Homeஇதழ்கள்2026 இதழ்கள்பி இராமன் கவிதைகள்

பி இராமன் கவிதைகள்


தமிழில் : பா.செ. வடிவேல்

வெளியே மரங்களில்
விம்மும் குளிர்
ஒரு சடலத்திற்குள்
விருந்திற்கு வந்தது

சிதைக்கு தீமூட்டியபோது
மரங்களிடமே மீண்டும்
திரும்பிச்சென்றது
•••

கவிதை
உள் சுருண்டு
என் எலும்பில்
சென்றுத் தட்டினேன்
உயிர் நடுங்கும் விதமொரு
ஒலி எழுந்தது
•••

வழி எங்கே?
வழி எங்கே?
துளசி மாடத்தின் மேல்
கொடித்தளிர்கள்
அனைத்தும் பரவசத்தில்

பந்தல் அமைக்கவில்லை
படரத்துடிக்கும் அதன்
பரவசத்தை
சிதையாமல் காக்கிறேன்
•••

ஆழமே
நின் காதலிலெங்கும்
மீன்கள் கொத்துவேலை
செய்த தடங்கள்
•••

நிசப்தத்தின் மரணக்குறிப்பு
காட்டுக்குள் சென்றால்
மௌனமாகிவிடும் நண்பனோடு
மட்டுமே நான் வருவேன்

உங்களோடு வர மாட்டேன், வந்தால்
இத்தனை காலம்
நீங்கள் விழுங்கி வைத்திருந்த
சத்தத்தை வாந்தியெடுப்பீர்கள்

செம்மண் பாதைகள்,
பசும்பரப்பில் போய்விரியும் காட்சி தொந்தரவாகும்

காண்போமென்று நினைத்த கிளிகள்,
இருந்த கிளையோடு
மறைந்து போகும்

போத்தலை உடைத்த சில்லுகளை
விலங்குகளின்
காலடிதோறும் புதைப்பீர்கள்

செங்குத்து மலையில் ஏறும்போது
நீண்ட நீண்ட மூச்சிரைப்பில்
பேசுவீர்கள்

காட்டுக்குள் சென்றால்
மௌனமாகும் என் நண்பன்
மரித்து விட்டான்:
உறுதியை விடுவதாயில்லை
வரமாட்டேன் நான்
நீங்கள் எவ்வளவு கதறி அழுதாலும்
•••

என் வெள்ளாரக் கண்களை
கறுப்பாக்கித் தருவேனென்று
முன்னொருமுறை தந்த வாக்கை
சூரியன் இப்போது காப்பாற்றும்

என்றே தோன்றுகிறது
காரணம்
இந்த நான்கு மணி பளிங்கு சூரியன்,
தாய்த்தண்டுகளை
கிளைகளை
இலைகளை
வழிப்போக்கரை
பேருந்தின் பலகையை வாசிக்கும்
கண்ணுக்கு நிழலான கைகளை

கறுப்பாக்கியுள்ளது
•••

கம்பீரம்
சிரிப்பைப் பற்றி
பல்லினிடையிலுள்ள
கடுகுமணிக்கு அறிந்த அளவே
நான் அறிவேன்

நீங்கள் சிரியுங்கள்
சிரிப்பின் நடுவே
களங்கமற்று
நானுமிருப்பேன்
•••

கருங்கல்லை
ஊமை
என்று அழைப்பது போலத் தான்
மரணம் பற்றி கவிதை எழுதுவதும்
•••

இந்தக்குளத்தின்
கற்படிகளை
பச்சைநீர் மறந்துவிட்டு போயிற்று

மறந்து விட்டதை
மீளத்தழுவ
மழைக்காலம் வரவாயிற்று
•••

அம்மா

என்
குடத்தில்
நிறைய
நதிக்கொரு
புன்சிரிப்பு போதும்
•••

விடைபெறல்

இப்போது நான் காட்டும் சைகைகளோடு சேர்த்துக்கொள்ள
வேண்டியவையே
வருஷங்களுக்கு முன்பே நான் சொன்ன சில சொற்கள்
இதோ, இந்த மயக்கத்தோடே ஒத்துப்போகும்
சில வருஷங்களுக்கு முன்பே நான்
கண்ட கனவு

அதனாலேயே
ஒரு தீர்க்க தரிசி
என்று என்னை ஏளனம் செய்யாதே
இப்போது நீ
பிரிந்து விலகுவாய்
என்று அறிந்ததனால் அல்ல
வருஷங்களுக்கு முன்பு
நான் கண்ணீர் உதிர்த்தது
•••

தொண்டையில் நஞ்சு சிக்கியும்
சாகாத பரமசிவனே,

சிறியதொரு பீப்பி சிக்கி
இந்தக் குழந்தை போய்விட்டதே.

கபம் அடைத்து
முதியவரும் போய்விட்டாரே.

மீன் சிக்கி
மீனவனும் போய்விட்டானே.

சொல் அடைத்து
கவிஞனும் போய்விட்டானே.

