வெடிப்பு

ஜார்ஜ் ஜோசப்

1

தினமும் இந்திரனோடுகூட சோமன் போதைமிகுதியில் வீடு திரும்புவது வாடிக்கையாகிப் போனது. 

சோமன் எங்கேயும் வெளிசெல்லாத நாட்களில், இந்திரன் வாசலில் வந்து நின்று ‘சோமண்ணே’ என்று கத்துவான். டூம் அடிவாங்கிய; சிவப்பு வண்ணம் மங்கியிருக்கக்கூடிய யூனிகார்ன் பைக்கில் இந்திரனின் வருகை நிகழும். அதில் அமர்ந்தபடி பிறரைத் தன்னிடம் வரவழைப்பதிலும் புகையிழுத்தவாறு இருப்பதிலும் கர்வம் பளிச்சிடும்.

அம்மாச்சியும் தாத்தாவும் எத்தனைமுறை சோமன் வீட்டில் இல்லை என்று சொன்னாலும் நகரமாட்டான். ’மாப்ள நீ சொல்லு, மாமா உண்மையிலே வீட்டுல இல்லையா?’, என்று குறளிடமும் சிலமுறை விசாரித்துவிட்டுத்தான் அகல்வான். ஒருமுறை சென்றவன் மீண்டும் வரமாட்டான் என்பதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் சக்கரங்கள் வாசலுக்குத் திரும்பலாம்.

அனுமதி கேட்காமலே வீட்டிற்குள் நுழைவான். இரு ஆண்டுகள் தொடர்ச்சியாய் கடன்கேட்டு வந்துபோவதன் விளைவாய், அது சகஜமாகி இருந்தது. நள்ளிரவு சமயத்தில் முகப்பறையில் வந்து அமர்ந்துகொண்டு ‘பசிக்குது சாப்பிடணும்’ என்பான். சோமன் உட்பட உறங்கிக் கொண்டிருந்த எல்லோரும் எழுந்தமர்ந்து, குறளின் அம்மாச்சி அவனுக்குத் தோசை சுட்டுக் கொடுப்பதைப் பார்த்தபடி இருப்பார்கள். அப்போது வீட்டையே ஒரு மாய நிழலுருவம் ஆக்கிரமித்துக் காற்றையெல்லாம் உறிஞ்சி எடுப்பதுபோல ஆகிவிடும். பழுதுபட்ட ஒலி பெருக்கியிலிருந்து சிதறும் வெண்கல உருளல் போன்ற தன் குரலுக்கு இந்திரன் ஓய்வே கொடுப்பதில்லை. தாத்தா, தன் மகன்மேல் குற்றம் என்பதால் வாய் திறவாமல் புலம்புவார். அது எப்போதும் குறளின் செவிகளைத் தீண்ட மறந்ததில்லை. 

ஒவ்வொருமுறை இந்திரன் நான்கைந்து சொற்கள் பேசியப் பின்னும் சோமனின் கையில் தான் தந்த ஒரு லட்ச ரூபாயை, இரண்டாகவோ மூன்றாகவோ மனவேகத்தைப் பொறுத்து நான்காகவோ மாற்றி விடுவான் என்பதால் எங்கேனும் கடன் வாங்கி விசிறியடிக்கலாம் என்ற முடிவுக்கும் அவர்களால் வர முடியவில்லை. வெகுகாலமாய் அது நான்கரை இலட்சத்தில் தொடர்வது குறளுக்கே ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

பொங்கல் விடுமுறை முடிய ஒருநாளே மீதமிருக்கையில், ‘அண்ணே நீ எவன்கிட்ட பணத்தெ கொடுத்தியோ அவன்கிட்ட இன்னிக்குக் கூட்டிட்டுப் போ. உன்ன நம்பி பிரயோசனமில்ல. நானே என் பணத்த வாங்கிக்கிறேன்’ என்று இந்திரன் சோமனை காலையே அழைத்துச் சென்றிருந்தான். இரவு வாசலில் இந்திரனின் வாகனச் சத்தம் ஒலித்து மறைந்தபோது, முகமெங்கும் இரத்தம் வழிய சோமன் அசையமுடியாமல் சுவர்க்கட்டையில் கைத்தாங்கலாய் நின்றுகொண்டிருந்தார். பொதி சுமக்க முடியாமல் சோர்ந்து நிற்கும் கழுதையைப் போல். என்ன நடந்தது என்று விவரிக்கக்கூட முடியாதபடி வாய் வீங்கிக் கன்னிப் போயிருந்தது. ‘எம் பிள்ளைய எத்தனை பேர் சேர்ந்து அடிச்சானுங்களோ’, என்று அவரது அம்மா அழுதபடி தன் காட்டன் சீலையால் காயங்களை ஒத்திக் கொண்டிருந்தார். புன்னகைத்தவாறே படுத்திருந்த சோமன், மிக அந்நியமாகத் தோன்றத் தொடங்கினார் குறளுக்கு.

