அன்றைய தினம் தான் செய்த சரிசெய்ய முடியாத தவறுகளைப் பற்றி எண்ணியவாறே அந்த மீனை வைத்துக்கொண்டு நின்றிருக்கிறாள் அவள். அதைச் சமைத்து முடிக்கும்போது அவள் அந்த மீனோடு தனித்திருக்கிறாள். வீட்டில் வேறு யாரும் இல்லை—மீன் அவளுக்குத்தான். அன்று அவளுக்குச் சற்று பிரச்சனை மிகுந்த நாளாகத்தான் இருந்தது. இதற்கிடையே மார்பிள் மேடை மீது மெதுவாக ஆறிக்கொண்டிருந்த அந்த மீனை அவள் எப்படி சாப்பிட முடியும்? அதே சமயம், அந்த மீனோ, அசைவின்றி, தனது எலும்புகளிலிருந்து உரித்தெடுக்கப்பட்டு, தனது வெள்ளிச் செதில்கள் களையப்பட்டு, இன்று இருப்பதுபோல் என்றுமே தனித்திருந்ததில்லை… ஒரு அறுதியான அத்துமீறல் தன்மீது நிகழ்த்தப்பட்டபின், சரிசெய்ய முடியாத புதிய தவறுகளை அன்று இழைத்துவிட்டு அதற்கு மேல் இதையும் செய்துவிட்ட அந்தப் பெண்ணின் சோர்வான பார்வையை ஏந்திக்கொண்டு, இதுபோல என்றுமே தனித்திருந்ததில்லை.
(லிடியா டேவிஸ் எழுதிய “The Fish” என்ற குறுங்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)
*
எலிகள்
எங்கள் வீட்டுச் சுவர்களில் எலிகள் வசிக்கின்றன. ஆனால் அவை எப்போதுமே எங்கள் சமையலறையைச் சீண்டுவதில்லை. எங்களுக்கு அதில் மகிழ்ச்சிதான். ஆனால் பக்கத்து வீடுகளில் வருவதைப் போல் எங்கள் வீட்டுச் சமையலறைக்கு அவை ஏன் வருவதில்லை என்பது புரியவில்லை. மகிழ்ச்சிதான் என்றாலும் எங்கள் சமையலறையில் ஏதோ குறை இருப்பதைப் போல எலிகள் நடந்துகொள்வதில் எங்களுக்குக் கொஞ்சம் வருத்தமும் உண்டு. இதில் புதிரான விஷயம் என்னவென்றால் பக்கத்து வீட்டுக்காரர்களின் சமையலறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எங்களுடையதில் கொஞ்சம் சுத்தம் குறைவுதான். நிறைய உணவுப் பொருட்கள் அப்படி அப்படியே கிடக்கும். சமையல் மேடையில் துணுக்குகள் சிதறியிருக்கும். கீழ் அலமாரிகளின் ஓரங்களில் என்றோ வெட்டிய சில வெங்காயத் துண்டுகள் பெருக்கி ஒதுக்கப்பட்டிருக்கும். எலிகளையே அயர்வுறச் செய்யும் அளவிற்கு எங்கள் சமையலறையில் உணவுப்பொருட்கள் சிதறியிருக்கின்றனவோ என்று தோன்றுகிறது. ஒரு சுத்தமான சமையலறையில் வசந்த காலம் வரும்வரை ஒவ்வொரு இரவும் உணவைத் தேடுவது அவற்றிற்குச் சவாலாக இருக்கலாம். பொறுமையாகத் தேடி வேட்டையாடி இரவு முழுவதும் கொறித்துக் கழித்து அவை வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம். எங்கள் சமையலறையிலோ அவை இதுவரை கண்டிராத அளவிற்கு ஒரு குவியலைக் காண்கின்றன போல. சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் அவற்றிற்கு எட்டும் காட்சிகளும் மணங்களும் திக்குமுக்காட வைத்து, தேடி வேட்டையாடி உண்ணமுடியாத சங்கடத்தில் அவை மீண்டும் வளைக்குள்ளே ஓடிவிடுகின்றன போல.
(லிடியா டேவிஸ் எழுதிய “The Mice” என்ற குறுங்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)
*
அம்மாக்கள்
எல்லோருக்கும் எங்கேயோ ஒரு அம்மா இருக்கிறார். நம்முடன் உணவருந்திக்கொண்டிருக்கிறார் ஒரு அம்மா. சிறிய உருவம் கொண்ட அவர், முகத்தை வேறுபக்கம் திருப்பும்பொழுது முழுவதும் கருப்பாகத் தெரியுமளவு தடிமனான கண்கண்ணாடி அணிந்திருக்கிறார். நாம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே விருந்தளிப்பவரின் அம்மா தொலைபேசியில் அழைக்கிறார். இதனால் எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் நம் விருந்தோம்பி உணவு மேசைக்கு வர இயலாமல் போகிறது. அந்த அம்மா நியூ யார்க்கிலிருந்து அழைத்திருக்கலாம். விருந்து உண்டுகொண்டிருப்பவர் ஒருவரின் தாயாரின் பெயரும் அடிபடுகிறது: அந்த அம்மா ஒரிகனில் வசிப்பவர். நம்மில் பலருக்கும் அங்கு வசிக்கும் நமது உறவினர் யாரையேனும் தெரிந்திருந்தாலும் ஒரிகன் மாகாணத்தைப் பற்றி நமக்குப் பெரிதாக எதுவும் தெரிவதில்லை. விருந்துக்குப் பின் காரில் செல்லும்போது ஒரு நடன இயக்குனரைப் பற்றிய பேச்சு எழுகிறது. வேறு மாகாணத்தில் இருக்கும் தன் அம்மாவைப் பார்க்கப் பயணித்துக்கொண்டிருப்பதால் அவர் இன்றைய இரவை மட்டும் இந்த நகரத்தில் கழிக்கிறார் என்று தகவல்.
தாயார்கள் விருந்து மேசைகளில் இருக்கையில் சிறுவர்கள் போல நன்றாக உண்பவர்களாக இருந்தாலும், இருப்பதே தெரியாமல் அமைதியாக இருப்பார்கள். பெரும்பாலும் நாம் பேசும் விஷயங்களும் செய்யும் செயல்களும் அவர்களுக்குப் புரிவதில்லை. அதேபோல, பெரும்பாலும், நம் இளவயதைப் பற்றிப் பேசும்போது மட்டுமே அவர்கள் உரையாடலில் கலந்துகொள்கிறார்கள். அல்லது, அனுசரித்துப் போகத் தேவையே இல்லாத இடங்களில் அனுசரித்து, புன்னகைத்து, தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் விடுமுறைகளில் மட்டுமாவது தாய்கள் சந்திக்கப்படுகிறார்கள், உரையாடப்படுகிறார்கள். நமக்காக அவர்கள் நிறைய அவதிப்பட்டிருக்கிறார்கள், பெரும்பாலும் நாம் காணாத இடங்களில் இருந்தபடியே.
(லிடியா டேவிஸ் எழுதிய “Mothers” என்ற குறுங்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)
*
முற்றுகையிடப்பட்ட ஒரு வீட்டில்
முற்றுகையிடப்பட்ட ஒரு வீட்டில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தனர். அவர்கள் சமையலறையில் பதுங்கியிருந்தபோது சிறிய வெடிச்சத்தங்களைக் கேட்டனர்: “காத்து,” என்றாள் அவள். “வேட்டைக்காரங்க,” என்றான் அவன். “மழ,” என்றாள் அவள். “ஆர்மிக்காரங்க,” என்றான் அவன். அவள் வீட்டுக்குப் போக விரும்பினாள். ஆனால் ஏற்கனவே வீட்டில்தான் இருந்தாள்… ஊருக்கு நடுவே, முற்றுகையிடப்பட்ட ஒரு வீட்டில்.
(லிடியா டேவிஸ் எழுதிய “In a House Besieged” என்ற குறுங்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)
*
இரண்டு சகோதரிகள்
யாருக்கும் அது நிகழ்வதில் விருப்பமில்லாவிட்டாலும், அது நிகழாமலிருப்பதுதான் நல்லது என்றாலும், சில சமயங்களில் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறக்கத்தான் செய்கிறது—இரண்டு சகோதரிகள் உருவாகத்தான் செய்கிறார்கள்.
எந்த பெண் குழந்தையுமே, அழுதுகொண்டே பிறக்கையில், மகன் பிறப்பான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் தந்தைக்கு ஒரு ஏமாற்றமான தோல்வியாகவே பிறக்கிறது. அவர் மீண்டும் முயற்சிக்கிறார். மீண்டும் பெண். இரண்டாவதும் பெண்ணாகப் பிறப்பது இன்னும் பெருத்த ஏமாற்றம். அதற்குப் பின் மூன்றாவது, பின்னர் நான்காவது கூட. பெண் குழந்தைகளுக்கு மத்தியில் சோகமே உருவாக, தோல்விகளைக் குவித்த விரக்தியில் அந்தத் தந்தை.
ஒரு மகனும் ஒரு மகளும் உடைய மனிதன் அதிர்ஷ்டசாலி. இருப்பினும் இன்னொரு மகனுக்கு முயற்சிப்பதில் அபாயம் இருக்கிறது. மகன்களை மட்டுமே பெற்றிருப்பவன் இருப்பதிலேயே அதிர்ஷ்டசாலி. அவன் மகள் பிறக்கும்வரை முயன்றுகொண்டே இருக்கலாம். அப்படிப் பிறந்தால் வேண்டிய அளவிற்கு மகன்களும் வீட்டை அலங்கரிக்க ஒரு சிறிய மகளும் அவனுக்கு அமையும். ஒருவேளை அவனுக்குப் பெண் குழந்தையே பிறக்காவிட்டாலும் தன் மனைவியின் வடிவில், தன் மகன்களின் தாயின் வடிவில், அவனுக்கு ஒரு பெண் ஏற்கனவே இருக்கிறாள். அவனுக்கு அவன் ஆண் அல்ல. அவனது மனைவிக்குதான் அவன் ஆண். தன் வாழ்வில் ஒரு பெண் இல்லாமல், ஒரு மகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவளது ஆசைகள் எவருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால், அவளது பெற்றோர் உயிரோடில்லாவிட்டாலும், அவளே ஒரு மகள்தான்.
ஒற்றை மகளாகப் பிறந்தவளோ, பல சகோதரர்களின் ஒரே சகோதரியாய், தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தவரின் குரல்களைக் கேட்டு மகிழ்ந்துகொள்வாள். அவளது சகோதரர்களின் முரட்டுத்தனத்திற்கு மத்தியில் அவளது மென்மையும், அவர்களது அடாவடிக்கு மத்தியில் அவளது அமைதியும் மெச்சப்படும்.
ஆனால் இரண்டு சகோதரிகளாய் இருந்தால், ஒருத்தி மற்றவளைவிட அசிங்கமாகவும், மந்தமாகவும், விட்டேற்றியுமாகவே கருதப்படுவாள். பெரும்பாலும் நடப்பதுபோல அனைத்து நற்குணங்களும் ஒரே சகோதரியில் இருக்கப்பெற்றாலும், மற்றவள் அவளைப் பொறாமை ததும்பும் கண்களோடு நிழலாகத் தொடர்வாள்.
இரண்டு சகோதரிகளும் வெவ்வேறு காலங்களில் வளர்ந்து, தமது சகோதரியை அவள் அவளாக இருப்பதற்காகவே வெறுப்பார்கள். சண்டை போடுவார்கள். ஒரே மகளாக இருந்தால், அவள் ஏஞ்சலாவாகவே, ஒரு தேவதையாகவே, இருக்க முடியும். ஆனால் இரண்டு சகோதரிகளாய் இருந்தால் இருவரும் தங்கள் பெயர்களை இழந்து மேலும் வீம்பாகத் திரிவார்கள்.
இரண்டு சகோதரிகளுக்கும் எப்படியும் திருமணமாகும். ஒருத்தி மற்றவளது கணவனை நாகரிகமற்றவனாகக் கருதுவாள். இன்னொருத்தியோ தன் சகோதரிக்கும் அவளது கணவனுக்கும் (அவன் வெகு சாமர்த்தியக்காரன் என்ற பயம் அவளுக்கு) எதிராக தன் கணவனைக் கவசமாகப் பயன்படுத்துவாள். தங்கள் குழந்தைகளுக்கு உறவுமுறையில் சகோதர சகோதரிகள் இருப்பது நல்லது என்பதற்காக அந்த இரண்டு சகோதரிகளும் அவ்வப்போது நட்பு பாராட்ட முயன்றாலும் ஏனோ பெரும்பாலும் விலகியே இருப்பார்கள்.
இருவரது கணவர்களும் அவர்களுக்கு ஏமாற்றமளிப்பவர்களாகத் தெரிவார்கள். அவர்களது மகன்கள் வாழ்க்கையில் தோற்றவர்களாக, தங்கள் தாயார்களின் அன்பை விலைவாசி குறைவான நகரங்களில் தொலைத்தவர்களாக இருப்பார்கள். இரும்பைப் போல உறுதியாக இன்னும் நிலைத்திருப்பது அந்த சகோதரிகளுக்கு ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காழ்ப்பு மட்டுமே. அவர்களது கணவர்கள் உலர்ந்து அழிந்த பின்னரும், அவர்களது மகன்கள் அவர்களை விட்டுப்போன பின்னரும் விடாமல் இருப்பது அது மட்டுமே.
ஒரே கூண்டில் அடைபட்ட இருவரும் தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். இருவரின் அம்சங்களும் ஒரே மாதிரியானவை.
இரண்டு சகோதரிகளும் கணவர்கள் மறைந்தபின், மகன்கள் ஏதோ போரில் இறந்தபின், கருப்பு உடை அணிந்து கடைகளுக்கு ஒன்றாகச் செல்வார்கள். ஒருவர் மீது இன்னொருவருக்கு உள்ள காழ்ப்பு மிகவும் பழகிப்போய் அது இருப்பதையே அவர்கள் உணர்வதில்லை. சில சமயங்களில் ஒருவர் மீது ஒருவர் கரிசனமாகக் கூட இருப்பார்கள், மறந்ததனால்.
(லிடியா டேவிஸ் எழுதிய “Two Sisters” என்ற குறுங்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)
***
லிடியா டேவிஸ் (1947–) இன்றைய அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். ஃபிரெஞ்ச்சிலிருந்து ஆங்கிலத்துக்கு பல முக்கியமான புதினங்களை மொழிபெயர்த்தும் உள்ளார். தனது தனித்துவமான கதைசொல்லல் முறையால் கவனம் பெற்ற இவர், “நவீன குறுங்கதைகளின் அரசி” என்று வழங்கப்படுகிறார். ஒரு வாக்கிய நீளத்திலிருந்து இரு பக்க நீளம் வரை விரியும் பல குறுங்கதைகளை எழுதியுள்ள இவர், சில புதினங்களையும் எழுதியுள்ளார்.
ராம் – சென்னையில் ஆங்கிலத் துணைப் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் மொழிபெயர்த்து இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை அண்மையில் முடித்து, மொழிபெயர்ப்பு, புனைவாக்கம் ஆகிய தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : ram.mech.sharma@gmail.com
யாரிடம் கோபித்துக்கொண்டாலும் போய்ச் சேர ஒரு வீடு இருந்தது எனக்கான உணவை எடுத்து வைத்துக் காத்திருந்த சமையலறை இருந்தது உணவு உண்ணாமல் வைராக்கியமாகக் கிடக்க தனியாய் ஒரு அறை இருந்தது யாரும் வந்து எழுப்பாததொரு நீண்ட உறக்கம் இருந்தது எல்லாவற்றுக்கும் மேலாய் அப்போதெல்லாம் என்னைச் சகித்துக் கொள்ள என் அம்மா இருந்தாள்!
*
அவள் தினம் ஒரு காதலை தன் நெஞ்சுக்குள் சொருகிக் கொண்டாள் சிகப்பு வெள்ளை ஆரஞ்சு இளம் சிவப்பு ஒவ்வொரு நிறத்திலும் ஒவ்வொரு காதல் ஒவ்வொரு மலரிலும் ஒவ்வொரு வாசம் அவளுக்குத் தேவை தினம் ஒரு மலர்ச்சி தினம் ஒரு காதலைச் சூடிக்கொள்ளும் அவள் இரவானதும் அவைகளைக் கழற்றிக் குப்பைத் தொட்டியில் வீசுவாள் ஏற்றுக்கொள்ள யாரும் இல்லாத அவளது காதல் நாட்களை நகர்த்திக் கொண்டே இருந்தது பருவங்கள் மாறின பூக்கள் நிறம் இழந்தன மணத்தையும் இழந்தன காதலை கழற்றிக் கழற்றிக் குப்பைத் தொட்டியில் வீசிக் கொண்டிருந்த அவள் ஒரு நாள் தானே அந்த குப்பை தொட்டிக்குள் போய் விழுந்து கொண்டாள்
*
எழுதப் படிக்கத் தெரியாத அம்மாவுக்கு பேச்சு மொழி இரண்டு தெரியும் இரண்டிலும் அழகாகப் பேசுவாள் நாங்கள் வளர்ந்த பிறகு அவளுடன் பேச நேரம் இருக்கவில்லை அவளும் அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருப்பாள் தொலைபேசி வந்த காலங்களில் போன் கூடப் பண்ணவில்லை என்று கோபித்துக் கொண்டு நான் செத்த பிறகு தெரியும் எனது அருமை என்பாள் சுகவீனத்தில் விழுந்த பிறகு அவள் மொழிகளை மறந்து போனாள் யாருடனும் பேச அவளுக்குப் பிடிக்கவில்லை நாங்கள் அருகிலேயே இருந்தோம் எங்கள் மொழிகளை அல்லது எங்களை அவள் நிராகரித்தாள்
எப்போதும் ரேடியோ ஓடிக் கொண்டிருக்க வேண்டும் அவளுக்கு நிறைய அலைவரிசைகள் வந்த பிறகு அவளுக்கு ரெயின்போ எஃப் எம் ஐ விட சூரியன் எஃப் எம் பிடித்திருந்தது பேசிட்டே இருப்பாங்க இல்ல அது போடு என்று கண்மூடிக் கொள்வாள் உண்மை தான்… இப்போது புரிகிறது அம்மாவின் அருமை!!
நறுமுகை தேவி – கோவையில் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். காலத்தால் களவு போனவை எனும் கட்டுரைத் தொகுப்பும், சாத்தான்களின் அந்தப்புரம் & மலையடி வாரத்தில் பிறந்தவள் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். மின்னஞ்சல்: narumugai99@gmail.com
அண்மையில், தொலைத்தொடர்புத் துறையின் முன்னோடிகளுள் ஒருவரும், இந்தியத் தொழில்நுட்ப மிஷனின் முன்னாள் தலைவருமான சாம் பிட்ரோடாவுடன் ஒரு காணொளி நிகழ்வில் கலந்து கொண்டேன். அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான துளசிராஜ் ரவில்லா, அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் சாதனைகளைப் பற்றிய ஒரு விளக்கக் காட்சியைக் (Presentation) கொடுத்துக் கொண்டிருந்தார்.
நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருந்த நண்பர் ஷான் ஷங்கரன், என்னிடம், ‘அரவிந்த் மருத்துவக் குழுமத்தை எப்படி காந்தியப் பொருளியல் வழி நடக்கும் தொழில் என வகைப்படுத்துகிறீர்கள்?’, எனக் கேட்டார்.
துளசிராஜ், தனது விளக்கக் காட்சியை, மதுரையில் ஒரு கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாம்பவன் என்னும் ஒரு மனிதருக்குப் பார்வையின்மையினால் ஏற்படும் பிரச்சினையுடன் தொடங்கியிருந்தார். சாம்பவனுக்கு கண்ணில் புரை. அர்விந்த் மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டால், அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்துவிடும். அதற்கு ஒருவாரம் பிடிக்கும். ஆனால், மருத்துவமனைக்குப் பயணம் செய்து, அங்கே ஒரு வாரம் தங்கியிருப்பதற்கு ஆகும் செலவுக்குக் கூட அவரிடம் பணம் இல்லை. ஒரு வார காலம் மருத்துவமனையில் தங்கினால், அவருக்குப் பிச்சை எடுப்பதன் வழியே கிடைக்கும் வருமானமும் நின்று விடும். இந்த நிலையில் இருக்கும் சாம்பவன் போன்றோருக்கும் கண் பார்வை கிடைக்க வேண்டும் என ஒரு வழியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது அர்விந்த். சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் கடைநிலையில் இருப்பவருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே காந்தியப் பொருளியலின் அடிப்படை. அதை முன்னிறுத்தி செயல்படுவதால், இது காந்தியப் பொருளியல் வழி செயல்படும் வணிக நிறுவனம்’, எனப் பதில் சொன்னேன்.
அந்த நிகழ்வின் இறுதியில், தமிழ்நாட்டின் பொதுச் சுகாதார நிபுணர்களில் ஒருவரான பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவர் அமலோற்பவநாதன் ஒரு முக்கியமான அவதானிப்பை முன் வைத்தார்.
’இன்று இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும், மருத்துவத் துறையில் பன்னாட்டு மருத்துவக் குழுமங்களும், நிதி முதலீடுகளும் வேகமாக நுழைந்து வருகின்றார்கள். ஆனால், கண் மருத்துவத் துறையில் எவரும் நுழைய முடியவில்லை. இதற்குக் காரணம், தன் செயல் திறன் வழியே, அர்விந்த் மருத்துவக் குழுமம், உயர் தரக் கண் சிகிச்சையை மிகவும் குறைவான கட்டணம் வழியே வழங்கி வருவதுதான். இதனால், இத்துறையில் பெரிதான லாபமில்லை. எனவே வெளிநாட்டு முதலீடுகள் வருவதில்லை’.
காந்தியத் தொழில் முறையின் செயல் திறனுக்கு இதுதான் மிகப் பெரும் பாராட்டுச் சான்றிதழ்.
எனக்கு சில ஆண்டுகள் முன்பு, அமுல் மேலாண் இயக்குநர் ஆர்.எஸ்.சோதியுடன் நிகழ்த்திய நேர்காணல் நினைவுக்கு வந்தது. அதில் அவர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தார்.
பால்தொழிலில் இந்தியாவில் முதலீடு செய்திருந்த ஒரு பன்னாட்டு நிறுவனம், சில ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட்ட பின்னர், இங்கே அவர்களால் லாபகரமாக இயங்க முடியாது என இந்தியச் சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள். அவரை ஒரு கருத்தரங்கில் சந்தித்த சோதி, அவரிடம், ‘ஏன் இந்தியாவை விட்டு வெளியேறுகிறீர்கள்?’, எனக் கேட்டாராம்.
அதற்கு அந்தப் பன்னாட்டுத் தொழில்குழுமத்தின் தலைவர், ‘இந்தியாவின் பால் துறை வணிகச் சங்கிலி மிகவும் செயல் திறன் மிக்க வகையில் இயங்கி வருகிறது. இங்கே எங்களால் போட்டி போட்டு லாபமீட்டுவது மிகவும் கடினம்’, என்று சொன்னாராம்.
மேற்சொன்ன இரண்டு சம்பவங்களுமே மிக முக்கியமான அவதானிப்புகள்.
வழக்கமான முதலாளித்துவத் தொழில் மாதிரி என்பது, உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் பொருள் அல்லது சேவைகளை, கொள்முதல் அல்லது ஒருங்கிணைப்பின் மூலம் பெற்று, அதை நுகர்வோருக்கு விற்று, அதன் வழியே லாபம் ஈட்டுவதாகும். இதில் லாபம் என்பது உழைப்பாளர்கள்/ உற்பத்தியாளர்கள் உருவாக்கும் உபரி மதிப்பினால் வருவது. அந்த உபரி மதிப்பு, நுகர்வோர் தரும் விலையின் வழி கிடைப்பது.
ஆனால், காந்தியப் பொருளியல் வழிநடக்கும் தொழில் மாதிரியில், உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் தொழில் முனைவோர் என்னும் இடைத்தரகர்கள் இருப்பதில்லை. எனவே, வணிகச் சங்கிலியில், உற்பத்திக்கும், நுகர்வுக்கும் தொடர்பில்லாத முதலீட்டாளர் எடுத்துக் கொள்ளும் லாபம் என்னும் உபரி இழப்பு தவிர்க்கப்படுகிறது. இதனால், உற்பத்தியாளரும், நுகர்வோரும் ஒரு நியாயமான விலையில் சந்தித்து, பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்ள முடிகிறது.
காந்தியப் பொருளியல் வழி வெற்றிகரமாக நடக்கும் தொழில் துறைகளில், இடைத்தரகர்களும், அவர்களுக்கான லாபம் என்னும் கோட்பாடும் இருப்பதில்லை. எனவே அங்கே இன்னாட்டு, பன்னாட்டுத் தொழில் முதலீடுகள் அதிகம் வருவதில்லை. வந்தாலும் அவை பெரிதும் லாபகரமாக இயங்க முடிவதில்லை.
இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகை 8 கோடி. அங்கே தேசியச் சுகாதாரச் சேவை என்னும் தேசிய நிறுவனம் இயங்கி வருகிறது. அது வருடம் சுமார் 5 லட்சம் கண் அறுவை சிகிச்சைகளைச் செய்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.5 கோடி. இங்கே அரவிந்த் என்னும் காந்தியத் தொழில் நிறுவனம் கிட்டத்தட்ட 8 லட்சம் அறுவை சிகிச்சைகளைச் செய்கிறது. இரண்டின் சேவைத் தரமும் ஒப்பிடத் தக்கவை. ஆனால், இந்த 8 லட்சம் சிகிச்சைகளைச் செய்ய அர்விந்த் செலவிடும் தொகை, இங்கிலாந்தின் தேசியச் சுகாதாரச் சேவை என்னும் அரசு நிறுவனத்தின் செலவில் நூற்றில் ஒரு பங்குதான். இத்தனைக்கும், இங்கிலாந்து அரசு தேசியச் சுகாதார நிறுவனம் என்பது லாப நோக்கமற்ற ஒரு அரசு நிறுவனம்.
அர்விந்த் குழுமம் கிட்டத்தட்ட 50% சிகிச்சைகளை இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்குகிறது. மீதமுள்ள 50% சிகிச்சைகளை, சந்தை விலையில் பாதியில் வழங்குகிறது. இந்தத் தொழில் மாதிரியில், அரவிந்த் ஈட்டும் வருமானம், தனியார் துறையை விட மிகக் குறைவானது. அந்த வருமானத்துக்குள்ளேயே, தனது செலவுகளைச் செய்து கொண்டாக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்குள் அர்விந்த் இயங்குகிறது.
செலவுகளைக் குறைக்க ஒரு முக்கியமான தீர்வு, தனது தொழில் மாதிரியின் செயல்திறனை மேம்படுத்துவது. கண் சிகிச்சை முகாம்கள் வழியே, ஃபோர்ட் உருவாக்கிய அசெம்பிளி லைன் உற்பத்தி முறை போல, தனது மருத்துவமனை தொடர்ந்து தனது முழுக் கொள்திறனையும் உபயோகித்துக் கொள்ளும் ஒரு புதிய வழியை உருவாக்கிக் கொண்டது. திட்டமிட்டு நடத்தப்படும் கண் சிகிச்சை முகாம்கள் வழியே, தொடர்ந்து மருத்துவமனைக்கு நோயாளிகளை அறுவை சிகிச்சைக்காகக் கொண்டு வந்தது அரவிந்த். சிகிச்சை செய்யும் மருத்துவரின் செயல்திறனை 400% வரை மேம்படுத்தும் வகையில், மருத்துவ அறுவை சிகிச்சை முறைகளில் புத்தாக்கத்தைக் கொண்டு வந்தது.
