Home Blog Page 71

தல புராணம்: தொன்மம் துளாவும் நவீனப் படைப்பு

0

ஜோ.டி.குரூஸ்

மீபத்தில் வாசிக்கக் கிடைத்த எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் ‘தல புராணம்’ என்னை வெகுவாகவே சிந்திக்க வைத்து விட்டது. மேலோட்டமான வாசிப்பில் தொன்மம் சார்ந்த மற்றொரு கதையாகத் தெரிந்தாலும், உள்ளார்ந்த வாசிப்பில் இந்தக் கதை நாம் இதுகாறும் நம்பி வரும் தொன்மங்களின் மேல் வைக்கப்பட்ட ஆரோக்கியமான விமரிசனமாகவே படுகிறது. நவீன இலக்கியப் படைப்பாளி எதைச் சொல்கிறான், எதைச் சொல்லாமல் சொல்கிறான், எதைப் பூடகமாக உணர்த்துகிறான், அகம், புறமென அவன் அடுக்கடுக்காய் செல்லும், சொல்லும் விடயங்கள் தொன்மமாக இருந்தாலும், இக்கண நிகழ்வாக இருந்தாலும் வேறொரு கண்கொண்டு பார் என்கிறானே!  

வழக்கம்போல ஆசிரியரை அழைத்து நன்றாக இருக்கிறது என்று சொன்னால் போதுமா, கண்டிப்பாகப் போதாது என்று என் உள்மனம் எனக்குச் சொல்லியது. அமைதியாக இருப்போம் என மனதை இரண்டு நாட்கள் மெனக்கெட்டுக் கட்டிப் போட்டேன். ஆனால், கதையைத் திரும்பத் திரும்ப வாசித்தேன்.  ஒருவேளை இன்று முத்தையன் சாமி, குமராத்தா, லெச்சுமியோடு என் கனவில் வந்தாலும் வரலாம்.

இந்தக் கதையில் நான்கு விதமான கூறுகளை என்னால் உணர முடிந்தது.

அவிழும் முடிச்சுகள்

தென்பகுதியில் அய்யனார் வழிபாடுகள் மிகவும் பிரபலம். நானறிய முத்தையன் போன்ற அய்யனார்களை, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கும் மக்களும், பெயரக் கேட்டாலே பயந்து ஒடுங்கும் மக்களும் இன்றும் இருக்கிறார்கள். இந்த இருசாராரையும் தாண்டி, முத்தையன் வழிபாடு என்ற காலகாலமாய்த் தொடரும் நம்பிக்கை சார்ந்த கருத்தியலை உள்ளார்ந்து, ஊடுருவிப் பார்த்திருக்கிறது இப் படைப்பு. சரி, தவறு என்றில்லாமல் உண்மையை உரக்கச் சொல்லி, தொன்ம வழிபாட்டின் மேல் ஆய்வு செய்த நவீன இலக்கியமாய் உயர்ந்து நிற்கிறது.

பெண் அரசியல் –

வடநாடு, தென்நாடு என்றில்லாமல் இசக்கிகள் வழிப்பாட்டின் மூல ஆதாரமே வாழ்தலின் துயரம். செய்த கொடுமைகள் தம் தலைமுறையைப் பழிவாங்கி விடக்கூடாது என்பதற்கான தொடர் ஆற்றுப்படுத்தல். பெண் அடிமைத்தனம் சங்க இலக்கியமான ‘நற்றிணைக்கு’ முன்பிருந்தே இருந்த சமூகக் கொடுமை. அன்றும் இன்றும் பாதகங்கள் நடந்தேறும் வேளைகளில், கையெடுத்துக் கும்பிட்ட தெய்வங்கள், ஏனோ கண்மூடியே கிடக்கின்றன. முத்தையன்தான் கொடும்பாவி என்றால், அவரது மூத்த குடியாள் குமராத்தாள் துரோகத்தின் உச்சம். இவர்களின் கொடுங்குணம் அறம்சார்ந்து வெள்ளேந்தியாய் வாழும் பலவேசத் தாயாருக்கும், பச்ச மதலையான லெச்சுமிக்கும் தெரியாமல் போனது ஆச்சரியமில்லை தான்.

மொழி –

நாய் பெற்ற தெங்கம் பழம் போலத்தான் இன்றைய மொழிப் பயன்பாடு இருக்கிறது. தமிழ் என்ற பதத்தைக்கூட றமிழ் என்று உச்சரிப்பதில்தான் பெருமிதமடைகிறது, படித்துப் பொருளாதாரத்தில் முன்னேறிய இன்றைய சமூகம். தல புராணத்தில் மொழி அதன் பழம் வழமையில் மிளிர்வது கண்டு பூரித்துப் போனேன். செம்புலம், வலசை, சீர்பாகம், வேடுவம், சாம்பவம், சூலிக்குடம், மூளிப்பருந்து, கொட்டுமுழக்கு என அனைத்து உபதலைப்புகளுமே சமூக வாழ்தலின் அங்கதமான குறியீடுகள். கரைபுரண்டு ஓடுமம்மா கொத்தாளன் ஆளும்பூமி… அற்புதம்.

கதை சொல்லும் உத்தி –

தகப்பனான ஆண்டிநம்பியிலிருந்து, முத்தய்யா வரை, வாழ்வு குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த பாலையாக, அன்பின் பாலையாக நகர்கிறது. முன் பின்னாக கதை சொல்லுவது, ஒருவகை பழக்கமான உத்தியானாலும் சம்பவங்கள் அங்கங்கே நிகழ்த்திக் காட்டப்பட்டிருப்பதுதான் படைப்பின் வெற்றி. முன் முடிவுகள் ஏதுமில்லா ஒரு வாசகனை, அவன் கையைப் பிடித்து இழுத்து வந்து கதை நிகழும் உலகோடு ஊடாட வைப்பது என்பது யாருக்கும் எளிதில் கிடைக்கும் வரமல்ல. கதை ஆரம்பித்த ஒருசில வரிகளிலேயே பழி தீர்த்த சங்கையாவுக்கு இருந்த பதட்டத்தை வாசகனுக்கும் ஏற்படுத்தி விடுகிறார் கார்த்திக் புகழேந்தி எனும் தேர்ந்த கதை சொல்லி. கழுவக் கழுவ கரையாத சங்கையாவின் குறுவாள் ரத்தம், படுபாதங்கள் தொடரும் இந்தச் சமூக வாழ்வின் குறியீடு.   

முத்தையாவின் இப் பாதகச் செயலுக்குச் சூழலே காரணம் என்று நாம் சாதாரணமாக ஒதுங்கிவிட முடியாது. பெண்களைப் போகப் பொருளாய், நுகர்வுப் பொருளாய் பார்த்து, ரசித்துத் தூய்ப்பது அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் அவலம். கொடும் பாதகம் செய்தவனைப் பழிதீர்த்தவன் தலைமுறைகளால் சாமியாய் வழிபடப்படுவது மரபு. தல புராணத்தில் முத்தையன், சங்கையன், பலவேசத்தம்மள், லெச்சுமி என எல்லோருமே சாமிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. காலகாலமாய் நம்மை ஆட்டிப்படைக்கும் இந்த உள்ளடி ஆன்மீக அரசியலை யார் செய்திருப்பார்கள்?

ஆசிரியர், தான் எடுத்துக் கொண்ட கருவின் உண்மையை அதன் போக்கிலேயே நிகழ்த்திக் காட்டி, வாசக ஊகங்களுக்கும் வழிவிட்டு நிற்பது மனதளவில் பெரும் நிம்மதியைத் தந்தது. ஆனால், வெகுகாலமாய் அவர் வருந்திச் சுமந்த கருவின் பாரத்தை அப்பாடா என இறக்கி வைத்து, பின் விட்ட பெருமூச்சை, படைப்பில் உணராமல் இருக்க முடியவில்லை. கடந்த பல ஆண்டுகளாய் அவரது செயல்பாடுகளை அவதானித்ததில், பதிவில் வராத அடித்தள மக்களின் வாழ்வியல் பேசும் எத்தனையோ வாய்வழிப் பாடல்கள் ஆசிரியரிடம் கொட்டிக் கிடக்கும் என்றே எண்ணுகிறேன். அவற்றில் நம் கண்ணகி போல், தன் பழியைத் தானே தீர்த்து நிமிர்ந்த வீரப் பெண்களின் கதைகளும் இருக்குமே, அவர்கள் பற்றியும் இதே சுவையோடும், அக்கறையோடும் ஆசிரியர் வரும் காலங்களில் பதிவு செய்வார் என்றும் நம்புகிறேன்.

வாஞ்சையுடன்

ஜோ டி’ குருஸ்.

கட்டுரை ஆசிரியர், கன்யாகுமரி மாவட்டம் உவரியில் பிறந்தவர். சாகித்திய அகாதமி விருது பெற்றவர். ஆழி சூல் உலகு, கொற்கை உள்ளிட்ட ஏழு நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

தலபுராணம் கதையின் இணைப்பு..

தீவிரவாதிகள்…!

2

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

முடிவில்லாத ஓட்டமாக துரத்தலின் வேகம் இன்னும் அதிகரிக்க, அந்த சிறுவனும் பயத்துடன் இன்னும் வேகம் கூட்டி மூச்சிரைக்க ஓடினான். உயிருக்கு பயந்து ஓடும் சிறிய புள்ளி மானைத் துரத்தும் புலியைப் போல அந்த போலீஸ்காரர் புலியின் பாய்ச்சலில் அசுரத்தனமாய் வேகம் கூட்டி அவரும் மூச்சிரைக்க துரத்திக்கொண்டு வந்தார். அந்த சிறுவன் தன் கையிலிருந்த ரொட்டியை இன்னும் அழுத்திப் பிடித்துக் கொண்டான். உடல் நிலை சரியில்லாமல் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தன் தாயின் பசியைப் போக்க அந்த ரொட்டியை அவன் திருட வேண்டிய சூழ்நிலை. அம்மாவுக்குத் தெரிந்தால் இதை சாப்பிடக்கூட மாட்டார்கள். ஆனாலும் பொய் சொல்லியாவது அம்மாவை சாப்பிட வைக்கணும். சட்டென்று முதுகில் இடிபோல் விழுந்தது அடி. சிறுவன் தெறித்து விழுந்ததில், கையில் இருந்த ரொட்டி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தது.

ஷாட் கட் ஆகி , அடுத்த நொடியில் பெரிய கால்கள் திரையில் ஓடியது. கொஞ்சம் கொஞ்சமாக ஜும் ஆகியது கேமரா. பின்னாடி போலீஸ் ஜீப். மெல்ல கேமரா மேலேறி அவன் முகத்தை குளோசப்பில் காட்ட, கதாநாயகன் ஆடியன்ஸ்சைப் பார்த்து சின்னப் புன்னகையுடன் கை அசைக்க , கரகோஷத்தால் தியேட்டர் அதிர்ந்தது.

“தமிழ்நாட்டு போலீஸூக்கு நா யாருனு காட்டறேன்..”

தன் ஸ்டைலில் பாடி லாங்க்வேஜுடன் ஏற்ற இறக்கத்துடன் அந்த வசனத்தைப் பேச இன்னும் அதிர்ந்தது தியேட்டர். திரையில் கதாநாயகர்கள் ஒண்ணு போலீசை உண்டு இல்லை என்று ஆக்குவார்கள். அல்லது அவர்களே உத்தம போலீஸாக வந்து நீதியை நிலை நாட்டுவார்கள்.

தன் நண்பனுடன் சேர்ந்து காதர் அலியும் கை தட்டினான். பிறகு, “நம்ம போலீஸின் லட்சணம் இப்பிடித்தாண்டா இரிக்கிது..” என்றான்.

“அது ஊருக்கே தெரிஞ்சதுதானே..கொள்ளையடிக்கிறவனையும், கொலை செய்றவனையும், வழிப்பறி செய்றவனையும், ஊரையடிச்சு உலைல போடுறவனையும் புடிக்கக் கையாலாகாது. காலைல அவசரமா டூ வீலர்ல வேலைக்குப் போறவனப்புடிச்சு நிறுத்தி லைசென்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கானு கேட்டு பணம் பறிப்பாணுங்க…..” என்றான் அஷ்ரஃப் எரிச்சலுடன்.

“முக்கியமான ஒண்ண விட்டுட்டியே..”

“என்னது….லாக்கப் கொலைகளா.. ?”

“அதவிட முக்கியமானது ! அப்பாவி முஸ்லிம்களப் புடிச்சு துன்புறுத்தி , தீவிரவாதிகளா முத்திரை குத்துறது…..!”

“ஒசாமா பின்லேடன்களை உருவாக்கிட்டு இருக்கிறதே ஜார்ஜ் புஷ்கள்தானே..! இது அவுங்க முக்கிய அஜண்டா அது இந்தக் கணக்குல சேராது.. அது தனிக் கதை…தமிழக ஸ்காட்லாந்தின் ஸ்பெஷல் சாதனை!” என்று காதர் அலி சிரிக்க , அஷ்ரப் பலமாகச் சிரித்தான்.

சிரித்துவிட்டு ,“தமிழக ஸ்காட்லாந்தின் ஸ்பெஷல்னு சொல்லாத ஒட்டு மொத்த இந்திய போலீசும் இந்த விசயத்துல இப்பிடி சதி செய்றதுல மட்டும் ரொம்ப ஸ்பெசல்தான்..!” என்றான்.


பசி வயிற்றைக் கிள்ளியது. தளர்ச்சியால் நடக்கக் கூட முடியவில்லை. அவன் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது. வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. அனல் காற்று தகித்துக் கொண்டிருக்க, வெக்கையாக உணர்ந்தான். தாகத்தால் தொண்டையும் வறண்டு விட்டது. முகம் கழுவி, கொஞ்சம் தண்ணீர் குடித்தால் கொஞ்சம் களைப்பு தீரும். காசிருந்தால்தான் ஒரு வாய் தண்ணீர் குடிக்கக் கூட குடிக்க முடியும். வீதியில் இருக்கும் குழாயைத் திருப்பினால் தாகம் தணிக்கலாம் என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. ஒரு வாய் தண்ணீர் குடித்து தாகம் தணிக்க இப்போது பதினஞ்சு ரூபாய் வேண்டும். தவிச்ச வாயிக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுக்கக் கூட மனமில்லாது மனிதம் சுருங்கி விட்டது. உலகமயமாக்கலின் அசுர வளர்ச்சி ! அப்படியே அருகில் இருந்த திண்டின் மீது மடிந்து உட்கார்ந்தான் .

இப்போது அவன் இருக்கும் கோலத்தைப் பார்த்தால் போலீசுக்கு சந்தேகம் வரும். பேரைக் கேட்டதும் , மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இழுத்துக் கொண்டு போய்விடும். மீண்டும் சிறைக் கொடுமையை அனுபவிக்க வேண்டும். அவனை சிலர் சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தபடியே சென்றனர். அவன் நினைத்தது சரியாகிவிட்டது. இனியும் இங்கு உட்கார்ந்தால் ஆபத்து. எழுந்து நடக்க முயன்றான். முடியவில்லை. குடித்துவிட்டு போதையில் தள்ளாடுவதாகத்தான் நினைப்பார்கள். முதலில் உடனடியாகத் தண்ணீர் குடித்தாக வேண்டும். அப்போதுதான் இங்கிருந்து நகரவே முடியும். மயங்கி விழுந்து விடுவோமோ என்கிற பயம் ஏற்பட, உடல் நடுங்கியது.

என்ன ஒரு வேதனை. இப்படியொரு அவலமான நிலைமைக்கு வாழ்க்கை தன்னை கொண்டு வந்து விட்டதை நினைக்கும் போது மேலும் வலித்தது. தன்னையும் தன் குடும்பத்தையும் அவமானப்படுத்தி குடும்பத்தையே சிதைத்து தன் வாழ்க்கையை நாசம் ஆக்கி இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்ட போலீசை பழி வாங்க வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் இந்த நிலையிலும் இன்னும் கனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. போலீஸ் மீது ஏற்பட்ட கோபம்தான் அவனை இப்படி மாற்றி விட்டது. இருந்தும் அவனுக்குள் வெறுப்பும் அந்த வன்மமும் இன்னும் தீர்ந்தபாடில்லை. கொஞ்சமும் குறையவில்லை..!


காதர் அலியின் சினிமா மோகத்திற்கு அவன் நண்பர்களும் ஒரு காரணம். பட்டறையில் வேலை இல்லையென்றால், உடனே சினிமா கிளம்பிவிடுவான் தினேஷ். ஒரு போதும் அவன் தனியாக தியேட்டருக்குச் சென்றதே இல்லை. துணைக்கு யாராவது ஒரு நண்பன் வேண்டும். பெரும்பாலும், ராஜாதான் அவனுக்குத் தோதான நண்பன். அவன் இல்லாத போது காதர் அலி மாட்டிக் கொள்வான். இப்படியாக காதர் அலியும் ஒரு சராசரி சினிமா ரசிகனாக மாறிப்போனான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விடுபட ஆரம்பித்தான். ரமலான் நோன்பு காலங்களில் அவன் நண்பர்களைத் தவிர்த்து விடுவான். இதை ஏன் தொடர்ச்சியாகக் கடைபிடிக்கக் கூடாது என்கிற சிந்தனை அவனை ஆட்கொண்டதில் மாற்றம் உண்டானது. அதன் பிறகு ஞாயிறுகளில் மட்டுமே நண்பர்களுடன் சினிமா என்றாக்கிக் கொண்டான்.

பாப்பநாயக்கன் பாளையத்தில் மோட்டார் பம்ப்செட் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் டர்னராக பணிபுரியும் காதர் அலி , அவன் வசிப்பிடமான அல்அமீன் காலனியிலிருந்து தினம் சைக்கிளில் சென்று வருவான். டவுன் ஹாலில் நடைபாதையோரம் சின்னதாய் பெட்டிக்கடை போட்டு ஆண்டாண்டு காலமாக ரெடிமேடு துணி வியாபாரம் செய்து வரும் வாப்பா சாகுல் அமீது தன் கடைக்கு பல முறை அவனை அழைத்தும் அவனுக்கு அந்த வியாபாரம் பிடிக்காததால் மறுத்து விட்டான். இதற்காக வாப்பாவிடம் தினம் திட்டு வாங்கியிருக்கிறான். உம்மாவும் தினம் அவனை நினைத்து சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தது. சரி வாப்பா இப்படிக் கூப்பிடுகிறாரே வியாபாரத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் வாப்பாவுடன் கடைக்கு சென்றான்.

சாயங்காலமானால் போதும் மாமூல் கேட்டு வரும் போலீஸின் தொல்லை அவனுக்குப் பெரிய இம்சையாகத் தோன்றியது. ஏன் இந்த நடைபாதை ஏவாரிகள் இதை ஒரு பொருட்டாகக் கருதாமல் இருக்காங்க ! போலீசார் வருவதைக் கண்டதும் அவசரம் அவசரமாக பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவதும் அல்லது ஓரம்கட்டி வைப்பதும் அவர்களிடம் பல்லிளித்துக் கெஞ்சுவதும் அவர்கள் பொருட்களைக் காலால் எட்டி உதைப்பதும் , கண்டபடி ஏசுவதும்…..ச்சே ! இதென்ன ஒரு பொழப்பு…….வெறுப்பாக உணர்ந்தான். இதற்கும் வியாபாரம் ஆனாலும் ஆகாட்டியும் தினம் மாமூல் பெற்றுக்கொள்கிறார்கள். காசையும் வாங்கிக் கொண்டு, பொருட்களை எட்டி உதைப்பதும் , லட்டியால் தட்டி விட்டு கடையை எடுக்கச் சொல்வதும் என்ன நியாயம்..? வாப்பா இதை எப்படி இத்தனை ஆண்டுகளாக சகித்துக் கொண்டிருக்கிறரோ…… அந்த சிறு வயதிலேயே காதர் அலி இதை ஒரு பெரிய அவமானமாக உணர்ந்தான்.

நடைபாதைக் கடைக்காரர்கள் மீது அனுதாபம் பிறந்தது. பாவம் அவர்கள்.! பிழைக்க வேறு எந்த வழியும் இல்லாததால்தானே வயிற்றுப்பாட்டுக்காக இப்படி தினம் மழையிலயும், வெயில்லயும் கிடந்து நாய் பிழைப்பு பிழைக்கிறார்கள்… சொந்தக் காசைப்போட்டு இப்படி போலீசிடமும் , பெரிய கடைக்காரர்களிடமும் ஏச்சும் , பேச்சும் வாங்கி அவர்கள் ஏவாரம் செய்ய வேண்டிய நிலைமைக்கு வருத்தப்பட்டான். இந்த ஏவாரத்தை வாப்பா நம்மையும் பண்ணச் சொல்கிறாரே… என்று கொஞ்சம் எரிச்சல் கூடியது. பொதுவாகவே எல்லா பொது இடங்களிலும் எல்லை மீறும் போலீஸின் அணுகுமுறையும் அவர்களின் அராஜகம் குறித்தும் அவனுக்குள் ஒரு உறுத்தல் எழுந்தது. போலீசின் மீது ஒரு வித வெறுப்பு இங்கிருந்துதான் அவனுக்குள் வேர் விட்டது.

சில நாட்களாக லேசாகப் புகைந்து கொண்டிருந்தது திடுமென ஒரு நாள் பற்றிக்கொண்டது வழக்கம் போல பெரும் நெருப்பாக ! அங்கே இங்கே என்று எங்கும் வெட்டு, குத்து, கொலை என்று நகரமே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. நிம்மதியற்றுப் போய் மக்கள் தவித்துக் கொண்டிருந்தனர். வெளியே சென்றால் வீடு திரும்பும் வரை வீட்டில் உள்ளவர்கள் என்ன ஆச்சோ.. எதாச்சோ என்று பதை பதைத்தவாறு காத்துக்கொண்டிருக்க, குழந்தையைத் தொலைத்து விட்டு தவிக்கும் தாயைப் போல அமைதியை இழந்து தவித்துக் கொண்டிருந்தது நகரம்.

இருந்தாற்போல இப்படித்தான் திடும் என கிறுக்குப் பிடித்துவிட்டதைப் போலாகிவிடும் நகரம்.! மதக் கிறுக்கு ! இரண்டு பக்கமும் ஒரு பாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுத்தான் ஓய்வார்கள் ! அந்த நாட்களில் மக்களின்பாடு படு திண்டாட்டமாகி விடும். மக்களுக்கு நிம்மதியே இருக்காது. அதற்குத் தகுந்த மாதிரி நாளிதழ்களும் பிரச்சனைகளை ஊதிப்பெருக்கும். அதுவும் ஒரு பக்க சார்பாகவே செய்திகளைத் திரித்து வெளியிடுவதில் இந்த தினசரிகளுக்கு அவ்வளவு சந்தோஷம். பிரச்சனைகளுக்கு வழி ஏற்படுத்துவது மட்டுமல்ல, சின்னப் பிரச்சனைகளைக் கூட பெரிதாக்கி இரண்டு பக்கமும் மோதலை உண்டாக்குவதற்கும் இந்த ஊடகங்களும் ஒரு காரணம்!

கலவரம் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போனதால், நகரம் தன் இயல்பு நிலைக்கு கொஞ்சம் திரும்பியிருந்தது. எத்தனை நாட்களுக்குத்தான் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பது. இரவுக் காட்சி சினிமா போகலாம் என்று தினேஸும், ராஜாவும் காதர் அலியைத் தேடி வந்தார்கள். அந்த வாரம் ஒரு புதுப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. காதர் அலிக்கு விருப்பம் இல்லை. நிலைமை சரியில்லை என்று அவன் உள்மனம் எச்சரித்தது.

” வண்டியிருக்கல்ல…… போயிட்டு வருவோம்டா..” என்றான் அஷ்ரஃப்.

சாப்பிட்டு விட்டுக் கிளம்பும்போது, “எங்க மொவனே இன்னேரத்துல…?” என்றது உம்மா.

” எங்கயுமில்லம்மா வந்துறேன்..”.

பின்னயும் பின்னயும் உம்மா எச்சரித்தது. “இன்னும் பிரச்சன தீர்ந்தபாடில்ல.. இன்னேரத்துல எங்கடா போறே…? நேரம் கெட்ட நேரத்துல கண்ட பக்கம் போகாதேனா கேக்கவே மாட்டயாடா நிய்யி…வாப்பா என்னத்தா திட்டும்.” உம்மாவின் பேச்சை அவன் கேட்கவில்லை.

கே.ஜி தியேட்டர் காம்ப்ளக்ஸ் இரவுக் காட்சிக்கு கூட்டமே இல்லாமல் காத்து வாங்கிக்கொண்டிருந்தது . “என்னடா படம் செம கடி போல…! கூட்டமே இல்ல.. வேற படம் போலாம்டா..” என்றான் காதர் அலி. நண்பர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் பேசியும், பாதி தூங்கியும் படம் பார்த்தான் காதர். எப்போதும் இரவுக் காட்சி சினிமா சென்றால், பாதிப் படம்தான் பார்ப்பான். மீதிப் படம் தூக்கத்தில் போய்விடும். நண்பர்கள் தட்டித் தட்டி எழுப்பி விட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனாலேயே இரவுக்காட்சி செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவான்.

படம் முடிந்து திரும்பும் போது வின்சென்ட் ரோடு சந்திப்பில் வண்டி சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸிடம் மாட்டிக்கொண்டார்கள். தினேசையும், ராஜாவையும் விசாரித்துவிட்டு அனுப்பிய போலீஸ், காதர் அலியையும், அஷ்ரபையும் பெயரைக் கேட்டு, ஓரம்கட்டி நிறுத்தியது..!

நண்பர்களைப் போகச் சொன்னவுடன், “சார் ! நாங்க நாலு பேரும்தா சார் ஒண்ணா சினிமா போயிட்டு வர்றோம்……” அஷ்ரஃப் கெஞ்சும் தொனியில் சொன்னான். எரிச்சலுடன் அவனை நோக்கிய அந்த காவலர், “கொஞ்சம் விசாரிக்கணும்…. அப்பிடி நில்லு..” என்றார் மிரட்டும் குரலில்.

ஏற்கனவே நடந்த கலவரத்தில் கலவரக்காரர்களை கைது பண்ணாமல், சம்பந்தமே இல்லாத முஸ்லிம் இளைஞர்களைப் பெருமளவில் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது போலீஸ். அந்த கோபமும் இப்போது சேர்ந்து கொள்ள எரிமலை போல குமுறிக் கொண்டிருந்தான் காதர் அலி. அவன் முகக் குறிப்பு அஷ்ரப்க்கு இதை உணர்த்தியது. ஏதாவது பேசி காரியத்தைக் கெடுத்து விடுவானோ என்ற பயம் ஏற்பட , அஷ்ரஃப் மெல்ல அவனை நோண்டி குறிப்பால் உணர்த்தி எச்சரிக்கை செய்தான். குளிர் மிக அதிகமாக இருந்தது. நடுக்கத்தைக் குறைக்க கைகளைக் கட்டிக் கொண்டு அஷ்ரஃப் நின்றிருந்தான்.

“ஏண்டா….இவுனுகளுக்கு பயந்து கை கட்டி நிக்கிரியாக்கும்….?” கோபத்துடன் மெல்லக் கேட்டான் காதர்.

“குளுருதுடா….அதான்..” என்றான் அஷ்ரஃப்.

அந்த வழியாக வந்த எல்லா வண்டிகளையும் நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்த காவலர்கள் யாரையும் நிறுத்தி வைக்காமல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் . நாம் முஸ்லிம் என்பதால்தான் நம்மை இப்படி வேண்டும் என்றே நிறுத்தி வைத்து போலீஸ் அவமதிக்கிறது என்பதை உணர்ந்த காதர் அலிக்குள் சுர்ரென்று கோபம் கொப்பளித்தது. அது பின் விளைவுகள் எதைப்பற்றியும் யோசிக்க விடாமல் அவனிடமிருந்து சட்டென்று வெளிப்பட்டது.

“இன்னும் எவ்வளவு நேரம் சார் இப்பிடியே நிக்கிறது..?” போலீசைப் பார்த்து கடுப்புடன் கேட்க வைத்தது.

கோபம் பொங்கத் திரும்பிய அந்த காவலர், “ என்னடா எகத்தாளமா..ம்..?” என்றார்.

“பின்ன எங்கள மட்டும் ஏன் சார் நிறுத்தி வைச்சிருக்கீங்க..?”

“ஓ..! அப்ப நீ அந்த இயக்கத்துக்காரனா…? வாடா…இங்க….? ” மிகுந்த கோபத்துடன் அவனை அழைத்தார் அந்தக் காவலர்.

“டே சும்மருடா…! சார்…சார்…..நாங்க எந்த இயக்கத்துலயும் இல்ல சார். அவன் எப்பவும் இப்பிடித்தா சார்..” என்று கெஞ்சியபடி அஷ்ரஃப் முன் வந்தான்.

“எங்கட வேல செய்றீங்க….?”

“நா ஜவுளி ஏவாரம் செய்றன் சார். அவன் ஒர்க் ஷாப்ல வேல செய்யிறான் சார்.”

“ஏன் அவன் வாயைத் தொறக்கமாட்டானா..? டே இங்க வா..” காதர் அலியை அழைத்தார் அந்த குண்டான காவலர்.

காதர் மெல்ல வந்தான். “உன் லைசென்ஸ் கொண்டா..”

“வண்டி என்னது சார்….நான்தான் ஓட்டிட்டு வந்தேன் சார். என்கிட்ட லைசென்ஸ் இருக்கு சார்..” என்றபடி அஷ்ரஃப் லைசென்ஸை எடுத்து நீட்டினான்.

“டே ! நீதண்டா வண்டி ஓட்டிட்டு வந்தே…..லைசென்ஸ் எங்கடா..?” காதர் அலியைப் பார்த்து வன்மம் பொங்கக் கேட்ட அவர் உதட்டில் இளக்காரத்தனமான மெல்லிய சிரிப்பைக் கவனிக்கத் தவறவில்லை அவன்.

“இல்ல சார்.. எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது சார். இவன்தான் ஓட்டிட்டு வந்தான் சார்….” காதர் அலியின் வாயிலிருந்து பல சார்கள் வந்தது.

பையன் பயந்துட்டான்….ம்……அது…… என்கிற நினைப்பு அந்த காவலருக்குள் ஓடிக் கொண்டிருந்ததை அவரின் முகக் குறிப்பிலிருந்து அஷ்ரஃப் உணர்ந்தான்.

எப்படியோ ஆளை விட்டால் சரி…..என்று நினைத்துக் கொண்டு கெஞ்சல் பார்வையுடன் அந்தப் போலீஸ்காரரைப் பார்த்தான்.

“உங்க ரெண்டு பேத்தையும் சந்தேகக் கேஸ்ல புக் பண்ணலாமாடா..?” நக்கலாக அவனைப் பார்த்துக்கேட்டார்.

அஷ்ரஃப் அழும் நிலைக்கு வந்துவிட்டான்.” சார் ! பிளீஸ் சார்….மன்னிச்சு விட்டுருங்க சார்…. நாங்க எந்தத் தப்பும் பண்ணல சார்..” மிகப் பணிந்து கெஞ்சினான் அஷ்ரஃப். காதர் அலி இன்னும் அப்படியே விட்டேத்தியாக நின்று கொண்டிருந்தது அந்த குண்டு காவலரின் கோபத்தை தணிக்கவிடவில்லை. அஷ்ரஃப் அவனைப் பார்த்து கண்ணைக் காட்டினான். காதர் மெல்ல இந்தப் பக்கம் நகர்ந்து வந்து , “சார்…..சார்…” என்றான். பசி வேறு வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. அந்த எரிச்சல் வேறு.

“ஏற்கனவே கலவரம் கலாட்டானு சிட்டில ஒரே அக்கப்போரா இருக்கு. இன்னும் பிரச்சன தீர்ந்தபாடில்லை. நாங்க கெடந்து அல்லாடிட்டிருக்கோம். இந்த சமயத்துல துலுக்கணுக்களுக்கு செகண்ட் ஷோ சினிமா கேக்குது இல்ல..?” இருவரும் எதுவும் பேசவில்லை. காதர் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். இந்தப் போலீஸ்காரன் வேணும்னே எகத்தாளப்பேச்சு பேசிட்டிருக்கான். சப்பென்று ஒரு அறை அறைந்தால் என்ன.. அல்லது எட்டி ஒரு உதை. சினிமா கதாநாயகன் போல யோசித்தான் காதர் அலி.

இரண்டு மூன்று நாட்களாக காதர் அலி உள்ளுக்குள் குமைந்து கொண்டே இருந்தான்.. எவ்வளவு திமிர் ! நம் மீது எவ்வளவு வெறுப்பு இவுனுகளுக்கு….! அதன் பிறகும் எவ்வளவு நேரம் வேணும்னே நிற்க வச்சாணுங்க..! அதிகாரத் திமிர். இப்படியாக ஒவ்வொரு சம்பவங்களும் அவனுக்கு போலீஸ் மீது வெறுப்பைக் கூட்டிக் கொண்டேயிருந்தது. அன்று வீடு வரும் போது நள்ளிரவு மூணு மணியானது. உம்மா தூங்காமல் முழித்துக் கொண்டே இருந்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டு, வாப்பா எழுந்து வந்து கண்டபடி திட்டிக்கொண்டே அடிக்க வந்தார்.

