Home Blog Page 11

வேணு வேட்ராயன் கவிதைகள்

0

(1)
ரு குழந்தையை
கையளித்துச் செல்வது போல
அவள்
உன்னை என்னிடம் விட்டுச்செல்கிறாள்.

இக்கணத்தில்
நீ எனக்கு தேவதை.
அவள் என் தெய்வம்.
நானோ ஓர் எளிய மானுடன்.

உன்னைக் கையில் ஏந்தி நிற்கையில்
என் கண்களில் பூத்து
உன் தாள்மீது உதிர்கின்றன
தூய கண்ணீர்த்துளிகள்.

(2)
இந்த மொத்த உலகும்
உன் ஒரேஒரு
உள்ளங்கையில் அடங்கும்.
அதில் முத்தமிடுகையில்,
ஊற்றெடுக்கும் கண்ணீரில்
இந்த மொத்த உலகும் நனையும்.

(3)
ஒரு இலை உதிரும்போது
ஒரு இதயமே உதிர்கிறது.
ஒவ்வொரு இலையாக
உதிர்ந்து உதிர்ந்து
இந்த அரசமரத்தடியில்
பரவிக்கிடக்கின்றன
எடையற்ற இதயச்சருகுகள்.

காற்றின் ஸ்பரிசத்தில் மெல்ல
புரண்டு புரண்டு
மண் மீது உறங்குகின்றன
மரம் கிளை வான் என
ஒவ்வொன்றாய் நீங்கிய உயிர்கள்.

(4)
இந்த இரவில் ஏன்
மண் மீது உதிர்கிறாய் மரமல்லியே?
உலராத கண்ணீர்துளிகளென
உனைக்கண்டு திக்கென்கிறது என் மனம்.
உன்னைத்தொட்டெடுக்கையில் நடுங்குகின்றன
என் விரல்கள்.
உன்னில் எஞ்சியிருக்கும் வாசம்
என்னிடம் சொல்வதுதான் என்ன?
மண்மீது வாழ்ந்து வீழ்ந்து
மரித்துப் போதல் சுகந்தமென்றா?

(5)
சார் ஜீரோ பாருங்க!

எத்தனை எத்தனையோ முறை
எனக்கு இதைச்
சுட்டிக்காட்டி இருக்கிறாய்
என் நண்பா!
மறுபடியும் மறுபடியும்
பூஜ்யத்தில் இருந்து தொடங்குதல்
உன் விரல் நுனிச் சொடுக்கல் போல்
அவ்வளவு எளிதானதா?

(6)
’உப்பு தேவையான அளவு’ என்று
எளிதில் ஒரு சமையல் குறிப்பை
சொல்லி முடித்துச் செல்கிறாய் நீ.
அந்த தேவையான அளவிலிருந்து
ஒரு சமையலை
செய்யத் தொடங்குகிறேன் நான்.

***

வேணு வேட்ராயன் – நவீன தமிழ் கவிஞர். கவிதைகளும், கவிதைகள் குறித்து கட்டுரை, விமர்சனம் எழுதி வருகிறார். சென்னையில் மருத்துவராக பணிபுரிகிறார். “அலகில் அலகு” எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல்: venuvetrayan.dr@gmail.com

ஆர்.கே.ஜி கவிதைகள்

0

பூமாதேவி என்னுடன் எதையோ பேச நினைக்கிறாள்.
கவிதைகளின் காலம்
என நான் எண்ணிக் கொண்டிருந்த பொழுது
எந்த தொடர்பும் இல்லாமல்
வானத்தில் அந்த ஒளி தோன்றியது.
பழகி வந்த புராணங்களைக் கொண்டு
அந்த ஒளி தேவர்களின் சஞ்சாரம் என்று தான்
முதலில் யூகித்தேன்.
செய்தித்தாளிலும்
இரண்டு நாடுகளுக்கு இடையே போர்
என்று தான் சொல்லியிருந்தார்கள்.
மத்தியில் எங்கள் நிலம் இருந்ததால்
பட்டும் படாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நாட்கள் செல்லச் செல்ல
அந்த ஒளி
என் வானத்தை விட்டு நீங்குவதாக இல்லை.

எங்கள் ஊரில்
போர் ஒரு சாதாரணமான சொல்லாக மாறி விட்டது.
போரைக் குறித்து அறிமுகம் இல்லாத மாமாவும் மாமியும்
அதைக் குறித்து உரிமையாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
கச்சா எண்ணெய் என்றும்
கடல்வழி முக்கிய வணிகப் பாதை என்றும்
சர்வாதிகாரியான ஒரு நாட்டின் தயவிற்காக
இரு நாடுகள் மோதிக் கொள்வதாகவும்
சாதாரணமாகப் பேசிக் கொண்டார்கள்.
அந்த வெளிச்சத்தை தரிசித்தபடி
போர் தேவையற்றது என்று சிலரும்,
அரிதான கண்டுபிடிப்புகள்
போர்க் காலங்களின் பிள்ளைகள் என்று சிலரும்,
இதுவரை கவலையேப்படாத
அறம், அருள் குறித்தெல்லாம் கூட
பேசத் தொடங்கினார்கள்.
இந்தப் போர் எந்த திசையில் செல்கிறது,
வரும் காலங்களை இந்தப் போர் எப்படி மாற்றும் என
புத்தகங்களிலும் இணையத்திலும் பதிவிட்டார்கள்.

வானத்தில் நின்ற வெளிச்சம்
என்னை நெருங்கத் தொடங்கியது.
அதன் வெம்மையை நாங்கள் உணரத் தொடங்கினோம்.
உடல் தகிக்க,
எங்கள் எண்ணங்கள் இன்னும் உக்கிரமாக மாறின.
எதிரிகளைத் தெரிந்தும்
அவர்களைக் கொல்ல முடியாத கோபம்,
இயலாமையின் தனிமை.

அந்த வெளிச்சம் என் முன்னால்
நடக்கத் தொடங்கியது.
உலகின் மொத்தப் பேராசையின் வடிவமாக
அது திரண்டிருந்தது.
என்னை நோக்கி வந்த அந்த பேரொளியை
அதன் சிறுமையின் காரணமாக
நான் வணங்க விரும்பவில்லை.

இத்தனைக்கும்
நான் நிற்கும் இந்த நிலம்
சமீபமாக வந்து சேர்ந்தது தான்.
என் தாய்நிலத்தை குறித்து
ஏனோ
அந்தக் கடைசி நொடியிலும்
நான் நினைக்க விரும்பவில்லை.

இறப்பதற்குள்
இந்தக் கவிதையை
எப்படியாவது கிறுக்கி விட வேண்டும்.

நான் ஆசையாக வளர்த்து கொண்டிருந்த
தென்னங்கன்றை நோக்கி ஓடினேன்.
அதை இறுக அணைத்தபடி
என் முன்னால் நிற்கும்
அந்த ஒளியின் கண்களைப் பார்த்தேன்.
அதன் கண்களில்
சொல்ல முடியாத ஒரு கனிவு, ஒரு ஏமாற்றம்.

பேரொளியைப் பேரொலி சூழ்ந்தது.
எங்கும் கூச்சல், அலறல்.
தென்னங்கன்றை என் கைக்குள் பிடித்தபடி
காதை கரங்களால் பொத்தி
உடலை நிலத்தில் சாய்த்தேன்.
“அய்யோ, எதுவும் பேசாதீர்கள்…
அமைதியாக இருங்கள்.
பூமாதேவி என்னுடன் எதையோ பேச நினைக்கிறாள்.”

பேர் அமைதி.

தூரத்தில்
கடல் என் சார்பாக
உலகம் அழியும் வரை பேசியது.


இரவு எனும் கரும் மழை.

எத்தனையோ முறை
அவளுடன் பேசிப் பேசி
இரவுகளை
கட்டிப் போட்ட ஞாபகம்.

பெரிய சித்தாந்தங்களைப் பேசும் பொழுது
சலனமின்றி
கன்னத்தில் கை வைத்து கேட்டுக் கொண்டிருப்பாள்.

அவ்வப்போது
பேசுவது பிடித்தால்
நெற்றியில் முத்தமிடுவாள்.

எனக்குத் தெரியும்…
நான் பேசும் சொற்கள்
அவள் உலகம் சார்ந்தவை அல்ல.
இருந்தும்,
பேசிக் கொண்டே இருப்பேன்.

அக்காலங்களில்
மாலைச் சூரியன்
வானில் ஒட்டி வைத்தது போல
நகராமல் நிற்பான்.

நான் பேசுவதையெல்லாம்
கேட்டுக் கொண்டிருந்தவள்
ஒரு நாள்
மௌனமாக என்னை விட்டு நகரத் தொடங்கினாள்.
நானும் கோபப்படாமல்
அவளை
அவள் உலகத்தில் விட்டுவிட்டு
என் இடத்திற்கு திரும்பினேன்.

இப்பொழுதெல்லாம்
மாலையில் வீட்டின் மாடியில் நின்றபடி
தனியாக
சூரிய அஸ்தமனங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

காற்று
நினைவுகளை மகரந்தம் என்று புரிந்து கொள்ளாமல்
தூசியெனத் தட்டிச் செல்கிறது.

தனிமை,
என்னை நூறாகக் கிழித்து
அந்தி சூரியன் முன்
படையலாகப் போடுகிறது.

இத்தனை நாள் தவிர்த்த
இரவு எனும் கரும் மழை.
துளித் துளியாகத் தூறி
எனை முழுதாக
நனைக்கிறது.


ஆச்சிப் பாட்டியின் Autopsy

எப்படி பொதுவுடைமை ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டதோ,
அன்பும் கொண்டாடப்பட்டது
என்று சொல்லும் காலத்தில் தான் நாம் இருக்கிறோம்.
அந்த காலத்தைச் சேர்ந்தவள் என் ஆச்சிப் பாட்டி.

பாட்டிக்கு பொதுவுடைமை தெரியாது.
அவளுக்கு தெரிந்தது எல்லாம்
அவள் சமைத்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியலை
குறிப்பாக, பாத்திரத்தின் விளிம்பிலும் அடியிலும் ஒட்டிக் கிடக்கும்
அந்த எண்ணெய் மிதக்கும் நறநற கத்திரிக்காயை
அவள் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும் என்பதே.

வாய்ப்பமைந்து,
எல்லோரும் சாப்பிட்ட பின் ஏதேனும் எஞ்சியிருந்தால்,
சமைத்த பாத்திரத்தில்
சோற்றில் நீரும் மோரையும் ஊற்றி
தானும் உண்பாள்.

பாட்டி பிறந்தது வேலூரில்; இறந்தது சென்னையில்.
முதல் பிள்ளையான மாமா
அவள் போட்டதையெல்லாம் உண்டார்.
அம்மா, மூக்கை உறிஞ்சியபடி
“கடன்காரி” என்றும் “மூளி”என்றும் எதை எதையோ ஏசிக்கொண்டு
அவள் சமைத்ததை சாப்பிட்டாள்.

பேரனான நான்
கூச்சமில்லாமல்,
எந்த வஞ்சனையுமின்றி சாப்பிட்டேன்.

பல நாட்கள்,
கீரை சாதம் மணக்கும் அவள் கைகளை
என் மூக்கில் வைத்தபடி,
புடவையின் இடுக்கில்
சுருங்கிய அவள் தோலின் சருமத்தில்
தலை புதைத்து தூங்கியுள்ளேன்.

உண்மையில்,
சோறு போட்டு வளர்த்த என் பாட்டி சுப்புலட்சுமி
என் அன்னலட்சுமி,
என்னைத் தட்டி தூங்க வைத்த நித்திரா தேவி.

அவள் பிள்ளைகள் எல்லாம் நகர்ந்து போனார்கள்.
மாமா தன் மகளுக்கு வதுவை செய்தார்;
அம்மா என்னைப் படிக்க வைத்தாள்.

மாமாவின் பெண்ணிற்கு பெண் பிறக்க,
அவளுக்கும் ஒரு பெண் பிறக்க,
பாட்டி அவர்கள் வீட்டிலும் சமைத்து கொண்டே தான் இருந்தாள் .

வருங்காலங்களில்
இன்னும் எங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் பிறக்கலாம்;
கிழவியும் சமைத்து கொண்டே போகலாம்.

காலம் இதை நிறுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன்.
அவள் சமைத்த அன்பை நினைக்க நினைக்க
உலகியல் பழகிய எனக்கு
ஏனோ இப்பொழுதெல்லாம் திகட்டுகிறது.

ஒரு முறையாவது பாட்டி
அவளைப் பற்றி மட்டும் யோசித்தாளா?
அணு அளவாவது மனிதத்தனமான சுயநலம்
அவளிடம் இருந்ததா?

ஒரு முறை யோசித்ததாக நினைவு.
தாத்தா தொண்ணூறு வயதில்
வாய்வாதத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதாக சொன்னபோது,
மாமாவிடம் கடுமையாக சண்டை போட்டாள்.
“சொத்தில் ஒரு பங்கு உனக்கு சேராது” என்று சொன்னாள்.
தாத்தாவிற்காக சொன்ன இந்தச் சொற்களும்
என் அளவில்
அரைகுறை சுயநலம் தான்.

ஆச்சி பாட்டி நேற்று இறந்து விட்டாள்.

இன்று
சொர்க்கத்தில் புடவையை இழுத்துக் கொண்டு,
தேவர்களுக்கு வியர்க்க வியர்க்க
பாட்டி சமைத்து கொண்டிருக்கக்கூடும்.

கண் முன் உயிரற்று என் ஆச்சிப்பாட்டி கிடக்கிறாள்.
எறும்புகள்
அவள் கைகளில் எஞ்சியப் பருக்கைகளை
எள்ளுப் பேரன்கள் போல்
உரிமையாக சுவைத்து கொண்டிருக்கின்றன.

ஆச்சிப் பாட்டியின் Autopsy முடிந்து விட்டது.
இனி நீங்களும் விரும்பியபடி
அவள் பிரேதத்தை பரிசோதிக்கலாம்.

***

ஆர்.கே.ஜி – இயற்பெயர் ராம் கார்த்திக் கணேசன். 2013 ஆம் ஆண்டு கனடாவின் கனகார்டியா பல்கலைக்கழகத்தில், இயந்திர பொறியியல் துறையில், முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது டொரோண்டோவில் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் நவீன இலக்கியக் குரல்களுள் ஒன்றான இவரின் நாவல்கள், ‘பாடுவான் நகரம்’ மற்றும் ‘அகம்’, யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன. மின்னஞ்சல் : ramkarthiksgm@gmail.com

மதுஷன் சிவன் கவிதைகள்

0

1
டிப்படையில் பலூன் ஒரு வெடிக்கும் கச்சா பொருள்;
அது ஊதிப்பெருக்கும் போது அழகுறும்
ஒரு விளையாட்டுப் பொம்மையின் சாயலைப்பெறும்
ஊழ் வினையின் பிடியில் அலைக்கழியும்
மனிதனைப்போல நிலையில்லாது அலைவுறும்
சோர்ந்த நிலையில் இருந்து காற்றை உள்வாங்கி
மெதுவாக மெதுமெதுவாக
பெருத்து பெருத்து பெருத்து
ஒரு நிலையில் உருப்பெருத்தலை நிறுத்தத்தூண்டும்
அதன் நிறுத்த தூண்டும் சமிக்ஞைகளை
எச்சரிக்கையாக கவனித்தபடி இருக்க வேண்டும்
எச்சரிக்கை மணி ஒலிக்கும் கணத்தை
உணர்ந்து கொள்ளும் பக்குவம் வேண்டும்
தோல் விரிந்து கொண்டே வரும், பதற்றம் அறவே கூடாது
ஒவ்வொரு பலூனிற்கும் எச்சரிக்கை மணி ஒலிக்கும்
அளவீடுகள் வேறுபடும்
சமயங்களில் எச்சரிக்கை மணி ஒலிக்காமலே வெடித்து விடும்
அப்படி வெடித்து விடநேர்ந்தால்;
அப்படி வெடித்துவிடும் வாய்ப்புகள் உண்டென தயாராகவிருந்தால்;
அந்த வெடிப்பு பூ மலர்தலைப் போல கடந்து போய்விடும்;
தயாராக இல்லாத போது எதிர்பாராதபோது
வெடித்து விட நேர்ந்தால் ,
வீழ்ந்து வெடித்த எவுகணையின் பாதிப்புக்களை நிகழ்த்திக்காட்டும்.

2
ஆடையில் ஒட்டி இடம்பெயரும்
குறு விதைகளைப்போல உதிர்ந்திடாது
பதியம் தேடி அலைந்து
சின்னதான பரிதவிப்பை உருவாக்கி
உள்ளுறக் கனன்று எரிந்து வெடித்துச் சிதறும்
தருவாயில்;
மேகம் சூழும், அங்கிங்கென எங்கும் விழும் துளிகளில்
மருதானிச் சாயத்தில் இருந்து
கைகளை விடுவித்துக்கொள்ள நாட்கள் எடுப்பதைப் போல
முகம் காட்டி பின், முதுகு காட்டி
என்புகளாகி நரம்புகளாகி
ஆண்குறியாக புடைத்து நின்று.
ஒரு பரிகாசம்;அடர்ந்த நெருப்பை படரவிடுகிறது.

3
புகைக்கும் மின்சாதனத்தை எறிந்து விட்டேன்
தூரமாய் எறிந்து விட்டேன்
தூரமாய் தூரமாய் வெகுதூரமாய் எங்கேயோ
அயலண்டவாசியின் படுக்கையில் போய்
வீழும் தூரமாய் எறிந்து விட்டேன்
அதை ஒரு விளையாட்டு பொருளாய்,
ஒரு முகமில்லாத பொம்மையாய்
விளையாடிப்பார்க்கிறான்
பின் எதை கிடைத்தாலும் வாயில் வைத்து விளையாடும்,
தன் குழந்தையிடம் கொடுத்துவிடுகிறான்
நொடிகளில்;மெதுமெதுவாய் மெது மெதுவாய்
புகை வருகிறது
புகையை உள்ளெடுக்க
உணர்வுகள் மாறுபடுவதை
விந்தைகள் நிகழ்வதை உணரும் பெழுதில்;
புகைக்கிறான்,புகைத்துக்கொண்டே இருக்கிறான்
சில மணிகளில் அல்லது நாள் முடிவதற்குள்;
திரவம் தீர்ந்துவிடுகிறது
மறுபடி மறுபடி புகையை உள்ளெடுக்கும் முயற்சியில்
ஏமாற்றமடைந்தவன்
தேவையற்ற பெருளென வீசி எறிகிறான்
தூரமாய் தூரமாய் வெகு தூரமாய்
அயலண்டவாசியின் படுக்கையறையில்
வீழும் தூரமாய் வீசி எறிகிறான்

ஏன் எறிந்தேன் என மறந்து விட்டிருந்த நான்
என்னுடையதேயான புகைக்கும் மின்சாதனம்
எனக்கு அருகில் வந்து விழுந்ததும்
திரவத்தை நிரப்பி புகைக்க ஆரம்பிக்கிறேன்
சில நாட்கள் தொடர்ந்து புகைக்கிறேன்
புகைத்துக் கொண்டே இருக்கிறேன்
அதில் அதிகப்படியான ரசாயனங்கள் இருப்பதை
மனைவி திட்டியதை, இடது நெஞ்சு வலித்ததை
மாடிப்படி ஏறி இறங்கும் போதெல்லாம் இளைத்ததை ,
நினைவுக்கு திருப்புகிறேன்
மறுபடியும் தூரமாய் தூரமாய் தூரமாய்
அயலண்ட வாசியின் படுக்கையில் வீழும் தூரமாய்
வீசி எறிகிறேன்
மறுநாள் மீளவும் என் அருகிலேயே வந்து விழுகிறது

4
பிராணணைக் கட்ட வைத்து விட்டதால்;
எங்கு போவதென்று அதற்கு தெரியாது
அதன் முகம் சிதைக்கப்பட்டிருக்கிறது
புன்னகைத்தபடியே நீரில் மூழ்கிப் போக வேண்டும்
ஒன்றிரண்டு மூன்று என வெளிவரும் போது சிரிப்பின்
சத்தம் அதிகரித்து இறுதியாக சிரித்தபடியே மூழ்கிப்போக வேண்டும்;
பெரும் கூட்டத்தின் விருப்பங்கள், தெரிவுகள், பேராசைகள்,
அழுத்தும்; மெதுமையாக தொடங்கி, இறுக்கமாக
பின் எழுந்து விடமுடியாதபடி அழுத்தும்
வழியும் கண்ணீர் பருகக் கிடைக்கும்.
குருதியை பிழிந்து;
ஏதும் கோரிக்கைகள் விருப்பங்கள் இருக்கிறதா?
ஏதும் கோரிக்கைகள் விருப்பங்கள் இருக்கிறதா?
ஏதும் கோரிக்கைகள் விருப்பங்கள் இருக்கிறதா?
காதுக்குள் ஒலித்தபடியே இருக்கும் பின்
அங்கிருந்து நடக்கவைத்து ஒவ்வொரு படியாக இறக்கி
கூட்டிப் போகும் பொழுதில்
சுவரில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படித்தபடியே நகர வேண்டும்
“அழுகுரல் யாருக்கும் கேட்காது
கண்ணீரை விரயம் செய்யாதீர்கள்
இங்கிருந்து கண்ணீர் கூட பருகக் கிடைக்காது”

5
கடல் தன் பிரியமான அலைகளை சுமந்தபடி
கரையை அடைந்து தன் பிரியத்தை
கரையிலேயே தவிக்கவிட்டு வேறொரு பிரியத்தை
சுமந்துவர நகர்ந்து சென்று விடுகிறது
கடலின் ஆர்பரிப்பின் முன் அலைகளின் மீதான அதன் காதல்;
ஏதோ ஒரு இடத்தில் பெரும்
அமைதியாகிறது
அலைகள் ஆர்பரிப்பின் வழி நிகழ்பவை
ஆர்பரிக்கும் போதெல்லாம் நிகழ்பவை

என் முன் இருக்கும் கடல் ஒரு பிரபஞ்சப் பேரமைதியின்
ஒரு மிகச்சிறிய ரூபத்தை வெளிக்காட்டியபடி இருக்கும்
அதன் ஆழமான பேரமைதியில் பிரபஞ்சம்
ஆழ்ந்து உறங்குகிறது
சூரியன்; வருகிறது பின் போகிறது பின்
வருகிறது பின் போகிறது
ஆழ்ந்த அமைதியில் சப்பணமிட்டு
கரையில் அமர்ந்திருப்பவன் நான்; யாருமல்ல நான்
என் அமைதியை மெது மெதுவாக உள்வாங்கி
ஆர்பரிக்கத் தெடங்குகிறது,
என்னிடம் அலைகளைத் தருகிறது,
பின் ஒரு பொழுதில் என்னை முழுதாக
எடுத்துக் கொள்கிறது