கண்புரை சிகிச்சையின் இன்னொரு மிக முக்கியமான செலவு செயற்கை விழித்திரை. பல ஆண்டுகளாக ஒரு சோடி செயற்கை விழித்திரைகளை 200 டாலர் விலையில் இறக்குமதி செய்து வந்த அரவிந்த், ஒரு கட்டத்தில், செயற்கை விழித்திரைகளைத் தானே உற்பத்தி செய்து கொள்ள முடிவெடுத்தது.
செயற்கை விழித்திரையை உற்பத்தி செய்ய அரவிந்துக்கு ஆன செலவு 2 டாலர் மட்டுமே. ஒரு சோடி செயற்கை விழித்திரையை தானே உற்பத்தி செய்ததன் மூலம், கண்புரை அறுவை சிகிச்சைக்கான கச்சாப் பொருளின் விலையை அர்விந்த் 99% குறைத்தது. இந்த உற்பத்தியின் உபரி, தனியார் தொழில் முதலீட்டாளருக்குச் செல்லாமல் இருப்பதால், அர்விந்த் தனது சிகிச்சைக்காகும் செலவை வெகுவாகக் குறைக்க முடிந்தது.
கண் அறுவை சிகிச்சைக்காகத் தேவைப்படும் கச்சாப் பொருளின் விலையை 99% குறைத்து, அறுவை சிகிச்சை நிபுணரின் செயல்திறனை 400% மேம்படுத்தி, கண் சிகிச்சை முகாம்களைத் தொடர்ந்து நடத்தி, அதன் வழியே மருத்துவமனை அறுவை சிகிச்சைக்குத் தொடர்ந்து நோயாளிகளை அனுப்பி அதன் முழுக் கொள்ளளவையும் உபயோகித்து, அரவிந்த், தனது சிகிச்சைகளுக்கான செலவுகளை வெகுவாகக் குறைத்தது. அர்விந்த், ஏழைகளுக்கான கண் சிகிச்சைகளை இலவசமாகவும், மானிய விலையிலும் தருகிறது. பணம் செலுத்தும் பயனாளிகளுக்கும், சந்தை விலையில் 50% த்தில் சிகிச்சையை வழங்குகிறது.
இப்படி சகாய விலையில் தனது சேவைகளை வழங்கும் அர்விந்தின் லாப சதவீதம் (EBITDA) 39% ஆக உள்ளது
இது எப்படி சாத்தியமாகிறது? சமூகத்தில் கண் மருத்துவம் தேவைப்படும் அனைவருக்கும் தரமான சிகிச்சை, பணம் படைத்தவர், ஏழை என்னும் பாகுபாடுகள் இல்லாமல் கிடைக்க வேண்டும். ஏழைகளினால் சிகிச்சைக்குப் பணம் செலுத்த முடியாது என்னும் நிலையில், மருத்துவச் சேவைகளுக்கான செலவுகளைக் குறைக்க வேண்டும், அதே சமயத்தில் தரம் குறைந்து விடக் கூடாது. இந்த நோக்கத்தில், அரவிந்த் நிறுவனத்தின் தலைவர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து செயல்படுவதினால், இது சாத்தியமாகிறது.
இதே துறையில் பெரும் தொழிற்குழுமங்கள் நடத்தும் மருத்துவமனைகள் எப்படி இயங்கி வருகின்றன? இந்தியாவின் மிகப் பெரும் மருத்துவக் குழுமங்களில் ஒன்றான ஒரு குழுமத்தின் லாப சதவீதம் (EBITDA) 12%. அங்கே அறைகளில் தங்கும் அறைகளுக்கான வாடகையே நாளொன்றுக்கு 10 ஆயிரம் வரை உண்டு. இவ்வளவு அதிகமான கட்டணம் வசூலித்தும், ஏன் பெரும் மருத்துவக் குழுமங்களின் லாப சதவீதம் குறைவாக உள்ளது?
ஏழை மக்களுக்கு இலவசமாகவும், மிகக் குறைந்த விலையிலும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவைகளை வழங்கும் அர்விந்த் 39% லாபமீட்டுகையில், அதிகக் கட்டணங்கள் வசூலித்து அதே உலகத்தர மருத்துவச் சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்களின் லாப சதவீதம் ஏன் 12% ஆக இருக்கிறது.
இதில் எந்தத் தொழில்முறை சமூகத்துக்கு அவசியமானது? செயல் திறன் மிக்கது?
இப்போது கூட்டுறவு பால்த் தொழில் மாதிரிக்கு வருவோம். 1970 ஆம் ஆண்டு, இந்தியாவின் பால் உற்பத்தி 17 மில்லியன் டன்னாக இருந்தது. வெண்மைப் புரட்சி தொடங்கி 25 ஆண்டுகளில், இந்தியா, 65 மில்லியன் டன் பால் உற்பத்தியைச் செய்து உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக உருவெடுத்தது.
வெண்மைப் புரட்சித் திட்டத்தில், இந்தியப் பசு மற்றும் எருமைகளின் உற்பத்தித் திறன் மேம்பட்டது. ஆனாலும், ஐரோப்பிய பசுக்களின் உற்பத்தித் திறனுடன் ஒப்பிடுகையில், இந்தியப் பசுக்களின் உற்பத்தித் திறன் மிகக் குறைவுதான். அப்படியானால், இந்த உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக இந்தியா எப்படி உருவானது?
இந்திய விடுதலைப் போரின் ஒரு பகுதியாக உருவான அமுல் பால்க் கூட்டுறவு, பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தொடங்கப்பட வில்லை. அது உற்பத்தி செய்யப்படும் பாலுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். அந்தப் பால் தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்னும் நோக்கங்களோடு தொடங்கப்பட்டது.
சிறு பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் எல்லாப் பாலையும் அவர்களே நேரடியாகக் கொண்டு சென்று நுகர்வோரின் வீட்டுக்கு தர முடியாது. எனவே, அவர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கினார்கள். அந்த நிறுவனம் சிறு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலைக் கொள்முதல் செய்து, பதப்படுத்தி, நுகர்வோரிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்தார்கள்.
உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் லாபநோக்கம் கொண்ட இடைத் தரகர்கள் இல்லாததால், உற்பத்தியாளர்களும், நுகர்வோரும், இருவருக்கும் கட்டுபடியாகும் விலையில் சந்தித்துக் கொண்டார்கள்.
தாங்கள் உற்பத்தி செய்யும் பால் சீராகக் கொள்முதல் செய்யப்படும் என்னும் நம்பிக்கை வந்த போது, உழவர்கள் கால்நடை வளர்ப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். உற்பத்தி பெருகியது. குறைந்த விலையில் பால் கிடைத்ததால் நுகர்வும் பெருகியது. நுகர்வும், உற்பத்தியும் நேரடியான, எந்தவித லாப நோக்கும் இல்லாத வணிகச் சங்கிலியின் மூலம் இணைக்கப்பட, இந்தியப் பால் உற்பத்தி, தங்கு தடையின்றிப் பெருகியது. உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளாராக இந்தியா உருவெடுத்தது.
இந்தியப் பசுக்களின் செயல் திறன் (பால் உற்பத்தித் திறன்) ஐரோப்பியப் பசுக்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கலாம். ஆனால், பால் கூட்டுறவு உற்பத்திச் சங்கிலி, உற்பத்தியாளர்களுக்கு ஒரு தொடர்ந்த வருமானத்தை அளித்து வந்தது. வருடம் 2-3 முறை மட்டுமே பயிர்கள் மூலம் வருமானம் பெற்று வந்த உழவர்கள், பால் உற்பத்தி வழியே வாரா வாரம் வருமானம் என்னும் மேம்பட்ட நிலையை அடைந்தனர். இங்கே பசுக்களின் செயல் திறன் குறைவாக இருந்தாலும், பால் உற்பத்திக் கூட்டுறவுத் தொழில் முறை செயல் திறன் மிக்க ஒன்றாக இருந்தது.
இந்த இரண்டு துறைகளிலுமே, அதீத லாப நோக்கம் கொண்ட தனியார் துறை தவிர்க்கப்பட்டதன், மூலம், அதீதச் செயல்திறன் கொண்ட வணிகச் சங்கிலி உருவாகியுள்ளது. இத்துறைகளில், பொருளும், சேவையும், உலகத் தரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, நுகர்வோருக்கு மிகக் குறைவான விலையில் கிடைக்கின்றன. எனவேதான், இந்தத் தொழில்களில், பன்னாட்டு முதலீடுகள் அதிகம் வருவதில்லை. வந்தாலும், அவற்றின் செயல்பாடுகளை, லாப சதவீதத்தை இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளே முதன்மையாக தீர்மானிக்கின்றன
உலகின் மிக முக்கியமான வேளாண் சிந்தனையாளரான பீட்டர் ட்ரக்கர், ஒரு நிறுவனத்தின் நோக்கம் என்பது, அது தனது நுகர்வோரின் தேவைகளை நன்றாக அறிந்து கொண்டு, அவற்றை, குறைவான விலையில், சரியாக நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். அதில் வரும் லாபம் என்பது, அந்த நிறுவனம், அந்தச் செயலை மிகவும் செயல்திறனோடு செய்து வருவதன் அறிகுறி என்கிறார்.
அவ்வகையில், பால், சுகாதாரம் போன்ற துறைகளில், தனியார் துறை நிறுவனங்களை விட அதீதச் செயல்திறனுடன் இயங்கிவரும் அமுல் மற்றும் அரவிந்த் நிறுவனங்கள் காந்தியப் பொருளியல் கோட்பாடுகளின் வெற்றிகரமான நடைமுறை உதாரணங்கள்.
***
பாலசுப்ரமணியம் முத்துசாமி: தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு ஊரகப் பகுதியைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர். மின்னஞ்சல்: arunbala9866@gmail.com.
1931ஆம் ஆண்டு. இந்திய அரசியல் சட்டத் திருத்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். அதன் பகுதியாக இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய காங்கிரஸின் ஒரே பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. தங்களின் ஆட்சியாளர்களோடு இந்தியர்கள் சரிசமமாக அமர்ந்து பேசுவது ஆங்கிலேயர்கள் பலருக்கு உறுத்தலாக இருந்தது. பின்னாட்களில் இங்கிலாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு படி மேலே சென்று, “இங்கு வக்கீலுக்குப் படித்துவிட்டு, கிழக்கு நாடுகளில் காணப்படும் அரை அம்மண ஆண்டிகளின் தோற்றத்தில், பிரிவினைவாதம் பேசித் திரிபவர், நம் மாளிகைப் படியேறி, நம் அரச பிரதிநிதிகளுக்குச் சமமாக அமர்ந்து பேசப் போகிறார்” என்று அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையால் காந்திக்கு அரை அம்மண ஆண்டி (Half Naked Fakir) என்ற அடைமொழி கிடைத்ததுதான் மிச்சம்.
இன்று நமக்கு காந்தி என்றவுடன் நினைவுக்கு வருவது கையில் ஒரு கம்புடன் முட்டிக்கு மேல் தூக்கிக் கட்டப்பட்ட வேட்டியும், மேலுடலை மறைக்கப் போர்த்தப்பட்ட துண்டும் கொண்ட உருவம்தான். ஆனால் ஆரம்பத்தில் காந்தி அணிந்து கொண்ட உடைகள் இவை இல்லை. அவர் இந்த உடைகளுக்கு மாறியதற்குப் பின் ஒரு கதை இருக்கிறது, அரசியல் இருக்கிறது, சமுதாயத்தின் மீதான அக்கறை இருக்கிறது.
(PC: Hariharan Sankaran / பட உதவி: ஹரிஹரன் சங்கரன்)
காந்தியின் தந்தையின் மரணத்திற்குப் பின் அவரின் குடும்பம் ஒரு சராசரிக் குடும்பமாகத்தான் இருந்தது. அவர் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல முடிவான பின்பு அதற்கான செலவுகளுக்குப் பணம் திரட்டுவது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் இங்கிலாந்தில் அணிவதற்கு ஏற்ற உடைகளைக் காந்தி வாங்கிக் கொண்டதாகத் தன் சுயசரிதையில் எழுதி இருக்கிறார். அப்பொழுது வாங்கிய கோட்டுகளும் கழுத்துப்பட்டைகளும் ஆரம்ப காலத்தில் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் பின்னாட்களில் கோட்டுகளையும் கழுத்துப்பட்டைகளையும் விரும்பி அணியத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற உடைகள் அங்கிருந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவையாக இல்லை என்று உணர்ந்து லண்டனில் புதிய உடைகளை காந்தி வாங்கிக் கொண்டார். கோட்டு சூட்டும், கழுத்துப்பட்டையும், தங்க கைக்கடிகாரமும், தொப்பியுமாக அவர் ஐரோப்பிய உடைகளுக்கு முழுதும் மாறினார். ஆனால் ஒரு கட்டத்தில் படிக்க வந்திருக்கும் மாணவனுக்கு இத்தனை படாடோபம் தேவை இல்லை என்று செலவுகளைக் குறைத்தும் கொண்டார்.
அங்கிருக்கையில் அவர் தமக்குப் பின் இங்கிலாந்து வரும் இந்தியர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு, உதவியாக இருக்கும் வரையில் லண்டன் கையேடு (Guide to London) என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகத்தை எழுதினார். அதிலும் கூட ஐரோப்பிய பாணி உடைகளான overcoat, morning coat, waistcoat, jacket suit, pairs of trousers, drawers (woollen, cotton or merino), woollen vests போன்றவற்றைக் கொண்டு வர வேண்டும் எனப் பட்டியலிட்டுள்ளார். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பி வந்து பாரிஸ்டராகப் பணிபுரிய முனைந்த பொழுதும் அவரின் உடைகளில் மாற்றங்கள் ஏதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், தன்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்த பொழுது அண்ணனின் குழந்தைகளையும் தன் பையனையும் கூட ஐரோப்பிய பாணி உடை அணியச் செய்ததாக காந்தியே எழுதி இருக்கிறார்.
இந்தச் சூழலில்தான் அவரது தென்னாப்பிரிக்கப் பயணம் அமைந்தது. அங்கு முதலில் அவர் அணிந்த கோட்டும் தலைப்பாகையும் அவரை அந்நியப்படுத்திக் காட்டினாலும் அவர் அதையே அணிந்தார். அங்கு சென்ற சில நாட்களிலேயே காந்திக்கு மாவட்ட நீதிமன்றம் ஒன்றிற்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் அமர்ந்திருந்த பொழுது அவரின் தலைப்பாகையை நீக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டார். ஆனால் காந்தியோ அதற்கு ஒத்துக்கொள்ளாமல் அந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். பின் வெகு நாட்களுக்கு அவர் அங்கு தலைப்பாகை அணியும் பழக்கத்தைக் கைவிடவில்லை. இது குறித்து அவர் நாளிதழ்களில் எழுத, அவரின் பெயர் பலருக்கும் தெரிய வந்தது. காந்தி தான் அணியும் உடையை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது இங்கேயே தொடங்கிவிட்டது.
காந்தி இந்த தலைப்பாகை அணியும் உரிமையை தனக்கு மட்டும் வேண்டுமெனப் போராடவில்லை. பாலசுந்தரம் என்ற தமிழர் அங்கு ஒப்பந்தக் கூலிக்காரராக வேலை பார்த்து வந்தார். அவருடைய முதலாளி கோபத்தில் கண்டபடி அவரை அடித்துக் காயப்படுத்திவிட அவர் காந்தியின் உதவி நாடி அவரைப் பார்க்க வந்தார். அப்பொழுது சமூகத்தில் தம்மை விட மேலான நிலையை இருந்தவர்களைப் பார்க்கும் பொழுது தலைப்பாகையைக் கழட்டி வைத்துக் கொள்வது வழக்கம். அதன்படி பாலசுந்தரமும் காந்தியைப் பார்க்கும் முன் தன் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்துக் கையில் வைத்துக் கொண்டு காந்தியை வணங்கினார். சக மனிதன் இப்படி வணங்க நேர்ந்ததைக் கண்டு திகைப்படைந்த காந்தி அவரை மீண்டும் தலைப்பாகையை அணிய நிர்பந்தித்தார். மிகுந்த தயக்கத்தோடு பாலசுந்தரம் தலைப்பாகையை அணிந்தாலும் அவர் முகத்தில் தென்பட்ட பெருமிதம் தனக்கு மகிழ்ச்சியை அளித்தது என்று காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் தேவைப்பட்ட நேரத்தில் காந்தி உடை விஷயத்தில் சமரசம் செய்யவும் தயங்கவில்லை. ஒரு முறை, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் காந்தி வழக்காட நேர்ந்த பொழுது அங்கிருந்த தலைமை நீதிபதி வக்கீல்களுக்கான உடை குறித்த விதிகளை குறிப்பிட்டு காந்தி தலைப்பாகையை அணியக் கூடாது என்று சொன்ன பொழுது அவ்வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி காந்தி அந்த கோரிக்கைக்கு உடன்பட்டு தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு வாதாடினார். அவரின் நண்பர்களுக்கு அந்தச் செய்கையில் ஒப்புதல் இல்லை என்பதை அறிந்து, அவர்களிடையே தான் ஏன் அப்படிச் செய்ய நேர்ந்தது என்பதை விளக்கினார். சில நேரங்களில் பெரிய இலக்கினை அடைய இது போன்ற சிறிய சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டும் என்ற தன் நம்பிக்கையை எடுத்துச் சொன்னார். அவரின் சத்யாகிரகப் போராட்ட வழியில் இந்தச் சமரசங்கள் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தன.
காந்தி தென்னாப்பிரிக்க அரசியலில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா வந்திருந்தார். அந்நேரம் அவர் கர்சன் பிரபு, இந்தியா கிளப் என்ற இடத்தில் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். பொதுவாக இந்தியா கிளப்பிற்கு இந்திய உடைகளில் வருபவர்கள் அன்று கோட்டும் பூட்ஸும் அணிந்து வந்திருந்ததைக் கண்டு வியந்த அவர், அப்படி உடையணிந்த நண்பர் ஒருவரிடம் ஏன் இப்படி உணவகத்தில் பரிமாறும் சிப்பந்திகளைப் போல உடையணிந்து வந்திருக்கிறீர்கள் என வினவினார். அதற்கு அந்த நண்பர், நாங்கள் கர்சன் பிரபுவிற்கு வேலையாட்கள்தானே. அதனால் இந்த வேஷத்தை அணிய வேண்டியிருக்கிறது என மனம் நொந்து பதில் சொன்னார். இந்நிகழ்வு, மற்றவர்களுக்காக நம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வியை காந்தியின் மனத்தில் எழுப்பியது.
தென்னாப்பிரிக்காவிற்குத் திரும்பிய காந்தி, தான் அணியும் உடைகளில் அடுத்த மாற்றத்தைக் கொண்டு வந்தார். ஐரோப்பிய பாணி உடைகளை விடுத்து இந்திய பாரம்பரிய உடைகளை உடுத்தத் தொடங்கினார். இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்த ஒன்றல்ல. காந்தி படிப்படியாக இந்த மாற்றத்திற்குத் தன்னை உட்படுத்திக் கொண்டார். தான் போராடும் மக்களோடு தன்னை இணைத்துக் கொள்ள இது ஒரு வழியாக அவருக்குப் பட்டது.
தென்னாப்பிரிக்காவில் தன் பணி முடிந்து லண்டன் வழியாக இந்தியாவிற்கு 1915ஆம் ஆண்டு நிரந்தரமாக திரும்பினார் காந்தி. லண்டனில் இருந்து இந்தியா வரும் பொழுதே இந்திய பாரம்பரிய ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டார். அதன்படி அவர் ஒரு வேட்டியும் மேற்சட்டையும், வட இந்திய பாணி தலைப்பாகையுமாகத்தான் கப்பலில் பயணம் செய்தார். கஸ்தூர்பாவும் ஒரு சாதாரணமானச் சேலையையே உடுத்தி இருந்தார். இந்த எளிமையான கோலத்தில் இவ்விருவரையும் பார்த்த மக்கள் திகைத்து நின்றார்கள். அவரின் இந்த உடை சராசரி மக்களோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. காந்தி இந்தியாவிற்கு திரும்பி வந்த நிகழ்வின் நூறாவது ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக இந்திய தபால்துறை கஸ்தூர்பா, காந்தி இருவரின் எளிமையான தோற்றத்தின் படங்களைக் கொண்ட தபால்தலைகளை வெளியிட்டது.
பணக்காரர்களும் தலைவர்களும் ஐரோப்பிய நாகரிகத்தை பின்பற்றி வந்த நேரத்தில், இப்படி எளிமையான உடைகளில் மேடை ஏறிய காந்தியை வியந்து பார்த்தனர் இந்திய மக்கள். காந்தி தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள இப்படி உடை அணியவில்லை, தான் எது சரி என்று நம்பினாரோ அதைத்தான் செய்தார். தனது நம்பிக்கைகள் மாறும் பொழுது அதற்கேற்ற மாதிரி தன் நடவடிக்கைகளில் மாற்றங்களைச் செய்து கொள்வதில் அவர் தயங்கியதே இல்லை.
இந்தியா திரும்பிய காந்தி, தனது அரசியல் குருவான கோகலே அவர்களின் அறிவுரைப்படி, ஒரு வருட காலம் இந்தியாவைச் சுற்றிப் பார்த்து, இம்மக்களோடு பழகி, அவர்களது தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு, அதற்காக தீர்வுகளை யோசித்துவிட்டு, தீவிர அரசியலில் இறங்கலாம் என முடிவு செய்தார். சாதாரண மக்களோடு பழக மூன்றாம் வகுப்பிலேயே பெரும்பாலும் பயணம் செய்தார். எளிமையான உடைகளை அணிந்து மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் பயணம் செய்த தலைவர்களை பார்த்தே இராத மக்களுக்கு காந்தியின் நடவடிக்கைகள் ஆச்சரியத்தை அளித்தன. இந்த எளிமை எதிர்பார்க்கப்பட்டதில்லை என்பதால் காந்திக்கு சில இடங்களில் அவரை அடையாளம் தெரியாமல் ஒரு தலைவருக்கு உண்டான மரியாதை கிடைக்காமல் சிரமங்கள் ஏற்பட்டதும் உண்டு. அவற்றை எல்லாம் அவர் தன் போக்கில் எதிர்கொண்டாரே தவிர தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை.
உதாரணமாக 1915ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்த பொழுது காந்தியை வரவேற்க ரயில்நிலையத்தில் குழுமி இருந்த தலைவர்கள் அவரைத் தேடி முதல் வகுப்புப் பெட்டிகளை நோக்கிச் செல்ல, மூன்றாம் வகுப்புப் பெட்டியில் இருந்து இறங்கிய காந்தியை யாருமே கண்டு கொள்ளவில்லை. அவரே தம்மை வரவேற்க வந்தவர்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலைமை உண்டாயிற்று.
பொதுவாக தலைவர்களும் சமூகத்தில் பெரும் அந்தஸ்து கொண்டவர்களும் வெளிநாட்டுத் துணிகளை அணிவது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல, இந்தியர்கள் இந்தியாவில் தயார் செய்யப்படும் உடைகளையே அணிய வேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கத் தொடங்கினார் காந்தி. காதி எனப்படும் கைத்தறி ஆடைகளை மாற்றாக அடையாளம் காட்டினார். இந்திய கைத்தறியை மீண்டும் மக்களுக்கானதாகச் செய்யவும் முயற்சிகளை முன்னெடுத்தார். அந்த முயற்சியைத் தனது ஆசிரமத்தில் இருந்தே தொடங்கினார்.
இந்தியாவில் தனது முதல் ஆசிரமத்தை அகமதாபாத்தில் அமைக்க காந்தி முடிவு செய்ததில் ஆச்சரியம் இல்லை. அவர் ஒரு குஜராத்தி, எனவே அங்கே இருந்து தன் சேவையைத் தொடங்க அவர் முடிவு செய்தது நியாயமே. ஆனால் அம்முடிவுக்கு பின் வேறு ஒரு காரணமும் இருந்தது. அகமதாபாத் கைத்தறிக்குப் பெயர் போன நகரம். ஆனால் அச்சமயத்தில் அந்தத் தொழில் அங்கே நசிந்து போயிருந்தது. அதனை மீட்கும் வகையில் தனது ஆசிரமத்தை அங்கே அமைக்கப் போவதாக காந்தி முடிவெடுத்தார். தனது ஆசிரமத்தில் கைராட்டை மூலம் நூல் நூற்பதற்கும், அந்த நூலை துணியாக நெய்யத் தேவையான ஏற்பாட்டையும் செய்தார்.
1916ஆம் ஆண்டு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவினை ஒட்டி ஹார்டிங் பிரபுவை பாராட்டி அளிக்கப்பட்ட விருந்தில் காந்தி கலந்து கொண்டார். இந்த விருந்தில் கலந்து கொண்ட அரசர்கள் பட்டாடைகளும், நகைகளும், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தலைப்பாகைகளும், தங்க உறைகளில் தொங்கிய கத்திகளுமாக இருந்தது காந்தியின் கண்களை உறுத்தியது. அவர்களில் சிலரும் கூட தாங்கள் வேண்டாவெறுப்பாகவே இப்படி வர வேண்டி இருக்கிறது எனச் சொன்னது காந்திக்கு புகழுக்கும் பதவிக்கும் இவர்கள் இப்படி எல்லாம் செய்ய வேண்டியிருப்பதை நினைத்து வெறுப்பாக இருந்தது. அனைவரும் இந்திய துணிகளை அணிய வேண்டும் என்ற முழக்கத்திற்கு இது சரியான தூண்டுகோலாக இருந்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு என்ற போராட்டத்தை காந்தி அறிவித்தார். ஜூலை 31, 1921, அன்று மும்பையில் அந்நிய துணிகள் கொளுத்தப்பட்டன. ஆங்கிலேய உடைகள் நம் அடிமைத்தனத்தின் அடையாளம் என முழங்கினார் காந்தி. இப்போராட்டம் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. கதர் அணிவது தேசபக்தியின் அடையாளம் என்றானது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு நிகழ்வு அந்த வருடம் காந்தி தமிழகம் வந்த பொழுது நிகழ்ந்தது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த காந்தி மதுரைக்குச் செல்லும் வழியில் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கே அவரை வரவேற்ற விவசாயிகள் மேலாடை அணியாமல் இருந்ததைக் கண்ட காந்தி, அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டார். தாங்கள் வறுமையில் இருப்பதால் காதி உடைகள் வாங்கும் வசதி இல்லை, அதனால் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு மேலாடை இல்லாமல் இருக்கிறோம் என அவர்கள் சொன்னது காந்தியின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.
மதுரை வந்து சேர்ந்த காந்தி, செப்டம்பர் 22ஆம் தேதி தான் இனி ஒரு நான்கு முழ வேட்டியும் மேலே ஒரு துண்டும் மட்டுமே அணிவது என்ற முடிவினை எடுத்தார். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன், தனது வேட்டியை இரண்டாகக் கிழித்து அதையே தன் உடையாக அணிந்து கொண்டு வந்தார். வறுமையில் இருக்கும் மக்களின் உணர்வினைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தான் இந்த ஆடைக்குறைப்பு என்ற முடிவுக்கு வந்ததாக காந்தி எழுதி இருக்கிறார். அன்றிலிருந்து அதுவே அவர் நிதமும் அணியும் உடையாக நிலைத்தது. அந்த உடையிலேயே லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தவும் போக ‘அரை அம்மண ஆண்டி’ என்ற பட்டமும் கிடைத்தது.