தொண்டையில் நஞ்சு சிக்கியும்
சாகாத பரமசிவனே,

சிறியதொரு பீப்பி சிக்கி
இந்தக் குழந்தை போய்விட்டதே.
•••

சிதைவு

ஆசை முறிவால் நேர்ந்த சிதைவை
தூர்வாற எடுக்கும் காலத்தை
அளக்க ஒரு கருவியை
நான் கண்டுபிடிப்பேன்
அதைக் கணக்கில் கொண்டு
இனிச் செயல்பட.
கடந்துவிட்ட காதல் விரக்தியை
மீண்டும் முன்னோக்கி நகர்த்தும்
காலை வெட்டியகற்ற.
சொல்லவேண்டிய இடத்தில்
சொல்லவேண்டியது போல
சொன்னதாலேயே
பேய்பிடித்த
ஒரு கனவை,
ஓர் அக அழைப்பை,
வேரோடு பிடுங்கி எறிய…

ஆனால்,
இதற்கெல்லாம் ஏற்ற
நேரம் கழிந்துவிட்டதை
அறியாமலே
சிதைந்து கொண்டிருக்கிறேன் நான்
•••

அழாதவர்கள்

எங்கே இந்த முகத்தின்
சங்கடம் பதுங்கிய ரகசிய இடங்கள்?

மென் வெளிச்சம் மின்னும் கன்னத்திலா?
காதின் பின் ஒதுக்கிய முடியின் நுனியிலா?

தேடுவதற்கு வந்த இரவிற்கு முன்னால்
பதறாமல் நிற்கிறாள் மெல்லிய புன்னகையுடன்
•••

கோடையில் ஒரு மரணம்

வேர்
நீரை உறிஞ்சியெடுக்கிற சப்தத்தில்
மங்கிய கிணற்றில்

இன்று காலை
ஓர் ஆள்
முங்கி மரித்தான்
•••

பழைய வீட்டின் ஓர்மைகள்

பழகிய மரணங்கள் மண்ணைவிடப்
பழகி உறைந்து கனத்து பொருளாகிப்
பழகிய மரணங்கள்

மரணத்தின் வேடங்களை பூணத்தொடங்கும் காரணமறிந்த காரணக்காரர்கள்
இங்கே இருந்து ராமநாமம் ஜெபித்தனர்.
இறுதியில் ஒரு துளி வாயில் ஊற்றி கொடுத்தனர்
இறுதியில் ஒரு துளி நீருக்காக பிளர்ந்து வெளிறியது உதடுகள்

மூப்பை மனிதர்களுக்கு நல்கி
நித்திய இளமை அனுபவித்தது
அந்தப் பழமையான வீடு.
இயற்கையும் அவ்வண்ணமே உல்லாசித்தன
சில சில சொற்களோடு பூக்கள் உதிர்ந்தன.
அவற்றின் இதழ்களை அலகில் எடுக்க ஏங்கியப்
பறவைகள் எவ்வளவு ரகசியமாய் மரித்தன!
கதை முழுவதும் அறிந்ததில்லை ஆனால் ஒருவனும் கேட்கவில்லை:

[ எப்படித்தான்
இத்தனை பூக்கள் வாடின?
பறவைகள் மடிந்தன? ]

சுடுரத்தம் ஓடும் நரம்புகளில் பரவிக்கொண்டிருக்கிறது முதுமை
ஒரு மலருக்கு தன் காலம் தெரியும்
உதிர்வதற்கு மட்டும் யாருமில்லை சாட்சி.
ஓர் அந்தியில் தெற்கு முற்றத்தில்
மரணம் நெருங்கிய ஒரு பூனை வந்து சாய்ந்தது.
பல்லுயிர் பெற்ற வயிறு சுருங்கி வீங்கிக் கிடந்தது
திரிவிளக்கு வரிசையாய் ஏற்றப்பட்டன

முதுமையில் எரியும் இதயத்துடிப்பு போல
நினைவழிந்த அந்த வீடு கெட்டு அடங்கியது

புதியதொரு
மரணம் துடித்து தொங்கியது
அறையின் மின்விசிறியில் கடந்த இரவில்.

***

பி.ராமன் – மலையாளக் கவிதையின் சுருக்கமான, படிமங்கள் கொண்ட, உரைநடைக் கவிதையின் முகமாக அறியப்பட்டார். பின்னர் செறிவான செய்யுள்மொழி கொண்ட கவிதைகளை நோக்கி நகர்ந்தார். தொடர்ச்சியாக கவிதைகளை முன்வைத்த விவாதங்களை உருவாக்குபவர். கவிதைநிகழ்வுகளை ஒருங்கிணைப்பவர். மொழியாக்கம் செய்பவர் என பல தளங்களில் செயல்பட்டுவருகிறார். மலையாள பழங்குடிக் கவிதைகளை மையக் கவிதையோட்டத்திற்குக் கொண்டுவந்த முன்னோடி என அறியப்படுகிறார்.


பா.செ. வடிவேல் – தேனியைச் சேர்ந்த இலக்கிய வாசகர். தொழில் முறையில் வழக்குரைஞர் . சட்டம் முதுகலைப் படிப்புக்காக கேரளம் சென்றவர், மலையாள நாட்டுப்புற பாடல்களில் ஈர்க்கப்பட்டு மலையாளம் வாசிக்கப் பயின்று, தற்போது மலையாளம்-தமிழ் மொழிப்பெயர்ப்புகளில் ஈடுபட்டு வருகிறார். மின்னஞ்சல்: vaigaipavadivel@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here