நேர்காணல் : மதார்
நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்
கவிஞர் மதாரை கடந்த ஒரு வருடமாக அறிந்து வருகிறேன். முதல் சந்திப்பிலேயே பழக எளிமையானவர், நேர்மையாகப் பேசும் குணம் கொண்டவர், எந்த இலக்கியத் திமிரும் அற்றவர் என்பது தெளிவாகப் புரிந்தது. தனது ஒரு கவிதையில் “நான் ஒரு குழந்தை” என்று சுயப் பிரகடனம் செய்து கொள்ளும் மதார், கவிதைகளிலும் அதே குழந்தைத்தன்மையைக் கொண்ட நேர்மறை அலைகளை வெளிப்படுத்துகிறார்.
மதாரின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய காட்சிகளில் காணப்படும் தரிசனங்களை நிரந்தரமான படிமங்களாக மாற்றுகின்றன. அவை கற்பனைச் செறிவும் சிந்தனையின் ஆழமும் கொண்டவை. அவரது கவிதைகளில் கள்ளமின்மை முழுவதும் பரவி நிற்கிறது. இதுவரை வெயில் பறந்தது, மாயப்பாறை ஆகிய இரு கவிதை நூல்கள் எழுதியுள்ளார்.
இந்தக் கவிதைகள் அனைத்தும் எளிய மொழியில், வெள்ளை மனதுடன் வாசகரோடு உரையாடுகின்றன. அதே சமயம், அவற்றின் உள்ளார்ந்த பரப்பும் உணர்வுகளின் பிரமாண்டமும் வாசகரை ஆழமாகத் தொட்டுச் செல்கின்றன.
கேள்வி: உங்களது கவிதைகள் எங்கிருந்து தொடங்கின? அவற்றின் பயணம் எதை நோக்கியதாக இருக்கிறது?
பதில்: பள்ளிப் பருவத்திலேயே கவிதைகள் எழுதத் துவங்கிவிட்டேன். அப்போது மொழி இல்லை துடிப்பான மனம் இருந்தது. வளர்ந்தபிறகு மொழி வந்துவிடுகிறது ஆனால் அந்த மனதைத் தான் தொலைத்து விடுகிறோம், கவிதையில் மொழியும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இரண்டும் நன்றாக இருக்கும்போதே செழுமையான கவிதை பிறக்கிறது. இந்த இரண்டையும் ஒரு சமரசத்துடன் கொண்டு செல்வதையே கவிதைகளில் தொடர்ந்து முயன்று வருகிறேன்.
கே: உங்களது கவிதைகளில் புறக் காட்சிகளை அடுக்குகிறீர்கள் ? அதை வாசிக்கும் வாசகருக்கு சில அகக்காட்சிகள் அதோடு இணைகின்றன ? திடிரென ஒரு வெடிப்பு வியப்பு நிகழ்கிறது உதாரணத்துக்கு பந்து கவிதையில்
“தான் இன்னாருக்கு சொந்தம்
என்று
அறிந்து கொள்ளாத பந்து
பூமியைப் போலவே இருந்தது”
அதே போலவே புறக்காட்சிகளை ஒரு துவலையின் மீதேற்றி சொல்கின்றீர்கள். அந்த கவிதை இப்படி முடிகிறது
“இறுதிப் போரில் கலந்துகொள்ளும்
வீரனின் முகக்களையோடு
காற்றில் சடசடத்து தன்னை சேனை பிடிக்கிறது
அருவியறை கதவு திறந்து
நடந்து வருகிறான்
துவட்டுனன்”
இந்த வெடிப்பு வியப்பு சார்ந்து சொல்லுங்கள்
ப: சமீபத்தில் எழுதிய ஒரு கவிதையோடு இதை ஒப்பிட்டுச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
அள்ளி
உண்ணத் தெரியாத
மாடு
வாயை மட்டும்
அருகில்
கொண்டு போக
ஊட்டியே விட்டது
புல்வெளி
என் மகனுக்கு சோறூட்டும்போது அருகில் ஒரு மாடு புல் தின்னும் காட்சியைப் பார்க்க நேர்ந்தது. நான் மகனுக்கு சோறு ஊட்டுவது போல புல்வெளியும் மாட்டுக்கு புல்லை ஊட்டிவிடுவதாக நினைத்தேன். மிக இயல்பான ஒன்றாகவே நினைத்து எழுதினேன். ஆனால் நண்பர் ஸ்ரீநிவாச கோபாலன் இதை தற்குறிப்பேற்ற அணி என்று சுட்டினார். எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு ஒரு வாசகனாக வாசிக்கையில் அது சரியென்றே தோன்றியது. நிறைய கவிதைகளில் இப்படி உணர்ந்ததுண்டு. கைக்குட்டை பறக்கிற கவிதையும் இதே போல இயல்பாக எழுதிய கவிதைதான். ஆனால் எழுதி முடித்து வாசிக்கிறபோது நீங்கள் குறிப்பிடுவது போல அதில் ஒரு வியப்பு, வெடிப்பு தென்படுகிறது. இது ஏன் நிகழ்கிறது, எப்படி என்று புரியவில்லை. ஒருவேளை அந்தக் குறிப்பிட்ட கணத்தில் இயல்பும் வியப்பும் தராசின் ஒரே தட்டில் சந்திக்கின்றனவோ என்னவோ..
கே: “சொந்த ஊருக்கு திரும்புவது பைத்தியத்திலிருந்து தெளிவது” – இந்த கருத்தாக்கத்தை நீங்கள் ஒரு கவிதையில் வாசகர் அதிர அதிர முன் வைக்கிறீர்கள். அது எழுதியதற்கு பின்னால் இருக்கும் அனுபவம் சார்ந்து சொல்லுங்கள். போலவே “பார்வைத் தெளிவெனும் அச்சம் என் வீட்டு பரணில் கிடைக்கிறது” இதை ஒரு கோட்பாடாக, முரணாக முன் வைக்கின்றீர்களா ? இதை இப்படி எழுதிப் பார்க்க காரணமென்ன?
