Wednesday, June 24, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்காத்திருப்பு

காத்திருப்பு

கணேஷ் பாபு

ந்த ஆளோய்ந்த வீட்டின் முன் அன்றும் நான் காத்திருந்தேன். காத்திருந்து காத்திருந்து பழகிப்போய்விட்டது. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடத்தைத் தொட்டுவிட்டன. அநேகமாக ஓராண்டு முடிந்து சில மாதங்கள் ஆகியிருக்கலாம். எதற்காக இந்தக் காலக்கணக்கையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறேன்?. கணக்கிட்டு என்ன செய்வது? இப்போதெல்லாம் நான் வெறுக்கக்கூடிய ஒரே முகம் எனது முகம்தான். கண்ணாடிமுன் நாள்தோறும் நிற்பதற்கே அஞ்சுகிறேன். அதில் தெரியும் முகத்தைப் பார்க்கப் பார்க்க அவமானமாகவும் அருவெறுப்பாகவும் இருக்கிறது.  ஒரு வேலைக்காக ஏன் இப்படி ஒரு மனிதனைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்? அப்படி என்ன வாய்ப்பு வேண்டிக்கிடக்கிறது? இவன் இல்லாவிட்டால் வேறு மனிதர்களே இல்லையா? இப்படி யோசித்துக் கொண்டே இருக்கும்போது, வீட்டு வாசலில் ஒரு இன்னோவா கார் வந்து நின்றது. காரிலிருந்து வெங்கடேஷ் சார் இறங்கி வந்தான். பணக்காரத் தோரணை தன் ரத்தத்திலேயே கலந்து விட்ட ஒன்று என்பதை, ஒரு மெல்லிய சலிப்புடன் தன் உடல்முழுக்கப் பரவவிட்டு நடந்துவரும் இந்த மனிதன் தான் என்னை ஒரு வருடத்திற்கும் மேலாகக் காக்க வைத்துக்கொண்டிருக்கிறான். பணக்காரத் தோரணையை நடிக்கும் அவனிடம் நானும் நடிப்பில் சளைத்தவனில்லை என்பதைக் காட்ட விரும்பினேன். மிகப் பணிவுடன், அவன் முன் சென்று நின்றேன். 

என்னைக் கண்டதும், செயற்கையானதொரு புன்னகையுடன், “வாய்யா, காலையில இருந்தே எதுக்கு காத்திட்டு இருக்க?. வீட்டுக்கு வந்ததும் நானே அப்பாவுக்கு போன் போட்டு உன்னைய வரச்சொல்லலாம்னு இருந்தேன். விடிஞ்சதில் இருந்து வேல மேல வேல. நிம்மதியா சாப்பிட முடியல, தூங்க முடியல, ஒண்ணுக்குப் போகக்கூட முடியல, அந்த நேரத்திலயும் எவனாவது போனப் போட்டு, தொணத்திக்கிட்டே இருக்கான்”. வானத்தைப் பார்த்தபடி, “என்ன செய்றது, நாய் வேஷம் போட்டாச்சு.. ஆனா ஒண்ணுப்பா, படிச்ச பய யாருக்காகவும் இப்படி வேலைக்காக காத்திருக்கக் கூடாதுப்பா. நானும் ஒனக்கு எப்படியாவது என் மாமன்கிட்டச் சொல்லி அவரு கம்பெனில ஒரு வேலையப் போட்டுக் கொடுத்துரணும்னு அவரத் தொண்ணாந்துகிட்டே இருக்கேன். அவரு பாரு… என்னயக் காட்டிலும் பிஸியா அலையுறாரு. என்னத்தச் சொல்ல.. ?” என்றார். 