6
முகங்களை மூடியபடி ஒளிந்து கொள்கிறார்கள்
இது முறையற்ற வினையாடல் என்பது அவர்களுக்குத் தெரியும்;
ஒளிந்து கொள்ளும் இடங்களை கண்டடைவதற்கு
கண்களை அகலவிரித்து,
ஒரு பிரமாண்ட பிரகாசத்தை வெளிக் கொணர்ந்து
சூரியனைப் போலவும் சந்திரனைப் போலவும்
இரவு பகலென இடை விடாது;

பிரகாசமுள்ள இருள் பேரருள் உடையது
பிரபஞ்சத்தின் அத்தனை பிரகாசத்தையும்
உறிஞ்சி உருப்பெருக்கி அரக்காதி அரக்க
ரூபமாக உருக்காட்டியபடி இருக்கும்
எப்பெரு வெளிச்சமும் ஊடறுக்க முடியாதபடி
காப்பரண்களை சுழலச் செய்யும்
வெளிச்சங்கள் மண்டி இடும்
கால் கடுக்க கடுக்க நிற்கும்
கூர் ஆயுதங்கள் ஏந்திப் போர் செய்யும்
வெப்பத்தளல்களை உருட்டி விடும்
இறுதியில் சாஷ்டாங்கமாக மண்டி இட்டு
பின் சரண்டைந்து,இருளோடு இருளாக,
இருள்; ஒரு முகமாக தன்னைக் குறுக்கி மறு முகமாக
தன்னைப் பெருக்கி பேரண்டமாகும்

7
ஆழமாக நேசித்த நகரம்
நேருக்கு நேராய் சந்திக்கக் கிடைக்கையில் தூரமாக இருக்கும்,
இரத்தத்தில் ஒட்டாத தூரம்
அடர் ஜாமத்தையும் நண்பகலையும் ஒத்த தூரம்
அந்தத் தூரம் முட்செருப்பை கால்களில்
அணிய வைத்து ஓடப்பணிக்கும்;

8
எங்கிருந்து வந்தாய் என கேட்கப்பட்டால்;
கொதிக்கும் நெருப்புப் பாளங்களை உருக்கி
செம்மண்ணை அப்பி படி செய்து
உருகியதை உள் வார்த்து
உருவமென உருக்கொண்டேன் என
ஆசை தீர அறிவிப்புச்செய்யலாம்
அறிவிப்பு முடியும் தருவாயில்
மீளவும் உருகிப்போகுமளவிற்கு
பரிகாசம் மேலெழும்
கூரையைப் பிளந்து வானைப்பிளந்து மேலெழும்
பூமியை இரு துண்டாக்கும்
பிரபஞ்சம் துகள் துகளாக உதிர்ந்து வீழும்

9
பூர்வீக நிலத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவன்;
விழுந்து புரண்டு உருண்டு முதல் நடை வைத்து
முதன் முதலாய் பறித்த சிவப்பு செவ்வரத்தம் பூவை
உன்னிடம் அர்பணிக்கும் போது;
உன் திருக் கோலம் மறைக்கப்பட்ட உருவமாக;
கண்கள் ஒளி மீட்ட
எங்கெல்லாம் வெளிச்சம் பரவுகிறதோ
அங்கெல்லாம் நீயென்றலைந்தேன்
கருணையில் இருந்து விழிக்கும் பகலாக
உனது குரல்;

10
பரந்த வானத்தில் எங்கேயோ தூரமாக
அடி வானத்தில் மின்னும் நட்சத்திரம் போல
துடித்தபடி இருக்கும் அவனின் வெளிச்சம்
சூரியனின் ஆர்பரிப்பை ஒத்தது;
பிரபஞ்சப்பிரகாசத்தை சுமந்த குழந்தையைப் போல
எரிமலைக்குழம்பாக கொதிக்கும் உள் வெளிகளில்
இருந்து வெளிப்படுவது உறைய வைக்கும் பேரருள்;
ஒரு போதும் உள்ளிருந்து கடந்திடாது
வெளிப்படும் ஏகாந்த அற்புதங்கள்
அவன் சாயல் ஒத்த நிழல் பிரவாகம்;
விசத்தை பருகியபடி இருக்கிறான் மரிக்காதிருக்கிறான்
அமிர்தத்தை உமிழ்கிறான்;

-இன்னும் எத்தனை முறைதான் என் கபாலத்தை நெறிப்பீர்கள்
என் கண்களை கட்டிப் போடுவீர்கள்
பெரும் செழிப்புடைய காட்டில் இருந்து
குரலெழுப்பும் பறவைகளைப் போல
என் பிரபஞ்சத்தின் இருள் விலக நானே சூரியனாக
மாற வேண்டுமா,
சில காலம் என் பரிசுத்த குரலைக் கேளுங்கள்
என் குருரமான குட்டிக் கண்களால் பூமியைப்
பார்த்திருக்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்ளுகிறேன்
தாளாத கொதி நிலையில் வரும் கொப்பளங்கள்
கண்களுக்கு தெரிகிறது.
“அண்ட சராசரங்களின் பேரொளியே”
என் கண்களை திறக்க வைப்பாய்
நாசித் துவாரங்கள் வழி உள்ளெடுக்கும் காற்றில்
அண்டங்களை சுழல வைத்து
ஆழப் பெரிய அனாதியற்ற நிகழ்வுகளை நடத்துவிப்பாய் காலமே
அற்புத தீர்கதரிசனங்கள் என் உள்ளிருந்து வெளிப்படுவன
அகமும் புறமும் ஒன்றென தெரிவிக்கும் பொழுதில்
தீவிர வாசனை உடைய கண்கள்
தீராத வாசனையை கசிந்தபடி இருக்கும்
மென் அகங்காரம் இனிப்புத்துவர்க்கும் சுனை;
வெளிப்படுவது,
எல்லாம் அறிந்த பாகனின் புன்னகை;”

***

மதுஷன் சிவன் – (1990 ஜீலை 25) கவிஞர் மற்றும் ஓவியர். 2003ம் ஆண்டில் இருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பவர். இதுவரை ஆறு கவிதை தொகுதிகள் எழுதியுள்ளார், 2025 இல் பரியலம் என்ற தொகுதி வெளிவந்தது. மின்னஞ்சல்:mathusansivam@gmail.com

போரும் அமைதியும்: வகைப்பாடுகளை மறுக்கும் காப்பியம்

0

பாரதிராஜா

ல்ஸ்தோய் எழுதிய ‘போரும் அமைதியும்’, உலக இலக்கியத்தில் இதுவரை எழுதப்பட்ட புதினங்களிலேயே தலைசிறந்த புதினம் என்று பேசப்படுவனவற்றுள் ஒன்று. அந்த அளவுக்கு அதில் சரக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான இந்த நூலை முதற்பதிப்பில் சரியாக 1225 பக்கங்களாக வெளியிட்டார் தல்ஸ்தோய். நெப்போலியன் ஐரோப்பிய நாடுகள் மீது நடத்திய போரை மையமாக வைத்து, ரஷ்யாவின் உயர்குடிக் குடும்பங்களின் வாழ்வையும் வரலாற்றையும் மெய்யியலையும் பேசுகிறது இந்த நூல்.

தல்ஸ்தோயே இதை ஒரு புதினமாகக் கருதவில்லை. “நான் இதை ஒரு புதினமாகக் கருதவில்லை. காப்பியமாகவும் கருதவில்லை. வரலாற்றுக் குறிப்பாகவும் கருதவில்லை. அத்தகைய வகைப்பாடுகளைக் கடந்த, நான் விரும்பிய வகையில் எழுதித் தீர்த்த, ஒரு படைப்பு இது” என்றுதான் சொல்கிறார். இந்த வகைப்பாட்டு மறுப்புதான் இந்த நூலை இன்றும் முக்கியமானதாக வைத்திருக்கிறது.

ஏன் இன்றும் இது முக்கியம்

இன்றைய புவியரசியற் பதற்றங்கள் நிறைந்த காலத்தில், தல்ஸ்தோயின் மையக் கருத்து மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது: வரலாறு என்பது பெரிய மனிதர்கள் பெரிய முடிவுகள் எடுப்பதால் வடிவமைக்கப்படுவதல்ல, மாறாக தம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் சிக்கிய எளிய மக்கள் எடுக்கும் மில்லியன் கணக்கான சிறு சிறு முடிவுகளால் வடிவமைக்கப்படுகிறது. 

நெப்போலியன், எவ்வளவு பெரிய மேதையாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே! ரஷ்யக் குளிரையோ தங்கள் தாயகத்தைக் காக்கும் மக்களின் கூட்டு விருப்பத்தையோ அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

நூலின் அமைப்பும் சவால்களும்

1805-இல் பீட்டர்ஸ்பர்கில் தொடங்கி 1820 வரை பரவியிருக்கும் இந்தக் கதை, மொத்தம் நான்கு தொகுதிகளாகவும் 15 நூல்களாகவும் இரண்டு முடிவுரை நூல்களாகவும் எழுதப்பட்டிருக்கிறது. பீட்டர்ஸ்பர்கின் உயர்குடி அறைகளுக்கும் குருதி தோய்ந்த போர்க்களங்களுக்கும் இடையில், வரலாற்றுக் காரணிகள் பற்றிய மெய்யியற் கட்டுரைகளுக்கும் காதலில் விழுந்து எழும் இளைஞர்களின் உள்ளார்ந்த சித்திரங்களுக்கும் இடையில் கதை நெய்யப்படுகிறது.

நூலைப் படித்த பலரும், பல முறை முயன்று தோற்றுப் பின்னர் வென்றதாகத்தான் சொல்கிறார்கள். இடையில் எங்கேனும் சலிப்படைந்தாலும் இடைவெளி கொடாமல் படித்துவிட்டால் நல்லது. எண்ணற்ற கதாபாத்திரங்கள், அடிக்கடி பிரெஞ்சுக்கும் ரஷ்யத்துக்கும் என்று மாறுதல், வரலாற்று வாதங்களுடன் கதையைக் குறுக்கிடும் தல்ஸ்தோயின் அந்தக் ‘கெட்ட’ பழக்கம்—இவை அனைத்தும் வாசிப்புக்கு உண்மையான தடைகளை உருவாக்குகின்றன.

சில படலங்கள் கட்டுரை போலவே இருக்கின்றன. இந்தக் கட்டுரைகளை அப்படியே நீக்கிவிட்டு வெளியிடப்பட்ட பதிப்புகளும் இருக்கின்றனவாம். கதையைக் கதையாக மட்டும் படிக்க விரும்புகிற வாசகர்கள் நிறைய இருக்கிறார்களே! ஆனால் புனைவு வாசகர்கள் இது புதினமே அல்ல என்று வாதிடவும் கூடும். அந்த அளவுக்கு நேரடியாக வாசகர்களிடம் திகட்டத் திகட்ட வரலாறும் தத்துவமும் பேசிவிடுகிறார் தல்ஸ்தோய்.

மொழியும் பண்பாட்டுப் பின்னணியும்

நூல் முழுக்கவும் பிரெஞ்சு மொழியில் நிறையப் பேசப்படுகிறது. பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த போதும், ஒரு காலத்தில் அவர்களின் மொழியைப் பேசுவதைப் பெருமையாகவோ அம்மொழியை உயர்தட்டு மக்களின் மொழியாகவோ ரஷ்யர்கள் கருதியிருக்கிறார்கள். இப்போது உலகின் பல பகுதிகளில் ஆங்கிலம் பிடித்திருக்கிற இடத்தை அப்போது ஐரோப்பாவில் பிரெஞ்சு பிடித்திருந்திருக்கிறது.

நூல் முழுக்கவும் ரஷ்யாவின் உயர்குடியினர் தமக்குள் பிரெஞ்சும் வீட்டுப் பணியாளர்கள், விவசாயிகள் போன்றவர்களிடம் ரஷ்ய மொழியும் பேசுகிறார்கள். ஆனால் போர் தொடங்கியதும் அவர்களுக்குள் ரஷ்ய மொழியின் மரியாதையை உயர்த்த வேண்டும் என்கிற உணர்வு மேல் எழுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்யர்களின் நாட்டுப்பற்று உணர்வைத் தட்டியெழுப்ப ஸ்டாலின் இந்த நூலைப் பெருமளவில் அச்சிட்டு வெளியிட்டதாகச் சொல்லப்படுவதுண்டு.

புதினத்தில் கோமான் ரோஸ்தோப்சின் கூறியதாக வரும் வரிகள் பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரெஞ்சு மொழிக்கும் அந்த நேரத்தில் இருந்த மரியாதையையும் மோகத்தையும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன: “பிரெஞ்சுக்காரர்கள் நம் கடவுள்கள்: பாரிஸ் நம் சொர்க்க நிலம்.”

முக்கியக் கதாபாத்திரங்கள்

கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் என்றால் அது சில உயர்குடிக் குடும்பங்களும் அக்குடும்ப உறுப்பினர்களும் என்று சொல்லலாம். பெசுக்கோவ், பொல்கோன்ஸ்கி, ரோஸ்தோவ், குராகின் ஆகிய குடும்பங்கள்.

பியர் பெசுக்கோவ்: கதையின் உண்மையான தலைவன்

பெசுக்கோவ் குடும்பத்தின் பியர்தான் கதையின் தலைவன். கதை முழுக்கவும் அவனைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிறது என்றாலும் அவனைக் கதைத்தலைவனாக ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு நீண்ட நேரம் ஆகிறது. புதினம் போருக்குச் சற்று முன்பு ஓர் உயர்குடிக் குடும்பத்தின் இல்லத்தில் நடைபெறும் விருந்துக் காட்சியோடு தொடங்குகிறது. அந்த விருந்தில் பியர் அவ்வுயர்குடிக் குடும்பங்களில் பெரும்பாலானவர்களால் வெறுக்கப்படுபவனாகவே காட்டப்படுகிறான். வெளிநாட்டில் படித்து ரஷ்யா திரும்பும் பியர் அந்தச் சமூகத்தில் ஒட்ட முடியாமல் திணறுகிறான்.

அவனுடைய தந்தை தன்னுடைய உயிலில் தன் சொத்து முழுவதும் பியருக்கே போய்ச் சேரும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டுப் போய்ச் சேர்ந்து விடுகிறார். பியர் பெயரில் சொத்து வந்து சேர்ந்ததுமே அந்தச் சமூகத்தில் அவனுக்கான மரியாதை கூடத் தொடங்கி விடுகிறது. இது பணத்துக்கும் அதிகாரத்துக்கும் அன்றைய ரஷ்ய சமூகத்தில் இருந்த மரியாதையைத் தெளிவாக விளக்குகிறது.

பியர் தனக்கென்று தெளிவான நியாய அநியாயங்கள் கொண்டவனாக இருக்கிறான். எப்போதும் மெய்யியல் ஆன்மீகத் தேடல்களில் ஈடுபடுபவனாக இருக்கிறான். தல்ஸ்தோயின் சிந்தனைகள் பெருமளவில் பியர் வழியாகத்தான் நமக்கு வந்து சேர்கின்றன. அவனுடைய பயணம் குறிப்பாகக் கவர்ச்சிகரமானது. தவறான வழியில் பிறந்த மகனாக மகத்தான செல்வத்தில் தள்ளப்பட்ட பியர், ப்ரீமேசன், சமூகச் சீர்திருத்தம், துறவு என்று ஒவ்வொன்றாகத் தாவிப் போகிறான். ஒரு கட்டத்தில் போர்க்கைதியாகவும் சிக்கிக்கொள்கிறான்.

குராகின் குடும்பத்தின் ஹெலனை அவளுடைய தந்தை சூழ்ச்சியாகப் பியருக்குக் கட்டி வைக்கிறார். ஹெலன் ஒரு அறிவற்ற, கணவனை மதிக்காத, பல ஆண்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் பெண்ணாகக் காட்டப்படுகிறாள். இந்த உறவு பியரை மனரீதியாக நொறுக்குகிறது. பின்னர் அவளிடமிருந்து பிரிந்து போகும் பியர், ப்ரீமேசன் கூட்டத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் ஆறுதல் தேடுகிறான்.

ஆண்ட்ரே பொல்கோன்ஸ்கி: இயல்பான வீரன்

ஆண்ட்ரே பொல்கோன்ஸ்கிதான் கதைத் தலைவனாக இருக்குமோ என்று தொடக்கத்தில் தோன்றும். ஆண்ட்ரே நாட்டுக்காக உழைக்க வேண்டும், உயிர் கொடுக்க வேண்டும் என்று போருக்குச் சென்று, கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்கு அருகில் சென்று, தப்பி வந்து, போர் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்து, மீண்டும் போருக்குப் போய் உயிரிழக்கிறான்.

கட்டிய முதல் மனைவியைப் பேதை என்று எண்ணுகிறான். திருமண வாழ்வே பிடிக்காதவன் போல நடந்துகொள்கிறான். அவளுடைய உணர்வுகளுக்குச் சற்றும் மதிப்பளிக்காமல் நாட்டுக்காக உயிர் கொடுப்பதுதான் ஆண்மகனின் உயரிய கடமை என்று முதன்முறை போருக்குப் போய் உயிர் தப்பித் திரும்பும் போது, மகப்பேறு நேரத்தில் சிக்கல் ஏற்பட்டு மனைவி இறந்து போகிறாள்.

பெரியவர் நிக்கோலாய் பொல்கோன்ஸ்கி சொல்வதாக வரும் இந்த வரிகள் தல்ஸ்தோயின் பொன்மொழிகளில் ஒன்றாக இன்றும் சொல்லப்படுபவை: “மனிதர்களின் தீமைகள் அனைத்துக்கும் இரண்டே இரண்டு மூலங்களே உள்ளன—சோம்பலும் மூடநம்பிக்கையும், இரண்டே இரண்டு நல்லொழுக்கங்களே உள்ளன—சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும்.”

பெண் கதாபாத்திரங்கள்: மரியா, நடாஷா, ஹெலன்

ஆண்ட்ரேயின் தங்கை மரியா தீவிர கடவுள் பக்தி கொண்டவளாக இருக்கிறாள். அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பெண் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்கிற விதத்தில் நாம் எண்ணுகிற அளவுக்குச் செதுக்கியிருக்கிறார். “நாத்தனாள்கள் கொப்புளங்கள் கொடுப்பார்கள். ஆனால் இவள் ஓர் ஈயைக் கூடக் காயப்படுத்த மாட்டாள்” என்று மரியா பற்றி மரியா திமித்ரியேவ்னா என்பவர் சொல்வார்.

ரோஸ்தோவ் குடும்பத்து நடாஷா இனிமையானவளாக இருக்கிறாள். கதையில் வரும் பருவ வயது ஆண்கள் எல்லோருமே அவள் மீது ஆசை கொள்கிறார்கள். முதலில் ஆண்ட்ரே பொல்கோன்ஸ்கிக்கு மனதைக் கொடுத்துவிட்டு, வயதுக் கோளாறால் நிகழும் சில குழப்பங்களால் அதிலிருந்து பின்வாங்கி, பின்னர் போருக்குப் பிந்தைய காலத்தில் பியரைத் திருமணம் செய்து கொண்டு, ஹெலனால் துச்சமாக மதிக்கப்பட்ட அதே பியரை உயிருக்கு உயிராக நேசித்துக் குழந்தைகள் பெற்று வாழ்ந்து காட்டுகிறாள்.

குராகின் குடும்பத்து ஹெலன் எப்படி ஒரு பெண் இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகிறாள். அறிவற்ற மூடப்பெண்ணாக இருந்தும் கூட அவளோடு தொடர்பு வைத்துக் கொள்வதை ரஷ்ய உயர் சமூகத்து ஆண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இது ரஷ்ய உயர்குடிச் சமூகத்தின் மேலோட்டமான போலித்தனத்தை நமக்குத் தோலுரித்துக் காட்டுவதாக இருக்கிறது.

ரோஸ்தோவ் குடும்பம்: வீழ்ச்சியும் மீட்சியும்

கோமகன் ரோஸ்தோவ் குடும்பம் கடுமையான பணச் சிக்கலுக்கு உள்ளாகிறது. ஆடம்பரமான உயர்குடி வாழ்வுக்குப் பழக்கப்பட்டவர்கள் அதை விட்டுக் கொடுக்க முடியாமல் மேலும் மேலும் வாழ்வைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள். இந்தக் குடும்பத்தின் கடைசிப் பையன் பேட்யா, பதின்ம வயதிலேயே நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று போருக்குப் போய் உயிரிழந்து விடுகிறான்.

அவர்களோடே வாழ்கின்ற அனாதைப் பெண் சோனியா எதன் மீதும் விருப்புக் கொள்ள முடியாத, வெறுப்புக் கொள்ள முடியாத, தியாகமே அவள் வாழ்வின் ஒற்றைக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பது போல வாழ்கிறாள். அவள் மீதான நம் பரிதாப உணர்வைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

போர்க்காட்சிகள்: கண் முன் நிகழும் வரலாறு

முதற்தொகுதியிலேயே போர் தொடங்கி விடுகிறது. போருக்கும் குடும்பங்களுக்குள் நடைபெறும் நிகழ்வுகளுக்குமாகக் காட்சிகள் மாறி மாறி வருகின்றன. தல்ஸ்தோய் போர்க்காட்சிகளை திரைப்படத் துல்லியத்துடன் எழுதுகிறார். “அப்படியே கேமராவை இங்கே திருப்பு”, “அங்கே திருப்பு”, “உருப்பெருக்கிக் காட்டு”, “சுருக்கிக் காட்டு” என்பது போலக் காட்சிகளை விவரித்து இருக்கிறார்.

பியர் போரைக் காண்பதற்காகப் போர் முனையில் போய் உட்கார்ந்து கொண்டு, படைவீரர்களுக்கு அதை இதை எடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்கிறான். அதன் மூலம் போரில் நடப்பவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு பியருக்கு மட்டுமின்றி நமக்கும் கிடைக்கிறது.

