Home Blog Page 23

சிவப்பு முத்துகள்

0

வைரவன் லெ.ரா

வெட்டி ஒதுக்கப்பட்டு ஓரமாய்க் கிடந்த பனை, தென்னை மரத் துண்டுகளுக்கிடையே வயதாகி பட்டுப்போய் நின்ற மருதமர மூட்டிலே, கால்களைக் குவித்தும் கைகளை அதனைச் சுற்றிலும் வளைத்து, குத்தவைத்து அமர்ந்தபடி, எதிரேயிருந்த வேம்பின் மூட்டிலிருந்த கருங்கல் பீடத்தில், பச்சை வண்ண பட்டுப் பாவாடை சுற்றி அணிவித்து, முகம் முழுக்க செக்கச் சிவந்த மஞ்சணை பூசியிருந்த பெண் தெய்வத்தின் முன் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேன் என்ற போதமில்லை.

நேரம் வேகமாகக் கடப்பதைப் பற்றிய பிரக்ஞை எதுவுமில்லாமல் வெறுமனே அமர்ந்திருப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஆயினும் தூர பனைவிடலிகளிலிருந்து சதா ஒலித்துக் கொண்டிருந்த கிளிக் கூட்டத்தின் கொஞ்சல்களும், பனையோலைகளின் உரசல்களும், தலைக்கு மேல் சென்ற உயர்அழுத்த மின்கம்பிகளின் வழி பாயும் மின்சாரத்தின் மென்அதிர்வின் ஒலியலையும் என்னுடைய மனம் எண்ணிக் கொண்டிருந்த அவ்வொன்றை அசைக்காமல்  கூடவே பயணித்தன. எப்பொழுதுமே வெறுமையாய் அமர்ந்திருக்கும் போது மனம் எண்ணிக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு கொடுமையான கனவிலிருந்தோ! அல்லது நிகழ்ந்தவொன்றிலிருந்தோ! அத்தனிமை என்னைத் தூர வீசிவிடும். மாறாக, அடிவயிற்றில் அடிக்கடி உண்டாகி உயரப்பறக்கும் ஓர் உணர்வு, என்னுடைய மண்டைக்குள் நான் மறக்க நினைக்கும் அக்காட்சிகளை, பார்வையை வீசும் ஒவ்வொரு இடங்களிலும் முளைக்கவிட்டுக் கொண்டிருந்தன.

 என்னவெல்லாமோ இயன்று இறுதியாக சுற்றிலும் கிடந்த பனைமரங்களின், தென்னைமரங்களின் துண்டுகளை ஒப்பிட முயற்சித்து. கையில் கிடைத்த மருத மரத்தின் ஒடிந்த கொப்பின் கூர்முனையைக் கொண்டு  எதிரே கிடந்த துண்டுகளின் மீது ஓங்கி அடிக்க ஆரம்பித்தேன். தென்னை மரத் துண்டில் அடிக்கும் தோறும் அதில் துளைகள் விழுந்தன. ஆனால், பனைத் துண்டில் ஓங்கி அடிக்கவும் கொப்பு முறிந்து போனது. சட்டென்று அந்த தலையில்லா முண்டத்தைப் பார்த்த கணம், மண்டைக்குள் கொடும்கூரான ஊசி போல நுழைய, உடல் நெளிய ஆரம்பித்தது. கோடையின் உச்சமான சித்திரை மாத அக்கினி நட்சத்திர வெயிலில் பழையாற்றின் கரையில் தென்னந்தோப்புகளுக்கிடையே பிறந்து வாழ்ந்து வந்தவன், இந்த கரிசலின் உலுத்துப் போயிருந்த தென்னை, பனை மரத் துண்டுகளுக்கிடையே அமர நேரிட்ட விதியை எண்ணி காரி உமிழ்ந்தேன். விழியின் முனைகளில் உண்டான துடிப்பு, உடல் எல்லாம் உதற அழ ஆரம்பித்தேன்.

நெல்லை மாவட்டம் திம்மராஜபுரம் புறவழிச் சாலையிலிருந்து கங்கைகொண்டான் செல்லும் திசையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பயணித்தால்,  இடப்புறமாக இறங்கும் சாலையில் கூனான்குளம் (ஊர்ப் பெயரல்ல, குளம் தான்) கடக்கவும், வெள்ளைச் சுண்ணாம்பும் மண்ணும் கலந்து செய்த நெல்லையின் அடையாளத்திற்கேற்ப பிறை வடிவ மண்டையுடைய சுடலை கோயிலிருந்து ஆரம்பிக்கும் ஊரானது ஐம்பதிலிருந்து அறுபது வீடுகள் வரை கொண்டது. கொம்புவீரன்பட்டினம் எனும் பெயருடைய அக்கிராமம், பொருநை ஆற்றின் கரையோரமிருந்தது.

ஒரே சமூக மக்கள் நிரம்பி இருந்தாலும், அவர்களின் உளமெங்கும் ஊர் நடுவே இருக்கும் முப்பிடாதி அம்மன் கோயில் கொடை கழிகையில் குடியும் கூத்தும் சேர, பல தலைமுறைகளுக்கு முன்னர் நிகழ்ந்த கொலைகளின் பழிக்காக காத்துக் கொண்டிருக்கும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரேடில் சொல்லிய தகவலில் நான் இதனால் அலையப்போகும் மறைப்பொருளும் ஒளிந்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. நெல்லை மாநகர டிவிஷனில் கால்களை, கைகளை உடைக்க பெயர் போன என்னை நோக்கி, மெல்லிய புன்னகையோடு அவர் சொல்லிய செய்தியின் இன்னொரு அர்த்தம், அடுத்த மூன்று நாட்களுக்கு நானும் அங்குதான் இருக்கப் போகிறேன்.

கண்காணிப்பாளர் கைகளை என்னை நோக்கி நீட்டவும், அவரருகே செல்ல கால்களை நகர்த்தும் போது, அவரே மரியாதைக்கு என்னுடைய குழுத்தலைவர் காவல்துறை ஆய்வாளர் ஸ்டீபனையும் எங்கள் மொழியில் சைகைக் காட்டி வருமாறு அழைத்தேன். நாங்கள் இருவரும் அவரை நெருங்கவும், “திருப்பூருக்கு மணிகண்டனும் வேணுமாடே. நீரு காமா டீம்ல இருந்து யாரையாவது கூட்டிட்டு போனா என்னடே! அக்கூயூஸ்ட் மணிகண்டன் வர அளவுக்கு பெரிய ஆளுப் புண்டைலாம் இல்லைல்லா! களவ பண்ணிட்டு யாருக்க அண்டைல கெடக்கானோ அந்த தேவிடியாவையும் இழுத்துட்டு வரணும் புரிஞ்சா,  நீரு ஒத்த ஆளு போறும்டே, ஒமக்க ஊக்கத்துக்கு…” கண்காணிப்பாளாரின் வாயும் இழுக்க, உதடுகளும் மெல்ல விரிந்தன. இந்தத் தொனி எப்பேற்ப்பட்ட ஆளுடைய சுயத்தையும் உலுக்கும், தன் வயதையொத்த இன்னொருவன் உயரதிகாரியாய் அதுவும் ஒரு முதல் நிலை காவலனின் தேவை உனக்கிருக்கிறதா? என்று கேட்கவும், எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் அண்ணன் தம்பி பிணைப்பிருந்தாலும், அதை உடைக்கும் என்று அறியாதவனா நான். ஸ்டீபன் சரியென்று தலையசைத்தாலும் அதிலிருந்த கசப்பான உறுதியற்ற தன்மையை உணர்ந்தேன். “மணிகண்டா, காமா டீம்ல இருந்து இன்னொருத்தரும் வருவாரு, மூணு நாளைக்கு அங்க இருக்கணும் கேட்டியா. டே அண்ட் நைட். பாளயங்கோட்டை கோட்டர்ஸ்ல தானே வீடு. வந்து போறதுக்கு பிராப்ளம் இல்லைல்லா. எஸ்.ஐ செல்லத்துரைவும் கூட இருப்பாரு. அவெ ஒரு வெளங்காத பய. ஒன்ன தான் நம்பி வுடுகேன் புரிஞ்சா. ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். யார வேணும்னாலும் தேவைப்படும் போது வெளுத்துரனும். எந்த கிரைம் சீனும் நடக்க கூடாது. இந்த வாட்டி மட்டும் அப்படியே ஒன்னும் நடக்காம வோட்டிட்டோம், அடுத்தவாட்டி நீ எஸ்.ஐ. புரிஞ்சாடே?” சொல்லிவிட்டு என்னுடைய பதிலை எதிர்ப்பார்க்காமல் தோள்களைத் தட்டிக் கொடுத்தவாரே அங்கிருந்து நகர்ந்தார்.

  ஸ்டீபன், “திருப்பூருக்கு நீ தான் வேணும்ன்னு முன் கூட்டியே சொல்லியிருந்தேன். கொம்புவீரன்பட்டினத்துக்கு வேணும்ன்னே ஒன்னைய அனுப்புராண்டா. நான்னா அவனுக்குப் புடிக்காது. சரி மூணு நாளு நிம்மதியா இரி. ஒன்னும் நடக்காம போயிரட்டும். ஆண்டவரே ஸ்தோத்திரம், எல்லாத்தையும் நல்லாக்கணும்.” வறண்ட குரலில் சொன்னார். வழக்கம் போல பதிலேதும் சொல்லாமல் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ரோந்து செல்லும் வாகனத்திற்கே திரும்பினேன்.

நெல்லை மாநகர டிவிஷனில் பணிக்குச் சேர்ந்த நாள் முதல் ஸ்டீபனுடைய ஆல்பா குழுவில் தான் அங்கம் வகிக்கிறேன். எங்களுக்கு காவல் நிலைய பணியில்லை. எப்போதும் ரோந்து வண்டியில் சுற்றியவாரே, காவல் கண்பாணிப்பாளரின் நேரடி கட்டளைகளுக்கு ஏற்ப பணி புரிந்தோம். குற்றவாளிகளின் இருப்பிடம் பற்றி தகவல் கிடைத்ததும் அவர்களை சுற்றி வளைத்துப் பிடிப்பது, ரோந்து செல்வது, கை கால்களை உடைப்பது, கொலை கொள்ளை எதுவாயினும் ஏதோ ஒரு தனிப்படையிலிருந்து துப்பறிவது என இவ்வேலை எனக்கு மிக விருப்பமான ஒன்றாக இருந்தது. சிறுவயதில் துப்பறியும் சாம்பு கதைகளைப் படிக்கும் போது பின்னாளில் நானும் இப்படியாவேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. இதற்கு முன் மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்தேன். அங்கடைந்த வெறுமையும், மனப்புழுக்கமும் இவ்வேலை எப்படியிருந்தாலும் அதற்கேற்றவாறு என்னை தகவமைத்துக் கொள்வதில் கொண்ட உறுதியை மென்மேலும் சாத்தியப்படுத்தியது.

மாலை காவலர் குடியிருப்பிற்குச் செல்கையில் வெளியே உள்வட்டச் சாலையிலே ரேவதியை கண்டேன். டிவிஎஸ் ஜூப்பிடரில் சென்றவள் என் பக்கமாக வண்டியைத் திருப்பினாள். “என்னங்க, பாப்பாக்கு இன்னும் ஜலதோஷம் கொறயலாயம். அத்த ஃபோன் பண்ணிச்சி. நீங்க நாளைக்கு நாரோயில் போயி பாத்துட்டு வரலாம்ல. அப்பா அம்மா ரெண்டு பேரும் இங்க கெடக்கோம். நம்மள தேடியே பாப்பா அழுது அழுது இழுத்து வச்சிருப்பா! போன வாரம் நானும் போகல. நீங்களும் பாப்பாவ பாத்து ஒரு மாசம் ஆயிட்டுல்லா. பிள்ள பாவம். நீங்க மட்டும் சரின்னி சொன்னா, நா வேலைய விட்டுட்டு ஊருக்கே போயிடுகேன். வேலையும் மயிறும் தான். ஒன்னுக்கு இருக்க கூட இடம் இல்லாத எடத்துல கொண்டு வுடுகானுக. சவுந்திரபாண்டியன் நகர்லலாம் ஒதுங்க மரம் கூட இல்ல. நேத்து எனக்கு மூணாம் நாளு. முடியலங்க. இங்க உள்ள ஆம்பளைகளு பொம்பளைகள என்னன்னு நெனைக்கானுவ. வீட்டு லோனு முடிய இன்னும் நாலைஞ்சி வருஷம் ஆகும். எங்க அப்பன் வீட்டுல இருந்து கொண்டு வந்த நகைய வித்துரலாம்ன்னி சொன்னா ஒங்களுக்கு புடிக்கல. எம்பாடு யாருக்குத் தான் புரியும். எம்புள்ளய ஒங்க அம்ம எப்புடி பாக்கோ!” வெம்பியவாறு கூறுகையில் அழவில்லை அவ்வளவுதான்.

எப்படியோ என்னுடைய ஆகிருதியில் ஊரில் இடமும் வாங்கி வீடும் கட்டிவிட்டேன். ரேவதி என்னை விட உயர்ந்த சாதியில் பிறந்தவள். கல்லூரி படிக்கும் போது உண்டான காதல். அவளுடைய அப்பா அதிர்ந்து கூட பேசாதவர். நாங்கள் காதலிக்கிறோம் என அவரிடம் சென்று சொல்லியபோது உடைந்து அழுத அவரைக் காண்கையில் ரேவதியிடம் சென்று இந்தத் திருமணம் வேண்டாம் என சொல்லுமளவிற்கு நானும் நொறுங்கிப்போனேன். பலமுறை ரேவதியின் அப்பாவிடமும் அம்மாவிடமும் சென்று பேசினேன். ரேவதியின் அம்மாவிற்கு ஆஸ்துமா பிரச்சனையிருந்தது. அவளுடைய அப்பா எங்களுடைய உறுதியைக் கண்டு இறங்கி வர ஆரம்பித்தார். ஆனால் அவளுடைய அம்மா என்னை முகத்திற்கு நேராக பார்த்ததேயில்லை. ஒருமுறை நான் அங்கிருக்கும் போதே, பீறிட்ட அழுகையால் மூச்சை அடக்கி மீண்டும்  ஏதோ பேச எத்தனிக்கும் போது அவளுடைய மூக்கில் இருந்த வடிந்த இரத்தம் சிவப்பு முத்துகளாகி தரையில் கிடந்தன. சட்டென்று அங்கிருந்து கிளம்பிவிட்டேன். கடைசியில் அவளுடைய பெற்றோர்களின் முழுவிருப்பமுமின்றி எங்களுடைய திருமணம் நிகழ்ந்தது. அதன்பிறகு அவரை பலமுறை சந்தித்துள்ளேன். ஓரளவிற்கு எனக்கும் அவருக்கும் ரேவதியின் பாலுள்ள நேசம் நெருக்கத்தை உண்டுபண்ணியது. ஆனாலும் அவளுடைய அம்மா இறக்கும் தறுவாயிலும் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னொரு நாள் அவளுடைய அப்பா அவளுக்கு என சேர்த்து வைத்த நகையை எங்களிடம் வீட்டிற்கே வந்து கொடுத்தார். ரேவதி அதை தன்னுடையதாய் எடுத்துக்கொண்டாள். நானோ அந்நகைகளை எங்களுடையதாய் ஏற்றுக்கொண்டதில்லை. பின்னர் கலப்பு மணம் புரிந்ததால் அவளுக்கும் எளிதாய் முயற்சித்ததில் காவல் துறையில் இடஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது. இன்னும் மூன்று வருடங்களாவது வேலை பார்த்தால் கடனை இன்னும் சீக்கிரம் அடைத்து விடலாம்.  இளம்பிராயத்தில் ஒருமுறை மேலரத வீதியில் நுழைந்ததற்காகவே வசைப்பாடப் பட்டேன். அதே வீதியில் இறந்து வீட்டு காரியங்களை செய்ய அப்பாவுடன் உதவியாகச் செல்கையில் அனுமதித்தார்கள். அங்கேயே இடமும் வாங்கி வீடும் கட்டிவிட்டேன்.எப்போது நான் விழுவேன் என்று இறைவனைப் பிரார்த்திக்கும் ஊர்க்காரர்களுக்காகவே சீக்கிரம் கடனை அடைக்கவேண்டும். எப்படி இவளுக்குப் புரியவைத்து சமாதனப்படுத்த, அமைதியாகவே நின்றேன், பின் மெல்லத் தொண்டையைச் செறுமியவாறே “இல்லட்டி,  டிப்பார்ட்மென்ட்ல தான நானும் இருக்கேன். எல்லாம் புரியு. ஒரு ரெண்டு வருஷம் பல்ல கடிச்சிட்டு கடந்துருவோம். அப்புறம் பாப்போம். கொஞ்சம் டைம் கொடு. ஊரு காரன் எங்க அய்யாவ அடிச்சி போலீஸ் ஸ்டேசன்ல விட்டப்போ போலீசும் என்ன ஊர் குடிமகனுக்க மொவன்னு தான் கூப்புட்டு பேசிச்சு. அந்த தெருவுல எனக்க வீடு இருக்கணும். இது எனக்க வைராக்கியம்.” அமைதியானேன். அவளே, “பேசுற ஏதோ ஒருநாளும் சண்ட பிடிக்காண்டாம். சரி நாரோயில் பக்க வேல விசயமா போற மாரி இருக்கா?” கேட்டாள். “என்னய மூணு நாளு கொம்புவீரன்பட்டினம் முப்பிடாதி கோயில் கொடைக்குன்னி போட்டுட்டானுக, எஸ்.பி சாரே நேர்ல சொல்லிட்டாரு. அங்க பாத்தா நாலு வருசத்துக்கு இடையில நடக்கிர கொடைல கட்டாயம் ஒரு கொல வுழுகு. இந்த வாட்டி நான் மாட்டுனேன். எஸ்.பி இக்கன்னா வச்சி எஸ்.ஐ ஆக்கிடுவேன்னி சொல்லுகாரு. டிப்பார்ட்மெண்ட்ல என்ன நடக்கும்ன்னி அறியாதவனா நானு. எனக்கு ஊருப்பக்கம் போகவே முடியாது. வார்டன் சங்கரலிங்கம் சாரு புரிஞ்சிப்பாரு, ஊருக்கு போக நீ கேட்டுப்பாரேன்.” தயக்கத்தோடு கேட்டேன்.

