Home Blog Page 22

சீர்மிகு சிறுபான்மை

0

என். சொக்கன்

காந்தியைப் பின்பற்றுவது எப்போதுமே சிரமம்தான். இப்போது அது மேலும் சிரமமாக இருக்கிறது.

இத்தனைக்கும் காந்தி புதிதாக எதையும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. நல்ல பழகுமுறைகள் என்று உலகம் காலங்காலமாக நம்பியவற்றைத்தான், பல்வேறு மொழிகள், பண்பாடுகளின் அற நூல்கள் சொன்ன எளிய உண்மைகளைத்தான் அவர் தன்னுடைய தேடலில் கண்டறிந்தார், பின்பற்றினார், பிறருக்கும் எடுத்துரைத்தார். ஆனால், நாம் அதிலிருந்து மிகவும் விலகி வந்துவிட்டதால், வெளிநாட்டில் பிறந்து, வளர்ந்த பேரனோ, பேத்தியோ தன்னுடைய தாத்தா, பாட்டி பேசுவது புரியாமல், அவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பதைப்போல் திகைக்கிறோம்.

காந்தி வலியுறுத்தியவற்றைப் பின்பற்றுவதில் இன்னொரு சிக்கல், அவர் பேசியவற்றின் அளவும் வீச்சும் மிகப் பெரியவை, மிகப் பரந்தவை. தனிப்பட்ட, பொது வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் படிநிலைகளுக்கும் காந்திய வழிகாட்டுதல்கள் உள்ளன. அத்தனையையும் புரிந்துகொண்டு அவற்றின்படி நடப்பது என்கிற எண்ணமே நமக்கு மலைப்பைத் தரும். மொத்தத்தையும் பின்பற்றாவிட்டாலும் ஓரிரு எளிய விஷயங்களையாவது பின்பற்றலாமே என்றால் அப்படியெல்லாம் சிறிதினும் சிறிது கேட்கக் காந்தி நமக்குப் பழக்கவில்லை. பின்பற்றியவற்றை நினைத்து வருகிற மகிழ்ச்சியைவிட, பின்பற்றாதவற்றை நினைத்து வருகிற வருத்தம்தான் கூடுதலாக இருக்கும்.

இப்படி நாம் வருந்திக்கொண்டிருக்கிற நேரத்தில், காந்தியத்தைப் பின்பற்றவேண்டும் என்கிற தேவையோ விருப்பமோ நாட்டமோ இல்லாத பெரும்பான்மையினர் எதிர்த்திசையில் இன்னும் விரைவாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதனால், நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் கூடுகிறது. அது நமக்கு இன்னும் அழுத்தத்தை உண்டாக்குகிறது.

ஏனெனில், பெரும்பான்மை செய்வதுதான் சரி என்கிற இயல்பான நம்பிக்கை நம் எல்லாருக்கும் இருக்கிறது. ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பது மிகவும் வசதியான ஓர் அறிவுரை. பெரும்பாலும் அது சிக்கலில்லாத ஒரு வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுத்துவிடுவதால், அதைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியோ என்கிற மயக்கம் வருவது இயல்புதான்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களூரில் ஒரு பெரிய வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான போட்டி ஒன்றை அறிவித்திருந்தார்கள். அதில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு வண்ணமயமான பல பிளாஸ்டிக் துண்டுகள் தரப்பட்டன. அவர்கள் அவற்றைப் பலவிதமாக அடுக்கிப் பொருத்தி அழகிய உருவங்களை உருவாக்கவேண்டும். நடுவர்கள் தேர்ந்தெடுக்கிற சிறந்த உருவங்களுக்குச் சில ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தப் போட்டிக்கான விதிமுறைகளில் ஒன்று, குழந்தைகள் தானாகச் சிந்தித்து அந்த உருவங்களைச் செய்யவேண்டும், பெற்றோரோ மற்றவர்களோ அவர்களுக்கு உதவக்கூடாது.

ஆனால், இந்த விதிமுறையை அங்கு வந்திருந்த பெற்றோர் யாரும் மதிக்கவில்லை. அவர்கள் போட்டி நடைபெறும் நீள்வட்டப் பரப்பின் விளிம்பில் நின்றபடி தங்கள் குழந்தைகளுக்குப் பலவிதமான யோசனைகளைக் கத்திக் கத்திச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஓரிருவர் அந்த விளிம்பையும் தாண்டிச் சென்று தாங்களே உருவங்களைச் செய்து கொடுக்க முயன்றார்கள்.

போட்டியை நடத்தியவர்கள் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘தயவுசெய்து யாரும் உள்ளே வரவேண்டாம், குழந்தைகளுக்கு உதவவேண்டாம்’ என்று அவர்கள் அறிவித்தார்கள், கெஞ்சினார்கள், கொஞ்சினார்கள், மிரட்டினார்கள். அங்கிருந்த மெத்தப் படித்த பெற்றோரில் யாரும் அதையெல்லாம் மதிக்கவில்லை, பொருட்படுத்தவில்லை.

வியப்பான விஷயம், தங்களுடைய பெற்றோர் இப்படி உதவுவதைப் பெரும்பாலான குழந்தைகள் விரும்பவில்லை என்பது அவர்களுடைய முகக்குறிப்பிலேயே தெரிந்தது. அவர்கள் சொந்தமாக உருவங்களை உருவாக்கி வெற்றி பெறத்தான் விரும்பினார்கள். ஆனால், வானளாவிய அதிகாரம் படைத்த பெற்றோர் செய்வதை அவர்களால் எப்படித் தடுத்து நிறுத்தமுடியும்?

எங்கள் குழந்தைகளும் அந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். நானும் என் மனைவியும் அவர்களுக்கு உதவவில்லை. ஆனால், சுற்றியிருக்கிற எல்லாரும் அப்படிச் செய்யும்போது நாம் மட்டும் ஒதுங்கி நின்றால் நம் பிள்ளைகள் வெற்றி பெறமாட்டார்களோ என்கிற கலக்கம் எங்களுக்கு வந்திருக்கும்தானே?

காந்தியைப் பயில்வோர் இந்த மனக் குழப்பத்தை ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிறோம். ஏனெனில், இன்றைய உலகின் அதிகாரப்பூர்வமற்ற வெற்றி விதிமுறைகளாக வகுக்கப்பட்டிருக்கிறவை பெரும்பாலும் காந்தியத்துக்கு எதிரானவை. ‘நீ வெல்லவேண்டுமென்றால் துணிந்து பொய் சொல்’ என்றோ, ‘யாருக்கு என்ன ஆனால் என்ன? நீ முன்னேறுவதுதான் முக்கியம்’ என்றோ யாரும் யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை என்று நான் நம்ப விரும்புகிறேன். ஆனால், அவைதான் வேலை செய்யும், அவற்றைப் பின்பற்றாதவர்கள் தோற்றுப்போவார்கள் என்கிற பேசப்படாத (Implicit) விதிமுறையை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதனால், காந்தியைப் பின்பற்றுவது இந்தக் காலத்துக்குச் சரிப்படாதோ என்று அவ்வப்போது திகைக்கிறோம்.

உண்மையில், காந்தியைப் பின்பற்றுவது எந்தக் காலத்துக்கும் சரிப்படாது என்றுதான் உலகம் சொல்லிவந்திருக்கிறது. காந்தியிடமே அவர்கள் அதைத்தான் சொன்னார்கள். ஒருவேளை, பலப்பல நூற்றாண்டுகளுக்குமுன்னால் அனைத்தும் அறத்தின்படி நடந்த ஓர் உலகம் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அது கற்பனையில்மட்டும்தான் இருக்கிறது. அதைத் தங்களுடைய சிறு வட்டத்துக்குள் ஓரளவேனும் உண்மையாக்க விரும்புவோர் மேற்சொன்ன பேசப்படாத விதிமுறையால் தொடர்ந்து மிரட்டப்படுகிறார்கள்.

சில நேரங்களில் இந்த மிரட்டல்கள் அன்பான, அக்கறையான அறிவுறுத்தல்களாக வருகின்றன. ஆனால், ‘உன்னை அடிச்சுப் பொளந்திடுவேன்’ என்பதும், ‘நீ இப்படியெல்லாம் நடந்தா உலகம் உன்னை அடிச்சுப் பொளந்துடும்’ என்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அறிவுரை சொல்பவர்மீது நாம் வைத்திருக்கிற மதிப்பு, அது சரியான அறிவுரைதானா என்று சிந்தித்துச் செயல்படுவதை அல்லது நிராகரிப்பதைத் தடுத்துவிடக்கூடாது.

பலனைமட்டும் பார் என்கிறது இன்றைய உலகம். அந்தப் பலனை அடைவதற்குப் பயன்படுத்துகிற பாதையும் தூய்மையாக இருக்கவேண்டும் என்றார் காந்தி. அதன்மூலம் கிடைக்கிற மன நிறைவு அதைப் பின்பற்றியவர்களுக்கு மட்டும்தான் புரியும். அதை எப்படி விளக்கிச் சொல்வது?

இதில் இன்னொரு பெரிய சிக்கல், சிலர்மட்டும் இதைப் பின்பற்றினால் அந்த நன்மைகள் அவரவர் வட்டத்துக்குள் நின்றுவிடும். எல்லாரும் அப்படிச் செயல்பட்டால்தான் அதன் கூட்டு விளைவால் (Combined Effect) உலகம் மிகச் சிறப்பானதாக, மிக மகிழ்வானதாக மாறும். அப்படி ஓர் உலகத்தை இப்போது நாம் கற்பனையில் மட்டும்தான் பார்க்கமுடியும்.

அதற்காக நாம் நம்பிக்கை இழக்கவேண்டியதில்லை. அனைவரையும் மாற்றுவது நம் கையில் இல்லாவிட்டாலும், நம்மால் இயன்றதை, அதாவது, நம் செயல்பாடுகளை நாம் மாற்றலாம்; மற்றவர்களுக்கு அறிவுறுத்தலாம்; திணிப்பதைக் காந்தி விரும்பமாட்டார்.

ஆனால், மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் அளவுக்குக் காந்தியை நமக்குத் தெரியுமா?

நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம். என் தந்தையும் நானும் முதலாண்டுப் படிப்புக்கான புத்தகங்களை வாங்கச் சென்றிருந்தோம். அந்தப் புத்தகங்களில் ஒன்று சுமார் ஆயிரத்தி ஐநூறு பக்கங்களைக் கொண்டது, சிறு தலையணையைப் போன்ற தோற்றம் கொண்டது.

அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் என் தந்தைக்கு மிகவும் கவலையாகிவிட்டது, ‘இத்தனைப் பெரிய புத்தகத்தை நீ எப்படிடா படிக்கப்போறே?’ என்று அக்கறையுடன் கேட்டார்.

கடைக்காரர் சிரித்தார், ‘கவலைப்படாதீங்க சார், இதுல சுமார் 200 பக்கம்தான் முதல் ஆண்டுக்குப் பாடம். மீதியுள்ள பக்கங்களை அடுத்தடுத்த செமஸ்டர்கள்ல கொஞ்சங்கொஞ்சமாப் படிச்சாப் போதும்’ என்று விளக்கினார்.

அதுவரை ஒரு பாடத்துக்கு ஓராண்டுக்கு ஒரு முழுப் புத்தகம் என்கிற பள்ளி அமைப்பை மட்டுமே அறிந்திருந்த எனக்கு இந்தப் புதிய முறை ஒரு பெரிய திறப்பாக இருந்தது, பொறியியல் படிப்பைப்பற்றி நான் கொண்டிருந்த மலைப்பைக் குறைத்து உதவியது, எத்தனைச் சிக்கலான தலைப்பையும் கொஞ்சங்கொஞ்சமாக அணுகினால் கண்டிப்பாகக் கற்றுக்கொண்டுவிடலாம் என்கிற நம்பிக்கையைக் கொடுத்து இன்றுவரை வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.

காந்தியத்தையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவர் சொன்னவற்றில் நான் அறிந்தவை ஐந்து சதவிகிதம்கூட இருக்காது, புரிந்துகொண்டவை மூன்று சதவிகிதம்கூட இருக்காது, பின்பற்றுகிறவை ஒரு சதவிகிதம்கூட இருக்காது. இன்னும் படிக்க, முயன்று பார்க்க, ஏற்றுக்கொள்ள, நிராகரிக்க ஏராளமாக இருக்கிறது என்கிற நம்பிக்கை என்னைச் செலுத்துகிறது.

அப்படியானால், ஊரோடு ஒத்து வாழ்வது?

இந்த விஷயத்தில் பெரும்பான்மை நம்புவதும் பின்பற்றுவதும் சரியில்லை என்று நாம் உறுதியாக உணர்கிறோம். ஆனாலும், அந்த உணர்வு சரியா, தவறா என்கிற கலக்கம் அவ்வப்போது வரும். அப்போது முரட்டுத்தனமாக ஒரு பக்கம் சாய்ந்துவிடாமல் இரு வாய்ப்புகளையும் அலசிப் பார்த்து, தேவைப்பட்டால் பரிசோதித்துச் சரியான தீர்மானத்துக்கு வருவதும் காந்தியத்தின் ஒரு பகுதிதான். அந்தத் தீர்மானத்தில் சில நெகிழ்வுகள் இருக்கலாம்; அவை தவறுகளாகவேகூட ஆகிவிடலாம்; அதை ஒப்புக்கொண்டு அடுத்த முறை நம்மை மேம்படுத்திக்கொள்ள முயல்வதும் காந்தியத்தின் இன்னொரு பகுதிதான்.

குறிப்பாக, இதுபற்றிய ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் தொடர்ந்து நிகழவேண்டும். தன்னைப்பற்றிய மிகையான புகழ்ச்சிகளைவிட, இருதரப்பினரும் கலந்து பேசித் தீர்மானிப்பதைத்தான் காந்தி விரும்புவார். வரலாறெங்கும் அப்படிப்பட்ட உரையாடல்கள்தான் காந்தியத் தொண்டர்களை உருவாக்கிவந்திருக்கின்றன, இனியும் உருவாக்கும். அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும், பெரும்பான்மையின் மனங்களை உறுத்திக்கொண்டே இருப்பார்கள்.

அந்த உறுத்தல் நல்லது; உலகம் தன்னுடைய வேர்களிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு விலகிவந்துள்ளது என்பதற்கான நினைவூட்டல் அது; என்றேனும் நல்ல மாற்றம் வரும் என்பதற்கான நம்பிக்கைத் துளியும் அது.

***

என். சொக்கன்  – இயற்பெயர் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன். தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் பிறந்து வளர்ந்த சொக்கன் கோவையில் பொறியியல் கற்றவர், மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். கடந்த இருபதாண்டுகளாகப் பெங்களூரில் வசித்துவருகிறார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதும் இவரது நூல்கள் ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. மின்னஞ்சல்: nchokkan@gmail.com

சமுதாயத்தில் அடக்குமுறையின் கெளிமதம்

0

ஆ. ஹரிகிருஷ்ணன்

பெண் அடிமை, பெண்கள் முன்னேற்றம் என்று பெண்கள் வளர்ச்சி சார்ந்து இதுவரை நிறைய நாவல்கள் வெளியாகி உள்ளன. அதில் சில நாவல்கள் பெண்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பில் சீர் செய்ய வேண்டிய விஷயங்களைப் பல அடுக்குகளோடு பேசும். அப்படி ஒரு நாவல் தான் செல்வகுமார் பேச்சிமுத்து எழுதிய கெளிமதம். 

ஊர் பண்ணையார் வயலில் விவசாயக் கூலியாக இருக்கும் ராக்கம்மா கோவில் திருவிழாவில் வைக்கும் பொங்கல், ஊரில் அந்தஸ்தில் பெரிய ஆளாக இருக்கும் முத்துப்பாண்டி மனைவி வைக்கும் பொங்கலுக்கு முன்பே பொங்கி விடுவதால் அவளுக்கு முதல் மரியாதை கிடைக்காமல் போகிறது. இதனால் முத்துப்பாண்டிக்கும் ராக்கம்மாவின் குடும்பத்துக்கும் தகராறு நடக்கிறது. பஞ்சாயத்தில் ராக்கம்மா தரப்பில் நியாயம் இருந்தாலும் முத்துப்பாண்டி செல்வாக்கு நிறைந்த ஆள் என்பதை மட்டுமே காரணமாக வைத்துக்கொண்டு ராக்கம்மாவை குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கின்றனர். இதனால் காதல் கைகூடாமல் போக விரக்தியில் அவள் வாழ்க்கை தடம்புரண்டு திசைமாறி செல்லகிறது. அதற்கு பின் ராக்கம்மா அவள் வாழ்க்கையை தன் விருப்பம் போல் வாழ நினைக்கிறாள். இதற்கு தடையாக வரும் அனைத்தையும் தன் சாமர்த்தியத்தால் எப்படி உடைக்கிறாள், இதனால் அவள் சந்திக்கும் இன்னல்கள் என்ன என்பது தான் இந்த நாவல்.

ஒரு பெண்ணாக இழக்கக் கூடாத அனைத்தையும் இழக்கும் ராக்கம்மா ஊர் மக்கள் முன் தானும் ஒரு ஆளாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறாள். இதற்கு அவள் தேர்ந்து எடுக்கும் குறுக்குவழி அவள் உடல். பாலியல் தொழிலில் ஈடுபடும் ராக்கம்மா தன்னுடைய அழகால் உயர்மட்ட அளவில் இருக்கும் பல ஆட்களை அவளுக்கு நெருக்கமாக்கிக் கொண்டு அவள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்கிறாள். அவள் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் ஊரின் பெரியாட்கள் அவளுடைய தொழிலை நிறுத்தச்சொல்லி கண்டிக்கிறார்கள். அவர்களையும் எதிர்த்து அவள் நினைத்தபடி இருக்கிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் ராக்கம்மாவை எதிர்க்க ஊரே அஞ்சுகிறது.

ஊர் ராக்கம்மவை ஒதுக்கி வைத்தாலும் ராக்கம்மா ஊருக்கு எந்த தீங்கும் நினைக்கவில்லை. தன் ஊர் பெண்களின் வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஊரில் உள்ள ஒரு ஆணையும் தன்னிடம் நெருங்க விடுவதில்லை. இதுவே அவளுக்கு பாதகமாக அமைகிறது. ஊர் ஆண்கள் அவளைத் தொழில் செய்யக்கூடாது என்று கூறுவதன் உள்நோக்கம் எப்படியாவது ராக்கம்மாவை அடைந்துவிட வேண்டும் என்பதே. அது நடக்காத போது வன்மம் கொள்ளும் மனசுகள் இறுதி அத்தியாயங்களில் மிருகமும் செய்ய நினைக்காத சில விஷயங்களை செய்கிறது. கடைசி இரண்டு இரண்டு அத்தியாயங்கள் எழுதும் பொழுது எழுத்தாளர் உள்ளாக்கும் மனநிலை சற்று பதற்றத்துக்குரியதே.

ராக்கம்மா என்ற தனி மனிதியைப் பற்றிய கதையாக இருந்தாலும் பணம், அதிகாரம், ஆள்பலம் இவை எல்லாம் உள்ளவர்கள் இவை எதுவும் இல்லாதவர்கள் மேல் எப்படி தனது அதிகாரத்தை செலுத்துகிறார்கள் என்பதை எழுத்தாளர் வாசகனுக்கு கூறுகிறார். அதே பெண் என வரும் போது மேல் கூறியவற்றில் எதும் இல்லாதவர்களும் பெண்ணை ஆள நினைக்கிறார்கள். இம்மூன்றும் ஒரு பெண் கையில் இருந்தால் அவளை அழிக்க எந்த எல்லைக்கும் செல்ல இந்த சமூகம் தயங்குவதில்லை.

கதையில் வரும் முக்கால்வாசி கதாபாத்திரங்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள்ளே ஒரு படிநிலை இருக்கிறது. கோவில் தேர் ஊருக்குள் வருவதற்கு முன் பண்ணையார் வீட்டிற்கு தான் முதலில் செல்ல வேண்டும் என்கிற வழக்கம் முத்துபாண்டி தலையெடுத்தப்பின் மாறுகிறது. இதைக் காரணம் காட்டி முத்துப்பாண்டி ஊர் மக்களை தன் வசப்படுத்துகிறான். இதற்கு முன் பண்ணையார் இந்த ஊருக்கு செய்யாததற்கும் இப்போது அவன் செய்வதற்கும் என்ன வித்தியாசம் என்பதை அதிகார போதை அவனை யோசிக்க விடவில்லை. நமக்கு நடந்தது ராக்கம்மா குடும்பத்திற்கு நடக்க வேண்டாம் என்று ஊர்மக்களும் யோசிக்கவில்லை.

ராக்கம்மா தலை நிமிர்ந்து நடப்பவள், எதிர்த்து கேள்வி கேட்பவள் எனும் காரணங்களாலே அவளுடைய காதலன் முருகனின் அம்மா அவளை வெறுக்கிறாள். இதே காரணங்களுக்காக பஞ்சாயத்தில் அவளை ஊரை விட்டு ஒதுக்கவும் சுலபமாக தன் மகன் முருகனுக்கு வேறு பெண்ணொடு திருமணம் செய்து முடிக்கிறாள். ராக்கம்மவின் அப்பா தன் மகளை வாழ்கையில் அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில் தன் வயது உள்ள வேலுவை ராக்கம்மாவுக்கு திருமணம் செய்து வைக்கிறான். இவர்களில் யாராவது ஒருவராவது ஒருதலை பட்சமாக இல்லாமல் நடுநிலையில் நின்று இருந்தால் அல்லது ராக்கமாவின் மனதை புரிந்து முடிவெடுத்து இருந்தால் அவளின் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும். 

தலைப்பிற்கு ஏற்ப இந்த கதையின் முக்கிய பாத்திரம் திமிர். ராக்கம்மா ஊர் கட்டுப்பாட்டை மீறி அவள் விருப்பம் போல் வாழ்வதால் ஊர் மக்கள் அவளுக்கு அகங்காரம் அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறார்கள். அவளை எப்படி வீழ்த்தி நசுக்கலாம் என்று காத்திருக்கும் கூட்டத்திற்கு நடுவில் அவளுக்கு கை பிடித்து ஆறுதல் கூறும் ஒருவனே இந்த திமிர். ராக்கம்மாவிற்கு கையில் காசு சேர்ந்ததும், ஊரில் இருக்கும் காவல்துறை அதிகாரி, வக்கீல், எம்.எல்.எ என்று பெரிய ஆட்கள் எல்லோரும் கூட இருக்கவும் அவளுக்கு திமிர் வரவில்லை. இவை எதுமே இல்லாத போதும் அவள் முத்துப்பாண்டியை கொள்ளிக்கட்டையை எடுத்து நெஞ்சில் அடித்தது திமிர் அவளுடைய உயிர்வாயு என்பதை நமக்கு காட்டுகிறது. 

இந்தக் கதை முழுவதும் ராக்கம்மாவின் வாழ்க்கையை சித்தரிப்பதால் அவளின் கதாபாத்திர வடிவமைப்பு மிக முக்கியமானது. இங்கே ராக்கம்மாவின் கதாபாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக உள்ளது. அவை அனைத்துமே இந்த சமூகத்தின் பிரதிபலிப்பு தான். அடுத்தடுத்து நடக்கும் துயர சம்பவங்களால் வாழ்க்கையை வெறுத்து விடாமல் எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருக்கும் ராக்கமாவின் மனது மேலும் மேலும் கூர்மைப்படுத்தப்படுகிறது. ஆனால் எங்குமே அவளின் அடிப்படை குணம் மாறவில்லை. ராக்கம்மாவுக்கும் நீலி கிழவிக்கும் இருக்கும் உறவில் நாம் இதைக் காணலாம். கிழவி தன்னை முறைதவறி பேசிவிட்டாள் என்பதற்காக பல மாதங்கள் அவளுடன் பேசாமல் இருந்துவிட்டு நீலி கிழவி இறந்தபின் அடுத்து 16 நாட்களுக்கு ராக்கம்மா எனும் ஒற்றை ஆளின் பங்களிப்பை பார்த்து ஊர் மக்கள் போல் நாமும் அசந்து நிற்கிறோம். நாவல் முழுக்க வரும் கதாபாத்திரங்களுக்கு ஈடாக ஆங்காங்கே வரும் சிறுசிறு கதாபாத்திரங்களும் நம் மனதில் நிற்கின்றது. 