ப: முதல் கவிதையின் பின் உள்ள அனுபவம் அசலானது தான். சொந்த ஊர் மீதான ஏக்கம் முற்றி இருந்த வாதையின் நாட்கள் அவை. அப்போது ஒரு சீனக் கவிதை என் நினைவில் அடிக்கடி வந்து வந்து போகும். “ஊருக்குத் திரும்பியபின் என் மண்டையை ஓடையில் கிடத்தி குளிர்ந்த நீரில் அதை நனைப்பேன்” என்று சொல்வது தான் அந்தக் கவிதை. எப்போதோ படித்த கவிதை என் வாழ்வனுபவத்திற்கு பக்கத்தில் வந்து நின்றபோது நான் அதை நெருக்கமாக உணரத் தொடங்கினேன். அதன் பாதிப்பும், வாழ்வனுபவம் தந்த அனலும் ஒன்றிணைய முகிழ்த்ததே என் கவிதை.
பார்வைத் தெளிவெனும் அச்சம் – அதுவும் அசலான அனுபவத்தில் இருந்து உருவான கவிதையே. மூக்குக் கண்ணாடி அணிய மறந்த ஒருவன் பைக் ஓட்டும்போது அவனுக்குக் கிடைக்கும் அனுபவமே கவிதை. உண்மையில் மூக்குக் கண்ணாடி அணியாமல் நான் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது தோன்றிய கவிதைதான் அது. வழியில் ஒரு பேக்கரியில் நிப்பாட்டி கவிதையை எழுதி முடித்தேன். அதில் வரும் மேடை பயம் விலக பள்ளி நாடகமொன்றில் கண்ணாடியைக் கழற்றிவிட்டு நடித்தேன் என்ற வரியும் உண்மையிலேயே பள்ளி படிக்கும்போது நான் செய்த ஒன்றுதான். இயல்பிலேயே நான் அச்சம் கொண்ட குழந்தையாய் இருந்தேன் என்று அந்தக் கவிதை எனக்குக் காட்டித் தந்தது.
இரண்டு கவிதைகளிலும் உள்ள முரணாக நீங்கள் குறிப்பிடுவது முதல் கவிதை பைத்தியத்திலிருந்து தெளிவது பற்றியது, இரண்டாவது தெளிவு வேண்டாம் என சொல்வது. ஆனால் அடிப்படையில் இந்த இரண்டு கவிதைகளுமே வெவ்வேறானவை. ஒன்று நரகத்தில் இருப்பது, இன்னொன்று சொர்க்கத்தில் வசிப்பது. நரகத்தில் இருப்பவனுக்கு ஒரே பிரச்சினைதான் – நரகத்தில் இருப்பதுதான் அந்தப் பிரச்சினை. சொர்க்கத்தில் வசிப்பவனுக்கும் ஒரே பிரச்சினைதான் – பிரச்சினை என்னவென தெரியாமல் இருப்பதே அது. இரண்டு பேருக்கும் ஒரே தீர்வைச் சொல்வது சரியாக இருக்காது.
கே: உங்களது கவிதைகளில் சில மாய எதார்த்தம் சாய்வு கொண்டவை. “டெய்ரி மரம்”, “கப்பி” போன்ற கவிதைகள் மீ-எதார்த்த கருத்தாக்கம் கோட்பாடுகளில் கவிதை எழுதும் சவால் எப்படிப்பட்டது ?
ப: ஒரு கவிதையைத் துவங்கும்போதும் அதை எழுதும்போதும் இன்ன விதத்தில் இதை எழுதிவிட வேண்டும் என்ற நினைப்பே எனக்கு இருந்ததில்லை. ஒரு கவிதை அது உருவாகும்போதே தன்னளவில் அதற்கான வழியைத் தானே தேர்வு செய்து கொள்கிறது என்றுதான் நினைக்கிறேன். கவிதையை மர்மப்படுத்துவதற்காக இதை நான் கூறவில்லை. ஒரு கவிதையைக் கொண்டு செல்ல பல்வேறு வழிகள் கவிஞனின் முன் வந்து நிற்கும். அந்தக் கவிதைக்கு எது தேவையோ அதை சரியாகத் தேர்வு செய்வதே கவிஞன் முன் உள்ள பெரும் சவால். தூதுவர்களுக்கு இறைவனிடம் இருந்து வந்து சேரும் அசரீரி போல கவிஞனுக்கு கவிதையில் ஒரு தருணம் உண்டு. ஆம் நான் கவிதையை மர்மம் தான் படுத்துகிறேன் போல! இறைவனிடம் பிரார்த்திக்கும் தருணங்களில் ‘நல்ல கவிதைகளைக் கொடு இறைவா’ என்று கேட்பேன். நம்மை மீறிய ஒன்றைத் துணையாகக் கொள்வது நம் படைப்பு செயல்பாட்டுக்கு உதவும் என்பது என் எண்ணம். பாரதியின் பெருவிசைக்குப் பின் காளியும், ரூமியின் ஆழத்துக்குப் பின் அல்லாஹ்வும் இருந்திருக்கலாம். இதற்கு விதிவிலக்கான கவிஞர்களும் ஏராளம் பேர் இருந்திருக்கிறார்கள்.
கே: “வெயில் பறந்தது” வார்த்தை பிரயோகமும் கற்பனையும் எங்கிருந்து ஊற்றெடுத்தது? “வெயில் கழுவுதல்”, “வெயில் தும்மிய ஈரம்” போன்றவையும் வெயிலை குளிப்பாட்டும் சித்திரமும், வெயிலை காப்பி போல ஆற்றும் சிந்தனையும் அபூர்வமானது. வெயிலின் பாதிப்பு கவிதையாகும் விஞ்ஞானம் பற்றியும், வெயில் மீதான உங்கள் பற்று சார்ந்தும் இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள்.
ப: கன்னி நாவலில் ஒரு இடத்தில் பிரான்சிஸ் கிருபா பாளையங்கோட்டை வெயிலை எந்த சிறப்பு உருவகமும் செய்யாமல் வெறுமனே ‘பாளையங்கோட்டை வெயில்’ என்றே குறிப்பிட்டிருப்பார். வானில் மேகங்களற்ற தூய வான் நீலத்தை பார்ப்பதற்கு ஒப்பானது பாளையங்கோட்டையின் வெயிலை அனுபவிப்பது. தேவிபாரதியின் நொய்யல் நாவலில் சூறைக் காற்று ஒரு கதாபாத்திரமாகவே ஊருக்குள் வாழ்வது போல பாளையங்கோட்டை வெயில் ஒரு பாத்திரமாகவே ஊருக்குள் நடமாடுகிறது என்று நினைக்கிறேன். உண்மையில் எனக்கு மழைதான் பிடிக்கும் என்று நம்பியிருந்தேன். அதைத்தாண்டி வெயில் மீதான என் காதலை அறியாமல் நான் எழுதிய கவிதைகளே எனக்கு உணர்த்தின.
