Home Blog Page 72

சக கவிஞர் – கேள்வி பதில் தொடர்: ஒரு சுய நேர்காணல்

2

மௌனன் யாத்ரிகா

  1. சக கவிஞர்- எப்படி இது தோன்றியது?

பதில்: இயல்பில் நானொரு இலக்கியப் பித்துள்ளவன். புத்தகங்கள் மீது காதல் அதிகம். என் வாசிப்பின் வழியே எழுத்தாளர்களை நேசிக்கத் தொடங்கி விடுவேன். வாசிப்பை கவிதையிலிருந்தே தொடங்கினேன் என்பதால் நான் அதிகம் கவிஞர்களையே நேசித்தேன். பள்ளிக்காலத்தில் அறிமுகமான அப்துல் ரகுமான், மு.மேத்தா, சிற்பி, மீரா, வைரமுத்து முதலானவர்களை அந்த வயதிலேயே தேடிப்போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. அவர்களை பார்க்கவும், பேசவும் விரும்பினேன். ஆசிரியர்களுக்கு பதிலாகக் கவிஞர்களைப் பாடம் நடத்தவிட்டால் மாணவர்கள் மேலும் நன்றாகப் படிப்பார்கள் என்று நம்பினேன்.
அப்போது அது சாத்தியமாகவில்லை. பின்னாளில் படிப்பதற்காக சென்னைக்கு வந்தபோது எனக்கு அந்த “பேறு” கிடைத்தது. அதாங்க, அந்த அதிர்ஷ்டம் அடித்தது.

என் வகுப்புக்கு வந்த பேராசிரியர்களில் இரண்டு கவிஞர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர்… ‘கண்ணீர் பூக்கள்’  கொடுத்த கவிஞர் மு.மேத்தா. அவர் பாடமே நடத்த வேண்டாம், கல்லூரிக்கு வந்தால் போதும் என்றெல்லாம் கூட அப்போது தோன்றியது. அவரைப் பார்த்தால் போதும் என்று அப்படியொரு மோகம். இன்னொருவர் பொன் செல்வகணபதி. இந்த இரண்டு பேரும் இருப்பதால்தான் தமிழ்த்துறை சிறப்பாக இருக்கிறது என்று கர்வம் கொண்டேன். இவர்களோடு பேசியபோது தான் ஏற்கனவே என் மீது ஏவி விடப்பட்டிருந்த கவிதை உக்கிரம் கொண்டு எழுந்து ஆடத் தொடங்கியது. கடற்கரைக் காற்றில், கல்லூரியின் புல்வெளியில், நெய்தல் குழுவில் அமர்ந்து அந்தப்பேய் தன் ஆட்டத்தை நடத்தியது. எங்கள் பேராசிரியர் சுதந்திரமுத்து ஆற்றுப்படுத்தும் மந்திரவாதியாக இருந்தார்.

அங்கிருந்துதான் உரையாடல் மீது ஆர்வம் வந்தது. கவிஞர்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அங்கெல்லாம் தேடிப்போய் பார்ப்பேன். இப்போதும் கூட அந்தப் பித்து என்னை விடவில்லை என்பதற்கு சான்றுதான் இந்த “சக கவிஞர்”. கவிஞர்களோடு  உரையாடுவதற்கு வேறொன்றும் நோக்கமில்லை… கவிதையைத் தவிர. இப்போதும் கூட… நானும் ஒரு நாடறிந்த! கவிஞனாக அறியப்பட்ட போதும் கூட இந்திரனைப் பார்க்க வேண்டும், வெய்யிலைப் பார்க்க வேண்டும், யவனிகா ஸ்ரீராமைப் பார்க்க வேண்டும், தேன்மொழிதாஸைப் பார்க்க வேண்டும், இளங்கோ கிருஷ்ணனைப் பார்க்க வேண்டும், இசையைப் பார்க்க வேண்டும், இன்னும் இன்னும் இருக்கும் ஆயிரக்கணக்கான கவிஞர்களையும் மனம் தேடிச்செல்லவும் உரையாடவும் விரும்புகிறது. ஏன் இப்படியெல்லாம் மனம் விரும்புகிறது? கவிஞர்கள் மீது ஏன் இப்படி ஈர்ப்பு? ஒரே பதில்தான். கவிதை.
கவிதையால்தான் இத்தனையும்…

  1. உரையாடுவதன் மூலம் கவிதையியலைக் கற்க முடியுமா?

பதில்: கண்டிப்பாக முடியும். கவிதை குறித்த தொடர்ச்சியான உரையாடல்கள்தான் கவிதைப் போக்கைப் பெருமளவில் மாற்றியமைத்தன. உலகம் முழுக்க கவிதையின் புதிய புதிய போக்குகள் உரையாடலின் வழியேதான் உருவாக்கப்பட்டன. தமிழ் கவிதைச்சூழலும் அப்படித்தான் ஒழுங்குபட்டிருந்தது. சிற்றிதழ்களும் அது சார்ந்து இயங்கியவர்களும் இந்தத் தகவலுக்கு மேலதிக சாட்சியங்களாக இருந்ததை வரலாற்றில் காண்கிறோம்.

கவிதையியல் குறித்த நூலாக்கம் பெருமளவில் இல்லை என்றாலும் தொடர்ச்சியான உரையாடல் சாத்தியமானதாகத்தான் இருந்தது. கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற அறிஞர்களும், சிறுபத்திரிக்கைச் சூழலில் இயங்கிய கவிஞர்களும் கவிதையை ஆரோக்கியமான விவாதக்களங்களில் கொண்டு சேர்த்தார்கள். கவிதையின் பொருண்மை, வடிவம், பாடுபொருள், குறியீடு, படிமம், நவீனம், மொழிவளம், எளிமை, இருண்மை என எல்லாவற்றையும் உரையாடல் வழி பேசிப்பேசி ஒழுங்குபடுத்தினார்கள், உருவாக்கினார்கள், கவனத்துக்குட்படுத்தினார்கள். என்னவொன்று… இத்தனை உரையாடல்களும் அவ்வப்போதே பிரதிகளாக்கப்பட்டிருக்க வேண்டும். அது ஒழுங்காக நடக்கவில்லை என்பதே வருத்தம். சமகாலத்தில் மொத்தத் தொகுதிகளாக சில சிற்றிதழ்கள் வந்திருக்கின்றன. அதேபோன்று மற்ற சிற்றிதழ் தொகுப்புகளும் வர வேண்டும்.  வந்திருக்கக்கூடிய சிற்றிதழ் தொகுப்புகளில் இலக்கிய உரையாடல்களின் கனத்தை, அதன் செறிவை, அதன் ஆழத்தை  நம்மால் உணர முடியும் என்று நினைக்கிறேன்.

இன்றும் அந்தத் தீவிர மனம் கொண்டவர்கள் நம்மோடு இருக்க்கிறார்கள். ஒரு சிலராக மட்டுமே இருந்தாலும் கவிதையியல் குறித்த ஆழமான சிந்தனையும் புரிதலும் கொண்டவர்களாக இருக்கும் அவர்களைப் பின்பற்றி கவிஞர்களும், வாசகர்களும் உரையாடலை நகர்த்தினால் தமிழ்ச்சூழலில் ரொம்ப தெளிவான கவிதையியல் போக்கை உருவாக்கலாம். அதற்கான உரையாடல் தேவையாக இருக்கிறது.

  1. சக கவிஞர்களோடு உரையாடுவது எப்படியுள்ளது?

பதில்: முன்பே சொன்னதுபோல் கவிதை குறித்த நிகழ்வும் சரி, உரையாடலும் சரி எனக்கு மிகுந்த நெருக்கமானதாக இருக்கிறது. சக கவிஞர்களோடு கவிதை பற்றி பேச அமைந்த இந்த வாய்ப்பை பெரிதும் விரும்புகிறேன். கற்றுக்கொள்ள இதுபோல் இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு கவிஞரும் தன் கவிதைகள் மூலம் ஒரு மன உலகைப் படைக்கிறார்கள். வாழ்வின் சில புதிரான பக்கங்களைத் திறந்து விடுகிறார்கள். இயற்கையின் அதி உன்னதங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். கண்டடையாத நிலக்காட்சிகளை வெப்பமும் புழுதியுமாக கண்முன் நிறுத்துகிறார்கள். அன்பின் மேன்மைகளையும் தேவைகளையும் புரிய வைக்கிறார்கள். சமூகப் பண்பாட்டு அரசியல் களங்களில் களமாட ஆற்றுப்படுத்துகிறார்கள். சக கவிஞர்களை தீர்க்கதரிசிகளாகவே பாவிக்கிறேன். இந்த உரையாடலின் மூலம் அவர்களின் கவிதாத்மா என்மேல் இறங்குவதாக நினைக்கிறேன்.

  1. “சக கவிஞர்” தொடரைப் பொருட்படுத்துகிறார்களா?

பதில்: எல்லோரும் பொருட்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தத் தொடரை ஆரம்பிக்கவில்லை. தமிழ் கவிதைச் சூழலில் நானும் இருக்கிறேன் என்ற வகையில் சக கவிஞர்களோடு உரையாட விரும்பினேன். அந்த உரையாடல் மூலம் கற்றுக்கொள்ள விரும்பினேன். ஒரு பாணன் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்தியதைப்போல் நான் கவிதையிடம் கவிஞர்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அல்லது அவர்களை என்னை ஆற்றுப்படுத்தி விடுமாறு கேட்கிறேன். அது நன்றாகவே நடக்கிறது.

பொருட்படுத்துதல் என்பதை கவனிப்பது, மதிப்பது என்று எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் இத்தொடர் நிறையவே கவனிக்கப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சக கவிஞர் தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு அமைந்த பதில்களையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருபவர்கள், இதுவொரு கவிதைக்கான சிலபஸ் தயாரிப்பு மாதிரியான ஒன்று என்று பகிர்ந்து கொள்கிறார்கள். கவிதை சார்ந்த உரையாடல் சாத்தியமற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இதுவொரு நன்மை தரும் முன்னெடுப்பு என்கிறார்கள். கவிதை குறித்த ஆய்வுக்கு இந்தத் தொடர் ஒரு சான்றாதார பனுவலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். கவிஞர்களைப் பொதுவெளியில் ஒன்றிணைக்கும் மிக முக்கியமான நிகழ்வு என்கிறார்கள். மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மெசஞ்சரிலும் இது குறித்து என்னோடு தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. சிங்கப்பூர் நண்பர்கள் யாழிசை மணிவண்ணன், மதிக்குமார், தாயுமானவர் போன்றோர் இத்தொடரின் வரவேற்பு அங்கு மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியிருப்பதைப் பகிர்ந்து கொண்டனர். இத்தொடர் மூலம் அங்கிருக்கும் கவிதைச்சூழல் புதிய நகர்வை உருவாக்குவதாகச் சொன்னபோது நாம் ஒரு உலகளாவிய வேலையை முடுக்கி விட்டிருக்கிறோம் என்று தோன்றியது. அதேபோல், ஆஸ்திரேலியாவில் இருக்கும் நாடகக் கலைஞரும், “உயிர்ப்பூ” மின்னிதழின் ஆசிரியருமான நிக்‌ஷன் சர்மா சக கவிஞர் ஏற்படுத்திய பாதிப்பில் ஒவ்வொரு கேள்வி பதிலையும் அவருடைய மின்னிதழில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தொடர் குறித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நாம் எடுத்திருக்கும் இச்சிறிய முயற்சிக்கு பெரிய அளவில் அதிர்வை உண்டாக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் நிறைய நண்பர்கள் “சக கவிஞர்” தொடர்ந்து இயங்குவதற்கான நம்பிக்கையையும் ஆதரவையும் தம் உரையாடல்கள் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி பார்த்தாலும், நான் எதிர்பார்த்திராத  மிகுந்த கவனத்தை “சக கவிஞர்” தொடர் பெற்றிருக்கிறது என்பதை எவ்விதத் தயக்கமும் இன்றி கூறுவேன்.

5. “சக கவிஞர்” தொடர் இதுவரை என்ன விளைவை ஏற்படுத்தியிருக்கிறது?

பதில்: பரவலாக இதுகுறித்து பேசுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இதுவே மிக முக்கியமான விளைவுதான் என்று நினைக்கிறேன். இலக்கியம் குறித்த ஆரோக்கியமான நிகழ்வுகள், உரையாடல்கள், கருத்துரைப்புகள் தமிழ்ச்சூழலில் குறைந்து கொண்டிருக்கும்போது இப்படியொரு விளைவு அதை மாற்றும் உதாரணமாக இருப்பது நன்றே. இதுவொரு கூட்டுச் செயல்பாட்டால் நேர்ந்த விளைவுதான். கேள்வி என்பதற்குப் பின் நானொரு கருவியாக இருக்கிறேன். ஆனால், பதில்கள் ஆளுமைத் திறன்களால் நிரம்புகின்றன. ஒவ்வொரு ஆளுமையும் ஒவ்வொரு விதமான பதில்களால் கவிதை குறித்த புதிய திறப்புகளை உருவாக்குகிறார்கள். இதுவரை கேள்விகள் குறித்தோ அதற்குக் கிடைத்த பதில்கள் குறித்தோ எதிர்மறையான கருத்துக்கள் எழவில்லை. சக கவிஞர் தொடரை அழித்தொழிக்கும் முயற்சிகள் ஏற்படவில்லை. எல்லா வகையிலும் உற்சாகப்படுத்தும் குரல்களும், தொடர்ந்து செயல்படத் தூண்டும் கருத்துக்களும், நம்பிக்கையளிக்கும் விமர்சனங்களும் மட்டுமே கிடைத்துள்ளன. இது அறிவார்ந்த விளைவு. தமிழின் கவிதையியல் சிந்தனை புத்துயிர்ப்புப் பெறுவதற்கு ஏற்ற காலமாக தற்காலம் இருக்கிறது.

  1. கேள்விகளை எப்படி உருவாக்குகிறீர்கள்?

பதில்: 1.கவிதையியல் சார்ந்து எனக்குண்டாகும் கேள்விகள் மற்றும் கவிதையியல் குறித்து என்ன மாதிரியெல்லாம் கேள்வி எழுப்பலாம் என்ற என் யோசனைகள் வழி கேள்விகளைத் தயார் செய்ய முயல்வேன். சில கேள்விகள் கவிஞரை தேர்வு செய்யப் பணிக்கும். பிறகு அந்தக் கேள்விக்கு சரியான பதிலை யாரால் சொல்ல முடியும் என்று தேடுவேன். ஒரு கவிஞரின் நினைவு வரும். பிறகு அவருடைய கவிதைகள், அவர் கவிதைகளைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளை, அவர் கொடுத்த நேர்காணல்கள் மற்றும் அவரது ப்ளாக் முதலானவற்றை தேடி வாசிப்பேன். எனக்கொரு புரிதல் வரும். அவருக்கான கேள்வியை அவருக்கு வைப்பேன்.

  1. கவிஞர்கள் அளிக்கும் பதில்களால் உங்கள் கேள்விகள் நிறைவடைகின்றனவா?

பதில்: பல்வேறு ஆளுமைகள், தனித்தனி சிந்தனைகள், வித்தியாசமான படைப்பு மனநிலைகள், படைப்புகள்- இவற்றையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கும்போது என் கேள்விகள் அதன் பலனை எட்டியுள்ளன என்றே தோன்றுகிறது. இதுவரைஅறுபதுக்கும் மேற்பட்ட கவிஞர்களிடம் நூற்றுக்கும் மேலான கேள்விகளை வைத்துள்ளேன். பாதிக்கும் மேற்பட்டோர் பதில் அளித்துள்ளனர். ஒவ்வொரு பதிலும் ஒரு புரிதலைக் கொடுக்கிறது. கேள்வியின் சாரம்சம் மற்றும் அதன் வலு புரிந்து அதேயளவுக்கு வலுவான பதில்களைக் கொடுப்பதற்காக கவிஞர்கள் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டுள்ளார்கள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. என்னுடைய சில கேள்விகள் வலு குறைந்தவையாக இருக்கும்போது தன் பதில்களால் அதன் வலுவைக் கூட்டியுள்ள பதில்களையும் என்னால் உணர முடிகிறது. சில பதில்கள் சாந்தமானவையே தவிர மற்றவை நல்ல உக்கிரமானவை.

இந்திரன், பெருமாள் முருகன், கலாப்ரியா, யவனிகா ஸ்ரீராம், க.மோகனரங்கன், ரவிசுப்பிரமணியன், அய்யப்ப மாதவன், யாழன் ஆதி, அமிர்தம் சூர்யா, எஸ்.சண்முகம், ரமேஷ் பிரேதன், ஆத்மார்த்தி, ஜெயதேவன், இளம்பிறை, குட்டி ரேவதி, சக்திஜோதி, நாச்சியாள் சுகந்தி, தி.பரமேசுவரி, பெருந்தேவி, இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், லிபி ஆரண்யா, கணேச குமாரன், ஸ்டாலின் சரவணன், வேல்கண்ணன், எஸ்.ஜெ.சிவசங்கர், கடங்கநேரியன், இயற்கை, ஷக்தி, இரா.பூபாலன்,  பூவிதழ் உமேஷ், முத்துராசா குமார்,  தீர்க்கதரிசினன் போன்றோர் இதுவரை பதில் அளித்துள்ளனர்.

தமிழ் கவிதைச் சூழலில் ஆழக்கால் பதித்தவர் முதல் இப்போதுதான் முதல் அடியை அதன் நீரோட்டத்தில் நனைய விடுபவர் வரை இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். எல்லோருடைய பதில்களிலும் என் கேள்விகள் தன் உரையாடலை சாத்தியப்படுத்தியுள்ளன என்றே நம்புகிறேன்.

  1. சமகாலக் கவிதைப் போக்கை இத்தொடர் கேள்வி பதில் மூலம் புரிந்துகொள்ள முடியுமா?

பதில்: அதற்கான முகாந்திரங்கள் நிச்சயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். கவிதையின் பல்வேறுபட்ட கூறுகள் கணிசமாக அலசப் பட்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது. இன்னும் மீதமிருக்கும் கேள்விகளுக்கு பதில்கள் வரும்போது அதன் கனம் கூடும். கவிதை பற்றிய மதிப்பீடுகள், அதன் வடிவங்கள், மொழிதல்கள், பாடுபொருள்கள், நுட்பங்கள் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள போதுமான வாய்ப்புகள் இருக்கின்றன. இது போதாது என்றாலும் கிடைத்துள்ள பதில்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. விடுபட்டுள்ள கேள்விகளும், கேட்கப்படாத கேள்விகளும் இன்னும் இருக்கின்றன. அவையும் களம் நிரம்பும்போது சமகாலத்தின் கவிதைப் போக்கை அறிந்துகொள்ள நல் வாய்ப்புகள் நிச்சயம் அமையும்.

  1. கவிதை குறித்த உங்களது தனிப்பட்ட புரிதல் என்ன?

பதில்: மனிதன் கண்டறிந்த அலாதியான கலை. மொழியின் ருசியை அறிந்த பழங்குடி மனிதர்கள் தன் குரலாலும், உடல் மொழியாலும் கலந்து உருவாக்கிய பாடல் மரபின் நாடோடி வடிவம். நிலமெங்கும் நடந்து நடந்து மனிதர்கள் உருவாக்கிய நெடும்பாதைகளைப் போல் கவிதை தொன்மையானது. நம் இலக்கிய மரபு கவிதையிலிருந்தே தொடங்குகிறது. யானையின் கால் தடத்தில் பறவையின் கால் தடம் பதிந்ததைப்போல் மொழிக்குள் கவிதையின் இருப்புள்ளது.

மக்கள் வாழ்வை, அவர்தம் நிலத்தை, அவர்தம் மனப்போக்கை, பண்பாட்டை, சமூக அமைப்பை, அரசியலை, உள்ளக் கிடக்கையை, உறுதி பொருள்களை எல்லாம் கவிதையில் பேசிப் பகிர்ந்து கொண்ட மொழி தமிழ். கவிதையில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லுக்கும் நுட்பமான ஒளி இருப்பதை அறிந்தே தொல்காப்பியர் ‘எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று உறுதியாய் இலக்கணம் வகுத்தார்.

கவிதை ஓர் ஆதிக்கூத்து. அந்தக் கூத்தில் நானும் அடவு தரித்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமையும் புளகாங்கிதமும் உண்டு.

  1. கவிதையியல் குறித்து ஏன் பேச வேண்டும்?

பதில்: பேசித்தான் ஆகவேண்டும். ஏனெனில், நம் மொழி கவிதையியல் மொழி. செவ்வியல் குணம் கொண்ட மொழி. உலகின் எந்த மொழியின் வேரும் தமிழ் மொழியில் தன்னை நனைத்துக்கொண்டு வளர முடியும். தமிழ் நீர்மைக் குணம் கொண்டது. அதுவும் ஆழ அமிழும். அதனுள்ளும் ஆழ அமிழ்ந்து போக முடியும். அந்தக் குணங்களின் தொகுப்புதான் கவிதை. அதைப் புரிந்து கொள்ளவே கவிதையியல் குறித்து பேசுகிறோம். பேச வேண்டுகிறோம்.

  1. வாசகர்களுக்கு கவிதையியல் பற்றிய புரிதல் இருக்க வேண்டுமா?

பதில்: கட்டாயம் இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை கவிஞருக்கு இருப்பதை விட கூடுதல் கவிதையியல் அறிவு வாசகருக்கு இருக்க வேண்டும் என்றே சொல்வேன். ஏனெனில், எழுதுபவரின் படைப்பு மனநிலையைக் காட்டிலும் வாசகரின் வாசிப்பு மனநிலைதான் கவிதையின் பரிமாணங்களை; உள்ளடுக்குகளை; அது கொடுக்கும் அனுபவங்களை; அதன் அசாத்தியமான பாடுபொருள்களை, மொழிதல்களை; கவிதை தொட்டுக் காட்டும் உலகங்களை; அது பேசும் சமூகப் பண்பாட்டுக் கூறுகளை; சொல்லின் தேர்வுகளை; பொருளின் ஆழங்களை; அது காட்டும் நிலக்காட்சிகளை கண்டறிந்து உலகின் முன் வைப்பதாகச் சொல்வேன்.

வாசிப்பின் வழியேதான் ஒரு பிரதி அதன் ஆற்றலைத் திறந்து காட்டுகிறது. ஒரேயொரு படைப்பு மனம்; அதை ஆயிரக்கணக்கான வாசிப்பு மனம் தொடும்போது கவிதையின் ஆற்றல் பெருகுகிறது. ரசிக மனதின் போதாமை இருக்கும் படைப்புக்கு அடையாளச் சிக்கல் உண்டாகிவிடும். அதன் நிலைப்பாடு கேள்விக்குறியாகி விடும்.

எனவே கவிதையியல் குறித்த அறிவும் புரிதலும் கண்டிப்பாக வாசகருக்கு இருக்க வேண்டும்.

  1. சக கவிஞர் தொடருக்கு கவிஞர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

பதில்:  தமிழ் இலக்கியச் செழிப்புடைய மொழி. குறிப்பாகக் கவிதைச் செழிப்பு அதிகம். அதன் விளைச்சலும் அதிகம். அந்த விளைச்சலில் இருந்தே கவிஞர்களை தேர்வு செய்கிறேன்.

  1. இதுவரை கிடைத்தவற்றுள் யாருடைய பதில்கள் அதிகக் கவனத்தைப் பெற்றுள்ளன?

பதில்: எல்லா பதில்களுமே கூர்ந்து அவதானிக்கப்பட்டுள்ளதாகவே நினைக்கிறேன். ஆனால், கருத்துரைப்பதில் அச்சமும் தயக்கமும் இருக்கும் சூழலை உணர முடிகிறது. அதற்கு என்ன காரணம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் தான் கண்டறிய வேண்டும்.

இந்தத் தொடர் மூலம் கவிதையியல் குறித்து உரையாட வேண்டும் என்று விரும்பியதைப்போல் வாசிக்கும் பிரதி குறித்த வெளிப்படையான கருத்துரைப்பையும் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். சில மாற்றங்கள் உருவாகியுள்ளதாக நினைக்கிறேன். களம் முகநூலாக இருப்பதால் இந்தத் தொடரைக் கடந்து செல்பவர்கள் – விரும்புதல், ரசனையின் குறியீட்டுப் படங்களைப் பகிர்தல்,  கருத்தைப் பதிதல் போன்றவை மூலம் தன் கவனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவற்றுள், கருத்துப் பதிவே முக்கியமானது. அதுதான் இந்தத் தொடரின் முக்கியத்துவத்தை கூர்மைபடுத்தும். அந்த வகையில், ஒவ்வொரு கவிஞரும் தன் பக்கத்தில் பதில்களை வெளியிடும்போது கணிசமான கருத்துப் பதிவுகளை பார்க்க முடிந்தது. ரொம்ப ஆரோக்கியமான கருத்துக்கள் இடப்பட்டிருந்தன. வெறுமனே மகிழ்ச்சி, சிறப்பு, வாழ்த்துகள் என்பதைத் தாண்டி கேள்வி பதில் குறித்து அறிவார்ந்த கருத்துக்களை வாசகர்களும் சக கவிஞர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்.

சில பதில்கள் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றதோடு அல்லாமல் பயங்கர அலைகளையும் கவிதைச் சூழலில் உருவாக்கியிருப்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

அப்படியான சில பதில்களின் சில பகுதிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

‘‘கவிஞனின் ஒற்றைப் பரிமாணம் மறுதலிக்கப்பட்டு, அவனது பன்முகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட இக்கால கட்டத்தில், அவனது கவிதையினுள் இருக்கும் உண்மையும் பன்முகத்தன்மை கொண்டதாகிறது.” – இந்திரன்.

‘‘ஒவ்வொரு கவிதையிலும் கவிச்சொல் என்று ஒன்றோ சிலவோ அமைந்திருக்கும். கவிதை என்னும் ஒட்டுமொத்தச் சொற்கூட்டத்திற்கும் கவிப்பொருளைத் தருவது அத்தகைய கவிச்சொல்தான். கவிச்சொல் பரந்த வெளியை அவாவி நிற்கும் பண்புடையது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை உணர முடியும்; விளக்க முடியாது.” – பெருமாள் முருகன்.

‘‘இந்தியாவில் செவ்வியல் என்பது சாதி, சமய, பக்தி, ஒழுக்கவாத நீதியியல் அழகியலாகப் பாதுகாக்கப்படுகிறது. இந்த அழகியல் என்பது அருவருப்பின் அழகியல், அராஜகவாத பகடி அழகியல், வன்முறை அழகியல், மத்தியதர அழகியல், இடதுசாரி அழகியல், நவீனத்துவ மற்றும் பின் நவீனத்துவ அழகியல் எனப் பன்மை கொண்டுள்ளது.”- யவனிகா ஸ்ரீராம்.

‘‘ஒவ்வொரு நல்ல கவிதையும் அதனதன் அளவில் ஒரு மொழியை, மொழிக்குள் ஒரு மொழியைக் கொண்டிருக்கும். அதுதான் அதன் அழகியல் என்று நினைக்கிறேன்.” – கலாப்ரியா.

‘‘கற்பனாவாதப் பண்புடன் எழுதப்படும் கவிதைகளாகவே இருப்பினும், அவற்றின் ஒரு வரி தன் வீச்சால் மொழியின் நினைவிலி ஆழத்திற்கு நழுவுமானால், அக்கவிதை செவ்வியல் தன்மை கொண்டுவிடும்.” – க.மோகனரங்கன்.

‘‘கவிதையால் மொழி வளர்வதில்லை; மொழியால்தான் கவிதை வளர்கிறது. மொழியின் ஒரு கூறு இலக்கியம், அவ்வளவே. மொழி என்பது பரந்துபட்ட அறிவுத்தொகைமைகளின் இயங்குத்தளம். மொழி அனைவருக்குமானது; கவிதை உட்பட்ட கலை இலக்கியம் என்பவை பொதுவில் இருந்தாலும் அவற்றை அனைவரும் அறிவதில்லை.” – ரமேஷ் பிரேதன்.

‘‘பொதுவாகவே நல்ல கவிஞர்களை இங்கு அடையாளப்படுத்துவது நடப்பதே இல்லை. நிறைய இருட்டடிப்பு வேலை செய்கிறார்கள். மூத்த கவிஞர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் மூத்த எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் பெரும்பாலும் ஒரு நல்ல கவிதையை ஒரு சிறந்த கவிஞனைப் பற்றி எங்கும் குறிப்பிடுவதுமில்லை. பேசுவதுமில்லை.” – அய்யப்ப மாதவன்.

‘‘கவிதை பொதுமொழியில் மட்டும் இயங்குகிறது என்பது ஒரு சாகச உணர்வைத் தரலாம். அது உண்மையல்ல. கவிதையின் மொழியை ஒருவன் கண்டடைய மேற்கொள்கிற பயணம் மிக முக்கியமானது. கவிதைக்கு உண்டான மொழியைக் கண்டடைகிற பயணம் மட்டுமல்ல அது.” -ஆத்மார்த்தி.

