எறிகுண்டுகளிடமிருந்து மூன்று முறை தப்பித்தவனை கைவிட்டுத் தீர்கிறது சொந்த வாகனத்தின் பெட்ரோல். கத்திகளோடு நெருங்குபவர்களை உற்றுப்பார்க்கும் மேம்பால விளக்குகள் மறுநாள் காலையில் அணைந்துவிடும் சாட்சிகள். மிக அருகில்தான் இருக்கிறது அவனது வீடு. அவ்விடத்தில் மட்டும் கேட்காதவாறு வளர்சுவரெழுப்பி மூடிக் கொள்கிறது பாலம். அடியில் ஓடிக்கொண்டிருக்கிறது நூற்றைம்பது பெட்டிகள் கொண்ட கூட்ஸ் ரயில். அசாதாரணத்திலிருந்து சாதாரணத்திற்குத் திரும்ப பாலத்துக்குத் தெரிந்திருக்கிறது. மகளும் நானும் அதே பாலத்தின் நடுவேதான் கூச்சலிட்டபடியே ஸ்கூட்டியில் பறந்து கொண்டிருக்கிறோம் மீன் வாங்கச் செல்லும் ஞாயிறு காலையில். கூச்சல்கள் எதிரொலித்து மீன்களைப் போல வளைந்தோடும் மேம்பாலத்தில் படபடத்துக் கொண்டிருக்கிறது இருபது வயதில் இறந்துவிட்டவனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.
அவசரம் இல்லாத நாள்
கழற்றி வைக்கப்பட்டிருக்கிறது கொண்டை விசிலடித்துக் கொண்டு ஆடும் ஆட்டம் இல்லை. தலைக்கு மேலே உடலைப் பரப்பி இஷ்டத்துக்கு தூங்குகிறது குக்கர். வயிற்றுப் பகுதியின் கூர் பிளேடுகள் அனுபவித்திராத சொகுசுடன் மூடியற்று வான் பார்த்திருக்கிறது மிக்ஸி ஜார். கேஸ் அடுப்புக்கு சொல்லவியலா ஆனந்தம் திருகியார்கள் இன்னும் வரவில்லையென்று. ஒல்லிக்குச்சி லைட்டரைப் பார்த்து எகத்தாளம் வேறு. சம்பிரதாயமாகி அனிச்சையாய்த் தொட்டெடுக்கும் தேயிலைத்தூள் டப்பாவுக்கு அவ்வளவு குஷி தன் மணத்தில் தான் மட்டும் குளித்துக் கொண்டிருக்கிறது. தட்டி அடிப்பவர்கள் இல்லை கட்டிக் கொண்டு களிக்கூத்தாடுகின்றன லஞ்ச் பாக்ஸ்கள்.
எங்கெங்கு காணினும் விடுதலையின் பரிசுகந்தம் .
காலை உணவு சமைக்க அவசரமில்லாத நாள் வாரி மடியிலமர்த்திக் கொள்ள வெகுநேரமாக அமர்ந்திருந்தோம்.
புதிதினும் புதிது
பறக்க விரும்புகின்றன உலர்ந்து கொண்டிருக்கும் ஆடைகள் கை கால்களை விரித்து பழைய உடல்களிடமிருந்து விடுதலையாகி புதிய சமவெளிகளுக்குப் பயணிக்கவும் மழைச்சேற்றில் அழுக்காகி நாய்கள் கடித்து விளையாடவும் அடையாளம் மங்கி பூர்வநாளில் அணிந்தவர்களால் கைவிடப்படுவதற்காகவும் பைத்தியங்களின் கூடாரத்துக்குள் அந்த நாளின் வண்ணமாக சூடிக்கொள்ளப் படுவதற்காகவும்.
ஒரு ஸ்க்ரோல்
ஒரு ரீல் மரணத்தைக் கடந்து செல்கிறது ஒரு ஸ்டேட்டஸ் பிரிவை அழுகையில்லாமலாக்குகிறது ஒரு ஸ்டோரி துரோகங்களை மழுங்கடிக்கிறது ஒரு ஷாட்ஸ் பலவீனங்களை ருசியான பண்டமாக்குகிறது ஒரு ஸ்க்ரோல் மொத்த பிரபஞ்சத்தையும் காணாமல் போகச் சொல்கிறது
நாளாம் நாளாம்
குலவையொலி கேட்கிறது எங்கேயோ ஒரு ஊரில் கோவில் திருவிழா. வைத்தியக் குறிப்பின் அடிவருடுகிறது நம்பிக்கை வாசகம். பலன்களில் அபாயமேதுமில்லை எங்களின் ராசிகளுக்கு. இன்னாரின் பிறந்தநாளோ இன்னாரின் இறந்தநாளோ ஒவ்வொரு நாளிலும் தோன்றும். நல்ல நேரம் எமகண்டம் ராகுகாலம் ஒன்றுகூடிக் கலந்திருக்கிறது அகாலத்தில். எவ்வளவு சுலபமாகக் கிழித்து விடுகிறேன் ஒரு நாளை அது கூட்டும் எடையைத் தாங்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறது உள்ளங்கை.
வாசனை முகூர்த்தம்
தலைகள் மென்மையாக திருகப்பட திறக்கப்பட்ட உடல்களிலிருந்து கசிகிறது வாசனை. துருப்பிடித்த தோல்செதில்கள் ஆரவாரித்து உதிர்கின்றன சாலைகளெங்கும். புதிதாகத் திருமணமாகியிருக்கும் கன்னிகையொருத்தி கூட்டத்தின் நடுவே கசிய விட்டிருக்கிறாள் பரிமளத்தை ஏற்கனவே திறக்கப்பட்ட உடலிலிருந்து. கால்களின் மருதாணிச் சிவப்பும் மஞ்சள் கயிற்றின் பொன்முறுக்கலும் நடப்பவர்களை கூட்டிச் செல்கிறது திருமணக் காலங்களுக்கு. முதன்முதலாக உடல்திறக்கப்பட்ட நாளில் வெட்கிப் பார்த்த கண்ணாடி பளிச்சென்று சிரிக்கிறது. சிணுங்கியபடி குலுக்கிக் கொள்கிறார்கள் பெருகுகிறது யௌவனத்தின் நுரை. வீடுகள் வந்தபின்னும் தெருவாசலிலேயே நின்றுகொண்டிருக்கின்றன மூடியைத் தொலைத்துவிட்ட வாசனை திரவியக் குப்பிகள்.
***
இரா.கவியரசு – திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் வசிக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிகிறார். ‘நாளை காணாமல் போகிறவர்’, ‘நறுமணப் புகையின் தனிமை’ என இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மாய சன்னதம் – 20 நவீன கவிஞர்களின் கவிதைகள் குறித்த கட்டுரைகள் மற்றும் 130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகளைத் தொகுத்து ‘இறகிசைப் பிரவாகம் ‘ என்ற தொகுப்பு நூலும் வெளிவந்துள்ளது. கவிதைகளும் கவிதைகள் குறித்த கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார். மின்னஞ்சல் : rajkaviyarasu@gmail.com
x ஐந்தாகும் போது y , அதுவாக இருக்கும் போது 5 + y ஆகிறது.
சிலபோது yயும் இரண்டாகும்போது x + y = 7 ஆகும்.
x என்பது ஜனநாயகம் y என்பது மக்கள் ஆகும் போது விடை ஏழு கிடைப்பதேதில்லை.
*
2.மேடைகளின் குரல்களில் மிகுந்திருக்கும் விஷம்
மேடைகளில் மனதை அச்சுறுத்தும் குரல்களில் அரூபவிஷம் மிகுந்திருக்கிறது
அக்குரல்கள் மிதக்கும் வார்த்தைகளில் உழைப்பின் பரிசுகள் ஏமாற்றத்தின் வாழ்வு நீதி மறுக்கப்பட்ட தீர்வுகள் மலர்வதாக… மிகுந்த சாந்தத்தோடும் மிகுந்த புன்சிரிப்போடும் லயக்கதவை தட்டுகின்றன
மற்றும் வாழ்வற்ற மனிதர்களுக்கு எதிர்காலமற்ற பிள்ளைகளுக்கு பொக்கிஷங்களற்ற வருங்காலத்திற்கு மேடைகள் அள்ளித்தர வைத்திருப்பதாய் ஒலி பெருக்கிகள் அலறுகையில் மெல்ல மெல்ல மலைகளும் லயங்களும் புகையின்றி தீயில் எரிகின்றன.
குரல்களில் ஒளிரும் பொய்களின் ஈர்ப்பில் விழுந்து கொடி பிடித்து கோசமிட்டு ஈசல்களாய் பொசுங்கிச் சாகிறோம் நாம்
தலைவர் வாழ்க தேசம் வாழ்க
வழமைபோல் அடிமையாய் சாவோம்.
சுயமாய் சிந்தித்து என்னத்தை கிழிக்கப் போகிறோம்.
*
என் இனிய சொற்களால் உனக்கொரு ஆடை நெய்வேன்.
அம்மா கிழிந்த உன் பூப்போட்ட ஆடையை மாற்ற என் இனிய சொற்களால் உனக்கொரு ஆடை நெய்வேன்
அவ்வாடை உன் மகளின் பட்டங்களானது
அவ்வாடை உன் மகனின் சாதனைகளானது
அவ்வாடை தோற்கடிக்கப்பட்ட உன் போராட்டங்களை மீளவும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வது
எனவே அம்மா உனக்காக உனது இழந்த வரலாற்றிலிருந்து மஞ்சள் நூல்களை சேகரிக்கிறேன்
உனது காவு கொள்ளப்பட்ட ஒப்பந்த வாழ்விலிருந்து சிவப்பு நூல்களை ஒன்று சேர்க்கிறேன்
உனது எதிர்கால சந்ததியின் பச்சை ஒளிரும் கனவு நூல்களையும் பிசைந்து இனிய சொற்களால் உனக்கொரு ஆடை நெய்வேன்
*
4.நானொரு காலத்தில் கனிகளை சுமக்கும் கிளையாவேன்
ஆம் நண்பர்களே வாழ்வதற்கு பூக்க காத்திருக்கும் கிளை நான்
வரலாற்றுக்கு முன்னும் பின்னும் மறைத்து வளர்க்கப்பட்ட கிளை நான்
நீர் இன்றி தவிக்கவிடப்பட்ட கிளை நான்
அதிகாரத்தின் கத்திகளால் கவ்வாத்து செய்யப்பட்ட கிளை நான்
எனக்கு தேவை அற்புதமான பூத்தல்
எனக்கு தேவை சுதந்திரமான வளர்தல்
எனக்கு தேவை பாடல்கள் நிறைந்த பறவைகள்
ஆதலால் நான் பூக்கிறேன் காய்க்கிறேன் கனிகின்றேன்
புதிய காலங்களால் நிறைந்து எதற்கும் அஞ்சாது காற்றில் ஆடி மகிழ்ந்து கிடக்கும் கிளையாக…
*
எக்காலத்தின் சொல் நாம்?
இழப்பின் வடுக்களை சுமந்த எக்காலத்தின் சொல் நாம்?
இருப்பின் அடையாளங்கள் தொலைத்த எக்காலத்தின் சொல் நாம்?
நிகழ் காலத்தின் இயக்கமா? இறந்த காலத்தின் அமைதியா? எதிர் காலத்தின் கனவா? எக்காலத்தின் சொல் நாம்?
அல்லது இறந்த காலத்தில் உழைப்பாய் இருந்த சொல்லா?
அல்லது நிகழ்காலத்தின் இருட்டுக்குள் திரும்ப திரும்ப தன்னையே துரத்தி துரத்தி பிடிக்க முயலும் வட்டச் சொல்லா?
எக்காலத்தின் சொல் நாம்?
*
மந்திரக்கவிதை
மலைகளிலிருந்து மந்திரக்கம்பளத்தில் பறந்து போன கவிதை … உலகமெங்கும் மலைகளின் இன்பங்களை துன்பங்களை வலிகளை ஒவ்வொரு இதயச்செவிகளுக்கும் கூறியது…
நொந்து மரணத்தை எதிர்பார்த்து மலைகளுக்குள் கிடக்கும் எளிய ஜீவனுக்காக அக்கவிதை தன் இரத்தத்தை சிந்தி உரக்க ஒலிக்கிறது…
முதலாளிகளின் காலம் தின்ற தாய்களின் உயிரின் மீதங்களில் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மீதமிருக்கும் பேரொளியின் வலிமையை ஏந்தி மலைகளிலிருந்து மந்திரக்கம்பளத்தில் பறந்து போன கவிதை உங்கள் வாசலின் முன் நிற்கின்றது…
உங்கள் இதயக் கதவை திறந்து அதன் வலிகளை இன்பங்களை பாடுகளை செவி கொடுத்துக் கேளுங்கள்…
பின் மந்திரக் கம்பளத்தில் கவிதையின் அருகில் ஒளிரும் வார்த்தையாக உருமாறிய நீங்கள் எழுதத்தொடங்குவீர்கள் உங்கள் வாழ்வின் மந்திரக்கவிதையை…
*
கைவிடப்பட்டதும் தனித்திருப்பதுமான ஒற்றை முகம்
காலத்தாலும் கடவுள்களாலும் அதிகாரத்தாலும் கைவிடப்பட்ட முகம் மலைகளில் தேயிலை கொழுந்தாய் வளர்ந்திருக்கிறது.
தேசத்தில் தனித்த முகம் கொண்டது. அந்த முகம்உழைத்து உழைத்து தேய்ந்து கிடக்கிறது…
வரலாற்றின் இருண்டக்கூண்டுக்குள் கிடந்தாலும் அம்முகம் அகத்துள் பெரும் கனத்த சிவப்புடன் சூரியனை உள்ளே வைத்திருக்கிறது.
அம்முகம் கைவிடப்பட்டதின் வலியை நன்கு உணர்ந்திருக்கிறது.
தனித்திருக்கும் ஒற்றை முகமொன்று என்னை அக்னி குஞ்சாக்கி லயத்து வாசலில் ஓங்கி எரியவிட்டது.
எரிந்து எரிந்து செஞ்சிவப்பாக கைவிடப்பட்டதும் தனித்திருப்பதுமான ஒற்றை முகம்…
இந்த கவிதையை வாசித்து தனது முகத்தை அறிய முயல்கிறது.
***
சண்முகம் சிவகுமார் – இலங்கை மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை இராணியப்பு தோட்டத்தில் பிறந்து வளர்ந்து தற்போது பாடசாலை ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த 22 வருடங்களாக எழுத்து துறையில் இயங்கி வருகிறார். கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி போன்ற துறைகளில் மலையக சமுதாயம் சார்ந்த படைப்புகளை உள்நாட்டு வெளிநாட்டு சஞ்சிகைகள் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். மலையகத்தில் இயங்கும் பெருவிரல் என்ற இலக்கிய அமைப்பின் தோற்றுவித்தவர்களில் ஒருவர். காற்புள்ளி கவிதை இதழின் நிர்வாக ஆசிரியர். மின்னஞ்சல் : sivakumarnilu@gmail.com
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் முதல் நாவல் “அம்மன் நெசவு”. இந்நாவல் வெளிவந்து இருபத்தி மூன்று ஆண்டுகளாகின்றன. இவரது பிற நாவல்களான மணற்கடிகை, மனைமாட்சி, தீர்த்த யாத்திரை மற்றும் வேங்கை வனம் ஆகியவற்றை ஏற்கனவே வாசித்தபின் முதல் நாவலை வாசிப்பது புதுவித உணர்வை அளிக்கிறது.
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் பிற நாவல்கள் பக்க அளவில் பெருநாவல்கள் எனக் கூறத்தக்கவை. அம்மன் நெசவு நூல் பக்க அளவில் சிறியதாக இருப்பினும் அது பேசும் களம் பெருநாவல்களுக்கு சற்றும் குறைவானதில்லை.
அந்நியர்களின் படையெடுப்பால் உஜ்ஜயினியிலிருந்து துங்கபத்திரை நதிக்கரையில் சிலகாலம் வாழ்ந்து அங்கிருந்தும் கிளம்பி திருப்பூர் அருகே தங்கி வாழ்ந்த நெசவாளர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்நாவல். அவர்கள் தங்களுடன் கொண்டுவரும் அம்மனின் பார்வை ஒரு குடும்பத்திலிருந்து விலகி இன்னொரு குடும்பத்தின்மேல் படுவதால் ஏற்படும் விளைவுகளைச் சொல்வதாகவும் கொள்ளலாம்.
கிராமங்களில் சற்று மேல்கீழ் என்ற சமூக அடுக்கில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அனுசரனையாக இருக்கும் இரண்டு சமூகத்தினரிடையே ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட வஞ்சத்தினால் ஏற்படுத்தும் சிறு நெருப்பு, பெருந்தீயாக கொழுந்துவிட்டெரிகிறது. அதன் முடிவில் கீழ் நிலையில் இருப்பவர்கள் நிம்மதியான வாழ்வைத்தேடி வேறு இடத்தை நோக்கிச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நாவலின் நிகழ்வை மிக எளிமையாக இப்படிச் சொல்லலாம். ஆனால் ஆசிரியர் காட்டும் வாழ்வு மிக நுணுக்கமானதும் விரிவானதுமாகும்.
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் தன் பெரு நாவல்களில் எல்லா நிகழ்வுகளையும் முழுமையாக காட்டிவிடுகிறார். அதில் இருக்கும் முரணையோ அபத்தத்தையோ கண்டு வாசகன் திகைப்படைவான். ஆனால் முதல் நாவலான அம்மன் நெசவு நாவலில் கோட்டோவியம்போல சம்பவங்களை கோடிட்டு காட்டிவிட்டு நகர்கிறார். அதற்கேற்பவே அத்தியாயங்களும் சில பக்கங்களுக்குள் உள்ளன. இது, தேவையில்லாத ஒரு சொல்கூட இருக்கக்கூடாது என்று வரையறைக்கு உட்பட்ட நவீனத்துவ நாவல்களின் கச்சிதமான வடிவம். வாசகன் கோட்டோவியத்தை தன் கற்பனையால் விரிவாக்கிக் கொள்ளவேண்டும். இதில் கற்பனை வளம் அதிகமாக உள்ளவன் நிகழ்வினைக் கண்டுணர்வதனால் ஏற்படும் திகைப்பையும் சற்று குறைவாக உள்ளவன் துண்டு துண்டான நாவலின் கட்டமைப்பைக் கண்டே திகைப்படையவும் வாய்ப்புண்டு. ஆனால், ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ளத் தெரிந்த இலக்கிய வாசகனுக்கு எந்த இடர்பாடும் இருக்காது.
நஞ்சப்பன் நெய்யும் ஒரு புடவை பிரகாசமும் அழகும் மிகுந்து தெய்வாம்சக் கலையைக் கொண்டிருக்கிறது. இதனை, மூன்று தலைமுறையாக பூசாரியப்பன் குடும்பத்தில் குடிகொண்டிருக்கும் சௌடேஸ்வரி அம்மன் நஞ்சப்பன் இல்லத்திற்கு குடிபெயர விரும்புகிறாள் என்பதாக ஊரார் முடிவு செய்கிறார்கள். அம்மனை உரிய சடங்குகளுடன் இல்லம் மாற்றுகிறார்கள். இம்முடிவு பூசாரியப்பன் குடும்பத்திற்கு வருத்தத்தை அளிக்கிறது. அதுவும் இளைய தலைமுறையை சேர்ந்த வெள்ளிங்கிரியின் மனதில் ஊர் மீதே வன்மத்தையும் காழ்ப்பையும் ஏற்படுத்துகிறது.
சாமிக்கு சேவைகள் சரியாக செய்யவேண்டுமே தங்களால் முடியுமா என்ற சந்தேகத்தால் நஞ்சப்பனுக்கும் அவன் மனைவி உண்ணம்மாளுக்கும் முதலில் தயக்கமும் அச்சமுமே தோன்றுகிறது. ஆனால், ஊர் முடிவு செய்ததும் சாமி தங்கள் வீட்டில் குடியேறப் போகிறாள் என்கிற பெருமிதம் அவர்களுக்குத் தோன்றிவிடுகிறது. அவளின் முடிவு அதென்றால் எல்லாவற்றையும் அவளே பார்த்துக் கொள்வாள் என்ற சரணாகதி அதற்கு உதவுகிறது.
பூசாரியப்பனின் மகன் வெள்ளிங்கிரி, அடுத்த சமூகத்தைச் சேர்ந்த இவன் குணத்தை ஒத்த மயில்சாமியோடு இணைந்து நெசவாளர்களின் வாழ்விற்கு அடுத்தடுத்து இன்னல்களை அளிக்கிறான். எதிர்பாராத பலவித இடையூறுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள நஞ்சப்பனும் ஊர்க்காரர்களும் கடும் பிரயத்தனப்படுகிறார்கள். அதிலிருந்து மீண்டார்களா, அவர்கள் எடுத்த முடிவென்ன என்பதை நாவல் சொல்கிறது.
முக்கியமான பிரச்சனையாக நீர் உள்ளது. இதுவரை நீர் எடுத்துவந்த கிணறுகளில் நீர் எடுக்கக் கூடாதென தடுக்கிறார்கள். எதிர்த் தரப்பிலும் மனிதநேயத்தோடு இருக்கும் வெளாந்தோட்டக்காரர் தனது கிணற்று நீரை எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறார். இருந்தபோதும் நிரந்தரத் தீர்வு வேண்டுமென நெசவாளர்கள் தங்களுக்கென தனியாக கிணறு வெட்ட முயற்சிகள் எடுக்கிறார்கள். அதனை தடுப்பதற்கு எதிர் தரப்பு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். இந்தக் காட்சிகள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.