கே: உங்கள் கவிதைகளில் மழையும் வருகிறது. மழை வரும் போதெல்லாம் சிறுவர்களும் வருகின்றார்கள். இந்த இணைப்புக்கு ஏதேனும் காரணங்கள் உண்டா?
ப: மழை கவிதைக்குள் வந்ததும் ஒரு குதூகலம் வந்துவிடுகிறது. கூடவே ஒரு பொறுப்பும் வருகிறது, மழையை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள நம்பி ஒப்படைத்துப் போகவே நான் அங்கு சிறுவர்களை அழைத்து வருகிறேனோ என்னவோ..
கே: உங்கள் கவிதைகளில் பிரத்தியேகமான சிறுவர் சிறுமியர் உலகமுண்டு. அதை எழுதும் போது நீங்கள் உங்கள் பால்ய பருவத்தை அந்த அனுபவத்தோடு எப்படி பொருத்திப் பார்க்கின்றீர்கள்? நட்சத்திரத்தை எண்ணும் கவிதையிலும், மதுக்குவளை பறக்கும் கவிதையிலும் மரமும் சிறுவனும் கவிதையிலும் ஒரு மாயாஜாலம் நடப்பது குறைந்த வார்த்தைகளில் எவ்வாறு சாத்தியமானது?
ப: சிறுவர் சிறுமியர் உலகம் சார்ந்த கவிதைகளில் நான் என் பால்யத்தைக் கொண்டு வரவில்லை என்று நினைக்கிறேன். மாறாக எழுதும் கணத்தில் நான் சிறுவனாகவே இருக்கிறேன். என் பால்யம் அது இப்போதில் இருந்துதான் எழுதப்படுகிறது. கவிதைக்கு முன்னும் பின்னும் கவிதை உள்ளது. நான் எனக்குத் தேவையான கவிதையை அதன் நடுவிலிருந்து எழுதுவதால் குறைந்த வார்த்தைகளில் கவிதை சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன். நான் என் பெரும்பாலான கவிதைகளில் ஏதோ ‘ஒன்றைத்’ தான் பார்ப்பதாக நினைக்கிறேன். அந்த ஒன்றை முழுமையாகப் பார்க்க முயல்கிறேன். இதுவும் கூட குறைவான சொற்பிரயோகத்திற்கு காரணமாக இருக்கலாம்.
கே: பெரியவர்கள் கர்வத்தை விட்டொழிந்து குழந்தையின் உலகத்தில் அது பேசும் மொழியில் நுழைந்து கொள்வது விசித்திரமானது இதை கவிதைக்குள் எப்படி கொண்டு வந்தீர்கள்? அது கொடுக்கும் சொல்லை அதனிடமே தூக்கி போடும் பந்து விளையாட்டு எப்படி சாத்தியமாயிற்று?
ப: முன்னரே சொன்னது போல நான் என்னை பெரியவனாகவே உணர்ந்தது இல்லை. என் பணிச் சூழலும் குடும்பப் பொறுப்புகளும் என்னை பெரியவனாக்குகின்றன. ஆனால் நான் அங்கும் ஒரு சிறுவன் நாடகத்தில் மீசை வைத்து வேஷ்டி சட்டையெல்லாம் அணிந்து நடிப்பது போலத்தான் சமயங்களில் விளையாடிப் பார்க்கிறேன் என்று தோன்றும். தற்போது இந்த மாதிரி நேர்காணல்களுக்கெல்லாம் பதில் சொல்வதால் கொஞ்சம் பெரியவனாகி விட்டேனோ என்னவோ..
கே: சிறுவயதின் வட்டப்பாதை வளர்ந்த பின் இரு துருவ ஊசலாட்டமாய் மாறுவதை வளர்ச்சி என்பீர்களா அல்லது வாதையா? எல்லோர் கனவிலும் நாம் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற ஏக்கத்தை மட்டுமா இது சொல்கிறது?
ப: நமக்குள் இருக்கிற குழந்தை முற்றாக அழியுமேயானால் அது வாதைதான். சிறுவன் வளரும்போது சிறுவன் வளரலாமே ஒழிய அழியக்கூடாது. நாம் எல்லோருமே நம் அகச் சிறுவனை அரவணைத்தேதான் வளர்கிறோம். அதனால்தான் மட்டுமே நாம் மனிதர்களாக இருக்கிறோம். இந்தக் கவிதை ஒரு எச்சரிக்கையைத் தருகிறது என்று சொல்லலாம். குழந்தையாக ஆக முடியாவிட்டாலும் குழந்தையாக ஆகாததின் ஏக்கம் கூட நம்மை குழந்தையாக வைத்திருக்கும்.
கே: மனதளவு இன்னும் பால்யத்துள் இருக்கும் சிலரது படைப்பில் சிறார் உலகம் உன்னதமாக எழுதப்பட்டிருக்கும் உதாரணத்துக்கு யூ மா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவலைச் சொல்லலாம். உங்கள் கவிதையில்
மரம் நிற்கிறது
அதைக் கடந்து
ஒரு பேருந்து செல்கிறது
அழிரப்பரைப் போல
இந்த வரிகளை வாசிக்கும் போது உங்கள் மனதுக்குள் வாழும் சிறுவனே இந்த காட்சியை இப்படிப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. பெரிய அனுபவங்களை சந்தித்து விட்ட பின்னர் குழந்தைமையை தக்கவைத்துக் கொள்வதில் இருக்கும் சவால்களை சொல்லுங்கள்.
