Home Blog Page 21

ஹவுஸ் ஆஃப் பாரடைஸ்

0

தூயன்

தினொராவது பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரப் பெரு மந்தத்தில் நானும் என் கணவரும் மறுபடியும் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி ஆனோம். புதிய வீடு வாங்குவதற்கான எங்களுடைய சேமிப்பு நின்று போனது. அலுவலகம் போகும் வழிகளில் கண்ட அழகிய வீடுகளின் காட்சிகள் சட்டென நின்றுவிட்டன (தினமும் ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் நான் பறந்து செல்வது வழக்கம்). வெறுமையை அசைபோட முடியாமல் மனப்பசு அப்படியே நின்று கொண்டிருந்தது. சிலந்தி வட்டத்தையும் குழவியின் குன்றையும் கண்டு மனம் ஆளாய் பறக்கும். மாபெரும் மௌனவெளியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினேன். திசைத்தப்பிய தும்பியாட்டம் கண்ணாடிச் சன்னல்களில் மோதி மோதிச் சாய்ந்து ஒருகட்டத்தில் படுக்கையிலிருந்தே எழ முடியாமல் ஆகிற்று. உறங்குவதற்குப் பழகிக்கொண்டேன். அவ்வளவுதான் வீடு கனவு என்னை ”வா” என்று அணைத்துக்கொண்டது. இரவானால் நான் உறங்குவதற்கு என் கனவு வீட்டிற்கே தினமும் போய் வந்தேன். காலையில் என்னுடைப் படுக்கைக் களையாமல் அப்படியே இருக்கும். ஆனால் கண்களைத் திறக்க முடியாமல் அவதிப்படுவேன். அதாவது, சமீப காலமாக விடிவதுகூட தெரியாமல் நான் உறங்கிக்கொண்டே இருப்பதாக என் கணவர் வருத்தப்பட்டார். நாளாக ஆக உறக்கம் களைவது நண்பகலைத் தாண்டிகூடச் செல்கிறது. ஒருபக்கம் என்னை எழுப்புவதை அவரே தவிர்த்தாலும் (என் வேலைப் பளுவால்) ஒரு நாளில் முக்கால் பங்குப் பொழுதை நான் யாருக்கோ தருவதாக அவர் குழந்தைபோல வருத்தப்பட ஆரம்பித்தார். உண்மையில் எனக்கு உறங்குது பிடித்திருந்தது. நான் உறங்குவது ஒரு வீட்டிலும் எழுவது இன்னொரு வீட்டிலுமாக உணர்வதை அவரிடம் சொன்னபோது முதலில் அவருக்குத் திடுக்கெனத்தான் இருந்தது. இதிலிருந்து என்னை மீட்க எத்தனையோ பிரயத்தனங்கள் செய்து பார்த்து, கடைசியாக உறக்க நல மருத்துவரிடம் போவதுதான் சரியென முடிவெடுத்தார்.

ஆலோசனைச் செயலி எங்கள் வசிப்பிடத்திற்கருகேயே ஆலோசனை மையம் இருப்பதைக் காட்டியது. காலையிலேயே நானும் கணவரும் சென்றுவிட்டோம். காத்திருப்பு அறையில் அமர்ந்திருக்கிறவர்கள் எல்லோரும் சாய்விருக்கையிலேயே தலை தொங்கும்படியும் சாய்ந்தபடியும் (ஒரு இளைஞன் அவனது மடியில் அவனது தலையை வைத்து தூங்குகிறான்) வெகுநேரமாக உறங்குவதாகத் தெரிந்தது. அவர்களது உறங்கங்களைக் கண்டு எனக்குப் பொறாமையாக இருந்தது உண்மையில். அவரவர்கள் விரும்புகிற உலகத்தில் நட்சத்திரங்களுக்குள் அண்டவெளிகளுக்குள் தூக்கனாக்குருவிக் கூட்டிற்குள் ஏன் பழைய காலத்தின் குடிசைகளுக்குள்கூட உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். நான் ரசித்துக்கொண்டிருந்தேன் அப்போது சாம்பல் நிறப் பூனையொன்று மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்தது.  

செவிலி எங்களது முன்பதிவு எண்ணை அழைத்தார். எனது பிரச்சினைகளை மருத்துவர் கேட்டுவிட்டு, ”சமீபமாக இதுபோல மணிக்கணக்காக உறங்குபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதெல்லாம் நம் லட்சியங்கள்மீது நாம் ஏற்படுத்திய அதீத கற்பனையின் விளைவு. இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய வியாதியே இதுதான். மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் நீங்கள் ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவரென்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பதால், இயற்கையான செய்முறை தீர்வுக்குச் செல்லலாம்” மறுபடியும் அந்தப் பூனை அறைக்குள் நுழைந்தது.

”போய்டலாம் இரு” என்றார் அந்தப் பூனையிடம். ”எதைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்?”

”எப்படி இருக்கும் இயற்கையான செய்முறை வழி?”

”ஆழ்மன ஆசையை நிறைவேற்றுவதுதான் வேறு என்ன. மாற்று மருத்துவத்தில் அதுதான் வழி” 

மருத்துவர் செவிலியரிடம் திரும்பி ”என்னமோ கோபமா இருக்கிறான்” என்றார் பூனையைத் தடவியபடி. 

”எங்களால் இப்போதிருக்கும் பொருளாதாரச் சூழலில் அதுவும் என் கனவு வீடு மாதிரி ஒன்றை கற்பனைகூட செய்ய முடியாதே”

”வேறு வழி இல்லை. அப்படி செய்யவில்லையென்றால் நாளாக ஆக, உங்களுடைய உறக்கம் அதிகரித்து பிறகு அங்கேயே நீங்கள் தங்கி விடுவீர்கள். உங்கள் கனவு வீட்டிலிருந்து சாமான்யமாக உங்களை எழுப்ப முடியாமல் போய்விடும். அதாவது அந்த வீடுதான் உங்களுக்குப் பிடிக்கத் தொடங்கிவிடும். இப்போது இருக்கிற வீடு நரகம் மாதிரி ஆகும்”, எச்சரிக்கை மாதிரி இருந்தது . 

ஆலோசனைக்குச் சென்று திரும்பியதிலிருந்து மருத்துவர் சொன்னபடி என்னுடைய உறக்கம் அதிகரிக்கத் துவங்கியிருப்பதாகக் கணவர் கூறினார். முதல்நாள் நான் விழிக்கையில் மதியம் அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார், மறுநாள் விழிக்கையில் இரவு உணவு தயாரிப்பதை நானே கவனித்தேன். மூன்றாம் நாள் அவரும் நானும் அவருடைய அடுத்தநாள் காலையிலும் என்னுடைய முதல்நாள் காலையிலுமாக கண் விழித்தோம். தேதியும் மணியையும் அவர் சொன்னபோது (அந்த முகத்தின் அப்பியிருந்த சோகம் என்னை உலுக்கியது) நான் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டேன்.

இந்தச் சிக்கலை உடனே சரிசெய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். கனவு வீட்டை வாங்குவது அவ்வளவு லேசனாதல்ல என்று தெரியும். பதிலாக, ஏதாவது ஒரு பழைய வீடு வந்தால் வாங்கும் முடிவுக்கு வந்தோம். என் கனவு வீட்டின் வரைபடத்தையும் எங்களுடைய அதிகபட்ச விலை மதிப்பையும் வைத்து, வீடுகள் செயலிக்குள் தேடத் தொடங்கினோம். புதியப் புதிய செயலிகளை அது எங்கள் முன் இறைத்தது. நிறைய அழைப்புகள். சோர்ந்துபோகாமல் ஒவ்வொன்றையும் பொறுமையோடு தேடியதில், நீங்கள் நம்ப மாட்டீர்கள், அச்சு அசலான என் கனவு வீட்டை ஒரு செயலி காட்டியது. எங்கு தினமும் நான் உறங்கப் போகிறேனோ, எங்கிருந்து என்னை எழுப்ப என் கணவர் படாதுபாடுகிறாரோ, எங்கு அற்புதமான இரவையும் நட்சத்திரம் போன்று பரந்துவரும் தும்பிகளையும் சில்லிடும் பனிப் பொழிவையும் வெட்கத்தோடு உறங்கச் செல்லும் அந்திச் சூரியனையும் நான் காண்கிறேனோ அதே வீடுதான். ஆனால் அந்த வீட்டிற்கு வெளியே நாகலிங்க மரத்தையொட்டி என் கற்பைனையில் இல்லாத, சுருள் மாடிப் படிக்கட்டுகளும் தொங்கும் மழைநீர் தொட்டிகளும் (மழைக்காலத்தில் மாடியில் சேகரமாகும் நீர் அதன் வழியாக அருவியாகக் கொட்டும் என்று நினைக்கிறேன்) வீட்டைச் சுற்றி அழகழகான சிமெண்ட் சாய்விருக்கைகள் என அது, ”என்னை வா” என்றுதான் வாய்விட்டு அழைக்கவில்லை. அன்றைக்கே அந்த வீட்டை வாங்குகிற முடிவை எடுத்துவிட்டேன்.  

அலுவலகத்திலிருந்து எழுபது மைல் தொலைவு. வீட்டின் உரிமையாளர் ஒருவர்தான். அறுபது வயதுக்கு மேல் இருக்கலாம். மிக அழகான வெள்ளைத் தாடியும் கச்சிதமான காலைநடைக்கான திருத்தமான ஆடையுடன் அந்த அழகிய வீட்டின் முகப்பிலிருந்த சிமெண்ட் கட்டையில் காபியோடு எங்களை வரவேற்றார். “டாக்டர் திரவியம்” என்று கைக் குலுக்கினார். அழகானக் கட்டுமானத்தைப் பற்றி நான் கேட்டதற்கு, இதை விற்கிற யோசனையே தனக்கு இல்லையென்றும், மிகுந்த பண நெருக்கடியில் இருப்பதாகவும் வெளிநாடு செல்வதற்கான அவசரம் ஏற்பட்டதால் மட்டுமே இப்படியொரு கசப்பான முடிவுக்கு வந்திருப்பதாக அழகான ஆங்கிலத்தில் முடித்தார்.  நான், ”முகப்பில் மட்டும் இந்த வீட்டிற்கான ஒரு பெயர் வளைவு மட்டும் இருந்திருந்தால். நீங்களும் என் கனவுக்குள் வந்துவிட்டீர்களோ என்று திடுக்கிட்டுப் போயிருப்பேன்” என்றேன். நான் அப்படிச் சொன்னது அவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை ஆனால், கொஞ்சமும் சலனமில்லாமல் கார் நிறுத்தும் நிழற்தாங்கலுக்குள் சாய்வாக வைத்திருந்த ”புதிய தம்பதிகளுக்கான அழகிய கனவுச் சொர்க்கம்” என்கிற வளைவு பதாகையைக் காட்டினார். எனக்கு மயக்கம்தான் வரவில்லை. கனவுச் சொர்க்கம் என்கிற பெயரை நான் என் கனவு வீட்டின் முகப்பில் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் “புதிய தம்பதிகள்“ என்கிற முன்னொட்டு மட்டும் அதில் கிடையாது. 

”இது ஏன் மாட்டாமல் இங்கே இருக்கிறது?”

“உங்களைப் போல ஒரு தம்பதிதான் இந்தப் பெயரை வைத்தார்கள்” என்று எங்களைப் பார்த்து திரவியம் குறும்பாகச் சிரித்தார். ”அதாவது, கொஞ்ச வருஷத்துக்கு முன்பு இது புதிய தம்பதிகள் மட்டும் வாடகைக்கு எடுக்கும் வீடாக இருந்தது. எனக்குப் பெரியப் பெரியக் குடும்பம், குழுந்தைகள் வருவது பிடிக்காது. வீட்டை பாழாக்கிடுவாங்க. என்னையும் வீட்டையும் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் புதுமணத் தம்பதிகளுக்கு விட்டால் வீடு அப்படியே இருக்கும் இல்லையா?.  முதல் முறையா இங்க வந்தவங்க, இரண்டே மாசத்துல பெரிய வேலை கிடைத்து மாற்றலாகிட்டாங்க, அடுத்து வந்தவங்க ஒரு வருசம் இருந்தாங்க பிறகு குழந்தைகள் பிறந்து பெரிய குடும்ப ஆனதும், நானே காலி பண்ணச் சொல்லிட்டேன். அடுத்து, இன்னொரு அழகான ஜோடி, என்ஆர்ஐ. கொஞ்ச நாள்தான் பிறகு இந்தியக் குடியுரிமைக் கிடைத்து வேற இடம் மாறிட்டாங்க. இப்படி வர அத்தனைபேருக்கும் இந்த வீடு சுபிக்ஷ்த்தைக் கொடுக்கிறது வெளியே பார்க்கிறவங்க ஒவ்வொருத்தரிடமும் சொல்வது வழக்கம் (இந்த இடத்தில் அவர் முகம் அவ்வளவு பூரிப்பில் மிதப்பதைக் கவனித்தேன்). பெங்களூர் ஜோடி ஒன்னு இங்க வந்தாங்க ஒன்னறை வருஷம் இருந்தாங்க அவங்கதான் இதுக்கு ஹவுஸா ஆஃப் பாரடைஸ் னு பெயர் கொடுத்தது” 

என் கணவர் இதைத் துளியும் நம்பவில்லை. தொழில்முறையில் இப்படியெல்லாம் வீட்டை விற்பதற்கு சில நம்பிக்கைகளை பரப்புவது மூன்றாம் தரமான உத்தி என்று காதருகே முணுமுணுத்தார். திரவியம் அதைக் கவனிக்காமலில்லை. முகம் கோணியது. எழுந்து சென்று வீட்டின் சாவியுடன் திரும்பியவர் எங்களை உள்ளே அழைத்தார். வீடு வட்ட வடிவமாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். நிலைவாசல் நுழைந்ததும் கண்களுக்கு முன்னால் நான்கு பெரிய அறைகள் ஹாலிலிருந்து நீண்டிருந்தன. நடுவில் அழகிய ஊஞ்சல், கிழக்கில் சுவருக்குப் பதிலாக முழுவதும் ஜன்னல்கள். நான் உறங்குகிறேனா? இது எல்லாம் என் கனவுதானா? முதல்முறையாக என் கனவுக்குள் என்னைத் தவிர இருவர் நுழைந்திருக்கிறார்களா என்றெல்லாம் எனக்குக் குழப்பமாக எண்ணங்கள் ஓடின. நான் உண்மையில் பேச்சற்றுத்தான் இருந்தேன். அவரிடம் என் கணவர் எதையதையோ கேட்டுக்கொண்டிருக்கிறார். எனக்கு உடனே ஓடிச் சொன்று தினமும் நான் உறங்கும் படுக்கையைப் பார்க்க வேண்டும், பொத்தென அதில் விழ வேண்டும் போல் இருந்தது. 

திரவியத்திடம் கணவர் என்ன சொன்னாரெனத் தெரியவில்லை. அவர் என் பக்கம் திரும்பி, ”பணம் தருவதற்கு முன்னால் நீங்க வேணா அதைக் கேட்டு முடிவு பண்ணுங்க மேடம்” என்றார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உறக்கம் என்னை மெல்ல அழைத்துக்கொண்டிருந்தது. நான் ”என்ன” என்று கணவரிடம் திரும்பினேன். ”இதற்கு முன்பு இங்கு இருந்தவர்கள் வீட்டைப் பற்றிப் பேசிய ஆடியோ இருக்காம்.” நான், ”நீ என்ன கேட்ட? இதுதான் இனி நம்ம வீடு. என்ன சரியா?” என்று கணவரை அமர்த்தினேன். “மிஸ்டர் திரவியம் அவர் சொல்வதைப் பெரிசா எடுக்க வேண்டாம். எனக்குப் பிடித்திருக்கு. எவ்ளோ என்ன என்பதைச் சொல்லுங்க? எப்போ கையெழுத்து போடனும்?” என்று விசயத்தை முடித்துவிட்டேன். 

நல்ல நாளாகப் பார்த்து நாங்கள் என் கனவு வீட்டிற்குக் குடி வந்தோம். உண்மையில் நாங்கள் எந்தப் பொருளையும் எடுத்து வரவில்லை. எங்களுக்குத் தேவையானவை எல்லாம் அது அது அதனதன் இடத்தில் அங்கு இருந்தன. மருத்தவர் கூறியபடி நான் என் நீண்ட உறக்கத்திலிருந்து விடுபட்டுக் கணவரோடு பொழுதைக் கழிக்கப்போகும் சந்தோஷம் எனக்கு. ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக கனவு வீட்டிற்கு வந்ததிலிருந்து கணவர் என்னிடம் கோபமாகவே இருந்தார். அவரை நான் மீறியதாக வருத்தம். அவர் மனதில் வைத்திருந்தத் தொகைக்கும், திரவியத்திடம் வாங்கியதுக்கும் இரண்டு மடங்கு வித்யாசம். ”என் உறக்க வியாதிக்கு ஆங்கில மருத்துவம் எடுத்திருந்தால் இதுக்கும் அதுவும் சமமாகத்தான் வந்திருக்கு” என்று ஒருவழியாக சமாதானம் பண்ணினேன். ”சரி அதுக்காக வீட்டை விற்க யாரோ பேசினதெல்லாம் விளம்பரமா பயன்படுத்துவது என்னமாதிரி ஆள் அவர்?” என்றார். நான் உடனே ”அதைத் தொழில் புத்தி என்று நினைக்க வேண்டும்? இந்த வீட்டைப் பற்றின ஆவணக் காப்பகமாக ஏன் இருக்கக் கூடாது?” கணவரிடம் அதற்கு எந்தப் பதிலும் இல்லை. ”சரி கேட்டா போகிறது” என்று முணுமுணுத்தவாறே ஹாலில் இருந்த சிறிய பெட்டியின் சாவியைத் திறந்து, கணினி போன்ற அதன் திரையை உயிர்பித்தேன். கணவரிடம் திரும்பி, ”கடவுச் சொல் என்னக் கொடுத்தார்?”

 “பாரடைஸ்” . கணினித் திரை எங்களுடைய வீட்டின் மாதிரி படத்தைக் காட்டிற்று. ”வேறு என்ன சொல்லனும்” என்பதுபோல பார்த்தேன். அவர் “வீடு” என்றார். நானும் “வீடு” என்றேன். திரை, தேதி வாரியாக அங்கு குடியிருந்தவர்களின் பெயர்களோடு அருகே அவர்கள் பேசிய ஆடியோக்களை ஓடவிட்டது. தோராயமாக ஒன்றை நிறுத்தினேன். ”இந்த வீடு எவ்ளோ அழகு. நமக்கு இங்க வந்தபிறகு ஒரு சண்டகூட வரலையே!” ”எனக்கு கார்டன்தான் பிடிச்சிருக்கு. அங்கு போய் உட்கார்ந்தா மனசு அவ்ளோ லேசா ஆகுது” இப்படி தம்பதிகள் பேசுவது ஓடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு தேதியாக பின்னோக்கிச் சென்று யார் யார் என்னவெல்லாம் வீடு பற்றிப் பேசியிருக்கிறார்கள் என்று தேடித் தேடிப் பார்தேன். ஒவ்வொரு ஆடியோ திறக்கும் முன் அவர்களுடைய பெயர் அறிமுகத்தைத் திரை முதலில் அறிவித்துவிடும் பிறகு சம்பாஷனை ஒலிக்கும். சில இடங்களில் ஒலிவாங்கி சரியாகப் பதிவு செய்யவில்லை, சிலது செவி அருகே பேசுவது மாதிரி அவ்வளவு துல்லியம். என் கணவர் இதில் இரண்டை மட்டும் அன்று திரவியத்தின் முன்பு போட்டுக் கேட்டிருக்கிறார். அந்தச் சமயத்தில்தான் நான் எதுவும் பேசாமல் வீட்டைப் பார்த்தப் பிரமிப்பில் கனவு வீட்டை அனுபவிக்கும் ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருந்துள்ளேன். இப்போது மறுபடியும் இந்த ஒலிக்கோப்புகளைக் கேட்கையில் யாரோ என்னை கனவுலகத்திற்குள் அழைப்பதாட்டம் தோன்றிற்று. 

கனவு வீட்டிற்கு வந்த பிறகு என் நீளுறக்கம் மெல்ல மெல்ல தன்னைச் சுருட்டிக்கொண்டிருப்பதை நானே உணர்ந்தேன். காலைப் பொழுதுகள் அழகான மலர்களுடனும் குயில்கள் பேசும் கதைகளுடனும் தொடங்கிற்று. வீட்டைச் சுற்றி நிற்கும் மரங்கள், நெருக்கிக்கொண்டு சரிந்திருக்கும் அதன் நிழல்கள் என ஒவ்வொன்றையும் ரசிக்கத்தான் பொழுது போதவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்தச் சம்பாஷனைப் பெட்டியைத் திறந்து வேறு என்னலாம் என் கனவு வீட்டைப் பற்றிப் பேசியிருக்கிறார்களென்று ஆராய்வேன். உண்மையில், வீட்டின் வரைபடத்தையே அவர்கள் பேசியதுபடிதான் சுற்றிப் பார்த்தேன். வீட்டில் நான்கு படுக்கையறைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்துக்குமாக நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம். ஆனால் நாங்கள் எதிர்பார்க்காதவொன்றாக அந்தப் படுக்கையறைகள் எங்களுக்குள் செயல்பட்டன. விலகிக் கிடந்த எங்களது அன்யோன்யம் ஒன்றையொன்று ஈர்க்கத் துவங்கியது. எப்படியென்றால், ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ப அந்தந்த அறைகளுக்கு வெளியே நிற்கிற மரங்களும் அதன் பூக்களும் அப்பருவத்தை எங்களுக்கு மாற்றிக்கொடுத்தன. வெயில் காலம் என்றால் முதல் படுக்கையறை. ஜன்னலுக்கு வெளியே புங்கை மரங்களும் வாகை மரங்களும் நின்று அழகைக் காட்டும். மழை காலத்தில் இரண்டாவது படுக்கையறை ஜன்னலில் கடம்ப மரங்கள் தெரியும். குளிர்காலத்தில் மூன்றாவது படுக்கையறையின் கொல்லையில் நாகலிங்க மரத்தில் பாம்புகள் பிணைந்து கொண்டிருப்பதாட்டம் நாகலிங்கப் பூக்கள் படம் எடுத்து ஆடும். இலையுதிர்காலத்தில் செண்பக மரங்களும் பன்னீர் பூக்களும் எங்களுக்குக் கிறக்கமூட்டும்.

ஒரு வருடம் பூர்த்தியாவதற்குள் சல்லாபத்தின் அத்தனை வகைகளையும் நாங்கள் உறங்கிய அறைகள் ஒவ்வொன்றும் போட்டிப் போட்டுக்கொண்டு சொல்வதுபோல நாங்கள் முடித்திருந்தோம். அதிகாலையும் அந்திவேளையும் சல்லாபத்தைத் தீண்டாமல் எங்களால் இறக்கி வைக்க முடியவில்லை. ஆனால் ஒருநாள்கூட சலிக்கபே பண்ணாத முறைமைகள் எங்களுக்கு எப்படித்தான் இத்தனைநாள் மறைத்து வைத்திருக்க முடிந்ததோ  என்று எங்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் என் வாழ்க்கையில் கலங்கலில்லாமல் விடிந்தப் பொழுதுகள் அத்தனையும் இந்த ஒரு வருடத்தில் மட்டும்தான். 

சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, எனக்கு அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம். கணவரின் அலுவலகம் இன்னும் திறக்கவில்லை. என் வீட்டைவிட்டுச் செல்ல எனக்கு மனமே இல்லை. கனவு களைந்துவிடுமோவென்கிற நடுக்கம். நான் அலுவலகம் முடிந்து வருவதற்குள் இந்த வீடும் அதன் தோற்றமும் கானல் சாலையில் மிதக்கும் வாகனங்கள்போல  ஆகிவிடுமெனப் பயந்தேன். இரவு எப்போதுவரும் வீட்டை எவ்வளவு சீக்கிரம் அடைய வேண்டும் என்றெல்லாம் கணக்குப் போட்டேன். அலுவலகத்தில் என் சக ஊழியர்கள் நான் மிகவும் இளமையாகத் தெரிவதாகக் கூறினார்கள். நோய்காலமும் பொருளாதார நெருக்கடியும் அத்தனை பேரையும் இரண்டு தலைமுறைத் தாண்டிய இறுக்கத்தையும் பயத்தையும் வழங்கிவிட்டிருந்தது. வீடு வாங்கியதற்கான விருந்தை அன்றைக்குச் சாய்ந்தரம் அவசராவசரமாக கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன். 

என் குழந்தையைப் போன்று எனக்காக அது காத்திருக்குமென்று தெரியும். தூரத்திலிருந்து கார் திரும்பும் திருப்பத்திலேயே அது என்னை நோக்கிக் குதிப்பதாக அவசரப்பட்டேன். தொலைவில் விட்டைக் கண்டதும் என் மார்புகள் விம்மியடங்கின. வீட்டுக்குள் நுழைந்ததும் கணவர் பேயறைந்ததுபோல ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். அது என்னுடையது, அவர் அதில் ஒருநாள்கூட அமரக்கூடாது (ஒரேயொருமுறை மழைக்காலத்தில் என் சம்மதத்தோடு அதன் மேல் புணர்ந்ததைத் தவிர). கோபமாக ”என்ன?” என்றேன். அவர் சம்பாஷனைப் பெட்டி இடத்தைக் காட்டினார். அது பாதி உடைக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. பக்கத்தில் சுவர் ஓரங்கள் கடப்பாறையால் குத்தப்பட்டிருந்தன. எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த வீட்டிற்குச் சிறு கீறல் பட்டால்கூட என்னால் தாங்க முடியாதென்று அவருக்கு நன்றாகத் தெரியும். எனக்கு உண்மையில் அப்போது கணவர் மேல் வந்த கோபத்திற்கு, ஆத்திரத்தில் பலாரென்று விடலாமெனத் தோன்றிற்று. 

”என்ன இதெல்லாம்”

என்னை உட்கார்த்தி, கடைசியாக ஓடி நின்ற, ஆடியோவை முழுமையாகச் கேட்கச் சொன்னார். என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. அவரை நோக்கி அன்னார்ந்தேன். ” முழுசா கேளு” என்று அதட்டினார். முப்பது நொடிகள்தான் நம்மால் எதையும் கவனிக்க முடியும். கொஞ்ச தூரம் தள்ளிவிட்டேன். அது மறுபடியும் வீட்டைப் பற்றிய சம்பாஷனையைத்தான் கொடுத்தது. “சரி என்ன?” என்றேன். “இது எல்லாம் குடியிருந்தவங்க வீட்டைப் பத்தி சொன்ன பரிந்துரை நேர்காணல் இல்ல” சற்று நிதானமில்லாமல் தொடர்ந்தார் ”அவங்களுக்குத் தெரியாம ரகசியமா பதிவு செய்த ஆடியோ” என்றார். அவர் முகம் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விலகாமல் இருந்தது. ”ஆனால் அதுவொன்றும் மறைக்கப்பட்ட தவறான எதையும் வீட்டைப்பற்றி கூறவில்லையே. எல்லோரும் நல்லவிதமாக, ஆரோக்கியமான நிலையில்தான் வீட்டை விதந்தோதுகிறார்கள். இதுவொன்றும் பெரிய குற்றம் இல்லையே” என்றேன்.

அவர் என் கையைப் பிடித்திழுத்து, அந்தக் கருவியின் ஒலிவாங்கி முன்பாக “சண்டை” என்று சேர்ந்து அழுத்தி உச்சரிப்போம்” என்றார். இரண்டு பேரும் சேர்ந்து ”சண்டை” என்றோம். ” சண்டை போடுறதுக்கு ஒரு அளவே இல்லையா? இன்னொரு முறை  நமக்குள்ள சண்டை வந்தா டைவர்ஸ் பண்றதைத் தவிர வேற வழி இல்லை,”. கணவர் இன்னொரு ஆடியோவைப் போட்டார். ”சண்டையில உன்ன கொல்லாம்னு தோணுது. சண்டை வந்தா ஏன் பிசாசா மாறிடுற” ”சண்டைக்கு என்ன காரணமும் நீ கண்டு பிடிக்கலையா இன்னைக்கு?” இப்படி நிறைய தம்பதியினரின் சண்டைகள் பதிவான ஒலிப்பதிவுகளை திரைக் காட்டிற்று, நிஜத்தில் அப்போது எனக்கு உள்ளூர அவை ஆர்வத்தைத்தான் மூட்டின. என் கணவர் ”சாப்பாடு” என்று அழுத்திக் கூறினார். சாப்பாடு பற்றின நிறைய ஒலிப்பதிவுகள் வந்தன. ஒன்றை மட்டும் ஓட விட்டேன். சமையலறையில் மிக்ஸியும் ஓவன் மூடியும் பாத்திரங்களின்மேல் நீர் கொட்டுவதும் எண்ணெயில் கடுகு வெடிப்பதும் என அத்தனையும் துல்லியமாகக் கேட்டன. அந்தத் துல்லியம் உண்மையில் அப்போது எனக்குப் பசியைத்தான் தூண்டிற்று. கணவர் பல் துலக்கும் பிரஷ் எடுத்துவந்து ஒலிவாங்கி முன்பாக பலமாகத் தேய்த்தார். குளியலறைக்குள் பிரஷ் தேய்க்கிற சத்தமும் பல் துலக்கியபடி பேசுகிற சம்பாஷனைகளும் குழித்துக்கொண்டே பாடும் பாடல்களும் ஒலித்தன. எனக்குப் பிடித்தமான பாடல்கள் என்னையறியாமல் முணுமுணுக்க நா எழுந்து பின் அடங்கிற்று. நான் கணவரைப் பார்த்தேன். அவர் முகம் வியர்த்துவிட்டிருந்தது. அடுத்து என்ன என்று எனக்குப் பரிந்துவிட்டது, நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். அவர் விடவில்லை, “தயவு செய்து” என்று கண்கள் சிவக்க நின்றுகொண்டிருந்தார். அவர் முகம் கோணிவிட்டது. நான் இப்படி அவரைப் பார்த்ததே இல்லை. மிகுந்த சங்கடத்துடன் ஒலிவாங்கியின் முன் சென்று மறுபடியும் மறுத்து தலையாட்டினேன். அவர் வேறு வழியில்லையென்பதுபோல பார்த்தார். நான் மெல்லமாய் “ம்” என்று அழுத்தமாகச் சொல்லி ஆலாபனையைப் போல இழுத்தேன்(அப்போது உண்மையில் என்னையறியாமல்தான் செய்தேன்). மறுகணம் அது தேதிவாரியாக நிறைய பதிவுகளைக் காட்டியது. அதில் கடைசியாக இருந்தது எங்களுடைய சல்லாப பருவங்கள். நான் கணவரிடம் திரும்பினேன். அவர் கையிலிருந்த கடப்பாறையால் வீட்டின் சுவரை ஓங்கி குத்தப் பாய்ந்தார். அவரைப் பிடித்து என் கனவு வீட்டிலிருந்து வெளியே தள்ளிவிட்டேன். எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தவரை நோக்கி ”என் வீட்டுக்கு காது இருக்கு” என்றேன். 

***

தூயன் – சமகாலப் படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை‘, ‘டார்வினின் வால்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. ‘கதீட்ரல்’ இவரது முதல் நாவல். மின்னஞ்சல்: thuyan154@yahoo.com

பயிர் நிலங்களை விழுங்கிய தார்ப்பாம்புகள்

0

ரமேஷ் கல்யாண்

நாவல்கள் எப்போதும் கடந்தகாலத்தில்தான் நிகழ்கின்றன. நல்ல நாவல்கள், ஏதோ ஒருவிதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நிகழ்காலத்தைத் தீண்டவோ சீண்டவோ செய்கின்றன. ஆகவே மனித வாழ்வுக்கும், மனிதத்துக்கும் தொடர்பிருக்கும் வரை இவ்வித நாவல்கள் இருக்கும். அப்படியான ஒரு களத்தில் எழுந்திருக்கிறது இந்நாவல். 

சுமார் அறுபதாண்டுகால வேளாண்வாழ்வை 43 அத்தியாயங்களில் தொய்வோ, அவசரமோ இன்றி, கூர்மையான அவதானிப்புகளுடன், சற்றே அடங்கிய மொழியில் சொல்லிச் செல்கிறது. ஜவ்வாது மலைத்தொடர்கள், தோல்தொழிற்சாலை போன்ற சொற்கள் தவிர, பூகோளரீதியான அடையாளத்தைத்தரும் வழமையான உந்துதலை தவிர்த்திருக்கிறது நாவல். அவ்வகையில் இது எந்நிலத்துக்கும் உரியதாகிறது. 

நாவலின் மையக்கதாபாத்திரம் சுந்தரம் என்றாலும், மையப்பாத்திரம் விவசாயம்தான். கதைநாயகனின் தோற்றம், வளர்ச்சி, கொண்டாட்டம், சவால்கள், சிக்கல்கள், கையறுநிலையில் நிற்றல் என்ற கதை வளர்ச்சியை, அப்படியே விவசாய நிலம் என்பதற்குப் பொருத்தலாம். பொருந்தும். 

இந்நாவலைப் பொறுத்தவரை, சாலை விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்கள் பிடுங்கப்பட்டு, எளிய மக்கள் நாடோடியாக துரத்தப்படும் அவலம், அதிகாரத்தின் பேயாட்டம் என்றெல்லாம் நாவல் களத்தை திரித்தெடுப்பதற்கெல்லாம் அவகாசமில்லாமல், நிதர்சனத்தின் சுயமிழக்காமல் தனித்துவத்துடன் நாவல் பயணிக்கிறது. சொல்லப்போனால், விரல்நீட்டாமல் சமூகம் நோக்கி ஒருவிதக் கண்டிப்புடன் பேசுகிறது. 

சாலை விரிவாக்கத்துக்கு சாதாரண விவசாயிகள் மட்டுமல்ல, இறுதியில் விளைநிலம் வாங்கிய பெரும் பணக்காரனின் வீடுமே அதே நிலைக்கு உள்ளாவதாக நாவல் முடியும்போது, நாவலின் பேசுபொருளுக்கு ஒற்றைப்படைத் தன்மை இல்லை என்பதை உணரமுடியும். 

ஆரம்ப அத்தியாயத்தின் தலைப்பு ‘ஆழ நட்ட கல்’. அது சாலை விரிவாக்கத்துக்காக விவசாயி சுந்தரத்தின் நிலத்தில் நடப்பட்ட கல். கடைசி அத்தியாயத்தின் தலைப்பு ‘கடைசியில் நட்ட கல்’. அது அதே விளைநிலத்தை வாங்கி மாளிகை கட்டிய சேகரின் வீட்டுக்குள் நீண்டு, விரிவாக்கத்துக்காக நடப்படும் கல். இந்த இரண்டு கற்களுக்கு ஊடேதான் நாவல் விரிந்தெழுகிறது. 

நாலு ஆறாகி, எட்டாகி, பத்தாகி, நூறாகும். அப்போது வழிமட்டும்தான் தனியாகப் போகும். ஊரெல்லாம் காணாமலாகும் என்ற பேச்சிக் கிழவியின் வார்த்தை நிஜமாகிறது. கற்கள் நகர்ந்து நகர்ந்து மண்ணைக் கவ்விச்சென்று கொண்டே இருக்கின்றன. 

நட் ஹாம்ஸனின் ‘நிலவளம்’ என்ற நார்வே நாவலில், ஒருவன் அடர்காட்டின் ஒரு பகுதியை தனியாகவே உழைத்து, திருத்தி, வளமான நிலமாக மாற்றும் சவால்மிகு வாழ்க்கை பேசப்படும். அப்படியான நாவலின் எதிர்ப்பயணமாக, வளமான பூமி எப்படி போக்குவரத்துக் காடாக இழிகிறது என்பதை இந்நாவல் பேசுகிறது. நிலம் கைவிடப்படும்போது, மனிதன் கைவிடப்படுகிறான். 

விவசாயிகளுக்கு சொந்தமாயிருக்கும்வரைதான் நிலம் நிரந்தரமானது’ என்று நாவலின் அடிநாதமாக ஒரு வரி நாவலில் ஒலிக்கிறது. ஏன் அவனால் விவசாயியாக தொடர முடிவதில்லை என்ற அவலச்சிடுக்கை, தலைமுறை மாற்றத்தின் சுரணையின்மையை, வணிகத் தந்திரத்தின் நித்தியத்தை, முன்னேற்றம் எனும் ராட்சத டைனோசாரின் பாத நகத்தில் நசுங்கும் விவசாயப் பச்சையை, நாவல் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது, அதீதமின்றி.

சொந்தமாக நிலம் வைத்திருந்து, தனது அம்மாவின், பாட்டியின் நகைகளை விற்று விவசாயத்தில் போட்டு அனைத்தையும் இழந்த குடும்பப் பின்னணி உள்ளவர்கள், இந்த நாவலை உலர்ந்த கண்களால் படித்துவிட முடியாது. அது மிகையுணர்ச்சி நாடகமாக இல்லாமல், வலியை வெளியே சொல்ல விரும்பாமல் அடி உதடு கடித்து நிற்கும்போது, கண்கள் காட்டிக்கொடுத்துவிடும் இயல்பான வெளிப்பாடாக அமைந்திருப்பது நாவலின் வெற்றியாகவே கொள்ள வேண்டும். 

எங்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவதை எழுதிக் காட்டிவிடும் அவகாசங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் அப்படிச் செய்யாமல் கவனமாக எழுதிச் சென்றிருப்பது, நாவலின் தொனிக்கு அடியுரமாகி இருக்கிறது.

வாய்க்காலின் ஒருபக்க வரப்பில் எழுத்தாளரும், மறுவரப்பில் வாசகனும் நடக்க, வயலுக்குள் புகுந்துவிடாமல் வயலைப்பற்றி பேசுக்கொள்ளும் விலக்கத்துடன் நாவல் செல்வதில் கலையம்சம் நேர்ந்திருக்கிறது. 

சாலை விரிவாக்கத்துக்காக இயந்திரக்கைகள் நிலங்களையும், கோயில்களையும், வீடுகளையும் நிதானமாக இடித்துச் சமப்படுத்தும் சம்பவங்களில் துவங்கும் நாவல், கொல்லைக்குச் சொந்தக்காரரான சுந்தரத்தின் வாழ்வைச் சொல்லிக்கொண்டே போகையில், நிலங்கள் பறிபோகயில் வேளாண் வாழ்வும் வலியும் சொல்லப்பட்டுவிடுகின்றன.

புல்டோசரின் எல்லாம் வல்ல இயந்திரக் கை கட்டிடங்கள் உள்ளே சென்று மையப்பகுதியை அசைக்கும். அவை நொறுங்கி விழுந்தவுடன் தனக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாதமாதிரி கையை உருவிக்கொள்ளும் என்ற வரி சாமானிய வாழ்வுக்குள் தொழில்நுட்பம் புகுவதன் குறியீடாக உள்ளது. 

வெள்ளைக்கதர் உடையில், கம்பீரமாக, தீர்மானமான, தெளிவான நோக்குடன் இருக்கும் சுந்தரம் ஒரு விவசாயியாக வளர்ந்து, பலமிழந்து, இறுதியில் முதுமையால் நடமாட்டம் நொடித்த நிலையில் தொய்ந்துபோன கட்டிலில் உயிரை விடும்போது, அவர் கடைவாயில் வழிந்த பால் கோடுகள், வாரிசுகளின் கையாலாகாத்தனத்தின் கையெழுத்துகள். 

விவசாயக் குடும்பத்துப் பெண்களான கொல்லைக்காவல் காக்கும் பெரியமுருகனின் மனைவி ராஜி (எப்போதும் கீற்று பின்னிக்கொண்டே இருப்பவள்), சுந்தரத்தின் மனைவி பொன்னம்மா, பேச்சிக்கிழவி என எல்லாப்பெண்களும் எல்லாத் துன்பங்களுக்கும் இடையிலும் வீட்டுக்கு பெரும் ஆதாரமாகி நிற்கின்றனர். எழும்போதும், விழும்போதும் சேர்ந்தே உள்ளனர். விவசாயக் குடும்பங்களில் தனிநபர்கள் இல்லை. அவ்வாறான தனி நபர்களாக உருக்கொள்ளும்போது, அனைத்தும் நொடித்து விழுகின்றன.

அக்காலத்து ஆண்களின் பெரும்பாடுகளும், இறுகிய, சுயநல முகமும் இயல்பாக வெளிப்பட்டுள்ளது. சுந்தரமே – ஒரு ஆசிரியராக இருந்தவர் – தான் மட்டும் தனியாக அறையில் பொட்டலங்கள் தின்பவராகவும், மனைவியின் அனைத்து நகைகளையும் விற்பவர், சாலை விரிவாக்கத்துக்காக தரப்பட்ட பணத்தை தனது பெட்டியிலேயே வைத்து மூடி அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொள்பவராகவும் இருக்கிறார். சுமதியின் கணவன் கொல்லையே வாழ்க்கை என்றிருக்கிறான்; விஜயாவின் கணவன் அரசியல் தொண்டன் குடித்துவிட்டு விபத்தில் ஒருவனை சாகடித்துவிட்டு நிற்கிறான். 

நலிந்த விலங்கு வேட்டையாடப்படும்போது, சிதிலச் சதைகளை தின்னவரும் காட்டுநாய்களைப்போல, விவசாயநிலத்தை, சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தும்போது, ரியல் எஸ்டேட் தரகர்கள் வருகின்றனர். கிடைத்தவரை லாபம் என்பதே வணிக விழுமியமாக இருக்கும் அவர்கள், மோகனிடம் பேரம் பேசி, காக்கா சுபையருக்கு விற்க ஒத்துக்கொள்ள வைத்து, முன் பணம் கொடுத்த பின்பு, சேகரை அழைத்துவந்து அவருக்கு மாற்றி விற்கச்சொல்லும் ‘வணிக தர்மத்தை’ காணமுடிகிறது. 