“ஏயப்பா, என்ன மாதிரி நடிக்கிறான், காலையில இருந்து இவன் என்னத்தக் கிழிச்சிருப்பான்? வாழைத் தோப்புக்குப் போய் வேலையாளுகள அதச்செய்யி இதச்செய்யின்னு நாட்டாமை பண்ணியிருப்பான். அவன் போகாட்டியும் அங்க வேல ஒழுங்காத்தான் நடக்கும். ஆனா, அவனாலதான் எல்லாம் நல்லபடியா நடக்குதுன்னு காட்டிக்கிருவான். அதுக்குப் பிறகு செந்திலாண்டவர் டீக்கடையில ஆமை வடையக் கடிச்சுக்கிட்டே தினத்தந்திய எழுத்துக்கூட்டிப் படிச்சிட்டு, வாரவன் போறவன் வாயப்பாத்து ஒக்காந்துட்டு இருந்திருப்பான். வெயில் ஏறுனதும், வீட்டுக்கு வந்து சாப்டிட்டு ஒரு பகல் தூக்கம். வெயில் தணிஞ்சதும் திரும்பவும் காலைல பார்த்த வேலையச் செய்யத்தான் போவான். இந்த லட்சணத்தில உண்மையிலேயே உழைக்கிறவன் மாதிரி என்னா பில்டப் குடுக்குறான் பாரு?”, என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். 

“நீங்க பிஸியான ஆளுன்னு தெரியும்ணே. அதுக்காகத்தான் வேல செய்யுற இடத்தில உங்களத் தொந்தரவு செய்ய வேணாம்னு நீங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா பேசலாம்னு காத்திருக்கேன்” என்றேன். உண்மையில் இவனைப் பல வாரங்களாக, போலீஸ் திருடனைத் துரத்துவது போல, இவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் தொடர்ந்து சென்று இவனிடம் பேச முயன்றிருக்கிறேன். அப்போதெல்லாம், என்னை, அங்க வா இங்க வா, என்று இவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் வரச்செய்து அங்கிருக்கும் ஆட்களிடம் என் அவல நிலையைத் தெரியப்படுத்தி, எனக்கு வாழ்வளிக்கப் போகும் வள்ளல் தான்தான் என்று காட்டிக்கொள்வான். அதைப் புரிந்துகொண்ட பின்னர், அவனை அவன் வீட்டிலேயே சந்திப்பது என்று முடிவெடுத்தேன். எவ்வளவு நேரக் காத்திருப்பானாலும் சரிதான்.

“நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுப்பா. உள்ள போனதும் மொத வேலையா மாமனுக்கு போன் போட்டு ஒன்னயப் பத்திச் சொல்லிர்றேன்”, என்றபடி வீட்டுக்குள் போனான். வீட்டின் இருள் அவனை உள்வாங்கிக் கொண்டது. 