‘‘மற்ற எல்லா வடிவங்களை விடவும் கவிதை சிமிழுக்குள் கடலையே கொண்டிருக்கும் வல்லமை கொண்டது.” – ரவிசுப்பிரமணியன்.

‘‘நாவல், சிறுகதைத் தளங்களில் நிகழாத, நிகழ்த்த முடியாத பெரிய எழுச்சிகளையும், புரட்சிகளையும், மறுமலர்ச்சிகளையும் நவீன தமிழ்க் கவிஞர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். கவிஞர் என்றால் பிழைக்கத் தெரியாத அசடு என்பதன்று அர்த்தம். கவிஞர் என்றால் ஆகச்சிறந்த அறிவுஜீவி; அவர்தான் அச்சமூகத்தின் அறிவு மரபின் நீட்சியும் அடையாளமும்.” – குட்டி ரேவதி.

‘‘உண்மைகள், நிகழ்வுகள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதை எழுத்தில் அப்படியே விட்டுவிடுங்கள். எழுத்தில் உண்மைகள் என்பதுதான் எழுத்தாளர் மீது தனித்த மரியாதையை ஏற்படுத்தும். எல்லாப் பாசாங்குகளுடனும் விதிக்கப்பட்ட வாழ்வில் எழுத்திலும் பாசாங்கு எனில் பாலில் விஷம் கலப்பது போலாகிவிடும்.”- இளம்பிறை.

‘‘சமகாலக் கவிதை மாத்திரமல்ல, இங்கே வரக்கூடிய எந்தச் செறிவான இலக்கிய ஆக்கமும் தமிழ் மரபின் சாயலன்றி இருக்க முடியாது. நிலமும் வீடும் உடலும் உயிரும் அவ்வவற்றின் சாரத்தோடு சாரமாகப் பின்னிக் கலந்திருக்கின்றன.” – பெருந்தேவி.

‘‘படைப்பாளர் எவருமே முன்னோடிகளை வாசித்து வளம் பெறாமல் தனித்துத் தானாக உருவாகிவிட முடியாது, அதேசமயம் முன்னோடியாக ஒரே ஒருவரை மட்டும் சுட்டவும் முடியாது. ரசனை, அனுபவம் ஆகியன காரணமாக வாசிப்பு முறை மாறுவதால் காலத்தை ஒட்டி படைப்பும் தன்னளவில் மாற்றம் கொள்ளத்தொடங்கும்.” – சக்திஜோதி.

எலோருடைய பார்வையிலிருந்தும் விலகி புதிய பார்வையை / தலைகீழாக்கத்தை / கலைப்பதை செய்வதுதான் கவிதையின் முதல் வேலை (கவிதைகளுக்கு கொஞ்சம் கூடுதல் வேலைகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை). ஒவ்வொருவருக்கும் வேறுபடும் இந்த வரையறையே ஒரு கவிஞரை தனித்துவமானவராக மாற்றுகிறது.” – எஸ்.ஜெ.சிவசங்கர்.

‘‘கவிதை வேறு கவிதையியல் வேறு. முன்னது கலைச் செயல்பாடு, பின்னது தத்துவச் செயல்பாடு. கலைஞன் உணர்வுப்பூர்வமானவன், கணங்களில் வாழ்பவன். ஒவ்வொரு விஷயத்திலும் அவனின் அப்போதைய மனநிலையே அவனின் எதிர்வினைகளில் தொழிற்படும்.” – இளங்கோ கிருஷ்ணன்.

‘‘மனித அகத்தை வேறு எதைக்காட்டிலும் கூர்மையாக, ஆழமாக பாதிக்கக்கூடியது கலை இலக்கியம். அது ஏற்படுத்தும் நினைவுகள் நீதியாக, அறமாக, தெய்வமாக மாற சாத்திமுள்ளவை. எனவே, அதன்மீது எப்போதும் நிகழ்கால அதிகாரம் கூடுதல் தணிக்கையை, ஒடுக்குதலைச் செய்கிறது. மீறினால் தண்டிக்கிறது.” – வெய்யில்.

  1. இந்தத் தொடரை நூலாக்கம் செய்வீர்களா? அதற்குரிய தகுதிகள் இருக்கின்றதா?

பதில்: தகுதி இருக்கிறதென்று நான் நம்புகிறேன். தகுதி இருப்பதால்தான் பலரும் இதை நூலாக்கம் செய்ய வேண்டி பரிந்துரைக்கிறார்கள். பொதுவெளியில் இத்தொடர் குறித்து நல்ல எதிர்வினையே இருக்கிறது. போதுமான கேள்விகளும் பதில்களும் தயாரானவுடன் நிச்சயம் நூலாக்கம் செய்யப்படும்.

  1. உரையாடல் தொடருமா?
    பதில்: தொடரும்…

***

மௌனன் யாத்ரிகா

சாத்தான் குலமா நம்முடையது?

0

பாரதீ

சாத்தான்குளத்தில் நடந்திருப்பது சாதாரணக் காவல் நிலையக் கொலைகளல்ல. இது ஒரு புதிய தமிழகம் பிறந்திருப்பதற்கான அறிவிப்பு. தமிழகம் மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், புதிய இந்தியாவின் குணாதிசயங்கள் தன்னைப் பெரிதும் பாதித்துவிடாதபடிப் பார்த்துக்கொள்ளும் மாநிலமாக இருந்தாலும், மத்திய அரசின் ஆசைகளை அவர்களின் மாநில அரசுகளை விடவும் பொறுப்புணர்வோடும் பணிவோடும் நடைமுறைப்படுத்தும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. அதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். தகுதியற்ற எவருக்குமே தன் தகுதிக்கு மீறிய வசதிகளும் அதிகாரங்களும் கிடைக்கப்பெறும் போது அதற்கு யார் காரணமோ அவர்களுக்குத் தேவையிருக்கும் வரை நன்றியுணர்வோடு வாலாட்டுவதும் பின்னர் நேரம் வரும்போது தன் நிறத்தைக் காட்டுவதும் எல்லாக் காலத்திலும் நாம் பார்ப்பதுதானே!

புதிய தமிழகம் என்று எதைச் சொல்கிறோம்? ஆட்சி செய்யும் வாய்ப்பைப் பெற்றவர்கள் (ஆட்சியாளர்கள் என்று சொல்லக்கூடக் கூச்சமாகத்தான் இருக்கிறது), மக்களை மக்களாகப் பார்க்காமல் அவர்களை அடிமைகள் போலவும், மூடர்கள் போலவும் நடத்தும் போக்கு வெகுவேகமாகக் கூடிவருகிறது. அடிமையாகவும் மூடர்களாகவும் இருந்துகொண்டே காரியம் சாதிப்பவர்களுக்கு தமக்குப் படியளப்பவர்கள் தவிர மற்ற எல்லோரும் அப்படியே இருந்தால்தான் பிடிக்கும். மக்களின் மனதை வென்று ஆட்சியைப் பிடிப்பவர்கள் அதைத் தக்கவைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். மக்களின் மீதும் மக்களாட்சியின் மீதும் அடிப்படை அரசியல் அறத்தின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எடுபிடி வேலை செய்வதற்காக மிரட்டி அமர்த்தப் பட்டிருப்பவர்கள் எதற்கு மக்களைப் பற்றிக் கவலைப்படப் போகிறார்கள்! தம்மைக் கேள்வி கேட்பவர்கள், எதிர்ப்பவர்கள், தம் முதலாளிகளின் திட்டங்களுக்குச் சிறிதளவிலேனும் இடையூறாக இருப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களைத் தம்மிடம் இருக்கும் தகுதிக்கு மீறிய அதிகாரத்தை வைத்து அடித்து நொறுக்கும் இந்தப் போக்கு மிகவிரைவில் சட்டம் ஒழுங்குக்குப் பேர் போன தமிழகத்தை வேட்டைக்காடாக மாற்றிவிடும். இப்படியே தொடர்ந்தால், இதுவரை குடிமக்களை அடிக்கும் தகுதியைப் பெற்றிருந்த காவல்துறை இப்போது கொல்லும் தகுதியையும் பெற்றுவிட்டதாக எண்ணிக்கொண்டு, பொழுதுபோக்குக்குத் தனக்கு வேண்டாதவர்களை எல்லாம் கொல்லத் தொடங்கிவிடும்.

அடுத்து ஆளுங்கட்சிக்காரர்கள் தமக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் கொல்லச் சொல்லிக் காவல்துறைக்கு நெருக்கடி கொடுக்கும் புதிய போக்கு உருவாகும். போராட்டம் செய்பவர்களைத் தடியடி நடத்திக் கலைத்த காலம் போய், கொன்று போட்டுவிடும் காலம் வரும். அடுத்து, அரசாங்கத்தைக் கேள்வி கேட்போரையே கொன்று போடும் காலமும் வெகுவிரைவில் வந்துவிடும். அது ஒன்றும் இந்த நாட்டில் ஏற்கனவே நடக்காததில்லை. மாநில அரசுகளை விமர்சிப்பவர்கள், அதுவும் தமிழ்நாட்டில் மாநில அரசை விமர்சிப்பவர்கள் கொல்லப்படும் காலம் இன்னும் வரவில்லை. அவ்வளவுதான். இருப்பினும் அதற்கான அறிகுறி தென்படத் தொடங்கிவிட்டது. அதுவும் ரவுடிகளை வைத்து வேட்டையாடி அதைக் காவல் துறையைக் கண்டுகொள்ளாமல் இருக்கச் சொல்வதையே அதற்குத் துணையாக இருக்கச் சொல்வதையோ விட, காவல் துறையை வைத்தே மொத்த வேலையையும் முடித்துவிடுவது பல வகைகளிலும் வசதியானதாக இருக்குமே! பின்னர் தமக்கு வாக்களிக்காத ஊர்க்காரர்களையும் தெருக்காரர்களையும் சமூகங்களையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்தே கொல்லும் காலம் ஒன்றும் வரும். அதுவும் புதிய இந்தியாவுக்குப் புதிதில்லை. புதிய தமிழகத்துக்குத்தான் புதிது. புதிய இந்தியாவிலும் சரி, புதிய தமிழகத்திலும் சரி, அதை நியாயப்படுத்திப் பேசும் கூட்டத்தின் குரலுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட தளங்கள் கிடைத்துள்ளன. “எங்கள் கட்சிக்கு வாக்களிக்காத மாநிலங்களுக்கு நாங்கள் ஏன் எதுவும் செய்ய வேண்டும்?” என்று அந்த மாநிலத்துக்குள்ளேயே வாழ்ந்துகொண்டு – அரசியல் பிழைப்பை ஓட்டிக்கொண்டு பேசும் மனிதர்களுக்கு இங்கே எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. அப்புறம் மேலே சொன்னதெல்லாம் நடக்காது என்று மட்டும் எப்படிச் சொல்ல முடியும்?

ஒருபக்கம் வல்லரசாகி விட்டோம் என்றும் உலகத் தலைமை கொள்ள வருமாறு எல்லோரும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கதை விட்டுக்கொண்டு, இன்னொருபுறம் விடுதலைக்குப் பிந்தைய எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குக் குடிமக்களை அடிமைகளாகவும் விலங்குகளைப் போலவும் நடத்தும் பழைய காலனியாதிக்கப் பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்தும் இந்த இடத்துக்கு எப்படி வந்தோம்? விலங்குகளைக்கூட முறையாக நடத்தும் நாகரிகம் அடைந்துவிட்டோம். இந்தக் கேட்டிலும் கேடுகெட்ட இழிநிலைக்கு நம்மை இட்டு வந்தது எது? இயல்பாகவே இந்த இழிவாழ்வுக்குத் தகுதிப்பட்டவர்கள்தாமா நாம்?

மக்களாட்சியில், ஆட்சி செய்பவர்கள் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்கிற பயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படித்தான் பெரும்பாலான நாடுகளில் இருக்கவும் செய்கிறார்கள். மக்களே மனச்சாட்சியற்றவர்களாக இருக்கும் போது அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பவர்களாக ஆட்சி செய்பவர்கள் இருப்பது வேறுவிதமான பிரச்சனை. இனவெறி பிடித்த மக்களின் அரசுகள் இனவெறி பிடித்தவையாகவே இருப்பதும் மதவெறி பிடித்த மக்களின் அரசுகள் மதவெறி பிடித்தவையாகவே இருப்பதும் நமக்குப் புதிதில்லை. மாறாக, மக்கள் அறிவற்றவர்களாகவோ தன்மானம் அற்றவர்களாகவோ தன்னலம் தவிர வேறு எது பற்றியும் கவலைப் படாதவர்களாகவோ இருக்கும்போது, ஆட்சி செய்பவர்கள் தமக்கு வேண்டியதையெல்லாம் சாதித்துக் கொள்பவர்களாகவும் மோசடிக்காரர்களாகவும் கொள்ளைக் கூட்டமாகவும் மாறுவது இயல்பாகவே நடக்கத்தான் செய்யும். அதுதான் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் நடந்துகொண்டிருக்கிறதா?

மக்களைக் காப்பதற்குத்தான் காவல்துறை. அதைச் சரியாகக் கட்டிப்போட்டு வைத்துக்கொள்ளா விட்டால் வெறிநாயாகவோ கடிநாயாகவோ மாறிவிடும் என்று பயந்துதான் முதலமைச்சர்கள் தம் அதிகாரத்தின் கீழேயே வைத்துக்கொள்வார்கள் என்றொரு கதை உண்டு. ஏனென்றால் அந்தத் துறைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அப்படி. அப்படிக் காவல்துறையைத் தன் அதிகாரத்தின் கீழேயே முதலமைச்சர்கள் வைத்துக் கொள்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. காவல்துறை, உளவுத்துறை போன்றவற்றைத் தன் அதிகாரத்தின் கீழ் வைத்துக்கொண்டால்தான் தமக்கு எதிராக இருப்பவர்களை வேவு பார்க்க வசதியாக இருக்கும். கட்சிக்குள்ளேயும் தமக்கு எதிராக உருவெடுப்பவர்களை முன்கூட்டியே அறிந்து அழிப்பதற்கு வசதியாக இருக்கும். தனக்குக் கீழே இருக்கும் வேறோர் அமைச்சரிடம் அந்த அதிகாரம் போய்விட்டால் அதுவே அவர் தன்னைக் கவிழ்ப்பதற்குப் பயன்படுத்தும் ஆயுதமாகிவிடக் கூடும் என்பதால் கிட்டத்தட்ட எல்லா முதலமைச்சர்களுமே காவல்துறையைத் தம் காலுக்குக் கீழேதான் வைத்துக்கொண்டார்கள்.

இதற்கு அடுத்த கட்டமாக, அரசுத் துறையில் இருப்பவர்களை நன்றாக வைத்துக்கொண்டால் தனக்கும் தன் ஆட்சிக்கும் நன்மை பயக்கும் விதத்தில் எல்லா வேலைகளையும் செய்துகொடுப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்று நம்பி அவர்களுக்கு வேண்டிய ஊதிய உயர்வுகளை அள்ளி அள்ளிக் கொடுத்து விசுவாசிகளை உருவாக்கிய ஒருகாலம் வந்தது. அதன் மூலம் வெளியில் காலமெல்லாம் தன்னைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் ஒருசில சமூகப் பிரிவுகளை வைத்திருந்தது போலவே உள்ளேயும் ஓர் அரசு ஊழியர் கூட்டத்தை உருவாக்கிவிட்டார். அடுத்து வந்தவர், அதே பாணியில் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள என்னென்ன வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்ததிலும் கலந்தாலோசித்தத்திலும் அவருக்குக் கிட்டிய யோசனைகளின் வெளிப்பாடுதான் காவல்துறைக்கு அளவிலாத அதிகாரத்தைக் கொடுத்ததும் தானும் தனக்கென்று சில ஆதரவுச் சமூகங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று செய்த வேலைகளும். அப்படிக் காவல் துறையைத் தன் செல்லப்பிள்ளை போல வைத்துக்கொண்டு, தனக்கு எதிரானவர்களை எல்லாம் அழிப்பதற்கு அவர்களைத் தன் ஏவல் நாயைப் போலப் பயன்படுத்தினார். சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்குக் காவல்துறைக்கு நிறைய அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பது ஓரளவுதான் உண்மை. “பசங்க உங்க மேல ரெம்பப் பாசமா இருக்காங்க. அவங்களுக்கு இதெல்லாம் செஞ்சு குடுத்தா – இதிலெல்லாம் கண்டுக்கிடாம விட்டா, உங்களுக்காக என்ன வேணாலும் செய்வாங்க” என்று பணிவோடு பேசப்பட்ட பேரத்தின் தொடர்ச்சிதான் நம்மை இங்கு கொண்டுவந்து விட்டிருப்பது.

“சென்ற ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்க் கிடந்ததால் நூறு கொலைகள் விழுந்தன. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தி அதைப் பத்துக் கொலைகள் ஆக்கிவிட்டோம்” என்கிற கதைக்குப் பின்னால் சட்டம் ஒழுங்கைக் காப்பதற்காக என்று சொல்லிக்கொண்டு காவல் துறையே நூறு பேரைக் கொன்றிருந்தால் அது உண்மையான சட்டம் ஒழுங்காகிவிடுமா? அதிலும் அந்த நூறு பேரில் ஐம்பது பேர் அப்பாவிகளாக இருந்தால்? காவல்துறை ஒவ்வொரு முறையும் நீதித்துறையின் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துச் செயல்பட்ட போதெல்லாம் அதை விசிலடித்துக் கொண்டாடினோம். அப்போதெல்லாம் இதுபற்றியெல்லாம் கவலைப்படாததால்தான் இந்த இடத்தில் வந்து நிற்கிறோம்.

அடுத்ததாகக் காவல்துறையில் நடந்த மாபெரும் முறைகேடு, காவல்துறை முழுக்கவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரைப் புகுத்தியது. ஒவ்வோர் ஆண்டும், “இந்த வருசம் பத்துக்கு எட்டுப் பேர் நம்மாளுகதான்”, “ஒன்பது பேர் நம்மாளுகதான்” என்று ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பெருமை பேசிக்கொண்டு திரியும் அளவுக்கு ஓர் அரசுத்துறை இருந்தது எவ்வளவு பெரிய முறைகேடு! “எந்தத் தகுதியும் இல்லாமல் வந்த எனக்கு இவ்வளவு ஆதரவையும் பலத்தையும் கொடுத்த உங்களிடம் தகுதி பாராமல் நன்றிக்கடன் செலுத்துவேன்” என்கிற ஏற்பாடுதான் அது. இதுவும்தான் தகுதியே இல்லாத பலர் அந்தத் துறைக்குள் வர வழிவகை செய்தது. இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களின் வாய்ப்பைப் பறிக்கிறது என்று கவலைப்பட்டவர்கள், இந்த முறைகேட்டைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இட ஒதுக்கீட்டில் கூட ஒரு குழுவுக்குள் உள்ள முன்னணித் திறமைசாலிகளே வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். இந்த முறைகேட்டில் தகுதியுடைய பல சாதி இளைஞர்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் வழங்கப்பட்டன. அதனால் இன்று அத்துறையே தம்முடையது போல நினைத்துக்கொண்டு அது செய்யும் அத்தனை மிருகத்தனங்களையும் ஆதரித்துப் பேசுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வந்திருக்கிறது? எந்தக் காவல் நிலையம் சென்றாலும் உதவுவதற்குத் தம் உறவினர் ஒருவர் இருப்பார். சாதியைக் கேட்டுவிட்டு வேலையை எளிதாக்கிக் கொடுப்பார் அல்லது வேறொரு சாதியைச் சொல்லியிருந்தால் எலும்பை உடைக்கிற இடத்தில் டீ வாங்கிக்கொடுத்து உபசரித்து அனுப்புவார். அதனால் எந்த மனச்சாட்சியும் இல்லாமல் இப்படிப் பேச முடிகிறது. ஆனால் இதில் பாதிக்கப்படுபவர்கள் யார்? மிச்சமிருக்கும் 80 விழுக்காட்டு மக்களுக்கு இது எவ்வளவு பெரிய அநீதி!

அரசியல் என்பது பண பலமும் ஆள் பலமும் சேர்ந்து செயல்படும் களமாக மாறிவிட்ட பின்பு, பணம் குவிக்க வாய்ப்பிருக்கும் துறைகளைப் போலவே ஆள் பலத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பிருக்கும் துறையான காவல் துறையும் முக்கியமானதாகிவிட்டது. தனக்குப் பலமாக இருப்பவர்கள் சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் புரிபவர்களாக இருந்தால் என்ன செய்வது? அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட வேண்டும். அதற்குக் காவல்துறையின் துணை தேவைப்படுகிறது. அங்குதான் ஊழல் தொடங்குகிறது. ‘அதிகாரம் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ள முடிகிறது. எனவே நமக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்படி அப்பாவிகளைச் சித்தரவதை செய்து மகிழ்ந்துகொள்வோம்’ என்கிற குரூர கீழ்ப்புத்தி வெளிப்படுகிறது. தம்முடைய அதிகாரத்தை வேறொருவரிடம் இழந்து நிற்கும்போது, தான் எப்படிப் பிறருடைய அதிகாரத்தைப் பறிக்கலாம் என்கிற புத்தியும் வேலை செய்யத்தானே செய்யும்! காவல் துறையின் அதிகாரத்தை உள்ளூர் அரசியல் தலைகள் பறிக்கிற விதத்தில் நடந்துகொள்ளும் போது, அதிகாரமற்ற எளிய மனிதர்களிடம் கூடுதல் அதிகாரத்தைச் செலுத்தும் கொடிய மிருகமாக அது மாறிவிடுகிறது. ஆக, அவர்களுக்கு அவர்களுடைய தகுதிக்கு மீறிய அதிகாரத்தைக் கொடுக்கிற அரசாங்கமும் கேடுதான், அவர்களுடைய அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் நடந்துகொள்ளும் அரசாங்கமும் கேடுதான். இரண்டுமே மக்கள் நலத்துக்காகச் செய்யப்பட்டவை அல்ல. சட்டம்-ஒழுங்கைக் காக்கவும் செய்யப்படவில்லை, அவர்களின் அதிகார மீறல்களுக்குக் கடிவாளம் போடவும் செய்யப்படவில்லை. தத்தம் காரியங்களைச் சாதித்துக்கொள்ளவே செய்யப்பட்ட பித்தலாட்டங்கள் அவை. இவ்விரண்டும் மாறி மாறி நடந்துதான் அவர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது.

மற்ற துறைகளைப் போலன்றி, காவல்துறையில் உடல் பலமும் உள பலமும் இரண்டிலுமே முரட்டுத்தனமும் தேவைப்படுகிறது. சல்லிப் பயல்களைக் கையாள்வதிலேயே அவர்கள் காலமெல்லாம் கழியும் என்பதால் அவர்களும் சல்லித்தனத்துக்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்தான். ஆனால் அவர்களும் சல்லிப்பயல்களாகவே இருந்துவிடக் கூடாதே. சாத்தான்குளத்தில் நடந்திருக்கும் கொலைகள் குற்றவாளிகளை விடவும் கொடுமையான மனநிலை கொண்டவர்கள் காவல் நிலையங்களுக்குள் நிறைந்திருப்பதைத்தான் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

‘சைக்கோக் கொலைகாரன்’ என்று செய்தி போடுவது போல, ‘சைக்கோக் காவலர்’ என்று செய்தி போட வேண்டிய காலம் வந்துவிட்டது. இது சட்டத்தை நிலைநாட்டச் செய்த கொலைகூட இல்லை. இவர்கள் பொள்ளாச்சியில் எப்படிச் சட்டத்தை நிலைநாட்டினார்கள் என்பதைப் பார்த்தோமே! முழுக்க முழுக்கத் தம் மனதுக்குள் கிடக்கும் மிருகத்தனத்துக்குத் தீனி போடச் செய்துகொண்ட கொலைகள். மீண்டும் மீண்டும் மிருகங்கள் என்று கூறக் கூடத் தயக்கமாகத்தான் இருக்கிறது. எந்த மிருகம் இப்படி இன்னொரு தன் இனத்து மிருகத்தையே அடித்துக் கொல்லும் அளவுக்கு கீழான உணர்ச்சிகள் கொண்டதாக இருக்கிறது! இவர்கள் சட்டப்படி கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல. சராசரி மனிதர்கள் நடமாடும் வெளியுலகில் வாழத் தகுதியற்றவர்கள். தீவிர மனநோய் மருத்துவத்துக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டியவர்கள்.

இப்படியொரு கொலையைச் செய்தால் மேலிடத்துக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயமில்லாமல் போயிருக்கிறது என்றால் அதையும் நாம் பேச வேண்டியிருக்கிறது. அடிமைகளின் அரசு, “யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்” என்கிற அதிகாரத்தைக் காவல் துறைக்கு வழங்கியிருக்கிறதா? அல்லது, “அவர்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நீ மூடிக்கொண்டு இருக்க வேண்டும்” என்று ஆட்சியில் இருப்பவர்கள் அடித்து மூலையில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது, ‘இவர்களே அடிமைகள், இவர்களுக்கு ஏன் நாம் பயப்பட வேண்டும்’ என்று காவல் துறை எண்ணுகிறதா? ஆட்சியில் இருப்பவர்கள் காவல்துறையின் மீது தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்ட அடிமைகளாக இருக்கிறார்களா? அந்தக் கட்டுப்பாடு வேறோர் இடத்தில் இருக்கிறதா? அல்லது, எல்லாமே முறையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது, குற்றத்தை ஒப்புக்கொள்வது ஆட்சிக்குக் கெட்ட பெயரைக் கொடுக்கும் என்ற அரசியல் ஞானத்தின் வெளிப்பாடா? இதில் எதுவாக இருந்தாலும் அது நல்லதில்லை.

காவல் துறைக்கு மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லை. ஆனால் காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கு அந்தக் கடமை இருக்கிறது. அந்த பயம் இருந்தால் காவல் துறையை இவ்வளவு கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்ள விடமாட்டார். முறையாக மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வருகிற ஒரு தலைவனுக்கு அந்த பயம் இருக்கும். நாளை இதே ஊரில்தானே தான் வாழ வேண்டும் – அரசியல் பிழைக்க வேண்டும் என்கிற ஓரளவேனும் அடிப்படை அரசியல் அறிவு இருக்கும் தலைவனுக்கு அந்த பயம் கண்டிப்பாக இருக்கும். இது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பவர்களுக்குப் புரியவே புரியாது. தன் காலடியில் அரசியல் அறிவே இல்லாத முட்டாள்களை வைத்துக்கொண்டால்தான் தனக்கு நல்லது என்று அரசியல் செய்த தலைவியின் கீழ் வளர்ந்த மூடர்களுக்கு எப்படி இது புரியும்?

இவ்வளவும் நடந்த பின்பு, ஒரு முதலமைச்சர், எந்த மனச்சாட்சியும் இல்லாமல், “தந்தை நெஞ்சுவலியால் இறந்தார்” என்றும் “மகன் மூச்சுத்திணறலால் இறந்தார்” என்றும் வாய் கூசாமல் பேச முடிகிறது என்றால் அதற்கு என்ன காரணம்? பொதுவாழ்வில் எவ்வளவு தரம் தாழ்ந்த மனிதர்கள் நமக்குத் தலைவர் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நின்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இதைக் காமராஜர் செய்வாரா? கருணாநிதி செய்திருப்பாரா? ஜெயலலிதா செய்திருப்பாரா? காமராஜர் கண்டிப்பாகச் செய்திருக்க மாட்டார். கருணாநிதியோ ஜெயலலிதாவோ செய்திருக்கக்கூடும் என்று உங்களில் சிலர் சொல்லக்கூடும். நான் அப்படி நினைக்கவில்லை. திரும்பவும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்கிற பயத்திலாவது இப்படியான வேலைகளைச் செய்யும் முன் யோசிப்பார்கள். அப்படியே ஒருவேளை அவர்களை மீறி இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் அதற்கான நடவடிக்கையையாவது எடுத்திருப்பார்கள். கண்துடைப்பாகவாவது ஏதேனும் செய்திருப்பார்கள். அதுகூடச் செய்யத் தேவையில்லை என்கிற அளவுக்கு கிறுக்கு முற்றிப் போயிருக்கிறது.

உலகிலேயே ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அடுத்துச் சிறந்தது தமிழகக் காவல்துறைதான் என்றும் இந்தியாவிலேயே சிறந்தது தமிழகக் காவல்துறைதான் என்றும் சொல்வதில் ஒழிந்திருக்கும் இன்னோர் உண்மை இருக்கிறது. இந்தியாவிலேயே கொடூரமான முறைகளில் காவல் நிலையக் கொலைகள் செய்யப்படும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசத்துக்கு அடுத்துத் தமிழகம் இருக்கிறது. நாட்காட்டியைத் தலைகீழாகத் திருப்பிக் கொண்டிருக்கும் உத்திரப்பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்துக்கு இது பிரச்சனையில்லை. எல்லாத்திலும் நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம் என்று சொல்கிற நமக்கு இது பெரும் அவமானம். உத்திரப்பிரதேசத்தோடு எதில் போட்டி போட்டாலும் அது நமக்கு அவமானமே.

