Home Blog Page 25

இரவாடிய திருமேனி – அரூபங்களிலிருந்து திரண்டெழும் கதைகளும் ரூபங்கள் தொலைந்த கனவுகளும்

0

ந. ரஞ்சித் குமார்

புனைவின் நுழைவாயில் உண்மையில் கதையின் முதல் வரி தானா என்றால் சில படைப்புகளில் வாசிப்பு நிறைவுற்ற பிறகு தோன்றுவது வேறாகவே இருக்கும். கதையின் இறுதிப்புள்ளி வரை அது தன்னுடைய ஆரம்பத்தையும் முடிவையும் அறுதியிட்டு வரிசைப்படுத்திட முடியாதபடி வாசகனை நிறுத்தி வைத்திருக்கும். இது முழுக்க முழுக்க படைப்பாளியின் கட்டுப்பாட்டில் தீர்மானிக்கப்பட்டு நிகழ்ந்த கண்கட்டுவித்தை என்றும் சொல்லிவிட முடியாது. அதேபோல் படைப்பாளியின் கரங்களை மீறி புனைவு தானாக நிகழ்த்திக்கொண்ட அரூபமான, பரிணாம நகர்வாக இருக்கும் என்றும் அடையாளப்படுத்த முடியாது.

நிகழ்வுகளின் தொடர்ச்சி அதன் காரணிகள் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் புரிந்து கொள்ளப்படுமேயானால் புனைவு விஸ்தரிக்கும் கண்ணோட்டங்கள் முடிவிலியாகச் சுழன்று எண்ணற்ற சாத்தியங்களை நெய்து கொண்டிருப்பது புலப்படும். இந்தக் காரணிகள் மற்றும் விளைவுகள் புனைவில் வெளிப்படையாகச் சித்தரிக்கப்பட்டவையாகவே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. புனைவு நிகழும் களம், காலம், சமுதாயப் பின்னணி, கதாபாத்திர வார்ப்பு போன்ற அத்தியாவசியக் கூறுகள் சரியாகப் பின்னப்படும் போது சூழல் கதைப்பரிமாற்றத்திற்கான முதன்மை ஊடகமாக ஆகிறது. சூழல் பூடகத்தன்மை வாய்ந்தது. வார்தைகளுக்கு இடைப்பட்ட வெளியில் இருந்து துலங்கி வருவது. மறுவாசிப்புகளில் வார்த்தைகளின் அர்த்தங்களுக்கு புதிய கண்ணோட்டத்தை அளிப்பது. கண்ணோட்டங்கள் விரிய விரிய கதையின் துவக்க காலமும் நிகழ்வுகளுக்கிடையேயான தொடர்புகளும் மாற்றுப் பார்வைகளுக்கு இடமளிக்கின்றன. காலம் கடந்து ஒரு படைப்பு உயிர்ப்புடன் நீடித்திருக்க பலவிதமான மாற்றுப் பார்வைகளுக்கு இடமளிக்கும் அம்சங்களைக் கொண்டிருத்தலும் அவசியமாகிறது. புனைவு நிகழ்த்தும் மாயச் சுழற்சி, மாற்றுப் பார்வைகளின் விசையுடன், ஒற்றைச் சாத்தியப்பாட்டை மீறித் தன்னை விஸ்தரித்துக்கொள்கிறது.

புனைவின் மொழியும் தொனியும் ஒட்டுமொத்த படைப்பிலும் சீரான ஒத்திசைவைக் கொண்டிருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. படைப்பூக்கமும் படைப்புச் செயல்பாடும் ஒன்றோடொன்று பிணைந்த அலைவரிசையைப் பேணுதலில் மட்டுமே படைப்பு எய்தக்கூடிய உன்னத நிலை அது. அப்படியான நிலையில் எய்திய உயிரோட்டத்தைப் படைப்பு முழுமைக்கும் சிதையாமல் காத்தல் என்பது படைப்பாளியின் முழுமையான அர்ப்பணிப்பைக் கோரி நிற்கும் பொறுப்புணர்ச்சியாக விளங்குகிறது.

வாசகனாக நாவல் படைப்பாக்க மனநிலையை உணரும் தருணத்தையும் படைப்பு வாசகனுக்கு உணர்த்த தயாராகவே இருக்கிறது. வாசிப்பின் ஒரு கட்டத்தில் கதையில் துலங்கும் சூழலின் வழியாக நேரடிச் சித்தரிப்பில் வார்த்தைகளாகச் சொல்லப்படாத புல் நுனிகளையும் விவரிக்கப்படாத கதாபாத்திரங்களின் நுட்பமான மனவோட்டங்களையும் நம்மால் நெருங்கிச் சென்றுவிட முடிகிறது. புனைவுடன் வாசக மனம் ஈருடல் ஓருயிராக ஒன்றிவிட்ட இந்த விந்தை, ஒரு குறிப்பிட்ட சித்தரிப்பு, அது மன உணர்வாக இருக்கலாம் உடல் வலியாக இருக்கலாம் தரையின் ஈரப்பதமாகவோ நிலவின் ஒளியில் தகதகக்கும் நதயின் நீர்ப்பரப்பாகவோ எதுவாகினும், கண்முன்னால் வார்த்தைகளாக வந்து விழுவதற்கு இரண்டு வரிகளுக்கு முன்னால் அவ்வார்த்தைகளின் உணர்வுச் சமிக்ஞை கடத்தப்பட்டிருப்பதை அறிய நேரும் தருணத்தில் தான் சிலிர்ப்புடன் புலன்களில் உணரப்படுகிறது!

இரவாடிய திருமேனி நாவலின் மிக முக்கியமான பலம் இதன் மொழி என்றால் மிகையாகாது. காடுகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட சில முக்கியமான புனைவுகளை வாசித்திருந்தாலும் இந்நாவல் அழைத்துச் செல்லும் காடு மட்டுமல்ல, காட்சிப்படுத்தும் ஒரு புல் கூட இந்நாவலுக்குள்ளேயே வேர்விட்டு வளர்ந்திருப்பதாகவேப் படுகிறது. சித்தரிப்பின் வழியாக அழகியலைக் கடந்த சூழலின் தனிச்சிறப்பான குணாம்சங்களைக் கடத்துவதிலும் உரைநடையைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் வேல்முருகன் இளங்கோ.

நாவல் முழுவதும் கையாளப்பட்டிருக்கும் மொழியின் சிறப்பம்சம் குறித்து மட்டுமே பக்கம் பக்கமாகப்பேச முடியும். அதைத் தனி ஒரு கட்டுரையாக எழுதினால் மட்டுமே அது சாத்தியம். இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு பார்க்கலாம். வனப்பெண்ணாக வரும் ஒரு கதாபாத்திரம் மலைக்குன்றின் உச்சியில் ஏறி நிற்கும் காட்சியை கதையின் மையக்கதாபாத்திரமான சாம்பன் ஏறிட்டு பார்த்தவாறு லயித்திருக்கும் சித்தரிப்பு இப்படி வருகிறது “குன்றின் உச்சியில் தனது வடிவுடைய முதுகினைக் காட்டி, இடையில் இரு கரங்களையும் பொருத்தி, பள்ளத்தில் குவிந்திருந்த வனச்செறிவைப் பார்த்தபடி அவள் நின்றிருந்தாள். காடும், மலையும் அவள் பாதங்களின் கீழ் கிடந்தன.” (பக்கம் -223) காடும், மலையும் அவள் பாதங்களின் கீழ் கிடந்தன என்பது இங்கு படைப்பாளியின் அவதானிப்பு அல்ல அது முழுக்க முழுக்க சாம்பனின் அவதானிப்பு. அவனது பார்வையில் அந்தக் கணத்தில் பேரண்டம் போல விரிந்து படர்ந்திருக்கும் இந்தக் காட்டை விட ஒய்யாரமான கம்பீரம் அவளுடையதாகப் படுகிறது. சாம்பனின் பார்வையில் காடே தன்னைத் தாழ்த்தி அவள் பாதத்தில் பணிந்து கிடக்கிறது என்ற அர்த்தம் தொனிக்கிறது.

இதேபோல் காட்டை விட்டு அகல யத்தனிக்கும் இரவொன்றில் கரிய மேனியுடையவளான அதே வனப்பெண்ணின் இருப்பை உணரும் சாம்பனுக்கு அவள் இவ்வாறான உருவகமாகப் புலப்படுகிறாள் “யானைகளின் மதன நீரில் ஊறி, மகரந்தப் பரவலுக்கிணையாய்ப் புலிகளின் ரோமங்கள் உதிர்ந்துகிடக்கும் அக்கானகத்திற்குச் சூடப்பட்ட மைப்பொட்டு போல் அவள் அங்கு நிற்கக் கண்டான்” (பக்கம் – 235). முக்கியமாக இங்கு சுட்டிக்காட்ட முனைவது ஒரு அழகியல் சித்தரிப்பு என்று வருகையில் அங்கு உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் கலப்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். காட்சிரூபமாக ஒரு சித்தரிப்பை உரைநடையில் கடத்த இந்த அம்சங்கள் அவசியமானதும்கூட. ஆனால் அப்படியான உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் புனைவுக் களத்தின் குணாம்சக் கூறுகளைக் கொண்டே சொல்லப்படுவதில் தான் இந்நாவல் கையாளும் மொழியின் தனித்துவம் வெளிப்படுகிறது. காட்டின் நினைவுகளோடு தொடர்புடைய யானை, புலி, மகரந்தம் ஆகியன அந்தக் குறுகிய கணம் வெளிப்பட்டு சூழல் அவதானிப்பைச் செறிவூட்டுகின்றன. சித்தரிப்பில் சிறிதும் கூட வாசிப்புக்கவனம் களத்தின் சூழலிருந்து விலகாது கட்டுண்டிருக்க இது ஒரு குறிப்பிடத்தக்கக் காரணம்.

கட்டமைப்பிலும் கதைக்களம் பல வடிவங்களையும் கோணங்களையும் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னல்கள் ஒன்றோடொன்று திருகிக்கொள்ளாமல் அதற்கே உரித்தான தனித்துவத்தோடு பிணைந்திருக்கிறது என்பதே இதன் சிறப்பு. கதையில் வரும் பெயர் குறிப்பிடப்படாத வனப்பெண்ணின் பார்வையில் நாவலைப் புரிந்து கொண்டால் நாவலின் தன்மை மாய யதார்த்த வடிவத்தை அடைகிறது. மையக்கதாபாத்திரமாகக் கருதத்தக்க சாம்பனின் பார்வையில் பார்க்கையில் நாவல் இருத்தலியலைப் பேசும் குணமுடையதாக வேறொரு பரிமாணத்தை அடைகிறது. அரசரின் மெய்க்காவல் படைத்தலைவன் மாறவர்மனின் பார்வையில் மட்டுமே நாவலை இரண்டாகப் பகுக்க முடியும். வெளிப்புறமாக ராஜ விசுவாசமுடைய காவலனின் யதார்த்த வாழ்க்கை, அதற்கு நேரெதிராக அகவயமாக மகளின் மரணத்திற்குப் பிறகு பலவீனப்பட்டு நொடித்துப் போயிருக்கும் ஒரு சாமானியனின் அலைக்கழிப்புகள் என மனத்தின் இரட்டைக்குணத்தைப் பேசும் படைப்பு. ஞானகுரு ஸ்ரீவத்சரின் பார்வையில் ஒரு மாநகரின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சரித்திரத்தின் அவலப்பார்வையிலிருந்து முன்வைக்கும் படைப்பு என்று பொருள் கொள்ள முடியும்.

நாவலின் கட்டுமானம் அரசவையில் தன் காவியத்தை அரங்கேற்றச் செல்லும் காந்தர்வன் எனும் கூத்தனால் சொல்லப்படுவதாக அமைந்திருக்கிறது. கள்ளர் மரபிலிருந்து வந்திருக்கும் நீசனொருவனால் அரங்கேற்றப்படும் காவியம் சரித்திர அங்கீகாரத்தை அரசவையில் பெறுமேயானால் அடுத்து நிகழப்போகும் அசம்பாவிதங்களுக்கு அரசே பொறுப்பு என்று அவையில் கூச்சல் எழவே முதல் சருக்கத்தின் முடிவில் அவமானத்துடன் வெளியேற்றப்படுகிறான் காந்தர்வன். புறக்கணிப்பும் அவமானமும் தூண்டி விடும் கசப்பைத் தணிக்க வானதி என்ற வேசையை நாடிச் செல்கிறான் காந்தர்வன். அவளது அரவணைப்பில் அரங்கேறுகிறது இரவாடிய திருமேனியின் இரண்டாம் சருக்கம். தான் உருவாக்கிய காவியத்துக்குள் தானே ஒரு கதாபாத்திரமாக வலம் வருகிறான் காந்தர்வன்.

அரசருடைய உத்தரவின் பேரில் பல தலைமுறைகளுக்கு முன்பு ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தீக்கடம்பை மலரைத் தேடி வனத்திற்குள் நுழைகின்றனர், சாம்பன், பரிதி, பெரியசாமி உடன் இரண்டு காவலர்கள். குறித்த கெடுவுக்குள் மலர் கொண்டுவரப்படாவிட்டால் பரிதியின் மனைவி கோதையின் தந்தை உத்திராபதி பண்டிதரின் தலை போய்விடும்.

மலரைத் தேடி ஐவரும் வனத்திற்குள் நுழையும் முன்பு உத்திராபதி பண்டிதர் முன்பு வெளியே காட்டிக்கொள்ளமுடியாத இரண்டு சந்தேகங்கள் இருக்கின்றன. தலை போனாலும் பரவாயில்லை என்று மலரைத் தேடி வனத்துக்கு போவது. ஆனால் தலைமுறை தலைமுறையாகத் தேடப்பட்டுவரும் ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தீக்கடம்பை மலரை இதுவரை யாரும் கண்ணால் கண்டதும் கிடையாது. உண்மையில் அப்படி ஒரு மலர் இல்லை என்று அரசரிடம் ஒப்புக்கொண்டு தன்னைத் தற்காத்துக்கொள்ள நினைத்தால் தமது முன்னோர்கள் அனைவரையும் தனது குல வரலாற்றையும் தாமே அவமானத்திற்கு உட்படுத்தியதற்கு ஈடாகும். அந்த அவமானம் உண்டாக்கும் துடைத்தழிக்கமுடியாத கறை தன் ஒருவனுடைய மரணத்தை விடவும் கொடுமையானது. இதற்கிடையே தீக்கடம்பை நிஜத்தில் ஒரு மலரே அல்ல அது ஒரு பெண்ணைப் பற்றிய வர்ண்ணனை என்ற திடுக்கிடச் செய்யும் ஊகமும் பாணன் ஒருவனால் உத்திராபதி பண்டிதரின் செவிகளுக்கு வந்தடைகிறது.

கள்ளர் குலத்தைச் சேர்ந்த சாம்பன் இந்தக் கதையில் மையக்கதாபாத்திரம் என்று சொல்ல இயலும் என்றாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இங்கு புனைவின் மையம் ஒரு தனித்த மனித ஆளுமையை பிரதானப்படுத்துவதில்லை. விரிவான புனைவுக்களத்தை எடுத்துக்கொண்ட பெரும்படைப்புகள் அனைத்துக்கும் இது பொருந்தக்கூடிய கூற்று தான். ஆரம்பத்தில் புனைவின் நோக்கம் தீக்கடம்பை மலரைத் தேடும் பயணமாக இருப்பதாகத் தோன்றினாலும் கதாபாத்திரங்கள் நமக்கு பரிச்சயமாகத் துவங்கியதுமே இதைக் கடந்து பலவற்றை நாவல் பேச இருக்கிறது என்ற ஊகத்திற்கு நாம் வந்துவிடுகிறோம். அப்படியான அடுத்தகட்ட நகர்வில் ஞானசபையில் விவாதிக்கப்படும் சர்ச்சைக்குரிய கலையின் முக்கியத்துவம் பற்றிய விவாதங்கள் இருக்கின்றன.

கதையின் மைய இழையில் விதிவசமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் உள்நோக்கங்களும் வெவ்வேறானவை. பெரும்பாலான கதாபாத்திரங்களை கதையோட்டத்தில் இணைக்கும் மையச்சரடு மரணத்தின் அலைக்கழிப்பு. களவில் பிடிபட்டு கண்முன்னாலேயே துடிதுடித்து மரணிக்கிறார் சாம்பனின் தந்தை. மகளின் மரணத்தில் முழு உலகமே இருள் சூழ்ந்தது போல் நடைபிணமாகத் துவண்டு நிற்கிறான் அரசரின் மெய்க்காவல் படைத்தலைவன் மாறவர்மன். காட்டில் தனது ஒரே துணையாக இருந்த அன்னையின் சடலத்தைப் புதைத்து விட்டு வரும் குறத்தியின் உக்கிரம் ராஜவம்சத்தின் அஸ்திவாரத்தை உலுக்கி எடுக்கிறது. கூடலின் நரம்புத் துடிப்புகூட அடங்கியிராத சடுதியில் செண்பகரதியின் மரணம் சாம்பனால் நிகழ்ந்து முடிகிறது. வயோதிகத் தனிமையும், கையறுநிலையும், பசியும் ஒன்றாகச் சேர்ந்து சாம்பனுக்கு தந்தை போல் இருந்த சுருளிக்கு மீட்சியளிக்கும் கடைசிச் சந்தர்ப்பமாக மரணம் அமைகிறது. வனத்தில் மரணத்தின் விளிம்பில் அல்லாடிக் கொண்டிருந்த சாம்பனின் உயிரைக் காத்து அவனது மனக்குழப்பங்களையும் உடல் நோவுகளையும் சரிசெய்த, வாழ்க்கை மீதிருந்த நெடுநாள் கசப்புக்குப் பிறகு அவனக்கு ஒரே இணக்கமான மனிதராகத் தென்பட்ட, பெரியசாமி அவன் கண்முன்னே குரூரமாக கொல்லப்படுகிறார். சாம்பனின் நண்பனாக இருந்த சங்கனின் நரக வாழ்க்கைக்கு அவனே முற்றுப்புள்ளி வைக்கிறான்.

குழந்தைகளின் வறிய நிலை, மரணம் ஆகியவற்றை தஸ்தயேவ்ஸ்கி தனது புனைவுகளில் அணுகும் விதம் இந்த உலகில் மனித உயிர்கள் படும் வேறெல்லாத் துயர்களைவிடவும் அவையே கொடுமையானது என்பதாகவே இருக்கும். எல்லாத் தருணங்களிலும் கடவுளின் பக்கம் நிற்கும் தஸ்தயேவ்ஸ்கி குழந்தைகள் அனுபவிக்க நேரும் துன்பங்களில் மட்டும் கடவுளுக்கு எதிராக நிற்பார். இந்நாவலிலும் ஓரிடத்தில் அப்படி ஒரு பகுதி வருகிறது. அரண்மனையிலிருந்து வீடு திரும்பும் வழியில் மாறவர்மன் ஒரு பச்சிளம் குழந்தையின் மரண நிகழ்வை எதிர்கொள்கிறான். பின்புலம் தெரியாத அந்தக் குழந்தையின் மரணம் அவனது சொந்த மகளான கண்ணம்மாவின் மரணத்தை அவனுக்கு நினைவூட்டுகிறது. ஒரு வகையில் மனித மனத்தின் ஆற்றுப்படுத்தவே முடியாத ஆழமான வலி நமக்கு நெருக்கமானவர்கள் இறந்துவிட்ட நினைவை வாழ்நாள் முழுவதும் சுமந்துகொண்டு துவழ்வதாகவே இருக்கிறது. ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுடைய மரணத்தின் முன்பு இந்த உலகமே பாவ மன்னிப்பு கோரி நிற்க வேண்டும் என்று அவனது ஆற்றாமை வெளிப்படுகிறது.

இறக்கின்ற பிள்ளைகள் அனைத்திற்கும் ஒரே சாயல். இந்த இறக்கமற்ற உலகை மன்னித்து, கனிவுடன் விடைபெறுகிறார்கள்.”

இந்த மௌனத்தின் முன் மொத்த உலகும் மண்டியிட்டுப் பாவ நிவர்த்தி கோர வேண்டும்” (பக்கம் 332)

ஒரே கரங்களில் குலுக்கப்பட்டு உருட்டப்பட்ட சோழிகள் போல் கதாபாத்திரங்களின் விதிகள் புனைவுக்குள் அடைபட்டு உருள்கின்றன. தத்தம் போக்குகளை தீர்மானிப்பதில் ஒவ்வொருவருக்கும் இடையே பேணப்படும் முழு வெளிப்படைத்தன்மையற்ற சூட்சும இடைவெளி வாசிப்பனுபவத்தில் சுவாரஸ்யம் கூட்டுகிறது. நாவலில் வரும் எந்தவொரு கதாபாத்திரத்தின் குணத்தையும் அவர்களின் நடவடிக்கைகளை வைத்து தீர்மானிக்க முடியாது. காமம், காதல், பிரிவேக்கம், மரணத்துயர், குற்றவுணர்ச்சி, பழிவாங்கல், என்று கதாபாத்திரங்களை ஏதேனும் உள்ளார்ந்த உணர்ச்சி அவர்களை இயக்கும் விசையாகச் செயல்படுகிறது. இதற்கு இவர்களை விதிவசத்தில் சங்கமிக்க வைத்திருக்கும் காடும், காட்டுக்கு வெளியே அவர்களின் வரவை எதிர்நோக்கியிருக்கும் உறவுகளின் காத்திருப்பும் பாலமாக இருக்கிறது.

காடுகளில் தழைத்து வளர்ந்த நாகரீகமேயானாலும் நகருக்குள் சென்று வாழப்பழகிய நூற்றாண்டுகளின் தொடர்ச்சியில் காடுகளின் நினைவும் மானுடர் மரபணு நினைவுகளில் இருந்து தடயமின்றி துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது என்பதே நிஜம். கதாபாத்திர மன இயல்புகளை கணத்துக்கு கணம் குலைத்துப் போடுகிறது காட்டின் மர்மம் பொதிந்த பேரழகு. காட்டின் மௌனம் காலத்தின் நகர்வை மறக்கடிக்கிறது. காட்டின் பிரம்மாண்டம் தனிமையுணர்வையும் மரண பயத்தையும் அதிகரிக்கிறது. காட்டின் திசையற்ற அடர்த்தி நினைவுகளைக் குழப்பியடிக்கிறது. காடு உறைய வைக்கும் காலம் வாழ்வையும் மரணத்தையும் பிரிக்கும் எல்லைக்கோட்டை இல்லாமலாக்குகிறது. காட்டின் இதம் தாபத்தை அதிகரிக்கிறது. காடு அகங்காரத்தை தவிடுபொடியாக்குகிறது. காடு மனக்கசடுகளின் ஊற்றுக்கண்ணைத் தூர்வாறுகிறது. காடு வாழ்வு மீதான பற்றைப் புதுப்பிக்கிறது. காடு அனைத்தையும் துறந்தவனுக்கு கடைசிப் புகலிடமாகிறது. காடு நூற்றாண்டுகளின் வஞ்சத்தைத் தன் கருப்பையில் சுமந்து மானுடக் கனவுகளில் புகட்டுகிறது. காடு இருள் மட்டுமே சூழ்ந்த நான்கு சுவர்களுக்குள் மிச்ச வாழ்வை பேரானந்தத்துடன் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.

பகல் பொழுதில் அசந்து தூங்கியதில் தூக்கத்தில் இருந்து விழித்ததும் காலையா மாலையா என்று பொதுவாக வரும் குழப்பத்துடனேயே நாவலில் சாம்பனின் அறிமுகத்தை நாம் எதிர்கொள்கிறோம். காட்டுப்பயணத்தில் அவனது பிரக்ஞை அவ்வப்போது நனவிலியில் சிக்கித் துவழ்கிறது. அப்போது அவனுக்குள் சிதறல் துணுக்குகளாகத் தோன்றி மறையும் கோர்வையற்ற கொடும் நினைவுகள் வழியாகவே அவனது கடந்த காலத்தை அறிகிறோம். ஆனால் விழிப்புநிலையில் சாம்பனின் மன உணர்வுகளும் செயல்பாடுகளும் புதிர்களாகவே இருக்கின்றன.

சாம்பனுக்கு நண்பனைப் போல் இருந்த சங்கனின் உடல் முடக்கத்திற்கு சுருளி போதித்த களவொழுக்கத்தை ஆர்வக்கோளாறில் அவர்கள் இருவரும் மீறியது காரணமாகிறது. சாம்பன் நினைத்திருந்தால் சங்கனின் மீதமுள்ள வாழ்க்கை முழுவதையும் அழுகிய உடலுடன் படுக்கையில் கழிக்க நேரும் நரக வேதனைக்குள் சிக்காமல் தடுத்திருக்கலாம். சாம்பனின் வெளியேற்றம் சங்கனின் மலட்டு உயிர் இவை இரண்டோடு தன்னுடைய வயோதிகத் தனிமையும் சேர்ந்து சுருளியை களவொழுக்கத்தை மீற வைக்கிறது. பாணர்களிடமும் கூத்தாடிகளிடமும் களவு எடுக்கக்கூடாது என்ற விதியை மீறுகிறார். பசி தமது குலத்தையே காட்டிக்கொடுக்கும் நிலைக்கு அவரைத் தள்ளுகிறது. அனைத்துக்கும் ஒரே மீட்பாக பித்தேறிய மகிழ்ச்சியுடன் மரணத்தை நேருக்கு நேராக எதிர்கொள்கிறார் சுருளி. சாம்பனின் வனவாசத்தில் அவனைப் பெரிதும் அலைக்கழிக்கும் குற்றவுணர்ச்சி, சங்கனின் வாதைகளுக்கும், தந்தைக்குப் பிறகு தனக்கு அடைக்கலம் தந்து வளர்த்த, களவின் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்த சுருளியின் கையறுநிலைக்கும் தாம்தான் காரணம் என்ற நிதர்சனங்களாக இருக்கின்றன..

சாம்பனின் மூர்க்க குணத்தையும் புதிரான ஆளுமையையும் அசைத்துப் பார்க்கும் வனப்பெண்ணான குறத்தி ஒருத்தி வருகிறாள். சாம்பனை மரணத்தறுவாய் சூழும் தருணத்தில் அவனைக் காத்து, உடனிருந்து, ஒரு வடுவைப் போல அவனை வீட்டு நீங்காமல் வதைத்துக்கொண்டிருக்கும் துன்பக் கறையை சுவடின்றி அகற்றுகிறாள்.

நாவலில் இவளது நிஜப்பெயர் என்னவென்று தீர்க்கமாக மறைக்கப்பட்டிருக்கிறது. அதை ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளலாம். நாவலில் கதைசொல்லியான காந்தர்வனுக்கு அடுத்து பூடகமான அடையாளத்துடனேயே வலம் வருகிறாள் இந்த வனப்பெண். கதைசொல்லியான காந்தர்வனுக்கும் வேசை வானதி உடனான பிணைப்பும், சாம்பனுக்கும் பெயர் சொல்லப்படாத வனப்பெண்ணுடனான உறவும் ஒன்றொன்றின் பிரதிபலிப்புகள் தானா என்ற வியப்பு தோன்றும் இடங்களும் நாவலில் இருக்கின்றன.