இந்தக் கதையில் ராக்கம்மாவிற்கு இவன் தான் அல்லது இவர்கள் தான் வில்லன்கள் என்று யாரையும் குறிப்பிட்டு ஒரு வட்டத்திற்குள் கொண்டு வர முடியாது. இங்கே பெண் என்பவள் எதற்கும் உடைமை இல்லாதவளாக கடைசிவரை ஒரு ஆணை மட்டுமே நம்பி வாழ வேண்டும் என்று எழுதப்படாத விதி ஒரு வில்லன். இன்னொரு பக்கம் அனைத்தும் இருக்கும் ஒருவனுக்கு எதுவும் இல்லாதவன் அடிமையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற மற்றொரு விதி (வில்லன்). இவை இரண்டுக்கும் தனக்கு எதிர் தரப்பில் இருப்பவன் ஒரே மதமாக இருந்தாலும் சரி, ஒரே சாதியாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் ஒரே சட்டம். இந்த வில்லன்களையும் தாண்டி கதையில் நம்மை நடுங்க வைப்பவன் வயிறுவூதிக் கிழவன். 

கதையில் ராக்கம்மாவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ரகுராம். ராக்கம்மாவுக்கும் ரகுராமுக்கும் நடுவில் இருக்கும் உறவை எழுதி இருக்கும் விதம் வாசிக்க இதமாக இருந்தது. குறிப்பாக இருவரும் சிறு வயதில் ஒருவர் மற்றவரை எப்படி பார்த்துக் கொண்டார்கள் என்று பேசிக் கொள்ளும் இடம் மீண்டும் ஒருமுறை அந்த பக்கத்தை வாசிக்க தூண்டுகிறது. இவர்கள் இருவருக்குள் இருப்பது நட்பா காதலா என்பது அவரவர் பார்வைக்கே. அவள் கூடவே இருக்கும் ரகுராம் ராக்கம்மாவிற்காக துடிப்பதை விட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பள்ளியனூர் எஸ்ஐ அவளுக்காக பரிந்து பேசும் இடம் இன்னும் மனிதம் இருக்கிறது என்பதை நமக்கு காட்டுகிறது.

இந்த புத்தகத்தின் மிகப்பெரிய பலம் மனிதர்களின் கொடூரத்தை எந்தவித பூசல்களும் இல்லாமல் உள்ளதை உள்ளது போல் ஆழமாகவும் வெளிப்படையாகவும் எழுதி இருப்பதுதான். அதுவே இந்தக் கதையின் உண்மைத் தன்மையை மேலும் அதிகரிக்கிறது. ஊரில் பெரியவர்களாக மதிக்கப்படுபவர்கள் ராக்கமாவை அடைய வேண்டுமென்று அவர்கள் அனைவரும் கூடிப் பேசும் பகுதி மனிதனை முழுவதுமாக சித்தரிக்க வேண்டும் என்று எழுத்தாளர் எழுதி இருக்கிறார்.

வட்டார வழக்கில் எழுதும் நாவல்கள் என்றைக்கும் வாசிப்பதில் வாசகனுக்கு ஒரு சவால் உண்டு. ஆனால் இந்த புத்தகம் வாசிக்க சுலபமாகவே இருக்கிறது. எழுத்தாளர் செல்வகுமார் பேச்சிமுத்து தன் மொழி நடையால் வாசகனை மாடனூருக்கு கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். மாடனூர் மக்களின் பேச்சு, செய்யும் தொழில், குலதெய்வம், அவர்களின் வழிபாடு, அவர்கள் உண்ணும் உணவு என்று அனைத்தும் நம் கண் முன்னே விரிகிறது. இந்த புத்தகம் படிக்கும் எல்லோருக்கும் பலாக்காய் தொவரம் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை கண்டிப்பாக மனதில் தோன்றும். கீ.ரா., தோப்பில் முகமது மீரான் போன்ற முன்னோடிகள் ஏற்கனவே வட்டார வழக்கில் எழுதி வாசிப்பவர்களை லயிக்க செய்திருக்கிறனர். அந்த வரிசையில் கெளிமதமும் சேரும்.

ஒரு பெண் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்கள் நிறைந்தவளாக இருக்க வேண்டும் என்று தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதைப் போலவே இப்போதும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆண்களோடு பெண்களும் நினைக்கிறார்கள். இது காலங்காலமாக இருக்கும் அடிமை மனநிலையா அல்லது அவர்களால் முன்னேற முடியவில்லை என்ற இயலாமையின் வெளிப்பாடா என்று தெரியவில்லை. பெண்களுக்கான மீட்சி என்பது வெறும் விடுதலை உணர்வாக பார்க்கப்படுவதில்லை. கற்பு, கலாச்சாரம் போன்ற கருப்பு துணி நம் கண்ணை மறைக்கிறது. இந்தக் கதையின் காலகட்டம் 1970ல், 80ல் போன்று இருந்தாலும் பேசப்பட்ட விஷயங்கள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துகிறது என்பது கசப்பான உண்மை. பின்வரும் நாட்களில் இந்த புத்தகம் வாசகர் கையில் பரவப் பரவ பல கலந்துரையாடல்களுக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

***

ஆ.ஹரிகிருஷ்ணன் – கோவையில் தொழில் நடத்திவருகிறார். சமூக வலைதளங்கள் தன் வாசிப்பனுபவங்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். மின்னஞ்சல் முகவரி : harikrish556@gmail.com

பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி?

0

ஆர். பட்டாபிராமன்

ளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச சமூகம் குறித்த வேட்கை பரவலாக அறியப்பட்டவைதான். அவரின் தியாக மரணம் இன்றும் ஆதர்சமாக இளைஞர்களை கவ்விப்பிடிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லாகூர் சதிவழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு மரணதண்டனை என்பது முடிவான பின்னர் அவர்களைக காப்பது காந்தியின் பெரும் பொறுப்பு என்கிற எதிர்பார்ப்பு அதிகமானது. தூக்குத்தண்டனை மாற்றப்படாமல் நிறைவேற்றப்பட்டப்பின்னர் இப்பிரச்சனையில் காந்தி குறித்த விவாதங்கள் நடக்கத்துவங்கின. அவை இன்றும் ஓய்ந்தபாடில்லை.

காந்தியின் உரை கேட்டு 9வது படித்துக்கொண்டிருந்த பகத்சிங் பள்ளியிலிருந்து வெளியேறி ஓத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்கிறார். ஜனவரி 4, 1922 உத்தரபிரதேசம் செளரி செளரா பகுதியில் போலீஸ்காரர்களின் ரசனை குறைவான சங்கேதங்களால் போராளிகள் கோபமூட்டப்பட்டனர். காவல் நிலையம் தீக்கிரையானது. போலீஸ்காரர்கள் மாண்டனர். அகிம்சை அறவழிப் போராட்டத்திற்கு நாடு தயாராகவில்லை எனப் போராட்டத்தை காந்தி திரும்பப் பெற்றார். ஆறு ஆண்டுகள் கடும் தண்டனை கொடுக்கப்பட்டு அவர் சிறைக்கும் அனுப்பப்பட்டார். அந்நிய துணிகள் தீக்கிரையாக்கும் போராட்டத்தில் பகத்சிங் நண்பர்கள் தீவிரமாக பங்கேற்றனர். 

காந்தி அறைகூவலைக் கேட்டு பள்ளிப்படிப்பை நிறுத்தியதும் காந்தி போராட்டத்தை கைவிட்டதுமான செயல்கள் பகத்சிங்கின் மனப்போராட்டத்தை அதிகப்படுத்தின. நண்பர்கள் மத்தியில் விவாதம் எழுந்தது. ஓரிரு நிகழ்வுகளைக் காரணம் காட்டி போராட்டத்தை நிறுத்தியது தவறு என பகத் பேசத்தொடங்கினார். காந்திய இயக்கத்தால் சாதிக்கமுடியாது என பகத்சிங் நம்பத்துவங்கினார். மதன்லால் திங்கராவின் செயலை காந்தி ஏற்கவில்லை. தவறான வழியில் செய்யப்படும் தியாகம் என அவர் கருத்துக்கூறி இருந்தார். பகத்சிங்கிற்கோ அது ஈர்ப்பை தந்தது

’சைமன் கமிஷனே திரும்பிப் போ’ இயக்கம் 1928ல் தீவிரமாக எழுந்தது. லாலாலஜ்பத்ராய் தலைமையில் நடந்த போராட்டத்தில் அவர் கடுமையாக பிரிட்டிஷ் போலிசாரால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் உடல் வலுவிழந்து செப்டம்பர் 1928ல் உயிர் நீத்தார்.

ஃபெரோஷா கோட்லாவில் பகத், சுகதேவ், குந்தன்லால், சிவ வர்மா, ஜெயதேவ் குப்தா, விஜய் குமார் சின்ஹா போன்ற புரட்சியாளர்கள் கூடினர். ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு அசோசியேசன் என்ற அமைப்பின் பெயரால் டிசம்பர் 10, 1928ல் ஸ்காட் போலீஸ் அதிகாரியை கொன்று பழி தீர்ப்பது என முடிவெடுத்தனர்.

டிசம்பர் 17 அன்று காவல்நிலையத்திலிருந்து வெளிவந்த போலிஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸை ராஜகுரு தலையில் சுடுகிறார். பகத் தொடர்ந்து சுடுகிறார். பகத்தை பிடிக்கவந்த சந்தன் சிங் என்கிற போலீஸ்காரர் ஆசாத்தால் சுடப்படுகிறார். அருகாமையில் இருந்த சைக்கிளில் ஏறி போராளிகள் தப்புகின்றனர். சாண்டர்ஸை ஜேம்ஸ் ஸ்காட் என நினைத்து கொன்றாலும் தோழர்கள் கடமையை செய்ததாக கருதினர்.

பொது பாதுகாப்பு மசோதா, தொழிற் தகராறு மசோதாக்களை கொண்டுவர பிரிட்டிஷ் தீவிரமாக இருந்தது. மசோதா மத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரும் நாளில் குண்டெறிவது என்கிற பகத்சிங் ஆலோசனை ஏற்கப்பட்டது

1929 ஏப்ரல் 8 அன்று சட்டமன்றம் கூடியது. மோதிலால் உட்பட தலைவர்கள் இருந்தனர். மசோதாக்கள் அறிமுகம் துவங்கியவுடன் பதுகேஷ், பகத் இருவரும் குண்டுகளை யாருக்கும் காயம் ஏற்படாதவாறு எறிந்தனர். பதட்டம் பரவியது. அனைவரும் ஓடத்துவங்கினர். மசோதா தாக்கல் செய்த ஜான் ஷீஸ்டர் மேசைக்கு கீழே பதுங்கி கொண்டார். தோழர்கள் இன்குலாப் முழக்கமிட்டனர். ஜின்னா, மாளவியா, விதல்பாய் படேல் அசெம்பிளியில் அமர்ந்திருந்தனர். போராளிகள் இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் பகத்சிங்கிடம் இருந்த துப்பாக்கியை எடுக்கவும் எந்த தடையும் அவர்கள் செய்யவில்லை. இதுவே பின்னர் அவர்களது சாண்டர்ஸ் கொலை வழக்கில் குற்றத்தை உறுதிப்படுத்த தடயமானது.

லாகூர் சதி வழக்கு எனப் புகழ்வாய்ந்த வழக்கில் சாண்டர்ஸ் கொலை, வங்கி கொள்ளை, அசெம்பிளியில் குண்டுவீச்சு போன்ற குற்றங்கள் வழக்கில் இணைக்கப்பட்டன

பகத்சிங், பதுகேஸ்வர், ஜதிந்திரநாத் ஆகியோர் லாகூர் பார்ஸ்டல் சிறையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது நேரு அவர்களை ஆக 9 1929ல் சந்தித்தார். கைதிகளின் நிலைமைகளை மேம்படுத்த அவர்கள் போராடிவந்தனர். – சிறைக்கைதிகளின் நிலையை மேம்படுத்தக்கோரி போராளிகள் பட்டினிப்போர் மேற்கொண்டனர். மிக உயர்ந்த இலட்சியதாகமும் சுதந்திர வேட்கையும் கொண்ட இவர்களைக் கிரிமினல்போல் நடத்துவது சரியல்ல என மதன்மோகன் மாளவியா அசெம்பிளியில் கண்டித்தார். அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டினார்.

சாண்டர்ஸ் வழக்கில் 24 பேர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டனர். செப் 12 1929ல் நீதிபதிகளுக்கு கட்டற்ற அதிகாரம் தரக்கூடிய மசோதா ஒன்றை- குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பார்க்காமல் கூட வழக்கு நடத்திட அதிகாரம் தரும் மோசமான மசோதா ஒன்றைக் கொணர்ந்தனர். மோதிலால்நேரு இதைக் கடுமையாக எதிர்த்தார்.

இர்வின் பிரபு மூவர் விசாரண கமிட்டி ஒன்றை லாகூர் சதி வழக்கிற்காக மே 1. 1930ல் அமைத்தார். இதை சட்ட விரோதமானது என பகிஷ்கரிக்க பகத்சிங் முடிவெடுத்தார். பின்னர் தோழர்கள் அறிவுரைப்படி லாலா துனிசந்த் என்பவர் வாதாட ஒப்புதல் தந்தார் பகத்சிங். மே 12, 1930ல் இன்குலாப் முழக்கத்துடன் விசாரணைக்கூடத்திற்கு புரட்சிகர தோழர்கள் வருகின்றனர்

அக்டோபர் 7, 1930 அன்று தீர்ப்பாயப் பிரதிநிதி சிறைச்சாலை வந்து தீர்ப்பின் 68 பக்க நகலை வாசித்தார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் மரணதண்டனை என்பது படிக்கப்பட்டது. அதிர்ச்சி நிலவுகிறது. மூவரும் புன்முறுவல் செய்கின்றனர். இன்குலாப் முழக்கம் இடுகின்றனர். நாடு முழுதும் இளைஞர்களின் போராட்டங்கள் எழுகின்றன. தீர்ப்பை கண்டித்து பொதுக்கூட்டங்கள் சென்னை உட்பட பெரு நகரங்களில் நடக்கின்றன. 

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய தோழர்களுக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து மார்ச் 23 1931 அன்று அதை நிறைவேற்றியது. வன்முறை மீது நம்பிக்கையற்ற காந்தி பகத்சிங்கை காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக சென்றது.

***

மஹாத்மாவின் சிந்தனை எப்படி இருந்தது? பகத் வழக்கு குறித்து எப்படி எதிர்வினை ஆற்றினார்? புகழுடன் விளங்கிய மஹாத்மா தனது அகிம்சைக் கொள்கை காரணமாக பகத்சிங் பிரச்சினையில் emotional ஆக involve ஆகவில்லை எனப் பேச்சு வந்தது. காந்தியடிகள் இறுதிகட்டம்வரை பல்வேறு முயற்சிகளை செய்தார்- அவர் வெற்றி பெறவில்லை எனச் சிலர் சொல்வதையும் பார்க்கமுடியும். இர்வினிடம் அதிகமான அழுத்தம் தந்தார் எனவும்-வைஸ்ராய் அவரை வஞ்சித்துவிட்டார் எனவும் வேறுபட்ட பார்வைகள் நமக்கு கிடைக்கின்றன. 

இர்வின் காந்தி இருவரும் நினைத்திருந்தால் தூக்குதண்டனயை மாற்றியிருக்கமுடியும் என்கிற பொதுவான கருத்தும் நிலவுகிறது. The Assumption is questionable- பிரிட்டீஷ் சிஸ்டம் என்கிற சூழலை வைத்து நாம் பார்க்கவேண்டும்- புரிந்துகொள்ளவேண்டும். பகத்சிங் தூக்கு பிரச்சனையில் காந்திய அரசியலை மட்டும் விமர்சிப்பவர்கள் பிரிட்டிஷ் சட்டமுறைக்கு பகத்சிங் பலியானவர் என சேர்த்து பேசுவதில்லை. அப்போதிருந்த வேறு எந்த தலைவர் குறித்தும் விமர்சனமும் இல்லை.

காந்தி இர்வினை சந்தித்து தண்டனை மாற்றம் (Remission of death sentence) என்பதைக்கோரி வருகிறார் என்பது செய்தியாக கசிந்தது. இதை அறிந்த பஞ்சாப் கவர்னர் காந்தியின் முயற்சி வெற்றிபெறக்கூடாது என எண்ணினார். அவர்கள் மார்ச் 24 என்பதற்கு ஒருநாள் முன்னதாக மார்ச் 23 அன்றே இரகசியம் காக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றுவது என முடிவெடுக்கின்றனர். 

காந்தி மார்ச் 23 அன்றும் விடியற்காலை மணி ஒன்றுக்கு நீண்ட கடிதம் ஒன்றை இர்வினுக்கு எழுதுகிறார். மாளவியா, நேரு, தேஜ்பகதூர் சாப்ரு ஆகியோரும் பெருமுயற்சி எடுக்கின்றனர். காந்தி மார்ச் 26 1931 கராச்சியில் கூடிய காங்கிரஸ் அமர்வில் எடுக்கப்பட்ட முயற்சிகளை விளக்குகிறார். முயற்சி பலனளிக்கும் என நம்பியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மார்ச் 23 அன்று பகத்சிங்கின் குடும்பத்தாரை காந்தி சந்திக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. காந்தியை வில்லனாக சித்தரிக்கும் முயற்சிகள் பின்னரும் நடைபெறாமல் இல்லை. 

சுதந்திரம் என்பது பிறரைக் கொன்று அடையமுடியாது என்பதை 1909லேயே தனது கருத்தாக வெளிப்படுத்தியவர் காந்தி. பிரிட்டிஷ் வைஸ்ராய் அல்லது குடும்பத்தார்- அதிகாரிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடந்தபோதெல்லாம் அதைக் கண்டித்தவர் காந்தி. 

பகத்சிங் குறித்த அக்கறை காந்திக்கு இருந்தது என குல்தீப் நாயர் தெரிவிக்கிறார். ஆனால் பகத்சிங்கின் வன்முறைப் பாதையை அவர் ஏற்கவே இல்லை. பகத்திற்கு சிலை எழுப்பும் இயக்கத்திலும் அவர் பங்கேற்கவில்லை. காந்தி இன்னும் சற்று தீவிர முயற்சியை எடுத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம் என்பது எச் ஆர் பக்‌ஷியின் கருத்தாக இருக்கிறது. 

மரணதண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக்கலாம் என்கிற காங்கிரசின் கருத்தை காந்தி ஏற்றார். அதை அமைதி திரும்புவதற்கான நிபந்தனையாகக் கூட வைக்கலாம் என காங்கிரஸ் செயற்குழு கருதியது. ஆனால் காந்தி நேர்மையாக கராச்சி காங்கிரஸ் அமர்வை எதிர்கொள்ள விரும்பினார். ஒருவேளை அந்த இளைஞர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்பது உறுதியானால் அது கராச்சி சந்திப்பிற்கு முன்பே நடந்துவிடவேண்டும் (If the boys should be hanged they had better be hanged before the Congress session than after it) என்றார் காந்தி. தலைவர்கள் கராச்சியில் தங்களைக் காத்துக்கொள்ள தள்ளிப்போடல் என்பதை காந்தி தன் நேர்மைப்படி ஏற்கவில்லை.

காந்தி முயற்சிகள் எடுத்தார் என்றாலும் வைஸ்ராய் அவரை ஏமாற்றிவிட்டார் என புரிந்துகொண்டவர்களும் இருக்கின்றனர். இக்கருத்தை கே கே கல்லு பிரதிபலிக்கிறார். இர்வின் சுயசரிதை எழுதிய அல்லாம் கம்பெல் ஜான்சன் இர்வின்-காந்தி உடன்பாட்டிற்கு பின்னர் பகத்சிங் தூக்கு குறித்த உரையாடல் இரு துறவிகளுக்கு மத்தியில் நடந்தது போல் இருந்ததே தவிர ராஜாங்க மனிதர்களுக்குள் நடந்தது போல் இல்லை என்ற பதிவைத் தருகிறார்

காந்தியின் மேல் சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு பதில் தரும் வகையில் காந்தி அனைத்து முயற்சிகளையும் செய்ததாக அனில் மெளரியா தெரிவிக்கிறார். காந்தி தூக்குத்தண்டனையை மாற்றக் கோரினார். மகாதேவ தேசாயின் குஜராத் குறிப்புகளின்படி பார்த்தால் இர்வின் உடன்பாட்டின் அம்சமாக இடம்பெற செய்யவும் காந்தி முயற்சித்தார் என்பது மெளரியா தரும் தகவல். உரிய காலத்தில் முயற்சி எடுக்கவில்லை- மார்ச் 3 1931ல்தான் எடுத்தார் என்கிற நூரணி தகவல் சரியானதல்ல. காந்தி பிப் 19 முதல் பெருமுயற்சிகளை எடுத்தார் என்பது மெளரியா முன்வைக்கும் வாதம்.

காந்தி பெரும் முயற்சிகளை எடுத்தார். வைஸ்ராய் எந்த உறுதிமொழியையும் தராவிட்டாலும் ரிமிஷன் கிடைக்கும் என காந்தி நம்பியதாக மீராபென் தெரிவித்துள்ளார்.

காந்தி ஜனவரி 26 1931ல் விடுதலையான பின்னர் பிப்ரவரி 18 முதல் மார்ச் 5வரை இர்வினுடன் பேச்சுவார்த்தை நடந்தது. எட்டு சுற்றுக்கள் 22 1/2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்ததாக அறியமுடிகிறது. மார்ச் 5 காலை எட்டப்பட்ட உடன்பாட்டில் நேருவிற்குகூட ஏமாற்றம் இருந்தது. 

பிப்ரவரி 18 அன்று காந்தி பகத்சிங் பிரச்சனையைப் பேசினார். பொதுவாக காந்தி மரணதண்டனைக்கு எதிராக நின்றவர். கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும். எவராக இருந்தாலும் திருந்த வாய்ப்பு தரவேண்டும் என்பதே அவரது பார்வை. பகத்சிங் பிரச்சனையில் மரணதண்டனையில் மாற்றம் என்றால் கூடுதலாக அமைதி நிலவும் என்றும் காந்தி கருத்து தெரிவித்தார். சரியோ தவறோ வெகுஜன கருத்து அவ்வாறு இருக்கிறது என்றும், இந்த உயிர்களை காப்பதன் மூலம் பல அப்பாவி உயிர்கள் பலியாவதும் தடுக்கப்படலாம் எனவும் காந்தி இர்வினுக்கு மார்ச் 23 அன்று எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். சிறப்பு பிரதிநிதி மூலம் அக்கடிதம் அனுப்பபட்டது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டால் திரும்ப பெறுவது என்பது நடவாத விஷயமல்லவா. Charity never faileth என்கிற வாசகம் கொண்ட அக்கடிதத்தை அனுப்பிவிட்டு அவசியமெனில் நேரில் வந்து பேசவும் தயார் என காந்தி தெரிவித்தார்.

இர்வின் தனக்கு மார்ச் 27, 1931 அன்று கொடுக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் காந்தியின் வற்புறுத்தலைக் குறிப்பிட்டுப் பேசினார். தனது கொள்கைக்கு எதிராக நடந்துகொண்ட இளைஞனுக்காக மரணதண்டனையை மாற்றவேண்டும் என அந்த அகிம்சை மனிதர் தன்னிடம் வலியுறுத்தியதையும், அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்டு இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க கூடாது என தான் உணர்ந்ததாகவும் விளக்கிக்கூறினார். இதை ட்ரிப்யூன் செய்திப்பத்திரிகை மார்ச் 28 1931 அன்று பிரசுரித்திருந்தது.