மூக்கை உறிஞ்சவாறே, “அவருட்ட கேட்டுப்பாத்து முடியாதுன்னு சொன்னதுனாலதான் ஒங்ககிட்ட கேட்டேன். எப்படி சமாளிக்கணுமோ அப்படியே அவர சமாளிச்சுக்கேன்.” அவள் சொல்லவும் முதுகெலும்பே உடைந்து நொறுங்கியது, “எல்லாம் மேக்கர அம்ம பாத்துப்பா. அம்மா தாயே, எம்பிள்ளய பாத்துக்க. மீன் கொழம்பு ஃப்ரிஜ்ல இருக்கும், நேத்தைக்கு குதுப்பு கெடச்சு. சோறு காணாதுன்னா பொங்கிக்கோங்க.” வண்டியை வேகமாக முறுக்கியபடி சென்றாள். வீட்டிற்குச் சென்றதும் முதலில் குளித்து முடித்து, ஏற்கனவே உடுத்திருந்த காக்கி உடுப்போடு மேலும் ஒன்றை இருக்கட்டுமே என்று துணிப்பையில் சொறுகி வைத்தேன். பரோடுக்குச் செல்கையில் மட்டும் தான் காக்கி உடுப்பை அணிவது, மற்ற நேரம் கையில் கிடைக்கும் சட்டையும், காக்கி முழுக்கால் சட்டையும் தான். கட்டிலில் படுத்து கண் அயர்ந்தேன்.

நாலரை மணிக்கு வைத்திருந்த அலாரம் அடிக்கவும் எழுந்தேன். கை கால்களை அலம்பி, கொம்புவீரன்பட்டினத்திற்கு என்னுடைய ஹோண்டா ஷைனில் சென்றேன். புறவழிச் சாலையிலிருந்து இறங்கி ஊர் நோக்கிச் சென்ற சாலையின் இருபக்கமும் ஒடைமுள்ளும், சப்பாத்திக் கள்ளியும் வழி நெடுக வளர்ந்திருந்தன. கூனான்குளம் கடக்கவும் பொருஞையின் கருணையால் ஆறு செல்லும் கரைகளில் மட்டும் வழமையாக வாழையும், நெல்லும் செழித்திருந்தன. ஊர் வரும் முன்னே காதில் விழுந்த எல்.ஆர் ஈஸ்வரியின் கணீர் குரலில் அம்மனே இக்காலை வேளையில் கண்விழித்து இறங்கி வந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று தோன்றியது.

மிகச் சிறிய கோயில்தான், ஆனால் திருவிழாவிற்காக கோயிலைச் சுற்றிலும் பந்தல் கட்டி, தரையெங்கும் கடல் மணல் வீசப்பட்டிருந்தது. பெரிய பெரிய ஒலிப்பெருக்கிகளில், சிலவற்றில் ஊஃபர் கிழிந்து காற்றின் பிதற்றலும் பாடலோடு சேர்ந்து ஒலிக்க, இன்னும் மூன்று நாட்கள் எப்படி சமாளிக்கப் போகிறேன் எனும் கிலி உண்டானது.

உடுத்திருந்த உடுப்பிற்குரிய மரியாதை, வெளுத்துப் போயிருந்த வெள்ளைச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்த பெரியவர் தன்னை செந்தூரப்பாண்டியன் என்றும் ஊர்த்தலைவர் என்றும் அறிமுகம் செய்து கொண்டு. எங்களுக்கு என ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு ஏற்கனவே இருவர் வந்துவிட்ட தகவலையும், அனுமதித்தால் தானே அங்கு கொண்டு விடுவதாகவும் சொல்லி என்னுடைய அனுமதியுமின்றி, பின்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார். கோயிலில் இருந்து இரண்டு தெரு தள்ளி ஆற்றின் கரை தெரியும் வகையில் தெருமுனையில் இருந்த வீட்டிற்கு கூட்டிச் சென்றார்.

அங்கே ஏற்கனவே இரண்டாம் நிலை காவலர் சுயம்பும் துணைநிலை ஆய்வாளர் செல்லத்துரையும் வந்து சேர்ந்திருந்தார்கள்.  நான் வண்டியை நிறுத்தவும், “மணி பிள்ளே, நீ வாரேன்னி எஸ்.பி சொல்லவும் தான் நானும் இங்க எறங்கினேன். மணி வந்துட்டான் எம்பெருமானே! லேய் சொயம்பு காலைல என்ன ஆகாரம் கிடைக்கின்னி பாரு.” சொல்லிக்கொண்டே என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

                தென்னந்தோப்புகளும் வயல்வெளிகளும் சுற்றியிருந்தாலும் காலையிலேயே வெக்கை சூழ ஊரே தகித்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. செல்லத்துரையிடம் ஊரைச் சுற்றிப் பார்த்து வருகிறேன் என்று மெல்ல விடைப்பெற்று ஆற்றங்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கிடா வெட்டுக்காக நேர்ச்சைச் செய்யப்பட்ட ஆடுகளை பரந்து வளர்ந்திருந்த ஒடைமுள் மரத்தின் கீழ் கட்டியிருந்தார்கள். ஒவ்வொரு விதமாக கனைத்துக் கொண்டிருந்த ஆடுகள் கூறமுயற்சிப்பது ஒரே பொருளுடையதாகப் பட்டது.

ரேவதி படும் அவஸ்தைகள் நான் அறியாத ஒன்றல்ல. ஆண்களின் கைகள் ஓங்கியிருக்கும் துறைகளில் பணிபுரியும் பெண்கள் ஏன் ஆண்களை போல தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள் என்பதை இவ்வேலையில் இணைந்தவுடன் புரிந்துகொண்டேன். ரேவதி அப்படிப்பட்ட சாமர்த்தியசாலியும் அல்ல, அவளால் எல்லாவற்றையும் சகிக்க முடியும், ஆனால் மறக்க முடியாது. பாப்பாவின் கொஞ்சல் குரலும் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்க, மனம் போன போக்கிலே ஆற்றங்கரையை நோக்கி நடந்தேன். நீரின் சலனம் பழையாற்றில் சாடிக் குளிக்கும் சிறுவனை வெளிக்கொணர ஆரம்பித்தது. அம்பை பாவநாசத்தில் அடித்துப் பெய்யும் கோடைமழையால் கலங்கிய நீர் சலசலத்து ஓடியது. ஓடிப்போய் முங்கிக் குளிக்கத் தோன்றியது. உடுத்தியிருந்த உடையின் இறுக்கம் என்னைக் கட்டுப்படுத்தியது. ‘வ்வ்வு வவ் க்க்ர்’  வெள்ளைப்பஞ்சுப் போன்றொரு நாய்க்குட்டி எங்கிருந்து வந்ததோ, கால்களுக்கிடையே நுழைந்து பூட்ஸை நக்க முயற்சித்தது, சுதாகரித்து சட்டென்று தூக்க எத்தனித்தேன்.

                “ஸார், எனக்க குட்டி தான்.” குட்டியை அள்ளித் தூக்க அவள் குனியவும், நெஞ்சை ஒட்டியிருந்த சுடிதார் விலகி, மார்பின் பிளவு தெரிய சட்டென்று பதட்டமானேன்.  உள்ளாடை சுடிதாரிலிருந்து விலகி இருக்கும் பிரக்ஞையின்றி என்னிடம் பேச ஆரம்பித்தாள். மேலுதட்டின் மேலிருந்த மெல்லிய மயிர்கற்றைகளும், புருவமிணையும் இடத்தில் இட்டிருந்த குங்குமமும், சுடிதாரை தாண்டி முன்னே தொங்கிய மஞ்சள் கயிறும், நிதானிமின்றி நோட்டமிடவும் “சார நான் பாத்துருக்கேன். ஒரு பொம்பள பிள்ள உண்டுல்லா. அழகா பொம்மை மாரி இருக்கும். நா பஸ் ஸ்டாண்டல பேன்ஸி ஸ்டோர்ல தான் வேல பாக்கேன். உங்க பொண்டாட்டியும் போலீஸ் தான, எனக்கு ஞாபகம் இருக்கு.”  நிகழுக்குத் திரும்பினேன்.

                “பொமேரியனா? மிக்ஸ்டு டைப்பா? வித்தியாசமா இருக்கே” எதோ ஒன்று பேசவேண்டும் என்பது போல பேசினேன்.
“மிக்ஸ்டு தான் ஸார். இங்க சடை நாய்ன்னி சொல்லுவோம்.”
“எங்கூர்லயும் சடைன்னி தான் சொல்லுவோம். நானும் ஒன்ன சின்னதுல வளத்தேன்.”
“அதான பாத்தேன், யாருக்கிட்டயும் போகாதே, ஒங்க கிட்ட எப்படி வந்துச்சின்னு.” பேசிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளுடைய அந்நேர இருப்பு ஏதோ ஒருவிதத்தில் அங்கிருக்கும் மூன்று நாளும் உதவலாம் என்று எண்ணினேன். கோயிலில் முதல்நாள் கொடை கழிகையில் கண்கள் அவளையே தேடின. பெரும்கூட்டத்தில் எங்கிருந்தாலும் தனியே தெரிந்தாள். செல்லத்துரைவும் நானும் கோயிலிலே இருக்க, சுயம்புவை எங்களுக்குத் தேவையான உணவு, சிகரெட், மது வாங்க பணியாளாய் மாற்றிக்கொண்டோம். அவனும் என்னுடைய குணம் அறிந்ததால் மறுக்காமல் சொன்னதை செய்தான். முதல் நாள் இரவு நாங்கள் மட்டும் கோயிலின் முன்னே அமர்ந்திருக்க, செந்தூரபாண்டியன் அங்கு வந்து என்னை மட்டும் தனியே அழைத்தார். ஏற்கனவே ஒரு பியர் அருந்தியிருந்தேன். அருகே செல்லவும், “நீ தாம்போ ஒரிஜினல் போலீஸாட்டும் தெரிய. எனக்கு ஆம்பிள புள்ள இருந்தா ஒனக்க வயசு தான் இருக்கும். வாயேன் ஒரு ஸ்மால் போடலாம்.” அழைத்தார். செல்லத்துரை தள்ளாட ஆரம்பித்திருந்தார். சுயம்பு பெருமணல்காரன் கல் போல அமர்ந்திருந்தான். அவனிடம் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு பெரியவருடன் ஆற்றங்கரையோரம் நடந்தேன்.

முதல் இரண்டு குவளைகள் பருகும் போது அமைதியாக ஊரின் கதையை, சுயசாதிப் பெருமைகளை பேசியவர், அதற்குப் பிறகு பிதற்ற ஆரம்பித்தார். அங்கிருந்து நகர முயற்சித்தேன். ஆனால் அவர் கொலை செய்யப்போகிறேன் என்று சொல்லவும் போலீஸ் குணம் முந்த அங்கேயே இருந்தேன்.

“ஒரே ஒரு கொலதான்ப்போ. செஞ்சுட்டு அடங்கிருவேன். கையும் காலும் பனத்தண்டாக்கும் கேட்டியா. பனயாக்கும். தெக்க நிக்க தெங்குன்னு நெனச்சானுவளோ. ங்கொம்மாளவோக்க.” சொல்லிவிட்டு நெஞ்சில் ஓங்கி அறைந்தார்.

“யாரன்னு சொன்னா! கேஸு இங்கயே முடிஞ்சிரும். அய்யா போலீஸாக்கும் முன்ன இருக்கது.”  கனிவாக சொல்ல முயற்சித்தேன்.

“அதாம்ல ஒங்கிட்டயே சொல்லுதேன்.” மூர்க்கமாகச் சொன்னார். குடித்திருக்கிறார், இருந்தாலும் இம்மாதிரியான தருணங்கள் அபாயகரமானவை. அவரை அமைதியாக்க முயற்சித்தேன். துடித்தார்.

இவ்வூர் பற்றிய கதையை சுயம்பு அவனுடைய பாட்டி சொல்லியதாய்ச் சொல்லி, நண்பகல் கொடையிலே ஓரளவிற்குச் சொல்லியிருந்தான். இவ்வூரிலிருந்த முப்பிடாதி கோயில் மண்ணெடுத்து இரண்டு கோயிலை கட்டினார்கள், ஒன்று பெருமணல் அருகே செம்மங்காடு எனும் சிற்றூரில் இருக்கிறது. இன்னொரு கோயில் திம்மராஜபுரம் பைபாஸ் திரும்பவும் மருதமரக் காட்டினிடையே பாழடைந்து கிடக்கிறது. அங்கே ஒரு மர அறுவை தொழிற்சாலை இருந்தது, இப்போது மூடப்பட்டிருக்கிறது.

‘நம்ம செவத்த முத்து கதயாக்கும் சொல்லப்போறேன். நெறஞ்ச வீரத்துக்கும் மாறாத கௌரவத்துக்கும் கொறையில்லாத அப்பனுக்கும் அம்மைக்கும் அண்ணன்மார் அஞ்சி இருந்த  குடும்பத்துல ஆறாது பொறந்த மகராசியாக்கும் நம்ம செவத்த முத்து. பொறக்கும் போது சுண்டுன இரத்தமாட்டும் நிறம் அவளுக்கு. சமஞ்சு பொறவு கையும் காலும் ஊரார் பார்த்தது இல்ல. முகமும் முழியும் அண்ணன்மார் பார்த்தது இல்ல. அம்ம அப்படியாக்கும்  வளக்க , அவளும் அப்படித்தான் வாழ்ந்தா. அப்பனும் அம்மையும் கொடுக்காத செல்லமில்ல. அண்ணன்மார்  வாங்கிக் கொடுக்காத செல்வமில்ல. அப்பனும் அம்மையும் ஓராளுக்கு இன்னொருத்தர் உசுராய் வாழ, அப்பா ஒரு நாளு பரலோகம் போக. அம்ம வீட்டோடு ஒடுங்கிப்போனா.  அப்பாக்கு செத்த வீட்டு சடங்கு நடந்த அன்னைக்குத்தான் ஊரே செவத்த முத்த பாத்துச்சு. செத்த வீட்டு சடங்கு கழிக்க வந்த பய அவள பாக்கவும் மயங்கி கிறங்கி போனான். ஏழு நாள் சடங்குல ஏழு விதமா மயக்குனான். எட்டாம் நாளு சடங்குல அவன் கூட அவளே எறங்கிப் போக . அம்மாவும்  அண்ணன்மாறும் ஏங்கிப் போவ. அண்ணன்மாறு காலுல வுழுந்து கெஞ்சினானுவ. அசரல அவ. அண்ணன்மாரு அஞ்சி பேரும் அந்த பய காலுக்கு கீழ கூட வுழுந்து புரண்டாலும், குடும்ப பெரும சீரழிக்க வந்த பய எறங்கி போகலயே. மாறா என்ன பண்ணான் தெரியுமா! அஞ்சு பேருக்கும் நீங்க சொல்லத கேக்கணும்ன்னா இந்த பழத்த தின்னுங்கன்னி மலவாழப் பழத்துல அஞ்சு விதமா வெஷம் வச்சு கொடுத்தான். தங்கச்சி குலப் பெரும காக்க திரும்பி வரணும்ன்னி அஞ்சி பேரும் தின்னு செத்தானுக. வெசயம் அறிஞ்ச தங்கச்சி கோவம் தீராமா வெசம் வச்ச பயல, கையாலாயே அரிஞ்சி தின்னா. அவளே முப்பிடாதியா ஆயி, குலப்பெரும காக்க நம்ம அம்மயாட்டு காத்து நிக்கா!’

