Home Blog Page 24

ஶ்ரீநேசன் கவிதைகள்

1

இருட்பிரகாசம்

என்னைச் சுற்றிலும்
கொஞ்சம் வெளிச்சம் வேண்டுமென
ஒரே ஓர் அகல் விளக்கை ஏற்றியிருந்தேன்
ஆனால்
அதையும் இப்போது
அணைத்து விட்டேன்
இதுவரை மங்கலில் ஒளி நிழலாய் மிதந்திருந்தவன்
இப்போது இருளின் நிழல் ஒளியில் ஆழ்ந்திருக்கிறேன்.

குரங்கு வித்தை

மலைமுகட்டில் ஓர் உருண்டைப்பாறை
முதியவர்கள்
பார்வையால் மட்டுமே தொட்டுணரக்கூடியது
ஒரு குரங்கு அதன் உச்சியில் வந்தமர்ந்தவுடன்
விரைத்தவொரு காம்பாகி விடுகிறது
இவ்வாறு அக்கடினப்பாறையை
ஒரு கோணல் பார்வை
அவ்வளவு அழகான
மென்முலையாக்கிக்கொண்டது.

கவிதைகள் சொல்

தனித்துவமான இந்தச் சொல்
கவிதையின் இறுதி வரிகளில் இருக்கிறது
எழுதி பல காலம் ஆனது
அதை எழுதும் போதும்
பின் பிரசுரத்தில் வந்தபோதும்
அதன் பின் நூலைப் புரட்ட நேர்ந்த
பற்பல சந்தர்ப்பங்களிலும்
இச்சொல்லை வாசித்துக் கடந்திருக்கிறேன்
இப்போதைய எதிர்பாரா வாசிப்பில்தான்
எதிர்பாராது உணர்ந்த இந்த இணைவு
நம் மொழியின் புகழ்ப்பெற்ற கவி
தூய கவிதையில் அரசியலைப் பிணைத்தவர்
அகாலமாய் வாழ்வை முடித்துக் கொண்டவர்
தம் புகழ்ப்பெற்ற கவிதையொன்றையும்
பிரத்யேகமான
இவ்வார்த்தையின் வரியோடு முடித்திருக்கிறார்
இன்றிருந்திருந்தாலும் அவர்
கவனத்துக்குக் கவிதை வந்திருக்குமா
வந்திருந்தாலும் அவர் பொருட்படுத்தியிருப்பாரா
பொருட்படுத்தியிருப்பினும்
அவரது போன்றே கவிதையின் இறுதியில்
கையாண்ட சொல்லை கவனித்திருப்பாரா
அதற்காக மகிழ்ந்திருப்பாரா
அசூயையேதும் அடைந்திருப்பாரா
அவர் தாக்கத்தில்
பெறப்பட்டிருப்பதாய் எண்ணமிட்டிருப்பாரா
அவரது தீவிர வாசகர்களில் ஒருவரோ
என்னை ஆர்வமாய் வாசித்த நண்பரோ
ஒத்திசைவான இப்பொருத்தப்பாட்டை
தம் வாசிப்பில் ஒரு போதும் உணர்ந்திருப்பாரா
ஒன்றிலிருந்து இன்னொன்று
தாக்கம் பெற்றதாய் கருதியிருப்பாரா
அல்லது
அவரது கவிதைகளை ஆழக்கற்று
ஆய்வுகள் செய்தவர்
பன்முகப் பார்வையில்
விமர்சனம் செய்தோர்
எவரும் இது குறித்து யோசித்திருப்பார்களா
எது எவ்வாறாயினும்
அக்கவிதை போன்றே இக்கவிதையும்
தோதான அந்த வார்த்தையிலான
இறுதி வரியைக் கொண்டு
சுபிட்சமாய் முடிந்ததில் பெருமகிழ்ச்சி எனக்கு.

திறவு

பயணப் பரவசப் பாய்ச்சல்
திமிறிக்கிளம்பும் மெய்யின் இருப்பில்
அகம் விழித்த உயிரின் மேய்ச்சல்
நீயோர் பறவை
கிளையிடைக் கூட்டை நெய்யும் குருட்டுத் தனத்தை
வழமையற்ற வாழ்வால் பொசுக்கும்
சுதந்திரப் பட்சி
எல்லையின்றிப் பறக்க
வெளியைத் தேர்ந்தால் வசப்படுமோர் சூக்குமம்
நெஞ்ச வேட்கையில் சிறைபுக அஞ்சா
அது அவியக் காலம்
நெய்யும் கனவில் தினசரி துளிர்ப்பு
உச்சி அரசனில் பொன்னிலை அசைப்பு
உதிர்ந்தால் சருகு
பறந்தால் முருகு
பறபற கடகட திரும்ப வெண்ணா
பயணம் பழகு
மரங்கள் எதிர்ப்படும்
வயல்கள் விரிந்திடும்
மலைகள் கூட நின்று சுழன்றிடும்
தரையினில் இறங்கு
புதிய முகங்களில் கண்கள் ஊன்றி
ஆதியன்பை அதன்வழிப் பருகு
ஆங்கே கசப்பே இனிப்பு
அழுக்கே சுத்தம்
அறிவும் மூடம் என அறி
மகத்துவ புள்ளியைத் தொட்டு
மறைநிலைப் புதிரினைத் திறந்திடு
திறக்கும் நோக்கே கதவின் சாவி
ஒவ்வொரு திருகிலும் முயங்கிடும் இருளொளி
உடன்
திறந்த புதையலை மூடித் திரும்பிடு.

நாங்களோடு நான்

வீட்டிலிருந்து வெளியே ஓரடி வைத்தாலே
தெருவுக்கு வந்து விட்டிருப்பேன்
அவ்வளவுதான் இடைவெளி வீட்டுக்கும் தெருவுக்கும்
அதனால் வீட்டில் இருந்தாலும்
நான் எப்போதும் தெருவில் வசிப்பவன்தான்
அநேக கூப்பிடு குரல்கள் சூழ எழுகின்றன
அவற்றின் பலவிதத்தொனி ஒலிப்புகளுக்கு
எம் தேகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது
யம்மா என்ற யாசகக் குரலும் எம் குரலே
காலத்தில் காலூன்ற முடியாத எனக்கு
எண்ணற்ற கால்கள்
எனினும் அவற்றைக் கொண்டுதான்
இத்தனை கால தூரங்களையும் கடந்திருக்கிறேன்
பூக்காரர் வருகிறார் வாசம் பரப்பியவாறு
கீரை முள்ளங்கி விற்பவருக்கு கருணை அதிகம்
வாரந்தோறும்
தெருவில் சிறுகூவலிடுவார் உப்பு வண்டிக்காரர்
எண்ணெய்க்காரரிடம் நயமான சொற்களுண்டு
சைக்கிளில் கேன் கட்டிய பால்காரர்
பணபட்டுவாடாவன்று தாமாதமாக வருவார்
வளையல்காரருக்கு முன்பாக
திருநாட்களை மோப்பம் பிடித்திருப்பார்
மொக்குமாவு செம்மண் விற்பவர்
உன்னி மக்காரியில்
குத்திப்பழம் கலாக்காயோடு வரும் மலையாள்
ராத்தங்கித்தான் மலை திரும்புவார்
காடா விளக்கேந்தி வரும் துப்பட்டி ஏலக்காரர்
நாதஸ்வர இசைமுழங்கும் பூம்பூம் மாட்டுக்காரர்
மூன்றாம் சாமத்தில் மூடிய கதவுமுன்
வாக்குச்சொல்லும் குடுகுடுப்பைக்காரர்
ஓக்கலித்துப் பிச்சைப் பிடுங்கும் பண்டையன்
சகலரும் ஊருக்கு உரியோரே
யாவரும் எண்ணக் குருதியில் சுழல்வோரே
வண்டியோடு வருவர்
தேங்காய் வெல்ல மண்டிக்காரர்கள்
கோணிப்பைகளுடன் நெல் வியாபாரிகள்
கல்யாணப் பந்தல்காரர் சுபநிகழ்வு மேளக்காரர்
எல்லோரும்
தேவையானதைத்தேடி வந்தோரே தந்தோரே
ஓர் அர்த்தத்தில் அனைவரும் நாங்களே
எம் சிச்சிறு பணிகள்
கைம்மாற்றுக்கு அப்பாலானவை
இனியும்
ஊரில் ஏர்மாடுடையோர் நிலத்தில் ஏர் பூட்டுவோம்
பெண்களோடு நாற்று நட்டுக்
களைப் பறித்து நெல்லறுத்துக்
களத்தில் குவிப்போம்
யாரோ நட்ட தென்னையில் ஓய நிழல் பெறுவோம்
கரும்பை வெட்டி வெல்லம் காய்ச்சுவோம்
கிணற்றில் ஏரியில் மூழ்கித் திளைப்போம்
மாடுகளோடு மல்லு கட்டுவோம்
உழைப்பின் களைப்பில்
வரப்புகளில் உறங்கியும் விழித்திருப்போம்
கல்யாண அழைப்பு சாவுச் செய்தி
எங்கெங்கோ போய் வருவோம்
ஏதெதற்கோ சுற்றி வந்து
ஓய்ந்த பம்பரம்போல் இந்நிலத்தில் சாய்வோம்.

***

ஶ்ரீநேசன் – திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள குந்தாணிமேடு கிராமத்தில் ஜூலை 28, 1966 அன்று பிறந்தார். கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் துறைப் பேராசிரியாராகப் பணியாற்றுகிறார். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பங்களித்துவரும் முதன்மையான கவிஞர்களுள் ஒருவர். உயிர்மை சுஜாதா அறக்கட்டளை விருது, அன்னம் விருது, கலைஞர் நவீன கவிதை விருது ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: sreenesan1966@gmail.com

மனத்திணையும்  நவீன உரையாடலும்

0

கவிஞர் பூர்ணா

ப்பிரபஞ்சத்தில் வாழ்தலின் நிமித்தம் நம்மை எப்படி தகவமைத்துக் கொள்கிறோம்’ என்பதிலிருந்து தான் வாழ்வியலின் பிரக்ஞை பொருந்திப் போகிறது. வாழ்தல் இங்கு வெவ்வேறு ஆதிகளால் உருக்கொண்டு பிரம்மாண்டமாய் நம்மை அணுகுகையில் எந்த வித சலனமும் இன்றி அவைகளின் மீது தன்னுடைய கேள்விகளை தீர்க்கமாக வைப்பதும் அதிலிருந்து தொடர அல்லது துண்டித்து நெடும்பயணத்தை மேற்கொள்ள நினைக்கும் நுட்பமான களங்களை எழுதிப் பார்க்க முயற்சித்துள்ளார் லட்சுமிஹர்.

அப்படியிருக்கையில் இதுவரை அவரது எழுத்து வடிவமாக வெளிப்பட்டிருக்கும் சிறுகதைகளில் இருந்து தொடங்கினால் அவைகள் வெளிப்படுத்த முயற்சிக்கும் பாடுகளுக்காகவே கவனிக்கப்பட வேண்டியவையாக மாறுகிறது. சிறுகதைகளில் எட்டப்படும் கருப்பொருள் அதன் விஸ்தார போக்கு அல்லது ஒரு துண்டு கணம், முடிவிலிருந்து தொடங்கும் யுக்தி போன்ற காரணி வினைகளை சார்ந்ததாகவே பின்னப்படும். அதை கதாபாத்திரங்கள் பின்தொடர்வதே வழக்கம். ஆனால் லட்சுமிஹரின் பெரும்பாலான கதைகளில், கதை மாந்தர்களின் ஊடே நிகழும் உளவியலை அடர்த்தியான சொற்கள் கொணர்ந்து முடிச்சிடப்படுகிறது. ஒவ்வொரு கதையும் பரிசோதனை முயற்சியாகவே நகர்கிறது, அல்லது நம்மை நகர்த்துகிறது. தயவு தாட்சனையின்றி அத்தனை எளிதில் உள்ளே வாசகனை அனுமதிப்பதில்லை, இருப்பினும் ஒரு தேர்ந்த வாசகனுக்காக வாஞ்சையோடு இரு கைகளை விரித்து வைத்திருக்கிறது.

வார்த்தைகளால் சொல்ல முடியாத அன்பை சில கணம் கண்ணீர்த் துளிகளால் எழுதி விடுவது போன்ற காட்சி வடிவமைப்புகள் திரைப்படத்திற்கானவை. வசனங்களால் பேசிவிட முடியாத உணர்ச்சிகளை சொற்களற்ற காட்சியொன்றால் நிகழ்த்தி காட்டுவார்கள். அதைப்போன்று தன் கதைகளில்  நிகழ்த்திக்காட்டி  வெற்றியும் பெற்றுள்ளார் லட்சுமிஹர். கவிதையில் ஒரு பத்திக்கும், இன்னொரு பத்திக்கும் சிறு இடைவெளியுண்டு,அவ்விடைவெளிப்  படைப்பாளன் சொல்லாத ஒன்றை நாம் எழுதிக் கொள்வதற்கும் ,நிகழ்த்திக் கொள்வதற்கும் ஆகும். இப்படியும் சொல்லலாம், இருபத்திக்குமிடையே நம் உணர்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தல்.. இப்பரிணாமம் கதைகளில் சாத்தியப்படுத்த பெரும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாசகனின் மீதான கருணையற்ற செயலாக இருப்பினும், அவன் பெயரில் வைத்துள்ள எத்தனை பெரிய நம்பிக்கை இது. எல்லா கதைகளும், காலம் காலமாக வகுத்து வைத்திருக்கும் எல்லைக்கோட்டுக்கு அப்பாலிருந்து தனக்கே உரிய மொழியில் காட்சிகளாக நகர்கிறது. அவைகள் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், இயங்கியல் கோட்பாடு இவைகளின் இயக்கவியல் நவீன இலக்கியங்களில் எங்ஙனம் பிரதிபலிக்கிறது எனும் கேள்விகளுக்கு ஆங்காங்கே இருட்டில் கொளுத்தப்பட்டதும் தீக்குச்சியின் ஒளியாய் மிளிர்கிறது.

புறச்சூழல் வாழ்வின் வகைமைகள், அதன்  கூறுகளின் அடுக்குகள். எங்ஙனம் உலகமயமாக்கல் நம்மை சீண்டுகிறது என்பதையும், அகம், புறம் என அந்த அந்த நேரத்தில் காலம்  எப்படி பிரதியெடுத்து தன் பேழையில் எழுதிக் கொள்கிறது என்பதையும் அலங்கரித்த சொற்கள் கொண்டு நகர்த்தாமல்,நிர்வாண சொற்கள் கொண்டே எடுத்தியம்பப்பட்டுள்ளது.

“டார்லிங் என பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம்” கதையில் வரும் வரிகள் ..

நேற்றைய கலவியில் அவளின் இன்னொரு கேள்வி இரவின் உறக்கத்தை திருடிக் கொண்டது .

“உனக்கு தெரியுமா ரான் …மச்சங்கள் நகரக் கூடியது …

“விளையாடாதே மானசி.”.

“விளையாட்டல்ல… என்று அவளின் பின் முதுகை என்னிடம் காட்டினாள் ஞாபகம் இருக்கிறதா என்கிற முகபாவனையில் ..

நவீன கவிதை ஒன்றின் வரிகள் போல் சிறுகதையில் மின்னல் கீற்றாய் இப்படி எழுதி விடுகிறார்.

முதல் தொகுப்பான ஸெல்மா  சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் பனுவலில் ஆப்பிள் பாக்ஸ், கடிந்து, ஆம், வெற்றோசை, முதலிய கதைகளில் சில பத்திகள் கவிதை வரிகளாகவே இருக்கும். பத்தி ஒவ்வொன்றிலும் கருத்தின் அடர்த்தியும் பொதிந்து கவனிக்கப்படவேண்டிய கதைகளின் பட்டியலில் இருக்க வேண்டியவை.

உப்புக்குள் உறைந்த கடலாய் அந்தச்சொற்களுக்குள், பிறவிப் பெருங்கடல் மறைந்துள்ளது. ஒரு இரவின் மின்னல் வெளிச்சத்தில் ஒருவனால் எதையெல்லாம் காணமுடியும், எவைகளையெல்லாம் உணரமுடியும் என்பதையும், எவ்வுயிர்க்கும் பொதுவாய் பெய்யும் மழையாய்….காலத்திற்கு முன் நீட்டப்படுகிறது இவர் பிரதி.

அடர்த்தியாக இருக்கும் இருட்டை உரித்து பகலைக் காணுவது போல உணர்வுகள் தோலுரித்து  பார்க்கப்படுகிறது. இவற்றை எல்லாம் ஒரு வாசகன் எங்ஙனம் எதிர் கொள்ளுவான் என்ற பதற்றத்துடனேயே ..அடுத்த அடுத்த வரிகளுக்கு நகர்ந்தேன்.

புனைவுகளுக்கும், நிதர்சனங்களுக்குமிடையே பாத்திரப்படைப்பு  வழியாக, சொற்கள் பரிமாறப்பட்டிருப்பின், இங்கே புனைவு நிஜத்திலும், நிஜம் புனைவாகவும் உருப்பெற்று உள்ளது. ரூபங்களும், அரூபங்களும் எதார்த்த மொழிநடையில் சொல்லப்பட்டு இருந்தாலும், அனுபவங்களின் நுட்பம் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. நிகழ்த்துக்கலை போன்று  சொற்கள் உணர்ச்சிக்குவியலின் கண்ணீர் மொட்டுக்களைப் பொத்து விடும் லாவகத்தை  வாய்க்கப்பட்டுள்ளார் ஆசிரியர். உணர்வுகளை கையாளும் விதத்தில் இன்றைய தலைமுறையினரின் மனநிலையை பிரதிபலிக்கும் கதைகள் நம்முடைய இளைய சமூகத்தின் பார்வையைக் கேள்வி கேட்கவே செய்கிறது. அதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. ஒருவகையில் புனைவென்றாலும், நிச்சயமாக இந்நிலப்பரப்பில் ஏதோ ஒரு மூலையில் அவ்வாழ்வு  தொடரத்தான் செய்யும். பயணங்களும், வாசிப்பின் வகைமைகளும் எழுத்துக்கு கை வரப்பட்ட போதும். எதார்த்த வாழ்வின் நுட்பத்தை கதைகளில் கொணர ஆசிரியர் மறுப்பதை விட கடந்து செல்கிறார் என்பதை உணர முடிகிறது. அவரின் கதை கூறல் அப்படியாக அதை பிரதியாக்குகிறது. அது தன்னிலையில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை. யதார்த்தமும் இலக்கியம் தான் சரியாக கையாளும் பட்சத்தில்.

நடந்து கொண்டிருந்த மனிதர்கள் பறவையின் குணத்தை பொருத்திக்கொண்டு அலையும் இந்த அவசர சூழலில், மேலும் வாசிப்புப் பழக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், பொருளீட்டலின் பொருட்டு உடலை அடகு வைத்து நாட்களை நகர்த்தும், அல்லது நகரும் நிலையில் இது போன்ற உளவியல், படிமம், குறியீடு மொழிச் செறிவு வாய்ந்த கதைகள் தேவைதானா என்றால் நிச்சம் தேவைதான். எத்தனையோ கதைகள் எளிமையாக வெளிவந்துள்ளது, வெளிவந்து கொண்டுமிருக்கிறது. இது போன்ற கதைப் பின்னல்களும் தமிழின் செழுமைக்கு  ஓர் அடையாளம்.

சங்க இலக்கியப் பாடல்கள் வாசிப்பு, ஒவ்வொன்றிலும் பன்முகத்தை வெளிப்படுத்தி தன்னை நிலை நிறுத்தி தமிழின் சிறப்பை நிரூபித்துள்ளது. அதற்கு சதுக்க பூதம், நிப்பாணகாதை போன்ற கதைகள் உதாரணம்.  பலூக் கதையிலும், சதுக்கம் பூதம் கதையிலும் சரி  குழந்தையின் உளவியல் மிக நுட்பமாக பேசப்பட்டு தன் வழியாக, நிலத்தின் அரசியலும்  தொன்மத்தின் வழியாக ஊடுருவி விழுமியங்களை கையகப்படுத்துவதும் சாத்தியமாகியுள்ளது. நவீனமாக்கப்பட்ட புறநகர் பகுதியின் மைய விளிம்பை, உலகமயமாக்கத்தின் நிலையை குழந்தை மொழியில் எழுதப்படுகையில் பலூனுக்குள் சிக்குண்ட அன்பும், அந்தரத்திணையில் மேல் நோக்கித் தொங்கும் பலூனாய் வாழ்வும் காட்சியளிக்கிறது. வாசகர்கள் பல வகையுண்டு தேர்ந்த வாசகர் கையில் இது போன்ற நூல்கிடைத்தால், அல்லது இந்நூல் ஒரு வாசகரை தேர்வுச் செய்தால், பொழுது  பழுதாகாமல் நகரும் என்பது திண்ணம்.

இறப்பின் நிமித்தம் மிக நுட்பமாக சடங்கு முறை தொடங்கி வீடு திரும்பும் வரை நிகழும் சம்பிரதாயங்கள், பூக்களின் வாசனை, சாராய நெடி, கொட்டுச்சத்தம், தார்ச்சாலையில் மிதிபட்டு, மிதிபட்டே மறுமுறையும் மரித்துப் போகும் ரோஜாக்கள்,ஒப்பாரியின் நுனியின் தொப்புள் கொடியின் விசும்பல். திறந்தே கிடக்கும் ஊருக்கு இனி யாரு இருக்கா என தொடர்ச்சியாக ஒரு பக்கம் புலிசாரை( வாடிவாசலுக்கு பின் தமிழில் காளைகள் பற்றிய முழுமையான வாழ்க்கைமுறை சார்ந்த கதை ) கதையில் யதார்த்தம் அறிந்த கைகள் மறுபக்கம் வெற்றோசை, ஆண்ட்ரைட் வெர்ஷன், ஆம் , கித்தானுடைய வண்ணப்பேழை முதலிய கதைகள் அப்படியே அதனின் எதிர்திசை. அதனின் வெற்றியையோ அல்லது தோல்வியையோ நினைத்து ஒரு எழுத்தையும் லட்சுமிஹர் முன் வைப்பதாக தெரியவில்லை. தன் சிந்தனைகளைக் கடத்திட எந்த வித அரிதாரமும் இல்லாத பாங்காகவே அவைகள் வெளிப்பட்டிருக்கிறது. எதையும் முயன்று பார்க்க அவருடைய  இளமையும் ஒரு காரணமாக இருக்கலாம். இது தொடரும் பட்சத்தில் மேலும் நல்ல கதைகளை நமக்கு அளித்திட முடியும். 

அப்படியாக பல களங்களில் எழுதி பார்த்திட விரும்பும் லட்சுமிஹர் தான் இயங்கக்கூடிய சினிமா துறை சார்ந்த கதைகளையும் எழுதியுள்ளார். அவைகளில் இருந்து இனி கிடைக்கப போகும் எந்த வித பயன்களையும் எதிர் பார்க்காது பாரபட்சமின்றி பாராட்டை போன்று விமர்சனத்தையும் அதன் மேல் குவித்துள்ளார்.

ஸ்டார் கதையில் திரையில் நிகழும் சண்டைக்காட்சிகள்,  நிஜமல்ல அதுவும் ஒரு வகை நடிப்புத் தான். அத்தனையையும் நடிப்பாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.’என்னப்பா உடம்பில் காயம்,’ என்று சூட்டீங் முடித்து வீடு திரும்பிய தந்தையை மகன் கேட்பான். ‘ ‘ஒன்னுமில்லப்பா’ இன்று நடிப்பின் போது உண்டான காயம்’ என்று ஒரு வரி எழுதப்பட்டிருக்கும். ஒரு கதையின் மையம் உதிரமும், சதையுமாக அப்படியே வைக்கப்பட்டு விட்டது. இந்த வாழ்வை எந்த விழிகளில், எந்தப் பார்வைப் பொருத்தி பார்க்கப்போகிறீர்கள் எனும் கேள்விக்கு மறு மொழியாக மௌனத்தைத் தவிர கைவசம் ஏதுமில்லை. மக்களின் வாழ்க்கை முறை பல்வேறு விதங்களில் பிரதிபலித்தலை உற்று நோக்கும் ஒரு முயற்சி.

