Home Blog Page 12

பிரயாணம்

0

எடித் வார்டன்

தமிழில் : பாலா இளம்பிறை

ன்னுடைய பெர்த்’தில் படுத்திருந்த நிலையிலேயே, மேலேயிருக்கும் பெர்த்’தில் கால் நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கும் அந்த நிழலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அவளது மூளையில் இரயிலின் சக்கரங்கள் வேக வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. மேலும் மேலும் ஆழமாகும் அவ்வட்டங்கள் விழிப்பின் தெளிவான எல்லைக்குள் அவளை உள்ளிழுத்துக் கொள்கின்றன. படுக்கைப் பெட்டிகள் வசதி கொண்ட, அந்த இரயில் ஆழ்ந்த அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஈரமான கண்ணாடிச் சன்னலின் ஊடாக திடீரெனத் தோன்றும் விளக்குகளையும் நகரும் நீண்ட இருள் பகுதிகளையும் பார்த்துக் கொண்டே வந்தாள். அவ்வப்போது தலையைத் திருப்பி நடுவிலிருக்கும் கம்பியையும் தாண்டி, தனக்கு மேலாக தொங்கிக் கொண்டிருக்கும் திரைச்சீலையின் இடையில் இருக்கும் கம்பியின் வழியாக அங்கே படுத்திருக்கும் தனது கணவனை மறைத்திருக்கும் திரைச்சீலையைப் பார்த்துக் கொள்கிறாள். 

அவனுக்கு ஏதாவது தேவைப்பட்டுக் கேட்கும் போது, அது தன் காதில் விழாமல் போய்விடுமோ என்கிற பதட்ட சிந்தனையோடே இருந்தாள். கடந்த சில மாதங்களாக அவனது குரல் மிகவும் பலவீனமாகிவிட்டிருந்தது. அது சரியாகக் கேட்காமல் பதிலுக்கு உடனடியாக அவளால் எதிர்வினையாற்ற முடியாத போது, அவன் எரிச்சலுற்றான். அந்த எரிச்சல், பிடிவாதம் எல்லாமுமாய்ச் சேர்ந்து அவர்களுக்கிடையில் புலப்படாத ஒரு குழந்தைத்தனமான அந்நியத்தன்மையை வெளிப்படுத்தியிருந்தது. ஒரு கண்ணாடித் துண்டின் இரண்டு பக்கமும் இருக்கும் இருவர், ஒருவருக்கொருவர் மிக நெருக்கத்தில் இருப்பது போல் உணர்வதும், கிட்டத்தட்ட தொடுதலை உணர்கிற நிலையில் இருப்பதும். ஆனால் அவர்களால் கேட்கவோ பதிலுரைக்கவோ முடியாததாகவும் – அவர்களுக்கிடையேயான தொடர்பு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டிருந்தது. அந்த அந்நிய உணர்வை குறைவாகவேணும் அவள் அறிந்தே இருந்தாள். மேலும் அவனது தளர்ந்து கொண்டிருக்கும் வார்த்தைகளுக்குப் பின்னாலும் அவளுடைய பரிவின் பிரதிபலிப்பில் கூட அது எதிரொலிப்பதை சமயங்களில் அவள் கற்பனை செய்துகொள்வாள். சந்தேகமேயில்லை, நிச்சயமாய்த் தவறு அவளுடையது தான். நோயின் தேவையற்ற பாதிப்புகள் எதுவும் தன்னை அண்டாதவாறு அவள் தன்னை மிகுந்த ஆரோக்கியத்துடன் எப்போதும் வைத்துக் கொண்டிருந்தாள். இங்கு, தன்னைத்தானே நொந்து கொள்ளும் அந்த கூச்ச உணர்வில், அவனுடைய பகுத்தறிவற்ற தன்மை குறித்த எண்ணமும் கலந்திருந்தது – அவனுடைய அந்த ஒன்றுக்கும் ஆகாத இத்தகைய கொடுமைகளுக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருப்பதாக அவளுக்குள் ஒரு சலசலப்பு இருந்து கொண்டேயிருந்தது. திடீரென நிகழ்ந்துவிட்ட இந்த மாற்றங்களின் தன்மை அவளை முற்றிலுமாய் தயாராகாத நிலையில் வைத்திருந்தது. சரியாக ஓராண்டுக்கு முன்னால் வரையிலும் அவர்களது இதயத் துடிப்புகள் ஒரே சீரான தாள லயத்தோடு துடித்துக் கொண்டிருந்தன. வற்றிப்போகாத எதிர்காலத்தைப் பற்றிய அபரிமிதமான நம்பிக்கை அவர்களுக்குள் சம அளவில் இருந்தது. இப்போது அவர்களுடைய ஆற்றல்களானது ஒன்றோடொன்று ஒத்துப் போகும் நிலையில் இல்லை. அதாவது அவளுடைய வாழ்க்கையானது தற்போது இன்னும் சற்று முன்னோக்கிச் சென்று, நடப்புக்கும் நம்பிக்கைக்கும் உரிமை கோர முடியாத அளவுக்கு அவளைத் தள்ளியிருந்தது. அதே சமயத்தில் பின்தங்கிவிட்ட அவளது வாழ்க்கையானது இதையும் கடந்து செல்வதற்கான போராட்டமாகிப் போயிருந்தது. 

அவர்கள் தங்களது திருமண உறவுக்குள் நுழைந்த போது, ஈடு செய்ய முடியாத குறைகள் ஏராளமாய் இருந்தன – உப்பு சப்பில்லாத தகவல்களை, உண்மைகளை மனமற்று இருக்கும் குழந்தைகளின் மீது திணிக்கும் வெள்ளையடிக்கப்பட்ட பள்ளி வகுப்புகள் போல், அவள் வெறுமையுடன் இருந்தாள். அவளுக்குள் நிகழ்ந்த அவனது வருகையானது, சூழலின் மந்தநிலைகளைக் கலைத்துப் போட்டு நிகழ்காலத்தைப் பற்றிய பெருத்த எதிர்பார்ப்புடன், தொலைதூர சாத்தியக் கூறுகளையும் உள்ளடக்கியதாக மாற்றியது. ஆனால், கண்களுக்குப் புலனாகாதவாறு அந்த எல்லையானது சிறிது சிறிதாக சுருங்கிக்கொண்டே வந்தது. 

வாழ்க்கைக்கு அவள் மீது ஒரு வன்மம் இருந்தது. அவள் தனது சிறகுகளை விரிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படவே இல்லை. ஆறு வாரங்களுக்கு இதமான காற்றைச் சுவாசித்தால், அவனுடைய உடல்நிலை சீராகும் என்று ஆரம்பத்தில் மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அவனது உடல்நிலை தேறி வரும்போது, அவ்வாறான உறுதிமொழியில் வறண்ட காலநிலையுள்ள ஓரிடத்தில் குளிர்காலத்தைக் கண்டிப்பாகக் கழிக்க வேண்டியதும் அடங்கும் என்பது விளக்கப்பட்டிருந்தது. அவர்கள் அழகான தங்களது வீட்டை விட்டுவிட்டு, திருமணப் பரிசுகள், புத்தம் புதிதான தளவாடங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் அடைத்து வைத்துவிட்டு கொலராடோவுக்குச் சென்றனர். தனக்கு நடந்த பொருத்தமிக்க அந்தத் திருமணத்தைப் பார்த்து வியக்கவோ அல்லது தனக்கு இப்போதைக்கும் பிரமிப்பூட்டும் அந்தத் திருமண ஆடைகளைப் பற்றியோ வாழ்த்து மடல்களைப் பற்றியோ பார்த்து பேசி அவள் மீது பொறாமைப்பட அங்கே யாரும் இல்லையே என்று அவளுக்கு வெறுப்பாக இருந்தது. அவனது நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே வந்தது. எதையும் நேருக்கு நேர் அணுகும் சுபாவம் கொண்ட அவளுக்கு, தன்னால் எதிர்கொள்ள முடியாத அளவிலான தந்திரமான பல சிரமங்களால் தான் சூழப்பட்டிருப்பதாக அவள் உணர்ந்தாள். இன்னமும் அவனை அவள் உறுதியாக நேசித்துக் கொண்டேயிருக்கிறாள். ஆனால் படிப்படியாக, தீர்மானிக்க முடியாத அளவுக்கு அவன் அவனாக இருப்பதை நிறுத்திக்கொண்டு விட்டான். அவள் யாரை மணந்திருந்தாளோ அந்த மனிதன் வலிமையானவன். துறுதுறுவென ஆற்றலும் மென்மையும் திறமையும் கொண்டவன். பொருளாதாரத் தடைகள் என்று நாம் நினைப்பவை அனைத்தையும் தகர்த்து நம்மைத் தெளிவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைபவன். ஆனால், அவளே இப்போது அவனுக்கும் பாதுகாவலாக இருக்கிறாள். எந்தத் தொந்தரவும் அவனுக்கு நேர்ந்து விடாமல் அவன் காக்கப்பட வேண்டும். வானமே இடிந்து விழுகிற நிலை வந்தாலும் அவனுக்கு இப்போது கொஞ்சமாவது மாட்டிறைச்சிச் சாறு வழங்கப்பட வேண்டும். நோயாளியை வைத்திருக்கும் அறையின் வழக்கங்கள் அவளை குழப்பத்தில் ஆழ்த்தின. நேரத்துக்கு மருந்துகள் வழங்க வேண்டிய நடைமுறைகள் யாவும், புரிந்துகொள்ள முடியாத சில மதச் சடங்குகளாகவும் வீணான கதைகளைப் போலவும் தோன்றின.  

அவனுடைய – அதே அரதப் பழசான ‘தான்’ என்கிற அவனுடைய பலவீனத்தின் அடர்த்தியை அவள் இப்போதும் ஊடுருவும் அவனது கண்களின் வழியாக காணத்தான் செய்கிறாள். இவையெல்லாம் நினைவில் நிலைக்கும் தருணங்கள். ஆம். அப்படித்தான்.. ஆனாலும், அவனது இன்றைய நிலை குறித்த அடியாழத்தின் வெறுப்புணர்வை அவன் மீதான பீறிட்டெழும் நெகிழ்வான பரிதாப உணர்ச்சியானது அனைத்தையும் துடைத்துப் போட்டு விடுகிறது. ஆனால் இந்த மாதிரியான தருணங்கள் மேலும் வலுப்பெறுவது அரிதாகிவிட்டது. சமயங்களில் அவன் தனது தோற்றத்தால் அவளைப் பயமுறுத்தினான். ஆழ்ந்து கிடக்கும் அவனது உணர்ச்சிகளற்ற முகமானது ஓர் அந்நியனைப் போல் தோன்றச் செய்தது. அவனது குரல் மிகப் பலவீனமாகவும் கரகரப்புடனும் இருந்தது. உலர்ந்து போன அவனது உதடுகள் வெளிப்படுத்தும் மெல்லிய புன்னகை கூட ஒரு தசைச் சுருக்கம் போல் இருந்தது. ஆண்மையின் வழக்கமான கரடுமுரடான நலத்தை இழந்து நிற்கும் அவனது மென்மையான தோலை வருடிப் பார்ப்பதை அவளது கைகள் தவிர்த்துவிட்டன. ஒரு விசித்திர விலங்கைப் பார்ப்பது போல் அவள் அவனைத் திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு நேரத்தில் தான் மிகத் தீவிரமாய் நேசித்த ஒரு மனிதன் தான் இவன் என்கிற நினைப்பு கூட அவளைப் பயமுறுத்தியது. தன்னுடைய இந்த மாதிரியான அச்சத்தில் இருந்தெல்லாம் தப்பிப்பதற்கு அவள் எவ்வளவெல்லாம் துன்புற்றிருக்கிறாள் என்பதை அவனிடம் தெரிவிப்பதற்கு இன்னும் பல மணி நேரங்கள் இருக்கின்றன. ஆனால், பொதுவாக அவள் தன்னை மிகவும் மென்மையானவளாகக் கருதிக் கொண்டாள். ஒருவேளை அந்த நினைப்பானது, அவள் தொடர்ச்சியாக அவனுடன் தனிமையில் இருந்ததால் ஏற்பட்டதன் விளைவாகக் கூட இருந்திருக்கலாம். மேலும் உணர்வுபூர்வமான வலுவான சுற்றத்தால் சூழப்பட்டிருக்கும் தன்னுடைய குடும்பத்துடன் இருந்த போதிருந்த நிலையென்றால் கூட அவள் தன்னை சற்று வேறுபடுத்தித் தான் உணர்ந்திருப்பாள். இறுதியில் மருத்துவர்கள் அவனை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு ஒப்புதல் தந்த பிறகு, அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மருத்துவர்களின் அந்த முடிவானது எதற்காகவென்று அவளுக்குத் தெரியும். அது அவர்கள் இருவருக்கும் தெரியும். அதன் பொருளானது, அவனது இழப்பு விரைவில் நிகழப்போகிறது என்பதே. ஆனாலும் அந்த உண்மையை அவர்கள் நம்பிக்கையூட்டும் வேடிக்கைப் பேச்சுகளாலும், சமயங்களில் அதை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளும் அலங்கரிப்பிலும் கழித்தனர். உண்மையில் அவள் தங்களது பயணத்தின் நோக்கத்தையே மறந்து விட்டாள். அடுத்து வரும் ஆண்டுக்கான திட்டங்களை வகுக்கும் குறிப்புகளில் ஆர்வத்தோடு தன்னை இலயிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள்.    

இறுதியில், மருத்துவமனையில் இருந்து கிளம்பும் அந்த நாளும் வந்தது. மருத்துவர்கள் ஒருபோதும் அவர்களைக் கைவிட மாட்டார்கள் என்கிற கொடூரமான அச்சம் அவளுக்குள் இருந்து கொண்டேயிருந்தது. கூடவே எப்படியாவது கடைசி நேரத்தில் தனது நம்பிக்கை பொய்த்துவிடும் – அவன் தன்னை ஏமாற்றி விடுவான் என்கிற அச்சமும். மருத்துவர்களும் தங்களுக்குப் பழக்கமான துரோகங்களில் ஒன்றை மறைத்துத்தான் வைத்திருந்தார்கள். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அவர்களிருவரும் இரயில் நிலையம் வரை வந்தார்கள். முழங்கால்களுக்கு மேலாக ஒரு கம்பளியும், முதுகுக்கு ஒரு மெத்தையையும் கொண்ட படுக்கை இருக்கையொன்றில் அமர வைக்கப்பட்டான். அப்படியொரு நிகழ்வை விரும்பாத அவள் அறிமுகமான அனைவருக்கும் வருத்தங்கள் ஏதுமின்றி விடைபெற்றுக்கொண்டு சன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். 

முதல் இருபத்து நான்கு மணி நேரம் நன்றாகவே கழிந்தது. அவன் கொஞ்சம் புத்துணர்வோடிருப்பது தெரிந்தது. சன்னலுக்கு வெளியே பார்ப்பதும் இரயில் பயணங்களின் நகைச்சுவைகளைப் பகிர்வதும் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. இரண்டாவது நாள், சூயிங்கம் மென்று கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் கொண்ட முகத்தோடு இருந்த குழந்தையொன்றின் உணர்ச்சிகளற்ற பார்வையால், எரிச்சலுற்று சோர்வடைந்தான். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது கணவனின் நிலை பற்றியும் அவருக்கு எதுவும் தொந்தரவுகள் நேரக் கூடாது என்றும், அந்தக் குழந்தையின் தாயிடம் தன் நிலையை விளக்க வேண்டியிருந்தது. வண்டியிலிருந்த மொத்த பேரும் தாய்மையுணர்வுடன் வெளிப்படையாக ஆதரிக்க, ஒருவித கசப்போடு அந்தக் குழந்தையினுடைய தாய் அவளது விளக்கத்தை ஏற்றுக்கொண்டாள்.  

அன்றைய இரவு உறக்கமின்றித் தவித்தான். காலையில் ரொம்பவும் காய்ந்து கொண்டிருந்த அவனது உடம்பைப் பார்த்து உறைந்து போனாள். அவன் மிக மிக பலவீனமாகிப் போய்க் கொண்டிருக்கிறான் என்பது உறுதியாயிற்று. சின்னச் சின்ன எரிச்சல்கள் இருந்தாலும், அந்த நாளின் பயணம் மெதுவாகவே கழிந்தது. அவனது சோர்வடைந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அவள், அதன் சுருக்கங்களில் நிற்காமல் ஓடுகிற இரயிலின் அதிர்வையும் சலசலப்பையும் கண்டாள். அவள் தனது உடல்நிலை தளர்ந்து போகும் அளவுக்கு அனுதாபத்தோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பயணத்தில் உடனிருந்த மற்றவர்களும் அவனைக் கவனிப்பதை உணர்ந்தாள். அவனைக் கவனிப்பதிலும் சக பயணிகளின் விசாரணைப் பார்வைகளுக்கும் இடையிலாக ஊசலாடிக் கொண்டிருந்தாள். கரும் புள்ளிகள் கொண்ட அந்தக் குழந்தையின் பார்வையும் விளையாட்டும் அவன் மீது ஊர்கின்ற ஈயொன்று அவனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது. மிட்டாய்கள், பாடப் புத்தகங்கள் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு தொந்தரவு செய்வதை அந்தக் குழந்தை நிறுத்தவில்லை. ஒரு காலை இன்னொரு காலோடு மடக்கி வைத்துக்கொண்டு, உறுதி குலையாமல் அவனையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே அவர்களைக் கடந்து செல்லும் பெட்டிகளின் காவல் ஊழியன் ஒருமுறை நிதானித்து நின்று பார்த்து விட்டு, ‘பயணிகளுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்படுமா என்ற மனிதாபிமான சேவை எண்ணத்தோடு’ அங்கிருந்தவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தான். மேலும் அங்கே மண்டையோடு பதிப்பித்த தொப்பியணிந்த மனிதன் ஒருவன் தனது மனைவியின் உடல்நிலை குறித்து கவலையுடன் பேசிக் கொண்டிருப்பதையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.  

ஒரு சலிப்பான ஆக்கிரமிப்போடு மணித்துளிகள் கடந்து கொண்டிருந்தன. மாலை நேரத்தில் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். அவன் தனது கையை அவளது கைகளோடு பொருத்திக் கொண்டான். அந்த ஸ்பரிசம் அவளைத் திடுக்கிட வைத்தது. அவன் அவளை நெடுந்தொலைவில் இருந்து அழைப்பதைப் போலிருந்தது. கையறு நிலையில் அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது புன்னகை ஓர் உடல் வாதையைப் போல், அவளுக்குள் பாய்ந்தது. 

“ரொம்ப சோர்வா இருக்கீங்களா?” ,அவள் கேட்டாள். 

“இல்லை.. ரொம்ப இல்லை.” 

“நாம சீக்கிரமாவே வீட்டுக்குப் போயிடலாம்.” 

“ஆமா, ரொம்ப சீக்கிரமா.” 

“நாளைக்கு இதே நேரம் நாம அங்கே இருப்போம்” 

அவன் தலையசைத்தான். அங்கே இருவருக்குமிடையில் சிறிது அமைதி நிலவியது. அவனைப் படுக்க வைத்து, குனிந்து தவழ்ந்து சென்று தனது படுக்கைக்குத் திரும்புகையில், இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அவர்களிருவரும் நியூயார்க்கில் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொண்டாள். அவளது சுற்றம் அனைத்தும் அவளைச் சந்திக்க இரயில் நிலையத்துக்கு வருகை தருவார்கள் – அந்தக் கூட்டத்தில் வட்டமாகச் சூழ்ந்திருக்கும் பதட்டமற்ற அவர்களின் முகங்கள் அவளை அரவணைப்பதைக் கற்பனை செய்து பார்த்தாள். அவர்கள் அவனிடம் சென்று உரத்த குரலில், ‘அவன் நலமோடிருக்கிறான்.. சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும் என்று சத்தமிட்டுச் சொல்ல மாட்டார்கள்’ என்று நம்பினாள். துன்பத்துடனான நீண்ட காலத் தொடர்புகளால் ஏற்படும் நுட்பமான அனுதாபங்கள், குடும்ப உணர்வுகளின் மீது ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்தாமல் அதன் கரடுமுரடான அமைப்பு முறைகள் அவளை உறுத்தின. 

திடீரென, அவன் அழைப்பது போல் தோன்றியது அவளுக்கு. திரையை விலக்கிப் பார்த்தாள். இல்லை. இன்னொரு ஓரத்தில் வேறொரு மனிதன் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய குறட்டையொலி பிசுபிசுவென்று கடந்து போகும் சதைக் கொழுப்பு போலிருந்தது. அவள் கீழே அமர்ந்து கொஞ்சம் கண்ணயர முயற்சித்தாள். அவன் இலேசாக அசைவது அவளுக்குக் கேட்கவில்லையா?… அவள் உடல் நடுக்கம் கண்டது… எந்தச் சத்தத்தையும் விட அந்த மௌனம் அவள் நிம்மதியைக் குலைத்தது. அவனது குரல் எழுப்பும் சத்தத்தை அவளால் கேட்க முடியாத அளவுக்கு அவனது குரல் உள்ளாழ்ந்து போயிருக்கலாம் – அவன் இப்போது அவளை அழைத்திருந்திருக்கலாம்… எது அவளை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது? மிகுந்த சோர்வுக்குள்ளாயிருக்கும் மனமானது, தனக்குத் தானே அதிவேகமாகச் செயல்பட்டு சகித்துக்கொள்ள முடியாத வாய்ப்புகளை முன்னறிவிக்கக் கூடியதாய் இருக்கிறதா ? தலையை இலேசாக வெளியே நீட்டி காது கொடுத்துக் கேட்கிறாள். ஆனால், அவளைச் சுற்றியுள்ள மற்றைய இரண்டு நுரையீரல்களின் சுவாசத்திலிருந்து, அவனது சுவாசத்தை அவளால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. எழுந்து அவனைப் பார்க்க விரும்பினாள். அந்தத் தூண்டுதலானது மனத்தின் அமைதியின்மையைப் போக்கிக் கொள்வதற்கான ஒரு வழியாக இருக்கும் என்பதை அறிந்திருந்தாள். ஆனாலும் அது அவனுக்குத் தொந்தரவாய் இருக்குமோ என்கிற அச்சமும் அவளைத் தடுத்தது. அவன் இருந்த படுக்கையை மறைத்திருந்த திரை அசைந்து கொண்டிருந்தது ஒருவித நிம்மதியை அவளுக்குத் தந்தது. ஆனால் அப்படியொரு எண்ணம் தோன்றுவது ஏன் என்பது அவளுக்கே தெரியவில்லை. அவன் சற்று முன், மகிழ்ச்சியோடு இரவு வணக்கம் தெரிவித்ததை நினைத்துக் கொண்டாள். மேலும், தனக்கு ஏற்படும் அச்சங்களை அவளால் ஒரு கணம் கூட தாங்கிக்கொள்ள முடியாதவளாக இருக்கும் போது, மிகவும் களைப்புற்ற தனது உடலின் அத்தனை பாகங்களுக்கும் தெரியப்படுத்தி அவற்றை தன்னிடமிருந்து விலக்கிவைக்க முயற்சித்தாள். அவன் பக்கம் திரும்பியிருக்குமாறு ஒருக்களித்துப் படுத்து உறங்கி விட்டாள். 

விறைப்புடன் எழுந்து உட்கார்ந்து கொண்டு அதிகாலையை சன்னல் வழியாக தரிசித்தாள். உயிரற்று மிதக்கும் வானத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெற்று மலைகளின் வழியாக இரயில் விரைந்து கொண்டிருந்தது. படைப்பின் முழுமுதல் நாள் போல் அந்தக் காலை தோன்றியது. சன்னல் வழியாக வரும் காற்று முகத்துக்கருகில் பாய்ந்தது. கிழித்துக்கொண்டு வரும் காற்றை உள்ளே அனுமதிக்க சன்னலைத் தள்ளித் திறந்துவிட்டாள். கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழாகி விட்டது. உடனிருப்பவர்கள் அனைவரும் பரபரப்பி‌ல் மூழ்கி விடுவர். அவள் எழுந்து உடைமாற்றும் அறைக்குச் சென்று, ஆடைகளை சரி செய்துகொண்டு, கலைந்திருந்த தலைமுடியை ஒதுக்கி மென்மையாக்கி விட்டுக் கொண்டாள். ஆடையைச் சரி செய்துகொண்டு முகம் கழுவிய பின் ஒரு புத்துணர்வும் நம்பிக்கையும் பிறந்தது. அதிகாலை வேளையில் மகிழ்ச்சியற்றிருப்பது என்பது அவளுக்கு ஒரு போராட்டமே. கரடு முரடாக இருந்த துண்டை எடுத்து முகத்தை அழுந்தத் துடைக்கையில் கன்னக் கதுப்புகள் எரிச்சல் கண்டன. நெற்றியைச் சுற்றிக் கொண்டிருந்த வலுவான கூந்தல் மேல்நோக்கிய தசைநார்களை உடைப்பது போலிருந்தது. உடம்பின் ஒவ்வோர் அங்குலமும் உயிர்ப்பும் நெகிழ்வுமாகத் துவண்டது. அடுத்த பத்து மணி நேரத்தில் அவர்கள் வீட்டில் இருப்பார்கள்!.   

அவனுடைய படுக்கையை நோக்கி நகர்ந்தாள். வழக்கம் போல், ஒரு குவளை பால் காலை வேளையில் கொடுக்கப்பட வேண்டிய நேரம் ஆகிவிட்டது. சன்னலின் நிழல் கீழ் நோக்கி விழுந்து கிடந்தது. திரைச்சீலைகள் பிணைத்திருந்த இடத்தில் விழுந்த அந்தியின் வெளிச்சத்தையும் தாண்டி, அவன் திரும்பியவாறு ஒருக்களித்துப் படுத்திருந்ததை மட்டுமே காண முடிந்தது. அவள் அவன் மீது சாய்கிற நிலையில் இடைவெளி வழியாக வெயில் பரப்பும் திரைச்சீலையை இழுத்து விட்டாள். எதேச்சையாக அவளுடைய கை அவன் மீது பட்டதில், குளிர்மையை உணர்ந்தாள். 

அவன் அருகே குனிந்து, அவன் தோளின் மீது கை வைத்து அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள். அவனிடம் எந்தவொரு அசைவும் தென்படவில்லை. திரும்பவும் உரக்கப் பேசிப் பார்த்தாள். தோளை இறுகப் பற்றி இலேசாக உலுக்கினாள். அவன் அசைவற்றுக் கிடந்தான். அவனது கைகளை திரும்பவும் பற்றினாள். அது தளர்ந்து போய், இறந்து போன ஒன்றைப் போல் நழுவி விழுந்தது. இறந்து போன ஒரு பொருள்…? அவள் ஒரு நொடி உறைந்து போனாள். இதயம் நின்றுவிட்டது போல் தோன்றியது. அவனது முகத்தை உடனடியாகப் பார்த்தாக வேண்டும். அவன் உடம்பின் மீதான சில்லிப்பு அவளது கைகளில் திரும்பவும் படர்ந்தது. அவள் முன்னோக்கி சாய்ந்து, அவசர அவசரமாய், உடம்பைக் குறுக்கிக்கொண்டு, சதை மீது உமிழும் வெறுப்போடு, கைகளால் அவனது தோள்களை இறுகப் பற்றி திருப்பிப் போட்டாள். அவனது தலை தொய்ந்து விழுந்தது. முகம் சுருங்கிச் சிறியதாய் இருந்தது. அவனது நிலைகுத்திய விழிகள் அவளை நோக்கி இருந்தன. 

அவனது தோள்களை இறுகப் பற்றிக்கொண்டிருந்த அவள், வெகு நேரம் அசையாமல் இருந்தாள். அங்கிருந்தவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்க்கத் தொடங்கியிருந்தனர். திடீரென்று பின்வாங்கினாள். கத்தி அழவேண்டும், யாரையாவது கூப்பிட வேண்டும், அவனிடமிருந்து தப்பியோட வேண்டும் என்கின்ற ஏக்கம் அனைத்தும் கிட்டத்தட்ட அவளை ஆட்கொண்டுவிட்டது. ஆனால், திடமான கரமொன்று அவளை அரவணைத்தது. கடவுளே! அவன் இறந்து விட்டான் என்று இங்கிருப்பவர்களுக்குத் தெரிந்து விட்டால், அவர்களிருவரும் அடுத்த நிலையத்தில் இறக்கிவிடப் படுவார்கள். 

சட்டென்று முன்பொரு பயணத்தின் போது, அவளுக்குத் தெரிந்து நிகழ்ந்த கொடூர காட்சியொன்று நினைவுக்கு வந்து முகத்தில் அறைந்தது – இரயில் பயணத்தில் தற்செயலாய் குழந்தையைப் பறிகொடுத்த ஒரு தம்பதியர் அடுத்த நிறுத்தத்திற்கான வாய்ப்பிற்காகக் காத்திருந்து வெளித் தள்ளப்பட்டனர். குழந்தையின் உடல் அவர்கள் இருவருக்குமிடையே கிடத்தப்பட்டிருக்க, நடைமேடையில் அவர்கள் பரிதவிப்போடு நின்றிருந்தது இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது. தங்களைத் தவிக்கவிட்டு பின்வாங்கிச் செல்லும் இரயிலை திகைப்பூட்டும் பார்வையால் நனைத்த அவர்களை ஒருபோதும் மறப்பதற்கில்லை. அவளுக்கும் இப்போது அதுதான் நடக்கப் போகிறது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அவளும் ஏதோவொரு அனாதரவான இரயில் நிலையத்தின் நடைமேடையில் தனது கணவனது உடலோடு தன்னந்தனியாக இருக்கப்போவதைக் காணலாம். அதைத் தவிர வேறென்ன! நினைக்கவே பயங்கரமாய் இருந்தது – ஊழிச் சூழலில் சிக்கியதோர் உயிரினம் போல் தவித்தாள். 

அவள் தன்னை மறைத்துக்கொண்டு பதுங்கியிருக்கும் வேளையில், இரயில் மெதுவாக நகர்வதை உணர்ந்தாள். அடுத்து வரக்கூடிய ஒரு நிறுத்தத்தை நோக்கிய மெதுவான நகர்வு! கணவனும் மனைவியுமாக தனிமையானதொரு இரயில் நிலையத்தின் நடை மேடையில் நிராதரவாய் நிற்பதை மீண்டும் நினைத்துப் பார்த்துக்கொண்டாள். அவன் முகத்தின் மீது விழும் வெளிச்சத்தை மறைப்பதற்காக, விடாப்பிடியான வற்புறுத்தும் தோரணையோடு திரைச்சீலையை இழுத்து விட்டாள். 

தலை சுற்றுவது போலிருந்தது அவளுக்கு. அவனது நீட்டிய உடல் அருகிலேயே மூழ்கித் தலை கவிழ்ந்து கிடப்பதைத் தவிர்த்து, படுக்கையின் விளிம்பில் இருந்து விலகி திரைச்சீலைகளை இழுத்து மூடினாள். அவர்களிருவரும் அந்தி மயங்கும் மாலை நேரத்தின் கல்லறை அமைதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். எதையும் சிந்திப்பதற்குக் கூட களைப்பாய் இருந்தது. அவன் உயிரோடில்லை என்கிற உண்மையை அவள் எப்படியாவது மறைத்தாக வேண்டும். ஆனால் எப்படி? மூளை வேலை செய்யவில்லை. எதையும் திட்டமிடவோ. ஒன்றோடொன்றை இணைத்துப் பார்க்கவோ முடியாத நிலை. நாள் முழுக்க திரைச்சீலைகளை இழுத்துப் பிடித்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருப்பதைத் தவிர வேறெந்த வழியையும் அவளால் யோசிக்க முடியவில்லை. 

படுக்கை விரிப்புகளை சேகரிக்கும் பணியாளர்கள் வரும் ஓசை கேட்டது. பயணிகளும் அங்குமிங்குமாய் இரயிலுக்குள் நடக்கத் தொடங்கி விட்டனர். உடைமாற்றும் அறையின் கதவு திறப்பதும் மூடப்படுவதுமாய் இருந்தது. அவள் ஓர் உத்வேகத்திற்குத் தயாரானாள். இறுதியில், தீவிர முயற்சியோடு எழுந்து நின்று, இடைக் கம்பிகளின் வழியே தலையை நுழைத்து, திரைச்சீலைகளை இணைத்து இறுக்கமாகப் பின்னால் இருக்குமாறு இழுத்து விட்டாள். வண்டியின் அசைவால் இன்னமும் விலகுகிற திரைகளைப் பார்த்துவிட்டு, தன்னுடைய உடையிலிருந்த ஊக்கை எடுத்துக் குத்தி அவற்றை இணைத்தாள். அப்போதைக்கு பாதுகாப்பாய் உணர்ந்தாள். சுற்றிலும் பார்க்க, பணியாளர் ஒருவர் அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாய் கற்பனை செய்துகொண்டாள். 

 “சார் இன்னும் எழுந்திருக்கலயா மேடம்?” , அவன் விசாரிக்கத் தொடங்கினான்.  

 “இல்லை,”, அவள் தடுமாறினாள். 

