Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்உருகும் நிழல்

உருகும் நிழல்

ஆர்.சங்கரநாராயணன்

டோக்கியோ, 1949.

மழை பெய்துவிட்டு நின்றிருந்தது. GHQ கட்டிடத்தின் ஜன்னல்களில் மங்கலான வெளிச்சம் மட்டும் இருந்தது. கீழே சாலையில் அமெரிக்க இராணுவ ஜீப்புகள் சென்றுகொண்டிருந்தன. அவற்றின் டயர்கள் தேங்கிய நீரை வெட்டிச்சென்ற சத்தம், இரவு முழுக்க நகரத்தின் மீது ஒரு சலிப்பான இசை போல ஒலித்தது.

ஒகாமோட்டோ கெஞ்சி இன்னும் அலுவலகத்தில் இருந்தான்.

அவன் முன் திறந்துகிடந்த வாக்குமூலத்தில் ஒரு ஜப்பானிய மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். இரண்டு மணி நேரமாக விசாரணை நடந்துகொண்டிருந்தது. அறைக்குள் புகை நிறைந்திருந்தது.

மருத்துவர் மெதுவாகச் சொன்னார்:

“நாங்கள் கைதிகளைப் பயன்படுத்தினோம்.”

கெஞ்சி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தான்:

SUBJECT STATES HE HAD NO DIRECT KNOWLEDGE OF HUMAN EXPERIMENTATION.

மருத்துவர் திடீரென்று அவனைப் பார்த்தார்.

“நான் அப்படி சொல்லவில்லை.”

கெஞ்சி கண்களை உயர்த்தவில்லை.

அமெரிக்க அதிகாரி கேட்டார்:

“What did he say?”

கெஞ்சி சிறிது நேரம் தாமதித்தான்.

“அவர் நேரடி தகவல் இல்லை என்றார்.”

மருத்துவர் நாற்காலியில் முன்னே குனிந்தார்.

“இல்லை,” என்றார் ஜப்பானியத்தில். “நான் பொய் சொல்லவில்லை.”

அமெரிக்க அதிகாரி எரிச்சலாகச் சொன்னார்:

“Tell him to answer properly.”

கெஞ்சி மருத்துவரைப் பார்த்தான்.

அந்த மனிதனின் உதடுகள் உலர்ந்திருந்தன. கைகள் நடுங்கின. ஆனால் கண்கள் மட்டும் அமைதியாக இருந்தன.

“உண்மையை எழுதுங்கள்,” என்றார் அவர் மெதுவாக.

கெஞ்சி ஒரு விநாடி தயங்கினான்.

பிறகு ஜப்பானியத்தில் சொன்னான்:

“அமைதியாக இருங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களை சோவியத்துகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.”

மருத்துவரின் முகத்தில் இருந்த நிறம் மெதுவாக மாறியது.

அவர் நாற்காலியில் பின்னால் சாய்ந்தார்.

அதற்குப் பிறகு அவர் எதுவும் பேசவில்லை.

***

அடுத்த சில நாட்கள் கெஞ்சியால் சரியாகத் தூங்க முடியவில்லை.

ஒவ்வொரு காலையிலும் interrogation room-க்குள் நுழையும்போது, அந்த மருத்துவர் மீண்டும் அங்கே உட்கார்ந்து இருப்பது போல அவனுக்குத் தோன்றும். காலியான நாற்காலியைப் பார்த்தவுடனே வயிற்றுக்குள் ஏதோ இறுகும்.

மூன்றாம் நாள் மிசாகோ மெதுவாகக் கேட்டாள்:

“அவர் இன்னும் கீழே இருக்காரா?”

“யார்?”

அவள் பதில் சொல்லவில்லை.

சிகரெட் சாம்பலை தட்டிவிட்டு மீண்டும் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.

அன்று மதியம், மிசாகோ தனது தட்டச்சுப் பொறியின் முன் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய இடது கை ஆள்காட்டி விரலில் ஒரு பழைய வடு இருந்தது. அதைக் கெஞ்சி முன்பு பார்த்ததில்லை.

“என்ன அது?” என்றான்.

“1945,” என்றாள். “யோகோஹாமா. எரிந்த வீட்டுக்குள் ஒரு குழந்தையைத் தேடிக்கொண்டிருந்தேன். உடைந்த கண்ணாடி.”