இன்றும் காந்தி என்றாலே அவரது எளிமையான உடையும், கைராட்டையும்தான் நம் மனத்தில் முதலில் தோன்றும். அந்த அளவிற்கு அவரது உடையின் தாக்கம் இன்றளவிற்கு நீடித்து இருக்கிறது. ஆரம்ப காலத்தில் காந்தி தன்னைத் தனியாகத் தெரியச் செய்யும் உத்தியாகவோ அல்லது ஒரு புரட்சியாகவோ இதனைச் செய்யவில்லை. ஆனால் உடையையும் ஓரு போராட்டக் கருவியாகப் பயன்படுத்த முடியும் என உணர்ந்த பின் அதனை அவ்வகையில் கையில் எடுக்க அவர் தயங்கவில்லை. இந்திய கைத்தறியை அரசியல் அடையாளமாக முன்வைத்து, அதனை தேசியவாதிகளின் சீருடையாக அவர் செய்தததால் இன்றும் கூட தலைவர்கள் கதர் அணிவது என்பது ஒரு பழக்கமாகவே இருக்கிறது. அதுவே காந்தியின் உடை அரசியலின் வெற்றி.
***
இலவசக்கொத்தனார் – இயற்பெயர் ராஜேஷ் கர்கா, ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் எழுதிய புத்தகங்களான ‘ஈசியாக எழுதலாம் வெண்பா’, செவ்வியல் தமிழ்க் கவிதை வடிவமான வெண்பா இலக்கணம் பற்றியது, ‘ஜாலியாத் தமிழ் இலக்கணம்’ தமிழ் இலக்கணத்தை எளிமையாகச் சொல்லும் ஒன்று. பெரு நாட்டில் பெற்ற பயண அனுபவங்களை ‘பெரு(ம்) பயணம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘Perambulating in Peru’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் புத்தகமாக இவர் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் இடையில் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். பல தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் எழுதி வரும் வலைப்பதிவு – https://elavasam.blogspot.com/ மின்னஞ்சல்: gargas@gmail.com
“கண்டிப்பாக முடியாது. இதெதுவும் நாம் எதிர்ப்பார்த்த முடிவுகள் கொடுக்காமல், தலையும் காலும் புரியாதபடிக்கு சிக்கலாக உள்ளது என்பது உனக்கே தெரியும். தெரிந்தும் இதை நம் வாடிக்கையாளரிடம் கொடுக்கலாம் என்கிறாய். நல்லது ரொம்ப நல்லது” என்று முடிக்கும் முன் டீன் சத்தமாக தொப்பை குலுங்க அடித்தொண்டையில் விக்கலும் இருமலும் ஒரே நேரத்தில் வருவது போல சிரித்தார். அந்த எரிச்சலூட்டும் சிரிப்பு ஆரம்பித்து முடிய சில வினாடிகளானது. வினாடிகள் என்பது கேட்பதற்கு எதோ காலத்தின் மிகக் குறுகிய அளவைப்போலிருந்தாலும் அவரது சிரிப்பு அப்படி உணரச்செய்வதில்லை. நான் பதில் சொல்லத்தொடங்க முயற்சிப்பதற்குள் அவர் மீண்டும் “நாளை சரி செய்து தருவாயல்லாவா. அப்போது பார்த்துக்கொள்கிறேன். இதோ மணி ஒன்பதாகிவிட்டது. அடுத்த அழைப்பிற்கான நேரம். பிறகு பேசுவோம். டேக் கேர்”. என் பதிலுக்குக் காத்திராமல் இணைப்பைத் துண்டித்தார். கணினித்திரையில் அவரது அலுவலக கணக்கிற்காக வைத்திருந்த, எதையும் ஏளனமாக மார்பில் கைகட்டியபடி பார்க்கும் பெரிய மீசை வைத்த பூனையின் கேலிச்சித்திரம் என்னையும் அப்போது ஏளனமாக பார்த்து சிரிக்கத்தொடங்குவதற்கு முன், கணினியை மூடிவைத்துவிட்டு எழுந்தேன். கழுத்தில் எழுந்த வலி மெல்ல கீழிறங்கி நடுமுதுகில் வெடித்துத் தெறித்தது. பின் பக்கமாக முதுகை வளைத்து அரை நொடிக்குள் அந்த வலியை இல்லாமலாக்க எடுக்கும் முயற்சியில் ஐந்தாறு டப் டப் ஒலியைத்தவிர வேறெதுவும் மிஞ்சவில்லை. பளீர் வெளிச்சம் கொண்ட அறையில் அச்சமயம் என்னைப்போல குறைந்தது ஐம்பது பேராவது அமர்ந்து நெட்டிமுறித்துக்கொண்டிருப்பார்கள். இதோ அந்த டப் டப் ஒலிகள் நீண்ட இசைத்துணுக்கென கேட்டுக்கொண்டேயிருக்கிறது. மந்தமான வயிற்றிலிருந்து எழுந்த ஏப்பத்தை மெல்ல படிப்படியாக ஏற்றி தொண்டைக்கு கொண்டுவந்து வெளியேற்றிவிடலாம் என எத்தனிக்கையில் அது தொண்டைக்குள் சிக்கி எரிந்து நாக்கில் அமிலமென கசந்தது. குளிர்ந்த நீரை தொண்டைக்குள் இட்டு நிரப்பி அந்த அமிலத்தின் நெடியை மாற்றியதும் சற்றே ஆசுவாசமானது.
இன்றோடு டீனுடன் வேலை செய்ய ஆரம்பித்து ஆறு வருடங்கள் முடிந்துவிட்டன. அவருடன் முதல் நாளில் பேசிய போது அமெரிக்க ஆங்கில வார்த்தைகளும் அதன் உச்சரிபுகளும், யோசித்தாலும் புரிந்துகொள்ள கடினமான ஆங்கில நகைச்சுவைகளும் என எல்லாவற்றையும் அன்றைய நாளிலேயே அனுபவித்துவிட்டேன். அவர் குரலில் எழுந்த கார்வையும் சொற்கள் வந்து விழும் வேகமும் ஏனோ இதுவரை பார்த்திராத அவரை தடித்த எப்போதும் காளர் வைத்த டீசர்ட் அணிந்து தொப்பையும் கழுத்துச்சதையும் குலுங்க பேசும் ஆணாகவே கற்பனை செய்திருந்தேன். ஆறு வருடங்கள் நேரிலோ புகைப்படத்திலோ பார்த்திராத ஒருவரின் மீது இத்தனை வன்மமும் கோபமும் உண்டாகுமென முன்பு சொல்லியிருந்தால் சிரித்திருப்பேன்.
காலையில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பும் முன் எழுந்த சண்டையின் வீச்சு இன்னும் தணிந்திருக்கவில்லை. ஜெனியின் குறுஞ்செய்திகள் ஒவ்வொன்றாக மாடிப்படி ஏறுவது போல வெறியின் கூச்சலுடன் நீண்ட வாக்கியங்களாக வந்து விழுந்துகொண்டிருந்தன. அவற்றைத் திறந்து பார்த்தால் இந்த அறைக்குள் கத்தி கூப்பாடு போட்டு “வந்து உன் கழுத்த அறுக்குறேன். முண்ட முண்ட” என அலறி எங்காவது ஓங்கி குத்திக்கொண்டிருக்கவேண்டும். உடலின் அனேக பாகங்களில் இதுபோல குத்திக்கொண்டதால் உண்டான வீக்கம் ரத்தக்கட்டு சதை கிழிவு என எல்லாம் வந்தாலும் குத்துதல் மட்டும் குறைந்தபாடில்லை. கடைசியாக வந்த குறுஞ்செய்தியில் இப்படி எழுதியிருந்தாள் “உன்னோட அம்மா எங்க என்ன தொழில் செஞ்சான்னு தெரியும். என்னப்பத்தி பேச வந்துட்டான்” துப்புவது போன்ற எமோஜியொன்றையும் வாக்கியத்தின் இறுதியில் சேர்த்திருந்தாள்.
அம்மா என்னை அங்குதான் பெற்றெடுத்தாள். அங்கென்றால்…விடுதி…விபச்சார விடுதி. அந்த இடம் நரகச் சாலைக்கு அப்பால் மங்கலான தூசுப்படலம் நிறைந்த பாழடைந்த மண்டபத்தைப் போல் ஞாபக அடுக்கின் அடியில் கிடக்கிறது. அதிலிருக்கும் கருவறைக்குள் உடலெல்லாம் சீழ்வடியும் தெய்வமாக, ஒற்றைக்கால் மடித்து, தளர்ந்த முதுகும், குனிந்த தலையுடன், அபயமுத்திரை ஏதுமின்றி அழுதுவடிந்த முகத்துடன் அம்மா அமர்ந்திருப்பதாக கற்பனைசெய்திருக்கிறேன். கனவுகளில் அதே நீர்கசியும் கண்களுடனேயே வந்திருக்கிறாள். முழுமையான மனித உடலாகவோ, முகமாகவோ அல்லாமல் முலைக்காம்பாகவோ கருத்த உதடுகளாகவோ மென்மையாக உள்ளங்கைகளாகவோ தொடையிடுக்காகவோ கனவுகளில் அவளை அடையாளம் கண்டுகொள்கிறேன். எப்படி யோசித்தாலும் அவளின் முகம் உண்மையில் எனக்கு ஞாபகமில்லை. அவளின் தொடுகையும் உடுத்தியிருந்த நைலான் சேலையின் வழுவழுப்பும் நினைவிருக்கிறது. ஒருவேளை அந்த தொடுகையும் வழுவழுப்பும் கூட அவளுடையதாக இருக்கவேண்டியதில்லை. ஏதோ ஒரு பெண் என்னிடம் விட்டுச்சென்ற நினைவுகள் எனும் இடத்திலேயே அவற்றை வைக்கமுடியும். நினைவு தெரிந்த நாளில் என்னுடனிருந்தது சுத்தமான அறையும் கூட தங்கியிருந்த நண்பனும் மட்டுமே. அம்மாவைப் பற்றிய செய்தியை பின்னாளில் ஃபாதரிடமிருந்து தெரிந்துகொண்டதும் “இதச் சொல்லாமலே இருந்திருக்கலாமே ஃபாதர்” என்றேன்.
புன்னகையுடன் “இது வேறயாரோ தப்பாச் சொல்லி தெரிஞ்சாத்தான் பிரச்சன ஜான். உனக்கும் அந்த இடத்துக்கும் சம்பந்தமில்ல. அத நீ தெளிவா புரிஞ்சுக்கனும். நீ இங்கருந்து காலேஜு வேலன்னு போனாலும் உன்ன அதோட சேர்ந்துவச்சு பாக்ககூடாது. மத்தவங்க சொல்றதில்ல. நீ புரிஞ்சுக்கனும்”
”புரியுது” என்றேனே தவிர அதன் பிறகு அம்மாவைப் பற்றிய தகவல்களை சேகரிப்பததை நிறுத்தவில்லை. அவளது ஒரேயொரு புகைப்படம் மட்டும் கிடைத்திருந்தால் தேடலை நிறுத்தியிருப்பேன். கிடைக்கவில்லை. கிடைக்கப்போவதுமில்லை. அதற்காக தேடாமலும் இருக்கமுடியாது. தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஜெனியிடம் இந்த விசயத்தை நான் சொல்லியிருக்ககூடாது என்ற எண்ணம் சொல்லும்போது தோன்றவில்லை. சொல்லிமுடித்ததும் எனக்குள் எரிந்துகொண்டிருந்த அழுகும் சுடரொன்றை இணையான இன்னொருவரின் இதயத்தில் ஏற்றி வைத்ததன் ஆசுவாசம். ஆனால் பிறகு எங்களுக்குள் எழுந்த சாதாரண பிரச்சனைகளின் இடுக்குகளில் அந்த செய்தியை சேர்த்து வசையொன்றை உதிர்ப்பதை அவள் பழக்கமாக்கியிருந்தாள். வசைகளுக்கிடையே என்னை நானே குத்திக்கொள்வதை ஒரு நாள் இணைந்த உதடுகளின் வலது ஓரமாய் எழுந்த நமுட்டுச் சிரிப்பால் கடந்து “இப்பிடி குத்திக்கிட்டா எல்லாம் செரியாகிருமா. செத்துப்போயிராத அப்புறம் நான் தான் காரணம்னு ஆகிரும்” என்றாள். அதுபோன்ற தருணங்களில் பின்னெப்போதும் அவள் முன் அடித்துக்கொள்வதில்லை. அதற்காவே நான் உண்டாக்கி வைத்திருக்கும் பிரதேசங்களில் சத்தமின்றி நுழைந்து கொள்வேன்.
அம்மா செய்ததை தொழில் என அடையாளப்படுத்தியிருந்தாள். நான் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் உண்டாக்கியிருக்கும் செயலியானது சமூக வலைதளமென அடையாளப்படுத்தப்படுகிறது. அதில் வெளிவரும் காணொளிகளை பயனாளிகள் பணம் கட்டி பார்த்துக்கொள்ளலாம். அதில் பதிவேற்றப்படும் காணொளித் தொகுப்புகள் எல்லாமே பார்னோகிராபி அல்லது சற்றே குறைந்த அளவிலான பார்னோகிராபி போன்றவை மட்டுமே. இந்த செயலி, சரியாக பயனர்கள் காணொளிகளை சொடுக்கியதும் ஒரு வினாடி கூட பொறுக்காமல் காட்சிகளை திரையில் ஆரம்பிக்கவேண்டும் என்பதை நாங்கள் வெற்றிகரமாக போன மாதம் நிறைவேற்றியிருந்தோம். இந்த வினாடியை எப்படி அரைவினாடிக்கும் குறைவாக ஆக்குவது என்பதற்காகவே நானும் டீனும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த வினாடிக்கும் குறைவான நேரம்கூட பயனர்களை பொறுக்கவைக்கக்கூடாது. உண்மையில் இந்த வேலையால் எனக்கும் மாதம் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கு மேல் கிடைக்கிறது. இந்தப் பணத்தில்தான் ஜெனி மகிழ்ச்சிக்கான பொருட்கள் அனைத்தையும் வாங்கி குவித்துக்கொள்கிறாள். ஆனால் அம்மாவின் தொழிலை இழிவுபடுத்த அவளுக்குக் கூசுவதில்லை. “தழுக்கி குலுக்கி” என ஒருமுறை அம்மாவை அடையாளப்படுத்தியிருந்தாள். நானும் அந்த மாதிரி பெண்களை கைப்பேசியில் பல தளங்களில் பார்த்திருக்கிறேன் தான். ஆனால் அம்மாவை அப்படி தழுக்கி குலுக்கு வந்து கட்டிலில் படுத்திருக்கும் பல ஆண்களின் குறிகளை வருடுவதை என்னால் எப்படி தாங்கமுடியும். அல்லது என் மகள் அப்படி செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது. டீனுக்கு இது சார்ந்த குழப்பங்கள் ஏதும் இருப்பதில்லை. இதைப்பறிய பேச்சு எப்போதாவது வரும்போது “கமான்…நீயா அவளை வந்து படுத்துக்கொண்டு காலைவிரிக்கச் சொன்னாய். தேவை, விரித்தாள். இருப்பவர்கள் பார்த்து சந்தோசப்படட்டுமே. எல்லா அருமை பெருமைகளையும் நீயே எடுத்துக்கொண்டால் எப்படி. எனக்கும் கொஞ்சம் குடு. நானும் கொஞ்சமாய் கண்ணீர் வடித்துக்கொள்கிறேன்” எனும்போது என் கற்பனைக்குள் அவர் தொப்பை குலுங்கச் சிரித்துக்கொண்டிருப்பார்.
நான் எவ்வளவோ தூரம் தாண்டி இந்த அலுவலகத்தில் அமெரிக்காவின் சார்லெட் நகரத்தில் வசிக்கும் டீனுடன் சரிக்கு சமமாக அமர்ந்து வேலை செய்ய வந்தாயிற்று ஆனால் ஜெனி வலுக்கட்டாயமான என்னைப் பிடித்து அந்த பாழ் மண்டபத்திற்குள் தள்ளுகிறாள். கருவறைக்குள் அம்மாவுடன் நான் மூச்சுமுட்டி திணறுவதை காண்பதற்கான எல்லா செயலையும் இதுபோன்ற தருணங்களில் அவளால் செய்யமுடியும். இப்போது பதிலுக்கு எதாவது குறுஞ்செய்தி அனுப்பியாகவேண்டுமென கைவிரல்கள் பரபரத்தன. ஆனால் இந்த அளவு அருவருப்பான வாழக்கை அவளுக்கில்லை. நித்தியமான அரசாங்க வருமானத்துடன் வாழ்ந்து பென்சனுடன் சாவகாசமாக தொடுதிரை கைப்பேசியை மூக்குக்கணாடி வழியாக கூர்ந்து பார்த்துககொண்டிருக்கும் சாதாரண அப்பாவிற்கும், அடுக்கடுக்காக சேலைகளுடனும் மாதாந்திர சொசைட்டி குழுவும் நடத்தும் அம்மாவிற்கும் பிறந்ததால் அவளைப்போல் அசிங்கமாக கேட்க முடியாதபடி ஆகிவிட்டது. ஆனால் கேட்கவேண்டும் “நீயும் அதே கேஸ்தான். எங்கம்மா என்ன வளக்க இப்புடி செஞ்சா. ஆனா நீ ஃபேமஸாக அவுத்து போட்டு ஆடாத கொறதான்” என்று எழுதி அனுப்புவதற்குமுன் யோசித்தேன். அப்படியொன்றும் அவள் செய்வதில்லை. ஆனால் இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். அனுப்பிவிட்டேன். நெஞ்சுக்கூட்டிலிருந்து இதயம் துடிப்பது மொத்த உடலும் முன்னும் பின்னும் அதிர்வது போலிருந்தது. பாக்கெட்டிற்குள் போனை போட்டு கணிணியை திறந்தேன்.
“முந்தைய நாள் நீ கிட்டில் அனுப்பிய கோடை சரி பார்த்தேன். ஆறு வருடங்களில் ஒன்றும் மாறவில்லை. நானே சரிசெய்துவிட்டேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஜாப் முடிந்துவிடு” கணினியின் ஓரம் எழுந்து நின்ற செய்திவந்த செயலியை எழுப்பி ”நன்றி” என்றனுப்பிவிட்டு என் கையாலாகதனத்தை எண்ணியபடி அறையைவிட்டு வெளியே வந்தேன். இவ்வளவு பெரிய அலுவலகத்தில் நான் வந்து செல்வதை எல்லாராலும் கவனிக்கமுடியும். என் கணினி தற்சமய உறக்கத்திற்குள் செல்லும்போது என் அலுவலக இருப்பை கண்காணிப்பவர்களுக்கு குறிப்பொன்று சட்டென செல்லும். டீன் அதை கவனித்திருப்பார். தற்சமயம் அதற்காக ஒன்றும் செய்யமுடியாது. மணி ஒன்பதாகியிருந்தது. இன்னும் இரண்டுமணி நேரம் என் தற்படத்துடன் கூடிய செயலியில் பச்சை வண்ணம் தெரியும்படி வைத்திருந்தால் போதுமானது. வேலை செய்வதற்கான மனநிலை கூடிவரவில்லை. ஆனால் டீனுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மண்டைக்குள் நடுவிரவில் இரையும் நாய்க்குறைப்பின் வீரியத்துடன் மூளையை முடுக்கிக்கொண்டிருந்தது.
லிஃப்டில் இறங்கி கட்டிடத்தின் தரைத்தளத்தில் வலது ஓரமாக வைக்கப்பட்டிருந்த டீக்கடையின் வாசலில் அப்போதும் கூட்டமாக இருந்தது. கூட்டத்தினுள் நுழைவதை எப்போதும் வெறுத்திருந்தேன். கூட்டத்தில் ஒரு தலையாகவே இருக்கிறேன் என்பதை டீன் ஒரு முறை மறைமுகமாகச் சொல்வதாக நினைத்துக்கொண்டு நேரடியாகவே சொன்னார் “இதோ பார் ஜான், நீ அடிக்கும் கோட் சரியாக வரவில்லை எனச் சொல்லவில்லை. ஆனால் அதை யாராலும் இத்தனை தவறுகளோடு அடித்துவிட முடியும். இருந்தாலும் முடித்துக்கொடுத்ததற்கு நன்றி”. இறுதியில் இணைந்துகொள்ளும் இந்த கொசுறுபோன்ற ‘நன்றி’ என்ற வார்த்தை மேலதிகமாக துன்புறுத்துவது. கூட்டத்திலிருந்து விலகி தனியாக மரமா அல்லது செடியா எனச் சொல்லமுடியாத ஒன்றின் கீழே நின்று சிகரெட்டைப் பற்றவைத்தேன். பாக்கெட்டுக்குள் கிடந்த போன் துடித்துக்கொண்டே இருந்தது. அந்த அதிர்வுகளை உடல் வாங்கிக்கொண்டிருந்தது. வரிசையாக அவள் அனுப்பிக்கொண்டிருந்த குறுஞ்செய்திகள்தான்.
“உன்னோட ஹிஸ்டரி தெரிஞ்சிருந்தா ஒனக்கெல்லாம் பொண்ணே கெடச்சிருக்காது. கெடச்சிருச்சின்னு இப்போ என்ன வேணா சொல்லலாம். இல்லையா”
“என்னோட ப்ரொபஷன் பத்தி போச உனக்கி என்ன ரைட்ஸ் இருக்கு”
“தாலி கட்டிட்டா என்ன வேணும்னா பேசலாமா”
“எல்லாம் உன் குடும்ப புத்திதான…வேற என்ன எதிர்ப்பாக்க முடியும்”
“எங்கையாவது போயி சாகேன்”
“செத்துப்போ அப்பையாவது எனக்கு நிம்மதி வருதான்னு பாக்கலாம்”
“சோஃபியாவ நீயே கொண்டுபோ. உன் பொண்ணெல்லாம் வச்சி என்னால காலம் பூறா ஓட்ட முடியாது. அது என்னோட வேலையும் இல்ல”
“நீயே சம்பாதிச்சி. நீயே நல்லா வளத்துவிடு”
“உங்கம்மா மாதிரி ஆக்கிராத அவள”
“மகாநதி படத்துல் அப்பங்காரன் போயி காப்பாதுதான். நீ கொண்டுபோயி விடு”
கடைசி வாக்கியம் என்னை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை உள்ளங்கையில் வைத்துத் தேய்த்துக்கொண்டேன். முகம் தெரியாத அம்மாவை முன்பு எப்போதும் இந்தளவு வெறுத்திருக்கவில்லை. காரணம் என்னவாக இருந்தாலும் அவள் தன்னுடலை விற்று என்னை வளர்த்திருக்கவேண்டாம். யாருடைய விந்து விழுந்து பிறந்தவன் நான் ? அல்லது பலவித விந்துக்களின் தொகுதியாக இருந்ததா நான் உருவான கரு? ஃபாதர் சொன்னது நினைவிற்கு வந்தது “பெத்தவங்கள சபிக்க நமக்கு உரிமையில்ல ஜான். அவங்களோட சூழ்நிலைய நம்மால முழுசா புரிஞ்சிக்க முடியாது. அததுக்கு ஒரு காரணமிருக்கும். உன்ன உருவாக்குனது இயற்கையோட ஆசைனு வச்சுக்க. அதோட கருணையால நீ உருவாகியிருக்க. அந்த கருணை உன்ன வழி நடத்தட்டும். அவங்கமேல வன்மம் வேண்டாம்” .
வன்மம் இல்லாத வாழ்க்கை எனக்கு வரமளிக்கப்படவில்லை. ஃபாதர் ஒருவேளை அம்மாவின் விசயத்தை என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால் ? அம்மாவைப் பற்றி வேறு யாருக்கும் தெரியாமல் போய் அவளின் காலம் பிரபஞ்ச காலத்திலிருந்து மொத்தமாக சாலையோரக் கழிவென அகற்றி எறியப்பட்டிருந்தால். நான் மகிழ்ந்திருப்பேன். கடந்த காலமற்ற அல்லது எல்லையில்லா நல் கற்பனைக்கு மட்டுமே சாத்தியமுள்ளவனாக நானும் ஆகியிருப்பேன். ஆத்திரம் மெல்ல நெகிழ்ந்து வழிந்து கழிவிரக்கம் நோக்கிச் சென்றது. அந்த பிம்பத்தை பிரதிபலிக்கும் நெகிழ்வில் என் முகம் அன்னையால் கைவிடப்பட்டு சாலையோரத்தில் பசித்து பசித்து வயிறொட்டி இனிமேல் சாப்பிடவும் முடியாதபடி குடல் வரண்டு சுருண்ட ரோமமற்ற நாய்க்குட்டியைப்போலானது. இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்து ஆழ இழுத்தேன். புகையை நெஞ்சில் சில நொடிகள் தேக்கிவைத்து மெல்லிய கிறுகிறுப்பை மூளையிலும் இதயத்துடிப்பிலும் உருவாக்கினேன். எதையாவது பற்றி இந்த பள்ளத்திலிருந்து மேலேறிவிடவேண்டுமென மனம் துடிதுடித்தது. கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். வண்ணப் பிரிவுகள் ஒவ்வொன்றாக மெல்ல எழுந்து வந்து நிறம்மாறிக்கொண்டிருந்தது. இறுதியில் இருளைப் பிடித்துக்கொண்டதும் சட்டென பொறிதட்டியது போல அந்த எண்ணம் வந்தது.