‘இதெல்லாம் உனக்குத் தேவையாடா’, என்று தலையில் கைவைத்தபடி மௌனமானார் குறளின் தாத்தா. 

வீடு நிம்மதியாய் உறங்கக்கூடிய ஓர் இரவை இனி ஒருபோதும் காணாதோ என்ற திகைப்பு உண்டானபின், குறள் தன் இயல்பிலிருந்து வெகுதொலைவு வந்திருந்தான். அவன் கனவுகள் துணுக்குறும் குரூரக் காட்சிகளால் நிறைந்தன. எங்கும் பாயும் இரத்த நதி வெள்ளத்தில், துடுப்புப் போடுபவனாக மாறிப் போயிருந்தான். ஒரே ஒரு முறை இந்திரனைக் கொன்றுவிட்டால் பழைய உற்சாகம் மீண்டுவிடும் என்று எண்ணுமளவு அது நீண்டது. நடந்த அனைத்துக்கும் காரணமாகவுள்ள, நடப்பது நடக்கட்டும் என்று குடித்துத் திரிகிற சோமனின் மீதும் அதே ஆத்திரம் மடைமாறத் தொடங்கியது. 

சிறுவயதில் இருந்தே குறளுக்குச் சோமன், அடிக்கடி சொல்லும் கதைகள் சில உண்டு. அவை எதிர்பார்ப்புகள் அல்லது கனவுகள்போல்தான் இருக்கும் என்றாலும் அவற்றைக் கதைகளாக்க அவரால் முடிந்தது. அக்கதைகளில் ஒருநாள் குறள் கேம்பிரிட்ஜில் அரசியல் படிக்கும் மாணவனாக; ஒருநாள் பாராளுமன்றத்தின் இளம் உறுப்பினனாக, வேறொரு நாள் கமலின் மருதநாயகத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் அறிமுகமாகும் இளம் நடிகனாக எனப் பல பல ரூபங்களை எடுத்திருப்பான். 

ஏனோ இப்போது இந்திரனுக்கும் சோமனுக்கும் நடுவே பைக்கில் நசுங்கிக் கொண்டு செல்கையில், சம்பந்தமின்றி அஞ்ஞாபகம் வருவது விசித்திரமாக இருந்தது குறளுக்கு.

’பணத்துக்கு என்னால அப்பாக்கிட்ட பதில் சொல்ல முடியல. நீங்களே நேர்ல வந்து சொல்லிடுங்க’, என்று இந்திரன் சோமனை அழைக்கவே, ஏற்கனவே கடுங்காயங்களுடன் திரும்பிய நிகழ்வை மனதில் கொண்டவராகக் குறளையும் துணைக்குப் போகச் சொல்லியிருந்தார் அவனது அம்மாச்சி. மறுநாள் மாதிரிப் பொதுத் தேர்வு என்றாலும் இந்த ஞாயிறு நமக்கானதில்லை என்ற தீர்மானத்துடன் போகச் சம்மதித்தான் குறள்.