 “நேரமாச்சேன்னு, அவருக்காக பால் எடுத்துட்டு வந்திருக்கேன். ஏழு மணிக்கு கொடுக்கச் சொல்லி நீங்களும் சொல்லியிருந்தீங்க.” 

அவள் அமைதியாக தலையசைத்துவிட்டு, அவளது இருக்கையில் அமர்ந்து கொண்டாள். 

எட்டரை மணிக்கு இரயில் பஃபலோ நிறுத்தத்தை வந்தடைந்தது. அதற்குள் அடுத்து வரும் பயணிகளுக்கான இருக்கை விரிப்புகள் சரி செய்யப்பட்டு, பழையவை மடித்து வைக்கப்பட்டன. தலையணை, படுக்கை மற்றும் இருக்கை விரிப்புகள் சுமையோடு அங்குமிங்கும் நகர்ந்து செல்லும் பணியாளர் ஒருவர், அவளைக் கடந்து செல்லும் போது ஒரு நிமிடம் நின்று பார்த்தார். “சார் எழுந்திருக்க மாட்டாரா மேடம்? உங்களுக்குத் தெரியும். முடிஞ்ச வரைக்கும் நாங்க சீக்கிரமா பழைய படுக்கையெல்லாம் எடுத்து வெச்சுட்டு, அடுத்ததுக்கு தயாராகணும்.” 

அவள் முகம் குளிர்மையால் இருண்டது. ஆம் புதிதாய் பயணம் மேற்கொள்பவர்கள் அதே முகப்புக்கு வந்து விட்டார்கள். 

 “ஓ.. இன்னும் இல்லை,” அவள் தடுமாறினாள். “அவர் இன்னும் பால் கூட குடிக்கல. தயவு செஞ்சு வாங்கித் தர்றீங்களா?” 

 “சரி.. சீக்கிரமே.. வண்டி கிளம்பினதும் பார்த்துக்கலாம்.” 

 “இரயில் நகர்ந்ததும் அவர் கையில் பால் குவளையுடன் வந்தார். அவன் கையிலிருந்து குவளையை வாங்கியவள், அதை வெறுமையோடு பார்த்தாள். சுழன்றடிக்கும் வெள்ளத்தின் நடுவே வெகு தொலைவில் அமைக்கப்பட்ட படிக்கற்கள். அவள் ஒரு யோசனையில் இருந்து அடுத்தடுத்த யோசனைகளுக்கு மெதுவாக தாவிக் கொண்டிருந்தாள். 

 “நான் வேணா அவருக்குக் கொடுக்கட்டுமா?”, அவன் பரிவோடு கேட்டான். 

“இல்லை.. இல்லை..” அவள் கதறாத அளவுக்கு குரலை உயர்த்தினாள். “அவரு.. அவரு.. இன்னும் தூங்கிட்டு இருக்காருன்னு தான் நினைக்கிறேன்.” 

அந்தப் பணியாளர் அங்கிருந்து நகர்ந்து செல்லும் வரை அவள் காத்திருந்தாள். பின் திரைச்சீலைகளின் ஊக்குகளைத் தளர்த்திவிட்டு, அதன் பின்னால் சற்று மறைந்து கொண்டாள். பாதியே தெளிவாய்த் தெரிந்த அந்த குறை வெளிச்சத்தில், தெளிவற்ற நிலையில் இருக்கும் அவளது கணவனின் முகம், பளிங்கு பதித்த கண்களோடு முகமூடி அணிந்தது போல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கண்கள் பயங்கரமானவை. அவள் தனது கைகளை நீட்டி அந்த இமைகளை கீழே இழுத்து விட்டாள். மறு கையில் பால் குவளை இருப்பது நினைவுக்கு வந்தது. அதை வைத்துக்கொண்டு அவள் என்ன செய்யப் போகிறாள்? சன்னலை மேலே உயர்த்தி, அதை வெளியே தூக்கி எறிந்து விடலாமா என்று நினைத்தாள். அப்படிச் செய்வதற்கும் அவனது உடலின் குறுக்காகச் சாய்ந்து, தன் முகத்தை அவன் அருகில் கொண்டு சென்று அந்த சாகசத்தை நிகழ்த்த வேண்டும். எனவே, அந்தப் பாலை அவளே குடித்து விடவேண்டும் என்று முடிவு செய்தாள். 

காலிக் குவளையை எடுத்துக்கொண்டு தனது இருக்கைக்கு வந்தவளிடமிருந்து, சிறிது நேரத்தில் அங்கே வந்த பணியாளர் அதை வாங்கிக்கொண்டு சென்றார். 

 “அவரோட படுக்கையை நான் எப்போ சுருட்டி வைக்கிறது?” 

 “வேணாம்.. இப்போ வேணாம். அவருக்கு முடியல.. அவருக்கு உடம்புக்கு ரொம்ப முடியல. அவரைக் கொஞ்சம் அப்படியே இருக்க விடுறீங்களா? அவரு முடிஞ்ச வரைக்கும் படுத்தபடியே இருக்கட்டும்னு டாக்டர் சொல்லிருக்காரு.” 

 அவன் தலையைச் சொறிந்தான். “நல்லது.. முடியலன்னா.. பாவம்.. இருந்துட்டுப் போகட்டும்.” 

காலிக் குவளையை எடுத்துக்கொண்டு சென்றவன் மற்றைய பயணிகளிடம், “பாவம்.. அந்தத் திரைக்குப் பின்னால இருக்குறவருக்கு உடம்புக்கு ரொம்ப முடியல.. எழுந்திருக்கவே முடியல.. இப்போ தான் பால் குடிச்சாரு” என்று விவரித்தவாறே நகர்ந்தான். 

அனுதாபம் பெருகும் கண்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பதாய் அவள் இப்போது உணர்ந்தாள். வயதில் முதிர்ந்த பெண்மணி ஒருத்தி தாய்மை உணர்வுடன் அவள் அருகில் வந்து அமர்ந்தாள். 

“உன்னோட வீட்டுக்காரர் இப்படி உடம்புக்கு முடியாம இருக்குறத பார்க்கிறதுக்கு கஷ்டமா இருக்கு. இந்த மாதிரி சூழல்கள் யாருக்கும் வரலாம்னு சேர்த்து வெச்சிருக்கிற பணம் கொஞ்சம் எங்ககிட்ட இருக்கு, தேவைப்பட்டா நான் உனக்கு உதவ முடியும். நான் அவரைப் பார்க்கட்டுமா?” 

 “ஐயோ வேணாம்.. ப்ளீஸ்.. அவரைக் தொந்தரவு பண்ணவே கூடாது.”, அந்தப் பெண்மணி மனதார ஒப்புக்கொண்டாள். 

 “நீங்க சொன்னா சரி தான்.. அப்படியே இருக்கட்டும்.. ஆனா இந்த மாதிரி நீங்க கஷ்டத்துல இருக்கும் போது, நான் உதவி செய்வேனோ மாட்டேனோன்னு எதுவும் நினைக்க வேண்டாம். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைச்சா மகிழ்ச்சியாத் தான் செய்வேன். உங்க வீட்டுக்காரருக்கு இப்படி இருக்கும் போது, சாதாரணமா நீங்க என்ன செய்வீங்க?” 

 “நான் – நான் அவரை தூங்கட்டும்னு விட்டுருவேன்.” 

 “இப்படி அதிகமா தூங்குறதும் நல்லது இல்ல. அவருக்கு மருந்து எதுவும் கொடுக்கலையா?” 

 “ம்ம்.. ஆமாம்.” 

 “அதைக் கொடுக்குறதுக்காவது அவரை எழுப்பலையா?” 

 “ஆமாம்.. ஆமாம்.””

 “மருந்து அடுத்த வேளை எப்போ கொடுக்கணும்?” 

 “ரெண்டு மணி நேரமா…. கொடுக்கல” 

அந்தப் பெண்மணி ஏமாற்றத்துடன் காட்சியளித்தாள். “உன்னோட இடத்துல நான் இருந்திருந்தா, அடிக்கடி கொடுக்கணும்னு நெனைப்பேன்.. அப்படித்தான் நான் எங்க வீட்டுக்காரரை கவனிச்சுப்பேன்.” 

“அதற்குப் பின் பல முகங்கள் அவளை உற்று நோக்கின. சாப்பாடு கிடைக்கும் பெட்டியை நோக்கிச் செல்லும் பயணிகள், இடைக்கம்பியைத் தாண்டிச் செல்லும் போது மூடியிருக்கும் திரைச்சீலைகளை ஆர்வத்துடன் பார்ப்பதை அவள் உணர்ந்தாள். அழுந்திய தாடையோடும் வெளிறிய கண்களோடும் இருந்த மனிதன் ஒருவன் அசையாமல் மூடிய திரைச்சீலையின் சிறிய இடைவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். காலை உணவை முடித்துக்கொண்டு திரும்பிய பெண் குழந்தை குறுக்கே நின்றுகொண்டு துறுதுறுப்பாய், முணுமுணுப்பதாய் பாவனை செய்து கொண்டு உரத்துச் சொன்னது – “அவருக்கு உடம்புக்கு சரியில்ல” – இன்னொரு முறை திரும்பவும் வந்த டிக்கட் பரிசோதகர், பயணச்சீட்டு கேட்டார். பொருள் புரியாத சித்திர எழுத்துக்களைக் கொண்ட ஒரு முடிவில்லாத நீண்ட காகிதத்தைப் போல் விரிந்து கிடக்கும் மரங்களும் வீடுகளும் சன்னலுக்கு வெளியே பறப்பதை, ஒரு மூலையில் தன்னைச் சுருக்கிக் கொண்டு அமர்ந்து அவள் பார்த்துக்கொண்டே வந்தாள். 

அவ்வப்போது இரயில் நின்றது. பயணத்திற்காக புதிதாய் உள்ளே நுழைபவர்களும் மூடிக் கிடக்கும் திரைச்சீலையை மாறிமாறிப் பார்த்தபடியே கடந்தார்கள். மேலும் மேலும் பயணிகள் கடந்து செல்வது போல் தோன்றியது. அவர்களின் பார்வைகள் அனைத்தும் மூலையில் குறுகிப் போய் அமர்ந்திருக்கும் அவளது தோற்றத்துடன் கலக்கத் தொடங்கியதாய் மூளைக்குள் உறைத்தது. 

முகத்தின் மீது ஒட்டியிருந்த மூடுபனியை விலக்கியவாறே அன்றைய பிற்பகலில் வண்டியின் உள்ளே நுழைந்தான் ஒரு பருத்த மனிதன். அவனது வயிறு சுருங்கி, உதடுகள் வெளிறிப் போயிருந்தன. அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அவன் தன்னை அழுந்தப் பதித்துக்கொண்ட போது, கருப்பு நிறத்தில் அகலமானதொரு துணியை ஆடையாய்ப் போர்த்தியிருப்பதையும்.. அழுக்கடைந்த வெள்ளை டை’யை அணிந்திருப்பதையும் கண்டாள். 

 “காலையில் இருந்தே உங்கள் கணவர் மிக மோசனமான நிலையில் இருக்கிறார், இல்லையா?” 

 “ஆமாம்.”

“மகளே!.. நடந்ததையெல்லாம் நெனைச்சு உனக்கு இப்போ ரொம்பவும் வருத்தமா இருக்கு, இல்லையா?” ஒரு திருத்தூதன் தனது தங்கப் பற்கள் வெளியே தெரியுமாறு புன்னகைப்பது போல் தோன்றியது. “நோய் என்று இந்த உலகத்தில் எதுவுமில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அப்படித்தான். அது ஓர் அழகியல் சிந்தனை இல்லையா? மரணம் என்பது நமது பரந்திருக்கும் புலன்களின் அழிவு மட்டுமே. புனிதங்கள் ஊடுருவ உங்களது ஆன்மாவைத் திறந்து வையுங்கள். இறை சக்திக்கு முன்னால் உங்களின் செயலற்ற தன்மையை சமர்ப்பித்து விடுங்கள். பிறகு, நோயென்பதும் அழிவென்பதும் உங்களுக்கு இல்லாமல் போகும். இந்தச் சிறிய துண்டுப் பிரசுரத்தை உங்கள் கணவரிடம் கொடுத்து படிக்க வைக்க முடிந்தால்…” 

அவளைச் சுற்றியிருந்த முகங்கள் மீண்டும் தெளிவின்றி வளர்ந்து கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் பலவித மருந்துகளை முயற்சித்துப் பார்க்கும் செயலையும் அல்லது ஒவ்வொன்றையும் மாறி மாறி எடுத்துப் பயன்படுத்திப் பார்ப்பதுமான முயற்சியை, அதன் ஒப்பீட்டு நன்மைகளைப் பற்றி தாய்மையுணர்வோடு தன்னை அணுகிய வயதான அந்தப் பெண்மணியும், முகச்சுருக்கம் கொண்ட அந்தக் குழந்தையின் பெற்றோரும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தது அவளுக்கு மங்கலாகக் கேட்டது.. போட்டி மனப்பான்மையானது நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்றாள் அந்த வயதான பெண்மணி. அதற்கு மறுத்துக் கூறுவதாக, அப்படியென்றால் எந்த மருந்து உங்களை குணப்படுத்தியது என்பதை உங்களால் சொல்ல முடியாது என்றது எதிர்க்குரல். அவர்களின் குரல்கள் மூடுபனிக்குள் பாய்ந்து செல்லும் மணிகள் பொருத்தப்பட்ட மிதவைகள் போல் தொடர்ந்து கொண்டேயிருந்தன. 

அந்தக் குறிப்பிட்ட பெட்டியின் பணியாளர் திரும்பத் திரும்ப வருவதும் கேள்விகளை அடுக்குவதுமாக இருந்தார். அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அவன் திரும்பவும் எதையும் சொல்லாமல் மீண்டும் சென்றுவிட்டதால், அவள் ஏதோ எப்படியோ பதிலளித்திருக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அந்த வயதான பெண்மணி வந்து, அவளது கணவனுக்கு மருந்து கொடுக்க வேண்டுமென்று நினைவூட்டிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே இருந்த பயணிகள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்கினார்கள். காலியான இடங்களை புதியவர்கள் நிரப்பினார்கள். 

அவளுடைய காதுகள் நாலா பக்கமும் சுழன்றன. கடந்து செல்லும் எண்ணங்களைப் பற்றிக்கொண்டு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயன்றாள். ஆனால் அவை செங்குத்தான பள்ளத்தாக்கின் ஓரத்தில் விளைந்திருக்கும் புதர்களைப் போல் அவளிடமிருந்து நழுவிச் சென்றன. சட்டென்று மின்னலென ஒரு தெளிவு. இரயில் நியூயார்க்கை அடையும் போது என்ன நடக்கும் என்று விலாவாரியாக கற்பனை செய்தாள். அவனது உடம்பு சில்லிட்டிருக்கிறதென்றும். அவன் அதிகாலையிலேயே இறந்திருக்கக் கூடும் என்பதை யாரேனும் அனுமானிப்பார்கள் என்றும் நினைத்தபோது அவளது உடல் நடுங்கியது.

உடனடியாக ஒன்றைச் சிந்தித்தாள். “நிகழ்வைப் பற்றிய ஆச்சரியம் ஏதுமில்லாமல் நான் இருந்தால், அவர்கள் என்மீது சந்தேகப்படக்கூடும். அவர்கள் கேள்விகளால் துளைப்பார்கள். நான் உண்மையை, நடந்ததைச் சொன்னாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள். ஒருவரும் என்னை நம்பமாட்டார்கள்! ரொம்பக் கொடுமையானது”. மேலும் ஒன்றை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டாள், “நிகழ்ந்தது எதுவும் தெரியாதது போல் நான் நடிக்க வேண்டும். ஆம்.. கட்டாயம் நான் நடிக்கத்தான் வேண்டும். அவர்கள் வந்து திரைச்சீலையை விலக்கும் போது, நான் வெகு இயல்பாக மேலே சென்று அவனைப் பார்க்க வேண்டும். பிறகு கதறித் துடிக்க வேண்டும். அந்தக் கதறல் பெரிய ஓங்காரம் போல் இருக்க வேண்டும்” , என்று யோசனை செய்து கொண்டாள். 

படிப்படியாக அடுத்தடுத்த துடிப்பான துரிதமான சிந்தனைகள் அவளுக்குள் குவியத் தொடங்கின. அவள் அவற்றைப் பிரித்துப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் முயன்றாள். ஆனால் அவை அவளை ஆரவாரத்தோடு திரும்பவும் சூழ்ந்து கொள்கின்றன. அவளது பள்ளிப்பருவத்தின் ஒரு பரபரப்பான நாளின் முடிவைப் போல அவள் களைப்படைந்த போது அவை அமைதியாயின. அவளது மூளை குழம்பியது. தன் பங்கை மறந்துவிட்டு, ஏதோவொரு கட்டுக்கடங்காத சொல் அல்லது பார்வையால் தானே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாளோ என்கிற கலக்கம் அவளுக்குள் ஏற்பட்டது. 

 “எனக்கு எதுவும் தெரியாது என்பது போல் நான் கட்டாயம் நடித்தேயாக வேண்டும்,” அவள் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். சொற்கள் தன் நிலையை இழந்துவிட்டன. ஆனால் ஒரு மாய சூத்திரத்தைப் போல, அவள் அவற்றை இயந்திரத்தனமாக திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். அவள் சொல்வது அவளுக்கே கேட்கிற வரை, அவளே உணர்கிற வரை. அதாவது , “எனக்கு ஞாபகம் இல்லை.. ஞாபகம் இல்லை!” 

அவளுடைய குரல் உரத்து ஒலித்தது. ஒருவித அச்சத்தோடு தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். நல்லவேளை அவள் பேசியதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. 

இரயிலின் உட்புறத்தைப் பார்ப்பது போல் அவளுடைய கண்கள் அவன் இருக்கும் பெர்த்’தின் திரைச்சீலையைப் பார்த்தது. அவள் அவர்களுடைய கனமான துணிப் பைக்குள்ளிருந்து அலங்காரமாய் நெய்யப்பட்ட ஆடைகளை தேடத் தொடங்கினாள். கண்டுபிடிப்பது சிக்கலாகவும் கடினமாகவும் இருந்தது. அவள் திரைச்சீலைகளை வெறித்துப் பார்க்கிறாள். அடர்த்தியான பொருட்கள் யாவும் வெளிப்படையாக மாறின. அதன் வழியாக அவள் தனது கணவனின் முகத்தைப் பார்க்கிறாள், அதோ அவனது இறந்து போன முகம். அதிலிருந்து தனது பார்வையைத் தவிர்க்க போராடினாள். ஆனால் அவளது கண்கள் அங்கிருந்து அசைய மறுத்தன. அவளது தலை ஒரு தீய சக்தியிடம் சிக்கிக் கொண்டது போல் தோன்றியது. இறுதியாகத் தன்னை பலவீனமாய் நடுங்க வைத்த அந்தச் சிக்கலில் இருந்து விடுபட கடும் முயற்சி செய்து தலையைத் திருப்பினாள். ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை. அவளுக்கு முன்னால் வெகு நெருக்கமாக சிறியதாக மென்மையாக அவளது கணவனின் முகம் நிழலாடுகிறது. அவளுக்கும் அவளுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் போலி ஜடைக்கும் இடையில் அது காற்றில் தொங்கவிடப்பட்டிருப்பது போல் தோன்றியது. கட்டுப்படுத்த முடியாத ஒரு சைகையோடு அவள் அந்த முகத்தைத் தள்ள முயற்சித்து தன் கையை முன்னே நீட்டினாள். திடீரென்று அவனுடைய மென்மையான ஸ்பரிசத்தை அவள் உணர்ந்தாள். அழுகையைப் பாதியிலேயே அடக்கிக் கொண்டு இருக்கையிலிருந்து எழுந்தாள். பொய்ச் சடை அணிந்த அந்தப் பெண்ணை சுற்றிலும் பார்த்துவிட்டு, தன்னுடைய செய்கைகளை நியாயப்படுத்தும் விதமாக எதிர்ப்புறத்தில் இருந்த தங்களது பயணப்பையை தூக்கினாள். பையைத் திறந்து உள்ளே பார்த்தாள். ஆனால், அவளது கையில் முதலில் தட்டுப்பட்டது ஒரு ஃப்ளாஸ்க்.. அவசரமாய்ப் புறப்படும்போது அவனுக்காகத் தேவைப்படுமேயென்று உள்ளே திணிக்கப்பட்டது. பையை இழுத்து மூடினாள். கண்களை மூடிக் கொண்டாள். அவனுடைய முகம் திரும்பவும் அங்கே தெரிந்தது. அது அவளுடைய இமைகளுக்கும் கருவிழிகளுக்கும் இடையே சிவப்புத் திரைக்கு எதிராக ஒரு மெழுகு முகமூடியைப் போல் ஆடிக்கொண்டிருந்தது.  

நடுக்கத்துடன் எழுந்தாள். அவள் மயக்க நிலையில் இருக்கிறாளா? அல்லது தூங்கிவிட்டாளா? வெகு நேரம் கடந்துவிட்டது போல் தோன்றியது. ஆனால், நேரம் பகலாகவே இருந்தது. அவளைச் சுற்றியிருந்த மக்கள் முன்பு போல அதே மனநிலையிலேயே அமர்ந்திருந்தனர். 

திடீரென்று ஏற்பட்ட பசி உணர்வு, காலையிலிருந்தே அவள் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்த்தியது. சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.. ஆனால், மீண்டும் மயக்கம் வந்துவிடுமோ என்று பயந்தாள். பையில் சில ரொட்டித் துண்டுகள் இருப்பதை நினைத்து அதிலிருந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். வறண்டு போன அந்த ரொட்டித் துண்டுகள் அவளை மூச்சுத் திணற வைத்தன. அவசர அவசரமாய் தனது கணவனின் ஃப்ளாஸ்க்’கிலிருந்த மதுவை சிறிது விழுங்கினாள். தொண்டை எரிந்தது. அந்த எரிச்சல், உள்ளிருக்கும் எரிச்சல்களை எதிர்க்கும் மருந்தாகச் செயல்பட்டு அதுவரை ஏற்பட்ட நரம்புகளின் மந்தமான வலிகளை கொஞ்ச நேரம் குறைத்தது. பின், இதமான ஓர் அரவணைப்பை உணர்ந்தாள். மென் தென்றல் காற்று அவளை வருடுவது போலிருந்தது. சுற்றி வளைத்திருந்த அச்சங்கள் அனைத்தும் தங்களது பிடியைத் தளர்த்தின. அக்கணத்தில் சூழ்ந்திருந்த அமைதியின் வழியே சிறிது பின்வாங்கினாள். ஒரு கோடை நாளின் பரந்த அமைதியைப் போல் இனிமையான அமைதி அது. அவள் அப்போதைக்கு உறங்கிப் போனாள். 

தூக்கத்தில் இரயிலின் துருப்பிடித்த சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. வாழ்க்கையே இதுதான் என்பது போல, தவிர்க்க முடியாத சக்தியொன்று அவளை தூக்கிச் சென்று இருளிலும் திகிலிலும் இன்னதென்று புரியாத அரூப நாட்களின் பிரமிப்பிலும் ஆழ்த்தி துயரத்தில் தள்ளியது. இப்போது அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றாகிக் கலந்து அமைதியாகி – ஒரே நிசப்தம்.. ஒரு துடிப்பு இல்லை.. அவளது முறையாக, அவளும் இப்போது இறந்துவிட்டாள்.. மென்மை தவழும் முகத்தோடு அவன் அருகிலேயே அவளும் படுத்திருந்தாள். ஓ.. எவ்வளவு அமைதியாக இருந்தது! இன்னமும் காலடியோசைகள் கூடக் கேட்டன.. ஆம்.. அவர்களை எடுத்துச்செல்ல வந்த மனிதர்களின் காலடி ஓசைகள் அவை.. அவள் அதை உணர்ந்தாள்.. திடீரென்று ஒரு தொடர்ந்த அதிர்வை உணரத் தொடங்கினாள்.. தொடர்ச்சியான அதிர்வுகள்.. அதன் பின்னும் மீண்டும் இருளில் மூழ்குதல். இந்த முறை மரணத்தின் இருள்குகையில் ஒரு கருப்பு சூறாவளியின் கைகளில் அவர்களிருவரும் இலைகளைப் போல் சுழன்று கொண்டிருந்தனர்.. சுருள் சுருளாய் காட்டுத்தனமான சுழல்கள்.. அதுவும் கோடிக்கணக்கான இறந்து போனவர்களுடன்.   

பயத்தில் அவளது உடல் குலுங்கியது. குளிர்கால நாளானது வெளிறிப்போய். விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததால், அவளுடைய உறக்கம் நீண்ட நேரம் நீடித்திருக்க வேண்டும்.. நிறுத்தம் வருவது போன்ற கிறக்கத்தில் இரயில் என்ஜின் கிறுகிறுத்தது. அவள் தன்னுணர்வு பெற்று எழுந்த போது, பயணிகள் தங்களது உடைமைகளை சேகரித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். தளர்ந்திருந்த பெர்முடாஸுடன் பொய்ச் சடை அணிந்திருந்த பெண், உடை மாற்றும் அறையிலிருந்து வந்து கொண்டிருந்தாள். போதனைகள் செய்த அந்தக் கிறித்துவ விஞ்ஞானி சட்டையின் கைமுனைக் காலரை சரி செய்து கொண்டிருந்தான். பணியாளர் தனது பாரபட்சமற்ற சேவைகளைத் தொடர இடைக்கம்பியை தாண்டிச் சென்றார். தங்க நிறத்தில் பட்டை அணிந்த தொப்பியோடிருந்த ஒருவர் அவளது கணவனின் டிக்கட் பற்றிக் கேட்டார். “பேக்..கேஜ்… எக்ஸ்பிரஸ்!” என்றொரு உரத்த குரல். பயணிகள் தங்களது டிக்கட்டுகளை ஆய்வாளரிடம் ஒப்படைக்கும் போது, ஒப்புதலுக்காக டிக்கட்டை அழுத்தும் உலோக ‘க்ளிக்’ சத்தம் அவளுக்குக் கேட்டது. 

தற்போது இரயிலானது ஹார்லெம் சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்ததால், அவளுடைய சன்னலைச் சுற்றிலும் புகைமூட்டமான சுவரால் அடைக்கப்பட்டிருந்தது. பயணம் நிறைவுறப் போகிறது. இன்னும் சில நிமிடங்களில், இரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலின் ஊடாக தனது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தன்னை நோக்கி நடந்து வருவதைக் காண்பாள். அவள் இதயம் ஆசுவாசத்தில் விரிந்தது. மிக மோசமான பயங்கரமொன்று கடந்துவிட்டது. 

 “நாம இப்போ அவரை எழுப்புறது நல்லது.. இல்லையா?” இரயில் பணியாளர் கேட்டார். 

அவர், அவளது கணவனின் தொப்பியைக் கையில் ஏந்திக் கொண்டு, நிதானமாக அதைத் தனது விரலின் கீழ் வைத்து சுழற்றிக் கொண்டிருந்தார்.

அவள் தொப்பியைப் பார்த்து பேச முயன்றாள். சட்டென்று இரயிலின் அறை முழுவதும் இருட்டாகி விட்டது. அவள் தீவிர முயற்சியுடன் தன் கைகளை மேலே தூக்கி எதையோ பிடிக்கப் போராடினாள். முகம் கீழ்நோக்கிக் கவிழ்ந்தது. இறந்தவனின் படுக்கை இருக்கையில் தலையை மோதிக் கொண்டாள். 

எடித் வார்டன் (1862-1937)– அமேரிக்க சிறுகதை மற்றும் நாவலாசிரியர். நாற்பதிற்கும் மேம்பட்ட ஆக்கங்களை எழுதியிருக்கிறார். அமேரிக்க மேல்தட்டு வர்க்கத்தின் வாழ்வையும் அதன் நுட்பங்களையும், அவர்களுடைய அறம் சார் சிக்கல்களையும் தன்னுடைய புனைவில் விரிவாக சித்தரித்தவர்.

***

பாலா இளம்பிறை – இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும். மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com

தாரிகா

1

பிரமிளா பிரதீபன்

சிங்களத்திகள் அழும்போது இரசிக்க முடியுமென்று ராமதாஸ் ஒருமுறை சொல்லியிருக்கிறான். சரியென்றால் இந்தத் தமிழன்களை நம்பவே கூடாது. 

கண்களை முட்டி விழத்துடிக்கும் கண்ணீரின் ஆட்டத்தில் தாரிகா அவனைப் பார்த்தாள். துளிச் சலனமில்லாமல் அவன் கணிணிக்கு முன்பாய் அசைந்து நெளிந்தான். அவள் வேறு சாவிகொண்டு வீட்டைத் திறந்து உள்ளே வந்ததையோ அல்லது வழமைக்கு மாறாக நேரத்தோடு வீட்டுக்கு வந்தது பற்றியோ அவன் பிரக்ஞையற்றிருந்தான். 

அவளது பாணியிலான பிரச்சனைகள் வழமைபோலவே ஆரம்பித்தன. சத்தமாக கத்திப்பேசி வீட்டை இரண்டாக்கினாள். கையில் கிடைத்த சிறு பொருட்களையெல்லாம் ஓங்கி தரையில் அடித்தாள். சிலவற்றை அவனைத்தாண்டி பறந்து போவதாய் வீசியெறிந்தாள். ‘தாரிகா’ என சத்தமாக அதட்டி அவளை அவன் அடக்கக்கூடுமென எதிர்பார்த்தாள். அதிகமாய் இரண்டு கெட்ட வார்த்தைகளில் அவன் திட்டியிருந்தால்கூட அவளது ஆத்திரம் கொஞ்சம் தணிந்திருக்கும். அவனென்றால் எந்தச் சலனமுமின்றி வேலையில் மும்முரமாயிருந்தான். 

தாரிகாவின் எல்லா சந்தர்ப்பத்து வலையிலும் சிக்கிச் சிதைந்து மீண்டு வந்த அனுபவம் அவனுக்கு. மேலும் தீவிரமாக கணிணியில் மூழ்கத் தொடங்கியிருந்தான். தவிர, இவற்றிலெல்லாம் தான் அகப்பட்டுவிடாதிருக்கவும் அவன் பழகியிருந்தான். தன்னை அதிலிருந்து இன்னுமாய் தவிர்த்துக்கொள்ள மெல்லிய ஓசையுடையதான சில தமிழ்ப் பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்டவாறே தலையை ஆட்டிக்கொண்டிருந்தான். 

தாளவியலா ஆத்திரம் தலையைக் குடைந்ததவளுக்கு. சிங்களத்திலிருக்கும் உச்சமான கெட்ட வார்த்தைகளையெல்லாம் சேர்த்துக் கூவி அவனைத் திட்டிக்கொண்டேயிருந்தாள். ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்த கடைசி வார்த்தையும் தீர்ந்து போனதாய் சோர்வடைந்தாள். தளர்வோடு சமையலறைத் திட்டில் அமர்ந்து வக்கிரமான பார்வையால் அவனையே வெறித்தாள். அவளுக்குப் புரியாத அந்தத் தமிழ்ப் பாடல்களின் சத்தமும் அதற்கேற்றாற் போலான அவனது முணுமுணுப்பும் அவளிடத்தே வெறி கொள்ளச் செய்யும் ஆத்திரத்தைப் பரவவிட்டிருந்தது. அவனுக்கு அதிகோபத்தைத் தரும் ‘தெமலு’* என்ற சொல்லையும் மிகக்கேவலமான தொனியில் உச்சரித்து அவனைச் சீண்டினாள். இன்னும் சில தடவைகளும் ‘தெமழா’ என்று அவனைத் திட்டினாள்.  

இறுதி முயற்சியாக, பாய்ந்து சென்று டெலிபோன் வயரை இழுத்து அறுத்தாள். டெலிபோனைத் தரையில் அடித்து சிதறவிட்டவாறே அவனது சலனத்தை எதிர்பார்த்தாள். ஒரே ஒரு நொடி அவன் அதிர்ந்தது போலிருந்தது. ஆனால் அப்படியும் இல்லை. தொடர்ச்சியாக பாடிக்கொண்டிடேயிருந்தான். 

ஒருவரையொருவர் நாலாய், எட்டாய், பத்தாய் என துண்டங்களாக்கி வீசியெறியும் வேகத்துடன் தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்திக்கொண்டனர். தாரிகா தனக்கேயுரித்தான வசைச்சொற்களையும் வன்முறைகளையும் இரைத்தாள். அவனோ அதியுச்சப் புறக்கணிப்பைக் கூரிய ஆயுதமாக்கியிருந்தான். பதினொரு வருட வாழ்வின் எச்சங்களாய் இரண்டு குழந்தைகள் நடமாடுவதைத் தவிர்த்து அவர்களுக்கிடையே சொல்லிக்கொள்ள வேறெதுவுமேயிருக்கவில்லை. நல்ல தகப்பனாயிருக்கும் ஒருவனுக்கு நல்ல கணவனாக முடியவில்லையென்பது அவளது கணிப்பு. ஒரு ஆதிக்கப்பிசாசிடம் காதலில் விழுந்த துர்பாக்கியம் அவனுக்கு. 