சிகரெட்டைத் தூக்கி எறிந்துவிட்டு அலுவலக கட்டிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். மூச்சின் வேகம் மெல்ல மெல்ல ஏறிகொண்டிருந்தது. லிப்ஃட்டை விட்டுவிட்டு படிக்கட்டில் தாவி ஏறிக்கொண்டிருந்தேன். மூன்றாவது மாடியிலிருந்த என் மேசைக்குச் சென்று கணினியை இயக்கி செயலிக்கான நிரலின் குறிப்பிட்ட பகுதியை மாற்றத்தொடங்கினேன். ஒவ்வொரு வரியாக எழுந்துவர இயந்திர வேகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். தவறுகள் ஏற்படப்போவதில்லை என்பதை மனம் ஏற்கனவே உணர்ந்திருந்ததன் வேகம் விரல்களின் வழியே எழுந்த விசைப்பலகையின் டப் டப் ஓசையில் புரிந்தது. பத்து நிமிடத்திற்கும் நான் எழுதி முடித்திருந்த அந்த வரிகளை ஒருமுறை மேலிருந்து கீழ்வரை வாசித்து சில மாற்றங்கள் செய்தேன். இந்த நிரல் மாற்றம் காணொளியை வினாடிக்கும் குறைவான வேகத்தில் இயங்கச் செய்துவிடும் என்பதில் சந்தேகமில்லாமல் ஒருமுறை ஓட்டிப்பார்த்தேன். அப்படி ஓட்டிப்பார்ப்பதற்கான குறிப்பிட்ட காணொளிகள் எங்களது முதல் நிலை செயலியில் இருந்தன. சோதனைக்காக செயலியை இயக்கியதும் காணொளி வினாடிக்கும் குறைவான வேகத்தில் எங்களது தரவுத்தொகையிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து காட்டியது. ஆனால் இதுமட்டும் போதாது. பயனர்கள் பயன்படுத்தும் அதேமாதிரியான இயக்கமும் செறிவும் இருக்கும்போதும் நிரல் சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதனை செய்யவேண்டும். முதல் தளத்திலிருந்து நிரலின் குறிப்பிட்ட மாற்றத்தை புதிய சோதனைத் தளத்திற்கு கொண்டுசென்று வேறு எதாவதொரு காணொளியை ஓட்டிப்பார்க்கவேண்டும். அதற்காக எங்களுக்கு கொடுக்கப்பட்ட போலியான பயனர் கணக்கினுள் சென்று ஏற்கனவே எங்கள் நிர்வாகத்தில் என்னைப்போன்ற ஒருவர் பார்த்துவைத்திருந்த காணொளியை இயக்கினேன். ஆயிரம் ஆண்கள் வரிசையாக ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு எழும் நீண்ட காணொளியது. அதைக் திறந்ததும் வினாடிக்கும் குறைவான நேரத்தில் அது ஓடத்திடங்கியது. இறுதியாக அந்தப்பெண் தன்கையில் குழந்தையொன்றை வைத்துக்கொண்டு நிர்வாணமாக சோபாவில் அமர்ந்திருக்க, அவளுக்குப் பின்னால் அந்த ஆயிரம் ஆண்களும் நின்றிருக்கும் காட்சி ஐந்தாறு வினாடிகள் மிச்சமிருந்த நிலையில் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் முன்னால் நீச்சல் குளமொன்றும் பின்னால் பெரிய மாளிகையொன்றுமிருந்தது. அந்தப்பெண் “தாங்க்யூ ஆல்…ம்ம்மா” என்று கையிலெடுத்த முத்தத்தை காற்றில் வீசினாள். கேமராவின் கோணம் மெல்ல அவர்களிடமிருந்து விலகி வான் நோக்கிச் சென்று அவர்களனைவரும் வெறும் புள்ளியாகினர். அந்த காணொளி ஆரம்பிக்க எவ்வளவு நேரமானது என்பதை செயலியில் நான் பார்ப்பதற்காக வைத்திருந்த குறிப்பேட்டில் காட்டியது “0.0003” வினாடிகள்.
மனம் குதியாளமிட்டு நிலையின்றி தவித்தது. அறையிலிருந்த குளிரிலும் நெற்றியில் அக்குளில் முதுகில் வியர்க்கத் தொடங்கியது. இதோ முடித்துவிட்டேன்…டீனின் முகத்தில் அடர்கரியை பூசிவிடலாம் எனும் எண்ணத்தால் விரல்கள் நடுங்கத்தொடங்கின. டீன் கணினியின் முன் இருக்கிறாரா எனப்பார்த்தேன். அவரது பூனைப்படத்தின் மேல் பச்சையோ சிவப்போ இன்றி சாம்பல் நிறமிருந்தது. ஒருவேளை டீன் இருந்திருந்தால் அப்போதே இதைச் சொல்லி “முடித்துவிட்டேன். முடிந்தால் சரிபார்க்கவும்” என்றொரு செய்தியை அனுப்பிவிடலாம் என நினைத்தேன். சிறிய கூர்மையான மின்னஞ்சல் ஒன்றை அடித்து அணித்தலைவரையும் அதில் சேர்த்துவைத்து அனுப்புவதே சரியாக இருக்குமென விசயத்தை தொகுத்தேன்.
ஹய் டீன்,
நாம் மூன்று மாதங்களாக போராடிக்கொண்டிருந்த பிரச்சனை சரியாகிவிட்டது. சரியாக 0.0003 வினாடி மட்டுமே எடுத்துக்கொண்டு காணொளி திரையில் வந்துவிடுகிறது. குறிப்பிட்ட நிரல் மாற்றம் சோதனை தளத்தில் உள்ளது. நீங்கள் மற்ற வேலைகளின்றி இருக்கும்போது இதை சரிபார்த்துவிட்டால் பயனர் தளத்திற்கு அனுப்பிடலாம்.
சியர்ஸ்,
ஜான்
மின்னஞ்சலை அனுப்பிவிட்டு மணியைப்பார்த்தேன் பதினொன்று தாண்டி ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்திலிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு நான்கு வழிச் சாலையில் வேகமாகச் சென்றேன். மனம் நிறைவாக இருந்தது. மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லியதும் மனம் நிரம்ப இடமின்றி பொங்கி வழியத்தொடங்கியது. எப்போதாவது என்னைக் கடந்தோ அல்லது எதிர்வெளிச்சம் காட்டியோ சென்ற வாகனங்களின் சக்கரக்கள் சாலையில் ரம்யமான ஒலியெழுப்பின. கைப்பேசி விட்டுவிட்டு அதிரத்தொடங்கியதும் நினைத்துக்கொண்டேன் “ஜெனியிடம் மன்னிப்புக் கேட்டு எல்லாவறையும் சரிசெய்துவிடவேண்டும்”. முகத்தில் புன்னகை தொற்றி ஏறிக்கொண்டிருந்தது. ஒரு கணம் வேகமான காற்றின் சுழிப்பொன்று என்மேல் பட்டுத் திரும்பியதும் அந்த முகங்கள் மூளையில் இடைவெட்டி வந்தன, கையில் குழந்தையுடன் நிர்வாணமாக அமர்ந்திருக்கும் அம்மா, பின் டீனின் கரிபிடித்து அகண்டிருந்த பூதமுகம்.
***
இவான் கார்த்திக் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். தற்போது மதுரையில் வசிக்கிறார். இலக்கிய வாசிப்புடன் சிறுகதைகளும் எழுதிவருகிறார். பதாகை, சொல்வனம், ஒலைச்சுவடி, வனம் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்துள்ளது. ‘பவதுக்கம்’ இவரது முதல் நாவல். தொடர்புக்கு: Ivaankarthik@gmail.com 9003405948
லட்சுமிஹர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிறுகதையாசிரியர். யதார்த்தவாதக் கதைகளுக்கு ஈடாகப் பரிசோதனைக் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன (ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள், ‘டார்லிங்’ என பெயர்சூட்டப்பட்ட சித்தாந்தம், க்ளாஸிக் டச், கூத்தொன்று கூடிற்று). சமகாலத் தமிழ் மற்றும் உலக இலக்கியங்களை தொடர்ச்சியாக வாசித்து வருகிறார். திரைத்துறையில் பணிபுரிகிறார். 2025 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருதை கூத்தொன்று கூடிற்று தொகுப்பிற்காக வென்றிருக்கிறார். அவருடைய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வாசித்து அதன் அடிப்படையில் இந்த நேர்காணல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவருடனான இந்த உரையாடல் அவருடைய படைப்பூக்கத்தை மட்டும் அறிய நேராமல் பரந்துபட்ட கதையுலகத்துடனான விவாதமாக அமைந்தது ஓர் நல்வாய்ப்பு. சமகால இலக்கிய உலகம் சார்ந்த தீவிர உரையாடலையும் எழுப்ப வல்லதாய் பதில்கள் அமைந்திருக்கின்றன.
யுவ புரஸ்கார் விருது வென்றதற்கு யாவரும் மின்னிதழ் சார்பாக எங்களின் வாழ்த்துக்கள். பாரம்பரியமான கேள்வியுடனேயே இந்த உரையாடலையும் தொடங்க விரும்புகிறேன். எப்போது உங்களுக்கு கதைகளின் மீது விருப்பம் ஏற்பட்டது ?
‘பொய்யை உண்மையாக சொல்ல முனையும் போது’ கதை மீதான ஆர்வம் எழுந்தததை விட ‘சொன்ன பொய்யை நியாப்படுத்த, நிறைய கதைகள் தேவைப்பட்டதே’ அதன் மீது கவனம் செலுத்தசெய்தது, இவை தொடக்க காலங்கள். என்னை அதன் பிறகு வெகுவாக கவர்ந்தது ‘வாய் மொழிக் கதைகளின் திரிபே’. அவை தனக்குள் கொண்டுள்ள உண்மையை ஒவ்வொரு மனிதர்களுக்கு கடத்தும்போது வேறுபடுவதை சிறுவயதிலேயே உணரத் தொடங்கியது, பின் அவற்றின் மீது கேள்விகளை எழுப்பி அது கொண்டு வந்து நிறுத்திய இடம் கதை உலகு. அப்போதே அதன் தொடர்ச்சியாக எழுத்தையும், திரைப்படங்களையும் வந்தடைந்தேன். இரண்டிற்கும் ஒரே நேரத்தில் வந்ததால் என்னவோ, அந்நியப்பட்ட இரு உலகில் என்னால் சுலபமாக நுழைய முடிந்தது. இன்று வரை அது என்னை சுவரஸ்யப்படுத்திக் கொண்டேயிருக்கிறது
முதல் கதை எழுதிய அனுபவம் குறித்து ?
முதல் சிறுகதை வெளிவந்த போது என்னிடம் ஒரு தொகுப்புக்கான கதைகள் இருந்தன. சுமார் ஆறு வருடம் எழுதிய கதைகள் அவை. ஆதலால் எது முதல் கதை என்று தெரியவில்லை. தொடர்ந்து எழுதுவதில் முதல் என்று ஒன்றைக் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால் முதல் கதை பற்றிய ஞாபகம் இல்லை என்றாலும் அது கொடுத்த அனுபவத்தையும், உணர்வையும், பாடத்தையும் ரசிக்க முடிந்தது. இன்றளவும் அதைக் கூர் நோக்குகிறேன்.
சிறுகதை எனும் புனைவு வடிவம் ஏன் உங்களுக்கு வசீகரமாக இருக்கிறது ? பிற புனைவு வடிவங்களை முயற்சிக்காததற்கு பிரத்யேகக் காரணங்கள் உண்டா ?
வடிவங்கள் என்பதை கதையின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். வடிவத்தை நான் என்றும் முன்னிறுத்த முயன்றது இல்லை. வடிவங்கள் காலப்போக்கில் ஒன்றைக் கட்டமைக்கக்கூடிய அடிப்படைவாதியின் மனநிலை கொண்டதாகவே தோன்றுகிறது. கதையின் பக்கமே எனது சிந்தனைகள் அனைத்தும் சுழலும். அதைத் திறம்பட கையாள அல்லது கையளிக்க ஏதுவான பாகங்களாக இருக்கும் அளவில் வைத்துக் கொள்கிறேன். எவ்விதமான வடிவத்திற்குள் அவை பொருந்தும் என்பதை அக்கதையின் போக்கே முடிவு செய்கிறது. அதற்கு முழு சுதந்திரம் அளிக்க நினைக்கிறேன். அப்படியிருக்க எனது வெளிப்பாட்டு தளத்திலிருந்து பொதுவெளிக்கு அறிமுகமானவை தற்போது சிறுகதைகள் மட்டுமே. இன்னும் நிறைய காலங்கள் இருப்பதால் பெயரிடப்படாத வடிவங்களிலும் நிறைய எழுதுவேன் என்று நினைக்கிறேன்.
சுய அனுபவங்களிலிருந்தும் மாயக் கற்பனைகளிலிருந்தும் கதைகள் எழுதத் தொடங்குவது இயல்பு. இவ்விரண்டு வகைமையிலும் கதைகளை முதல் சிறுகதைத் தொகுதியிலிருந்தே எழுதியிருக்கிறீர்கள். இவ்விரண்டு விதமான கதைகளிலும் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன ?
பெரும்பாலும் படைப்பு தனிமனித எல்லைக்கு அப்பாற்பட்டது அல்லது எழுதியவனை சார்ந்ததில்லை என்ற வாதங்களை நானும் ஏற்றுக் கொள்பவனே. இருந்தாலும் சில மாதிரிகளை நாம் சொல்லியே ஆகவேண்டும்.
இயல்பு தன்மையோ (அனுபவத்திலிருந்து) அல்லது மாய எதார்த்த வாதமோ (உங்கள் கூற்று படி) எனது முதல் தொகுப்பில் வெளிப்பட்ட கதைகளைப் பொறுத்தளவு என்னுடைய சிந்தனையிலிருந்து தோன்றும் அன்றாட வாழ்கையின் பிரதிகளாகவே அணுகுகிறேன். இன்று கதை எழுதப் போகிறேன் என்று ஒரு முகமூடியை எடுத்து ஒரு போதும் எழுதியதில்லை. அவைதி எனது அன்றாடத்திலிருந்து சிதறிய சில தருணங்களாகவே பார்க்கிறேன். என்னுடைய வாழ்க்கை என்னுடைய கதைகளைத் தாண்டிய சுவாரஸ்யம் உடையது, சாகசங்களும் உடையது என்று என்னை சுற்றி இருப்பவர்கள் அறிவர். அதை எழுத்திலும் கொண்டுவர முயலும் பொழுதுதான் வெவ்வேறு தளங்களில் தன்னை விரிவு படுத்திக்கொள்கிறது. இன்னும் எழுத எழுத அது வாசகர்களாலும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். கதைகளை புது தளத்தில் எழுதிட வேண்டும் என்பதைத் தாண்டி எனது வாழ்கையை எந்நிலையிலும் கொண்டாட்டமாகவும், கற்பிதத்துடனும், நிறைய சோம்பேறித்தனமாகவும், மரமண்டையாகவும், அறிவுஜீவியாகவும் கடந்திட விழைகிறேன்.
என்னதான் நமது சிந்தனைகளுக்கு ஒரு அடிப்படை இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் கருவியாக இங்கு இருப்பது மொழி. அம்மொழியில் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள சில பயிற்சிகள் அவசியம் தேவை. அதைக் கைகொள்ளக் கூடிய திறம் அவசியம். அதில் தனிக் கவனம் செலுத்தும் போது எவ்விதமான கதைகளையும் நாம் எதிர்பார்க்கும் சட்டகத்திற்குள் கொண்டுவந்திட முடியும். அப்போது அவை சவால்களாக இருக்காது என்றே தோன்றுகிறது. பெரும் மொழியில் என்னை இழக்காமல் கவனத்துடனும் எழுதுகிறேன்.
கதைசொல்லல் முறையில் நவீன புனைவு நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். அ-நேர்கோட்டுப் பாணி, சிதறல்களாக கதை சொல்லுதல் முதலியன. இந்தக் கதைகளுக்கு இந்த பாணி என்று எப்படி தீர்மானிக்கிறீர்கள்?
மிக எளிது. என் அறிவை, கோமாளித்தனத்தை, இசங்களின் மீதுள்ள பற்றை, ஒரு பட்டறைக்குள் இயங்கும் மனநிலையை விடுத்து கதையின் பக்கம் நின்றாலே போதும். எந்தக் கதை எவ்வித வகைமைக்குள் பொருந்தும் என்பதை அறிந்து கொள்ளலாம். என்னதான் நெறிமுறையற்ற தொனியில் இவை இருந்தாலும் தனிமனிதக் கூற்றையும், சமூகப்பாட்டின் தோற்றுவாயையும் கேள்வி எழுப்பாது, அவற்றிலிருந்து தனித்த அணுகுமுறை கொண்டிராத ஒருவரால் வெளிப்படும் காரணிகள் பயனற்றது. அவற்றிலிருந்து தன்னை மீட்டு உருவாக்கி கொள்ள நினைக்கும் ஒருவன் தேடும் நுட்பங்கள் நாம் வகுத்து வைத்திருக்கும் இலக்கிய நுட்பங்களைத் தாண்டிய ஒன்று. வாழ்க்கை இலக்கியத்தை விட பல வகைமைகளைக் கொண்டிருக்கிறது.
பலவிதமான கதைசொல்லல் முறைகளைக் கையாள்வதால் இந்தக் கேள்வி. உங்களுக்கான முன்னோடி அல்லது ஆதர்சம் யார் ?
முன்னோடிகள் இருப்பதால் தான் இத்தனைத் தெளிவுடன் பல வித கதைகளை சொல்ல வேண்டும், முடியும் என்கிற எண்ணம் எழுகிறது. நான் அடிப்படையில் புனைவு சார்ந்து எனது வாசிப்பை தொடங்கவில்லை. தத்துவம் சார்ந்தே எனது வாசிப்பை ஆரம்பித்ததால் என்னவோ அவை என்னை வரலாற்று பக்கங்களுக்கு கைமாற்றிவிட்டது. தத்துவங்களின் வகைமைக்குள்ளும், வரலாற்று திசைகளின் நடுவே எனது சிந்தனைகள் கட்டமைக்கப்பட்டதால் என்னால் புனைவு மொழியினை இயல்பாய் எடுக்க முடிந்தது. எந்த வித சார்பற்ற எழுத்தை (இங்கு சார்பு என்பது பரந்த பார்வையின் அடிப்படையில்) வாசிக்கவும், எழுதவும் முடிந்தது.
அப்படியிருக்கையில் நான் ஒரு போதும் பெயர்களை குறிப்பிடுவது இல்லை. நான் குறிப்பிடும் பெயர்கள் என்னை எப்படி தீர்மானிக்க முடியும். என் எழுத்துகளை வாசிப்போருக்கு தெரியும் நானும், என்னுடைய வாசிப்பும், அனுபவமும். இங்கு கண்மூடித்தனமாக பரிந்துரைகளை நம்பக்கூடிய ஒரு தலைமுறையின் மனநிலையை உடைக்கவே அதை சொல்ல மறுக்கிறேன். இங்கு தமிழ் இலக்கிய சூழலில் அப்படியான வாசகர்களும், எழுத்தாளர்களும் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பட்டறையின் கீழ் குழுமும் மனநிலை கொண்டவர்கள். அது அவர்களை வழிநடத்தும் எழுத்தாளர் தன் பெயரைத் தக்க வைக்க இளம் வாசகனையும் எழுத்தாளனையும் பயன்படுத்திக் கொள்ளும் ஆயுதம். அதை நான் ஒருபோதும் கையில் எடுக்க மாட்டேன். ‘தேர்ந்து படிக்க முதலில் நீயாக கண்டதை படி’ என்கிற வரையறைக்குள் என்னை போட்டுக்கொள்வேன். அதையே நான் ஆதர்சம் என்று உணர்கிறேன். நான் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்று தோன்றும் தமிழில் அசோகமித்திரன் ஒரு எல்லை என்றால் நகுலன் அதன் மறுஎல்லை. அதன் நடுவில் தான் எல்லோரும் இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்று. இதில் பெண் எழுத்தாளர்களுக்கென தனி உலகு இருக்கிறது.
தத்துவங்கள் மற்றும் வரலாறு குறித்த உங்களின் தேடலுக்கு வழித்துணையாக அமைந்தவர்கள் யார் ?
கிளாசிக் காலகட்டத்தின் இறுதி அத்தியாயத்தினை சார்ந்த ‘ Boethius ‘ யினுடைய வரி நினைவுக்கு வருகிறது. ‘In other living things to be ignorant of the self is natural; but in man it is a defect.’ அதை நாம் இப்படி பொருத்தி பார்த்துக்கொள்ளலாம் ‘தன்னை நிலைகொள்ளச் செய்ய விரும்பும் மனித மனம் எதையோ ஒன்றில் தஞ்சமடைவதை வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.’ அதை அணுக நமக்கு தத்துவங்களே பெரும் உதவி புரிகிறது.
அப்படியாக எனது ஆரம்பக்கட்ட தத்துவ வாசிப்புக்கு என்னுடைய பள்ளி வரலாற்று ஆசிரியர் அழகரின் ஒரு வரி சொல்லாடலினுடைய முரணே இன்றுவரை தத்துவங்கள் குறித்த பார்வையை விரிவுபடுத்துகிறது. ‘நிலைத்து நிற்க தத்துவ பின்புலம் அவசியம்’ என்பதே அது. தத்துவத்தை நோக்கிய பயணம் இப்படி ஆரம்பித்தாலும் தத்துவ ஆசிரியர்கள் குறித்தான வாழ்வின் போக்கு பெரும் ஈர்ப்பாக இருந்ததே, தொடர் வாசிப்புக்குள் என்னைத் தள்ளியது.
பிளாட்டோ சொல்கிறார் ‘தuntil philosophers are kings. Or kings…have the spirit and power of philosophy.. cities will never have rest from the evils’ இவ்வரிகள் எப்படி சிறுவனை ஈர்க்காமல் இருக்கும். இப்போது இதிலிருந்து நிறைய தூரம் வந்துவிட்டதால் ஆரம்ப கால கட்டத்தின் முனைப்புக்காக குறிப்பிடுகிறேன்.
தத்துவங்கள் ஒன்றை விளக்குவதாக அறிந்த ஆரம்ப கட்டத்திலிருந்து அவை உலக நகர்வுகளின் செயல்முறைக்குள் ஊன்றி இருக்கும் பார்வையைக் கூராக்கி தம்மை செழுமையாக்கிக் கொண்டே வருகிறது என்கிற களத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறேன், தத்துவ மயிரே தேவையில்லை என்கிற நிலையும் பின்னால் வரலாம். உதாரணத்திற்கு ‘friedrich schiller யினுடைய ‘beautiful soul‘ தொடங்கி ‘Schopenhauer’ எடுத்துக்கொள்ளும் ‘will’ வரை ஒன்றின் பார்வையை பல்நோக்கில் மட்டும் அணுகிடாது அவற்றை விமர்சிக்கவும் முடிகிற தளத்திற்கு வருகிறது. ஒன்றிலிருந்து தானே ஒன்று மேலெழும்புகிறது. அவரே ‘kant’ இன் (the world as we experience it and world as it is in itself ) என்கிறதிலிருந்து தானே முன்னகர்கிறார்.
இப்படியாக நான் குறிப்பிட போனால் பட்டியல் நீளும் Husserl ,scheler ‘detach from bondage and pressure of life through spiritual) , georgre Santayana , Ortega, ‘Ludwig Wittgenstein ‘where of one cannot speak ,there of one must be silent’ ;இவருடைய வாழ்வின் முறை தத்துவமாக மாறுவதை வாசிக்கும் போது நாம் மனநிலையின் புதிரான அத்தியாயங்களுக்குள் நுழையலாம்’, hans – George gadamer, theodor adorno (the world is not just mad, it is mad and rational as well) ,Hannah arendt , simone de Beauvoir ( I don’t want my life to obey any other but my own) இப்படியான ஒரு நெடும் பட்டியல் rorty , slavoj zizek , bell hooks வரை நீளும்.
Kierkegaard இன் கூற்று படி ‘நம் வாழ்கையினுடைய புரிதல்களை கடந்த காலங்களில் இருந்தே எடுத்தாக வேண்டும், ஆனால் வாழ்தல் எப்போதும் முன்னோக்கியே இருக்கும்’ . இவர்களை போல பெயர்கள் குறிப்பிடும் அளவை தாண்டி இந்திய மரபில் ஆட்கள் இருகிறார்கள். நம் தொன்மம் தொட்ட தத்துவ மரபுக் குடிகளின் மகனிலிருந்து தொடங்கி பூதவாதம், புத்தர் என்று நீளும். நேர்காணலுக்காக நினைவில் வந்த பெயர்களோடு நிறுத்திக்கொள்கிறேன். இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக விலங்கினை பதில் சொல்ல வைக்க அல்லது சிந்திக்க ஒருவர் வந்தே ஆக வேண்டும். ஒருவர் என்பது இங்கே நாயக பிம்பம் இல்லை என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறேன். அந்த ஒருவர் நீங்களும் நானும் தான்.
முதல் இரண்டு தொகுதிகளிலும் “புலிசாரை” எனும் தலைப்பில் சிறுகதை இடம்பெறுகிறது. ஒரே கதையை, அதே தலைப்பில் இரண்டு பாகங்களாக எழுதியுள்ளீர்கள். அதே போல ‘கூத்தொன்று கூடிற்று’ தொகுப்பில் “கூடாரத் தரிசனம்” மற்றும் “வேடிக்கையும் இன்னபிறவும்” ஆகிய சிறுகதைகள் ஒரே கதையின் இரண்டு பாகங்கள். இவற்றை குறுநாவலாக எழுதாமல் சிறுகதைகளாக எழுதியதற்கு பிரத்யேகக் காரணம் உண்டா ?
புலிசாரை குறுநாவலாக எழுதப்பட்டது தான். அதன் அத்தியாயங்களை அப்படியே சிறுகதைகளாக பிரித்தேன் அவ்வளவு தான். தற்போது புலிசாரை குறுநாவல் வடிவிலும் வருகிறது. ஆனால் ‘கூடாரக் கரிசனம்’ கதையும் ‘வேடிக்கை இன்னபிறவும்’ அப்படியில்லை. அதன் மாந்தர்கள் ஒருவர்களாக இருப்பினும் அதன் மையம் வேறு ஒன்றைப் பேசுவதாக அமைந்ததால் அது அதன் பொருத்ததில் அமைந்துவிட்டது. என்னுடைய சிறுகதைகளின் மாந்தர்களை இனி வரும் கதைகளில் தொடர்ச்சியாக பார்க்கமுடியும் என்று நினைக்கிறேன். அவர்களைக் குறுநாவலில் அல்லது நாவலில் வடிவமைத்தால் அவர்கள் இறுதியை நோக்கி ஓடுபவர்களாக இருக்கிறார்கள். அதில் உடன்பாடில்லை. எனக்கு நெருக்கமான பாத்திரங்களை இன்னும் பல சூழலில் அணுகிப்பார்த்திட நினைப்பதே காரணம்.
யதார்த்தவாத சிறுகதைகளில் தென்படும் செறிவும், நிலத்துடன் கொண்டிருக்கும் rootedness உம் பிற வகையிலான கதைகளில் மங்கித் தெரிவது அதன் வடிவத்தாலா அல்லது கதையின் தன்மையா ?
நாம் கண்ணுக்கு புலப்படுபவற்றை, நம் கைகளுக்கு பழக்கப்பட்டவற்றை எடைபோடப் பழகிக் கொண்டோம். அது நம் மீது தவறில்லை. சமூகம் கட்டமைக்கும் ஒன்றிற்குள் நாம் எதிர் வாதத்தை வைக்கலாம், ஆனால் அதன் போக்கை நம்மால் எப்படி மாற்ற முடியும். அப்படி மாற்ற வேண்டும் என்று இறங்கிவிட்டால் உங்களின் சொகுசுகள் அனைத்தையும் அரசாங்கம், மதங்கள், அரசியல் நாற்றங்கள் உங்களிடமிடருந்து பிடுங்கிக்கொள்ளும். அதை எதிர்த்து நிலைகொள்ள உங்களின் வாழ்கையையே அது கேட்கும். அதற்கு தன்னை பலியிடுபவர்கள் எத்தனை பேர் என்னையும் சேர்த்தே சொல்கிறேன். சமூக மாற்றத்தினை விரும்புவர்கள் தன்னுடைய துறையிலிருந்து முன்னெடுப்புகளை செய்தால் போதும் என்பது ஆரம்ப புள்ளியே. அதிலிருந்து நாம் கைகொள்ளும் அதிகாரமே முக்கியம். அப்படியிருக்கையில் முழுமையுடைய, செறிவான வாழ்வு என்பது நம் மனநிலையில் இருக்கிறது. இலக்கியத்தை பொறுத்தவரை அல்லது கலையை பொறுத்தவரை செறிவான ஒன்றை உருவாக்க முடியுமா என்று கேட்டால் அது முக்கியமில்லை என்றே தோன்றுகிறது. செறிவானவைகளும், முழுமையறிவும் போலித்தனமும், முன்கட்டுமான வேலைகளை கொண்டவை என்று நினைக்கிறேன். அதில் அன்றைய நேரத்தை கடத்துவதற்கான பொழுதுபோக்கேயிருக்கும். என்னுடைய கதைகளை அணுகும் நீங்கள் அதைப் பிரித்துக் கொள்ளலாம், உரையாடிக்கொள்ளலாம். நான் அனைத்தையும் ஒன்றாகவே அணுகுகிறேன். கைக்கு எட்டும் தூரத்தில் உங்களுக்கு அனைத்தையும் வைக்க முயன்று கொண்டே இருக்கிறேன். இருப்பேன்.