நெப்போலியனின் படை மாஸ்கோவைப் பிடிக்கும் காட்சிகள் நூலின் முக்கியமான பகுதி. மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுவதும் நகரத்தைத் தீயிட்டுக் கொளுத்துவதும் அப்படியே நம் கண் முன்னால் கொண்டுவரப்படுகின்றன. மர வீடுகள் என்பதால், போரில் தோல்வியுற்று விடுவோம் என்று அஞ்சி, வெளியேறும் போது நகரங்களைத் தீயிட்டுக் கொளுத்தி விடுவது ஒரு போர் முறை உத்தியாக இருந்திருக்கிறது.

எரியும் மாஸ்கோவைக் கண்டு பொறுக்க முடியாத பியர் இதற்கெல்லாம் காரணமான நெப்போலியனைப் போட்டு தாக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கிறான். இந்த இடத்தில் இதுதான் கதையின் முக்கிய நோக்கமோ என்ற ஐயம் வருகிறது. ஆனால் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரெஞ்சு வீரனுக்கு எதிராகச் சண்டையிடும் போது பியரைப் போர்க்கைதியாகப் பிடித்துச் சென்று விடுவார்கள். அத்தோடு அந்த நோக்கம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிடும்.

தல்ஸ்தோயின் தீவிரப் பார்வை: வரலாறு எப்படி உருவாகிறது

மற்ற வரலாற்று நாவல்களிலிருந்து இதை வேறுபடுத்துவது, வரலாற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது குறித்த தல்ஸ்தோயின் சீற்றமான வாதம். இரண்டாம் முடிவுரை முழுக்க தல்ஸ்தோயின் கட்டுரை வடிவிலான எழுத்துக்களே. வரலாறு எழுதப்படும் முறையைக் கேள்வி கேட்கிறார். ஒரு தலைவனைச் சுற்றி வரலாற்றை உருவாக்குவது எவ்வளவு தவறு என்பதை விளக்குகிறார்.

பெரும் வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் ஒரு தனிமனிதனின் திறமையாலோ முடிவாலோ மட்டும் ஏற்படுபவை அல்ல, பல்லாயிரம் சிறு சிறு நிகழ்வுகளின் விளைவாகத்தான் ஒரு பெரிய நிகழ்வு நிகழும் என்று அடித்துச் சொல்கிறார். அறிவியல், மெய்யியல், கணிதம் என்று ஆழ்ந்த தர்க்கங்களை முன் வைக்கிறார். நுண்கணிதம், நிகழ்தகவு போன்ற கணிதக் கருத்துகள் எல்லாம் வருகின்றன. எத்தனை புனைவு நூல்களில் இதையெல்லாம் படிக்க முடியும்!

போரில் திட்டமிடுதல் என்பது சாத்தியமே இல்லை, அதுவும் குறிப்பாக போர் நடக்கும் இடத்தை விட்டுப் பல நூறு மைல் தொலைவில் இருப்பவர்கள் போட்டுக் கொடுக்கும் திட்டம் எதையும் போரில் செயல்படுத்தவே முடியாது என்கிறார். திட்டத்தில் உள்ள ஒன்று சொன்னது போல் நடக்காவிட்டால் அடுத்ததும் திட்டத்தின் படி நடக்க முடியாது. அந்த நேரத்துக்கு எது சரியான முடிவோ அதைக் களத்தில் இருப்பவர்கள்தாம் எடுக்க வேண்டும்.

நெப்போலியன் x குத்துசோவ்

நெப்போலியனை மொத்த ஐரோப்பாவும் எப்படிக் கொண்டாடினாலும் அவன் ஒரு மனித குலத்தின் எதிரி என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறார். பிரெஞ்சுப் புரட்சி நாயகனான நெப்போலியன், வெற்றிகரமாக முடிந்த அந்தப் புரட்சியோடு நிறுத்தாமல் நாடு பிடிக்கும் முழுநேர வேலையில் இறங்குவதுதான் அவனுடைய அழிவின் தொடக்கமாகிறது. ஐரோப்பா முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஐரோப்பியர்கள் அனைவருக்கும் உயர்வான வாழ்வைக் கொடுக்கும் உயரிய நோக்கத்துடன் இதைச் செய்வதாகத் தனக்குத் தானேயும் தன் மக்களுக்கும் அவன் சொல்லிக் கொள்கிறான்.

ஆனால் தல்ஸ்தோய் வைக்கும் கேள்வி: ஐரோப்பிய மக்கள் அனைவருக்கும் உயர்வான வாழ்வைக் கொடுக்க விரும்புகிறவன், இத்தனை போர்கள் மூலம் இத்தனை இலட்சம் வீரர்களை அழித்து அதைச் செய்வானா? அவன் உண்மையிலேயே நல்ல மனிதனா?

தொடர்ந்து வெற்றிகளையே கண்டு அதன் மூலம் தன்னைக் கடவுளுக்கு இணையான ஒரு மனிதனாக உணரத்தொடங்கி விடுகிறான் நெப்போலியன். அவனுடைய மக்களும் அப்படியே அவனை ஏற்றிவிடுகிறார்கள். இப்போது நடப்பதுதானே! தொடர் வெற்றி பெற்று விட்டாலே தன்னைக் கடவுளுக்கு இணையாகக் கருதிக் கொள்வதும் அதற்குச் சுற்றி இருப்பவர்கள் ஒத்து ஊதுவதும் இப்போதும் நடப்பதுதானே!

ரஷ்யப் படைத் தலைவர் குத்துசோவ் போரைத் தவிர்க்க முயன்றதற்காகப் பலராலும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டாலும், “அவர் ரஷ்ய வீரர்களின் உயிரை மதித்தவர்”, “மூடத்தனமாகப் பகையை வளர்த்து எதிரிக்கு இரண்டு கண் எனக்கு ஒரு கண் என்று இழப்பதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை” என்கிறார் தல்ஸ்தோய்.

ரஷ்யாவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று நெப்போலியன் முடிவு செய்தபோது அவனுடைய அழிவு தொடங்கிவிட்டது. ரஷ்யாவை வீழ்த்துவது எவருக்கும் எளிதல்ல என்பது இரண்டாம் உலகப் போருக்கு முன்பே ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனியொரு முறை இதைச் செய்ய முயலும் எவரும் கருத்தில் கொள்ள வேண்டிய வரலாறு இது.

எழுத்து நுணுக்கம்: கண் முன் வரும் காட்சிகள்

காட்சிகளாகச் சொல்லப்படும் பகுதிகள் முழுக்கவும் மிக மிக நேர்த்தியாக நுணுக்கமான விவரணைகளுடன் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துபவையாக இருக்கின்றன. வங்காளத்துக்கும் கேரளத்துக்கும் அடுத்தபடியாக ரஷ்ய இலக்கியத்தின் செல்வாக்கு பெருமளவு செலுத்தப்பட்ட மாநிலம் தமிழ்நாடு எனலாம். ஒரு காலத்தில் தமிழில் எழுதிய பெரும்பாலான எழுத்தாளர்கள் ரஷ்ய இலக்கியத்தின் தாக்கத்தால் எழுத வந்தவர்கள். அதிலும் முக்கியமாக தல்ஸ்தோய், தாஸ்தாயெவ்ஸ்கி ஆகிய இருவரைச் சொல்லலாம்.

தல்ஸ்தோயைப் படித்து எழுத வந்து, இன்று அந்த நுணுக்கத்தைத் தேர்ச்சி பெற்றுவிட்டவர்கள் என்று நாம் எண்ணுபவர்களை விடவும் நுணுக்கமான முறையில் பல காட்சிகளை தல்ஸ்தோய் விவரித்து இருக்கிறார். 

பிரன் நகரத்தின் நடைபாதை வீதிகளில் இளவரசன் ஆண்ட்ரே சத்தமிட்டு நடந்து சென்றபோது – முகாம் வாழ்க்கைக்குப் பிந்தைய ஒரு சிப்பாயை எப்போதும் கவர்ந்திழுக்கும் உயரமான கட்டிடங்கள், கடைகள், வீடுகள், தெரு விளக்குகள், நேர்த்தியான வண்டிகள், பெரிய சுறுசுறுப்பான நகரத்தின் சூழல் ஆகியவற்றால் சூழப்பட்டிருந்ததை உணர்ந்த போது – ஏற்கனவே இருட்டிவிட்டது.” இது போன்ற வரிகளில் யுத்தங்களுக்கு இடையில் போர் வீரர்கள் குடிமைச் சமூகத்துக்குத் திரும்பும் போது சந்திக்கும் மாற்றங்கள் விளக்கப்பட்டிருக்கிறது.

பண்பாட்டு எதிரொலிகள்: இந்தியாவும் ரஷ்யாவும்

இந்த நூலைப் படிக்கும் போது – 200 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்றாலும் கூட சில கதாபாத்திரங்களைப் பற்றிப் படிக்கும் போது – இன்று நம்மோடு வாழ்கிற பல மனிதர்களை நினைவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அடிப்படை மனிதப் பண்புகள் என்று இருப்பவை எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் ஒன்றுதானோ என்பதைத்தான் இந்தப் புதினம் நமக்கு நினைவூட்டுகிறது.

வரதட்சணை முறை, உயர் வர்க்கத்தினர் பிரெஞ்சு பேசுவதையும் ரஷ்ய மொழியை வேலைக்காரர்களுக்கு விட்டுவிடுவதையும், பெண்களுக்கு திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கை மரியாதைக்குரியதாக இல்லை என்ற நம்பிக்கையையும் பார்க்கும் போது இவை இன்றைய இந்தியப் பிரச்சனைகள் போலவே இருக்கின்றன. காலமாற்றம், இடமாற்றம் போன்றவற்றால் மனிதர்களின் பண்புகளில் வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என்றாலும், சமூக அமைப்புகளின் அடிப்படை இயக்கவியல் உலகளாவியது என்பதை தல்ஸ்தோய் இங்கு காட்டுகிறார்.

போரைப் பற்றிய கேள்விகள்

ஆண்ட்ரேயின் மனைவி கேட்டுவிட்டுப் போன இந்தக் கேள்விதான் நூல் முழுக்கவும் பெண்களின் கேள்வியாக நம்மை வதைக்கிறது: “எனக்குப் புரியவில்லை. ஆண்களால் ஏன் போர்கள் இல்லாமல் வாழவே முடியவில்லை என்பதை என்னால் சிறிதளவும் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”

ஆண்ட்ரேயின் தங்கை மரியா தன் தோழிக்கு எழுதும் கடிதத்தில் இப்படிச் சொல்லிப் புலம்புவாள்: “மனிதர்கள் ஒருவரையொருவர் கொல்லும் திறமையை மிகப்பெரிய தகுதியாகக் கருதுகின்றனர்.”

ஒரு காலம் வரும், அப்போது இனி போர்களே இரா” என்று பியர் சொல்லிவந்தான் என்பது தல்ஸ்தோயின் நம்பிக்கை போலப் படுகிறது நமக்கு. இதுதான் இன்றும் மனிதகுலத்தின் மாபெரும் கனவுகளில் ஒன்று. அவனுக்குப் பதில் அளிக்கும் விதத்தில், ஆண்ட்ரேயின் தந்தை அவனிடம் சொல்வார்: “ஆண்களின் நரம்புகளில் இருந்து இரத்தத்தை எல்லாம் வடித்து, அதற்குப் பதிலாக தண்ணீர் ஊற்றுங்கள், அப்போது இனி போரே இருக்காது!” இது ஒரு வகையில் போரற்ற மனிதகுலம் என்பது சாத்தியமே அற்றது என்று தல்ஸ்தோயும் நம்பினார் என்பதற்கான சான்று.

படை வாழ்க்கையின் உண்மைகள்

நாம் அரசதூதரல்ல, நாம் படைவீரர்கள், அதைவிட எதுவும் இல்லை. நம்மை மரணிக்க உத்தரவிடப்பட்டால், நாம் மரணிக்க வேண்டும். தண்டிக்கப்படுவதாக இருந்தால், அதற்கு நாம் தகுதியானவர்கள் ஆகிறோம்; அதை நாம் தீர்மானிக்க முடியாது” என்று பேசும் ரோஸ்த்தோவின் சிந்தனைதான் பெரும்பான்மைப் படைவீரர்களின் சிந்தனை.

ஒவ்வொரு தளபதியும், ஒவ்வொரு படைவீரனும் தன் அற்பத்தன்மையை உணர்ந்திருந்தான்; மனிதப் பெருங்கடலில் வெறும் ஒரு துளியாக இருப்பதை அறிந்திருந்தான், அதே சமயம், அந்த மிகப்பெரிய ஒன்றின் ஒரு பகுதியாக இருக்கின்ற தனது வலிமையையும் உணர்ந்திருந்தான்.” இந்த வரிகள் படைவீரர்களின் உள்மன ஓட்டத்தைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன.

பணியில் வெற்றி அடைவதற்கு உழைப்போ வேலையோ, அல்லது தைரியமோ, அல்லது விடாமுயற்சியோ தேவையில்லை, ஆனால் பரிசுகளை வழங்கக்கூடியவர்களுடன் எவ்வாறு ஒத்துப்போக வேண்டும் எனும் அறிவு மட்டுமே தேவை” என்று வரும். முதலாளி-தொழிலாளி உறவு போல, தலைவன்-தொண்டன் என்ற உறவு வந்துவிட்டாலும் இந்தச் சிக்கல்கள் வந்துவிடுகின்றன.

ஆன்மீகமும் ப்ரீமேசன்களும்

பியர் ப்ரீமேசன் கூட்டத்தில் போய்ச் சேர்கிறான். ப்ரீமேசன் பற்றிய விவரிப்புகள் அனைத்தும் சுவையாக இருக்கின்றன. இவ்வளவு விரிவாக அவர்களைப் பற்றிப் பேசிய முதல் உலக இலக்கிய நூல் இதுவாகத்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது. வாழ்வு பற்றிய அவர்களுடைய விளக்கங்களும் அவர்களுடைய வாழ்க்கை முறையும் பியருக்கு ஒரு விதமான தெளிவையும் வாழ்க்கை மீதான பிடிப்பையும் ஏற்படுத்துகின்றன.

மேசன் பெரியவர் ஒருவர் சொல்வார்: “உயர்ந்த அறிவு வெறும் காரணத்தின்மீது மட்டுமே கட்டமைக்கப்பட்டதல்ல. உயர்ந்த அறிவு என்பது ஒன்றே. உயர்ந்த அறிவு என்பது ஒரே அறிவியல் கொண்டது—முழுமையின் அறிவியல்—முழுப் படைப்பையும் அதில் மனிதனின் இடத்தையும் விளக்கும் அறிவியல்.”

ப்ரீமேசன்களின் ஏழு வழிகாட்டு நெறிமுறைகள்: கவனம், சீர்மையின் ரகசியங்களைக் காப்பாற்றுதல், சீர்மையில் உயர்ந்த நிலைகளில் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படிதல், நெறிமுறை, மனிதகுலத்தின் மீது அன்பு, தைரியம், தாராளம், சாவின் மீதான அன்பு. இதில் சீர்மை என்பது ப்ரீமேசன்.

பிடித்த சில வரிகள்

எளிமையும் நன்மையும் உண்மையும் இல்லாத இடத்தில் எந்தப் பெருமையும் இல்லை” என்கிற ஒரு வரி இந்தப் புதினத்தின் தலைசிறந்த வரியாகச் சொல்லப்படுவதுண்டு. இந்த வரியைக் கொண்டுதான் ஆகப்பெரும் ஆளுமைகளில் ஒருவராகக் கொண்டாடப்பட்ட நெப்போலியனை மனிதகுலத்தின் எதிரி என்ற இடத்தில் வைத்துக் கேள்வி கேட்கிறார் தல்ஸ்தோய்.

ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த நம்பிக்கையினால் மட்டுமே அன்றி மற்ற எதற்கும் போரிடவே மாட்டான் என்றால் போர்களே இரா” – இந்த வரி போரைப் பற்றிய இந்த நூலின் மிக முக்கியமான கருத்து. போரிடப் போகிற ஒவ்வொரு வீரனுக்கும் இதைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தினால் எப்படி இருக்கும்?

எப்போதும், எப்போதும் திருமணம் செய்து கொள்ளாதே, என் அன்பு நண்பனே! நீ உன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டாய் என்று உனக்கு நீயே சொல்லிக்கொள்ளும் வரை, நீ தேர்ந்தெடுத்த பெண்ணை நேசிப்பதை நிறுத்தும் வரை, அவளை அப்படியே அவள் இருக்கிறபடியே காணும் வரை திருமணம் செய்து கொள்ளாதே” என்று ஆண்ட்ரே பியரிடம் சொல்வான்.

நீங்கள் ஏன் இந்த நூலைப் படிக்க வேண்டும்?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடுமையான இலக்கண விதிகளுடன் கூடிய செய்யுள்கள் படைத்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நாம் என்ற போதும், 160 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு விரிவான, தெளிவான உரைநடை எழுத்துக்கள் நம்மிடம் இல்லை என்பதால் இதன் மீதான வியப்பையும் தவிர்க்க முடியவில்லை.

இந்தப் புதினத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நாடகங்கள் போடப்பட்டிருக்கின்றன. அப்படியானால் இதைப் புதினம் என்று மட்டும் சொல்ல முடியுமா? இதுதானே காப்பியம் என்பதற்கான வரையறை!

1200 பக்கங்களுக்கும் மேலான நீளம், சிக்கலான கதாபாத்திரங்கள், மெய்யியல் விவாதங்கள் – இவையெல்லாம் வாசிப்புக்குத் தடைகளாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் அனுபவிக்கப் போவது வெறும் கதை அல்ல. வரலாறு எப்படி உருவாகிறது, மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், போர் என்றால் என்ன, அமைதி என்றால் என்ன என்பதைப் பற்றிய ஆழமான புரிதல்.

200 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்யாவில் நடந்ததைப் படிக்கும் போது, இன்றைய இந்தியாவில் நடப்பவற்றையும் நினைவு கூர்வீர்கள். மனித இயல்புகள், சமூக அமைப்புகள், அதிகார விளையாட்டுகள் – இவை காலம் கடந்து நிற்பவை என்பதை நமக்கு உணர்த்துகிறது இந்நூல்.

எளிய கதையும் தெளிவான முடிவுகளும் வேண்டுமானால், அதற்கான இடம் அல்ல இது. ஆனால் இலக்கியம் என்ன செய்ய முடியும் என்பதை அதன் மிக உயர்ந்த வடிவில் அனுபவிக்க வேண்டுமானால், பொறுமையுடன் இதைப் படியுங்கள். வாசித்து முடித்தபின் நிச்சயம் உங்கள் மீதே பெருமை கொள்வீர்கள்.

மனித வரலாற்றின் பெரும் நகர்வுகள் முக்கியம்தான். ஆனால் நாம் எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும், எதை மதிக்க வேண்டும் என்பது பற்றி நாம் எடுக்கும் சிறிய முடிவுகளும் அதே அளவு முக்கியம். அவையும் – அல்லது அவையே – வரலாற்றின் பெருநகர்வுகளைத் தீர்மானிப்பவை எனும் காவியம் இது.

***

பாரதிராஜா – தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com

தலையங்கம்

0

உணர்வுசார் கதைகளும் கதைகளின் உணர்வுகளும்

கதைகளை அரசியல்சார் கதைகள் மற்றும் உணர்வுசார் கதைகள் என்று பொதுவாசிப்பில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இராண்டையும் இருவேறு துருவமாக அர்த்தப்படுத்தியதில் ஒன்றில் மற்றொன்றைக் காணும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். அரசியல் கோட்பாடுகளின் பின்புலத்தில் குடும்பத்தின் பங்கும் சேர்ந்தே செயல்படுகிறது. குடும்பம் அரசியல் கோட்பாடுகளின் எளிய முன்மாதிரியாக அமைகின்ரன. ஆதிக்கத்தின் வேர்களும், மரபார்ந்த சாதியப் பிடிமானங்களும், தந்தை எனும் அமைப்பியல் ரீதியான தலைமைக் குணமும் அரசியல் கோட்பாடுகளின் சிற்றுருவங்களாக அமைகின்றன. அதனுள் முளைக்கும் காதல் அதிகார கட்டமைப்பை உலுக்குவதாக அமைகிறது. அதன் பரிணமித்த தடமும், பண்பாட்டில் அதன் இடமும், மருவி நிற்கும் அதன் வெளிப்பாடும் விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டியதாகிறது. வரலாற்றில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து காதல் கதைகளும் அரசியல் கதைளாக மீள்வாசிக்கப்பட வேண்டியவையாகின்றன. தனிமனிதனின் சிக்கல் குடும்பம் சார்ந்த சிக்கலாகவும் மற்றமைகளின் கதைகள் சமூக/அரசியல் கதைகளாகவும் அர்த்தப்படுத்தப்படுகின்றன. காதல் தனிமனிதனின் சிக்கலோ துய்ப்போ அல்ல. மற்றமைகளின் மீதான அபிமானத்தை தன்னைக் கடந்து பேசும் கோட்பாடாக காதல் அமைகிறது. அதன் கதைகள் பிற சமூக அமைப்பில் ஊடுருவும் தன்மை கொண்டவையாகின்றன. காதல் இரண்டு தனி மனிதர்களின் உணர்வுசார் அனுபவங்களாக தொடங்கினாலும் குடும்பம் எனும் சமூக அமைப்பிற்குள் நுழையும்போது அவை சமூக அனுபவமாக மாறிவிடுகின்றன. குடும்பம் எனும் அமைப்பின் மீதான உளவியல்சார் அச்சம் அதனுள் நுழைவதற்கு தடையாகவும் ஆகிறது. அதன் மீது வைக்கப்படும் உரையாடல்களும் விமர்சனங்களும் பார்வைகளும் வேறுபாடுகள் நிறைந்த சமூகத்தை கூர்ந்து அவதானிப்பதற்கான வாய்ப்பாக அமைகின்றன.

யாவரும் பிப்ரவரி – மார்ச் இதழில் காதலை சிறப்பு பகுதியாக்க திட்டமிட்டோம். நிர்மல் மற்றும்  பாரதிராஜாவின் கட்டுரைகள் சமுகத்தில் காதலின் தாக்கத்தையும் தடத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது. பல்வேறு நாகரிகங்களில் பயணித காதலின் பரிணாமத்தை பேசுகின்றன. தி கு இரவிச்சந்திரனின் கட்டுரை உளவியலாளர்களின் பார்வையில் காதலின் நுட்பம்ங்களை அலசுகின்றன. நமக்குள் இருக்கும் காதல் சார்ந்த புரிதல்களுக்கு கூடுதல் வெளிச்சத்தை பாய்ச்சுகின்றன.