மேல் தரப்பு ஒடுக்க நினைத்து காய்களை நகர்த்துவதும் கீழ்தரப்பு தற்காத்துக் கொள்வதற்கான நகர்வுகளை மேற்கொள்வதும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று மேல் தரப்பில் யாராவது ஒருவர் கீழ்தரப்பின் நியாயங்களை புரிந்தவராகவும் அதற்கு உதவுபவராகவும் இருக்கிறார் என்பது. இராமாயணத்தில் வீடணனும் மகாபாரதத்தில் விதுரரும் இவ்வகையினரின் முன்னோடிகள். உலகை இதுவரை காத்துவரும் அறம் என்பது வெளாந்தோட்டக்காரர் போன்றவர்கள் வழியாகவே கடத்தப்பட்டு நீடித்து வருகிறது என நானும் நம்புகிறேன்.
எம். கோபாலகிருஷ்ணன் சில வாக்கியங்களில் விரிவான செய்திகளைக் கூறிவிடுகிறார். உதாரணமாக ஒரு அத்தியாயத்தின் இறுதி, கோவில் பந்தலில் நெருப்பு பற்றிக்கொள்வதோடு முடிகிறது. அடுத்த அத்தியாயத்தில் வேறு விவரணைகளுப்பின் இடையே “பந்தல் நெருப்பு பரவுவதற்குள் நல்ல வேளையாய் அய்யாவுவின் கூச்சலில் ஓடிவந்தவர்கள் மணலை இறைத்து அணைத்துவிட்டார்கள்” எனக் கூறிவிட்டு வேறு விசயத்திற்கு செல்கிறது.
இது எம். கோபாலகிருஷ்ணனின் ஒரு உத்தியாகவே நாவல் முழுக்க உள்ளது. வாசிக்கும்போது மனம் முன்பின்னாக சென்று வருவது சுவாரசியமாகவே உள்ளது. ஆயினும் சம்பவத்தின் போது நிகழ்வதை வாசகன் ஆழ்ந்து உணருமாறு விவரிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் தவிர்த்துச் செல்வதாகவும் தோன்றுகிறது. இதனை ஆசிரியரும் உணர்ந்தே அடுத்தடுத்த நாவல்களில் விரிவாக எழுதிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் எனவும் கொள்ளலாம்.
அம்மன் நெசவு நாவலை வாசிக்கும்போது எனக்கு தோன்றிக் கொண்டேயிருந்த ஒன்று இந்த அம்மன் தன்னையே நம்பி நலிந்து வாழும் இவர்களுக்கு ஏதாவது செய்யக்கூடாதா என்று. அற்புதமாகக்கூட வேண்டாம் இயல்பாக இவர்களுக்கு சாதகமாக ஏதையாவது நிகழ்த்தக் கூடாதா என மனம் தவித்தது. ஆனால் அம்மனுக்கு கருணையில்லை. தம்மக்கள் படும் துயரங்களை வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கிறது. அவர்களும் அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள் தாங்கள் செல்லுமிடத்திற்கெல்லாம் தூக்கிச் சுமந்து செல்கிறார்கள்.
இதில் எழும் கேள்வி தங்களுக்கு எதையுமே செய்யாத அம்மனை எதற்கு தூக்கிச் செல்லவேண்டும், பூஜை செய்ய வேண்டும், விழா எடுக்கவேண்டும். எத்தனை யோசித்தாலும் பொருத்தமான பதில் கிடைக்கவில்லை. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்கள் அம்மன், நாங்கள் வணங்குவோம் என்பது அவர்களுடைய உள்ளுணர்வின் வழிகாட்டல் என்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, இந்நாவல் முப்பது ஆண்டுகளுக்குமுன் தமிழக கிராமங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சமூகத்திற்கிடையே நிகழ்ந்த மோதல்களை காட்டுவதாகக் கொள்ளலாம். கீழிருப்பவர்கள் மேலே வர எத்தனிப்பதும், மேலிருப்பவர்கள் அவர்களைத் தடுத்து கீழேயே வைத்திருக்க துடிப்பதும் உலகம் தொடங்கிய காலம் தொட்டு உலகமெங்கும் நிகழ்வதுதான். இந்தப் பொதுத்தன்மையே நாவலை மிகச் சிறப்பானதாக சுவாரசியமானதாக மாற்றுகிறது.
பூத்துக் குலுங்கும் மரத்தின் மலர்களை முகர்ந்து ரசித்த பிறகு அடித்தண்டை ஆராயும் முயற்சி இது. அம்மன் நெசவு எனும் அடித்தண்டு மிகப் பலமானதாக உள்ளதால்தான் மனைமாட்சி, வேங்கை வனம் போன்ற அழகிய வாசமுள்ள பிரமாண்டமான மலர்கள் தோன்றுகின்றன என்பதை உணர்கிறேன்.
வெளியாகவுள்ள எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் “மனையறம்” நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
***
கா. சிவா: சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவலாங்குடியில் பிறந்தவர். தற்போது சென்னையருகே உள்ள ஆவடியில் வசிக்கிறார். விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி, ஆழ்தலும் மிதத்தலும் ஆகிய நான்கு சிறுகதை தொகுப்புகளும் “கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு” எனும் கவிதைத் தொகுப்பும் “தண்தழல்” எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார். சரஸ்துதி எனும் நூல் தற்போது வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: sivaangammal1983@gmail.com
தினசரி வாழ்க்கை செயல்பாடுகளிலிருந்து விலகிச் சென்று தனிமையை நாடுவதற்கு வாழ்வின் அதீதத்தைச் சுவைத்திருக்க வேண்டும், இல்லாவிடில் அதிருப்தியின் சுழலுக்குள் சிக்கியிருக்க வேண்டும். குறிப்பாக நம் நாட்டில் குடும்ப வாழ்விலிருந்து வெளியேறுபவர்கள் அதுவும் மத்திம வயதில் வெளியேறுபவர்கள் துறவுப் பாதையைத் தங்களுக்கான நிவாரணமாக நினைத்து அதையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.
துறவுப் பாதையின் ஊடாக இமயமலை, பெருங்கோயில்கள், ஆன்மீக மடங்களை இருப்பிடமாகக் கொண்டவர்கள், ஊர் ஊராகச் சுற்றித் திரிபவர்களோடு சிறிதளவு பழக்கம் உண்டு. அதில் பெரும்பான்மையானவர்கள் தங்களது சுய வாழ்வின் அதிருப்தியின் உந்துதலால் வெளியேறியவர்கள். நாவலின் மையக் கதாபாத்திரமான சுப்ரமணியன் தன்னுடைய குடும்ப வாழ்வின் கட்டுகளிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு அதிருப்தியின் வண்டல் சுவையே காரணமாக இருக்கிறது.
வாழ்வின் தாளமுடியாத நெருக்கடிக்கு உள்ளாகும் மனிதர்கள் அதிலிருந்து வெளியேறுவதற்கு பெரும்பாலும் இரண்டு விதமான வழிகளைத் தேர்வு செய்கிறார்கள் ஒன்று தற்கொலை இரண்டாவது சந்நியாசம். இதில் முதல் வகையைத் தேர்ந்தெடுப்பவர்கள் பெண்களாகவும் இரண்டாவது வகையைத் தேர்ந்தெடுப்பவர்கள் ஆண்களாகவும் இருக்கிறார்கள். எதார்த்தத்தில் இவர்களுக்குப் புரியாதது என்னவெனில் சந்நியாசமும் ஒரு மாபெரும் தற்கொலை.
சுப்ரமணியன் மீதான அழுத்தமும் அதிலிருந்து அவன் விடுபடுவதற்கான வழிகளின் தெரிவும் கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாவல் அவனுடைய உணர்வுகளை முன்வைத்து அவனுடனே நகர்கிறது. குடும்பத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான எண்ணம் அவனுக்கு திடீரென வந்ததல்ல, அதற்கான விதை முன்பே விதைக்கப்பட்டது.
சுப்ரமணியின் உலகத்தைத் திறந்து வைத்த அளவிற்கு அவனுடைய மனைவி பத்மாவின் மீதான வெளிச்சம் போதிய பிரகாசத்தைத் தரவில்லை. இதன் காரணமாக யாக்கை ஆணின் உலகமாகவும் அவனுடைய தனித்த வெளிப்பாடாகவும் மட்டுமே நிற்கிறது.
சுப்ரமணிக்கும் சாமியப்பாவிற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் காத்திரமாக இல்லை. ஒருவேளை சாமியப்பா என்கிற கதாபாத்திரத்தின் கட்டமைப்பு நொய்மை அல்லது ‘மனித வாசனையற்ற இடத்திற்குச் செல்ல வேண்டும் தனியாக, தனிமை என்பது உருவமற்ற வெளியில் நடைபயில்வது.’ என்கிற எண்ணத்தோடு பரதேசியான சுப்ரமணியின் நோக்கம் அதற்கான வெளியை உருவாக்காமல் இருந்திருக்கலாம். அவர் மீது சுப்ரமணிக்கு இருக்கும் ஆர்வம் விருப்பமாக மாறவில்லை. எனவே அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் எவ்விதமான தரிசனக் கீற்றுகளையும் பாய்ச்சவில்லை.
நாவலில் என்னைக் கவர்ந்த முக்கியமான அம்சம் திருநங்கையர் உலகம். இது குறித்து கே.ஜே.அசோக்குமார் அளிக்கும் தரவுகள் புதிராகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றன. கருணாகரன் ரேஷ்மியாகும் பரிணாமம் ஒரு சில அத்தியாயங்களில் நிகழ்ந்துவிடுகிறது, என்றாலும் அதுவே நம்மை பிரமிப்புக்குள் ஆழ்த்துகிறது. சுப்பிரமணி மீது ரேஷ்மிக்கு இருக்கும் மென்மையான உணர்வு பேருணர்ச்சியாகப் பரிணமிக்கும் போது பால் கடந்த மனித மனங்களின் சுய தாபத்தையும் அதன் அதிகார வெறியையும் உணர முடிகிறது.
பாலியல் விழைவுக்கான அடிப்படை உடலிலிருந்து கிளர்கிறது. உடலே ஆதாரமாக இருக்கிறது. உடலே செயல் புரிகிறது. உடலே அதன் சுவையைக் கிரகித்துக் கொள்கிறது. இவை மனம் பிரதிபலிக்கும் விதத்தில் அதன் வேகமும் விரிவும் தீர்மானிக்கப்படுகிறது.
சுப்ரமணிக்கும் பத்மாவிற்கும் நிகழும் காதல் திருமணம் ஆரம்பத்தில் விருப்பப்பட்ட வடிவில் அமைந்தாலும் அது தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை. தற்போதைய உலகம் வண்ண விளக்குகள் மத்தியில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தும் உன்மத்தம் கொண்டது. பிறழ்வுக்கும் பிரிதலுக்குமான காரணம் அனர்த்தமாகி தொக்கி நிற்கும் காலமிது. சுப்ரமணியின் தத்துவ புத்தி தொழில் ரீதியாக அவனுக்கான லாபத்தின் நோக்கில் சிந்திக்கிறது. பத்மாவின் உடல் மீது ஆசையும் மனம் மீது வெறுப்பும் இருக்கிறது. உடல் மீதிருக்கும் ஆசையே அவளிடமிருந்து விலகி செல்வதற்குத் தடை என்பதால் பத்மாவின் உருவத்தை நரம்பு, ரத்தம், சளி நிரம்பிய உருவகமாக நினைக்க முற்படுகிறான்.
வீட்டை விட்டு வெளியேறிச் சுற்றித் திரிந்து எண்ணம் ஈடுறாமல் பயணம் முடிக்காத யாத்திரிகன் போல் பாதியில் திரும்பி வரும்போது அவனுடைய மகள் அதேவிதமான அசூசையைப் பிரதிபலிக்கிறாள்.
மனதிற்கும் உடலுக்குமான சதிராட்டத்தில் உடலின் ஆளுமை அதன் தேவை ஆட்டத்தின் முடிவில் அதன் நிலைப்பாடு குறித்த புரிதல்களை யாக்கை விரிவாக அலசுகிறது. காமம் என்பதின் மீது கவிழும் சலிப்பு குறித்து நுட்பமான அவதானிப்பு நாவலின் பலத்தைக் கூட்டுகிறது. யாக்கையின் புரிதலுக்கும் விரிதலுக்கும் அதுவே திடமான உள்ளீடு. நல்ல முயற்சிக்கும் மாறுபட்ட சிந்தனைக்கும் ஆழமான அனுபவத்திற்கும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமாருக்கு பாராட்டுகள்.
***
மஞ்சுநாத் – புதுச்சேரியை சேர்ந்தவர். விமர்சகர், பயணி, வரலாற்று ஆய்வாளர். தற்போது புதுச்சேரி அரசின் ஆயுஷ் துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணியாற்றுகிறார். குதிரைக்காரனின் புத்தகம், உடனுறை இடாகினி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், டால்ஸ்டாயின் மூன்று கண்கள் கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளியான ‘அப்பன் திருவடி’ நாவல் தமிழ் இலக்கியத்தில் இமயமலையின் பேரழிவு குறித்து முதல் முதலாக பேசி புதியதொரு களத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மின்னஞ்சல் : manjunath.author@gmail.com
செத்த பறவை மெத்தப் படித்த சொச்ச அறிவை வெச்ச இடமும் வானம் என விரிஞ்சதே
2.
கேட்டிலையோ
காற்றுக்கு வாய் இருந்தால் (இருந்தால் என்ன, இருக்கிறது) வாய் திறந்து பேச முடிந்தால் (முடிந்தால் என்ன, முடியும்) கேட்க ஒரு செவி வாய்த்தால் (வாய்த்தால் என்ன, வாய்த்திருக்கிறது) அதுவும் (அதுவும்) மறுமொழி உரைத்தால் (உரைத்தால் என்ன, உரைக்கிறது உரைக்கிறது)
3.
முரட்டுத்தனமாக மேவு என்மேலே என்பு நொறுங்க இயங்கு
என் குறிக்குப் பேய் பிடித்தது போல் உன் குறிக்கும் பிடித்ததா
ஒருவருக்கொருவர் பேய் ஓட்டிக்கொள்ளும் ஏற்பாடுதானா இது
கோழியின் கால்களில் நட் சத் ரம் பதித்துப் பதித்து நடக்குமது எத்தனை நட்சத்ரங்களைத்தான் நடுகிறது எண்ண எண்ணத் தீராத சூட்சுமம் புரிந்தது இப்போது
5.
நான் கால்களை பிடித்துக்கொண்டேன்
அவர் கைகளிரண்டையும் சேர்த்து அழுத்திக்கொண்டார்
முகவாய்க்கட்டையையும்
தாதி முகத்தில் பொருத்தினாள் ஆவி பிடிக்கும் கருவியை
குழந்தை வீல் வீல் என அழுதது
அழுகிற அளவு வலி இல்லை?
குழந்தை அழுதது வேறு சில காரணங்களுக்காக
6.
+
பார்க்கும் எண்களையெல்லாம் கூட்டுகிறேன் டூவீலர்கள் கார்களின் வண்டி எண்களை கடைகளின் பதிவு எண்களை வீடுகளின் கதவு எண்களை கண்ணால் காண்கிற எண்கள் அனைத்தையும் கூட்டுகிறேன் வெறிபிடித்தது போல கூட்டுகிறேன் கூட்டிக்கூட்டி ஒரே எண்ணாக்க முயல்கிறேன் ஒன்றாய் ஒத்துமையாய் ஒண்ணுக்கொண்ணாக
***
மதார் – கவிஞர். வெயில் பறந்தது, மாயப்பாறை ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது, கோவை விஜயா வாசகர் வட்டத்தின் மீரா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். kavithaigal.in இணைய இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல் : matharmohideen24@gmail.com
“வா தம்பி… ரொம்ப நாளாச்சு பாத்து! எப்போ வந்த ஊருக்கு?”
“போன வாரம்”
“லீவா? அப்பா எப்டி இருக்காரு?”
“அவரு சாவுக்குதான் வந்திருக்கேண்ணா”
“ . . . “
*
“ஏம்ப்பா அசோக்கு… அப்பா போயி ஒரு வருசம் ஆச்சு… அம்மா இங்க தனியா இருக்கு… நீயும் இங்கயே ஒரு வேலயப் பாத்துக்கிட்டு கலியாணம் பண்ணி செட்டில் ஆவலாம்ல?”
“ம்… பண்ணலாம் அத்த…”
“எங்க… இதயேதான் சொல்லிட்டு இருக்க எப்ப கேட்டாலும்”
“பண்ணிறலாம் அத்த”
“அம்மாவ இங்க தனியா வுட்டுட்டு நீ உம்பாட்டுக்கு வெளியூர்ல இருக்கறது அவ்ளோ நல்லால்லப்பா… அவ்ளோதான் சொல்ல முடியும்”
“அம்மாக்கு தனியா இருக்க முடியலன்னா அவங்க எங்கூட வந்து இருக்கறது ஈஸியா? இல்ல, அம்மாக்கு தொணையா நான் இங்க வந்து, புதுசா ஒரு வேல பாத்து, இன்ட்ரஸ்ட்டே இல்லாம கல்யாணம் பண்ணிட்டு, எங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ ப்ரச்சனன்னு அம்மா நெனச்சுக்கிட்டு அந்தப் பொண்ணுகூட எனக்கு ப்ரைவஸி வேணும்னு அவங்க இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயி தனியா இருக்கறது ஈஸியா?”
“ஆவுதான்னு பாப்போம்… இத்தன வருஷமா கண்ணு தெரிஞ்சு கிளிச்சத விட அது கொஞ்சமாவது இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்ல? ஏன், கண்ணு தெரியற தொண்ணூறு பர்செண்ட்ல இருக்கறத விட கண்ணு தெரியாத பத்து பர்செண்ட்ல, அதுலயும் பார்வை இருந்து அப்றம் கண்ணு தெரியாமப் போன இன்னும் கம்மியான பாப்புலேஷன்ல ஒருத்தனா இருந்தா நல்லாதான இருக்கும்?”
“நீ இருட்டுலயே கெடந்து சாவு”
*
“ஹாய் அஷோக்”
“ஹேய் ரம்யா”
“செம பிஸியா வொர்க் பண்ணிட்டு இருக்க போல! ஒரு சின்ன பிரேக் எடுக்கலாம்ல?”
“யா… வில் டூ”
“அப்டி என்ன ஸ்க்ரீன்லேந்து கண்ண எடுக்க முடியாத அளவுக்கு இம்ப்பார்ட்டண்ட் வொர்க்?”
“நெஜமாவே இன்ட்ரஸ்ட்டோட கேக்கறேன்னா எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். பட் சம்பந்தமே இல்லாத ப்ராஜெக்ட்ல இருக்கற வொர்க்க எப்டி புரிஞ்சுக்குவேனு எனக்கு தெரியல”
“ஷப்பா! ஒரு காஃபி சாப்பிடலாமானு கேக்கதான் வந்தேம்ப்பா?”
“ஸீ, ஐம் நாட் யுவர் பாஸ்… நீ காஃபி சாப்ட என்கிட்ட ஏன் பர்மிஷன் கேக்கற?”
“இல்ல, இந்த மாதிரி பேசத்தான் அடிக்கடி கூப்பிடுவீங்கன்னா உங்க நம்பர ஸேவ் பண்ணி வெச்சு இனிமே கால் பண்ணும்போது எடுக்காம இருப்பேன். இல்லேனா அட்லீஸ்ட் இன்னிக்கு மாதிரி யாருன்னு தெரியாமயாவது எடுத்து பேசுவேன்”
*பீப்*
***
ராம் – சென்னையில் ஆங்கிலத் துணைப் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் மொழிபெயர்த்து இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை அண்மையில் முடித்து, மொழிபெயர்ப்பு, புனைவாக்கம் ஆகிய தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : ram.mech.sharma@gmail.com
“நீ ரொம்ப நல்லா இருக்கே” என்று உற்சாகமாக கூவினார் முதியவர் திரு வுட்ஃபீல்ட். தனது நண்பர் ‘முதலாளி’யின் மேஜைக்கு எதிரில் இருந்த பச்சை நிற தோல் நாற்காலியில் தள்ளுவண்டியிலிருந்து எட்டிப்பார்க்கும் குழந்தையைப் போன்று எட்டிப்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் பேசி முடிந்து கிளம்பும் தறுவாயில் இருந்தார். ஆனால் அவருக்கு கிளம்ப மனமில்லை. ஓய்வுபெற்று பக்கவாதம் வந்தபிறகு, மனைவியும் பெண்பிள்ளைகளும் அவரை வாரம் முழுவதும் வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கின்றனர், செவ்வாய்க் கிழமைகள் தவிர. செவ்வாய்க் கிழமைகளில் சீவி சிங்காரித்து பகல் பொழுதில் கொஞ்சம் நேரம் நகரத்தில் கழிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் அங்கே என்ன செய்வார் என்பதை அவர்களால் கற்பனை செய்ய இயலவில்லை. அவருடைய நண்பர்களுக்கு தொல்லையாக இருப்பாராக இருக்கும் என எண்ணிக்கொண்டனர். எப்படியாகினும், மரம் தனது கடைசி இலைகளைப் பற்றிக்கொள்வதுபோன்று நாம் இறுதியாக அனுபவித்த இன்பங்களைப் பற்றிக்கொள்கிறோம். அப்படித்தான் பெரியவர் வுட்ஃபீல்ட் ஒரு சுருட்டைப் புகைத்தபடி ஏறக்குறைய பொறாமையுடன் அலுவலகத்தின் சக்கர நாற்காலியில் சுழன்று கொண்டிருக்கும், தடித்து சிவந்த, தன்னைவிட ஐந்து ஆண்டுகள் முதியவர் எனினும், இன்னமும் திடமாக, இன்னமும் அதிகாரமாக இருக்கும் முதலாளியை வெறித்துப் பார்த்தபடி அங்கே அமர்ந்திருந்தார். அவரைக் காண அனைவருக்கும் நன்றாகத்தான் இருக்கும்.
ஏக்கம் தொனிக்க, ஆராதனைப் பொங்க அந்த முதிர்ந்த குரல் சொன்னது,”நிஜமாவே இங்கே நல்லாத்தான் இருக்கு.”