சேரர்களும் பாண்டியர்களும் படையெடுத்து, வனமே ஒரே புகலிடமாய் வசித்து வந்த கடம்பர்களின் குலம் அழித்த கதையை காவிய நடையில் சித்தரிக்கும் மூன்று படலங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. இறந்த ஆன்மாக்களின் ஓலங்கள் திரண்டு நிற்கும் கல்மரம் ஒன்றின் தொடுகை அக்கதைகளுக்கான நுழைவு வாயில். அதன் பின்னணி தெரியாத பரிதி முதலில் அந்தக் கல்மரத்தின் கோரப்பிடியில் அகப்பட்டு புத்தி உறைந்து போகிறான். வனப்பெண்ணின் வழிகாட்டுதலோடு சாம்பன் தக்க தருணத்தில் அந்தப் படலங்களுக்குள் நுழைகிறான். ஒரு பக்கம் பரிதியின் அகம் உறைந்த நிலை. அவனுக்கு வெளியே அவனது பிரக்ஞையை ஊடுருவிக் காரணத்தை அறிய உத்திராபதி பண்டிதர் எடுக்கும் முயற்சியில் அவர் கண்ணுறும் காட்சிகள். இன்னொரு பக்கம் இவர்கள் இருவரையும் தன்னுடைய பிரவேசத்தில் காணும் சாம்பன். மூவரின் காலமும் இடமும் வெவ்வேறு புள்ளிகளில் இருந்து ஒற்றை மையத்தில் சங்கமித்து மீள்கின்றன. நாவலில் கற்பனையின் வீச்சு உச்சம் தொடும் பகுதிகளில் இதுவும் ஒன்று. ஒருவகையில் பார்த்தால் நாவலில் துவக்கமே இந்தப் படலங்களிலிருந்தே துவங்குகிறது என்ற பார்வையிலும் புரிந்துகொள்ளலாம்.

அரசவையில் காந்தர்வனின் இரவாடிய திருமேனி காவியம் எதிர்கொள்ளும் அவமானங்களின் எதிரொலியாக காவியத்துக்குள் நிகழும் ஞானசபை விவாதங்கள் இருக்கின்றன. கலையின் மேன்மைகள் சரித்திரத்தில் அமரத்துவம் பெறுவதில் அவற்றைப் படைத்தவரின் பின்னணி முக்கியமானதாகப் பார்க்கப்பட வேண்டும் என்று தன் சீடர்கள் சூழ உரை நிகழ்த்துகிறார் ஞானகுரு ஸ்ரீவத்சர். கலையின் ஆதார ஊற்று ஞானம் பயிலும் அருகதையற்றவரிடமிருந்து பிறந்ததெனில் அது அரங்கேறுவதற்கும் தகுதியற்றது என்று போதிக்கிறார். “என் தடுமாற்றம் எப்படி ஒரு சிந்தனை அதற்குரிய மரபிலிருந்து ஒதுங்கி வெளியில் தோன்றுகிறது என்பதில் தான். அது என்னை அச்சுறுத்துகிறது. எந்தக் கலையும் அதற்குரிய மரபிலிருந்துதான் பிறக்க முடியும்” (பக் 302). அதேசமயம், மரணத்தின் இறுதிப்புள்ளியில் ஞானகுரு அடையும் சிறுதுளி தரிசனம், அதுவரையிலான ஞான சபை விவாதங்கள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும் முக்கியமான திருப்பு முனை!.

தீக்கடம்பை மலர் கொண்டுவரப்பட்டதிலிருந்தே அடுத்தடுத்து தென்கூடல் நகரை கெடுநிமித்தங்கள் சூழ்கின்றன. ஞான சபையில் யுகங்களாக நின்று எரியும் ஞான விளக்கில் துவங்கி நகரில் நிர்மாணிக்கப்படும் மகா சங்கு, கோவில் கோபுரம், தேர் பவனி, ஆயிரம் கால் மண்டபம், ஞானகுரு ஸ்ரீவத்சரின் மரணம் வரை தொடர்ந்து அரங்கேறும் நிகழ்வுகள் அனைத்தும் மகாபிரளயத்தின் முன்னறிவுப்பு போல் நகர மக்களை நிரந்தர அச்சத்தில் பீடிக்கின்றன. இவை அனைத்திற்கும் மூல காரணமாக பெயரறியா வனப்பெண்ணின் மூச்சுக்காற்று அசரீரியாக இருக்க அதை ஏற்றுச் செயல்படுத்தும் கைப்பாவையாக சாம்பன் ஆகிறான்.

எங்கும் வீசும் காற்றே.

நாங்கள் இருளில் இறங்கத் துணியும்வரை

எங்கள் தீபங்களை அணைக்காதிரு.

அவை அணைந்தபின்

ஒளியின் நினைவுகளைச் சுமக்காதிரு.

எங்கும் பரவியுள்ள ஒளியே,

நாங்கள் இருளில் இறங்கத் துணியும்வரை எங்களை நீங்காதிரு.

எங்களை நீங்கியபின்

எங்கள் இல்லாமையைத் துலங்காதிரு.” (பக்கம் 298)

கதைச்சுருக்கம் அதிகமாக சொல்லப்பட்டுவிட்டதோ என்று நினைப்பவர்களுக்காக கடைசியாக ஒரு குறிப்பு. பா.வெங்கடேசனின் முத்தம் என்றொரு சிறுகதை இருக்கிறது. ஒரு கதையில் துவக்கம் என்ற ஒன்று இருந்தால் முடிவும் ஒற்றைச் சாத்தியத்துடன் தானே இருந்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கலாகாது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடிய கதை அது. இரவாடிய திருமேனியில் வரும் தீக்கடம்பை மலரிலும் ஒரு பொடி இருக்கிறது. அதை வாசகர் புரிந்துகொள்ளும் பார்வைக்கேற்ப ஒட்டுமொத்த நாவலும் வேறொரு நாவலாகத் தோன்ற வாய்ப்பிருக்கிறது. எனவே நான் படித்த கதையும் நீங்கள் இரவாடிய திருமேனியில் படிக்கப் போகும் கதையும் வேறுவேறாகவும் இருக்கலாம். தீக்கடம்பை மலரல்ல அது ஒரு பெண் என்றால் அவள் தான் பெயர் குறிப்பிடப்படாத வனப்பெண்ணா? களவுக்காக கோயிலுக்குள் நுழையும் சாம்பனை வசியப்படுத்தி தன்னுடைய வஞ்சத்தை நிறைவேற்றத்தக்க ஏவலனாக வனத்துக்கு வரவழைப்பது தான் தீக்கடம்பையின் நோக்கமா?.

ஆனைக் காதன்.

சிரம் விரித்துச் சர்பமென மிளிரும்.

வனம் கடக்கும் பெருந்தீயின் வேகம்.

தீக்கடம்பையாம் அதன் பெயர்.

பற்றுபவன் நிலைப்பான்.

காலம் உளவரை

தென்கூடற்பதியாய்.”

ஏட்டில் தீக்கடம்பை மலர் பற்றி வரும் பாடல்.

வலியாய வினைகள் நிகழ்ந்திருக்க.

காண் உறித்த இடமெங்கும் கருப்பை நீர்.

தழைகளுக்குக் கீழ் வேலேந்தி முரண்டோரின் சிரம்.

திண்ணிய ஆடவர் கல் சுமக்க.

மாதக்கரசிகளில் பலர் மன்னவன் சேவைக்கு.

தொடர்வினை கழியலுக்காய்,

நூற்றியெட்டு சூல்பெண்டிர் புனல் நீருக்கு.

ஆயினும் ஒரு தளிர். நிலமோடி மலை ஏறிற்று. தீக்கடம்பையாம் அவள் பெயர்.

தீக்கடம்பை பற்றிய குறிப்பு இடம்பெற்ற பாணன் பாடிய பாடல்.

***

ந. ரஞ்சித் குமார் – சொந்த ஊர் தென்காசி அருகே சேர்ந்தமரம். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அச்சு ஊடகங்களில் தொடர்ச்சியாக நூல் மதிப்புரைகள் எழுதிவருகிறார். மின்னஞ்சல்: ranjithlogin01@gmail.com

விந்தியா எனும் தீற்றல் : நூல் மதிப்புரை

0

விந்தியா எனும் இந்திய தேவி 1927-இல் பிறந்து 1947 முதல் 1960 வரை சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிறுகதைகள் தொகுக்கப்படவில்லை. 2025-இல் தொகுப்பாசிரியர் ரம்யா, விந்தியாவின் 26 சிறுகதைகளைத் தொகுத்து, நீலி பதிப்பக வெளியீடாக, அதாவது விந்தியாவின் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். எனில், கிட்டத்தட்ட ஆசிரியரின் நூறாவது வயதில் வெளியாகும் முதல் தொகுப்பு. தவிர, 1999-இல் மறைந்த விந்தியா 1960 முதல் 1999 வரையிலான நாற்பதாண்டு காலம் சிறுகதைகள் எதையும் எழுதவில்லை. இவ்விரண்டும் சேர்ந்த வினோதமான மனநிலை, மற்றும் கதைகள் எழுதப்பட்ட காலத்தை நினைவில் கொள்ளவேண்டும் என்ற கவனம் ஆகியவற்றுடன் மிக வித்தியாசமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது, ‘விந்தியா எனும் தீற்றல்.’

குடும்பம், பக்தி, பண்டிகைகள், போலவே தான் வாழும் நிலம், சமகால அரசியல் ஆகியவற்றைப் பற்றியும் விந்தியாவுக்குத் தெளிவான பார்வை இருந்திருக்கிறது. இந்துப் பண்டிகைகள், வழக்கங்கள் ஆகியவற்றைச் சொல்லும் அதே நேர்த்தியுடன் கிறித்தவக் கொண்டாட்டங்கள், நம்பிக்கைகளைப் பற்றியும் அவரால் சொல்ல முடிகிறது. 

காயம்பட்டுக்கொண்டு அழும் குழந்தைக்கு அதனாலேயே வசவும்கூட கிடைத்தாற்போலாச்சு லக்ஷ்மியின் வேதனை” – ‘கிறிஸ்துமஸ் நாள்’ சிறுகதையின் ஒரு வரி இது. விருந்தோம்பலின் சங்கடம், பிறகு அது ஒரு பார்வையிலேயே சரியாகிவிடும் அதிசயம் என்று நகரும் இந்தக் கதை, 1949-இல் சுதேசமித்திரனில் வெளிவந்திருக்கிறது. பள்ளியில் பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள் என்று ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம் சொல்லி, அது பெரியவர்களை வந்தடைகிறது. அதாவது, 1948 ஜனவரியில் மறைந்த காந்தியடிகளின் மறு உருவாகத்தான் 1948 நவம்பரில் இங்கிலாந்தில் ராஜகுமாரன் (சார்லஸ்) பிறந்திருக்கிறார் என்ற சலசலப்பும், அதையொட்டி என்னவெல்லாம் நடக்கலாம் என்ற கூடுதல் கற்பனைகளும். இன்றைய நம் சூழலிலிருந்தபடி இதை வாசிக்கையில், புன்னகைக்காமல் எப்படிக் கடப்பது?! இந்த அரட்டையை ஒட்டி, மறுபிறப்பு என்பதைப் பற்றிய இந்து நம்பிக்கையையும், கிறித்தவ நம்பிக்கையையும் கதையில் சொல்லியிருப்பதும், அதைக் கடைசிப் புள்ளியில் கொண்டுவந்து இணைப்பதும் விந்தியாவின் திறமைக்கும், தெளிவுக்குமான சான்றுகள்.

காந்தியடிகளின் படுகொலை, அதையொட்டி நிலவும் அசாதாரணச் சூழல் ஆகியவை இரண்டு கதைகளில் இடம்பெறுகின்றன. ‘என் நினைவுக்குறிப்புகள்’ என்ற கதையில் ‘சங்கப்பித்து’ என்றே எழுதியிருக்கிறார். நிறங்களில் அரசியல் அல்லது அரசியலில் நிறங்கள் பற்றியும் இதே கதையில் ஒரு குறிப்பு உண்டு:

//அத்தையகத்தில் இருந்தபோது சினிமாவுக்குப் புறப்பட்டபோது, பச்சை நிறப்புடவை உடுத்திக்கொண்டு நான் கிளம்பியபோது, “இந்தக் கலர்தானா அகப்பட்டது,” என்று அத்தான் சொன்னான் என்று உடனே அவனைத் திருப்தி செய்ய, உடை மாற்றிக்கொண்டு அரக்கு நிறப் புடவையில் காட்சியளித்தேன்! “பேஷ்,” என்றான் அத்தான்! //

இவ்வளவு சுருக்கமாக எழுதி, எவ்வளவைக் கடத்திவிட முடிகிறது இவரால்!

இன்றைக்கும் பொருந்தக் கூடிய பல கதைக்களங்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. மார்பில் வலி இருப்பதால் மருத்துவரைச் சந்திக்கவேண்டிய இளம்பெண், ஆண் மருத்துவர் என்பதால் கொள்ளும் தயக்கம் என்பதில் தொடங்கும் கதையில், ஒரு சிறு திருப்பத்துக்குப் பின் கணவன் மனம் கொள்ளும் அலைபாய்தல்; தான் ‘கிராப்பு’ வெட்டிக்கொள்ளும் விதம் மனைவிக்குப் பிடிக்காது என்று தெரிந்து, வேண்டுமென்றே அவளுடன் வெளியில் செல்வதற்கு முதல் நாள், “பச்சையாகத் தலையைக் குலைத்துக்கொண்டு” வரும் கணவன்; அந்தக் கணவனை வெறுப்பேற்றுவதற்காகவே இன்னொருவனுடைய ‘கிராப்பு’ பற்றி “பின்னாடி அழகாய் இருக்கும்” என்று சொல்லும் மனைவி; “நறுவிசு” வேண்டும் என்று அனத்தும் மனைவியை மடைமாற்றிவிட்டு, பிறகு அதை நினைத்து ஏங்கும் கணவன்; பாட்டு நன்றாக இருக்கிறதே என்று ரசிக்கும்போதே செய்திகளுக்கு நேரமாகிவிட்டது என்று கத்தரி போட்டவிடுவார்களே என்று வானொலி நிலையத்தை நொந்துகொள்ளும் தோழிகள்; ஒரு கச்சேரிக்குப் புறப்படும் முன் அதைப் பற்றியே நினைத்துப் புலம்பிவிட்டு, அங்கே போனபிறகு, கணவன் வரவேண்டுமே என்றும் இனிமேல் வரவேண்டாமே என்றும் மாற்றி மாற்றி அலைபாயும் ஒருத்தி என்று நிறைய இடங்கள் உண்டு.

‘புகைப்படம்’ என்ற கதையில் இருவர் இருக்கும் படத்திலிருந்து ஒருவர் படத்தை மட்டும் பெரிதாக்குவது, குழு படத்திலிருந்து இருவரை மட்டும் பிரித்து ஜோடியாக்குவது, ஒரு பெண் மறுத்தும் அவளை விடாமல் பின்தொடர்வது என்று இன்றைய ஃபோட்டோஷாப், ஏ.ஐ., ஸ்டாக்கிங் ஆகியவற்றுக்கு சவால் விடும் காட்சிகள் இருக்கின்றன. ‘கற்பனை உள்ளம்’ ஒரு பெண் எழுத்தாளரின் கதை. முதல் கதை பிரசுரமானதும் வரும் வாழ்த்துக் கடிதங்களுக்கும், அவற்றில் கேட்கப்படும் ஐயங்களுக்கும் பதில் எழுதியே சலித்துப்போகிறாள் ‘எழுத்தாளி’! அடுத்தடுத்த கதைகள் பிரசுரமாவது பற்றி யாருக்கும் சொல்லக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். பிறகு ஒரு கதைக்குப் பரிசு கிடைக்கிறது. தன்னனுபவம் சேர்த்து எழுதிய கதைக்குத்தான் பரிசு கிடைத்திருக்கிறது என்ற புரிதல் வருகிறது. ஆனால், “இப்போ மன்னி முந்தி மன்னியில்லைதான்,” என்று வம்பும் வருகிறது. வாட்ஸாப் குழுக்கள், ஃபேஸ்புக் பின்னூட்டங்கள் எல்லாம் அங்கே தொடங்கியவைதானே என்று நமக்கும் தோன்றுகிறது.

விந்தியாவின் கதைகளில் யாரும் அறிவுரை சொல்லாமல், தண்டனை அளிக்காமல், படிப்பினை என்று எதையும் திணிக்காமல் மனித மனம் தானாகவே அலசி, தானகவே தெளிந்துகொள்ளும் இடங்கள் வாசிக்கையில் பெரும் நிறைவைக் கொடுக்கின்றன, நிம்மதி என்று கூடச் சொல்லலாம். ‘உள்ளுணர்வு’ கதையில் வரும் கணவனும், ‘உருகாத வெண்ணெய்’ கதையில் வரும் மனைவியும், ‘புகைப்படம்’ கதையில் வரும் நாராயணனும் தனக்குள் தானே பேசி அடையும் மனமாற்றங்கள், கச்சிதமான அளவில், நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கின்றன.

இந்தக் கதைகளில் குழந்தைகள் மேல் பெரும் பரிவு வெளிப்படுகிறது. மூத்த தாரத்தின் மகனைத் தன்னுடன் அணைத்தபடி நிலவொளியில் உறங்கும் கர்ப்பிணி இளையதாரத்தின் சித்திரத்தை அவரால் தீட்ட முடிகிறது. இரண்டாம் திருமணம் செய்துகொண்டபின், அவளும் கருத்தரித்த பின் குறுகிவிடும் கணவனின் மனம், அதனால் மேலும் பலவீனமடையும் மனைவியின் உடல், இறுதியில் கவிதைத் தன்மை நிரம்பிய ஒரு காட்சி, ஆனாலும் பெரிதாக மாறிவிடாத, அல்லது ஒப்புக்கொள்ள விரும்பாத ஆண் மனம் என்று ‘மறுவின் உரை’ விந்தியாவின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று.

பார்வையற்ற கேசவன், பார்வையற்ற குருவிடம் ‘பிடில்’ கற்றுக்கொள்வதில் தொடங்கி, விரியும் ‘விழியின் வெம்மை’ என்னளவில் இந்தத் தொகுப்பின் கிரீடம். விந்தியாவுக்கு ‘பிடில்’ மேல் தனித்ததோர் அன்பு இருந்தது போலும். பல கதைகளில் பிடிலுக்குத் தனி இடம் இருக்கிறது. கேசவனுக்கு அவனுடைய குரு எப்படி வாசிக்கக் கற்றுத் தருவார் என்ற நுணுக்கமான விவரிப்பு, அவனுக்கு சிறுதீனி பிடிக்கும் என்பதால் எந்த ஊருக்குப் போனாலும் ‘மதறாஸ் ஹோட்டல்’ போகவேண்டும் என்று அவன் அடம் பிடிப்பது, அப்படியான தருணங்களில் அவன் அப்பாவுக்கு ஏற்படும் சின்ன சலிப்பு, மைந்தனுக்குக் “கண்ணுங் கோலுமாக” விளங்கி அவன் பார்க்க முடியாத நகைகளை அவனுக்கு அணிவித்துப் பார்க்கும் அதே அப்பா… அபாரமான கதை. விந்தியாவின் படைப்பு மனம் எத்தகையது என்பதைச் சொல்ல, இந்தக் கதையிலிருந்து இரண்டு வரிகள்:

கேசவனுக்குப் பூணூல் போட்டார்கள். சந்தனக் கட்டையாலான ஊதுவத்தித் தாங்கி ஒன்று நண்பன் ஒருவன் மூலம் வரவழைத்துப் பரிசு அளித்தோம். நாசியினால் உணரக்கூடிய பொருள் அல்லவா?

கூர்மையான நடை, உணர்வுகளை இயல்பாகக் கடத்தும் தன்மை, துருத்தித் தெரியாத சொற்கள், எடுத்துக்கொண்ட கதைக்கருவைப் பற்றிய தெளிவான பார்வை என்று விந்தியாவின் கதைகள் வாசிக்க இலகுவாக இருக்கின்றன. சில கதைகளை வாசிக்கும்போது, இவர் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றியது; சில கதைகளை வாசிக்கும்போது இவர் இன்று இதை எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று தோன்றியது. ஆனால், விந்தியாவின் கதைகளை, அவற்றின் முடிவுகளை ஒட்டி இயல்பாக யோசித்தால், அவ்வளவுதான் அமைந்தது, அமைந்தவரைக்கும் அற்புதம் என்ற நிறைவே எழுகிறது. ‘விந்தியா எனும் தீற்றல்’ என்ற இந்தத் தொகுப்புக்காகவும், இந்தத் தலைப்புக்காகவும் எழுத்தாளர் ரம்யாவுக்கு அன்பும், நன்றியும். விந்தியாவின் கதைகள் அவசியம் வாசிக்கப்பட வேண்டியவை, எங்கிருந்து இங்கு வந்திருக்கிறோம் என்பதற்காக மட்டுமல்ல, எங்கெல்லாம் இன்னமும் அப்படியே இருக்கிறோம் என்பதற்காகவும்தான்.

***

தென்றல் சிவக்குமார்  – சென்னையில் வசித்து வருகிறார். ‘எனில்‘ என்ற கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்தது. தாமரைச் செல்வி என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். மின்னஞ்சல்: thendralsivakumar@gmail.com

கடன்

0

வெயில் பழுத்து முதிர்ந்திருந்த ஒரு சோம்பல் மிகுந்த மதிய வேளையில் வீட்டு வாயிற்படியில் வெறுமனே அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தூக்கத்தின் பாரம் கண்ணிமைகளை அழுத்த அதனுடன் போராடியபடியே அமர்ந்திருந்தேன். மதியத்தின் இந்த நேரத்தில் தெருவில் எந்த ஆரவாரமும் இருக்காது. அதுவரையிலான இயக்கங்கள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து, மனிதர்களற்ற தெரு, விநோதமானதொரு மௌனத்தில் புதைந்து விடும்.  இவ்வேளையில், தெருநாய்கள் கூட அமைதியாக வீட்டு வாசல்படிகளுக்கு அருகே படுத்துக்கொண்டு இளைப்பாறும். எங்கேயோ ஒலிக்கும் ரேடியோப் பாடலை காற்று மெல்ல சுமந்து கொண்டு வரும். தள்ளுவண்டியில் காய்கறிகள் அல்லது கொய்யாப்பழங்கள் விற்க வரும் சிறுவணிகர்களின் நம்பிக்கையற்ற விளிகள் தேய்ந்தபடியே வரும். தொலைவில் உள்ள ஏதோவொரு வீட்டில் பாத்திரம் புரளும் ஒலி கேட்கும்.

மயங்கிக் கிடக்கும் தெருவை எழுப்புவது போன்றதொரு இரைச்சலுடன் தூரத்தில் ஒரு பழைய டி.வி.எஸ் 50 வண்டி வருவதைப் பார்த்தேன். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் ஒரு நொடி தயங்கியபடியே வந்து மிகச்சரியாக எங்கள் வீட்டின் முன் நின்றது. வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவர் என் அப்பாவின் நண்பரான பெருமாள் ஐயா. ஆனால், அவருக்குப் பின் அமர்ந்துகொண்டு வந்தவன் ஒரு இளைஞன். அதிகம் போனால் இருபத்து ஐந்து வயதுக்குள் இருக்கலாம்.

அவனைப் பார்த்து, “இந்த வீடு தான்”, என்றார் பெருமாள் ஐயா.

வாசலில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்த பெருமாள் ஐயா, “நம்ம வீடு தேடித்தான் வந்திருக்காரு. சாவடியில தெகைச்சு வழிகேட்டுத்திருந்தாரு. அதான் நானே என் வண்டியில கூட்டிட்டு வந்தேன்”, என்றார்.

“இனி நீ பாத்துக்கப்பா”, என்றபடி பெருமாள் ஐயா தனது வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனார்.

நட்பார்ந்த புன்னகையுடன் அந்த இளைஞன் என் கைகளைக் குலுக்கி, “என் பெயர் வசந்தன். மதுரையில இருந்து வர்றேன். நான் ரெங்கசாமி அய்யாவைப் பார்க்கலாமா, அவரு நண்பரோட பையன் நான்” என்றான்.

“அவரு பையந்தான் நான். அவருக்கு இப்ப கொஞ்சம் உடம்புக்கு முடியல, ஆனாலும் பரவாயில்லை” என்றபடி, அவனை வீட்டின் உள்ளறைக்கு அழைத்துச் சென்றேன்.

உள்ளறையின் சன்னலுக்கு அருகில் உள்ள கட்டிலில் ஓய்வாகப் படுத்திருந்தார் அப்பா. மதிய வேளையில் அவர் உறங்குவதில்லை. கண்களை மூடியபடியே பல்வேறு நினைவுகளில் ஆழ்ந்திருப்பார். வழக்கமாக, இந்த நேரத்தில்தான் அவர் அன்றைய செய்தித்தாளை கருத்தூன்றிப் படிப்பார். காலையில், மேலோட்டமாக வாசித்தவற்றை ஆழ்ந்து வாசிக்க இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வார். ஆனால், இப்போது கடுமையான மூட்டு வலியால், அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். அதனால், பெரும்பாலும் கட்டிலில்தான் கிடக்கை.

அறைக்குள் நாங்கள் வந்ததுமே ஓசை கேட்டு எழுந்துகொண்டார் அப்பா, அந்த இளைஞனின் முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார், நான் அறிமுகப்படுத்துவதற்குள்ளாகவே, வசந்தனே அப்பாவிடம் பேசத் துவங்கினான். “ஐயா, என் பெயர் வசந்தன், நான் மதுரையிலே இருந்து வர்றேன். மனோகரனோட பையன் நான்” என்றான்.

அப்பா முகம் மலர்ந்து, “நெனச்சேன், முகச்சாடையப் பாக்கும்போதே தெரிஞ்ச முகமா இருந்தது.” என்னைப் பார்த்து, “மனோகரன் எங்கூட வேல பார்த்தவரு. அவரு பையன் இவரு.” என்று உவகை பொங்கச் சொன்னார். பின் வசந்தனைப் பார்த்து, “கிட்டத்தட்ட இருவத்தஞ்சு வருசமா நானும் உங்க அப்பாவும் ஒண்ணாத்தான் பி.எஸ்.என்.எல்-ல வேலபார்த்தோம். பொங்கல் பொங்கறது மாதிரி அந்த கம்பெனி பொங்கறதையும் பார்த்தோம், மெல்ல மெல்ல மங்குறதையும் பார்த்தோம். நான் தான் முதல்ல ரிட்டயர் ஆனேன். அதுக்கப்புறம் நாலஞ்சு வருசத்துக்கு அப்புறமா உங்க அப்பா ரிட்டயர் ஆனார்னு கேள்விப்பட்டேன். இப்பல்லாம் அரசாங்க அலுவலகத்துல யாருப்பா கடைசி வரை வேல பாக்குறா? எல்லோருமே வாலண்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு கிளம்பிடுறாங்க. இல்லன்னா, நிர்வாகமே கிளப்பிவிட்டிருது. அப்பா சவுரியமா? ரொம்ப வருசம் ஆச்சு, பேசி” என்றார்.

வசந்தன் தயங்கியபடியே, “அப்பா இறந்து போய் ரெண்டு மாசம் ஆச்சுங்கய்யா” என்றான்.