ஆறாம்திணைக்கு பக்கத்திலிருக்கும், ஏழாம் திணையில் உலவும் இச்சொற்களை, வாசிக்கப் பழகிக் கொள்ளுதல் என்பது நவீன சிறுகதை வளர்ச்சியில் மறு வாசிப்பு முறையில் இது ஒரு தொடர் வாசிப்பு ஆகும். முன்னும் பின்னுமாக அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

கூத்தொன்று கூடிற்று வழியாக லட்சுமிஹர் எழுத்துக்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எத்தனையோ இரவுகளை காவுக்கொடுத்ததன் வழியாக இது சாத்தியப்பட்டுள்ளது. சொற்குவியலுக்குள் தன்னைத் தொலைத்து, புதிய வடிவத்தை, புதிய உணர்வுகளை கை மாற்றுகிறார். நாம் நிதானித்து ஒரு இளைஞனின் உலகை கவனிக்காமல் எப்படி கடந்து செல்ல முடியும். இக்கதைகள் இன்றைய தலைமுறையின் சிந்தனை. அவர்களிடம் குறைகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் வெளிப்படுத்தும் உண்மையை ஒரு போதும் மறுக்கமுடியாது. பெரும் ஜாம்பவான்கள் புழங்கிய தமிழ் சிறுகதை வெளியில் தன் வருகையை ஆழமாக பதித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

***

கவிஞர் பூர்ணா: இயற்பெயர் ஜோ.ஏசுதாஸ். திண்டுக்கல் மாவட்டம் பொன்னி மான்துறையைச் சேர்ந்தவர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட் இல் கிளை மேலாளராக பணிபுரிகிறார். ஈரோட்டில் வசித்து வருகிறார். பத்து கவிதை நூல்கள், நான்கு கட்டுரை நூல்கள், ஒரு நூலுக்கு விளக்க உரையும் எழுதியுள்ளார்.கம்பம் பாரதி இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, வாசகசாலை இலக்கிய விருது, தமுஎகச விருது ஆகிய விருதுகளை கவிதைகளுக்காக வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: poornayesudass@gmail.com

பேரழிவுகளின் புதிய பரிமாணம்

0

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியா-பாகிஸ்தான் மோதல், அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான விபத்து மற்றும் இஸ்ரேல்-ஈரான் ஆயுத மோதல் எனக் கடந்த இரு மாதங்களுக்குள் உலகையே உலுக்கிய மூன்று கவலைக்குரிய நிகழ்வுகள் நடந்தேறின. இவை ஒவ்வொன்றும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய துயரச் சம்பவங்களே!

நடந்த இந்த மூன்று சம்பவங்களை சமூக ஊடகங்கள், முன்னணி செய்தி ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிச் சேனல்கள் அணுகிய விதத்தில் ஒரு புதிய போக்கைக் காண முடிந்தது. இவை பாரம்பரியச் செய்திச் சேகரிப்பு மற்றும் வெளியிடும் முறைகளிலிருந்து விலகி, புது வகையாக தோற்றமளித்தன.

தொழில்நுட்ப மோகமும், டிஜிட்டல் “வீரமும்!”

இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது, இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள், அவற்றின் தன்மை, அழிக்கும் திறன் போன்ற தொழில்நுட்ப விவரங்கள் சமூக ஊடகங்கள் மட்டுமன்றி, அனைத்து பொது ஊடகங்களிலும் மிக விரிவாக விவாதிக்கப்பட்டன.

பொதுமக்களும் இத்தகைய ஆயுதங்கள் குறித்துத் தங்கள் அறிவை மெருகேற்றிக்கொண்டார்கள். குறிப்பாக, ட்ரோன்கள் என்றால் என்ன, பிரம்மோஸ் ஏவுகணைகள், ஏவுகணைகளைத் தடுக்கும் ஆற்றல், ரஃபேல் விமானங்களின் சாகசங்கள் எனப் பல செய்திகள் வெளிவந்தன. அது மட்டுமல்லாமல், எந்த இடங்கள் தாக்கப்பட்டன? ஏன் தாக்கப்பட்டன? எந்த விதங்களில் தாக்கப்பட்டன? என்பதைக் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமாகப் பரப்பப்பட்டன, விவாதிக்கப்பட்டன!

இராணுவத் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் செயல்பாடுகளின் விவரங்களே முக்கியச் செய்தியாக அளிக்கப்பட்டன, நுகரவும் பட்டன.

சிலர் தங்களுக்குத் தோன்றியவற்றைச் செய்திகளாகப் பரப்பினர். இது ஒருபுறமிருக்க, “ஒரு வார்த்தை சொல்லுங்க, நாங்களும் ராணுவ வீரர்களாகச் சண்டைக்குப் போகிறோம்,” என சில குழுக்கள் அறிக்கைவிட்டன. அதை நகைச்சுவையாக்கியது பொது சமூகம். சமூக ஊடகங்களில் சில நடிகர்கள் ராணுவ வேடமிட்ட புகைப்படங்களைப் பதிவிட்டு ஆதரவளித்தார்கள். யுத்த வீடியோக்களை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் வெட்டிச் சேர்த்து, இசைக் கோர்த்து, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் ரீல்ஸ்களாக மாற்றி, மக்களை ஈர்க்கும் கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் பார்வையாளர்களை அதிகரித்துக் கொண்டார்கள். ஆளாளுக்கு கதை விட்டார்கள். திரைக்கதை அமைத்துக்கொண்டார்கள். விதவிதமான கதாபாத்திரங்களை, அறிவுக்குப் புலப்படாத கதையாடல்களை உருவாக்கினார்கள்.

இந்த மோதலில் எத்தனை இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? பாகிஸ்தானின் எத்தனை விமானத் தளங்கள் அழிக்கப்பட்டன? போன்றவை பல நாட்களுக்குச் செய்திகளாகவும், அரசியலாகவும், சமூகப் பிரச்சனைகளாகவும், விவாதங்களாகவும் நடந்தேறிக் கொண்டிருந்தன.

இது, விளையாட்டுப் போட்டியின் ஆட்டப் புள்ளிகளைக்கண்டு ஆர்ப்பரிக்கும் மனநிலையை உருவாக்கியது. மொத்தத்தில் ஊடகங்களால் இந்த போர்ச் செய்திகள் சில வேளைகளில் விளையாட்டுச் செய்திகளாகவும் தொழில்நுட்ப சாகசங்களைக் காட்டும் அறிவியல் செய்திகளாகவும் கையாளப்பட்டன.

இன்னும் மிக முக்கிய வேறுபாடு தொலைக்காட்சி நேரலைகள் மற்றும் அவைகளை நடத்தும் நெறியாளர்களின் அட்டகாசங்கள். இது நாடுகளுக்கிடையில் நடக்கும் போர் என்பது உணர்வுபூர்வமாவதை யாராலும் தடுக்க முடியாது.

மேலும் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மிகவும் நுணுக்கமானதும், வரலாற்று ரீதியாக சிக்கலானதும். இதன் தீர்வும் சிக்கலானதே. ஆனால் சினிமா படம் போல இந்த சிக்கலை எளிமைப்படுத்தி, தங்களின் அறியாமையுடன் வன்முறையைக் கலந்து சுழற்றினார்கள் தொலைக்காட்சி நேரலை நெறியாளர்கள்.

தொழில்நுட்ப அலசல்களில் மூழ்கிய கவனம் அகமதாபாத் விமான விபத்தின்போது, ஒட்டுமொத்தத் தேசமும் விபத்திற்கான காரணம், போயிங் ட்ரீம்லைனர் விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள், ஓடுபாதையின் நிலை போன்ற விஷயங்களைப் பற்றி விவாதித்தது. பலர் உடனடியாக விமானிகளாகவும், விமானப் பொறியாளர்களாகவும் மாறி, நுட்பமான தொழில்நுட்பக் காரணங்களை அலசத் தொடங்கினர். இந்த விபத்துக் குறித்த செய்திகளை வாசிப்பதன் மூலம் பலர் விமானிகளாகவும், விமானப் பொறியாளர்களாகவும் கூட ஆகும் அளவிற்கு அறிவு பெற்றார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

இஸ்ரேல்-ஈரான் மோதல்: தொழில்நுட்ப சாகசங்களின் உச்சம்!

இந்தியா-பாகிஸ்தான் ஆயுத மோதலின்போதும், அகமதாபாத் விமான விபத்தின்போதும் நடந்த அனைத்தும், உலகளாவிய அளவில் மீண்டும் நிகழ்ந்ததை இஸ்ரேல்-ஈரான் ஆயுத மோதலிலும் நம்மால் பார்க்க முடிந்தது. உலகம் முழுவதும் இஸ்ரேலின் “அயர்ன் டோம்” எனும் வான் பாதுகாப்பு அமைப்பைக் குறித்து விவாதித்தன. அவற்றால் ஈரானின் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்க முடியுமா முடியாதா என அலசிப் பார்த்தன. எத்தனை எண்ணிக்கையில் ஏவுகணைகள் ஏவப்பட்டன? இஸ்ரேலின் ஏவுகணைப் பாதுகாப்பை மீறிச் சென்றது எத்தனை? என மீண்டும் விளையாட்டுப் போட்டிபோலப் புள்ளிகள் போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்படிப் பேசிக்கொண்டிருந்த வேளையில், அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் அவை போட்ட குண்டுகள் குறித்தச் செய்தி வந்தது. திடீரென B-2 விமானம் ஹீரோவாகிவிட்டது! அதன் தொழில்நுட்பங்கள், அதன் வசதிகள், அதன் திறனாற்றல்கள் என ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டு, விரிவாகப் பேசின. ஆயுதங்களின் தொழில்நுட்ப அதிசயங்களைக் குறித்துப் பேசிப் பேசி களைத்து விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.

தொழில்நுட்ப மாயைக்கு மத்தியில்..

மனித உணர்வுகளை விடத் தொழில்நுட்ப விவரங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. செய்திகளை விட புதிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நிகழ்வுகளே அதிகம் கவனப்படுத்தப்பட்டன, அதிகம் பரப்பப்பட்டன. போரினால் ஏற்படும் மனித உணர்வுகளையும், துயரங்களையும் ஆழமாகப் பதிவு செய்வதை விட, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், குடும்பங்களின் பாதிப்புகள், மக்களின் உளவியல் போராட்டங்கள் போன்றவை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்பட்டன.

இவை அனைத்தும் உண்மைதான். மனிதர்கள் இப்படித்தான் இந்த உலகை அமைத்துக்கொள்ள முடியும் என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். அந்தக் காலம் போல் இல்லாமல் மனிதத்தன்மை வெகுவாகக் குறைந்துவிட்டதையே இவை நமக்குக் காட்டுகின்றன என எளிதாகக் கூறிவிடலாம். ஆனால், இந்த முடிவையும் தாண்டிப் பார்க்க முடியுமா என்பதுதான் சவால்.

முதலில் இந்தத் தொழில்நுட்ப அதிசயங்களை எடுத்துக் கொள்வோம், உண்மையிலேயே அவை அதிசயமாகத்தானே இருக்கின்றன. நடந்த இரு போர்களிலும் துல்லியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளைத் தாக்கும் திறனை வெளிப்படுத்தியது முதன்மைப்படுத்தப்பட்டன. எதிரிகளின் தாக்குதல்களைத் தன்னிச்சையாகச் சுட்டு வீழ்த்தும் முறை உண்மையிலேயே வியப்பாகத்தான் இருந்தது. கத்தார் நாட்டை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகளும் ட்ரோன்களும் தாக்க அனுப்பப்பட்டன, மக்களின் தலைகளுக்கு மேலே பறந்துகொண்டிருந்தன. கடலிலிருந்து தாக்குதல். மக்கள் வசிக்கும் பகுதியைத் தாண்டி இருக்கிறது அவற்றின் இலக்கு. பறந்து வரும் எதிரிகளின் ஏவுகணைகள் வானிலேயே சுட்டு வீழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்படும்போது, “வாவ்!” “சூப்பர்!” என்றே அனைவரும் மகிழ்ந்தனர்.

தொழில்நுட்பம் நடத்தும் சாகசத்தை யாராலும் மறுக்க முடியாது என உணர்ந்த தருணம் அது. அந்த ஏவுகணைகளில் ஒன்று நம் வீட்டில் விழுந்தாலே மரணம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அந்த ஏவுகணைகளின் தாக்குதல்களையும், அதை முறியடித்த எதிர் தாக்குதல்களையும் வானவேடிக்கையைக் காணும் குழந்தைகளாகவே அனைவரும் கண்டனர் என்பதும் உண்மையே.

இப்படி ஜி.பி.எஸ்-வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், லேசர்-வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், வெடிப்பொருட்களின்  பெருக்கம் போன்றவை, துல்லியமாகத் தாக்கும் வழியை அளித்துள்ளது.

அழிக்க வேண்டிய இலக்கின் சில மீட்டர்களுக்குள் சென்று தாக்கக்கூடிய அளவிற்குப் புதியத் தொழில்நுட்பம் வியத்தகு முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு ஆளில்லா விமானங்கள் – ட்ரோன்கள் மூலம் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அறிவியல், வியக்கத்தக்க சாதனைகளாக மெய்சிலிர்க்கத்தான் வைக்கின்றன.

தொழில்நுட்பம் காட்டும் இந்த அதிசய, ஆச்சரிய, வியக்க வைக்கும் சாகசங்களுக்கு இடையில், செய்தி ஊடகங்களும் குழந்தைகளைப் போல இவற்றைப் பார்த்துச் சிலிர்த்து எழுதி மகிழ்வது புரிந்துகொள்ளக்கூடிய நிலையே என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. போலிச் செய்திகள், புள்ளிவிவரக் கணக்குகள் என விளையாட்டுப் போட்டி மனநிலை உருவாவதைத் தவிர்க்க முடியாது எனத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுதான் இந்த நூற்றாண்டின் மனிதர்கள் சந்திக்கப் போகும் பெரும் சவால். தகவல்களுக்கு இடையிலும், தொழில்நுட்ப சாகசங்களுக்கு மத்தியிலும் மனிதத்தைக் கண்டறிவது எப்படி என்பதே இப்போதைய பெரும் சவால்.

போலி செய்திகள், வெற்று செய்திகள் போன்றவற்றுகளை கடந்துதான் துல்லியமாக இலக்கை அழிக்கும் தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்தும், அது எந்த அளவு உண்மை என்பதையும் கேள்விகளாக முன்வைக்க வேண்டியுள்ளது.

மக்கள் மரணங்களை மூடி மறைக்க இந்தத் தொழில்நுட்ப சாகசங்களைக் குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவதைப்போல அதிகாரத்தில் உள்ளவர்களால் திட்டமிட்டு நமக்குக் காட்டப்படுகின்றனவா எனும் சந்தேகங்களை நம்மை வியக்க வைக்கும் தொழில் நுட்பங்களை தாண்டி எழுப்ப முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

இப்படியான ஊடகக் கூச்சல்களுக்குள்தான் நடந்தேறிய இரு போர்கள் ஏன் ஆரம்பிக்கப்பட்டன? அதன் நோக்கம் என்ன? அதன் உண்மைத் தன்மை என்ன? போன்ற கேள்விகளைத் தொடுக்க வேண்டியுள்ளது.

இந்தத் தொழில்நுட்ப மாயாஜாலத்திற்குள்தான் மனித உணர்வுகளையும், அரசியலையும் மிகுந்த சிரமங்களோடு மீட்க வேண்டியுள்ளது. இந்தப் பரபரப்புகள் நடந்து கொண்டிருந்தபோதே, திருமணம் ஆகி இரண்டு நாட்களே ஆன என் உறவினரின் மகனுக்கு ராணுவத்தில் வந்து சேர ஆணை வந்தது. கணவன், தன் மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு எல்லைக்குச் சென்றார். இப்படியான ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் போருக்காக ஆபத்தான சூழலுக்குள் பணி நிமித்தம் சென்றிருப்பார்கள்தானே? போர்களாலும் விபத்துகளாலும் ஏற்படும் மரணங்கள் தந்த வலிகள், தேற்ற முடியாதவைகளாக, வடுக்களாகி இருக்கும்தானே? தொழில்நுட்ப அதிசயங்களுக்கிடையிலும் உட்சென்று பிரித்தறியாத அளவை மிஞ்சிய தகவல்களுக்குள் தேடித் தேடித்தான் மனித உணர்வுகளையும், இந்தச் சூழல் உருவாக்கும் பதட்டங்களையும், சிறிய அளவில் நாமும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இப்படியானத் தேடுதல்கள் தேவையாகவும் இன்றையச் சவால்களாகவும் உள்ளன.

***

நிர்மல் – தூத்துக்குடி மாவட்டம் ‘ஏரல்’ எனும் ஊருக்கு அருகில் உள்ள ‘திருவழுதிவிளை’ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கத்தார்’ தேசத்தில் ‘பெட்ரோ கெமிக்கல்’ துறையில் பணி செய்து வருகிறார். ‘ காணாமல் போன தேசங்கள்’, ‘நிலமும் பொழுதும்’, ‘குன்றாவளம்’ , “சகாக்கள் “ , “ மக்களாகிய நாம்”, “இடுக்கண் படினும்” ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
மின்னஞ்சல்: nirmalcb@gmail.com

நான் கண்ட குற்றாலம்

0

தொடக்கப்பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தில் நான் தணியாத ஆர்வம் கொண்டிருந்தேன். அதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஆசிரியர்களாக இருந்த நவநீதம் டீச்சர், கண்ணன் ஐயா, கிருஷ்ணன் ஐயா ஆகியோர். பாட்டு, கதை, பாடம் எதுவாக இருந்தாலும் அவற்றைச் சொல்லும் விதத்தாலேயே கேட்பவர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சொல்லச்சொல்ல பாடல்வரிகளும் கதைக்கூறுகளும் நினைவில் நிரந்தரமாகப் பதிந்துவிடும். எல்லா ஆசிரியர்களும் பாடம் படிப்பதை ஒரு விளையாட்டுக்குப் பயிற்சி கொடுப்பதைப்போல மாற்றிவிடும் திறமை கொண்டவர்கள்.

கோவிந்தையர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு எங்கள் ஊர்க்கடைசியில் இருந்த அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சொக்கலிங்கம் ஐயா. உயரமாகவும் ஒல்லியாகவும் இருப்பார். பளிச்சென பேண்ட்டும் சட்டையும் போட்டுக்கொண்டு வருவார். பார்க்கும்போது ஏதோ விருந்துக்கு வந்தவர்போல இருக்கும். ஆனால் பாடம் நடத்தத் தொடங்கியதும் எல்லா மாணவர்களைப்போலவே அவரும் ஒரு மாணவராக மாறிவிடுவார்.

வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளுக்கு இடையிலிருக்கும் வேறுபாடுகளை அவர்தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். ஒற்றெழுத்தின் தேவை ஏற்படும் இடங்களைக் கண்டுபிடிக்கும் நுணுக்கத்தையும் அவர்தான் சொல்லிக் கொடுத்தார். ஒற்றெழுத்தைச் சேர்ப்பது அல்லது தவிர்ப்பது தொடர்பான பயிற்சியில் தேர்ச்சியடைவதற்காக ஒவ்வொரு நாளும் பத்து இருபது சொற்களைச் சொல்லி எழுதவைத்தார்.

அவர் எந்தப் பாடத்தையும் பாடமாகவே நடத்தமாட்டார். முதலில் ஒரு கதையைப்போலவோ அல்லது அவருடைய ஊரில் பார்த்த ஏதோ ஒரு அனுபவத்தைப்போலவோ அல்லது ஏதோ ஒரு நாடகத்தில் இடம்பெற்ற காட்சியைப்போலவோ சொல்லி எங்களுக்கு ஆர்வத்தை உருவாக்குவார். ஒரு வகுப்பு முழுதும் அந்தக் கதை நீளும். அன்று முழுதும் அந்தக் கதை நினைவில் மிதந்தபடியே இருக்கும். அடுத்தநாள் காலையில் ஒவ்வொருவாக எழுந்து நின்று பாடத்தைப் படிக்கவைக்கும்போதுதான், அந்தப் பாடத்துக்கும் முதல்நாள் அவர் சொன்ன கதைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.

ஒருநாள் வகுப்பு தொடங்கியதும் “உங்க ஊருல ஒரு பெரிய ஏரி இருக்குதே, அதை எத்தனை பேருடா பார்த்திருக்கீங்க, பார்த்தவன்லாம் கையைத் தூக்குங்க” என்று சொன்னார். எல்லோருமே உற்சாகமான குரலில் “பார்த்திருக்கோம் ஐயா” என்றபடி கையை உயர்த்தினோம். வகுப்பில் அமர்ந்திருந்த எல்லா மாணவர்களையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு “பரவாயில்லையே, எல்லாருமே பார்த்திருக்கீங்க. கெட்டிக்கார பசங்க. சரி சரி, கையை கீழ எறக்குங்க” என்றார். எல்லோரும் அக்கணமே கையை கீழே இறக்கினோம்.

“சரி, இந்த ஏரிக்கு எந்த ஆத்திலேர்ந்து தண்ணீர் வருது, தெரியுமா?” என்று அடுத்த கேள்வியை முன்வைத்தார்.

சிலர் மட்டுமே கையை உயர்த்தினோம். ஐயா அனைவரையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு “நீ சொல்லு” என்று என் பக்கமாக விரலை நீட்டினார். உடனே நான் எழுந்து நின்று “தென்பெண்ணை ஆறு” என்றேன்.

“சரியான பதில்” என்று புன்னகைத்தபடி கைத்தட்டி பாராட்டுதல்களைத் தெரிவித்தார். “அது எப்படி உனக்குத் தெரியும்? அந்த ஆத்தை நீ பார்த்திருக்கியா?” என்று கேட்டார். உற்சாகமான குரலில் “ஆமாம் ஐயா, பார்த்திருக்கேன் ஐயா” என்று தலையசைத்தேன்.

“எப்ப பார்த்த?”

“பொங்கல் முடிஞ்சதும் ஆத்துத்திருவிழா அன்னைக்கு எங்க தெருவிலேர்ந்து எல்லாரும் வண்டி கட்டிகிட்டு அந்த ஆத்துக்குப் போவாங்க. அவுங்களோடு நானும் போவேன். அப்ப பார்த்திருக்கேன்.”

“ஆறு எப்படி இருக்கும், சொல்லு”

திருவிழா சமயத்தில் பார்த்த ஆற்றின் தோற்றத்தை நினைவுக்குக் கொண்டுவந்து ஒவ்வொரு வரியாகச் சொன்னேன். அவர் அனைத்தையும் கேட்டு மகிழ்ச்சியோடு புன்னகைத்தபடி அமரும்படி சைகை காட்டினார்.

“அடுத்து, அருவியை எத்தனை பேரு பார்த்திருக்கீங்க, சொல்லுங்க?”

அவருடைய கேள்வியே எனக்கு முதலில் புரியவில்லை. அருவி என்னும் சொல்லையே அன்றுதான் நான் முதன்முதலாகக் கேட்டேன். குளம், குட்டை, ஏரி, ஆறு மாதிரி அதுவும் ஒரு நீர்நிலையாகத்தான் இருக்கவேண்டும் என எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. ஆனால் எழுந்துநின்று சொல்ல துணிவில்லாமல் அமைதியாக ஐயா முகத்தையே பார்த்தபடி இருந்தேன். அருவி அருவி என ஒவ்வொருவரும் உதடுகளை அசைத்து தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டார்களே தவிர, ஒருவருக்கும் தெளிவான பதில் தெரியவில்லை.

“என்னடா, தெரியலையா, சரி, நானே சொல்றேன்” என்று சொல்லத் தொடங்கினார்.

“இந்த ஊருல, நம்மச் சுத்தி பார்க்கிற இடம் முழுக்க நிலப்பகுதியா இருக்கறதால எல்லா இடத்துலயும் இதுபோலவே இருக்கும்னு நாம நினைச்சிட்டிருக்கோம். ஆனா உண்மை அது கிடையாது. காடு, மலை, பள்ளத்தாக்கு, பாலைவனம்னு உலகம் பலவிதமா மாறிமாறி இருக்கும். அந்த வழியாவும் ஆறுகள் போகும். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அப்ப ஒரு மலையில ஓடக்கூடிய ஆறு உயரமான இடத்துலேர்ந்து பூமியில விழுந்து தரையில ஓட ஆரம்பிக்கும். அதுக்குப் பேருதான் அருவி.”

சொக்கலிங்கம் ஐயா தொடர்ந்து சொல்லச்சொல்ல எனக்குள் அருவியைப்பற்றிய சித்திரம் பேருரு கொள்ளத் தொடங்கியது. மலையிலிருந்து உருண்டு விழும் ஆறு என்னும் காட்சியை நினைக்கநினைக்க மனம் பரவசத்தில் திளைத்தது.

நீண்ட விவரணைக்குப் பிறகு “நான் அருவியைப் பார்த்திருக்கேன். அருவியில குளிச்சிருக்கேன்” என்று புன்னகைக்கும் முகத்துடன் சொன்னார் ஐயா.

“உண்மையாவா ஐயா?” என்று நான் கேட்டபடி மனம் துள்ள அவர் முகத்தைப் பார்த்தேன்.

“ஆமாம். எங்க ஊரு திருநெல்வேலி. ஊருக்குப் பக்கத்துலயே மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி குற்றாலம்னு ஒரு அருவி இருக்குது. ஒரு அருவி இல்லை, மலையினுடைய வெவ்வேறு பக்கத்துல வெவ்வேறு பேருல விழுந்து ஓடுது. பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பாலருவின்னு ஏகப்பட்ட அருவிகள். ஒவ்வொன்னும் வெவ்வேறு உயரத்துல மலையுச்சியிலேர்ந்து விழுது. அப்படியே பால்குடத்தைக் கவிழ்த்தமாதிரி இருக்கும். மழை நேரத்துல ஒரு ஆறுமாச காலம் அந்த அருவியில தொடர்ச்சியா தண்ணி விழும். உங்களமாதிரி சின்ன பிள்ளையா இருந்த சமயத்துல ஒவ்வொரு வாரமும் எங்க அப்பா அந்த அருவிக்கு அழைச்சிட்டு போய் குளிக்கவைப்பாரு. ஒரே கொண்டாட்டமா இருக்கும்” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனார் ஐயா.