வெள்ளைக்காரனுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் இங்குதான் நிறைய இருந்தார்கள், அதனால்தான் நிறையப் பேர் வெள்ளைக்காரனைப் போல ஆங்கிலம் பேசிக்கொண்டு திரிகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. வெள்ளைக்காரனே எவ்வளவோ மாறிவிட்ட பின்பும், வெள்ளைக்காரன் காலத்துக் கொடூரங்கள் அப்படியே தொடரும் முன்னணி மாநிலமாக இருக்கிறது தமிழகம். ஆட்சியில் இருப்பவர்கள் காவல்துறைக்கு இவ்வளவு அதிகாரம் கொடுக்கும் இந்த இழிபண்பு கூட வெள்ளைக்காரன் காலத்துப் பழக்கத்தின் நீட்சியே. வெள்ளைக்காரன் தன்னைப் பண்பட்ட மனிதனாகவும் நம்மை இன்னும் முழுமையாக மனிதகுலத்தில் சேர தகுதிபெறாத கற்கால விலங்குகளாகவும் கருதினான். அதனால் நம் முன்னோர்கள் மீது இப்படியொரு மனிதத்தன்மையற்ற அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டான். இன்று இங்கிலாந்தில் போய் நாம் என்ன குற்றம் செய்தாலும் அப்படியொரு தண்டனையை நமக்குக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் எவ்வளவோ பண்பட்டுவிட்டார்கள். நாமும் பண்பட்ட மனிதர்கள் ஆகிவிட்டோம் என்று எண்ணத்தொடங்கி விட்டார்கள். இப்படியெல்லாம் நடப்பதைக் கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள்!

எல்லாக் குற்றங்களுக்கும் குற்றவாளி வைத்திருக்கும் நியாயம் என்று ஒன்று இருக்குமல்லவா? இந்தக் குற்றத்தில் அப்படி என்ன நியாயம் இருக்க முடியும்? “காவல் துறை என்றால் பயம் இருக்க வேண்டும். காவல்துறையையே எதிர்த்துப் பேசினால் – தாக்கினால் சும்மா விட முடியாது” என்று ஏதேனும் கூறுவார்கள். இவை அனைத்துமே முற்றும் நிராகரிக்கப்பட வேண்டியவை. காவல்துறைக்கு எவரும் பயப்பட வேண்டியதில்லை. குற்றம் செய்யத்தான் குடிமக்கள் பயப்பட வேண்டும். “நம்மைவிடக் குற்றம் செய்பவர்களைப் பார்த்து நாம் ஏன் பயப்பட வேண்டும்?” என்றோ “ஒரு துண்டைத் தூக்கிப் போட்டால் நாம் செய்யும் குற்றங்களுக்கும் காவலுக்கு வந்து நிற்பவர்களுக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்?” என்றோ மக்கள் எண்ணத் தொடங்கிவிட்டால் அப்புறம் எப்படிப் பயப்படுவார்கள்! எதிர்த்துப் பேசுவதற்குத் தண்டனை அடித்துத் துன்புறுத்துவதும் தாக்குவதற்குத் தண்டனை சித்திரவதை செய்து கொல்வதும் என்று ஆகிவிட்டால் அது காவல்துறையாக இருக்க முடியாது. அதை ஆதரித்துப் பேசுபவர்கள் நாகரீகமடைந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. கூலிக்குக் கொலை செய்பவர்கள் கூட இவ்வளவு கொடுமையான வாதங்கள் செய்வார்களா என்று தெரியவில்லை.

எதையுமே சாதியக் கண்ணோட்டத்தில் பார்க்கும் நோய் தென் தமிழகத்துக்குப் புதிதில்லை. ‘சாதி வெறி’ என்ற சொல்லாடலே அது இழிவானதாகப் படவேண்டும் என்று உருவாக்கப்பட்டது. வெறி என்பது நாய்க்கு இருக்க வேண்டியது என்பதால் மனிதர்கள் அதை இழிவாகக் கருதுவார்கள் என்று இடப்பட்டது. நாய்கள் மனிதர்களைவிட இழிவானவை அல்ல எனினும், அப்படி எண்ணுபவர்களாவது ஓரளவு திருந்தியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அதையும் பெருமையாகப் பேசுகிற கூட்டம்தான் கூடிக்கொண்டிருக்கிறது. இனி அதைச் ‘சாதி மனநோய்’ என்று அழைத்தால் சரியாக இருக்கும் என்றுபடுகிறது. மனநோய் ஒன்றும் இழிவானதில்லை. ஆனால் அது சரி செய்யப்பட வேண்டியது. “எனக்குக் கொஞ்சம் சாதி மனநோய் உண்டு!” என்று பெருமையாகச் சொல்ல மாட்டார்களே!

தமிழத்தில் குறிப்பிட்ட சில சாதியினருக்கு இந்த நோய் முற்றிய நிலையில் இருக்கிறது. அவர்களைப் பார்த்து ஒழுங்காக இருந்தவர்களும் நிறையக் கெட்டுப் போயிருக்கிறார்கள். ‘அவர்கள் அப்படியிருக்கிறார்கள். அதனால் நாமும் அப்படி இருக்க வேண்டும்’ என்ற உளவியல் அழுத்தம் காரணமாக எல்லோரும் அப்படி ஆகியிருக்கிறார்கள். “கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்”, “நாம் வடநாட்டுக் கூமுட்டைகள் போல முட்டாள்கள் இல்லை” என்ற வளர்ச்சிப் பெருமைகளையும் பேசிக்கொண்டே இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கான வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட சாதியினர் மட்டுமில்லாமல், தன் சாதி மனநோயை மதத்தின் பெயருக்குள் மறைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு கூட்டமும் இதில் புகுந்து மீன் பிடிக்க முயல்கிறது. வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்றால் ஓர் அப்பாவி கொல்லப்படுவதைக்கூடக் கொண்டாடும் அளவுக்கு – தன் மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் சிறுமியைக் கற்பழித்துக் கொல்பவனைக் கூட ஆதரித்துப் பேசும் அளவுக்குக் கேடுகெட்ட சிந்தனைச் சாக்கடை கொண்டதுகள் இவ்வளவு காலமாக நாம் வாழும் இதே மண்ணில் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன. நாமும் அதுகளை நம்மைப் போன்ற மனிதர்களாக மதித்திருக்கிறோம். காலம் இப்படியே ஓடும் என்ற நம்பிக்கையில் எக்காளமிட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது நமக்கு. பின்னர் நேரம் வரும்போது இதற்கான சரியான பாடத்தைக் கற்றுக்கொடுக்கத் தவறினால் மீண்டும் மீண்டும் இப்படியான இருண்ட காலத்துக்குள் சென்று நாம் நாயாய் பேயாய் உழைத்துக் கண்ட வளர்ச்சியையெல்லாம் வீணடித்துத் திரும்ப வேண்டிய நிலைக்குத்தான் உள்ளாவோம்.

அடுத்த ஓராண்டில் தேர்தல் வருவதால் இதுபோன்ற நிறைய வேலைகள் நடக்கும். அவற்றுள் பல திட்டமிட்டே நடத்தவும் படும். தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் அடிப்படை அறிவுகூட இல்லாத இனமில்லை நாம். இதையெல்லாம் புரிந்து நடந்து கொண்டால் நம்மிடம் பாதுகாப்பானதாகக் கொடுக்கப்பட்ட நம் நிலம் நம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பாதுகாப்பானதாகக் கைமாற்றப்படும். இல்லாவிட்டால், சில பிழைப்புவாதிகளின் மனிதத்தன்மையில்லாத உயிர் விளையாட்டில் நாமும் பலியாகி நம் சந்ததிகளும் பலியாகும் பாவத்துக்குத் துணை போனவர்களாவோம்.

சாத்தான்குளத்தில் கொலையுண்டிருப்பவர்கள் இருவரும் தந்தை – மகன் என்பதால், இரட்டைக்கொலைகள் என்பதால், அதுவும் வியாபாரிகள் என்பதால், அரசியல் செல்வாக்கு மிக்க ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவ்வளவும் வெளியில் வந்திருக்கிறது. இந்த அளவுக்குக்கூட ஆதரவுக்கு ஆட்கள் இல்லாத எத்தனை எளிய மனிதர்கள் இதற்கு முன்பு இது போலக் கொல்லப்பட்டிருக்கிறார்களோ! வெளியில் சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்று மிரட்டினால் அதை மீறிப் போராடும் திராணி இருக்கிற தமிழ்த் தாய்மார்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எனவே, இதுபற்றி ஒரு விரிவான மாநிலம் தழுவிய விசாரணை வேண்டும்.

இன்று வியாபாரிகளுக்கு நடப்பது நாளை விவசாயிகளுக்கு நடக்கலாம், தனியார் துறை ஊழியர்களுக்கு நடக்கலாம், எவருக்கும் நடக்கலாம். தன் சொந்தப்பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக பக்கத்துத் தெருக்காரரையோ எதிர் வீட்டுக்காரரையோ சித்தப்பன்-பெரியப்பனையோகூட கொன்றுபோடத் தொடங்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இன்று கொலை செய்பவர்கள் அடுத்து எவர் வீட்டுக்குள்ளும் புகுந்து கற்பழிப்பு செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? ஒரு தந்தையையும் மகனையும் இழந்திருக்கும் தாயும் மனைவிகளும் பிள்ளைகளும் போலவே அந்தக் கொலைகாரர்களை மனமாரச் சபிப்பதைத் தவிர எளியவர் நாம் என்ன செய்துவிட முடியும்? அவர்கள் நம் சாபங்களுக்கெல்லாம் பயந்தவர்களா என்ன?

ஒவ்வொரு சாவுக்கும், அடிக்கும் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நிறுத்தும் அளவுக்குக் காவல்துறையைச் சீர்திருத்தம் செய்வதை அடுத்த தேர்தல் அறிக்கையில் முக்கியமான வாக்குறுதியாக வைக்கும் கட்சிகளையே நாம் ஆதரிக்கப் போகிறோம் என்கிற அழுத்தத்தை இப்போதிருந்தே எல்லாக்கட்சிகளுக்கும் புரிய வைப்பதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். “தேர்தல் அறிக்கையில் எதை வேண்டுமானாலும் போடலாம். போடுவதையெல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன?” என்று எளிதில் தப்பிவிட முடிகிற மாநிலமல்ல தமிழகம் என்பதையும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இந்த இரட்டைக் கொலைகள் மட்டுமல்ல. கடந்த பல ஆண்டுகளில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் கொடூரர்களின் வழக்கை நேர்மையாக நடத்தாமல் துணை போனது உட்படப் பல மன்னிக்கவே முடியாத குற்றங்களை இந்த அரசு செய்திருக்கிறது. அவற்றையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தி, குற்றவாளிகள் எல்லோரையும் தண்டிப்பதாக உறுதியளிக்கும் கட்சியையே இனி நாம் நம்ப வேண்டும். அரசியலில் கூட்டுக் களவாணித்தனத்துக்கு இடமே இல்லாமல் செய்யும் தேர்தலாக வரும் தேர்தல் இருக்க வேண்டும்.

இதெல்லாம் ஆகுற வேலையா? அப்படியே ஆகும் என்றாலும் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

சமூக ஊடகங்களில் குரல் எழுப்புவது ஒன்றும் முற்றிலும் பொருளற்ற வேலையில்லை. தெருவில் இறங்கிப் போராடுபவர்களையும் ஒரு காலத்தில் அப்படித்தான் கேலி செய்தார்கள். இந்தக் கேலிகள் அனைத்துமே எதற்கும் வக்கில்லாதவர்கள் செய்பவை. அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதே இல்லை. சமூக ஊடங்கங்களில் நன்றாகப் பொய் பரப்பத் தெரிந்தால் போதும், ஆட்சியையே எளிதாகப் பிடிக்கலாம் என்கிற அளவுக்கு உலகம் மாறிவிட்டது. அது அவர்களுக்கும் தெரியும். எனவே, இதுபற்றி இடை விடாமல் பேச வேண்டும். பரப்ப வேண்டும். நாளையும் நாளை மறுநாளும் திட்டமிட்டே நம் கவனத்தைத் திருப்பப் பல கிளர்ச்சிக் கதைகள் வெளியிடப்படும். அதில் கிறங்கிவிடாமல் இதில் கவனத்தை வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கும் வேளையில் இதையும் தூத்துக்குடி கொலைகளையும் பொள்ளாச்சிக் கொடுமைகளையும் மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். எனவே, சமூக ஊடகப் போராளிகளின் தோளில் மிகப்பெரிய சுமை இருக்கிறது.

அமெரிக்காவில் ஒரு கறுப்பர் கொல்லப்பட்டதற்காக மொத்த நாடே கொதித்தெழுந்தது. அதில் வெள்ளையர்களும் கலந்து கொண்டார்கள். அதனால்தான் உலகமெங்கும் இருந்து அறிவாளிகளும் திறமைசாலிகளும் அங்கு வந்து குவிகிறார்கள். அதில் பிழைக்க வந்த இந்தியர்களும் கலந்து கொண்டார்கள். இப்போது அதுபோன்ற, இன்னும் சொல்லப்போனால் அதைவிடப் பலமடங்கு கொடிய சம்பவம் ஒன்று தம் சொந்த மண்ணிலேயே நடந்திருக்கிறது. ஆனால் இதற்கு மட்டும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். நயமாகப் பேச்சுக் கொடுத்தால் சிலர் இதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். அதற்குள் இருப்பது அவர்களின் சாதி – மத – அரசியல் அழுக்குக் கணக்குகள். அது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களை அடையாளம் மட்டும் கண்டுகொண்டு நமக்கான வேலையைப் பார்க்க வேண்டும். அதில் முக்கியமானது, இங்கே நடந்திருக்கும் இந்தக் கொடுமையை உலகறியச் செய்வது. அதற்கு உள்ளூரில் உள்ள பெரிய மனிதர்கள் மற்றும் பெரிய மனித வேடம் போடும் சில்லறைகள் எல்லோரையும் குரல் கொடுக்க வைக்க வேண்டியது மிக முக்கியம். எப்போதும் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்களைப் பற்றிப் பிரச்சனையில்லை. இந்த மண்ணையும் மக்களையும் ஆளத் தகுதியுடையவராகத் தன்னைக் கருதும் – காட்டிக்கொள்ளும் ஒவ்வொரு பேராசைப் பேர்வழியையும் பேரழுத்தத்துக்கு உள்ளாக்க வேண்டும். இழிவான தனிமனித ஆதாயங்களுக்காக அரசியல் நிலைப்பாடு எடுக்கும் – தன்னிடம் மக்களுக்கு வழிகாட்டும் தகுதி இருப்பதாக எண்ணிக்கொண்டு கருத்துகள் உதிர்க்கும் அரைவேக்காடுகளையும் களத்துக்குள் இழுக்க வேண்டும். வர மறுத்தால் அவர்களை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

கடைசியாக, காவல்துறை அரசியல் தலையீடில்லாமல் செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றி நீண்ட காலமாகவே நிறைய பேர் பேசி வருகிறார்கள். அவர்கள் சொல்வது, ஆளுங்கட்சியின் தலையீடு பற்றி. அதைவிடக் கொடுமையாக இப்போது இந்தியா முழுக்கவுமே காவல்துறையோடு சேர்ந்துகொண்டும் அவர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்யவும் ஓர் அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த சல்லிப் பயல்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை மற்ற கட்சிகள் எப்பாடு பட்டேனும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இதுபற்றி சில முக்கிய எதிர் கட்சிகளே மூச்சுவிடாமல் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் ஏற்பாடுகள் பற்றி ஏற்கனவே ஒரு சாரார் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நுணுக்கமாகப் பார்த்து, நம் நண்பன் யார் – எதிரி யார் – நண்பன் வேடத்தில் இருக்கும் பிழைப்புவாதி யார் என்பதையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டிய காலம் இது. காவல்துறையை மட்டுமல்ல, நம் அரசியலையும் துப்புரவு செய்ய அருமையானதொரு வாய்ப்பு இது. ஏற்கனவே நிறைய உயிர்கள் கொடுக்கப்பட்டு உருவாகியிருக்கும் வாய்ப்பு இது. பெற்ற தகப்பன் கண் முன்னேயே மகனையும் மகன் கண் முன்னேயே தந்தையையும் அடித்துக் கொல்லும் அளவுக்கு, அதையும் ஆதரித்துப் பேசும் அளவுக்கு, அப்படியானவர்களின் கையில் நம் அதிகாரத்தைக் கொடுத்து வேடிக்கை பார்க்கும் அளவுக்குக் கீழான சமூகமில்லை நம்முடையது. நாமும் நம் பிள்ளைகளும் இவ்வளவு குரூரமான சமூகத்திலா வாழப் போகிறோம்? வேண்டாம்! இதற்கொரு முடிவு கட்டிவிடுவோம்.

***

பாரதீ

மாதவன் அதிகன் கவிதைகள்

0

தேவிகா

நீ
எழுபதுகளில் மலையடிவாரத்தில்
மலர் கொய்துக் கொண்டிருந்தாய்

இதழுதிர்ந்து
சூலழிந்து
பிஞ்சாகி
காயாகி
கனியாகி வீழ்கையில்

நிலமெல்லாம் பச்சயம் நீங்கி வளர்ந்தது

கடைசியாய்
உன்னை ஷாப்பிங் மாலொன்றில்
ஸ்கூட்டியோடு பார்த்ததாய் ஞாபகம்

அலை எழுவது நின்று
மரங்கள் அசைவது நின்று
பறவைகள் பறப்பது நின்று
மின்னலும் இடியும் அசைவற்று நின்று
விடுபடுகையில்

நான்
மீண்டும் மலையடிவாரத்தில் பிறந்தேன்

தேவிகா
நீ இப்பொழுதும் அங்குதானே

மலர் பறித்துக்கொண்டிருக்கிறாய்?

2

கண்ணாடி அறைக்குள்
அழைத்துச் செல்கிறாய்

என் வருகைக்காகவே
இரண்டு வைபர் டம்ளர்களையும்
பெயரறியாத மதுவையும் வைத்திருக்கிறாய்

இரண்டாவது சுற்றிலேயே தொடங்கிவிட்டாய்
இலத்தீன் அமெரிக்கா
ல்லத்தீன் அமேரிக்காய்
ல்த்தீன் அமேரிஇக்கா..காகா கா

குளிர்தாளாத என்னுடலுக்கு
இரஷ்ய பனிக்கட்டிகளைக் கொட்டுகிறாய்

மத்திய ஐரோப்பாவின் மலைகளை
தாண்டிய கதைகளை சொல்கிறாய்

மதுவேற்றிய பசிக்கு
பச்சைத் திராட்சைகளை தின்னச் சொல்கிறாய்

என் பூண்டு ஊறுகாயை வேறு
வீசி விட்டாயே நாராயணா

ம்…
பின் ப்ரௌன் நிற இதழுடைய
உன் காதலியை முத்தமிட்டால் மட்டும்
ஏன் நண்பா அம்மணமாகிறாய்

உட்கார் நண்பா உட்கார்
நீ பாடு நாராயணா நீ பாடு

இலத்தீஈஈஈன அமேரிக்கா
லா..லா…லாதீன்
அமோ..ஓஓ ஓ ரிகா

ம்… மறந்திடாதே நண்பா
அதே தான்

ரசூ…சூசூ யா… ஆயா ஆஆஆயா…


3. பேஸ்மட்டம் வீக்

குற்றத்தை செய்து கொண்டேயிருக்கிறார்கள்
அவளிந்தச் சாக்கடையின் நடுவில்
குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த போதுதான்
பூப்படைந்த குருதியாலதன் புனிதம் கெட்டது
நாயின் வாயிலிருந்து பிஸ்கட் துண்டுகளை
குழந்தைகள் பிடிங்கி தின்ற போதுதான்
நட்சத்திர விடுதிகளுக்கு காவலை கூட்ட வேண்டியதாயிற்று
நடைமேடையில் முதலிரவை கழித்தவர்களால்தான்
கடவுள் நள்ளிரவில் தூக்கிட முயன்றார்
நூறு ரூபாய்க்கு படகின்பின் ஒதுங்கியவர்களால்தான்
இரவு பப்களுக்கு கேடுபேர் நேர்ந்தது
தலைபிரட்டைகளை மீனென பிடித்தவர்களை
எவ்வாறு சிறையிலடைப்பது
அம்மாவாசை என்றுகூட பாராமல்
கருவாடு தின்றவனால்தான்
பித்ருக்களின் ஆன்மா தெருநாயைபோல
மூச்சிரைக்க சுற்ற நேர்ந்திருக்கிறது
மதுக்கூடத்திற்கு வீட்டிலிருந்து
தண்ணீர் கொண்டு சென்றவனால் தான்
நிலத்தடி நீர் வற்றியது
இவர்களால்தான் குற்றமொரு மோந்தா கோலியானது
மூலவியாதியர்களெல்லாம் எழுந்து நிற்க
கால்கள் சூம்பியவனின்மேல்
விழுகிற அடி உதைகளுக்காக தான்
பேஸ்மட்டம் வீக்கான கால்களோடு
நாமும் நிற்க வேண்டியிருக்கிறது

4. வைரத்துண்டுகள்

ஒளிரும் வைரத்திற்குள் கருப்புநிற கிழவனின் வியர்வை
மீனைபோல் நீந்துகிறது

கிழவியொருத்தியோ பசியாற வேண்டி
காடு சென்று விறகொடித்து திரும்புகிறாள்

அதன் நேர்த்தியான வெட்டுக்களோ
நதியை ஆவியாக்கும் சூரியனின் நிகர்

நிலமற்றவனின் மரித்த கால் நகங்கள்
சிறிய சிறிய வைரத்துண்டுகளாயின

உருபெருக்கிக்கொண்டு உற்று நோக்குகிறோம்
ஊழிக்கால எலும்புகளும் கற்சிலைகளும்

மேலுமொரு சீழ் கவிச்சியும்
கி.பி.ஏழாம் நூற்றாண்டின் கழுமரமொன்றும்
உதிர்ந்த மயிலிறகுகள் சூழ
ரத்தக்கறை படிந்த வெள்ளாடையும் காணக்கிடக்கிறது

நம் கடனட்டைகள் ஒரு கத்தியை போல்
காலத்தை அறுத்தெறிகிறது

கடைசியில் நம் காதலியின் கழுத்தில் ஒளிரும்
அவ்வைரங்கள் கூடுதலாய் ஒரு முத்தத்தையோ
மூன்றாவது முறை புணருமொரு வாய்ப்பையோ அளிக்கிறது

5.டக்டக் டக்குடக்கு டக்கு…

நீங்கள் செல்ல வேண்டிய வழி இதுதான்
பன்றிகள் புணரும் சகதியை கடந்தால்
ஆணுறை பொறுக்குபவனின்
பாடலொன்று கேட்கும்
அங்கிருந்து இடது பக்கம் திரும்பினால்
கீற்றுக்கொட்டகை வாயிலில் கிழட்டு வேசியொருத்தி
நமத்த புகையிலையை கசக்கி விரல் நீட்டுவாள்
அதன் அனுசரிப்பில் தெரியும்
பழைய நடிகையின் பங்களாவிற்குள்
நுழைந்து விடாதீர்கள்
நாய்கள் தின்ற குழந்தையின் உடலை
தாண்ட வேண்டியிருக்கும்
பூங்காக்களில் உறங்குபவனின் கால்வெடிப்புகளை
உற்று நோக்கினால் முட்டுச்சந்து தெரியும்
கள்ளச்சாவி தேடுபவனை விலக்கிச் செல்லுங்கள்
முழங்காலுக்கு எச்சிலால் மருந்திடுபவனை கேளுங்கள்
வழியறியும் உபாயம் இல்லையென்றால்
பிளாஸ்டிக் டப்பாக்களில் டீ குடிப்பவனையோ
உள்ளங்கைகளை மேல்நோக்கி விட்டிருக்கும் சிறுமியிடமோ
தள்ளுவண்டியில் இட்லி திருடுபவனிடமோ கேளுங்கள்
இப்பொழுதும் வழி தெரியவில்லையெனில்
கோழி வண்டிகளை பின்தொடருங்கள்
ரப்பர் வளையலணிந்த கன்னியொருத்தி
வதங்கிய முலைகளுக்கு மாராப்பை இழுத்து விட்டு
தங்க நாற்கரச் சாலையின் மேன்மையைக் காட்டுவாள்
இப்பொழுது ஓடத்துவங்குங்கள்
டக்டக் டக்குடக்கு டக்கு…
டக்டக் டக்குடக்கு டக்கு…

***

மாதவன் அதிகன்

கப்பிரி உலகம்

7

லீனா மணிமேகலை

ஃபோர்ட் கொச்சி. இரண்டு ரூபாய் சில்லறைகளைப் பொறுக்கியெடுத்து டிக்கெட் வாங்கி, ஃபெர்ரியில் போர்ட் கொச்சிக்குப் பயணிப்பது என்றால் கனிக்கு அவ்வளவு விருப்பம். கேரளப்மபெண்களின் கூந்தலை கடல் காற்று கலைக்கும் போதெல்லாம் வீசும் தேங்காய் எண்ணெய் வாசனையும், கைலியைத் தம் தோல் போல அவ்வளவு அனிச்சையாய் அணிந்து திரியும் ஆண்கள் நாக்கைச் சுழற்றி சற்று கர்வத்தோடு உரக்கப் பேசும் மலையாளத்தில் தெறிக்கும் பீடித்துகள்களும், தங்கள் சைக்கிள்களை ஃபெர்ரியில் ஏற்றி அவற்றை விட்டுப்பிரிய மனமில்லாமல் அவற்றின் மேலேயே அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு வரும் பள்ளி மாணவ மாணவிகளையும், ஏதேதோ வியாபாரத்திற்கான சரக்குகளை விதவிதமான மூட்டைகளாய் ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோக்களையும் அரைபாடி வண்டிகளையும், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பல்கள் அலைகளுக்கு அசைந்து கொடுத்து ஆடிக் கொண்டிருப்பதையும், அணுஅணுவாய் ரசிப்பது அவளுக்கு அலுக்கவே அலுக்காது. கனி ஒரு இண்டீரியர் டிசைனர். அதிலும் பட்ஜெட் டிசைனர். கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கும் இடங்களின் சூழலுக்குத் தகுந்தாற்போல, சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் உள்ளூர் பொருட்களைச் சேகரித்து பத்துக்கு பத்து அறைகளைக்கூட கலாபூர்வமாக மாற்றி விடும் கனிக்கு கிராக்கி அதிகமென்றாலும் தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வடிவமைப்பு வேலைகளை ஏற்றுக்கொண்டு செய்து தருவாள். இயற்கை வண்ணங்களில் கைநெசவு செய்த ஆடைகளை தனக்கேற்றாற்போல் தன் கையாலேயே தைத்து அணிந்து கொள்ளும் கனியை அவளைக் கடந்து போகும் யாரும் சில நொடிகள் நின்று கவனித்துப் பார்க்காமல் செல்வது அரிதுதான். கிட்டத்தட்ட ஒரு கடலோர ஐரோப்பிய நகரத்தின் தெருக்கள் போல டூரிஸ்ட் வேகபாண்ட்கள் நிறைந்த ஃபோர்ட் கொச்சியின் நடுவே கம்பீரமாக நிற்கும் ஜூயிஷ் சினகாக்கின் அருகில் தன் கேரளத்தோழி நீலாம்பரி, புதிய காஃபி ஷாப்பை திறக்கும் திட்டத்தைச் சொல்ல, ஆலோசனை வழங்க வந்திருக்கிறாள் கனி. சன்னல்களைத் திறந்தால் சீன வலைகள் ராட்சச சிலந்திக்கூடுகள் போல கடற்கரையை ஆக்கிரமித்திருக்கும் காட்சி தெரியும்படியான விடுதி அறையொன்றை ஓரிரவுக்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்துவிட்டு காலையில் வருவதாக செய்தி அனுப்பியிருந்தாள் நீலாம்பரி. ஒரு வெந்நீர்க் குளியலைப் போட்டுவிட்டு கடற்கரையோரம் காலாற ஒருநடை போட ஆயுத்தமாகிறாள் கனி.