ப: என்னுடைய முதல் தொகுப்பான வெயில் பறந்தது வெளிவந்தபோது அதற்காக எனக்கு விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது. அப்போது அந்த விருதை ஒட்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெளிவந்த கடிதங்களைப் படித்தபின்னர் தான் நான் என்னுடைய கவிதை உலகம் என்பது இன்ன இன்ன விஷயங்களைச் சுற்றி எழுதப்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன். கள்ளமின்மையும், குழந்தைமையும்தான் என் பிரதான அம்சங்கள் என அறிந்துகொண்டது அப்போதுதான். பிறகு இந்த கள்ளமின்மை, குழந்தைமை கவிதைகள் சார்ந்த விமர்சனங்கள் தமிழ்ச் சூழலில் தொடர்ந்து முன் வைக்கப்பட்டன. ஒரு படைப்பாளியாக என் படைப்புக்கு எந்த விமர்சனம் வந்தாலும் அது எனக்கு மகிழ்வாகவே இருக்கும். ஆனால் ஆரம்பத்தில் அவற்றில் எவற்றை எடுக்க வேண்டும், எவற்றை எடுக்கக் கூடாது என்கிற தெளிவு என்னிடம் இல்லை. பெரிய மனுஷனாக உருவெடு, அரசியல் கவிதைகளை எழுதிப்பார் போன்ற விமர்சனங்கள்.. ஒரு தொகுப்புக்கும் அடுத்த தொகுப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது கவிஞர்கள் வட்டத்துக்குள்ளே மிக ஆழமாகப் பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் மிகவும் பயந்தேன். நாமும் எப்படியாவது அரசியல் கவிதைகளை எழுதி வயசுக்கு வந்துவிடலாமா என்றெல்லாம் அப்போது எண்ணிக் கொண்டிருந்தேன். அச்சமயம் கவிஞர் லட்சுமி மணிவண்ணன் கூறிய அறிவுரை எனது மனத்தடையை நீக்கிவிட்டது. ‘எப்படிப் பார்த்தாலும் கவிதை ஒரு பயணம்தான், கவிஞன் தன் வாழ்வை அது என்னவோ அதை உண்மையாய் எழுதினாலே அது உண்மையான கவிதையாக இருக்கும்’ என்று கூறினார். அது எனக்கு மிகுந்த ஆசுவாசத்தை அளித்தது. நீங்கள் சொல்வது போல பெரிய ஆளாக ஆவது அல்ல, குழந்தையாகத் தொடர்வதே சவாலானது என்பதை உணர்ந்து கொண்டேன்.
பெரிய அனுபவங்களுக்கும் குழந்தைமைக்கும் தொடர்பு உள்ளதாகவே நான் நினைக்கிறேன். ஞானிக்கும் சிறுவனுக்கும் வயது வித்தியாசம் மட்டுமே உள்ளது என்று நம்புகிறேன்.
கே: உங்களின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று முதன் முதலில் கிருஸ்மஸ் ஸ்டார் பார்க்கும் சிறுமி என்ற கவிதை இதில் ஊடாடும் சிறுமியின் அறியாமை, கடவுளின் அற்புதம், அந்த கவிதை கொடுக்கும் positive அனுபவம் அபாரம். இது ஒரு மீ எதார்த்த பாணி கவிதை ஆனால் இது அப்படியே நடந்திருக்க கூடும் என்று எண்ணச் செய்யும் கவிதை. இதை எழுதிய தருணத்தை கொஞ்சம் சொல்லுங்கள்.
ப: சிறிய வயதில் நான் எதிர்கொண்ட பெரும் ஆச்சரியங்களில் ஒன்று -கிறிஸ்துமஸ் ஸ்டார் எப்படி ஒளிர்கிறது என்பதுதான். கேள்விகளிலேயே இரண்டு உண்டு. ஒன்று வெறும் கேள்வி, இன்னொன்று வியப்பான கேள்வி. முதல் வகைக் கேள்விகளுக்கு நான் விடை தேடுவேன். இரண்டாவது வகை கேள்விகளுக்கு விடையைத் தேடாமல் அதை ஒரு கனவாக எனக்குள் தேக்கி வைத்துக் கொள்வேன். பள்ளிக் காலங்களில் எனக்கே தெரியாமல் இதை ஒரு பயிற்சியாக நான் செய்து வந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். கிறிஸ்துமஸ் ஸ்டாரின் ஒளி குறித்தான இந்தக் கனவே நீங்கள் குறிப்பிடும் கவிதையாய் பின்னர் முகிழ்த்தது. அதில் வரும் விண்மீன்கள், வானம், ஏசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் தாத்தா, விவிலியச் சொல்லாடல், நள்ளிரவு, ஜெபம் ஆகிய அனைத்துமே நான் கனவாகத் தேக்கி வைத்தவையே. இவை யாவும் சரியான விகிதத்தில் கலந்தபோது உருவானதே அந்தக் கவிதை. (ஓரளவு சரியாக சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்)
கே: பலூன் பற்றி எனக்கு தெரிந்து மூன்று கவிதைகள் உள்ளன. அக விடுதலை, பலூன் தாத்தா, பலூனுக்குள் ஒரு பலூன் என்று தொடங்கும் கவிதை. மூன்றுமே ஒவ்வொன்றும் வெவ்வேறு விதத்தில் அற்புதமானவை. அகவிடுதலை ஒருவாறு தத்துவம் பேசும் கவிதை போலிருந்தாலும் அதற்குள்ளும் ஒரு சிறிதளவான குழந்தைமை, பரவசம் (அ) ஆசுவாசம் தெரிகிறது. மற்ற இரண்டு பலூன் கவிதைகளுமே சிறார் உலக கவிதைகள் அல்லது பலூனை குழந்தைகளின் வஸ்துவாக பாவிக்கும் கவிதைகள். பலூன் கவிதைகளை எழுதும் போது எதை உணர்ந்தீர்கள்?
ப: பாவண்ணன் தன் கட்டுரையில் சிறுகதைக்குள் ஒரு ரயில் வரும்போது அந்தக் கதை என்னவாக மாறுகிறது என்பதை எழுதியிருப்பார். ஒரு சிறுகதையின் கதைத் தன்மையையே மாற்றிவிடும் சாத்தியம் அதற்கு உண்டு. ரயில் கதைகள் உருவாக்கித்தரும் மனநிலை தனித்துவமானது. அது போலவே கவிதைக்குள் ஒரு பலூனின் இருப்பு என்று கருதுகிறேன். வெறும் ‘பலூன்’ என்று குறிப்பிட்டாலே அது பல்வேறு விஷயங்களின் குறியீடாக இருப்பதைப் பார்க்கலாம். இத்தகைய பளு நிறைந்த சொல்லை (இன்னொரு உதாரணம் மரம்) கவிதையில் பயன்படுத்துவது கவிதையைத் தேய்வழக்காக்கும் என்பதே நவீன வாதம். ஆனால் நான் அத்தகைய எடையிலிருந்து அதை விடுவிக்கவே என்னுடைய பலூன் கவிதைகளில் முயன்றுள்ளதாக நினைக்கிறேன். இந்தக் கருத்தாக்கத்தை அடிப்படையாக வைத்து ‘கவிதையின் கருவிகள்’ என்ற சிறிய கட்டுரையையும் முன்னர் எழுதிப் பார்த்திருக்கிறேன்.