“குழந்தை?”

“இறந்துபோயிருந்தது.”

அவள் மீண்டும் சிகரெட்டைப் பற்றவைத்தாள்.

“நான் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அறிக்கையில் அதை  ‘தீ விபத்து’ என்று எழுதினேன்.”

***

அடுத்த வாரம் அந்த மருத்துவர் காணாமல் போனார்.

அதற்கான அதிகாரப்பூர்வ பதிவு:

TRANSFERRED FOR FURTHER QUESTIONING.

அந்த வார்த்தையை தட்டச்சு செய்தது கெஞ்சிதான்.

அன்று இரவு அவன் வீட்டுக்குப் போகவில்லை.

உனோ ரயில் நிலையம் அருகே ஒரு சிறிய மதுக்கடையில் குடித்துக்கொண்டிருந்தான். வெளியே ரயில் சத்தம். அருகில் அமெரிக்க வீரர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர்.

கெஞ்சி தனது கைகளைப் பார்த்தான்.

அவன் திடீரென்று தம்பி ஹிரோஷியை நினைத்தான்.

1943-ல் அவர்கள் கடைசியாகச் சண்டையிட்ட நாள்.

“நீ கோழை,” என்று ஹிரோஷி சொன்னான்.

“நீ முட்டாள்,” என்று கெஞ்சி பதில் சொன்னான். “இந்தப் போர் தோற்கும்.”

ஹிரோஷி சிரித்தான்.

“அப்படின்னா நீ ஏன் இங்கேயே இருக்கிறே?”

அதற்கு கெஞ்சி பதில் சொல்லவில்லை.

மூன்று மாதங்கள் கழித்து ஹிரோஷி மஞ்சூரியாவுக்கு அனுப்பப்பட்டான்.

அதற்குப் பிறகு வீட்டுக்கு வந்த கடைசி கடிதத்தில் இருந்த ஒரு வரி மட்டும் எப்பொழுதும் நினைவில் இருந்தது:

“குளிர் ஆரம்பிச்சுடுச்சு”

***

அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்தபோது மிசாகோ அவனைப் பார்த்தவுடன் கேட்டாள்

“நீ சரியா இருக்கியா?”

“ஆம்.”

“பொய்.”

அவள் சிகரெட் பற்றவைத்தாள்.

“இந்த கட்டிடத்தில் எல்லாரும் ஏதாவது translate பண்ணிக்கொண்டே இருக்காங்க,” என்றாள். “சிலர் கோப்புகளை  வேறு சிலர் தங்களை.”

***

அன்று மாலை லெப்டினன்ட் கர்னல் மார்ட்டின் அவனை அழைத்தார்.

அவருடைய அலுவலகத்தில் யமடா கோப்பு திறந்துகிடந்தது.

“உட்கார்,” என்றார் மார்ட்டின்.

கெஞ்சி அமைதியாக உட்கார்ந்தான்.

மார்ட்டின் நேராக விஷயத்துக்குப் போனார்.

“நேற்று interrogation-ல் தேவையில்லாத தயக்கம்  இருந்தது.”

“அவர் உண்மையைச் சொல்ல முயன்றார்.”

“Everybody says that.”

“அவர் பயந்திருந்தார்.”

“நாமெல்லாம் பயந்திருக்கிறோம்.”

மார்ட்டின் சிகரெட் பற்றவைத்தார்.

“Okamoto, நான் உன்னை ஏன் இங்கே வைத்திருக்கிறேன் தெரியுமா?”

கெஞ்சி பதில் சொல்லவில்லை.

“Because you understand ambiguity. Fanatics are useless in intelligence work.”

அவர் கோப்பைத் திறந்தார்.

“இந்தப் புகைப்படங்கள் வெளியே போனால் என்ன ஆகும் தெரியுமா? Soviet propaganda. Political instability. Panic.”

“அப்படின்னா நாம என்ன செய்கிறோம்?”

“Editing,” என்றார் மார்ட்டின். “History is always edited.”

கெஞ்சி திடீரென்று கேட்டான்:

“என் தம்பியும் edit செய்யப்பட்டானா?”

மார்ட்டின் அமைதியாகிவிட்டார்.

“என்ன?”

“Missing in Manchuria,” என்றான் கெஞ்சி. “அதன் அர்த்தம் என்ன?