நடுத்தரமானதென்றாலும் ரசனையாக கட்டப்பட்ட அந்த விடுதியின் வரவேற்பறையில் ஃபோர்ட் கொச்சியின் வரலாறு சொல்லும்படியான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வெளியேறுவதற்கு முன் அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்த கனிக்கு அங்கு போடப்பட்டிருந்த ஒரு மர சோஃபாவில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் கண்ணில் படுகிறான். கைவேலைகள் செய்யப்பட்டிருந்த உறைகள் போர்த்தியிருத்த மெத்தையில் சாய்ந்து அமராமல், சோபாவின் நுனியில் ஒருவித பதட்டத்தோடு அமர்ந்திருக்கிறான். கலைந்த தலைமுடியும், சவரம் செய்யப்படாத தாடியும், தாழ்ந்த கண்களுமாய் இருக்கிற அவன், கனியை இன்னொரு முறை கவனிக்க வைக்கிறான். லாபியில் வேறு யாரும் இல்லை. புகைப்படங்களை ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு திரும்பியபோதும் அதே இடத்தில், அதே கோலத்தில் அமர்ந்திருக்கும் அவனிடம் பேசலாம் என முடிவெடுத்து அவனருகே போகிறாள் கனி. அவள் அருகில் வந்ததையும் கவனிக்காது, கைவிரல்களைப் பிரிப்பதும் கோர்ப்பதுமாய் ஏதோ யோசனையில் இருக்கிறான். ஹாய் என்ற அவளின் குரலுக்கு திரும்பியவன் கண்களில் நீர் முட்டிக்கொண்டிருக்கிறது.”ஒரு வாக் போகலாம்னு.. நீங்களும் வரீங்களா’ என்று கேட்க நினைத்த கனி பேசாமல் நிற்கிறாள். ‘ஹாய்’ என்று தீனமாய் முகமன் சொல்கிறான். ‘ஆர் யு ஒகே’ என்ற கனிக்கு மையமாய் தலையாட்டினாலும் நுனியிலேயே தான் அமர்ந்திருக்கிறான். அருகில் கொஞ்ச நேரம் அமரலாம் என முடிவு செய்து சோபாவின் அடுத்த முனையில், தன் ஸ்லிங் பேக்கை மாட்டுகிறாள் கனி. சில நிமிடங்கள் மெளனமாக கரைகின்றன. ‘சரி.. போகலாம்’ என எழுந்திருக்கும் கனியை நோக்கி, பின்பக்கம் தெரியும் அவனுடைய அறையை காண்பிக்கிறான் அவன். “ரூமுக்குப் போக மனமில்ல. என் கேர்ள் ஃபிரண்ட் தூங்கிட்டு இருக்கா. எழுப்பிட்டா திரும்ப சண்டை தான். வாக்குவாதம் தான்.. சரி அமைதியா கொஞ்ச நேரம் உக்காந்திருக்கலாம்னு தான்…” என்கிறான். ‘வாக்கிங் வர்றீங்களா’ என்று சற்றுமுன் கேட்க நினைத்ததை அப்போது கேட்கிறாள் கனி. “இல்லங்க.. அவங்க எழுந்திருக்கிறப்ப இல்லன்னாலும் பிரச்சனை தான்…” என்று காத்திருக்கும் அவனை யோசனையுடன் பார்க்கிறாள். வாழ்க்கையின் பெரும்பகுதியை நாம் காத்திருப்பதில் தானே கழிக்கிறோம் என்று அவளுக்குத் தோன்றுகிறது. யாரோ ஒருவருக்காக, அரிய கனவொன்றிற்காக, விருப்பப் பூர்த்திக்காக, பருவ மாறுதலுக்காக, முழு நிலாவிறகாக, விடிவதற்காக, வடுக்களின் ஈரம் காய்வதற்காக, புதியவைக்காக, கேட்கப்பட வேண்டுமென்பதற்காக, உணரப்படுவதற்காக, புரியவைப்பதற்காக, நல்ல நேரத்திற்காக, சரியான தருணத்திற்காக, காரணத்திற்காக, சொல்ல தவிப்பதை சொல்வதற்காக, அந்த கடிதத்திற்காக, பதிலுக்காக, பயணத்திற்காக, சென்று சேர்வதற்காக, துன்பங்கள் தீர்வதற்காக, முடிவதற்காக, தொடங்குவதற்காக, அன்பை தருவதற்காக, பெறுவதற்காக, வாழ்வதற்காக, சாவதற்காகவென்று நாம் காத்துக்கொண்டே தானே இருக்கிறோம். தள்ளிப்போடுவதை தான் வாழ்வதாக நம்புகிறோம். வாழ்கிறோம்.

கனிக்கு தன் கணவன் நினைவுக்கு வருகிறான். உருகி உருகி காதலித்து திருமணம் செய்தவன். “சாப்பிடறயா” “வீட்டு சாவி ஷூ ராக்கில் வச்சிட்டுப் போறேன்” “காஃபி போடறேன், வேணுமா” “இன்னிக்கு வெளியூர் போறேன், வர்றதுக்கு இரண்டு நாள் ஆகும்” “செடிங்களுக்கு தண்ணி ஊத்திட முடியுமா” “வைரவனுக்கு டாக்ஃபுட் வாங்கிட்டு வந்துடு” என்று உரையாடல்கள் வெறும் அன்றாடங்களுக்கு சுருங்கி விட்ட உறவாக மாறிவிட்டிருந்தது அவர்களது திருமண வாழ்க்கை. ஒருவரையொருவர் தொடாமல் ஒரு நிமிடம் இருந்தாலும் பூமிப்பந்தே நின்றுவிட்டதைப் போன்ற பதட்டத்தில் இருவரும் செயலற்று நின்ற காலம் ஒன்றிருந்தது. ஒருநாளின் மொத்த கனத்தையும் இறக்கி வைக்கும் வேகத்தில் நடந்ததையெல்லாம் பேசிக்களித்து நீளும் இரவுகளை கலவியில் தோய்த்துக் காட்டாறுகளாக்கிய பருவமும் தூரத்து நினைவாய்ப் போயிருந்தது. காலத்தின் விளையாட்டில் நாள்தோறும் ஒருவருக்கொருவர் மீள மீளத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லையென்றால், பொம்மைகள் தொலைந்த செஸ் போர்டு போல காதல் வெறும் கட்டங்கள் வரையப்பட்ட அட்டையாகி விடுகிறது. ஃபோர்ட் கொச்சியில் வருடப்பிறப்பிற்காக, மக்கள் கடற்கரையில் கூடி ஆடிப்பாடி பாப்பன்ஜி உருவ பொம்மைகளை எரிப்பார்கள். பாப்பன்ஜி என்றால் போர்த்துகீசிய மொழியில் பாட்டன். ஃபோர்ட் கொச்சி முசிரிஸ் துறைமுகமாக இருந்த காலத்தில் போர்த்துகீசியர்கள் ஆண்டதால், புழக்கத்தில் இன்னும் இருக்கும் நிறைய போர்த்துகீசிய சொற்களைக் கேட்கலாம். பாப்பன்ஜி பொம்மையை எரிப்பது கடந்து போன காலத்தை எரிப்பதுதான் என்று கனி கேள்விப்பட்டிருக்கிறாள். கடக்க விரும்பும் காலத்தையெல்லாம் பொம்மையாக்கி எரித்துவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறாள் கனி.

கட்டிடங்களில் கம்பீரமாய் பறக்கும் சிவப்புக்கொடிகள் பழமைக்கும் புதுமைக்கும் இடையே இழுத்த கோட்டுச் சித்திரம் போல நகரத்தை அலாதியாக வைத்திருக்கின்றன. கடற்கரைக்கு அடுத்து கனிக்கு, ஃபோர்ட் கொச்சியில் பிடித்த இடம் கப்பிரி பார். சுருட்டு ஒன்று புகைந்து கொண்டே இருப்பது போன்று ஒளிரும் நியான் விளக்கு சுழலும் அதன் முகப்பு வசீகரமானது. அந்நியப் படையெடுப்பு காலங்களில் அடிமைகளாக வரவழைக்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அந்த காலக்கட்டத்தில் வணிகம் செய்ய வந்த அரபுமார்கள் ‘காஃபிர்’ என்று அழைத்தது மறுவி ‘கப்பிரி’ என்றாகி விட்டதென்பது வரலாறு. இந்த நகரத்தை தங்கள் ரத்தத்தாலும் வியர்வையாலும் கட்டிய கப்பிரிகள் இன்று ஃபோர்ட் கொச்சி மக்கள் தொழும் சிறு தெய்வங்கள். பல நூறு வருடங்களாக வேர்பிடித்து நிற்கும் தொன்மையான மரங்களின் அடிவாரத்தில் கற்களால் கட்டப்பட்ட சின்ன மாடத்தில் புகைந்து கொண்டிருக்கும் சுருட்டு தான் கப்பிரி என்ற காவல் தெய்வத்தின் வழிபாட்டு உருவம். மலர மலரப் பிடித்த மீன்களைக் கையோடு கொண்டு வந்து அந்த பாருக்குள் கடை போடும் வயதுபோன மீனவரிடம், கப்பிரி பெயர் காரணக் கதையை முதல் தடவையாக கேட்டு தெரிந்து கொண்ட அனுபவம் கனிக்கு சுவாரஸ்யமானது. அந்த மீனவரின் பெயர் மறந்து போனாலும் அவர் சிபாரிசு செய்து சாப்பிட சொன்ன மீன் சினைப் பொரியலை அவளால் மறக்கவே முடியாது. ஏழு டிகிரியில் பதம் செய்யப்பட்ட சிவப்பு வைனுடன் மீன் சினையைக் கொறிப்பது கனிக்கு சொர்க்கம். ஜாஸ் அதிர, கப்பிரி உலகம் ஒரு தீவிரமான ஏகாந்தத்தில் திளைத்திருக்கிறது. பெருங்கலைஞன் ஜான் கொல்திரானின் In a Sentimental Mood ஒலிக்க கனிக்கு ஹோட்டல் வரவேற்பறையில் சந்தித்த அந்த இளைஞனின் முகம் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்துக்கொண்டே இருக்கிறது. கொடுக்க வழியில்லாத அன்பை வைத்துக்கொண்டு அதை கரைக்கவும் வழியில்லாமல், நொறுக்கவும் சக்தியில்லாமல், கடத்தவும் துணிவில்லாமல் ஏங்கியே சிறுத்துப்போன இதயங்கள் கொஞ்சம் நீண்டு துடிப்பதும் அதே கதியில் அடித்துக் கொள்ளும் மற்றொரு இதயத்தை சடுதியில் இனம் கண்டுவிடும் என்பதும் உண்மை தான் போலிருக்கிறது. வீட்டில் பார்த்த பெண்ணையே மணந்து கொண்டிருந்தால் ‘மனைவி’யாக நடந்து கொண்டிருப்பாள் என்பது கனியுடைய கணவனின் புகார். வேலை நிமித்தம் மாதம் முப்பது நாளில் பத்துநாட்கள் பயணம் செய்வது காதலிக்கும்போது பிரச்சினையாகத் தெரியாதது திருமணத்திற்குப் பிறகு மட்டும் பூதாகரமானதின் புதிரை அவிழ்க்க முற்பட்டால், அவள் மனதுக்குப் பிடித்த வேலையைக் கைவிடும் அபாயம் நிகழ்ந்துவிடும் என்பது கனியின் அச்சம். பொருத்தமில்லாத கதாபாத்திர வார்ப்புகளால் கலையாக மாறாமல் விழுந்துவிட்ட ஒரு தோல்வியடைந்த திரைப்படமாக தன் திருமணத்தை சமயத்தில் கற்பனை செய்து கொள்வாள். தன்னைப்போலவே அகச்சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறானோ அந்த இளைஞன் என்ற எண்ணம் குமைச்சலாகிய பொழுதில் முக்கால்வாசி வைன் பாட்டில் முடிந்திருந்தது.

விடுதிக்கு கனி திரும்பும்போது, இரவு ஒன்பதாகி விட்டிருக்கிறது. அதே சோபா நுனியில் இன்னும் காத்திருக்கும் அந்த இளைஞன். அவனுடைய அறையை தன்னிச்சையாய் திரும்பி பார்க்கிறாள் கனி. இன்னும் அடைத்தே வைக்கப்பட்டிருந்தது கண்டு சற்று துணுக்குறும் கனி, “இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பீங்க… என் அறைக்கு வேணா வந்து உக்காந்திருங்க..” என்கிறாள். “சரி” என்று எழுகிறான் அவன். அவர்களுக்குள் ஒரு இனம்புரியா பந்தம் உண்டானது போன்ற உணர்வு. அறையைத் திறந்து அவனை அமரவைத்து உணவு ஆர்டர் செய்கிறாள் கனி. தான் ஐ.டியில் வேலை செய்வதாகவும், தன் கேர்ள்ஃபிரண்ட் ஒரு போட்டோகிராஃபர் எனவும் சொல்கிறான். தங்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வருவதாகவும், அவள் அர்த்தமில்லாமல் கோபப்படுகிறாள் எனவும் வருத்தப்படுகிறான். உறவில் விழும் பாதுகாப்பின்மையின் முடிச்சுகளை அவிழ்ப்பதில் இருக்கும் அவஸ்தைகள் குறித்து மணிக்கணக்கில் நீள்கிறது பேச்சு. உணவு முடித்து ஒரு முழு சிகரெட் பாக்கெட்டையும் காலி செய்கிறான் அவன். கடலின் இரு மிதவைகள் அலைகளினூடே ஊர்ந்து அருகில் வந்தும் தொடாமல் அசைந்து கொண்டிருப்பது போலத் தொடர்கிறது கனிக்கும் அவ்விளைஞனுக்குமான உரையாடல். மிக நெருங்கிய நண்பர்களை விட அந்நியர்களிடம் தன்னைத் திறந்து வைத்துவிட முடிவு செய்யும் மனம் கோடையில் பெய்வதற்கு முடிவு செய்யும் மழை போன்று தான். பின்னிரவு கடந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தன் கேர்ள்ஃபிரண்ட் உடனே வரச்சொல்கிறாள் என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறுகிறான். விரைந்து ஓடும் அவனை வைத்த கண் விலகாமல் பார்க்கும் கனி ஒரு உந்துதலில் படிகளிறங்கி கீழே வருகிறாள். அவன் அறை வெளிச்சமாய் இருக்கிறது. அறைக்கு வெளியே கத்தலும் கெஞ்சலுமாய் வாக்குவாதத்தின் சத்தம் கசிகிறது. தன் அறைக்குத் திரும்பும் கனி, விளக்குகளை அணைக்காமல், கதவை மூடாமல், தன்னை விழுங்குவது போல வாய்பிளந்து கிடக்கும் பெரிய கட்டிலைத் தாளாது, சோஃபாவில் ஒடுங்கிப் படுத்து தூங்கிப்போகிறாள்.

காலையில் ஒரு கட்டன்சாய் குடித்துக் கொண்டே அவனுக்காக ஒரு குறிப்பு எழுதுகிறாள் கனி. ’Quit‘ என்று எழுதிய அந்த குறிப்பில் அவள் பெயரும் இல்லை, அவன் பெயரும் இல்லை. இருவருமே பெயர்களைக் கேட்டு தெரிந்துக் கொள்ளவில்லை என்பது உறைக்கிறது. அவனின் அறை எண்ணைக் குறிப்பிட்டு ஒரு கவரில் மடித்து வைக்கிறாள். அவளுடைய அறை எண்ணை கவரின் முன்பக்கத்தில் எழுதுகிறாள். அப்போது அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எந்த முன்பின் விசாரிப்புகளுமில்லாமல், அன்று மின்சாரக் கட்டணம் கட்டுவதற்கு கடைசி நாளெனவும், மறக்காமல் இணையதளத்தில் கட்டி விடவும் என்றும் நினைவுறுத்துகிறான் கனியின் கணவன். ஃபோன் பேசி வைத்துவிட்டு ஏதோ தோன்ற அவள் எழுதிய குறிப்பை கவரில் இருந்து எடுத்து படித்துப் பார்க்கிறாள். தனக்கு ஏன் இந்த குறிப்பை அவள் எழுதிக் கொள்ளவில்லை என்ற யோசனை திடீர் காய்ச்சல் போல வருகிறது. காதுகள் அடைத்துக்கொண்டு ஙே என்று சத்தம். எதுவும் தோன்றாமல் பல மணித்துளிகள் அப்படியே அமர்ந்து விடுகிறாள். பிரிவதை விட சகித்துக்கொள்வது வசதியாக இருப்பதால் தான் உறவுகள் நீடிக்கின்றனவா? உடைவதற்கு அச்சப்பட்டு ஊசலாடிக் கொண்டிருப்பதற்கு மனித ஆயுள் அவ்வளவு நீளமானதா? தீர்ந்துப் போனதை இன்னும் இருப்பதாக பாசாங்கு செய்து யாருக்கு என்ன நிரூபிக்கப் போகிறோம்? கேள்வி மேல் கேள்வி. அவள் எழுதிய குறிப்பு காற்றில் படபடக்கும் சத்தம் ஓங்கி கேட்கிறது. ஏறியது தவறானப் பேருந்து என தெரிந்தும் பாதியில் இறங்கி அவதிப்படாமல் அது போய் நிற்கும் கடைசி நிறுத்தம் வரை மூச்சை நீட்டிப்பிடித்து போவதில் அர்த்தம் இல்லை என்று உறைக்க தன் கைபேசியைத் திறந்து தன் கணவனின் எண்ணை தேடுகிறாள். குட்டிப்பா என்ற பெயரில் வசீகரமாக சிரித்துக் கொண்டிருக்கும் அவனுடைய புகைப்படம். அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வாட்ஸ் ஆப்பை அழுத்துகிறாள். தன் கணவனுடன் சேட் செய்தே ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டதை ஹிஸ்ட்ரி காட்டுகிறது. விரல்கள் நடுங்க “I Quit” என்று டைப் செய்கிறாள். அழிக்கிறாள். மீண்டும் டைப் செய்கிறாள். அனுப்புவதற்கு துணிவில்லாமல் ட்ராஃப்டில் வைக்கிறாள். சட்டெனப் பிணம் போல பாரமாகத் தெரியும் ஃபோனைக் கைகளில் இருந்து மாற்றி ஸ்லிங் பேகில் போட்டுக் கொண்டு நீலாம்பரியின் காஃபி ஷாப்பிற்கு செல்லும் சாலையில் விறுவிறுவென நடக்கிறாள்.

டபுள் எக்ஸ்பிரஸ்ஸோவை ஒரே ஷாட்டில் விழுங்கிவிட்டு, தன் லேப்டாப்பைத் திறந்து சிமுலேஷனில் காஃபி ஷாப்பின் வடிவமைப்பை விளக்கத் தொடங்கிய கனியை சற்று நிறுத்திய நீலாம்பரி “நேத்து சரியா தூங்கலயா? என்ன ஆச்சு” என்று கேட்கிறாள். நீலாம்பரியின் கைச்சூடு உடலில் பட்டதும் கனியின் இறுக்கமும் விடைப்பும் தளர்கிறது. கம்ப்யூட்டரை மூடி வைத்துவிட்டு மெளனமாகிறாள். தன்னையே உறுத்து கவனிக்கும் தோழியின் கண்களை சந்தித்தால் உடைந்துவிடக்கூடும் என அஞ்சி வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்கும் கனியின் மோவாயைத் திருப்புகிறாள் நீலாம்பரி. இரவில் தான் சந்தித்த இளைஞன் முதல், வாட்ஸ் ஆப் டிராஃப்டில் இருந்த குறுஞ்செய்தி வரை நடந்ததைப் பகிர்கிறாள் கனி. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “யார் கண்டது, உன்னை சந்தித்தது கப்பிரியாக கூட இருக்கலாம்” என்ற நீலாம்பரியை குழப்பத்துடன் பார்க்கிறாள் கனி. தன் சுருட்டு புகைந்து கொண்டிருக்கும் வரை கப்பிரி, ஃபோர்ட் கொச்சியில் யாரையும் தனிமையில் வாட விடமாட்டார் என்கிறாள் நீலாம்பரி. அவளிடம் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு வெளி வராந்தாவிற்கு வரும் கனி வானத்தை அண்ணாந்துப் பார்க்கிறாள். நிலா இன்னும் தேயாமல் வானத்தில் மங்கலாக காய்ந்து கொண்டிருக்கிறது .வெயில் ஒரு புகை போல எல்லாவற்றின் மீதும் இறங்குகிறது.

***

லீனா மணிமேகலை

லத்தி

1

மணி எம் கே மணி

பையன்கள் மூன்று பேர். வாசலில் நின்று தயங்குகிறார்கள். ஸ்டேஷனுக்கு உள்ளே இருந்தவாறு அவர்களை உள்ளே வரச் சொன்ன போலீசின் கையில் லத்தி இருந்தது. பையன்கள் என்று சொல்லப்பட்டோர் சிறுவர் என்கிற நிலையைக் கடந்தவர்கள், அவ்வளவுதான். நண்பனின் காதலுக்கு உதவி செய்து விட்டார்கள். அவர்கள் தமது நண்பனுடன் அனுப்பி வைத்த அந்தப் பெண் இன்னும் மேஜர் ஆகவில்லை. ஆகியிருந்தாலும் இதே வைபவம் நடந்திருக்கும். பெண் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள், அவளது உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோரோடு பெற்றோரும் பல கார்களில் வந்து இறங்கி சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். வான்கோழி பிரியாணி உட்பட கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் உறுமவே முதலில் ஒருத்தன் உள்ளே வந்தான். ’வலது காலை எடுத்து வைத்து வர இது உன் மாமியார் வீடா’ என்று கேட்டு கால்களில் அடி விழுந்தது. அடுத்தவன் மிக யோசனையுடன் இடது காலை எடுத்து வைத்து வந்தான். ’இந்த இடம் நாசமாக போகட்டும் என்று பீச்சக் காலை வைத்தாயா’ என்று மறுபடி வீச்சு. அம்மா என்று கூச்சலிட்டுக் கொண்டு அவன் உள்ளே சென்று விழுந்தான். மூன்றாமவனுக்கு இருப்பது வலது, இடது என்று இரண்டு கால்கள் மட்டுமே அல்லவா? போலீஸ் கூச்சலிடவே அவன் இரண்டு கால்களையும் தூக்கிக் கொண்டு படியை தாண்டிக் குதிக்க ’என்னடா தவளை மாதிரி குதித்து வருகிறாய்’ என்று அவனது முட்டியையும் பதம் பார்த்தார் அந்தப் போலீஸ்.

உள்ளே இருந்த அத்தனை போலீசாரும் சிரிக்க பாஷாவும் சிரித்து வைத்தான். அப்படி அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதால் தனக்கு அடி விழாமல் இருக்கலாம் என்கிற நப்பாசை தான். மற்றபடி சிரிப்பதற்கு மிகவும் சிரமமிருந்தது. அவர்களோடு சேர்ந்து சிரித்ததை அவர்கள் கவனித்திருக்க வேண்டும் அல்லவா? எனவே சிரிக்கத் திறந்த வாயை பாஷா மூடாமல் இருந்தான். நெடுநெடுவென்று இருந்த பீதாம்பரம் பார்த்து விட்டார். இலேசாக ஒரு ஓரத்தில் அவருடைய கருணையை எதிர்நோக்கி மனம் இறைஞ்சுவதற்குள் அவர் எல்லா துணிகளையும் கழட்டி வைத்து உட்காரச் சொன்னதை எதிர்பார்க்கவில்லை. தயக்கத்துடன் அவிழ்த்துக் கொண்டு ஜட்டியுடன் உட்கார்ந்தான். பையன்களைக் கூட்டிக் கொண்டு எல்லோரும் படியேறிப் போனார்கள். சற்று நேரத்தில் அலறல்கள் கேட்டன. எழுதிக் கொண்டிருந்த ரைட்டர் ஒரு சிகரெட்டை தேடி எடுத்துக் கொண்டு வெளியே போனார். யாருமில்லை, ஓடி விட்டால் என்ன? எங்கே ஓடுவது? இப்போதுதான் வேலைக்கு வருகிற ஒருவர் இவனைப் பார்த்துப் புன்னகைக்கிறார். கொண்டு வந்த பையை வைக்கிறார். பானையில் இருந்து தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு மூலையில் இருக்கிற லத்தியை எடுக்க பாஷாவின் மனம் திடுக்கிட்டது. எந்த திட்டமும் நோக்கமும் இல்லாமல் அவனை வீசித் தள்ளினார். பாஷா தன்னை அறியாமல் கத்தின கத்தல்களுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. கடைசியாக அவருக்கு மூச்சு வாங்கியது. சோர்வுடன் அமர்ந்து கொண்டார். பக்கத்தில் இருந்து கிடைத்த ஒரு பைலால் விசிறிக் கொண்டு மெதுவாக ஓடுகிற மின் விசிறியை ஒருமுறை பார்த்துக் கொண்டார். மெதுவாக எழுந்து சென்று முகத்தைக் கழுவி, சீருடைக்கு மாறினார். அவருக்கு இன்னும் ஒரு பாலன்ஸ் கிடைக்கவில்லை. அவன் யாராக இருப்பான் என்கிற யோசனை வந்தது. ஏதாவது திருட்டுக் கேசாகத்தான் இருக்கும். மயக்கம் அடைந்திருந்த அவனது முகத்தில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு சப்தங்கள் வீறிட்டவாறு இருந்த மாடிக்குப் படியேறினார்.

மயக்கம் தெளிந்த போது பிரியாணியைக் காட்டி சாப்பிடச் சொன்னார்கள்.

அவன் அதை வேண்டாமென்று சொல்ல நினைக்கும்போதே அவன் அதை தானாகவே அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். எலும்பை இரண்டாக உடைத்து உறிஞ்சும்போது பீதாம்பரம் அவனை நெருக்கத்தில் வந்து பார்த்தார். “ மோகன் சார் போணி பண்ணிட்டாரா? “ என்று சிரித்தார். “உனக்கு தக்காளி புடிக்குமா, உருளக் கெழங்கு புடிக்குமா ? “ என்று கேட்டார். தக்காளி என்பது வெளிக்காயம். உருளைக் கிழங்கு என்பது உள்காயம். அந்தக் கணத்தில் நினைவு வந்து விட்ட ஆயிஷாவின் புன்னகையைக் கேவியவாறு எச்சில் வாயுடன் “ என் அம்மா மேல சத்தியமா, என் பொண்டாட்டி புள்ள மேல சத்தியமா நான் அந்தக் கேமராவை எடுக்கல சார் ! “ என்றான்.

மெல்ல அழுதான்.

“ வயித்துக்கு வஞ்சம் பண்ணாத. அத ஒழுங்கா சாப்ட்டு முடி. நான் இப்ப உன்ன கேமரா பத்திக் கேட்டேன்?  “

இரவு வந்த போது அவர் தான் வந்து கேட்டார். யாரிடம் விற்றாய் அல்லது யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறாய். அவன் திக்கித் திக்கி சொன்னது முழுக்க உண்மைகள் தான். நான் எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் என்பது என் முதலாளிக்கே தெரியும் என்று சொல்ல வேண்டி வந்தபோது எல்லோருமே சிரித்தார்கள். முதலில் பீதாம்பரம் அவனது வாயை தான் நொறுக்கினார். உள்ளங்கைகளை பஞ்சு பஞ்சாக்கினார். மோகனின் துணையுடன் ஏரோபிளேன் கட்டிப் புட்டங்களைப் பழுக்க வைத்தார். ஸ்டுடியோ முதலாளி ரெண்டு தட்டு தட்டினால் உண்மையைக் கக்கி விடுவான் என்று கொடுத்த நம்பிக்கை தள்ளிச் சென்று கொண்டே இருந்தது அவருக்கு வெறியைக் கூட்டியது. இதோ இதோ என்று மேலும் மேலும் அவனை சில்லு சில்லாக்க அவன் வலி தாங்காமல் பல பெயர்களைச் சொன்னான். அவைகள் எல்லாம் பொய்த்தன. மிகுந்த சோர்வுடன் வெளியே நின்று சிகரெட்டு குடித்துக் கொண்டிருந்தவர் வேறு ஒருவரிடம் மோகன் எங்கே என்று கேட்டார். ரவுண்ட் போயிருப்பதாகச் சொன்னார்கள். பல யோசனைகளுடன் நின்றிருந்து சட்டென அங்கிருந்து உள்ளே ஓடிய பீதாம்பரம் பாஷாவை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். அந்த நிமிடம் தான் அவனது உயிர் போயிற்று. எல்லோரும் கூடி ஒரு கயிற்றில் மாட்டித் தொங்க விட்டு அவருக்கு தைரியம் கொடுத்தார்கள். மனதை விட்டுவிடக் கூடாது என்கிற நம்பிக்கையையும் கொடுத்தார்கள். எல்லோரும் எந்த நேரத்திலும் சொல்ல வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவான ஒரு வகுப்பு நடந்தது.

அன்றெல்லாம் இந்த லாக்கப் கொலைகள் அல்லது தற்கொலைகள் என்பதெல்லாம் பெரிய விஷயமே அல்ல. மதியம் வீட்டில் இருந்து கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு பாக்கு போடுவதற்காக பாஷா கீழே இறங்கியிருக்கிறான். அங்கே கடைக்காரன் பாக்கி சில்லறை தருவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்திருக்கிறது. அந்த இடைவெளியில் கேமிராவைக் கழட்டிக் கொண்டு போனது அந்தக்கடை ஓனரின் நண்பர் ஒருவர் தான். அவரைப் பிடித்து பொருளை பறிமுதல் செய்தாலும் கேஸ் பதியப்படவில்லை. விட்டு விட்டார்கள். இந்தக் கதையை எனக்குச் சொன்னவர் பீதாம்பரம் தான். அவருக்கு அதில் வருத்தம் இருந்ததாகக் கூட சொல்ல முடியாது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.  என்ன செய்வது, அந்தப் பயலுக்கு நேரம் சரியில்லை என்பதற்கு மேலே அவர் எதுவும் சொன்னதாக எனக்கு நினைவில்லை.

ஆனால் ஒன்று நடந்தது.