அவர் சொன்ன சொற்களைக் கேட்கக்கேட்க அப்படியே ஒரு பறவையைப்போல பறந்துபோய் அந்த அருவிக்கு அருகில் நிற்கவேண்டும்போல இருந்தது. “நம்ம ஊருல ஒரு மலையும் இல்லை. காடும் இல்லை. அருவியும் இல்லை. ரொம்ப மோசம்” என்று சட்டென ஊர் மீது சலிப்பான ஓர் எண்ணம் பிறந்தது.

“அருவின்னு சொன்னா, வெறும் தண்ணின்னு மட்டும் நினைச்சிக்கக்கூடாது. அக்கம்பக்கத்துல செடி, கொடி, மரங்கள் எல்லாமே இருக்கும். காடு இருக்கும். பாறைகள் இருக்கும். விதவிதமான பறவைகள் இருக்கும். காய்கனிகள் இருக்கும். விலங்குகள் இருக்கும். குரங்குகள் விளையாடும். இன்னொரு விதமான உலகம் அது. எப்பவாவது ஒரு வாய்ப்பு கிடைச்சா, வாழ்நாள்ல ஒருமுறையாவது எல்லாரும் குற்றாலத்துக்குப் போய் அருவியைப் பார்த்துட்டு வரணும். அப்பதான் அதனுடைய அருமை உங்களுக்குப் புரியும்”

குற்றாலத்தைப் பார்க்கும் கனவை அன்று சொக்கலிங்கம் ஐயா எல்லோருடைய நெஞ்சிலும் விதையாகத் தூவிவிட்டார். அது ஆழத்தில் சென்று பதிவது தெரியாமல் பதிந்துவிட்டது.

“இவ்வளவு கதையையும் ஏன் உங்களுக்குச் சொன்னேன் தெரியுமா?”

“ஏன் ஐயா?”

“அந்தக் குற்றால அருவியைப் பத்தி உங்களுக்கு ஒரு பாட்டு இருக்குது. அதைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான் சொன்னேன். இப்ப பாட்ட படிக்கிறேன், கேளுங்க”

சொல்லிக்கொண்டே புத்தகத்தைப் பிரித்தார் ஐயா. வழக்கம்போல எதையோ ஒரு கதையைப்போல சொல்லத் தொடங்கி, கடைசியில் சரியாக பாடத்தில் வந்து நின்றுவிட்டார்.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்ச்ம்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்

ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங்காரர்

குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே

ஏற்ற இறக்கங்களோடும் அபிநயங்களோடும் அவர் சொன்ன விதத்திலேயே எங்களுக்கு அந்தப் பாட்டு புரிந்துவிட்டது. ஒவ்வொரு வரியாகப் பிரித்துப் பிரித்து தனியாகச் சொல்லி விளக்கியதும் முழுப்பாட்டும் புரிந்துவிட்டது. மனப்பாடமும் ஆகிவிட்டது.

“இதை எழுதுனது திரிகூட ராசப்ப கவிராயர்னு ஒரு கவிஞர். குற்றாலக்குறவஞ்சின்னு பெரிய காவியம். அதுல ஒரு பாட்டு இது. குற்றால மலையைப்பத்தியும் அருவியைப்பத்தியும் அந்த மலையில குறி சொல்லி பிழைக்கிற ஒரு பாட்டி சொல்றமாதிரி அமைஞ்சிருக்குது. அந்தக் காவியத்தைப் பாராட்டி அந்தக் காலத்துல மதுரையில அரசரா இருந்த சொக்கநாத நாயக்கர்ங்கறவரு கவிராயருக்குப் பெரிய பெரிய பரிசுலாம் கொடுத்து அனுப்பிவச்சாருன்னு சொல்வாங்க”

அன்று இரவு வீட்டுக்குத் திரும்பியதும் ஆறேழுமுறை நிறுத்தி நிதானமாக அந்தப் பாட்டைப் படித்தேன். இயல்பாகவே முழுப்பாடலும் மனத்தில் பதிந்துவிட்டது. வகுப்பில் அந்தப் பாடலை அபிநயத்தோடு சொல்லிப் பார்ப்பது ஒரு விளையாட்டாகவே மாறிவிட்டது. ஆளுக்கொரு வரியைச் சொல்லி அந்த வரிக்குத் தகுந்த மாதிரி நடிப்பதுகூட ஒரு விளையாட்டாக மாறிவிட்டது. அந்த ஆண்டு நடைபெற்ற பள்ளி விழாவில் அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஆடிப் பாடி குதித்து ஒரு நாடகமாகவே நடித்து பரிசு பெற்றான் ஒரு மாணவன். குற்றாலத்தைப் பார்க்கும் ஆவல் எனக்குள் மேன்மேலும் ஆழமாக வேரூன்றியது.

அடுத்தடுத்த வகுப்புகளில் படிக்கப்படிக்க, தமிழ்நாட்டின் நிலவியலும் வெவ்வேறு மாவட்டங்களின் பெயர்களும் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான நகரங்களின் பெயர்களும் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் மூன்று கடல்களின் பெயர்களும் ஆறுகளின் பெயர்களும் மெல்ல மெல்ல மனத்தில் பதிவாகின. ஓய்வுநேரங்களில் தேசப்படத்தை விரித்துவைத்துக்கொண்டு ஒவ்வொரு நகரத்தையும் ஆறு ஓடும் திசையையும் கண்டுபிடிப்பது மனத்துக்குகந்த விளையாட்டாக மாறியது.

பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் பள்ளி சார்பாக ஒரு சுற்றுலாப்பயணத்தைத் திட்டமிட்டு, பெயர்கொடுத்து பணமும் கொடுத்த மாணவர்களை மட்டும் சாத்தனூர் அணைக்கட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர். பதினொன்றாம் வகுப்பில் இருந்தபோது அதேபோன்ற ஒரு பயணம் வீடூர் அணைக்கட்டைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பத்து பதினைந்து ஊர்களுக்கு ஆண்டுமுழுக்கத் தேவையான தண்ணீரைத் தேக்கிச் சேமித்துவைத்திருக்கும் கட்டுமானம் என்பது கற்பனைக்கு எட்டாத ஒரு வசீகரமாக இருந்தது. அதைப் பார்க்கும் ஆர்வம் பொங்கிக்கொண்டே இருந்தது. ஆனால் அப்போது பயணத்துக்குரிய கட்டணத்தைச் செலுத்தும் வசதி இல்லை. அதனால் பயணத்தில் கலந்துகொண்டவர்கள் சொன்ன விவரங்களை வைத்து, ஓர் அணைக்கட்டு எப்படி இருக்கும் என்பதை நானே கற்பனையில் கட்டியெழுப்பிப் பார்த்துக்கொண்டேன். எதிர்காலத்தில் எல்லா இடங்களையும் ஒன்றுவிடாமல் பார்ப்பேன் என மனத்துக்குள் சொல்லி ஆறுதல் தேடிக்கொண்டேன்.

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிப்படிப்பும் முடிந்து புதுச்சேரியில் தொலைபேசித்துறையில் ஊழியராகப் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. சம்பளமாக ஒரு தொகை கையில் கிடைக்கத் தொடங்கியதும் குற்றால அருவியைப் பார்க்கும் கனவு மீண்டும் என்னை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது.

ஒருமுறை எங்கள் ஊர் திரையரங்கில் புதிய படம் எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காக, வல்லவனுக்கு வல்லவன் என்னும் பழைய திரைப்படத்தைக் கொண்டுவந்து வெளியிட்டிருந்தார்கள். கூட்டமே இல்லாத அந்தப் படத்துக்கு முதல்நாள் இரவே சென்றிருந்தேன். ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்’ என்னும் பாடலை முழுக்கமுழுக்க பால்போல் பாய்ந்தோடும் அருவிக்கரையோரம் படமாக்கியிருந்தார்கள். அந்த அருவிக்காட்சி என்னை இன்பத்தில் மூழ்கவைத்தது. நான் கற்பனை செய்துவைத்திருந்ததைவிட பத்து மடங்கு வசீகரத்தை அளிப்பதாக இருந்தது அந்த அருவி. திரையைக் கடந்துவந்து அருவியின் குளிர்நீர் என் மீது தெறித்துவிடுவதுபோல ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன். ஒருகணம் கூட விழிகளைத் திரையைவிட்டு அகற்றாமல் பரவசத்தோடு அக்காட்சியில் நான் திளைத்திருந்தேன்.

முதன்முதலாக ஓர் அருவி எப்படி இருக்கும் என்பதை எனக்கு அக்காட்சி உணர்த்திவிட்டது. அருவி அருவி என மனம் குதித்துக்கொண்டே இருந்தது. அந்தப் பாடல் காட்சி எந்த அருவிக்கரையில் எடுக்கப்பட்டதோ தெரியாது, ஆயினும் குற்றால அருவிக்கரையில் எடுக்கப்பட்டதாக நானே கற்பித்துக்கொண்டேன். குற்றாலம் குற்றாலம் என மனம் கூவிக்கொண்டே இருந்தது. ஆறாம் வகுப்பில் எங்கள் சொக்கலிங்கம் ஐயா சொன்ன சொற்களை மீண்டும் நினைத்துக்கொண்டேன். புதிய திரைப்படம் வந்துவிட்டதால் நான்கு நாட்களுக்குப் பிறகு அந்தப் படத்தை எடுத்துவிட்டார்கள். அந்த அருவிக்காட்சிக்காகவே நான் அந்த நான்கு நாட்களும் அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து இரவுக்காட்சியாகப் பார்த்தேன்.

அந்த அருவிக்காட்சி எப்படியாவது குற்றாலத்தை வெகுவிரைவில் பார்த்துவிடவேண்டும் என்னும் எண்ணத்தை விதைத்தது.

ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையாகச் சேமித்துவைத்து, நாலைந்து நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு குற்றாலத்துக்குச் செல்லவேண்டுமெனத் தோன்றியது. திட்டமிட்டபடி மாதம் இருபத்தைந்து ரூபாயை தனியாக எடுத்துவைத்து சேமிக்கவும் தொடங்கிவிட்டேன். எறும்பு தன் புற்றுக்குள் தன் எதிர்காலத் தேவைக்கு உணவைச் சேமித்துவைத்துக்கொள்வதைப்போல துணிமணிகளை வைத்துக்கொள்வதற்காக இருந்த பெட்டிக்குள் ஆடைகளுக்கு அடியில் மறைவாக ஒரு சுருக்குப்பைக்குள் பணத்தை வைத்து பாதுகாத்தேன். சிக்கனமாக இருந்து சேமிப்பதற்காக கூடுமானவரைக்கும் பேருந்துப்பயணத்தைத் தவிர்த்து நடந்துசெல்ல முடிந்த இடங்களுக்கெல்லாம் நடந்து சென்றேன்.

நான்கு மாதங்களில் நூறு ரூபாய் சேர்ந்தது. இன்னும் ஒரு நூறு ரூபாய் சேர்த்துவிட்டால் குற்றாலத்துக்குப் புறப்பட்டுவிடலாம் என்ற கற்பனையில் மூழ்கியிருந்தபோது, எதிர்பாராத விதமாக எங்கள் அப்பா உடல்நலம் குன்றியதால் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டியதாயிற்று. வேறு வழியில்லாமல் குற்றாலப்பயணத்துக்காகச் சேமித்துவைத்திருந்த பணத்தை எடுத்து மருத்துவத்துக்குச் செலவிடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. குற்றாலம் பற்றி நினைக்கக்கூட நேரமில்லை. எப்படியோ கடன் இல்லாமல் சமாளித்தோமே, அதுவே பெரிய விஷயம் என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன். எனக்கும் எப்போதாவது ஒரு வாய்ப்பு வரும், அப்போது குற்றாலத்துக்குச் செல்லலாம் என என்னைத் தேற்றிக்கொண்டேன். எனினும் நான் புதுச்சேரியில் பணிபுரிந்த காலம் வரைக்கும் அந்த வாய்ப்பு வரவே இல்லை.

என் வாழ்வின் திருப்புமுனையாக, கர்நாடகத்தில் தொலைபேசித்துறையில் இளநிலை பொறியாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஓராண்டு காலப் பயிற்சிக்குப் பிறகு பெல்லாரி கோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். கர்நாடக மாவட்டத் தலைநகரங்களை பிற பெருநகரங்களோடு கேபிள் வழியாக இணைக்கும் மாபெரும் தேசியத்திட்டத்தில் நான் பணிபுரிந்தேன். பெல்லாரியில் தொடங்கி ஹூப்ளி வரைக்கும் கேபிள் புதைக்கவேண்டும். நான் ஹொஸபேட்டெ என்னும் நகரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். பெல்லாரியில் தொடங்கி ஹொஸபேட்டெ வழியாக கொப்பல் வரைக்குமான பணி எனக்கு ஒதுக்கப்பட்டது. நடுவில் இருந்த ஹொஸபேட்டெயைத் தங்குமிடமாகக் கொண்டு நான் செயல்பட்டேன்.

ஹொஸபேட்டெக்கு அருகில்தான் துங்கபத்திரை அணைக்கட்டு இருந்தது. முப்பத்திரண்டு வாசல்களைக் கொண்ட மிக நீண்ட அணைக்கட்டு. வேலைக்குச் சேர்ந்த முதல்நாள் மாலையிலேயே அந்த அணைக்கட்டைப் பார்க்கச் சென்றேன். உயர்ந்த தடுப்புச் சுவர்களுக்கு மறுபுறம் கடலென குமுறி ஓசையெழுப்பி கரைகளை மோதிக்கொண்டிருக்கும் அலைகளோடு துங்கபத்திரை சுழன்றாடிய காட்சி நினைவில் அப்படியே பதிந்துவிட்டது. இருட்டும்வரைக்கும் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரைக்கும் தெரிந்த தண்ணீர்ப்பரப்பைப் பார்த்தபடி இருந்தேன். இரண்டாண்டு காலம் அந்த ஊரில் தங்கி நான் தொடங்கிய வேலையை முடித்தேன்.

அந்த இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு நாளும் துங்கபத்திரையைப் பார்ப்பதற்காகவே என் அதிகாலை நடைப்பயிற்சியை அல்லது மாலை நடைப்பயிற்சியை அதை நோக்கியதாக வைத்துக்கொண்டேன். சாத்தனூர் அணைக்கட்டைக்கூட பார்த்திராத எனக்கு அந்தத் துங்கபத்திரை அணைக்கட்டுக்காட்சி மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. அங்கிருந்த சமயத்தில்தான் நான் திருமணம் செய்துகொண்டேன். துங்கபத்திரையை நோக்கிய நடைப்பயிற்சியில் தினந்தோறும் என் மனைவியும் என்னோடு சேர்ந்து நடந்தார்.

பெல்லாரி – ஹூப்ளி இணைப்புத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததும் வேறுவேறு நகரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதேபோன்ற ஒரு திட்டத்துக்காக ஷிமோகாவுக்குச் செல்லவேண்டிய வேலை வந்தது. ஷிமோகாவையும் சாகரையும் இணைப்பதுதான் திட்டம். ஷிமோகாவில் எங்கள் துறைக்குரிய குடியிருப்புப்பகுதியிலேயே எனக்கு வீடு கிடைத்ததால் வாடகைக்கு வீடு தேடவேண்டிய அவசியம் எழவில்லை. உடனே குடும்பத்தை அந்தப் புதிய வீட்டுக்கு மாற்றிக்கொண்டோம். எங்களுக்கு மகன் பிறந்திருந்தான்.

சாகரிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் ஜோக் அருவி இருந்தது. என்னோடு பணிபுரிந்த நண்பரொருவர்தான் எனக்கு அந்த அருவியைப்பற்றி எடுத்துரைத்து முதலில் அந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். ஒரு பகல்பொழுதையும் இரவுப்பொழுதையும் அந்த அருவிக்கு அருகிலேயே நாங்கள் கழித்தோம். நாங்கள் நின்றிருந்த இடத்துக்கும் அருவி விழுந்த இடத்துக்கும் இடையில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருந்தது. ஆயினும் அருவியின் சாரல் முகத்தில் தெறித்தது. பன்னீர்த்துளிகள் போல அச்சாரல் துளிகள் முகத்தில் படும்போது மெய்சிலிர்த்தது.

அருவி எனச் சொன்னபோதும் அது நான்கு பிரிவுகளாக மலையிலிருந்து விழுந்துகொண்டிருந்தது. ராஜா, ராணி, ரோவர், ராக்கெட் என ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் இருந்தது. ஷராவதி ஆற்றின் போக்கில்தான் அந்த அருவிக்கூட்டம் காட்சியளித்தது. இந்தியாவில் உயரமான அருவிகளில் அதுவும் ஒன்று. ஏறத்தாழ ஆயிரம் அடி உயரம். பார்த்துக்கொண்டே இருந்த அனுபவத்தில் பசி கூட மறந்துவிட்டது. ஆழ்நெஞ்சில் குற்றாலத்தை நினைத்தபடி, நான் அந்தப் பேரருவியைப் பார்த்தபடி நின்றிருந்தேன்.

அடுத்துவந்த விடுமுறை நாளில் என் மனைவியையும் மகனையும் அழைத்துக்கொண்டு மீண்டும் அருவியைப் பார்க்கச் சென்றேன். ஓராண்டு காலம் நான் ஷிமோகாவில் இருந்தேன். அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் பத்து முறையாவது ஜோக் அருவியைப் பார்த்திருப்போம். ஜோக் அருவிக்குச் செல்வது எங்களுக்கு உல்லாசப்பயணம்போல அமைந்துவிட்டது.

ஷிமோகாவிலிருந்து எனக்குப் பெங்களூருக்கு மாற்றல் கிடைத்தது. மகன் வளர்ந்ததும் கல்வி வாய்ப்புக்கு பெங்களூர் நகரம் பொருத்தமாக இருக்கும் எனக் கருதி, நான் அந்த மாற்றலை ஏற்றுக்கொண்டேன். ஷிமோகாவில் நான் தொடங்கிய அலுவலகப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு குடும்பத்தோடு பெங்களூருக்கு வந்துவிட்டேன்.

காவிரியைப் பாயும் மைசூருக்கு அருகில் இருக்கிறோம் என்ற எண்ணமே, அந்த ஆற்றைப் பார்க்கவேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியபடி இருந்தது. சில நாட்களிலேயே அந்த எண்ணத்தைச் செயல்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கூடிவந்தது. ஒரு விடுமுறை நாளில் காலை நேரத்தில் வாடகைக்காரில் மைசூரை நோக்கிச் சென்றோம். சிவசமுத்திர நீர்வீழ்ச்சியின் முன்னால்தான் முதலில் நாங்கள் போய் நின்றோம்.

அருகில் சென்று பார்க்க அனுமதி இல்லை. வெகுதொலைவில் அதைக் கண்டு ரசிப்பதற்கான மேடை இருந்தது. அங்கு நின்று ககனசுகி, பரசுகி என இருபெரும் பிரிவுகளாகப் பொங்கி விழும் அந்த அருவியைப் பார்த்தோம். ஏறத்தாழ முன்னூறு அடி உயரத்திலிருந்து அந்த அருவி விழுந்து பாய்ந்தோடியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலேயே முதல் நீர்மின்சார நிலையம் அந்த இடத்தில்தான் தொடங்கப்பட்டது என்று அங்கிருந்த பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிவசமுத்திரம் மின்சார நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மின்சாரத்தின் உதவியோடுதான் கோலார் தங்கவயலில் சுரங்கவேலை தொடங்கப்பட்டது என்றும் பெங்களூரில் வெள்ளைக்கார அதிகாரிகள் வசித்த பகுதிகளுக்குத் தேவையான மின்சாரமும் அங்கிருந்துதான் வழங்கப்பட்டது என்றும் எழுதப்பட்டிருந்தது.

சிவசமுத்திரம் அருவியின் அழகில் மனம் பறிகொடுத்து நின்ற தருணத்தில் ஒருகணம் குற்றாலம் அருவியின் எண்ணம் எழுந்து என் ஏக்கத்தை அதிகரிக்கவைத்தது. இவ்வளவு வாய்ப்புகளை வழங்கும் இயற்கை அந்த வாய்ப்பையும் என்றாவது ஒருநாள் தானாக வழங்கும் என நினைத்து அமைதிகொண்டேன்.

சிவசமுத்திரத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கப்பட்டினம் சங்கமத்தையும் கோவிலையும் பார்த்துவிட்டு கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுக்குச் சென்றோம். தடுத்து நிறுத்தப்பட்ட காவிரியின் நீர்ப்பரப்பு வெயில் பட்டு வெள்ளித்தகடுபோல பளபளத்தபடி இருந்தது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் தண்ணீரே தெரிந்தது. முதலில் கண்ணம்பாடி அணைக்கட்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும் அந்தக் கட்டுமானத்துக்காக பெருமளவில் தம் சொந்தப்பணத்தைச் செலவிட்ட மைசூர் அரசரான கிருஷ்ணராஜ உடையாரைக் கெளரவிக்கும் வகையில் அவர் பெயரையே அந்த அணைக்கட்டுக்குச் சூட்டிவிட்டனர். துங்கபத்திரை அணைக்கட்டு போலவே இதுவும் நீளமான அணைக்கட்டு. பல கதவுகளைக் கொண்டது. அணையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த பிருந்தாவனம் என்னும் பூந்தோட்டம் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

பெருநகர இணைப்புகளுக்கு கண்ணாடி இழை கேபிள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நடைமுறை அப்போது இந்தியாவெங்கும் அறிமுகமானது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைச் சென்றடையும் வசதிக்காக அந்தத் தொழில்நுட்பத்தை எங்கள் துறை உடனடியாக ஏற்றுக்கொண்டது. அதன் விளைவாக, முதல்கட்டமாக கேபிள் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்தியாவெங்கும் உள்ள எங்கள் பயிற்சி நிலையங்கள் வழியாகப் பயிற்சியளிக்கப்பட்டது. அந்தச் சிறப்புப் பயிற்சிக்காக எங்கள் அலுவலகம் என்னை ஜபல்பூரில் உள்ள பயிற்சிநிலையத்துக்கு அனுப்பியது. நானும் இரண்டுமூன்று ரயில்களில் மாறிமாறிப் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தேன்.

பயிற்சி இல்லாத ஞாயிறு அன்று அங்கு கிடைத்த நண்பர்களோடு சேர்ந்துகொண்டு ஜபல்பூருக்கு அருகில் இருந்த பேடாகாட் என்னும் இடத்துக்குச் சென்றோம். சலவைக்கற்கள் நிறைந்த மாபெரும் மலையைப் பிளந்துகொண்டு பாய்ந்துவந்த நர்மதை நதியைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது. வெள்ளைவெளேரென சுடர்விட்ட மலையை அண்ணாந்து பார்த்தபடி அந்த நதியோட்டத்தில் நாங்கள் சென்ற படகுப்பயணத்தை மறக்கவே முடியாது. அது ஒரு பேரனுபவம். அதையடுத்து நாங்கள் கண்ட துவாந்தார் அருவியின் தோற்றம் மயங்கவைப்பதாக இருந்தது. அந்த உயரம். அந்த ஓசை. அந்தச் சாரல். ஒவ்வொன்றும் பரவசம்.

பணிநிமித்தமாக நான் மேற்கொண்ட பயணத்தின் ஒரு பகுதியாகவே பல ஆறுகளையும் பல அருவிகளையும் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஒரிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவிலிலிருந்து சிறிது தொலைவில் இருந்த காந்தஹார் அருவி, சதீஸ்கரின் சித்திரக்கூட அருவி, குடகு பகுதியில் அமைந்திருக்கும் சுன்சுன்கட்டெ அருவி, கோகாக் பகுதியில் அமைந்திருக்கும்  கடப்பிரபா ஆற்றையொட்டிப் பொங்கிப் பாயும் அருவி, மடிக்கேரிக்கு அருகில் தொட்டஹெப்பெ, சிக்கஹெப்பெ என இரு பெயர்களில் சகோதரிகளைப்போல பொங்கி இறங்கி வழியும் அருவிகள் என நான் பார்த்த அருவிகளின் காட்சிகள் மனத்தில் விரிந்தபடி இருக்கின்றன. ஒவ்வொரு அருவியின் முன்னால் நிற்கும்தோறும் சொக்கலிங்கம் ஐயா சொல்லிக்கொடுத்த வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் பாடல் நினைவுக்கு வந்துவிடும். குற்றாலத்தின் சாயலை அந்த அருவிகளில் நானாகவே கற்பனை செய்துகொண்டு, சில கணங்கள் அதில் திளைத்திருப்பேன்.

இதற்கிடையில் இருபதாண்டு காலம் உருண்டோடிவிட்டது. நான் எழுதிய சிறுகதைகள் தமிழ்ச்சூழலில் கவனம் பெறத் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு சிறுகதைத்தொகுதியோ அல்லது நாவலோ வெளிவந்து பதிய வாசகர்கள் கிடைக்கத் தொடங்கினர். பல மூத்த எழுத்தாளர்களின் அறிமுகமும் நட்பும் அமைந்தன. அப்படி எனக்குக் கிடைத்த நண்பர்களில் மூத்த கவிஞரான கலாப்ரியா முக்கியமானவர்.  2000 ஆண்டு இறுதியில் அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். குற்றாலத்தில் ஒரு பட்டறை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்தச் சந்திப்பில் கவிதை, சிறுகதை, நாவல் என எல்லா வகைமை சார்ந்த படைப்புகள் குறித்தும் உரையாடலாம் என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் மலையாளக்கவிஞர்களை அழைத்துவந்து மலையாளக்கவிதைகளை அறிமுகப்படுத்தும் விதமாக ஓர் அமர்வை ஒருங்கிணைக்கிறார் என்றும் அதேபோல நான் கன்னடக்கவிதைகளை அறிமுகப்படுத்தும் விதமாக ஓர் அமர்வை நான் ஒருங்கிணைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

என் நீண்டகாலக் குற்றாலக்கனவை நிறைவேற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை காலம் கலாப்ரியா வழியாக எனக்கு வழங்கியிருப்பதாக நினைத்து மகிழ்ந்தேன். உடனே நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஒருபுறம் எனக்கு அறிமுகமான இரு கன்னடக்கவிஞர்களைச் சந்தித்து பங்கேற்பதற்கு ஒப்புதல் பெறும் வேலையைச் செய்தபடி அமர்வில் வாசிப்பதற்காக அவர்களுடைய சில கவிதைகளையும் வேகவேகமாக மொழிபெயர்த்து முடித்தேன்.