பெரியவர் கீழே சுருண்டு கிடக்க அவரை எழுப்ப பெரும்பாடு ஆனது. கோயிலில் வில்லுப்பாட்டு நடந்துகொண்டிருக்க ஊரார் சிலர் எப்படியோ விசயம் அறிந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு அவரை எழுப்பிச் சென்றனர். இதே மாதிரி ஒரு முப்பிடாதி கதையில், முடிவை மட்டும் என்னுடைய அம்மா இரவில் என்னை மார்போடு அணைத்தபடி வேறுமாதிரி சொல்லியிருந்தாள்.

‘செல்ல மவளாட்டும் வளத்த தங்கச்சி செத்தவீட்டு சடங்கு கழிக்க வந்த ஊர்குடிமொவன் பய கூட எறங்கி போயிட்டான்னு அண்ணன் அஞ்சி பேரும் ஒறங்கல்ல. அம்மயும் ஒரு வாயி திங்கல்ல. ஒரு நாளாச்சி ரெண்டு நாளாச்சி மூணு நாளாச்சி. பொட்டப் புள்ள ஒருத்தின்னி பாசம் வெச்சு வளத்தோமே! எச்சக்கல பயளப் பாத்தா எறங்கிப் போனா! கோவம் அடங்கல்ல. அவ உயிரோட இருக்க வர குலப்பெரும உண்டா! இல்ல எனத்தான்ல மரியாத தான் உண்டா! அப்பனும் அம்மயும் அழுது தீத்தா. அண்ணன் அஞ்சிப் பேரும் அவ ஊர விட்டு தாமிரவருணி ஆத்தங்கரயோரம் அவனுக்க ஊரார் உடன்பிறந்தார் எடத்துல ஒதுங்கியிருந்த எடம் அறிஞ்சி, ஒத்த பொம்பள பிள்ள, ஒம்மேல் வச்சா பாசம் தான் குறையுமா! இன்னைக்கு ராத்திரி உங்கூட இருக்க, நாளக்கே ஊருக்கு போயி கல்யாணம் பண்ணி வைக்கேன்னி கெஞ்ச, எல்லாம் மனசிறங்கி,  ஒரு இராத்திரி நிம்மதியாட்டு. உறங்க. அம்ம அறிய, ஊருக்கே தீ வச்சான் அண்ணன்மாரு அஞ்சி பேரும். காரணம் அறியாம கருஞ்சி போச்சு எல்லாமே. அவ அறியாம போவாளா அத. பாதி கறிஞ்சிப் போன மிச்சப் பொணமா ஊருக்கு வந்தவ, சாதிசனம் எல்லாத்தையும் சாவம் வுட்டு அழிச்சா. மிச்சம் உள்ள கொஞ்சம் பேரு, சாமியாட்டு வணங்க. எறங்கிப் போனா. மருதகாட்டு கரையோரம் ஒத்தையா நின்ன வேப்பமரத்துக்கு முன்ன சாம்பலா கரஞ்சி போனா. அவள கூட்டிபோன அந்தப் பயலுக்க ஊராரெல்லாம் கெழக்க கடக்கரையோரமா போயி ஒதுங்கிட்டாம்.’

என்னுடைய உள்ளுணர்வெல்லாம் இதற்குப் பிறகு கொஞ்சம் விழிப்படைந்தது. செல்லத்துரையிடமும் சுயம்புவிடமும் காலையில் நான் கண்ட இளம்பெண்ணும் இப்பெரியவரும் அப்பா மகளாக இருக்கக்கூடும் என ஊகிக்கிறேன் எனவும் அவளுடைய கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிறுக்கு யார் காரணம் என்றும் ஊரில் விசாரிக்கச் சொன்னேன். பெரியவர் கொல்லப் போவதாகச் சொல்லியதையும் சொன்னேன். செல்லத்துரை நிற்க கூட இயலாமல் கதையைக் முழுதாய்க் கேட்கும் முன்னரே உறங்கிப் போனார். சுயம்பு விசாரித்து வருவதாகச் சொல்லிவிட்டு இறங்கிப் போனான்.

ஏற்கனவே குடித்திருக்கிறேன், எல்லாக் கதைகளும் ஒருசேர சோர்வுற்றுப் போனேன். இதற்கிடையே ரேவதி அழைத்து சங்கரபாண்டியன் ஊருக்குச் செல்ல அனுமதித்துவிட்டார் எனச் சொன்னாள். ஒலித்துக் கொண்டிருந்த வில்லுப்பாட்டில் எப்படி உறங்கினேன் என்ற நினைவில்லை. சுயம்பு என்னை அழைக்கவும் அடுத்த நாள் விடிந்துவிட்டதை உணர்ந்தேன். அப்பெரியவரால் அப்படியொன்றும் அந்த இளம்பெண்ணை கொல்ல முடியாது எனவும் அவருடைய மகள் காதலித்து மணம் புரிந்தவள் அவருடைய சொந்தச் சாதியைச் சேர்ந்தவன் தான் என்று அவன் சொல்லவும் மிகவும் குழம்பிப்போனேன். யாரைத் தான் இவர் கொல்ல உத்தேசித்திருந்தார் என அவரிடம் கேட்டிருந்தால் நேற்றைய நிலைமைக்கு அவர் சொல்லியிருக்கக் கூடும். அவ்வீட்டில் இருந்த சிறிய குளியலறையிலே குளித்து காக்கி உடையை உடுத்தி நேராக திம்மராஜபுரம் காவல்நிலையம் சென்று இவ்வூரின் பழைய குற்றப்பிண்ணனியைக் கேட்டறிந்து, ஏனோ முப்பிடாதி கதையை கேட்டு வேறுதிசையில் சிந்திக்க ஆரம்பித்துவிட்ட என்னை நானே கடிந்து கொண்டேன். மீண்டும் கொம்புவீரன்பட்டினம் செல்கையில் நாங்கள் தங்கியிருந்த  வீட்டினருகே செந்தூரபாண்டியன் ஏற்கனவே எனக்காக காத்துக்கொண்டிருந்தார்.

“குடிச்சு பழய கதைய பேசிட்டேன். சார் மன்னிக்கணும்,” என்றார்.

பொய்யானப் புன்னகையை முகத்தில் வரவழைத்து அவரை அங்கிருந்து கிளம்பச் செய்தேன். நடந்து சென்றவர் மெல்லத் திரும்பி, “எம்பிள்ள போல சொல்லுதேன். இந்த வாட்டி கொல எதுவும் நடக்காம போயிரணும். இந்த கோயிலுக்க விதி, ஒவ்வொரு கொடைக்கும் ஒரு கொல நடக்கு. எல்லாம் யாரார் செஞ்ச பாவமோ.” சொல்லிவிட்டு விருட்டென்று நடந்தார்.

பகல் முழுக்க கோயிலிலேயே இருந்தேன். மாலை வரையிலும் அந்த இளம்பெண்ணும்  அவளுடைய அம்மாவும் கோயிலிலேயே இருக்க . சுயம்புவை அழைத்து பெரியவரைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். காலையில் இருந்து குடிக்க ஆரம்பித்தவர் நிதானமின்றி ஆற்றங்கரையோரம் கிடக்கிறார் எனச் சொல்லவும், சுயம்புவை அவரை மட்டுமே நோட்டமிடச் சொல்லி செல்லத்துரையுடன் கோயிலிலேயே இருந்தேன் அந்தி கறுக்க ஆரம்பிக்கவும் நான் எதிர்பாராமல் இருக்க, அந்த இளம்பெண் எதிரே வந்து பேச ஆரம்பித்தாள். கூடவே மெல்லிய உடல்வாகு உடைய அந்த இளைஞனும் நின்றான். அவள் எதையோ பேசிக்கொண்டிருந்தாள். நான் அவனையே உற்றுநோக்கினேன். ஏற்கனவே அறிந்த முகம், நெல்லையப்பர் கோயில் முன்னே ஒருவழிப்பாதையில் நான் முன்னே பணியில் நின்றிருந்த போது கஞ்சா போதையில் இருச்சக்கர வாகனத்தில் வந்து சாலையில் விழுந்து, என்னிடம் அடி வாங்கியவன். என்னிடம் அடி வாங்கியவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் என்னை மறக்க முடியாது. என்னைப் பார்த்தவன் பொய்யாய் சிரிக்க முயற்சித்தான். என்முன்னே பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் மீது பரிவு ஏற்பட ஆரம்பித்தது.

“அப்பா அப்படித்தான் சார் என்னல்லாமோ ஒளரும். நீங்க ஒன்னும் அவர தப்பா நெனச்சுக்கிடாதீங்க. அம்மதான் பாவம், நீங்க எங்க அவர போலீஸ் ஸ்டேஷன் பிடிச்சிட்டுபோயிருவேங்களோன்னி பயப்படுகு.” இப்போதும் அவளுடைய மேலுள்ளாடையில் ஸ்ட்ராப் வெளியே தெரிவதைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் பேசிக்கொண்டிருந்தாள். அந்த இளைஞன் என் முன்னே கூனிக்குறுகியபடி நின்றான். என்னையறியாமல் இவன் மேலே ஏதாவது வழக்கு இருக்குமா! என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். அவர்கள் இருவரும் என்னிடம் மெல்ல விடைபெற, அவன் மட்டும் எதையோ மறைப்பவன் போல ஒளிந்து ஒளிந்து விலகினான். செல்லத்துரையிடம் அந்தப் பயல் மேல் ஒரு கண்ணிருக்கட்டும் என்றேன்.

இரண்டாம் நாள், இரவு பூஜை முடியும் போது செந்தூரபாண்டியனும் அப்பெண்ணும் அவரவர் வீடு சென்றடைந்ததையும், அந்தப் பயல் அன்றைக்கு வீட்டிற்க்குச் செல்லவில்லை என்பதை அறிந்தப் பிறகே மதுவருந்த ஆரம்பித்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏதேனும் நடந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்பதே என்னை ஆசுவாசபடுத்தியது. பாப்பாவும் ரேவதியும் வீடியோ காலில் வந்தார்கள். அடுத்தநாள், கடைசி நாள் கொடை முடியவும், நானும் நாகர்கோயில் வீட்டிற்கு வருவேன் என்று இருவரிடமும் சொல்ல பாப்பா குதூகலித்தாள்.

விடிகையில் கொஞ்சம் நம்பிக்கையாகவே உணர்ந்தேன். ஆற்றுக்குச் சென்று முங்கிக் குளித்து திரும்பினேன். இந்த ஊரில் நண்பகலில் கிடாவெட்டு நடக்கும், அத்தோடு கொடை முடிந்தது. ஒடைமுள் மரத்தின் கீழ் கட்டியிருந்த கிடாவை எல்லாம் கோயிலுக்கு முன்னே அவரவராய் நேர்த்திக் கடனுக்காக விட்டவர்கள் கோயிலின் அருகே ஓர் ஒழுங்கில் இழுத்து வந்தார்கள். நான், செல்லத்துரை, சுயம்பு மூவரும் கோயிலின் முன்னே நின்றிருந்தோம். சட்டென்று கோயிலின் முன்னே நின்றுகொண்டிருந்த சிலர் பதற ஆரம்பிக்க, நானும் கால்கள் பரபரக்க அந்த இளம்பெண்ணின் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தேன். என் எதிரே அந்தப் பயல் இன்னொரு தெரு பக்கமாய் ஓட ஆரம்பிக்க, அவனைத் துரத்திப் பிடித்தேன். அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்ட் இறுக்கமாகி விடைப்பாக நிற்க, கையிலிருந்த லத்தியால் அதில் ஓங்கி அடித்தேன். ‘டிங்க் டிங்க்’ எனும் சத்தம் கேட்டது. அவனுடைய முகம் வியர்த்துக் கொட்டியது. உதடுகள் நடுங்க ஏதோ உளறினான்.

“என்னல சொருவி வச்சுருக்க.” வலது கையை ஓங்கவும்,

“சார்  இது எனக்க சேப்டிக்கு,” இடுப்பினிடையே கையை விட்டு நீண்ட வாள் ஒன்றை உருவி எடுத்தான்.

“என்னல ஆச்சி” கத்தினேன்.

“என்னயயும் கொல்லுவாங்க,” ஓட எத்தனிக்க. என் பின்னே வந்த சுயம்பு அவனுடைய கையில் இருந்த வாளை தட்டிவிட்டு, “செல்லத்துரை சார், ஒத்தைக்கு நிக்காங்க, நீங்க அங்க போங்க,” என்றான்.

அங்கே ஓடினேன். நான் சுதாகரித்து இருக்கவேண்டும். வெளியே நான் எதிர்பார்த்து இருந்தது போல, பீறிட்ட இரத்தம் சிதறி சிவந்த முத்துகளாகி சுடுமண்ணில் கிடக்க, பெரியவர் செந்தூரபாண்டியன் அம்மண்ணில் புரண்டு அழுதபடி கிடந்தார். என் நெஞ்சில் கனமேறி அடைக்க, மண்டை சூடேற அவரை எழுப்பி நிறுத்தினேன்.

“எம்பொண்ணு சார். வேண்டாம் வேண்டாம்ன்னி சொன்னேன் சவத்துமூதி கேக்கலையே” தலையில் அடித்தபடி வாயில் சழுவை வடிய மீண்டும் தரையில் விழுந்தார்.

தலை துண்டித்திக் கிடக்க. முண்டத்தில் இருந்து பாய்ந்த இரத்தம், சுடுமண்ணில் திடத்திரவமற்று பாகு போல அப்பி இரத்தச் சூட்டில் மெல்ல அசைந்தது. நான் மீண்டும் கோபம் கொப்பளிக்க பெரியவரின் அருகே செல்ல, செல்லத்துரை என்னை உலுக்கி, “செஞ்சது அம்மையாக்கும்” என்றார்.

முகம் முழுக்க மஞ்சணை பூசியிருந்த இசக்கி போல அவளுடைய அம்மை எதிரே நிற்க, வெட்டரிவாள் தூரமாகக் கிடந்தது. “தராதரம் வேண்டாம்.  முண்டைக்கு.” அவளுடைய உதடுகள் முனகின. மனம் முழுக்க ஒருவித பயம் அப்ப, கால்கள் கனக்க ஆரம்பித்தன. இருந்தாலும் வேலைக்குரிய தோரணையில், “என்ன பொம்பளட்டி நீ”, என்று கத்தினேன். அவள் மெதுவாக என்னருகே வந்து, “இந்த கெழவன்ட்ட சொன்னேன் நீறு கொல்லும்ன்னி, என்னய கொல்லவச்சுட்டான். எனக்க தங்கக்குடமே! எனக்க குலப்பெருமையே!,” பீறிட்ட அழுகையால் மூச்சை அடக்கி மீண்டும் பேச ஆரம்பிக்கவும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன்.

***

வைரவன் லெ.ரா – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணி நிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது நூல்கள் ’பட்டர் பீ & பிற கதைகள்’ராம மந்திரம்’. மின்னஞ்சல்: vairavanlr@gmail.com

தூயன் – ஆறு குறுங்கதைகள்

0

கடலின் வாக்குமூலம்

இறந்த இளம்பெண்ணின் உடலைப் பத்திரமாகக் கரைக்குக் கையளித்தன அந்திநேர அலைகள். நுரையோடு நுரையாக அவள் கிடந்தாள். சுடிதாருக்குள் சிக்கிய மீன் ஒன்று அவளோடு சேர்ந்தே இறந்துவிட்டது. கடற்பயணக் களைப்பில் உறங்குவதுபோல குப்புறப்படுத்திருக்கிறாள். தற்கொலைக்கானக் காரணத்தைத் தேடியவர்களிடம் மூன்று நாளைக்கு முந்தின இரவு அவள் விளையாடிய காலடித் தடங்களைத்தான் நான் உடனுக்குடன் அழித்தேனே தவிர வேறொன்றும் செய்யவில்லையே என்று அலைகள் புலம்புவது யாருக்கும் கேட்கவில்லை.