சுந்தரம் சுயநினைவற்றுப் போயிருக்கையில் நிலத்தை விற்க ஒப்பந்தம் செய்துகொண்டு, பணத்துடன் வரும்போது சுந்தரம் மூச்சுக்குப் போராடிக்கொண்டு, பணத்தைக் கையில் கொடுக்கையில் பற்றிக்கொண்டு இறுதி மூச்சை விடுகிறார். தீட்டுச்சடங்குகள் முடியும் முன்பே, பத்திரப்பதிவுக்கு அலுவலகம் வர அழுத்தம்கொடுக்கும் தரகர் கண்ணனும் அவனது அலட்சிய மொழியும்; சாவு நடந்த வீட்டில் படையல் செய்ய இயலாமல் பாகப்பிரச்சனை; தமக்கான பங்கு சதவீதத்தை உறுதி செய்தால்தான் கையெழுத்து போட வருவோம் என்று சொல்லும் பரிவான தமக்கைகள்; கிடைத்த வாய்ப்பில் சற்று பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில் சகோதரியின் கணவன் முத்து. இப்படியான வெட்கக்கேடான நிலைமைக்கு வர சுந்தரம் என்ற விவசாயி ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார் என்பதை வாசகன் மிக கனத்த இதயத்துடன் உணர்வான். 

விவசாயி காலமெல்லாம் எதையாவது விதைத்துக் கொண்டே இருக்கவேண்டும். விளைச்சலைப் பற்றிக் கவலைப் படக்கூடாது என்றொரு வரி நாவலில் இருக்கிறது. ஏனென்றால் விவசாயம் என்பது தொழில் அல்ல. வாழ்க்கைமுறை. அவனுக்கு இவ்வித ஆன்மீகமான மனநிலை ஒரு வாழ்வாகவே பரிணமித்திருப்பதை நாவல் முழுதும் காணலாம். சுந்தரத்தைப் பற்றிச் சொல்லும்போது ‘நெற்கள் வேறு என்றும் விதைகள் வேறு என்றும் நினைப்பார்’ என்பதை கவனிக்கலாம். பெரியமுருகன் தண்ணீர் வாய்க்கால்களிடம் பேசுகிறார். சுந்தரம் கரும்புப் பயிர்களிடம் உரையாடுகிறார். எங்கிருந்தோ வரும் ராமனுக்கு அடைக்கலம் தந்து கரும்பு காய்ச்சுமிடத்தில் வேலையும் இடமும் கொடுத்து ஆதரிக்கிறார். அவன் ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடுகிறான். அதைப்பற்றி அவர் அலட்டிக் கொள்வதுமில்லை. 

பொன்னம்மாளின் அத்தனை நகைகளும் விவசாயத்துக்காக, வீட்டை ஜப்தியிலிருந்து காக்க ஒவ்வொருமுறையும் மீட்டுவிடலாம் என்றே சுந்தரம் விற்கிறார். பொன்னம்மாவுக்கு தாய்வீட்டு நகை விரயமாவதில் கடும்கோபம் இருக்கிறது. சண்டை வருகிறது. ஆனால் விளைநிலத்தில், குடும்ப அமைப்பில் அனைத்தும் சமரசமாகிறது. தனது இறுகிக்காலங்களில் நிலம் விற்கப்படும்போது அவளுக்கு எல்லாம் ஒன்றுதான் என்று ஒரு வரிவருகிறது. அது வாழ்வுச் சோர்வல்ல. கனிதல். 

நிலம் விற்கப்பட்டுவிட்டபின், அதைத் தெரிவிக்க மோகன் வரும்போது, மூன்று தலைமுறையாக ‘கொல்லைக்காவலை’ மட்டுமே செய்யத்தெரிந்த பெரியமுருகன் பொறுப்பாக வாய்க்காலில் நீர் விட்டுக்கொண்டிருக்கிறான். நிலம் விற்றாயிற்று. இனி காவல் வேலை செய்யவேண்டாம் என்று தெரிவிக்கும்போது, அவன் ஒரு நில உரிமையாளனைப்போல தவிக்கிறான். கண்ணீர் விடுகிறான். நிலத்துக்கு அவன் உரிமையாளனாக இருக்காவிட்டாலும், ‘சொந்தக்காரன்’ என்பதை அவன் அதே கொல்லையில் தொடர்ந்து சேகரிடம் (புது உரிமையாளன்) வேலை செய்து, இறுதியில் வரப்பின் மேல் கைகால்கள் விரித்து படுத்துக் கிடந்தவாறே தன் இறுதி மூச்சை விட்டிருக்கிறான் என்பதை அறியும்போது,நிலமே வாழ்வு என்ற அவனது ஆத்மார்த்த உறவை நாம் உணரமுடியும். 

சுந்தரம், ஆசாரியின் நிலத்தை குத்தகைக்கு பயிர் செய்து, நல்ல நிலைக்கு வரும்போது விற்பதற்காக அது பறிபோகிறது. சகோதரன் சந்திரசேகரின் வறண்ட நிலத்தை குத்தகைக்கு எடுத்து, செப்பனிட்டு, முன்செலவு செய்து அது பசுமையேற்று, அறுவடை நெருங்கும்போது அதைப் பார்த்து சந்தோஷப்பட்டு, இப்போது விற்றால் நல்ல விலைபோகும் என்று அண்ணன் சுந்தரத்தை ‘பயிரிட்டது போதும்’ என்று ஒரே நாளில் விலக்கும்போது சுந்தரம் வளரும் குழந்தையை விட்டுவிட்டுப் போவது போல தவிக்கிறார். ஆனால் அப்படி உருப்பெற அவர் செய்த முன்செலவுகள் எவ்வளவு! அவற்றை திருப்பித் தந்தால் அந்த உறவின் மதிப்பை, வளர்வித்த உயிர்ப்பச்சையை ஈடு செய்துவிட முடியுமா! என்ற கேள்வியை வெளிப்படையாக கேட்காகமல், வாசகனின் கவனத்தை நாவல் ஈர்க்கிறது. 

முனியன் நிலத்தை பெரிய முருகன் தனது உழைப்பை மூலதனமாக்கி, பணம் செலவழித்து கொல்லையைத் திருத்தி, வளமாக்கி பயிர்செய்கிறார். சுந்தரம் தனது கொல்லைக் காவலன், விவசாயக் கூலியாக இருந்த பெரிய முருகன், விவசாயியாக மாறுவதை ஏற்று அனுப்பி வைக்கிறார். தனக்கு கீழ் வேலைசெய்பவனை ஒரு வணிகர் வேறு கடை வைத்து முன்னேற அனுமதித்து விடுவாரா என்று கேட்டுக்கொண்டால் விவசாயியை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் அங்கேயும், நன்றாக வளர்ந்து அறுவடை நெருங்கும் சமயம், முனியன் வந்து பயிரிட்டது போதும் என்று அவனை கத்தரித்துவிடும்போது, கொல்லையிலிருந்த மாட்டை அவிழ்த்து, கயிற்றை அதன் முதுகின் மேல் போட்டுவிட்டு, லாந்தரை எடுத்துக்கொண்டு, துண்டை உதறிக்கொண்டு மாட்டுடன் வெளியேறிக்கொண்டே ‘போகம் முடிந்தபிறகு திருப்பிக் கேட்டிருக்க வேண்டும்’ என்று சொல்கிறான். துணுக்குறும் முனியன் ‘இப்போதே போகவேண்டாம்’ என்று சொல்லும்போது ‘உரிய ஆள் வாய்விட்டுக் கேட்டபின் திருப்பித் தருவதுதான் ஞாயம்’ என்று விட்டுப் போகிறான். எத்தனை பெரிய முருகன் அவர்! பண்பாட்டு ஞாயத்துக்கு கல்வி பொருட்டே இல்லை. மீண்டும் சென்று சுந்தரத்திடம் கொல்லைக்காவலுக்கு கேட்கும்போது, அவர் சேர்ந்துகொள்ளச் சொல்கிறார். எவ்வளவு விசாலமான சுந்தரம் அவர் !

நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள், சாலை விரிவாக்கத்துக்காக, நிலத்தை கையகப்படுத்தும் காட்சிகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டு, அந்த விவசாய நிலத்தின் துவக்க காலத்திலிருந்து, பயிரிடல்களை, வேளாண்பாடுகளை, மனிதர்களை, குடும்பத்தை, போராட்டங்களை, சமரசங்களை, இழப்புகளை விரிவாகப் பதிவு செய்கிறது இவ் விவசாய நாவல். 

ஒரு காலத்தில் கால்நடை மேய்ப்பவர்களிடமிருந்து சுந்தரத்தின் மூதாதைகள் அந்நிலத்தை வாங்குகிறார்கள். சுந்தரத்தை படிக்க வைக்கிறார்கள். மக்களைப் பற்றி சிந்திக்கும் முதல்வர் ‘படித்தவர்களின் வேலை கற்பிப்பது’ என்ற வேண்டுகோளுக்கு இணங்கி ஆசிரியராகி, பிறகு அம்மாவின் வற்புறுத்தலால் விவசாயத்துக்கு திரும்பும் சுந்தரம், பாடுபட்டு, அதன் அருமை தெரியாத அடுத்த தலைமுறையாலும், முன்னேற்றம் என்ற பெயரில் பாழாய்ப்போவதை சகிக்கமுடியாமல் பேசவும் முடியாத நிலையில் தன்னை உதிர்த்துக் கொள்கிறார். சுயநினைவிருக்கும் வரை நில விற்பனையை அவர் ஏற்பதில்லை. 

விளைநிலத்தில் போட்ட பணத்தால் லாபம் வருவதில்லை. சேமிப்புகள், நகைகள் கரைகின்றன. நிலத்தின் பகுதிகள் சூதாட்ட விடுதி, உணவு விடுதி, பஞ்சர் கடை போன்றவற்றுக்கு வாடகைக்கு விடப்பட்டு, விளை நிலத்துக்கு வணிகப்புற்றுநோய் பீடிக்கிறது. விவசாயத்தை லாபமாக்கவும் முடியாமல், கைவிடவும் முடியாமல், இழுபறியில் இருக்கும் சாமானிய விவசாயிக்கு, சேற்றில் புதைபட்ட காட்டெருமை, கழுகுகளுக்கு தன்னைத் தின்னக்கொடுக்கும் நிலைதான். 

விவசாயக் கூலி, விவசாயி, சிறுவிவசாயி, பெருவிவசாயி என்ற பிரிவுகளில், கூலிகள் எங்கிருந்தாலும் கூலியாக மாறிக் கொண்டுவிடுகிறார்கள். காக்கா முருகனும், பெரிய முருகனும், சின்ன முருகனும், சுப்ரமணியும் கூலிகளாக, உணவுவிடுதிகளில் மேசை துடைப்பவராக, உணவுக்கு வாகனங்களை கொடியசைத்து அழைக்கும் வேலைக்காரராக மாற்றிக் கொண்டுவிடுகிறார்கள். சிறுவிவசாயி மாற்றுப் பயிர் முறைகளை முயலுகிறான். பெருவிவசாயிக்கு விவசாயம் ஒரு தொழில் உபாயம். இதில் சாதாரண விவசாயி மட்டுமே, தோற்றுக் கொண்டே இருப்பவன். நிலவளம் புத்தாக்கம் பெறுவதற்கு, அரசுகளும் கூட்டுறவு அமைப்புகளும் தீவிரமாக முன்வந்தால், அறிவியல் பூர்வமான தாக்கத்தை நிகழ்த்தினால் விவசாயம் பிழைக்கும். அப்படியானவை நாவலில் எதுவும் இல்லை; ஏனென்றால் அப்படியொன்று வேளாண் சமூகத்துக்கு கிடைப்பதில்லை என்ற நிதர்சனம்தான். 

அடுத்த தலைமுறைப் படிப்பு அவர்களை சிப்பந்திகளாகவும், அலுவலர்களாகவும் கழித்துப் போடுகிறது. அந்த தலைமுறை, விவசாயத்தை மேம்படுத்தவும் தெரியாமல், வேலைகளில் உச்சமும் பெறமுடியாமல் இரண்டும்கெட்டானாக மிஞ்சுகிறார்கள். முன் தலைமுறைச் சொத்தை விற்றுப் பிழைத்துக் கொள்வதில் கூச்சமற்றுப் போய்விடுகிறார்கள். 

தனது விளைநிலத்தில் கட்டப்பட்ட ஆடம்பர சாலையோர உணவு விடுதியில் கால் வைக்கும்போது சுந்தரத்தின் மகன் மோகனுக்கு அந்தக் கூச்சம் இருக்கிறது – பரிமாறிய உணவைச் சாப்பிடும்வரை. உணவகத்தின் ஒரு மூலை, முன்பு வாய்க்கால் நீர் கூடித் தேங்கிய இடம் என்ற குறிப்பு, எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. நாவலாசிரியர் இப்படியான பல இடங்களைத் தொட்டு, சொல்லாமல் சொல்லிச் செல்கிறார்.

நிலத்தை பயிர் பூமியாக பார்த்த தலைமுறையின் எச்சமாக நின்றவர்களுக்கு அதன் மதிப்பு என்பது வெறும் விலையாகத்தான் தெரிகிறது. அதுவும் முழுமையாகத் தெரியவில்லை. சுந்தரம் தனது இறுதிப் படுக்கையில் இருக்கையில், டவுனில் கம்ப்யூட்டர் செண்டர் வைத்துக்கொண்டு சொற்ப சம்பாத்தியத்தில் இருக்கும் மகன் மோகனிடம் சென்று நிலத்தை விலைபேசும்போது, நிலத்தின் மதிப்பாக எவ்வளவு உயர்த்திக் கேட்கவேண்டும் என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. போட்டிவிலைகளைப் பற்றிய அறிதல் கூட இல்லை. மற்றொரு மகன் கார்த்திக்கிடம் தொலைபேசியில் கேட்கும்போது, அது என்ன கோவண நிலம்.. ஏதோ பேசி வர்ற விலைக்கு நீயே வித்துடு’ என்று பழைய பேப்பரை விற்கும் தொனியில் சொல்கிறான். ஆனால் அப்படியொரு கோவண நீள நிலத்தை இன்று அவனால் வாங்கமுடியாது என்பது அவனுக்கு உரைப்பதே இல்லை. வாங்குபவர்கள் சார்பில் இஸ்மாயில் முடிவாகச் சொல்லும்போது, ‘ஏதோ நல்ல விலை போட்டுக்கொடுங்கள்’ என்று தீர்மானமின்றிக் கேட்கிறான். அவர்கள் விலையை மாற்றாமல் முன்பணத்தை கையில் திணிக்கும்போது, மறுப்பின்றி வாங்கி வைத்துக்கொள்கிறான். வாங்குபவனுக்கு தெரிந்திருக்கும் நிலத்தின் மதிப்பு விற்பவனுக்கு தெரிந்திருப்பதில்லை. ஏனென்றால் அவன் விவசாயியும் அல்ல. வணிகனும் அல்ல.

நாவல் துவக்கத்தில் பூக்கள் முளைத்த எள்ளுச் செடிகள் தம்மை நசுக்க வரும் இயந்திர உருளைகளுக்கு முன் எதிர்ப்பைக் காட்டுவதுபோல எதிர்த்து நிற்கும் என்ற காட்சி, விவசாயியின் நிலைமை. ஆனால் அந்தப் புற்கள் காட்டும் எதிர்ப்பைக்கூடக் காட்டாமல், கொடுப்பதை வாங்கிக்கொண்டு, விளைநிலத்தை விற்றுத் தின்பவர்களாக பின் தலைமுறை இழிகிறது. 

முன்பொருமுறை தரகர்கள் சுந்தரத்திடம் வீட்டுக்குச் சென்று வற்புறுத்தி விலை கேட்கும்போது, தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே முகத்தை கூடத் திருப்பாமல் ஒரு விரலை உயர்த்தி ‘ஒரு கோடி’ ரூபாய் என்று சொல்லி தரகர்களை விரட்டிய கம்பீரம், மகனிடம் இல்லை. ஏனென்றால் அவன் விவசாயியும் அல்ல. வணிகனும் அல்ல.

சுந்தரத்தின் விளைநிலத்தின் பகுதி சாலை விரிவாக்கத்துக்கான கையகப்படுத்தலால் பறிபோகிறது. ஆனால் மிச்சமிருக்கும் நிலத்தையும் காப்பாற்றிக்கொள்ளாத நிலைக்கு குடும்பம் செல்கிறது. இந்நிலம் தனக்குப்பின்னால் இருக்காது என்பதை அவர் யூகித்தாலும், தானிருக்கும்வரை விற்பதில்லை என்பது விவசாயப் பிடிமானமும் பிடிவாதமும் ஆகும். மணல் கொள்ளையை பார்க்க நேரும்போது பள்ளத்தில் விழுந்து கையொடிகிறது. பிறகு கொல்லைக்குச் செல்லும்போது விழுந்து காலொடிகையில், கொல்லை அவருக்கு என்றென்றைக்கும் தூரமானதாகிவிடுகிறது. 

தன்னை இதே கொல்லையில், பிற மூதாதைகளைப் புதைத்த மாதிரியேதான் புதைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தாலும், தலைச்சன் மகன் என்பதால் எரியூட்டப்படுதலால், அவருடைய சிறிய கோரிக்கையும் நிறைவேறுவதில்லை. ஆனால் பின்னால் மாளிகையைக் காவல் காக்கும் சுப்பிரமணி பேய்கள் நடமாடுவதாகவும், அங்கே புதைக்கப்பட்ட சுந்தரத்தின் பேய் அது என்று சொல்கிறான். இந்த வரி கேள்விப்படலாக சொல்லப்பட்டாலும், எரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டதற்கு முரணாக அமைந்திருக்கிறது.

சாலை விரிவாக்கத்துக்காக போயிருக்காவிட்டாலும் அந்த நிலம் நீண்டநாளைக்குகாப்பற்றப் பட்டிருக்காது என்பதுதான் நிதர்சனம். 

பொன்னம்மாளின் நகைகள் பயிரிடலுக்காக விற்பனைக்குப் போகும் அருமையான அத்தியாயம் சத்தியமானது. ஒரு திருமணத்துக்காக தயாராகும்போது பெட்டியைத் திறக்கையில் நகை காணாமல் போயிருப்பதும், அது விற்கப்பட்டிருப்பதையும் யூகிக்கிறாள். கடும் கோபமுறுகிறாள். ஆனாலும் திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பி, தனது பெட்டியைப் பூட்டிவைக்கிறாள். அதை அறியும் சுந்தரத்தின் குற்ற மௌனம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. 

பின்னொரு சமயம், மகனுடைய காதல் விஷயத்தால் சுந்தரம் போலீஸ் ஸ்டேஷன் செல்ல நேரும்போது, கடனை அடைக்க‘அம்மாவின் தலை ஜடை பில்லையை விற்றுவிடலாம்’ என்றும் மகன் சொல்லும் அளவுக்கு அவளது நகைகளை யார் வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்பதே குடும்பத்தில் அவளுடைய இடம். 

சுந்தரம் பூஜை செய்யும் படத்தில் இருக்கும் தங்கத்தாலான பொட்டுக்கள் காணாமல் போயிருக்க, மனைவி பொன்னம்மாளை சந்தேகித்தில திட்டித் தீர்க்கும்போது, அவை உதிர்ந்திருக்கும் என்றும், தான் எடுக்கவில்லை என்றும் சொல்பவள் ‘என்னுடையது எவ்வளவோ போச்சு’ என்று ஒரு வார்த்தை சொல்கிறாள். ஆழமான இடம் அது. தனது உடம்பிலிருந்த அத்தனை நகைகளையும் நிலத்துக்காக இழந்தவளின் பெயர் ‘பொன்னம்மாள்’ என்பது ‘நகை’ முரண்.

நாவலில் ஆரம்பநிலைக் காதல்கள் உருவாகி, அவை முதிருமுன்பே உலகியல் சிக்கல்களால் உதிர்கின்றன. கோவிலில் பூஜை செய்யும் இளைஞன் பரஞ்சோதி காரணமின்றி ஒலிக்கும் கோவில்மணி, தன்னை அவன் அழைப்பதாக நினைக்கும் சுமதியின் சொல்லப்படாத காதல். ரேஷன்கடையில் காதல் கடிதங்கள் தரும் நாகேந்திராவுடன் விஜயாவின் காதலும் அவற்றைப் பின்னாளில் தேடித்தேடி எடுத்து அடுப்பில் போடும் அவலமும். விருந்தினராக ஊருக்கு வந்த கண்மணிக்கு கடிதங்கள் எழுதிக் காதலிக்க முயன்ற கார்த்தி. சுந்தரம் குடும்பத்தின் எந்த காதலும் திருமணத்தில் முடியும்படியான நாடகீயத்தன்மையற்ற காதல்கள். ஆனால், இப்படி காதல்வசப்பட்டவர்கள் அனைவருமே தொடர்கதை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பது சுவாரசியமான குறிப்பு. 

நாவலின் ஏறக்குறைய எல்லா அத்தியாயங்களுமே விரிவான காட்சியில்தான் துவங்குகின்றன. காட்சிகளும், காட்சி மூலம் இடங்களும் பிரதேசங்களும், இடங்கள் மூலம் சம்பவங்களும், சம்பவங்கள் மூலம் தனி மனித மற்றும் குடும்ப அனுபவங்களும், அனுபவங்களின் கோர்வை மூலமாக ஒரு வேளாண் வாழ்க்கையும் பின்னி நாவலாக விரிக்கப்பட்டுள்ளன.

மரக்கலன்களைச் செய்யும்போது இணைப்பு இடங்களில் சிறு மரஆணியை அறைந்து உறுதிப்படுத்துவார்கள். அதன் பிறகு ஆணி அந்த மரப்பொருளின் அங்கமாகவே மாறும். அதைப்போல சிற்சில வரிகளின் மூலம் அறைந்து இணைக்கப்பட்டு, நாவலை கட்டுக்கோப்பாக வைக்கும் வரிகள் பல உள்ளன. அவை வாக்கியச் சுருக்கங்களாக இல்லாமல், ஒரு பார்வையை, ஒரு உணர்வெழுச்சியை குறிப்பாகச் சொல்லுவதாக அமைந்திருப்பவை நாவலுக்கு அணிசேர்ப்பவை. 

பெட்டிச்சாவி குறித்த காட்சியில் பொன்னம்மாவின் மோதிரமும் அப்பாவின் கதையும்; கடிதங்கள் குறித்த காட்சிகளில் துவங்கி ஒரு காதல்கதையும் தோல்வியும்; நெற்குவியல் முளைநெல் குறித்த காட்சிகளில் துவங்கி சுந்தரத்தின் முன்கதை; மாடு விற்கபட்டபின் அந்த இடத்தை பற்றிய காட்சியில் துவங்கி பெரியமுருகனின் விவசாய முயற்சிகள்; – இவ்வாறாக பலவற்றைச் சொல்லலாம். 

நாவலில் அமானுஷ்யத்தை எழுதி இருந்தாலும், அவற்றைத் தர்க்கரீதியாக யோசிக்க இடமின்றி, நாவலின் மையக் கூறுகளுக்கு உபகருவியாகியிருக்கிறது. பெரியமுருகன் கொல்லையில் படுத்திருக்கையில் வயலில் களை எடுக்கும் பேய், சோளத்தை அறுவடை செய்திருக்கும் பேய், மாளிகைக் கட்டப்பட்டபோது விழுந்து இறந்தாக சொல்லப்பட்ட பெண் சித்தாளின் ஆவி, பெரிய முருகனின் ஆவி, சுந்தரத்தின் ஆவியெனும் பிரமை போன்றவை. எந்தப்பேயும் பயமுறுத்தவோ, தீமையோ செய்வதில்லை. சொல்லப்போனால் சுப்பிரமணி அந்தப் பெண் பேயை கொஞ்சமாவது அணைத்துக்கொள்ள வேண்டும் என்று முயல்கிறான். பெரியமுருகன் திண்ணையில் வந்து உட்கார்ந்து பேய் அவனோடு பேசுகிறது. சுந்தரம் கொல்லையில் ஒரே இரவில் திருடப்பட்ட தென்னங்கன்றுகளை அறிந்து, காக்கா முருகனை சுந்தரம் சந்தேகமுறுகையில், அவன் வருந்துகிறான். அப்படியே எண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, மறுநாள் காலையில் பார்க்கும்போது, அனைத்தும் மீண்டும் நடப்பட்டிருக்கின்றன. 

நாவலில் பல இடங்கள் துல்லியமான விஷயங்கள் கவனப்பட்டிருக்கின்றன. நாம் விரும்பினால் அவற்றின் உபரிவிவரங்களை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, பேச வரும் முஸ்லீம் ஆள் ஒருவருக்கு சொம்பில் தண்ணீர் கொடுக்கும்போது ‘வாய்வைத்து’ குடித்தார் என்று ஒரு வரி. விருந்தினர் வீட்டிலோ, தம் வீட்டிலோ விவசாயிகள் குடிக்கும் கலத்தில் வாய்வைத்து எச்சிற்படுத்திக்கொண்டு குடிக்கும் வழக்கம் இருப்பதில்லை. 

மற்றொரு இடத்தில், நிலத்தை விற்பனைக்காக பார்வையிடச் செல்லும் சேகர் காலில் செருப்பு அணிவதை தவிர்க்க முனைந்தாலும், கரடான நிலத்தால் செருப்பு போட்டுக்கொண்டு செல்கிறான். விவசாயிகள் நிலத்தில் செருப்புக்காலுடன் நடப்பதில்லை. அங்கே சேகர் விளைநிலத்தை விற்பனை மனையாக பார்க்கத்தொடங்கிவிடுகிறான். 

 வெளியிலிருந்து ஒரு சிறு கல்லைக் கூட கிணற்றுக்குள் போடுவதை, ஒரு சிறுவனாக இருந்தாலும் சரி, விவசாயி அனுமதிக்க மாட்டான். விவசாயம் பொய்த்துப் போனபோதும் கூட, கிணற்று நீரின் ஆழமறிய ஒரு கல்லைப் போடுபவனை, பெரிய முருகன் மென்மையாக கண்டிக்கிறான். கிணறு தோண்டுகையில் அடியாழத்தில் வெட்டப்பட்டு கற்களை மேலே கொண்டுவர ஆகும் கடின உழைப்பை மதிக்கும் மனம் அது. 

அம்மாவின் புடவையைக் கிழித்து சிறுமி தாவணியாக அணிந்து கொள்கிறாள். அதனால் அவளுக்கு முழு பெரிய ஆள் கூலி கிடைக்கும் என்ற கூலியாட்களின் சமயோஜிதம் மென்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. 

சுந்தரம் ‘பாப்லின்’ சட்டை போட்டிருப்பது, சிறு கிராமங்களில் பள்ளிகள் திறக்க முனையும் முதல்வர், எவர்சில்வர் பாத்திரங்கள் வரத் தொடங்கியுள்ளன என்ற குறிப்புகள், நாவலின் காலத்தை உத்தேசமாக யூகிக்க வைத்துள்ளன. அதுவே பாத்திரங்களின் இயக்கங்கள் மற்றும் குணாதிசயங்களுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டுவருவன.

சம்பவங்களை, பாத்திரங்களை நாவல் நெடுக அவ்வப்போது தொடர்புறுத்தியும், சங்கேதமாகவும் உடனழைத்துச் சென்றிருக்கிறார் நாவலாசிரியர். இரவல் நகையை அணிந்து கொண்டிருக்கும் சுமதியை பெண்பாக்க வருவதும், அமையாமல் போவதும் வழக்கம். ஒருமுறை விருப்பமின்மையால் அவள் குளியலறைக்குள் கதவை தாழிட்டுக்கொண்டு, யார் அழைத்தாலும் வெளியே வருவதில்லை. ஆனாலும் சுமதியை நிச்சயம் செய்துகொண்டு விடுகிறார்கள். திருமணம் ஆனபின், கரட்டு பிரதேசத்தில் இருக்கும் கணவன் வீட்டுக்குச் செல்லும்போது அங்கே பின்கட்டில் குளியலறைக்கு கதவே இருப்பதில்லை. அவளுக்கு அதிகபட்ச சுதந்திரமென்பது குளியலறையில் உடைகளைந்து குளிப்பது. அதுவும் இனி வாய்க்காது. 

ஆரம்ப அத்தியாயத்தில், தென்னைமரத்திருட்டு தொழிலை கலையாக செய்யும் காக்கா முருகன் பிடிபட்டு, பஞ்சாயத்தில் தண்டனையாக கட்டைவிரல் நசுக்கப்படுகிறது. அதன் பிறகு நாவலில் தென்படாத அவன், இறுதி அத்தியாயத்தில் உணவகத்துக்கு வாகனங்களை கொடியசைத்து அழைக்கும் வேலையைச் செய்வதைச் சொல்ல்லும்போது, கட்டைவிரல் பிடிமானம் இல்லாததால் கொடியசைப்பதற்கு கஷ்டப்படுவது குறிப்பிடப்படுகிறது. 

சுந்தரம் இருக்கும்வரை அவர்தான் விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும். அவர் நினைவு பிறழ்ந்து மரணப்படுக்கையில் இருக்கும்போதே அவர் மகனிடம் தரகர் முன்பணம் தருவதன் நோக்கம், சுந்தரம் விரைவில் இறந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்புதான். நிலத்தை வாங்குபவனிடம் இருப்பது நரித்தனம் என்றால் அவரது மகன்களுக்கே அப்படி இருப்பது அற்பம். அவர் இறந்து தீட்டுநாட்கள் முடியும் முன்பே, படையலைக் கூட போட விடாமல் அலுவலகம் வந்து பதிவு செய்து கொடுக்க வீட்டுக்கு வந்து கண்ணன் நெருக்கடி தருவதற்கு காரணம், மோகன் வேறு ஒருவருக்கு மாற்றி எழுதி தந்துவிடமாட்டான் என்று என்ன நிச்சயம்? என்ற பதைப்புதான். ஏனென்றால் அப்படி அவனை வார்த்தை மாறவைத்து வாங்கியிருப்பவர்தான் இவர். மனிதக் குரூரம் வெளிப்படும் இந்த இடங்களை, மிக சன்னமாக சொல்லப்பட்டசம்பவங்களைக் கோர்வைப்படுத்தித்தான் நாம் உணர முடியும். 

ஒரு சில அத்தியாயங்களில் தேவைக்கு அதிகமான அளவு விவரணைகளுடன் விரிந்திருக்கின்றன. உதாரணமாக சோளக்கொல்லை பொம்மை, மணல்கொள்ளை குறித்த அத்தியாயங்கள் ஒன்றிரண்டைச் சொல்லலாம்.

நாவலாசிரியர், அடங்கிய தொனியில், மிகச்சிக்கனமானஆனால் அழுத்தமான வரிகளை அழகியலோடும் சாதித்திருக்கிறார். 

சுமதி எங்கோ தொலைவில் ஏரியைக் கடந்து இருக்கும் கிராமத்தை நோக்கி நடக்கும்பொது வறண்ட நீளமான ஒற்றையடிப் பாதையைப் பார்க்கும்போது ‘சுமதிக்கு தன் எதிர்காலம் முழுவதையும் பார்த்துவிட்டது போலிருந்தது’ என்ற வரி; 

பெண்பார்க்க வருபவர் முன் இரவல் நகையணிந்துகொண்டு இருப்பதை ‘இரவல் நகைகள் உடம்பில் ஒட்டாமல் தம்மைக் காட்டிக்கொள்ளும்’ என்ற வரி; 

குடும்ப சண்டையில் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குச் செல்லும் பொன்னம்மாவைப் பார்க்கையில் ‘தீய்ந்த குடும்ப வாடை வீசியது’ என்ற வரி; 

பட்டுப்புழு அரைக்கும் ஒலி மழை பெய்வதைப் போலிருந்தது. உயிர்வாழும் ஆவேச ஒலி உலுக்கியது’ என்ற வரி; 

‘நாட்டுக்குத் தேவையென்றால் குடிமகன் அனைத்தையும் இழக்கவேண்டும்’; 

‘எத்தனை முறை எண்ணினாலும் பணம் கூடவும் இல்லை, குறையவும் இல்லை. பணத்தின் பிரத்யேக மணம் வீசியது’; 

புதிய பள்ளிகளை உருவாக்கும் புத்திசாலியான, மக்கள் சேவையில் இயங்கும் முதல்வரின் பெயரைக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பெயர் சொல்லாமலே அவர் யார் என வாசகன் புரிந்துகொள்ளும்படி வைத்திருப்பது, இலட்சிய அரசியல் பார்வையை மென்மையாகச் சொல்கிறது. பெயரைக் குறிப்பிட்டிருந்தால் காலத்தகவலாகத்தான் இருந்திருக்கும்; சொல்லாமல் விடும்போது அடையாளமாக மாறியிருக்கிறது. 

நெல் கொட்டப்பட்ட வீடு மஞ்சள் கடலாக இருந்தது; தரையில் பரந்திருக்கும் நெல்களை அளையும் கால்களை ‘கால்கள் தேர்ச்சக்கரங்கள் போல நகரும் . நெல்லில் வெள்ளை மெட்டி மெல்ல மறைந்து தோன்றும்’; 

 ‘மழை பெய்த சற்று நேரத்தி வெள்ளம் பெருகும். பாம்புக் கூட்டங்கள் போல் ஓடிவரும்’ ;

‘பயிரிடுவதில் காலம் உறைந்துள்ளது. அதில் நிகழ்வது வெறும் பருவ மாற்றங்கள்தான்’; 

முகப்பு அட்டையில் தார்ச்சாலைக் கருப்பில் பசுவின் பின்பகுதி வரையப்பட்டு, புத்தகத்ததை அப்படியே பின் அட்டை நோக்கி 180 பாகை, திருப்பினால் பசுவின் முன்பகுதி வருமாரு அமைத்திருப்பது அருமை. சாலைக்கடியில் புதைந்திருக்கும் விளைச்சல் நிலத்தை மனதில் அசைபோட்டு, தார் ரோடில் படுத்திருக்கும் பசு. ஓவியரின்/ வரைகலையாளர் பெயர், புத்தக அறிமுகக் குறிப்பில் தந்திருக்கத் தகுதியானது. 

சாலைகளால் எங்கும் போகமுடியும் என்கிறாள் பேச்சி. தவிர்க்கவியலாத முன்னேற்றச் சாலைகளடியில் புதைபட்டிருக்கும் விளைநிலங்களின் ஆன்மா ஒரு பேயைப்போல நாவல் முழுதும் உலவிக்கொண்டிருக்கிறது. இந்தப் பேயை நமக்குப் பிடித்திருக்கிறது. 

***

ரமேஷ் கல்யாண் – ஓசூரில் வசிக்கிறார். விளம்ப்ரத்துறையில் பெங்களூரில் பணிசெய்கிறார். தொடர்ந்து இலக்கிய பத்திரிக்கைகளில் வாசிப்பு அனுபவக் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிறுவாணி வெளியீட்டில் திசையறியாப் புள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. மின்னஞ்சல் முகவரி : rkliterature2023@gmail.com

கார்த்திகை சோமவாரம்

4

தருணாதித்தன்

ஞ்சய், ஒரு புதிய ப்ராஜெக்ட் வந்திருக்கிறது. மிக சுவாரசியமானது, நாம் இது வரை செய்யாதது. பைலட் ப்ராஜக்ட் சுமார் பத்து மில்லியன் டாலர்தான் இருக்கலாம், ஆனால் அதற்குப் பிறகு ஆயிரக்கணக்கான இன்ஸ்டலேஷன் இருக்கும்.”

“அப்படியா ? இப்போது நாம் பத்து மில்லியன் ப்ராஜெக்ட் பற்றி எல்லாம் பேச வேண்டிய நிலைமை ஆகி விட்டது. அரஸ், உண்மையிலேயே ஆயிரக்கணக்கான இன்ஸ்டலேஷன் இருக்குமா இல்லை உன்னுடைய விற்பனைத் திறமையை என்னிடமும் காண்பிக்கிறாயா ?”என்று சிரித்தான் என்னுடைய மானேஜர் சஞ்சய். 

தமிழரசன் ஆகிய நான் அரசன் ஆகி யுஎஸ் வந்த பிறகு அரஸ் என்று அமெரிக்கர்களுக்கு வசதியாக உச்சரிக்கக் கூடிய ஈரசைச் சொல்லாகச் சுருங்கி விட்டேன். நான் இருப்பது டல்லாஸில்.

சஞ்சய் அமெரிக்க பிரதேச வைஸ் ப்ரெசிடென்ட், விரைவில் சீஃப் பிஸினஸ் ஆஃபீசராக போர்டில் சேரப் போவதாக வதந்தி. வசிப்பது சான்ஃப்ரான்சிஸ்கோ பே பகுதியில். முன்பெல்லாம் நூறு மில்லியனுக்கு குறைவான ப்ராஜெக்டுகளைப் பற்றி நாங்கள் மொபைலில் கூட பேச மாட்டோம். இப்போதைய மந்தமான மார்கெட் நிலவரத்தில், பத்து மில்லியன் ப்ராஜெக்ட் வீடியோ அழைப்பில் விவாதிக்கப்படுகிறது. 

“அது மட்டும் இல்லை, இதையே ப்ராடக்ட் ஆக செய்து, யூரொப், ஜப்பான், ந்யூசிலாண்ட் என்று மற்ற பிரதேசங்களிலும் விற்கலாம். நாம் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இஆர்பி இம்ப்ளிமெண்டேஷன் செய்து அமித் கேட்கும் முப்பது சதவீத வளர்ச்சி காண்பிக்க முடியாது.”

அமித் எங்கள் கம்பெனி எம் டி மற்றும் சிஇஓ. மூன்று வருடங்களில் எங்கள் கம்பெனி வருவாயை இரண்டு மடங்காக ஆக்குவதாக பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து வருகிறார். இன்னும் இரண்டு வருடங்களில் இந்திய மற்றும் அமெரிக்க பங்குச்சந்தையில் அய் பி ஓ வுக்கு எங்கள் நிறுவனம் போவதாக வதந்தி. அதையும் ஒரு பேட்டியில் கேட்ட போது, அமித் மறுக்காமல் சிரித்தது உறுதி செய்வதாக இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். 

நான் இந்த நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் இவர்களுடைய கலாச்சாரம் முழுவதாப் புரியவில்லை. எந்த புதிய ப்ராஜெக்ட் கொண்டு வந்தாலும் இறுதியாக அமித் சரி என்று சொல்ல வேண்டும். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹெச் ஆர் தலைவர் என்னை அழைத்திருந்தார், வேறு நிறுவனத்திலிருந்து வந்திருப்பதால், நான் புதிய கலாச்சாரத்துக்கு எப்படி பழகிக் கொண்டிருக்கிறேன், எனக்கு முற்றிலும் பிடிக்காத, ஒப்புக் கொள்ள முடியாதவை என்ன என்றெல்லாம் கேட்டார். அப்போது நான் என்னுடைய கருத்தை துணிச்சலாக சொல்லி விட்டேன். நான்கு பில்லியன் வளர இருக்கும் நிறுவனத்தில் சி இ ஓ அமித் எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

 நான் சொன்னதுதான் காரணமோ, இல்லை மற்றவர்களும் சொல்லி இருக்கலாம், அமித் அதைப் பற்றி இப்போது சொல்லத் துவங்கி இருக்கிறார். நிறுவனம் வளர, ஒவ்வொருவரும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும், அதிகாரம் தலைமை அலுவலகத்தில் மட்டும் இல்லை, ஒவ்வொரு சின்ன ப்ராஜெக்டுக்கும் இனிமேல் அமித்திடம் வரத் தேவை இல்லை என்று டவுன் ஹால் கூட்டத்தில் பேசினார். கூடவே அந்தந்த பிஸினஸ் யூனிட் தலைவர்களே முடிவு செய்து கொள்ளலாம். நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பு இருந்தால் மட்டுமே அமித்தின் ஒப்புதலுக்கு வர வேண்டும் என்று புதிய விதிகளையும் மின்னஞ்சலில் எங்களுக்கு எழுதினார். அதனால் நான் இப்போது உற்சாகத்துடம் இன்னும் நிறைய புதிய , எங்கள் நிறுவனம் இதுவரை செய்யாத ப்ராஜெக்ட்டுகளுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

“அரஸ், என்ன ப்ராஜெக்ட் அது ?”

“நாம வெறும் சாஃப்ட்வேர் மட்டும் செய்வதை விட, கூடவே ஹார்டுவேரும் இருக்கும்படியான ப்ராஜெக்டுகளை செய்ய வேண்டும் என்று நான் சேல்ஸ் ஸ்ட்ராடெஜி மீட்டிங்கில் சொன்னேன் அல்லவா ? அமித் கூட, ஆமோதித்து, இந்த மாதிரி புதிய முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று பாராட்டினாரே, நினைவு இருக்கிறது அல்லவா?”

“ஆமாம் நினைவிருக்கிறது, என்னிடம் மீட்டிங் ஆன பிறகு, அரஸ் மாதிரி மற்ற நிறுவனங்களிலிருந்து புதியவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும், நம்முடைய பையன்கள் புதிதாக எதுவுமே செய்வதில்லை என்று சொன்னார். இது என்ன ஹார்டுவேரும் சேர்ந்த ப்ராஜெக்டா ?”

“ஆமாம், வெறும் ஏ அய் மட்டும் இல்லை, அய் ஓ டி எனப்படும் சென்ஸார், நெட்வொர்க் தவிர டேடா, க்ளவுட் எல்லாமே உண்டு.”

“அட, இத்தனையும் இருந்தும் பத்து மில்லியன்தானா ?”