ஊமைவெயில் சாலையில் படிந்து வெப்பம் கூட்டியது. சென்னை நெடுஞ்சாலையில் சீறும் கனரக வாகனங்களை முந்தியும் பிந்தியுமாய் இந்திரன் பைக்கைச் செலுத்திக் கொண்டிருந்தான். தனக்குப் பின்னால் எந்த உணர்ச்சியும் காட்டாத முகத்தோடு தன் மாமன் அமர்ந்திருப்பதைக் கண்டும் காணாமல் திரும்பினான் குறள். காவிரிப் பாலம் தாங்கள் செல்லும் வாகனத்தைப் போலவே ஆட்டம் காணுவதாய்ப் பட்டது. நாணற்புற்களின் பாதங்களை நனைத்துப் பாய்ந்தபடி இருந்தது நதி. ஊசலாடிய வாகனம் இந்திரனின் குணமேறிய பித்துப் பிடித்த குதிரைபோல் தோன்றவே தனக்குள் சிரித்துக்கொண்டான். பாலத்தின் முடிவில் பிரியும் கும்பகோணத்தார் சாலை மார்க்கமாய் பைக் திரும்பியது.

மத்தியச் சிறையிலிருந்த நண்பன் சேகரைச் சந்திக்க சென்றபோதுதான் சோமனுக்கு அறிமுகமானான் இந்திரன். சின்ன வயது. ஆனால் திருட்டுக் கேஸில் பிடிபட்டிருந்தான். அத்தனை பெரிய உருவம் பிடிபடாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இந்திரனின் அப்பா உப்பிலியப்பன், ஒளிர்ந்து அடங்கியுள்ள தேசியக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது தெரியவரவே அவன் சிறையில் இருந்த காலம்வரை வாரம் தவறாமல் பீடிக் கட்டுகளுடன் சந்திப்பதை சோமன் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 

இழிபெயர் தந்துவிட்டான் என தன் அப்பாவே, வெளி எடுக்க முயலாதபோது சோமனின் வருகையும் நட்பும் அவனுக்கு ஆதரவாய்ப் பட்டது. நெடுங்காலச் சிறைவாசி சேகரின் தயவால் தன்னை மேய வந்த சதை தின்னிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் அவனால் முடிந்தது. சேகர் சிறையிலே இரத்தப் புற்று முற்றி இறந்துபோகவே, நட்பு இந்திரனுடன் ஆழப்பட்டது. சோமனால் நினைவுகூர முடிந்தவரை, அப்போது இத்தனை மூர்க்கமும் பித்துக்குளித்தனங்களும் இந்திரனிடம் இருக்கவில்லை. சிகரத்தின் உச்சியிலிருந்து பள்ளத்தாக்கைப் பார்க்கும் குதூகலிப்போடும் பயவுணர்வோடும்தான் சுற்றிக் கொண்டிருப்பான். 

ஐந்தாண்டுகள் கழித்து அவனை மத்திய பேருந்து நிலையத்தை ஒட்டிய ஒயின்ஸில் சந்திக்க நேர்ந்துபோது இருவருக்குமே பிரிய மனமில்லை. இந்திரன் சுலோச்சனையை மணந்து சரியாக மூன்றுமாதங்கள்கூடக் கழியாத சமயம். சோமன் இன்னமும் அன்றைய தினம் தான் வாய் மூடி அமைதிக் காத்திருக்கலாம் என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. 

’ஈஸ்ட் இந்தியா கம்பெனி தயாரிச்ச நல்ல மெட்டல் பீஸு. டெஸ்டிங்லாம் அடிச்சாச்சு. கைமாத்திவிட்டாப் போதும் பல சி கிடைக்கும். அதுக்குக் கொஞ்சம் முன் பணம் தேவைப்படுது’ என சோமன் ஆசையூட்டவே தன் மனைவியின் நகையைப் பெற்று அடகுக்குத் தந்திருந்தான் இந்திரன். சோமன் தனக்கு ஆசையேறக் காரணமானவர்களைத் தற்போது மறந்தே போய்விட்டார் போல்தான் இருக்கிறது.