ஒரு தலை முக்காடிட்ட பெண்மணியும் அவளோடு ஒரு இளம்பெண்ணும் ஒரு சிறுவனும் வந்தார்கள். என்னிடம் தான் பீதாம்பரத்தின் வீடு எது என்று கேட்டார்கள்.

நான் காட்டினேன்.

தெரியாமல் இல்லை, அவர்கள் இறந்து போன பாஷாவின் குடும்பத்து ஆட்கள் தான். அவள் பெயர் ஆயிஷா அல்லவா? அப்படி இருந்தாள். ஒரு பார்வையில் எனது வயிறே கலங்குவது போலிருந்தது. பீதாம்பரம் திகைத்தார். என்ன, என்ன, என்ன என்று இடைவெளியில்லாமல் சத்தம் போட்டார். அவரை மீறி அவரது மனைவி துடப்பக்கட்டையை எடுத்துக் கொண்டு விட்டாள்.

“ ஒண்ணும் இல்ல, ஒண்ணும் இல்ல ! “ ஆயிஷாவின் குரலில் அவ்வளவு சமாதானம் இருந்தது.

அவளை வெளியே தள்ள முந்துபவர்களிடம், “ சும்மா உங்க குடும்பத்த பாத்துட்டுப் போலாம்னு வந்தேன் ! “ என்றாள். “ எல்லாரும் நல்லா இருங்கன்னு சொல்லிட்டு போவத்தான் வந்தேன் ! “

என்ன சொல்வது அதை, அப்போதுதான் வெளியே வந்து நின்று பராக்கு பார்த்த பீதாம்பரத்தின் மகள் மஞ்சுவின் மீது அவள் பார்வை படிந்தது. ஆயிஷா அவளைப் பார்த்தவாறே நின்றாள். யாருடைய கூச்சலையும் அவள் பொருட்படுத்தவே இல்லை. தனது கூட வந்தோரை அழைத்துக் கொண்டு போனாள். திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் அவளது பார்வை மஞ்சு மீது தான் இருந்தது. அந்தக் குழந்தையும் அதற்கு பின்னடைந்தவாறே இருந்தாள்.

பீதாம்பரத்தின் முகத்தில் மட்டும் என்னவோ சரியில்லை என்பதை கண்டிப்பாக நான் பார்த்தேன். அவள் மூக்கை உறிஞ்சினால் அவர் பயந்தார். காய்ச்சல் வந்தால் வேலையைக் கடாசி எறிந்து விட்டு ஓடி வந்து ஆஸ்பிட்டலுக்கு தூக்கிக் கொண்டு ஓடினார். அவர் பயந்த மாதிரி ஒருபோதும் மஞ்சுவிற்கு எதுவும் நேரவில்லை. அவளது உடல்நலம் எப்போதும் ஆரோக்கியமாகவே இருந்தது. நான்கு பேர் மெச்சிக் கொள்ளுவது போல நன்றாகவே படித்தாள். நல்லபடி பூப்பெய்தினாள். பட்டம் வாங்கினாள். ஒரு காதல், ஒரு கசமுசா ? இயல்பாக ஒரு வயது வந்த பெண்ணுக்கு இருக்க வேண்டிய கொஞ்சம் தந்திரம்? அல்லது சற்றேனும் திருட்டுத்தனம்? எதுவும் இல்லை. இத்தனைக்கும் அவளது அம்மாவிற்கும் மோகனுக்கும் இருந்த தொடுப்பு வெளியே வந்து சுற்றியிருந்தோர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். மோகன் கல்யாணம் பண்ணிக் கொண்டு மாற்றல் வாங்கிக் கொண்டு போக இந்தப் பெண்மணி கொஞ்ச நாள் சீக்கு வந்து படுத்தாள். என்ன நடந்தாலும் மஞ்சு எப்படியோ தன்னைப் பொட்டலம் பிரியாமல் காப்பாற்றிக் கொண்டு ஒரு தேவதை என்றெல்லாம் பெயர் வாங்கிக் கொண்டு தனது வீட்டைத் தாங்கினாள்.

நான் பல ஊர்களை சுற்றிக் கொண்டு வந்து தொழில் செய்கிறவன். என்னுடைய பயணத்தில் நான் தெற்குப் பக்கம் ஆயிஷாவைக் கூட சந்தித்தேன். எல்லாம் மறந்து அவர்கள் தங்களுடைய பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்லலாம். பாஷாவின் மகன் படிப்பு முடித்து சுமாரான ஒரு வேலையில் இருந்தான். எனக்குத் தேவையாக இருந்த கொஞ்சம் சரக்குகளை வாங்கிக் கொடுத்தான்.

மஞ்சுவின் திருமணப் பத்திரிகை கையில் கிடைத்தது.

சென்னைக்கு வந்தேன்.

நல்லபடியாக திருமணம் நடந்து முடிவு பெற்றது.

மாப்பிள்ளை மிகவும் நல்ல மாதிரி. கனடாவில் இருக்கிறான் என்றார்கள். வெளிநாட்டில் புழங்கி அளவுக்கு அதிகமாகவே பண்பாடு கலாச்சாரத்தைப் பேணினான். பெரியவர்கள் யாரைப் பார்த்தாலும் அவர்களுடைய காலில் விழுவது அவனுடைய பிடிவாதமாக இருந்தது. அதனாலேயே அவன் தனது மாமனாரின் ஆசீர்வாதத்தை வாங்க விரும்பினான்.

நாங்கள் பத்து பேர் ஒரு கோஷ்டியாக அந்த தனியார் மன நல மருத்துவமனைக்குப் போனோம். பீதாம்பரத்துக்கு மஞ்சுவை அடையாளம் தெரியாது. அதில்லை மனைவியைக் கூட அறிய மாட்டார். அவர்கள் அவரைக் கொண்டு வந்தார்கள். ஒரு சோம்பலான இயந்திரம் நடந்து வருவது போலிருந்தது. வீட்டார் பார்க்க வருகிறார்கள் என்றால் அவர்கள் இன்று அவருக்கு மேலும் ஒரு ஊசியை அடித்திருப்பார்கள். கண்களில் தூக்கம் சொக்கியது. மஞ்சு தனது கணவனுடன் அந்த மரத்த கால்களில் விழுந்து எழுந்தாள். யார் என்ன சொன்னாலும் அவர் விழித்துக் கொண்டு தான் இருந்தார். ஒரு லட்டை உடைத்து மஞ்சு அவருக்கு ஊட்டினபோது அது பாதிக்கு மேல் கீழே விழுந்தது. அவளது அப்பா, அப்பா, அப்பா அவருக்கு உறைக்கவே இல்லை. அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே கிளம்பும்போது அவர் ஒருமுறை திடுக்கிட்ட மாதிரி இருந்தது. அது தனது மகளை நினைத்து தான். ஆனால் அந்த மஞ்சு ஒரு சிறுமி. ஆயிஷாவின் பார்வைக்குப் பின்னடைந்த சிறுமி.

இரண்டு நர்சுகள் அவரை அழைத்துக் கொண்டு போகிறபோது அவர்களுக்குப் பின்னால் ஒரு காவல்கார தடியன் நகர்ந்து கொண்டே சென்றான். அவன் கையில் ஒரு லத்தி இருந்தது. மேலும் அவன் அதை இலேசாகத் தரையில் தட்டிக் கொண்டே சென்றான்.

***

மணி எம்.கே மணி

அன்பூ மணிவேல் கவிதை

0

உயிர் குச்சிமிட்டாய்

உச்சிவெய்யிலுக்குத் தப்பமுடியாமல்
மல்லாக்கப் படுத்துக்கிடக்கிறது மந்தை.

எட்டுத் திக்குமாய் மந்தையைச் சுற்றிலும்
விரித்துப் போட்ட கேசத்தோடு
விளையாட ஆளில்லாது ஒற்றைக் காலில் அழுது புரளும்
ஆலமரத்துக் காற்றுக்குப் போக்குக் காட்டி
தாயம் உருட்டுகின்றனர்
காதுவளர்த்த
அப்பத்தாவும் கைக்கோலூனிய அப்பச்சியும்.

ஆண்டுக்கொரு முறையேனும் தேடிவரும் சனம்
தூக்கிவைத்துச் சீராட்டும்
திருவிழாக் கோலத்தைத் தொலைத்த இடம் தெரியாது
யாரிடம் குறி கேட்பதென்று
தறிகெட்டு நிற்கிறாரு
வீரவாண்டி அய்யனாரு.

இழுத்துப் பூட்டிய கதவிற்கு உள்ளே
தன் குசலம் விசாரிக்கக் குலக்குஞ்சு ஏதும் வாராதாயென்று எட்டியெட்டிப் பார்த்தபடி
ஏமாந்து மருகுகிறாள் மந்தை முத்தாலம்மன்.

முகஞ்சிதைந்து பொலிவிழந்து இறுதிமூச்சுக்கு
மன்றாடுகின்றன
ஏதேனும் திருவிழாவிலோ கொண்டாடப்பட்டு
இப்போது முடமாகிப் போன
பொறவியெடுப்புக் குதிரைகள்.

நாளுக்கு மூன்றுமுறையே வந்துபோகும் பேருந்துக்காய்
ஆறிப்போன காப்பியை அடுப்பிலேற்றி ஏற்றி இறக்குகிறார்
ஆளில்லாத் தெருவில் வெறுமை மேய்த்துக் கிடக்கும் டீக்கடைக்காரர்.

ஆசை தீரத் தன்னை
நக்கிச் சுவைக்கும்
பிள்ளைகளின் நா ருசிக்கு ஏங்கித் தவிக்கும்
குச்சிமிட்டாய்களின் உயிரிக்குள்ளும்
எட்டிப்பார்க்கிறது
தொலைந்துபோன
கொட்டுச் சத்தம் .

கையகல மந்தை விரிக்கும்
விட்டேத்திக் காட்சிகளைக்
கண்ணகலப் பார்க்கச் சகிக்காது
உறங்கியே கடக்கின்றன

***

அன்பூ மணிவேல்

மரபுக்கு திரும்புதலே புதுமை

1

அ. வெண்ணிலா

விதையின் மரபை இருவிதங்களில் அணுகலாம். தொல்காப்பியம் தொடங்கி சங்கம், காப்பியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர் பாடல்கள், உலா, தூது, தனிப்பாடல்கள், புதுக்கவிதை, ஹைக்கூ என கவிதையின் வடிவம் சார்ந்த மரபை கணக்கிலெடுத்துக் கொள்ளலாம். இவ்வகை மரபில் கவிதையின் வடிவம் என்பது புதுக்கவிதைக்கு முன்பு வரை செய்யுள்தான். செய்யுள் யாப்பிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டது. யாப்பில் பா வகை, அசை, சீர், தொடை என்ற உள்ளிருக்கும் இலக்கணப் பாகுபாடுகள் தனி. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் சுதந்திர கவிதைகள் என்ற புதுக்கவிதைகள் பிறந்தன.

பாரதியாரே புதுக்கவிதையின் கர்த்தா. மரபைக் கட்டுடைத்தல் என்ற மேலை சித்தாந்த அறிமுகத்தின் வழியாக பாரதி, தனக்கு மிக கைவந்த மரபுடன், வசன கவிதைகளையும் எழுதிப் பார்த்தார். காட்சிகள் என்ற தலைப்பிலான வசன கவிதைகள் தான் தமிழில் எழுதப்பட்ட யாப்பை மீறிய முதல் கவிதைகள். பிறகு வல்லிக்கண்ணன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா. போன்றவர்கள் எழுதத் தொடங்கினர். இவர்களுடன் க.நா.சு சேர்ந்தார். புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா பின்தொடர்ந்தனர். 1960 வரை மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி உள்ளிட்ட இதழ்களில் ஆங்காங்கு விவாதங்களையும் தாங்கிய கவிதைகள் வெளியாகத் தொடங்கியிருந்தன. புதுக்கவிதை என்ற பெயரே முகச்சுளிப்புகளைத் தாங்கியிருந்தது. சி.சு.செல்லப்பா 1959-இல் எழுத்து இதழைத் தொடங்கிய பின், புதுக்கவிதைக்கான விரிந்த களம் உருவானது. பின் வானம்பாடி காலம். சமூகப் பிரக்ஞையுடனும் கலை கலைக்காகவுமென்று எழுத வந்தவர்களுக்கு வானம்பாடி விரிந்த களம் அமைத்துக் கொடுத்தது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு, புதுக்கவிதை என்ற வழக்கு போய் நவீன கவிதை என்ற சொல்லாட்சி வருகிறது. நவீன கவிதை, நவீன இலக்கியம், நவீன சிந்தனை என எல்லாவற்றுக்கும் முற்சேர்க்கையாக நவீனம் சேர்ந்து கொண்டது.

இவ்விடத்தில் நிறுத்தி, மரபு, மரபில் இருந்து புதுமை, நவீனம் இவை சுட்டும் பொருளைப் பார்க்கலாம். பொதுவாக மரபு என்பது எவ்வாறு உருவாகிறது? ஓர் இனக்குழுவின் வாழ்வியல் நெறிகள், பண்பாடு, சமூக ஒழுங்கு இவையெல்லாம் காலப்போக்கில் உருத்திரண்டு வழக்கமாகின்றன. வழக்கம் தலைமுறைகளுக்குக் கடத்தப்படும்போது, அது ஒழுங்கு செய்யப்பட்ட ஒழுகுநெறியாகிறது. ஒழுங்கு செய்யப்படும்போது, வழக்கங்கள் ஏற்றே ஆகவேண்டிய கட்டாயத்தைத் தன்னளவில் வயப்படுத்தி வைத்திருக்கின்றன. இவ்வொழுங்கு நெறிகள் கால ஓட்டத்தில் மரபாகின்றன.

மரபுக்குச் சாதகமான கூறுகள் அவற்றுக்குள்ளேயே இருக்கின்றன. முதல் கூறு, மரபைப் பேணுதல், மரபை ஏற்றல் என்பது தன் மூதாதையரின் வழக்கத்தை, கேள்விகளற்று ஏற்றல் என்ற நற்குணமாக அறியப்படுகிறது. இரண்டாவது, குடும்ப, சமூக நெறிகளைச் சந்தேகிக்காமல் பின்பற்றுதல். மரபை முழுமையாக ஏற்பதின் மூலம் ஓர் அமைதியை, சமூக ஒழுங்கை உருவாக்குதல். மரபை ஏற்பதென்பது, மூதாதையரின் செழுமையான அனுபவங்களின் சாரத்தை உள்வாங்குதல்.

மரபு என்ற சொல் கேட்கிற கணத்தில், கேட்பவர் மனத்தில் பழமை என்ற பொருளை உருவகித்தாலும், மரபு என்பது வெறும் பழமை மட்டுமல்ல. பலநூறு ஆண்டுகளைக் கடந்த மனித குழுவின் வாழ்வியல் திரட்சி. சரி, தவறுகளுக்கு உட்பட்ட சமகால வாழ்வியல் சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து கொள்ள உதவும் அனுபவங்களின் தொகுப்பு. நம் சிந்தனையைக் கூர் தீட்டிக்கொள்ள உதவும் வேர். நாம் மரபில் இருந்து கிளைக்கவும், மரபை மீறவும் அந்த வேரை அறிந்திருக்க வேண்டும்.

மரபு என்று சுட்டப்படும் எல்லாமே ஒரு காலத்தில் புதுமையாகத்தான் இருந்திருக்கும். உதாரணத்திற்கு, தமிழ்க்கவிதை என்பது செய்யுள். இதுவே கவிதை மரபு என்கிறோம். செய்யுள் எப்பொழுது உருவாகியிருக்கும்? தமிழில் எழுத்து வடிவம் தோன்றியவுடன், எழுதப்பட்ட கவிதை செய்யுள் வடிவத்திலா இருந்திருக்கும்? சராசரிக்கும் மேலான சிந்தனை வடிவங்களில், பேச்சு வழக்கை மீறிய வார்த்தைகள், வரிகள் அவ்வப்போது பேசப்பட்டிருக்கும். அவை உண்டாக்கிய வியப்பு, மேலதிகத் தேடலுக்கு வழிகாட்டியிருக்கும். கற்பனையும், ஓசை நயமும் சொற்களுக்குச் சேரும்போது அதை ரசனையாகச் சொல்லிப் பார்த்திருப்பார்கள். கவிதை பிறந்திருக்கும். இவ்வாறு தொடக்க காலத்தில் மக்கள் இன்று புதுக்கவிதையில் உள்ளதைப்போல், யாப்பு, அசை, சீர் என்ற எந்த இலக்கண விதிகளும் இல்லாமல்தான் கவிதைச் சொல்லியிருப்பார்கள், எழுதியிருப்பார்கள். நாட்டார் பாடல்களாக இன்று நாம் வரையறுக்கும் தளைகளற்ற பாடல்கள்தான் சங்கத்திற்கு முன்பிருந்திருக்கும். இன்றைக்கு மரபைக் கட்டுடைத்து, மரபின் தளையை மீறித் தோன்றியதாக வியக்கும் புதுக்கவிதையும் நாட்டுப்புறப் பாடல்களும் போன்ற சுதந்திரமான கவிதைகளே மரபுக்கு முந்தைய கவிதைகளாக இருந்திருக்கும்.

அவரவர் மனம்போன போக்கில் எழுதப்பட்டுக் கொண்டிருந்த கவிதைகள், குறிப்பிட்ட காலத்தில், எழுத்தறிவு மேம்பட்ட காலம் என்றும் சொல்லலாம், அப்படியான ஒரு காலத்தில் இலக்கண விதிகள் வகுக்கப்பட்டு, கவிதைகள் செய்யுள் என்ற புதுமையான வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அந்தக் காலத்தில் மரபுக்கவிதையென்பதும் புதிய கவிதை வடிவமாக, புதுமையானதாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். இன்று நம் முன் நரையோடி, தளர்ந்த தோற்றத்துடன் இருக்கும் நம் தாத்தா பாட்டிக்கும் நுரைத்துப் பொங்கிய இளமையும் அழகும் இருந்திருக்கும் என்பது போல்தான். பலநேரம் அவர்களின் நரையைத் தாண்டி நாம் பார்ப்பதே இல்லை.

மரபும் புதுமையும் ஒரு வட்டத்தின் மீதான சுழற்சி. மரபு என்று சுட்டப்படும் இடத்தை புதுமையும், புதுமை என்ற இடத்தை மரபும் அதன் சுழற்சிப் பாதையில் இயல்பாகவே சந்திக்கின்றன.

இலக்கியம், கவிதைக்கு மட்டுமல்லாமல் நம் மரபின் அனைத்துக் கூறுகளுக்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடிகிறது. செய்யுள் என்ற வடிவம் வருவதற்கு முன்பு ஏராளமான வடிவத்தில் கவிதைகள் எழுதப்பட்டிருக்கக் கூடும். இவ்விடத்தில் சமூக மரபையும் புதுமையையும் உதாரணத்திற்குச் சொல்லலாம். ஆதிமனித வாழ்விலும், பின்னால் இனக்குழு வாழ்விலும் குடும்பம், சாதிய முறை, தீர்மான சடங்குகள் இருந்ததில்லை. பின் சமூகம் நிறுவனமாக, இறுகிய விதிகளுடன் இயங்கத் தொடங்கியவுடன் குடும்பத்திற்கு என்று இறுக்கமான விதிகள் உருவாக்கப்பட்டன. சாதியடிப்படையிலான பிரிவினைகள் ஆளப்பட்டன. மேல் x கீழ், உயர்வு x தாழ்வு கருத்தியல்கள் நிலைகொண்டன. இவை சமூக வாழ்வியல் மரபாக மாறின. கால மாற்றத்தில் இம்மரபு இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. குடும்ப அமைப்பு நெகிழ்வைக் கோருகிறது அல்லது குடும்பமே வேண்டாம் என்ற நவீன சிந்தனை, சாதிய வேறுபாடுகளை நீக்குதல், மேல் x கீழ், உயர்வு x தாழ்வு என்பதெல்லாம் வக்கிர மனதின் கற்பிதம் போன்ற சிந்தனைகள் நவீன சிந்தனையாக ஏற்கப்படுகின்றன. ஆனால் இவையெல்லாமே ஆதிக்குழுவின் இயல்பான வாழ்வியல். நவீனம் என்பதின் தொடக்கப்புள்ளி ஏதோ ஒரு மரபின் புள்ளியில் தான் நிற்கிறது. எனில் இங்கு புதுமை என்பது மரபை அழித்தல் அல்ல முந்தைய மரபுக்குத் திரும்புதல் என்றும் பொருள் கொள்ளலாம்.

மரபு, புதுமை இரண்டுமே இடம் மாறக் கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டிருப்பவையே என்றாலும் நாம் புரிதலுக்காக மரபு என்பதை பழக்கத்தில் இருந்த முந்தைய நெறி என்று கொள்வோம்.

தமிழ்க்கவிதையின் மரபு என்றால் செய்யுள். செய்யுள் வடிவத்தை மீறியெழுந்தது புதுக்கவிதை என்ற புரிதலோடு, வடிவம் சார்ந்த இச்செய்தியில் இருந்து கவிதையின் பாடுபொருளுக்குள் நுழைய விரும்புகிறேன். அதற்கு முன்னால் கவிதை என்றால் என்ன? எழுதத் தொடங்கும் எல்லாருக்கும் முதலில் ஈர்க்கப்படும் வடிவமாக ஏன் கவிதையே இருக்கிறது? மூவாயிரம் ஆண்டுகளாகக் கவிதையில் எழுதாத ஒன்றை, இன்றைய புதுக்கவிஞர் (ன்,ள் இதில் எந்த விகுதியைப் போடுவது என்ற தடுமாற்றத்தில் ர் சொல்கிறேன். அவரவர் விருப்பத்திற்குப் பொருத்திக் கொள்ளலாம்.)

கவிதை என்றால் என்ன? என்ற கேள்விக்கான நிறைவான பதிலை, அவரவரே சொல்லிக்கொள்ள முடியும். எது நல்ல கவிதை என்பதற்கும் அவரவர் ஆன்மாவே கைவிளக்கு. ஒரு நல்ல கவிதை சிந்திக்க வைக்காமல் உணர்ச்சிவயப்பட வைக்க வேண்டும் என்பதையே நான் அளவுகோலாகக் கொண்டுள்ளேன். அறிவுத்தளத்திற்கு என்னை ஒரு கவிதை இழுக்குமென்றால், அக்கவிதை தன் இயல்பில் இருந்து திரிந்து, செய்யப்பட்ட ஒன்றாக, தேவைக்காக எழுதப்பட்ட ஒன்றாகப் பிறந்திறக்கிறது என்ற எளிமையான, என் ரசனையின் அடிப்படையிலான அளவுகோலையே நான் நல்ல கவிதையைக் கண்டறிவதற்காக வைத்துள்ளேன்.

உணர்ச்சிவயப்பட வைப்பது என்பது என் இதயத்தின் ஊடான பயணம். ஆன்மாவின் தரிசனம். ஆழ்மனத்தின் அடுக்குகளைச் சென்றடைவது. அறிவினால் தேடிக்கண்டடைய முடியாத உண்மைகளைக் கண்டடைவதற்கான கருவிதான் கவிதை. மனதின் மறைபொருளைக் கண்டுபிடித்தல். நம்முடைய கனத்த ரகசியங்கள் புதைந்திருக்கும் இடமே மனம். மனம் எங்கிருக்கிறது என்பது அறிவியலும் கண்டடைய முடியாத ரகசியம். ரகசிய இருப்பிடம் கொண்டுள்ள மனம்தான் நம் ரகசியங்களைப் பொதித்து வைத்திருக்கிறது என்பதில் எவ்வளவு பெரிய ஆச்சர்ய முரண் இருக்கிறது.

மனம்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையை இயக்குகிறது. வாழ்வின் தரிசனமாகிறது. மனத்தின் எண்ணங்களே நம் நடத்தை, நம் குணம், நம் அன்பு, நம் காதல், நம் காமம். இவைகளின் வழியாகத்தான் நம் குழந்தைகள் பிறக்கிறார்கள். நம்மைப் பிரதிபலிக்கிறார்கள். நமது மரபாகிறார்கள். நம் எல்லோருக்குமே பிறப்பின் வழியாகவும், வாழும் சமூகத்தின் வழியாகவும் இருவகை மரபு கிடைக்கிறது. இதை மனமே தீர்மானிக்கிறது.

மனத்தின் ரகசியங்களைக் கண்டடைய சொற்களின் வழியாக கவிதை பயணிக்கிறது. முதல் காதல் வந்தவுடன் கவிதை எழுதுபவர்களைப் பார்த்தால் இவ்வுண்மை புரியும். பதின்ம வயதில் இருக்கும் பெரும்பான்மையோர் தனக்குள் காதலுணர்வு நுழைந்த பிறகுதான் தங்களின் மனத்தைக் கூர்ந்து பார்க்கிறார்கள். காதல் உருவாக்கும் உணர்வெழுச்சிகளைப் பின்தொடர்கிறார்கள். முதன்முறையாக மனத்தைக் கூர்ந்து பார்க்க காதலும் கவிதையும்தான் உதவுகிறது. அறிவுத் தேடலுக்கு இலக்கியத்தின் பிற வகைமைகள் உதவலாம்.

பாரதியின், ஒவ்வொரு வரிகளில் விரியும் உணர்ச்சிக் கொந்தளிப்பை, நல்ல கவிதைக்கான உதாரணங்களாகப் பகிர விரும்புகிறேன். ‘சுவை புதிது, பொருள் புதிது’ என்று கவிதைக்கு விளக்கம் சொல்லும் பாரதியின் ‘தீ இனிது’ என்றொரு வரி. ‘தீ’ இச்சொல்லை நம் கண்கள் வாசிக்கும்போதே, வழக்கப்படுத்தப்பட்ட நம் மனது, ‘சுடும்’ என்ற இரண்டாவது சொல்லைக் கோர்க்கும். தீ நம்மைச் சுடும். பாரதி அக்கற்பனையை மீறுகிறான். ‘இனிது’ என்று சொல்கிறான். நம் சராசரி இயல்பு முதலில் சிறு அதிர்ச்சியைத்தான் காட்டும். தீ இனிதா என்று? உடனே நம் அறிவு தீ எப்படி இனிதாக இருக்க முடியும் என்று கொஞ்சம் குதர்க்கமான தொனியில் கேள்வி எழுப்பும். அறிவுக்குக் கையைப் பொசுக்கும் நெருப்பும், வீட்டைக் கொளுத்தும் பெருந்தீயும், காட்டை எரிக்கும் காற்றின் கோபாக்னியும் தான் முதலில் நினைவுக்கு வரும். அறிவைக் கடந்த, பிரபஞ்ச தரிசனத்தை உள்வாங்கியிருக்கும் மனதுக்கு, தீ என்றவுடன் ஞாயிறுதான் நினைவுக்கு வருகிறது. உலகத்து உயிர்களுக்கு ஜீவாதாரணமான கதிரவன், நம்பிக்கைத் தரும் வெளிச்சம், பூமி சுழற்சியின் ஆதாரம். இந்தப் பிரபஞ்ச உயிர்களையெல்லாம் வாழ்விக்கும் கடவுள்.

இக்கவிதை சங்க காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், நவீன கவிதையாக இருந்தாலும் இந்த ஒற்றை வரி, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் தரும் உணர்வெழுச்சி பேருவகை. இயற்கையின் தரிசனத்தைக் கண்டெடுத்த ஞானம் தரும் பரவசம். மொழியின் மேலடுக்கைப் புரட்டிப் போட்டு, மொழியைக் கடந்த உண்மையைக் கண்டறியும் பேருவகை. மரபு, புதுமை என்ற வகைப்பாட்டை கடந்து நல்ல கவிதையாக எல்லா காலத்திலும் மனத்தில் நிற்கும் அற்புதக் கவிதை. சொல்லின் நேரடி பொருளைக் கடந்து, அதன் அர்த்தத்தைக் கடந்து, வேறொரு இடத்திற்கு நம் உணர்வெழுச்சியைக் கொண்டு செல்லும் வலிமை கொண்டுள்ளது. கவிதையையன்றி வேறோர் இடத்தில், தீயின் பொருளாக இனிமையைக் கொள்ள முடியாது. கவிதையின் மரபாக இதையே நான் சொல்ல விரும்புகிறேன். கவிதை எவ்வளவு தூரம் நம் கற்பனையைத் தூண்டி, நம் மனதுக்குள் பயணிக்கச் செய்கிறது என்பதில் தான் அதன் பூரணத்துவமும், நித்தியத்துவமும் இருக்கிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் ஒருவன்/ள் பார்த்த அதே நிலா, அதே சூரியன், நட்சத்திரம், மஞ்சள் கொன்றை, புன்னை, கடற்கரை, காதல், பிறப்பு, இறப்பு, கோபம், மகிழ்ச்சி, துரோகம், நட்பு, காமம்… எல்லாமே பழையதுதான். புதிதென்று இவ்வுலகில் ஒன்றுமில்லை. பிறக்கின்ற உயிர் ஒன்றே புதிது. இப்புதிய உயிரின் வழியாக, அதன் உணர்தலின் வழியாகப் பழைய பிரபஞ்சமும் உணர்வெழுச்சிகளும் புதிதாக மாறுகின்றன. ஒரே வானம்தான். எத்தனையாயிரம் பார்வைகள். ஆறு பழையது. வெள்ளம் புதிதுதானே?