பரிசோதனை முயற்சியான கதைகளைத் தொடர்ச்சியாக முயல்கிறீர்கள். பாராட்டுதலுக்குரிய விஷயம். அதைப் புரியவில்லை என்று வாசகர்கள் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் ?
விருதுக்கு முன் இதழ்களில் மட்டுமே என்னுடைய கதைகள் பிரசுரமாகியது, புத்தகங்களாக வந்தது. இருந்தும் அது நேரடி வாசகர்களை அடையவில்லை. இங்குள்ள இலக்கிய சூழலில் பலதரப்பட்ட எழுத்துக் கொள்கைகள், பட்டறைகள் இருப்பினும் பெரும்பாலான இதழ்களில் என்னுடைய கதைகள் பிரசுரமானது. பரிசோதனை முயற்சிகளை நமது இலக்கிய இதழ்கள் ஆதரித்துக்கொண்டே இருப்பதாகவேப்படுகிறது. ஆனால் இலக்கியவாதிகளின் நிலைப்பாடு இதில் வேறு என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன். அப்படியிருக்கையில் விருது என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. இந்த மூன்று மாத கால இடைவெளியில் வாசகர்களிடமிருந்து எனது புத்தகத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இக்கதைகளை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்கிற எண்ணமில்லை என்றாலும் புது முயற்சிகளுக்கு மக்களின் ஆர்வமும் அதிகமாகவே இருக்கிறது. புரியவில்லை என்கிற கேள்விகளும் இல்லாமல் இல்லை அதற்கு புன்னகையைத் தவிர என்ன பதில் சொல்ல முடியும். புரியவில்லை என்பதால் என்னை மட்டும் மாற்றிக்கொள்ள முடியுமா? அது இருமுனை கொண்ட மாறுதலுக்கு உட்படவேண்டியவை.
உங்கள் கதாபாத்திரங்களின் பொதுக்குணங்களாக தனிமையும், அடையாளத்தைத் தேடுதலும் தொடர்ந்து உணர முடிகிறது. உடனிருக்கும் வீடு, நிலம், தொழில் ஆகியவற்றில் பற்று கொண்டவர்களாக, அதன் வழி அடையாளம் அடைபவர்களாக, அதை இழக்க அச்சம் கொள்பவர்களாக இருப்பது தற்செயலானதா ?
தனிமையும், அடையாளச் சிக்கலும் என்னுடைய கதைகளில் எப்படி இவ்வளவு முக்கியத்துவம் கொள்கிறது என்று தெரியவில்லை. வாசித்த இலக்கிய நண்பர்களுக்கு மட்டும் அந்தத் தனிமை புலப்பட்டுவிடுகிறது. (வாசகர்கள் பல்வேறு விதங்களில் விமர்சிக்கிறார்கள்) ஒருவேளை அவர்கள் அவர்களுடன் ஒப்பிட்டு அதன் வரைமுறைக்குள் இப்பிரதிகளை கொண்டு வந்து விடுகின்றன போல. இதுவும் ஒரு வகையில் பழமைவாதம் தான். இப்போது கூட இந்தக் கேள்வி பதில்களை நான் நேர்கோட்டில் எழுதவில்லை எனக்கு பிடித்த கேள்விகளுக்கு முதலில் பதில் அளித்து விட்டு பின் மற்ற கேள்விகளுக்கு நகர்கிறேன். அப்படியிருக்கையில் பின் வரும் கேள்வி ஒன்று இருக்கிறது இப்போது இலக்கிய சூழல் எப்படி என்று ‘இலக்கியம் வித்யாசமாக இருந்தாலும் விமர்சனம் ஒரே பாதையில் இருக்கிறது. இன்னும் சுலபமாக சொல்லப்போனால் ‘பிரதியெடுக்கும் விமர்சனம்’ ஆக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எழுத்தாளர்களே விமர்சகர்களாக இருப்பது தமிழின் சாபக்கேடு. அது மாறுமா என்றால் தெரியவில்லை. ஆனால் ஒன்று எழுத்தாளர்கள் கொடுக்கும் விமர்சனப்பார்வைக்கு முக்கியத்துவம் தேவையில்லை. அதற்கு பின் பல சமயங்களில் பெரிய கத்தியும், சில சமயங்களில் விமர்சனமும் இருக்கிறது என்று மட்டும் தெரியும். ஆகையால் அதைத் தாண்டி என்னுடைய கதைகள் பல தரப்பட்ட களங்களில் பயணிப்பதாகவேப்படுகிறது. இதற்குள் அடங்காது. இவை தொகுத்த பார்வை என்றால் மீண்டும் ஒருமுறை எனது கதைகளைப் படிக்கவும். நேரம் இல்லை என்றால் அவசியம் இல்லை. அவ்வளவு முக்கியமும் இல்லை.
திரைத்துறையில் பணி, சிறுகதை எழுத்தாளர் என்று ஒரு நாளின் முழுமைக்கும் புனைவுகளுடன் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்து செயல்பாட்டை எப்படி சீர்மையுடன் தக்க வைக்கிறீர்கள் ?
வேலையாக செய்தால் கண்டிப்பாக அலுப்பு தட்டிவிடும். அதைவிட முக்கியமான ஒன்று அங்கீகாரத்திற்காக எழுதினால் அதை விட அலுப்பு தட்டக் கூடிய ஒன்றாக அது மாறிப்போகும் . என்னுடைய வாழ்க்கைமுறைக்குள் கலையினை அங்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் இயங்குவதாக பார்க்கிறேன். அது அவ்வளவு எளிதில்லை. நம் சமூகம் அப்படியிருக்க விடாது அல்லது இவன் மட்டும் எப்படி இப்படி சுதந்திரமாக சுற்ற முடியும் என்று பல கேள்விகளை மட்டுமில்லாது கேலியையும் நம்மீது உமிழும். ஆனால் நமது படைப்பு மனநிலையினை சரியாக கையாண்டு அதிலிருந்து வெளிப்படும் படைப்புகளிலிருந்து அவர்கள் நமக்கு துணை நிற்பர். பணத்திற்கு என்ன செய்கிறீர்கள் ? எப்படி ? என்கிற கேள்விக்கு தான் உங்களின் இலக்கிய (கலை )வெளிப்பாட்டின் தரம் முக்கியம் என்று தோன்றுகிறது. அதன் மூலம் பணம் என்கிற வாதத்தை கடந்து விட முடியும். அப்படியிருக்கையில் என்னைப் பிற்காலத்தில் நினைவுகூற இதையெல்லாம் நான் செய்யவில்லை. என்னை நினைவு கூற வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இவை என்னுடைய வெளிப்பாடு அவ்ளோதான். கலையினை மையமாக வைக்காத லட்சுமிஹரை அறிந்த பல உலகத்தினுள் இருக்கிறேன்.
திரைத்துறையில் பணிபுரியும் நபர்கள் பற்றிய நுட்பமான சித்தரிப்புகளுடன் சிறுகதைகள் முயன்றிருக்கிறீர்கள். சண்டை பயிற்சியாளர், ஜூனியர் ஆர்டிஸ்ட், துணை இயக்குனர் என்று. அவர்கள் பெரும்பாலும் கனவுகளை அடைய முடியாமல் தோற்றவர்களாக இருக்கிறார்கள். பெரும் பொருளாதார சூழலுள்ள துறையில் கைவிடப்பவர்களாக இருக்கிறார்கள். பொது வாசிப்பில் கரைந்த நிழல்கள் நாவலும், சுஜாதாவுடைய சில புனைவுகளிலும் இதே மாதிரியான கதாபாத்திரங்களைக் காண முடியும். உங்களுடைய புனைவுலகை அவர்களுடைய புனைவுகளிலிருந்து எப்படி வேறு படுத்த முனைகிறீர்கள் ?
அசோகமித்திரனின் திரைத்துறை சார்ந்த மாந்தர்களுக்கும், சுஜாதாவின் திரை சார்ந்த மாந்தர்களுக்குமே அவ்வளவு முரண் இருக்கிறது. ஒருவர் அவர்களின் துறையின் துயரை எழுதினால் இன்னொருவர் துயரின் காரணங்களை எழுதக் கூடியவர். அதுமட்டுமில்லாது அவர்கள் இருவரின் மொழி அடிப்படையில் வாசிக்க ஒன்றாக இருந்தாலும் அதன் முறைகள் வெவ்வேறு. ஆனால் திரை சார்ந்த கனிவு இருவரிடமும் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அந்தக் கனிவை என் திரை சார்ந்த கதைகளில் காண முடியாது. அவர்கள் கலையினை தூக்கி எறியவும் சங்கடப்படாதவர்கள். அதன் மாயையினுள் சிக்காத சாமானியர்கள். அவர்கள் கலை மட்டுமே இவ்வுலகில் உயர்ந்த ஒன்று என்று எண்ணாதவர்கள். அது இன்றைய காலகட்டத்தின் பிரதிபலிப்பு மட்டுமில்லை. காலமாற்றம். இத்திசையில் தான் இனி வரக்கூடிய சினிமா மாந்தர்கள் இருப்பார்கள் என்பது என் எண்ணம். இதற்கு மேல் சொன்னால் நான் எழுதியிருப்பது வீண். ஆகையால் வாசகர்கள் புரிந்து கொள்ளட்டும். இங்கு எனது சினிமா சார்ந்த கதையில் வரும் ஒரு வாசகத்தை மட்டும் குறிப்பிட வேண்டும். ‘ மயிராச்சு பணமா, மண்ணானு தூக்கி எறிஞ்சுட்டு வர இது சினிமாவா ? வாழ்க்க …அதுவும் நான் சினிமா எடுக்க போறவன்.’
சுய மரியாதையைத் தக்க வைக்கும் மூர்க்கமும், சுயநலமாக இருக்க விழையும் யதார்த்தமும் அனைத்து கதாபாத்திரங்களிடமும் பிரதிபலிக்கின்றன. உங்கள் அனுபவத்திலிருந்து எழுந்தவையா அல்லது அவதானிப்பிலிருந்து கனிந்தவையா?
சுய மரியாதைக்கும் சுயநலத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் நம்மை பற்றியும் பிறர் நம்மை பற்றியும் நினைக்கும்தளத்தில் இவை மாறுபடும். அவ்வளவுதான். முன்பு சொன்னது போல தான் உங்களுடைய அனுபவங்களிலும், முன்தீர்மானங்களிலும் என்னை அணுக நினைத்தால் உங்களுக்கு பிடித்தவனாக நான் மட்டுமில்லை எனது படைப்பும் இருக்காது என்பதை இப்போது இல்லை எப்போதும் சொல்லுவேன். என் பார்வையின் வழியே ஒரு உலகை காட்ட நினைக்கும் ஒருவன் அதில் புலப்படும் யாவையும் அறிந்து புரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியுமா? அப்படி செய்யும் வாய்ப்பு இருந்தால் எவ்வளவோ முயன்று பார்த்திருப்பேன். பறக்க, விலங்குகளுடன் உரையாட, மரத்தினுள் வாழ, ஒவ்வொருவரின் தலையில் ஏறி அமர, எண்ணிக்கையின்றி ஒரு பெண்ணிற்கு கற்பினை வழங்க, ஆணுக்கு சுய ஒழுக்கத்தில் மகிழ்ச்சியுற என்று நீண்டு கொண்டே போகும் மனிதத்தை நிலை நாட்டியிருப்பேன், என்னால் முடிந்தளவு.
நான்கு தொகுப்புகளில் ‘க்ளாஸிக் டச்’ தொகுப்பு அதன் தொகுப்பாத்தில் தனித்துவம் அடைகிறது. பெருவாரியானவை கதைகளைப் பற்றிய கதைகள். இந்த தொகுப்பாக்கம் திட்டமிட்டு நிகழ்ந்ததா ?
கண்டிப்பாக இல்லை. கிளாசிக் டச் கதைகள் எழுதிய காலகட்டம் அப்படியானது. தப்பி உயிர் பிழைத்துக்கொண்ட காலம். இனி வாழும் ஒவ்வொரு கணமும் முக்கியம் என்று தோன்றிய நேரம். இப்போது வரை அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது பார்ப்போம். அக்காலகட்டத்தில் என்னுடைய சிந்தனைகள் அனைத்தும் நோய்மை, மரணம், உறவுகளின் மீது ஏற்பட்ட கசப்பு, நம் மருத்துவ உலகம், நம்பிக்கை, கடவுள், தத்துவம், நாத்திகம் என்று கடுமையாக இருக்க எழுதும் பக்கங்கள் அப்படி இருக்கக்கூடாது என்று எனக்கு தோன்றியதே கிளாசிக் டச் உடைய முதல் வரைவு. அதில் பெரும்பாலும் கையில் எடுத்து கொண்ட ‘young adult fiction’ வகைமை என்னை என் இளமைக்குள் செலுத்தியது. கதைகள் பற்றிய கதைகள் என்பது தீர்மானித்தது தான். அதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. நமக்கு முன் எழுதிய ஒரு கலைப் படைப்பையோ அல்லது கலை சார்ந்த நபர்களையோ அல்லது அதிலிருந்து மீண்டவர்களின் மனநிலை எதையும் செய்து பார்க்கும் உத்வேகம் கொண்டது. அது அப்படியாக உருபெற்றது. ஆனால் ஒரு கதை இன்னொரு கதையின் சாயலை தவிர்த்து எழுதியவையே. கிளாசிக் டச் முன்பு கொண்டிருக்கும் உடல் மீதும், நமக்கு முன் கற்பிக்கபட்டிருக்கும் அடையாளங்கள் மீதும் எழுப்பப்பட்ட இன்றைய சிந்தனைகள். இது மாதிரியான கதைகளை எழுதும் போது கதையின் அடிப்படை இல்லை, வாக்கியமே சரியில்லை, புரியவில்லை என்று இங்கு ஒரு கும்பல் புலம்பும். அது புதியவற்றை எதிர்கொள்ள திராணி இல்லாத போக்கு. பழைய புழுத்துபோன சக்கைகளை வாசிப்பவர்கள், எழுதுபவர்கள். இன்றளவும் என்னுடைய புத்தகங்களில் எதிலிருந்து வாசிக்க தொடங்கலாம் என்று கேட்டால் இப்போது வெளிவர இருக்கும் புலிசாரை குறுநாவலுக்கு பிறகு கிளாசிக் டச் தான்.
சமகாலத் தமிழிலக்கிய சூழலை எப்படி அவதானிக்கிறீர்கள் ? உங்களுக்கு பிடித்த சமகால எழுத்தாளர்கள் யார் ?
இளைய தலைமுறையினர் வாசிப்புக்குள்ளும், எழுத்திற்குள்ளும் தங்களை விரிவுபடுத்திக்கொண்டதாகப்படுகிறது. அதில் அவர்கள் மேம்போக்காக இல்லாமல் ஆழப் பயணிக்க தயாராக இருக்கின்றனர்.
அனைவரையும் வாசிக்கிறேன். ஆகையால் ஆதர்சம் நாளுக்கு நாள் மாறும்.
உங்களின் அடுத்த புனைவு முயற்சிகள் குறித்து.
ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு விருதுக்கு முன்னரே பதிப்பகத்தாரிடம் அளிக்கப்பட்டுவிட்டது. திரைக்கதை சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன். அது படமாக மாறும் பட்சத்தில் மகிழ்வேன்.
***
கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் பிறந்தவர். தனியார் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். சென்னையில் வசிக்கிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரை என்று தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பவர். மின்னஞ்சல் முகவரி : krishik10@gmail.com
காந்தியடிகள் எழுதிய கட்டுரைகளும் கடிதங்களும் அறிக்கைகளும் தொகுக்கப்பட்டு நூறு தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. இன்றைய இணைய கால வாசகர்கள் இருந்த இடத்திலிருந்தே அவற்றைப் படிப்பதற்கேற்றவாறு அவை அனைத்தும் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
காந்தியடிகள் தம் வாழ்நாளில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் பக்கங்கள் அளவுக்கு எழுதியிருக்கிறார் என்பது மிகப்பெரிய சாதனை. இவற்றைத் தவிர, இந்திய சுயராஜ்ஜியம், தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம், சத்திய சோதனை ஆகிய முக்கியமான நூல்களையும் எழுதியிருக்கிறார். இவை அனைத்தும் பலருக்கும் தெரிந்த செய்தியாகவே இருக்கக்கூடும். இந்த அளவுக்கு எழுத்தின் வழியாக தன்னை வெளிப்படுத்திய காந்தியடிகள் மொழிபெயர்ப்பின் வழியாகவும் தன்னை முன்வைத்துக்கொண்டார் என்பது முக்கியமான செய்தியாகும்.
புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் உலகெங்கும் வசித்த வாசகர்களும் ஆர்வலர்களும் கடிதமெழுதி கேட்கிற கேள்விகளுக்கு கடிதம் வழியாகவே பதில் அனுப்புவதை ஒரு பழக்கமாகவே மேற்கொண்டிருந்தார். ஒவ்வொரு கடிதத்தையும் தன் நிலைபாட்டை விளக்கிச்சொல்லும் வகையில் விரிவாகவே அவர் எழுதினார். அவ்வகையில் வான்கூரில் வசித்துவந்த இந்தியரான தாரக்நாத் தாஸ் என்னும் அன்பர் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற நினைக்கும் இந்தியாவுக்கு ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டு டால்ஸ்டாய்க்கு இரண்டு கடிதங்கள் எழுதி அனுப்பினார்.
இந்தியாவில் ஆங்கிலேயரை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றி விடுதலை பெறுவதற்கு ஆயுதப்புரட்சியே சிறந்த வழி எனும் நிலைபாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர் தாரக்நாத் தாஸ். அத்தகு கருத்துகளைப் பரப்புவதற்கு உதவும் வகையில் அக்காலத்தில் அவர் ‘ஃப்ரி இந்துஸ்தான்’ என்னும் பெயரில் ஒரு பத்திரிகையையும் நடத்திவந்தார். அவருடைய கடிதங்களுக்கு டால்ஸ்டாய் மிக விரிவான முறையில் 1908ஆம் ஆண்டு இறுதியில் ஒரு பதில் எழுதி அனுப்பினார்.
தாரக்நாத் தாஸின் கருத்து நிலைபாடுகளுக்கு முற்றிலும் மாறான மற்றொரு கருத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக இருந்தது டால்ஸ்டாயின் பதில். ஆயினும் ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட அக்கடிதத்தை அதன் முக்கியத்துவம் கருதி உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தம் பத்திரிகையில் வெளியிட்டார் தாரக்நாத் தாஸ்.
அப்போது காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்தார். 1909இல் அவர் ஆப்பிரிக்காவாழ் இந்தியர்களின் நிலை பற்றி ஆங்கிலேய அரசுடன் நேரிடையாகப் பேசுவதற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார். எதிர்பாராத விதமாக டால்ஸ்டாயின் கடிதம் வெளிவந்திருந்த ஆங்கிலச் செய்தித்தாளை அப்போது அவர் அங்கு படிக்க நேர்ந்தது. அக்கடிதத்தில் விடுதலை குறித்தும் அறவழியிலான போராட்டம் குறித்தும் டால்ஸ்டாய் எழுதியிருந்த வரிகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. அக்கடிதத்தை மொழிபெயர்த்து வெளியிட டால்ஸ்டாயிடம் அனுமதி கேட்டு உடனடியாக ஒரு கடிதம் எழுதினார். டால்ஸ்டாயும் அவருக்கு அனுமதி வழங்கினார்.
காந்தியடிகள் இங்கிலாந்தில் தங்கியிருந்த சமயத்தில் தசரா விழாவை முன்னிட்டு நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொள்ள அவரை அழைத்தனர். காந்தியடிகளும் அக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அந்தக் கூட்டத்திற்கு சாவர்க்கரும் அழைக்கப்பட்டிருந்தார். அன்று இருவருடைய பேச்சும் இந்திய விடுதலையை ஒட்டியதாக இருந்தது. சாவர்க்கர் துர்க்கையின் வழியில் நின்று, பத்து கரங்களிலும் ஆயுதங்களை ஏந்திய துர்க்கையைப்போல இந்தியர்கள் அனைவரும் ஆயுதங்களை ஏந்திப் போரிட்டு ஆங்கிலேயரை விரட்டுவதன் வழியாகவே விடுதலையைப் பெற முடியும் என்று ஆவேசமாக உரை நிகழ்த்தினார். காந்தியடிகள் அகிம்சை வழியில் உறுதியாக நின்று எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழியாகவே விடுதலையைப் பெறமுடியும் என்று குறிப்பிட்டார். வன்முறை வழியா, அகிம்சை வழியா என்பதையொட்டி அனைவரும் யோசனையில் மூழ்கினர்.
இங்கிலாந்தில் தன் வேலை முடிந்ததும் தென்னாப்பிரிக்காவுக்குக் கப்பலில் புறப்பட்டார் காந்தியடிகள். அந்தக் கப்பல் பயணத்தில் பயண நேரத்தை வீணடிக்கக்கூடாது என்கிற எண்ணத்தோடு நீண்ட காலமாக தன் நெஞ்சில் தேக்கிவைத்திருந்த எண்ணங்களையெல்லாம் திரட்டி தினந்தோறும் இருபது முப்பது பக்கங்கள் என்கிற கணக்கில் கேள்வி பதில் பாணியில் ‘இந்திய சுயராஜ்ஜியம்’ என்னும் புத்தகத்தை எழுதி முடித்தார் காந்தியடிகள். அதை முடித்ததும் எஞ்சியிருந்த நேரத்தில் டால்ஸ்டாயின் கடிதத்தையும் ஆங்கிலத்திலிருந்து குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து முடித்தார். பிற்காலத்தில் அவர் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு அக்கடிதம் ‘இந்து ஒருவருக்கு ஒரு கடிதம்’ என்னும் தலைப்பில் குஜராத்தி மொழியில் ஒரு தனி நூலாக வெளிவந்தது. பிறகு படிப்படியாக இந்தியாவின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
டால்ஸ்டாய் தன் கடிதத்தில் எழுதியிருந்த ஒரு கருத்துதான் அக்கடிதத்தை மொழிபெயர்க்கும் ஆவலை காந்தியடிகளிடம் உருவாக்கியது. ‘ஒரு வணிகர் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒரு மதுக்கடை நடத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தக்கடையில் தினமும் மதுவை வாங்கிக் குடிக்கும் ஒருவருக்கு அந்த வணிகர் மீது குற்றம் சுமத்த எந்த அதிகாரமும் இல்லை. தன் செயலின் காரணமாக தன் உரிமையை அவர் இழந்துவிடுகிறார். தம்மை அடிமையாக்கும் சூழலை மனப்பூர்வமாக ஆதரிப்பவர்களாகவும் அதற்கு இசைந்துபோகிறவர்களாகவும் இந்தியர்கள் இருக்கும் வரையில் அவர்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்புணர்வுக்கு ஒரு பொருளும் இல்லை. ஆயுதங்களால் அந்த வணிகரை விரட்டிவிடுவது இன்று எளிதாக இருக்கக்கூடும். ஆனால் அக்கடையில் தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்துக்கு இரையாகிவிட்டவர்களிடமிருந்து அப்பழக்கத்தை விரட்டுவது எளிதல்ல. ஆகையால் உறுதியான மனத்துடன் ஓர் அமைப்புடன் ஒத்துழையாமல் விலகி இருப்பதே எதிர்ப்பைப் புலப்படுவதற்கான ஒரே வழி. அதுவே விடுதலைக்கு வழிவகுக்கும்’ என்பதுதான் அவர் கருத்து.
அச்சமயத்தில் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இந்தியா சிக்கி ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலம் நகர்ந்துவிட்டிருந்தது. ஆங்கிலேயரின் செல்வாக்கு இந்திய மண்ணில் ஆழமாகவே வேரூன்றிவிட்டது. அந்தச் செல்வாக்கிலிருந்து மக்களை விடுவிக்க, தாய்நாட்டுப்பற்றை ஊட்டும் முயற்சி மட்டுமே போதாது என்பதை காந்தியடிகள் நேரிடையாகவே உணர்ந்துகொண்டார். ஆகவே, கூடுதலான சில வழிமுறைகளை அவர் கண்டறியவேண்டியிருந்தது. அதுவரை இந்திய விடுதலைக்கான கோரிக்கை என்பது கோகலே வழியாகவும் திலகர் வழியாகவும் இருந்த நிலையிலிருந்து வேறுபட்டு புதிய பாதையை அவர் உருவாக்க நினைத்தார்.
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என இந்தியாவின் மேல்தட்டு மக்கள் கருதினாலும் கூட, அவர்களுடைய ஆழ்மனத்தில் ஆங்கிலேய அரசு அதிகாரிகளின் வாழ்க்கைமுறைகள் மீதும் ஆடம்பரத்தின் மீதும் பெரியதொரு ஈர்ப்பு இருந்தது. நாற்காலியிலிருந்து அவர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தான் அமரும் கனவு கொண்டவர்களாகவே பெரும்பாலானோர் இருந்தனர். மேல்தட்டில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை இருந்தது. அவரவர்களுடைய வாழ்க்கைப்பாடே அவரவர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தது.
1915இல் இந்தியாவுக்குத் திரும்பி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்ட காந்தியடிகள் அந்தச் சூழலையும் வேறுபாடுகளையும் வெளிப்படையாகவே கண்டுணர்ந்தார். காந்தியடிகளுடைய எளிமையான தோற்றத்தின் காரணமாகவே இந்தியாவில் வசித்த எளியவர்களை அவர் உடனடியாக ஈர்த்தார். அவருடைய வருகைக்குப் பிறகே இந்திய தேசிய காங்கிரஸ் எளியவர்கள் பங்கேற்கும் இயக்கமாக மாறியது. அவருடைய குரல், பல்வேறு சாதிகளும் பல்வேறு மதங்களும் நிலவிய அன்றைய சூழலில் அனைவரையும் ஒன்றிணைத்து நல்லிணக்கத்தோடு செயல்பட வைக்கும் லட்சியக்கனவை விதைத்தது.
காந்தியடிகள் எளிமையை ஒரு கவசமாகக் கொள்ளவில்லை. மாறாக, அதையே வாழ்க்கைமுறையாக அமைத்துக்கொண்டவர். ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்னும் தலைப்பில் 1896 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் இருபது முறை தமிழ்நாட்டுக்கு வந்துபோன வரலாற்றை பத்திரிகையாளரும் காந்தியருமான அ.ராமசாமி ஒரு தனிப் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்தப் பயணங்களில் அவரை நேரில் கண்டவர்களும் உரையாடியவர்களும் எண்ணற்றோர். அவர்களில் அவிநாசிலிங்கம், அம்புஜம்மாள், தி.சே.செள.ராஜன், குமுதினி போன்ற ஒருசிலர் அவரோடு பயணம் செய்த பொழுதுகளைப்பற்றியும் உரையாடிக் கழித்த பொழுதுகளைப்பற்றியும் பதிவு செய்திருக்கிறார்கள். நிர்மல் குமார் போஸ், சுசிலா நய்யார், காகா காலேல்கர் போன்றோர் புத்தகங்களாகவே எழுதியிருக்கிறார்கள். ஒரு சின்னஞ்சிறு பெட்டியில் அடங்கக்கூடியதாகவே காந்தியடிகளுடைய உடைமைகள் இருந்தன என்பதையும் அவருடைய தேவைகளும் மிகமிகக் குறைவாகவே இருந்தன என்பதையும் குறிப்பிடும் பகுதி எல்லோருடைய நூல்களிலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதைப் பார்க்கமுடிகிறது. எளிமையையே வாழ்க்கைமுறையாகக் கொண்ட ஒருவரால் மட்டுமே எல்லா இடங்களிலும் எல்லாத் தருணங்களிலும் ஒரே மாதிரியாக வெளிப்படமுடியும்.