இந்த இதழ் முதல் தொடக்கமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் எழுத வந்த எழுத்தாளர்களுக்கு ஓர் அறிமுக நேர்காணலை எடுக்க திட்டமிருக்கிறோம். ஒரே கேள்விகளுக்கு கிடைக்கும் எழுத்தாளர்களின் பதில்கள் சமகால இலக்கியத்தின் பன்முகதையும், அதன் பரந்துபட்ட வீச்சையும் அறிய உதவும் என்று எண்ணுகிறோம். இந்த இதழில் ப்ரிம்யா கிராஸ்வின் மற்றும் ஐசக் பேசில் எமரால்ட் ஆகிய எழுத்தாளர்களின் நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. சமகாலத்தை உணர்வு ரீதியாக முன்வைக்கும் ப்ரிம்யாவின் புனைவும், படிமமாக முன்வைக்கும் ஐசக்கின் பார்வையும் இரண்டு உலகத்தை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

இதழில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் அனைத்தும் உணர்வுசார் இலக்கியத்தின் மீதிருக்கும் நமது மதிப்பீடுகளை சலனப்படுத்துவதாக அமைந்திருப்பது ஓர் தற்செயல் நிகழ்வு. பங்களித்திருக்கும் அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்களது அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

காதலெனும் குன்றா வளம்

0

நிர்மல்

ண்மையில்… காதல் குறித்து நமக்கு என்னதான் தெரியும்?”

அந்தக் கேள்வியின் நுனியிலிருந்துதான் இந்தப் பயணம் தொடங்குகிறது..

காதலென்பது…யாதெனில்…..

“காதல்.. மனிதர்கள் உருவாக்கிய ஒரு சமூகக் கட்டுமானம்” என்ற கருத்து உண்டு. சமூகம் சொல்லிக் கொடுத்தது, திரைப்படங்கள் அலங்கரித்தது, பாடல்கள் நம்முள் ஊற்றியது, இலக்கியங்கள் வார்த்தைகளால் வார்த்தது, கதைகள் கற்பனையால் ஜோடனை செய்தது—இவை எல்லாம் சேர்ந்தே காதல் என்கிற புரிதல் உருவானது போலத் தோன்றுகிறது. ஆனால் கவனித்துப் பார்த்தால், இவை எதுவும் காதலை உருவாக்கவில்லை; அதை விளக்க முயன்ற முயற்சிகள்தான் இவை எல்லாம். திரைப்படங்கள் காதலைப் பிறப்பிக்கவில்லை, ஏற்கெனவே இருந்த ஒன்றை காட்சியாக மாற்றின. பாடல்கள் மனத்தில் காதலை ஊற்றவில்லை, மனதில் ஓடியதை ஒலியாக்கின. இலக்கியங்கள் காதலை கண்டுபிடிக்கவில்லை, அதை வார்த்தைகளுக்குள் பிடிக்க முயன்றன. கதைகள் காதலை ஜோடனை செய்யவில்லை, அதைப் புரிந்து கொள்ள மனிதன் எடுத்துக் கொண்ட பாதைகள்தான் அவை. ஒரு விஷயம் சொல்லப்படுவதால் அது உருவாகாது; அலங்கரிக்கப்படுவதால் அது பிறக்காது. மழையைப் பற்றி கவிதை எழுதலாம், ஆனால் கவிதையால் மழை பெய்யாது. அதுபோலவே, சமூகம் காதலை உருவாக்கவில்லை; காதலைப் பற்றி பேசுவதற்கான மொழிகளை மட்டும் உருவாக்கியுள்ளது.

“காதல் என்பது வெறும் ஹார்மோன்களின் ரசவாதம், ரசாயன மாற்றங்களின் லீலைகள், மூளைக்குள் நடக்கும் விசித்திர கண்ணாபூச்சி விளையாட்டு” என்றொரு விளக்கம் உண்டு. டோபமைன், ஆக்சிடோசின், செரோட்டோனின் என்று சில பெயர்களை உச்சரித்தவுடன், காதல் முழுவதும் அங்கேயே அடங்கிவிடும் போலத் தோன்றுகிறது. ஆனால் அதே ஹார்மோன்கள் பயம், கோபம், மகிழ்ச்சி, அடிமை, உற்சாகம் போன்ற பல அனுபவங்களிலும் சுரக்கின்றன. ரசாயன மாற்றங்கள் இல்லாமல் எந்த மனித அனுபவமும் சாத்தியமில்லை என்பதும் உண்மை. அதனால் ரசாயன மாற்றங்களே அந்த அனுபவம் ஆகிவிடுவதில்லை. ரசாயனம் காதலுக்கே உரியது அல்ல. அது வாழ்க்கை முழுவதும் உடன் வரும் ஒரு அடித்தளம் மட்டுமே.

மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதை விவரிக்க முடியும் என்பதால், காதலை முழுமையாக விளக்கிவிட்டதாகக் கூற முடியாது. ஒரு இசையை கேட்டபோது மூளையில் எந்த நரம்பு எரிகிறது என்பதைச் சொல்லலாம்; ஆனால் அந்த இசை ஏன் ஒருவரை அழ வைக்கிறது, இன்னொருவரை அமைதியாக்குகிறது என்பதற்கு அது போதாது. அதுபோலவே, மூளையில் நடக்கும் செயல்களை வரைபடமாகக் காட்டுவதால், காதலின் ஆழத்திற்கும் அதன் மாற்றுத்திறனுக்கும் முழுமையான விளக்கம் கிடைத்துவிடாது.

“காதல் இன்பம் துய்க்கும் ஒரு வழிமுறை” என்றொரு புரிதலும் உண்டு. காதலை சந்தோஷம், சிலிர்ப்பு, நிறைவு என்று மட்டும் பார்க்கும் பார்வை அது. ஆனால் காதல் அப்படியொரு வழிமுறை மட்டுமே என்றிருந்தால், அதில் இவ்வளவு வலி, பிரிவு, தவிப்பு, இழப்பு ஏன் இடம் பெற்றிருக்கும்? வள்ளுவரின் காமத்துப்பால் அதிகாரங்களில் ஒலிப்பது இன்பம் மட்டுமா? வள்ளுவரின் காமத்துப்பால் அதிகாரத்தின் குறள்கள் முழுக்கக் காதலின் வலிகளே ஒலிக்கின்றன. ரண வேதனைகள், கண்ணீர், கவலை, பிரிவாற்றாமையே மேலோங்குகின்றன. அதன் அதிகாரங்களின் தலைப்புகளே இதற்கு சாட்சி. பிரிவாற்றாமை (பிரிவைத் தாங்க முடியாமை), படர்மெலிந்திரங்கல் (காதல் நோயால் மெலிந்து வாடுதல்), கண்விதுப்பழிதல் (கண்கள் வாடுதல்), பசப்புறுபருவரல் (நிறம் மாறுதல்), தனிப்படர்மிகுதி (தனிமையில் வருந்துதல்), நினைந்தவர்புலம்பல் (நினைத்து வருந்துதல்), கனவுநிலையுரைத்தல் (கனவு கண்டு வருந்துதல்), பொழுதுகண்டிரங்கல் (பிரிவுப் பொழுதில் வருந்துதல்), உறுப்புநலனழிதல் (உடல் உறுப்புகள் வாடுதல்), நெஞ்சொடுகிளத்தல் (நெஞ்சோடு பேசுதல்), நிறையழிதல் (மனம் கலங்குதல்), அவர்வயின்விதும்பல் (அவரைப் பிரிந்து வருந்துதல்), குறிப்பறிவுறுத்தல் (அவருக்குத் தன் நிலையை உணர்த்துதல்), புணர்ச்சி விதும்பல் (மீண்டும் இணைதலை விரும்புதல்), நெஞ்சொடுபுலத்தல் (நெஞ்சோடு கோபித்தல்) இன்பம் காதலில் ஒரு அலைபோல் வந்து செல்லலாம்; ஆனால் காதலின் மையம் அது அல்ல. இன்பம் தேடும் கருவியாகக் காதலைப் பார்க்கும்போது, காதல் மனிதனை எப்படிச் சிதைக்கும், மாற்றும், ஆழமாக உலுக்கும் என்பதற்கு விளக்கம் கிடைப்பதில்லை. அதனால் காதல், இன்பம் துய்க்கும் ஒரு வழிமுறை அல்ல.

“Love is blind” என்று சொல்வது முதலில் அழகாகவும் கவிதை போலவும் தோன்றலாம். ஆனால் அந்தச் சொற்றொடர், பார்வையின்மை என்றால் அறிவின்மை என்ற தவறான புரிதலின் அடிப்படையில் உருவானது. பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் பலர், அறிவுத்திறனிலும் உணர்வுத்திறனிலும் எவ்வளவு ஆழமாகவும் கூர்மையாகவும் இருப்பதை நாம் தினம் தினம் அனுபவத்தில் காண்கிறோம். பார்வை அறிவின் ஒரே வாயிலல்ல, அது பல வழிகளில் ஒன்றே. இந்தச் சொற்றொடர், உடல் பார்வையை மட்டுமே அறிவின் மையமாகக் கருதும் ஒரு குறுகிய எண்ணத்தையும், அதே நேரத்தில் அழகு, தோற்றம் போன்ற வெளிப்படையான அம்சங்களைத் தாண்டிய உறவைச் சுட்டிக்காட்டும் முயற்சியையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், காதலுக்கு கண் உண்டு.. அது பார்க்கிறது—அழகை அல்ல, தோற்றத்தை அல்ல, உடலை அல்ல, மாற்றங்களை, மௌனங்களை, சின்னச் சலனங்களை. காதல் தீர்ப்பை ஒத்திப் போடலாம். சில குறைகளைக் கணக்கில் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் அது பார்ப்பதை நிறுத்துவதில்லை. மாறாக, காதல் வேறு விதமாகப் பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த “வேறு விதமானப் பார்வை”யை பார்வையற்றதாக சித்தரிப்பது தகாதலின் கவனத்தையும் அறிவையும் தவறாகப் பெயரிடுவது போல.

“Love is God” என்றார்கள்—விளக்கம் தர வேண்டிய அவசியமே இல்லாத ஒன்று என்ற பொருளில். ஆனால் நம்புகிறவர்களிடம் மட்டுமே வேலை செய்யும் ஒன்றுதான் இறை. நம்பவில்லை என்றால், அதற்கு அங்கே இடமில்லை. காதல் அப்படியல்ல. காதல் என்றால் என்ன என்று தெரியாதவர்களிடமும் அது பெருகுகிறது, பிரவாகமாகிறது. நம்பிக்கை இல்லாத இடத்திலும், விளக்கம் இல்லாத மனங்களிலும் அது வேலை செய்கிறது. அப்படியென்றால் காதல் இறை அல்ல.

“காதல் அழிக்கும்” என்றார்கள். காதலைப் பிடித்துக்கொண்டு மீண்டு வந்தவர்களை காணாதவர்களின் பிதற்றலே அது. காதல் மனிதர்களை மீட்டிருக்கிறது, வீழ்ச்சியிலிருந்து எழ வைத்திருக்கிறது, வாழ்க்கையை மறுபடியும் தொடங்கச் செய்திருக்கிறது. “காதலுக்கு மரியாதை வேண்டும்” என்ற கூற்று, காதலைப் புரிந்து கொண்டதன் விளைவு அல்ல. அதைப் புனிதமும் அதிகாரமும் கொண்டு பார்க்கப் பழகிய சமூகப் பழக்கத்தின் விளைவு மட்டுமே. அதன் தொடர்ச்சியாகத்தான் “காதல் சாத்வீகமானது” என்றார்கள். ஆனால் காதலால்தான் பல வன்முறைகள் அரங்கேறுகின்றன என்ற இன்னொரு பக்கம், அந்தச் சாத்விகக் கற்பனையை உடனே கரைத்துவிடுகிறது.

ஒன்றாய் வாழ, இனப்பெருக்கம் செய்ய, துணை ஒன்றைத் தேட—இவையே காதலுக்கான காரணங்கள் என்றார்கள். ஆனால் காதல் இல்லாமலேயே இனப்பெருக்கம் நடந்துகொண்டு இருக்கிறது என்பதே எளிய உண்மை. விந்தணுவும் கருமுட்டையும் சேர்ந்தால் உயிர் தொடங்கிவிடுகிறது. அதற்குக் காதல் கட்டாயமில்லை. காதலோடு கலவை நிகழும்போது அது பேரின்பமாக மாறலாம்—அது மனித அனுபவத்தின் ஆழம் சேர்க்கிறது. ஆனால் காதலின்றியும் கலவை சாத்தியம் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அப்படியானால், காதல் இனப்பெருக்கத்தின் நிபந்தனை அல்ல.

இந்தப் பட்டியலை இன்னும் நீட்டித்துக்கொண்டேச் செல்ல முடியும். ஒவ்வொரு கருத்துக்கும் அதற்கு நேரெதிரான இன்னொரு கருத்தை, மிக நேர்த்தியாக, ஒன்றுக்கு ஒன்று எதிரே அடுக்க முடியும். அப்படியென்றால் காதல் என்றால் என்ன? எந்த ஒரு பிடிமானத்துக்குள்ளும் முழுவதுமாக அகப்படாமல், அதே நேரத்தில் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் எப்படியோ கலந்து கொண்டே இருக்க வேண்டியதாகக் கருதப்படும் இந்தக் காதல், உண்மையில் என்னவாக இருக்க முடியும்? அதைத் தெளிவாக வரையறுத்து, “இதுதான்” என்று சொல்லிவிட முடியாது என்பதே ஒரே உறுதி.

காதல் என்பது மனித அனுபவம் மட்டுமா என்றால், அதுவுமில்லை. மனிதன் பெயரிட்டதும் விளக்க முயன்றதும்தான் காதல். ஆனால் அதன் செயல் மனிதனைத் தாண்டி இயற்கை முழுவதிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தென் துருவத்தின் கொடியப் பனிக்குளிரில், பென்க்யுன் பறவைகளின் உலகத்தில், ஆண் பறவை தன் இணை இட்ட முட்டையைக் கால்களின்மேல் வைத்து, புயலும் பனியுமாகிய உறையும் குளிரை எதிர்கொண்டு அடைகாக்கிறது. அதே நேரத்தில், பெண் பறவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவு கடந்து கடலை நோக்கி இரை தேடிச் செல்கிறது — நாட்கள் அல்ல, மாதங்கள்! அங்கே எந்த மொழியும் இல்லை, எந்த வாக்குறுதியும் இல்லை, “நான் உன்னை நேசிக்கிறேன்” என்ற சொற்றொடரும் இல்லை. ஆனால் அந்தக் காத்திருப்பு, அந்தத் தாங்குதல், அந்தத் தியாகம் — இவை அனைத்தும் காதல் அல்ல என்று சொல்வதற்கு வேறு எந்த அளவுகோல் இருக்க முடியும்? இங்கே காதல் உணர்ச்சியாக அல்ல, பொறுப்பாக, தொடர்ச்சியாக, உயிர் காக்கும் செயல் வடிவில் இயங்குகிறது. மனிதன் காதலை புரிந்து கொள்ள முயல்வதற்கு முன்பே, இயற்கை அதை வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது.

காதல் என்றால் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. குத்துமதிப்பாக—இதுதான், அதுதான், இப்படித்தான், அப்படித்தான் என தத்தக்காபித்தகாவென ஏதோதோ உருவகங்களைச் சேர்த்து, நமக்குள் காதல் இதுதான் என நம்பிக்கையுடன் வாழ்கிறோம். காதலை முழுமையாக அறிந்துவிட்டோம் என்ற இடத்திலிருந்துதான், காதலைக் கொள்கையாக மாற்றுகிறோம். சடங்குகள், தியாகங்கள், எதிர்பார்ப்புகள் என அளவுகோல்களைக் கொண்டு அதை அளக்க முயல்கிறோம். அதன் விளைவுதான் ஏமாற்றமும் எரிச்சலும். ஆனால், “எனக்குக் காதல் என்னவென்று தெரியாது” என்று நாம் ஒப்புக்கொள்ளும் கணத்தில் அதிசயங்கள் நடக்கத் துவங்குகின்றன. காதல் குறித்து நாம் எடுக்கும் முடிவுகள் அறிவிலிருந்து வருவதில்லை, அவை ஊகங்களின் மேல் நிற்கின்றன என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. அப்பொழுது, காதல் ஒரு கொள்கையாக இல்லாமல் ஒரு “பொறுப்பாக” மாறுகிறது. கொள்கை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என முன்கூட்டியே நிபந்தனை விதிப்பது. பொறுப்பு என்பது – எதிரில் இருப்பவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதைக் கவனிப்பது. நாம் செய்யும் செயல் அவருக்குப் பாதுகாப்பா அல்லது சேதமா என்பதை யோசிப்பதே அந்தப் பொறுப்பு. நம் உணர்வுகளைச் சொல்லும் அதே உரிமை, அவரின் எல்லைகளை மதிப்பதிலும் இருக்கிறது. அங்கே காதல் யாரையும் கட்டளையிடுவதில்லை, எதையும் அளப்பதில்லை.

எதிரில் இருப்பவரின் அக உலகம் நமக்கு முழுமையாகத் தெரியாது என்பதை உணர்ந்து, அவரோடு கவனமாகத் தடம் பதிப்பதே காதலின் நெறிமுறை. எனவே, காதல் என்பது எல்லாம் தெரிந்து செய்யும் செயலல்ல, ஒன்றும் தெரியாத நிலையிலும், மிகுந்த பொறுப்போடும் நெறியோடும் ஒருவரோடு ஒருவர் இணைந்து நடக்கும் பயணம்.

காதல் குறித்து நமக்குச் சொல்லப்பட்ட, காட்டப்பட்ட, வாசிக்கப்பட்டவைகள் அனைத்தும் தவறு அல்லது முழுமையான விளக்கமல்ல என்ற புரிதல், காதலைக் குறித்த முடிவுகளை நிராகரித்து முடிவில்லாத சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில், அதன் தன்மையை—அது மனித வாழ்க்கையில் எப்படிச் செயல்படுகிறது என்பதை—கொஞ்சம் பணிவுடன், அருகிலிருந்து கவனித்துப்

பார்க்கும் சாத்தியத்தையும் உருவாக்குகிறது. புதியதாகக் கற்பனை செய்யும் சுதந்திரத்தையும் தருகிறது.

என்றோ நினைவில் வாழும் நம் நேசத்துக்குரியவரின் முகமும் குரலும், காலங்களைத் தாண்டி திடீரென நம் நினைவுக்குள் எழுகின்றன. கடந்த காலமாக அவை உறங்குவதில்லை. அந்த நினைவுகள் இன்று நமது செயல்களை மாற்றக் கூடியவை. இன்று எதைச் சொல்வது, எதைத் தவிர்ப்பது, எங்கே நிற்க வேண்டும் என்பதையே தீர்மானிக்கின்றன. நாளை சந்திக்கப் போகும் காதலியை நினைத்தாலே உள்ளம் சிலிர்க்கிறது, அதே நேரத்தில் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்ற எண்ணம் நெஞ்சை அழுத்துகிறது. இன்னும் நிகழாத ஒன்றுக்கான உணர்வு, இன்றையத் தருணத்தை மாற்றுகின்றது. இது காலத்துக்கும் தூரத்துக்கும் அப்பால் செயல்படும் காதலின் விசித்திரமான நடை. காலத்தின் நேர்க்கோட்டை (Linear Time) வளைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அதனால்தான், இறந்துபோன ஒருவரின் நேசம் இன்றும் நம்மைச் செயல்படுத்த வைக்கிறது. இன்னும் பிறக்காத ஒரு உயிருக்காக நாம் தியாகம் செய்யத் துணிகிறோம். இது வெறும் உணர்ச்சி வேகம் அல்ல, இது ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்குப் பாயும் ஒரு ஆற்றல் பரிமாற்றம். நம் நேசத்துக்குரியவர் கடந்த காலத்தில் மரணித்திருக்கலாம். அல்லது இதோ, பூமியின் ஏதோ ஒரு பாலைவனத்தில் நமக்காகப் பயணித்துக் கொண்டிருக்கலாம். இல்லை, மிக அருகில் அடுத்த அறையிலேயே கூட அமர்ந்திருக்கலாம். நம்மிடையே இருக்கும் தூரங்களும் காலங்களும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அவர்கள் அங்கே இருக்கிறார்கள், அவர்கள் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற அந்த ஒற்றை உறுதிப்பாடு போதும்—அனைத்துத் தடைகளும் தகர்ந்து போகின்றன. மரணம் என்பது காலத்தால் ஏற்படும் பிரிவு, பாலைவனம் என்பது தூரத்தால் ஏற்படும் பிரிவு. ஆனால், இந்தப் பிரிவுகள் அனைத்தும் உடலுக்கு மட்டுமே. நினைவுகளில் நாம் சேமித்து வைத்திருக்கும் அந்த அழுத்தமான உணர்ச்சிச் சித்திரங்கள், அவர்களை எப்போதும் நம் நிகழ்காலத்தில் வைத்திருக்கின்றன. பௌதீக விதிகள் அவர்களை நம்மிடமிருந்து தள்ளி வைக்கலாம், ஆனால் காதல் எனும் விசை, அந்த விதிகளை வளைத்து அவர்களை நமக்கு நெருக்கமாக்குகிறது.

