ளப்பெருக்கு, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து இது காப்பாற்றுவதால் காவல் தெய்வம்தான். முத்துப்பேட்டையில் இருக்கும் அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரியது. 120 கி மீ பரப்பு கொண்டது. வெப்பமண்டல கடலோர பகுதியில் காணப்படும். கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் பாதுகாப்பாக உள்ள கடலோர பகுதிகளிலும் வளரும் தாவரங்கள் இங்கேயும் காணப்படும். நிலையற்ற அடித்தளம் அதிகமான உற்பத்தித்தன்மை போன்றவை இந்த அலையாத்தி காடுகளில் இருக்கின்றன. நிலத்தில் மட்டும் இல்லாமல் நீரிலும் இந்தத் தாவரங்கள் மரங்களின் பங்கு முக்கியமானது என்பதை இவை உணர்த்துகின்றன. ஆழிப் பேரழிவைத் தடுத்து அந்தப் பகுதி நாசமாகாமல் காக்கிறது. அலையாத்திகாட்டு மரங்களின் முட்டு வேர்கள் எப்போதும் கவனத்தில் இருக்க வைக்கின்றன. அலையாத்தி மரங்களின் கிளைகள் மற்றும் தண்டுகளில் இருந்து வளரும் வேர்கள் அவை. அவை தான் முதலில் பார்வையில் படுகின்றன கடினமான சதைப்பற்றான விதைகளை அவை கொண்டிருக்கின்றன. நீர் தேங்கி நிற்கும் கழிவின் முகத்துவார இடங்களில் வாயு பரிமாற்றம் நடைபெறுவதில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை எதிர்கொள்ளும் வகையில் மரங்கள் மண்ணின் மேல் நோக்கி வளரும். பவளப்பாறைகளுக்கு அடுத்த படியாக பூமியில் அதிக உற்பத்தி திறன் கொண்ட சூழலமைப்பு அலையாத்தி காடுகளின் சூழமைப்புதான். மனிதர்களின் குறுகிய கால வணிக வளர்ச்சி, பக்கத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளின் உப்புத்தன்மை மிக்க இறால் பண்ணைகளின் கழிவுகள் ஆகியவை இங்கு எப்படியோ வந்து சேர்ந்து விடுகின்றன. இவை அலையாத்தி காடுகளுக்கு சவாலாக அமைந்திருக்கின்றன. இயற்கை தரும் பெரும் சிரமங்களுக்கு எதிராக நிற்கும் அலையாத்தி காடுகள் இந்த வகை கழிவு சவால்களையும் எதிர்த்து இயங்க வேண்டியிருக்கிறது. முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கிற திணை மயக்கமாகச் சிகப்பு சதுப்பு நிலக்காடுகளை இருக்கின்றன. இந்தியாவின் கங்கை ஆற்றங்கரையில் சுந்தரவனக்காடுகள், மிகப்பெரிய அலையாத்தி காடாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகிலான பிச்சாவரம் பகுதியில் உள்ள சதுப்பு நிலக்காடு இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகளாகும். இந்தக் கோடிக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் முக்கியமானவை. குஜராத் ஆந்திர மாநிலங்களிலும் கடற்கரை பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகள் பல இடங்களில் உள்ளன. இலங்கையில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பு அலையாத்தி காடுகள் உள்ளன. அவை பல சமயங்களில் இயற்கையின் பேரழிவிலிருந்து நிலப்பகுதியைக் காப்பாற்றுகின்றன. ஆனால் இந்தச் சதுப்பு நிலக்காடுகளின் இன்றைய நிலைமை பல நுண்ணுயிர்கள் சாவதற்கு ஏதுவாகக் கழிவுகள் கலக்கின்றன. பல வகையான மீன்கள் இல்லாமல் போவதற்காக இந்தக் கழிவுகள் விஷமாக அமைந்து விடுகின்றன. எந்த ஆட்சி வந்தாலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை என்பது போல் இருந்தாலும் இந்த மக்களை இயற்கையின் பேரழிவுகளில் இருந்து காப்பதற்கான காவல் தெய்வமாக முத்துப்பேட்டையின் அலையாத்திக் காடுகளைக் கண்டேன். அந்தப் பகுதி மக்களும் அப்படியேத்தான் நினைக்கிறார்கள். பிச்சாவரம் காடுகளில் படகுளில் அலைந்த போது அதன் உள் பகுதிகளைக் காண முடியும். ஆனால் உள் பகுதிகளுக்கு இந்த மின்சாரப் படகுகள் செல்வதில்லை. தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் என்று சில இடங்கள் உள்ளன. திகில் மாளிகை போல அவை காட்சியளிக்கின்றன. அலையாத்தி காடுகளைப் பற்றி நினைக்கிற போது இந்த திகில் மாளிகை என்ற வார்த்தையும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியாது. பருவநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு போன்றவைகளால் சதுப்பு நிலங்களில் சேமிக்கப்படும் கார்பனை இழக்கும் சூழல். வெப்பமண்டலக்காடுகளால் சேமிக்கப்படும் கார்பனின் அளவினை விட மூன்று மடங்கு அதிகம் இது. நல்ல வண்டல் மண்ணைப்பாதுகாக்க வேண்டும். சதுப்பு நிலங்களை உள்நாட்டில் விரிவுபடுத்த வேண்டும் . அப்போதுதான் கடல் மட்டம் உயர்வதைத் தடுக்க முடியும்.
பருவநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் சதுப்பு நிலக்காடுகள் பாதிக்கப்படும் சூழல்கள் அதிகரித்துள்ளன. திகில் மாளிகை பிம்பத்தை உடைத்து அலையாத்தி காடுகளைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
***
சுப்ரபாரதி மணியன் : தொடர்ச்சியாக இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் மூத்த எழுத்தாளர்களுள் முதன்மையானவர். 27 நாவல்கள் உட்பட 100 நூல்கள் எழுதியிருக்கிறார். இந்திய ஜனாதிபதியின் கதா விருது, தமிழ்ச்செம்மல் விருது, தமிழக அரசின் மொழிபெயர்ப்பு விருது முதலிய பல முக்கிய விருதுகளை வென்றிருக்கிறார். இவருடைய படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாடநூலிலும் இடம்பெற்றிருக்கின்றன. மின்னஞ்சல் : subrabharathi@gmail.com
அந்த ஆளோய்ந்த வீட்டின் முன் அன்றும் நான் காத்திருந்தேன். காத்திருந்து காத்திருந்து பழகிப்போய்விட்டது. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடத்தைத் தொட்டுவிட்டன. அநேகமாக ஓராண்டு முடிந்து சில மாதங்கள் ஆகியிருக்கலாம். எதற்காக இந்தக் காலக்கணக்கையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறேன்?. கணக்கிட்டு என்ன செய்வது? இப்போதெல்லாம் நான் வெறுக்கக்கூடிய ஒரே முகம் எனது முகம்தான். கண்ணாடிமுன் நாள்தோறும் நிற்பதற்கே அஞ்சுகிறேன். அதில் தெரியும் முகத்தைப் பார்க்கப் பார்க்க அவமானமாகவும் அருவெறுப்பாகவும் இருக்கிறது. ஒரு வேலைக்காக ஏன் இப்படி ஒரு மனிதனைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்? அப்படி என்ன வாய்ப்பு வேண்டிக்கிடக்கிறது? இவன் இல்லாவிட்டால் வேறு மனிதர்களே இல்லையா? இப்படி யோசித்துக் கொண்டே இருக்கும்போது, வீட்டு வாசலில் ஒரு இன்னோவா கார் வந்து நின்றது. காரிலிருந்து வெங்கடேஷ் சார் இறங்கி வந்தான். பணக்காரத் தோரணை தன் ரத்தத்திலேயே கலந்து விட்ட ஒன்று என்பதை, ஒரு மெல்லிய சலிப்புடன் தன் உடல்முழுக்கப் பரவவிட்டு நடந்துவரும் இந்த மனிதன் தான் என்னை ஒரு வருடத்திற்கும் மேலாகக் காக்க வைத்துக்கொண்டிருக்கிறான். பணக்காரத் தோரணையை நடிக்கும் அவனிடம் நானும் நடிப்பில் சளைத்தவனில்லை என்பதைக் காட்ட விரும்பினேன். மிகப் பணிவுடன், அவன் முன் சென்று நின்றேன்.
என்னைக் கண்டதும், செயற்கையானதொரு புன்னகையுடன், “வாய்யா, காலையில இருந்தே எதுக்கு காத்திட்டு இருக்க?. வீட்டுக்கு வந்ததும் நானே அப்பாவுக்கு போன் போட்டு உன்னைய வரச்சொல்லலாம்னு இருந்தேன். விடிஞ்சதில் இருந்து வேல மேல வேல. நிம்மதியா சாப்பிட முடியல, தூங்க முடியல, ஒண்ணுக்குப் போகக்கூட முடியல, அந்த நேரத்திலயும் எவனாவது போனப் போட்டு, தொணத்திக்கிட்டே இருக்கான்”. வானத்தைப் பார்த்தபடி, “என்ன செய்றது, நாய் வேஷம் போட்டாச்சு.. ஆனா ஒண்ணுப்பா, படிச்ச பய யாருக்காகவும் இப்படி வேலைக்காக காத்திருக்கக் கூடாதுப்பா. நானும் ஒனக்கு எப்படியாவது என் மாமன்கிட்டச் சொல்லி அவரு கம்பெனில ஒரு வேலையப் போட்டுக் கொடுத்துரணும்னு அவரத் தொண்ணாந்துகிட்டே இருக்கேன். அவரு பாரு… என்னயக் காட்டிலும் பிஸியா அலையுறாரு. என்னத்தச் சொல்ல.. ?” என்றார்.
“ஏயப்பா, என்ன மாதிரி நடிக்கிறான், காலையில இருந்து இவன் என்னத்தக் கிழிச்சிருப்பான்? வாழைத் தோப்புக்குப் போய் வேலையாளுகள அதச்செய்யி இதச்செய்யின்னு நாட்டாமை பண்ணியிருப்பான். அவன் போகாட்டியும் அங்க வேல ஒழுங்காத்தான் நடக்கும். ஆனா, அவனாலதான் எல்லாம் நல்லபடியா நடக்குதுன்னு காட்டிக்கிருவான். அதுக்குப் பிறகு செந்திலாண்டவர் டீக்கடையில ஆமை வடையக் கடிச்சுக்கிட்டே தினத்தந்திய எழுத்துக்கூட்டிப் படிச்சிட்டு, வாரவன் போறவன் வாயப்பாத்து ஒக்காந்துட்டு இருந்திருப்பான். வெயில் ஏறுனதும், வீட்டுக்கு வந்து சாப்டிட்டு ஒரு பகல் தூக்கம். வெயில் தணிஞ்சதும் திரும்பவும் காலைல பார்த்த வேலையச் செய்யத்தான் போவான். இந்த லட்சணத்தில உண்மையிலேயே உழைக்கிறவன் மாதிரி என்னா பில்டப் குடுக்குறான் பாரு?”, என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
“நீங்க பிஸியான ஆளுன்னு தெரியும்ணே. அதுக்காகத்தான் வேல செய்யுற இடத்தில உங்களத் தொந்தரவு செய்ய வேணாம்னு நீங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா பேசலாம்னு காத்திருக்கேன்” என்றேன். உண்மையில் இவனைப் பல வாரங்களாக, போலீஸ் திருடனைத் துரத்துவது போல, இவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் தொடர்ந்து சென்று இவனிடம் பேச முயன்றிருக்கிறேன். அப்போதெல்லாம், என்னை, அங்க வா இங்க வா, என்று இவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் வரச்செய்து அங்கிருக்கும் ஆட்களிடம் என் அவல நிலையைத் தெரியப்படுத்தி, எனக்கு வாழ்வளிக்கப் போகும் வள்ளல் தான்தான் என்று காட்டிக்கொள்வான். அதைப் புரிந்துகொண்ட பின்னர், அவனை அவன் வீட்டிலேயே சந்திப்பது என்று முடிவெடுத்தேன். எவ்வளவு நேரக் காத்திருப்பானாலும் சரிதான்.
“நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுப்பா. உள்ள போனதும் மொத வேலையா மாமனுக்கு போன் போட்டு ஒன்னயப் பத்திச் சொல்லிர்றேன்”, என்றபடி வீட்டுக்குள் போனான். வீட்டின் இருள் அவனை உள்வாங்கிக் கொண்டது.
அவன் உள்ளே போனதும் என்ன செய்வான் என்பதும் எனக்குத் தெரிந்ததுதான். வறுத்து வைத்த வஞ்சிரம் மீனை வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவான். நான் மீண்டும் வாசலில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டேன். வெயில் எரிந்து கொண்டிருக்கும் அந்த வெக்கையான தெருவின் இறுதி வீடு அவனுடையது. அவனும் அவனது நோயுற்ற மனைவியும்தான் அந்த வீட்டில் இருக்கிறார்கள். சமைப்பதற்கும் அவனது மனைவியைக் கவனித்துக் கொள்வதற்கும் வேலையாட்கள் வந்து சென்று கொண்டிருப்பார்கள். அவனது அக்காவின் கணவர் சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறார். அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணிபுரிந்தபின்னர் சென்னைக்குத் திரும்பி அமெரிக்க கம்பெனிகளுக்கு மென்பொருள் வேலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஊரில் உள்ள படித்த பையன்களைக் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்து, பயிற்சி கொடுத்து, சில ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவுக்கு அனுப்பிவைப்பார். அங்கு சென்ற பின்னரும், வருமானத்தில் கணிசமான பகுதியை வாங்கிக்கொள்வார். சில ஆண்டுகள் இந்த ஒப்பந்தம் தொடரும். ஆனால், பையன்களை சென்னையில் வேலைக்கு எடுத்துக்கொண்ட பின்னர், அமெரிக்காவிற்கு அனுப்புவது வரை, ஒரு நாளில் பதினெட்டு மணிநேரம் வேலை வாங்குவார் என்றனர். ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை இல்லை. வேலையாட்களை ஏவுவதைப் போலத்தான் எல்லாரிடமும் பேசுவார். கிட்டத்தட்ட அவரிடம் சென்றால் ஓர் அடிமையைப் போலத்தான் நடத்துவார். ஆனாலும், இருட்குகையின் மறுமுனையில் தென்படும் ஒளிக்கீற்றைப் போலத் தெரியும் அமெரிக்க வாய்ப்புக்காக மறுபேச்சு பேசாமல் பல இளைஞர்கள் அவரிடம் வேலைக்குப் போனார்கள். அதை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார். அவரது கம்பெனி ஒரு இரும்புக் கோட்டை, சிபாரிசின்றிப் புதியவர்கள் அதற்குள் எளிதாக நுழைய முடியாது. அதனால், வேலை தேடும் இளைஞர்கள், அவரவருக்குத் தெரிந்த முறையில் அவரை அணுக முயன்றார்கள். அவரிடம் அணுக்கமாக உள்ள அவரது நண்பர்களையும் உறவினர்களையும் நட்பாக்கிக் கொண்டு அவர்களது சிபாரிசு மூலம் வேலை பெற முயற்சிப்பார்கள். அந்த வகையில், எனக்குக் கிடைத்த உறவினர்தான் இந்த வெங்கடேஷ் சார் என்பவன். ஏதோ ஒரு அலுவலக விஷயமாக என் அப்பாவைச் சந்தித்தவன், நான் படித்து முடித்து வேலைக்கு முயன்று கொண்டிருப்பதை அறிந்துகொண்டு, தன் மாமனைப் பற்றிச் சொல்லி, அவரது கம்பெனியில், எனக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறான். அதை நம்பி, என் வீட்டிலும் அவனைச் சென்று சந்திக்கும்படி சொல்லவே, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, தினந்தோறும் இவனைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இவன், ஒவ்வொரு நாளும் ஒரு காரணத்தைச் சொல்லி, எனக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறான். இவன் இல்லாமல் நேரடியாக என்னால் இவனது மாமனைச் சந்திக்கவும் இயலாது. படித்த படிப்பை வைத்து வேறு எங்காவது வேலை தேடிக் கொள்ளலாம் என்றாலும், வீட்டில் உள்ளவர்கள் இவனது சிபாரிசையே மலை போல நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை இவனைப் பார்ப்பதற்காக வீட்டில் இருந்து கிளம்பும்போது நெற்றியில் விபூதி இட்டு அனுப்பும் அம்மாவையும், ஏமாற்றத்துடன் நான் வீடு திரும்பும்போது என்னைப் பார்த்து முகம் வாடும் அப்பாவையும் பார்க்க மனம் வேதனையடையும்.
இதையெல்லாம் யோசித்தபடி நான் இவனுக்காக இன்றும் காத்துக்கொண்டிருக்கிறேன். அந்த தெருவில் உள்ள ஒரு குழந்தைக்கும் என்னைத் தெரியும். எதிர்வீட்டில் இன்றைக்கு கரும்புவில் வைத்த கோலம் போட்டிருக்கிறார்கள். எனில் இன்று செவ்வாய்கிழமை. நாளை புதன்கிழமை தேர்க்கோலம் போடுவார்கள். எதிர்வீட்டுக்கு அருகில் உள்ள தகரம் போட்ட வீட்டில் என்னைப் பார்த்துச் சிரித்தபடி நடைபயிலும் அந்தப் பையன் கைக்குழந்தையாக இருக்கும்போதுதான் நான் முதன்முதலில் வெங்கடேஷ் சாரைப் பார்க்க வந்தேன். அன்றிலிருந்து நான் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காத்திருப்புக் காலத்தில், இயற்கை பல பருவங்களைக் கடந்து விட்டது, மேடு பள்ளமான இந்த தெருவில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, தார் ரோடு போட்டு விட்டிருந்தார்கள். தெருமுக்கில் இருக்கும் அடிபம்பு அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. நடுவீட்டில் உள்ள செல்வி அக்காவிற்கு திருமணம் முடிந்து அவர் தலைப்பிரசவத்திற்காக தாய்வீடு திரும்பியிருக்கிறார். சிறு குழந்தைகள் வளர்ந்து விட்டிருந்தார்கள். ஓரிரு முதியவர்கள் இறந்துவிட்டார்கள். கூரை வீடுகள் காரை வீடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. சைக்கிள்கள் பைக்குகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. காலையில் முற்றத்தில் விழும் வெயில், மதியத்தில் பழுத்து, மாலையில் சிறுத்து மறைகின்றது. நிழல்கள் நீண்டும், சிறுத்தும் உருமாறியபடி என்னைக் கேலி செய்து கொண்டிருக்கின்றன. என்னைச் சுற்றியுள்ள நிலக்காட்சியும் மனிதர்களும் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். எரியும் வெயிலில் உருகும் தாவரங்கள் கூட நிறம் மாறிக்கொண்டிருக்கின்றன. நான் மட்டும் மாறாமல், இந்த பெயிண்ட் இல்லாத, துருப்பிடித்த ஸ்டீல் சேரில் ஒரு மனிதனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். இப்படியே இன்னும் சில காலம் இருந்தால் நானும் துருப்பிடித்துவிடுவேனா? போகிற போக்கைப் பார்த்தால், அப்படியே இந்த மண்ணில் வேர்பிடித்து, கற்சிற்பமாக மாறி, நூற்றாண்டுகளுக்குப் பின் காணவரும் பள்ளிச்சிறுவர்களுக்கான காட்சிப்பொருளாக மாறிவிடும் சாத்தியமும் இருக்கிறது.
இந்த அவலத்தில் இருந்து என்னை நானே மீட்காவிட்டால், காத்திருப்பதே எனது வேலையாகிவிடும். வீணாக்கிய காலம் வீணானதுதான். அது ஒருபோதும் எனக்குத் திரும்பக் கிடைக்கப்போவதில்லை. இனியாவது காலத்தை வீணாக்காமல் செயல்பட வேண்டும். துணிந்து முடிவெடுத்தேன். அன்று மாலையே, நான் சென்னை செல்வதற்கு டிக்கெட் போட்டேன். மறுநாள் காலை எப்படியாவது வெங்கடேஷின் மாமாவைப் பார்த்துவிடுவது என்ற உறுதியுடன் கிளம்பினேன். பார்ப்பது கஷ்டம்தான். இருந்தாலும் ஒரு ஞமலியைப் போல வெங்கடேஷ் வீட்டு வாசலில் வருடக்கணக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும், இப்படித் துணிந்து அவனது மாமனையே பார்க்கக் கிளம்பலாம். பக்கத்து ஊர் பையன் ஒருவன் அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் விலாசம் கொடுத்திருந்தான். ஆனாலும், சிபாரிசின்றி வந்தால் பார்க்க முடியாது என்றுதான் அவன் சொல்லியிருந்தான். பரவாயில்லை, இந்த நாட்டில் எத்தனையோ பெரும்ஞானிகள் எல்லாம் கடவுளையே கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். முயன்றால், ஒரு மனிதனையா சந்திக்க முடியாது?
எக்மோரில் இருந்தது அந்த அலுவலகம். நான் நினைத்தது போல அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக இல்லை. சுமாராகத்தான் இருந்தது. மிகச் சிறிய வரவேற்பறை. நிறுவனத்தின் தலைவருக்காக மட்டும் குளிரூட்டப்பட்டத் தனியறை இருந்தது. அதைக் கடந்து சென்றால், உள்ளே பையன்கள் வேலைப்பார்க்கும் அலுவலக அறைகள் இருந்தன. வரவேற்பறையில் உள்ள இளைஞன் சுருள்முடியுடன் குண்டாக இருந்தான். நிமிடத்திற்கு ஒருமுறை வரும் போன் அழைப்புகளை எடுத்துப் பேசிகொண்டேயிருந்தான். மறுமுனையில் பேசிய நபர்களிடம் “சார், இப்ப வந்திருவாங்க”, “சார் வந்ததும் சொல்றேன்”, “அத சார்தான் முடிவு பண்ணனும்” என்றே சொல்லிக்கொண்டிருந்தான். நான் அவனிடம் என்னை வெங்கடேஷ் சாரின் நண்பரின் மகன் என்று அறிமுகப்படுத்தினேன். “லெட்டர் இருக்கா?” என்று கேட்டவனிடம், “வெங்கடேஷ் சார் பிஸியா இருக்காரு, லெட்டர் எதுவும் குடுக்கல, ஆனா..அவரு சாருக்கு முன்னாடியே போன் போட்டு என்னப் பத்தி சொல்லியிருக்காரு” என்றேன். “லெட்டர் இல்லாம யாரையும் அனுப்பினதில்ல, இருந்தாலும் சார் வந்ததும் சொல்றேன், அவர் நல்ல மூடுல இருந்தா உங்களப் பாப்பாரு, வெயிட் பண்ணுங்க” என்றான்.
நான் மீண்டும் காத்திருக்கத் துவங்கினேன். யார் யாரோ அந்தப் பக்கமாக என்னைக் கடந்து போய்கொண்டிருந்தார்கள். வரவேற்பாளனும் எத்தனையோ போன் அழைப்புகளை எடுத்துப் பேசிக்கொண்டிருந்தான். மின்விசிறி இருந்தும் இல்லாததைப் போலச் சுற்றிக்கொண்டிருந்தது. மேஜையில் இருந்த செய்தித்தாளைக் கூட அதனால் அசைக்க முடியவில்லை. வியர்வைக் கசகசப்பிலும், பரிச்சயமற்றவர்கள் இல்லாத புதிய இடம் கொடுத்த அணுக்கமின்மையினாலும் இருக்கையில் அமர முடியாமல் அமர்ந்திருந்தேன். காலையில் சாப்பிட்டிருக்காததால் கண்கள் மெல்ல மங்கத் துவங்கின. இங்கிருந்து எழுந்து சென்றால் பின் மீண்டும் வரமுடியாமல் ஆகிவிட்டால் என்ன செய்வது? தண்ணீர் கூட அருகில் இல்லை. தலையைக் குனிந்து அமர்ந்திருந்தேன். சரியாக அந்தத் தருணத்தில் என்னைக் கடந்து ஒரு நிழல் போனது போலிருந்தது. நிமிர்ந்து பார்ப்பதற்குள், நிறுவனரின் அறைக்கதவு மூடப்பட்டிருந்தது. போனில் பேசிக்கொண்டிருந்த வரவேற்பாளன் அவசரமாக உள்ளே போனான். நிறுவனர்தான் என்னைக் கடந்து சென்றவர் எனப் புரிந்து கொண்டேன். உள்ளே அவர் கோபத்தில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது தெளிவற்றுக் கேட்டது. சிறிது நேரத்தில், வரவேற்பாளன் சுருங்கிய முகத்துடன் வெளியே வந்தான். எதற்காகவோ முதலாளியிடம் வசை பெற்றுவந்திருக்கிறான் போலிருக்கிறது. அதனால் அவனிடம் இப்போது பேசுவது சரியாக இருக்காது. நான் மீண்டும் காத்திருக்கத் துவங்கினேன். சிறிது நேரம் கழித்து வரவேற்பாளனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவன், என்னைப் பார்த்து, “உங்களத்தான் கூப்பிடுறாரு, போய்ப் பாருங்க” என்றான். நான் என் கையில் இருந்த ஃபைல்களையெல்லாம் திரட்டிக் கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே நீண்ட மேஜையின் மறுபுறம் கரிய நிறத்தில் ஒரு மனிதர் இருந்தார். கபில நிறத்தில் சஃபாரி அணிந்திருந்தார். உடல் பெருத்துப் போய், பார்க்க அகோரமாக இருந்தார். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற குறள் நினைவில் இருந்ததால் என் மனத்தை உடனே அடக்கினேன். உடல் முழுக்கப் பணிவை வரவழைத்து, அவரிடம் என் ஃபைலை நீட்டி, “வெங்கடேஷ் சார்..” என்று நான் பேசத் துவங்கும் முன்னரே என் ஃபைலை மேஜையில் எறிந்தார். “வேல தேடி வந்தவனுக்குப் பணிவு வேணும், நான் ரூமுக்குள நுழையறப்பவே பார்த்தேன், நீ எந்திரிக்கவே இல்ல.. உக்காந்துகிட்டேதான் இருந்த.. ஒரு மரியாத தெரிய வேணாம்? உனக்கு நான் உதவி செய்யணுமா?” என்று ஆங்காரமாகக் கேட்டார். தீவிர கோபத்தில் அவர் குரலும் முகமும் அகோரமாக மாறிக்கொண்டு வந்தது. நான் எதுவும் சொல்வதற்குள்ளாகவே, வரவேற்பாளனைக் கூப்பிட்டு, “இந்தப் பையன வெளிய அனுப்பு. மட்டு மரியாத தெரியாதவனயெல்லாம் நான் வேலைக்கு எடுத்துக்கறதா இல்ல” என்று சொல்லிவிட்டுத் தன் கணிப்பொறியைப் பார்க்கத் துவங்கினார்.
வரவேற்பாளன் என்னை மெல்ல வெளியே இட்டு வந்தான். எனக்கு என்ன நிகழ்ந்தது என்பதைத் தொகுத்துக்கொள்ளும் முன்பாகவே, கிட்டத்தட்ட கழுத்தைப் பிடித்துத் தள்ளி வெளியேற்றிவிட்டார்கள். வரவேற்பாளன் என்னிடம் அடங்கிய குரலில், “என்னப்பா, இப்படிச் செஞ்சுட்ட, அவரு வரும்போது எந்திரிச்சி நிக்க வேணாமா”? என்றான். எனக்கு அந்த அவமானத்திலும் கோபத்தைக் காட்டிலும் சிரிப்புத்தான் வந்தது, “அண்ணே, ரொம்ப நேரமா அந்தப் பக்கமா நெறைய ஆட்கள் போயிட்டும் வந்துட்டும் இருந்தாங்க. அவருதான் முதலாளின்னு எனக்கு எப்படித் தெரியும்? அவர முன்னப்பின்ன நான் பாத்தது கூடக் கிடையாது,” என்றேன். வெளியே செல்லும் முன், அவனிடம் இப்படிச் சொன்னேன், “அண்ணே, வேணும்னா இப்படிச் செய்யலாமா? அவர மறுபடி வெளியில இருந்து அவரோட ரூமுக்குப் போகச் சொல்லுங்க, இந்த முறை நான் அவரப் பாத்ததும் எந்திரிச்சு நிக்கிறேன்”. அவன் பதில் எதுவும் சொல்லாமல் என்னை முறைத்துவிட்டு உள்ளே சென்றான். உள்ளே சென்றதும், சிரித்திருப்பான் என்பது மட்டும் நிஜம்.
அந்த நிகழ்வில் எனக்கு ஏற்பட்ட அவமானம் பல இரவுகளின் தூக்கத்தைப் பறித்துக்கொண்டது. அதன்பின், நானாக சுயமுயற்சியில் வேலை தேடி முன்னேறியதெல்லாம் தனிக்கதை. வாழ்வில் எத்தனை தூரம் முன்னேறியிருந்தாலும், நமக்கு ஏற்பட்ட அவமானங்களை மட்டும் நம்மால் மறக்கமுடியாது. இந்தச் சம்பவத்தைக் கூட நான் மறந்துவிட்டதாகத்தான் நினைத்தேன். ஆனால், ஷங்கர்ராமசுப்ரமணியனின் இந்தக் கவிதையை வாசிக்கும்போதெல்லாம் ஆழ்மனதில் புதைந்து போன இந்தச் சம்பவம் புதிது போல நினைவில் மேலெழும்புகிறது.
மொஹபத்
நெடுங்காலமாய் வரவேற்பறையிலேயே தங்கிவிட்டதாய் உணர்கிறீர்கள் உள்ளறைகளின் கதவுகள் தடித்துவிட்டன வரவேற்பறை அமர்வுக்கான வரிசை கூடிக்கொண்டே இருப்பதைச் சிரித்துக்கொண்டே பார்க்கிறீர்கள் வெளியில் சத்தங்கள் கூடிக்கொண்டே வருகின்றன குரல்களையும் முகங்களையும் பொருத்தவே இயலாமல் ஏமாற்றமடைகிறீர்கள் தொடர்ச்சியாகத் தேநீர் வந்துகொண்டு இருக்கிறது மிகவும் சன்னமாக இந்திப் பாடல் ஒன்று கேட்கிறது அர்த்தம் புரியாமலேயே மொஹபத் என்னும் வார்த்தையை வசீகரமாய் உணர்கிறீர்கள் அதிகாரி போன்று தோற்றமளிக்கும் ஒருவர் அறையைக் கடக்க மரியாதையுடன் எழுகிறீர்கள் இவை எல்லாம் வெறும் சம்பிரதாயமாகி விட்டன என்று முணுமுணுக்கிறீர்கள் உங்கள் கவனம் இல்லாமலேயே வளர்ந்துவிட்ட உங்கள் பெண்ணை யோசிக்கையில் வியப்பாய் உள்ளது ஜன்னல்களில் இருந்து பார்க்கப் பழகிவிட்ட மரங்களைத் தவிர வேறு எவரிடமும் சொல்வதற்கு செய்திகள் இல்லை என்பதை மெதுவாய் உணர்கிறீர்கள் குழந்தைகள் வரவேற்பறைகளைத் தாண்டி வெகுதூரம் ஓடி விட்டன.
-ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஏதேதோ அலுவலகங்களில் ஏதேதோ வாய்ப்புகளுக்காக, எண்ணிக்கையற்ற இளைஞர்கள் யாருக்காகவோ இப்படித்தான் வரவேற்பறையில் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கும் அவர்கள் நுழைய விரும்பும் அறையின் கதவுகள் திறப்பதில்லை. அவை தடித்துப்போயிருக்கின்றன. காலம் யாருக்காகவும் நிற்பதில்லை, அது வேகமாக நகர்ந்தபடியிருக்கிறது. காத்திருக்கும் இந்த மனிதர்களைச் சுற்றியுள்ள காட்சிகளும், மனிதர்களும் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். இவர்கள் மட்டும் காத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அப்படிக் காத்துக்கொண்டிருப்பவர்கள் யாரும் இந்தக் கவிதையை மட்டும் படிக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொள்வேன்.
***
கணேஷ்பாபு – தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.மின்னஞ்சல்: ganeshmodec@gmail.com
மின்சாரமில்லாத மழை இரவுகளில் பேசுவதையும் கேட்பதையும் தவிர வேறெதையும் செய்ய முடியாது. அப்படியானதொரு இரவில்தான் ஆடறுத்து இரத்தத்தைத் துணியில் நனைத்து அசைத்து இரயிலை நிறுத்தியக் கதையைச் சொன்னாள் என் றாத்தா. அது மீச்சிறு கதையாக இருந்ததால் அவள் நெடுந்தொடரொன்றை சொல்லத் தொடங்கினாள். ஜின் வசிய வீட்டுக்காரிகளைப் பற்றியது. அவ்விரவில் அரிக்கேன் லாந்தர்களின் அலையும் வெளிச்சப் படலுடன் சுவர் கடிகையின் ‘டிக்’ ஒலியும் மட்டும் இல்லாதிருந்தால் அந்த இருளால் இவ்வளவு மட்டுக்கும் வீட்டுக்குள் அலைந்திருக்க முடியாதுதான்.