கே: தவளைக் கல் எரிவதைப் பற்றி சில கவிதைகளில் எழுதியிருக்கின்றீர்கள். சிறுவயதில் விளையாடிய அல்லது இந்த கால குழந்தைகள் விளையாட வேண்டிய outdoor விளையாட்டுகளைப் பற்றிச் சொல்லுங்கள். முதலில் தவளைக் கல் விளையாட்டைப் பற்றி அது தந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள். அதன் பிறகு சிறுவயதில் நீங்கள் விளையாடிய விளையாட்டுகளையும்.
ப: சிறுவயதில் அல்ல சமீப கால கட்டங்களில் தான் நதிக்குச் செல்கையில் தவளைக்கல் விளையாடியிருக்கிறேன். அது ஒரு விளையாட்டு கூட இல்லை, ஒரு மனநிலை. ஒரு பெரிய மனிதன் போல நிற்கும் ஆற்றை விளையாட அழைத்து நண்பனாக்கும் முயற்சி.
சிறுவயதில் எல்லா குழந்தைகளையும் போலத்தான் நானும் விளையாடியிருக்கிறேன். பிரத்தியேகமான விளையாட்டு என்று எதையும் தனித்துவமாக குறிப்பிட இயலுமா எனத் தெரியவில்லை, ஆனால் நீங்கள் கேட்டதும் சட்டென நினைவுக்கு வருவது – பிளாஸ்டிக் கவரில் கொஞ்சம் மணலைப் போட்டு அதைத் தூக்கி வானத்துக்கு வீசுவது. அப்போது அது எழுப்பும் ஒலி வித்தியாசமாக இருக்கும், மேலும் ஒரு தினுசாக அது பறக்கும். எடையும் எடையின்மையும் இணைந்த வெளியில் அது பறந்து கீழே விழுவதைப் பார்க்க பெரும் பரவசமாக இருக்கும்.
கே: இண்டிகேட்டர் கவிதையின் (அ) பகுதியில் அழகான காட்சியும் இக்கால கல்வி முறையின் சாபக்கேட்டையும் ஒருங்கே சொல்வது போலிருக்கிறது. இரண்டைப் பற்றியும் சொல்லுங்கள்.
ப: இண்டிகேட்டர் கவிதையை முதலில் நான் ஒரு காட்சியாக மட்டும் பார்த்தேன்.என்னைத் தாண்டிய ஒன்று எப்போதுமே கவிதையில் நிகழ வேண்டுவேன். அந்தக் கவிதையிலும் அப்படி ஒன்று நிகழ்ந்துள்ளதாக உணர்கிறேன். அதில் வரும் கனத்துத் தொங்கும் முதுகுப்பை என்ற வரி மொத்த கவிதையின் பொருளையும் மாற்றிவிடுகிறது. அது திட்டமிடாமல் போகிற போக்கில் எழுதியது. ஒன்றைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வரும்போது அது நம் தன்-முனைப்பில்லாமலேயே நம் படைப்புகளில் ஏறிக்கொள்கிறது.
கே: கவிதைகளுக்குள் இழையோடும் துயரத்தை புதைத்த சில கவிதைகளை எழுதியிருக்கின்றீர்கள். நட்சத்திரத்தை எண்ணுபவர்கள், இடையனும் ஆடும், முழுதாக கரைந்த ரப்பர் போன்ற கவிதைகளில் கவியும் துயரம் எதை குறிக்கிறது?
ப: துயரம் கவிகளின் பிரதான கச்சாப் பொருள். ஒரு கவிஞரின் தனித்துவமாக அவர் தன் கவிதைகளில் துயரத்தை எவ்விதம் எழுதுகிறார் என்பதையே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். துயரம் ஒரு பெருந்தாய் போல. வாழ்க்கை, தத்துவம், மரணம், மகிழ்ச்சி என அனைத்தையும் அரவணைத்துக் கொள்கிறது. கவிஞர் இசையின் ஒரு கவிதை
ஒரு பந்தென இருக்கிறோம்
கடவுளின் கைகளில்
அவரதைத் தவறவிடுகிறார்
தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் எற்றி
புஜங்களால் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கிடையே
மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்
‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை;
உன்னைக் கைவிடுவதுமில்லை’
பிதாவே!
தயவு பண்ணி எம்மைக் கைவிடும்
இந்தக் கவிதையை எழுதியவர் இசைக்குப் பதிலாக பிரான்சிஸ் கிருபா என வைத்துக் கொண்டால் என்ன நிகழ்கிறது.. மொத்த துயரமும் வேறொன்றாக ஆகிறது. இசையின் துயரத்தை பகடியால் கடந்து விடலாம். கிருபாவின் துயரத்தை செறிப்பது மிகச் சிரமம். அதே போல கல்யாண்ஜியின்,
இருந்து என்ன ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்
என்ற வரிகளை எழுதியவர் நகுலன் என வைத்துக் கொண்டால் கவிதையின் தொனியே மாறிவிடுகிறது.
என்னுடைய கவிதைகளில் துயரம் என்பதை நேரடியாக அல்லாமல் வேறொன்றாகவே எழுதிப் பார்த்து வந்துள்ளேன். தனி மனிதனின் துயரை அரிதாகவே எழுதியிருக்கிறேன். என கவிதைகளில் வரும் மனிதனுக்கு துயரம் தன்னைப் பார்க்கும்போது வருவதில்லை. விண்மீனைப் பார்க்கும்போது வருகிறது, ஈர மணலை பார்க்கும்போது வருகிறது. எதையாவது ஒன்றைத் தொலைக்கும்போது அல்ல, ஒன்றைத் தேடும்போதே அவன் துயரமடைகிறான்.