தான் வாங்கிய கடனே தன்னோடுகூட சார்ந்தவர்களையும் அலைக்கழிக்கிறது என்று கழிவிரக்கம் கொண்டபடி பைக்கில் அமர்ந்திருந்தார் சோமன். இந்திரனின் அப்பாவைச் சந்தித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதையும் நினைத்துக் கொண்டார். எத்தனை கீழிறக்கம். வீழ்ச்சியின் முற்றத்தில் நின்றபடி, கெஞ்சும் நிலையில் ஒருவனைப் பார்க்கப் போவதையும் அதற்கு அத்தாட்சியாய் மாப்பிள்ளை உடன் வருவதையும் யோசிக்கையில் குதித்துவிடலாமா என்றிருந்தது. விடுவிக்க முடியாத நுகத்தடியில் நிரந்தமாய்ப் பிணைக்கப்பட்டதொரு சலிப்பு அவர் முகத்தில் குடிகொண்டிருந்தது. அது அழிக்கவும் அழிபடவும் போதுமான கசப்பை மறைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. மாயமான எதுவொன்றைப் பற்றியும் அறியும் ஆவலே ஏமாறவும் ஏமாற்றவும் வைத்துவிட்டது என மனதுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டார்.

2

திருவானைக்காவல் பிரதான சாலையைத் தாண்டி விநாயகர் நகருக்குள் புகுந்துகொண்டது வாகனம். பரந்த வீதி. இரு பக்கத்திலும் மாளிகை போன்ற வீடுகள்.

’இது எந்த ஏரியாவுல வருது!’

‘ஸ்ரீரங்கம் மாப்ள’ என்றான் இந்திரன்.

பைக் சாலையின் முடிவில் இருந்த பங்களா முன் ஒதுங்கி நின்றது. மூவரும் இறங்கிக் கொண்டனர். 

‘அண்ணே கொஞ்சம் இருங்க. நான் உள்ள போயிட்டு உங்களக் கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்’ என்றவன் அகண்ட கதவைத் திறந்து உள்ளே மறைந்தான். வீட்டுத் தோட்டத்தில் செழித்திருந்த மாமரங்களில் ஒன்று வீதியைப் பெருக்கும்படி தாள அசைந்துகொண்டிருந்தது. 

‘நம்ம வீட்டுக்குள்ள தாந்தோனியா நுழையிற நாயி. நம்மள வாசல்ல நிக்க வச்சிட்டுப் போவுது’, என்று தன்னிடம் புலம்பிய சோமனைப் பொருட்படுத்தாமல் சிறிது தள்ளியிருந்த பெட்டிக் கடையில் நீர்புட்டி வாங்கி அருந்தினான். ஜோப்பில் வைத்திருந்த பேசியை இடக்கையில் எடுத்துத் தனக்கு வந்திருந்த மெசேஜ்களுக்குத் துரிதமாய்ப் பதிலளித்து பாக்கெட்டுள்ளே சொருகினான் குறள்.

தேசத்தின் சகல பிரசித்திப் பெற்றவர்களுடனும் தனக்குத் தொடர்பு இருப்பதுபோல் காட்டிக் கொள்ளும் சோமனின் இயல்பை மிகச் சமீபமாகத்தான் புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தான். எதுவொன்றை எடுத்துக் கொண்டாலும் தனக்கு அதில் மேதைமை ஊற்றெடுப்பதாகவே பேசுவதும் அகத்தியருக்கும் போகருக்கும் தெரியாத மூலிகைகளையும்தான் அறிவேன்; எவனையும் அமர்ந்த இடத்தில் தூக்குவேன் என்றெல்லாம் அவர் உளறிக் கொட்டுவதையும் கண்டு சிரிக்காமல் இருக்கவும் கற்றுக் கொண்டான். இந்தக் கதைகள் யாவும் குடிமிகுதியில் மட்டுமே பிறக்கக் கூடியவை. இந்திரனின் பிடிக்குள் அவர் சிக்காதிருந்தால் அவை வெறும் நகைச்சுவையாகவே தொடர்ந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டான்.

வீட்டின் பக்கவாட்டில் தோட்டத்தைப் பார்த்தபடி அமைந்திருக்கும் பலகணியில் இந்திரனும் அவனது மனைவியும் கோபமாய்ப் பேசிக் கொள்வது தெரிந்தது. அவனைவிட மிகவும் வயது குறைந்த பெண் என்பதும் அவர் மகப்பேறுக்கு காத்திருக்கிறார் என்பதும் புலப்பட்டது. இத்தனை பெரிய உருவம் ஒரு சிறிய பசலைக் கொடி போன்ற தேகத்தின் முன் இறைஞ்சுவது வேடிக்கையாய்த் தெரிந்தது. 