இப்பழைமையில் இருந்துதான் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுத்து நாம் ஒவ்வொருவரும் அவரவருக்கான புதிய கவிதைகளை எழுதுகிறோம். நம் பார்வையின் ஒளி சொற்களுக்குள் மாற்றும் வித்தையில் நாம் தேறினால், நம் கவிதையும் நித்தம் நவமென சுடர்விடும் கவிதையாகும்.

மொட்டவிழவும் இதழ் மூடவுமான
தேவ கணத்தில்
சூரியனுக்குப் பிந்தைய
நிலவுக்கு முந்தைய வானில்
விண்ணெங்கும் மொட்டவிழ்ந்து
நின்றது நம் நேச மலர்

-அ.வெண்ணிலா

கருக்கலில்
ஒளிரும்
வெண்ணிற மலர்
நின் காதலன்றோ

– தேவதேவன்

தேவதேவனும் நானும் ஒரே அந்தியைக் கடக்கிறோம். இருவருக்குமே காதலின் நினைவு. நான் தேவ கணம் என்கிறேன். அவர் கருக்கல் என்கிறார். விண்ணெங்கும் மொட்டவிழ்ந்து நிற்கிறது நம் நேச மலர் என்கிறேன். தேவதேவனோ அந்த வெண்ணிற மலர் நின் காதலன்றோ என்கிறார்.

காதல் நினைவை அதிகப்படுத்தும் அந்தியில் மலர்ந்த நேச மலரை, நீ என்பதோ, விண்ணில் மொட்டவிழும் மலர் என்பதோ அவரவர் அப்போதைய கவிதை. நாளையே தேவதேவனின் கவிதையை வெய்யில் எழுதலாம். வெய்யிலின் கவிதையை பிறக்கப் போகும் புதிய கவிஞர் எழுதலாம். கவிதையும் காதலும் மரபு என்றாலும், மொழி புதிது.

கவிதை நமக்குச் செய்திகளை உணர்த்தி நிற்பதில்லை. தர்க்கத்தைத் தனக்குள் வைத்திருப்பதில்லை. கவிதை நேரடியாக நம்மிடம் பேசுவதைவிட, உணர்த்திச் செல்வதைத்தான் அதிகம் நேசிக்கிறோம். மழை வரப்போவதைச் சொல்லிச் செல்லும் மண்வாசனை நிரம்பிய காற்றைப்போல், கவிதை குறிப்பால் உணர்த்தினாலே போதுமானது.

‘மயிர் நீப்பின்’ என்று வள்ளுவர் பயன்படுத்தும் மயிர் என்ற சொல், இன்றைய நவீன கவிதையில் எவ்வாறு வருகிறது என சீனிவாசன் நடராஜன் சொல்கிறார். எழுதத் தொடங்கும் எல்லோரையும் கவிதை ஈர்ப்பதற்கு இதுவே காரணம். பழகிய எளிமையான சொற்கள். நவீன, புதுக்கவிதைகளின் தோற்றத்தில் வெளிப்படும் எளிமை, வாசிக்கும் பெரும்பாலோரை எழுதவும் தூண்டும். சொற்களை மேலும் கீழும் உடைத்து உடைத்து அடுக்குதல், எளிய உணர்ச்சிகளையும் எளிய வார்த்தைகளால் கவிதை போன்ற ஒரு பாணியில் சொல்லிவிட முடிவது, வழக்கத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்துதல், ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் முடிவுறா புள்ளிகளை அடுக்குதல் போன்றவை, வாசகர்களை எளிதில் ஏமாற்றி கவிதைக்குள் அழைத்து வந்துவிடக் கூடியவை. வானம்பாடிக் கவிஞர்கள் தொடங்கி, புதுக்கவிதையில் வைக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை நீக்கினாலே, அவரவர் கவிதைப் புத்தகத்தின் பக்கங்களில் கால்பகுதி குறைந்துவிடும். கவிதை, சொற்களுக்கு இடையிலான மௌனத்தின் வழியாகப் புரிந்து கொள்ளப்படுவது என்ற வரியைத் தவறாகப் புரிந்து கொண்டார்களோ என்னவோ, மௌனத்திற்குப் போகும் வழியாக மூன்று புள்ளிகளை வைத்துத்தான் கவிதை எழுதியிருக்கிறார்கள். தமிழில் நான் உட்பட மூன்று புள்ளிகளை வைத்து கவிதை எழுதாத கவிஞர்கள் மிகக்குறைவு. தலைப்பில் மூன்று புள்ளிகள் வைக்கப்பட்ட புத்தகங்களும் அதிகம்.

கவிதையின் எளிமையான தோற்றம், விளக்கின் வசீகரத்தில் கவர்ந்திழுக்கப்படும் விட்டில்களைப் போல் இழுக்கிறது. தோற்றத்தில் எளிமை என்றாலும், மொழியின் உச்சபட்ச சாத்தியப்பாடுகளை கவிதையே கொண்டுள்ளது. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று சொல்ல, கணியன் பூங்குன்றனுக்குக் காலத்தை விஞ்சிய பரந்துபட்ட நேசம், மனிதர்கள் அனைவரையும் அன்பெனும் ஒற்றை குடைக்குள் அடைத்துப் பார்த்த தீர்க்க தரிசனம், நிலவெல்லை மனிதர்களுக்கிடையில் கோடுகளைப் போட்டாலும், அன்பு எல்லைகளைக் கடந்து அரவணைத்துக் கொள்ளும் புரிதல், எல்லாம் இருந்திருக்க வேண்டும். கணியன் பூங்குன்றன் இக்கவிதையைச் சொல்லிய காலத்தைவிட, இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு எவ்வளவு நுட்பமாய்ப் பொருந்திப் போகிறது? கவிஞனுக்கு மட்டுமே காலத்தைக் கடந்து சிந்திக்கும் தீர்க்க தரிசனம் நிகழும். இந்த ஒற்றை வரி, மிக எளிமைதான், ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாகப் புத்தம் புதிதாக உள்ளதே? குழந்தையின் சோப்புக்குமிழுக்குள் தெரியும் வண்ண உலகமாக, கவிஞனின் சொற்கள் குறை ஆயுளுடன் காணாமல் போய் விடக்கூடாது. சிற்பியின் உளியில் இருந்து உருவெடுக்கும் கல் சிற்பமாய் இருக்க வேண்டும்.

மரபை, புதியது கடக்கும்போது பெரும் விவாதங்கள் கிளம்பும். மீறலும், மீறலின் துணிவும் பெரும் பதற்றத்தை உண்டாக்கும். கவிதையும் அப்பதற்றத்தைச் சந்தித்திருக்கிறது. பாரதியின் வசன கவிதைகளுக்கு முகஞ்சுளித்தார்கள். பாரதிக்கு மரபில் இருந்த தேர்ச்சியினை அறிந்திருந்ததால், இம்முயற்சி கிறுக்குத்தனமாகப் பார்க்கப்பட்டது. தேவையற்ற வேலையென்றும். கு.ப.ரா., பிச்சைமூர்த்தி முதலானோர் எழுதும்போது, வசன கவிதைகளால் மரபுக் கவிதையெனும் ஆலமரத்தின் சிறு நுனியைக்கூடத் தொட முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. தளை தட்டும், யாப்பிலக்கணத்தில் அமையாததெல்லாம் கவிதையாக முடியுமா என்ற ஏளனமும். காலம், கவிதையில் இருந்து எல்லாத் தளைகளையும் உதிர்த்துத் தள்ளியது. கவிதைக்கு உண்மையின் தரிசனமும் புதுமையும் அழகியலும் மட்டுமே என்றைக்குமான அளவுகோல் என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது.

சங்கப் பாடல்களில் உள்ள அடிக்குறிப்புகளையும், திணை பாகுபாடுகளையும் உதிர்த்துவிட்டுப் பார்த்தால், அவை இன்றைக்குள்ளதைப் போன்ற எளிமையான கவிதைகள்தான். சங்கப்பாடல்களுக்கான அடிக்குறிப்புகளும், திணை அடிப்படையில் தொகுக்கப்பட்டதும் தொகுப்பாளர்கள் செய்த வேலை. சங்க கவிஞர்கள் யாரும், குறிஞ்சி நிலப் பாட்டு, நெய்தல் நிலப் பாட்டு என்ற வகைப்பாட்டுக்குள் நின்று கவிதை எழுதவில்லை. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஒரு கவிஞரின் பாடலே அகத்திணையிலும் புறத்திணையிலுன் குறுந்தொகையிலும் இடம் பெற்றது, இவையெல்லாம் பிற்காலத்தில் தொகுத்தவர்கள் உருவாக்கிக் கொண்ட கருதுகோள்கள்தான். ஐவகை நிலம், நிலத்திற்கான பண், ஆடல், கடவுள், உணவு, தலைவன், தலைவி, இயல்பு எல்லாமே பின்னால் சேர்க்கப்பட்டவை என்று முனைவர் துளசி ராமசாமி சொல்கிறார். தொகுப்பு என்று வரும்போதே அதில் தனிநபர்களின் தேர்வு, விருப்பு வெறுப்பு, சிந்தனைத்தளம் எல்லாம் அடிப்படையாக அமைந்துவிடும். அப்படித் தொகுப்பாளர்களால், தகுதியில்லையென்று தொகுக்கப்படாமல் போன பாடல்கள் எத்தனையோ, கவிஞர்கள் எத்தனைப் பேரோ? அவ்வாறே திருக்குறளை நீதி இலக்கியத்திற்குள் சேர்த்து அதன் கவிதை அழகியலை மறைத்திருக்கிறார்கள்.

நவீன கவிஞர்கள் பலர் திருக்குறள் என்றாலே முகஞ்சுளிக்கும் அளவிற்குப் பத்து நூற்றாண்டுகளாக, அதன்மேல் நீதியின் சுமை ஏற்றப்பட்டுவிட்டது. மகிழ்ச்சியான விதிவிலக்காக, ஜெயமோகன் திருக்குறளின் அழகை வியந்தோதுகிறார். மிகக்குறிப்பான அதிகாரங்களைத் தவிர்த்து, திருக்குறளில் இருக்கும் கவிதை தரிசனம் அற்புதமானது. ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்’ என்ற கேள்வி என்றாவது உயிரற்றுப் போகுமா? ‘நீரின்றி அமையாது உலகு’, ‘வான் நின்று உலகம் வழங்கி வருதலால்’ என்றைக்குமான பிரபஞ்ச உண்மைகள் அல்லவா?

சங்கப் பாடல்களின் அடிநாதமாக இருப்பவை வாழ்வியல். மனமொத்து காதலும் ஊடலும் கொண்டு வாழ்தல். சங்க காலத்தின் வாழ்வியலைப் பிந்தைய காலத்துடன் ஒப்பிட முடியாததற்குக் காரணம் அரசியல் மாற்றங்கள். சங்க காலத்தில் இருந்த இனக்குழு வாழ்க்கை, அரசர்கள் சிற்றரசர்களாக, மக்களில் இருந்து மேலெழுந்து வந்த தலைவர்களாக இருந்தார்கள். பின்வந்த காலம் பேரரசுகளின் காலம். களப்பிரர்கள், பல்லவர்கள் போன்ற பேரரசுகளின் எழுச்சியோடு, பேரளவிலான அதிகாரத்தோடு சமணமும் பௌத்தமும் தமிழ் மண்ணுக்கு வருகின்றன. அதுவரை இங்கு பெரும் மதமாக உருத்திரளாமல், வழிபாட்டு முறைகளும் சடங்குகளுமாக இருந்த வைதீக மதம் ஆட்சியாளர்களால் மொத்தமாக நசுக்கப்படுகிறது. மக்களிடமிருந்து மறைந்துபோய் விடுமோ என்ற எண்ணத்தக்க அளவில் சமணமும் பௌத்தமும் கி.பி.3-ஆம் நூற்றாண்டில் இருந்து, 6-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நிலைபெற்றது.

தங்களின் மரபான வைதீகச் சமயத்தை மீட்டெடுக்க, அடியார்கள் தோன்றி, வைதீக நெறிகளை முன்னெடுக்கிறார்கள். வழக்கொழிந்து போய்க்கொண்டிருந்த சமய சடங்குகளை மீட்டெடுத்து, அதைப் புதுமை படுத்துகிறார்கள். முருகும், மூதாதை தெய்வங்களும், நடுகல்லும் இருந்த இலக்கியங்களுக்குள் சிவனும் திருமாலும் உள் நுழைகிறார்கள். இலக்கியங்கள் தொகுக்கப்பட்டு, அவைகளுக்கு வைதீக மரபின் அடையாளம் தரப்படுகிறது. இறைவனுக்குத் தங்களை அடியார்களாக்கி, உருகி உருகித் தங்களையே தரும் பதிகங்கள் பாடப்பட்டன. பதிகங்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டு பன்னிரு திருமுறைகளாக்கப்பட்டன. அற இலக்கியங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. முன்பு எழுதியவைகள் தொகுக்கப்பட்டன. 6-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ஆம் நூற்றாண்டு வரை, கவிதை என்றாலே பதிகம் பாடுதல் என்றானது. இக்காலகட்டத்தில் தனித்து ஒலித்ததுதான் திருமூலரின் திருமந்திரம்.

சங்கப் பாடல்கள் தற்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ள பட்டியல்களில் இருந்து விடுவித்து, அவைகளுக்கான அடிக்குறிப்புகள், திணை வகைப்பாடுகள் எல்லாவற்றையும் நீக்கி, கவிஞர்களின் பாடல்களாக மட்டும் வைத்துப் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தோமானால், சங்கத்திலும் அவர்களின் காலத்தினை மீறி எழுதிய கவிஞர்களை அடையாளம் காண முடியும். பரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவனுக்காகக் காத்திருந்து, துன்பப்பட்டு அவன் திரும்பி வந்தவுடன் அதை உலக இயல்பு என்று பெரிதுபடுத்தாமல், அவனுடன் இணைந்து காதல் வாழ்வு வாழ விரும்பும் தலைவியைப் பற்றிய கவிதைகளுக்கு மத்தியில், அரசனும் நண்பனுமான அதியமானின் நட்பை வியந்தோதுவதும், அவன் மாண்டுபோன பின், உணவு உண்ணும்போது விக்கினால் தன் தலையை அன்புடன் தடவிவிட நண்பனில்லையே என்று துயரம் கொள்ளும் அவ்வை தனித்துவமிக்கவளாக, சுதந்திரமானவளாக இருக்கிறாள். அவளின் கவிதையும் தளைகளற்ற சுதந்திரத்துடன் உள்ளன.

புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ள அவ்வையின் ‘சிறுகட் பெரினும் எமக்கீயும் மன்னே’ என்ற பாடலைப் பார்ப்போம். அதியமானை சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை போரில் வென்றுவிட்டான். சோழர்களும் பாண்டியர்களும் அதியமானுடன் உடன் போரில் நின்றும் அதியமான் நெடுமான் அஞ்சி தோல்வியடைகிறான். அதியமானின் வீழ்ச்சியை அவனுடைய தோழியான அவ்வையால் தாங்க முடியவில்லை. அவனுடைய இழப்பு எவ்விதத்திலெல்லாம் இழப்பென்று அவ்வை எழுதுகிறார். தனக்குக் கிடைப்பது கொஞ்சம் கள்ளென்றால் அதை முழுமையாக எனக்குக் கொடுப்பான். நிறைய கள் கிடைத்தால் எனக்கு வேண்டிய அளவிற்குக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள கள்ளருந்தியபடி, என்னைக் கவிதைப் பாடச்சொல்லிக் கேட்பான். கொஞ்சம் உணவு என்றால் எனக்கு. எலும்பும் தசையுமாகிய இறைச்சியை எனக்குத் தந்து நான் சாப்பிடுவதைப் பார்த்திருப்பான். நரந்தம் பூவின் வாசனை வீசும் அவன் கையால், புலால் நாற்றமடிக்கும் என் தலையைக் கோதுவான் என்று சொல்கிறாள். இதுவரை அதியமான் என்னும் நண்பனால் தான் இழக்கப்போகும் அன்பான தருணங்களைச் சொல்லிய அவ்வை, கவிதையை அடுத்த தளத்திற்கு நகர்த்துகிறாள். அம்பும் வேலும் பாயும் இடங்களில் எல்லாம் அவன்தான் முன்சென்று நிற்பான் என்கிறாள். அரசன் தன் வீர்ர்களை முன் நிறுத்தி, தனக்குப் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொண்டு இடையிலோ பின்னாலோ நின்று போரிட மாட்டான். போர்க்களத்தில் தன் வீரர்களைக் காப்பதுபோல் அவனே முன் நிற்பான். முன்னின்ற அரசனின் நெஞ்சில் வேல் பாய்கிறது. அந்த வேல் அவன் நெஞ்சை மட்டும் துளைத்துத் தாக்கவில்லை. புரந்து வாழும் பெருமக்கள், பெற்றுப் பாடும் புலவர்கள், கை மண்டையுடன் அவனை அணுகி நிற்கும் பாணர்கள் எல்லோரின் வாழ்வையும் துளைக்கிறது. எங்களுக்குத் துணைவனாக இருந்த எந்தை இப்போது எங்கிருக்கிறானோ என்று கதறுகிறாள். ஓர் அரசன், தலைவனின் குணமாக என்றைக்கும் சொல்லக் கூடிய பாடலாக இப்பாடல் நிற்கிறது. இதில் உறைந்து நிற்கிற கவிதையின் துயரம் நூற்றாண்டுகளைக் கடக்கும் வலு கொண்டிருக்கிறது. இது மரபில் நின்றாலும் நவீனத்தின் நுட்பம் கொண்டிருக்கிறது.

இன்றைய நவீன கவிதையில் கையாளப்படும் தொன்மங்கள், மரபின் கூறுகளே. தொன்மத்தைக் கேள்வியாக்கிக் கொண்டே நவீனத்தில் கூர்தீட்டிக் கொள்ளும் கவிதைகளும் உள்ளன. “நெருப்பின் நாக்கு, நிரூபித்த கற்பை, ஒரு வண்ணானின் நாக்கு, அழுக்காக்கியது” என்ற கவிதை சமூக விமர்சனமாகத் தெரிந்தாலும் தொன்மத்தின் இடைவெளிகளையும் நிரப்புகிறது.

மரபோ, வசனமோ, புதுக்கவிதையோ கவிதை கவிதையாக இருக்க வேண்டும். கவிதையின் அகத்தில் இருந்து அக்கவிதை எந்தக் கண்ணியில் நிற்கிறது என்ற இரண்டாவது அணுகுமுறையில் இருந்தே என் பார்வையை முன்வைத்துள்ளேன். கவிதை அரசியலைப் பேசக் கூடாதா என்று கேள்விக்கு ஞானக்கூத்தன் சொல்லிய பதிலை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். “கவிதை எல்லாம் பேசலாம். கவிதை கவிதையாக இருக்க வேண்டும்.”

நல்ல கவிதைகள் மிக நீண்ட மரபுதான் நம்மில் நிலைபெற்று வந்திருக்கின்றன. காலத்தின் தேவைகளுக்கு எழுதப்பட்ட படைப்புகளைக் காலமே நிர்தாட்சண்யமாக நிராகரித்திருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு, விதவைத் திருமணம், சாதிய மீறல், திராவிடம், தமிழ், தமிழர் அல்லாதவர் உள்ளிட்ட சீர்திருத்தக் காலங்களின் கவிதைகளுக்கு இன்று என்ன இடம் என்பது ஆய்வுக்குரியது. பாரதி, பாரதிதாசனின் பல கவிதைகள் இவ்வகையில் தனக்கான இடத்தை இன்னும் தக்க வைத்திருக்கிறதா? இசைப்பாடல்களான பதிகங்களின் நிலை இன்று என்னவாக இருக்கிறது? போன்ற கேள்விகளையும் முன்வைக்கிறேன்.

இறுதியாக, கவிதை மரபு என்பது முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட கடந்த காலம் அல்ல. எல்லாப் புதுமைகளின் தொடக்கப்புள்ளியே மரபு. மரபுக்குத் திரும்புதலே புதுமை. மொழியின் வழியாக உருவாகும் கவிதை, மொழியின் எல்லைகளைக் கடந்து நிற்பதைப் போல், மரபும் தன் காலத்தின் சாத்தியங்களைக் கடந்து நிற்கிறது. சங்கம் தொடங்கி நவீனம் வரை நீளும் கவிதை மரபென்பது, வடிவத்தில் இல்லை. அதன் தரிசனத்தில்தான் இருக்கிறது. யதார்த்தத்தைக் கடந்த தீர்க்க தரிசனமும், உண்மையின் தரிசனமுமே நம் கவிதை மரபு. எந்தக் கைவிளக்கேந்தியும் அதனுள் பயணிக்கலாம்.

கவிதை வடிவத்தைக் கடந்து நிற்கும் பேரொளி.

(26.06.2020 அன்று சிங்கப்பூர் கவிமாலை நிகழ்ச்சியில், கவிதை மரபு என்ற தலைப்பில் இணைய வழியில் ஆற்றிய உரையை ஒட்டிய கட்டுரை)

***

அ. வெண்ணிலா

அபராதம் அவமானமல்ல

4

முனைவர் சீ.சரவணஜோதி

மதுரைக்கு ‘நான்மாடக் கூடல்’ என்ற பெயர் வந்த கதைத் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. நான்மாடக் கூடல் படலத்தில் பரஞ்சோதி முனிவர், மதுரக்குள் வரும் வருணன் பற்றி கூறும் பாடல் ஒன்று, அடியனேன் முன்னஞ் செய்த அபராதம் இரண்டும் தீரும் படிபொறுத்து அருள்வாய் என்று பண்முறை பரவித்தாழ்ந்து மடிவிலா மகிழ்ச்சி பொங்க வரங்களும் சிறிது வேண்டிக் கடியதன் நகரம் புக்கான் குட்திசைக் காவல் வேந்தன் என்று பாடலில், வழி வருணன் (குடதிசைக் காவல் வேந்தன்) மதுரை நகருக்குள் வருமுன் நான் செய்த இரண்டு வினைகளுக்கு (குற்றங்களுக்கு) அபராதம் தீரும் பொருட்டு உன்னிடம் வரங்கள் வேண்டி வந்துள்ளேன்.

அபராதம் என்பது குற்றமாகவும் அவமானத்தின் அடையாளமாகவும் சமூகத்தில் நிலவி வருவதை இக்கதை உணர்த்துகிறது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை அபராதம் என்பது அவமானத்தின் அடையாளமாக அஞ்சி வாழ்ந்தனர் மக்கள். தங்களுடைய அடுத்த தலைமுறையினரையும் அவ்வறே வளர்த்தனர். இக்கருத்தியல் சமூகத்தின் விழுமியமாகவும் கருதப்பட்டது. அவமானங்களைக் கண்டு அஞ்சி வாழ்ந்த குடும்பத்தையும் மனிதர்களையும் மக்கள் பெரிதும் மதித்தனர் மரியாதையும் செய்தனர். இதனைச் சங்க இலக்கிய புறநானூற்றுப் பாடல் ஒன்று:

பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்.

என்று வாழ்ந்த சமூகம் தமிழ்ச் சமூகம். தமிழ்ச் சமூகம் மட்டுமல்லாமல் உலக மாந்தர்களுக்கும் இது ஒரு பொது அறநெறியாகக் கருத்தப்பட்டு வந்த வாழ்வியல் ஒழுக்கமாகும்.

அபராதம் பற்றிய புரிதல்

இன்றையத் தகவல் தொழில் நுட்ப உலகத்தில் அபராதம் என்ற சொல்லின் பொருள் மலினப்படுத்தப்பட்டு வருகிறது. நடப்புக் காலத்தில் பேருந்து, இரயில், வங்கி, நீதிமன்றம் போன்ற இடங்களில அபராதம் அவமானத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் மின்சாரக் கட்டனம், தொலைப்பேசிக் கட்டணம், கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் தேர்வுக் கட்டணம் போன்றவைப் பெற்றோர்களால் அபராதத்துடன் கட்ட அனுமதிக்கப்படுகின்றன. உதாரணமாக என் நண்பர் வீட்டில் நடந்த நிகழ்வு, ‘அப்பா இன்றைக்குத்தான் தேர்வுக்கட்டணம் கட்ட கடைசி தேதி, அப்படி கட்டவில்லை என்றால் அபராதத்துடன் கட்டவேண்டும் என்றான், உடனே அப்பாவின் பதில் அபராதத்துடன் கட்டிக் கொள்ளலாம். இந்தப் பதில் என் நண்பர் வீட்டில் மட்டும்மல்ல பெரும்பாலான பெற்றோர்களின் பதில் இதுவாகத்தான் இருக்கிறது. பெற்றோர்களாலும் சமூகத்தாலும் வருங்காலத் தலைமுறையினர் அபராதத்தை அவமானமாகக் கருதாமல் வழக்கமான செயலாகக் கருதும் மனநிலை உருவாகி வருகிறது.

செல்லிடைப்பேசி பெருகிவரும் காரணத்தால் கடன் வாங்குதல் என்பதும் அபராதம் கட்டுதல் என்பதும் மலினப்படுத்தப்பட்டு அச்சம் அற்ற தன்மையைச் சமூகத்தில் உலாவ விட்டுவிட்டது. உதாரணமாக செல்லிடைப்பேசியில் பிறரை அழைப்பதற்குப் போதிய பணம் இல்லாத பட்சத்தில் குறிப்பிட்ட எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தற்சமயத்திற்குத் தேவையானத் தொகை கிடைத்து விடுகிறது. எனவே எளிமையாக கடன் வாங்கும் பழக்கம் உருவாகிவிடுகிறது. மேலும் வங்கியில் தொடங்கி பணம் குடுக்கும் நிறுவனங்கள் வரை வாடிக்கையாளரைத் தவனைத் தேதியைக் கடந்து பணம் கட்டவைத்தால் இலாபம் கிடைக்கும் என்பதற்காக வாடிக்கையாளர்க்கான தகவல் தாமதப்படுத்தப்பட்டு அனுப்புதல் போன்ற செயல்பாடுகள், அபராதம் அவமானமல்ல என்ற மனநிலையை ஊக்கிவிக்கும் காரணிகளாக அமைகின்றன.

இன்றையத் தலைமுறையும் அபராதமும்.

வருங்கால தலைமுறைகளின் ஒழுக்கங்களைக் கற்பிக்கும் பெற்றோரும், கல்வி நிறுவனங்களும், சமூகமும் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கின்றன. மற்றொருபுறம் தங்களை அறியாமலே பெற்றோரும், கல்வி நிறுவனங்களும், சமூகமும், கடன் வாங்குதல், அபராதம் போன்ற செயல்பாடுகளில் இளம் தலைமுறையினர் ஈடுபடுத்தப்பட வைக்கின்றனர். சமீபகாலமாக கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் ஒழுக்கங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இவற்றில் உச்சகட்டத் தண்டனை, தவறு செய்யும் மாணவர்களுக்குத் தவறுகளின் தன்மைக்கு ஏற்ப அபாராதத் தொகையைத் தீர்மானித்துக் கட்டவைத்தல்.

அபராதம் என்பது அவமானமாக கருதாத சமூகத்திற்கு, அபராதம் எப்படிப் பொருத்தமாகும். அப்படியே இருந்தாலும் அபராதம் என்பது செலவினங்களின் ஒன்றாகத்தான் கருதப்படும். மேலும் அபராதம் அவமானமாக கருதிய சமூகம் அலைபேசியில் தொடங்கி அனைத்து நிகழ்வுகளுக்கும் கடன் என்ற சொல் இயல்பானதாக மாற்றப்பட்டுவிட்டன. எனவே, கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஒழுங்கு மேம்பாட்டிற்கு அபராதம் என்பதை நீக்கி அதற்கு நிகரான சிந்தனையை முன்வைக்க வேண்டும். இளம் தலைமுறையினரை நம் கண் முன்னே நாமே கெடுத்துவிட்டு அவர்கள் சரியில்லை என்று குறை கூறுவது பொருத்தமற்ற வாதம். எனவே, ஒழுங்கு நடவடிக்கைக் குறித்து சிந்திக்கிற போது பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ள மாணவர்களின் மன சீர் அமைப்பு முறையைப் புரிந்து செயல்படுத்த வேண்டும். பாடம் நடத்தி அறிவை மேம்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் பாடம் நடத்துவதற்கு நிகராகப் பின்பற்றப்பட வேண்டும். எனவே இளம் தலைமுறையினர்க்குச் சிறுசிறு கருத்தியல்களை நாம் புரிந்து கொண்டு, அவர்களை வழி நடத்த வேண்டும். இதன் மூலம் மாணவர் சமூகத்திற்கு அபாராத்திற்கு ஆட்படுதல் தவறு என்பதைப் புரியவைக்க வேண்டும்.