காந்தியடிகளின் அகிம்சை என்பது எதிரியின் மீது வன்முறையைச் செலுத்தாமல் இருப்பது என்பது மட்டுமல்ல, எதிரி என்னும் கருத்தாக்கத்தையே நிராகரிப்பதாகும். அகிம்சை என்பதை வாழ்வதற்கான அடிப்படை விதியாகவே காந்தியடிகள் கருதினார். இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் எல்லா உயிர்களும் பொருட்களும் சமமானவையே. உருவ அமைப்பில் நாம் காணும் வேறுபாடு என்பது தோற்றத்தை ஒட்டி உருவாவதாகும். சாராம்சத்தில் அனைத்தும் ஒன்றே. எந்த ஒன்றும் இன்னொன்றுடன் ஒத்திசைவோடு இயங்கும்போது மட்டுமே முழு இயக்கமும் மிகச்சிறந்த இயக்கமாக இருக்கமுடியும். ஒன்று இன்னொன்றுடன் மோதி அழிக்கத் தொடங்கினால், ஒட்டுமொத்த ஒத்திசைவும் இயக்கமும் சிதையும். அத்தகு சிதைவுக்கு இடம்கொடுக்காமல் ஒத்திசைவோடு வாழும் அறமே அகிம்சை. அத்தகு அற உணர்வை ஒருவன் ஆழ்நெஞ்சில் கொண்டிருக்கும்போது, அவன் நெஞ்சில் பகை என்ற சொல்லுக்கே இடமில்லை. அவன் நெஞ்சம் கருணை, அன்பு, உண்மையின் உறைவிடமாக அமையும். காந்தியடிகளின் அகிம்சைக்கொள்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதைமட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, வாழ்க்கையில் மாமனிதனாக வாழும் வகையைக் கற்பிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
இராட்டையில் நூல் நூற்பதையும் கைத்தறியால் உருவாக்கப்பட்ட கதராடைகளை அணிவதையும் காந்தியடிகள் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தினார். கதருக்காக ஓர் இயக்கத்தையே நடத்தினார். வாங்கி அணிவதற்கு அது எளிமையான ஆடை என்பது உடனடியான ஒரு நன்மை, கதர் வழியாக தற்சார்பு கொண்ட நெசவுத்தொழிலை இம்மண்ணில் நீடித்திருக்க வைக்கமுடியும் என்பது இன்னொரு நன்மை.
அயல்நாட்டு ஆடைகளைப் புறக்கணிப்பதற்காகக் கட்டமைக்கப்பட்ட இயக்கமும் இவ்விதமான இரு நன்மைகளை அளிப்பதாக அமைந்தது. ஆடம்பரமான ஆடைகள் மீதான மோகத்தைத் தவிர்ப்பதன் வழியாக எளிய வாழ்க்கையின் மீது ஈடுபாட்டை அனைவரிடமும் உருவாக்கமுடியும் என்பது ஒரு நன்மை. அயல்நாட்டுத் துணிவணிகம் குறையக்குறைய அரசின் வருமானம் தானாகவே மெல்ல மெல்ல சரியும் என்பது இன்னொரு நன்மை. கள்ளுக்கடை எதிர்ப்பு வழியாக வருமானத்தில் பெரும்பகுதியைக் குடிச்செலவில் செலவழிப்பவர்களைத் தடுத்து குடும்பத்தின் மீது அக்கறை காட்டுமாறு மீட்டெடுப்பது ஒரு நன்மை. குடி வருமானத்தின் வழியாக அரசுக்குச் செல்லும் வரிவருமானத்தைக் கட்டுப்படுத்துவது மற்றொரு நன்மை. அந்த வழியில் காந்தியடிகள் முன்வைத்த ஒத்துழையாமைச் செயல்பாடு மனிதர்களிடையில் தன்னம்பிக்கையையும் விடுதலை நாட்டத்தையும் உருவாக்குவதை ஒரு நோக்கமாகவும் ஆங்கிலேயரின் நிர்வாகத்தை நிலைகுலைய வைப்பதை இன்னொரு நோக்கமாகவும் கொண்டிருந்தது.
காந்தியடிகள் வகுத்த அறவழியில் நம்பிக்கை கொண்ட பல இளைஞர்களும் அவருக்குத் துணையாக நின்றனர். காந்தியடிகள் அந்த இளைஞர் கூட்டத்தை இரு அணிகளாகப் பிரித்தார். ஓர் அணியை அரசியல் விடுதலை சார்ந்த போராட்டங்களில் ஈடுபடுத்தினார். இன்னொரு அணியை இந்தியாவைப் புதிய தோற்றத்தில் கட்டமைக்கும் கனவுகளைக் கொண்ட நிர்மாணப்பணித் திட்டங்களில் ஈடுபடுத்தினார். இந்த இருபெரும் அணிகளில் இந்தியாவைச் சேர்ந்த எளிய ஏழை மக்களும் இருந்தனர். வசதியுள்ள பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். சாதி, மத, இன வேறுபாடுகளையும் வசதி வேறுபாடுகளையும் கடந்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் இலட்சியக்கனவு கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர்.
காந்தியடிகள் முன்னெடுத்த உப்பு சத்தியாகிரகத்துக்கு நாடு தழுவிய அளவில் கிடைத்த ஆதரவும் வெற்றியும் இனி நீண்ட காலத்துக்கு இந்தியாவில் ஆட்சியதிகாரத்தைத் தொடரமுடியாது என்னும் செய்தியை ஆங்கிலேயருக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டன. ஆயினும் தன் அதிகாரத்தின் ஆற்றலை இழக்க விரும்பாத ஆங்கிலேய அரசு, காந்தியடிகள் ஈட்டிய மக்கள் ஆதரவை இல்லாமலாக்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. அவர் மீண்டும் மீண்டும் தன்னை இந்த உலகத்தின் முன் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். இறுதியில் அதற்காகவே அவர் தன் உயிரையும் இழக்க நேர்ந்தது.
இந்திய மக்களிடையில் எளிமை, உண்மை, நல்லிணக்கம், ஒற்றுமை, தியாகம் ஆகியவற்றை விதைத்து வளர்த்தெடுக்கும் ஆவலோடு காந்தியடிகளுடைய குரல் இந்தியாவெங்கும் ஒலித்தது. அதுதான் நம் தேசத்தின் விடுதலையைச் சாத்தியமாக்கியது. காந்தியடிகளின் பிறந்தநாளைக் கொண்டாடுகிற சூழலில், அதை ஒரு சடங்காக நினைக்காமல் அவர் வளர்க்க நினைத்த ஐந்து அம்சங்களுக்கு நம் நெஞ்சில் நாம் எந்த அளவுக்கு இடம் கொடுத்திருக்கிறோம் என்பதை சுயமதிப்பீடு செய்துகொள்வது பயனளிப்பதாக இருக்கும்.
***
பாவண்ணன் – விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் பிறந்தவர். கர்நாடக மாநிலத்தில் உதவிக் கோட்டப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை, நாவல், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று தொடர்ச்சியாக இலக்கியத்தில் தடம்பதித்து வருபவர். மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய அகாதெமி விருது, இயல் விருது முதலிய தமிழின் முன்னணி விருதுகளை வென்றவர். மின்னஞ்சல்: writerpaavannan2015@gmail.com
கதவைத் திறந்தபோது அவன் முகம் இறுகிப்போய் காணப்பட்டது. அதுவரைக் கண்களை மூடி தியானத்தில் இருந்த மலை கண்திறந்து அவனை பார்க்கத்தொடங்கியது. நிலவின் வெளிச்சத்தில் எலிகள் வயலுக்குள் மறைவது நன்றாகத் தெரிந்தது. சுற்றிமுற்றி பார்த்தவன் பெரிய சுத்தியல் ஒன்றை எடுத்து, முற்றத்தில் கிடந்த கல்லை அடித்து நொறுக்கத்தொடங்கினான். காற்றில் சாய்ந்து நிமிர்ந்துக்கொண்டிருந்த புற்கள் லேசாக அசைந்துக்கொண்டிருந்தது. ரீங்காரமிட்டுக்கொண்டிருந்த பூச்சியினங்கள் மௌனமாயின.
மூன்றுப்பக்கமும் வயல்பரப்பு. முன்பக்கம் சாலை. வயலைக்கடந்து மலைத்தொடர் தெரிந்தது. நடுவில் தீயினால் கீறல் விழுவது போல் ஏதோ ஒன்றுத் தெரிந்தது. நடுநடுவே இடிசத்தம். அடித்து உடைத்ததில் சல்லிகளாக மாறியிருந்தது. வெறி அடங்காமல் தேடித்தேடி ஒவ்வொரு கற்களாக உடைத்துக்கொண்டிருந்தான். பலமுறை ஒரே கனவை கண்டதன் விளைவு. அது ஒரு பெரிய சிலை. தலைப்பகுதி மட்டும் பொன். கழுத்திலிருந்து மார்பு வரை வெள்ளியிலும், வயிறு வெண்கலத்திலும், தொடை இரும்பிலும் இருக்க, பாதம் மட்டும் களிமண்ணினால் செய்யப்பட்டிருந்தது.
ஒவ்வொரு தடவையும் அந்த சிலை கனவில் வரும்போது பிரமிப்பூட்டும்விதமாக இருந்தது. அந்த வசீகரமான சிலையைப் பார்த்துக்கொண்டு கனவில் உறைந்துவிடலாம் என்று நினைத்தான். அதிலும் பொன் தலைப்பகுதி அவனுக்குள் பரவசத்தைக்கொடுத்தது. அதன் தலையில் இருக்கும் கிரீடத்தை தொட்டுத்தடவி ரசித்துக் கொண்டிருக்கும்போதுதான் ஒவ்வொரு தடவையும் அந்த சம்பவம் நடந்தது. மலை பிளப்பது போல் ஒரு சப்தம். கூடவே யானைப் பிளிறலும், திரும்பிப்பார்ப்பதற்கும் பெரிய கல் ஒன்று மலையில் இருந்து உருண்டு அந்த சிலையை உடைத்துவிடும். ஒவ்வொரு தடவையும் சிலையை முழுமையாக ரசிப்பதற்குள் இந்த சம்பவம் நடந்து கனவு முடித்துவைக்கப்படுகிறது.
கல்லை உடைத்து சோர்வானவன், அருகே ஓடிக்கொண்டிருந்த ஓடையில் இருந்து நீரை அருந்திவிட்டு படுத்தான். புரண்டுபுரண்டுப் படுத்தும் தூக்கம் வரவில்லை. இரவு ஒருமுறை விழித்தால், அதற்குப்பிறகு தூங்கமுடியாது. வீட்டின் உரிமையாளர் ஒரு மாதம் முன்பாக பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது கனரக லாரி ஏறி இறங்கி இறந்தார். தாரோடு ஒட்டி கூழாகியிருந்த உடலை சாலையில் இருந்து கைவிரல்களால் சுரண்டி எடுத்து, துணியில் பொதிந்து அடக்கம் செய்தனர். பிள்ளைகள் வெளியூரில் வசித்துவந்தனர். இரவில் பெரும்பாலும் அப்பகுதியில் மனித நடமாட்டங்கள் இருக்காது. ஊர்வனவற்றின் அசைவைக்கூட பேய் என்று நினைத்துப்பயப்படுவான்.
ஒருநாள் திடீரென்று கண்விழித்தபோது கான்கிரீட் கூரை ஓடாக மாறி, நடுவே துவாரம் தென்பட்டது. மழைப்பெய்ய தயாராகும் நேரத்தில் புளியமரம் ஆடிக்கொண்டிருந்தது. வெள்ளை சீலை உடுத்த கிழவி கையில் உலர வைத்த மரவள்ளிக்கிழங்குளை கையில் ஏந்தியபடி ஓட்டில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தாள். எவ்வளவு வற்புறுத்தியும் அவன் அந்தக் கிழங்குகளை வாங்காததால் கதவைத் திறந்து கொல்லைப்பக்க கல்லறையில் அணைந்திருந்த மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து அதில் கிழங்குகளை வைத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் குழிக்குள் போய் படுத்துக்கொண்டாள். அன்று இரவு மனித நடமாட்டம் இருப்பது போல் தெரிந்தபோது தவளையாக இருக்குமோ என்று தான் முதலில் நினைத்தான். அதற்குப்பிறகு வளையல்கள் சப்தம் கேட்கவே அந்த கிழவிதான் குழியில் இருந்து மறுபடியும் வந்துவிட்டதாக நினைத்தான்.
கல்லை அடித்து நொறுக்கிய சுத்தியலை எடுத்துக்கொண்டு மெதுவாக கதவைத் திறந்தான். வெளியே நின்றுக்கொண்டிருந்தது கிழவி இல்லை. திரும்பி பார்த்தபோது கல்லறையில் மெழுகுவர்த்தி அணைந்திருந்தது. எதிரில் அழகான இளம்பெண் நின்றுக்கொண்டிருந்தாள். “என்பெயர் சுதா.. சுதா என்று அழைப்பதைவிட தாரா என்று செல்லமாக அழைப்பதுதான் என் கணவனுக்கு பிடிக்கும். நான் அவரைத் தேடி இங்கு வந்திருக்கிறேன், நான் கடலில் நீராடிக்கொண்டிருக்கும்போது சொல்லாமல் கொள்ளாமல் ஒரு பெட்டியத் தேடி இந்த மலைக்கு வந்துவிட்டார். நான் இந்த ஊருக்கு புதியவள். நீங்கள் அவரை கவனித்தீர்களா? எனக்கு இந்த இரவில் உங்களை விட்டால் உதவ ஆளில்லை. அவர் பெயர் டேனி. ஒன்று மட்டும் தெரியும், அவரை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. மிகவும் திறமைசாலி. புதிய ஊர் என்பதனால் மட்டுமே உதவி கேட்கிறேன்.” பதற்றமாக நின்றுக்கொண்டிருந்த அவளைச் சற்றுப் பொறுமையாக இருக்க சொன்னவன் டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினான்.
மலையில் இரவில் விளக்கு வைத்து மும்மூரமாக வேலை நடந்துக்கொண்டிருந்தது. பெயர்த்து எடுத்த கற்களை உடைந்த மலையில் பொருத்திக்கொண்டிருந்தார்கள். துறைமுகத்திற்கு கொண்டுசென்ற கற்கள் அனைத்தும் டாரஸ் லாரிகளில் திரும்பி வந்துக்கொண்டிருந்தது. ஒருவன் கல்லின் வடிவத்தை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான். “உன் கணவனின் புகைப்படம் கையில் இருக்கா?” என்று கேட்டபோது இல்லையென்பதுபோல் தலை அசைத்தாள். போகும்வழியில் மிதிபட்டு புற்கள் மண்ணோடு புதைந்துக் காணப்பட்டன.
ஒருத்தர் நடப்பதற்கான சிறுபாதை வளைந்து வளைந்து உருவாக்கப்பட்டிருந்து. ஏற்ற இரக்கத்தைக் கடந்து கற்களை கைத்தாங்கலாக முன்னகர்த்தினார்கள் . வழியில் சிறிய தண்ணீர் பாட்டில்கள். ஆங்காங்கே உடைந்த மதுப்பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. பாறைகளில் எழுதப்பட்டிருந்த காதலர்களின் பெயர்களுக்கு நடுவே எய்தப்பட்ட அம்பு. குருத்தோலைகள் காயத்தொடங்கியிருந்தது. மலைப்பொருத்தும் இடத்தைக்கடந்து உச்சிக்கு வந்தபோது அங்கே ஒரு வில்வமரம் இருந்தது. ஓடிசென்று அதை சுற்றி வந்தவள், தான் இதற்கு முன்பே கணவனுடன் இந்தப்பகுதிக்கு வந்தது போல் இருப்பதாக சொன்னாள்.
நதிநீரின் சலசலப்பை உணர்ந்தவள், ‘நாங்கள் வரும்போது இந்த நதி தோன்றியிருக்கவில்லை. என் கணவனின் அற்புத சக்திகளால் இந்த நதி உருவானது’ என்று பெருமையாக சொன்னாள். வான்நோக்கி நிலவை பார்த்துவிட்டு அவளை நன்றாக உற்றுப்பார்த்தான். கால்பட்டு உடைந்த சருகளை கவனித்தவன் அதைப் பின்பற்றி நடக்கத்தொடங்கினான். முடிவில் ஒரு குகை ஒன்று காணப்பட்டது. தங்கமுலாம் பூசப்பட்ட நான்கு பிடிகள் கழன்று கிடப்பதைக் கவனித்து உள்ளே சென்று பார்த்தான். பெட்டி இருந்ததற்கான தடயம் அங்கிருந்தது. மண்ணோடு ஒட்டியிருந்த பலகைக்கீற்றுகள். சுற்றியெங்கிலும் பறவைகளின் இறகுகள் பறந்துக்கொண்டிருந்தன. மேற்குநோக்கி பக்கவாட்டில் பெய்துக்கொண்டிருந்த மழைக்கீற்றினுள் புகுந்த தையல் பறவை மலையை ஒட்டிக்கொண்டிருந்தவனின் தலையை கொத்துவதற்காக கீழே பாய்ந்தது. பறவை உள்ளே செல்லும்விதமாய் பதற்றத்தில் வாயைத்திறந்தான்.
மலையை ஒட்டிக்கொண்டிருக்கிறவர்கள் ஒவ்வொருவரும் வேறுவேறு மொழி பேசுபவர்களாக இருந்தனர். வெட்டிக்கொண்டு போகிறபோது அப்படியில்லை. அவர்களை நிறுத்த சொல்லலாம் என்றால் மொழி புரியவாய்பில்லை. கனவில் வரும் பெரிய கல் அவர்கள் தலைமீது விழாதா என்று நினைத்தபோது சுதா அங்கிருந்த செடிகளையும், கற்களையும் எடுத்து அவன்மீது வீசத்தொடங்கினாள். “கொலைக்கார பாவி.. என் கணவனை எங்கே அடைத்து வைத்திருக்கிறாய்? இந்த மலைகளை அழிப்பதும் நீதான். உன் வம்சம் அழிந்துபோகும்” என்று வெறிபிடித்தவள் போல் கத்திக்கொண்டிருந்தாள்.
கற்களை மண்ணிலிருந்து எடுத்தபோது மனிதனின் கால் பெருவிரல் ஒன்று கையில் தட்டுப்பட்டது. குத்திருட்டு அகன்று வானில் முழுநிலவு. அவன் சிரிப்பது மலைமுழுதும் எதிரொலித்தது. காற்றில் கேசம் அசைந்து அவன் முகம் வேறொரு முகமாகத் தோன்றி மறைந்துக்கொண்டிருந்தது. சுதா காலை ஓரடி எடுத்துவைக்க எண்ணினாள். சேலை அசைந்தது. கால் முன்னகரவில்லை. இரு உதடுகளும் ஓட்டிக்கொண்டு மூளையில் உதிக்கும் சொற்கள் சிறைப்பட்டன. இந்த மலை இருக்கும்வரை அதிசய சிலையை என்னால் முழுமையாக ரசிக்க முடியாது. எத்தனை கற்களை ஜல்லிகளாக மாற்றினாலும் கல் திரும்ப வரும். நான் சிலையை ரசிப்பேன். அதனுடன் புணர்வேன் என்று அங்கிருந்த புற்களை மாட்டைப்போல் மேய்ந்துவிட்டு நடந்து சென்றான்.
அவன் நடந்த பாதைகளில் மூன்று எலும்புகளை கவ்வியபடி கிழட்டு சிங்கம் ஒன்று நடந்தது. அதற்குப்பின் இரண்டு எலும்புகளை கவ்வியபடி ஒரு கரடி. வெறும் வாயுடன் ஒரு பன்றி. மூன்றுநாட்கள் கழித்து அங்கே வந்த பசு சுதாவின் கால்களில் பாலை பீய்ச்சி அடித்தபோது கால் அசைந்தது. உதட்டை அடிமடியில் வைத்தபோது வாய் திறந்துக்கொண்டது. டேனியைத்தேடி அவள் கால்கள் வேகமெடுத்தன.
டேனிக்கு எப்போதிலிருந்து பிறர் கனவை அறியும் சக்திக்கிடைத்தது என்று சரியாக நினைவில்லை. பிறர் கனவுகளுக்காக உறக்கத்தை இழந்த அவன் இப்போது ஒரு பெட்டியைத்தேடி இங்கு வந்திருக்கிறான். அது இந்த மலையில் எங்கேயோ ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. சுதா இதுவரை வருவாள் என்பது அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவன் கண்முன்னே நின்றுக்கொண்டு கண்களை வட்டமடித்துக்கொண்டிருந்தாள்.
காற்றில் பச்சைத்தருவையின் மணம் நிரம்பியிருந்ததால் அவனை கண்டுபிடிக்கமுடியவில்லை. எப்படியும் அவளால் கண்டுபிடித்திருக்க முடியாது. ‘தாரா.. தாரா..” என்று கத்திக்கொண்டிருக்கும் அவன் குரலை கேட்டிருக்க முடியாது. மந்திர வளையத்தினுள் உருவமற்று நின்றுக்கொண்டிருந்தான் டேனி. அங்கிருந்து அவள் சென்றபோது தருவைப்புற்களை அவன் எரிக்கத்தொடங்கியிருந்தான். வெளிச்சம் வரும் திசையை நோக்கி செல்லும் அவள் நிழலின் முடிவுவரைப் பார்த்துக்கொண்டு அழத்தொடங்கினான்.
இந்தமுறைக் கனவை முழுமையாக கண்டுவிடவேண்டும் என்று மலை உச்சியில் உறங்கத்தொடங்கினான். இதற்குமேல் கல் எப்படி விழும் என்று பார்க்கிறேன். இந்தமுறை கனவை முழுமையாகக் காண்பது உறுதி என்று ஆழ்ந்த நிலைக்கு சென்றான். கனவு வந்தது. கிரீடத்தை தொடும்நேரம் கல் எதுவும் விழவில்லை. பல டன் எடையுள்ள பெட்டி ஒன்று அந்த சிலையின் மீது விழுந்து சுக்குநூறாக உடைந்தது. கோவத்துடன் பெட்டியைத் தேடி மலை முழுவதும் திரிந்தான். சல்லடைபோட்டு தேடியும் பெட்டி எங்கும் கிடைக்கவில்லை. இவ்வளவு பெரிய பெட்டி எப்படி தன் கண்களை மறைத்து இந்த மலைக்குள் பதுங்கியிருக்க முடியும் என்று எண்ணினான். மலையெங்கிலும் அலைந்ததில் கழைத்துப்போய் உறங்கத்தொடங்கினான்.
சிலை வருவதற்கு முன்பு ஒரு சிறுபெட்டி வந்தது. திறந்து பார்த்தபோது அதிலிருந்த குறிப்பை வாசித்தவன் நேராக வளையத்தின் அருகேவந்து மந்திரத்தை செயலிழக்கச் செய்தான். கை,கால்கள் முளைத்த பெட்டி கையில் அவன் காணும் சிலையின் சிறிய வடிவத்தை கையில் ஏந்தியபடி நின்றுக்கொண்டிருந்தது. அவன் அதனை துரத்தத்தொடங்கினான். இரும்பு ஸ்க்ரூக்கள் கழன்று தெறித்தன. மரத்தோல்கள் பெட்டியின் பாகங்களில் ஒட்டத்தொடங்கியது. மரத்துகள் மண்ணில் இருந்து பறக்கத்தொடங்கின. சதுரம் அரைவட்டத்தை அடைந்தது. பிளக்கப்பட்ட மரத்துண்டுகள் ஒரு மரமாக இணைந்தது. பக்கவாட்டில் சரிந்து நகர்ந்துக்கொண்டிருந்த மரம் காற்றின் அசைவில் நேராக நிமிரத்தொடங்கியது. எரிக்கப்பட்ட தருவையில் இருந்து பரவிய நெருப்பு சருகுகளையும் சாம்பலாக்கியது.
புகை மேலிருந்து உள்ளே சென்றுக்கொண்டிருந்தது. மழமழவென எரியும் நெருப்பின் சத்தம் மெல்ல குறைந்துக்கொண்டிருந்தது. உடைக்கப்பட்ட இலைகள் நடுங்கிக்கொண்டு இணையத்தொடங்கியதும், அதன்மீது படிந்திருந்த கருமையின் இருள் மடியத்தொடங்கியது. இந்த நிலை அங்கிருந்த அனைத்து இலைகளிலும் ஒரே நடந்துக்கொண்டிருந்தன. கிளைகளுடன் மேலெழும்பிய மரத்தில் இலைகள் சென்று சேருமாறு காற்று கீழிருந்து மேலாக வீசிக்கொண்டிருந்தது. மரத்தூண் தரையில் பட்டதும், மண், சிறு கற்களை பிளந்துக்கொண்டு ஊடுருவிய வேர் பக்கவாட்டில் சல்லிவேர்களை பரப்பி உறுதியானது. ஓடிவந்தவன் பெட்டி எங்கே சென்றது என்று சுற்றிமுற்றி பார்த்தபடி வில்வமரத்தின் அடியில் நின்றுக்கொண்டிருந்தான்.
பறந்துக்கொண்டே காணும் பறவை ஒன்று கனவில் வந்ததைப்பார்த்து கண்விழித்தான் டேனி. சுதா எங்கே என்று தேடும்போது, அவர்கள் உருவாக்கியதாக சுதா சொன்ன நதியருகே அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
தூரத்தில் நின்றுபார்த்தபோது பனிப்புகையால் மறைக்கப்பட்டிருந்த மலை உச்சி இப்போது தெளிவாக தெரிந்தது. இரு ஆண்குறியினால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை புணரும் ஆணின் தோற்றத்தில் பூத்திருந்த மலரை புகைப்படம் எடுக்க விரும்பினாள். அவள் அருந்தியிருந்த மது கைகள் நிலையாக நிற்காமல் பார்த்துக்கொண்டது. காற்றில் மழைத்துளிகள் லென்ஸை நனைத்துக்கொண்டிருந்தன. ஒரு கெட்டவார்த்தையை சொல்லி துடைத்தவள் கேமிராவால் அந்த மலரைப் பார்த்தாள்.
காற்றில் புணர்ச்சியின் வேகம் அதிகமாக இருந்தது. அதை பறித்துவிட எத்தனித்த மனம் புகைப்படம் எடுப்பதற்காக தள்ளிப்போட்டது. காற்றின் அளவு குறையும் நேரம் அருமையான புகைப்படம் ஒன்றுக்கிடைத்தது. மெதுவாக கொடிகளை அறுத்து மலரின் அருகே பறிக்க கையை வைத்தாள். கால்பகுதி மட்டும் கையிலிருந்தது. மலர் கிழியும் ஓசையை அவளால் கேட்கமுடியவில்லை. கிழிக்கப்படும் நேரம் தூரத்தில் பிளிறிய யானையின் சத்தம் தடையாக இருந்தது.