‘நீ ஆம்புளன்னெல்லாம் இங்க ஒண்ணும் புடுங்க முடியாது. எப்பவுமே நீயெல்லாம் அடிமைதாண்டா தமிழ் நாயே’ வார்த்தைகளில் விஷம் தடவி வீசிக்கொண்டிருந்தாள். எல்லாமே அவனுக்குப் பழக்கப்பட்ட வசைச்சொற்கள்தான் என்றாலும், காதில் ஒலிக்கும் பாடலைத்தாண்டி அவள் உச்சரிக்கும் ‘தமிழ் நாயே’ என்ற சொல் தலையில் அடித்து நின்றது. அவ்வளவு நிதானத்துடன் அந்த வார்த்தைகளைத் தாண்டினான். 

பரஸ்பரம் விழுங்கிட யத்தனிக்கும் அவர்களது யுத்தம் தொடங்குவதும் தெரியாமல் முடிவதும் தெரியாமல் எப்போதும் தொடங்கி எப்போதாவது முடிகிறது. இயலுமானால் ஒருவரின் இரத்தத்தை ஒருவரென்று சியர்ஸ் சொல்லி பருகுமளவிற்காய் வாழ்க்கை ஆடத்தொடங்கிக் கொண்டிருந்தது. 

அனேகமாக ஒவ்வொரு சண்டைகளின் எச்சத்திலும் அவனது ஆயுதமே வலுகொண்டதென ஆகியிருக்கும். அவளது தொடர்ச்சியான தோல்வியைத் தனக்குள் பொருத்திக்கொள்ள முடியாமல் புதிது புதிதாக எதையெல்லாமோ செய்து பார்த்தாள். அவனைத் தன் வசப்படுத்த அல்லது எப்போதோ அவனைத் தனக்கேற்றாற்போல ஆட்டுவித்த காலங்களை எண்ணியெண்ணிக் கோபப்படுவாள். தன்னுடலைக் காயப்படுத்துவாள். நினைவிலுள்ள தம்மபதத்தின் வரிகளையெல்லாம் சொல்லிச் சொல்லி ஆசுவாசப்படுவாள். குழந்தைகளை அடித்து காயப்படுத்துவாள். 

நேரம் பத்தைத் தாண்டியிருக்கவில்லை. கருமை தொற்றிக்கொண்ட வானத்தில் நீலம் மறைந்து மெல்லிய தூறல் விழுந்தது. ராமதாஸ் ஓடிச்சென்று கொடியில் காய்ந்த உடைகளை எடுத்துவந்தான். அதில் குழந்தைகளினதும் அவளுடையதும் உள்ளாடைகள் சேர்ந்திருந்தன. 

ஆக அவன் இன்னும் தன்னை நேசிக்கிறானோ! உள்ளுக்குள் ஜிவ்வென்றிருந்தது. பின்னென்ன? ஒரு தமிழனுக்கு எப்படி இவ்வளவு திமிர் வர முடியும்? தாரிகா அவளது உள்ளாடைகளைப் பிடுங்கியெடுத்தாள். 

அவனுக்கான உணவைத் தானே சமைத்து வைத்திருந்தான். எல்லாவற்றிலுமாய் நேர்த்தியாகத் தன்னை ஆக்கியவனாக அவன் மேலும் மேலும் மாறிக் கொண்டிருந்தான். எந்த வழியில் அவனை அணுகுவதென்பதே தெரியாதிருந்தது. தான் எதற்காக சண்டை போடுகிறேன் என்றாவது அவன் கேட்க வேண்டுமென தாரிகா விரும்பினாள். 

‘ஏன் காலையிலேயே கதவைச் சாத்தி வைத்திருந்தாய்?’ அவனைக் கைகளால் மறித்து கேட்டாள். ‘கதவு வேறெதற்கு இருக்கிறது?’ மிக இயல்பாகவிருந்தது அவனது பதில். 

‘நான் இல்லாதது அவ்வளவு சந்தோசம் உனக்கு. யனக்கங் பலங் இன்னவா நேத’* இரு மொழியிலுமாய் சத்தமிட்டு அடுத்த சண்டையை ஆரம்பித்தாள். காதில் பாடலை ஒலிக்கவிட்டவாறே கணணிக்கு முன்பாக மீண்டும் அமர்ந்தான். 

அமைதியற்றவளாய் வீட்டுக்குள்ளேயே அலைந்தாள். மண்ணுக்குள் தான் மூழ்கி அழுகிக் கொண்டிருப்பதாய் இருந்தது. தலைமுடியை இழுத்துக் கடித்துக்கொண்டு தம்மபத காத்தாவை முணுமுணுத்தாள். 

மனம் அமைதி கொள்வதாயில்லை. மேலும் மேலும் கொப்பளித்து ஆர்ப்பரித்தது. காத்தாவை விடாமல் உச்சரித்துக்கொண்டிருந்தாள். பின், விருட்டென எழுந்துசென்று உடம்போடு ஒட்டிப்பிடித்த சட்டையொன்றை அணிந்தாள். முகத்திற்கு அலங்காரம் செய்தாள். முடியை விரித்துவிட்டு ஒரு கிளிப் மாட்டினாள். அவனுக்காக வைத்திருந்த பொட்டை அழித்தாள். தாலியைக் கழற்றி மெத்தைக்கு மேலாக வீசியெறிந்து ஒரு வெள்ளிச் சங்கிலியை அணிந்தாள். இளம் ஊதாநிறத்தில் உதட்டுசாயமிட்டாள். கண்ணாடியைப் பார்த்துச் சிரிக்க முயற்சித்தாள். கண்கள் வீங்கித் தொங்கின. தனது கைப்பேசியை எடுத்து நூறிற்கு சத்தத்தை கூட்டி வைத்தாள். தனக்குப் பிடித்த பாடல்களைத் தேடித் தேடி இறுதியில் டெஸ்மொன் டி சில்வாவின் ‘சும்ஹிரி பானே’ பாடலை பெருஞ்சத்தத்துடன் ஒலிக்கவிட்டாள்.

பைலா பாடலின் அதிகரித்த சத்தம் அவனைக் குழப்பியது. 

கைகளை வீசிக்கொண்டு உடலை மென்மையாக அசைத்தசைத்து தாரிகா நடனமாடத் தொடங்கியிருந்தாள். 

‘என்ன எழவாவது பண்ணட்டும்’ என்றெண்ணி அவள் பக்கம் திரும்புவதையே ராமதாஸ் தவிர்த்தான். ஆனால் பாடல் சத்தமாக அதிர்ந்தொலிப்பதையும் அவள் நிறுத்தாமல் தொடர்ச்சியாக ஆடிக்கொண்டிருப்பதையும் அவனால் உணர முடிந்தது. 

தாரிகா சிங்கத்தைக் கிணற்றில் தள்ளத் திட்டமிட்ட நரியாக மாறியிருந்தாள். பிரிட்ஜிலிருந்த ஜின் போத்தலை திறந்து எதையும் கலக்காமல் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பித்தாள். அப்படியே தன்னிலை மறந்து ஆடத்தொடங்கியிருந்தாள். முதலில் கசப்பாயும் பிறகு உற்சாகமாயும் சற்றே தாமதித்து, பறப்பது போலுமாய் இருந்தது. அவனின் அலட்சியம் தந்த வெறுப்பிலிருந்து மீள்வதற்காகவே அவள் அதனை விரும்பினாள். அந்த ஜின் போத்தலை முத்தமிட்டபடி இன்னும் இன்னுமாய் சிறுகச் சிறுகக் குடித்தாள். கண்கள் மின்னியது. சிறு புள்ளியென அவன் தூரமாகிக் கொண்டிருந்தான். தானும் சேர்ந்து பாடிக்கொண்டே வேகமாக ஆடத் தொடங்கியிருந்தாள். 

Play the devil with the bottle freedom in the bar
When you broke don’t worry sell your lovely car…. *சும்ஹிரி பானே….. பதமட கஹலா… ஹெட்ட மெருணத் ஹித்தட செப்பய் அத ஜொலி கரலா… பாடல் அதிர்ந்தொலித்தது.

அவளது குட்டையான சட்டை விரிந்து சுழன்றது. சட்டென ஒருபடி அதிகரித்து, கையில் போத்தலை வைத்துக்கொண்டே அசைந்தசைந்து ஆடினாள். கண்கள் சொறுகி மீண்டது. மொத்தமாக அவனை மறந்துபோயிருந்தாள். சுற்றிச் சுற்றி ஆடினாள். தலையை ஆட்டிக்கொண்டே, போத்தலைத் தூக்கிப்பிடித்துக் குடித்துக்கொண்டே ஆடினாள். தான் இதுவரை இப்படிக் குடித்ததில்லை என்பதை மறந்து அதிகமாகக் குடித்துக் குடித்து…. கால்கள் தள்ளாடி விழப்போவதையும் நடனத்தின் அசைவென்றாக்கி, அதே பாடலை ஒலிக்கவிட்டுக் குலுங்கியாடினாள். 

‘சும்ஹிரி பானே………’ குரல் தடுமாறியது. தனக்கு முன்னால் தெரிந்த எல்லாமே தலைகீழாகிச் சுழல்வதாக… அவ்வளவு போதையிலும் அவன் தன்னைப் பார்க்கிறானாவெனத் தேடினாள். அவனைத் தெரியவில்லை. ஆடியாடித் தான் வேறெங்கோ வந்துவிட்டதாயிருந்தது. ஒருவேளை வீட்டு முற்றத்தில் ஆடிக்கொண்டிருக்கிறேனோ! ச்சே என்ன வெட்கங்கெட்ட பிழைப்பு… கைகளை அளைந்து தடுமாறி நடந்தாள். மேசை தட்டுப்பட்டது. அப்படியே டிவி.. இல்லை வீட்டில்தான் இருக்கிறோம். அவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். 

பாட்டு நின்றிருந்தது. அதையறியாமல் அவள் தானே பாடிக்கொண்டு, அவன் எங்கோயிருந்து தன்னைப் பார்க்கிறான் என்றெண்ணியவாறே ஒரு பைத்தியத்தைப் போல சரிந்து நிமிர்ந்து சிரித்துக்கொண்டே தள்ளாடினாள். 

சுற்றிலும் இருண்டது. தனதுடல் கிடையாகிச் சுற்றிக்கொண்டிருப்பதாயிருந்தது. தலை பாரமாகி வெடிக்கத்தொடங்கியது. உடலிலிருந்து கழுத்து தனியே துண்டிக்கப்பட்டாற் போல கழுத்திற்கும் உடலிற்குமான இடைவெளி எடையற்று அசைந்தது. கைகளைப் பிணைக்க முடியவில்லை. அல்லது கைகளைக் காணவில்லை. அவள் நேராக நடப்பதற்குக் கால்களைக் குனிந்து தேடினாள். கால்களையும் காணவில்லை. உடல் மட்டும் வெறும் துண்டமாய் சரியத் தொடங்கியது. 

சற்று நேரத்திற்குள் தடார் என்ற பெருஞ் சத்தத்தேடு அவள் இடிபட்டு விழுந்தாள். 

…………………………………………………………..

சத்தம் கேட்டு ராமதாஸ் அவளிடத்தே ஓடினான். அசைக்க முடியாத பாரத்தோடு மயங்கிக் கிடந்தாள். ஜின் போத்தல் காலியாகியிருந்தது.

‘பைத்தியமே இவ்வளவையும் தனியா அடிச்சா செத்துருவடி’ தான் கவனிக்காமலிருந்ததை எண்ணி வருந்தினான். என்ன செய்யலாமென்று அவனுக்கும் தெளிவில்லை. பிள்ளைகள் வரும் நேரம் வேறு. ஹொஸ்பிட்டல் கொண்டுபோக முடியாத நிலை. ஆயிரம் கேள்விகள் முளைக்கும். என்ன செய்யலாமென்று ஒன்றும் தோன்றவில்லை. சுமதி அக்காவைத் தொலைபேசியில் அழைத்தான். ‘பதட்டப்படாத கொஞ்சம் பார்த்துட்டு ஹொஸபிட்டல் போ… ஆபத்தாகிரும்’ என்றாள். முகத்திற்குத் தண்ணீர் தெளித்தான். தாரிகா தாரிகா என்று கன்னத்தில் தட்டினான். 

அகங்காரத்தின் எல்லாத் திசைகளிலும் ஒரு அப்பாவியின் கழுத்து நெறிபடுகின்றது. குருதி சொட்டச் சொட்ட என்னை வேட்டையாடித் தின்று தீர்த்தும் இவளுக்கு இன்னும் அடங்காத பசி. வெறி கொண்ட பசி. கைப்பொம்மையாக விரும்பாத ஒருவன் தனித்திருக்க விரும்புவதை உலகம் எப்படிச் சொல்லப்போகிறதோ! பெண்ணுக்குச் சார்பாக மட்டுமே இயங்கும் ஒரு உலகத்தை அவன் தெளிவாகப் பார்த்தான். ஒரு அரக்கியோடு… அதிகாரப் பிசாசோடு….! என்னவொரு சாபம் இது? குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வேன். இவளது ஒவ்வொரு முட்டாள்தனத்தின் முடிவிலும் எனது பிரகாசத்தை இழந்து நான் தனியனாகி நிற்கிறேன். ஏதோ ஒரு வகையில் எனக்கு உடன்படு அல்லது என்னோடு சண்டையிடு என்பதாய் பழி வாங்குபவளிடம் வேறென்ன செய்வது? 

அவளைத் தூக்க முயன்றான். பின் அப்படியே படுக்கச்செய்து கால்களைத் தளர்த்தி விட்டான். சொட்டுச் சொட்டாகத் தண்ணீர்த்துளிகளைப் பருகச்செய்தான். செய்வதறியாது ஸ்தம்பித்த நிலையில் பதறியோடிச் சென்று Chat GPT யிடம் என்ன செய்வதென்பதைக் கேட்டுப்பார்த்தான்.

Chat GPT யின் பதிலைப் பார்த்ததும் அவனுக்கு மூச்சடைத்தது. வியர்த்து கைக்கால்கள் உடலென முழுதாய் நடுக்கம் கொண்டான். ஏமாற்றமும் சோர்வும் தோல்வியும் சேர்த்ததாய் சில பெருமூச்சுகளோடு தலையிலடித்துக் கொண்டான். அவனுக்குச் சாதகமாக ஏதும் இருக்கிறதாவென மீண்டும் மீண்டும் படித்தான். 

நீங்கள் உடனடியாகச் செய்யவேண்டியது இங்கே:

1. அவசர சேவைகளை இப்போதே அழைக்கவும் – இலங்கையில், 1990 (சுவசேரியா ஆம்புலன்ஸ் சேவை) என்ற எண்ணை டயல் செய்யவும்.

2. அவளை வாந்தி எடுக்கவைக்க முயற்சிக்காதீர்கள்.

3. அவள் வாந்தி எடுத்தால் மூச்சுத் திணறலைத் தடுக்க அவளைப் பக்கவாட்டில் படுக்கவைக்கவும் (மீட்பு நிலை).

4. அவளுடைய சுவாசத்தையும் நாடித்துடிப்பையும் சரிபார்க்கவும்.

5. அவளைச் சூடாக வைத்துக்கொண்டு, உதவி வரும் வரை அவளுடன் இருங்கள்.

இது ஒரு மருத்துவ அவசரநிலை. உடனடியாக தொழில்முறை உதவியைப் பெறவும் – ஆல்கஹால் விஷம் கோமா அல்லது மரணத்தை ஏற்படுத்தும்.

அவனுக்கு அழுகை வந்தது. அவள் இறக்கக்கூடுமென்ற பயத்தில் அவளது கைகளை இறுக்கமாகப் பற்றினான். நடுங்கும் விரல்களால் சுமதி அக்காவை அழைக்க கைப்பேசியை எடுக்கும்போது தாரிகா சரிந்து வாந்தி எடுக்கத் தொடங்கியிருந்தாள். கைப்பேசியை வைத்துவிட்டு அவளுக்கு உதவினான். அணைத்துப் பிடித்துக் கொண்டான். தொடர்ச்சியாக வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள். மீண்டும் ஓடிச்சென்று Chat GPT யிடம் கேட்டான். ஆபத்து நிலையில்லையென்றும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக பருகத்தரும்படியும் சொன்னது. 

அவன் செய்வது முட்டாள்தனமென்று தெரிந்தும் அவன் அதையே செய்து கொண்டிருந்தான். இப்போது அவள் விழித்திருந்தாள். உளறிக்கொண்டே கைகளை ஆட்டினாள். மீண்டும் வாந்தியெடுத்தாள். அப்படியே அவளை இழுத்து குளியலறைக்குள் எடுத்தான். ஆடையை பிய்த்தகற்றி குளிச்சியான தண்ணீரில் குளிக்கச்செய்தான். ‘சீத்தலாய் சீத்தலாய்’* என்று அவள் பிதற்றினாள். ‘என்ன செய்கிறாய், நீ யார்? ஏன் என் ஆடையைக் கழற்றுகிறாய்…?’ சிறுபிள்ளையைப்போல கேட்கத் தொடங்கியிருந்தாள். அவனுக்குள் மெல்லிய நெகிழ்தல் உருவாகியது. எலுமிச்சை பாதியை தலையில் தேய்த்து தண்ணீர் ஊற்றினான். அவளைத் துடைத்து உடைமாற்றி படுக்கச்செய்து, பின் வாந்தி எடுத்த இடத்தை முழுவதுமாய் சுத்தம் செய்தான். வயிறு புண்பட்டிருக்குமெனத் தோன்றியது. ஜெலி செய்து பிரிட்ஜில் வைத்தான். 

அதற்குள் அவள் எழுந்திருந்தாள். மீண்டும் அந்தப் பாடலை ஒலிக்கும்படியும் தான் ஆட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேயிருந்தாள். ஜெலியை ஊட்டிவிட்டான். 

‘சும்ஹிரி பானே….. பதமட கஹலா…’ சாப்பிட்படியே கைகளை அசைத்தாடியபடி பாடத்தொடங்கினாள். அவன் இப்போது நிஜமாகவே நொந்திருந்தான். வெறுப்பா அன்பா என்றறியாத ஒரு உணர்வோடு அவளிடத்திலேயே அமர்ந்திருந்தான். அவள் தொடர்ச்சியாக உளறிக்கொண்டே கைகளையும் உடலையும் அசைத்தசைத்து ஆடுவதாய் எண்ணிக்கொண்டு ஏதோ செய்தாள். அவனை அருகே வரும்படி அழைத்தாள். அவனது மடியில் படுத்துக்கொண்டாள்.

நீண்ட காலத்திற்குப் பிறகு பெண்ணுடலை நிர்வாணமாக பார்த்த நிலை அவனை அழுத்தியது. அவள் தனது மடியில் படுத்துக்கொண்டு பாடுவது மேலும் அவனை அவஸ்த்தைக்குள்ளாக்கியது. தான் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து ஓட எத்தனித்தும் மீண்டும் வெளிச்சத்தைத் தேடி இறக்கும் பலவீனமான ஒரு பூச்சியென உணர்ந்தான். விருப்பத்துடன் அவளது ஸ்பரிசத்தை ஏற்றான். போதையில் அவளது கண்கள் ஜொலித்தன. அவ்வளவு அருவருப்பான வாந்தியின் மணத்தைத் தாண்டியதொரு பெண் வாசனை நாசியில் அகலாமல் தங்கியிருந்தது. அவள் தொடர்ச்சியாக பாடிக்கொண்டே இருந்தாள். அவனை இழுத்தணைத்தபடி அசைந்தாடினாள்.  

தான் சுயமிழக்கப் போகிறேனென்று உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மொழிக் கலப்பைக் கொண்டாடிய அவர்களின் அழகான பக்கங்களை நினைவிற்குக் கொண்டுவந்தான். அது நடுக்கடலையொத்த பேரமைதியுடன் கடந்து போனதை எண்ணிக்கொண்டான். மழைநீரின் தூய சுகந்தத்தை அள்ளித்தெளித்த அவர்களது அந்நாட்களில் காதல் ததும்பியருந்ததையும் அவளது உரத்த சிரிப்பும் அதன் அதிர்வுகளும் அவனை வீழ்த்திச் சாய்த்ததையும்… மீண்டும் அந்நாட்களை உயிர்ப்பிக்க எங்கேனும் வாய்ப்பிருக்கிறதாவென ஒருகணம் சந்தேகித்தான். அப்போதெல்லாம் வெளியில் தென்படா அவளின் வெறி, இப்போது மட்டும் எங்கிருந்து வந்ததென யோசித்தான். . பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி சிங்களத்தில் பேசவைத்தது தற்செயல் அல்லவெனத் தோன்றியது. 

அதிகாரத்தின் ஆதிவேரைக் கொண்ட ஒருத்தியின் அனிச்சையான குணம் வெறுமனே உள்ளத்தோடு தோன்றித் தொடர்பறுந்துபோக வாய்ப்பே இல்லையென்பதை யாருமே அவனுக்குச் சொல்லியதில்லை. அல்லது காதல் முற்றிய அவனது பூஞ்ஞைக் கண்கள் அதனைக் கண்டுபிடிக்கவில்லை. அத்தகைய ஆதிக்கத்தின் மிச்சங்கள் குருதியின் மொத்தத்திலும் ஆட்கொண்டிருக்கும் என பின்னாளில் தாரிகாவேதான் அவனுக்கு உணர்த்தியுமிருந்தாள். அவளது நாக்கில் மிகுந்திருந்த துவேசிக்கும் நச்சுக்கள் மீதான தன் சகிப்பிற்குள் குழந்தைகளின் முகங்கள் மாத்திரமே எஞ்சியிருந்தன. 

அவனை மொத்தமாகத் தோற்று விழச்செய்த அவளின் இந்தப் புதிய நாடகத்தில், துருவேறி விஷமாகியிருந்த அவர்களுக்கிடையேயான இடைவெளி இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் என்றே அவன் நம்பினான். ஆனால் நீண்ட தொலைவுக்கப்பால் இருவரும் பிரியப்போகிறார்கள் என்ற அவனது உள்ளுணர்வு கொதிக்கும் எண்ணெயில் தெறித்த நீரத்துளிகளென்றானது. பிடிவாதத்தின் உச்சத்தில் நெகிழ்வடையும் தன்மையுடையதான ஒரு பலவீனமான ஆண் அவனுக்குள் உயிர்த்தெழுவதாய் உணர்ந்தான். 

பாம்பும் ஏணியும் கொண்ட விளையாட்டில் ஒவ்வொரு ஏணியிலும் தாவியேறி வெற்றியின் எல்லையைத் தொட்டிருந்த அவன், இறுதியில் வாய் பிளந்திருந்த பாம்பின் வாய்க்குள் தப்பிக்க வாய்ப்பிருந்தும் சிக்குவது போலானான். அந்தப் பெரும் பாம்பு வெற்றியின் உச்சத்திலிருந்து அவனைத் தொடக்கப் புள்ளிக்குள் வீழ்த்துவதற்காய் வாய்பிளந்து காத்திருந்தது. 

பிறகும் அவள் அதே பாடலைப் பாடிக்கொண்டே அவனைப் பார்த்து வெற்றிச் சிரிப்பொன்றை உதிர்த்தாள். தனக்கு முன்னால் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த அவனைத் தன் கால்விரல்களால் சீண்டி,

 ‘ஒயா மட்ட ஆதரேய் நேத?’* என்றாள். 

***

*சும்ஹிரி பானே….. பதமட கஹலா…ஹெட்ட மெருணத் ஹித்தட செப்பய் அத ஜொலி கரலா… (இனிய பானத்தைப் பதமாகக் குடித்து இன்று குதூலித்துவிட்டு நாளையே இறந்தாலும் மனதிற்குக் கொண்டாட்டம்தான்.)

*சீத்தலாய் – குளிர்கிறது 

*யனக்கங் பலங் இன்னவா நேத’- போகும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறாய் தானே? 

*‘தெமலு’- தமிழன் 

*ஒயா மட்ட ஆதரேய் நேத?– நீ என்னை காதலிக்கிறாய் தானே? 

பிரமிளா பிரதீபன் – இலங்கையை சேர்ந்தவர். ஃபாத்திமா மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், SLIIT பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் வெளியாகியிருக்கின்றன. தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். மின்னஞ்சல் : pramilaselvaraja@gmail.com

நாடகம்

0

அரிசங்கர்

திடீரென்று தான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது. பெங்களூருக்கு சென்றதிலிருந்து தொடர்ந்து ஒரு இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். அங்கு பழக்கமான ஒரு நண்பர் தான் எனக்கு அந்தத் தகவலைத் தெரிவித்தார். அதாவது கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் பருவம் நாவல் ஆண்டிற்கொரு முறை முழு நாள் நாடகமாக மூன்று நாட்கள் போடப்படுகிறது என்றும் அது அடுத்த மாதம் நடைபெறப்போகிறது என்றும் அவர் தெரிவித்த நொடியிலிருந்தே எனக்கு அந்த நாடகத்திற்கு போக வேண்டுமென்ற ஆசை துளிர்விட ஆரம்பித்துவிட்டது. அதைப் பற்றி தேட ஆரம்பித்தேன். எட்டு மணி நேர நாடகம். காலை ஒன்பதரை முதல் மாலை ஏழு வரை நடைபெறும். இடையே உணவு மற்றும் தேநீர் இடைவேளைகள் உண்டு என்றும், உணவுடன் நாடகத்திற்கான நுழைவுக் கட்டணத்தைப் பார்த்ததும் கொஞ்சம் மனம் பின்வாங்கியது. ‘நாம இருக்கிற இருப்புக்கு இதெல்லாம் தேவையா?’ என்ற கேள்வியும் குழப்பமும் எனக்குள் ஏற்பட்டது. என்னுடைய விருப்பத்தையும் தயக்கத்தையும் ஊரிலிருந்த மனைவியிடம் தொலைபேசியில் பேசும்போது தெரிவித்தேன். “உங்களுக்கு பிடிச்சிருந்தா போயிட்டு வாங்க” என்று தெரிவித்தாள். இருந்தாலும் இரண்டு நாட்கள் அந்த தயக்கம் இருந்துகொண்டேயிருந்தது. டிக்கெட் புக் செய்ய போவேன். பிறகு பின் வாங்கிவிடுவேன். சில நண்பர்களிடம் இதைப் பற்றி தெரிவிப்பேன். அவர்கள் ஆர்வமுடன் விசாரிப்பார்கள். ஆனால், கடைசியில் வரவில்லை என்று சொல்லிவிடுவார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சட்டென நாடகத்திற்கான நுழைவுச்சீட்டை இணையத்தில் வாங்கிவிட்டேன். அதன் பிறகு தயக்கம் மறைந்து நாடகத்தைப் பார்க்கப் போவதற்கான எதிர்பார்ப்பு மட்டுமே என்னிடம் இருந்துகொண்டிருந்தது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் அந்த நாடகத்திற்கு நான் சனிக்கிழமை நுழைவுச் சீட்டை வாங்கியிருந்தேன். வெள்ளிக்கிழமை அலுவலகம். ஞாயிறு அன்று நுழைவுச்சீட்டு தீர்ந்துவிட்டிருந்தது. எனவே சனிக்கிழமை. அதுவும் கொஞ்சம் பின்னாலிருந்து பார்க்கும் படிதான் கிடைத்தது. சரி இதுவும் நன்மைக்குத்தான் என்று நினைத்துக்கொண்டேன். சனிக்கிழமை சுற்றிவிட்டு வந்தால் கூட ஞாயிறு முழுவதும் ஓய்வு எடுக்கலாம். வெள்ளிக்கிழமை அன்று அலுவலக நண்பர்களிடம் நாடகம் நடக்கும் இடத்திற்கு எப்படி செல்லலாம் என்று கேட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியை பரிந்துரைத்தார்கள். பேருந்து, மெட்ரோ, ஊபர் என பல வழிகள். நான் தங்கியிருந்த இடத்திலிருந்து கிட்டதட்ட நாற்பது கிலேமீட்டர்கள். அதை நினைத்தப்போதுதான். வயிற்றில் புளியை கரைத்தது. பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் உலகறிந்தது. சமீபத்திய செய்தி ஒன்று, ஒரு குடும்பத்தினர் தங்கள் உறவினர் ஒருவரை துபாய் செல்வதற்காக விமான நிலையத்தில் விமானம் ஏற்றிவிட்டு திரும்பும்போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டனர். இவர்கள் வீடு போய் சேர்வதற்குள் உறவினர் துபாய்க்கே சென்றுவிட்டார். இந்த செய்தி இணையத்தில் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதெல்லாம் நினைவுக்கு வர நான் என் பயணத்தை கவனமாகத் திட்டமிட்டேன். எல்லாம் சரி தூங்கி எழுந்து புறப்பட வேண்டியதுதான் என்று நான் வெள்ளிக்கிழமை இரவு உணவிற்குப் பின் நினைத்துக்கொண்டிருந்தபோது அறையின் கதவைத் திறந்துகொண்டு அவன் வந்தான். 

அவன் பெயர் ஆதித்தியா. மேல் அறையில் தங்கியிருக்கிறான். என்னுடைய அலுவலகத்தில் தான் வேலை செய்கிறான். எனக்கு இந்த விடுதியில் அறை ஏற்பாடு செய்துகொடுத்ததும் அவன் தான். எப்போதாவது அறைக்கு வருவான். எதாவது பேசியிருந்துவிட்டுப் போவான். 

அறைக்குள் நுழைந்ததும், “நாளைக் காலை எப்படிப் போகப்போகிறாய்” என்று ஆங்கிலத்தில் கேட்டான். எனக்கு கன்னடம் தெரியாது. அவனுக்கு தமிழ் தெரியாது. 

“ஊபர்” என்றேன்.

“சரி, நானும் உன்னுடன் வருகிறேன்” என்றான். நான் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தேன். “நானும் டிக்கெட் எடுத்திருக்கிறேன்” என்றான்.

“ஓ… சரி, எனக்கு வசதியாக இருக்கும். மொழி தெரிந்த ஒருவன் துணைக்கு இருந்தால் நல்லதுதான்” என்றேன்.

“சரி, காலை ஏழரை மணிக்கு புறப்படலாம். நீ எழுந்ததும் எனக்கு போன் செய்து எழுப்பிவிடு. பை” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டான்.

தனியாக அலைய வேண்டியதில்லை என்ற நிம்மதியோடு தூங்கச் சென்றேன்.

மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து ஊபருக்கு புக் செய்துவிட்டு வண்டி வரக் காத்திருந்தோம். ஆதித்யா  யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. சாலையை எட்டிப் பார்த்து யாரையோ எதிர்பார்த்து தேடிக் கொண்டிருந்தான். வண்டி தான் வருகிறதா என்று பார்க்கிறான் என்று முதலில் நான் நினைத்துக்கொண்டேன். ஆனால் வண்டி வந்து நின்ற பிறகும் அவன் எங்களைக் காத்திருக்க சொல்லிவிட்டு யாரோயோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தனது கைபேசியை எடுத்து யாரையோ அழைத்து எங்கே இருக்கிறாய் என்று கேட்டான். பிறகு எங்களிடம் திரும்பி இரண்டு நிமிடம் காத்திருங்கள் என்றான். சரி அவனுடன் இன்னொருவர் யாரோ வருகிறார் என்று நினைத்துக் கொண்டேன். நான் வேறு ஒரு திசையில் பார்த்துக் கொண்டிருக்க அவள் என் பின்னால் வந்து நின்று கொண்டிருக்கிறாள் என்று அவன் என்னை தட்டி அழைத்து அவளை அறிமுகப்படுத்தும் போதுதான் நான் தெரிந்து கொண்டேன். நான் லேசாக சிரித்து விட்டு புறப்படலாம் என்று அவனிடம் சொன்னேன். அவர்கள் இருவரும் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, நான் ஓட்டுநரின் அருகில் உட்கார்ந்து கொண்டேன். எங்கே போக வேண்டும் என்று அவன் அவரிடம் கன்னடத்தில் தெரிவித்தான். பிறகு எங்கள் பயணம்  தொடங்கியது. சென்று சேரும் வரை அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே வந்தனர். பல நேரம் சண்டையிட்டனர். கிட்டத்தட்ட இரண்டு எதிர்க்கட்சிக்காரர்களைப் போல சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருமே அரசியல் ரீதியாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் ஆதரித்த மதவாத கட்சியை அவள் தீவிரமாக எதிர்த்தாள். இருந்தாலும் அவர்களிடம் ஒரு நெருக்கம் இருந்தது. அவர்களின் பேச்சின் ஊடாக அவனை விட அவள் பல மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறாள் என்று தெரிந்து கொண்டேன். இடையே அவள் என்னிடம் ஏதாவது கேட்டுக்கொண்டேயிருந்தாள். நான் முடிந்த அளவுக்கு ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளுக்குள் எனது பதிலை தெரிவித்து விட்டு அமைதியானேன். சரியாக எட்டு முப்பதுக்கு நாங்கள் போய் சேர வேண்டிய இடத்தை அடைந்தோம். வண்டியை விட்டு இறங்கியதும் ஊபருக்கு நானே பணம் கொடுத்தேன். பிறகு அங்கிருந்து காலை உணவு சாப்பிடுவதற்காக ஒரு ஓட்டலுக்கு நடந்துச் சென்றோம். சிறிய நல்ல ஓட்டல். உணவும் தரமாக இருந்தது. காலை உணவுக்கும் நானே பணம் கொடுத்தேன். பிறகு அவன் என்னிடம் வந்து, போகும் போது இரவு உணவிற்கும் வாகனத்திற்கும் அவன் பணம் கொடுப்பதாக தெரிவித்தான். நான் சரி என்ற தலையாட்டினேன். நாங்கள் மூவரும் நாடகம் அரங்கத்திற்குள் நுழைந்தோம். கூட்டம் நிரம்பியிருந்தது. முழு அரங்கும் நிரம்பிவிடும் என்று தோன்றியது. பைரப்பாவின் புத்தகங்களை ஓர் இடத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அங்கும் பெரும் கூட்டம். ஒரு பத்து நிமிடம் காத்திருப்பிற்குப் பின் நாங்கள் அரங்கினுள் நுழைந்தோம். இதுவரை அப்படி ஒரு அரங்க அமைப்பையோ அவ்வளவு பெரிய அரங்கையோ நான் பார்த்ததில்லை. சிறிய நாடகங்களையும் தெருக்கூத்துக்களையும் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். இது எனக்கு ஆச்சரியமாகவும் ஒரு வகையில் புதிய அனுபவமாகவும் இருந்தது. வந்திருந்த கூட்டத்தினர் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்களே. யாரும் பெரும் பணக்காரர்கள் போல் தெரியவில்லை. நிறைய பேர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். இவ்வளவு பணம் கொடுத்து நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு குடும்பமாக வருகிறார்கள் என்று எனக்கு ஒரு வகையில் ஆச்சரியமாக தான் இருந்தது. நான் ஒரு இடத்திலும் அவர்கள் இருவரும் என்னிலிருந்து ஒரு இரண்டு வரிசை முன்னாள் சற்று தள்ளியும் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். இடைவேளையின் போது சந்தித்துக் கொள்ளலாம் என்று பேசிக்கொண்டோம். சரியாக 9:40க்கு நாடகம் தொடங்கியது.