உம்மாதான் “சும்மருங்கணு…” என்று தடுத்தது. “ஏம் மொவனே இவ்வளவு நேரம்..?” உம்மாவின் முகத்தில் இன்னும் பதட்டம் இருந்தது. அவன் உண்மையை மறைத்து, “ வண்டி பஞ்சராயிருச்சுமா…..தள்ளிட்டே வந்தோம்..” என்றான்.

“காலங்கெட்டுக் கெடக்கு…. அப்படியென்னடா உங்களுக்கு சினிமா வேண்டியிருக்கு..?” நள்ளிரவு என்று கூடப்பார்க்காமல் வாப்பா கத்தினார். அவன் பதிலேதும் சொல்லவில்லை.

“சாப்பிட்டயா மொவனே..?” உம்மா வாஞ்சையுடன் கேட்டது. இல்லை என்று தலையாட்டினான். “ சாப்பிடாமக் கொள்ளாம அப்டி சினிமாக்குப் போணும். ஏண்டா..” மறுக்கவும் வாப்பா ஆரம்பித்தார். ஏதாவது பதில் சொன்னால் வாப்பா கத்திக்கொண்டே இருப்பார் என்பதால் காதர் அலி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்.

“சரி உடுங்கணு….வா மொவனே சாப்புடு….வா..” அவனுக்கு சாப்பாடு போட அடுப்படிக்குள் நுழைந்த உம்மாவின் பின் அவனும் சென்றான்.

நகரில் மதக்கலவரம் நடக்கும்போதெல்லாம் முஸ்லிம் இளைஞர்கள் மட்டும் வேட்டையாடப்பட்டு கைது செய்யும் போக்கு தொடர்ந்து கொண்டேருந்தது. அமைப்புக்களில் இருந்தவர்களின் நிம்மதி பறிபோனது. போலீஸ் அவர்களை சீண்டிக்கொண்டே இருந்தது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வெறுப்பும் கோபமும் சுழன்று கொண்டேயிருந்தது. காதர் அலி குரூப் நண்பர்களில் ஒருவனான பெல்ட் வியாபாரியான அப்துல் காதர் என்கிற “பெல்ட் காதரை “ இப்படித்தான் சந்தேக கேசில் கைது செய்துவிட்டு , எங்கெங்கோ நடந்த குண்டு வெடிப்பு இவன்தான் காரணம் என்றும் அதற்கு மூளையாக செயல்பட்டவன் இந்த “பெல்ட் காதர்’ என்றும் “பெல்ட் பாம் “ தயாரிப்பதில் இவன் நிபுணராக செயல்பட்டு வந்ததால் “பெல்ட் காதர்” என்று அழைக்கப்படுகிறான் என்றெல்லாம் இஷ்டத்திற்கு பொய்த் தகவல்களை ஜோடித்து அப்பாவியான அப்துல் காதரை குற்றவாளியாக்கியது போலீஸ். மக்களும் அப்படியே நம்பினார்கள்.

பெல்ட் வியாபாரம் செய்வதால் நண்பர்கள் அடையாளத்திற்காக வைத்த பெல்ட்காதர் என்கிற அடைமொழிப் பெயரை அப்படியே திரித்து ‘பெல்ட் பாம் தயாரிப்பதில் வல்லவன்’ என்று அவனை குற்றவாளியாக்கி ஒட்டு மொத்த மக்களையும் நம்ப வைத்தது போலீஸ். ‘பெல்ட் பாம்’ இங்கே எங்கு எப்போது வெடித்தது…? சாதாரண குண்டைக் கூட கண்ணில் பார்த்திருக்காத ஒரு அப்பாவி பெல்ட் பாம் தயாரிப்பதில் எப்படி நிபுணர் ஆனார். என்றெல்லாம் எந்த ஒரு புலனாய்வு பத்திரிக்கைக்காரனும் கேள்வி கேட்கவில்லை. புலனாய்வு செய்யவில்லை. போலீஸ் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்து மேலும் பொய்த் தகவல்களைச் சேர்த்து பரபரப்பு செய்தியாக்கி, நெம்பர் ஒன் புலனாய்வுப் பத்திரிகை என்று விற்பனையைக் கூட்டி காசு பார்த்தார்கள். எப்போதும் இவர்களின் குறிக்கோள் இதுதான்.

இவனை எப்படி தேர்ந்தெடுத்து கைது செய்தார்கள் என்பது யாருக்கும் எதுவும் விளங்கவில்லை ! பிறகுதான் செய்தி மெல்ல வெளிப்பட்டது. தண்ணீர் பிரச்சனை தொடர்பாக அந்த இயக்கத்தின் சார்பாக சாலை மறியல் நடந்தபோது முன்னாடி நின்று கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தான் அப்துல் காதர். போலீஸ் வந்து கூட்டத்தைக் கலைத்தது. பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் மறியலை கைவிட மாட்டோம் என்று போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கொஞ்சம் ஆவேசமாக கைநீட்டிப் பேசினான் அப்துல் காதர். போலீஸ் அடிக்கப் பாய்ந்தது. தடியடி நடத்த தயாரானது போலீஸ்.

மறியலில் கலந்து கொள்ளாமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காதர் அலிக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கேறியது. பிரச்சனைக்காக போராடும் மக்கள் மீது வன்முறையை பிரயோகிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லா இடங்களிலும் இப்படித்தான் போலீஸ் அராஜகம் செய்கிறது. மக்கள் போராடினால். பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று அமைதியாக பேச்சு வார்த்தை நடத்துவதே இல்லை. அதை விட்டு உடனே தடியடி நடத்தி கூட்டத்தை கலைப்பதுதான் அதன் முதல் வேலையாக இருக்கிறது. அதிகாரத் திமிர். யாரும் தட்டிக் கேட்பதில்லை. நாலு இடங்களில் மக்கள் திருப்பித் தாக்கினால்தான் இதற்கு விமோசனம் கிடைக்கும். அவனுக்குள் இப்படியாக எண்ணங்கள் ஓடியது . போலீஸ் மீது அவனுக்குள் இருந்த வன்மமெல்லாம் ஒன்று சேர எதையும் யோசிக்காமல் சட்டென்று கூட்டத்திற்குள் புகுந்து “அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க..” என்று போலீசைப் பார்த்து கத்தினான். சட்டென்று அவன் காலரைப் பற்றிப்பிடித்த ஒரு போலீஸ்காரர் அவனை இழுத்துக் கொண்டு சென்றார்.

காதர் அலி திமிறினான். பிடி இறுகியது. போலீஸ் ஜீப்பை நோக்கி அவனை இழுத்துச் செல்வதை உணர்ந்தான். இந்த நேரத்தில் கைது செய்தால் அவ்வளவுதான் விடமாட்டார்கள் எந்தக் கேஸில் வேண்டுமானாலும் சிக்க வைத்து விடுவார்கள் என்கிற பயம் அவனுக்குள் ஒரு துணிச்சலை ஏற்படுத்த,பலம் கூட்டி திரும்பி அந்த போலீஸ்காரரை தள்ளிவிட்டு தப்பித்து ஓடினான் காதர் அலி. எங்கும் நிற்காமல் சந்து பொந்து என்று மாறி மாறி ஓடினான். நல்லவேளை போலீஸ் துரத்தி வரவில்லை என்று அறிந்த பிறகுதான் நிம்மதி அடைந்தான்.

அதன் பிறகு போலீஸிடம் எல்லோரும் சேர்ந்து பெரிய வாக்குவாதம் செய்ய தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தது போலீஸ். சிக்னலில் இருந்த சி.சி.டிவி கேமராவில் எல்லாம் பதிவாகிக் கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை. போலீஸ் கவனித்துக் கொண்டது. அதை வைத்து அடையாளம் கண்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு நள்ளிரவில் வீடு தேடிச் சென்று அப்துல் காதரை சந்தேக கேசில் கைது செய்து கொண்டு போனது போலீஸ். மற்ற நண்பர்களை விட காதர் அலி மிக வருந்தினான். உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது. போலீசுடன் வாக்குவாதம் செய்த ஒரே காரணத்துக்காக அப்பாவியான அப்துல் காதரையே இப்படி பொய்யான வெடிகுண்டு வழக்கில் கைது செய்த போலீஸ், அவர்களுடன் சண்டைக்குப் போனதும் இல்லாமல், அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிப்போன தன்னை சும்மா விடுமா.. என்று மிகப் பயந்து போனான் காதர் அலி. ஒரு வேளை தன்னைப் பிடிப்பதற்கு பதில் அவனைப் பிடித்து விட்டார்களோ. இன்னும் பயம் கூடியது.

அதன் பிறகு என்ன முயன்றும் அப்துல் காதரை வெளியில் கொண்டு வரவே முடியவில்லை. அவனை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. போலீஸ் அவர்களை அழைக்கழித்தது. அவன் பெற்றோர்கள் கதறி அழுதார்கள். யாரும் அவர்களுக்கு உதவி செய்யவும் முன் வரவில்லை. குண்டு வெடிப்பு கேஸ் என்றாலே சமூகம் பயந்து பின் வாங்கியது.

காதர் அலிக்கு போலீஸ் மீது வன்மம் இன்னும் கூடியது என்றாலும், பயமும் விடவில்லை .தன்னையும் போலீஸ் கைது செய்யலாம் என்கிற பயம் அவன் நிம்மதியைப் பறித்தது. வேலைக்குகூடச் செல்லாமல் இரவுகளில் வீட்டுக்கு வராமல் தலைமறைவாக சில நாட்கள் சுற்றிக் கொண்டிருந்தான்.

யாராவது வந்து விசாரித்தாலோ, இரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டாலோ, எழுந்து பயந்து பின்புறம் இருளில் பதுங்கிக்கொள்வான். இதனால் தங்கச்சியின் வாழ்க்கைக்கும் கூட இடைஞ்சல் வரலாம் என்று பயந்தான். இதிலிருந்து எப்படி மீள்வது.. எதுவும் புரிபடவில்லை வாப்பாவும், உம்மாவும் மிக பயந்து போனார்கள். “என்ன மொவனே இப்பிடிப் பண்ணிட்டே…” உம்மா கதறியது.

“இந்த மாதிரிப் பிரச்சனைக்கெல்லாம் போகாதேணு….பின்னயும் பின்னயும் நா உங்கிட்ட பல தடவ சொல்லியிரிக்கேன்….இப்பப் பாரு யாரு கெடந்து அவதிப் படுறது…?” வாப்பா கோபப்பட்டார்.

“நா என்ன வாப்பா தப்பு செஞ்சேன்….? போலீஸ் அவன அடிக்க கை ஓங்குனப்ப போய்த் தடுத்தேன்.. இதுக்குப்போயி என்னப் புடிச்சு தர தரனு இழுத்துட்டுப் போனான் ஒரு போலீஸ்காரன். பயந்து போயி தப்பிச்சு ஓடினேன். ” சொல்லிவிட்டு காதர் அலி குனிந்து கொண்டு அழுதான். உம்மாவும் சேர்ந்து அழுதது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி மறைந்து திரிவது..?

கொஞ்ச நாட்களுக்குப் பின் இனி பிரச்சனை எதுவும் இல்லை என்று இரவுகளில் பயமின்றி மனம் விட்டு கொஞ்சம் தூங்க ஆரம்பித்த நிலையில் , ஒரு நாள் திடுமென நள்ளிரவில் வீடு புகுந்து அவனை கைது செய்தது போலீஸ். “தேடிக்கொண்டிருந்த குற்றவாளி கைது ..” என்று மறுநாள் நாளிதழ்களில் செய்தி வந்தது. சிறையில் கொடுஞ் சித்ரவதை செய்தது போலீஸ். பிணை கிடைக்கவில்லை. மனம் வெதும்பி வாப்பா நோயுற்றார். சிறைக் கொடுமையை விட, தன் குடும்பம் சீரழிந்து போகும் நிலைக்கு வந்து விட்டதை அவனால் தாங்க முடியவில்லை. அழுவதற்கு கண்ணீர் கூட வற்றிவிட்டது ! என்ன செய்வது.. யோசித்தான். விடுதலை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. சிறையில் வாடும் முஸ்லிம்களின் நிலை அவ்வளவு கேவலமாக இருக்கு ! என்னைப் போல எத்தனை அப்பாவி முஸ்லிம்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறது போலீஸ். வாழ்நாள் முழுக்க சிறையில் வைத்தே கொன்று விடுவார்கள். தப்பிப்பதைத் தவிர வேறு வழி எதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. ஒரு போலீசையாவது வஞ்சம் தீர்க்க வேண்டும். அப்போதுதான் கொஞ்சமாவது மனம் ஆசுவாசம் அடையும். ரவுடி போலீசை அடித்து துவம்சம் செய்யும் சினிமா கதாநாயகர்கள் மனதுக்குள் வந்தார்கள். இதற்காகவே தப்பிக்க வேண்டும். தருணம் பார்த்துக் காத்திருந்தான் காதர் அலி.

வாப்பாவின் மௌத்து அந்த சூழலை உருவாக்கியது. வாப்பா இப்படி குடும்பத்தைத் தவிக்கவிட்டுச் செல்வார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. தான் சிறையிலிருக்க வாப்பாவும் இல்லாத தன் குடும்பம் எப்படி மீளும். உம்மாவும், தங்கச்சியும் நிர்கதியாகி விட்டார்களே. எங்கள் குடும்பத்தையே நிர்மூலமாக்கி விட்டதே இந்த போலீஸ். நினைக்க நினைக்க அவனால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. போலீஸ் புடை சூழ வீடு வந்தது. உம்மாவைக் கட்டிப் பிடித்து கதறி அழுதான். அழுது அழுது கண்கள் மட்டுமல்ல முகமும் வீங்கிப் போயிருந்தது. சுற்றிலும் நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்க்கப் பார்க்க இன்னும் ஆத்திரம் அதிகமானது. அவன் மீது அனுதாபம் குறைந்து குடும்பத்தினர் அவனை மிக வெறுப்பாகப் பார்ப்பதை உணர்ந்தான். மௌத்தை அடக்கம் செய்து விட்டு வந்ததும் அவனை அழைத்துச் செல்ல போலீஸ் தயாரானது. எங்கிருந்து அவ்வளவு பலம் வந்தது என்றே தெரியவில்லை. ஒரு போலீஸ்காரர் கையிலிருந்த அந்தப் பெரிய துப்பாக்கியைப் பிடுங்கி இருக்கும் பலத்தையெல்லாம் திரட்டி மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டான் காதர் அலி. அந்த போலீஸ்காரர் ரத்தம் சொட்டச் சொட்ட திருகி விழுந்ததைக் கூட பார்க்காமல் ஓடினவன்தான். அதன் பிறகு போலீஸ் கண்ணில் படாமல் எங்கெங்கோ மறைந்து திரிந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தான்.

போலீஸ் அவன் வீட்டைக் கண்காணித்துக் கொண்டே இருந்தது. இதனால் நிரந்தரமாக ஒரே இடத்தில் வேலை கொண்டிருந்தான். வெளியிடங்களில் கிடைத்த வேலைகள் செய்து கொண்டு, உம்மாக்கு போன் செய்ய முடியவில்லை. இடம் மாறிக்கொண்டே இருக்க வேண்டியதானது. சிறையில் போலீஸ் அடித்த அடியின் பாதிப்பால் அடைக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய் கவனிக்காமல் விட்டதில் இப்போது பெரிய பாதிப்பாகி விட்டது. மருத்துவம் பார்க்கவும் வழி இல்லை. நடை பிணமாக அலைந்து கொண்டிருக்கிறான். போலீசிடமிருந்து தப்பித்து ஓடியது தவறோ…என்றும் கொஞ்சம் வருந்தினான்.


ரொம்பநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தான் காதர் அலி. தளர்ச்சியில் அப்படியே மயங்கிப் படுத்துவிட்டான். “ஏய்.. எந்திரிடா…. யார்ரா நீ..?” யாரோ அவனை உலுக்கினார்கள். மெல்ல கண்களைத் திறந்தான். மங்கலாக காக்கி உருவம் தெரிந்தது. ”கேக்குறனல்ல….தெனாவெட்டாப் படுத்திட்டே இருக்கே..” அந்த போலீஸ்காரர் அவனை எட்டி உதைக்க உருண்டு விழுந்தான். உயிர் போகும் வலி. தடுமாறி மெல்ல எழுந்தான். “என்ன குடிச்சிருக்கியா..?’’.

அவன் பதில் சொல்லாமல் நின்றான். ”திருடனா….நீ..இல்ல பைத்தியமா.. ?” உம் பேரென்னடா.. ?”

காதர் அலி அந்த போலீஸ்காரரை முறைத்துப் பார்த்து விட்டு, ஓங்காரமாக கத்தியபடி “எம் பேரு காதரலிடா . நா திருடனல்ல.. பைத்தியம்டா… அதும் சாதாரணப் பைத்தியம் இல்ல.. உங்களால. தீவிரவாதியாக்கப்பட்ட பைத்தியம்டா..” என்று கத்திக்கொண்டே அந்தப் போலீசை தாக்க முற்பட்டான். அவர் சுதாரித்துக் கொண்டு ஓங்கி ஒரு உதை விட்டார். அப்படியே மல்லாந்து விழுந்தான் காதர் அலி.

கூட்டம் சேர்ந்து திகைத்து நின்றது – எதுவும் புரியாமல்.

மறுநாள் நாளிதழ்களில் பரபரப்பாக தலைப்புச் செய்தி இப்படி..! “போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து ஓடிய தீவிரவாதி பிடிபட்டான்.! நாட்டை சீர்குலைக்க அவன் தீட்டிய சதித்திட்டம் அம்பலம்.!”

. . ***

அரணையப்ப கோ(லப்ப)ஸ்வாமி

0

பிரபு தர்மராஜ்

தனால ஊரு சனங்களுக்கு அம்பலப் படுத்துகது என்னன்னா, நம்மூருல உள்ள எல்லா பெயலுவளும் அவங்கவங்களுக்க வூட்டு மேக்கூரையள ஊருக்கு அர்ப்பணிக்கணும் ! நம்ம தலைவரு பக்கத்தூருகார தெய்வங்களுக்கு எல்லாரு வூட்டுக் கூட்டுக் கூரையள தார வாக்குறம்னு வாக்குக் குடுத்துட்டாரு சாமியோ ! டம் டம் டம்!”

இந்த முரசுச் சத்தத்தைக் கேட்ட ஊரிலுள்ள ஆறறிவு படைத்த மனிதர்கள் கோபமடைந்தனர்.

“இவே எவம்புல கோம்பத் தா…ளி நம்மூட்டுக் கூரைய வெளியுருகாரனுக்குக் குடுக்கதுக்கு ? இதுவரைக்கும் வித்து நக்குனதெல்லாம் போறாதா ? கொப்பன…ளி !”

ஊரிலுள்ள இரண்டறிவு படைத்த கசவாளிகள் அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

“ யேயப்பா ! நம்மூட்டுக் கூரைய வெளியுருக்கு … அதுலயும் தெய்வங்களுக்குக் குடுக்கதுன்னா சாமானியமான காரியமா ? நாம கூரைய குடுத்தம்னாக்கா சாமி கூறையப் பிச்சிக்கிட்டு கூடுதலா குடுக்குமுலேய் ! எண்டே பகவதி மாதாவே !”

முரசறைந்தது வேறு யாருமல்ல ! நம் கோலப்பன்தான். கோலப்பனின் சிறுவயதில் காலில் ஒரு அரணைப் பல்லி நக்கியதால் கோலப்பன் செத்துவிடுவானோ என்று பயந்து அவனது தாய் புய்ப்பம் சாமிக்கு சாராயமும், சுருட்டும் வைப்பதாக வேண்டிக் கொண்டாள். ‘அரணை தன்னுடைய நாக்கினால் யாரையாவது நக்கினால் நக்குண்டவர்கள் நட்டுக் கொள்வார்கள்’ என்றொரு அரிதான கற்பனை ஊருக்குள் திரிந்தது.

‘அரணை ஒரு மனிதனை… அதுவும் கோலப்பன் மாதிரி விஷப் பயல்களை நக்கினால் அரணைக்குதான் மரணம் நேரும்!’ என்ற சின்ன அறிவு கூட இல்லாத ஊர் அது. அந்த அரணை கோலப்பனை நக்கிவிட்டு அவனது வீட்டின் பின்பக்கத்தில் வைத்து பரிதாபமாக மரித்த காரியம் யாருக்கும் தெரியாது. “நாம் இன்னாரை நக்கியதாலேயே தான் மரித்தோம்!” என்ற காரியம் அந்த அரணைக்கும் தெரியாது என்பதுதான் பரிதாபமான காரியம். சாமியின் அருளாலேயே கோலப்பன் அரணையின் கொடும் விஷத்திலிருந்து தப்பினதால் கோலப்பனுக்கு ‘அரணையப்ப கோலப்ப சாமி’ என்ற அரிதான பெயரை வைத்தாள் அறிவாளி புய்ப்பம்.

ஊருக்குள் சதாகலமும் கோள்மூட்டி சண்டை இழுத்து விட்டு ஒவ்வொரு குடும்பத்தைப் பிரித்தும், கொலைக்களங்களுக்கு ஆளாகியதாலும் கோலப்பன் ஒரு மனித உருவிலான அரணையாகவே பாவிக்கப் பட்டான். தரையில் ஊர்ந்து போகாததது ஒன்றுதான் குறை.

அப்படித்தான் ஒருமுறை வடக்குத் தெரு அழகுசுந்தரி தனது வீட்டு அடுப்பாங்கரைக்குள் வைத்து தனது பகல் காதலன் பசுங்கண்ணனோடு சேர்ந்து ரகசிய கஞ்சியும், கூட்டும், கறியும் சமைத்துக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டுக்குள்ளிருந்து கேட்ட கரண்டியால் சட்டியைச் சுரண்டும் சப்தமும், கசிந்த புகையும் உள்ளே நடந்த ச’மையலை’ ஊருக்குள் அறிவிக்கவே, அதைக்கண்ட கோலப்பன் ஓடிப்போய் சுந்தரி வீட்டுக் கதவை வெளிப்புறமாய்த் தாளிட்டுவிட்டு வந்துவிட்டான்.

அதோடு நில்லாமல் சுந்தரியின் கணவன் கதிரேசனை விளித்துக் கொண்டு வந்து “உன் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது” என்று சொல்லி கருக்கரிவாளைக் கையில் கொடுத்து வீட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் கதவை வெளிப்புறமாகத் தாளிட்டுவிட்டான். உள்ளே கிடந்த பசுங்கண்ணப் பாம்பினைக் கண்ட கதிரேசன் கடும்கோபத்தில் பாம்போடு மோத கதிரேசனின் கையிலிருந்த கருக்கரிவாளைப் பிடிங்கிய பசுங்கண்ணன் கதிரேசனை வெட்டிப் போட்டான். அப்படியாக அந்த நாளானது கருக்கரிவாளால் கழுத்தில் வீசல் வாங்கிய கதிரேசனின் கடைசி நாளாக அமைந்து போனதில் சுந்தரி வெள்ளாடை அணிந்தாள். சொந்தப் பாம்பு மண்ணுக்குள்ளும், அவ்வப்போது வந்த பாம்பு ஜெயிலுக்குள்ளும் போனதால் சுந்தரியின் அடுக்களை வெறிச்சோடிப் போனது.

இப்படியாக ஊர்க்கொடியில் தனது கோவணத்தைக் காயப் போடுவதை கோலப்பன் வழக்கமாக வைத்திருந்தான். இந்த ஒரு தகுதியே அந்தப் பணிக்குப் போதுமான தகுதியாக இருந்ததால் முரசறையும் அதாவது கொட்டடிக்கும் பணியில் கோலப்பனை அமர்த்தினான் ஊர்த்தலைவர் ‘கோணிச்சாக்கு மோணியாண்டி’.

மோணியின் இயற்பெயர் ஆண்ட்டியப்பன். பிறக்கும்போதே அந்த முகமானது ஊரிலுள்ள ஆண்ட்டிகளை நோக்கி மாணியைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்து வளைக்கும் கோழியாக இருப்பானோ என்று தோன்றியதால் ஜாடைக்குத் தகுந்தாற்போல ‘ஆண்ட்டி’யப்பன் என்ற பெயரை மோணியின் தாய்தகப்பன் வைத்துவிட்டார்கள். ஆனால் ஆண்ட்டிகளை வளைக்கும் அளவிற்கு ஆண்டியப்பனுக்கு கிளி வேலை செய்யவில்லை.

மோணி ஊருக்குள் சுக்குக் காப்பி கடை வைத்திருந்தான். சுக்காப்பி கடைநேரம் போக மீதமுள்ள ராத்திரி வேளைகளில் கைகளில் ஒரு கோணிச் சாக்கை எடுத்துக் கொண்டு, ஊரிலுள்ள வீடுகளின் மோடுகளைப் (கூரை) பிரித்து இறங்கி மோஷண காரியங்களில் (களவு எடுத்தல்) ஈடுபட்டதால் ஆண்ட்டியப்பன் ‘கோணிச்சாக்கு மோணியப்பனாக’ உருவெடுத்தான். உள்ளூர்த் திருடன்களோடு வெளியூர்த் திருடன்களும் சேர்ந்து கொண்டதால் ஊர்மக்கள் கொடியில் காயப் போட்ட தங்களுடைய கோவணங்களையும் பறிகொடுத்தனர்.

ஆகையால் ஊர்கூடி ‘திருடனின் கையிலேயே சாவியைக் கொடுக்க’ முடிவெடுத்தது. அவ்வூரிலுள்ள மனிதர்களின் நாவுகளின் சுவையை நன்றாக அறிந்து வைத்திருந்த ஒரே நபர் மோணிதான் என்பதால் அந்தப் பதவியும் அவருக்கு எளிதாக வாய்த்தது. மோணியப்பன் ஊர்த்தலையாரியானான். இரண்டறிவு மாக்கள் கோணிச்சாக்கு மோணியப்பனை ‘கோமோ’ என்று சுருக்கமாகவும், ஆறறிவு உள்ள மக்கள் அவனை ‘மோடுமுட்டி ஆண்டியப்பன்’ என்றும் அழைத்தார்கள்.

அரணை கோலப்பன் தன்னுடைய சின்ன வயதில் வாயிலேயே மோளம் அடித்து வந்ததாலும், திருவிழாக் கச்சேரிகளில் பல்படாமல் ஊத்து வாசித்ததாலும் மோணி அவனை அரவணைத்து அவனுக்கு சில பணிகள் கொடுத்தான். முரசு அடித்து ஊருக்குள் கிலி வரத்துவது, பொய்களைச் சொல்லி கிளிகளைப் பறக்கவிடுவது, மற்றும் ஊரின் எல்லைகள் குறித்து ஒற்று சொல்லுவது என அவனது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து போனது. கோலப்பனும் அதைச் சிறப்பாகச் செய்து வந்தான்.

மோணி பிறவீடுகளின் மதிலேறிக் குதிக்கும் நாட்களின் அந்திக் கருக்கலில் ஊர்ச்சந்தியில் முரசடித்து சமீபத்தில் செத்துப் போனவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களது ஆத்துமா ஊர்த்தெருக்களில் அலைவதாக பீதியைக் கிளப்பி ஆட்கள் யாரையும் இரவு வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளுவது போன்ற பணிகளைக் கையாள்வதில் கோலப்பனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

கோமோவால் ஊருக்குள் மோஷ்டிக்கப் பட்ட வஸ்துக்களை வெளியூரில் விற்பனை செய்யக் கொண்டு போகும் இரவுகளில் கோலப்பன் ஈரச்சாக்கைத் தலையில் மூடி பேய் வேஷம் போட்டு, வாய்க்குள் டார்ச் லைட்டை பொருத்திக் கொள்ளிவாய்ப் பிசாசு வேஷம் போடுவது வழக்கம். இப்படியாகக் கொஞ்சம் நாட்கள் கடந்தது. கொள்ளிவாய்ப் பிசாசு யாரென்பதை ஓரளவு மக்கள் கணித்து ஈரச்சாக்கைக் காயவைக்கவிருந்த நேரத்தில் கோலப்பன் சுதாரித்து கொண்டான். ஆனாலும் பிழைப்பு ஓடவேண்டுமே ? ஆகையால் ஒரு திட்டம் தீட்டினார்கள்.

“ஊர்த்தலைவர் எப்படி கடையைத் திறந்து சுக்குப்பால் ஆத்துவது? அது அவமானமல்லவா ? அப்படியென்றால் வேறு ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்று கோலப்பன் அறிவுரை சொன்னதால் மோணி ஒரு வர்த்தகராக உருவெடுத்தார். ஊர்மக்களின் விளைபொருட்கள் மற்றும் தயாரிப்புகள் போன்றவை கோமோவின் வாயிலாக விற்கப்படும் என்று அறிவித்தான் கோலப்பன்.

முதலாம் வியாபாரமாக ஊர்த்தோட்டத்திலுள்ள விளைபொருட்கள் அனைத்தும் வெளியுருக்குக் கொண்டு போய் விற்கப்பட்டு ரப்பர் தைகள் (கன்றுகள்) வாங்கப் பட்டன. அதற்கு கோலப்பன் தரப்பில் இவ்வாறு முரசறையப் பட்டது,

“அதாகப் பட்டது முக்கியஸ்தர்களே ! நீங்கள் முக்கி முக்கி வித்தாலும் கோமோ அளவுக்கு உங்கள் யாராலும் கூறுள்ள யாவாரியாய் ஆகிவிட முடியாது ! இதோ இங்க கெடக்க ரப்பரு கண்ணு\வள பூரா நம்ம தோட்டத்துல நட்டு வச்சா அது ஏழே வருசத்துல பால் சொரந்து நம்ம ஊருக்க லெச்சனத்தையே மாத்திரும் !”

ஒரு மனிதர் கேட்டார், “ரப்பர திங்க முடியுமா ? ரெப்பரு மரம் மொளச்சா ஜீவ சுவாசத்தப் பூராத்தையும் மரமே நக்கிட்டு கெட்ட காத்த வெளியிடுமாமே ? நிலத்தடி தண்ணியையும் குடிக்கும்னு சொன்னாவளே ? உண்மையா ?”

அதற்குக் கோபித்துக்கொண்ட கோலப்பன் இவ்வாறு பதிலளித்தான், “ இத்தன வருசம் வாழ்ந்து என்னத்த பொளந்தீரு ஓய் நீரு? ஜீவ சுவாசம் வேணுமாமே? பூமிக்குள்ள தண்ணி இருந்தா ஊருசனங்களுக்குத்தா கேடு ! ஒரு பெருவெள்ளம் வந்துன்னு வையும் ! அதப் பூராத்தையும் நெலமே உறிஞ்சிரும்லா ? வெள்ளம் வடிய வரைக்கும் எதுக்குக் காத்துக் கெடக்கணும்? ”

இந்த பதிலைக் கேட்ட மக்கள் கொதித்தனர்,

“இந்த மண்டையன் மோணிக்கெல்லாம் ஒரு சாக்காலம் வார மாட்டங்கே? செத்தும் தொலயானுவ இல்லியே ?”

மாக்கள் கொட்டடித்துக் கொண்டாடினார்.

“தலைவன் கோமோ வாழியவே !”

பின்பொருநாள் ஊருக்குள் இருந்த தேக்கந்தடிகளை வெட்டிக் கொண்டு போய் வெளியூரில் விற்றுவிட்டு முருங்கைத் தடிகளைக் கொள்முதல் செய்து கொண்டு வந்தான் மோணி. அதற்கு கோலப்பன் இவ்வாறு முரசடித்தான்,

“அதாகப் பட்டது முக்கியஸ்தர்களே ! இதோ கிடக்கும் மரத்தடிகள் அனைத்தும் உறுதியானவை ! இவைமட்டும் காய்ந்துவிட்டால் உங்கள் வீட்டின் அடுப்பங்கரையில் விறகாய்ப் பயன்படுத்தலாம் ! உங்கள் வீடுகளின் அடுப்பெரியக் காரணமான தலைவன் மோணியைப் போற்றுங்கள் !”

யாரும் எந்தக் கேள்விகளும் கேட்கவில்லை. மக்கள் மோணியின் உருவத்தை வைக்கோலில் செய்து கொளுத்தினார்கள், மாக்கள் எல்லாரும் ஒன்று கூடி தங்களுடைய தலைவன் கோமோவின் பெயரைச் சொல்லி தீபமேற்றி வழிபட்டார்கள்.

தோப்பு துறவுகளை விற்றான் மோணி! மக்கள் ரப்பர் கொட்டைகளைத் தின்றார்கள். மாக்கள் சாணியை வாரித் தின்றார்கள்.

குளம் குட்டைகளை விற்றான் கோமோ ! மக்கள் கடலுக்குக் குளிக்கப் போனார்கள். மாக்கள் குளிப்பதை நிறுத்திவிட்டார்கள்.