‘அந்த ஜின் வாசலாத்துக்கார* ஊட்டுல மூணு பேர்தான் இந்தாளுவோ”. லாந்தர் வெளிச்சம் தாவியிராத இடத்திலிருந்து றாத்தாவின் குரல் தொடர்ந்தது. மொத்த அறைக்கும் ஒரே ஒரு லாந்தர். அணைவதற்கான படபடப்புடன் திண்ணையிலிருக்கும் குத்து விளக்கு. வெளிச்சங்களின் எல்லைகளுக்குள் இருக்கிற மாதிரி நான் படுத்துக் கொள்வேன்.
வசியங்களின் இரவுகளை அடுத்து வரும் காலைகளில் கண் விழித்தவுடன் நான் போய்ப் பார்ப்பது றாத்தாவின் பாதங்களுக்கும் சுவர் மூலைக்கும் இடைப்பட்ட இடத்தைத்தான்.
முதன்முதலில் சென்னைக்கு போய் வந்த பின் ஆடு, இரத்தம், இரயில் அதன் நிறத்தையிழந்தது. றாத்தா* சொன்ன ஜின் வசியம் மட்டும் அதன் சுவாரசியங்களினால் சிலைத்திருந்தது.
வசியக்கார வீட்டின் சுற்று வட்டம்தான் ஓட்டமும் ஒளிவுமான என் வயது பையன்களுக்கு விளையாட்டும் கூத்தும் நிகழுமிடம். அங்கு குப்பை மேடு உண்டு. ஜின் களிகளைக் கேட்ட பிறகு அங்கு எறியப்படும் கரிந்த பல்புகளை சேகரிக்கத் தொடங்கினேன். பவர் பல்புகளுடன் நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் ஜீரோ வாட்ஸ் குட்டி இரவு பல்புகளும் அவ்வப்போது கிடைத்து வந்தன. கவண் கல்லிற்காக வேட்டைக்கார காதர் சுலைமானிடம் ஓரிரண்டு பல்புகளைக் கைமாற்றியது போக மீதியை வீட்டுத் தோட்டத்தின் மூலையில் பானைச் சில்லுகளை அடையாளம் வைத்துப்புதைத்தேன்.
குப்பை மேட்டில் கிடந்த சிறியதும் பெரியதுமான மாத்திரைகளை மம்மாக்கார்மாவின் பேரன் விழுங்கியதோடு நாயின் செவியையும் கடித்த செய்தியை வருத்தமும் புதினமுமாக அவ்வட்டாரத்து முதிய பெண்கள் பேசி முடிந்த கதைகளுடன் அவ்வப்போது பல வகை புதுக் கதைகளும் குப்பைமேட்டு பகுதியிலிருந்து வந்து சேருவதில் குறைவிருக்கவில்லை. அக்கம் பக்க வீடுகளில் ஊதல் ஓசையுடன் ஏவல் கல் வந்து விழுவதும் சுடு சோற்றுச்சட்டிக் கவிழுவதுடன் மையும் பசையும் தடவிய கோல் கள்ளர்களின் நடமாட்டம் பற்றிய செய்திகளும் அந்திக்குப் பிறகு அங்கு ஆள் நடமாட்டத்தை வெகுவாக குறைத்திருந்தன.
எனது இரவுகளில் அதிலும் உறங்கும் முன்னரும் இடை விழிப்புத் தட்டும் பின்னிரவுகளிலும் ஜின் வசிய வீட்டினுள்ளே ஒரு பல்பும் வெளியே வீட்டின் நெற்றியில் ஒரு பல்புமாக கட்டாயம் எரியும். பகல்களில் மட்டும் அவ்விடத்தில் இருப்பது கிணறும் அதிலிருந்து நீளும் சிமிட்டித் தாவளத்தின் ஓரத்திலுள்ள சேறு பிடித்த மண் நுரைப்பில் நெளியும் மண் புழுக்களும்தான்.
வசியக்காரிகள் எப்போதும் நின்றிருப்பது பல்பின் மஞ்சள் வெளிச்சம் முடிந்து இருள் தொடங்கும் இடத்தில். வீட்டின் கொல்லைக்கடையிலிருந்து அவர்கள் குமரி வயதுள்ள ஜின்களை எண் திசைகளுக்கும் கிளப்புவதுண்டு. அவர்களுக்கான அதிகாரக் கால அளவென்பது முதல் சேவல்கூவும் வரைக்கும்.
அந்நேரங்களில் பூனையின் கறாவுதலில் தொடங்கி நாயின் ஊளையில் முடியும் கலவையொலிகளை காதருகில் வந்து மோதும் கொசுக்களிடமிருந்து கேட்டதாக அவ்வீட்டைக் கடக்க நேரிடும் வெளித்தெருக்காரர்கள் பலர் சொல்லி தெருக்களுக்குள் செய்தி பரவியிருந்தது. ஈரக்கையுடன் ஹோல்டரில் பல்பை செருகும்போது மவ்த்தாகிப்போன இஸ்மாயீல் காக்காவின் கறிக்கடையும் வசிய வீட்டிற்கு வடமேற்குத் திசைதான்.
“ நட்ட நடு ராத்திரில பறக்குற கொமரி மட்டய்கள் என்ன செய்வாளுவோ தெரியுமா. . ?” விரியும் தன் கண்களை கதை முடியும் வரைக்கும் சுருக்காமலேயே அந்த ஜின்கள் ஒவ்வொரு நாளும் செய்து முடிக்கும் வேலைகளை றாத்தா வரிசைப்படுத்துவாள். பிடிக்காதவர்களின் வீட்டு நடு முற்றத்தில் மலங்கழிப்பது, நள்ளிரவில் குழந்தையின் குரலில் வீறிடுவது, புதிய புடவைகளில் பொத்தல் போடுவது…. இப்பட்டியலில் ஒரு நாள் வரும் சேட்டைகள் அடுத்த நாள் இடம் பெறுவதில்லை. ஒவ்வொரு நாளும் வண்ணமும் வகையுமான புதிய புதிய சேட்டைகள்.
இரவில் கேட்டவைகள் மறுநாள் பகலில் பள்ளிக்கூட நண்பர்களிடம் ஊறிப் பெருகின. அது மர்மங்களுக்கான அரசவை. எனது அரியணையிலிருந்து இரண்டடி தள்ளியே நண்பர்கள் அமர வேண்டும் என்பது யாரும் சொல்லாமலேயே நடைமுறைக்கு வந்தது. . ஒவ்வொரு நாள் பகலிலும் சுவாரசியங்களுக்கான பசி அவர்களை பிடித்தாட்டியது. பசிய குலைகளுக்காக ஏங்கும் ஆடுகளைப்போல என் ஒவ்வொரு சொல்லையும் அவர்களின் கண்கள் பின் தொடர்ந்தன. செவி மடல்கள் கூர்த்தன. கடலை மிட்டாய், சவ்வு மிட்டாய், எலந்தைப்பழம், சொடக்குத் தக்காளிகளுடன் அவ்வப்போது பளிங்கு போலாக்களும் திறையாகக் கிடைத்து வந்ததன. விளையாட்டுச் சமயங்களில் நடக்கும் சச்சரவுகளையும் என்னிடம் நண்பர்கள் கவனமாகத் தவிர்த்தனர். அடுத்த நாளைக்கான புதிய கையிருப்புகளுக்காக நானும் பகல் முழுக்க இரவை எதிர்பார்க்க வேண்டியிருந்தது.
வீட்டுத்திண்ணையிலுள்ள கரிந்த பல்பைக் கழற்றி புதியதொன்றை காக்கா* மாட்டும்போது மறக்காமல் அவரிடமிருந்து கேட்டு வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டேன்.
பல்பைச் சுற்றியிருந்த துணியை அவிழ்த்து பெஞ்சில் எடுத்து வைத்த பிறகு அன்றைய அவையின் செயல்பாடு தொடங்கியது. ஆணியடித்து கயிறு சுற்றியிருந்த புதிய பம்பரமொன்றை பக்கத்து பெஞ்சு அன்சாரி என்னிடம் நீட்டியவன் மறு கையை உருண்டை வடிவில் பிடித்துக் காட்டினான். பல்பை கையில் வாங்கியவனின் தோள்பட்டைகளிரண்டும் வெடுக்கென தாழ்ந்தன. அதைக் கீழே போடப்பார்த்தவன் சுதாரித்தவனாக ‘’சரியான கனம் ‘’ என பதட்டமும் புன்னகையும் கலந்து முனகினான்.
இருவரைத் தவிர மற்றெல்லோரும் ஏழாம் வகுப்புக்குத் தேறினோம். எங்களது கோடை விடுமுறைகளையும் அதல்லாத மற்ற நாட்களின் மாலைகளையும் இரவுகளையும் நிரப்பியவர்களின் பட்டியலில் பயில்வானப்பா, காக்கப்பா, போல்முட்டாய், புளிடோங்கா, மம்மிப்பேய், அஞ்சீசா……. மழைக்கும் வெய்யிலுக்கும் யாராவது எங்கிருந்தாவது வந்து போயினர்.
அபின் கஞ்சா என்ற பட்டப்பெயரும் உமர் என்ற உண்மைப் பெயருங் கொண்ட நெட்டையான கறுத்த மனிதர் அப்போதுதான் ஊருக்கு வந்து சேர்ந்திருந்தார். அவரைப்பற்றிய செய்தி பரவி கிழக்குத் தெருக்களிலிருந்தும் பைபாஸ் சாலையிலிருந்தும் பையன்கள் பார்க்க வந்தனர்.
உமர் திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரையில் பிறந்தவர்.காட்டு மொகுதூம் பள்ளிக்கு பரிகார சில்லா வந்த இடத்தில் இங்கேயே கடைசி வரைக்கும் தங்கி விட்டார். அவருக்கு நீண்ட முடியிருந்தது.அதை முடிந்து தலைப்பாகைக் கட்டியிருப்பார். அதை அவர் அவிழ்க்கும் சமயம் நீண்ட கைகளைப்போல தலை முடிக் கற்றை அவிழ்ந்து விழும். அதற்குள் குட்டிக் காகிதப் மடிப்புகளைத் தொங்க விட்டிருந்ததாக பள்ளிக் கிணற்றில் குளிக்க வந்த சிறுவர்கள் செய்தியைக் கிளப்பி விட ‘அபின் கஞ்சா’ என்பதே பெயராகியது. தெருக்களில் யாராவது ‘உமர்’என ஒன்றுக்கும் மேல் தடவைகள் விளித்தால் மட்டுமே அவரும் திரும்பிப்பார்த்தார்.
பள்ளிவாயில் குறட்டில் எரியும் பல்பின் வெளிச்சம் சிறுக்கும் பகுதியில்தான் அபின் கஞ்சாவின் தங்கல். “அஃபீன் கஞ்சாஆஆ…. . சேம்பாரியின் முக்கால் தெரு கடக்கும் விளியைத் தொடர்ந்து கும்பலிலுள்ளவனின் தலையையோ முகத்தையோ பதம் பார்த்த பிறகே கல் புறப்பட்டது தெரிய வர தினமும் அவ்வழியாக வரும் பெரியவர்கள் துணையுடன் ஒற்றை பல்பு கல் குறட்டைத் தாண்ட வேண்டியிருந்தது.
“வசியக்காரியளுக்கு மலயாளம் தெரியுமா?” றாத்தாவிடம் கேட்டதற்கு “மலயாளம் மட்டுமில்லே அவளுவலுக்கு நம்ம நாட்டுல உள்ள எல்லா பாசயும் தெரியும். ”
தேசிய மாணவர் படையில் மலையாளம், ஹிந்திக்கார அலுவலர்கள் வருவதாகவும் அதில் சேர்ந்தால் இராணுவத்தில் சேர்வது எளிது. அப்படி சேரக் கிடைத்தால் நாட்டிலுள்ள எல்லா இடங்களிலும் போய் வேலை செய்ய வேண்டி வரும். அப்படியே புதிய மொழிகளையும் படிக்கலாம் என ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் எங்கள் தெரு மம்மா லெப்பை சொன்னான்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடமும் திறந்தது. எட்டாம் வகுப்பில் கணக்கு வகுப்பு எடுக்கும் பட்டப்பா நாராயணன் சார்தான் தேசிய மாணவர் படையின் ஏஎன்ஓ.
விக்கிரமசிங்கபுரத்தில் நடக்கவிருக்கும் பதினைந்து நாட்கள் தேசிய மாணவர் படை பயிற்சித் தங்கலுக்கு பெயர் கேட்டார்கள். நான் பிறந்ததிலிருந்து அதுதான் முதன் முதலான தொலைவுப் பயணம். பாசறையினருகில் குளமிருந்த காரணத்தினால் பொறுப்புத் துறப்பு படிவத்தில் பெற்றோர் கையெழுத்துக் கேட்டிருந்தனர். “இருவத்தொன்னு குண்டுலோ சுடுவானுவோ” வாப்பாவின்* தயக்கத்தை உம்மா* சமன் செய்தாள். இருந்தாலும் நான் புறப்படும் வரைக்கும் வாப்பாவின் முக வாட்டம் மாறவில்லை.
இராப்பயணத்தில் வடமலைசமுத்திரம் கிராமத்திற்கு திசைகாட்டி உதவியுடன் பெயர் தெரியா பூச்சிகளின் ஓசைகளுக்கு இடையே கூட்டிச் சென்றார் ஹிந்திக்கார ஹவில்தார். அவரின் நடை வேகத்திற்கு அணியினர் யாராலும் ஈடுகட்ட இயலவில்லை. இடுப்பு மட்டும் அந்தரத்தில் மிதக்கும் ஒட்டக நடை. அழகிய மணவாளப்பெருமாள் கோயிலருகிலுள்ள கொட்டகையில் உட்கார வைத்து தேநீரும் பிஸ்கட்டும் தந்தனர்.
அங்குள்ள சுவற்றில் எரிந்துக் கொண்டிருந்த குண்டு பல்பு மென் காற்றில் அங்குமிங்கும் உருண்டது. வைக்கோல் போர் பொன் மழைச்சரமாகி இன்னும் மஞ்சளாகியிருந்தது. பாசறை முடிந்து வீடு திரும்பிய அடுத்த நாள் இரவிலிருந்து வடமலைசமுத்திரத்தை தஞ்சாவூரின் கிராமமேதான் என மனம் அச்சாக நினைக்கத் தொடங்கியிருந்தது.
உடல் முழுக்க பல்புகளாலான இருவர் என் முகத்திற்கு மிக நெருக்கமாக வந்து உற்றுப்பார்க்கின்றனர். திருநெல்வேலி சர்க்கஸில் பார்த்த அதே அளவுள்ள தலை பெருத்து வால் நீண்ட பல்புகள். கண் துளைகளின் வழியே அவ்வெளிச்சம் ஏறியதில் மூளையும் தகித்து மஞ்சள் நிறமாகி விட்டிருந்ததை தெளிவாகப் பார்க்க முடிகிறது. வேகமாகப் பின் வாங்கியதில் குட்டை மதிலொன்றில் தட்டி வீழ்ந்தேன். பல்புகள் ஆணிக்கூர் நகங்களாகி என் ஹல்கை* குறி வைத்து நீண்டன. விரல் நுனிகளில் மஞ்சள் வெளிச்சம் ஆவித்திவலைகளுடன் சொட்டியது. “ …. என்ட றப்பே லாயிலாஹ இல்லல்லாஹு இல்லல்லாஹு இல்லல்லாஹு அல்லா அல்லா ஹூ ஹூ ஹூ…. மூச்சிரைத்தது. இடக்கையில் கடும் வலி. சுட்டுருக்கும் வெப்பத்தில் முகம் பொசுங்கப்போகிறது. ‘ஆஆஆ… உம்மா…. ’ கத்தலும் தொண்டையிலிருந்து வாய்க்கு வந்து சேரவேயில்லை. விக்கலொலி என் செவிக்குள்ளேயே மடங்கி விழுகிறது வலப்பக்கமும் இடப்பக்கமும் அசைந்தும் முடியவில்லை. முழங்கையை ஊன்றி எழப்பார்த்தேன். கழுத்துக்கு கீழே உடல் எழும்பவில்லை. முக்கினேன். மார்பின் படபடப்பில் எல்லாப்பக்கமும் வியர்வை பெருகியது. திடீரென பெய்தது மழை. வெந்நீர் மழை. கால் இடுக்குகளில் இளஞ்சூடு. ”வெடிச்சிரும் பல்புத்தலய்லாம் # * % & …. . ”
“மாடு நெளியுற மாதிரி நெளியிறியே. பண்டி பண்டி. வயசாக்காணாது…” தொடையில் முழு வீச்சில் கம்பு இறங்கியது. கூடவே தலையணையில் ஒரு எத்தும்.
“ஏந்தலய்ல பேஞ்சுட்டான்” தங்கையின் கூப்பாட்டில் தூக்கம் கலைந்த ஆவேசத்துடன் வாப்பா ஸ்கேலோடு ஓடி வந்திருக்கிறார். றாத்தாவைத் திட்டிய உம்மா எனக்கு தண்ணீர் ஓதித் தந்ததோடு அரை ஞாண் கயிற்றில் துஆக்கூட்டையும் கோர்த்து விட்டாள். காக்காமார்களை வற்புறுத்தி பரணையும் ஸ்டோர் ரூமையும் தவிர மற்ற எல்லா இடங்களிலுமுள்ள பல்புகளைக் கழற்றி குழல் விளக்குகளை மாட்ட வைத்தாள்.
அது வெறும் கனவே இல்லை. இவ்வளவு உக்கிரமாக சூடும் புகையுமாக… முகம் சுட்டது நெஞ்சு வியர்த்தது தொடை நனைந்தது……ஒன்றுமே பொய்யில்லை. கனவு உருவத்தில் வந்த நனவுதான். இவ்வளவும் உள்ளடங்கிய ஒன்றை கனவென்று மட்டும் எப்படி ஒதுக்குவது?இதை யாரிடமாவது சொன்னால்தானே பகடி. அதையே எழுத்தில் கொண்டு வந்தால் காவியமாக உலகம் கொண்டாடத்தான் செய்யும்… இன்றில்லாவிட்டால் நாளை கட்டாயம்…
கனவு கரைவதற்குள் டைரியில் எழுதி வைத்துக் கொண்டால் நல்லதுதான். பின்னர் எப்பவாவது ஒரு திகில் கதை எழுதுவதற்கான முன் குறிப்புக்கு உதவும். இதை எழுதி முடித்த பிறகு அதனடியில் இப்படி ஒரு பின் குறிப்பையும் எழுதினேன்: பல்பின் நிறம் ஓமப்பொடி முறுக்கில் அப்படியே இறங்கியது எப்படி? வடமலை சமுத்திரம் தஞ்சாவூராகின மாதிரிதான் இதுவும்…… இதை எதற்கு எழுதினேன். காரணம் சொல்லத் தெரியவில்லை. அடிக்கப்போனேன். வேண்டாம். எழுதியாகி விட்டது.
*
நின்ற நிலையில் மார்பு, இடுப்பு பகுதிகள். கவிழ்ந்த நிலையில் மார்பிலுமாக துப்பாக்கியைப் பொருத்திச் சுடுவது பற்றிய ஜேசிஓ ரமேஷ் நாயரின் விளக்க வகுப்புக்குப் பிறகு இடது கண்ணில் தொங்க விடுவதற்காக வட்டத்திரை ஒன்றை தைத்துக் கொண்டேன். மொட்டை மெத்தை வெய்யிலில் காக்கை, குருவி, அணில்கள், சில வேளை கள்ளப்பருந்துகளும் கிரிக்கெட் மட்டையின் குறியெல்லைக்குள் வந்தன. பழகுவதற்காக சுடுவதில் பாவமில்லை. ஒவ்வொன்றாகச்சுட்டேன்.
ஒற்றை பல்பு எரியும் கல் குறட்டைக் கடக்க வேண்டி வரும் போது கிரிக்கெட் மட்டையும் உடன் வந்தது. அபின் கஞ்சா ஏறிட்டுப் பார்த்தார். மனம் களிப்பில் கூவியது. மட்டைக் கனத்ததால் அதே நீளத்தில் பருங்குச்சியை வைத்துக் கொண்டேன். கையை விறைப்பாக்கி நடந்து பழகிய பிறகு குச்சியும் இல்லை.
குளிர் என்றில்லை மழையென்றில்லை… எல்லா பருவக்காலங்களிலும் பள்ளிவாயில் தலாக்கிணற்றில் விடிகாலை நான்கு மணிக்கே அபின் கஞ்சாவால் எப்படி குளிக்க முடிகிறது. ? வாப்பா கண்ணைப் பொத்திக் கொண்டு பைத்தை* முணுமுணுத்துக் கொண்டிருந்த சமயம் பார்த்து மெல்லக் கேட்டேன்.
எனது கேள்விக்குள்ளிருப்பதைப் புரிந்துக் கொண்டவராக “இதுல ஜின் பேய்லாம் ஓன்னுமில்லடா. பெரிய வித்த ஒன்னுமில்ல. அபின் கஞ்சாவும் மனுசந்தான். இதுலாம் ஒரு பழக்கம்தான். ” என் பக்கம் திரும்பி “நீ பத்து நாளய்க்கி ஒரு தடவ குளிக்கிறதுனால இதுலாம் பெரிசா தெரியுது. ஏங்கிட்டயும் ஒரு குளியல் கத இக்கிது. கேளூ…”
இரண்டாம் உலகப்போர் காலத்தில் கொழும்பில் நிலவிய நீர்த்தட்டுப்பாட்டினாலும் சென்னை அங்கப்பன் தெருவிலிருந்த எங்கள் கட்டிடத்தில் வாடகைக்குத் தங்கியிருந்த கேரளியர்களின் பழக்கவழக்கங்களிலிருந்தும் தனக்கும் இளம் பருவத்திலேயே நேரத்தோடு குளிக்கும் வழமை தொற்றிக் கொண்டதாக சொன்ன வாப்பா தனது கொல்கத்தா குளியல் நடப்பை விவரித்தார்.
கூதல் காலத்தில் வணிக நிமித்தம் அங்கு சென்றவர் பதினைந்து பாகைக் குளிரில் அதுவும் தஹஜ்ஜுத்* நேரத்தில் குளித்திருக்கிறார். ”அரே கோன்ரே பாகல்… மர்ஜாயேகாத் தூ…”* வீட்டு உரிமையாளரின் கூப்பாடு கிளம்பிய சமயம் அவர் தலை துவட்டி முடித்திருந்தார்.
சாஹிப் தைக்கா கந்தூரி மாதம். ஆழ்வை உஸ்மானின் பாட்டுக் கச்சேரிக்கு போட்டிருந்த இருநூறு வாட்ஸ் பல்பை ஹேப்பி சவுண்ட் சர்வீஸ்காரர் அணைக்கும்போதுதான் அது கண்ணில் பட்டது. குழல் விளக்கைப்போல பல்பின் இழைகளிலிருந்து ஒளி வெட்டென மறைந்து விடவில்லை. நிதானம். மின்னி அணையும் ஆன்மாவின் கடைசிச் சுடரைப்போல… நிதானிப்பதற்குள் உயரங்களில் கொழுவிக்கொள்ளும் எழுஞாயிறின் செம்மைத் தீற்றல் போல எங்கோ போய் புகுந்துக் கொள்ளும் ஒரு கணத்தின் சுணக்கம்.
“இப்ப இதுலயிருந்த வெளிச்சம் எங்க போச்சு காக்கா?” சவுண்ட் சர்வீஸ்காரரிடம் கேட்டேன். கச்சேரியின் பெருத்த ஓசை இலயத்தில் தலையை ஆட்டிக் கொண்டிருந்த அவர் என் உதட்டசைவைக் கண்டு இன்னும் பெரிதாக தலையை ஆட்டத் தொடங்கினார். வேறு வழியில்லை. தீன் காக்காவிடம் போக வேண்டியதுதான். அவர்தான் இது மாதிரி விசயங்களுக்கு சரி.
வளைகுடாப்போரில் அமெரிக்கர்கள் பக்தாதில் போட்ட குண்டுகள் இறை நேசர் முஹ்யித்தீன் அப்துல்காதிரின் தர்காவின் மேல் விழாதக் காரணத்தை தீன் காக்கா இப்படித்தான் சொல்லியிருந்தார்: “ கேட்டியா! மொய்தீன் ஆண்டவங்க தன்ட வலது சுண்டு வெரல ஒசத்தி மிஸய்லய்லாம் ஒரு சுண்டு சுண்டிதான் உட்டாங்க பாத்துக்கோ” தீன் காக்காவின் கைப் பட்டு கொளுக்கியில் கிடந்த தூக்குக் கவிழ்ந்தது அதிலுள்ள புத்துருக்கு நெய் அவர் தலையிலும் உடையிலும் சிந்திய பிறகுதான் தன்னிலை மீண்டார்.
அணையும் பல்பின் வெளிச்சம் போகுமிடம் குறித்து அவருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. வீட்டுத் திண்ணையில் முதுகைக் காட்டியபடி புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவரிடம் நடப்பைச் சொன்னேன். கருத்தில்லாமல் என் முகத்தைப் பார்த்தவர் ரொம்ப நேரத்திற்கு ஒன்றுமே சொல்லவில்லை. அவர் மகனிடம் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன்.
அறிவியல் வகுப்பெடுக்கும் லூர்து சங்கீதராஜ் சாரிடம் போய்க்கேட்கலாம்தான். ”உறிஞ்சுக்கொழலத்தான் வரயச்சொன்னேன் ஆட்டுப்புடுக்க இல்ல”. சார் வீசியெறிந்த தாள் தரையைத் தொடுவதற்குள் ”ஒம்ம மொகத்தயுந்தான் படமா வரய யாராலயும் முடியாது. ”. சேக்கனா ஓட சார் துரத்த. . அது இன்றைக்கு நடந்தது போலிருக்கிறது.
அரசு கிளை நூலகத்திற்குப் போய் கல்கண்டு, குங்குமம், முத்தாரம் போன்றபருவ இதழ்களில் வரும் அறிவியல் செய்திகளையும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய துணுக்குகளையும் விடாப்பிடியாக வாசித்து வந்தேன். ஒரு துப்புமில்லை. ஆங்கில அகர முதலிகளிலும் தேடிப்பார்த்தேன்.
புதியதாக வரத் தொடங்கியிருந்த சிற்றிதழொன்றில் பல்பு உள்ளிட்ட நுகர்வு பொருட்களின் உருவாக்கத்தின் பின்னால் தொழிற்படும் அரசியல் பற்றி விரிவாக எழுதியிருந்தனர். ஆட்களிருந்ததால் இதழை இடுப்புக்குள் பத்திரப்படுத்த முடியவில்லை. அங்கேயே அமர்ந்து வாசித்தேன்.
முதலில் உருவாக்கிய பல்பு கிட்டத்தட்ட நூறாண்டுகள் வரை எரிந்ததினால் ஒன்று ஒன்றரை ஆண்டுகள் ஆயுளைக் கொண்ட பல்புகளை உருவாக்கத் தொடங்கினார்களாம். இந்த சூக்குமத்தைக் கண்டுபிடித்த பிறகுதான் முதலாளிகளுக்கு விழிப்புத் தட்டியிருக்கிறது. தாங்கள் உருவாக்கும் பொருட்களின் ஆயுளை முடிந்தளவுக் குறைத்தார்கள். அது மாதிரியான தொழில் நுட்பங்களையும் பரவலாக்கினார்கள். அதிலொன்றுதான் காங்கிரீட். நூறாண்டுகளைத் தாண்டும் கட்டிடங்களின் இடத்தில் முப்பதாண்டுகளைக்கூடத் தாண்டாத காங்கிரீட் கட்டிட முறை. செங்கல் அடித்தளங்களுக்கு மாற்றாக காங்கிரீட் தூண்கள். பழைய பாணியை மக்கள் ஒதுக்கத்தொடங்கினர். இது மாதிரி உத்திகளை ஃபிரீ மேஷன் கமுக்க அமைப்பின் மூலம் உலகம் முழுக்க செயல்படுத்துகிறார்கள் என அக்கட்டுரை முடிந்திருந்தது.
எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏமாந்தாலும் கட்டுரை தந்த பெயர்களுக்கும் சுவையான தகவல்களுக்கும் பின்னால் கொஞ்ச காலம் நடந்தேன். அதில் கிடைத்தவைகளின் பரபரப்பில் நண்பர்களை கொஞ்ச நாளைக்கு கிறங்க வைக்க முடிந்தது.
டங்ஸ்டன் இழைக்குள் மின்சாரம் பாய்வது எல்லாம் சரிதான். இந்த இரண்டுமில்லாமல் வெளிச்சமில்லையென்றால்?. . . . . மற்ற வெளிச்சங்கள் எப்படி?. வெளிச்சம் எனத் தனியாக ஒன்றில்லையா? தனியாக அப்படி இருக்கத்தானே வேண்டும்?. அப்படி தனியாக இருக்குமென்றால் பல்புக்குள்ளிருக்கும் வெளிச்சம் எங்குதான் போய் தொலைகிறது?. . . . . . சுவிட்சைப்போட்டால் உடனே வரவும் செய்கிறதே… அப்போ அது புறப்படுமிடம்? போகுமிடம் தெரிந்தால் புறப்படுமிடமும் தெரிந்து விடும்தானே? விஷயம் எளிதுதான். 1+1 = 2 2-1 = 1 1-1 = 0. எப்படி கணக்குப் போட்டாலும் வேறு வேறு இலக்கங்கள். எண்கள் வெளிச்சங்கள் வகுத்தல் கழித்தல் கூட்டல் கழித்தல் ச்சை…. ராஜ பைத்தியம் நம்பர் ஒன் கிறுக்கு……பல்புக்கும் வெளிச்சத்துக்கும் பல்லி மிட்டாயாவது எவனாவது தருவானா…?
தோட்டத்திற்கு போய் கிணற்று நீரை இறைத்து தலைக்கு விட்ட சிலிர்ப்பில் சுழல் மட்டுப்பட்டது.
வெளிநாட்டில் வருடகாலங்கள் இருந்து விட்டு ஊர் திரும்பிய றாத்தாவை பார்க்கப் போயிருந்தேன். தின்பண்டப் பொட்டலங்களை நீட்டியவாறே “தொழில் எப்பிடிப் போவுது?”விசாரித்தாள்.
“வந்த இடத்திற்கே ஒளி திரும்பி விட்டது என்கிறார் ரூமி. ”
“ஜின் வாசலாத்து வீட்டு மஞ்ச பல்புட வெளிச்சத்தயும் சேர்த்துதான் ரூமி சொல்றாரு. ” மூக்கிலிருந்து சளி முகத்தில் தெறித்தது கூடத் தெரியாமல் சிரித்து உருண்டாள்.
“அந்த பேய்கள இன்னுமாடா மறக்கல. ”
*
சொல் முதலி
றாத்தா =அக்கா வாசலாத்து= வசியம் காக்கா =அண்ணன் சில்லா = நோய் நீக்கம், தியானம் போன்றவற்றிற்காக நினைவிடங்கலில் நாற்பது நாள் தங்கல் வாப்பா=தந்தை உம்மா=தாய் ஹல்க்=குரல்வளை தஹஜ்ஜுத்= இரவின் மூன்றாம் பகுதி அரே கோன்ரே பாகல்… மர்ஜாயேகாத் தூ = எந்த பைத்தியம்ட அது? நீ செத்து விடுவாய். பைத் =பாடல்
***
சாளை பஷீர் – காயல்பட்டினத்தில் பிறந்தவர். எழுத்து, சூழலியல், இயற்கை வாழ்வியல், திரைப்படம்/புத்தகத் திறனாய்வு என்ற செயல்பாடுகளுடன் ரிஹ்லா மரபு வழி பயண முகமை, UNTOLD – HISTORY COLLECTIVE முதலான தளங்களின் வழியாக பல வகைமையிலான பயணங்களையும், தொன்மம்/வட்டார வரலாறு திரட்டப்படல் போன்றவற்றையும் முன்னெடுத்து வருகிறார். சீர்மையின் பதிப்பாசிரியர் குழுவில் இருக்கிறார். கசபத்(குறு நாவல்), பித்தளைத்துட்டு(கதைத் தொகுப்பு),தோந்நிய யாத்ரா,என் வானம் என் சிறகு (பயண நூற்கள்) உள்ளிட்ட நூற்களின் ஆசிரியர். மின்னஞ்சல் : shalai_basheer@yahoo.com
காஷ்மீரி மொழி கவிதைக்கு மிகவும் உகந்த ‘இசைமை’ கொண்டது. காஷ்மீரி சிறுகதை என்பது கவிதை என்ற ஆழமான வேரிலிருந்து முளைத்த ஒரு செடியாகும். கவிதை வழங்கிய தத்துவம், ஏக்கம், மனிதாபிமானம் ஆகியவையே நவீன காஷ்மீரிய சிறுகதைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
காஷ்மீரி இலக்கியத்தின் வேர்கள் மிகவும் பழமையானவை. ஆழமானவை. தஸ்தான்கள் (Dastans), லால் தெத்தின் தத்துவார்த்த ‘வாக்குகள்’ (Vakhs) மற்றும் ஹப்பா காத்தூனின் உணர்ச்சிகரமான ‘வட்சுன்’ (Vatsun) போன்ற வாய்மொழி மரபுகளே காஷ்மீரி கதையாடலின் அடித்தளமாக அமைந்தன. இருப்பினும், நவீன சிறுகதை என்ற வடிவம் காஷ்மீரில் இருபதாம் நூற்றாண்டின் பாதியில்தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. காஷ்மீரி சிறுகதை, ஒரு சிறிய புவியியல் பரப்பிற்குள் முடங்கிவிடாமல், மனித ஆன்மாவின் உலகளாவிய வலிகளையும், நம்பிக்கைகளையும் பேசுகிறது. 1948-ல் தொடங்கிய அந்தப் பயணம், இன்று நவீனத்துவத்தையும், போர்க்கால அதிர்ச்சிகளையும் கடந்து, நினைவுகளின் வழியாக நல்லிணக்கத்தைத் தேடி நகர்கிறது.