கே: மரமும் கதவும், பலூன் கவிதைகளில் ஒரு சிறுகதைத் தருணமிருக்கிறது அதை நீங்கள் எப்போதேனும் விரித்தெழுத யோசித்தது உண்டா? உங்களது இலக்கிய ரசனை சார்ந்து சொல்லுங்கள். கவிதை அல்லாத பிற வடிவங்களை எப்படி அணுகுகின்றீர்கள் ?
ப: கவிதையாக நிறைவாக அமைந்த கவிதைகளை அப்படியே விட்டுவிடுவேன். சரியாக வராத கவிதைகளை குறுங்கதைகளாக ஆக்கலாமா என யோசித்ததுண்டு. சிலவை பொறிகளாக மட்டும் இருக்கும், கவிதையாக ஆகியிருக்காது. சிறுகதை மிகுந்த சவாலான வடிவம். அதில் பிரக்ஞை பூர்வமாக நிறைய விஷயங்களை எழுத்தாளன் செய்ய வேண்டியிருக்கும்.
கவிதைக்கு பிறகு நான் பெரிதும் விரும்பி வாசிப்பது நாவல்களை. சிறுகதைகளையும் கட்டுரைகளையும் சீராக வாசிப்பேன். படைப்பாளி தன்னை விட தனக்குள் கமழும் வாசகனுக்குத் தீனி போடுவது முக்கியமானது, இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட. அதற்காக இயந்திரகதியில் படிக்க வேண்டும் என்றில்லை, வாசிப்பதை முழுதாக அனுபவித்து இன்புறவேண்டும். எழுத்தில் கவிதை அல்லாமல் நாவல் மேல் மோகம் உண்டு. இதுவரை எழுதிப் பார்த்ததில்லை, சில சிறுகதைகள் எழுத முயன்று சரியாக வரவில்லை.
கே: உங்கள் கவிதைகளில் தொடர்ந்து யாராவது எதையாவது தேடிக் கொண்டிருக்கின்றார்கள். மூங்கில் தேடும் மூங்கில் காடு போல இந்த தேடலின் பிண்ணனி என்ன? இடையனை தொலைத்த ஆடு, ஆட்டை தொலைத்த இடையன் இருவரும் தேடுவதும் தப்பிப்பதுமாக இருப்பது எந்த விதமான குறியீடு?
ப: அடிப்படையில் எல்லா கவிதையுமே ஏதோ ஒன்றைத் தேடுகிறது, இதில் முரண் என்னவென்றால் கவிதை எதையும் தொலைக்கவில்லை, ஆனால் அது எதையோ தேடிக் கொண்டே இருக்கிறது, கண்டுபிடிக்கிறது. ராமாயணத்தில் எல்லோரும் சீதையைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதியைத் தேடிக்கொண்டே இருக்கிறாள். நீலகண்டப் பறவை தேடப்படுகிறது. குட்டி இளவரசன் தேடுகிறான். தேடும் கணம் கவிதையின் கணமாகிறது.
இடையனும் ஆடும் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறியீடாகிறது. இடையனும் ஆடும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விஷயங்களைக் கவிதை கையாளும்போது அவற்றின் அதிகபட்ச நிகழ்தகவை நிகழ்த்திப் பார்க்கிறது. ஒரு நாணயத்தைத் திருப்பித் திருப்பிப் பார்ப்பது மட்டுமே கூட கவிதைக்குப் போதுமானது. ஏனென்றால் கவிதைக்குள் வரும் நாணயத்திற்கு பக்கங்கள் இரண்டல்ல, முடிவிலி..
கே: சில கவிதைகளில் யூகிக்க முடியாத பிரம்மாண்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். பூனையின் கண்களை ஒரு கிரகமாகப் பார்ப்பதும் பூமியையும் நிலவையும் அளக்க சென்டிமீட்டர் அளவுகோல் போதும் என்று சொல்லுமிடமும். எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது? “ஆகாசத்தின் கதவா என் எளிய ஜன்னல்”, இந்த கவிதை கொண்டிருக்கும் எளிய பிரம்மாண்டம் தற்செயலானதா?
ப: ஆர். அபிலாஷ் மொழிபெயர்த்த ஜேம்ஸ் வில்லியம் ஹேக்கெட்டின் ஒரு கவிதை
எல்லையற்ற பரப்பு சீக்கிரமே சலிக்க
காட்டுப் பூக்கள் மற்றும் அவற்றின்
அதிசயங்களிடம் மண்டியிடுகிறேன்
பிரம்மாண்டம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். பிரம்மாண்டம் அதன் அளவிலோ பயன்பாட்டிலோ இருபபதில்லை. பிரம்மாண்டம் என்பது தூரமாக இருப்பதுவும் இல்லை. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த முக்கியமான படம் – மெட்ராஸ் மேட்னி. அதன் இறுதிக் காட்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒரு சாதாரண மிடில் கிளாஸின் வாழ்விலும் அதிசயங்கள் இருக்கின்றன என்ற வசனத்துடன் கேமராவின் கோணம் தரையில் ஓடும் ஆட்டோவில் இருந்து வானத்திற்கு ஏறும். நான் பார்த்த எந்த பிரம்மாண்ட படங்களின் பிரம்மாண்ட காட்சிகளை விடவும் ஒரு படி மேலான காட்சி அது. பிரம்மாண்டம் என்பது மனதை நிறைத்து விடுவது. அது எப்படியும் இருக்கலாம்.
ஆகாசத்தின் கதவு கவிதையில் வரும் பிரம்மாண்டம் தற்செயலானதே.
கே: உங்கள் கவிதைகளில் எல்லாப் பொருட்களுக்கும் உயிர் உள்ளது அது சில நேரம் மனிதர்களுடன் பேசுகிறது சில நேரம் மனிதர்களை விஞ்சியும் செல்கிறது இதை எப்படி புரிந்து கொள்வது?
ப: கவிதையில் எல்லாவற்றிற்கும் இடம் உண்டு. உயிர் உண்டு. உலகியலில் ஒவ்வொன்றின் சரியான இடத்தையும் கவிதையில் மட்டும்தான் ஒருவன் அறிய முடியும்.