குடும்ப உறவுகளில் இளம் தலைமுறையினர் முழுமையாக கவனிக்கப்பட வேண்டும். இவர்களின் பிற்கால வாழ்வியலுக்கு உதவும் பழக்க வழக்கங்கள் கற்றுத்தர வேண்டும். ஆனால் தற்கால சமூக அமைப்பில் குடும்ப உறுப்பினர்களின் உரையாடல் குறைந்த அளவில் உள்ளன. அலைபேசிகள் குடும்ப உறுப்பினர்களாக மாறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ளதை யாரும் கண்டுகொள்ளாது உள்ளோம். இதன் விளைவை எப்படி உணரலாம் என்றால், பொறுப்பற்ற தன்மை, காலம் கடத்தல் போன்ற ஒழுக்கக் கூறுகள் நம்முள் குடிகொண்டு இருப்பதை உணர மறுத்தல். மின்சாரக் கட்டணம், அலைபேசிக்கட்டணம், இவற்றை அபராதத்துடன் கட்டுவதை மிக சாதாரனமாக எடுத்துக்கொண்டுள்ளோம். பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் வெளி நாடுகளில் ஒழிந்து கொள்ளுகிற நபர்களுக்கும் இருபது ரூபாய் அபராதத்துடன் கட்டுகிற மத்தியத்தர குடும்பத்திற்கும் என்ன வேறுபாடு காண முடியும். இந்தக் கட்டுரை மத்தியத்தர குடும்பத்திற்கான ஒழுக்கம் பற்றி பேசுகிறது. இவர்களிடம் தான் ஒழுக்கம் விழுமியமாக கருதப்படுகிறது. பிறர் சொல்லுக்கு அஞ்சி வாழ்வது பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அடையாளம். எனவே, அபராதத்தை அவமானமாக கருதி வாழ்ந்தால் பிற்கால அரசியல் செழுமை பெறும். மத்தியத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் அரசியல் தலைவர்களாக உள்ளனர். கடன் கட்டாதவர்கள் வணிக சமூக மாறியுள்ளார்கள்.

சமீப காலமாக அரசு பொய் பேசுகிறது என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. அரசு என்பது அரசியல் தலைவர்கள், மக்களோடு தொடர்புடைய அரசு அலுவலர்கள். இவர்கள் கூற்றில் முன்னுக்குப் பின் புறம்பாக கூற்றுகள் எழுகிறபோது, நம் ஒழுக்கங்களை நிர்ணயிக்கின்ற நிறுவனங்கள் நம்பிக்கையற்றத் தன்மையைப் பெறுகின்றன. இக்கருத்தியல் இளைய தலைமுறையைப் பாதிக்கும். இது தொடர்ந்தால் உறவுகள் பொய்த்துப் போய்விடும். உறவுகளின் அவநம்பிக்கையோடு ஒரு சமூகம் கட்டமைக்கப்பட்டால் நாட்டின் வீழ்ச்சி எப்போது இருக்கும் என்றுகூட யூகிக்க முடியாது. மனிதர்களின் வாழ்வியல் நகர்வு யூகங்களால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. அபராதம் தானே என்று எளிமையாக கருதாமல் அவமானமக கருதி வாழ்வது நலம்.

***

முனைவர் சீ.சரவணஜோதி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை.
E.Mail: saravana7mkuc@gmail.com

ஒரு தொல்‌ கானகச்‌ செய்தி

1

யவனிகா ஸ்ரீராம்

பர்ணா ராய்‌, தில்லி மருத்துவப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பாலியல்‌ மற்றும்‌ ஊட்டச்சத்துடனான உடல்‌ ஆரோக்கியமும்‌ பயிற்றுவிக்கும்‌ மனித வளத்துறைப்‌ பேராசிரியர்‌. உலகின்‌ பிரபல ஆங்கில நாளேடுகளில்‌ வெளிவந்துள்ள இவரது பாலியல்‌ பற்றிய கட்டுரைகள்‌ அதிக வரவேற்பைப்‌ பெற்றவை. “மனிதரில்‌ இனவிருத்திக்கான காமமும்‌ கேளிக்கைக்கான காமமும்‌” என்ற நூலுக்காக உலக சுகாதார நிறுவனத்தின்‌ விருதினைப்‌ பெற்றுக் கொண்டவர்‌. உலக மயமாதலில்‌ “பாலுறவுகளின்‌ விழ்ச்சி” என்ற ஆய்வு நூலையும்‌ “காமம்‌ ஒரு இயந்திரவியல்‌ தொழிற்சாலையின்‌ சமூக இயக்கம்‌” என்ற நூலை எழுதிய பெர்னார்டோ ரிச்சர்ட்ஸன்‌ என்ற அமெரிக்க “எதிர்கால உளப்பகுப்பாய்வு அறிஞருக்கு ஒரு மறுப்பு” என்ற நூலையும்‌ எழுதி மேலதிக விவாதங்களை உண்டாக்கியவர்‌. தனது நாற்பதாவது வயதினை நெருங்கிக்கொண்டிருக்கும்‌ இவர்‌. உலகின்‌ பல பாகங்களுக்கும்‌ தன்‌ ஆய்வுகளுக்காகப்‌ பயணிக்கிறார்‌. இவரை நேர்கண்டவர்‌ சுற்றுச்சூழல்வாதியும்‌ அடித்தள மக்கள்‌ பண்பாட்டு ஆய்வுக்காக பாட்டியாலா பல்கலைக்கழகத்தில்‌ முனைவர்‌ பட்டம்‌ பெற்ற டாக்டர்‌ குமாரதாஸ்‌ குப்தா.

ஆங்கிலத்திலிருந்து தமிழில்‌ சுருக்கப்பட்ட நேர்காணல்‌ இது.

விரிவாகக்‌ காண www.indianhumansexualexploitation.com, www.aestheticforwomanandman.com என்ற வலைத்தளங்களைப்‌ பயன்படுத்தலாம்‌. தமிழில்‌: இளங்கோவன்‌.

குப்தா: நல்லவகையான உடலுறவை ஆரோக்கியமான வலுவுடன்‌ அனுபவித்து வந்திருக்கும்‌ சமூகம்‌ அல்லது இனக்குழு தன்‌ எல்லா வரலாற்றுக்‌ காலங்களிலும்‌ புத்துயிர்ப்பையும்‌ வளர்ச்சியையும்‌ அடைந்து வந்திருக்கிறது என்ற உங்கள்‌ கூற்று பிரசித்தமானது. உங்கள்‌ இளம்பருவ நாட்களைப்‌ பற்றி நினைவு கூர்ந்துவிட்டு பிறகு ஆய்வுகளுக்குள்‌ செல்லலாம்தானே?

அபர்ணா: என்‌ இளம்பருவம்‌ பெரும்பாலும்‌ படிப்பறைகளில்‌ கழிந்ததாகத்தான்‌ ஞாபகம்‌. அதிக விளையாட்டுத்தனங்கள்‌ இல்லாத ஆனால்‌ அறிவார்ந்த நல்ல சூழலில்‌ வளர்க்கப்பட்டேன்‌. எனது பாட்டி கிராமத்துச்‌ செவிலி போன்றவர்‌. பிரசவம்‌ பார்ப்பதில்‌ திறமையானவர்‌. சுடுநீர்‌. சுத்திகரிக்கப்பட்ட சிறுகத்தி, ஆவியில்‌ வெளுத்த துண்டுத்துணிகள்‌ இவற்றைக்‌ கொண்டே எளிதில்‌ தாயிடமிருந்து குழந்தையை பத்திரமாக எடுத்துத்தருவார்‌. இன்றைய நவீன மருத்துவத்தைப்போல அக்காலங்கள்‌ பிள்ளைப்பேற்றினை ஒரு நோயாகக்‌ கருதவில்லை. மேலும்‌ அக்காலத்துப்‌ பெண்கள்‌ என்‌ பாட்டியிடம்‌ வந்து தங்களது குடும்பக்‌ கதைகளையும்‌ அதன்‌ புகார்களையும்‌ பகிர்ந்து கொள்வார்கள்‌. பாட்டி மிகப்‌ பொறுமையாக, நாசுக்காக படுக்கை முதல்‌ வாழ்வில்‌ சிக்கனமாக இருப்பது வரையிலான விஷயங்களையும்‌ அதோடு பாலியல்‌ பிரச்சனைகளையும்‌ எளிதாக விளக்கி அனுப்பிவைப்பார்‌. அப்படியான சூழலிலிருந்து இன்றைக்கு நான்‌ பாலுணர்வு சார்ந்த ஆய்வுகளுக்குள்‌ வந்து அதன்மூலம்‌ பலருக்கும்‌ வாழ்வைச்‌ சுலபமாக்கும்‌ பணியில்‌ ஈடுபட்டிருக்கிறேன்‌ எனில்‌, எனது பாட்டிதான்‌ அதற்கு முன்னோடி. குடும்பம்‌ என்ற அமைப்பு அடிப்படையில்‌ காமத்திற்கு அவ்வளவு ஞாயம்‌ செய்யவில்லை என்பது அப்போது எனது அபிப்பிராயமாக இருந்தது. அதனால்தான்‌ என்னவோ பள்ளிப்பருவத்திலேயே எனது சினேகிதிகள்‌ மற்றும்‌ அருகாமை உறவுப்‌ பையன்களிடம்‌ பாதுகாப்பான உடலுறவை நான்‌ மேற்கொண்டு வந்தேன்‌. கல்லூரிக்‌ காலங்களில்‌ விடுதிகளில்‌ பெண்கள்‌ என்ன செய்துகொள்வார்கள்‌ என்பதை அறியாதவர்கள்‌ இன்றும்‌ யாரும்‌ இருக்கிறார்களா எனத்‌ தெரியவில்லை. பிறகு எனக்கு அது பசித்த நேரம்‌ உணவு உண்பது போல்‌ சகஜமாகிவிட்டது. ஆயினும்‌ ஆண்களிடம்‌ இன்றுவரை எனக்கு ஒரு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இப்போது அதைப்பற்றி பேசிப்‌ பயனில்லை. திருமணமாகி பிரிந்து ஒரு குழந்தையும்‌ விடுதியில்‌ வளர்கிறாள்‌. மற்றபடி. இப்போது எனக்கு வேறு வேலைகள்‌ அதிகரித்துவிட்டன.

குப்தா: ஆதிகாலம்‌ முதல்‌ இனவிருத்திக்‌ காமத்திற்கு அப்பால்‌ அதிகமும்‌ கேளிக்கை சார்ந்த காமமே நிலவிவந்ததாகச்‌ சொல்லும்‌ நீங்கள்‌, அதற்கான ஒரு வரலாற்றுப்‌ பின்புலத்தை இங்கு சுருக்கமாக விவரிக்கமுடியுமா?

அபர்ணா: மிருக உணர்ச்சிக்குப்‌ பிந்தைய மனிதன்‌ என்கிற கருதுகோள்‌ தோன்றுவதற்கு முன்பே பழங்குடி வாழ்வின்‌ மாயங்களிலும்‌ சடங்குகளிலும்‌ புணர்ச்சியிலும்‌ ஈடுபட்டுக் கொண்டிருந்த மனிதர்களுக்கு குழந்தைப்‌ பிறப்பிற்கும்‌ உடலுறவிற்குமான தொடர்புகள்‌ தெரியாமலிருந்தது. தீய ஆவிகள்‌ அல்லது சுற்றுப்புறத்தில்‌ இருந்து ஏதோ ஒன்று பெண்களின்‌ வாய்வழியாக ஊடுருவி குழந்தை உருவாகி விடுவதாக அவர்கள்‌ நம்பினார்கள்‌. இன்றுகூட மனிதர்கள்‌ குழந்தை பிறந்தால்‌ ‘கடவுள்‌ கொடுத்த வரம்‌’ என்றுதானே தன்னை அறியாமல்‌ சொல்லிக்‌ கொள்கிறார்கள்‌. ஆக கேளிக்கைசார்‌ காமம்தான்‌ அவர்களுடைய இயல்பூக்கமாக இருந்திருக்கிறது. பிறகு அஸ்டெக்‌, மாயா போன்ற பெரும்‌ ஆதிக்க இனக்குழுக்கள்‌ உருவானதும்‌ அவர்கள்‌ தங்களது சந்ததிகளின்‌ வலிமைகளை அறிந்து கொண்டதும்‌ அவற்றைப்‌ பெருக்கிக் கொள்ளும்‌ பொருட்டே வேறுவேறான பல பழங்குடி ஆண்களைப்‌ பலியிட்டு அவர்களது பெண்களைக்‌ கவர்ந்து புணர்ந்து தங்கள்‌ தொகைகளைப்‌ பெருக்கிக்‌ கொண்டார்கள்‌. அது ஒரு கேளிக்கைச்‌ சடங்காகவே பெரு வெளியில்‌ நடந்தேறியது. அதன்பிறகு பெரிய சாம்ராஜ்ய நோக்கம்‌ கிரேக்கத்தில்‌ உருவானபோது பிரபுக்கள்‌ மற்றும்‌ அடிமைகள்‌ என்கிற மனித இரண்டக நிலையில்‌ அடிமைகளை பெரும்‌ வட்ட அரங்குகளில்‌ புணர்ச்சி செய்யச்‌ சொல்லி எந்த குற்றவுணர்ச்சியும்‌ அற்று ஆண்கள்‌. பெண்கள்‌, குழந்தைகள்‌ என கேலரிகளில்‌ அமர்ந்து அதை வேடிக்கை பார்த்து ரசித்தார்கள்‌. ஒருவிதமான Exhibitional Recreation நாளெல்லாம்‌ நடந்து வந்திருக்கிறது. அக்காலத்தில்‌ ஹிப்போகிராட்ஸ்‌ என்கிற திறமையான கேளிக்கை நிகழ்ச்சியின்‌ அரங்காளன்‌ சிங்கங்களையும்‌ பெண்களையும்‌, பெண்‌ x ஆண்களையும்‌ புணரவைத்து பிரபுக்களுக்கு உற்சாகத்தை ஊட்டினான்‌.

ஒருவருக்கொருவர்‌ சண்டையிட்டு இறுதியில்‌ மடியும் வரை போரிடும்‌ அடிமைகளின்‌ அக்கேளிக்கை கொடுரமாகத்தான்‌ இருந்தது. உண்மையைச்‌ சொன்னால்‌ அடிமைகளை ஏலம்‌ எடுத்து உபரி உடல்களாக பொதுவில்‌ அழிப்பது ஒரு கேளிக்கையாகவே இருந்தது. கிரேக்க யுத்தம்‌ முழுவதும்‌ அல்லது டிராயன்‌ போர்கள்‌ என்று சொல்லக்கூடிய அனைத்தும்‌ காமத்திற்கும்‌ பெண்களுக்கும்‌ இவ்வகையான கேளிக்கைக்குமாக ஒரு மையவெளியில்‌ நடந்தது என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது அரசதிகாரம்‌ அல்லது ஆண்மையத்தின்‌ தோற்றுவாய்‌ என்பதைவிட, இனவிருத்திக்கான காமத்துக்கு வெளியே கேளிக்கைக்கான காமத்திற்காக நடந்த அல்லது ஒருவகையில்‌ உச்சம்‌ பெற்றிருந்த நிலை என ஒரு தொன்ம வரலாற்றுவியலை பாலியல்‌ சார்ந்து நாம்‌ பின்தொடரவும்‌ முடியும்‌. சமூகமயமாக்கம்‌ அல்லது உடைமைமயமாக்கம்‌ எனும்‌ காலகட்டத்தில்தான்‌ சந்ததி என்கிற இனவிருத்திக்காமம்‌ புனிதம்‌ பெறுகிறது. ஏதேன்‌ தோட்டத்தில்‌ கேளிக்கையாக இருக்கும்படிதானே சொல்லி தேவனும்‌ ஆதாம்‌ ஏவாளைப்‌ படைக்கிறார்‌.

குப்தா: இன்றைய சமகாலத்திலும்‌ பழம்‌ கிரேக்கத்தின்‌ காமம்‌ சார்ந்த தன்மைகள்‌ அல்லது நாம்‌ இன்று கருதும்‌ நாகரீகம்‌ சாராத வன்முறைகள்‌ தொடர்கின்றன அல்லவா?

அபர்ணா: இருக்கத்தானே செய்கிறது. மனிதப்‌ பாலுறவை மனிதர்களே வேடிக்கை பார்க்கும்‌ இன்றைய பாலுறவுக்‌ காட்சிகள்‌ கேளிக்கை மையங்களில்‌ கண்முன்பாகவே நடக்கும்‌ புணர்ச்சிக்‌ கலைகள்‌ காபரே போன்றவை மனித நனவிலிக்குள்‌ உறங்கிக்கிடக்கும்‌ தொன்மத்தின்‌ எச்சங்கள்தான்‌. ஓவியங்கள்‌, சிற்பங்கள்‌ நடனக்கலைகள்‌ அனைத்திலும்‌ விரசபாவம்‌, சிருங்காரம்‌, மிகைப்படுத்தப்பட்ட பாலியல்‌ உறுப்புகள்‌ பலவாறான வித்தைகள்‌ மீண்டும்‌ மீண்டும்‌ உருவாக்கப்பட்டு வந்தவண்ணம்தானே இருக்கிறது. தனது சொந்த நிர்வாண உடலை கண்ணாடியில்‌ பார்த்து வந்தது தொடங்கி இன்றைய புகைப்பட கருவியுடன்‌ கூடிய நவீன அலைபேசிகளில்‌ இளம்‌ பெண்கள்‌. ஆண்கள்‌ முதலில்‌ தங்களது அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துப்‌ பார்த்தும்‌ ஒருவருக்கொருவர்‌ பரிமாறிக் கொள்கின்றனர்‌. இன்றைய குடும்பங்களில்‌ மளிகைச்‌ சாமான்கள்‌ வாங்குவது மாதிரி நீலப்பட வட்டுகள்‌ வாங்கப்படுகின்றன. போக, திருவிழாக்கள்‌. ஹோலிப்‌ பண்டிகைகள்‌ நடக்கும்போது காமம்‌ ஒரு சீற்றத்துடனும்‌ வன்முறையுடனும்‌ அக்கேளிக்கைக்குள்‌ ஊடுருவி இச்சையுடன்‌ திரிவதைப்‌ பார்த்துக் கொண்டுதானே வருகிறோம்‌. இத்தகையப்‌ பொதுவெளிக்குப்‌ பின்னால்‌ மதம்‌ அவர்களை குடும்பத்திற்கு அடியில்‌ பணியுமாறு அச்சுறுத்தி கலாச்சார கண்காணிப்போடு வன்முறைகளையும்‌ ஏவி ஆக இரண்டையும்‌ அவைகளை ஆட்டிப்படைக்கின்றன என்பதையும்‌ கவனத்தில்‌ கொள்ளவேண்டும்‌. சென்ற நூற்றாண்டில்‌ குறிப்பாக இந்தியாவில்‌ சில இனக்குழுக்களுக்கிடையே தங்கள்‌ வீட்டுப்‌ பெண்களை, விதவைகளை ஒரே ஒருநாள்‌ மட்டும்‌ பொதுவெளியில்‌ சென்று காமம்‌ அனுபவித்துவிட்டு திரும்பி அவர்களை விட்டுக்குள்‌ ஏற்றுக்கொள்ளும்‌ பழக்கம்‌ இருந்து வந்துள்ளது. யோசித்துப்‌ பார்த்தால்‌ இன்றுவரை பழங்குடிகளுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.

குப்தா: உண்மைதான்‌. ஆனால்‌ இத்தகைய கேளிக்கை சார்ந்த காமத்தால்‌ ஆப்ரிக்காவில்‌ இரண்டிற்கு ஒருவர்‌ வீதம்‌ எய்ட்ஸ்‌ நோய்‌ பரவிவருவதும்‌ இந்தியாவில்‌ அது தொடர்ந்த அச்சுறுத்தலாக இருப்பதும்‌ குறித்து நாம்‌ பேசவேண்டியிருக்கிறது.?

அபர்ணா: “உலகமயமாதலில்‌ பாலுறவுகளின்‌ விழ்ச்சி” என்ற எனது புத்தகத்தில்‌ இதுபற்றி மிக விரிவாக எழுதியுள்ளேன்‌. பாலுறவிற்கும்‌ ஒரு தொற்றுநோய்க்குமான ஒப்பந்தம்‌ அநேக உயிரிழப்புகளுக்குக்‌ காரணமாகிறது என்றால்‌ அது ஆய்வகங்களில்‌ நடக்கும்‌ உயிரியல்‌ சதி என்றுதான்‌ முடிவுகட்ட வேண்டியிருக்கிறது. எய்ட்ஸ்‌ நோயால்‌ உலகில்‌ பாதிப்பேர்‌ அழிந்துபோவார்கள்‌ என நம்பவைப்பது ஊடக முயற்சி மட்டுமல்ல. எதிர்கால மருந்துகளின்‌ சந்தைகளுக்காகவும் தான்‌ என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில்‌ புற்றுநோய்கள்‌. ஊட்டச்சத்துக்குறைவு. மூளைச்செல்‌ அழிவு, இதயநோய்‌, நீரிழிவு. இயற்கைப்‌ பேரிடர்கள்‌ மற்றும்‌ விபத்துகள்‌, குண்டுவெடிப்புகள்‌ மூலமாகத்தான்‌ உலகில்‌ அதிகம்பேர்‌ இறந்துபோகிறார்கள்‌. மற்றபடி பாலுறவு நாட்டம்‌ இதற்குள்‌ வேட்கையுடன்‌ பலவகையில்‌ தப்பிப்பிழைத்து பரிணாமம்‌ அடைந்து கொண்டிருக்கிறது. அத்தகைய மனித வளத்தை, அதன்‌ காமத்தை வளமாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும்‌ என்பதைத்தான்‌ நான்‌ அழுத்தமாகக்‌ கூற முயற்சிக்கிறேன்‌.

குப்தா: நீங்கள்‌ இளமையில்‌ பாதுகாப்பாக உடலுறவு மேற்கொண்டதைப்‌ பற்றி குறிப்பிட்டீர்கள்‌. “பாலுறவு ஒரு சமூக எந்திரமயமான நிகழ்வுப்போக்கு” என்கிற ரிச்சர்ட்சனின்‌ புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளீர்கள்‌. இரண்டையும்‌ எப்படி எடுத்துக்கொள்வது?

அபர்ணா: பாதுகாப்பான உடலுறவு என்பது ஆரோக்கியமான திருப்தியை உருவாக்கும்‌ இச்சையைக்‌ குறிக்கிறது. கேளிக்கையான உடலுறவிற்கு பன்மைப்பட்ட உடல்களை தேர்ந்துகொள்ளும்‌ ஒரு பெண்‌, இனவிருத்திக்கு ஆரோக்கியமான, வலிமையான ஒரு ஆணையே தேர்ந்தெடுப்பாள்‌ என்பது ஒரு இனவிருத்தி சார்ந்த உளவியல்‌ உண்மை. அதற்கான சமூக வாய்ப்புகள்தான்‌ பெண்களுக்கு இங்கு இல்லை. பயம்‌ காரணமாக உறையணியும்‌ இன்றைய பாலுறவு சகிக்க முடியாதது. புணர்ச்சிக்குப்பின்‌ கிழிந்துவிட்ட ரப்பர்‌ துணுக்குகளை ஒரு நாள்‌ முழுக்க குனிந்து எடுத்த தோழியின்‌ எரிச்சலூட்டும்‌ முகம்‌ ஞாபகத்திற்கு வருகிறது. எய்ட்ஸ்‌ போன்ற நோய்கள்‌ 1980-களுக்குப்‌ பிறகுதான்‌ மனித உயிர்களை ஆட்கொள்ளத்‌ தொடங்கியது என்பதே அதைச்‌ சந்தேகத்துக்குள்ளாக்குகிறது அதற்கு முன்னான பால்வினை நோய்களைக்‌ கட்டுப்படுத்த நாம்‌ பூஞ்சைக்‌ காளான்களைப்‌ பயன்படுத்தி வெற்றி காணவில்லையா?

உலகின்‌ உயிரியல்‌ சமன்பாடு தெரியாதவர்கள்தான்‌ இப்படி கதைவிட்டுக்‌ கொண்டிருப்பார்கள்‌. டினோசர்கள்‌ அழிந்துவிட்டன என்று நாம்‌ நம்புவது அது இருந்ததாகச்‌ சொல்லப்படுவதையும் சேர்த்துதானே. ரிச்சர்ட்சனுக்கு மறுப்பு என்பது அவர்‌ பாலுறவை தொழிற்சங்க செயற்பாடுபோல விமர்சிப்பதிலிருந்து தொடங்குகிறது. தேவைக்கான உற்பத்திப்‌ பொருளுக்கும்‌ மனித இயல்பூக்கமான காமத்திற்குமான முரண்பாட்டில்‌ குடும்பம்‌ சமூகம்‌ என்ற இரண்டு பாரிய தொழிற்சாலைகளின்‌ போட்டிமயமான மோதல்‌ நடக்கிறது என அவர்‌ எடுத்துக்காட்டுகிறார்‌. இயந்திரமும்‌ மனித உடலும்‌ ஒன்றுதான்‌. அவற்றில்‌ இருவேறு உற்பத்திகள்‌ நடக்கின்றன எனும்போது கேளிக்கை சார்ந்த காமத்தின்‌ வாய்ப்புகளை சந்தைமயமாக்கத்திற்குள்‌ தள்ளிவிடுகிறார்‌. அவர்‌ சொல்வதைப்‌ பார்த்தால்‌, உலகம்‌ முழுக்க முதலீடு சார்ந்த புணர்ச்சிதான்‌ நடக்கமுடியும்‌. மேற்சொன்ன இருவேறு உற்பத்திகள்‌ தங்களுக்குள்‌ ஒன்றையொன்று அழிக்கும்‌ செயல்பாடு என அவர்‌ மேலும்‌ தொடங்கும்போது நாம்‌ காமம்‌ என்கிற கிளர்ச்சியை, அதன்‌ வேட்கையை நிறுவனமயமாதலில்‌ இருந்து அமைப்பு சாரா உதிரித்‌ தன்மைக்கு அல்லது தன்னிலைக்கு உருவி எடுக்க வேண்டியிருக்கிறது.

குப்தா: குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்‌. ஒரு சுற்றுச்சூழல்வாதி என்கிற முறையில்‌ நீங்கள்‌ சொல்லும்‌ காமத்திற்கான மறைவிடத்திற்குத்‌ தானே அல்லது சமூகமயமாதல்‌ என்கிற பெரும்‌ குடும்ப வழக்கிற்காகத்தானே நாம்‌ வனங்களையும்‌ பல்லுயிர்ப்‌ பெருக்கத்தையும்‌ அழித்து நாடு. நகரங்களை நிலைநாட்டினோம்‌. இன்றைய காமம்‌ சார்ந்த தனியுடைமைக்‌ குடும்பங்களின்‌ தேவைகளுக்காகத்‌ தான்‌ இத்தனை தொழிற்சாலைகளும்‌. விவசாய நிலங்களும்‌ மனித உறவிற்குள்‌ அடைக்கப்பட்டன. ஆக, ரிச்சர்ட்சன்‌ கூறுவதுபோல. இரண்டு வகையான இயந்திரமய போக்கில்தானே உலகப்‌ பரிவர்த்தனை நடக்கிறது?