காஷ்மீர் என்பது வெறும் செய்தித்தாள்களில் வரும் மோதல் செய்திகள் மட்டுமல்ல; அது “கதை சொல்லும் ஒரு தொட்டில்” என்பதை இந்த இலக்கிய வரலாறு நிரூபிக்கிறது. போராட்டங்களுக்கு நடுவிலும் காஷ்மீரிகள் தங்கள் கதைகளை நுட்பமான உரைநடையில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
காஷ்மீரி சிறுகதைகளின் ஆன்மாவாகத் திகழும் ‘காஷ்மீரியம்’ என்ற பண்பு சூஃபி கவிதை மரபிலிருந்து வந்ததே. அரசியல் பிளவுகளையும் தாண்டி மனிதநேயம் வெளிப்படுவதற்கு இந்தச் சூஃபி கவிதை மரபு வழங்கிய கலாச்சார அடித்தளமே காரணம் எனலாம் .
1948-ல் தீனநாத் நாதிம் எழுதிய ‘ஜவாபி கார்ட்’ காஷ்மீரியின் முதல் நவீன சிறுகதையாகக் கருதப்படுகிறது. இது வெறும் புனைவல்ல; காஷ்மீரின் நவீன இலக்கிய விடியலின் அடையாளம். 1949 முதல் 1952 வரை ‘க்வோங் போஷ்’ (குங்குமப்பூ) இதழ், நாதிம், சோம்நாத் ஜுத்ஷி போன்ற முன்னோடிகளின் படைப்புகளை வெளியிட்டு ஒரு முறையான மேடையை அமைத்துக் கொடுத்தது.
இந்திய சுதந்திரக் காலகட்டத்தை ஒட்டி காஷ்மீரில் ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ பெரும் செல்வாக்கு பெற்றது.ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் தாக்கத்தால் உருவான ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’, வர்க்கப் போராட்டம் மற்றும் சமூக மாற்றத்தை முன்னிறுத்தியது.
நாதிமின் ‘ஜவாபி கார்ட்’ கதையில் வரும் ‘சூன் தெத்’ என்ற முதிய பெண்மணி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது அன்றைய காலக்கட்டத்தின் புரட்சிகர மாற்றத்தைப் பிரதிபலித்தது.
சோம்நாத் ஜுத்ஷியின் ‘யெலி போல் காஷ்’ (ஒளி உதயமானபோது), பழைய பிற்போக்குச் சிந்தனைகள் மறைந்து சோசலிசச் சிந்தனைகள் உருவாவதைச் சித்தரித்தது
இந்தக் காலகட்டத்தின் முக்கியக் கருப்பொருள்களாக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை, முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான குரல் ஆகியவை இருந்தன. அர்ஜுன் தேவ் மஜ்பூர், அஜீஸ் ஹாரூன் மற்றும் நூர் முகமது ஆகியோர் இந்த மரபை முன்னெடுத்துச் சென்றனர்.
முற்போக்கு இயக்கத்தின் அரசியல் பிடியிலிருந்து விடுபட்டு, புனைகதையை ஒரு கலை வடிவமாக மாற்றிய பெருமை அக்தர் மோஹி-உத்-தின் மற்றும் அமின் காமில் ஆகியோரைச் சாரும்.
அக்தர் மோஹி-உத்-தின்: இவரது ‘சத் சங்கர்’ (1955) மற்றும் ‘சோன்சல்’ தொகுப்புகள் காஷ்மீரி சிறுகதைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கின. யதார்த்தமான கதாபாத்திரங்களையும், மனித மனதின் சிக்கல்களையும் இவர் நுட்பமாக கையாண்டார். அமின் காமில்: சமூகத்தின் பாசாங்குத்தனத்தை பகடி (Satire) மூலம் வெளிப்படுத்துவதில் இவர் வல்லவர். இவரது ‘கோக்கர் ஜங்’ (சேவல் சண்டை) கதை இன்றும் மிகவும் புகழ்பெற்றது.
இந்தக் காலகட்டத்தில் உமேஷ் கவுல், குலாம் அஹ்மத் சோபி மற்றும் தீபக் கவுல் போன்ற எழுத்தாளர்கள் சிறுகதையின் வடிவம், உள்ளடக்கத்தில் புதிய சோதனைகளைச் செய்தனர். குறிப்பாக சோபி குலாம் முகமதுவின் நேர்த்தியான உரைநடையும், பன்சி நிர்தோஷின் கதை சொல்லும் முறையும் காஷ்மீரி இலக்கியத்தை செழுமைப்படுத்தின. பாரம்பரிய கதை சொல்லும் முறையைத் தகர்த்து, புதிய நவீனத்துவத்தைப் புகுத்தினார். அவதார் கிருஷ்ணா ரஹ்பர், அலி முகமது லோன் ,சந்தோஷ் ஆகியோர் இக்காலகட்டத்தில் கதாபாத்திர உருவாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்.
1960களுக்குப் பிறகு, காஷ்மீரி சிறுகதை உலகளாவிய தத்துவார்த்தப் போக்குகளை நோக்கி நகர்ந்தது. அதி-உண்மை மற்றும் குறியீட்டு வாதம் கதைகளில் இடம்பெறத் தொடங்கின. பரிசோதனை மற்றும் தத்துவார்த்த நிலைகளின் காலகட்டம். ஹரி கிருஷ்ணா கவுல், ரத்தன் லால் ஷாந்த் மற்றும் ஹ்ரிதே கவுல் பாரதி ஆகியோர் உலகளாவிய தத்துவப் போக்குகளை அறிமுகப்படுத்தினர் யதார்த்தமான பாணியைத் தவிர்த்து, குறியீடுகள் மூலம் குழப்பமான மனநிலையை விவரிக்கின்றனர். இது நேரடியாகச் சொல்ல முடியாத வலிகளைப் பதிவு செய்யும் ஒரு வழியாகும்.
ஹரி கிருஷ்ணா கவுல்: காஷ்மீரி சிறுகதையின் ஒரு மைல்கல். இவரது ‘தாஃப்’ (சூரிய ஒளி) மற்றும் ‘துக்கம் அனுசரிப்பவர்கள்’ போன்ற கதைகள் காஷ்மீரி மக்களின் அன்றாட வாழ்க்கையை நகைச்சுவை மற்றும் முரண் கலந்து விவரிக்கின்றன. ரத்தன் லால் ஷாந்த்: உளவியல் ரீதியான ஆழம் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்குவதில் இவர் சிறந்தவர். ‘த்ரிகோன்ஜால்’ போன்ற இவரது படைப்புகள் முப்பரிமாண சமூகப் படத்தைக் காட்டுகின்றன.
1990களில் காஷ்மீரில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பும், காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றமும் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
நீரஜா மாட்டூவின் “காஷ்மீரின் ஆகச்சிறந்த கதைகள்” (The Greatest Kashmiri Stories Ever Told) தொகுப்பில் உள்ள 25 கதைகளும் ‘காஷ்மீரியம்’ என்ற சொல்லுக்குப் புதிய அர்த்தத்தைத் தருகின்றன. இது வெறும் அரசியல் சொல்லாடல் அல்ல; இது ஒரு வாழ்க்கை முறை. இக்கதைகள் காஷ்மீரை ஒரு நிலப்பரப்பாக மட்டும் காட்டாமல், அதன் தனித்துவமான கலாச்சார அடையாளமான ‘காஷ்மீரியம்’ என்பதன் வழியாக அணுகுகின்றன.
கதைகளில் வரும் ‘காங்கிரி’ (குளிருக்காகப் பயன்படுத்தப்படும் தீச்சட்டி), ‘கண்டுர்’ (ரொட்டி சுடுபவர்), மற்றும் ‘சோச்வூர்’ (ஒரு வகை ரொட்டி) போன்ற குறிப்புகள் வெறும் அலங்காரச் சொற்கள் அல்ல; அவை காஷ்மீரி மக்களின் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் கலந்தவை. ஜீலம் நதி மற்றும் டால் ஏரி சூஃபி ஆலயங்களில் மக்கள் கூடுவது, ஸ்ரீநகரின் சந்துகள் என காஷ்மீரின் நிலவியலும் கலாச்சாரமும் கதைகளில் வெறும் பின்னணியாக இல்லாமல், கதாபாத்திரங்களின் வாழ்வோடும் மகிழ்ச்சியோடும், துக்கத்தோடும் ஒரு அங்கமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
தொகுப்பின் ஆரம்பகாலக் கதைகள் (1940-1950) காஷ்மீரின் நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு எதிரான குரலைப் பதிவு செய்கின்றன.
தீனநாத் நாதிம் மற்றும் சோம்நாத் ஜுத்ஷியின் கதைகளில், ஏழை எளிய மக்களின் எழுச்சி மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை முக்கியமாகப் பேசப்படுகிறது.
தீனநாத் நாதிம் காஷ்மீரியின் முதல் நவீன சிறுகதை “ஜவாபி கார்ட்”. இக்கதை 1947-48 காலகட்டத்தில் காஷ்மீர் மீது நடத்தப்பட்ட பழங்குடியினரின் ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியின் பின்னணியில் எழுதப்பட்டது.
‘சூன் தெத்’ என்ற வயதான பெண்மணி இக்கதையின் மையக்கதாபாத்திரம். போரின் கொடூரங்களுக்கு மத்தியில், தனது கிராமத்தைப் பாதுகாக்க அவர் காட்டும் தைரியமே இக்கதை.
“ஜவாபி கார்ட்” என்பது தகவல்தொடர்புக்கான ஒரு கருவி. போர்க்காலத்தில் ஒரு குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா என்பதை அறியப் பயன்படும் இந்த அஞ்சல் அட்டை, கதையில் உயிர்வாழும் நம்பிக்கையின் குறியீடாக மாறுகிறது.
1940-களிலேயே ஒரு முதிய பெண்ணை வீரத்தின் அடையாளமாகச் சித்தரித்ததன் மூலம், காஷ்மீரி இலக்கியத்தில் பெண்ணியச் சிந்தனைக்கு நாதிம் வித்திட்டார். இது ஒரு சாதாரணக் கதையல்ல, காஷ்மீரிகளின் தற்காப்பு உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு புரட்சிகர ஆவணம் நாதிமின் கதையில் வரும் ‘சூன் தெத்’ என்ற கதாபாத்திரம். ஒரு முதிய பெண்ணாக இருந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது, அக்காலகட்டத்தில் இருந்த புரட்சிகரமான மாற்றத்தைக் காட்டுகிறது.
அமின் காமிலின் ‘சேவல் சண்டை’ கதை, இரண்டு சேவல்களுக்கு இடையே நடக்கும் சண்டை, உண்மையில் மனிதர்களுக்கு இடையே உள்ள அதிகாரப் போட்டி, பொறாமை., மற்றும் சமூகப் பிரிவினையை எள்ளி நகையாடுகிறது. சாதாரண மக்களின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தி பாசாங்குத்தனத்தின் திரைகளை அவர் அகற்றினார். பிடிவாதம் எப்படி ஒரு சிறிய விஷயத்தை பெரிதாக்குகிறது என்பதை காமில் மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளார்.
மனிதர்கள் எப்படித் தங்கள் தோல்விகளை மறைக்க மற்றவர்கள் மீது பழி போடுகிறார்கள் என்பதையும், சிறிய வெற்றிகளில் எப்படித் தங்களை மேலானவர்களாகக் கருதுகிறார்கள் என்பதையும் இக்கதை உளவியல் ரீதியாக அணுகுகிறது.
நாதிமின் கதை வெளிப்புற மோதலையும் (யுத்தம், ஆக்கிரமிப்பு), சமூகத்தின் கூட்டு வீரத்தையும் பேசுகிறது. இது ஒரு லட்சியவாத கதையாகும். காமிலின் கதை உட்புற முரண்பாடுகளையும், மனித இயல்பில் உள்ள பலவீனங்களையும் பேசுகிறது. இது ஒரு யதார்த்தவாத மற்றும் விமர்சனப் பாங்கான கதையாகும்.
ஹரி கிருஷ்ணா கவுலின் ‘துக்கம் அனுசரிப்பவர்கள்’ கதை காஷ்மீரி சமூகத்தின் ஆழமான கலாச்சாரப் புரிதலையும், மனித உறவுகளின் சிக்கலையும் ஒரு மரண வீட்டின் பின்னணியில் விவரிக்கிறது. ஒரு மரண வீட்டில் துக்கம் என்பது எப்படி ஒரு சடங்காக மாறிப்போனது என்பதையும், மக்களின் பாசாங்குத்தனத்தையும் அங்கதச் சுவையுடன் விவரிக்கிறது.
மரண வீட்டின் துயரத்தை விட, அங்கு வருபவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், அவர்களின் உரையாடல்கள், சமூக அந்தஸ்து மற்றும் பாசாங்குத்தனம் ஆகியவற்றையே கவுல் முதன்மைப்படுத்துகிறார்.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நிலவி வரும் பழைய ஸ்ரீநகரின் மொஹல்லா (குடியிருப்பு) வாழ்க்கை முறையை இக்கதை அச்சு அசலாகப் பதிவு செய்கிறது.
இக்கதை ஒரே நேரத்தில் நகைச்சுவையையும் ,அதே சமயம் வாழ்வின் நிலையாமையைப் பற்றிய சோகத்தையும் கடத்துகிறது. ஹரி கிருஷ்ணா கவுலின் ‘கண்ணாடி போன்ற சொல்லாட்சி’ கதாபாத்திரங்களின் அகந்தையைத் தோலுரித்துக் காட்டுகிறது.அவதார் கிருஷ்ணா ரஹ்பர் காஷ்மீரி சிறுகதையில் ‘நுட்பம்’ மற்றும் ‘கதாபாத்திரப் படைப்பு’ ஆகிய இரண்டிலும் புதிய தரநிலைகளை உருவாக்கியவர்.
இவரது கதைகள் பெரும்பாலும் நேர்க்கோட்டுத் தன்மையுடன் இல்லாமல், கதாபாத்திரங்களின் அகநிலை மாற்றங்களுக்கு ஏற்ப நகரும். இவரது புகழ்பெற்ற ‘தோப்ருக்’ என்ற தொகுப்பு இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
ரஹ்பர் மிகவும் பொருத்தமான மற்றும் செறிவான மொழியைப் பயன்படுத்துவதில் வல்லவர். தேவையற்ற விவரிப்புகளைத் தவிர்த்து, சில வரிகளிலேயே ஒரு கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த வாழ்வையும் வாசகரின் கண்முன் நிறுத்திவிடுகிறார்.
சமூக மாற்றங்கள் ஒரு தனிமனிதனின் நம்பிக்கைகளை எப்படி அசைத்துப் பார்க்கின்றன என்பதை ரஹ்பர் ஆராய்கிறார். இவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் கற்பனை உருவங்கள் அல்ல; அவை காஷ்மீரி சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளின் பிரதிபலிப்புகள்.
பன்சி நிர்தோஷ் காஷ்மீரி யதார்த்தவாத கதைசொல்லிகளில் முக்கியமானவர். இவர் மூன்று முக்கியமான தொகுப்புகள்: பால் மாராயோ, ஆதம் ச்ஹு யிதை பத்நாம் மற்றும் கிருதாப்.
நிர்தோஷின் பலமே அவரது சரளமான கதை சொல்லும் முறைதான். வாசகர்களை முதல் வரியிலேயே கதையோடு கட்டிப்போடும் வித்தையை அவர் அறிந்திருந்தார். சிக்கலான சமூகப் பிரச்சினைகளைக் கூட எளிய மனிதர்களின் கதைகள் வழியாக மிக இயல்பாகக் கடத்திவிடுகிறார்.
இவரது கதைகள் காஷ்மீரின் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அன்றாட வாழ்வின் போராட்டங்கள், ஏமாற்றங்கள் மற்றும் சிறு மகிழ்ச்சிகளை அவர் யதார்த்தமான முறையில் பதிவு செய்துள்ளார்.
தனது கதைகள் மூலம் சமூகத்தின் அழுகிப்போன பழைய நம்பிக்கைகளை விமர்சிப்பதில் அவர் தயங்கியதே இல்லை. ‘ஆதம் ச்ஹு யிதை பத்நாம்’ (மனிதன் இப்படித்தான் அவதூறு செய்யப்படுகிறான்) போன்ற தலைப்புகளே அவரது சமூகக் கோபத்தைப் பறைசாற்றுகின்றன
இந்தத் தொகுப்பின் மிகக் கனமான பகுதி 1990-களில் காஷ்மீரி பண்டிட்கள் வெளியேறியதையும், அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளையும் விவரிக்கும் கதைகள் ஆகும். அரசியல் கொந்தளிப்பும் காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றமும் இலக்கியத்தின் போக்கை மாற்றின. வலி, இழப்பு மற்றும் அந்நியமாதல் ஆகியவை பிரதானக் கருப்பொருள்களாயின.
ரூப் கிரிஷண் பட்டின் அழைப்பு கதை 1990-களில் காஷ்மீரை விட்டு வெளியேறிய காஷ்மீரி பண்டிட்களின் வாழ்வைச் சொல்லும் மிக முக்கியமான கதை., சொந்த மண்ணை விட்டு வெளியேறி டெல்லியின் வெப்பத்தில் வாழும் ஒரு பெண்ணின் மனதை உலுக்குகிறது. அவர் தனது கடந்த காலத்தை ‘பிரமை’களின் வழியாகத் தேடுவது, ஒரு சமூகம் தனது வேர்களை இழந்த துயரத்தைப் பிரதிபலிக்கிறது.
வெளியேறியவர்கள் அங்கேயே தங்கியிருக்கும் தங்களின் முஸ்லிம் அண்டை வீட்டாரை ஏக்கம் கலந்த அன்புடன் நினைவுகூர்வது, அரசியல் பிரிவினையும் தாண்டிக் கலாச்சார ரீதியாக அவர்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதை உணர்த்துகிறது.
இக்கதையின் நாயகி ‘தெத்’-ஒரு வயதான காஷ்மீரி பண்டிட் பெண். அவர் டெல்லியின் கடும் வெப்பத்தில் ஒரு சிறிய அறையில் வசிக்கிறார். பனி படர்ந்த காஷ்மீர் மலைகளிலிருந்து வந்த அவருக்கு, டெல்லியின் சூழல் அந்நியமாகவும் நரகமாகவும் தோன்றுகிறது.
அவர் தனது கடந்த கால நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிறார். காஷ்மீரில் அவர் பழகிய முஸ்லிம் அண்டை வீட்டார் (ஹஜிரா, நாத், சாமத்) அவரது நினைவுகளில் நிழலாடுகிறார்கள். இறுதியில், காஷ்மீரிலிருந்து அவருக்கு ஒரு ‘அழைப்பு’ வருவதாக அவர் உணர்கிறார். அந்த அழைப்பு அவரைத் தனது தாய் மண்ணிற்குத் திரும்பி வரச் சொல்கிறது. அந்த ஏக்கத்தின் பிடியில், அவர் தனது உடலை அந்த அறையிலேயே விட்டுவிட்டு, ஆத்மார்த்தமாகத் தனது நிலத்திற்குத் திரும்பிச் செல்கிறார். தனது சொந்த மண்ணின் நினைவுகளால் சிதைந்து, இறுதியில் மரணத்தின் வழியே தனது நிலத்தை அடைவதை உருக்கமாகச் சித்தரிக்கிறது. தனது சொந்த மண்ணின் குளிர்ச்சியைத் தேடி ஏங்குவது மனதை உலுக்குவதாக அமைகிறது
புலம்பெயர்ந்தவர்கள் அனுபவிக்கும் ‘வேரற்ற உணர்வை’ இக்கதை மிக வலிமையாகப் பதிவு செய்கிறது. காஷ்மீர் நிலத்தின் மீதான ஏக்கம் என்பதை விட, அங்கு வாழ்ந்த ‘வாழ்க்கையின்’ மீதான ஏக்கமே இக்கதையின் ஆன்மா.
குல்ஷன் மஜீத்தின் தண்ணீரில் நீந்தும் பாசி காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான உறவுச் சிதைவை ஒரு தத்துவார்த்த மற்றும் உணர்ச்சிகரமான கோணத்தில் அணுகுகிறது.இக்கதையின் மிகப்பெரிய பலம் இது எந்த ஒரு தரப்பையும் நியாயப்படுத்தவோ அல்லது குற்றம் சாட்டவோ முயலவில்லை. மாறாக, காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையால் பண்டிட்கள் தங்கள் நிலத்தை இழந்தனர், அங்கேயே தங்கிய முஸ்லிம்கள் தங்கள் நிம்மதியை இழந்தனர் என்பதைச் சமமாகப் பதிவு செய்கிறது.
தண்ணீரில் வேர் பிடிக்காமல் மிதக்கும் ‘பாசி’ என்பது காஷ்மீரி மக்களின் தற்போதைய நிலைக்கு ஒரு குறியீடு. சொந்த மண்ணிலேயே வேரற்றுப் போன அல்லது அடையாளத்தை இழந்து தவிக்கும் மக்களின் நிலையை இது குறிக்கிறது.இக்கதை இரு தரப்பினரையும் ‘தோற்றவர்களாக’ முன்வைக்கிறது. ஒரு காலத்தில் பின்னிப் பிணைந்து வாழ்ந்த சமூகம், இன்று சந்தேகத்தாலும் வன்முறையாலும் எப்படிப் பிரிந்து கிடக்கிறது என்பதை இது வலியுடன் விவரிக்கிறது.
அரசியல் சூழல் இரு தரப்பையும் பிரித்தாலும், ஒருவருக்கொருவர் காட்டும் மறைமுகமான இரக்கம் மற்றும் பழைய நினைவுகள் இன்னும் அந்த மண்ணில் மனிதநேயம் முழுமையாகச் சாகவில்லை என்பதைக் காட்டுகிறது.
மஜ்ரூஹ் ரஷீத்தின் திகைப்பூட்டும் காரிருளின் அணைப்பில் கதை காஷ்மீரின் மோதல் காலங்களில் நிலவிய சொல்லொணா அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஒரு திகில் அனுபவத்தைப் போலச் சித்தரிக்கிறது. ஒரு மனிதன் காட்டில் தொலைந்து போவதும், அங்கிருக்கும் பயங்கரமான இருளில் அவன் சிக்கிக் கொள்வதும் கதையின் கரு. இந்த இருள் என்பது வெறும் இரவு அல்ல; அது காஷ்மீர் பள்ளத்தாக்கை மூடியுள்ள வன்முறை மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் குறியீடு.
மஜ்ரூஹ் ரஷீத்தின் எழுத்து நடை வாசகர்களை ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கும். “ரத்தம் உறைய வைக்கும் சத்தங்கள்” மற்றும் “பயங்கரமான கருப்பு இரவு” போன்ற வர்ணனைகள், காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு இரவும் அனுபவிக்கும் பாதுகாப்பின்மையைப் பிரதிபலிக்கின்றன. இருள் எப்போது முடியும், விடியல் எப்போது வரும் என்று கதையின் நாயகன் காத்திருக்கிறான். ஆனால், விடியலுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இது பல தசாப்தங்களாகத் தொடரும் காஷ்மீர் பிரச்சினையின் முடிவில்லாத் தன்மையைக் காட்டுகிறது. இக்கதை வெளிப்படையான போரை விட, ஒரு தனிமனிதனின் மனதிற்குள் நிலவும் பயத்தையும், உதவியற்ற நிலையையும் மிக நுட்பமாக ஆராய்கிறது.
இந்த இரண்டு கதைகளும் காஷ்மீரிய இலக்கியத்தின் ‘அதிர்ச்சிகரமான தசாப்தங்களை’ மிகச் சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஒன்று ‘இழந்த உறவுகளை’ நினைத்து அழுகிறது, மற்றொன்று ‘வாழும் பயத்தை’ எண்ணி நடுங்குகிறது.
விளையாட்டாக உருவான ஒரு சிறிய மோதல் அல்லது பொறி, எதிர்பாராத விதமாக ஒரு பெரிய மதக்கலவரமாக உருவெடுப்பதை நசீர் ஜஹாங்கீரின் “குற்றவாளிப் பையன்” கதை காட்டுகிறது. உண்மையில் தவறு செய்யாத ஒரு சிறுவன், சமூகத்தில் நிலவும் மதப் பதற்றத்தாலும் மற்றவர்கள் உருவாக்கிய சூழலாலும் “குற்றவாளி” என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறான். கலவரத்தின் தீவிரத்தை அறியாத சிறுவர்களின் உலகம், பெரியவர்கள் வளர்த்த மதவெறியால் எப்படிச் சிதைக்கப்படுகிறது என்பதை ஆசிரியர் விவரிக்கிறார். ஒரு தனிமனிதன் குற்றவாளியாவதற்கு அவன் குணம் காரணமல்ல, அவனைச் சுற்றியுள்ள மனிதர்களும் அவர்கள் உருவாக்கும் வன்முறைச் சூழலுமே காரணம் என்பதை இக்கதை உரக்கச் சொல்கிறது.
ஏ.ஜி. ராதர்: எதிரி என்ற கதை அரசியல் காரணங்களுக்காக வரையப்பட்ட எல்லைக் கோடு, ஒரே ரத்தமும் சதையுமான உறவுகளையும், நண்பர்களையும் எப்படி இரு வேறு துருவங்களாகப் பிரிக்கிறது என்பதை உணர்த்துகிறது. கம்பி வேலிகளால் நிலத்தைப் பிரிக்க முடிந்தாலும், மனிதர்களின் பாசத்தையும் நினைவுகளையும் பிரிக்க முடியாது என்பதை கதை சொல்ல முயல்கிறது. எல்லையோரம் வாழும் மக்களின் அன்றாட அச்சம், அவர்கள் சந்திக்கும் உயிரிழப்புகள் மற்றும் ஒரு சிறிய தவறான புரிதல் எப்படிப் பெரிய வன்முறைக்கு இட்டுச் செல்கிறது என்பதை ஆசிரியர் வலியுடன் பதிவு செய்துள்ளார்..
குலாம் நபியின் “தணியாத தாகம்” கதை வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் ஆன்மீகப் பயணம். இங்கு “தாகம்” என்பது தண்ணீருக்கானது அல்ல; அது மனித மனதின் ஓயாத ஆசைகளையும், தேடலையும் குறிக்கிறது. எவ்வளவு வசதிகள் வந்தாலும், மனித மனம் அமைதிக்காக ஏங்குவதை இக்கதை ஒரு குறியீடாக விளக்குகிறது.
வன்முறை மற்றும் ஆணாதிக்கத்தால் துரத்தப்பட்டு கைவிடப்பட்ட பெண்களின் இறுதித் தஞ்சமாக தர்காக்களே அமைகின்றன. சமூகம் அவர்களைப் “பைத்தியங்கள்” என்று ஒதுக்கினாலும், அவர்களின் பேச்சில் வாழ்வின் கசப்பான உண்மைகள் ஒளிந்துள்ளன. தர்காவின் புனிதத்திற்கும், வாசலில் இருக்கும் வறுமைக்கும் இடையிலான முரண்பாட்டை தாஜ் பேகம் ரென்சுவின் “தர்காவில் உள்ள பிச்சைக்காரர்கள்” கதை பேசுகிறது.
குலாம் முகமதுவின் “காகிதப் புலிகள்” கதை, ஆன்மீகம் என்பது சடங்குகளோ அல்லது வெளிவேஷமோ அல்ல; அது அகத்தில் நிகழும் மாற்றம். புகழுக்காகவும் கர்வத்திற்காகவும் ஆன்மீகவாதி போல் நடிப்பவர்கள் “காகிதப் புலிகள்” போன்றவர்கள். அவர்களால் உண்மையான இறைஞானத்தை அடைய முடியாது என்பதை இக்கதை வலியுறுத்துகிறது. போலி ஆன்மீகத்தை விமர்சிக்கிறது. காகிதப் புலி நிலையிலிருந்து உண்மையான நிலைக்கு மாற சூஃபித்துவம் சொல்லும் வழி இதுதான்:நப்ஸ் (Nafs): பேராசை கொண்ட மனதைக் கட்டுப்படுத்துதல். ஜிக்ர் (Zikr): எப்போதும் இறைநினைவிலும் உண்மையிலும் இருத்தல். இஹ்ஸான் (Ihsan): இறைவன் நம்மைப் பார்க்கிறான் என்ற உணர்வோடு நற்செயல்களைச் செய்தல். குலாம் முகமதுவின் இக்கதை, நாம் வெளியே எப்படித் தெரிகிறோம் என்பதை விட, உள்ளுக்குள் எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம் என்பதை உணர்த்துகிறது.
இந்தத் தொகுப்பில் பெண் எழுத்தாளர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும் இடம்பெற்றுள்ள கதைகள் மிகவும் காத்திரமானவை. குறிப்பாக, தீபா நசீர் காஷ்மீரி சிறுகதையில் ஒரு புதிய அலையை உருவாக்கியவர்.
தீபா நசீரின் “தேடல்” கதை பிரிவினைக்குப் பிந்தைய காஷ்மீரில் மனித உறவுகளின் சிதைவையும், அதை மீட்டெடுக்கத் துடிக்கும் தேடலையும் பேசுகிறது. வன்முறை மற்றும் அரசியல் சூழலால் சிதறிப்போன ஒரு குடும்பத்தின் அல்லது உறவின் வேர்களைத் தேடும் ஒரு பெண்ணின் பார்வையில் இக்கதை நகர்கிறது.
நசீரின் எழுத்துக்கள் ஆழ்ந்த மென்மையையும் அதே சமயம் ஒருவிதமான மௌனமான வலியையும் கொண்டவை. இவரது ‘சரீன் சக்ஹம்’ தொகுப்பிற்காக சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரி சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ‘இரட்டை ஒடுக்குமுறை’ (அரசியல் மோதல்கள் ஒருபுறம், ஆணாதிக்கச் சமூகம் மறுபுறம்) குறித்து இவரது கதைகள் மறைமுகமாகப் பேசுகின்றன.
காஷ்மீரி எழுத்தாளர்கள் நேரடி அரசியலைப் பேசுவதை விட, குறியீடுகள் வழியாகப் பேசுவதையே ஒரு கலையாக வளர்த்தெடுத்தனர். இது தணிக்கையிலிருந்து தப்பிக்கவும், அதே சமயம் ஆழமான உண்மைகளைச் சொல்லவும் உதவியது.
குல்ஷன் மஜீத்தின் கதையில் வருவது போல, பாசி என்பது ‘வேரற்ற நிலைக்கு’க் குறியீடு. காஷ்மீரி மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அந்நியமாகி, எங்கும் வேர் பிடிக்க முடியாமல் மிதந்து கொண்டிருக்கும் நிலையை இது காட்டுகிறது.
அமின் காமிலின் கதையில் வரும் சேவல் சண்டை, மனிதர்களின் வீணான அதிகாரப் போட்டிக்கும், அர்த்தமற்ற எல்லைச் சண்டைகளுக்கும் குறியீடாக அமைகிறது. சேவல்கள் சண்டையிடும்போது ரத்தம் சிந்துவது போல, மனிதர்களின் ஈகோப் போரில் அப்பாவி மக்கள் பலியாவதை இது உணர்த்துகிறது.
மஜ்ரூஹ் ரஷீத் பயன்படுத்தும் காரிருள், வெறும் இரவு அல்ல. அது எதிர்காலம் குறித்த பயம், அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் விடுதலையே இல்லாத ஒரு தேக்க நிலை ஆகியவற்றின் குறியீடாகும்.
காஷ்மீரின் பாரம்பரிய தீச்சட்டியான காங்கிரி, அக்கதைகளில் ‘வெப்பம்’ மற்றும் ‘உயிர்வாழ்தல்’ ஆகியவற்றின் குறியீடு. கடுங்குளிரிலும், துயரத்திலும் காஷ்மீரிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அவர்களின் கலாச்சாரப் பிணைப்பை இது குறிக்கிறது.
பல கதைகளில் கதாபாத்திரங்கள் நீண்ட மௌனம் காக்கின்றனர். இந்த மௌனம், சொல்ல முடியாத அதிர்ச்சியின் வெளிப்பாடாகும். 1990-களுக்குப் பிந்தைய கதைகளில், வார்த்தைகளை விட மௌனமே அதிகக் கதைகளைச் சொல்கிறது.