உங்களது இந்தக் கேள்வியை கவிதைத் தொகுப்புகளின் தலைப்புகளை வாசிக்கும்போது நான் உணர்ந்ததுண்டு. மிக மிக சாதாரணமான ஒரு சொல்லை, சொற்றொடரை கவிதைத் தொகுப்பொன்றின் தலைப்பாக வைக்கும்போது அது கூடுதல் அர்த்தம் பொதிந்ததாக, கூடுதல் மர்மம் நிறைந்ததாக மாறிவிடும் விந்தையைக் கவனிக்கலாம். உதாரணத்திற்கு ‘கல்’ என்பதை ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பாக வைத்தால் அது அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு படிமம் என்ற தகுதியை எட்டி விடுகிறது. மேலும் ஒரே நேரத்தில் அது மிக மிகத் தனிமையான ஒன்றாகவும், அனைத்தின் சாரமான ஒன்றாகவும் திகழும். உலகியலில் வரும் ‘கல்’ என்ற சொல்லுக்கு இந்த அந்தஸ்து கிடைப்பதில்லை.
கவிதைக்குள் வரும் பொருட்கள் கவி ஆளுமையின் பிரதிநிதியே. நாற்காலியில் அமர்ந்திருக்கும் மனிதனோடு பேசுவதை விடவும் ஒரு நாற்காலியோடு பேசுவதையே கவிஞன் விரும்புவான். அவனுக்குப் பொருள் வெறும் பொருள் அல்ல, கவிதா கணத்தின் பெரும் வாய்ப்பு..
கே: மதநம்பிக்கைகளை அல்லது அதீத நாடகீய மதச் சடங்குகளை கேள்வி கேட்கும் கவிதைகளை எழுதியிருப்பது தைரியகரமானது. உதா:இசபெல்லாவின் இரவுகள், நீரோ நீ வாசி, சஜ்தாவில் குழந்தை போன்றவை. அதை சார்ந்த எதிர்வினைகளை எதுவும் வந்ததா? அப்படி எதிர்வினையாற்றப்பட்டால் உங்களது பதில் என்னவாக இருக்கும்?
ப: நீங்கள் குறிப்பிடுகிற மூன்று கவிதைகளுமே அந்த நோக்கில் எழுதப்பட்டவை அல்ல. ஒரு கவிதை வெவ்வேறு தளங்களில் வாசிக்கப்படுவது மகிழ்ச்சிதான்.
கே: உங்கள் கவிதைகளில் பெண்களின் நடமாட்டம் குறைவு, அம்மாவாக, மனைவியாக, குழந்தையாக சில இடங்களில் பெண்கள் வருகின்றனர் ஆனால் மழையிலிருந்து மகனுக்கு வாங்கிய பொம்மையை பாதுகாக்கும் கவிதையில் பிறர் பார்வையில் நீங்கள் தாய்மையை உணர்கின்றீர்கள். இயல்பாய் எப்போதேனும் தாய்மையை, பெண்மையை உங்களுக்குள் உணர்ந்ததுண்டா? இன்னொரு கவிதையில் தாய் முலையூட்டும் முப்பது நொடிகளுக்கு முன்னர் குழந்தைக்கு முத்தம் கொடுத்து இந்த அன்பும் அந்தக் குழந்தையின் உடலில் சேரும் தானே என்று ஏக்கத்தோடு கேட்கின்றீர்கள். இது பெண் உலகை முழுமையாய் உணர முடியாத்தன் வலியென்று எடுத்துக் கொள்ளலாமா?
ப: ஆண் குழந்தையைக் கொஞ்சவும் நான் ‘அழகி’ என்ற வார்த்தையையே பயன்படுத்துவேன். அதே போல குழந்தையைக் கொஞ்சும் தந்தை யாவருமே தாய்தான் என்பது என் எண்ணம். தாய் என்பதை ஒரு பாலினமாக அல்லாமல் ஒரு பண்பாக, தகுதியாக இவ்விடத்தில் நான் சுட்ட விரும்புகிறேன்.
பெண்மையை உணராத ஆண் இருக்க முடியுமா.. நிச்சயம் வாழ்வின் ஏதோ ஒரு கணத்திலாவது கட்டாயம் உணர்ந்தே இருக்க முடியும்.
முத்தம் கவிதையில் பெண் உலகை புரியாத வலி இல்லை. ‘நீ அவன்கிட்ட இத கொடுத்துடு’ என்ற பரிவுதான்.
கே: நிறத்தின் மணம் நுகர முடியவில்லை என்றொரு கவிதையில் சொல்கின்றீர்கள், அதே போல செடியின் நிழலில் தெரியாத பூவின் நிழல் அதன் மேலிருக்கும் பனியின் நிழல் அதை காண வேண்டும் என்கின்றீர்கள். இதெல்லாம் கனவுலகத்தின் நிகழ்பவையா? கனவில் கண்ட மூலப்பிரதியை வைத்துக் கொண்டு நனவை மெய்ப்புப் பார்க்கும் இந்த பணி பைத்தியக்காரத்தனத்தின் உச்சமா? கவிஞர்கள் இப்படித் தானோ என்ற கேள்வி வந்தால் அதற்கு உங்கள் பதில் என்ன?
ப:கவிதையில் கனவுலகம், இயல்புலகம் என்ற பிரிவில்லை – கவிதை உலகம் அவ்வளவுதான். கவிதைக்கு உள் இருக்கும்போது நமக்கு இந்த பேதங்கள் தோன்றுவதில்லை. கவிதைக்கு வெளியில் வந்து யோசிக்கும்போது இவை தோன்றுகின்றன. கவிதையின் உள் உலகத்தை வெளி உலகமாயும் சிருஷ்டித்த கவிகளையே நாம் மகாகவிகள் என்கிறோம். தினமும் ஒரே பாடலையே பாடிக்கொண்டிருக்கிற குயில் பைத்தியமென்றால், அடர் சிகப்பில் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிற பூ பித்தின் வடிவமென்றால் கவிஞனும் பித்தன்தான்..
கே: தன்னந்தனியாக நின்று எரியும் நெருப்பு கிழிவின் ஓசையும் கேட்கும் நுட்பத்தை எங்கிருந்து பிடித்தீர்கள். நெருப்பை நேர்மறையாகவும் பார்க்கலாம் எதிர்மறையாகவும் காட்டலாம். ஆனால் நெருப்புக்கு சொந்தமாய் ஒரு உணர்வுண்டு என்றுணர்த்தும் கிழியும் நெருப்பென்ற படிமம் எதை காட்டுகிறது?