அவன் உள்ளே போனதும் என்ன செய்வான் என்பதும் எனக்குத் தெரிந்ததுதான். வறுத்து வைத்த வஞ்சிரம் மீனை வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவான். நான் மீண்டும் வாசலில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டேன். வெயில் எரிந்து கொண்டிருக்கும் அந்த வெக்கையான தெருவின் இறுதி வீடு அவனுடையது. அவனும் அவனது நோயுற்ற மனைவியும்தான் அந்த வீட்டில் இருக்கிறார்கள்.  சமைப்பதற்கும் அவனது மனைவியைக் கவனித்துக் கொள்வதற்கும் வேலையாட்கள் வந்து சென்று கொண்டிருப்பார்கள். அவனது அக்காவின் கணவர் சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறார். அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணிபுரிந்தபின்னர் சென்னைக்குத் திரும்பி அமெரிக்க கம்பெனிகளுக்கு மென்பொருள் வேலைகளைச் செய்து  கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஊரில் உள்ள படித்த பையன்களைக் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்து, பயிற்சி கொடுத்து, சில ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவுக்கு அனுப்பிவைப்பார். அங்கு சென்ற பின்னரும், வருமானத்தில் கணிசமான பகுதியை வாங்கிக்கொள்வார். சில ஆண்டுகள் இந்த ஒப்பந்தம் தொடரும். ஆனால், பையன்களை சென்னையில் வேலைக்கு எடுத்துக்கொண்ட பின்னர், அமெரிக்காவிற்கு அனுப்புவது வரை, ஒரு நாளில் பதினெட்டு மணிநேரம் வேலை வாங்குவார் என்றனர். ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை இல்லை. வேலையாட்களை ஏவுவதைப் போலத்தான் எல்லாரிடமும் பேசுவார். கிட்டத்தட்ட அவரிடம் சென்றால் ஓர் அடிமையைப் போலத்தான் நடத்துவார். ஆனாலும், இருட்குகையின் மறுமுனையில் தென்படும் ஒளிக்கீற்றைப் போலத் தெரியும் அமெரிக்க வாய்ப்புக்காக மறுபேச்சு பேசாமல் பல இளைஞர்கள் அவரிடம் வேலைக்குப் போனார்கள். அதை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார். அவரது கம்பெனி ஒரு இரும்புக் கோட்டை, சிபாரிசின்றிப்  புதியவர்கள் அதற்குள் எளிதாக நுழைய முடியாது. அதனால், வேலை தேடும் இளைஞர்கள், அவரவருக்குத் தெரிந்த முறையில் அவரை அணுக முயன்றார்கள். அவரிடம் அணுக்கமாக உள்ள அவரது நண்பர்களையும் உறவினர்களையும் நட்பாக்கிக் கொண்டு அவர்களது சிபாரிசு மூலம் வேலை பெற முயற்சிப்பார்கள். அந்த வகையில், எனக்குக் கிடைத்த உறவினர்தான் இந்த வெங்கடேஷ் சார் என்பவன். ஏதோ ஒரு அலுவலக விஷயமாக என் அப்பாவைச் சந்தித்தவன், நான் படித்து முடித்து வேலைக்கு முயன்று கொண்டிருப்பதை அறிந்துகொண்டு, தன் மாமனைப் பற்றிச் சொல்லி, அவரது கம்பெனியில், எனக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறான். அதை நம்பி, என் வீட்டிலும் அவனைச் சென்று சந்திக்கும்படி சொல்லவே, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, தினந்தோறும் இவனைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இவன், ஒவ்வொரு நாளும் ஒரு காரணத்தைச் சொல்லி, எனக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறான். இவன் இல்லாமல் நேரடியாக என்னால் இவனது மாமனைச் சந்திக்கவும் இயலாது. படித்த படிப்பை வைத்து வேறு எங்காவது வேலை தேடிக் கொள்ளலாம் என்றாலும், வீட்டில் உள்ளவர்கள் இவனது சிபாரிசையே மலை போல நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை இவனைப் பார்ப்பதற்காக வீட்டில் இருந்து கிளம்பும்போது நெற்றியில் விபூதி இட்டு அனுப்பும் அம்மாவையும், ஏமாற்றத்துடன் நான் வீடு திரும்பும்போது என்னைப் பார்த்து முகம் வாடும் அப்பாவையும் பார்க்க மனம் வேதனையடையும்.