“ஆமா, இங்கே போதிய வசதி இருக்கு,” முதலாளி ஒப்புக்கொண்டார், அவர் ஃபினான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையை தாள்கிழிக் கத்தி கொண்டு திருப்பிப் போட்டார். உண்மையில் அவர் அந்த அறை குறித்து பெருமிதம் கொண்டிருந்தார்; அதை பிறர் மெச்சுவதை பெரிதும் விரும்பினார், குறிப்பாக முதியவர் வுட்ஃபீல்ட். மஃப்ளர் அணிந்த அந்த நலிந்த கிழட்டு உருவத்தின் பார்வை முழுவதும் படும்படி அதன் மத்தியில் இருத்தப்பட்டிருப்பது அவருக்கு ஒரு ஆழ்ந்த திடமான மனநிறைவைத் தந்தது.
“சமீபத்திலதான் கொஞ்சம் சரி பண்ணினேன்,” என்று அவர் விளக்கினார், கடந்த – எவ்வளவு?- வாரங்களைப் போலவே. “புது தரைவிரிப்பு,” பெரிய வெண்ணிற வட்டங்கள் கொண்ட அடர் சிவப்பு நிறத் தரை விரிப்பினைக் கைகாட்டினார் அவர். “புதுசு,” பெரிய புத்தக அலமாரியும் முறுகிய சர்க்கரைப் பாகு போன்ற கால்களைக் கொண்ட மேஜையும் இருந்த பக்கம் தலை அசைத்தார். “மின்சார வெப்பமூட்டி!” சாய்ந்தவாக்கிலிருந்த செப்புத் தட்டில் மிக மென்மையாக தகதகத்துக் கொண்டிருந்த ஐந்து ஒளி ஊடுருவும் முத்துப் போன்ற பஜ்ஜிகளின் பக்கம் ஏறக்குறைய ஆரவாரமாக கை வீசினார்.
ஆனால் பேய் உலவும் புகைப்படக்காரர்களின் பூங்காவில், புகைப்படக்காரர்களின் புயல் மேகங்களைக் பின்னணியில் கொண்ட, கடுமையான முகத்தோற்றம் கொண்ட சீருடை அணிந்த ஒரு பையனின் புகைப்படத்தின்பால் முதியவர் வுட்ஃபீல்டின் கவனத்தை அவர் திருப்பவில்லை. அது புதியது அல்ல. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அது அங்கே இருக்கிறது.
“உன் கிட்டே ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்,” முதியவர் வுட்ஃபீல்ட் சொன்னார், அவரது கண்கள் நினைவுகூர்தலில் மங்கின. “என்ன அது..? காலையில் கிளம்பும்போது அது மனசில இருந்தது.” அவரது கைகள் நடுங்கத் தொடங்கின. அவரது தாடிக்கு மேல் சிவப்புத் திட்டுகள் தோன்றின.
பாவம் கிழட்டுப் பயல், இறுதிக்காலத்தில் இருக்கிறான் என்று முதலாளி நினைத்தார். கருணை பொங்க, அவர் முதியவரைப் பார்த்துக் கண்ணடித்து, விளையாட்டாகச் சொன்னார், “என்னண்ணு நான் சொல்றேன். நீ திரும்பி வெளியே மீண்டும் குளிருக்கு போகும்போது இதமாக இருக்கச் செய்யும் ஒன்றின் சில துளிகள் என் கிட்ட இருக்கு. அருமையான சரக்கு. குழந்தைக்கு கூட ஒண்ணும் பண்ணாது.” அவரது கடிகாரச் சங்கிலியிலிருந்து ஒரு சாவியை எடுத்து மேஜையின் அடியில் இருந்த ஒரு அடுக்கைத் திறந்து இருண்ட நிறம் கொண்ட குட்டையான குப்பி ஒன்றை இழுத்தெடுத்தார். “இதுதான் மருந்து,” அவர் சொன்னார். “இதை எனக்குத் தந்தவர் சத்தம் காட்டக்கூடாதுன்னு சத்தியம் வாங்கி இது விண்டோர் அரண்மனையின் நிலவறையிலிருந்து வந்ததுன்னு சொன்னார்.”
அதைக்கண்டு முதியவர் வுட்ஃபீல்ட் வாய் பிளந்தார். முதலாளி ஒரு முயலை எடுத்து காட்டியிருந்தால்கூட அவர் இவ்வளவு வியந்திருக்க மாட்டார்.
“விஸ்கி தானே அது?” என்று அவர் மிகவும் சன்னமாகக் கேட்டார்.
முதலாளி குப்பியைத் திருப்பி அன்பாக அதன் மீதிருந்த பெயரைக் காட்டினார். விஸ்கிதான் அது.
“உனக்குத் தெரியுமா,” அவர் சொன்னார், முதலாளியை மிகக் கூர்ந்து, அதிசயித்துப் பார்த்தபடி, “வீட்டில என்னை இதைத் தொடக்கூட விடமாட்டாங்க.”. அவர் அழ தொடங்கிவிடுவார் போலத் தெரிந்தது.
“அப்படியா! இது தான் நாம் பெண்களை விட கொஞ்சம் அதிகம் தெரிஞ்சவுங்கன்னு சொல்லறது,” மேஜையின் மீதிருந்த இரண்டு கிளாஸ்களையும் பாட்டில் தண்ணீரையும் பாய்ந்தெடுத்து தாராளமாக ஒரு விரக்கடை இரண்டிலும் ஊற்றினார். “சாப்பிடு, நல்லா இருக்கும். இதுலயெல்லாம் எப்பவும் தண்ணி சேக்கக் கூடாது, இந்த மாதிரி சரக்கை எல்லாம் கலப்படம் செய்யறது தெய்வகுத்தமாயிடும். ஆஹ்.”. அவர் தன்னுடைய கிளாஸை வாயில் கவிழ்த்து, அவசரமாக கர்சீப் எடுத்து மீசையைத் துடைத்த பிறகு தனது கிளாஸை தொடை மீது வைத்து தேய்த்துக் கொண்டிருந்த முதியவர் வுட்ஃபீல்டை ஆவலுடன் பார்த்தார்.
அந்த முதியவர் அதை முழுங்கினார், ஒரு நொடி அமைதியாக இருந்துவிட்டு சன்னமாகச் சொன்னார், ”வித்தியாசமா இருக்கு!”
ஆனால் அது அவரை சூடேற்றியது; அவருடைய உறைந்த முதிர்ந்த மூளைக்குள் ஊர்ந்து சென்றது – அவருக்கு நினைவிற்கு வந்தது.
“ஆ, இதுதான், உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன்.” அவர் சொன்னார், இருக்கையிலிருந்து சற்றே மேலெழும்பியபடி. “எங்க வீட்டுப் பெண்கள் போன வாரம் பாவம் ரெக்கியோட கல்லறையைப் பாக்க பெல்ஜியம் போயிருந்தாங்க, எதேச்சையா உன் பையனோடதையும் பாத்தாங்களாம். ரெண்டும் ரொம்ப பக்கம் பக்கம் இருக்கும்போல.”
முதியவர் வுட்ஃபீல்ட் கொஞ்சம் நிறுத்தினார், ஆனால் முதலாளி பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அவருடைய இமையிதழ்கள் லேசாகத் துடித்தது அவர் சொன்னதைக் கேட்டார் என்பதற்கு சான்றாக இருந்தது.
“அந்த இடத்தை வெச்சிருக்கறது பத்தி பெண்களுக்கு ரொம்பவுமே சந்தோஷம்”, அந்த முதிய குரல் உற்சாகமாகச் சொன்னது. “அழகா பாத்துக்கறாங்க. வீட்டில இருந்தாக் கூட இவ்வளவு நல்லா இருக்காதாம். நீ போனதில்லை இல்லையா, போயிருக்கியா?”.
“இல்லை, இல்லை!” பல காரணங்களால் முதலாளி அங்கே சென்றதில்லை.
“அது இருக்குமாம் பல மைல் தூரத்துக்கு,” முதியவர் வுட்ஃபீல்டின் குரல் நடுங்கியது, “ஒரு பூங்கா மாதிரி சுத்தமா இருக்காம். எல்லா கல்லறையிலும் பூச்செடி வளக்கிறாங்களாம். நல்ல அகலமான பாதைகள்.” நேர்த்தியான அகலமான பாதைகளை அவர் எவ்வளவு விரும்பினார் என்பது அவரது குரலில் தெளிவாகத் தெரிந்தது.
அந்த இடைவெளி மீண்டும் வந்தது. பிறகு அந்த முதியவர் வியப்பூட்டும்படி மிகுந்த உற்சாகம் கொண்டார்.
“தெரியுமா? ஹோட்டல்லே கொஞ்சம் ஜாம் கேட்டதுக்கு பில் போட்டுட்டாங்களாம். “ அவர் கூவினார். “பத்து பிராங்க்! கொள்ளைன்னு நான் சொல்லுவேன். ஒரு சின்னக் கிண்ணம், ஜெர்ட்ரூட் சொல்லுவா ஒரு அரை கிரவுன் துட்டு அளவுதான்னு. அதிலயும் ஒரே ஒரு ஸ்பூன் அளவு கூட எடுக்காததுக்கு பத்து பிராங்க். அவுங்களுக்கு ஒரு படிப்பினையா இருக்கட்டும்னு ஜெர்ட்ரூட் அந்தக் கிண்ணத்தை எடுத்துட்டு வந்துட்டா. அதுவும் ரொம்ப சரிதான்; அவுங்க நம்ம உணர்வுகளை இல்லை காசாக்குறாங்க. அங்கே சுத்திப்பாக்க போனதினால நாம எவ்வளவு வேணும்னாலும் பணம் கொடுப்போம்னு நினைக்கிறாங்க போல.”. அவர் கதவு பக்கம் பார்வையைத் திருப்பினார்.
“ஆமாமா!” என்று முதலாளி உரத்து சொன்னார். இருப்பினும் எது குறித்து அப்படிச் சொன்னார் எனும் எந்த எண்ணமும் அவருக்கு இருக்கவில்லை. அவர் மேஜையை சுற்றி வந்து தடுமாறும் காலடிகளைப் பின்தொடர்ந்து அந்த மனிதரை வழியனுப்பினார். வுட்ஃபீல்ட் கிளம்பிவிட்டார்.
நெடுநேரம் முதலாளி அப்படியே சூனியத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார், தலை நரைத்த அலுவலகப் பணியாளர் அவரைப் பார்த்துக் கொண்டு, நடக்க கூட்டிச் செல்வதை எதிர்பார்க்கும் நாயைப்போல அவரது கவனத்தைக் கலைக்காமல் அந்தப் புறாக்கூண்டு அறையின் உள்ளே புகுவதும் வெளியேறுவதுமாக இருந்தார். பிறகு, “மாசே, அரைமணி நேரத்துக்கு நான் யாரையும் சந்திக்க மாட்டேன், யாரையுமே, புரிஞ்சுதா?” என்று முதலாளி கூறினார்.
“ரொம்ப நல்லதுங்க ஐயா.”
கதவு மூடப்பட்டு, உறுதியான எடைமிகுந்த காலடிகள் வைத்து அந்தப் பொலிவான தரைவிரிப்பினைத் திரும்பிக் கடந்து, அந்த தடித்த உடல் ஸ்பரிங்க் பொருத்திய இருக்கையில் சரிந்து முன்னால் நகர்ந்து கைகளால் முகத்தை மூடினார் முதலாளி. அவருக்கு அழவேண்டும் போல இருந்தது, அபபடித்தான் முடிவு செய்திருந்தார், அதற்காக தயாரானார்.
முதியவர் வுட்ஃபீல்ட் எதிர்பாராமல் பையனின் கல்லறையைக் குறிப்பிட்டது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. நிலம் திறந்து அந்தப் பையன் படுத்திருப்பதையும் வுட்ஃபீல்டின் வீட்டுப் பெண்கள் குனிந்து அதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதையும் அவர் நிஜமாகவே கண்டதைப்போல இருந்தது அவருக்கு. அது இயல்புக்கு மாறானதாக இருந்தது. ஆறு வருடங்களுக்கு மேல் கடந்திருந்தபோதும் இப்போதும் எந்த மாற்றமுமின்றி அவனுடைய சீருடையில் மாசுமருவற்று என்றென்றைக்குமாக உறங்கிக்கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றாக முதலாளி அவனைப் பற்றி எண்ணியதே இல்லை. “என் மகனே!” முதலாளி வேதனையில் முனகினார். இருப்பினும் கண்ணீர் எதுவும் வந்திருக்கவில்லை. கடந்த காலத்தில், பையனின் மரணத்தின் பிறகான ஆரம்பத்தில், சில மாதங்கள், ஏன், சில ஆண்டுகள் வரைக்கும் கூட இந்தச் சொற்களை உச்சரிப்பதே மூர்க்கமான, அடக்கமுடியாமல் தேம்பித்தேம்பி அழுவதைத் தவிர வேறு எதுவும் ஆற்றுப்படுத்த முடியாத, ஒரு துயரத்தால் அவர் ஆட்கொள்ளப்பட போதுமானதாக இருந்தது. காலம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அப்போது அவர் அனைவரிடமும் தீர்மானமாக சொல்லிக்கொண்டிருந்தார். பிற மனிதர்கள் வேண்டுமானால் மீண்டு வந்து அவர்களின் இழப்பை வாழ்ந்து மறக்கலாம், ஆனால் அவர் அப்படியில்லை. இது எப்படிச் சாத்தியம்? அவரது மகன் அவருக்கு ஒரே பிள்ளை. அவன் பிறந்ததில் இருந்தே அவனுக்காகத்தான் அவர் இந்தத் தொழிலைக் கட்டமைத்து வந்தார். அந்தப் பையனுக்காக இல்லையெனில் இதற்கு வேறு எந்தப் பயனும் இல்லை. மொத்த வாழ்க்கையுமே வேறு எந்த நோக்கமும் அற்றதாக மாறியிருந்தது. தான் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய காலடித்தடத்தை முன்னெடுத்து அந்தப் பையன் செல்வான் எனும் நம்பிக்கை எப்பொழுதும் கண்முன் தெரியாவிடில், எப்படி அவரால் தன்னைத்தானே அடிமைப்படுத்தி, சுயத்தை நிராகரித்து, இவ்வளவு ஆண்டுகள் இந்த பூமியில் தொடர்ந்திருக்க முடியும்?
அந்த நம்பிக்கை நிறைவேற்றப்படுவது அவ்வளவு நெருங்கியிருந்தது! அந்தப் பையன் போருக்கு முன்னான ஒரு வருடம் அவரது அலுவலக்கத்தில்தான் வித்தைகளை கற்றுக்கொண்டு இருந்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் அவர்கள் இருவரும் ஒன்றாகத்தான் புறப்பட்டு வந்துக்கொண்டிருந்தனர். ஒரே இரயிலில்தான் இருவரும் திரும்பிச் சென்றனர். அந்தப் பையனின் தந்தை என்பதற்காக எவ்வளவு பாராட்டுகளை அவர் பெற்றார்! அதிசயிக்கும் வகையில் அவன் அவ்வளவு அழகாக அனைத்தையும் கையாண்டான். பணியாளர்களிடம் அவனுக்கிருந்த நன்மதிப்பு, கிழவன் மாசே உட்பட ஒவ்வொரு பெயர் தெரியாத பணியாளருக்கும்கூட அவனுடன் இருப்பது போதுமானதாக இருக்கவில்லை. அவனைக் கொஞ்சமும் செல்லம் கொஞ்சவில்லை. இல்லை, அவன் இயல்பாகவே திறமையானவனாக, ஒவ்வொருவருக்கும் தேர்ந்த ஒரு சொல் கொண்டவனாக, சிறுவனின் சாயல் கொண்டவனாக, அனைத்திற்கும் “ஆஹா, அற்புதம்” எனச் சொல்பவனாக இருந்தான்.
அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்பதுபோல முற்றாக முடிந்துவிட்டிருந்தது எல்லாம். மாசே அவரிடம் கையளித்த தந்தியினால் உலகமே இடிந்து அவரது தலையில் விழுந்தபோது அந்த நாள் வந்தது. “இந்தச் செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதில் ஆழ்ந்த வருத்தமடைகிறோம்..” வாழ்க்கையே நாசமான, சிதறுண்ட ஒரு மனிதனாக அவர் அலுவலகத்திலிருந்து திரும்பினார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆறு ஆண்டுகள்.. எவ்வளவு வேகமாக காலம் கடந்து சென்றது! அது நேற்று நிகழ்ந்தது போல உள்ளது. முதலாளி முகத்திலிருந்து கையை எடுத்தார். அவருக்கு வியப்பாக இருந்தது. அவருக்கு தவறாக ஏதோ நிகழ்ந்துவிட்டது போலத் தெரிகிறது. அவர் எப்படி உணர வேண்டும் என நினைக்கிறாரோ அப்படி அவர் உணரவில்லை. அவர் எழுந்து பையனின் புகைப்படத்தை ஒரு முறை பார்க்க முடிவு செய்தார். ஆனால் அது அவருக்கு பிடித்தமான அவனுடைய புகைப்படம் அல்ல; அதன் முகத்தோற்றம் இயல்பாக இல்லை. அது உணர்ச்சிகளற்று, சொல்லப்போனால் கடுமையான தோற்றம் கொண்டிருந்தது. அந்தப் பையன் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை.
அந்த நேரம் ஒரு ஈ அவரது அகன்ற மைச் சட்டியில் விழுந்ததைப் பார்த்தார்; அது பலவீனமாக எனினும் வெறிகொண்டு தட்டுத்தடுமாறி வெளியேற முயன்றுக்கொண்டிருந்தது. உதவி! உதவி! என போராடும் அந்தக் கால்கள் சொல்லின. மைச்சட்டியின் உட்புறம் ஈரமும் வழுக்கலும் கொண்டதாக இருந்தது; அது மீண்டும் மீண்டும் உள்ளே விழுந்து நீந்தத் தொடங்கியது. முதலாளி ஒரு பேனாவை எடுத்து அந்த ஈயை மசியிலிருந்து வெளியே எடுத்தார். அதை ஒரு உறிஞ்சு காகிதத்தின் மீது உதறினார். ஒரு கணம் அது அதைச் சுற்றிப் பரவிய இருண்ட திட்டின் மீது அசைவின்றிக் கிடந்தது. பிறகு முன்னங்கால்கள் அலைந்தன, பிடி கிடைத்து, அதன் நனைந்த உடலை மேலே இழுத்து எடுத்து, இறக்கைகளின் மீது படிந்திருந்த மசியினை சுத்தம் செய்யும் பெரும்பணியினைத் தொடங்கியது. இறக்கையின் மேலேயும் அடியிலும், மேலேயும் அடியிலும் என ஒரு கால் மாறிமாறிச் சென்றது. செதுக்கருவாளின் மேலும் கீழும் ஒரு கல் செல்வதைப் போன்று. பிறகு ஒரு சிறு அமைதி, அப்பொழுது அந்த ஈ கால்களின் நுனியில் ஊன்றி நிற்பது போலத் தெரிந்தது. அது ஒரு இறக்கையை விரிக்க முயன்றது, பிறகு மற்றதையும். இறுதியில் அது வெற்றிபெற்றதும் அமர்ந்து நுணுக்கமான ஒரு பூனையைப் போல அதன் முகத்தை சுத்தம் செய்யத் தொடங்கியது. இப்போது அது களிப்புடன் முன்னங்கால்களை தட்டித் துடைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. கொடுமையான ஆபத்து நீங்கியது. அது தப்பித்துக் கொண்டது. அது மீண்டும் வாழத் தயாரானது.
ஆனால் அந்தக் கணம் முதலாளிக்கு ஒரு எண்ணம் எழுந்தது. அவர் சட்டென பேனாவை மசியில் தோய்த்து, அவரது தடித்த கையினை உறிஞ்சு காகிதத்தின்பால் சாய்க்க, தன்னுடைய இறக்கைகளை சோதித்துக் கொண்டிருந்த ஈயின் மீது ஒரு எடைமிகுந்த கறை விழுந்தது. அதைப் பற்றி என்ன நினைத்ததுவோ என்னமோ? என்ன நினைக்க! அடுத்து என்ன நிகழுமோ என முற்றிலும் மிரண்டு, திகைத்து, பயந்து அசையவும் திராணியற்று நின்றது அந்த அற்பப் பதர். ஆனால், பிறகு, வேதனையில் என்பதுபோல, உடலை முன்னோக்கிச் இழுத்துச் செல்ல முற்பட்டது. முன்னங்கால்கள் அலைபாய்ந்து பிடிமானம் பெற்று, இம்முறை மிகவும் மெதுவாக, முதலிலிருந்து பணியினைத் தொடங்கியது.
அது ஒரு மனம் தளராத குட்டிப் பிசாசு, முதலாளி நினைத்துக் கொண்டார், அந்த ஈயின் துணிவின்பால் அவருக்கு ஒரு உண்மையான நன்மதிப்பு ஏற்பட்டது. இப்படித்தான் அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டும்; அதுதான் சரியான மனப்பாங்கு. முடிந்தது என ஒருபோதும் இருந்துவிடக்கூடாது. எல்லாவற்றிற்கும் ஒரு.. ஆனால் அந்த ஈ மீண்டும் தனது கடுமையான பணியினை முடித்திருந்தது. பேனாவை மேலும் ஒருமுறை நிரப்பி புதிதாக சுத்தப்படுத்திய அந்த உடலின் மீது சரியாக குறிபார்த்து மீண்டும் ஒரு இருண்ட துளியினை உதறுவதற்கு போதுமான நேரம்தான் முதலாளிக்கு இருந்தது. வலிமிகுந்த தவிப்பான ஒரு கணம். இருங்கள், அந்த முன்னங்கால்கள் மீண்டும் அலைகின்றன; முதலாளிக்கு அது பேராறுதலாக இருந்தது. அவர் குனிந்து ஈயிடம் கனிவாகச் சொன்னார், “நீ ஒரு தந்திரமிக்க –மகன்.” எளிதில் உலர அதன் மீது ஊதும் மகத்தான எண்ணமும் அவருக்குத் தோன்றியது. அதே நேரம் அதன் முயற்சிகளில் ஏதோ ஒரு அச்சமும் வலுவின்மையும் இருப்பதாகத் தெரிந்ததால் இதுவே கடைசி முறை என முதலாளி உறுதி பூண்டு பேனாவினை மசிப் பாத்திரத்தின் ஆழத்துக்குள் அமிழ்த்தினார்.