பூதம் நுழைய கிணறு கிளம்பியக் கதை

சொன்னபடியெல்லாம் கேட்கும் இராட்சஸ பூதத்தை அவர்கள் எங்கிருந்தோ பிடித்து வந்து பூமிக்குள் விட்டார்கள். பூதம், புதியதோர் புகைவண்டித் தடத்துக்காக நிலத்துக்குள் புற்றுகட்ட ஆரம்பித்தது. நகரத்தின் அடுக்குமாடிகளும் மேம்பாலங்களும் சாக்கடைத் துளைகளும் நிலத்துக்கு மேலே பெரும் கூச்சலுடன் கத்துகின்றன நிதமும். கூச்சலுடன் கூச்சலாக மெல்ல மெல்ல பூதம், நகரத்தின் கீழே பெரும் கோலமொன்றை வரைய ஆரம்பித்திருக்கிறது. இளமை தளர்ந்துபோன நகரத்திடம், “அவ்வளவுதான் அவ்வளவுதான் முடிந்துவிட்டது” என்று எத்தனைமுறை சமாதானம் சொன்னாலும் கேட்பதில்லை சுருங்கிய ஸ்தனங்களுக்கு. பூதம் உறுமி உறுமி நகர்ந்து போகும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அடியிலிருந்து பெரிதாக மூச்சுவிடுகிறது. அவர்களும் “அப்பாடா” என்று பெருமூச்சு விடுகிறார்கள். ஆயிரஞ்சேரியைத் தாண்டிவிட்டால் அத்துடன் முடிகிறதாம் நிலத்தடிப் புற்றின் கோலம். அதன்பிறகு இன்னொரு நகரம். அவளையும் இவளையும் இணைத்தால் போதும். இராப்பகலாக ஊர்ந்துகொண்டிருந்த பூதம் ஆயிரஞ்சேரியைத் தொட்டபோது, முன்பொரு காலத்தில் அவ்வூரையே கொழிக்கச் செய்திருந்த கிணறுகளெல்லாம் விழித்துக்கொண்டன. அவ்வளவுதான், பிரசவத்தில் வீறுகொண்டு அலறுவதுபோல ஒவ்வொன்றும் அலறியதில் கெட்டுப் போனப் பனிக்குட நீர் பீச்சியடித்தது நிலவைத் தொட.

சாய்வு நாற்காலி

பள்ளியை விட்டு வந்ததும் தாத்தா அமர்கிற நாற்காலி காலியாக இருப்பதை சிறுவன் கவனித்தான். அது  சாய்வு நாற்காலி. அதில் அமர்ந்தால் குளத்தில் மல்லாக்கப் படுத்து நீச்சல் அடிப்பதாட்டம் இருக்கும். புத்தகப் பையை வீசிவிட்டு உடனே  அதில் அப்படியே சாய்ந்தான். திடுக்கென வானம் கண்ணுக்கு முன்னால் வருவதுபோல விழுந்தது. ஆகாயத்தில் உழவாரக்குருவிகள் வேக வேகமாக எதையோ கிறுக்கின. அதன் தடத்தைக் கூர்ந்து கவனிப்பதற்குள் மேகம் பின்னாலயே அழித்தபடி வருகிறது. கிளி ஒன்று கழுத்தைத் திருப்பி அவனைப் பார்த்தது. தாத்தா வராமல் இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம்கூட சுகமாக சாய்ந்திருக்கலாமென்று நினைத்தான். சாய்ந்தவாறே மதில்சுவரில் உட்கார்ந்திருக்கும் பூனையைக் கவனித்தான். எதிர்வீட்டின் சோமு பாட்டி தெரிந்தார். பக்கத்து வீட்டு மாடியில் யாரோ துணிகளை எடுத்து மடிப்பது துலக்கமாகத் தெரிகிறது. தாத்தா மாதிரியே கைகளை மடித்து புறங்கழுத்துக்கு வைத்தான். கால்களைத் தூக்கி ஸ்டூலில் போட்டான். இமைகளை மூடுவது மட்டும்தான் இன்னும் பாக்கி. கண்கள் சொருக ஆரம்பித்தன. ஏதாவதொரு புத்தகத்தை இப்படிச் சாய்ந்தபடி படித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றிற்று. ஓடிச் சென்று கைக்குச் சிக்கியதை எடுத்து வந்தான். சுகமாக இருந்தது. ஆனால் கையில் வெகுநேரம் பிடித்திருக்கத்தான் முடியவில்லை. தூக்கிப் போட்டுவிட்டான். மறுபடியும் கைகளை புறங்கழுத்திற்குள் செறுகியபடி வாசலைப் பார்த்தான். பேரன் அப்போதுதான் பள்ளியிலிருந்து வருகிறான். அருகில் அமர்த்தி என்ன வீட்டுப்பாடம் இன்றைக்கு என விசாரித்தான். மனப்பாடச் செய்யுளை ஒப்பிக்கச் சொல்லிக் கேட்டான். எட்டாத அவனது காதைப் பிடித்திழுக்க இடது கையை காற்றில் அலையவிட்டான். இப்படி செய்யும்போது நாற்காலி முன்னாலும் பின்னாலுமாக ஆடியது. ”தாத்தா” என்று பேரன் கத்தினான். காது வலிக்கிறது என்று அழுகிறான். அவன் அழுவதைக் கவனிக்காததுபோல மார்பைச் சொறிந்துகொண்டிருந்தபோது யாரோ உள்ளிருந்து அழுவது கேட்டது. எட்டிப் பார்த்தான். கொல்லையில் தாத்தாவை ஸ்டூலில் உட்கார்த்தி வைத்து பாட்டியும் அம்மாவும் குளிப்பாட்டுகிறார்கள். அவரது தலை தொங்கிவிட்டிருந்தது. தலையைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கையில் தாத்தா தன்னைப் பார்த்துவிடக் கூடாதென படாரென்று நாற்காலிக்குள் ஒளிந்துகொண்டான். ஈரப்புடவையுடன் அவனை நோக்கி அவசரமாக வந்த அம்மாவிடம் “தாத்தா பாத்துட்டாரா” என்று பயந்துபோய் கேட்டான்.

இளவரசி

அண்ணா நகர் சுரங்கப்பாதை இரயில் நிலையத்திற்கு மேலே தட்டுக்கடை ஒன்று இருக்கிறது. சற்று முன்புதான் அங்கு காத்திருந்தேன். பின்னிரவுக் கடந்துவிட்டிருந்தது எனக்கானப் பேருந்து இன்னும் வரவில்லை. முகங்கள் மறைகிற இரவின் கருமையில் பெரிய முட்டை வடிவ மின்னொளியுடன் சிறிய தேர் போல ஒரு வண்டி மெல்ல வந்தது. பேட்டரி விளக்கில் கண்ணாடி சீஸாவுக்குள் தேவதையொருத்திக் களைத்துப்போட்ட ஆடைகளாட்டம் சோன்பப்படி குவியல். இளவரசியின் உத்தரவைப் பணிகிற சேவகனைப் போலத்தான் சோன்பப்படிக்காரன் வண்டியை தள்ளிக்கொண்டு வந்தான் அவனது வருகை ஒருவரையும் தலைத் திருப்பிவிடவில்லை. தட்டுக்கடைச் சிறுமி மட்டும் தன் பாட்டியிடம் “பப்படி” என்று கேட்டாள். பாட்டி மறுக்கிற அந்தக் கணத்தில்தான் நானும் சிறுமியும் சந்திக்கிறோம். சோன்பப்படிக்காரன் நிற்பதா நகர்வதா என சில கணங்களை எங்களுக்கு நடுவே தங்கிவிட்டுக் கிளம்பிவிட்டான். அச்சிறுமிக்கு ஒரு பப்படி வாங்கித் தரத் தோன்றியது எனக்கு. நானும் பப்படி தின்று வெகுநாளாகிற்று. சோன்பப்படிக்காரனை அழைத்து ஒன்று எனக் கைக்காட்டினேன். “இருபது சார்” என்றான். நான் சரி என்றேன்.

அவன் கண்ணாடி சீஸாவுக்குள் கரண்டியை விட்டுப் புரட்டியபோது சிறுமி அப்பாலிருந்தாலும் சீஸாவுக்குள் வந்து போவதைக் கண்டேன். நான் ரசிப்பதைக் கவனித்தவன், பப்படி கிளறிவிழுவதை விளக்கு வெளிச்சத்தில் மேலும் கீழும் காட்டினான். உறங்குகிற ஒருத்தியாட்டம் பப்படிக் குவியல் புரண்டன. அவன் கிளறக் கிளற ஆடையை உதறுவதுபோல சீஸாவுக்குள் பப்படிக்கட்டிகள் பறந்தன. பால்வெளிக் கோலம் அவ்வாறுதான் பூமியைப் படைத்திருக்கும் என்று அச்சிறுமிக்குக் காட்டினேன். பிரபஞ்ச வெடிப்பை பல முறை எனக்கும் சிறுமிக்கும் அவன் நிகழ்த்திக்காட்டினான். சிறுமி சீஸாவுக்குள் உருப்பெருகி உருப்பெருகி மறைகிறாள். சில கணங்களுக்குப் பிறகு கையால் பிடிக்க முடியாதளவு கவிழ்த்திய காகிதப் பிரமிடுக்குள் காற்றில் சரியச் சரிய சோன்பப்படியை அவன் எனக்கு அளித்தான். நான் அப்படியே அச்சிறுமிக்குத் தர திரும்பினேன். அவளை அங்குக் காணவில்லை, அதுவரை அங்கு நின்றுகொண்டிருந்தவர்களும் கடைசிப் பேருந்தில் போய்விட்டது எனக்கு அப்போதுதான் விளங்கிற்று. சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் ஓடின.

பப்படியை சிந்தாமல் இரு கைகளாலும் பிடித்தபடி குவியலை அள்ளி நாவில் கரையவிட்டுக்கொண்டே தலையை இறக்கியபோது, பாதசாரியின் தூரத்தில் நின்று சிறுமி என்னைப் பார்த்தாள். நான் அவளை நோக்கி பப்படியுடன் சென்றேன். நான் வருவதைப் பார்த்தவள் வேக வேகமாக பாதசாரியில் நட்டிருக்கிற லிங்கங்களுக்குள் புகுந்து ஓடினாள். எனது வேகமும் கூடிற்று. வெளிச்சம் மறைகிற இருளுக்குள் அவளைப் பின்தொடர்வது சிரமமாக இருந்தது. எதற்காக ஓடுகிறாளென்று தெரியவில்லை ஆனால் பிடிக்க வேண்டுமென்கிற வேகம் எனக்கு. நான் அவளை அன்மித்ததாக நினைக்கையிலெல்லாம் அவள் கைநழுவிக்கொண்டே இருந்தாள். ஒரு வளைவில் திரும்பியவள் சட்டென சுரங்கப்பாதைக்குள் புகுந்துவிட்டாள். அவளைக் கூவியழைத்தவாறே நானும் உள்ளே நுழைந்தேன். சுரங்கப்பாதைக்குள் ஒரு பாம்புபோல அவள் வேக வேகமாக ஊர்ந்தாள். அந்தத் தடம் அவளுக்குப் பழக்கமானதாக இருக்க வேண்டும். நான் நெருங்க நெருங்க அவள் என்னைத் திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டே இருந்தாள். சோன்பப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் விரல்களில் சிந்த ஆரம்பித்தது. சுருட்டி பத்திரப்படுத்திக்கொண்டே சிறுமியை விரட்டிச் சென்றேன். வியர்வை நெற்றிப் பொட்டிலிருந்து வழிவதைத் துடைத்துக் கொள்வதற்குள் சுரங்கப்பாதையின் மையத்தில் பிரிகிற நான்கு வழியின் எதற்குள்ளோ மறைந்துவிட்டாள். என் பார்வைச் சிதறிவிட்டது. சிமிட்டுகிற விளக்கொளியில் சிறுமியைத் துழாவினேன். எனது மூச்சொலி பயங்கரமாய் எதிராலித்தது. எனக்குப் பின்னே யாரோ வருகிற உணர்வு. திரும்பிப் பார்த்தேன். சோன்பப்படிக்காரன் கையில் விளக்குடன் ஓடி வந்துகொண்டிருந்தான். அவனுடைய பேட்டரி விளக்கின் ஒளியில், தூணுக்குப் பின்னால் அமர்ந்திருந்த சிறுமியின் நிழல் சுவரில் வெளிப்பட்டது. நான் தூணுக்கு முன்னால் சென்று அவளைப் பிடிக்கக் குனிந்தபோது சிறுமி முகத்தை மூடிக்கொண்டு அழ முடியாமல் திணறினாள். நான் அவள் கைகளைப் பிடிக்க முயன்று (தொடுவது தெரிந்து தொடைகளுக்குள் ஒளித்துக்கொண்டாள்) தொட்டும் தொடாமலுமாக, அவளிடம் “சோன்பப்படி கொடுக்கத்தான் விரட்டுனேன்” என்றேன். அவள் தலையை ஆட்டி மறுத்தபடியே விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அவளது அழுகை கடவுள் அழுவதைப் போன்றிருந்தது. சோன்பப்படி முழுவதுமாகச் சிந்திவிட்டது. தேவதையின் ஆடைப்போன்றிருந்த அதன் அழகு குப்பையாக மாறியிருந்தது. நான் சிறுமியின் முன் என் கடந்தக் காலத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டேன். சிறுமி என்னைத் தாண்டி ஓடினாள். சுரங்கப்பாதையின் எல்லா தூண்களிலும் யாரோ சிலர் யாரோ சிலரிடம் மண்டியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

சிந்தாதிரிபேட்டை

தம்பதியரின் விவாகரத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தபோது, அரசு பணியில் இருக்கும் பெண்ணுக்கான இழப்பீடு தொகை என்று எதுவும் இல்லையென்பது முடிவாகிற்று. கணவனோடு நான்கு வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை வீணானதற்கு ஏதாவது இழப்பீட்டைத் தரத்தான் வேண்டும் என்று பெண்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அந்தப் பெண்ணும் நீதிபதியிடம், கணவனுக்கு இழப்பீடாக நான் விவாகரத்தைத் தரும்போது அவர் எனக்கென்ன இழப்பீடு தருவார்? என்று கேட்டேவிட்டாள். அவள் சொல்வதும் நியாயம்தான். பணம் அல்லாமல் வேறெதையாவது அவள் கேட்பதற்கு உரிமை உண்டு என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அந்தப் பெண், இனி தான் மறுமணம் செய்யப் போவதில்லை, அதில் எனக்கு விருப்பமும் இல்லை, எனவே அவன் மூலமாக ஒரு குழந்தையை இழப்பீடாகத் தர வேண்டுமென்றாள்.

கணவன் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதோடு பெண்ணுக்கு திருணமத்திற்கு முன்பே கர்ப்பக் குழாயில் காசம் தொற்று உள்ளதை எங்களிடம் மறைத்துவிட்டதும் குற்றச்சாட்டில் சேர்த்திருக்கிறோம் என்றனர். அதற்கு நீதிபதி, ”செயற்கைக் கருத்தரிப்பில் ஆணின் உயிரணுவைச் செலுத்தலாமே” என்றார். விவாகரத்து முடிவானதற்குப் பிறகு எந்த ஒட்டும் உறவும் கூடாதென்பதில் எதிர்தரப்பு பிடிவாதமாக இருந்தது. குழந்தையை இழப்பீடாக தந்தே ஆக வேண்டுமென்பதில் அவளும் பிடிவாதமாக நின்றாள். வழக்கை எப்படி முடிப்பதெனத் தெரியவில்லை.  உணவு வேளைக்குப் பிறகு இருதரப்பு வழக்கறிஞர்களும் கலந்து பேசி வாடகைத் தாய் மூலம் அவள் கேட்கிற இழப்பீட்டை ஏற்பாடு செய்யலாமென்கிற யோசனைக் கூறினர். அப்படியானால் மருத்துவ விதிமுறைகளின்படி ஒரு வாடகைத்தாயை அமர்த்த நீதிமன்றம் உத்தரவிடுகிறதென்று நீதிபதி வழக்கைக் கெடுவுடன் முடித்தார்.