இதையெல்லாம் யோசித்தபடி நான் இவனுக்காக இன்றும் காத்துக்கொண்டிருக்கிறேன். அந்த தெருவில் உள்ள ஒரு குழந்தைக்கும் என்னைத் தெரியும். எதிர்வீட்டில் இன்றைக்கு கரும்புவில் வைத்த கோலம் போட்டிருக்கிறார்கள். எனில் இன்று செவ்வாய்கிழமை. நாளை புதன்கிழமை தேர்க்கோலம் போடுவார்கள். எதிர்வீட்டுக்கு அருகில் உள்ள தகரம் போட்ட வீட்டில் என்னைப் பார்த்துச் சிரித்தபடி நடைபயிலும் அந்தப் பையன் கைக்குழந்தையாக இருக்கும்போதுதான் நான் முதன்முதலில் வெங்கடேஷ் சாரைப் பார்க்க வந்தேன். அன்றிலிருந்து நான் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காத்திருப்புக் காலத்தில், இயற்கை பல பருவங்களைக் கடந்து விட்டது, மேடு பள்ளமான இந்த தெருவில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, தார் ரோடு போட்டு விட்டிருந்தார்கள். தெருமுக்கில் இருக்கும் அடிபம்பு அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. நடுவீட்டில் உள்ள செல்வி அக்காவிற்கு திருமணம் முடிந்து அவர் தலைப்பிரசவத்திற்காக தாய்வீடு திரும்பியிருக்கிறார். சிறு குழந்தைகள் வளர்ந்து விட்டிருந்தார்கள். ஓரிரு முதியவர்கள் இறந்துவிட்டார்கள். கூரை வீடுகள் காரை வீடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. சைக்கிள்கள் பைக்குகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. காலையில் முற்றத்தில் விழும் வெயில், மதியத்தில் பழுத்து, மாலையில் சிறுத்து மறைகின்றது. நிழல்கள் நீண்டும், சிறுத்தும் உருமாறியபடி என்னைக் கேலி செய்து கொண்டிருக்கின்றன. என்னைச் சுற்றியுள்ள நிலக்காட்சியும் மனிதர்களும்  மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். எரியும் வெயிலில் உருகும் தாவரங்கள் கூட  நிறம் மாறிக்கொண்டிருக்கின்றன. நான் மட்டும் மாறாமல், இந்த பெயிண்ட் இல்லாத, துருப்பிடித்த ஸ்டீல் சேரில் ஒரு மனிதனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். இப்படியே இன்னும் சில காலம் இருந்தால் நானும் துருப்பிடித்துவிடுவேனா? போகிற போக்கைப் பார்த்தால், அப்படியே இந்த மண்ணில் வேர்பிடித்து, கற்சிற்பமாக மாறி, நூற்றாண்டுகளுக்குப் பின் காணவரும் பள்ளிச்சிறுவர்களுக்கான காட்சிப்பொருளாக மாறிவிடும் சாத்தியமும் இருக்கிறது. 

இந்த அவலத்தில் இருந்து என்னை நானே மீட்காவிட்டால், காத்திருப்பதே எனது வேலையாகிவிடும். வீணாக்கிய காலம் வீணானதுதான். அது ஒருபோதும் எனக்குத் திரும்பக் கிடைக்கப்போவதில்லை. இனியாவது காலத்தை வீணாக்காமல் செயல்பட வேண்டும். துணிந்து முடிவெடுத்தேன். அன்று மாலையே, நான் சென்னை செல்வதற்கு டிக்கெட் போட்டேன். மறுநாள் காலை எப்படியாவது வெங்கடேஷின் மாமாவைப் பார்த்துவிடுவது என்ற உறுதியுடன் கிளம்பினேன். பார்ப்பது கஷ்டம்தான். இருந்தாலும் ஒரு ஞமலியைப் போல வெங்கடேஷ் வீட்டு வாசலில் வருடக்கணக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும், இப்படித் துணிந்து அவனது மாமனையே பார்க்கக் கிளம்பலாம். பக்கத்து ஊர் பையன் ஒருவன் அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் விலாசம் கொடுத்திருந்தான். ஆனாலும், சிபாரிசின்றி வந்தால் பார்க்க முடியாது என்றுதான் அவன் சொல்லியிருந்தான். பரவாயில்லை, இந்த நாட்டில் எத்தனையோ பெரும்ஞானிகள் எல்லாம் கடவுளையே கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். முயன்றால், ஒரு மனிதனையா சந்திக்க முடியாது? 