கையில் ஒரு பெண்ணின் உருவமுடைய மலர் மட்டும் இருந்ததைப்பார்த்து கண்ணீர் வடிக்க தொடங்கியவள், சோகத்தில் மீதமிருக்கும் மலரைப்பறித்து மலையிலிருந்து கீழே போட்டு தற்கொலை செய்ய வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். பாசிபடிந்த பாறைகளில் உரசி மலையிலிருந்து கீழிறங்கிக்கொண்டிருந்தபோது மலரின் இதழ்களில் தெரிந்த காட்சி, இதுவரை பயம் என்ற உணர்வை முதன்முறையாக அனுபவித்தாள்.
தேரோசை வந்ததும் அந்தக்காட்சி மறைந்தது. கண்களை மூடிக்கொண்டபோது எரியும் பிணங்கள் கொண்ட சுடுகாட்டின் நடுவே அவள் கால்கள் நடந்துக்கொண்டிருந்தன. மதிலில் இருந்து விழும் பெண்பிணம் சுடுகாட்டின் எரியும் சிதையின்மேல் விழுந்தபோது ஓரிதழ் தரைக்கு வந்து சேர்ந்தது. சிதையைச் சுற்றி யானைகள் வட்டமடிக்கத்தொடங்கின. மீதி பூவிதழ் மலையின் பாதியைக் கடந்திருந்தது. கண்ணில் இருந்து பரவிய வலி உடல்முழுதும் கிளைவிரித்தபடி பரவத்தொடங்கியது. கடைசியில் முதுகை ஊசியால் குத்துவது போல் ஓரிடத்தில் வலி குவியத்தொடங்கி மறைந்தது. சுதாவின் கண்கள் இயல்பாகி தூங்கத்தொடங்கின.
மலைக்குள் மந்திர சுழல்பாதை ஒன்று உருவாகியிருந்தது. பித்துப்பிடித்தவன் போல் பெட்டியைத் தேடி சுழன்றுக் கொண்டிருந்தவனுக்கு சுழல்பாதை என்பது பிடிபடவில்லை. பாதையின் ஓரத்தில் இரு எலும்புகளை கவ்வியக் கரடி வந்து நின்றுக்கொண்டு வேடிக்கை பார்க்கத்தொடங்கியது. உடைந்துக் கிடக்கும் சிலையின் துண்டுகள். அதன் வழியில் நடக்கத்தொடங்கினான். நடையின் வேகம் அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. பாலைப் பீய்ச்சி அடிக்கும் பசு வந்தது. கூடவே மூன்று எலும்புகளுடன் சிங்கம். வெள்ளை சேலை உடுத்தியக் கிழவி, அடுப்பில் வேகும் மரச்சீனி கிழங்கின் மணம். தங்கமுலாம் பூசப்பட்ட பிடிகள் வழியில் கிடந்ததில் கால்தட்டப்பட்டு விழப்போனான். சிலையின் அடிப்பகுதி சாரல் மழையில் கரையத்தொடங்கியது. மலை உடையும் சப்தம். கொஞ்சம் நேரம் தான் அதற்குள் பெட்டியைக் கண்டுபிடித்துவிடலாம். மனம் இயல்பாகும். கனவில் பதறி எழும் அவன் முகம். நிற்கப்போகும் இதயம். கல்லறையில் எரியும் மெழுவர்த்தி.
அவனைக்கண்டு மிருகங்கள் மிரண்டுப்போய் நின்றுக்கொண்டிருந்தன. காரணம் காது கிழியும் விதமாய் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தான். துண்டு துண்டாய் உடைந்துக்கிடக்கும் சிலையின் அருகே நின்ற பன்றிகள். வாய் திறக்கப்படும் என்று அடிக்கடி பயமுறுத்தும் உக்கில். கண்களில் இருந்து நீர் வரத்தொடங்கியது. வேகம் மெதுவானது. இதனூடாய் ஒரேநேரம் பழமொழி பேசுபவர்களின் குரல்கள். உடைந்துக்கிடந்த சிலைத்துண்டுகளைக் கடந்து முதியக்கால் ஒன்று பாதைக்குள் வந்தது. முதியவர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் கையில் சாட்டையை வைத்துக்கொண்டு அவனிடம் ஏதோ சொல்லி கெஞ்சத்தொடங்கினார். அதைக்காதில் வாங்காமல், திரும்பிப்பார்க்காமல் பெட்டியைத்தேடி சுழன்றுக்கொண்டிருந்தான். அவர் கூறுவது முணுமுணுப்பது போன்று இருந்ததாலும், பலநாட்கள் பட்டினிக்கிடந்தவர் போன்று இருந்ததாலும் குரல் உள்ளிழுத்து ஒலித்துக்கொண்டிருந்தது.
நதியோசை கேட்டு கண்முழித்தாள் சுதா. எதிரே நின்றுக்கொண்டிருந்த டேனியை பார்த்து எவ்வித சலனமும் இல்லாமல் இருந்தவள் இயல்பாக சிறிதுநேரம் பிடித்தது. “தேடிச்சென்ற பெட்டி எங்கே? கிடைத்ததா? ஏன் எதுவும் சொல்லாம மௌனமா இருக்கீங்க?” என்று முகம் வாடிப்போயிருந்த டேனியை விடாமல் அவள் கேட்டுக்கொண்டிருந்தபோது வில்வமரத்தைக் கடந்திருந்தார்கள்.
பல வருடங்கள் கழித்து, முற்றிலும் மலை அகற்றப்பட்டு மழைநீர் அவ்விடத்தை குளம் போல் நிரப்பிக்கொண்டிருந்த நாளில், நல்ல உறக்கத்தில் சுழல்பாதைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. என்ன சொல்கிறார் என்று காதை வாயருகே கொண்டுசென்று உன்னிப்பாகக்கேட்டான். “என்னை சிலுவையில் அறையவாது இந்த மலையில் கொஞ்சம் இடத்தை விட்டு வையுங்கள்”.
***
ஐசக் பேசில் எமரால்ட் – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், முதுகலை மென்பொருள் பொறியியல் முடித்துவிட்டு ஊடகத்துறையில் பணிபுரிகிறார். “அபினி” (நாவல்), “பற்றி எரியும் நரம்புகள்” (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவரது படைப்புகள் நீலம், யாவரும்.காம், வனம், நகர்வு, தடாரி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் : issacb06@gmail.com
(திரிதீப் சுஹ்ருத்தின் காந்தியின் தன்வரலாறு (சத்திய சோதனையின் ஆய்வுப் பதிப்பு) நூலுக்கான முன்னுரையை காந்தி சிறப்பிதழுக்காக நல்கிய காலச்சுவடு பதிப்பகத்திற்கு நன்றி)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரையிலான காலகட்டத்தைச் சார்ந்ததும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி உருப்பெற்றதுமான குஜராத்தி இலக்கிய, பண்பாட்டுப் புலம்; அறிவொளி கால விழுமியங்கள், நகர்மயமானதும் தொழிற்வயபட்டதுமான உட்டோபிய உலகம் இவற்றின் கவர்ச்சிகரமான கலவையை மறுத்து, முற்றிலும் வேறான லட்சிய சமூகத்தை முன்வைத்த தீர்க்கமான பார்வையைக் காந்தியிடம் காணும் உலகளாவிய அறிஞர் கூட்டம். இவ்விரண்டிற்கும் முக்கிய இணைப்புப் பாலமாக திரிதீப் சுஹ்ருத் கடந்த இருபதாண்டுகளாக உருவாகியிருக்கிறார்.
மனித நாகரிகத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அறிவொளிக் காலம் ஆற்றியிருக்கக் கூடும் என்பதை அந்த மாற்றுப் பார்வை ஒப்புக்கொள்கிறது. மனித குலம் இன்று எதிர்கொள்ளும் மையச் சிக்கல், சக மனிதர்கள்மீதும் உயிரோட்டமான இயற்கைமீதும் வருங்காலத் தலைமுறையின்மீதும் நிகழ்த்தப்படுகிற மிகப்பெரியதும் முறைபடுத்தப்பட்டதும் அமைப்புரீதியானதும் (இன்னும் ஒன்றைச் சேர்க்கலாம் என்றால்) ‘அறிவியல்பூர்வமான’துமான வன்முறை. இதற்கான எந்தத் தீர்வும் அறிவொளிக் காலம் முன்வைக்கிற ‘இன்பஉலகு’ என்னும் கற்பனையிடம் இல்லை.
இருபதாம் நூற்றாண்டில் இன அழிப்பில் மட்டுமே சுமார் இரண்டரை லட்சம் உயிர்களைப் பறித்த ஒருவித நிகிலிச வன்முறைக்கு இரு முக்கியக் கூறுகள் உள்ளன. முதலாவதாக, பல சமூகங்களில் தொற்றுநோயாகப் பரவும் வடிவம் கொண்டுள்ள நாகரிகமற்ற கொடூரம். இரண்டாவது, அரசியல் ரீதியான பயங்கரமான அச்சுறுத்தல். இந்த அச்சுறுத்தல் இல்லாமல் அறத்தை நிலைநாட்ட முடியாது என்று பிரெஞ்சுப் புரட்சி நாயகர்களில் ஒருவரான மாக்ஸிமில்லியன் ராபிஸ்பியர் நம்பினார்.
வேறு பலரைப் போல் சுஹ்ருத்தும், 1970களில் நெருக்கடி நிலை அமலாகி, மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட பிறகுதான் காந்தியை மறுகண்டுபிடிப்பு செய்துகொண்டார். இந்தக் கண்டடைதல், காந்தியைச் சீரிய சிந்தனையாளராகக் காணும் போக்கின் ஒரு பகுதி. முந்தைய காலங்களில் அவரைப் பற்றிய படிமங்களைக் கட்டமைத்துப் பரப்பியதில் முக்கியமாக ஈடுபட்ட இருவகையான காந்திய ஆர்வலர்களின் ஆளுகையில் காந்திய மரபை இனியும் விட்டுவிட முடியாது என்று நம்புகிறவர்கள் இவர்கள். முதல் தரப்பினர், அழுக்கான, வன்முறை நிறைந்த, ஊழல் மிகுந்த அன்றாட அரசியலில் அவரை இழுப்பது நியாயமில்லை எனக் கருதினார்கள். இந்த காந்தியைப் பற்றிப் பேசும்போது, ஒருமுறை மெய்யியலாளரும் சிந்தனையாளருமான ராமச்சந்திர காந்திக்கு ஒரு கருத்தரங்கில் கவிஞர் உமாசங்கர் ஜோஷி அளித்த கூர்மையான பதில் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் புனிதர்கள் வகைக்கு எத்தனையோ பேர்; காந்தி தனித்துவமானவர், அவர் ‘அரசியல் சாக்கடை’யில் வாழத் துணிந்த புனிதர் என அவருக்கு நினைவுபடுத்தினார். வரலாற்றாசிரியர் ஆர்னால்ட் டாயின்பீ, காந்தி படுகொலை செய்யப்பட்ட பின் தனது அஞ்சலிக் குறிப்பில் ‘வருங்காலங்களில் மனித குலம் அதன் தீர்க்கதரிசிகளிடம், “அரசியல் சாக்கடையில் நீங்கள் வாழத் தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்கும் என்று சொன்னதிலிருந்து இந்த வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டதாக ஜோஷி கூறினார்.
இரண்டாவது தரப்பினர் காந்தியை நடைமுறைத் தொலைநோக்குக் கொண்டவராகக் காணும் தரப்பு. அவருடைய அரசியல், சமூகச் செயல்பாடுகள் எல்லாம் இந்திய மரபிலிருந்தே அல்லது சூனியத்திலிருந்தே கிளைத்தவை எனக் கருதுபவர்கள். இந்த வகை காந்திய ஆர்வலர்கள், காந்தியிடம் தீவிர அறிவார்ந்த ஈடுபாட்டோடு அணுகுவதை நேர விரயம் என்றோ அல்லது அது உண்மையான காந்தியைப் புரிந்துகொள்வதிலிருந்து தற்காலத் தலைமுறையைத் தடம்மாற்றும் உத்தி என்றோ எண்ணுகிறார்கள். காந்தியை இப்படி வகைப்படுத்துவதில் ஒருவித மெல்லிய வக்கிரம் படர்ந்துள்ளது. காந்தி செயல்வீரர்தானே ஒழிய, சிந்தித்தவரோ ஆராய்ச்சி செய்தவரோ அல்லர் எனச் சொல்வது இப்போது ஒரு அரசியல் தந்திரமாகவே மாறிவிட்டது. இத்தகைய நிலைப்பாடுதான் வினாயக் தாமோதர் சாவர்க்கர் போன்றவர்களை காந்தி அறிவியலுக்கு எதிரானவர், மூட நம்பிக்கைகள் உடையவர், நவீன ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளை அறியாதவர் எனத் துணிவுடன் கூறவைத்தது.
ஐம்பது ஆண்டுக்காலமாக அவ்வப்போது காந்தியுடன் உறவாடிக்கொண்டிருப்பவன் எனும் முறையில் ஒன்றைச் சொல்லத் துணிகிறேன்: இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இந்திய விடுதலை வீரர்களில், அரசியல் சமூக சீர்திருத்தவாதிகளில் ஐரோப்பிய நாகரிகத்தின் டயனோசிய சுயத்திலிருந்து துணிவுடன் துண்டித்துக்கொள்ள முயற்சித்த மேற்கத்திய மாற்று அரசியல் சிந்தனையாளர்களுடனும் அறிஞர்களுடனும் அதிகபட்ச அறிமுகம் கொண்டிருந்தவர் காந்திதான். காந்தி தன் அறிவாசான்கள் என அறிவித்துக்கொண்ட லேவ் தல்ஸ்தோய், ஹென்றி டேவிட் தோரோ, ஜான் ரஸ்கின் ஆகிய மூவரும் மேற்கத்தியர்கள்; நான்காவதாக ரால்ப் வால்டோ எமர்சனையும் சேர்த்துக்கொள்ளலாம். உலகின் பிற பகுதிகளில் இனவாதத்திற்கும் காலனியத்திற்கும் எதிராகப் போராடிய இயக்கங்களோடும், இப்போது நாம் பெண்ணியம், மனித சக்திக்குட்பட்ட தொழில்நுட்பம், சூழலியல் நீதி என அடையாளப்படுத்தும் செயல்பாடுகள் சார்ந்த இயக்கங்களோடும் சீரிய முறையில் அவர் தொடர்பில் இருந்தார்.
நெருக்கடி நிலையின்போது மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட ‘த்விஜா’ என்ற நூலில் அதன் ஆசிரியரான இலங்கை காந்தியர் டி.கே. மகாதேவன், காந்தி வாழ்க்கையில் இருமுறை மட்டுமே தீவிரமாகத் தெருவில் இறங்கிப் போராடினார், பிற சமயங்களில் சிந்திக்கவும் எழுதவுமே செய்தார் எனும் கருத்தை முன்வைக்கிறார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. தொண்ணூற்றி ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ள காந்தியின் எழுத்துக்கள் மகாதேவனின் கூற்றையே வலுப்படுத்துகின்றன; காந்தியின் விமர்சகர்களின் முடிவை அல்ல.
இந்தப் பின்புலத்தில்தான் இந்தத் தலைமுறை இந்திய அறிவுஜீவிகளுக்கு காந்தியின் சிக்கலான, ஆற்றல் மிகுந்த சிந்தனைப் புலத்தைக் கொண்டுசேர்க்கும் திரிதீப் சுஹ்ருத்தின் முயற்சிகளை மதிப்பிட வேண்டும். இந்த வரிசையில் சுஹ்ருத்தின் முதல் பெருமைமிகு முயற்சி, குஜராத்தி மொழியில் நாராயண் தேசாயின் நான்கு தொகுதிகளாக வெளிவந்த காந்தியின் வாழ்க்கை வரலாறான ‘என் வாழ்வே என் செய்தி’யை நான்கு தொகுதிகளாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததாகும். கலவரத்தால் சீரழிந்த குஜராத்தில் தேசாய் ‘காந்தி கதை’ என்னும் தொடர் கதைசொல்லலை இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் நிகழ்த்துவதற்கு இந்த நூல் அடித்தளமாக அமைந்தது. தேசாய் குஜராத்தின் சிறிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கு மட்டும் காந்தி கதையைக் கொண்டுசெல்லவில்லை; இந்தியா முழுக்கக் கொண்டுசென்றார், அமெரிக்காவிற்கும்தான். வங்கதேச மக்களிடம் கொண்டு செல்வதற்காக அவர் அழைக்கப்பட்டார். ஆனால் மரணம் அதற்குள் குறுக்கிட்டுவிட்டது.
சுஹ்ருத்தின் இரண்டாவது முக்கிய முயற்சி, சந்துலால் பாகுபாய் தலால் குஜராத்தியில் எழுதிய காந்தியின் புகழ்பெற்ற மூத்த மகனான, எதற்கும் அடங்காத ஹரிலாலின் வாழ்க்கை வரலாற்றை மொழியாக்கம் செய்தது. வாசிப்பவரை நெகிழவைக்கும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை என்றாலும் நம்மை நெகிழவைக்கும் நூல் அது. ‘ஹரிலால் காந்தி; ஒரு வாழ்க்கை’ எனும் பெயரில் இது வெளியானது. இந்நூலுக்கு ராமச்சந்திர காந்தி சிறிய, இரண்டு பக்க முன்னுரையை வழங்கியிருக்கிறார். மயக்கும் எதிர் ஆளுமையாகவும் விமர்சனம் வாய்ந்த அறக் குரலாகவும் ஹரிலால் தன்னையறியாமலேயே தன் தந்தையின் வாழ்வில் எப்படி முக்கியப் பங்காற்றினார் என்பதை அவர் அற்புதமான புதிய கோணத்தில் சொல்கிறார். இந்த நூலையும் அதன் குறிப்புணர்த்தும் முன்னுரையையும் மோகன்தாஸ் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைய முற்படும் எவரும் வாசிக்க வேண்டியது அவசியம்.
சுரேஷ் சர்மாவுடன் திரிதீப் சுஹ்ருத் இணைந்து பதிப்பித்த ‘இந்து சுயராஜ்ஜிய’த்தின் ஆய்வுப் பதிப்பை இந்தப் புத்தகத்தின் முன்னோடி எனக் குறிப்பிடலாம். தன்வரலாற்றின் இந்தச் செம்பதிப்பிற்குத் துணைநூலாக அதைக் கருதலாம். ஆங்கிலத்தில் எப்படி இருக்கிறதோ அப்படியே தன்வரலாற்றை வாசிக்க முடிவதோடு குஜராத்தி வடிவத்தின் வாசனையையும் கொஞ்சம் உணர முடியும். மூல ஆசிரியரின் நோக்கங்கள், மொழியாக்கம் செய்தவரின் தயக்கம், தடுமாற்றங்கள், குஜராத்தி, ஆங்கில வடிவங்களுக்கு இடையிலான தொனி வேறுபாடு ஆகியவற்றையும் ஓரளவு ஊகிக்கலாம். சுஹ்ருத் குறுக்கீடு செய்யாத அருமையான வழிகாட்டி. அதேசமயம் நாம் சுயமாக முடிவு செய்துகொள்வதற்கும், எது உண்மை என்று அவர் பார்க்கும் பார்வையிலிருந்து கடுமையாக வேறுபடுவதற்கும் தேவைக்கு அதிகமாகவே இடமளிக்கிறார். (உண்மையில் இந்த முன்னுரையும்கூட அவருடைய அவ்வளவாகப் புகழ்பெறாத புத்தகமான ‘Reading Gandhi in Two Tongues and other Essays’ நூலுடன் சில விஷயங்களில் மாறுபடுகிறது)
மீண்டும் யோசிக்கையில், இந்த நூலானது காந்தியின் காலத்திற்கும் நமது காலத்திற்குமிடையே இணைவை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய பார்வை கொண்ட காந்தியை, இந்தியமயப்படுத்திப் போற்றித் துதிக்க வேண்டியவராக்கிப் புரட்சிகரச் சிந்தனைநீக்கம் செய்யப்பட்ட – இந்திய அரசியல் என்ற சிலந்திவலையில் சிக்கிக்கொண்டுள்ள – காந்தியோடு வைத்துச் சீர்தூக்கிப் பார்ப்பதாகவும் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.
***
அஷிஷ் நந்தி நவீன இந்தியாவின் மிக முக்கிய அறிவுஜீவிகளில் ஒருவர். பின் காலனிய ஆய்வாளர். காந்திய சிந்தனையாளர்.
***
சுனில் கிருஷ்ணன் – காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர். காந்தி குறித்து தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருபவர். சிறுகதை, நாவல், காந்தியக் கட்டுரைகள், மருத்துவம் சார்ந்த கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக இலக்கியப் பங்காற்றி வருகிறார். ‘அம்புப் படுக்கை’ நாவலுக்காக சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வென்றவர். மின்னஞ்சல் : drsuneelkrishnan@gmail.com
நஞ்சுண்டபுரத்தைப் பற்றி இதிகாஷ் என்னிடம் அத்தனை ஆர்வமாக சொன்ன போது, எனக்கு உண்மையில் ஆச்சரியமாகவே இருந்தது. திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் இப்படியொரு ஊர் இருப்பதையோ, அங்குவோர் பிரம்மாண்டமான கோவில் இருப்பதையோ இதற்கு முன்பாக நான் கேள்விப்பட்டதில்லை. இத்தனைக்கும் கடந்த ஐந்தாண்டுகளாக நானும், அவனும் சேர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பழமையான கோவில்களைப் பார்வையிடுவதிலேயே எங்களது விடுமுறை நாட்களையெல்லாம் செலவிட்டிருந்தோம். எங்கள் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்த பாலுசாமி சார் ஏற்பாடு செய்திருந்த மகாபலிபுரம் சுற்றுலாவில் கலந்துக்கொண்டதில் இருந்து எங்களை இந்தக் கோவில் பைத்தியம் தொற்றிக்கொண்டது. அங்கிருந்த கிருஷ்ண மண்டபத்தையும், அர்ஜுன தபசு சிற்பத் தொகுதிகளையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நின்றபடி அவர் விளக்கி சொன்ன விதம், பூக்களில் இருக்கும் மிக சுவையான தேன் துளிகளையெல்லாம் எங்களைப் பருகச் செய்து போதையேற்றிவிடுவதைப் போல இருந்தது. அன்று தொடங்கிய கோவில்களை நோக்கிய எங்களது பயணம், நானும் இதிகாஷும் வேலைக்கு சென்ற பிறகும் முடிவடையவில்லை.
அன்றைய அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு, வித்யாவுடன் சிங்காரத்தோப்பில் அத்தோ சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இதிகாஷ் கூப்பிட்டான்,
“மச்சான், வர சனிக்கெழம காலையில ஐஞ்சு மணிக்கே ராக்போர்ட்ல திருச்சி வந்திடுவேன். நான் போன வாரம் சொன்னேனே, நஞ்சுண்டபுரம் கோயில் பத்தி. ஒரு மணி நேரத்தில உன் கார்லயே போயிடலாம். நான் உனக்கும் அனுப்பின போட்டோஸ் எல்லாம் பாத்தியா? உண்மைலயே மார்வலஸ் அந்த கோவில். வேற எங்கயும் இவளோ அழகான கங்காதரர் சிற்பத்த நான் பாத்தது கிடையாது.”
அவன் அனுப்பிய படங்கள் எல்லாம் என்னையும் கிளர்ச்சியடையவே செய்தன. எப்படி இத்தனை ஆண்டுகள், திருச்சிக்கு அருகாமையிலேயே அமைந்திருக்கும் அற்புதமான சோழர் காலத்து கோவிலைப் பற்றி தெரியாமல் இருந்தது என்கிற கேள்வி என்னுள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவன், அவ்வூரைப் பற்றி முதன்முதலாக சொன்னபோதே, இணையத்தில் நஞ்சுண்டபுரத்தைப் பற்றித் தேடினேன். அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. ஏதோ பழைய புத்தகத்தில் இருந்து அவ்வூரில் இருக்கும் அகத்தீஸ்வரர் கோவிலைப் பற்றிய குறிப்புகளையும், புகைப்படங்களையும் எனக்கு இதிகாஷ்தான் மெயில் அனுப்பியிருந்தான். திருச்சியில் இருக்கும் சில நண்பர்களிடம் நான் விசாரித்தேன். யாருக்கும் அந்த ஊரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கவில்லை.
இதிகாஷ் திருச்சி வந்ததும், தில்லை நகர் சங்கீதாவில் ஏழு மணிக்கெலாம் சூடாக மினி டிபன் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம். பத்து கிலோ மீட்டர், திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையில் சென்றுவிட்டு, பிறகு இருபது கிலோ மீட்டர் தூரம் சின்னஞ்சிறு கிராமங்கள் வழியாக பயணிக்குமாறு கட்டளையிட்டது கூகுல் மேப். தூரம் குறையக் குறைய, நாங்கள் கடக்கும் கிராமங்களின் அளவு சிறிதாகிக் கொண்டேயிருந்தன. குண்டும் குழியுமான, குறுகிய மண் பாதையில் நாங்கள் ஊர்ந்தப்படி நஞ்சுண்டபுரத்தை அடைந்த போது, அவ்வூரின் அமைப்பு எங்களை வியப்படையச் செய்தது.
உயர்ந்த மதில் சுவர்களோடு ஒரு கோட்டையைப் போல எழுப்பப்பட்டிருந்தது அகத்தீஸ்வரர் ஆலயம். அக்கோவிலும், அக்கோவிலை சுற்றியிருக்கும் நான்கு தெருக்கள் மட்டும்தான் நஞ்சுண்டபுரம். கோவிலுக்குள் நுழையும் முன்னர், காரிலேயே அந்த நான்கு தெருக்களையும் சுற்றிவந்தோம். இருந்தது முப்பது வீடுகள். அவற்றில் பெரும்பாலானவை சிதிலமடைந்த நிலையில், வசிக்க யாருமற்று இருந்தன. ஒரேயொரு சாப்பாட்டுக் கடை இருந்தது. பயணக் களைப்பு நீங்க, அங்கு டீ குடித்துவிட்டு ஆலயத்திற்குள் நுழைந்தோம். ராஜகோபுரத்திற்கு அருகில் ஒரு பாட்டி மட்டும் பூக்கட்டிக் கொண்டிருந்தார். அவரையும் எங்களையும் தவிர கோவிலுக்கு அடுத்த சில மணி நேரத்திற்கு யாரும் வருவதற்கு எந்த அறிகுறியும் இல்லை.
ஆர்வமார்வமாக, நானும் இதிகாஷும் கோவிலைச் சுற்றினோம். சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தது அவனுக்கு எந்த ஏமாற்றத்தையும் தந்திடாத வகையில் திகட்டத் திகட்ட கோவிலின் சுவர்களிலும், தூண்களிலும் புடைப்புச் சிற்பங்கள் நிரம்பி வழிந்தன. அவன் எனக்கு புகைப்படமாக அனுப்பிய பிரம்மாண்டமான, கங்காதரரோடு, திரிப்புராந்தகர் சிற்பமும் எங்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தது. அவ்விரு சிற்பங்களையும் அரை மணி நேரமாகவது பார்த்துக் கொண்டிருந்தோம். அவை சோழர் கால சிற்பமா அல்லது பிற்பாடு கோவிலை விரிவாக்கம் செய்த நாயக்கர் காலத்து சிற்பமாக என எங்களிடையே சின்ன விவாதம் கூட நடந்தது. வெவ்வேறு கோணங்களில், அவற்றை புகைப்படம் எடுத்துக்கொண்ட இதிகாஷ், இவைப் பற்றி நிச்சயமாக தான் முகநூலில் எழுதப் போவதாக கூறினான்.