சிறிது நேரத்தில் வாசலில் ஆட்டோ வந்து நின்றது. மாளிகையின் பிரம்மாண்டக் கதவுகள் திறந்ததும், நீண்ட சிகையை கொண்டையிட்டபடி நீலச் சுடிதார் அணிந்து வந்தவர் கையில் பிடித்திருந்த தோள் பையை ஆட்டோவினுள் வீசிவிட்டுத் தானும் ஏறினார். கோபமும் அலட்சியுமுமான பார்வை தங்கள் மீதும் விழுந்ததை சோமனும் குறளும் உணர்ந்துகொண்டனர். இந்திரன் ஆட்டோ கிளம்பிப் போகும்வரை எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தான்.

’பைத்தியக்காரி’

‘கோச்சிட்டுப் போறாங்களா?’

‘அதெல்லாம் இல்ல மாப்ள. அவளுக்கு அப்பப்பக் கிறுக்குப் புடிச்சிக்கும். நீங்க உள்ள வாங்க’, என இருவரையும் உள்ளே நகர்த்திவிட்டு, இந்திரன் தன் பைக் டேங்க் கவரில் மிச்சம் வைத்திருந்த மதுவை வாயில் கொட்டிக் கொண்டான்.

3

வீடு மிகச் சுத்தமாக இருந்தது. அறையினுள் இருவரின் மீதுமிருந்த மதுவின் நாற்றம் துலக்கமாகத் தெரிந்தது. தன் மீதும் நெடி ஒற்றிக் கொண்டு விட்டதோ எனத் தோள்களை முகர்ந்து பார்த்தான். அடிப்பதுபோலவும் அடிக்காதது போலவும் பட்டது. பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டு தலைகுனிய உட்கார்ந்திருந்த சோமனைப் பார்க்கையில், குடை சாயப் போகிறது என்ற எண்ணம் வலுப் பெறத் தொடங்கியது. பாண்ட் பாக்கெட்டில் கிடக்கும் ஐம்பது ரூபாய் தாராளமாக, வீடு திரும்பப் போதுமானது என்ற நினைத்தபடி இந்திரன் சென்றிருந்த திசைப் பக்கம் நோக்கினான். தூரமாய் இரு ஆண்கள் பேசிக்கொள்ளும் சத்தம் பிசிறு பிசிறாய்க் கேட்டுக்கொண்டிருந்தது.

தனக்குச் சண்டை பழக்குவித்த; உறக்கத்தில் கால் தூக்கிப் போடும் பழக்கத்தை ஒருபோதும் குறையாகக் கருதாத; அரசியல் உள்வாங்கக் கற்றுத் தந்த; பருவத்தின் ஆசைகளால் மெத்தையில் உருண்டபடி பொழுதைப் போக்குகையில் வெளியே சென்று விளையாடுமாறு உற்சாகப்படுத்திய; எப்போதும் ஏதோ வகையில் துணைநின்ற மாமனை, அந்த ஒரு கணம் பரிவோடு பார்க்கத் தோன்றியது. சோமன் தன் முகம் நிமிர்த்தி, வளைந்து சுருண்டிருந்த மீசையைக் கைச் சீப்பால் நீவியபடி உப்பிலியப்பனைக் காண ஆர்வமுடன் தயாராகி இருந்ததைப் பார்க்கையில் சப்பென்று ஆகியது.

‘குறளு டைனிங் டேபிளப் பாத்தியா, ஒன்னுமே இல்ல. கொஞ்சம் முட்டக் கோஸும் ரசமும் கிடக்குது. இத செஞ்சு டயர்டாகி இவன் பொண்டாட்டி ஓடியே போயிட்டா வேற. நல்ல சோத்துக்கு வழி இல்லாமத்தான் நம்ம வீட்டுல வந்து நிக்கிது நாயி. பணம் மட்டும் இருந்தாப் போதுமா…’ என்கையில் தங்கள் பின்னிருந்து தடித்ததொரு பெண் உருவம் மறைந்துபோனது போல்பட்டது குறளுக்கு. 

‘நீங்க வாங்கி அடகு வச்ச செயினு, இவரு பொண்டாட்டியோடதுதானே!’, என்றான்.

சோமன் வாய் மூடிக் கொள்ளவும் இந்திரன் வரவும் சரியாக இருந்தது.