இறப்பா, கைவிடப்பட்டனா அல்லது மறக்கப்பட்டானா?

மார்ட்டின் அவனை நீண்ட நேரம் பார்த்தார்.

“உன் பிரச்சினை என்ன தெரியுமா?” என்றார் மெதுவாக. “நீ language-ஐ moral thing என்று நினைக்கிறாய்.”

“அப்படியில்லையா?”

“இல்லை. அது tool.”

***

அன்று இரவு கெஞ்சி ஷிஞ்சூகுவுக்குச் சென்றான்.

கருப்புச் சந்தையில் அந்த வயதான பெண் இன்னும் இருந்தாள்.

“Translator,” என்று அவள் சிரித்தாள்.

“அப்படிக் கூப்பிடாதே.”

“அப்போ என்ன?  பிசாசா ?”

அவள் மேசைக்குக் கீழிருந்து ஒரு சிறிய அட்டைப் பெட்டியை எடுத்தாள்.

“இது உனக்கு பிடிக்கும்.”

கெஞ்சி அதைத் திறந்தான். அதற்குள் ஒரு செல்லுலாய்ட் மனிதத் தலை இருந்தது. முகத்தின் வலது பகுதி உருகியிருந்தது.

“எங்கிருந்து கிடைத்தது?”

“வடக்கிலிருந்து.”

“Unit 731-aa?”

அந்தப் பெண் உடனே அவனைப் பார்த்தாள்.

“அந்தப் பெயரை இங்கே சொல்லாதே.”

கெஞ்சி தலையை மீண்டும் பார்த்தான்.

அது பாதியிலேயே உருகிய முகம் போல இல்லை.

பாதியிலேயே அழிக்கப்பட்ட சாட்சி போல இருந்தது.

அவன் அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். அன்று இரவு அவனால் தூங்க முடியவில்லை.

அந்த மருத்துவரின் முகம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.

“உண்மையை எழுதுங்கள்.”

***

அடுத்த நாள் காலை GHQ-வில் இரண்டு பேர் அவனுக்காகக் காத்திருந்தார்கள்.

ஒருவன் ராணுவ போலீஸ். மற்றவன் மெலிந்த அமெரிக்கர்.

“ஒகாமோட்டோ கெஞ்சி?” என்றார் அந்த மனிதர்.

“ஆம்.”

“நான் டாக்டர் ஃபெலிக்ஸ்.”

“மருத்துவரா?”

“சில நேரங்களில்.”

அவர்கள் அவனை ஏழாவது மாடிக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஜன்னல் இல்லாத அறை.

மேசையின் மீது மஞ்சள் நிறத் திரவம்.

ஃபெலிக்ஸ் நேராகக் கேட்டார்:

“அந்த மருத்துவர் உன்னிடம் என்ன சொன்னார்?”

கெஞ்சி அமைதியாக இருந்தான்.

“நீ mistranslate பண்ணினாய்,” என்றார் ஃபெலிக்ஸ். “ஆனால் முழுவதுமாக இல்ல.”

“என்ன அர்த்தம்?”

“நீ அவரைக் காப்பாற்ற முயற்சித்தாய். அதே நேரத்தில் உன்னையும் காப்பாற்ற முயற்சித்தாய்.”

கெஞ்சியின் தொண்டை உலர்ந்தது.

“அவர் இப்போது எங்கே இருக்கிறார்?”

ஃபெலிக்ஸ் பதில் சொல்லவில்லை.

அதற்குப் பதிலாக அந்தக் குவளையை அவன் பக்கம் தள்ளினார்.

“இதைக் குடித்துவிட்டு வீட்டுக்குப் போ,” என்றார். “கொஞ்ச நாள் தூங்கு.”

“அப்புறம்?”

“அப்புறம் தேவையில்லாத விஷயங்கள் நினைவிலிருந்து போய்விடும்.”

கெஞ்சி குவளையைப் பார்த்தான்.

பிறகு மெதுவாகத் தள்ளிவிட்டான்.

“நான் முடியாது.”

ஃபெலிக்ஸ் அவனை சில விநாடிகள் பார்த்தார்.

“People who keep digging,” என்றார் மெதுவாக, “usually disappear.”

***

அந்த இரவு கெஞ்சி வீட்டுக்குத் திரும்பவில்லை.