காதலை ஒரு இயற்கை வளம் போலக் கருதலாம். அது நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. அது வெறுமனே உண்டு, நீரைப் போல, நெருப்பைப் போல. பயன்படுத்தினால் அர்த்தம் பெறுகிறது—இரு உள்ளங்கள் இணைகின்றன. உள்ளங்களைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. ஒன்றாய் ஏதோ செய்யத் தூண்டுகிறது. பிழையைப் பொறுக்கச் செய்கிறது, மன்னிக்க அழைக்கிறது, கனிவாக்குகிறது. உடலுக்குள் இடம் தருகிறது. காய்த்துக் கனி தர வைக்கிறது. இந்த வளம் அரிதானதல்ல. எப்போதும், எங்கும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஏதோ பெரும் சக்தியின் முடிவிலா கொடையாகக் கூடக் கற்பனை செய்து கொள்ளலாம். இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த வளத்தை சேமிக்க முடியாது, உரிமையாக்கவும் முடியாது. ஆனால் அணுக முடியும், பயன்படுத்த முடியும். காற்றாடி சுழலும் போது நம்மை சுற்றியுள்ள காற்றை உணர்வதைப் போல நம் நேசத்திற்குரியவர்களுக்காகச் செய்யும் ஒவ்வொரு காரியமும் காதலை, தென்றல் போல உணரச் செய்யும். இந்த வளத்தின் உரிமை நம்மிடமில்லை, அதன் பயன்பாட்டின் பொறுப்பு மட்டும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவருக்காகக் கவலைப்படுவது, அவருக்காகக் காத்திருப்பது, கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பது, ஒரு செயலுக்குப் பொறுப்பேற்பது—இவை அனைத்துமே காதலின் வெவ்வேறு செயலாக்கங்கள். காதல் அங்கே உணர்வாக மட்டும் நிற்கவில்லை, அது செயலில் இறங்குகிறது, மனிதனை நகர்த்துகிறது. இந்தச் செயல்களினூடாகத்தான் காதல் நேரத்தையும் தூரத்தையும் தாண்டி அர்த்தமுள்ள ஒன்றாக மாறுகிறது. காதல் உணர்வாகத் தொடங்கலாம். ஆனால் உணர்வாக மட்டுமே இருந்தால், அது நினைவாக மங்கிவிடும். செயலில் இறங்கும் போது தான் காதல் காலத்தைக் கடக்கிறது. அதனால் காதல் “என்ன உணர்கிறேன்?” என்ற கேள்வி அல்ல; “இந்த உணர்வால் நான் என்ன செய்கிறேன்?” என்பதே கேள்வி. கரையில் நின்றபடி கடலை விவரிக்க முயலும் ஒருவனின் தவிப்பைப் போலவே,  இவை ஒவ்வொன்றும் காதலின் ஒரு துளியை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தப் பெருங்கடலையும் விளக்கிவிட முடியுமா என்கிற சிறு முயற்சிதான் இது. அதனால் அவசரப்பட்டுக் காதலுக்குப் புது விளக்கம் சொல்லிப் பெயரிட்டு முடிக்கவும் மனம் வரவில்லை—ஏனெனில் காதல் அப்படித்தான் வேலை செய்கிறது. காதலைப் பற்றிப் பேசுவதை விட, அந்தப் பெருங்கடலில் இறங்கி நனைவதே அதன் சாரத்தைப் புரிந்துகொள்ளும் ஒரே வழி. நாம் காதலை வரையறுக்க வேண்டிய அவசியமில்லை, காதலின் வழியே நம் வாழ்க்கையை வரையறுத்துக் கொண்டாலே போதுமானது.

***

நிர்மல் – தூத்துக்குடி மாவட்டம் ‘ஏரல்’ எனும் ஊருக்கு அருகில் உள்ள ‘திருவழுதிவிளை’ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கத்தார்’ தேசத்தில் ‘பெட்ரோ கெமிக்கல்’ துறையில் பணி செய்து வருகிறார். ‘ காணாமல் போன தேசங்கள்’, ‘நிலமும் பொழுதும்’, ‘குன்றாவளம்’ , “சகாக்கள் “ , “ மக்களாகிய நாம்”, “அறியாத உறவுகள்”, “இடுக்கண் படினும்” ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: nirmalcb@gmail.com

தமிழ் மொழிக்கு கதையாடல் தொழில்நுட்பங்கள் மட்டுமே தேவை!

0

நேர்காணல்: ஐசக் பேசில் எமரால்ட்
நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி

ழுத்தாளர்களுக்கான அறிமுக நேர்காணல் வரிசையில் ஐசக் பேசில் எமரால்டுடன் உரையாடுகையில் அவர் உருவாக்கும் படிமங்களின் பின்னுள்ள சமூக – அரசியல் – கோட்பாட்டு பார்வையை அணுக்கமாக புரிந்துகொள்ளமுடிகிறது. ஐசக் பேசில் எமரால்ட் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். சமகால எழுத்து சூழலில் தனக்கென பிரத்யேகமான சொல்முறைகளையும், தொடர்ச்சியாக சோதனை முயற்சிகளாலான கதைகளையும் எழுதிவருபவர். சர்ரியல் பாணி சிறுகதைகள் இவருடைய கதையுலகின் தனித்த முத்திரை. சர்ரியல் படிமங்களின் வழியே சூழலியல், அரசியல், பண்பாடு ஆகிய அம்சங்களை வாதத்திற்கு உட்படுத்துபவர். இதுவரை ‘அபினி’ எனும் நாவலும், ‘பற்றி எரியும் நரம்புகள்’, ‘மின்மினிப்பூச்சியின் மினியேச்சர்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

  1. கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்கியது ?

தமிழ் துணைப்பாடம் மூலம் நேரடி பரிட்சயம் ஆகியிருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் வாசிப்புக்குள் நுழையும் ராணி காமிக்ஸ், விகடன் குமுதம் உள்ளிட்ட பத்திரிக்கைகள் வழியாக வாசிப்பு பழக்கம் ஆரம்பித்திருந்தது. வாசிப்பு சூழல், கலைசெயல்பாடுகள், வழிகாட்டிகள் எதுவும் இல்லாத பின்புலம் என்பதால் ஒவ்வொன்றையும் தாமதமாகத்தான் தெரிந்துக்கொண்டேன். ஊரில் ஒரு சிறிய வட்டார நூலகம் இருந்தது. தினமும் பள்ளி முடித்து அங்கு சென்று வாரப்பத்திரிக்கைகளைப் படிப்பேன். நூலகத்தின் அருகில் இருந்த ஒரு கேசட் கடைக்கு சென்றபின் பெரிய இடைவெளி. வெகுவாக வாசிப்புப் பழக்கம் குறைந்தது. கல்லூரி நாட்களில் தமுஎகச, மகஇக அமைப்புகளில் இயங்கும் சகாக்கள் அறிமுகமாகி வாசிப்பை மீண்டும் உயிர்பிக்க வைத்தது. தீவிரமான அரசியல் வாசிப்பிலிருந்து நவீன இலக்கியத்தை வந்தடைந்த தருணம் சரியாக நினைவில்லை. இடது பின்னணியில் சிந்தனை அமைப்பு இருந்ததால், தமிழில் பரவலாகியிருந்த ரஷ்ய பெரு நாவல்கள் என்று தொடங்கி தமிழ் முன்னோடிகளின் செவ்வியல் படைப்புகளை ஆரம்பத்தில் வாசித்தேன். அப்போது நவீன தமிழ் இலக்கியம் ஓர் அமைப்பாக செய்திருக்கும் சாதனைகள் பிரமிப்பாக தோன்றியது. அது எழுதுவதற்கு முதலில் மனத்தடையை உருவாக்கியது. மரபணு மூலம் உருவான இயல்பின்மையும், அகத்தனிமையும் ஒருகட்டத்தில் எழுத்து ஒன்றே மீட்சி என எண்ண வைத்தது. புனைவு எழுதும்போது உணரும் இருப்பைக்காட்டிலும் சிறந்த தருணத்தை இதுவரை எதிலும் உணர்ந்ததில்லை. 

  1. முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து ?

முதல் சிறுகதை எழுதுவதற்கு முன்பாகவே முதல் நாவல் எழுதிவிட்டேன். சிறுகதையின் கரு, நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு வளர்ப்பு பிராணி மீது வைக்கும் அன்பைப் பற்றிய எதார்த்தவாதக் கதை. வாசகசாலை மின்னிதழில் வெளிவந்தபோது ஓரிருவர் படித்து கதையோட்டம் சீராக உள்ளதாக தெரிவித்தனர். 

  1. அறிவு – அனுபவம் – மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது ?

பத்தில் இருந்து இருபது சதவீதம் எந்தக் களம் என்பதனை தீர்மானிப்பதில் அறிவுக்கு வேலை இருக்கலாம். பின்பு அறிவைப் பெரும்பாலும் ஒதுக்கி வைக்கிறேன். அதற்குப்பின் கதை போகும் பாதையின் பின்னால் போய்க் கொண்டிருப்பது மட்டும் தான் என் வேலை என்று நினைக்கிறேன். கூட்டு நனவிலியில் சேகரமான அனுபவங்கள் படிமங்களாக, துண்டுத்துண்டாக வெளிப்படும். அது தனிப்பட்ட இயல்பானாலும், அல்லது நுகர்ந்த படைப்புகளின் வழியாக வந்து சேர்ந்ததாக ஆனாலும், அந்த தொழில்நுட்பத்திற்கு பின்னாலிருக்கும் கோட்பாட்டை மிகப் பிந்தி அறிந்து, அதிலிருக்கும் வாசக நன்மையை தெரிந்து உடன்பட்டுக்கொண்டேன். அதைப் பின்னால் முடிந்தால் சொல்கிறேன். பெரும்பாலும் மொழியை எடுத்துக்கொண்டு தன்னுணர்வு அற்ற பயணமாகவே மாறியிருக்கும். அப்படி இல்லாத படைப்புகள் நிறைவைத் தருவதில்லை. அது எப்படி முடிகிறது? புதிதாக ஒன்றைக் கண்டடைகிறதா? என்பதனைத் தாண்டி மொழியைக் கொண்டு எந்த அளவிற்கு விளையாட முடியும்? கற்பனையை விரிக்க முடியும்? என்பதனைப் பார்க்கிறேன். மேலும் சிறுகதைக்கான மரபான நவீன வடிவங்களை ஏன் உடைக்க வேண்டும் என்பதற்காக புரிதல் வலுவாக உள்ளதால், மனித மையப் பார்வையிலிருந்து விலகி ஒரு கனவை சிறுகதையாக எழுதிப்பார்க்க முடிகிறது. இச்சிந்தனை அமைப்பு, கதைசொல்லல் முறை அனைத்துமே இங்கு ஏற்கனவே இருப்பதால், புதியதாக ஒன்றை செய்கிறேன் என்கிற பதற்றமில்லை. மொழியில் நீள்வரிகள், அதாவது ஒன்றை சொல்லி முடிவடையப் போவதும் முற்றுப்புள்ளி வைக்காமல் மடக்கி, அதற்கு நேரெதிரான ஒன்றை அல்லது சம்பந்தமில்லாதது போல் தோன்றும் ஒன்றை இணைப்பதைக் கூட புனைவின் அங்கமாகத் தான் தோன்றுகிறது. ஒரே வரியில் எதிர்கருத்து உருவாக்கும் வாக்கியங்களை தொடர்ந்து எதிர்கொள்ளும் மூளை, சிந்தனை அமைப்பை மாற்றுகிறது. இத்தகையை மொழி விளையாட்டுகள் நிலபிரபுத்துவ சிந்தனை முறைக்கு எதிரான ஆயுதங்கள் என்று நம்புகிறேன். இங்கு திரும்பத்திரும்ப மனிதர்கள் மேல் விமர்சனம் வைக்கப்படுகிறது. பெருங்கதையாடல்கள் முன்வைக்கும் அற விழுமியங்கள், மதிப்பீடுகள் கடைசியில் யாருக்கு பயன்படுகிறது? நம்முடைய முன்னோடிகளால், முன்னரே கண்டறியப்பட்ட நுட்பங்களிற்கு ஒப்பனை செய்து, இறுதியில் தோசையைத் திருப்பிப் போட்டு அடிப்பக்கம் வெந்துள்ளது என்று சொல்லும் கதைகள், நம் சமூகம் ஒரு இன்ச் அளவிற்கு முன் நகர்ந்துவிடக் கூடாது என்று தங்களை அறியாமல் சொல்லப்படுபவை. அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக இதைச் செய்யலாம். இனி தமிழ் மொழிக்கு கதையாடல் தொழில்நுட்பங்கள் மட்டுமே தேவை என்பது வலுவான நம்பிக்கை. 

நாவல்

  1. ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்யேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளை சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங்கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம் ?

கதைகளில் இயங்கும் தொழில்நுட்பங்களை மேலோட்டமாக கவனிக்கையில் நிலத்திலிருந்து விலகி எழுதுவதுப் போல் தோன்றலாம். நிலத்திலிருந்து அந்நியமான எழுத்து என்கிற விமர்சனம் சிலரால் வைக்கப்படுவதுண்டு. காரணம் வட்டார வழக்கு சொற்களின்மை, உள் உரையாடல்கள் உள்ள எழுத்துமுறை. உண்மையை சொல்லப்போனால் கதைகளில் செம்மண் இல்லாத நிலத்தை எழுதுவது சிரமம். களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை தான் கதைக்களமாக இருக்கிறது. அறியாத நிலத்தை கள ஆய்வின்றி எழுதுகையில் அதன் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடக்கூடிய வாய்ப்புள்ளது. அப்படி ஒன்றை பெரும்பாலும் முயற்சிப்பதில்லை. தெரியாத ஒன்றைக் குறித்து எழுதிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், அனைத்தையும் உள்ளடக்கிய நிலத்தை அடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே மனித மைய கதைகளில் இருந்து விடுபட முயற்சிக்கிறேன். ஊர் குறித்த கேள்விகள் அனைத்தும் விமர்சனங்களாக இருக்கிறது. ஒட்டுமொத்தமான நிலத்தின் தற்போதைய பிரச்சனை சூழலியல் என்பதானால், இரண்டாவது தொகுப்பில் அத்தகைய கதைகள் இடம்பெற்றது. சென்னையில் அதிகமாக புழங்கிய இடத்தைக் கொண்டு மட்டும் இரு கதைகள் எழுதியுள்ளேன். பால்யம் தாழ்வுணர்ச்சியினால் ஒடுங்கிப்போய் தனிமையில் இருந்துக்கொண்டு, சுற்றி நடப்பவற்றில் பங்குக் கொள்ளாமல் ஓர் அந்நியனாக அனைத்தையும் உற்றுநோக்கும் தன்மையுள்ள உதிரியாகவே இருந்திருக்கிறேன். அந்த நிலையும் கூட எழுத்திற்கு உதவுவதாகவே எண்ணுகிறேன். இரவு மேகக்கூட்டங்கள் விலகி வானம் பளிச்சிடும்போது குவியலாய் விரிந்துக் கிடக்கும் நட்சத்திரங்களை பார்க்கும்போது உருவாகும் மனநிலையை, புனைவு எழுதும்போது உருவாக்க நினைக்கிறேன். 

  1. உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய படைப்பு என்று உண்டா ?

முதல் நாவல் “கரமஸோவ் சகோதரர்கள்” வாசிப்பு தந்த உந்துதல் தான் எழுத வைத்தது. ஆயிரம் பக்கங்களுக்கு மேலான அகவயமான உணர்ச்சிக் கொந்தளிப்புகளை பக்கம், பக்கமாக வாசித்து முடிக்கும்போது, மண்டைக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் சொற்களை ஒருக்கட்டதில் இறக்கி வைத்தாக வேண்டும். அப்படி ஒரு உந்துதல் முதல் படைப்பிற்கு மட்டும் தான் நிகழ்ந்தது. அதற்குப்பின் பல்வேறு இலக்கிய வகைமைகளின் அறிமுகமும், தமிழ் மொழியில் நிகழவேண்டிய சாத்தியங்கள் குறித்த கனவும் பரீட்சாத்தமான முயற்சிகளை செய்வதற்கு உந்துதலாக அமைந்தது. மேலும், இப்போதைக்கு உந்தித் தள்ளி உத்வேகம் அளித்துக் கொண்டிருப்பவர் கவிஞர் பச்சோந்தி. 

  1. எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார் ?

ஆதர்சம் என்று சொல்வதைவிட நம்முடைய சிந்தனை முறை ஓரளவிற்குப் பொருந்திப்போகும் எழுத்தை வாசிக்கும்போது ஒருவித நெருக்கம் உருவாகும். அப்படி தமிழ் செவ்வியல் நூல்களை வாசித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நூலில் ஓரிடத்தில் ‘அவனோடு எந்த முரணும் வந்ததில்லை, ஏனென்றால் அவன் என்னிடம் பேசவே இல்லை, கதவைத் திறந்து என்னை பார்க்க உள்ளே வந்தவுடன் நான் அவனாக மாறிவிட்டேன். அவன் அவனிடம் பேசுவதில் என்ன முரண் வரப் போகிறது’ (இதே வாக்கியம் இல்லை, அர்த்தம் மட்டும்) இப்படியொரு இடம் என் மனநிலையோடு நெருக்கமாக உணர்ந்த இடம். அந்த பிரதி நினைவுப் பாதை; ஆசிரியர் நகுலன். அடுத்தபடியாக பிரதியே முக்கியம் என்பதை தமிழ் சூழலில் அறிமுகம் செய்த தமிழவன் அவர்களின் படைப்புகளை வாசித்தபோதும் இது நான் நம்பும் இலக்கியத் தரப்பின் முன்னோடி எழுத்து என்பதனை அறிந்துக் கொண்டேன். அவரது ஆரம்பக்கால பிரதிகள் (இந்த சொல்லை தமிழுக்கு கொடுத்தவர் அவர் தான்) ஆதர்சமானவை. “ஸ்கொயர்” போன்ற ஒரு சிறுகதை நாற்பது வருடங்கள் முன்பே எழுதப்பட்டிருக்கிறது என்பது நம்ப முடியாததாகவும், ஆச்சரியம் நிறைந்ததாகவும் உள்ளது. 

  1. சிறுகதைக்கான கருவை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ? 

உற்றுக் கவனிக்க வைக்கும் ஒரு சித்திரம் கிடைத்தால் போதும். எலியட்ஸ் கடற்கரை சாலையோரம் நடந்துக்கொண்டிருந்த போது அங்கிருந்த குப்பைத்தொட்டியில் அச்சு அசலான வெட்டப்பட்ட மனிதத் தலையின் சிலையைக் கண்டேன். உண்மையான மனிதனின் தலையைவிட அளவில் சற்று சிறியதாக இருக்கலாம். ஆனால், பார்ப்பதற்கு மனிதனின் தலை தான் குப்பைத் தொட்டியில் கிடப்பது போல் இருந்தது. அந்த சித்திரம் ‘இரவானால்’ சிறுகதையாக ‘நீலம்’ இதழில் வெளியானது. இதைத்தவிர சென்னையின் மையமான ரிப்பன் மாளிகைக்கு பணி நிமித்தமாக குறைந்தபட்சம் வாரம் மூன்று நாட்கள் வீதம் மூன்று வருடங்கள் சென்றேன். அங்கு சிறு தொழிலாளர்கள் முதல் பெரிய அதிகாரிகள் வரையிலும் மனிதர்கள் மீது அதிகாரத்தை எப்படியெல்லாம் பிரயோகித்து ஆர்கசம் அடைகிறார்கள் என்பதை எரிச்சலுடன் கவனிப்பேன். சுற்றி மிகவும் பரபரப்பாக இருக்கும் அந்த நிலத்தில் தான் உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்ததாகவும், ஒரு தீ விபத்து ஏற்பட்டு வண்டலூருக்கு மாற்றப்பட்டதும், வரலாற்றைப் படித்து தெரிந்தபோது புனைவுக்கான சித்திரம் உருவாகிவிட்டது. அங்கே தான் அதுவரை போர்ஹேசை படித்திராத, ஆனால் போர்ஹேஸ் கதைகளைப் போன்று எழுதும் படைப்பாளி (யார்?) நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வந்து ஆரம்பத்தில் பணிபுரிந்திருக்கிறார் என்பதும், தமிழின் முதன்மை எழுத்தாளர் ஒருவர் அங்கிருக்கும் மூர் மார்க்கெட் அருகே மேன்ஷனில் தங்கியிருந்திருக்கிறார் முதலிய தகவல்கள், அவர்களைப் புனைவுக்குள் கொண்டு வந்து அதிகாரத்திற்கு எதிரான இரண்டு சிறுகதைகளை (மனிதக்காட்சி சாலை, நிலத்தடியில் நகரும் பிரேதங்கள்) எழுதினேன். அந்த அதிகார மையத்திற்கு சென்று தான் இரண்டு சிறுகதைகளோடு மூன்றாவதாக வாழ்க்கைத் துணையும் கிடைத்தது. அந்தக் காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை. 

  1. சமகாலக் கதைகளில் வரலாறு – தொன்மம் – நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இதன் தாக்கம் உண்டு. இவை தற்செயலா அல்லது காரணார்த்தத்துடனான செயல்பாடா 

வரலாறு, தொன்மங்கள், பெருங்கதையாடல்களில் இணைக்கப்படுவதினால் பலனிருப்பதாக நம்பவில்லை. இதனால் தொன்மத்தில் இருக்கும் விமர்சனக் கூறுகள், அல்லது மாற்றப்பட வேண்டிய விழுமியங்கள் மாறாமல் அப்படியே கடத்தப்படுகிறது. அது ஒற்றைப்படையான பார்வையை வழங்கும். மேலும், இவை அனைத்துமே ஒற்றைப் பிம்பத்தை மண்டைக்குள் கட்டமைப்பதாக உள்ளது. பிம்பங்கள் எப்படி நம்மை விழுங்குகிறது என்பதனைப் பார்க்கிறேன். கருத்தைவிட பிம்பம் முக்கியமென வரும்போது தான் எனக்கு ஆந்த்ரே பிரட்டன் உதவி செய்கிறார். ஒன்றைப் பலவாக பார்க்கும் பயிற்சியை எழுத்து தான் செய்தாக வேண்டும். ‘புரியும்படியான நேரடியான கதை எழுதலாம் இல்லையா?’ என்ற கேள்வியை பலர் எழுப்புவதுண்டு. இப்போது நமக்கு வந்து சேர்ந்திருக்கும் சிந்தனை முறைமைக்கு முதல் காரணம் இலக்கியம் என்பதனை உணராதவர்களின் கூற்று இது. இலக்கியத்திலிருந்து பல்வேறு கலைவடிவங்கள் வழியாக என்றாவது ஒருநாள் வெகுஜனப் பரப்பிற்கு வந்து சேரும். இங்கு தான் தொன்மங்களை கூராய்வு செய்து தூக்கி வீசி, வாசகனிடம் ஒன்றிணைக்க சொல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. என் நிலம் பழைய வேணாடு. தமிழ் நிலத்திற்கு முற்றிலும் அந்நியமான நிலம். இங்கு பல தலைமுறைகளாக கிறிஸ்துவ தொன்மங்கள் வேரூன்றிக் கிடக்கிறது. பிற மதச் சின்னங்கள் இருந்தாலும், பெரும்பான்மையாக கிறிஸ்துவ சின்னங்களை அடையாளமாகக் கொண்டு தான் ஒவ்வொரு நிலத்தையும் மனச் சித்திரத்தில் நினைவுக்கு கொண்டு வர முடியும் என்றளவிற்கு. அதற்கு முட்டிடிசான் பாறை, சீடர்கள் வந்து தங்கிய தேவாலயங்கள் என்று நிறைய சொல்லலாம். எனவே தான் இந்த நிலத்தை எழுத வேதாகமத் தொன்மங்கள் கொண்டு எளிதாக புனைவில் அணுக முடியும் என்று நினைக்கிறேன். அதிலிருந்து புனைவுகள் வழியாக பின் அமைப்பியல் சார்ந்து புதிய சிந்தனையை உருவாக்க முடியும். மேலும் இது உலகளாவிய தொன்மங்களாகவும் இருப்பதால், இந்நிலத்திலிருந்து உலகத் தன்மையையும் எளிதாக அடைந்துவிட முடியும் என்றுக் கருதுகிறேன். மேலும், ஏற்கனவே பின் நவீன கூறுகளோடு இருக்கும் தொன்மங்களைத் தொடுவதில்லை. மிகவும் புனிதமான, ஒழுங்கான, பழமைத் தன்மையோடு எவை இருக்கின்றன என்பது தான் முக்கியமாகப் படுகிறது. ஆனால், இது அனைத்துமே என்ன காரணம் என்று யோசித்து தொகுக்க முடிகிறதே தவிர, எழுத்தில் என்னை அறியாமல் நடக்கும் விஷயங்கள் தான் மிகுதியாக உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ இப்படி எழுதுகிறேன் என்று சொல்லலாம். ஒவ்வொரு நகர்வுகளும் மெதுவாக இருப்பினும், திட்டமிடல் எதுவுமின்றி பிரக்ஞையற்று முன்னகர்வதாக நினைக்கிறேன். மேலும், மேற்கூறிய கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டு புனைவை அணுக வேண்டிய அவசியமில்லை. வாசக கூட்டு நனவிலியின் அறிதல்களைக் கொண்டும், தன் நிலத்தின் சித்திரத்தைக் கொண்டும் அணுகுவது இக்கதையாடலின் நோக்கம் என்பதால், உள் அடுக்குகளை சொல்வதை ஒரு எல்லைக்குள் நிறுத்துவது தேவையாகப்படுகிறது. பிரதியின் குரல் மட்டுமே முக்கியம். 