“ஏ, என்னப்பா சொல்ற” என்றபடியே அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க முயற்சி செய்தார் அப்பா. நானும் வசந்தனும் அவரை மீண்டும் கட்டிலில் அமரச் செய்தோம்.

“ஒரு வருசமாவே படுத்த படுக்கையாத்தான் இருந்தாருங்க. உங்களுக்கே தெரிஞ்சதுதான், அவர் நிறைய ஸ்மோக் பண்ணுவாரு. ஆனாலும், ரிட்டயர் ஆனதுக்கு அப்புறமா நிறுத்திட்டாரு. நிறுத்தினாலும், அந்தப் புகையே பகையா வந்து உயிரப் பறிச்சுருச்சு. நுரையீரல் புற்றுநோய். நாங்க டாக்டர்ட்ட போகும்போதே நோயோட கடைசி கட்டத்துலதான் இருந்திருக்காரு. ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க முடியல” என்றான் வசந்தன்.

நான் வசந்தனின் தோளின் மீது ஆதரவாகக் கைவைத்தேன். அவனிடம் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் பேசிப் பேசி, உணர்ச்சி கலவாமல் ஒரு சோகச் செய்தியை அவனால் சுருக்கமாகவும் கூர்மையாகவும் சொல்ல முடிகிறது. அவனது துக்கம் அவனது முதுகுக்குப் பின்னால் போய்விட்டிருக்கிறது. ஆனால், அது எங்கள் முகத்திற்கு முன்னே இப்போது நின்று கொண்டிருக்கிறது.

அப்பாவும் அதிர்ச்சியை ஓரளவு உள்வாங்கிக்கொண்டிருந்தார். இயல்பு நிலைக்கு வந்து விட்டார். “ஆமாயா, உங்க அப்பாகிட்ட சொல்லிக்கிட்டே இருப்போம். அந்தக் கொள்ளிக்கட்டைய தூக்கி எறிஞ்சுருய்யான்னு. அந்தக் காலத்திலேயே ஒரு நாளைக்கு கொறைஞ்சது ரெண்டு பாக்கெட்ட காலி பண்ணிருவாப்ல. அவரு புகைய இழுக்குற இழுப்பப் பார்த்தா, அவரு அதக் குடிக்குறது மாதிரி இருக்காது, அந்தக் கருமம்தான் அவரக் குடிக்குறது மாதிரி இருக்கும்” என்றார்.

அதற்கு மேல் என்ன பேசுவது? சட்டென்று எங்கள் மூவரைச் சுற்றியும் ஒரு சிறிய மௌனம் படர்ந்தது. மின்விசிறியின் சத்தமும், மின்விசிறியின் காற்றுக்கு ஆடும் செய்தித்தாளின் படபடப்பும் மட்டுமே அந்த அறையில் கேட்டுக்கொண்டிருந்தது.

வசந்தனைப் பார்த்து, “ மோர் குடிக்கிறீங்களா?” என்றேன்.

அப்பா என்னிடம், “என்னப்பா, இதக் கேக்கணுமா, போய் கொண்டுகிட்டு வாய்யா” என்றார்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மதியச் சாப்பாடு சாப்பிட்டேன்” என்றபடி, தன்னுடைய கைப்பைக்குள் இருந்து ஒரு கனமான மஞ்சள் நிற பிளாஸ்டிக் பையை எடுத்து அப்பாவிடம் கொடுத்தான்.

“என்னய்யா இது?” என்றபடி அப்பா அந்தப் பையைத் திறந்து பார்த்தார். அதற்குள் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது. எல்லாம் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள். அதிர்ச்சியுடன் அவர் வசந்தனைப் பார்த்தார். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

“உங்க அப்பா இறந்து போன செய்தியே எனக்குப் பெரிய அதிர்ச்சி, இப்ப என்னய்யா இன்னொரு அதிர்ச்சியக் குடுக்குற, எதுக்கு இவ்வளவு பணத்த எங்கிட்ட குடுக்குற, எனக்கொண்ணும் விவரம் புரியலயே” என்றார் அப்பா.

“சொல்றேன்யா” என்றபடி தான் அமர்ந்திருந்த சேரை அப்பாவின் கட்டிலுக்கு அருகில் நகர்த்தினான் வசந்தன். “அய்யா, இதுல ரெண்டு லட்ச ரூவா இருக்கு. இது நீங்க அப்பாவுக்கு கொடுத்த கடன். அவரால கடைசி வரைக்கும் அதத் திருப்பிக் கொடுக்க முடியல. அந்தப் பணம்தான்யா இது,” என்றான்.

அப்பா வியப்படைவதும் அதன்பின் வியப்படங்கி நெகிழ்வதைப் பார்ப்பதும் எனக்கு புதியதொரு அனுபவம். இதைப் பற்றி வீட்டில் ஒருவருக்கும் இதுவரைத் தெரியாது. அப்பா தனது முதுகுக்குப் பின்னிருந்த தலையணையைச் சுவற்றில் நட்டமாய் நிறுத்தி அதன்மேல் சாய்ந்தார். அவரது பார்வை எதிரிலிருந்த சுவற்றில் நிலைத்தது. ஆனால், அவர் மனது தூர தூரங்களைக் கடந்து எங்கெங்கோ புரண்டு கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. “உங்கப்பா அவரு தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கினப் பணம்ப்பா அது. கம்பெனில லோன் போட்டாரு. அவங்களும் குடுத்தாங்க. ஆனாலும், அவருக்கு அது போதல. கூட வேல செஞ்சவங்க கொஞ்சம் உதவினோம். கடைசி நேரத்துல அவருக்கு ரெண்டு லட்சம் தேவைப்பட்டுச்சு. அவரால அத மட்டும் புரட்டவே முடியல. இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் ஓடறாரு. ஒண்ணும் நடக்கல. கடைசில அவரோட நிலைமையப் பார்த்து நானாத்தான் அவருக்கிட்ட இந்தப் பணத்தக் குடுத்தேன். கண் கலங்கி நின்னுட்டாரு. இந்த உதவிய வாழ்நாளுக்கும் மறக்க மாட்டேன். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா குடுத்துடுறேன்னாரு. நீ குடுக்கும்போது குடுய்யா, கல்யாணத்த நல்லபடியா நடத்துய்யான்னேன். அதுக்கப்புறமும் ஒரு பத்து பதினைஞ்சு வருசம் ஒண்ணாத்தான் வேலை பார்த்தோம். என்னப் பார்க்கும்போதெல்லாம் சொல்லிட்டே இருப்பாரு, எப்படியும் குடுத்துருவேன்யான்னு. எனக்கும் பெரிய தேவை எதுவும் ஏற்பட்டதில்ல. நல்ல மனுசன், அவரா குடுக்கும்போது வாங்கிக்கலாம், அவரப் போட்டு நச்சரிக்கவேண்டாம்னு நானும் பணத்தப் பத்தி அவருகிட்ட அதிகம் பேசிக்கிறதில்ல. வாழ்க்கைல மனுசனுக்கு எதிரா எத்தனையோ விஷயங்கள் நடந்து போயிருது. காட்டாத்து வெள்ளத்துல இழுத்துக்குட்டுப் போறமாதிரி வாழ்க்கை ஒவ்வொருத்தரையும் எங்கெங்கயோ இழுத்துட்டுப் போய்ப் போடுது. அதுல சில விஷயங்கள செய்ய முடியுது. பல விஷயங்கள செய்ய முடிய மாட்டெங்குது. ஒரு கட்டத்துல அவருகிட்ட பணம் கொடுத்ததையே நானும் மறந்துட்டேன். இப்ப நீ வந்து பணத்தக் காட்டினதுக்குப் பிறகுதான் எனக்கே இதெல்லாம் ஞாபகம் வருது.” என்றார்.

வசந்தன் சிறிய புன்னகையுடன் சொன்னான், “நீங்க மறந்திருக்கலாம்யா. அது உங்க பெருந்தன்ம. நாங்க மறக்கக் கூடாதுல்ல. அதுவும் அப்பா படுத்த படுக்கையா இருந்த காலத்துல தினமும் இதப் பத்திதான் பேசுவாரு. ஒரு கட்டத்துல, என்னாலதான் அவருக்குப் பணம் குடுக்க முடியல. என் சார்பா, நீ அவருக்குப் பணம் கொடுக்கணும். அப்பத்தான் என் ஆவி ஆறும்னாரு. சரிப்பான்னு அவருக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன். அப்போ நான் படிச்சிட்டு இருந்தேன். வேலைக்குப் போகல. அப்பா புண்ணியத்துல போன வருசம்தான் எனக்கு சென்னையில ஒரு ஐ.டி கம்பெனில வேலை கிடைச்சுச்சு. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு ரெண்டு லட்சம் தேறுனதும் எடுத்துட்டு வந்துட்டேன்யா.” என்றான்.

அப்பா அவனைக் கருணையுடன் பார்த்தார், “யப்பா, நீயும் என் மகன் மாதிரிதான். இப்பத்தான் வாழ்க்கைய ஆரம்பிச்சிருக்க. அப்பாவும் தவறிட்டாரு. உங்க குடும்பத்த நீதான் கொண்டு செலுத்தணும். இந்த நேரத்துல போய் இந்தப் பணத்த எனக்குக் கொடுக்க வந்திருக்கியே. வேணாம்யா. இந்த பணம் எனக்கு வேணாம். ஆண்டவன் புண்ணியத்துல, நாங்க நல்லாத்தான் இருக்கோம். நீ இத எடுத்துக்கிட்டுப் போய் நல்லா இருய்யா” என்றார் உணர்ச்சி பொங்க. இதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் நெஞ்சுக்குள் இன்னதென்று சொல்ல முடியாததொரு உணர்ச்சி அலை புரண்டது.

வசந்தன் உடனே அதை மறுத்துப் பேசினான், “எங்க அப்பாவுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் வாய்ச்சுருக்காங்கன்னு நெனச்சா எனக்கே பொறாமையா இருக்குய்யா, இந்தப் பணத்த நீங்க வாங்குனாத்தான், என் அப்பாவுக்கு நான் குடுத்த வாக்கு நிஜமாகும். என் அப்பாவோட கடன், என் கடன்தான். அவரே வந்து இந்தப் பணத்த உங்க கையில் குடுக்குற மாதிரு நினைச்சு நீங்க இத வாங்கிக்கணும்” என்றான்.

அப்பா உணர்ச்சி ததும்ப எழுந்து கொண்டார், “உங்க அப்பா ஆகப்பெரிய சொத்த சம்பாரிச்சிருக்காருய்யா, நீதான் அந்தச் சொத்து. அப்பாதான் செத்துட்டாருல்ல, கடன் குடுத்தவனும் அத மறந்துட்டான், நாம எதுக்கு எடுத்தேறி இந்தப் பணத்தக் குடுக்கணும்னு நீ நெனக்கலயில்ல. இவ்வளவு தூரம் தேடிவந்து பணத்தக் குடுக்க வந்திருக்கியே. இன்னிக்குச் சொல்றேன்யா, இந்த நல்ல மனசுதான்யா உன் மூலதனம். அத வச்சு முன்னேறி போய்க்கிட்டேயிருய்யா, உனக்கு நடக்குறதெல்லாம் நல்லதாத்தான் நடக்கும், பணத்தக் குடுய்யா, உங்கப்பாவுக்காக இல்ல, உனக்காக இந்தப் பணத்த வாங்கிக்கிறேன்”, என்றார்.

வசந்தனும் சந்தோசமாகப் பணத்தைக் கொடுக்க அப்பாவும் சந்தோசமாக அதைப் பெற்றுக்கொண்டார். எப்பேற்ப்பட்ட மனிதர்கள்! எப்பேற்ப்பட்ட கொடுக்கல் வாங்கல்!

காலத்தின் இலை

ஒரு இலை விழுவதைப்பார்த்து
ஒவ்வொரு இலையும்
விழுகிறது

 காணக் காண
எல்லாம் ஓர் இலை
எப்போதும்
முப்போதும்
விழாத இலை

அது ஆதியுமின்றி அந்தமுமின்றி அந்தரத்திலேயே
நிகழ்த்திக்காட்டிக்கொண்டிருக்கிறது

ஒரு தொடக்கமும் இல்லை
ஒரு முடிவும் இல்லை என்பதான ஒரு விளையாட்டை
.

அர்ஜுன்ராஜ்

அர்ஜுன் ராஜின் இந்தக் கவிதையை வாசிக்கையில், எனக்கு வசந்தன் என் அப்பாவிடம் பணம் கொடுத்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, வசந்தன் அல்ல, மனோகரன் அய்யாவேதான் என் தந்தைக்குப் பணம் கொடுத்து கணக்கை நேர் செய்துகொண்டிருக்கிறார் என்று தோன்றியது. ஒவ்வொரு தந்தையும் மகன் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மகனும் தந்தையின் நீட்சியாகவே வந்தமைகிறான். ஒவ்வொரு இலையும் தனித்தனியானதுதான். ஆனாலும், எல்லாமே ஒர் இலைதான் அல்லவா! தந்தையரும் தனயர்களும் பிறந்து வந்து கொண்டேயிருக்கிறார்கள். இலை உதிர்வது போல உதிர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். இந்த மாபெரும் இலைக் கூட்டத்தில், வசந்தன் என்ற ஒளிமிக்க ஓர் இலையை என்னால் இந்த வாழ்க்கையில் பார்க்க முடிந்திருக்கிறது என்பதையே பெருமிதமாக எண்ணிக்கொள்கிறேன்.

***

கணேஷ்பாபு – தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.மின்னஞ்சல்: ganeshmodec@gmail.com

கண்டேன் சீதையை

0

நாகேந்திர காசி
தமிழில் : ஸ்ரீநிவாஸ் தெப்பல

நேரம் காலை பத்துமணி ஆகின்றது. தினம்தோறும் சுமார் இரண்டாயிரம் வெளிப்புற நோயாளிகளுடன் காக்கிநாடா அரசு மருத்துவமனை நெரிசலாக இருக்கும். வெளிப்புற நோயாளிகளின் பகுதியை ஒட்டி இருக்கின்ற கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில்தான் பயோ மெடிக்கல் பிரிவு உள்ளது. பழுதுபார்க்க வந்திருக்கும் இரத்த அழுத்த இயந்திரங்கள், சேதமடைந்த நெபுலைசர்கள், மூலைமுடுக்குகளில் துருப்பிடித்த ஆக்சிஜன் சிலிண்டர்கள், சில பாகங்கள் உதிர்ந்து செல்லப்பட்ட ECG இயந்திரங்கள் என அந்த அறை ஒரு பெரிய பழுதுபார்க்கும் இடம் போல் காட்சியளித்தது. வெங்கட் அந்த அறைக்கு வந்து, மின்விசிறியைப் போட்டு, மேசை மீது வைத்திருந்த இரண்டு மெமோக்களை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான்.

எமர்ஜென்சி ஆபரேஷன் தியேட்டரில் ஒன்று பெட் மூமெண்ட் பொறுத்தவில்லை என்றும், மற்றொன்று ஆக்ஸிஜன் முகமூடிகள் இண்டெண்ட் வைக்கவில்லை என்றும், பார்த்து இரண்டையும் வெறுப்பாக மேசையின் மீது வீசி எறிந்தான்.

சமீபகாலமாக, துயரப்படுபவர்களை கண்டாலும், துயரத்தை அளவிடும் இந்த உபகரணங்களைக் கண்டாலும் வெறுப்பு மேலும் அதிகரிக்கின்றது. ஏதோ இனம்புரியாத, வாட்டி வதைக்கின்ற ஒரு வலி. எதையும் சாதிக்காத கோபம். மிகவும் பொலிவு இழந்து நகர்கின்ற பொழுதுகள். எப்பொழுதும் நோய்களையும், அழுகைகளையும், துயரங்களையும் கண்டு அவன் வெறுப்படைந்தான். விஷக் காய்ச்சலை விடவும், கண்டுபிடிக்கவே முடியாத நோயை விடவும் நாம் நினைத்தபடி வாழ முடியாமல் போவதே பெரிய தண்டனை என்ற நம்பிக்கையில் நிலைபெற்று இருந்தான். 

இரத்த்ததை டயாலிசிஸ் செய்வது போல மனித எண்ணங்களையும், மனதையும் சுத்தப்படுத்தி, பழைய காயங்களையும், கற்பனை செய்து வைத்திருந்த விரகத்தையும் நீக்கி, மீண்டும் மூளைக்குள் செலுத்தும் உபகரணம் ஏதும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருப்பான்.

வெங்கட்டிற்கு நாற்பது வயது.

திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்திருந்தால் தன் வாழ்க்கையே வேறுவிதமாக இருந்திருக்கக் கூடும் என்று நேற்று முந்தினம் தன் மகளின் பத்தாவது பிறந்த நாளன்று இரவு சட்டென் நினைவுக்கு வந்தது.

இரத்த அழுத்த இயந்திரத்தை பழுது பார்த்துகொண்டு இருந்த வெங்கட்டிடம் நர்ஸ் வந்து நின்று, “முடிஞ்சுதா சார்?” என்று கேட்டாள். அவளது போனில் ஏதோ மெசேஜை சரி பார்த்தவாறு.

வால்வை சரிசெய்து இயந்திரத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, “OP கிட்ட கூட்டம் இருக்கா?” என்று கேட்டான்.

சியாமளா சிரித்துக்கொண்டே, “எங்கிருந்துதான் வந்துடுறாங்களோ சார், இந்த மக்கள் திருவிழக்கு வர மாறி  கூடிட்டாங்க” என்று இயந்திரத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

டாக்டரிடம் ஒரு இண்டெண்ட் எழுத கீழே செல்லுகையில்,

இன்டர்ன்ஷிப் செய்கின்ற ரங்கராய மருத்துவக் கல்லூரி பெண்கள் திடிரென எதிரே வந்தனர். ஜெனரல் ஓபிக்கு அருகில் நிற்கின்ற வரிசை, மருத்துவமனையின் தூண்களைச் சுற்றி இருக்கின்ற மலைப்பாம்பு போல் உள்ளது. மலைப்பாம்பு தலையை கடந்து செல்லுகையில், ​​உலர்ந்த பனையோலை நிற புடவையை அணிந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டு சட்டென நின்றான்.

சீதா.

குரஜாபலங்க சீதா.

அது “சீதா” தானா என மூன்று ரீடிங்குகளை எடுத்து சராசரியை அளவிட்டு உறுதி செய்துகொண்டான். கர்ப்பமாக இருக்கக் கூடுமோ என்று வயிற்றைப் பார்த்து உறுதி செய்துகொண்டான். முகம் கொஞ்சம் பொலிவு இழந்து, சோர்வாக தெரிந்தது. சாதாரண செருப்புகள், ஒரு கையில் கோகோ கோலாவை பயன்படுத்திய பாட்டிலில் குடிநீர், மறு கையில் கோப்பை வைத்துக்கொண்டு, வரிசையை நோக்கினாள். கழுத்தில் நிறம் மங்கிய மஞ்சள் சரடு மட்டுமே இருந்தது. அதன் விளிம்பில் மங்கள சூத்திரம் இருக்காது, வெறும் மஞ்சள் கொம்பு மட்டும் தான் இருக்குமென அந்த பெண்ணை யார் கண்டாலும் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.

இடைநிலை பள்ளி படிக்கும் நாட்களில் சீதாவைப் பார்க்க இதைவிடப் பெரிதாகவே வரிசை இருக்கும். அந்த வரிசையில் வெங்கட் தான் முன்னால் இருப்பான்.

சீதா பார்த்துவிடுவாளோ என ஒருபுறம், அவள் பார்க்க வேண்டுமென மற்றொருபுறம் மனம் வாட்டி எடுத்தது.

சீதா அவனைப் பார்த்தாள். ஒரு கணம் அவள் பார்த்தாள், ஒரு நோயைப் பார்த்தவாறு.

வெங்கட் எதிர்பார்த்த ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அவள் முகத்தில் எங்கேயும் தென்படவில்லை. ‘எனக்குத் தெரியும் உன்னை’ என்கின்ற சிறு புன்னகையைத் தவிர. தன் வாழ்வில் அதிக டிராமா எதிர்பார்த்திருந்த வெங்கட்க்கு சட்டென அவமானம் நிகழ்ந்தது.

“நல்லா இருக்கீயா?” எனக் கேட்டு அழைப்பில் பெரும்போக்குடன் நடந்துகொண்டாள் தன்னை காட்டிலும் வயதில் சிறியவளான சீதா.

தலை அசைத்து ” நீ எப்படி இருக்க? ரொம்ப நாளாச்சு! இப்ப எங்க இருக்கீங்க? ஒங்க வீட்டுக்காரர் கூட வந்திருக்காரா? ” என பதிலுக்காக காத்திருக்காமல் கேட்டான்.

“ஆ…வந்திருக்காரு. அதோ அங்க படிக்கட்டு மேல உக்காந்துட்டு இருக்காரு. “

அவன் அங்கு பார்த்தான். புச்சிபாபு படிக்கட்டுகளின் மீது அமர்ந்து, இரு கைகளையும் கக்கத்தில் வைத்துக் கொண்டு வெறித்து அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே இருந்தான். அழுக்கு சட்டைக்கு பொருத்தமாக இருக்கின்றது அவனது தாடி. தூரத்திலிருந்தே கழுத்திலும், முகத்திலும் தெரிகின்ற காயங்கள்.

“என்னாச்சு?” எனக் கேட்டான்.

“நான் செஞ்ச தப்பு. ஆமா நீ என்ன இங்க?” என்றாள்.

“நான் இங்கு சேர்ந்து ரெண்டு வருஷம் கிட்ட ஆகுது, அதோட அர்த்தம் நோயாளின்னுக் கிடையாது” என ஏதோ கேளிக்கையாக சொல்ல முயன்றான்.

“சரி, ஒரு நிமிஷம்” என்று சென்று முன் அறையில் இருக்கின்ற ஹெட் நர்சை அழைத்து வந்தான்.

“சீதா! இவங்க எல்லாமே பார்த்துப்பாங்க. இவங்கள கூப்பிட்டு போங்க” என்று சொன்னான். சீதா இரு கைகளுடனும் அவளது கணவனை எழுப்ப முற்படுகையில் அவனும் உதவிக்கு சென்றான். புச்சிபாபு முகத்திலும், மார்பு பகுதியிலும் வெள்ளை மச்சங்கள் கொப்பளித்து மேல் எழுந்த படி தெரிந்தன. முழங்கை அடிபாகத்தில், கொஞ்சம் நீர்த்துப்போய் கொப்பளித்து, சீழ் போல் வடிகின்றது.

புச்சிபாபு வெங்கட்டைக் கண்டு சன்னமாக புன்னகைத்தான், அவ்வளவு துயரத்திலேயும். இந்த வலி ஒன்றும் பெரிய வலி கிடையாது என்பது போல் சிரித்தபடி செல்கின்ற புச்சிபாபுவைக் கண்டால் அவனது புன்னகைக்கு மருத்துவமனையில் இருக்கின்ற அனைத்து நோயாளிகளின் நோய்களையும் குணமடையச் செய்யும் வல்லமை இருப்பதாக தோன்றியது. பொதுவாக மருத்துவமனைகளில் ஒரு புன்னகையைப் பார்ப்பது என்பது வெறும் டெலிவரி வார்டுகளில் ஆண் பிள்ளை பிறக்கின்ற போது மட்டும் தான் நிகழும்.

வெங்கட் தனது அறைக்குள் வந்து அமர்ந்தான். மனம் சோர்ந்து போனது.

‘சீதா கண்ணில் படாமல் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்’ என்று நினைத்தான்.

சீதா எதுவும் பேசாமல் ஏதோ, ஒரு புதிய நபரைப் பார்த்தவாறு, முகம் சுளிச்சுக்கிட்டாலும் நல்லா இருந்திருக்கும் போல.

இவை இரண்டும் நடைபெறாமல் இருந்ததினால் மகிழ்ந்தான்.

எப்போதோ இருபது வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த அறிமுகம். சீதாவினுடைய ஊர் வெங்கட்டின் பாட்டியின் ஊர் தான். எப்போதாவது ஊருக்கு செல்லும் போது ஒருமுறை அவளைப் பார்ப்பான். அதன்பின் அவ்வப்போது செல்வான். அந்த சுற்றுப்புறத்து ஊர்களில் பேரழகி என்பதால் அந்த ஊரில் இளசுகளின் போட்டியைத் தாள முடியவில்லை. அதன்பின் இடைநிலை பள்ளியில் கண்டான். அவன் இரண்டு ஆண்டுகள் பின் தொடர்ந்து காதலித்தான், பின்பு யாரையோ மனம் முடிக்க இருப்பதாக தெரிந்து, உன்னை விரும்புகிறேன் என்று சொல்லாமலேயே நிறுத்திக் கொண்டான். அதன்பின்னர் ஊரில் யாருடனோ நெருக்கமாக திரிகிறாள் எனத் தெரிந்தது. சில ஆண்டுகளுக்கு பின் வேறொருவரை திருமணம் செய்துகொண்டாள் என்றும், அவன் மனவளர்ச்சி இல்லாதவன் என்றும், அவனை அழைத்து எங்கேயோ தூரமாக சென்றுவிட்டதாகவும் தகவல் தெரிந்தது.

அதன்பின், எப்போதும் சீதாவைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ளவில்லை. பாட்டி இறந்தபின் அவன் அந்த ஊருக்கு செல்லவில்லை.

மேசையின் மீது சீனாவில் இருந்து கொண்டு வரபட்ட எந்திரத்தின் கையேடு இருந்தது. மேலே ஆங்கிலம், அதன் கீழ் சீன மொழியில் இருந்த எழுத்துகள் அவன் மனம் போலவே எதுவும் புரியாத வண்ணமாக இருந்தது. மறுபடியும் வெளிப்புற நோயாளிகளின் பிரிவிற்கு சென்று சீதாவைப் பார்த்து வரலாம் என்று நினைத்து, திடிரென அந்த முயற்சியை கைவிட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து, சீதா வெங்கட்டின் அறைக்கு அருகில் வந்து நின்றாள்.

எழுந்து அந்தப் பக்கமாக பார்த்து “ஒன் கணவர் எங்கே?” என்று கேட்டான்.

“நர்ஸ் ஏதோ இன்ஜெக்ஷன் கொடுத்தாங்க. மயக்கமா இருக்குன்னு அங்கேயே படிக்கட்டு கிட்ட ஒக்காந்துட்டாரு” என்றாள்.

வெங்கட் வெளியே வந்து, பொது மருத்துவ வார்டில் வேலை செய்கின்ற பாய்க்கு கால் செய்து, ஒரு படுக்கையை ஏற்பாடு செய்யச் சொல்லி, அப்படியே உணவகத்திற்கு சென்று பால், ரொட்டியை எடுத்து வருமாறு அனுப்பினான்.

புச்சிபாபுவை பொது மருத்துவ வார்டுக்கு அழைத்துச் சென்று படுக்கையில் கிடத்தினான். அதற்குள் பாய் ரொட்டியையும், பாலையும் வாங்கிக் கொண்டு வந்தான். பாலை குடித்து புச்சிபாபு தூங்கினான்.

“சார்! ஓபி க்கு பெட் எதுக்கு குடுத்திங்கன்னு கேட்பாரு சார் ட்யூட்டி டாக்டர்” என்று முணுமுணுத்தான் பாய்.