நாடகத்தை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். மொழி புரியவில்லை என்றாலும் அந்த முழு நாவலையும் நான் ஏற்கனவே வாசித்துவிட்ட காரணத்தால் என்னால் ஓரளவுக்கு என்ன நடக்கிறது என்ன பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. நாடகத்தின் இடையே ஒரு நெருக்கமான காட்சியும் இருந்தது. பீமனும் திரௌபதியும் இருக்க அணைத்துகொண்டு காதல் ரசம் சொட்ட பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அது சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. முழு அரங்கிலும் அதிர்ச்சியடைந்தது நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். வேறு யாரும் அந்த அதிர்ச்சியை காட்டிக் கொள்ளவில்லை அல்லது ஒரு வேலை இந்த இருட்டில் எனக்கு தெரியாமலும் இருக்கலாம். ஒரு சிலர் அந்தக் காட்சிக்கு கைதட்டினார்கள். இடைவெளியின் போது ஒன்றாகவே தேநீர் அருந்தச் சென்றோம். மதிய உணவு ஒன்றாகவே சாப்பிட்டோம். ஒரு வழியாக மாலை ஏழு முப்பதுக்கு நாடகம்  முடியும் தருவாயை எட்டியது. அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கைதட்டினார்கள். நானும் எழுந்து நின்று கை தட்டினேன். நாடகத்தில் பங்கு பெற்ற அனைத்து நடிகர்களும் மேடையில் வரிசையாக நின்று அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, பிறகு மேடையில் இருந்து மெதுவாக இறங்கி வணக்கம் சொல்லியபடியே முழு அரங்கத்தையும் சுற்றி வந்தார்கள். உண்மையில் அப்போதுதான் ஒவ்வொரு நடிகரின் முகத்தையும் நான் நெருக்கத்தில் பார்த்தேன். நான் இருந்த இடத்திலிருந்து எந்த ஒரு முகமும் எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. 

ஆதித்தியா நகர்ந்து என்னை நோக்கி வருவதைக் கண்டு, புறப்படலாம் என்று சொல்லத்தான் வருகிறேன் என்று நினைத்தேன். என் அருகில் வந்து, நாங்கள் இருவரும் நாடகம் முடிந்ததும் பக்கத்தில் உள்ள மாலுக்கு ஷாப்பிங் போகிறோம் வருவதற்கு தாமதமாகும் நீ புறப்படு என்று சொன்னதும் நான் ஒரு நொடி கோபத்தின் உச்சிக்குச் சென்றேன். ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. சரி இருந்தாலும் இது அவர்கள் விருப்பம். அவர்கள் தேர்வு. நான் எதுவும் சொல்லவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் நின்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதன் பிறகு என்னால் அங்கு நிற்க முடியவில்லை. புறப்பட்டு விடலாம் நேரமாகிவிட்டது இனி போய் சேர்ந்தால் போதும் என்ற மனநிலைக்கு சட்டென வந்துவிட்டேன்.  எப்படி போகப்போகிறோம் என்ற தவிப்பும் உள்ளுக்குள் குடி கொண்டது. நான் அவனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. பார்க்க விரும்பவும் இல்லை. இன்று இரட்டை செலவு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன் அரங்கை விட்டு வெளியேறினேன். ஒருவேளை தனியாக வந்திருந்தால் தனியாகத்தானே சென்றிருப்போம் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். வெளியே பேய் மழை பெய்துகொண்டிருந்தது.

அரங்கத்தை விட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்துக் கொண்டு எப்படியாவது போய்விடலாம் என்று முடிவு எடுத்தேன். எப்படியும் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே பணம் செலவாகும் என்று தெரியும். இருந்தாலும் அறைக்கு சென்று படுத்துவிட்டால் போதும் என்று தோன்றியது.  ஏனோ தெரியவில்லை படபடப்பு அதிகமாகவே இருந்தது.  வெளியே வந்து நான் போக வேண்டிய இடத்தை குறிப்பிட்டு ஏதாவது வண்டி கிடைக்கிறதா என்று எனது கைபேசியில் முயற்சி செய்தேன். பதினைந்து நிமிடம் முயற்சி செய்தவாறு காத்திருந்தேன். ஒரு வாகன ஓட்டுநரும் எனது அழைப்பை ஏற்கவில்லை. அவ்வளவு நேரமும் அரங்கில் இருந்து யாரும் வெளியேயும் வரவில்லை. உள்ளே அதன் பிறகு வேறு எதுவும் நடந்து கொண்டு இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். பிறகு ஒருவன் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். என்னை ஃபோனில் அழைத்து இந்த இடத்தில் நிற்கிறேன் வா என்றான். அவன் சொல்கிற இடம் எது என்று எனக்கு தெரியவில்லை.

அருகே ஒரே ஒரு பெண் மட்டும் நின்றுகொண்டிருந்தாள். அவளிடம் அந்த இடம் எங்கே இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கேட்டேன். அவள் வேகமாக கன்னடத்தில் பதில் சொன்னால். அவளை இடைமறித்து எனக்கு கன்னடம் தெரியாது என்றேன். அவள் ஆச்சர்யமாக, பிறகு எப்படி இந்த நாடகத்தைப் பார்த்தாய் என்று ஆங்கிலத்தில் கேட்டாள். நான் அந்த நாவலை தமிழில் படித்திருக்கிறேன் என்றேன். பிறகு வெளியே சென்று இடதுபுறம் திரும்பி நட, சிக்னல் அருகில் என்றாள்.

மழையில் நனைந்து கொண்டே ஓடினேன். அங்கிருந்த நான்கு முனை சாலையில் நின்று கொண்டு மீண்டும் அவனை அழைத்தேன். அவன் எங்கே வரச் சொல்கிறான் என்பதை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பிறகு அவனுடைய அழைப்பையும் அந்த கோரிக்கையும் துண்டித்து விட்டு அருகில் இருந்த ஒவ்வொரு ஆட்டோவாக நான் போக வேண்டிய இடத்தை சொல்லி வர முடியுமா என்று கேட்டேன். ஒருவருமே வர விரும்பவில்லை, வர முடியாது என்று மறுத்தனர். அவ்வளவு தூரமா என்றனர், முடியாது என்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் ஒரு இடத்தில் ஒதுங்கி பத்து நிமிடமாக நின்றுகொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று இரவு இன்னும் எவ்வளவு நீளப் போகிறது என்று அச்சம் எனக்குள் மெல்ல ஒரு புகையைப் போல நுழைந்தது. பிறகுதான் திரும்பிப் பார்த்தபோது நான் நின்று கொண்டிருந்தது ஒரு மெட்ரோ ஸ்டேஷனின் வாசல் என்று தெரிந்ததும் உள்ளே நுழைந்து இங்கிருந்து நான் போகும் இடத்திற்கு அருகில் ஏதாவது மெட்ரோ போகிறதா என்று தேடிப்பார்த்தேன். மெஜஸ்டிக் வரை மெட்ரோ போகிறது என்று தெரிந்து கொண்டேன். எனக்கு தெரிந்த ஒன்று இரண்டு இடங்களில் மெஜஸ்டிக்கும் ஒன்று. மெஜஸ்டிக் பெங்களூரின் மத்தியில் உள்ள ஒரு இடம். அங்கு சென்று விட்டால் அங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் சென்று விடலாம் என்று முடிவு செய்து மெஜஸ்டிக்கிற்கு ஒரு நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு வேகமாக ஓடினேன். சரியாக நான் போய் சேர்ந்து இரண்டு நிமிடத்தில் ஒரு மெட்ரோ ட்ரெயின் வந்தது. ட்ரெயினில் ஏறிய உடனே தான் எனக்கு பாதி உயிர் திரும்பி வந்தது.

பத்து நிமிடங்களிலேயே மெஜஸ்டிக் ஸ்டேஷனை அடைந்துவிட்டேன். அங்கிருந்து இறங்கி வெளியே வந்தேன். மழை லேசாக ஆனால் விடாமல் பெய்துகொண்டிருந்தது. இங்கிருந்து ஏதாவது ஆட்டோ கிடைக்குமா என்ற முயற்சி செய்தேன். அங்கிருந்த ஒருவரும் தயாராக இல்லை. மழை. பெரும் கூட்டம். கடும் போக்குவரத்து நெரிசல். நேரம் ஒன்பதரையைக் கடந்திருந்தது. பசி ஏற்கனவே வந்து அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் உடல் நடுக்கம் ஏற்படலாம் என்ற சூழ்நிலை. சாப்பிட்டே ஆக வேண்டும். அதையும் மீறி வீட்டுக்கு சென்றால் போதும் என்ற மனநிலையே எனக்குள் இருந்தது. நான் விசாரித்து வர மறுத்த ஒரு ஆட்டோ டிரைவர் நீண்ட நேரமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ‘ஹலோ” என்று அழைத்தார். நான் அவரிடம் சென்றதும், “தமிழா” என்றார். 

“ஆமாம்” என்றேன். 

பிறகு அவர் ஒரு இடத்தை சொல்லி அந்த இடத்தில் இறக்கி விடுவதாகவும் அங்கிருந்து நீ போகும் இடத்திற்கு சுலபமாக பேருந்து கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அதற்கு மேல் என்னால் வர முடியாது என்றார். ஆனது ஆகட்டும் என்று நான் ஏன் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததும் ஆட்டோவை இயக்கியவர், குனிந்து நீ வரியா அம்மா எதிரில் யாரையோப் பார்த்து கன்னடத்தில் கேட்டார். யாரிடம் கேட்கிறார் என்று நான் சற்று குணிந்து பார்த்தபோது தூரத்தில் ஒரு பெண்ணும் அவள் அருகில் ஒரு ஐந்து வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தார்கள். அவள் சரி என்றாள். ஆட்டோ டிரைவர் திரும்பி என்னை பார்த்து “அவங்களும் தூரமா போகனும். ஆட்டோ கிடைக்கல. உங்க இடத்துல அவங்களையும் இறக்கி விட்டருறேன். அவங்களும் பஸ் பிடிச்சு போயிடுவாங்க. உங்களுக்கு ஓகேவா?” என்றார். நான் “சரி” என்று சொல்லிவிட்டு நகர்ந்து உட்கார்ந்து கொண்டேன். அவளும் குழந்தையும் என் அருகில் உட்கார்ந்து கொண்டனர். அவளுக்கும் எனக்கும் நடுவில் குழந்தையை உட்கார வைத்தாள். பிறகு அவன் எழுந்து சென்று அவள் மடியில் உட்கார்ந்து கொண்டான். ஆட்டோ மெல்ல நகரத் தொடங்கியதும் என் மனைவியிடம் இருந்து வீடியோ கால் வந்தது.

 வீடியோ காலை கட் செய்து விட்டு சாதாரணமாக கால் செய்து “சென்று கொண்டிருக்கிறேன் போனதும் அழைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு போனை அணைத்தேன். சரியாக அதே நேரம் அவளுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து அவள் ஏதோ இந்தியில் பேசினால். சற்று நேரத்தில் பேச்சு வாக்குவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் அவள் அழுது கொண்டே போனை அணைத்து பைக்குள் போட்டுக் கொண்டாள். அவள் தன் கணவனிடம் தான் சண்டையிட்டாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அவன் “திரும்பி வராதே, வந்தால் கொன்றுவிடுவேன்” என்று சொன்னது லேசாகக் கேட்டது. போனை அணைத்து பைக்குள் போட்ட சில நொடிகளில் அவள் அழ ஆரம்பித்தாள். அவள் மகனும் அம்மா அழுவதைப் பார்த்து அழ ஆரம்பித்தான். ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் போக்குவரத்து நெரிசலில் இரு பக்கமும் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் என்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் முறைத்தார்கள். எப்போது வேண்டுமானாலும் யாராவது ஒருவன் இறங்கி வந்து என் சட்டையைப் பிடித்து விடுவான் என்பது போல் ஒருவித பயம் எனக்கு தோன்றியது. நான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தேன். போக்குவரத்து நெரிசலில் ஆட்டோ நகர மிகவும் சிரமப்பட்டது. அவள் மெல்ல மெல்ல தன் அழுகையை நிறுத்தினாள். எனக்குள் லேசாக பயம் அதிகரித்தது. இவளும் அந்த ஆட்டோ டிரைவரும் ஒரே கூட்டாக இருந்து, ஏதாவது ஒரு இடத்தில் என்னை மடக்கி எதாவது செய்ய முயற்சித்தால் என்ற விபரீதமான யோசனை எனக்குள் எட்டிப்பார்த்தது. ஆனால் அவ்வளவெல்லாம் செய்வதற்கு என்னிடம் என்ன இருக்கிறது. அதிகபட்சம் சில நூறுகள் பாக்கெட்டில் இருக்கிறது. சம்பள பணம் அக்கவுண்டில் இருக்கிறது. கையிலோ கழுத்திலோ எந்த நகையும் இல்லை. கட்டியிருக்கும் கைக்கடிகாரம் வெறும் இருநூறு ரூபாய். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினால் கூட நான் ஜீபே செய்யவோ ஏடிஎம்மில் பணம் எடுத்தோ கொடுக்கமாட்டேன். சரி அப்படி செய்தால் பார்த்துக் கொள்வோம். தெருவில் சண்டை போட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கான உடல்நிலையோ மனநிலையோ இல்லையென்றாலும் சந்தர்ப்பமூம் சூழ்நிலையும் தானே சண்டை செய்வதை தீர்மானிக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் பயம் ஒரு ஊசியை போல மெல்ல உள்ளுக்குள் இறங்கியது.

நான் யோசித்துக் கொண்டிருந்தது போல எதுவும் நடக்கவில்லை. ஆட்டோ டிரைவர் எங்கள் இருவரையும் அவர் சொன்ன பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு என்னிடமும் அவளிடமும் பணத்தை பெற்றுக் கொண்டு சென்று விட்டார். நேரம் சரியாக பத்தரை. அந்த நேரத்தில் பசி என்னைக் கொன்றுவிடும் போல் தோன்றியது. பேருந்து நிறுத்துவதற்கு எதிரே ஒரு சிறிய ரோட்டுக்கடை இருந்தது. நான் நேராக சென்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இட்லி இருக்கிறது என்றும் தொட்டுக்கொள்ள கொஞ்சமாக மட்டுமே சம்பார் இருக்கிறது என்றும் வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். பெங்களூர் சாம்பார். எனக்கும் அப்போது சக்கரை கொஞ்சம் தேவைப்பட்டது.  சரி மூன்று இட்லி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். அப்போது யதார்த்தமாக திரும்பிப் பார்த்தபோது அவள் பேருந்து நிறுத்தத்தில் தவிப்புடன் நின்று கொண்டிருந்தாள். அந்த குழந்தை தனக்கும் பசிக்கிறது என்ற அழ ஆரம்பித்தது. அவள் அதன் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள். அது மேலும் வீல் என்று கத்த ஆரம்பித்தது. என்னால் அடுத்த துண்டை புட்டு வாயில் போட முடியவில்லை. நான் அந்த தட்டை அருகில் இருந்த ஒரு மேஜையில் வைத்துவிட்டு சாலையைக் கடந்து அவளிடம் வந்து எதுவும் சொல்லாமல் அந்த குழந்தையின் கையை பிடித்து கொண்டு ஹோட்டலுக்கு அழைத்து வந்தேன். அவள் அதிர்ச்சியோடு என்னை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ இந்தியில் முணுமுணுத்தது எனக்கு கேட்டது. ஆனால் என்னவென்று புரியவில்லை. அந்த குழந்தை ஹோட்டலுக்கு அழைத்து வந்து இரண்டு இட்லியை குழந்தைக்கு கொடுக்க சொன்னேன். அவர்கள் எதுவும் சொல்லாமல் குழந்தைக்கு கொடுக்க, இவள் வேகமாக சாலையைக் கடந்து வந்து அந்த இட்லி தட்டை வாங்கி எதுவும் பேசாமல் அந்த குழந்தைக்கு ஊட்ட ஆரம்பித்தாள். பிறகு நான் அந்த மூன்று இட்லியை வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு ஐந்து இட்லிக்கும் பணம் கொடுத்துவிட்டு சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்று கொண்டு ஏதாவது பேருந்து வருகிறதா என்று பாத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் தோன்றியது அவள் சாப்பிடுகிறாளா என்று நான் கேட்கவில்லையே என  நினைத்து எதிரில் நின்று பார்த்தேன். அந்த குழந்தை அரை இட்லி தான் சாப்பிட்டது. மீதம் இருந்த ஒன்றரை இட்டிலியை வேகமாக விழுங்கி விட்டு கையை கழுவிக் கொண்டு வந்து என் அருகில் பேருந்துக்காக நின்று கொண்டாள். மணி பதினொன்றைத் தாண்டிவிட்டது. அதுவரை ஒரு பேருந்து கூட அந்த பக்கம் வரவே இல்லை. எதிரிலிருந்த கடைக்காரரும் கிளம்பிவிட்டார். 

நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு ஆட்டோ  வந்து நேராக அவள் எதிரில் நின்றது. எங்கே போக வேண்டும் என்று டிரைவர் அவளிடம் கன்னடத்தில் கேட்டார். அவள் தயங்கிறயபடி ஏதோ ஒரு இடத்தை சொன்னாள். அவர்  சிறிதும் யோசனை இன்றி 800 ரூபாய் என்றார். அவள் அதிர்ச்சி அடைந்தாள். பதில் ஏதும் சொல்லவில்லை. அவரை புறக்கணிக்கும் விதமாக இடது புறமும் வலது புறமும் தன் தலையை திருப்பி பேருந்து வருகிறதா என்று பார்த்தாள். அடுத்தது அந்த ஆட்டோ டிரைவர் என்னிடம் எங்கே போக வேண்டும் என்று கேட்பார் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன். அவர் ஆயிரம் ரூபாயை கேட்டால் கூட கொடுத்து முதலில் அறைக்கு சென்று விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னை திரும்பிப் பார்க்கவே இல்லை.  அவள் அவரை உதாசீனப்படுத்தி விட்டாள் என்று தெரிந்ததுமே அவர் தன்  ஆட்டோவை வேகமாக இயக்கினார். நான் ‘ஹலோ’ என்று கூப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவர் ஆட்டோ வேகமாக சாலையில் பயணித்தது. நான் திரும்பி அவளை பார்த்தேன். அவள் தன் மகனை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தாள். என் பக்கம் திரும்பவே கூடாது என்று உறுதியாக இருந்ததை என்னால் உணர முடிந்தது. லேசான தூறல் இருந்து கொண்டே இருந்தது. எப்போதும் வேண்டுமானாலும் இந்த மழை மீண்டும் அதிகரிக்கலாம் என்று தோன்றியது. ஒருவேளை அந்த ஆட்டோ டிரைவர்  எங்களை ஏமாற்றி இங்கே இறக்கிவிட்டு பணம் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாரோ என்று எனக்கு தோன்றியது. அல்லது தன் ஆட்களை கூட்டிக் கொண்டு இனிமேல் தான் வருவாரோ என்று பயந்தேன். சுற்றி பார்த்தேன் அது ஒரு நீண்ட சாலை. தெரு விளக்குகள் பிரகாசமாக  ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாய் சாலையைக் கடந்து சென்றது. எங்கள் மூவரை தவிர யாரும் இல்லை. அந்த சிறுவன் தூங்கி விழுந்தான். அவள் அவனை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டாள். மிகவும் ஒல்லியாக இருந்த அவளால் அந்த குழந்தை எவ்வளவு நேரம் தூக்கிக்கொண்டு இருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. நான் ஏதோ ஒரு வகையில் அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். எனது கைபேசியில் மனைவிடமிருந்து தொடர்ந்து குறுஞ்செயதிகள் வந்து கொண்டே இருந்தன. போய் விட்டீர்களா? போனதும் அழைக்கவும். எங்கே இருக்கிறீர்கள்? என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு குறுஞ்செய்தி வந்து கொண்டே இருந்தது. என் நினைவுகளை சிதைக்கும் விதமாக மீண்டும் ஒரு ஆட்டோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். சற்று முன் வந்து சென்ற ஆட்டோ சுற்றிக்கொண்டு மீண்டும் அதே வழியில் வந்தது. இப்போதும் நேராக வந்து அவள் எதிரில் தான் நின்றது. ஏழ்நூறு ரூபாயாவது குடுமா என்று அவர் கன்னடத்தில் கேட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் தன்னிடம் பணமே இல்லை என்பதால் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். இப்போது நான் ஒருவன் நின்று கொண்டிருப்பதை ஆட்டோ டிரைவர் கவனித்தார்.  நீங்க எங்க போகணும் என்றார். நான் அவருக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்தேன். நானூற்றி ஐம்பது ரூபாய் என்றார். நான் உடனே சரி என்று அந்த ஆட்டோவில் ஏறப்போனேன். ஒரு நொடி திரும்பி அந்த இருவரையும் பார்த்தேன். என்னால் அந்த ஆட்டோவில் ஏற முடியவில்லை. அவர்களை விட்டுவிட்டு போவதற்கு என் மனம் ஒப்பவில்லை. இப்போது நான் இந்த ஆட்டோவில் சென்று என் அறையில் நிம்மதியாக உறங்கி நாளை காலை எழுந்து ஏதாவது, சாலையில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு தாய்க்கும் மகனுக்கும் ஏதாவது நேர்ந்து விட்டது என்ற செய்தியைப் படிக்கும் போது அந்த குற்ற உணர்ச்சியை வாழ்நாள் முழுக்க என்னால் சுமக்க முடியும் என்று தோன்றவில்லை.  நான் ஒரு வீரனும் இல்லை. பெரிய தியாகியோ வள்ளலோவோ இல்லை. ஆனால் அவர்களை இப்படியே விட்டு விட்டு போகவும் மனமில்லை. ஒருவகையில் இதுவும் ஒரு சுயநலம் தான். குற்றவுணர்விலிருந்து தப்பித்துக்கொள்ளும் நல்லவனுக்கான வேஷம் தான். அந்த ஆட்டோ டிரைவரிடம் அவர்களை அழைத்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு விடும்படி சொன்னேன். அவர் புரியாமல் என்னைப் பார்த்தார். நான் அவரது ஆட்டோவில் ஒட்டி இருந்த ஜிபேவில் ஸ்கேன் செய்து அந்த ஏழுநூறு ரூபாயை கொடுத்துவிட்டு அவர்களை ஆட்டோவில் ஏற சொன்னேன். அவள் குழப்பத்துடன் என்னைப் பார்த்தாள். அந்தக் கண்கள் முழுக்க பயம் நிரம்பியிருந்தது. அவள் தயங்கினாள் நான் ஆட்டோ டிரைவரிடம், “இனி இந்த பக்கம் பேருந்து வருமா என்பது சந்தேகம் தான்” என்று அவளிடம் சொல்ல சொன்னேன். நான் சொன்னபடி அவரும் கன்னடத்தில் அவளிடம் சொன்னதும் அவர்கள் இருவரும் ஆட்டோவில் ஏறிக் கொண்டனர். அவள் நன்றி தெரிவித்தாள். நான் எதுவும் சொல்லாமல் தலையாட்டி அவர்களை வழி அனுப்பி வைத்தேன். அந்த ஆட்டோ கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு நிம்மதி. இப்போது அந்த சாலையில் அந்த இருளில் மழையில் நான் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தேன். சாலையை அங்குமிங்கும் கடந்து சென்றுகொண்டிருந்த தெருநாயும் ஒரு இடத்தில் ஓரமாக படுத்துவிட்டது. மிக நீண்ட நேரத்திற்கு பிறகு இன்னொரு ஆட்டோ அந்த பக்கம் வர அவர் என்னிடம் முன்னூற்றி ஐம்பது ரூபாய் கேட்க நான் உடனடியாக எதுவும் பேசாமல் ஆட்டோவில் ஏறிக்கொண்டு நள்ளிரவு ஒரு மணிக்கு அறைக்கு வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்து விட்டேன் என்ற தகவலை மட்டும் என் மனைவிக்கு தெரிவித்து விட்டு படுத்து விட்டேன். தூக்கம் வரவில்லை. அவர்கள் சென்று சேர்ந்து இருப்பார்களா? என்ற எண்ணமே என்னை சூழ்ந்து சுழன்று வந்தது. எப்போது என்று தெரியாத நொடியில் நான் தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

மறுநாள் காலையில் பொறுமையாக எழுந்து என் மனைவிக்கு போன் செய்து நடந்ததை ஒன்று விடாமல் ஒரு கதையைப் போல சொன்னேன். அவள் என்னைக் கடுமையாகத் திட்டினாள். ஒருவேளை நீ பயந்தது போல் அவர்கள் உன்னை ஏதாவது செய்து இருந்தால் என்ன செய்திருப்பாய் என்றாள். ஆனால் எதுவும் தான் நடக்கவில்லையே என்று சமாளித்தேன். பேச்சு ஒரு கட்டத்தில் இலகுவானது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவள் “அந்த பொண்ணு அழகா இருந்திருப்பா” என்றாள். நான் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டேன். பேசி ஓய்ந்ததும் அவள் போனை வைத்துவிட்டு வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள்.  மனைவி சொன்ன வார்த்தைகள் என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவள் அழகாகவா இருந்திருப்பாள் என்று மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தேன். பர்தாவுக்குள் இருந்த அவளுடைய முகம் எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து கொள்ள பார்க்க முடியவில்லை. அந்த குழந்தையை நினைத்து பார்த்தேன். குழந்தையின் முகத்தை வைத்து அவளுடைய முகத்தை கற்பனை செய்து பார்க்க முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. அவள் எப்படி இருந்தால் தான் என்ன?

***

அரிசங்கர் –  புதுச்சேரியைச் சேர்ந்தவர். பிரபஞ்சனுக்குப்பின் பாண்டிச்சேரி வாழ்க்கையை எழுதும் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக அரிசங்கர் கருதப்படுகிறார்.  பதிலடி, ஏமாளி, உடல், சப்தங்கள் ஆகிய  சிறுகதைத் தொகுப்புகளையும், மாயப்படகு, பக்கார்டி, பாரிஸ், உண்மைகள் பொய்கள் கற்பனைகள் மற்றும் மாகே கஃபே ஆகிய நாவல்களையும் வெளியுட்டுள்ளார். இரண்டு நாவல்களையும் மொழிபெயர்த்துள்ளார். மின்னஞ்சல்: harisankarux@gmail.com

நான் பார்க்கிற கடல், கிருபாவின் கடலுக்கு மிக நெருக்கமானது. ஆனால், அது ஆண்கடல்!

1

நேர்காணல் : ப்ரிம்யா கிராஸ்வின்
நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி

ழுத்தாளர்களுக்கான அறிமுக நேர்காணல் வரிசையில் ப்ரிம்யா கிராஸ்வினுடனான உரையாடல் அவருடைய கதைகளை அருகில் சென்று பார்க்க வழிவகுக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் ப்ரிம்யா கிராஸ்வின். தப்பரும்பு எனும் கவிதைத் தொகுப்பும், ‘கெத்சமனி’, ‘திருப்பண்டம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். கதைகள் மென்னுணர்வின் சாயலை பிரதிபலிப்பதாக இருப்பினும் அதன் மரபார்ந்த தடத்தையும், நிகழ்கால சிக்கல்களையும் ஒரே தட்டில் வைத்து புனைவில் ஆராய்பவர். சரளமான மொழி நடையில் எளிமையான கதை வடிவில் ஆழமான கேள்விகளை எழுப்புபவர். இந்த நேர்காணல் புனைவுலகத்துடனான அவருடைய அன்றாடத்தையும் அதன் வழி அவருடைய கதைகளுக்கான மற்றொரு திறப்பையும் அறிய உதவுகிறது.

  1. கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்கியது ?

கவிதைகளில் உணர்வைச் சொல்ல வார்த்தைகளில் போதாமை ஏற்பட்டபோது, நான் கதைகளுக்கு நகர்ந்தேன். கதைகள் தரும் கருத்துச் சுதந்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயல்பில் அகமுகச்சிந்தனையாளியாக இருக்கிற எனக்கு ஒரு  நுரைப்பஞ்சுபோல என்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களை மௌனமாக விழுங்கிக் கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. பிறகு, ஒரு சாதகமான தருணத்தில் இந்த சம்பவங்கள் தம்மை  கதையாக சிருஷ்டித்துக் கொள்கின்றன.

  1. முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து ?

எனது முதல் சிறுகதை ‘பிடாரி’, வாசகசாலை இணைய இதழில் டிசம்பர் ,2023இல் வெளியானது.உண்மையில் அக்கதைக்கான கரு பின்வரும் கவிதையை எழுதும்போதுதான் பிறந்தது.

“சீக்கு வந்த பண்ணைச்சேவலை
தூரவா எறிந்து விட முடியும்…
அம்மா உப்பு காரம் தூக்கலாக  வைத்த குழம்பும் பொறியலும் அப்பாவுக்கு 
அத்தனை உவப்பாய் இல்லை… பிள்ளையைப்போல 
வளர்ந்த பிரிய சேவலை விழுங்கவும் முடியாமல் 
இலையை மூடவும் முடியாமல் 
அப்பா பரிதவிப்பதை ,
அம்மா ஏன் குரூர இளிப்புடன் லயித்துப் பார்க்கிறாள்?
நேற்றுவரை தெருவில் 
சிறுமியாய் ஆடி ஓடி 
விளையாடிக்கொண்டிருந்த பெண்ணை, 
அத்தான்உறவு 
விட்டுவிடக்கூடாதென்று
கல்யாணம் கட்டி  
கூட்டி வந்த போது 
அவளுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்!”

வழக்கமாக ஆறேழு வரிகளுக்குள் கவிதைகளை எழுத முடிகிற எனக்கு வழக்கத்துக்கு மாறாக வார்த்தைகள் அதிகம் கோருகிற இவ்வரிகளை கவிதை என்றே ஒப்புக் கொள்ள முடியவில்லை.  எழுதும்போதே எனக்குள் இது கதையாக விரியும் என்ற ஒரு அகக்காட்சி தோன்றி விட்டது.

         முதல்  கதையை எழுதும்போது, உண்மையில் வார்த்தைகளுக்குத் தடுமாறினேன் என்றுதான் சொல்லவேண்டும். சுருங்கச் சொல்லி பழகியிருந்த கவிமனது திடுமென கிடைத்த இந்த தாராளத்தில் சற்று திகைத்து நின்றதே உண்மை. ஆயிரத்து இருநூறு வார்த்தைகள் என்பதெல்லாம், அப்போது எனக்கு மலைப்பாயிருந்தது. எழுத ஆரம்பித்தபின், நிகழ்ந்ததெல்லாம் மாயம். கதைகள் என் விரல் பிடித்து,  தனக்கான ஒப்பனைகளைத் தானே செய்துகொள்வதை ஒரு பிள்ளையின் ஆச்சர்யத்துடன் இன்றைக்கும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

கவிதை

  1. அறிவு – அனுபவம் – மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது ?

 முதல் தலைமுறை எழுத்தாளர்களிடம் இருந்து சமகால எழுத்தாளர்களை வேறுபடுத்திக் காண்பிக்கும் வகையில், இம்மூன்றில் அனுபவம் தான் முதலாய் வருகிறது. அவர்களுக்கிருந்த விஷய ஞானம் நேரிடையான அனுபவங்களின் அடிப்படையில் இருந்தது. இன்றைக்கு ஒரு விரல் சொடுக்கில் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களை அறிவதற்கு, அந்நாள்களில் எவ்வளவு பிரயத்தனப்பட்டிருப்பார்கள் என்பதை யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது. அறிவு இருந்தால் யார் வேண்டுமானாலும் இன்றைக்கு கதை எழுதிவிட முடிகிறது. ஆனால், மொழியில் அவர்களின் சாயம் வெளுத்துப் போகும். தனக்கென்று ஒரு மொழிநடை இல்லாவிட்டால் pied piper ஐப் போல பிள்ளைகளைக் கடத்திக் கொண்டு மலைக்கு அப்புறமாக கொண்டு செல்வது எப்படியாம்!