பகத்சிங்கை தூக்கில் ஏற்றினால் அவர் தேசத்தியாகியாக கொண்டாடப்படுவார். நிலைமைகள் சற்று விபரீதமாகும். ஆனாலும் சட்டப்பிரச்சனைகளில் அதன்படி செயல்படுவதுதான் தனக்கு சரியாகப்படுகிறது என்பதையும் காந்தியிடம் தான் சொன்னதாக இர்வின் தெரிவித்தார். மேலும் பகத்சிங்கிற்கு அத்தண்டனை சரியானதே என்பதால் அதை மாற்றவேண்டும் என்பது தன்னால் இயலமுடியாத ஒன்றானது என்றும் இர்வின் தெரிவித்திருந்தார். The Earl of Halifax- fullness of daysல் இப்பதிவு இருப்பதாக அறியமுடிகிறது.

பஞ்சாப் அரசாங்க செயலரின் தனி உதவியாளர் ஆண்ட்ரூஸ் மகளைத்தான் சாண்டர்ஸ் திருமணம் செய்வதாக இருந்தார் என்கிற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. அவரின் செல்வாக்கும் பகத்சிங்கிற்கு எதிராக இவ்வழக்கில் இருந்திருக்கலாம். ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்ட போலீஸ் சூப்பரிண்டெண்ட் ஜேம்ஸ் ஸ்காட்டும் வழக்கின் திருப்பங்களை உன்னிப்பாக கவனித்து ஆலோசனைகளை சொல்லிவந்ததாகவும் அறியமுடிகிறது. ஆண்ட்ரூஸ் தான் பல ஆங்கில அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதாகவும் தனக்கு ஆறுதலாக நிற்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதையும் அறியமுடிகிறது. ஆங்கில மாதுகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்கிற தாக்கம் பரவலாக்கப்பட்டது. 

அன்று பொறுப்பில் இருந்த 7 கவர்னர்கள் உறுதியாக நின்று வைஸ்ராயை வலியுறுத்திய செய்தியை ராபர்ட் பெர்னே தெரிவிக்கிறார். காந்திக்கும் பகத்சிங் மரணதண்டனையை ரத்துச் செய்ய அடிப்படைகள் இல்லை என அறிந்தும் அவர் மனிதாபிமான அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டதாக ராபர்ட் சொல்கிறார். பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு ராஜினாமா எச்சரிக்கையை செய்ததாக பீப்பிள் என்கிற பத்திரிகை தலையங்க செய்தியில் எழுதியது. அந்த இளைஞர்கள் இரு போலீஸ் உயிரை பறித்தவர்கள் என்கிற போலீஸ்தரப்பு வாதத்தை எழுதியது.

பகத்சிங்கின் தந்தை கிஷன் சிங் கவர்னர் ஜெனரலின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தி பிரைவி கவுன்சிலுக்கு பெட்டிஷன் ஒன்றை செப் 20, 1930ல் தந்தார். பிப்ரவரி 17, 1931ல் அது நிராகரிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் லால்கபூர், பால்ஜித் சிங் போன்றவர்கள் பிரவரி 16 அன்று வைஸ்ராய்க்கு தந்தி அனுப்பினர். நீதிமன்ற அமர்வுக்காலம் முடிந்த நிலையில் மரணதண்டனை செல்லாது என்றனர். பிப்ரவரி 25ல் ஆட்கொணர்வு மனு ஒன்றை போட்டனர். அவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாக்ஸ்டன், கிங், ஜோவெல்ட் போன்றவர்கள் பகத்சிங்கின் மரணதண்டனையை மாற்றவேண்டும் என வைஸ்ராய்க்கு வேண்டினர்.

காந்தி மார்ச் 23 அன்று எழுதிய கடிதத்தில் வைஸ்ராயை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்திருந்தார். கராச்சி செல்வதை ஒருநாள் ஒத்தியும் போட்டார். காந்தி கராச்சி சென்றபோது திரும்பிப் போ முழக்கத்துடன் இளைஞர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர். காந்தியம் வீழட்டும் என முழக்கம் இட்டனர்.

I pleaded Viceroy as best as I could. I brought all pressure at my command to bear him. I poured my soul into it but no avail எனக் காந்தி குறிப்பிட்டார்.

தண்டனைமாற்றம் பெறுவது என்பதைவிட தியாகத்தால் ஆற்றும் தேசக்கடமை உயர்ந்தது என பகத்சிங் கருதினார். The country will be served better by my sacrifice என்றவர் பகத்சிங். பகத்சிங் தனது தியாக வாழ்விற்கான பாதையைத் தேடிக்கொள்வதில் குறியாக இருந்தார். காந்தி தன்னால் இயன்றதை செய்யவே முனைந்தார். பிரிட்டிஷ் நிர்வாகத்தைவிட காந்தி மீதான தாக்குதலை சிலர் அதிகமாக தருவதை நம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

காந்தி வன்முறை வேண்டாம் என்று சொன்னவரே தவிர பகத்சிங் உட்பட எவரையும் வேண்டாம் எனச் சொன்னவர் அல்ல. ஒவ்வொரு உயிரின் உன்னதமும் அறிந்தவர் காந்தி.

***

ஆர்.பட்டாபிராமன் – தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் வசித்து வருகிறார். பி.எஸ்.என்.எல் இல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காந்தியை கண்டுணர்தல், நேருவின் மரபு, மார்க்சியத் தடங்கள் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். காந்தி குறித்தும், காந்தியம் குறித்தும் பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதிவருகிறார். மின்னஞ்சல் முகவரி: pattabieight@gmail.com.

நேசக்காற்று

0

தேன்மொழி அசோக்

1)

நீ வரவேயில்லாத 
என் வீட்டில் 
எப்போதும் மயான அமைதிதான் நிலவுகிறது 
எப்போது நீ நுழைகிறாயோ 
அக்கணமே திருவிழாக் கோலம் பூண்டுவிடும் 
அதற்காகக் கெஞ்சிக் கூத்தாடியெல்லாம் 
திருவிழாக் கொண்டாட முடியாது
என்னைப்போலவே உனக்கும் பித்து இருந்திருந்தால்
இந்நேரத்திற்குத் 
தோரணம் பின்னியிருந்திருப்பாய் அல்லவா?
நீ வேண்டுமானால் பொறுப்பில்லாமல் இருக்கலாம் 
எனக்கு ஆயிரம் வேலைகள் கிடக்கின்றன 
வேலையோடு வேலையாய் 
திருவிழாவின்போது 
உனக்குப் பிடித்த நிறத்தில் உடை அணிய 
சட்டைத்துணி தைத்துக் கொண்டிருக்கிறேன்

என் மீப்பெரும் நம்பிக்கையே 
வரும்போது 
முல்லைப்பூ வாங்கி வருவாய்தானே?

~~~

2)

யார் வந்து கேட்டாலும் 
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாய் 
விலை சொல்லும் நானேதான் 
நீ வரும்போது 

உன் முகம் பாராமல்
வளைந்து
நெளிந்து 
குழைந்து 
விலை நிர்ணயிக்கின்றேன் 

காய்கறி வியாபாரத்தில் பிரச்சனையில்லை 
வாடிக்கையாளர்களோடும் கராறாகத்தான் இருக்கிறேன் 
வியாபார நேரத்தில் நீ மட்டும் 
அந்தப் பக்கம் தலை காட்டாமல் 
இருந்தால்தான் என்னவாம்?

உன்னைப் பார்த்த குதூகலத்தில்  
கொத்தமல்லியோடு சேர்த்து
மரிக்கொழுந்தையும் கொத்துக்கொத்தாகக் கொடுக்கிறேன்  
இலவசமாக!

~~~

3)

உன்னைத் தேடி வருவதில் 
எந்தப் பிரச்சனையுமில்லை
என்னை யாரோபோல நடத்திவிட்டால் 
என்ன செய்வது என்பதை 
சிந்தித்து சிந்தித்துதான் 
சீரழிந்து போகிறேன்.
மற்றபடி என் நெஞ்சோரத்தில் வந்து மோதும் 
உன் நினைவலைகள் 
நீங்காமல் அடித்துக் கொண்டுதானிருக்கின்றன.

~~~

4)

சுடும் ஓட்டில் 
உப்புக்கொண்டமாய்க் கிடக்கின்றது 
என் காமம் 

இரத்தமும் சதையுமாக இருக்கும்போதே ருசிக்காமல் 
வெய்யிலில் கிடத்தி
வேடிக்கை பார்ப்பதால்
என்னதான் லாபம் உனக்கு?

~~~

5)

தனிமையின் பிடியிலிருந்து தப்பி 
உன் மடியினில் 
தஞ்சம் புகுந்துவிடலாமென 
உள்ளூர நினைக்கும்போதே 
தேன்கூட்டில் யாரோவொரு
சிறு கல்லை எரிந்தவுடன் 
ஓராயிரம் தேனீ கிளம்பி 
சூழ்ந்து கொள்வதைப்போல 
ஆயிரமாயிரம் கரங்களால் 
ஆரத்தழுவிக் கொள்கிறது 
பொல்லாத இத்தனிமை.

***

தேன்மொழி அசோக்  – கவிதை,நூல் அறிமுகம் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் சிங்கப்பூர் தமிழ் முரசு, மக்கள் மனம், மின்கிறுக்கள் இணைய இதழ், சிராங்கூன் டைம்ஸ் மற்றும் திணைகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் வாசகசாலை, வளரி, நுட்பம், ஆனந்த விகடன், கொலுசு மற்றும் கணையாழி போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூரின் தேசியக் கலைகள் மன்றம் நடத்தும் தங்கமுனைப் போட்டிகளில்(2023) கவிதைப் பிரிவில் மூன்றாம் பரிசைப் பெற்றிருக்கிறார். மின்னஞ்சல்: honeylx@gmail.com

இடம்

0

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

கடைசியாக அந்த நாள் வந்தேவிட்டது. ஜனவரி மாதம் கடைசியில் தனது வேலை விலகல் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அந்த நிறுவனத்தில் அவன் பார்க்கப்போகும் கடைசி வேலைநாளாக அவர்கள் மார்ச் கடைசியில் ஒரு நாளைச் சொன்னார்கள். அவனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது. கடைசி வேலைநாள் வரை இரண்டு மாதம் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்துகொள்ளலாம். மேலும் அவன் புதிதாக மென்பொருள் நிறுவனத்தில் சேராமல் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்துள்ளதால் கல்லூரி திறக்கும் வரை மேலும் இரண்டு மாதம் ஓய்வு கிடைக்கும். விலகல் மடல் அனுப்பிய நாள் முதல் இன்று வரை இந்த இரண்டு மாதமும் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இருந்தான். காலையில் மிகத் தாமதமாக வேலைக்கு வருவது மிக விரைவாகவே அறைக்கு சென்றுவிடுவது என்று இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மிக நிம்மதியான இரண்டு மாதங்கள். ஒருவேளை தான் வேலைக்குச் சேர்ந்ததின் உண்மையான பயன் என்பதை இந்த இரண்டு மாதங்களில் தான் மெய்யாக அனுபவிக்கிறோம் என்று நினைத்துக்கொண்டான்.

இன்று கடைசிநாள் பணிமுடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபொழுது மனம் மிக மிக இலகுவாக உணர்ந்தது. சோழிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வந்து செம்மஞ்சேரியில் இருந்து கிண்டி தொழிற்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டான். நெரிசலில் ஏறியபொழுது பொதுவாக கூட்டத்தைக் கண்டவுடன் இருக்கும் ஒருவித எரிச்சல் மனநிலை இன்று அவனிடம் இல்லை. வழக்கமாக அவன் இடம் பிடிக்கும் கணக்குகளுடன் தேர்ந்தெடுக்கும் இருக்கைகளுடன் ஒட்டியபடி வேறு எவரும் நுழைந்துவிடாதபடி கைகளை இருபுறமும் பிடித்து இருக்கையை மறைத்தவாறு நின்று கொள்வான். இன்று அந்த எண்ணம் எதுவுமின்றி கூட்டத்தின் நடுவில் நின்றுகொண்டான். பேருந்து நெரிசலில் நின்றவாறு தான் வேலையை விட்டு நின்றுவிடும் முடிவை எடுத்த அந்த நாட்களை மீண்டும் ஒருமுறை ஓட்டிப்பார்த்துக்கொண்டான்.

வேலையை விடவேண்டும் என்ற எண்ணம் பெரும் கண் உறுத்தல் நோய்க்கு முன் ஒரு நொடி கண்ணில் ஏற்பட்டு மறையும் சிறு உறுத்தல் போல மனதில் தோன்றிய நாள் அவனுக்குத் துல்லியமாக நினைவில் நின்றது. அன்று அவன் அணியைச் சார்ந்த அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட கணிணி நிரலில் வந்த சிக்கல் ஒன்றிற்கு தான் மட்டுமே தீர்வு காணவேண்டும் என்ற நிலையில் தனிமையில் விடப்பட்டான். சரியாக அவன் வீட்டிற்கு புறப்படுமுன் அவனது திரையில் ஸ்கைப் மின்னியது. அவனின் அமெரிக்க மேலாளர் தான் கூப்பிட்டார். அவனிடம் ஒரு வேலையை ஒப்படைத்துவிட்டு முடிந்தால் இன்றே முடித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். சரியென்று சொன்னவன் அந்தச் சிக்கலை விரித்து எழுதி அவர் அனுப்பிய மின்னஞ்சலைத் திறந்து வாசித்து சிக்கலை புரிந்துகொள்ள முயன்றான். வெகுநேரம் அந்த சிக்கலின் தீர்வைப்பற்றி யோசிக்காமல் மீண்டும் மீண்டும் அந்த சிக்கலைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். இரவு பத்துமணிக்கு எழுந்து சென்று ஒரு டீ குடித்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். சில நேரங்களில் இந்தக் கணிணி நிரல் எழுதும் பொழுது வரும் சிக்கல்களுக்கு தேநீர்கடையில் தான் தீர்வு கிடைத்திருக்கிறதென்று ராஜேஷ் அடிக்கடி சொல்வான். அவனால் எப்படி அவ்வளவு எளிதாகவும் வேகமாகவும் நிரல்களை எழுத முடிகிறதென்பது எப்பொழுதும் இவனுக்கு புதிரானது. அவனிடம் அதைக் குறித்து கேட்கலாம் என்று சில தடவைகள் நினைத்திருக்கிறான், ஆனால் அது தன்னைப் பற்றி அவன் குறைத்து மதிப்பிடவைக்கும் என்பதனால் தவிர்த்துவிடுவான். நாளை காலையில் சீக்கிரமாக வந்தால் இந்த வேலையை முடித்துவிடமுடியுமா என்று கொஞ்ச நேரம் கணக்கு போட்டான். ஆனால் இந்த நிரலின் சிக்கல் எதனால் வருகிறதென்று புரியாமல் அப்படி காலையில் வந்து முடித்துவிடமுடியும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது என்பதால் இன்றிரவு அமர்ந்து வேலையை முடிக்கலாம் என்று நினைத்தான். கணிணித் திரையின் பின்னால் தொங்கிக்கொண்டிருந்த தன் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். அவன் இருந்த தளத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகிவிட்டன. தொலைவில் ஒரே ஒருவன் தன் இருக்கையை பின்னால் சாய்த்தவாறு தன் கால்களை மற்றொரு இருக்கையில் வைத்துக்கொண்டு கைப்பேசியில் சத்தமாகச் சிரித்தப்படியே பேசிக்கொண்டிருந்தான். அவன் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் நிரலில் பிரச்சனை எதுவும் இல்லையாக இருக்கலாம், அதனால் தான் இவ்வாறு மகிழ்ந்து சிரித்துக்கொண்டிருக்கிறான். இல்லை அந்த நிரலின் சிக்கல்களுக்கு அவனுக்கு தீர்வு தெரியுமாக இருக்கலாம். அல்லது இவை போன்ற பலநூறு சிக்கல்களை அடுத்தவர் துணையின்றி தீர்த்த தன்நம்பிக்கையின் விளைவாக இருக்கலாம். யோசித்தப்படியே படியில் இறங்கி கீழே வந்தபொழுது அடுத்த தளத்தின் ஓரத்தில் ஒரு பெண் நின்றபடியே கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள். மேல் தளத்தில் இருந்தவனிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறாளோ. இருக்காது, நேராகவே சென்று பேசிக்கொள்ளலாமே, இவள் வேறு யாரோடோ பேசிக்கொண்டிருக்கிறாள். மேலே இருப்பவன் இவள் காதலனாக இருப்பானா. தரைத் தளத்தை வந்தடைந்துவிட்டான். ராஜேஷ் ஒரு நாள் சொன்னது நினைவிற்கு வந்தது. ஒரு நிரலை முடிப்பதில் சிக்கல் வந்தால் நாம் அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்று அதற்கான தீர்வை  தேநீர் கடையில் தேடும் பொழுது மிக மிக முக்கியமானது நாம்  தேநீர் கடையை நோக்கி நடக்கும் அந்த சில நிமிடங்கள். அப்பொழுது தான் நாம் அந்தச் சிக்கலை அசை போடவேண்டும்.  தேநீர் கடையை சென்றடைந்தவுடன் நாம் இயல்பாக இருக்கவேண்டும்.

அதைப்பற்றி சிந்திக்ககூடாது. ஆனால் தீர்வு சட்டென்று மேலெழுந்துவரும். ஆகவே  தேநீர்க் கடையை நோக்கிய நடை மிக மிக முக்கியமானது. அவன் மனதை ஒரு நிலைப்படுத்தி நிரலின் சிக்கல் குறித்து சிந்திக்கத்தொடங்கினான். ஆனால் ஏற்கனவே அவன் முயன்று பார்த்துத் தோற்றுவிட்ட வழிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் எழுந்து வந்தது. புதியதாக எதுவும் தோன்றவில்லை. சற்றே கூர்மையாக நோக்கினால் இந்த நிரலின் சிக்கல்களுக்கு அவனுக்கு தோன்றும் தீர்வுகள் அனைத்தும் எவ்வகையிலும் ஒரு புத்தாக்கம் கொண்டது அல்ல என்று கவனித்தான். அவற்றை எந்த ஒரு சாதாரண மனிதனும் சிந்திக்கமுடியும். ஆனால் இந்த நிரலின் சிக்கல் அவ்வாறு நேரடியானத் தீர்வுகள் கொண்டதல்ல என்று அவன் முன்பே அறிந்துவிட்டான். பழக்கத்தினால் அவன் இந்த வேலை சார்ந்த பலவற்றையும் படித்துவிட்டாலும் சட்டென்று எழுந்துவந்துவிடும் இதுபோன்ற சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்பது இன்று வரை அவனுக்கு கைக்கொள்ளவில்லை. போன முறை இத்தகைய ஒரு சிக்கல் வந்து அவன் அதைத் தீர்க்க முடியாமல் திணறியபொழுது அவன் அணித்தலைவரும், அணி மேலாளரும் இவனிடம் வேலை முடிந்துவிட்டதா எனக் கேட்டுவிட்டு பக்கத்து அறைக்குள் சென்று தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். தனது ஓரக்கண்ணால் அதை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. ராஜேஷ் வேலையென்று சொன்னபிறகும் அவனிடம் கெஞ்சி அழைத்து அந்த நிரலின் சிக்கலைத்தீர்த்தான். எப்படியோ சமாளித்துவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக தான் இத்தகைய சிக்கல்களை சமாளிக்க முடியாமல் திணறுவதை அணியில் உள்ள எல்லாரும் உணர்ந்துவிட்டதை அறிந்து மனம் வேதனைகொள்ளும். அவ்வாறு அவன் சிறிய அவமதிப்பை உணரும் பொழுதெல்லாம் வீட்டிற்கு சென்று அன்று இரவு முழுவதும் படித்து அவர்களை விட எல்லாம் மிகத்திறமையானவனாக மாறிவிடுவதைப் போன்று உறுதியெடுத்துக்கொள்வான். ஆனால் வீட்டிற்கு சென்று பார்த்தால் அந்த தொழில்நுட்பத்தை எத்தனைப் படித்தாலும் அதன் அடிப்படையைச் சரியாக புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்பதை உணர்ந்து அச்சம் கொள்வான்.

 அன்று தேநீர்கடையில் அவனுக்கு அந்த நிரலின் சிக்கலுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி ராஜேஷிடம் தான் இம்முறையும் போகவேண்டியதாயிற்று. அடுத்தநாள் காலையில் சற்று முன்னதாகவே வந்து அவன்தான் அந்தச் சிக்கலைத் தீர்த்துக்கொடுத்தான். அந்தச் சிக்கலைத் தீர்த்துவிட்டு ராஜேஷ் சொன்னான். “நீ லாஜிக் யோசிக்கும் போது அது சாதாரண வாழ்க்கையில நடப்பதைப்போல கற்பனை பண்ணிக்க அப்பதான் ஈஸியா அது நமக்குப் புரியும்” என்றான். அவன் அதை நன்றாக மனதிற்குள் பதியவைத்துக்கொண்டான். ராஜேஷ் அப்படித்தான் கற்பனை செய்கிறானா என்பது அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை ஆனால் அவன் இந்தச் சிக்கல்களை ஒருவித வழிபாட்டு மனநிலையுடன் நோக்குவதாக இவனுக்குத் தோணுவதுண்டு. அவர்கள் அணியில் எல்லோரும் இயற்கை காட்சிப் படங்களைக் கணிணியின் திரையில் வைத்திருப்பார்கள். அவன் மட்டும் ஏதேதோ மனிதர்களின் படங்களை வைத்திருப்பான். அந்த மனிதர்கள் அடிக்கடி மாறிக்கொண்டிருப்பார்கள். அவன் சில நேரங்களில் அந்த மனிதர்களை யாரென்று ராஜேஷிடம் கேட்டுத்தெரிந்துகொள்வதுண்டு. ஒரு முறை கண்களில் கருவிழிகள் எதுவுமற்ற நீர் பாய்ந்த மண்ணிண் தடம்போல நெற்றியில் முடி கிடக்கும் ஆணின் பளிங்குச் சிலையொன்றின் படத்தைத் திரையில் வைத்திருந்தான். “யாரது” என்று கேட்டதற்கு, “இவரைத் தெரியாதா இவர் தான் அரிஸ்டாட்டில்” என்றான் ராஜேஷ். இன்னொரு நாள் வழித்துவாரப்பட்ட தலையும் அடர்த்தியாக முறுக்கப்பட்ட மீசையும் முகத்தை மறைத்த தாடியும் கொண்ட ஒருவரின் புகைப்படத்தை திரையில் வைத்திருந்தான். அவர் யாரென்று இவன் கேட்டதற்கு “இவரைத்தெரியாதா இவர்தான் ஃபரெகே” என்றான் ராஜேஷ். “என்னஜி இவரத்தெரியாதாணு கேக்குறீங்க, என்னம்மோ இவருதான் உசிலம்பட்டில இருக்குற அப்பத்தா புருஷன்ங்குற மாதிரி” என்று சிரித்தபடியே விலகிவிட்டான்.

சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் வேலை செய்த மென்பொருளில் புதிதாக ஒரு மாற்றம் கேட்டிருந்தார்கள். அதுவரை அந்த மென்பொருளின் பயனாளர்கள் எவருக்கும் மென்பொருளுக்குள் தனியுரிமை சார்ந்த வேறுபாடுகள் எதுவுமில்லை. ஆனால் இப்பொழுது அதைக்கொண்டு வந்து சிலருக்கு மட்டும் மென்பொருளில் சில பக்கங்கள் தெரியுமாறு மாற்றவேண்டும் என்றார்கள். ராஜேஷ் நீண்ட விடுமுறையில் சென்றதனால் அவன் மேலாளரும் அணித்தலைவரும் மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு இவனிடம் அந்த மாற்றத்தை அமலாக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவன் மிகுந்த உற்சாகமாக உணர்ந்தான். தன் திறமையைக் காட்டத் தனக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பாக அதைக் கருதிக்கொண்டான். அன்றிரவு வீட்டிற்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த அந்த மாற்ற வேண்டுகைக் கோப்பை படித்தான். அம்மாற்றம் எளிதாக இருந்தது போலத்தான் இருந்தது. அதை ஏற்கனவே இருக்கும் நிரலில் எங்கே பொருத்துவது என்று நான்கைந்து முறை பார்த்துக்கொண்டான். பின்பு அந்நிரலில் அம்மாற்றத்தை நிகழ்த்த தேவையான ஏரணத்தைப் பற்றி சிந்திக்கத்தொடங்கினான். மாற்ற வேண்டுகை கோப்பு இவ்வாறு இருந்தது.