மக்களின் கோவணங்களை விற்றான் கோமோ! மக்களில் இருந்த ஆண்பெண்களும் குழந்தைகளும், கிழடுகட்டைகளும் இலைகளை உடுத்தி ஆதிவாசியானார்கள். மாக்கள் பட்டியலில் இருந்த ஆண்கள் ஜானி சின்சாகவும், பெண்கள் மியா கலீஃபாவாகவும் மாறினார்கள்.

தெருவை விற்றான் கோமோ! மக்கள் புழக்கடையின் வழியாக நடமாடினார்கள். மாக்கள் தங்களுடைய பயணப்பாதை உயர்ந்து விட்டதாகக் கருதி வீட்டுக் கூரையின் வழியாக நடமாடினார்கள்.

ஊரை விற்றான் கோமோ ! மக்கள் ஆகாயமார்க்கமாக நடமாடினார்கள். மாக்கள் வீடுகளுக்குள்ளேயே கிடந்தார்கள்.

இப்போது வீட்டுக் கூரைகளை வீற்றிருக்கிறான் கோமோ ! மக்கள் யாவரும் தங்களது கூரைகளைத் தரப்போவதில்லை.

ஆனால் மாக்கள் தங்களுடைய கூரைகளை ஊருக்குத் தானம் கொடுத்துவிட்டு வெயில் உண்ணப் போகிறார்கள். வீடுகளுக்குள்ளேயே மழையில் நனைந்து மழைப்பாடல்களைப் பாடி ஆடலாம் ! மொட்டை மாடிகளின் மீது ஏறாமலேயே நிலாச் சோறு உண்ணலாம்! என்று மாக்கள் மகிழ்ந்து போயிருந்தார்கள்.

கோமோவின் இந்த அதிரடியான வளர்ச்சித் திட்டங்கள் மீது மிகப்பெரிய ஆர்வத்தைக் கொண்ட முனியம்மாளுக்கு கோமோவின் மீது சொல்லவொண்ணாக் காதல் மலர்ந்தது. ஊர்த்திருவிழாவில் தன்னுடைய காதலை மோணியிடம் சொல்லி மறுநாள் இரவு தன்னுடைய வீட்டிற்கு ரகசியமாக வரச் சொன்னாள். இதுவரையிலும் எந்தக் கூண்டையும் கண்டிராத மோணியின் மொண்ணைக் கிளி மறுநாள் இரவைக் குறித்து இலவுகாக்கத் துவங்கியது.

கோலப்பனும் , மோணியும் சேர்ந்து மறுநாள் இரவில் ஊருக்குள் பேய்நடமாட்டம் நடைபெறவிருப்பதாக முரசறைந்து அறிவித்தார்கள். அரணையப்ப கோலப்பசாமி பேய் வேடம் தரித்தான். மோணியும் கோலப்பனும் ஊரயர்ந்த நேரத்தில் வெட்டுக்கிளி மாதிரி துள்ளித் துள்ளி முனியம்மாளின் வீட்டின் பின்பக்கச் சுவற்றின் பின்பக்கத்தில் போய் நின்று கொண்டார்கள்.

கோலப்பன் மாணியிடம், “எண்ணே ! மொதத்தடவ.. கொஞ்சம் பாத்து பத்தரமா நடந்துக்கா ! புள்ள பாவமாக்கும் சொல்லிப்புட்டேன் ஆமா !”

மோணியின் கருத்த கன்னங்கள் அந்த இருட்டிலும் பச்சை நிறத்தில் சிவந்து போனது,

“சும்ம இரிடே கோலப்பா ! எனக்கு படபடன்னி வருகு !”

“நீ இப்புடி நெளியத பாத்தா எனக்குப் படபடன்னு வருகு ! களவெடுக்கப் போவும்போதே அசால்ட்டாப் போவ ! இந்த எளவெடுக்கப் போறதுக்கு என்ன பயமோ ?”

“அதென்ன பித்தளச் சொம்பா? ஓடிப்போயி பைக்குள்ளாற போட்டுகிட்டு வெடுக்குன்னி ஓடியாறதுக்கு ? பண்டம்டே ! பாத்துப் பதனமாப் போவாண்டாமா ?

“ஆமா செம்புன்னா லெகுவாத் தொடச்சி எடுத்துரலாம்! பித்தள அண்டாவக் கொஞ்சம் பாத்துதான் தொடைக்கணும்! நா இங்ஙனக்குள்ளத்தானே நிக்கியேன்! நீ தைரியமாப் போண்ணே !”

கோலப்பன் கொடுத்த தைரியத்தில் மோணி மதிலேறிக் குதித்தான்.

சற்று நேரத்திலேயே பேய்வேடத்தில் ஊளையிட்டுக் கொண்டே தெருவில் நடமாடிய கோலப்பனை பின்பக்கத்தில் இருந்து மோணியப்பன் அழைத்தான். முனியம்மாளின் வீட்டுக்குள் நுழைந்து முழுதாய்ப் பத்துநிமிடம் கூட ஆகியிருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த கோலப்பன் மோணியிடம் கேட்டான்,

“என்னண்ணே! அதுக்குள்ளயா முடிச்சிட்ட ?”

“ஆமடே ! எல்லாமே கொஞ்ச நேரத்துல முடிஞ்சி போச்சி பாத்துக்கா ?” என்று மோணி சொல்ல அதற்குக் கோலப்பன்,

“ரொம்ப நாளு காஞ்சி கெடந்த பாதாளக் கரண்டில்லா ! கெணத்தக் கண்டதும் பாஞ்சிட்டு இல்லியாண்ணே? கிகிக்கிகீ ?”

கோலப்பனின் சிரிப்பாணியைக் கண்ட மோணி முகம் வெளிறிப் போய், “முனியம்மைக்கி அத்தாம்பெரிய கெணறு இருக்குன்னு எனக்குத் தெரியாது கோலப்பா ?”

“அத்தாந்தண்டி கெணறாண்ணே ? பாத்தா அப்புடித் தெரியலையே ?”

“ஆமடே ! செவம் இருட்டுக்குள்ள இருந்தத நாந்தாங் காணல்ல !”

“பகலல்ல பாத்தா முனியம்மைக்க பல்லே தெரியாது ! இதுல ராத்திரில போயி அவளுக்க கூந்தல தேடியிருக்க ? வெளக்க போட்டுட்டு பாக்க வேண்டியதான ?”

“பொழக்கடையில யாதுடே வெளக்கு ?”

“ஒன்னய யாருணே பொழக்கடையில பொளங்கச் சொன்னது ? வூட்டுக்குள்ளாற போய்த் தொலைய வேண்டியதான ?”

“வூட்டுக்குள்ள போக வுட்டாத்தானே ?”

“முனியம்மைக்கி அவ்ளோ காச்சலா ? எம்மா பாக்கத்தான் ஆளு ஒடமரங் கணக்கா இருக்கா ? கொப்ப ஒடச்சிப் புடுவா போலுக்கே ?”

“தண்ணியுங் கொறச்சலா இருந்துல்லா ? அதா பொறமண்டையில அடிச்சி ரத்தம் பாஞ்சிட்டு பாத்துக்கா ?”

“ ரத்தம் வர்ற அளவுக்கா பாஞ்ச நீ ? என்னண்ணே ? பாவம்லா அந்தப் புள்ளை ?”

“அவள முழுசா பாக்கமலயே போறனே சாமீ ?” என்று மோணி அழுதான்.

“இதுக்கெல்லாமா சடையிவாவ? நாந்தா இங்க நிக்கம்லா ? இன்னொருமட்டம் போய்ட்டு வாண்ணே ! நின்னு நிதானமா நீந்திட்டு வா ! ஒருபெய வெளில லாந்த மாட்டான் ! நாம் பாத்துக்கிடுகென் !”

கோமோ கோலப்பனை அழைத்தான், “நீயும் எங்கூட வாடே?”

“நானா ? எதுக்கு ? நமக்கு அந்தப் பழக்கம்லா கெடையாதுணே!”

“ஒடம்பையாவது பாத்துட்டுப் போலேய்!”

“சேச்சே ! அது நமக்கு சொகப்படாது ?”

“தொவளத்து மேலயாச்சிம் நின்னுப் பாருடே !”

“ஆளு நின்னு பாக்கக் கூடிய அளவுக்கா பெரிய தொவளம்…. தொட்டி முடிவாளுக்கு ?”

“கூட வாறியா இல்லியாடே ?” மோணி கோபமடைந்தான்.

“அதெல்லாஞ்சரிதான் ! போவும்போது வேற நெரத்துல உடுப்பு உடுத்திக்கிட்டுப் போயிருந்த ? இப்ப வெள்ளையுஞ் சொள்ளையுமா வந்து நிக்கியே ? திருட்டுச் சூடடிக்கிப் போன வூட்டுலயுமா சுருளும், கோடித் துணியுந் தாரானுவோ ?”

என்று கோலப்பனுக்கு ஆச்சர்யமாகிப் போனது. மெதுவாக நடந்து அருகில் போன கோலப்பனை வழிநடத்தினான் மோணி. அவனது பின்னாலயே போன கோலப்பனுக்கு மோணி போய் நின்ற இடம் வியப்பளித்தது. அது முனியம்மாளின் வீட்டுப் பின்பக்கச் சுற்றுச் சுவர்.

“என்னண்ணே இங்கக் கூட்டியாந்துருக்க ?”

“நீ வாடே !” என்றவாறே அத்தனைப் பெரிய மதில்சுவரின் மேல் அசால்ட்டாகத் தாவி ஏறினான் மோணி.

‘இந்த வயிசுலயும் இந்தா ஒசரத்துல இப்புடி ஏறுகானே? அப்புறம் எப்பூடி முனியம்ம தாக்குப் புடிச்சாளோ ? ஒருவேள வாயப் பொளந்துட்டாளோ என்னமோ ? ஒடம்பையாது பாத்துட்டுப் போன்னு கூப்டானே ? அவளுக்க சவத்த பாக்கக் கூப்புடுகானோ ?’

என்று எண்ணியவாறே கோலப்பன் தயங்கித் தயங்கி மோணியிடம்,

“மோணியண்ணே! நா எதுக்குணே அங்குட்டு தேவையில்லாம ?”

“நீயும் வந்து ஏறுடே !” என்றார் கோமோ.

“அய்யே… எனக்கு முனியம்ம அக்கா மொறையில்லா வரும்ணே ?” என்று தயங்கியவனைக் கண்ட மோணி,

“எலேய் ஒன்னிய செவுத்து மேலல்லா ஏறச்சொன்னேன்! செவத்து மூதி!”

என்றவாறே கையைக் கொடுத்து கோலப்பனை மேலே தூக்கிவிட்டான். மேலே ஏறியவனின் கால்களுக்கு நேரே கீழே கிணறு இருந்ததைக் கண்டு திடுக்கிட்ட கோலப்பன் மோணியிடம்,

“என்னணே இது… ? கெணறு கெடக்கு…?”

மோணி அழுதவாறே, “ஆமடே கோலப்பா ! கெணருதா என்னியக் கெடந்துட்டு !” என்று சோகம் பாய்ந்தான்.

“நீரு முனியம்மயல்லா கெடக்க வந்தீரு! கெணத்துல என்ன பரிபாடி ?”

“ஆமலே கோலப்பா ! கெணத்துக்குள்ளதான் பாடி கெடக்கு ! உள்ள டார்ச் அடிச்சி பாரு !”

‘பாடிய கழத்தி எதுக்கு கெணத்துக்குள்ள வீசிச்சி செவம்?’ என்ற குழப்பத்தில் கோலப்பன் கிணற்றுக்குள் டார்ச் அடித்துப் பார்க்க அங்கே மோணியைப் போலவே உருவம் கொண்ட ஒரு ஆள் படுத்து கிடந்தான்.

“என்னண்ணே ! உன்னிய மாதிரியே ஒருத்தங் கெடக்கான் ! கெணத்துத் தண்ணி வேற செங்கப்பொடி கலந்து செக்கச் செவெல்ன்னி இருக்கே ?”

“அது நாந்தாங் கோலப்பா ! அது செங்கப்பொடியில்ல! எனக்க ரெத்தமுடே!” என்று பெருங்குரலெடுத்து அழுதபடியே அந்தரத்தில் எழுந்து பறந்தான் மோணி. அதிர்ந்து போய்க் கிணற்றுக்குள் உற்றுப் பார்த்த கோலப்பன் அலறினான்.

“அப்போ நீ பேயா வந்தா எங்கிட்ட இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்த ? பாவிமுடிவான !”

என்று பதறியவாறே நடுங்கி கிணற்றின் ஆழத்தை நோக்கிப் பாய்ந்தான் கோலப்பன். சற்று நேரத்தில் கோலப்பனும் வெள்ளுடை தரித்து கிணற்றின் மேல்பரப்பில் உலாவியபடியே காற்றில் கலந்து மறைந்தான்.

கோலப்பனுக்கு விடைகொடுத்த மோணி காதல் மயக்கத்தில் ஏறி மறுபக்கம் குதித்தான். முனியம்மாளின் வீட்டின் பின்பக்க மதிலின் மறுபக்கத்தில் ஒரு பாழுங்கிணறு இருப்பதை மோணியின் துடித்துத் தடித்த கிளி மண்டையை மறக்கடித்திருந்தது. மதிலிருந்து தலைகீழாகப் பாய்ந்த மோணியின் நடுமண்டை கிணற்றின் துவளத்தில் இடித்துத் துவண்டது. இப்படி எதிர்பாராமல் செத்துப்போன மோணியின் ஆவி வந்து கோலப்பனைக் கூட்டிப் போய் கிணற்றில் தள்ளி தன்னுடைய துணைக்கு அழைத்துக் கொண்டு ஆகாய மார்க்கமாய் பறந்து நரகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

தன்னுடைய காதலன் வந்து பூக்களில் தேனூற்றுவான் என்று காவல்கிடந்த முனியம்மாளுக்கு தன்னுடைய காதலன் தங்கள் வீட்டுக் கிணற்றில் மண்டையில் தேன்வழிய நித்திய யாத்திரையை மேற்கொண்டான் என்பது தெரியாமல் விழித்து கொண்டே பசலை பூத்தாள்.

தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய பெயர்க்காரணியான ஆண்ட்டிகளைக் கண்கொண்டு கூடக் காணாத ‘கோணிச்சாக்கு மோணியப்பன்’ என்ற ஆண்ட்டீயப்பனும், அரணை நக்கியும் சாவாத அரணையப்ப கோலப்ப சாமியும் கிணற்றில் விழுந்து செத்துப் போனதை அடுத்த நாள் முரசறைந்து இவ்வாறு அறிவித்தான் கோலப்பனின் ஒன்றுவிட்ட தம்பி வேலப்பன்,

“நள்ளிரவில் கிணற்றில் தடுமாறி விழப்போன முனியம்மாளின் வீட்டு தண்ணீர் வாளியைக் காப்பாற்றும் நோக்கில் குதித்த ஊர்த்தலைவர் மோணியப்பனும், ஊடகத்தலைவர் அரணையப்ப கோலப்பஸ்வாமியும் நித்தியப் பாதையை எய்தினார்கள் !”

அரணை நக்கினால் யாரும் சாகப் போவதில்லை என்பது அரணைகளுக்குத் தெரிவதில்லை. அவைகள் வேண்டுமென மனிதர்களை நக்குவதில்லை. நக்கினால் நாம் செத்துப் போவோம் என்பது மாத்திரம் அரணைகளுக்குத் தெரிந்தால் அவை கோலப்பன்களின் திசைப்பக்கமே தலைவைத்துப் படுக்காது.

முரசுகளின் பின்பக்கம் இருக்கும் பொய்க் குரல்களை மாக்கள் அறிவதில்லை. அவைகள் பொய் எனத் தெரிந்தாலும் கூட அவர்கள் மோணியையும், கோலப்பன்களையும் நம்பிக் கொண்டேயிருக்கும் வரை முரசுகளின் முழக்கம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதில் மாக்களோடு சேர்ந்து மக்களும் தங்களது கூரைகளை இழப்பார்கள்.

பேய்க்கதையின் முதல் பாராவிலிருந்தே பேய்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. கதைகளின் இறுதியில் கூட பேய்கள் வந்து கதையில் யாரையும் பயமுறுத்தாமல் அமைதியாகவே போய்விடலாம். ஆனாலும் இரண்டு பேர் செத்துப் போய் பேயானார்கள் என்பதற்காக ஒரு காதல் கதையானது எப்போதும் ஒரு பேய்க் கதையாக மாறிவிடாது என்பதையும் இந்த வாசகப் பேய்கள் உணரும் வரையில் பேய்க்கதைகள் மரிக்கவே போவதில்லை. கோலப்பனும், கோமோவும் கூட… ஏனென்றால் பொய்யர்களுக்கு மரணமேயில்லை!


  • பிரபு தர்மராஜ்

எவா

5

மயிலன் ஜி சின்னப்பன்

‘நீ ஏன் அந்த படத்துக்கெல்லாம் போன?’ முகம் நிஜமாகவே சிவந்து போயிருந்தது அவளுக்கு.

‘ஏன்? செமத்தியா இருந்துச்சு தெரியுமா.. ஒனக்கு லீவா இருந்தா நீயும் வந்திருக்கலாம்’

‘லீவுன்னாலும் அதுக்கெல்லாம் நா வரமாட்டேன்’

‘ஏன்?’ காரணம் தெரிந்தேதான் கேட்டேன்.

‘சொல்லமாட்டேன்’

‘ப்ச்.. சொல்லு’

‘ம்ஹும்’

‘சொல்லுன்னு சொல்றேன்ல’

‘ஹீரோயின ட்ரெஸ்ஸே இல்லாம ஹீரோ வரைவானாமே? நீ ஏன் போன? போ அப்டியே..’ இதற்கு அவள் கோபப்படுவது எனக்கு குஷியாக இருந்தது.

‘லூசு.. அதெல்லாம் பொய்யி.. ஸ்கின் கலர்லயே ஒரு ட்ரெஸ் மாட்டிப்பாங்களாம்?’

‘கத விடாத.. உனக்கு யார் சொன்னா?’

‘சத்தியமா லூசே..’ பால்யத்தின் அனேக சத்தியங்கள் எவாவின் கையைத் தொடுவதற்காக மட்டுமே செய்யப்பட்டவை.

கதாநாயகிகளுக்கு எப்போதுமே வடிவான பெயர் அமைந்துவிட வேண்டும். ‘இவாஞ்சலின் ஷர்மிளா’ என்ற பெயரை எந்த கோணத்தில் யோசித்து பார்த்தாலும் அந்த ரம்மியம் கூடிவரவில்லை. அதைச் சுருக்கி வசீகரமாக்கிய அந்த மனிதரை இப்போது கண்டால் ஓர் அன்பு முத்தம் கொடுத்துவிட வேண்டும். ஆனால் நான் அவரை அந்நாட்களிலேயே பார்த்ததில்லை. கிருஷ்ணவேணி காலனிக்கு நாங்கள் குடிவருவதற்கு முன்பே, அவர் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். அவளுடைய அப்பாவைத்தான் சொல்கிறேன். காலனியின் அத்தனை குடித்தனங்களும் காதில் விழும்படி கொஞ்சுவாராம் – எவாத்தங்கோ, எவாச்செல்லோ… அங்கிருந்த அத்தனை பேருக்கும் அப்படித்தான் அவள் ‘எவா’வாகியிருந்தாள்.

ரோஸ்லின் அத்தை மட்டும் ‘இவாஞ்சலின்’ என்றேதான் விளிப்பார் – தன் கணவருக்கு எதிரான வைராக்கியமோ என்னமோ! எவாவின் அப்பா ஃபாரினில் வேலை பார்ப்பதாக அம்மா என்னிடம் அப்போது சொன்னது ஞாபகமிருக்கிறது. ‘ஃபாரின்’ என்பதையே ஒரு நாட்டின் பெயரென்று ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் நீள்வட்டமான முகவெட்டு அவளுக்கு. வலது புருவத்திற்கு கீழே மிகச்சிறிய அம்மை தழும்பு ஒன்றிருக்கும்; அந்த முகத்தை முழுமையடைய செய்ய அது அவசியம் என்பதைப்போல அத்தனை பாந்தமாக இருக்கும். கன்னக் கதுப்பிலிருந்து தாடைமுனை வரை நீண்டிருக்கும் மென்மடிப்பு, செதுக்கி நிரந்தரமாக்கப்பட்ட புன்னகை போல அந்த முகத்தில் எப்போதும் பதிந்திருக்கும். அவள் அழுதாலும் புன்னகைத்துக் கொண்டே அழுவதைப் போலத்தான் தெரியும். அந்த முரண்பாட்டை ரசிக்கவே அவள் அழுகையை ஆற்றுப்படுத்தி நிறுத்த நான் முயற்சித்ததேயில்லை. அழவைக்கவும் செய்திருக்கிறேன். இயந்திரத்தை வைத்து ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து சுருட்டியதைப் போன்ற கேச அமைப்பில் இரட்டை ஜடை பின்னலெல்லாம் சேரவே சேராது; அவர்கள் பள்ளியில் குதிரைவாலை அனுமதிப்பார்களாய் இருக்கும். மிக மெல்லிய தங்கச்சங்கிலியில் ‘Eva’ என்ற டாலர்- அந்த கழுத்தைப் பார்க்க காரணம் கொடுப்பதாலேயே பிடித்து போன வஸ்து அது. உண்மையை சொல்லவேண்டுமெனில் அது அவளது நீண்ட கழுத்தின் கலைத்தன்மையைக் குலைக்கும் ஓர் அபத்த திணிப்பு. இவையனைத்தோடும் சேர்த்து ஒரு கத்திரிப்பூ நிற பாவாடை சட்டை. எவா இப்படிதான் இந்த இருபது வருடங்களில் என்னிடம் மிச்சமிருக்கிறாள்.

ரோஸ்லின் அத்தை, புனித சின்னப்பர் மகளிர் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியிலிருந்தார். ஓரிரு முறைகள் ‘ஆண்ட்டி’ என்றழைக்குமாறு சொல்லிப்பார்த்தார் – எனக்கு அது அனிச்சையாக வரவில்லை. ஆங்கில பரிச்சயமின்மை என்றில்லை. ‘அத்தை’ என்பதில் ஓர் அணுக்கம்; அதுவும் எவாவின் அம்மா வேறு. ஒரு வீட்டிலிருக்கும் பிள்ளையின் பெயரை வைத்து அந்த வீட்டுப் பெரியவர்களை அத்தை/மாமா என்று கூப்பிடுவதுதான் அப்போது வழக்கமாக இருந்தது – சுந்தரத்தை, ரமேஷத்தை, ஆர்த்திமாமா… ஆனால் எவாவின் அம்மாவை மட்டும் எவாஅத்தை என்று சொல்லாமல் ‘ரோஸ்லின்’ அத்தை என்று நேரடியாக அவர் பெயரைச் சொல்லியே ஏன் அழைத்தேன் என்று தெரியவில்லை.

கீழ்வரிசையில் நான்கு, மேல்வரிசையில் நான்கென எட்டு குடித்தனங்களைக் கொண்ட குடியிருப்பு அது. நீளவாக்கில் அமைந்த கட்டடத்தில், முதல் இரண்டு வீடுகளைக் கடந்ததும் மாடிப்படி நடுவில் ஏறும். மேல்தளத்தில் படிகளையொட்டிய வலப்பக்க வீடுதான் எவாவுடையது. அதற்கு நேர்கீழ் வீட்டில்தான் நாங்கள் குடியேறி இருந்தோம்.

முதன்முறை, ரோஸ்லின் அத்தையின் சில்வர் ப்ளஸ் மொப்பெடில், பின்னாலமர்ந்து பள்ளிக்கு புறப்படும் எவாவை, பல் தேய்த்தபடி வாசலில் நின்று பார்த்தேன். ஆறாம் வகுப்புக்கு அதிக உயரம்தான். பச்சை நிற கட்டம்போட்ட சீருடை சட்டையும், அடர் பச்சை நிற பாவாடையுமாக அவள் பின்னிருக்கையில் இரண்டு பக்கமும் கால் போட்டு அமரும்போது, அவள் உயரத்துக்கு அந்த பாவாடை கொஞ்சம் மூட்டுக்கு மேல் ஏறிவிட்டது. என்னை ஏதோ வெறுப்பாக பார்த்தபடியே அதை கீழே இழுத்து சரிசெய்தாள்; அந்த வயதிலேயே அது எனக்கு கெளரவச் சீண்டலாகப் பட்டது.

‘மொதோ நாள் பாத்தப்ப, நான் உன் முட்டிய பாக்குறேன்னுதான நெனச்ச?’ பின்னொரு நாளில் கேட்டுவிட்டேன். அதை காதிலேயே போட்டுக்கொள்ளாதவள் போல வேறெதையோ பேசினாள். பூப்பெய்துவதற்கு முந்தைய சுதாரிப்புகள் அவளிடம் கச்சிதமாக இருக்கவே செய்தன; இதுப்போன்ற கேள்விகள் இடமளிக்கும் நெருக்கத்தை உடனடியாக அனுமதித்துவிடக்கூடாது என்ற தெளிவு அவளிடம் எப்போதும் இருக்கும். என்னாலும் இன்னொரு முறை அந்த கேள்வியைக் கேட்கும் துணிவைக் குவித்துவிட முடியாது.

நல்லவேளையாக நானும் அப்போது ஆறாம் வகுப்பில்தான் இருந்தேன். ஒன்றிரண்டு வயது பெரியவன் என்றால் ‘அண்ணன்’ என்று பழக்கப்படுத்தி எல்லாவற்றையும் பாழாக்கியிருப்பார்கள். அவளுக்கு பக்கத்து வீட்டிலிருந்த, என்னைவிட சிவப்பான சுந்தரை, அவன் ஏழாம் வகுப்புக்காரன் என்பதாலேயே, ‘அண்ணா’ என்று அவள் அழைக்கும்போதெல்லாம், மனதிற்குள் நானொரு சிறிய குத்தாட்டம் போட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் போகப்போகத்தான் அண்ணன் என்ற அடையாளத்துடன் அவளைத் தொட்டுத் தொட்டுப் பேசும் அனுகூலத்தை அவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்று புரியவந்தது. அவளை அவனிடமிருந்து பாதுகாக்கும் அவஸ்தையை தான் கூடி விளையாடும் பொழுதுகளில் அவர்கள் எனக்கு ஒதுக்கியிருந்தார்கள். இருவரும் ஒரே பள்ளி வேறு. என்றாவது ரோஸ்லின் அத்தைக்கு நேரம் ஒத்துவராத நாளில், அவள் சுந்தரின் சைக்கிள் கேரியரில் அமர்ந்தபடி எனக்கு டாட்டா காட்டிவிட்டு பள்ளிக்கு கிளம்பிப் போவாள் – அன்று மட்டும் அதிக நேரம் சாமி கும்பிடுவேன்; கடவுளையெல்லாம் எனக்கு அடியாளாக வைத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை.

‘சுந்தரண்ணாவோடது பாய்ஸ் சைக்கிளா இருக்கு.. நீ ஒன்னோடதுல எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லித்தர்றியா?’ அத்தனை நாட்களும் ஆண்மைக்கான இழுக்குடன் ஓட்டிக் கொண்டிருந்த பி.எஸ்.ஏ-எஸ்எல்ஆரை அள்ளியெடுத்துத் தழுவிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. சுந்தரிடமிருந்து அவளைத் தனிமைப்படுத்த எனக்கு இதைவிட்டால் வேறு நல்ல வாய்ப்பு இருக்கவே முடியாது. உட்கார வைத்து கைப்பிடியையும் கேரியரையும் பிடித்துக் கொண்டு, ஐயாறப்பர் தெற்கு வீதியில் மாலை நேரம் முழுக்க ஓடிக் கொண்டிருப்பேன்.

கேரியரிலிருக்கும் பிடியை ஓட்டப்போக்கில் மெதுவாக அவளது இடைக்கு மாற்றினால், வேண்டுமென்றே தடுமாறி விழுவதைப் போல ஏதோ செய்துவிட்டு கொஞ்சம் கடுகடுவென ‘சாரி’ என்பாள். அது என்னைக் கூர்மையாக எச்சரிக்கும் தொனி; ‘அவ்வாறு கை வைத்ததற்கு என்னிடம் மன்னிப்பு கேள்’ என்பதுதான் அந்த ‘சாரி’யின் பொருள். வெளிப்படையாக அதுகுறித்த அதிர்வுகளை ஒருவேளை அவள் உருவாக்கினால், நான் பெரிய ரோஷக்காரன் மாதிரி அவளிடம் முகத்தைத் திருப்பிக்கொள்வேன்; பேசாமலிருப்பேன்; தேவதைகளுக்கேயான கனிவுடன் அவள்தான் மீண்டும் வந்து பேசவேண்டும் – அப்படி பேசிவிட்டால், என் செயலை அவள் மன்னித்ததாகிவிடும்; அந்த மன்னிப்பு, அப்படி கை வைத்ததற்கு அந்தரங்கமான அங்கீகாரத்தையும் கொடுப்பதாகிவிடும். இதற்கெல்லாம் இடங்கொடுக்காமல் இருப்பதற்குத்தான் அந்த ‘சாரி’. அதே நேரம், எத்தனை வேகமாக அந்த முகம் சுருங்குமோ, அத்தனை வேகமாகவே தணிந்திடும். கோபம் கொடுத்துவிடும் உரிமையை மறுக்கும் இணக்கம். பன்னிரெண்டு வயதிலேயே அத்தனை தெளிவாகத்தான் இருந்திருக்கிறாள்.

அது வில்ஸ் உலகக்கோப்பை சமயம் – எவாவுக்கும் ஓரளவுக்கு கிரிக்கெட் தெரிந்திருப்பதை, அவள் சலித்துக் கொள்ளாமல் ஐம்பது ஓவர்களையும் பார்ப்பதிலிருந்து புரிந்து கொண்டேன்; இன்னொரு அனுகூலம், சுந்தர் கிரிக்கெட் பார்க்க மாட்டான். ‘எனக்கு அசார்தான் புடிக்கும்..’ என்றாள். கொஞ்சமும் யோசிக்காமல், ‘எனக்கும்’ என்றேன். அப்போது பூஸ்ட்டுக்கு இலவசமாக கொடுக்கப்பட்ட மட்டையைக் கொண்டு, அசாருதீனின் மணிக்கட்டை மட்டும் சொடுக்கும் பேட்டிங் பாணியைக் காற்றில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பேன். ‘அவன் கழுத்துல கருப்பா எதோ கயித்துல கட்டி போட்ருக்கானே.. என்னடா அது?’ இது போன்ற கேள்விகளில் மட்டும் எப்படியோ ஒரு குழந்தைத்தனத்தைக் கொண்டு வந்துவிடுவாள். ‘அது ஒரு சின்ன பர்ஸ் மாதிரி.. ஜிப் இருக்கும்.. உள்ள பிக் ஃபன் பபுள்கம் வெச்சிருப்பான்’ கூச்சமேயில்லாமல்தான் புளுகுவேன்.

அவளுக்கு பிடித்ததால் எனக்கும் அசாருதீனைப் பிடித்தது சரி; ஆனால் அவளுக்கு ஏன் பிடித்தது என்பது எனக்கு குழப்பமாக இருந்தது. ஏனெனில், அந்த உலகக் கோப்பை, ஒட்டுமொத்த தேசத்தின் இதயத்தில் டெண்டுல்கர் என்ற பெயரை ஈரமாக பதிய வைத்திருந்தது. சுந்தர் அதற்கொரு பதில் வைத்திருந்தான்.

‘டேய்.. அவ கிளாஸ்ல அசார்ன்னு ஒரு பய இருக்கான். போன வருஷ ஆனுவல் டே-ல அவனும் இவளும்தான் ஜோடியா ஆடுனாங்க..’ சொல்லிவிட்டு இளக்காரமாக சிரித்தான். அந்த சிரிப்பு, எவாவிடம் நான் கிறங்கிப்போயிருப்பதை அவன் அறிந்து வைத்திருப்பதையும், அவனும் அதே விருப்பத்தில் இருப்பதையும் வெளிப்படையாக காட்டிக்கொடுத்தது.

‘உன்னோட கிளாஸ்ல அசார்ன்னு யாரும் இருக்காங்களா?’ நேராக எவாவிடம் போய் கேட்டுவிட்டேன். கொஞ்சமும் பொறுமை அற்றவனாகவும், சாதுர்யம் அற்றவனாகவும்தான் அவள் விஷயத்தில் இருந்திருக்கிறேன்.

‘ஏன் கேக்குற?’

‘சொல்லு..’ ஏதோ அவள் ஆமாமென்றால் நீடுருக்கு அடுத்த பஸ் பிடித்துப்போய் அவனை வெட்டி பொலி போட்டுவிடுவதைப் போல..

‘ஆமா.. இருக்கான்.. உனக்கெப்டி அவன தெரியும்?’

‘அதனாலதான் ஒனக்கு கிரிக்கெட்ல அசார புடிக்குமா?’ அவள் என்னை வினோதமாக பார்த்தாள்.