தொகுப்பில் வரும் பல கதைகளில் மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது சமூகத்திலிருந்து அந்நியப்பட்ட கதாபாத்திரங்கள் திரும்பத் திரும்ப வருகின்றனர். இது அந்தப் பள்ளத்தாக்கில் நிலவும் ‘கூட்டு அதிர்ச்சியை’ மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது. காஷ்மீரில் மூன்றில் ஒருவருக்கு ஏதோ ஒரு மனநலப் பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இது அந்த மண்ணின் நீண்டகாலப் போராட்டத்தின் உளவியல் பாதிப்பைக் காட்டுகிறது. காஷ்மீரின் நீண்டகால அரசியல் கொந்தளிப்பு மக்களின் மனநிலையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைப் பல கதைகள் நுட்பமாகப் பேசுகின்றன. வலிகளையும் துயரங்களையும் மட்டும் பேசாமல், மனிதநேயம் எஞ்சியிருக்கும் புள்ளிகளையும் இக்கதைகள் தொடுகின்றன.
நாதிமின் வீரத்திலிருந்து தொடங்கி, ரஹ்பரின் நுட்பம் வழியாக, ரூப் கிரிஷண் பட்டின் ஏக்கம் வரை நீண்டிருக்கும் இந்தப் பயணம், காஷ்மீரிய இலக்கியம் எவ்வளவு வலிமையானது என்பதைக் காட்டுகிறது. தீபா நசீர் போன்றவர்களின் எழுத்துக்கள் காஷ்மீரி பெண்களின் உள்மன உலகத்தைத் திறந்து காட்டுகின்றன. மறுபுறம், குறியீடுகள் மூலமாக எழுத்தாளர்கள் காஷ்மீரின் சிக்கலான அரசியலை ஒரு உலகளாவிய தத்துவமாக மாற்றியுள்ளனர்.
இந்த எழுத்தாளர்கள் அனைவரும் காஷ்மீரி சிறுகதையை ஒரு பிராந்திய மொழியின் படைப்பாக மட்டும் பார்க்காமல், உலகத் தரம் வாய்ந்த ஒரு இலக்கிய வடிவமாக மாற்றப் பாடுபட்டுள்ளனர். நீரஜா மாட்டூவின் தொகுப்பில் இவர்களது பங்களிப்பு, காஷ்மீர் என்ற நிலப்பரப்பின் ஆன்மாவைத் தரிசிக்க ஒரு சாளரமாக அமைகிறது.
நீரஜா மாட்டூவின் இத்தொகுப்பு காஷ்மீரின் குரலை உலகிற்கு உரக்கச் சொன்னாலும், சில குறைகள் இல்லாமல் இல்லை. முக்கியமாக 25 கதைகளில் 2 மட்டுமே பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. இது காஷ்மீரி இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு இன்னும் போதிய அளவு அங்கீகரிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. அதேபோல் ‘வெளியேறியவர்களின் வலி’க்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, ‘அங்கேயே தங்கி இராணுவ மற்றும் தீவிரவாத நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்பவர்களின் வலி’க்குக் கொடுக்கத் தவறியுள்ளது.
காஷ்மீரி புனைகதை என்பது வெறும் கதைகளின் தொகுப்பு மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் ஆன்மா தனது காயங்களை ஆற்றுவதற்காக நிகழ்த்தும் இலக்கியப் போராட்டம். கருத்த இரவு எப்போது முடியும் என்ற திகைப்பூட்டும் காத்திருப்பு ஒருபுறம் இருந்தாலும், தங்களின் வேர்களைத் தேடி அலையும் மனிதர்களின் விடாமுயற்சியே காஷ்மீரி புனைகதையின் நீடித்த தன்மையாகும். வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களுக்கு நடுவிலும், காஷ்மீரிகள் தங்களின் கதைகளைத் துணிச்சலோடும், நுட்பமான உரைநடையோடும் உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு இந்த இலக்கியப் பயணம் ஒரு நித்திலச் சான்றாகும்.
*The Greatest Kashmiri stories ever told – selected & translated by Neeraja Mattoo. Publisher ALEPH BOOK COMPANY
நீரஜா மாட்டூ ஒரு சிறந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். காஷ்மீரில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றியவர். இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்த “The Mystic and the Lyric: Four Women Poets from Kashmir” என்ற நூல் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவரது படைப்புகளை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சகத்தின் ஆய்வூதியத்தையும் ,பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பையும் பெற்றவர். தற்போது காஷ்மீரின் ஸ்ரீநகரில் வசித்து வருகிறார்.
***
அ. முனவர்கான் – முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். சமீபத்தில் “காபி ஆறுவதற்கு முன்” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் : amkhansrv@gmail.com
நடனம், இசை, நாடகம் அல்லது வேறெந்தக் கலை வடிவங்களும் அவை சார்ந்த இயங்குதலும் படைப்புருவாக்கமும் அதனை உருவாக்கும் நபரின் உலகப் பார்வையை, அதாவது அந்த நபரின் சித்தாந்தத்தையும் உள்ளடக்கியது. அத்தோடு கலை வடிவத்தின் ஊடாக நுகர்வோருக்கு அவை கடத்தவும்படுகின்றன.
மனிதனின் தன் பற்றியதும், மனிதர்கள், சமூகம், உலகம் பற்றியதுமான புரிதல், ‘அழகியல் அனுபவத்தின்’ மூலம் வளர்கிறது என்பதை Boal ஆழமாக விவரிக்கின்றார். கலைச் செயற்பாடு, படைப்பாக்கப் பரீட்சார்த்த முனைப்பு என்பன குறித்த புரிதல், கலைமனதின் புலலுணர்தல் மூலம் சாத்தியமாகுகின்றது என்கிறார்.
பிக்காசோவின் ‘நான் தேடுவதில்லை, கண்டடைகிறேன்’ என்ற கூற்றை மேற்கோள் காட்டுவதன் மூலம் உண்மையான கண்டடைவு செயல் வழியாக மட்டுமே நிகழும் என விளக்குகிறார். அழகியல் அனுபவம், உணர்வு, உருவாக்கம், பரிசோதனை போன்ற செயற்பாடுகள், மனிதர்கள் உலகத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள வழிசெய்கிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தத்தமது அளவுகளிலும் வழிகளிலும் பிக்காசோவாக இருக்கின்றார்கள் என்றும் Boal கூறுகின்றார்.
புலலுணர்தலில் மூன்று வகைகள் வரையறை செய்யப்படுகின்றன. வாழ்வதற்கும் அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கும், ஆள்புலத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், மனிதர்களுக்கும் எல்லா வகையான விலங்குகளுக்கும் வாழும் உலகு பற்றிய புலணுணர்தல் இன்றியமையாதது. தகவல் – உள்வாங்கும் நிலை (Information – The receptive level), அறிவு மற்றும் தந்திரோபாய முடிவெடுத்தல் – இது கூடுதல் செயற்பாட்டியக்க நிலை (Knowledge and tactical decision-making – the more active level), நெறிமுறை உணர்வுகள் – மனித நிலை- (Ethical Consciousnes – the human level) எனவாகப் புலணுணர்தலின் படிநிலைகளை வரையக்கலாம்.
தகவல் – உள்வாங்கும் நிலை
பொருட்களின் மீது ஒளி பிரதிபலிக்கிறது, எமது கண்களின் படிக வில்லைகளின் (crystalline lens – ஒளிக்கதிர்களை விழித்திரையின் மீது குவியச் செய்யும் கண்ணின் ஒரு பாகம்) வழியாகச் சென்று, விழித்திரையைத் தூண்டுகிறது. இந்தத் தகவல், பார்வை நரம்பிற்குத் தெரிவிக்கப்படுகின்றது. இது மின்வேதியியற் தகவல், மூளைப் பகுதியை அடையும் வரை பரவச் செய்கிறது. அதனால் எமக்கு (கண்களுக்கு) முன்னால் உள்ள பொருள் எமது கண்களுக்குப் புலப்படுகிறது. நாம் பார்த்த அந்தப்பொருள் தொடர்பான செய்தி மூளைக்குக் கிடைக்கப்பெறுகின்றது. இந்தத் தகவல் காப்பகப்படுத்தப்படவில்லை (சேமிக்கப்படவில்லை) – மாறாக, இது ஏனைய நரம்பியற் சுற்றுகளுடன் ஒன்றோடொன்று தொடர்புபட்டிருக்கின்றது. ஏனைய புலனுணர்தல்களிலும் இதுவே நிகழ்கிறது.
அறிவு, தந்திரோபாய முடிவெடுத்தல் – கூடுதல் செயற்பாட்டியக்க நிலை:
இது ஒரு நபர் புதிய தகவலை அல்லது முன்பு பெற்ற அதே அநுபவத்தை ஒத்த அல்லது வேறு நிரப்புதகவல்களுடன் தொடர்புபடுத்துவதனூடாக வினை-எதிர்வினை ஆற்றத்தகுந்த முடிவுகளை எடுக்கிறார். இந்த இரண்டு நிலைகளிலும் மனிதர்களும் மிருகங்களும் ஒன்றே. இரண்டும் முடிவெடுக்கின்றன (Decide), வினையாற்றுகின்றன (React),
தருணங்களில் முடிவுகள் உள்ளுணர்வு அல்லது உயிரியல் சார்ந்தவையாக அமைவன. பரிசோதனைக்கூடத்தில் வளர்க்கப்படும் எலிகள், பூனையின் முகத்தையோ நிறத்தையோ பார்த்ததில்லை, அதன் தன்மையை அறியாதவை. எலிகளின் பார்வையில் பூனைகள் தீயவை. பூனையின் வாசனையை உணர்ந்தால் அவை பயந்து ஓடும். தமது எதிரி என்று அறிந்திராத நிலையிற் கூட இதுவே நிகழ்கிறது. காரணம் இந்த வினையாற்றல் உயிரியல் ரீதியாக நிகழ்கிறது. பூனையின் மணத்தை எலி நுகர்வதால் அது பயந்து ஓடுகிறது.
மனிதர்களின் அறிவு என்பது, ஒரு அகநிலை மதிப்பீட்டுடன் இணைந்துள்ளது. அது தவறுகளுக்கு வழிவகுக்கக்கூடியது. மனிதர்களுக்குள் தகவல் மற்றும் அறிவுசார் கூறுகள் ஒரு மூன்றாவது நிலைக்கு இட்டுச்செல்லக்கூடியது. அதனை ஒரு அனுமான உதாரணத்துடன் Boal விளக்குகின்றார்:
நான் என் வீட்டுக் கதவைத் திறந்த போது, கேளிக்கை வட்டரங்கிலிருந்து (Circus) தப்பிய ஒரு புலியைக் காண்கிறேன். எனது பார்வை நரம்பு புலியின் பிரசன்னத்தினைப் பதிவு செய்கின்றது. நான் அந்தத் தகவலை உள்வாங்கிக் கொள்கின்றேன். என் புலன்கள் இயங்கத் தொடங்குகின்றன. புலி நெருங்குகின்றது. மின்-வேதியல் நரம்பின் ஊடாகத் தகவல் துல்லியமாகத் தொடர்கின்றது. புலி உறுமுகிறது. எனக்கு அதன் உறுமல் கேட்கின்றது. அதன் பொருள் என் செவிப்புலன் இயங்குகின்றது. புலி அதன் பெருவாயைத் திறக்கின்றது. என்னுடைய முகரும் சுரப்பிகள் செயற்படுத்தப்பட அதன் சுடுகாற்றை நான் உணர்கிறேன். இப்போ எனது முப்புலன்களான கண், காது, மூக்கு ஆகியவற்றின் தொழிற்பாட்டினை நான் உறுதிப்படுத்திக் கொள்கின்றேன். செஷியர் பூனையைப் போல (Cheshire cat) புலி உணவுக்குழாயைத் திறக்கிறது. என்னால் அனைத்தையும் மிக அருகாமையிற் பார்க்க முடிகிறது, அதனுடைய கூரான பற்களுக்கு மிக நெருக்கமாகவுள்ளேன். புலி தன் தாடைகளை என் மீது இறுகப் பற்றிக்கொள்ளும் வரைதான் எல்லாப் புலனுணர்தலும் துல்லியமாக நிகழ்ந்தன. அதன் பின் எந்த புலனுணர் தகவல்களும் என்னை அடையவில்லை.
இந்த உணர்ச்சித் தகவல் நிலையில் எனது மனச்செயல்முறை நிறுத்தப்பட்டால், நான் மேலும் திணறியிருப்பேன். ஆனால் புலிகளைப் பற்றிய பல முக்கியமான தகவல்களை ஏலவே என் மூளையிற் சேமித்து வைத்திருக்கிறேன். புலி ஆபத்தானது என்பதை அறிவு மட்டத்தில் முன்பே அறிந்திருக்கின்றேன். நான் கதவைச் சாத்தி அதனைப் பூட்ட முடியும் என்பது நான் அறிந்துவைத்திருந்த விடயம். எனக்கு கால்கள் இருப்பதும் தெரியும், அதனால் வீட்டின் மேற்தளத்திற்கு ஓடிச் சென்று தஞ்சம் புகலாம் என்பதும் நான் அறிந்ததுதான். பூனையிடமிருந்து ஓடித்தப்பும் எலியைப் போல என்னாலும் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் இயங்க முடியும் என்பது நான் அறிந்த விடயம்தான்.
இச்சந்தர்ப்பத்தில் ஒரு மனிதனாக, நான் ஆக்கபூர்வமான பல முடிவுகளையும் எடுக்க முடியும், படைப்பாக்கம் மிக்கதும் மூலோபாய ரீதியிலானதுமான முடிவுகளை எடுக்கமுடியும். வெறும் தந்திரோபாய ரீதியிலான முடிவுகளை மட்டுமன்றி வேறு தீர்வுகளையும் தேடமுடியும். கண்டடைய முடியும். என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய முடியும். எனது அலமாரிப் பெட்டிக்குள் ஒரு கைத்துப்பாக்கி இருக்குமெனில், அதனை எடுத்துப் புலியைச் சுட்டுக் கொல்லவும் முடியும்.
நெறிமுறை உணர்வுகள் – மனித நிலை
(Ethical Consciousnes – the human level)
இந்த நிலை மனிதனுக்கு மட்டுமே உரித்தானது அல்லது வாய்க்கப்பெற்றது. இது நாம் எடுக்கும் முடிவுகளுக்கு அர்த்தத்தையும் பெறுமதியையும் அளிப்பதை உள்ளடக்குகின்றது. மனிதன் தன்னைத் தானே சுயவிசாரணைக்கு உட்படுத்துகின்ற நிலை. இது சந்தேக நிலையையும், அதன் தொடர்ச்சியாக மனிதன் சீர்தூக்கிப் பார்ப்பதனூடு எடுக்கக்கூடிய அறநெறி சார்ந்து நியாயப்படுத்தப்படக்கூடிய தெரிவு(முடிவு) சார்ந்தது.
நான் புலியைக் கொல்ல வேண்டுமா? புலி தன் பசியைப் போக்க மட்டுமே என்னைத் தின்ன விரும்புகிறது. எனக்கு எந்தத் தீமையையும் உண்டாக்குவது அதன் நோக்கமல்ல. அது மனிதனையோ அல்லது மிருகத்தையோ உண்பது இயற்கையான அம்சம். நான் என்னைக் காப்பாற்றும் அதேவேளை புலியைக் கொல்லாமல் விட்டால், முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் என் பக்கத்து வீட்டுக்காரரின் மகனை அந்தப் புலி தின்றுவிடும் அபாயம் உள்ளது. அவசர உதவி இலக்கத்திற்கு அழைப்பதா? என் எழுத்து மேசையைப் புலியின் தலையில் எறிந்து அதனைத் திடுக்கிடச் செய்வதா? கத்தவா? இந்த மூன்றாவது நிலை அறநெறி சார்ந்தது. இது ஒவ்வொரு செயலுக்கும் பெறுமதியை வழங்குவதோடு, மனித எதிர்வினைகளின் நிகழ்காலத்தில் மட்டுமே நின்றுவிடாமல், செயல்களில் மனிதனின் எதிர்காலத்தை முன்னிறுத்துகிறது. இது ஆக்கப்பூர்வமானது. அது மாற்று வினைகளையும் மாற்றுத் தெரிவுகளையும் அடைவுகளையும் கோருகின்றது. இத்தகு தார்மீக நெறிமுறை மட்டத்தில்தான் மக்கள் அரங்க (Forum Theatre) அமர்வு செயற்பட வேண்டும். சிறந்த எண்ணங்கள் மட்டும் போதாது, அவை நெறிமுறைகளுக்கு அமைய நியாயப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே நிலவும் சிந்தனைகளுக்குள் நின்றுகொண்டு இயங்குவது போதாது, புதிதான கண்டடைவுகள் அவசியம்.
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கச் செயற்பாட்டில், புலனுணர்தலின் அனைத்து நிலைகளையும் விரிவுபடுத்துவதும், பெருக்குவதும் இன்றியமையாதது. குறிப்பாக அறம்சார் நெறிமுறைகள் முதன்மையானவை. அதாவது எமது தெரிவுகள் மனசாட்சி, அறிவு சார்ந்த பிரக்ஞைபூர்வமானவையாக இருப்பதைக் கருத்திலெடுக்க வேண்டும். ஏலவே நிலவுகின்ற அல்லது புதிதாக உருவாக்கப்படுகின்ற வாய்ப்புகளாக இருப்பினும் எந்ததொரு சூழலிலும் எப்போதும் அதற்குள் இவை குறித்த அக்கறையுடனான தெரிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
கலையின் அழகியல்: புரிதலுக்கான புதிய வடிவம்
ஒடுக்கப்பட்டோருக்கான அழகியல் என்பது ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் தவிர்க்கமுடியாத உள்ளீடு. புரிதலுக்கான புதிய வடிவத்தை அது உருவாக்குகின்றது, புலன்கள் மற்றும் நுண்ணுணர்வு ஊடாக மனிதர்களை உணர வைக்கின்றது. ஒட்டுமொத்தமாகப் புதிய சமூகப் பார்வையை உருவாக்குகின்றது, சமூக யதார்த்தம் பற்றிய புரிதலை உண்டாக்குகின்றது. ஒடுக்கப்பட்டோருக்கான அழகியல் எளிமையான உணர்வுகளை மட்டுமன்றி பரந்த அறிதலனுபவத்தினை வழங்குவதோடு அறம்சார் முடிவுகளையும் முன்வைக்கின்றது. அது வார்த்தையின் குறியீட்டு மொழியையும், உணர்வுகளின் சைகை மொழியையும் உள்ளடக்கிய உணர்ச்சி மற்றும் அறிவு மட்டத்திலான தூண்டுதல்களை உருவாக்க முயல்கிறது.
உவமை: மனிதர்களும் ஹோமினிட்களும் (ஆதிமனிதர்கள்)
ஒடுக்கப்பட்டவர்களுக்கான அழகியலில், ஒடுக்கப்பட்டவர்கள் தமது உவமை உலகத்தை முழுமையாக உருவாக்கக்கூடிய நிலைகளை உருவாக்கும் முயற்சிகளுக்குக் கவனக்குவிப்பு கொடுக்கப்படுகின்றது. அவர்களின் சிந்தனை, கற்பனை, குறியீட்டுருவாக்கத் திறன், கனவு காணும் திறன் மற்றும் உருவகங்களை உருவாக்குவதற்குரிய புறநிலைகளை ஏற்படுத்துவது முக்கியமானது. இப்புறநிலை ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து, அவர்கள் மாற்ற விரும்பும் யதார்த்தத்தைக் காண அவர்களை அனுமதிக்கிறது – சமூக யதார்த்த உலகில் அவர்கள் பங்கேற்பதிலிருந்து விலகாமல் இருக்க உதவுகின்றது. யதார்த்தத்தை கண்டடைவதற்குச் சற்று எட்டிநின்று பார்ப்பது அவசியம். கற்பனை, குறியீட்டு மொழி, சொற்களைக் கண்டடைவதனூடான உவமை உருவாக்கம், குகை ஓவியம், நடனம், நாடகம் ஆகியவற்றை கண்டுபிடித்தபோது, ஹோமினிட்கள் தம்மை மனிதர்களாக மாற்றிக் கொண்டனர். முதலில் தோன்றிய மனிதனை (ஆதிமனிதன்) ஆங்கிலத்தில் “ஹோமினிட்” (Hominids) என்று சொல்வதுண்டு.
பிளேட்டோ ‘பரிபூரண கருத்துலகம்’ பற்றி பேசினார், இது உணர்ச்சிகரமான, யதார்த்த உலகில் இல்லாத ஒரு உலகம். பரிபூரண கருத்துலகம் நாம் வாழும் முழுமையற்ற இந்த உலகிற்கு முற்றிலும் எதிராக நிற்கிறது. இது உணர்ச்சிகரமான யதார்த்தங்களால் நிரப்பப்பட்டது. வேறு வார்த்தைகளிற் சொல்வதானால் நாம் கற்பனை செய்திருக்கும் ஒரு (கருத்தியல்) சிறந்த உலகம், உண்மையான இந்தப் பௌதீக உலகில் இல்லை என்பது அதன் பொருள்.
லோகோஸ், ஏதோஸ், பாதோஸ் வாதமுறைகள்
சோக்ரடீஸ் ஏற்கனவே லோகோஸ் (Logos) என்ற கருத்தை நிறுவியிருந்தார். ‘லோகோஸ்’ என்பது தர்க்க நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாதமுறை (Rhetorical means of proof). இந்தச் சொல்லின் அடிச்சொல் கிரேக்க மொழியைச் சேர்ந்தது. இது அடிப்படையில் இருபொருளைச் சுட்டுகிறது. ‘சொல்’, ‘பகுத்தறிவு’ (Reason) ஆகிய பொருட்களைக் கொண்டுள்ளது. விவாதிக்கும் போது அல்லது எழுதும் போது லோகோஸ் பயன்படுத்தப்படுவது என்பது உண்மை, ஆதாரம், புள்ளிவிவரம், மற்றும் தர்க்க ரீதியான காரணங்களை கொண்டு ஒருவரை நம்ப வைப்பதைக் குறிக்கிறது. இதன் அடிப்படையில் பிளேட்டோ தனது கோட்பாட்டை அமைத்தார். கவித்துவ உதாரணமாகச் சொல்வதானால் ‘நடனம்’ அசைவின் லோகோஸ், ‘இசை’ ஒலியின் லோகோஸ், ‘நாடகம்’ வாழ்க்கையின் லோகோஸ் என்று கூறலாம். ஒழுக்கம் என்பது மனித நடத்தையின் வடிவவியல் (Geometry)இ அறம் என்பது முழுமையின் கனவு என்று விளக்குகின்றார் அகுஸ்ரூ போல்.
லோகோஸ் விவாதமுறையோடு எதோஸ், பாதோஸ் (Ethos, Pathos) எனும் கருத்தியல்களும் (வாதமுறைகள்) உள்ளன. எதோஸ் என்பது நம்பகத்தன்மையைப் பற்றியது. இது வாதத்தை முன்வைப்பவரின் நம்பகத்தன்மை மற்றும் அதிகாரத்தைக் குறிக்கிறது. இது ஒருவரின் அல்லது ஒரு குழுவின் பொதுவான அறப்பண்பையும், வாழ்க்கை முறையையும் குறிக்கலாம். தொடர்பாடலில்; அறிவு, அனுபவம், நேர்மை வெளிப்படும்போது ஏதோஸ் வலுப்படுத்தப்படுகிறது. அதாவது கருத்தியல் வாதங்கள், உகந்த உடல் மொழி மற்றும் நிபுணர்களை மேற்கோள் காட்டுதல் ஆகியவற்றின் மூலம் அது நிகழ்த்தப்படுகின்றது.
‘லோகோஸ்’ என்பது மனித நுண்ணறிவினதும் புரிதலினதும் முக்கியமான அங்கம் என்று கருதினார் சோக்கிரட்டீஸ், லோகோஸைப் பின்பற்ற ஊக்குவித்தார். அது மனித மனதின் (ஆன்மாவின்) கீழ்ப்படிதல்களை அறிவின் இயங்குதலுக்கு உட்படுத்துவதை உள்ளடக்கியது. லோகோஸ் நியாயமான கொள்கைகளையும் ஞானத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மனித அறிவு, இயற்கைக்கு இசைவான முடிவை அல்லது இலக்கை கொண்டுள்ளது என்று சோக்கிரட்டீஸ் கருதினார். அது இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவி மட்டுமல்ல, உண்மை மற்றும் இருத்தலியலின் ஆழமான புரிதலுக்குரிய சுட்டியாகவும் அதனை முன்வைத்தார்.
பாதோஸ் உணர்ச்சி சார்ந்த அழைப்புரையைக் குறிக்கிறது. உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் பார்வையாளர்களை அல்லது பங்கேற்பாளர்களை நம்பவைக்க அல்லது ஈர்ப்பதற்கு இந்த வாதமுறை-உரைமுறை பயன்படுத்தப்படுகிறது. எதோஸ் என்பது ‘நம்பிக்கை’, லோகோஸ் என்பது ‘தர்க்கம்’, பாதோஸ் என்பது ‘உணர்ச்சி’ எனச் சுருங்கக் கூறலாம். பாதோஸ் முறைமையானது வாதம், இலக்கியம், திரைப்படம் மற்றும் பிற கதையாற்றல் கலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. பாதோஸ் வாதமுறை உயிரோட்டமான விளக்கங்கள், உருவகங்கள், கதைகள் அல்லது பேச்சாளரின் குரற்பயன்பாட்டின் மூலமும் உரிய வடிவம் பெறுகின்றது.
கலையும் உவமைகளும்
பரிபூரணத்துவம் எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருக்கின்றது, யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தனித்ததும் அடையமுடியாததுமான உலகம் இல்லை என்று கருதினார் அரிட்டோட்லஸ். கலையும் உவமைகளும் மனித வளர்ச்சியிலும் விழிப்புணர்விலும் முதன்மை வகைபாகத்தைக் கொண்டுள்ளன. அறிவாற்றலுக்கான தேவையின் அழுத்தம் காரணமாக ஹோமினிட்களின் மூளைவளர்ச்சி நிகழ்ந்தது. அதன் பரிணாமமே ‘மூளைக்கோளம்’ (Cortex) எனப்படும் மூளையின் வெளிப்பகுதியை மூடி இருக்கும் கூறு உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்தது. அங்கு சிந்தனைகள், மதிப்பீடுகள், கலை மற்றும் அறிவியற் செயலாக்கம் ஆகியன இடம்பெறுகின்றன. கலை என்பது உலகத்தை மறு உருவாக்கம் செய்யும் மனிதத் திறனின் வெளிப்பாடு. மனிதனின் கலைப்படைப்பாக்கத்தின் தொடக்கமான குகை ஓவியங்கள், மனிதன் வேட்டையாடிய விலங்குகளின் உவமைப் பிரதிபலிப்பாகும்.
ஹோமினிட்கள் மனிதர்களாக மாறியபோது, மூளை-மனம், பொருள்-உயிர் எனவாகப் பகுத்தறியும் நிலை உருவானது. புதிய அறிவுசார் தேவைகளின் அழுத்தம் காரணமாக பௌதீகமும் உடற்கூறியல் மூளையும் மூளைக்கோளத்தினை உருவாக்கின. அங்குதான் சிந்தனைகள், மதிப்பீடுகள், கலை, அறிவியல், மாற்று வழிகளுக்கான ‘உவமை உலகச்’ செயலாக்கம் உருவானது. இப்படித்தான் செயல்கள் உருவாகுகின்றன. அதாவது தேவைகளின் அழுத்தம் புதிய யதார்த்தங்களை உருவாக்குகிறது.
கலை என்பது அடிப்படையில் உவமை. பரந்த பொருளில் அது எல்லாவகையான மொழிபெயர்ப்புகளையும் குறிக்கின்றது. ஒரு சூழமைவிலிருந்து ஒன்றின் இருப்பை இன்னொரு சூழமைவிற்கு நிலைமாற்றும் செயல். ஓவியமும், சிற்பமும் உவமைகளாகும். ஏனெனில் அவை அசலிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அதேவேளை ஒத்ததன்மையுடனும் வேறொன்றாகவும் உருவாக்கம் பெறுகின்றன. இதே விடயம்தான் திரைப்பட உருவாக்கத்திலும் நிகழ்கின்றது. யதார்த்த நாடகம் அசலான உண்மையைப் பிரதிபலிக்கின்றது. வெவ்வேறு பாணிகள் பின்பற்றப்படினும் காட்சிப்படுத்தல், வெளிப்பாட்டு முறைமை, நேர்த்தி, அழகியல் மற்றும் உவமைகள் கலைநோக்கிற்கு வலுவூட்டுகின்றன. விலங்குகளில் மனிதன் மட்டுமே உவமை உருவாக்கி.
சமுதாயங்களில், ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்குவதற்கான முடிவுடன், ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டவர்களின் குறியீட்டு வாழ்வை, அவர்களின் கற்பனையைக் குறைக்க முயல்கின்றனர், அவர்களை எந்தவொரு வேறு நபராலும் இட்டுநிரப்பக்கூடிய இயந்திர வேலைக்கு ஒப்படைக்கின்றனர். அவர்களின் பெயர்கள், எண்களாக மாறுகின்றன. தகமையானது எண்ணிக்கையாக மாறுகிறது, மனிதன் ரோபோவாக மாறுகிறான்.
சொல், உருவகம், ஒலி
ஒடுக்கப்பட்டோருக்கான அழகியலானது உவமைச் செயற்பாடுகள், குறியீட்டு மொழிகள், நுண்ணறிவு, உணர்திறன் என்பவற்றின் விடுதலை மற்றும் வலுப்படுத்தலை இலக்குகளாகக் கொண்டுள்ளது. நாம் வாழும் உலகு பற்றிய பார்வையை விரிவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. அது சொல், உருவகம், ஒலி ஆகியனவற்றின் ஊடாக மானிடநேய நெறிமுறையால் வழிநடத்தப்படுகின்றது.
நாடகம் என்பது கற்றலுக்குப் பொருத்தமான மிக இயல்பானதும் முதன்மையானதுமான வடிவமாகும். ஒரு குழந்தை நாடக அம்சங்களை இலகுவில் உள்வாங்கப் பழகுகின்றது, விளையாடுகிறது, கதாபாத்திரங்களை நடிக்கிறது. உருவங்களைப் பார்த்து ஓவியம் வரைவது, பாடுவது மற்றும் நடனம் ஆடுவது உட்பட்ட இன்னபிற கலைகளின் மூலம் வாழ்விற் பல அம்சங்களைக் கற்றுக்கொள்கிறது. இத்தகு கற்றலும் பயிற்சிகளும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இன்றியமையாதவை. எந்தவகையில் இன்றியமையாதவை என்ற கேள்வியை எழுப்புவோமானால், இந்தச் சமுதாயத்தின் தேக்கமடைந்த இருப்பினைத் தவிர்ப்பதற்காக என்ற பதிலை முன்வைக்கின்றார் அகுஸ்ரூ போல். ஒடுக்கப்பட்டவர்களுக்காக அரங்கம் – அதன் நிகழ்த்துமுறைமுறை சமூகத்தில் நிலைபெற்ற கட்டமைப்பகள், மதிப்பீடுகள் மீது கேள்வி எழுப்புகின்றது.
ஒரு குழந்தை வளரும் காலத்தில் இந்தச் சமுதாயத்தில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கற்றுக்கொள்ளலுக்குள் கேள்விகளை எழுப்புகின்ற அம்சமும் தவிர்க்கமுடியாததாக இணைந்திருக்கின்றது. அரங்கச் செயற்பாட்டின் பயிற்சிகளும் விளையாட்டுகளும் ஒழுக்கம், சுதந்திரத்தின் ஒருங்கிசைவை உள்ளடக்கியவை. ஒவ்வொரு விளையாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டிய தெளிவான விதிகள் உள்ளன. ஆனால் விதிகளைப் பின்பற்றும் அதேவேளை படைப்புத்திறனும் சுதந்திரமும் அவசியமானவை.
‘ஒவ்வொரு விளையாட்டும் சமூக வாழ்க்கைக்கான பயிற்சியாகும். அரங்க விளையாட்டும் அத்தகைய பயிற்சியே. அவை சமூக வாழ்க்கைக்கான பயிற்சியுமாகும். ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின்; விளையாட்டுகள் இருத்தலுக்கான (Existence) பயிற்சியாகும். நெறிமுறை இல்லாமல், சமூக வாழ்க்கை இல்லை. சுதந்திரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. விளையாட்டுகள் சமூக வாழ்க்கைக்கான உவமைகள்’ என்கிறார் Boal.
சாத்தியமான கற்பித்தல்
எமது அழகியல் நரம்புகளைச் சாத்தியமான கற்பித்தல் மூலம் செயற்படுத்த வேண்டும். படங்களைப் பார்த்தல், காணுதல் ஊடாக – ஒலி மற்றும் இசை வழியாக – கேட்டல் மற்றும் செவிசாய்த்தல் ஊடாக – வார்த்தைகளின் வழியாக (கவிதை மற்றும் கதை) அனைத்து அழகியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளின் வழி நாம் எமது அறம்சார் நெறிமுறைகளைத் தேடவேண்டும்.