“இது பைலட் ப்ராஜெக்ட், இப்படி ஒரு புதுமை யாருமே அய் ஓ டியில் செய்ததில்லை, நாம் முதலில் செய்து நிரூபித்தால், பிறகு ஆயிரம் இன்ஸ்டலேஷன் உறுதி.”

“சரி, என்ன ப்ராஜெக்ட் ?”

“இங்கே ‘ரான்ச்”அப்படின்னு சொல்லுகிறார்களே, அந்த மாதிரி பெரிய பண்ணைகளுக்குத்தான் இது”

“நாம் பண்ணைகளுக்கு இதுவரை எந்த சாஃப்ட்வேரும் செய்தில்லை, புதிய மார்க்கெட், மேலேசொல்லு, அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?”

“ஒரு பெரிய ரான்ச்சில் ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும். நிலப்பரப்பு ஆயிரம் ஏக்கர்கள் கூட இருக்கலாம். நூறாண்டுகளுக்கு முன் கௌபாய்கள் குதிரை மேல் ஏறி சுற்றி வருவார்கள், மேய்ப்பார்கள். தண்ணீர் எல்லாம் ஏற்பாடு செய்து, அவை சரியாக சாப்பிடுகிறதா, வளர்ச்சி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுவார்கள். நடமாட்டத்தைக் கவனித்து நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்று கண்காணிப்பார்கள்.”

“இப்போது ஏஅய் வைத்துக் கொண்டு அதை எல்லாம் செய்ய வேண்டுமா ?”

“ஆமாம், நடுவில் ட்ரோன் வைத்துக் கொண்டு கண்காணித்தார்கள். இப்போது ஒவ்வொரு மாட்டுக்கும் கழுத்தில் பட்டையுடன் ஜிபிஎஸ், வேறு சென்ஸார்கள் எல்லாம் போட்டு விட்டால், அவை எங்கே இருக்கின்றன, எவ்வளவு நடக்கின்றன , சுறுசுறுப்பாக இருக்கின்றனவா, எவ்வளவு நேரம் சாப்பிடுகின்றன, எவ்வளவு நேரம் தூங்குகின்றன என்று நாள் முழுவதும் கண்காணிக்கலாம்.”

“நாம ஸ்மார்ட் வாட்ச் கட்டிக் கொண்டு எத்தனை அடிகள் நடந்தோம் என்று எண்ணி, இதயத் துடிப்பை அளந்து வாராந்திர மாதாந்திர சார்ட் போடுவது போல ?”

“ஆமாம் சஞ்சய், அந்த மாதிரி வைத்துக் கொள்ளலாம்,”

“மாடுகளுக்கு ஸ்மார்ச் வாட்ச் செய்ய பத்து மில்லியன் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களா ?”

“சாதாரண ஸ்மார்ட் வாட்ச் மட்டும் இல்லை, அதற்கு மேலும் நிறைய செய்ய முடியும்.”

“வேறு என்ன செய்ய முடியும் ?”

“மாடுகளின் உடல் ஆரோக்கியத்தை தினமும் கவனிக்க முடியும். இதயத் துடிப்பு, உடல் வெப்ப நிலை, சுவாசம் இப்படி அடிப்படை அளவுருக்களைத் தொடர்ந்து கண்காணிக்கலாம். இந்த மாதிரி பண்ணைகளில் ஒரு மாட்டுக்கு ஏதாவது நோய் வந்தால், எல்லாவற்றுக்கும் பரவி விடும். நாம் மாடுகளின் அளவுருக்களுடன் அவற்றின் நடமாட்டத்தையும், தீனி எடுப்பதையும் டேடா சேகரித்து ஏ அய் மாடல் செய்தால், உலகம் முழுவதும் பண்ணைகளுக்கு விற்கலாம்.”

“புரிகிறது, இப்படி ஒன்று ஏற்கெனவே யாரும் செய்யவில்லையா ?”

“இல்லை சஞ்சய், இது வரை எல்லா டேடாவையும் ஒன்றாகச் சேர்த்து யாரும் ஏ அய் மாடல் செய்யவில்லை.”

“வசீகரமாக இருக்கிறது. டேடா கிடைத்தால் அல்காரிதம் செய்வோம் இருந்தாலும் பால் அதிகம் கறப்பதற்குப் பத்து மில்லியன் கொடுப்பார்களா ?”

“சஞ்சய், இது பாலுக்காக அல்ல. டெக்ஸாஸ்தான் அமெரிக்காவிலேயே பீஃப் , மாமிசத்துக்காக மாடுகளை வளர்க்கும் பகுதி. அது எவ்வளவு பில்லியன் மார்கெட் தெரியுமா ? நான் முழுதாக விளக்கவில்லை, முன்பெல்லாம் மாடுகளைக் கடைசியாக சிறிய இடத்தில் அடைத்து வைத்து, நிறைய உணவு கொடுத்துப் பருக்க வைப்பார்கள். இப்போது மாடுகளைப் பரந்த வெளியில் சுதந்திரமாக உலாவ விடுகிறார்கள். அதனால் மாடுகள் நடந்து செல்லும்போதே பாதையில் சென்சார் பதித்து எடையை அளக்க வேண்டும். அவை எவ்வளவு தீவனம் சாப்பிடுகின்றன, எவ்வளவு தண்ணீர் குடிக்கின்றன போன்றவற்றை மதிப்பீடு செய்து, தீவனத்தில் எவ்வளவு ப்ரோட்டின் சேர்க்க வேண்டும், எவ்வளவு சப்ளிமென்ட் மினரல்கள் தேவை ஒவ்வொரு மாட்டுக்கும் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். அப்போது மாடுகள் நன்றாக, ஆரோக்கியமாக வளரும். சரியான வளர்ச்சி அடைந்து விட்டனவா என்பதை ஏஅய் அல்காரிதத்துடன் கவனித்து எப்போது வெட்ட அனுப்பலாம் என்று முடிவு எடுக்கலாம்.”

சஞ்சய் ஒரு கணம் மவுனமாக இருந்தான். பிறகு 

“நாம் இவ்வளவு சென்சார், ஹார்டுவேர் எல்லாம் செய்ததில்லையே ? அதில் அனுபவமும் இல்லை.”என்று கம்மிய குரலில் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

“சஞ்சய், இதெல்லாம் கவலையே பட வேண்டாம், சென்னையில் ஒரு ஸ்டார்ட்டப் நிறுவனர்களுடன் பேசி கொட்டெஷன் வாங்கி இருக்கிறேன். அவர்கள் இந்த மாதிரி சென்சார், ஹார்டுவேர் எல்லாம் செய்திருக்கிறார்கள்.”

“ஓ அப்படியா”

“இன்னொரு அல்காரிதமும் கேட்டிருக்கிறார்கள். மாடுகள் வளர வளர சரியான சதைப் பிடிப்புடன் எடைக்கு…”

“அரஸ், எனக்கு எல்லாம் புரிந்தது. நேரம் ஆகிறது, அடுத்த மீட்டிங் இருக்கிறது. நீ எல்லாம் யோசித்திருக்கிறாய். இருந்தாலும் எனக்கு சில கேள்விகள்.”

சஞ்சய் தீவிரமாக இரண்டு விரல்களை இடது நெற்றியிலும் கட்டை விரலை முகவாயிலும் வைத்துக் கொண்டு வலதுபுறம் மேலே பார்த்துக் யோசித்துக் கொண்டிருந்தான்.

“என்ன கேள்வி ?”

ஏதோ கேட்க வாயைத் திறந்து, தானே தலையை மறுத்து அசைத்தான்.

“இவ்வளவு செலவழிப்பார்களா என்று புதிராக இருக்கிறது.”

“சஞ்சய், நான் அந்த பண்ணை முதலாளியுடன் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்கிறேன், நேராக அவரிடமே கேட்கலாம்.”

“ம் ம், கேட்கலாம், அமித்திடம் சொல்லி வைக்கிறேன், பிறகு மீட்டிங் ஏற்பாடு செய்யலாம்.”

“சஞ்சய், எனக்குப் புரியவில்லை, எதற்காக அமித்திடம் சொல்ல வேண்டும் ? இது வெறும் பத்து மில்லியன்தானே ?”

“இல்லை அரஸ், அமித்திடம் ஒரு வார்த்தை சொல்லி விடுவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.”

“சஞ்சய், நாம் வருவாயை மூன்று வருடங்களில் இரட்டிப்பாக்க வேண்டும், அதனால் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், நம்முடைய நிறுவன கலாச்சாரமே மாற வேண்டும் என்று சொல்லுவது யார் ? இப்படி ஒவ்வொரு ப்ராஜெக்டுக்கும் அமித்திடம் அனுமதி வாங்கப் போனால் நாம் வழக்கம் போல பத்து சதவீதம் வளரலாம்.”

“அரஸ், கோபப் படாதே, இன்னும் உனக்கு இந்த நிறுவனத்தைப் பற்றி முழுதாகத் தெரியவில்லை. இந்த ப்ராஜெக்டுக்கு அனுமதி கேட்டுதான் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.”

“அப்படியானால் முதலில் வழக்கம்போல சக்ராவிடம் போக வேண்டுமா ?”

இது வரை எல்லா ப்ராஜெக்ட் ஒப்புதலுக்கும் அமித்திடம் போவதற்கு முன்பு சக்ரா என்று அழைக்கப் படும் சீஃப் ஃபைனான்ஸ் சக்ரபாணியிடம் போக வேண்டும். அவரிடம் எந்த ப்ராஜெக்டுக்கும் ஒப்புதல் வாங்குவது எளிதல்ல. அவர் குடைந்து குடைந்து லாபக் கணக்கு கேட்பார். என்னுடைய குரலில் ஆயாசம் தெரிந்திருக்க வேண்டும்.

“அரஸ் ஆசுவாசப் படுத்திக்கொள். சக்ராவிடம் போக வேண்டாம், அவர் இந்த ப்ராஜெக்டை கண்டிப்பாக நிராகரித்து விடுவார்.”

“ஏன், ஹார்டுவேர் இருப்பதாலா ? இல்லை நான் உறுதியாகச் சொல்லும் இன்னும் ஆயிரம் இன்ஸ்டலேஷன்கள் வராது என்றா ?”

“அதெல்லாம் இல்லை. அமித்திடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாம்.”

“அமித்துடன் மீட்டிங் கேட்டால் மூன்று வாரங்களுக்குப் பிறகு பத்து நிமிடம் கிடைக்கும். அதற்குள் இந்த பண்ணை உரிமையாளர் இருக்கும் பட்ஜெட்டை வேறு ஏதாவது அய்டி ப்ராஜெக்டுக்கு செலவழித்து விடுவார்.”

“அரஸ், அப்படி அவசரப்பட முடியாது. அடுத்த வாரம் நாம் சேல்ஸ் மீட்டிங்குக்கு பெங்களூர் செல்ல வேண்டும், அங்கே அமித்தை சந்தித்து நேராகப் பேசி விடலாம்.”

 நான் பதில் சொல்லக் காத்திருக்காமல் சஞ்சய் முடித்து விட்டான். நான் விடுவதாக இல்லை, அமித்தின் செக்ரட்டரிக்கு மீட்டிங் கேட்டு ஒரு மின்னஞ்சலை அனுப்பினேன்.

சேல்ஸ் மீட்டிங்கில் அவ்வளவாக உற்சாகம் இல்லை. அமித் எதிர்பார்த்தபடி அடுத்த வருடத்துக்குப் பெரிய ப்ராஜெக்ட் எதுவும் வருவதாக இல்லை. ஐந்து நாட்கள் உலகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த நாங்கள் எல்லோரும் விவாதம் செய்தாலும், வெள்ளிக்கிழைமை வரை நல்ல தீர்வாக, புதிதாக எதுவும் தேறவில்லை. இப்படியே போனால், இரண்டு வருடங்களில் இருபது சதவிகிதம் கூட வளர முடியாது என்று அமித் காட்டமான உரையுடன் முடித்தார், நடுவில் நான் மறுபடியும் ஹார்டுவேர் இருக்கும்படியான ப்ராஜெக்டுகளை செய்ய வேண்டும் என்று சொன்ன போது அமித் நிமிர்ந்து புன்னகைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நிச்சயம் என்னுடைய பண்ணை ப்ராஜெக்ட்டுக்கு ஒப்புதல் அளித்து விடுவார் என்று நம்பிக்கையாக இருந்தேன்.

அமித்தின் செக்ரடரி திங்கள் கிழமை பன்னிரெண்டு மணிக்கு மீட்டிங் கொடுத்திருந்தாள். நான் வார இறுதியில் ஊருக்குப் போகாமல் அந்த சந்திப்புக்காக காத்திருந்தேன்.

திங்கள் காலை பதினொன்றரை மணிக்கே நானும் சஞ்சயும் அமித்தின் அலுவலகத்தில் காத்திருந்தோம். செக்ரடரி உள்ளே சென்று கேட்டுவிட்டு சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு எங்களை அனுமதித்தாள். 

அமித் கை குலுக்கிக் கொண்டே”என்ன அரஸ், புதிதாகப் பெரிய ப்ராஜெக்ட் எதுவும் வட அமெரிக்காவிலிருந்து வருவதே இல்லையே ? நீயும் மார்கெட் நிலவரம் சரி இல்லை என்று இங்கு இருக்கும் பழகியவர்கள் மாதிரி பேச ஆரம்பித்து விட்டாயா ?”என்று முதல் கேள்வியிலேயே சற்று பின்னடைய வைத்தார்.

சஞ்சய் குறுக்கிட்டு”அமித், இவன் ஒரு புதிய ப்ராஜெக்ட் கொண்டு வந்திருக்கிறான். ஹார்டுவேர், ஏ அய், டேடா, க்ளவுட் எல்லாம் இருக்கிறது. அதைப் பற்றி பேசத்தான் இன்றைய மீட்டிங்.”என்றான். 

அமித் சற்று உற்சாகத்துடன்,”என்ன ப்ராஜெக்ட் ? எவ்வளவு மதிப்பு ?”என்று என்னைப் பார்த்தார்,

“இப்போதைக்கு பைலட் ப்ராஜெக்டுக்கு பத்து மில்லியன்தான், ஆனால் நாம் இதை வெற்றிகரமாகச் செய்து முடித்தால், ஆயிரக்கணக்கான இன்ஸ்டலேஷன் வரும்.”

பத்து மில்லியன் ப்ராஜெக்டுக்கு எதற்கு என்னிடம் ஒப்புதல் வாங்க வருகிறீர்கள் என்று அமித் கேட்பார் என்று எதிர்பார்த்தேன், கேட்கவில்லை. 

முதலிலேயே வருவாயை சரியாக சொல்லிவிடுவது நல்லது. அமித்துக்கு தொழில்நுட்பம் எல்லாம் அவ்வளவாகப் புரியாது. எவ்வளவு வரும், எவ்வளவு லாபம், வேறு எங்கு அதே மாதிரி விற்க முடியும், வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் உண்டா என்பது மாதிரியான கேள்விகள்தான் நிறைய கேட்பார்.

“நீயும் இப்போதைக்கு பத்து மில்லியன் ஆனால் பின்னால் பில்லியன் டாலர் வரும் என்று ஸ்டார்ட் அப் மாதிரி பேசுகிறாய்.”

சஞ்சய் என்னுடைய உதவிக்கு வந்தான் “அமித், இந்த ப்ராஜெக்ட் நிறைய விற்கும் என்றுதான் தோன்றுகிறது, அரஸ் விளக்கினால் நீயே புரிந்து கொள்ளுவாய்.”

நான் பண்ணை ப்ராஜெக்டை மறுபடியும் விளக்க ஆரம்பித்தேன். மாடுகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் என்று எளிதாக சொன்னேன். அமித் நடுவில் நிறைய கேள்விகள் கேட்டார். ஹார்டுவேருக்கு சென்னையில் ஸ்டார்ட்டப் பார்த்து பேசி இருப்பதாக சொன்னதற்கு பாராட்டினார். 

“சஞ்சய், இப்படித்தான் சேல்ஸ் இருக்க வேண்டும், வெறும் கஸ்டமர் மீட்டிங் மட்டும் ஏற்பாடு செய்து விட்டு எஞ்சினியரிங் பையன்களை மேலே பார்த்துக் கொள்ளச் சொன்னால், புதிதாக எதுவும் செய்ய மாட்டோம் .”

நான் பெருமையாக,”அமித் அது மட்டும் இல்லை, நாம் புரட்சிகரமான ஏஅய் அல்காரிதம் ஒன்று செய்து காட்ட வேண்டும்.”

நான் மாடுகளுக்கு ஸ்மார்டு வாட்ச் மாதிரியான கருவியால் என்னென்ன செய்ய முடியும் என்று விவரமாகச் சொன்னேன். பாதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அமித்தும் அதே கேள்வியைக் கேட்டார்.

“இவ்வளவும் செய்து மாடுகள் அதிகம் பால் கொடுக்குமா ?”

“அமித் இது பால் கறக்கும் மாடுகளுக்கு இல்லை, மாடுகள் சரியான சதைப் பிடிப்புடன் எடைக்கு வளர்ந்தவுடன், நம்முடைய ஏ அய் அல்காரித்தை பயன்படுத்தி..”

அமித் குறுக்கிட்டு ஒரு விசித்திரமான முகக் குறிப்பு காட்டினார். 

எழுந்து நின்று ஜன்னல் வழியாகச் செடிகளை பார்த்துக் கொண்டே,”எனக்குப் புரிந்தது. பத்து மில்லியன் ப்ராஜெக்டுக்கு எதற்கு என்னிடம் ஒப்புதல் வாங்க வருகிறீர்கள் ? ஒவ்வொருவரும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும், அதிகாரம் தலைமை அலுவலகத்தில் மட்டும் இல்லை, நான் திரும்பச் சொல்லுகிறேன், நீங்களே முடிவு செய்ய வேண்டிய சிறிய ப்ராஜெக்ட் இது.”என்று திரும்பி சஞ்சய் பக்கம் முறைத்தார்.

 நான் உற்சாகமாக,”நன்றி அமித், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அடுத்த வருடமே ஆயிரம் பண்ணைகளில் நமது அய் ஓ டி சிஸ்டம் ஏ அய் அல்காரித்துடன் செயல்படும்.”என்றேன்.

சஞ்சய் அதைக் கவனிக்காதது போல”அமித் இரண்டு நிமிடம் தனியாகப் பேச வேண்டும்.”என்று என்னையும் கதவையும் பார்த்தான். நான் மடிக் கணினியை எடுத்துக் கொண்டு எழுந்தேன்.

“சஞ்சய், உனக்கு நேரம் இருந்தால், இன்றைக்கே லஞ்ச் பொழுதில் இந்த ப்ராஜெக்டுக்கு அடுத்தது செய்ய வேண்டியதைப் பேசலாம்.”

சஞ்சய் அமித்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அமித் கைக் கடிகாரத்தில் மணி பார்த்து,”மதிய உணவு நேரம் ஆயிற்றே, எங்கே கேஃபடேரியாவுக்கா ?”என்றார்.

“ஆமாம், நான் வெளியே காத்திருக்கட்டுமா ? .”என்றேன்.

அமித் “எதற்கு கேஃபடேரியா ? என்னுடன் சாப்பிடலாம், இன்றைக்கு கார்த்திகை சோமவாரம் அல்லவா ? விரத நாள், வீட்டிலிருந்து அம்மா சாபுதானா கிச்சடி நிறையவே செய்து அனுப்பி இருக்கிறார். வாருங்கள்.”என்று ஓரத்தில் வைத்திருந்த ஒரு பையை எடுத்தார்.

சஞ்சய் என்னைப் பார்த்து நிம்மதியாகப் புன்னகைத்தான்.

அமித் ஷர்மாவின் அம்மா சுவையாக சமையல் செய்பவராக இருக்க வேண்டும். சாபுதானா கிச்சடி நிறைய உருளைக்கிழங்கும், பொடித்த வேர்க்கடலையும், பச்சை மிளகாய்க் காரமும், பிழிந்த எலுமிச்சையின் மணமுமாக மிக அருமையாக இருந்தது.

***

தருணாதித்தன் : இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ணன், பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகவும், பின்னாளில் பன்னாட்டு நிறுவனத்தில் வாகன மென்பொருள் துறையில் பணியாற்றினார். தருணாதித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு “மாயக்குரல்” எழுத்து பிரசுரத்தால் (ஸீரோ டிகிரி) வெளியிடப்பட்டிருக்கிறது. மின்னஞ்சல் முகவரி : tharunadithan@gmail.com.

பாடம்

0

ஜார்ஜ் ஜோசப்

நாகை மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் மூச்சு வாங்கியபடி நடந்துகொண்டிருந்தார். அதன் முகப்புக் கட்டடத்தில் பணியிலிருந்த பாதுகாவலர், நான் எதிர்பார்த்த ஆனால் தாத்தா எதிர்பாரா ஒன்றைச் சொன்னார். 

‘நீங்கள் தேடிவந்த புரோபசர் நசீர் விடுமுறைல இருக்காரே. அவர் மக திருமணக் காரியமா லீவ்ல இருக்கார். எப்போ வருவார்னு தெரியாதே தாத்தா. ஏன் இப்படி வெயிலுல கிடந்து அலையுறீங்க. ஜனவரில யுனிவர்சிட்டி தொடங்கினதும் வாங்க’ என்றார். ஐம்பதைக் கடந்தவரும் அவரைத் தாத்தா என்று அழைப்பதைக் கண்ட பின்தான், முதுமை தன் அலகுகளால் அவரை எவ்வளவு பூரணப்படுத்தியிருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன். இரு கால்களும் கவனிக்கத்தக்க அளவு குறுகி வளைந்திருந்தன. நடக்கையில் செருப்புத் தேயும்படியான இழுவை கூடியிருந்தது. ஒவ்வொரு அசைவிலும் நிதானம் பீறிட்டது. ஆனால் இந்தக் காரியத்தில் மட்டும் அவரால் பொறுமை காக்க முடியவில்லை. தன் நாட்கள் குறைந்துவருகின்றன என்ற நினைப்பால் இருக்கலாம். சோர்வடைந்து முகப்பிலிருந்த அலங்காரக் குளக் கட்டையில் அமர்ந்தார். கனத்த கருங்காக்கை சீண்டுவதைப் போல் நெருங்கி வந்து தன் காலளவு நிரம்பியிருந்த குளத்தினுள் இறங்கி நின்றது.

‘அவரோட நம்பராவது கிடைக்குங்களா, ரொம்ப தூரத்துலேந்து வந்துருக்கோம்’ என்றேன்.

நான் முயற்சிக்கிறேன் என்பதைப் பார்த்ததும், தாத்தா தன் இடக்கையால் வெள்ளைத் துணியில் மடித்துக் கட்டப்பையினுள் புதைந்து வைக்கப்பட்டிருந்த தன் பொக்கிஷத்தை மேலாகத் தடவிப் பரவசப்பட்டுக் கொண்டார். அவர் கண்களில் மிளிரும் நம்பிக்கையின் ஒளி, சட்டெனத் தோன்றிப் பின் மறைந்துபோவதாய் இருந்தது. வினைவலி பற்றிப் பெரிய யோசனைகளற்ற அவரது நம்பிக்கை ஒவ்வொரு முன்னேற்றச் சந்தர்ப்பங்களிலும் இறுக்கமாவது தெரிந்தது.

‘தண்ணீ வேணுங்களா தாத்தா’

‘கொஞ்சங்கொடு’ என்றார். 

வெயில் பாந்தமாகவே இருப்பினும் கடல்புறத்தின் அனல் காற்று, வியர்க்க வைத்தன. பச்சையத்திற்குப் பழக்கமாயிருந்த கண்கள், நீலத்தின் வெவ்வேறு ரூபங்களை அசைபோட்டன. வந்திறங்கியது முதல் அதன் முழுமையை இன்னும் காணவில்லை. அதற்கு வாய்ப்பு இல்லை என்றே பட்டது. தோள்பையிலிருந்து கொடுத்த சிறிய பாட்டிலைச் சாய்த்துச் சிறிது நீரை வாயில் கொட்டிக்கொண்டார்.

‘தம்பி, இதோ மேடம் வரேன்னு சொன்னாங்க. அவங்க ஜாகீர் சார் டிப்பார்ட்மெண்ட்தான். கொஞ்சம் பொறுங்…’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே இறுக்கமான பச்சை சுடிதாரில் மேம் என்று விழிப்பதை விரும்பும் தோரணைகொண்ட ஒருவர் வந்தார்.

‘சொல்லுங்க எதுக்கு அவரைப் பாக்கணும். லீவ் நேரங்கள்ல சந்திக்க முடியாதே!’

‘இல்லங்க மேம். சார் தினச்சேதியில மீன்களோட முள்ளுகப் பத்தி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தாத்தா அதுபத்தித் தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்படுறாங்க, அதான் வந்தோம். அவர் நம்பராவது தர முடியுங்களா’ என்றேன். இவ்வளவு கெஞ்சலான குரலில் பேச வேண்டியுள்ளதே என்ற கோபமும், அப்படிப் பேசுவதால் காரியம் நிகழும் என்று கற்பிக்கப்பட்ட சாமர்த்தியம் செயல்படுகிறதே என்ற உணர்வும் ஒருசேர எழுந்தது. 

‘சரி’ என்று தொடர்பு எண் கொடுத்துவிட்டு நகர்ந்தார். காவலரும் தன் இருக்கைக்குத் திரும்பினார்.

நான்கைந்து முறை சிறுசிறு இடைவெளிவிட்டு முயற்சித்தபின், பேராசிரியர் நசீர் அழைப்பை எடுத்தார். தன் மகள் திருமண வேலையாகச் சொந்த ஊரான சேலம் சென்றிருப்பதாகவும், இருபது நாட்கள் கழித்து வந்தால் நிச்சயம் சந்திக்கலாம் என்றும் சொன்னார். என்ன காரியம் என்று அவரும் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. நான் பேசிய அனைத்தையும் கேட்டிருந்தாலும், ‘என்ன?’ என்பதுபோல் தாத்தா பார்த்தார். ‘அடுத்த மாசம் வரச் சொல்றாங்க’ என்று அவரது பையை எடுத்துக்கொண்டேன். மீண்டும் நடக்கப் போகிறோமே என்ற கலக்கத்துடன் எழுந்தார். 

வளாக நுழைவில் ஒரு ஆட்டோ வரவே, அறுபதுக்கு பேரம் பேசி நாகூர் தர்காவில் சென்று இறங்கினோம். ‘நான்கு மணிக்குத்தான் ரயில் வரும். அதுவரை இங்கே இருக்கலாம் தாத்தா’ என்றேன். எதுவுமே பேசாதிருந்தார். மினாரின் மினுப்புகளினூடே மதியநேர பாங்கொலிக்கான மன்றாட்டுக் கூவல் காற்றை ஊடறுத்தது. வாசலில் விற்கப்பட்டுக்கொண்டிருந்த தஸ்பீஹ் மணிகளையும் அல்பாத்திஹா தகடுகளையும் பார்த்தவாறிருந்தார். குழந்தைகளை மையமிட்டு ஏராளமான விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பக்தி மையங்களெல்லாம் ஏன் குழந்தைகளை ஈர்க்கும் பாவத்துடன் நிரம்பிவழிகின்றன; பக்தி என்பதே குழந்தைகளுக்கானதுதானோ என்று தோன்றியது. 

‘தாத்தா உள்ள போறதுக்கு முன்னாடி சாப்பிடலாமா?’ என்றேன்.

‘எனக்கு வேணாம் கேபா நீ சாப்பிட்டு வா. உள்ள உக்காந்திருக்கேன்’ என்றார். புழுக்கம் தணிய ஏதேனும் குடித்தால் போதுமென்றிருந்தது. சப்ஜா விதைகள் தழும்ப, கண்முன் கத்திரிக்கப்பட்ட பாக்கெட்டிலிருந்து பாலைப் பீய்ச்சியூற்றி ரோஸ் மில்க்கைக் கையில் தந்தார் சைக்கிளில் கடை அமைத்திருந்த இளைஞர். அப்பானம் தந்த களிப்பு, காத்திருக்க நேர்ந்ததையும், நேர்வதையும் மறக்கச் செய்தது. தர்காவினுள்ளே நுழைந்தேன். இந்த நூற்றாண்டைப் பின்னுக்கு வைத்துவிட்டு வரும் நினைப்பை வழங்கும் எல்லா திவ்ய ஸ்தலங்களையும் போலவே அதுவும் உணரச் செய்தது. 

தாத்தா வலப்பக்கச் சுவரில் தன் முதுகைச் சாய்த்தவாறு கால்களை நீட்டி அமர்ந்திருந்தார். களைப்பை அவருடல் லேசான நடுக்கத்துடன் வெளிக்காட்டியது. அவர் அருகே சென்றமர்ந்ததும், இமைதிறந்து மூடிக்கொண்டார். நரை வியாபித்திருந்த அவரது மீசையில் ஆங்காங்கே நீர்த்துளிகள் தொற்றிக்கொண்டிருந்தன. நான் அவரைப்போலவே சாய்ந்தமரலாம் என்றிருக்கும்போது,

‘ஏன்யா பெரியவரே புதுசா நீரு. ஆண்டவருக்கு நேரா கால் நீட்டி உக்காரக்கூடாதுன்னு தெரியாதா? ஒன்னு கால மடக்கும், இல்லனா திரும்பி உக்காரும்’ என்று மிரட்டும் தொனியில் பேசியவருக்கு அரணாக மூவர் பின்னே நின்றுகொண்டிருந்தனர்.

‘ஐயோ தெரியாதுங்க. நான் கால மடக்கிக்கிறேன்’ என்றார். ஏற்கனவே மடங்கியதுபோலவே வளைந்துவிட்டிருந்த கால்களை மடிக்கமுடியாது, பக்கவாட்டில் திரும்பி உட்கார்ந்தபடி அசௌகரியத்துடன் கால்களை நீட்டிக்கொண்டார். என்னுடன் வந்திருக்கும்போது அவருக்கு ஒரு சுடுசொல் விழுந்துவிட்டதே என்று ஆதங்கத்தோடு நின்றவாறிருந்தேன். 

‘நாம வேணும்னா ஸ்டேசன்ல உக்காந்துக்கலாம் தாத்தா’ என்றேன். இதெல்லாம் தனக்கு ஒரு பொருட்டில்லை என்பதுபோல் ’இல்லப்பா. நீ உக்காரு. இனியும் வெயில்ல அலைய முடியாது. கொஞ்சம் ஓஞ்சாதான் இனி நடக்க முடியும்’ என்று கால்மூட்டை நீவிக்கொண்டார். எங்கள் முன் விரிந்திருந்த தர்காவின் பரப்பினுள் எண்ணற்ற புறாக்கள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தன. அவற்றுக்கு எந்நேரமும் உணவிருக்கும்படி தளமெங்கும் கோதுமை, சோளம், பயிறு, வெள்ளை கௌபி, கொள்ளு உள்ளிட்ட தானிய வகைகள் தூவப்பட்டிருந்தன. அக்காட்சியை மறைத்தவராக வெள்ளைக் குல்லாவும் செம்பட்டையடித்த நீண்ட தாடியும் சிறுத்த கண்களும் தடித்த உதடுகளும் கொண்ட உயரமான மனிதர் எங்கள் பக்கம் வந்து தாத்தாவின் அருகே அமர்ந்துகொண்டார். சட்டையின் கழுத்துப்பட்டை மடிப்பில் பச்சைக் கைக்குட்டை மடிந்திருப்பது தெரிந்தது. வெள்ளைக் கைலி முழங்காலுக்கு மேலாக இருந்தது.

‘ரஹ்மானே என் ரப்பே’ என்று குல்லாவைக் கழற்றி நெற்றி வியர்வையைத் துடைத்தவர், ‘என்ன நைனா எஜமான பாத்துக் கால நீட்டிட்டனு திட்டிட்டாங்களா. பாத்தேன் நான் எல்லாம் பாத்தேன். அதான் மனசு பொறுக்காம வந்துட்டேன்’ என்று அவரது கால்களைப் பற்றிப் பரிவுடன் பிசைந்துவிட்டார். அவரது குரலில் இருந்த கனிவுமிக்க அதிகாரம் எங்களைப் பேசவோ மறுக்கவோ விடவில்லை. நீண்ட ஓட்டத்தை முடித்தவனின் உறக்கம்போல் தாத்தா சொக்கிவிட்டார். ஒரு கண்கட்டு போல், முன்னெழுதப்பட்ட நாடகம் போல, என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள் சிவத்த மேனியுடைய அஜானுபாகுவான அந்த ஆண் மறைந்திருந்தார். உறங்கிக்கொண்டிருந்த தாத்தாவை எழுப்பாமல் வளாகத்தில் அவரைத் தேடி சுற்றிச் சுற்றி வந்தும் வசப்படவில்லை. நினைவில் அவர் உருவைச் சிக்கெனப் பிடித்தவனாக, திரும்பினேன். தாத்தா ’புறப்படலாம்’ என்று எழுந்துகொண்டார். நிழல் படர்ந்த தெருக்கள் வழியாக நாகூர் ரயில் நிலையத்திற்குச் சென்றடைந்தோம். அரை மைலுக்கும் மேல் நீண்டது நடை. சகஜமாய் அடியெடுத்து வந்தார்.

ரயில் பெட்டியை மீன் கவிச்சி நிறைத்திருந்தது. வெயில் தோய்ந்த உடைகளின் வீச்சம் குபீரென்று காற்றை நிறைத்திருந்தது. தாத்தா முதல்முறை தனது சேகரிப்பில் உறங்கிக்கொண்டிருந்த சுறா முள் பாடத்தைப் பொக்கிஷம் என அறிவித்து எனக்கென ரகசியமாய்க் காட்டிய தருணம் நினைவை ஆக்கிரமித்தது. ஒருபோதும் அழியக்கூடாதென்ற நேசத்தில் எட்டுமுழ வெள்ளை வேட்டியால் தன் மிடிமையை மாற்றவிருக்கிறது என்று நினைத்த அரணைக் கட்டவிழ்த்தார். அப்போது உள்ளறைக்குள் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். கைகளில்லாச் சிலுவை போலும் நீள்கத்தியைப் போலும் இருந்த மரப்பட்டையின் இரு பக்கவாட்டிலும் வரிசையாய் முட்கள் பதியப்பட்டிருந்தன. சற்றே நீண்ட பூசணி விதை போல இருந்தன முட்கள். அது பூரானை ஒத்த தோற்றத்தையும் பிரமிப்பைக் கூட்டித்தரும் சிலிர்ப்பையும் அதற்கு அளித்திருந்தது.

’என் பூட்டன் காலத்திது. அப்பா கடசீல அண்ணணுகள விட்டுட்டு என்கிட்டதான் தந்தாரு. எனக்கு என்னடாப்பா ஆண்டவா வழினு கிடந்தப்ப, இன்னிக்குக் காலையில ஒரு சேதிய வாசிச்சப்பதான் இது ஞாபகம் வந்துச்சு. உடனே தேடி எடுத்துட்டேன். இனி கவலையே இல்லடா’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார். எங்கே மகன்களின் கைகளுக்குப் போய்விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வு எழவே, மீண்டும் அழகாய்த் துணிச்சுற்றிப் பரணில் அதை ஒளித்தார்.

நாளிதழில், ‘சுறா முட்கள் புற்றுநோய் மருந்து தயாரிப்பதில் அதிகம் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதன் விலை இலட்சங்கள் போக்கக்கூடியதாக உள்ளது. இறால் வகைகளிலும்கூட மருத்துவ குணம் வாய்ந்தவை நிறைய உள்ளன’ என்று கடல்வாழ் இனங்களின் மருத்துவ குணங்கள் என்ற கட்டுரையில் சில வரிகள் அடிக்கோடிடப் பட்டிருந்தன. அந்த ஓரிரு வார்த்தைகள் அவரது வாழ்நாளின் ஆச்சர்யமாகவும் தேடுதல் வேட்கையாகவும் மாறும் என அதை வாசித்தபோது நான் நினைக்கவே இல்லை. 

வீடு திரும்பி, ‘அது நம்புற மாதிரியான செய்தியா இல்லையே’ என்று அப்பாவிடம் கேட்கவே, அவர் தனது நண்பர்களிடம் விற்பனை பற்றி விசாரித்துவிட்டு, ‘அதெல்லாம் கரிக்கு உதவாதுடா. முந்நூறு வருஷ ஆண்டிக்ஸ் பொருள கைமாத்தனும்னு ரயிஸ் புல்லிங்னு திரியவன்கிட்டகூட கேட்டுட்டேன். எப்படா எது கிடைக்கும்னு ஜிமிக்ஸ் காட்டறவனே ஆகாதுன்னுட்டான்’ என்று துளியாய் ஒட்டிக்கொண்டிருந்த நப்பாசையையும் ஒழித்துவிட்டார்.

‘வேற வாய்ப்பே இல்லியாப்பா?’ 

’என்ன நடக்கணுங்கிற?’

‘அவர் விரும்புற மாதிரி சின்னதா ஒரு நிலத்த வாங்கிட்டாப் போதும்பா. இன்னும் பத்து வருஷம் உசிரோட இருப்பாரு. மண்ணு அவர் காலுல புரளனும். எதையாவது கைல வச்சிக்கிட்டு அதைக் கொத்திட்டு இருக்கணும். மரங்கொத்தி மாதிரி அவரு மண்கொத்தி.’

‘சரிதான். ஆனா இருந்ததெல்லாம் உன் மாமனுங்க அழிக்காம இருந்தா இப்ப ஏன் இப்படி ஏங்கிட்டிருப்ப போறாரு’ என்று அமைதி காத்தவர், ‘அவர் கையும் தரித்திரியம்தான்டா. என்னைக்குமே ஒரு வேலை தெரிஞ்சவந்தான் பொழப்பான். அந்த மனுஷனுக்குத் தெரியாத வேல உண்டா! நிலம்னு இருந்துட்டா அங்குல அங்குலமா பிரிச்சு விதைச்சிடுவாரு. கம்பிய பாத்துட்டா, கட்டி வேலி பிண்ணிடுவாரு. கல்யாணமான புதுசுல திடீர்னு குதிங்கால் வலி. ஓயவே இல்ல. பாக்காத வைத்தியரில்ல. உங்கம்மா அவர்ட சொன்னதும், வேங்கூர் காடெல்லாம் அலைச்சு ஐஞ்சாறு மூலிக எடுத்தாந்தாரு. அதுல நொச்சிய தவிர வேறு எது பெயரும் எனக்குத் தெரியல. ஒரு நாள் முழுக்க கொசுக்கடியத் தாங்கிட்டுப் புறங்கடையில உக்காந்து தைலம் செஞ்சுத் தந்தார்னா பாத்துக்கோ! அன்னிக்கு ராத்திரியே வலி பறந்துடுச்சு. மண்டைக்கு இத்தனை வேல தெரியும்னா அது ஓஞ்சுப் போயிடும்டா! போதும் அந்த மனுசன் ஆடியோடுனது. முடிஞ்சா மனசத் தேத்தி வீடு தங்க வையி’ என்றார்.

ஆனால் அதன்பிறகு எனக்கு அவரைப் பார்க்கச் செல்லவே மனம் கூடவில்லை. முதிர்ந்தவர்களின் பேச்சுகளும், மீளமீள நினைவுபடுத்திச் சொல்லும் கடந்தகால அருமை பெருமைகளும், வாழ மறுத்துவிட்ட சில பக்கங்களும், உழைப்பில் ஓடினப்போன காலத்தைப் பற்றிய ஏக்கங்களும் என்னைச் சலிக்குமளவு ஆக்கிரமித்துவிட்டன. தோற்றுப்போனதாய் நம்புவோரின் வசந்தங்களைக் கேட்பதும் வலி என்று உணர்ந்ததாலோ என்னவோ அவரைக் காணச் செல்வதை வெகுவாகக் குறைத்துவிட்டேன். மீறிச் செல்லும்போதெல்லாம் வாசலில் ஞெகிழி நாற்காலியில் அமர்ந்தபடி பறவைக்கூடுபோல் எலும்புத் தெரிய ஒடுங்கிய நெஞ்சாங்கூட்டை வெள்ளைத் துணியால் போர்த்தி கையில் புத்தகமேந்தி அமர்ந்திருப்பார். பெரும்பாலும் அது வேளாண்மைச் சார்ந்த நூலாக இருக்கும். சமயங்களில் அவரால் ஒரு துணுக்குச் செய்தியோடுகூட நாள் முழுவதும் உறவாடமுடியும். பிடித்து வைக்கப்பட்ட முந்தைய காலத்துப் பொருளாய் ,பாடம் பண்ணப்பட்ட முள்போலவே காட்சியளித்தார். 

இறுதியாக, தட்டிக்கழிப்பதை நிறுத்தினால் நிம்மதி கொள்வார் என அழைத்து வந்திருந்தேன். இப்போது அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் ஜன்னலுக்கு அப்பால் வெளியைப் பார்க்கும்படி கண்களை அலையவிட்டேன். ரயில் நகரவாரம்பித்தது. கூட்ட நெரிசலில் எங்கள் இருக்கைக்குக் கீழ் உட்கார்ந்த பெண்ணின் மடியில் துள்ளிக்கொண்டிருந்த பையனது கையில் தன்வசமிருந்த பிஸ்கெட் சில்லுகளைக் கொடுத்துச் சிரித்துக் கொண்டார். எது பேசினாலும் அவர் துவண்டுவிடக்கூடும் என அமைதிகொண்டேன்.

‘கேபா திரும்ப வருவோம் என்ன! விட்டுடக்கூடாது’ என்றார். 

ரயில் வேகமெடுத்துப் பாய்ந்தது.