‘அண்ணே வாங்க அப்பா கூப்பிடுறார். மாப்ள வா, வந்து எங்கப்பாவ நமஸ்காரம் பண்ணிக்கோ’, என்று இந்திரன் சொன்னதும், தயக்கத்துடனே எழுந்து சோமனின் பின் சென்றான். 

‘நம்மைவிட எவனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ கிடையாது’, என்று பேசும் சோமனின் சொற்களையும் யார் காலில் யார் விழுந்தாலும் அதைக் கண்டித்துப் பேசும் அவர் இயல்பையும் எண்ணி தைரியப்பட்டுக் கொண்டான். ‘நமஸ்காரம்’ என்ற சொல், செவியை நீங்காது தொடரவே செய்தது. மெல்ல அது மறுநாள் பரீட்சையின் பதற்றத்தையும் விஞ்சுவதாக மாறியது. மிக லேசானதாகவோ அல்லது நிரந்தர முள்ளாகவோ இந்தச் சந்திப்பு மாறக்கூடும் எனப்பட்டது அவனுக்கு.

மாடி அறை விசாலமாய் இருந்தது. தடித்த மூக்குக் கண்ணாடி அணிந்தபடி உப்பிலி ஒற்றை மெத்தை நாற்காலியில் கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்தார். பச்சை வேட்டியும் கை வைத்த வெள்ளை பனியனும் அணிந்திருந்தார். தன் மகனுக்கு ஒப்பான பரந்த உடல். நல்ல உயரமும்கூட. முன்தலை நன்கு ஏறியிருந்தது. காமராஜருக்கும் காந்திக்கும் மத்தியிலான முகத்தோற்றம். ஆனால் விழிகளோ பதுசாக நெருங்கி வேட்டையாடிச் செல்லும் வல்லூறின் கண்களை ஒத்திருந்தது.

அசைவின்றிப் பார்த்தவாறே நின்றவனை அவரது கண்கள் எடைபோடுவதுபோல் சந்தித்துவிட்டுத் திரும்பின. பார்வை சத்தமின்றி ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியின் மீது கிடந்தது. சோமன் தனக்கு முன் தள்ளாட்டத்திற்குரிய நிலையிலும் பவ்யமாக நிற்பதைக் கவனித்துக் கொண்டான் குறள். 

‘டே சுலோச்சனா எங்க வேகமாப் புறப்பட்டுப் போறா?’

‘அவ வீட்டுக்குத் தங்கச்சி வந்துருக்கான்னு போயிருக்காப்பா. சொர்க்க வாசலுக்குப் போயிட்டு நாளைக்கு வந்துடுவா’

‘ஓ புள்ளத்தாச்சி ஏகாதசிக்குப் போறாளாக்கும்!’

‘அப்படித்தான் சொன்னாப்பா’

‘மடையா’

இந்திரன் வாய் திறக்கவில்லை.

‘தண்ணியப் போட்டுட்டு வந்துருக்கீங்களா? என்ன சோமா இதெல்லாம்’, என்று பார்வையைத் திருப்பினார். 

அவர்கள் இருவரையும் நோக்கி எழுப்பப்படும் கேள்விகள் தன்னை நோக்கி நீள்வதாகவே பட்டது குறளுக்கு.

வேகமாக முன்னேறி அருகில் சென்ற சோமன், ‘வணக்கம்பா’ என்று மடித்து வைத்திருந்த அவரது வலக்காலின் பாத வெடிப்பைத் தொட்டு தன் மார்பில் ஒத்திக் கொண்டார். வாயில் ஒன்று வாழ்க்கையில் ஒன்று எனச் சத்தமாய்க் கத்த வேண்டும் போலிருந்தது குறளுக்கு. பல்லிளித்த சோமனின் முகத்தைத் தன் பங்கிற்குச் சிலமுறை குத்தலாமா என்று உள்ளங்கையை இறுக்கிக் கொண்டான். 

‘அது யாரு?’