  1. ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்யேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளை சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங்கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம் ?

சொந்தஊரிலே ஆயுள்பரியந்தம் வாழுகிற வரம் எனக்கு கிடைத்துள்ளது. சிறுவயதில்  நாங்கள் வசித்த வீடு இருக்கிற தெருவில் நடந்து செல்கின்றபோது, நான் ஒரு பாவாடைச் சிறுமியாக மாறி விடுகிறேன். ஒரு குழந்தையாக நான் நின்று அழுத இடங்களில்,  இன்றும் என் கால்கள் தயங்க நின்று நின்றுதான் போகிறேன்.  என் கதைகளில் ஒரு சிறுவனோ சிறுமியோ வந்துகொண்டே இருப்பார்கள். அது நான் தான்…என் பால்யமும், என் ஊரும் என் கதைகளில் இருந்து பிரிக்க முடியாதவை. எங்கள் ஊரில் விரிந்த கடல் ஒன்று இருக்கிறது.வீரபாண்டியன் பட்டணத்துக் கடல்… அதனை எழுதி மாயவே இந்த ஜீவன் இருப்பதாய் கருதுகிறேன். என் மக்களின் பாடுகளை, அவர்கள் சுமக்கும் ஒரு உப்புச் சிலுவையை, அத்தனை கண்ணீர் துளிகளையும் ஆவேசமாக வந்து அழிக்கும் இந்த அலைகளை எழுத்தில் வார்க்க முடியாவிட்டால் நான் எழுதிதான் என்ன பயன்?

  1. உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய படைப்பு என்று உண்டா ? 

கன்னி போல ஒரு படைப்பை ஆழ வாசித்தவர்கள் கடல் சார்ந்து எழுத  அமர்ந்தாலே, கிருபாவின் கைநடுக்கம் வராமல் இருக்க முடியாது. கடலைத் தொட்டால் கன்னியைத் தொட்டது போல இருக்கிறதோ என்று மென்பதட்டம் வந்து திரும்பத் திரும்ப வாசித்து இல்லை என்பதை உறுதி செய்துகொள்வேன். ஏனென்றால், நான் பார்க்கிற கடல், கிருபாவின் கடலுக்கு மிக நெருக்கமானது. ஆனால், அது ஆண்கடல். அதனால் பிழைக்கிறேன்.

  1. எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார் ?

அது ஒரு நெடும்பட்டியல் இருக்கிறதே. குபரா, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், ஜெயமோகன், கு.அழகிரிசாமி, சுஜாதா, எஸ் ரா, வண்ணநிலவன், ஜி.நாகராஜன், ஆதவன், அம்பை இப்படி நீளும் பட்டியலில் ஒருவரைத்தான் சொல்ல வேண்டுமென்றால் வண்ணதாசனைச் சொல்வேன்.  அவர் சிறிய விஷயங்களின் கடவுள். சாமி உண்டியலில் சேரும் செல்லச் சிறுவாடு. எனது முதல் கவிதைத் தொகுப்புக்கான விருதினை அவரது கையாலே பெற்றேன்.  அவரிலிருந்தே அனைத்தும் துவங்கியது. கவிதைகளில் என்றால் நேசமித்ரன் மற்றும் முகுந்த் நாகராஜனைச் சொல்லலாம்.

சிறுகதைத் தொகுப்புகள்

  1. சிறுகதைக்கான கருவை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ? 

வாழ்வியல் அனுபவங்கள் மட்டும் கதையாக மாறாது. சில நேரங்களில் வாசிப்பும் கூட கதைகளுக்கு இட்டுச்செல்வதைக் கண்டுள்ளேன். நான் எழுதிய கதைகளிலே, ஒரு கதையின் துணைக்கதாப்பாத்திரம் மற்றொரு கதை எழுதும்போது  முதன்மைப் பாத்திரமாக தன்னை வரித்துக் கொண்டுள்ளதை கண்டதுண்டு. சிலநேரம் கவிதைகள்கூட கதைகளை நோக்கி என்னை அழைத்துச் செல்லும். கதைக்கான திறப்பு இங்கிருந்து தான் வருமென்று இல்லை. கூம்பும் பருவத்து கொக்கொக்க நிற்பதே எழுத்துலட்சணம்.

  1. சமகாலக் கதைகளில் வரலாறு – தொன்மம் – நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இதன் தாக்கம் உண்டு. இவை தற்செயலா அல்லது காரணார்த்தத்துடனான செயல்பாடா ?

விருப்பப்புணர்வுக்கும், பலாத்காரத்துக்கும் இடையில் இருக்கிற வித்தியாசம்தான் தற்செயலுக்கும் காரணார்த்தத்துக்குமான வேறுபாடும். நான் எதையும் கதைகளின் மீது திணிப்பதில்லை. அவை தன்னியல்பில் தனக்கு தேவையான விஷயங்களை தேர்ந்துகொள்கின்றன. திணிப்பு கதைகளின் குரல்வளையை நெறிக்கும்.  அடுத்த கதை நீங்கள் இதை வைத்து எழுதினால் நன்றாக இருக்கும் ,அதை வைத்து எழுதினால் அதகளமாக இருக்கும் போன்ற பரிந்துரைகளை இங்கே காணமுடிகிறது. இப்போது ஒரு முட்டை பப்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்பதுபோல எவ்வளவு எளிதாக சொல்லி விடுகிறார்கள் பாருங்களேன். என்னைக் கேட்டால், எழுத்தாளன் என்பவன் தனக்குத் தோன்றினால் மட்டுமே எழுதவேண்டும் அல்லது பனிக்கரடி போல தனக்குள்ளே குகையமைத்து குளிர்உறக்கத்துக்குச் சென்றால் கொழுப்பாவது கரையும்.

  1. சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்பிராயம் ? நீங்கள் ரசிக்கும் சில சமகால படைப்புகள் குறித்து

என்னோடு எழுத வந்தவர்களை கூர்ந்து அவதானிக்கிறேன். எதைச் செய்ய வேண்டும் என்பதைவிட எதைச் செய்யக்கூடாதென்று பாடம் கற்க வேண்டியுள்ளது இவ்விடத்தில் முக்கியமாக இருக்கிறது.  புதியவர்கள் நிறைய எழுதுகிறார்கள். அவர்களின் நண்பர்கள் விமர்சனம் செய்கிறார்கள். நண்பர்களின் நண்பர்கள் புத்தகத்தை வாங்கிக் கொள்கிறார்கள். வாங்கியவரெல்லாம் படிக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒரு புத்தகம் ஐந்நூறு ரூபாய், எழுநூறு ரூபாய் என்கிறார்கள். அபிமானத்தின் பேரில் அத்தனை தொகை கொடுத்து புத்தகம் வாங்கி  கையைச்சுட்டுக்கொண்ட அனுபவங்கள் எனக்கே ஏராளம் உண்டு. இப்போதெல்லாம் திருந்தி விட்டேன். இரண்டு மூன்று தாள்களை படித்துப் பார்த்த பின்னரே புத்தகத்தை வாங்குகிறேன். 

“நண்பர்களுக்கு எனது வரவேற்பறையில் 
இடம் கொடுப்பேன்…
புத்தக அலமாரியில் அல்ல. “

கவனம் பெறாத புதிய எழுத்தாளர்கள் இங்கே எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, நல்ல படைப்பு அடைய வேண்டிய இடத்தை அடைந்தே தீரும். 

“மலையை விழுங்குகிறவர்களை விழி விரிய பார்த்துக்கொண்டு நிற்கிறவர்களே!
உங்கள் பசிக்கு ஒருமீன் போதாதா….
தூண்டிலை மட்டும் துருப்பிடிக்காமல் 
பார்த்துக் கொள்ளுங்கள்!”

சமகாலபடைப்புகளைச் சொல்வதை விட படைப்பாளர்களை சொல்கிறேன். என்.ஶ்ரீராம், கார்த்திக் புகழேந்தி, செந்தில் ஜெகன்னாதன், அமுதா ஆர்த்தி, ரம்யா அருண் ராயன், இத்ரீஸ் யாக்கூப், ஐ.கிருத்திகா, கண்மணிராசா, தமிழக்குமரன், செஞ்சி தமிழினியன் இன்னும் ஒரு பட்டாளமே இருக்கிறார்கள்.

  1. உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் ? எழுதும் செயல்பாட்டிற்கு தனிப்பட்ட முறைமைகளை பின்பற்றுகிறீர்களா ?

இருபது வருடங்களாக அரசுப்பள்ளி ஆசியராக  பணியாற்றி வருகிறேன். பள்ளிநேரங்களில் அலைபேசியை என் உபயோகத்துக்கு பயன்படுத்துவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். எழுதுவதற்கென்று பிரத்யேக நேரம் என்ற ஒன்று எனக்கு இல்லை. கதைகளை அலைபேசியின் notepad இல் தட்டச்சு செய்துகொள்கிறேன். அதுவே மற்ற எல்லா முறைமைகளையும்விட சுலபமாயிருக்கிறது. எனது பெரும்பாலான கதைகள் பேருந்தில்  எழுதப்பட்டவையே. இருக்கை கிடைக்காத நாள்களில், பிறகு எழுதலாம் என்று நினைத்து கோட்டைவிட்ட கதைகளும் உண்டு. தனிப்பெண்ணாகிய எனக்கு அர்த்தநாரியின் பாத்திரமும் வீட்டில் உண்டு. 

அன்றாட வேலைகளைச் செய்து முடித்துவிட்டு, இரவில் எழுதலாம் என்றால்,‘உனக்கு இருக்கிற உடல் உபாதைகளுக்கு ஆறுமணி நேர தூக்கமாவது அவசியம் ’,என்று இடித்துரைக்கிறார் எனது மருத்துவர். ‘Miles to go before you sleep ’,என்கிறார் Frost. அன்றாடம் என் தலைக்குள் இவர்கள் இருவருக்கும் தான் போட்டியே!

  1. உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து

தற்சமயம் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். எழுதியிருக்கும் கவிதைகளைத் தொகுக்க வேண்டும். நாவல் எழுதும் உத்வேகம் இருக்கிறது. அதற்கான மெனக்கெடல்களை மேற்கொள்வதற்கான சூழல்கள் தற்போது இல்லையென்பதால், காலதாமதம் ஆகிறது. கதைகளை எழுதுவேன் என்று ஒருகாலத்தில் நினைத்தும் பார்த்ததில்லை.இன்று இரண்டு தொகுப்புக்களை வெளியிட்டாகிறதல்லவா… காலம் எனக்கு இன்னும் என்ன வைத்திருக்கிறது என்று பார்க்கலாமே!

***

நேர்கண்டவர் – கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.

வில்லியம் டவேனெரின் மிகையுணர்ச்சி

0

வில்லா கேதர்

தமிழில் : சுபஶ்ரீ முரளிதரன்

மேற்கத்திய உலகில் வாழ்வதில் வெற்றி பெறுவதற்கு, ஒரு பெண் வலிமை மிக்கவளாக இருந்தால் மட்டுமே முடியும். ஹெஸ்டர் அப்படியானவள் என்பதில் சந்தேகமே இல்லை. மேக்ஃபெர்சன் மாகாணத்தில் மக்கள் வளமான விவசாயி என்று வில்லியத்தைப்பற்றி பேசும்பொழுது, வழக்கமாக அவரது மனைவியை ஒரு நல்ல மேலாளர் என்பதையும் சேர்த்தே சொல்வார்கள். அவள் நாவண்மையும் அதிகார தோரணையும் மிக்க ஒரு நிர்வாகத் திறன் கொண்ட பெண். அவள் கணவன் அவளிடம் வியாபாரத்தைப் பற்றி கலந்தாலோசிக்க முற்படாததன் காரணம், அவள் அதற்கான அவசியத்தை ஏற்டுத்த காத்திருக்கவில்லை என்பதாலேயே. 

ஹெக்டருடைய அறிவுரைகள் அனைத்தையும் ஒரு மனிதன் பின்பற்றுவது என்பது மனித செயல்பாடுகளுக்கு சாத்தியமில்லாதது என்றாலும், அவற்றில் சிலவற்றை வில்லியம் பின்பற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். போரடிக்கும் இயந்திரத்தை அவர் திறந்த வெளியில் விட்டுவைத்திருப்பதை ‘பொறுப்பற்றத்தனம்’’ என்று அவள் கடுமையாக விமர்சித்தபோது, ஒருவழியாக அதற்காக ஒரு கொட்டகையைக் கட்டினார். புல்லைக் கொண்டு பன்றிக்கு வேலி அமைப்பதைப்பற்றிய அவரின் கருத்தினை இளக்காரமாக அவள் பார்த்தபோது, தன்னுடைய ”கோபத்தைக் காட்டும்விதமாக” சுரத்தேயிலாமல் அந்த வேலையைத் தொடங்கினார். ஆனால், கடைசியில் அந்த வேலையை முடிப்பதற்கு அருகாமையிலிருந்த நகரத்திற்கு சென்று முள்கம்பியை வாங்கி வந்து அதை முடித்தார். முதல் கனமழை பெய்தபொழுது, பன்றிகள் உள் நுழைய ஆங்காங்கே அந்த புல்வேலிக்கு அடியில் சிறுசிறு பாதைகளை ஏற்படுத்திக் கொண்டபோது, அவர் மனைவி சாப்பாட்டு மேசையில் மந்திரியிடம் பன்றி குட்டிகள் மணல்வீடு கட்டிய கதையை ரசித்து சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டு, ஒரு நொடியும் தன் கண்ணியத்தை இழக்காதவராக இருந்தார் – சொல்லப்போனால் மௌனமே அவருக்கான பலமும் தஞ்சமும்.

வில்லியம், தன் பிள்ளைகள் அவர்களுடைய தாயாரை மதிப்பதற்கான முழு முன்மாதிரியாக திகழ்ந்தார். அவரை அறிந்தவர்கள் அவர் தன் மனைவியை மதிப்பதோடு ரசிப்பதாகவும் ஐயப்பட்டனர். அண்டை வீட்டாருக்கு அவர் பேராசையும், பிடிவாதமும் லட்சியமும் கொண்ட ஒரு கடினமான மனிதராகவே தெரிந்தார்.

அவர் எப்பொழுதாவது வீட்டுக் கணக்கை பார்க்கும் சோர்வான நாட்களில், ஒருபோதும் அவருடைய மனைவியின் அங்கி மற்றும் குல்லாய்களுக்கான செலவிற்கு ஆட்சேபம் தெரிவித்ததில்லை. எனவே தேவையற்ற சின்னஞ்சிறு பொருள்களை ஹெஸ்டெர் தன் மகன்களுக்காக செலவு செய்துவிட்டு, அதை அவள் கணக்கில் சேர்த்து விடுவாள்.

 ஒரு மழை நாள் இரவில் ஹெஸ்டர் ஜன்னலுக்கு அருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி காலுறைகளை தைத்துக் கொண்டிருந்தாள். அவள் நாற்காலியில் பலமாக ஆடியபடியே அவள் கையிலிருந்த நீளமான ஊசியை காலுறை கிழிசலை தைக்கப் பயன்படும் உருளையான உபகரணத்தின் வழியாக மும்மரமாக முன்னும் பின்னும் செலுத்தியதில், அவள் ஏதோ மனக்கிலேசத்தில் ஆழ்ந்திருக்கிறாள் என்பது சிறு பார்வையிலேயே தெரிந்துபோகும். வில்லியம் மேசையின் மறுபக்கம் அமர்ந்து விவசாய பத்திரிகையொன்றை வாசித்துக்கொண்டிருந்தார். அவர் மனைவியின் முகத்திலிருந்த கொதிப்பைப் பார்த்தும், சுத்தமாக மழிக்கப்பட்ட அவரின் முகம் எந்தவித அக்கறையும் காட்டாமல் இருந்தது. அவர் இரவு உணவு நேரத்தில் அவள் கிண்டலாக பேசியதையும், அவளது வளர்ந்த பிள்ளைகள் அமைதியாக சாப்பிடுவதையும் கவனித்திருக்கலாம். இரவு உணவு பாதியில் இருந்தபோது அவர்களின் இளைய மகன் பில்லி திடீரென தட்டை தள்ளிவிட்டு, துக்கம் தொண்டையை அடைக்க மேசையிலிருந்து நழுவினான். வில்லியம் டவேனர், வீட்டு விவகாரங்களில் புயல் அடிக்கும் பொழுதுகளில், அதற்கு முன்னான முன்னெச்சரிக்கைகளை பொருட்படுத்துவதில்லை.

இரவு உணவிற்குப்பின் அவர்களது மகன்கள் உழுததினால் ஏற்பட்ட தூசியை அகற்றிக் கொள்வதற்காக மாட்டுக் கொட்டகையின் பக்கமாக இருந்த குளத்திற்கு சென்றனர். அவள் ஜன்னலருகே உட்கார்ந்திருக்க அவ்வப்போது தண்ணீர் தெளிக்கும் சத்தமும் சிரிப்பொலியும் இரவின் அமைதியில் ஹெஸ்டரால் கேட்க முடிந்தது. அவள் ஒரு மணி நேரமாக எப்படித் துவங்குவது என்பது குறித்து பல்வேறு திட்டங்களை மனதில் சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் திட்டமிடல்களில் தீவிரம் காட்டாது நேரிடையாகவே தன் கருத்திற்கு வந்துவிடுபவள். கடைசியில் நூலை துண்டித்து தைத்துக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, திட்டவட்டமாக,

“வில்லியம், பிள்ளைகளை நாளைக்கு சர்கசுக்கு அனுப்புவதில் உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை” 

வில்லியம் தன் விவசாய பத்திரிகையை வாசிப்பதைத் தொடர்ந்தார், ஹெஸ்டருக்கு பதிலுக்காகக் காத்திருக்கும் வழக்கம் இல்லை. அவர் வாயைத் திறந்து எதையும் சொல்வதற்கு முன்பே, அவற்றைத் தானாக யூகித்து அவற்றிற்கு பதிலளித்துவிடுவாள். 

“வெய்யில் காலம் முழுவதும் உங்களுக்கு ஆள் பற்றாக்குறை இருந்தது, அதனால் பயல்களைக் கடினமாக வேலை வாங்கினீர்கள். ஒரு மனிதன் அவன் வேலையாட்களுக்கு இணையாக தன் ரத்தத்தையும் சதையையும் பயன்படுத்தத்தான் வேண்டும். நமக்கு செலவு செய்ய போதுமான அளவிற்கு பணம் இருக்கிறது, அதோடு நம் மகன்கள் அதில் சிறிதளவு மட்டுமே செலவழிக்கிறார்கள். நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்தாமலே, எப்படி நிதானத்துடனும் கடினமாகவும் உழைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. சர்கஸ் பார்ப்பதில் எந்த கெடுதலும் இல்லை என்பதோடு, அவர்கள் அதற்கு சென்றதும் இல்லை. ஓ, ஜிம் ஹோவ்லியின் மகன்கள் குடிக்கிறார்கள், குடித்துவிட்டு அப்படியே சென்று ரகளை செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், நம் மகன்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் வில்லியம். விலங்குகள் மூலம் நிறைய கற்க முடியும், இங்கு இந்த புல்வெளி பிரதேசத்தில் நம் மகன்களால் நிறைய பார்க்க முடிவதில்லை. நாம் வளர்ந்த விதம் வேறு, நம் மகன்களுக்கு இங்கு அதற்கான வாய்ப்புகள் இல்லை, நீங்கள் அவர்களை சரியாக கவனித்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் கத்துக்குட்டிகளாகவேதான் இருப்பார்கள்”.

ஹெஸ்டர் ஒரு கணம் நிறுத்தினாள், வில்லியம் எந்த பேச்சும் கொடுக்காமல் பேப்பரை மடித்து வைத்தார். ஹெஸ்டர் பெர்கின்சுடன் வில்லியம் போன்ற அமைதியான ஒருவனால்தான் வாழ்க்கை நடத்த முடியும் என்று விர்ஜினியாவில் இருக்கும் அவரின் சகோதரி அடிக்கடி சொல்வாள். வில்லியம் தன் மனைவி வழிபாட்டுக் கூட்டங்களின்போது ஒரு ஆணுக்கு இணையாக சரளமாக பேசுவதில் அவளுடைய ”பேச்சாற்றல்” குறித்து ரகசியமாக பெருமைப்படுபவர். அவர் அந்த வகையில் தன் முயற்சிகளை வழிப்பாட்டுக் கூட்டங்களில் சிறு பிரார்த்தனை என்பதோடு நிறுத்திக்கொள்வார். 

 ஹெஸ்டர் இன்னொரு சாக்ஸை எடுத்துக் கொண்டு தொடர்ந்தாள்.

“சர்கஸுக்கு போவதால் யாருக்கு எந்த கெடுதலும் நடந்ததில்லை. ஏன், என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்! நான் சிறியவளாக இருந்தபோது ஒரு முறை சென்றிருக்கிறேன். கிட்டத்தட்ட மறந்தேவிட்டேன். அது ப்யூடவுனில் நடந்தது, நான் அதற்கு என் மனதை எப்படி தயார் செய்து கொண்டேன் என்று நினைவிருக்கிறது. மழைக்குப் பிறகு அந்த செம்மண் வழித்தடம் அவ்வளவு பயங்கரமானதாக இருந்தது என்றாலுமே என் தந்தை என்னை மட்டும் கூட்டி சென்றிருக்காவிட்டால், நான் அவரை மன்னித்திருக்கவே மாட்டேன். அங்கு ஒரு யானை, ஆறு கிளிகள், ஒரு மலைப் பூனை, ஒரு குரங்குக் கூண்டு மற்றும் இரண்டு ஒட்டகங்கள். ஆகா! அது எனக்கு கண் நிறைந்த காட்சியாக இருந்தது”. 

ஹெஸ்டர் கையிலிருந்த கருப்பு சாக்ஸை கீழே போட்டுவிட்டு, தலையை ஆட்டியபடி தன் நினைவுகளில் மூழ்கிப்போய் புன்னகைத்தாள். அவள் வில்லியத்திடமிருந்து எதையும் இன்னும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவர் வழிபாட்டுக் கூட்டங்களில் சொல்லக்கூடிய அதே விதமான தொனியில் அவர் பேசியதைக் கேட்டு பதற்றமானாள். 

“இல்லை. அங்கு ஒரு ஒட்டகம் மட்டுமே இருந்தது. மற்றொன்று ஒற்றை திமில் கொண்டது” 

அவள் விளக்கை உற்று நோக்கியபடியே அவரையும் கூர்ந்து பார்த்தாள்.

“எப்படி, உங்களுக்கு எப்படி தெரியும்?”

வில்லியம் பேப்பரை மடித்து விட்டு சற்றே தயக்கத்துடன் “நானும் அங்கு இருந்தேன்” என்று பதிலளித்தார்.

ஹெஸ்டர் ஆர்வம் மின்ன “நல்லது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு தெரிய வந்திருக்கிறது வில்லியம்! நீங்கள் அப்பொழுது நம் பில்லியைவிடவும் பெரியவனாக இருந்திருப்பீர்கள். நான் உங்களப் பற்றி நினைவுகூற உங்களின் இளவயதில் பார்த்ததேயில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால், ஓடைப்புறம் வாழ்ந்த உங்களுக்கு மலைப்பகுதியில் வாழ்ந்த எங்களுடன் ஒருபோதும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. ஆனால் நீங்கள் எப்படிப் போனீர்கள்? நீங்கள் நம் பிள்ளைகளிடம் இருப்பதைவிட உங்கள் தந்தையார் உங்களிடம் அதிக கண்டிப்புடன் இருந்தார்”.

“நான் போயிருக்ககூடாது என்று நினைக்கிறேன்” என்றார் மெதுவாக. “ஆனால் பயல்கள் முட்டாள்தனமான வேலைகளை செய்வார்கள். நான் அதற்கு முந்தைய குளிர் காலத்தில் நரி வேட்டைக்கு சென்றிருந்தேன், அதில் கிடைத்த உபரித் தொகையை வைத்துக்கொள்ள என் தந்தை அனுமதித்திருந்தார். நான் சோளக்காட்டில் களை பறிக்க டாம் ஸ்மித்தின் ஆட்களை அமர்த்திவிட்டு, அப்பாவிற்குத் தெரியாமல் அந்த காட்சிக்கு சென்று விட்டேன்” 

ஹெஸ்டர் இதமாக பேசினாள், “அபத்தமாக பேசாதீர்கள் வில்லியம்! அதனால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் எப்பொழுதுமே கடினமாகவே உழைத்திருக்கிறீர்கள். சர்கஸை சிறு வயதில் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும். அந்த கோமாளி உங்களுக்கு வயிறு வலிக்க சிரிப்பை ஏற்படுத்தியிருப்பார்”.

வில்லியம் கால் மேல் கால் போட்டபடி, தன் நாற்காலியில் சாய்ந்து கொண்டார். 

“நான் இப்பொழுது அந்த முட்டாள்தனமான ஜோக்குகளை சொல்லலாமா என்று யோசித்துப் பார்க்கிறேன். சில சமயம் பிரசங்கம் அதிக நேரத்திற்கு நீளும்போது அதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. நான் அணிந்துகொண்டிருந்த புதிய காலணிகள் என் காலைக் கடித்து புண்ணாக்கிக்கொண்டிருந்தது, ஆனால் அந்த மனிதன் கழுதை மீதேறி சென்றதைப் பார்த்தபோது அதெல்லாம் மறந்தே போய்விட்டது. நான் நகரத்தின் பார்வையிலிருந்து விலகியதுமே காலணிகளைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு வெறுங்காலுடன் சேற்றில் ஓடியதை நினைத்துப் பார்க்கிறேன்”.

ஹெஸ்டர் அவளுடைய நாற்காலியை பக்கத்தில் நகர்த்திக்கொண்டு, முழங்கைகளை மேசைமீது ஊன்றியபடி “ஐயோ பாவம்” என்றாள். “குழந்தைகளுக்கு எவ்வளவு மோசமான காலணிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். சர்கஸ் கூடாரங்கள் எடுத்து செல்லப்படுவதைப் பார்க்க நான் ஓடைக்கு பின்புறம் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் கரையோரமாகத்தான் வந்தார்கள் தெரியுமா. சர்கஸ் ஆட்கள் அங்கு ஓடைப்பக்கம் விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக நிறுத்தினார்கள், அந்த யானை அடங்காமல், அங்கிருந்த சுங்கச் சாவடியின் வாயிலிலிருந்த ஒரு மரத்தின் கிளையை முறித்தது, அங்கிருந்த எழுத்தர்கள் அது எங்கே அந்த கட்டிடத்தையே கீழே தள்ளிவிட்டு, தாங்கள் இறந்துவிடுவோமோ என்று பயந்துவிட்டார்கள். ஆனால், நான் அது இப்படி செய்ததைப் பார்த்தேன். அது ஓடையில் அளைந்து தன் தும்பிக்கையில் நீரை நிரப்பிக்கொண்டு, அந்த எழுத்தர் சர்கஸ் செல்ல வேண்டி இஸ்திரி செய்து கட்டில்மேல் தயாராக வைத்திருந்த ஆடையின் மீது, ஜன்னல் வழியாக நீரைப் பீய்ச்சியடித்து அதை கெடுத்து விட்டது.” 

“அது எலனுக்கு ஏற்பட்ட சோதனையாக இருந்திருக்கும்” என்று வில்லியம் சிரித்தபடி கூறினார். “அவர்கள் காலத்தில் அவள் மிகவும் முக்கியமானவள்”.

ஹெஸ்டர் தன் நாற்காலியை வில்லியத்திற்கு இன்னும் அருகில் நகர்த்திக்கொண்டாள். குழந்தைகள் பெரியவர்களாகத் தொடங்கியதிலிருந்து அவளுக்கு தன் கணவருடனான பேச்சுவார்த்தைகள் என்பது குடும்ப பொருளாதாரம் மற்றும் செலவீனங்கள் குறித்தானதாக மட்டுமே என்றாகியிருந்தது. அவர்களின் உறவு ஒரு வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைதாரருக்குமானது போன்று வியாபார நிமித்தமானதாக ஆகிவிட்டிருந்தது. தன் மகன்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவள் தன்னையும் அறியாமலே தன் கணவருடன் ஒருவித தற்காப்பு மற்றும் பகைமை மனோபாவத்தையே கடைபிடித்து வந்தாள். கடன்காரன் ஒருவன் கந்துவட்டிக்காரனிடம் எப்படி பேரம் பேசுவானோ அதைவிட அதிகமாக தன் மகன்களுக்காக ஹெஸ்டர் தன் கணவனிடம் மல்லுக்கட்டுவாள். இந்த வகையான போட்டி மனோபாவம் அவர்களுக்கிடையில் இருந்த நெருக்கமான உறவின் நினைவுகளை மங்கிப் போகச் செய்திருந்தன. இன்று இரவு எதிர்பாராதவிதமாக அவர்களிடையே நடந்த இந்த ரகசியங்களின் பரிமாற்றங்கள், பொதுவாக நினைவு படுத்திக்கொண்டவைகள் காதலின் அதிசயத்தை கொண்டிருந்தது. அவர்கள் பழைய அண்டை வீட்டார் பற்றி, அவர்கள் வளர்ந்த அந்த பிரதேசத்தில் அவர்களுக்கு தெரிந்த முகங்களைப்பற்றி, நெடுங்காலமாய் மறந்துபோயிருந்த அவர்களின் இளமைக் கால சம்பவங்களை, திருமணங்கள், சுற்றுலாக்கள், பனிச்சறுக்கு விளையாட்டுகள் ஞானஸ்நானக்களைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். பல வருடங்களாக வெண்ணெய் விலை, முட்டை விலை மற்றும் இதர சில பொருட்களின் விலைகளைத் தவிர அவர்கள் வேறு எதையுமே பேசியிருக்கவில்லை என்பதால் நீண்ட காலமாக பிரிந்திருந்தவர்களைப்போல ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள அவர்களிடம் நிறைய இருந்தன. 

 கடிகாரத்தில் மணி பத்து அடித்தவுடன், வில்லியம் அவரது வாதுமை மரத்தாலான பெட்டகத்தைத் திறந்தார். அதிலிருந்த சிவப்பு நிற தோல் பணப்பையிலிருந்து ஒரு பத்து ரூபாய்த்தாளை எடுத்து ஹெஸ்டருக்கு அருகாக மேசைமீது வைத்தார். 

“பயல்களிடம் அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் குதிரைகளை வேகமாக விரட்ட வேண்டாம் என்றும் சொல்லிவிடு” என்று மென்மையாக சொல்லிவிட்டு தன் படுக்கைக்குச் சென்று விட்டார்.

ஹெஸ்டர் விளக்கை ஊதி அணைத்துவிட்டு நெடுநேரம் இருட்டில் உட்கார்ந்திருந்தாள். அவள் வில்லியம் எங்கு பணத்தை வைத்துவிட்டு சென்றாரோ அதே இடத்தில் வைத்துவிட்டு சென்றாள். அவளுக்குத் தான் எதையோ இழந்துவிட்டதைப் போலவும் தொலைத்துவிட்டதைப் போலவும் ஒரு வலியை உணர்ந்தாள். காலம் எப்படியோ தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தோன்றியது.. 