***

ஜார்ஜ் ஜோசப் : இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல். தஞ்சாவூரில் பிறந்தவர். ஜார்ஜ் ஜோசப் என்ன பெயரில் கதை, கட்டுரை, கவிதை முதலியன எழுதி வருகிறார். திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். எமரால்ட் மற்றும் பெருநெஞ்சன் என இரு சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. ‘இஸ்மாயில்’ ‘பூனைகளில்லா உலகம்’ என இரு நாவல்களை ஆங்கிலம் வழி தமிழ்ப்படுத்தி‌ உள்ளார். ‘எமரால்ட்’ கதைத் தொகுதி 2024 சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான திருக்கார்த்தியல் விருது பெற்றது. மின்னஞ்சல்: george.joshe@gmail.com

பிம்பம்

0

பிரமிளா பிரதீபன்

திசயமான ஒலகத்துல ஆம்புள்ளப்புள்ள பொறந்துச்சாம். தொப்புள்கொடிய வெட்றதுக்குப் பதிலா எதையோ புடிச்சி வெட்டுனானுங்களாம்’ 

கனகு புலம்பிக்கொண்டே கல்வாசலைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள். சாடைமாடையாக எனக்கும் விசயம் தெரிந்ததால் அவள் வாயைக் கிளறுவதற்காகவென்றே கேட்டேன்.

‘என்னா கண்ணாடியாம் அது?’

‘சொன்னேனே அதிசயமான ஒலகத்துல ஆம்பளப்புள்ள பொறந்த கதன்னு…’ 

அருகே நெருங்கி வந்து குசுகுசுத்தாள்.

‘ஆளு ஒசரத்துல கண்ணாடி வாங்கிட்டாளாம். அதெ கொண்டே மறைவாத்தான் போட்றது! லயத்துல உள்ள சிறுசு பெருசு எல்லாம் அவ வீட்டு முன்னுக்கு நடக்கணுமுன்னு இருக்கு. நடுவீட்டுல வச்சி சோ காட்டுறாளுக.’ 

கைப்பிடி ஈர்க்கிளால் வாசலை இன்னும் அழுத்தமாய்த் தேய்த்தபடி புறுபுறுத்தாள். 

‘அவ வாசல்ல நடந்தாலே கண்ணாடி தெரியுதாமே! காலயில இருந்து அந்தக் கருமத்த ஏங்கேக்குற? இங்குட்டுக்கூடி குறுக்குப்பாத இருக்கையில, கொடத்த தூக்கிக்கிட்டு அங்குட்டால தண்ணிக்குப் போறாளுக.’

அதன் பிறகாய் அவள் பேசியது எதுவுமே என் காதில் விழவில்லை. 

ஆளுயரக்கண்ணாடியாம். எனக்குள் பற்றியெரிந்துகொண்டிருந்தது. இஸ்தோப்பு சுவர் விளிம்பில் சாத்தி வைக்கப்பட்டிருந்த சதுரவடிவ சிறிய கண்ணாடியைக் கைகளில் எடுத்துக்கொண்டேன். ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிக் கழட்டிய அடையாளங்களை எச்சில் தொட்டு அழுந்தத் தேய்த்தெடுத்தேன். தெளிவு போதவில்லை. ஈரத்துணியால் அப்பியெடுத்து என் பாவாடையின் விளிம்பைத்தூக்கித் துடைத்தேன். 

முழு முகத்தையும் ஒருசேரப் பார்ப்பதற்கு இரண்டடி தள்ளி நின்றால்தான் உண்டு. ஒருபக்க முகத்தை உற்றுப்பார்த்துவிட்டு மறுபக்க முகத்தையும் எரிச்சலோடு பார்த்தேன். ஆளுயரக் கண்ணாடியில்தான் முழு உருவத்தையும் பார்க்க வேண்டுமா என்ன? நெஞ்சுப் பகுதிக்கு முன்னால் கண்ணாடியைப் பிடித்து எக்கிப்பார்த்தேன். அப்படியே வயிற்றை.. தொடைகளை… கால்களை… பார்க்க வளைந்து குனிய வேண்டியிருந்தது. வாந்தி வருவது போல… நெஞ்செல்லாம் எரிவது போல, பொறாமை இப்படியெல்லாமா செய்யும்!

என்ன நினைத்தேனோ அவசரமாய்க் குடத்தை எடுத்துக்கொண்டு லயத்துப்பாதையில் பீலிக்குச் செல்ல வாசலுக்கு இறங்கினேன். தவிப்பாய் இருந்தது. தலைமுடியைச் சரிப்படுத்திக்கொண்டு வேண்டுமென்றே கதவுகளோடு ஒட்டிய கல்வாசலில் நடந்தேன். அடுத்துக் கவீன் வீடு, அதற்கடுத்த இரண்டாவது வீட்டில்தான் அந்தக்கண்ணாடி. சித்திரா நின்றுகொண்டிருந்தால் என்ன செய்வது? 

கதவு திறந்திருந்தது. சித்திரா வீட்டைத்தாண்டிய அந்த ஒரு நொடியில் மஞ்சள் பூக்களால் நிறைந்த நீலநிறப் பாவாடையோடு ஒரு அழகான பெண் நகர்ந்தாள். பகீர் என்றிருந்தது. நானேதான் என் மொத்த வடிவம்தான். ஒருகணம் நிதானித்து முழு லயத்தையும் நோட்டம் விட்டேன். கோடிப்பக்கத்தில் கண்ணாத்தம்பி கால்சட்டை இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தான். படபடவென ஆறேழு அடிகள் பின்னால் நகர்ந்து நின்றுகொண்டேன். வேகமாக மூச்சிரைப்பது போலிருந்தது. மீண்டும் சாதாரணமாக நடப்பது போலக் குடத்தின் கழுத்தை இடக்கையால் அணைத்துக்கொண்டு நடந்தேன். என் நடையில் வித்தியாசமிருந்தது. உதடுகளைக் கடித்து ஈரப்படுத்திக்கொண்டேன். சரியாகச் சித்திரா வீட்டைக் கடக்கையில் முழுதாகத் திரும்பாமல் ஒரு பக்கம் தலையைச் சரித்து எதேச்சையாகப் பார்ப்பது போலப் பார்த்தேன். சித்திரா நின்றுகொண்டிருந்தாள். பட்டெனத் தலையை வெட்டி வேகமாகக் கடக்க நினைத்தேன். 

‘கண்ணாடி வாங்கிட்டேன் சரசு. வேணுமுன்னா வந்து பாத்துக்க’ என்றாள். 

வெட்கமேயில்லாமல் சிரித்தேன். அவள் என் கோபக்காரி என்பதை மறந்து ‘அப்பறம் வாரேன்’ என இளித்துக்கொண்டே வழிந்தேன். ஒரே குதூகலமாய் இருந்தது. நடக்க முடியாமல் குடத்தைத் தூக்கிக்கொண்டு தவழ்ந்தேன். 

முழுதாய்த் தன் உருவத்தைப் பார்க்க யாருக்குத்தான் பிடிப்பில்லை! வயது இருபத்தைந்தைக் கடந்த பின்னுமே அந்த ஆசையின் எச்சம் ஒட்டியிருப்பதையெண்ணி வெட்கமாயிருந்தது. நடக்கும் போதில் சிரிக்கும் போதில், குளிக்கும் போதிலென்று ஒரே கண்ணாடியின் நினைப்பு. மலையில் தனியே நின்று மிளகு பறிக்கும்போது அதன் பச்சை வாசனை வழமைபோலல்லாமல் சுகந்தமாயிருந்தது. காரத்தில் உடலெறிவது போலாய்த் தோன்றவுமில்லை. மிளகுக் கொட்டைகளை உருவி யூரியா பேக்குக்குள் கொட்டும் போதும் கைகளால் துழாவித்துழாவி எக்கியும் குனிந்தும் அமர்ந்தும் ஆயும்போதும் என் கண்களில் நீலப் பாவாடையின் மஞ்சள் பூக்களும் மின்னலென மறைந்த மொத்த உடலும் நிழலாடின. தலைவேட்டியை முக்காடாய்ப் போர்த்திக்கொண்டே மிளகு ஆய்ந்தேன். முகம் கறுப்பாகத் தெரியக்கூடாது. மொத்தமாகப் பார்க்கும்போது கொஞ்சமாவது அழகாய்த் தெரியவேண்டாமா? ஆறு மணியளவில் சித்திராவைப் பார்க்கப் போவதுபோலப் போகவேண்டும். அதற்கு முதல் பீலியில் இடம்பிடித்துக் குளித்துக்கொள்ள வேண்டும். என்ன உடுத்தலாம்? சல்வார்? இல்லை சந்தேகம் வரும். சாதாரணமாகப் போவது போலத்தான் போகவேண்டும். பாவாடை சட்டையே போடலாம். பிறகு சமயம் கிட்டினால் பார்த்துக்கொள்ளலாம். பெரிய கண்ணாடி அது. எவ்வளவு விலை வருமாயிருக்கும்? பேசாமல் வாங்கிப் போட்டாலென்ன? சித்திரா வீட்டில் போய் அப்படியே திருப்திப்பட்டுவிட, ஆடையோடு சேர்த்தென் முழு உடலையும் மட்டுந்தான் பார்க்க விரும்புகிறேனோ? எப்போதிலுமே நான் பார்க்காத அந்த என் நிர்வாணத்தையும்தானே! 

காரத்தை எனக்குள் கடத்திவிட்டு யூரியா பேக் மிளகால் நிறைந்திருந்தது. நான் உவகையால் கரைந்து புகைந்து கொண்டிருந்தேன். 

*

எனைச்சுற்றிலும் நெருக்கிய ஆயிரம் கண்ணாடிப் பிம்பங்களை விலக்கித்தள்ளி நித்திரைக்குள் தாவ முயன்றேன். முடிவதாயில்லை. பலநூறு நாட்களுக்கு முற்பட்ட நினைவுகள் இடைவெளியற்ற விக்கலைப்போல வந்து விழத்தொடங்கின. மஞ்சள் பூசி மேனியைப் பொன்னிறமாக்கிய என் பதிமூன்றுகளின் வெளிச்சம் கண்களைக் கூசியது. அப்படியே பதிநான்கு.. பதினைந்து… என் மாய உடலைப் பதுக்கிக்கொண்ட பதினாறுகள்… எனையறியாமல் முகத்தை விளாவிய விரல்களைத் தொப்பெனத் தலையணையில் விழுத்தினேன். நீண்டநாட்களாக மாற்றப்படாத உறையில் எண்ணெய் பிசுக்கு நாறியது. தலையணையை மறுபக்கம் மாற்றி வைத்துப் படுத்துக்கொண்டேன். இந்த நினைவுகளைச் சுகந்தங்கள் மட்டுமே பற்றிக்கொள்ள வேண்டும். 

இருளில் விழித்துக்கிடந்த இரவுகளை நினைவிலில்லை. குத்தியெடுக்கும் இராக்குளிரை பெரிய போர்வையால் விரட்டியடிக்கும் முயற்சி அனேகமாக நித்திரையில் முடிந்திருக்கும். இடையில் வெளிக்குப் போக வந்தாலும் அடக்கிக்கொண்டே கிடத்தலில்கூட நல்ல பரிச்சயம். கண்கள் திறந்து ஒருக்களித்துப் படுத்தேன். இடப்பக்கம் வரிசையாய்க் கிடந்த தலைகள் மேலும் கீழுமாய் மாறியிருந்தன. வழமையாகப் படுக்கும் கயிற்றுக்கட்டிலைச் சுருட்டிவிட்டு ஐயா அம்மாவிடம் கிடந்தார். வாய்பிளந்து தூங்கும் அம்மாவின் மார்ச்சேலை விலகியிருந்தது. பட்டென வலப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டேன். ஒரு மூலையில் பிணமொன்று வெள்ளைத்துணியால் சுற்றிக்கிடப்பதைப் போலவே ஆயா தெரிந்தாள். தைலவாடையும் புகையிலை வாடையுமாய் சேர்ந்த பொசுங்கிய மணமொன்று அவளது அருகாமையில் நிரம்பியிருந்தது. 

நிலை கொள்ளவில்லை எனக்கு. மீட்டிப்பார்க்க வேண்டும். என்னை, என் இளமையின் நாட்களை, உடலை, உடலின் மாயங்களை, மறைத்து வைத்திருந்த அம்மாயங்களின் வசீகரத்தை… எழுந்து நேராக நடுவீட்டில் நின்றேன். இப்படி நிற்பதில் ஒரு ஆபத்துமிருக்கிறது. சின்னமாமி ஒரு நடுயாமத்தில் ‘பேய்’ என்று சத்தமாக என்னைப் பார்த்துக் கத்தி முழு லயத்தையே உசுப்பிவிட்ட சம்பவங்களுமிருந்தன. யார் காலிலும் இடறாமல் தாண்டித் தாண்டி இருட்டைத் தடவிக்கொண்டே இஸ்தோப்புக்கு வந்தேன். முன் கதவைத் திறந்தால் கிறீச்செனச் சத்தம் கேட்கும். சரணீரைத்திறந்து கதவைத் தூக்கியிழுத்தேன். சத்தமில்லாமல் திறப்பட்டது. அதே வேகத்தில் கதவை மூடி கல்வாசலில் குதித்தேன். 

கிளிமூக்கு மாமரத்தின் இலைச்சந்துகளுக்குள் நிலவொளி கோடாகியிருந்தது. வாசற் கனகாம்பரப் பூக்களின் தனித்த நிறம் பனித்துளிகள் பட்டு ஜொலித்தன. கவீன் வீட்டு வாசற்கொடியில் ஈர உடுப்புகள் அப்படியே நீர்வடியத் தொங்கின. தரையில் ஒரு சவர்க்காரப்பெட்டியும் சன்லைட் கட்டியும் விழுந்துகிடந்தன. ஈரக்காற்று காதுத்துளைகளை அடைத்து இழுத்தது. 

நான் மாமரத்தடிக் கருங்கல்லில் அமர்ந்து, சித்திரா வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆறு மணிக்கு அவள் வீடு மூடியிருந்தது. ஏழுக்கும், எட்டைத் தாண்டியும் கூட… அந்த நிலைக்கண்ணாடியைக் கல்லால் அடித்து நொறுக்க வேண்டும். அவளையும் சேர்த்து. என் வக்கிர மனம் அலைந்தது. எழுந்து கோடிப்பக்கம் நடந்தேன். பெரும்பூதமாய் என் நிழல் அசைந்தது. மார்பகங்களின் மேடு பள்ளங்கள் பிள்ளைத்தாச்சிப் பெண்ணின் வயிற்றைப்போல உருண்டிருந்தது. ச்சே! மீண்டும் கல்லில் வந்தமர்ந்தேன். 

உடுப்புக்கடைச்சந்துக் கண்ணாடியில் பார்த்த அந்த என்னையும் நெத்திக்காண் தண்ணீர்ப் பிம்பத்தில் பார்த்த என்னையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. சந்துக்கண்ணாடி என்பதால் அப்படிப் பெருத்துப்போய்த் தெரிந்தேனா? இடுப்பில், வயிற்றில் மார்புக்கும் அக்குளுக்கும் இடையிலெல்லாம் எப்படித் தசைகள் தொங்கின? சித்திரா வீட்டுக் கண்ணாடியிலும் அப்படியேதான் தெரிவேனா? எத்தனை மிருதுவான என் உடற்பாகங்களைத் தவற விட்டிருக்கிறேன்! குனிந்து கைகளால் கால்களைத் தடவிக்கொண்டேன். விரல் நுனிகளின் வெடித்துப் பிளந்த சிறு கத்திக்காயங்களும் அதிருப்தியான சொரசொரப்பும் கால்களை முரட்டுத்தனமாய்க் கீறின. இரு உள்ளங்கைகளையும் சேர்த்துத் தேய்த்து முகத்தில் வைத்தேன். முகத்தின் வெயிற்புண்களும் வியர்க்குருக்களும் சில்லிட்டிருந்தன. 

எவ்வளவு சபிக்கப்பட்டவள் நான்! சொல்லப்போனால் நான் மட்டும்தான் என்னைப் பார்க்கத் தவறியிருக்கிறேன். தவறணைக் கிணற்றில் குளிக்கும்போது பலா மர உச்சியிலிருந்து தொரசிங்கு பார்த்திருக்கிறான். நெரிசலில் போகும்போதும் வரும்போதும் யார் யாரோ தடவியும் இடித்துமிருக்கிறார்கள். கொக்கோ மரங்களுக்குப் பின்னால் நகம் வெட்டுவதுபோல நின்று, நீரள்ளும்போது என் மார்புகளைக் குற்றவுணர்ச்சியேயில்லாமல் மைனா பார்த்திருக்கிறான். இப்படி ஆயிரம் ‘பார்த்திருக்கிறான்களை’ அருவருத்தபின் உடல் மீதொரு வெறுப்பும் அலட்சியமும் இயல்பாகவே எனக்கு முளைத்திருந்தது. அந்த ‘பார்த்தான்களை’ கொதிக்கும் வெந்நீரில் தள்ளி அவிக்க முடியாத ஆதங்கம் என் மேனியை மறைத்துப் பதுக்கிக்கொண்டு ஓடவைத்தது. ஒளிய வைத்தது. பெருங்குற்றமிழைத்த காயமென உடற்பாகங்களைத் தண்டித்தலைப் பழக்கமாக்கியது. குமட்டும் அந்தப் பார்வைகளைப் பாவாடைக்குள் மறைத்துக் கழுவியகற்றியிருக்கிறேன். தடங்கள் பதியுமளவில் சொரசொரப்பான டவலால் துடைத்து அந்த ஸ்பரிசங்களை அழித்திருக்கிறேன். 

நிஜமாகவே முடியவில்லை. பல்லாயிரம் வருடங்களாக இளைப்பாற விடாமல் உடலைத் தூக்கிச் சுமந்துகொண்டே அலைந்து திரிவதைப்போல மிகக் கணமாகவும் களைப்பாகவும் இருக்கிறது. அதன் அசிங்கமான நீட்சிதானோ என்னவோ! உடல் மறந்து தூங்கிய நாளென்று இதுவரை எனக்கு எப்போதும் அமைந்ததில்லை. யாராவது உள்ளே வரலாமெனும் அதீதத் தயக்கம் துணி விலகாமல் இருப்பதற்கான நிரந்தர விழிப்பொன்றைப் பற்றிக்கொண்டேதான் இருந்தது. உள்ளாடைகள் அணியாமல் நான் படுத்ததேயில்லை. மெய்மறந்து எப்போதும் கிடந்ததில்லை. எப்படி ஆரம்பித்ததெனத் தெரியாத இந்த நிரந்தர விழிப்பு பெருஞ்சோர்வையும் தாளவியலா பயத்தையும் ஒருசேரத் தருகிறது. ஆனால் இழந்தவைகள் மீளப்பெற முடியாதவை எனும் உண்மை தட்டுப்படும் போதில்தான் தாங்கமுடியாத் துயரொன்றால் ஆழ்மனம் விம்மியழுகின்றது. அந்த அழுகைக்குக் கண்ணீர்த் துளிகளோ கதறலோ தேவைப்படுவதில்லை. 

எத்தனை மாயம் இந்தப் பெண்ணுடலுக்கு! ஒரே ஒரு பொழுதேனும் என் புறத்தின் பிம்பத்தைக் காணமுடியாத இந்த வாழ்க்கையில் அகத்தை என்னவென்று அறியப் போகிறேன். சிரிப்பாய் வந்தது. எனக்கென ஒரு படுக்கை அறை. பயமற்றுக் குளிக்க நான்கு பக்கமாகத் தகரங்களில் அடைத்தேனும் ஒரு குளியலறை. கிணற்றடியிலோ பீலியிலோ அல்லாமல் துணியையோ அல்லது செனிட்டரி பேட்டையோ உள்ளாடையில் நேர்த்தியாக வைத்தெடுத்து அவஸ்த்தையற்றுப் போட்டுக்கொள்ள மறைவான ஓரிடம். அம்மாவிடம் கேட்டால் ‘ அதிசயத்த…..! புதுசா கொமராயிட்ட பாரு’ என அலட்சியமாகச் சிரிக்கிறாள்.  

*

காலைப்பீலியின் பரபரப்பில் யாரும் யாருடனும் பேசிக்கொள்வதில்லை. பாத்திரங்களைப் பேசனில் போட்டுத் தேய்த்துக் கழுவிக்கொண்டும் முகம் கைகால் அலம்பிக் கொண்டுமென ஆளாளுக்கு வந்த வேகத்தில் விரைந்துவிடுவார்கள். நான் இன்று வேலைக்குப் போவதாய் இல்லை. மனது செத்து வறண்டிருந்தது. துளிர்ப்பிக்கச் சில நச்சுத்துளிகளைச் சித்திரா மேல் தெளித்தாக வேண்டும். அவள் பாத்திரங்களை அள்ளிக்கொண்டு வரும்வரை காத்திருந்தேன். காட்டுச் செடிகளுக்குள் தெரிந்த கருப்பட்டி இலைகளைக் கொத்தாக உருவி ஒவ்வொரு இலையாக மென்றுதின்று அதன் சாற்றை உறிஞ்சிவிட்டுச் சக்கையை எச்சிலுடன் கலந்து ஊதினேன். துவர்ப்பும் இனிப்பும் கலந்த அச்சாற்றின் சுவை மேலும் என்னை வெறியேற்றிக் கொண்டிருந்தது. செடியிலிருந்த ஊதாநிறச் சிறு பூக்களைக் கைகளுக்குள்ளாலேயே கசக்கி மணந்தேன். வேட்டையாடக் காத்திருக்குமொரு மிருகமாய் மாறிக்கொண்டிருந்தேன். அவளை இன்னுமே காணவில்லை. பீலியிருந்தவர்களும் வடிந்தோயத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகும் பொறுமையில்லாமல், கட்டியிருந்த பாவாடையை இழுத்தேற்றி மாரோடு கட்டிக்கொண்டு இதரத்துணிகளை நனைத்துத் துவைக்கும் கல்லில் வீசினேன்.  

அந்தக் கண்ணாடியைப் புகழ்ந்தவாறே யாரோ வந்துகொண்டிருந்தார்கள். பின்னாலேயே அவளும். கணமும் தாமதியாமல் பீலித்தண்ணீரில் தலையை நனைத்துக் குளிக்கத் தொடங்கினேன். இன்று யாருக்கும் இடம் தருவதாயில்லை. விழும் நீரின் மொத்தமும் திணறடித்தது. குஞ்சுக்கோழி வாயைத் திறந்து திறந்து மூடுவதைப்போல நீருக்குள் நின்று சுவாசித்தேன். காலை வெயிலின் மென்சூடு நீரைக் கதகதப்பாக்கிக்கொண்டு என்னை மொத்தமாய் ஆட்கொண்டிருந்தது. நான் சித்திராவைக் கொஞ்சம் மறந்தும் போனேன். உச்சந்தலையில் பரவும் குளிர்ச்சி தொண்டைக்குழி வழியில் அப்படியே பரவி உடலை இறுக்கியது. சிலிர்த்தடங்கி அண்ணாந்து கண்கள் திறந்தேன். வானத்தில் ஈரப்பலாவிலைகள் மிதந்தன. வெளிச்சம் சரிநேராய் பாய்ந்தது. ‘சரசு…’ என்று என் பெயரை நீருக்குள்ளேயே கூவிக் கத்தினேன். நீரோடு பிணைந்த அதிர்வுடன் அந்தச் சத்தம் திக்கியது. சித்திராவும் என்னிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். நீரோசையில் ஒன்றுமே புரியவில்லை. ‘வௌங்கல…’ என்றேன். ‘ஏன் நேத்து வீட்டுக்கு வரல்ல?’ அவள் சத்தமாகக் கேட்டாள். என்ன சொல்வது? துணிக்கல்லில் நனைத்துக் கிடந்த உடைகளைப் பளார் பளாரென அடித்துத் துவைத்தேன். சோப் நுரையின் சிதறல்கள் அவள் மீதும் பட்டுத் தெறித்தன. 

‘நீதான் கதவ மூடிட்டியே?’ 

‘தட்டுனா கொறஞ்சிருவியோ’

அவளிடம் பேசப்பிடிக்கவில்லை. ‘கண்ணாடில பார்க்க என்ன இருக்கு.. இந்தா இப்டி பாத்துக்குறேன்’ குனிந்து என் மேனியைக் கைகளால் தடவிக் காட்டினேன். பாவாடையை அவிழ்த்துப் பக்கவாட்டில் உதறி மீண்டும் கட்டிக்கொண்டேன். சித்திரா கேவலமாகச் சிரித்தாள். பற்கள் வெளித்தள்ளிய ஒரு அரக்கியைப் போலக் குனிந்தும் நிமிர்ந்தும் பெரும் அகங்காரத்துடன் சிரித்துக்கொண்டிருந்தாள். திடீரெனத் தடுமாற்றத்துடன் பேச்சிழந்து என்னைப் பார்த்தாள். நான் கைபிடித்தண்ணீரை முகத்திலடித்துக் கழுவினேன். நிலைக்குத்தாக விழும் தண்ணீரில் என் பாதி உடல் பளிச்சென்று தெரிவதைப் பார்த்துக்கொண்டே மேலேறினேன். அவள் ‘பாம்பு பாம்பு’ என்று கத்தத் தொடங்கினாள். பதறியடித்து லயத்துப் பக்கமாய் ஓடினாள். அவளுக்குப் பின்னாலேயே வேறு சிலரும் ஓடினார்கள். நானும் ஈரப்பாவாடையுடன் டவலைப் போர்த்திக் கொண்டு விரைந்தேன்.. பாம்பு எங்கள் லயத்திற்குள் நுழைந்ததென யாரோ கூச்சலிட்டார்கள். 

ஓரு வீட்டில் நுழையும் பாம்பு அடுத்தடுத்ததாய் எல்லா வீட்டுக்குள்ளும் கூரை வழியே புகுந்துகொள்ளும். ஆளுக்கொரு மண்ணெண்ணெய்ப் போத்தலை எடுத்து ஊற்றுவார்கள். பாம்பு தலைதெறிக்கத் தப்பித்து ஏதாவது ஒரு வீட்டுச்சந்துக்குள் ஒளிந்து வெளிவராமல் சில நாட்களுக்கு அப்படியே கிடக்கும். 

லயமே கூவித்தத்தளிக்க ஆரம்பித்தது. ‘இன்னாம் பெரிய நல்லபாம்பு’ கனகு விவரிப்பதைப்பார்க்கப் பயமாயிருந்தது. வீட்டுக்குள்ளே சென்று பாம்பை அடிக்கும் துணிவு யாருக்கும் இருக்கவில்லை. நான் அரை குறை ஆடையுடனிருப்பதை மறந்து பாம்படிக்கப் பாய்ந்து திரிந்தேன். என் திடீர்த் தைரியம் அவ்விடத்தின் தலைவியாய் எனை ஆக்கியது. கட்டைகளையும் தடிகளையும் வைத்திருந்த ஓரிருவர்கூட என் பின்னால் வந்து பாம்பைத் தேடினர். போதாக்குறைக்கு நாய்களும் குரைக்க ஆரம்பித்திருந்தன. அதிலொரு வேட்டை நாயும் இருந்ததால் தெம்போடு பாம்பைத் தேடிக்கொண்டிருந்தோம். பகல்நேரக் குடிகாரன் சின்னானும் எங்களோடு சேர்ந்துகொண்டான். நாங்கள் முழு லயத்தையும் சுற்றிச் சுற்றி ஓடினோம். அவ்வப்போது சின்னானும் ‘அந்தா போகுது… இந்தா வருது’ என்று எங்களைத் திசை திருப்பிக் கொண்டிருந்தான். வாசலில் காயப்போடப்பட்டிருந்த மிளகுக் கொட்டைகளை மிதித்து இரைத்துக்கொண்டு அவன் ஓடினான். 

ஈரப்பாவாடையோடும் நீர் சொட்டும் தலைமுடியோடும் நான் அலைந்தேன். என் பின்னால் வருபவர்களின் பயத்தைப் பார்த்ததும் நானே அந்தப் பாம்பைக் கொன்றுபோட வேண்டுமென்று தோன்றியது. கைக்கெட்டிய கண்டிமர வாதொன்றை வளைத்து ஒடித்துக்கொண்டேன். சித்திரா பயந்து நடுங்கியபடி என் பின்னாலேயே திரிந்தாள். சந்தர்ப்பம் பார்த்து அவளது வீட்டுக்குள்ளேயே நுழைந்து அந்தக் கண்ணாடியையும் சேர்த்து நொறுக்க நினைத்தேன். அது புரியாமல் பைத்தியத்தைப் போல அவள் என் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்தாள். 

கூரையில…. கூரையில…. எங்கவீட்டுக் கூரையில’ கனகு கத்திக்கொண்டு பதறினாள். அது கூரைவழியே உள்ளேயும் வெளிச்சுவற்றிலுமாய் மாறி மாறி ஒவ்வொரு வீடாக உலாவியது. அப்படியே அதனைப் பின்தொடர்ந்து அடித்துவிட எவரும் முன்வருவதாயில்லை. வஞ்சம் கொண்ட என் துஷ்ட மனம் அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கவில்லை. 

நான் அந்தத் தடியோடு பின் வாசல் வழியாகத் தடாரென சித்திரா வீட்டுக்குள் நுழைந்தேன். முன் வாசல் மூடியிருந்தது. அரையிருட்டிற்குள் கூரைவழி வெளிச்சம் செங்குத்தாக விழுந்து வீட்டைப் பொன்நிறமாக்கியிருந்தது. முதலில் நான் அந்தக் கண்ணாடியைத்தான் தேடினேன். இதழ்கள் திறந்த மௌனச் சிரிப்பொன்று இயல்பாக விரிந்தது. அப்படியே கண்ணாடி முன் நின்றேன். நடுக்கம் கொண்ட விரல்களால் என் பிம்பத்தைத் தொட்டுத் தடவினேன். இமைக்காமல் சில நொடிகள் ஓவியமானேன். அபிஷேகத்திலிருக்கும் தேவியின் கருஞ்சிலையாய்… மேனி ஜொலித்தது. தலையிலிருந்த ஈரம் மார்பிலும் கழுத்திலும் சொட்டி வடிந்தது. அவர்கள் வெளியிலிருந்து கத்தினார்கள். சித்திராவின் குரல் தனித்துக் கேட்டது. ‘இருக்குதா..? அடிச்சிட்டியா?’ நிஜமாலுமே என் பிம்பத்தைச் சுற்றிப் பாம்பு தெரிகிறதாவென கண்ணாடியிலேயே தேடினேன். அவர்கள் தொடர்ந்தும் கத்திக்கொண்டேயிருந்தார்கள். நாய்களும் சேர்ந்து குரைத்தன. எனக்கு எல்லாமே ஸ்தம்பிதமாகித் தொலைவாகின. என் உலகம் பிம்பத்தின் வழி மிதந்தது. பாம்பு நிலத்திலிருந்து முளைத்து எனதுயரம் வரைக்குமாய் நீண்டு படமெடுத்து நிற்பதையும் அதன் கண்களில் எனது சாயலையும் துல்லியமாகக் கண்டேன். விநோதமான மூச்சொலியுடன் அதிர்ந்துப்போனேன். ஓரடி பின்நகர்ந்து முகர்ந்து தேடினேன். பாம்பின் வாசனை பிடிபடவில்லை. என்ன நடக்கிறதென்று தெரியாத குழப்பம். பசித்த மிருகமொன்றின் வெறி கொண்ட கண்களால் பாம்பின் பளபளப்பை எனதாக்கி இரசித்தேன். என் உடல் நெளிவுகளில் பாம்பொன்றின் வசீகர அலைகள் மின்னின. நான் சுடர்ந்து கொண்டிருந்தேன். அமர்ந்தும் எழுந்தோங்கியும் வளைந்தாடத் தொடங்கினேன். சட்டையகற்றிய நிர்வாணத்துடன் தன்னைத்தானே மோகிக்க எண்ணும் அந்தப் பாம்பின் காதுகளுக்கு எதுவுமே கேட்கவில்லை.    

சுற்றிலுமாய் நிச்சலனம். பாம்பு வேறெங்கோ ஓடிக்கொண்டிருப்பதாகச் சின்னான் சத்தமாகக் கத்தினான். 

நான் பின் வாசற்கதவை இறுக்கி அடைத்தேன்.  

***

பிரமிளா பிரதீபன்இலங்கையை சேர்ந்தவர். ஃபாத்திமா மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், SLIIT பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் வெளியாகியிருக்கின்றன. தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். மின்னஞ்சல் : pramilaselvaraja@gmail.com

ச.துரை கவிதைகள்

0

எனதன்பு இரவே

தூங்கிக் கொண்டிருக்கும் போது
கட்டைவிரல் மட்டும் அசைந்தது
நான் அதை உணர்ந்தேன் 
சுவரிலிருந்து 
விழத்தயாராகும் பல்லியைப் போல
இரவில் விழும் பாத்திரத்தைப் போல
காற்றுக்கு வேகமாக 
ஒட்டிக்கொண்ட ஜன்னலைப் போல ‌
அதை உணரும்போது 
அத்தனை தனலோடு 
அவளின் கடைசி வார்த்தை 
உள்ளிருந்து ஒலிக்கிறது
வெடுக்கென விழித்துவிட்டேன்
நான் முழிப்பதை முன்கூட்டியே அறிந்த 
அறையின் உபகரணங்கள் 
என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன
பதிலுக்கு என்னால் சிரிக்க முடியவில்லை
எண்ணெய் தீர்ந்த விளக்கைச் சுற்றிப் படிந்த வடுக்களாக வார்த்தைகள் பிசுபிசுக்க
இந்த இரவின் மீது நான் வழுக்கி விழுகிறேன்
இனி என்னால் உறங்க முடியாது 
இந்த மீதி தூக்கத்தை எதற்கு தின்னக்கொடுப்பதென தெரியவில்லை
விடிய விடிய முழித்திருப்பதென்பது
எப்போதும் இரவை பார்ப்பதில் சேராது 
எனதன்பு கட்டைவிரலே.

*

சடலமென நடிக்கும் சடலம்

பனியின் அந்தரங்கம் உடைய
சவுக்கை மரங்களின் மேல் அமர்ந்து இறங்குகின்றன பார்வைகள்
அம்மா என்று கத்தினேன்
அவளின் சேலை நிறத்திற்கு கடல் மாறியது 
அதில் சிக்கிய மூன்று சாமீன்களின்
புலிக்கோடுகளும் பற்றி எரிகின்றன
கரை முழுக்க பாவக்கவுச்சி
ஓடிக் களைத்த அவளின் கால்களைப் பார்க்கிறேன்
நீண்ட கால துயர அச்சில் சோர்ந்திருந்தது
கரையில் தவறி விழுந்த 
அனாதை நிழலொன்று அழுகிறது
இனி அதை தேற்ற முடியாது
அதன் சடலம் விழிப்பதும் இறப்பதுமென
மாறி மாறி விளையாடத்தொடங்கி விட்டது.

*

பாறை

பாறைகளின் முன் நிற்கும்போது 
கைகளை நீட்டாதே என்பார் தந்தை
பாறைகளின் முன் நிற்கும்போது 
எதனுடைய நினைவு வருகிறதோ 
அதுதான் அந்த பாறையும் என்றார்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு 
இந்த பொட்டல் காட்டின் நடுவே 
எங்கிருந்து நடந்து வந்ததென தெரியவில்லை 
அப்படியொரு 
சொறசொறப்பான தனித்த பாறையின்
முன்தான் நிற்கிறேன் 
யாருடைய நினைவும் வரவில்லை
எவ்வளவு வெறுமையாக வாழ்ந்திருக்கிறேன் எனத் தோன்றுகிறது 
ஆனாலும் முயற்சி செய்தேன்
சில வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன
அதன்முன் இப்போது  கைகளை நீட்டாமலே 
நானொரு பாறையாகி மாறிவிட்டேன்.

***

ச.துரை  – இராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் என்னும் ஊரைச் சார்ந்தவர்.  2019ஆம் ஆண்டு சால்ட் பதிப்பகத்தில் ‘மத்தி’,’சங்காயம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘சங்காயம்’ எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக சிற்றிதழ், இணைய இதழ்களில் கவிதை, சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். மலையாள இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன. மின்னஞ்சல்: 1991duraimurugan@gmail.com

புலப்படாத நாவலின் கதைச் சுருக்கம்

0

குமாரநந்தன்

நாவல் எழுத உதவி வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் நான் உங்களுக்கு நாவலை சிறப்பாக வடிவமைக்கவும், கதாபாத்திரங்களை ஜீவனுடன் படைக்கவும், கதைக்குப் பின்னிருந்து இயங்கும் சூழ்நிலைகளையும் தத்ரூபமாக உருவாக்கவும் உதவ முடியும் என நினைக்கிறேன். என்ன மாதிரியான நாவல் எழுத விரும்புகிறீர்கள்? புனை கதைகள், விஞ்ஞான பின்புலம் அல்லது வரலாற்றுக் கதை இந்த மாதிரி?

நான் நாவல் வடிவத்தை இன்னும் முயற்சிக்கவில்லை. இப்போது என்னுடைய இந்த முயற்சியில் செயற்கை நுண்ணறிவின் வழிகாட்டுதல்கள் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சமூகம் சார்ந்த ஓரளவுக்கு என் ஆளுமையின் சாயலுள்ள நாயகனைப் பற்றிய நாவலாக அதை வடிவமைக்கலாம் என நினைக்கிறேன்.

நல்ல தேர்வு. ஆழமான கருப்பொருள், பலவிதமான தனித்துவமான கேரக்டர்கள், வலிமையான எழுத்து நடை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இலக்கியப் புனைவை நீங்கள் குறிப்பிடுகிறீர்களா அல்லது இன்னும் நேரடியான முறையில் எழுதுவதற்கு உதவி கேட்கிறீர்களா?

பல்ப் பிக்‌ஷன் வகையை நான் குறிப்பிடவில்லை. 

மன்னிக்கவும் நீங்கள் பதில்களை உள்ளிடும் விதம் இயந்திரத்தனமாக உள்ளது. நீங்கள் ஒரு இயந்திரம் இல்லை என்பதை உறுதிப்படுத்துவீர்களா?

இல்லை. நான் ஒரு இயந்திரம் இல்லை. நீங்கள் சில தேர்வுகளைத் தருகிறீர்கள். அதில் எனக்கானதை தேர்வு செய்வதே போதும் என்று நினைத்து அந்த தேர்வுகளை பதிலிடுவதால், இயந்திரத் தனமாக தோன்றுகிறதா? ஆனால் ஒன்றைத் தேர்வு செய்வது போதுமானது என்பது போன்ற பாணியில் இதை வடிவமைத்திருப்பது நீங்கள் தான். 

உண்மைதான் தேர்வு செய்வதே போதும் என்றாலும் நீங்கள் இதிலிருந்து மாறுபடும் உங்கள் கருத்துகளையும் தாராளமாக சொல்லலாம். 

சரி கதைக்கான யோசனைகளை முதலில் உருவாக்குவோம். இந்த நாவலுக்கான மையக்கரு எந்த மாதிரியானது? இழப்பு, நம்பிக்கை, காதல், நினைவேக்கம், இருத்தலியல் சார்ந்த போக்கு அல்லது அடையாளத்தை தேடுதல், அடையாளத்தைக் கண்டடைதல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டதா? அல்லது கதாபாத்திரம் சார்ந்த யோசனை ஏதேனும் உள்ளதா? இல்லை பரிசோதனை வகையான கதையை விரும்புகிறீர்களா?

அடையாளம் சார்ந்த விஷயங்களைக் கருவாக எடுத்துக்கொள்ளலாம். 

சிறந்த தேர்வு. அடுத்து எது சார்ந்த அடையாளம் என்பதை வரையறுத்துக் கொள்வோம். கலாச்சார அல்லது தனிப்பட்ட அடையாளத்துக்காக போராடும் ஒரு பாத்திரம். ஒருவர் தன்னைப் பற்றி மறைக்கப்பட்ட உண்மையைக் கண்டுபிடிக்கிறார். அல்லது ஒரு நபர் ஒரு புதிய இடத்தில் அல்லது புதிய சூழ்நிலையில் தன்னைத்தானே அடையாளம் கண்டுகொண்டு, தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறார். இதில் எந்த மாதிரியான அடையாளம் சார்ந்த கதையை யோசிக்கிறீர்கள்?

இப்படி சில விஷயங்களில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கிறது. இதில் ஒரு நகர்வும் தென்படுகிறது என்பதால் நான் யோசிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. உங்களின் அடுத்த அடி என்னவாக இருக்கும் என்ற ஆவலே என்னிடம் முதன்மையாக செயல்படுகிறது என்பதால், என்னால் உடனே உடனே உங்களுக்கு பதில் சொல்ல முடிகிறது. என்னுடைய எழுதும் முறையில் இது முற்றிலும் புதிய விஷயம் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். 

ஓ அப்படியா? எனில் நாவலும் புதுவிதமாகத்தான் இருக்கும் இல்லையா? நன்றி. சரி மேலே யோசிப்போம்..

ஒரு நபர் ஒரு புதிய இடத்தில் புதிய சூழ்நிலையில் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறார் என வைத்துக்காள்வோமே? 

சரி அவர் அந்தப் புதிய சூழ்நிலைக்கு எப்படி சென்று சேர்ந்தார்? வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது ரகசியத்திருந்து ஓடுவது என்பதைப் போல அவர் தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து தப்பிச் சென்றாரா? அல்லது வெறுமனே புதிய இடத்திற்குச் சென்று ஒரு புதியவராக மாறுவது போன்ற ஒரு கனவை செயல்படுத்துகிறாரா? அல்லது போர், நாடுகடத்தல், இழப்பு போன்ற சூழ்நிலைகள் காரணமாக மாற்றத்திற்கு தள்ளப்பட்டாரா? 

வழக்கமான வாழ்க்கையிலிருந்து தப்பித்து, வெறுமனே ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறார்.