“நான் பார்த்துக்கிறேன். ஆமா, டூட்டி டாக்டர் யாரு?” என விசாரித்து போன் செய்து விஷயத்தை சொன்னான்.

“ஹாஸ்பிடல்ல தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, நிறைய நோய் குணமாயிடும்மில்லே” என்றாள் சீதா. சீதாவின் கண்களில் நன்றி உணர்வை வெங்கட் வேண்டுமென்று தான் பார்க்கவில்லை. புச்சிபாபு தலையின் கீழ் பைலை வைத்து, கட்டிலின் கீழ் தண்ணீர் போத்தலை வைத்தாள்.

வெங்கட் சீதாவைக் கண்டு “ரொம்ப சோர்வா தெரியுற. அதோ அங்க டாய்லெட் இருக்கு, போயிட்டு முகத்த அலம்பிகிட்டு வா, டீ குடிக்கலாம்” என்றான். சீதாவும் சென்றாள்.

புச்சிபாபு தலைமாட்டில் இருக்கின்ற பைலை எடுத்துக்கொண்டு பார்த்தான் வெங்கட். மண் எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ பற்றவைத்து கொண்டதாலான காயங்கள். ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் கன்சல்டேஷன் எழுதி இருக்கின்றது.

புடவை முந்தானையுடன் முகத்தை துடைத்துக் கொண்டு வந்து நின்றாள் சீதா.

மெட்டர்னிட்டி பிளாக்கிற்கு செல்லும் வழியில் இருக்கின்ற கேண்டீனுக்கு அவளை அழைத்து சென்றான் வெங்கட். ஒரு முட்டை தோசையும், இரண்டு காபியையும் சொன்னான்.

சீதா வேக வேகமாக சாப்பிட்டாள். கொஞ்சம் நிலைப்பற்றபின் “இப்ப சொல்லு, எங்க இருக்கீங்க? ஊர விட்டு எங்கேயோ போயிட்டீங்கன்னு தகவல் தெரிஞ்சது” எனக் கேட்டான், காபி கப்பை சுழற்றியவாறு,

“நிறைய விஷயம் நடந்துருச்சு” என்றாள் காபியின் சூடை ஆற்றியவாறு.

“உன் பின்னாடி திரியறப்ப என்ன கண்டுப்பியா…இன்னும் சொல்லப்போனா, நான் நினைவிருக்கேனா? ” 

“என்னோட நிலைமையை பார்த்து, ஒனக்கு இந்த விஷயமா கேட்க தோணுச்சு? “

வெங்கட் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெட்கப்பட்டான்.

“சீதா! உங்க கணவர் எதுக்கு மண்ணெண்ணெய ஊத்திக்கிட்டு தீக்குளிச்சாரு” என்று கேட்டான்.

சீதா ஒரு நொடி எதுவும் பேசவில்லை.

காபியை ஒரு மிடறிட்டு,  “என்ன? எல்லாரும் போலவும் நீயும் தயவு காட்டி… ” எனப் பேசுவதை நிறுத்தினாள்.

“நீ சந்திச்ச ஆம்பளைங்க எல்லாரும் வேணும்னா அப்படிப்பட்டவங்களா இருந்து இருக்கலாம். ஆனா, பாக்குற எல்லா பொம்பளைங்க கிட்டயும் இப்படி கேக்க மாட்டேன். சின்ன வயசுல இருந்து உன்னை எனக்கு தெரியும். அதுக்கப்புறம் காலேஜ்ல. அது உனக்குமே தெரியும். ரவியோட, உனக்கு இருக்கிற காதல பத்தி தெரியும். நீ அவன எவ்ளோ காதலிச்சி இருக்கேன்னு தெரியும். இப்ப புதுசா உன் மேல இரக்கம் காட்டி, உன் கிட்ட என்ன சாதிக்க வேண்டி இருக்கு?” என்றான்.

சீதா கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“ரவிய காதலிச்சேன். ஒண்ணா சேர்ந்து சுத்தனோம். அந்த விஷயம் எங்க வீட்ல தெரிஞ்ச பெறவு, எங்க அப்பா போயி அவங்களோட சம்பந்தம் பேசப்போனா, திட்டி அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம் ரவி கூட கல்யாணம் பண்ணிக்க போறான்னு தெரிஞ்சது. எங்க அப்பாவுக்கு அவமானமா தோணுச்சு, அதனால ஏதாவது ஒரு சம்பந்தத்த பேசி முடிச்சிடலாம்ன்னு சுத்துகையில, ரவி அவங்க பெரியப்பா, பெரியம்மா எங்க வீட்டுக்கு வந்து, எங்க அப்பாவ கெஞ்சி, வரதட்சணை எதுவும் வேணாம்ன்னு, ஒத்துக்க வெச்ச்சு புச்சிபாபுவை கல்யாணம் கட்டிக்க சொல்லி கேட்டாங்க. 

வீட்ல வரதட்சணை கொடுக்க முடியாத சூழ்நிலை. அவங்களுது ரொம்ப பணக்கார குடும்பம். பத்து ஏக்கர் நிலம், பெரிய மாட்டுப்பண்ணை. ஆனா, பெரிய பையன் வெகுளி, என்ன ஆவானோ, ஏது ஆவானோன்னு மனவேதனை அவங்கள வாட்டி வதக்கிடுச்சு. கல்யாணம் செயலாம்னாலும் எந்த சம்பந்தமும் வரல. சின்ன பையன் சொத்து முழுக்க எனக்குதான்னு இருந்தான். அவனும், ரவியும் நல்ல நண்பங்க. எங்க அப்பா ஒன்னு ரெண்டு சம்பந்தம் கொண்டு வந்தாலும் ரவி கெடுத்துட்டான்.

என்னோட விஷயம் ஊருக்குள்ள தெரிஞ்சி, யாரும் வரன் கிடைக்காம, வேற வழி இல்லாம எங்க அப்பா புச்சிபாபுக்கு, என்னய கட்டிக் கொடுக்க சம்மதிச்சாரு. என் பின்னாடி தங்கச்சி வேற இருக்கா. நான் டைட் எழுதினாலும் சீட்டு கிடைக்கல. எனக்கும் வேற வழி தெரியல. நான் வேற எதுவும் பேசாம கல்யாணம் கட்டிகிட்டேன். ரவிதும், எனதும் பக்கத்து பக்கத்து வீடுதான். காலையில எழுந்தா அந்த அயோக்கியனோட முகத்தை பார்க்க வேண்டிவரும். கல்யாணம் கட்டிக்கிட்டாலும் அவன் என்னை விடறதாவே இல்ல. அந்த வேலை, இந்த வேலைன்னு எங்க பெரியப்பா வீட்டுக்கு அடிக்கடி வருவான். புச்சிபாபு அப்படியே அது எல்லாத்தயும் பாத்துட்டு இருப்பான்.

புச்சிபாபு வெகுளி, உலகம் தெரியாதவன். வீட்டு வேலை, வயல் வேல நல்லாவே செய்வான், ஆனால் ,பேச்சு மட்டும் சரியா வராது. நடக்கும்போது சரியா அடியெடுத்து வைக்க முடியாது. நடுநடுவுல கையில நடுக்கம் வேற. பார்வையாலயே நிறைய விஷயம் பேசுவான். கல்யாணமான புதுசுல அழுவேன். அதப் பாத்து, என்ன ஆறுதல் படுத்த செம்பு நிறைய தண்ணி கொண்டு வந்து கொடுப்பான். என் பின்னாடி நிறைய பேர் சுத்துனாங்க. என்னய பயன்படுத்திக்கலாம்னு பார்த்தாங்க. ஆனா, நான் யாரையும் விரும்பல. எல்லோரோட பார்வையும் என் கழுத்துக்குக் கீழே நின்னுடும். புச்சிபாபு என்னய உயிருக்கு உயிரா காதலிச்சான். ஒரே கட்டில ஒன்னா படுத்தாலும் எனக்கு மட்டும்தான் தெரியும். ஒரு நிமிஷம் நான் கண்ணுல படலேன்னாலும் பைத்தியம் பிடிச்ச மாதிரி கூச்சல் போடுவான். கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாரும் பைத்தியம் ஆயிட்டான்னு சொன்னாங்க.

‘தேடி தேடி இந்த வெகுளியயா கட்டிக் கொடுத்தான் ஒங்க அப்பன்’ ன்னு சில பேரு, இப்படிப்பட்ட அழகிய வெச்சுக்கிட்டு என்ன செய்வான்னு சில பேரு என் பின்னாடி அரசல் புரசலா பேசிப்பாங்க. நான் அது எதுவும் கண்டுக்கல.

ஒரு நாளு புச்சிபாபு நாற்று பத்திக்கு தண்ணி பாய்ச்சுறதுக்கு வயலுக்கு போனான். வீட்ல யாருமே இல்ல.

ரவி முழுசா குடுச்சுபுட்டு, நேரா என்னோட அறைக்குள்ள வந்து, என்னோட கையை புடிச்சான். அவனுக்கு நான் அண்ணி ஆவேன். கூச்சல் போடும் யோசனை வரல. எனக்கு கல்யாணம் ஆனாலும், நீ என் கூட தான் இருக்கணும். எங்க அண்ணன் சுத்த வெகுளி. கட்டில்ல அவன் ஒன்னும் செய்ய மாட்டான்.” ன்னு பேசயில அழுதுகிட்டு தடுக்க முயற்சி செஞ்சேன்.

நான் ரவியை வெளியே தள்ளும் நேரத்துல புச்சிபாபு வாசல்ல நின்னு அதை பாத்துட்டான்.

என்ன நினைச்சானோ என்னவோ, நேரா அடுப்பு கிட்ட போயி கேன்ல இருந்த மண்ணெண்ணெய் எடுத்துக்கிட்டு, மேலே திணிச்சுக்கிட்டு தீக்குளிச்சான். வீட்ல பெரிய சண்டை நடந்தது. புச்சிபாபு தம்பி என்னையும், அவங்க அப்பா அம்மாவையும் திட்டித் தீர்த்தான். அந்த ஊரிலயே இருந்தா, ரவி கிட்ட இருந்து தப்பிச்சுக்கிறது கஷ்டம். புச்சிபாபுவையும் உயிரோட விடமாட்டான்னு அவன அழைச்சுக்கிட்டு, எங்கேயாவது போய்டலாம்ன்னு முடிவெடுத்தேன்.

‘துனி’ இங்குர ஊர்ல எங்க அப்பாக்கு தெரிஞ்சவங்க கிட்ட மாந்தோப்புல காவல் வேலை இருக்குன்னு அழைச்சிட்டு வந்துட்டேன். நான் செஞ்ச தப்புக்கு அவன் தண்டனை அனுபவிக்கிறான்.

அந்த புண்ணு எல்லாம் சீக்கிரம் ஆறிடும். நான் ரெண்டு வாரமா இந்த ஆஸ்பத்திரிக்குதான் வரேன். ஆனா, இங்க ஒன்ன எப்பவும் பாத்ததில்லே. ஆமா, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என முழு கதையும் சொல்லி, புன்னகைத்தாள். நடந்ததை நினைத்து வருத்தப்படும் உணர்வேதும் அவளது முகத்தில் தெரியவில்லை வெங்கட்டுக்கு. பில் வந்ததும், பணம் கொண்டு வந்து கொடுக்கும்வரை எதுவும் பேசவில்லை.

சீதாவின் கேள்விக்கு பதில் ஏதும் கூறவில்லை வெங்கட்.

சீதா மேலே எழுந்தபடி “ஒரு மனுசன புச்சிபாபு நேசிக்கிற அளவுக்கு வேற யாராலயும் நேசிக்க முடியாது. அது என் ஒருத்திக்கு மட்டும் தான் தெரியும். அவனுக்கு ஏதாவது துயரம் இருந்தா, அதோடு சேர்ந்து பழகுவான். அதை கெஞ்சுவான். மனசு முழுக்க அதை நிரப்பிப்பான். நம்ம எல்லாரும் துயரத்தை துரத்ததான் பார்ப்போம், இல்லனா அதுலருந்து தப்பிக்க மட்டும் தான் பாப்போம்” என்றாள்.

தலை உயர்த்திப் பார்த்தான் வெங்கட். “சீதாவே இப்படி பேசுதுனா, புச்சிபாபு எவ்வளவு நல்லவனா இருந்திருப்பான்” என நினைத்தான்.

இரண்டு பேரும் சேர்ந்து பொது மருத்துவ வார்டில் இருக்கின்ற புச்சிபாபுவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தனர். வெங்கட் ஒரு பையனை அனுப்பி, மருந்துகள் வாங்கி கொடுத்தான்.

மூவரும் பேருந்து நிலையத்தில் நின்றனர்.

புச்சிபாபு கண் தூக்க கலக்கத்தில் இருந்தாலுமே, கண்ணில் ஒரு ஒளி தெரிகிறது.

சீதா, வெங்கட்டுக்கு அருகே நகர்ந்து,

“ஒரு மனுசன நேசிக்கிறது புச்சிபாபு ஒருத்தனுக்கு தான் தெரியும்ன்னு நான் ஏன் சொன்னேன்னு, உன்னால சொல்ல முடியுமா?” என்றாள் சீதா.

எதற்காக என்பது போல் பார்த்தான்.

“ரவியும், நானும் ஒன்னா சேர்ந்து திரிஞ்சப்போ நான் மாசமா இருக்கேனோன்னு பயமாயிடுச்சு. மாசமானா கருவ கலச்சிடுன்னு அவன் எங்கேயோ போயிட்டான். யார் கிட்ட சொன்னாலும் ஊரு மொத்தம் சொல்லிடுவாங்கன்னு, அந்த ராத்திரியில சென்டர்ல உக்காந்துகிட்டு இருக்கிற இந்த புச்சிபாபுவை அழைச்சிக்கிட்டுதான் கருவ கலைக்க போனேன். இப்படிப்பட்ட விஷயம் அந்த வெகுளி மனுசனுக்கு தெரியாதுன்னு.

ஆனா, கல்யாணம் முடிஞ்ச பெறவு பிள்ளைங்க பொறக்கலேனாலும் பரவாயில்லைன்னு அவன் தன்னோட மொழியில சொன்னான்.

கடவுள் கூட உனக்கு இனிமே பிள்ளைங்க வேணாம், ஒருத்தனை கொடுக்கிறேன், அவனயே பிள்ளையா பார்த்துக்கோன்னு சொல்லிட்டாரு” என்றாள் சிரித்தபடி.

இதற்கு இடையில் பேருந்து வந்தது. சீதா, புச்சிபாபுவின் கையை பிடித்துக் கொண்டு பேருந்தை ஏறினாள்.

சீதா மறுபடியும் அவனைத் திரும்பி பார்க்கவில்லை.

எப்போதோ சின்ன வயதில், அதன்பின்னர் கல்லூரியில், தான் காதலித்த சீதாவை தன்னுள் வைத்துக் கொண்டு அழைத்துச் சென்றது பேருந்து, அச்சு அசல் புச்சிபாபுவை வைத்துக் கொண்டவாறு. பேருந்தை அப்படியே பார்த்துக் கொண்டு இருக்கையில் கண்களில் வெண்மையான, மெல்லிய திரைச்சீலை மூடியது போல் கண்ணீர் துளி இடைமறித்தது.

***

விஷப்பல்

0

லாவண்யா சுந்தர்ராஜன்

பொன்வண்டின் விஷப்பல் வேலை செய்யவில்லை. இது எவ்வளவு ஆபத்தானது. குறிப்பேட்டின் படி ஒரடிக்குள் எந்த அந்நிய நடமாட்டமிருந்தாலும் பொன்வண்டு அதைக் கொல்ல வேண்டும். களத்தில் நெருப்புப்பெட்டியுள் இருக்கும் போதே அந்நியர் வருகையை மோப்பம் பிடிக்க வேண்டும். இப்போது என் மேசை மீது எந்த கவசமும் இல்லாமல் திரியும் போதே  இந்த பொன்வண்டை  கொசு இவ்வளவு எளிதாக சுற்றி சுற்றி வருகிறதே. நியமப்படி அந்த கொசு பத்தடி தொலைவில் ரீங்காரம் கேட்கும் போது இதன் இறக்கை விரியவேண்டும், ஒரடிக்குள் வரும் முன்னர் பறந்து சென்று விஷப்பல்லால் சிறுகடி, கொசு மயங்கி விழுந்து இறந்து போய்விடும். ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை. அந்த கொசு ஒருசில சமயம் பொன்வண்டின் வாயருகில் கூட வந்து இளிக்கிறது. அன்று ஆராய்ந்துப் பார்த்த போது தான் பொன்வண்டின் பற்கள் காலவதியாகி சொத்தையாகியிருக்கும் விஷயத்தை  கண்டுபிடித்தேன் இது மிக ஆபத்தானது. உடனடியாக குழுவில் விசாரித்த போது மழுப்பலான பதில் கிடைத்தது. மேலாளரிடம் சொன்னபோது பத்து வருடமாக விற்பனையில் இருக்கிறது. பயனாளர்களின் அறையில் வெறுமனே அலங்கரிக்கவா இதனை வாங்கிச் சென்றிருப்பார்கள் என்று சாடினார். சரி நான் என்ன செய்ய முடியும் என்று நினைத்தேன். இரண்டே வாரத்தில் அவரது ஊழ் அவரை வேறு மாதிரி பேச வைத்தது.

ஹும்ம் இந்த புது குழுவில் இன்னும் எத்தனை கஷ்டம் தான் படவேண்டுமோ தெரியாது!! குழுவில் சேர்ந்து சில மாத காலமே ஆயிருந்தாலும் குழுவில் செய்ய முடியாத சில வேலைகளை உடனடக்குடன் முடிந்து கொடுத்திருந்தேன். என் போறாத வேளை களத்தில் ஒரு பயனாளர் பொன்வண்டின் செயல்திறனை நான் குழுவுக்கு சேர்ந்த சமயத்தில் தான் சோதனை செய்ய வேண்டுமென்று நினைத்து அதைப் பரிசோதித்திருக்கிறார். பாவம் அவர் ஊழ் அந்த சோதனையை இப்போது செய்யவேண்டும் என்று எழுதி வைத்துவிட்டது. பயனாளர் தெய்வங்களாயிற்றே! அவர்களுக்கே சந்தேகம் வந்த உடன் விசாரணை தொடங்கியது. அதனால் தான் நானும் ஆராயத்தொடங்கினேன். நான் சொன்னதை முதலில் மறுத்தவர், இரண்டாம் வார முடிவில் அப்படியே நாக்கு நரம்பில்லாமல் புரண்டு விட்டது.

 மேலாளருக்குத் தான் என் மேல் எவ்வளவு நம்பிக்கை. ‘இதுவரைக்கும் இந்த விஷப்பல் எப்படி வேலை செய்கிறது என்று யாருக்குமே தெரியாது. இந்த பாவப்பட்ட ஜந்து (மின்)பொன்வண்டு நம்மிடம் வந்ததிலிருந்து இதே பல்லோடு தான் இருக்கிறது. ஒவ்வொரு முறை இதை மாதிரியாகக் கொண்டு உருவாக்கும் பிற வண்டுகளும் அதே போலொரு பல்லோடு தான் களத்துக்கு அனுப்பப்படுகின்றன. அவை பேருக்கு தான் போர் புரியுமாம் அல்லது போரிடுவது போல நடிக்குமாம். நிஜமாய் களத்தில் விஷ ஐந்துகள் எதுவுமிருந்தால் அதைக் கடித்து நமது பயனாளர் நிறுவனத்துக்கு எந்த பாதுகாப்பையும் அளிக்கதாம். இதுவரை நமது பொன்வண்டு இடப்பட்ட நெருப்புப் பெட்டியை வாங்கிய நிறுவனங்கள் அதனைத் திறந்தே பார்க்கவில்லை என்பதால் நாம் தப்பித்தோம். நல்லவேளை இந்த விஷப்பல் சொத்தையாகி விட்டதை நீங்களே கண்டறிந்து விட்டீர்கள். மகிழ்ச்சி வாழ்த்துகள். பல் காலாவதியானது யாருக்கும் இதுவரை தெரியாமல் போனது நமது துரதிருஷ்டம், அதனால் வண்டின் பிற செயல்பாடுகளுக்கு எதுவுமே பாதிப்பில்லை என்றாலும், இது கண்டறிப்பட்டாலோ, விஷமிகள் யாரேனும் அவர்களது ஊடுருவ நினைத்து அவர்களது ஈக்களையோ ஈசல்களையோ பொன்வண்டிலிருக்கும் பெட்டிக்குள் நுழைந்து அவை நம் பொன்வண்டால் கொல்லப்படாமல் உயிரோடு தீப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் அறையில் நுழைந்து விட்டால் நம் கதி அவ்வளவு தான். எத்தனை லட்சம் டாலர்கள் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமோ தெரியாது. அப்படி கொடுப்பது ஒருபுறமிருந்தாலும் இதுவரை நாம் சந்தையில் கட்டமைத்திருக்கும் தரமான பாதுக்காப்பான பொருட்களை மட்டுமே சந்தைப்படுத்துவோம் என்ற நம்பிக்கை பிம்பம் என்றாவது? நினைத்துப் பார்க்கவே கொடூரமாக உள்ளது. அய்யோ!!!

உங்களுடைய அடுத்த பணி இந்த வண்டுக்கு சொத்தைப் பல்லை மாற்றி நற்பல்லை அமைப்பது எப்படி என்பதைப் பற்றியும் அதில் விஷத்தை வேறு யாருக்கும்(மிக முக்கியமாக பயனாளர்களுக்கே) தெரியாத வண்ணம் ஏற்றி வைப்பது எப்படி என்பதையும் மேலும் களத்தில் அந்த பல்லை சரியாக கண்டறிந்து பிடிங்கி விடாமல் இருக்க என்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வதே ஆகும். இதைவிட தலை போகும் வேலையை நானே அளித்தாலும் நீங்கள் அதை செய்யத் தேவையில்லை. உங்கள் மேல் எனக்கு பரிபூரண நம்பிக்கையிருக்கிறது. இதுவரையிலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் திறன்பட முடித்துக் கொடுத்ததோடு அல்லாமல் அவை நமது எல்லா தரக் கட்டுப்பாட்டையும் ஒரு குறையும் இல்லாமல் பூர்த்தி செய்திருக்கிறது. இதெல்லாமே பிரச்சனையை சரிவர புரிந்து கொண்டு தீவிரமாய் தொலைநோக்கு பார்வையோடு தீர்வை கட்டமைக்கும் திறனே.

ஆனால் இந்த பணி எவ்வளவு முக்கியமானது என்பதும் இதன் தீவிரத்துவம் உங்களுக்கு புரிந்திருக்கும். ஏற்கனவே சந்தைபடுத்தப்பட்டு பத்து வருடங்கள் இயங்கும் ஒரு பொருளில் இருக்கும் சிக்கலை தீர்ப்பது முக்கியம். மேலும் நமது தீர்வு அதன் செயல்திறன் எதையும் பாதிக்கக்கூடாது இதெல்லாம் உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை இருந்தாலும் என்ற ஒரு நீண்ட பிரசங்கத்தைக் கொடுத்து விஷப்பல்லை மாற்றும் வேலையை என் தலையில் கட்டினார்.அவர் ஒவ்வொரு பணியை என்னிடம் கையளிக்கும் போதும் இதுவரை அதனை செய்து முடிக்காத நிலுவையிலிருக்கும் வேலைகளையே கொடுத்துக் கொண்டிருந்தார். வேலை கொடுப்பதாலும் அவர் சொல்லும் விபரங்களை கேட்க கேட்க அவர் பேச்சின் தீவிரம் மூளையை தீப்பிடித்து எரிய செய்து விடும், மூளையிலிருந்து அந்த தீ இதயத்துக்கு தாவும். பின் ரத்தநாளங்கள் வழி உடல் முழுவதும் தீ ஆழ எரியும். இரத்த அழுத்தம் இதுவரை கூடாமல் இருந்தால் இன்னும் கூடும். தனது பணிகளை தீவிர செயலூக்கத்துடன் செய்யும் பணியாளர்களை இன்னும் தீவிரப்படுத்துவதில் இந்த இந்திய மேலாளரின் திறன் அதீதமானது.

மிகத் திறமையான மேலாளர் இந்தியாவிலிருந்து சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் குடியேறியவர். வாய்திறமை அதிகம். அதைக் கொண்டே தனக்கு மேலிருக்கும் அதிகாரிகளை வசியப்படித்தி வைத்திருப்பதாக குழுவுக்குள் பேச்சு திரிகிறது. பணியாளர்களை வேலை வாங்குவதில் வல்லவர் ஆனால் அந்த வல்லமை இந்தியப் பணியாளர்களிடம் மட்டுமே செல்லுபடியாகிறது. அது அவருக்கும் தெரிந்தேயிருக்கிறது. அமெரிக்காவில் பணியாளர்களிடம் ஐந்து வார்த்தைகளுக்கு மேல் பேசினால் அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். அப்படியெல்லாம் இந்தியப் பணியாளர்கள் செய்ய மாட்டார்கள் என்பது இவருக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது. அமெரிக்க மேலாளர்கள் பணியாளர்களை இவ்வளவு கெடுபிடி செய்வதில்லை. ஆனால் அவர்களெல்லாம் அங்கேயே வசிக்கும் இந்திய மேலாளர்களின் பின்னால் மறைந்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் பணியை முடித்துக் கொடு என்று தங்கள் கண்களை மூடிக் கொள்கிறார். பேருக்கு தான் ‘உனது வேலை தனி வாழ்க்கையை எதுவும் பாதிக்கவில்லையே?’ என்ற கேள்வியை பட்டும் படாமலும் கேட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். அந்த கேள்வியைக் கூட கேட்க அவசியமில்லாத பாவனையில் கேட்டுவிட்டு ‘பிரச்சனையெல்லாம் எதுவுமில்லை எனது வேலை தனி வாழ்க்கையை நேரத்தை கொஞ்சம் கூட பாதிக்கவில்லை’ என்ற பதிலை மட்டுமே எதிர்நோக்குகின்றார்கள்.

வேறு எதையும் சொல்லி வைத்தால், அடுத்த சில வாரங்களிலேயே உங்களிடம் இது குறை அதை சரி செய்து கொள்ளலாம் என்ற புகார் பட்டியல் கேட்பவர் காது நோகாமல் கொடுப்பதில் அமெரிக்க மேலாளர்கள் வித்தகர்கள். இந்திய மேலாளர்கள் அமெரிக்கர்களும் அவர்கள் இவர்களுக்கு மூடிக்கு குமிழாக இருந்து ஜாடியை பாதுகாப்பார்கள். அமெரிக்க மேலாளர்கள் அடித்து பேசி வேலை வாங்குவதை இந்தியாவிலிருந்து வந்து அங்கே அமர்ந்து கொண்டு கொத்தடிமைக் குழுக்களை உருவாக்கும் மேதமைகளை நம்பியே தங்களது குழுவை நிர்வாகிக்கும் உரிமையைத் தாரளமாக அவர்களின் பொறுப்பில் எந்தக் கேள்வியும் கேட்காமல் விட்டு விடுகின்றார்கள். தங்களது எழுத்து மற்றும் எறுப்பை எருமையாக்கும் வல்லமையால் இந்திய மேலாளர்கள் குழுவில் ஏற்படும் மனகசப்புகளை மேல்பூசி மறைந்து பிரச்சனை அடிமைகளே உங்களிடம் தான் என்று சொல்லி மாயம் செய்ய உதவுவார்கள். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தாலும் இந்திய மனப்பான்மை கொண்ட மேலாளர்களை அவர்கள் எப்போதும் ஆதரிக்கவே செய்வார்கள். பெயருக்கு தான் எங்களுக்கு பொறியாளர்களே முக்கியம் அவர்கள் எங்கள் கண்கள் என்று சதிபாடல்கள் எல்லாம். மேலாளர்கள் மேலாளர்களே அடிமைகள் என்றும் அடிமைகளே என்பது தனிக்கதை. பாவம் சொத்தைப் பல் பொன்வண்டே என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு புலம்பாதே மேலே கதை சொல் என்கிறது.