“எழுந்திரு,” முதலாளி சொன்னார், “நல்லாப் பாரு!” அவர் அதை பேனாவைக் கொண்டு நகர்த்தினார் – பயனில்லை . எதுவும் நடக்கவோ நடக்கும் வாய்ப்பிருப்பதாகவோ இல்லை. அந்த ஈ செத்துவிட்டது.
முதலாளி அந்தச் சடலத்தை தாள்கிழிக் கத்தியின் நுனிகொண்டு எடுத்து குப்பைக் கூடைக்குள் எறிந்தார். இருப்பினும் மனதைப் பிசையும் ஒரு பரிதாப உணர்வு அவரை ஆட்கொண்டு நிஜமாகவே அச்சம் கொள்ளச் செய்தது. அவர் இருக்கையில் முன்நகர்ந்து மாசேவுக்கான அழைப்புமணியை அழுத்தினார்.
“கொஞ்சம் புது உறிஞ்சு காகிதத்தைக் கொண்டு வாரும்,” அவர் அழுத்திச் சொன்னார், “நல்லா பாத்து எடுத்து வாங்க.” அந்த கிழட்டு நாய் அரவமின்றி நகர்ந்து சென்றபோது இதற்கு முன்னராக தான் எதைப்பற்றி எண்ணிக் கொண்டிருந்தோம் என வியந்துக் கொண்டிருந்தார். அது என்னவாக இருந்தது? அது.. அவர் கைக்குட்டையை எடுத்து சட்டைக் காலருக்கு உள்பக்கம் போட்டுக்கொண்டார். உயிரைக்கொடுத்து யோசித்தும் அது என்னவென நினைவிற்கு வரவில்லை.
கேத்தரீன் மான்ஸ்ஃபீல்ட் – நியுஸிலாந்து நாட்டில் பிறந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர். சிறுகதை எழுத்தாளர். புகழ்பெற்ற டி.எச்.லாரன்ஸ், விர்ஜினியா வுல்ஃப் ஆகியோரின் சமகாலத்தவர். உளவியல் கூறுகள் நிரம்பிய நவீன சிறுகதைகளை எழுதியவர். 34 வயதில் காச நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.
அரவிந்த் வடசேரி – பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்க்கிறார். தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழி பெயர்த்த சிறுகதை ஒன்று மாத்ருபூமி பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. ஆவநாழி எனும் இருமாத இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. மின்னஞ்சல் முகவரி : v.aravi.cbe@gmail.com
காதல் என்றென்றும் காதல்தான். அது, பாலாகவோ தேனாகவோ அமுதமாகவோ அமைவது, ஒருவருக்கு வாய்க்கின்ற காதல் நபரைப் பொருத்தது. அது வெற்று நீரில்லை. ஆனால், இந்த நீரின்றி அந்த மூன்றுமில்லை.
I
காதல்: இது, கனவு போன்று காண வேண்டிய இருண்மை; இலக்கியம் போன்று வாசிக்க வேண்டிய பனுவல்; தொன்மம் போன்று அகழ்வாய்வு செய்ய வேண்டிய படிவம். இது, இயற்கை உணர்ச்சியா அல்லது செயற்கை உணர்ச்சியா? இது குறித்து உளவியலும் உளப்பகுப்பாய்வும் கூறுவதென்ன? இப்படியொரு விவாதம் இன்றைய சூழலில் தேவை. பொதுவாக, காதல் என்பது உள்ளம் சார்ந்த ஒன்று. இதற்கு உடல் ஒரு கருவி என்றாலும் உள்ளத்தில்தான் காதலின் இருப்பு உள்ளது. அதனால், உளவியல் பார்வையைச் சிறப்புக் கண்கொண்டு காண வேண்டியுள்ளது. அதேவேளை, உள்ளம் அளவுக்கு உடலின் இயக்கங்கள் காதலில் பங்கு கொள்கின்றன. இவ்விரண்டையும் கடந்த நிலையில் ஆன்மாவின் பங்கும் காதலில் கவனிக்க வேண்டியதாகும். இந்தியவியல்படி, காதலில் ஆன்மாவின் பங்கும் கணிசமாக உள்ளது. எனவே, உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றின் வழியிலும் காதலைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. உடற்காதலை உடலியல் நோக்கிலும் உளக் காதலை உளவியல் ரீதியிலும் ஆன்மக் காதலை இந்தியவியல் பார்வையிலும் அணுகுவது சிறப்பு. அதைத்தான் இந்தக் கட்டுரையில் காண இருக்கிறோம்.
காதலுக்கு மூலக்காரணம் உடல் என்கிறது உடற்கூற்றியல். இந்த அறிவியல்படி, உடலானது வேதிப்பொருள்களால் இயங்குவது. இந்த இயக்கம் ஒழுங்கமைவிலானது. இதைத்தான் சிஸ்டம் (system) என்பர். ஓர் உடல் என்பது நரம்பியல், எலும்பியல், செரிமானவியல், சிறுநீரகவியல், செந்நீரோட்டவியல் எனப்பல ஒழுங்கமைவுகள் அடங்கிய பேரொழுங்கமைவு. இதில் உள்ள நீர்மங்கள் (குருதி, சிறுநீர், நிணநீர், ஹார்மோன்..) யாவும் வேதிப் பொருள்கள் ஆகும். இவற்றில் ஹார்மோன் சுரப்பி காதலுடன் தொடர்புடையது. இதன் தாக்கம் இளமையில் அதிகம். பருவமடைவுக்குப் பிறகான உடலியல் மாற்றங்கள் இந்த ஹார்மோனால் விளைந்தது. இதுவே ஒருவரை இனக் கவர்ச்சியில் ஈடுபட வைக்கிறது. இந்த இனக்கவர்ச்சி இயற்கை வழிப்பட்ட உணர்வெழுச்சியாகும். அதுவும், உடலியல் சார்ந்த உணர்வாகும். இந்த இனக்கவர்ச்சியைக் காதலெனறும் கருதப்படுவதுண்டு. எழுத்தாளர் சுஜாதா கூறுவதுபோல், ‘காதல் என்பது ஹார்மோன்களின் அட்டகாசம்’ ஆகும்.
உண்மையில், ஹார்மோன் என்பது காதலுக்கு உரியதல்ல; இனக் கவர்ச்சிக்கானது. காரணம், இந்த ஹார்மோன் உடலியல் சார்ந்த வேதிப்பொருள். இதன் தூண்டுதலால் உடற்சார் இனக் கவர்ச்சியே மிஞ்சும். காதலுக்கும் ஹார்மோனுக்கும் 1:1 தொடர்பில்லை. பதின்பருவத்தில் ஏற்படுகின்ற உடற்சார் ஹார்மோன் மாறாட்டமே இனக் கவர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பது உண்மை. இதுவே காதலாகாது. உளவியல்படி, இந்த இனக் கவர்ச்சி இயற்கை வழிப்பட்டது. இதன் அடிநாதம் பாலின்பம். இதை இயற்கை வழங்கியிருப்பது இன்பத் துய்ப்புக்காக அல்ல; இனப் பெருக்கத்துக்காக. அதாவது, இனப்பெருக்கத்துக்காகத்தான் பாலியல் துய்ப்பை வழங்கியுள்ளது. இங்கே துய்ப்பு என்பது இரண்டாம் நிலை.
இந்த இனக் கவர்ச்சியைக் காதலென்று பதின்பருவத்து இளமனம் நம்பிவிடுகின்றது. இந்த உடலியல் ஈர்ப்புக் காதலாகாது. அப்படியே இந்த ஈர்ப்பைக் காதலென்று நம்பினால், அது நிலைக்காது; ஆழப்படாது. காரணம், இனக்கவர்ச்சிக்கான உடல் தன்மை நாளடைவில் மாறிவிடும். இதற்கேற்பக் காதல் தன்மையும் மாறிவிடும். மேலும், இந்த இனக்கவர்ச்சியில் பாலியல் நோக்கம் முதன்மையாக இருக்கும். ஒருவேளை அந்தக் காதல் நபர் கொஞ்சம் உளச் சார்புடன் இருப்பின், அதற்கேற்பக் காதலின் வீரியம் கொஞ்சம் கூடியிருக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குச் சான்று பாரதியார் காதல். அவரின் ‘கனவு’ கவிதையில் இதை உணரலாம். (பார்க்க: எனது நூல் ‘கனவிலுங் கனவு: பாரதியார் சுயசரிதை உளப்பகுப்பாய்வு’, பரிசில் வெளியீடு).
உடற்சார் அறிவியல்படி, காதல் என்பது டோபமைன், ஆக்சிடோசின் மற்றும் செரோடோனின் ஆகிய நரம்புசார் வேதிப்பொருட்களால் இயக்கப்படுகின்ற ஒரு சிக்கலான மூளைச் செயல்முறையின் விளைவாகும். இது, ஒருவர் மீதான பற்றையும் அது தொடர்பான இன்பத்தையும் உருவாக்க வல்லது. அந்தப் பற்றுடைய நபருடன் ஏற்படும் தொடக்க நிலை உறுவுகளால் இதயத்துடிப்பு அதிகரிப்பது மற்றும் கன்னங்கள் சிவப்பது போன்ற உடற்சார் எதிர்வினைகளுக்கு வழிவகுக்கிறது. அதே சமயம், நீண்டகால உறவுகளில் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது ஹார்மோன்கள் மற்றும் மூளைச் சுற்றுகளால் கட்டுப்படுத்தப்படும் தனித்துவமான அதேவேளை ஒன்றோடொன்று தொடர்புடைய நிலைகளான காமம், ஈர்ப்பு, பற்று ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், இது நடத்தை மற்றும் உள வாழ்வைப் பாதிக்கவும் செய்கிறது. இவற்றைப் பதின்பருவத்து முதற்காதலில் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கலாம். இந்தப் பருவத்தில் உடல் ஈர்ப்பே முதன்மையாக அமையப் பெரும்.
உடல் முதன்மையாகவும் உள்ளம் இரண்டாம் நிலையாகவும் இருப்பின், அது முழுமையான காதல் என்றாகாது. மனித இனத்துக்கு அப்பாலான உயிரினங்களுக்கு இது பொருந்தலாம். மாறாக, மனிதனிடத்தில் உள்ளமே முதன்மை. ஏனென்றால், மனத்தால் வாழ்பவனே மனிதன். மனிதன் என்ற சொல் அப்படித்தான் வந்தது. இது பௌத்த வரையறை. ‘மானஸ்- மனஸ்- மனுஷன்- மனிதன்’. இந்த வரையறைப்படி, மனிதனுக்கு உடல் வாழ்வைவிட உள வாழ்வே முதன்மை. மனிதனின் உள வாழ்வை ஆராய்கின்ற துறை உளவியல். இந்தத் துறை தற்போது அறிவியலாக இருந்தாலும், தொடக்கத்தில் இது தத்துவமாகவே கருதப்பட்டு வந்தது. இதன்படி, உளவியலைத் தத்துவமுறை உளவியல் என்றும் அறிவியல்முறை உளவியல் என்றும் வரலாற்றுப் பார்வையில் பகுப்பர். அதனால், எந்தவொரு உளப் பாங்கையும் தத்துவப் பார்வையில் கூறியதை அறிந்த பிறகு அறிவியல் பார்வையில் காண்பது சிறப்பு. காரணம், தத்துவ உளவியலில் அனுபவமிருக்கும். மாறாக, அறிவியலில் நிருபணம் இருக்கும். முன்னதில் பட்டறிவு அனுபவமும் பின்னதில் சோதனை அனுபவமும் அடிப்படை. அந்த வகையில் ‘காதல்’ மனநிலைக் குறித்துத் தத்துவ வாதிகள் கூறுவதை முதலில் காணலாம்.
தத்துவமென்றால் கிரேக்கம். இது தத்துவ மொழி. கிரேக்கத்தில் காதல் குறித்துக் கூறிய முன்னவர் ப்ளேட்டோ. இவர் பார்வையில் காதல் என்பது ஏற்கக்கூடியதோ விலக்கக்கூடியதோ அல்ல; அழியக்கூடிய எல்லாவற்றாலும் அது பாதிக்கப்படாமல் இருக்கிறது. மேலும், இது புலன்களிலிருந்து நித்தியத்தை நோக்கியதாக இருந்தது. அது ஒருபக்கம் தாழ்ந்த ஆசைகளுக்கு வழிவகுக்கக்கூடியதாகவும் மறுபக்கம் ஆழமான தத்துவ ஞானத்திற்கும் இட்டுச் செல்லக்கூடிய ஒரு சக்தியாகவும் இருக்கிறது என்கிறார் ப்ளேட்டோ. ஒருகட்டத்தில் காதலை மனநோய் நிலை எனவும் கூறினார் இவர். ப்ளேட்டோவுக்குக் கவிதை மீது ஆர்வமில்லை. கவிஞர்களை அவர் அங்கீகரித்ததில்லை. இதனால், அவர்களை நாடுகடத்த வேண்டும் என்றும் விரும்பினார். காதல் என்பது கவிதை அளவுக்கு விழுமியம் கொண்டது. எனவே, கவிதையோடு காதலையும் ப்ளேட்டோ வெறுத்ததைக் காணமுடிகின்றது. ‘காதல் என்பது ஈர்ப்பு மற்றும் இன்ப உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அவை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த உணர்வுகள், அன்பான உறவுகளை விடக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவை’ என்பது ப்ளேட்டோவின் அவதானிப்பு.
ப்ளேட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டிலும் காதல் குறித்துச் சிந்தித்துள்ளார். இன்ப உணர்வுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உறவுகள் பொதுவானவை என்றாலும், அவை நல்லெண்ணம் மற்றும் நற்பண்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உறவுகளை விட மனிதகுலத்திற்கு குறைவான நன்மை பயக்கும் என்று கூறினார். ஏனென்றால், உணர்வுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உறவுகள் யாவும் உணர்வுகள் நீடிக்கும் வரை மட்டுமே நீடிக்கும் என்று அரிஸ்டாட்டில் நினைத்தார். இந்த வகையில் காதல் உணர்வும் அடங்கும் என்பது இவரின் முடிபு.
இடைக்காலத் தத்துவவாதிகளான டெக்கார்ட், ஹும், காண்ட் முதலியோர் காதல் குறித்துச் சிந்தித்துள்ளனர். முதலில் டெக்கார்ட். இவர் சிற்றின்பக் காதல் குறித்துப் பேசுகிறார். ஒரு பொருளின் மதிப்புக் குறித்த ஆன்மாவின் தீர்ப்பை உடல் உணர்வுகளுடன் இணைக்கும் ஒரு பேரார்வமாக வரையறுக்கிறார். குறிப்பாகக் காதலை, ‘இதயத்தைச் சுற்றியுள்ள ஒரு மர்மமான வெப்பமாக’ காண்கிறார். மேலும், கூறும்போது, பெரும்பாலான வேளையில் ஏமாற்றக்கூடிய, உடலியல் சார்ந்த அல்லது புலன்சார்ந்த பேரார்வமாகக் கருதுகிறார். இது கட்டுப்படுத்தப்படாவிட்டால், காதலிக்கப்படுபவர் மீது அதீத பக்திக்கு வழிவகுக்கும் என்கிறார். மேலும், இதைப் பகுத்தறிவு சார்ந்த காதலிலிருந்து வேறுபடுத்துகிறார், மேலும், பகுத்தறிவின் மூலம் இந்த பேரார்வக் காதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
அடுத்து, காதல் குறித்து டேவிட் ஹும் கூறும்போது, இன்பம், உடல், வேட்கை மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு சிக்கலான உணர்ச்சி என்கிறார். இதை வெறும் அடிப்படை வேட்கையாகப் பார்க்காமல், ஆரோக்கியமான சக்தியாகக் காண்கிறார். இந்தக் காதலை முறையாகக் கையாளும்போது பண்பாட்டுச் செம்மைக்கு பங்களிக்கிறது என்கிறார். மேலும், பாலுணர்வு சார்ந்த காதலை ஒரு நேர்மறையான ‘ஈர்க்கும்’ சக்தியாகப் பார்க்கிறார். இது, தூய உடல் ஆசைக்கும், செம்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது என்கிறார்.
அடுத்து, இம்மானுவேல் காண்ட் பேசுகிறார். இவர் பார்வையில் காதல் ஒரு சக்திவாய்ந்த பசி. இதில், தனிநபர்களை ‘இன்பத் துய்ப்புடைய ஆள்’ என்கிற நிலைக்குத் தாழ்த்தி விடுகின்ற ஆபத்துள்ளது. அதனால், மனித கண்ணியத்தைக் கேள்வியாக்குகின்றது என்பார். விபச்சாரம் அல்லது சாதாரண இனப்பெருக்கம் செய்யாத (பரஸ்பரம் இல்லாத பாலியல் செயல்பாடு) சுய-இழிவின் ஒரு வடிவமாகவும், மற்றவர்களைத் தங்களுக்குள் நோக்கமாகக் கருதும் தார்மீகக் கடமையை மீறுவதாகவும் கருதப்படுகிறது என்பார்.
கருத்துமுதல்வாதியான ஹெகல், சிற்றின்பக் காதலை ஓர் ஆழமான, தற்காலிகமான இயங்கியல் இணைப்பாகக் காண்கிறார். இதில் தனிநபர்கள் தங்கள் பிரிவினையைக் கடந்து, சுயத்தையும் மற்றவரையும் ஒன்றிணைத்து, ஒரு ‘உயிருள்ள முழுமைநிலையாக’ மாறுகிறார்கள். இது தனிநபர் சுதந்திரத்திற்கும் ஒற்றுமை ஆசைக்கும் இடையிலான முரண்பாட்டைச் சமரசம் செய்கின்ற அல்லது மேம்படுத்துகின்ற செயல்முறையாகும் என்கிறார். மேலும், இது பெரும்பாலும் காதலர்கள் ஒருவரையொருவர் தங்களுள் காண்பது போன்ற ஓர் அங்கீகார வடிவமாகக் கருதப்படுகிறது; இது வெறும் ஆசையைத் தாண்டிப் பகிர்வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது. இருப்பினும், ‘உயிரற்ற’ புறப் பொருட்கள் அல்லது சொத்துக்களுடன் மோதும்போது இது சிதைவடையும் அபாயத்தையும் கொண்டுள்ளது.
இவரைத் தொடர்ந்து காதல் குறித்துப் பொருள் முதல்வாதியான கார்ல் மார்க்ஸ் கருதுவதைப் பார்க்கலாம். காதலை மார்க்ஸ் ஒரு தனியரின் உணர்ச்சியாக மட்டும் பார்க்காமல், ஆழமான மனிதருள் நடக்கின்ற சமூக மற்றும் அரசியல் செயல்முறைக்கு இணையாகக் கருதுகிறார். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உண்மையான அன்புறவை, ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் அளவுகோலாகச் செயல்படுகின்ற ஒரு பிணைப்பாகப் பார்க்கிறார். உண்மையான காதலுக்குப் பரஸ்பர அங்கீகாரம் தேவைப்படுகிறது. இந்த அங்கீகாரம் மற்றவர் வழியில் தன்னை மனிதமயமாக்குகிறது. எனவே, உண்மைக் காதலை மார்க்ஸ் ஏற்கிறார். இவர் ஜென்னியைக் காதலித்து மணம் செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற நூற்றாண்டின் சிறந்த தத்துவவாதியான ஷோபன்ஹவர் கூறும்போது, காதலை ஓர் ஆபத்தான மாயை எனக் கருதினார். இது, ஒரு தனிப்பட்ட பிணைப்போ ஆன்மீக அல்லது காதல் ரீதியான பிணைப்போ அல்ல, மாறாக இனப்பெருக்கத்தை உறுதி செய்வதற்கான ‘தந்திரம்’ என்று அவர் வாதிட்டார். பாலியல் ஆசையால் உந்தப்படும் இந்த வகையான காதல், இனப்பெருக்கத்தின் நோக்கத்திற்கானது. இது பெரும்பாலும் தனிப்பட்ட துயரம், ஏமாற்றம் மற்றும் பகுத்தறிவு வாழ்வின் சீர்குலைவுக்கு வழிவகுக்கிறது. இந்தக் காதலால் இயற்கையின் உந்துதலுக்கு ஒருவர் அடிமையாகி விடுகின்றார்.
இவ்வாறு அன்று முதல் இன்று வரை காதல் குறித்துத் தத்துவவாதிகள் சிந்தித்து வந்ததைக் காண முடிகிறது. இதே அளவில் தமிழிலும் காதல் சிந்தனைகள் உள்ளன. திருவள்ளுவர் முதல் பாரதி வரை ஆழமான கருத்துகள் காதல் பற்றிப் பேசப்பட்டுள்ளது. சங்க காலத்தில் ‘காமம்’ சொல் காதலைக் குறிக்கும். காமத்துப் பால் என்பது காதல் ஒழுக்கத்தைப் பேசுகின்ற பகுதி. இதன் உள்ளும் வெளியும் காதல் குறித்து வள்ளுவர் பல உரைக்கிறார். ‘மலரினும் மெலியது காமம்’ என்று அதன் மென்மையை/ மேன்மையைப் போற்றுகின்றார். இன்னொரு இடத்தில் காதலை நட்பு உறவாகக் காட்டுகின்றார்:
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு (குறள்: 1122)
இந்த நட்பை ‘இடுக்கண் களைவது’ என்கிறார். இதுபோன்றுதான் காதல் என்பது வள்ளுவர் கருத்து. அடுத்து, இலக்கணவியலர் தொல்காப்பியர் இலக்கியங்களுக்கு வழங்கிய கோட்பாடுகளுக்குள் காதல் கருத்தாக்கங்களையும் முன் வைக்கிறார். இவை இலக்கியங்கள் வழியில் பெறப்பட்ட கருத்துகள் மூலம் சொல்லப்பட்டவை. ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ (தொல்.பொருள்.56) என்பது அகப்பொருள் பாடல்கள் அமைய வேண்டிய இலக்கணத்தைக் குறிக்கிறது. கற்பனை, மெய்ம்மை, புலமை ஆகிய மூன்றும் கலந்த கருத்தாக்கங்களை அகப் பொருள் மரபாகத் தொல்காப்பியர் முன் வைக்கிறார்.