 1. “பயனராகிய நான் அமெரிக்கர் என்றால்”

“மென்பொருளில் நான் நுழையும் பொழுது

என்னால் மென்பொருளின் எல்லாப்பக்கங்களையும் பார்க்கமுடியவேண்டும்”

2. “பயனராகிய நான் அமெரிக்கர், ஆனால் நான் தற்பொழுது வேறு நாட்டில் வசிக்கிறேனென்றால் “

“மென்பொருளில் நான் நுழையும் பொழுது

என்னால் மென்பொருளின் அமெரிக்கத் தொடர்பான பக்கங்களைப் பார்க்க இயலாது”

3. “பயனராகிய நான் அமெரிக்கர் ஆனால் நான் தற்பொழுது வேறு நாட்டில் வசிக்கிறேனென்றால் , அந்த நாடு இங்கிலாந்து என்றால் “

“மென்பொருளில் நான் நுழையும் பொழுது என்னால் மென்பொருளின் எல்லாப்பக்கங்களையும் பார்க்கமுடியவேண்டும்”

4. “பயனராகிய நான் அமெரிக்கர் அல்ல என்றால்”

“மென்பொருளில் நான் நுழையும் பொழுது

அமெரிக்கத் தொடர்பான பக்கங்களைப் பார்க்க இயலாது”

5. “பயனராகிய நான் அமெரிக்கர் அல்ல ஆனால் நான் ஒரு இங்கிலாந்து நாட்டவரென்றால்”

“மென்பொருளில் நான் நுழையும் பொழுது அமெரிக்கப் பக்கங்களைப் பார்க்க இயலாது, ஆனால் இங்கிலாந்து பக்கங்களைப் பார்க்கலாம்”.

6. “பயனராகிய நான் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவனென்றால்”

“மென்பொருளில் நான் நுழையும் பொழுது

அமெரிக்கத் தொடர்பான பக்கங்களையும் , ஐரோப்பா தொடர்பான இரண்டு பக்கங்களையும் பார்க்க இயலாது”.

என்று சென்றுகொண்டிருந்தது அந்த வேண்டுகைக் கோப்பு.

 பலமுறை அதைப் படித்தப்பிறகு அவன் கணிணி அருகே ஒரு மின்விசிறியைக்கொண்டு வந்து வைத்துவிட்டு, மேசை இழுவையைத்திறந்து அங்கிருந்த பாயையும் தலையணையையும் எடுத்துப் தரையில் போட்டுப் படுத்துக்கொண்டான். அந்த மாற்ற வேண்டுகைக் கோப்பின் கேட்புகளை மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓட்டிப்பார்த்துக்கொண்டான். மூளைச் சோர்வடைந்து எப்பொழுதோ உறங்கிப்போனான். காலை ஆறு மணிக்கு விழித்த பொழுது கண்கள் கரித்தன. எழுந்து சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். மனம் மீண்டும் அந்த கோப்பின் சொற்களைச் சுற்றி சுற்றி வந்தது. அவன் அதை நிரலாக்குவதைப் பற்றி மீண்டும் சிந்திக்கத்தொடங்கினான். பேருந்தில் ஏறி உட்கார்ந்தவன் கிண்டிக்கு பயணச்சீட்டு வாங்கிவிட்டு நடுப்பேருந்தில் ஓர் இருக்கையைப் பார்த்து அமர்ந்து கொண்டான். கையிலிருந்த ஓர் தாளை எடுத்து தொடையில் வைத்துக்கொண்டு ஒரு பேனாவை எடுத்து அதில் கோப்பிலிருந்தவைகளைக் கிறுக்கத்தொடங்கினான். பகுதி நிரலாகவும் பகுதி பொது மொழியிலுமாக இருந்தது அந்த கிறுக்கல். ஒவ்வொன்றாக எழுதி வரும்பொழுது ஏதோவொன்று விடுபட்டிருந்தது. மொத்தமாக சென்று அனைத்தையும் வெட்டினான். மீண்டும் முதலிலிருந்தே எழுதினான். மீண்டும் வெட்டினான். மீண்டும் எழுதினான். கிண்டி வருவதற்குள் தாள் நிரம்பியிருந்தது. பேருந்திலிருந்து இறங்கி அறையை நோக்கி நடந்தான். மீண்டும் ஏதோ மூளையில் தட்ட கைகளில் மடித்திருந்த தாளை எடுத்துப்பார்த்தான். அந்தத் தாளைப் பார்த்தவுடன் மூளை மீண்டும் ஒரு சுற்று போய்விட்டு வந்து சோர்ந்துவிட்டது. அறையை அடைந்தபொழுது கார்த்திக் மட்டும் முழித்திருக்க மற்றவர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். கார்த்திக் “ஏண்டா ராத்திரி வரல” என்று கேட்டான். “வேலைடா, அதான் ஆபிஸ்லேயே படுத்திட்டேன்” என்று சொல்லிவிட்டு கழிவறைக்கு சென்றான்.

 காலை ஒன்பது மணிக்கு கிண்டி பேருந்து நிலையம் வந்து செம்மஞ்சேரி செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டான். இரவு சரியாக உறங்காததன் கிறக்கம் கண்களை சோர்வடையச் செய்திருந்தது. பேருந்து கிண்டி மேம்பாலம் ஏறும்முன் உறங்கிவிட்டான். பேருந்தின் குலுக்கத்தில் சட்டென விழித்துக்கொண்டவன் அவன் இருக்கைக் கம்பியைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் நிற்பதைப்பார்த்து சற்று கூச்சத்துடன் தலையைக் கவிழ்ந்தவாறு வாயில் வழிந்த கோழாயைத் துடைத்துக்கொண்டான். அவள் அங்கே நின்றுகொண்டிருக்கிறாள் என்கிற நினைப்பே உறக்கத்தைக் கலைத்திருந்தது. வேண்டுமென்றே உறங்குவதைப்போல் நடித்துக்கொண்டு அவள் தன்னைப் பார்க்கிறாளா என்று பார்த்தான். அவள் அவ்வப்பொழுது அவனைப் பார்ப்பது போலத்தான் தெரிந்தது. அவள் சோழிங்கநல்லூருக்கு முன்பே ஒக்கியம்பேட்டையில் இறங்கிக்கொண்டாள். இவனும் காரணமின்றி ஒக்கியம்பேட்டையில் இறங்கி அவள் சாலையைக் கடந்து செல்வதைப் பார்த்துவிட்டு அலுவலகம் இருக்கும் சோழிங்கநல்லூர் நோக்கி நடக்கத்தொடங்கினான். அவன் கணிணியின் முன் அமர்ந்தபொழுது அருகே இருந்தவன் “யோ என்னயா சம்பந்தமில்லாம ஒக்கியம்பேட்டையில இறங்கின” என்று கேட்டான். கூச்சத்தோடு ஒரு சிரிப்பை அவனுக்கு அளித்துவிட்டு கணிணியைத்திறந்து அங்கே ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டிருந்த கோப்பை மீண்டும் பார்த்தான். அந்த வரிகளை மனதில் ஓட்டிக்கொண்டான். ஒவ்வொன்றாக மனதில் அவ்வரிகளை அடுக்கிக்கொண்டு வரும்பொழுது ஏதோ ஓரிடத்தில் தடுமாறியது. அருகிலிருந்த ஒரு தாளில் ஆங்கிலமும் தமிழும் குறியீடுகளும் கலந்த ஒரு மொழியில் அதை எழுத முயற்சித்தான். எல்லாம் சரியாக வருவது போல தோன்றியது. கணிணிக்குத் தன் பார்வையைத் திருப்பி கணிணி மொழியில் இவன் தாளில் எழுதியவற்றை மாற்ற முயற்சித்தான். ஏதோ ஓரிடத்தில் அது வந்து தடைபட்டு நின்றுகொண்டது. தலைமுடிக்குள் கைகளைவிட்டு முடியை கொத்தாகப்பிடித்தபடி கை மூட்டை ஊன்றி கண்களை மூடியபடி சற்று நேரம் அமர்ந்திருந்தான்.

தலையைக் குலுக்கிவிட்டு அந்த கோப்பையும் அவன் எழுதிய தாளையும் மீண்டும் ஒரு முறை ஒப்பிட்டுக்கொண்டான். அவற்றை அவன் சரியாகவே செய்திருந்ததாகப்பட்டது. ஆனால் அது நிரலில் எங்கோ விடுபட்டுக்கொண்டிருந்தது. அவனுக்கு ராஜேஷ் கூறியது நினைவிற்கு வர அந்த கோப்பிலிருக்கும் சொற்றொடர்களை தன் மனதில் கற்பனையில் நிகழ்த்திப்பார்க்க முயன்றான். ஒரு அமெரிக்கனைக் கற்பனை செய்துகொண்டான். இயல்பாக அது அவன் அணியின் அமெரிக்கத் தலைவரின் ஸ்கைப் புகைப்படத்திலிருக்கும் முகத்துடன் இணைந்துகொண்டது. அந்த முகம் மென்பொருளில் நுழைவதையும் அந்த முகத்திற்கான கை ஒன்று கணிணி மௌஸை சுடுக்குவதையும் மென்பொருளில் மேய்வதையும் கற்பனை செய்து, அதற்கு இருக்கும் தனியுரிமைகளைக் கற்பனை செய்தான். அவற்றை மூளையின் அவனறியா ஏதோ ஒரு பகுதியில் தேக்கிக்கொண்டான். கோப்பிலிருந்த அடுத்த வரியைப் படித்தான். அந்த முகம் இப்பொழுது வேறு நாட்டிற்கு பயணம் செய்வதாகவும் அது சென்று இறங்கிவிட்டதாகவும் அந்த நாடு ஜெர்மனியென்றும் கற்பனை செய்தான். இப்பொழுது அந்த முகம் மென்பொருளில் மேய்வதையும் அதற்கான தனியுரிமைகளையும் மீண்டும் தேக்கிகொண்டு கோப்பின் அடுத்தப்பகுதிக்கு சென்றான். இப்பொழுது அந்த முகம் ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றது, அதன் தனியுரிமைகள் மனதிற்குள் பட்டியலிடப்பட்டு தேக்கப்பட்டது. அவன் கோப்பைப் படித்தவாறு அந்த முகத்தை அங்கும் இங்குமாக அலைத்துக்கொண்டிருந்தான். எங்கோ ஒரு நொடியில் மூளையின் ஒரு பகுதியில் அவன் அறியாமல் ஒரு சிறு சலிப்பு மேலிட அந்த முகம் இப்பொழுது எங்கிருக்கிறதென்பது குழம்பிவிட்டது. மீண்டும் அமெரிக்காவிலிருந்து அந்த முகம் தொடங்கியது. அவன் மூளை சலிப்புற்று வேறு வழிகளைத் தேடியது. அவன் இப்பொழுது தன் நண்பனொருவனை அமெரிக்கனாகவும் சென்னையை அமெரிக்காவாகவும் மதுரையை ஜெர்மனியாவும் திருநெல்வேலியை இங்கிலாந்தாகவும் கற்பனை செய்துகொள்ள அந்த நண்பன் கோப்பிலிருந்த சொற்றொடர்களின்படி பயணித்தான். பயணம் நீண்டுகொண்டே போக எங்கோ ஒரு சலிப்பு தட்ட நண்பன் இப்பொழுது திசை தெரியாத ஊரில் சென்று நின்றான். அவன் முற்றிலும் சோர்ந்துவிட்டான்.

ஒரு வாரம் நீடித்த இந்தப் பணியில் கடைசிவரை அந்த அமெரிக்கனோ அல்லது அந்த நண்பனோ அந்தக் கோப்பிலிருந்த கேட்புகளை முழுவதுமாக கேட்டுக்கொண்டு அந்த வழியில் சரியாகப் பயணிக்கவில்லை. அவன் அணித்தலைவர் ஏன் பிந்துகிறதென்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருந்தார். இவன் மாற்றங்களைச் செய்து கொடுக்க கொடுக்க ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து அது அணித்தலைவரால் திருப்பி அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வாரத்தின் இறுதிநாளில் வீட்டிற்கு செல்லும் முன் அணித்தலைவர் வந்து நீங்கள் இந்த வேலையைச் செய்யவேண்டாம் திங்கட்கிழமை காலை ராஜேஷ் வந்து பார்த்துக்கொள்வார் என்று சொன்னார். அவன் கெஞ்சும் குரலில் சனி ஞாயிறு முயற்சி செய்கிறேனென்றும் அப்படி முடியவில்லையென்றால் ராஜேஷ் செய்யட்டும் என்றான். சரி உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட அவன் அந்த சனி ஞாயிறு இரண்டு நாட்களும் அந்த தாளுடனும் அந்த முகங்களுடனும் போராடிக்கொண்டிருந்தான்.

 திங்கட்கிழமை ராஜேஷ் வந்தவுடன் அந்த வேலை ராஜேஷுக்கு கொடுக்கப்பட்டது. அவன் இரண்டு நாட்களில் அதை முடித்து அனுப்பிவிட்டான். இவன் சென்று ராஜேஷிடம் “நீ ரொம்ப பிரில்லியண்டுடா” என்று மேலோட்டமாகச் சொல்லிவிட்டு வந்தான். இது நடந்து சில நாட்களில் அவர்களின் நிறுவனம் வேறு ஒரு புதிய கட்டடத்திற்கு மாறியது. புதிய கட்டிடத்தில் ஒவ்வொருவருக்குமான இடம் அதற்காக அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு அணியினரால் முடிவு செய்யப்பட்டது. அவன் சென்று அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பார்த்தபொழுது மகிழ்ச்சியாக உணர்ந்தான். ஓ. எம். ஆர் சாலை தெரியும் விதமாக கண்ணாடி சுவற்றின் ஓரத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது அவனது இடம். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. ராஜேஷ் அன்று வந்தவுடன் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் பிடிக்கவில்லை என்று அணி மேலாளரிடம் சொன்னான். அவர் உடனே அவனிடம் வந்து பல் இளித்துவிட்டு வேறு இடம் தருவதாகச் சொன்னார். அவன் மறுப்பெதுவும் சொல்லவில்லை. உடனே மாறிக்கொண்டான். ஏனோ ராஜேஷ் அன்று மாலை அவனிடம் வந்து அந்த கண்ணாடி அருகில் சாலையைப் பார்த்தவாறு தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் எத்தனை மோசமானதென்றும் இவனுக்கு அந்தத் தளத்தின் நடுவில் ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் எத்தனை வசதியானதென்றும், மேலும் இவனின் இடத்திற்குப் பக்கத்தில் அழகானப் பெண்கள் உள்ளனரென்றும் சொன்னபொழுது எரிச்சல் வந்தது. ஆனால் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டான்.

 அதற்கு அடுத்தநாளில் எல்லாரும் சேர்ந்து சினிமாவிற்கு போகலாமென்று விவேக் சொன்னான். மாலை ஐந்து மணிக்கு அவரவர் வேலையை முடித்தவிட்டு தரைத் தளத்திற்கு வந்து கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். விவேக் தனது காரைக் கொண்டு வந்து முன்னால் நிறுத்த மானஸின் கார் இரண்டாவதாக வந்து நின்றது. எல்லோரும் ஏறிக்கொள்ள இவனுக்கு மட்டும் இடமில்லை. விவேக் இவனைப் பார்த்து “உங்கக்கிட்ட டூவீலர் இல்லியா” என்று கேட்டான். “நான் கொஞ்சம் இதுலயே நெருங்கி ஏறிக்கிறேன் , சமாளிச்சக்கலாம்டா” என்றான் இவன். “இல்லை எல்லாரும் ஏன் கஷ்டப்படவேண்டும்” என்று கேட்டான் விவேக். அவன் சரியென்று விலகிவிட்டு தனியாக ஒரு ஆட்டோ பிடித்து திரையரங்கிற்கு சென்றான். திரையரங்கில் நின்ற விவேக் தாங்கள் எப்படி காரில் நெருக்கிக்கொண்டு வந்தோமென்றும் அவன் எப்படி ஆட்டோவில் தனியாக ராஜா போன்று அமர்ந்து வந்தானென்றும் பேசிக்கொண்டிருந்தான். இந்நிகழ்வு நடந்த அடுத்தநாள் தான் வேலையை விட்டு விடுவதாக அணித்தலைவரிடம் தெரிவித்தான் அவன். அதற்கான மனநிலை எப்பொழுதோ அவனிடம் உருவாகிவிட்டது. எனவேதான் அவன் வேலையை விடும் நாளிற்கு முந்தைய நாள் எவ்வித தத்தளிப்பிற்கும் ஆளாகாமல் வழக்கமாகச் செய்யும் செயல்களைச் செய்தான்.

 இன்று அவனுக்கு நிகழ்ந்த வழியனுப்பு விழாவில் ராஜேஷ் பங்கேற்காமல் நண்பகலிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டான். அவனின் மற்ற அணி உறுப்பினர்களும் வேறு அணித்தோளர்களும் சேர்ந்து பரிசாக ஒரு ரூபிக் கியூப் கொடுத்து வழியனுப்பினார்கள். அவன் பேருந்தில் ஏறும் முன்பே பேருந்து நிறுத்தத்தின் பின்புறமுள்ள கடக்காலில் ஓடிய கறுத்த சாக்கடை நீரினுள் அதை வீசிவிட்டான். பேருந்து கந்தன்சாவடி நிறுத்தத்தில் நின்றபொழுது ராஜேஷ் பேருந்திற்குள் ஏறுவதைப் பார்த்தான். பேருந்து அங்கிருந்து புறப்பட ராஜேஷ் நடத்துனரிடம் கிண்டிக்கு பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு உள்ளே நகர்ந்து வந்தான். அவனைப் பார்த்தவுடன் “ஜீ, நீங்க எங்க இங்க, ஸாரி ஜீ, நான் ஒரு வேலயா இங்க வரவேண்டியது இருந்திச்சு, அதான் பேர்வெல்லுக்கு வரமுடியல” என்றான். “பரவாயில்லை” என்று சொல்லிக்கொண்டவன், ராஜேஷ் நடுப்பேருந்திலிருந்து நகர்ந்து ஒரு இருக்கையின் கைப்பிடியைப் பிடிக்க முயல்வதைப் பார்த்தான். அவன் தன்னை கவனிப்பதைப் பார்த்த ராஜேஷ் கந்தன்சாவடியில் சாலை வேலைக்காக தோண்டிய குழியில் விழுந்து தனக்கு முட்டியில் அடிபட்டுவிட்டதென்றும் கிண்டியில் இறங்கி மருத்துவமனை செல்லவேண்டுமென்றும் கூறினான். ராஜேஷ் அருகில் சென்றவன் இன்னொருபக்கம் அந்த இருக்கையை அணைத்தபடி நின்றுகொண்டான். பேருந்து தரமணி செல்லும் திருப்பத்தை அடைந்தவுடன் அந்த இருக்கையில் இருந்த ஒருவர் இறங்குவதற்காக எழும்பினார். ராஜேஷ் அந்த இடத்தைப் பிடிப்பதற்காக தனது கால்களை இருக்கையினுள் விட்டான். அங்கே அமைதியாக இது வரையிலும் நின்று கொண்டிருந்த வயதானக் கிழவர் ஒருவர் உள்ளே புகுந்து அவன் இடத்தைப்பிடித்துக்கொண்டார். ராஜேஷ் திகைப்போடு அந்தக் கிழவரைப் பார்த்துவிட்டு அவனைப்பார்த்தான். எதோவொன்று மூளை நரம்புகளில் திரவம் ஒன்றைப் பாய்ச்ச அந்தக் கிழவரைப் பார்த்து “எங்களைப் பார்த்தா இளிச்சவாயன் மாதிரி தெரியுதா” என்றான் அவன். “நான் அப்படி சொல்லலியே” என்றார் கிழவர். “நாங்கள் எங்கிருந்து நிற்கிறோம் நீ கந்தன்சாவடியில் ஏறி இந்த இடத்தைப் பிடிச்சு உட்கார்ந்து வரப்பாக்குற” என்றான் கிழவரிடம். “சண்டையை வளர்க்கவேண்டாம்” என்று ராஜேஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கிழவரின் மண்டையில் தட்டினான் அவன். ராஜேஷ் பயந்து வேண்டாம் என்று மீண்டும் கெஞ்சினான். “என் மேலேயே கை வைக்கிறியா” என்றவாறு எழுந்த அவனிடம் பேசவந்தக் கிழவரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான். கிழவர் தடுமாறி பேருந்தின் நடுவில் நின்ற ஒருவன் மீது சாய்ந்தார். ராஜேஷ் இருக்கையில் அமராமல் தயங்கியபடி நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்து “நீ உட்காரு எவன் கேக்குறானு பாப்போம்” என்றான். கிழவர் சென்று விழுந்த ஆள் அவனைப்பார்த்து “யாண்டா வயசானவர அடிச்ச” என்றவாறு அவனை நெருங்க “அப்படீண்ணா சின்ன வயசுக்காரன் ஒன்ன அடிக்குறேன் என்று” அவன் மூஞ்சில் குத்தினான்.

ராஜேஷ் பதறியபடி இருக்கையிலிருந்து எழுந்து “ஜீ, வேணாம் ஜீ , நம்ம இறங்கிரலாம் ஜீ” என்றவாறு எழுந்தான். அவன் தோளைப்பற்றி இருக்கையில் அமர்த்தியவனின் முதுகில் ஒருவன் குத்தினான். அந்த ஆளுக்கும் கிழவருக்கும் அவன் ஆளுக்கொரு அடிக் கொடுத்தான். கூச்சல் கேட்டு பேருந்தை தரமணி பறக்கும் ரயில் பாலத்தினடியில் ஓரமாக ஒதுக்கினார் ஓட்டுநர். “எப்பா டிரைவர் வண்டிய போலிஸ் ஸ்டேஷனுக்கு வுடுப்பா” என்று கத்திய ஒருவனைப் பார்த்து “ஒம்மாள நீயும் போலிஸ் ஸ்டேஷன்லதான் ராத்திரி கெடக்கணும் முடிஞ்சா அனுப்புடா” என்றான் அவன். “ஒரு எடத்துக்கு ஏம்பா இப்படி அடிச்சிகிறீங்கோ, வோணாம்ணா வுட்டுடுங்கோ நான் வந்து ஒக்காந்துக்கிறேன்”

என்றவாறு சிரித்தார் அவர். “எப்பா எங்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு சிங்கிள் அடிக்கணும், இந்த ட்ராபிக்கில எட்டு சிங்கிள் முடிக்க நைட் பத்து மணி ஆவுது , இதுல நீங்க வேற ஏம்பா வந்து சண்டை புடிச்சிக்கிணு தாலியறுக்குறீங்க, வேணாம்ணா உடுங்க நான் அங்க உட்காந்து டிக்கெட் கிழிக்கிறேன்” என்றார் நடத்துநர்.