எனக்கு இது தேவை தான் என்று இருந்தது ஒருவேளை இது எனது ஆர்வக்கோளாருக்கு கிடைத்த தண்டனையே. இதற்கு முன்னர் ஒருவருஷமாக இந்த வண்டின் செயல்பாடுகளை வடிவமைப்பது போல பாவனை செய்து கொண்டிருந்த இருவர் குழுவில் நான் சேர்ந்ததும் அவர்கள் இருவர் முன்னிலையிலும் மேலாளர் நான் வந்து சேர்ந்தது குழுவின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் என்று சொல்லி வரவேற்றபோது அமைதியாக இருந்தனர். மிக மிக மகிழ்ச்சி என்று கை குலுக்கிய போது இருவரின் பிடியிலும் தெரிந்த வெறுப்பு என்னை இந்த குழுவோடு எப்படி பயணிக்கப் போகிறோம் என்ற திகிலைக் கொடுத்தது. பொன்வண்டு வளர்த்தெடுப்பதிலேயே அதன் செயல்பாடுகளைப் பழக்குவதில் எனது பெரும்பாலான வேலைக்காலம் கழிந்திருந்ததே அந்த குழுவுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம். என்னுடைய பழைய குழுவில் தயாரித்து சந்தைபடுத்தப்படும் விளைப்பொருளில் பகுதியாகவே பொன்வண்டு இருந்தது. அந்த பொருளின் முக்கிய செயல்பாடுகள் பொன்வண்டின் பல்வேறு செயல்திறனில் இருந்தது. பொன்வண்டின் ஒவ்வொரு மூச்சும் அசைவும் எனது கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் விழி அசைவுகளிலிருந்தே அதன் நோவென்ன என்று கண்டறியும் அளவு என்னிடம் அனுபவமும் கண்டறியும் கருவிகளுமிருந்தன. முன்னர் வேலைப்பார்த்த குழுவும் ஒத்திசைந்த எண்ணத்தோடு உதவும் மனப்பான்மையோடும் இருப்பார்கள். ஒவ்வொருவர் வேலையும் தனித்துவமானது ஆகவே எனது என் என்ற எந்த தனி இசையும் அங்கில்லை.

புதுக்குழுவில்  பொன்வண்டின் செயல்பாடுகளைத் தெரிந்தவர்கள் அதிகமில்லை, சில தீர்க்க முடியாத சிக்கல்களுக்கு ஆலோசனை தேவைப்படுகிறது ஆகவே உங்களை அங்கே பணியமர்த்துகிறோம் என்று சொல்லி உயர்பதவி கொடுத்து குழு மாற்றம் செய்த போது மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் கைக்குலுக்கிலேயே தங்களது எதிர்ப்பை நசுக்காய் தெரிவித்த குழுவோடு நான் கொஞ்சம் சூதானமாக இருந்திருக்க வேண்டும். மென்பொருள் கட்டுமானம் எதையுமே அவர் எனக்கு சரிவர சொல்லித் தரவில்லை. பொன்வண்டும் சொந்தமாக உருவாக்கப்படவில்லை. அதைப் பெரும் பணம் கொடுத்து இன்னொரு நிறுவனத்திலிருந்து வாங்கியிருக்கின்றார்கள். அந்த விஷப்பல் சொத்தையான விஷயத்தை முதன்முதலில் கண்டறிந்து சொன்னது மேலாளருக்கு முதலில் அதிர்ச்சி. அப்படியிருக்க வாய்ப்பில்லை. களத்தில் பத்து வருடமாய் இயங்குகிறதே. நம்மிடம் திறமையான பொறியாளர்கள், குற்றம் குறை எதுவும் இருந்தால் சாதனத்தை இந்த கட்டத்திலிருந்து வெளியே எடுத்து செல்ல அனுமதிக்க முடியாத கடுமையான திட்டவட்டங்கள் இருக்கின்றன. இப்படியெல்லாம் அவதூறு பரப்பவேண்டாம் என்று பொறிந்து தள்ளினார். பத்து வருடங்களாக இந்த சாதனத்தோடு பயணிக்கும் இவர்களுக்கு தெரியாதா என்றபோது குழுவின் நண்பர்கள் இளக்காரம் காட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். ஏற்கனவே இந்தப் பிரச்சனை இருப்பது சமீபத்தில் அவர்கள் கண்டுபிடித்ததாகவும், சொன்னால் இப்படித் தான் சிக்கலாகும் என்றே நாங்கள் சொல்லவில்லை என்றும் நன்றாக அனுபவி என்று சபித்துவிட்டு இரண்டு பாவனையாளர்களும் தத்தம் கோட்டைக்குள் சென்று பதுங்கிக் கொண்டார்கள்.

 இந்த குழுவுக்கு வந்த நாள் முதல் அறிந்து கொண்ட ஒரே விஷயம் இரண்டு பொறியாளர்களும் செய்வது புள்ளியளவே ஆனாலும் காட்டிக் கொள்வது புவியளவு. அதைக் கண்டறியாமல் இருக்க திருக்கி திருக்கி அமைக்கப்பட்ட மென்பொருள் வடிவமைப்பை இந்த இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் எளிதாக நெருங்கி விடாதபடி வடிவமைத்து வைத்திருந்தனர். அதன் செயல்படுகளை விளக்கச் சொன்னால் இருவரும் நாள்கணக்கில் பேசுவார்கள். ஆனால் அதில் ஒரு தூசியைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் சொல்லும் சூட்சுமத்தைத் தெரிந்து வைத்திருந்தார்கள். மென்பொருளின் செயல்பாடுகளை சொல்லும் போது ஒருபோதும் சம்மந்தப் பட்ட கோட்பாடுகளைக் காட்டி செயல்விளக்கம் தரமாட்டார்கள். எதையாவது நானே கண்டறிந்து அதனை சார்ந்த கேள்விகளைக் கேட்டால் அது தான் உங்களுக்கே தெரிந்திருக்கிறதே என்ற பதிலையும் தருவார்கள். சொல்லிக் கொடுத்தால் சில மணி நேரமே ஆகும் கட்டுமானத்தை தானே அறிந்து கொள்ள பல மாதம் பிடிக்கும். ஆனாலும் குழு என்ற உணர்வு ஒன்று இல்லாத இடத்தில் ஒத்திசையை எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனமென்ற முடிவோடு களமிறங்கிய போது கண்டறியப்பட்டதே இந்த சொத்தைப்பல் விவகாரம். சொல்லிய போது அதிர்ச்சியடைந்தவர் பல்வேறு பழியைப் போட்ட அதே மேலாளர் தான் இன்று காலை இளித்த முகத்தோடு இதன் செயல்பாடுகளை இதுவரை யாரும் முழுதாக அறிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்லி வேலையை சமர்த்தியமாக தலையில் கட்டிவிட்டார். முன்னர் பேசிய கடும்சொற்களுக்கான மன்னிப்போ குற்ற உணர்வோ கொஞ்சமும் இல்லாத முதலாளித்துவ மனோபான்மையை நிலைநாட்டிவிட்டு நகர்ந்து விட்டார்.

பொன்வண்டை இயக்கும் மென்பொருளை எங்கள் பழைய குழு தானே தயாரித்து எல்லா செயல்பாடுகளையும் கைச்சொடுக்கில் வைத்திருந்தது. அந்த  குழுவில் இருக்கும் போதே இந்த விஷப்பல் சார்ந்த இயக்குமுறைகளை நான் வெறுப்பதுண்டு, அது சம்மந்தப்பட்ட எந்த மென்பொருள் வடிவமைப்பையும் நான் கடந்த குழுவில் என்னுடைய நண்பருக்கு அளித்துவிடுவது வழக்கம். அதனால் அந்த செயல்முறை கோட்பாடுகளை இணையத்தில் தேடிப் படிக்கத் தொடங்கினேன். கொஞ்சம் சந்தேகங்களை பழைய குழு நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  அது நான் ஒவ்வொரு முறை படிக்கும் போது தலைகீழாய் தவம் செய்யும் வவ்வாலுக்கு மண்ணிலிருந்தே புகட்டுவது போன்ற கடுமையான செயலாக இருந்தது. எத்தனை முறை கோட்டுபாடுகளைப் படித்தாலும் மண்டைக்குள் இறங்க மறத்தது அதன் அடிப்படைகள். மேலும் அதனைப் படித்து புரிந்து கொண்டவர்களும் சொல்வது வவ்வாலை தரையிருக்கும் எந்த யுத்தியோடும் இருக்கவில்லை. இது தான் இப்படித் தான் என்பதை அறிந்து கொள்ள இரவு பகலாக மறுபடி மறுபடி படிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை ஒரு மரமேறினால் வவ்வால் மறுமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதன் அடிப்படைகளை புரிந்து கொண்ட பின்னரே பொன்வண்டின் செயல் கோட்பாடுகளை வரைந்து கொடுத்த நிறுவனத்திடம் பேச்சு வார்த்தைத் தொடங்க வேண்டும். இரவில் உறக்கத்தில் கூட பொன்வண்டு தனது சொத்தைப் பல்லைக் காட்டி என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.

புரிந்த விஷயங்களைக் கொஞ்சம் வைத்துக் கொண்டு கொள்ளைப் பணம் கொட்டி வாங்கிய வண்டியக்க மென்பொருளை கொஞ்சம் கொஞ்சமாய் உள்நுழைய ஆரம்பித்தேன். எனது முதல்கட்ட கேள்வியை சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பியதும் அவருடைய முதல் பதில் உங்கள் குழுவில் ஏற்கனவே இதனை செய்து கொண்டிருந்த திருவாளர் டேஷ் இடம் கேட்டுபாருங்கள் என்றார். திருவாளர் டேஷ் தனது இரும்புக்கரங்களை விரித்து இதுவரை அது சார்ந்த எந்த விஷயத்தையுமே நான் செய்யவில்லை. கடந்த ஒருவருடமாக மென்பொருள் ஆராய்ச்சி மட்டுமே செய்து கொண்டிருந்தேன் என்று என்னிடம் இந்த வேலையை ஒப்படைந்த மேலாளருக்கும் எனக்கும் மடல் அனுப்பிவிட்டு தன்னுடைய பணியைத் தொடர சென்றுவிட்டார். சரி என்ன ஆராய்ச்சி செய்தீர்கள் அதில் கண்டறிந்த எதையாவது கொடுங்கள் என்று கேட்ட போது அதெல்லாமே இணையத்தில் இருக்கிறது தேடிக் கொள்ளுங்கள் என்று கிண்டலாக சொல்லி இதிலிருந்து விலகிக் கொண்டார். தற்சமயம் எனதருமை மேலாளரே ஒருவருக்கு ஒரு வருடம் வரை ஆராய்ச்சிக்கு நேரம் கொடுப்பீர்கள் அதில் அவர் பல் சொத்தையானதை கூட கண்டறிந்து சொல்ல மாட்டார் அதைப் பற்றிய எந்த புகாருமில்லையா என்று கேட்கத் தோன்றும். அதை முகர்ந்தறிந்து இது கவலைக்குரிய விஷயம் தான், அதனால் தான் உங்களிடம் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது நீங்கள் கண்டிப்பாக சொத்தை பல்லை உடைத்தெரிந்து சரியானத் தீர்வை கண்டடைவீர்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது என்ற இனிப்பு தடவிய வார்த்தைகளை சொல்லி விடுவார்.

ஆனால்  கேள்வி மலையாக எழும். ஒவ்வொரு கேள்வியும் வேலை எப்போது முடிப்பீர்கள் என்பதை நோக்கியே இருக்கும். வேறு வழியில்லாமல் மறுபடி மென்பொருளை விற்ற நிறுவனத்திடம் கேள்விகளை மடைமாற்றிய போது, நீங்கள் இன்னுமா விஷப்பல்லையே நம்பியிருக்கிறீர்கள்.  அது வண்டின் சோதனையோட்டத்துக்காக செய்யப்பட்டது. அது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. களத்தில் வண்டின் பல்லை யார் வேண்டுமானாலும் பிடிங்கி விடலாமே!!! நீங்கள் வண்டின் மென்பொருள் கோட்பாடுகளை திருகி விஷத்தை உமிழ்நீர் சுரப்பிக்குள் வைத்திருப்பது போல மென்பொருளை எழுத வேண்டுமென்றார். அதை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை என்று இருமாப்புடன் சொன்னார். உமிழ்நீர் சுரபி எப்படி விஷத்தை வைத்துக் கொள்ளும் அது தேவைப்படும் நேரத்தில் எப்படி வெளிப்படும் என்று கேட்டேன். அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் அது மென்பொருள் பார்த்துக் கொள்ளும்  அந்த கோட்பாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டு விஷத்தை எப்படி உமிழ்நீர் சுரப்பிக்கு செலுத்துவது என்ற குறிப்பேடுகளைப் பாருங்கள் என்று சொல்லி கறார் பதிலை அனுப்பி வைத்தார். குறிப்பேடுகளில் கொடுக்கப்படிக்கும் விஷயத்தை வைத்துக் கொண்டு வண்டின் வாயைக்கூட திறக்க முடியாது என்பதை வெவ்வேறு விதமாக சொன்னாலும் புரியாதவர் போல பதில் அளிப்பதோடு கடும் எரிச்சல் கொண்ட ஒரு மொழியில் பதில் எழுதப்பட்டிருந்தது. சரி நரியை வேட்டையாட வருவாயா என்று அழைப்பதை விட நாமே சுட்டுத் தள்ளுவோம் என்று தூப்பாக்கியை தேடத் தொடங்கினேன். மறுபடி தூக்கமற்ற இரவுகள், பக்கம் பக்கமாய் ஆராய்ச்சி, பார்த்தவர்களிடமெல்லாம் புலம்பல்.

எது நடந்தால் என்ன தீர்வு வேண்டுமே எத்தனை ஆராய்ச்சி செய்தாலும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனது ஆராய்ச்சி நேரம் எல்லையில்லாமல் என் சொந்த நேரத்தைத் தின்றது. எப்போது கணினி முன் அமர்கிறேன் எப்போது படித்து உறங்குகிறேன் சாப்பிடுகிறேனா என்று எனக்கே தெரியவில்லை. சூன்யச் சுழலில் சிக்கிக் கொண்டதுபோல மூச்சு முட்டியது. கணினி முன்னே தவமிருந்த ஒருநாள் கணினியுள் தெரிந்த எழுத்துருக்கள் பிறழ்ந்து பறந்தன. நான் உட்கார்ந்த நிலையில் மயங்கியிருந்தேன். கண்கள் சொருகி மயங்கி மேசை மீது தலை சாய்த்து உறங்கிப் போனேன். கனவில் வந்த பொன்வண்டு நீ ஏன் தீர்வை என்னிடம் கேட்கவில்லை என்று கேட்டது. களத்தில் இருப்பவர்கள் என் வாயை எப்படித் திறப்பார்கள் என்று யோசி. சட்டென எழுந்தேன். இதுவரை வண்டின் வாயை எப்படி திறக்க வைப்பது என்றே யாருக்கும் தெரியாதே என்று இணையத்தில் தேடத் தொடங்கினேன்.  யாரோ ஒரு புண்ணியவான் வண்டின் வாயைத் திறக்க அதன் வாய்க்கு அருகே கன்ன கதுப்பு போன்றதொரு கரும்புள்ளியை அழுத்த வேண்டும் என்று எழுதி வைத்திருந்தான். அந்தப் புள்ளியைக் கண்டறிவதை பெரும் வித்தையாக இருந்தது. அதனைக் கண்டறிந்து மெல்லத் தடவிய போது வண்டு தானே வாயை திறந்து காட்டியது. பல்லை எப்படி மாற்றுவது என்ற கோட்பாட்டை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தேன். அதை மாற்றிய உடன் சோதனையோட்டத்தை அந்த விஷப்பல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட எதிரியை கடித்துக் கொன்றது. அந்த மாயகணத்தில் வண்டையை கையில் ஏந்தி முத்தமிட்டேன். அது வெட்கம் கொண்டது.

சரி சொத்தைப் பல்லை மாற்றி புதுப்பல் கட்டி அதில் விஷத்தை சரிவர செலுத்தி எதிரியை தாக்குமளவுக்கு வண்டைத் தயார் செய்து விட்டால் மட்டும் போதுமா, அது தான் பாதுகாப்பனாது கிடையாதே என்ற கேள்வியை இப்போது எப்படி எதிர்கொள்வது என்று மறுபடி மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மொத்த குழுவுக்கும் எப்படி இந்தப் பல்லை மாற்றிக் கட்டினேன் என்பதை செயல்விளக்கமாக சொல்லும் போது இந்த கேள்வி வருமல்லவா அதுவும் என்னுடைய குழுவில் இதுவரை இந்தத் தீர்வைக் கூட கண்டறியாதவர்கள் தங்களுடைய பங்களிப்பாக ஏதாவது செய்யத் தானே வேண்டும். “அவர்களைப் பற்றி தெரியுமல்லவா தெரிந்தே பின்னர் இந்த விளக்கமுறையை நீயேன் செய்ய வேண்டும்” என்று கேட்டது வண்டு.  பதிலுக்கு புன்னகை மட்டும் புரிந்தபடி அடுத்தகட்ட செயலாக்கத்தில் ஈடுப்பட்டேன்.  நான் வண்டின் வாயைத் திறக்கும் வழிமுறையை சற்றே சிக்கலாக மாற்றினேன். சங்கேத எண் உள்ளீடு செய்யாமல் வண்டின் வாயை இனிமேல் திறக்க முடியாது. அதை வடிவமைக்கும் போது பாவம் பொன்வண்டு மிகவும் சிரமப்பட்டு விட்டது. அந்த கோபத்தில் மறுபடி கேட்டது “உனக்கு யார் எந்த உதவி புரிந்தார்கள்” என்றது மறுபடியும். ஆமாம் வண்டு சொல்வது சரி தான். சின்னச் சின்ன தகவல் கூட பரிமாற விரும்பாத குழுவில் நான் மட்டும் எல்லா தகவல்களும் எல்லோருக்கும் என்று இருப்பது சரியாகுமா? “குழுவில் உனது இருப்பு இன்றியாமையாது என்று ஆக்கிக் கொள்ள நீயும் தகவல்களை உன்னோடு வைத்துக் கொள் பொதுவில் வைக்காதே. எதை சொல்லாமல் விட்டால் கட்டுப்பாடு உன்னோடு இருக்கும் என்று சில தகவல்களை மட்டுபடுத்தும் கலை உன்னிடமில்லை” 

வண்டு சொன்னது எதையும் காதில் வாங்காமல் நான் என் வேலையைத் தொடர்ந்தேன். என்ன தான் தலையால் நடந்தாலும் கைலாசம் இருக்கும் இடத்தில் தானே இருக்கும். வண்டின் வாயைத் திறக்க சங்கேத எண்ணை யாரும் கண்டு பிடித்து விட்டால்? சரி அதை இன்னும் கடினமானதாக மாற்றினேன். ஒவ்வொரு முறை உள்ளீடு செய்த பின்னும் சங்கேத எண் மாறிக் கொள்ளும் விதத்தில் மென்பொருளை வடிவமைத்தேன். மேலும் இது எப்படியெல்லாம் பாதுகாப்பானது என்ற விளக்கங்களை எல்லாம் தெளிவாகக் குழுவில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் எழுதி வைத்தேன். மேலும் இத்தனை அடுக்கு பாதுகாப்பை உடைத்து வண்டின் விஷப்பல்லை நெருக்குவது அசாத்தியமானது. அது மட்டுமல்லாமல் இந்தச் சின்ன சிக்கல் பொருட்டு களத்தில் யாரும் அதன் வாயைத் திறக்க நினைக்க மாட்டார்கள். அப்படியே நினைத்தாலும் அவ்வளவு எளிதாக வண்டின் வாயை யாரும் திறக்க முடியாது. மேலும் அதன் எந்த பல்லில் எந்த பகுதியில் விஷம் உண்டு என்பதை ஆராய முடியாது.  அதற்கு தனது வாய்க்குள் ஏதோ ஆராய்ச்சி நடக்கிறது என்ற தகவல் நமக்கு வந்து விடும் என்று சட்ட நுணுங்கங்கள் போல எழுதி வைத்துக் கொண்டேன். எப்போது வண்டு மட்டுமல்ல நானும் யாரையும் சமாளிக்கத் தயாராகி விட்டேன். வண்டு என்னைப் பார்த்து சிரித்தது. நான் சொன்னேன் வண்டே என் பொன் வண்டே வாயை மூடி சிரி அல்லேல் நான் உன்னால் மாட்டிக் கொள்வேன். பிறகு உனக்கு வாய்ப்பூட்டு ஒன்றை தயாரிக்க நான் தான் மறுபடியும் தலையை வெட்டி என் கையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றேன். அதுவும் புரிந்தது போல தலையாட்டியது.  

***

லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்த இவர் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com

ந. பெரியசாமி கவிதைகள்

0

1.பழி

பாட்டலில் நீரைப் பீச்சி
நன்றாக குலுக்கினான்
சொட்டுகள் இறங்கும்வரை
கவனமாக கொட்டிய 
கடைசி கோப்பையை
கை தவறிக் கவிழ்த்தான்

திமிர்பிடித்த முண்டதான்
செத்துக் கிடக்கிறாள்
எப்பவும் இப்படித்தான்
தட்டி விடுகிறாள்.

எரிச்சலோடு புதை மேட்டை
எட்டி உதைத்தவன்
வேறு இடம் மாற
நினைத்தபடி
சட்டெனக் குனிந்து
கொட்டிய மதுவை
மோந்து நகர்ந்தான்.

*

2. பிச்சை மது

இடிபாடுகளுக்கிடையே
முன் நகர்ந்தவன்
190ல் ஒன்னு கொடு
காலி ஆகிடுச்சு
240தான் இருக்கென்றதும்
நாதேறிப்பய ஊரில்
எப்பவும் இப்படித்தான்
கேட்டது கிடைக்காதென
கொஞ்சம் தூரம் வந்தவன்
ஒவ்வொருவரிடமாக கெஞ்சத் தொடங்கினான்

பத்து ரூவா கொடுண்ணா.

*

3. வேண்டுதல்

நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்தான்
உள்ளிருப்பது
ஆம்பளையோ பொம்பளையோ
குடிச்சிட்டு போற வரைக்கும்
வம்பு தும்பு ஏதும் வராம
பத்திரமா பாத்துங்குங்க.

வேண்டுதலோடு
ஊதுபத்தியை சொருகிவிட்டு
மூடியை திறந்து
நுகர்ந்த வாசனையை ரசித்தவாறு
ஊற்றத் தொடங்கினான்
நம்பிக்கையோடு.

***

4. நூல் கணக்கு

எப்படி பார்த்தாலும்
ஒரு நூல் அளவு 
உங்களுக்கு எச்சாகத்தான் இருக்கும்
அப்ப இத நீ குடி
அத கொண்டாவென கேட்க
அய்யோ
நீ தெய்வம் அண்ணே
உங்கிட்ட வம்பெதுக்கு
கண்களை இறுக்கி மூடி
சட்டென வாயில் கவிழ்த்து
முகத்தில் பாவம் வழிய
விரலை நீட்டினான்.

கொஞ்சமாக ஊறுகாயைப் பிதுக்க
நக்கியபடி நகர்ந்தான்

*

5. இடுகாட்டு எழில்

லெமன் பக்கார்டி கோட்டர்
ஒரு லிட்டர் தண்ணி பாட்டில்
சிக்கன் கவாப் சகிதமாக
புங்கமர நிழல் இருந்த
புதை மேட்டில் அமர்ந்தான்

டாஸ்மாக் கடைகளை
சுடுகாட்டிற்கு அருகில் வைக்கும்
அதிகாரிகளை மெச்சியபடி.

அருகில் அமர்ந்த நாய்க்கு
அப்பப்போ ஒரு துண்டை போட்டு 
மூன்றாவது ரவுண்டில் 
அலைபேசியில் ஒவ்வொருவராக அழைத்து
உரையாடத் தொடங்கினான்.

பொட்டலம் காலியானதும்
வெறித்தபடி நாய்
விட்டோடியது.

யாரிடமோ அவன்
அவமதிக்கப்பட தொடங்கினான்.

6. டம்ளர் பார்த்தீனியம்

பார்த்தீனியச் செடிகளோடு
செடிகளாக எங்கும் 
முளைத்திருந்தன
கசங்கிய டம்ளர்கள்

மூட்டையில் பாட்டில்களை 
சேகரித்தபடி இருந்தவன்
மீந்த தண்ணிரை சேகரித்து
கொண்டுபோன கோட்டரை
குடித்து முடித்தான்

நாளைய குடிக்கு
உத்திரவாதம் கொள்ள
போதும் பாட்டில் பொறுக்கியதென
புறப்பட்டான்.


வானில் சூரியனும்
ஒளியை 
மூட்டை கட்டிக் கொண்டிருந்தது.

***

1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான ‘நதிச்சிறை’ வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். ‘மொழியின் நிழல்’ என்ற கட்டுரைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்
நதிச்சிறை (2004)
மதுவாகினி (2012)
தோட்டாக்கள் பாயும் வெளி (2014)
குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016)
கடைசி பெஞ்ச் (2021)
அகப்பிளவு
கட்டுரை தொகுப்பு
மொழியின் நிழல் 2021

ஏமாற்றாத நாயகர்கள்

0

ஷான் கருப்பசாமி

ண்பதுகளின் முற்பகுதி என்று நினைக்கிறேன். அப்போது எம்ஜிஆர் உயிருடன் இருந்தார். இந்தியா உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட் வீரர்கள் மெல்ல கோடீஸ்வரர்களாக மாறத் தொடங்கியிருந்தார்கள். தொலைக்காட்சிகள் ஊருக்கு ஒன்று என்று முளைத்துக் கொண்டிருந்தன. வேறு எங்கும் தொலைக்காட்சி இல்லாத காரணத்தால் இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலத்தை ஒரு மருத்துவர் தன் வீட்டுக்கு வெளியே தொலைக்காட்சியை எடுத்து வைத்து அனைவரும் பார்க்கச் செய்தார். பக்கத்து வீடுகளில் தேடிப் படித்த அம்புலிமாமா, சிறுவர் மலர், பூந்தளிர் பரிச்சயம் இருந்தது. அப்படியான ஒரு பெல்பாட்டம் காலத்தில்தான் ராணி காமிக்ஸ் கையில் கிடைத்தது. அழகியைத் தேடி என்ற பெயரில் வெளியான ஜேம்ஸ்பாண்ட் சாகசம். எச்சில் விழுங்கி சுற்றும் முற்றும் பார்த்துக்கொள்ள வைக்கும் கிளுகிளுப்பான மேலாடையில்லாத படங்களுடன் அந்தக் காமிக்ஸ் வெளியாகி இருந்தது. அதன் பிறகான இதழ்களில் எல்லாம் அந்த அந்நிய அழகிகளின் மாண்பைக் கூட உள்ளூர் ஓவியர்கள் மேலாடை வரைந்து காப்பாற்றியிருந்தார்கள். ஆனால் அதற்கு முன்பு வேறு புத்தகங்கள் தந்திராத ஒரு வாசிப்பு அனுபவத்தை அந்தக் கதைகள் தந்தன. நான் காமிக்ஸ் கதைகளின் அடிமையாகத் தொடங்கியது அப்போதுதான்.