ஒன்றே வேறே என்று இரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப, மிக்கோன் ஆயினும், கடி வரை இன்றே. (தொல். பொருள்:90)
இந்த நூற்பாவில் இருவகைப்பட்ட ஊழ்வினைப் பயன்களில் நல்வினைப் பயனால், ஒருவருக்கொருவர் எல்லா வகையிலும் பொருந்திய காதலனும் காதலியும் ஒருவரையொருவர் கண்டுகொள்வார்கள் என்கிறார். (தீவினைப்படி, நல்ல காதல் அமையாது என்பது இதன் மறைபொருள்). காதலுக்குப் பின்புலமாக ஊழ் இருக்கின்றது என்பது தொல்காப்பியர் கருத்து. மேலும் இவர் காதலில் பத்துப் படிகள் இருப்பதைப் பட்டியலிடுகிறார் அவர்.
வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு, என்று இச் சிறப்புடை மரபினவை களவு என மொழிப (தொல். பொருள்:97)
காதல் வேட்கை, ஒருதலையாகக் காதலித்தல், அதனால் உடல் மெலிதல், காதல் ஈடேறத் தமக்குத்தாமே நல்ல வார்த்தைகளைக் கூறிக் கொள்ளுதல், இயல்பாக நாண வேண்டியச் செயல்களைச் செய்தல், எதைப் பார்த்தாலும் காதல் நபரையேக் காணல், தன்னை மறத்தல், சிந்தை மயக்கம், காதல் போயின் சாதல் எனக் கூறுதல் ஆகியவை காதலின் படிநிலைகள் என்பார் தொல்காப்பியர். இவை இலக்கியங்கள் வழி தொல்காப்பியர் கண்டவை. இந்தக் குறிப்புகள் இயல்பான வாழ்க்கை வழியில் புலவர்கள் செய்யுளில் பொருத்தியவை. தொல்காப்பியர் காலத்துக் காதலைத் தனி ஆய்வுக்கு உட்படுத்தி, அகத்திணையையும் அது சார்ந்த சங்க இலக்கியங்களையும் கொண்டு ‘தமிழ்க் காதல்’ எனும் நூலில் பல செய்திகளை வ. சுப. மாணிக்கனார் பதிவிடுகிறார். சங்க இலக்கியத்தின் செம்புலப் பெயனீரார் வரிகள் உண்மைக் காதலின் சிறப்பு.
II
இனி, உளவியலுக்கு வருவோம். காதல் குறித்து அறிவியல்முறை உளவியல் என்ன கூறுகிறது? உண்மையில், காதல் என்பது உடலியல் கடந்த உளவியலுக்கு உட்பட்ட ஒன்று. இதற்கு லைலா கதை சான்று. ‘அசிங்கமான லைலாவைப் பித்துப்பிடித்தவன் போல் ஏன் காதலிக்கின்றாய்’ என்று நண்பர்கள் கேட்டபோது, ‘லைலாவைக் கயஸ் கண்ணில் பார்’ என்றான் கயஸ். இதில் இரண்டு உளக் குறிப்புகள் உள்ளன. ஒன்று, காதல் என்பது தனியர் நிலைக்கு உட்பட்ட ஒன்று. இதைப் பொதுமைபடுத்தக் கூடாது. இரண்டு, காதல் என்பது உளம் சார்ந்தது. புறத் தோற்றத்துக்கும் காதல் உணர்வுக்கும் தொடர்பில்லை. புறத் தோற்றம் தாண்டி ஏதோவோர் ஈர்ப்பு இருப்பதால் உண்மைக் காதல் உந்தும். அந்த ஈர்ப்பை ஒருவர் அறிந்தோ அறியாமலோ இருக்கலாம். இதனால்தான், காதலில் உளவியல் முக்கியத்துவம் பெறுகிறது. இது, இனக் கவர்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒன்று.
உளவியல்படி, காதலில் பல பிரிகைகள் உள்ளன. இதில் நெருக்கம் (intimacy) உணர்வெழுநிலை (passion) கடப்பாடு (commitment) ஆகிய மூன்று அடிப்படை அலகுகள் உள்ளன. காதலின் முதல்நிலை ‘விருப்பம்’ (liking) ஆகும். இதில் நெருக்கம் மட்டும் இருக்கும். கிட்டத்தட்ட ஆழமான நட்புப் போன்றது. ஆனால், இதில் காமம் போன்ற உணர்வெழுநிலையோ அர்ப்பணிப்புப் போன்ற கடப்பாடோ இருக்காது.
அடுத்து, இனக்கவர்ச்சி (infatuation) உள்ளது. இது, காம இச்சை மட்டும் கொண்டது. தீவிரமான உடல் ஈர்ப்பு மற்றும் அதனாலான உணர்வுக் கிளர்ச்சியால் ஏற்படக்கூடியது. இவ்வகைக் காதல் பெரும்பாலும் பதின்பருவத்தில் தோன்றும். ‘கண்டதும் காதல்’ இதன் சிறப்பம்சம். ஆனால், உள நெருக்கமோ அர்ப்பணிப்போ இருக்காது. மூன்றாவதாக, வருவது வெற்றுக் காதல் (empty love) ஆகும். இதில் கடப்பாடு அல்லது அர்ப்பணிப்பு மட்டும் செயல்படும். அதாவது, ஒருவரையொருவர் சார்ந்து, சேர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொள்ள வைக்கும். இதனால், நெருக்கமும் காமமும் மங்கிக் கிடக்கும். அல்லது இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும். ஏற்பாட்டுத் திருமணங்கள் இதில் அடங்கும். நான்காவது நிலையில் இருப்பது, நடைமுறையில் சொல்லப்படுகின்ற காதல் ஆகும். இதைத்தான் ரொமாண்டிக் என்பர். இதில், உள மற்றும் உடல் நெருக்கமும் மோகமும் இணைந்திருக்கும். திருமணம் போன்ற கடப்பாடு இருக்காது. இணைந்து வாழ்தல் (living together) இதன் வடிவம். கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்கின்ற வரை இருந்து, பிறகு காணாமல் போவதுண்டு. அடுத்த வடிவம் தோழமைக் காதல் (Companionate Love) உள்ளது. இதில் நெருக்கமும் கடப்பாடும் சேர்ந்திருக்கும். காமம் இருப்பதில்லை. நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கின்ற ஆழ்நிலைப் பாசம் இதில் அடங்கும்.
அடுத்து, மடமைக் காதல் (Fatuous Love) வருகிறது. இதைக் காமமும் அர்ப்பணிப்பும் இணைந்து வழி நடத்தும். ஆழத்து உணர்வெழுச்சி இதில் இருக்காது. திருமணத்துக்கு அப்பாலான காதல் இதன் அம்சமாகும். இங்கே, காதலும் திருமண பந்தமும் சுழன்று இயங்குவதைக் காணலாம். அதேவேளை, ஆழத்து உணர்வெழுச்சி இதில் இருக்காது. முழுமையான காதலில் மட்டும் ஆழம் இருக்கும். அந்தக் காதல் முழுநிலைக் காதல் (Consummate Love) ஆகும். இதில் உள/ உடல் நெருக்கம், காமம், அர்ப்பணிப்பு ஆகிய மூன்றும் கலந்திருக்கும். இதுவே காதலின் சிறந்த வடிவமாகக் கருதப்படுகிறது. காரணம், இதில் ஈகோ இருக்காது, சமூக நிர்பந்தம் கலக்காது. இதுவே தொல்காப்பியர் கூறும் இயற்கைப் புணர்ச்சி.
காதல் குறித்த இந்த உளவியல் பார்வைகளுக்கு அப்பால் இன்னொரு பார்வை உள்ளது. அதுதான், உணர்வெழுச்சிப் பார்வை. இதைக் கண்டவர் பால் எக்மன். இந்தப் பார்வையானது உளவியலின் ஒரு பகுதி. உணர்வெழுச்சி உளவியல் (emotion psychology) பிரிவுக்கு உட்பட்டது. அடிப்படையில் எக்மன் ஓர் அமெரிக்க மானிடவியலர். உளவியலில் இவரின் பங்கு சிறப்பிற்குரியது. மானிடவியலையும் உளவியலையும் இணைத்து 1960களில் ஒரு புதிய கருத்தாக்கத்தை முன் வைத்தார். இவரின் ஆய்வுக்களம் மானிடவியல் சார்ந்த உணர்வெழுச்சி. உணர்வு வெளிப்பாடுகளில் பழங்குடி மனிதருக்கும் நவீன மனிதருக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிய 1966 இல் நியு குனியா என்கிற தீவுக்குச் சென்று களஆய்வு மேற்கொண்டார். சில நிழற் படங்களைக் காட்டி, அந்தப் பழங்குடி மனிதர்களின் முக பாவங்களைப் பதிவு செய்து கொண்டார். அதே படங்களை நவீன மனிதரிடையே காட்டி இவர்களின் முக பாவங்களைப் பதிவு செய்து கொண்டார். வியத்தகு வகையில் இரண்டிலும் சில பாவனைகள் ஒரே மாதிரியாக இருந்தன. சில வேறுபட்டு இருந்தன.
இந்த ஆய்வில் எக்மன் கண்ட முடிவு உளவியல் துறையில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இவரின் ஆய்வுப்படி, மனிதரிடையே இருவகை உணர்வெழுச்சிகள் உள்ளன. ஒன்று, அடிப்படை உணர்வெழுச்சிகள் (basic emotions) மற்றொன்று, உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள் (higer cognitive emotions) என்கிறார் எக்மன். அடிப்படை உணர்வெழுச்சிகள் என்பவை பிறப்பிலேயே இயற்கை வழியில் அகிலத்துக்கும் பொதுவாக அமைந்திருப்பவை. உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள் என்பவை பிறந்த பிறகு, சமூகத்தின் வழியில் பெறப்படுபவை. இவை அகிலப் பொதுவானவையல்ல. பண்பாட்டு நிலைக்கேற்ப மாறி அமைபவை. எக்மன் வகைப்பாட்டுப்படி, ஆனந்தம், வருத்தம்,கோபம், அச்சம், வியப்பு, அருவருப்பு ஆகியவை அடிப்படை உணர்வெழுச்சிகள். காதல், குற்றவுணர்வு, அவமானம், சங்கடம், கெளரவம், ஏக்கம், பொறாமை ஆகியவை உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள். இவற்றில் காதல் என்பது சமூகம் தயாரித்த உணர்வெழுச்சி என்கிற முடிவுக்கு வருகிறார் எக்மன். காதலை ஏற்காத சமூகப் பண்பாட்டுத் தளங்கள் உலகில் உள்ளன. உளவியல் பார்வையில் காதல் என்பது மனித வரலாற்றின் இடையில் உருவானது. இயற்கை உணர்வல்ல. முன்பே கூறியபடி, இனக்கவர்ச்சிதான் இயற்கை. இதன் நோக்கம் இனப் பெருக்கம். இதைக் காதல் என்று தவறாகக் புரிந்துகொள்ளப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
உணர்வெழுச்சி உளவியல் கூறுவதுபோல், காதல் உணர்வு இயற்கையல்ல என்றால் பறவைகளுக்குள் நடக்கின்ற காதல் பொய்யா? லவ் பேர்ட்ஸ் என்ற பெயரில் பறவையினமே உள்ளது என்பதை நாம் அறிவோம். இந்தப் பெயரை மனிதன்தான் வைத்தான். தங்களுக்குள் இருப்பது காதல் என்று அந்தப் பறவைகள் அறியாது. காரணம், பறவைகளின் நெருக்கம் பொதுப்புத்தியில் கருதுவதுபோல் ‘காதல்’ என்று சொல்வதற்கில்லை. இந்த நெருக்கம் தற்காப்பு உணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது வேறு சார்பொழுக்கமாக இருக்கலாம். அப்படியே இதைக் காதல் எனக் கொண்டாலும் இந்தப் பறவைக் காதலிலிருந்து மனிதக் காதல் வேறுபட்டது. காரணம், மனிதனில் நனவிலி மனம் உள்ளது. அதுதான் காதலைத் தீர்மானிக்கின்ற சக்தியாக உள்ளது. அதனால், மனிதக் காதல் நனவுக் காதலல்ல; நனவிலிக் காதல். இந்தக் காதலைப் புரிந்துகொள்ள உளப்பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
நனவிலி மனம் என்பது மனிதனுக்கே உரிய சிறப்பு உளத் தளம். இதை ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகிய மூவர் ஆழமாக ஆராய்ந்துள்ளனர். இந்த நனவிலியானது, ஃப்ராய்ட் பார்வையில் உள்ளத்தின் பிளவால் தோன்றுகின்ற பகுதி. யூங் கோணத்தில், ஆதி மனிதரிடம் இருந்து பதிவாகி, வம்ச வழியில் கடத்தப்பட்டு வருகின்ற மறைமனம். லக்கான் நோக்கில், மொழிக்குள் மனிதன் நுழையும்போது தோன்றுகின்ற உளப்பகுதி. இவர்கள் கோணங்களில் காதல் எப்படிப்பட்டது என்பதைத்தான் இனி நாம் காண இருக்கிறோம்.
III
முதலில், ஃப்ராய்ட். மறதி முதல் நிர்வாண நிலை வரை உளப்பகுப்பு விளக்கங்கள் கொடுத்தவர் இவர். ‘அமுக்கப்பட்ட வேட்கைகளின் புனைவேட வெளிப்பாடே காதல்’. இது ஃப்ராய்ட் கண்ட தெளிவு. காதல் குறித்துத் தொடக்க காலத்திலிருந்தே (1895) பேசி வந்தவர் ஃப்ராய்ட். ஃப்ராய்டியத்தின் அடி நாதமான ‘லிபிடோ’ (பாலூக்க சக்தி) எனும் கருத்தாக்கம், குழந்தைப் பாலியலை மையம் கொண்டிருப்பதாகும். காதல் உணர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது இந்த லிபிடோ. எனவே, லிபிடோவின் ஒருவித வெளிப்பாடே காதல். குறிப்பாக, அமுக்கப்பட்ட லிபிடோ வேட்கைகளின் மாற்றுருவாக்கம் காதல் என்றாகிறது.
இந்தக் காதல் குறித்துப் பல கருத்துகளை ஆங்காங்கே ஃப்ராய்ட் கூறியிருப்பது அந்தக் காதலை இன்னும் புரிந்து கொள்ள வகை செய்கிறது. காதலில் ‘காதலிப்பது’, ‘காதலிக்கப்படுவது’ ஆகிய இரண்டு நிலைகள் உள்ளன. இவற்றில், ‘பிறரால் காதலிக்கப்படுதல்’ எனும் நிலையே மூத்தது. காரணம், இது குழந்தைப் பருவத்தில் இயல்பாக நடக்கின்ற ஒன்று. படுவினையில் (passive) குழந்தை கிடக்க, அதை பிறர் தூக்கிக் கொஞ்சுவதன் வழியில் ‘தாம் காதலிக்கப் படுகிறோம்’ என்பதைக் குழந்தை உணர்கிறது. இதன்மூலம், தாம் காதலிப்பதாகக் கற்பிதம் செய்துகொள்கிறது. குறிப்பாகத் தாய் வழியில் இது நடக்கிறது. குழந்தைக்குத் தாய்தான் உலகம். பிறர் தூக்கிக் கொஞ்சுவதைவிடத் தாயின் அரவணைப்பையே குழந்தை நாடும். இந்த ஒரு வயதிலேயே காதல் உணர்வைக் குழந்தை அனுபவிக்க வந்துவிடுகின்றது. பிற்காலத்தில் காதல் என்கிற சொல்லைக் கேட்டவுடன் அந்தச் சொல்லானது குழந்தைப் பருவத்து அனுபவங்களை மீண்டும் செயல்படத் தூண்டிவிடுகின்றது. இதனால், அந்தச் சொல் புதிய காதல் நோக்கி ஈகோவை நாடச் செய்கிறது. இதன் வழியே புதிய அனுபவத்தை மனம் பெறுகிறது. ஆள் வேறு; உணர்வு ஒன்றே. ஃப்ராய்ட் ஆய்வுப்படி, தாயின் மார்பகமே குழந்தையின் முதல் காதற்பொருள். இந்த மார்பகத்துடனான உறவுமுறைகள் காதலின் அம்சங்களாகின்றன. ‘மனிதக் காதலின் வித்து மார்பகக் காதல்’ என்பது ஃப்ராய்டின் முடிபு.
இந்த முடிபோடு ஃப்ராய்டின் ஆய்வு முடிந்துவிடவில்லை. காதலை இவர் இரண்டாகப் பகுக்கிறார். ஒன்று, தன்மோகக் காதல் (nacissistic love) மற்றொன்று, ஒட்டுறவுக் காதல் (anaclitic love) ஆகியவை ஆகும். இவ்விரண்டும் காதல் நபரைத் தேர்ந்தெடுப்பதில் வேறுபடுகின்றன. தன்மோகக் காதலில் தன்னைப் போன்ற அல்லது தனது பண்பு ஒத்த நபரை விரும்பி ஏற்பதைக் குறிக்கும். குறிப்பாக, தனது நிறம் அல்லது உயரம் போன்ற எதிர்ப்பாலினர் மீது வரும் ஈர்ப்பு இதற்குச் சான்றாகும். ஒரே துறையில் பயணிக்கும் நபர், இணையான சாதியினர், மதத்தினர் ஆகியோர் மீதான காதல் இதனுள் அடங்கும். ஆண், பெண் கவிஞர்களுள் அல்லது கலைஞர்களுள் ஏற்படும் காதல் எல்லாம் தன்மோகக் காதலாகும். ஆண், பெண் இருவருக்கும் ஒரே குறிக்கோள் இருந்து, அதனால் ஈர்ப்புக் கொண்டால், அதுவும் இந்த வகையில் அடங்கும்.
இந்தக் காதலில் நடக்கும் உறவானது, தன்னைத்தானே காதலிக்கின்ற தற்காதல் உணர்வின் வெளிபாடாகிறது. இதன்படி, தன்னிலைக் காதல், புறநிலைக் காதல் என இரண்டு போக்குகள் உளப்பூர்வக் காதல் உறவுகளில் உள்ளன எனத் தெளியலாம். தன்னைத்தானே காதலிப்பது ஒரு வடிவம். புறநபரைக் காதலிப்பது இன்னொரு வடிவம். ஒரு மனிதரிடையே இரண்டும் இருக்கும். இவற்றில் ஒன்று கூடுதலாக இருக்கும். அதுவே அன்னாரின் காதல் அம்சம். அவர் தன்னிலைக் காதலராக இருப்பின் அவரே தன்மோகக் காதலரும் ஆவார்.
அடுத்து, ஒட்டுறவுக் காதல். இது, புறநிலைக் காதல் வழிப்பட்டது. பார்க்கின்ற புறநபர் மீதெல்லாம் காதல் ஏற்படாது. நனவிலிக்கு நெருக்கமான யாரேனும் ஓர் ஆள் இருந்து, இனம்புரியாத ஈர்ப்பை ஏற்படுத்த, நனவறியாமல் காதல் தோன்றும். இதில், நனவிலியின் பங்கு அதிகமாக இருக்கும். ‘கண்டதும் காதல்’ இவ்வகைப்பட்டதே ஆகும். அந்தக் காதல் நபர் நனவிலியில் பதிந்துள்ள பழைய ஆளின் தோற்றம் அல்லது பண்பு ஒத்தமைந்தவராக இருப்பார். இதைத்தான் ஃப்ராய்ட் இடிபஸ் காதல் என்கிறார். அதாவது, ஆண் குழைந்தைக்குத் தாயும், பெண் குழந்தைக்குத் தந்தையும் புறநிலைக் காதலின் முன் மாதிரியாக இருப்பர். இதை அந்தக் காதலர் அறிந்திலர். தாயும் தந்தையும் குழந்தைப் பருவத்தில் தரும் அன்பு, அரவணைப்பினால் அவர்கள் குழந்தை நனவிலியில் வார்ப்புருவாக (imago) அமைந்து விடுகின்றனர். அந்த வார்ப்புருவின் புறத் தோற்றமே ஒட்டுறவுக் காதல் நபர். இது முழுமைக்கும் நனவிலிக்குள்ளேயே நடக்கின்ற நாடகமாகும். காரணம், அந்த வார்ப்புருக்களின் புனைவேடமாக இந்தக் காதல் நபர்கள் வருகின்றனர். சுருங்கச் சொல்லின், பெற்றோர் போன்ற தோற்றம், அவர்களின் அன்பு, அக்கறை, அரவணைப்பு எல்லாம் கலந்த ஆள் ஒட்டுறவுக் காதல் நபராகின்றனர். பெற்றோரிடமிருந்து போதுமான அன்பும் அரவணைப்பும் தொடராமல் இடைவெளி ஏற்படுமானால், அந்த ஏமாற்றம்கூட இத்தகுக் காதல் நபரை நாடச் செய்வதுண்டு. எனவே, பெற்றோர் காதலே ஒட்டுறவுக் காதலாக மலர்கிறது. அம்மாவைப் போன்ற பெண் வேண்டுகின்ற விநாயகர் நிலை இவ்வகைப்பட்டதே ஆகும். தனது தந்தையான பிரம்மாவை மணந்த சரஸ்வதி கதையை நாம் அறிவோம்.