எக்மோரில் இருந்தது அந்த அலுவலகம். நான் நினைத்தது போல அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக இல்லை. சுமாராகத்தான் இருந்தது. மிகச் சிறிய வரவேற்பறை. நிறுவனத்தின் தலைவருக்காக மட்டும் குளிரூட்டப்பட்டத் தனியறை இருந்தது. அதைக் கடந்து சென்றால், உள்ளே பையன்கள் வேலைப்பார்க்கும் அலுவலக அறைகள் இருந்தன. வரவேற்பறையில் உள்ள இளைஞன் சுருள்முடியுடன் குண்டாக இருந்தான். நிமிடத்திற்கு ஒருமுறை வரும் போன் அழைப்புகளை எடுத்துப் பேசிகொண்டேயிருந்தான். மறுமுனையில் பேசிய நபர்களிடம் “சார், இப்ப வந்திருவாங்க”, “சார் வந்ததும் சொல்றேன்”, “அத சார்தான் முடிவு பண்ணனும்” என்றே சொல்லிக்கொண்டிருந்தான். நான் அவனிடம் என்னை வெங்கடேஷ் சாரின் நண்பரின் மகன் என்று அறிமுகப்படுத்தினேன். “லெட்டர் இருக்கா?” என்று கேட்டவனிடம், “வெங்கடேஷ் சார் பிஸியா இருக்காரு, லெட்டர் எதுவும் குடுக்கல, ஆனா..அவரு சாருக்கு முன்னாடியே போன் போட்டு என்னப் பத்தி சொல்லியிருக்காரு” என்றேன். “லெட்டர் இல்லாம யாரையும் அனுப்பினதில்ல, இருந்தாலும் சார் வந்ததும் சொல்றேன், அவர் நல்ல மூடுல இருந்தா உங்களப் பாப்பாரு, வெயிட் பண்ணுங்க” என்றான்.  

நான் மீண்டும் காத்திருக்கத் துவங்கினேன். யார் யாரோ அந்தப் பக்கமாக என்னைக் கடந்து போய்கொண்டிருந்தார்கள். வரவேற்பாளனும் எத்தனையோ போன் அழைப்புகளை எடுத்துப் பேசிக்கொண்டிருந்தான். மின்விசிறி இருந்தும் இல்லாததைப் போலச் சுற்றிக்கொண்டிருந்தது. மேஜையில் இருந்த செய்தித்தாளைக் கூட அதனால் அசைக்க முடியவில்லை. வியர்வைக் கசகசப்பிலும், பரிச்சயமற்றவர்கள் இல்லாத புதிய இடம் கொடுத்த அணுக்கமின்மையினாலும் இருக்கையில் அமர முடியாமல் அமர்ந்திருந்தேன்.  காலையில் சாப்பிட்டிருக்காததால் கண்கள் மெல்ல மங்கத் துவங்கின. இங்கிருந்து  எழுந்து சென்றால் பின் மீண்டும் வரமுடியாமல் ஆகிவிட்டால் என்ன செய்வது? தண்ணீர் கூட அருகில் இல்லை. தலையைக் குனிந்து அமர்ந்திருந்தேன். சரியாக அந்தத் தருணத்தில் என்னைக் கடந்து ஒரு நிழல் போனது போலிருந்தது. நிமிர்ந்து பார்ப்பதற்குள், நிறுவனரின் அறைக்கதவு மூடப்பட்டிருந்தது. போனில் பேசிக்கொண்டிருந்த வரவேற்பாளன் அவசரமாக உள்ளே போனான். நிறுவனர்தான் என்னைக் கடந்து சென்றவர் எனப் புரிந்து கொண்டேன். உள்ளே அவர் கோபத்தில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது தெளிவற்றுக் கேட்டது. சிறிது நேரத்தில், வரவேற்பாளன் சுருங்கிய முகத்துடன் வெளியே வந்தான். எதற்காகவோ முதலாளியிடம் வசை பெற்றுவந்திருக்கிறான் போலிருக்கிறது. அதனால் அவனிடம் இப்போது பேசுவது சரியாக இருக்காது. நான் மீண்டும் காத்திருக்கத் துவங்கினேன். சிறிது நேரம் கழித்து வரவேற்பாளனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவன், என்னைப் பார்த்து, “உங்களத்தான் கூப்பிடுறாரு, போய்ப் பாருங்க” என்றான். நான் என் கையில் இருந்த ஃபைல்களையெல்லாம் திரட்டிக் கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே நீண்ட மேஜையின் மறுபுறம் கரிய நிறத்தில் ஒரு மனிதர் இருந்தார். கபில நிறத்தில் சஃபாரி அணிந்திருந்தார். உடல் பெருத்துப் போய், பார்க்க அகோரமாக இருந்தார். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற குறள் நினைவில் இருந்ததால் என் மனத்தை உடனே அடக்கினேன். உடல் முழுக்கப் பணிவை வரவழைத்து, அவரிடம் என் ஃபைலை நீட்டி, “வெங்கடேஷ் சார்..” என்று நான் பேசத் துவங்கும் முன்னரே என் ஃபைலை மேஜையில் எறிந்தார். “வேல தேடி வந்தவனுக்குப் பணிவு வேணும், நான் ரூமுக்குள நுழையறப்பவே பார்த்தேன், நீ எந்திரிக்கவே இல்ல.. உக்காந்துகிட்டேதான் இருந்த.. ஒரு மரியாத தெரிய வேணாம்? உனக்கு நான் உதவி செய்யணுமா?” என்று ஆங்காரமாகக் கேட்டார். தீவிர கோபத்தில் அவர் குரலும் முகமும் அகோரமாக மாறிக்கொண்டு வந்தது. நான் எதுவும் சொல்வதற்குள்ளாகவே, வரவேற்பாளனைக் கூப்பிட்டு, “இந்தப் பையன வெளிய அனுப்பு. மட்டு மரியாத தெரியாதவனயெல்லாம் நான் வேலைக்கு எடுத்துக்கறதா இல்ல” என்று சொல்லிவிட்டுத் தன் கணிப்பொறியைப் பார்க்கத் துவங்கினார். 