அவன் திரும்பி நடுத்துனரை முறைத்துவிட்டு “நீ கம்முணு போ, உனக்குதான் ஒரு ஸீற்று தந்திருக்குல, அதுல போயி உட்காந்து கிழிசிணு கிட” என்றான். சொல்லிவிட்டு திரும்புவதற்குள் திடீரெனத் துள்ளியெழுந்த ராஜேஷை அவன் இருக்கை நோக்கி தள்ளவும் அவன் “ஜீ, ஓணாண் ஜ” என்று கத்தினான். பேருந்த நின்ற இடத்தின் அருகிலிருந்த மரத்திலிருந்து தாவியிருந்த ஓணானொன்று அந்த இருக்கையில் தன் தலையைத் தூக்கியவாறு அமர்ந்திருந்தது. அனைவரும் இருக்கையை விட்டு விலகி நின்றனர். அது எவ்வித சலனமுமற்று இருக்கையின் மேலேயே அமர்ந்திருந்தது. அந்த இருக்கையின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தவன் இங்கு நடப்பவற்றுக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது போல இருக்கையின் கம்பின் மீது தலையைச் சாயவிட்டு உறங்கிக்கொண்டிருந்தான். ஓணான் அங்கேயே இருந்தது. லேசாக தலையைத் திருப்பியது. பின் உடலை ஜன்னல் பக்கம் திருப்பியது. அவன் சட்டென்று அதன் வாலைப்பிடித்து தூக்கி வெளியே வீசினான். அவன் வீசிய ஓணாண் நடுசாலையில் சென்று விழுந்து அதன் மீது ஒரு வாகனம் ஏறிவிட முற்றிலும் சிதைந்தது. அவன் மீண்டும் ராஜேஷை அந்த இருக்கையில் பிடித்து அமர்த்தினான். அங்கிருந்த நடுவயது சுரிதார் அணிந்த பெண்ணொருத்தி “எப்பா இப்பிடி சண்டைபுடிக்கிறதுக்கு பதிலா அந்த ஸீற்ற லேடீஸுக்கு வுட்டு கொடுக்கலாம்ல” என்றாள். “இவளுக வேற ஆம்பளைங்க எப்பம் அடி வைப்பானுங்க நம்ம மடி வைக்கலாம்ணு பாப்பாளுக” என்றான் அவளைப்பார்த்து. அவள் அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டே “சண்டைய முடிச்சி வைக்கலாம்ணு பாத்தா இந்த பையன்பாரு எப்பா நம்மளயே திட்டுது” என்றாள். ஓட்டுநர் இப்பொழுது இறங்கி அவர்கள் அருகில் வந்திருந்தார். வந்தவர் அவனைப்பார்த்து “என்னதாம்ப்பா பிராபளம் உங்களுக்கு” என்றார். தன் தரப்பை சொல்ல முயற்சித்த கிழவரை பார்த்து முறைத்துவிட்டு அவன் தரப்பைச் சொன்னான் அவன்.

“நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுப்பா எப்பா, பஸ்ஸுல க்யூ ஸிஸ்டம் கெடயாது, வரவங்க அவங்க தெறமை போல இடம் புடிச்சிக்கணும் , அதுவும் இல்லாது அவரு வேற வயசானவரு , நீங்கதான் மொதல ஸீற்று கம்பிய காரப்பாக்கத்திலேந்து புடிச்சிணு வந்தீங்கணு உங்களுக்குதான் ஸீற்றுணு சொல்றதுல்ல எதுனா லாஜுக் இருக்குதா” என்று நீட்டி மெதுவாகச் சொன்னார் ஓட்டுநர்.

“வந்துட்டாண்டா லாஜிக் மயிர தூக்கிகிணு” என்று ஓட்டுநரின் மூஞ்சில் ஓங்கிக் குத்தினான் அவன்.

“ஒம்மாள, அடிங்கடா அந்த பாட” என்ற குரலொன்று ஒலித்தவாறே அனைத்து பக்கமிருந்தும் அவனுக்கு அடி விழ அவனைச் சுற்றியிருந்த உடல்களுக்கு நடுவில் தெரிந்த ஒரு சிறிய இடைவெளியில் ராஜேஷ் பேருந்துச் சாளரம் வழியாகக் குதித்து ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தான் அவன்.

***

ஜெயன் கோபாலகிருஷ்ணன்: குமரி மாவட்டம் முருங்கவிளையில் பிறந்த இவர் தற்பொழுது பணி நிமித்தமாகச் சென்னையில் வசித்து வருகிறார். யாவரும் வெளியீடாக ‘நின்றெரியும் சுடர்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: jeyangopalakrishnanv@gmail.com

அரேபிய ‘ஜின்’ சொல்லும் தென்னிந்தியக் கதைகள் – கனகராஜ் பாலசுப்ரமணியம்

0

உரையாடல் : கிருஷ்ணமூர்த்தி

  • கன்னடம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துப் பயணம் எங்கு தொடங்கியது?

என் தாய்மொழி தமிழாக இருந்தாலும் கன்னடத்தில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன். எங்கள் குடும்பம் நூறு வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்திற்கு புலம்பெயர்ந்ததால் என் பள்ளிப் படிப்பு கன்னட மொழியில் தொடங்கியது. ஆயினும், ஏழாம் வகுப்பு வரை வீட்டிலியே தமிழ் கற்று எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை முதல் மொழியாய் தமிழ் பயின்றேன். ஆனால் இலக்கிய வாசிப்பை ஆரம்பித்தது கன்னட இலக்கியத்தில்.

கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை பயிலும் நாட்களில் கன்னட எழுத்தாளர்களின் படைப்புகளைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக பா.லங்கேஷ், யூ.ஆர்.அனந்தமூர்த்தி, மற்றும் கிரீஷ் கார்னாட் என்னை மிகவும் ஈர்த்த எழுத்தாளர்கள். இவர்கள் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்த நாட்கள் அவை. என் முதல் கதை கன்னடத்தின் முன்னணி நாளிதழில் வர இவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு தான் காரணம்.

இதோடு, எங்கள் வீட்டில் என் தாத்தா, மற்றும் அவருடைய தந்தை இருவரும் தமிழ் எழுத்தாளராக இருந்த காரணத்தினால் வீட்டில் இலக்கிய சூழல் இருந்தது. அதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

  • உங்கள் தாத்தா மற்றும் அவருடைய தந்தை எழுத்தாளர் என்று குறிப்பிடுகிறீர்கள். அவர்களின் எழுத்து குறித்தும், அவை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எழுத்து வாழ்க்கை மீது செலுத்திய தாக்கத்தைப் பகிர முடியுமா?

என் அம்மா வழி தாத்தா மற்றும் அவர் தந்தை இருவரும் கர்நாடகத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் மதுரை சென்று அங்கேயே தங்கி தமிழ் பயின்றவர்கள். கர்நாடகம் திரும்பி வந்த பிறகு தமிழில் ஆய்வுக் கட்டுரை, கவிதை எழுதி வந்தனர். என் தாத்தாவின் தந்தை திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கர்நாடகத்தின் ஆரனகட்டை எனும் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியொன்றைத் தொடங்கி அரசின் அனுமதி பெற்று அங்கு தமிழ் மொழியைப் பாடமொழியாக சேர்க்கப் பாடுபட்டார். அவரே பல வருடம் தம் சொந்தக் காசில் ஆசிரியர்களுக்கு ஊதியம் தந்துகொண்டிருந்தார். அது மட்டுமல்லாது சிறுவர்களுக்கு தினந்தோறும் தமிழ் எழுத்துகளையும்,  இளைஞர்களுக்கு தமிழ் இலக்கணத்தையும்,  செவ்விலிக்கியங்களையும் கற்றுகொடுத்தார்.  அவர் வழியாகத் தான் நான் தமிழ் கற்றேன். என் தாயின் தந்தை திரு சுப்பிரமணியம் என் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தவர். கவிஞராக இருந்த அவர் முழுநேர சமூகநலப் போராளியாகவும் அரசியல்வாதியாகவும் இருந்தவர். கர்நாடகத்தின் எங்கள் தாலுக்காவில் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர்; கர்நாடக உழவர் சங்கத்தின் தாலுக்கா கிளையின் தலைவராகப் பல போராட்டங்களை முன்னெடுத்து எங்கள் பாகத்திற்கு “அப்பர் பத்ரா” எனும் பாசனத் திட்டத்தை அரசு அறிவிக்கும் வரை உண்ணாவிரதம் செய்தவர்.  இவருடைய சமூகப் பொறுப்புணர்ச்சி என் உலகப்பார்வையைத் தீட்டியுள்ளன.  

  • நீங்கள் எழுதிய முதல் படைப்பு குறித்து…

என் முதல் படைப்பு ஒரு சிறுகதை, கன்னட நாளிதழ் “பிராஜவாணி”யில் பிரசுரமானது. இந்நாளிதழில் கதை அல்லது கட்டுரை பிரசுரமாவது கன்னட இலக்கியச் சூழலில் அன்று ஒரு முக்கியமான மற்றும் பெருமைக்குரிய நிகழ்வு. என் முதல் கதை 2003 ல் அங்கு வெளியான போது நான் கட்டற்ற மகிழ்ச்சியில் மிதந்திருந்தேன். அதொரு மாய யதார்த்தவாதக்கதை; கேப்ரியல் கார்சியா மார்கேஸ் பாதிப்பில் எழுதியக் கதை. மார்கேஸ் இலக்கியத்தைக் குறித்து நான் ஆய்வு செய்துகொண்டிருந்த நாட்கள். சிறுவயதில் நான் கண்ட நிகழ்வொன்றை புனைவாக்கியிருந்தேன்; அக்கதை கன்னட இலக்கியச் சூழலில் வெகுவாகப் பேசப்பட்டது. அதன் தலைப்பைத் தமிழில் இவ்வாறு கூறலாம்:  “பாயும் நிலவொளியை நோக்கும் இரண்டு முதியவர்களின் மனவொலி”

  • புனைவின் மீதான உங்கள் வசீகரம் எப்படி ஆரம்பமானது?

என் பால்ய காலம் முழுவதும் புனைவால் பின்னப்பட்டது. தூங்கும் நேரத்தில் மட்டுமல்லாது காலை, மதியம், இரவு வேளைகளில் உணவு அருந்தும் நேரத்திலும் நான் கதைகள் கேட்டு வளர்ந்தவன். என் பாட்டன், தாத்தா, மாமாக்கள் என்று நாள் முழுவதும் நான் அவர்களைக் கதை சொல்ல வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். அவர்களும் சலிக்காமல் கதைகளை வர்ணித்துக்கொண்டே வந்தார்கள். நாளிதழ்கள் மற்றும் சிறுவர் பத்திரிக்கைகளும் எனக்கு மாயாது கதைச்சொல்லிக்கொண்டே இருந்தன. இங்கிருந்து தொடங்கிய புனைவின் மீதான வசீகரம் இன்று வரை என்னைக் குலுக்கிக்கொண்டே இருக்கின்றன.    

  • சிறுகதை, நாவல், குறுநாவல் ஆகிய மூன்று வடிவங்களில் புனைவைக் கையாண்டிருக்கிறீர்கள். இவற்றில் எந்த வடிவத்தை சவாலானதாக உணர்கிறீர்கள்?

மூன்றுமே சவாலான வகைமைகள் என்றாலும் இவற்றில், என்னைப் பொருத்த வரையில், நாவல் கூடுதல் கவனத்தை வேண்டும் வகைமை. இவை மற்றுமல்லாது நாடகமும் எழுதியுள்ள எனக்கு நாவல் எழுதுவது கொஞ்சம் கடினமான செயல். பக்கங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக நாவலில் எதை எதையோ எழுதினால் அது நாவலாகாது. அதற்கே உகந்த சூட்சமங்கள் உள்ளன. அவற்றை தொடக்கம் முதல் இறுதி வரையில் பின்பற்றுவது கொஞ்சம் சவாலானது தான். நாவல் வகைமையின் “கேன்வாஸ்” பரந்த வாழ்வியல் என்பதால் காலம், இடம், உயிரினங்கள் மாறிக்கொண்டும், ஆற்றைப் போல் ஓடிக்கொண்டே இருக்கும். இவற்றைப் புனைவு இலக்கியத்தின் நுட்பங்களோடு சேர்த்து எழுதுவது ஒரு நாவலாசிரியருக்கு சவாலான பணி என்பது என் கருத்து.   

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய இலக்கியத்தில் வளர்ந்த நாவல் வகைமை தொடக்கத்தில் “வள வள கொள கொள” என்று தான் எழுதப்பட்டது. நாவலை வெகுஜன இலக்கியம் என்று கருதப்பட்டு பத்தொன்பதாவது நூற்றாண்டு இறுதி வரையில் தீவிர இலக்கியத்தில் அதற்கு இடம் இருக்கவில்லை என்பது நமக்கு தெரியும். இருபதாம் நூற்றாண்டில் அதன் வடிவம் முற்றிலுமாக மாறி அதன் போக்கே மாறியது. தற்கால இலக்கியத்தில் அது பல வகையில் கையாளப்படுகின்றன. அந்த பலவகைகளில் எனக்கு பிடித்த பாதையில் செல்ல என் உள்ளம் விரும்புகிறது. உள்ளுக்குள் சீறிப் பாயும் விதையை நீரூற்றி “திசை தீட்டி” நாவல் வடிவத்திற்குள் கொண்டு வருவது என் மட்டில் ஒரு பெரும் நகரத்தைக் கட்டமைப்பது போன்றது, அல்லது பெரும் வனத்தில் நடப்பது போன்றது. இந்தப் பாதையில் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கிறது, ஆனால் பணிச்சுமைகளால் தொடர்ந்து நகரத்தை உருவாக்கவோ காட்டுப் பாதையில் புகுந்து அலையவோ முடிவதில்லை. 

  • கதைக்கான கருவை எங்கிருந்து தேர்வு செய்கிறீர்கள்?

கதைக் கருவை நான் தேர்வு செய்வதில்லை. மாறாக காலமும் மனவோட்டமும் தான் கருவைத் தீர்மானிக்கிறது.

யதேச்சையாக பார்க்கும், அல்லது கேட்கும் நிகழ்வுகள் பழைய நினைவொன்றையோ அல்லது புதிய கருத்தொன்றையோ தூண்டும், அதைப் பிடித்து சில நாட்கள் பயணம் செய்வேன். அப்பயணம் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் எழுதத் தொடங்குவேன். கதைக் கரு யதேச்சையாக தோன்றுவதால் நான் அவற்றைத் தேர்வு செய்வதில்லை.

அக்கரு வளர்ந்து ஓடையாக ஓட ஆரம்பித்த போது அதை நேர்த்தியாக்கி அதற்கு நுட்பங்களை சேர்ப்பேன். கதை போகும் பாதையில் விட்டு அதை புனைவாக்க மனதிற்குள் “எடிட்” செய்வதும், நுட்பங்களை ஜோடிப்பதும் தான் நான் மனபூர்வமாகச் செய்யும் செயல்.

  • எழுதுவதற்கு ஏதேனும் முறைமை பின்பற்றுகிறீர்களா?

எழுத குறிப்பிட்ட நேரம் என்கிறதொன்றும் இல்லை. எழுத வேண்டும் என்கிற உறுத்தல் உள்ளுக்குள் பாய்ந்தால் உடனே எழுத ஆரம்பித்துவிடுவேன். முதலில் மனதிற்குள் எழுதிக்கொள்வேன். நாள் கணக்கில் அது உள்ளே வளர்ந்துகொண்டே போகும். ஒரு நாள் அது என்னை எழுத வைத்துவிடும். இப்படி கூறுவது உங்களுக்கு வேடிக்கையாக தெரியலாம், ஆனால் அது தான் உண்மை. உள்ளுக்குள்ளிருந்து உறுத்தல் வரும் வரை நான் எழுத அமர்வதில்லை, அது எவ்வளவு நாட்களாயினும் சரியே….

  • உங்கள் கதைகள் தென்னிந்திய கிராமங்கள், நகரங்களின் உழைக்கும் வர்க்கம் மற்றும் சவுதி அரேபியாவின் புலம் பெயர் மக்களை பிரதினிதித்துவப் படுத்துகிறது. ஆனால் கதைகளில் அவர்களின் ஆதாரச் சிக்கல் அடையாளம் சார்ந்ததாய் அமைவது தற்செயலானதா?

நான் பார்க்கும் உலகத்தை எழுதும் போது என்னையும் சேர்த்து புலம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் அகச் சிக்கல், புறச் சிக்கல் அனைத்தும் கதையோட்டத்தில் வருகின்றன. நான் பார்த்த, கேள்விப்பட்ட, அனுபவித்த விடயங்களை மட்டுமே நான் எழுத விரும்புகிறவன். கடந்த இருபத்தைந்து வருடங்களாக அயல் நாடுகளில் வாழும் காரணத்தால் என் எழுத்துக்கள் அயல்டநாட்டு வாசிகளைக் குறித்தே இருக்கின்றன. அது மட்டுமல்லாது, அந்தந்த நாட்டு மூலக்குடிகளின் வாழ்வும் என்னை ஈர்க்கின்றன. என் “அல் கொஸாமா” நாவல் அது போன்றது. அரேபியாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வோடு சேர்த்து அரேபியாவின் மூலக்குடிகளான ‘பதூவன்’ களைக் குறித்தும் எழுதியுள்ளேன். இவ்வாறு எழுதும் போது சில நேரங்களில் மட்டும் நானே விரும்பி நான் பார்த்த புலம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை முன்னெடுப்பேன். ஆனால் அவற்றின் நோக்கம் ஒட்டு மொத்த மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் மகிழ்ச்சிகளும் தான்.

அது கர்நாடகாவில் வாழும் எம் தமிழினம், அல்லது அரேபியாவில் வாழும் அனைத்து நாடுகளின் புலம் பெயர்ந்தவர்கள், அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சா வழியினர் என்று யாராக இருந்தாலும் அவை அடிப்படையில் விவாதிப்பது மனித வாழ்வின் அக-புறச் சிக்கல்களைத் தான். வெறுமனே, புலம் பெயர்ந்தவர்களின் சிக்கல்களை மட்டும் என் படைப்புகள் சொல்லக்கூடாது, மாறாக மனித இனத்தின் பிரச்சனைகளை வெளிப்படுத்த வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருப்பேன். புலம் பெயர்ந்தவர்களின் உலகம் ஒரு கருவி அவ்வளவு தான். அதனூடே மனித குலத்தின் விருப்பம், கனவு, ஒவ்வாமை, யதார்த்தம் என்று கூறப்படும் உணர்தல்கள், சிக்கல்கள், வெற்றிகள் அல்லது தோல்விகள், இவற்றை தீர்மானிக்கும் “நிறுவனங்கள்” என்று அனைத்தையும் சித்திரிக்க வேண்டுமென்பது தான் என் நோக்கமாக இருக்கும். ஆனால் அதை வேண்டுமென்றே கதைக்குள் புகுத்தமாட்டேன். கதைகளில் அவை இயல்பாக வெளிப்படும், வெளிப்படாவிட்டால் அக்கதையைத் திருத்தி எழுத முயற்சிப்பேன், அல்லது அதை நிறுத்திவிடுவேன்.

நான் வாழும், தினந்தோறும் பார்க்கும் வாழ்க்கையைத் தானே எழுத முடியும். ஆனால், அவ்வாழ்க்கையின் குறிப்பிட்ட பிரச்சனை/சிக்கல் ஒன்றை எழுத வேண்டும் என்று ஒரு போதும் நான் தீர்மானிப்பதில்லை; அவை கதையோட்டதில் நிகழ்கின்றன.  

  • இந்தியக் கதைகளில் சாதியும், அரேபியாவை மையப்படுத்தும் சிறுகதைகளில் மதவாதமும் பேசுபொருளாகிறது. சில கதைகளில் அவற்றை ஒன்றிணைக்கவும் செய்கிறீர்கள். இரண்டையும் ஒரே சிக்கலின் இருமுகமாக கருதுகிறீர்களா?

அப்படியும் கூறலாம்… ஆனால் அவற்றை நான் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வரையறுக்கவில்லை, இந்த உலகில் மதம் என்றொரு அமைப்பு ஏற்ப்படுத்தியிருக்கின்ற அவலங்களை விவாதிக்க விரும்புகிறேன்.

மதவாதமும், ஜாதி அடக்குமுறையும் சமகால உலகின் பெரும் பிரச்சனைகளில் முக்கியமானவை. சாதிய/வர்க்கக் கொடூரமும், மதவாத பயங்கரமும் பல நூற்றாண்டுகளாக மனித குலத்தை வஞ்சித்துக்கொண்டும், உலகத்தின் மீது வன்முறை செலுத்திக்கொண்டும் இருக்கின்றன.

இவ்வுலகில் மதம் பிறந்த பிறகு மனிதம் காணாமல் போயிற்று. கடவுள் என்கிற ஒரு “அமைப்பை” கட்டமைத்து மக்களை தம் கட்டுப்பாட்டுகளுக்குள் கொண்டுவந்துள்ள மதங்கள் பன்முகங்கொண்ட இவ்வுலகை ஒற்றை அடையாளங்களாக மாற்றியுள்ளன. உலக மனிதராக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தம் அடையாளங்களாக மாற்றி “உண்மை” மனிதர்களை மதங்கள் கொன்று குவித்துக்கொண்டே இருக்கின்றன.

சொர்க்கம்/நரகம், நாகரீகம்/அநாகரீகம், நீதி/அநீதி என்கிற செயற்கையான நெறிகளை உண்டாக்கி மனித உரிமைகளை சூறையாடும் அவை மனித இனத்தின் கேடுகளில் முதன்மையானவை.

ஆகையால், மதங்கள் இல்லாத உலகம் உருவாக வேண்டுமென்பது என் விருப்பம். இவ்விருப்பம் என் ஆழ்மனதில் பதிந்துள்ளது என்றே நம்புகிறேன். இதோடு என் சிறு வயதில் நான் பார்த்த/செய்த ஜாதிய கொடுமைகளும் என் படைப்புகளில் தொடர்ந்து வருகின்றன. அறியாமையில் நான் செய்த ஜாதி பாகுபாடுகள் என்னை வாட்டியெடுக்கும்.

பிறந்து வளர்ந்த சமூகத்தின் “இன்சைட் க்ரிடிக்” ஆக என் படைப்புகள் இருக்க வேண்டுமென்பது என் “பொலிடிகல் கரெக்ட்னெஸ்” (பொலிடிகல் கரெக்ட்னெஸ் என்னும் சொல்லாடலை தவறாக புரிந்துகொள்ளும் காலத்தில் நாம் இருக்கிறோம். அதன் உண்மையான பொருளில் என் கருத்தை புரிந்துகொள்ள வேண்டும்). இவை என் ஆழ்மனதிலேயே இருப்பதால் என் கதையோட்டத்தில் அவை இயல்பாக வருகின்றன என்றே நம்புகிறேன். வேண்டுமென்றே அவற்றைக் கதைகளுக்குள் புகுத்த நான் எப்போதும் முயற்சி செய்ததில்லை, செய்வதும் இல்லை.   

உங்கள் கேள்வியின் இரண்டாம் பாகத்திற்கு வருகிறேன். மதவாதமும் ஜாதிக் கொடுமையும் அடிப்படையில் ஒன்று தான். இரண்டுமே செயற்கையானவை மற்றுமல்லாது மனிதர்கள் மீது அடையாள அரசியலைத் திணிப்பவை, தனி மனித உரிமைகளை நிராகரிப்பவை. அவற்றின் அடிநாதமே வெறுப்பும் வண்முறையும் தான்.

உலகெங்கும் அடையாள அரசியல் ஓங்கி நிற்கும் இவ்வேளையில் மதம், ஜாதிகளுக்கு அப்பாற்ப்பட்ட மனிதத்தை போற்றுவது இலக்கியத்தின் கடமை என்றே நான் நம்புகிறேன்.

  • யதார்த்தவாத சிறுகதைகளின் இறுதியில் மாயத்தன்மைகள் சேர்ந்து முடிவடைவதை தொடர்ச்சியாக உங்கள் கதைகளில் காணமுடிகிறது. சில தருணங்களில் அவை காஃப்காவை நினைவூட்டுகின்றன. அப்படி அமைவதற்கு ஏதேனும் பிண்ணனி உண்டா?

பின்னணி ஒன்றுமில்லை, எனக்கு அது இயல்பாக வருகிறது என்றே நினைக்கிறேன். நான் யோசிப்பதே “சர்ரியல்” ஆகத் தான் இருக்கும். இரவுகளில் என் கண்களுக்கு யார் யாரோ தெரிவார்கள், செவிகளில் யார் யாரோ பேசுவார்கள்… தூக்கமும் அல்லாத விழிப்பும் அல்லாத தருணத்தில் கதையின் தொடக்கப் புள்ளி திடீரென்று என்க்குள் பாயும். சில நேரங்களில் மின்சாரம் பாய்ந்தது போல் எழுந்து அமர்ந்து எழுத ஆரம்பித்துவிடுவேன். அந்நேரங்களில் நான் “வேறொருவனாக” இருப்பதைப் பிறகு அறிந்துள்ளேன். “ட்ரான்ஸ்” நிலையில் சில கதைகளை எழுதியுள்ளேன். அப்படி எழுதுவது எனக்கு மன நிம்மதியை தருகிறது, உற்சாகத்தை அளிக்கிறது! கதையைத் திருத்தி எழுதும் போது கதை எழுத ஆரம்பித்த தருணத்தின் மனநிலைக்கு உண்மையாக இருக்கவே விரும்புவேன்; அதைப் பெரிதாக மாற்றமாட்டேன். பித்து நிலையில் எழுதுவது என் மனதிற்கு மிகவும் பிடிக்கிறது.  