முத்து காமிக்ஸ், லயன், மினி லயன், ஜூனியர் லயன்  போன்றவை அதற்குப் பின்பாக எனக்கு அறிமுகம் ஆனவை. அழிவு கொள்ளை தீமை கழகத்தை எதிர்த்துப் போராடிய லாரன்ஸ் டேவிட் கதைகள் படித்தபோது உண்மையில் அப்படி ஒன்று உலகில் இருக்கக் கூடும் என்று நம்பினேன். பிற்காலத்தில் அந்த நம்பிக்கையை நம் அரசியல் கட்சிகள் காப்பாற்றின. ஸ்பைடர் என்ற நெகடிவ் ஹீரோவும் ஆர்ச்சி என்ற தங்கமான குணம் கொண்ட இயந்திர மனிதனும் என் பதின் வயதுக் காலங்களின் நினைவுகளில் பதிந்து போனவர்கள். டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் கதைகள் படிக்கும்போது அமெரிக்கா என்ற வல்லரசு எத்தகைய சமாதியின் மீது எழும்பியிருக்கிறது என்று புரிந்தது. பிறகு நான் செய்த அமெரிக்கப் பயணங்களின் அனுபவத்தை காமிக்ஸ் கதைகள்தான் தந்தன. எத்தகைய வில்லனாக இருந்தாலும் தாடையைப் பெயர்க்கும் டெக்ஸ் இன்றைய மாஸ் ஹீரோக்களுக்கு முன்னோடி. டெக்ஸ் வில்லருக்குப் பெரிய இடைஞ்சல் தரும் வில்லன் இதுவரை பிறக்கவில்லை. அவருடைய மகனுக்கே திருமணம் நடந்தாலும் அவர் இளமை குன்றாமல்தான் வலம் வருவார். மகனுக்கு ஒரு ஆபத்தென்றால் இவர்தான் போய் காப்பாற்றுவார். இவை அத்தனையும் நம் ஹீரோக்களுக்கு ஒத்துப் போகிறது பாருங்கள்.

ஏனென்று இப்போது நினைவில்லை. நாடோடி ரெமி கதை குறித்து மாபெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். உலகின் மிகப் பிரபலமான காமிக்ஸ் அது குறித்து வெளியான விளம்பரங்கள் ஒரு காரணமாக இருக்கலாம். எப்போதும் ஏதாவது ஒரு காமிக்ஸ் புத்தகத்தைக் கையில் வைத்தபடி திரிந்து கொண்டிருந்தேன். இன்று வரை என்னோடு பயணிக்கும் நெருங்கிய நண்பனை நான் தேர்ந்தெடுக்க அவனும் காமிக்ஸ் வாசகன் என்ற காரணம் மட்டுமே போதுமானதாக இருந்தது. இப்போதும் புத்தகக் கண்காட்சிகளில் என் பெரும்பகுதி புத்தகச் செலவின் ஒதுக்கீடு காமிக்ஸ் கதைகளுக்காக இருந்து வருகிறது. என் இளம் வயதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவற்றில் சினிமாவுக்கு அடுத்தபடியான இடத்தை படக்கதைகளுக்குத் தரலாம்.

படங்களின் வழியாக சொல்லப்படும் கதைகள் தரும் அனுபவம் ஒரு புதினத்துக்கும் திரைப்படத்துக்கும் இடைப்பட்டது. எத்தகைய சிக்கலான கதைக் களத்தையும் காமிக்ஸ் எளிதாக சில படங்களில் விளக்கி விடும். இறந்தகாலம், எதிர்காலம், விண்வெளி, பாதாள உலகம் என்று நொடிகளில் நம்மை கதைக்குள் இழுத்து விடும். படக்கதைகள் அப்படி என்ன அப்பா டக்கர்களா என்று கேட்டால் அப்படித்தான். உலகத்தின் இதுவரை அதிக வசூல் சாதனை செய்த முதல் பத்து படங்களில் நான்கு படங்கள் டிசி அல்லது மார்வல் காமிக்ஸ் பாத்திரங்களை ஒட்டி எடுக்கப்பட்டவை. பொதுவாக காமிக்ஸ் அல்லது கிராபிக் நாவல் என்றால் அது சிறுவர்களுக்கானது என்ற தவறான கருத்து நம் சமூகத்தில் நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. படிப்பவர் நெஞ்சை நடுங்க வைக்கும் இரண்டாம் உலகப் போரின் கொடுமைகளை அப்படியே காட்டும் கிராபிக்ஸ் நாவல்கள் இருக்கின்றன. அவற்றில் பல தமிழில் கூட மொழிபெயர்த்துக் கிடைக்கின்றன. பல நாடுகளின் உள்நாட்டுப் போர்களை காமிக்ஸ் கதைகளின் வழியாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் கோட்பாடுகளைச் சொல்லும் கதைகளை காமிக்ஸ் வாயிலாக இன்னும் அழுத்தமாகச் சொல்ல முடியும். ஒரு குறிப்பிட்ட நிலத்தின் இனத்தின் தன்மைகளை காமிக்ஸ் ஒவ்வொரு வரையப்பட்ட கட்டத்திலும் சொல்லிக்கொண்டே வரும். இதை ஒருபோதும் எழுத்தில் கொண்டுவர முடியாது.

இப்போது சிந்தித்துப் பார்த்தால் என்னுடைய கதை சொல்லும் ஆர்வம் காமிக்ஸ் வாசிப்பிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பொதுவாக நாவல்களுக்கான கதைக்களம் பற்றி யோசிக்கும்போது எதுவும் சாத்தியம் என்ற கோணத்தில் சிந்திக்க வைப்பவை காமிக்ஸ்கள்தான். கதை எழுதும்போது இதையெல்லாம் விளக்கி விளக்கி எழுத வேண்டுமா, வாசகர்கள் யோசித்துக் கொள்ள மாட்டார்களா என்று தோன்றும். அதுவும் காமிக்ஸ் வாசிப்பிலிருந்து வந்த பழக்கம்தான். காட்சிகளாக விரியும் வகையில் கதை சொல்ல காமிக்ஸ் எனக்கு கற்றுத் தந்தது.  எத்தனை உதவி இயக்குநர்களுக்கு இந்த விஷயம் தெரியுமோ ஷாட் பிரிப்பதில் காமிக்ஸ் குறிப்பாக கிராஃபிக் நாவல்களுக்கு ஈடு இணை இல்லை. ஒரு காட்சிக்கு எப்படியெல்லாம் கேமரா கோணம் வைக்கலாம் என்பதை ஒருவர் இந்தப் புத்தகங்கள் வழியாகவே படிக்க முடியும்.

என் பெயர் லார்கோ – Philippe Francq வின் ஆக்‌ஷன் Panels

லார்கோ வின்ச் வகை கிராபிக் நாவல்கள் பொருளாதாரக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட சாகசங்கள். ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவருடைய கடல் போன்ற திரண்ட சொத்துக்கு வாரிசாக வரும் அவருடைய தத்துப் பிள்ளை ஒரு தறுதலை, கேளிக்கை விரும்பி. கணக்கில்லாத தோழிகளுடன் வலம் வருபவன். அவன் சகவாசம் எல்லாம் நிழல் உலக ஆசாமிகளிடமும் பித்தலாட்டக்காரர்களிடமும்தான். தனது தந்தையின் சொத்தைப் பாதுகாக்க லார்கோ குறுக்கு வழிகளில் சென்றாலும் அவன் நியாயத்தின் பக்கம் நிற்பவன். தன்னுடைய எளிய வாழ்க்கையை அவன் நிறையவே நேசித்து அதற்கு திரும்ப நினைக்கிறான். என்னுடைய வெட்டாட்டம் கதையின் நாயகன் வருண் இதைப் போன்ற ஒரு பாத்திரப்படைப்புதான். தந்தையின் பதவி, பணம், அதிகாரத்தின் மீது எந்த விதத்திலும் ஆசை இல்லாதவன். அவரிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென்று நினைக்கிறான். நண்பர்கள், குடி, தோழிகள் என்று திரிந்தவனின் மடியில் பதவி வந்து விழுகிறது. அதை அவன் எப்படி புத்திசாலித்தனமாக எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. இதை எழுதும்போது லார்கோ வின்ச் என் நினைவில் இல்லை. இப்போது யோசித்தால் இத்தனை ஒற்றுமைகளா என்று தோன்றுகிறது.

அடுத்தபடியாக எனக்குப் பிடித்த கதாபாத்திரம் மாடஸ்டி ப்ளைஸி. எத்தனை வலிமையான ஆண்களையும் அடித்து வீழ்த்தும் பலமும் அசத்தி வீழ்த்தும் அழகும் கொண்டவள். உயிருக்கு ஆபத்தான சூழல்களில் புறங்கையை வாய்க்கு மேல் வைத்து வீல் என்று கத்தும் நாயகிகளைப் பார்த்து வளர்ந்தவனுக்கு மாடஸ்டியின் சாகசங்கள் ஆச்சரியமானவையாக இருந்தன. ஆண் நண்பர்களை விருப்பம் போல மாற்றிக்கொண்டே செல்லும் அந்தப் பாத்திரம் என் மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். பதின் பருவத்தில் மாடஸ்டி போன்ற கண்கள் கொண்ட ஒருத்தியிடம் அதற்காகவே மயங்கியது கூட உண்டு. பொன்னி என்ற நாவலை எழுதி முடித்த பிறகுதான் அதன் முக்கியப் பாத்திரத்தில் மாடஸ்டியின் சாயல் இருப்பதை உணர்ந்து கொண்டேன். மாடஸ்டியைப் போலவே பொன்னிக்கும் உயிரைக் கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள். எத்தகைய சாகசத்துக்கும் பொன்னி அஞ்சாதவள். எடுத்துக் கொண்ட காரியத்துக்காக உயிர் போனாலும் கவலை இல்லை என்று செயல்படுபவள். அத்தனையும் மாடஸ்டியின் குண வார்ப்புகள்.

அமெரிக்காவின் வரலாறு எனக்கு பாடப் புத்தகங்களில் படித்துத் தெரிந்ததை விட காமிக்ஸ்களின் வழியாகத்தான் அதிகம் பரிச்சயம். ரோமப் பேரரசின் வலிமை எத்தகையது என்பதை ஆஸ்ட்ரிக்ஸ் கதைகளிலிருந்துதான் படித்துத் தெரிந்து கொண்டேன். இவற்றைப் படிப்பதால் வரலாறு பற்றி முழு அறிவு வந்து விடுமா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தேர்வுகள், ஆசிரியர் என்ற பயம் இல்லாமல் ஏதோ ஒரு அறிவை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ள எனக்கு காமிக்ஸ்கள் உதவியிருக்கின்றன. சொல்லப் போனால் கொஞ்சம் பட்ஜெட் ஒதுக்கி ஐந்தாம் வகுப்பு வரையிலான நம் பாட நூல்கள் அத்தனையும் காமிக்ஸ் வடிவத்தில் மாற்றினால் மாணவர்களின் திறன் இப்போது இருப்பதை விடப் பல மடங்கு மேம்படும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மாணவர்களின் படைப்புத் திறனையும் அது மேம்படுத்தக் கூடும். மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இன்னும் தீவிரமான வாசிப்பை நோக்கி அது அவர்களை இட்டுச் செல்லும். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த பள்ளிகள் தோறும் நூலகம் உருவாக்கி வைத்தால் மட்டும் போதாது. அந்த நூலகங்களை மகிழ்ச்சியான இடங்களாக மாற்ற வேண்டும். படக்கதைகள் அந்த மாயத்தைச் செய்யும் சக்தி வாய்ந்தவை.

பிக்பேங் தியரி என்ற நெட்ஃப்ளிக்ஸ் வலைத்தொடரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். உச்ச கட்ட அறிவுடைய நான்கு நண்பர்கள் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கில்லாடிகள். ஆனால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகளில் அத்தனை விவரம் தெரியாதவர்கள். உடலளவில் பலவீனமானவர்கள். அவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை காமிக்ஸ் வாசிப்பு. ஒரு காமிக்ஸ் புத்தகக் கடைதான் அவர்களின் சரணாலயம். ஏன் நோஞ்சான் படிப்பாளிப் பிள்ளைகள் தங்களை ஒளித்துக் கொள்ளும் இடமாக காமிக்ஸ் இருக்கிறது என்று அதில் ஒரு உரையாடல் வரும். அவர்களுக்குத்தான் சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள். தங்களைவிட வலிமையான சக மாணவர்களிடமிருந்து தப்பித்து அவர்கள் இந்த சாகச உலகில் தங்களை தொலைத்துக் கொள்கிறார்கள். தங்களையே அந்த ஹீரோக்களில் ஒருவனாக நினைத்துக் கொள்கிறார்கள். அல்லது அப்படி ஒருவன் தங்களைக் காப்பாற்ற வருவான் என்று நம்புகிறார்கள். கெட்டவர்களிடமிருந்து நல்லவர்கள் காக்கப்படும் அந்த உலகத்தை அவர்கள் விரும்புகிறார்கள். இந்தியாவில் இவை இல்லை என்று பொருளில்லை. புராண, இதிகாசங்கள் வடிவத்தில் அவை இருக்கின்றன.

இன்றைய சூழலில் சிறு பிள்ளைகள் மட்டுமல்ல, நம்மில் பலரும் நோஞ்சான் பிள்ளைகளாகத்தான் இருக்கிறோம். நம்மை விடப் பல மடங்கு பெரிய ஏதோ ஒன்று நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. நம்மை நசுக்குவதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்மைக் காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோவை நாம் தொடர்ந்து தேடிக் கொண்டுதான் இருக்கிறோம். திரைப்படங்களிலும் அரசியல் தலைவர்களிலும் சுய முன்னேற்ற குருக்களிடமும் சாமியார்களிடமும் நாம் விடாமல் தேடிக்கொண்டிருக்கிறோம். அதற்காக அவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து கொண்டும் இருக்கிறோம். ஆனால் இந்தக் காமிக்ஸ் நாயகர்கள் நம்மை ஒரு போதும் ஏமாற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் இந்த உலகத்துக்கு ஆபத்து நேரும்போது அவர்கள் பறந்து வந்து காப்பாற்றும் தங்கள் கடமையில் தவறுவதே இல்லை.

***

ஷான் கருப்பசாமி – தனியார் இணையவழிக் கற்றல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்தில் இருக்கிறார். “வெட்டாட்டம்”, “பொன்னி” பொன்னி-2 என மூன்று நாவல்களும் சின்ராசு (உரையாடல்கள்), தங்கம் சிறுகதைத் தொகுப்பும் ‘ஆண்ட்ராய்டின் கதை’, ‘எதிரொலிக்கும் அறைகள்’ என்ற இரு கட்டுரைத் தொகுப்புகளும் ‘விரல் முனையில் கடவுள்’, ‘ள்’ என இரு கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கிறது. திரைத்துறையில் திரைக்கதை ஆசிரியராகவும் இயங்குகிறார். மின்னஞ்சல்: shan.mugavari@gmail.com

Persepolis – சத்ரபியின் வாழ்க்கைக் குறுக்குவெட்டுத் தோற்றம்

0

தூயன்

ர்ஜான் சத்ரபி 1969 ல் ஈரானில் பிறந்தவர், 1979 ல் வெடித்த ஈரானின் இஸலாமியப் புரட்சியினால் புலம் பெயர்ந்தவர்களில் சத்ரபியும் ஒருவர். தற்போது பாரிஸில் வசிக்கிறார். இவர் குழந்தைகளுக்கான நிறைய புத்தகங்கள், காமிக்ஸ்கள் எழுதியுள்ளார். இவரது காமிக்ஸ்கள் பல தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி நியூயார்க்கர் உட்பட உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. பெர்செபோலிஸ் 1, பெர்செபோலிஸ் 2 இரண்டும் சுயசரிதை வடிவில் எழுதப்பட்ட, சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான காமிக்ஸ். அதன் பிறகு எம்ப்ராய்டரிஸ் என்கிற புத்தகத்தை 2005 ல் எழுதினார். தொடர்ந்து அரசதிகாரத்திற்கு எதிராகவும் கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இஸ்லாமியப் பெண் அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற பெண்களில் சத்ரபியும் முக்கியமானவர்.

“இரண்டாம் உலகப் போர் மேற்கில் ஒரு பெரிய விஷயமாக இருந்தது, அது முழு உலகிற்கும் ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அது அல்ல. இரண்டாம் உலகப் போர் எங்களுக்கு ஒரு பெரிய விஷயமல்ல. எங்களுக்கு ஒரு போர் இருந்தது. கொரியாவின் போருக்குப் பிறகு, ஈரான்-ஈராக் போர் மிகப்பெரிய போர், ஆனால் அதைப் பற்றி யாருக்குத் தெரியும்? இந்த போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வரையிலான இந்த வெள்ளையர்கள் அனைவரும் சுமார் அறுநூறு மில்லியன், அதாவது உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதம். உலகம் முழுவதிலும் உள்ள பத்து சதவிகித மக்களின் பிரச்சனை நூறு சதவிகிதப் பிரச்சனை என்று நம்மீது முன்னிறுத்துகிறார்கள் அதுதான் வெள்ளை நாசிசம்.”

பெர்சேபோலிஸ் கிராஃபிக் நாவல்

‘மெய்யான உலகமானது மானுட உடலின் விரிவாக்கமாகிறது. மானுட உடல் எப்படி அங்ககமான உறுப்புகளைக் கொண்டிருக்கிறதோ அதுபோல மெய்யான உலகம் மானுடர்களின் அங்ககமல்லாத உறுப்புகளாகிறது. இதனால்தான் மானுடர்களின் பௌதிக இருப்பும், மனம் சார்ந்த இருப்பும் இயற்கையோடு இணைந்திருப்பது என்பது, இயற்கை இயற்கையோடு இணைந்திருப்பது என்றே அர்த்தமாகிறது. ஏனெனில் மானுடர்கள் இயற்கையின் பகுதியாகிறார்கள் என்கிறார் மார்க்ஸ். இயற்கை என்றழைக்கப்படும் பௌதிக உலகமே மானுடர்களின் அங்ககமல்லாத உறுப்பு. இந்த மேற்கோளை உள்முகமாக விரித்துப் புரிந்துகொண்டே போகலாம். இன்றைக்கு ‘உலகம்’ என்பதற்கு அர்த்தம் என்ன? உலகம் / மெய்யான உலகம் / மெய்நிகர் உலகம் என நவீன அறிவியல் உலகத்தை அர்த்தப்படுத்துகிறது. மார்க்ஸ் குறிப்பிட்ட அங்ககமல்லாத மானுட உறுப்புகளான பௌதிக உலகத்திற்கு இந்த நவீன அறிவியல் இன்று என்னவாக இருக்கிறது?

இதற்கு முதலில் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். ஒன்று நவீன அறிவியல் மற்றொன்று கலாச்சார மாற்றம். முதலில் நவீன அறிவியலைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நவீன அறிவியல் கிரேக்க அறிவின் தாக்கத்தைக் கொண்டே உருவானது என்பது நாம் அறிந்தது. கிரேக்கப் பார்வை இந்திய, அரேபிய பண்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாமிய கணிதவியலை இஸ்லாமிய இறையியலிலிருந்து பிரித்தெடுக்க முடியாதவொன்றாக நவீன அறிவியல் அதை அப்புறப்படுத்துகிறது. சுந்தர் சருக்கை சொல்வதை இங்கு மையப்படுத்த வேண்டும். காலனியத்தின், ஏகாதிபத்தியத்தின் விளைவாக இயற்கையை (பௌதிக உலகை எனப் புரிந்துகொள்ளலாம்) ஒருவிதமாக அர்த்தப்படுத்தும் நவீன அறிவியல் முறைமை உலகளாவியத் தன்மை கொண்டதாகி விட்டது. இதுவே புறவயத் தன்மை கொண்டதாகவும், நவீனத்துக்கு முந்தைய சமூகங்கள் உருவாக்கிய மற்ற வரையறைகள் அகவயமான கதையாடல்களாகவும் முன்வைக்கப்பட்டன. இதே கருத்தைத்தான் சையித் ஹூசைன் மேற்கத்திய நவீனத்தின் ஆக்கிரமிப்புக்கு முன்பாக மாபெரும் இஸ்லாமிய அறிவியலாளர்கள் எல்லோரும் இஸ்லாமிய மறைஞானத்துக்கு உட்பட்டுத்தான் இயங்கினார்கள் என்கிறார். நவீன மேற்கத்திய அறிவியல் மதத்தையும் அறிவியலையும் எதிரெதிராக வைப்பதை நாம் நினைவில் கொள்வோம். இங்கு இஸ்லாமிய மறைஞானம் என்ற சொல்லை, நான் மேலே குறிப்பிட்ட நவீன அறிவியலால் விலக்கப்பட்ட கீழைத்தேய கணிதவியல் என்றே புரிந்துகொள்கிறேன்.

இரண்டாவது, கலாச்சார மாற்றம். கலாச்சார மாற்றம் எப்போதும் ஒருவித நவீன உலகப் பார்வையை முன்வைப்பதாக நாம் தவிர்க்க முடியாமல் நம்புகிறோம். எப்படி நவீன அறிவியலை மறுக்க முடியாதோ அதேபோல கலாச்சார பிம்பத்திலிருந்து நம்மால் விலக்கவும் முடியாது. உலகளாவியப் பார்வை என்கின்ற பதமே கலாச்சார இறக்குமதியின் இன்னொரு அர்த்தம். அப்படியென்றால் நவீனம் , பழமையை முற்றிலுமாக நிராகரிக்கிறதா? அல்லது இணைத்து விலகுகிறதா? என்றால் இரண்டும் நடந்திருக்கலாம் என்கிறார்கள். காலனிய நவீனத்துவம் அறிமுகப்படுத்திய மேற்கத்திய நவீனத்துவம்தான் இருபதாம் நூற்றாண்டின் உலகம் முழுக்க வேர் ஊன்றியதென்பது மறுக்க முடியாத உண்மை.

நவீனத்துவம் எப்படி பொருளாதார அதிகாரத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதோ அப்படியேதான் பொருளாதார அதிகாரம் நவீனத்துவத்தை உள்ளடக்கமாகக் கொள்கிறது. அப்படியென்றால் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை நிர்ணயிப்பதில் பொருளாதாரத்திற்கும் அடிப்படை மதவாத அனுகுமுறைக்குமான உறவு என்ன?

இந்தக் கேள்விகளை மர்ஜான் சத்ரபி எழுதிய பெர்சேபோலிஸ் கிராஃபிக் நாவல் வழியே நாம் எதிர்கொள்ள முடியும். 1979 வரை ஷா முகம்மது ரீஷா பக்லவியின் ஆட்சி நடக்கிறது. ஈரானை நவீனமயமான நாடாக, வெளியே செல்வது, ஹிஜாப் அணிவது என பெண்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், மேற்கத்தியக் கலாச்சாரத்தின் போக்கில் சுதந்திர நாடாக வைத்திருக்கிறார். அப்போது ஈரானின் அரசதிகாரம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் (ஈரானின் எண்ணெய் வளங்களுக்காக) இருக்கிறது. ஷாவை ஆட்சியிலிருந்து இறக்கி அவரது மகனைத் தூண்டிவிட்டு பிரிட்டனும் ரஷ்யாவும் செல்வாக்கைப் பிடிக்கின்றன. ஆனால் ஷா தனது தந்தையைப் போன்றே நவீனமயமான நாடாகத்தான் ஆட்சியை நடத்துகிறார் (அப்போது உருவானதுதான் கலாச்சார வெண்மை புரட்சி) , ஒரு கட்டத்தில் வெளியிலிருந்து ஆட்சி செய்து வந்த பிரிட்டனின் கொள்கையைத் துறக்கும் முடிவில்-எண்ணெய் நிறுவனங்களை தாங்களே நிறுவகித்துக் கொள்கின்ற நிலை-பிரிட்டன் ஈரானின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, தங்களுடைய முதலீட்டியத்திற்குச் சிக்கல் ஏற்படுகிறபோது , இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனை உருவாகிறது. ஈரானுக்கு முன்பாக இப்போது இரண்டு வழிகள் உள்ளன: ஒன்று, தனது சொந்தப் பொருளாதாரத் தேவைகளை நிர்வகிக்க வேண்டும், இரண்டாவது, உள்ளூர் மதகுருமார்கள் அலி கமேனி போன்றவர்களால் இஸ்லாமிய அடிப்படை வாத வழக்கங்களை மீளப் பற்றும் முடிவு.

இந்தச் சூழலில்தான் அங்கு இஸ்லாமியப் புரட்சி வெடிக்கிறது. நாவலின் மையப் பாத்திரமான மர்ஜான் சத்ரபி ஆறுவயதுச் சிறுமியாக இந்தப் புரட்சியை என்னவென்றே தெரியாமல் எதிர்கொள்வதிலிருந்து தொடங்குகிறது பெர்சேபோலிஸ் நாவல் . நவீன பழக்கவழக்கங்களால் (பர்தா அணியாத) வளரும் சத்ரபிக்கு திடீரென ஒருநாள் இஸ்லாமியக் கட்டுப்பாடுகளின் நெருக்கம் குழப்படையச் செய்கின்றன. இருபாலர் பள்ளியாக பாட முறைகள் மாறுகின்றன. எங்கு பார்த்தாலும் பெண்கள் கலாச்சார அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். அதாவது, ஈரானிய அரசு மேற்கத்திய நவீன கலாச்சாரத்திற்கு எதிராக (Counter to Western Modernity) தனது அதிகாரத்தை நிறுவ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அடிப்படை இஸ்லாமிய கலாச்சாரப் பண்பை கையில் எடுக்கிறது. பிரிட்டிஷின் ஏதேச்சதிகாரப் போக்கிலிருந்து புரட்சி மூலம் விடுதலை பெறுவதா? அல்லது அடிப்படை இஸ்லாமிய கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்வதா? என்கின்ற இரட்டைக் குழப்பத்தில் அன்றைய ஈரானின் முகம் புரட்டிப் போடப்படுகிறது. (இதை இன்று ஓரளவுக்கு நம்மால் இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் சீன அரசின் மறைமுக அதிகாரத்துடன் பொருத்திப் பார்க்க முடியும்.)