சிலரிடம் குடும்ப அங்கத்தினர் போன்ற நபரால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. இது இடிபஸ் காதலின் நீட்சி ஆகும். பெரும்பாலும் இது தகாப்புணர்ச்சித் தடையால் ஏற்படுகின்ற மாற்றுருவாக்கம் ஆகும். ஃப்ராய்டின் முடிபுபடி, பெண்களிடம் தன்மோகமும் ஆண்களிடம் புறநிலை மோகமும் அதிகளவில் உள்ளது. காதல் ஒரு கனவு. இதனுள் கனவுத் தொழில்கள் நடக்கின்றன. காரணம், அந்தக் காதல் நபர் யாரோ ஒருவரின் குறியீடாக இருக்கலாம். பல உருக்களின் கலவையாக இருக்கலாம். பழைய ஆளின் மாற்றாக இருக்கலாம். இந்தக் குறியீடும் கலவையும் மாற்றும் கனவின் வினைப் பண்புகளாகும். இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்னோர் இடத்தில் ஃப்ராய்ட் கூறும்போது, இந்தக் காதல் நிலை நோயாகவும் அந்த நோய்க்கான மருத்துவமாகவும் இருப்பதாகக் கூறுகிறார். இது தொடர்பான சிந்தனைகளை அவரின் பிற்கால எழுத்துகளில் காணலாம்.
காதல் தொடர்பாக இன்னொரு கருத்தையும் ஃப்ராய்ட் முன்னெடுக்கிறார். அதுதான் ‘காதல்- வெறுப்பு’ என்கிற பொருமுக உணர்வு நிலை (ambivalent feelings) ஆகும். இது, எதிரும் புதிருமான உணர்வுகள் இணைந்தே செயல்படுவதைக் குறிக்கின்ற உள இயக்கமாகும். இதன்படி, ஒருவர் மீதுள்ள காதல் அளவுக்கு வெறுப்பும் தன்னகத்தே கொண்டிருக்கும். இதன் பொருள், காதல் நபர் மீது வெறுப்பும் இருக்கும். அது காதலுக்கு அடியில் மறைந்து கிடக்கும். சமயம் வரும்போது இந்த வெறுப்பு வெளிப்படும். அவ்வேளை, காதல் மட்டுப்படும். இந்த மாறாட்டத்தைக் (disorder) கண்கூடாக நடப்பில் காணலாம். இவ்வாறு பல நிலைகளைக் காதல் குறித்து ஃப்ராய்டியம் வழியாக விளங்கிக் கொள்ளலாம்.
IV
அடுத்து, யூங்கியப் பார்வையில் காதலைக் காண்போம். ஃப்ராய்டின் சீடரான யூங், கருத்து வேறுபாடுகள் காரணமாகப் புதிய உளவியலை உருவாக்கியவர். இதனால், உளப்பகுப்பாய்வில் அரசியல் ஏற்பட்டது. இருப்பினும், ஃப்ராய்ட் அளவுக்கு யூங் பரவலாகவில்லை. என்றாலும், இவரின் எழுத்துகளில் ஆழம் இருப்பதைக் காண முடிகிறது. ஃப்ராய்டின் சிந்தனைக்குப் பின்புலமாகக் கிரேக்க, ஐரோப்பியத் தத்துவங்கள்மிகுதியாக இருந்தன. இந்தியத் தத்துவத்தில் புத்தரின் நிர்வாணக் கொள்கையும் இருந்தது. யூங்கின் சிந்தனைச் செயல்பாட்டில் மேலைத் தத்துவத்துக்கு நிகராக இந்தியத் தத்துவங்கள் இருந்தன. இந்தியத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் யூங்கியத்தை மேலைச் சிந்தனையாளர்கள் கவனஞ்செலுத்தவில்லை. ‘ஃப்ராய்டைப் படித்தப் பிறகு விமர்ச்சித்தனர். என்னைப் படிக்காமலேயே விமர்ச்சிக்கின்றனர்’ என்று ஓரிடத்தில் ஆதங்கப் பட்டார் யூங்.
இவர் கண்ட ‘பகுப்பாய்வு உளவியல்’ வழியில் பிறப்பு முதல் மறுபிறவி வரை நடக்கின்ற உள நிகழ்வுகளை விவரித்துள்ளார். அவற்றுள் காதலும் ஒன்று. காதலை யூங் உள்ளுணர்ச்சியாக (instinct) மட்டும் பார்க்கவில்லை. மாறாக, நனவிலி மற்றும் ஆன்மச் சக்தியாகவும் பார்க்கிறார். இவரின் காதல் பார்வைக்குச் சீனத் தத்துவமும் இந்தியத் தத்துவமும் இருகண்கள். காதலுக்கு அடிப்படை உள ஆற்றல் (psychical energy) எனப்படுகின்ற லிபிடோ. இது இரண்டாகப் பகுந்துள்ளது. இதுதான் ‘ஆண்மை- பெண்மை’ ஆற்றல்களாக பிரிந்தமைகிறது. இவை உளச் செயற்பாடுகளில் பங்குகொள்கின்றன. சீனத் தத்துவ வழக்கில் ‘யின்- யாங்’ என்று கூறுவார். இதை ‘அனிமா- அனிமஸ்’ என்று தகவமைத்துக் கொள்கிறார் யூங். Anima- Animus ஆகியவை இலத்தினச் சொற்கள். இந்தச் சொற்களுக்கு அங்கே ‘ஆன்மா- மனம்’ என்று பொருள். இவற்றை ‘ஆண்மை- பெண்மை’ என்று தனது உளவியலில் தகவமைத்துக் கொள்கிறார். இவ்விரண்டின் கலவையே மனித மனம் என்பது யூங்கின் முடிபு. இதன்படி, மனிதர் யாவரும் இரட்டைப் பால்நிலையைக் (bisexual) கொண்டவர்கள் என்கிறார் யூங். இது ஃப்ராய்டியக் கருத்தாக்கம். இதற்கு மறுவடிவம் தருகிறார் யூங். இங்கிருந்து காதல் குறித்த யூங்கியப் பார்வையைக் காண்போம்.
ஒருவரின் காதல் நபர் எப்படிப்பட்டவராக இருப்பார்? ஓர் ஆணுக்கு அனைத்துப் பெண்களும் காதலியாக ஈர்க்க மாட்டார்கள். அதேபோல், ஒரு பெண்ணுக்கு அனைத்து ஆண்களும் காதலனாகக் கவர வாய்ப்பில்லை. ஒருவருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் நபர் இன்னொருவருக்கு அந்நியமாகத் தெரிவதைப் பார்க்கலாம். மற்றவர் கண்களுக்கு லைலா அசிங்கம். கயஸ் கண்களுக்கு அவள் தேவதை. இதற்குக் காரணம் மூலப்படிவம் (archetype) ஆகும். மூலப்படிவங்கள் என்பவை அகிலப் பொதுமையாக, மனித இனத்துக்கே உரிய உளப்படிவங்களைக் குறிக்கும். இவை, தனியர் நனவிலிக்கு அடியில் இருக்கின்ற உளத்தளத்தின் அடங்கல்களாகும். அந்தத் தளத்தைக் ‘கூட்டு நனவிலி’ என்கிறார் யூங். ஃப்ராய்டை ‘நனவிலிக் கண்டறிஞர்’ என்றும் யூங்கைக் ‘கூட்டு நனவிலிக் கண்டறிஞர்’ என்றும் சுட்டுவர்.
யூங் கூறும் கூட்டு நனவிலி மனித இனத்தின் கூட்டுப் படைப்பாகும். ஆதிக் காலத்திலிருந்து இதன் கட்டுமானம் நடந்து வருகிறது. ஃப்ராய்டின் நனவிலிக்குத் தனியரின் குழந்தைப் பருவம் ஆதாரமென்றால், யூங்கின் கூட்டு நனவிலிக்கு மனித இனத்தின் குழந்தைப் பருவமான ஆதிக் காலத்து அனுபவங்கள் ஆதாரமாகும். இன்றைய நவீன மனிதரின் செயல்பாடுகள் ஆதி மனிதர் அனுபவத்தின் எதிரொலிகளாகும். சான்றாக, ஆதிக் காலத்துக் குகையின் மாற்று வடிவம்தான் அறை அல்லது இல்லம். இலை தழைகள்தான் இன்றைய உடைக் கலாச்சாரம். ஆதி மனிதனின் வேட்டையே இன்றைய பண வேட்டை. எதுவும் புதிதில்லை. யூங் கூற்றுப்படி, நவீன மனிதனைக் காட்டிலும் ஆதி மனிதனிடம் அறிவுச் செயல் திறன் அதிகம். அவன் செய்தவை எல்லாம் புதியவை. அவற்றின் நீட்சியாகத்தான் நவீன மனிதனின் செயல் திறன்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று காதல் என்கிறார் யூங்.
காதலுக்கு ‘அனிமா- அனிமஸ்’ மூலப்படிவங்கள் ஆதாரம். இவற்றில் அனிமா என்பது ஆணுரு. அனிமஸ் என்பது பெண்ணுரு. இவற்றில் ஒன்று நனவு என்றால் இன்னொன்று நனவிலி. வேறொரு கோணத்தில், ஒன்று புறத் தோற்றம் (persona) என்றால் இன்னொன்று அகத்தோற்றம் (shadow) ஆகும். இதன்படி, ஆண்மை, பெண்மை இரண்டும் கலந்த பால்நிலையில் (bisexual) மனிதரின் இருப்பு உள்ளது. ஆணிடம் அவனே அனிமஸ்; காதலியே அனிமா. பெண்ணிடம் அவளே அனிமா; காதலனே அனிமஸ். காதல் உறவு என்பது அனிமாவுக்கும் அனிமஸுக்கும் இடையில் அகத்துள் நடக்கின்ற அகமன உறவு (intrapsychic) ஆகும். இதன் புறத்தெறிவே வெளியே நடக்கின்ற காதல் உறவாகும். இது, இடைமன உறவு (interpsychic) ஆகும்.
இந்த அனிமாவும் அனிமஸும் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யூங் கூற்றுப்படி, ஆணினுள் இருக்கின்ற கற்பனையுரு அனிமா, பெண்ணுள் இருக்கின்ற கற்பனையுரு அனிமஸ். இந்தக் கற்பனையுரு என்பது அனுபவ ரீதியாகக் குழந்தைப் பருவத்தில் உருவாகின்ற உளப்படிமம். இதைப் புரிந்துகொள்ள குழந்தைப் பருவத்து உளவியலைப் பார்க்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் தன்னைச் சுற்றி இருக்கின்ற உறவினர்கள் ஏற்படுத்துகின்ற தாக்கங்களால் இந்த உருக்கள் தோன்றுகின்றன. ஆண்கள் அனைவரும் ஆணுரு உருவாக்கத்தில் அமைய, பெண்கள் அனைவரும் பெண்ணுரு உருவாக்கத்தில் அமையப் பெறுகின்றனர். பெரும்பாலும், பெற்றோரே அமைகின்றனர். இதில், ஓர் உளத் தர்க்கம் என்னவென்றால், ஆணுக்குத் தானே அனிமஸ். பெண்ணுக்குத் தானே அனிமா. எனில், ஆணின் அனிமாவும் பெண்ணின் அனிமஸும் புறத்தில் உள்ளன. இதன்படி, ஆண் மகனின் ஈகோ தமது பெண்ணுருக்கு ஏற்றப் பெண்ணையும் பெண் மகளின் ஈகோ தமது ஆணுருக்கு ஏற்ற ஆணையும் புறத்தில் தேடுகின்றனர்.
ஆணிடம் தனது அனிமாவுக்கு ஏற்புடைய பெண்ணைக் ‘கண்டதும் காதல்’ வந்துவிடுகின்றது. அதேபோல், பெண்ணிடம் தனது அனிமஸுக்கு ஒப்பான ஆணைக் ‘கண்டதும் காதல்’ வந்துவிடுகின்றது. இதுதான் காதல் தோற்றம் குறித்த யூங்கியப் பார்வை. இதிலிருந்து இன்னும் ஆழமாகக் காதலைக் காணலாம். இந்த உருக்களுடன் அவர்களின் ஈகோ வைத்துள்ள உறவு அல்லது நெருக்கமே காதலாகிறது. இந்தக் காதல் நிறைவான ஒன்று என்று சொல்வதற்கில்லை. சான்றாக, ஆணின் அனிமாவுக்கு ஒத்தமைந்த பெண் ஒருத்தி இருந்தாலும் அவள் முழுமையாக அமையப் பெற வாய்ப்பில்லை. ஒரு முப்பது விழுக்காடு அமையப் பெற்ற பெண் மீது காதல் கொள்ளலாம். இன்னொரு கட்டத்தில் நாற்பது விழுக்காடு ஒத்தமைந்த பெண்ணைக் கண்டுவிட்டால், காதல் உணர்வு இடம் மாறிவிடும். இவளுக்கும் கூடுதலான ஒப்புமையுடன் வேறொரு பெண் வந்துவிடின், அந்த ஆணின் ஈகோ மீண்டும் தாவிவிடும். இந்தத் தாவல் அனிமாவுக்கு ஏற்ற நூறு விழுக்காடுப் பெண் அமையும் வரைத் தொடரும். இதே தாவல் பெண்ணுள்ளும் நடந்துகொண்டிருக்கும். அதனால்தான், காதல் உணர்வு ஒரு கட்டத்தில் சலிப்படைந்து விடுகின்றது. முழுமையான காதல் என்பது அனிமாவுக்கு அனிமஸும் அனிமஸுக்கு அனிமாவும் நூறு விழுக்காடு அமையப் பெற வேண்டும். அதுதான், ஆண் பாதி பெண் பாதி அர்த்தநாரீஸ்வரம். இப்படியான காதல் அமைவது அரிதினும் அரிது. ஆன்மக் காதலில் மட்டுமே சாத்தியம்.
அது என்ன ஆன்மக் காதல்? உடல் சார்ந்த காதல் இனக்கவர்ச்சி. உள்ளம் சார்ந்த காதல் உள்ளப் புணர்ச்சி. இதுவரைதான் மேலை உளவியல் கண்டது. இவற்றைத் தாண்டி ஆன்ம நிலையில் காதல் உள்ளது என்பதை இந்தியத் தத்துவமே கண்டது. அதற்குப் பெயர் தாந்ரீகம். இதன்படி, ஆன்ம நிலையில் ஒருவரையொருவர் ஈர்த்துக் கலப்பது ஆன்மக் காதல் ஆகும். இதில்தான் ‘வைப்ரேஷன்’ வினைப் புரிகிறது. இந்தக் காதல் எப்போதாவது யாருக்கோ நிகழும். அதற்கு இருவரும் ஆன்ம நிலைக்கு சென்றிருக்க வேண்டும். உடல் கடந்து உள்ளம் கடந்து ஆன்ம நிலைக்குச் செல்வது அவ்வளவு எளிதல்ல. அதுவும் இருவரும் அந்த நிலை அடைவது முயற்கொம்பே. இது, இராமகிருஷ்ண பரமஹம்சர்- சாரதா இடையே நடந்தது. ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் திருமணம் செய்து வைக்கச் சீடர்கள் விரும்பினர். அதைப் பரமஹம்சர் மறுத்து வந்தார். ஒரு கட்டத்தில் சீடர்களின் தொடர் வலியுறுத்தலால் சம்மதித்தார். பெண்ணையும் சுட்டிக் காட்டிவிட்டார். சாரதா பெயரைச் சொல்லி, ‘அந்த ஊரில் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளை அழைத்து வாருங்கள்’ என்று வரவழைத்து மணம் புரிந்துகொண்டார். இது, உடற் காதலல்ல. எனவே, பாலுறவு இல்லை. உள்ளக் காதலுமல்ல. களிப்பு நிகழ்வுகளில்லை. வெறும் ஆன்ம நெருக்கமே இருந்தது. அதற்கான ஆதாரமே அந்த டெலிபதி. அரவிந்தர்- மதர் இடையே ஆன்ம நெருக்கம் இருந்திருக்கக் கூடும்.
இந்த ஆன்மக் காதல்தான் காதலில் உச்சம். என்றாலும், இதிலும் இருவரின் ஆன்ம நிலைகளும் முழுமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இதிலும் பிரிவு ஏற்படக் கூடும். இராமகிருஷ்ண பரமஹம்சர்- சாரதா இடையே முழுமையில்லை அதனால்தான், சாரதாவை விட்டுப் பரமஹம்சர் மறைந்தார்முழுமையான ஆன்மக்காதல் என்பது மூலாதாரத்திலிருந்து இருவரும் பிணைந்து முக்தி வரை அகப்பயணம் செய்வதைக் குறிக்கும். இது அரிதினும் அரிது. இந்த அகப்பயணத்தை யூங் கூறும் தனியராக்கம் (individuation) என்கிற உளச் செயலோடு ஒப்பிடலாம். தனியராக்கம் என்பது கூட்டு நனவிலியில் உள்ள சுயம் (self) நோக்கி ஈகோ பயணிப்பதைக் குறிக்கும். இது அகப் பயணம்; ஆன்ம பயணம்.
இந்தச் சுயம் இருக்கின்ற தளத்தில்தான் முக்தி நிலை உள்ளது என்பது யூங்கின் முடிபு. இதுதான் உள வளர்ச்சியின் எல்லை. இந்த சுயத்தை ஈகோ அடைந்து விட்டால், உள்ளம் முழுநிலை அடையும் என்கிறார் அவர். தவம் அதற்கான வழி. ஆன்மக் காதலும் அதற்கு வழியாக அமையும். ஒருவிதத்தில், ஆன்மக் காதல் என்பதும் தவமே ஆகும். இதில் ஆன்மப் புணர்ச்சியே நடக்கும். இவ்வாறு, இரண்டு ஆன்மாக்கள் இணையாக அகப்பயணம் செய்து முழுநிலை (முக்தி) அடைவதன் பெயர்தான் ‘தந்ரா’ என்கிற ஆன்மீகப் பாலுணர்வு. எனவே, ஆன்மக் காதல் என்பது தாந்ரீகம் ஆகும். இதை அனுபவப் பூர்வமாகக் கண்டவர்கள் பதிவு செய்ய விரும்ப மாட்டார்கள். அதனால்தான், இதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், ‘தந்ரா’ தத்துவார்த்தமாக உள்ளது. இதை யூங் கவனித்துள்ளார். குண்டலினி யோகத்தில் காண்கிறார். இந்த யோகத்தை, தனிமனித ‘முழுமை அடைதல்’ செயல்முறையாகக் காண்கிறார். அதாவது, தனியராக்கப் படிமுறையாகக் காண்கிறார். தனியராக்கத்தில் முரண்பாடுகளின் இணைவு இருக்கும். ஆண், பெண் எனும் அனிமா- அனிமஸ் முரண்பாடே பெரியது. இதன் இணைவு முழுமை நிலை என்றாகிறது. தந்ரா அந்தப் பணியைச் செய்கிறது. குண்டலினி யோகத்தில் வரும் இரண்டு பாம்புகள் அனிமாx அனிமஸ் குறியீடுகளாகும். இதில் உள்ள சக்கரங்கள் அனிமா- அனிமஸ் பிணைப்புகளாகும். இந்தத் தந்ராவை யூங் ஆன்மக் காதலாகப் பாராமல் ஆழ் மனத்தின் காதலாகப் பார்த்தார். காரணம், ஆன்ம நிலையை அவரால் உணர முடியவில்லை. சுயத்தை நோக்கிய ஈகோவின் பயணத்தைக்கூட ஆன்மப் பயணமாகக் கொள்ளாமல் உளப் பயணமாகவே பார்த்தார். இருப்பினும், இறுதிக் கட்டத்தில் ஆன்மா, கர்மா, மறுபிறவி ஆகிய இந்தியவியல் கூறுகளைக் கருத்தியல் ரீதியில் ஏற்றுக் கொண்டார். இதன் காரணமாகத்தான் மேலை நாடுகளில் யூங் புறக்கணிக்கப்பட்டார்.
V
இறுதியாக, லக்கான் பார்வைக்கு வருவோம். ‘உன்னிடம் எது இல்லையோ அதைப் பிடித்தமானவருக்குக் கொடுப்பதுதான் காதல்’ என்று தனது இருண்மை பாணியில் சொன்னவர் லக்கான். பிரெஞ்சு உளப்பகுப்பாய்வாளரான லக்கான், ஃப்ராய்டின் வழி வந்தவர். என்றாலும், ஃப்ராய்டியத்தை மீள் வாசிப்புக்கு உட்படுத்தியவர். அதாவது, ஃப்ராய்ட் சொன்ன கருத்தாக்கங்களுக்குப் புதிய விளக்கங்களை வழங்கியவர். இதன் விளைவாக, இடிபஸ் சிக்கல், காயடிப்புச் சிக்கல், வேட்கை, நோய்க்குறி, கனவு முதலியவற்றுக்கு மொழியியல் ரீதியில் மறுவிளக்கம் கொடுத்தார். அந்த வரிசையில் காதலும் அடங்கும்.
லக்கான் பார்வையில், காதல் என்பது ‘உங்களிடம் இல்லாததைக் கொடுப்பது’. அதாவது, நமது குறையை (லேக்) நாம் விரும்பியவருக்குக் கொடுப்பது. இதன்படி, இருவரின் குறைகளுள் ஏற்படுகின்ற உறவே காதலுக்கு அடிப்படை. இங்கே, காதலரை நேசிக்கவில்லை; அவரின் குறையை நேசிக்கின்றீர்கள். அதுவும் நீங்கள் நேசிக்கவில்லை. உங்கள் குறைதான் நேசிக்கின்றது. நனவிலியில் உள்ள ஏதோவொரு குறை உங்களைக் காதலிக்க வைக்கின்றது. இந்தக் காதல் மூலம் ஒருவரின் குறையை இன்னொருவரின் குறை அங்கீகரிக்கின்றது. இந்த அங்கீகாரம்தான் காதலுக்கான அடையாளம். அதனால், குறையைக் கொண்டு நிறைவு காண மனம் முயல்கிறது. இது என்றென்றும் எவ்விதத்திலும் நிறைவடையாது எனத் தெரிந்தும் காதல் நாட்டம் கொள்வது மொழி மனிதரின் இயல்பு என்பார். இதன்படி, ஒருவருக்கொருவர் நோயாளியாக இருக்கின்றனர். அதுவும் இசிப்புநோயாளியாக இருக்கின்றனர். ஹிஸ்டீரியா எனும் இசிப்பு நோய்க் குறித்து லக்கான் பேசும்போது, மற்றவரின் குறையுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதன் மூலம், வேட்கையை நிறைவு செய்யாமல் வைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் நோய் நிலை என்கிறார். இது காதலில் புலப்படுகின்றது.