கண் யதார்த்தத்தை விட உணர்வு யதார்த்தத்தை வெளிப்படுத்தவே நான் விரும்புகிறேன். அதனால் தான் மாயத்தன்மைகள் என் பெரும்பாலான கதைகளில் காணப்படுகின்றன. அரேபிய நாட்டார் மரபில் ஒரு நம்பிக்கை உள்ளது: கவிதையை மனிதர்கள் எழுதவதில்லை, “ஜின்”கள் மனிதர்களுக்குள் புகுந்து கவிதைகளை எழுதுகின்றன என்று. “அல் கொஸாமா” நாவலில் அதை நான் கையாண்டிருப்பதை நீங்கள் அறிவீர்.

  • அல் கொஸாமா நாவலிலும் சில சிறுகதைகளிலும் தொன்மங்களைக் கையாள்கிறீர்கள். அவை நவீன வாழ்க்கையுடன் இணையும் இடங்களை விரிவாகப் பேசுகிறீர்கள். இது தொன்மத்தின் மீதான ஈர்ப்பினால் அமைவதா அல்லது கருத்தியல் ரீதியாக அணுக முடியுமா?

தொன்மத்தின் மீதான ஈர்ப்பினால்… அதுவும் மதங்கள் இல்லாத, குடும்பம், நாடு முதற்கொண்டு அனைத்து “நிறுவனங்களும்’ உருவாக்கப்படாத காலகட்ட அழகின் மீதான என் ஈர்ப்பின் காரணமாகத் தான் தொன்மத்தை பின் நவீன காலத்தோடு இணைக்கிறேன்.  

  • இருமொழிகளில் எழுதும் நீங்கள் ஆதர்சங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

இருமொழி இலக்கியங்களில் மனிதம் (மதங்கள் கூறும் பொருளில் அல்ல) பேசும் படைப்புகள் என் ஆதர்சம். ஆயிரம் வருடங்களாக இருமொழி இலக்கியங்களிலும் மதங்கள் கூறும் நெறிகளுக்கு அப்பாற்ப்பட்ட மனிதத்தை கூறிக்கொண்டே வருகின்றன. அவை தான் என் ஆதர்சங்கள்.  

  • சமகால கன்னட இலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒப்பு நோக்கினால் உங்கள் அவதானிப்புகள் என்ன?

சமகாலத்தை பொருத்த வரையில் தமிழில் தான் இலக்கியம் வெவ்வேறு கோணங்களில் அணுகப்படுகிறது. பின் நவீன எழுத்துகள், அதன் வாசிப்பும் புரிதலும் தமிழில் அதிகம். நவீன கன்னட இலக்கியத்தில் “நவ்யா”, “பண்டாய” மற்றும் “தலித்” இலக்கிய காலகட்டங்களில் வந்த படைப்புகள் சிறப்பாக உள்ளன.  

  • உங்கள் அடுத்த படைப்புகள் குறித்து சில வார்த்தை...

தமிழில் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். கன்னடத்தில் இரண்டு நூல்கள் விரைவில் வெளிவரவுள்ளன. சினிமாவிலும் ஆர்வமுள்ள காரணத்தால் தொடர்ந்து புனைவு எழுதமுடியவில்லை. வரும் நாட்களில் எனக்குள் “ஜின்” புகுந்து என்னை ஆட்டிப் “படைக்கும்” என்றே எதிர்பார்க்கிறேன்.

*

சக எழுத்தாளருடன் பேசுவது சிறப்பான அனுபவம். இந்த நேர்காணலில் என் எழுத்துலகத்தைப் பற்றி மட்டும் பேசினாலும் இக்கேள்விகளின் பின்னால் இருக்கும் சக எழுத்தாளர்கள் மீதான உங்கள் அன்பு,  சமகால இலக்கியம் குறித்தான உங்களுடைய அவதானிப்பு இருப்பதை அறிவேன். இந்த அழகான நேர்காணலுக்கு நன்றி. இதை பிரசுரிக்கும் “யாவரும்” இணைய இதழுக்கு நன்றி.

– கிருஷ்ணமூர்த்தி

***

நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் பிறந்தவர். தனியார் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். சென்னையில் வசிக்கிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரை என்று தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பவர். மின்னஞ்சல் முகவரி : krishik10@gmail.com

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு 13 – கோட்பாட்டு அடிப்படையும் அழகியலும்

ரூபன் சிவராஜா

இதற்கு முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

குஸ்ரூ போல்- Augusto Boal’ எழுதிய ‘The aesthetics of the oppressed -ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் அழகியல்’ நூலானது தனிமனிதர்கள் தம்மைப் பற்றிய அகப்பொருளை மீட்டெடுப்பதைச் சாத்தியப்படுத்தும் அரங்கச் செயற்பாட்டு அணுகுமுறைகளின் அடிப்படைகளை விபரிக்கின்றது. அதனுடைய மையச் செய்தியென்பது மனிதர்கள் தமது சொந்தப் படைப்பாற்றலைக் கண்டடைவதனூடாக கலையைக் கண்டடைவதையும்- தமது படைப்பாற்றலைக் கண்டடைவதனூடு தம்மைத் தாமே கண்டடைதலையும் பற்றியது. 

கடந்த 50 ஆண்டுகளாக உலகளவில் ஒரு காத்திரமான இயக்கமாகப் பரிணமித்திருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு குறித்த தனது பரந்த அனுபவங்களையும் பார்வைகளையும் முன்வைக்கின்றார். அரங்கின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை அடித்தளங்களை விரிவாகவும் ஆழமாகவும் இந்நூலில் விவாதிக்கின்றார், விபரிக்கின்றார்.

உலகு தொடர்பான உணர்திறன்

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு அதன் அனைத்து வடிவங்களின் ஊடாகவும், சமூக மாற்றம் கோருதல், அதாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கான அக-புற விடுதலையை இலக்காகக் கொண்டிருக்கின்றது. அவை குறித்து ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு குறித்து நான் எழுதிவரும் தொடரின் முன்னைய பாகங்களிற் பார்த்திருந்தோம். மாற்றம் சார்ந்த யதார்த்தத்தை விளங்கிக் கொள்வது மட்டும் போதுமானதல்ல, அதை மாற்றத்திற்கு உள்ளாக்குவதற்கான செயற்பாடுகள் அவசியம் என்கிறார் Boal. தொடரின் அடுத்த பாகங்களில் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் அழகியல் குறித்த சிந்தனைகளும் பார்வைகளும் முக்கிய இடம்வகிக்கவுள்ளன.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அழகியல், அதனை  முன்னெடுப்பவர்கள் மத்தியில் நாடகத்தை மட்டுமல்லாது, அனைத்துக் கலைகளின் வழியாகவும் உலகு தொடர்பான உணர்திறனை வளர்க்க முயல்கிறது. அந்தச் செயல்முறை ‘சொல், ஒலி, உருவகம்’ ஆகியவற்றை மையப்படுத்துகிறது. சொல் என்பது அனைத்துப் பங்கேற்பாளர்களும் கவிதைகள், கதைகளை எழுதத் தூண்டுதலைக் குறிக்கின்றது. ஒலி என்பது புதிய கருவிகளைக் கண்டடைதலும் புதிய ஒலிகளை உருவாக்குவதையும் குறிக்கின்றது. உருவகம் என்பது ஓவியம், சிற்பம், ஒளிப்படம்; உள்ளிட்டவற்றைக் குறிக்கின்றது. 

அரங்கினை மரமாக உருவகித்தல்

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு என்பதையும் அதன் அழகியற் கூறுகளையும் ஒரு மரமாக உருவகிக்கின்றார் Boal. அந்த மரத்தின் ஒவ்வொரு இலையும் அழகியலின் பிரிக்கமுடியாத ஒவ்வொரு பகுதியை உருவாக்குவதோடு, வேர்களை ஊடறுத்து பூமியை அடைகின்றது எனவாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது.

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கத்தினை ஒரு மரமாக உருவகிக்கும் அவர், அறம், கூட்டுணர்வு, தத்துவம், ஒலி, உருவகம், சொல் (மொழி), வரலாறு, அரசியல், பெருக்கம் என்பனவற்றை அதன் வேர்களாகவும் வேர்கள் ஆழ ஊடுருவும் பூமியின் உட்பகுதியாகவும் முன்வைக்கின்றார். நாடகத்திற்கான விளையாட்டுகளை (Theatre Games) மரத்தின் அடித்தண்டாகவும், மக்கள் அரங்கு, கட்புலனாகா அரங்கு, உருவக அரங்கு, வானவில் அரங்கு, சட்டவாக்க அரங்கு செய்தித்தாள் அரங்கு உட்பட்ட வடிவங்களை மரத்தின் கிளைகளாக உருவகிக்கின்றார்.

தரையில் விழும் பழங்கள் மரங்கள் தம்மை இனப்பெருக்கம் செய்ய உதவுகின்றன. ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு உருவாக்குகின்ற கூட்டுவிளைவானது, பரந்த அளவிற்கு அதன் ‘மாற்றும் சக்தியை’ (Transformatory power) அதிகரிப்பதனூடு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயுள்ள பல்வேறு குழுக்களை ஒன்றோடொன்று இணைப்பதிலும் வெற்றி பெறுகிறது. ஒடுக்கப்பட்டோர் தமது ஒடுக்குமுறைகளை மட்டுமல்ல, அவர்களுக்கு அந்நியமான ஒடுக்குமுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது அதே நிலையிலுள்ள ஏனைய மக்களுடன் தோழமையைக் கொண்டிருத்தல் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் இன்றியமையாத பகுதியாக உள்ளது. 

உடலையும் மனதையும் இயந்திரமயமாதலிலிருந்து விடுவித்தல்

அரங்கச் செயற்பாடுகள், அவற்றுக்கான பயிற்சிகளின் முக்கிய அம்சம் விளையாட்டுகளாகும். விளையாட்டுகள் சமூக வாழ்வின் இரண்டு அத்தியாவசியப் பண்புகளை இணைக்கின்றன. விளையாட்டிலும் சமூக வாழ்விலும் விதிகள் முக்கியமானவை. விதிகளின்றி விளையாட்டு சாத்தியமில்லை. ஆனாலும் அவை படைப்புச் சுதந்திரத்தினையும் கோருகின்றன. ஆதலால் விளையாட்டோ வாழ்வோ அடிமைத்தனமான கீழ்ப்படிதலாக மாற இடமில்லை. விதிகள் இல்லாமல் விளையாட்டு இல்லை. அதேபோல் சுதந்திரம் இல்லாமல் வாழ்வு இல்லை.

மேற்சொன்ன இந்த இன்றியமையாத உருவகப் பண்பைத் தவிர, நாளாந்தம் திரும்பத்திரும்பச் செய்யும் பணிகளால், குறிப்பாக வேலை, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிலைமைகள் ஆகியவற்றால் அந்நியப்படுத்தப்பட்ட உடலையும் மனதையும் இயந்திரமயமாக்கலிலிருந்து விடுவிப்பதற்கு (de-mechanisation) விளையாட்டுகள் உதவுகின்றன.

உடலே முதலீடு

அரங்கின் முதன்மை முதலீடு உடல். அதனாற்தான் கலைவெளிப்பாடுகளில் உடல்மொழி முக்கிய இடத்தை வகிக்கின்றது. உடலானது தூண்டுதல்களை உருவாக்குவதோடு, நாம் உள்வாங்கும் விடயங்களுக்குப் பதிலளிக்கிறது-எதிர்வினையாற்றுகின்றது (Responding/reacting). அத்தோடு சமூக நடத்தையின் முகமூடியைப் போல வலுவான புஜ முகமூடியையும் உருவாக்குகிறது – இவை இரண்டும் நேரடியாக சிந்தனை மற்றும் உணர்ச்சிகளில் அடுக்குகளாகச் செயற்படுகின்றன. விளையாட்டுகள் உடலின் இயந்திரமயமாக்க விடுபடலை எளிதாக்குவதோடு அதனைக் கட்டாயப்படுத்துகின்றன. அவை உணர்திறன் உரையாடல்களாக இருப்பதால், தேவையான ஒழுங்குமுறைக்குள், அவற்றின் சாராம்சமான படைப்பாற்றலைக் கோருகின்றன

இயற்கையின் படைப்புகளின் பன்முகத்தன்மை

இயற்கை ஒருபோதும் ஒரேமாதிரியான படைப்புகளை உருவாக்குவதில்லை. அதாவது நாம் காணும் எந்தப் பொருளுமே அச்சொட்டாக இன்னொன்றைப் போல் இருப்பதில்லை. ஒரே வகைமையைச் சேர்ந்த பொருட்கள்கூட ஒரே மாதிரிகளாக இருப்பதில்லை. இரண்டு மணற்துகள்கள், எம் தலையில் இருக்கக்கூடிய முடிகளோ, உடலின் வேறெந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மயிர்களோ ஒன்றுபோல் இன்னொன்றில்லை. ஒரே கருவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தோற்றம் நூறு வீதம் ஒரே மாதிரி இருப்பதில்லை. சாயல் இருக்குமே தவிர ஒரே மாதிரியாக அல்ல. விரல் ரேகைகள், மழைத் துளிகள், காட்டின் பறவைகள், அல்லது மரம், அதன் கிளைகள், இலைகள் என இந்த இயற்கையில் எதுவுமே முற்றிலும் இன்னொன்றை ஒத்ததாக இல்லை. நாம் சாயலையே ஒரே மாதிரியானவை என நடைமுறையிற் பொருளுணர்த்திப் பேசுகின்றோம், கையாளுகின்றோம். அனைத்து உயிரற்ற பொருட்களும் அனைத்து உயிரினங்களும் எப்போதும் தனித்தன்மை வாய்ந்தவை, மீளுருவாக்க முடியாதவை. குறிப்பாக உயிரியல் ரீதியான படியெடுப்புச் (Cloning) செய்யப்பட்டாலும் அச்சொட்டாக மீளுருவாக்கம் செய்ய முடியாதவை. 

நாம் கண்ணுறும் ஒவ்வொரு விடயத்தையும் நாம் உற்றுணர வேண்டுமெனில், நம் காதில் விழும் அனைத்தையும் நுணுக்கமாக உள்வாங்க வேண்டுமெனில், நாம் தொடுகின்ற, உணர்கின்ற, முகர்கின்ற, சுவைக்கின்ற அனைத்தையும் நுணுக்கமாக உணரவேண்டுமெனில் நாம் முடங்கிவிடுவோம். அவை பெறப்பட்ட தகவல்களின் கொந்தளிப்பான பேரழிவுத் திரட்சியாகிவிடும். இயற்கையானது அதியுச்சப் பன்முகத் தன்மையுடையது. அந்தப் பன்முகத்தன்மையின் உச்சத்தினை மனிதர்களால் நாளாந்த அடிப்படையில் எதிர்கொள்ளவோ தாங்கவோ முடியாது. குறைந்தபட்ச உளநல வாழ்வைக் கொண்டதும் சுயமாக நகரக்கூடியதுமான மனிதன் அல்லது மிருகம் எனவான எந்தவொரு உயிரினமும் உலகத்தைப் பற்றிய புலனுணர்தலை ஒழுங்கமைத்து எளிமைப் படுத்தாவிட்டால், இந்த எல்லையற்ற பன்முகத்தன்மைக்குள் வாழ முடியாது.  

ஒத்திசைவும் நிரப்புதன்மையும்

ஒத்திசைவு மற்றும் நிரப்புத்தொகுப்புகளை உருவாக்குவதன் மூலம், சிக்கலான உண்மைகளுக்கான எளிய தோற்றப்பாடுகளை உருவாக்க இயற்கை அனுமதிக்கிறது. எளிமைப்படுத்துதல்கள் சிக்கல்களைத் தவிர்த்துவிட்டாலும், வேறு வழியின்றி, மேலும் இவ்வுலகில் வாழவும், அதன் மூலம் ஒரு போக்கை வழிநடத்தவும், தோற்றப்பாடுகளின் தொகுப்பினை உருவாக்கும் உணர்வுசார் செயல்முறையை நிகழ்த்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஒரு குழந்தை முதன்முறையாகக் கண்களைத் திறக்கும்போது, அதன் கண்களை ஒளிரச் செய்கின்ற அனைத்தையும் பார்க்கிறது. எல்லாவற்றையும் பாரப்பதென்பது அடிப்படையில் எதையும் பார்க்கவில்லை என்பதாகும். சாம்பல் நிறம் மட்டுமே சிசுக்களின் கண்களுக்கு முதலில் தெரிவன. சிறிது சிறிதாக குழந்தையின் ‘பார்வைநரம்பு’, ஒளி மற்றும் நிழலால் தூண்டப்படத் தொடங்கும் போதுதான், அதன் ‘காட்சி உணர்வு’ ஒழுங்குபடுத்தப்படுகின்றது, அப்போதுதான் குழந்தை நேர் கோடுகள், வளைவுகள், ஆழம் மற்றும் வண்ணங்களை வேறுபடுத்துகிறது. எல்லாவற்றையும் ஒரே நேரத்திற் பார்ப்பதை நிறுத்தும் தருணமே குழந்தை உண்மையில் பார்க்கத் தொடங்கும் தருணமாக அமைகின்றது.

எதுவும் இன்னொன்றைப் போன்றதல்ல 

எந்த மீனும் மற்றொரு மீனைப் போன்றது அல்ல, ஆனால் மீன்கள் ஒரே மாதிரியானவை. அதனால் மீன் கூட்டத்தைக் காண்கிறோம். எந்தவொரு ரோஜாவும் மற்றொரு ரோஜாவைப் போன்றது அல்ல, ஆனால் வெவ்வேறு வண்ணங்களிலான ரோஜாக்கள் அனைத்தும் ஒன்றையொன்று ஒத்திருக்கும் ரோஜாத் தோட்டங்கள் உள்ளன. பூமி நீலமானது என்று ஒரு விண்வெளிப் பயணிகள் கூறுவர்.  இரவு கருப்பு என்றும், நமது நாளங்களில் ஓடும் குருதி சிவப்பு என்றும், மழை வானம் சாம்பல் என்றும் சொல்கிறோம். ஆனால் அவை அவ்வாறு இல்லை என்பதை நாங்கள் அறிவோம். ஒவ்வொரு சிறு துணிக்கைகளும்; மற்றொன்றைப் போல இல்லை. 

எந்த ஒரு மலையும் இன்னொரு மலையைப் போல இல்லை என்பதை நிச்சயமாகத் அறிந்துவைத்திருக்கின்ற போதும், பூமியிலிருந்து நீண்டு வானத்தை முத்தமிடும் அனைத்திற்கும் ‘மலை’ என்று பெயர் சூட்டியிருக்கின்றோம். மற்ற மேகங்களைப் போலவே, என்னுடையது போல் எந்த கனவும் இல்லை. எந்த மேகமும் இன்னொன்றைப் போல் இல்லை, எந்தக் கனவும் எனது போல் இல்லை என்று அறிந்திருந்தும் மேகம், கனவு என்ற பொதுப்பெயரிலேயே அவற்றை அடையாளப்படுத்துகின்றோம்.

ஆனால் ஒத்திசைவு சார்ந்த உணர்வின் மூலம், ஒரே மாதிரியான விஷயங்களைக் கொண்டதும் ஒற்றைத்தன்மை கொண்டதுமான தொகுப்புகளை நாம் உணரவும்; உருவாக்கவும் முடியும். 

நிரப்பு கூறுகளாலான பன்முகத் தொகுப்புகளையும் நாம் உணர முடியும். ஒருபோதும் இரண்டு வெவ்வேறு ஆறுகள் ஒரே பாதையில் ஓடுவதில்லை. ஆனால் எல்லா நதிகளிலும் தண்ணீரே ஓடுகிறது – அது உலகின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆறாக இருக்கலாம் அல்லது மலையின் மிகச்சிறிய நீரோடையாக இருக்கலாம். அவற்றின் கரைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அனைத்து நதிகளும் அவற்றினூடாக ஓடும் நீரை வழிப்படுத்துகின்றன. அதேபோல ஆற்றுப்படுகைகளில் உள்ள கற்களும் எடை மற்றும் வடிவத்தில் ஒரே மாதிரியானவை அல்ல. 

காடுகளை ஒரே மாதிரியான மரங்களின் திரளாக நாம் உணர முடியும், ஆனால் அவை அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்குக்கூட்டமும் அங்கு இல்லை. இருப்பினும் கூட்டத்தின் ஒவ்வொரு மிருகமும் குறிப்பிட்ட தனித்த இயல்புகளைக் கொண்டுள்ளன. அதேபோல் மனிதர்களில் எவரும் இன்னொருவர் போல் இல்லாத போதும் மனிதக்கூட்டாகப் (திரளாக) பார்க்க முடியும்.

மனிதனின் பன்முகத்தன்மை 

ஒரு மனிதன் என்பது கூட பன்முகத்தன்மை கொண்ட தொகுப்பாகும். நிரப்புகூறுகளாலான திரளே மனித உடலும். மனித உடலுக்கு தலை, கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகள், குருதிநாளங்கள், நரம்புகள், முடி, தோல் எனவாகப் பல நிரப்புகூறுகள் உள்ளன. ஒரு கல் சாம்பல் நிறமாக இருந்தாலும், உள்ளூர அது பல வண்ணங்களைக் கொண்டுள்ளது. மேலும் அதன் மேற்பரப்பில் வட்டமாகத் தோன்றினும்கூட, அதன் மேற்பரப்பில் பல்வேறு வடிவ மாறுபாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கும்.

இயற்கையைப் பற்றிய நமது புலனுணர்தலை எளிமையாக்குவதன் மூலம் நாம் அதிர்ச்சியின்றி வாழலாம். ஒன்றில் ஒத்த உயிரினங்கள் மற்றும் பொருட்களின் ஒத்திசைவான தொகுப்புகளாக அல்லது வேறுபட்ட உயிரினங்களின் மற்றும் பொருட்களின் நிரப்புகூறுகளின் தொகுப்புகளாக முறைப்படுத்தப்படலாம். இந்த எளிமைப்படுத்தலில் வேறுபாடுகள் மற்றும் தனித்துவமான அடையாளங்களின் செழுமை தொலைந்து போவதோடு, ஒருபோதும் மீள அணுக முடியாதவையாகவும் ஆகின்றன. இந்த எளிமைப்படுத்தல், நமது கற்பனையின் அங்கமே தவிர இயற்கையின் பன்முகத்தன்மையின் விளைவல்ல. இது ஒரு கவசம் போல்  தொழிற்பட்டு உண்மையான புறத்தோற்றங்களை மட்டுமே அணுக அனுமதிப்பதோடு, தோற்றங்களைக் கணிப்பிடவும் வழிகோலுகின்றது. மனிதர் நாம் எமக்குள் தொடர்பு கொள்ள, இந்த தொகுப்புகளுக்கு பெயரிட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

இந்த எளிமைப்படுத்தல், நமது கற்பனையின் அம்சமே அன்றி, இயற்கையின் பன்முகத் தன்மையின் கூறு அல்ல. இது ஒரு கவசம் போல் செயல்படுவதோடு, உண்மைத் தோற்றங்களை மட்டுமே அணுக அனுமதிக்கிறது. மேலும் இந்த தோற்றங்களின் மீது நாம் எமது கணிப்புகளை நிகழ்த்த முடியும். மனிதர்களாகிய நாம் நமக்கிடையிலான தொடர்பாடலுக்கு ஏதுவாக இந்தத் தொகுப்புகளுக்கு பெயரிடப்பட வேண்டியுள்ளது.

இத்தொடரின் முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

***

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன.

மின்னஞ்சல் – svrooban@gmail.com

வே. நி. சூர்யா கவிதைகள்

3

1. இதம் என்றால் என்ன?