  1. சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்பிராயம் ? நீங்கள் ரசிக்கும் சில சமகால படைப்புகள் குறித்து

சமகால இலக்கியம் குழுக்களில் இயங்குவதாக பலராலும் விமர்சிக்கப்படுகிறது. முகநூலில் எழுதப்படும் விமர்சனத்தை வாசித்து பரவசமாகி நூலை வாங்கி ஏமாற்றமடைந்தாக பதிவிடும்போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது. ‘சர்வதேச விருதுகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கான மாபெரும் படைப்பை நான் எழுதியுள்ளேன். பணிவோடு என் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்று என் நூலை வாசியுங்கள்’ என்று சந்தைப் படுத்தப்படும் சமகால படைப்புகளில் சரியான ஒன்றை தேர்வு செய்வது கொஞ்சம் கடினமான காரியம். ஆனால் குறிப்படத் தகுந்த முயற்சிகள் தமிழில் எல்லாக் காலத்திலும் நடப்பது போன்று, வாசக ஏற்பை பொருட்படுத்தாமல் இப்போதும் நடப்பதாகவே நினைக்கிறேன். ரசிக்கும் படைப்புகள் குறித்து சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் நல்ல படைப்புகளைத் தருகிறார்கள். எண்ணிக்கை அளவுகளில் மாறுபாடுகள் இருக்கலாம். 

  1. உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் ? எழுதும் செயல்பாட்டிற்கு தனிப்பட்ட முறைமைகளை பின்பற்றுகிறீர்களா ?

நேரமேலாண்மையில் போதாமை உள்ளது. எந்த சூழலிலும் எழுதும் திறன் இன்னும் வாய்க்கவில்லை. ஆனால், எப்போதும் எழுதுவது குறித்த சிந்தனை ஓட்டங்களும், எழுதாமல் இருந்ததற்கான குற்ற உணர்ச்சியும் அதிகமாக இருக்கும். சிறுகதைகள் எழுதுவதைவிட அதற்கான முன் தயாரிப்புகளுக்கு அதிக நேரம் எடுக்கும். பாபிலோன் அரசன் நேபுகாத் நேச்சரையும், மணிமேகலை – சுதாமதியையும் குமரிக்கு அழைத்து வரும்போது நல்லபடியாக கவனிக்கவேண்டும் என்ற பதற்றம் எப்போதுமுண்டு.

  1. உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து

இப்போதைக்கு சிறுகதையாடலாக ஒரு நாவல் எழுதும் திட்டம் உள்ளது. 

***

நேர்கண்டவர் – கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.

காதலாற்றுப் பாதை

0

பாரதிராஜா

னிதகுலத் தோற்றத்திற்கு முன்பு தொடங்கி மனிதகுல வரலாறு முழுக்கவும் பல்வேறு காலங்களிலும் நாகரிகங்களிலும் பண்பாடுகளிலும் சமயங்களிலும் நாடுகளிலும் பகுதிகளிலும் மொழிகளிலும் மெய்யியல்களிலும் காதல் ஒரு பேராறாக ஓடி வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆற்றின் பாதையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

குகைகளில் வாழ்ந்த மனிதனிலிருந்து இன்றைய எண்முறை (டிஜிட்டல்) வாழ் மனிதன் வரை காதலை வெவ்வேறு விதமான பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறான் – பயன்படுத்தியிருக்கிறான். பெரும்பாலும் கொண்டாடவே பட்டிருக்கிறது என்றாலும் பல நேரங்களில் – இடங்களில் கட்டுப்படுத்தவும் பட்டிருக்கிறது. பல நேரங்களில் – இடங்களில் கெடுபிடியான கட்டுப்பாடுகளோடே கொண்டாடவும் பட்டிருக்கிறது. இன்னும் வேடிக்கையாக, புறத்தில் கட்டுப்படுத்தப்பட்டு அகத்தில் கொண்டாடப்பட்டும் கூட இருக்கிறது. இப்போதும் கூட அது தொடரத்தானே செய்கிறது? திரைப்படத்தில் வரும் காதலை மனமார ஏற்றுக்கொள்கிற – ஆதரிக்க முடிகிற அதே மனதால் தம் சொந்தக் குடும்பத்தில் நிகழும் போது ஏற்றுக்கொள்ள முடிவதில்லையே!

பண்டைய உலகின் காதல் – முதற் குரல்கள்

மெசபடோமியா: காதலின் முதற் பாடல்கள்

மனிதகுலத்தின் முதல் எழுத்து வடிவம் தோன்றிய நிலப்பரப்பில்தான் காதலின் முதற் கவிதைகளும் எழுதப்பட்டன. கி.மு. 3000-க்கு முந்தைய மெசபடோமியாவில், டைக்ரிஸ்-யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையே உள்ள இடத்தில், இனன்னா என்ற காதற்கடவுளுக்கும் துமுசி என்ற மேய்ப்புக் கடவுளுக்கும் இடையே ஏற்பட்ட காதல் பற்றி – அல்லது, ஏற்பட்டதாக – பாடல்கள் எழுதப்பட்டன.

இந்தப் பாடல்கள் எந்தவிதமான நாணமுமின்றி உடற்காதலைக் கொண்டாடுகின்றன. “அவர் என் பிறப்புறுப்புகளை அழகாக்கியுள்ளார்… கை கோர்த்து உறங்குதல் இனிமை” என்று இனன்னா பாடுகிறாள். அன்றைய மெசபடோமியாவில் இது வெறும் உடல் இன்பம் மட்டுமல்ல – இது பேரண்டத்தின் படைப்பாற்றலாக, வயல்களுக்கு வளம் தரும் இரையாற்றலாகப் பார்க்கப்பட்டது.

மெசபடோமிய மக்கள் காதலை மூன்று விதமான நோக்குகளில் கண்டனர். கருவுறுதலுக்கும் இனப்பெருக்கத்துக்குமான வழி என்பது ஒன்று. இன்று அறிவியல் – உளவியல் அதைத்தான் சொல்கிறது. மனிதன் செய்யும் எல்லா வேலைகளுக்கும் பின்னணியில் தன்னையும் தன் இனத்தையும் காத்துக்கொளல் – பெருக்கிக்கொளல், தன்னைப் பிறரோடு பிணைத்துக்கொளல் ஆகிய இரு உள்நோக்கங்களே இருக்கின்றன என்கிறார்கள். இரண்டாவதாக அதை ஒரு கடமையாகக் கண்டார்கள். தன்னைச் சார்ந்தோருக்குப் பொருளீட்டி வருதல், அவர்களை ஆபத்துகளிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் காத்தல் போல காதலித்தலும் கடமையாகப் பார்க்கப்பட்டது. அதைத்தான் இன்று வழங்கல், பேணல், பெருக்கல் (provide, protect, and procreate) என்கிறோம். மூன்றாவதாக, காதலை ஓர் இறைச்சித்தம் என்று எண்ணினார்கள். எதுவெல்லாம் இயற்கையோ அதுவெல்லாம் இறைச்சித்தம் என்றும் கொள்ளலாந்தானே! பிறப்பும் இறப்பும் போல.

திருமணம் என்பது குடும்பங்களுக்கு இடையேயான கூட்டணி, பொருளியல் ஒப்பந்தம், கொடுக்கல்-வாங்கல் (transaction) என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில், காதற் கவிதைகளும் மடல்களும் எழுதினார்கள் என்றால் மக்கள் உடலுறவைத் தாண்டிய உணர்ச்சிகளை உணர்ந்தார்கள் என்றுதானே கொள்ள வேண்டும்! அல்லது, ஆண் மயில் தோகையைக் காட்டிப் பெண் மயிலைக் கவர்வது போல, மனிதர்கள் தம் அழகுணர்வைக் கவிதைகளாகவும் மடல்களாகவும் வரைந்து தனக்கு வேண்டிய விதமான பெண்ணை அடைந்து கொண்டார்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். அதாவது, உடலுறவைத் தாண்டிய உணர்ச்சிகளுக்கும் அடிப்படையானது உடற் தேவையே எனும் பார்வை.

எகிப்து: நைல் நதிக்கரையில் காதல்

பண்டைய எகிப்தின் புதிய பேரரசு (கி.மு. 1500) நமக்கு வியப்பூட்டும் விதத்திலான புதுமை ஒலியோடு பல காதற் கவிதைகளைத் தந்துள்ளது. 

தவிட்டுப்புறா குறுகுறுத்தது

“பொழுது விடிகிறது, எந்த வழி போகிறாயடி?” என்றது என்னிடம்
தொலைந்து போ குட்டிப் பறவையே
என்னை ஏன் சீண்டுகிறாய்? 
என் காதலனைப் படுக்கையில் கண்டேன்
அளவிலாமல் இனித்ததென் இதயம்

இந்தக் கவிதைகளில் கள்ளச் சந்திப்புகள், பிரிவின் வேதனை, உடல் ஈர்ப்பு – எல்லாமே இருக்கின்றன. முறைப்படியான திருமணம் என்பதும் எகிப்திய வரலாற்றில் இருக்கிறது. அதற்கு இணையாகவே காதலும் இருந்திருக்கிறது.

பண்டைய இந்தியா: காதலின் ஆன்மீக வேர்கள்

இந்திய நாகரிகத்தில் காதல் என்பது வெறும் மனித உணர்வு என்று மட்டுமில்லாமல், அது ஓர் அண்டப் பேராற்றலாகப் பார்க்கப்பட்டது. 

ரிக்வேதத்தில் (கி.மு. 1500) காமம் என்பது படைப்பின் முதல் ஆற்றலாக விவரிக்கப்படுகிறது.

காமசூத்திரம் (கி.மு. 400 – கி.பி. 200) வெறும் பாலியல் வழிகாட்டியாக மட்டும் இல்லாமல், அது ஒரு காதற் பேருரையாக இருக்கிறது. மனைவியை எப்படி நடத்த வேண்டும், காதலை எவ்வாறு கட்டிக்காக்க வேண்டும் போன்றவற்றையெல்லாம் விளக்குகிறது.

தமிழகத்தின் அகம்: காதலின் நுண் மொழி

சங்க காலத்தில் (கி.மு. 300 – கி.பி. 300) தமிழர்கள் காதலை ஒரு கலை வடிவமாக உயர்த்தினார்கள். உலக வரலாற்றில் முதன்முறையாக தமிழில் அகம் என்ற கவிதை வகை முற்றிலும் காதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு – ஐந்து திணைகள். திணை என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைக் குறிப்பது என்று மட்டும் இல்லாமல், அது காதலின் வெவ்வேறு உணர்வு நிலைகளையும் குறிப்பதாக வகுக்கப்பட்டது. அதாவது, மலையைக் காணும் போது வரும் உணர்வு போலக் காதலிலும் ஓர் உணர்வு இருக்கிறது, கடலைக் காணும் போது வரும் உணர்வு போலக் காதலிலும் ஓர் உணர்வு இருக்கிறது என்றார்கள்.

குறிஞ்சி (மலை) – முதற் காதல், திருமணத்திற்கு முந்தைய கூடல், இரவில் கள்ளச் சந்திப்பு ஆகியவற்றைப் பேசுகிறது. இவையெல்லாம் முறையே மலையைப் போல முதலில் தோன்றியவை, காலத்தால் முந்தியவை, மலைப் பகுதிகளில் நடத்த வசதியானவை என்று கொள்ளலாம். 

முல்லை (காடு) – பொறுமையுடன் காத்திருத்தல், கணவன் வெளியூர் சென்றிருக்கும்போது மனைவியின் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசுகிறது. இங்கே காடு காத்திருப்பின் அடையாளமாக இருக்கிறது. முறையே காட்டினங்கள் நீருக்காக மழைக்குக் காத்திருப்பது போல, மழை வரும் என்று நம்பிக்கையோடு இருப்பதைப் போல என்று கொள்ளலாம்.

மருதம் (வயல்) – காதலர்களின் சண்டைகள், கணவனின் துரோகம், சமரசம் ஆகியவற்றை விவரிக்கிறது. மருதம் மனிதர்கள் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் சலசலப்பு நிறைந்ததாக இருக்கிறது. இங்குதான் சமூகம் எனும் அமைப்பு உருவாகிறது. வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்மூலம் நேரும் பிரச்சனைகள் இங்கு உள்ளே வந்துவிடுகின்றன.

நெய்தல் (கடற்கரை) – பதட்டமான காத்திருப்பு, பிரிவின் ஏக்கம் ஆகியவற்றைப் பாடுகிறது. முல்லையில் நம்பிக்கையோடு காத்திருந்தவள், நெய்தலில் பதட்டம் கொள்கிறாள். காரணம், கொடிய விலங்குகள் நிறைந்த காட்டைவிட, புயலும் கடற்கொள்ளையரும் தொலைதலும் கடலில் பெரிய அச்சுறுத்தல்களாக இருக்கின்றன. காடு மனிதனுக்குப் பல்லாயிரமாண்டுப் பழக்கப்பட்டது எனும் காரணமாக இருக்கலாம்.

பாலை (பாலைவனம்) – ஓடிப்போதல், பிரிவின் கொடூரமான வேதனை ஆகியவற்றைப் பாடுகிறது. பாலைவனம் என்பது எதுவுமற்றது. உயிர் அற்றது. நீர் அற்றது. வெறுமையும் வெப்பமும் மட்டுமே கொண்டது. உச்சகட்ட வெறுமையின் விளைவாக தற்கொலை எண்ணமும் உளநோயும் வந்து வதைக்கின்றன.

சங்கப் பாடல்களில் மிக முக்கியமான கூறாக பெண்ணின் குரல் அவற்றில் மையமாக இருப்பது இருக்கிறது. அவளது ஆசை, அவளது உணர்வுகள், அவளது தேவைகள் – இவையனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன – கொண்டாடப்பட்டன.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. 

இந்த மனிதன் மீதான காதல், உலகத்தைவிடப் பெரியது, வானத்தைவிட உயர்ந்தது, நீரைவிட ஆழமானது என்கிறாள். எப்போது? கி.பி. முதல் நூற்றாண்டில். தமிழர் அகம் முழுக்கவும் இப்படியான உணர்வுகளைக் கொட்டுவதாக இருக்கிறது.

கிரேக்கமும் ரோமும்: காதலின் மெய்யியல்

கிரீஸ்: ஈரோஸின் பிறப்பு

உணர்ச்சிமிக்க, காமம் ததும்பும், பாலியற் காதலை பண்டைய கிரேக்கர்கள் ஈரோஸ் என்ற கடவுளின் பெயரில் வகைப்படுத்தினார்கள். 

பிளாட்டோவின் “சிம்போசியம்” என்ற உரையாடலில், காதல் என்பது உடலழகிலிருந்து தொடங்கி ஆன்மீக அழகை நோக்கி உயரும் ஓர் ஏணி என்று விவரிக்கப்படுகிறது.

நிறையப் பெண் கவிஞர்களைக் கொண்டிருந்த சங்க இலக்கிய காலத்துக்கும் சற்று முந்தைய காலத்தில் – கி.மு. 630-இல் – சாஃபோ என்ற கிரேக்கப் பெண் கவிஞர் தீவிரமான காதல் ஏக்கத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்:

அவர் எனக்குக் கடவுள்களுக்குச் சமமாகத் தோன்றுகிறார்… 
உங்கள் குரலின் இனிய முணுமுணுப்பை
என் இதயத் துடிப்பையே வேகமாக்கும் கவர்ச்சியான சிரிப்பை 
நெருக்கத்தில் கேட்பவர் அவர்.

ரோம்: காதல் எனும் வேதனை

ரோமானியக் கவிஞர்கள் காதலை மிகவும் வேறுபட்ட முறையில் பார்த்தார்கள். அவர்களுக்கு காதல் என்பது ஆபத்தானதாகவும் அழிவையே அளிப்பதாகவும் பகுத்தறிவற்றதாகவும் பட்டது. 

கேட்டுல்லஸ் தனது சிக்கலான காதலை இப்படி வெளிப்படுத்துகிறார்: 

நான் வெறுக்கவும் செய்கிறேன் காதலிக்கவும் செய்கிறேன்
ஏன் இப்படிச் செய்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம்
எனக்குத் தெரியவில்லை
ஆனால் அது நிகழ்வதை உணர்கிறேன், அது என்னைத் துன்புறுத்துகிறது

ஓவிட் தனது “காதலின் கலை” (ஆர்ஸ் அமடோரியா) என்ற நூலில் காதலரை எவ்வாறு மயக்குவது, காதலை எப்படிக் கட்டிக்காப்பது என்று நடைமுறை ஆலோசனை கொடுக்கிறார். இதில் சற்று இந்தியக் காமசூத்திரத்தின் வாடை அடிக்கிறது.

மதங்களின் பார்வை: புனிதமா? பாவமா?

கிறித்தவம்: பதற்ற உறவு

தொடக்ககாலக் கிறித்தவம் காதலையும் பாலுறவையும் ஐயத்துடன் பார்த்தது. புலனடக்கம் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்பட்டது. ஆனால் விவிலியத்தில் உள்ள “பாடல்களின் பாடல்” என்ற நூல் முற்றிலும் காமக்காதலைப் பாடும் கவிதையாக இருக்கிறது:

அவர் என்னைத் தனது வாயின் முத்தங்களால் முத்தமிடட்டும்… 
உங்கள் காதல் மதுவை விட மகிழ்ச்சியானதாக இருக்கிறது.

பிற்காலத்தில் இது இயேசுவுக்கும் சபைக்கும் இடையேயான காதல் என்று விளக்கப்பட்டது. ஆனால் அதன் மொழி தெளிவான உடற்காதல் மொழி என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை.

கிறித்துவத்தில் திருமணத்தின் அடிப்படை காதல் அல்ல. குடும்பங்களின் கூட்டணியும் குழந்தைகள் பெறுதலுமே முக்கியம். இன்றைய நம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போலத்தான் அவர்களுடையதும். காதல் என்பது ஒரு கூடுதல் நன்மையாக இருக்கலாம்; ஆனால் அது ஓர் அடிப்படைத் தேவை அல்ல எனும் பார்வை.

இசுலாம்: இறையன்பும் மனிதக் காதலும்

இசுலாமியப் பாரம்பரியத்தில் இரண்டு வகைக் காதல்கள் உள்ளன. சங்க இலக்கியத்தில் இருக்கும் கற்பு நெறி, களவு நெறி போல.

ஹப் – மென்மையான அன்பு, திருமணத்தில் உள்ள காதல். கற்பு நெறி.

இஷ்க் – தீவிரமான, எரிக்கும், உணர்ச்சிமிக்க காதல். களவு நெறி.

சூஃபி கவிஞர்கள் காதலை ஆன்மீகத் துய்ப்பாக உயர்த்தினார்கள். 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூமி எழுதுகிறார்:

காதலர்கள் கடைசியில் எங்கோ ஓர் இடத்தில் சந்திப்பதில்லை

அவர்கள் எப்போதும் ஒருவருக்குள் ஒருவர் இருக்கிறார்கள்

லைலா மஜ்னூன் கதை – காதலால் பைத்தியக்காரனான இளைஞனின் கதை, இஸ்லாமிய உலகின் மிக முக்கியமான காதல் கதையாக மாறியது. மஜ்னூன் லைலாவைத் திருமணம் செய்ய முடியாமல், அவளை நினைத்துக்கொண்டே பாலைவனத்தில் அலைந்து திரிந்து, இறுதியில் காதல் ஏக்கத்தால் செத்தே போகிறான். இது, காதலை வாழ்தலை விட வலிமையான ஓர் இடத்தில் வைக்கிறது.

மஜ்னூன் என்பது அவன் உண்மையான பெயர் அல்ல. பைத்தியக்காரன் என்பதற்கான சொல்லே அது. காதற் பைத்தியம் பிடித்த மஜ்னூன் லைலா மீதான காதலை அதன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறான்:

நான் காதலிப்பது உண்மையான லைலா அல்ல
நான் காதலிப்பது காதல் என்ற கருத்தை
லைலா என்பது ஒரு சின்னம்
தெய்வீக அன்பின் சின்னம்
நான் அவளைத் தாண்டிச் சென்றுவிட்டேன்
நான் இப்போது காதலையே காதலிக்கிறேன்

இந்து சமயத்தின் பக்தி: ராதையும் கண்ணனும்

இந்து சமயத்தின் பக்தி இயக்கத்தில், காதல் கடவுளை அடையும் பாதையாக மாறியது. கண்ணன் ராதையின் காதல், சமூகத்தால் தடை செய்யப்பட்ட காதல் என்ற போதும், நிலை பெற்ற அன்பின் சின்னமாகக் கொண்டாடப்பட்டது, புனிதமானதாகப் பார்க்கப்பட்டது.