லக்கான் பார்வையில் காதல் என்பது சிக்கலான உள நிகழ்வு. இதன் அடிப்படையாக நார்சிசம் எனப்படுகின்ற தன்மோகம்/ தற்காதல் உள்ளது. அவனின் குறையும் அவளின் குறையும் கண்ணாடிப் பிம்பம் போன்று உறவாடுவதால், இது நார்சிச அமைப்பிலான உறவை உறுதி செய்கிறது. உங்களை நீங்களே நேசிப்பது காதலாகும். அதாவது, மற்றவர் வழியில் உங்களை நீங்களே நேசிக்கின்றீர்கள். இந்த இடத்தில் காதல் நபர் ஒரு கண்ணாடிப் போன்றவர். அந்தக் கண்ணாடி மங்கும் வரை காதல் நடக்கும். கண்ணாடி மங்கத் தொடங்கினால் காதலும் மங்கத் தொடங்கிவிடும். அப்போதுதான் காதல் சிக்கலாகி விடுகின்றது.
இந்தக் காதலை ஒரு சொல்லாடலாகப் பார்க்கிறார் லக்கான். இவர் கண்ட நான்கு அடிப்படைச் சொல்லாடல்களில் இசிப்புச் சொல்லாடல் வகைக்குட்பட்டது காதல். லக்கானியத்தில் சொல்லாடல்கள் சிறப்பிற்குரியது. லக்கானைப் பொறுத்தவரை, சொல்லாடல் என்பது இரண்டு அகநிலைகளைப் பிணைக்கின்ற இணைப்பானாகும். அனைத்துச் சொல்லாடல்களுக்கும் மொழியே ஆதாரம். காரணம், மொழிதான் சமூக மனிதரைப் பிணைத்துச் செயல்பட வைக்கின்றது. லக்கான் பார்வையில் மொழிக்கு முன்பு காதல் கிடையாது. ஏனென்றால், மொழிக்குப் பிறகுதான் சமூகம் தோன்றியது. இந்தச் சமூகமே காதலைக் கற்பித்தது. அதனால், சமூகத்தையும் காதலையும் மொழியமைப்பில் புரிந்துகொள்ள வேண்டியதாகிறது. எனவே, இந்தக் காதலை லக்கானியச் சொல்லாடல் அமைப்பைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்:
இதுதான் மொழிக்கான அடிப்படை அமைப்பு. இதுவே சொல்லாடலின் ஆதி அமைப்பு. இதிலுள்ள குறிகள் சொல்லாடலின் நிலைகள் ஆகும். இவை மனிதனின் மனத்தையும் சமூக உறவுகளையும் தீர்மானிக்கின்ற நிலைகள். இந்த அமைப்பில் S1 என்பது ‘தன்மை’ எனப்படுகின்ற பேசுவோரைக் குறிக்கும். S2 என்பது ‘முன்னிலை’ எனப்படுகின்ற கேட்போரைக் குறிக்கும். $ என்பது தன்மை மனத்தில் உள்ள ‘குறை’. a என்பது தன்மையின் பேச்சால் விளைகின்ற ‘விளைவு’. சுருங்கச் சொல்லின், இடப்பக்கம் தன்மையையும் வலப்பக்கம் முன்னிலையையும் குறிக்கும். இந்த அமைப்பின்படியே மனித உறவுகள் மொழியால் நடந்து வருகின்றன. அவற்றில் காதல் உறவும் ஒன்று. இதே பாணியிலான அமைப்பு இந்தக் காதலுக்கும் உள்ளது. அது இசிப்புச் சொல்லாடலாகும்:
இது, காதல் உறவுக்கான அமைப்பு. இதற்கான விளக்கம் கீழ்க் கண்டவாறு அமையும்:
இதில் இடதுபக்கம் காதலரும் வலது பக்கம் காதலிக்கப் படுபவரும் இருக்கின்றனர். இதன்படி, ‘தன்மை’ இடத்தில் காதலிப்பவர் இருக்கின்றார். இவரிடம் குறை உள்ளது. அதன் குறியீடுதான் $. இதன் பொருள், குறையுடைய அகநிலை அல்லது மனம். முன்னிலை இடத்தில் காதலிக்கப் படுகின்றவர் இருக்கின்றார். தன்மையின் குறையை அல்லது விருப்பத்தைக் கேட்கின்றவர் இவர். S2 என்பது அன்னவரைக் குறிக்கும். இது மொழி சார்ந்த குறியீடு. (S1 மற்றும் S2 மொழியாலானது). காதலுறவில் $ மற்றும் S2 ஆகிய இரண்டு அகநிலைகள். இவர்களின் மறைபொருளாக முறையே S1 மற்றும் a உள்ளன.
S1 என்பது குறிப்பான் அல்லது வேட்கை. அதுவும் மொழி வடிவிலான வேட்கை. இதனால், அந்த நபரின் மனம் பிளவுண்டதாகிறது. இந்த வேட்கை உள்ளத்தில் குறையை உண்டாக்கிவிடுகின்றது. அதனால்தான், S எனும் அகநிலை திரிந்து $ ஆகிறது. இதில் உள்ள பிரிகோடு அகநிலையில் (மனத்தின்) பிளவைக் குறிக்கும். இந்த $ என்கிற காதலரை S1 பேச வைக்கிறது. இங்கே, S1 என்பது மொழியைக் குறிக்கும். மொழியின்றிக் காதலில்லை. சொன்னால்தான் காதல். அது, குறியீட்டு மொழியாகவும் இருக்கலாம். இங்கே ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்று ‘நான்’ எனும் காதலர் சொல்ல வேண்டும். இந்தச் சொல்லாடல் காதலிக்கப் படுகின்ற நபரை நோக்கியது. (படுகோட்டு அம்பு குறியைப் பார்க்கவும்). இவர் கூறும் வார்த்தைகளைக் காதலிக்கப் படுகின்ற நபரான S2 கேட்கிறார். அங்கீகாரம் செய்துவிட்டால் அவருள் விளைவை ஏற்படுத்திவிடும். அதாவது, அவருள் மறைந்து கிடக்கின்ற a எனும் ‘காதல்’ செயல்பட வந்துவிடும். இந்தக் காதல் என்றும் ‘நான்’ நோக்கியதாக இருக்கும். (a 🡪$ அம்புக் குறியைப் பார்க்கவும்). இந்த ‘நான்’ ($) காதலுறவின் தன்மையே அன்றி முன்னிலையைக் குறிக்காது. இந்த ‘நான்’ வார்த்தைகள் முன்னிலை நோக்கியது (S1🡪S2 அம்புக்குறி இதைக் காட்டும்). ‘நான்’ இடத்தில் தொடங்கி ‘நான்’ இடத்தில் முடிவுக்கு வந்தால், காதல் நிறைவேறிவிட்டதாகப் பொருள்படும். இந்த ‘நான்’ ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். என்றாலும், உறவின் அமைப்பு மாறாது. $ என்பது குறையுடைய அகநிலை என்பதால் இதை நிறைவு செய்யும் பொருட்டு முன்னிலையின் பங்கு தேவைப்படுகின்றது. இதில் நிறைவு கிடைக்காது என்பதால் சுழற்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும். மொழிதலும் இப்படிப்பட்டதே ஆகும். காரணம், மொழியும் காதலும் முன்னிலை நோக்கியவையாகும். இந்த முன்னிலையின் அங்கீகாரம் கட்டாயம். அதனால்தான், காதல் என்பது மொழி அமைப்பிலானது என்கிறார் லக்கான். குறைதான் மொழியை ஏற்படுத்தியது. அழுத குழந்தைக்குத்தான் பால். அழுகை என்பது மொழி.
VI
உளப்பகுப்பாய்வு என்றால் ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகிய மூவரும் தனித்த சிந்தனைப் புலத்தை உருவாக்கியவர்கள். இவர்களை அடிப்படையாகக் கொண்டுதான் பிற உளப்பகுப்பாய்வாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதனால், இம்மூவரின் பார்வையில் இங்கே காதல் குறித்து விவாதித்தோம். இந்தக் கட்டுரை அறிமுக நிலையிலானது. காதல் குறித்துத் தனித்த நூல் எழுதும் அளவுக்கு உளப்பகுப்பாய்வில் பல செய்திகள் உள்ளன. அதேபோல், காதலில் பல நிலைகள் உள்ளன. தற்காதல், புறக் காதல், ஒருதலைக் காதல், ஓரினக் காதல், கள்ளக் காதல், விலங்கு மீதானக் காதல், முதியோர் மீதானக் காதல் என எண்ணிலடங்கா. மேலும், பார்வைக் காதல், புன்னகைக் காதல், பேச்சுக் காதல், தீண்டல் காதல் என ஆன்ம காதல் வரை காதலில் பல நிலைகள் உள்ளன. அறிந்தோர் அல்லது அறியாதோர் இடையே வெறும் பார்வையால் காதலிப்பது பார்வைக் காதல், புன்னைகையால் மட்டும் காதலிப்பது புன்னகைக் காதல், ஒருவருக்கொருவர் அக்கறை வழியில் காதலிப்பது அக்கறைக் காதல். இப்படிப்பட்ட கோணங்களிலும் காதலைக் காண வேண்டியுள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்த உளவியல் பின்னணி கொண்டது.
இந்தக் கட்டுரையில் வெற்றிக் காதலை மட்டும் பார்த்திருக்கிறோம். இந்தக் காதல் உறவானது ஃப்ராய்டிய நோக்கில் நனவிலி நோயாகவும் யூங்கிய நோக்கில் ‘அனிமா- அனிமஸ்’ உறவாகவும் லக்கான் நோக்கில் இசிப்புச் சொல்லாடலாகவும் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வின் வழியில் அறியலாம். இறுதியாக, திருமணம் என்பதும் ஒருவிதப் போலிக் காதல். இது குறித்தும் பேச நிறைய உள்ளன. திருமணத்தின் பின்னணியாகப் பண்பாடு மட்டுமின்றி உளவியலும் உள்ளது. இது கட்டாயக் காதல்; சமூக நிர்பந்தக் காதல். ஆணினத்தைவிடப் பெண்ணினத்துக்குப் பாதிப்பு மிகுதி. இதற்குத் தனித்த ஆய்வு தேவை.
***
தி கு இரவிச்சந்திரன்: ஃப்ராய்ட், யூங், லக்கான் சிந்தனைப் புலங்களில் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இயங்கி வருபவர். ‘சிக்மண்ட் ஃப்ராய்ட்- உளப்பகுப்பாய்வு அறிவியல்’ நூல் மூலம் ஃப்ராய்டையும் ‘ழாக் லக்கான்- குறியியல் உளப்பகுப்பாய்வுக்கு ஓர் அறிமுகம்’ நூல் மூலம் லக்கானையும் தமிழில் விரிவாக அறிமுகப் படுத்தியவர். இதுவரை உளப்பகுப்பாய்வு தொடர்பாகப் பதினாறு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தொல்காப்பியமும் ஃ ப்ராய்டியமும், தீண்டாமை நனவிலி, எளிய மொழியில் உளவியல் ஆலோசனை, அம்மா வந்தாள்- உளப்பகுப்பாய்வு, ஃப்ராய்ட் யூங் லக்கான்- அறிமுகமும் அதற்கு அப்பாலும் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. சிக்மண்ட் ஃப்ராய்ட் நூலுக்காகச் சிறந்த நூலாசிரியர் விருதை நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியிலும் (2007), காப்பிய உளப்பகுப்பாய்வு நூலூக்காகச் சிறந்த திறனாய்வாளர் விருதான பஞ்சு பரிசிலைப் புதுவையிலும் (2019) பெற்றுள்ளார். திருப்பத்தூரைச் சார்ந்த இவர், தற்போது புதுவைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மின்னஞ்சல்: tkravichandranphd@gmail.com
1) பிறழ்வின் கோடுகளைத் தொடும் உன் காதலின் வண்ணம் அழுத்தமான இளஞ்சிவப்பு. அதே நிறத்தில் உன் வெளியெங்கும் மலர்ந்து கிறங்குகின்றன உன்மத்தத்தின் செங்குவளை மலர்கள். காமத்தின் கள்ள நீலம் பாய்ந்திருக்கும் அடர்சிவப்பு அல்லிகள். மோகத்தின் கிளர்ச்சியேறி மென்காற்றில் மெல்ல துவளும் மேக வண்ண ஆம்பல்கள். நீர்ப்பரப்பின் மீது இடைவெளியற்று நிறைந்து பூத்திருக்கும் உன் தாபத்தின் பசிய குளத்தின் மீது இடைவிடாது பெய்து கொண்டேயிருக்கிறது பெருஞ்சப்தமிட்டபடி அடை மழை. கண்ணாடி கூரை கொண்ட ஸ்நான அறையில் உன் உடல் வெப்பத்தில் சூடேறி குமிழ்கள் உடையும் குளியல் தொட்டி நீரைக் கிழித்து முகிழ்த்து மேலெழுகின்றன உன் நிறைவேறாத வேட்கையின் நீண்ட தண்டுகள் கொண்ட கருப்பு நிறத் தாமரைகள்.
*
2) என் காதலனின் இறந்து போன முன்னாள் காதலி தன் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கிறாள் உணவில் அதீதமாய் கலந்து விட்ட பிரித்து விட முடியாத உப்பைப் போல். வேலமரப் பூக்களில் – அவள் ஒரு பட்டாம்பூச்சியென அமர்ந்து மிதந்து செல்லும் போது அவளென்று அறியாது அவளைப் பிடிக்க கை உயர்த்துகிறான். ஒரு புலரியின் கூடலில் மேற்கூரையில் மங்கலாய் தெரியும் மூன்றாவது நிழல் யாருடையது? செனெவில்லின் பியானோ இசை மனதின் உச்சஸ்தாயிற்கு சென்று கீழிறங்குகையில் அவனை அணைத்துக் கொள்கிறேன் அப்பொழுது அவளையும் சேர்த்தே தான் அணைக்கிறேன்.
*
3) கருங்கல் தூணில் சாய்ந்து பகவதியின் அம்பலத்து தாழ்வாரத்தினின்று அமையும் சரம் சரமான விளக்குகளை நோக்கியபடி நீ ஏங்கி நிற்பது ஏனோ….?! கொஞ்சம் கவனித்துப் பாரேன். என் மனதின் பிரகாரங்களை.. அதில்.. பொன்சுடர் அசைய எரியும் தீபங்களை.. அத்தனை தீபங்களின் மொத்தமான ஒரே மகா வெளிச்சம் நீ தானே…!
***
சம்யுக்தா மாயா – தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர். தற்போது தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சென்னையில் வசிக்கிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘டல்ஹொஸியின் ஆரஞ்சு இரவு'(உயிர்மை பதிப்பகம் ) 2016ல் வெளி வந்தது. இரண்டாவது ‘கவிதை நூல் ‘தீ நின்ற பாதம் ‘(சால்ட் பதிப்பகம்) 2024ல் வெளி வந்தது. தொடரந்து சிற்றிதழ்களிலும் மின்னிதழ்களிலும் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல் : samyukthamaya3@gmail.com
அபிராமி அக்காவுக்கும் ஜெயராஜ் சாருக்கும் திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. ஜெயராஜ் சார் எங்கள் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்கிறார். அவர் வீட்டில்தான் மாலை நேரத்தில் டியூஷன் படித்தோம். இந்த ஒரு வாரமாக ஜெயராஜ் சாரோடு அபிராமி அக்காவும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தாள். அக்காவுக்கு தலைமுடி அடர்த்தியாகவும் மிக நீளமாகவும் இருந்தது. மாலை நேரங்களில் தேங்காயெண்ணெய் போட்டு தலைசீவி குண்டு மல்லி வைத்திருப்பாள். அவள் அருகில் போனாலே நறுமணம் வரும். அந்த மணத்திற்காவே அபிராமி அக்காவை எனக்குப் பிடிக்கும்.
அக்கா, டியூஷன் முடியும் நேரத்தில் பைபிள் கதை சொல்வாள். அவள் கதை சொல்லும் விதம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஒருமுறை நான் ஆர்வமிகுதியில், “அக்கா, உங்களுக்கு இந்தக் கதைகள் எல்லாம் எப்படித் தெரியும்?” என்றேன். “நான் ஊரில் இருக்கும்போது தினமும் பைபிள் படிப்பேன். சர்ச்சுக்குப் போவேன். ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு டிவியில் ஒளிபரப்பாகும் பைபிள் ஸ்டோரி தொடரைப் பார்ப்பேன்,” என்று சொன்னாள்.
“அக்கா, உங்க வீட்டுல டிவி இருக்காக்கா?” ஆச்சரியமாகக் கேட்டேன். “ஆமாம். இந்த வாரம் கூட நோவாவின் கப்பல் பத்தின கதை ஒளிபரப்பாகுதாம். ஆனா என்னாலதான் பார்க்க முடியாது,” என்று கவலையாகச் சொன்னாள்.
எங்கள் ஊரில் மூன்று வீடுகளில்தான் தொலைக்காட்சியிருந்தது. என்னோடு படிக்கும் பிரதீப் வீட்டில் மட்டும்தான் மற்றவர்களை டிவி பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால் ஜெயராஜ் சாரின் அம்மாவுக்கும் பிரதீப்பின் பாட்டிக்கும் சண்டை. மற்ற இரண்டு வீடுகளில் சண்முகம் வாத்தியார் யாரையும் அனுமதிக்க மாட்டார். என்னோடு படிக்கும் கார்த்திக்கின் அத்தை வீட்டில் சில பேர் டிவி பார்க்கப் போனார்கள். அவங்க மகள் கவிதாவும் என்னைப் போல ஐந்தாம் வகுப்புதான் படிக்கிறாள். ஜெயராஜ் சாருக்கு அந்த குடும்பத்தோடு நல்ல பழக்கம் இருந்ததால், “அங்கப் போய் டிவி பார்க்கலாமாக்கா?” என கேட்டேன்.
அக்காவிற்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. “”உங்க சாரு போன வாரம் சினிமாவிற்கு கூப்பிட்டாருடா. வரலன்னு சொல்லிட்டேன். இப்போ பைபிள் கதை பார்க்க போறோன்னு சொன்னா திட்டுவாரோன்னு பயமா இருக்குடா” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
“உண்மைய சொல்ல பயமாயிருந்தா ஏதாவது பொய் சொல்லிட்டு வாங்கக்கா. எனக்கும் டிவி பார்க்க ஆசையாக இருக்கு,” என்றேன். கொஞ்ச நேரம் யோசித்தவள், பின் ஒப்புக்கொண்டாள்.
ஞாயிற்றுக்கிழமை ஒன்பதே முக்காலுக்கு இருவரும் கார்த்திக்கின் அத்தை வீட்டிற்குச் சென்றோம். எங்களை அன்புடன் வரவேற்ற அத்தை, “உங்க அம்மாவும் நானும் டீச்சர் ட்ரைனிங் ஒண்ணா படிச்சோம்” என்று அக்காவின் குடும்பத்தை நலம் விசாரித்தாள். வந்திருக்கும் விஷயத்தைச் சொன்னதும், “நாங்க பைபிள் ஸ்டோரி பாக்கறதில்ல. அது தான் ஆப் பண்ணி வச்சுட்டோம்” என்று சொல்லியபடியே டிவியைப் போட்டாள். நாங்கள் இருவர் மட்டுமே பார்க்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் கவிதாவும் அவளின் பாட்டியும் பார்க்க வந்தார்கள். அக்கா பாட்டிக்கு நோவாவின் கதையைச் சொல்லிப் புரிய வைத்துக்கொண்டே பார்த்தாள். அக்காவின் கதைசொல்லும் முறையால் ஈர்க்கப்பட்டுச் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த மாமாவும் வந்துவிட, அத்தையும் மதிய சமையலுக்கு வெங்காயத்தை உரித்துக்கொண்டே பார்க்க ஆரம்பித்தாள்.
நோவாவின் பேழைக்குள் சகல உயிரினங்களும் ஜோடியாக ஏறிக்கொண்டிருந்தன. சிங்கம், புலி, பறவைகள் என ஒவ்வொன்றாக உள்ளே சென்றன. அப்போது ஒரு நீண்ட கருநாகம் சுருண்டு சுருண்டு நெளிந்து, பேழையின் ஒரு இருட்டான மூலைக்குள் ஊர்ந்து சென்று மறைந்தது. அக்கா அந்தப் பாம்பையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா, அந்தப் பாம்புக்குப் பயமா இருக்காதாக்கா? மத்த மிருகத்தையெல்லாம் அது கடிக்காதா?” என்று மெல்லக் கேட்டேன்.
அக்கா டிவியிலிருந்து கண் எடுக்காமலேயே, “சர்ப்பமானது தேவன் உண்டாக்கின சகல காட்டுமிருகங்களைப்பார்க்கிலும் தந்திரமுள்ளதாயிருந்தது” என்ற பைபிள் வசனத்தைச் சொல்லிவிட்டு, “யாரும் பார்க்காத ஒரு இருட்டு மூலை அந்தப் பெரிய பேழைக்குள்ள அதுக்குக் கிடைச்சிருக்கும்டா… அங்க அது அமைதியா சுருண்டுக்கும். அது அங்க இருக்கிறது யாருக்கும் தெரியாது,” என்றாள். அவளது குரலில் ஒரு விசித்திரமான நடுக்கம் இருந்தது.