வேலியோரமாக வளர்ந்திருந்த சிறிய லோகஸ்ட்(இலந்தை) மரங்களில் வெண்ணிற மலர்கள் பூத்திருந்தன. அந்த இரவில் அவற்றிலிருந்து காற்றில் மிதந்து வந்த அதன் அடர்த்தியான மணம், நெடுநாட்களுக்கு முந்தைய ஒரு இரவை அவளுக்கு நினைவிற்குக் கொண்டு வந்தது. வசந்த காலத்தின் முதல் விப்-பூர்-வில் (whip-poor-will) பறவையின் குரல் கேட்கும் போது, ஹாக்கின்ஸ் கேப் (Hawkins Gap) பகுதியின் அந்த முரட்டுத்தனமான, துடிப்பான இளம்பெண்கள் அவளைப் பிடித்து, அந்த இலந்தை மரங்களின் (locust trees) கீழ் சிரித்துக்கொண்டே போராடும் அவளை அடக்கி, அவளுடைய மார்பில் அவளது காதலனின் தலைமுடிச் சுருள் இருக்கிறதா என்று தேடினார்கள்; ஏனெனில், முதல் விப்-பூர்-வில் பறவை பாடும்போது, ஒவ்வொரு பெண்ணின் மார்பிலும் அவளது காதலனின் தலைமுடி இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த பெண்களில் இருவர்தான் அவளுடைய திருமணத்தின்போது பெண் தோழிகளாய் இருந்தார்கள். ஹெஸ்டர் மிகவும் மகிழ்ச்சியான மணப்பெண்ணாய் இருந்தாள். அவள் எழுந்து மெதுவாக வில்லியம் படுத்திருந்த அறைக்குள் சென்றாள். அவர் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார் என்றாலும் அவ்வப்போது கொசுக்களை விரட்டுவதற்காக தன் கைகளை முகத்திற்கருகே அசைத்துக் கொண்டிருந்தார். ஹெஸ்டர் வீட்டின் முன் அறைக்கு சென்று, அவள் சகோதரி இறப்பதற்கு முன் செய்திருந்த மெழுகு ஆப்பிள்கள் மற்றும் பேரிக்காய்கள் அடங்கிய கூடையிலிருந்து கொசுவலையை எடுத்தாள். விலைமதிப்பற்ற இந்த அலங்காரப் பொருட்களை சரக்கு வண்டியில் எடுத்துவருவதை ஹெஸ்டர் விரும்பவில்லை என்பதால் இவற்றையெல்லாம் தகர டப்பாவில் வைத்து அவளுடைய மகன்களில் ஒருவன் விர்ஜினியாவிலிருந்து கொண்டுவந்தான். அவள் படுக்கையறைக்கு திரும்பிச் சென்று, வில்லியம் தலைமீது அந்த கொசுவலையை விரித்தாள். பிறகு கட்டிலுக்கருகில் மகன்கள் திரும்பி வரும்வரை அவருடைய ஆழ்ந்த சீரான சுவாசத்தை கவனித்தபடி அமர்ந்திருந்தாள். அவள் தன் மகன்கள் அவர்களுடைய தந்தையை எழுப்பிவிடாமலிருக்க எச்சரிக்கை செய்ய வேண்டி வெளியில் சென்றாள்.

“பசங்களா, நான் உங்களுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக சீக்கிரமே எழுந்து விடுவேன். நீங்கள் சர்கஸ் காட்சிக்கு செல்லலாம் என்று உங்கள் தந்தையார் சொல்லிவிட்டார்” என்று கூறியபடி பணத்தை மூத்தவனிடம் கொடுக்கும்போதே தன் கணவன் மீது அவளுக்குள் ஒருவிதமான உணர்வுப்பூர்வமான பற்று ஏற்பட்டதில், நறுக்கென “ஜாக்கிரதையாக இருங்கள், தேவையில்லாமல் வீணாக்கிவிடாதீர்கள். உங்கள் தந்தை இந்த பணத்திற்காக கடினமாக உழைக்கிறார்” என்றாள்.

பயல்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டதோடு தங்களுடைய வலிமையான கூட்டாளியை இழந்துவிட்டதாக உணர்ந்தார்கள்.

வில்லா கேதர் : 1873-1947. அமேரிக்க நாவலாசிரியர். சமவெளிப் பகுதிகளின் வாழ்க்கையை புனைவாக்கியதில் குறிப்பிடத்தக்கவர். One of Ours என்ற நாவலுக்காக புலிட்சர் விருது வென்றவர்.

***

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

நகர்வு

1

பா.கண்மணி

ம்மாவின் நீளக் கண்கள், விமான நிலையத்தின் வாயிலில் வெளியேறிடும் முகங்களை மாறிமாறி அலைமோதிப் பொறுமையிழந்தன. பின்னர் அரேபிய மோஸ்தரில் விதானத்திலிருந்து தொங்கிய மூன்றடுக்கு மூங்கில் கூடைகளை அளைந்தன. இந்திய விமான நிலையம், என்ன இழவுக்கு அரேபிய………அதைப்பற்றி ஆராய இது நேரமில்லை. இதோ, இதோ, எந்த நொடியிலும் அமெரிக்காவிலிருந்து தரையிறங்கிடும் மகள் தோன்றப் போகிறாள். பரபரத்த உடலைப் பின்னாலிருந்து தழுவியது-மகளே தான்! திரும்பிய அம்மா, எலும்புவரை இறுக்கிக் கொண்டாள். 

குரல்வளை வழி வெளியேறத் துடித்திட்டக் கொத்து விளிகளில் முண்டியடித்து வெளிவந்த “செல்லக்குட்டீ!” லேசாக நடுங்க, அம்மாவின் உலர்ந்த முத்தம், மகளின் கழுத்தெழும்பில் அழுத்தியது. அப்பாவைப் போலவே நல்ல வளர்த்தியவள். ட்ராலியைத் தள்ளியபடி, டாக்ஸி பிடிக்கும் நடை மேடையை நோக்கிச் சென்றிடும் மகளை அம்மா தொடர்ந்தாள். அவள் பெரிய பெட்டியை எடுத்துக் கீழே வைப்பதை, தோள்வலியுள்ள அம்மாவால் வேடிக்கை பார்க்கவே முடிந்தது. 

காரின் பின்னிருக்கையில் அம்மாவின் கையை மகள் பிடித்துக் கொண்டாள். 

“கை ஏன் இவ்ளோ ஜில்லாருக்கு? செக் பண்ணணும். “

“அம் ஆல்ரைட் கண்ணா“. 

பயண அனுபவங்களை விசாரித்த அம்மாவின் மீது,”ஆல் ஓகே“, என்கிற பதில், கத்தரிக்கப்பட்டு விழுந்தது. அசந்திருப்பாள் என அம்மா அமைதியானாள். அம்மாவின் தோளில் சாய்த்து வடிவான அவையங்களைப் பக்கவாட்டில் பார்த்தபடி அரைக்கண் மூடிய மகளுக்கு, எங்கும் எதிலும் கிடைத்திடாத ஆசுவாசம் கிட்டியது. அம்மா, தன் பக்கத்து சன்னல் கண்ணாடியை சற்று இறக்கினாள். பாதையோரம் நட்சத்திரங்களாய் மலர்ந்த நைட் குவீன் மலர்களின் அலாதியான மென் மணம் நுழைந்து தாலாட்டியது. மௌனத்தின் கனம் தாளாது மை வீதியில் வீழ்ந்தது பனி. 

அந்தப் பழைய அடுக்ககத்தை அடைந்ததும் காவலாளி பெட்டிகளை எடுத்துவந்து பூச்சு தேய்ந்த கூடத்தில் வைத்தான். முன்னாலிருந்த ஆக்கிரமித்துக் கொண்ட 2 பெட்டிகளும், மங்கிய அந்த சூழலுக்குப் பொருந்தாது பளீரிட்டன. நுழைவாயிலில் இறைந்து கிடக்கும் பெரிய செருப்புகள், உள்ளே ஆங்காங்கு சிதறியிருக்கும் டம்ளர், குவளை, நாளிதழ்-இவையெதையுமே காணோம். வீட்டின் துப்புரவு, துக்கம் முடிந்து கழுவப்பட்ட வீடாய் அச்சுறுத்தியது. 

மகள், பசிக்கிறதெனக் கூறினாள். அவளுக்கு உண்மையில் பசிப்பது போலவுமிருந்தது. சோபாவில், உணவு மேசையில், டிவி ஸ்டாண்டில் அடையாளக் குறியோடு கிடந்த தடித்த புத்தகங்கள் மட்டும் அங்கிருந்த ஒழுங்கில் துருத்திக்கொண்டு தெரிந்தன. ஒஷோவின் ‘love, freedom, aloneness ‘, தேநீர் மேசை மீது தலைகுப்புற விரிந்து கிடந்தது. அதையெடுத்துக் கண்ணோட்டிய மகள் புன்னகைத்தாள். அப்பா இருந்தபோதே அம்மாவைப் பீடித்திருந்த புத்தகப் பித்து, இப்போது தீவிரமடைந்திருக்கிறது. அதுவும் இல்லையென்றால் இன்றைய நிலைமைக்கு, அவர் பைத்தியமாகி விட்டிருப்பார். அம்மா கொடுத்த தட்டிலிருந்த கேக்கையும் இனிப்பையும் பார்த்து முகஞ்சுளித்தவள், வறுத்த முந்திரியைக் கொறிக்கும்போதே இமைகள் பாரத்தில் தாழ, தன்னறைக்குச் சென்றாள். பொருட்கள் இம்மியும் நகராது தான் விட்டுச் சென்றவாறே இருந்த அறை, அருங்காட்சியகமாகத் தோற்றமளித்தது. அப்பா இருந்திருந்தால் ஒதுங்க வைப்பதாக எதையாவது மாற்றியிருப்பார். இப்போது தூசி மட்டும் துடைக்கப் பட்டிருந்தது. அறையின் உயிர்ப்பின்மை தாளாது கண் மூடினாள். 

அம்மா, குவில்ட்டை விரித்து நெடுமூச்சோடு போர்த்திவிட்டாள். வெக்கையாக இருக்கிறதென்ற மகள், அதனை உதறித் தள்ளினாள். விழிமூடிய மகளைப் பார்த்துக்கொண்டே நின்ற அம்மாவின் கால்கள் வலிக்கத் துவங்க, படுக்கையின் கால் பக்கமாக மெல்ல அமர்ந்தாள். மகளிடம் அனக்கம் ஓய்ந்ததும் மெலிதான போர்வையொன்றை எடுத்துவந்து மூடி வைத்தாள். ஜாதிப் பூச்சரத்தைப் பருத்தித் துகிலில் பொதிந்து வைப்பதாக இருந்தது அது. மகள் கருவறைக் குழந்தையாய்ப் போர்வைக்குள் சுருண்டுகொண்டாள். 

கடை திறந்த சுருக்கில் போய் ஆட்டுக்கறி வாங்கிவருவதற்குள் மகள் எழுந்து பிரட்டை டோஸ்டரில் போட்டுக் கொண்டிருந்தாள். 

“ப்ளாக் காஃபி கிடைக்குமா?”

“இது எப்பைலருந்து?”

“அங்கே நா ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தூங்காம வொர்க் பண்ணியாகணும். அதுக்காகப் பழகிகிட்டது.“

கடுங்காப்பியை சகித்துக் குடித்த மகள், கைபேசியை மின்னூட்டத்தில் போட்டுவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். 

அம்மா, பிரியாணியைக் கவனமாக செய்யத் துவங்கினாள். எளிய ஆரோக்கிய உணவுப் பழக்கத்திற்கு மாறியிருந்த அவளுக்கு, விசேஷ சமையல் இடறியது. சுவைத்து சுவைத்து சமைத்ததிலேயே கால் வயிறு நிரம்பிவிட்டது. ஆவி பறக்கும் பிரியாணியை எடுத்து தாராளமாக நெய் விட்டுக் கிளறிக் கிண்ணத்தில் அடைத்துத் தட்டிற்கு மாற்றினார். அளவுக்கதிகமான நெய், பிரியாணியை சப்பென்று ஆக்கிவிட்டது. காரத்தைக் குறைத்துவிட்ட மகளுக்கு சரியாகத்தான் இருக்கும். அந்த மொட்டைக் கோபுரத்தின் உச்சியில் புதினாக் கொத்தை செருகி, பக்கவாட்டில் தயிர்பச்சடி கப்பை அமர்த்தி, முள்கரண்டி, ஸ்பூனோடு தட்டை எழுதுமேஜையில் வைத்துவிட்டு மகளை மிருதுவாக அழைத்தாள். 

“artistic garnishing“, மகள் படுக்கையில் இருந்தபடியே திரும்பிப் பார்த்து சிரித்தாள். எத்தனை நாட்கள் கழித்து இந்த ராஜபோகம்! 

தன்னுடைய மெல்லிய அழைப்பிற்கு மகள் எப்படி விழித்தாள்? அவள் உறங்கவே இல்லையோ?

“ஆறிப் போறதுக்குள்ள பல்ல வெளக்கிட்டு சாப்புடுடா“

“என்ன பிரியாணி?”

“மட்டன்”

“நா ரெட் மீட் சாப்புட்றதில்ல “

“சொல்லவேயில்ல?”

“கேட்டாதான சொல்றதுக்கு?”

உண்மைதான். வரண்டுபோன இந்த நாட்களில் கல்லூரிக் கட்டணம், கைச்செலவு மற்றும் மதிப்பெண்கள் குறித்து மகளிடம் பேசியவையே அதிகம். முன்பெல்லாம் இந்தப் பொறுப்புகளைக் கணவரே கவனித்துக் கொள்வார். மகளிடம் உணவைப் பற்றியும் உடல்நிலை குறித்தும் துருவித்துருவிக் கேட்டு வற்புறுத்துவதற்கான அவகாசம், அம்மாவுக்கு இருந்தது. எந்நேரமும் மனதின் பின்னணியில் வரவு செலவு கணக்கு ஓடிக் கொண்டிருப்பதால் மற்ற அனைத்தும் மறந்து போகின்றன. கணவரின் காசோலைகளும் கணக்குப் புத்தகங்களும் தேடத்தேடக் கிடைத்துக் கொண்டேயிருந்தன. எதற்காக இத்தனை வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாரோ புரியவில்லை. ஐந்தாயிர ரூபாய் க்ளைமுக்காக கற்றைக் காகிதங்களோடு ஒவ்வோர் வங்கியிலும் ஐந்தாறு முறை படியேறி இறங்கவேண்டும். தனக்குரிய கௌரவம் கிட்டாததில் அம்மாவுக்கு வருத்தமே. 

கனவிலும் காசைப் பற்றிய பதற்றம். மகளுக்குப் பணம் அனுப்புவதற்காக வங்கியை நோக்கி நடக்கும்போது கைப்பையை ஓர் இளம்பெண் பறித்துக்கொண்டு ஓடுவதாய் ஒரு கனவு. பிரதான சாலையிலிருந்து தெருவுக்குள் திரும்பி விரையுமவளை விடாது துரத்துகிறாள். மூச்சிரைக்க எட்டிப் பிடிக்கும் தூரத்தில் விழிப்பு வந்துவிட்டது. இளம்பெண்ணின் முகத்தைப் பார்த்திருக்கலாம்.  கணக்கிலிருந்த தொகை குறைந்து விட்டதாக மற்றுமோர் கனவு வந்தபோது, வியர்த்து நனைந்ததில் எழுந்துவிட்டாள். செல்வத்தின் வல்லமையை அறிந்திடாது, கணவருடைய ஆலோசனையின் பேரில் வங்கிப் பணியைத் தான் ராஜினாமா செய்திருக்கக் கூடாது. அதற்குத் தன்னுடைய சோம்பேறித் தனமும் காரணம். இப்போது வங்கிப் பரிவர்த்தனை செய்வதற்கே தடுமாறுகிறது. மாற்றம் என்பது இப்படி ஒளிந்திருந்து வந்து கழுத்தை நெறிக்குமென எண்ணிப் பார்த்ததில்லை. 

“அமெரிக்காவுக்குப் போய் கருத்திருக்க?” மகளை சகஜ நிலைக்கு இழுத்தாள். 

“ஹூ கேர்ஸ்? அங்க extreme weatherக்கு இப்படித்தான் ஆகும்,” தன்னுடைய பொது நிறத்தை சுட்டிக் காட்டுவதாக எண்ணி எரிந்து விழுந்தாள். 

அம்மாவின் வெண்ணிற முகத்தில் இருளாடியதும், தான் அநாவசியமாகக் கோபமுற்றத்தை உணர்த்த மகள்,”you racist“, என்றபடியே அவளை செல்லமாக உச்சந்தலையில் தட்டினாள்.

குளிர்ந்த அம்மா, “அப்ப கறியை எடுத்துட்டு வெறும் பிரியாணிய தரவாம்மா?”

“நோப். ஆதிரா மெஹந்தி functionக்கு வரச்சொன்னா. அங்க சாப்டுக்குறேன்.”

இதுபோன்ற ஆரவாரங்களில் தனக்கு உவப்பில்லை தான். திருமணத்திற்குப் போனால் போதுமானது. ஆனால் இங்கிருந்து நாள் முழுக்க இந்த அம்மாவை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? அப்பா இருந்தால் குறுக்க மறுக்க அலைந்துகொண்டு, எதையாவது சலம்பிக் கொண்டிருப்பார். தன்னை வலிந்து உற்சாகப் படுத்திக்கொள்ளும் முனைப்பில் ஜெட்லாகையும் பொருட்படுத்தாது கிளம்பிச் சென்றாள். 

‘’எப்போ வருவ?”

வினோதமாகப் பார்த்த மகள்,’’அதெல்லாம் சொல்லமுடியாது. இவ்ளோ நாளுக்கப்புறம் friends எல்லாம் மீட் பண்ணிக்கப் போறோம்.” 

இரவு படுக்க வந்துவிடப் போவதைத் தெரிவித்திருக்கலாம். ஆனால் தன் வளர்ச்சியைக் காட்டுவதற்கு வேறென்ன வழி? மேலும், இரவுணவு குறித்து நடக்கப்போகும் உரையாடலை அவள் வெறுத்தாள். 

மகள் அலரக் குளித்து வருவதற்குள் அம்மா, அலமாரியிலிருந்த 3 லெஹெங்கா செட்டையும் எடுத்துக் கட்டிலின் மீது வைத்தாள். அவற்றைப் பிரித்துப் போட்டதும் விழாக்கோலத்தில் மெத்தை மறைய, இருவரையும் மகிழ்ச்சி சுற்றிக்கொண்டது. தள்ளி நின்று பார்த்த மகள், பழுப்புவெள்ளைப் பாவாடையை எடுத்து விரிக்க, அதிலிருந்த முத்துக்கள் கண் விழித்தன. 

“பகல் வெளிச்சத்துக்கு குட் சாய்ஸ். ஆனா மருதாணி படாம பாத்துக்கோ.”

அலட்சியமாக உச்சுக் கொட்டினாள் மகள். 

“எத்தனை ஆயிரம் தெரியுமா அது?” அம்மாவிடம் அந்த விலைக்கு சேலையில்லை. 

“நாட் அகய்ன்! Am sick of these numbers ……அயர்ன் பண்ணி வச்சிருக்கக் கூடாது?”

‘நீ எந்தப் பாவாடைன்னு சொல்லிருந்தா குடுத்து வாங்கியிருப்பேன். மூணையும் எதுக்கு வேஸ்ட்டான்னு“

“எல்லாத்துக்குமே கணக்கு தானா?’

கணக்கு பார்க்காவிடில் அடுத்தவரிடம் கையேந்த வேண்டிவரும் என்று அம்மா சொல்லவில்லை. 

“குடு; உன் தலை காயுறதுக்குள்ள அயர்ன் பண்ணித் தரேன்.“

“ஆமா, நீங்க சரியாவே பண்ண மாட்டீங்க.”

“இப்பல்லாம் புடவையக் கூட நானேதான் அயர்ன் பண்ணிக்குறேன்”, பாவாடையை வாங்கிய சின்னக் கை, அதன் கனத்தில் தாழ்ந்தது. 

பணியாளிடம் பை பையாகத் துணிகளை இஸ்திரிக்குக் கொடுத்து வாங்கும் அம்மாவிடம் இப்போது பணியாளுமில்லை; தோரணையுமில்லை. 

இஸ்திரிப் பெட்டியை ஸிந்தெடிக் செயல்முறையில் வைத்த அம்மாவுக்கு உள்ளூரப் பதைப்பு. முத்துக்கள் கருகி விடாதவாறு இடைப்பட்ட துணியை விரித்துவிட்டு அழுத்துகையில், சுர்ரென இடது கையின் நடுவிரல் நுனி சூடு வாங்கிவிட்டது. எரிச்சலை வெளிக்காட்டாது பணியை முடித்தாள். 

அதிருப்தியோடு மகள் உடுத்திக் கொண்டாள். 

“You look like a princess da!”

“ஆ,மா ; princess without kingdom,” கல்விக் கடனின் சுமை அதில் தெரிந்தது. 

மகளைக் கட்டிக்கொள்ள நெருங்கிய அம்மா, அங்கேயே நின்றுவிட்டாள். காதணியைத் தவிர வேறு ஆபரணங்களின்றி மகள் முத்துப் பல்லாக்காக அசைந்து சென்றாள். தோழனின் காருக்குள் அவள் மறையும் வரை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த அம்மா, தன் பூரிப்பைப் பகிர்ந்து இரட்டிப்பாக்கக் கூடிய ஒரே ஜீவனுக்காக ஏங்கினாள். ஹூம்….. மரணிப்பவர்கள் தங்கள் உடலைத் தவிர வேறெதையுமே எடுத்துச் செல்வதில்லை. அவர்களது பொருட்களாலும் சொற்களாலும் உணர்ச்சிகளாலும் செயல்களாலும் மதிப்பீடுகளாலும் ஆசை, நிராசைகளாலும் குப்பைக் காடாக நிரம்பி வழிகிறது இந்த உலகம். மகள் விட்டுச்சென்ற மேல்நாட்டுத் திரவிய வாசம் மெல்ல வருடி சாந்தப் படுத்தியது. காலாவதியாகிப் போயிருந்த பர்னாலை விரல் நுனியில் தாராளமாகத் தடவினாள். எரிச்சல் தணிந்த பாடில்லை. 

மகளுக்கு நல்ல வேலை கிடைத்துப் பணம் அனுப்பினால் அடகிலிருக்கும் நகைகளை சிறிது சிறிதாக மீட்கவேண்டும். இறுதி செமஸ்டர் முடித்தும் ஏனோ அவளுக்குத் தகுதியான வேலை இன்னும் வாய்க்கவில்லை. ஆறிப்போன பிரியாணியை இட்டு வயிற்றை நிரப்பினாள். தனக்குப் பிடித்தமான உணவு எதுவென்று யோசித்தபடியே அடை தோசைக்கு ஊற வைத்திருந்த பருப்புகளை அரைத்து ஃபிரிஜ்ஜில் வைத்தாள். அங்கு பெரிய டப்பாவில் இட்லி மாவு இருந்தது. இந்தப்பெண் எதைத்தான் சாப்பிடுமோ? 

சாம்பல் பொழுதின் நிசப்தத்தை உடைக்கும் பொருட்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். பொழுதுபோக்கு அலைவரிசைகள் அனைத்துமே அசட்டுத்தனமாக நேரத்தை வீணடித்தன. எனவே அந்த வீட்டு வழக்கப்படி ஆங்கிலச் செய்தி அலைவரிசைக்கு மாற்றி, கணவர் ஒலிக்கவிடும் விதமாக உரக்க வைத்தாள். இந்த சத்தத்தைத் தாளமுடியாமல் தினந்தோறும் தான் ஆட்சேபித்தது நினைவுக்கு வந்தது. வெறும் நிழலாய் வாழ்ந்து வந்திருக்கும் தான், அவர் மறைந்தபின்பும் நிலத்தில் காலூன்றி நடக்க முயலவில்லை; அவரது ருசியையும் ஆரோக்கியத்தையும் மறந்து சமைக்க, கைகளுக்குத் தெரியவில்லை. ஆர். கே. நாராயணனின்,’The Blind Dog ‘ஐப்போல மனம் கணவரையே சுற்றிச் சுற்றி வருகிறது. விருப்பங்களை விடப் பழக்கங்களுக்கு வலு அதிகம் போல. சுயவெறுப்பில் தொலைக்காட்சியை டொக்கென்று நிறுத்தினாள் அம்மா.

எப்போது வருகிறாய் என்று அனுப்பிய செய்தியை மகள் பார்த்ததாகவே தெரியவில்லை. கார் எடுத்துக்கொண்டு வரவா எனக் கேட்பதற்குக் கார் இப்போதில்லை; இருந்தாலும் தனக்கு ஓட்டத்தான் தெரியுமா? இயலாமையில் சோர்வு மேலிட்டது. இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்ததில் இரவு நாகப்பழமாய்ப் பழுத்தது தெரியவில்லை. தமிழ்நதியின் நிதிலாவா தான்? மகளுக்கு ஃபோன் செய்தாள். 

“Am just worried about your safety.”

“சும்மா nag பண்ணாதீங்க. ஃபாரின்லயே தனியா இருக்கிற எனக்குத் தெரியாதா?”

இந்த அடியை அம்மா எதிர் பார்த்திருந்தாள். ஆனால் கேட்கவில்லை என்றால் அக்கறை இல்லையென்று மகள் கருதுவாள். அதற்காகத்தான் விசாரிப்பு. மகள் அதனை ஊகித்திருந்தாள். இதே நள்ளிரவில் மகள் பிறந்தபோது, உடல் வெடிக்குமளவிற்குத் தான் மகிழ்ந்தது அம்மாவின் நினைவில் மோதியது. பிறந்து 3 நாட்கள் கழித்தே கணவர் வந்து பார்த்தார். மின்தூக்கி வந்து நிற்கும் சத்தம் கேட்ட அம்மா, துள்ளிச் சென்று கதவை விரியத் திறந்தாள்.

மேஜையில் விரிந்திருந்த அரதப் பழைய கணினியைப் பார்த்த மகள், “நல்ல வேலை கிடைச்சதும் புது லேப்டாப் வாங்கி அனுப்பறேன்.”

“அது கிடக்கட்டும். சில ஆபரேஷன்ஸ் சொல்லிக் குடு ராஜ். தடுமாற வேண்டியிருக்கு.”

மகளிடமிருந்து மதுவாடை வருகிறதோ? அவள் காலணியைக் கழற்ற அமர்ந்திடும் இந்த சமயத்தில் உச்சி முகர்ந்து முத்தமிட்டால் உண்மையைக் கண்டுபிடித்து விடலாம். இது தன்னுடைய பழைய யுக்தி. அப்படியே கண்டுபிடித்துக் கேட்டு மகள் எடுத்தெறிந்து பேசினால்? அம்மா, நீர்த்துளி விழுந்த ஓவியமாகக் கலைந்தாள்.

“சாப்பிட்டாச்சா?”

“சாப்டுட்டு வருவேன்னு அப்பவே சொன்னனே.”

அம்மாவின் கண்ணுக்குக் கீழான கருவளையத்தின் அளவும் அடர்வும் குறைந்திருப்பது குழல் விளக்கு வெளிச்சத்தில் மகளுக்குப் புலப்பட்டது. 

“ஹால்லருந்த அப்பா ஃபோட்டோ எங்க?” துப்பட்டாவை நாற்காலியில் போட்டபடி கேட்ட மகளின் அதிகாரத் தோரணை, அம்மாவைப் பதம் பார்த்தது. 

“சாமி அலமாரீல“, இதனைக் கூறுகையில் தனக்கேற்பட்ட குற்றவுணர்விற்காக அம்மா வெட்கினாள். 

“எதுக்கு அங்க போச்சு?” மகளுடைய குரல் முன்னிலும் உயர, அம்மா சமையலறைக்குள் பதுங்கினாள். 

“இங்கருந்தா, போறப்பயும் வர்றப்பயும் அவர் என்னப் பார்க்கிற மாதிரியே இருக்கு. ஃபோட்டோ கூட குடும்பம் நடத்துறது வேதனை,”திக்கித் திணறி உணர்வுகளை இறைத்துவிட்டார்.  

தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அறைந்த மகள், விளிம்பில் நின்ற கண்ணீரை வடித்து தீர்த்தாள். தான் கூடுதலாக மது அருந்தியிருக்க வேண்டும். 

தோழியின் திருமணம் முடிந்ததும் மகள், பல்லைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டுமென்றாள். அவளது பல் மருத்துவரிடம் மன்றாடி அதற்கான நேரத்தை வாங்கினாள் அம்மா. மறுநாள் நாராயணா நேத்ராலயாவில் கண் பரிசோதனை. மகள் தேர்ந்தெடுத்த கண்ணாடியின் விலை, அம்மாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டாலரில் புழங்கிடும் மகளுக்குத் தன்னாலான ஒரே பரிசு. சேமிப்பைத் துடைத்தெடுத்து தன் கையால் பெருந்தொகையைக் கொடுக்கையில் பெருமிதமாக இருந்தது. பிறகு மகளை வற்புறுத்தி மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மைக்ரேனுக்கு ஸ்கேன் செய்வித்து அதற்கான மாத்திரையை வாங்கித் தந்தாள். அப்படியே அங்கிருந்த மகப்பேறு மருத்துவரையும் விட்டுவைக்காது, மாதவிடாய் வலிக்கான நிவாரணியையும் எழுதி வாங்கினாள்.

தூசி படிந்திருந்த அப்பாவின் சுழல் நாற்காலியின் தண்மை உரைக்குமாறு அழுந்தியமர்ந்த மகள், முன்னாலிருந்த இரும்பு மேஜையின் இழுப்பறையை சாவி போட்டுத் திறந்தாள். துருவில் இறுகிப் போயிருந்த இழுப்பறைகள், மகளுக்கு சலுகை தந்து திறந்தன. முதல் இழுப்பறையில் கண்ணாடி, பேனா, பற்று அட்டைகள் மற்றும் பர்ஸ். அவற்றுக்கடியில் அமெரிக்க விசாவிற்கான விண்ணப்பம். பட்டமளிப்பு விழாவில் தான் அனாதையாக நின்ற காட்சி, துயரத்தை அழைத்து வந்தது. இரண்டாவது இழுப்பறையை இழுத்தாள். அதில் இவள் கொடுத்த பிறந்தநாள் வாழ்த்தட்டைகள்; க்ரையானில் வரைந்தது முதல் ஆர்ச்சீஸ் வரை கால வரிசைப்படி அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவற்றின் நிறம் அதிகம் மங்கிப் போகாமலிருந்தது. I lost unmatched love forever……..

மகளது அழுகையைக் கண்டுப் பதறியணைத்த அம்மா,”It’s okay da,” இயலாமையில் திரண்ட துளி மகள் தலையில் இறங்கியது.

“Its not okay. I love him”, நின்றிருந்த அம்மாவை விலக்கித் தள்ளினாள்.

“He always wanted your happiness. நீ வருத்தமா இருந்தா அவருக்குப் பிடிக்காது“. 

“ம்ம்..”, திரும்பிக் கண்ணீரை சட்டையின் கையில் துடைத்துக் கொண்டாள். 

“We can’t help da. Be practical“, குரல் தாழ்ந்தது. 

“If I die, can you be practical?”

அமிலத்தின் காட்டம் தாளாத அம்மா, “நான் போய் அவர் இருந்திருக்கணும். அப்ப ஹாப்பியா இருந்திருப்பல்ல?” அரற்றினார்.

“வாய மூடுங்க! எனக்கு ரெண்டுபேரும் வேணும்.”

“ஒருவேள அப்படி நடந்திருந்தா, வேளைக்கொரு ஹோட்டல்ல சாப்பிட்டு ஷூகர் ஏறிக் கோமாவுல முடிஞ்சு -என் பின்னாலயே வந்து சேந்திருப்பாங்க உங்கப்பா“. 

“இப்பகூட அவுங்கள விடமாட்டீங்களா நீங்க?” ஒருவழியாக மகள் சிரித்துவிட்டாள். 

“வேற யார இப்படியெல்லாம் டீஸ் பண்ண முடியும்? நீ கூட கோச்சிப்ப. உங்கப்பா இருந்தப்ப கூட அவர இவ்ளோ நினைச்சதில்லை பாரு. இப்ப என்னடான்னா சும்மா சும்மா நினைப்பில வந்து தொல்லை பண்றார்.” 

மகள் மூன்றாவது இழுப்பறையைத் திறந்தாள். அதில் பெற்றோரின் திருமண அழைப்பிதழ். அடுத்து, கோர்த்த கைகளின் புகைப்படம் தாங்கியதோர் வாழ்த்தட்டை. அட்டைக்குள் 4 வரியில் ஆங்கில மணநாள் வாழ்த்து. எஞ்சியிருந்த இருந்த காலியிடத்தை அம்மாவின் கோர்வையான தமிழ் கையெழுத்து பூர்த்தியாக நிரப்பியிருந்தது. தேதி, தான் பிறந்த வருடத்திற்கானது. பிரசவத்திற்காக சென்ற அம்மா, பிறந்த வீட்டிலிருந்து அனுப்பியிருக்க வேண்டும். தமிழ் படிக்கத் தெரியாத தன்னை அந்நியமாக உணர்ந்தவள், அவற்றை இருந்தவாறே மடித்து வைத்தாள். கோர்த்திருந்த அந்தக் கைகள் கசகசப்பு தாளாது விடுபட்டுப் போயின போலும். தனக்கு விபரமறிந்து, அவர்கள் திருமண நாளைக் கொண்டாடியதில்லை. 

“இங்க டேபிள்ல இருந்த ஸீடி ப்ளேயர் என்னவாச்சி?”

“அது பாடலன்னு டிஸ்கார்ட் பண்ணிட்டேன்.“

அது ஒலித்து அவள் கேட்டதில்லை. 

“அப்பா வாங்குனது. ஞாபகமா வச்சிருக்கலாமில்ல?”

“சின்ன சாமான் எல்லாமே அப்பா வாங்குனது தான? ஃபர்னீச்சர்ஸ் எல்லாம் நா சீதனமா கொண்டுவந்தது; சாகற வரைக்கும் அது கூடவே இருந்து சாகணும்,” அம்மாவின் குரலில் பழைய எகத்தாளம். தான் தேடிவந்த கதகதப்பு இங்கு கிடைக்கப் போவதில்லை என்பது மகளுக்குப் புரிந்தது. இல்லத்தின் தகுதியை இந்த வீடு இழந்துவிட்டது. 

“The weight of memories is pressing me down“, கோழி சூப்பைக் கொண்டுவந்த அம்மா ஆழத்திலிருந்து கூறினாள். நெஞ்சப் பாரத்தைத் தாண்டிவந்த சிரமம், அவற்றிலிருந்தது. 