2000 ஆம் ஆண்டில் டிசம்பர் இறுதி மூன்று நாட்களில் குற்றாலத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. எங்கள் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் பட்டறையில் சில புத்தகங்களும் வெளியிடப்பட்டன. அந்நிகழ்ச்சிக்கு நான் குடும்பத்தோடு சென்றிருந்தேன். நிகழ்ச்சிகளுக்கு இடையிடையில் கிடைத்த ஓய்வுப்பொழுதுகளில் அவர்களை அழைத்துக்கொண்டு அருவிகளைப் பார்ப்பதில் செலவழித்தேன். நாங்கள் தங்கியிருந்த திவான் பங்களாவுக்கு அருகிலேயே குற்றாலநாதர் கோவிலும் சுற்றுலாப்பயணிகள் பார்த்து மகிழ்வதற்கு வசதியாக அருவியும் இருந்தது.

அந்த அருவியின் முன்னால் நின்று அண்ணாந்து பார்த்தபடி நின்றிருப்பதே ஆனந்தமான அனுபவமாக இருந்தது. கண்கூச வைக்கும் உயரத்தில் அந்த அருவியின் மேல்விளிம்பு இருந்தது. அந்தப் பேரோசையைக் கேட்கக்கேட்க ஏதோ இசைநிகழ்ச்சியைக் கேட்டதுபோல மனம் துள்ளியது. அக்கணத்தில் சொக்கலிங்கம் ஐயா முன்னால் அமர்ந்து அவரிடம் ‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்’ பாடத்தைக் கேட்ட சிறுவனாக என்னை உணர்ந்தேன். அருவிக்கனவை மானசிகமாக எனக்குள் விதைத்த அவரை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

அந்த அருவியைச் சுற்றி ஏழெட்டு இடங்களில் இன்னும் சில அருவிகள் இருப்பதாக கலாப்ரியா சொன்னார். பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி என அதன் பெயர்களை அடுக்கினார். எல்லாமே எங்கள் சொக்கலிங்கம் ஐயா வழியாகக் கேட்ட பெயர்கள். அவை அனைத்தையும் நான் மனத்துக்குள் குறித்துக்கொண்டேன். ஆனால் அமர்வுகளுக்கு இடையில் எங்களுக்குக் கிடைத்த ஓய்வுப்பொழுதில் எல்லா அருவிகளையும் பார்க்கமுடியவில்லை. பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றை மட்டுமே பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டோம்.

அத்தருணத்தில் பார்க்காமல் விட்ட அருவிகளையெல்லாம் அடுத்து 2001இல் கலாப்ரியா ஏற்பாடு செய்திருந்த பட்டறைக்குச் சென்றபோது பார்த்தோம். அதற்காகவே பட்டறை முடிந்ததும் கூடுதலாக ஒரு நாள் தங்கினோம். மலைப்பாதையில் நடந்து உச்சியைத் தொட்டதும் ஒரு திருப்பத்தில் வானுயரத் தோற்றத்தில் சட்டென தெரிந்த தேனருவியின் தரிசனம் மிகப்பெரிய அனுபவம். அதன் முன்னிலையில் பேச்சே எழவில்லை. பொங்கியிறங்கும் தேனருவியின் முன்னால் தண்ணீரில் இறங்கி விழியை விலக்க மனமின்றி அண்ணாந்து பார்த்தபடியே நின்றேன். ஒருபுறம் என் மனைவியும் மறுபுறம் என் மகனும் நிற்க, அன்று நான் கண்ட தேனருவிக்காட்சி ஒரு சிற்பத்தைப்போல என் மனத்தில் இன்றும் இடம்பெற்றிருக்கிறது.

அந்த நாள் என் வாழ்வில் மிகமுக்கியமான நாள். ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது சொக்கலிங்கம் ஐயா வழியாக என் மனத்தில் உருவான குற்றாலக்கனவு முப்பதாண்டுகளுக்குப் பிறகு நிறைவேறிய நாள்.

***

பாவண்ணன் – விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் பிறந்தவர். கர்நாடக மாநிலத்தில் உதவிக் கோட்டப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை, நாவல், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று தொடர்ச்சியாக இலக்கியத்தில் தடம்பதித்து வருபவர். மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய அகாதெமி விருது, இயல் விருது முதலிய தமிழின் முன்னணி விருதுகளை வென்றவர். மின்னஞ்சல்: writerpaavannan2015@gmail.com

நீ ஒருத்தன் தடுத்து நிறுத்துவதால் நிற்கப் போவதில்லை அலைகள்

0

பைக்கை நிறுத்தியவுடன் அவன் ப்ரீத்தாவைப் பார்த்தான். உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த அவள், கையை உயர்த்தி, “ஹாய்” என்றாள். அவனும், “ஹாய் ப்ரீத்தா,” என்றான். உடம்பை ஒட்டிக்கொண்டிருந்த அவளுடைய டி-ஷர்ட் வியர்வையில் நனைந்திருந்தது. அவள் முகத்தில் வியர்வைத்துளிகளைக் கவனித்தான். அவள் ஒரு முறை கீழே குனிந்து வலது கையால் இடது பாதத்தைத் தொட்டவுடன், வலது கையால் இடது பாதத்தை தொட்டுவிட்டு நிமிர்ந்தாள். சிவப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் நீல நிற டி-ஷர்ட் அணிந்திருந்த அவள், நாற்காலியின் மேலிருந்த துண்டை எடுத்து முகத்தையும், கைகளையும் துடைத்துக்கொண்டு, வாட்டர் பாட்டலிலிருந்து தண்ணீரை அருந்திக்கொண்டு அவன் அருகில் வந்து, அவன் கையில் கிரீடம் போன்ற ஒன்றை சுட்டி, “இது என்ன?” என்று கேட்டாள் . அவன் அதை அவள் கண்ணுக்கு நேராக தூக்கி, “இது என்னுடைய புது AI ப்ராஜெக்ட். என்னுடைய ஃபைனல் இயர் ப்ராஜெக்ட்,” என்றான். “ஓ. ரஷ்மியம் ஏதோ AI ப்ராஜெக்ட் செய்வதாக சொன்னாள். இதுதான் அதுவா?” “இல்லை. அவள் செய்வது வேறு, நான் செய்வது வேறு. இந்த கருவி சரியா வேலை செய்கிறதா என்று இவர்களை வைத்து சோதனை செய்யப்போகிறேன். நீங்களும் சோதனையில் கலந்துக்கொள்ளலாம்,” என்று கன்னட மொழியில் சொன்னான். “நீங்கள் என்று சொல்லாதே. நீ என்றே சொல்லு போதும்”, என்று ஆங்கிலத்தில் அதுவரை பேசிக்கொண்டிருந்த அவள் கன்னட மொழியில் கூறினாள்.

ப்ரீத்தா ரஷ்மியின் தாய். முதல் முறை அவன் இந்த வீட்டுக்கு வந்த பொழுது தன்னுடன் படிக்கும் ரஷ்மியின் தாயை, ஆன்டி என்று கூப்பிட்டான். “ஆன்டி, கீண்டி எல்லாம் வேண்டாம். எனக்கு ப்ரீத்தா என்ற அழகான பெயர் இருக்கிறது. நீ ப்ரீத்தா என்றே என்னை அழைக்கலாம்.” என்று அவள் கூறினாள். ரஷ்மியின் மற்ற நண்பர்களுக்கும் இதே கட்டளை இடப்பட்டது. ஆங்கிலம் பேசும்வரை எந்த சிக்கலும் வந்ததில்லை ஆனால் அவன் அடிக்கடி ஆங்கிலத்திலிருந்து கன்னடத்திற்கு மாறும்பொழுது அவளை மரியாதையுடன் விளிப்பான். “இந்த நீங்கள் நாங்கள் எல்லாம் வேண்டாம்,” என்று அவள் வற்புறித்தினாலும், அவனுக்கு இயற்கையாகவே மரியாதை மிகுந்த சொற்கள் வந்துவிடுவதுண்டு.

கிரீடம் போன்ற அந்தக் கருவியை ஒரு முறை பார்த்துவிட்டு, “நான் குளித்துவிட்டு வந்து இதை பார்க்கிறேன். உனக்காக தான் எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்,” என்று கூறிவிட்டு, வீட்டுக்குள் சென்றாள். பெங்களூரு கோரமங்களா பகுதியில் அது ஒரு பெரிய பங்களா. இதுவரை பச்சை புல்தரையின் மீது அவள் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள். இப்பொழுது அந்த புலதரை மேல் இரண்டு ஸ்ப்ரின்க்லெர்கள் மெல்லிய மழையை சாரலைப்போல தூவிக்கொண்டிருந்தன. சுவரை ஒட்டி பல ரோஜா செடிகள். இரண்டு செடிகளில் ரோஜாக்கள் பூத்திருப்பதைக் கவனித்துக்கொண்டே அவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

விஸ்தாரமான ஹாலிலிருந்த வளைந்து செல்லும் மாடிப்படிகளை ஏறி நேரே சென்று வலதுபுறம் இரண்டாவதாக இருந்த அறைக்கதவைத் திறந்தான். இவனைக் கண்டவுடன் எல்லோரும், “ஹாய்”, “ஹை”, “ஹை” என்கிறார்கள். பிரம்மாண்டமான டீவியில் ஓடிக்கொண்டிருந்த ஆங்கில படத்தின் ஒலியில் அவர்களின் குரல்கள் எடுபடவில்லை. ரஷ்மி டிவியின் ஒலியை ம்யூட் செய்துவிட்டு, “உனக்காக தான் எல்லோரும் காத்திருக்கிறோம்,” என்று சொல்லிவிட்டு படுக்கையின் மேல் அமர்ந்தாள். அவள் குட்டையான வெள்ளை ஷார்ட்ஸ் மற்றும் அரக்கு நிறத்தில் தொள தொளவென்ற டி-ஷர்ட் அணிந்திருந்தாள். அவள் ப்ரா போடவில்லை என்று அவனுக்கு தெரிந்தது. அவளருகில், நீல நிற குட்டை frock மற்றும் வெள்ளை நிற டி-சோர்ட் அணிந்த மேகனா உட்கார்ந்திருந்தாள். ரஷ்மிக்கு இன்னொருபுறம் அவள் மேல் சாய்ந்துக்கொண்டு அவளுடைய boyfriend ராகுல் உட்கார்ந்திருந்தான். அந்த அறையில் இருந்த ஒரு நாற்காலியில் நீல நிற ஜீன்ஸ் மற்றும் கருப்பு டி ஷர்ட் அணிந்த பிரேர்னா ‘நான் இப்பொழுது இதைவிட்டு சறுக்கிவிடுவேன்’ என்ற தோரணையில் உட்கார்ந்திருந்தாள். அவன் காலியாக இருந்த இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து, “என்ன, ஆரம்பிக்கலாமா?” என்றான்.

“ஆரம்பிப்பது இருக்கட்டும். முதலில் இது என்ன பரீட்சை என்பதை சொல். எல்லோரும் ஏதோ AI வைத்துக்கொண்டு புதிதாக ஏதோ செய்திருக்கிறாய் என்கிறார்கள். எப்பொழுது எதை எடுத்தாலும் AI என்கிறார்கள். நீ நியூராலஜி ஒரு சப்ஜெக்ட்டாக படிக்கிறாய் அல்லவா? அதை வைத்து ஏதோ செய்திருக்கிறாயா?” பிரேர்னா கேட்டாள்.

அவன் அவள் உருண்டை முகத்தை பார்த்தான். அவனைத் தவிர AI பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தவர்களில் பிரேர்னா ஒருத்தி. முதலில் அதிகம் எதுவும் சொல்லவேண்டாம் என்று இருந்த அவன், பிரேர்னா கேட்டவுடன், தன்னுடைய ப்ராஜெக்ட்டை உற்சாகமாக விளக்க ஆரம்பித்தான்.

“இந்த கருவியைப் பாருங்கள்,” என்று கிரீடம் போல் இருந்த கருவியை அவர்களுக்கு காண்பித்தான். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்லில் செய்யப்பட்டிருந்த கருவியின் உட்பகுதியில் பல வண்ணங்களில் மெல்லிய வயர்கள் ஓடின. அதன் வெளிப்பகுதியில் சிறிய பல்புகள் பதிக்கப்பட்டிருந்தன. அவன் ஒரு சிறிய சுவிட்ச்சை தட்ட ஒரு பல்பு சிவப்பாக எரிந்து பிறகு நீல வண்ணத்துக்கு மாறியது. “உன் டீவி ப்ளூடூத் லிஸ்டில் இந்த கருவியின் பெயர் வருகிறதா பார்,” என்று ரஷ்மயிடம் கூற அவள் ரிமோடை எடுத்து இயக்கினாள். “பெயர் ஆகிவிட்டது,” என்று சற்று நேரம் கழித்து சொன்னாள். “இதைத் தலையில் வைத்துக்கொள்,” என்று அவள் தலையில் அந்த உலோகக் கிரீடத்தை வைத்தான். “இப்பொழுது உன்னுடைய பெயரையும் உன்னுடைய சோசியல் மீடியா பெயரையும் நான் இந்த கருவிக்கு கூறப்போகிறேன். இந்த கருவி உனக்கு உன்னுடைய சோசியல் மீடியாவிலிருந்து பல படங்களை காட்டும். நீ படங்களை பார்க்கும்பொழுது உன் மூளையில் உண்டாகும் எலக்ட்ரிக் கரண்ட்டை இந்த கருவி பதிவு செய்துக்கொள்ளும். எந்த படத்துக்கு உன் மூளை எது போல் ரியாக்ட் செய்கிறது என்று பதிவு செய்துக்கொண்ட பிறகு, உன்னை நான் யார் பற்றியாவது நினைக்க சொல்லுவேன். இந்த கருவி அது யார் என்பதை உன் பிரைன் ஆக்ட்டிவிட்டி வைத்து கண்டுபிடித்து இந்த டீவியில் காட்டும்,” என்றான்.

“வாவ்,” என்று ரஷ்மி, ராகுல் மற்றும் மேகனா மூவரும் ஒரே சமயத்தில் உரக்க சொன்னார்கள். பிரேர்னா மட்டும் மெளனமாக அவனை முறைத்தாள். “எதற்காக இது? இதனால் யாருக்கு என்ன பயன்?” என்று கேட்டாள் . “இதனால் பலர் பயனடைவார்கள். போலீஸ்சுக்கு உதவியாக இருக்கும். ஒரு கொலையாளி மனதை இதை வைத்து அறிந்துக்கொள்ளலாம். அவனுக்கு இதை அணிவித்தால், அவன் எங்கு யாரை கொலை செய்தான் என்பது நமக்கு தெரிந்துவிடும். இது மட்டும் அல்ல. யாராவது வயதானவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரால் பேச இயலவில்லை என்றால், இதை அவருக்கு மாட்டிவிட்டு அவர் எதை பற்றி நினைக்கிறார் என்று தெரிந்துக்கொண்டு அவருக்கு வேண்டியதை செய்துக்கொடுக்கலாம். இப்படி பல நன்மைகள் இதனால் உண்டாகும்,” என்றான்.

“நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம் உண்டாகும். போலீஸ் இதைக் கையில் எடுத்தால் யாருக்கு வேண்டும் என்றாலும் மாட்டிவிட்டு அவர்கள் என்ன நினைக்கிறார்களோ தெரிந்துக்கொண்டு அவர்களை மிரட்டலாம். பெரிய கம்பெனியில் இதை மாட்டிக்கொண்டு வேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தலாம். நீ கம்பெனி வேலையைத் தவிர வேறு எதை நினைத்தாலும் உன்னை வேலையை விட்டு தூக்கிவிடலாம். நம்முடைய மூளையில் விளையும் பல கோடி கற்பனைகளை வேறொருவர் எதற்கு பார்க்கவேண்டும்? கணவனும் மனைவியும் இதைக் கையில் எடுத்தால் எது போன்ற சர்ச்சைகள் உண்டாகும் என்று யோசித்தாயா?” இப்பொழுது அவள் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து அவனை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.

“அப்படியெல்லாம் ஒன்றும் நிகழாது..”

“அப்படித்தான் முதலில் சொன்னார்கள். இப்பொழுது பல கலைஞர்களுக்கு வேலை இல்லை. உன் கருவி ஆழ்மனதில் இருக்கும் அழுக்கையெல்லாம் வெளியில் கொட்டவில்லை என்று யார் அழுதார்கள்? இதை நம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா?”, என்று பிரேர்னா கேட்டாள்.

“இதை நாங்கள் அப்படி புரோகிராம் செய்யவில்லை. நீ வெளிப்படையாக நினைப்பதைத்தான் அது எடுக்கும். ஆழ்மனதுக்குள் அதனால் செல்ல இயலாது,” என்றான்.

அவன் முகத்தை பார்த்து கையை நீட்டி, “ஏஐ என்பது தானாக கற்றுக்கொள்ள கூடியது. ஒரு செல்ஃப் லர்னிங் சிஸ்டம் இதுதான் கற்றுக்கொள்ளும் என்று உன்னால் நிர்ணயிக்கமுடியாது,” என்று பிரேர்னா சொன்னாள்.

“டெக்னாலஜி முன்நகர்வதை யாராலும் தடுக்க முடியாது,” என்றான் ராகுல்.

“நான் சொல்வது உனக்கு புரியாது. நீ இது போன்ற விவாதங்களில் தலையிடாதே. ஏதோ உன் அபிமான நடிகர் நடிகையின் படங்களை பற்றிய விவாதத்துடன் நிறுத்திக்கொள்”, என்று பிரேர்னா சொன்னாள்.

சுவரில் சாய்ந்துக்கொண்டிருந்த ரஷ்மி, நிமிர்ந்து உட்கார்ந்து, “நீ எப்படி ராகுலை இது போல் நடத்தலாம்? அவனிடம் சாரி சொல். உன் இஷ்டத்துக்கு என் வீட்டில் நீ பேச முடியாது. ராகுல் யார் என்று உனக்கு தெரியும். இருந்தாலும் நீ என்னை இன்சல்ட் செய்ய வேண்டும் என்றே இப்படி செய்கிறாய்.”

ராகுல் ரஷ்மியின் தோளை பிடித்து, “கூல் டவுன். கூல் டவுன். அவளைப் பற்றி உனக்கு தெரியும் தானே?”

“நாட் இன் மை ஹவுஸ்,” என்று ரஷ்மி கத்தினாள் ரஷ்மி படுக்கையை விட்டு கீழே இறங்கி பிரேர்னா அருகில் சென்று, “நீ இப்பொழுது அவனுக்கு சாரி சொல். இல்லையென்றால் உன் வீட்டுக்கு போ,” என்றாள் . பிரேர்னா அமைதியாக எழுந்து நின்று, “எனக்கு இவன் செய்வதில் சம்மதமில்லை. நான் வீட்டுக்கு செல்கிறேன்,” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு அகன்றாள். ரஷ்மி காலால் தரையை வேகமாக மிதித்து, “பிட்ச்,” என்றாள்.

அறையில் மௌனம் நிலவியது. பிரேர்னா வெளியேறியது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. மேகனா காற்றுக்கு பறந்து அவள் குட்டை ஸ்கர்ட்டை இரு கைகளாலும் பிடித்து நிறுத்தினாள். படுக்கையில் மறுபடியும் உட்கார்ந்துக்கொண்ட ரஷ்மி, குனிந்து அவனிடமிருந்து கருவியை பெற்றுக்கொண்டாள். அவள் குனிந்த பொழுது அவன் தலையை திருப்பிக்கொண்டான். “ஆரம்பிக்கலாமா?” என்று ரஷ்மி கேட்க, அவன் தன்னுடைய லேப்டாப்பில் ஏதோ டைப் செய்தான். செய்தபின், “ஓகே,” என்றான். டீவியில் பல படங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஒவ்வொரு படத்தையும் ரஷ்மி பார்க்கும்பொழுது அந்த கருவியில் வேறு வேறு விளக்குகள் எரிந்து அணைந்தன. அதனுடன், ஒரு மெல்லிய ஒலியும் அந்த அறையை நிரப்பியது. பல படங்களை காண்பித்த பிறகு, விளக்குகள் மின்னுவது நின்றது. ஒலி அடங்கி மௌனம் குடிக்கொண்டது.

“ஓகே,” என்றான் அவன். “இப்பொழுது யாரை பற்றியாவது நினைத்துக்கொள்.” ரஷ்மி டீவியை உற்று பார்த்தாள். கருவியில் நீலம் மற்றும் பச்சை விளக்குகள் பளிச்சிட்டன. டீவியில் ராகுலின் படம் தெரிந்தது. “வாவ், வாவ், வாவ்,” மூவரும் கைக்கொட்டி கத்தினார்கள். அவன் சிரித்தான். “இப்பொழுது உனக்கு விருப்பமான இடத்தை நினைத்துக்கொள்,” என்றான். ரஷ்மி கண்ணை மூடி தலையை குனிந்து ஒரு நிமிடம் மெளனமாக இருந்தாள். அவள் கண் திறந்தவுடன் டீவியில் பாரிஸ்சில் உள்ள ஈபிள் டவர்ருக்கு முன் அவள் நிற்பது போல் ஒரு படம் தெரிந்தது. ரஷ்மி குதித்து எழுந்து அவனை அணைத்துக்கொண்டு, “யூ ஆர் ஏ ஜீனியஸ்,” என்றாள். அவன் முகம் மலர்ந்து, “இதை இன்னும் டெஸ்ட் செய்யவேண்டும்,” என்றான். “நான்சென்ஸ். திஸ் இஸ் perfect,” என்றவள், தலையை திருப்பி, ராகுலை பார்த்து, “நீ வைத்துக்கொள். யார் வருகிறார்கள் என்று பார்ப்போம் ,” என்றாள் ராகுலின் முகம் இருக்கமாவதை அவன் கவனித்தான். இவ்வளவு நேரம் ராகுலின் உதடுகளில் குடிகொண்டிருந்த புன்சிரிப்பு மறைந்தது. “வேறு யாராவது உன் மனதில் இருக்கிறார்களா?” என்று மேகனா கேட்டாள். “சீ, சீ.” என்ற ராகுலிடம், “அப்பொழுது தலையில் இதை வைத்துக்கொள்,” என்றாள் ரஷ்மி. ராகுல் வேண்டாவெறுப்பாக தன்னிடமிருந்து கருவியை பெற்றுக்கொண்டது போல் அவனுக்கு தோன்றியது . டீவியில் பல படங்கள் தெரிய ஆரம்பித்து, விளக்குகள் எரிய ஆரம்பித்து, மெல்லிய ஒலி கேட்க ஆரம்பித்த பிறகும் ராகுலின் முகத்தில் இறுக்கம் மறையவில்லை. இப்பொழுது ரஷ்மியின் முகத்திலும் இறுக்கம் குடிக்கொள்வதை அவன் கவனித்தான். மேகனா அவர் இருவரையும் உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். ஒலி நின்றவுடன், “இப்பொழுது யாரையாவது நினைத்துக்கொள், இல்லையென்றால் ஒரு இடத்தை நினைத்துக்கொள்,” என்றான். ராகுல் நாக்கினால் உதடுகளை ஈரம் செய்துக்கொண்டு, கண்களை மூடினான். கண் திறந்தவுடன் டீவியில் மெதுவாக தெளிவாகும் படத்தை உற்று நோக்கினான். படம் தெளிவடைந்தபோது அவனும் ரஷ்மியும் லண்டன் மான்செஸ்டர் யுனைடெட் ஸ்டேடியம் வெளியில் நிற்பதை பார்த்து, “ஊ,” என்றான். ரஷ்மி அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு “ஐ லவ் யூ,” என்றாள். அவன் முகத்தில் நிம்மதி படர்ந்திருந்தது. அவன் மேகனாவைப் பார்த்து சிரித்தான்.

“எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது,” என்று கூறிக்கொண்டே ப்ரீத்தா உள்ளே நுழைந்தாள். அவள் குளித்துவிட்டு குட்டையான புது டி ஷர்ட்டும் ஷார்ட்ஸ்சும் அணிந்திருந்தாள். “ம்ம். உன்னால் இதை நம்பவே முடியாது. இந்த கருவி உன் மனதில் உள்ள ரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்தும். வேண்டுமானால் நீ இதை சோதித்துப்பார்,” என்று ரஷ்மி கூற, ப்ரீத்தா அந்தக் கருவியைத் தலையில் மாட்டிக்கொண்டு அவன் அருகில் வந்து நின்றாள். அவன் லேப்டாப்பில் அவளுடைய சோசியல் மீடியா அக்கௌன்ட் விவரங்களை டைப் செய்வதை ப்ரீத்தாவும், ரஷ்மியும் அவன் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். “செட்டப்பு முடிந்துவிட்டது. இப்பொழுது ஏதாவது ஒரு இடத்தை பற்றியோ, மனிதரை பற்றியோ நினைக்கவேண்டும்,” என்றான். சற்று நேரத்தில் ப்ரீத்தா ஸ்விம் சூட்டில் நீச்சல் குளத்தின் அருகில், கையில் ஏதோ ஒரு குளிர்பானத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த படம் வந்தது. தூரத்தில் கடலும் மறையும் சூரியனும் தெரிந்தன. ப்ரீத்தா ஆச்சரியத்தில் வாயை திறந்தாள். “ஓ மை காட். இது மால்தீவ் ஐலண்ட். எனக்கு மிகவும் பிடித்த ரிசார்ட் இது. நான் இதுவரை இங்கு சென்றதில்லை. நான் அங்கு இருப்பது போல் படம் எப்படி வந்தது,” என்று கேட்டாள். “தட் இஸ் தி பவர் ஆப் AI,” என்றாள் ரஷ்மி. நடந்ததை நம்ப முடியாமல் ப்ரீத்தா தலையை ஆட்டினாள் . “திஸ் இஸ் அமேஸிங்,” என்று கூறிக்கொண்டே இருந்தாள் . பிறகு, “ரஷ்மி, வேலைக்காரி வீட்டுக்கு சென்று விட்டாள். நீ உன் நண்பர்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது குடு, ” என்றாள். “மேகனா, வா. நாம் கீழே சென்று ஸ்னாக்ஸ் எடுத்துக்கொண்டு வரலாம்,” என்றாள் ரஷ்மி. அவர்கள் இருவருடன் ராகுலும் சென்றான்.

அவன் அந்த அறையில் தனியாக இருந்தான். இதுவரையில் அவன் அந்த கருவியை தலையில் வைத்துக்கொண்டதில்லை. ஒரு முடிவை எடுக்க முடியாதவன்போல் கருவியை உற்று நோக்கினான். பிரேர்னா உடனான விவாதம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. தன் நிலையைப் பார்த்து பிரேர்னா சிரிப்பதுபோல் உணர்ந்தான். டக்கென்று கருவியைத் தலையில் வைத்துக்கொண்டு செட்டப் ஆரம்பித்தான். கண்களை மூடிக்கொண்டு பனி படர்ந்த ஊட்டி மலைகளை நினைத்துக்கொண்டான். அவன் கண் திறந்து பனி படர்ந்த மலைகளை எதிர்ப்பார்த்து டீவியை நோக்கினான். இப்பொழுது மங்கலாக காடு தெரிய வேண்டும் என்று எண்ணியபொழுது தெள்ள தெளிவாக ஒரு உருவம் தெரிந்தது. அந்த படத்தை பார்த்தவுடன் தலையிலிருந்து கருவியை உருவி அதை அணைக்கும் பொத்தானைத் தேடினான். அவனுக்கு வியர்த்து கொட்டியது. நண்பர்கள் மாடிப்படி ஏறிவருவது அவனுக்கு கேட்டது. மறுபடியும் பொத்தானுக்காக துழாவினான். அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது. இதயம் படபடத்தது. அவர்கள் அறைக் கதவை நெருங்கும் பொழுது அவனுக்கு பொத்தான் சிக்கியது. அவன் கருவியை ஆஃப் செய்தான். டீவியில் படம் மெதுவாக மறைய ஆரம்பித்தது. அவன் திகிலுடன் கதவைப் பார்த்தான். நண்பர்கள் நுழைய படம் மறைந்தது. “ஒ. என்ன படம் வந்தது? என்ன படம் வந்தது?” என்று ரஷ்மி உற்சாகமாக கைகளைத் தட்டிக்கொண்டு கேட்டாள். “ஓ. வி மிஸ்ட் இட்,” என்றால் மேகனா. “மறுபடியும் தலையில் வைத்துக்கொள்,” என்று ரஷ்மி உத்தரவிட்டாள். அவர்களுக்கு தெரியாமல் அவன் ஒரு வயரை புடிங்கினான். “ஏதோ தகராறு செய்கிறது. லேபுக்கு சென்று சரி செய்ய வேண்டும்,” என்றான். அவனை நம்பாத மேகனா அதை தலையில் வைத்துக்கொள்ள, அவன் ஸ்விட்ச்சை ஆன் செய்ய டீவியில் வெறும் வண்ண கோடுகள் மட்டும் தெரிந்தன. “ஓ நோ.” என்றாள் மேகனா. “அடுத்த சண்டே சரி செய்து கொண்டுவா. நானும் பார்க்கணும்.”

வீட்டுக்கு திரும்பும் வழியில் அதிகம் ஜன நடமாட்டம் இல்லாத ஏரியின் கரையில் நின்றுக்கொண்டு கருவியை வீசி எரிந்தான் . அந்த கருவி தண்ணீரில் முழுகுவதை பார்த்த பிறகும், அது மூழ்கிய இடத்தை உற்று நோக்கிக்கொண்டு நின்றிருந்தான்.

***

எஸ்.சுரேஷ்: விழுப்புரத்தில் பிறந்த இவர் வளர்ந்தது சிகந்திராபாத்தில். கடந்த இருபது ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கிறார். இவர் மொழிபெயர்த்த சங்கக் கவிதைகளும், க்ஷேத்ரையா கவிதைகளும் சாஹித்ய அகடமியின் மாதாந்திர இதழில் வெளியாகியுள்ளன. இவருடைய கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் சொல்வனம் மற்றும் பதாகை இதழ்களில் வெளியாகியுள்ளன. இதுவரை பாகேஸ்ரீ, கணவாய் பாதை என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரில் துயிலும் தேவன்? – தேவ ரகசியம் தேடலுக்கல்ல…

0

இயேசு கிறிஸ்துவும் அவருடைய போதனைகளும் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்குப் பிரபலமானவை, அவரைப் பற்றிய கதைகளும் அவரைச் சுற்றி உலவும் கான்ஸ்பிரசி தியரிக்களும். என்னுடைய பத்தாவது வயதில் ஒரு தமிழ் நியூஸ் சேனலில் அப்போது வெளியீட்டிற்குத் தயாராக இருந்த “டாவின்சி கோட்” திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தியைப் பார்த்ததிலிருந்தே அந்தத் திரைப்படம் பார்ப்பதற்கான எனக்குள்ளிருந்த ஆவலும் அதிகரித்திருந்தது. ஆனாலும் எட்டு வருடங்களுக்குப் பிறகு கல்லூரி படிப்பில் சேர்ந்த பிறகுதான் அந்தத் திரைப்படம் பார்ப்பதற்கான சூழல் அமைந்தது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தொடங்கி  சிலுவையில் அறையப்பட்டது வரையிலான அவர் வாழ்வைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான அனுமானங்களைப் பற்றி அந்தத் திரைப்படம் பேசியிருந்தது. இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய காதலி என்று சொல்லப்பட்ட மேரி மெக்டலினுக்கும் குழந்தை பிறந்ததாக உலா வந்த கான்ஸ்பிரசி தியரியும் அதில் அடக்கம்.

இதுபோன்ற திரைப்படங்கள் பேசும் கான்ஸ்பிரசிகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தாண்டி அதிலிருக்கும் சுவாரஸ்யம் மக்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கும். கருப்பின மக்களின் விடுதலைக்கு அதிகம் பங்காற்றிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனை ரத்த காட்டேரிகளை வேட்டையாடும் சாகசக்காரராகச் சித்தரித்து 2012 ஆம் ஆண்டு வெளிவந்த “ஆபிரகாம் லிங்கன்: வேம்பயர் ஹண்டர்” என்ற திரைப்படம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூல் செய்ததற்குப் பின்னாலிருந்த காரணமும் அதுதான்.

“டாவின்சி கோட்” நாவலை எழுதிய டான் பிரவுனின் மற்ற நாவல்களும் இதுபோன்ற தியரிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவைதான். இப்படியாக உலகம் முழுவதும் இயேசுவைப் பற்றி உலா வரும் மற்றுமொரு கான்ஸ்பிரசி தியரியை மையப்படுத்தி அதில் கற்பனைக் கலந்து உருவாக்கப்பட்டதுதான் “தேவ ரகசியம் தேடலுக்கல்ல” என்கிற கிராபிக் நாவல். பாவ்லோ கிர்லாவின் ஓவியத்துடன் ராபர்ட் டு டெலிபோவின் கற்பனையில் பிரெஞ்சு மொழியில் “le manuscrit interdit”(The Forbidden Manuscript) என்ற பெயரில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த இந்தக் கிராபிக் நாவல் ஆங்கிலம் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதன் கதாசிரியர் மற்றும் ஓவியர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.

1951 ஆம் ஆண்டு சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்தின் ஒரு புத்த மடாலயத்தில் கதை தொடங்குகிறது. லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ப்ரொபஸர் ஈகோன் பையர் அந்த மடாலயத்தில் இருக்கும் துறவிகளுடன் தங்கி சில வரலாற்று ஆவணங்களைப் பற்றி ஆய்வுசெய்து வருகிறார். அங்கே தடாலடியாக நுழையும் சீன ராணுவம் துறவிகளைக் கொன்று குவித்து அந்த மடாலயத்தைத் தீக்கிரையாக்க, அவருடைய ஆவணங்கள் அனைத்தும் அழிந்து போகின்றன. பற்றி எரிந்துகொண்டிருக்கும் அந்த மடாலயத்திலிருந்து ப்ரொபஸர் தன்னுடைய உயிரைத் தற்காத்துக்கொள்ளத் தப்பிக்க முயல்வதோடு முதல் அத்தியாயம் முடிகிறது. மறுமுனையில் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கும் கதை ப்ரொபஸரின் மகளான ஹெலன் தொலைந்து போன தனது தந்தையின் ஆய்வைப் பற்றியும் தரவுகளைப் பற்றியும் தேடுவதாய் தொடங்குகிறது.

ஆறு மாதங்களாகத் தன்னுடைய தந்தையைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காமல் தவித்துப்போகிறாள். அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தால் அது பல்வேறு அமைப்புகளுக்கு பாதகமாக அமையும் என்று அறியும் ஹெலன் டிடெக்டிவ் கெவின் மேக்பிரேடன்னுடன் தந்தையைத் தேடி லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து திபெத்துக்குப் புறப்படுகிறாள். மறுப்புறம் சீன ராணுவம் ப்ரொபஸரைத் தேடுவதற்காக ஒரு ஸ்பெஷல் ஏஜெண்டை நியமிக்கிறது. ப்ரொபஸர் தேடிய உண்மை என்ன? அவருடைய ஆய்வுக் கட்டுரை எதைப் பற்றியது? அது வெளியே வருவதால் ஏற்படும் ஆபத்து என்ன? ப்ரொபஸர் உயிரோடு இருக்கிறாரா? ஹெலன் ப்ரொபஸரைக் கண்டுபிடித்தாளா? என்ற பல்வேறு கேள்விகளுக்குப் பரபரப்பான கதையோட்டத்துடன் விடை சொல்கிறது இந்தக் கிராபிக் நாவல்.

தந்தையைத் தேடி உலக உருண்டையின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குப் பயணிக்கும் ஹெலனின் தவிப்புகள் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சூழல்கள் எதுவும் தனக்குச் சாதகமாக இல்லாதபோதும் வற்றாத நம்பிக்கையோடு தன் தந்தையைத் தேடுகிறாள். கதாநாயகனாக வரும் டிடெக்டிவ் கெவினின் அலட்டலில்லாத நடவடிக்கைகளும் அவன் செய்யும் சாகசங்களும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. அவனுடைய உருவத்தையும் தலையில் இருக்கும் தொப்பியையும் அவன் அணிந்திருக்கும் கோட்டையும் பார்க்கும்போது இண்டியானா ஜோன்ஸ் வரிசைத் திரைப்படங்களில் வரும் ஹாரிசன் போர்டு நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஹெலன் கெவினோடு திபெத்திற்கு வந்துசேர்ந்தவுடன் சூடு பிடிக்கும் கதை அதற்குப் பிறகு தீப்பிடித்த ரயிலைப் போல பயணிக்கிறது.

தன் உயிருக்கு ஆபத்திருப்பதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய ஆய்வில் முழுமூச்சாக பயணிக்கும் ப்ரொபஸரின் தைரியம் நம்மைப் பல இடங்களில் ஆச்சரியப்படுகிறது. “யூஸ் அசாப்” என்ற பெயரில் அறியப்பட்ட இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அங்கிருந்து தப்பி தன்னுடைய தாயான மேரி மாதா மற்றும் தாமஸோடு பாலஸ்தீனத்திலிருந்து பயணித்து பாகிஸ்தானின் ராவல் பிண்டியைக் கடந்து தற்போதைய இந்தியாவின் ஸ்ரீநகருக்கு வந்துசேர்ந்திருந்ததாக ப்ரொபஸர் சொல்லும்போது நம்முள் சுவாரஸ்யம் தொற்றிக்கொள்கிறது.

மேலோட்டமான தியரிக்களாக இல்லாமல் அந்தத் தகவல்களைப் பற்றிய தரவுகளையும் முடிவில் இணைத்திருப்பது கதையின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கிறது. ரோசாபால் என்ற பெயரில் இன்றளவும் ஸ்ரீ நகரில் அறியப்படும் ஒரு புனித ஸ்தலத்தில் அமைந்திருக்கும் இரண்டு சமாதிகளில் ஒன்று மிர்சா செய்யது நசுருதீனுடையது என்றும் மற்றொன்று “யூஸ் அசாப்”என்ற பெயரில் அறியப்பட்ட இயேசு கிறிஸ்துவுடையது என்றும் பரவலாக அறியப்படும் தகவலைப் பற்றியும் இந்த நூல் அலசி ஆராய்கிறது.

கி.பி 1899 ஆம் ஆண்டிற்கு பிறகு ரோசாபால் புனித ஸ்தலத்தில் மிர்சா சையது நசுருதீனோடு துயிலும் மற்றொரு கல்லறை இயேசு கிறிஸ்துவுடையது என்ற செய்தி வலுவடைந்ததாகவும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. அஹ்மதியா இயக்கத்தைத் தோற்றுவித்த மிர்சா குலாம் அஹமத் இயேசு கிறிஸ்து ஸ்ரீநகரில் புதைக்கப்பட்டிருப்பதாகச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தபோது உள்ளூர் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மேலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிரிழக்கவில்லை என்ற வாதத்தை வலுவாக முன்வைத்தார்.

Mausolaeum of the Yuz Asaf and the Islamic saint Syed Nasr-ud-Din. Some people believe that Yuz Asaf is Jesus Christ (Issa Rooh-Allah, “Jesus the Spirit of God”).

சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் அவர் இந்தியாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கி ஸ்ரீநகரில் வாழ்ந்து தனது 120வது வயதில் ஜீவனைத் துறந்து ரோசா பால் என்கிற அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் புதைக்கப்பட்டதாக ஒரு கருத்தை வெளியிட்டார். 120வது வயது வரை இந்தியாவில் வாழ்ந்த இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்நாளில் பல்வேறு இந்து கோவில்களிலும் பிரசங்கம் செய்ததாகவும் தகவல்கள் உலா வருகின்றன. உபரி தகவலாக இயேசு கிறிஸ்துவை ஸ்ரீநகருக்கு அழைத்துவரும் வழியில் பாகிஸ்தானின் ராவல் பிண்டி அருகில் இருக்கும் ஒரு சிற்றூரில் ஜீவனைத் துறந்த மேரியின் நினைவாக அங்கிருக்கும் ஒரு வளாகத்திற்கு இன்றளவும் “அன்னை மேரி துயிலும் இடம்” என்ற பொருள்படக் கூடிய வகையில் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

இன்றுவரை அனைத்து மத மக்களும் வழிபடும் இடமாக அது இருந்து வருகின்றதாம். இந்தக் கிராபிக் நாவலின் ஓவியமும் கதையோட்டமும் அதிலிருக்கும் சுவாரஸ்யமும் அதைத் தாங்கி நிற்கும் தரவுகளையும் தாண்டி 1951 ஆம் ஆண்டு உலகில் பரவலாக நிலவிய அரசியல் சூழல்களை உண்மைக்கு நெருக்கமாகச் சித்தரித்திருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.

திபெத்தில் நிலவிய சீன ஆக்கிரமிப்பு, புத்த மடாலயங்கள் மேல் சீனர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு அமெரிக்காவில் நிலவிய கம்யூனிஸ எதிர்ப்பு சித்தாந்தம் போன்ற பல்வேறு அரசியல் சூழல்களை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.

உலக வல்லரசான அமெரிக்காவில் செயல்பட்டு வந்த இன்றும் ரகசியமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் வெள்ளை மேலாதிக்கப் பயங்கரவாத குழுவான “கு க்ளாக்ஸ் கிளான்”பற்றியும் இந்தக் கிராபிக் நாவல் விவாதிக்கிறது. அடிப்படைவாதத்தில் ஊறிப்போன இக்குழுவினர் புதிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் எதிர்த்து நடத்திய செயல்பாடுகளைப் பற்றியும் மேலோட்டமாக விவரித்துச் செல்கிறது.

காமிக்ஸ் என்கிற பெயரில் வெகுஜன வாசகர்களால் பரவலாக அறியப்படும் கிராபிக் நாவல்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமே என்ற பொதுவான கருத்தைத் தவிடுபொடியாக்குகிறது இந்தக் கிராபிக் நாவலின் கதையோட்டமும் அது பேசியிருக்கும் உலக அரசியல் சூழல்களும்.

திபெத்தில் தொடங்கி பின் அமெரிக்காவைத் தொட்டு மீண்டும் திபெத்தை அடைந்து அங்கிருந்து இந்தியாவின் ஸ்ரீநகரை நோக்கிப் பயணப்படும் கதைக்களம் நமக்குக் கூடுதல் சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் கொடுக்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் நிலப்பரப்பையும் சூழலையும் நமக்குள் எளிமையாகக் கடத்துகின்றன தத்ரூபமான ஓவியங்கள். தொடக்கத்தில் சொன்னது போல இந்தக் கிராபிக் நாவல் விவாதித்திருக்கும் கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகளில் இருக்கும் உண்மைத்தன்மையை தாண்டி அதிலிருக்கும் சுவாரஸ்யம் நம்மை நிச்சயம் பரவசப்படுத்தும்.

***

ரூ என்ற பெயரில் எழுதிவரும் இவரது இயற்பெயர் அசாருதீன். தந்தை பெயர் சான்லால், தாயார் கௌஹர் காந்தி, மதுரை இவரது சொந்த ஊர். இவரது சிறுகதைகள் நீலம் மாத இதழிலும் சில இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. முதல் நாவல் ‘லவ்டேல்’. மின்னஞ்சல்: azarrudheenrafeeq@gmail.com தொடர்புக்கு: 8610346140

ஓர் இளஞ்சிவப்பு வண்ண சாபம்

1

ப்ரிம்யா கிராஸ்வின்

ரு பொதி பஞ்சு மிட்டாயைக்கொட்டி வைத்தது போல, இளஞ்சிவப்பு நிறத்தில் போகன்வில்லாக்கள் அந்த வீட்டின் மேற்கு பக்கத்திலிருக்கும் மதில் மீது சரிந்து கிடந்தன. அந்த திசையில் பார்க்கக் கூடாதென்று நான் நினைக்கும் போதே என் கண்கள் அத்திசையை நோக்கி திரும்பி விட்டிருந்தன. தந்த நிறத்தில் வர்ணமடிக்கப்பட்டிருந்த அவ்வீடு, போகன்வில்லா மலர்களின் பிரகாசமான வண்ணத்தை மேலும் எடுப்பாகக் காண்பித்தது. மலர்களின் புதரிலிருந்து யாரோ என்னை உற்றுப்பார்ப்பதாய் உணர்கிறேன். கண்களைச் சுண்டி இழுத்த பூக்களிடமிருந்து தலையை வலுவில் திருப்பிக்கொண்டு அழைப்பு மணி இருக்கும் திசையை நோக்கி நகரலானேன்.

வீட்டின் மேற்குதிசையிலுள்ள மேல்தளத்தில் தான் டாரத்தியின் அறை இருக்கிறது. கீழ்தளத்தில் கிட்டத்தட்ட எல்லா அறைகளின் ஜன்னலிலும் போகன்வில்லாக்கள் படர்ந்து நிறைந்திருந்தன. கீழ் தளத்தை விட்டு வெளியில் தனியே துருத்திக் கொண்டிருந்த அவ்வறையின் மாடத்தையும் விட்டுவைக்காமல் போகன்வில்லாக்கள் பற்றிப் படர்ந்திருந்தன. டாரத்தி அவ்வறையில் தான் தற்கொலை செய்துகொண்டாள் என்று அனூப் என்னிடம் தெரிவித்திருந்தான். குப்பியிலிருந்த மாத்திரைகளை ஒவ்வொன்றாக விழுங்கி, குப்பி பாதி காலியாகும் முன்பே பிரக்ஞை இழந்திருக்கிறாள். முழுதாக தன் நினைவை இழக்கும் முன்பாக அருகிலிருந்த அவளது அறையின் தொலைபேசியில் எனது அலைபேசி எண்ணைச் சுழற்றியிருக்கிறாள்… அதன்பின், டாரத்தி என்று ஒருத்தி இவ்வுலகில் இருந்திருக்கிறாள் என்பதை நான் அறியும் முன்பாகவே டாரத்தி இறந்திருக்கிறாள்.

அது நிசியாக இருந்திருக்காவிட்டால், அன்று சனிக்கிழமையாக இல்லாமல் இருந்திருந்தால், நான் மது அருந்தியிருக்காவிட்டால், என் அலைபேசி எனது உறக்கத்தை தொந்தரவு செய்யாது இருக்கும்படி அதனை நான் மௌனப்படுத்தி வைக்காமல் இருந்திருந்தால், வெகு நாள்களுக்குப் பிறகு நான் ஆழ்ந்து உறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நான் டாரத்தியின் அழைப்பை ஏற்றுப் பேசியிருந்திருப்பேன். ஆனால், இதில் ஒன்று கூட நடக்கவில்லை. அவள் இறந்து போனாள். அவள் தனது இறப்பு நாடகத்தின் இடையில், தனது மேடையிலிருந்து வெளியே வந்து என் அலைபேசி ஒலித்தடங்கிய முப்பது நொடிகளுக்கு என் அறையில் உலவியிருக்கிறாள். ஒருவேளை நான் அவளது அழைப்பை ஏற்றுப் பேசியிருந்தால், இன்று அவள் இருந்திருப்பாளோ!

ஓ. . . டாரத்தி!

அவள் இறந்த மறுதினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. காவல் துறை அதிகாரி என் அறைக் கதவைத் தட்டும் போது நான் அறையில் தான் இருந்தேன். அது பின் மதியம்… ஆனால் நான் அப்போது நல்ல உறக்கத்தில் இருந்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் நான் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பேன். யாரோ என்னைத் துரத்துவது போலவும், எதையோ பிடிக்க முனைவது போலவும் தறிகெட்டு ஓடிக் கொண்டே இருப்பேன். சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து சென்றாலும், பிறகு வந்து உறக்கத்தை தொடரும்போது, விட்ட இடத்திலிருந்து ஓட ஆரம்பிப்பேன். அந்த ஞாயிறு என் அறைக்கதவு தட்டப்பட்ட போது நான் கனவில் ஓடிக் கொண்டிருந்தேன். உறக்கத்திலிருந்து எழுந்த பிறகு, என்னால் சமநிலையில் நிற்க முடியாதபடி மது என்னை நிலையிழக்கச் செய்திருந்தது. அவர் என்னிடம் டாரத்தியைப் பற்றிக் கேட்டார். . . அவளின் புகைப் படத்தைக் காண்பித்தார். அத்தனை அழகான ஒரு பெண்ணை நான் பார்த்ததாய் என் நினைவில் மட்டுமல்ல, கனவில் கூட எனக்கு ஞாபகம் இல்லை என்றேன். அவள் இப்போது உயிருடன் இல்லை என்று அவர் சொன்னபோது என் இருதயம் கவலையால் பீடிக்கப்பட்டது. அவளது கடைசி அழைப்பு தவறிய அழைப்பாக இருந்ததையும், அது என் எண்ணாக இருந்ததையும் பற்றிச் சொன்னார். வாழ்வின் கடைசி தருணத்தில் ஒரு பேரழகான பெண்ணுக்கு ஒரு எழுத்தாளனிடம் பகிர்வதற்கான ரகசியம் என்ன இருந்திருக்க முடியும் என்று நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அதன் பிறகு, பல நாள்கள் டாரத்தியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு நான் காவல் நிலையத்துக்கு அழைக்கப் பெற்றேன். எனது அலைபேசி ஆதாரத்துக்கு உட்பட்டதாக கருதி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லையென நிரூபிக்கப்பட்டு நான் விசாரணைகளில் இருந்து விடுபட்டேன். அலைபேசி என் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அலைபேசி என்னிடம் திரும்பி வந்தபோது அதிலிருந்த அழைப்பு விபரங்கள், படங்கள், அதன் குறிப்பேட்டில் பல வருடங்களாய் நான் சேமித்து வைத்திருந்த எனது சிறுகதைகள், கதைக் கருக்கள் என்று ஒரு புள்ளி மச்சம் கூட மீதமில்லாமல் அனைத்தும் துடைத்து அழிக்கப்பட்டிருந்தன. அப்போது தான், நான் எல்லாவற்றுக்கும் என் கைபேசியை முற்றிலும் சார்ந்து இருந்தமைக்காக என்னை மிகவும் நொந்து கொண்டேன்.