‘லூசா நீ?’ உடனே ஆமோதிக்க வேண்டும் போலத்தான் இருந்தது. முகத்தில் பாய்ந்திருந்த ரத்தமெல்லாம் வடிந்துவிட்டன; சிரித்துவிட்டேன். ‘அதுக்கு ஏன் நீ கோவப்படுற?’ என்று அவள் கேட்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அவள் அந்த கதவை மட்டும் திறந்து விடவே மாட்டாள். இந்த ஒரு விஷயத்திற்காகவே சுந்தருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அவள் அனுமதிக்காத எல்லைக்குள் என்னை நானே கொண்டு சேர்த்துவிட்டேன்.

‘உனக்கு அதுனாலதான் அசார புடிக்கும்ன்னு நெனச்சு எனக்கு செம்ம கோவம் வந்துருச்சு’ அவளுக்கு ஏற்கனவே புரிந்திருந்த என் நிலைப்பாட்டை இன்னும் கொஞ்சம் வெளிச்சம் போட்டு காட்டினேன். கீழுதட்டை ஒரு மாதிரி கன்னத்தில் குழிவிழும் வாக்கில் உள்ளிழுத்து, கள்ளத்தனமாக சிரித்துவிட்டாள். அந்த சிரிப்புதான் கேட் வின்ஸ்லட்டின் ஓவியம் குறித்த பேச்சுவரை கொண்டுவந்திருந்தது.

கொஞ்சம் நெருக்கத்தை அனுமதிக்கும் சமிக்ஞைகள் அவளிடமிருந்து தெரிந்ததுமே, நெருங்கியிருக்க மட்டுமே விரும்புபவனாக என்னைக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். அதற்காகவே அவள் ராஷ்ட்ரபாஷா படித்துக் கொண்டிருந்த ஷாந்தா ஹிந்தி வித்யாலயாவிற்கு போய், நானும் பிராத்மிக்கில் சேர்ந்தேன். ரென் அண்ட் மார்ட்டின் சகிதம் மாலைகளில் ரோஸ்லின் அத்தையிடம் தஞ்சமடைந்தேன். மொட்டைமாடிக்கு படிக்க போகிறேன் பேர்வழியென, ஏறும்போது இரும்பு நாற்காலியை மாடிப்படிகளில் டமடமவென இழுத்து அவளுக்கும் அதனை அறிவிப்பேன். சில நாட்கள் அதற்கான பலனும் இருந்திருக்கிறது. பிரதியெடுத்ததைப் போலிருக்கும் இரு வீட்டு உள்ளமைப்பில், மேல்வீட்டில் அவள் குளிக்கும் நேரத்தில், கீழே எங்கள் வீட்டு குளியலறையிலிருந்து, ‘லவ் டுடே’, ‘மின்சார கனவு’ பாட்டுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு சத்தமாக பாடுவேன். ‘அட உலகை ரசிக்க வேண்டும் நான்ன்ன்..’ என்ற இடத்தில் குரல் வேறு க்க்கீச்சென்று ஆகித்தொலைக்கும். குறைந்தபட்சம் ஒரு கோமாளியாகவாவது, தொடர்ச்சியாக அவளது கவனத்தைக் கோரிக் கொண்டிருந்தேன்.

இது ஒரு பக்கமிருக்க, ரோஸ்லின் அத்தை, கொஞ்ச நாட்களாகவே என் சேஷ்டைகளைக் கூர்ந்து கவனிப்பவராக தெரிந்து கொண்டிருந்தார். ஓரிரு முறைகள் மொட்டை மாடியில் நானும் எவாவும் படித்துக் கொண்டிருக்கும்போது ஏதோ நோட்டம் பார்ப்பதைப் போல வந்துவிட்டு போனார். அவரும் காதல் திருமணம் புரிந்தவர் என்ற கதை, அந்த குடியிருப்பில் பிரசித்தம் என்பதால், எச்சரிக்கைகளைத் தாண்டியும், எங்கள் விஷயத்தில் எனக்கொரு சலுகை தெரிந்து கொண்டிருந்தது. என் வகுப்பு நண்பன் தாமஸின் வீட்டு கதவில் ஒட்டியிருந்த ‘அநாநி சினேகத்தால் நான் உனைச் சினேகித்தேன் – எரேமியா 31-3’ என்ற திருவிவிலிய வாசகத்தை, எவாவின் கண்ணில் படவேண்டும் என்பதற்காக என் கிராமர் நோட்டில் எழுதி வைத்திருந்தேன்- அதையும் ரோஸ்லின் அத்தை ஒரு நாள் பார்த்துவிட்டார். அவருக்கு ஏதோ பொறி தட்டியிருக்க வேண்டும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், வழிபாட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அவர்களிடம் போய், ‘அத்த, சர்ச்சுக்கு நானும் வரவா?’ என்றேன்.

பதிலுக்கு முன்னிருந்த கணநேர தாமதத்திலேயே எனக்கு பதில் புரிந்துவிட்டது.

‘போய் உங்க அம்மாட்ட கேட்டுட்டு வா’ வந்து விழுந்த பதிலிலிருந்த வெளிப்படையான வெறுப்பு ஒரு மாதிரி குறுக வைத்தது. விடுவிடுவென இறங்கி வீட்டுக்கு வந்துவிட்டேன். அவரது எண்ண ஓட்டம் எனக்கு புரிந்துவிட்டதென்பதை பதிலுக்கு புரிய வைத்துவிட்டேனென்று உள்ளுக்குள் ஓர் ஆசுவாசம். எக்காரணம் கொண்டும் அந்த வீட்டு வாசலை மீண்டும் மிதித்துவிடக் கூடாதென்று சூளுரைத்தேன். ஹிந்தி டியூஷன் போவதை நிறுத்திக் கொள்ளலாமா என்று யோசித்தேன். என் சுயமரியாதையில் ரத்தம் கசிந்து கொண்டிருந்த நேரம், எவாவின் முகத்தில் களையே இல்லாததைப் போல தோன்றியது. மனக் கண்ணிலிருந்த அவள் முகத்தில் திடீரென எண்ணெய் வழிய ஆரம்பித்தது; கீழ்வரிசையின் முன்னிரண்டு பற்களுக்கிடையிலான இடைவெளி மிக அகலமாக தெரிந்தது; முன்பு ஓர் அதிகாலையில் அம்மா கோலமிடுவதை, வேடிக்கை பார்க்க மாடியிலிருந்து தூங்கி எழுந்த கோலத்தில் வந்து நின்ற அவளின், கொடுவாய் வாடையை நினைவிலேயே ஒருமுறை முகர்ந்துப்பார்த்து முகம்சுளித்துக் கொண்டேன். குளியலறைக்கு போய் ஒளித்து வைத்திருந்த பாட்டு புத்தகங்களைக் கிழித்து கக்கூஸில் போட்டு தண்ணீரை ஊற்றிவிட்டு வந்தேன். எல்லாம் சாக்கடைக்கு போகட்டும்.

அடுத்த நாள் காலை வாசலில் சில்வர் ப்ளஸ் புறப்படும் ஓசை கேட்டது. வெளியே போகவில்லை. சாயங்காலம் அவளுக்காக காத்திருக்காமல், ஹிந்தி கிளாசுக்கு புறப்பட்டுவிட்டேன். பாடநேரத்தில் அவள் ஏதோவொரு விவரிக்க முடியாத துயரத்தை முகத்தில் சுமந்திருந்தது, எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. வகுப்பு முடிந்ததும் என் போக்கில் கிளம்பி நான் வீட்டிற்கு நடையைக் கட்டிவிட்டேன். அவள் பின்தொடர்ந்தேகூட வந்து கொண்டிருக்கலாம்; நான் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

வீட்டிற்குள் நுழைந்ததும், வாசலை நோக்கியே காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். எவாவின் காலடி ஓசை எனக்கு தெரியும்; ஒரு மாதிரி சரக் சரக்கென தேய்த்து தேய்த்து நடப்பாள். அந்த ஓசை எங்கள் வீட்டுக்குள் வந்து ‘ஏண்டா விட்டுட்டு தனியா போற?’ என்று கேட்கப்போகிறதா? இல்லை, அப்படியே கடந்து படியேறிவிடப் போகிறதா? – அதுவரையிலான என் வீராப்புகள் எதுவும் என் தன்மானத்திற்காக செய்யப்பட்டவையில்லை என்றும், என் எதிர்வினையை எவா உணர வேண்டும் என்பதற்கான பம்மாத்துகள் மட்டும்தான் என்றும் புரிய வந்தபோது, நொடிநேர மன அழுத்தம் வந்து அமைதியிழக்க செய்தது. அதை மேலும் மோசமாக்கும் விதத்தில், அந்த சரக் சர்க் காலடிகள் எங்கள் வீட்டைத் தாண்டிப்போய் படிகளில் ஏறத்தொடங்கின.

ஆனால், அந்த ஓசையில் முன்னெப்போதும் இல்லாத நிதானம்; ஒரு தொய்வு – இவை போதும் எனக்கு.

கொஞ்சநேரத்தில் ரோஸ்லின் அத்தை மாடியில் நின்றபடி என் அம்மாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்தார். என்ன சொல்வதற்காக அழைத்திருக்கிறார்? – என் நடத்தைகளைப் பட்டியலிட்டு, அவற்றை ஒழுக்கமீறல்களாக கட்டமைத்து, ஒரு வழியாக என் சாயங்களை வெளுக்கவைக்கப் போகிறார்கள். அம்மா இது மாதிரியான குற்றச்சாட்டுகளை எப்படி கையாள்வார் என்று வேறு தெரியவில்லை. அப்பாவிடம் சொல்லிவிடுவார்- அது நிச்சயம். அவர் இடுப்புவாரைக் கழற்றி தோலை உரிக்கப் போகிறார். எங்காவது ஓடிப்போய் விடலாமா? மகாதானத் தெருவில், முன்வாசலிலிருந்து கொல்லைவாசல் வரை தெரியும், நடுவில் துளசி மாடம் இருக்கும் அந்த அய்யர் மாமா வீட்டில் போய் ஏதாவது வேலை கேட்டுப் பார்க்கலாமா? ஸ்கூலுக்கு போகும் வழியிலிருக்கும் அந்த பழைமையான ஓட்டு வீடு, ஏனோ எனக்கு அந்நாட்களில் ரொம்பவே பிடித்திருந்தது. நெடுநேரமாகியும் அம்மா கீழே வரவில்லை. விபரீதம் புரிந்துவிட்டது. கட்டிலில் போய் குப்புற படுத்துக்கொண்டு தூங்குவதைப் போல பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்.

அப்பாதான் முதலில் வீட்டிற்குள் வந்தார். அம்மாவை அழைத்து பார்த்தார். அவர் படுக்கையறைக்குள் நுழைந்துவிட்டு வெளியேறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். வாசலில் போய் நின்று, ‘சரஸ்வதீ..’ என்று உரக்க கூப்பிட்டு பார்த்தார். பதிலில்லை என்றதும், ஹாலில் வந்து அவர் அமர்வது காதில் விழுந்தது. சில நிமிடங்களில் அம்மா வீட்டிற்குள் நுழைவதும் கேட்டது. ஒரு மாதிரி இறுகி, ‘எதற்கும் தயார்’ என்ற நிலைக்கு வந்திருந்தேன். அதிகபட்சம் என்ன செய்துவிடப் போகிறார்கள்? போட்டு அடிப்பார்கள்; சுந்தரோடு ஒப்பிட்டு கேவலப்படுத்துவார்கள்; அப்பா ‘போயி அவன் மூத்தரத்த வாங்கிக்குடி’ என்பார் – ஒழுக்கத்திற்கான வேதிப்பொருட்கள் சிறுநீரில் இருப்பதாக அவர் அழுத்தமாக நம்பிக் கொண்டிருந்திருக்க வேண்டும் – அடிக்கடி அதையேதான் சொல்லுவார். நானாகவே அறையைவிட்டு வெளியே வந்தேன்.

என்னைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். டிவி இரைச்சலுக்கு நடுவில் அம்மாவின் அந்த வார்த்தைகள் செவியில் கலந்தது. ‘பாவம்.. யாரும் ஒத்தாசிக்கு இல்ல அவங்களுக்கு.. பதிமூனு வயசுல்லாம் இப்ப லேட்டுதான்.. வசந்தி மவல்லாம் பத்து வயசுலயே குந்திட்டா..’ அதன் பிறகு அவர்கள் பேசிக்கொண்ட எதுவுமே என் மண்டையில் ஏறவில்லை. பயந்துக் கொண்டிருந்த விஷயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பெருமூச்சு அல்ல அது; அதுவரையிலான என் மனவோட்டங்கள் எதுவுமே அக்கணம் என் நினைவிலில்லை. எவா பெரிய மனுஷியாகியிருப்பது, ஏதோ எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நிகழ்வாக எனக்கு தெரிந்தது; இன்னும் நெருக்கமாகி விட்டவளாக தெரிந்தாள். சம்மந்தேயில்லாமல் கூடுதல் பொறுப்பு என் தோள்களில் ஏறியிருப்பதாக உணர்ந்து கொண்டிருந்தேன்.

எப்படியும் அவளை அன்றிரவு பார்த்துவிடவேண்டுமென்று மனம் அடித்துக் கொண்டது. எந்த நாடகமுமின்றி சகஜமாக காட்டிக்கொண்டு, மாடியேற போனவனை, ‘எங்கடா போற?’ என்றது அம்மாவின் குரல். அதுவரைக்கும் அப்படி அம்மா கேட்டதாக நினைவில்லை.

‘சும்மா மேல போயிட்டு வரேன்’ காரணம் சொல்லவே அலுப்பாக இருந்தது.

‘இனிமே, ச்சும்மா ச்சும்மா எவா வீட்டுக்குள்ளல்லாம் போயிட்டிருக்கக்கூடாது’ இது என்ன ஒரே நாளில் அமலுக்கு வரும் அவசர ஆணை? அந்த உத்தரவு இனி அவர்கள் கட்டமைக்கப்போகும் புதிய விதிமுறைகளுக்கான முன்னோட்டமாக தெரிந்தது.

‘சுந்தரண்ணா வீட்டுக்குதாம்மா போரேன்’ என்று சொல்ல நினைத்து, சொன்னால் அந்த பொய்யை என் தடுமாற்றம் காட்டிக் கொடுத்துவிடும் என்று சுதாரித்து, எதுவும் சொல்லாமல் அலட்சியமாக மேலே ஏறினேன். எவாவின் வீட்டைக் கடக்கும்போது சீட்டியடித்துக் கொண்டே போனேன். அங்கு ஓர் அச்சுறுத்தும் பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. மனதிற்குள் தடுக்கி விழுந்து கொண்டிருந்தேன்- ‘அவளும் இப்போது என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருப்பாளா? இனிமேல் ஒளிந்து மறைந்து அம்மாக்களுக்கு தெரியாமல்தான் பேசிக்கொள்ள முடியுமா? சுந்தர் வீட்டில் இந்த தடையெல்லாம் நடப்பில் இருக்குமா அல்லது அவன் எப்போதும் போல போய் தொட்டு தொட்டு பேசுவானா? – அந்தக் கையை முறிக்க வேண்டும். ரோஸ்லின் அத்தைக்கு வேறு ஏற்கனவே என் மேலே கொஞ்சம் காட்டமிருக்கிறது. இதுவெல்லாம்கூட பரவாயில்லை – எவாவே விலக ஆரம்பித்துவிட்டால்?’ யோசித்துப் பார்க்கும்போதே தோற்றுப்போன ஒரு வலி.

அடுத்த நான்கைந்து நாட்களும் அவளைப் பார்க்க முடியவில்லை. அதில் ஒரு மாலை, பள்ளியிலிருந்து வரும்போது, சாப்பாட்டு மேசையில் இண்டோசிலோன் பேக்கரியிலிருந்து ஹனி கேக் ஒரு பெட்டி வந்திருந்தது.

‘எவாம்மா குடுத்துட்டு போனாங்க.. எவா ஏஜ் அட்டன் பண்ணிருக்கால்ல..’ அம்மா அந்த விஷயத்தை வெளிப்படையாக என்னிடம் சொன்னபோது, அதன் பின்னிணைப்பாக, நான் அஞ்சியிருந்த ஒழுக்கவிதிகள் பட்டியல் எதுவும் அறிவிக்கப்படுமோ என்று கலவரமானேன்; நல்லவேளை, அப்படியெதுவும் இல்லை.

மீண்டும் அவளைப் பார்க்கமுடிந்த நாளில், புதிதாக ஜிமிக்கித்தோடு போட்டிருந்ததைத் தவிர்த்து, வெளிப்படையாக வேறெந்த மாற்றமும் தெரியவில்லை. ஏதோ தடையுணர்வைத் தகர்த்து பேசுபவளைப் போல செயற்கையாக சிறு அபிநயங்கள் பிடித்துக் கொண்டிருந்தாள். எனக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. எங்கள் அன்யோன்யத்தை சிதைத்த அந்தப் பருவ மாற்றத்தை அந்த நொடியில் நான் மனதார வெறுத்தேன்.

‘பெரிய மனுஷி ஆயிட்டியாம்..?’

நிஜமாகவே ரொம்ப அழகாக வெட்கப்பட்டாள்.

‘இனி எங்க்கூட பேசவேமாட்டன்னு நெனச்சேன்.. அத்தையும் பேசக்கூடாதுன்னு சொல்லிருப்பாங்கல்ல..’ என் தவிப்பையும் அச்சத்தையும் பட்டவர்த்தனமாக்கிவிட வேண்டும். பொய்யாகவேனும் அவள் இதற்கு ‘இல்லை’ என்றுதான் பதில் சொல்ல வேண்டும். அந்த தேற்றல் எனக்கு அவசியப்பட்டது.

‘ஏன்? நா எப்பவும் போலதான் இருப்பேன்’ இதெல்லாம் ஒரு விஷயமேயில்லை என்று மலினப்படுத்தும் குரலில் அவள் பேசும் போது, எனக்கு அவள் கையை ஒருமுறை தொட்டுப்பார்க்க வேண்டும் போல இருந்தது.

‘ஹே.. முன்னமே உங்கிட்ட கேட்டேன்ல.. ஏஜ் அட்டெண்ட் பண்றப்போ என்ன ஆகும்ன்னு.. ஆனதும் சொல்றேன்னு சொன்ன..’

‘லூசு.. போடா’ நாங்கள் பழையவர்களாகத்தான் இன்னமும் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் கொனஷ்டை.

ஆனால் மற்றதெல்லாம் அப்படியே இருந்துவிடவில்லை. அடுத்து வந்த ப்ரவேஷிகா பரீட்சையோடு அவள் ஹிந்தி வகுப்பிலிருந்து நின்று கொண்டாள். அதன் பின்னாலும் நான் அதனைத் தொடர வேண்டியிருந்தது தான், என் வாழ்வின் மிக மோசமான ஹிந்தி திணிப்பாக இருக்க முடியும். பாவாடை சட்டை சீருடைக்கு பதிலாக, சுடிதார் சீருடைக்கு மாறி விட்டாள். ரோஸ்லின் அத்தையுடன் தொற்றிக் கொண்டு போகாமல், புதிதாக கருப்பு வண்ண லேடிபேர்ட் சைக்கிளில் வலம் வந்தாள். எனக்கு போதுமான ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுத்துவிட்டதைப் போல, அத்தையும் வீட்டில் வகுப்பெடுப்பதைக் குறைக்க ஆரம்பித்தார் – அந்த வீட்டிற்குள் நான் நுழைவதற்கான வாயிலாக இருந்ததை காலி செய்துவிட்டார். மொட்டை மாடிக்கு எவா படிக்க வருவது குறைந்து போனது. இதையெல்லாம்கூட பருவமெய்தியதற்கான பரிணாம மாற்றங்கள் என்று பொறுத்துக் கொண்டேன்.

தாங்கமுடியாத ரணமாக தெரிந்தது, எவாவே என்னிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளுவதைப் போல காட்டிக்கொள்ள ஆரம்பித்தது தான். கேரம் விளையாட அமரும்போது பாவாடையைக் கால்களுக்கிடையில் சுருக்கி நிதானமாக சம்மணம்போட ஆரம்பித்தாள். ஸ்ட்ரைக்கரை எடுக்க வளையும்போது, ஒவ்வொரு முறையும் மேல்சட்டையின் கழுத்துப் பகுதியை மிகக் கவனமாக உள்ளங்கை கொண்டு மறைப்பதுப்போல செய்வது, அப்பட்டமாக என்னை அசிங்கப்படுத்துவதைப் போலிருந்தது.

ரோஸ்லின் அத்தையும் அம்மாவும் சேர்ந்து, இன்னொரு பக்கம், எனக்கும் அவளுக்குமிடையில் ஒரு மிகப்பெரிய அரணை எழுப்பிக் கொண்டிருப்பதாக தோன்றியது. இவர்கள் மூவரும் எதற்காக இப்படி என் கைகளைக் கட்ட நினைக்கிறார்கள்? எவா தன் குழந்தைத் தனங்களை எப்படி ஓரிரு மாதங்களில் முற்றிலுமாக தொலைத்தாள்? எதற்காக இப்படி அநியாயத்திற்கு பெரிய மனுஷி போல காட்டிக்கொள்கிறாள்? என்னிடம் அவள் என்ன நிரூபிக்க நினைக்கிறாள்? அவளின் ஸ்பரிசத்திற்காக தவிப்பவனாகவும், அவளிடம் முழுவதுமாக சரணாகதியாகி விட்டவனாகவும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாளா? இப்படி எளிதாக முத்திரை குத்திவிடும் அளவிற்கு, என் பலவீனங்களைக் காட்டிக் கொள்கிறேனா? நான் நிஜமாகவே பலவீனனா? எவாதான் என்னை இப்படியெல்லாம் யோசிக்க வைத்துவிட்டாளா? அவளுக்கு இதுவெல்லாமும் சாத்தியம்தானா?

ஓராண்டுக்கு முன்னிருந்த என் எவாவை யோசித்துப் பார்த்தேன்..

‘நா அந்த படமெல்லாம் பாத்தா உனக்கென்ன வந்துச்சாம்?’

‘தெரியல.. பாக்கக்கூடாது.. அவ்ளோதான்’

‘வேண்ணா சொல்லு.. நானும் உன்ன அப்டி வரையறேன்..’

‘செர்ர்ருப்பு.. ச்சீ.. மூஞ்சி.. பேசுறத பாரு’ வெட்கம் அவளுக்கு வெடித்துக்கொண்டு வந்தது கண்கூடு. சப்சப்பென்று என் புறமண்டையில் அடித்தாள்.

இந்த தருணங்களெல்லாம் இனி சாத்தியமே இல்லை என்ற தெளிவிற்கு பொறுமையாக என்னை நகர்த்த ஆரம்பித்தேன். அதைப் புரிந்து கொண்டவள் போலவும், தானும் அதைத்தான் விரும்புவதைப் போலவும் எவா நடந்துகொள்ள ஆரம்பித்தாள். ஓரிரு மாதங்களுக்குள் நான் என் தடுமாற்றங்களிலிருந்து தணிந்து நிலைகொள்ள ஆரம்பித்தேன். சுந்தரை நண்பனாக பாவிக்கும் அளவிற்கான ஆழ்ந்த அமைதியை எட்டியிருந்தேன்.

காதலிகளுக்குள் இருக்கும் சாத்தான் அப்படியெல்லாம் விட்டுவிடாதுதானே! எவா மீண்டும் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். பள்ளிக்கு புறப்படும் போது அனாவசியமாக சைக்கிள் மணியடிப்பாள். நான் சிடுசிடுவென எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் அதைப் பார்க்கும்போது, என்னை நையாண்டி செய்வதைப் போல வாய்க்குள்ளேயே சிரிப்பாள். எனக்கு விதிகளை வகுத்துவிட்டு, இவள் மட்டும் விளையாடிப் பார்ப்பது, நிஜமாகவே என்னை எரிச்சலடைய வைத்தது. என் சமநிலையிலிருந்து நான் தவற நேர்ந்தால், மீண்டும் அவள் சிலுப்பிக் கொண்டு போவாளோ என்ற எச்சரிக்கையுணர்வுதான் என்னை ரொம்பவே நிதானப்படுத்தி வைத்திருந்தது. தவமெல்லாம் இல்லை – எந்நேரமும் அவளால் நொறுக்கி விடமுடியும். கூடுமானவரைப் தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் அவளே ஒதுங்கிப்போய் விட்டாலும் பரவாயில்லை என்று மனப்பூர்வமாக விரும்பினேன்.

99ஆம் வருட உலகக்கோப்பை காலகட்டம் – குடியிருப்பின் பெரும்பாலானோர் எங்கள் வீட்டில் கூடியமர்ந்து போட்டிகளைப் பார்ப்பது வழக்கமாகியிருந்தது – நான் முழுமையான சச்சின் ரசிகனாக மாறிவிட்டிருந்த காலம் அது. அவளுக்கு எதிர்துருவம் எடுக்க வேண்டுமென்றோ என்னமோ, சச்சின் மீதான பற்று ரொம்பவே உணர்வுப்பூர்வமாகியிருந்தது. போட்டியொன்றின் துவக்கத்தில் சச்சினின் அப்பா இறந்துவிட்டதாக அறிவிப்பு வந்ததும், நான் அங்கிருந்து எழுந்துவிட்டேன். ‘ஒக்கார்ரா.. சடகோபன் ரமேஷ் அடிப்பான் இன்னிக்கு’ என்ற அம்மாவையெல்லாம் என்ன செய்வது? எவாவும் அப்போது அங்குதான் இருந்தாள். எப்படியும் நான் போய் மொட்டை மாடியில்தான் நிற்பேன் என்பது அவளுக்கு தெரியும். என் ரகசியமான அழுகைகளுக்கான இடம் அதுதான். அன்றும் கிட்டத்தட்ட அழுதுவிடக் கூடிய நிலையில்தான் இருந்தேன். மாடிப்படிகளில் எந்த ஓசையும் எழுப்பாமல் மேலே வந்தவள், எங்கோ பார்த்தபடி, வந்து என் பக்கத்தில் நின்றுகொண்டாள். எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பத்து நிமிடங்கள் போயிருக்கும். ‘கீழ போலாமா?’ என்றேன். ‘ம்ம்’ என்றவள், என்ன நினைத்தாளோ, அருகில் வந்து, கைப்பிடி சுவற்றின் மீது அமர்ந்திருந்த என் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

அந்த ஒரே நொடியில், பாசாங்குகளற்ற அர்த்தமுள்ள உறவிற்குள் நாங்கள் வந்துவிட்டதைப் போல இருந்தது.

முன்பு சேர்ந்திருந்த சுரணையால், அவர்கள் வீட்டிற்கு போவதை அப்போது முழுமையாக நிறுத்தியிருந்தேன். ஆனால், எவாவால் கிரிக்கெட்டைக் காரணமாக வைத்து எங்கள் வீட்டிற்குள் அடிக்கடி நுழைய முடிந்தது. மதியத்தில் துவங்கி முன்னிரவு வரை தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கும்போது, கண்ஜாடைகள், காரணமுள்ள தொடுகைகள் என என்னைக் கலவரத்திலேயே வைத்திருப்பாள்.

அப்படியொரு நாளில், தண்ணீர் குடிக்க அடுப்பங்கறைக்கு நான் போனப்போது, பின்னாலேயே வந்து கட்டியணைத்துவிட்டு பின்கழுத்தில் ஒரு முத்தம் பதித்துவிட்டு போய்விட்டாள். அவள் பூப்பெய்திவிட்டதை எனக்காக பிரத்யேகமாக நிரூபணம் செய்துவிட்ட தருணம் அது. நான் மூச்சுவாங்கிக்கொண்டு நெடுநேரம் உள்ளேயே நின்றிருந்தேன். அவள் உள்ளே வந்துவிட்டுப் போனதை எவரேனும் பார்த்திருக்கக் கூடும் என்ற அச்சம்தான் என்னை அப்போது முழுமையாக ஆட்கொண்டிருந்தது. மேலும் இரண்டு மூன்று லோட்டா நீரை விழுங்கிவிட்டு, நேரத்தைக் கடத்துவதைப் போல கழிவறைக்குள் கொஞ்சம் தஞ்சமிருந்தேன். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கடந்து, ஹாலுக்கு வந்தபோது கங்குலி-டிராவிட் இணை ஏதோ உலக சாதனை ரன்குவிப்பு நிகழ்த்தியதாக எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். எவா டிவியைப் பார்த்தபடி, கடைக்கண்ணை என்பக்கமாக உருட்டினாள். நான் வந்தமர்ந்த அடுத்த பந்தில், சச்சினுக்கு ஸ்டம்ப் எகிறியது. எல்லோரும் அமைதியானபோது, எவா மட்டும் சிரிப்பைத் தாளமுடியாமல் வாயைப் பொத்திக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தாள். அவளும் என்னை காலி செய்துவிட்டிருந்ததின் சிரிப்பு அது.

‘அறிவிருக்கா நாயே? கிச்சன்ல வந்து அப்டி பண்ணிட்டு போயிட்ட..’ அடுத்த நாள் மதியம் வலுக்கட்டாயமாக அந்த தருணத்தைப் பேச்சில் கொண்டுவந்தேன். அவள் எப்படியும் மேற்கொண்டு அதைப் பற்றி பேசவோ, என்னைப் பேசவிடவோ செய்யமாட்டாள் என்றுதான் நினைத்தேன்.

‘என்ன அறிவு பத்தல எங்களுக்கு? உங்க டைட்டானிக் ஹீரோயின் மாதிரி கிஸ் பண்ணனுமோ?’ எனக்கு அடிவயிற்றில் ஏதோ கவ்வியது போல இருந்தது. ஒரு விதத்தில், அவள் இத்தனை பகிரங்கமாக பேசியது கொஞ்சம் மெலிதான அருவருப்பாகக்கூட இருந்தது. அசடுவழிவதைத் தாண்டி எதுவுமே எனக்கு பேச வரவில்லை.

கோடை விடுமுறையின் எஞ்சிய அவ்விரு வாரங்கள் முழுக்கவே எனக்கு மட்டும் குளிரடித்துக் கொண்டிருந்தது. உலகின் சகல சந்தோஷங்களும் வந்து என்னிடம் சேர்ந்து கொண்டதாக தோன்றிய நாட்கள் அவை.

கிடைத்த வேகத்தில், கிடைக்கப்பெற்றதை இழந்துவிடும் ராசி எனக்கு இருக்கிறது. அந்த மாதக்கடைசியில் வாடகை வாங்க வந்த குடியிருப்பின் மேலாளர் சொல்லித்தான் எவாவின் குடும்பம் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தோடு வீட்டை காலி செய்யப் போகிறார்கள் என்று தெரியவந்தது. ரோஸ்லின் அத்தைக்கு, அம்மாவைத் தவிர யாருடனும் நெருக்கமான சினேகம் கிடையாதுதான். இருந்தும், அம்மாவுக்கும்கூட அவர்கள் வீட்டை காலி செய்யப்போகும் விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை.

‘எனக்கே என்ன செய்யப்போறேன்னு தெரியாமதான் இருந்தேன்.. நாலு மாசமாதான் அவரும் மறுபடியும் ஒன்னா இருக்கலாம்ன்னு பேச ஆரம்பிச்சாரு. ஒருவாட்டி ஸ்கூள்ல கூட வந்து பாத்துட்டும் போனாரு..’

‘அவரும் இங்கயே வந்து இருந்துட்டா என்ன?’

‘எல்லாரும் எல்லாமும் பேசியாச்சு இங்க.. அவரு இந்த ஊரே வேணாம்ங்கறாரு.. கேட்டு வாங்கி புனேக்கு மாத்தலாயிருக்காரு இப்ப.. அங்கயே செட்டில் ஆகலாம்ன்னு யோசன.. பாக்கலாம்.. எனக்கும் அங்கவொரு க்றிஸ்டியன் ஸ்கூள் வேக்கன்ஸிக்கு பேசிருக்காரு..’

‘இங்க ரிசைன் பண்ணியாச்சா? எவாக்கு ஸ்கூல் டீசிலாம்’ அதுவரைக்கும் மூன்றாவது மனிதனாக இந்த உரையாடலைப் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவளது பெயர் வந்ததும் கண்கள் பெருகிவிட்டன. மேற்கொண்டு அவர்கள் பேசுவதில் எனக்கு எந்த நாட்டமும் இல்லை. எவாவைப் பார்ப்பதற்காக எழுந்து அவர்கள் வீட்டிற்கு போனேன். வாசலில் நின்று சுந்தர் அம்மாவிடம் எவா பேசிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் இமைகளைத் தாழ்த்திக்கொண்டாள்.

‘உனக்கு எப்ப தெரியும்?’ சுந்தர் அம்மா போனதும் கேட்டேன்.

‘ஏன் இப்போ.. நா அழனுமா உனக்கு?’

‘சொல்லு.. எப்ப தெரியும்?’

‘கொஞ்ச நாளாவே.. அம்மாவ வந்து அப்பா ஒன்ஸ் பாத்துட்டு போயிருக்காரு.’