தளராடையோடு உலா வரும் அம்மா, புடவை கசங்காமல் நடமாடுவது அந்நியமாகத் தெரிந்தது. இவள் கேலி செய்யும் தொப்பை கூட சற்று உள்ளொடுங்கித் தெரிந்தது. அம்மா நடைப்பயிற்சி செல்கிறாராம்.  

“ஐய்யே….. fat !” சூப்பில் ஏடு கட்டியிருந்த கொழுப்பைக் கண்ணுற்ற மகள், புருவத்தை உயர்த்தினாள். 

“Fat இல்லாம என்னதான் வேணும்னு சொல்லேன்; செஞ்சு தரேன்.”

“ஒண்ணும் வேணாம். சாப்புடுறதுக்காகத் தான் இவ்வளவு தூரம் வந்தேனா? அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்“, மகள் சூப்பை உறிஞ்ச அம்மாவிடம் வாட்டம் கண்டது. மகளுக்கு திருப்தி. 

“நைஸ் ஸாரீ“, அம்மாவை உற்சாகப் படுத்தப் பாராட்டினாள். 

“பொய் சொல்லாத. பெய்ஜ் எனக்கு எடுக்கவேயில்ல. எல்லாம் உங்கப்பா செலக்ஷன். அப்பப்ப கடைக்குப் போக வேண்டியிருக்கேன்னு கட்டியிருக்கேன்”, அம்மாவின் வழமையான அதிருப்தி. ஆனால் அப்பா “நல்லாருக்கே “ என்றதும் கன்னம் சிவக்க வெட்கப் படுவார். கடாயை அடுப்பில் வைத்துவிட்டு அப்பாவைக் கடைக்கு அனுப்புவார். “இதுகூட ஞாபகமில்லையா?” என அப்பா எய்திடும் அம்பு, “எத்தனை வருஷமா இதையே ஞாபகம் வச்சிருக்க முடியும்?”என்கிற கேடயத்தில் பட்டு வீழும். அப்பா, அம்மாவை விட 9 வயது மூத்தவராதலால் சில சமயம் பொருட்படுத்தாது போய்விடுவார்.  

புறப்படும் நாள் நெருங்கி வர, மகளுக்கு அம்மா மீது வாஞ்சை பெருகியது. பாவம் ஓடியோடி இளநீர் வாங்கிவந்து, ஜூஸ் பிழிந்து, சாலட் செய்து கரிசனமாக கவனித்துக் கொள்கிறார். அந்த இளக்கத்தில் தன்னோடு தங்கியிருக்கும் அமெரிக்க நண்பனைப் பற்றிய விவரங்களை அம்மாவிடம் கூறி, அலைபேசியிலிருக்கும் அவனது புகைப்படத்தைக் காண்பித்தாள். 

“ம்…. பையன் பீங்கான் பொம்மை மாதிரி அழகாயிருக்கான்,”அம்மா அதிர்ச்சியை மறைத்தபடி சொன்னாள். அவளது அப்பா இருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பாளா? ஒருவேளை எடுத்திருந்தாலும் இவ்வளவு சகஜமாக அவரிடம் தெரிவிப்பாளா? செம்பருத்தி குஞ்சம்மாளைப் போல ஏனோ, தன்னிருப்பு யாரையுமே பாதிப்பதில்லை. 

தனக்கு அமெரிக்க இணை இருப்பது அத்தனை சாதாரண விஷயமா என்ன ? சும்மா நடிக்கிறார் அம்மா. அவருக்கு எல்லாமே சாதாரணம் தான். அப்பாவுக்குத் தான் ஆர்வமெல்லாம். தோற்றதாய் உணர்ந்தவளுக்குக் கோபம் வந்தது. 

“அப்பறம் எதுக்கு டல்லா இருக்கீங்க ?”அம்மாவின் ஆட்சேபணையை அவள் கோரினாள். 

“இவங்கள்லாம் அலுத்துப்போனா விட்டுட்டுப் போயிடுவாங்க“

“That’s better; நீங்களும் டாடியும் மாதிரி fight பண்ணிகிட்டே ஒண்ணா இருக்குறதை விட.”

“That’s our personal. அதை விமர்சிக்கிற உரிமை உனக்கில்லை !” 

இவளைப் பீற்றிக் கொண்டேயிருக்கத் தானொன்றும் இவளுடைய தந்தையைப்போல முட்டாளில்லை. அதற்குமேல் அந்த அமெரிக்கனைப் பற்றியோ அவனுடனான உறவைப் பற்றியோ விசாரிப்பதற்கான சூழல் வாய்க்கவில்லை. தகப்பனில்லாத அந்தப் பிள்ளைக்குத் தன்னைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? சின்னப் பெண்ணிடம் கடுமை காட்டிய தன்னைக் கடிந்துகொண்டு சமாதானப்படுத்த முனைந்தாள். 

“எங்களுதெல்லாம் மனந்திறந்த விவாதங்கள். Tv டிஸ்கஷன்ல கத்தறதில்லையா? உள்ளே இருக்குற grudge எல்லாம் வெளீல வந்துட்டா we will become free”, வலிந்த சிரிப்போடு சமாளித்தாள். 

பின்னர் பால்கனிக்குப் போய் வாகாக அமர்ந்து, தையல் பிரிந்த, பட்டன் கழன்ற மகளின் உடைகளை தைத்துக் கொண்டிருந்தாள். கொட்டிக் கிடந்த சூரியவொளி, அம்மாவை சகஜ நிலைக்குத் திருப்பியது. 

“இதையெல்லாம் கத்துக்கோன்னு தலைபாடா அடிச்சிகிட்டேன். இப்ப பாரு-எல்லாத்தையும் இவ்வளவு தூரத்துக்கு அள்ளிகிட்டு வர வேண்டியிருக்கு.”

“உங்களால முடியலைன்னா விட்டுடுங்க.”

“அப்படி யார் சொன்னது? எல்லாரும் செல்ஃப் ரிலையண்ட்டா இருக்கணும்னு அப்பல்லாம் ஸ்கூல்ல அடிப்படை தையல் கத்துக் குடுப்பாங்க. அப்படித்தான் நா கத்துகிட்டேன். இப்பல்லாம் பணம் சம்பாதிக்க மட்டுந்தான் கத்துக் குடுக்குறாங்க. “ 

“உபதேசம் போதும்“

இதுபோன்ற வேலைகளை செய்யும்போது அம்மாவுக்கு சினிமாவில் திடாரென நொடித்துப்போய் ஒட்டுப் போட்ட ரவிக்கை உடுத்திடும் கதாநாயகி நினைவுக்கு வருவாள். அதுவரை அணிந்திருந்த புதிய நல்லாடைகளையெல்லாம் என்ன செய்வாள் அந்த நாயகி? 

மகள் புறப்படும் நாள் தாவி வந்துவிட்டது. 

“பாஸ்போர்ட் டிக்கெட் எடுத்துட்டியா ?”

“ம்.. டிக்கெட் ஃபோன்ல இருக்கு. அப்பா இருந்திருந்தா ரெண்டுமூணு print எடுத்துத் தந்திருப்பாங்க.”

“ஆமாம். நான் -இப்ப ஓடிப்போய் எடுத்துட்டு வந்துடவா?’’

“பரவாயில்லை; அதுக்கெல்லாம் டைமில்ல.”

“பாப்பா, டாக்ஸியை வரவழிக்கவா?”

“இன்னும் புக் பண்ணலியா? அப்பா ஏற்கெனவே fix பண்ணியிருப்பாங்க.”

அம்மாவுக்கு இந்த விசா, boarding, check-in.. அனைத்துமே மலைப்பாக இருந்தது. அப்பா, அம்மா – இரண்டு பாத்திரங்களையும் மோனோ ஆக்ட் செய்ய இயலாது விழி பிதுங்கியது. 

முதன்முதலாக இதே விமான நிலையத்திற்குச் செல்கையில் கண்ணும் மூக்கும் சிவக்கும்படி டிஷ்யூவால் ஈரத்தைத் துடைத்துக்கொண்டே வந்த அம்மா, அப்பா கவனித்ததும் இயல்பானார். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பலவீனத்தைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். இப்போது பின்னிருக்கையில் கல்லாய் உட்காரந்திருப்பது வேறு பெண்மணி. மகள் டாக்சியின் முன்பக்கம் ஏறிக்கொண்டாள். 

“பின்னால உட்கார்ந்தா பேசிகிட்டே போகலாமில்ல?”

“இத்தனை நாள் பேசாதத இப்பதான் பேசப் போறீங்களாக்கும்? ஒண்ணரை வருஷமா நான் 5 இடம் மாறியிருக்கேன். நான் என்ன செஞ்சேன்; எப்படி சமாளிச்சேன் -எதையாவது கேட்டீங்களா நீங்க? You just care about my health. நான் உயிரோட இருந்தா போதும். எப்படி இருந்தாலும் பரவாயில்லை.”

கொரில்லா தாக்குதலில் அம்மாவின் நா உலர்ந்து போனது. 

“எனக்கு அங்கே இருக்கற சிச்சுவேஷன் புரியாதுடா.”

“உங்களுக்குத் தோணல. உங்களுக்கு வேற priorities இருக்கலாம்.”

“சீச்சீ ! உன்னைவிட வேறென்ன priority எனக்கு?”

“எனக்கென்ன தெரியும்?”

அம்மாவின் கடைசித் துருப்புச் சீட்டும் கை நழுவிப் போய்விட்டது. இனி இழப்பதற்கு ஏதுமில்லை. வலியோடு ஒருவிதமான நிம்மதியும் சேர்ந்து கவ்வியது. 

“I have become a loner now”, அம்மா பிசிறடித்தாள். 

விமான நிலையத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த மகள், இலக்கின்றி தூர வெறித்துக் கொண்டிருந்தாள். 

அவளின் கை பிடித்து, “நாளெல்லாம் வெளீல சுத்திட்டு ராத்திரி தான் தனியா கிடைப்ப. அப்ப வந்து பேசி உன் தூக்கத்தக் கெடுக்க மனசில்லடா..”

“ராத்திரி வந்து பாத்தா, உங்க ரூம்ல மொபைல உருட்டிட்டு இருப்பீங்க.” 

இவள் இன்னும் குழந்தை தான்; என்னுடைய குழந்தை தான்! மகளை ஆரத் தழுவிக்கொள்ளும் பேரவாவை சிரமப்பட்டு கட்டுப் படுத்திக் கொண்டாள். தான் பாசாங்கு செய்வதாக மகள் எண்ணக் கூடும். இந்தக் குழந்தையின் தலையை மடியில் வைத்துக் கோத எப்படித் தவறினேன்? அம்மா, மடித்துப்போன ஏடுகளாக உதிர்ந்தாள். 

“நீ மாறிப் போயிட்டடா. உனக்கு என்ன வேணும்னு தேரீல கண்ணு”, உடைந்தாள்.

“Don’t bluff. I’ll go”, விமான அழைப்பு வருமுன்னே கிளம்பி உள்ளே போய்விட்டாள். தன்னுருவம் மறையப் போகையில் கண்ணாடிச் சுவர் ஊடாக திரும்பிப் பார்த்த மகள், கையாட்டவில்லை. வெளியே நின்றிருந்த அம்மா மட்டும் கையை அரைவட்டமாக அசைத்து அசைத்துக் காண்பித்தாள். அதில் முன்பிருக்கும் நளினம் காணாமல் போயிருந்தது. 

திரும்பி வந்த அம்மாவுக்கு, அங்கிருந்த கடைகளில் எதை வாங்கிக் குடிப்பதென்று தெரிவுசெய்ய இயலவில்லை. இதுவரை வெளியில் போனால்-தன்னைக் கேட்காது ஏதோவொரு பானம் கைக்குக் கிடைத்துவிடும். அவற்றிலுள்ள குறையைக் கூறியபடியே அருந்தும்போது சுவை கூடும். தான் இதுவரை அருந்திடாத டர்கிஷ் காப்பியை சிறிய கோப்பையில் வாங்கிக்கொண்டு ஆட்களில்லாத மேசைக்கு முன்பிருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள். வடிவான கோப்பையில் குட்டிக்குட்டி மலர்களும் இலைகளும் பளிச்சிட்டன. கருத்திருந்த காப்பி கசந்தது. இதனால்தான் கணவர் மறுத்திருக்கிறார். ஆனால் இந்தக் கோப்பையின் அழகே போதும். 

தலை, சாவி தீர்ந்த பொம்மையாய் அலைபேசியை நோக்கியவண்ணம் அசைவின்றிக் குனிந்திருந்தது. ‘Burnt Sugar’இன் தாராவைப் போலத் தான் ‘cold mother’ ஆகிவிட்டோமா? வாசித்து வாசித்துத் தனக்குள் பெருகிடும் தர்க்கமானது உணர்வுகளைக் கொன்றுவிட்டதா? இல்லை. இந்தக்கணம் அனுபவிக்கும் துடிப்பும் வலியும் சத்தியம். கசப்புக் காப்பியைப் பெறுமிடறாக விழுங்கினாள். சலனமற்ற தொடு திரையிலிருந்து அவள் கண்ணெடுக்கவில்லை. தன்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்த சாவி தீராத பொம்மைகளைப் பற்றிய பிரக்ஞை அவளிடமில்லை. 

பாதுகாப்புச் சோதனை முடித்து விமானத்திற்காகக் காத்திருந்த மகளை, உடைந்த பொம்மையைப் போன்ற அம்மாவின் கையசைப்பு தொந்தரவு செய்தது. 

‘Security check over. Where are you?’ குறுஞ்செய்தி அனுப்பினாள். 

‘Sitting at the same gate.‘

இந்த அகாலத்தில் அம்மா விசாரித்து விசாரித்து வீடு போய்ச் சேரவேண்டும். விமான நிலையப் பேருந்து அவர்களது பகுதிக்குச் செல்லாது. எனவே டாக்ஸி தான் கதி. நண்பர்கள் யாராவதை, கூட வரச் சொல்லியிருக்கலாம். விமானத்தில் ஏறுவதற்கான நடை பாலத்தில் நடக்கும்போது அம்மாவை விட்டு விலகி விலகிச் சென்றிடும் தொலைவு உரைத்தது. விமானத்தில் ஏறியமர்ந்ததும் 

‘Boarded the flight. Feeling bad that you don’t understand me. I’m still the same only. Just better’, நீள செய்தியனுப்பினாள்.

‘1-2 years of loneliness might have erased tenderness from me.’

வீட்டில் அப்பாவின் நினைவுகள், மறைந்த வெளிச்சமாக மனதிற்குள் பெருகிப்பெருகிக் கண்ணைக் கூசச் செய்து நடைமுறையை மறைத்துவிட்டது. தன்னுடைய முதிர்ச்சியின்மைக்காகக் கூசியவள்,

‘Am proud that you have become stronger’, அம்மாவைத் தேற்றுமுகமாக அனுப்பினாள். 

‘sorry da..’

‘Chi! why sorry? Flight is taking off. Bye’

‘bye. tc kannappa’

பரீட்சை முடித்த பள்ளிச் சிறுமியாக எழுந்து வெளிப்புறமாக வந்த அம்மா, அண்ணாந்து பார்த்தாள். பஞ்சு பஞ்சாய் சிதறிக் கிடந்த மேகங்களுக்கிடையில் ஒளியிழந்த விழிகள், தொலைந்துபோன எதையெதையோ தேடித் தவித்தன. கடிபட்டுத் தப்பித்த மிருகத்தின் மருட்சி கலந்த வேதனை அந்தக் கண்களில் படர்ந்திருந்தது. ஒருகை கைப்பையையும் மறுகை அதன் வாரையும் பற்றியிருந்தன. இரைச்சலிட்ட விமானம் மேலே மேலே உயர்ந்து, ஆகாயத்தில் கரைந்திடும் புள்ளிக்குள் அவளது மொத்த பந்தமும் இருக்கின்றது. கன்னத்து ஈரத்தில் காற்று பட்டு சிவீரிட, ஜீன்ஸை ஊடுருவிக் குளிர் நடுக்கியது. 

மகளின் இந்தப் பாசம்-தனக்கானதல்ல; முளையடித்து கட்டப்பட்ட தன் இடத்திற்கானது. அடித்த புயலில், மூடியிருந்த கூரையும் சுவரும் காணாமல் போய்விட்டன. ஆயினும், தான் அங்கேயே தன்னந்தனியாக நிற்கவேண்டும்; வெய்யிலிலும் மழையிலும் பனியிலும். அவற்றிலிருந்து சற்றே ஒதுங்கி நிற்பதற்காகத் தான் எடுக்கும் குறுகிய அடி, சிறுமியை சஞ்சலப் படுத்துகிறது. அவள் மட்டும் அமெரிக்கக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாள். மகளது இந்த இரட்டை நிலையானது, வியப்பையும் ஏமாற்றத்தையும் அளித்தது. 

சிந்தனையின் அடுக்குகளில் சிக்கியபடி மெல்ல நடந்தாள். 

‘க்ளக்‘

‘Daughter left? Are you okay?’ நண்பனிடமிருந்து சம்பிரதாய விசாரிப்பு கைபேசியில். 

‘she left. am depressed’, விரலை மீறி வழுக்கிச் சென்றது பதில். 

அனுப்பிய செய்தியை வேண்டாமென்று அழிப்பதற்குள் ‘Come home‘ வந்து விழுந்தது. 

வாட்ஸப்பில் மேலே தெரிந்த அவனது பெயரை ஆட்காட்டி விரலால் வருடினாள். தமிழ் பழகாத அவனின் உச்சரிப்பில் தன்னுடைய பெயர், தனித்துவமான இனிமையுடன் ஒலிக்கும். அந்தப் பெயருக்கு அவன் புத்துயிர் கொடுத்திருக்கிறான். 

‘coming’ என்கிற ஆறு எழுத்துக்களைத் நிறுத்தி நிறுத்தி டைப் செய்வதற்கு 60 வினாடிகள் ஆயின. 

பிறகு டாக்ஸி நிறுத்தத்தை விசாரித்து, அதன் திசையில் ஓட்டமும் நடையுமாகக் கைவீசி விரைந்தாள். 

***

பா.கண்மணி – பெங்களூருவில் வசிக்கிறார். இடபம், வீனஸ் ஆகிய இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். இடபம் நாவலுக்காக கனடா இலக்கியத் தோட்டப் புனைவு விருது பெற்றவர். இணைய இதழ்களிலும் சிறுபத்திரிக்கைகளிலும் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: bkanmani16@gmail.com

வெளிச்சத்தைத் துண்டாடும் நிழற் கோடுகள்

0

ந.ரஞ்சித் குமார்

(கிறிஸ்டின் உல்பெர்கா எழுதி ரெஜினா சந்திரா மொழிபெயர்த்த பச்சைக் காகம் நாவல் குறித்த மதிப்புரை)

ரு இலக்கியப் பிரதியுடன் வாசகன் தன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். பெரும்பாலும் தனது சொந்த அனுபவங்களுக்கு முற்றிலும் அந்நியமான பின்னணிகளைப் பேசும் படைப்புகளுடன் வாசகனுக்கு இப்படியான தொடர்பு சடுதியில் அமைந்து விடுவது தான் வாசிப்புச் செயல்பாட்டில் நிகழும் விசித்திரமான யதார்த்தம்.

நம்முடைய அனுபவங்களில் காணத் தவறியவற்றை, அலட்சியத்துடன் அல்லது புரிதல் குறைபாடு காரணமாக கண்டுகொள்ளாமல் விழ நேர்ந்த இடைவெளிகளை இப்பிரதிகள் நினைவூட்டுகின்றன. அறிமுகமும் அனுபவமும் இல்லாத கதைக்களம் என்ற போதும் அதன் கதை கூறல் நாம் கவனத்தில் நிறுத்தாமல் கடந்து வந்த சூழலுக்கு பரிச்சயமான தொனியைக் கொண்டிருக்கிறது.

குடும்ப உறவுகளின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கப்பெறாத தனிமையின் அழுத்தத்தில் மனச்சிதைவுக்குள்ளான ஒரு பெண் தான் நாவலில் கதைசொல்லி. மருத்துவர் மற்றும் வெவ்வேறு காரணங்களால் மனநல மருத்துவமனையில் அவளுடன் சிகிச்சைக்கு வந்து தங்கியிருக்கும் பெண்களுடன் தனது கடந்த வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். 

உடன் தங்கியிருக்கும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் அங்கு கொண்டு வரப்பட்டதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இவர்களுக்குள் பேசிக் கொள்ளக்கூடிய சம்பவங்களின் தொகுப்பு தான் முழு நாவலும். அவர்கள் முழுமையாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள அமைந்த ஒரே இடம் அதுதான். 

அவர்களுக்குக் காது கொடுக்காத புற உலகம் அவர்களுக்கு எட்டாத தொலைவில் இருக்கிறது. அது பற்றிய புகார்களும் அவர்களிடம் இல்லை. ஏனெனில் அவர்கள் அவர்களுக்கென்றே உருவாக்கிக் கொண்ட உலகத்தில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். நாவலின் நோக்கம் அவர்கள் அங்கு வந்ததற்கான காரணங்களைப் பதிவு செய்வது அல்ல. காரணங்கள் வெறும் கதைகள் தான். அக்கதைகளின் வழியாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்கள் அடைந்த உளவியல் பாதிப்புகளை மிகையின்றி அவர்களின் குரலிலேயே பதிவு செய்வது தான் நாவலின் பிரதான நோக்கம். 

நம்முடைய பழக்கப்பட்ட அவதானிப்புகளை உதறிவிட்டு அவர்களின் உலகுக்குள் சென்று அவர்களின் பார்வை வழியாக, அவர்களின் நேரடிக் குரலிலேயே அவ்வுலகைக் காண்கிறோம். கற்பனையிலும் கண்டிராத விசித்திரமான கதாமாந்தர்கள் வந்து போகிறார்கள். வினோதமான நிகழ்வுகள் இயல்பாக நம் கண் முன்னே அரங்கேறுகின்றன. 

கடந்த கால நாட்களில் கதைசொல்லியின் தனிமைக்கு ஆதரவாக அவளுக்கு வாய்த்த ஒரே நண்பன் அவளது கண்ணுக்கு மட்டுமே புலப்படக்கூடிய பச்சைக் காகம் மட்டுமே. 

கதைசொல்லியின் விடுதலை மீதான தீராத ஏக்கத்தின் உருவகமாக வடிவெடுத்தது போல் வருகிறது பச்சைக் காகம். சிறு பிராயத்து நினைவுகள், கணவன், பிள்ளைகள், நண்பர்கள், பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் முதலிய அனைத்திலிருந்தும் அனைவரிடமிருந்தும் விடுபடத் துடிக்கும் அவளது விடுதலை ஏக்கம் இருக்கிறது. அப்படிப்பட்ட விடுதலை எண்ணத்தின் ஆதியும் அந்தமுமாக இருக்கிறது பச்சைக் காகம்.

தனது அடக்கப்பட்ட உள்ளக்குமுறல்களின் வெளிப்பாடாக அவ்வப்போது சில அசட்டையான விளையாட்டுத் தனங்களில் ஈடுபடுகிறாள். அவையெல்லாம் ஒரு தற்காலிகமான ஆசுவாசத்தை மட்டுமே அளிக்கின்றன. தனக்கான விடுதலையை அவள் யாரிடமிருந்தும் யாசிப்பதுமில்லை, அதை அடைவதற்காக தன்முனைப்புடன் துணிவுகரமான செயல்களில் ஈடுபடுவதுமில்லை. காரணம் அவள் வேண்டும் சுதந்திரம், தன்னைக் கட்டி வைத்திருக்கும் அனைத்துத் தளைகளிலிருந்தும் துண்டித்துக்கொள்ளக்கூடிய அப்படி ஒரு நிரந்தரமான சுதந்திரம், கால் தரையில் படும் இந்த உலகின் எந்த மூலையிலும் சாத்தியமே இல்லை என்று அவள் புரிந்து கொண்டதால் தான்!. இவளா மனப்பிறழ்வு கொண்டவள்? 

நட்பு, காதல், கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள் என மனித உறவுகளில் நிரம்பியிருக்கும் போலியான ஆசாபாசங்கள், ஒவ்வொருவரும் தம்மைத் தாமே முக்கியத்துவம் கொண்டவர்களாகக் கருதிக் கொள்ளும் மனப்பாங்கு ஆகியவை மனச்சிதைவுக்கு உள்ளானவராகப் பார்க்கப்படும் ஒரு கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகின்றன. டயரிக்குறிப்புகள் போல நேரடியாக எழுதப்பட்ட ஒரு கையெழுத்துப் பிரதியை வாசிக்கும் நெருக்கமான உணர்வைத் தருகிறது படைப்பு.

இந்தப் பார்வை தான் நாவலின் தொனியை நெய்கிறது. இந்தப் பார்வை தான் நாம் காணும் தெளிவான நாகரீகமான உலகை சித்திரவதைக் கூடமாகக் காட்டுகிறது. இவற்றில் எங்கும் விமர்சனத் தொனி வெளிப்படுவதில்லை. ஆனால் ஆழமாக நம்மைச் சீண்டுகிறது. இந்த அம்சத்தில் தான் நாவலின் அடர்த்தி கூடுகிறது. 

கதைசொல்லி நாவலில் நேரடியாக வெளிப்படுத்தியிராத ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. அவளை ஏளனமின்றி சக மனித உயிரியாக நினைப்பது மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடன் இருக்கும் தற்காலிகமான தோழிகள் மட்டுமே. இந்த கதை சொல்லப்பட காரணமாக அமைந்த ஒரு வாய்ப்பும் அவர்களின் இருப்பு மட்டும் தான்.

கதைசொல்லியை மனச்சிதைவுக்கு உள்ளான ஒருவராக அடையாளப்படுத்துவதுமே கூட அபத்தம் தான். அது அவளால் நேர்ந்ததல்ல மாறாக அவள் மீது சுமத்தப்பட்ட அடையாளம். அதில், கற்பனையில் மட்டுமே தனக்கென சுதந்திரமான உலகைப் படைத்துக் கொள்ள நிர்பந்தித்த அவளது குழந்தைப்பருவம் கொடுத்த பதற்றம் இருக்கிறது‌; தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத கணவன் மீதான பரிகாசம் இருக்கிறது; பாசமற்ற பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கை இருக்கிறது; இந்தத் தளைகளில் துண்டித்துக் கொள்ள முடியாமல் ஒரு எல்லைக்குப் பிறகு மீண்டும் அதிலேயே வந்து ஒட்டிக்கொள்ள நேரிடும் தன்னுடைய இயலாமை குறித்து தன் மீதான பரிதாபம் இருக்கிறது. 

அழுத்தமாக தனித்து தெரியும்படி அல்லாமல் போகிற போக்கில் எளிமையாக உதிர்க்கப்படும் மேற்கோளிட்டுச் சொல்லத்தக்க வாக்கியங்கள் ஒவ்வொரு பத்தியிலும் வந்து கொண்டே இருக்கின்றன. ஒருமுறைக்கு மறுமுறை வாசிப்பில் நுட்பங்களின் ஆழம் கூடுதலாக துலக்கமாகிறது. 

“என்னால அற்புதமாக இருக்க முடியாது – என் குடும்பம் என்னை நேசிக்க நான் துயரமா இருக்கணும்.”

“உங்களைச் சுத்தியிருக்கற எல்லாரும் மகிழ்ச்சியற்றவங்களா இருக்கும்போது நீங்க தொடர்ந்து மகிழ்ச்சியா இருக்கணும்னா நீங்க மிகப்பெரிய சுயநலவாதியா இருக்கணும்.”

“உங்க மூளையில ஒரு கொடூரமான எதிர்காலத்தைக் கட்டமைக்கறத விட, கடந்த காலத்த உங்க கனவுகள்ல அனுபவிக்கிறது சிறந்தது.”

“நாட்கள் நகல் எடுக்கப்பட்டக் காகிதத் தாள்களைப் போல இருக்கின்றன”

“எனக்குக் கனவுகள் வருவதில்லை என்பது வேறு. அல்லது நான் இல்லவே இல்லை என்பது போல், அவை ஒருவேளை என்னைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம்”

“ஒரு நினைவை விட மென்மையானது உலகத்துல வேறெதுவும் இல்ல.”

“ஒரு குறிப்பிட்ட சொற்றொடருக்கு நீங்கள் நன்கு பழகிவிட்டால், அது எதைக் குறிக்கிறது என்பதை நீங்கள் உணரவோ புரிந்துகொள்ளவோ மாட்டீர்கள்.”

நிகழ்வுகளின் காலவரிசையும் தொடர்ச்சிகளற்று முன்பின்னாகச் சொல்லப்படுகிறது. நேரடித் தன்மையிலிருந்து ஆரம்பித்து நனவோடைக்குள் நழுவிச் சென்று மீண்டும் ஆரம்பப் புள்ளியில் ஒரு சுற்று வந்து சங்கமித்து நிற்பது போன்ற வாசிப்பனுபவத்தைத் தருகிறது. கதாபாத்திரங்களின் உளவியல் தன்மையை வார்த்தெடுத்தது போலவே இருக்கிறது நாவலின் கட்டுமானமும்.

நாவலின் இறுதியில் இதுவரை சொல்லப்பட்டவற்றுள் எதுவெல்லாம் நிஜம் எதுவெல்லாம் கற்பனை என்று பிரித்தறிய முடியாத புதிரான சுழலுக்குள் ஆட்படுகிறோம். நிஜம் கற்பனை ஊகங்களுக்கு அப்பால் எளிதில் இறக்கி வைக்க முடியாத கனம் நம்மை யோசனைகளின் சஞ்சாரம் இல்லாத மௌனத்தில் ஆழ்த்துகிறது.

எந்தவித அறிமுகங்களும் இல்லாமல் வாசிக்கத் துவங்கியதில் இவ்வளவு சுவாரஸ்யமான வாசிப்பனுபவமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை. சர்ரியல் பாணியிலான கதைசொல்லல் என்று இலக்கிய வகைமையில் அடையாளப்படுத்தலாம் தான், ஆனால் கதைசொல்லியின் கண்ணோட்டத்தில் நடப்பவை யாவும் எளிமையான சந்தேகத்திற்கு இடமில்லாத யதார்த்தமே – நம்முடைய பழக்கப்பட்ட கண்கள் காண முடியாத யதார்த்தம். யதார்த்தங்களின் மீதான நம்முடைய புரிதல்களை மிருதுவான வருடலுடன் சீண்டிப் பார்க்கும் கதைசொல்லல். மெதுவாக ஆழ்ந்து அனுபவித்து வாசிக்க நிர்ப்பந்திக்கும் படைப்பு. பேச்சிலும் கதைசொல்லிலும் தொனி மாறுபடக்கூடிய மொழிநடை. தமிழில் முதல் மொழிபெயர்ப்பாக இப்படைப்பை ஒருவர் தேர்வு செய்வது ஆச்சரியம் தான். ஆனால் உண்மையில் இப்படைப்பு தான் மொழிபெயர்ப்பாளரைத் தேர்வு செய்திருக்கிறது. வெகு சிறப்பாக உள்ளது ரெஜினா சந்திரா அவர்களின் மொழிபெயர்ப்பு.

சமுதாய விதிமுறைகள் கட்டுப்பாடுகள் ஒரு தனி மனித சுதந்திரந்தில் செலுத்தும் ஆதிக்கங்களைப் பேசும் நிறைய படைப்புகள் தமிழிலும் பிற மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டும் வந்திருக்கின்றன. அதற்கும் அடிநிலையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்களற்ற மாந்தர்களின் பேசப்படாத இருண்மை உலகம் புனைவிலக்கியங்களில் அரிதாகவே தட்டுப்படுகின்றன. அப்படியான அரிதான கருப்பொருளில் உருவாகியிருக்கும் படைப்பு “பச்சைக் காகம்”.