ப: க. மோகனரங்கன் மொழிபெயர்த்த அப்பாஸ் கியரோஸ்தமியின் ஒரு கவிதை
நன்மைக்கும்
தீமைக்கும் அப்பால்
நீல நிறமாக இருக்கிறது
வானம்
இதை கவிதையாக மட்டுமல்லாமல் கவிதை உத்தியாகவும் கொள்ளலாம். கவிதையில் ஏதோன்றின் பண்பு நலன்களையும் அழித்துவிடும் வசதி உள்ளது. ஏதொன்றையும் புத்தம் புதிதாய் பிறப்பெடுக்க வைக்க கவிதையால் முடியும். ‘நூறு நூறு புலன்கள் முளைத்த புத்துயிரி நான்’ என்று கவிஞர் சபரிநாதன் குறிப்பிடுகிறாரே..
கே: உங்கள் பெரும்பாலான கவிதைகளில் காட்சிகள் கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்கின்றன. இதெல்லாம் திட்டமிடாமல் எழுத முடியுமா? உதா: “நான் அமரச் சென்ற நாற்காலியில் கத்தரி நிறப் பூ”, “மணல் ஓவியத்தில் கண்களில் கட்டெறும்பை ஊர விடுவது” “மஞ்சள் பூவனம் போல் ஆட்டோ ஸ்டேண்ட்” “நீர் நிலவில் ஒரு தவளை குதித்தெழ” “மழை காய்த்த பட்டு போன மரம்” இதை பின்புலமான விஷயங்களைச் சொல்லுங்கள். உங்கள் கவிதைகளை காணும் எல்லா காட்சிகளிலிருந்தும் படம் பிடிக்கின்றீர்களா? அந்த அளவுக்கான நுட்ப ரசனை கவிதை தொழிற்படுதலுக்கு தேவைப்படுகிறதா? சமகால கவிதைகளை இந்த நோக்கில் ஆராய்ச்சி செய்திருக்கின்றீர்களா?
ப: கவிதையில் எதையும் திட்டமிட்டு எழுதுவதில்லை. நமக்கு ஒரு கனவு வரும்போது அதில் நனவின் துணுக்குகளும் சேர்ந்தே கூட்டுக் கலவையாக நிகழுமல்லவா அதுதான் இந்தக் கவிதைகளிலும் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையை இதில் பின்பற்றலாம். ஒட்டுமொத்த சமகால கவிதைகளையும் இவ்விதத்தில் ஆராய்ச்சி செய்வது பொருத்தமாக இருக்காது.
கவிதைக்கு வலு சேர்ப்பவை படிமங்கள் தான். அதற்கு கவிஞன் உணர்வுத்தளம், காட்சித் தளம் என்ற இரண்டிலும் துடிப்போடு இயங்க வேண்டியுள்ளது. இந்த இரண்டிற்கும் மொழி வாயிலாக தன்னால் இயன்ற அதிகபட்சத்தை தந்துவிடவே கவிஞன் கவிதையில் முயல்கிறான்.
கே: இதயம் எதோ காரணத்தால் நின்று போன சில நொடிகளில் CPR என்ற செயல்முறையில் இதயத்தை மறுபடி துடிக்க செய்ய முடியும். அந்த செயல்முறையை தண்ணீர் குதித்தாடும் தவளையாக காட்டியிருப்பது வித்தியாசமான கவிதை. இதை மருத்துவ அறிவியல் கவிதைக்கு அருகே வைக்கலாம். தவளையின் துள்ளலை இதயத் துடிப்போடு ஒப்பிட எப்படித் தோன்றியது.
ப: இடைவிடாமல் குதித்துக் கொண்டே செல்கிற தவளையை நான் பார்த்ததே இல்லை, பெரும்பாலும் ஓரிடத்தில் நின்று கொண்டேயிருக்கிற அல்லது அரிதாகக் குதிக்கின்ற தவளைகளைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இடைவிடாது குதித்துக் குதித்துச் செல்கிற தவளையை பார்ப்பதற்கு நான் கவிதையை விட்டால் வேறெங்கே போக முடியும்? அப்படி பார்க்க முனைந்தபோது தோன்றியதே அந்தக் கவிதை.
கே: “ஜெகஜ் ஜோதியாய் நடக்க ஒளிர வேண்டுமென்ற அவசியம் இல்லை”இது வாழ்க்கையின் எல்லா அவநம்பிக்கையும் போட்டு உடைத்து சுக்குநூறாக்கும் கருத்தாக்கம். கிண்டல் தொனிக்கும் கருத்தியல் கத்தி கொண்டு கொல்ல துடிப்பவரை எள்ளி நகைக்கும் இறுமாப்பு. இதை எப்படி எழுதத் தோன்றியது? உங்களின் சில கவிதைகளில் நம் முன்னோடி கவிஞர் சிலரின் தாக்கம் இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. இந்த தாக்குதலை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?
ப: மழையில் நடக்கும் தீக்குச்சி கவிதை மீதான உங்கள் வியப்பு அப்படியே தொடர ஏதும் சொல்லாமல் அதை அப்படியே விட்டுவிடுகிறேன். இந்தக் கவிதையுமே கூட எந்த அதீத உணர்வெழுச்சியும் இல்லாமல் மிக இயல்பான ஒரு தளத்தில் எழுதிய கவிதைதான். அந்த இயல்புதான் உணர்வெழுச்சியா.. தெரியவில்லை..
எனக்கு என் அப்பாவின் ஜாடை இருக்கலாம். ஆனால் நான் என் அப்பா அல்ல. துவங்கும்போது ஒரு பிடிமானத்திற்கு நம் அபிமானிகளை பிடித்துக் கொள்வதில் தவறொன்றுமில்லை, அவர்களே நாம் சுயமாக நடப்பதற்கும் கற்றுத் தந்துவிடுவார்கள். நான் என் அசலான கவிதைகளைக் கண்டடைய நண்பரும் பதிப்பாளருமான ஸ்ரீனீவாசகோபாலனின் அக்கறையே முதன்மையான காரணம்.
***
லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்தார். தற்போது பெங்களூரில் மென் பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல் முகவரி : lavanya.sundararajan@gmail.com