மூளையின் ஒரு பகுதியில் நிகழும் தூண்டுதல் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பரவுகிறது: இசையின் ஒலிக்கூறுகள் கேட்கும் திறன்களை மட்டுமல்லாமல் காட்சித்திறன்களையும் உருவாக்குகின்றன. சதுரங்க விளையாட்டு நிபுணர்கள் படைப்பாற்றல் உத்திகளுக்கான கற்பனைத் திறனை வளர்ப்பதற்கு பாரம்பரிய இசையைக் கற்கின்றனர். ஐன்ஸ்டைன் தனது கணிதத் தீர்வுகளை அடையத் தாமதமாகும் தருணங்களில் வயலின் இசைத்தார். வயலினின் இசைக்கோர்வையில் தனக்கு அவசியப்பட்ட தூண்டுதலைக் கண்டுணர்ந்த போது கணிதத்திற்குத் திரும்பினார். இசை என்பது கணிதத்தின் ஒலி. ஒலிகளாகக் கோர்க்கப்பட்ட கணிதம். ஒட்டுமொத்த நரம்பு அமைப்பிலும் அழகியல் நரம்புகள் மிகவும் முக்கியமானவை. அழகியல் நுண்ணுணர்வானது புலனுணர்தலை மட்டுமல்லாமல், உணர்ச்சிகள், காரணம், தீர்வுகள், முடிவுகள் மற்றும் விழுமியங்களையும் உள்ளடக்கியது.
உடலின் ஆற்றல் வளர எப்படி விளையாட்டு வலிமை சேர்க்கின்றதோ, அதேபோன்று மனதின் ஆற்றலை விரிவாக்கம் செய்கிறது கலை. இந்த அழகியற் செயற்பாட்டின் விதைகள் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் அசல் வடிவத்தில் உள்ளடங்கியுள்ளன. உருவக விளையாட்டுகள் மற்றும் உத்திகள் ஏலவே காட்சிக் கலைகளாகும். அவற்றைக் கலைப்பொருளாக மாற்ற வேண்டியது மட்டுமே எஞ்சியுள்ள வேலை. தாளம் சார் விளையாட்டுகள் மற்றும் அதுசார் உத்திகளுக்குள் ஏற்கனவே இசை உள்நிறைந்துள்ளது. அவற்றை பாடல்களாகவும் சிம்பொனிகளாகவும் மாற்றுவது அதில் எஞ்சியுள்ள வேலை.
இது குழந்தைகளின் கற்றற் குறைபாடுகளைச் சரிசெய்யக் கூடுதல் கலை வகுப்புகளை ஏற்படுத்துவது பற்றியதல்ல. அல்லது கிரேக்கச் சிலைகள் அல்லது நிர்வாண மாதிரிகளை சிறந்த முறையில் வரைதல் (Greek statues or nude models) நிறம் மற்றும் கோடுகளைக் கற்றுக்கொள்ளல் பற்றியதுமல்ல. இது முற்றிலும் மனிதர்களின் உணர்வுகளை, அவர்களின் கலை நயங்களை மற்றும் அவர்களின் மழுங்கிய அறிவை விரிவுபடுத்த உதவுவது பற்றியதாகும்.
உண்மையின் ஒளி
அழகு என்பதற்குப் பின்வரும் விளக்கத்தினைக் கொடுக்கிறார் தத்துவவியலாளர் ஹெகல்: உண்மையின் ஒளிர்வு புலன்களின் மூலம் உணரக்கூடியதாக மாறுகிறது. தோற்றங்களின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை அக்கூற்றுக் குறிக்கின்றது. ஆனால் ஹெகலின் உண்மை பற்றிய இந்தக்கூற்று அடிப்படையில் கடவுள் வெளிப்படுவதைக் குறிப்பது. ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு மனிதர்களிடமிருந்து மனிதர்களாற் கண்டடையப்படும் உண்மையைக் காண்கிறது. அது மனித அறநெறி சார்ந்தது. அறம் என்பது ஒரு மனிதக் கண்டுபிடிப்பு என்பதாகும். அத்தோடு அதுவொரு விழிப்புணர்வு மற்றும் விருப்புகள் சார்ந்த அம்சம், வெளிப்பாடு அல்ல. ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அழகு மறைந்திருக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் அடிப்படையில் ஒரு கலைஞன். இத்தொடரில் முன்னர் கூறியதுபோல எல்லா மனிதர்களும் ஒரு அழகியற் படைப்பினை உருவாக்க முடியாதபோதிலும், அனைவரும் தங்களை வளப்படுத்தும் ஒரு அழகியற் செயல்முறையை உருவாக்க முடியும்.
கலாச்சாரத் தேடல் என்பது வெளிநாட்டுக் கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் மட்டுமல்ல. பிற கலாச்சாரங்களின் அறிவார்ந்த கூறுகளை உற்றுணர்வதற்கானது மட்டுமல்ல. எமது சொந்த அடையாளத்தை உருவாக்கவுமாகவே கலாச்சாரத் தேடல் எம்மிடையே உள்ளது. நாங்கள் எதனை உருவாக்குகின்றோம் என்பதிற்தான் எமது தனித்துவ அடையாளமும் பெறுமதியும் தங்கியிருக்கின்றது. மற்றவர்கள் கண்டுபிடித்ததை மட்டுமே நாங்கள் உருவாக்கினால் அல்லது செய்தால், நாம் மற்றவர்களின் நகலாக இருப்போமே அன்றி அது ‘நாம்’ அல்ல.
கலைகளைக் கண்டடைவதும் தம்மைத் தாமே கண்டடைவதும்
நடனம், இசை, நாடகம் அல்லது வேறெந்தக் கலை வடிவமும் அது சார்ந்த இயங்குதலும் படைப்புருவாக்கமும் அதனை உருவாக்கும் நபரின் உலகப் பார்வையை, அதாவது அந்த நபரின் சித்தாந்தத்தையும் உள்ளடக்கியது. அத்தோடு கலை வடிவத்தின் ஊடாக நுகர்வோருக்கு அவை கடத்தவும்படுகின்றன.
நாம் எமக்கான கலாச்சாரத்தை உருவாக்காவிட்டால், பிற கலாச்சாரங்களுக்கு கீழ்ப்படிந்து பணிவிடை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நாம் எமக்கான கலாச்சாரத்தை உருவாக்கும் போது, பிற கலாச்சாரங்கள் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும், எமது நுண்ணுணர்வை விரிவுபடுத்தும். நான் யார் என்பதை அறியும் போது, நான் யார் என்பதற்கான உண்மை, மற்றவர்களைப் பற்றி அறிவதிலிருந்து என்னைக் கட்டுப்படுத்தாது. நான் யார் என்பதை அறியாதவரை, நான் என்பது இன்னொன்றின் அல்லது இன்னொருவரின் நகலாக மட்டுமே இருக்க முடியும்.
ஒடுக்கப்பட்டவர்களின் அழகியல் என்பது ஒடுக்கப்பட்டவர்கள் அவர்களுக்கான கலைகளைக் கண்டடைவதற்கும் அவர்கள் தம்மைத் தாமே கண்டடைவதற்கும் உதவுவதற்கான ஒரு திட்டமாகும், அதனூடு உலக தரிசனத்தைப் பெறவும் பங்களிக்கிறது. ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, இன்னபிற தகவல் நுகர்வுகளுக்கு அப்பாற் தமது சொந்த உலகின் கலைத்துவ உவமைகளை உருவாக்க கலையின் அழகியல் உதவுகிறது.
***
ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் – svrooban@gmail.com
குட்டை மரங்களும் புற்களும் நிறைந்த நிலப்பரப்பின் நடுவே சிறு குன்றென உயர்ந்து நின்ற அந்த பாறையின் மீது நின்று பார்த்திருந்தனர் நகுலனும் சகாதேவனும். அர்ஜுனன் மூங்கில் வில்லுடன் விரைந்து ஓடினான். ஓடிக்கொண்டே சுழன்று அம்புகள் எய்தான். புற்களால் செய்த அம்புகள். முதலில் நான்கு திசைகளிலும் நான்கு அம்புகள் ஓரே சமயத்தில் பாய்ந்தன. அவன் சுழற்சியின் வேகம் அதிகரித்தது. எட்டு அம்புகள் எட்டுத் திசைகளிலும். பின் நொடிகளில் பதினாறு…முப்பத்தியிரண்டு. அதன் பின் அம்புகளை எண்ண முடியவில்லை. அவனைக் காணவும் முடியவில்லை. விரைந்து நகரும் சுழி ஒன்றின் மையமென அவன் ஆனான். 360 பாகைகளிலும் அம்புகள் விசையுடன் விரைந்து கொண்டிருந்தன.
“மூத்தவருக்கு நிகரே இல்லை” என்றான் நகுலன்.
“சுழன்றாடும் நடனம். ஆடும் அலைகளெனவும் பொழியும் மழையெனவும் திசைகள் அனைத்தும் விரியும் அம்புகளே அவரது ஆடை. தம் வாழ்வின் இறுதியை நெருங்கிவிட்ட உயிர்களே இந்த ஆடையின் நுனியைத் தொட நேரும். ஊழின் நடனம்”
நகுலனி்ன் பேச்சிற்கு சகாதேவன் எதுவும் சொல்லாமல் புன்முறுவல் புரிந்தான்.
தன் பயிற்சி முடித்து நகுல-சகாதேவர்களை நோக்கி அர்ஜுனன் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவர்களும் பாறையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். பாறையின் கீழிருந்த குட்டை மரங்களில் அர்ஜுனனின் புல்லம்புகள் தைத்திருந்தன. கழுத்தின் கீழாக அம்பு துளைத்திருந்த சிறு பறவை ஒன்று மண்ணில் தன் ஒரு இறக்கையை அடித்து துடித்தவாறே கிடந்தது. துண்டுபட்ட பாம்பொன்றின் ஒரு பாதி நெளிந்துகொண்டிருந்தது.
அர்ஜுனன் புன்னகையுடன் மறுப்பதுபோல் தலையசைத்து தன் வில்லை மறுகைக்கு மாற்றிக்கொண்டான்
”இது சரியான கேள்வியா என்று தெரியவில்லை என்றாலும் கேட்கத் தோன்றுகிறு. தங்களுக்கு மட்டும் எவ்வாறு இது இயல்கிறது?” நகுலன் கேட்டான்.
”விருப்பமும் பயிற்சியும் தான் வேறென்ன?” என்றான் அர்ஜுனன். ”சகாதேவனுக்கு நிமித்த இயல் போலத்தான் இதுவும்” என்று சகாதேவனை நோக்கி புன்னகைத்தான்.
”விருப்பம் கொண்டு பயிற்சி மேற்கொள்ளும் அனைவருக்குமா அமைகிறது?” என்றான் நகுலன்.
”அப்படி அமையாது” என்று சொன்னான் சகாதேவன். ”மூத்தவரின் பிறவி நூல் அவ்வாறு அமைந்திருக்கிறது. அவரது ஊழ்….அவரது முற்பிறவி பயன்… அதற்கேற்ப கோள்களின் அமைவு.….திங்களுடன் செவ்வாயும், வெள்ளியும்……….”
அர்ஜுனன் குறுக்கிட்டு ”பார்த்தாயா அம்பின் விழிபெற்று நான் உயிர்களை நோக்குவது போல இவன் ஊழின் விழிபெற்று உயிர்களை நோக்குகிறான்” என்றான். பின் ”அதெவ்வாறோ திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என எல்லாக் கோள்களின் நாட்களும் என் பயிற்சிக்குரியவைதான்” என்றான்.
”பசிக்கிறது இளையோரே இதை உண்போம்” தன் ஒரு கையில் காதைப் பிடித்து பற்றியிருந்த பருத்த முயலைக் காண்பித்தான் அர்ஜுனன்.
“இது எங்கிருந்தது? நாங்கள் இதுவரை காணவில்லையே” ஓரே குரலில் வியப்புடன் கேட்டனர் நகுலனும் சகாதேவனும்.
“இங்கேயே தான் இருந்தது. தன் இடையில் பிணைத்திருந்த மரவுரிப் பையைக் காண்பித்தான்” பை முயலின் குருதியால் நனைந்திருந்தது. அவன் பற்றி இருந்த இறந்த முயல் பாதி செந்நிறமும் பாதி வெண்மையுமாக இருந்தது.
“இதை எப்படி காணாமல் போனேன்!” மீண்டும் வியந்தான் நகுலன்.
“நீ கண்டிருக்கமுடியாது” என்றான் அர்ஜுனன்.
“ஏன்?”
“நீங்கள் காண முடியாதவாறு உங்கள் கண்களை நான் மறைத்திருந்தேன். மற்றவர்கள் காண முடியாதவாறு ஒன்றை மறைப்பதும் விற்கலையின் திறன்களில் ஒன்றுதான்”
“ஊழைச் செயல்படுத்தும் கோள் உண்மையை நோக்க முடியாதவாறு மனிதரின் கண்களை மறைப்பதுபோல” என்றான் சகாதேவன்.
“எப்போதும் கோள்கள் மனிதர்களை ஊழ் என்ற பேரில் துன்புறுத்திக் கொண்டுதான் இருக்குமோ?” என்று கேட்டான் நகுலன்.
“நான் எப்போது அப்படிச் சொன்னேன்? மனிதருக்கு திறன்கள் அருளி விழிப்பித்து காத்து நலங்கள் செய்வனவும்…..மெய்மை நோக்கி செலுத்துவனவும் கோள்களே. கோள்களுக்கும் ஊழ் உண்டு” என்றான் சகாதேவன்.
“எனில் ஊழ் என்பது….” என்று நகுலன் கேட்க வர ”இளையோர்களே பிறகு பேசுவோம். பசிக்கிறது” என்றான் அர்ஜுனன்.
“இவன் அருகே இருக்கும் காட்டின் அப்பாலுள்ள குன்றின் சிறுகுகையில் தங்கி இருக்கும் சமண முனிவர் ஒருவரை சில நாட்கள் முன்பு சென்று கண்டுவந்தான். அவரை மீண்டும் காணச் செல்ல இருக்கிறான். அதன் பொருட்டு புலால் மறுப்பு நோன்பு மேற்கொள்கிறான்.” என்றான் நகுலன்.
“ஆம் மூத்தவரே அவர் சில தியான முறைகளை எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். அதன் பொருட்டு சென்று வருகிறேன். அத்துடன் தென்நிலத்தின் தொன்மையான நிமித்த நூல் ஒன்றும் அவரிடம் உள்ளது. பெருங்குன்றன் என்ற முனிவரால் இயற்றப்பட்டது. அதை அவரே மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். அதை எனக்குத் தருகிறேன் என்றார்” என்றான் சகாதேவன்.
“சரி” என்று சொன்ன அர்ஜுனன் ”காட்டின் வழியாக தனியாகவா சென்றாய் சிறுவனே?” என்று கேட்டான்.
“ஆம் மூத்தவரே நான் மட்டும்தான் சென்றேன். இவனை அழைத்துச் செல்லவில்லை” என்றான் சகாதேவன்.
“இனி அவ்வாறு செய்யக் கூடாது. நான் உன் உடன் வருகிறேன்” என்றான் அர்ஜுனன்.
“வேண்டாம் மூத்தவரே. நான் இவனுடன் செல்கிறேன். நான் பார்த்துக் கொள்வேன் இச்சிறுவனை” என்றான் நகுலன்.
நகுலன் இலையிலிருந்து ஊனை எடுத்து மெல்லத் தொடங்கினான்.
நகுலனும் சகாதேவனும் விடை பெற்றபோது ”இரு” என்ற அர்ஜுனன் தன் மூங்கில் வில்லையும் புல்லம்புகள் கொண்ட அம்பறாதூணியையும் நகுலனிடம் அளித்தான். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட நகுலன் ”மூத்தவரே தங்களுக்கு ?” என்றான்.
“மூடனே…..தேவை எனில் ஒரு கரம் வில் மறு கரம் அம்பு நம் மூத்தவருக்கு… தெரியாதா உனக்கு?” என்று கடிந்து கொண்டான் சகாதேவன்.
அர்ஜுனன் உரக்கச் சிரித்தான். பின் சிரிப்பை அடக்கிக் கொண்டு ”நீ கொஞ்சமேனும் விற்கலை தேர்ச்சி கொண்டவன் அல்லவா?” என்று நகுலனிடம் கேட்டான்.
“ஆம் மூத்தவரே. தங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும்“ என்றான் நகுலன்.
இருவரும் அர்ஜுனன் பாதம் தொட்டு வணங்கி விடை பெற்றனர்.
*
செல்லச் செல்ல இருண்டு வந்த காட்டை நினைவில் இருந்து மீட்டெடுத்த காட்டுடன் ஒப்பிட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தான் சகாதேவன். அவனது காவலன் என்ற கடமையுணர்ச்சியுடன் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தான் நகுலன். நீண்ட நேரம் நடந்து கால்கள் ஓய்ந்தபோது ஒளி மிகுந்து வரத் தொடங்கியது. குறுக்கிட்ட நீரோடை ஒன்றில் நீரருந்தி கை கால்கள் கழுவி அருகே இருந்த பாறை ஒன்றில் அமர்ந்து ஓய்வெடுத்தார்கள்.
வெயில் சாய்வதற்கு முன்னதாகவே சமண முனிவர் இருந்த குன்றின் குகையை எட்டிவிட்டிருந்தார்கள். அவர்கள் பற்றி ஏறிய மரக்கிளைகளின் அசைவிலும் பறவைகளின் கலைவு ஒலியிலுமாக அவர்களின் வருகையை உணர்ந்துகொண்ட சமண முனிவர் குகையினின்று வெளிவந்து அவர்களை புன்முறுவலுடன் தலையசைத்து வரவேற்றார். சகாதேவன் குனிந்து அவரது பாதம் தொட்டான். தன் தோள் உயரத்திற்கு இருந்த வில்லை ஒரு கையால் விலக்கி குனிந்து தடுமாறி அவர் பாதம் தொட்ட நகுலனைக் கண்டு சமண முனிவர் முகத்தில் குறும்பு தோன்றியது. உயிர்க்கொலை தவிர்க்கும் நெறி கொண்ட சமண முனிவரைக் காண வில் அம்புகளுடன் வந்தது தவறோ என நினைத்தான் நகுலன்.
அவர்கள் தலைதொட்டு ஆசி வழங்கிய அவர் உள்ளே வருமாறு சைகை செய்தார். குகையின் உள்ளே மேலிருந்த இடுக்கு ஒன்றின் வழியாக மஞ்சள் வெய்யில் கதிர் விரித்திருந்தது. வெளியே சிறுகுகை என்று தோன்றிய போதும் உள்ளே செல்லும்போது பெரியது என்று தோன்றியது. அன்று சமண முனிவர் பேசா நோன்பு கொண்டிருந்தார்.
“நீங்கள் உணவு உண்ண வேண்டுமல்லவா?” என்று அவர் சைகையில் கேட்டபோது இருவரும் பசியில்லை என்று மறுத்துவிட்டனர். பின் நகுலன் குகைக்குள் சுற்றிக் கண்டு பின் வெளியே சென்று சுற்றுப்புறங்களைக் கண்டுவிட்டு வந்தான். தியானத்தில் அமர்ந்துவிட்ட முனிவரின் எதிரில் தானும் தியானம் செய்ய அமர்ந்து கொண்டான் சகாதேவன். நகுலன் சற்று விலகிச் சென்று பெரிய கல் ஒன்றில் முதுகு சாய்த்து கால்நீட்டி அமர்ந்தான். கதிர் மறைந்த போது குகையில் சிற்றகல் ஒன்று சுடர்விட்டுக் கொண்டிருந்தது.
சுடரை நோக்கிக் கொண்டிருந்த நகுலன் திரும்பி தியானத்தில் இருந்த சமண முனிவரை நோக்கினான். அவரது உடல் முற்றிலும் அசைவற்று இருந்தது. அவர் மூச்சு விடுகிறாரா என்று அய்யம் தோன்றும் விதத்தில் இருந்தது. நகுலனின் உள்ளம் நெகிழ்ச்சி அடைந்தது. அவன் கண்களில் நீர்பெருகி கன்னங்களில் வழியத் தொடங்கியது. கரங்களால் அதைத் துடைத்துக் கொண்ட போது அது ஏன் என்று அவன் வியந்து கொண்டான்.
அவன் சகாதேவனை நோக்கியபோது அவன் தியானம் விட்டெழுந்து சுடர் விளக்கின் அருகே சென்று அமர்ந்து சுவடி ஒன்றை நோக்கிக் கொண்டிருந்தான்.
பகல் போல் அல்லாமல் புறத்தில் இருக்கும் காட்டின் இரவு ஒலிகளை மட்டும் முற்றாக விலக்கி அமைதியை தன்னுள் நிறைத்திருந்தது அந்த குகை. நகுலன் தரையில் சரிந்து உறக்கத்தில் அமிழ்ந்தான்.
*
மறுநாள் காலை உணவிற்கென காய் கனிகளைத் திரட்டி வரவும் அவர்கள் நீராடவும் அவர்களை அருகே இருக்கும் ஓடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் சமண முனிவர். கடமை உணர்வுடன் தன் வில்லை ஏந்திச் சென்றான் நகுலன். சமண முனிவர் அதற்கு மறுப்பேதும் சொல்வாரோ என்று எண்ணினான் அவன். அவர் எதுவும் சொல்லவில்லை. பாறைகளின் வழி இறங்கி காட்டினுள் நடந்தனர் மூவரும்.
சற்று நேரம் மௌனமாக சென்றபின் ”முனிவரே…” என்று அழைத்த சகாதேவன் ஒருவேளை அவர் இன்றும் பேசா நோன்பு கொண்டுள்ளாரோ என்று தயங்கினான்.
“சொல் குழந்தை”
“அருக நெறியின் முதன்மைக் கொள்கை கொல்லாமை அல்லவா?” என்று கேட்டான்.
“ஆம். அதில் உனக்கு என்ன அய்யம்?” என்றார் சமண முனிவர்.
“ஆனால் நாங்கள் உயிர்கொலை செய்கிறோமே?”
“ஆம்”
“அது பாவம் இல்லையா?”
“ஆம்”
“எனில் என்ன செய்வது?”
“பாவம் என்று கருதுவதை செய்யாமல் இரு”
“அது எப்படி இயலும்? இப்புவியில் அது உண்மையில் இயல்வதா என்ன?” என்று நகுலன் கேட்டான்.
“இயலும் என்பதே அருகர் நெறி” என்றார் சமண முனிவர். பின் ”கருணையினால் தவத்தால் இயலாதது ஒன்றில்லை” என்றார்.
நகுலனும் சகாதேவனும் எதுவும் கூறவில்லை.
மேலும் சிறிது தொலைவு சென்றபின் சகாதேவன் நின்றான். ”முனிவரே” என்று அழைத்தான்.
சமண முனிவர் நின்று திரும்பி நோக்கினார்
“நேற்று வியாழன் வக்கிரம் பெற்றது. சனி செவ்வாயுடன் இணைந்து சிம்மத்திலிருக்கும் ராகுவை நோக்க……அங்கிருந்து…….” என்று தனக்குள்ளாக சொல்லிக் கொண்டான்.
“அதனால்?” என்றார் சமணப் படிவர்.
“வக்கிரம் என்றால் கோள் பின்நோக்கிச் செல்வதுதானே” என்றான் நகுலன்.
“இல்லை. பின்நோக்கிச் செல்வது போல தோற்றமளிப்பது” என்றான் சகாதேவன். பின் சுற்றிலும் பார்த்துவிட்டு கூச்சலிட்டான் ”முனிவரே அங்கு மறைந்து கொள்ளுங்கள்” என்று ஒரு பெரும் பாறை இடைவெளியைக் காண்பித்தான். ”தயவுசெய்து உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் முனிவரே..செல்லுங்கள்”என்றான்.
சமண முனிவர் சில கணம் தயங்கி ’“நீ காணும் நிமித்த நூல் குறிகளை நானும் அறிவேன். அதன்பொருட்டு அஞ்ச வேண்டியதில்லை” என்றார் அவர்.
“இப்போது என்ன ஆயிற்று? அதுதான் நான் இருக்கிறேனே? என்ன அச்சம் உனக்கு?” என்று சகாதேவனை நோக்கி எரிச்சலுடன் சொன்னான் நகுலன்.
“இல்லை முனிவரே தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். இந்நேரம் தங்களின் உயிருக்கு ஆபத்திருக்கிறது. மறைந்துகொள்ளுங்கள் தயவு கூறுங்கள்” கதறி கூச்சலிட்டான்.
முனிவர் மறுசொல் கூறாமல் சென்று பாறை இடைவெளி சென்று மறைந்தார். மறுகணம் எங்கிருந்தோ பாய்ந்து வந்த அம்பு ஒன்று சாகதேவனின் தோளை உரசி அவன் ஆடையைக் கிழித்துச் சென்றது. நகுலன் வில்லில் அம்பைத் தொடுத்துக் கொண்டு அம்பு வந்த திசை நோக்கி விரைந்தான்.
“யாரது கோழையே ஏன் மறைந்திருக்கிறாய்?” என்று கூச்சலிட்டு இலக்கறியாமல் அம்பை செலுத்தினான். மறுகணம் பிறிதொரு அம்பு வந்து நகுலனின் மூங்கில் வில்லை முறித்தது.
பாறை இடைவெளியில் இருந்து சமண முனிவர் வெளியே வந்தார். பெருங்குரலில் ”எவராயினும் அறிக. நான் சமண முனிவன். இவர்கள் என்னைக் காண வந்த சிறுவர்கள். எங்களிடம் பொருள் எதுவும் இல்லை. நாங்கள் எவர்க்கும் தீங்கழைப்போரும் அல்ல. எவரையேனும் நீங்கள் கொன்றாக வேண்டுமென்றால் என்னைக் கொல்லுங்கள். இச்சிறுவர்களை விட்டுவிடுங்கள். அருகரின் பெருங்கருணையின் பெயரால் கேட்கிறேன். அளி கூறுங்கள்” என்றார்.
அத்திசையில் பசுந்தழைப்பின் இடையே சலசலப்பு ஒலி கேட்டது. பின் ஒலிகள் முற்றாக அமைதி அடைந்தன.
“அஞ்ச வேண்டியதில்லை சிறுவர்களே” என்று கூறிக்கொண்டே நகுல-சகாதேவர்களின் அருகே வந்த சமண முனிவர் அவர்களைக் கனிவுடன் நோக்கினார்.
அவரது கண்கள் மெல்ல இருண்டன. கால்கள் தடுமாற அவர் தரையில் அமர்ந்தார்.
சட்டென்று ”இல்லை….முனிவரே இல்லை…..” சகாதேவன் கதறத் தொடங்கினான். நகுலன் பாறை இடைவெளியிலிருந்து வெளியே ஊர்ந்த நீண்ட அரச நாகத்தைக் கண்டான்.
“நீ நிமித்த நூலில் தேர்ச்சி பெற்றுவிட்டாய் சிறுவனே” சமண முனிவர் புன்முறுவலுடன் சொன்னார்.
“இல்லை… இல்லை… நான் தான் உங்களைக் கொன்றுவிட்டேன். இல்லை…நீங்கள் என்னைப் பிரியக் கூடாது” சகாதேவன் அழ நகுலன் செய்வதறியாது சுற்றிலும் பார்த்து எழுந்து ஓடினான்.
சகாதேவனும் எழ ”வேண்டாம். செல்லாதே. பயனற்று நேரத்தை வீணாக்க வேண்டாம். ஊழை மீற வீணில் முயல வேண்டியதில்லை. நான் உனக்கு அளிக்க வேண்டிய தியான நுண்சொல் ஒன்றிருக்கிறது. பயன் மிக்கது. கொல்வதும் கொல்லப்படுவதுமான உலகினின்று விடுதலை அருள்வது. தன்னுயிர் தான் அறப்பெற்றோனாக்குவது”
வலது கையை தன் முகத்தின் முன்னிறுத்தி, அழுகையை அடக்கி செவியை தாமரை இருக்கையில் அமர்ந்த அவரது முகத்தருகே கொண்டு சென்றான் சகாதேவன்.
மிகப் பின்னொரு காலத்தில் அர்ஜுனன் அமர்ந்த துலாவின் மறுதட்டில் சகாதேவனை அமர்த்தியது அந்த நுண்சொல்.
***
விக்ரம்: கோவையில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறார். மின் இதழ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: vikram321shiva@gmail.com
“நிச்சலனமாய் இருந்த கிணற்றில் முகம் பார்த்த குரங்கை அந்நியர் விரட்டினர்
அப்பா, கனவு மற்றும் ஒரு கதை”
(கல்வெட்டுச் சோழன், பக்கம் 51)
எண்பதுகளில் மிகுந்த உயிர்ப்புடனும், செழுமை உற்றிருந்த சிறுபத்திரிக்கைகளில் சிறுகதை எழுதுவதில் ஈடுபட்டிருந்த பல்வேறு சிறுகதையாசிரியர்களில்; டி.கண்ணன் யதார்த்தவாத கதையாடலைத் தவிர்த்துவிட்டு, எதிர்-யதார்த்தவாதம் மற்றும் மேஜிகல் ரியலிசம் ஆகிய இரண்டு வகைமைகளிலும் இயங்கியவர் என்பதைத்தான் டி.கண்ணனின் எழுத்து மரபு என்று குறிப்பிட வேண்டும் என்று எண்ணுகிறேன். மிகச் சில கதைகளை எழுதிய போதிலும் அவரது சிறுகதைகள் ஒவ்வொன்றும் பல வகைமைகளின் விளிம்புகளின் புறக்கோட்டை மென்மேலும் விரிவடையச் செய்யும் விதமாக அமைந்தவை. பிரதியின் அமைப்பாக்கத்திலும் கதையாக்கத்திலும் அவருக்கு இருந்த அதீத அக்கறை என்பது நவீனத்துவ எழுத்தை – நவீனத்திற்கு பிந்தைய நிலைப்புகளுக்கு நகர்த்தக் கூடியவையாக அமைந்துள்ளன. எண்பதுகளில் எழுந்த எதிர் – யதார்த்த அலையில் பயணித்தார். அப்போதைய காலகட்டத்தில் தமிழில் அமைப்பியல் கோட்பாட்டை தமிழவனின் “ஸ்ட்க்சுரலிசம்” புத்தகம் அறிமுகப்படுத்தியிருந்த ஆண்டுகளில், நிகழ்ந்த மற்றொருன்று இலக்கிய அறிதல் மேஜிக்கல் ரியலிசம். டி.கண்ணன் இவ்விரு நவீனத்துவ இலக்கிய போக்குகளின் இழைகளால் நெய்யப்பட்ட கதைசொல்லி ஆவார். டி.கண்ணன் ஒரு தற்செயல் நிகழ்வல்ல.
டி.கண்ணன் மறைந்த செய்தியை 23/11/2025 அன்று காலை இலக்கிய நண்பரும், அவருடன் மிக நெருக்கமாக பழகிய எனக்கும் அணுக்கமானவருமான ஶ்ரீகுமார் கூறினார். அடுத்த சில மணி நேரத்தில் கும்பகோணத்திலிருந்து எனது சக பயணியும் விமர்சகருமான ஜமாலன் டி.கண்ணனின் மறைவு உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். சில நொடிகளுக்கு பிறகு தெரியும் என்று சொன்னேன். கண்ணனுக்கும் எனக்கும் ஏற்பட்ட நட்பும் நெருக்கமும் எதன் அடிப்படையில் ஏற்பட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு இசைக்கோர்வையை எதனால் பிடித்தது என்ற கேள்வியின் விடையின்மைதான் கண்ணனுடனான உறவின் பிடிப்பிற்குமான பதிலென்று கருதுகிறேன். அவரது ஆர்வங்களுடன் எனது ஆர்வங்களும் சந்தித்த புள்ளி தான் உறவு நேரிட்ட இடம்.
அவரை முதன்முதல் சந்தித்த இடம், திரு.கோமல் சுவாமினாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான “சுப மங்களா” பத்திரிக்கை சார்பாக தியாகராய நகரில் நடந்த வாசக நிகழ்ச்சியில் தான் சந்தித்தேன். சந்தைப்படுத்தல் நிர்வாகிகளின் ஆடையில் இருந்தார். அவரை யார் அறிமுகப்படுத்தினார் என்று எனக்கு நினைவில் இல்லை. பரஸ்பரம் இருவரும் புன்னகைத்துவிட்டு பேசத் துவங்கினோம். நீண்ட நேரம் இலக்கியம் பற்றி பேசுகையில் எதார்த்தவாதத்தை தவிர்த்துவிட்டு எழுதப்படும் மாற்று புனைவுகளைப் பற்றியும், மேஜிக்கல் ரியலிசம், இலத்தின் இலக்கிய சிறுகதைகள், நாவல்கள் முவைக்கும் புனைவுகளைக் குறித்தும் உலக இலக்கியத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தை முன்வைத்து தனது பிரதியை விவரித்தார். நான் அமைப்பியல் பின் – அமைப்பியல் எனும் இரு கோட்பாடுகளும் தமிழ் புனைவு வாசிப்பில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அறிதல் வழி மாற்றத்தை எடுத்துரைதேன். இதுதான் ஒரு நல்லிணக்கம் எம்மிருவருக்கும் இடையில் ஏற்பட்டது.