தொடர் மிகுந்த சுவாரசியத்தோடு இருந்தது. இறுதியில் பெருங்காற்றுடன் மழை வந்து உலகமே அழிந்துபோகும் காட்சிகள் மிரட்டலாக இருந்தன. பெரும் வெள்ளத்தில் நோவாவின் பேழை அடித்துக்கொண்டு சென்றது. நோவாவும் அவன் குடும்பமும் அந்த உயிரினங்களும் காப்பாற்றப்பட்டதா? என்பதை அடுத்த வாரம் பாருங்கள் என்று முடித்தார்கள்.
திரும்பி வரும்போது ஏனோ எனக்குப் பயமாக இருந்தது. அக்காவிடம், “சாரு உங்களைத் திட்டுவாராக்கா?” என்று கேட்டேன். “பயப்படாமல் வாடா. நான் பார்த்துக்கிறேன்,” என்றாள். அக்காவின் வீட்டை நெருங்கியபோது வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த காமாட்சி பாட்டி கோபமாக முறைத்தாள். எனக்கு ஜெயராஜ் சாரைப் பார்க்கும் தைரியம் இல்லாததால், “நான் வீட்டுக்குப் போறேங்க,” என்று சொல்லி ஓடி வந்துவிட்டேன்.
அடுத்த நாள் பள்ளியில் சாரின் கண்ணில் தென்படாமல் மறைந்து திரிந்தேன். மாலையில் டியூஷனுக்கும் போகவில்லை. செவ்வாய்க்கிழமை டியூஷன் போனபோது ஜெயராஜ் சார் மட்டும்தான் சொல்லிக்கொடுத்தார். என்னிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. அக்காவுக்குக் காய்ச்சலாம்; நேற்றும் சொல்லித் தர வரவில்லை என்று சொன்னார்கள்.
வியாழக்கிழமை அக்காவைப் பார்த்தபோது அவள் பழைய உற்சாகத்தோடு இல்லை. தலையில் மல்லிகைப்பூ இல்லை. எண்ணெய் வழிய தலை சீவியிருந்தாள். “அக்கா, அன்னைக்கு சார் உங்களைத் திட்டினாராக்கா? ஏன் உடம்பு சரியில்லாமல் போச்சு?” என்று விசாரித்தேன். “மாமா எதுவும் சொல்லலடா,” என்று மட்டும் சொல்லிச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவளது உதடுகளோடு நின்றுவிட்டது.
“அடுத்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பேழைக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கப் போகலாமாக்கா?” என்று ஆர்வமாகக் கேட்டேன்.
அக்கா ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தாள். அவள் கண்களில் ஒரு மெல்லிய அச்சம் மின்னி மறைந்தது. “வேண்டாம்டா… அந்தப் பேழைக்குள்ள போன பாம்பு அந்த இருட்டுக்குள்ளேயே இருந்திருக்கலாம். அது ஏன் வெளியே வந்துச்சோன்னு தோணுது. நாம இனிமே அங்க போக வேண்டாம்,” என்றாள்.
*
முத்தம்
ஹோட்டலில் நுழைந்தபோதே, வாழ்வில் மீண்டும் சந்திக்கக் கூடாது என்று நினைத்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டேன். பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே வசீகரத்தோடுதான் இருந்தாள் தங்கபாரதி. நுழைவாயிலைத் தாண்டி, இடதுபுறம் போடப்பட்ட இருக்கையில் தனியாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தாள். மீண்டும் திரும்பிப் பார்த்தபோது, அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். மறந்திருப்பாளா? மறந்திருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், மறக்கக்கூடிய காரியத்தையாச் செய்திருந்தோம்?
ஒருகணம் திரும்பிப் போய்விடலாமா என யோசித்தேன். ஐந்து கிலோமீட்டர் தாண்டித்தான் வேறு நல்ல ஹோட்டல்கள் இருக்கும். மதியம் இரண்டு மணி. என் பத்து வயது மகளையும் கூட அழைத்து வந்திருந்தேன். அவளுக்கு நல்ல பசி. வேறு வழியில்லாமல், வலதுபுறம் ஐந்தாறு இருக்கைகள் தள்ளி, அந்தப் பெண்ணுக்கு என் முதுகுப் பகுதி மட்டுமே தெரியும் படி அமர்ந்துகொண்டேன்.
உணவுக்காகக் காத்திருந்தபோது, தங்கபாரதி எங்கள் இருக்கைக்கு அருகில் வந்தாள். “டாக்டர் நல்லா இருக்கீங்களா?” என்றாள். நான் திடுக்கிட்டுத் தலையசைத்தேன். அவள் என் மகளின் அருகில் அமர்ந்தாள். “இது உங்கள் மகளா? சோ ஸ்வீட்!” என்றாள். என் மகள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு, மாலை நேரம் அல்சர் பிரச்சனையோடு இவளும் இவளின் கணவனும் கிளினிக் வந்தது நினைவில் ஓடியது. ஆங்கில மாத்திரைகளில் நம்பிக்கை இழந்திருந்த இவளின் கணவர், கட்டாயப்படுத்தி என்னுடைய ஆயுர்வேதா மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். அவருடைய குடும்ப நண்பர் என்னைப் பரிந்துரை செய்ததாகச் சொன்னார். தங்கபாரதியின் மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து பார்த்ததில், நோயின் தீவிரம் கூடியிருந்தது. குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது நான் கொடுக்கும் மருந்துகளையும், நான் பரிந்துரைக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டுமென்றேன். கணவர் முழு மனதோடு ஒப்புக்கொண்டாலும், தங்கபாரதி அரை மனதாகத்தான் இருந்தாள். அவளை நம்ப வைக்கப் போராட வேண்டியிருந்தது.
என் மருந்தை உட்கொண்டதில் ஒரு மாதத்திலேயே நோயின் தீவிரம் குறைவதை உணர்ந்தவள், என்னை முழுவதுமாக நம்பத் தொடங்கினாள். கணவனோடு வந்துகொண்டிருந்தவள், சில மாதங்களுக்குப் பிறகு தனியாக வரத் தொடங்கினாள். தங்கபாரதியின் தோற்றமும் அழகும் என்னை வசீகரித்த படியே இருந்தது. அவளிடம் பேசும் போதெல்லாம் அவளின் உதடுகளையே கவனித்துக் கொண்டிருப்பேன். மற்ற நோயாளிகள் இல்லாத ஒருநாள் மாலை நேரத்தில், அந்த ஈர உதடுகளின் வசீகரத்தில் தன்னிலை மறந்து, என் கரங்களால் அவளை அணைத்து, உதடுடன் உதடாக முத்தமிட்டேன். எதிர்பாராத இந்த அத்துமீறல் அவளுக்குள் பெரிய அதிர்வை உண்டாக்கியது.
“நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை டாக்டர்,” என்று அழுதபடியே சொன்னவள், மிகுந்த கோவத்தோடு வெளியேறினாள். என்னுடைய தவறின் வீரியத்தை உணர்ந்தவனாய் ஓடிச் சென்று அவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன். அவள் உடல் முழுவதும் நடுங்குவதை என்னால் உணர முடிந்தது.
“மன்னிச்சுடுங்க மேடம். தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு தப்பு பண்ணிவிட்டேன். இது வெளியே தெரிந்தால் நான் இங்க தொழில் செய்ய முடியாது,” என்று கெஞ்சினேன். ஆனால், என்னுடைய எந்த வார்த்தையும் அவளின் செவிகளில் சேரவே இல்லை. அடுத்த நாள் அவளின் கணவனும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து என்னையும் என்னுடைய சிறிய மருத்துவமனையையும் அடித்து உடைத்தார்கள். தீயைப் போல அந்தப் பகுதி முழுக்கச் செய்தி பரவி விட்டது. காவல் நிலையத்தில் இருவரும் மாறிமாறி புகாரளிக்கச் சென்றோம். அந்த இன்ஸ்பெக்டர் நல்ல மனிதராக இருந்ததால் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அந்தப் பாதிப்பிலிருந்து வெளியேறுவதற்கு எனக்கு ஓராண்டுக்கு மேலானது.
அந்தக் குற்ற உணர்வு என்னை நிலைகுலையச் செய்ய, தங்கபாரதி இப்போது என் மகளிடம் பேசிக்கொண்டிருந்தாள். “உங்க அப்பா கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்ட அந்த நாட்களை என்னால மறக்கவே முடியாது. அவர் கொடுத்த மருந்து என் உடம்பை மட்டுமில்ல, என் வாழ்க்கையையே மாத்திடுச்சு,” என்றாள் மிக நிதானமாக.
என் மகள், “எங்க அப்பா ரொம்ப நல்ல டாக்டர்” என்று பெருமையாகச் சொன்னாள். அந்தப் பெருமை என் முகத்தில் சுளீரென அறைந்தது.
“அப்படியா” என்று வியந்த படி மெல்ல எழுந்து என் மகளின் தலையை வருடி விட்டு
“நேர்மையான நல்ல டாக்டரான உங்க அப்பாவிற்கு ஒரு நோயாளியின் அன்பு பரிசு இது” என்று என்னருகில் வந்து கன்னத்தில் முத்தமிட்டாள். நானும் என் மகளும் அதிர்ச்சியில் உறைந்து போனோம். எங்களுக்கு பக்கத்து இருக்கையிலிருந்தவர்களெல்லாம் ஆச்சரியமாகப் பார்க்க, “போயிட்டு வறேன் டாக்டர். பாய் செல்லகுட்டி” என்று வெகு இயல்பாகச் சொல்லிவிட்டுச் சென்றாள்.
*
ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
நண்பன் வெங்கடேஷின் வீட்டு வரவேற்பறை முழுவதும் சிறிதும் பெரிதுமான புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதில் இசைஞானி இளையராஜாவோடு வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு பின்னணியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. வெங்கடேஷ் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், அவரைச் சந்திப்பதில் இவ்வளவு ஆர்வமும் வெறியுமாய் இருப்பான் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“இதுவரைக்கும் எத்தனை முறை அவரைச் சந்தித்திருக்கிறாய் வெங்கடேஷ்?” என்று ஆச்சரியம் தாளாமல் கேட்டேன்.
“எட்டு முறை பார்த்திருக்கேன் ரகு” என்றான் பெருமையாக.
“ஒரே ஆளைத் தொடர்ந்து பார்க்கிறதுல என்ன சுவாரசியம் இருக்கப் போகுது? எனக்கெல்லாம் சலிப்புத் தட்டிடும்,” என்றேன்.
“கடைசியா பார்க்கப் போனப்ப, ராஜா அப்பாவும் இதையேதான் கேட்டாரு” என்று சொல்லிச் சிரித்தான். “ ‘அப்பா, நீங்க மூகாம்பிகை கோயிலுக்கும், திருவண்ணாமலைக்கும் அடிக்கடி போறீங்களே… அதுமாதிரிதான் இதுவும். சலிக்கவே சலிக்காது’ன்னேன். ‘கடவுளும் நானும் ஒண்ணா? தப்புயா. அப்படியெல்லாம் சொல்லக் கூடாது’ன்னாரு. ‘எனக்கு நீங்கதான்ப்பா கடவுள்’ன்னேன். செல்லமா முதுகில் தட்டி, ‘உன்னையெல்லாம் திருத்த முடியாது. போயா’ன்னாரு.”
“எப்பல்லாம் பார்க்கப் போவ வெங்கடேஷ்?”
“அவர் எப்பல்லாம் ரசிகர்களைச் சந்திக்கிறாரோ, அப்பல்லாம் பார்க்கப் போயிருவேன் ரகு. பெரும்பாலும் அவரோட பிறந்தநாளுக்குச் சென்னையிலயும், தீபாவளிக்கு அடுத்த நாள் தேனியில இருக்குற சொந்த வீட்டுலயும் தான் அவரைச் சந்தித்திருக்கேன்” என்றான் பெருமையாக.
“கூட்டம் எக்கச்சக்கமா இருக்குமே?”
“அதெல்லாம் சொல்லவே வேணாம், பயங்கரமான கூட்டம் வரும்.”
“இந்தக் கூட்டத்துல உனக்கு மட்டும் எப்படிச் சந்திக்க வாய்ப்பு கிடைக்குது வெங்கடேஷ்?” என்று கேட்டேன்.
ஒருவிதப் பெருமையோடும் மெல்லிய புன்னகையோடும் பதில் சொல்லிக்கொண்டிருந்த வெங்கடேஷ் திடீரென மௌனமானான். அவனது முகம் தீவிரமடைந்தது. என்னை உற்றுப் பார்த்தவன், “ரகு, நீ உன் உடலை நேசிக்கிறாயா?” என்று கேட்டான்.
வெங்கடேஷின் முக மாற்றமும், சம்பந்தமே இல்லாத இந்தக் கேள்வியும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. “இது என்ன கேள்வி வெங்கடேஷ்? எல்லாருமே அவங்க உடலை நேசிக்கத்தானே செய்வோம்,” என்றேன்.
“இல்லை ரகு. நான் என் உடலை நேசிச்சதே இல்லை. பிறக்கும்போதே ரெண்டு கால்களும் ஊனமான, குள்ளமான இந்த உடலை யார்தான் நேசிச்சிருக்க முடியும்? என்னைப் பெத்தவன்ற உரிமையில என் அம்மா இந்த உடலை நேசிச்சிருக்கலாம். ஆனா, என் அப்பாகூட ஒருகட்டத்துல இந்த உடலை நேசிக்க முடியாமல்தானே ஓடிப் போயிட்டாரு. நாற்பது வயசாச்சு எனக்கு. கல்யாணம், குழந்தைன்னு சராசரி வாழ்க்கை கிடைக்காமல் போனதுக்கு இந்த உடல் தானே காரணம்? இதை நான் எப்படி நேசிக்க முடியும் ரகு?” என்றான் விரக்தியுடன்.
நான் என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தேன்.
“ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தைந்துல என் கால்கள்ல அடுத்தடுத்து ஆப்ரேஷன் செஞ்சு வலியால நான் மரண அவஸ்தையில துடிச்சப்ப, என்னோட அப்பா ‘நினைவெல்லாம் நித்யா’ கேசட்டை டேப் ரெக்கார்டர்ல போட்டுவிட்டு, ‘இந்தக் குரலைக் கவனி தம்பி, வலி தெரியாது’ன்னாரு. அந்த அறை முழுவதும் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடல் ஒலிக்கத் தொடங்கின. அந்த நொடிதான் ரகு, எனக்கும் ராஜா அப்பாவுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவு ஆரம்பமானது. ஜானகி அம்மாவோட அந்த ஆலாபனையும் ராஜாவோட இசையும் என் பிஞ்சு கால்களோட வலியை அப்படியே உறிஞ்சி எடுத்துச்சு; மத்த குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டுறது போல, எனக்கு இந்தப் பாட்டைக் காட்டித்தான் அப்பா என் வலியையும் மருந்தையும் முழுங்க வைச்சாரு.”
”எனக்கும் ஞாபகம் இருக்கு வெங்கடேஷ். ஸ்கூல் முடிஞ்சு உன்னைப் பார்க்க வரும்போது எதாவது ராஜா பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பாய்” என்று சொன்னதும், தன்னைச் சுதாரித்துக் கொண்டவனாக முகத்தில் சின்னப் புன்னகையைத் தவழவிட்டபடியே வெங்கடேஷ் மீண்டும் பேசத் தொடங்கினான். “இளையராஜா அப்பாவைச் சந்திக்கப் போன நாளில்தான் ரகு, என்னோட உடலை நான் உண்மையாவே நேசிக்கத் தொடங்கினேன்.” என்றான்.
நான் ஒன்றும் விளங்காமல் அவனையே பார்த்தேன்.
“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, இளையராஜாவை நேர்ல பார்க்கணும்னு ஆசை வந்துச்சு. ஒரு நண்பர் மூலமா, அவர் ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு அடுத்த நாள் தேனியில இருக்குற அவரோட அம்மாவோட கல்லறைக்குச் சாமி கும்பிட வருவாருன்னும், அப்போ தன்னோட ரசிகர்களைச் சந்திச்சுப் போட்டோ எடுத்துப்பாருன்னும் கேள்விப்பட்டேன். அந்த வருஷம் நானும் போனேன். எக்கச்சக்கக் கூட்டம். எப்படியும் ஐந்நூறு பேருக்கும் மேல இருப்பாங்க. ‘இந்தக் கூட்டத்துல நாம எப்படிப் பார்க்கப் போறோம்?’னு நம்பிக்கையிழந்து, ‘வந்ததற்கு அவர் வீட்டுச் சாப்பாட்டையாவது சாப்பிட்டுப் போவோம்’னு பந்தியில உட்கார்ந்துட்டேன். சாப்பிட்ட பின்னாடி, தூரத்துல இருந்தாவது பார்த்திடலாம்னு அவர் வீட்டு வாசல்ல நின்ன கூட்டத்துல நானும் ஓரமா நின்னேன்.
அப்போ வீட்டுல இருந்து வெளிய வந்த போலீஸ்காரங்க கூட்டத்தைப் பார்த்து வரிசையில நிற்கச் சொன்னாங்க. நான் நிற்கிறதா, வேண்டாமானு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, என் தோள்மேல கைபோட்டு, ‘வா தம்பி, உள்ளே போகலாம்’னு ஒருத்தர் கூட்டிட்டுப் போனாரு. உள்ளே இருந்த ரூம்ல ஐந்தாறு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க. என்னைப் பார்த்ததும் அங்கிருந்த ஒருத்தர், ‘இவரை முதல்ல அனுப்பி வைப்போம்’ன்னாரு. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணோம். வெள்ளை வேட்டி சட்டையில சிரிச்ச முகத்தோட இசைஞானி வந்தாரு. அவர்கிட்ட முதல்ல போக நான் அனுப்பப்பட்டேன். நான் ஆச்சரியம் தாங்காம அவரோட கால்ல விழுந்து கும்பிட்டேன். என்னை எழுப்புனவரு என் பேரையும், எங்கிருந்து வர்றேன்னும் கேட்டாரு. அப்புறம் என்னோட போட்டோ எடுத்துக்கிட்டாரு. என்னை அழைச்சுக்கிட்டு வந்தவர், திரும்பவும் என் தோள்ல கைபோட்டு வெளிய கொண்டுவந்து விட்டுட்டு, ‘இப்போ சந்தோஷம்தானே?’னு சிரிச்சவரு திரும்பவும் கூட்டத்தைச் சரி பண்ணப் போயிட்டாரு.”
“இவரு யாரு? எதுக்காக என்னை அழைச்சுட்டுப் போனாரு? நான் ஏன் முதல்ல போட்டோ எடுத்துக்கணும்?”னு யோசிச்சப்ப, என் ஊனமான உடல்தான் அதுக்குக் காரணமா இருக்க முடியும்னு தோணுச்சு. வெளிநாடுகள்ல இருந்தும் தமிழ்நாட்டோட பல பகுதிகள்ல இருந்தும் வந்திருக்குர கூட்டத்துல, என்னைத் தனியா காட்டினது இந்த உடல்தான். இதை உறுதிப்படுத்திக்கொள்ள அடுத்த முறை அவர் பிறந்த நாளின் போது சென்னைக்குப் போனேன். அவர் அப்போ புதுசா கட்டியிருந்த ஸ்டுடியோவுல ரசிகர்களைச் சந்திச்சாரு. தேனியை விட ரெண்டு மடங்கு கூட்டம். உண்மையில அவரைப் பார்க்க முடியாதுன்னுதான் நினைச்சேன். ஆனா அவரோட மியூசிக் குரூப்ல இருந்த ஒருத்தர் என்னை அழைச்சுக்கிட்டுப் போய் ராஜா அப்பாவைப் பார்க்க வைச்சுட்டாரு.
அப்பலேருந்துதான் என் உடலை நான் உண்மையாவே நேசிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் தொடர்ந்து போக ஆரம்பிச்சேன். இதுவரைக்கும் எட்டுமுறைப் போயிட்டேன் ரகு. ஒருமுறை கூட அவரைச் சந்திக்காம ஏமாற்றத்தோட வந்ததில்லை. ஏதோ ஒரு கருணைக் கரம் என்னைப் பிடிச்சு கூட்டிட்டுப் போய் அவர் முன்னாடி நிறுத்திடுது. என்னை அடையாளம் கண்டுகிட்டு அவரும் பாசத்தோட ஓரிரு வார்த்தை பேசுவாரு. இந்தச் சந்திப்பும், அந்த ஓரிரு வார்த்தைகளும் ஏதோ ஒரு வகையில என் உடலை நேசிக்கக் கத்துக் கொடுத்திருக்கு. இந்த உடலால நான் இழந்துட்டதா நினைக்கிற வாழ்க்கையோட இழப்புகளை இட்டு நிரப்பிக்க அவரும் அவரோட இசையும் துணையா இருக்கு. மத்தவங்களுக்கு இது பைத்தியக்காரத்தனமாகக்கூடத் தெரியலாம் ரகு. ஆனா எனக்கு இது பிடிச்சிருக்கு,” என்றான்.
வெங்கடேஷின் வார்த்தைகளைக் கேட்டபோது என் கண்கள் கலங்கியிருந்தன.
“அடுத்த முறை போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போ வெங்கடேஷ்,” என்றேன்.
***
சிவபிரசாத் – சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய சிறுகதைகளும் விமர்சனங்களும் தமிழின் முக்கியச் சிறுபத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. மறைந்த எழுத்தாளர் நஞ்சுண்டனின் கட்டுரைத் தொகுப்பான ‘காற்றின் நிழல்’ மற்றும் மொழிபெயர்ப்புத் தொகுப்பான “பால்மீசை” ஆகிய புத்தகங்களின் தொகுப்பாசிரியர். சொற்சுனை இலக்கிய அமைப்பின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இவர் சேலத்தில் வசிக்கிறார். மின்னஞ்சல்: Sivaprasath29@gmail.com