***

ந.ரஞ்சித் குமார் – சொந்த ஊர் தென்காசி அருகே சேர்ந்தமரம். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அச்சு ஊடகங்களில் தொடர்ச்சியாக நூல் மதிப்புரைகள் எழுதிவருகிறார். மின்னஞ்சல்: ranjithlogin01@gmail.com

செல்வசங்கரன் கவிதைகள்

0


றைக் கதவு
இந்த விரிந்த உலகம்
எனது அறைக் கதவு வழியாகத் தான்
கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப்
பெரிதாகின்றது
கொஞ்சம் கொஞ்சமாக
எனக்குச் சிறிதுமாகின்றது


பைக் ஓட்டி
வண்டி ஓட்டிக் கொண்டிருப்பவனிடம்
இருப்பது எல்லாமே ஆயிரம்
ஒரு கட்டிடத்தை அவனால்
காணவே முடியாது
ஒரு மரத்தை அவனால்
பார்க்கவே முடியாது
ஒரு சந்தோசத்தை அவனால்
அடையவே முடியாது
அவனுக்கு தெரிவது எல்லாமே ஆயிரம்
அவனுக்கு கிடைப்பது எல்லாமே ஆயிரம்
அவன் ஆயிரங்களின் தலைவன்


அரவணைப்பு
இரண்டு கை நீட்டி தரை
எந்தக் கால்களையும் அழைத்ததில்லை
இரண்டு கால்கள்
இரண்டு கைகளை நீட்டி
தரையை வந்து அணைக்கும்
அம்மா அணைக்கின்றதே
தெரியாமல் அணைப்பார்
குழந்தைகள் முட்டி முட்டி
அம்மாவை அணைத்துக் கொள்வர்


நீர் நிலம்
தங்களுக்குள் பழக்கமான
இரண்டு பேர்
வேறு வேறு பாதையில்
முன்னால் கூடி நகர்ந்தனர்
அவர்களுக்கு பின்னால் கூடி
ஒரு கடல்
இடையே இருந்து புரண்டது
பெருகுவதும் ஒடுங்குவதுமாக
தன் எல்லையை மாற்றி மாற்றி
வகுத்துக் கொண்டிருந்தது
நீர் நிலம்
எத்தனையோ தலைகள்
இந்த நிலத்தில் மிதப்பது
தெரிந்தாலும்
இந்நிலத்திற்கென இருப்பது
எந்நேரமும்
வெறும் இரண்டு பேர்


முகக் கோட்டை
என் முகத்திற்கு என்னிடம்
முறையான பாதைகளே இல்லை
அங்கு செல்லவே எப்பொழுதும்
தவ்விக் கொண்டிருக்கிறேன்
எங்கு சேர்கிறேன் தெரியவில்லை
என்னை என் முகம்
ஏமாற்றுவது மாதிரி யாரும்
என்னை ஏமாற்ற முடியாது
ஆனால் ஒன்று
அந்த கோட்டைச் சுவரை
அங்கு நான் கட்டவில்லை


அந்தப் பாடல்
அந்தப் பாடலை
அவன் ரசித்துக் கேட்கிறான்
அந்தப் பாடல்
எத்தனையோ இடங்களில்
இதுவரைக்கும் ஒலித்துள்ளது
அவனது ரசிப்பு முறை தான்
அந்தப் பாடலுக்கு மிகவும் பிடிக்கும்
எங்கிருந்தாலும் அந்தப் பாடல்
அவனைக் கண்டுபிடித்து விடும்
அவன் இறந்த வீட்டிலும்
அந்தப் பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது

***

செல்வசங்கரன் : விருதுநகரில் பிறந்தவர். அரசு உதவிபெறும் கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2009 லிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவரும் இவர். ஆதவன் ( கே.எஸ்.சுந்தரம் ) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். அறியப்படாத மலர் ( 2013 ), பறவை பார்த்தல் ( 2017 ), கனிவின் சைஸ் (2018 ), சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி ( 2020 ), கண்ணாடி சத்தம் (2022), மத்தியான நதி ( 2022), வெறுங்கடல் ( 2024 )ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிற இவரது கவிதைகள் அநேக இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சௌமா இலக்கிய விருது பெற்றுள்ளார். மின்னஞ்சல்: selvasankarand@gmail.com

சதைக்கூடு….

0

ம.கண்ணம்மாள்

(செல்வக்குமார் பேச்சிமுத்து எழுதிய “கெளிமதம்” நாவலை முன்வைத்து…)

பெண் உடல், ஆண் உடலின் பாலின உறுப்புகள் உறுப்பின் பெயராக, இங்குப் பார்க்கப்படுவதில்லை. மாறாக, வசைச்சொல்லாகவும், கேலிக்குரியதாகவும் உள்ளதை இயல்பாகவே கதையிலிருக்கும்படி பொருத்திக் கொண்டு, அதன் போக்கிலேயே மனித உடல்களைக் களம் கண்டகதை. 

*

கடும் வெய்யிலில் அலையும் மனித உடல்கள் கொஞ்சம் இளைப்பாறிக்கொள்ளும் நிகழ்வு விழாக்கள். இங்கும், முதலில் கோவில் திருவிழாவும், ஊரும், சாதியும் சாமியும் முன்னிறுத்தப்படுகின்றது. அந்தந்த நிலப்பகுதியின் உடற்திரள்களின் கொண்டாட்டமும், இக்கதையினைத் தொடங்குவதற்குமானச் சூழலுமாக இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

*

ஒரு அசைவினை உற்றுப்பார்த்தால், சில மரபான நடைமுறைகள் தென்படும். சமூகத்தின் வாழ்நிலங்கள் நீர், தீ, உணவு என்ற இம்மூன்றினாலும் அசைக்கப்படுபவை. மரபின் மிச்சங்களில் பண்பாடுகளில் மங்கலமென்பதை உணவிட்டுப்படைத்தலைக் கூறலாம். அதற்கான மூலப்பொருள் நீர், தீ, உணவு. இதில் தீயில் எரிந்த கொள்ளிக்கட்டை தான் கதையின் அடித்தளம்.

*

பொதுவாக, இயற்கையான உணர்வு காமம். காதலுணர்வும், அதனைச் சார்ந்ததனைத்தும் ஆண், பெண் இரு உடல்களுக்கும் தேவை. இதில் எவ்விதமானத் தடைகளும் கட்டுப்பாடுமன்றி இரு உடல்களும் தத்தம் விருப்பதத்திற்கேற்ப சமூகத்தில் இயங்கத்தொடங்கும் போது எச்சிக்கலுமில்லை. மாறாக, தவறு என்று சுட்டிக்காட்டி, தூற்றி மட்டுப்படுத்தி, கீழ்ப்படுத்தியச் சூழல் இக்கதைக்கானக் களமாக வெளியுலகில் அறியப்பட்டது.

*

ஒரு முதற்படைப்பில் செல்வக்குமார் பேச்சிமுத்து கதை உருவங்களின் பின் நின்று கூறவில்லை. கதைப்போக்கை, சிக்கலை, திரைக்கதை போன்று அடுத்தடுத்து என்ன நிகழப்போவதென்பதை நேரடியாக விவரணைக்குள் உட்படுத்துகின்றார். இங்கு கருத்தியலோ, ஆளுமையோ வாசிக்கும் போது தோன்றவில்லை. அடுத்தடுத்த நாட்களிலும் என்னைப் பிசைந்தெடுத்த ஒரு கதை உருவம், அக்குரல், பிரச்சினையின் தீவிரம், கதை உருவத்தின் வழி சமூகத்தில், தன் நிலத்தில் நடக்கும் சிக்கலை அன்றாடம் காண்பதை மொழியின் துணையோடு வெளிப்படுத்திய நேர்த்தி மனதில் வந்து வந்து போனது. குறிப்பாக, கதை என்பது கலை. அழகியல், வெறும் மொழிச்சேர்ப்பு என்பதெல்லாம் தாண்டி, இக்கட்டுரை எழுதும் நேரத்தில் கூட ஒரு பெண் உடலின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான மூச்சுப்பாடுகளை கொடுந்துயரமாக எண்ண வைக்கின்றது. சொல்லப்போனால், பாதுகாப்பாக நான்கு சுவருக்குள் அடைப்பட்டுக் கிடப்பவர்களுக்கு இப்படியும் ஒரு கொடுந்துயரம் நடக்கின்றது என்பது தெரியவேண்டும்.

“கெளிமதம்” நாவலின் வழி ஒரு பெண் உடல் ராக்கம்மா என்ற பெயரோடு நாவல் முழுவதும் அக்கதை உருவம் தன் மீது கதையைத் தூக்கிக் கொண்டு நடக்கின்றது.

ராக்கம்மா என்ற பெண் உடல் இயல்பாக ஒரு ஆணை விரும்பித் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றாள். 

இத்திருமணம் நடந்திருந்தால் ராக்கம்மா என்ற ஒரு பெண் உடல் கண்ட பாலியல் இச்சைகள், தவிப்பு, முழுமையாக ஒருவரும் ராக்கம்மாவை அண்டாத மனநிலை, அன்றன்றையக் காட்சிகளுக்காக வரையப்பட்ட ஓவியம் போன்ற தின நிகழ்வுகளைக் காண நேரிடாமல் போயிருக்கும். கதையின் நிறைவாக வரும், கதையின் முடிவுக்காக ராக்கம்மாவிடமிருந்து விலக்கப்படும் ரகுவின் வெள்ளைவேட்டியில் தான் இறந்த போன ராக்கம்மா கட்டப்படுகின்றாள்.

ஒரு பேரிளம் பெண்ணைக் குழந்தையாக பாவித்துக் கட்டுதலாகப் படைப்பாளர் காட்டியிருப்பதும் நடப்பியலில் வாழும் மனித உடல்களைப் பார்த்து ஏதோ ஒன்றைக் கேட்டு விட்டு நகர்கின்றார். பாடைக் கட்டவும்,தொட்டுத் தூக்கவும் அஞ்சிய மனித உடல்கள் சடலத்தைப் புணர்ந்து இச்சையைத் தீர்த்துக் கொள்கின்றனர். இல்லாத நோய்க்கு ராக்கம்மா, அலைக்களிக்கப்பட்ட மனநிலையைத் தந்த அத்தனை மனித உடல்களும் தன்னைத் தானே தீயிலிட்டுக் கொள்வது போன்ற உணர்வை அடைய வேண்டும்.

இங்கு, யாரும் யாரையும் சரி, தவறெனச் சொல்லி திருத்துவதற்குப் பிறக்கவில்லை. தேவையான மதிப்பும், சமமாகக் கருதுதலும் தீங்கிழைக்காமிலிருத்தலும் போன்ற செயற்பாடுகளே போதுமானது. இதைத் தாண்டி பெரிதாக எதுவுமேயில்லை.

ராக்கம்மா தன் தாய் தந்தையைளத் தவறாகப் பேசியதாலயே கொள்ளிக்கட்டையைக் கையிலெடுக்கின்றாள். அதனால் வரும் பிரச்சினையில் ஊர் விலக்கம் செய்யப்பட்டக் குடும்பமாக அவர்கள் வாழ்வு மாறுகின்றது. ராக்கம்மாவின் காதல் மறுக்கப்பட்டு, அதனைக் கேட்க முயல்கின்ற போது, விரும்பியவன் சொன்ன தேவுடியா என்ற வார்த்தை பின்னாட்களில் ராக்கம்மா பாலியல் களத்துக்குள் தம்மை உட்படுத்திக் கொண்டபோது, முருகனை நேருக்கு நேர் சந்திக்கின்ற போது தன்னை விட முருகனே துன்பப்பட்டிருக்கக்கூடிய தொன்றாகவே கருதினாள்.

திருமணத்திற்கு வயது ஒரு விஷயமல்ல. விருப்பமிருந்தால் வயது அதிகமுள்ளவரை மணக்கலாம். விருப்பமற்று, கட்டாயப்படுத்தி, பணத்துக்காக, பாலியல் தேவைக்காக நடக்கும் திருமணம் நிலைத்து நிற்க அவசியமில்லை. ராக்கம்மாவின் வாழ்வில் அது தான் நிகழ்ந்தது.

இது, ராக்கம்மாவின் மனதிற்கு அடுத்ததொரு ஆண் உடலைத் தேர்வுச் செய்ய இடமாகின்றது. காதலெனும் உணர்வு ஒரு உடல் இறப்பைத் தொடும் வரை வரும். உணரமுடியும். அதைத் தாண்டி வாழ்வதற்காக விருப்பமுடன் பாலியல் இச்சைகளுக்காக சாராயத்தின் துணையோடுத் தன்னை மாற்றிக் கொள்கின்றாள்.

இதற்குக் காரணம் இங்கு வாழும் எண்ணற்ற மனித உடல்களின் பழங்கருத்துகள், சந்தேகங்கள், பண்பாட்டுக் கூறுகளைத் தனக்கேற்றவாறு உட்படுத்துவது, வாய்மொழி மரபுகள், கடந்து போன வாழ்வு போன்றவற்றைக் கூறலாம். இதனை, மெல்ல மெல்ல பல உடல்களில் நாட்பொழுதுகளில் புகுத்தி அதன்படி நடக்க வைக்கின்றனர். அதில் நாட்டமும் கொள்கின்றனர். இதன் வழியாக அதனைக் குத்தி குத்தி தைப்பதில் குருதிக் கொட்டிக் கிடக்கும் உடல்கள் நிலத்திலுண்டு, அதிலொரு உடல் தான் ராக்கம்மா.

ராகம்மாவின் உடலைக் கைக்கொண்ட பலப்பல ஆண் உடல்களின் சாதிய வெளிப்பாடு, கிண்டல் தொனி, அந்தந்த நேரத்து மையல்கள், ராக்கம்மாவின் மேல் வைக்கப்படும் உரையாடல்கள், ராக்கம்மாவைச் சுற்றும் நெருக்கடிகள் போல்வனவெல்லாம் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய இடங்கள். இங்கு, புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ ஞாபகத்துக்கு வருகின்றது. விருப்பப்பட்டு பசியாற்றுவதற்கு, விருப்பப்பட்ட நபர்களுக்காக மாறிக்கொள்ளும் ராக்கம்மாவின் பாலியல் முடிவைப்பற்றிச் சொல்ல எதுவுமேயில்லை. குறிப்பாக, ராக்கம்மாவை கீழ்மைப்படுத்தி சதா அந்த உடலை நச்சரித்துப் பேசிய பேச்சுகள் மட்டுமே ‘கெளிமதமாக’ மாறியுள்ளது.

கதையில் வரும் வயதான நீலி உயிர் நீத்தவுடன் தனி ஆளாக ராக்கம்மா துக்க வீட்டின் பொறுப்பை ஏற்று செய்கின்ற போது, தான் இப்படித் தூக்க தொட அஞ்சித் தனியளாகக் கிடப்பேனென்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.

மூப்பு வரும் போது சுருங்கி வதங்கும் ஒரு சதைக் கூட்டிற்கு எத்தனை எத்தனை அச்சுறுத்தல்கள்? ராக்கம்மா எனும் சதைக் கூட்டின் நேருக்கு நேரான தைரியம் கதையில் முக்கியமானது. யாரும் தன் மீது அனுதாபப்பட ராக்கம்மா விழையவில்லை. இங்குள்ள பற்பல மனித உடல்களின் விதவிதமான விருப்பங்கள், பாலியல் பிறழ்வுகள், அத்து மீறல்கள், சாதித் தீண்டல்கள், போன்றவை திணிக்கப்பட்ட ராக்கம்மாவை யாரும் மறுதலிக்க முடியவில்லை. தனக்குத் தானே வெகுண்டெழுந்து மூர்க்கத்தை நியாயமாகக் காட்டிய அப்பெண்ணிடம் உயிருடனிருக்கும் பொழுது அவள் விருப்பமின்றி யாரும் நெருங்க முடிந்ததில்லை.

அழியும் இந்த உடலுக்கு இம்மனிதர்கள் என்ன தான் இன்னும் செய்யப் போகின்றார்களெனத் தெரியவில்லை…

காப்பு கட்டின ஆட்கள் அடிக்கும் மேளத்தில், சுடுகாட்டில் உறங்கும் ராக்கம்மா எழுந்திருக்கப்போவதில்லை.

“ஏ நான் வளர்த்த கட்டி மவளே

ஏ நான் வளர்த்த தங்க மவளே”

உன்னை இப்படி பார்க்கிறதுக்காகவா தங்கமா வளர்த்தேன்” என்ற ராக்கம்மாவின் தந்தை ஒப்பாரியில், கோவிலில் அடிக்கின்ற நையாண்டி மேளம். கெளிமதமாக உருமாறுகின்றது.

***

ம.கண்ணம்மாள் – மருதநிலம் தஞ்சையைச் சொந்தமாகக் கொண்டவர். 25 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக பணி மேற்கொண்டு வருகின்றார். அதோடு, பொதுவெளியில் கவிதை, கட்டுரை, சிறுகதை என இயங்குதலோடு, சீர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருக்குறள் அக மெய்ப்பாடுகள், இலக்கண உரைகளில் சமுதாயம், முப்பெரும் கவிஞர் பாக்களில் மெய்ப்பாடுகள், பாவலரேறு ச.பாலசுந்தரம் போன்ற நூல்களையும், ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் திருக்குறள் விளக்கம்’ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். சீர் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் பங்குக் கொண்டுள்ளார். சன்னத்தூறல், அதகளத்தி, உடல்கள் – கால்கள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி : kannamano07@gmail.com

கடத்தப்பட்ட அநீதி

0

ரெ விஜயலெட்சுமி

“பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் சமாதானம் கொள்வது
அடுத்த தலைமுறைக்கு அநீதியை கடத்துவது.”

  • நாவலிலிருந்து

ட்டியல் இனம் (Scheduled Caste) என்பது இந்தியாவில் வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக குறிப்பாக சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் அதிகாரப்பூர்வமான பெயர். அதைச் சுருக்கி எஸ்சி என்ற வார்த்தையை உருவாக்கி அதை இழிவு சொல்லாக மாற்றி வைத்திருக்கிறது சமூகம். இந்த இழிசொல் பலரை தண்டித்துக் கொண்டிருக்கிறது. விலங்குகளை விட தம்மைப் பல படிகள் மேலானதாகக் கருதி அறிவும் தெளிவும் உள்ளதாக்க காட்டிக் கொள்ளும் மனித இனம், தங்களில் சிலரைப் பிரித்து இப்பெயரிட்டு மார்தட்டிக் கொள்வது என்பது சுத்த அபத்தம். அந்தப் பிரிவிற்குள் மனிதர்கள் தள்ளப்பட்டதன் வரலாற்று பக்கங்கள் இரத்தக்கரை படிந்ததோடு மட்டுமல்லாமல், கரையான்களால் செல்லரிக்கப்பட்டுப் பல பக்கங்கள் காணாமலும் போனது. கவனமாக மிச்சம் விடப்பட்டப் பக்கங்கள், தனக்குப் பிடித்தவற்றை எழுதி அதில் வரலாறு என்று பெயரிட்டு வைத்திருக்கிறது. 

அவ்வாறாகப் பெயரிடப்பட்ட மக்களின் நிஜம் சில சமயங்களில் குறிஞ்சி பூத்தாற் போல் இலக்கியத்திலும் கதைகள் ஆவதுண்டு. எழுதத் தொடங்கிய போது இழிச்சொல் மறைந்து தலித்தியம் என்ற வார்த்தையை கையில் எடுத்துக் கொண்டார்கள். 1970களில் மராத்தியர்களும் இந்திய வரலாற்றில் சாதிமுறையில் ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்களில் சிலரும் தங்களை தலித் என்று அழைத்து அவ்வார்த்தையைப் பிரபலப்படுத்தினர். தலித் என்ற சொல்லுக்கு உடைந்து போனது அல்லது நசுக்கப்பட்டது என்று பொருள். 

ஆரம்பக்கட்டங்களில் அதாவது நவீன இலக்கியம் என்கிற ஒன்று ஆரம்பித்தபோது தலித்திய நாவல்கள் வெளி வந்தாலும் அவை பார்த்தெழுதியக் கதைகளே. வாழ்ந்தெழுதியக் கதைகள் மிக அரிது. அப்படி வாழ்ந்தெழுதியக் கதைகள் செவ்வியல் புதினங்கள் அதாவது கிளாசிக் நாவல்கள் வரிசையில் இடம் பெற்றதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியது அவசியம். 

சமீப காலங்களில் எண்ணிக்கை அளவில் உயர்ந்திருந்தாலும் பட்டியலின வாழ்க்கை கிளாசிக் நாவல்கள் வரிசையில் வருமா என்பதை காலம்தான் நிர்ணயிக்க வேண்டும். 

இவை நான் வாசித்த சமீபத்திய சில தலித்திய (என்னளவில் செவ்வியல் புதினங்கள்) நாவல்கள். 

யாம் சில அரிசி வேண்டினோம் – அழகிய பெரியவன் 
பேட்டை – தமிழ் பிரபா 
கருக்கு – பாமா 
பிச்சிப்பூ – பொன்னீலன் 
வெக்கை – பூமணி 
கோரை – கண்மணி குணசேகரன் 
கூகை – சோ. தர்மன்
செடல் – இமையம் 

செடல் தவிர்த்து மற்ற நாவல்களின் மதிப்புரைகளை எனது முதல் நூலான வாசிப்பின் வாசலில் எழுதி இருக்கிறேன்.

அந்த வரிசையில் அண்டனூர் சுரா எழுதிய வேங்குடி வயல் நாவலும் ஒரு மிக முக்கியமான நாவல் என்றே கருதுகிறேன்.

வேங்குடி வயல் என்னும் கிராமத்தில், நத்தம் பகுதியில் அணிலி என்றொருத்தி வசித்து வருகிறாள். அவள் தன் அணில் பிள்ளையான்களோடு பிள்ளைக்கிணற்றில் நீர் குடிக்க இறங்குகிறாள். சாரையான்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, அணிலி தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள் என்றும், அவள் இறங்கியதால் நீர் தீட்டாகிவிட்டது என்றும் சொல்கின்றனர். அணிலி அதை ஏற்க மறுக்கவே, சாரையான்கள் மூர்க்கமடைந்து, மின்னல் பிடித்து நீரில் நெருப்பை உண்டாக்கி அதை கொண்டு அணிலியையும் பிள்ளையான்களையும் பொசுக்குகின்றனர். அதனால் அவர்களின் முதுகுகளில் மூன்று கோட்டு புண்கள் உருவாகின்றன. அவை யாரோ ஆசையாக தடவி கொடுத்த கோடுகள் அல்ல, வன்மக் கோடுகள் என்ற கதையோடு ஆரம்பிக்கிறது புதினம்.

அணிலி வசிக்கும் நத்தப்பகுதியில் ஓர் தென்னை மரம் இருக்கிறது. அதிலிருக்கும் நீரை மரத்திலிருந்து எல்லோருக்கும் அணிலிதான் பங்கு போட்டு நன்னீர் கொடுப்பாள். அவர்கள் தங்களிடம் இருப்பதைக் கொண்டு கொண்டாட்டமாக வாழ்பவர்கள். அவர்கள் மகிழ்ந்திருப்பதை கண்டு சகிக்க முடியாத கட்டு விரியன் ஒருவன் எதிரே வாழ்ந்து வந்தான். ஒரு நாள், கடுமையான வக்கிரத்தில் அந்த மரத்தில் ஏறி தன் நஞ்சை கக்கி முக்கி தன் உடலில் இருந்து மொத்த பலத்தையும் மலப்புழுக்களையும் எல்லா இளநீரிலும் கலந்து விடுகிறான். 

விஷயம் தெரியாமல் அணிலி வழக்கம்போல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறாள். அதைக் குடித்த அணிற்பிள்ளைகள் எல்லோருக்கும் பல வியாதிகள் வர ஆரம்பிக்க, மருத்துவர்கள் இரவும் பகலுமாக அவர்களைக் காப்பாற்றப் போராடுகின்றனர். பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு நன்னீரில் நீந்திய மலப்புழுக்கள்தான் அணிற்பிள்ளைகள் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்பது கண்டுபிடிக்கப்படுகின்றது. 

இந்த மாபெரும் அநீதியை இழைத்தவர்கள் யார் எனக் கண்டறிய பூனையார் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது. அந்த கமிஷன் மிக நிதானமாக பல வருடங்கள் கழித்து அணிலி மீதே அப்பழியைச் சுமத்தி வழக்கை முடித்து வைக்கிறது. 

அதன் பிறகு உண்மை கண்டறியப்பட்டதா, அறியப்பட்டாலும் தெரியப்படுத்தப்பட்டதா என்பதை எல்லாம் விலங்குகள் மேடையில் நடத்தும் நாடக வடிவில் நாவலில் சிறப்பாக உள்ளங்கை நெல்லி போல தெள்ளென விளக்குகிறார் அண்டனூர் சுரா.

மொத்தக் கதையும் மனித உயிரைத் தவிர்த்து விலங்குகளை வைத்தே சொல்லப்படும் எழுத்துக்களை ஆர்வேலியன் (Orwellian) எழுத்து என்று வகைப்படுத்துகின்றனர், அதற்கான ஆறு விதிமுறைகளோடு ஒத்து போகும் காரணத்தினால். ஆனால் என்னைப் பொருத்தமட்டிலும் நம் பாட்டி வடை சுட்ட கதையிலேயே நரியை பேச வைத்து விட்டோம் என்பதால், நம் இந்தியாவில் ஜார்ஜ் ஆர்வெல்லுக்கு (விலங்கு பண்ணை நூலை எழுதியவர்) முன்பே இவ்வகை எழுத்து இருந்து வந்திருக்கிறது. இதற்கு பெயர் அந்த்ரோபோமார்பிசம் (Anthropomorphism). அதாவது மனிதர் அல்லாத பொருள்கள், விலங்குகள், தெய்வங்கள், இயற்கை நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு மனிதனின் பண்புகள், உணர்வுகள், சிந்தனைகள், பேச்சு போன்றவற்றை வழங்கி வர்ணிப்பது. சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பண்பை மற்றவற்றின் மீது ஏற்றல். ஆனாலும் ஆர்வேலியன் தன்மையோடு ஒத்துப்போகும் மிக முக்கிய இடம் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்குமிடம்தான். அதை வேங்குடி வயலில் சரியாக செய்திருக்கிறார் அண்டனூர் சுரா.

வேங்குடி வயல் நாவல் முழுவதையும் நாவலாசிரியர் இவ்வாறாக எழுதி இருப்பதால் அதிகாரத்தையும் ஆணவத்தையும் எதிர்த்து கேள்வி கேட்பது மட்டுமல்லாமல், அதைப் பகடியும் செய்து இருக்கிறார். கேள்வி கேட்பவர்களாக வேஷம் போடுபவர்களையும் கோர்த்து விட்டிருக்கிறார். அரசியலைப் பகடி செய்து அதிகாரத்தை நேரடியாக கூண்டில் ஏற்றுகிறார். 

கதாபாத்திரங்களாக அணிலியும் விரியனும் பூனையாரும் கொக்காரும் ஆமையாரும் மீன் குஞ்சுகளும் யானையாரும் முயலாரும் என வரும்போது எவ்வித முன் விளக்கமும் தேவையில்லாமல் நாம் ஏற்கனவே அவ்விலங்குகளின் பால் ஏற்றி வைத்திருக்கும் பண்புகளை மனிதப் பண்புகளாக கற்பனையில் சட்டென உருமாற்றிக் கொள்ள வைத்திருக்கும் மாயாஜாலம் நிகழ்ந்திருக்கின்றது.

மேலும் ஏகப்பட்ட சிறு விலங்குகள், பெருவிலங்குகள், ஊர்வன, பறப்பன, நடப்பன, ஓடுவன, நீந்துவன, ஊர் பெயர்கள், நீர்நிலைகள், பூக்கள், செடிகள், கொடிகள், மரங்கள், வேர்கள் என்று வளர்வது சுவாரசியத்தை அள்ளித் தெளிக்கிறது. 

சங்க இலக்கிய நூல்கள் பலவற்றில் இருந்து மேற்கோள்களும், பாடல்களும் அதன் விளக்கங்களுமாக நாவல் படர்கின்றது. 

நிலவியல் புரிதலுக்காக மன்னர்களின் பெயர்களும் இடம்பெறுகின்றன. மொழி வளம் கொழிக்கிறது.

இரண்டு உதாரணங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

தமிழி என்பது ஆணா பெண்ணா? (ஆதியில் தமிழ் – தமிழி எனப்பட்டது)

இரண்டும் இல்லை.

தமிழி என்பது விலங்கு.

எப்படி?

‘ம’ மற்றும் ‘ழ’ இரண்டிலும் விலங்கு இருக்கிறது. அதனால் தமிழி ஒரு விலங்கு. (சுழிக்கு மற்றொரு பெயர் விலங்கு).

கபிலர் 99 பூக்களை எழுதியபோதும் தன்னை மட்டும் விட்டுவிட்டதாக சிணுங்கி அதாவது தொட்டாற்சிணுங்கி ஒரு கடிதம் எழுத, அதற்கு கபிலரும் பதில் உரை எழுதுகிறார். (சிணுங்கியிலும் பூப்பூக்கும்). 

மிக முக்கியமான விவகாரத்தை கையில் எடுத்தாலும் நகைச்சுவைக்கோ காதலுக்கோ சுவாரசியத்திற்கோ வேதனைக்கோ வலிக்கோ துன்பத்திற்கோ பஞ்சமில்லாத நாவல். 

மருத்துவம், அறிவியல், அரசியல், மதம், மொழி, இனம், தீண்டாமை, சாதியம், கல்வி மற்றும் சுயசார்பு என்ற பல விடயங்களைத் தீண்டி கேள்வி கேட்கும் நாவல் வேங்குடி வயல்.

இறுதியில், நன்னீரில் மலப்புழுக்களைக் கலந்து மாபெரும் அநீதியை இழைத்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தகவல் வருகிறது. அத்தகவல் மேகத்திற்கு போய்ச் சேர்ந்துவிடுகிறது. அதன் பிறகு மேகம் நீர்க்குமிழிகளாக அதைக் கீழே அனுப்புகிறது. ஒவ்வொரு துளியிலும் குற்றவாளியின் முகம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. எல்லோரும் ஆவலோடு குற்றவாளிகளின் உருவங்களைத் தேட, அங்கிருக்கும் அனைத்து விலங்குகளின் உருவங்களும் ஒன்று விடாமல் நீர்க்குமிழிகளில் தெரிகின்றன. 

அதைப் பார்த்ததும், இந்த மொத்தக் கதையையும் நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கும் கதை சொல்லியான மாட்டிற்கு ஒரு பெரும் சந்தேகம் வருகிறது. அதை சடாமுடியாரிடம் தீர்த்துக்கொள்ள நினைக்கிறது. 

“மரபணுச் சோதனை அறிக்கையில், வேங்குடிவயல் நத்தத்தில் அணிற்பிள்ளை பருகும் இளநீரில் புழுக்களைக் கலந்தவர்களின் முகங்களில் என் மகனின் முகமும் இருக்கிறதே, எப்படி?” என்று கேட்டேன். 

சடாமுடியார் சிரித்தார். 

“பூமியில் யார் என்ன செய்கிறார்களென்று இயற்கைக்குத் தெரியும். அவள் அனுப்பும் நீர் அது. நீரில் புழுக்களைக் கழித்தது விரியனாக இருக்கலாம். விரியன் என்பவன் யாரோ அல்ல; நீங்கள்தான். உங்கள் மனம்தான் விரியன். உங்கள் வன்ம எண்ணம்தான் விரியன். உங்கள் எண்ணத்தின் நச்சுதான் விரியன். உங்கள் ஒவ்வொருவருக்குள் விரியன் இருக்கிறான்.”

“நீர் என்பது தூய்மையின் குறியீடு. நீர் என்பது உலகம். நீர் என்பது இதயம். நீர்தான் மூளை. நீர்தான் இரத்தம். உன்னிடமிருந்து நீரை நீக்கிவிட்டால் நீ எலும்பாகக்கூட மிஞ்சமாட்டாய். அப்படியான நீரைக் களங்கப்படுத்தியதில் உனக்கும் பங்குண்டு. ஆகையால்தான் உன் முகமும் ரேகையும் நீர்ப்பழத்தில் இருந்திருக்கிறது.”

நான் சடாமுடியார் சொல்வதை மறுக்கும் விதமாகச் சொன்னேன். “நான் நீரை ஒரு காலமும் களங்கப்படுத்தியவள் இல்லையே?”

“நீ களங்கப்படுத்தாமல் இருந்திருக்கலாம். களங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தாயா?”

சடைமுடியாரின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக நின்றேன்.

“இல்லைதானே? அப்படியென்றால் உனக்குள்ளும் அப்படியான வன்மம் இருந்திருக்கிறதுதானே?” என் தலை என்னையும் அறியாமல் ஒடிந்தது.

“அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பாத எவரும் அநீதி இழைப்பவர்களே.”

சடாமுடியார் சொன்னதை என்னால் மறுக்க முடியவில்லை. அவரது கருத்தை ஆமோதிப்பதைப்போல அமைதியாக நின்றேன்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் என்னும் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடிக்கும் தண்ணீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து விசாரணை இரண்டு வருடங்கள் நீடித்ததும் இறுதியில் வெளியில் இருந்து யாரும் கலக்கவில்லை உங்களில் ஒரு சிலரே இதை செய்து உங்களைக் குடிக்க வைத்திருக்கிறார்கள் என்ற அருமையான தீர்ப்பை வழங்கியதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் இருக்கும் அநீதியை நீதிக்கு முன்னால் உடைக்க முயல்கிறது வேங்குடி வயல். 

நடக்கும் அநீதிகளை அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே, மிக எளிதாகவும் வேகமாகவும் ஸ்க்ரோல் செய்து நகரும் நம்மை சாட்டையால் சொடுக்கி,  “இதில் நீ எந்த விலங்கு?” என்று கேள்வி கேட்டு, பதில் தெரியாமல் நாம் நிற்கும்போது “எதுவாக இருந்தாலும் நீயும் நீர்க்குமிழியில் தெரிவாய்” என்று   சொல்லிவிட்டு அண்டனூர் சுரா விடை பெற்றுக்கொள்கிறார்.

***

ரெ.விஜயலெட்சுமி : மதுரையை சேர்ந்தவர். பணி நிமித்தமாக சென்னையில் வசித்து வருகிறார். ஊடகங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக்வும் திரைத்துறையில் வசனகர்த்தாகாவும் பணிபுரிகிறார். தேன்கூடு எனும் youtube channel மூலம் நூல் அறிமுகங்களையும் கவிதை வாசிப்புகளையும் தொடர்ச்சியாக செய்து வருபவர். மின்னஞ்சல் : itsviji2006@gmail.com