நீதிமன்றத்தின் கெடுவால் அவனுக்கு மறுமணம் செய்யும் ஏற்பாடும் நின்று போயிற்று. அவள் அவனிடம் வருத்தம் தெரிவித்தாள். வாடகைத்தாய் கிடைக்கிற அன்றைக்கே கருப்பையில் விந்தணுவைச் செலுத்திவிட்டால் போதும் இழப்பீடு பாதி முடிந்த மாதிரிதான். வழக்கின் ஆணையும் கிடைத்துவிடும் என்றாள். இருதரப்பும் அவசரவசரமாக தங்களுக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் வாடகைத்தாயைத் தேட ஆரம்பித்தனர். சென்னையில் சுலபமாக வாடகைத்தாய் கிடைக்கிறதாகக் கேள்விபட்டு தம்பதிகள் உடனே சென்னைக்குக் கிளம்பினர். இந்தச் சமயத்தில் மருத்துவக் குழுமத்திலிருந்து அவர்களுக்கான வாடகைத்தாய் பதிவு சம்பந்தமாக மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அவர்களின் முன்பதிவுக்கான எண்ணும், வாடகைத்தாய் கொடையாளரின் காத்திருப்புப் பட்டியலும் இருந்தது. அதாவது, மருத்துவக் குழும கணக்கின்படி அவர்களுக்கான வாடகைத்தாய் கொடையாளர் இன்னும் இரண்டு வருடங்களுக்குக் கையிருப்பில் இல்லை. தம்பதிக்குத் தூக்கிவாறிப் போட்டது. வழக்கறிஞரைத் தொடர்புகொண்டார்கள், இது மருத்துவக் குழுமத்தின் பழைய பட்டியல், அவர்கள் எப்போதும் இப்படித்தான் பதிவு வரிசைகளைச் சரிபார்ப்பதே இல்லை. அதனால் நமக்குத் தெரிந்தவர்களிடம் விசாரிக்கலாம் என்று சமாதானம் கூறினர். அதுவும் சரிதான். பெரும்பாலும் அரசு திட்டங்களில் இதுபோல சுணக்கம் உண்டு. கொடையாளரை நேராகப் போய் பார்த்தால்தான் சரியாக இருக்கும்.

இருவரும் வழக்கறிஞர் கொடுத்த முகவரிகளுடன் ஆளுக்கொரு இடமாகச் சென்று விசாரிக்கத் துவங்கினார்கள். மூன்றாவதுமாதம் நான்குமாதம், ஆறுமாதம், எட்டுமாதம், எனப் பார்க்கிற வாடகைத்தாய்கள் எல்லாரும் அடுத்து அடுத்து குழந்தைப் பேறுக்கானப் முன்பதிவுகளை வைத்திருந்தனர். ஒவ்வொருத்தரையும் குறைந்தது மூன்று வருடங்களுக்கு அணுக முடியாத நிலைமை.

தம்பதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. விசாரித்தவர்களிடமிருந்து அவரவர்களுக்குத் தெரிந்த வாடகைத்தாய்களின் முகவரிகளை வாங்கி, ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு கடைசி வரை எதுவும் அமையவில்லை. இதற்கென தனியார் நிறுவனம் ஒரு செயலி வைத்துள்ளது. தினசரியில் விளம்பரங்கள் நிறைய வருகிறது. தொலைபேசிக்கு நிறுவன அழைப்புகள் வருவதும் உண்டு. எல்லாமே இதைப் பற்றித் தேடத் தேடத்தான் தெரிய ஆரம்பிக்கின்றன. ஆனால்  அத்தனையும் எதிர்காலத்துக்கானத் திட்டங்களாகவே உள்ளன. உடனே நடக்கிறமாதிரி எதுவும் இல்லை. இப்படியே எவ்வளவுநாள் காத்திருக்க முடியும். தனியார் மருத்துவமனைகள் வெளிநாட்டிலிருக்கும் வாடகைத்தாய்களை கைவசம் வைத்திருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பெரும் செலவு ஆகும். தம்பதிகளால் அவ்வளவு கொடுக்க முடியாது. குறைந்த விலைக்கு வெளியே, இரண்டு மூன்று முறை வாடகைத்தாயாக இருந்து, உடல் தகுதியிழந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் பலவீனமாகவும் வயதானவர்களைப் போல இருப்பதைப் பார்த்ததும் தம்பதிக்கு பயம் பிடித்துவிட்டது. அதில் ஒருத்தி, ”பயப்பட வேண்டாம் ஒப்பந்தம் போட்டுக்கலாம். கருவுக்கு ஏதும் ஆனா காப்பீடும் உண்டு.” என்றாள். இவள் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். பரவாயில்லை என்று அந்த வாடகைத்தாய் ஒரு தரகர் எண்ணைத் தந்தாள். அவர் மருத்துவக் குழுமத்தில் பணியாளர்.

தம்பதிகள் தரகரைத் தொடர்பு கொண்டார்கள். அவர் அவர்களது பதிவு எண்ணைச் சரியாகச் சொன்னார். ஆமாம் நாங்கள்தான் என்றனர். தொடர்பு எண் கொடுத்தவள் ஆவடி என்றால், நீங்கள் பட்டினப்பாக்கத்திலிருந்து, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, செங்குன்றம் கடைசியாக ஆவடி என்று தேடியிருப்பீர்கள் சரிதானே என்றார். தம்பதிகளுக்குத் தலைச்சுற்றியது. அவர் தன்னைச் சந்திக்க வேண்டிய இடத்தையும் நேரத்தையும் சொன்னார்.

இருவரும் சிந்தாதரிபேட்டையில் காத்திருந்தனர். அவ்வளவு ஜனநெருக்கடிக்குள் தரகர் அவர்களைச் சரியாக கண்டுபிடித்தார். இருவரையும் வட்டச்சுருள் போன்ற தெருவுக்குள் அழைத்துபோனார். அவர்களைப் பார்த்த  கடைவாசிகள் ”வா வா” என்று நிறைமாதப் பெண்ணின் படத்தையும் சிலர் குழந்தை பொம்மையையும் காட்டி, கையைப் பிடித்திழுக்காத குறையாக அழைத்தனர். தரகர், ”இதெல்லாம் ஏமாத்து. இன்னும் நாலு வருஷத்துக்கு ஆகாது” என்றார். சட்டென ஒரு நிலவறைக்குள் புகுந்தார். அதில் நீளமான பாதையொன்று பூமிக்குள் சென்று மறுபக்கம் தெருவுக்குள் தொடங்கிற்று. ”எப்போதோ மெட்ரோவுக்காக தோண்டி கைவிடப்பட்ட இடம். வடநாட்டினர் சிலர் கள்ளத்தனமாக வாடகைத்தாயாக இங்கு இருக்கிறார்கள். வயது நாற்பது இருக்கும் பரவாயில்லையா?” தம்பதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”ஏழோ எட்டோ மாதத்தில் குழந்தைத் தயாராகிவிடும். அப்போதான் போலீஸ் கெடுபிடியிலிருந்து தொழில காப்பாத்த முடியும். கொழந்த கைல வந்தபுறம் பணம் தந்தா போதும். என்ன சரியா?” தம்பதிகள் அமைதியாக வந்தனர். அவர்கள் ஒரு கடை வாசல் வழி சென்று வீட்டின் ஹாலை அடைந்தனர். முக்காடிட்ட அழகானப் பெண் ஒருத்தி வரவேற்றாள். தரகரிடம் பத்திரம் ஒன்றைக் காட்டினாள். தரகர் இவர்களிடம் திரும்பி, ”இப்போதான் ஒருத்தர் முன்பதிவு பண்ணிட்டு போறார். பெரிய பெரிய டாக்டர்ங்க கன்சல்ட் பண்ண வராங்க. புது டெக்னிக். உங்களுதயும் கொடுத்தா ஒரே சமயத்துல கெர்ப்பம் கிடைச்சுடும். ரெண்டு இல்ல மூணு வரைக்கும்கூட வாடிக்கையாளருங்களுக்குப் பண்ணுவாங்க. உங்க ஒருத்தருக்காக ஒரு வாடகைத்தாயப் பிடிக்கிறதலாம் கட்டுபடியாகாது. என்ன சரியா?” அவர் பேச்சை முடிப்பற்குள் தம்பதிகள் இருவரும் ”சரி சரி” என்று சந்தோஷத்தில் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு குதித்தனர்.

தெரியாமல்தான் தினமும் வந்து போகிறார் அவர்.

சித்ரா அவசரமாக வேலைக்குக் கிளம்பும்போதெல்லாம் ஜன்னலைச் சார்த்துவதில்லை. பாவம், கண் தெரியாதக் காற்று திசைமாறி சித்ராவின் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. அறைக்கதவில் மோதிக்கொள்வது, தினசரியைக் கிழிப்பது, துணிகளைக் களைத்துப் போடுவது, குப்பைக் கூடையை உதைப்பது, புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவது, மேசையிலிருக்கும் ஊஞ்சல் அழகியை கீழே சாய்ப்பது, ஒப்பனைக் குப்பிகளை உருட்டிவிடுவது, பால்கனியில் காயும் ஆடைகளைப் பிடுங்கிவிடுவதென தினமும் வீட்டை கந்தர்கோலம் பண்ணும். சித்ரா அலுவலகம் முடிந்து வந்து ஜன்னலைச் சார்த்தும்வரை அஃதால் வெளியே போக முடியாது. பிறகு அடுத்தநாள் இதேபோல திறந்து கிடக்கும் ஜன்னல் வழியாகத் திரும்பவும் வீட்டிற்குள் வரும்.  ஒருநாள் கோபத்தில் சருகுகளை அள்ளி வீட்டுக்குள் வீசியது. அப்படித்தான் ஒருமுறை சிகரெட் துண்டு ஒன்றைப் போட்டது. இன்னொரு முறை சாக்லேட் காகிதம். வீட்டுக்குத் திரும்பியதும் களைந்தவற்றையெல்லாம் அடுக்கி வைக்க சித்ரா ஒருநாளும் சுணங்கியதில்லை. வேண்டுமென்றேதான் ஜன்னலைச் சார்த்தாமல் போகிறாளென்று கண் தெரியாகக் காற்று வெட்டவெளியில் நின்றுகொண்டு சிலசமயம் கூப்பாடு போடும். சித்ரா காதில் விழாதவாறு போய்கொண்டிருப்பாள்.

***

தூயன் – சமகாலப் படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை‘, ‘டார்வினின் வால்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. ‘கதீட்ரல்’ இவரது முதல் நாவல். மின்னஞ்சல்: thuyan154@yahoo.com

நாவல் பகுதி – I AM

0

(யாவரும் பதிப்பக வெளியீடாக ப. நந்தகுமாரின் முதல் நாவல் I AM வெளியாகவிருக்கிறது. அந்த நாவலின் ஒரு பகுதி வாசகர்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது)

ரத்தம்

“மரணத்தை அனுபவிப்பது என்பது அதைப்பற்றி திரும்பத் திரும்ப சிந்திப்பது மட்டுமல்ல. அது அதற்கு முன் பின் வாழ்வைப் பற்றி அறிய முனைவதும் தான். ஆனால் அது பெரும்பாலும் அவ்வாறு எளிதில் முடிவதில்லை. முடியும் தருவாயில் அது எவ்வாறு அமைந்து விடுகிறது என்பதைத் திரும்ப வந்தவர்களால் கூடத் தெளிவாக உரைக்க முடியவில்லை.”

நான் சாவதை உண்மையில் விரும்பினேனா? தெரியவில்லை.

ஆனால் அதன் எல்லையின் விளிம்பில் சதா தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான சூழலை நானே உருவாக்கிக் கொள்ள அதிகம் முனைந்தேன்.

தன்னைத் தானே கொல்வது. உடல் எனும் பரப்பு ஒரே நேரத்தில் சில்லுக் கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் பிம்பம் போல பல விதமாய் உருமாறிக் கொள்ள அனுமதித்தல். சின்னஞ்சிறு உடலிலிருந்து மாபெரும் உடல் வரை தனக்குள் தானே ஆகிக் கொண்டே இருப்பது. ஒரு தொடர் நிகழ்வு போல அதை செய்வது. அதன் மூலம் அது ஒரு எளிய செயலாக மாறிக் கொள்ளும் என்று நினைத்துக் கொள்கிறேன். எனக்கு மரணம் பற்றி அத்தனை தெளிவான பதில்கள் இருந்தன.  அது எனக்கு அளிக்கப் போகும் அனைத்தைப் பற்றியும் கனவு கண்டேன்.

மரணம் சிறகுகள் மட்டுமே உடலாகக் கொண்ட பறவை!

அந்தக் கடைசி விருந்தினை என் நண்பர்களுடன் நான் அருந்திக் கொண்டிருக்கையில் அவர்களுக்கும் எனக்கும் நான் என்ன தர வேண்டும் என்பதைப் பற்றி அனைவருக்குமே தெரிந்திருந்தது.

நான் என் சதையையும் இரத்தத்தையும் அவர்களுக்கு திங்கக் கொடுப்பேன். நான் அவர்களின் உடலாவேன்!

நான் எப்படி சாக வேண்டும்?

வலி! வலி! வலி! என்று சொல்லிக் கொண்டேன். வலியினால் மரணத்தை மிக எளிய நிகழ்வாக்குவேன். நடக்கும் போது தன்னிச்சையாக, நம் கால்களும் கைகளும் அடுத்த நகர்விற்கு அசைவது போல மரணமும் ஒரு அனிச்சை செயலாய் என்னை ஆட்கொள்ளும். தனித்தவனாய் நான் இருக்கும் பொழுதே இந்த மொத்த பிரபஞ்சமும் என்னுள் வலியினால் ஒன்றிணையும் என்று நினைத்தேன்.

நான் வலியை நம்பினேன். என் மரணம் ஒரு இசை உச்சம் போல நிகழ ஆசைப்பட்டேன். என் நண்பர்கள் என் சொற்களில் அமிழ்ந்திருந்தனர். அவர்கள் என்னை அப்பொழுது வெறுத்திருக்கலாம். நானாக ஆவதைப் பற்றி அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

நான் ஒரு நுண்ணுயிரி, 13 தலைகளும் 26 கால்களும் கொண்ட மாபெரும் உடல் கொண்டு பூமியின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கிறேன். மிக அழகான சிவந்த நிறக் கொடுக்குகள் தலைக்கு இரண்டாக எனக்கு இருந்தன. நான் எண்ணிலடங்காதக் கால்களைக் கொண்டிருந்தேன். காண்பவை அனைத்தையும் கொட்டுவதே எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. உண்மையில் காண்பது அல்ல. உணர்வது. எனக்கு கண்கள் இல்லை. உணர் கொம்புகள் மூலமே நான் அனைத்தையும் அறிந்தேன்.

என் தலைகள் முரண்படும் பொழுது, ஒன்றினை ஒன்று விழுங்கத் தொடங்கின. நீர்த் துளிகள் தரையில் சிதறி நெழிவது போல நான் சிதறிக் கொண்டிருந்தேன். எல்லா தலைகளும் விழுங்கிய ஒற்றைத் தலை பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது.

                பின் நான் உடல் மட்டுமே ஆனேன். நான் உணர்வதை எல்லாம் என் உடல் கொண்டு விழுங்கினேன். என் உடல் பெருத்துச் சிதறியது. சிதறிய துகள்கள் முட்டைகள் ஈனின.  கரும்பழுப்பு நிற முட்டைகள். என் உதிர்ந்த ஒற்றைத் தலை அதை ஒவ்வொன்றாக விழுங்கியது.

கனவினுள் இருந்து எழுந்த பொழுது ரத்த விளாராய்க் கிடந்தேன். தோல் கிழிந்தும் பிளர்ந்தும், என் தேகம் பல்லாயிரம் வாய்களால் ஆனது போல இளித்தது. ரத்தம் அவ்வாய்களிலிருந்து கசிந்து என்னைச் சுற்றி தேங்கி நின்றது.

நான் மண்ணைப் பார்த்துக் கூவினேன். என் முட்டைகள் உடையவில்லை, உடையவில்லை என்று!

பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் என் வருகையை அறிவிக்கும் நிமித்தம் என் பிணத்தின் முன் அமைதியுடனும் மிகுந்த சிரத்தையுடனும் நின்று கொண்டிருந்தனர்.  அவர்கள் அனைவரும் வானை அணுகினர். அவர்கள் தங்கள் ஒவ்வொருவரின் வலது முழங்கையிலிருந்து மூன்று துளி ரத்தம் வீதம் என் முன்னே சொட்டினர். என் பிணம் மண்ணில் நாறிக் கொண்டிருந்தது.

அவர்கள் என் பிணத்தின் முன்னே ஒன்றை மந்திரம் போல கூட்டாகத் திரும்பத் திரும்பச் சொல்லினர்.

“ரத்தம்

ரத்தம் மூலமே நீ இறவாதிருந்தாய்

ரத்தமே உன்னை அறிவித்தது

ரத்தமே உன்னை விடுவித்தது

ரத்தமே உன் சொல்

ரத்தமே உன் மொழி

ரத்தமே உன் இருப்பு

ரத்தமே உன் பிரார்த்தனை

ரத்தமே நீ”

“ரத்தத்தால் மீண்டும் எழுவாய் என் தேவனே!”