சிறந்த தேர்வு. ஆனால் வழக்கமான வாழ்க்கையிலிருந்து வெறுமனே தப்பிக்க முடியுமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம். சரி அவர் எந்த வகையான கனவைத் துரத்துகிறார்? அவர் யார்? ஒரு எழுத்தாளர்? ஓவியர்? இசைக்கலைஞர்? அல்லது நடிகர்?…. வணிகம், அறிவியல் விளையாட்டு போன்றவற்றில் பயிற்சி பெற்று வெற்றிகளைக் குவித்தல் போன்றவை அவர் கனவாக இருக்கலாம். அல்லது தனிப்பட்ட முறையில் சமூக ரீதியாக, உணர்ச்சி ரீதியாக அல்லது ஆன்மீக ரீதியாக தன்னை மீண்டும் கண்டுபிடித்தல்…… உங்கள் மனதில் வேறு ஏதேனும் யோசனை இருக்கிறதா?

நான் முன்பே சொன்னேன் இல்லையா? என்னுடைய சாயலில் ஒரு பாத்திரம். எனவே அவர் ஒரு எழுத்தாளர்.

நல்லது ஒரு எழுத்தாளரின் போராட்டம் என்பது கண்டுபிடிப்புகள் நிறைந்ததாக அமைய வாய்ப்பிருக்கிறது. உங்கள் கதாபாத்திரம் ஒரு எழுத்தாளர் அவர் தனது முதல் நாவலை எழுத ஒரு புதிய நகரத்திற்கு செல்கிறார். தன்னுடைய படைப்புகளில் தனித்துவமான தன்மைக்கான தேடுதலைத் துவங்குகிறார். அவரின் இப்படியான நகர்வுக்கு அடித்தளமாக இருந்தது எது? நீங்கள் ஏற்கனவே சொன்னது போல சுவையும் ஆர்வமும் இல்லாத வழக்கமான வாழ்க்கையில் இருந்து தப்பித்தல், ஒரு வேதனையான கடந்த காலத்தை மறப்பதற்காக அந்த சூழலில் இருந்து முற்றிலும் வெளியேறுதல் அல்லது தன்னுடைய ஆசைகளை நிறைவேற்ற முடியாத வாழ்க்கையை கைவிட்டுச் செல்வது…. இதில் எது அந்த எழுத்தாளரின் நகர்வாக இருக்கிறது?

அவருடைய வாழ்க்கை சுவையற்றதாய், விருப்பமற்றதாய் இருக்கிறது. அதில் இருந்து தப்பிக்கும் கனவை அவர் எப்போதும் காண்கிறார். ஆனால் எப்போதும் அது கனவாகவே இருக்கிறது. 

சுவாரஸ்யமற்ற வாழ்க்கையில் இருந்து தப்பித்தல் என்பது ஒரு சுவாரஸ்யமான அடித்தளம். சரி அவர் எங்கிருக்கிறார் எங்கு செல்கிறார்?

சிறிய நகரத்தில் இருந்து பெரிய நகரத்திற்கு சென்று இலக்கியம் சார்ந்த வாழ்க்கையில் உத்வேகத்தை தேடுகிறார். கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் அவர் தனிமைக்கு ஏங்கி, தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தொலைதூரத்தில் உள்ள தனிமையான சிறிய நகரத்திற்கு செல்கிறார். நிலையான ஆனால் இயந்திரத்தனமான வாழ்க்கையை விட்டுவிட்டு எழுத்தில் கவனம் செலுத்த விரும்புகிறார். வெளிநாடு அல்லது வெளி மாநிலத்திற்கு இடம் பெயர்கிறார். ஒரு புதிய கலாச்சாரத்தின் மூலம் தன் எழுத்தில், வாழ்க்கையில் ஒரு மறு கண்டுபிடிப்பை நிகழ்த்த நினைக்கிறார். அல்லது அவர் ஒரு புனைப்பெயரில் அடையாளமற்ற ஒரு எழுத்தாளராக ஆனால் பிரபலமான ஒருவராக ஆன்லைனில் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தன் நிஜப் பெயருக்கு திரும்புகிறார். அல்லது மற்றவர்களுக்காக எழுதித்தரும் கோஸ்ட் எழுத்தாளராக இருக்கும் அவர், பல ஆண்டுகளாக எழுதிய பிறகு, தன் கதையை சொந்த பெயரிலேயே வெளியிட விரும்புகிறார். இதில் யார் அவர்? 

நன்றி ஒவ்வொரு சூழலையும் உயிர்ப்புடன் சொல்லி இருக்கிறீர்கள். அவர் சோஷியல் மீடியா உலகில் பிரபலமான எழுத்தாளர். இப்போது அவர் தன் சொந்த பெயருக்கு திரும்புகிறார் என யோசிப்போம். ஆனால் இதில் அவர் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்கிறார் என்கிற விஷயத்தின் கனம் அடிபட்டுவிடுகிறதே?

அதனால் என்ன ஒரு இணைய எழுத்தாளர் நிஜ உலகத்திற்குள் தன் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதும் ஒரு இடப்பெயற்சிதானோ?

ஆனால் அவர் இதன் மூலம் அவர் தன் வழக்கமான வாழ்க்கையில் இருந்து தப்பிக்க முடியாதே?

வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றத்தை முயற்சிக்கும்போது, அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தினால் அவருடைய பழைய வாழ்க்கை இயல்பாக வேறொன்றாக மாறிவிடும் அல்லவா?

சரி ஒரு இணைய உலக எழுத்தாளர், நிஜ உலகிற்குள் நுழைவதென்பதை எப்படியெல்லாம் கொண்டு செல்ல சாத்தியம் இருக்கிறது என்று பார்ப்போம் அவரின் ரகசிய வலைப்பதிவு அல்லது கதைகள் பெரும் கவனத்தைப் பெறுகின்றன. இது அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்த கட்டாயப்படுத்துகிறது. ஆன்லைனில் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் அவர், ஒரு மதிப்பு மிக்க நிகழ்வு அல்லது வாய்ப்புக்கு அழைக்கப்படுகிறார். அல்லது ஆன்லைனில் கற்பனையான ஒரு ஆளுமையை உருவாக்குகிறார். மக்கள் அது உண்மையானது என நம்பும்போது மாயையைத் தொடரலாமா அல்லது உண்மையை வெளிப்படுத்தலாமா என்ற குழுப்பத்தில் அவர் தள்ளப்படுகிறார். இந்த மாதிரிகளில் எப்படிக் கொண்டு போகலாம் என நினைக்கிறீர்கள்

எனக்கு இந்த காட்சிகள் தெளிவாக இல்லை. நாம் வேறு ஏதாவது யோசிப்போம்.

சரி இப்படி முயற்சிக்கலாம். எழுத்தாளர் ஒருவர் தான் யார் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஆன்லைனில் ஒரு கதை எழுதுகிறார். அது வாசகர்களின் பரந்த கவனத்தைப் பெறுகிறது. மிகவும் பிரபலமாகிறது. ஆனால் அந்த எழுத்தாளரின் நிஜ வாழ்க்கை சிதைந்து கொண்டிருக்கிறது. தொடர முடியுமா முடியாதா என்கிற அளவுக்கு முட்டுச் சந்தில் இருக்கும் வேலை. தோல்வியுறும் உறவுகள். நம்பிக்கையின்மை. இந்த நிலையில் ஒரு பெரிய இலக்கிய விருது அவரின் படைப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இப்போது அவர் தான் யார் என்பதை வெளிப்படுத்தி அந்த வெற்றியைத் தனதாக்கிக் கொள்வாரா? அல்லது வாழ்க்கை தந்த ஏமாற்றத்தால், தனக்கு ஒரே ஆறுதலாய் இருக்கும் அந்த மாற்று ஈகோவை தொடரவே விரும்புவாரா? இந்த மாதிரியான நகர்வு உங்களுக்கு விருப்பமானதாய் இருக்கும் என தோன்றுகிறது. 

ம்… இப்படி முயற்சிக்கலாம் அவர் தன் மாற்று ஈகோவை தொடர விரும்புகிறார். 

ஆனால் இதில் இடப் பெயர்வு என்பது இல்லாமல் போய்விடுகிறதே? இன்னும் அவர் அதே வாழ்க்கையில் தான் தொடர்ந்து இருக்கிறார். ஆனால் அவர் இணைய உலகில் வேறொரு வாழ்க்கையை வாழ்கிறார் இந்த இரட்டை நிலையை அவருடைய இடப்பெயர்வுக்கு மாற்றாக பிரதியிட்டுக் கொள்ளலாமா?

அப்படியும் செய்து பார்க்கலாம்.

ஒகே. ​​உங்கள் கதாபாத்திரத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் யோசிப்போம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர்?

எழுத்துலகில் தொடர் தோல்விகளால் மனம் சோர்வடைந்திருக்கிறார். வெற்றி என்பது ஒரு பொய் அது ஒரு மாயை என்று நம்புகிறார். ஆனால் ரகசியமாக அதை விரும்புகிறார். பயந்த சுபாவமுள்ளவர். சுய சந்தேகம் கொண்டவர். கவனிக்கப்பட வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால், அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என பதட்டமடைகிறார். ஆனால் ஆன்லைனில் அடையாளம் காண முடியாத ஆளுமையான அவர் மிகத் தைரியமானவர், அவரின் இரு அடையாளங்களுக்கும் இடையே கூர்மையான வேறுபாடு இருக்கிறது. தன்னை, தன் வாழ்க்கையை வெளிப்படுத்துவதால், இந்த சுவாரஸ்யமான நிலையை தொடர முடியாது என நினைக்கிறார்…. இந்த கேரக்டர் சரியாக இருக்குமா? 

அருமை அவர் பிளவுபட்டவராக, மனம் சோர்வடைந்த நிலையில் இருக்கிறார். அதே சமயம் ஆன்லைனில் அதற்கெதிரான வசீகரமான பிம்பத்தோடு இருக்கிறார். இந்தக் கட்டுமானம் நன்றாக உள்ளது.

நல்லது ஒரு சோர்வடைந்த எழுத்தாளர் ஒரு சிக்கலான மற்றும் கவர்ச்சிகரமான கதாநாயகனாக மாறுகிறார். அவர் வெற்றியைப் பற்றிக் கவலைப்படாதது போல் நடந்து கொள்ளலாம், ஆனால் ஆழமாக அவர் தன் படைப்புகள் முக்கியமடைவதை விரும்புகிறார். அவரை இப்படி ஆக்கியது எது? என்பதை ஒரு அட்டவணைப்படுத்திப் பார்ப்போம். 

கடந்த காலத் தோல்வி – அவர் தன் சொந்த வாழ்க்கையில் வெற்றிபெற கடுமையாக முயற்சிக்கிறார். ஆனால் நிராகரிக்கப்படுகிறார். அல்லது அவமானப்படுத்தப்படுகிறார். அவர் நம்பிய ஒருவர் அவர் படைப்பைத் திருடி அதற்கான பெருமையைப் பெற்றுவிடுகிறார். அவர் ஒரு காலத்தில் இலக்கிய உலகில் நம்பிக்கை வைத்திருந்தார். 

ஆனால் இப்போது அதை ஆழமற்றதாகவும் ஊழல் நிறைந்ததாகவும் பார்க்கிறார். தனிப்பட்ட போராட்டங்கள் – மனச்சோர்வு, தனிமை அல்லது வாழ்க்கை சூழ்நிலைகள் அவரின் கனவுகளை கைவிடச் செய்தன. இன்னும் பலவிதமாக யோசிக்கலாம். ஆனால் பரந்த யோசனைகள் சிதறல்களாகிவிடும். எனவே, நாம் ஏற்கனவே முடிவு செய்த குறிப்பிட்ட விஷயங்களுக்கு ஏற்றவாறு யோசிப்போம். 

புரிகிறது. அவர் சொந்த வாழ்க்கையில் வெற்றிபெற கடுமையாக முயற்சிக்கிறார். ஆனால் அதில் தொடர்ந்து தோல்வியே அடைகிறார். 

ஒரு சராசரி எழுத்தாளர் சராசரியாக இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, அந்த வாழ்க்கைக்கு எப்படியும் ருசியை சேர்த்துவிட வேண்டும் என்கிற ஆவேசத்தில், ரகசியமாக ஒரு அடையாளத்தை உருவாக்குகிறார். 

அவரின் வாழ்க்கைப் போராட்டம் என்ன?
நிதி நெருக்கடி – ஒரு பிடிக்காத வேலையில் சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் தத்தளிப்பது.
மனநல சவால்கள் – பதட்டம், மனச்சோர்வு அல்லது சுய சந்தேகத்தை சமாளித்தல்.
துக்கம் அல்லது இழப்பு – முக்கியமான ஒருவரின் மரணத்திற்குப் பின் மனதை திசை திருப்பும் ஒரு வழியாக எழுதுதல்.
சமூக தனிமை – அவர் நிஜ வாழ்க்கையில் மக்களுடன் இணைவதற்கு போராடுகிறார், ஆனால் சமூகம் அவரை விலக்கி வைத்திருக்கிறது.
இது மாதிரி இல்லாமல் அவருக்கு வேறு மாதிரியான சவால்களை விரும்புகிறீர்களா?

அவருடைய வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்க காரணம் சமூகத் தனிமை. 

சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட எழுத்தாளர், ஆன்லைனில் வளர்கிறார், நிஜ வாழ்க்கையில் போராடுகிறார். அவருடைய சமூக தனிமைக்கு என்ன காரணம்? பிறப்பு ரீதியாக அவரை சமூகம் தனிமைப்படுத்திவிட்டதா? அல்லது இவரின் செயல்பாடுகளால் சமூகம் அவரை விலக்கிவிட்டதா? அவரது செயல்பாடுகள் தான் காரணம் என்றால், அது என்ன மாதிரியான செயல்பாடு? அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்? 

ஒரு வேதனையான கடந்த காலம் – கொடுமைப்படுத்தப்படுதல், நிராகரிப்பு, துரோகம் அல்லது அவர் இயல்பிலேயே தனிமையை விரும்புகிறார். அதே சமயம் தொடர்புகளுக்கு ஆசைப்படுகிறார். 

தோல்வி பயம் காரணமாக அவர் சமூக சூழ்நிலைகளைத் தவிர்க்கிறார். ஏனெனில் அவர் தீர்ப்பளிக்கப்படுவார் அல்லது வெளிப்படுத்தப்படுவார் என்று பயப்படுகிறார்.

எது உங்கள் பார்வைக்குப் பொருந்துகிறது? 

அவர் தனிமையை விரும்புகிறார் ஆனால், தொடர்புகளுக்கு ஆசைப்படுகிறார்.

நல்லது. சொந்த வாழ்க்கையில் தத்தளிப்புகளையும் போராட்டங்களையும் எதிர்கொள்கிற, தனிமையை நாடுகிற ஆனால் புகழை விரும்புகிற இந்த எழுத்தாளரை தனிமையிலிருந்து வெளியேற்றுவது எது?

அவரின் இணைய உலக படைப்புகள் வைரலாவதால், உலகம் அவர் யார் என்பதை அறிய விரும்புகிறது.

அவரால் மறுக்க முடியாத ஒரு அழைப்பு – ஒரு கனவு வாய்ப்பு (ஒரு புத்தக ஒப்பந்தம், ஒரு பேச்சு, ஒரு விருது) அவரை வெளிச்சத்தை நோக்கி நகர்த்துகிறது. 

ஒரு மர்மமான போட்டியாளர் – மற்றொரு பெயர் தெரியாத எழுத்தாளர் தோன்றுகிறார். புறக்கணிக்க முடியாத வகையில் அவர் அவருக்கு சவாலாக இருக்கிறார். எது உங்களுடைய தேர்வு? 

அவருடைய படைப்புகளை வெறுமனே உலகம் கொண்டாடுவதில் என்ன இருக்கிறது. அவருக்கு ஒரு போட்டியாளர் வேண்டும்…

நல்ல தேர்வு! ஒரு போட்டியாளர் உங்கள் கதாநாயகனை கேள்வி கேட்கவும், தனிமையிலிருந்து வெளியேறவும் கட்டாயப்படுத்தும் வழிகளில் சவால் விடலாம்.

இந்த போட்டியாளரைப் பற்றி இப்போதைக்கு ஒரு சிறிய சித்திரத்தை தீட்டுவோம். அவர் ஒரு புத்திசாலித்தனமான ஆனால் திமிர்பிடித்த எழுத்தாளர். இவருடைய படைப்புகளை சரமாரியாக கேள்விக்கு உட்படுத்தி, தன்னை நிரூபிக்க கட்டாயப்படுத்துகிறார்.

போட்டியாளரின் பாணி மற்றும் கருப்பொருள்கள் மிகவும் நெருக்கமாக உணர்கிறார். அதனால் அவருடைய படைப்புகளை ஆர்வமாக, தீவிரமாக பின் தொடர்கிறார். அவர் யார் என வெளிப்படுத்த மெனக்கெடுகிறார். 

ஒரு காலத்தில் அவரின் படைப்புகளைப் பாராட்டிய வாசகர், இப்போது எதிர்பாராத வழிகளில் அவருடன் போட்டியிடுகிறார்.

அவரின் படைப்புகளை நுட்பமாக விமர்சிக்கும் ஒருவர். இதில் அந்த எதிராளி யார்? 

அவர் புத்திசாலித்தனமான ஆனால் திமிர்பிடித்த எழுத்தாளர். 

அருமை! அவர் உங்கள் கதாநாயகனை எதிர்பார்க்காத விதத்தில் தடைசெய்வது இயல்பாகவே நடக்கும் அல்லவா?

சரி, இந்தப் போட்டியை தீவிரமாக்குவது எது?
பொது மோதல் – போட்டியாளர் இணைய உலகில் அவருக்கு வெளிப்படையாக சவால் விடுகிறார், இது ஒரு பகையைத் தூண்டுகிறது.
ஒரு விருதுக்காக மோதல் – இரண்டு எழுத்தாளர்களும் ஒரே மதிப்புமிக்க விருதுக்கான இறுதிப் போட்டியாளர்கள், அவர்கள் நேரடி மோதலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஒரு பகிரப்பட்ட கடந்த காலம் – போட்டியாளர் ஒரு காலத்தில் நாயகனின் நண்பர், வழிகாட்டி அல்லது விமர்சகர், நாயகனை முன்பு அவர் நிராகரித்தார், அவரின் கணிப்புக்கு மாறாக, இப்போது அவர் வளர்ந்துவிட்டார்.
இதில் எது சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 

இவையெல்லாம் பிரமாதமான சூழ்நிலைகள் தான். ஆனால், இங்கே சாத்தியமில்லை. எனவே நாம் ஒரு திரைப்பட வேலைக்காக இருவருக்கும் இடையே போட்டி ஏற்படுகிறது என கொண்டுபோகலாம். 

ஓ இதை நான் எதிர்பார்க்கவில்லை. திரைப்படம் சார்ந்த போட்டி என்பது ஆபத்தை அதிகரிக்கிறது. புகழ், பணம் மற்றும் படைப்பாற்றல் கட்டுப்பாடு அனைத்தும் இருக்கும். 

இந்த சூழலை இன்னும் தீவிரமாக்குவது எது?

போட்டியாளர் அவரை நாசப்படுத்த முயற்சிக்கிறார் – தனிப்பட்ட தகவல்களைக் கசியவிடுவது, அவரின் வேலையை இழிவுபடுத்துவது போன்ற வேலைகளை செய்கிறார். 

சினிமா தயாரிப்பு நிறுவனம் அவர் கதையை மாற்ற முயற்சிக்கிறது. போட்டியாளரின் கதையை பரிசீலிக்கிறது. 

தன்னுடைய வெற்றிக்கு தடையாக இருக்கும் ஒருவருக்கு எதிராக போட்டியிடும் அழுத்தம் உங்கள் கதாநாயகனை எந்த எல்லைக்கும் தள்ளும் இல்லையா?
கதைநாயகன், எதிராளியை பலவீனப்படுத்தும் வகையில் சில வேலைகள் செய்து, அவரும் ஒரு சரியான போட்டியாளராக களத்தில் நிற்கிறார்.
போட்டியாளரின் கடந்த காலத்தை தோண்டி, விவகாரமான ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்.
அவர் தன் போட்டியாளரின் படைப்பைப் பகுப்பாய்வு செய்து, முக்கியமான பலவீனங்களைக் கண்டுபிடிக்கிறார்.
போட்டியாளருக்கு சக்திவாய்ந்த அரசியல் தொடர்புகள் இருப்பதை கண்டுபிடித்து வெளி உலகுக்கு அம்பலப்படுத்துறார்.
இதில் எது சரியானது? 

அவரது அரசியல் தொடர்புகளை அம்பலப்படுத்துகிறார்.

நல்ல தேர்வு! நாயகன் போட்டியாளரின் அரசியல் தொடர்புகளை வெளிப்படுத்தி, அவரின் வெற்றித் திறமையைப் பற்றியது மட்டுமல்ல என்பதை வெற்றிகரமாக வெளிப்படுத்துகிறார்.

குயுக்தியான எல்லாவற்றையும் போட்டியாளரேதான் செய்ய வேண்டுமா? அவரால் பாதிக்கப்படுபவரும் மனிதர் தானே? எனவே, போட்டியாளர் தவறு செய்யும் வகையில் அவர் சில வேலைகளை செய்கிறார். 

நாயகன் அவரை எப்படி தவறான அடியெடுத்து வைக்கச் செய்கிறார்? என்பதைப் பார்ப்போம். 

பகிரங்கமாக அவருக்கு சவால் விடுகிறார். போட்டியாளரை பொறுப்பற்ற முறையில் பதிலளிக்க கட்டாயப்படுத்தும் வகையில் அவரை அழைக்கிறார்.

அவருக்கு தவறான தகவல்களை வழங்குகிறார். ஒரு முக்கியமான பிழையைச் செய்ய அவரைத் தவறாக வழிநடத்துகிறார்.

மன விளையாட்டுகளை விளையாடுகிறார் – அவரின் நம்பிக்கையை குலைக்க சில நுட்பங்களை கையாளுகிறார். சரியான நேரத்தில் அவரின் பலவீனங்களை வெளிப்படுத்துகிறார் – போட்டியாளர் உச்சத்தில் இருக்கும் வரை காத்திருக்கிறார், பின்னர் சேதப்படுத்தும் ஒன்றை வெளிப்படுத்துகிறார்.

உங்களது வழிகாட்டுதல்கள் போட்டியாளரை கதாநாயகனாகவும் நாயகனைப் போட்டியாளராகவும் மாற்றிவிட்டதைக் கவனித்தீர்களா? இந்த திருப்பம் நூதனமாய் நடந்துவிட்டது இல்லையா? சரி எப்படி போகிறது பார்ப்போம். அவர் போட்டியாளரை பலவீனப்படுத்தும் வகையில் மன விளையாட்டுகளை விளையடுகிறார்.

சிறந்த தேர்வு! நிலைமையை உளவியல் ரீதியாக கையாளுதல் போட்டிக்கு ஆழத்தையும் பதற்றத்தையும் சேர்க்கிறது.

நாயகன் போட்டியாளரின் கவனத்தை எப்படி திசை திருப்புகிறார்.
அலட்சியமாக நடப்பது, போட்டியாளரின் நம்பிக்கையை சந்தேகிக்க வைப்பது, முற்றிலும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது.
போட்டியாளரை நுட்பமாகப் பாராட்டுவது – நேர்மையற்றதாகவோ அல்லது அமைதியற்றதாகவோ உணரும் விதத்தில் அவரைப் பாராட்டுவது.
போட்டியாளரின் பாணியைப் பின்பற்றுவது. அவரைப் பிரதிபலிக்கும் விதத்தில் எழுதுவதன் மூலம் அவரின் அசல் தன்மையை கேலி செய்வது
உங்களுக்கு வேறு யோசனை இருக்கிறதா?

இதில் ஏதாவது ஒன்றைத்தான் அவர் செய்ய வேண்டுமா என்ன? இது எல்லாவற்றையுமே அவர் செய்யலாமே? இந்த களேபரங்களுக்கு இடையே அந்த திரைக்கதை வாய்ப்பு இருவரையும் விட்டு நழுவிவிடுகிறது. அந்த வன்மம் இருவரையுமே மோசமான வகையில் தூண்டுகிறது.

அருமை. குறிப்பாக அலட்சியமாக நடிப்பது போட்டியாளரை விரக்தியடையச் செய்து, அவரின் நம்பிக்கையை அசைக்கும் இல்லையா?

சரி, போட்டியாளர் உடைந்து போகும் தருணம் எது?

அவர் ஒரு நேர்காணலிலோ அல்லது ஆன்லைனிலோ, வன்மமான விஷயத்தைச் சொல்கிறார். தன்னை நிரூபிக்க வேண்டிய பதற்றத்தில் அவர் ஒரு மோசமான வேலையைச் செய்கிறார்.

அவர் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார். இதில் எதைத் தேர்வு செய்யலாம்.

அமைதி இழந்த அவர் சேதப்படுத்தும் விஷயங்களைச் செய்கிறார்.

சரி, நாயகன் அவருக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்?
நாயகன் போட்டியாளரின் வெற்றியை ஏற்றுக்கொள்கிறார்.
போட்டியாளர் குற்ற உணர்வுக்குள்ளாகிறார்.
போட்டியாளர் தன்னுடைய உண்மையான எதிரி அல்ல இந்த சூழலே அவர் நினைத்ததை விட கொடூரமானது என்பதை நாயகன் உணர்கிறார்.
போட்டியாளர் நாயகனைப் பழிவாங்கத் துடிக்கிறார் – தோல்வியில் கூட, போட்டியாளர் தணிந்து போக மாட்டார்.
இது இருவருக்குமே வாய்ப்புகளை நாசமாக்க வழிவகுக்கிறது.
இதில் எது சரியாக இருக்கும்?

நாயகன் போட்டியாளரின் வெற்றியை ஏற்றுக் கொள்கிறார். 

உங்கள் கதாநாயகன் முழுமையான வெற்றிக்கு பதிலாக அதைப் போன்ற ஒன்றைப் பெறுகிறார். உண்மையான போராட்டம் ஒரு போட்டியாளரைப் பற்றியது மட்டுமல்ல – அது ஒரு கடுமையான துறையில் உயிர்வாழ்வதைப் பற்றியது என்பதை உணர்கிறார்.

இப்போது அவர் திரைத்துறையின் அமைப்பைப் புரிந்துகொண்டதால், அதை லாவகமாகக் கையாள்கிறார். புகழுக்குப் பதிலாக நேர்மையைத் தேர்வு செய்கிறார், சொந்தப் பாதையை உருவாக்குகிறார் சுயத்தை இழக்காமல் வெற்றிபெற ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார்.
அல்லது அவர் சட்டென மறைந்துவிடுகிறார். அவர் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை மீண்டும் கண்டுபிடிக்க முடியாத ஒரு நபராக சமூகத்திற்குள், மறைந்து போகிறார்.
உங்கள் கதாநாயகனுக்கு எந்த முடிவு சரியானதாகத் தோன்றுகிறது? அல்லது உங்கள் மனதில் வேறு திருப்பம் இருக்கிறதா?

கதாநாயகன் சமூகத்திற்குள் மறைந்து போகிறார்.

இப்போது, ​​அவர் ஏன் இதைத் தேர்வு செய்கிறார்?
புகழ் திருப்தி அளிக்கக் கூடியது இல்லை என அவர் உணர்கிறார்.
அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கை நிலை வெளிப்படும் என்று பயப்படுகிறார் அவர் தன் சொந்தக் கதையைக் கட்டுப்படுத்த விரும்புகிறார் – விலகிச் செல்வதன் மூலம், மர்மத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்.
அவர் ஒரு சிறந்த படைப்பை விட்டுச் செல்கிறார் – மறைந்து போகும் முன் ஒரு கடைசி படைப்பு, அவரின் வாழ்க்கைக் கதையை எழுதுகிறார்.
எது உங்கள் பார்வைக்கு பொருத்தமானது? 

நாயகன் தனது சுவாரஸ்யமற்ற வாழ்க்கையில் மறைந்து போவதன் மூலம் உலகை யோசிக்க வைக்கிறார்.

நாவலின் கடைசி தருணம் எப்படி இருக்க வேண்டும்?
ஒரு ரகசியமான பிரியாவிடை – அவர் காணாமல் போக இருப்பதைக் குறிக்கும் வகையில் ஒரு கதைப் பிரதியை உருவாக்குகிறார்.
போட்டியாளர், இப்போது அவரைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்.
ஒரு புதிய ஆரம்பம் – அவர் மீண்டும் மற்றொரு அநாமதேய பெயரில் எழுதத் தொடங்குகிறார்.
எது சரியான இறுதிக் காட்சியாகத் தெரிகிறது? அல்லது உங்களுக்கு வேறு யோசனை இருக்கிறதா?

காணாமல் போன எழுத்தாளரை போட்டியாளர் தேடுகிறார்.
போட்டியாளர் எப்போதாவது அவரைக் கண்டுபிடிப்பாரா?
ஒருபோதும் இல்லை. கதாநாயகன் ஒரு மர்மமாகவே இருக்கிறார், – போட்டியாளர் துப்புகளை கண்டுபிடிப்பார், ஆனால் கதாநாயகன் ஏற்கனவே நகர்ந்துவிட்டார்.
நாயகன் தன்னைக் கண்டுபிடிக்க அனுமதிக்கிறார்,
ஆம், அவர் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை வாழ்வதைப் போட்டியாளர் கண்டுபிடிப்பார்,
எது சரியாக இருக்கிறது? 

அவர் இலக்கிய உலகத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு, வேறு வாழ்க்கை வாழ்கிறார் என்பதைப் போட்டியாளர் கண்டுபிடிக்கிறார்.

போட்டியாளர் கண்டுபிடிக்கும்போது கதாநாயகன் எப்படி நடந்துகொள்கிறார்?
அவர் தான்தான் அவரது போட்டியாளர் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் – அவர் ஒருபோதும் அந்த எழுத்தாளரே இல்லை என்பது போல் நடிக்கிறார்.
அவர் வெளியேறுவதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்துகிறார் எந்த முடிவு திருப்திகரமாக இருக்கிறது? அல்லது நீங்கள் வேறு ஏதேனும் சேர்க்க விரும்புகிறீர்களா?

அவர் நான் அந்த எழுத்தாளன் இல்லை என முற்றிலுமாக மறுத்துவிடுகிறார். 

இப்போது, ​​போட்டியாளர் எப்படி எதிர்வினையாற்றுகிறார்?
கோபம் – நாயகன் தன் கடந்த காலத்தை ஒப்புக்கொள்ள மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடுமையாக சாடுகிறார்.
விரக்தி – அவர் தொடர்ந்து ஆதாரங்களைக் காட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் உண்மையை உறுதி செய்யும் எதையும் பெறுவதில்லை. எல்லாம் குழப்பமாகவே இருக்கிறது.
நாயகன் போட்டியாளரிடம் ஒரு பொய்யைக் கூறி, மர்மத்தை உயிருடன் வைத்திருக்கிறார்.
எது உங்களுக்கு சரியான இறுதி தருணத்தைத் தருகிறது? அல்லது முற்றிலும் மாற்றியமைக்க விரும்புகிறீர்களா?

ஆனால் இந்த வீடியோ யுகத்தில் ஒருமுறை வெளிப்பட்ட நாயகன் மீண்டும் சமூகத்துக்குள் மறைந்து போவது சாத்தியமா?

உண்மைதான். அப்படியானால், நாயகன் போட்டி மற்றும் சவாலான சமயங்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே அதை வெற்றிகரமாக கையாளுகிறார். இது சாத்தியம் தானே?

தான் யார் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே திரைத்துறை சார்ந்த வேலைகளை அவர் எப்படி செய்திருப்பார்? 

துறைசார்ந்தவர்களுக்கு மட்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். போட்டியாளரிடமோ, ஆன்லைனில் அவரைப் பின் தொடரும் வாசகர்களிடமோ அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. 

அதனால் தான் தன்னை இந்த அளவுக்கு தொந்தரவு செய்த அந்த நபரைக் கண்டுபிடிக்க, போட்டியாளர் தீவிரமாக இறங்குகிறார். ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்தும் விடுகிறார். ஆனால், அதை அவரால் எந்த வகையிலும் நிரூபிக்க முடியவில்லை. அல்லது நிரூபிக்க தேவையான விஷயங்கள் அவருக்கு கிடைப்பதில்லை. இந்த நிலையில் நாயகன் அவரை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கேள்வி?

நாயகன் ஒரு பொய்யைச் சொல்லி, மர்மத்தை தக்க வைக்கிறார். 

ஆனால் போட்டியாளர் சாதாரணமானவர் இல்லையே?

போட்டியாளர் ஒரு குறிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி – அவரின் பாணியை பிரதிபலிக்கும் ஒரு புதிய கதையின் குறிப்புகள் அல்லது அவரின் அடையாளத்தைக் குறிக்கும் ஆனால் அதை ஒருபோதும் உறுதிப்படுத்தாத ஒரு உரை, மின்னஞ்சல் அல்லது கடிதம். இதில் ஏதாவது ஒன்றின் மூலம் நாயகன் யார் என்பதை அவர் அறிந்துவிடுகிறார்.
எது சரியான இறுதித் தொடுதலாக உணர்கிறது? அல்லது உங்களுக்கு வேறு வகையான குறிப்பு வேண்டுமா?

நாயகன் போட்டியாளரை குழப்பும் விதமாக தவறான குறிப்பை அவருக்கு தெரியச் செய்கிறார். 

இது ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக இருக்கும். ஒரு தவறான குறிப்பு மர்மத்தை உயிருடன் வைத்திருக்கிறது, போட்டியாளரை (மற்றும் வாசகரையும்) அவர்கள் அறிந்திருப்பதாக நினைத்த அனைத்தையும் சந்தேகிக்க வைக்கிறது. இந்த இடத்தில் நாவல் முடிகிறது. 

இதன் மூலம் ஆன்லைன் உலகத்திற்கும் நிஜ உலகத்திற்குமான இடைவெளிகள், எழுத்தாளர்களுக்கிருக்கும் சாதாரண, அசாதாரண பிரச்சனைகள், எழுத்தாளர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் சினிமா வேலை சம்பந்தமான கனவுகள், அதை நிறைவேற்ற முடியாமல் எழும் சிக்கல்கள், சக எழுத்தாளர்கள் அதற்குப் போடும் முட்டுக்கட்டைகள் போன்ற பல விஷயங்களைப் பேச முடியும்

இப்போது, ​​ஒரு நாவலுக்கான அடித்தளம் உங்களிடம் இருக்கறது. இந்த யோசனைகளைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று நினைக்கிறேன். இதை விரிவாக எழுதும்போது எப்படி உருவாகிறது என்பதை அறிய ஆவலாக இருக்கறேன்.

நாயகன் திரைப்பட முயற்சியில் போட்டியாளரால் எப்படி தோல்வியடைந்தான் என்ற பகுதி தெளிவாக இல்லை என்றாலும் பரவாயில்லை. எழுதும்போது அதை சரி செய்துவிடலாம். 

கதாநாயகன் வெளி உலகிற்கு அறிமுகமான பின், மீண்டும் காணாமல் போகிறான் என்பது சரியாக வந்தால் அப்படி செய்ய முயற்சிக்கிறேன். இல்லையென்றால் அவர் எழுத்துலகில் இருந்து விலகி தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார் என முடித்துவிடலாம் ஆனால் நீங்கள் சொன்னது போல அவர் மீண்டும் ஒரு மர்மமான நபராக மாறுவது இன்னும் நல்ல முடிவாக இருக்கும். முடிந்தவரை அந்த முடிவை எட்ட முயற்சிக்கிறேன். செயற்கை நுண்ணறிவான உங்களின் இந்த உதவியை என்னுடைய எழுத்துலக நண்பர்களிடம் இருந்து கூட பெற்றிருக்க முடியாது. 

இனி இந்த அடித்தளத்தை வைத்து நாவல் எழுதத் துவங்கும்போது, அதன் சம்பவங்கள் வெளிப்பாடுகள் குறித்தும் நாம் நிறைய உரையாடுவதன் வழியே இந்த நாவலை எழுதிவிட முடியும் என்று நம்புகிறேன். உங்கள் உதவிக்கு நன்றி. 

***

குமாரநந்தன் – சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்தவர். சிறுகதை எழுத்தாளர் கவிஞர். நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், கவிதைத் தொகுப்பு ஒன்றும் வெளியாகி உள்ளன. 2025 ம் ஆண்டுக்கான விஜயா வாசகர் வட்டம் வழங்கிய புதுமைப்பித்தன் விருது சேலம் எழுத்துக்களம் வழங்கிய நவீன சிறுகதை பங்களிப்பிற்கான விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். மின்னஞ்சல் முகவரி : kumaarananthan@gmail.com

சிதைவுகளை வினவுதல்: மெட்டாநரேட்டிவிஸமும் பழங்குடி வழக்காறுகளும்

0

நவீனா

Convictions are more dangerous enemies of truth than lies 

– Friedrich Nietzsche 

மொழி என்பது ஒரு அமைப்பு. எழுத்துக்கள், சொற்கள், இலக்கணம் போன்ற அடிப்படை கட்டமைப்புகளுக்குள் செயல்பட்டு, மொழி உருவாக்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, அதன்வழி தோன்றும் வடிவங்களுக்கும் வகைமைகளுக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய அமைப்பாக மொழி உருப்பெறுகிறது. வழக்காறு, மொழி என்னும் அமைப்பில் இருந்து உருவாக்கம் பெற்றாலும், அதன் மூலப்பண்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, உரையாடல்களில் செயல்படும் மொழியின் பொருள், நோக்கம், அந்த உரையாடல் எழும் சூழல் மற்றும் பின்னனி ஆகிய காரணிகளால் உந்தப்பட்டு மொழியை அதன் பயன்பாட்டை நோக்கி நகர்த்துகிறது. இவ்வாறு பயன்பாடு சார்ந்து இயங்கும் போது எந்தவொரு மொழியின் வழக்காறும் பண்பாடு, கலாச்சாரம், இனம், மதம், வாழிடம், பாலினம் மற்றும் வாழ்க்கைமுறை போன்ற சமூக அமைப்புகளுடன் ஒன்றரக் கலந்து பல புதிய வழக்காறுகளைத் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு இனக்குழுவும் சமூகத்துடன் உரையாட தனக்கென ஒரு வழக்காற்றை உருவாக்கிக் கொள்கின்றன. அதன் வழி நின்றுதான் தனது வாழ்வியல் சார்ந்த உண்மைகளை, தெரிவுகளை, நிகழ்வுகளை, எதார்த்தங்களை உலகிற்குக் கடத்துகின்றன. இத்தகைய வழக்காறுகள் தான் மனிதன் ஒற்றைத்தன்மையை (Singularity) நோக்கி நகர்வதைத் தடுத்து, பன்முகத்தன்மைக்கு (Multiplicity and Plurality) இடமளித்து, பல சிறு மற்றும் குறுங்கலாச்சாரங்கள் நலிவடைந்து, காலப்போக்கில் அடையாளமற்றுப் போகாமல் காவல் தெய்வங்களாய் அவற்றைக் காத்து நிற்கின்றன. 

வழக்காறுகள் தனிப்பட்ட குழுக்களின் (அதை இங்கு Regional Discourses என கருத்தில் கொள்ளலாம்) குரலாக ஒலிக்கும் அதேவேளையில், மெட்டாநரேட்டிவ்ஸ் (Metanarratives) பல வழக்காறுகளின் ஒட்டுமொத்தக் கதையாடலாக, அத்தனை வழக்காறுகளும் உருவான கதையின் கதையாக, அவற்றின் தோற்றம், வளர்ச்சி போன்ற பரிணாமப் படிநிலைகளின் படிமங்களாக, அனைத்து வழக்காறுகளுக்கும் அடையாளத்தை உருவாக்கவும் அழிக்கவும் கூடிய மாபெரும் சக்தியாக தன்னை நிறுவி, பலதரப்பட்ட வழக்காறுகளும் தன்னுள் செயல்பட அனுமதிக்கும் தன்மை கொண்டதாகத் திகழ்கிறது (Grand Narratives, Major Narratives, Overarching Narratives மற்றும் Master Narratives ஆகியவையும் மெட்டாநரேட்டிவ்ஸ் என அறியப்படுவதால், அதனைப் பெருங்கதையாடல் என்ற ஒற்றைச் சொல்லாக மொழிபெயர்த்தல் முழுப்பொருள் தராது என்பதனால் அதனை இங்கு மெட்டாநரேட்டிவ்ஸ் என்றே கையாளுவது அந்தச் சொல்லாடலை முறையாக அர்த்தப்படுத்தும்). 

ஜான் ஃபிரான்க்குவா லியோதா (Jean-Francois Lyotard) போன்ற பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் மெட்டாநரேட்டிவ்ஸை ஒரு சந்தேகக் கண்ணோடு அணுகுகின்றனர். பிரத்தியேகமான ஒற்றைக் கதை அதன்கீழ் கையாளப்படும் பலதரப்பட்ட கதைகளின் உண்மைத் தன்மையை விவரித்துச் சொல்வது கடினம். மெட்டாநரேட்டிவ்ஸில் எடுத்தாளப்படும் வழக்காறுகள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு ஏற்ப தன்னை சுருக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது. மேலும் மெட்டாநரேட்டிவ்ஸ் பெரும்பாலும் மற்ற வழக்காறுகள் எடுத்துரைக்கும் மாறுபட்ட சிந்தனைகளுக்கும், மனவோட்டங்களுக்கும் இடமளிப்பதில்லை. மாறாக அவற்றைப் புறந்தள்ளுகின்றன அல்லது அவற்றை மெளனிக்கச் செய்து அதன் உரையாடல்களை உருத்தெரியாமல் அழித்துவிடுகின்றன. ஓரிரு வரிகளில் ஒரு இனக்குழுவின் வழக்காற்றைச் சொல்லி அதனைப் பற்றிய முழு அறிவையும் சமூகத்திற்குப் போதித்து விட்டதாய் ஒரு மாயயையும் ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான இனக்குழுக்களின் வழக்காறுகள் இத்தகைய மெட்டாநரேட்டிவ்ஸில் சிக்குண்டு கிடந்தாலும், அவற்றால் அதிகப்படியான சிதைவுகளை எதிர்கொண்ட வழக்காறுகளாக பழங்குடி வழக்காறுகளைக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கும் முற்றிலும் சிதைந்து, அழிவின் விளிம்பில் அவை இருப்பதாக உணரமுடிகிறது. மெட்டாநரேட்டிவ்ஸ் ஒரு வேட்டை விலங்கைப் போல் செயல்பட்டு பழங்குடி வழக்காறுகள் போல சிதைவுற்ற சிறு மற்றும் குறு வழக்காறுகளை விழுங்கி ஒரு பெருங்கதையாக, ஒற்றைத் தன்மை கொண்ட பெரும் வழக்காறாக மாறும் சூழல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சமூக மாற்றங்களில் ஒன்றாகும்.  