12-ஆம் நூற்றாண்டு எழுதப்பட்ட ஜெயதேவரின் “கீத கோவிந்தம்” வெளிப்படையான காம விவரணைகளைக் கொண்ட பக்திக் கவிதை. இதில் ராதையின் ஏக்கம், கண்ணனின் மயக்கல், அவர்களின் உடல் ஒன்றிப்பு – எல்லாமே விவரிக்கப்படுகின்றன. இது பாவமல்ல – இது ஆன்மா கடவுளை நாடும் வழி எனப்படுகிறது.

அவனது கரங்கள் என்னைச் சுற்றுகின்றன
அவனது உதடுகள் என் கண்களை முத்தமிடுகின்றன
நாம் இரண்டு உடல்கள் ஆனால் ஒரே உயிர்
தமிழ் மொழியின் பக்தி: ஆண்டாளின் மணவாளன்

8-ஆம் நூற்றாண்டில் ஆண்டாள் என்ற பெண் துறவி திருமாலைத் தனது காதலனாக, மணவாளனாகப் பார்க்கிறாள். அவளது திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் காதலின் மொழியில் எழுதப்பட்ட பக்திக் கவிதைகள்:

“எட்டுத் திசையும் அழகிய செந்தாமரைக் கண்ணும் ஆரமுதுமாய் ஒட்டி வந்து என்மனம் புகுந்தானைக் கண்டேன்” என்ற வரியில் பக்தியைவிடக் காதலே மேலிடுகிறது.

ஆண்டாள் ஒரு பெண்ணாக, கடவுளைக் காதலிக்கிறாள், அவனைப் பெற ஏங்குகிறாள் – இது பக்தியில் நிகழ்ந்த பெரும் புரட்சி. பெண்ணின் காதல் ஆசையும் பாலியல் உணர்வுகளும் இங்கே புனிதமான – ஆன்மீகப் பொருள்களாக மாறுகின்றன.

இடைக்காலம்: காதலின் மறுவரையறை

ஐரோப்பாவில் ‘தலையழி’

12-ஆம் நூற்றாண்டில் தெற்கு பிரான்சில் ஒரு புரட்சிகரமான கருத்து தோன்றியது – தலையழி (Courtly Love). இதன்படி, காதல் என்பது மனிதனை உயர்த்தும் – மாற்றும் ஆற்றல். காதலன் தனது காதலியை (பெரும்பாலும் திருமணமான உயர்குடிப் பெண்) கடவுள் போல வழிபட வேண்டும்.

அங்கிருந்த ட்ரூபடோர்கள் இந்த காதலைப் பலவாறு பாடியிருக்கிறார்கள். அவற்றின் முக்கியக் கூறுகள்:

காதலன் காதலியை விடத் தாழ்ந்தவன்
காதல் பொதுவாக நிறைவேறாது
தடைகள் காதலை வலுப்படுத்தும்
காதலில் மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டும்
காதலில் துன்பப்படுதல் அதன் மீதான ஈடுபாட்டைக் காட்டும் 

இது ஏன் புரட்சிகரமானது? முதன்முறையாக, காதல் திருமணத்திற்கு வெளியே, குடும்பக் கடமைகளுக்கு வெளியே, ஒரு தனி – உயர்ந்த மதிப்பாகப் பார்க்கப்பட்டது.

மன்னனின் மனைவியுடன் மிகச் சிறந்த மாவீரன் ஒருவன் காதல் கொள்வதாக வரும் லான்ஸ்லாட் கினிவெர் கதை, இந்த மரபின் மிக முக்கியமான எடுத்துக்காட்டு. இது தடம் மாறிய களவு நெறி பற்றியது, துரோகம் பற்றியது எனினும் அவர்களின் காதல் உண்மையானது எனும் கணக்குப்படி இன்னும் கொண்டாடப்படுகிறது.

பாரசீகக் காதல் மாதிரிகள்

இசுலாமிய உலகிலும் காதல் பற்றிய மாதிரிக் கதைகள் தோன்றின. லைலா மஜ்னூன் கதை மத்திய கிழக்கு, பாரசீகம், துருக்கி, இந்தியா முழுவதும் பரவியது. இது ஒரு வகையான காதற் கதைகளுக்கு முன்னோடியானது – தீவிரக் காதல், சமூகத் தடைகள், பிரிவு, சோகமான முடிவு எனும் பாணியிலான வகை.

நிசாமி, ரூமி, ஹாஃபிஸ் போன்ற கவிஞர்கள் காதலை ஆன்மீகத் துய்ப்பாக எழுதினார்கள். உலகியற் காதல் இறைக்காதலின் எதிரொளிப்பு எனும் படியாக இருந்தன அவை.

தமிழில் சிலப்பதிகாரம்

5-ஆம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் எழுதிய “சிலப்பதிகாரம்” தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான காதற் கதைகளில் ஒன்று. கண்ணகியும் கோவலனும் திருமணம் செய்துகொண்டு கற்பு நெறிப்படியான வாழ்க்கை வாழ்கிறார்கள். கோவலன், மாதவி என்ற நடன மங்கையின் காதலில் விழுகிறான். கண்ணகி காத்திருக்கிறாள். இறுதியில் கோவலன் திரும்பி வருகிறான். அவர்கள் புதிய வாழ்க்கை தொடங்க மதுரை செல்கிறார்கள். அங்கே கோவலன் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்படுகிறான். கணவனை இழந்த கண்ணகியின் சீற்றம் மதுரை நகரையே எரிக்கிறது.

கணவன் மீது தூய்மையான அன்பு கொண்ட மனைவியின் காதல், அவன் செய்யும் துரோகத்தை மன்னிக்கிறது, ஆனால் அவனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போராடும் ஆற்றல் கொடுப்பதாகவும் இருக்கிறது.

மறுமலர்ச்சிக் காலம்: காதலைத் தனிமனிதப்படுத்தல்

14-ஆம் நூற்றாண்டில் பெட்ராக் என்ற இத்தாலியக் கவிஞர் லாரா என்ற பெண்ணைக் கண்டு காதலில் விழுகிறார். அவளோ அவரைத் திருமணம் செய்யகொள்ள மாட்டாள். ஆனால் அவர் பல பத்தாண்டுகள் அவளைக் காதலித்து, அவளுக்காக சொனட் பாடல்கள் எழுதுகிறார். அவள் இறந்த பிறகும் அவர் அவளைப் பற்றியே பாடுகிறார்.

இது “பெட்ராக்கன் காதல்” என்ற ஒரு பாணியை உருவாக்கியது. நிறைவேறாத காதல், காதலியை உன்னதமாக்குதல், காதல் வலியே ஒரு வகை இன்பம் எனும் பாணி.

ஷேக்ஸ்பியர்: காதலின் உளவியல்

16-17-ஆம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் காதலின் அனைத்து வகைகளையும் ஆராய்ந்தார். 

ரோமியோ ஜூலியட் – இளம், தீவிரமான, குடும்பங்களை எதிர்க்கும், சோகமான காதல். 

“மச் அடூ அபௌட் நத்திங்” (Much Ado About Nothing) – புத்திசாலித்தனமான, சமத்துவமான காதல். 

தனது சொனட் பாடல்களில் ஆசை, பொறாமை, காதலில் காலத்தின் தாக்கம் போன்றவற்றை விரிவாக ஆராய்ந்தார்.

ஷேக்ஸ்பியர் காதலைச் சிக்கலானதாக, முரண்பாடுகள் நிறைந்ததாகக் காட்டுகிறார். அது ஒரே நேரத்தில் இன்பமும் வேதனையும், பகுத்தறிவும் பைத்தியக்காரத்தனமும், நிலையானதும் மாறக்கூடியதுமாக இருக்கிறது என்கிறார்.

காதல் இயக்கம்: உணர்ச்சியின் உச்சம்

18-19-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் “புனைவியம்” எனும் காதல் இயக்கம் (Romanticism) தோன்றியது. இது காதலை வாழ்க்கையின் மிக உயர்ந்த துய்ப்பாக உயர்த்தியது.

கோதேவின் வெர்த்தர்

1774-இல் கோதே எழுதிய “இளம் வெர்த்தரின் துயரங்கள்” ஐரோப்பாவையே உலுக்கியது. வெர்த்தர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவள் வேறொருவரைத் திருமணம் செய்கிறாள். அவனால் தாங்க முடியாது. எனவே தற்கொலை செய்து கொள்கிறான்.

இந்த நூல் வெளியான பிறகு, இளைஞர்கள் வெர்த்தர் உடை அணிந்து தற்கொலை செய்து கொண்டார்கள். காதல் வாழ்தலைவிட முக்கியமானது என்ற கருத்து பரவியது.

கடமையிலிருந்து காதலுக்கு

இந்தக் காதல் இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்பு – காதற் திருமணம். அதற்கு முன்பு இருந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது குடும்பங்களின் கூட்டணி, சொத்துப் பரிமாற்றம், குழந்தைகள் பெறுதல், சமூகக் கடமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உலகம் முழுக்கவுமே அப்படித்தான் இருந்தது. காதல் இயக்கத்திற்குப் பிந்தைய திருமணம் என்பது இருதலைக் காதல், தன்னைக் கண்டடைதல், கண்டதும் காதல், உணர்ச்சி அடிப்படையிலான தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலானதாக மாறியது. இது மேற்கத்திய சமூகத்தை முற்றிலும் மாற்றியது. இன்று நாம் “காதற் திருமணம்” என்று சொல்வது இந்தக் காலத்தின் கண்டுபிடிப்பே.

காலனித்துவம்: பண்பாடுகளின் மோதல்

19-ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய காலனித்துவ ஆற்றல்கள் ஆசியா, ஆப்பிரிக்கா முழுவதும் பரவின. அவர்களோடே அவர்களது காதற் கருத்துக்களும் வந்தன.

இந்தியாவில் பதற்றம்

விக்டோரிய ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குக் காதற் திருமணத்தைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் வழக்கத்தில் இருந்தது. இரண்டு கருத்துக்களும் மோதின.

இந்தியச் சீர்திருத்தவாதிகள் – குறிப்பாகத் தமிழ் மறுமலர்ச்சியாளர்கள் – திருமணச் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று வாதிட்டார்கள். பெண்களுக்குத் தெரிவுரிமை, காதலில் பெண்களின் ஒப்புதல், அவர்கள் வாழ்வில் காதலுக்கான இடம் – இவையெல்லாம் விவாதிக்கப்பட்டன.

ஆனால் இப்படியொரு கேள்வியும் எழுந்தது: நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் காதல் வரலாமே? திருமணத்திற்கு முன்பே காதல் இருக்க வேண்டுமா?

“நமது மரபில் திருமணத்திற்குப் பிறகு காதல் வளர்கிறது. இது வேறு வகைக் காதல், ஆனால் எந்த வகையிலும் குறைந்ததல்ல” என்று இந்தியர்கள் பலர் வாதிட்டார்கள்.

20-ஆம் நூற்றாண்டு: காதலின் புரட்சி

பிராய்ட்: காதலின் உளவியல்

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிக்மண்ட் பிராய்ட் காதலை உளவியல் நோக்கில் பகுப்பாய்வு செய்யத் தொடங்கினார். அவரைப் பொருத்தமட்டில், காதல் என்பது பால்மயக்க உணர்வு, குழந்தைப் பருவப் பாடுகளின் – உளநிலைச் சிக்கல்கள்களின் விளைவு என்றார்.

இது காதலை மறைபொருளாக்கியது. இது முதல் காதல் வெறும் கவிதைப் பொருள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வுக்கு உட்பட்ட ஒன்றும் என்றானது.

1960-களின் பாலியற் புரட்சி

1960-களில் மேற்கில் பாலியற் புரட்சி நடந்தது. குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை கர்ப்ப பயமற்ற பாலுறவைச் சாத்தியமாக்கியது. “சுதந்திரக் காதல்” இயக்கம், காதல், திருமணம், பாலுறவு ஆகியவற்றைத் தனித்தனியாகப் பிரித்தது.

இந்தக் காலத்தில்தான் கீழ்வரும் இந்தக் கேள்விகள் பிறந்தன:

காதல் இல்லாமல் பாலுறவு கூடாதா?

திருமணம் இல்லாமல் காதல் கூடாதா?

ஒரே நபருடன் வாழ்நாள் முழுவதும் காதலில் இருக்க வேண்டுமா?

பெண்ணியம்

பெண்ணிய எழுத்தாளர்கள் காதல் என்ற கருத்தியலையே கேள்விக்குள்ளாக்கத் தொடங்கினார்கள். 

காதல் பெண்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?

“எப்போதும் மகிழ்ச்சி” என்ற கதை பெண்களை வீட்டில் வைத்திருக்க உதவுகிறதா? 

“காதல்” என்ற பெயரில் அதிகார ஏற்றத்தாழ்வுகள் மறைக்கப்படுகின்றனவா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சமத்துவக் கூட்டாண்மை, இருதலை மரியாதை, ஒருவர் மற்றவருக்கு “முழுமையாக்குபவர்” அல்ல என்ற கருத்து போன்ற உரையாடல்கள் நடைபெற்றன.

LGBTQ+ விடுதலை

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஒரே பாலினக் காதல் மெதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. காதல் என்பது ஆண்-பெண்ணுக்கு இடையில் மட்டும் நிகழ்வது அல்ல என்ற கருத்து பரவியது.

இன்று பல நாடுகளில் ஒரே பால் திருமணம் சட்டப்படியாகிவிட்டது. காதல் என்பது பாலினத்தைத் தாண்டியது என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

21-ஆம் நூற்றாண்டு: எண்முறைக் (டிஜிட்டல்) காதல்

இணையப் பழகள் (ஆன்லைன் டேட்டிங்): படிமுறைத் தீர்வுக் (அல்காரிதம்) காதல்

இன்று கோடிக்கணக்கான மக்கள் டிண்டர், பம்பிள், ஹிஞ்ச் போன்ற செயலிகளில் காதலரைத் தேடுகிறார்கள். ஒரு புகைப்படத்தை வலதுபுறமோ இடதுபுறமோ தேய்த்து விடுவதன் மூலம் காதல் தொடங்குகிறது.

இது காதலை மாற்றியுள்ளதா? இது காதலை எளிதாக்கியுள்ளது – மக்கள்மயப்படுத்தியுள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். இது காதலை வணிகம் (“ஷாப்பிங்”) ஆக்கியுள்ளது, இதில் மனிதர்கள் பொருள்களாகப் பார்க்கப்படுகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.

புதிய உறவு வடிவங்கள்

இன்று காதலில் பல புதிய வடிவங்கள் வந்துவிட்டன:

பன்மைக்காதல் (Polyamory) – ஒரே நேரத்தில் பலருடன் காதல் உறவு, அதுவும் தொடர்புடைய அனைவரும் அறிந்தவர்களாக, அதை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள் 

திறந்த உறவுகள் (Open Relationships) – முக்கிய உறவு என்று ஒன்று இருக்கிறது, ஆனால் மற்றவர்களுடன் பாலுறவு கொள்வதும் அனுமதிக்கப்படுகிறது

உறவுக் கட்டுடைப்பு (Relationship Anarchy) – காதல், நட்பு, பாலுறவு ஆகியவற்றின் படிநிலைகளை மறுதலித்த நிலை

ஈர்ப்பின்மை (Aromanticism) – காதல் ஈர்ப்பை உணராதவர்கள் என்றும் ஒரு குழுவினர் இருக்கிறார்கள்

இவையெல்லாம், “காதல் என்றால் என்ன?”, “அது தேவைதானா?” என்ற கேள்விகளை எழுப்புகின்றன.

சமூக ஊடகங்களின் தாக்கம்

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் மனிதர்கள் தங்கள் உறவுகளைப் பொதுவில் காட்டுகிறார்கள். ஒருவரின் “உறவு நிலை” முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இணைகள் தங்கள் காதல் வேளைகளைப் பிறரோடு பகிர்கிறார்கள்.

இது காதலை எவ்வாறு மாற்றுகிறது? காதல் இப்போது மற்றவர்களுக்குக் காட்டுவதற்கான ஒன்று என்றாகிவிட்டது. 

சைட் அடித்தல், கரெக்ட் பண்ணுதல், ரூட் விடுதல் போன்ற சொற்களைப் பயன்படுத்தியவர்களின் பிள்ளைகள் இப்போது ghosting, breadcrumbing, situationship போன்ற சொற்களோடு விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழ் கூறும் நல்லுலகின் நன்மைக்காக இப்போதைக்கு அவற்றை இப்படியாக மொழி பெயர்த்து வரையறை செய்து வைப்போம்:

ஆவியாதல் (ghosting) – திடீரென தொடர்பைத் துண்டித்தல்

ரொட்டித்தூள் காட்டல் (breadcrumbing) – சிறிதாக அக்கறை காட்டி மனிதரைத் தொங்க விடுதல்

நிலைமையுறவு (situationship) – உறவா இல்லையா என்று தெரியாத நிலை. 

அறிவியல் என்ன சொல்கிறது?

“காதலில் விழும்போது” மூளையில் என்ன நடக்கிறது என்பது பற்றி நவீன நரம்பியல் அறிவியல் ஆய்வு செய்கிறது. டோபமைன், ஆக்சிடோசின், செரடோனின் ஆகிய மூன்றும் காதல் வேதிப்பொருள்கள் எனப்படுகின்றன.

டோபமைன் – இன்பம், வெகுமதி, இயக்கம், உற்சாகம், கவனம் ஆகியவற்றைக் கிளறுவது.

ஆக்ஸிடோசின் – இணைப்பு, நம்பிக்கை, காதல் போன்ற உணர்ச்சிகளைக் கிளறும் இதுதான் முதன்மையான காதற் சுரப்பி.

செரடோனின் – மகிழ்ச்சி, தூக்கம், மூளைக்கும் உடலுக்குமான பரிமாற்றங்களுக்கான சுரப்பி.

இதில், காதல் மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகிறது:

காமம் (Lust) – பாலியல் ஆசையை மட்டும் மையமாகக் கொண்டது.

ஈர்ப்பு (Attraction) – ஒருவர் மீது காதலில் விழுவதும் வெறித்தனமாகக் காதலிப்பதும் இந்த நிலையில் நடப்பது.

இணைப்பு (Attachment) – காமத்தையும் ஈர்ப்பையும் தாண்டி நீண்டகாலப் பிணைப்பு உருவாவது இந்த நிலையில்தான். அவற்றைக் கடந்துதான் இந்த நிலையை அடைய வேண்டும். அவற்றைத் தவிர்த்து நேரடியாக இந்த நிலைக்குள் குதித்துவிட முடியாது.

காதலையும் உணர்வுகளையும் ஆராயும் அறிவியல் ஒருபோதும் உணர்வுகளுக்கு ஆட்பட்டு விடாது. இந்த ஆராய்ச்சிகளைச் செய்யும் அறிஞர்கள் கூடத் தாம் காதலிக்கும் போது அறிவியலுக்கு உட்படுத்த முடியாத ஓர் உணர்வு நிலையை அடையத்தான் செய்வார்கள். உணர்வுகளை ஆய்தல் வேறு; உணர்தல் வேறு – அல்லவா?

தமிழ்த் திரைப்படங்களில் காதல்

தமிழ் திரைப்படங்கள் காதலை எவ்வாறு சித்தரித்தன என்பது தமிழ்ச் சமூகத்தின் காதல் பற்றிய பார்வையை எதிரொளிக்கிறது.

1950-கள், 60-கள்: அப்பாவித்தனமான – உன்னதமான காதல் பேசப்பட்டது. “மன்னாதி மன்னன்”, “பாசமலர்” போன்ற குடும்ப மதிப்புகள், தியாகம், நம்பிக்கை ஆகியவற்றை முன்னிறுத்தும் படங்கள் வெளிவந்தன.

1970-கள், 80-கள்: சோகக் காதல் நிறைந்திருந்தது. “16 வயதினிலே”, “மூன்றாம் பிறை” போன்ற சமூகத் தடைகள், சாதி வேறுபாடுகள், சோகமான முடிவுகள் பற்றிப் பேசும் படங்கள் வந்தன.

1990-கள், 2000-கள்: கல்லூரிக் காலக் காதல்கள் நிறைய இருந்தன. “காதலன்”, “காதல் கோட்டை” போன்ற இளமை, துடிப்பு, நகைச்சுவை போன்றவற்றைக் கொண்ட படங்கள் வந்தன.

2010-களுக்குப் பின்பு: இயல்பான, சிக்கலான உறவுகள் பற்றிப் பேசப்படுகிறது. “விண்ணைத்தாண்டி வருவாயா”, “96”, “சூரரைப் போற்று” போன்ற நவீன உறவுகளின் சிக்கல்கள், கனவுகளுக்கும் இயல்புக்கும் இடையிலான முரண்கள், தனிமனிதத் தேர்வுகள் போன்றவற்றைப் பேசும் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

காதலின் நிலையான மர்மம்

ஐயாயிரம் ஆண்டுகள் கடந்தும் காதல் இன்னும் நம்மைக் குழப்புகிறது, ஈர்க்கிறது, மாற்றுகிறது. மெசபடோமியாவில் இனன்னாவும் துமுசியும் பாடிய காதல், தமிழகத்தில் குறிஞ்சி மலைகளில் ஏக்கத்துடன் காத்திருந்த தலைவியின் காதல், ரூமியின் மாய ஏக்கம், ஷேக்ஸ்பியரின் ரோமியோவின் துடிப்பு, இன்று திறன்பேசியில் செய்தி அனுப்பும் இளைஞனின் பதட்டம் – எல்லாமே ஒரே உணர்வின் வெவ்வேறு வெளிப்பாடுகள்தானே!

காதல் மாறியுள்ளது – யார் யாரைக் காதலிக்கலாம், எவ்வாறு வெளிப்படுத்தலாம், என்ன எதிர்பார்க்கலாம் – இவையெல்லாம் காலத்துடன் மாறியுள்ளன. ஆனால் காதலின் மையம் – இன்னொரு மனிதரோடு ஆழமாக இணைய விரும்பும் ஏக்கம், அவர்களைப் புரிந்து கொள்ள விரும்பும் ஆசை, அவர்களுடன் இருக்க விரும்பும் தவிப்பு – இவை என்றும் மாறாதவை.