அவர் நான் வசிக்கும் ஜாம்பஜார் பகுதிக்கு அருகில் திருவல்லிக்கேணி – பெரிய தெருவில் மேன்சன் அறையில் தங்கியிருந்தார். அடுத்தடுத்த வாரங்களில் அவருடைய அறையிலும் என்னுடைய அறையிலும் மற்றும் என் அன்பிற்கினிய நண்பர் கோட்பாட்டாளர் திரு நாகார்ஜுனன் அவர்களுடைய நாட்டு சுப்பராயன் தெருவில் இருந்த இல்லத்து இரண்டாவது மாடியில் இருந்த தனியறையிலும் தொடர்ந்தன. மிகத் தீவிரமான விவாதங்களில் டி.கண்ணன் சில அறிய இடையீடுகளையும், நகைச்சுவையான சிறு தொடர்களையும் பங்களித்தார். சில தருணங்களில் நாகார்ஜுனனின் தீவிரத்தன்மையை மட்டுப்படுத்தும் வகையில் உங்கள் சொற்றொடர்கள் உள்ளன என்று இடித்துக் கொண்டதும் உண்டு. உரையாடலில் நடுவே கண்ணன் என்னைக் கிண்டல் செய்யும் விதத்தில், எப்போதும் தீவிரமான மன நிலையிலேயே பேசாதீங்க, கொஞ்சம் நெகிழ்வாகுங்கள் என்பார். தீவிரமும் நெகிழ்வும் சரிவிகிதத்தில் தொனிக்க விவாதங்களில் பங்கு கொள்வார்.
அன்றைய காலகட்டத்தில் டி.கண்ணன் சேகரத்தில் பெரும் எண்ணிக்கையிலான கிடைத்தற்கரிய இலத்தின் இலக்கியபுத்தகங்கள் அவர் வசமிருந்தன. அவர் உறங்கிய கட்டிலுக்கு கீழ் பல அட்டைப் பெட்டிகளில் சேமிக்கப்பட்டிருந்தன. நான் உட்பட அன்றைய அநேக சிறுபத்திரிக்கை எழுத்தாள நண்பர்கள், கண்ணனிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொண்டு வாசித்தனர். மேலும் அவரது மற்ரொரு தனியார்வம் கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை கேட்பதிலும் அதிக நேரம் செலவிட்டார். குறிப்பாக என்னிடம் புல்லாங்குழல் மாலியின் இசை மேதைமையை வியந்து பேசுவார். அதைவிட செனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான் இசையின் மாய அனுபவத்தை விவரிக்க இயலாமல் திகைத்ததையும் பார்த்துள்ளேன். மேலும் பழைய தமிழ் திரையிசைப் பாடல்களில் சாரங்கி இசைக்கருவியின் பங்கையும் பயன்பாட்டையும் விளக்கிக் கூறியுள்ளார். மேற்கத்திய செவ்வியல் இசைக் கோர்வைகளிலும் மிகுந்த பரிச்சயம் உடையவராக இருந்தார். இன்னொரு விநோதம் சீட்டாட்டத்தில் அவருக்கிருந்த ஈடுபாடும், வெல்லும் தேர்ச்சியும். சீட்டாட்டத்தில் நிலவும் நிச்சயமின்மை அவரது எழுதாக்கத்தின் ஒரு கூறாகவே இயங்கியதைக் காண்கிறேன். அவரது சிறுகதைகளில் இது விரவியிருந்தது.
அவர் இயர்கையில் அபரிமிதமான நகைச்சுவையுணர்வு உடையவர். என்னையும் இன்ன பிற நண்பர்களையும் கூட திகைக்க வைத்த ஒரு விசித்திரமான நிகழ்ச்சியைக் கூற வேண்டும். ஒருமுறை தமிழவனின் பெங்களூரூ இல்லத்தில் நிகழ்ந்த சம்பவம் இதற்கொரு சான்று. தமிழவன், நான், நாகார்ஜுனன், கண்ணன் பேசிக்கொண்டிருக்கையில் டி.கண்ணன் தமிழின் மூத்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி பேசும் தருணத்தில், ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தமிழ் சினிமாவின் மூத்த குணச்சித்திர நடிகர்களான எல்.வி.ரங்கராவ், டி.எஸ்.பாலையா, நாகையா, எல்.வி.சுப்பையா, ஆகியோரை ஒப்பிட்டு சொன்னதை அருகிலிருந்து கேட்டதை; இன்றும் அது நினைவுக்கு வரும்போதெல்லாம் அடக்க முடியாமல் சிரித்துவிடுவேன்.
தமிழவன், நாகார்ஜுனன், எஸ்.சண்முகம், நஞ்சுண்டன் ஆகியோர் இணைந்து காவ்யா சண்முகசுந்தரம் வெளியிட்ட”வித்யாசம்” இதழின் ஆசிரியர் குழுவில் டி.கண்ணன் இடம்பெற்று பங்காற்றினார். வித்யாசம் இதழில் வெளியிட்ட”அப்பா, கனவு மற்றும் ஒரு கதை” சிறுகதை, அவருடைய தனித்துவமான கதையாடல் பாணியின் பிரதியியல் உச்சமெனக் கருதுகிறேன். இக்கதை ஏற்படுத்தும் வாசக தாக்கம் முக்கியமானது. வழமையான வாசிப்பைக் கோரும் எதிர்-எதார்த்தம், மேஜிக்கல் ரியலிசம் ஆகிய இரண்டின் வலைப்பின்னலாக அமைந்துள்ளது. வாசகனுடைய கதைமொழி ஒருவித opaqueness ஐ தோற்றுவிக்கிறது. இந்தக் கூறு டி.கண்ணனுடைய எழுத்துமுறைமையின் தனிமுத்திரை. கதைசொல்லியின் குரல் ஏகத்துவமான ஒற்றைக்குரல் என்ற கருத்தாக்கத்தை மறுப்பதும், தகர்ப்பதும்தான் கண்ணனின் எழுத்து தொழில் நுட்பம். அதிகமான பக்கங்களில் எழுதுவதைக் காட்டிலும் சுருக்கமான (brevity) பிரதியியலைக் கையாள்பவை இச்சிறுகதைகள்.
தமிழ் நவீனத்துவ எழுத்தாளர்களின் பன்முனைப் பிரதியாக்கத்தில் கண்ணனின் சிறுகதைப் பங்களிப்பு அவதானிக்கத்தக்கது. எண்ணிக்கையில் குறைவாக இருப்பதும், அவை ஒவ்வொன்றும் பல வித்தியாசங்களின் வகைமாதிரிகள் எனலாம். பன்மை அடுக்குகளில் கதையாடலை எழுத்தாக்கம் செய்தவர் டி.கண்ணன். அவருடைய சிறுகதைகள் குறித்து ‘கல்குதிரை’ இதழில் நான் எழுதியுள்ளேன். கண்ணனின் “கல்வெட்டுச் சோழன்” சிறுகதைத் தொகுப்பு பற்றிய விரிவான கட்டுரையொன்றை எழுத வேண்டிய கடமை எனக்குள்ளது. விரைவில் விரிவாக எழுதவும் செய்வேன். கண்ணன் நிறைய கவிதைகளையும் எழுதியுள்ளார். அவையும் ஆழ்ந்து கவனிக்கத்தக்கவை.
எனினும் ஒரு சில வரிகள் அவரது “அப்பா, கனவு மற்ரும் ஒரு கதை”யைப் பற்றி சொல்ல வேண்டும். இக்கதையை முழுமையிலிருந்து அணுகாமல் அதன் fragments இலிருந்து (Closed Reading) அணுக்க வாசிப்பைக் கோருகிறது. கதையின் பல்வேறு opaque புள்ளியிலிருந்து துவங்குவதும், தொடர்வதும், நிறைவடைவதுமான வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கதையின் துவக்கத்தில்,
“உன் நினைவுகளை இழக்கப் பார்க்கும் சாட்சிகள் நிரம்பிவிட்ட இவ்வூர் இனி வேண்டாம். உன் குழந்தைகளின் ஞாபகங்கள் வேறொரு வடிவத்தில் மீண்டும் தொடங்கட்டும். காலம் உனக்கு சகல சௌகரியங்களையும் அளிக்கட்டும்”(பக்கம் 42)
பாரசீக வியாபாரி ஒருவர் பின்னால் அப்பா ஓடிக் கொண்டிருந்தார்.
தன் மனைவியைக் கொன்றதற்காய் சிறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
நதியின் மூலத்தைத் தேடி இன்னும் கல் சக்கரத்தின் பின்னால் அவர் ஓடிக் கொண்டிருந்தார்.
தொலை தேசமொன்றில் வேறோர் மனைவியுடனும் அவர்தம் குழந்தைகளுடனும் இல்லறத்தைத் துவக்கியிருந்தார்.
அரசாங்கததிற்கு எதிரான போராட்ட – தலைமறைவு வாழ்க்கையில் பாதாள அறையொன்ரில் வரைபட உதவியாளராய் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
திண்ணைகள் சூழ்ந்த நகரமொன்றில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
(பக்கம் 49-50)
நிச்சலனமாய் இருந்த கிணற்றில் முகம் பார்த்த குரங்கை அந்நியர் விரட்டினர் (பக்கம் 51)
நான் கதையை எழுதி முடித்தேன்(பக்கம் 53)
மேற்காணும் சிறுகதையின் பிரதி என்பது முழுமையில் அன்றி, அதன் சிறு பகுதிகளில் உள்ள சிறுதொடர்களின் வழியே அமைப்பாக்கம் பெறுவதைக் காண முடிகிறது. பெருங்கதையாடல் தன்மையைத் தவிர்த்துவிட்டு நுண்கதையாடல்களின் பிரதியாக்கம் எனலாம்.
டி.கண்ணன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது கைப்பேசியில் அழைத்து பேசுவார். தான் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகக்கள் மற்றும் செவி நுகரும் இசைக் கோர்வைகள் பற்றி விவாதிப்பார். தான் நடத்திய சிறுபத்திரிக்கையான “பிரம்ம ராஷஸ்” தொடர்ந்திருக்கலாம் என்ற யோசனை அவரிடம் எப்போதுமிருந்தது.
இவையாவும் ஒருபுறமிருக்கட்டும். டி.கண்ணன் என்பவர் யார் ? எது அவரை நவீனத்துவ இலக்கியச் சூழலில் கட்டமைத்தது என்ற வினாவிற்கான விடை, அவர் தீவிர வாசிப்பு, உரையாடல், எழுதுதல் எனும் தமிழ் சிறுபத்திரிக்கையின் கொடிமரபின் தனிப்பண்பிலிருந்து உயிர்த்தவர். கடந்த மாதம் கூட என்னிடம் பேசினார். அவரது எழுத்துகள் என்றென்றும் தமிழ் வாசக சமூகத்திடம் பேசிக் கொண்டேதான் இருக்கும்.
இனி அவரது எழுத்துக்களை முன்வைத்து இடையறாது பேசுவதும் எழுதுவதும், அவரது சிறுகதைகள் குறித்து மென்மேலும் விவாதிப்பதும்தான் டி.கண்ணனின் நவீனத்துவத்திற்கு பிந்தைய இலக்கிய பங்களிப்பிற்கு நாம் செலுத்தும் இலக்கிய அஞ்சலி.
***
எஸ்.சண்முகம் – சென்னையை சேர்ந்தவர். கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இலக்கிய நேர்காணல்கள், தொகை நூல்கள் என்று தொடர்ச்சியாக பங்களித்து வருபவர். மேற்கூறிய வகைமைகளில் 21 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனந்த விகடன் நம்பிக்கை விருது, இலக்கிய வீதி அன்னம் விருது, பாண்டிச்சேரி இலக்கியக்கழகம் கபிலர் விருது, மா.அரங்கநாதன் இலக்கிய விருது, பேராசிரியர் க.பஞ்சாங்கம் இலக்கியத் திறனாய்வாளர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். மின்னஞ்சல் : s.shanmugam65@gmail.com
லத்தின் அமெரிக்க இலக்கியத்துடான எனது அறிமுகம் பெரும்பாலும் எதேச்சையாகவும், எண்பதுகளில் மூன்றாம் உலகம் என்று அழைக்கப்பட்ட இடங்களில் ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களின் சீரற்ற கிடைப்புத்தன்மையால் நிர்ணயிக்கப்பட்டதாகவும் இருந்தது. போர்ஹெஸ்சின் Labyrinths (பென்குயின் பதிப்பு) புத்தகமே என் நூலகத்தில் நுழைந்த முதல் லத்தீன் அமெரிக்கப் புத்தகம் என்று நினைக்கிறேன். என் உறவினனொருவன் படிக்கக் கொடுத்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட லத்தீன் அமெரிக்கக் கதைகளின் தொகுப்பொன்றும் நினைவுக்கு வருகிறது. அதில் கண்களை மையப்படுத்திய அக்டோவியோ பாஸின் கதை (நீல நிறப் பூச்செண்டு?) இருந்ததாக ஞாபகம். ஆனால் என் ஆரம்பக்கால லத்தீன் அமெரிக்க இலக்கியப் பயிற்சிக்காக நான் நுங்கம்பாக்கம் சாலையில் நிலவறைக் கடையாக அமைந்திருந்த அந்த முதல் லாண்ட்மார்க் கடைக்கே கடன்பட்டிருக்கிறேன் — குறிப்பாக அவர்கள் வாசகர்களிடம் கொண்டுசேர்த்த அந்த அற்புதமான பிகடர் பதிப்புகளுக்காக. சர்வநிச்சயமாக கார்ஸியா மார்க்கெஸ்சின் One Hundred Years of Solitude என்ற அந்த மைல்கல் நாவலுக்காக, ஆனால் வர்காஸ் யோஸாவின் On The Green House, Aunt Julia and the Scriptwriter, Time of the Hero நாவல்களுக்காகவும்கூட. அதன்பின் சொட்டு சொட்டாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டெடுக்கப்பட்டு தாறுமாறாக வந்து சேர்ந்த மானுவெல் பூயிக்கின் On Kiss of the Spider Woman, இஸபல் அயெண்டேயின் House of the Spirits, போர்ஹெஸ், ஒகாம்ப்போ, செஸாரெஸ் இணைந்து தொகுத்த The Book of Fantasy என்ற அபாரமான தொகுப்பு, இத்யாதி… பூம் என்று அழைப்பார்களே அதை என் வாசிப்புப் பரிணாமத்தில் ஒரு பெரும் வெடிப்பாகவே உணர்ந்துகொண்டேன். கிட்டத்தட்ட ஒரு லத்தீன் அமெரிக்க இலக்கிய க்ரூப்பியாக ஆகும் அளவிற்கு ஆட்டிவைத்த ஒரு வெறியுடன் கிடைப்பதற்கு அரிதாக இருந்த பல தலைப்புகளைக் மேலும் மேலும் கனவுற்றபடியே: ஃபுயெண்டெஸ்சின் நாவல்கள் (Christopher Unborn என்ற பிந்தைய நாவலே முதலில் படிக்கக் கிடைத்தது), கார்த்தஸாரின் விநோதங்கள் (விசித்திரமாக அதிகம் பேசப்படாத Winners புத்தகமே முதலில் வந்து சேர்ந்தது), கப்ரேரா இன்ஃபாண்டேயின் வார்த்தை விளையாட்டுகள் (Infante’s Inferno), மார்கெஸ் மிகவும் மெச்சிய அல்வாரோ முடிஸ்சின் Maqroll நாவல்கள், அலெஹோ கார்பெண்டியரின் Concierto Barraco…. என்று நீண்ட சந்தோஷமான ஒரு பெருங்கனவு.
அக்கனவு தொண்ணூறுகளில் நனவாகவும் ஆகியது. பின்னர் பூமென்று வெடித்த அதே அவசரத்துடன் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் சட்டென ஓய்ந்தடங்கியது (அமெரிக்க / பிரிட்டிஷ் இலக்கியத்துக்கு என் வாசக கவனம் திசை திரும்பியதால்.) இளமைக்கால கிளர்வின் நினைவாக மட்டுமே சிறிது காலத்துக்கு அது நீடித்தது. சொல்வனத்துக்கு எழுத ஆரம்பித்தபோது கொர்த்தஸாரின் Continuity of Parks கதையை (அதன் குறுகிய நீளத்துக்காகவே) மொழிபெயர்த்தேன். பின்னர் நண்பர் பாஸ்கரின் உந்துதலால் கொர்த்தஸாருடன் பாண்டியாடுதல் என்று அவரது கதைகளுக்கான அறிமுகக் கட்டுரை ஒன்றை எழுதினேன். பாண்டியாட்டமே என் முதல் புத்தகத்துக்கான தலைப்பாகவும் அமைந்தது ஒரு சுவாரஸ்யமான உடன் நிகழ்வு. 2015-இல் சொல்வனம் பொலான்யோ சிறப்பிதழின் ஆசிரியராகப் பணியாற்றியபோது பொலான்யோவை வெறித்தனமாகப் படித்து முடித்தேன். அதன்பின் பல வருடங்களுக்குப் பெரும்பாலும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. அண்மைக்காலம் வரை…
நெட்ஃபிளிக்ஸ்சில் உலாவிக் கொண்டிருக்கையில் One Hundred Years of Solitude தொடர் கண்ணைப் பறித்தது. அதைப் பார்த்து முடித்தவுடன் சம்பந்தமே இல்லாமல் கார்லோஸ் ஃபியெண்டஸின் Terra Nostra நாவலை மீள்வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் 800 பக்க அளவுத் தடையையும் மீறி அதை வாசித்து முடித்தேன். இம்முறை மேலும் தெளிவாகியது போலிருந்தது. அதையும் அதன் ஆசிரியரின் பிற படைப்புகளைப் பற்றி எழுதலாம் என்ற ஒரு எண்ணம் துளிர்விட்டது. அதன் ஊக்குவிப்பில் Where the Air is Clear, Distant Relations, The Death of Aretemio Cruz , Aura நாவல்களையும் Burnt Water சிறுகதைத் தொகுப்பையும் வாசித்து முடித்தேன். வெவ்வேறு காலங்களில் வாசித்தவற்றை இப்போது ஒரே மூச்சில் தொடர்ச்சியாக வாசித்தது அவற்றை மேலும் மெருகூட்டியது. ஒரு வழியாக எழுத உட்கார்ந்தபோது ஒரு சிக்கல் தலைதூக்கியது. என் ஆரம்பக்கால லத்தீன் அமெரிக்க வாசிப்புகள் எவ்வளவு பின்புலமற்று சீரற்றவையாகவும் இருந்தன என்ற நினைப்பு மீண்டும் மீண்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. இந்நூற்றாண்டில் அதை வந்தடையும் ஒரு இளம் வாசகனும் அதை இப்படித்தான் வாசிக்கத் தொடங்குவான். இளமையில் அப்படி இலக்கின்றி வாசிப்பதே சிறந்தது என்ற கருத்துடன் உடன்பட்டாலும் அவ்விலக்கியத்தின் நவீனத்துவமும், நேர்க்கோட்டின்மையும், வரலாற்றுப் பின்புலமும், பிரதி ஊடுருவலும் அவனுக்கு ஒரு தடையாக இருக்கக்கூடும் என்றும் தோன்றியது. Terra Nostra பற்றி எழுதுவதற்கு முன்னால் அம்மரபின் சில அரம்பக்காலப் பிரதிகளைப் பற்றி பேச வேண்டுமோ என்ற சந்தேகமும் உடனெழுந்தது. பூமிற்கும் (Boom) முன்னால் வந்த முக்கியமான ஆசிரியர்களுள் போர்ஹெஸ், நெரூடா போன்ற ஜாம்பவான்களைப் பற்றி ஓரளவுக்கேனும் நம்மாட்கள் எழுதியிருக்கிறார்கள். சரி, இன்னும் சற்று பின்னோக்கிப் போகலாம் என்ற எண்ணத்துடன் என் நூலகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆக்கங்களைத் தேடிச் சென்றேன்.
The Posthumous Memoirs of Bras Cubas(முந்தைய பதிப்பில் Epitaph of a Small Winner, Susan Sontag முன்னுரையுடன்) — பிரேசீலிய மாஸ்டர் மஷாடோ டி அசீஸ் எழுதியது, மரியானோ அசூயெலாவின் Underdogs, மற்றும் ஹுவான் ரூல்ஃபோவின் Pedro Páramoநாவல்களையும் வாசித்து முடித்தேன். (ஒரு கட்டுரை எழுதுவதில்தான் எவ்வளவு வாசிப்பின்பங்கள் பொதிந்திருக்கின்றன பாருங்கள்!) எழுதாமல் வாசித்துக்கொண்டே இருப்பதற்காக பெரெஸ் கால்டோ, ஃபெர்னாண்டோ டெ ரோஜாஸ், செர்வாண்டஸ், பெர்னார்ட் காஸ்டீல் என்று அந்த பேராசைப்படும் வாசக மனம் ஸ்பானிஷ் ஆளுமைகளுக்குத் தாவப்பார்த்து பின்னர் அதிர்ஷ்டவசமாக தன்னைத்தானே சுதாரித்துக் கொண்டது. இவ்வளவு ஆயத்தங்களுக்குப் பிறகும் கட்டுரைக்கான மையத்திரி இன்னும் பிடிபடவில்லை என்று பட்டதால் கட்டுரை எழுதும் திட்டத்தைச் சற்று ஆறப்போட்டேன்.
ஒரு நாள் பாட்மிண்டன் விளையாடி முடித்துவிட்டு காரில் வீடு திரும்புகையில் ஸ்பாடிஃபை பிளேலிஸ்டிலிருந்து பீடோவணின் எராய்கா ஸிம்ஃபொனி ஒலித்துக்கொண்டிருக்கையில் ஒரு பொறி தட்டியது: Alejo Carpentier! இவரது படைப்புகளின் பரிணாமத்தைப் பேசியபடியே லத்தீன் அமெரிக்க இலக்கிய பின்புலத்தின் சில மையச் சரடுகளையும் பேசிவிடலாம் என்று தோன்றியது. வீட்டுக்கு வந்தவுடன் நூலகத்தில் அவரது Kingdom of this World நாவலைத் தேடத் தொடங்கினேன்.
மூவ்மண்ட் I– கருப்பொருட்களின் அணிவகுப்பு
லத்தீன் அமெரிக்க பூமிற்கான (Boom) அடிக்கல்லை நாட்டியவர்களுள் மிக முக்கியமானவராக அலேஹோ கார்பெண்டியரை அடையாளப்படுத்துவதுடன் நாம் ஆரம்பிக்கலாம். ஏனெனில் கார்சியா மார்கெஸ்சின் மகாண்டோவின் கற்பனை வரலாறு, கார்லோஸ் ஃபியூண்டெஸ்சின் ஹிஸ்பானிய வரலாற்று முழுமையைப் புனைவில் செரித்து பிறிதொன்றாகக் கட்டமைக்க முயலும் பூதாகாரப் புதினம் (Terra Nostra), யோசாவின் கானூடோஸ் புரட்சித் தரவுகளைக் கற்பனையில் யதார்த்தமாக மீட்டெடுக்க முயலும் முயற்சி (War of the End of World) இவற்றுக்கெல்லாம் முன்னதாகவே, அவற்றை வழிவகுக்கும் வகையில், கார்பெண்டியர் லத்தீன் அமெரிக்க வரலாற்றைக் குறித்த ஒரு முக்கியமான தரிசனத்தைத் தன் புனைவுகளில் முன்மொழிந்தார் என்பதால். லத்தீன் அமெரிக்க வரலாறு, அதாவது தரவுகளால் ஆவணங்களாக்கப்பட்ட கற்பனை அல்லாத நிஜ வரலாறு தன்னளவிலேயே – பல அதீதமான அமைப்பொழுங்குகளையும், நம்பவே முடியாத மீள்நிகழ்வுகளையும், விசித்திரமான முரண்களையும் உள்ளடக்குகிறதென்றும், அதன் மெய்மையை இலக்கியத்தில் கைப்பற்ற புது யுத்திகளும் நடையும் தேவைப்படுகின்றன என்றும் அவர் தன் முதல் நாவலான கிங்டம் ஆஃப் திஸ் வர்ல்ட்-இன் தோற்றுவாயிலேயே வாதாடுகிறார். மேஜிகல் ரியலிஸம் அதாவது மாய யதார்த்தம் என்று இப்போது இலக்கிய வகைமை ஆகிவிட்ட ஒன்றை அவர் 1949-இல் கிங்டம்-இன் முன்னுரையில் lo real marovillosa americano (அற்புதமான அமெரிக்க யதார்த்தம்) என்று வரையறுத்தார். “அருவங்களையும் வலிந்து பிணைக்கப்பட்ட படிமங்களையும் கொண்டு நிஜத்தைத் தலைகீழாக்கவோ, கடக்கவோ முயலும் யுத்திகளைக் கொண்டு அற்புதத்தைக் கண்டடைய முடியாது. இதற்கு மாறாக இடம், நேரம் சார்ந்த இயல்பான மானுட யதார்த்தங்களிலேயே அற்புதம் உள்ளார்ந்திருக்கிறது. அங்கு சாத்தியமில்லாத பொருத்தங்களும் அதிசயமான கலப்புகளும் இயற்கையாகவே உள்ளன; அவை லத்தீன் அமெரிக்காவின் பல்வகைப்பட்ட வரலாறு, புவியியல், மக்கள்தொகை, அரசியல் ஆகியவற்றின் விளைவாகத் தோன்றியவையாகும் — எந்தக் கொள்கை அறிக்கையாலும் அல்ல.” என்று அவர் காத்திரமாகவே தெளிவுபடுத்துகிறார். இங்கு அவர் மாய யதார்த்தத்தை ஸர்ரியலிசத்திலிருந்து கறாராக வேறுபடுத்த முயல்கிறார் என்பது வெளிப்படை.
இரண்டாவதாக நாவல்களினூடே அவர் சென்றடைந்த வரலாற்றைக் குறித்த தரிசனங்கள் வரலாற்றை அணுகுவதில் லத்தீன் அமெரிக்க இலக்கியவாதிகள் சென்ற நூற்றாண்டில் எதிர்கொண்ட சிக்கல்களின் மீதும் அவற்றுக்கான அவர்கள் தேர்வு செய்த தீர்வுகளின் மீதும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். கார்பெண்டியரின் நாவல்களை வரிசையாக வாசித்துச் செல்கையில் வரலாற்றுக் கோட்பாடு ரீதியாக ஆஸ்வால்ட் ஸ்பெங்லரில் தொடங்கி ஹெகலுக்கும் ஹெகலைக் கடந்து பின்-ஹெகலிய அணுகுமுறைகளுக்கும் நீண்டு செல்லும் ஓர் பரிணாமத்தை நாம் அனுமானிக்கிறோம். 1918-இல் ஸ்பெங்லர் தனது பிரசித்தி பெற்ற The Decline of the West புத்தகங்களில் (எப்போதுமே இப்புத்தகம் போர்ஹெஸ் இவரைப் பற்றி எழுதிய ஒரு அபாரமான குறிப்பையும் உடனழைத்து வருகிறது “His biological concept of history is open to debate, but not the splendor of his style”) நாகரிகங்களும் பிறப்பு, வளர்ச்சி, விழ்ச்சி, இறப்பு என்ற தவிர்க்க முடியாத வாழ்வுச் சுழற்சிகளால் நிர்ணயிக்கப்படும் உயரினங்கள் போன்றவை என்றும் அவற்றின் நேர்க்கோட்டு வளர்ச்சி என்பது ஒரு மாயை என்றும் வாதாடினார். அதாவது வரலாறு முன்னேறாது மூர்க்கமாக மீண்டும் மீண்டும் ஒரே நாடகத்தை வெவ்வேறு உடைகளில் அரங்கேற்றுகிறதென்றும், வெவ்வேறு நாகரிகங்கள் என்பதெல்லாம் இம்மூலப் படிவத்தின் வேற்றுமை உருவுகள் மட்டுமே என்றும் இருண்மையான ஒரு வாதத்தையே ஸ்பெங்லர் முன்வைக்கிறார். இது கார்பெண்டியரின் ஆரம்பக்கால படைப்புகளான Kingdom of this World நாவலுக்கும், The War of Time கதைகளுக்கும் ஏன் இடைக்காலப் படைப்பான Explosion in the Cathedral-க்குமே பொருந்தும்.
மேலும் இச்சுழற்சியில் எங்கிருக்கிறான் என்பதைப் பொறுத்து மனிதன் பிரபஞ்சத்தை உணர்ந்துகொள்ளும் விதமும் வேறுபடுகிறது என்றும் அவர் வாதாடினார். சுழற்சியின் ஆரம்பக் கட்டங்களில் மனிதன் தன் பண்பாட்டில் அனிச்சையாக உள்ளார்ந்து இருக்கிறான். பிரபஞ்சத்தையும் அதில் தன் இருப்பையும் விதியாக உணர்கிறான். அவன் கலை வெளிப்பாடுகளும் அப்பண்பாட்டுடனும் அப்பிரபஞ்ச விதியுடனும் ஒருங்கிணைந்து சுதந்திரமாகச் செயல்படுகின்றன. நாகரிகம் வளர வளர அதாவது வரலாற்றுச் சுழற்சியின் இறுதிக்கட்டங்களில் அவன் அவற்றிலிருந்து விலகி, அதை சிந்தனையின் சுயப் பிரதிபலிப்புத் திறனைக் கொண்டு விமர்சிக்கிறான். இப்போது வரலாறு விதியாக உணரப்படாது ஒரு இயந்திரத்தனமான முறைமையாக உணரப்படுகிறது. இதன்படி, ஐரோப்பாவை இச்சக்கரச் சுழற்சியின் இறுதியிலும் லத்தீன் அமெரிக்கா போன்ற நவ-நாகரிகங்களை அதன் ஆரம்பத்திலும் இருப்பதாகக் கார்பெண்டியர் அடையாளப்படுத்திக் கொண்டார். ஐரோப்பிய மனிதன் உலகைச் சிந்திக்கிறான், லத்தீன் அமெரிக்கன் அதை உணர்கிறான் என்றும் இதை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். வரலாற்றுணர்வு என்பது சுழற்சியின் இறுதிக் கட்டங்களில் வருவது; இதனால்தான் Kingdom நாவலில் அச்சுழற்சியை ஏழு தசாப்தங்களாக புரிந்துணர்வில்லாத வெறும் சாட்சியாளனாக மட்டுமே அதன் நாயகன் டி-நோயல் உற்றிருக்கிறான். The War of Time தொகுப்பில் இடம்பெறும் Like the Night கதையில் மூவாயிரம் ஆண்டுகளாக விரியும் கதையின் வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு போர்வீரன் அதே போலிப் பிரச்சாரங்களுக்காக (நாகரிகத்தை நிலைநாட்டுவது/பெண்களைக் காப்பாற்றுவது) போருக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.
ஸ்லென்கரிய வரலாற்றுப் பார்வையைக் கார்பெண்டியர் முற்றிலும் துறக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும் அதன் சட்டகத்துக்குள் அவர் தன் பிற்கால நாவல்களில் (Lost Steps நாவலில் இந்த நிலைமாற்றத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்). ஒரு ஹெகலிய வரலாற்று விழிப்புணர்வைக் கொண்டு வருகிறார். ஆனால் இவ்விழிப்புணர்வால் விடுதலையை ஈட்ட முடிவதில்லை. வரலாறு எனும் சிறையைக் கடக்க இயலாமல் நிரந்திரமாகச் சிக்குண்டிருக்கிறோம் என்ற புரிதல் மட்டுமே எஞ்சுகிறது. ஆனால் Explosion in the Cathedral இறுதியில் இந்தச் சுழற்சி ஒரு வட்டமாக அல்லாது ஒரு சுழலாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதன் மையம் சற்றே உயர்த்தப்படுகிறது, புரட்சிகள் முடிவின்றி தொடர்கின்றன என்றாலும் ஒவ்வொரு புரட்சியும் வரலாற்றின் புதிய தொடக்கமாகவும் அமையலாம் என்ற அர்த்தத்தில். Explosion-க்குப் பிறகு நாம் இந்தச் சுழற்சியை நினைத்து மனச்சோர்வில் ஆழ்வதிலிருந்து இவ்வரலாற்று “நாயகர்கள்” பார்த்து நகைக்கத் தொடங்கிவிட்டோம் (Reasons of State). Concierto Barroco நாவல் இதற்கும் ஒருபடி மேல் சென்று ஹெகலிய முரணியக்கத்தை அரசியலிலிருந்து கலைக்கு மடைமாற்றி, ஹெகலிய மொழியிலேயே கூறுவதானால் ஒரு Aufhebung-இல் ஒரே சமயத்தில் கடந்தகாலத்தைப் பாதுகாத்தும், மறுத்தும் கடக்கவும் செய்கிறது.