ஒரு கருவி வேண்டும். தன்னந்தனியாக மரணத்தை அனுபவிக்க ஒரு கருவி. எனக்காக நானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆம்! என் சொந்தக் கைகளினால்.

அது எப்படி இருக்க வேண்டும். ஒரு குமிழ் போலத் தொடங்கி கடல் ஒதம் போல வலியை உருமாற்றும் செய்யும் கருவி. நான் விடுவிக்க விடுவிக்க என்னை இறுக்கிக் கொண்டே இருக்கும் ஒன்று.

உயிர் என்பது உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் நிறைந்திருப்பதை அதன் மூலம் உணர்வேன். நான் வலியை மறுதலிக்க விரும்புகிறேனோ! என்று தோன்றியது. இல்லை! காலமற்றிருப்பதை விரும்பினேனா? தெரியவில்லை.

என் சொந்த மரணத்தை நான் பணயம் வைக்கிறேன்.

என் பிணத்தின் முன் அவர்கள் ஜபித்துக் கொண்டிருந்தனர்.

” ரத்தம் மூலமே நீ இறவாதிருந்தாய்

ரத்தமே உன்னை அறிவித்தது

ரத்தமே உன்னை விடுவித்தது

ரத்தமே உன் சொல்

ரத்தமே உன் மொழி.

ரத்தமே உன் இருப்பு

ரத்தமே உன் பிரார்த்தனை

ரத்தமே நீ”

“ரத்தத்தால் மீண்டு எழுவாய் என் தேவனே!”

காதல்

அன்பின் பரிசுத்தத்தை நான் மேவினேன். இயற்கையைப் போல அன்பையும் நம்பினேன். அன்பை மட்டுமே நான் எனக்காக எடுத்துக் கொள்ள விரும்பினேன். ஆனால் அவளிடம் நான் குழப்பிக் கொண்டேன். அன்பின் நிமித்தங்கள் பாசாங்கானவை. அவளை நான் அங்கு சென்று சந்தித்திருக்கக் கூடாது.

அவள் என்னிடம் தெள்ளத் தெளிவாக உரைத்தது ஒரு சொல்லை மட்டுமே. எடுத்துக் கொள்! நான் அவள் உடல் முன் கூனி நின்று கொண்டிருந்தேன். எங்களுக்குள்ளே பாவனைகள் அற்ற ஒன்றிருந்தது. அதனை நாங்கள் தழுவிக் கொள்ள முயன்றோம். ஆனால் அவள் சீற்றமடைந்தாள். என் சொற்களின் தாழ்வாரத்தில் அவளது எண்ணங்கள் குழம்பித் தவித்தன. அவளை அமைதியடையச் செய்ய முடியவில்லை. அதனால் என்னை நான் அவளிடம் விடுவித்தேன்.

எனக்குள் ஆழமான ஒரு புண் உருவாகியிருந்தது. நான் சேர்த்து வைத்திருந்த ஞாபகங்களின் கூடாரத்தில் அவள் வேறு ஒன்றாக இருந்தாள். ஆனால் என் முன்னே இருப்பவள் முற்றிலும் புதியவள். என் பகற்கனவுகளில் அவளை நான் ஒருவாறு உருவகித்து வைத்திருந்தது, ஒரு சிறுமியின் லயத்தை. நான் புண்பட வேண்டும் என அவள் விரும்பியிருப்பாளோ? என்னுள் தகிக்கிறது. அவள் எனும் சொல், நினைவு, உரு, ஞாபகங்களின் தீட்சண்யமான வெளி அனைத்தும் ஏங்கி நிற்கிறது. என் செவிகளில் அவளது குரலை ரீங்கரிக்க முயல்கிறேன். அவள் என்னை அழைப்பதைப் போல. சமாதானம் செய்ய முயல்வதைப் போல. ஆனால் நிகழில் அவள் நேரிடையாக என்னை வெறுத்தாள். இல்லை! நான் அப்படி நம்பினேன். அப்படி அவள் இருக்க வேண்டும் என வேண்டினேன்.

இல்லை! அவள் என்னை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என எனக்கு விருப்பங்கள் இருந்தன. ஒரு ஆணைப் போல அவள் என்னை நடத்த வேண்டும் என்று நினைத்தேன். அவள் என்னை சிறுமை செய்தாள். என்னிடம் அவள் பேச முனையவில்லை. ஆனால் என் கண்களைக் கவனித்தாள். ஒரு விளக்குத் துளி போல அலைவுறும் அவளது விழிகள் வழி என்னை நான் ஒரு பலவீனனாக நினைத்தேன். அவளுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். என்னை, என் பார்வையைத் தவிர்த்தாள். நிலத்தில் குத்திட்டிருந்த அவள் விழிகள், ஒரு நீள நிழல் போல என் இருப்பைத் தழுவித் ததும்பியது.

நான் அமைதியடைந்தேன். அவளை என் கைகளில் ஏந்திக் கொள்ள முயன்றேன். அவளிடம் அனிச்சமில்லை. நான் செய்வதறியாது திகைத்தேன். அவள் அப்படியே படுத்துக் கொண்டாள். மற்ற ஆண்களைப் போலவே என்னையும் நீ எடுத்துக் கொள்! என்பதைப் போல அவள் சலனமற்று மேற்கூரையைப் பார்த்தவண்ணம், அசையாது கிடந்தாள். அவளது வியர்வையின் மென் நெடி துளைத்து அறையின் சுவர்களில் பாவித்து அலையடித்தது. நான் அவள் உடுத்தியிருந்த மிருதுவானத் துணியின் நுனியை பற்றிக் கொண்டு அசையாது அவளை நோக்கி அமர்ந்திருந்தேன். நான் வெடிக்கக் காத்திருந்தேன். அவளின் சின்னத் தலை அசைப்பு போதும். ஆனால் அவள் அசைவற்றுக் கிடந்தாள்.

எவ்வளவு காலம், நேரம் என்று நான் அறிய முற்படவில்லை. நான் காலமற்று அவள் முன்னே இப்படியே அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுவே அப்பொழுதின் என் ஒரே பிரார்த்தனையாக இருந்தது. அவளது நெஞ்சு விம்மி அசைவதை, சீராக மூச்சு இறைப்பதைக் கவனித்தேன். நான் ஏற்றிருப்பது பற்றி அவளுக்குக் கேள்விகள் இருந்தன. இது நேராக மரணத்தின் பாதை என்பதை அவள் அறிந்திருந்தாள். வேண்டாம்! வேண்டாம்! யார் வேண்டுமானாலும் என்னை அப்படிப் பார்க்காட்டும். நீ அப்படி என்னைப் பார்க்காதே! என்று என் அகத்தினுள் புலம்பினேன்.

அன்பின் வழிகளின் உண்மையில் பாசாங்கானவையா? நான் ஏங்கியது வேறொன்றைப் பற்றி. இது அன்பைப் பற்றியது அல்ல. வாழ்வைப் பற்றியது நான் சாவதற்காக வாழ்கிறேன். இல்லை! இது அப்படி நிகழ்ந்து விடாது. என் நம்பிக்கைகள் வீண் போகாது. என் தந்தையின் சொற்களை நான் கூர்கிறேன். என் துடிப்புகளின் நீண்டக் குளிர்மையானக் கைகள் அவளது நினைவுகளினுள் அளைகிறது.

நெடிது உயர்ந்த மரத்தின் உச்சி நுனி இலையைப் போல என்னை எண்ணிக் கொள்கிறேன். அவள் ஒரு தீர்க்கமானக் காற்றினைப் போல என் நெற்றியில் படறி சிலிர்க்கிறாள். நான் அசைந்து அசைந்து அவளுள் குதூகலிக்கிறேன். சட்டென காற்றின் குளிர்மை கூடுகிறது. என் நரம்புகளில் உறைகிறது, கூர்மையான அக்குளிர். உடைந்து விழுகிறது இலைத்தும்பு. நான் அவளின் இமைகளுக்குள் உருளும் கண்களின் சொப்பனத்தில் ஒரு ஆட்டினைப் போல, ஒரு பாவப்பட்ட ஆட்டுக்குடியைப் போலத் தெரிவதை வெறுத்தேன். அவளை வெறுத்தேன். என்னை, என் தந்தையை, எனக்கு விதிக்கப்பட்ட சொல்லை, என் உடலை, என் மாபெரும் பாதையை. அனைத்தையும் வெறுத்தேன். அவளது சூடான உள்ளங்கைகளினால் என் முகத்தைத் தாங்கி என்னை அவளின் மார்புக்குவைகளில் அழுத்தி அணைத்துக் கொண்டாள். நான் அச்சமயம் உறுதியாக முடிவு செய்திருந்தேன்.

ஞானம்

என்னிடம் தெளிவானத் தீர்வுகள் இருந்தன. நான் அதனை என் வாழ்வில் நிகழ்த்திப் பார்க்க முனைந்தேன். உண்மையில் அத்தீர்வுகளை நான் முழுமையாக நம்பினேன்.

என் சபலங்களை நான் மதித்தேன். என்னால் திரும்பிச் செல்ல முடியாது. என் முன்னே புழுதியின் சொல் மட்டுமே நீக்கமுற நிறைந்திருந்தது. நான் என் மனத்தை போஷிக்கிறேன். ஒரு  நாய்க்குட்டியினைப் போல. எனக்கு கிடைத்தது, இல்லை நான் அடைந்தது என்பது என்ன? என்று துழாவிக் கொண்டிருந்தேன். என் வாழ்நாள் முழுவதும் நான் அடைய விரும்புவது இந்த இயற்கையைப் போன்ற ஒரு திட்டவட்டத்தை.

என்னுடைய சொற்கள் என உலவும் வாக்கியங்கள் என்னுள் மிகுந்த கிளர்ச்சியை அளித்தன. ஒரு புறம் அது சுவாரஸ்யமாகவும் மறுபுறம், நான் அடைந்தவை என எனக்கேக் காட்டி எக்களிப்பவையாகவும் இருந்தன.

“நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

மத்தேயுவைப் பற்றி நான் ஆரம்பத்திலேயே சரியாகக் கணித்திருக்கிறேன். இதோ இந்தத் திட்டவட்டத்தைத் தான்  நான் விரும்புகிறேன். ஆனால் அதனுள் இருக்கும் சூட்சுமத்தை நான் கேலி செய்கிறேன். ஒரு பைத்தியக்காரத்தனத்தை வேண்டுமென்றே வலுக்க சேர்த்துக் கொள்வது எவ்வளவு அவசியம் என்று நான் நம்புகிறேன் என்பதற்கு இந்த வாக்கியமே சாட்சி.

“அதற்கு இயேசு:நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”

யோவான், பாவம்! அவருக்கு என்னால் RIP மட்டுமே செலுத்த முடியும். ஆனால் இச்சொல்! இதன் பிடி அபரிமிதமானது. யோவானின் தலை வெட்டி வைக்கப்பட்ட போது என்னை நினைத்திருக்கும். நான் நம்பிக்கைகளை விதைப்பவன். அதனால் ஒன்றும் செய்வதற்கில்லை. என் சாவின் முன்னும் வாழ்வின் முன்னும், நான் படைத்திருப்பது அசைக்கவே முடியாத நம்பிக்கையை. அதன் மேல் தான் இதோ என்னுடைய சொல். வழியும், சத்தியமும், ஜீவனுமயிருக்கும் ஒன்று நிச்சயம் ஒரு நம்பிக்கைதானே. என் ஞானம் என்று நான் அடைந்திருப்பதும் அளிப்பதும் அழிவில்லாத நம்பிக்கை. மனுஷனுக்கு என்னால் அளிக்க முடிந்ததும் அது மட்டும் தான். யோவான்! சற்று இளைப்பாறுங்கள். என்னுடைய முடிவிலும் எந்த மாற்றமுமில்லை. உங்களைப் போலவே தான் நானும்.

“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”

அன்பில் படிந்த வாக்கியங்கள். சரியான இருமை என்று இவ்வாக்கியத்தை சொல்லலாம். நான் ஒரு தந்தையாக மாறுவதை உணர்கிறேன். பவுல் நிச்சயம் இதனை ரசித்திருப்பான். பாவம்! என் கால்கள் நடுங்குகின்றன. என் பிள்ளைகளை நான் கடுமையாக நடத்துகிறேன். என்னை என் தந்தை நடத்தியதைப் போலவே. ஆனால் பிள்ளைகளுக்குத் தெரியும், அப்பன்! நமக்கு அளித்திருப்பதன் மகிமை. என் அன்பின் ஊடுவழிகளில், அவர்கள் சதா அகப்பட்டுக் கொள்கிறார்கள். குற்றமும், தண்டனையும். அன்பும் மீட்சியும் , வாழ்வும் மரணமும் ஒன்றே என்பதனை அவர்கள் ஏதாவது ஒரு வகையில் புரிந்து கொள்வார்கள், நான் புரிந்து கொள்வதைப் போலவே. நிரந்தரமான மற்றும் உறுதியான வழிப்பாதையில் அவர்களை நான் தவற விடமாட்டேன். என் அன்பின் சாஸ்வதமான இருப்பில் அவர்களை களித்திருக்கப் பண்ணுவேன். ஆனால் இந்தத் துடுக்குப் பிடித்த பவுல் மறு பக்கத்தையும் காட்டச் சொல்கிறான். என் பிள்ளைகள் அதிகப்பிரசங்கிகள்தான் . அதனால் என்ன? பரவாயில்லை. ஒரு அப்பனாக என்னால் கொடுக்க முடிந்தது என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். வாழ்வின் நிச்சயங்கள் நிலையற்றவை. அதனால் மகிழ்ந்திருங்கள். துக்கித்திருங்கள். என் அப்பன் எனக்கு அளித்ததையே நான் உங்களிடமும் அளிக்கிறேன்.

 “தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.”

பவுல் என்னைச் சிலையாக்குவதில் மும்முரமாக முயற்சி செய்திருக்கிறான். ஒரு நீதிமானாக என்னை நிறுவுவதில் அவன் ஜெயித்து விட்டான் என்றே நினைக்கிறேன். நுட்பமானப் பகடி இச்சொல்லில் பரவுவதை என்னால் உணர முடிகிறது. பவுல் அப்படித்தான் அவன் எதிர்ப்புறம் பார்ப்பவன். அதனால் ஒரு பீ உருட்டி வண்டினைப்போல சொற்களை உருட்டி உருட்டிப் பெரிதாக்கிக் கொண்டே செல்கிறான்.

தீமை, வஞ்சம் என்பது எளிதானவையாக இருக்க வாய்ப்பில்லை. அதன் பிடிமானங்கள் மிகவும் உறுதியானவை. மனுஷனின்  வாழ்வை விடவும் அவனின் வஞ்சம் பெரியது. அதனால் தான் அதற்கு நிகராக நான் நம்பிக்கையை வைத்தேன். ஆனால் தீ  நுனிகளில் விட்டில் பூச்சிகள் செய்வதற்கு என்ன உண்டு. அதில் எரிந்து அழிவதைத் தவிர. துக்கம் எனும் உணர்வு, வாழ்வின் எல்லா உணர்வையும் விட ஆழமானது. அதனாலேயே எளிதில் சீண்டக் கூடியதும்.

என் புண்களின் ரணத்துடன் நான் போராடுவதில்லை. அதன் வலி! என்னைப் புரட்டியபொழுது, நான் கை விடப்பட்டவனாக என்னை நினைத்த பொழுதெல்லாம், நான் உண்மையைத் தவிர்த்தேன். எளிய உயிர்கள்! நாம்! உண்மையின் பால் நம்மால் எரிந்தழிய முடியும். ஆனால் அச்சங்களினால் தான் நாம் வாழ்கிறோம். நான் உயிர்த்தெழுந்து வந்தபின், முதலில் யூதாஸிடமே சென்றேன். மூன்று நாட்கள் என் வருகைக்காக அமைதியாகக் காத்திருந்த அவனிடம் நான் சொன்னதையே உங்களிடமும் சொல்கிறேன். “மனுஷர்கள் தனக்களிப்பதை வைத்து போதுமானவர்கள் ஆவதில்லை. அவர்களை திருப்திப்படுத்துவதினால் நம் யோக்கியதை மாறுவதுமில்லை”.

எங்கள் இருவரது உருக்களும், ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும் ஆடி பிம்பங்கள் போல உருமாறியிருந்தது. அவனை என்னருகில் அழைத்து என் உடலுடன் பிணைத்துக் கொண்டேன். அந்த நொடி, நாங்கள் சமரசம் செய்து கொண்டோம். அன்பின் மிகுதிகள் நாடகீயமானவை தான். நாங்கள் நடிப்பதைப் போல.