என் குறிப்பேட்டில் சேமித்து வைத்திருந்த ஐந்தாறு கதைகள் இன்னும் பிரசுரமாகாதவை. அவற்றில் இரண்டு, பிரபல மாத இதழ்களுக்கு நான் தருவதாக ஒப்புக்கொண்டவை. பல நாள்கள் அல்லும் பகலும் என் மூளையைத் துன்புறுத்தி, ஒரு தேனியைப் போல நான் சேகரித்து வைத்திருந்த என் உழைப்பனைத்தும் முற்றாக வீணாகியிருந்ததை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. அந்தக் கதைகளில் பலவற்றின் கைப்பிரதி என்னிடம் இல்லை. அவற்றை நான் தான் எழுதினேன் என்றாலும், எவ்வளவு முயன்றாலும் என்னால் அவற்றை முன்பு போல மீளுருவாக்கம் செய்து விட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனக்கு முற்றிலும் சம்மந்தம் இல்லாத ஒருத்தியால் நான் இத்தனை நிஷ்டூரப் பட்டிருக்கவேண்டாம். அப்போதுதான், எனக்கு இதுவரை பார்த்தறியாத அந்த பெண்ணின் பேரில் கொலை செய்யுமளவு ஆத்திரம் வந்தது. ஆனால் நானும்தான் என்ன செய்வது? அவள் தான் ஏற்கனவே இறந்து விட்டாளே!

அத்துடன் நான் அந்த அழகி டாரத்தியை மறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், என் எழுத்தாள மூளை டாரத்தியின் மரணத்தை எண் திசைகளிலிருந்தும் அணுகிக் கொண்டே இருந்தது. நல்ல மது உறக்கத்தில், ஓடிக் கொண்டே இருக்கும் கனவுகளில் கூட எனக்கு டாரத்தியின் நினைவு வந்தது. டாரத்தி என்னை எதற்காக அழைத்தாள் என்பது தெரியாமல் என்னால் வேறு கதைகளுக்கு எனது பேனாவைத் திறக்க முடியாது என்று தெரிந்ததும், நான் டாரத்தியின் விபரங்களை பெறுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்தேன். நான் யுகங்களாக எழுத்தாளனாக இருப்பதன் அனுகூலமாக, காவல்துறையிலும் எனக்கு சொற்ப நண்பர்கள் உண்டு.

அனூப்!

இந்த விசாரணைகளிலிருந்து நான் இலகுவில் விடுபடுவதற்கு அனூப் ஒரு காரணமாக இருந்தான். அனூப் எனது வாசகனாக இருந்தது எனது பெரும் பாக்கியம். அவனே எனக்கு டாரத்தியைப் பற்றிய விவரங்களையும் தந்தான்.

“நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியும் ஆரா சார்!”

“டாரத்தியோட வீடு எங்க இருக்கு அனூப்?

“பெரைரா காட்டேஜ்!”

“அது எங்க இருக்கு?”

“செயின்ட் தாமஸ் மௌண்ட் கிட்டக்க. . . !”

“ஓ!”

“அந்த வீட்டில் இது போல துர்மரணம் நடக்கறது இது முதல் தடவை இல்ல ரைட்டர் சார். !”

“சில வருடங்களுக்கு முன்னால, டாரத்தியோட மூத்த அக்கா நிறைமாத கர்ப்பவதியாக இருந்த போது தனது இருபத்து ஒன்றாவது வயதில் சர்ப்பம் தீண்டி உயிரை விட்டாள். அதற்கடுத்த மரணம் இளைய அக்கா டெபோராவினுடையது. அவள் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தாள். அப்போது அவளுக்கும் வயது இருபத்து ஒன்று . இந்தத் தொடர் மரணங்களுக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்த முதல் மரணம் வில்மா பெரைராவினுடையது. அது நிகழ்ந்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது. வில்மா, இறந்து போன இந்த சகோதரிகளின் தந்தை ஜேக்கப் பெரைராவின் தங்கை ஆவார். தனது படிக்கும் அறையில் மெழுகுவர்த்தி சரிந்ததால் ஆடையில் நெருப்பு பற்றி உடல் முழுவதும் எரிந்து இறந்தாள் என்று காவல் துறையிடம் இருக்கும் இறப்பு அறிக்கையில் இருக்கு. !”

“நீ சொல்றதக் கேட்டா இது ஏதோ சாபக் கதை போலல்ல இருக்குது”

“கிட்டத்தட்ட சாபம் தான் ரைட்டர் சார். திருமணம் ஆகாத வில்மா பெரைரா இறக்கும்போது கர்ப்பவதியாக இருந்தார் எனவும், அவமானத்திற்கு அஞ்சி அவரது சகோதரர் ஜேக்கப் பெரைரா, வில்மாவை நெருப்பிட்டுக் கொன்றதாகவும் கதைகள் உண்டு. இதுல ஒரு இணைப்புப் புள்ளி என்னனா, வில்மா இறக்கும் போது அவருக்கு வயது இருபத்து ஒன்று”

“அப்போ டாரத்தி. . . “

“மற்ற மரணங்கள் தற்செயல்னு வெச்சுகிட்டாலும், டாரத்தியின் மரணம் அப்படியில்லை என்பதே இங்க சிக்கல். ஆனாலும், அவளுக்கு இருந்த புற்றுநோயின் காரணமாக, அவள் தனது உடல் உபாதைகளிலிருந்து விடுபட தற்கொலைக்கு முடிவு செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த பின் இந்த வழக்கு மூடப்பட்டது. இதில நீங்க எப்படி உள்ளே வந்தீங்க என்பது தான் எங்களுக்கு புதிரா இருந்தது. காவல்துறை பல கோணங்களில் இந்த வழக்கை விசாரிச்சு பார்த்தது, முதல்ல உங்களுக்கும் டாரத்திக்கும் சம்மந்தமே இல்லை என்கிறது ஊர்ஜிதம் ஆனதும், வேறு சாத்தியங்களை ஆராய்ந்தோம். டாரத்தியின் உடன் படித்தவர்கள், உறவினர் என்று அனைவரின் அலைபேசி எண்ணையும், உங்க எண்ணையும் ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்தோம். உங்க அலைபேசி எண்ணிலிருந்து ஓரிரு இலக்கங்கள் மாறி இருக்கிற சாத்தியங்கள் இருக்கிற எண்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதில்லையா? தூக்க மாத்திரையின் வீரியத்தில் டாரத்தி கடைசி ஒன்றிரண்டு இலக்கத்தை மாற்றி சுழற்றி இருக்க வாய்ப்பு இருக்கலாமென்ற கோணத்தில் விசாரணை நடந்தது”

“நீங்க எதிர்பார்த்தபடி விசாரணையில் துப்பு ஏதாவது கிடைச்சதா?”

“இல்லை, ரைட்டரே! டாரத்தி சர்வநிச்சயமாய் உங்களுக்குத் தான் கால் செஞ்சுருக்கா!”

நான் தலையைப் பிடித்துக் கொண்டேன்.

“நீ சொல்வது போல இது ஒரு சாபத்தோட நீட்சியா இருந்தா, டாரத்தி தான் இதுக்கு கடைசி பலி இல்லையா?”

“இல்ல ரைட்டரே!”

“என்ன!”

“அவளோட தங்கை ஜெசிக்கா இன்னும் உயிரோட தான் இருக்கா”

“பெரைரா காட்டேஜ்லயா!”

“ஆமா. . . ரைட்டரே!”

“அனூப். . . எனக்கு அந்த விலாசம் வேணுமே!”

“என் வேலை போயிரும் ஆரா சார்!”

“நான் சோறு போடுறேன். . . “

“சரிதான். . . வில்லங்கம் வராம பாத்துக்குங்க ரைட்டர் சார்!”

ஜெசிக்கா டாரத்தியை விடவும் அழகாக இருந்தாள். படத்தில் பார்த்த டாரத்தியின் சருமத்தில் நோய்மையின் வெளுப்புடன் கூடிய ஒரு சாம்பல் நிறம் இருந்தது. எனக்காக கதவைத் திறந்த போது வாசலில் இருந்த போகன்வில்லாமலர்களின் இளஞ்சிவப்பு நிறம் பட்டு எதிரொளித்த இந்த ஜெசிக்காவின் ஜீவனுள்ள தங்க நிறம் அவளைத்தான் எத்தனைப் பதுமையாக காட்டுகிறது.

“வணக்கம். . . நான் ஆராவமுதன்”

“வாங்க ஆரா சார்!”

“ஆஹா. . . உங்களுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கே!’

“நான் டாரத்தியின் கண்களின் வழி உங்களத் தெரிஞ்சுகிட்டேன், ஆரா சார்!

“மொதல்ல டாரத்திக்காக என் வருத்தத்தை தெரிவிச்சுக்கறேன், ஜெசிக்கா!”

எங்களின் ஆரம்பகட்ட சம்பிரதாயப் பேச்சுக்களின் பின் ஜெசிக்கா தானாகவே டாரத்தியைப் பற்றின உண்மைகளை என்னிடம் பகிர ஆரம்பித்தாள்.

“டாரத்தி ஒரு புற்றுநோயாளியா தன்னோட இறுதி நாள்களை எண்ணிக்கிட்டு இருக்கும்போது, அவளோட வியாதியின் தீவிரம் அவளை நிலைகுலையச் செய்திருந்தது ஆரா சார். இருந்தும், அவ வாழ ஆசைப்பட்டா. . . எதோடையாவது தன் உயிரைப் பிணைச்சுக்க விரும்பினா. அப்பத்தான், நீங்க உங்க ‘மாயமான்’ தொடர்கதைய விட்டில் பத்திரிக்கைல எழுத ஆரம்பிச்சீங்க. டாரத்தி வாரம் ஒருமுறை வரும் விட்டிலுக்காக தவம் கிடந்தா! சொல்லப் போனா, அதை வாசிக்கறதுக்காகவே, டாரத்தி உயிரோட இருந்தா!”

“சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. டாக்டருங்க அவளுக்கு கொடுத்த கெடுவைத் தாண்டியும் அவ பிழைத்துக் கிடந்தா, உங்க கதைய படிக்கிறதுக்காகவே!”

“அப்பத்தான் விட்டில் அந்த அறிவிப்பை வெளியிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் தொடர் முடிவுக்கு வருமென்று. . . “

“டாரத்தி மனதளவில் ரொம்பவே தளர்ந்து போயிட்டா. . . தன் முடிவு நெருங்கிட்டதா அவ உணர ஆரம்பிச்சா. தொடர்கதையின் கடைசி அத்தியாயத்தை படிக்கும்போது தான் இறந்து விடுவோம் என்று தீவிரமா நம்பினா. அடுத்த ஒரு மாதத்தில் அவளுக்கு இருபத்து ஒன்றாவது பிறந்தநாள் வரவிருந்ததும் அதற்கொரு காரணம். பெரைராவின் பெண் வாரிசுகள் யாரும் இருபத்து ஒன்றைத்தாண்டி பிழைத்ததில்லையே. ஒவ்வொரு நாளும் அவ தன் மரணத்தை நோக்கி விரிந்த கரங்களோட போய் கிட்டே இருந்தா!”

ஜெசிக்கா கண்களை மூடிக் கொண்டாள். . . ஜெசிக்காவின் பக்கவாட்டிலிருக்கும் ஆளுயர நிலைக் கண்ணாடியில் அவளது பிரதிமை தெரிகிறது. எத்தனை வியாகுல அழகு!

பிரியத்துக்குரிய ஒருவரின் மரணத்தை மீண்டும் நினைவு கூறச் சொல்லி ஒருவரை இம்சிப்பது தான் எவ்வளவு அடாத செயல்! ஜெசிக்கா இந்த இடத்தில் அழுதிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று நான் ஏன் நினைக்கிறேன். ஆண் எவ்வளவு எளிதில் பெண்ணைத் தேற்றத் தயாராக இருக்கிறான். பெண்தான் அவ்வளவு சீக்கிரம் தன்னை ஆணிடம் ஒப்புக் கொடுப்பதில்லை. . திடுமென என் அலைபேசியில் அழிந்து போன கதைகளை நினைத்துக் கொண்டேன். என் இதழ்க்கடையில் ஒரு அவஸ்தையான முறுவல் தோன்றி மறைந்தது.

“தொடர்கதையின் கடைசி அத்தியாயம் வெளியான முதல் நாளை என்னால் மறக்கவே முடியாது ரைட்டர் சார். அன்று டாரத்தி தன்னை முடிந்தளவு நல்லா அலங்கரித்துக் கொண்டிருந்தாள். என்னை அவளது அறைக்கு அழைச்சிட்டுப் போனா. அவளது கைகளில் விட்டில் இருந்தது. “

“அவ இறந்து கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன் ஆரா சார்! என் கைகளைப் பற்றின டாரத்தியின் கைகள் ஏற்கனவே சில்லிட்டிருந்தன.”

“ஜெசிக்கா. . . எனக்காக நீ இந்த ‘ மாயமான்’ கதையின் இந்த இறுதி அத்தியாயத்தைப் படிச்சு சொல்றயா?”

” இல்ல டாரத்தி! நான் படிக்க மாட்டேன். தொடர் முடிவடைந்தா, நீ செத்து போயிருவ!”

“தயவு செஞ்சு எனக்காக படி ஜெசிக்கா!”

ஜெசிக்கா வலியுடன் கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள். அன்றைய நாளை மனதில் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறாள்.

“நான் படித்தேன், ஆரா சார். படித்துக் கொண்டிருக்கும்போதே, என் டாரத்தியின் கண்கள் செருக ஆரம்பிச்சது. அந்த முட்டாள் தூக்க மாத்திரைகளை விழுங்கியிருந்திருக்கிறாள் என்பது எனக்கு அப்போது தெரியாது. என் அன்புக்குரிய தமக்கை என் கண் எதிரில் சாவதை என்னால் வெறுமனே பார்த்துக்கிட்டிருக்க முடியல. உங்க அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தொடரை இன்னும் சில மாதங்கள் நீடிக்க செய்யலாம்னு ஒரு நப்பாசை தோணுச்சு. அதை அவ கிட்ட சொன்னேன் . அப்போ, அவள் கண்களில் ரொம்ப சின்னதா ஒரு ஒளி வந்தது. அது இருளுக்கு முன்பானது!”

“அதுக்கு பிறகு தான் நீ என் ஃபோன்க்கு கூப்ட்டியா, ஜெசிக்கா?”

“ஆமாம் ஆரா சார்! துரதிஷ்டவசமா நீங்க அன்னிக்கி ஃபோன எடுக்கல. அதுக்கப்புறம், என் டாரத்தி இறந்துட்டா”

“என்னை மன்னிச்சிடு ஜெசிக்கா!”

“இதில் உங்க தப்பு எதுவும் இல்ல ரைட்டர் சார்!”

“இவையெல்லாவற்றையும் நீ காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னாயா?”

“இல்ல. அவ இறந்ததப்பறம் தான் நான் அவ படுக்கைல தூக்க மாத்திரைகளைப் பார்த்தேன். அவ மாத்திரை விழுங்கியிருக்கான்னு தெரியாம சாபத்தால இறக்குறான்னு நெனச்சு நானும், அவளது தற்கொலைக்கு மௌன சாட்சியாக நின்னேன் என்பதைப் பகிர்ந்தால் தண்டனை எனக்கும் கிடைக்கலாம் என்பதால் இதை வேறு யாரிடமும் சொல்லாம மறச்சுட்டேன். அவளும் நானுமா படித்த உங்க கதைகள் இருந்த புத்தகங்களை எல்லாம் கூட நெருப்பிலிட்டு எரிச்சுட்டேன். ஆனா, உங்க அலைபேசி எண்ணை மட்டும் என்னால எதுவும் செய்ய முடியல”

“என் ஆழ்ந்த வருத்தங்கள் ஜெசிக்கா! எப்படியோ டாரத்தியும் உன் அத்தையின் சாபத்துக்கு பலியாகிட்டால்ல. இந்த சாபக்கதைய நீயும் நம்புறியா?”

“என் அப்பாவோட டைரிய படிக்கறவரை நானும் நம்பல, ஆரா சார். என் அத்தை வில்மா பெரைராவுக்கு மலர்கள் என்றால் உயிர். அதுவும் போகன்வில்லா மலர்களின் மீது அவளுக்கு கொள்ளை பிரியம். வீட்டைச் சுற்றிலும் அவற்றை நட்டு வைத்து பராமரித்து வந்தார். எங்கள் மொத்த வீட்டைச் சுற்றிலும் இளஞ்சிவப்பு நிற மேகங்கள் படர்ந்தது போல போகன்வில்லா மலர்கள் கவிந்து பொலிந்தன. எங்கள் அத்தை வில்மா அம்மரங்களை மிகவும் நேசித்தாள். அவள் தனது காதோரத்தில் ஒரு கற்றை போகன்வில்லா மலர்களைச் செருகியபடி நாளெல்லாம் தோட்டத்தை வளைய வருவாளாம். அவள் போகன்வில்லாக்களுடன் தனியே பேசுவதை பலமுறை பாரத்ததாக என் அப்பா தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார். அச்சமயம் எங்கள் தோட்டத்தை பராமரித்து வந்த வேலையாள் கருப்பனுடன் எங்கள் அத்தை காதல் கொண்டுவிட்டார். இதையறிந்த என் தந்தை ஜேக்கப் பெரைரா என் அத்தையை கண்டித்திருக்கிறார். அதற்குள்,

அவர்களுடைய பழக்கத்தின் காரணமாக என் அத்தை வில்மா கருக்கொண்டு விட்டிருந்தாள். எவ்வளவு எடுத்துச் சொல்லியும், அவள் தனது காதலில் உறுதியாக இருக்கவே, கருப்பனை அடித்து குற்றுயிராய் விரட்டிய என் அப்பா, ஆத்திரம் தாளாமல் அத்தையை நெருப்பிட்டு கொளுத்தியிருக்கிறார். “

“சாகும் தருவாயில் அவள் எங்களுக்கு தந்து சென்ற இளஞ்சிவப்பு நிற சாபத்தை எங்கள் அக்காள்கள் இறந்த பிறகே நாங்க தெரிஞ்சுகிட்டோம். காலம் சென்ற எங்கள் அப்பாவின் படிக்கும் அறையை சுத்தப் படுத்தும்போது அவரது குறிப்பேட்டை கண்டுபிடித்து, டாரத்தி தான் என் அத்தையின் சாபத்தினைப் பற்றி எங்கள் இருவரில் முதலில் அறிந்துகொண்டாள். “

“நெருப்பில் கருகிக் கிடந்த அத்தை வெற்றுடலுடன் வாழை இலை மீது படுக்க வைக்கப் பட்டிருந்தாராம். அறை ஜன்னலில் எப்போதும் நிறைந்திருக்கும் அவளது பிரியத்துக்குரிய போகன்வில்லா மலர்கள் இந்த காட்சியைக் கண்டு இறுகி நின்றிருந்தனவாம். அப்போது எமது அத்தை தமது இறுதி வார்த்தைகளை என் தகப்பன் காதில் சொன்னாராம். “

“உனது பெண்கள் தமது பிராயம் வரைக்கும் இந்த போகன்வில்லாவின் மலர்களைப் போல மலர்ந்து பொலிவர். பின்பு ஒருநாள் அவர்களின் மீது இம்மலர்களின் இளஞ்சிவப்பு வண்ண நிழல் விழும். அப்போது, மரணம் அவர்களை கைக்கொள்ளும்”

“கர்ப்பவதியாக பெரைரா காட்டேஜுக்கு வந்த என் அக்கா வியானி சர்ப்பம் தீண்டி மரித்துப் போனாள். அவளது நீலம் பாரித்த உடல் தோட்டத்தில் கவிந்திருக்கும் போகன் வில்லாக்களின் இளஞ்சிவப்பு நிற மலர்களின் அடியில் கிடந்தது. எங்கள் அப்பா, வியானி இறந்ததை தற்செயல் என்றுதான் முதலில் நினைத்திருக்கிறார்.

பின்பு, இளைய அக்கா டெபோராவும் தனது இருபத்து ஒன்றில் இறந்தபோதுதான், சாபத்தின் வீரியத்தை உணர்ந்துள்ளார். டெபோரா மாடிப் படிக்கட்டில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு இறந்த போது சாட்சியாய் நின்று கொண்டிருந்தவையும் இந்த போகன்வில்லா மலர்கள் தான். “

“பிள்ளைப் பிறப்பின் பிறகு, அதீத இரத்தப் போக்கில் இறந்திருந்த எங்கள் தாயாருக்குப் பின் எங்களை வளர்த்த எங்கள் இரண்டு அக்காள்களும் மரித்துபோகவே, நாங்கள் திக்கு தெரியாதவர்கள் ஆனோம். அதிலும், புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த டாரத்தி மனம் தொய்ந்து போனவளாய் இருந்தபடியால் தானும் இருபத்து ஒன்றாவது வயதில் மடிவேன் என்று சர்வநிச்சயமாய் நம்பத் தொடங்கினாள். “

“நாங்கள் எங்கள் வீட்டைச் சுற்றிலும் இருந்த போகன்வில்லாக்களை அடியோடு களைந்தோம், என்றாலும் அவை தூரிலிருந்து கிளைத்து வந்தன. எத்தனைத் தீவிரமாக அவற்றை அழிக்க பார்த்தோமோ, அத்தனைத் தீவிரமாய் போகன்வில்லாக்கள் யார் மூலமாவது எங்கள் பெரைரா காட்டேஜுக்கு வந்தன. ஒரு கட்டத்தில், அவற்றை அகற்ற முடியாமல் நாங்கள் சலித்து சோர்ந்து போனோம். . போகன்வில்லாக்கள் எங்களைச் சுற்றிலும் தண்ணீர் விடாமலும் செழித்து வளர்ந்தன. “

“இதோ, டாரத்தியின் படுக்கையறை மாடத்தைப் பாருங்கள்.. வில்மாவின் இளஞ்சிவப்பு சாபத்தை அவளுக்கு வழங்கவென்று போகன்வில்லா மலர்கள் எவ்வளவு வேகமாய் சுவரைப் பற்றி வளர்ந்து மேல்தளத்தை அடைந்திருக்கின்றன. “

அவள் காண்பித்த திசையில் பார்த்தேன். டாரத்தியின் அறையின் மாடத்தின் தந்த வண்ணத் தூண்களை பற்றிப் படர்ந்திருந்த போகன்வில்லாவின் முள் நிறைந்த கிளைகளில் கொத்துக் கொத்தாய் செழித்து மலர்ந்திருந்த பிரகாசமான மலர்கள் வேகமாய் காற்றில் அசைந்தன.

இத்தனை பெரிய வீட்டில் தன்னந்தனியாய் நிற்கிற அந்த சிறிய பெண்ணின் மீது எனக்கு இரக்கம் பிறந்தது. நான் அவளது கைகளைப் பற்றினேன்.

“உனக்கு இம்மலர்களைக் கண்டு பயமில்லையா ஜெசிக்கா?”

“நான் எனது இருபத்தி ஒன்றாவது பிறந்த தினத்தைத் தாண்டி விட்டேன் ஆரா சார்!”

“என்ன சொல்ற ஜெசிக்கா. . . “

“டாரத்தியும் நானும் ரெட்டைகள்!”

“அப்படியென்றால். . . “

“நான் பிறவியிலே நிறக்குருடு, ஆரா சார்!போகன்வில்லாக்களின் நிறம் இன்னதென்றே எனக்குத் தெரியாது!”

***

ப்ரிம்யா கிராஸ்வின் – ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ப்ரிம்யா கிராஸ்வின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரபாண்டியன் பட்டணம் என்கிற கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர். தப்பரும்பு எனும் கவிதைத் தொகுப்பும், கெத்சமனி எனும் சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். எஸ்.ஏ.ஆர் நினைவு இலக்கிய விருது மற்றும் சௌமா இலக்கிய விருது வென்றவர். தொடர்ந்து அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதி இயங்கி வருகிறார். மின்னஞ்சல் – primyacrosswin@gmail.com

நீலத் தாவணி: நம்பிக்கையளிக்கும் எழுத்து

0

பெண் எழுத்து ‘தன்னை எழுதுதல்’ என்ற வட்டத்திலிருந்து இன்று கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக்கொண்டிருக்கிறது. ரம்யாவின் சிறுகதைகளை அப்படியொரு நம்பிக்கைக்குரிய எழுத்தாகப் பார்க்கிறேன். பொதுச்சமூகத்தின் உதிரிகளுக்கும் வரலாற்றில் மறக்கப்பட்டவர்களுக்கும் இவர் எழுத்து முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் பெண்களின் நுண்ணுணர்வு சார்ந்த உளவியல் பிரச்சினைகளையும் இவர் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார். ரம்யாவின் ‘நீலத் தாவணி’ என்ற தொகுப்பிலுள்ள சிறுகதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது கதை கூறும்முறை மிகச் சிறப்பாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. மனித மனம் உறைபனித்தீவு (Iceberg) போன்றது என்கிறார் ஃபிராய்ட். அதன் பெரும்பகுதி நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு தளத்தில் மூடுண்டு கிடக்கிறது. அதன் சிறு பகுதியே வெளியே தெரிகிறது. அதுதான் அறிமனம் (Conscious) என்பது அவரது கண்டுபிடிப்பு. இந்தத் தொகுப்பின் கதைகளினூடாக அறிமனத்தைக் கொண்டு ஆழ்மனத்தைக் காணும் முயற்சியை ரம்யா செய்திருக்கிறார். ‘நீலத் தாவணி’ அப்படியொரு உளவியல் சிக்கலைப் பேசக்கூடிய சிறந்த கதை. தன் இளமையைத் தக்கவைத்துக்கொள்ள தன் இரு மகள்களையும் சிறிய குழந்தைகளாகவே இந்த உலகிற்கு முன் நிறுத்த நினைக்கும் அம்மாவின் ஆழ்நிலை மனதை ஒரு கட்டத்தில் மூத்தபெண் கண்டுபிடித்து விடுகிறாள். தன் மகள்கள் தாவணி அணிவதன் மூலமாகத் தன்னுடைய வயதும் வெளிப்பட்டுவிடும் என்று நினைக்கும் அம்மாவின் மனதை ரம்யா இந்தப் புனைவில் மிக இயல்பாகக் காட்டியுள்ளார். அம்மா என்கிற தொன்ம மதிப்பின்மீது ஏற்படுத்திய உடைப்பு இச்சிறுகதை.