இறுதியாக காலத்தைக் கையாளும் விதத்திலும் கார்பெண்டியர் பல சோதனைகளைச் செய்து பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பாத்திரங்கள் பல வருடங்களைக் கணங்களாகவும் கணங்களை யுகங்களாகவும் அனுபவிக்கக் கூடியவர்கள். லத்தீன் அமெரிக்கர்கள் காலப்போக்கை ஐரோப்பியர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடும் வகையில், ஒரே சமயத்தில் பல வரலாற்று யுகங்களில் வசிப்பதைச் சாத்தியப்படுத்தும் விதத்தில் உணர்கிறார்கள் என்பதையும் அவர் ஸ்திரமாக நம்பினார். இந்த யுத்தியும் அவருக்குப் பின்னால் வந்த பூம் எழுத்தாளர்களுக்கு வரலாற்றை அணுகுவதற்கு அனுகூலமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
மூவ்மண்ட் II – நடைமுறையில் கோட்பாடு: கார்பெண்டியரின் நாவல்கள்
Kingdom of this World ஹேடீய புரட்சியை (1791-1804) மையப்படுத்திக் கட்டப்பட்டிருக்கும் நாவல். அதன் பின்புலத்தையும் பின்விளைவுகளையும் (1750-1820) புனைவாக விவரிக்கும் நாவல். நாவலில் பல நிஜ வரலாற்றுப் பாத்திரங்கள் உலாவுகிறார்கள்:
மகாண்டால் (Mackandal) அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்ட ஆப்ரிக்க-அமெரிக்கர்களான, மரூண்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் தலைவர். ஊடூ (voodoo) பில்லி சூனியத்தின் வல்லுநரான ஒரு ஹுங்கானும்கூட (Houngan). 1750-இல் ஹேடீயில் நிகழ்ந்த அடிமைப் புரட்சியின் தலைவர். 1758-இல் அதற்காக சிரச்சேதம் செய்யப்பட்டார்.
பூக்மான் (Bouckman). பாய்ஸ் கைமன் சடங்கின் வழியே 1791-இல் அடிமைகளைப் புரட்சி செய்யத் தூண்டிய ஒரு ஊடூ பாதிரி.
வரலாற்று ஆவணங்களிலிருந்து (களத்தின் நிஜத்தை நிறுவுவதற்காக) புனைவில் கார்பெண்டியர் இப்பாத்திரங்களை மீட்டெடுக்கிறார். இவர்களுடன் டி-நோயல் (Ti-Noel) என்ற சாமான்யனும் நாவலில் அவர்களுக்குச் சாட்சியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறான். நீண்ட ஆயுளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் அவன் பார்வையிலிருந்து கார்பெண்டியரால் ஹேடீயின் எழுபது ஆண்டுக் காலக் கொடூரமான வரலாற்றின் வீச்சை நாவலின் அபாரமாகக் காட்சிப்படுத்த முடிகிறது.
வரலாறு இக்கதையில் நேர்க்கோட்டில் முன்னேறாது சுழற்சிகளில் மீள் நிகழ்கிறது. பிரெஞ்சு காலனிய ஆதிக்கத்தை அடியறுக்க முயலும் மகாண்டாலின் புரட்சி அவனது சிரச்சேதத்தில் முடிவுற்று மீண்டும் கருப்பர்களின் அடிமைத்தனத்தைத் தொடர்கிறது. வூடூ என்ற பழங்குடியர்களின் (மூட) நம்பிக்கை வரலாற்றைப் பாதிக்கும் ஒரு காரணியாகப் புனைவில் நிறுவப்படுகிறது. மகாண்டாலின் உருமாற்றங்கள் அதைக் காண்பவர்களின் நம்பிக்கையின் பின்புலத்தில் (உயிரோடு எரிக்கப்படும்போது ஒரு கொசுவாக மாறி அவன் தப்பித்துவிட்டான் என்று அவர்கள் நம்புகிறார்கள்) நமக்கு அளிக்கப்படுவதால் அதை நாம் லத்தீன் அமெரிக்காவில் நிலவும் அற்புதங்கள் ஊடுருவும் மாய யதார்த்தமாகவே தடைகளின்றி உள்வாங்கிக் கொள்கிறோம். இந்த உருமாற்றம் உண்மையா இல்லையா என்பதைப் பற்றி நாவல் கவலைப்படுவதில்லை. அதை அக்கதையின் மக்கள் நம்பினார்கள், அந்த நம்பிக்கை அவர்களின் புரட்சிக்கு வழிவகுத்தது என்ற வரலாற்றுத் தரவை மட்டுமே அது புனைவாக நமக்கு அளிக்கிறது.
மக்காண்டால் கலவரத்துக்குப் பின் வரலாறு அதன் புதிய சுழற்சியில் (1791) பூக்மன் என்பவன் மாம்போ நடனச் சடங்கொன்றை முடித்துவிட்டு ஒரு புதிய புரட்சியைத் தொடங்குவதுடன் தொடர்கிறது. இதுவே ஹேடீயுன் சுதந்திரத்துக்கு வழிவகுத்து ஆன்ரீ க்ரிஸ்டோஃபை ஆட்சி பீடத்தில் அமர்த்துகிறது. அவனது ஆட்சி மூர்க்கமான ஒரு கொடுங்கோலாட்சியாக மாறுவதுடன் இந்த வரலாற்றுச் சுழற்சி முடிவுக்கு வருகிறது. அதன் பின் மீண்டும் ஒரு புதிய தொடக்கம், க்ரிஸ்டோஃப் ஆட்சியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுகிறான், குடியரசு நிறுவப்படுகிறது, அதில் அதிகாரத்தில் இருக்கும் முலாட்டோ மேட்டுக்குடிகள் இப்போது கருப்பினத்தவர்களை முந்தைய அரசைக் காட்டிலும் மூர்க்கமாக அடக்கி ஒடுக்குகிறார்கள். சொர்க்கத்தின் சாம்ராஜ்யத்தை நிறுவப் பிரயத்தனப்பட்ட புரட்சி கொடூரங்கள் நீடிக்கும் புவியின் மற்றொரு சாம்ராஜ்யத்தையே நிறுவுகிறது. அதை உணர்ந்து கொண்டு அதற்கு எதிராக அவன் போராட முடிவெடுக்கும் தருணத்தில், வரலாறும் இயற்கையும் பிணையும் ஒரு உருவகத்தில், பச்சை நிறத்தில் திரண்டு வரும் பெரும் புயலில் அவன் மறைகிறான். நூற்றாண்டு காலத் தனிமை நாவலின் இறுதியில் வரும், நாவலை மீண்டும் அதன் முதல் வரிக்கே இட்டுச் செல்லும் அந்த பெருங்காற்றை நினைத்துக் கொண்டேன்.
War of Time: ஐந்து கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. காலமே இக்கதைகளின் மையம் என்பதுபோல் புனைவில் காலத்தைக் கையாளும் விதத்தில் கார்பெண்டியர் பல சோதனைகளைச் செய்து பார்க்கிறார். வரலாற்றுக் காலத்தைக் காட்டிலும் அகவயமான காலத்தையே கதைகள் முன்வைக்கின்றன.
Journey Back to the Source: கதையின் தலைப்பை கார்பெண்டியரின் கலைக்கான இலக்கு வாசகமாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். சினிமாவில் பிளாஷ்பாக் காட்சிக்கு முன்னே ரீல் பின்னால் சுற்றுவது போல் (கதையில் பிணத்தின் தலைமாட்டில் வைக்கப்பட்டிருக்கும் மெழுகுவர்த்தி உருகுவதற்குப் பதிலாக மீண்டும் முழுதாகி, தனது சுடரை அணைத்துக் கொள்கிறது) காண்பிப்பார்களே அதே போல் இக்கதையும் ஆரம்பத்தை நோக்கி படிப்படியாகச் செல்கிறது. ஒரு மாளிகை வீடு தகர்க்கப்படுவதை ஒரு வயதான கருப்பர் பார்த்து கொண்டிருக்கிறார். அவருக்கு மந்திர சக்திகளும் இருக்கக்கூடும் என்பதை நாம் சந்தேகிக்கும் வகையில் கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வீடு சிதைகையில் காலத்தின் திசை திருப்பப்பட்டு, நமக்கு டான் மார்சியாலின் வாழ்வு தலைகீழாக அளிக்கப்படுகிறது: அவரது இறப்பிலும் மூப்பிலும் தொடங்கி நடுவயதினூடே அவரது இளமைக்காலத்து பாலியல் விழிப்பிற்கும், அதையும் தாண்டி குழந்தைப் பருவத்தினூடே கருவில் அவரது இருப்பிற்கும், நாம் இட்டுச் செல்லப்படுகிறோம். தனிப்பட்ட வாழ்வின் தலைகீழ் பயணத்தை உள்வாங்கிக் கொள்கையில் நாம் கியூபாவின் காலனிய வரலாற்றையும் சுதந்திரத்திலிருந்து, அடிமைப்பட்டிருக்கும் காலம் வரையிலும் தலைகீழாக உள்வாங்கிக் கொள்கிறோம். இவ்வாறு பின்நோக்குகையில் வாழ்வுக்கு நாம் அளித்த அதன் நேர்கோட்டு அர்த்தங்களுக்கு எதிராகப் பிற அர்த்தங்களையும் நம்மால் தருவித்துக் கொள்ள முடியும் என்று நான் அர்த்தப்படுத்திக் கொண்டேன். கருவின் நீர்மையில் காலமும் ஜனித்து கிளைபிரியும் பாதைகள் கொண்ட தோட்டமாக உருப்பெறக் காத்திருக்கும் ஒரு உறைந்த படிமம் மின்னி மறைந்தது. மரணப் படுக்கையில் இருக்கும் அர்டீமியோ க்ருஸின் வாழ்வைப் பன்னிரெண்டு கணங்களில் நமக்குக் காட்சிப்படுத்தும் கார்லோஸ் ஃபியூண்டஸ்சின் நாவலும் நினைவுக்கு வந்தது. இங்கிருந்து நாம் Lost Steps-இன் நாயகனின் ஆதார கனத்தை நோக்கிய பயணத்தையும் யோசித்துப் பார்க்கலாம்.
The Highroad of Saint James ப்ளாண்டர்ஸிலிருந்து சாண்டியாகோ டே கம்போஸ்டெல்லாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹ்வான் ரொமீரோவை பின்தொடர்ந்து பதினாறாம் நூற்றாண்டில் ஃபிளாண்டர்ஸ், ஸ்பெயின், கியூபா என்று பல இடங்களுக்குச் செல்கிறது, அவற்றில் தேவைக்கேற்ப ஹ்வான் பல ஆளுமைகளைத் தருவித்துக் கொள்கிறான். கொள்ளைநோயிலிருந்து தப்பிப்பதற்காக முதலில் காம்போஸ்டெல்லாவிற்குப் பயணிக்கும் யாத்திரிகனாக மூன்றாம் அத்தியாயத்தில் உருமாறும் ஹுவான் ஐந்தாவது அத்தியாயத்தில் அப்பயணத்தை முடித்துவிட்டவர்களுக்கு அளிக்கப்படும் உபசாரங்களை அனுபவிப்பதற்காக யாத்திரையை முடித்துவிட்டதாகப் பாவனை செய்கிறான். கியூபாவின் மரூண் சமுகத்தில் தன் அந்தஸ்தை உயர்த்திக்கொள்வதற்காக மாணவ வேடம் தரிக்கிறான். கானரி தீவுகளின் மீண்டும் யாத்திரையை மேற்கொள்ள யத்தனிக்கிறான். ஆனால் பர்கோஸ் அடைந்தவுடன் வெஸ்ட் இந்திய ஹ்வானாக மாறிவிடுகிறான். ஆனால் இவ்வளவு ஆளுமைகளைத் தருவித்துக் கொண்ட அவனுக்கு தன் ஆளுமையைப் பற்றிய சுய பிரக்ஞை துளிகூட இல்லை. இதனால்தான் கதையின் நடுவில் யாத்திரி ஹ்வானும் வெஸ்ட் இந்திய ஹ்வானும் மதுசாலையில் சந்தித்துக்கொள்கையில் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவோ அடையாளப்படுத்திக் கொள்ளவோ முடிவதில்லை. அதேபோல் முரசடித்து உச்சாடனம் செய்யும் மரூண்களை நொந்துகொள்ளும் மாணவனாகப் பாவித்துக்கொள்ளும் ஹுவான் தானே கொட்டடிப்பவன் என்ற உண்மையை மறந்துவிடுகிறான். மதம், ஓவியம், கட்டிடக்கலை, வணிகம், வரலாறு என்று பல உள்ளடுக்குகளைக் கொண்ட சுய அடையாளத்தையும் வரலாற்று சுழற்சியையும் அதிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியின் பயனின்மையையும் பிணைக்கும் அபாரமான கதை.
இன்னும் ஒரேயொரு கதையைப் பற்றி பேசிவிட்டு இத்தொகுப்பைப் பற்றிய விவரணையை முடித்துக் கொள்கிறேன்.
Like the Night கதையில் அதே காட்சி வரலாற்றின் வெவ்வேறு காலகட்டத்தின் பின்னணியில் புனைவாக்கப்படுகிறது. ஒரு கிரேக்கப் போர்வீரன் டிராய்க்கும், ஒரு ஹிஸ்பானிய வீரன் அமெரிக்காவுக்கும், ஒரு பிரெஞ்சு வீரன் க்ரூஸேடுகளில் பங்கேற்பதற்காகவும், இருபதாம் நூற்றாண்டில் ஒரு ராணுவ வீரன் உலகப் போரில் பங்கேற்பதற்காகவும் மேற்கொள்ளும் பிரயாண ஆயத்தங்களைக் கதை அடுத்தடுத்து காட்சிப்படுத்துகிறது. நால்வரும் தங்கள் இணைகளைப் பிரியவிருக்கிறார்கள், அதே பிரச்சாரத்தால் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். படிப்படியாக போருக்காக முன்மொழியப்படும் காரணங்களில் நம்பிக்கை இழக்கிறார்கள். மூவாயிரம் வருடங்களாகப் போருக்குப் புறப்படும் ஒரு வீரனின் நிலை மாறவே இல்லை என்பதையும் எல்லாப் போர்களும் ஒரே போரே என்று கொடூரமான உண்மையையும் தாட்சண்ணியமின்றி நிறுவும் மிக ஸ்ப்லெங்லரியத்தனமான கதை. வரலாறு என்ற இருட்டில் அனைத்துமே சமம் என்று கசப்பை விட்டுச் செல்லும் அழகான கதை.
The Lost Steps (1953) கார்பெண்டியரின் படைப்புகளிலேயே மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கையில் பணத் தட்டுப்பாட்டையும் மீறி புதிதாக வாங்கிய என் முதல் கார்பெண்டியர் நாவலும்கூட. அதன் பெயரில்லா இசை வல்லுநர் நாயகன் பல்கலையின் பேரில் சில புராதன இசைக்கருவிகளை காட்டிலிருந்து மீட்டு வருவதற்காக நியூ யார்க்கிலிருந்து கீழை அமெரிக்கா சென்று அங்கே ஒரிநோகோ நதியின் எதிர்திசையில் பயணித்து வெனுசுவேலாவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் செல்கிறான். வெளியில் பயணிக்கையில் அவன் வரலாற்று யுகங்களைத் தலைகீழ் வரிசையில் பயணிக்கிறான். அதாவது நியூ யார்க்கின் நவீன நகர நாகரிகத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு கட்டிடங்களை நினைவுகூரும் காலனிய யுகத்தினூடே பதினாறாம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் கைப்பற்றுகை யுகத்திற்கும், அதிலிருந்து கொலம்பஸின் வருகைக்கு முந்தைய பழங்குடிச் சமூகத்திற்கும், அதிலிருந்து மறைவாக இருக்கும் பழங்கற்காலக் குடியிருப்புகளுக்கும் பயணித்து இறுதியில் “படைத்தலின் நானகாம் நாள்” என்று அழைக்கும் மனிதனின் தோற்றத்துக்கு முந்தைய ஒரு புவியியல் காலத்தை சென்றடைகிறான். அந்தக் காலத்தை இன்னமும் வரலாற்றால் கலங்கப்படாத தூய காலமாக அவன் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். அதாவது காலத்தாலும் வரலாற்றலும் அழிக்கப்பட்ட மானுடத்தின் தொலைந்த காலடிகளை மீட்டெடுப்பதன் மூலம் ஒரு ஆதர்ச காலத்துக்கு நாம் பின்செல்ல முடியும் என்று அவன் நம்புகிறான்.
Santa Mónica de los Venados பழங்குடியில் வாழ்வும், சமூகமும், இயற்கையும், இல்லறமும் ஒருங்கிணைந்திருப்பது அவனது க்ரியா சக்தியை ஊக்குவித்து அவன் பாதியிலேயே கைவிட்ட இசைப்படைப்பை முடிக்கத் தூண்டுகிறது. ஆனால் அதற்குத் தேவையான கச்சா பொருட்கள் அவன் ஆர்வத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் விரைவிலேயே தீர்ந்துவிடுகிறது. மேலும் திருமணமாகிவிட்டாலும் அங்கே நவீன யுகத்துடன் முற்றிலும் தொடர்பற்று அவன் பழங்குடி மனம் (என்று கற்பனை செய்து கொள்ளும்) கொண்ட ரொசாரியோ என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான்.
“எதையுமே சொந்தம் கொண்டாடாது, நேற்றையதை பொதியாய் பின்னால் இழுத்து வராது, நாளையதை பற்றி சிந்தனை இல்லாது, இந்த நிகழில் வாழ்தல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது” என்று அவளைப் பற்றி அவன் ஒருமுறை கூறுகிறான். எனினும் இதிலிருந்து ஒரு கற்பிதத்தை அவன் உள்வாங்கிக் கொள்வதில்லை. அவன் காலத்தில் பின்நோக்கி தோற்றுவாய் கணத்திற்குப் பயணித்தாக வேண்டும். ஆனால் ரொஸாரியோவுடன் பரிச்சயம் ஏற்படுகையில் அவளும் தன்னுடன் பயணிப்பாள் என்று நம்புகிறான், அவள் ஏற்கனவே அக்கணத்தில் நிரந்தரமாக இருந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ளாமல்.
மனைவியிடம் முறையாக விவாகரத்து வாங்க வேண்டும் என்ற குற்றவுணர்வும் அவனை சஞ்சலப்படுத்துகிறது. கைப்பற்றி பழங்குடி இசைக்கருவிகளை வேறு பல்கலைக்கு அவன் ஒப்படைத்தாக வேண்டும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அனைத்தையும் ஒரே மூச்சில் முடித்துவிட்டு திரும்பிவிட வேண்டும் என்ற முனைப்போடு அவன் நகரத்துக்குத் திரும்புகிறான். இங்கு ரொஸாரியோவின் மேன்மை நம்மிடம் நிறுவுவதற்காக மனைவியையும், காதலியையும் அவன் வலிந்து மட்டம் தட்டும் இடங்கள் கிட்டத்தட்ட பெண்வெறுப்பை நெருங்குகிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
ஆதர்ச இடத்தை அடைந்து அங்கேயே இருக்கப்போவதாக முடிவு செய்த பிறகு அவன் ஏன் திரும்புகிறான். அவன் நம்மிடம் சொல்லும் சப்பைக் காரணங்களுக்காகவா? இல்லை, திரும்புவதற்கு முன்னால் “ஒருக்கால் எங்கேயோ ஒரு இளைஞன் என் செய்திக்காக காத்திருக்கிறானோ என்னவோ; என் குரலின் வழியே விடுதலைக்கான பாதையைச் சென்றடவதற்கான திடத்தை தன்னுள்ளே கண்டறிவதற்காக.” என்று தனக்குத்தானே கூறிக்கொள்கிறான். தாமஸ் மோரின் யூடோபியாவை நினைத்துக் கொள்கிறோம்: “நீங்களும் என்னுடன் யூடோபியாவுக்கு வந்திருந்தீர்களானால் உங்கள் கண்களாலேயே பார்த்திருக்கக் கூடும்… ஐந்து வருடங்களுக்கு மேலாக நான் அங்கிருந்தேன், அதை விட்டுவிட்டு வந்திருக்கவே மாட்டேன், மற்றவர்களுக்கும் அந்த புதிய உலகத்தைப் பற்றித் தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் எனக்கிருந்திருக்காவிட்டால்… ” இதுவே கதைசொல்லியின் பிரச்சினை. ப்ரொமீதியஸாக மாறிய பிறகு மீண்டும் ஆதாமாக ஆக முடியாது. ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறிய பிறகு அதனுள் மீண்டும் நுழைய முடியாது. துயர்நாடகத்துக்குறிய துயரத்துடன், ஒரு பிற்கால ஆர்ஃபியஸைப் போல் “ஒரு அதிசயம் மீண்டும் நிகழலாம் என்று நினைத்து ஒரு நாள் மன்னிக்க முடியாத ஒரு தவறைச் செய்தேன், திரும்பிச் சென்றேன். ஆனால் திரும்பி வந்தபோது சூழல் மாறிவிட்டதையும், அடையாளங்கள் அழிக்கப்பட்டு, வழிக்காட்டிகளின் முகங்கள் புதிதாக இருந்ததையும் கண்டேன்….”, என்று அவன் புலம்புகிறான். வரலாற்றுத் தன்னுணர்வு வந்துவிட்ட பிறகு அதை மறந்துவிட முடியாது. திரும்பமுடியாத ஆதர்சம் திரும்ப வேண்டிய நகரம் இம்முரண்களை சமரசபடுத்திக் கொண்டிருப்பதே ஹெகலிய வரலாற்றுத் தன்னுணர்வின் சாபம் (பலம்?). ஆனால், திரும்ப முடியாததை உணர்ந்திருப்பது ஒரு விதத்தில் ஸ்ப்லெங்கரிய துயரமும்கூட.
The Lost Steps நாவல் வெளியினூடே பயணித்து நகரத்தின் காலத்திலிருந்து ஒரு புராதனக் காலமின்மைக்குத் தப்பித்துச் செல்லும் சாத்தியத்தை ஆராய்ந்தது என்று கூறினால் The Chase குறுநாவல் அந்நகரத்தை ஒரு வெளியேறுவதற்கான சாத்தியங்கள் இல்லாத ஒரு லாப்ரிந்த்தாக, தப்பிக்கவியலா ஒரு சிறையாகச் சித்தரிக்கிறது. எவரிடமிருந்தோ தப்பியோடும் ஒரு பெயரில்லா ஆசாமி ஒரு இசைக்கூடத்திற்குள் ஓடி ஒளிந்துகொள்கிறான். உள்ளே செல்வதற்கு முன்னால் அங்கு டிக்கட் விற்றுக் கொண்டிருக்கும் மாணவனிடம் ஒரு கள்ளப் பணத்தாளை எறிந்துவிட்டு உள்ளே ஒடுகிறான். பீடோவணின் எரோய்க்கா சிம்ஃபொனி (Eroica) ஒலிக்கத் தொடங்குகிறது. அதன் 46 நிமிட கால நிமிடத்திற்குள் கார்பெண்டியர் தன் கதையை முடித்தாக வேண்டும் என்பது அதன் விறுவிறுப்பையும் குவியத்தையும் அதிகரிக்கிறது. தப்பி ஓடுபவன் கட்டிடக்கலை நிபுணன், டிக்கட் விற்பவனோ இசையியலில் நாட்டமுள்ளவன். டிக்கட் கூண்டில் பீடோவணின் சரிதையை வாசித்துக் கொண்டிருப்பவன் (கார்பெண்டியர் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவர். இசை ஆராய்சியாளரும் கூட; அவரது Music in Cuba ஆராய்ச்சி நூல் பிரசித்தி பெற்றது என்பதெல்லம் சுவாரசியமான உபரித்தகவல்கள்.) சிம்ஃபொனி ஒலிக்கும் அந்த 46 நிமிடங்களில் கதை இவர்கள் இருவரின் நினைவுகளாக விரிகிறது, சிம்ஃபொனி முடிகையில் துரத்தப்படுபவன் சுட்டுக் கொல்லப்படுகிறான், ஆனால் அவன் எதிர்ப்பார்த்தவர்களால் அல்ல. வரலாறு இக்கதையில் ஒரு எலிப்பொறியை போல் உருவகிக்கப்படுகிறது. தப்பி ஓடுபவன் உண்மையில் தன் சகாக்களுக்கு துரோகம் இழைத்த ஒரு Rat. தவிர்க்க இயலாத வகையில் அவன் பொறியில் சிக்கி உயிர் துறக்கிறான். கார்பெண்டியர், கதை மச்சாடோவின் வீழ்ச்சிக்கு பிறகு படிஸ்டா ஆட்சி செய்த ஹவானாவில் நிகழ்ந்த ஒரு நிஜ சம்பவமொன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது என்று கூறியிருக்கிறார். ஹவானா பல்கலையில் ஏய்ஷிலஸ்சின் Coeforas நாடகம் (ஓரஸ்ட்டியா மும்மையின் இரண்டாவது நாடகம்) நிகழ்ந்து கொண்டிருக்கையில், க்ளைடம்நிஸ்ட்ரா சாவுக் காட்சியின்போது ஒரு துப்பாக்கிக் குண்டு வெடிக்கிறது. தான் செய்துகொண்டிருந்த ஒலிப்பொறியியல் வேலையை நிறுத்திவிட்டு கார்பெண்டியர் வெளியே வருகிறார். போரியாஸ் முற்றத்தில் மாஃபியாக் குழுவின் அடியாளொருவன் குண்டடிபட்டு கீழே விழுவதை அவர் காண நேரிடுகிறது. இங்கேயும் தரவிலிருந்தே புனைவு கட்டமைக்கப்படுகிறது. இரண்டு குரல்களில் தன்மையிலும் ஆசிரியரின் குரலில் படர்க்கையிலும் கதை கூறப்படுவதால் அதற்கொரு சிதறுண்ட ஃபாக்னரியத் தன்மையும் இருப்பதாக எனக்குப் பட்டது. இந்த துரத்தல் படத்துக்குப் பின்னணி இசையாக எரோய்கா சிம்ஃபொனி ஒலிப்பது தற்செயல் அல்ல. அதை பீடோவன் முதலில் நெப்போலியனுக்கே சமர்ப்பித்தார். படைப்பின் முதல் தலைப்பு “Heroic” — அதாவது மக்களின் போராட்டத்தையும், சுதந்திரத்திற்கான விழைவையும் வழிநடத்தக்கூடிய நாயகன் நெப்போலியேனே என்று அவர் நம்பியதால். ஆனால் நெப்போலியன் அந்த ஜனநாயக ஆதர்சங்களைக் கைவிட்டு பேரரசனாக அரியாசனத்தில் அமர்த்திக்கொண்டதைக் கண்டு வெறுப்புற்று அந்தச் சமர்ப்பணத்தை அடித்துத் திருத்துகையில் படைப்பின் தலைப்புப் பக்கத்தில் சில துளைகளையும் அவர் விட்டுச் சென்றார். கதையின் நாயகனும் போராட்டத்தில் தொடங்கி அப்போராட்டத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறான். ஆனால் இசையைப் பொறுத்தவரையில் அவனது பரிதாபகரமான ஓட்டத்துக்கும் கேடுகெட்ட மரணத்துக்கும் எதிராக அதன் இரண்டாவது மூவ்மெண்டின் சாவுஊர்வல இசையையும் மீறி ஏரோய்காவின் கருப்பொருட்கள் கம்பீரமாக முரணொலிக்கின்றன.
Explosion in the cathedral ப்ரெஞ்சு புரட்சியுயையும் கரீபியத் தீவுகளில் அதன் தாக்கத்தையும் வரலாற்றுப் பின்புலமாக வைத்துப் புனையப்பட்ட நாவல். பின்புலம் என்று சொல்வதைவிட புரட்சியே இந்நாவலின் பிரதான நாயகன் என்று கூறத் தோன்றுகிறது. இதிலும் ஆதர்சம்-> போரட்டம் -> புதிய ஆட்சி -> ஆதர்சங்களின் துறத்தல் -> வன்முறை –> மீண்டும் ஆதர்சம் –>போராட்டம் இத்யாதி என்ற தவிர்க்க இயலாத ஸ்ப்லென்கரிய வரலாற்று சுழற்சி வருகிறது. ஆனால் இதில் கதை மாந்தர்கள் வரலாற்றைக் கையாலாகாத சாட்சியாளார்களாகவோ, அல்லது அதிலிருந்து தப்பி ஓடுபவர்களாகவோ அல்லாது அதைப் படைப்பவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ஹெகலிய வரலாற்றுணர்வு ஸ்ப்லெங்கரிய சட்டகத்துக்குள் புகுத்தப்படுகிறது என்று முன்பு கூறியது இந்த அர்த்தத்தில்தான். நாவலில் முக்கியமான சம்பவங்கள் நிகழும் அத்தியாயங்களில் கோயாவின் பிரசித்தி பெற்ற ஓவிய வரிசைகளான Los Desastres de la Guerra மற்றும் Los Caprichos வரிசைகளில் இடம் பெறும் படங்களின் தலைப்புகள் மேற்கோள்களாக அச்சமபவங்களை கட்டியம்கூறி விமர்சிக்கின்றன. (உதாரணமாக The Sleep of Reason Produces Monsters )
பணக்காரத் தந்தையின் சாவுக்குப் பின் ஹவானாவில் பொஹீமியர்களாக வாழும் கார்லோஸ், அவன் தமக்கை, சோஃபியா மற்றும் அவர்களின் வளர்ப்புச் சகோதரன் எஸ்தாபனின் வாழ்வுகளுக்குள் தீடீரென்று அறிவுப்புகளின்றி விக்டர் ஹூயூஸ் தன் அறிவொளிக்கால சித்தாந்தங்களையும் புரட்சி ஆதர்சங்களையும் வலுக்கட்டாயமாக எடுத்து வருகிறான். இந்த விக்டர் ஹூயூஸ் ஒரு நிஜ வரலாற்று ஆளூமை, குவாடலூபேயின் ராபஸ்பியர் என்று அறியப்பட்டவன். விகடர் ஒரு ஃப்ரீமேஸன் என்பதால் ஹவானாவில் ஆட்சியில் இருப்பவர்கள் அவனை அபாயகரமானவன் என்று சந்தேகிக்கிறார்கள். இதனால் விக்டர் ஹவானவைத் துறக்க நேரிடுகிறது. அவனை எஸ்தபான் பின்தொடர்கிறான். இங்கிருந்து நாவல் எஸ்தபானின் பார்வையில் மொழியப்படுகிறது.
விக்டர் குவாடலூபேயை ஆங்கிலேய ஆதிக்கத்திலுருந்து விடுவித்து அடிமைகளுக்கு விடுதலை அளிக்கிறான். அதை நிர்வகிக்கையில் நடைமுறை யதார்த்தத்தின் பேரில் சர்வாதிகரித்தனத்தை நோக்கிச் செல்கிறான். நெப்போலியனின் வார்த்தைகளை அவன் எஸ்தபானுக்கு முன்மொழிகிறான்: ‘புரட்சியின் நவிற்சியை நாம் முடித்துவிட்டோம். இப்போது நாம் அதன் வரலாற்றைத் தொடங்குகையில், அதன் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் நிதர்சமானதையும் நடைமுறைக்குச் சாத்தியமானதையும் மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்…”
நாவலை இப்படி சுருக்கிக் கொண்டேன். ஒருபுறம் அடிமைத்தனதை ஒழித்த Decree of 16 Pluviôse of Year II (February 4, 1794)ஆணை. மறுபுறம் அதை மீண்டும் பிரெஞ்சு காலனிகளில் நிறுவிய The Law of the 30th Floréal, Year X ஆணை (May 20, 1802), இவை இரண்டுக்கும் இடையே புரட்சியின் முரண்கள் உறையும், தேவாலயங்களை ஒழித்த புரட்சியின் தேவாலயமாக உயரும் கீயடீன் (Guillotine). ஃப்ரான்ஸ், குவாடலூபே, பிரெஞ்சு கயானா என்று பல்வேறு நாடகங்களில் இத்துயர் நாடகம் அதன் மேடையில் அரங்கேற்றப்படுகிறது. எலியட்டின் ஹாலோ மென் கவிதையின் வரிகள் நினைவுக்கு வந்தன.
Between the idea And the reality Between the motion And the act Falls the Shadow
கீயடீனின் நிழலை நாவல் முழுதும் காட்சி ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் பதறவைக்கும் வகையில் படரச் செய்ததே நாவலின் வெற்றி என்று வாதிடலாம்.
எஸ்தபான் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்பது குறிப்பிடத்தக்கது, அவனே நாவலின் பல விழிப்புணர்வுகளுக்கிடையே மத்யஸ்தம் செய்பவன். விகடர் புரட்சியின் செயல்வீரன் என்றால் எஸ்தபானே அதன் மனச்சாட்சி. புரட்சிகளால் சலிப்புற்று ஹவானா திரும்புகையில் அவன் “மிக அழகாக இருக்கும் வார்த்தைகளைப் பற்றி நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும்; அவை உருவாக்கும் ஆதர்சமான உலகங்களைப் பற்றியும். வார்த்தைகளின் மிகைக்கு நம் காலம் இரையாகிவிட்டது. ஒருவன் தன்னுள் கணடடையும் நிலத்தைத் தவிர உறுதியளிக்கப்பட்ட நிலம் என்ற வேறொன்று இல்லை” என்று ஸோஃபியாவிடம் கூறுகிறான்.