வரவேற்பாளன் என்னை மெல்ல வெளியே இட்டு வந்தான். எனக்கு என்ன நிகழ்ந்தது என்பதைத் தொகுத்துக்கொள்ளும் முன்பாகவே, கிட்டத்தட்ட கழுத்தைப் பிடித்துத் தள்ளி வெளியேற்றிவிட்டார்கள். வரவேற்பாளன் என்னிடம் அடங்கிய குரலில், “என்னப்பா, இப்படிச் செஞ்சுட்ட, அவரு வரும்போது எந்திரிச்சி நிக்க வேணாமா”? என்றான். எனக்கு அந்த அவமானத்திலும் கோபத்தைக் காட்டிலும் சிரிப்புத்தான் வந்தது, “அண்ணே, ரொம்ப நேரமா அந்தப் பக்கமா நெறைய ஆட்கள் போயிட்டும் வந்துட்டும் இருந்தாங்க. அவருதான் முதலாளின்னு எனக்கு எப்படித் தெரியும்? அவர முன்னப்பின்ன நான் பாத்தது கூடக் கிடையாது,” என்றேன். வெளியே செல்லும் முன், அவனிடம் இப்படிச் சொன்னேன், “அண்ணே, வேணும்னா இப்படிச் செய்யலாமா? அவர மறுபடி வெளியில இருந்து அவரோட ரூமுக்குப் போகச் சொல்லுங்க, இந்த முறை நான் அவரப் பாத்ததும் எந்திரிச்சு நிக்கிறேன்”. அவன் பதில் எதுவும் சொல்லாமல் என்னை முறைத்துவிட்டு உள்ளே சென்றான். உள்ளே சென்றதும், சிரித்திருப்பான் என்பது மட்டும் நிஜம். 