***

நந்தகுமார் பத்மனாபன் – குமரி மாவட்டம், நாகர்கோவில் – ஒழுகினசேரி பகுதியைச் சேர்ந்தவர். சென்னையில் தனியார் துறையில் பணிசெய்துவருகிறார். கவிதைகள் மற்றும் கதைகள் சொல்வனம், யாவரும் இதழ்களில் வெளிவந்துள்ளது.
மின்னஞ்சல்: nantha65@gmail.com

“ஓவியம் – தேடல்கள் புரிதல்கள்”

0

தொடக்கம்

இருமுறை ஹம்பிக்கு அருகிலிருக்கும் குகை ஓவியங்களை காணச் சென்றிருக்கிறேன். இந்த ஓவியங்கள் கற்கால மனிதர்கள் இயற்கை சாயங்களைக் கொண்டு தீட்டியவை. அதில் உருவாகி வந்துள்ள மாட்டின் தீற்றலும் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடும் காட்சியும் அற்புதமானவை. வலிமையான உடலும், பெரும் திமிலும் வளைந்து உயர்ந்த கூர் கொம்புகளும் கொண்ட மாட்டின் ஓவியம் வெறும் சிவப்பு வண்ண எளிமையான கீற்றுகளால் மட்டுமே படைக்கப்பட்டிருந்தன. அந்த கீற்றுகளின் லாவகமும் அதன் வெளிப்பாடும் அந்த காலமற்ற மாட்டின் இருப்பை தத்ரூபமாக நம் முன் நிறுத்துகின்றது. வெறும் கீற்றுகளால் உருவாக்கப்படும் இந்த மாட்டின் ஓவியத்தைப்போலொன்றை பிக்காசோ வரையும் காணொளியொன்று இணையத்தில் கிடைக்கிறது. அவர் கீற்றுகளால் வரையும் காட்சி, ஆதிமனிதன் குகைக்கு அடியிலமர்ந்து வரைந்த காலத்தை நமக்குள் சட்டென மீளுருவாக்கம் செய்துவிடுகிறது. ஓவியம் அதன் அடிப்படையை அப்போதே கண்டுகொண்டதன் அடையாளம் அந்த குகை ஓவியங்கள். இந்த அறிமுகத்தை, புரிதலை, கீற்று எனும் அடிப்படை ஓவியத் தனிமத்தை, ஓவியம் மகிழ்விக்கும் கலை என்னும் இடத்திலிருந்து உண்மையை நோக்கிய பயணத்தின் ஊர்தியென காட்டித்தருவது கணபதி சுப்ரமணியத்தின் “ஓவியம் தேடல்கள் புரிதல்கள்” எனும் இரு பகுதிகளாலான புத்தகங்கள். பின்வருவனவற்றை இந்த புத்தகங்ளைப் பற்றிய என் அனுபவக் குறிப்புகள் என்னும் நிலையிலேயே வாசகர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

விடுதலை

கலைகள் எப்படிப்பார்த்தாலும் அவற்றிற்கான அடித்தளங்களின் மேல் ஆழமாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இலக்கியம் மொழியை, அதன் சொல் வாக்கியம் பொருள் மறைபொருள் போன்றவற்றின் அடிப்படையிலேயே அமைக்கிறது. எழுதும் எவரும் சொற்களை அதன் அர்த்தப்பாடுகளை கைவிட்டுவிட்டு எழுதமுடியாது. அப்படி எழுதப்படுபவை பிதற்றல் என்று அடையாளப்படுத்தப்படும். விதிவிலக்காக நகுலனின் நினைவுப்பாதை நாவலின் கடைசி அத்தியாங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவையும் மொத்த பொருளற்ற தன்மையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பொருளையே சுட்டுகின்றன.

சாதாரண புழக்க வெளியில் கூட மொழி பேசப்படுவதற்கும் சொல் பொருள் அமைப்பின் அடித்தளம் தேவைப்படுகிறது. இசைக்கும் இதே நிலைதான். அதன் ஆதார அதிர்வுகள், அதற்குமேல் ஸ்வரம், ராகம், தாளம் என்ற கட்டுமானங்களின் மேல் இசைக்கோவைகள் உருவாக்கப்படுகின்றன. இப்படி மனிதன் தன்னை வெளிப்படுத்தும் எல்லாவற்றிலும் அவன் பயன்படுத்தும் ஊடகத்திற்கான அடிப்படை அமைந்திருக்கவேண்டும். காலப்போக்கில் அவ்வடிப்படைகள் புத்தகங்களில் பதியப்பட்டிருக்கும். இந்த அடிப்படையானது முறையாக குருவிடம் அமர்ந்து கற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இயல்பாகவே மனிதன் சகமனிதனிடமிருந்து, இவற்றை அன்றாட தளத்திலிருந்தே சுவீகரித்துக்கொள்கிறான். மொழியின் இத்தகைய அடிப்படைகளைக் கடந்து சென்றமையும் இடமென ஒன்றிருந்தால் அதையே ஞானம் எனலாம். இசையில் நிசத்பத்தை அதில் உறையும் பெரும் அதிர்வைக் கண்டடைதலும் இதைப் போன்றதே.

பலவருடங்களாக நான் இலக்கிய வாசகன், எழுத்தாளர் என்ற இடத்தில் நின்று ஓவியங்களைப் பார்த்தும் அனுபவித்தும் வருகிறேன். அடிப்படையாக எந்த ஒரு ஓவியத்தையும் அதிலிருந்து எடுத்துக்கொள்ள சாத்தியப்படும் கதையாக எனக்குள் ஒன்றை உருவாக்கி மொழியாக்கவே முயன்றிருக்கிறேன். மொழியாக்கம் நடந்ததும் அந்த ஓவியம் கெட்டிப்பட்டு ஓரிடத்தில் இவ்வளவுதான் எனும் இடத்தை என்னை அறியாமலேயே அடைந்துவிடுகிறது. மீள் பார்வையில் அந்தக்கதையில் நான் தவறவிட்ட நுண் தகவல்களை கண்டடைகிறேன்.

அந்தக் கதையை மீண்டும் மீண்டும் அந்த ஓவியத்தில் நிகழ்த்திப் பார்ப்பதே பிற்பாடு நான் செய்வதாய் இருக்கும். மேற்கத்திய செவ்வியல் சிம்பனி இசைக்கோவைகளை கேட்கத்தொடங்கும் முன் அந்த வடிவத்தில், குறிப்பிட்ட தாளத்தில் ஏற்ற இறக்கத்துடன் இசைக்கப்பட்டதிற்கான திடமான காரணம் எதாவது இருக்கிறதா எனத் தேடத்தொடங்கினேன். அந்த தேடல் நேரடியாகவே ஒரு கதையம்சத்தை அதற்குள் கண்டடைய முயன்றதன் விளைவே! இன்னொரு தளத்தில், ஓவியத்தை அதன் உடல்பகுப்பாய்வு (Anatomy), உளக்காட்சி (Perspective), ஒளி நிழலின் ஊடாட்டம் ஆகியவற்றையே இலக்கணம் என எடுத்துக்கொண்டு அணுகுதல் என்பதே பரவலாக நான் அறிந்தது. உண்மையில் இந்த பார்வை ஓவியத்திலிருந்து நம்மை விலக்கிவிடுகிறது அல்லது ஓவியத்தின் அடிப்படைத் தன்மைகளை ஓவியம் என்ற அளவிலேயே ரசிக்க முடியாமல் செய்துவிடுகிறது (உதாரணத்திற்கு இசையில் மொழியின்றி ரசிக்கமுடியாமல் போகுதல்) என்பதை உணர்த்தியவர் கணபதி சுப்ரமணியம்.

ஓவியம் அதற்கேயான அடிப்படைத் தனிமங்களுடன் இயங்குகிறது அல்லது உருவாகிறது என்பதை முதல் சில அத்தியாங்களில் விளக்கும் நூல் “ஓவியம் – தேடல்கள் புரிதல்கள்”. இந்த விளக்கம் என் ஓவியம் பற்றிய பார்வையை மொத்தமாக மாற்றி அமைத்தது. கீற்று, வடிவம், வண்ணம், வண்ணத்திண்மை, இழைநயம், தீட்டப்படும் இடம் (Space) இவையே ஓவியத்தின் அடிப்படை தனிமங்கள். இந்த தனிமங்களைக்கொண்டு உருவாக்கப்படும் தொகுப்பே ஓவியம் என்கிறார் ஆசிரியர். இந்த அடிப்படைப் புரிதலற்று நாம் ஓவியத்தை ரசிக்கத்தொடங்கும்போது நாம் ஏற்கனவே கற்றுவைத்துள்ள கலைவடிவமான இலக்கியம் அல்லது நம் மனம் ஓயாமல் புழங்கும் மொழியில் ஓவியத்தை உருமாற்ற முயல்கிறோம். ஓவியம் காட்சிப் புலத்தால் அதன் அடிப்படைத் தனிமங்களுடன் நான் பயணிக்கவேண்டிய ஒரு வெளி என்கிறார் ஆசிரியர். நம் கண்முன் நிற்கும் பரந்து விரிந்த ஓர் மரம் அதற்கேயான கீற்றுகளால், வடிவத்தால் இழை நயத்தால் வண்ணத்திண்மையால் ஆனதல்லவா! ஓர் புனைவெழுத்தாளனுக்கும் புனைவு வாசகனுக்கும் மகத்தான காட்சித் திறப்புகளை அளிக்கவல்ல கருத்துக்களை சிக்கலற்ற ஆனால் நுண்மையான மொழியில், தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கலைச்சொற்களுடன் கூடிய கட்டுரைகள் அடங்கியது இத்தொகுப்பு. நீங்கள் ஓர் மலையை, மரங்களை, மனிதர்களை, கட்டிடங்களை, நீர்த்தேக்கங்களை, புல்வெளியை, சிற்றெறும்பை, உருவை, உருவற்ற அருவை என எல்லாவற்றையும் காணும், உணரும் தன்மையை மாற்றியமைக்கும் சாத்தியம் கொண்டவை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள். நாம் உருவாக்கிவைத்திருக்கும் ஓவியம் பார்த்தல் எனும் செயலைத் தொடர்ந்து நாம் நமக்கே உருவாக்கி வைத்திருக்கும் சிறையிலிருந்து விடுதலை செய்துவிடுபவை இந்தக் கட்டுரைகள்.

படர்தல்

குழந்தைகள் சுவர்களில் கீற்றுவதை நாம் கவனித்திருப்போம். ஓர் ஓவியம் எப்படிப்பார்த்தாலும் ஒற்றை கீற்றிலிருந்தே தொடங்கவேண்டும். இந்தக் கீற்றை ஆரம்பிப்பதற்கு முன் நம் மனதுள் உருவாகியிருக்கும் கருப்பொருள் எப்படியிருக்கும்? தீட்ட முனைந்த பருவடிவத்தின் புறமா அல்லது அதன் அகமா ? புறமாக இருந்தால் அதில் நம் அகம் எப்படி கிரகித்து வெளிப்படுகிறது ? என்ற கேள்விகளுக்கான விடைகள் அல்லது ஆசிரியரின் அனுபவங்கள் எளிமையாக சிறிய கட்டுரைகளாக தரப்படுகின்றன. வான்கோ தன்னுடைய ஓவியங்களை வேகமாக வரையக்கூடியவர். அந்த வேகத்தில் நேரடியாக கைகளால் வண்ணங்களை திரையில் திட்டிவிடும் பழக்கமும் கொண்டவர். அப்படி அவரைத் தீட்டும் வேகத்திற்கு கொண்டு சென்ற உந்துதல் எது என்பதை “அதுவாதல்” என்று விளக்குகிறார் ஆசிரியர். வான்கோ உருவாக்க நினைத்த ஓவியங்கள், அவர் கண்ட காட்சிகளை அதன் இயக்கத்தை தன்னில் பதித்து அதுவாகிவிடும் வேகம் வெளிப்படுகிறது. திரையில் தூரிகையால் வண்ணங்களை மெல்ல குழைத்து வரையும் நிதானம் அவரிடம் இருக்க வாய்ப்பில்லை அல்லது அப்படி எதிர்ப்பாக்கவும் முடியாது. அந்த வேகத்தில் அவர் கண்ட பொன் வெயிலும் நெகிழ்ந்து அசையும் கதிர்களும் அவராகிவிடுகின்றன.

நாம் பழக்கப்பட்டிருக்கும் உருவங்களை அவற்றின் இருப்பால், இருப்பின்மையால், அதன் புழங்கும் தன்மையிலிருந்து மாற்றியமைக்கப்படுவதால் தீட்டப்படும் ஓவியங்கள் அந்த பருப்பொருட்களின் மேல் ஏற்றிவைக்கபட்டுள்ள அர்த்தப்பாடுகளால் கவனிக்கப்படுகின்றன. நெளிந்து வழியும் கடிகாரமும், விகாரமான முகங்களைக்கொண்ட ஓவியங்களும் அந்த உருவங்களின் நேரடி அல்லது மறைமுக அர்த்தங்களாலேயே நமக்குள் பொருள்படுகின்றன. ஆனால் அருப ஓவியங்கள் என நாம் அடையாளப்படுத்தும் ஓவியங்கள் இவற்றிலொன்றாக இருப்பதில்லை என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்,

அரூப ஓவியங்கள் முற்றிலும் ஓவிய இலக்கணம் சார்ந்ததாகவே அமைந்திருக்கும். ஓவிய இலக்கணத்தின் ஆதாரத்திலேயே அது இயங்கும். அதற்குக் காரணம், அந்த ஓவியத்தில் ஒரு செய்தியோ ஒரு பொருளோ ஓர் இடத்தைப் பற்றியோ கருத்தோ பெரும்பாலும் செயல்படுவதில்லை. அது காலத்தையும் இடத்தையும் கடந்து இருக்கின்றது

அரூப ஓவியத்தினைப் பற்றிய தெளிவான ஆனால் எளிமையான இந்த வரிகள், நவீன அரூப ஓவியங்களிடம் நம்மை அருகணைத்துச் செல்கின்றன. காலம் எனும் தன்மையற்ற பருப்பொருளற்ற ஓவியங்களில் நாம் உண்மையை, முழுமையை கண்டடைய முடியும் என்கிறார் ஆசிரியர். வண்ணங்களை இசையின் அதிர்வாகவும் அதன் அடர்த்திவேறுபாட்டை, அந்த அதிர்வுகளுக்கு இடைப்பட்ட வேறுபாடென விளக்கும் ஓவியங்களை நமக்கு அறிமுகப்படுத்துவன் மூலம் அவர் திறந்துவைக்கும் வாசல் ஒவ்வொரு இலக்கிய வாசகனுக்கும் பெரும் கவியின் வரிகளை முதன்முதல் படிக்கும்போது எழும் அகயெழுச்சிக்குச் சமானமானது.

கரவாஜியோவின் (Caravaggio) நாடகியமான தருணங்களை தத்ரூபமான தைலவண்ண ஓவியங்களாக படைத்திருந்த காலகட்டத்தில் கிழக்கில் உருவாகியிருந்த ஓவியங்கள் அந்த புறவயத்தை தவிர்த்து அகவயமாக முன்னேறியிருந்தன. கிழக்கின் ஓவியங்கள் உடற்கூறியலை நம் விழிப்புலனின் யதார்த்தத்தை , ஓளி நிழல் விளையாட்டுகளை விட்டுவிட்டு ஓவியனின் தனிப்பட்ட மனப் பிம்பத்தில் உருவான யதார்த்த காட்சியின் தனித்துவமான பிரதியை உருவாக்கிக்கொண்டிருந்தன. இந்த செய்தி பண்டைய சித்தன்னவாசல், அஜந்தா ஓவியங்களை நாம் பார்க்கும் கண்ணொட்டத்தை முற்றிலும் மாற்றக்கூடியது. மேற்கின் ஓவியங்களை கிழக்குடன் ஒப்பிடுவதில் இருந்த பிழை இனிமேல் நடக்க வாய்ப்பில்லாமல் செய்துவிடுகிறார்.