‘என் மாப்ளதான்ப்பா. தங்கச்சி புள்ள. டே இங்க வா, தாத்தாவக் கும்பிட்டுக்கோ’, என்று சோமன் சொன்னதும், மார்பின் வேகம் கூடித் துடித்தது குறளுக்கு. தான் ஒருபோதும் தன் வாழ்நாளில் செய்திடாத ஒன்றிற்காக நிர்ப்பந்திக்கப்படுவதை எண்ணித் தயங்கியபடியே முன் நகர்ந்து தன் மாமனைப் பார்த்தான். 

செய் என்பதாக சோமானின் தலையும் கண்களும் நிர்ப்பந்தித்தன. வேகமாய் வெளியேறிவிட்டால் என்ன என்று யோசித்தபடியே மௌனமாக நின்றான்.

தவிர்க்க நினைக்கும் தவிப்பை உப்பிலியால் நன்றாகவே உணர முடிகிறது என்பது அவர் கண்ணசைவில் குறளுக்குப் புரிந்தது. இருந்தும், மரியாதையை நிகழ்த்து என்று கட்டளையிடும் அமைதியை நீட்டித்தார். இந்திரன் தன் சிவந்த கண்களோடு ‘கூச்சப்படாத’ என்றான். தன் உள்ளங்கால்கள் வியர்ப்பது தெரிந்தது. அங்குள்ள எல்லோரும் ஒரு நிமிடம் சிலைகளானால், நிதானமாக அவர்களது முகங்களின் மீது மூத்திரம் பெய்யலாமெனக் கனாச் செய்தான். ஒரு சுளுக்கியாய் மாறி கொட்டிச் சாவது மேன்மை என்று நினைத்தான். அத்தனையும் அடுத்த கணமே வடிந்து இயலாமையோடு மெல்லத் தன் வலக்கையைத் தாழ்த்தி அவரது சுரசுரப்பான பாதத்தைத் தொட்டான். 

வாய் மிகச் சன்னமாக ‘நமஸ்காரம்’ என்றது. தான் பயன்படுத்த நேர்ந்திடாத அச்சொல், எங்கிருந்தோ றெக்கை முளைத்துத்தான் வந்திருக்க வேண்டும் என்று எண்ணினான்.

’ஏன்டா சோமா இப்ப என்னத்தான் பண்ணிட்டு இருக்கெ!’

‘ரியல் எஸ்டேட் தானுங்கப்பா’

‘அப்ப ஒன்னும் செய்யலனு சொல்லு. வயசு என்னாகுது இன்னுமா நீ திருந்தல.’

சோமன் புன்னகைத்தபடி நின்றார்.

‘இந்திரா டே இது என்ன புதுசா சோமனக் கூட்டிட்டுச் சுத்திட்டிருக்க. ஒரு சின்ன பையன வேற கெடுக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா! கண்ணனாட்டம் இருக்கான் அழகா!’

‘அப்படிலாம் ஒன்னுமில்லேப்பா. நானும் சோமண்ணனும் ஒரு பிசினஸ் பண்ணலாம்னு இருக்குறோம்ப்பா. சுலோச்சனா அதுக்குத்தான் நகையெல்லாம் தந்துச்சு…’

‘ச்சே போங்கடா வெளிய. உருப்படாத கழுதைகளா’ என்று செய்தித் தொலைக்காட்சியின் சத்தத்தைக் கூட்டியபடி முகம் திருப்பிக் கொண்டார் உப்பிலியப்பன். இந்திரன் அப்போதுதான் கடன் பெற்றிருப்பதையே உப்பிலியிடம் சொல்கிறான் என்பது தெரிந்தது. அவசியமற்ற வருகை என சோமுவைப் பார்த்தான் குறள்.

அந்த அறை அதற்குமேல் யாரையும் நிற்க அனுமதிக்காத அமைதியால் நிரம்பியது. 

4

இந்திரன் அவர்களை வம்படியாக உணவறைக்கு அழைத்துச் சென்று இருத்தினான். அவன் நினைத்ததைச் சாதிக்கும்வரை செய்ய நினைத்ததைச் செய்யாமல் விடமாட்டான் என்பது இருவருக்குமே தெரியும். அவனது அம்மா ‘ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டுத்தான் போவணும். அப்பா அப்படித்தான் சிடுசிடுனு பேசுவாங்க. அத யோசிக்காமச் சாப்பிடுங்க’ என்று தட்டில் சோற்றைப் பதமாகச் சரித்தார். 