புற்கள் ஒளியில் சலசலக்கின்றன
நாரைகளும் கொக்குகளும்
பசும்செறிவினின்று சிதறிப்பறக்கின்றன
நான்
இம்மாலைப்பொழுதின் 
பச்சைப் பசேலென்ற
அமைதிக்கு நடுவே
கொஞ்சநேரம் கழித்து என
பத்திரப்படுத்திவைத்திருந்த
இனிப்பு மிட்டாய்களிடையே
திடுமென உன்னை
என் சட்டைப்பையில் தேடிப் பார்க்கின்றேன்.

*

2. வர்க்கலா கடற்கரை, 20/04/2025

என் விரல்களுக்கிடையிலிருந்து
மறைந்துகொண்டிருக்கின்றன
அந்தியின் விரல்கள்

இன்னும் சற்று நேரம்தான்
இன்னும் சற்று…
இன்னும்…

கதகதப்பு மறைந்துவிடும்
ஏக்கச்சொரூபமான என் கையும் மறைந்துவிடும்
நானுமே கூட மறைந்துவிடுவேன்
நிலவொளிக்கு இடைஞ்சலாக இருப்பதற்கு
எனக்கு என்ன உரிமையுள்ளது?

*

3. லைக்கா

கசக்கி எறியப்பட்ட காகிதங்கள் மொட்டவிழும் சப்தம் கூட செவியை எட்டும் ராத்திரிப்பொழுது அது. தூரத்தே அகலும் கப்பல்களைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன், சொல் ஆல கண்டனாக. எப்படியென்று அறியேன், புறப்படும் ஒவ்வொரு கப்பல்களிலும் நானும் இருக்கிறேன். கடலின் ஈரவிழிகளை நேருக்குநேர் பார்த்து நிற்பவனின் கதாபாத்திரத்தில். உன்னிடம் சொல்லவேண்டிய யாவற்றையும், இருண்ட தொடுவானத்தின் தட்டச்சுப்பலகையில் என் பார்வையால் தட்டிக்கொண்டிருப்பவனின் கதாபாத்திரமாகவும். தொலைவினின்று எனக்கு நானே கையசைக்கும் விசித்திரம் போலவும்.

சாளரத்துக்கு அப்பால் அது என்ன? ஒன்று, இரண்டு இல்லை நான்கு நேரங்கெட்ட கடற்பறவைகள். புகைப்படம் எடுக்க முயல்கையில் விருட்டெனப் பறக்கின்றன சமுத்திரத்தை நோக்கி. நீண்ட ஆலோசனைக்குப்பிறகு ஒருவழியாக பக்கத்து அறையின் தொலைகாட்சி சப்தம் என்னிடம் வருகிறது. ராக்கெட், நிலவு, விஞ்ஞானிகள், பெருமிதக்கூச்சல்கள் இத்யாதி இத்யாதிகள்… அப்புறம் அலைகளின் ஒயாத குரைப்பொலிகள் மாத்திரமே. 

நானோ மெதுமெதுவாக உடுக்கூட்டங்களில் ஆழ்ந்தேன். அதோ அங்குதான் எங்கோ இன்னும் லைக்காவின் எலும்புக்கூடுகள் மிதந்துகொண்டிருக்கின்றன, அறியமுடியாமையின் சமுத்திரத்தில் ஒரு எலும்புப்படகு என. அதோ அங்குதான் லைக்கா தூசித்துகள்களாக, நட்சத்திரத்துகள்களின் மீது மோதி எதிரொலித்து, பூமியின் வஸ்துகள் எதுவும் அறியாத வெண்தனிமையில் பிரயாணம் போய்க்கொண்டிருக்கிறாள். இரு, நானும் வருகிறேன்.

***

வே.நி. சூர்யா – நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையை சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து பங்களித்துவருகிறார். கரப்பானியம் (2019), அந்தியில் திகழ்வது (2021) என இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. மின்னஞ்சல்: suryavn3@gmail.com

மூன்று கவிதைகள்

2

பெரு. விஷ்ணுகுமார்

வேலைதேடும் பேச்சிலரின்
சபதங்களில் ஒன்று….

அது எப்போதாவது செல்லும் மலையுச்சி
அதில் எப்போதாவது தெரியும் நாங்கள் வசிக்கும் அறை
ஒரே தலையணையில் நெருக்கியடித்து உறங்குபவர்களைப்போல்
ஒன்றின் மேலொன்றாய் முளைத்திருக்கும் மலைத்தொடர்கள்.
அதில் செல்லும் பாதையை அளந்துகொண்டிருக்கும் அருவி
தம் துதிக்கையினால் தட்டிக்கொடுக்கிறது
கனவிலும் உருளாமல் தாக்குப்பிடிக்கும் பாறைகளை.
நான் பள்ளங்கள் அழைக்கும் தூரம்வரை எட்டிப்பார்க்கிறேன்
இந்த ஆழம் அப்படி என்னதான் செய்யுமென
அருகிலிருந்தவொரு பந்தினை எட்டி உதைக்கிறேன்
எனக்குப் பதிலாக.
அது மெயின் ரோட்டுக்குச் செல்லும் வீதி
அங்கே பச்சைநிற கதவுகொண்ட வீடு எப்போதும் மூடியே இருக்கும்.
அவ்வழியே கடக்கும்போதெல்லாம் கவனிப்பேன்,
நீளமான மூக்குக்கண்ணாடியுடன்
கால்மேல் காலிட்டு அண்ணாந்திருப்பார் ஒரு முன்னாள் ராட்சசர்.
ஹ்ம்ம்ம்ம்…… அவருக்கென்ன….
ஒளிசூழ் மாடம், ஓய்வூதியப் பெருமூச்சு
உலகையே வென்றுமுடித்த முகக்களை.
அப்போதெல்லாம் உள்ளுக்குள் சூளுரைத்துக்கொள்வேன்
நானும் என் கண்ணெதிரில்
ஒருமுறையேனும் அமர்ந்து காட்டவேண்டும் இப்படி
கிஞ்சித்தும் என்னைக் கண்டுகொள்ளாதபடி.

நாணல்

கவிழ்ந்த நாணலொன்று
எழுந்து நிற்கிறது மறுபடியும்
காற்றைச் சமாதானப்படுத்தி.
உடனுக்குடன் சம்மதம் தெரிவிப்பதும்
பிறகு இல்லையென்று மறுப்பதுமாக
அலைபாயும் உனக்கு
எப்போதும் தென்படுகிறது ஒரு தலையாட்டி பொம்மை
அதன்முன்னே மிடுக்காக
ஒரு கட்டளையைச் சொடுக்கும் விரல்கள்
ஆம்
அது நீயேதான்
நானேதான்
அச்சு அசல் ஒரு பொம்மையேதான்.

மது அருந்துகையில்

மது அருந்துகையில்
என் மறுநாளையும் சேர்த்து அருந்திவிடுகிறேன்.
தொண்டை வளைவில் ஆர்ப்பரிக்கிறது ஒரு மெல்லிய தழல்.
ஜீவிதங்கள் அனைத்திலும் சன்னமான பூகம்பம்
ஏன் எல்லா இடங்களிலும் தெரிகிறது ஒரே விண்மீன்.
பெயரிடப்படாத இந்நீளமான புதினத்தில்
இடது பக்கத்திற்கு அடுத்ததாக,
இடது பக்கமே வாசிக்க வருகிறது.
எல்லோரையும் எளிதில் பின்தொடரும் மதுக்கோப்பை
என்னை மட்டும் எட்ட நின்று கவனித்துக்கொண்டிருக்க,
கண்ணாடித் தொட்டிக்குள் ஒளிய முடியாமல்
அல்லாடுகிறது மீன் ஒன்று.
விவரம் புரியாமல் ஒன்றையொன்று விரட்டிச் செல்கின்றன
குடைராட்டினத்தின் மிருகங்கள்
வேறுவழியின்றி நானும் அவற்றுடன் சேர்ந்துகொள்கிறேன்
முன்னங்கால் உயர்த்திக் கணைக்கும் என் புரவியை
உச்சபட்ச வேகத்தில் செலுத்துகிறேன்.
விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது
அதற்குள் அனைவரையும் காப்பாற்றியாக வேண்டும்.

***

பெரு. விஷ்ணுகுமார் – 2015 க்கு பிறகு எழுத வந்தவர். கவிதைகளோடு கட்டுரைகள், கதைகள் மற்றும் அவ்வப்போது மொழிபெயர்ப்பிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். ழ என்ற பாதையில் நடப்பவன், அசகவ தாளம் ஆகிய இரு கவிதைத் தொகுப்பு வந்துள்ளன. மின்னஞ்சல்: peru.vishnukumar@gmail.com

வடு

3

சுகுமாரன்

பிழைப்பு நிமித்தம் ஊரை விட்டுப் போய்ப் பெரு நகரத்தில் குப்பை கொட்டத் தொடங்கி இருபது ஆண்டுகள் கழித்து, எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத சமயத்தில் பங்காருவைச் சந்தித்தேன். உத்தியோகபூர்வமான உடையில் காலில் ஷூவும் கழுத்தில் மாட்டிய அடையாள வில்லையுமாக முன்னால் விசுக்கென்று கடந்து போன நபரைப் பார்த்ததும் முதலில் சந்தேகமாகத்தான் இருந்தது. நிறுத்திவைத்துக் கேட்கத் தயக்கமாக இருந்தது. பங்காருவை அப்படி சர்வாலங்காரத் தோற்றத்தில் முன்பு ஒருபோதும் பார்த்ததில்லை. இது அவனாக இருக்கச் சாத்தியமில்லை என்று தோன்றினாலும் முகத்தில் இடது கண்ணுக்கும் இடது காதுக்கும் மேலே நெற்றிப் பொட்டில் தெரிந்த காய வடுவும் ஓட்ட நடையும் அது பங்காருதான் என்று நம்ப வற்புறுத்தின.

எங்கள் நிறுவனம் ஊழியர்களின் மன மகிழ்ச்சிக்காக இரண்டு நாள் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் புத்துணர்ச்சி முகாம். அதன் பொருட்டு நாங்கள் எல்லாரும் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் திருவனந்தபுரத்திலிருந்தும் ஹைதராபாத்திலிருந்தும் மசினகுடிக்கு வந்திருந்தோம். யானைகளின் சுகவாச கேந்திரத்துக்கு எங்களை அழைத்து வந்தது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும்.

எங்கள் நிறுவனத்துக்கு, இல்லை இல்லை, நிர்வாக இயக்குநருக்குச் சொந்தமான பண்ணை இல்லம் மசினகுடியில் இருந்தது. அடர்ந்த வனத்துக்குள்ளே பத்துச் சொச்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய மாளிகை. நிறுவனம் தொலைக் காட்சி ஒளிபரப்பில் முன்னணியில் இருந்தது. எனவே நிகழ்ச்சித் தயாரிப்பை முன்னிட்டும் வியாபார பேரங்களை வெளியே தெரியாமல் விவாதிக்க உதவும் வகையிலும் மாளிகை கட்டப்பட்டிருந்தது. வெளியிலிருந்து பார்த்தால் கருங்கல் கட்டுமானமாகத் தென்பட்ட அதற்குள் சகல வசதிகளும் இருந்தன. எல்லா அறைகளிலும் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டிருந்தது வினோதமாக இருந்தது. காசிருந்தால் துருவப் பிரதேசத்திலும் ஏசி வைத்துக் கொள்ளலாம்தானே? ஒரு நட்சத்திர ஓட்டலை ஏளனம் செய்து பின்னுக்குத் தள்ளி விடும் ஆடம்பரத்துடனும் இருந்தது அந்த இல்லம்.

பண்ணை இல்லத்தைப் பராமரிக்க ஏராளமான பணியாட்கள் இருந்தார்கள். செய்யும் வேலைக்குத் தகுந்ததுபோலத் தனித் தனிக் குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். வரவேற்புக்கும் அறைகளை ஒதுக்குவதற்கும் தண்ணீரை விநியோகிக்கவும் மின்சாரத்தை விநியோகிக்கவும் ஆண்களும் பெண்களுமாக ஒரு கூட்டம். கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய இன்னொரு கூட்டம். அவர்கள் எல்லாரும் நிரந்தரப் பணியாளர்கள். அதைத் தவிர குற்றேவல்கள் செய்வதற்காக உள்ளூர்வாசிகளான சில பழங்குடிகள். ஆனால் அவர்கள்தாம் அதிகமாக வேலை செய்தார்கள் என்பதை ஒரு நாள் தங்கலிலேயே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த நிலத்தின் நரம்புகளையும் நாளங்களையும் கைவசப்படுத்திருந்தவர்கள் அவர்கள்தான். அந்த மண்ணின் திடத்தையும் மூச்சையும் தெரிந்து வைத்திருந்தவர்கள். வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கக் கற்றிருந்தவர்களும் அவர்கள்தான். அவர்களை அதற்காகத்தான் அங்கே வேலையில் வைத்திருப்பதாக பண்ணை வீட்டின் தலைமைப் பராமரிப்பாளரான தன்றாஜ் வைஸ்யா நாங்கள் பண்ணை இல்லத்துக்கு வந்து சேர்ந்ததும் நிகழ்த்திய வரவேற்புரையில் விவரமாகச் சொன்னார்.

இந்தக் கூட்டத்தைத் தவிர இன்னொரு கூட்டமும் அங்கே இருந்தது. அது ஓட்டுநர்கள். ஒன்றிரண்டு உள்ளூர் வாசிகளைத் தவிர மற்ற எல்லாரும் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள். பண்ணை உபயோகத்துக்காக நான்கு ஜீப்புகளும், இரண்டு வேன்களும், தயாரிப்புக் குழுவுக்காக ஒரு குளிர் பேருந்தும் விஐபிகள் பயன்படுத்துவதற்காக இரண்டு விலையுர்ந்த உள்ளூர் தயாரிப்புக் கார்களும் எம்டியின் போக்குவரத்துக்காக வெளி நாட்டு இறக்குமதிக் காரும் இருந்தன. வெளியிடங்களிலிருந்து வந்தவர்கள் மலைக் குளிரையும் காட்டு வாசத்தையும் சகிக்க முடியாமல் வந்த சில நாட்களிலேயே ஓடி விடுகிறார்கள். இந்தத் தகவல்களையும் வைஸ்யாதான் சொன்னார்.

பெயர்தான் அழுத்தமான வடக்கத்தி உச்சரிப்பில் இருக்கிறதே தவிர ஆசாமி சுந்தரத் தெலுங்கர். எங்கள் நிறுவனத்தின் தெலுங்கு அலைவரிசையின் பொது மேலாளர். இதற்கு முன்பு தெலுங்கு சினிமா உலகத்தில் இருந்தவர். பிரபலமான ஸ்டூடியோ ஒன்றில் வேலை பார்த்து வந்தவரை எங்கள் நிர்வாக இயக்குநர் வலை வீசிப் பிடித்து வந்து பதவி கொடுத்திருந்தார். வைஸ்யாவின் சினிமாத் தொடர்புகள்தான் அப்படி வலையெறியச் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் எங்கள் நிறுவனம் திரைப்படத் தயாரிப்பிலும் கால் வைக்கத் திட்டமிட்டிருந்தது. அதற்குத் தோதான நபர் அவர்தான். அவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் தவிர இந்தித் திரையுலகிலும் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டது. அவரை அலுவலகத்தில் பார்க்கும் நாட்கள் சொற்பம். பெரும்பாலும் மசினகுடியில்தான் வாசம். வாரத்துக்கு ஒருமுறையோ பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையோதான் பார்க்க முடிந்திருக்கிறது. மசினகுடியிலோ சென்னை அலுவலகத்திலோ இல்லாத நாட்களில் வெவ்வேறு நகரங்களுக்கு விமானத்தில் பறந்து கொண்டிருப்பார்.

சென்னையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரயில். அங்கிருந்து மசினகுடிக்கு வேன். இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்காக நின்று நின்று நீண்ட பயணம் செய்து வந்து சேர்ந்தபோது பகலுணவு நேரமாகி இருந்தது. எல்லாரையும் களைப்பைச் சீக்கிரம் போக்கி விட்டு உடனடியாக உணவுக் கூடத்துக்கு வரும்படி சொல்லியிருந்தார் வைஸ்யா. அதைச் சொல்ல எல்லாரையும் திரட்டியபோதுதான் பண்ணை இல்ல மகாத்மியத்தையும் விலாவரியாகச் சொன்னார். ‘புத்துணர்வு தரும் இரண்டு நாட்களில் அரை நாள் போய் விட்டது. மீதியிருக்கும் ஒன்றரை நாளில் நம்மை உற்சாகப் படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டாமா?’ என்று கேட்டார். அலுவலகக் கசடு இல்லாத நாட்களுக்காக எல்லாரும் ஏங்கி இருக்கிறோம் என்பது எங்கள் பிந்தைய பரபரப்பில் அப்பட்டமானது.

புத்துணர்வின் பொருள் அன்று பகலுணவுக்குப் பிறகு விளங்க ஆரம்பித்தது. முதலில் வெவ்வேறு கிளைகளைச் சேர்ந்தவர்கள் பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பிறகு வெற்று இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தோம். அலுவலக விவகாரங்களைப் பேச்சில் இழுத்து வரக் கூடாது என்று எல்லாரும் நினைத்திருந்தபோதும் அதைச் சுற்றிய புறணிகளும் கிசுகிசுப்புகளும் துப்புத் துலக்கல்களும்தான் பேச்சில் அதிகமாக இருந்தன. சற்று நேரத்தில் அவை சலிப்பூட்டத் தொடங்கின.

சங்கிலிப் புகைஞரான எங்கள் நிர்வாக மேலாளர் ஒரு நாள் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டார். அதன் பிறகு அவரைப் பார்க்கச் செல்லும் எல்லா ஊழியர்களிடமும் புகை பிடிப்பதன் தீமையைப் பற்றி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அறிவுரை பலனளிக்காத கட்டத்தில் தடைச் சட்டம் கொண்டு வந்தார். அலுவலக வளாகத்தில் புகைப் பிடித்தால் சம்பளத்தில் வெட்டு என்று அறிவித்தார். அது ஓரளவு பயன் அளித்தது. ராஜாவை விட ராஜ விசுவாசம் மிகுந்தவர்களான ஊழியர்களில் கணிசமான பேர்வழிகள் சிகரெட்டைக் கைவிட்டார்கள். அதன் மூலம் கிடைக்கும் பலன்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். குறிப்பாக அதன் மூலம் மிச்சமாகும் காசைப் பற்றி விரிவாகச் சொன்னார்கள். தடையையும் செலவையும் பற்றிக் கவலைப்படாத புகைஞர்களாக நானும் இன்னும் சிலரும் இருந்தோம். யாரும் பார்க்காமல் ரகசியமாகப் புகைத்து வந்தோம்.

அலுப்பேற்படுத்திய கூட்டு அரட்டையிலிருந்து விலகி எனக்கு ஒதுக்கப் பட்ட அறைக்கு வந்தேன். என்னுடைய பயணப் பையில் ஒளித்து வைத்திருந்த சிகரெட் பெட்டியையும் கொளுத்தியையும் எடுத்துக் கொண்டு மாளிகையின் பக்கவாட்டில் மறைவான இடம் தேடி நடந்தேன். யார் கண்ணிலும் படாத இடத்தில் நின்று பாக்கெட்டை எடுத்தவுடன் எங்கிருந்தோ அந்நிய மொழி அசரீரி கேட்டது. ‘சர்ஜி, இதர் தூம்ராபான் ந கரேங்க்’. ஒலியைத் திரும்பிப் பார்த்தபோது சீருடை அணிந்த கூர்க்கா நின்றிருந்தான். இன்னும் நடந்து கட்டடத்தின் பின் பகுதிக்கு வந்து சேர்ந்தேன்.

பணியாட்களின் குடியிருப்பு. அதற்கும் அப்பால் வகைவகையான மரங்கள் ஆகாயம் முட்ட நின்றிருந்தன. பிரம்மாண்டமான தாவரச் சுவர்போல அடர்ந்திருந்த மரங்கள். அதைத் தாண்டிச் சென்றதும் காட்டுத்தனமாக வளர்ந்திருந்த மூங்கில் கூட்டம். காட்டு அணில்களும் முயல்களும் நடைச் சலசலப்பில் வெருண்டு ஓடின.

பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை உருவி உதட்டருகே கொண்டு போனபோது நெருக்கத்தில் காலடியோசை கேட்டது. சிகரெட்டை முதுகுப் பக்கம் மறைத்துக் கொண்டு திரும்பினேன். சந்தேக பங்காரு நின்றிருந்தான். தயக்கத்துடனும் பணிவுடனும் ஆனால் கறாராகவும் ‘’ சார், இங்க சிகரெட்டுப் புடிக்கக் கூடாதுங்’’ என்றான்.

‘’இன்னும் புடிக்கலீங்களே’’ என்று வழிந்துகொண்டே அவன் முகத்தைப் பார்த்தேன். அந்த முகத்தில் என்னுடையதை விட வழிசலான சிரிப்பு இருந்தது. பெரிய மனிதர்களைக் குற்றம் சாட்ட நேரும்போது ஏற்படும் தயக்கச் சிரிப்பு. அந்தச் சிரிப்பால்தான் முகத்தை உன்னிப்பாகப் பார்க்க நேர்ந்தது. அவனுடைய இடது கண்ணுக்கும் காதுக்கும் மேலே நெற்றிப் பொட்டில் பூரான் ஒட்டிக் கொண்டிருப்பது போன்ற வடு .இவன் பங்காருதான் சந்தேகமே இல்லை.

எங்கள் பகுதியில் அந்த நாட்களில் வீட்டுக்கு வீடு கழிப்பறைகள் கிடையாது. தெருவில் பாதி வீடுகளில்தான் அவை இருந்தன. அவையும் உலர் கழிப்பறைகள். முனிசிபாலிட்டி ஊழியர்கள்தான் காலையில் வந்து அதைச் சுத்தம் செய்வார்கள். எங்கள் தெருவுக்கும் பக்கத்திலுல்ள மூன்று தெருக்களுக்கும் ஒரே துப்புரவுப் பணியாளர்தான். மந்திரி. நாங்கள் குடிவந்த காலம் முதல் பொருள் வயின் நான் பிரியும் நாள்வரைக்கும் மந்திரிதான் எங்கள் சுகாதார இருப்புக்கு உத்தரவாதமாக இருந்தான்.

மந்திரி என்ற பெயரில் யாரும் இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றும். ஆனால் அந்தப் பெயரைச் சொல்லி யாரும் அவனைக் கூப்பிட்டது இல்லை. சாதிப் பெயரைச் சொல்லித்தான் அழைப்பார்கள். அவனை மட்டுமல்ல. அவன் மனைவியையும் மகளையும் மகனையும் அப்படித்தான் அழைத்தார்கள். எங்கோ அத்துவானத்திலிருந்து வருவதுபோலத்தான் மந்திரி வருவான். அவனும் அவனுடைய மொத்தக் குடும்பமும் முனிசிபாலிட்டித் தொழிலாளர்கள். கருக்கலிலேயே அந்தக் குடும்பம் எங்கள் பகுதிக்கு வந்து விடும். இரண்டு சக்கரங்கள் வைத்த பெரிய துத்தநாகப் பீப்பாயை எங்கள் பகுதியிலிருந்த முனிசிபாலிட்டி பகுதி அலுவலகத்திலிருந்து உருட்டிக் கொண்டு யாராவது ஒருவர் முன்னால் வர மற்றவர்கள் கையில் துடைப்பத்தையும் வாளியையும் மலம் அள்ளும் தகர முறத்தையும் துக்கிக் கொண்டு பின்னால் வருவார்கள். அவரவர் உபகரணங்களுடன் வெவ்வேறு தெருக்களுக்குப் பிரிந்து போவார்கள். பகலில் வேலை முடிந்தாலும் பொழுது அடைகிறவரைக்கும்  எங்கள் வட்டாரத்திலேயே இருப்பார்கள். அநேகமாக எங்கள் வீட்டையொட்டியிருந்த சந்தில். இருட்டிய பிறகு கடைசி பஸ்ஸில்தான் வீடு திரும்புவார்கள். மற்ற நேரங்களில் அவர்களைப் பஸ்ஸில் ஏற்ற மாட்டார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது வெகுகாலம் புதிராகவே இருந்தது. தற்செயலாகத்தான் அன்று நகரத்தின் விளிம்பாக இருந்த பகுதியிலுள்ள காலனியிலிருந்து வருகிறார்கள் என்பதைக் கண்டு பிடித்தேன்.