காதல் நம்மை மனிதர்களாக்குகிறது. அது நமக்கு மகிழ்ச்சியையும் வேதனையையும், நம்பிக்கையையும் ஏமாற்றத்தையும், பலத்தையும் பலவீனத்தையும் தருகிறது. அது நம்மை மரணத்தை எதிர்கொள்ள வைக்கிறது (கில்காமெஷ் அனுபவித்தது போல), நம்மை இறைமையைத் தொட வைக்கிறது (ஆண்டாள் உணர்ந்தது போல).

இன்று, 21-ஆம் நூற்றாண்டில், காதல் பல புதிய வடிவங்களை எடுத்துள்ளது. ஆனால் அதன் சாறு அப்படியேதான் உள்ளது. நாம் இன்னும் காதற் கவிதைகள் எழுதுகிறோம், காதற் பாடல்கள் பாடுகிறோம், காதற் கதைகள் சொல்கிறோம். அவற்றையெல்லாம் கேட்கும் போது சுவைக்கிறோம்.

காதலாற்றுப் பாதை தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கிறது. அது எங்கே போகிறது? எதிர்காலத்தில் காதல் எவ்வாறு இருக்கும்? யாம் அறியோம். ஆனால் ஒன்று உறுதி – மனிதர்கள் இருக்கும் வரை, காதலும் இருக்கும்.

***

பாரதிராஜா – தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com

ஆர்.கே.ஜி கவிதைகள்

0

சிங்கவேள்

ஒரு நாள்
சந்திப் பொழுதில்
உன்னை
மனமாறக்
கொன்றேன்

சிங்கவேளாய்
மடியில் வைத்து
உன் இதயம் பிளந்தேன்

அடுத்த நாளே
யோகத்தில் அமர்ந்து
இன்னொரு மனமும்
கூடுவதற்கு இன்னொரு ஒரு பெண்ணும் சிருஷ்டித்தேன்

இனி
புதியவளின் பஞ்சு தனங்கள்
என்னை சீண்டினாலும்
அவள் என் மார்பில் குழைந்தாலும்
அலட்டாமல் யோகத்தில்
அமர்ந்து போவேன்

இருட்டு குகையில்
தனியே அமர்ந்தப்படி
இதை சொல்கிறேன்

நித்யம் அநித்யம் எல்லாம் கூச்சல்


முடிவிலி – Infinity

அனைத்திற்கும் சாட்சியாக
ஒருத்தி இருக்கத் தான் செய்கிறாள்.

அவளே,
ஈசன் எரி ஆடும் கணங்களில்
மஹா தாண்டவ சாக்ஷிணி.

அனைத்திற்கும் சாட்சி எனில்,
எறும்பின் கடிக்கும்
ஊழிக்கும் அஃதே.

வண்ணம் பூசாத
வெள்ளைத் தாளுக்கும்
பார்வையின் புணர்வுக்கும்
பிறந்தவள் அவள்

அருவம் அவள்
வண்ணம் தீட்டாத வரை
உருவம் அவள்
வரைந்தவை அழியும் வரை

அனைத்திற்க்கும் சாட்சி ஆவதால்
படைப்பு, காப்பு, இறப்பு
முத்தொழிலும் அவளுக்கு பரிட்சயம்

எங்கும் நிறைந்தவள்
நிறைந்தவள் எனில் முடிவற்றவள்
முடிவற்றது உலகில் காமம்
சம்மந்தமில்லாத
X & Y

அனைத்தையும் தனதாக்கி
ஒரு புறம் முத்தமிட்டும்
மறு புறம் அளித்தும்
இச்சைக்கு பின்னால்
பொருளாக முன்னால்
தன்னைத் தானே
பார்த்து சிரிக்கும்
வினோதினி

எண் இறந்து
ஒன்றே எஞ்சுவதால்
அ-த்வைதி

ஆதி அந்தம்
சொல்ல முடியாத முடிவிலி
நீலி காளி முடிவிலி Infinity


நீரின் கைகள்

மனம் உடல் வாக்கு என்று
அனைத்தையும் சுத்தப்படுத்தும்
நீரின் கைகளை
என் முன்னோர்கள் நம்பி வந்தார்கள்.

காட்டிலும் மலையிலும்
பதுங்கி நின்ற பன்றிக் குட்டிகளை மாய்த்து,
மாலையில் எதோ ஒரு நதியின் கரையில் அமர்ந்தபடி
பயத்துடன் இறந்து வீழ்ந்த அந்த பன்றியின் கண்களை
நீரில் பார்த்தபடி அவர்கள் அசைப்போட்டார்கள்.

உண்மையில் அக்காலம்
பசிக்கும் – பண்பிற்கும் விடை சொல்ல முடியாத ஒரு காலம்.

எப்படியோ அந்த காலத்தில்
எளிதாக மந்திரத்தில் நீர் சுத்தமானது.
சுத்த நீரில் மலர்கள் தூவப்பட்டன.

இன்று
நம் கண் முன் அழுக்கு நீரும்,
நீரில் பிரதிபலிக்கும் பொய்யும் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

இதை உணர்ந்தபடி
நிதானத்துடன்
நீரை சுத்தப்படுத்த
நீரின் கைகளையே நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.


மூன்றாம் கண்

இட பாகம் முழுதும் தந்தும்
சிவனை‌ எதிர்‌ நின்று
அவன் நெற்றியில் முத்தமிடவே ஆசைப்படுகிறாள்
உமா

நெற்றிக் கண்ணின் சூட்டில்
சிவந்த இதழ்கள் பொசுங்கும் வரை


ஏர்ப்போர்ட் குறிப்புகள்

காலம்
ஒழுகும் குழாயின் நீர்ப்போல
சொட்டுகிறது
யாருக்கும் பயனின்றி

எழுத்துக்கள் வண்ணமாக மாறும்
காலம்
கவிதைகளின் காலம்

துறவியின் கண்கள்
சௌந்தர்யத்தை
மௌனமாகப் பார்க்கின்றன

பார்த்தப் பின்
அப்பட்டமாக்கிவிடுகின்றன
அந்த
லோக யுவதியின் அழகை

காதலித்தது
சத்தியத்தை
காமம்‌ காதலியுடன்
இப்படிக்கு
சத்ய காமன்

ஏகாந்தம் என்பது
ஒன்றை மட்டும் விட்டு
அனைத்தையும் கொன்ற
கொலைகாரனின் சாந்தம்

அனைத்தும் நானே என்பது
அஹங்காரம்
எதிலும் நான் இல்லை என்பது
சூன்யம்
சிலவற்றில் நானும்
பலவற்றில் பிறவும்
என்னும் குழப்பமே நிதானம்

ஆயிரம் பௌர்ணமிகளைக்
கண்டவர்கள்
கொண்டாடப்படுகிறார்கள்
நானோ
ஆயிரம் நிலவுகளுக்குப் பாலூட்டும் அவளை
காண விரும்புகிறேன்.

***

ஆர்.கே.ஜி – இயற்பெயர் ராம் கார்த்திக் கணேசன். 2013 ஆம் ஆண்டு கனடாவின் கனகார்டியா பல்கலைக்கழகத்தில், இயந்திர பொறியியல் துறையில், முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது டொரோண்டோவில் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் நவீன இலக்கியக் குரல்களுள் ஒன்றான இவரின் நாவல்கள், ‘பாடுவான் நகரம்’ மற்றும் ‘அகம்‘, யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன. மின்னஞ்சல்: ramkarthiksgm@gmail.com

அறிவைக் கையளித்தலும் – அதிகாரத்தை நிலைநிறுத்துவதும்

0

நிஜந்தன்

நாவலில் எமிலிக்கும், அவந்திகைக்கும் இடையேயான உரையாடலிலிருந்தே தொடங்குகிறேன். எமிலி அவந்திகையிடம் சொல்கிறாள். 

“ஏன் நாம் கடவுளாக அவற்றுக்கு (விலங்குகளுக்கு) தோன்றுவதில்லை? அதாவது எந்த உயிரியாவது நம்மைக் கடவுளாக நினைப்பதுண்டா? எனக்கு அந்த சந்தேகம் எப்போதும் உண்டு.”

“நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை எமிலி. நாம் எதற்கு மிருகங்களுக்குக் கடவுளாகத் தோன்றவேண்டும். அவற்றுக்கு அப்படிச் சிந்திக்கத் தெரியாதே?”

எமிலி அவள் முடிப்பதற்குள் குறிக்கிட்டு, “ஆமாம் அந்தச் சிந்தனைதான் மிருகத்தையும் மனிதத்தையும் பிரிக்கிறது.”

அந்த அறிவு மிருகங்களுக்கிடையே மட்டுமல்லாமல் மனிதர்களுக்குள்ளாவும் அதிகாரம் கொண்டவர்கள், அவர்களுக்கு கீழ்படிந்தவர்காளாகவும் பிரிக்கிறது. அதிகாரம் படைத்தவர்கள், தங்களை மேல் நிலையில் வைத்திருக்க அறிவைத் தங்களுக்குள்ளாகவே தொகுத்து தங்களது குறிப்பிட்ட இன, மொழி, மதம் மற்றும் சாதிக்குள்ளாக பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்களை அதிகாரம் பொருந்தியவர்களாகவே நிலை நிறுத்திக்கொள்கிறார்ர்கள்.

இது ஆதியிலிருந்தே தொடர்ந்து வரும் போக்கு. பொதுமை படுத்திக்கொள்ள அதிகாரம் பொறுந்தியவர்கள் விரும்புவதேயில்லை. இதை எளிதாக புரிந்துகொள்ள முடியும், மேலதிகமாக விவரங்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

மேற்கூறியவை சம்மந்தமான ஆய்வு ஒன்று மலை உச்சியில் இருக்கும் கதீட்ரல் ஒன்றில் (கிறுத்தவர்களின் தலைமை சபை) நிகழ்வதாக தூயன் எழுதிய கதீட்ரல் நாவல் விரிகிறது. 

ஒரு துப்பறியும் நாவலுக்கான வேகம் கதீட்ரலில் இருந்தாலும், நாம் ஆழ்ந்து வாசிக்கும்போது நாவல் அதிகமான களங்களை விவாதத்துக்கு எடுத்து கொண்டிருக்கிறது, அதை நேரடியாக விவரிக்காமல் நம்மிடையே வாசிக்கும் பொருட்டு உருவாகும் சிந்தனையின் போக்கில் விட்டுவிடுவதை நாவலின் சிறப்பான அம்சமாகத்தான் பார்க்க வேண்டும், விடுபடல்களாக எடுத்துக்கொள்ளமுடியாது.

யாவரும் இணைய இதழில் ‘தாண்டவராயன் கதை’ குறித்த விமர்சனத்தில் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். 

“‘தாண்டவராயனின் கதை’ இனி எழுதப் புகுபவர்களுக்கும், பா.வெங்கடேசனுக்குமே அளித்திருக்கும் சவால் என்னவென்றால், இந்த வடிவத்தை மறுமுறை பயன்படுத்தினால் அது போலச் செய்தலாக தோற்றம் பெறும்.”

இந்த சவால் தூயனுக்கு அதிகம் இருந்திருக்க வேண்டும், சில இடங்களில் ‘தாண்டவராயன் கதை’யின் பாதிப்பும் அதே போன்ற பாணியும் சில இடங்களில் வெளிப்படுகிறது, ஆனால் துருத்திக்கொண்டு தனியாகத் தெரியவில்லை. 

கதீட்ரல் நேர்கோட்டில் இல்லாமல் பயணிக்கும் நாவல், கதாப்பாத்திரங்களை மட்டுமல்லாமல், மேலிருந்து பார்க்கையில் குதிரையின் லாடம் போன்ற அமைப்பில் இருக்கும் கதீட்ரலின் கட்டிட அமைப்பையும் புரிந்துகொள்ள தேவையும் இருக்கிறது.

யாளிகளின் வருகை என மாய யதார்த்ததில் இறுதி அத்தியாயத்தோடு நாவல் தொடங்குகிறது. 

கதீட்ரலில் ரகசியமாக மருத்துவ உளப்பகுப்பாய்வை செய்துவரும் நீட்ஷன், அவரது நண்பரில் ஒருவர் பிரிட்டிஷ் துரையிடம், பங்காவாலாக (விசிறி போன்று காற்றிற்காக உத்திரத்தில் திரை போன்ற பெரிய துணியை முன்னு பின்னுமாக இழுப்பவர்களின் பெயர்) வரும் ஆப்ராஹம், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஓவியங்களை பிரதியெடுக்க வரும் அவந்திகை, மற்றும் எமிலி என்ற கன்னியாஸ்திரி. இந்த நால்வர்களை மையமாக கொண்டு அவர்களின் கதையையும் முன்னும் பின்னுமாக கொண்டும் அதன்வழியே கதீட்ரலில் இருக்கும் ரகசிய ஆய்வையும் ஒரு புதிரான கட்டிடத்துக்குள் சிக்கவைக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியான ஒரு கண்ணோட்டமும், அதற்கு காரணமான வரலாற்று பின்னணியும் உள்ளது. மேலும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஒரு அறிவு தொகுப்புமுள்ளது, அனைத்தும் ஓரிடத்தை நோக்கி இணைகிறது.

நீட்ஷனுக்கு நோய்மை குறித்த பார்வை ஃப்ரூக் உரையாடலில் அளிக்கிறது, நோயைக் குறித்த நினைவு அளிப்பது என அவந்திகையோடு பகிர்ந்துகொள்கிறார். நீட்ஷனின் பார்வையில் காலகட்டம் நீர்த்துப்போனாலும் தனி மனித சுயத்தை ஒருவன் தன்பால் ஈர்ப்பது அறிவுத் தொகுப்பே, அதன் மூலமே நிலத்தைத் தொடர்ந்து கையில் வைத்திருக்க முடியும் என்ற பார்வையுள்ளது. அதற்கான உளப்பகுப்பாய்வைதான் ரகசியமாக செய்து வருகிறார். அதற்கான ஓவியத்தை பிரதியெடுக்கவே அவந்திகை வருகிறாள்.

அவந்திகையிடம் எல்லாவற்றையும் எண்களாகவே பார்க்கும் ஒரு அறிவு செயல்பாடு உள்ளது. மாதவிடாயை கணிப்பதன் மூலமே எண்களாக எல்லாவற்றையும் கணிக்கும் நுட்பம் வாய்க்கப்பெறுகிறார். நீட்ஷனின் ஆய்வு கூட தன்னுடையது என ஒரு சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டவராக, அவருக்கு அந்த ரகசிய ஆய்வை எடுத்து தர உதவுவது ஆப்ரஹாம். ஆப்ராஹம் மட்டும் சைகை மொழியில் பேசுபவரல்ல, அங்கிருக்கும் மொத்தம் மூன்று நபர்களுமே காது, வாய் இரண்டுமே செயல்படாதவர்கள். பொதுவாகவே பங்காவாலாகவே இருக்கும் தகுதிகளில் இதுவும் ஒன்று, இதன் பின்னனி நாவலில் குறிப்பிடப்படவில்லை, ஆனால் பறங்கியர்களின் விவாதங்களில் பங்கியை இயக்கும் பொழுது அந்த விவாதத்தை தெரிந்துகொள்ளக்கூட வாய்ப்புள்ளது என்றிருக்கலாம் எனக் கருதுகிறேன்.

ஆப்ரஹாமும் அவந்திகையும் இருவருக்குமிடையேயான உரையாடல் சைகை மொழியில் நடைப்பெற அந்த கட்டிட அமைப்பு உதவுவதை விவரிக்கும் பொழுதில், புனைவின் உட்சத்தை தொடுகிறார் தூயன். ஆப்ரஹாமிடம் கூத்து காட்டும் ஒரு திறமையொன்றுள்ளது. அதன் மூலம் கட்டிட அமைப்புகளை விளக்கவும் முடிகிறது. அவனது கூத்து முடியும்பொழுது நாவல் முடிகிறது, ஆனால் கூத்து நாவலின் முந்தைய பகுதிகளிலே தொடங்கி விடுகிறது.

மிஷனிலிருந்து வெளியேற நீட்ஷனை நெருக்கும் பொழுது, அந்த பிரிட்டிஷ்காரர்களை தத்தமது அறையிலிருந்து பிறிதொரு அறைக்கு மாற்றுவது அவரின் சிந்தனையோட்டத்தை குழப்பும் வகையில் இருக்கிறது. ஆனால் ஆப்ரஹாம் வந்தவுடனே அறிந்துகொள்கிறான். அதற்கு அவனது பின்னனி உதவுகிறது.

“பறங்கியர்களுக்கு இது நன்றாகவே தெரியும். நாங்கள் கூறுவதற்கு வெறுமனே செவி கொடுக்கிறார்களே தவிர அவர்களின் புத்தி தேடுவது. எங்களிடம் இருக்கும் மந்திரசாவியைத்தான். அதாவது அரண்மனையில் விசித்திர சரீரத்தின் ஆத்ம வழியைக் கண்டுபிடிப்பது”

எமிலி கன்னங்கரிய சிறுமியாக மங்களூரில் ஒரு தேவலாயத்துக்கு வந்து சேர்கிறாள். அதன் கிறுத்துவ சிலுவையுரு மற்றும் ஆலயத்துள் சென்று பார்த்தபோது சிலுவையிலிருந்து ரத்தமும் காயமுமாக கிருஸ்துவை கைகளில் தாங்கிக்கொண்டிருக்கும் பால்முகம் கொண்ட ஒருத்தியின் சிலையைப் பார்க்கும்போது, காயப்பட்ட கிருஸ்து தனது பலியை தருவதன் மூலம் அவள் தன் கருப்பைமீது வைத்துக்கொள்கிறாள். இதை இறுதி வரை நம்பி கன்னியாஸ்திரியாகி நீட்ஷனிடம் வந்து சேர்கிறாள். 

புனைவுகளில் கதாபாத்திரங்களின் செயற்பாடுகளை முன்நகர்த்துவது அவர்களின் உரையாடல்களே. ஃப்ரூக்கிடம் உரையாடும் நீட்ஷன், புதிய கோட்பாடுகள் பதில்கள் மூலமாகவே தன்னை நிலைத்து நிறுத்திக்கொள்கிறது. அறிவொளிக்காலம் அப்படியொரு பதில்களின் குவியல் தான். அதுவே அவரது ஆய்வை முன் நகர்த்துகிறது.

எமிலிக்கும் நீட்ஷனுக்குமிடையேயான உரையாடல் விவிலியம் குறித்த நம்பிக்கையை உருவாக்குவது அதன் தொன்மை தான். தொன்மைக்கான கட்டமைப்புதான் அதை நம்பிக்கையிலேயே வைத்திருக்கிறது என்கிறார்.

எமிலி கிறிஸ்துவின் சிலுவை அறைதல் கூட பழங்குடிகளின் பண்பாட்டின் ஒரு கூறு என விவாதிக்கும் போது பதிலற்று போகும் நீட்ஷன் அந்த ஆய்வின் எட்டாண்டுகள் முழுவதுமாகவே அவளின் முடிவுறா கேள்விகள்தான்.

ஆப்ரஹாமிடையே சைகையால் உரையாடும் அவந்திகை அவன் எழுப்பும் கேள்விகள், நீட்ஷனின் அந்த ஆய்வு நூலை வாசிக்க நகர்த்துகிறது.

அந்த நூலை கைப்பற்ற ஆப்ரஹாம் மற்றும் அவந்திகை எடுக்கும் முயற்சிகளும் அதை எமிலி கண்டுணரும் பகுதி முழுவதுமே நாவலை தனித்துவமாக நிற்க செய்கிறது.

இறுதி பகுதிக்கிடையே வரும் “தீம்பு அல்லது பூர்வக்குடிகள் தம் ஸ்வாதீனத்தை இழந்து கதை” யில் வரும் புதளி மற்றும் அதன் தொடர்ச்சியாக வரும் ஹலக்கொ பழங்குடிகளின் பகுதிகள் எமிலியின் முன்கதையாக மட்டுமல்லாமல் நாவல் பேசும் அதிகாரம் எப்படி அறிவின் தொகுப்பாக இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.

அவந்திகையின் நுதல் பற்றிய குறிப்பு, அவளுடைய வாசனை, அதனாலே அவளுடையவளாகும் பூனி என்ற பூனை, நூலகத்தின் சாவியை கண்டுப்பிடிக்கும் தருணம் எல்லாம் சேர்ந்து வாசிப்பதில் கொடுக்கும் இன்பம் சலிப்பு தட்டாத வாசிக்கும் புனைவில் புனைவின் உட்சமான இடங்கள்.

“ஆமாம் சர்வ வல்லமை படைத்த ஒரு சாம்ராஜ்யத்தின் வெறும் புவியியல் அமைப்பைப் பெறுவதால் மட்டும் திருப்தி அடைவதில்லை. அதாவது, நிலம் என்பது வெறும் புவியியல் அமைப்பு என்பதைத்தாண்டி ஒரு கலாச்சாரத்தின் இடம், விருப்பு வெறுப்புகளின் சூழல், அவர்களின் நம்பிக்கை. இப்படி அத்தனையும் சார்ந்தது. ஒரு தலைமைக்குக்கீழ் பணிகையில் அவர்களை மாற்ற வேண்டிய பொறுப்பும் உழைப்பும் அதிகார பீடத்துக்குரிய மரியாதை. அப்படியொரு விழுமியத்தை மாற்றுவதுதான் உண்மையான அரசதிகாரம். அது ஒருபோதும் சலிக்காது.” 

வரலாற்றோடு புனைவு கலந்து மாய யதார்த்தத்தை எழுதுவது அத்தனை எளிதானதல்ல. ஆனால் அதில் பெரும் கலைஞராக இருக்கும் பா.வெங்கடேசனோடு சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் தூயன் அந்த வரிசையில் இணைந்து கொள்கிறார்.

***

நிஜந்தன் – கோயம்புத்தூரை பிறப்பிடமாக கொண்டவர் நிஜந்தன். ஆரம்பத்தில் இடதுசாரிய அமைப்புகளோடு தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டு கொண்டிருந்தவர். தீவிர வாசகர். நூல்கள் குறித்த அறிமுக கட்டுரைகள் தொடர்ச்சியாக சமூக ஊடங்களில் எழுதி வருகிறார். தற்போது குறுங்கதைகள் மற்றும் சிறுகதைகளை வாசகசாலை, நடுகல் போன்ற இதழ்களில் எழுதி வருகிறார். மட்டுமன்றி நக்கலைட்ஸ் என்ற You tube சேனலில் Script writer ஆக பணிபுரிந்த அனுபவமும் கொண்டவர். பிறழ் இவரின் முதல் நாவல். மின்னஞ்சல் : chenijanthan@gmail.com