டோக்கியோ முழுக்க நடந்தான். அமெரிக்க ஜீப்புகள். ஜாஸ் இசை. தெருவோரத்தில் தூங்கும் குழந்தைகள். குடிபோதையில் சண்டையிடும் முன்னாள் வீரர்கள். ஒரு பாலத்தின் கீழ், ஒரு கொரிய தொழிலாளி தனது வீட்டுக்கான கடிதத்தை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“நீ ஜப்பானியனா?” என்று கேட்டான்.

“ஆம்.”

“இதுல என்ன எழுதிருக்குனு சொல்ல முடியுமா?”

கெஞ்சி கடிதத்தை எடுத்தான்.

அவனுக்கு கொரிய மொழி முழுமையாகத் தெரியாது.

ஆனால் சில வார்த்தைகள் புரிந்தன.

அம்மா.
திரும்பி வா.
குளிர்.

அவன் நீண்ட நேரம் அந்தக் காகிதத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு மெதுவாகச் சொன்னான்:

“அவங்க நீ உயிரோட இருக்கணும் னு சொல்றாங்க.

அந்த மனிதன் அழ ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து தனது coat-க்குள் இருந்து ஒரு சிறிய டப்பாவை எடுத்தான்.

“சூப்,” என்றான். “சாப்பிடுறியா?”

அவர்கள் இருவரும் பாலத்தின் கீழ் உட்கார்ந்து குளிர்ந்த சூப்பை பகிர்ந்து சாப்பிட்டார்கள். மேலே ரயில் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், தண்ணீர் சிறிது அதிர்ந்தது.

அந்த மனிதன் திடீரென்று சிரித்தான்.

“நான் வீட்டுக்குத் திரும்பும்போது,” என்றான், “என் அம்மா என்னை அடிப்பாள்.”

கெஞ்சி பல மாதங்களுக்கு பிறகு முதல் முறையாகச் சிரித்தான்.

***

அடுத்த வாரம் அவன் வேலைக்குப் போகவில்லை.

மூன்று நாட்கள் கழித்து military police அவன் அறைக்குச் சென்றார்கள்.

ஆனால் அவன் அப்போது நிலத்தடியில் இருந்தான்.

கழிவுநீர் சுரங்கங்களில்.

அங்கு மறக்கப்பட்டவர்கள் வாழ்ந்தார்கள்.

ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியர் ஒவ்வொரு இரவும் ஒரே ஹைக்கூவை நினைவுபடுத்த முயற்சிப்பார். முதல் இரண்டு வரிகள் மட்டும் அவருக்கு நினைவில் இருக்கும். மூன்றாவது வரிக்கு வந்தவுடன் நின்றுவிடுவார். பிறகு மறுபடியும் ஆரம்பிப்பார்.

கெஞ்சி அவரருகில் உட்கார்ந்தான்.

“என்ன அது?” என்றான்.

“தெரியவில்லை,” என்றார் ஆசிரியர்.

“மூன்றாவது வரி?”

“இல்லை. நான் ஏன் அதை நினைவில் வைக்க விரும்புகிறேன் என்றே தெரியவில்லை.”

***

1952-ல் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்த நாளில், சுரங்கச் சுவரில் யாரோ கரியால் எழுதினார்கள்:

நாங்கள் இன்னும் இங்கே இருக்கிறோம்.

கெஞ்சி நீண்ட நேரம் அந்த வார்த்தைகளைப் பார்த்தான்.

பிறகு கீழே எழுத எண்ணினான்.

ஆனால் அவன் கை மேலே போன இடத்தில் நின்றது.

இடது கை சற்று நடுங்கியது.

***

ஆர்.சங்கரநாராயனன் – தென்காசி மாவட்டத்தை சார்ந்தவர். பணி நிமித்தமாக மும்பையில் வசித்து வருகிறார். 10 வருடங்களுக்கும் மேலாகத் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய செயல்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன் . 2017 ல் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எழுத்தாளர் நீலபத்மநாபன் அவர்களின் அறக்கட்டளை சார்பில் சிறந்த கவிதைக்கு வழங்கப்படும் “தலைமுறைகள் “ விருது எனது “மாயவிதைகள் என்ற கவிதைக்கு கிடைத்து. தொடர்ச்சியாக சிறுகதைகள், கவிதைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: rbisankar2009@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here