தன் கையைப் பிடித்து, உணவு மேசை இருக்கையில் அமர்த்திய சோமனை எரிச்சலுடன் பார்த்தான் குறள். அந்நியர் முன் தான் ஒரு புழுதியாக்கப்பட்டு விட்டதாய்த் தோன்றியது அவனுக்கு. தன் இயல்பு இதுவல்ல என்று தன்னையே தேடினான். சோற்றின் நடுவே பருப்பு நெய் ஊற்றப்பட்டது. கடலைப் பருப்புகள் மிகுதியாய்க் கலந்த முட்டைகோஸ் பொரியல் தட்டினோரம் வைக்கப்பட்டது.

‘சொன்னாக் கேளுமா, எனக்கு வேணாம்மா. இன்னிக்கு ஏந்தான் ஓவராக் கொஞ்சுறியோ’ என்று உணவூட்ட வந்த அம்மாவின் கையை மறித்து, அவர் இடையைத் தன் அகன்ற தலையால் மோதி விளையாடிக் கொண்டிருந்தான் இந்திரன். காட்டெருமையின் தலை, முதிய பசுவின் கழுத்துமேல் ஓய்ந்துகொண்டது போலிருந்தது அக்காட்சி. அழுகை முட்டிவிடும் போலாகிவிட்டது குறளுக்கு. 

‘நீ என்னடா தம்பி லொட்டாங்கய்ய போடுற’ என்ற இந்திரனின் அம்மாவைப் பாராமல்,

‘நான் இடது கைக்காரேன் பாட்டி’ என்றவனாய்த் தன் மாமனை ஏறிட்டான். 

தன் கையைத் திருத்துமாறு பார்த்த மாமனை முறைத்தான். இயற்கைச் சுபாவம், பழக்கத்தை வென்றவாறு தேர்ச்சியாய்ச் செயல்பட்டது. எல்லோர் மீதுமுள்ள பூச்சுகளைத் தன் இடக்கை விரல்கள் சுத்தம் செய்வதாய்ப் பட்டது. பிசைந்த சோற்றை, உருண்டைப் பிடித்தான். சோமன் ஒருவன் முகத்திலாவது விசிறினால் என்ன என்று யோசித்தான். 

மயக்கத்தில் இருந்ததுபோல் தலையாட்டியபடி அசைந்துகொண்டிருந்த சோமன், குறளின் கண்களைப் பார்க்கத் தயங்கியபடி தலைகவிழ்த்தார். பொரியலில் இருந்த கறிவேப்பிலைகளை அவரது விரல்கள் தேடி ஒதுக்கிக்கொண்டிருக்க, உதடுகளில் விரிந்த புன்னகையின் மறைவில் மலர்ந்த வாதை எச்சிலாய்த் தொடைமீது ஒழுகிக் கொண்டிருந்தது. 

உருண்டை பிடிக்கப்பட்டப் பருக்கைகளை ஒருங்கே தன் வாய் நோக்கி குறளின் இடதுகை எடுத்து வர, அவனது வலக்கை விரல்கள் ஒவ்வொன்றும் மேஜைக் காலின் சிலாம்புகள் கையிலேறச் சுறுசுறுப்பாகத் தங்களைச் சுரண்டிக் கொண்டன.

***

ஜார்ஜ் ஜோசப் – இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல் (1996) இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் ‘தமிழ் நாவல்களில் மெய்யியல் நோக்கு’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டுவருகிறார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதிவருகிறார். ‘எமரால்ட்’, ‘பெருநெஞ்சன்’ ’அலங்கம்’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளும்; ‘பூனைகளில்லா உலகம்’, ‘இஸ்மாயில்’ ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் சீர்மை பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. ‘எமரால்ட்’ தொகுப்பிற்காக திருக்கார்த்தியல் (2024) விருதும் ‘பெருநெஞ்சன்’ தொகுப்பிற்காக படைப்பு விருதும் (2025) பெற்றவர். சமீபத்தில் காலச்சுவடு வெளியீட்டில் வந்த இவரது குறுநாவல் தொகுப்பான ‘புளித்த அப்பம்’ கவனம் பெற்று வருகிறது. தொடர்புக்கு: george.joshe@gmail.com,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here