இரண்டு விதமான அழைப்புகளால் மந்திரியின் வருகை தெரியும். காலையில் மலம் அள்ளும் வாளியுடன் வந்து பொடக்காலிக் கதவைத் தட்டி ‘’ கக்கூசுக்குத் தண்ணியூத்துங்க சாமீ’’ என்பான். நண்பகல் வாக்கில் அலுமினியப் போசியுடன் ‘’சாமி பளயது கீது இருந்தாப் போடுங்’’ என்று வந்து நிற்பான். சில நேரங்களில் மனைவியோ மகளோ மகனோ வருவார்கள். அப்படி ஒரு நாள் வந்தபோதுதான் மந்திரியின் மகன் பெயர் பங்காரு என்று தெரிய வந்தது. அவனைச் சாதிப் பெயர் சொல்லி அழைக்கவோ மந்திரி பயா’’ என்று கூப்பிடவோ மனது ஒப்பவில்லை. அவன் பெயரைக் கேட்டேன்.

‘’என்ற பேர எதுக்குக் கேக்கறிங்’’.

‘’பேரெதுக்குக் கேப்பாங்க, கூப்புடத்தான். ஆமா, ஒனக்குப் பேரிருக்கில்ல?’’

‘’ஆமா, பெத்த பேரு, நீங்க சும்மா மந்திரி பையான்னே கூப்புடுங்க சாமி ’’ என்றான்.

‘’அப்புடிக் கூப்புடாம இருக்கறதுக்காட்டித்தா பேரக் கேக்குறன்’’

உடம்பை எட்டுக் கோணலாக்கிக் கொண்டு சொன்னான். ‘’ பங்காரு… பங்கார் சாமி’’

அம்மாவைக் கூப்பிட்டு அவன் வருகையைச் சொன்னேன். சில நொடிகளில் பழைய மீன் குழம்பின் வாடையுடன் அம்மா வாசலுக்குச் சென்று திரும்புவதையும் பங்காரு போசியை மூடியால் அடைத்தபடி நகர்வதையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு நடக்கவே தெரியாது என்று தோன்றியது. முன்பே பலமுறை பார்த்திருந்தாலும் அவன் நடையைக் கவனித்தது அப்போதுதான். மெதுவாக நடக்கும்போது லேசான நொண்டல் இருந்தது. அதனால்தான் நடையை ஓட்டமாக மாற்றிக் கொண்டிருக்கிறான்,

எங்கள் தெருவிலிருந்து வடக்காக இரண்டு தெருக்கள் தள்ளி சதுரமான கல்லுக்குழி இருந்தது. பாறைகளை வெட்டி எடுத்த பிறகு மிஞ்சிய பெரும் பள்ளம். இரண்டு ஆள் ஆழத்திலும் மண்ணைப் போட்டு மூடி நிரவினால் நாலு பெரிய வீடுகள் கட்டுமளவுக்கான விஸ்தீரணத்திலும் இருந்தது. பூமியின் சொந்தக்காரரான மருதாசலம் அதை மூடாமல் விட்டிருந்தார். கல்லுக் குழியைச் சுற்றிலும் வேலி அடைத்து ஒரு பக்கத்தில் இரும்பு கேட்டையும் போட்டுப் பூட்டி வைத்திருந்தார். குழியில் நல்ல வெயில் காலத்திலும் கண்ணாடிபோலத் தன்ணீர் மினுங்கும். உள்ளே ஊற்று இருப்பதாவும் சொன்னார்கள். மழைக் காலத்தில் ஒரு ஆள் நின்றால் தோளைத் தொடும் மட்டத்துக்கு இருக்கும். காவல் போட்ட இடம் . அதனால் டிச்சுத் தண்ணீரோ மற்ற கழிவு நீரோ கலக்காமல் சுத்தமாக இருந்தது. அதனால் கொஞ்ச தூரத்திலிருந்த ஜெயம் சோப்புக் கம்பெனிக்கார்கள் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கினார்கள்.

விடுமுறை நாட்களில் கல்லுக்குழியில் கும்மாளம் போடுவது எங்கள் விளையாட்டுகளில் ஒன்று. இருந்தது. எங்களுக்காகவே வேலியின் ஒரு மூலை சரியாக அடைபடாமல் திறந்திருந்தது. ஒரு ஆள் நுழையும் அளவுக்கான வழி. அதன் வழியாகப் புகுந்து கொட்டமடிப்போம். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தியும். தெரியாதவர்கள் ஓரத்தில் நின்று முக்குளித்தும். மருதாசலமோ அவர் வீட்டைச் சேர்ந்தவர்களோ பார்த்தால் அதட்டுவார்கள். ஆனால் ஒரு தடவை கூட விரட்டியது இல்லை.

ஒரு கோடை விடுமுறை நாள். நாங்கள் எல்லாரும் வழக்கம்போலக் கல்லுக் குழியைக் கலக்கிக் கொண்டிருந்தோம். மருதாசலத்தின் பையன் தங்கான் என்ற தங்கவேலுவும் எங்களுடன் கூத்தடித்துக் கொண்டிருந்தான். அன்றைக்கு நல்ல வெயில். மண்டை மயிர் பொசுங்கிப் போகிற வெயில். அதனால் யாருக்கும் தண்ணீரை விட்டு வெளியே வர விருப்பமில்லாமலிருந்தது. நீர் விளையாட்டு முடியாமல் நீண்ட போது உயிரைப் பிடுங்குகிற அலறல் கேட்டது. கல்லுக்குழியின் தென்புறத்திலிருந்து தங்கான் கத்திக் கொண்டிருந்தான். எல்லாரும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு நீர்ச் சளசளப்புடன் அவன் பக்கமாகப் போனோம். அவன் நின்றிருந்த இடத்தில் பாறைகள் இருந்தன. வழக்கமாக அந்தப் பக்கம் போகாமல்தான் விளையாடுவோம். தங்கான் அந்தப் பக்கமாகப் போய்ப் பாறை இடுக்கில் காலைச் சிக்கவைத்துக் கொண்டிருந்தான். தன்னிச்சையாகக் காலை எடுக்கமுடியாமல் போனதும் அழுது கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான். தத்தளிப்புடன் நின்றிருந்த நாங்கள் நாலு பேரும் அவனைப் பிடித்து இழுக்கப் பார்த்தோம் ,முடியவில்லை. அவனால் காலைக் கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. அதற்குள் எங்கள் கூப்பாட்டைக் கேட்டு வேலிக்கு அந்தப் பக்கமிருந்து சில தலைகள் எட்டிப் பார்த்தன. கேட் பூட்டிக் கிடந்தது. எப்படி உள்ளே நுழைவது என்று முன்னும் பின்னுமாகப் பரபரத்தார்கள். தங்கான் மரணக் கூச்சல் போட்டான். நாங்களும் எதுவும் செய்ய முடியாமல் பயத்திலும் கலவரத்திலும் அழுது ஓலமிட்டோம்.

அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. காக்கிச் சட்டையும் அரை டிரவுசரும் போட்ட உருவம் வேலியின் அடைபடாத வழியாக உள்ளே வந்து நீரில் குதித்தது. தங்கவேலுவின் மரணக் கூச்சல் ஒரு நொடி எழுந்து அடங்கியது. எங்களைப் பீதி சூழ்ந்தது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே தங்கானைத் தோளில் போட்டுக் கொண்டு நீருக்குள்ளிருந்து நிமிர்ந்தான் பங்காரு. அதற்குள் மருதாசலமும் தங்கானின் அம்மாவும் மற்றவர்களும் கேட்டைத் திறந்து உள்ளே வந்திருந்தார்கள். திறந்த கதவு வழியாக பங்காரு தங்கானைத் தூக்கிக் கொண்டு அவன் வீட்டை நோக்கி ஓடினான். ஈரம் சொட்டச் சொட்ட நாங்களும் பின்னால் ஓடினோம்.  எங்களுக்குப் பின்னால் மருதாசலமும் இன்னும் ஆட்களும் ஓடி வந்தார்கள்.

வீட்டுத் திண்ணையில் தங்கானைப் படுக்க வைத்தான் பங்காரு. அதே சுருக்கில் வாசல் படலருகில் போய் நின்றான். கொளுத்துகிற வெயிலிலும் அவன் உடம்பு நடுங்குவதையும் பற்கள் கிடுகிடுப்பதையும் பார்க்க முடிந்தது. தங்கானின் வலது கெண்டைக் காலிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவன் வாயைப் பிளந்து கத்திக் கொண்டிருந்தான்.

‘’எனுங்க் பையன ஆசுபத்திரிக்குக் கொண்டுட்டு போலாங்க்’’ என்றாள் தங்கவேலு அம்மா.

அவளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்த மருதாசலம்’’ பெரிசா ஒன்னுமில்ல செராச்சிருக்கு. மஞ்சத் தூள அப்பி வுடு. சரியாப் போய்டும்’’ என்றார்.

அவர் பார்வை எங்கள் மீது திரும்பியது. தோளில் போட்டிருந்த துண்டை உதறி கயிறுபோல ஆக்கிக் கொண்டு எங்களை நோக்கி வேகமாக வந்தார். அதை விசிறி எங்கள் நால்வரையும் அடித்தார். ஆவேசத்துடன் ‘’ கண்டாரோளி புள்ளைங்களா, போனாப் போச்சாதுன்னு வுட்டா, என்ற பயனையவே கொன்னு போடப் பாக்குறீங்களா, தாயோளிகளா’’ என்று கூச்சல் போட்டார்.

நாலு பேரும் வலி பொறுக்காமல் கத்தினோம். துள்ளினோம். ஈர உடம்பில் விழுந்த அடியில் உயிர் போய் விடும்போல இருந்தது. வாசல் பக்கமாக ஓடினோம். மருதாசலம் துண்டைச் சுழற்றிக் கொண்டே பின்னால் ஓடி வந்தார். வாசலைத் தாண்டி தெருவுக்குள் வந்து நின்றோம். துரத்திக் கொண்டு வந்தவரும் நின்றார். தெருவில் நிறுத்தி அடிப்பது விவகாரமாகி விடும் என்று தயங்கியிருக்கலாம். ஆனால் அவர் கோபம் அங்கே நின்றிருந்த பங்காரு மீது திரும்பியது.

‘’ஏண்டா எச்சக்கல நாயி, ஒனக்கு என்னா தெகிரியம், எங்க வூட்டுப் பயனத் தொட்டுத் தூக்கி வாசலத் தாண்டி வந்திருக்கே. பலபட்டற சாதிக் கொளுப்பு. இல்ல’’ என்று பாய்ந்து அவனைத் தள்ளி விட்டார். பங்காரு நிலை குலைந்து படலின் மீது விழுந்தான். அவன் முகம் ஒருக்களித்த வாக்கில் படலின் தப்பைமீது பதிந்து இறங்கியது. இடது நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டியது. நாங்கள் நாலுபேரும் ஒருவரை ஒருவர் கிலியுடன் பார்த்துக் கொண்டோம். பிறகு அங்க்கிருந்து ஈரம் சொட்டச் சொட்ட ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடினோம். அன்று மாலைவரை எங்களில் ஒருவனும் தெருப்பக்கம் தலைகாட்டவில்லை.

பங்காருவை எங்கள் வட்டாரத்தில் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான்.

சம்பவம் நடந்து முடிந்து சில வருடங்களுக்குப் பிறகுதான் மறுபடியும் பங்காருவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கல்லூரி நண்பர்களுடன் பெரிய கடைத் தெரு ஆனந்த விலாசத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். கடை முன்னால் முனிசிபாலிட்டியின் குப்பை வண்டி நின்றிருந்தது. மாடு பூட்டிய வண்டி. அதற்குள் ஓட்டல் எச்சில் இலைகளும் உணவுக் கழிவுகளும் நிரம்பிய பெரிய டிரம்மைக் கவிழ்த்துக் கொண்டிருந்த காக்கிச் சட்டை கொட்டி முடித்துத் திரும்பியது. பங்காருதான். நாங்கள் நின்றிருந்த வாசலையொட்டி ஓட்டலின் பின் பகுதிக்குப் போகும் சந்து இருந்தது. சந்தை நோக்கி வந்த பங்காருவை கைகாட்டி மறித்து ‘’ நல்லா இருக்கியா பங்காரு?’’ என்று கேட்டேன்.

சில நொடிகளின் தயக்கத்துக்கு அப்புறம் அடையாளம் தெரிந்து சிரித்தான். ‘’சாமி, நீங்களா? நல்லா இருக்கீங்ளா?’’ என்றான்.

‘’ நல்ல இருக்கேன் பங்காரு. நீ எப்புடியிருக்கே?’’

‘’ அதான் பாக்குறீங்களே, அப்டியேதான் குப்ப கொட்டிட்டு இருக்கறனுங்க்’’

அதற்குள்ளே சந்துக்குள்ளிருந்து ஒரு குரல் அவனை அழைத்தது. அவசரமாக ‘’வர்றனுங்க் சாமி’’ என்று டிரம்மை உருட்டிக் கொண்டு நகர்ந்தான். சற்று முன்னால் போய்த் திரும்பிப் பார்த்து விட்டுப் போனான். அவன் முகத்தில் இடது கண்ணுக்கும் காதுக்கும் மேல் இருந்த கறுத்த தழும்பு அனிச்சையாகக் கண்ணில் பட்டது.

பாக்கெட்டிலிருந்து உருவிய சிகரெட்டை மறுபடியும் உள்ளே சொருகி வைத்துக் கொண்டே முன்னால் நின்றவனிடம் கேட்டேன்.

‘’ஒங்க பேரு பங்காருதான?’’

அவன் முகம் விரிந்தது. சந்தேகமும் அடையாளக் குழப்பமும் அதில் இருந்தன.

‘’ ஆமாங்க், ஒங்களுக்கு எப்டி என்ற பேரு தெரியும்?’’ என்றான்.

சிரித்துக் கொண்டே ‘’உங்க பேரு மட்டுமில்ல, உங்களையும் உங்க அப்பாவையும் தெரியும். அம்மாவையும் தெரியும். தங்கச்சியையும் தெரியும்’’ என்றேன்.

குழப்பத்துடன் பார்த்தான். ‘’ எனக்குத் தெரீலீங்க யாருன்னு’’ என்றான்.

நானே வெகுகாலம் மறந்து போய் சற்று நேரத்துக்கு முன்பு திரும்பக் கொண்டு வந்திருந்த ஞாபகங்களைக் கொட்டினேன். அவனும் கேட்டுக் கொண்டிருந்தான்.

இருட்டு சட்டென்று பரவியது. வனப் பகுதி. எனவே இருட்டு அடல் அடலாகத் தெரிந்தது. சுவர்க்கோழிகளும் பூச்சிகளும் வண்டுகளும் பறவைகளும் சிலம்பின. மாளிகைக்குள்ளிருந்து ஆர்ப்பாட்டச் சிரிப்புகளும் அதிரடிக் கூச்சலும் இசை முழக்கமும் கேட்டன. மெய்யான புத்துணர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டதன் அறிகுறி. அதற்கிடையில் பங்காருவின் குரல் கேட்டது.

‘’பாத்து வெகு காலமிருக்குமில்லிங்க? ‘’

‘’இருவது வருசமோ அதுக்கு ஜாஸ்தியாவோ இருக்கும் ‘’

இருபது வருடங்களுக்குள் என்னவெல்லாமோ நடந்திருக்கிறது. எதுவெல்லாமோ புரண்டிருக்கிறது. யாரெல்லாமோ கண் காணாமற் போயிருக்கிறார்கள். சிலரெல்லாம் உலகத்தை விட்டே மறைந்திருக்கிறார்கள். தங்கவேலு விபத்தில் சிக்கி முதலிலும் பிறகு மாரடைப்புக்கு மருதாசலமும் பலியாகியிருந்தார்கள். அந்த அதிர்ச்சியில் தங்கானின் அம்மாவுக்குப் பித்துப் பிடித்திருந்தது. கல்லுக்குழி மூடப்பட்டு அங்கே கட்டடம் வந்து விட்டிருந்தது. இவையெல்லாம் ஊருக்குப் போகும் போது காதில் விழுந்த செய்திகள்.

அம்மா சொல்லித் தெரிந்து கொண்டது மந்திரியும் பங்காருவைத் தவிர்த்த அவன் குடும்பமும் ஆஸ்துமா முற்றி ஒருவர் பின் ஒருவராக இறந்து போய் விட்டார்கள். திக்குத் திசை தெரியாமல் நின்ற பங்காருவை சொந்தக்காரர்கள் பார்த்துக் கொண்டார்கள். அவனும் முனிசிபாலிடி சுகாதார இலாக்காவில் நிரந்தர ஊழியனாகியிருக்கிறான். கல்யாணம் கட்டிக் கொண்டிருக்கிறான்.

‘’பிட்டாதாங்க, அதாம், பொஞ்சாதி தாங்க, முனுசுபாலிட்டி வேலய வுட்டுறச் சொல்லிச்சு. எல்லா வூட்டுலயும் தண்ணி வுடற கக்கூஸு, ப்ளசவுட்டு வந்துருச்சு. அழுக்கை வுடறதுக்கு பூமிக்கு அடியில் பெரிய கொளாயெல்லாம் போட்டாச்சு. இனி நம்மள மாரி ஆளுங்களுக்கு பொழப்பு கஷ்டந்தான்னுச்சு. ஆனா நான் எந்த வேலக்குப் போறதுங்க்? நாலு எளுத்துப் படிச்சிருந்தா ஊர வுட்டுப் போயாச்சும் வேற பொழப்பப் பாத்திருக்கலாம்’’ என்றான்.

‘’ஆனா முந்தி பாத்த மாரி நீ இப்ப இல்லயேப்பா. நல்லாப் படிச்சவனாட்டந்தான் பேசற’’ என்றேன். அதைச் சொல்லும்போதே அவனுடன் பழைய நெருக்கத்தில் நீ என்று கூப்பிட்டதையும் உணர்ந்தேன்.

‘’ அதுங்கூட பிட்டாவால தாங்க். அதுதான் நைட் ஸ்கூல்ல சேந்து படிக்கச் சொல்லிச்சு. இப்பா எங்காளுங்கள்ளயும் நெறயப் பேரு பள்ளிக் கூடம் போயிப் படிக்குறாங்களே. அவங்கதான் ராத்திரிப் பள்ளிக்கூடம் நடத்துனாங்க. அப்புடி நாலு எளுத்துத் தெரிஞ்சதுனாலத்தான் இந்த வேலயும் கெடச்சுது’’

மாளிகைக்குள்ளிருந்து இசை முழக்கமும் ஆரவாரமும் உரத்துக் கேட்டன. சிரிப்புகள் வெடித்தன. நான் இங்கே நிற்கத் தொடங்கி அதிக நேரமாகி விட்டதையும் பேச்சு மும்முரத்தில் தன் மறதியாக மூன்று சிகரெட்டுகளைப் புகைத்துத் தள்ளியிருந்ததையும் அசௌகரியத்துடன் உணர்ந்தேன்.

‘’ ஆமா, ஒன் பொஞ்சாதியும் இங்கதான் இருக்குதா?’’

‘’ இல்லீங்க், அதுக்கு இங்கத்திக் குளுரு ஒத்துக்கல. ஊர்லதான் உட்டுருக்கன். நாந்தா அப்பப்ப போயிட்டு வர்றன். ‘’

அவனிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும் முசுக்காரத்துடன் ‘’ சந்தோசம் பங்காரு, ஒன்ன இங்க பாத்தது. அதுவும் இப்புடிப் பாத்தது. நல்ல நெலமயில இருக்கேங்கறது எவ்வளவு சந்தோசம் தெரியுமா?’’ என்றேன். அவனுடைய சீருடையில் மார்புப் பகுதியில் சிவப்பு நிறத்தில் எம்பிராய்டர் செய்யப் பட்டிருந்த நிறுவன இலச்சினைக்குக் கீழ் கிளீனிங்க் சூப்பர்வைசர் என்றிருந்தது. என் ஆள்காட்டி விரலால் குத்தி ‘’ சூப்பர் வைசர் பங்காரு’’ என்றேன்.

அரண்ட வெளிச்சத்தில் பங்காருவின் முகத்தில்  சிரிப்பல்லாத சிரிப்பொன்று தெரிந்தது. ‘’ எனக்கும் சந்தோசந்தாஞ் சாமி… சார். ஆனா என்ன… வேல பழசுதாங்க. பேருதான் புதுசு. சீமாத்துக் கட்டய்க்கு பட்டுக் குஞ்சலம்னு.’’ என்றான். அவன் அவ்வளவு வியாக்கியானமாகப் பேசக் கூடியவன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆச்சரியம். ஆனால் அடுத்து அவன் சொன்னது அதிர்ச்சியைக் கொடுத்தது.

‘’நீங்கள்ளாந்தான் சீமாத்துக் கட்ட சீமாத்துக் கட்டயாவே இருந்தாப் ’’ போதும்னு நெனக்கறீங்க’’

எனக்குச் சுருக்கென்றது. ‘’நா அப்படி நெனக்கற ஆளில்ல, பங்காரு’’ என்றேன்.

‘’ அய்யோ சாமீ… நீங்கன்னா நீங்க இல்ல. உங்கள மாரி மத்த ஆளுங்க’’ என்று அவன் குரல் தழைந்தது. இரண்டு பேரும் பேச்சு முட்டி நின்றிருந்தோம்.

ஒரு வெளிச்ச வட்டம் எங்களை நோக்கி வந்தது. வைஸ்யா கையில் டார்ச் லைட்டுடன் வந்து கொண்டிருந்தார். நாங்கள் இருக்குமிடம் வந்ததும் முதலில் பங்காருவைப் பார்த்துத் தெலுங்கில் ‘’ உன்னை எங்கெல்லாம் தேடுவது ? ……. பயலே, இங்கே வந்து வாயாடிக் கொண்டிருக்கிறாயா? அதுவும் உன்னை விடப் பெரிய ஆளிடம். போ, அங்கே குடிக்கத் தெரியாதவனெல்லாம் குடித்து வாயால் கக்கி அசிங்கம் பண்ணி வைத்திருக்கிறார்கள். போய் சுத்தம் பண்ணு. உன் ஆட்களையும் கூப்பிட்டுப் போடா, திருட்டுப் பயலே’’ என்று எரிந்து விழுந்தார். பங்காரு பண்ணை இல்லத்தைப் பார்த்து ஓடினான்.

என் பக்கமாகத் திரும்பியவர் முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு ’’ நீங்க இங்கதான் இருப்பீங்கன்னு நெனச்சேன். ஸ்மோக் பண்ணாம இருக்க முடியாதுல்ல?. அது சரி, உங்களுக்கு அவனோட என்ன பேச்சு ?’’ என்று சிடுசிடுத்தார். சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறினார்.

‘’ டோண்ட் யூ ஃபீல் அஷேம்ட் ஆஃப் டாக்கிங்க் டு எ ஸ்கேவெஞ்சர். எ லொஃபர். ஷிட். கம் லெட் அஸ் கோ’’ என்று முன்னால் நடந்தார். நான் அவரைப் பின் தொடராமல் ஒரு வினாடி உடல் குறுகி நின்றேன். அவமானமாகத்தான் இருந்தது. ஆனால் அது பங்காருவுடன் பேசிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட அவமானம் அல்ல.

(நூல்வனம் வெளியிட்டுள்ள “உஸ்தாத்” சிறுகதைத் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றிருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறோம் – யாவரும்)

***

சுகுமாரன் – கோவையில் பிறந்தார். தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். கவிஞர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர். இதழாசிரியராகவும் தொலைக்காட்சி செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். சுகுமாரன் தமிழ்ப்புதுக்கவிதையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
மின்னஞ்சல்: nsukumaran@gmail.com