பெர்சேபோலிஸ் நாவலின் தொனி எள்ளல் தன்மையுடையது. சிறுமியான சத்ரபி அடிப்படைவாதக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் விதம் நாவல் முழுக்க அதை நையாண்டிப் போக்கில் சொல்லப்படுகிறது. அதாவது, பிரக்ஞை பூர்வமாகப் பகடி செய்யாமல் ஒருவித Black Humour போல். சத்ரபி சிறுவயதில் அத்தனைப் பிரச்சனையையும் கடவுளிடம் (கற்பனையில் உரையாடுவது) சொல்கிறாள் (முறையிடுவதில்லை). கடவுள் நீண்ட வெள்ளை முடியும் தாடியுமாக மார்க்ஸைப் போல தோற்றமளிக்கிறார் என்கிறாள். கடவுள் அவளிடம், “நீ டாக்டராகப் போகிறாயா?” என்று கேட்பதற்கு இல்லை “நான் தீர்க்கதரிசியாகப் போகிறேன்”என்று, ”ஏன் இந்த உலகை சகிப்புத் தன்மை கொண்டதாக மாற்ற முடியவில்லை?” எனக் கேள்வி கேட்கிறாள். அவளது அப்பா மூலம் அறிமுகப்படுத்தப்படும் உலகத் தலைவர்கள் காந்தி, சேகுவாரா, பிடல் காஸ்ட்ரோ மற்றும் தத்துவவாதிகள் மார்க்ஸ், தெகார்த்தே என அனைவரையும்போல தன்னை ஒப்பனை செய்துகொண்டு புரட்சி செய்யப் போராட்டத்திற்கு கிளம்புவதாக விளையாடுகிறாள். ஒரு சமயம், மார்க்ஸ் அவளுக்கு கனவில் வரும் வெள்ளைத் தாடியும் சுருட்டை முடியுடன் இருக்கும் கடவுள் போல இருக்கிறார்.

ஈரான்-ஈராக் போர் துவங்கும்போது ஈராக்கிலிருந்து நிறைய பேர் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்கிறார்கள். சத்ரபியின் குடும்பமும் முயற்சிக்கிறது. ஆனால் கடைசியில் சத்ரபி மட்டும் ஆஸ்திரியாவுக்கு அனுப்பப்படுகிறாள். ஒருபுறம் கலாச்சார அடக்குமுறை, அடிப்படைவாத நெருக்கடி, பொருளாதாரச் சிக்கல் என அனைத்திலிருந்தும் வெளியாவதற்கு ஒரே தீர்வான நாட்டை விட்டு வெளியேறுவது நல்ல முடிவு என்றாலும் புலம்பெயரும் நாட்டின் கலாச்சாரம், அன்றாட நடைமுறைகள் அவளது உலகத்தை மேலும் சிக்கலாக்குகிறது. ஆஸ்த்திரியாவின் நவீன வாழ்க்கை முறை, மது விடுதி, களிப்பூட்டும் ஆடை ஒப்பனைகள், அதீத சுதந்திரம் எல்லாம் சத்ரபிக்கு உற்சாகத்தை அளிப்பதற்குப் பதிலாக மன அழுத்தத்தையும் புரியாதக் குழப்பத்தையும் தருகிறது. அங்கேயே படிப்பை முடிக்கின்ற சத்ரபி, பின் தாய்நாடுக்குத் திரும்பி வேலை செய்கிறாள், இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறாள், திருமணம் செய்து கொள்கிறாள், பின் திரும்பவும் நாட்டை விட்டு வெளியேறுவதோடு நாவல் முடிகிறது. கிழக்குக்கும் மேற்குக்குமான சுதந்திரத் தன்மையையும் நிலையின்மையும் சத்ரபியின் இளமைக் காலம் முழுவதும் அலைகழிப்பை ஏற்படுத்துகிறது. சத்ரபி மட்டுமில்லை அன்றைய ஈரானின் பெண்கள் அனைவரின் சுயமும் நவீனத் தன்னிலையாலும் அடிப்படைவாதத் தன்னிலையாலும் கட்டப்படுகிறது.

ஆஷிஸ் நந்தி தனது The Uncolonized Mind கட்டுரையில் ருத்யார்ட் கிப்ளிங் என்கின்ற ‘ஆளுமை’ எப்படி காலனியப்பட்ட இந்திய நிலத்தின் பழக்கங்களைக் கொண்ட மேற்கத்திய மனிதனுக்குள் உருவானது என உரையாடுகிறார். அதவாது, கிப்ளிங் போன்று பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் வளரும் குழந்தைகள் Indianized Westerner / Westernized Indian என்கிற பண்பாட்டுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். கிப்ளிங்கால் பிரிட்டிஷ்காரர்களை வெறுக்கவும் முடியாமல் முழுமையான இந்திய மனோநிலையால் கவரப்பட்டு இந்தியர்களால் பிரிட்டிஷ்காரராகப் பார்க்கப்படுவதன் பிரதிபலிப்புதான் Kim கதாப்பாத்திரம். இத்தகைய சுயம் ஒருவகையான பிளவுபட்ட தன்னிலையால் உருவாகிறது. முழுமையானச் சுயமாக இல்லாமல் பிளவுபட்ட சுயமாக. கிப்ளிங்கின் படைப்பூக்க மனம் இந்தப் பிளவுபடுவதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறது என்பதாலே Kim இந்திய நிலத்தில் அநாதையாக அலைவதும் (ஈரானைவிட்டுத் தப்பிச் சென்றாலும் சத்ரபி இதே போன்று ஆஸ்திரியாவில் சுற்றிக் கொண்டிருப்பாள்), தி ஜங்கிள் புக் போன்ற அதீதக் கற்பனைகளும் வரக் காரணமாக அமைகிறது. மர்ஜான் சத்ரபியின் எழுத்தை முழுமையாக இல்லாவிடினும் ஓரளவுக்கு கிப்ளிங்கின் படைப்பூக்க சுயத்துடன் ஒப்பிட முடியும். ஈரானிய எழுத்தாளர் முகமது மோக்தரி போன்றவர்கள் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகான ஈரான் இரட்டை கலாச்சாரத்தால் உருவானது என்கிறார்கள். புரட்சி மக்களுக்கு-முக்கியமாகப் பெண்களுக்கு-இரட்டைத் தன்மையான வாழ்வைக் கொடுத்துள்ளது.

நாவல் முழுக்க முழுக்க சத்ரபியின் வழியாகவே Autobiography வடிவில்தான் சொல்லப்படுகிறது. மனவோட்டங்களும் அவளைச் சுற்றியிருப்பவைக்கான எதிர்வினைகளும்தான் சித்திரங்களாக விரிகின்றன. கல்லூரி ஆசிரியர்களிடம் ஹிஜாப் அணிவதற்கு எதிராக, “ஆண்களைப் பார்த்து நாங்கள் சபலப்பட மாட்டோமா?” என்றும் பேருந்து பிடிக்க ஓடியதற்காகக் கண்டிக்கும் காவலனிடம் ”நீங்கள் எனது பின்பக்கத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டியதுதானே?” என்றும் திருப்பிக் கேட்கிறாள். நாவல் முழுக்க கலாச்சார காவல்களிடமிருந்து அவள் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறாள்.

நாவலின் ஆசிரியர் மர்ஜான் சத்ரபி, இயல்பில் அவர் ஓவியர் என்பதால் காமிக்ஸ் வடிவத்தில் நாவலுக்கான சித்திரங்களையும் (அவரது உருவத்தை மிக அழகாக, நிஜத்தில் இருக்கின்ற அதே ஒற்றுமையுடன்-மூக்கின் மேல் இருக்கும் மச்சம் கூட) வரைந்திருக்கிறார். அதேசமயம் வழக்கமாக கிராஃபிக் நாவலின் தனித்துவமான வண்ணப்படங்களோ சாகஸ சித்திரங்களோ கிளர்ச்சியூட்டும் கட்டிட அமைப்புகளோ எதுவும் பெர்சேபோலிஸில் கிடையாது. பெர்சேபோலிஸின் சித்திரங்கள் கருப்பு-வெள்ளையில் இருக்கும். எந்தவித அதிக ரசனைத் தன்மையும் இல்லாமல் தட்டையாக, பரவலாக கிராஃபிக் நாவல்கள் அளிக்கும் வாசிப்பு இன்பத்தை வாசிப்பவர்களுக்குத் தராது. கிராஃபிக்கின் வண்ண உலகை ரசித்தவர்களுக்கு பெர்சேபோலிஸ் ஏமாற்றத்தையே தரும். இத்தனையும் தாண்டி பெர்சேபோலிஸ் வாசிக்கப்பட வேண்டுமென்றால் அதன் கதையும் அது பேசியிருக்கும் அரசியலும் அரசதிகாரமும் கலாச்சார மாற்றமும் மிகவும் முக்கியமானது. அன்றைய ஈரானின் பெண் அடக்குமுறைக்குக் காரணமான அடிப்படைவாதத்தைப் (இன்றைக்கும் கூட) பேசியுள்ளது.

ஆசிரியரே சித்திரங்களை வரைகிற போது கதாபாத்திரங்களின் எண்ணவோட்டங்கள், கற்பனைகள், வெளிப்படுகிற விதம் என அனைத்தும் துல்லியமாக வெளிப்படுகின்றன. மர்ஜான் சத்ரபியின் கலாச்சார அழுத்தம் ஏற்படுத்திய பிளவுபட்ட சுயத்தின் பாதிப்பு மொழியால் வெளிப்படுத்த முடிகின்ற இடங்களுக்கு சவாலான சித்திரப் பிரதிபலிப்பு தீட்டப்படுகிறது. உதாரணமாக, 1979 இஸ்லாமியப் புரட்சி ஏற்படுகின்ற இடங்கள் கரிய பரப்பில் எண்ணற்ற பேய்கள் பறப்பது போன்றும், ஹிஜாப் அணிந்தபின் இராட்சஸ உருவமாகவும் உலகம் இருண்டு போவது போலும், கடவுளும் மார்க்ஸும் அருகருகே நிற்கின்ற படங்கள், கலாச்சார அடக்குமுறைக்கு எதிராக ஸ்பைடர் மேன் போல் கட்டிடங்களில் தாவி ஓடுவது என பௌதிக உலகின் குரூரம் சத்ரபியின் கற்பனைக்குள் சிதறலான குணங்களை, கிப்ளிங்கின் மோக்லி மாதிரியான தப்பித்து ஓடும் வழிகளையும் கொண்டிருக்கிறது.

உதவிய நூல்கள்

  1. ராமாநுஜம் கட்டுரைகள் (எதிர் வெளியீடு)
  2. ஆஷிஸ் நந்தியின் The Uncolonized Mind கட்டுரை

***

தூயன் – சமகாலப் படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை‘, ‘டார்வினின் வால்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. ‘கதீட்ரல்’ இவரது முதல் நாவல். மின்னஞ்சல்; thuyan154@yahoo.com

பெஞ்சமின் (எ) ஜெட்ஸன் – புனிதம் கெடாத புதினம்…

0

– கார்த்திகேயன் புகழேந்தி

என்னதான் மொழிப் புலமையும், விசாலமான அறிவும் இருந்தாலும் கடும் நேர வரயறைக்கு உட்படும்பொழுது எழுதுகோல், காகிதம், அழிப்பான் சகிதம் பணியமர்த்தப்பட்ட எந்த மனிதனும் ஒரு எந்திரனே

அலன் டியூரிங், நவீன கணினி யுகத்தின் தந்தை

தழியலில் தன்னையே மையக் கதாபாத்திரமாக வைத்து சம்பவத்தை விவரிக்கும் இந்த உத்திக்குப் பெயர் ’கொன்சோ முறை’. சில வருடங்களுக்கு முன் உலகின் முதல் கொன்சோ நாவலை எழுதிய ’ஜாக் கெரோவாக்’கிற்குப் போட்டியாக ஒரு கதாசிரியரை அப்படியே போகிற போக்கில் தன் நினைவோடையைக் கதையாக வடிக்கும்படி அமெரிக்காவின் தெருக்களில் நகர்வலம் அனுப்பினார் ’ராஸ் குட்வின்’.

கெராவாக்கும் இவரும் எதிரும் புதிருமான கதாசிரியர்கள். கெராவாக் 50 வருடங்களுக்கு முன் ஹிப்பிக்களுக்கெல்லாம் முன்னோடியான ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தவர். இன்றும் பாப் டைலான், பீட்டில்ஸ் என்று பல பாப் இசையின் முடி சூடா மன்னர்களின் ஆதர்சமான எழுத்துலக முன்னோடி. முரண்பாடுகளின் மூட்டை. தடாலடிப் பெயர்வழி. போதையிலேயே மிதந்தவர். நரம்பியல் கோளாறுடையவராக முத்திரை குத்தப்பட்டவர்.

புதியவரோ ஒரு சொல்லைக் கொடுத்தால் அதையே உள்ளீடாகக்கொண்டு ஒரு கவிதோவியத்தைப் படைக்கும் நயம் கொண்டவர். வாய் பேசாதவர். தர்க்கத்தை மீறாத கனவான். விடாப்பிடிக்கு பெயர் போனவர். ஒரு மைக்ரஃபோன், ஒரு கேமரா, மடிக்கணினி சகிதம் இணையத்தையே இதயமாகவும், நேரியல் கணித்ததையே நரம்பு மண்டலமாகவும் கொண்ட கவனகக் கலைஞர்.

”டிரோன்களும், பாட்களும் கோலோச்சியுள்ள இந்த காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு என்ன மாதிரியான முன்னேற்றங்களை அறிவியலில் சாத்தியமாக்கியுள்ளதோ அதேபோல் செயற்கை படைப்பாற்றலும் கலைத்துறையில் பெரிய மாற்றங்களைச் செய்யக் கடவது” என்று கட்டியம் கூறுகிறார் ராஸ் குட்வின்.

யார் இந்த ராஸ் குட்வின்? கெரோவாக்குக்கே போட்டியாக அவர் நகர்வலம் அனுப்பிய கதாசிரியர் யார்?

கூகிள் கண்டெடுத்த ராசுக்குட்டிதான் ராஸ். கவிதோவியம்(Poem Portraits) என்ற கலை வடிவை எஸ் டெல்வினுடன் சேர்ந்து தோற்றுவித்த ஒபாமா தோட்டத்து கன்றுக்குட்டி. செயற்கை படைப்பாற்றலைக்கொண்டு கவிதை வரிகளும், பாடல்களும் இயற்றத் துவங்கிய இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிகாலத்தில் அவருக்காக பல உரைகளை இயற்றியுள்ளார். இனி வருங்காலத்தில் சிம்பொனி இசை முதல் டிஸ்னி போன்ற பெரிய திரைப்படக் கம்பெனிகள் எடுக்கும் படங்களின் கதைவரை இப்படித்தான் உருவாகும் என்று அடித்துச் சொல்கிறார்.

அதை மெய்ப்பிக்கும் முயற்சியில்தான் ஒரு ரோபோ காரை ரோந்தில் அனுப்பிவைத்தார். எப்படி கெராவாக் தன் பெண் தோழிகளை வண்டியை ஓட்டச்சொல்லிவிட்டு கையில் கிடைக்கும் காகித்திலெல்லாம் குறிப்புகளைக் கிறுக்கிக்கொண்டே செல்வாரோ அதேபோல் கேமரா காட்டும் வெளிகள், மைக்ரஃபோன் பிடிக்கும் குரல்கள், ஜிபிஎஸ் காட்டும் இடம் எல்லாவற்றையும் உள்ளீடாக எடுத்துக்கொண்டு ஏற்கெனவே பதிவேற்றப்பட்ட இலக்கிய அடித்தளத்தைக்கொண்டு காட்சிகளைப் புனைகிறது இந்த மகிழுந்து. ஒரு கதாசிரியர் அல்லது இயக்குநரின் வேலை அதைத் தொகுப்பது மட்டுமே. கெராவாக்கும் எடுத்த குறிப்புகளும் அப்படித்தான். குறிபார்க்காமல் 100 பேரை 3 நிமிட்த்தில் சுட்டு வீழ்த்தும் லோகேஷ் படத்தில் வரும் பீரங்கியைப்போல் தன் டைப்ரைட்டரில் செருகப்பட்ட 120 அடி பேப்பர் சுருளில் தன் பல வருட குறிப்புகளை அடிப்படையாக்கொண்டு மூன்றே வாரத்தில் கதையை தட்டச்சு செய்து முடித்தார். அவர் எழுத்தை அவரது பயணம், உடன் பயணித்தவர்கள் பேசியது, ஊடாடிய நிகழ்வுகள் எல்லாம் வழிநடத்தினாலும் எதை நோக்கிக் கதையை நகர்த்தவேண்டும் என்ற ஒரு முன்தீர்மானத்தோடுதான் தட்டச்சைத் தொடங்கினார்.

100 வருடங்களுக்குமுன் எந்திரகதியில் இயங்கும் மனிதனைப் பற்றி டியூரிங் பேசினார். 50 வருடங்களுக்குப் பிறகு கொராவாக் படைப்பூக்கம் கொண்ட ஒருவனால் எப்படிப்பட்ட சூழலிலும் ஒரு கதையை சிருஷ்டிக்க முடியும் என்று நிரூபித்தார். இன்று மனிதனுக்கு இணையாக கற்பனை செய்யும் முயற்சியில் இருக்கும் 4 சக்கர கதாசிரிய இயந்திரத்தைத்தான் ராசுக்குட்டி பயிற்றுவிக்கிறார்.

இது எப்படி செயல்படும் என்பதை ஒரு உதாரணத்தோடு விளக்கினால் இந்த எழுத்து பானியைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். வருங்காலத்தில் நெல்லைப் பின்புலத்தில் ஒரு கதை வேண்டும் என்று ஒரு பட தயாரிப்பாளர் இந்தக் காரை வாடகைக்கு எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கரிசல் எழுத்தாளர்களின் கதைப் பின்புலங்கள், வர்ணனைகள் எல்லாம் இதன் நரம்பு மண்டலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். பின்பு கதை நடக்கும் அந்தப் பிரதேசத்தில் மட்டும் அது பவனி வரும். நெல்லையப்பர் கோயிலைக்கடக்கிறது என்றால் ஜிப்எஸ்ஸில் டேக் செய்து யாரெல்லாம் அந்தத் தளத்தைப் பற்றி பதிவிட்டிருக்கிறார்களோ அது எல்லாவற்றையும் உள்ளீடாக எடுத்துக்கொள்ளும். கூகிள் லென்ஸ் போன்ற மென்பொருளின் உதவியுடன் போகும் வழியில் இருக்கும் மரம், செடிகொடி, வாகனங்கள் எல்லாவற்றைப்பற்றிய தரவுகளையும் கேமரா வழியாக குறிப்புகளாக மாற்றிக்கொள்ளும். ஒலிப்பு முறையைத் தொடர்புபடுத்தி தேவையான பதிவுகளை வட்டார வழக்கிற்கும், மற்றவற்றை உரைநடையாகவும் பதிந்துகொள்ளும். ஒரு நேரத்தில் ஒரு வாக்கியம் என்று வரிசைகரமாக இயற்றிக்கொண்டே பயணிக்கும்.

என்னதான் நொடிக்கு பல வரிகளை அது எழுதித் தீர்த்தாலும் இன்னும் கருப்பொருள், கதாபாத்திரத்தை எல்லாம் வடிவமைக்கும் அளவிற்கு அது வளரவில்லை என்றது ஹாலிவுட் வட்டாரம். ராஸ் வைத்த ஜெட்ஸன் என்ற பெயரை மாற்றி தனக்குத் தானே பெஞ்சமின் என்று நாமகரணம் செய்துகொண்டு முன்னே நகர்ந்தது மகிழுந்து. (உலகின் முதல் AI கதாசிரியர்)

“மொழிதான் மனிதனை இயங்கச்செய்யும் மென்பொருள். மராபார்ந்த ஒரு மொழியின் உவமைகள், உருவகங்கள், நகைச்சுவை குறிப்புகளை,வழிப்போக்கன் யார் முக்கிய கதாபாத்திரம் யார், யார் பார்வையில் கதை சொல்லப்படுகிறது என்பதற்கெல்லாம் எல்லாம் ஒரே நாளில் தர்க்கத்தால் கட்டமைக்க முடியாது. மற்றபடி மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் அறிவுசார் கூறுகளை(facts) இந்த முறையைப் பயன்படுத்தி ஒரு கதாசிரியரோ அல்லது இயக்குநரோ சேகரிப்பதில் நிறைய நேரத்தை சேமிக்க முடியும்” என்கிறார் ராஸ்.

“அதற்காக புனைவு சாத்தியமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட மிகை இல்லாது சரியான கலவையில் உணர்வுகளையும், உவமைகளையும் என் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும்விதம் பல பத்திகளை பெஞ்சமின் எனக்கு எழுதிய கதையில் நீங்கள் படிக்கலாம்.” என்பது ராஸ் குட்வினின் வாதம்.

“அக்மார்க் மனித மூளையில் உதித்த சிந்தனைகளையும், வாக்கியங்களையும் மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஒருவர் சொல்பவராயினும் அவர் ஒரு சமூகத்தை அல்லது ஒரு சாராரைப் பற்றி ஒரு தனி மனிதனின் பொதுப்புத்தியில் உள்ள கருத்துக்களையும், வன்மங்களையும், கற்பிதங்களையும் காழ்ப்பையும் அவருடைய எழுத்திலிருந்து பகுத்தறியும் ஊடுகதிர் சட்டகமாக(editor/fact checker) இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்” என்கிறார் குட்வின்.

சரிதான். காட்சி ஊடகத்தில் சரித்திரப் படங்கள் எடுக்க ஏன் பொருட்செலவு அதிகம் ஆகிறது? ஏனென்றால் அந்த காலத்தில் எல்லாமே மனிதனின் கைப்பட கலை நயத்தோடு கட்டப்பட்டவை. மின்சாரத்திற்கு முந்தய காலத்தில் ஒரு தீப்பந்தத்தின் பிடிப்புச்சட்டகத்தில்கூட ஒரு சின்ன வேலைப்பாடு இருக்கும். அதையெல்லாம் மீள் உருவாக்கம் செய்யும் செலவு நடிகர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு ஆகும்…

அந்த காலத்தில் ஒரு கைவினைஞர் பொருட்களின் வடிவத்தை செழுமைப்படுத்தத்தான் தன் நேரத்தை செலவிட்டார். அகழ்ந்து எடுத்த கீழடி முதல் இன்று நாம் எழுப்பும் ஸ்மார்ட் சிட்டிவரை தானியங்குப் பொறிகள்தான்(automation) செங்கல் சூளைகளில் எந்திரத்தனமான வேலைகளில் உழலாமல் மனித சக்தியை இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வழிவகுத்துள்ளது. இன்று கிராஃபிக்ஸ் பெரும் அளவிற்கு மனித ஆற்றலை திரைத்துறையில் மிச்சப்படுத்துகிறது. வரிசையாக வரலாற்றுப் படங்கள் வெளியாவதற்கும் அதுவே காரணம். ஏதோ ஒரு கட்டத்தில் அனிமேஷன் போன்ற ஆட்டமேஷனை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு எல்லாத் தொழில்களும் தள்ளப்படும்.

ஒரு மருத்துவர், நோய்க்குறைக் கண்டுபிடிப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும்தான் நேரத்தை செலவிட வேண்டும். குமாஸ்தா வேலைகளை ஒரு ஆள் அல்லது ஏஐ செய்ய வேண்டும். அப்படியென்றால் அடிமட்ட வேலைகளை எல்லாம் ரோபோ எடுத்துக்கொள்ளுமா? என்றால். இல்லை. அப்போதும் சுஜாதா கதைகளில் வருவதுபோல் எந்த பொத்தானை அழுத்தினால் என்ன வேலை நடக்கும் என்று பொறியை இயக்கத் தெரிந்த தெரிந்த மனிதன் தேவை.

அந்த காலத்தில் ஒரு மன்னரின் கோட்டோவியத்தை வரைய பல மாதங்கள்கூட ஆகும். ஓவியரின் நேரத்திற்காக பெரும்பணத்தை அவர்கள் செலவுசெய்யத் தயாராக இருந்தார்கள். இன்று நாம் யாரும் புகைப்படம் எடுக்க ஸ்டுடியோவுக்கெல்லாம் போவதில்லை. திருமணம் போன்ற பிரத்தியேகத் தேவைகள் தவிர்த்து. ஆண்டி வார்ஹாலின், பிக்காசோவின், டாலியின், வான்கோவின் ஓவிய பாணியை மென்பொருள் தத்ரூபமாக பிரதியெடுத்து பிரிஸ்மா ஃபில்டர்களாக்கி ஒரு புகைப்படத்தில் தட்டையாகப் பொருத்தி சில விநாடிகளில் பைசா செலவில்லாமல் கொடுத்துவிடுகிறதல்லவா? அப்படி ஒரு நாள் ஏஐயிடம் கரிசல் நிலத்தைப் பற்றி கதை எழுதச்சொல்லும்பொழுது அது கி.ராவின் எழுத்தையும், இளையராஜாவின் இசையையும், சில்பியின் சிலையையும், பி.சி.ஸ்ரீராமின் கேமராக் கோணங்களையும் கலந்துகட்டிய ஒரு குறைந்தபட்ச டெம்ப்ளேட்டை உருவாக்கும். (காப்புரிமை சட்டங்கள் எல்லாம் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன). இதை மென்பொருளாகப் பதிவிறக்கம் செய்துகொண்டால் ஒரு செல்போனைக்
கையில் வைத்திருக்கும் யாரும் சரியான உள்ளீடுகளுடனும், தேவையான இடத்தில் செழுமைப்படுத்தலுடனும் கதை எழுதலாம், குறும்படம்
எடுக்கலாம். ஆகவே கதாசிரியர்களும், வரைகலைஞர்களும், இசையமைப்பாளர்களும் பரிச்சார்த்த முயற்சிகளுக்கு இவற்றை இயக்கத் தெரிந்தவர்களாக இருந்தால்தான் இதுவே ஒரு புதிய தொழிலாக மாறும்பொழுது அதன் பலனை அடைய முடியும்.

முயன்றால் முடியாதது என்று எதுவுமே கிடையாது. காகிதமும், மையும் தீறத் தீற எழுதிய நாம்தான் இன்று கெராவாக்கின் நீண்டுகொண்டே போகும் வெள்ளைத் தாள்போன்ற வலைப்பூக்களில் அதைவிட வேகமாக தட்டச்சு செய்கிறோம். பார்த்துப்பார்த்து படம்பிடித்த படச்சுறுல்களிலிருந்து பார்ப்பதையெல்லாம் படம் பிடித்துத் தள்ளும் கேமராக்களை அனாயாசமாக உபயோகிக்கிறோம். ரஹமான் போன்ற ஆளுமைகள் தொடர்ந்து முன்னணியில் இருப்பதும், அவர்களது இசையில் ஒரு பாடகரின் குரல்,கருவிகளின் ஒலி பலமடங்கு மெருகேறுவதும் படைப்பாற்றலோடு சேர்ந்த தொழில்நுட்பத்தில் அவர்களது சரியான முதலீடுகளால்தான். அதேபோல் எழுத்தாளர்களின் எல்லா தொழில்நுட்பத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் ஒரு இடமாக பதிப்பகங்கள் மாற வேண்டும். மாறும் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளவில்லை என்றால் பல கோடிகள் புழங்கும் உணவுத் துறையை ஸ்விக்கி, சொமாட்டோ, டன்ஸோ போன்று நவீன வெட்டிக்குடிகளை உருவாக்கும் செயலிகள் எப்படி கபளீகரம் செய்கின்றனவோ அப்படி ஒரு நாள் பதிப்பகங்கங்களையும் ஒரு தொழில்நுட்பம் அச்சகங்களாக சுருக்குவதைத் தவிர்க்கவே முடியாது.