அந்த நிகழ்வில் எனக்கு ஏற்பட்ட அவமானம் பல இரவுகளின் தூக்கத்தைப் பறித்துக்கொண்டது. அதன்பின், நானாக சுயமுயற்சியில் வேலை தேடி முன்னேறியதெல்லாம் தனிக்கதை. வாழ்வில் எத்தனை தூரம் முன்னேறியிருந்தாலும், நமக்கு ஏற்பட்ட அவமானங்களை மட்டும் நம்மால் மறக்கமுடியாது. இந்தச் சம்பவத்தைக் கூட நான் மறந்துவிட்டதாகத்தான் நினைத்தேன். ஆனால், ஷங்கர்ராமசுப்ரமணியனின் இந்தக் கவிதையை வாசிக்கும்போதெல்லாம் ஆழ்மனதில் புதைந்து போன இந்தச் சம்பவம் புதிது போல நினைவில் மேலெழும்புகிறது. 

மொஹபத்

நெடுங்காலமாய் வரவேற்பறையிலேயே
தங்கிவிட்டதாய் உணர்கிறீர்கள்
உள்ளறைகளின் கதவுகள்
தடித்துவிட்டன
வரவேற்பறை அமர்வுக்கான வரிசை
கூடிக்கொண்டே
இருப்பதைச் சிரித்துக்கொண்டே
பார்க்கிறீர்கள்
வெளியில் சத்தங்கள்
கூடிக்கொண்டே வருகின்றன
குரல்களையும் முகங்களையும்
பொருத்தவே இயலாமல்
ஏமாற்றமடைகிறீர்கள்
தொடர்ச்சியாகத் தேநீர்
வந்துகொண்டு
இருக்கிறது
மிகவும் சன்னமாக
இந்திப் பாடல் ஒன்று கேட்கிறது
அர்த்தம் புரியாமலேயே மொஹபத்
என்னும் வார்த்தையை
வசீகரமாய் உணர்கிறீர்கள்
அதிகாரி போன்று தோற்றமளிக்கும்
ஒருவர்
அறையைக் கடக்க மரியாதையுடன்
எழுகிறீர்கள்
இவை எல்லாம் வெறும் சம்பிரதாயமாகி
விட்டன
என்று முணுமுணுக்கிறீர்கள்
உங்கள் கவனம் இல்லாமலேயே
வளர்ந்துவிட்ட
உங்கள் பெண்ணை யோசிக்கையில்
வியப்பாய் உள்ளது
ஜன்னல்களில் இருந்து பார்க்கப்
பழகிவிட்ட
மரங்களைத் தவிர
வேறு எவரிடமும் சொல்வதற்கு
செய்திகள் இல்லை என்பதை
மெதுவாய் உணர்கிறீர்கள்
குழந்தைகள் வரவேற்பறைகளைத் தாண்டி
வெகுதூரம் ஓடி விட்டன.

                                                                       -ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஏதேதோ அலுவலகங்களில் ஏதேதோ வாய்ப்புகளுக்காக, எண்ணிக்கையற்ற இளைஞர்கள் யாருக்காகவோ இப்படித்தான் வரவேற்பறையில் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கும் அவர்கள் நுழைய விரும்பும் அறையின் கதவுகள் திறப்பதில்லை. அவை தடித்துப்போயிருக்கின்றன. காலம் யாருக்காகவும் நிற்பதில்லை, அது வேகமாக நகர்ந்தபடியிருக்கிறது. காத்திருக்கும் இந்த மனிதர்களைச் சுற்றியுள்ள காட்சிகளும், மனிதர்களும் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். இவர்கள் மட்டும் காத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அப்படிக் காத்துக்கொண்டிருப்பவர்கள் யாரும் இந்தக் கவிதையை மட்டும் படிக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொள்வேன். 

***

கணேஷ்பாபு – தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.மின்னஞ்சல்: ganeshmodec@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here