எப்போதும் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்வையிட்டப் பிறகு, கடைசியாகவே நாங்கள் மூலவர் சந்நிதிக்கு போவோம். ஒரு வேளை கூட்டம் அதிகம் இருக்கிறதென்றால், மூலவரைப் பார்க்காமலேயே நாங்கள் சென்றுவிடுவதும் உண்டு. இதனாலேயே நான் வீட்டில் உள்ளவர்களோடும், மற்ற உறவினர்களோடும் கோவிலுக்கு சென்றால் என்னை வினோதமாகவும் எரிச்சலோடும்தான் பார்ப்பார்கள். ஆனால், அகத்தீஸ்வர கோவில் சிற்பங்களை நாங்கள் பொறுமையாக பார்த்து முடிக்கும்வரை, வேறு எந்த பக்தரும் கோவிலுக்குள் வரவில்லை. எனவே, துணிந்து மூலவர் சந்நிதிக்கு சென்றோம். கறுத்த சிவலிங்கமும், அதன் மீது ஒரு குடையைப் போல ஐந்து தலை நாகமும் கருவறையில் தென்பட்டது. நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கோவில் அர்ச்சகர், நாங்கள் வரும் சப்தம் கேட்டு கண்விழித்து, மெல்ல சூடமேற்றி தீபாரதணைக் காட்டினார். அவ்வெளிச்சத்தில், அந்நாகத்தின் பத்து கண்களும் ஒளிர்வாதாக எனக்குத் தோன்றியது.
அய்யரின் தட்டில் நூறு ருபாய் போட்ட இதிகாஷ், அவரிடம் கோவிலின் தலப்புராணம் குறித்துக் கேட்டான். நன்றாக சிரித்தப்படி அவரும் கதையைச் சொன்னார்.
“அதாவது தம்பி. பல்லாயிரம் வருசத்துக்கு முன்னாடி இங்க அகத்தியர் கடுமையா தவம் பண்ணினார். அவருக்கு, மகேஸ்வரன் திருமண கோலத்தில பார்வதி தேவியோடு இங்க காட்சிக் கொடுத்தார். அவுங்க மறஞ்சதும், சுயம்புவா லிங்கம் இந்த எடத்துல உருவாச்சு. அப்புறம், ரொம்ப காலம் கழிச்சு, சுந்தர சோழர் கனவுல இந்த இடம் வர, அவர்தான் சுயம்புலிங்கத்தை சுத்தி இந்த கோயில கட்டினாரு.”
“அப்படியா! அவ்வளோ பழமையான கோவிலா சாமி இது. பொதுவா, இந்த மாதிரி பெரிய கோவில் இருந்தா, ஊரும் பெருசா இருக்குமே. இங்க நஞ்சுண்டபுரத்தில ஆளுங்க ரொம்ப பேரு இருக்கிற மாதிரியும் தெரியலயே.”
பிறகு அய்யரிடம் விபூதி வாங்கி பூசிக்கொண்டு, கோவிலைவிட்டு கிளம்பினோம். அப்போது, மண்டபத்தில் ஆங்காங்கு சில பூனைகள் ஓடுவதைக் கவனித்தேன். வித்யாவிற்கு பூனைகள் என்றால் உயிர். எங்கே பூனைகளைப் பார்த்தாலும், அவள் அவற்றோடு கொஞ்ச நேரம் விளையாடாமல் இருக்க மாட்டாள். நாய்களைப் போலயில்லை பூனைகள். அவ்வளவு எளிதாக மனிதர்களை தன்னிடம் அண்டவிடாது. ஆனால், பூனைகள் எப்படி வசியம் செய்து தனதருகே வர செய்வது எனும் வித்தை அவளுக்குத் தெரியும். அவளோடு இருப்பதால், நானும் அதைப் பழகிக் கொண்டேன். எனவே, கோவில் மண்டபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பூனைகளை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். ஸ்ரீரங்கம் கோவிலில் நானும் இவ்வாறு பூனைகள் திரிவதைப் பார்த்திருக்கிறேன். அங்குள்ள பூனைகள் நன்றாகக் கொழுத்திருக்கும். ஆனால், இங்கிருப்பவையோ எலும்பும் தோலுமாக இருந்தன. என்னைப் பார்த்ததும், சில பூனைகள் பசிக்குரலை எழுப்பியப்படி அருகே வந்தன.
“இந்த பூனைங்களுக்கு பால் இல்லாட்டி தயிறு வாங்கி தரலாமாடா?”
“என்னடா, வித்யாவோடு சேந்து உனக்கும் இந்த பூனை பைத்தியம் தொத்திக்கிச்சா?”
“என்னனு தெரியல. நல்ல காலு வலி. நைட்டு ட்ரெயின்ல சரியாவும் தூங்கல. டையர்டா இருக்கு. நீ போய் வாங்கிட்டு வா. நான் இங்கயே உக்காந்திருக்கேன்.”
கடையில் இருந்து தயிர் பாக்கெட்டுகள் வாங்கி வந்த போது மண்டபத்திலேயே தூணில் சாந்து, காலை நீட்டியப்படி உறங்கிப் போயிருந்தான் இதிகாஷ். நானும் அங்கிருந்த காலி தேங்காய் மூடியில் தயிரை ஊற்றிவிட்டு சற்று கண்ணயர்ந்தேன். என்னையும் அறியாமல், நெடு நேரம் தூங்கிவிட்ட என்னை வெயில்தான் முகத்தில் அரைந்து எழுப்பிவிட்டது. மணி மதியம் பன்னிரெண்டு. இதிகாஷ் அருகே இருக்கிறானா என தேடினேன். இன்னும் அவன் தூக்கத்தில் இருந்து மீளவில்லை. பிறகு, தேங்காய் மூடியை எனது கண்கள் பார்வையிட்டன. பூனைகள் அதில் ஊற்றப்பட்டிருந்த தயிரை காலி செய்துவிட்டன. எனக்கு, உடலெல்லாம் அசாத்தியமான அசதி. மீண்டும் படுத்துவிட்டேன். இதிகாஷ் எழுப்பிவிடும் வரை தூங்கலாம் என நினைத்துக்கொண்டேன்.
ஆழ்ந்து நித்திரையில் கிடந்த என்னை ஒரு கொடுங்கனவு ஆக்கிரமித்தது. இருள் சூழ்ந்த ஒரு காட்டில், கண்கள் ஒளிர என்னையும், இதிகாஷையும் ஐந்து தலை நாகம் துரத்துவதுப் போன்ற கனவது. தப்பிப் பிழைப்பதற்காக, நாங்கள் இருவரும் எங்கெங்கோ ஓடினோம். கடைசியாக ஒரு மரத்தில் மோதினோம். யோசனை செய்யாமல், இதிகாஷ் மரத்தின் மீது ஏறத் தொடங்கினான். நான், பயத்தோடு தரையிலேயே இருந்தேன். ஆனால், நாகம், என்னை விட்டுவிட்டு மரத்தின் மீதேறி மிக ஆக்ரோஷமாக இதிகாஷைத் தீண்டியது. கனவில் அவன் அலறிய சபதம் கேட்டு நான் பதட்டத்தோடு கண் விழித்தேன். சூரியன் மங்கத் தொடங்கியிருந்தது. இதிகாஷ் எனதருகே முனங்கியப்படி படுத்திருந்தான். அவனை எழுப்ப முயற்சித்தேன். ஆனால், அவன் கண் விழிக்கவில்லை. அவனது தலையையும், கழுத்தையும் தொட்டுப்பார்த்தேன். நெருப்பைப் போல அவனுடல் கொதித்தது.
பையில் வைத்திருந்து பாட்டிலில் இருந்து தண்ணீரை அவன் மீது தெளித்தும் பார்த்தேன். அவன் வேதனையில் சுயவுணர்வில்லாமல் முனங்கியப்படி இருந்தான். இதுவரை இப்படி ஏதும் இதிகாஷுக்கு நடந்ததில்லை என்பதால், அவனுக்கு என்ன பிரச்சனை என்றே புரியாமல் குழம்பித் தவித்தேன். எப்படியாவது அவனை கார் வரைக் கூட்டிக்கொண்டு போனால் போதும், பிறகு அருகே இருக்கும் ஏதாவது ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று சிகிச்சை அளித்துவிடலாம். அவனைத் தூக்க முயற்சித்தேன். தடித்த அவனுடலை என்னால் தரையில் இருந்து அசைக்கவே முடியவில்லை. வேறெதுவும் யோசிக்காமல், உதவிக்காக கோவிலுக்கு வெளியே ஓடினேன். தனது பூக்கடையை அடைத்துக் கொண்டிருந்த கிழவியிடம் விவரத்தைக் கூறினேன். அவர் ஊரில் இருந்து ஆட்களை கூட்டி வருவதாக சொன்னார். நான் மீண்டும் மண்டபத்திற்கு சென்று, இதிகாஷின் அருகே அமர்ந்துக் கொண்டேன். இரண்டு பூனைகள் எங்களை சற்று தூரத்தில் இருந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன.
கிராமத்து ஆட்கள் சிலர் பூக்கடைப்பாட்டியுடன் கோவில் மண்படத்திற்குள் வந்து, என்னோடு சேர்ந்து இதிகாஷைத் தூக்கி காருக்குள் கிடத்த உதவினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கார் ஸ்டார்ட் ஆகவில்லை. எனக்கு உதவியவர்கள் காரைத் தள்ளவும் செய்தார்கள். இம்மியும் நகரவில்லை வண்டி. நான் பயத்திலும், பதற்றத்திலும் செய்வதறியாது கிடந்தேன். இதிகாஷ் ’பாம்பு பாம்பு’ என உளறிக்கொண்டிருந்தான். அவனுடல் முன்பைவிட பல மடங்கு அதிகமாக அனலடித்தது. இதே நிலை நீடித்தால், அவன் சாம்பாலாகிவிடுவானோ என்றுகூட எண்ணத் தோன்றியது. சிக்கலை உணர்ந்த ஊர்க்காரர்கள், உள்ளூர் வைத்தியர் வீட்டில் இதிகாஷைக் கூட்டிச் செல்வதாக அவனைத் தூக்கினார்கள். அவர்கள் கிளம்பிய பிறகே, அது மடத்தனமான முடிவு என்றெனக்கு தோன்றியது.
“வைத்தியரெல்லாம் வேண்டாமங்க. அது இவனுக்கு சரிப்பட்டு வராது. டாகடர்கிட்டதான் போகனும். அப்போதான் என்ன ஏதுன்னு கண்டுபுடிச்சி, கரெக்டா குணப்படுத்த முடியும்.”
“ஒன்னும் பயப்புடாதிங்க தம்பி. வைத்தியரொட பொண்ணு பெரம்பலூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில நர்ஸா வேல பாக்குறாங்க. கொஞ்சம் இங்கலீசு மருந்து மாத்திரைய அவுங்க வீட்லயே வச்சிருக்காங்க.”
அவர்களின் பதில் என்னை மௌனமடையச் செய்தது. ஆனால், என்னுடைய அவநம்பிக்கை முழுமையுமாக தணியவில்லை, எனவே, மொபைலில் இருந்து ஆம்புலன்சுக்கு தகவல் சொன்னேன். ஊர் பேரைக் கேட்டதும், அங்குவரை வர முடியுமாயெனத் தயங்கியவர்கள், பிறகு நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்ததும் கிளம்பி வருவதாக சொன்னார்கள். ஆனால், நஞ்சுண்டபுரத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தடைய ஒரு மணி நேரமாவது பிடிக்குமாம்.
வைத்தியரின் வீட்டு வாசலில் அவ்வூரை சேர்ந்த இருபது முப்பது ஆட்களும் கூடிவிட்டார்கள். அதில் அதிகமாக வயதானவர்களே இருந்தனர். உள்ளே, வைத்தியரும் அவர் மகளும் இதிகாஷுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்கள். என்னவென்று கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றாலும், ஜுரம் குறைய ஊசி குத்தியிருப்பதாக அந்த பெண் என்னிடம் கூறினார். ஆம்புலன்ஸ் வந்ததும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கே கூட்டிச் சென்றுவிடலாம் என தைரியமும் சொன்னார். அங்கிருந்த மற்றவர்களெல்லாம், ஒரு மரத்தருகே கூடி தீவிரமாக எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தார்கள். சில வயதான பெண்கள், அம்மரத்தடியில் இருந்த குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை வணங்கினார்கள். நான் ஆம்புலன்ஸ் டிரைவரை அழைத்தேன். இன்னும் அரை மணி நேரம் ஆகுமென்றார்.
அப்போது மரத்தருகே இருந்த பெரியவர்கள் என்னைக் கூப்பிட்டார்கள். ஊர் வைத்தியர் என்னிடம் ஒரு விசித்திரமான கேள்வி கேட்டார்.
“உன் நண்பனோடு பூர்வீகம் எந்த ஊர்னு தெரியுமாப்பா?”
“இல்லங்களே அய்யா. அவன் ஊர் சென்னைதான். இத ஏன் இப்போ கேக்குறீங்க?”
“அவன் பிறந்தது சென்னை சரி. அவுங்க அப்பா, தாத்தா எல்லாரும்?”
“எனக்கு தெரியலங்களே. ரொம்ப காலமாக அவுங்க குடும்பம் மெட்ராஸ்லயே இருக்காங்கனுதான் தெரியும். ஆனா, எப்போ அங்க குடியேறுனாங்கங்கிற விவரமெல்லாம் தெரியாதே எனக்கு. ஏங்க, இந்த நேரத்தில இந்த விவரம் ரொம்ப முக்கியமா?”
என சற்று எரிச்சலடைந்து அவர்களிடம் பேசினேன். மிகவும், பொறுமையாக தனது பேச்சை தொடங்கினார் வைத்தியர்.
“தம்பி இந்த ஊருக்கு ஒரு பெரிய சாபமொன்னு இருக்கு. ஒரு காலத்தில் நூத்து கணக்குல மனுசங்க வாழந்த ஊரு இது. பெரிய பெரிய ராஜாக்களெல்லாம் இந்த கோவிலைக் கட்டி, கோவிலை சுத்தி இருந்த காட்டை அழிச்சு இந்த ஊரையும் உருவாக்குனாங்க. மாசி மாசம் நடக்குற கோவில் தேர் திருவிழாவுக்கு நாட்டுல எங்கெங்க இருந்தோ எல்லாம் சாமியாருங்களும், ஜனங்களும், வியாபரிங்களும் இங்க வருவாங்க. ஆனா, அந்த திருவிழாவையும் ஜனக்கூட்டத்தையும் இப்போ இந்த ஊர்ல இருக்கிற யாருமே பாத்தது இல்லை. எனக்கு எழுபது வயசாவுது. என்னுடைய அப்பா காலத்திலயும், திருவிழா நடந்தது கெடயாது. தாத்தா காலத்திலயும் கெடயாது. எல்லாம், பல நூறு வருசத்துக்கு முன்னாடி நடந்தது.
ஒரு திருவிழாவுக்கு, வடக்க இருந்து கயித்துல நடந்து வித்த காமிக்கிற குடும்பம் இங்க வந்துச்சு. புருஷன், பொண்டாடி, அப்புறம் அவுங்களோட சின்ன பொண்ணு. அவுங்க அரையும் குறையுமாதான் தமிழ் பேசுவாங்களாம். கோவில் திருவிழா முடியுற கடைசி நாளப்போ, அந்த வடநாட்டுகாரன், ரெண்டு பெரிய குச்சிய நட்டுவச்சு, அது மேல கயிறு கட்டி நடந்து வழக்கம் போல வித்தை காண்பிச்சிட்டு இருந்தான். எங்க ஊர் சின்னப் பையன் ஒருத்தன் வேடிக்கையா, அந்த குச்சிய தள்ளிவிட்டுடான். அந்த ஆளும் கீழ விழுந்து, பாறையில தலைய மோதி செத்துப் போயிட்டான்.
ஒரு முறை, சமயபுரம் கோவில்ல திருவிழா நடந்தப்போ, அந்த பொண்ணுக்கு நல்ல காய்ச்சல். அதனால, அவள குடிசையிலயே விட்டுட்டு, அந்த அம்மா மட்டும் பாம்புகள கூட்டிட்டு சமயபுரத்துக்குப் போன. இரண்டு நாள் கழிச்சு ஊருக்கு திரும்பி வந்தப்போ, அவளோடு மக குடிசையில இல்ல. ஊரெல்லாம் பைத்தியக்காரி மாதிரி அவ தேடி அலைஞ்சாலாம். எங்கயும் அந்த பொண்ணு கிடைக்கல. நாலு நாள் கழிச்சு அந்த சின்னப்பொண்ணு கோவில் நந்தவனத்தில பொணமா கிடந்தா. அவ உடம்பெல்லாம் இரத்த காயம். சில பேரு சேந்து அவள கெடுத்துக் கொன்னுட்டாங்க. தன்னுடைய மகளோடு உடம்ப கட்டிப்பிடிச்சு அழுததால, அந்த அம்மாவோட உடம்பும் முழுக்கவும் ரத்தம். அந்த கோலத்தில அவளப் பாக்க துர்க்கயம்மன் மாதிரி இருந்ததா எங்களுக்கு கதை சொல்லியிருக்காங்க.
எங்க ஊர்ல அவளோட மொத்த குடும்பத்தையும் பறி கொடுத்ததுனால, இந்த நஞ்சுண்டபுரத்தையே சபிச்சா. அவளோடு மகள கெடுத்து கொன்ன ஆட்களோட வம்சமே அழியுற வரை எங்க ஊர்ல ஒரு பொட்டு மழை வராதுன்னு சாபம் கொடுத்துட்டு, காட்டுக்குள்ள ஓடிப் போயிட்டா. அப்போயிருந்து, இன்னைக்கு வரைக்கும் எங்க ஊர்ல மழையே பெய்யல.”
“அந்த பொண்ண கொன்னவுங்க யாரு? அந்தம்மா கொடுத்த சாபப்படி அவுங்க சாவலயா?”
”ஆரம்பத்துல ஊர் காரங்களால யாரு அந்த பாவத்த செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்க முடியல்ல. அந்த அம்மா சாபம் கொடுத்த நாப்பத்தி எட்டாவது நாள்ள இருந்து, எங்க ஊர்ல சில இளந்தாரி பசங்களுக்கு விஷக்காச்சல் வர ஆரம்பிச்சதாம். காய்ச்சல் வந்த ராத்திரையே அவுங்க செத்தும் போயிட்டாங்க. அப்படி காய்ச்சல் வந்தவங்க எல்லாம், தங்கள பாம்பு கடிச்ச மாதிரி கனவு கண்டதா மயக்கத்துல உளறினாங்களாம். எங்க ஊர் ஜனங்களுக்கு புரிஞ்சிடுச்சு. அந்த சின்ன குழந்தைய கொன்னுவங்க தான் விஷ காய்ச்சலால சாவுறாங்கன்னு. ஊர்ல மறுபடியும் மழைப்பெய்யனும்னா, இது நடந்தே ஆவனும்னு வேற வழியில்லாம எல்லாரும் இளந்தாரி பசங்க சாவுறத பாத்துட்டு இருந்தாங்க. ஒரு மாசத்துல எட்டு பேர் செத்துப் போனாங்க. சரி, சாபம் அதோட முடிஞ்சதுன்னு எங்க ஊர்காரங்க எல்லாரும் நினைக்க, அப்புறம் அந்த பசங்கோளட குடும்பத்த சேந்த ஆம்பளங்களும் அதே மாதிரி விஷக்காய்ச்சல் எடுத்து சாக ஆரம்பிச்சாங்க. எந்த பாவமும் பண்ணாத வயசானவங்களும், சின்ன பசங்களும் சாகுறத பொறுக்காத அப்போயிருந்த ஊர் வைத்தியரு அவுங்கள காப்பாத்த முயற்சிப் பண்ணினார். எந்த மருந்தும் அவுங்கள குணமாக்கல. அவரோடு எந்த மந்திரமும் அந்த குடும்பங்களோட மரணத்தை நிப்பாட்டல. ஒரு வருசம்தான். அந்த அந்த எட்டு பசங்களோட குடும்பத்தில இருக்கிற எல்லா ஆம்பளங்களும் செத்துப் போயிட்டாங்க.”
“நீங்க சொல்லுறபடி பாத்தா, அந்த சாபம் முடிஞ்சிடுச்சுதானே?”
“அதான் இல்ல. எட்டு குடும்பம் அழிஞ்சாலும், ஊர்ல மழையே பெய்யல. இங்க இருந்த ரெண்டு குளமும் வத்திடுச்சு. விவசாயத்துக்கு வழியில்ல. ஊர்ல சுத்திட்டு இருந்த ஆடு-மாடுங்க எல்லாம் தண்ணியில்லாம செத்துட்டே போச்சுங்க. அப்புறம்தான் விசயம் செரிஞ்சது. ஊர் ஜமீந்தாரோட பையனும் அந்த எட்டு பசங்களோட சேந்துதான் அந்த பாவ காரியத்தை பண்ணியிருந்திருக்கான். மொதல சில பேர் சாக ஆரம்பச்சதுமே, ஒரு மளையாள மந்திரவாதிகிட்ட விசயத்தை சொல்லி, இந்த சாபத்துக்கு என்ன விமோசனம்னு விசாரிச்சிருக்கார் ஜமீந்தார். அந்த மளையாளத்தான் சொன்னானம், அந்த அம்மா விட்ட சாபம் ஊர் எல்லை வரைக்குதான் எடுபடுமாம். அதனால, புள்ளைய ஊர விட்டு அனுப்பிடுங்கன்னு. யாருக்கும் தெரியாம ஒரு ராத்திரி அந்த பையன ஜமீந்தார் வெளியூருக்கு அனுப்பிட்டார். ஜமீந்தாரும் அவரு குடும்பத்துல இருக்கிற மத்த ஆண்களும் கூட அந்த வருசத்துலயே இறந்து போயிட்டாங்க. ஆனா, தப்பிச்சிப் போன அந்த பையன் சாவல. எங்கேயோ போயி அவன் வம்சத்தை வளர்த்திருக்கான். அந்த வம்சத்துல பிறந்த எல்லா ஆம்பளங்களும் செத்தாதான் தான் எங்க நஞ்சுண்டபுரத்துக்கு விமோசனம். தீயில எரிஞ்சுப் போன காடு மாதிரி, சாபத்துல அழிஞ்ச இந்த கிராமம் மறுபடியும் துளிர்க்கனும்னா அது மட்டும்தான் வழி.”
அந்த வயோதிக வைத்தியர் என்ன சொல்ல வருகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. மிகவும் முட்டாள்தனமான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு கதையை சொல்லி, அந்த ஜமீந்தார் குடும்பத்தின் வாரிசாக இதிகாஷ் இருக்கலாம் என அவர் நினைக்கிறார். அவரின் இந்த மூடக்கதையை காரணம் கட்டி, எங்கே அவரே இதிகாஷை கொன்றுவிடுவாரோ என பயந்தேன். நல்ல வேளையாக, அவர் என்னிடம் வேறு எதுவும் பேசுவதற்கு முன்பு ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. ஆச்சரியப்படும்படியாக, அந்த ஊர்க்காரர்கள் யாரும் இதிகாஷை நான் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதைத் தடுக்கவில்லை. செவிலியராக இருக்கும் மருத்துவரின் மகளும் என்னுடன் ஆம்புலன்சில் ஏறினார். அவரிடம் இந்த கதையைப் பற்றி கேட்டேன்.
“ஆமாம் சார். அந்த அம்மாவோட சாபம்தான் எங்க ஊர் நிலைமைக்கு காரணம்னு ஜனங்க நம்புறாங்க. அதோ அந்த மரத்திடியில குங்குமம் தடவின ஒரு சாமி செல இருக்கே, அதுதான் அந்த அம்மானு நினைச்சு கும்பிடுறாங்க. உங்க பிரண்டுக்கு இப்படி திடீர்னு காய்ச்சல் வந்ததும், எல்லாருக்கும் இவர்தான் ஜமீந்தார் வம்சமோன்னு சந்தேகம். ஆனா, எதுவும் உறுதியா தெரியாததால அவுங்களும் குழப்பத்துலதான் இருக்காங்க.”
மறுநாள் இரவு வரை மருத்துவமனை ஐசியூவில் இருந்தான் இதிகாஷ். அதன் பிறகு அவன் தாக்குப்பிடிக்கவில்லை. இறந்துவிட்டான். அங்கிருந்த மருத்துவர்களால் அவன் இறப்பிற்கான காரணம் இதுதான் எனத் துல்லியமாக்க கூற முடியவில்லை. அவனுடைய பிரேதத்தை நான் தான் சென்னையில் இருக்கும் அவனது வீட்டிற்கு கொண்டு சேர்த்தேன். அவனுடைய அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நண்பர்களும், சில தூரத்து உறவினர்களும் வந்திருந்தனர். இதிகாஷின் உடல் எரியூட்டப்படும் வரை நான் அவர்களுடனேயே இருந்தேன். என் நெருங்கிய நண்பனை இழந்த சோகமும், அவனைக் காப்பாற்ற முடியாமல் போனதே என்கிற குற்றவுணர்வும் மிகத் தீவிரமாக இம்சித்தது. இனிமேல், எந்த கோவிலுக்கும் சிற்பத்தை காண்பதற்காக என்னால் போக முடியாது என உறுதியாக நம்பினேன். இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை காலமாகும் என்று என்னால் கற்பனைக்கூட செய்ய முடியவில்லை.
எல்லாவற்றையும் முடித்துவிட்டு, மீண்டும் திருச்சிக்கு திரும்புகையில், ஏதோவொரு உந்துதல் ஏற்பட்டு, வண்டியை நஞ்சுண்டபுரத்தை நோக்கி செலுத்தினேன்.
அந்த மே மாத வெயிலில், தமிழ்நாடே கருகிக்கொண்டிருக்க, நஞ்சுண்டபுரத்தில் மட்டும் லேசாக சாரலடித்துக் கொண்டிருந்தது. வண்டியை எங்கும் நிறுத்த மனமின்றி, கோவிலைச் சுற்றியிருக்கும் நான்கு வீதிகளிலும் காரிலேயே வலம் வந்தேன். வைத்தியரின் வீட்டருகே இருந்த மரத்தடியில் நிறுவப்பட்டிருந்த அந்த அம்மனின் சிலையின் மீதிருந்த குங்குமமெல்லாம் மழைச் சாரலில் கறைந்துப் போயிருந்தது. பிரக்ஞையின்றி ‘விமோசனம்’ எனும் வார்த்தையை நான் மெலிதாய் உதிர்த்தேன்.
***
அருண் பிரகாஷ் ராஜ் – வரலாற்று துறை ஆய்வு மாணவர், தில்லி அம்பேத்கார் பல்கலைகழகம். இவர் எழுதிய சிறுகதைகள் கணையாழி, அகநாழிகை இதழ்களிலும், வாசக சாலை இணையதளத்திலும் வெளியாகியுள்ளது. மயிலை சீனி வேங்கடசாமியின் சமணமும் தமிழும் எனும் நூலை நண்பருடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மின்னஞ்சல் : arunprakashrajn@gmail.com