‘உன்ன பாக்கவே இல்லையா? நீ மேஜரானது தெரியும்ல அவருக்கு.. அதுக்குக்கூட எதும் பேசலயா?’

‘ப்ளீஸ்..’ – ‘நம்மைப் பற்றி மட்டும் பேசலாம்’ என்று அறிவுறுத்தும் ‘ப்ளீஸ்’ அது.

‘பழைய மாதிரி பேசாமலே இருக்கவேண்டிதான.. ’

இப்போதும் அப்படியே நினைவிருக்கும் புன்னகை.

‘எதுக்கிப்ப சிரிக்கிற?’

‘அன்னிக்கு நீ மொட்டமாடில தனியா நின்னப்ப.. மேல வந்தேன்ல.. அன்னிக்குதான் ஃபைனலைஸ் ஆச்சு’ சொல்லிய பின்னர் அந்த சிரிப்பு அப்படியே அவள் முகத்தில் இருந்தது. மேற்கொண்டு எதுவுமே பேசாமல் நான் திரும்பி வந்துவிட்டேன். அவளும் பின்னாலிருந்தெல்லாம் என்னை அழைக்கவேயில்லை. எந்த நேரத்திலும் சிந்திவிடக்கூடிய நிலையில் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த அவளது கண்ணீர் அப்போது நிச்சயம் கரையைக் கடந்திருக்கும்.

பிரிவின் துயரத்தைப் பூதாகரமாக்க என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்து முடித்துவிட்டாள். உள்ளிருப்பவற்றை ஒளிவுமறைவற்று உணர்த்தி, உடனிருக்கும் நாள் வரை உண்மையாய் இருந்துவிட்டுப் போக துணிந்திருக்கிறாள். எதிர்கொள்ளவிருக்கும் உண்மையை லட்சியம் செய்யாமல், எஞ்சியிருக்கும் நாட்களை அர்த்தப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு என்னை வாதையில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தாள். அவள் பிரியப் போகிறாள் என்ற நிஜத்திற்கு என்னை தயார்ப்படுத்தி கொள்வதைத் தவிர, எனக்கு வேறு மாற்று வழியில்லை. அழுவதற்கு மட்டுமே ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டேன் – அவர்கள் காலி செய்துவிட்டு புறப்படும் வரை அவளைச் சந்திக்கவே வேண்டாம் – அவளும் அதே முடிவிற்குதான் வந்திருப்பாள் போலும்.

அன்றிலிருந்து ஆறாவது நாள், நான் பள்ளி முடிந்து வரும்போது, குடியிருப்பின் வாசலில் ஒரு மினி லாரி நின்று கொண்டிருந்தது. அப்படியே எங்காவது ஓடிப்போய்விட்டு, அந்த லாரி கிளம்பியதும் வரலாமா என்று தோன்றியது. விறுவிறுவெனப் போய் வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டேன். வேலையாட்கள் சாமான்களை மாடிப்படிகளில் உருட்டி இறக்குவது கேட்டபடி இருந்தது. அந்தச் சத்தம் ஓய்ந்தபோது, ஒரு பதற்றம் பெருகி காதை அடைத்தது.

வெளியே ரோஸ்லின் அத்தையும் அம்மாவும் பேசிக் கொண்டிருப்பதாக தெரிந்தது. நடுநடுவே விசும்பல்கள் கேட்டன. என்னையும் மீறி எழுந்து வெளியே வந்தேன். என்னைப் பார்த்து ஒருமுறை தலையசைத்துவிட்டு அத்தை புறப்பட, உடன் அம்மாவும் வழியனுப்பப் போனார். பின்னால் போகலாமா? ஒருமுறை மட்டும் அவளைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம்தானே? விரும்பி அந்த வலியை ஏற்க நினைத்தேன். அதைவிட அவளுக்கும் அப்படியொரு வலியைக் கொடுக்க விரும்பினேன். அதை மட்டும் கடத்திவிட்டால் கூட ஆழ்மனம் கொஞ்சம் ஆத்ம சுகம் அடையும். யோசித்துக் கொண்டிருக்கும்போதே, செருப்புகளின் அந்த பிரத்யேக தேய்மான ஒலி, பொறுமையாக எங்கள் வீட்டை நோக்கி வருவது தெரிந்தது.

நான் சுதாரிப்பதற்குள் எவா வீட்டிற்குள் வந்திருந்தாள். சிறு வார்த்தைக்கும் கூட அவகாசமளிக்காமல் ஓடிவந்து கட்டியணைத்துக் கொண்டாள். யாரும் பார்த்து விடுவார்களோ என்ற அச்சம் எதுவுமின்றி அவளை மட்டுமே என்னால் முழுமையாக அப்போது நினைக்கமுடிந்தது. அவள் முகத்தில் அப்போதிருந்தது, புன்னகையா சோகமா என்பதை என்னால் எப்போதும் வரையறுக்க முடியாது. எதையும் யோசித்துவிட அனுமதிக்காதவள் போல, நிலுவையிலிருந்த அந்த முத்தத்தை அழுத்தமாக பதித்துவிட்டு, கண்களை மூடியபடி பின்னகர்ந்து, என்னைத் திரும்பியே பார்க்காமல் போய், காத்திருந்த வாகனத்தில் ஏறிக்கொண்டாள்.

***

மயிலன் ஜி சின்னப்பன்

தலபுராணம்

கார்த்திக் புகழேந்தி

செம்புலம்

பின்னிரவில் மேல்வானம் கண்ணுக்கு அவ்வளவு தெளிவாய் இல்லை. தென்வடக்காக வீசும் கூதலும் பொடிச் சத்தம் கூடக் காட்டாதிருந்தது. எப்போதும் ஒன்றையொன்று தள்ளிக்கொண்டும் தழுவிக்கொண்டும் வம்பளந்து கொண்டிருக்கும் பால்பிடியாத நாற்றுக் கொத்துக்களும் வயல் ஏலாவுக்குள் சுருண்டு படுத்துக் கிடந்தன. ஊருக்குள் கன்று காலிகளின் கழுத்து மணிச்சத்தம் என்றுகூட எதையும் காணும். ஒரு குடிசை, குசினி, மச்சிலையும் விட்டு வைக்காமல் குளிர் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் பெருங்குடியான் அரண்மனை வீட்டுக்குப் பின்பக்கமுள்ள தொழுவத்தின் சாணக்குழியைத் தாண்டிக் குதித்துச் சாடி விழுந்து, கும்மிருட்டுக்குள் மறைந்தான் சங்கையா.

வண்டிப்பாதையில் கடுங்கல்லை ஆரக்கால்கள் ஏறி இறங்கித் தடுமாறும் நொடிப்பொழுதுக்கும் இடைவெளி விடாத ஓட்டம். விலா வெடிக்கப் போகிற அளவிற்கு மூச்சு வாங்கியது. காட்டுத் திக்கில் தூரமாக எரிகிற தூசு வெளிச்சம் சுடலை எரிகிற திசையாகத்தான் இருக்க வேண்டும். தோளுக்கு மேலாக அள்ளி முடித்த கோடாலிக் கொண்டை அவிழ்ந்து விழுந்திருந்தது. மேல்சட்டை இல்லாத உடம்பு விசர்த்து நீர்பொங்கி வழிய, எதுபற்றிய சிரத்தையில்லாமல் திடுதிடுமென ஓடிக்கொண்டே இருந்தான்.

வெள்ளி கீழே விழத்துடிக்கும் தூரத்தில் வீராசமுத்திர ஆற்றங்கரையின் தாழம்புதர் வாடை காற்றில் மணந்தது. அரைமனசோடு ஊரைச் சலசலக்கச் செய்து கொண்டிருக்கும் ஆற்றைக் கடந்து மறுகரை ஏறினால் தலை கண்டு அறியமுடியாத விடிலிக்காடு. நத்தத்திலிருந்து பயினி இறக்குகிற ஆட்களும், பனஞ்சீவிகளும் கும்மாறமிடும் முன்னால் விடிலியைக் கடந்துவிட்டால் மிச்சமனைத்தும் மேற்படியான் விட்டவழி.

சங்கையா இப்போது நிதானத்துக்கு வந்திருந்தான். இடுப்புக் கச்சையில் இறுக்கியிருந்த குத்துவாளை இன்னொரு தரம் தடவிப் பார்த்துக்கொண்டான். பல வருசத்துப் பகை. இவ்வளவு காலம் பொறுத்திருந்து தீர்த்து முடித்ததன் எக்காளம் அவன் மனசில் பிறந்தது.

‘எய்யா எந்தத் தள்ளையடா இந்தக் காரியத்தப் பண்ணவன். அரமன ரத்தம் தரயில இப்படி ஆறா வழிஞ்சி கெடக்கே, எங்கருந்து எவன் குதிச்சானோ, அய்யோ இப்படி அக்கக்கா அறுத்துப் போட்டு பேயிருக்கானுவளே.. அறுதலிகளா, ஒங்க வமிசம் கருத்தரியுமா, ஒங்க வாச நெல நிக்குமா, பெய மக்களா நீங்க வௌங்க மாண்டிய. ஒங்க சாக்காடு நாதியத்து போவ…”

ஏரளமெடுக்கும் ஏச்சுக்குரல் ஒன்று அவன் காதுகளுக்குள் அலையாக வந்து மோதினது. சாவும் பிறப்பும்போல சாபங்களும் இந்த நாடு உண்டான நாள் தொட்டு இங்கேயே உலவிக் கொண்டிருக்கும் ஆங்காரங்கள் தான். மண் தூற்றி வீச மடிந்து விழுந்த மாடங்கள் எத்தனை. ஆனாலும் அவனுடைய பழிபாவங்களைப் புதிதாகத் தூக்கிச் சுமக்க இனி எந்த வமிசம் புறப்பட்டு வந்துவிடப் போகிறது. ஒவ்வொன்றின் பின்னாக அற்றமழிந்து போன தன் சொந்த ரத்தத்தைத் தானே அவன் கருவறுக்கவே வேண்டியிருந்தது.

ஆற்றடியில் கருவைப் போர்களைக் கொளுத்தின உமிச்சாம்பல் சங்கையாவின் காலடிபட்டு புகையைக் கிளப்பியது. இருட்டில் அங்கங்கு முங்கிக் கிடந்த கல்லுத்தேரைகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க, அருவமில்லாமல் பாறைத்தடத்தில் தாவி தண்ணீருக்குள் இறங்கினான். ஈரம்பட்டதும் பொதுமின உமிச்சாம்பல் வாசனை அந்நேரத்துக்கு அவனது அடிவயிற்றுப் பசியைக் கிளப்பிவிட்டது. வீராத்துத் தண்ணீருக்கும் விடிலிக்காட்டுப் பயினிக்கும் பந்தயங் கட்டினால் பயனி தோத்துப் போகும். ஐராவதிக்கு ஈடுகொடுத்து வடக்கு தெற்காகப் பாய்ந்தோடும் ஆறு. சுத்தி உள்ள வயல்களுக்கெல்லாம் மணிமணியாக விளைச்சல் கொடுத்து ஓய்ந்து, கிழடு தட்டி, இப்போது பள்ளத்துக்குள்ளே முட்டாங்கால் அளவுக்குத் தங்கித் தயங்கி ஊரைத் தெளிய வைத்துக்கொண்டிருந்தது.

சங்கையா இடுப்புச் சவுக்கையை அவிழ்த்து தலையில் சுற்றிக் கொண்டான். தண்ணீரைக் கைநிறைய அள்ளி வயிறுமுட்டக் குடித்துக் கொண்டிருக்கும்போது, கண் நொடிக்கும் வேகத்தில் பின்னாலிருந்து சரசரவென சத்தம். குறுக்கே பாய்கிற ஆளென்றுதான் முதலில் பரபரத்தான். மஞ்சள் பிடித்திருந்த எருக்கஞ்செடி மூட்டிலிருந்து விரியன் ஒன்று அவசரமாகத் தண்ணீருக்குள் ‘சலப்’ என்று சாடியதைக் கண்டபிறகுதான் ஒரு சின்ன நிதானம் வந்துசேர்ந்தது. கைகள் அனிச்சையாகக் குத்துவாளை இடுப்பிலிருந்து உருவி மேலுக்கு ஓங்கியிருந்ததைக்கூட அதன்பிறகுதான் கவனம் பண்ணினான்.

இதுநாள் வரைக்கும் முன்பின் தெரியாத எத்தனையோ மனிதர்களை நம்புவதற்குப் பயன்பட்டு வந்த கருவி அது ஒன்றுதான். நீளத்திலும் கற்றாழைக் கூம்புச்சாடை. ரெண்டு தரிப்பிலும் கொஞ்சமும் நெரியாத கூர். ரத்தம் ஒழுகிச் சிவந்து போயிருந்த கலாமரக் கைப்பிடியில் வளை வளையாய் நான்கு அழுத்தமான கோடுகள். அதன் முன்னும் பின்னும் பித்தளை பூண். மேல் பூணின் முனையில் வாங்காகப் பறக்கும் மூளிப் பருந்துச் சின்னம். அதன் கீழே மூன்று நட்சத்திரங்கள். உறையோடு பிணைத்து கட்டுவதற்கு ஏற்ப பொடீசான தோல் கயிறு என்று ரசித்து ரசித்து இழைத்துக் கொடுத்த கருமாரக்காரனை நெஞ்சில் எண்ணிக் கொண்டான். உயிர்களைப் பிரசவிக்கிற கைகள் தானே பகையும் உறவும் அறியாத இந்த கொலைக் கருவியையும் உண்டாக்கி இருந்தது.

எந்த ஒரு கொலைக்கருவியும் ரத்தம் பார்க்காமல் செத்துப் போவதே இல்லை. அது யாருடைய ரத்தத்தால் தன் பசியை எழுதப் போகிறது என்பதுதான் விளங்கிக் கொள்ள முடிந்திராத புதிர். அது இன்றைக்குக் குடித்தது தன் சொந்த தாய்மாமனின் ரத்தம்.

தகப்பன் இல்லாத பிள்ளைக்குத் தாய்மாமன் தானே அப்பனுக்கு அப்பனாவான். இன்றைக்கு அவன் ரத்தம் படிந்த வாளைத்தான் தண்ணீரில் அலசுகிறோம் என்கிற குறுகுறுப்போடே அடிமண்ணை அள்ளி, வாள் முழுக்க ராவினான். ராவின இடங்களில் இருந்து மறுபடியும் ரத்தம் கசிகிறது. திரும்பத் தண்ணீரில் மூழ்கடிக்கிறான். குருதி கசிந்து பெருகுகிறது. விரல்களால் மழுங்கத் தேய்க்கிறான்…. தேய்க்கத் தேய்க்க ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. முழு ஆறும் செம்புலமாகச் சிவந்து கொந்தளிக்கத் துவங்கியபோதும் வாளின் ஒழுக்கு நின்றபாடில்லை.

வலசை

பாண்டி நாட்டு பலவேசத்தம்மாளுக்கு அடுத்தடுத்து ஆறு பிள்ளைகள். தலைச்சன் பெண்பிள்ளை பிறக்கும் போதே ஆச்சுபூச்சென்று சத்தம் எதுவும் இல்லை. சந்தேகித்த மாதிரி கால்கள் நேருக்கு நிற்கிற வயசு வரைக்குமே எந்தப் பேச்சுக் குரலும் அவள் தொண்டையில் எழும்பவில்லை. லெச்சுமி என்று தாங்கித் தழுவின போதும் ஊமச்சி என்றே ஊர் அழைத்த்து. அவளுக்கடுத்தடுத்து கடேசியாக இளைத்துப் பிறந்தவன்தான் சங்கையா. ரெண்டு பேருக்கும் இடையில் பிறந்த எல்லா மக்களும் பெண் பிள்ளைகளாய்ப் போனதும் அதுகளில் ஒன்றுகூட பிழைத்துக் கிடக்காமல் பிறந்த வேகத்தில் செத்துப் போனதும் பலவேசத்தம்மாளுக்கு மீளமுடியாத கொடுங்கனவுகள். சங்கு கழுத்தோடு பிறந்த ரெண்டாமவளைப் பிறந்த மறுநாளையிலே கிடங்கு நரிகள் கூட்டமாக வந்து தூக்கிக்கொண்டு போனதென்றும், பாசிப்பூ நிறத்தில் கண் கொண்டு பிறந்தவள் கொள்ளையில் விழுந்து இறந்தாளென்றும், ஒவ்வொரு பிஞ்சுக்கும் ஒவ்வொரு கதையை வரிசைக்கிரமமாக தன் நெஞ்சுக்குள் சுமந்திருந்தாள் அவள்.

சங்கையா பிறந்த வீட்டுக்குள்ளே தான் அவன் ஐயா ஆண்டி நம்பியார், வெண்ணாவல் மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு, நாக்குத் தள்ளச் செத்துப் போனார். மருந்தும் மந்திரவாதங்கள் பண்ணிக் கொண்டிருந்த மனுசனைப் பஞ்ச காளி அப்படி ‘பொலி’ வாங்கி விட்டதாக ஊர்மந்தையில் சம்சயம் பேசிக் கொண்டார்கள். ஆனால், ஆண்டி நம்பியான் கூளிப்பேய்களுக்குச் சடங்கு வைக்கிறேன் என்று தன் பெண் பிள்ளைகளையே ஒவ்வொன்றாக அதற்குக் காவு கொடுத்துக் கடைசியில் அந்தச் சதிகளில் செத்தொழிந்து போனான் என்பது அநேகருக்குத் தெரியாத ரகசியம். ஊமச்சியாய் இருக்கவே லெச்சுமி பிழைத்திருந்தாள்.

ஆண்டி நம்பியார் செத்துப்போன சில காலத்திலே தேசாந்திரங்கள் முழுக்க கொடும் பஞ்சம் வந்திருந்தாடியது. மேய்ச்சல் புல்லெல்லாம் கருகிச் சாம்பலாக, வரப்பு மண் வெடித்துக் கிடக்க, குளத்தடிகளில் ஆடுமாடுகள் தண்ணீருக்குத் தவித்துச் சுருண்டு விழுந்து கிடந்தன. வலசுப் பாதைகளிலும் ஒரு குன்னி குருணி தண்ணீர் காணும். ஆறு பட்டுபோன கதையைக் கூத்தாகச் சொல்லி கோடாங்கிகள் வீதிப் பிச்சைக்கு வந்துவிட்டார்கள். கந்தலும் கடவங்களுமாகச் சுமந்துகொண்டு நாடுதாண்டி போன ஆணும் பொண்ணும் பிள்ளைகளை எங்காவது மடங்களில் விட்டுப் போக வழிகிடைக்காதா என்று ஏங்கினார்கள். எந்த திசைக்கும் வழியற்ற கூட்டம் பசி தாழாமல் சாணக் குழியில் செத்து விழுந்து கிடந்த மாட்டின் எலும்பை வெட்டி எடுத்துக் கொண்டுபோய் சுட்டு வைத்துத் தின்றது.

சுள்ளியும், களையும், கிழங்கு, கொட்டை, வேர்களையும், தோண்டிப் பறித்து நாக்கடியில் ஊற வைத்து பசியை மயக்கியது. எலிவளைகளும் எறும்பு புத்துகளும் அங்கோல கங்கோலமாகச் சிதைந்து கிடக்க இனி எதற்கும் வழியில்லை என்றான பிறகுதான் பலவேசமும் ஊரைக் காலி பண்ணச் சித்தமானாள். அமாவாசை முடிந்த மறுநாள் லெச்சுமியை ஒரு கையிலும், சங்கையாவை இடுப்பிலுமாகக் கட்டித் தூக்கிக்கொண்டு மேற்றங்காட்டை நோக்கி நடையாக நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

வாபாட்டுப் பாடிக் கொண்டு எல்லா சனமும் கிழக்குச் சீமைக்கு நடக்கும்போது, மேற்கே மலங்காட்டை நோக்கி நடந்தவளை, ’பாதகத்தி இந்தப் பிள்ளைகளச் சாவடிக்கத்தான் போறா’ என்றே காவல் தெய்வங்கள் கூட கண்மூடிக் கொண்டன. அதுகள் கண்மூடிக் கொள்வது ஒன்றும் புதுசுமில்லை. பாண்டிப் படைகள் இதே பாதையில் புகுந்துவந்து மனுச மக்களை அட்டூழியம் பண்ணிக் கட்டி இழுத்துப் போனபோதும், பாண்டிகளோடு சண்டைகட்டிப் போராடி செத்துப் போனவர்களின் சவமெல்லாம் இந்த வீதிகளிலே இறைந்து கிடந்தபோதும் இப்படியேதான் இந்த தெய்வங்கள் கண்மூடிக் கொண்டிருந்தன.

மலைக்கு அந்தப் பக்கத்தில் ஆயி, அப்பனுமாக வேடுவம் பண்ணிக் கொண்டிருந்த குடிபிறப்பினர் யாரும் திரும்ப வந்தவழி ஏறி வாழ்க்கை கண்டதில்லை என்கிற கதையை வாழ்நாள் முழுக்கக் கேட்டிருந்தும் எந்த நம்பிக்கையோ பலவேசத்தை மேலேறி வா என்றழைத்திருந்தது.

நீண்ட மலையேற்றத்தில் வெகுகாலம் பிந்தி, தன் பிறந்த மண் எல்லையில் கால்மிதித்த பரவசம் எதையும் அவள் பூசிக் கொள்ளவே இல்லை. கைக்குக் கையாக பொதிகளை மாற்றிக் கொண்டே மூணாம் நாள் பகல் பொழுதில் மலைக்கு அந்தப் பக்கத்தை அடைந்தார்கள். பாச்சை பிடித்துக் கிடந்த குட்டைகள் தாகம் ஒடுக்கியது. குரங்கு கூட்டம் கடித்து வீசிப் போட்ட மாம்பிஞ்சுகள் பசி முறித்தது. வழிகளில் பூப்பிடித்திருந்த வரகுக் குருணையைச் சவைத்துக் கொண்டே சேர்விலார் மலையைத் தாண்டி ஊர்களின் தலைவாசலில் இறங்கியிருந்தார்கள். அவ்வளவு காடும் நடந்து களைத்திருந்த லெச்சுமி அன்றைக்குத்தான் இனி நிச்சயம் பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையில் அம்மையின் மடியில் நிம்மதியாகத் தலை வைத்தாள். மாரில் மகனையும் மடியில் பிள்ளையையும் தாங்கிக் கொண்டு, தன்னுடைய அந்த சொந்த மண்ணின் பேறுகளை வாயெடுத்துப் பாட ஆரம்பித்தாள் பலவேசம்.

கரை புரண்டு ஓடுமம்மா கொத்தாளன் ஆளும் பூமி
நெளிநெளியா ஓடுமம்மா நீலவண்ணத் தண்ணியெல்லாம்
சுழிசுழியா ஓடுமம்மா சுத்தமான ஆத்துத்தண்ணி
வெயிலடிக்கும் நேரத்திலே வெள்ளிபோல மின்னுந் தண்ணி
குடிதண்ணியும் குளிதண்ணியும் கண்ணே
கொடம் கொடமா எடுப்போமடி
தண்ணிக்கொரு தீட்டுமில்ல கண்ணே
தடுக்க ஒரு நாதியில்ல
பாப்பானுக்கும் பச்சத்தண்ணி கண்ணே
பறையருக்கும் பச்சத்தண்ணி
கோதையுங் கோவலனும் கண்ணே
கோரிக்கொள்ளும் பச்சத்தண்ணி
தண்ணியக் கடந்தாக்கா தங்கம்போல வெளையும் பூமி
தாமனே தாய்மாமன் தலையேத்து ஆளும் பூமி…

லெச்சுமியும் சங்கையாவும் பாட்டிலே சொக்கிக் கிடக்க, பலவேசம் ரொம்ப நேரமாக ஊரின் கடைக்கோடிப் புள்ளியாய் தீ வெளிச்சம் தெரியும் தன் அண்ணன்மார் அரண்மனையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

சீர்பாகம்

வெயில் விழாத கொட்டாரத்து வாசலில் கட்டுக்கட்டாக நிற்க வைக்கப்பட்டிருந்த குதிரைகளின் கனைப்பொலிகளைத் தாண்டி, அச்சமும் தவிப்புமாக தன் அண்ணன் முத்தையனின் முன்னால் பிள்ளைகளோடு நின்றுகொண்டிருந்தாள் பலவேசம். பலவேசத்தின் அண்ணன்மார் முத்தையன் கையில்தான் அந்த வட்டாரத்தின் ராஜாங்கம் இருந்தது. அண்ணன் பேரைச் சொல்லி தவிட்டையாவது இங்கே தான் தின்று கொள்ளலாம். தன் பிள்ளைகளுக்கு அரையரிசி குருணையாவது கிடைக்கும் என்கிற அவளது கடைசி நம்பிக்கை வீண்போகாதவாறு அண்ணன் பெஞ்சாதி குமராத்தாளும் புன்முகம்காட்டி பிள்ளைகளை உபசரித்தாள்.

அண்ணனும் தங்கையுமாக இருதாய் வயிற்றில் பிறந்திருந்தும் அருகருகிருந்து வளர்ந்ததில்லை. அங்க லட்சணங்கள் அப்படியே உரித்து வைத்திருக்கும்போது யார் வந்து எந்த பந்தத்தை விளங்க வைக்கணும்? பராரியாய் வந்து நிற்கும் தாயும் பிள்ளைகளையும் பார்த்த மாத்திரத்திலே முத்தையன் அவர்களுக்குப் பரிபூரண ஆதரவு தரத் துணிந்துவிட்டார். இடைக்குடியிலே அவர்கள் தங்க ஒரு விடுதி ஒதுக்கித் தந்து, விதவைக் கோலம் கொண்டிருந்தவளுக்கு அண்ணமார் கோடியும், விளக்கெரிக்க ஒரு வரையாடும், பாய் படுக்கைகளும், பண்ட பாத்திரங்களும் கொடுத்து, கேப்பையும், புல்லரிசியும், புளி, மிளகுச் சேர்மானங்கள் என்று முடிச்சு முடிச்சாய் கழுதைகளில் கொண்டு வந்து இறங்கச் செய்தார். அப்போதுதான் ராசாவானாலும் அண்ணனாய் நின்று அரவணைக்கிறான் என்று முதன்முறை பெருமை பூத்தாள் பலவேசத்தம்மாள்.

முத்தையன் பெஞ்சாதி குமராத்தாளும் நல்ல குணம் மாதிரிதான் தெரிகிறது. வயசும் ரொம்பக் குறைதான் என்பதைப் பார்த் கணமே கணித்துவிடலாம். ரொம்ப காலம் கலியாணம் பண்ணாமலிருந்து இப்போ கொஞ்சக் காலம் முந்திதான் மணமுடித்தார் என்று பலவேசத்தம்மாள் காதுக்குச் சேதி வந்தபடி இருந்தது.

அண்ணன் பாடு செழிப்பாய் இருந்தாலும், அளவோடு எடுத்துக் கொள்வது தான் தனக்கு நல்லது என்று பார்த்துப் பரிதவித்து எதையும் பெற்றுக் கொண்டாள் பலவேசம். தன்பலத்துக்குக் காட்டு மூங்கிலைப் பிளந்து, கல்லடுப்பும், விறகும் கூட்டி கேப்பைக் களியும் கீரையும் கிண்டிக் கொண்டாள் பிள்ளைகளுக்கு. கழுதைகளைப் பத்திக் கொண்டு ஊர்வேலி வரை நெருங்கிப்போய் பாதை பொட்டுக்களைத் தெரிந்து கொள்வதும், கிழங்கறுத்து, கொள்ளு பறித்து, கொஞ்சங் கொஞ்சமாக சக்கரத்தை உருட்டினாள். எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தபோது தான், லெட்சுமி பூப்பு கண்டுவிட்ட சேதி சொல்ல அரண்மனைக்குள் முதல் தடவையாக உள்நுழைந்தாள்.

தங்கச்சி மகளுக்குச் சீர்செனத்தியோடு பாக்கும், புதுச்சேலையும், பொன் சவிரியும் கொடுத்தனுப்பினார் முத்தையன். வந்தது சீதனமும் சவிரியும் மட்டுமா என்ன? ‘தனக்குக் கலியாணம் ஆயிருந்தாலும் இதுவரைக்கும் வாரிசு ஒன்னும் உருசு கொள்ளலே. ஆகையால், உன் மகளை நான் கலியாணம் செய்துகொள்ள உத்தேசித்திருக்கிறேன். இதனால் நம் ரத்த பந்தமும் விட்டுப் போகாமலிருக்கும்’ என்று மலையை முழுங்குவது போல சேதியையும் கூடே அனுப்பி வைத்திருந்தார். கொற்றத்து இடி தன் தலைமேலே நேராக்கில் வந்து விழுந்தது போல நொடிந்து போய் விழுந்தாள் பலவேசத்தம்மாள்.

சங்கையாவுக்கு அப்போது ஒன்பது வயசுக்குக் கொஞ்சம் குறைவு. அக்காளுக்கும் மாமனுக்கும் அறுதலிக் கலியாணம். யார்யாரோ முன்னின்று எடுத்துச் செய்கிறார்கள். அம்மைக்கு என்னமும் சொல்லி யாரையும் தடுத்துவிடக்கூடிய பாக்கியதை கூட இங்கு கிடையாது என்பதெதுவும் அவன் அறியா வயசு. பலவேசத்தம்மாள் வாய் வார்த்தை சொல்லத் திராணியற்று தனக்குள்ளே தவித்துக் கிடந்தாள். பிள்ளை வாழ்வு சீரழியப் போகிறதா சீமாட்டியாக மாளிகை புகப்போகிறாளா என்று எதுவும் தெரியாமல் இருந்தது அவள் பாடு.

சித்திரை மாசத்திலே சீர்பாகம் தேதியிலே ஞாயிறு திங்களுக்கு நல்ல புதன்கிழமை நல்ல தேதியென்று சொல்லி முகூர்த்தம் முடிவானது. முடி மன்னருக்கும், அம்பத்தாறு அரசருக்கும் அருமையாய் சீட்டெழுதி அழைப்பு அனுப்பினார் முத்தையன். வாழை மரம் பிளந்து வாசலெல்லாம் பந்தல், தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல். ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் தங்கள் வீட்டுக் கல்யாணமாகக் கொள்ள ஊரே தூள் பரத்தினது போல் இருந்தது. இளம்பிள்ளைகள் வந்து மஞ்சள் குத்திக் கொண்டாட்டமாகச் சடங்கை ஆரம்பித்தபோது ஆர்ப்பாட்டமாய் வந்திறங்கினார் மாமன் முத்தையன். ஏயப்பா என்ன தோற்றம் அது.. கிழ யானையின் கனத்த காலடித் தடம்போல் மண்ணில் பதியப் பதிய நடக்கும் இந்த பெரிய மானுடத்துக்கும் எலிக்குஞ்சு போலிருக்கும் தனக்கும் இன்றைக்குக் கலியாணம் என்று பதபதைப்பதா அல்லது இந்தப் புத்தம்புது அலங்காரங்கள் தந்த கௌரதையையும், சட்டி சட்டியாக நிரப்பியிருக்கும் பலகாரங்களையும் எண்ணிக் குதுகலிப்பதா என்ற எந்த மனமுடிவுக்கும் லெச்சுமி வரத் தயாராயிருக்கவில்லை.

ராத்திரி நேரத்துக்கு ஊர்ப்பாடுகள் வந்துசேர, வெட்டவெளிப் பந்தலில் கலியாண கச்சேரி களைகட்டத் துவங்கியது. பால் உலையிலும், புளிநீரிலும், கரும்பஞ் சாறிலும் சோறுபோட்டு சமைத்த புகை ஊரை உசுப்பேற்றியது. கள்ளுப் பதக்கு, கதலி, பொங்கல் கறி, எள், அவல், பொரி, வெல்லம், பலாச்சுளை என்று உபசரிப்புத் தடபுடலாக இருந்தது. சந்தனமும் மஞ்சளுமாக வந்தமர்ந்திருந்தார் மணமகனாக முத்தையன். தந்தூபி ஊதிகள் முன்னால் வந்து கலியாணச் செருக்குகளைப் பாட ஆரம்பித்தார்கள்.

‘சந்திர சூரியர் தானவர் வானவர் முந்தியோர் தேவரும் முனிவரும் காத்திட நல்லக் கலியாணம் நடந்திடச் செய்வாரே! இந்தப் பெண்ணும், மாப்பிள்ளையும் நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும், வேரும் கொழுந்தும் வில்வப் பத்திரமும், தண்ட மாலை, கொண்டமாலை தானணிந்து, ஆடை ஆபரணம் அலங்கரித்து, வெற்றிலைப் பாக்கும் வீட்டுப் பேழையில் நிறைநாழி நெல்லுமெடுத்து, நாட்டிலுள்ளோர் சபைக்கு வர, தாயிடம் முறைகேட்க, தம்பியிடம் வழிகேட்க, உரும்பு துடும்படிக்க, ஊர்மேளம் பறையடிக்க, கொம்பு துத்தூரி, மல்லாரி, திமிரித்தாளம், பம்பை, பேரணி எல்லா அமளிகளும் ஒலிக்க ஒலிக்க வெள்ளைக்குடை சுழல சுழல, வெண் சாமரம் விசிற விசிற விருதுகள் சுற்றி, தீவட்டிச் சகிதமாய் கட்டுக தாலி எம் மன்னவரே!’ என்று முழங்கியபோது மைத்துன்னாக சங்கையா முன்னின்று எடுத்துக் கொடுத்த கழுத்து மாலை லெச்சுமிக்கு அணிவிக்கப்பட்டது. அடுத்த கணமே அரிசிப் பொன்னால் கோர்த்த தாலி மகள் கழுத்தில் ஏறியிருக்கும் என்பதை மூளிகள் கூட்டத்திடையே நின்றிருந்த பலவேசத்தம்மாள் உணர்ந்து கொண்டு கண்ணீர் வடித்தாள்.