தன் குழந்தைகள் வேகமாக வளரவேண்டும் என்றுதான் பெரும்பாலான அம்மாக்கள் விரும்புவார்கள். விதிவிலக்கு இக்கதையின் மோகனாவின் அம்மா. அவள் இக்கதையில் பெரிதாக உரையாடலை நிகழ்த்தவில்லை என்றாலும் அவள் மனம் உறைபனித்தீவு. அம்மாவின் மனதைப் படித்துவிடும் அறிவை நகரம் மோகனாவிற்கு வழங்குகிறது. மோகனா தன் வயதிற்குரிய ஆடைகளை அணிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறாள். நகரத்திற்கு வந்தபிறகுதான் பெண்களுக்கான ஆடை வகைகளே அவளுக்கு அறிமுகமாகின்றன. கிராமம் மோகனாவின் குழந்தைத்தன்மை மாறாமல் பார்த்துக்கொண்டதையும் நகரம் அந்தத் தன்மையின்மீது உடைப்பை ஏற்படுத்தியதையும் ரம்யா அருமையாகப் புனைவாக்கியிருக்கிறார். ‘குண்டா இருக்கிறவங்களுக்குத் தாவணி கட்டினா அவ்ளோ நல்லா இருக்காது’ என்று மோகனாவின் அம்மா சொல்லும்போதுகூட அவள் மனதை அவதானிக்க முடியவில்லை. மகள் மீதான கரிசனத்தின் காரணமாகவே அவள் இவ்வாறு கூறுகிறாள் என்ற தோற்றம் உருவாகிறது. ‘நான் பெரிய பொண்ணு தான். தாவணியோ சேலையோ போடாததால மட்டும் சின்ன புள்ளையா இருந்திடப் போறதில்லை’ என்ற இடம்வரை அம்மாவின் மனம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. புனைவின் இறுதிவரை இதனைத் தக்கவைத்திருப்பது தேர்ந்த கதைசொல்லிக்குரிய தன்மையாகவே பார்க்கிறேன். இந்தக் கதையில் வெளிப்படும் மோகனாவின் வெகுளித்தனம் புனைவில் அருமையாகத் தொழிற்பட்டுள்ளது.

உண்மை மனிதர்களின் கதைகளைப் புனைவாக்கியதில் ஜெயமோகனுக்குத் தனித்த இடமுண்டு. அத்தகைய கதைகளடங்கிய ‘அறம்’ தொகுப்பு, எப்போதும் என் பிரதான வாசிப்புக்குரியது. அவரை முன்மாதிரியாகக்கொண்டு ரம்யாவும் நாடக அறிஞர் ஆண்டி சுப்பிரமணியம் குறித்து ‘தூசி’ என்ற கதையும் நாடக நடிகை பாலாமணி அம்மாள் பற்றி ‘ட்ராமாகுயின்’ என்றொரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். ரம்யா தமிழ் விக்கியில் பங்காற்றுகிறார். ஆண்டி சுப்பிரமணியம், பாலாமணி அம்மாள் பற்றிய குறிப்புகளைத் தமிழ் விக்கியில் பதிவேற்றும்போது இவர்களது வரலாறு ரம்யாவைப் பெரிதும் பாதித்திருக்கிறது. தமிழ் விக்கியின் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இச்சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும் ரம்யாவின் மொழிநடையும் புனைவின் கூற்றுமுறையும் இக்கதைகள் வாசிப்பவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆண்டி சுப்பிரமணியம் (1897-1981) ஒரு நாடக அறிஞர். ‘தமிழறிஞர்கள்’ என்ற நூலில் அ.கா. பெருமாள் இவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், “A Theatre Encyclopedia” என்னும் தலைப்பில் அவர் சேகரித்த நாடகக் கலைக்களஞ்சியம் 60000 உட்தலைப்புகள் கொண்டது. கையெழுத்துப் பிரதியிலிருந்த அந்த நூலைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் அதைத் தவறவிட்டது; அதன் பிறகும் ஆண்டி இன்னும் ஓராண்டு முயற்சி செய்தால் மறுபடியும் அதைத் தொகுத்து விடலாம் என்றாராம். அப்போது அவருக்கு வயது 80” (பக்.214) என்று எழுதியிருக்கிறார். ஆனால் தமிழ் விக்கியில், “இன்னும் 20 ஆண்டுகள் முயற்சி செய்தால் மறுபடியும் அதைத் தொகுத்து விடலாம்” என்று ஆண்டி சுப்பிரமணியம் கூறியதாக இருக்கிறது. இதில் எது சரியான தகவல் என்பதை அறிய முடியவில்லை. அந்திம காலத்தில் இருக்கும் ஒருவர் தன்னுடைய பல்லாண்டுகால உழைப்பில் உருவான நூலின் கையெழுத்துப் பிரதி தொலைந்துபோனது பற்றிக் கவலைப்படாமல் கூறிய அந்த வார்த்தையின்மீது இந்தப் புனைவு கட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பிரதி காணாமல் போனதற்குக் காரணமாக இருந்த மோகன் என்ற கதாபாத்திரத்தின் வழியே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கலையின்மீது பிடிப்பற்றுப்போன ஒரு தலைமுறை எண்பதுகளிலேயே உருவாகிவிட்டதையும் இக்கதை நினைவூட்டுகிறது.

தமிழ் இலக்கியத்தின்மீது பித்துப்பிடித்து, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் அழித்துக் கொண்டவர்களைப்போல, நாடகத்தின் மீதுள்ள பிடிப்பின் காரணமாகவும் பல குடும்பங்கள் அழிந்துள்ளன. அப்படியொரு குடும்பத்திலிருந்து வந்தவன்தான் ‘தூசி’ கதையின் கதைசொல்லியான மோகன். ‘அத்தன பேத்த சாவடிச்ச கலைய ஏன் தூக்கி நிப்பாட்டனும்னு நெனைக்கீங்க’ என்ற மோகனின் கோபத்திற்குப் பின்னால் ஒரு துயரமான கதை இருக்கிறது. தன் தந்தையைப் போன்றவர்களைப் பார்க்கும்போது அவனுக்குக் கோபம் வருகிறது. ஆனாலும் இறுதியில் ஆண்டி சுப்பிரமணியத்தின் பணியைப் புரிந்துகொள்கிறான். அப்போது அவர் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதி வேண்டுமென்றே காணாமல் ஆக்கப்படுகிறது. ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வின்மீது ஒரு காத்திரமான உரையாடல் இக்கதையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நாடக வரலாறுகள்கூட இவர் பெயரைக் குறிப்பிடவில்லை. இத்தகைய சூழலில் ஆண்டி சுப்பிரமணியம் எனும் ஆளுமையைப் பற்றிய இந்தப் புனைவை முக்கியமானதாகக் கருதுகிறேன்.

ஆண்டி சுப்பிரமணியம் போல வரலாற்றில் பலரும் மறந்துவிட்ட இன்னொரு நாடக ஆளுமை பாலாமணி அம்மாள். தேவதாசி மரபில் வந்த இவர், கும்பகோணத்தில் ‘பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி’யை நிறுவினார். இக்குழுவில் முழுக்க முழுக்கப் பெண்களே நடிகர்களாக இருந்தனர். மிகுந்த செல்வாக்குடன் இருந்த அம்மையார், அரண்மனை போன்ற வீட்டில் வசித்திருக்கிறார். இவர் நடிக்கும் நாடகங்களைக் காண சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவரது இறுதிக்காலம் துயரம் நிறைந்ததாக இருந்திருக்கிறது. சிறிய அளவில் பாலாமணி அம்மையாரைப் பற்றிக் கிடைத்த தரவுகளை அடிப்படையாகக்கொண்டு ரம்யா ‘ட்ராமாகுயின்’ கதையை எழுதியிருக்கிறார். காசி விஸ்வநாத முதலியார் எழுதிய ‘டம்பாச்சாரி விலாசம்’ முதல் சமூக நாடகமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நாடகத்தைப் பாலாமணி அம்மாள் பலமுறை மேடையேற்றிப் புகழ்பெற்றிருக்கிறார். பாலாமணி அம்மையாரின் மங்கலான சில புகைப்படங்களே கிடைத்திருக்கின்றன. இந்தப் புகைப்படங்களைக் கொண்டு அவர்களைப் பற்றிய அழகான வருணனைகளை ரம்யா உருவாக்கியிருக்கிறார். இவரது மொழியில் அவரது ஆகிருதியும் அரண்மனையும் துலக்கம் பெற்றிருக்கின்றன. இந்தப் புனைவினூடாக நாடகங்களில் பங்களித்த பெண்களைப் பற்றிய ஆண்களின் ஒவ்வாமைகளையும் செல்வம் என்ற கதாபாத்திரத்தின் வழியாக விரிவான விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கிறார். ‘பொண்ணு வந்தாலே தீட்டுன்னா கதைல ஏன் ஆம்பளைகள மட்டும் வச்சு எழுத வேண்டியது தானே’ என்று இக்கதையின் அண்ணாச்சி கதாபாத்திரம் பேசுகிறது. இந்தக் கதாபாத்திரம் டி.கே.சண்முகம். ஏனெனில், டி.கே.சண்முகத்தின் நாடகக்குழு நொடிந்துபோனபோது பாலாமணி அம்மையார்தான் உதவி செய்திருக்கிறார். உண்மையில் பாலாமணி அம்மையாரை இச்சிறுகதை மீண்டும் உயிர்பெறச் செய்திருக்கிறது. இதுபோன்ற உண்மை மனிதர்களின் கதைகளை ரம்யா தொடர்ந்து எழுத வேண்டும் என்ற விருப்பத்தை இவ்விரு கதைகளும் ஏற்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பிலுள்ள ‘வஞ்சி’ என்றொரு சிறுகதையும் மிக முக்கியமானது. இந்தக் கதையும் நாடகத்துடன் தொடர்புடையதுதான். சூர்ப்பணகை என்ற தொன்மக் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இக்கதையை எழுதியிருக்கிறார். இராமாயணத்தில் பாவப்பட்ட ஒரு கதாபாத்திரம் சூர்ப்பணகை. ஆனால் கம்பனின் பார்வையில் கொடூரமான அரக்கி. இராமனின் ஆளுமைப் பண்பை நிலைநிறுத்துவதற்காகத் தன் மூக்கையும் முலைக்காம்புகளையும் இழந்தவள் சூர்ப்பணகை. இராமன் என்கிற தொன்ம கதாபாத்திரத்தின்மீது நவீன எழுத்தாளர்கள் பலரும் பல்வேறு விதங்களில் மறுவாசிப்பை நிகழ்த்திப் புனைவுகளை உருவாக்கியிருக்கிறார்கள். ரம்யா இந்த இடத்தில் வேறுபட்டிருக்கிறார். நாடகத்தில் இராமன் வேடம் புனையும் செல்லப்பன், யதார்த்தத்தில் எவ்வளவு மோசமானவனாகவும் பெண் பித்தனாகவும் இருக்கிறான் என்பதை இப்புனைவின் வழியாக உரையாடியிருக்கிறார். அதேநேரத்தில் இந்தக் கதையில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தின் வழியாக ஆண்களின் இயல்பையும் உடைத்துப் பேசியிருக்கிறார். ‘அந்த நேரத்துக்கு ஆம்பளைக என்ன வேணுனாலும் சொல்லுவாக. பொட்டச்சிக்கு எங்க போவுது புத்தி’ என்கிறான் கண்ணன். புனைவின் ஒற்றைத் தன்மையைச் சிதைத்துக் கதாபாத்திரங்களைச் சுதந்திரமான உரையாடலுக்கு உட்படுத்துகிறார். ரம்யாவின் பல கதைகளில் இந்தத் தன்மையைப் பார்க்க முடிகிறது.

ஆண்கள் இராமன்களாக இல்லாதபோது பெண்களில் பத்தினிகள் மட்டும் எப்படி இருப்பார்கள் என்ற கேள்வியையும் இக்கதை எழுப்புகிறது. குமார், செல்லப்பன் ஆகிய இரு கதாபாத்திரங்களையும் குடிக்கவைத்துப் பேசவைத்திருக்கிறார். அவர்களின் வழியாகவே ஆண்களின் மனதில் பெண்களின் இருப்பு என்னவாக இருக்கிறது என்ற இடத்திற்கும் புனைவை நகர்த்தியிருக்கிறார். யதார்த்த வாழ்க்கையில் இராமன் என்று எவரும் இல்லை. அதுவொரு புனைவுத்தன்மைக்குரிய கற்பனைக் கதாபாத்திரம். அந்தப் பாத்திரத்தை ஏற்கும் நடிகர்கள்கூட அப்படியாக இருக்க விருப்பப்படுவதில்லை. காதல் என்பது ஒரு கற்பிதம். நிஜத்தில் சூர்ப்பணகையைப் போன்று உருகி வழியத் தேவையில்லை என்பதை இக்கதையின் ராசாத்தி இறுதியில் உணர்ந்துகொள்கிறாள். இராமனைப் பார்ப்பதற்கு முன்பிருந்த சூர்ப்பணகையின் கம்பீர நடைதான் தன்னுடைய அடையாளம் என்று அவனை ஏளனமாகப் பார்த்துவிட்டுச் செல்கிறாள் ராசாத்தி. இராமன், சூர்ப்பணகை கதாபாத்திரத்தின்மீது இக்கதை நிகழ்த்தும் மறுவாசிப்பு குறிப்பிடத்தக்கது. சா.கந்தசாமியின் ‘இரணிய வதம்’ என்ற சிறுகதையும் இக்கதையுடன் சேர்த்து வாசிக்கத் தகுந்தது.

‘அழைப்பு’ என்ற சிறுகதையும்கூட இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இக்கதையின் சோஃபியா பாவ மன்னிப்புக் கேட்க மாதா கோயிலுக்குச் செல்கிறாள். அங்கு இவளிடம் வெளிப்படும் குழந்தைத்தனம் ஃபாதரையே அயர்ச்சியடையச் செய்கிறது. எது பெரிய விஷயம்; எது சின்ன விஷயம் என்பதற்குக்கூட இவளுக்கு வித்தியாசம் தெரியவில்லை. எது பாவம்? எந்தப் பாவத்திற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற உரையாடலை ரம்யா சோஃபியா கதாபாத்திரம் வழியாக முன்னெடுத்திருக்கிறார். வேலூரின் புகழ்பெற்ற சி.எம்.சி. மருத்துவமனையை நிறுவிய ஐடா சோஃபியா ஸ்கடரின் வாழ்க்கையை இப்புனைவு அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் சொகுசான வாழ்க்கையைப் புறக்கணித்துவிட்டு ஏழைகளின் பக்கம் நிற்கச்சொல்லும் சமிக்ஞையை ஸ்கடர் ஒருநாள் பெறுகிறார். அந்த சமிக்ஞையைப் பெற்ற தருணத்தைத்தான் ரம்யா இக்கதையின் மையமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ரம்யாவின் எழுத்து பிற பெண் எழுத்துக்களில் இருந்து தனித்துத் தெரிகிறது. எந்தவொரு சிறிய நிகழ்வையும் காத்திரமான புனைவாக மாற்றிவிடும் மொழிவண்மையை ரம்யா பெற்றிருக்கிறார். எதைப் பற்றியும் இவரால் தீவிரமாக உரையாட முடிகிறது. கதாபாத்திரங்களைப் புனைவின் தன்மைக்கேற்ப அருமையாகக் கையாண்டிருக்கிறார். கலவையான கதாபாத்திரங்கள் ஒவ்வொரு சிறுகதைக்கும் புதிய நிறங்களை அளிக்கின்றன. அறிவுத் தளத்திலிருந்து விலகி நின்று தன் புனைவின் இயக்கத்தைக் கண்காணிக்கிறார். ஒவ்வொரு கதைக்கும் இவரால் உருவாக்கப்படும் எதிர் கதாபாத்திரங்கள் புனைவாசிரியரின் சார்பாக முக்கியமான உரையாடலை வளர்த்தெடுத்துச் செல்கின்றன. அதிர்ந்து பேசாத இவரது மொழி புனைவுக்கு ஓர் இயல்பான அடர்த்தியை அளிக்கின்றன. ஒவ்வொரு கதையின் உரையாடலிலும் வெளிப்படும் நுணுக்கமான விவரணைகள் புனைவுக்குக் கனத்தைச் சேர்க்கின்றன. நம்பிக்கைக்குரிய எழுத்தாக இவரது ‘நீலத் தாவணி’ இருக்கிறது.

***

சுப்பிரமணி இரமேஷ் – இயற்பெயர் சு.இரமேஷ். நவீன இலக்கியங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சென்னை, இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘தமிழில் தலித் இலக்கியம்’ என்ற நூலுக்காகச் சிறந்த திறனாய்வாளருக்கான ‘பஞ்சு பரிசில் – 2023’ என்ற விருதினைப் பெற்றுள்ளார். மின்னஞ்சல்:ramesh5480@gmail.com

புராதன நினைவுகளின் உறைவிடத்தில் உயிர்த்தெழுந்த புனைவு மிருகம்

0

ல்குதிரையில் [இதழ் 38] வெளியான ‘இரு பிரதிமைகள்’ என்ற கதையை வாசிக்க நேர்ந்த பிறகுதான் அசோக் ராம்ராஜ் என்ற எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார். [கதையின் வாயிலாக மட்டுமே]. இணையத்தில் தேடியபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருப்பதை அறிந்தேன்.

எழுத்தாளர் அசோக் ராம்ராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பு “ரித்னாபூரின் மழை”. இது இரண்டாயிரத்து இருபத்தொன்றில் நூல் வனம் வெளியீடாக வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகளும் கல்குதிரை இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. மேலும், நாதன் பதிப்பகம் சார்பாக அஷ்வின் பாக்கியராஜ் தொகுத்த “புதிய காற்று: தற்காலத் தமிழ்ச்  சிறுகதைகள் (2014–2024)” தொகுப்பில், இதன் தலைப்புக் கதையான “ரித்னாபூரின் மழை” இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது 

இத்தொகுப்பில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஓர் எழுத்தாளன் நேரடியாகவோ, குறிப்பிட்ட சம்பவத்தின் மூலமாகவோ, இலைமறை காயாக ஏதேனுமொரு குறியீட்டின் வாயிலாகவோ கதை நிகழ்ந்திடும் காலத்தைப் பதிவு செய்வதன் மூலமாக குறிப்பிட்ட அந்த காலக்கட்டத்திற்குப் புனைவின் பிரதான வெளிகளைக் கொண்டு கதையின் உள்ளடுக்குகளில் மறைந்திருக்கும் புதிர்களைப் புரியச் செய்வான். காலம் அணுக்கமாகும் போது கதாபாத்திரங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களும், முரண்களும் ஒவ்வொன்றாக முடிச்சவிழ்ந்து வாசிப்பவனுக்குக் கதையோடு ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கும். அந்த வகையில் அசோக் ராம்ராஜ் கையாண்டிருக்கும் கதைகளில் காலம் என்று பார்த்தால்,  அவை பெரும்பாலும் பல நூறு ஆண்டுகள் பழமையானவையாக இருக்கின்றன. எந்த ஒரு கதையும் சமகாலத்தை மையம் கொண்டு இயங்கவில்லை. 

புனைவு என்னும் மாய வெளியில் தனது கற்பனைக் குதிரையை உலாவச் செய்து, அதன் குளம்படிகள் இட்டுச் செல்லும் மாயப் பாதையை மௌனமாகப் பின்தொடர்ந்து தமக்கு வாய்த்திருக்கும் செழிப்பான சொற் குவியல்களில் தேர்ந்தெடுத்த சொற் முத்துகளைக் கோர்க்கப் பண்ணி அந்தக் காலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மீளுருவாக்கம் செய்து சமகாலக் கதைகளாக்கி வாசகனுக்கு வழங்கியிருக்கிறார். 

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் போக்கானது, வழக்கமான உரையாடல் வழி கதை நகர்தலிலிருந்து விடுபட்டு முற்றிலும் வேறுபட்ட பாணியில் வாசிப்பின் சுவாரசியத்தைக் கூட்டி மிகச்சிறந்ததொரு வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன. எந்தக் கதையிலும் பெண்கள் இல்லை. உறவுகள் இல்லை. உறவுச் சிக்கல்கள் இல்லை. கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் குறித்த பெரும் சித்தரிப்புகள் இல்லை. குறிப்பாகக் காதல் இல்லை. இவற்றிற்கு மாறாக, கிட்டத்தட்ட அனைத்துக் கதைகளுமே வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன. இதில் நிலமும், புன்னை மரங்களும், இலைகளும், மலையும், காடும் பெரும்பங்கு வகிக்கின்றன. அக்காட்டில் நாகம் உகுத்த தோல் எப்போதும் காற்றில் அசைந்தபடியே இருக்கிறது. இப்போது ஒவ்வொரு கதையாக அசை போட்டுப் பார்க்கையில் ஒரு பிரதான கதாபாத்திரத்திற்கு நிகரான அந்தஸ்தை ஒவ்வொரு கதையிலும் ‘இருள்’ [இரவு] பெற்றிருப்பதை உணர முடிகின்றது. 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த மண்ணில் நிகழ்ந்த போரும், போரினால் உண்டான நசிவும், அதையொட்டிய வந்த பஞ்சத்தின் கொடுமைகளும் கதையின் வெளிப்புறக் காட்சியமைப்புகளுக்குப் பின்னால் ஊடாடியிருக்கும் முதன்மையான அம்சங்களாகத் திகழ்கின்றன. கதை சொல்லல் முறையில் இவை யதார்த்தத்தின் சாத்தியக்கூறுகளிலிருந்து தம்மை முற்றிலுமாக துண்டித்துக் கொண்ட விதத்தில் தனித்துவமான புனைவு வெளியை  வந்தடைகின்றன. 

எது வரலாறு? எது புனைவு? என்று வாசக மனநிலையின் அவதானிப்புகளை கூர்தட்டும் இடங்களில் அந்த வரலாற்றையும், புனைவையும் இணைத்திடும் ஒரு மென் இழையாகத் தொன்மத்தை உய்த்துணர வைப்பதன் மூலம் கதை வேறொரு தளத்திற்கு பரிணமிப்பதுடன் வாசகனையும் புனைவின் மயக்குறு நிலைக்கு இட்டுச் செல்கின்றது. 

என் வாசிப்பு அனுபவத்தில் நான் கண்டு கொண்ட மற்றொரு முக்கியமான விடையம், இத்தொகுப்பில் வரும் மனிதர்களான சங்கன், சித்தன், ராஜன், சீவல மாறன், பூலி, ஈசல் என அனைவரும் ஒற்றை ஆளுமையாகவே தோன்றுகிறது. தனித்தனி சூழ்நிலைகளில்  விளைந்த தொடர்ச்சியான சம்பவங்களின் ஊடாக வெவ்வேறு கதைகளில் வேறுவேறு கதாபாத்திரங்களாக உருப்பெற்று வருகிறார்கள் என்றே தோன்றுகிறது. எனினும் முன்னரே குறிப்பிட்டது போல், இக்கதைகளில் பாத்திரங்களின் தனிப்பட்ட இயல்புகளை விட அதன்வழியே முன்னின்று பேசப்படும் நிலம், காடு, தொன்மம், புராதன நினைவுகள் போன்றவைகளே கதையை முன்னகர்த்திச் செல்லும் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. 

தனது மண்ணும் நிலமும், ஒரு காலத்தில் அங்கு நிலவிய போரும் வறட்சியும் அதன்பால் உண்டான பஞ்சத்தால் நிகழ்ந்தேறிய தவிர்க்க முடியாத இடப்பெயர்வும் மனதின் அடியாழத்தில் வலியும், ஏக்கமுமாக அண்டிக் கிடந்து தொந்தரவுக்கு உள்ளாக்கிடும் புராதன நினைவுகளிலிருந்து  மீண்டெழும் முயற்சியில் அல்லது அந்தப் புராதன நினைவுகளை மீட்டிப் பார்க்கும் பேராசையில் தன்னையே அர்ப்பணித்து தனது படைப்பின் வாயிலாக அதற்குச் சாட்சியம் தேட முயன்றிருக்கிறார்  அசோக் ராம்ராஜ். இப்படைப்பிலேயே ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று,

இந்தப் புனைவுலகில்,  “எல்லாற்றுக்குமே வழி உண்டு”.