ஒரு போட்டிக்குமுன் விளையாட்டு வீர்ர்கள் பலமுறை அந்த களத்தில் நடந்துபார்ப்பார்கள் இல்லையா? அதுபோல்தான் நியூ யார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் வரையிலான தன் பல வருட கார் பயணங்களை ஜாக் கெரோவாக் குறிப்புகளிலிருந்து ஒரு துடிப்பான புதினமாகவே ‘On the road’ என்ற பெயரில் வடித்தார். ஏராளமான தனிக்கைக்குப் பின் அது பிரசுரமாக 7 ஆண்டுகள் பிடித்தன. இன்றும் அது உலக யுத்தத்திற்கு பின்பான தலைமுறை(beat generation) (1950கள்) அமெரிக்க வாழ்க்கையின் தடைசெய்ய்யப்பட்ட பக்கங்களைத் தாங்கி நிற்கும் முக்கியமான பதிவு. 2012ல் திரைப்படமாகவும் வெளிவந்தது.

பெஞ்சமின் முதன்முதலில் ‘சன்ஸ்ப்ரிங்’ என்ற குறும்படத்திற்கு திரைக்கதை எழுதியது. 2017இன் தொடக்கத்தில் கெரோவாக் சென்ற அதே பாதையில் பயணித்து ‘1 the road’ என்ற புதினத்தை செயற்கை படைப்பாற்றலைப் பயன்படுத்தி ராஸ் குட்வின்(பென்ஜமின்) 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் எழுதியுள்ளார். எழுத்துப்பிழைகள், இடம், நேரம் பற்றிய குறிப்புகள் என்று பதிவான எதையுமே அவர் தொகுக்கவில்லை. ஒரு வருடத்திற்குள் அது அப்படியே பதிப்பிக்கப்பட்டது.

இப்போதுதான் ஏஐயில் படங்கள் வரைந்து அழகுபார்த்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழ் எழுத்துலகிற்கு ஒரு பெஞ்சமின் வேண்டுமா? என்று கேட்பது உண்டிகோள் வைத்திருப்பவனிடம் எட்டு தோட்டாக்கள் கொண்ட பிஸ்தல் வேண்டுமா…சரமாறி சுடும் பீரங்கி வேண்டுமா…என்று கேட்பதைப்போல் ஆகிவிடும்.

எந்த ஆயுதத்தைத் தேர்வு செய்கிறோம் என்பது ஒரே நேரத்தில் எவ்வளவு பேரை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை மட்டும் சார்ந்ததல்ல(scale)…நமது இயங்குசக்தியையும்,களத்தையும் சார்ந்ததே(capacity). பத்திரிகைகள், புத்தகங்கள் தாண்டி ஒலி\ஒளி ஊடகங்களில்(OTT) கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைப் பெற முதலிலி நம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்பு இருப்பின் இரண்டு நாவலையும் படியுங்கள். படத்தையும் பாருங்கள். சேட் ஜிபிடி, ஐலேஸா, இந்தியா ஏஐ உள்ளிட்ட ஏனைய செயற்கை படைப்பாற்றல்சார் கருவிகளைப் எப்படித் திறம்பட எழுத பயன்படுத்தலாம் என்று யோசிக்கத் தோன்றும்.

இந்தியச் சந்தைகள் நம் சாலைகள் போலவே லேன்கள் இல்லாதவை. ஆர்க்கெஸ்ட்ரா இல்லாத இசையை நாளை முதல் கேட்கமாட்டேன் என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால் இந்த BTS யுகத்தில் கடிவாளம் கட்டிக்கொண்டு அண்ணாசாலையில் ஒரே நேர்க்கோட்டில்தான் கடப்பேன் என்று அடம்பிடிப்பதாகிவிடும் செயல் அது. சொல்லப்போனால் ஆட்டோமாட்டிக் கியரில் வண்டி ஓட்டுவது இன்றைய போக்குவரத்து நெறிசலில் எவ்வளவு பெரிய சௌகரியம். அதை உபயோகிப்பதான் நம் ஓட்டும் திறனை யாரும் குறைத்து மதிப்பிடப்போவதில்லையே. இதற்கப் பொருத்தமான சுஜாதாவிடம் ஒருமுறை இதுபற்றி கேட்கப்பட்டது. அவருடைய பதிலோடு நிறைவு செய்வோம்.

கேள்வி : ஒரு வார்த்தையில் இளையராஜா இசையையும், ஏ.ஆர்.ரஹமான் இசையையும் ஒப்பிடுவதாக இருந்தால் உங்கள் பதில் என்ன?

சுஜாதா : அவர் ‘அம்மா’, இவர் ‘ஹம்மா’

***

பதிப்பாளர் கார்த்திகேயன் புகழேந்தி, இவர் வானவில் புத்தகாலயம் எனும் பெயரில் பதிப்பகம் நடத்தி வருவதோடு. பதிப்புலகம் தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகிறார். பல்வேறு சர்வதேச, தேசிய ஊடகங்களில் பதிப்புலகம் தொடர்பான இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன – மின்னஞ்சல்:Writerpk86@gmail.com

புவியெனும் கொலைக்களம் – கர்ட் வோன்னுகாட் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலை முன்வைத்து

0

சுனில் கிருஷ்ணன்

சிறுவயது முதல் படக்கதைகள் காமிக்ஸ்கள்  வாசித்து வந்திருந்தாலும் சித்திர நாவல் உலகிற்கு நான் புதியவன். அவற்றை வாசிக்க முதல் தடை அவற்றின் விலை, மேலும் அவை சிறுவர்களுக்குரியது எனும் மனப்பதிவு. எழுத்தாளராகச் சொற்களின் இடத்தை காட்சிகள் எடுத்துக்கொள்வது என்பது சொற்களின் போதாமையைச் சுட்டுவது எனும் எண்ணம் கூட எனக்கு உண்டு. எனக்கு காணக் கிடைத்த பெரும்பாலான கிராஃபிக் நாவல்கள் வெகுமக்கள் ரசனைக்குரிய மிகு புனைவாகவே இருந்தது. ஆகவே எப்போதாவது யதார்த்தம் அலுக்கும்போது சாய்ந்துகொள்ளும் சாய்மானம் எனும் எண்ணமே எனக்கிருந்தது. சிங்கப்பூர் வாசத்தின்போதுதான் நான் சித்திர நாவல்களை வாசிக்க தொடங்கினேன். வாசித்துப் பார்க்க வேண்டும் எனும் ஆர்வம், அவை நூலகங்களில் இலவசமாக வாசிக்கக் கிடைத்தது என்பவைதான் காரணங்கள். சித்திர நாவல்கள் வாசிப்பதில் உள்ள பெரும் சவால் நல்ல நாவலை / நமக்கான நாவலைக் கண்டடைவதுதான். ஏனெனில் சந்தையில் பதின்ம வயதினருக்கான சித்திர நாவல்கள் காமிக்ஸ்கள் அநேகம் காணக் கிடைக்கின்றன. சித்திர நாவல்கள் மெல்ல என்னை ஈர்த்துக் கொண்டன. ஒவ்வொரு முறை நூலகம் செல்லும்போதும் அங்கேயே ஒன்று அல்லது இரண்டு நாவல்களை வாசித்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டேன். சித்திர நாவல்கள் வாசிக்கவே நூலகம் செல்வது எனும் நிலையை நோக்கி வெகு விரைவிலேயே நகர்ந்தேன்.

இலக்கியம் போலவே சித்திர நாவல்களிலும் பொழுதுபோக்கு படைப்புகள் தீவிர இலக்கிய படைப்புகள் எனும் பகுப்பு உண்டு. ஓவியம் வழி கதை சொல்லுதல் என்பது ஒன்றும் நமக்கு புதிதல்ல. சித்தன்னவாசல் ஓவியத்தில் மலர் கொய்யும் துறவியை பெரிய கதையின் பகுதியாக நம்மால் காண முடியும். சித்திர நாவலை திரைக்கதையுடன் ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. திரைப்படம் அசையும் காட்சிகளால் ஆனது எனில் சித்திர நாவல் உறைந்த சட்டகங்கள் கொண்ட ஓவியங்களால் ஆனது. ஓவியம் காட்சியை மட்டும் காட்டுகிறது பொருள்கொள்ளுதலை முழுக்க நம் கற்பனையில் நிகழ்த்த சொல்கிறது. நாவல் பொருள்கொள்ளுதலை எளிதாக்குகிறது ஆனால் காட்சியை கற்பனைக்கு உரியதாகச் சொல்கிறது. சித்திர நாவல் நாம் இதை காண வேண்டும் என நம் கற்பனைக்கு திண்ணமான வழிகாட்டுதலை அளிக்கிறது, திரைப்படம் நாம் இதைக் காண வேண்டும், அதை இன்ன வேகத்தில் தான் காண வேண்டும் என்றும் சொல்கிறது. சித்திர நாவலை திரைப்படத்திற்கும் நாவலுக்கும் இடையேயான ஒரு வடிவமாக வரையறை செய்ய  முடியும்.

ஓவியங்களை அதிகமாகப் பயன்படுத்தி சொற்களைத் துணைக்கழைத்து கதை சொல்லும் முறை எனச் சொல்லலாம். ஓவியத்திற்கு எது தேர்ந்தெடுக்கப்படுகிறது? அது எந்த அளவிற்கான சட்டகத்தைப் பயன்படுத்துகிறது? சில ஓவியங்கள் முழு பக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். அந்த ஓவியத்திற்கான முக்கியத்துவம் என்ன? இப்படியாகச் சித்திர நாவல் காமிக்ஸிலிருந்து வேறுபடுவதை கவனிக்கலாம். முக பாவனைகள், உடல்மொழிகள் எளிதாக கடத்தப்படுகின்றன. இப்படி தனக்கென சில பாதைகளை வகுத்துக்கொண்டு, தனக்கென சில இலக்கணங்களை உருவாக்கிக்கொண்டு சித்திர நாவல்கள் முன் நகர்கிறது.

ர் இலக்கிய நாவல் சித்திர நாவலாக உருமாற்றம் அடைந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்க எழுத்தாளரான கர்ட் வோன்னுகாட்டின் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலாக வடிவம் பெற்றுள்ளது. ரியான் நார்த் எழுத்தாக்கத்தில், ஆல்பர்ட் மான்டிஸ் சித்திரங்களுடன் 2020 ஆம் ஆண்டு வெளியானது. ஓர் இலக்கிய நாவல் சித்திர நாவலில் என்னவாக உருமாற முடியும் என்பதற்கு இந்நாவல் மிகச்சிறந்த உதாரணம்.  ரியான் நார்த்தால் அசல் நாவலாசிரியரின் பகடியையும் பார்வையையும் அபாரமாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது. தனக்கேயுரிய சுதந்திரத்துடனும் துடுக்குத்தனத்துடனும் நாவலுக்கு சித்திர வடிவத்தை அளித்துள்ளார். உதாரணமாக நாவல் தொடங்கும் இடத்திலேயே இரண்டு வடிவங்களுக்கு இடையேயான ஒற்றுமையைச் சொல்கிறார், இரண்டும் ஒரே இடத்தில் தொடங்குகிறது, ஒரே இடத்தில் முடிகிறது என்கிறார். பின்னர் கதை மாந்தர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். துணைப் பாத்திரங்களின் இயல்புகளைச் சொல்கிறார். ஒவ்வொரு துணைப் பாத்திரங்களையும் மூன்று சட்டகங்களில் அறிமுகப்படுத்தும் உத்தியைக் கையாள்கிறார்.

நாவலின் மையம் பில்லி பில்க்ரிமின் வாழ்க்கையைச் சுற்றி நிகழ்கிறது. பில்லியின் காலக்கோடு என ஒரு சட்டகத்தை வரைந்துள்ளார். அவன் எப்போது பிறந்தான், எப்போது அவனிடம் சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிலை வந்தடைந்தது, எப்போது ராணுவத்தில் சேர்ந்தான், எப்போது போர்க்கைதியாக ஆனான், எப்போது மனநோயாளியாக ஆனான், பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான், வெற்றிகரமான கண் கண்ணாடி நிபுணராக திகழ்கிறான், அயல்கிரகவாசிகளால் கடத்திச் செல்லப்படுகிறான், பின்னர் தான் காலம் குறித்து அறிந்துகொண்டதை விளக்குகிறான். லயன்ஸ் சங்கத் தலைவராக இருக்கிறான், மரணமடைகிறான். பூமிவாசிகள் காலத்தை நேர்கோடாகக் காண்கையில் அந்நிய கிரகவாசிகளான ட்ராஃபல்டோர்காரர்கள் காலத்தை நான்கு நிலைகளில் காண்பவர்கள். அவர்களுடைய கோணத்திலிருந்து பில்லி ஒரே சமயத்தில் ஒரு இடத்தில் உயிருடன் கண்ணாடி நிபுணனாக இருக்கும்போது இன்னொரு இடத்தில் மரணமடைந்த சடலமாக இருக்கிறான். அவர்கள் கோணத்தில் மனிதர்களுக்கு மரணமே இல்லை. மரணம் என்பது எத்தனையோ செயல்பாடுகள் போல அதுவும் ஒன்று. அந்நிய கிரகவாசிகள் காலத்தை மலைத்தொடரைக் காண்பது போல காண்கிறார்கள்.

பில்லி எப்படியோ ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். அவனுக்கு அதற்கான தகுதியோ விருப்பமோ இல்லை என்பதை அவனது நண்பர்கள் அவனுக்கு சுட்டிக்காட்டுகிறார்கள். ஜெர்மானியர்களின் போர்க்கைதியாக அவனும் அவனது நண்பன் ரோலாண்ட் வியரியும் முகாமிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். சரியான காலணி கூட அணியாத பில்லி  பரிதாபகரமான நிலையில் உடன்வருகிறான். தலைக்கு தொப்பியோ கவசமோ கூட இல்லை. ரியான் நார்த் ரொலாண்டை அவனது முழு ராணுவ உடையில் ஒரு பக்கம் முழுக்கச் சித்தரித்து இருப்பார், எதிரியைப் பற்றி கையேடு, கிளர்ச்சியூட்டும் நிர்வாணப் படம், பருத்தி உள்ளாடை, அதற்கு மேலாக கம்பளி உள்ளாடை, அதற்கு மேலாகக் கம்பளி மேலாடை, அதன்மேல் ஸ்வெட்டர், ஜாக்கெட், கோட் தொடங்கி முக்கோணக் கத்தி வரை அவனது சகலத்தையும் அட்டவணைப்படுத்தியிருப்பார் நார்த். குரூரங்களின் மீதும் நாயக வாழ்வின் மீதும் அதீத ஈடுபாடு கொண்டவன் வியரி. பில்லியைப் பலமுறை காப்பாற்றியதாகச் சொல்லிக்கொள்வான். வியரியின் இந்த வினோதக் கோலத்தை கண்ட ஜெர்மானியர்கள் அவனிடமிருந்து காலணிகளைப் பிடுங்கி பில்லிக்கு கொடுப்பார்கள். அவனது காலணி பறிக்கப்பட்ட ஒன்பதாவது நாளில் காலில் புண் வந்து மரித்துப் போவான். அவனது மரணத்திற்கு காரணம் பில்லிதான் எனச் சாகும் தறுவாயில் சொல்லிவிட்டு செல்வான். அப்போது உடனிருந்த பால் லாசரோ அவனுக்காக பில்லியைக் கொன்று பழி தீர்ப்பதாக உறுதி எடுத்துக்கொள்வான். அதை இறுதியில் நிறைவேற்றவும் செய்வான்.

இந்த நாவலுக்கு ‘குழந்தைகளின் போராட்டம்’ அல்லது ‘மரணத்துடனான கடமையின் நடனம்’ எனப் பெயரிட்டுள்ளார். ஸ்லாட்டர் ஹவுஸ் போரை நிராகரிக்கும் நாவல். போரில் நியாயம் என்பது என்ன? உண்மையில் நாம் நினைக்கும் அளவிற்கு எதிரெதிர் தரப்புகள் வெவ்வேறானவையா? ட்ரெஸ்டன் நகரத்தின் மீதான அமெரிக்க தாக்குதலின் பின்புலத்திலிருந்து இந்தக் கேள்விகளை எழுப்புகிறார். நாவலின் மையமான பேசுபொருள் மனிதனுக்கு சுயத்தேர்வு என்று ஏதேனும் உண்டா? அப்படி ஏதுமில்லை என அன்னியகிரகவாசிகளின் வழியாக அறிந்துகொள்கிறான் பில்லி. அப்படியானால் நாம் விதியின் அல்லது காலத்தின் கைப்பாவைகள் தானா? தனக்கென எதையும் வகுத்துக்கொள்ள முடியாத, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்திருக்கும் குழந்தைகளின் நிலையிலிருந்து நாம் போரிட்டோம், அவை தவிர்க்க முடியாதது ஆகவே நிகழ்கிறது. ட்ராபல்டோர்வாசிகள் பிரபஞ்சம் எப்படி அழியும் என்பதை விளக்குகிறார்கள், அவர்களில் ஒருவர் ஒரு சுவிட்சை தவறாக இயக்க எல்லாம் அழிகிறது, பில்லி ‘அப்படியானால் அதை நீங்கள் தடுக்கலாமே?” என கேட்பான். இல்லை நாங்கள் அதை அனுமதிப்போம், பிரபஞ்சம் முந்தியும் அழிந்தது, பிறகும் அழியும் அதை எதற்கு தடுக்க வேண்டும்!’ என்பார்கள். விமான விபத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஒரேயொருவனாக பில்லி மருத்துவமனையில் இருக்கும்போது அவனருகே அமெரிக்க ஜெனெரல் அதே மருத்துவமனையில் படுத்திருப்பார். வெளியுலகிற்கு ட்ரெஸ்டன் குண்டுவெடிப்பு பற்றிய தகவலை மூடி மறைக்க முயலும்போது, நான் அங்கிருந்தேன் என பில்லி அவரிடம் கூறுவான், பேரழிவின் சாட்சியாக குழந்தைகளும் பெண்களும் மொத்தமாக வான்வழி தாக்குதலில் மரணித்ததை அவன் கண்களால் பார்த்திருப்பான். ஜெனெரல் அவனிடம் ‘அது தவிர்க்க முடியாதது’ என்பார். பில்லியம் ஆமோதிப்பான். கர்ட் வோனேனுகாட் மனிதர்களின் இந்தப் பொறுப்பற்ற தன்மையை இடித்துரைக்கிறார். உண்மையில் மனிதன் தனது சுயத்தேர்வு எனும் வாய்ப்பை தவறாக பயன்படுத்திவிட்டு காலத்தின் மீதும் விதியின் மீதும் பழிபோடுகிறான் என்பதே அவரது பிரதான குற்றச்சாட்டு. 

நாவல் முழுவதும் ‘இப்படியாக இது நடந்தது’ (So it Goes) எனத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. நிகழ்வுகளின் தவிர்க்க முடியாத தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. உண்மையில் நமது தேர்வுகளின் விளைவுகளுக்கு விதியின்மீது பழி சுமத்துகிறோம் என்பதே நாவலாசிரியர் மனிதர்கள் மீது வைக்கும் குற்றசாட்டு. கில்கோர் எனும் வெளியுலகம் அறியாத அறிவியல் புனைவு எழுத்தாளர் கதைகளால் பில்லி மிகவும் ஈர்க்கப்படுகிறான். ட்ராஃபல்டோர்வாசிகள் மற்றும் அவர்களது காலக்கோட்பாடு கில்கோரின் காலக்கோட்பாடுகளுடன் நெருக்கமாக இருப்பதைக் காண முடியும். தனது மரணம் என்பது உண்மையில் மரணமல்ல, தன்னுடையது மட்டுமல்ல, எவருடைய மரணமும் மரணம் அல்ல, அவை புகைப்பட ‘போஸ்’ போல ஒரு நிலை மட்டுமே எனும் அறிதல் அவனுக்கு ஆசுவாசத்தை அளித்திருக்க வேண்டும். எஞ்சியிருப்பதன் துயரத்தையும் குற்ற உணர்வையும் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். உண்மையில் இவை யாவும் பில்லி உலகில் தரித்திருக்க அவனது மனம் உருவாக்கிக்கொண்ட மாயைகள், சல்ஜாப்புகள் என உளவியல் கோணத்திலிருந்து வாசிக்க ஒரு இடமுண்டு. 

ரியான் இந்தச் சித்திர நாவலை கர்ட் வோன்னுகாட்டின் மேற்கோள் ஒன்றுடன் தொடங்குகிறார். “ட்ரெஸ்டன் குண்டுவீச்சினால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை, என்னைத் தவிர, இந்த நாவலை எழுதிய வகையில் அங்கே செத்த ஒவ்வொருவரும் எனக்கு இரண்டு டாலரோ மூன்று டாலரோ ஈட்டித் தந்திருக்கிறார்கள்”. சுயமாக முடிவெடுக்கத் தெரியாத, எல்லோராலும் கைவிடப்பட்ட உயிரினமாகவே மனிதன் சித்தரிக்கப்படுகிறான். வாழ்க்கைக்கு எந்த அர்த்தமோ இலக்கோ இல்லை.  இனிய நினைவுகள் கொண்ட காலத்திற்கு துன்பம் வரும்போது திரும்பிச் செல்வதைத் தவிர வேறேதும் செய்வதற்கு இல்லை. வேற்று கிரகவாசிகள் பூவுலகிலிருந்து ‘மோண்டானா’ எனும் நீலப்பட நடிகையை கவர்ந்து வருகிறார்கள். அவளுக்கும் பில்லிக்குமான உடலுறவை ஆராய்கிறார்கள். அங்கு அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. பில்லி ‘காலத்தடையை’ கடந்தவனாக வாழ்கிறான். பில்லி எவ்வித லட்சியவாதமும் இல்லாதவன். பிறரை வென்று முன்செல்லும் திண்மையும் கூட  இல்லாதவன். அமெரிக்க நாஜியாக ஆகும் பாப் போல பச்சோந்தியும் அல்ல, அவனை எதிர்த்து குரல்கொடுத்து தேநீர் கோப்பையை எடுத்ததற்காகச் சுட்டுக்கொல்லப்படும் எட்கர் டெர்பி போல நாயகனும் அல்ல. பில்லி தன்னை ‘எவருமில்லாதவன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறான். லட்சியமற்று, எவருமில்லாதவனாக வாழ இங்கு இடமிருக்கிறதா என்பதே கேள்வி. ஷோபா சக்தியின் நாவல்களுடன் இந்தக் கேள்வியை ஒப்பிட்டு நோக்கலாம் என்றே தோன்றுகிறது.

வன்முறையின் மீதான நமது அதீத நாட்டத்தை சுட்டிக் காட்டுகிறார். நாயகத்தன்மையின் பேராலும் நீதியின் பேராலும் அவை நிகழ்த்தப்படுகின்றன. ரொலாண்ட் வியரி மனிதர்களைக் கொல்வதற்கு தானே சிந்தித்து உருவாக்கிய ஆகக் குரூரமான முறையை விளக்குகிறான். ஏறத்தாழ முக்கால் பக்கத்திற்கு இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. பாலைவனத்து எறும்பு புற்றுக்களுக்கு அருகே ஒருவனின் கைகால்களைப் பிணைந்து தேனை ஆண்குறி மற்றும் விதைப்பந்துகள் மீது ஊற்றிச் சாகடிப்பதே வியரி கண்டுபிடித்த முறை. பால் லாசரோ எல்லாவற்றையும் விட பழி தீர்ப்பதையே தனது வாழ்க்கைக்கான குறிக்கோளாகக் கொள்கிறான். தொந்தரவு செய்த நாய்க்கு விஷ உணவு கொடுத்துக் கொன்ற அனுபவத்தைப் பெருமையாகச் சொல்கிறான். யூதர்களின் உடல் கொழுப்பிலிருந்து உருவான மெழுகுவர்த்திகள் வெளிச்சத்தில் சிறை முகாம் ஒளிவிடுகிறது என்பது நம்மைக் கடுமையாகத் தொந்தரவு செய்கிறது. நாவல் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் பேசுகிறது.

பில்லிக்கு மிகவும் பிடித்த அறிவியல் புனைவு எழுத்தாளர் கில்கோர் கால இயந்திரத்தின் மூலம் கிறிஸ்துவைக் காணச் செல்லும் நாயகனைப் பற்றி நாவல் எழுதுகிறார். இயேசுவே பாலகனாக இருக்கும்போது தனக்கான சிலுவையை வடிவமைக்கிறார். உண்மையில் சிலுவையில் அறையப்பட்டுதான் இயேசு மரித்தாரா என அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான். அவன் கொண்டுவந்த ஸ்டெதஸ்கோப் கொண்டு சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் நெஞ்சைப் பரிசோதித்து உறுதிசெய்து கொள்கிறான். மனித குலத்தின் பாவங்களுக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்ட கிறிஸ்துவின் வாழ்க்கைச் செய்தி கைவிடப்படுவதன் துயரத்தை எழுதுகிறார். ட்ராஃபல்டோர்வாசிகள் இரண்டாம் பைபிளை உருவாக்கி மனிதர்களுக்கு அளிக்கிறார்கள். அப்போதும் கிறிஸ்து சிலுவையில் அறையப்படுகிறார், அப்போதும் மனிதர்களுக்கு சில உபதேசங்களைச் சொல்கிறார். கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவத்துக்குமான இடைவெளியை நாவல் சுட்டிக் காட்டுகிறது. நமது வன்முறையின் வெளிப்பாடாகவே சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைக் காண்கிறார். ட்ரெஸ்டனின் கசாப்பு விடுதிக்குள் பதுங்கி உயிர்பிழைப்பார்கள் பில்லியும் அவனது சகாக்களும், நாவலின் தரிசனம் என்பது இந்த உலகத்தையே ‘ஸ்லாட்டர் ஹவுஸாக’ காண்பதுதான். போர் புனிதப்படுத்தபப்டுகிறது. மரணம் ‘உயிர்த்தியாகம்’ எனப் போற்றப்படுகிறது. இன்றைய சூழலில் அவற்றின் அபத்தத்தை நமக்கு உணர்த்தும் முக்கியமான படைப்பாகவே ஸ்லாட்டர் ஹவுஸ் சித்திர நாவலைக் கருத முடியும்.

***

சுனில் கிருஷ்ணன் – தொழில்முறை ஆயுர்வேத மருத்துவர். காரைக்குடியில் வசிக்கிறார். நாவல், சிறுகதைகள், விமர்சனங்கள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். காந்திக்காக www.gandhitodaytamil.com என்றொரு இணைய தளத்தை நடத்தி வருகிறார். முதல் சிறுகதை தொகுப்பான ‘அம்புப் படுக்கைக்கு’ 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி யுவ புரஸ்கார் விருது கிடைத்தது. மின்னஞ்சல்:drsuneelkrishnan@gmail.com