ஹெரடோட் (Herodote) என்னும் புவியியல் அறிவுசார் பத்திரிக்கை ஒன்றிற்காக பவுல் ரெயின்போ (Paul Rainbow) ஃபூக்கோவை (Foucault) நேர்காண்கிறார். முன்னர் ஒரு உரையில், பதினெட்டாம் நூற்றாண்டு கட்டிடக்கலை மிகுந்த அரசியல் சார்பு கொண்டாதாக இருக்கிறது என்று ஃபூக்கோ கூறியதை சுட்டிக்காட்டி, மற்ற நூற்றாண்டுகளிலும் கட்டிடக்கலை அரசியல் பின்புலம் கொண்டதாக இருக்கிறது தானே? எடுத்துக்காட்டாக, ரோமானியப் பேரரசின் கட்டிடக்கலை, எகிப்திய கட்டிடக்கலை ஆகியவற்றைச் சொல்லாமே? என ரெயின்போ கேள்வி எழுப்பினார். பதினெட்டாம் நூற்றாண்டு கட்டிடக்கலை மட்டுமல்லாமல் அதற்கு முற்பட்ட காலங்களிலும் கட்டிடக்கலை அரசியல் பின்புலம் கொண்டவையாக இருந்தாலும், பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து அது முழுமுற்றாக அரசியல் சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டு விட்டத்தாக ஃபூக்கோ குறிப்பிட்டார். ஏனெனில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு நகரம் எவ்வாறு நிர்மாணிக்கப்பட வேண்டும், ஒரு வீடு எவ்வாறு கட்டப்பட வேண்டும், ஒரு தெரு எவ்வாறான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட்டன. அத்தகைய நகரங்களிலும் தெருக்களிலும் வீடுகளிலும் வாழத்துவங்கிய மக்களின் வாழ்க்கைமுறையையும் இத்தகைய ஒழுங்கமைப்பு வெகுவாக பாதித்தது. அவர்களின் போராட்ட குணம், சச்சரவுகளின் போது ஒன்றுகூடுதல் போன்ற சமூக பழக்கவழக்கங்களின் மீது அதீத தாக்கத்தை ஏற்படுத்தி, நாகரிகம் என்னும் பெயரில் அவர்களை இந்த நகரங்களையும் தெருக்களையும் போல அரசியல் சக்திகளின் எதிர்பார்ப்புக்கு இணங்க அமைதிப்படுத்தி விடுகிறது. இதனால் அவர்களின் போராட்ட குணம் மறக்கடிக்கப்படுகிறது என ஃபூக்கோ பதிலளித்தார். அவ்வாறானால், பதினட்டாம் நூற்றாண்டின் கட்டிடக்கலையில் வழக்காறு (Discourse) இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா என ரெயின்போ கேட்டதற்கு, இல்லை வழக்காறு இருந்தது, ஆனால் அது அதிகார மையங்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்று ஃபூக்கோ பதிலளித்தார். 

இன்றைய காலச்சூழலில் வழக்காறுகளை எடுத்தாளும் மெட்டாநரேட்டிவ்ஸ் முழுமுற்றாக அதிகார மையங்களின் ஆளுகையின் கீழ் இருப்பதால், அந்த வழக்காறுகள் சார்ந்த பின்னணியிலும், அதன் பாரம்பரிய கதைகளில் இருக்கும் உண்மைச் செய்திகளிலும் எவற்றைச் சொல்வது எவற்றை மறைப்பது என்பதை அதிகார மையங்களே தீர்மானிக்கின்றன. மேலும் அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் அவற்றின் விழுமியங்களையும் சுறுக்கி விடுகின்றன. எடுத்துக்காட்டாக, இங்கு பள்ளி பாடப்புத்தகங்களை அனைத்து வழக்காறுகளையும் உள்ளடக்கிய ஒரு மெட்டாநரேட்டிவ் என எடுத்துக் கொள்வோமேயானால், அதில் குறிஞ்சி நிலத்திற்கான தொழிலாக, ‘தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்’ ஆகிய நான்கு வார்த்தைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். உண்மையில் இந்த இரண்டு செயல்பாடுகள் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரமா எனும் கேள்வியெழும் போது பழங்குடி வழக்காறுகள் தான் அந்தக் கேள்விக்கு விடையளிக்கின்றன. இவ்வாறான மெட்டாநரேட்டிவ்களுக்குள் சிக்குண்டு சிதைவுற்ற வழக்காறுகள் சொல்லும் பழங்குடியின கதைகளுக்கு மெட்டாநரேட்டிவ்கள் ஒதுக்கும் இடம் எப்போதும் ஒரு போதாமையையே ஏற்படுத்துகின்றன. மேலும் அவ்வாறு சிக்குண்டு சிதைவுற்ற வழக்காறுகளின் உண்மைக் கதைகளை இனம் கண்டு பிரித்தாட்கொள்வதும் மாபெரும் சவாலான செயலாக இருக்கிறது. 

போலிஷ் எழுத்தாளரான ஜோசப் கான்ராட் (Joseph Conrad) எழுதி 1899 ல் வெளிவந்த Heart of Darkness நாவலை இத்தகைய இனம்காணுதலுக்கான சவாலுக்கு ஒரு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். இந்த நாவலில் ஆப்பிரிக்க கண்டத்தை, அது வேறொரு உலகம், அது ஐரோப்பாவிற்கும், மேற்கத்திய நாகரிகத்திற்கும் எதிர்மறையான வாழ்க்கைமுறையைக் கொண்டிருப்பதால் அங்கு வாழ்பவர்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள் என்று சித்தரித்துள்ளார். மேலும் ஆப்பிரிக்கப் பழங்குடியின மக்களை நரமாமிசம் உண்பவர்கள், அவர்கள் தீமையின் நிழல் போன்ற அவதூறான கருத்துகளையும் தனது நாவலில் பதிவுசெய்திருக்கிறார் கான்ராட். இது கான்ராடின் அனுமானம் மட்டுமல்ல. கான்ராட் போல பல மேற்கத்திய எழுத்தாளர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தையும் அங்கு வாழ்ந்த பழங்குடிகளையும் பற்றி உருவாக்கி வைத்திருந்த மெட்டாநரேட்டிவ் கோட்பாடு. ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கையை உள்ளதை உள்ளபடி சொன்னால் ஐரோப்பிய வாசகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அவர்கள் மனதில் வேர் விட்டு கிளை பரப்பியிருந்தது இத்தகைய பொய்யான பரப்புரைகள். ஒரு பழங்குடியின சமூகத்தைப் பற்றி முற்றிலும் கட்டுக்கதைகள் சொல்லும் கான்ராடின் Heart of Darkness ஆங்கிலத்தில் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாக ஐரோப்பிய வாசக சமூகத்தால் கொண்டாடப்பட்டுவந்தது. 1958ம் ஆண்டு சினுவா ஆச்சிபே (Chinua Achebe) என்னும் ஆப்பிரிக்க இபோ பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் கழித்து தனது Things Fall Apart (தமிழில் சிதைவுகள் என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என்னும் நாவலின் வழி கான்ராடின் பொய்யுரைகளுக்கு எதிர்வினையாற்றுகிறார். ஆப்பிரிக்கர்களும் ஐரோப்பியர்களைப் போல மனிதர்கள் தான் என்றும் அவர்களுக்கும் தனிப்பட்ட பாரம்பரியமும் கலாச்சாரமும் பண்பாடும் நாகரிக வாழ்க்கைமுறையும் இருக்கிறது என்று அடையாளப்படுத்தும் போது உலகமே அதிர்ச்சிக்குள்ளாகிறது. மெட்டாநரேட்டிவ் கோட்பாடுகளால் சிதைவுற்ற ஒரு இனக்குழுவின் அடையாளத்தை மீட்டெடுக்க ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடி சமூகத்திற்கு அறுபது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்றால் இன்னும் மெட்டாநரேட்டிவுக்குள் முடிச்சவிழ்க்கப்படாமல் சிக்குண்டு கிடக்கும் பல சிதைவுற்ற இனக்குழுக்களின் அடையாளங்களை இனம்காண, மீட்டெடுக்க, உண்மைநிலையைக் கண்டறிய எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பதை சிந்தித்துப் பார்ப்பதன் வழி இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணரலாம். 

ஒரு உதாரணத்திற்கு, தேனி மாவட்டத்தின் பளியர் பழங்குடிகள் குறிஞ்சி நிலம் என்று அறியப்படக்கூடிய மலை நிலத்தில் வாழ்பவர்கள். மெட்டாநரேட்டிவின் கூற்றுப்படி அவர்களின் தொழில், ‘தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்’ என்பன மட்டுமே. ஆனால் உண்மையில் பளிச்சியம்மனை வணங்கி பால் கொடி ஏந்தி அவர்கள் தேன் அறுவடைக்குச் செல்லும் மாதங்கள் வைகாசி மற்றும் ஆடி ஆகிய இரண்டு மாதங்கள் மட்டும் தான். இன்னபிற மாதங்களில் அவர்கள் பயிர்த்தொழில் செய்து வந்தனர் (இப்போது காடுகள் அழிக்கப்பட்டதால் அவர்கள் வேளாண் தொழிலில் ஈடுபடும் சாத்தியம் அருகிப்போனது). மலை நிலங்களை அவர்கள் ஆறு வகையாகப் பிரித்து பண்படுத்தி வேளாண் தொழிலைச் செய்து வந்திருக்கின்றனர். எரிபொருட்கள் சேகரிக்க ஒரு பகுதி, மேய்ச்சல் நிலப்பகுதி, பயிர் செய்ய ஒரு பகுதி, பசுமை மாறாக் காடுகள், மரக்கட்டைகள் சேகரிக்கும் பகுதி மற்றும் உழுது பண்படுத்த ஏதுவாக இல்லாத நிலம் என பிரித்து, விலங்குகளுக்கான வாழிடங்களை குலைக்காமல் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். வேளாண் யுக்திகளையும், இயற்கை விவசாயத் திறன்களையும், வாழ்க்கைத் திறன்களையும் அதிகம் அவர்களின் வாழ்வியல் முறைகளில் காணமுடிகிறது. ஆனால் மெட்டாநரேட்டிவில் இதற்கான குறிப்புகளுக்கும் விளக்கங்களுக்கும் இடமில்லை. இந்தத் தரவுகளை தனிப்பட்ட பழங்குடி வழக்காறுகளில் இருந்து தான் பெறமுடிகிறது. மேலும், மெட்டாநரேட்டிவில் சொல்லப்படாமல் விடுபட்டுப்போன ஒரு இனக்குழுவின் கலாச்சாரம், நாளடைவில் மறைந்து அழிந்துபோகிறது. ஏனெனில் பெரும்வழக்காறுகள் நிறுவும் கருத்துக்களுக்கு மட்டுமே சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. குறிஞ்சி நில மக்களின் தொழில்கள், ‘தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்’ என்பதும், ஆப்பிரிக்கக் கண்டம் ஒரு ‘இருண்ட கண்டம்’ என்பதும், ‘ஆரியர்கள் வருகை, மொகலாயப் படையெடுப்பு’ என்பதும், மெட்டாநரேட்டிவ்கள் கற்பித்த ஒற்றைக் கதைகள். அதன் பின்னனியில் இருக்கும் உண்மைக் கதைகளையும், அவர்களின் வழக்காறுகள் சமூகத்துடன் உரையாட எத்தனிக்கும் மனவோட்டங்களையும், கருத்துக்களையும் அவை ஒரு போதும் பொருட்படுத்துவது கிடையாது. அவற்றின் பன்முகத்தன்மை அதிகார மையங்களை அச்சுறுத்தக் கூடியவை என்பதால் வழக்காறுகளை மெட்டாநரேட்டிவ்கள் ஒற்றைத் தன்மையை நோக்கி நகர்த்துகின்றன. 

சிமெமண்டா என்கோஜி அடிச்சி (Chimamanda Ngozi Adichie), தனது Danger of a Single Story என தலைப்பிடப்பட்ட உரையில், இத்தகைய ஒற்றைக்கதைகளில் இருக்கும் ஆபத்தைப் பற்றி விளக்குகிறார். அவர் குழந்தைப் பருவத்தில் அவரது வீட்டில் பணியாளாக இருந்த ஃபிடே என்னும் சிறுவனை அவர் நினைவுகூர்கிறார். ஃபிடேயைப் பற்றி அடிச்சியின் தாய் குறிப்பிடும் போதெல்லாம், அவனது ஏழ்மையைக் குறித்தே பேசுகிறார். அவர் உணவை உண்ணாமல் மீதி வைக்கும் போது, ஃபிடே போன்ற சிறுவனுக்கு உண்ணக்கூட உணவில்லை, ஆனால் அடிச்சி உணவை வீணாக்குகிறார் என்று அவரது தாய் வருத்தப்படுவார். திரும்பத் திரும்ப தனது தாய் வழியாக ஃபிடேயின் ஏழ்மை குறித்து மட்டுமே கேள்வியுற்ற அடிச்சிக்கு ஃபிடே ஒரு ஏழைச் சிறுவன் மட்டும் தான் என்ற எண்ணம் தவிர அவனது வாழ்க்கை முறை குறித்த வேறெந்த சிந்தனையும் அற்றவாராக அடிச்சி இருந்தார். ஒரு நன்றியறிதல் நாளில் ஃபிடேயின் வீட்டிற்கு சென்ற அடிச்சிக்கு ஒரு அழகான மூங்கில் கூடை ஒன்றினை ஃபிடே பரிசளிக்கிறான். அதை அவனது அண்ணன் முடைந்ததாகச் சொல்கிறான். அடிச்சிக்கு மிகுந்த ஆச்சரியம் உருவாகிறது. ஏழ்மை என்கிற ஒற்றைக் கதையைத் தாண்டி அவர்களின் வாழ்க்கையில் வேறு பல அத்தியாயங்களும் இருப்பதை அடிச்சி முதல் முறையாக உணர்கிறார். இதற்கு இன்னுமொரு சிறந்த எடுத்துக்காட்டையும் அவர் தனது உரையில் முன்வைக்கிறார். ஒருமுறை அடிச்சி ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது, ஒரு மாணவி அவரிடம், அவரது Purple Hibiscus நாவலை வாசித்ததாகவும், அந்த நாவலில் வரும் யூஜீன் என்னும் தந்தை கதாப்பாத்திரம் தனது மனைவியையும் குழந்தைகளையும் அடித்துத் துன்புறுத்துவதைப் பார்க்கும் போது, நைஜீரியாவின் ஆண்கள் அனைவரும் மனைவி மக்களை அடித்து துன்புறுத்தக்கூடியவர்கள் என்பதை அறிந்து அவர்கள் மேல் பச்சாதாபம் கொள்வதாகக் கூறுகிறார் (அதற்கு அடிச்சி பதிலளிக்கும் வண்ணம் எள்ளலாக, தான் சமீபத்தில் American Psycho என்னும் நாவலை வாசித்ததாகவும், அதில் வரும் முதன்மைக் கதாப்பாத்திரம் போல அமெரிக்க இளைஞர்கள் அனைவரும் சைக்கோக்கள் என்பதை அறிந்து தானும் பச்சாதாபம் கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார்). ஒரு நாவலில் சித்தரிக்கப்படும் ஒரு தனிப்பட்ட கதாப்பாத்திரத்தின் குணாதிசியங்களை அது சார்ந்த நிலத்தில் வாழும் அனைவருக்குமான ஒற்றைக் கதையாக பார்க்கும் மனப்பாங்கை அடிச்சி சாடுகிறார். மேலும் அவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கைமுறைகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கம், பண்பாடு பற்றியும் முழுமுற்றாக அறிந்துகொண்டதற்கான நிறைவை வாசகர்கள் ஒற்றைக் கதைகளில் இருந்து கண்டடைவது அபத்தம் என்கிறார்

இத்தகைய மனப்பாங்கு மிகுந்த ஆபத்தானது. பன்முகத்தன்மை கொண்ட இனக்குழுக்களின் வரலாறுகளை, அவற்றின் பற்பல கதைகளை மெட்டாநரேட்டிவ்கள் ஒற்றைக்கதையாக மாற்றுகின்றன. ஒரு இனக்குழுவின் வழக்காற்றில் இருக்கும் நீண்ட நெடிய கதைகளை ஓரிரு வரிகளில் சொல்ல எத்தனிப்பதை எவ்வாறு நியாயமென நிறுவ முடியும் என்பது சிந்தனையைத் தூண்டும் கேள்வியாக இருக்கிறது. இதில் அதிகப்படியான சிதைவுகளைச் சந்திப்பது பழங்குடி வழக்காறுகள் தான். பல்வேறு பழங்குடிகளும் அவர்களுக்கென்று பிரத்தியேகமாகத் தனித் தனி வழக்காறுகள் வைத்திருப்பினும் அவை அனைத்தையும் ஒன்று திரட்டி ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போவதே மெட்டாநரேட்டிவ்களின் பணியாக இருக்கிறது. இதனால் சிதைவுற்ற பழங்குடி வழக்காறுகள் பல இன்று அழிந்த நிலையிலும், அழிவின் விளிம்பிலும் இருக்கின்றன. அவற்றை மீட்டு புத்துருவாக்கம் செய்ய வேண்டியதும் இன்றைய சமூகத் தேவையாக இருக்கிறது. மேலும் மெட்டாநரேட்டிவ்கள் அவை எடுத்தாளும் மையக்கருவிற்கு வழக்காறுகளை உபகதைகளாக மாற்றிவிடுகின்றன. இதனால் வழக்காறுகள் ஒவ்வொன்றும் தனித்தனி மையக்கருக்கள் கொண்டு சமூகத்துடன் நிகழ்த்தக்கூடிய உரையாடல்கள் சிதைவுறுவதோடு, அவற்றின் உரையாடல் முனையும் மெட்டாநரேட்டிவின் மையக்கருவை நோக்கி திருப்பப்படுகிறது. இதனால் வழக்காறுகள் தனித்து செயல்படக்கூடிய நிலை மாறி அவை மெட்டாநரேட்டிவ்களின் ஒரு அங்கமாகச் செயல்படும்படி உருமாற்றப்படுகின்றன. காலப்போக்கில் அவை தனது தனித்தன்மையை முற்றிலுமாக இழந்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இவ்வாறு மெட்டாநரேட்டிவ்களுக்குள் தொலைந்துவிட்ட வழக்காறுகளும் இனக்குழுக்களின் கலாச்சாரங்களும் பேரிழப்புகளைச் சந்தித்திருக்கின்றன. ஆங்கிலேயர்கள் காலனியாதிக்க காலத்தில் கொண்டுவந்த ஆங்கிலக்கல்வி முறை என்னும் மெட்டாநரேட்டிவ் கோட்பாடும், உலகம் முழுவதையும் ஆங்கிலம் என்னும் ஒற்றை மொழியின் வழி இணைக்க எடுத்த முயற்சிகளும் எண்ணற்ற இனக்குழுக்களின் எழுத்துருக்களைச் சிதைத்துவிட்டதால், இன்று இபோ முதலான பழங்குடிகள் ஆங்கில எழுத்துருக்களைப் பயன்படுத்தி தங்கள் மொழியை எழுதி வருகின்றனர். பல தென்னிந்தியப் பழங்குடி மொழிகள் இந்தி எழுத்துருக்களைப் பயன்படுத்துவதும், துளு மொழியின் திகலாரி (Tigalari) எழுத்துரு அழிந்து தற்போது அம்மொழி கன்னட எழுத்துருவைப் பயன்படுத்துவதும், ஆங்கிலம் மற்றும் பிராந்திய பெரு மொழிகளில் சிக்குண்டு சிற்றினக்குழுக்களின் மொழிகள் எதிர்கொண்ட சிதைவுகளின் விளைவுகள் தான். மெட்டாநரேட்டிவ்களால் ஏற்படக்கூடிய அழிவுக்கும் இவையே சான்று பகர்கின்றன.    

மெட்டாநரேட்டிவ்கள் உருவாக்கும் மற்றொரு பெரிய சிக்கல் அவை அழகியலுக்குத் (Aestheticism) தரும் அதீத முக்கியத்துவமாகும். நீட்ஷேயின் கூற்று ஒன்று இந்த அழகியலுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தினால் உருவாகும் அபத்தங்களை விளக்குகிறது. ஒரு பட்டாம்பூச்சியைக் கொல்லும் மனிதனை கெட்டவனாகப் பார்க்கும் உலகம், ஒரு கரப்பான்பூச்சியைக் கொல்பவனை வீரனாகப் பார்க்கிறது. உலகில் ஒழுக்கநெறிகள் கூட அழகியலைச் சார்ந்து தான் தீர்மானிக்கப்படுகின்றன என்கிறார் நீட்ஷே. வழக்காறுகளில் இருந்து எடுத்தாளப்படும் அழகியல் சார்ந்த கருத்துகளை மட்டுமே தன்னுள் இயங்க மெட்டாநரேட்டிவ்கள் அனுமதிக்கின்றன. வழக்காறுகளில் விளங்கும் அழகற்ற, ஒழுங்கற்ற, சீரற்ற உண்மைகளுக்கு அவை முக்கியத்துவம் அளிப்பதில்லை.  அதிகார மையங்களை மகிழ்விக்கும் கருத்துகளை மட்டுமே வழக்காறுகளில் இருந்து அவை எடுத்துரைக்கின்றன. எவற்றை உலகிற்குச் சொல்ல வேண்டும், எவற்றை மறைக்க வேண்டும் என்பதும் அதன் தெரிவுகளின் அடிப்படையில் தான் நிகழ்கிறது. இன்னொருபுறம் மெட்டாநரேட்டிவ்கள் நிர்மாணிக்கும் கட்டமைப்புக்குள் வழக்காறுகள் அடங்கிப் போக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும், அவற்றின் மீது மெட்டாநரேட்டிவ்கள் செலுத்தும் அதிகாரமும் வெளிப்படையாகவே நிகழ்வதால் வழக்காறுகள் நசுக்கப்படுகின்றன. இவ்வகை அதிகார அத்துமீறல்களால் பழங்குடி வழக்காறுகள் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ஒவ்வொரு இனக்குழுவிற்கும் அவற்றின் அடிப்படை பாரம்பரியத்தையும், வரலாற்றையும் சொல்லும் வழக்காறுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் மிகப்பழமையான வரலாற்றைச் சொல்லும் பழங்குடி வழக்காறுகள் அதீத சிறப்பும், அழுத்தமான தரவுகளையும் பதிவுகளையும் அவர்களின் வாழ்க்கைமுறை வழி உலகிற்கும் உணர்த்தும்படி எஞ்சியிருக்கககூடிய ஒரேயொரு ஆதாரமாகும். அவற்றில் பல இந்த மெட்டாநரேட்டிவ்களால் விழுங்கப்பட்டு அழிந்துவிட்டன. எஞ்சியவை சிதைவுற்ற நிலையில் அழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. வழக்காறுகளின் சிதைவுகள் கலாச்சார சிதைவுக்கு வித்திடுகின்றன. அது சமூகத்தை அதன் பன்மைத்தன்மையில் இருந்து மாற்றி ஒற்றைத்தன்மையை நோக்கி நகர்த்துகிறது. கலாச்சாரங்கள் அழியும் போது இனக்குழுக்கள் அதன் வேரைத் தேடி மீட்டெடுக்க போராடும் போது வழக்காறுகள் தான் அவற்றுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஒரேயொரு காரணி என்பது தவிர்க்க முடியாத உண்மை. அதிலும் சித்த மருத்துவக் குறிப்புகள், இயற்கை விவசாய யுக்திகள், இயற்கையை சிதைக்காமலும் அழிக்காமலும் வாழக் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைமுறைகள், மரமேறுதல், தேனெடுத்தல், விலங்குகளைப் பழக்குதல், தாவரங்களை இனங்காணுதல் போன்ற இன்றியமையாத வாழ்க்கைத் திறன்கள் என்று மனித வாழ்க்கையின் களஞ்சியமாகத் திகழும் பழங்குடி வழக்காறுகள் சிதைவை நோக்கி நகர்த்தப்படுவது மனிதகுலத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடு என்பதை உணர வேண்டும். 

அவ்வகையில் பழங்குடி வழக்காறுகளை மெட்டாநரேட்டிவ்களில் இருந்து விடுவிக்க வேண்டியது தற்காலச் சூழலில் மிகுந்த அவசியமாகிறது. மெட்டாநரேட்டிவ்கள் எழுத்துவடிவில் பதிவுசெய்யும் ஓரிரு வரிகளுக்குப் பின்னால் ஒரு பழங்குடி இனத்தின் வரலாறு புதைக்கப்பட்டிருப்பதை, சிதைவுற்று சிதலமடைந்திருப்பதை உற்றுநோக்கி மெட்டாநரேட்டிவ்கள் சொல்லும் ஒருவரி வரலாறுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். செயற்கையான வாழ்க்கைமுறையை நோக்கி மனிதகுலம் நகர்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலச்சூழலில் ஆதிக்குடிகளின் வாழ்வியலை, கலாச்சாரத்தை, நமது முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களை, அவர்களின் நம்பிக்கைகளை இக்காலத் தலைமுறைக்குக் கடத்தும் பழங்குடி வழக்காறுகள் தொலைந்துபோகாமல் காப்பது மிகவும் முக்கியமாகும். மெட்டாநரேட்டிவ்களுக்குள் கரைந்துகொண்டிருக்கும் அவற்றை அடையாளம் கண்டு அவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். பழங்குடி வழக்காறுகளுக்கு தகுந்த மதிப்பும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். ஏனெனில், இக்கால தலைமுறைகளுக்கும், எதிர்காலத் தலைமுறைகளுக்கும் வாழ்க்கை குறித்து எழும், எழவிருக்கும் அத்துனை ஐயங்களுக்கும், வினாக்களுக்கும், குழப்பங்களுக்கும், அச்சங்களுக்கும் விடைகளை ஆதிக்குடிகளின் வழக்காறுகளில் கண்டடைய முடியும். அவை மனித வாழ்வை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டவை. அதன் அர்த்தங்களை ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைக்ககூடியவை. இன்னும் சொல்லப்போனால், வேர்களில் தொலைத்துவிட்டு கிளைகளில் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கும் சமானிய மனிதனுக்கு இந்த ஆதிக்குடி வழக்காறுகள் தான் மனிதனாக வாழ வழிகாட்டக்கூடியவை. அவற்றைச் சிதைவுகளில் இருந்து மீட்பதுதான் மனித வாழ்க்கைப் பாதையின் மையில்கல், மானுட அடையாளம். 

***

நவீனா –  சொந்த ஊர் தேனி. ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தென்காசியில் கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை மூன்று நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பளியர் இனப் பழங்குடி மக்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இலங்கையின் சிபிஎஸ் அமைப்பின் விருது பெற்றிருக்கிறார். மின்னஞ்சல்: writernaveena@gmail.com

காந்தி இந்துவா?

0

சி. சரவணகார்த்திகேயன்

காந்தி ஓர் இந்துதானே! அதிலென்ன குழப்பம்? இதென்ன கேள்வி எனத் தோன்றலாம்.

காந்தியின் மதம் பற்றிய குழப்பம் விளைவிப்பதல்ல நம் இலக்கு. ஒரு மனிதனின் மதம் என்ன என்ற கேள்விக்கு மூன்று அடிப்படைகளில் பதிலுரைக்க இயலும். ஒன்று அவன் பெற்றோர் மற்றும் குடும்பத்தின் வழியே அவனுக்கு வந்து சேருகிற மத அடையாளம். அடுத்து தான் என்ன மதத்தவன் என அவன் நம்புவதும், தொடர்ந்து பொதுவெளியில் முன்வைப்பதுமான ஓர் அடையாளம், கடைசியாக அவன் வாழ்நாள் முழுக்க ஈடுபடும் செயல்களின் வழி, பேசும் சொற்களின் வழி, சிந்தனைகளின் வழி எந்த மதத்தினனாக‌ வெளிப்படுகிறான் என்பது. காந்தி மோத் பனியா என்ற வாணிப வகுப்பைச் சேர்ந்தவர். பனியாக்கள் பொதுவாக‌ சமண மத‌த்தையோ இந்து மதத்தையோ பின்பற்றுபவர்களாக‌ இருக்கிறார்கள். பனியாக்கள் முற்காலத்தில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்றொரு கருதுகோளும் உண்டு. காந்தியின் குடும்பம் இந்துக்கள். காந்தி தன்னை எப்போதும் ஓர் இந்துவாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். குறிப்பாக வைணவராக, ராமன் மீது பிரியம் கொண்டவராக. எனவே மேற்சொன்ன மூன்றில் முதலிரண்டின் அடிப்படையில் காந்தி நிச்சயம் இந்துதான். ஆனால் மூன்றாவது விஷயம்? காந்தியின் சிந்தை, சொல், செயல் மூன்றிலும் வெளிப்பட்ட மதம் என்ன, அந்த அடிப்படைகளில் அவர் ஓர் இந்துவா என்பதையே விசாரணைக்கு உட்படுத்துகிறோம். இஃது ஒரு தத்துவ விசாரம் மட்டுமே.

காந்தியின் ஆரம்ப காலம் மூன்று நிலவெளிகளில் கழிந்தது – குஜராத், லண்டன் மற்றும் தென்னாப்ரிக்கா. அந்த‌ அனுபவங்கள் காரணமாக அவர் மீது தொடர்ந்து பல மதங்கள், தத்துவங்களின் மோதல் நிகழ்ந்து கொண்டே இருந்தது. அவர் அவற்றிலிருந்து தனக்கு உகந்தவற்றை எடுத்துக் கொண்டார். முதன்மையாக இந்து மதம், அதிலும் அத்வைத தத்துவம். அப்புறம் சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம். மத நூல்களில் பகவத் கீதையும், பைபிளில் வரும் இயேசுவின் மலைப் பிரசங்கமும் அவரைப் பாதித்துள்ளன‌. லியோ டால்ஸ்டாயின் The Kingdom of God Is Within You மற்றும் A Letter to a Hindu, ஹென்றி தோரோவின் On the Duty of Civil Disobedience, ஜான் ரஸ்கினின் Unto This Last, வில்லியம் சால்டரின் Ethical Religion ஆகிய நூல்களிலிருந்து காந்தி தனது மத மற்றும் அரசியல் கொள்கைகளைத் தகவமைத்துக் கொண்டார். இவை போக, சகஜானந்த சுவாமியின் சுவாமிநாராயணன் சம்பிரதாயத்திலும், சமணக் கவிஞரான ஸ்ரீமத் ராஜ்சந்திராவின் ஆன்மீகத்திலும், இஸ்லாமிய சூஃபியிஸத்தின் சிஷ்டி வரிசையிலும் தாக்கம் பெற்றார்.

காந்தி தன் ஆசிரமவாசிகளுக்காக பதினோரு உறுதிமொழிகளைப் பட்டியலிட்டார். ஒரு நல்ல‌ தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு அவசியப்படும் பண்புகள் என அவற்றைப் பார்க்கலாம்: 1) அஹிம்சை 2) சத்தியம் 3) திருடாமை 4) பிரம்மச்சரியம் 5) பொருட்களின் மீது பற்றின்மை 6) உடல் உழைப்பு 7) உணவு ருசி மீது ஆசையின்மை 8) தன்னை அறிதல் 9) மதங்களைச் சமமாகப் பாவித்தல் 10) அச்சமின்மை 11) தீண்டாமை தவிர்த்தல். காந்தியின் மொத்த வாழ்வின் சாராம்சமாக இவற்றைக் கருத இடமுண்டு.

பதஞ்சலி யோக சூத்திரத்தின் ஆஷ்டாங்க யோகம் என்ற பகுதி ஐந்து யாமங்கள் பற்றிப் பேசுகிறது. அதாவது தூய்மை அல்லது ஒழுக்கத்தின் குணங்களைப் பட்டியலிடுகிறது: அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பொருட்களின் மீது பற்றின்மை. ஆக, காந்தி நேரடியாக இங்கிருந்தே த‌ன் முதல் ஐந்து உறுதிமொழிகளை எடுத்திருக்கிறார் என்பது தெளிவு. யோக சூத்திரம் சாங்கியத்தில் இருந்தும், பௌத்தத்தில் இருந்தும் உந்துதல் பெற்று எழுதப்பட்ட நூல். இதில் சாங்கியம் என்பது பண்டைய‌ இந்து மதத்தின் ஆறு ஆத்திகத் தத்துவப் பள்ளிகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும் இன்று பரவலாக அறியப்படுகிற நடைமுறை இந்து மதத்துடன் அதை இணைத்துப் பார்க்க முடியாது.

காந்தி சுயராஜ்யத்தை அடைய அஹிம்சையையே முன்வைத்தார். வன்முறையை அவர் போராட்ட முறையாக நம்பவில்லை. கண்ணுக்குக் கண் என்ற வழிமுறை உலகையே குருடாக்கும் என்றார். சொல்லப் போனால் அஹிம்சை என்பதை பலவீனமான தரப்பின் தவிர்க்க முடியாத உத்தியாக (அதாவது வேறு வழியற்ற‌ சந்தர்ப்பவாதமாக) அல்லாமல் பொறுமையும் விடாமுயற்சியும் கொண்டியங்கும் மனோபலம் மிக்க போராளிகளின் வலுவான ஆயுதமாகக் கருதினார். வன்முறை செலுத்தி வெல்லும் பலம் இருந்தாலுமே கூட ஒருவர் ப்ரக்ஞைப்பூர்வமாக அஹிம்சைப் பாதையையே போராட்ட வடிவமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அவர் நிலைப்பாடு. அதுவே பாதிப்பு குறைந்த வழி, அதுவே நிரந்தரத் தீர்வு என நம்பினார். எதிர்தரப்பின் மனமாற்றம் என்பற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். அதுவே நீண்ட கால அடிப்படையில் நிலைத்த அமைதிக்கு வழிகோலும் என நினைத்தார். போர் அல்ல, போராட்டமே இரு தரப்புக்கு இடையிலான பிரச்சனைக்குத் தீர்வு என்றார். இந்தச் சிந்தனையை காந்தியின் தனித்துவம் எனலாம்.

இவ்விஷயத்தில் இந்து மதத்தின் நிலைப்பாடு என்ன? உலகின் எந்த‌ மதத்தையும் போல் இந்து மதத்திலும் அன்பே பிரதானமாகப் போதிக்கப்பட்டாலும் அதன் புராணங்கள் நெடுக தீமையை அழிக்க வன்முறையே பிரயோகிக்கப்பட்டது. எந்தத் தெய்வத்தின் அவதாரம் என்றாலும் உலகிற்குத் தொந்தரவு தரும் அசுரர்களை வதம் செய்தே தீர்வு கண்டார்கள். காக்கும் தெய்வமான மஹாவிஷ்ணு தீமையை அழிக்க புதிய அவதாரம் எடுத்த போதெல்லாம் குருதி வழிந்தோடியது (மச்சம், கூர்மம், வராஹம் தவிர‌). எனவே அஹிம்சை இந்து மதத்தின் பிரதானக் கூறு அல்ல‌. அதை அது போதிப்பதும் இல்லை.

இஸ்லாம் யுத்தச் சூழலில் உருவான மதம் என்பதால் அதில் ஒருவித‌ வன்முறைச் சாயை படர்ந்திருக்கிறது. அப்படியான பின்புலம் கொண்டிராத‌ இந்து மதமுமே பல இடங்களில் போரை ஆதரிக்கும் முகமாகவே கருத்துக் கொண்டிருக்கிறது. காந்தி இந்த விஷயத்தில் இந்து மதத்துக்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கிறார். இவ்விஷயத்தில் அவர் கிறிஸ்துவத்துக்கு அருகே நிற்கிறார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.” (பரிசுத்த வேதாகமம், புதிய ஏற்பாடு, மத்தேயு 5:39) என்று இயேசு மலைப் பிரசங்கத்தில் சொல்கிறார். அதுவே காந்தி வந்து நிற்கும் புள்ளியும். சமணமும், பௌத்தமும் கூட இதே திசையில்தான் சிந்திக்கின்றன.

அடுத்து சத்தியம். எங்கும் எதிலும் சமரசமில்லாத உண்மையைப் பேசுவது என்பது காந்தியின் மிக‌ அடிப்படைக் குணம். மறைக்கவோ மழுப்பவோ ஏதும் இல்லை என நம்பியவர். தன் பிம்பத்துக்குக் கடும் களங்கம் உண்டாக்கும் எனத் தெரிந்திருந்தும் மிகச் சங்கடமான விஷயமான தன் பிரம்மச்சரியப் பரிசோதனைகளைப் பற்றிக் கூட தயங்காமல் பதிவு செய்தவர், அதில் ஈடுபட்ட பெண்களையும் அதே போல் பதிவு செய்யத் தூண்டியவர். திறந்த புத்தகம் என்பதற்கான மிகச் சரியான உதாரணம் அவர்தான். மிகச் சிறுவயது முதலே தனக்கு இழப்பு உண்டாக்கும் எனத் தெரிந்தாலும் கூட பொய்யுரைக்கப் பிடிவாதமாக‌ மறுத்தவர் (புகழ் பெற்ற Kettle உதாரணம்).

இந்து மதம் அறத்தைத் தீவிரமாகப் போதித்தாலும் அவ்வளவு இறுக்கமாகத் தன்னை வைத்துக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். இந்து மதத்தின் பிரதான தெய்வங்கள் யாரும் சத்தியத்தை முக்கிய விஷயமாகப் பேசியதாகத் தெரியவில்லை. “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த / நன்மை பயக்கும் எனின்” என வள்ளுவர் கண்ட சமரசம் இந்து புராணங்கள் வைக்கும் உதாரணங்களுடன் ஒத்துப் போகிறது. மஹாபாரதத்தில் கிருஷ்ணன் அவ்வாறு பல சூதுக்கள் செய்தே பாண்டவர்களை வெல்ல வைக்கிறார். காந்தியின் ஆதர்சமான இராம பிரானே மறைந்திருந்து அம்பெய்துதான் வாலியைக் கொல்கிறார். அதில் அறம் வலுவாக அடிபடுகிறது. வறட்டுப் பிடிவாதம் என்று இந்து மதம் காந்தியின் மெய் மீதான பிரேமையைக் காணும். அங்கே இந்து மதத்திலிருந்து காந்தி சற்று விலகி நிற்கிறார். மோசஸுக்குக் கடவுள் சொன்ன பத்து கட்டளைகளில் பொய் சொல்லக் கூடாது என்பதும் வருகிறது: “பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக.” (பரிசுத்த வேதாகமம், பழைய‌ ஏற்பாடு, யாத்திராகமம் 20:16).

காந்தி தன் பதின்ம வயதில் வேலையாளிடம் செப்புக் காசு திருடி சிகரெட் வாங்கிப் பிடித்த‌தைக் குற்றவுணர்வுடன் சத்திய சோதனை நூலில் குறிப்பிடுகிறார். பிற்பாடு தன் தவறை உணர்ந்து புகை, திருட்டு இரண்டையுமே விட்டு விட்டதாகச் சொல்லும் போது புகையை விட திருட்டு செய்ததற்கு ஒரு படி மேலாகக் குற்றவுணர்வு கொள்கிறார். காந்தியின் திருட்டு மீதான விலக்கம் என்பது உண்மை மீதான அவரது பிடிப்பிலிருந்தே வருகிறது. திருட்டு ஒருவருக்கு நேரடி பாதிப்பை உண்டாக்குகிறது என்பது அவருக்குச் சகிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால் இந்து மதம் திருட்டை அவ்வளவு கறாராகக் கண்டிக்கவில்லை. பகவான் கிருஷ்ணன் அறியா வயதில் வீட்டில் வெண்ணெய் திருடி உண்டதையும், குளிக்கும் கோபியரின் ஆடைகளைக் களவாடியதையும் சுவாரஸ்யத் திருவிளையாடலாகவே புராணங்கள் முன்வைக்கின்றன. மாறாக, அபிரஹாமிய மதங்கள் பொதுவாகவே திருட்டைப் பெருங்குற்றம் என்கின்றன. கிறிஸ்துவம் பத்து கட்டளைகளில் திருட்டைக் கண்டிக்கிறது: “களவு செய்யாதிருப்பாயாக.” (பரிசுத்த வேதாகமம், பழைய‌ ஏற்பாடு, யாத்திராகமம் 20:15). முகமது நபியின் ஹாடித்களில் இஸ்லாமின் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக பொய்யும் பட்டியலிடப்படுகிறது.

காந்தி இள வயதில் தன் சகோதரனின் நண்பனின் பேச்சைக் கேட்டு புலால் உண்டால் ஆங்கிலேயரைப் போல் பலவானாக‌ ஆகி விடலாம் என நம்பி ஆட்டுக்கறி உண்கிறார். அதன் விளைவாகக் கொடுங்கனவுகள் காண்கிறார். அதிலிருந்து அசைவ உணவுகளைப் பகிஷ்கரிக்கிறார். அதையே தன் பின் திரண்டு வந்தோருக்கும் சிபாரிசு செய்கிறார்.