***

கார்த்திக் பிரகாசம் கல்குதிரை, தமிழ்வெளி, உதிரிகள், அகழ், நகர்வு, கலகம், வாசகசாலை முதலிய அச்சு, இணைய இதழ்களில் சிறுகதைகளும் மற்றும் கணையாழி, பேசும் புதிய சக்தி, சொல்வனம், நுட்பம் இதழ்களில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவரது “மீச்சிறு இருள்” என்ற சிறுகதைத் தொகுப்பை தேநீர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மின்னஞ்சல்: karthiksona91@gmail.com

பள்ளிப்பருவச் சிறார்களும் அசோகமித்திரனும்

2

மிழின் நவீன சிறுகதைக்கு ஒரு நீண்ட தொடர்ச்சி இருக்கிறது, அந்த வரிசையில் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு பெரிய பங்குண்டு. அவருடைய காலத்தில் வந்த சிறுகதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சொல்முறையை இவரின் கதைசொல்லல் கையாளப்பட்டு இருந்தது, எந்த பெரும் விவரிப்புகளும் வர்ணனைகளும் இன்றி மிகவும் எளிய சொல் முறையில் மனிதர்களின் வாழ்க்கையை இவரின் கதைகள் நிகழ்த்திக் காட்டிய விதம், அந்த சொற்களின் இடைவெளியில் விடப்படும் மௌனங்களும் வாசகனுக்கு அவனுக்கான ஒரு இடத்தை தருவதாலோ என்னவோ இவரின் கதைகள் ஒரு கணத்தில் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு உணர்வை தட்டி எழுப்பிவிட்டுச் செல்கிறது.

இவரின் கதைகளை வாசிக்கும் போதெல்லாம் எனக்குள் தோன்றும் உணர்வானது, அந்த எழுத்துக்களை வாசிக்கும் போது உருவாகும் ஒரு உலகத்தின்(மனிதர்களால்) கீழ் வேறொரு பார்வையைக் கொண்டு ஒரு உலகம்(உணர்வுகளால்) உருவாகிறது என்பதுதான். இந்த இரண்டாம் பார்வை பெருவாரியாக அந்தக் கதையில் இருக்கும் உரையாடல்களும், இடையிடையே விடப்படும் மௌனங்களின் மூலமாகத் தான் உருவாகிறது. இந்த இருமை நிலை எனக்கு எளிதில் கிடைக்கப் பெறவில்லை என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவரின் நாவல்கள், குறுநாவல்கள் வாசித்து வந்ததினால் இப்படி ஒரு பார்வை எனக்குக் கிட்டி இருக்கிறது போலும்.

பெருவாரியாக எளிய மனிதர்கள் தான் இவரின் கதைமாந்தர்களாக இருக்கிறார்கள். அதுவும் கீழ் நிலை நடுத்தர வர்க்கத்தினர்கள். அவர்களிடத்தில் அதிகாரம், பணம், பதவி என்ற எந்தச் சிறப்புத் தகுதிகளும் இல்லாதவர்களாக இருப்பதால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் தான் இவரின் கதைகளை நகர்த்துகின்றன. அம்மனிதர்கள் மீளமுடியாத கஷ்டங்களும் துயரங்களும் அந்தக் கதையின் கருவாகிறது, அவற்றை எதிர்கொண்டு வீழ்ந்து போகாமல் முன்னேறி செல்கிறார்கள், இவற்றைதான் இவரின் கதை நெடுகிலும் காண முடிகிறது. 

இவரின் கதைகள் பெருவாரியாக தன்னிலையில் இருந்து கூறப்படுவதால், வாசகன் அதில் எளிதில் ஒன்றி அவனை அதில் கண்டடைந்து பொருந்திக்கொள்கிறான். இந்தத் தன்னிலையில் கூறும் நபர்கள் எல்லாம் பள்ளிப் பருவ பிள்ளைகள், கல்லூரி இளைஞர்கள், வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்கள், வேலையில் இருப்பவர்கள், குடும்பஸ்தர்கள், முதியவர்கள் என்று எல்லா வயது பருவங்களையும் உடையவர்களாக இருக்கிறார்கள், ஏன் மரணித்தவர்கள் கூட இருக்கிறார்கள். இந்தத் தன்னிலையில் கூறுவதாலோ என்னவோ இதுவெல்லாம் அசோகமித்திரனின் வாழ்க்கையோ என்று பல கதைகளில் சிந்திக்க முடிகிறது, அதில் திரும்பத் திரும்ப வரும் ஒன்றாக நான் கண்டது – அப்பாவின் மரணம். அதேபோல் இவரின் கதைமாந்தர்கள் சந்திக்கும் பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு லேசான பகடியை தூவிவிட்டு செல்லும் போது மனதில் கூடும் கணம் சற்றுக் குறைத்து அவனின் வாழ்வை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க நகர்த்துகிறது, இதுவும் அசோகமித்திரனின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக உணர முடிகிறது. 

இவரின் மொத்த கதைகளையும் வாசித்து எழுதி வைத்திருந்த குறிப்புகளை மீண்டும் வாசிக்கும் போது இந்த கதைகளின் ஊடாக இருக்கும் வெவ்வேறு  விடயங்களை வைத்து தொகுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அந்தக் கதைகளில் பெரும்பான்மையாக இருப்பது குழந்தைகள் தான் என்று என்னுடைய சித்தத்திற்கு முதலில் பட்டது, அதுவும் பள்ளிப் பருவ பிள்ளைகள். இவர் எழுதி இருக்கும் 280 கதைகளில் 60க்கும் மேற்பட்ட கதைகளில் குழந்தைகள் தான் வருகிறார்கள், அந்தக் கதைகள் எல்லாம் வெவ்வேறான பார்வைகளிலிருந்து கூறப்படுகின்றன. மீண்டும் அந்தக் கதைகளை மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி அதில் இருக்கும் சில பிரிவுகளாக நான் கண்டது, குழந்தைகளின் பார்வையிலிருந்து கதையை நகர்த்தும் போது அதில் பெரியவர்கள் வாழ்வு எப்படி இருக்கிறது என்றும், பெற்றோர்கள் உறவினர்கள் பள்ளி ஆசிரியர்கள் பிள்ளைகளை எப்படி நடத்துகிறார்கள் என்றும், நினைவுகளின் மீட்டுருவாக்கமாக சிறுவயதில் பார்த்த பிறரின் வாழ்வியல் அனுபவங்களை மீள் பார்வைக்கு உட்படுத்துதல், அந்த சிறுவயதில் மனதின் ஆழத்தில் பதிந்த முக்கியமான நிகழ்வுகள், காதல், அன்பு, துரோகம், இழப்பு, பிரிவு, விளையாட்டு, நட்பு வட்டம் என சிறுவர்களின் வாழ்வில் இருக்கும் உணர்ச்சிகளை தான் அதிகம் காண முடிகிறது.

நினைவுகளின் மீட்டுருவாக்கமாக இருக்கும் நிலமாக செகந்தராபாத் தான் பிரதானமாக வருகிறது, அந்தக் கதைகள் அனைத்தும் பெருவாரியாக இந்தப் புத்தகத்தின் இரண்டாம் தொகுதியில் தான் வருகிறது, அதாவது ஆரம்ப நாட்களில் எழுதாமல் பிற்காலத்தில் எழுதி இருக்கிறார். இந்தக் கதை எல்லாம் வெறும் ஒரு nostalgic மட்டும் என்ற வட்டத்தில் சுருக்காமல் அந்த வாழ்வியலில் இருக்கும் அழகழகான நிகழ்வுகளை மட்டும் கூறிச் செல்லாமல் வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம் வெவ்வேறு உணர்ச்சிகளை தொட்டுச் செல்கிறார். சில கதைகளை வாசிக்கும்போது திரும்பத் திரும்ப ஒரே கதையைக் கூறுவது போன்ற எண்ணங்களை தந்து அது வாசகனுக்கு ஒரு அயர்வையும் தரக்கூடும். ஆனால் மிக மெல்லிய உணர்வுகளின் வாயிலாக கதை வெவ்வேறு உணர்ச்சிகளை உள்ளுக்குள் கடத்தி செல்லும் போது வேறொரு கதையாக மாறுதல் அடைகிறது. இந்த செகந்தராபாத் நிலத்தில் இருக்கும் கதைகள் மட்டும் எடுத்துத் தொகுத்தால் அது ஒரு நாவல் தன்மையிலும் இருக்கக் கூடும்.

சிறு வயதில் நாம் நம்முடைய சகோதர சகோதரிகள் இடத்தில் வேண்டும் என்றே வீண் வம்புக்கு இழுப்போம். அது விளையாட்டாகத் தொடங்கி விபரீதத்தில் முடிந்து இருவருக்குள்ளும் அணையாத தழல் ஒன்று எரிந்து கொண்டே இருக்கும், அல்லது பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் மீது அதிக அக்கறை காட்டுவது மற்றவரை பெரிதாக அக்கறை காட்டாதது போல அப்போது அந்த பிஞ்சு உள்ளங்களில் சில நஞ்சுகள் அவர்களுக்குள் புகும். அதனாலேயே தம்முடைய சகோதர சகோதரிகளின் மேல் சில கோபங்கள் இருந்து கொண்டே இருக்கும், இப்படி இருக்கும் போது அவர்களுக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்து விட்டால் இந்த பிஞ்சு மனம் அவர்களுக்காக வருந்தி பிரார்த்திக்கும். அப்படியாகத்தான் விபத்து, வாழ்விலே ஒரு முறை, சிரிப்பு ஆகிய கதைகளை பார்க்கிறேன்.

சிறுவர்களின் உலகத்தை நாம் எந்தவித தர்க்கங்களினுள் வரையறை செய்து கொள்ள முடியாது, அவர்களுக்கு எது சரியோ அது தான் அவர்களின் உலகம். அப்படி நாம் அதில் நுழைந்து கொண்டாலும் நம்முடைய மேதாவித்தனத்தை பிள்ளைகளின் மேல் செலுத்தி அவர்களின் பார்வையை மாற்றி எழுத முயற்சிக்கிறோம், இதெல்லாம் தோல்வியில் தான் முடிகிறது. அந்த உலகத்தின் அழகைக் கண்டு ரசிக்காமல் இருக்கும் மனதை வெளிப்படுத்தும் இடமாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இந்த விடயங்களை மழை மற்றும் ரிக்‌ஷா கதையில் இருக்கும் தன்மையோடு பொருத்திக் கொள்ளலாம்.

சிறுவயதில் ஒரு விடயத்தைக் கண்டு பிரமித்து அந்த செயலை தானும் செய்ய வேண்டும் என்ற அவா உள்ளுக்குள் ஆழமாக பதிந்து விட்டால் பெற்றோர்களை நச்சரிக்கத் துவங்கிவிடுவார்கள், அந்தப் பெற்றோர்களின் நிலை அவற்றுக்கு எதிராக இருந்தால் சிறுவர்கள் இன்னும் அடம்பித்துக் கொண்டு பெற்றோர்களின் கோபத்தை தூண்டச் செய்து அப்போதைக்கு சில அடிகளையும் பெற்றுக்கொண்டு, பின்பு ஆறுதலாக அந்த பிள்ளைக்கு தரும் சத்தியம் பெரும்பாலும் பொய் சத்தியங்களாகத் தான் இருக்கிறது. அச்சிறுவர்களின் நிறைவேறாத ஆசையாக இருந்த ஒரு  விடயம் பிற்காலத்தில் அவர்கள் பெற்றோராக இருக்கும்போது அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை வைத்து தீர்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள். இது தான் பெரும்பான்மையான இந்தியப் பெற்றோர்களின் மனநிலையாக இருக்கிறது, அசோகமித்திரன் இதே கருவை வைத்து இரு கதைகளை எழுதி இருக்கிறார். இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கதையில் இருக்கும் இந்திரா என்ற குழந்தையின் ஆசை, இந்திராவால் வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற கதையில் அவள் தாயாக வளர்ந்து தன்னுடைய மகன் வரை அந்த ஆசை நீள்கிறது. இதே கதையில் அவளின் காதல் பற்றிய ஒரு பார்வையையும் வைத்து கதையை வேறொரு திசைக்கு நகர்த்தியும் காண்பித்து இருந்தார்.

அதிகாரத்தை எளிதாக செலுத்தக்கூடிய இடமாகத்தான் குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு அந்நியர்களாக இருந்தாலும் சரி இந்த அதிகாரம் அவர்களின் மேல் செலுத்தப்படுகிறது. அந்த குழந்தை ஒரு குற்றத்தை செய்ததோ இல்லையோ அவர்களின் மேல் செலுத்தப்படும் ஒரு அவதூறுவைக் கூட பொருட்படுத்திக் கொள்ள முடியாமல் பெற்றோர்கள் அவர்களின் மேல் செலுத்தப்படும் அதிகாரம்(இவனை எப்படி?), ஒரு வரிசையில் பெரியவர்களுக்கு மத்தியில் சிறுவர்கள் நிற்க்கும்போது அவர்களின் மேல் செலுத்தக் கூடிய அதிகாரம்(வரிசை), அரசு அதிகாரிகளுக்கு சொல்லவே வேண்டாம்(கொடியேற்றம், புத்தகக் கடை), உபதேசம் என்ற பெயரில் சில அதிகாரங்களும் வரத்தான் செய்கின்றன(பொறுப்பு). இப்படி அவர்களின் மேல் செலுத்தப்படும் அதிகாரத்தில் அவர்களின் குரல் நசுக்கப்பட்டாலும் அவர்களின் குரல்களை வாசகன் உணர்ந்து அதில் இருக்கும் வலிகளையும் உண்மையையும் கண்டடைகிறான்.

சிறு வயதில் பார்க்கும் பிறரின் வாழ்க்கையை அப்போதிருக்கும் வளர்ச்சியால் பெரிதாக எந்தப் புரிதலும் தெளிவாக கிட்டப்போவதில்லை. அந்த வயதின் அனுபவத்திற்கு ஏற்றார்போல் ஒரு புரிதலோடு நின்றுவிடுகிறது, ஆனால் அதை வாசிக்கும் வாசகனுக்கு அந்த மனிதர்களின் வாழ்க்கை பற்றிய தெளிவான பார்வையை உணரமுடிகிறது. இந்த சிறுவர்கள் பார்வையிலிருந்து காண்பிக்கும் நபர்கள் பெருவாரியாக ஏதோ ஒரு விடயத்தாலோ நபராலோ நிராகரிக்கப் பட்டவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு இந்த சிறுவர்கள் ஆறுதலாகவும் இருக்கிறார்கள், தங்களுடைய இருண்மையை சற்று இறக்கி வைக்கும் ஜீவனாகவும் இருக்கிறார்கள் என்ற நிம்மதி அவர்களின் மனதில் குடி புகுகிறது, அப்பொழுதும் அவர்களின் சிலருக்கு  ஆறுதல் பெறாத சுமையும் அவர்களிடத்திலேயே நிலைக்கத்தான் செய்கிறது. அவள் ஒருத்திதான், நடனத்துக்கு பின், உத்தர ராமாயணம், சில்வியா, வாழைப்பழம் ஆகிய கதைகளில் மேலே குறிப்பிட்ட அந்தப் பார்வையை வைத்து பல பரிமாணங்களில் கதை நகரும், எல்லா கதைகளிலும் வருவது அதே  சிறுவன் தான் என்ற புரிதலையும் தரக்கக்கூடும்.

பள்ளியில் படிக்கும் போது உருவாகும் நட்பானது தன்னுடன் படிக்கும் வகுப்பு மாணவர்களை தாண்டியும் உருவாகிறது, அந்த நண்பர்கள் மற்ற வகுப்பு நண்பர்களாகவும், மற்றப் பள்ளியில் படிக்கூடிய மாணவர்களாகவும், வேலைகளைச் செய்யக்கூடிய பிள்ளைகளாகவும், தன்னுடைய சுற்றதிற்கு வந்த புதிய நபர்களாகவும் என்று இந்த நட்பு வட்டம் எப்படி வேண்டுமானாலும் விரிவடைந்து கொண்டே செல்வதுண்டு. இந்த நண்பர்களில் பெரும்பான்மையினோர் தம்முடைய சமகால வாழ்வு தொடர்பில் இருக்கப் போவதில்லை, ஆனால் நினைவுகளின் பாதையில் இருக்கும் அவர்களின் தடம் என்றும் நீங்காத ஒன்றை சுமந்து கொண்டு தான் நம்மோடு ஜீவித்துக் கொண்டு வருகிறது. இம்மாதிரியான நண்பர்களை வைத்துக் கொண்டு அசோகமித்திரன் பத்துக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி இருக்கிறார், அந்தக் கதைகளில் இருக்கும் நண்பர்களாக இருப்பவர்கள் தையல் கடையில் வேலை செய்யும் பதின் பருவ இளைஞன், லாரி கிளீனராக இருக்கும் சிறுவன், வீட்டு வேலை செய்யும் சிறுவன், விளையாடும் போது உருவாகும் நண்பர்கள், கலைக்காக கிடைக்கும் நண்பர்கள் முதலிய பள்ளி வட்டத்தைத் தாண்டி இருக்கும் நண்பர்களைப் பற்றி கூறும் கதைகளில் கதைசொல்லியின் வாழ்வியலை விட அந்த நண்பர்களின் வாழ்வியல் தான் மிகவும் ஆழமாக பாதிக்கிறது. அப்படி இருக்கக் காரணமாக அந்த நண்பர்களின் வாழ்க்கை இந்தக் கதைசொல்லியின் வாழ்வியலை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறது என்பதை தான் உணர்த்துகிறது.

 “நீ சிறுபிள்ளையாக இருந்தபோது அவர்கள் உன்னை எப்படிப் பார்த்துக் கொண்டார்களோ அவ்வாறு நீ அவர்களை முதுமையில் கனிவாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பது போன்ற ஒரு வசனம் திருக்குர்ஆனில் வருகிறது. முதியவர்களின் செயல்களைக் கண்டாலே அதில் ஒரு சிறுபிள்ளைத்தனம் இருக்கும் – பேதமற்ற தனம். அது தான் முதலில் என் கண்ணுக்கு படும், அதை பெருவாரியானோர் கவனிப்பதில்லை, அதனால் தான் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகிறார்கள் என்றும் என்னுடைய அவதானம். அதேபோல சிறுவர்கள் சில நேரங்களில் நடந்து கொள்ளும் விதத்தில் ஒரு முதிர்ச்சியான மனிதனின் சாயலை உணரக்கூடும். இப்படி குழந்தைமை – முதுமை என்ற ஒரு பரிமாற்றம் இருக்கிறது. இந்த விடயத்தை வைத்துத்தான் பாலாமணி குழந்தை மண்ணைத் தின்கிறது மற்றும் அப்பாவிடம் என்ன சொல்வது என்ற கதைகள் எழுதப்பட்டிருந்தது. 

பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து ஒரு விளையாட்டை விளையாடும் போது, உதாரணத்திற்கு கிரிக்கெட்டை எடுத்துக் கொள்வோம், ஒருவரிடத்தில் மட்டை இருக்கும் இன்னொருவர் இடத்தில் பந்து இருக்கும். விளையாடும் பொருட்களை வைத்திருக்கும் அவர்கள் தன்னிடத்தில் இருக்கும் அதிகாரத்தை வைத்து ஏதும் இல்லாதவர்களுக்கு வாய்ப்புகளை தராமல் தானே விளையாடித் தீர்த்து, தம்முடைய பொருளை எடுத்துச் சென்று விடுவேன் என்ற கிலியில் வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி இருக்கும் நபர் பல ஆண்டுகள் கழித்து தன்னால் பாதிக்கப்பட்ட அந்த நண்பனை காணும் போது அவன் நம்மை நிராகரித்து சென்று விட்டால் நம்முடைய மனம் முதலில் தேடுவது நாம் முன்பு அவனை என்னவெல்லாம் செய்தோம் என்பதை தான், அப்போது  நாம் செய்த பல விடயங்கள் நினைவில் தோன்றி இதன் காரணத்தால் தான் அவன் என்னை பார்த்தும் பார்க்காதது போல சென்று விட்டானோ என்றொரு தீர்வுக்கு வரும். அப்படி இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, அவனுக்கு நீ யார் என்று மறந்து போயும் இருக்கலாம், அதேசமயம் அவன் இப்போதிருக்கும் சூழலில் சிரித்து பேச இயலாமல் இருக்கலாம் என்றும் ஆறுதலுக்காக சில எண்ணங்களும் எழமால் இருக்கப்போவதில்லை, அப்படியாகத்தான் பார்த்த ஞாபகம் இல்லாமல் போதல் கதையைக் காண்கிறேன். இதே சாயலை வைத்தும் சில கதைகள் இருக்கிறது. இதுவெல்லாம் அந்த சிறு வயதில் இருக்கும் ஒரு விதமான பொறாமை குணத்தால் நேரும் நிகழ்வுகள் என்றும் வைத்துப் பார்க்கலாம். அதிலும் நினைவுகளின் ஊடாக நகரும் கதைகள் தான் அதிகம். 

பள்ளிப் பருவத்தில் பலரும் அனுபவித்திருக்க கூடிய தொந்தரவாக இருப்பது தன்னை நோக்கி வரும் கேலி கிண்டல்கள். அதை எப்படி எதிர்கொள்வது எந்த அறிவும் இல்லாமல் சில நேரங்களில் கேலி கிண்டல்களை செய்வோர் இடத்திலேயே சேர்ந்து கொள்வது அல்லது அந்த இன்னல்களை எதிர்கொள்ள முடியாமல் அதிலேயே வாடுவது, அந்த நேரத்தில் ஆசிரியர்கள் தம்மை ஏசினாலும் அடித்தாலும் எல்லோரும் தன்னை நிராகரித்து கைவிடப்பட்ட நிலையை உணராமல் இருக்கப்போவதில்லை. அந்த சிறார்களின் மனநிலையை கல்வி என்ற கதையில் ஓர் உவமையோடு கையாண்டிருந்த விதம் அருமையாக இருந்தது. பெற்றோர்களின் மரியாதையும் மதிப்பும் பிள்ளைகளின் மதிப்பெண்களில் இருக்கிறது. அவர்களைப் பொருத்தமட்டில் தம்முடைய பிள்ளைகள் மற்ற பிள்ளைகளை விட அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் பிள்ளைகளின் செயலில் அறமில்லை என்றாலும் சரியே என்பது போன்ற ஒரு பார்வையை யுகதர்மம் கதை உணர்த்துகிறது.

கிரிக்கெட், கில்லி, பாண்டி போன்ற விளையாட்டுகளை  அசோகமித்திரனின் கதைகளில் காண முடிகிறது, அந்த விளையாட்டுகளின் விவரிப்புகள் இவரின் கதைகளில் வெளிப்படும் போது அதில் இருக்கக்கூடிய நுட்பமும் அவதானிப்பும் அது அந்த விளையாட்டின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது, அந்த விளையாட்டுகளால் உருவாகும் நண்பர்கள் வட்டம் பல கோணங்களில் இருக்கும், எதிர் அணியிலிருந்தவன் நண்பனாவதும், புதிதாக தன் நிலத்திற்கு வந்தவன் நண்பனாவதும் என நட்பு என்பது எந்தெந்த வகையில் எல்லாம் வந்து சேகரம் ஆகிறது என்றும், அதேபோல காலப்போக்கில் அந்த நட்பில் உருவாகும் முரண்கள், முறிவுகள், இழப்புகள், பிரிவுகள் என்று அது எப்படி நம்முடன் வாழ்நாள் முழுவதும் பின் தொடர்கிறது எனவும் சில கதைகளில் காணமுடிகிறது.

இந்த சிறுவர்கள் சார்ந்த கதைகள் பெரும்பான்மையாக கதைசொல்லல் முறை தன்னிலையில் இருப்பதாலும் நிகழும் நிலம் செகந்தராபாத் என்பதால் இதுவெல்லாம் அசோகமித்திரனின் சுயசரிதமாகத்தான் எனக்குப் பட்டது, அதுவும் அப்பாவின் மரணங்கள் திரும்பத் திரும்ப வருவது அவரின் தந்தை மரணத்தையே எனக்கு நினைவூட்டி இதுவெல்லாம் அவரின் வாழ்வு தான் என்ற ஆழமான தடம் மனதில் நீங்காமல் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது. மீண்டும் சில காலங்கள் கழித்து வாசிக்கும் போது இதை நான் கைவிட்டும் இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாசிப்பும் இருக்கிறது என்று தான் மனம் ஒப்புதல் அளிக்கிறது. இதேபோன்று வேறு சில பார்வைக் கோணங்களில் அவரின் கதையை அணுகி அவதானிக்க வேண்டும் என்ற அவா மனதில் துளிர்கிறது. 

***

முகமது இப்ராஹிம் அலி – சென்னையில் பட்டூர் என்ற கிராமத்தில் வசிப்பவர்‌. ஐடி துறையில் பணிபுரிபவர். தொடர்ந்து நூல் மதிப்புரைகள் எழுதி வருபவர். மின்னஞ்சல்: tech.ibrahim@outlook.com