வேடுவம்

ந்த ஊருந் தண்ணியும் இனி நம்மளை வாழ வைக்கும் என்று நம்பினாளோ அதே வெள்ளத்தில் விழுந்துச் சாகலாம்போல எரிந்தது நெஞ்சு. எத்தனைக் கொலை பாதகக் கூட்டுக்குள் அதுவும் தான் பெத்த ஒரே பெண் பிள்ளையைக் கேப்பார் பொறுப்பார் இல்லாமல் தள்ளி விட்டுவிட்டோம் என்ற ஆத்தாமை அவளைப் பலியாய் சுட்டது. தாயைப் பிரிந்த கன்றுக்குட்டி போல மாளிகைக்குள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட மகளை இனி எங்கு எப்போது காண்போம் என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கொட்டார வாசலில் நெடுந்துயரோடு நின்ற நாட்கள் தான் எத்தனை எத்தனை. அல்லும் பகலும் அழுதழுது ஆற்றிய கண்ணீரோடு யாருக்கும் எந்தச் சொல்லும் சொல்லாமல் திரும்பவும் கால்நடையாய் இருட்டுப்போக்கில் வேலி எல்லையைக் கடந்து கொண்டிருந்தார்கள் தாயும் மகனும்..

அம்மைக்கும் தம்பிக்கும் எப்போ வருவார்கள் தன்னைப் பார்க்க என்று பரியாய் பரிதவித்த லெச்சுமிக்கு பிறகு அவர்கள் குறித்த எந்த உண்மையும் தெரியாமலே போனது. இளம்பிராயத்தில் கண்ணுக்கு முன்னால் அய்யா தூக்கில் தொங்குவதைப் பார்த்தவள். இன்று அம்மையும் தம்பியும் இந்தத் திக்கு தெரியாத காட்டுக்குள் தன்னை தள்ளிவிட்டுவிட்டுச் சந்தோசமாக இருப்பார்கள் என்று வாய்வராத வார்த்தைகளால் உள்ளமொடிந்து ஓங்காரமாய் கத்தி அவர்களைச் சபித்தாள். அவளது எந்தத் தவிப்புக்கும் ஒரு சிறு குறிப்பும் கொடுக்கமாட்டாமல் பெரும் மலைபோல் எதிரில் அமர்ந்திருந்தார் முத்தையன். புராதனமான அவரது ஆஜானுபாகு அத்தனையும் அசந்துபோய் தோல் வற்றி, தொடை வற்றி, குருக்கத்திப் பிஞ்சாய் நரைத்த மார்மயிர்களோடு வாய்பிளந்து சிரித்து அவளைக் கிட்டே அழைத்தார்.

அவருடைய இந்த ராசா வாழ்க்கை எல்லாம் ஒருகாலத்தில் துள்ளித் திரிந்த வேகத்தில் புத்தி நிதானித்துச் செயல்பட்டதால் அவர் மடியில் வந்து விழுந்தவை. கையில் தடிபிடித்துக் கொண்டு மேட்டாங்காட்டுக்குள் வேட்டுவம் பண்ணவும், வெட்டு மரங்களைக் களவெடுக்கவும் போகும் கூட்டத்தாருக்கு ஊடே முத்தையன் சாடி வந்தால் அவர் நடைமட்டும் துண்டாகத் தெரியும். தண்டங்கீரை இலை மாதிரி உடம்பெல்லாம் தடித்த நரம்புகள். தண்ணீருக்குள் சாடுகிற பாம்பை தலக்’கென்று கொண்டையிலே குறிபார்த்து அடிக்கிற கூரான பார்வை என்று களேபரமாய் இருப்பார். மலங்காடு மொத்தமும் திருவாங்கூர் ராசமார் ஆளுகைக்குள் இருந்த போது, ஒருதடவை மாவேலிக்கரை படைக்காரர்களிடம் கூட்டமாய் அகப்பட்டுக் கொண்டார் முத்தையன்.

ரெண்டு தரப்புக்கும் பலத்த சண்டை. எல்லாபேரும் சிறைப்பட்டுவிட, ராத்திரியோடு ராத்திரியாய் படைத் தலைவனின் குதிரையையும், அவன் அணிந்திருந்த வெள்ளிக் காப்பையும், சுடு தோக்கையும் பறித்துக் கொண்டு, போர்ச்சேவல் போல அடிபட்ட காலை கெந்திக் கெந்தி நடந்து தான் மட்டும் தப்பித்து வந்துவிட்டவராம். தன் படைகளையே மறித்து ஒருவன் தப்பித்துவிட்ட விபரம் கேள்விப்பட்ட திருவாங்கூர் மகராசா மறுவாரமே இவரைத் தேடிக் கண்டுபிடிக்க ஆளனுப்பி இருக்கிறார். காலடி காயம் ஆறி வந்த முத்தையனைத் தன் ராசாங்கத்தில் கூட இருந்து இனிமேல் தனக்குக் காவல் காக்கும்படி கேட்டுக் கொண்டார் ராசா. ராசாவின் வேண்டுகோளை மறுத்து, காட்டுக்குள் தனக்கு ஒரு எல்லை கேட்டு வாங்கி, தன் கூட்டத்தாரையும் தன்னோடு விடச்சொன்னால் தான் பறித்த குதிரையையும், காப்பையும், கொத்தபிடி சுடு தோக்கையும் தனக்கே தந்துதவினால் ராசாங்கத்தின் மேலெல்லை வரைக்கும் தாமே காவல் பார்த்துக் கிடப்போம் என்று நியமனம் கேட்டிருக்கிறார். அப்படி ஒரு தைரியம், அதனுள்ளே ஒரு நிதானம்.

அன்றைக்கு முதல் மேலெல்லை காட்டுக்குள் தனக்கென்று மாவேலி நிலம், மகராசா புலிவேட்டைக்கு வரும்போதெல்லாம் அவருக்குப் பாதுகாப்பு என்று ராசாங்கத் தொடர்புகளில் வலுசாலியாகிவிட்டார் முத்தையன். கூதல் எட்டிப் பார்க்கும் காலத்தில் மகராசா வந்து மேல்மலை கொட்டாரக் கோட்டையில் தங்குவார். அப்போதெல்லாம் அவருக்கான வசதிப்பாடுகள் அத்தனையும் முத்தையன் தரப்புதான் பார்த்துக் கொண்டது. ‘எரியுதே எரியுதே என் கொள்ளி’ என்று பெத்தவர்கள் துடிதுடித்தபோதும் அவர்களின் பெண் பிள்ளைகளைக் காவிக் கொண்டுவந்து ராசா மடியில் போட்டு, அந்த உபகாரங்களுக்குப் பரிகாரமாக பொன் பொருளும், நிலபுலன்களும், நிர்வாகக் கொட்டாரங்களும் தனக்கென்று சேர்த்துக் கொண்டார். நாளாவட்டத்தில் தாம் களவெடுத்த காட்டுக்குக் கீழே தன் குடிசனங்களைக் கொண்டுவந்து அமர்த்தி, ராசாங்கப் பதவிகளும் வாங்கிக் கொண்டு பெருங்குடிக்காரனாய் மாறிப்போனார்.

இராவானால் இலுப்பைச் சாராயம். எதுக்களித்து படுக்கைக்குப் போகும்போது குளிருக்குக் கட்டிக் கொள்ள பெண்ணுடம்பு. மிடுக்கினால் மடிந்து விழும் பொடித் தலைகள். மடக்கின சாதிகளுக்கெல்லாம் பொஞ்சாதி. சொத்துக்கும் சுகத்துக்கும் பஞ்சமேயில்லை முத்தையனுக்கு. ஆனால், அப்படியும் இப்படியுமாய் வாழ்ந்தவருக்கு வாரிசு இல்லாமல் ஏன் போனது. அந்த ஒரு துரதிஷ்டம் தான் அவரை மாடாய்ப் போட்டு ஏறி மிதித்து உழட்டியது. எங்கெங்கெல்லாமோ எகிறி விழுந்து பார்த்தார். ம்ஹூம் ஒரு கொழுந்து கூடத் தளிர்க்கவில்லை. பொண்டாட்டியாய் வந்தவளோ எரியும் நெருப்பு போல ச்சீ மனுசா என்று துப்பாத குறைக்குப் பேசிவிட்டாள். அவள் முகத்தில் கரிபூசவாவது ஒரு பிள்ளையைக் கொண்டார வேண்டும். புத்திர துயரம் வந்து அவரை ஒரு ஆட்டிய ஆட்டில் தான் வந்துநின்ற அன்றைக்கே லெச்சுமியியை தன் மனசுக்குள் வரித்துக்கொண்டார்.

கட்டாந்தரை சுருளில், கன்னி நிலத்தில் விளைந்த கதிர்கட்டு போல லெச்சுமி சுருண்டு கிடந்தாள். சாராய மூச்சுக் காத்தும், சடை சடையான உடல் திணவோடும் அவளை எக்கிப் பிடித்து உலுப்பினார் முத்தையன். மூப்புபின் புழுதி அவர் முகமொட்டப் படிந்து கிடந்தது. கண்களில் இருந்த காமத்திற்கு மட்டும் வயது என்ற ஒன்றில்லை. வடலி வளர்த்துக் கள்ளுக் குடிக்கக் காத்திருந்தவன்போல இத்தனைக் காலமும் மலடன் என்று கிடைத்த அவச்சொல்லுக்கு இவள் மூலமாக ஒரு பதில் கண்டாக வேண்டும் என்கிற வெறி முத்தையனுக்கு. வயதின் நடுக்கமும் புதிய பரவசத்தின் தளர்ச்சியும் அவருக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், சுருட்டுப் புகையை உள்ளிழுத்து விடும்போது, கொடுக்கும் கமறல் சத்தத்தில் கூட எந்தப் பதற்றத்தையும் காட்டாமல் அவளை ஒரே சுண்டில் கிட்டே இழுத்துப் போட்டார்.

லெச்சுமி அத்தரும் அஞ்சணமும் கொண்டை ஊசிகளும், தனந்தூக்கிகளும், கண்கட்டி வித்தை காட்டும் மேல்பூச்சு என்று எதுவுமே தேவைப்படாத பாண்டி நாட்டுத் தேக அழகி. வயதைத் தோற்கடிக்கும் அவள் வாளிப்பும் வெட்டிவேருடன் தாழம்பூ கலந்தது போல வாசனை வீசும் அவள் உடலும் ஆளைக் கிறுகிறுக்கச் செய்துவிடும். தன்மீது விழுவிருந்த முதல் ஆணணைப்பின் மூர்க்கத்தில் வெளிறிப் போயிருந்தவளை அறுவடைக்குக் காத்திருக்கும் கதிரை அள்ளி தோளில் போட்டுக் கொள்வது போலத்தான் கையாண்டார் முத்தையன். பிறகு வந்த நாட்கள் ஒவ்வொன்றிலும் தசைகட்டிய மார்பில் பொங்கின மருட்சிகள் யாவும் நீங்க, பனிச்சை மரத்தை எருக்கஞ் செடிகள் சூழ்ந்து பாழ்படுத்திப் போட்டதுபோல களையிழந்தே கிடந்தாள் எந்நேரமும். அச்சமும், இரைப்பும், அலறலும், பயமும் மண்டிய அவளது கிடப்பை உள்ளூர ரசித்துக் கொண்டிருந்தாள் முத்தையன் பெஞ்சாதி குமராத்தாள்.

சாம்பவம்

லையாள நாட்டின் குமரங்குடி பொற்றையடிக் குன்றத்தைக் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது திருவாங்கூர் அரச பல்லக்கு. திடீரென விளக்குக் கிண்ணங்களும் , தீப்பந்தங்களும் அணைந்துபோய் கும்மிருட்டில் தகித்து நிற்கிறது பல்லக்குப் பரிவாரம். வெளியில் எட்டிப் பார்த்து என்ன விபரம் என்று தெரிந்துகொள்ளத் தன் தளவாயை அழைக்கிறார் திருவாங்கூர் மகராசா.

“பந்தம் பொழிஞ்ஞல்லோ குஞ்சுராமா”

“பனிபெய்யு நுண்டே தம்புரானே”

“இது விதியோ சதியோ குஞ்சுராமா’ என்று ராசா விளித்துக் கொண்டுருந்த தருணத்தில் சரியாய் அவரது விலாவைச் சீவிக்கொண்டு வெளியேறுகிறது தறவாடுகளின் வல்லீட்டி முனை.

சுற்றிலும் கண் மாளும் இருட்டு. பல்லக்கிலிருந்து, மூச்சைப் பிடித்துக் கொண்டு கீழே குதிக்கிறார் மகராசா. தறவாடுகள் எல்லாப் பக்கமும் சூழ்ந்து நிற்கிறார்கள். ராசா அங்குமிங்கும் பார்க்கிறார். கீழ்தலையில் அண்ணாந்து பார்க்கிற உயரத்துக்கு எழுந்து நிற்கிறது பொன்குன்று. குன்றுக்குக் கீழே பரந்துகிடந்த சமவெளியெங்கும் நிலை தப்பிய அமளி. ராசாவுக்குத் தசை வலி பின்னுகிறது. மூச்சைரைப்பு குறைந்தால் தேவலாம். துணைக் காவலாட்கள் எவரின் தீவர்த்தி ஜோதியும் கண்ணில் தென்படவில்லை. அலுக்கமாகச் சத்தம் போட்டாலும் அது எதிரிக்கே தான் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடும். முடிந்தவரை இருளில் பம்மிப் பதுங்கி ஒளிகிறார் மகராசா.

அன்றைக்கு அந்த ராசாவை கமுகுப் பாளையில் அமுக்கிப் போட்டு தறவாடுகளின் வாசனையில் கூடப்படாமல் மறைத்துக் காப்பாற்றிக் கொடுத்தவர்கள் குமராத்தாளின் மூப்பர்கள். சாம்பவக் குடிகளான அவர்களின் மூத்தவர் மகராசா போல உடை தரித்துச் சென்று, ராசாவுக்குப் பதில் தன்னுயிரைத் தந்து தறவாடுகளை திசைதிருப்பி, அவர்களது தேடுதல் வேட்டையைத் தற்காலிகமாக நிறுத்தி, ஒரே ராத்திரியில் என்னென்னவோ செய்து ராசாவைக் காப்பாற்றின விசுவாசத்துக்காக வாரிக்கொடுத்த சொத்துக்களின் பூமியில் தான் குமராத்தாள் செல்வச் செழுமையோடு ஏழு அண்ணன்களின் தங்கையாகப் பிறந்திருந்தாள். அந்த கன்னியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முத்தையன் ஆசை கொண்டது காலத்தின் சூது.

அண்ணன்மார் அரவணைப்பிலும் மிளாவாகத் துள்ளிக்கொண்டு திரிந்தவளைத் தான் கண்டு மயங்கிய ஒரே ராத்திரியில் குதிரையில் போய் கொள்ளையிட்டு, அவள் காடுகளை எல்லாம் அழித்து, சொத்துக்களைக் கொள்ளையிட்டே அவளைத் திருமணம் செய்துகொண்டிருந்தார் முத்தையன். உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் குடல் சரியச் சாகக் கிடக்க தான் வாழ்ந்த மலையடியும் காடும் நெருப்பில் கருக, கை வறண்டு, கால் வறண்டு, கண்ணீர் சுரப்பு மறந்து கதறித் துடித்தவளை தன் கொட்டாரக் கோட்டைக்கு வரும் பாதையில் வைத்தே அங்கலமங்கலமாக்கின அவன் பாவங்களுக்கு பலிமுடித்து அவனை நிர்கதியாக்கித் தீர்வதென்ற இறுமாப்பு அவளுக்குள் எப்போதும் குடிகொண்டிருந்தது.

சூலிக்குடம்

லெச்சுமி வயிற்றில் தங்கிய கரு கலைந்து கெட்டது என்று குமராத்தாள் வருத்தம் கொண்டுவந்து சொன்னபோது, முத்தையனுக்குத் தாளவில்லை. இத்தனைக் காலம் தான் சேர்த்தெடுத்த அத்தனை சொத்து சம்பத்துக்களும் எந்தவோர் அவச் சொல்லை தன் மீது சாபமாகப் பொழிந்து கொண்டிருக்கிறதோ அந்தப் பழி அழியவே அழியாதா என்கிற துயர் அவருள் நெருப்புக் குண்டமாய் பற்றி எரிந்தது. இயலாமையின் கோபத்தால், லெச்சுமியை தளியில் கட்டி உதைத்தார். தன்னைச் சூழ்ந்து கிடக்கும் இந்த அவமானத்திற்கு மூலகாரணம் குமராத்தாள் என்கிற ஓர்மை அவருக்குள் இருந்தாலும், அவளை வெற்றி கொள்கிற வாய்ப்பு கைநழுவிப் போன உச்சக்கட்டத் தாளாமையில், குமராத்தாள் மீது எழுத முடியாத எல்லா ஆத்திரங்களையும் அவர் இப்போது லெச்சுமி மீது கொட்டத் துவங்கினார்.

நல்லபாம்பு படத்தை திருப்புகிற மாதிரி நாள்தோறும் தன்னைக் கொத்திப் பிடுங்கின மாமனைக் குறித்து மனதாரத் துக்கப்பட்டாள் லெச்சுமி. அவள் அவனது தோல்வியின் நெருக்கமான வடிவமாக இருப்பதை வலியோடு உணரத் துவங்கியபோது, தனக்கென்று பிள்ளை இல்லை என்ற பேர் இனி தன் மாமனுக்கு வரக்கூடாது என்று அவள் மனம் கருணைகொண்டு இரங்கியது. கருப் பிடித்து தன்னையறியாமல் கலைந்து வலியால் துடித்த ராத்திரியின் கொடூரங்களை எல்லாம் வெளிச் சொல்ல முடியாமல் மறைத்துக் கொண்டவள், ஓர்நாள் நறவம் குடித்த மயக்கத்தில் முங்கிக் கிடந்த மாமனை, அந்தி நேரத்தில் ஆளரவம் அறியாமல், பைய ஒழிந்துசென்று தானாய் அவனோடு கூடினாள். அந்தக் கூடலின் விநயமாக லெட்சுமிக்கு மீண்டும் கரு பிடித்தது.

இந்த முறை தன் மடி நிறைக்கப் போகும் பிள்ளையால் மாமனுக்கென்று ஒரு வாரிசைச் சுமக்கப் போகிறோம் என்ற குதிப்பில், யாருக்கும் இந்த உண்மையைச் சொல்ல மறைத்தாள். ஆனால், ஒருப்பொழுதும் எதிர்பாராவிதமாக, ‘எங்கோ யாரோடோ தொடர்பெடுத்துத்தான் வயிற்றில் பிள்ளை வாங்கி வந்திருக்கிறாள் லெச்சுமி என்று நடுக்கூடத்தில் வைத்து அவளை மானமிழக்கச் செய்தாள் குமராத்தாள். அதற்கு வாய்ச்சொல்லால் உள்ளதைச் சொல்ல முடியாத அவளின் ஊனத்தைத் தன் சாதகமாக்கிக் கொண்டாள். லெச்சுமி எவ்வளவோ வாயசைத்தும், கையசைத்தும் எவனுக்கோ வந்ததை தன் பிள்ளையாக்கப் பார்த்தாளே என்ற பித்தம் தலைக்கேறின முத்தையன்கிட்டே அவளால் எதையும் விளங்க வைக்க முடியவில்லை.

அவமானத்தில் தார்க்கோலால் குத்தப்பட்டதாக உணர்ந்தவன், ஏனென்று கேட்க நாதியில்லாத நாய் என்று சொல்லிச் சொல்லி அவளைச் சாணிக்குழியில் தள்ளி மிதித்தான். ஒழுக்கங்கெட்டுப் போன இவளோடு கூடினவன் யாராய் இருந்தாலும் அவனுக்கும் சாவு இப்படித்தான் என்று தண்டனை அறிவித்து லெச்சுமியோடு சேர்த்து, தான் சந்தேகித்த மூவரையும் ஊரறிய கழுவில் பாய்ச்சினான். லெச்சுமியின் வயிற்றில் கருப்பிடித்து, உயிர்த் தரித்த அந்தச் சிசுவும் அவளது உதிரத்தோடு உதிரமாய் கழுவில் மாள, வலியின் ஆங்காரத்தோடு தன் நாக்கைத் தானே பிடுங்கி வீசிச் செத்துப்போனாள் லெட்சுமி.

மூளிப்பருந்து

ட்டிக்காயைப் பறித்துத் தின்று சாகத்துணிந்து விட்ட பலவேசம் தன் மகன் சங்கையன்கிட்டே வாங்கின கடேசி சத்தியம் அவன் தாய்மாமன் குலம் மொத்ததையும் கருவறுத்துவிட வேண்டும் என்பதுதான். தனித்து விடப்பட்ட அவன், காடோ செடியோ என்று அலைந்து திரிந்து, சத்திரம் சாவடிகளில் விழுந்து கிடந்து, கட்டக்கடேசியாக பணிக்கர் கூட்டத்தாரோடு சேர்ந்து மலையாள தேசம் முழுக்கச் காவல் பணியாகச் சுற்றித் திருந்திருந்தான். எந்தக் கொழுகொம்பு கிடைத்தாலும் பற்றிப் படரக்கூடிய கொடியாகக் காத்து வளர்ந்த அவன் வெஞ்சினம் குஞ்சுகுடி வார்படச்சாலையில் அன்று ஓர் தீர்மானத்துக்கு வந்தது.

காக்கையும் இறங்க முடியாத கொட்டாரப் பாதுகாப்பில் வாழ்ந்துவரும் தன் மாமனை நெருங்குவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம் எனத் தெரிந்திருந்தது. சிவப்புச் சீருடையும், நாணல் தொப்பியும் அணிந்து மலையாளச் சிப்பாய்போல அரண்மனைக்குள் நுழைந்தபோது சங்கையனை இன்னார்தான் என்று ஆள் அடையாளம் சொன்னாலும் யாரும் கண்டுபிடித்திருக்க முடியாத தோற்றத்தில் இருந்தான். எங்கே திரிந்து சுற்றினாலும் அவன் மண்டைக்குள் நெருப்பு உளியைக் கொண்டு கீறினதுபோலப் பதிந்துவிட்ட உடம்பிறந்தவளின் அவச்சாவும், தாயாளின் சத்தியமுமாகப் பந்தாடி வந்த தாய்மாமன் பகையை அந்தப் பனி ராத்திரியிலே கரம் முடித்தான். பருந்தாய்க் காத்திருந்து இரு உயிர்களின் ரத்தத்தையும் தரை முழுக்கப் பரவவிட்டபோது, எல்லா காலமும் நெருப்பாய் பொழிந்து கொண்டிருந்த அவன் நெஞ்சுக்குள் கூதல் பெருகி உடல் சிலிர்த்தடங்கியது.

கொட்டுமுழக்கு

”இதனால் அறிவிப்பு என்னன்டா… வீராண சமுத்திரத்திலே அம்ம முத்தையஞ் கோயிலில கொடை காப்பு சாத்தியிருக்கு… அம்ம மேலங்காட்டு முத்தையஞ்சாமி கோயில் கொடைத் திருவிழாவுக்கு சுத்துபத்து அத்தனை ஊர்கள்ல இருந்தும் பெரிய மனுசங்க சனங்க எல்லாரும் இன்னையில இருந்து பதினெட்டாம் நாள் வரைக்கும் கறி மீனு அசைவஞ் சாப்புடாம சாமிக்கு வெரதக் கட்டு கட்டிக்கணும்னு கேட்டுக்கிடுறோம்… இது தலையாரி அறிவிப்பு சாமியோ…”

முத்தையன் சாமி கோயில் கொடைக்கு ஊர் தயாராகியிருந்தது. கொட்டுச்சத்தம் விட்டம் அதிர முழங்க, பந்த வெளிச்சத்தில், அலங்காரங்கள் மின்ன, சாந்தில் குழைத்துச் செய்த முத்தையன் முகம் ஜோதியில் துலங்கி நிற்க, ஊர் எல்லையில் குட்டி விளக்கு அலங்காரங்களில் சிவனும் பார்வதியும், பிள்ளையாரும் முருகனும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு புன்னகை பூரித்துக் கொண்டிருந்தார்கள். கோடைநாளில் அந்தி சாய்ந்தபிறகு கோயிலுக்கு வரக்கூடாது என்று கன்னிப் பிள்ளைகளைத் தடுத்துவிட்ட பெரியாட்கள் ஆரமும், தேங்காய் பழமும் ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் தாம்பூலத்தில் எடுத்து வைத்துக் கொண்டு நேந்துவிட்ட கருங்கிடாய்களை கோயிலை நோக்கிப் பத்திக் கொண்டு போனார்கள்.

கமிட்டிக்காரர் பொன்னம்பலம் பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை சாமி வேட்டைக்குப் போகும்போது எதிரே ஊரார் யாரும் வந்துவிடக் கூடாது என்று மைக்செட்டில் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அதுவரை நேர்த்திக் கிடாய்களை கோயில் மரத்தடியில் கொண்டுவந்து கட்டாதவர்களை விரசாக வரச்சொல்லியும் அதட்டிக் கொண்டிருந்தார்.

மணி பதினொன்று தொட்டிருக்கும். வில்லுக்கச்சேரி ஆரம்பமாகியது. வீரகேரளம் பாட்டுக்காரர்கள் சலங்கை சத்தம் கலகலக்க முத்தையன் கதையை இப்படிப் பாடத் துவங்கினார்கள்.

‘ஈரேழு பதினாலு லோகங்களையும் அடக்கி ஆண்ட மேலங்காட்டு பெருங்குடி முத்தையனாண்டவன் சுவாமிக்கு ரெண்டு சம்சாரங்களாம்.

“ஆமா…”

“அவர்களிலே பெரிய நாச்சி ரௌத்திர காளி. சின்ன நாச்சி பிள்ளை வரங் கொடுப்பவள்.”

“கேளாத வரமும் கொட்டிக் கொடுப்பவள்..”

“நேரே எதிரே அருவாளை ஓங்கி, குதிரையேறி நின்று கொண்டிக்கும் சங்கையன் இவர்களுக்கெல்லாம் காவல் தெய்வம்.”

“ஆமா.. பொல்லாத காவல்காரன்… பொசுக்கென்றால் கோவக்காரன்.”

“அந்த முத்தையனுக்கும் அவனோட ரெண்டு நாச்சிகளுக்கும் அந்தப் பக்கம் குடியிருப்பவள் பலவேசத் தாயார். இந்தச் சாமிகளுக்கெல்லாம் மூத்த தாயார்…”

“சரிய்…”

“ஈரேழு லோகங்களை அடக்கி ஆண்ட முத்தையன் ஆண்டவர் ஒவ்வொரு பங்குனியும் நடைபெறும் உத்திரத் திருவிழாவில் வெள்ளிக் குதிரை ஏறி அருள் பாலிக்க, மளையாள தேசமிருந்து பக்தர்களெல்லாம் வந்து வணங்கி..”

“வணங்கி…”

“வெள்ளாடு குறும்பாடு மலைமேயும் வரையாடு என்று வெட்டி வெட்டிச் சாத்துகிறார்…”

“எப்படியெப்படியெம்மா சாத்துகிறார்..”

“அஞ்சு கோட்டை அரிசிப்பெட்டி…”

”வந்ததம்மா… வந்ததம்மா…”

“பஞ்சுப் பஞ்சா வேக வச்சி..”

“வெந்ததம்மா… வெந்ததம்மா…”

“தலை வாழை இலை விரிச்சி
தரமுழுக்க பர பரப்பி..”

“எல்லாம் தயாரா…”

“மாலையோடு கொடியோடு
மதலையெல்லாம் வேக வச்சி..”

“வேக வச்சி…”

“ஈரக்கொலை காமரக்கால்..
எலும்பெல்லாம் மல கணக்கா..”

“சரீய்..”

“பாளை அறுவாளால் நெஞ்சு கீறி வடிச்ச ரத்தம்…”

“அடேங்கப்பா….”

“எல்லாம் கொண்டாந்து வச்சாச்சா…”

“வச்சாச்சு வச்சாச்சு, இனி ஊட்டு கொடுக்க வேண்டியதுதான் பாக்கி..”

“அள்ளி அள்ளி ஊட்டுக் கொடுக்க
ஆவேசங்கொண்டு வாராரய்யா…”

”ஆவேசங்கொண்டு வாராரய்யா…”

“முத்தையன் சாமி வாரா..ரய்யா..”

டுண்டுகு டுண்டுகு டுண்டக டுங் டக..

***

கார்த்திக் புகழேந்தி

கார்த்திக் புகழேந்தி – பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு -writerpugal@gmail.com

தமிழ் எழுத்தாளன்

1

வேணி

மன் ஐந்தாவது நாளாக தலைமை அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கான தண்டனையை நிறைவேற்ற இன்னும் சில மணிநேரங்களே மீதமிருந்தது. தலைமையதிகாரி அவனை கண்டும் காணாதது போல போய்வந்துக் கொண்டிருக்கிறார். அவனுடைய அம்மா இங்கு இருந்திருந்தால் அவனை இப்படித் தவிர்த்திருக்க மாட்டார், மேலும் அவன் இப்படி இங்கு காத்துக் கொண்டிருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. ஏமனுடைய அம்மாவுக்கு இச்சமூகத்தில் உயர்ந்த மதிப்பு உண்டு.

இந்நிலையை அடைய அவள் உழைத்த உழைப்பையும், செய்த ஏவல் வேலைகளையும், பட்ட பாடுகளையும் சொல்லி மாளாது. ஏமனின் அம்மா ஏமரியா தற்பொழுது சமூகத்தில் மிகுந்த மதிப்புடைய முந்நூறு ஆண்டு காலம் வாழக்கூடிய ஆலமரமாக பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள் .

தொடக்கத்தில் எல்லா சமூகத்தைச் சார்ந்தவர்களும் மனிதனாக பிறப்பதில் ஆர்வம் காட்டத்தான் செய்தனர். ஆனால் எப்போது பூமியில் நாகரீகம் தோன்றி வளர்ந்து, வாழுதல் கடினமானதோ அப்போதிலிருந்து மனிதனாகப் பிறப்பதென்பது குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் தண்டனையாக மாறிப்போனது. எல்லாச் சமூகங்களை போலவே இங்கும் சமூகப்படிநிலையில் கீழே உள்ள மக்களுக்கே அவர்கள் செய்த மற்றும் செய்யாத குற்றங்கள் என அனைத்தும் விரைவில் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது, மேலும் இங்கு குற்றங்கள் எளிதாக நடப்பதற்கான சாத்தியங்களையும் உருவாக்கி வைத்துள்ளனர். ஏமரியா இங்கிருந்துதான் முன்னேறி வந்துள்ளாள்.

அவளும் துவக்கத்தில் சில முறை மனிதராகப் பிறப்பெடுத்து உள்ளாள். ஆனால் அதன்பிறகு முன்பே கூறியதுபோல தனது கடும் உழைப்பினால் செடி, கொடி என ஆரம்பித்தவள் தற்போது ஆலமரத்தில் வந்து நின்றுள்ளாள். ஆனால், அவள் இத்தோடு நிற்கப்போவதில்லை. புத்தர் ஞானம் பெற்ற இரண்டாயிரம் ஆண்டு வாழக்கூடிய அரசமரமாக பிறப்பெடுப்பதே அவள் இலட்சியம், அதற்கான வேலைகளையும் அவள் தொடங்கி விட்டிருந்தாள்.

மேலும் அவளுக்கு மற்றவர்களை நிர்வாகம் செய்யும் இடத்தில் ஒரு அதிகாரியாக இருக்க வேண்டும் என்பது தீராத ஆசை. துரதிர்ஷ்டவசமாக முறையான கல்வி இல்லாததால் அவளுக்கு அது சாத்தியமில்லை. எனவே தனது மகன் மூலம் அந்த ஆசையை தீர்த்துக்கொள்ள முடிவு செய்தாள்.