அபர்ணா: இயந்திரங்கள்‌ இயந்திரங்களை உருவாக்குகின்றன. மனிதன்‌ ஒரு இயந்திரம்‌ என்றால்‌ மேற்சொன்னவை சரிதான்‌. ஆனால்‌ உடலுறவில்‌ இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது என்பது விதி உண்மையில்‌, இன்று பெண்களின்‌ யோனிக்குள்‌ ஆண்கள்‌ தங்கள்‌ உறுப்புகளைக்‌ கொண்டு சுயமைதுனம்தான்‌ செய்கிறார்கள்‌. தங்கள்‌ உச்சத்தைப்‌ பெற அவர்கள்‌ ஏன்‌ புணர்ச்சி நேரங்களை புனைவின்பமின்றி குறைத்துக்கொள்ளுகிறார்கள்‌ எனத்தான்‌ அவர்களைக்‌ குற்றம்சாட்ட வேண்டியிருக்கிறது. பாலியல்‌ விருப்பம்‌ அல்லது வேட்கை என்பது பெண்களைப்‌ பொறுத்தமட்டில்‌ ஒன்று, இரண்டு, மூன்று என மேல்நோக்கிச்‌ சென்று நாம்‌ எதிர்பார்க்கும்‌ ஒரு ஒழுங்கில்‌ உச்சநிலை அடைவதல்ல. அவள்‌ உடலில்‌ பாலியலின்‌ தொடுபுள்ளிகள்‌ ஆயிரமாயிரம்‌ உள்ளன. பாலுறவின்‌ போது ஆணுக்கு மேல்‌, நுனி, கீழ்‌ என கூர்மைப்படுத்தப்பட்டிருக்கும்‌ உச்சம்‌, பெண்ணைப்‌ பொறுத்தவரையில்‌ நடுவில்‌ கரைகளை மீறி வேகமெடுத்துப்‌ போகும்‌ அடி ஆற்றலுடன்‌ இருக்கிறது. அனைத்தையும்‌ கூடவே வேறு சிலதையும்‌ அடித்துக்கொண்டுப் போகும்‌ பன்மைப்பட்ட உச்சநிலைப்‌ புள்ளிகள்‌ பக்கவாட்டில்‌ தன்‌ அலைகளைச்‌ செலுத்துகின்றன. காமம்‌ அவளது உடலின்மேலே மாய்மை அடைகிறது. தயார்‌ செய்தல்‌, பேசுதல்‌ போன்றவற்றுக்கும்‌ திடீர்‌ தாக்குதலுக்கிடையே உச்சம்‌ பற்றிய புனைவு தொடங்கி அவளது மயிர்க்கால்கள் வரை விரவி தீண்டலுக்குத்‌ தயார் நிலையில்‌ இருக்கின்றன. மிகக்குறைந்த விருப்ப நேரத்தில்‌ ஒரு வலிமையான ஆனால்‌ இதமாக வலியூட்டக்கூடிய அல்லது மிகச்‌சுலபமான கூட்டுக்கலவி என அவள்‌ உடலின்‌ பரப்பின் மீது ஒரு காமம்சார்‌ நிறுவன இயக்கமே தேவைப்படுகிறது. அப்படியில்லாமல்‌ மையப்புணர்ச்சிக்கென தக்கவைக்கப்படும்‌ ஒரு ஒற்றை ஆண்‌ என்பது அவளின்‌ வாழ்நாள்‌ வேட்கையைச்‌ சுருக்கி பல்வேறு திறமைகளை மழுங்கடித்து உடல்ரீதியாகவும்‌ மனரீதியாகவும்‌ ஆரோக்கியமற்றவளாக ஆக்கிவிடுகிறது என்பதைப்‌ பெண்‌ என்கிற அளவில்‌ நான்‌ கண்டிருக்கிறேன்‌. ரிச்சர்ட்சனுக்கு எதுவும்‌ தெரியாமலிருக்காது. வேட்கையைப்‌ பொறுத்தவரையில்‌ பெண்‌ – கணவன்‌. மகன்‌, சகோதரன்‌ தந்தை போன்ற சமூகமயமாக்க பேதங்களை நனவிலியில்‌ கொண்டிருப்பவளாகத்‌ தெரியவில்லை. அச்சமடைதலின்‌ ஆழ்நினைவுகளில்‌ அவள்‌ பலமுறை கொல்லப்பட்டதும்‌ வன்முறைக்கு ஆளானதும்‌ தீவைத்துக்‌ கொளுத்தப்பட்டதும்‌ உறுப்புகள்‌ சிதைக்கப்பட்டதும்‌ மத பாவ புண்ணியங்களுக்கு. கடவுள்களின்‌ அச்சுறுத்தும்‌ சொல்லாடல்களுக்கு கல்லெறிகளுக்கு உள்ளானதும்‌ மனச்சிதைவின்‌ சங்கிலியில் பிணைக்கப்பட்டதுமான சமூகக்‌ கொடுரங்களின்‌ மையத்தில்‌ இறுக்கி வைக்கப்பட்டிருக்கிறாள்‌ என்ற பீதி அவள்‌ நனவிலியில்‌ புதைந்து கிடக்கிறது. அதனாலேயே பண்புப்பெயர்களின்‌ உறவுகள்‌ குறித்து அதற்காக அடக்கமுறும்‌ பாவனையை மேற்கொள்கிறாள்‌. இறுதியில்‌, தனது உடல்‌ குடும்பங்களுக்குள்‌ ஒடுக்கப்பட்டிருக்கிறது என்கிற நடைமுறை யதார்த்தத்திற்கு காலத்தில்‌ செவிமடுத்தும்‌ விடுகிறாள்‌. போக, புராதன பொது உடைமைப்‌ பெண்ணான அவளுக்குள்‌ ஆதிப்பாலியல்‌ எச்சங்கள்‌, கருஉற்பத்தி முறை தாண்டி, பிறகு அனைத்திற்கும்‌ வெளியே வேட்கையுடன்‌ தன்னிலை கொள்வது என்பது ஆண்களால்‌ ஒருபோதும்‌ பரிந்துரைக்கப்படவே முடியாத ஒரு தொல்‌ கானகச்‌செய்தி. அண்ட கோளங்களில்‌ உருவாகி பாலியல்‌ வகைமைகளை உடலின் பரப்பில்‌ வேட்கையாக உருவாக்கம்‌ செய்துகொள்ள உதவும்‌ பாலுறவை ரிச்சர்ட்சன்‌ இயந்திரங்களுக்கு மசகு பூசுவதுபோல குறுக்கிவிடுகிறார்‌.

குப்தா: ஒடுக்கப்பட்ட பெண்கள்‌ குறிப்பாக, இந்தியாவில்‌ தாழ்த்தப்பட்ட சமூகங்களில்‌ வாழும்‌ பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கும்‌ இந்திய சாதிய மனோபாவங்களை நாம்‌ எப்படி அணுக வேண்டியிருக்கிறது?

அபர்ணா: இந்திய உற்பத்தி உறவுகள்‌. நிலம்‌ மற்றும்‌ பொருளாதார எல்லைகள்‌ அனைத்துமே சாதிய அமைப்புக்குள்தான்‌ முடங்கிக்‌ கிடக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினர்‌ தொழில்களைத்‌ தேர்ந்தெடுக்கும்போது பன்மைப்பட்ட கைமைகளையும்‌ விவசாயம்‌ என்று வரும்போது நிலத்தின்‌ மீதான பிதுரார்ஜிதத்‌ தன்மையையும்‌ கொண்டிருக்கிறார்கள்‌. நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்கள்‌ இவற்றுக்குள்‌ உள்வாங்கப்பட்டு, வெளியேற்றப்பட்டு வன்கொடுமைகளுக்கும்‌ ஆளாகிறார்கள்‌. இது இந்தியாவிற்குள்‌ மாபெரும்‌ விழிப்புணர்வாக மாற்றிப்‌ போராட வேண்டிய உள்காலனியப்‌ பிரச்சனை. உலகமயமாதலோடு இந்த உள்காலனிய மாற்றங்களையும்‌ இரண்டு வகையாக செயல்படுத்த நீண்ட தொடர்‌ போராட்டங்கள்‌ தேவைப்படுகிறது. இதற்குள்‌ பெண்ணுடல்‌ சமூக அந்தஸ்துடன்‌ மிக உயரிய நிலையில்‌ பாதுகாக்கப்படவேண்டும்‌. இந்த இடத்தில்‌ ‘யோனி பலம்‌ உலக நலம்’ என்று எழுதிய என்‌ ஸ்னேகிதியின்‌ கவிதை வரிகள்‌ நினைவிற்கு வருகிறது. எதிர்காலத்தில்‌ ஆண்கள்‌, பெண்களுக்காக அவர்கள்‌ பிறப்பு விகிதம்‌ குறைந்துவரும்‌ நிலையில்‌ தங்களுக்குள்‌ அடித்துக்கொண்டு சாவார்கள்‌ என்று நினைக்கிறேன்‌. இரண்டு பனித்துருவங்களுக்கு மத்தியில்‌ மெல்லப்‌ பரவும்‌ குளிர்ந்த காதல்‌ உணர்ச்சியை புத்துயிர்ப்பாக்கிக்‌ கொள்ளாமல்‌ ஏன்‌ இந்நிலங்கள்‌ வன்முறையாக்கிக்‌ கொள்கின்றன எனத்தான்‌ தெரியவில்லை. இரண்டு உலகப்போர்கள்‌. மற்றும்‌ விஞ்ஞானத்தின்‌ வழியின்‌ பேரழிவுகள்‌ பொருட்களின்‌ பெருக்கத்தால்‌ மனித மதிப்பு குறைவதாலும்‌ உலக மக்களிடையே பொதுவாகவே சாவு விருப்பம் அதிகரித்திருப்பதை இக்காலகட்டத்தில்‌ இனம்புரியாத அழுத்தமாக உணர முடிகிறது.

குப்தா: இன்றைய நவீனச்‌ சமூகத்திற்கும்‌ இயந்திரமயமான இயங்கியலுக்கும்‌ உள்ள வேறுபாடுகள்‌ தன்னிலையின்‌ காமம்சார்‌ உடலுக்கு வழங்கிவரும்‌ சேதிகளைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்‌. இந்தியாவைப்‌ பொறுத்தவரையில்‌ இத்தகைய காமம்‌ பற்றிய கலைப்‌ படைப்புகள்‌, கோவில்‌ சிற்பங்கள்‌, விளக்கங்கள்‌ கதையாடல்கள்‌ ஒரு காலத்தில்‌ அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆகவே இது தன்னளவில்‌ பாலியலின்‌ அனுபவத்தின்‌ தோற்றுவாயாகவும்‌ இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. குடும்பம்‌, சாதி, தாண்டி அவற்றை வளர்த்தெடுக்க முடியாத சிக்கல்‌ என்னவாக இருக்கமுடியும்‌?

அபர்ணா: இடைக்காலத்தில்‌ அந்நிய ஆட்சிகளின்போது ஏற்பட்ட கலவரங்கள்‌, சீர்திருத்தங்கள்‌ மற்றும்‌ குடும்ப கட்டுப்பாடுகள்‌ போன்றவற்றுக்கு இடையே காமம்‌ மெதுவாக ஒடுக்கம்‌ கண்டிருக்கிறது என்றே நம்புகிறேன்‌. ஒரு காலத்தில்‌ இந்திய காம சாஸ்திரம்‌ எழுதிய வாத்‌ஸாயனார்‌ என்கிற மேதையை இன்றைய நெருக்கடியில்‌ தொலைத்து விட்டோம்‌. அவர்‌ மன்னர்களுக்காக கேளிக்கை புணர்ச்சிப்‌பிரதிகளைத்‌ தயாரித்தவர்‌ என்ற குறைபாடுடைய பார்வை இருக்கிறது. இன்றைய மேற்குலகில்‌ அவரது புணர்ச்சி விதிகள்‌ வெகுவாகக்‌ கடைபிடிக்கப்படுவதோடு பாட திட்டங்களுக்குள்ளும்‌ எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால்‌ இந்தியாவில்‌ அதை ஒரு ஆபாசப்‌பிரதி என்றே கட்டம்‌ கட்டி ஒரே சமயத்தில்‌ மேட்டுக்குடி மக்களுக்கு ஆதரவாகவும்‌ கீழ்மட்டத்தில்‌ குறிப்பாக உழைப்புச்‌ சக்திகளுக்கு அது மறைக்கப்பட்டும்விட்டது. இந்தியாவில்‌ இரண்டு நூற்றாண்டுகளாக ஆண்களுக்கான பாலியல்‌ மட்டுமே நியாப்படுத்தப்பட்டு பெண்களுக்கு இன்பம்‌ தரும்‌ கலையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. ஒரு பெண்ணுக்குக்கூட முழுதிருப்தி தராமல்‌ பல பெண்களை மணந்துகொண்ட ஆண்கள்‌ இங்குதான்‌ அதிகம்‌.
காதலும்‌ காமமும்‌ பேணப்படாத அகமணமுறையில்‌ சீரழிந்துவிட்ட இந்தியக்‌ கூட்டுக்குடும்ப, சாதிய பாலியல்களின்‌ கதை அறிவியல் பூர்வமற்றது. ஒருவகையில்‌ புலவர்களிடமும்‌ வணிகர்களிடமும்‌ கூலித்‌தொழிலாளிகளிடமும்‌ மற்றும்‌ நிலவுடைமை ஆணாதிக்கத்திடமும்‌ அதன்‌ வழியேயான அரசுடமையிடமும்‌ நம்பி ஒப்படைக்கப்பட்ட வீரியம் மிக்க பெண்களின்‌ மோசமான காதல்‌ தோல்விக்‌கணக்கு அளவிடமுடியாதது. அதற்குள்‌ ஒரு பாலியல்நீதி வைத்து எப்படிப்‌ பேச முடியும்‌?. நாம்‌ குறிப்பிடுவது மாதிரி முதலாளித்துவ வர்க்கத்திற்கு அடிமை ஆண்களையும்‌ பெண்களையும்‌ காமத்தின்‌ பேரளவு சுகிப்பின்றியே பெற்றுக்கொடுத்த ஒரு மறுவிளைச்சலைத்தான்‌ நாம்‌ மக்கள்‌ தொகை என்கிறோம்‌. அது இந்தியாவில்‌ கர்ப்பப்பை புரட்சி, மாறாக, கலவி இன்பத்திற்கான உச்சங்கள்‌ கூடிய ஆரோக்கியமான புத்துயிர்ப்பின்‌ சித்தாந்தம்‌ அல்ல. இக்காலங்களில்தான்‌ வாடகைத்‌ தாய்மார்கள்‌ அதிகரித்திருக்கிறார்கள்‌. வறுமை உள்ளிட்ட மூன்றாம்‌ உலகின்‌ பல பின்னணிகளும்‌ இன்றைய நவீன உயிரியல்‌ தொழில்நுட்பம்‌ வரையிலான புனைவுகள்‌ யாவும்‌ பண்பாட்டுத்‌ தளத்தில்‌ மோதிச்‌ சிதறுகின்றன. கீழைத்தேய ஆசியர்கள்‌ தாங்கள்‌ கண்டுபிடித்த பல நுட்பங்களை வசதியின்மை காரணமாக அனுபவிக்க முடியாமல்‌ அறிவுச்‌ சொத்தாக அதை மேலைச்‌ சமூகத்துக்கு விற்றுவிடுவது போலவே வாத்ஸ்யாயனாரின்‌ காமசாஸ்திரமும்‌ நம்‌ கைவிட்டுப்‌ போய்விட்டது.

குப்தா: பாலியல்பை மையமாக வைத்து மட்டுமே புரட்சிகரமான மாற்றங்களைக்‌ கொண்டுவர முடியும்‌ என்று நம்புவதைப்‌ போல்‌ இருக்கிறது உங்கள்‌ கூற்று.

அபர்ணா: இன்றைய நவீன உலகின்‌ மாற்றங்கள்‌ காமத்தின்‌ பண்பு மயமான அழகியலை நோக்கி கோட்பாட்டுத்‌ தளத்தில்‌ நகர்ந்திருக்கிறது. ஊடகங்கள்‌, வதிவிடங்கள்‌ மற்றும்‌ சாலைகள்‌ அனைத்தும்‌ அழகுறச்‌ செப்பனிடப்படுகின்றன. கடற்கரைகள்‌. பூங்காக்கள்‌, கேளிக்கை நிலையங்கள்‌, உணவு விடுதிகள்‌
போன்றவை மக்களின்‌ மனதில்‌ ஒரு பாலியல்‌ உருமாதிரிகளைத்‌ தூண்டி இருக்கின்றன. மேலும்‌ இப்படியான அழகியலும்‌ காமமும்‌ சாவு விருப்பமும்‌ நாடோடித்‌ தன்மைகளும்‌ அரசு சார்‌ வளங்களைக்‌ கோரிப்‌ பெற முயலுகின்றன. தனியார்‌ நிறுவனங்கள்‌ ஒருவித தரகுத்‌ தன்மையோடு மக்களின்‌ அடிப்படை
உணர்ச்சிகளான உணவு, உடை, இருப்பிடம்,காமம்‌ போன்றவற்றை சந்தைமயப்படுத்தி தீர்மானிப்பதில்‌ பெரும்‌ வலிமையாக மாறிவிட்டிருக்கின்றன. குடும்பத்திற்கு வெளியே மரபுசார்‌ பாலுணர்ச்சிகள்‌ அதீதப்‌ பெருக்கமடைந்து அதனுள்ளே முற்போக்காகவோ முறைசாராமலோ தகவமைந்தும்‌ இதனிடையே நடந்து வருகின்றன. இத்தகைய நிலையில்‌ எதன்‌ தலைமையிலும்‌ நீங்கள்‌ பூமியின்மீது நிலையான ஓரிடத்தில்‌ இருந்து ஒரு புரட்சியை மொத்தமாக சாதிக்க முடியாது. இன்று உலகமெங்கும்‌ மக்கள்‌ சதுக்கங்களில்‌ வந்து சத்தமிடுவதன்‌ மூலம்‌ நிகழும்‌ சம்பவங்கள்‌ அவர்களது பாலியல்‌ மற்றும்‌ ஆன்மீக நிலைப்பாட்டைக்‌ கடக்கும்‌ கேளிக்கைக்கான பொருள்வயமான தட்டுப்பாட்டைப்‌ பிரதிபலிக்கும்‌ முகமாகவே வெளிப்படுகிறது என்றே சொல்லலாம்‌. இப்படியான பல்லாயிரம்‌ பன்மைப்பட்ட புரட்சிகள்‌ உலகெங்கும்‌ வேறுவேறு காரணங்களுக்காக நடந்து கொண்டேதான்‌ இருக்கின்றன. முதலாளித்துவ அரசை அதன்‌ நிறுவனங்களை அல்லது ஏகாதிபத்தியத்தைத்‌ தாங்கள்‌ வாழும்‌ இடங்களிலேயே நெருக்கடிக்கு உள்ளாக்குவதன்மூலம்‌ அவர்களது தேவை பகிர்ந்தளிக்கப்படுவதை மக்கள்‌ உணர்ந்திருக்கிறார்கள்‌. அத்துடன்‌ அதிகாரங்களை வெளியேற்றி தங்களுக்கானதாகவும்‌ மாற்றியமைக்க முயலுகிறார்கள்‌. அமெரிக்கா மாதிரியான ஒற்றைமைய ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு முந்தைய பனிப்போர்களுக்குப்‌ பின்பு உருவாகி இருக்கும்‌ பண்பாட்டு நெருக்கடி இது. ஆக, மூலதனம்‌ மக்களைக்‌ கைவிட்டு தனியாக நிலவமுடியாது என்பது இதன்‌ பாரதூரமான செய்தி. இதற்கிடையே தங்கள்‌ வாழ்விடங்களில்‌ இருந்துவரும்‌ மரபான உடைமைப்‌ பார்வைகளை முதலில்‌ உடலில்‌ இருந்தே அடையாளம்‌ காண்கிறார்கள்‌. சொத்துகள்‌ பொதுவுடைமை ஆகவேண்டுமெனில்‌ உடல்கள்‌ பொதுவுடைமை ஆகவேண்டும்‌. உடல்களின்‌ வித்தியாசங்கள்‌ வேட்கையின்‌ சுதந்திரத்தை முன் நிபந்தனையின்றி பகிர்ந்து கொள்ளும்போது உடைமைகளின்‌ குவிப்பு பொருளற்றதாகவிடும்‌ என்பது ஒரு கணிப்பு இத்தகைய பார்வையில்‌ காமம்‌ தன்‌ நிலையற்ற தன்மையாலும்‌ நிறுவனமயமாக்கப்படமுடியாத ஆற்றலில்‌ இருப்பதாகவும்‌ அதிகாரம்‌, வறுமை. மற்றும்‌ பல்வேறு அழிவு சக்திகளின்‌ இடையே தன்னைப்‌ புதுப்பித்துக்கொண்டு வருவதாலும்‌ அவை ஒரு புரட்சிகரமான பாத்திரத்தை அனைத்துத்‌ தளங்களிலும்‌ முறைசாராமல்‌ தூண்டி நிற்கும்‌ என்பதாகவே நீள்கிறது எனது ஆய்வுகள்‌. பிறகு பாலியல்‌ எப்போதும்‌ எல்லா கட்டமைப்புகளுக்கும்‌ வெளியேதான்‌ உள்‌ உந்தம்‌ கொள்கிறது. இந்தியாவில்‌ சமயமும்‌ ஆன்மீகமும்‌ பெண்ணுடலை ஆராதனை செய்வது அயோக்கியத்தனமானது. அவைகள்‌ பெண்ணின்‌ வேட்கையை உள்ளொளி தரிசனமரபில்‌ உயர்வு நவிற்சியாக அடைத்துவைக்கின்றன.

குப்தா: முறைசாராக் காமத்தை வன்முறையாக ஒரு ஒழுங்கிற்குள் கொண்டுவரும்போது தான் சமூகம், ஏற்றத்தாழ்வுகள், நீதியற்ற சூழல், உடைமை பெருக்கங்கள் உண்டாகிறது என்பதை விளக்கியிருக்கிறீர்கள்

அபர்ணா: காமமும்‌ மூலதனத்தைப்‌ போலவே நபர்‌ சாராதது என்பதால்‌ இவ்விரண்டுக்குமிடையே ஏற்படும்‌ மோதல்கள்‌ வழிதான்‌ எதிர்காலச்‌ சமுதாயம்‌ சில தீர்வுகளையும்‌ தோற்றுவாய்களையும்‌ நோக்கி நகரும்‌ என நம்புகிறேன்‌. அதற்கு ஆதாரமாக பெண்களே இருப்பார்கள்‌. பசுக்களை பீடபூமியிலிருந்து பிரிக்க முடியாது என்ற நீட்ஷேயின்‌ கூற்றைப்போலவே அனைத்து மாற்றங்களில்‌ இருந்தும்‌ பெண்களை பிரித்துவிட முடியாது.

குப்தா: நல்லது.

***

யவனிகா ஸ்ரீராம்

சமகால தமிழ் இலக்கியத்தின் போதாமைகள்

1

சரவணன் மாணிக்கவாசகம்

ந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகளை எழுதும் முன்பே நான் எதிர்கொள்ள வேண்டிய கேள்வியை அறிவேன். அப்படி என்ன தமிழில் இதுவரை வந்த எல்லாப் புத்தகங்களையும் படித்து விட்டாயா? பாலகுமாரன் நான்கோ, ஐந்தோ படித்தேன், அதற்கு மேல் படிக்க முடியவில்லை என்கையில் எல்லாம் படிக்காமல் எப்படி அபிப்ராயம் சொல்ல முடியும் என்றார்கள். நல்ல புத்தகங்களை வாசகன் தேடிச்சலிக்க வேண்டியதில்லை. அவையே அவனைத் தேடிவரும்.

சிறார் இலக்கியத்திலிருந்து ஆரம்பிப்போம். வெளிநாடுகளில் Bedtime stories என்பது நம் அம்புலிமாமா கதைகள் இல்லை. Ruskin Bond-ன் தரத்தில் எழுதுவதற்குக் கூட தமிழில் ஆளில்லை. போலவே Young Adult என்ற பதமே இங்கே இல்லை. குட்டி இளவரசன், ஹாரிபார்ட்டர் முதலிய புத்தகங்கள் சிறுவர், பெரியவர் இருபாலாரும் படிப்பது. YA fiction என்பது மட்டுமே பலகோடி வாசகர்களைக் கொண்டது. பதின்ம வயதில் புத்தகங்கள் மீது காதல் வராமல் பின்னர் எப்போது வரும்?

அடுத்தது காதல் கதைகள். காதல் என்றால் Mills and Boons, Nicholas Sparks வகையறா இல்லை. Sons and Lovers, Wuthering heights போல் உலுக்கி எடுக்கும் காதல் கதைகள். Wuthering Heights-ன் மையக்கருவும் தி.ஜாவின் மலர்மஞ்சமும் ஒரே மையக்கரு. மலர்மஞ்சம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மலர் மஞ்சம் வெளியான வருடம் 1961. Wuthering heights 1847.

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடத்தைத் தமிழின் முதல் LGBTவகை நாவல் என்று சொல்லலாம். அது வெளிவந்து அறுபது ஆண்டுகளில் கலைநயத்துடன் LGBT முழுநாவல் எதுவும் வந்திருப்பதாகத் தெரியவில்லை. Gay பற்றி வந்த அளவிற்குக்கூட Lesbians பற்றி வரவில்லை. வெளிநாட்டினர் அனுபவக் குறிப்புகளோடு நம்மவர்களின் அனுபவங்களை ஒப்பிட வாழ்வியல் அனுபவங்கள் எழுத்து வடிவில் காணக் கிடைக்கவில்லை.

அடுத்தது மூன்றாம் பாலினம் குறித்த நாவல்கள். அவர்களது அவஸ்தை, அலைக்கழிப்புகளை புலியூர் முருகேசனின் மூக்குத்தி காசி ஓரளவு சொல்லியிருக்கிறது. Parcel போன்ற முழுமையான நாவல்கள் தமிழில் இல்லை.

அடுத்தது குறுங்கதைகள். நம்மவர்களில் அநேகருக்கு குறுங்கதை வடிவம் புரிபடவில்லை. குறுங்கதைகள் எழுத விளைவோர் குறைந்தபட்சம் Lydia Davis-ஐயாவது முழுக்கப் படித்தல் நலம்.

சாயாவனம் போல் Dystopian சாயல் கொண்ட தமிழ் நாவல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாரன்ஹீட் 451 போன்ற முழுமையான Dystopian novel தமிழில் வந்திருப்பதாகத் தெரியவில்லை.

Kristin Hannahவின் The Nightingale போலவோ இல்லை Book Thief போலவோ அல்லது The Tattooist of Auschwitz போலவோ சரித்திர நாவல்கள் உண்டா பாருங்கள். சரித்திரநாவல்களிலேயே Historical Romance, Historical Mystery போல பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள்.

Paranormal, Gothic ghost novels என்பதும் தமிழில் இல்லை. இரத்தக்காட்டேரியான Vampire-கள் ஒரு தனிப்பிரிவு. அதற்கென ஏராளமான வாசகர்கள். Charlaine Harris ன் Dead until dark சமீபத்தில் கவனம் பெற்ற இவ்வகை நாவல். தமிழில் முயற்சிக்கப்பட்ட சில சிறுகதைகள் காஞ்சனா திரைப்படம் போல் சிரிப்பை ஏற்படுத்துகின்றன.

அதே போல் வாழ்க்கை சரிதங்கள். புதுமைப்பித்தனுடன் பலகாலம் பழகிய தொ.மு.சியின் புத்தகத்தில் புதுமைப்பித்தன் பற்றி நாம் அறியாதது வெகு குறைவு. கஸ்தூரிபாய் யாரிடமும் பேசாமலா இருந்திருப்பார்! நேருவுக்கு படேலின் மகளிடம் என்ன வெறுப்பு? தி.ஜா ஏன் தனது எல்லா நாவல்களிலுமே பெண்களின் மீறல்களைக் கதைக்களமாக்க வேண்டும். ஆயிரமாயிரம் கேள்விகள். வாழ்க்கைக் குறிப்புகள் இங்கே சரியாகப் பதிவாவதில்லை.

திரில்லர் நாவல்களில் குறைந்தது இருபது வகை உண்டு ஆங்கிலத்தில். தமிழில் உலகத்தரத்தில் சொல்லும்படி ஒரு திரில்லர் நாவலும் கிடையாது. ஒரு Silent Patient-ஓ Gone Girl ஓ இங்கே வர இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியப்பட முடியாது.

True Crime என்பது கூட புனைவு போல் எழுதப்படுகிறது தகவல்களின் போதாமையால். Ted Bundyயுடன் பணியாற்றிய, பலமுறை அவரைப்பேட்டி கண்ட Ann Rule அவரது வாழ்க்கை சரிதத்தை ஆராய்ந்து எழுத எடுத்துக்கொண்டது பல வருடங்கள். அதனாலேயே அந்தப் புத்தகத்தை எதிர்த்து யாரும் ஒரு கேள்வி கேட்க முடியவில்லை.

Game of thrones, Lord of the Rings, Hobbit போன்ற Fantasy novels இங்கே இருக்கிறதா பாருங்கள். Fantasy என்பது கனவுத்தீவுக்குக் கூட்டிச்சென்று நிஜஉலகின் பாரத்திலிருந்து சிறிது நேரம் எனினும் விடுதலை தரவல்லது.

Contemporary Classics என்றால் Chinua Achebe, Isabel Allende, Balano, Ngugi wa Thiong’o என்பது போன்ற நூற்றுக்கணக்கானவர்களின் தரத்திற்கு இணையாக தமிழில் கடந்த பத்து ஆண்டுகளில் யாரைக் கூறுவீர்கள்?

போதாமைகள் என்று சொல்வதை விட இவையெல்லாம் வாய்ப்பிருக்கும் இடங்களாகவே சொல்லத் தோன்றுகிறது. மருத்துவர்கள் அனாடமி குறித்து, பாரிஸ் நகரில் பத்துமாதமேனும் இருந்தவர் அந்த நகரை பின்னணியாய் கொண்ட நாவல் எழுதுதல், பல ஆண்டுகள் பயிற்சியில் இருந்த வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை, Ravi Subramanian போன்ற வங்கியாளர்கள் அதன் Indepth தகவல்களை, சுதா சௌம்யா போன்றோர் கர்நாட்டிக் ராக நுணுக்கங்களை, பாலியல் தொழிலாளர்கள் அவர்களது அனுபவங்களை என்று துறை சார்ந்தவர்களோ அல்லது அதன் அடிப்படை தெரிந்தவர்கள் மிகுந்த ஆராய்ச்சியின் பின்னரோ எழுதாதவரை தமிழ் நவீன இலக்கியம் சிறிய வட்டத்தைச் சுற்றிச்சுற்றி வந்து நீண்டதூரம் பயணம் செய்ததாய் கற்பிதம் கொள்ளும்.

***

சரவணன் மாணிக்கவாசகம்