அப்போது ஸோஃபியா?
அவளே புரட்சியின் க்ரியை; அதன் Muse. என்று ஃபுயெண்டஸ் ஒருமுறை அவளை வரையறுத்தார். விக்டர் எஸ்தபான் இருவரின் காதலியும்கூட. ஃப்ரீமேஸன், அவர்களுக்கு எதிரானவன், ஜெகோபின், டேரக்டரியின் முகவர், கான்ஸலேட்டின் முகவர், ஆதர்சவாதி, நடைமுறைவாதி, என்று அவன் பூணும் பல முகமூடிகளைக் களைத்து அவற்றுக்குப் பின்னே ஒரே சமயத்தில் ஆஹிர்மானாகவும் ஆர்முஸ்சாகவும் இருக்கவல்ல ஒரு பச்சோந்தியாக இருப்பதை வெளிப்படுத்துபவளும் கூட. புரட்சியின் அத்தனை குறைகளையும் மீறி பேராட்ட உணர்வு (Rebellion என்று கமூ வரையறுத்தது) தன்னையே புதுப்பித்துக் கொள்ளும் சுனை அவள். ஸ்பெங்லரின் வரலாற்று சூறாவளிகள் சுழலும் பாலைவனத்தில் துளிர்க்கும் ஹெகலிய விழிப்புணர்வெனும் சிசிபியப் புல். புரட்சிகள் தோற்றுக் கொண்டே இருக்கும் என்பது நிதர்சனம். இதற்கெதிராக அவள் “நாம் அங்கு செல்வோம்… சண்டையிடுவோம்… தெருக்களில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்காக. நாம் எதையாவது செய்தாக வேண்டும்! எதையாவது…” என்று எஸ்தாபனை ஊக்குவித்து அவனுடன் களத்தில் இறங்குகிறாள் அதில் மரிவதற்காக.
1967-இல் வர்காஸ் யோஸாவும் கார்லோஸ் ஃபியுயெண்டஸும் ஒரு டஜன் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் முன் ஒரு கோரிக்கையை வைத்தார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் தேசத்தின் பிரியமான சர்வாதிகாரியைப் பற்றி ஐம்பது பக்கங்களுக்குள் ஒரு கதை எழுத வேண்டும். கதைகள் ”Los Padres de las Patrias” (தாய்நாடுகளின் பிதாமகர்கள்) என்ற தலைப்பில் வெளியாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல காரணங்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப் படவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக மூன்று ஆசிரியர்கள் இந்தத் தூண்டுதலின் பேரில் சர்வாதிகாரிகளைப் பற்றி அபாரமான நாவல்களை எழுதினார்கள்: கார்ஸியா மார்கெஸ் (Autumn of the Patriarch), அகுஸ்டோ பஸ்தாஸ் ரோவா (I the Supreme), கார்பெண்டியர் (Reasons of State).
Reasons of State-இல் கார்பெண்டியர் வெனிசுயலாவின் அண்டோனியோ குஸ்மான் பளான்கோவையும் குவாதமாலாவின் மனுயெல் எஸ்ட்ராடா கப்ரேராவையும் கலந்து ஒரு புனைவுச் சர்வாதிகாரியை உருவாக்கினார். பருமனான, சிற்றின்பங்களில் நாட்டமுள்ள, ப்ரெஞ்ச் தொடர்களை அடிக்கடி பிரயோகப்படுத்தும் ஒரு நையாண்டி பாத்திரம். ஆபராவை முணுமுணுத்துக் கொண்டே போராட்டங்களை மூர்க்கமாக நசுக்கக் கூடியவன்.
அரசியலை ஸ்ப்லெங்கரிய சுழற்சியாக உருவகிக்கும் நாவல். கொடுங்கோலன் வீழ்கிறான், ஜனநாயகத்தின் பெயரில் இன்னொருவன் ஆட்சிக்கு வருகிறன், அவனுக்கும் கொடுங்கோலனுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை, வன்மூறை புதிய கொடுங்கோலன் இத்யாதி… ஆனால் இந்த நாவலில் அங்கதத்தின் தொலைவுபடுத்தலைக் கார்பெண்டியர் கொண்டுவருகிறார் – கொடுங்கோலன்தான், அவன் செயல்கள் கொடூரமானவைதான் ஆனால் அவனை ஒரு கார்ட்டூன் பாத்திரமாகவே நாம் உணர்கிறோம் அவனது தம்பத்தட்டத்தை எள்ளிச் சிரிக்க்கப் பழகுகிறோம். இது ஒருவகையில் அந்தக் கொடுரங்களுக்கான நம் எதிர்வினையை மொண்ணைப் படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அரசியல் பிரச்சார மொழியின் ஊதிப்பெருக்கப்பட்ட பலூன்களிலிருந்து இவவங்கத மொழி காற்றை வெளியேற்றுகிறது. இதுவரை படித்திருந்த, மேலே விவரிக்கபட்ட நாவல்களிருந்து அதன் நடையால் இந்நாவல் எனக்கு மிக வித்தியாசமான வாசிப்பனுபவமாக இருந்தது. Explosion in the cathedral நாவலில் வரும் கோயாவின் ஒவியத் தலைப்புகளைப் போல் இங்கு அறிவொளி காலத்தின் அடிப்படைப் படைப்பான தேகார்ட்டின் (Descartes) Discourse on the Method-இன் வரிகள் மேற்கோள்களாக வருகின்றன. மேற்கோள்களும் அத்தியாயங்களும், ஒன்றையொன்று நையாண்டி செய்துகொள்ளும் வகையில் முரணிசைக்கின்றன. தர்க்கம் அறிவொளிகாலத்து அறிஞர்கள் முற்றிலும் நிராகரிக்கக் கூடிய தர்க்கமற்ற செயல்களை நியாயப்படுத்துவதற்காகவும் பயன்படலாம் என்பதே இங்கு முரண்.
இறுதியாக Concierto Barroco. இதில் கார்பெண்டியர் ஒரு பாயச்சலை நிகழ்த்துகிறார். அதுவரையில் ஸ்ப்லெங்கரிய சுழற்சியை மையப்படுத்தி நாவல்களைக் கட்டமைத்தவர் இதில் ஹெகலிய முரணியக்கக் கோட்பாட்டைப் பண்பாட்டுக் களத்தில் புனைந்து பார்க்கிறார். டாம் ஸ்டாப்பார்டின் Travesties நாடகம், அல்வாரோ என்ரீகேயின் நாவல் Sudden Death போன்ற படைப்புகளை நினைவுபடுத்திய வினோதமான வரலாற்றுப் பாத்திரக் கலவை. பெயரில்லா மெக்ஸிக கனவான் ஒருவன் ஃபிலோமினோ என்ற தன் கியூப வேலைக்காரனுடன் பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பாவிற்குப் பயணிக்கிறான். (கனவான் ஐரோப்பாவின் மகோன்னதங்களைப் புத்தகங்கள் வழியே அறிந்துகொண்டவர். அவற்றை நிஜத்தில் கண்டு மரியாதை செலுத்த பயணம் மேற்கொள்கிறார்.) அதுவரையில் சப்பையாக இருக்கும் பயணம் அவர்கள் வெனிஸ் சென்றவுடன் களை கட்டுகிறது அங்கு ஒரு க்ரிஸ்த்மஸ் கார்னிவல் கொண்டாட்டத்தில் (கனவான் மாக்டேசூமாவாவின் வேடத்திலிருக்கிறார்) இருவரும் பரோக் இசைப் படைப்பாளிகளான விவால்டி, ஹாண்டல், மற்றும் ஸ்கார்லட்டியைச் சந்திக்கிறார்கள். கார்னிவலில் சலிப்புற்ற இந்த ஐவர் குழு Ospedale della Pieta-க்குச் சற்று நேரம் இசையில் ஈடுபடுவதற்காகச் செல்கிறது விவால்டியிடம் பயிலும் அனாதைப் பெண்கள் ஆர்கெஸ்ட்ராவிலும் ஹாண்டல் ஆர்கனிலும் ஸ்கார்லட்டீ ஹார்ப்சிகார்டிலும் பங்கேற்கும் ஒரு கிராண்ட் கண்செர்ட்டோ இசைத்து முடிந்தபின் ஃபிலோமினோ ஒரு புராதன பாக்கஸ் என்ற கிரேக்க கடவுளுக்கான கூத்தொன்றில் தேவாலயத்தைச் சுற்றிப் பாடி ஆடுகிறான்.
கனவான் புது உலகத்தின் ஆச்சரியங்களையும் வரலாற்றையும் (அஸ்டக் சாம்ராஜயம், குறிப்பாக தான் வேடம்பூண்டிருக்கும் அரசன் மாக்டேசூமாவை பற்றி) பற்றிக் கதைக்கிறான். விவால்டிக்கு வரலாற்றைக் கலையாக மற்றுவதற்கான உந்துதலாக இது அமைகிறது. மறுநாள் எஜமானும் ஆண்டையும் விவால்டியின் மாண்டேசூமா ஆபராவைப் பார்ப்பதற்காக டியட்ரோவுக்குச் செல்கிறார்கள். ஆபரா வரலாற்றுப் பிழைகள் நிரம்பியதாக இருக்கிறது என்று கனவான் குறைபட்டுக் கொள்கிறார். விவால்டி கலையின் சுதந்திரம் அதற்கு தேவையான தருக்கத்தைத் தேர்வு செய்து கொள்கிறது என்று பதிலளிக்கிறார். உரையாடல் கலைக்கும் வரலாற்றுக்கும் இருக்கும் உறவில் தொடங்கி உலகைக் குறித்த ஐரோப்பியப் பார்வைக்கும் லத்தீன் அமெரிக்க பார்வைக்கும் உள்ள வேறுபாடுகளுக்குத் தாவுகிறது. ஸ்டேஷனில் அவர்கள் விடைபெறுகிறார்கள். ஆனால் ஃபிலோமினோ தன் முதலாலியிடம் தான் ஒரு இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகப் தங்கப் போவதாகக் கூறுகிறான். நாவல் அவன் ஒரு லூயி ஆர்ம்ஸ்ராங்க் கச்சேரியைக் (“பைபிள் தாளமாக்கப் பட்டிருக்கும் இசை!”) கேட்பதோடு நிறைவடைகிறது.
Lost Step-இல் அதன் நாயகன் வெளியினூடே காலத்தைப் பின்நோக்கிச் செல்கையில் அனைத்து வரலாற்று யுகங்களும் உலகில் ஒரே சமயத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்று கருத்தும் முன் வைக்கப்படுகிறது. Concierto Barroco-வில் அதே கருத்து பண்பாட்டு தளத்தில் முன்வைக்கப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் பரோக் கம்போஸர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஸ்ட்ராவின்ஸ்கி, லூயி ஆர்ம்ஸ்ட்ராங்குடன் ஏதோ ஒரு வகையில் உடனிருந்து கொண்டிருக்கிறார்கள் என்ற பக்க அணிமையை அது யோசித்துப் பார்க்கிறது. அதற்கு கன்ஷியெர்ட்டோ பராக்கோ என்ற நாவல் களம் தேவையாக இருக்கிறது. அதாவது கற்பனையின் விரிவாக்கத்தால் வரலற்றால் பழைய உலகம் புதிய உலகம் என்று பிரிவுபட்டிருப்பது கலையின் ஒருங்கிணைப்பால், ஜாஸ் என்ற synthesis மூலம் இணைக்கப்படுகிறது. ஹண்டல், ஸ்கார்லட்டி, விவால்டியின் பரோக் இசையை ஹெகலின் தீசிஸ் ஆகவும் ஃபிலோமினோ ஆஃப்ரிக்க தாளத்திற்கு ஏற்ப தேவாலயத்தில் பாடி ஆடுவதை ஆண்டி-தீசிஸ் ஆகவும் நாம் எடுத்துக் கொண்டால், அவ்விரண்டையும் பிணைத்து உருவாகும் ஆர்ம்ஸ்டிராங்கின் இசை ஒரு ஹெகலிய சிந்தசிஸ் என்ற அர்த்தத்தில். இந்தப் புதிய இசையின் தோற்றம் அதில் பிணைந்திருக்கும் பரோக், அஃப்ரிக்க இசைக்கூறுகள் அழித்துவிடவில்லை. அவையும் ஜாஸில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது சற்றே உருமாறி. இதனால்தான் ஆர்ம்ஸ்டிராங்கின் Hallelujah Hallelujah-வைக் கேட்டுக் கொண்டிருக்கையில் ஃபிலோமினோவின் மனதில் ஒரு எண்ணம் உதிக்கிறது – “which evoked for Filomeno all at once the image of that one – the George Frideric of that night …..who also knew so much about mystical and triumphal trumpets.”. ஹெகலின் ஆஃப்ஹேபுங்கின் இசை வடிவம்.
மூவ்மண்ட் III – கார்பெண்டியரின் நாவலிசைக் கருவிகள்
இக்கட்டுரை அது ஒரு இலக்கியத்தில் வரலாறு சிறப்பிதழிற்காக எழுதப்படுகிறது என்பதால், வரலாற்று அம்சங்களையே இதுவரையில் பேசியிருக்கிறேன். ஆனால் அதைக் காட்டிலும் எனக்கு உவப்பான சில மொழி / இசை/ கட்டிடிக்கலை சார்ந்த சில அமசங்களையும் சுருக்கமாகப் பேசலாம் என்று தோன்றுகிறது.
நடையைப் பொறுத்தவரை அவர் கூறியதிலிருந்தே தொடங்கலாம். பரோக் நடையே லத்தீன் அமெரிக்க யதார்த்தத்துக்கு மிகப் பொருத்தமானது என்று அவர் வாதாடினார். மிகையே – அதாவது அதன் எஸ்பானியக் குடியேற்றத்தின் வன்முறை, மீண்டும் மீண்டும் நிகழும் அதன் புரட்சிகள், அதன் பெரிதினும் பெரிதாக தங்களை கற்பனை செய்துகொள்ளும் சர்வாதிகாரிகள், அதன் பன்முக கலாச்சாரம் – இவை அனைத்துமே பரோக்கின் – அதன் ஒப்பனைக்கூறுகள், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போகும் பாங்கு, அதன் கலப்பட நடை, மிகையணிகள் — பாணிக்கு ஏற்றவைதான். பரோக்கே மறுமலர்ச்சி கால செவ்வியலையும் கவுண்டர் ரிஃபொர்மேஷன் என்று அழைக்கப்பட்ட சீர்திருத்தப் புரட்சியின் உக்கிரத்தையும் ஒருங்கிணைத்து உருவான ஒரு கலப்படம்தான். ஐரோப்பியக் கலப்பட பரோக்குடன் பழங்குடி மனதின் பிரத்யேகங்களையும், ஆஃரிக்க பாதிப்புகளையும் சேர்த்துகொண்டு உருவானதே லத்தீன் அமெரிக்க பரோக். பல யுகங்கள் ஒரே சமயத்தில் நிலவும் சூழலைக் கைப்பற்ற இக்கலப்படம் கூட்டிக் கொண்டே போகும் மொழி ஏதானது. Horror vacui என்ற வெறுமையை அஞ்சும் மனப்பானமையே பரோக்கின் முக்கிய அம்சம். உதாரணத்திற்கு மாளிகை தகர்ந்து வெற்றிடமாகப் போகும் தருணத்துடன் தொடங்கும் Journey to the Source அக்கணத்தை எப்படி விவரிக்கிறது பாருங்கள்:
The tiles had already been removed and covered the dead flower-beds with their mosaic of baked clay. Overhead, blocks of masonry were being loosened with picks and sent rolling down wooden gutters in an avalanche of lime and plaster. And through the crenellations that were one by one indenting the walls, were appearing—denuded of their privacy—oval or square ceilings, cornices, garlands, dentils, astragals, and paper hanging from the walls like old skins being sloughed by a snake.
Concierto Barroco-விலிருந்து இன்னும் பொருத்தமான ஒரு உதாரணம்:
“And the music began to speak in a universal tongue, a tongue of all epochs and all regions, where the sarabande of the viceroys greeted the minuet of the French court, and the syncopation of the candombe mingled with the sixteenth-note runs of a Vivaldi concerto, an entire New World counterpoint where the ancient and the modern, the European and the American, flowed into one single, prodigious present”.
இந்த இரண்டு உதாரணங்களும் அவரது நாவல்களின் அதிகமாக இடம்பெறும் மற்ற இரண்டு அம்சங்களையும் சுட்டுகின்றன – கட்டிடக்கலை மற்றும் இசை.
கட்டிடக்கலை அவரது அருவமான வரலாற்றுத் தரிசனத்துக்கு வெளியில் ஒரு உருவத்தை அளிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். Lost Steps யுகங்களினூடே நிகழ்த்திப் பார்க்கும் பயணத்தை வெளியில் அதன் பல்வேறு கட்டிடங்களின் விவரணையில் பிரதிபலிக்கிறது. நியூ யார்க்கின் வானளாவும் ஸ்கைஸ்கிரேப்பர்கள், லத்தீன் அமெரிக்காவின் காலனிய பரோக்கில் அமைந்திருக்கும் நகரங்கள், கைவிடப்பட்ட சமயப்பரப்பு தேவாலயங்கள், அமெரிக்க இந்தியர்களின் மரக் கட்டுமானங்கள், பழங்குடியினரின் பனை ஓலை வேய்ந்த மண் குடிசைகள் என்று நீண்டு செல்லும் ஒரு பரோக்கியப் பட்டியலிது.
காலத்தைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாது கட்டிடங்கள் கொள்கைளுக்கும் அதன் நடைமுறைப்படுத்தலால் உருவாகும் வரலாற்று விளைவுகளுக்கும் ஏற்ற உருவகமாகவும் அமைகின்றன. உதாரணத்துக்கு Kingdom-இல் வரும் Sans-Souci அரண்மனையை எடுத்துக் கொள்வோம். ஆன்ரீ க்ரிஸ்டாஃப் என்ற முன்னாள் அடிமை, ஹேடியின் அரசனாக அவனை அடிமைப்படுத்திய ஐரோப்பியாவின், போஸ்டாமின் நவ செவ்வியல் பாணியில் அமைந்த, Sans-Souci அரண்மனையை நகலிக்க முயல்கிறான். அதன் பெயரிலேயே ஒரு முரண் இருப்பதை அவன் உணருவதில்லை. Sans-Souci அதாவது “கவலைகளின்றி” என்ற பெயரிடப்பட்ட அரண்மனையைக் கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான கருப்பர்கள் துயருற்றிருக்கிறார்கள். இந்த கட்டிடச் சுழற்சியிலும் ஒரு ஸ்ப்லெங்கரிய துயரம் பொதிந்திருக்கிறது. அதேபோல் அவனது Citadel Laferriiere மலைக்கோட்டையைக் கட்ட இருபதாயிரம் பேர் உயிர் இழந்தார்கள். பிரம்மாண்டத்தில் ஆரம்பிக்கும் வரலாறு Reason’s of State நாவலுக்குப் பயணிக்கையில் நையாண்டித்தனமான போலி பிரம்மாண்டமாக உருமாறுகிறது. சர்வாதிகாரியின் ஆட்சியின் நிலையின்மைக்கான போலி முகப்பே அப்பிரம்மாண்டம். அட்டைகளாலும், தாள் ஊரல் கூழாலுமாலான ஒரு நாடக செட்டைப் போல்தான், அது காட்சியளிக்கிறது.
அனைத்துக்கும் மேலாக இலக்கியத்தில் வரும் கட்டிடக்கலைக்கான மகுடம் போல், வாசிப்பவரை உண்மையிலே பதைபதைக்க வைக்கும் Explosion in the Cathedral-இல் வரும் அந்த அற்புதமான கீயட்டீன். அதை எவ்வளவு அருமையாக கார்பெண்டியர் விவரிக்கிறார் பாருங்கள்:
I saw them erect the guillotine again to-night. It stood in the bows, like a doorway opening on to the immense sky— ….the empty doorway stood in the bows, reduced to a mere lintel and its supports, with the set-square, the inverted halfpediment, the black triangle, and its bevel of cold steel, suspended between the uprights..and now it had reappeared over our very bows, going ahead of us like a guide, resembling, in the necessary precision of its parallel lines, its implacable geometry, some gigantic instrument of navigation.
புரட்சிக் கொள்கையின் புற உருவம். உருவம் உள்ளடக்கத்தோடு எவ்வளவு அற்புதமாக ஒருங்கிசைக்கிறது.
இசையை எடுத்துக் கொண்டால் The Chaseதான் முதலில் ஞாபகத்துக்கு வருகிறது. நாவலின் கட்டமைப்பும் நீளமும் அதிலொலிக்கும் எரோய்க்கா ஸிம்ஃபனியால் நிர்ணயிக்கப்படுகிறது. ஸிம்ஃப்னியின் கட்டமைப்போடு ஒப்பிடுகையில் இப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்
முதல் மூவ்மண்ட் — விறுவிறுப்பான Allegro con brio — (துணிவு / போராட்டம் அதன் கருப்பொருட்கள்) தப்பியோடுபவன் துரத்தப்படுகிறான். அவன் தன் புரட்சி ஆதர்சங்களையும், வன்கொடுமையைத் தாளமுடியாது சகாக்களுக்கு இழைத்த துரோகம். அவர்களின் போராட்ட ஆதர்சம். அதற்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக இவனது போராட்டம்.
இரண்டாவது மூவ்மண்ட் Allegro Assai / Marcia funebre — நாயகனின் நெருங்கிகொண்டிருக்கும் சாவுக்காக ஒலிக்கும் இசை. அவன் இயைத்த துரோகத்தில் உயிரிழந்த சகாக்களின் இறப்பிற்கான ஒப்பாரி.
மூன்றாவது மூவ்மண்ட — துரித கதியில் அமைந்திருக்கும் Scherzo / அதிலிருந்து வேறுபடும் Trio பகுதி — ஹவானாவின் தெருக்களில் அவன் பீதியுடன் புகலிடத்துக்காக ஒடித் திரிதல்.
துரத்தலிலிருந்து வாசகனுக்கு ஆசுவாசமளிக்கு, டிக்கட் விற்பனின் எஸ்ட்ரெல்லா உடனான பகுதிகள் நான்காவது மூவ்மெண்ட்: Finale / Allegro Molto : முடிவு வெற்றியையும் துணிவையும் கம்பீரமாகக் கொண்டாடுதல்.: கதையின் கிளைமாக்ஸில், தப்பியோடுபவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். கலை வெற்றியைக் கொண்டாடினாலும் வாழ்வு தோல்வியில் முடிகிறது என்ற முரணும் சுட்டப்படுகிறது.
Lost Steps-இன் உந்துவிசையே அதன் நாயகன் இசையின் தோற்றுவாயைத் தேடிப் போவதுதான். “படைத்தலின் நான்காவது நாள்” என்று அவன் அழைக்கும் இடத்தில் எஞ்சியிருப்பதோ ஒரு ஆதி மௌனம். இந்த மௌனத்தின் பின்னணியில் பேச்சே படைத்தலைப் போலாகிறது. முதல்முதலாக பெயரிடுதல் பெயரிட்டதைப் படைப்பது போலாகுகிறது. கார்சியா மார்கெஸ்சின் மகாண்டோவில் இதைப் போன்ற ஒரு பெயரிடல் சடங்கு நிகழ்வது வாசகனுக்கு நினைவுக்கு வரலாம். வார்த்தை சதையாகும் மர்மம். இப்படிப்பட்ட பிரபஞ்ச மௌனத்தைத்தான் “நாய்கள் சூழ்ந்திருக்கும் பிணத்தின் மீதெழும் அந்த பயங்கரமான அலறல்” உடைக்கிறது. அதை நம் இசை ஆராய்ச்சியாளர் நாயகன் பீதியுடன் கேட்கிறான். தன்னை ஸ்தம்பிக்கச் செய்த அந்த அலறலை நாயகன் சாவு அதன் கைதியைப் பிடிவாதமாக விடுவிக்க மறுக்கையில் பேச்சு தன் துணிவை இழந்து வெறும் தொண்டை இரைச்சலாக வெளிப்படும், இன்னமும் வார்த்தை ஆகாத, வார்த்தைக்கு முந்தைய வார்த்தையாக அடையாளப் படுத்திக்கொள்கிறான். சாவிடம் என்ன கூறுவது என்பதை அறியாத பேச்சு திகைத்து மரிக்கையில் இசை பிறக்கிறது என்ற முடிவுக்கு வருகிறான். அதைத்தான் பின்னால் தன் படைப்பில் கைப்பற்ற முயல்கிறான். ரொசாரியோ பாடுகையில் அவள் எப்படி தன்னுணர்வில்லாது பாடுகிறாள் என்று அவன் ஆச்சரியப்படுகிறான். இதுவே அவன் பிரச்சினை. இசையை பற்றிய வரலாற்றுப் பிரக்ஞை உள்ளவன் அவ்வரலாற்றுக்கு முந்தைய இசையை எப்படிக் கைப்பற்றுவது? ஆதிமூலங்களை அவன் தேடிச் செல்லலாம் ஆனால் அவனால் அவற்றில் நிலைத்திருக்க முடியாது. ஸ்ப்லெங்லர் சுட்டிய பண்பாட்டு மனிதன் / நாகரிக மனித இருமையும் இதுதான். திரும்பிச் செல்ல முடியாது ஆனால் இதுவரையிலும் வந்ததைத் தக்க வைத்துக்கொண்டு அதன் மீது புதியதைப் பொருத்தி முன் செல்ல முடியும் என்று Concerto Barraco அவனுக்கு விடையளிப்பது போலிருக்கிறது.
கோடா (Coda) முடிவின் ஆரம்பம்
ஜோஸே அர்காடியோ பூயெண்டிய ஜிப்ஸிக்களுடன் சாகசித்துவிட்டுத் மகோண்டோவுக்குத் திரும்புகையில் அவன் Explosion in the Cathedral-இல் வரும் விக்டர் ஹ்யூஸ்சின் கப்பலைப் பார்த்ததாகக் கூறுகிறான். Kingdom – இறுதியில் வீசும் பச்சைக் காற்றே One Hundred Years of Solitude-இன் இறுதியிலும் வீசுகிறது. அதைக் கொடூரமாக ஆக்கிரமிக்கும் சிடடெலே ஃபுயெண்டஸ்சின் Terra Nostra-வில் ஏஸ்கோரியாலாக நம்மை அச்சுறுத்துகிறது. கார்பெண்டியரின் நடையே அடுக்கிச் செல்லும் அந்த பிரம்மாணடமான நாவலின் அனைத்து வரலாற்றையும் உட்செரிக்க முயலும் பரோக்காக உருமாருகிறது. Lost Steps-இல் ரொசாரியோவும் கதைசொல்லியும் காமத்தில் லயித்திருக்கும் பக்கமொன்றில் “கூறைகள் மீதும், தண்ணீர் ஜாடிகள் மீதும், எங்கள் தோள்கள் மீதும் பட்டாம்பூச்சிகள் மழை போல் பொழிந்தன,” என்ற வரி நம்மைச் சட்டென ஈர்க்கிறது. காமத்தின் உருவகமாக வரும் இந்தச் சிகப்புப் பட்டாம்பூச்சிகள் தாம் நிறம் மாறி நூற்றாண்டுகாலத் தனிமையில் தடைசெய்யப் பட்ட காமத்தின் உருவகமாக மௌரீசியோ பாபிலோனியாவைத் தொடரும் மஞ்சள் பட்டாம்பூச்சிகளாக வலம் வருகின்றனவா? என்று யோசிக்கத் தொடங்குகிறோம். Terra Nostraவில் ஃபெலீபே பரிபூரணத்தையே உள்ளடக்க முயலும் தனது கல்லறைக் கோட்டையில் இன்னமும் கட்டிமுடிக்கப்படாத படிக்கட்டுகளில் ஏறிச் செல்கிறான். அது அவன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கிருந்த சாத்தியங்களைக் காட்டும் தரிசனமாக விரிகிறது. அவன் அத்தரிசனத்தைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது வேறு விஷயம். வருங்காலத்தை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கூற்றும் அந்நாவலில் மீண்டும் மீண்டும் மொழியப்படுகிறது. Lost Steps-இன் இறுதியில் அதன் நாயகன் தன் ஆதர்ச இடத்துக்கு திரும்புவதற்கான வழியை மீண்டும் கண்டறிய முடியாத விரக்தியில் ஆழ்ந்திருக்கையில் அவ்விடத்துக்கு முன்பு வழி நடத்திச் சென்ற அடெலண்டாடோ தன்னை முதலில் சந்தித்த இடத்தின் பெயரை நினைவுகூர்கிறான்: Memories of the Future.
குந்தரா தனது கட்டுரைப் புத்தகமொன்றில் கார்பெண்டியரைப் பற்றிப் பேசுகையில் “எந்த மாபெரும் நாவலாசிரியராலும் நாவல் வரலாற்றை தவிர்க்க இயலாது” என்ற கூற்றை முன்வைத்ததாக ஞாபகம். வரலாற்றுப் பிரதிகளை ஒன்றன் மேல் மற்றொன்றாக அடுக்கி நாவலை உருவாக்கும் கார்பெண்டியரின் பாணியை அவர் ஹெர்ம்ன் ப்ரோஹ்க்கின் Sleepwalkers உடன் தொடர்புபடுத்துவார். அந்நாவல் வரலாற்றை நினைவுறுத்தும் வகையில் ப்ரூஸ்டின் புனைவுப் பாத்திரங்களான ஓவியர் எல்ஸ்டிரும், இசைக்கலைஞர் வேன்டாயும் (Elstir / Vinteuil) Reasons of State நாவலில் நிஜ மனிதர்களைப் போல் பாவிக்கப் படுகிறார்கள். அதேபோல் கடந்த காலத்தை மீட்டெடுக்கும் ப்ரூஸ்டின் பிரசித்தி பெற்ற மாடலென் காட்சியும் இந்நாவலில் தமாலே சுவைக்கப்படும் காட்சியாக உருமாறுகிறது.
லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்பது வரலாறும் சுய அடையாளமும், நவீனத்துவமும் மரபும், நினைவும் விழைவும் மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் கண்ணாடிக் கூடம். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னே மார்கெஸ்சின் magical realism-இல் தொடங்கியது இப்போது கார்பெண்டியரின் Lo real maravilloso-வுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. வாசிப்பு என்பதே ஒரு பரோக் செயல்தான் போல். ஒவ்வொரு வாசிப்பிலும் இலக்கிய வரலாற்றிலும், நம் வாழ்க்கை வரலாற்றிலும், ஏன் நம் வாசிப்பின் வரலாற்றிலும் நாம் பயணிக்கிறோம்.
மூலங்களை நோக்கிப் பயணித்திருங்கள். உங்கள் வருங்காலம் உங்களுக்காக அங்கே காத்திருக்கிறது. யார் கண்டார்கள், வேறொரு லத்தீன் அமெரிக்க ஆசிரியரைப் பற்றிய கட்டுரையில் அங்கு என்னையும் நீங்கள் சந்திக்கக்கூடும்.
*
மூலநூல்கள் / மேலும் படிக்க:
Carpentier, Alejo, Kingdom of this World, St. Andre Deutsch, 1990 Carpentier, Alejo, War of Time, Alfred A. Knopf, 1970 Carpentier, Alejo, The Lost Steps, Noonday Press, 1989 Carpentier, Alejo, The Chase, University of Minessota Press, 2001 Carpentier, Alejo, Explosion in a Cathedral, Noonday Press, 1989 Carpentier, Alejo, Concierto Barroco, Council Oak Books, 1988 Echevarria, Roberto Gonzalez, The Pilgrim at Home, University of Texas Press, 1990
***
நம்பி கிருஷ்ணன் – பாஸ்டனில் வசித்து வரும் நம்பி கிருஷ்ணன் பல ஆண்டுகளாக சொல்வனம் இணையப் பத்திரிகையில் கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் தொடர்ந்து எழுதி வருபவர். பதாகை, தமிழினி, கனலி, காலச்சுவடு சாகித்திய அகடமியின் Indian Literature உட்பட பல இலக்கிய இதழ்களில் இவரது ஆக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நகுல்வசன் என்ற பெயரில் தமிழ் புனைவுகளையும் Nakul Vāc என்ற பெயரில் ஆங்கில மொழியாக்கங்களையும் முயற்சிப்பவர். இவரது பாண்டியாட்டம் என்ற உலக இலக்கியம் சார்ந்த கட்டுரைத் தொகுதியும், டி.எஸ். எலிய்ட் கவிதைகள் குறித்த அவதரிக்கும் சொல் எனும் நூலும். திரைபடங்களும் இலக்கியமும் சார்ந்த கட்டுரைகளடங்கிய நரி முள்ளெலி டூயட் தொகுதியும், கடவுளும் கேண்டியும் என்ற சிறுகதைத் தொகுப்பும் இதுவரை யாவரும் பதிப்பில் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் : nambik@yahoo.com