நிர்வாகத்தின் எந்த ஒரு பணிக்கு தேர்வு நடைபெற்றாலும் அதில் ஏமனின் பெயர் நிச்சயம் இடம்பெற்றிருக்கும், அதேபோல தேர்வு முடிவுகளில் அவன் பெயர் நிச்சயம் இடம்பெற்றிருக்காது. காலங்கள் கடந்து கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் ஏமனுக்கு தேர்வு எழுதுவதற்கான வயதுவரம்பு முடிவடைய ஒரு நூற்றாண்டுக்கும் கொஞ்சம் அதிகமான காலமே எஞ்சி இருந்தது. அச்சமயத்தில்தான் ஏமரியாவின் நேரம் வந்தது. அவள் இம்முறை ஆலமரமாக பிறப்பெடுத்து ஆக வேண்டும். சென்றால் திரும்ப எப்படியும் முந்நூறு ஆண்டுகள் ஆகும். அவள் அதனை தள்ளிப்போட எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.

இதனை எண்ணி அவள் சோகமாக தனது தலையில் கைவைத்து அறையில் உட்கார்ந்திருந்த ஒரு இருள் சூழ்ந்த வேளையில் ஏமரியாவின் கணவன் தனது பிறப்பை முடித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். ஏமரியாவின் கணவன் ஏமரியாவின் சமூகத்தைச் சார்ந்தவன். ஏமரியாவுடன் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவன். அவளைப் பின்பற்றி அவளுடனையே மேலே ஏறி வந்தவன். தற்போது சமூகத்தில் ஓரளவுக்கு மதிப்புள்ள பறவைகளாகப் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனால், ஏமரியாவுக்கு திருப்தியில்லை, அவன் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமென சொல்லிக்கொண்டே இருப்பாள். அவனோ, தான் தற்போது இருக்கும் நிலையிலே திருப்தியாக உள்ளதாகக் கூறுவான். இதை முன்னிட்டு, அவர்களுக்குள் அவ்வப்போது சிறுசிறு சண்டை ஏற்படும்.

கடைசியாக ஏற்பட்ட சண்டை இருவரும் பிரிந்து செல்லும் நிலைக்குச் சென்று கடைசியில் ஏமனின் கண்ணீரால் தீர்த்து வைக்கப்பட்டது. வந்தவன் ஏமரியாவின் நிலையையும், அவளின் துயரத்திற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டு அவள் முன் சென்று மண்டியிட்டு அவளின் கைகளை எடுத்து தனது உள்ளங்கைகளுக்குள் வைத்துக்கொண்டு, “ஏமரியா ! கவலைப்படாதே, நிம்மதியாக சென்று வா.. நீ திரும்பி வரும்போது நமது மகன் நிச்சயம் தலைமையகத்தில் அதிகாரியாக இருப்பான். அதற்கு நான் உறுதியேற்கிறேன்” என்று சொல்லி ஏமரியாவின் நெற்றியில் தனது உதடுகளை அழுந்தப் பதித்து ஒரு முத்தமிட்டான்.

ஏமரியாவுக்கு தன் கணவனும் தனது கனவை பகிர்ந்து கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனை அப்படியே இறுக்கமாக அணைத்து கட்டிலில் கிடத்தினாள். அன்று இருவரும் அவர்கள் வாழ்வின் மிகச்சிறந்த கலவியை அனுபவித்தனர். அடுத்த நாள் ஏமரியா சந்தோஷமாக ஏமனை தனது கணவனின் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றாள்.

ஏமரியாவின் கணவனுக்கு தனது மகன் மக்கு என்று தெரியும் ஆனால் இவ்வளவு மக்கு என்று தெரியாது. ஏமனின் மண்டையில் இவனால் ஒன்றையும் புகுத்த முடியவில்லை. ஏமரியாவின் கணவனுக்கு தற்போது தனது மகனின் மண்டையில் களிமண்ணாவது உள்ளதா என்ற சந்தேகம் வரத்தொடங்கியிருந்தது.

நூற்றியிருபது வருடங்கள் கடந்துவிட்டன. ஒன்றிலும் தேர்ச்சி பெறவில்லை. இன்னும் ஏமனுக்கு தேர்வு எழுத பத்து வருட காலமே அவகாசமே இருந்தது. இனியும் இவன் தேறமாட்டான் என நிச்சயம் ஏமரியாவின் கணவனுக்குத் தெரிந்தது. ஏமரியாவுக்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற வேறு ஏதேனும் மாற்று வழிகள் இருக்கிறதா எனத் தேடத்தொடங்கினான். ஒருவன் தான் தேடுவது எது என்று தெரிந்து தேடும்போது அது நிச்சயம் கிடைத்துவிடுகிறது.

அவனுக்கும் கிடைத்துவிட்டது. ஆள் மாறாட்டம், கொஞ்சம் பழைய முறைதான் ஆனால் நூறு சதவீத வெற்றி. அந்த இடைத்தரகன் அப்படித்தான் சொன்னான். மேலும் அவன் தனது வாடிக்கையாளர் என உதிர்த்த பெயர்களெல்லாம் உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் இருந்தவர்கள்தான். செலவு அதிகம்தான், இருப்பினும் அவனுக்கு வேறு வழியில்லை. ஏமனும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டான். தேர்வு வந்து சென்றது, ஆள்மாறாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்து,  தேர்வு முடிவும் வெளியானது.

ஏமன் தலைமையகத்தில் வாழ்நாளை தீர்மானிக்கும் பிரிவில் அதிகாரியாக தேர்வானான்.  தனது முதல்நாள் பணிக்கும் சென்று வந்தான். அன்று ஏமன் பணியில் இருந்து திரும்பியதும் ஏமனின் தந்தை அவனுக்காக ஒரு பெரிய விருந்தே ஏற்பாடு செய்திருந்தான். அச்சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படக்கூடிய அனைவரும் வந்திருந்தனர். விருந்து மிகச்சிறப்பாக நடைபெற்றது .

ஏமனை அவன் வயதையொத்த பெண்களில் சிலர் சூழ்ந்துகொண்டனர். ஏமரியா இங்கிருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பாள் என ஏமரியாவின் கணவன் நினைத்துக் கொண்டான், இப்போது மட்டும் என்ன அவள் எப்போது திரும்பி வந்தாலும் நிச்சயம் ரொம்ப சந்தோஷப்படத்தான் போகிறாள், அன்று இதைவிட பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வாள், அன்று என்னை முன்பை விட இன்னும்  இறுக அணைத்துக் கொள்வாள் என்று நினைத்துக் கொண்டான். விருந்து நிறைவாக நடந்து முடிந்தது.

அமைதியைத் தொடர்ந்து வரும் புயல்போல, நேற்றிருந்த மகிழ்ச்சியைக் குலைக்கும் வகையில் விடியலில் செய்தி வந்தது.  ஆள் மாறாட்ட குழுவில் உள்ள ஒருவன் மாட்டிக்கொண்டான், அவன் ஒன்றும் போராளியல்லவே. விரைவிலேயே அனைவரும் காட்டிக் கொடுக்கப்பட்டனர். ஒட்டுமொத்த ஆள் மாறாட்ட குழுவும், அந்த தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பத்து பேரும் பிடிபட்டனர். இந்த சம்பவம் நிர்வாகத்தின் நம்பிக்கை தன்மையையே அசைத்துப் பார்த்தது.

அனைவருக்கும் அன்றே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அனைவரும் மனிதராக பிறப்பெடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொருவருக்கும் அங்கு அவன் பிறக்க போகும் இடமும், தொழிலும், வாழும் காலமும் தீர்மானிக்கப்பட்டது.

அதிலும் ஏமனோடு தண்டனை பெற்றவர்களில் அதிகாரத்துக்கு நெருக்கமான சிலருக்கு, அற்பாயுளில் இறந்து போகும் சிசுவாக பிறப்பது போன்ற எளிய தண்டனை அளிக்கப்பட்டது.

மீதி இருந்தவர்களுக்கு நீதிபதியின் மனநிலைக்கு ஏற்ப தண்டனை நிர்ணயிக்கப்பட்டது. ஏமனுக்கு பிறக்கும் இடமாக தமிழ்நாடாகவும், தொழில் தமிழ் எழுத்தாளன் எனவும், வாழும் காலம் அறுபத்தியெட்டு வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இன்னும் ஐந்து நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும். இவனது மேல்முறையீடும் உடனே நிராகரிக்கப்பட்டது.

தண்டனை உறுதியான பிறகு ஏமன் இந்தத் தொழிலைப் பற்றி அறிந்து கொள்ள தொழிற்பட்டியலில் தேடிப் பார்த்தான், அது மோசமான தொழில்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அது இவனுக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது. பூமிக்கு போனவுடன் எதுவும் ஞாபகம் இருக்கப் போவதில்லை,

இருப்பினும் மேலும் தெரிந்துகொள்ள விரும்பி நூலகம் சென்று  இதுவரை தமிழ் எழுத்தாளராகப் பிறப்பெடுத்தவர்களின் குறிப்புகளை தேடி எடுத்துப் படித்தான். அந்த குறிப்புகள் அவனுக்கு தெம்பூட்டுவதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக ஒருவரின் குறிப்பு இப்படித் தொடங்குகிறது, “நான் இதுவரை பலமுறை மனிதனாக பிறப்பெடுத்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு போலியான வாழ்வை வாழ்ந்ததில்லை”, இன்னொருவரோ “மோசம்” என்ற ஒரே வார்த்தையோடு தனது குறிப்பை முடித்துக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் சென்று வந்திருந்தவரின் குறிப்பு ஒரு நீண்ட சோகக்கதை போலிருந்தது, “அங்கு இருக்கும்வரை என்னை ஒருவன் சீண்டவில்லை எனது படைப்பைப் பற்றி ஒருவன் வாய்திறந்து பேசவில்லை. ஆனால், இப்போது நான் இறந்தவுடன், ஒவ்வொருவனும் என்னைத் தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறான். எனது படைப்பில் எனக்கே தெரியாத நுணுக்கங்களையெல்லாம் கண்டுபிடித்து பேசுகிறான், என்னை இதுவரை சந்தித்தேயிராதவனெல்லாம் என்னுடன் கழித்த பொழுதுகளைப் பற்றி அனுபவக்கட்டுரை எழுதுகிறான், இரங்கற்பா எழுதுகிறான், கவிதை எழுதுகிறான், எனது பெயரில் இலக்கியப்போட்டி நடத்தி  பரிசுத்தொகையெல்லாம் கொடுக்கின்றனர் . ஆனால் அங்கு நான் வாழ்ந்த எண்பதாண்டு ஜீவனத்தையும் சோற்றுப் பிரச்சனையிலேயே கழித்தேன், ஒருவனும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை” என்று இன்னும் நிறைய எழுதியிருந்தார்.

இவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. கிட்டத்தட்ட இவன் படித்த மற்றவர்களின் குறிப்பும் இதை ஒத்தே இருந்தது.  எப்படி அறுபத்தியெட்டாண்டுகள் கடத்துவது என்று கவலை கொண்டான். தண்டனையை இரத்து செய்ய முயற்சியெடுக்கத் தொடங்கினான்.

ஏமன் இதுவரை புவியில் முழுமையான அர்த்தத்தில் பிறப்பெடுத்ததில்லை, ஒரேமுறை படிக்கும்போது செய்முறை பயிற்சிக்காக காகமாக ஒரு மூன்று மாதம் பிறப்பெடுத்துள்ளான், அவ்வளவுதான். அது பறப்பது, தின்பது, கரைவது, விளையாடுவது என மகிழ்ச்சியாகவே இருந்தது. இது அப்படி இல்லை, இவனுடைய தாய் இந்த பிறப்பெடுக்கும் பிழைப்பே வேண்டாமென்றுத்தான் இவனை அதிகாரியாக்க முயன்றாள்.

ஆனால் மொத்தமும் பாழாய்ப்போகி இப்படி தண்டனை பெற்று அதுவும் மனிதனாகப் பிறக்கப் போகிறான்.

இப்போது இவனுக்கு இருக்கும் ஒரே வழி தலைமையதிகாரிதான். அவர் நினைத்தால் கருணை அடிப்படையில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க முடியும். மேலும் அவர் ஏமரியாவுக்கு நெருக்கமானவர் வேறு. அவரை அணுகி உதவுமாறு வேண்டினான்.  அவரோ இந்த வழக்கை அனைவரும் உற்று கவனிப்பதாகவும், இந்த வழக்கிலிருந்து விடுதலை அளித்தால் அது மற்றவர்களின் கோபத்தைக் கிளறி, தனது நற்பெயரை கெடுத்துவிடும் எனக்கூறி விலக்களிக்க மறுத்து விட்டார். இவனும் விடாமல் எப்படியும் கடைசிவரை முயற்சித்து பார்த்துவிடலாமென அவரின் அறை வாயிலிலேயே தினமும் காத்துக் கொண்டிருக்கிறான்.

இன்னும் சில மணிநேரங்கள் தான் இருக்கிறது.

இவன் இப்படி காத்துக்கொண்டிருக்கும்போது ஏமனின் தந்தை உள்ளே வந்து அவனது கையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றார். இழுத்துச் சென்றவர் தன்னை பின்தொடருமாறு சொல்லிவிட்டு முன்னே சென்றார். இவன் எங்கே என்று கேட்டதற்கு அமைதியாக தன்னை பின்தொடருமாறு சொன்னார். அந்த பின்தொடர்தல் எளிதில் முடிவதாகத் தெரியவில்லை. இவனுக்கு கால்கள் வலியெடுத்தன.

ஒன்னரை மணிநேரத்திற்குப் பிறகு அவர்கள் மிகவும் கீழ்நிலையில் இருப்பவர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஏமனின் தந்தை அங்கிருந்த ஒரு பழைய சிறிய வீடொன்றைக் காட்டி அவனிடம், “ஏமன், அந்த வீட்டின் கதவைத்தட்டு உனது மாமன் ஏமன் திறப்பான். உனது நிலையைக்கூறு. நிச்சயம் அவன் உதவுவான்” என்றான்.

“மாமன் ஏமனா?”

“ஆமாம், உனது அம்மாவின் தம்பி”

“அவரது பெயரும் ஏமனா?”

“ஆமாம், அது உங்கள் குடும்ப வழக்கம் பிறக்கும் முதல் பெண்ணுக்கு ஏமரியா எனவும், முதல் பையனுக்கு ஏமன் எனவும் பெயரிடுவார்கள்”

“அது சரி, ஆனால் இவர் பற்றி நீங்கள் இருவரும் என்னிடம் இதுவரை வாய் திறந்ததேயில்லையே”

“ஆம், அதற்கு பொறுப்பு உனது அம்மாதான். அவளது நிலை உயர்ந்ததும், இவர்களுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொண்டாள்”

“ஏன்?”

“ஏனென்றால், இவர்கள் அவளுடைய முந்தைய நிலையைத் தொடர்ந்து நினைவுவூட்டிக் கொண்டேயிருப்பார்கள் என்பதால்”

“அப்படியென்றால், அவர்களின் பெயரை மட்டும் எதற்கு வைத்தாள்?”

“அதை நீ அவளிடன்தான் கேட்க வேண்டும்”

“சரி, கேட்கிறேன். ஆனால், தலைமையதிகாரியாலேயே ஒன்றும் செய்ய முடியாதபோது இவர்களால் என்ன செய்து விட முடியும்”

“இவர்களால் செய்ய முடியாததே இல்லை, இவர்களுக்கு இருக்கும் தொடர்புகளெல்லாம் தெரிந்தால் நீ நிச்சயம் ஆச்சரியப்படுவாய். எதற்கும் கடைசி முறையாக இவர்களிடமும் கேட்டுத்தான் பார்த்துவிடுவோமே. முயற்சிப்பதில் ஒன்றும் தவறில்லையே”

‘நீங்கள் சொல்வதெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், இவர்கள் எப்படி நமக்கு உதவுவார்கள் அவர்களை நாம் முழுதாகப் புறக்கணித்திருக்கிறோமே”

“ஏமன் மிகவும் நல்லவன், உனது அம்மாவின் மேல் அதிகம் பிரியம் வைத்துள்ளான். நிச்சயம் மறுக்க மாட்டான்”

“அப்படியென்றால், நீங்களும் என்னுடன் வரலாமே”

“அவனுக்கு என்னைப் பிடிக்காது, நான் வந்தால் நன்றாகயிருக்காது. ஏமரியாவின் மகன் என்று சொல் நிச்சயம் உதவுவான்”.

சரி என்று சொல்லிவிட்டு ஏமன் அந்த வீட்டை நோக்கி நடந்தான். அவன் செல்லும் வழியிலிருந்தவர்கள் இவனையே உற்றுப்பார்த்தனர். இவன் அந்த வீட்டை அடைந்ததும் கதவைத் தட்டினான். கிட்டத்தட்ட ஏமரியாவின் முகச்சாயலில் இருந்தவன் கதவைத் திறந்தான். ஏமன் தனது மாமன் ஏமனிடம் தான் ஏமரியாவின் மகன் ஏமன் என்றான். மாமன் ஏமனின் முகம் பரவசத்தில் ஒளிர்ந்தது. ‘மாப்பிள்ளை’ என்று சொல்லி கட்டியணைத்துக் கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டான்.

தனது கைகளால் அவனது முகத்தை அளவெடுப்பது போல முகம் முழுவதும் அளந்தான். ஏமனுக்கு இது புதிதாக இருந்தது. மாமன் ஏமன், ஏமனை உள்ளே அழைத்து உட்கார வைத்து முகத்தில் புன்னகையுடன் ஏமனையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் ஏமன் தனது மாமனிடம் தயங்கித் தயங்கி தான் வந்த காரியத்தை சொன்னான்.

சிலநொடிகள் யோசித்த மாமன் ஏமன், ஏமனை அங்கு காத்திருக்கச் சொல்லிவிட்டு வெளியில் சென்றான். ஒரு அரைமணி கழித்து வந்தவன் கையில் ஒரு சிறிய பன்றி சிலை இருந்தது. அதை ஏமனின் கையில் கொடுத்துவிட்டு பேசத்தொடங்கினான்.

“ஏமா, இதை கொண்டுபோய் உனது தலைமையதிகாரியின் முன்பு போடு அவன் முதலில் அதிர்ச்சியடைவான், அப்போது அவனிடம் “அபேலியா” என்று சொல்லு அவன் நடுங்குவான், மேலும் அவனிடம் “கனிமேடா நட்சத்திரம்” என்று சொல்லு. உனது காலடியில் மண்டியிட்டு கதறுவான். அப்போது அவனிடம் நீ என்ன கேட்டாலும் செய்வான். இந்த தண்டனையிலிருந்து விலக்கு நிச்சயம் உனக்கு கிடைக்கும்” என்றான்.

“இது மிரட்டுவதாக உள்ளதே. ஏற்கனவே ஒரு தவறு செய்துள்ளேன். இது மேலும் மேலும் தவறு செய்வதாக ஆகாதா”

“தவறுதான். ஆனால் ஒரு தவறை இன்னொரு தவறால்தான் சரி செய்ய முடியும்”

“இதெற்கெல்லாம் என்ன அர்த்தம். பன்றி சிலை, அபேலியா, கனிமேடா நட்சத்திரம்”

“அதெல்லாம் பெரியவர்கள் சமாச்சாரம். உனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. இதைக்கொண்டு போய் காட்டு. நிச்சயம் உன் காரியம் முடிந்து விடும்”.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும், இங்கே இருந்து கொண்டு”

“மேலே உள்ளவர்களெல்லாம் தங்கள் அழுக்கை இங்கேதானே வந்து கொட்டுகிறார்கள், நாங்கள்தானே அதை சுத்தம் செய்கிறோம்.. அல்லது அதற்கு பலி ஆகிறோம். எங்களுக்குத் தெரியாமல் எப்படி”

“மாமா, இதைப் பயன்படுத்தி நீங்கள் இங்கிருந்து தப்பித்திருக்கலாம் தானே”

“அது, நீ சொல்லும் அளவுக்கு எளிதல்ல. இந்த சுழலில் மாட்டிக் கொண்டவர்கள் வெளியே செல்வது மிகக்கடினம். அப்படி வெளியே சென்றவர்கள் மிகக்குறைவு, உனது அம்மாவை போல. ஆனால் அவர்களும் வெளியேறியதும் இந்தச் சுழலையும், அதில் சிக்கிக் கொண்டிருப்பவர்களையும் மறந்து விடுகிறார்கள்”

“அப்படியென்றால், அம்மாவும் இந்த முறைகளைப் பயன்படுத்திதான் முன்னேறினாளா?”

“இல்லை, இல்லை. அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது இதெல்லாம் வேண்டாமென்றுதான், நேர்வழியில் கடினமாகப் பயணித்து, தான் இப்போது இருக்கும் இடத்திற்கு வந்துள்ளாள்.”

ஏமனுக்கு பெருமிதமாக இருந்தது. அந்த பன்றிச்சிலையை எடுத்துக்கொண்டவன், அதையே சில நொடிகள் உற்றுப் பார்த்தான். பின்னர் தனது மாமனை நோக்கி, “மாமா, நீங்கள் மனிதனாக பிறப்பெடுத்துள்ளீர்களா” என்று கேட்டான்.

அவன் சிரித்தப்படி, “நூறு முறைக்கும் மேல்” என்றான். “எங்களுக்கு வேறு வழியுமில்லை”

“எழுத்தாளனாக?”

“ம்.. இருந்திருக்கிறேன்”

“எப்படி இருந்தது?”

“ம்.. மற்றவற்றை விட கொஞ்சம் மேல் என்று சொல்லலாம். நான் அங்கு வாழ்ந்து இருநூறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னமும் என்னை அங்கு படிக்கிறார்கள், நினைவுகூர்கிறார்கள். எனது படைப்புகள் அங்கு திரைப்படமாக ஆக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் ஒரு கிராமத்துக்கே எனது பெயர் சூட்டப்படுள்ளது, நிறைவான வாழ்வு தான்” என்றார்.

“தமிழ் எழுத்தாளனாக” என்று கேட்டான். அவர் இல்லை எனத் தலையை ஆட்டினார். மேலும் அவன் தனது மாமாவிடம், “சொல்லுங்கள் மாமா! ஏன் எல்லோரும் மனிதனாக பிறக்க பயப்படுகிறார்கள்” ஏமனின் மாமா ஒரு அலட்சியமான புன்னகையை வீசிவிட்டு பேசத்தொடங்கினார்.

“நம்மவர்களைக் கேட்டால் மனிதர்களை இழிப்பிறவிகள், வாழ்க்கையை வாழத் தெரியாதவர்கள், அவர்களின் கணநேர வாழ்க்கையை உண்மையென நம்பி ஓடிக்கொண்டிருப்பவர்கள், வாழ்வதற்காக உழைக்காமல், உழைப்பதற்காக வாழ்பவர்கள், மூடர்கள்  என குறை கூறுவார்கள்.

உண்மையில் சொல்லப்போனால் நம்மவர்கள் சோம்பேறிகள், பயங்கொள்ளிகள். இங்கு வாழத்தேவையான புள்ளிகளுக்காக பூமியில் பிறக்கிறார்கள்.

அதில் எதற்கு சவால் நிறைந்த மனிதனாக பிறக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மனிதர்களின் வாழ்வு சவால் நிறைந்தது. மனிதர்களின் பிரச்சனைகள் இவர்களை பயமுறுத்துகிறது. விலங்காகப் பிறந்தால் வெறும் சோற்றுப் பிரச்சனை மட்டும்தான்.

அதுவே மரம், செடி கொடியாகப் பிறப்பெடுத்தால் இவர்களுக்கு இன்னும் நிம்மதி. ஓட வேண்டியதில்லை, ஆட வேண்டியதில்லை, பாட வேண்டியதில்லை, ஏமாற்ற வேண்டியதில்லை, பொய் சொல்ல வேண்டியதில்லை, துரோகம் செய்ய வேண்டியதில்லை, கொலை செய்ய வேண்டியதில்லை, காதலிக்க வேண்டியதில்லை, கலவிகொள்ள வேண்டியதில்லை, வேலை செய்ய வேண்டியதில்லை, சேர்த்து வைக்க வேண்டியதில்லை, சேர்த்தை பாதுகாக்க வேண்டியதில்லை, புரட்சி செய்ய வேண்டியதில்லை, கதைகள் எழுத வேண்டியதில்லை, ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை வெறுமனே நின்றால் போதும், எல்லாம் தானாக நடந்து விடும்.

அதிலே இவர்களுக்கு பெருமிதம் வேறு.. த்தூ” காறி உமிழ்கிறான். “அதை ஏதோ தீண்டதகாததாக்கி தண்டனையாக்கி விட்டனர். ஏமன்! நான் இதுவரை நூறுமுறைக்கும் மேலே மனிதனாக பிறப்பெடுத்திருக்கிறேன், அதைவிட அதிகமாக விலங்காக, அதைவிட அதிகமாக செடி, கொடியாக. நான் சொல்கிறேன் மற்ற எல்லாவற்றையும் விட மனிதனாக இருந்ததுதான் எனக்கு சுவாரசியமாகவும், பிடித்தும் இருந்தது.

இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் இவர்கள் என்னை தண்டிக்கட்டும். அது எனக்குத் தண்டனையே அல்ல. நான் அத்தனை முறையும் மனிதனாகப் பிறப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்” என்று சன்னதம் ஆடி முடித்தான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

ஏமனுக்கு ஒரு நொடி மனிதனாகப் பிறந்துதான் பார்க்கலாமே என்ற ஆசை தோன்றியது. பின்னர் ஏமரியாவை  நினைத்ததும் முடிவில் இருந்து பின்வாங்கிக்கொண்டான். தனது மாமனிடம் இப்போது கட்டியணைத்து விடைபெற்றான். மாமன் ஏமன், ஏமனை அடிக்கடி வருமாறு கேட்டுக்கொண்டான். இவனும் நிச்சயம் வருவதாக உறுதியளித்தான். கடைசியாக ஒருமுறை மாமன் ஏமன் அவன் செய்ய வேண்டியதை நினைவூட்டினான் பன்றிசிலை, அபேலியா, கனிமேடா நட்சத்திரம்.

ஏமன் அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பி தனது தந்தை காத்துக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தடைந்தான். இவனது தந்தை இவனது முகக்குறிப்பை வைத்தே கண்டுபிடித்து விட்டான். போன காரியம் வெற்றியென்று. இன்னும் ஒருமணி நேரமே உள்ளது. தலைமையகத்தை நோக்கி விரைந்தனர்.

ஏமன் தலைமையதிகாரியின் அறைக்கதவை தனது காலால் எட்டி உதைத்து திறந்தான். தலைமையதிகாரியின் முகம் கோபத்தில் சிவந்தது, அப்போது இவன் தனது பையிலிருந்து அந்த பன்றிச்சிலையை எடுத்து அவரின் மேசை மேல் எறிந்தான் மாமன் ஏமன் சொன்னது போலவே தலைமையதிகாரி அதிர்ச்சியடைந்தான். தொடர்ந்து அபேலியா என்றவுடன் அந்த அதிகாரி நடுங்கினான், அடுத்து கனிமேடா நட்சத்திரம் என்று சொன்னதுதான் தாமதம் அதிகாரி இவன் முன் மண்டியிட்டு கைகூப்பி கெஞ்சலனான், “அய்யோ, இதற்கு மேல் எதுவும் சொல்லாதே. நீ என்ன சொன்னாலும் செய்கிறேன்” என்று கதறினான்.

இவன் தனது தண்டனையை நீக்கச்சொன்னான். அதிகாரி இப்போது அவனது காலை தனது இரண்டு கைகளால் இறுக்கிப் பிடித்துக்கொண்டு தற்போது நேரம் கடந்துவிட்டதாகவும், அதை தன்னால் செய்ய முடியாதென்றும் கூறினான். சரி, நான் ஆனதை பார்த்துக்கொள்கிறேன் என்று ஏமன் வெளியில் கிளம்பினான். அவனை அங்கிருந்து நகர விடாமல் காலை கெட்டியாக பிடித்தவாறே தலைமையதிகாரி பேசத் தொடங்கினார்.

“ஏமா! நான் உண்மையாகச் சொல்கிறேன், நேரம் கடந்து விட்டது. இனி என்னால் தண்டனையை தடுக்க இயலாது. ஆனால் ஒன்று செய்கிறேன் உன் பிறப்பு முடிந்து நீ திரும்ப வந்ததும் உனது பழைய வேலையையே உனக்கு திரும்ப தருகிறேன்”

“ஆனால், நான் மனிதனாக பிறப்பெடுத்தது எனது அம்மாவுக்கு தெரிந்தாலே துடிதுடித்துப் போவாளே” என்றான் ஏமன்.

“கவலைப்படாதே, நீ இப்போது எடுக்கப்போகும் பிறப்பை உனது பதிவேட்டிலிருந்தே எடுத்து விடுகிறேன். யாருக்கும் தெரியாது” என்றான்.

இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த ஏமனின் தந்தை ஏமனை அழைத்து, “ஏமா, இது ஒரு நல்ல வாய்ப்பாக தெரிகிறது. உனது அம்மா வருவதற்கு எப்படியும் குறைந்தபட்சம் இருநூறு வருடங்களாகும், உனக்கோ அறுபத்தியெட்டு வருடங்கள்தான் ஆயுட்காலம். எனவே, அவள் வருவதற்குள் நீ திரும்பி வந்துவிடுவாய், அதிகாரி பணியும் உன் கையில் இருக்கும். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும். ஏமரியாவுக்கும் மகிழ்ச்சி. ஒப்புக்கொள்” என்றார்.

ஏமனுக்கும் இது சரியாகவே பட்டது, இருப்பினும் கடைசி கோரிக்கையாக, “என்னுடைய தொழிலையாவது மாற்றித்தர முடியுமா, தமிழ் எழுத்தாளானாகப் பிறப்பது மிக மோசம். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது” என்று தலைமையதிகாரியிடம் கேட்டான்.

“துரதிர்ஷ்டவசமாக உனது தொழிலை என்னால் மாற்ற முடியாது ஏமா, உனக்கு தமிழ் எழுத்தாளானாக பிறப்பதுதானே பிரச்சனை”

இவன் ஆம் என்று தலையையாட்டினான்.

“என்னால் உனது தொழிலைத்தான் மாற்ற முடியாது, ஆனால் உனது பிறக்கும் இடத்தை மாற்ற முடியும், தமிழ்நாட்டில் பிறந்தால் தானே தமிழ் எழுத்தாளனாக மாறுவாய். கவலைப்படாதே உன்னை எழுத்தாளர்களை பெரிதும் மதிக்கும் ஒரு தேசத்தில் பிறக்க வைக்கிறேன், போதுமா” என்றான்.

ஏமனும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டான். இருபக்கமும் ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏமன் தண்டனைகள் நிறைவேற்றப்படும் நகரும் படிகள் கொண்ட வரிசையில் சென்று நின்றான். ஏமனின் தந்தை வழியனுப்ப வந்திருந்தார், ஏமன் தன் கண்களில் இருந்து மறையும்வரை கையசைத்துக்கொண்டே இருந்தார். அவரது கண்களில் சாதித்துவிட்ட பெருமிதம் இருந்தது.

ஏமன் இடி, மின்னல், காற்று என அடர்மழை பெய்து கொண்டிருந்த ஒரு இரவில் பிரான்ஸ் தேசத்தின் ஒரு மருத்துவமனையில் ஏழாவது மாடியில் வீல் என்று அலறியபடியே பிறந்தான்.

பிறந்து சிறிது நேரத்திலேயே அவனது தந்தையும், அங்கிருந்த புலம்பெயர்ந்த பள்ளிகளில் ஒன்றில் கண்டிப்பான தமிழ் ஆசானாகவும் பணிபுரியும் சதாசிவ செல்வநாயகம் தனது மகனுக்கு தான் முன்பே முடிவு செய்திருந்தப்படி செழியன் என்று பெயரிட்டார் .

அடுத்தநாள் காலை அந்த மருத்துவமனை வளாகத்தில் நூற்றியிருபது ஆண்டுகளாக வீற்றிருந்த ஆலமரம், இரவு பெய்த அடைமழையில் வேரோடு சாய்ந்திருந்தது.  

வேணி – ஆசிரியர் தொடர்புக்கு – veniwrites11@gmail.com

வெகு தொலைவில் உலகம்

0

பிரபாகரன் சண்முகநாதன்

1

ப்பா இறந்திருந்தார். அதற்கான காரணங்களை உறுதிப்படுத்த இயலாது கைவிரித்தனர் மருத்துவர்கள். இறப்பின் மீது சந்தேகம் எழ விசாரணை குழுவொன்றை நிறுவனம் ஏற்பாடு செய்தது. விசாரணை குழுவே நிறுவனம் விரும்பும் முடிவுகளை அறிவிக்க தான் என முதன்மை போட்டி நிறுவனத்தின் தலைவர் செய்திகளில் பேசிக் கொண்டிருந்தார். நிறுவனத்தின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட குழு தன்னுடைய விசாரணையை எங்களிடமிருந்து தொடங்கியது.

முதல் அமர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் நகரின் ஒதுக்குப்புறத்தில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தூய்மை இலாகாவின் அலுவலகம். சாம்பல் நிற ஒற்றைக் கை தானியங்கி இயந்திரங்கள் சதுர வடிவ பிணைப்புக் கற்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து சுவர் எழுப்பும் பணியில் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தன. எங்களை உள்ளே அழைத்துச் செல்ல வந்திருந்த கருப்பு நிற அங்கி மனிதர் முதல் அடி எடுத்து வைக்கவும் இயந்திரங்கள் தங்களுடைய பணியை நிறுத்தியிருந்தன. நாங்கள் கடந்தப் பிறகு அந்த கீரிச் சத்தம் மீண்டும் தொடங்கியது.