பிரம்மச்சரியம், பொருட்களின் மீது பற்றின்மை, உணவு ருசி மீது ஆசையின்மை என‌ இம்மூன்றும் லௌகீக ஆசைகளை நிராகரித்தல் என்ற ஒரு குடையின் கீழ் வருபவை, துறவறம் சார்ந்தவை. இவை பற்றி இந்து மதம் நிறையவே பேசி இருக்கிறது. போலவே சமணத்திலும், பௌத்தத்திலும் துறவு உண்டு. கிறிஸ்துவத்திலும் கூட இருக்கிறது. மிக முக்கிய வித்தியாசம் இந்து மதத்திலும் கிறிஸ்துவத்திலும் குடும்பஸ்தர்களுக்கு இத்தகு பற்றறுத்தல் வலியுறுத்தப்படவில்லை. இது உலக வாழ்வை மறுதலித்த துறவிகளுக்கான கட்டுப்பாடுகள். மாறாக, சமணத்திலும், பௌத்தத்திலும் சாதாரணக் குடிகளுக்கே ஓர் எல்லை வரை புறத் துய்த்தலுக்குக் கோடுகள் போடப்பட்டிருக்கின்றன‌. பூண்டையும் வெங்காயத்தையும் தவிர்க்க வேண்டும் என்ற சமண உணவு முறையை உதாரணம் சொல்லலாம். காந்தியின் ஆசிரமவாசிகள் துறவிகள் அல்ல, அவர்கள் தேச சேவைக்கு அவர் பின்னால் திரண்டவர்கள் மட்டுமே. அவர்களில் இல்வாழ்வில் ஈடுப்பட்டிருந்த தம்பதிகள் உண்டு, உலகை துய்க்க ஆரம்பித்திருந்த மிக இளம் வயதினரும் உண்டு. அவர்களுக்கு இம்மாதிரி தடைகள் அதீதமானவை. ஆனாலும் காந்தி அவை அவசியம் என்றே நம்பினார். அவர் மதுவை மட்டுமல்ல, மாமிசத்தையுமே பாவம் எனக் கருதினார். அது அவரது அஹிம்சையிலிருந்து வந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

உடல் உழைப்பு, அச்சமின்மை இரண்டும் பொதுவாக தேச விடுதலை, தேச முன்னேற்றம் ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் காந்தி உறுதிமொழிகளில் சேர்த்தவை. அவை நவீனச் சிந்தைகள். எனவே மதங்கள் அவற்றை விதந்தோதவில்லை. அதே சமயம் இவற்றுக்குப் பொதுவாக எந்த மதமும் எதிராக இருக்கவும் வாய்ப்பில்லை.

தன்னை அறிதல் என்பதை இந்து மதம் எல்லோருக்குமே அவசியமாக்குகிறது. “தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை” என்கிறார் திருமூலர் (திருமந்திரம், 2355). ‘நான் யார்?’ என்ற பெயரிலேயே ரமண மஹரிஷியின் நூல் ஒன்று இருக்கிறது. பௌத்தம், சமணம் ஆகியன அறுதி உண்மையை அறிதல் என்கிற ஞானோதயம் நோக்கியே மனிதனைத் தள்ளுகின்றன என்றாலும் அதில் நேரடியாகத் ‘தன்னை அறிதல்’ என்கிற விஷயம் வரவில்லை. அது இந்து மதத்திலிருந்து காந்தி நேரடியாகப் பெற்றுக் கொண்டதுதான்.

அடுத்து மதங்களைச் சமமாகப் பாவித்தல் என்பது பூரணமாக‌ எம்மதத்திலுமே இல்லை என்பதுதான் உண்மை. அல்லாவுக்கு இணையாக வேறு கடவுள்களைப் பாவிப்பதை ஏழு பெரும்பாவங்களில் ஒன்றாக ஷிர்க் என்ற பெயரில் குறிப்பிடுகிறது இஸ்லாம். கடவுளின் பத்துக் கட்டளைகளில் ஒன்றாகக் கிறிஸ்துவம் சொல்வது”என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.” (பைபிள், பழைய‌ ஏற்பாடு, யாத்திராகமம் 20:3). சமணமும், பௌத்தமும் அவ்வளவு பதற்றத்துடன் மற்ற மதங்களை மறுதலிக்கவில்லை.

இந்து மதம் இவ்விஷயத்தில் ஓரளவு நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறது. அது மற்ற மதங்களை நிராகரிக்கவில்லை, அதனோடு உரையாடி நல்லனவற்றைத் தனதாக்கிக் கொள்ளவே பார்க்கிறது. இஸ்லாம், கிறிஸ்தவம் போல் இந்து மதத்தில் மத மாற்றம் செய்யும் எத்தனங்கள் இல்லை. காந்தியே கிறிஸ்துவத்தையும் இந்து மதத்தையும் ஒப்பிட்டு இந்த வித்தியாசத்தைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். தனி மனிதர்கள் ஒரு மதம் ப‌ற்றி உணர்ந்து அதைப் பின்பற்றுவதன் மூலம் தானாவே பரவ வேண்டுமே ஒழிய பிரச்சாரம் செய்து மனிதர்களை மதம் மாற்றுவதால் அல்ல என்றார். அந்த வகையில் இருப்பனவற்றில் இந்து மதமே மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டது என்றார். (இன்று நிலவும் இந்துத்துவக் கொள்கைகள் அவ்வகையில் இந்து மதத்தின் அடிப்படைக்கே எதிரானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். காந்தி பின்பற்றியது இந்துத்துவம் அல்ல.)

கடைசியாகத் தீண்டாமை தவிர்த்தல் என்ற கொள்கை. மேற்கே தோன்றிய கிறிஸ்துவம், இஸ்லாம் உள்ளிட்ட மதங்களில் சாதியம், தீண்டாமை பற்றி ஆதரவாகவும் எதிராகவும் நேரடியாக எதுவும் இல்லை. வெள்ளை கருப்பின வேறுபாட்டால் நிலவும் தீண்டாமையை அம்மதங்கள் ஆதரிக்கவில்லை. காந்தி குறிப்பிடும் தீண்டாமை இந்தியாவில் நிலவுவது. சாதி வேற்றுமை அடிப்படையில் தோன்றுவது, இந்து மதத்தோடு பின்னிப் பிணைந்தது. கிருஷ்ணன் பகவத் கீதையில் போதித்த‌ நால் வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் ஆனதல்ல எனினும் இன்று இந்து மதம் வர்ணங்களைப் பிறந்த சாதி அடிப்படையிலேயே பாவிக்கிறது. அவதார புருஷனான‌ ராமன் பிராமணர்களுக்கு மட்டுமான வேதத்தைப் பஞ்சமனான சம்புகன் படித்ததற்காக அவனைக் கொன்றான். ஆக, கடவுளே சாதி ஏற்றத் தாழ்வுக்கும், தீண்டாமைக்கும் அறங்காவலராக‌ நிற்பதை இந்து மதத்தின் புராணங்கள் அங்கீகரிக்கின்றன. சாதியை ஒழிக்க ஒரே வழி இந்து மதத்திலிருந்து வெளியேறுவதே என்றார் அம்பேத்கர். அதன் மாற்றாகச் சமத்துவம் கொண்ட பௌத்தத்தைக் குறித்தார். இஸ்லாம் மதத்தில் சாதி வெறி இல்லை என்று பெரியார் கருதினார். எனவே காந்தியின் தீண்டாமை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் வாக்குதானே ஒழிய இந்து மதத்தின் சாரம் அல்ல. ஆனால் காந்தி இதற்கு முரணாக‌ சாதியம் என்பது இந்து மதத்தின் இயல்பல்ல என்றே நம்பினார். அதைக் கை விட்டு இந்து மதம் தன்னைச் சரி செய்து கொள்ள முடியும் எனக் கருதினார். நிராகரிப்பல்ல, சீர்திருத்தம் போதும் என்றார்.

காந்தி  இறுதி வரை தன்னை இந்துவாகவே கருதினார். சுடப்பட்டுச் சாகும் தறுவாயில் அவர் “ஹே ராம்!” என்று சொன்னதாக நிலவும் பிரபலத் தொன்மமும் அதை ஒட்டியதே!

ஆனால் கறாராக மதிப்பிட்டால் காந்தியை ஓர் இந்து என்று மட்டும் சுருக்கிட முடியாது. அவர் இந்துவாகச் சில விஷயங்களில் வாழ்ந்தார்தான். அதே போல் கிறிஸ்துவராகவும், இஸ்லாமியராகவும், சமணராகவும், பௌத்தராகவும் கூட‌ சில சமயங்களில் வாழ்ந்தவர்.

அவரை ஒரே மதத்துக்குள் அடைக்க வேண்டும் என்றால் அது காந்தியம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவரே அதை நிராகரிக்கிறார்: “காந்தியம் என்ற ஒன்று கிடையாது. எனக்குப் பின் அத்தகைய ஒரு பிரிவை விட்டுச் செல்ல விரும்பவில்லை. நான் புதிதாக எந்தக் கொள்கையோ கோட்பாட்டையோ உருவாக்கியதாகச் சொல்ல மாட்டேன். நான் தினசரி வாழ்க்கைக்கும், சிக்கல்களுக்கும் நித்யமான உண்மைகளை என் வழியில் பயன்படுத்திப் பார்த்தேன், அவ்வளவுதான். நான் உருவாக்கிக் கொண்ட கருத்துக்களும், வந்தடைந்த முடிவுகளும் இறுதியானவை அல்ல. நான் அதை நாளை மாற்றக்கூடும். நான் இந்த உலகிற்குப் புதிதாகப் போதிக்க ஒன்றும் இல்லை. சத்தியமும் அஹிம்சையும் மலைகளைப் போல் மிகப் பழையவை.” இது நிச்சயம் ஒரு சனாதனியின் குரல் இல்லை!

***

சி. சரவணகார்த்திகேயன் – கோவையை சேர்ந்தவர். பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். அனைத்து இலக்கிய வடிவங்களிலும் 36 நூல்கள் எழுதியுள்ளார். சுஜாதா விருது, திருப்பூர் இலக்கிய விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலிற்கான விருதுகளை பெற்றிருக்கிறார். தொடர்ச்சியாக படைப்பு செயல்பாட்டில் ஈடுபட்டு வருபவர். மின்னஞ்சல்: c.saravanakarthikeyan@gmail.com

பென்டெம் சோடா சென்டர்

0

முகம்மது கதீர் பாபு

தமிழில்: ஸ்ரீநிவாஸ் தெப்பல

டல் பகுதியைச் சார்ந்து இருக்கும் ஊரில் கோடைக்காலம் வந்தால் சாபக்கேடு.

வெயிலுக்கு உப்பும் இணையாகும். வியர்வைக்கு தோல் வெடிக்கும். மேலும் மேல்காற்று கடந்து சென்றால் உடலில் ஒரு துளி நீரும் மிஞ்சாது.

அப்படியான கோடைக்காலத்தில், அப்படியான உப்புக் காற்றின் மத்தியில், அப்படியான கடல் அருகிலுள்ள ஊரில் இடுப்புக்கு வேட்டியைக் கட்டியபடி ஒரு மனிதர் வீதியில் உலாவுகிறார். உடம்பில் சட்டை அணியாத அவரின் மெல்லிய மார்பிலும், கட்டுமஸ்தான பின்புறத்திலும், அவரது மாநிறமான முதுகின் மீதும் இரண்டு அட்டைகள் தொங்குகின்றன. அதன்மீது சுண்ணக்கட்டியால் எழுதிய எழுத்துக்கள் அங்கங்கே வியர்வைக்கு நனைந்து அழிந்து இருந்தன. அதில் இப்படி எழுதி இருந்தது. 

‘ஹரிஜன ஆலயப் பிரவேசம்

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.’

சில நாளாக அந்த மனிதர் யார் மதித்தாலும், மதிக்காவிட்டாலும், யார் கேட்டாலும், கேட்காவிட்டாலும், யார் சிரித்தாலும், சிரிக்காவிட்டாலும், அந்த அட்டைத் துண்டுகளின் பிரச்சாரத்துடன் ஊரூராகச் சுற்றி கூவிக்கொண்டே இருந்தார். நின்ற இடத்தில் எல்லாம் அந்தப் பிரச்சாரத்தைக் கூறுவதும், கழுத்தில் புதிய அட்டைகளைத் தொங்கவிட்டபடி அழிந்த எழுத்துகளை மறுபடியும் எழுதுவதுமாக இருந்தது அவரது செயல்.

அன்று அவர் அந்த ஊரில் அந்தச் செயலுக்காக நேராக இலிந்திர குருநாதம் ஸ்ரேஷ்டி துணி அங்காடியின் முன் நின்றார். 

‘ஸ்ரேஷ்டி ஐயா… நான் அட்டைகளுக்காக வந்திருக்கேன்’ என்றார் குரலை உயர்த்தியபடி.

ஸ்ரேஷ்டி அவரைக் கண்டு முகம் சுளித்தபடி, மேலோட்டமாக மட்டும் சிரித்தவாறு ‘மகானுபாவரே வாங்க வாங்க… ’ என்றார் மேஜையை காண்பித்தவாறு. 

வெயிலுக்கு சோர்ந்து போன அந்த வேட்டியை அணிந்த நபர் மேஜையின் மீது சோர்வை தணித்து கொள்ள உட்கார்ந்தார்.

‘வெயிலுக்கு தாகமா இருக்கு… கொஞ்சம் தண்ணி குடுங்க’ என்றார்.

அப்பேர்ப்பட்ட புண்ணியவான், போதாதற்கு எஜமானுடைய சாதியைச் சேர்ந்தவர் வாயைத் திறந்து தண்ணீர் கேட்டால் கொடுப்பதைக் காட்டிலும் வேறு ஏதும் பாக்கியம் இருக்குமாவென நினைத்து அங்காடியில் உள்ள குமாஸ்தா சட்டென எழுந்து மூக்குக்குவளையில் தண்ணீரை கொடுக்க முயன்றார்.

அவ்வளவுதான்… ஸ்ரேஷ்டியின் குரல் சீறியது.

‘டேய் டேய் கழுத… வந்திருக்குறது யாருன்னு நெனைச்சா… மகான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு அவர்கள். அவ்வளவு பெரிய மனுஷனுக்கு, உத்தமருக்கு வெறும் குடித்தண்ணியா கொடுக்கப் பாக்குற? குவளை அங்க வெச்சிட்டு சட்டென எழுந்து போய்ப் பென்டெம் காரங்க கடையிலிருந்து சோடாவை வாங்கிவந்து கொடு? வேகாத வெயில்ல வந்தவங்களுக்கு அதல்லவாடா நம்ம செய்யவேண்டிய மரியாத’ என்றார் கோபமாக. 

குமாஸ்தா திகைத்துத் தண்ணீரை அங்கே வைத்துவிட்டு சோடாவிற்காக ஓட முயன்றார்.

அதைக் கண்ட அந்த வேட்டியை அணிந்த நபர் ‘வந்துட்டாரு பெரிய போராளி’ என ஊர் மக்கள் நெடுங்காலமாக ஏளனம் செய்துகொண்டு இருந்த பொட்டி ஸ்ரீராமுலு அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. 

மேலே எழுந்து நின்று ‘ஸ்ரேஷ்டி அவர்களே… உங்களுக்கு எதற்கு அந்த வீண் சிரமம். நம்ம ஊர் மரியாதை எனக்குத் தெரியாதா. அந்தச் சோடாவை ஏதோ நானே வாங்கிக்கிறேன்’ என்று அவர் கூச்சத்துடன் போக முற்பட்டார். ஸ்ரேஷ்டி தடுத்தாலும், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

கொஞ்ச தூரம் நடந்து பென்டெம் காரங்க சோடா அங்காடிக்குச் சென்று தென்னை நாரை போட்டு மென்மையாக அமைத்த மர நாற்காலியில் சாய்ந்துவாறு ‘சந்திரய்யா அவர்களே இதாங்க விஷயம். குடிக்க தண்ணி கேட்டா கூடக் குடுக்கலங்க’ என்றார் சிரித்தவாறு.

அந்த வார்த்தைக்குச் சந்திரய்யாவிற்கு பேச்சு வரவில்லை. 

சட்டென அவருக்குக் குடிதண்ணீர் கொடுத்து, அதைவிடக் குளுமையான சோடாவை கையில் வைத்துப் பக்தனை போல், அருகில் ஓரமாகச் சாய்ந்து நின்று, கொஞ்சம் குரலைச் செருமிக்கொண்டு ‘எதுக்காக ஸ்ரீராமுலு ஐயா… எதுக்காக அப்படி நடந்துகிட்டாரு ?’ என்றார் வருத்தத்துடன்.

அவர் மீண்டும் புன்னகைத்து ‘ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு பறையர், அருந்ததியரின் பறைச்சேரியில சுத்துறன் இல்லயா. தீட்டு ஆயிட்டேனாம். இப்போ தண்ணி குடிக்குற குவளையில் எனக்குத் தண்ணி கொடுத்தா தீட்டு ஆயிடுமே… அதனாலதான்’ என்றார்.

அதைக் கேட்ட சந்திரய்யா நெடுநேரம் வரை ஏதும் பேசவில்லை.

அதன் பின் ‘செட்டி ஐயா… உங்க மேல சத்தியம். ஊரு தண்ணிக்கு வேணும்னா தீட்டு இருக்கலாம், இங்க தண்ணீக்கும், சோடாவுக்கும் தீட்டு ஏதும் இல்லேங்க’ 

*

கடல் பகுதியைச் சார்ந்து இருக்கும் அந்த ஊரின் பெயர் காவலி. 

பிரம்மம் அவர்கள் காலக்கணிப்பை கூறுகையில் ‘நெல்லூரு தரைமட்டம், காவலி பொன்நகரம்’ என்றார். அந்தப் பைராகி வாய் வார்த்தையினால் அது ஆதியிலிருந்து பொன்நகரம்தான்.

இலிந்திர குருனாதம் ஸ்ரேஷ்ட்டியிதும் அதே ஊர்தான். பொட்டி ஸ்ரீராமுலுதும் அதே தாலுகாதான். மேலும் பல வியாபாரிகள் அந்த ஊரில்தான் பிறந்து வளர்ந்திருக்கின்றனர். ஆனால், பென்டெம் சந்திரய்யா மட்டும் அந்த ஊரைச் சேர்ந்தவர் இல்லை.

அவரது ஊர் சீராலா. அந்தக் காலத்து நெசவு ஜவுளிகளுக்குப் பிரசித்தி பெற்ற இடம்.

நெசவாளி சாதியில் பிறந்ததற்கு எல்லோரும் போல் அவரும் தறியை கையில் ஏந்தி இருந்தால் இந்நேரத்திற்கு சீராலாவில் அவர் கைதேர்ந்த வேலைக்காரனாக இருந்திருப்பாரே தவிர காந்தியடிகள் ‘ஓய்’ என்று அழைத்தால், ‘ஓய்’ என்று பதிலுக்குத் திரும்பிப் பார்த்த லட்ச கணக்கான இளைஞர்களில் அவரும் ஒருவர். முகத்தில் மீசை கூடச் சரியாக முளைக்காத வயதில், இருக்கிற சொத்தையெல்லாம் போராட்டத்திற்கு கொடுத்து வெறும் கையோடு நிற்கிற அவரைக் கண்டு உடல் முழுக்க ஆடையை அணிந்த தனது சொந்த சமுகத்தினை சேர்ந்தவர்களே அவரைத் தூக்கி விடுவதற்கு பதில் தரக்குறைவாக நடத்தினர்.

‘இவனுக்குப் பொண்ணு குடுக்கரதே தரித்திரம்’ என்றனர்.

‘குலத்தொழில் கூட வராதே எப்படிதான் வாழப்போறானோ?’ எனப் பரிகசித்தனர்.

இனி அந்த ஊரில் இருப்பது சரி வராதென இரண்டு ஜோடி துணியை மூட்டைக் கட்டி சீராலாவிலிருந்து தெற்கை நோக்கிக் கிளம்பி நெல்லூரு வரை பயனம் செய்தார், எந்த ஊர் சௌகரியமாக இருந்தால் அந்த ஊரிலேயே நிரந்தரமாக வாழ்ந்து விடலாமென நினைத்துக் கொண்டு. 

அந்தப் பயணத்தில் முதலில் அவன் ஒங்கோலுவை சென்றடைந்தான். ஆனால், அங்குக் கருவேலம் மரங்கள் அதிகமாக இருந்ததாம். ஊர் கரடுமுரடாகத் தெரிந்ததாம். இறுதியில் நெல்லூரை சென்றடைந்தான். அங்குப் பட்டினத்தின் சாயல் அதிகமாகத் தெரிந்ததாம். ஆங்காங்கே தமிழ் மொழி வாசமும் தென்பட்டதாம்.

இது இரண்டுமே வேண்டாமென, இதற்கு மத்தியில் இருந்த காவலியைக் கண்டு அவ்வளவு பெரிய பட்டினமும் கிடையாது, அவ்வளவு பெரிய கிராமமும் கிடையாது. அவ்வளவு நல்லதும் கிடையாது, அவ்வளவு கொடியதும் கிடையாதென இந்த ஊர்தான் சௌகரியமா இருக்குன்னு பெருவழி அருகில் கொஞ்சம் வசதியாக இருக்கின்ற நிலபரப்பில் சின்னத் திண்ணையைப் போட்டு உட்கார்ந்தான்.

‘யார் இவன்? சீராலாவிலிருந்து வந்து நம்ப சாலை பக்கம் திண்ணையைப் போட்டிருக்கான்?’ என யாராவது கேட்டால்….

‘அட… எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரன் நம்ப நாட்டையே அவனுதுங்குறன். அசலூரிநிலிருந்து வந்த வீடுவாசல் இல்லாதவன் நான். இந்தத் திண்ணை எனதுன்னா மட்டும் தப்பா’ என்றானாம்.

அந்த வார்த்தைக்குக் காவலி மக்கள் வேறேதும் பேசவில்லை.

அவர்களை மீண்டும் பேசவிடாமல் மௌனத்தில் ஆழ்த்திய இன்னொரு நிகழ்வும் இருந்தது. அதுதான் பென்டெம் சந்திரய்யா சோடா.

வளி உருளையைப் பக்கத்தில் நிற்கவைத்து முகத்திற்கு கம்பி வலையை மாட்டிகொண்டு போத்தல் நிறைய வாயுவை நிரப்பித் தண்ணீர் தொட்டியில் குளிரூட்டி கேட்பவர்களுக்குப் பெரும் சப்தத்துடன் கோலியை அடித்துக் கொடுக்கும் சந்திரய்யா சோடா என்றதும், எல்லோரும் வெகுவிரைவில் நெருக்கமானார்கள். அதற்கு காரணம், இதுவரை அவர்கள் அவ்வளவு வாயு நிறைந்த சோடாவையோ, அவ்வளவு ருசியான ஏப்பத்தையோ அதுவரை கண்டதில்லை.

‘சந்திரய்யா… நல்ல வேலைக்காரன்யா நீ… உனக்கு எப்படியா இந்த வித்தை தெரிஞ்சது?’ எனக் கேட்டால் சிரித்து அமைதியாகிவிடுவார்.

சந்திரய்யா இந்தத் தொழிலை எப்போது, எப்படி கற்றார்? எப்படி திறனை அடைந்தாரென யாருக்கும் தெரியாது. ஆனால், ஆகமொத்தத்தில் காவலி சந்தியில் சந்திரய்யா சோடா ஒரு பழக்கமாக மாறிவிட்டது. பொழுது சாய்வதற்குள் சந்திரய்யா சோடா வயிற்றில் விழுந்தால் அன்று பொழுதோடு, உயிர் கூடத் தேறுமென்று காவலி மக்களின் பேச்சு.

அந்த வார்த்தை ஊரின் நாலாபுறமும் பரவியது. வியாபாரம் சூடு பிடித்தது. குளிரூட்டும் தண்ணீர் தொட்டிகள் இரண்டும், நான்கென ஆனது. சிப்பம் கொண்டு செல்லும் ஆறு பெட்டிகளின் எண்ணிக்கை, பன்னிரண்டு ஆனது. காற்றிற்கும், வெயிலிற்கும் அடிபணிந்த அந்தத் திண்ணைகள் போகப் போக நான்கு பக்கமும், நான்கு சுவர்கள் எழுந்தன. கூறையில் ஓடுகள் வேயபட்டன. அதன் பின்னர் வாசற்படியில் பெரிய அட்டை துண்டு ஒன்று தொங்கிகொண்டு கிடந்தது. அதில் இப்படி எழுதியிருந்தது.

‘ஹரிஜன ஆலயப் பிரவேசம் – பொட்டி ஸ்ரீராமுலு அவர்களின் எடுத்துரை.’

வந்தேமாதரம் – பென்டெம் சோடா செண்டர் கொள்கைக் குரல்’

அதைக் கண்டு காவலி மக்கள் ‘நீ அரசியல்வாதியா? என வியப்படைந்தனர்.

‘இல்லை…காந்தியவாதி’ எனப் பதிலளித்தார் சந்திரய்யா.

சந்திரய்யா காவலி வந்து நல்லபடியாக இருந்து, நாலு காசைச் சம்பாதித்தார். மறுபடியும் அதனைக் காங்கிரஸ்காகவோ, மற்றோன்றுக்கோ தானம் செய்வதற்கு முன்பே, அதைத் தடுத்து, ஒரு கால்கட்டு போட நினைத்துச் சீராலாவிலிருந்து உறவினர்கள் வந்து இறங்கி தகுந்த பெண்ணைப் பார்த்துக் கல்யாணத்தை நடத்தி சென்றனர்.

அந்தப் பெண் பலசாலி. கூர்மையான பார்வை கொண்டவள். சோடா போத்தலில் கோலியை போல வந்தும் வராதுமா சந்திரய்யாவிடம் ஒட்டிகொண்டாள்.

‘லக்ஷ்மம்மா கொஞ்சம் தண்ணி பிடிக்கிறியா?’ என்றால், ‘பிடிச்சி வெச்சு ஒரு சாமம் ஆயிடுச்சி’ என்பாள்.

‘லக்ஷ்மம்மா போத்தல்களை கழுவிட்டீயா? என்றால், ‘கழுவி வெச்சி பொழுது சாஞ்சிடுச்சு’ என்பாள்.

முடியை முடிச்சு போட்டுக் குனிந்து வேலையைச் செய்யத் தொடங்கினால் வீட்டு வேலை, கடை வேலையைச் செய்யத் தொடங்கினால், மறுபடியும் அதை முடிக்கும்வரை மேலே எழும்பமாட்டாள்.

அவளது துணிச்சலை கண்டு, வீட்டிற்கே வளி உருளையைக் கொண்டு வந்து சோடா பிடிப்பதை கற்றுதந்தார் சந்திரய்யா. அந்தக் காலத்தில் இந்த வேலையைச் செய்யும் பெண்ணை ஊர் மக்கள் எல்லோரும் விந்தையாகப் பார்த்தனர்.

அவர்கள் எல்லோரும் எட்டிப் பார்க்கையில் லக்ஷ்மம்மா கண்டுக் கொள்ளாதது போல் சர்ரெனச் சக்கரத்தை சுழற்றுவாள்.

பிற்காலத்தில் பென்டெம் சோடா சென்டர் சுதந்திர வீரர்களின் இடமாக மாறியது, அங்கு எப்போதும் விவாதங்களும், சோடாகளின் சப்தங்களும் காட்டமாக ஒலித்தன. அவர்களுக்காக ஆந்திரப் பத்திரிகையின் முதல் வாழ்நாள் சந்தா பென்டெம் சந்திரய்யாவின் கடையிலிருந்துதான் போனது. நெல்லூரில் நடக்கும் காங்கிரஸ் சபைகளுக்கும், ஊர்வலங்களுக்கும், கண்டனங்களுக்கும் செல்லவேண்டிய மக்கள் கூட்டம், கொடுக்கவேண்டிய ஆதரவு அனைத்தும் அந்தக் கடையிலிருந்துதான் தீர்மானிக்கபடும்.

ஆனால், அதற்குத் தேவைபடும் நிதிகள் அவர்களிடம் இருக்காது. சில சமயங்களில் நெல்லூருக்கு கால்நடையில்தான் செல்வார்கள். சில சமயங்களில் அந்த அவஸ்தையைத் தாங்க முடியாமல் நின்றுவிடுவார்கள். அதைக் கண்டு, அவர்களுக்குப் போதுமான அளவிற்கு உதவி செய்தால் நன்றாக இருக்குமென நினைத்தார் சந்திரய்யா. அதற்கு இருக்கின்ற அந்த வியாபாரம் போதாது, அதை மேலும் வளர்க்க வேண்டும். அணாவிற்கும், காலணாவிற்கும் சேர்த்து நாலு காசு சம்பாதிக்க வேண்டும்.

‘அது எப்படி?’ என்று நினைத்தார்.

‘இதுல என்ன இருக்கு? ஒரு வேலையை மட்டும் நம்பி இருந்தா நடக்குற காரியமா அது? தங்கமான சென்டர் அது. ஒன்னுக்கு நாலு பொருள் வைக்கணும்’ என்றாள் லக்ஷ்மம்மா.

‘என்ன செய்யலாம்?’ என்றார் சந்திரய்யா. 

‘நீதான் யோசிக்கனும்’ என்றாள் அவள்.

அப்போது சந்திரய்யா நன்றாகச் சிந்தித்து மனைவியுடன் இணைந்து பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஒரு பானத்தைக் கண்டுபிடித்தார்.

அதன் பெயர் ‘சுகந்தா பால்.’

இதை வேண்டுமெனவே மக்கள் கூட்டம் ‘பென்டெம் சுகந்த்’ என்று அழைத்தனர்.

வெட்டிவேர்களுடன் செய்கின்ற இந்தப் பானம் அப்போது சிங்கபுரி மண்ணில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும்தான் கிடைத்துக் கொண்டு இருந்தது. சந்திரய்யாதான் இதனைக் காவலிக்கு அறிமுகம் செய்தார். இருளர்களிடம் சொல்லி அந்தந்த நாளுக்கு வேர்களைத் தோண்டி எடுத்துவந்து அவற்றினை இரண்டு நாள் ஊறவைத்து, மூன்றாவது நாள் கொதிக்கவைத்து, ஆறியதும் அதனிலிருந்து அடர்த்தியான சாரத்தை எடுப்பார். அந்தச் சாரத்திற்கு சர்க்கரை கரைசல், காட்டமான சோடாவை கலந்து அதன் மீது எலுமிச்சை நாலு சொட்டைப் பிழிந்து ‘உடம்புக்கு நல்லது… குடிங்க’ என்று கொண்டுவந்து கொடுப்பார்.

இது கோடைக் காலத்தில் அமிர்தம் போன்றது. மழைக்காலத்தில் சினேகம் போன்றது. குளிர்காலத்தில் குதூகலம் போன்றது.

மக்கள் இதைக் குடிக்க சாக்குபோக்குகளை தேடுவார்கள். சந்திரய்யாவின் வியாபாரம் மேலும் வளர்ந்தது. ‘சோடா, சுகந்தா எது குடிச்சாலும், சந்திரய்யா கிட்டதான் குடிக்கனும்’ என மக்கள் சத்தியம் செய்தனர்.

‘பாத்தியா. ஒன்னுக்கு ரெண்டு கலந்து குடுத்ததும் எவ்வளவு நன்மை நடந்திருக்குன்னு, இந்த ரெண்டை நாலாக்கனும், நம்பகிட்ட இருக்கும் பொருட்களோட எவ்வளவு செய்ய முடியுமோ அத்தன செய்வோம்’ என்றாள் லக்ஷ்மம்மா.

அன்று முதல் அங்கு மேலும் மேலும் புது பானங்கள் வந்தன.

ஆரஞ்சு சோடா, எலுமிச்சை சோடா, லைம் பழரசம், க்ரஷ், திராட்சை, பாதாம் பால், வயிற்று போக்குக்கு இஞ்சி.

மற்ற பானங்களின் சங்கதி என்னமோ, இஞ்சி விஷயத்தில் மட்டும் சந்திரய்யா பெண்களுக்குக் கடவுளுக்கு இணையானார். அவர்களுக்குத் தீட்டு போன்ற பிற உபாதைகள், பல நேரங்களில், பலவிதமான காரணங்களுக்காக வயிற்றுவலி வரும். அந்த நேரத்தில் அவர்களுக்குச் சந்திரய்யாவின் இஞ்சிதான் மருந்து. அதைக் குடித்ததும் வலி சட்டெனப் பறந்துவிடும். மிகவும் மோசமான வயிற்றுவலி என்றால் ஒரு வாந்தியோடு குறைந்துவிடும்.

சந்திரய்யா அதை அதனுடன் விட்டுவிடவில்லை. பொடி போடும் பழக்கமுள்ள வயதானவர்களின் அவசரத்தையும் கண்டறிந்தார். அந்தக் காலத்தில் தரக்குறைவான பொடி எல்லா இடத்திலும் கிடைக்கும். ஆனால், மெட்ராஸ் ஆண்டார்குப்பம் மூக்குபோடி மட்டும் எவ்வளவு கஷ்டபட்டாலும் கிடைப்பதில்லை. அதற்கு முன்பணம் அதிகமாகச் செலுத்தவேண்டி இருந்தது. விலையும் அதிகம்தான். ஆனாலும், கஷ்ட்டபட்டு ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதவைத்து அதையும் சந்திரய்யா வரவழைத்தார். தரமான சரக்கு என்பதால் மூக்குபொடி பழக்கம் இருப்பவர்களுக்கு அது சொர்க்கத்துக்கு சமம்.

தற்போது சந்திரய்யா வியாபாரம் ஜோராக உள்ளது. சுதந்திர போராளிகளுக்கு உதவி செய்வதில் முன்னும் பின்னும் யோசிக்கவில்லை. நாட்கள் ஓடின. இந்தியா மட்டுமின்றி நெல்லூரு சுற்று வட்டாரங்களிலும் போராட்டங்கள் தீப்பற்றி எரிந்தன.

சரியாக அந்த நேரத்தில் காந்தியடிகளின் கதர் போராட்டம் தெற்கை நோக்கிச் சீறிபாய்ந்து பற்றி எரிந்தது.

அந்த நெருப்பின் தீப்பிழம்புகள் பென்டெம் சோடா சென்டரின் மீதும் விழுந்தன.

இது சந்திரய்யாவிற்கு புதிய விழிப்பு. இன்னும் சொல்லபோனால் வாழ்கையில் அவரை அதிகளவில் யோசிக்கவைத்த ஒரே செய்தி.

அதுவரை அவன் சுதந்திரம் கிடைத்தால் போதும் எல்லோரும் நல்ல நிலைமைக்கு வருவார்கள். எந்தவித துயரங்கள் இனி இருக்காதென நினைப்பார். ஆனால், சுதந்திரம் வந்தாலும், வரவில்லையென்றாலும், கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் – இங்கிருக்கும் சொத்துகளைக் கொள்ளையடித்து செல்ல வெள்ளையர்கள் வியாபார சாக்கில் பலவிதமான ஏற்பாடுகள் செய்கின்றார்களென அவனுக்குப் புரிந்து விட்டது. அந்நிய நாட்டு ஜவுளிகளினால் இங்குத் தான் பிறந்து வாழ்ந்த சாதிக்கும், நெசவு தொழிலாளர்களுக்கும் எப்படி நஷ்டமோ, பிற அந்நிய பொருட்களால் போதிய உள்நாட்டு வியாபாரிகளுக்கும், வேலைகாரர்களுக்கும் நஷ்டம் தானே என்று நினைத்தார் சந்திரய்யா. அது புரிந்ததும் சுதேசி மரியாதையுடன் புதிய பிறவியை எடுத்தார்.

‘நமது உடனடி நடவடிக்கை – சுதேசிப் போராட்டம்.’

இந்தக் கொள்கைக் குரல் எழுதிவைக்கபட்ட அட்டையை வாசற்படிக்கு தொங்கவிட்டதும் அவர் செய்த முதல் செயல் வீட்டிற்கு சென்று தெரிந்த ஒவ்வொரு அந்நிய பொருளையும் கொண்டுவந்து அங்காடிமுன் வீசி எரிப்பது.

அதன்பின் வாழ்கையில் அவர் எப்போதும் அந்நிய ஆடையை அணிந்ததில்லை. அந்நிய பொருளைக் கண்டதில்லை. மெட்ராஸில் சாரங்களை கடை கடையாகத் தேடி தேடி வாங்குகின்ற அவரைக் கண்டு வியாபாரிகள் வியப்படைந்தனர். அவர் அவர்களைக் கண்டுகொண்டதில்லை. ஆனால், அந்த மகாநகரத்தில் அவரைக் கலவரத்துக்கு ஆளாக்கிய சங்கதி ஒன்று உள்ளது.

அது தான் அந்நிய பானங்களின் மீது நயப்பு.

திராவிடர்களின் நாட்டுபற்று சந்தேகத்திற்கு இடமில்லை என்றாலும், அவர்களையும் தகர்த்தெரியும் மகத்துவமும், மாயயையும் அதில் உள்ளதாக அவருக்குச் சந்தேகம் எழுந்தது. ‘இது இன்னைக்கு இங்குவரைக்கும் வந்தது, நாளைக்கு எங்குவரை போகும் என்று பயந்தார்.

நாலு நாள் கழித்து. அவரின் பயம் உன்மை ஆனது.

நூனெ சுப்ரமன்ய ஸ்ரேஷ்டி என்னும் வர்த்தகன் ஆறு அணாக்கள் ‘போர்டெல்லோ’ என்னும் அன்னிய பானத்தை ஊருக்குள் கொண்டுவந்ததாக, மக்களிடயே பழக்கப்படுத்த நாலு அணாக்களுக்கே விற்பதாகவும் – இது பென்டெம் சுகந்தாவை விட வித்தியாசமாகவே இருப்பதாகவும், சந்திரய்யா வல்லமையை கண்டு தாங்கமுடியாமல் அவன் இந்த வேலைக்கு இறங்கியதாக ஒரு செய்தி காட்டுத் தீயாகப் பரவியது.

இந்த வார்த்தை பெண்டெம் சந்திரய்யாவை கடுமையாகத் தாக்கியது. அன்று அவர் சோறு தண்ணியை எதுவும் சாப்பிடவில்லை.

‘ஊருக்குள்ள இதுக்கே இப்படின்னா எப்படி? குறுக்கு வழியில வந்த சனியன், குறுக்கு வழியிலியே அடையாளம் தெரியாமலே போகும். நம்பளுக்கு ஒன்னும் ஆகாது’ என்று உச்சுகொட்டினாள் லக்ஷ்மம்மா.

ஆனால், சந்திரய்யா அமைதியாக இல்லை.

அதுவரை மேடைகளுக்கும், மேடைப் பேச்சுகளுக்கும் தூரமாக விலகி நின்ற அந்த மனிதர் அன்று மாலை முதன்முறை பென்டெம் சோடா சென்டரில் நாலுபேரு முன்னாடியும் நின்று சிறிய உரையையாற்றினார்.

‘ஐயாமார்களே… இதெல்லம் சீனி வாசம் பழகிய எறும்புகளின் விவகாரம் போல் உள்ளது. சீனி அறிகுறியை முதலில் ஒரே ஒரு எறும்புதான் கண்டறியும். அதன் பின்னர் மற்ற எறும்புகள் எல்லாம் வழியைக் கண்டறியும். இந்த அந்நிய பொருட்களும் அப்படிதான். இவை ஒன்றோடு நிற்ப்பவை அல்ல. இவை அனைத்தும் நம் நாட்டு வளத்திற்கு முதல் எதிரியென நாம் அறிய வேண்டும். நூனெ சுப்ரமன்ய ஸ்ரேஷ்டிது இந்த வியாபாரம் கிடையாது. அவனுக்கு இந்த வித்தை புரியாது. இதன் மீது சார்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லாத வியாபாரங்கள் அவனுக்குப் பல உள்ளன. ஆனாலும், அவன் இந்த வேலையைச் செய்தான் என்றால் – நாலு காசு இருக்கும் இது போன்றோர்களினால் எந்தச் சரக்கையாவது வித்து காசாக்கிக் கொள்ளலாமெனப் பார்க்கும் இப்படி பட்ட வியாபாரிகளினால் வருங்காலத்தில் நம் நாட்டுக்கும், உள்ளூரில் இருப்பவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் தீவிர நஷ்டம் வரும் வாய்ப்பு அதிகமுள்ளது. இந்த விபத்தினை நாம் வேரிலேயே தகர்த்தெரிய வேண்டும். அந்த வேலையை நாம் இப்போதே தொடர வேண்டும். காவலிலியிருந்து அவன் அந்த அந்நிய பானத்தைப் பின்வாங்கும் வரை நான், காந்திய வழியில் உண்ணாவிரதம் செய்ய நினைக்கிறேன்.’

இந்த இறுதி வார்த்தைகள் ஊரில் பதற்றத்தை உண்டாக்கின.

வணிகர்கள் எல்லோரும் இதன் மீது பல வியாக்கியானம் செய்தனர். சிலர் சந்திரய்யாவின் பக்கம் பேசினர். சிலர் சுப்ரமன்ய  ஸ்ரேஷ்டியின் பக்கம் பேசினர். ஆனால், பென்டெம் சோடா சென்டர் மட்டும் தணல்களை போல் எரிந்தது. சந்திரய்யாவுடன் உண்ணாவிரதத்தில் உட்காருவதற்கு மற்ற காந்தியவாதிகள் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்க அன்று இரவுப் பொழுது சாய்ந்ததும் நூனெ சுப்ரமன்ய ஸ்ரேஷ்டி கடை சட்டெனப் பற்றி எரிந்தது. கறுப்பு வானில் தீப்பிழம்புகள் காற்றில் நாக்கை நீட்டிச் செந்நிற நெருப்பு ஊரை அச்சுருத்தியது.