கருப்பு நிற அங்கியணிந்த மனிதர் வெளியே நின்றுக் கொள்ள நாங்கள் உள்ளே சென்றோம். அம்மா உணர்வுகளற்று இருந்தாள். எதிரே ஒளிர்ந்துக் கொண்டிருந்த திரையில் ஆறு மனிதர்கள் வெவ்வேறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இடையிடையே அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். வெள்ளை நிற முகக் கவசம் அவளின் முகத்தின் முக்கால்வாசியை அடைத்துக் கொண்டிருக்க அம்மா தன் கண்களில் உண்மையும் கண்ணீரும் வழிய பதில் அளித்துக் கொண்டிருந்தாள். இடையில் என்னையும் தங்கச்சியையும் கருப்பு நிற அங்கி மனிதர் வெளியே அழைத்துச் சென்றார். அவர் எங்களிடம் மிகவும் அன்பாக நடந்துக் கொள்ள முயன்றார். அப்பாவைப் போலவே. அப்பாவின் நண்பர் அவர் என்பதையும் சொல்ல மறக்கவில்லை.

அப்பா நிறைய பேருக்கு நண்பராய் இருந்தார். நிறுவனத்திற்கு எதிராக அறியப்பட்ட முகங்களுள் அவரும் ஒருவர். தமிழிய பிராந்தியம் அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என நிறுவனத்தின் செயல் அதிகாரி இரங்கல் கூட்டத்தில் பேசினார். எங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்கள் நான் பணிக்கு செல்ல தயாராகும் வரை நிறுவனத்தின் அங்காடிகளில் பெற்றுக் கொள்ளும் அனுமதியை வழங்கினார். செயற் அதிகாரியின் புத்திசாலித் தனமான நடவடிக்கை இதுவெனவும் நிறுவனத்தின் நற்பெயருக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் நேரலை விவாதங்களில் சண்டைகள் அரங்கேறிக் கொண்டிருந்தது. திரையின் வலதுப் புறத்தில் அன்றைக்கு இறந்தவர்கள், உயிரோடு இருந்து பாதிக்கப்பட்டவர்கள், உயிரோடு இல்லாதவர்கள் என நகரும் எண்கள் ஓடிக் கொண்டிருந்தன.

2

ப்பா நிறுவனத்தின் ஆரம்பகால இயக்குனர்களுள் ஒருவர். அரசுகள் மொத்தமாக கலைக்கப்பட்டு நிறுவனங்கள் அதிகாரத்திற்கு பொறுப்பேற்ற காலம் முதல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எங்களுக்கான கதைகளில் அப்பாவின் பழைய நினைவுகள் உருவம் பெறும். சிறிய வயதில் அவர் பெற்றோர்களோடு மகிழ்ச்சியாக சுற்றுலா சென்றது, பள்ளிக் கூடம் என்பது வீட்டிற்கு வெளியே எங்கோ இருந்தது, அந்த பள்ளிக்கு செல்ல மஞ்சள் நிற தானியங்கி வாகனங்கள் வந்தது, சந்தை, பொருட்காட்சி, திருவிழா, திரையரங்கம் இப்படி பேசிக் கொண்டே இருப்பார். அப்பாவின் எல்லா கதைகளிலும் மனிதர்கள் கூட்டமாகவே வருவார்கள். போவார்கள். நடமாடுவார்கள்.

எனக்கான பாடத்திட்டத்தில் வரலாறு என்பது நிறுவனம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடங்கும். அதற்கு முன்னதான உலகம் பற்றிய பதிவுகள் வேறு எந்த இணைய பக்கங்களிலும் இருந்தது கிடையாது. ஆனால் அப்பாவுக்கு தெரிந்திருந்தது.

அப்பா நிறுவனத்தின் அடிப்படை பங்குதாரர் என்கிற நிலையிலிருந்து கூட விலகி இருந்தார். அவரது ஒரு காணொளி நிறுவனத்தை கேள்வி கேட்பதாக அமைந்திருந்தது. நிறுவனத்துக்கும் பழைய அரசுக்குமான ஒப்பீடு குறித்து அவர் பேசி இருந்தார். அது தான் அவரை பல முறை நீதிமன்ற காணொளி விசாரணைகளில் பதில் அளிக்க வைத்தது. தொடர் மன அழுத்தத்தால் மது நோயாளியாக கொஞ்ச கொஞ்சமாக மாறிக் கொண்டிருந்தார் அப்பா.

அப்பா கதைகள் சொல்வது குறைந்தது. பெரும்பாலான நேரங்களில் அவர் தனிமையிலேயே இருந்தார். எப்போதாவது எங்களைப் பார்த்தார். அவரது மின்னஞ்சல் பல நாட்களாக திறக்கப்படாமலே இருந்தது.

வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது. அம்மா ஒவ்வொரு முறையும் அன்பாக அப்பாவிடம் பேசப் போயி, அது விவாதமாகி பின்னர் சண்டையாக முடிவடையும். இரவுகளில் அழுகை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அல்லது அப்பாவின் அனத்தல் சத்தம்.

இனி ஒரு துளி மது அருந்தினாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்கிற மருத்துவரின் அறிக்கை வந்த பிறகு அப்பா மது தொடுவதையே நிறுத்தினார்.

கொஞ்ச நாட்களுக்கு கண்களுக்கு கீழ் கருவளையத்தோடும், உலர்ந்த உதடுகளோடும், மெலிந்தும் காணப்பட்டார்.

காகிதத்தில் நிறைய எழுதிக் கொண்டிருந்தார். அதை விட எழுதியவற்றில் பெரும்பாலானவற்றை தீயிலிட்டு எரிக்கவும் செய்தார். நிறுவனம் நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது என்கிற ஒற்றை வரியைத் தவிர கணினியிலோ தொடுபலகையிலோ எதுவுமே எழுதவில்லை.

அப்பாவை நிறுவனத்தின் சமாதான தூதுவர்கள் ஒருமுறை அழைத்து சென்று திரும்பி வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வரை இதை மட்டுமே திரும்ப திரும்ப செய்துக் கொண்டிருந்தார். அடுத்து அவர் வாழ்ந்தது வெறும் மூன்று நாட்களே. அப்பாவின் எல்லா புத்தகங்களும், கருவிகளும், ஏடுகளும் எடுத்து செல்லப்பட்டன. எனது நாட்குறிப்பில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு பக்கத்தைத் தவிர.

3

ன்புள்ள மகனுக்கு,

நீ படித்த எந்த வரலாறும் உண்மை கிடையாது. உண்மையான வரலாறின் பல கூறுகளைப் பிரித்து பிரித்து உங்களுக்கு கதையாக சொல்லியிருக்கிறேன். அதன் இறுதி பத்தி இந்த கடிதம்.

தொற்றுவியாதிகளின் காலம் தொடங்கியது மனிதர்களின் வீழ்ச்சியின் ஆரம்பம். முதலில் இயற்கை பேரழிவு என்றே எல்லோராலும் நம்பப்பட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும் என்று எண்ணியிருந்தோம். நாட்கள் மாதங்களாக மாறியது. மாதங்கள் வருடங்களாகி பல வருடங்களாக பரிணமித்தது. அரசுகள் தங்களின் தோல்வியில் கலைந்தது. சில இடங்களில் கலைக்கப்பட்டது. நிறுவனங்கள் தங்களுக்குள் பிராந்தியங்களைப் பிரித்துக் கொண்டன. செயல் அதிகாரிகளும், இயக்குனர்களும், தணிக்கையாளர்களும் மக்களை ஆளத் தொடங்கி இருந்தனர். மருத்துவம், கல்வி, சுகாதாரம், உணவு என்பவை விலையுள்ள சேவைகளாகின. மது, பாலியல் தொழில், பொழுதுபோக்கு, இணைய சேவை இலவசமாகின. இவற்றை வழங்குவதே நிறுவனத்தின் கடமை என நம்ப வைக்கப்பட்டது.

எதை செய்தாவது உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பது தர்மமாக தொடங்கியது. பல ஆண்டுகளாக இவை எவற்றையும் யாரும் தெரிந்துக் கொள்ள முடியாதபடி பூச்சாண்டி காட்டியே இந்த நிறுவனங்கள் செயல்பட்டன. அவற்றுக்கு எல்லா வருவாயும் செலவுகளின்றியே கிடைப்பதினால் இலாபம் ஈட்டுவதில் உள்ள ஆசை மறைந்து மக்களை ஆள்வதில் கவனம் குவிக்க ஆரம்பித்தன. ஆனால் அதற்குள்ளாகவே பாதி மக்கள் தொகை அழிந்திருந்தது.

மக்களைப் பணியாளர்களாகவும், வாடிக்கையாளர்களாகவும் நிறுவனங்கள் பழகிக் கொண்டன. நிறுவனங்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கின்றன. அவர்களின் பகடை காய்கள் மக்களே.  

உனக்கு நான் கதைகளில் கூறிய உலகம் இங்கிருந்து வெகு தொலைவில் மறைந்து இருக்கிறது. அதன் பிரகாசமான ஒளி கண்ணைக் கூச செய்கிறது. இப்போதே நான் அதைப் பார்க்க தொடங்கிவிட்டேன். கொஞ்ச நாட்களில் இறந்து போனால் நான் அங்கு தான் போவேன் என நம்புகிறேன். நீ வாழும்போதே இவ்வுலகம் சீராக வேண்டும். அல்லது சீராக்கிக் கொள்.

அன்புடன், 
அப்பா

4

நாட்குறிப்பேட்டை மூடி வைத்தேன். நேரலையில் அப்பாவின் விசாரணை குறித்த தீர்ப்பு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எளிதில் புரிந்துக் கொள்ள இயலாத கிருமியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. அதுவே காரணமாக இருக்கலாம் என அறுதியிட்டுக் கூறப்பட்டது. அது எந்த மருத்துவ சோதனையிலும் தெரியவில்லை எனவும் இதுவரை அறிந்திராத புதுவகை என்றும் அறுவர் குழு முடிவுக்கு வந்தது. ஆகையால் இறப்பின் மீது சந்தேகங்கள் களையப்பட்டதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அம்மா இப்போதும் உணர்ச்சிகளற்று இருந்தார்.

அப்பா கூறிய உலகின் வானம் எனக்கு தெரிய தொடங்கியது. என் தங்கைக்கு அதைக் காட்ட பெரிதும் விரும்பினேன். தங்கைக்கு மட்டுமில்லை எல்லோருக்கும். வானத்தின் கீழ் நேர்க்கோட்டில் நட்சத்திரம் ஒன்றும் ஒளிர்ந்தது. கண்ணைக் கூச செய்யும் ஒளி.

***

பிரபாகரன் சண்முகநாதன் – காரைக்குடியைச் சேர்ந்த இவர். விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக பணியாற்றியுள்ளார். இவரது மின்னஞ்சல் முகவரி – arivar1999@gmail.com

கம்யூன்

0

அகில் குமார்

வன் வானம் என்கிற வெட்ட வெளியை விரும்புகின்றவன். இந்த மால் அதற்கு அந்நியமான ஒன்றாக அவனுக்குத் தோன்றியது. மூச்சு முட்டுவதுபோல் இருந்தது. அவன் திரும்பி தர்ஷனைப் பார்த்தான். தரைதள அரங்கில் நடக்கும் கலை நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே தர்ஷன் முகுந்துடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். இந்த முறையும் வேலை கிடைக்கவில்லையென்ற விரக்தி அவர்களிடமிருந்து முழுமையாக கரையேறிவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அவர்களை பார்க்க பார்க்க அவனுள்ளும் மகிழ்ச்சி திரும்ப ஆரம்பித்தது.

மெல்ல அவன் அந்த மாலின் மூன்றாம் தளத்தில் நடக்க ஆரம்பித்தான். சத்தமெழுப்பும் ஷூக்களை அணிந்தவாறு நடைபயிலும் சிறு குழந்தைகள், தாத்தாவோடு சேர்ந்து ஃபன் கேம்ஸ்  விளையாடும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், காஸ்மெட்டிக் கடைகளை நோக்கி வாடிக்கையாளர்களை இழுக்க இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக் தீட்டி காட்சிப் பொருளாக்கப்பட்டுள்ள பெண்களெனும் உயிருள்ள பொம்மைகள், தனது தலைமுடிக்குள் இரு கைவிரல்களையும் நுழைத்து மசாஜ் செய்துகொண்டிருக்கும் பெண்ணிடம் அவள் ஸ்பரிசத்தின் உணர்வு உடலெங்கும் பரவ தனக்குத் தேவையான ஹேர் ஸ்டைலை சொல்லிக்கொண்டிக்கும் இளம் ஆண்கள், தனக்குப் பிடித்த சட்டையை காதலன் மேல், தோழன் மேல், அண்ணன் மேல் வைத்துப் பார்க்கும் இளம்பெண்கள், இந்தமுறை கடந்த முறையைவிட நீண்டதொரு, சிறந்ததொரு முத்தத்தைத் தந்துவிட வேண்டுமென்ற தவிப்பில் சினிமா தியேட்டரின் வாசலில் செக்யூரிட்டிகளின் பரிசோதனைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஜோடிகள், தண்ணீர் பாட்டிலைத் தொட்டால் அதற்கும் பில்லைப் போடுவதற்காய் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஹோட்டல் சப்ளையர்கள், இவர்கள் எல்லோரையும்விட அதிகமாக,  வெளியுலகின் வெயில் தாங்காமல் ஏர் கண்டிஷனரில் சுகிக்கலாம் என்ற முடிவோடு வந்து, தொடையோடு முடிந்துவிடுகிற ஸ்கர்ட் அணிந்த பெண்களின் முழங்கால் மூட்டு எப்படி கொஞ்சம்கூட கருமை அண்டாமல் இருக்கிறதென ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஆண்கள். இவர்கள் அனைவரையும் அவன் பார்த்தான்.

திடீரென அவன் உள்ளத்தில் வெறுமையும், வெறுப்பும் படர ஆரம்பித்தது. தர்ஷன் போன்றவர்கள் எதற்காக வேலை தேடி வரவேண்டும்? இன்னும் தலைமுறைகளுக்கு கைவசமிருக்கப் போகிற சொத்துள்ள அவனுக்கு வேலையின் அவசியம் என்ன? சொல்லிக் கொள்வதற்காக ஒரு வேலை. ஆனால் இவனைப் போன்றவர்கள் பறித்தெடுத்துக் கொள்வது தன்னைப் போன்ற ஒருவனின் பங்கை. அந்த நொடியில் முகுந்த் மீது அவனுக்கு அன்பு பெருகியது.

சிரித்துக் கொண்டே தன்னை நெருங்கும் தர்ஷனையும், முகுந்தையும் அவன் கண்டான். முகுந்த் மீதான அவனது அன்பில் கொஞ்சம் பரிதாபமும் இணைவதை அவன் உணர்ந்தான்.

“இங்க என்னடா பண்ற சரண்”

“இல்ல.. சும்மா அப்படியே நடந்து வந்தேன்”

“ஓ.. நீ இன்னும் அந்த விரக்தில இருந்து வெளிய வரலியா.. இந்த வேலை இல்லைனா இன்னொரு வேலை. விடேன்டா”

“உனக்கு என்னடா தர்ஷன்? உன்ன மாதிரியா நான்”

“ஓக்கே..கூல்… பேய் வீடு போலாமா?”

“இந்த வாழ்க்கையே ஒரு பேய் வீடு மாதிரிதான் இருக்கு.. வேறென்னத்த ஸ்பெஷலான இன்னொரு பேய் வீடு”

“அது வீடு மாதிரியான ஒரு செட் அப். ஃபுல் இருட்டு. உள்ள ஒரு மனுஷன் பேய் வேஷம் போட்டு நம்மளத் தொரத்துவான். நாம அந்த வீட்ல இருந்து தப்பிச்சு வெளிய வரணும்”

“ஓ”

“யெஸ், போலாமா?”

“எவ்ளோ”

“ஒருத்தருக்கு எய்ட்டி ருபீஸ்”

“எய்ட்டி ருபீஸை இதுக்காக வேஸ்ட் பண்ண முடியாது. என்ன யூஸ்?”

“ஒரு எக்ஸ்பிரீயன்ஸ்”

“எனக்கந்த எக்ஸ்பிரீயன்ஸே வேணாம். தினம் தினம் நான் இங்க அனுபவிக்கறதுதான் அது”

“முகுந்த் தாண்டா ஆசப்பட்டான். பணத்தைப் பத்தி பிரச்சனையில்ல. நான் போட்டுக்கறேன்”

“எங்கிட்ட பணம் இல்லைனு நான் உன்கிட்ட சொன்னனா”

“இப்போ எதுக்கு இப்டி கோபப்படற? வேணாம்னா வேணாம்”

“டேய் போலாமேடா சரண்” என்றான் முகுந்த். கொஞ்சமாக தணிந்த சரண் ” சரி போவோம்” என்றான்.

அந்த மாலின் இரண்டாம் தளத்திலிருந்த கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த “ஹாரர் ஹவுஸ்” என்ற வார்த்தையை அவர்கள் வாசித்தார்கள். மூவரும் ஒன்றாக உள்நுழைந்தார்கள்.

“இவ்ளோதானா ஒரு பயமும் இல்ல” என்றான் முகுந்த். ஹா, ஹா, ஹா என்று உரக்கச் சிரித்து “வா பேயே வா” என்று கூவினான் தர்ஷன். எண்பது ரூபாயும் வீணாகி விட்டதாக நினைத்து கவலை கொண்டான் சரண்.

சுமார் இரு நிமிடங்கள் நீண்ட அந்த உற்சாக கூச்சல்களின் ஊடே, அந்த குகை போன்ற அறையின் இருட்டு மெல்ல மெல்ல உக்கிரமடைந்து, அடர்த்தி கூடுவதை திடீரென அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் உள்நுழைந்த கதவு சடாரென சாத்தப்படும் ஓசையை அவர்கள் கேட்டார்கள். இருட்டு அதிகரிக்க அதிகரிக்க அந்த அறையில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கான வழியைக் காட்டும் மினுங்கும் அம்புக்குறிகளை அவர்கள் கண்டார்கள். “ஹா, ஹா, ஹா” என்று ஒரு பெண் குரல் ஆக்ரோஷிப்பதை அவர்கள் கேட்டார்கள்.

சலங்கை ஒலி தங்களை நெருங்குவதை அவர்கள் உணர்ந்தார்கள். “உங்க கிட்ட தாண்டா வரேன்” என்று உரக்கக் கூவிக்கொண்டே ஒரு பெண் அவர்களை நோக்கி ஓடி வருவதை அவர்கள் அறிந்தார்கள். விதைத்த உடனே வானளாவ உயர்ந்துவிட்ட மரமென அச்சம் அவர்களில் படிப்படியாகவன்றி உடனடியாக எழுந்தது. முகுந்த், தர்ஷனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். சரண் தனியாக நின்றான். அவர்கள் அந்த அம்புக்குறிகளை பார்த்துக்கொண்டே ஓட ஆரம்பித்தார்கள்.

மூவரும் நேராக ஓடி வலப்பக்கம் திரும்பினார்கள். அங்கிருந்து முகுந்தும், தர்ஷனும் வேகமாக ஓடினார்கள். சரண் தனித்து விடப்பட்டான். தப்பிக்க வழிகளில்லாத அறையில் தான் மாட்டிக்கொண்டதாகவும், தன் வாழ்வு இன்றோடு முடிந்து விட்டதாகவும் சரண் நினைத்தான். “டேய் ப்ளீஸ்டா, என்னைக் காப்பாத்துங்கடா. எங்கடா இருக்கீங்க.. ப்ளீஸ் வாங்கடா.. பயமா இருக்குடா” என்று சரண் கதறினான். “உன்னக் கொல்லப் போறண்டா, உன் ரத்தம் குடிக்கப் போறேன்” என்ற பெண் கர்ஜனையையும், சலங்கை ஒலியையும் அவன் மிக மிக அருகில் கேட்டான். “மயிரு என் கைல கிடைச்சா நீ செத்தடி” என்று சரண் கோபமாக கத்தினான். பதிலுக்கு அந்தப் பெண் குரல் ஏளனமாக சிரித்தது. “டேய் அகெயின் நேரா ஓடி ஃலெப்ட் திரும்புடா சரண்” என தர்ஷன் கத்தினான்.

சரண் எழுந்து ஓட ஆரம்பித்தான்.

திடீரென வழிகாட்டும் அம்புக்குறிகளில் இருந்த வெளிச்சம் அணைந்தது. எது பேய், எது மனிதன் என்று அறியாவண்ணம் அவர்கள் நிலைகுலைந்து தவித்தார்கள். ஒவ்வொருவரையும் சந்தேகத்தோடு பார்த்தார்கள்.

தன் கைகளில் பிணைந்திருந்த முகுந்தின் கைகளை தர்ஷன் தன்னிலிருந்து விடுவிக்க முயன்றான். “என்னை விட்டுட்டுப் போனா, உங்களைக் கொன்றுவேன்டா” என முகுந்த் தர்ஷனின் கழுத்தை ஒரு கையால் முறுக்கினான். மறுகையால் சரணின் கழுத்தையும் முறுக்கினான். சரணுக்கு மூச்சு முட்டியது. முகுந்தின் நகம் கீறி தர்ஷனின் கழுத்திலிருந்து ரத்தம் கசிந்தது. அணைந்திருந்த மின்னும் அம்புக்குறிகள் மீண்டும் ஒளிகொண்டன. தர்ஷன் தனது முழு சக்தியையும் திரட்டி முகுந்தை தன்னிலிருந்து விடுவித்து ஓடினான். “வந்துண்டேண்டா” என்ற பெண் பேய்க்குரல் ஒலித்தபோது சரணும், முகுந்தும் திரும்பிப் பார்த்தார்கள்.

உடலெங்கும் சிறிய மின்னும் விளக்குகள் பொருத்திய உடையில், நாக்கு வெளித்தள்ளிய, கோரைப் பற்களுள்ள, தலைவிரிகோல உருவமொன்று கையில் சாட்டையோடு நிற்பதை அவர்கள் கண்டார்கள். முகுந்த் சரணை அந்த உருவத்தை நோக்கித் தள்ளிவிட்டு கண்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தான். அந்த சாட்டை மெதுவாக சரணைத் தீண்டியது. அவனும் எழுந்து ஓட ஆரம்பித்தான். பல இளம்பெண்களின் சிரிப்பொலியும், கொலுசொலியும் அந்த வீட்டை நிறைத்தன.

முகுந்தை பின்தொடர்ந்து ஓடிய சரணுக்கு எக்ஸிட் என்று எழுதியிருக்கும் கதவு தெரிந்தது. எக்ஸிட்க்கு மிக அருகில் முகுந்த் கீழே விழுந்தான். அவனைத் தாண்டி ஓடிய சரண் கதவைத் திறந்து வெளியேறினான். சாட்டை அடி முகுந்தின் முதுகில் விழுந்தது. வலியற்ற அந்த அடி பயத்தை மட்டும் விளைவித்தது. கடைசியாக அவன் வெளியேறி “தண்ணீர், தண்ணீர்” என்று கதறினான். கழிவறையிலிருந்து வெளிவந்த தர்ஷன் அவர்கள் இருவரையும் அருகிலிருந்த கே.எஃப்.சி-யை நோக்கி தள்ளிக்கொண்டு போனான்.

தர்ஷன் சிக்கன் பர்கரும், லெமன் மொயித்தோவும் வாங்கி வந்தான். பர்கரைப் பிடித்த சரணின் கைகள் இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் நடுக்கத்தை கவனித்த முகுந்த் பர்கரை பிடுங்கி அவன் ஒரு கடி கடித்துவிட்டு சரண் வாயில் பர்கரை வைத்துவிட்டான். குடிப்பதற்கு ஏதுவாக மொயித்தோ குவளையை சரண் வாயருகே கொண்டுசென்று “நிஜமா பேய் வந்த மாதிரியே இருந்துச்சுல்ல” என்றான் முகுந்த்.

மூவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகை செய்தார்கள். கழுத்து எரிச்சல் அதிகமாவதை தர்ஷன் உணர்ந்தான்.

அகில் குமார்

நீரை மகேந்திரன் கவிதைகள்

0

அகலாத நினைவு சொல்லும் நன்றி..நன்றி..

வழக்கமாக செல்லும் பாதையில்
இருந்து விலகி
நினைவு தவறியவனாய் பழைய பாதையில் சென்றுவிட்டேன்.
அது முன் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றது
ஒரு திரைப்படத்தில் பார்த்த
நினைவுத் துண்டென..
அவ்வீட்டின் அழைப்பு மணியை அழுத்திய பின்னர்,
நான் வசிக்கும் வீடில்லை என அறியும் கணத்தில் கதவு திறக்கப்பட்டது.
உலோக கம்பிகளால் தடுக்கப்பட்ட
அவ்வானத்தின்
ஒவ்வொரு அறையாக சென்று திரும்புகிறேன்
அந்த குரல்கள் ஒலிக்கவென.
அது என் வீடில்லை
வலசைப் பறவைகள் களித்த கானகம்
அந்திச் சாயலின் சிணுங்கொலி
படித்த வீட்டில்
யாரோ நிற்கிறார்கள்.
புது வண்ணமேறிய
கூடாரத்தில்
பழைய மோஸ்தரை பார்க்க ஏதுமில்லை
இல்லாத எதுவும்
காணாத எதுவும்
அசரீரியைப் போல ஒலிக்கின்றன
அகலாத நினைவு சொல்லும் நன்றி..நன்றி.

***

ஒரு லெஃப்டில் காலியாகும் இருக்கை

அச்சம் தரும் இந்த காலத்தின் அலுவலகம் வாட்ஸ் அப் பில் இயங்குகிறது
மின்னணு அடையாள அட்டைக்கு திறக்கும் கதவு போல
ரெடி டூ ஷிப்ட் கதவுகள் எமோஜியுடன் திறக்கப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் முந்திக்கொள்பவன்
ஒரு ஸ்மைலியை தட்டிவிட்டு
பல் துலக்கச் செல்கிறான்
வொர்க் ப்ரம் ஹோமில்,
அதிகாலையிலேயே கண்விழித்து விடுகிறது அலுவலகம்
காலியான இருக்கை நிரம்பும்போது காட்டப்படும் ஸ்நேகிதம் இல்லை
அங்கிருந்தே தொடங்கிவிடுகிறது சமூக விலக்கல்…
இசைநாற்காலி போல ஆட்கள் நழுவுகிறார்கள் ஒரு லெஃப்டில்…
தேநீர் பருகியபடி பேசும் ரகசியங்கள் இல்லாத அலுவலகம் நம்பிக்கை இழக்கிறது
மேலும் மேலும் ஸ்மைலிகள் தட்டப்படுகின்றன.
நள்ளிரவிலும் எவனோ ஒருவன்
திரும்பி பார்த்துக்கொண்டிருக்கும் அலுவலகத்துக்கு..
ரகசியமாக வந்து செல்கின்றனர்
அலுவலக சிப்பந்திகள்.

***

பன்னீர்புஷ்பங்கள் யார் எடுத்தது?

ஆளில்லாத எதிர்முனைக்கு
சைகையில் பேசும்
எனக்கு என்ன பெயர் வைப்பீர்கள்?
அதேதான்..
அதனுடன்
கொஞ்சம் கொதிநீரை சேருங்கள்
இந்த வேடிக்கையில் வீச.

*
எதற்கிந்த ஆட்டம்
நிறுத்தி விடலாம்
ராணி இல்லாத கட்டங்கள்
கழுத்தை நெரிக்கின்றன
போராட்டம் எதற்கு
வெற்றி எதற்கு
தற்காப்புதான்
ஆட்டத்தை கலைக்கும்
இந்த கனமா?

*
அப்படியா?
ஆமாம்
அந்த காயத்தில்தான்
நீங்கள் உப்பைத் தடவியது.
காயம் ஆறிவிட்டது
வாருங்கள்
ஒன்றாக ஒரு தேநீர் அருந்துவோம்.

*
யார் யாரோ சொன்னது
யார் யாரோ கேட்டது
அதெல்லாம்
உண்மையில்லை.
என்னைப்பற்றி
நான் சொல்வதும் பொய்.

*
பன்னீர்புஷ்பங்கள்
யார் எடுத்தது?
இந்த வேடிக்கையான கேள்வியை
எங்கு பேசினோமா?
மீண்டும் தொடங்கும் உரையாடலில்
மீண்டும் இடம்பெறும்
பன்னீர்புஷ்பங்கள்.

*
முதலில்
ஒன்றை பகிர்ந்து கொண்டோம்
பிறகு மற்றொன்றை
பகிர்ந்து கொண்டோம்
இரண்டு பசி
பசியாறியது.
*

  • நீரை.மகேந்திரன்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

0

1. வேறெங்கோ இருந்திருப்பதாக..



சுழற்றி வீசி சுருட்டிக்கொள்ளும் காற்றோடு போய்விட
துகளென அற்ப பாத நிழலுக்குள் ஒடுங்கிடாமல்
ஆளற்ற தீவொன்றில் ஒளி ரூபமாய்
வியாபிக்க

கூடவில்லை இத்தனிமை

இரைச்சலாகி சிதறும் சொற்களை அரைக்கின்ற தகிப்பு
மிச்சமுள்ளது

உயிர் புலம்பலில் ஆவியாகும் கற்பனை மூச்சு
இருளில் முட்டியபடி போக்கு காட்டுகிறது கனவென
பொய்யாய்

உருக்குழைவு பிம்பத்தை எதிர்கொள்ளத் தவிக்கும் நனவிலி
வியப்பில்
பாதரசம் இளகும் கண்ணாடியில் தெரிந்திருந்தேன்
எப்போதும்

எழுதிட
வாகற்ற லிபிகளின் சாயல்
காகித அடுக்குகளுக்கு ஊடே விம்முவதை
நிறுத்தவில்லை

அடர்ந்த நிசிமூலையின் சன்னமான ஊளையாகி
அழைத்தபடி

இன்னும்

காலத்தின் கவுச்சி ஏறிய மடிப்புகளின் படிகளில் மனம்
இறங்கிட
உந்தும் பிடிமானத்தை காவு கேட்கின்றன
ரத்தம் உறைந்த நாளங்கள்

சொல்லத் தோன்றிற்று

எளிய விசாரனைகளுக்குள் அடைப்படுகின்ற நிர்ப்பந்தம்
வேண்டாம்
உண்மைக்கு அருகே மண்டியிருக்கும் நீச்ச வாடையில்
தோய்ந்து வெளிப்படும் முக பாவங்களை
தந்துவிடுவேன்

மாறாக

சுயவரைபடத்திலிருந்து வெளியேறும் ஒருவனாய்
வைகறையொன்றில் காற்றோடு போய்விட
போதவில்லை

இத்
தனிமை


2.நட்சத்திரங்களை எண்ணி காத்திருந்த வேளையில்..


*
பூனையுடலிலிருந்து பிரிந்து அலைகிறேன்
உங்கள் எழுத்துக்களினூடே
மியாவ் என்றபடி

ஒவ்வொரு வேட்டைக்குப் பிறகும்
குருதியை சுத்தப்படுத்த விழையும் அர்த்தங்களின்
வாடை
நாசியை விட்டு அகலுவதில்லை
எதிர்கொள்ளும் இரவிலும்

பச்சிளங் குழந்தைகளின் குரல்களைப் பெயர்த்து
உங்கள் ஜன்னல் மீதேதான்
சார்த்தி வைக்கிறேன்
அவ்வப்போது

அகாலத்தின் பள்ளத்தில் குப்புறக் கிடக்கும்
கனவுகளை முகர்ந்து பார்க்க ஒரு
வாய்ப்பு

ஒப்புக்கொள்ள வேண்டாம்
பரிவு கூட்டும் தயவுகளுக்கு பொறுமையில்லை

இப்பொழுதின் தருணத்தைத் தூய்மைப்படுத்தி
மேஜை விரிப்பில் கிடத்திக் கொள்ளுங்கள்

அது உங்களின் சௌகரியம்

ச்சோ
என் அரைக்கண் தூக்கம் சொக்கியபடி கூசுகிறதே

அட
இந்தக் கவிதையின் திரைச்சீலையை மட்டுமாவது கொஞ்சம்
இறக்கிவிடுங்கள்


3.மீதமுள்ள கயமையை..



நீர்ச்சுமை விலக கிழித்துப் பாய முயலவில்லை
பழையச் சருகு

இடைவெளி நெருக்கித் தொகுத்துப் பிளப்பதில்
பொடித்துப் போகின்ற
வம்பு

அள்ளி யனல் ஊதி

எங்கிருந்தோ வாசலில் கால் பரப்பி
நிற்பதாக
உச் கொட்டுகிறீர்

மடை உடைத்து

***

கவிதைக்காரன் இளங்கோ