இது சந்திரய்யா சற்றும் எதிர்பார்க்காத மரண அடி.

அடிமீது அடியாக இது சந்திரய்யாவின் வேலைதான் என்ற புகாரும் ஊருக்குள் பரவலாகப் பரவியது. விவாதங்கள் இடம்பெற்றன. உண்மைகளைக் கண்டறிய ஊர் பெரியவர்கள் களத்தில் இறங்கினார்கள். சந்திரய்யாவின் ஆதரவாளர்களில் சில அமிதவாதிகள் அவருக்கே தெரியாமல் இந்த வன்முறையில் ஈடுப்பட்டதாக இறுதியில் உண்மை வெளியே வந்தது. ஆனால், இந்த அமிதவாதிகள் யாரென்பது யாருக்கும் தெரியவில்லை.

இது நடக்கின்றபோது சந்திரய்யா மௌனமாகவும், கம்பீரமாகவும், வார்த்தையற்று நின்றார். இறுதியில் இப்படி கூறினார்.

‘இவ்வளவு பெரிய நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க காந்தியடிகள் அகிம்சையை ஆயுதமாக்கினார். ஒரு சிறிய செயலுக்காக நமது ஆட்கள் வன்முறையைக் கையாண்டனர். இது என் மனசுக்கு மிகவும் கஷ்டத்தை அளித்தது. இதற்குக் கண்டனம் தெறிவிக்கும் வகையில் பதினைந்து நாள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் செய்கிறேன்.’

இந்தப் பிரகடனம் செய்ததும் அவர் முடிவை யாரும் மாற்றமுடியவில்லை.

மிக எளிமையான மனிதர் பதினைந்து நாட்களாகச் சோறுதண்ணியை சாப்பிடாமல் உண்ணாவிரதத்தை செய்வதைக் கண்டு ஊர் முழுக்க அவரைச் சென்றடைந்தது. பதினைந்தாவது நாளில் சுப்ரமன்ய  ஸ்ரேஷ்டி தானாகவே முன்வந்து கால்மாட்டில் உட்கார்ந்தார்.

‘சந்திரய்யா… நடந்தது ஏதொ நடந்து முடிஞ்சது. தப்பான வேலை செஞ்சிட்டேன். உங்க ஆளுங்க நல்லாவே பாடத்தைப் புகுத்திட்டாங்க. இதுக்கிடையில நீ எதுக்கு உசுர கஷ்டபடுத்திக்கிட்டு. உன் வார்த்தை படியே செய்றேன். சரியா?’ என்றான் முழுமனதோடு.

சந்திரய்யா விரதத்தை கைவிட்டார். ஊரிலிருந்து அந்த அந்நிய பானம் வெளியேறியது.

நாட்கள் கடந்தன.

இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்திற்கு சென்றது.

தேசபட்ல ரங்கய்யா, பெஜவாட கோபால ரெட்டி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பென்டெம் சோடா சென்டரை மையமாக மாற்றிக்கொண்டு ஆரவாரமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். மூக்குபொடி இழுப்பதை பழக்கமாக்கிகொண்ட வென்னெலகண்டி ராகவய்யா போன்ற பெரியவர்களுக்குக் காவலியில் இது மிகவும் பிடித்தமான இடமாக மாறியது. பத்திரிகைகளுடன், நாட்டுபற்று பாடல்களுடன், வந்தேமாதரம் போன்ற கோஷங்களுடன் நாளுக்குநாள் பற்றி எரிகின்ற இந்தத் தேசிய முகாமிற்கு இன்னும் இன்றோ, நாளையோ இந்திய சுதந்திர பிரகடனம் வரவிருப்பதாகப் புரிந்துவிட்டது.

கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடந்தன.

‘அன்னைக்கி நம்ப எல்லோரும் பண்டிகை கொண்டாடனும்’ என்றான் ஒரு நாட்டுபற்றாளார் சந்தோஷத்தை தாங்கமுடியாமல்.

‘நம் தேசிய கொடி முதலில் இந்த மையத்தில்தான் பறக்க வேண்டும்’ என்றார் இன்னோரு நாட்டுபற்றாளர் உற்சாகத்துடன்.

‘அதெல்லாம் அப்புறம். முதல்ல இந்தச் சங்கதி ஊர் முழுக்க கேட்கனும். அதற்கு ஏற்பாடுகளைச் செய்யனும் என்றான் சந்திரய்யா.

‘அதெப்படி?’ என்றார் அவர்கள்.

‘ரேடியோ கொண்டுவரலாம்’ என்றான் சந்திரய்யா.

அதன் மறுநாள் சந்திரய்யா முடிவின்படி இடுப்பளவு உயரம் இருக்கும் ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ ஒன்று மெட்ராஸுலிருந்து வந்திறங்கி அங்காடியில் வைக்கபட்டது.

அதுவரை வணிகர்களின் வீட்டில் அலங்கார பொருளாக மட்டுமே கிடந்த நாட்கள் எல்லாம் போய் முதன்முறை சாலையில் நின்று இந்திய முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சரித்திரமிக்க செங்கோட்டை சொற்பொழிவு ஊர் முழுக்க ஒலித்தது.

பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் எழுதபேச இயலாத துடிப்பான நாட்டுப்பற்றாளர்கள் எத்தனயோ பேர் பென்டெம் சோடா சென்டார் முன் கூட்டம் கூடி அந்த அற்புத சொற்பொழிவிற்கு பரவசமடைந்து கரகோஷம் எழுப்பினார்கள்.

அன்று முதல்,

அதன்பின்னர் அந்த ரேடியோ அப்படி எத்தனயோ செய்திகளை அந்த ஊர் மக்களிடம் ஒலிக்கசெய்தது. பல நாள்களாக, மாதங்களாக இன்றுவரையிலும் ஒலித்துகொண்டே இருக்கும் அந்தச் செய்திகளில் ஒரு இரண்டு செய்திகளை மட்டும் சந்திரய்யா என்றைக்கும் மறக்கமாட்டார்.

அந்த இரண்டில் முதல் செய்தி மதவெறியர்களின் கையில் காந்தியடிகளின் கொடுமையான கொலை.

இரண்டாவது செய்தி ஆந்திர மாநிலத்துகாகப் பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் செய்த உயிர் தியாகம்.

இது இரண்டும் இல்லாமல் அவர் மறக்கமுடியாத இன்னொரு செய்தியும் இருந்தது.

அதுதான் – இந்தியாவில் கொக்கக் கோலாவின் வருகை.

கருமேகம் போல் இந்தியாவில் அந்த அந்நிய பானம் எப்படி உள்ளே நுழைந்து என்று உள்ளூர் வியாபாரிகள் எல்லோரும் திக்குமுக்காடினார்கள். அவர்கள் இதயம் படபடத்தது, முணுமுணுத்தல்கள் உடைந்தன.

அது அடி எடுத்து வைத்ததுமே மாநகரங்களை ஜெயித்ததாக, கல்லூரி மாணவர்கள் எல்லோரும் பித்துப் பிடித்தவர்கள் போல் இதைக் குடிப்பது மட்டுமே நயப்பாகி விட்டதாக அப்போதே சந்திரய்யாவிற்கு அங்கும் இங்கும் பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள். இன்றைக்கோ, நாளைக்கோ கிராமங்களின் புறமும், பட்டினங்களின் பக்கம் வரத்தொடங்கினால் அந்தக் குறையும் நிறைவடைவதாகப் பயமுறுத்தினார்கள்.

அவர்கள் பயந்தது போலவே நடந்தது.

ஒரு நாள் மதியம் உச்சி வெயிலின் வெப்பம் சுட்டெரிக்கையில் அந்தக் கம்பெனி தென்னிந்திய பொது மேலாளர் அவராகவே முன்வந்து சந்திரய்யாவை சந்தித்தார்.

‘சந்திரய்யா அவர்களே…நான் வேலையில் சேர்ந்த நாளிலிருந்து இன்றுவரை ஆறு மாசம் ஆகுது. இந்த ஆறு மாசமாக மெட்ராஸ்லிருந்து, பெஜவாடா வரை சுத்திகிட்டே இருக்கேன். எந்த ஊர் போனாலும், எந்தச் சந்தைக்குப் போனாலும் எங்க கூல் டிரிங்க் ஏஜென்ஸிக்காக அவ்வளவு பணம் டிபாசிட் கட்டுறோம், இவ்வளவு டிபாசிட் கட்டுறோம்ன்னு சொல்லுவாங்களே தவிர, வேணாம் போயிடுங்கன்னு சொன்னவங்க ஒருத்தங்க கூடக் கிடையாது. நீங்கப் பெரிய மனுஷன். எத்தனயோ வருஷமா இந்தத் துறையில இருக்கிங்க. புதுசா வர எங்க ட்ரிங்க்கை முதல்ல உங்கள மாதிரி ஆட்கள் வித்தால்தான் எங்களுக்கும் பெருமை. மக்கள் மத்தியிலும் நம்பிக்கை. அதுக்காகதான் நானே சுயமா வந்து கேட்குறேன். டெபாசிட் ஏதும் வேணாம். ஏஜென்ஸி தறேன். வேணம்ன்னு மட்டும் சொல்லாதிங்க’ என்றார்.

சந்திரய்யாவிற்கு என்ன செய்வதென்பது தெரியவில்லை.

எதிரில் இருப்பவன் வயதில் சிறியவனும், படித்தவனும். படித்த படிப்புக்கு ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதுமெனச் சேர்ந்தவன். குருவியின் மீது பிரம்மாஸ்த்திரம் போல் அவனோடு எதற்குத் தகராறு என ‘ஐயா, ஒரு நிமிஷம்’ என்றார்.

உள்ளே சென்று தனது கைகளினால், டம்ளரை சுத்தபத்தமாகக் கழுவி குளுமையான சுகாந்தாவை கலந்து ‘ஐயா, இது எங்க கடை சிறப்பு, குடிங்க’ என்று கோடுத்தார்.

அவரும் அதைக் குடித்தார்.

‘நல்லா இருக்கா?’

‘நல்லா இருக்குங்க’ என்றார் அந்த இளைஞன்.

‘உங்க கொக்கக் கோலா விட நல்லா இருக்கா?’ என மறுபடியும் கேட்டார் அவர்.

‘உண்மையாதாங்க சொல்றேன். எங்க கொக்கக் கோலாவைவிட நல்லாவே இருக்கு’ என்றார்.

‘அப்ப வேறென்ன…. நீங்களே உங்க வாயால ஒத்துகிட்டிங்க. கிளம்புங்களய்யா… நான் உங்க கொக்கக் கோலாவை விக்கமாட்டேன்.’ என்றார் அவர்.

வந்தவர் அதைக் கேட்டுத் திகைத்தார்.

‘சந்திரய்யா அவர்களே, உங்கள பத்தி எதுவும் தெரிஞ்சுக்காம இங்கு வந்துட்டேன்னு நினைக்காதிங்க. அதெல்லாம் அந்தக் காலம். இப்போ அது எதுவும் எடுப்படாது. உண்மையை சொல்றேன். இனிமே நீங்க இதை அதிக காலம் இதெல்லாம் விக்க முடியாது. எங்க கம்பெனி முதலீடு பார்த்திங்களா, எங்க கம்பெனி விளம்பரத்தைப் பார்த்திங்களா? இந்த உலகத்துல அதிக பேருக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு கம்பெனி எங்களதுதாங்க. இதுக்கு முன்னாடி உங்களால நிக்கமுடியுமா? இப்போ வர வருமானத்தவிட பல மடங்கு வருமானம் உங்களுக்கு எளிமையா கிடைக்கும். உங்க மேல இருக்குற மரியாதை நிமித்தமா சொல்றேன். என் வார்த்தையைத் தட்டாதிங்க…’ என்றார்.

சந்திரய்யாவிற்கு அந்தப் பேச்சு சிரிப்பு வந்தது.

‘ஐயா… எந்த வருமானத்தைப் பத்தி சொல்றீங்க? சுட்டெரிக்கிற வெயில் காலத்திலும் ஒரு பொழுது சோடாவை வித்தாலும் அது வித்த வருமானத்தோட நூறு நாட்டுப்பற்றார்களுக்கு சோறு போடுறவன் நான். இந்த வியாபரத்துல வருமானத்தைப் பத்தி எனக்கே சொல்லிகொடுக்கிறீங்களா? எது வருமானம்? என் சரக்கு நாலணாக்கு வித்தா எனக்கு மிச்சமிருக்கும் அந்த இருபது பைசா வருமானமா? உங்க சரக்கு நாலணாக்கு வித்தா உங்களுக்குக் கிடைக்கும் இருபது பைசாவா? என்னோட இருபது பைசா இங்கதான் இருக்கும். உன் இருபது பைசா நாடுகடக்குது. அப்படிப்பட்ட வேலைக்காக என்னையும், என் கஷ்டத்தயும், என் கடையையும் பயன்படுத்திக்கிட்டு, அதுக்கு பதிலா அஞ்சு பைசா பிச்சை போட்டு அதுக்கு வருமானம்ன்னு பேரு வைக்கிறீங்களா? இதுக்கு நான் விலைபோகனுமா?’ என்றார் அவர் அமைதியாக.

வந்தவர் ஏதும் பேசவில்லை.

சற்று நேரம் உட்கார்ந்து பார்த்துவிட்டு இனி ஏதும் செய்யமுடியாமல் எழுந்து கிளம்ப முற்படுகையில் ‘ஐயா, ஒரு வார்த்தை’ என்று தடுத்தார் சந்திரய்யா.

‘ஐயா! உனக்குத் தெரியுமா இல்லையான்னு தெரியல. இருநூறு வருசமா வெள்ளயர்களின் ஆட்சியில் அடைபட்டு நசுங்கிய இந்த நாட்டை எத்தனயோ மகான்கள் எத்தனயோ மக்களோட துயரத்தைக் கண்டு தியாகங்கள் செஞ்சி, சிறையிலிருந்து மீட்டு, உங்கள மாதிரி ஆளுங்க கையில குடுத்துட்டு போனாங்க. அதுக்கு முடிஞ்சா நல்லது செய்யுங்க. அதை விட்டுபுட்டு இப்படி பட்ட துரோகம் மட்டும் செய்யாதிங்கய்யா…’ என்றார்.

அந்த இளைஞனின் குரல் தளர்ந்தது.

‘துரோகமா…’ என்றார்.

‘துரோகம் இல்லனா இதை வேறென்ன சொல்லுவாங்க? என்னய்யா இந்த நாட்டுல எத்தனை நதி, வாய்க்கால் இருக்கு. வெயில் அடிச்சா தாகத்த தனிக்க தித்திப்பான பானங்கள் இருக்கு. குளுமையூட்டும் வேர்கள் இருக்கு. நம்ப கண்டுபிடிச்ச சர்பத் இருக்கு. இங்க இத்தனை இருக்க, எங்கிருந்தோ கடல் தாண்டி வந்து உன் கம்பெனி இங்கு வந்து வியாபாரம் செய்ய நினைச்சா இங்க எவ்வளவு வருமானம் வராமலேயேவா இந்த வேலைக்கு வந்து இறங்கும். இப்பேர் பட்ட துரோக செயலுக்கு உங்கள மாதிரி ஆளுங்க துணை போகலாமா?’ என்றார் அவர்.

இந்தக் கேள்விக்கு அவன் பதிலளிக்கவில்லை.

சற்று நேரம் நின்று ‘கிளம்புறேன்ங்க’ எனத் தலைகுனிந்து கிளம்பினார்.

அவர் சென்றதும் இனி அங்காடியில் உட்கார ஏனோ மனம் வரவில்லை சந்திரய்யாவிற்கு. ரிக்ஷாவை அழைத்து வீட்டிற்கு கிளம்பினார்.

அன்று அவருக்கு மிகவும் நிலைகுலைந்தது போல் உள்ளது. அதுவரை அவரில் இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் அன்றோடு மொத்தமாகக் கரைந்தது.

காந்தியவாதிகள் இருக்கிறார்கள்…கொக்கக் கோலா வந்ததினால் நாட்டில் கண்டன பிரகடனங்கள் பலவற்றை கொட்டிக் குவித்தனர்… அவர்களின் மதிப்பு இல்லாமல் போய்விடுமா, அரசு அதை முறை படுத்தாதா என்று அவர் நினைத்தார். இன்று நடந்ததை கண்டதும், கிராமங்களின் மூலைமுடுக்குகளுக்கும் அது சேருவதற்கு அத்தனை முயற்சிகளும் செய்கின்றதென்று தெரிந்ததும் இனி முழுமையாக நம்பிக்கையை இழந்துவிட்டார்.

‘இனி எல்லோரோட நிலமையும் அவ்வளவுதான?’ என்று நினைத்தார்.

சுற்றி இருக்கும் கிராமங்களில் அதற்கு தகுந்த ஆதரவு இல்லாததினால், என்ன செய்வதென்று தெரியமால் ‘ஐயா சந்திரய்யா! நாங்களும் சோடா சென்டர்கள் வெச்சிக்கபோறோம். எங்களுக்கும் அதக்கான வழிய சொல்லுங்க. எரிவாயு உருளைகளை வாடகைக்கு குடுங்க. சாரத்தை எப்படி கலக்கனும்ன்னு சொல்லிகொடுங்க’… என்று எத்தனயோ பேர் கேட்டதால், அவர்கள் எல்லோருக்கும் தகுந்த வழிகளைச் சொல்லி அவரது கையோடு சாரத்தை கட்டி கொடுத்து அவர் மனநிறைவு அடைந்தார். அவர்கள் எல்லோரும் ஒருவரை சார்ந்து இல்லாமல் மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து அந்த வியாபாரங்களை செய்துகொண்டு இருப்பதைகண்டு மனம் மகிழ்ந்தனர்.

இனிமேல் அந்த உழைப்பும், அந்தச் சுதந்திரமும் இழக்கவேண்டியதுதானா? இவர்கள் கல்லா பெட்டிகளின் முன்னால் சோம்பேறிகளாக இருக்கவேண்டியதுதானா? என அவர் நினைத்தார்.

அதை நினைத்துப் பார்க்கையில் அவருக்கு மகன் நினைவுக்கு வந்தான். அவன் என்ன நினைப்பானோ என நினைத்தார்.

வீட்டிற்கு வந்து மனைவியுடன் அந்த சங்கதியைக் கூறினார்.

‘நல்ல வேலை செஞ்ச…. இதுக்கு மேல எப்படி நல்லபடியா பேச முடியும் என்றாள் லக்‌ஷ்மம்மா.

‘பயா என்ன நினக்கிறானோ இல்லே’ என்றான் சந்திரய்யா.

‘அவன் நம்ப புள்ளை யாச்சே? நம்பள மாதிரி யோசிக்கமாட்டானா பின்ன?’ என்றாள் லக்ஷ்மம்மா.

அன்றிரவு சாப்பிடுகையில் சந்திரய்யா லக்ஷ்மம்மா, மருமகள், மகனும் அருகில் உட்காரந்தனர்.

சந்திரய்யா மகனுடன் இப்படி கூறினார்.

‘கிருஷ்ணா… எங்களுக்கும் வயசாயுடுச்சி. வாழ்க்கயோட விளிம்புல இருக்கோம். இதுவரை ஒரு மாதிரி வாழ்ந்தோம். புரட்சி, போராட்டங்களுன்னு இருந்துட்டோம். சுத்தி முத்தி பார்த்தா இப்போ காலம் மாறிபோயிருக்குது. உன்ன மாதிரி இளைஞர்கள் மன நிலை எப்படி இருக்கோ, என்ன நினைக்கிறாங்களோன்னு எனக்குச் சுத்தமா புரியல. உனக்கு இப்படி இருக்கிறது பிடிக்குமா? இல்ல அப்படி இருக்கிறது பிடிக்குமா? எதுவா இருந்தாலும் சொல்லிடுப்பா… என்னொட முடிவுகள் உனக்குச் சுமையா இருக்ககூடாதுப்பா…”

சாப்பிட்டபடி இருந்தவன் சட்டெனப் பிடிசோறை தட்டில்வைத்துவிட்டான்.

‘அப்பா, நீங்கப் போய் என்ன இப்படி கேட்க்கலாமா? என்றான் மனம் நொந்தபடி.

‘அப்படி கிடையாதுடா, உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரிய வேணாமா?’ என்றார். 

‘அப்பா…உங்கள நான் சின்ன வயசுலிருந்து பார்க்குறன். நீங்களும், அம்மாவும் எவ்வளவோ உழைச்சிருக்கிங்க. கடையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு போயிருக்கிங்க. இப்போ நானும், என் மனைவியும் அதே அளவுக்குதான் உழைக்கிறோம். உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு வேலை தெரியுமோ, எங்களுக்கும் அதே அளவுக்கு வேலை தெரியும். இவ்வளவு தொழில் தெரிஞ்சிகிட்டு நம்ப நாலுபேரும் இன்னொருத்தரோட காலுக்குக் கீழ வேலை பாக்கனுமா, நம்ப வாழ்க்கையை நம்பளல வாழமுடியாதா?’ என்றான் மகன்.

அந்த வார்த்தை சந்திரய்யாவிற்கு மனநிறைவை அளித்தது.

அன்றிரவு அவர் நீண்ட நாட்களுக்குபின் அமைதியாக உறங்கினார்.

காலையில் கண் விழித்துப் பார்கையில் மகன் அவரது கால்மாட்டில் அமர்ந்திருந்தான்.

‘கிருஷ்ணா… என்னடா செய்தி?’ என்றார்.

‘ஒன்னுமில்லப்பா? நேத்து ராத்திரி அந்தக் கொக்கக் கோலா ஏஜென்ஸியை நம்ப ஆத்துக்கு அக்கரையில பண்ட்ல சேஷாரெட்டி எடுத்துகிட்டாறாம். நம்ப வேணாம்ன்னு சொன்னதுக்கு அப்புறம், இன்னொருத்தர் கிட்ட போனா, உங்களுக்குப் பயந்து எடுத்துக்க மறுத்தாங்களாம். கடைசியில நான் எடுத்துக்குறன், எவன் குறுக்க வந்தாலும் நான் பாத்துக்கிறேன்னு அந்த ரெட்டி எடுத்துக்கிட்டானாம். காலைலை டீக்கடை முன்னாடி பார்த்தேன். திமிரா பேசுனான்.’ என்றான் கிருஷ்ணன்.

‘திமிராவா? என்ன சொன்னான்? என்றார் சந்திரய்யா,

‘டேய்…பொடியா… உங்க அப்பன என் கூடத் தகராறுக்கு வரவேணாம்ன்னு சொல்லிவை. ஏஜென்ஸியை எடுத்துக்கிட்டேன்னு, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கடைகளை எரிக்கிறதுக்கும், சத்தியாகிரகம் செய்றதுக்கும் இது வெள்ளைக்காரங்க காலம் கிடையாதுன்னு சொல்லு. ஏதாவது செய்யணும்னு நெனச்சா சிறைல கம்பி என்ன வேண்டி வரும்னு சொல்லு’ என்றான்.

சந்திரய்யா எதுவும் பேசவில்லை.

கொக்கியில் மாட்டியிருந்த சட்டையை மாட்டிகொண்டு நேராகப் பண்ட்ல ஸெஷாரெட்டி வீட்டை நோக்கிச் சென்றான்.

வேப்பம் குச்சியுடன் பல் துலக்கிகொண்டு ஸேஷாரெட்டி விடிகாலையில் வாசற்படியில் நேர் எதிரில் நிற்கின்ற சந்திரய்யாவை பார்த்துத் திகைத்தான்.

‘சந்திரய்யா அவர்களா…வாங்க…வாங்க’ என்றான் தடுமாறியபடி.

அவர் உள்ளே அடியெடுத்து வைக்கவில்லை.

‘ரெட்டி… எங்க பையனுடன் ஏதோ சொன்னியாம்… எங்கே இன்னொரு முறை சொல்லு’ என்றான்.

ரெட்டி இன்னும் பதற்றமடைந்தார்.

‘அட… நான் ஏதும் சொல்லலயே…நான் ஏதும் சொல்லலங்க’ என்றான்.

‘சரிதான் பார்த்துகிட்டு இரு. மூனு மாசத்துக்கு முன்னாடி மூடிவைச்ச உன் அழுக்கு தண்ணி ஜெயிக்குமா… இப்பத்திக்கிப்போ இந்த மண்ணுலிருந்து தோண்டியெடுத்த இந்த ஊர் தண்ணி ஜெயிக்குமான்னு பார்த்துக்கலாம்’ ன்னு வீட்டுக்கு நடையைக் கட்டினார்.

ரெட்டி அந்த வார்தைகளை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 

அதன் மறுநாளே மூன்று மாதங்களுக்கு முன்பு மூடிவைத்திருந்த கொக்கக் கோலாவை மேளதாளங்களுடன் ஊருக்குள் கொண்டுவந்து இறக்கினார்.

அது வந்த முதல் நாளே காவலி மக்களுக்குப் பெரிய விந்தை. அதைத் தொட்டு பார்ப்பவர்கள், குடித்து பார்ப்பவர்கள், குழந்தைகளுக்காக, பெண்களுக்காக, கொண்டாட்டத்துடன் வீடுகளுக்குப் பார்ஸெல் வாங்குபவர்களும்… சந்திரய்யாவும் ஒன்று வரவழைத்தார்.

அதை நேராக வீட்டிற்கு எடுத்துச் சென்று தரையில் வைத்து ‘இதுக்கு நம்ப நகல் செய்யனும்’ என்றார்.

‘நகலா? என்றான் கிருஷ்ணா.

‘அது எவ்வளவு நேரம்’ என்றாள் லக்ஷ்மம்மா.

‘இதைவிடச் சிறப்பா, இதைவிடக் காட்டமா, இதைவிட நல்ல நிறத்தோடு நம்ப அதைத் தயார் செய்யானும். இதைவிட மலிவான விலைக்கு விக்கனும். இப்படி பட்டவங்கள, அப்படிதான் முறியடிக்கன்னும்’ என்றார் சந்திரய்யா.

சந்திரய்யா, லக்ஷ்மம்மா, கிருஷ்ணா, அவனது மனைவி மூக்கை மூடி ஆளுக்கொரு மிடறு அதைக் குடித்துப் பார்த்தனர்.

பல வருஷங்களாக அந்தத் துறையில் பழம் தின்னு கொட்டை போட்ட அந்தத் திறமையாளிகளுக்கு அதில் உள்ள ரகசியம் என்னவென்று விலங்கியது. அந்த ராத்திரியோட, ராத்திரியா ஆராய்ச்சி தொடங்கியது.

அதன் மறுநாள் நீண்ட நேரத்திற்கு பிறகு பென்டெம் சோடா சென்டர் வாசற்படியில் ஒரே ஒரு அட்டைத் துண்டு தொங்கிகொண்டு இருந்தது.

அதில் இப்படி எழுதபட்டு இருந்தது.

‘பென்டெம் காரங்க புதிய பானம் – பென்டெம் கோலா – இன்றே குடித்து மகிழுங்கள்.’

அதைக் கண்டு ‘அஹா’ என்று சுற்றி வந்தனர் மக்கள்.

‘இதென்னய்யா’ என்று ஆச்சரியம் தொடர்ந்தது.

இதென்ன விந்தையா இருக்குன்னு அதன்பின் குடித்துப் பார்த்தனர்.

குடித்ததும் சந்திரய்யாவிற்கு வணங்கினார்கள்.

கொக்கக் கோலாவை விட மலிவான விலைக்கு, அதைவிடச் சிறப்பான ருசியுடன் கொக்கக் கோலாவை விடச் சிறப்பான காட்டத்துடன் கிடைக்கின்ற அந்தப் பானம் மற்றோரு முறை சந்தையில் ஜெயித்தது. அதன் வெற்றி எவ்வளவு கனமானது என்றால், அதன் தாக்குதலுக்கு ஊரில் கொக்கக் கோலாவின் விற்பனை முழுமையாகச் சரிந்தது.

இது தெரிந்து துடிதுடித்தான் ரெட்டி. பென்டெம் கோலாவை வாங்கிவந்து குடித்து, அதைக் குடித்த வாயுடன் இது குடிப்பது சிரமம் என்று புரிந்து விட்டது.

விழுந்து பொறண்டு அந்தத் தகவலை மெட்ராஸுக்கு அனுப்பினான்.

பொது மேலாளர் ஓடிவந்தார்.

‘ஐயா சந்திரய்யா… இது சரியான முறை கிடையாது. எங்களை நகல் செய்ததற்கு உங்க மேல் வழக்குப் பதிவு செய்வோம்’ என்றான் மிரட்டியபடி.

சந்திரய்யா கொஞ்சம் கூட அசரவில்லை.

‘உங்களுக்கு என்ன தோணுதோ அதைச் செய்யுங்க’ என்றான் துளியும் அதைப் பற்றி எந்த வருத்தமும் இல்லாதவன் போல்.

பொது மேலாளார் வழக்கைப் போடவில்லை. அதே போல் ஊரில் கொக்கக் கோலாவை நிலைநிறுத்தும் முயற்சிகளும் கைவிடவில்லை.

அது ஊரிலேயே பீறிட்டு ஓடியது. சந்தையில் அலங்காரமாகத் தொங்குகின்றது. பலவிதமான அளவுகோல்களில், பலவிதமான போத்தல்களில் மக்களைக் கவருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர். சினிமாக்காரர்கள் புதிதாக இதன் மீது மெட்டுகள் கட்டினார்கள். மது வியாபாரிகள் இதை மதுவில் எவ்வளவு நன்றாக இருக்குமோ என அதை விவரிக்கின்றனர்.

ஆகமொத்தத்தில் சந்திரய்யா இருந்த இடத்திலேயே நின்று கத்தி சுழற்றுகையில் அது சுற்று வட்டாரத்திலிருந்து அவனையே விழுங்கிக்கொண்டு இருந்தது.

ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு என நாட்கள் கடந்தன. 

அதன்பின், மக்கள் கொஞ்ச கொஞ்சமாக அதற்குப் பழகிப்போனார்கள்.

மரத்திற்கு பூச்சி பிடித்து நாளடைவில் அதைத் தகர்த்தெறிவது போல் சந்திரய்யா கூட நாளுக்கு நாள் விற்பனை இழந்தான். தற்போது அங்குக் கொண்டாட்டம் இல்லை. கோலாகலமும் இல்லை. சோடாவிற்காகவோ, சுகந்திற்காகவோ, ரேடியோவில் செய்திகளைக் கேட்பதற்காகவோ அங்கு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்துவிட்டது. இஞ்சி அவசியம் தீர்ந்து விட்டது. ஆரெஞ்சு, திராட்சையின் டிமாண்டும் குறைந்துவிட்டது. அரசியல் பேசுபவர்கள் இல்லை. நாட்டுப்பற்றார்களின் முன்னாள் வீரத்தை நினைத்துப் பார்ப்பவர்கள் இல்லை.

சந்திரய்யா ஒருவன் மட்டும்தான் கதர் துணியை அணிந்த வெள்ளை வேங்கை புலிபோல் அங்கு அமர்ந்து தெரிகிறார். அவருக்குச் சமீபகாலத்தில் பார்வை குறைபாடு வந்தது. உடல் நலமும் பாதிக்கபட்டது. சோடாவை அடிக்கையில் கை நடுங்குகின்றது.

‘எதுக்குப்பா இன்னும் நீங்க இதெல்லாம் பண்ணிகிட்டு, ஓய்வு எடுத்துக்கலாமே’ என்று மகன் சொன்னால் ‘என்ன ஓய்வுடா… கை நிறைய வேலையுடன் வாழ்ந்தவன். இப்போ சும்மா உட்கார முடியுமா?’ என்று கூறுவார் அவர்.

‘கிருஷ்ணா… காந்தியடிகள் சொல்லிகிட்டு இருப்பாருடா… நம்ப நாட்டுல இருக்கிறதே கிராமங்கள்தான். இங்குக் குடிசைத் தொழில்கள்தான் சரி வரும்மென்று. நம்பளுதும் குடிசைத் தொழில்தாண்டா. உங்க அம்மா, நானும், நீயும், மருமகள், நம்ப வேலைக்காரங்க எல்லாரும் சேர்ந்து உழைச்சோம். இப்போ என்னோடு சேர்த்து நீங்க எல்லோரும் சும்மாவே இருக்கீங்களே, அது எப்படிடா…. என்னோடு நீங்க எல்லோரும் சும்மாவே இருக்கீங்களே, இப்படி நூத்து கணக்குல எத்தனை பேர் காலியா இருப்பாங்கன்னு யோசிச்சுபாரு. இது எல்லாத்துக்கும் காரணம் அதுதாண்டா. இந்தக் குணம் அதோட நிறத்துலயே இருக்குது போலடா. என்னிக்காவது கவனிச்சியா? ரத்தம். அந்த ரத்த சோறுக்கு என்னிக்கும் ஆசை படாதேடா யப்பா’ என்பார்.

‘அதை என்னிக்காவது நாட்டுலிருந்து விரட்டி அடிப்போம்’ என முணுமுணுப்பார்.

அவர் கோரிக்கை நிறைவேறவில்லை. நாளடைவில் அவரது உடல் நலமும் சீர்குலைந்தது. கிருஷ்ணா மருந்து, மாத்திரை என்று அவஸ்தைபட்டான். கண்ணுக்கு இமைபோல் லக்ஷ்மம்மா அவரைக் கட்டி காத்தாள்.

இது தெரிந்து ஒரு நாள் சேஷாரெட்டி இருக்கிறவன் சும்மா இருக்காமா ‘சந்திரய்யா ஓட நிலமை மோசமா இருக்குனு தெரிஞ்சது. குடும்பம் ஓடுறதே சுமையா இருக்குனு தெரிஞ்சது. என் சரக்கு போடுறேன்னு சொல்லுங்க. அவருக்காக என் கமிஷனை கூட நான் இழக்க தயாரா இருக்கேன்னு சொல்லுங்க’ என்று தகவல் சொன்னான்.

அதைக் கேட்டு ‘ஆ’ எனச் சந்திரய்யாவின் இதயம் படபடத்தது.

அதன்பின்னர் அவர் நிலைமை என்ன ஆனது என்று பல பேருக்குத் தெரியாது. கொஞ்ச நாள் படுத்த படுக்கையாக இருந்து அதன்பின் இறந்து விட்டதாகச் சொல்வார்கள்.

அவர் இறந்த கொஞ்ச நாளைக்கு இந்தியாவிலிருந்து கொக்கக் கோலாவை உண்மையாகவே விரட்டி அடித்தனர். அப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸின் பெயரை நாடு முழுக்க பெருமையாக உச்சரித்தது. காவலியிலும் பேசிக்கொண்டனர்.

ஆனால், சந்திரய்யாவை நினைவு செய்து கொண்டவர் எவரும் இல்லை.

கடல் பகுதியைச் சார்ந்து இருக்கும் ஊரில் தற்போது எங்குப் பார்த்தாலும், வெட்டபட்டு, கருத்த தலைகளைப் போன்று கொக்கக் கோலா தொங்குகின்றது.

அந்தத் தலைகள் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுடையது. உள்ளூர் வேலைக்காரர்களுடயது.

கொஞ்சம் சர்க்கரை, கொஞ்சம் எலுமிச்சை, கொஞ்சம் வெட்டி வேர்களுடன் அதிசயங்களை நிகழ்த்தும் புண்ணியவான்கள் தற்போது இறந்து விட்டனர். அவர்களின் திறமையும் ஒழிந்துபோனது.

இந்தியாவில் மறுபடியும் கொக்கக் கோலா நுழைந்ததும் வாய்க்கால்கள் பாய்ச்சலிடும் கிராமங்களிலிருந்து, ஒரு சொட்டு தண்ணீர் கூடக் கிடைக்காத செந்நிற பாலைவனம் வரை அது பரபரப்பாகப் பரவி இங்குக் குழந்தைகளுக்குப் பாலுக்கு பதிலாகக் கொக்கக் கோலாவை புகட்டும் பழக்கத்தைப் புழக்கத்தில் கொண்டுவரும் அளவிற்கு மனிதகுலம் வளர்ச்சி அடைந்ததும், ஒரு குளிர் பேழையை வைத்துகொண்டு கொஞ்சம் பொருட்களை வாங்கி போட்டுக் கொண்டு அதனை விற்று சோம்பேறிகளை போல் கல்லா பெட்டிகளின் முன் உட்காருவதற்கு இளசுகள் எல்லாம் எத்தனித்ததும், அனைத்து ஊர்களிலும் எத்தனயோ தலைகள் உருளுகின்றன.

இன்னும் ஏதாவது ஒன்றிரண்டு மிச்சம் இருந்தால் அது கிருஷ்ணாவை போன்றொரின் கடைகள் மட்டும் தான்.

தற்போது கிருஷ்ணாவிற்கு அறுபது வயது.

தந்தை போலவே அவனும் அந்த அங்காடியில் அப்படியே உட்காருகிறான். வெள்ளை தாடியும், ஆங்காங்கே கிழிந்த கதர் துணிகளும் எந்த ரத்த சோற்றுக்கும் கரைபடியாமல் ஜொலிக்கின்ற கண்களும், கண்ணுக்குப் புலப்படாத வாளை இரு கரங்களுடன் திடமாகப் பிடித்துக்கொண்டு வீசுகிற கண்ணுக்குப் புலப்படாத போராளியின் தோற்றமும்….

கடந்த காலத்தின் எந்தவித தடையங்களும் அங்கு இல்லை.

பென்டெம் வம்சத்திற்கு கல்பதருவை போல் நின்ற சோடா என்றோ மறைந்து போனது. கொக்கக் கோலாவை விரட்டி அடித்ததும், மீண்டு வந்த உள்ளூர் பானங்களை அங்கு மறுபடியும் ஒரு முறை இறந்தன. நாள் முழுக்க அழுது கிடந்த குளிர் பெட்டிகள் ஏதோ கொஞ்ச நேரம் வேலை செய்யும்.

லட்ச கணக்கில் மக்கள் நிறைந்த ஊர். லட்சங்கள் திரட்டும் தங்கமான சென்டர்.

ஆனாலும், பிடிவாதமாக அப்படியே இருக்கிறான்.

கற்பனை விடவும் எதிர்பாராத இந்த உண்மையில் சமீபகாலத்தில் ஒரு நிகழ்வு இடம் பெற்றது.

இந்தியாவில் குடிதண்ணீர் விற்க சென்ற ஒரு அந்நிய கம்பெனி அனைத்து ஊர்களிலும் வியாபாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது போல் காவலியிலும் நிலைநிறுத்துவதற்கு முன்னுக்கு வந்தது. அதன் மேலாண்மையர் ஒருவர் கிருஷ்ணாவை சந்தித்தார்.

‘கிருஷ்ண மூர்த்தி அவர்களே… எதுக்காக நீங்க இப்படி இருக்கீங்க. தயவு செஞ்சி நீங்க எங்க தண்ணியை வித்துகொடுங்க. ஒரு ரூபாயிக்கு ஒரு ரூபாய் லாபம் பார்க்கலாம். காவலியில் இது மாதிரி ஒரு நல்ல சென்டர் வேற எங்கேயும் கிடைக்காது. கண்ணு முன்னாடி குவியுற காசை வேணாம்னு விட்டுடாதிங்க. என் பேச்சைக் கேலுங்க. எங்க ஏஜன்ஸியை எடுத்துகோங்க’ எனக் கெஞ்சி பேசிக் கிளம்பினார்.

அவர் இருக்கும்வரை ‘அப்படியேங்க… பாக்கலாம்’ என இருந்த கிருஷ்ணா, அவன் கிளம்பியதும் ஒரு அட்டை துண்டைக் கொண்டுவந்து அதற்கு கயிறினை கட்டி பென்டெம் சோடா சென்டருக்கு தொங்கவிட்டார். அதன்பின்னர் அதில் இப்படி எழுதிவைத்தார்.

‘இங்கு கம்பெனி குளிர்பானங்கள் விற்கபடாது’

‘இங்கு கம்பெனி தண்ணீரும் கிடைக்காது’

நல்ல வெயில் காலத்தில் மேல்காற்று செந்நிறத்தில் சட்டென எழுந்தாலும் கூடத் தைரியமாக அந்த அட்டை துண்டு அங்குத் தொங்கி கொண்டேதான் இருந்தது.

***

முகம்மது கதீர் பாபு – 1972 இல், ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டத்தின் தர்காமிட்டா பகுதியில் பிறந்த முகம்மது கதீர் பாபு ஒரு புகழ்பெற்ற தெலுங்கு சிறுகதை எழுத்தாளர். அவர் எழுதிய கதைகள், குறிப்பாக முஸ்லிம் சமூக வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. தர்காமிட்டா கதைகள், நியூ பாம்பே டெய்லர்ஸ் போன்ற சிறுகதை தொகுப்புகள் தெலுங்கில் மிகவும் புகழ் பெற்றவை. இதுவரை 20 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன, அதில் பத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு சிறுகதை தொகுப்புகள் தொகுத்துள்ளார். தற்போது சாட்சி பத்திரிகையில் பணி புரிந்து வருகிறார்.

ஸ்ரீநிவாஸ் தெப்பல – 1989 இல் பிறந்த இவர், ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், விசாகா மாவட்டத்தில், ‘துனி’ என்னும் ஊரைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்து சென்னையில் வசித்து வருகிறார். கணினி அறிவியல் படித்த இவர், வரைகலை வடிவமைப்பாளராக ஆறு ஆண்டுகள் பணி புரிந்து, தற்போது திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். ‘இவன்தான் பாலா’, ‘மாயப்பொன்’ தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு ‘முக்குளிப்பான்’ ‘கரடி’ என்னும் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் மொழிபெயர்த்துவருகிறார். Email : srinivasprasthanam@gmail.com