ஓர் ஓவியன் ஒரு காட்சியை பலமுறை வரைவதை நாம் எப்படி புரிந்துகொள்வவது? எழுத்தாளர் ஆதவன் எழுதிய நாவல் சிறுகதைகள் என அனைத்தையும் பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கொண்ட சமூகத்தில் ஏற்படும் முரண்களை அதில் உழல்பவர்கள் மேற்கொள்ளும் பாவனைகள், அந்த பாவனைகளால் தங்களுக்கு தாங்களே விளைவித்துக்கொள்ளும் நெருக்கடிகள் எனலாம். இதையே அவர் திரும்பத்திரும்ப எழுதி எழுதி பார்த்திருக்கிறார். ஓவியர்களும் இதேபோல ஒரே காட்சியை பலமுறை வெவ்வேறு கோணங்களில் உத்திகளில் வரைந்து பார்த்திருக்கிறார்கள். இதற்காக ஆசிரியர் காட்டும் எடுத்துக்காட்டு “மோனே” வரைந்த ரூவன் தேவாலயம். முப்பது ஓவியங்களை ஒரு வருட காலத்தில் வரைந்திருக்கிறார். இதனைத் தவம் என்றே ஆசிரியர் அடையாளப்படுத்துகிறார். அந்தத் தவம் கலையும் இடத்தை,

இவ்வாறு ஒரே செயலில் ஒரு கலைஞன் தன்னுடைய படைப்பினை படைத்தவண்ணம் இருக்கும் பொழுது திடீரென பல தளங்களை ஒரே சமயம் தாண்டிய பரிணாம திருப்புமுனை ஏற்பட்டுவிடுகிறது” என்கிறார்.

ஆதவனின் எழுத்துக்களில் ஏற்படாத அந்த திருப்புமுனை மோனேயின் ஓவியங்களில் ஏற்பட்டிருக்கலாம். ஏனென்றால் பிறகவர் அந்த காட்சியை விட்டு நகர்ந்திருக்கிறார்.

உலகின் அழகான கீற்றை இந்த புத்தகம் வழியாக கண்டுகொண்டதும் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் நான் அழகென ரசிக்கும் பொருட்களனைத்திலும் இந்த கீற்று ஒளிந்திருப்பதை பார்க்கமுடிந்தது. இந்த பார்வையானது இயந்திரத்தனமாக இல்லாமல் இயல்பான ரசனையாக மாற்றுவதிலேயே ஆசிரியரின் வெற்றி இருக்கிறதென்றே நினைக்கிறேன். ஓவ்வொரு கட்டுரைக்கும் அவர் எடுத்துக்காட்டாக கொடுத்திருக்கும் ஓவியங்கள் வழியாக நம் ஓவிய வாழ்க்கைகான பெரும் பயணத்தை தொடரமுடியும்.

காலம் என்பதை ஓவியம் எப்படி கையாள்கிறது. நேரடியாக காலத்தை ஒரு கருத்தாக எடுத்துக்கொண்டு மறைபொருளுடன் இதை வரைவதாக இதை எடுத்துக்கொள்ளாமல், அடிப்படை தனிமங்களில் ஒன்றான வண்ணம் மற்றும் வண்ண அடர்த்தி ஆகியவற்றால் காலம் கட்டமைக்கப்படுகிறது. ஓவியங்களில் காலத்தை உணர ஒரு சரித்திர நிகழ்ச்சியின் கதையோ மொழியோ தேவையில்லை என்பதே இந்த அரூப ஓவியங்களின் மேல் ஈடுபாட்டைக் கூட்டுகிறது. இசையின் காலத்தை விளக்கும்போது “ச” என்ற ஸ்வரம் குறுகிய காலத்தையும் “நி” நீண்டதொரு காலத்தையும் உண்டாக்குகிறது என்கிறார் ஆசிரியர். இந்த கால இடைவெளியை நாம் கற்பனை செய்து பார்க்கையில் கால இட வித்தியாசத்தை அடுத்தடுத்த ஸ்வரங்கள் செவியுணர்வில் உருவாக்கிவிடுகின்றன. இதன் அடிப்ப்டையில் அரூப ஓவியங்களிலும் வண்ண அடர்த்தி வேறுபாட்டால் காலத்தையும் இடத்தையும் உணரமுடிகிறது. அதற்கு நாம் ஓவியத்தில் கண்களால் முழுமையாக பயணிக்கவேண்டும் என்பதே ஆசிரியர் முன்வைக்கும் ஒரே கோரிக்கை.

ஒரு பருப்பொருள் அதன் இருப்பால், கண்களால் உணரப்படுகிறது. இந்த பருப்பொருள் ஒரு பழமாக இருக்கையில் அதற்கென்று தனித்துவமான நிறமொன்றை நம் காட்சிப்புலன் உணர்ந்துகொள்கிறது. அதே பழத்தின் மணம் பரவியிருக்கும் புலத்தை அல்லது வெளியை காட்சிப்புலத்தால் யதார்த்தத்தில் உணர முடிவதில்லை. ஆனால் ஓவியம் அந்த புலத்தை காட்சிப்படுத்த முயல்கிறது. வண்ணத்தால் திரையில் உண்டாக்கப்பட்ட புலம் அந்த பழத்தின் மணத்தை காட்சிப்புலமாக மாற்றுகிறது. இதொரு பெரிய பாய்ச்சல் என்றே தோன்றுகிறது. மனிதனின் புலம் சார்ந்த அனுபங்களை ஒரு குறிப்பிட்ட கலைக்குள் கட்டுப்படுத்தி வைக்கவேண்டிய அவசியமற்ற தன்மைக்கு இந்த ஓவியங்கள் கொண்டுசெல்கின்றன. இத்தகயை அனுபவங்களை விளக்கும்போது ஆசிரியருக்கு மொழியில் எந்தவொரு பிரச்சனைகளும் இருப்பதில்லை.

தீட்டிக்கொண்டே இருப்பதை குழந்தைகள் விரும்புகின்றன. அவர்கள் கையில் கிடைக்கும் வண்ணங்கள் எல்லா பக்கங்களிலும் அடர்த்தியாக மென்மையாக தீட்டிக்கொள்கிறார்கள். நீண்டுகொண்டேயிருக்கும் முடிவில்லாத ஒரு கீற்றை அவர்கள் தீட்ட முயல்கிறார்கள். அந்த கீற்று காகிதத்தின் நீள அகல பரப்பின் குறுக்கீட்டால் தடையுறும்போது அங்கிருந்து தாவி தரையிலும் சுவருக்கும் நகர்கிறார்கள். இந்த தீட்டுதலிலிருக்கும் இன்பத்தை எல்லா ஓவியர்களும் உணர்ந்திருப்பார்கள். இந்த இன்பத்தை ஆலாபனை என்ற இசைக்கான சொல்லுடன் இணைத்துவிடுகிறார் ஆசிரியர். இந்த இணைப்பு நமக்கு ஓவியத்தை இன்னொரு கோணத்தில் ஆழமாக உணர வழிவகுக்கிறது.

ஓவியம் எப்போதும் இயக்கத்தினை பிரதிபலிப்பதன் மூலமே வெளிப்படுகிறது. ஓவியங்களில் செயல்படும் இந்த இயக்கத்தைப் பூனையின் அசைவுகளை வைத்து ஆசிரியர் விளக்குறார். பூனை அசைவுகளுடனேயே இருக்கிறது. அசைவற்றிருக்கும் என நாம் நினைக்கும் கணத்திலும் அதன் வாலின் நுனி சற்றே நெளிந்துகொண்டிருக்கும். இந்தப் பூனையை நாம் நிலைத்த தன்மையில் வரைகிறோம் என்றால் அதன் இயக்கம் அல்லது ஆசிரியர் கூறும் உயிர் இல்லாமல் போகிறது. அந்த இயக்கத்தை வெளிப்படுத்தும் சீன வழிமுறையான சீ (Chi) விளக்கப்படுகிறது. ஓவியத்தில் செயல்படும் இயக்கம் நம்முள் நம்மை சுற்றியங்கும் அனைத்தின் இயக்கத்தையும் ஆழமாக கவனிக்கும் தன்மையை பதியவைத்துவிடுகிறது. இந்த இயக்கத்தை கவனிக்கும் குணம் ஒரு புனைவெழுத்தாளனுக்கு முக்கியமாக தேவைப்படும் ஒன்று. அதன் தேவையை ஆசிரியர் அழுத்தமாகச் சொல்கிறார்.

செயற்கை நுண்ணறிவைப்பற்றி நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் வடிவமைக்கும் தொழிற் நுட்பங்களெல்லாம் படைப்பாக எடுத்துக்கொள்ளமுடியாது. அது தன்னளவில் ஏற்கனவே இருப்பவற்றை அப்படியிப்படி இடமாற்றி புதிதாக ஒன்றை உருவாக்குகிறது. தலை ஒருவனுடையது கால் இன்னொருவனுடையது. ஆனால் கணினிக்கு சீரற்ற எண்கள் (Random Numbers) மூலமாக புதிய மனிதன் யோசித்திராத வடிவ ஒழுங்குகளுடன் பல வண்ணக்கலவையுடன் ஓவியங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த ஓவியங்களுக்கான ஆரம்ப உள்ளீடு படைப்பாளியால் கொடுக்கப்பட்டு பின் அவை முற்றிலும் புதிய ஒன்றாக, இயற்கையில் பரிணாமம் கண்டு உருவாகிவரும் உயிர் ஒன்றின் நரம்பு மண்டலத்தை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரியது!

உண்மை

அழகான ஓவியம் என நாம் அடையாளப்படுத்தும் எவற்றுக்கு அவை நமக்கு அழகாகக் தெரிவதற்கான காரணமென பெயரிட முடியாத ஒரு தன்மை இருப்பதாக கூறும் “க்ரிஸ்டபர் அலெக்சாண்டர்” எனும் கட்டிடக்கலை ஆசிரியர், அந்த பெயரிட முடியாத தன்மையை “நான்” எனும் நம்முள் உறைந்திருக்கும் அழகான இருப்பின் பிரதிபலிப்பை நாமே கண்டுகொள்ளும் தருணம் என்றே சொல்கிறார். இந்தக் கருத்தையொட்டி ஓவியத்தின் உண்மைத்தன்மையை நோக்கிய பயணத்தை தொடங்கலாம். பிரபஞ்சத்தின் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின் ஓவியம் பிரபஞ்ச உண்மையொன்றை கண்டறியும் முயற்சியில் இருந்தது. அந்த உண்மை யதார்த்த ஓவிங்களைவிட்டு விலகி எளிமையான கோடுகளாலும் வடிவங்களாலும் உண்மைத்தன்மையை அறிய முயன்றது.

அதே அறிவியல் தத்துவங்களால் உந்தப்பட்டு (புள்ளியின் கீற்று கோடு , கீற்றின் நிஜம் வடிவம், வடிவத்தின் நிஜம் உருவம் அப்படியானால் உருவத்தின் நிஜம் எதுவாக இருக்கும் என்ற கேள்வியிலிருந்து) முப்பரிமாண உலகிலிருந்து வெளிவர ஓவியர்கள் முயல்கிறார்கள். இந்த உந்துதல் ஓவியர்களின் மரபார்ந்த முறையிலிருந்து விலகி ஓவியர்களைப் புது கற்பனைகளுக்குள் செலுத்துகிறது. இதுவும் உண்மையை நோக்கிய பயணத்தின் ஓவியர்கள் சென்றதன் விளைவே.

ஆசிரியர் அறிமுகப்படுத்தும் இன்னொரு கருத்து சித்திர சூத்திரம் எனும் நூலில் தரப்பட்டுள்ள ஓவியம் பற்றியது. பாடல் (மொழி/கவிதை/கருத்து), இசை, நடனம் என்னும் வரிசையில் கடைசியாக ஓவியம் வைக்கப்பட்டுகிறது. இந்த வரிசையில் ஓவியம் வைக்கப்படுவதற்கான காரணமும் விளக்கப்படுகிறது. கருத்தில் தொடங்கி, அது இசையாக்கபட்டு, அந்த இசை நடனத்தின் நெழிவுகளை கைகொண்டு இறுதியில் ஓவியமாக உருவாகிறது. ஏன் ஓவியம் வரையவேண்டும் என்ற கேள்விக்கு “ஓவியம் என்பது கண்களால் காணா முடியாத காதால் கேட்க முடியாத நுகர முடியாத தொட்டுணரமுடியாத ஒன்றை உருவாக்குவதற்காவே” என்கிறது சித்திர சூத்திரம். இந்த பதில் ஓவியம் எனும் கலையை ‘தன்மையற்ற தன்மை’ என்னும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்தப் பண்டைய கருத்தானாது நவீன அரூப ஓவியர்களின் கருத்தை ஒத்துள்ளது என்பது ஆச்சரியமூட்டுகிறது. இத்தனைக்கும் சித்திர சூத்திரம் 1500 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது. இந்த இணைப்பு ஓவியத்தின் நெடுங்கால இலக்கணம் மற்றும் காலம் காலமாக ஓவியத்தின் உச்சமென முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்ட ஒன்றை ஆசிரியர் அடையளப்படுத்துகிறார். இந்த இணைப்பைக் கண்டடைய ஆழமான வாசிப்பு பின்புலம் தேவைப்படுகிறது. அவர் எடுத்துக்காட்டும் அல்லது விளக்கும் ஓவியங்களும் ஓவியர்களும் நாம் ஓவியம் சார்ந்து பெரும் பயணமொன்றை தொடர்வதற்கான உந்துதலை அளிக்கக்கூடியவை. ஆசிரியரின் பலகால ஓவியப்பயணத்தின் பெரும் பயனாகவே இந்த புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

ஓவியம் எனும் கலையை அதன் கோட்பாடுகள் வளர்ச்சி, மற்ற கலைகளுடனான இணைப்பு, புதுமை, தத்துவம், மற்ற கலைகளுக்கான தொடர்பு, மெய்மை என எல்லாவற்றையும் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கும் இந்த நூலை வாசகர்களும் புனைவெழுத்தாளர்களும் கண்டிப்பாக வாசிக்கவேண்டும். இந்தக் கட்டுரைகள் புனைவுக்காக கொடுக்கும் திறப்புகளும் வாய்ப்புகளும் எந்த புனைவெழுத்தாளும் இழக்கூடாத ஒன்று. அந்த வகையில் கணபதி சுப்ரமணியத்திற்கு புனைவெழுத்தாளனாக, வாசகனாக என் நன்றி!

***

இவான் கார்த்திக் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். தற்போது மதுரையில் வசிக்கிறார். இலக்கிய வாசிப்புடன் சிறுகதைகளும் எழுதிவருகிறார். பதாகை, சொல்வனம், ஒலைச்சுவடி, வனம் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்துள்ளது. ‘பவதுக்கம்’ இவரது முதல் நாவல். தொடர்புக்கு: Ivaankarthik@gmail.com 9003405948

The Initiates – கிராஃபிக் நாவல்

0

கார்த்திக்

The Initiates: A Comic Artist and a Wine Artisan Exchange Jobs
Book by Étienne Davodeau
Originally published: 2013 (In english translation)
Étienne Davodeau, வயது 58, பிரெஞ்சு காமிக் புத்தக ஆசிரியர்.

In 2011 வெளியான இவரின் Les Ignorants (The Initiates) என்ற காமிக் புத்தகம் மிக முக்கியமான படைப்பு. கிராபிக் நாவல்களில் இதுவரை யாரும் எடுத்திராத புதிய முயற்சி.

ஒரு வைன் தயாரிப்பாளர் ஒரு கிராஃபிக் நாவல்களின் எழுத்தாளர் மற்றும் கலைஞர், 2010 இல் அவர்கள் பரஸ்பர வர்த்தகத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர் அதனை புத்தகமாக வடிவமைத்துள்ளார் Étienne Davodeau .

Étienne Davodeau ஒரு கிராஃபிக் நாவல் கலைஞர் – அவருக்கு ஒயின் தயாரிக்கும் உலகம் பற்றி அதிகம் தெரியாது. ரிச்சர்ட் லெராய் (Richard Leroy) ஒரு ஒயின் தயாரிப்பாளர் – அவர் அரிதாகவே காமிக்ஸைப் படிப்பார். ஆனால் அறிவார்ந்த மற்றும் பரந்த மனப்பான்மை கொண்ட இவ்விருவர்கள் தங்களுக்குத் தெரியாத தத்தம் தொழில்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

மேலும் ரிச்சர்டின் திராட்சைத் தோட்டங்கள் மற்றும் பாதாள அறையில் எட்டியென் வேலைக்குச் செல்கிறார், அதே நேரத்தில் ரிச்சர்ட், காமிக்ஸ் உலகில் குதிக்கிறார். இது ஒரு உண்மை வழங்குதல்.

ஒருவருடைய தொழிலின் தன்மையை ஆராயும் இந்த கிராஃபிக் நாவல் இரண்டு வேறுபட்ட தொழில்களில் கைவினை செய்வதற்கான தினசரி பக்தியை வழங்குகிறது.

இரண்டு தொழில்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான உண்மையான வாழ்க்கைப் பிரதிநிதித்துவத்தை வழங்கும் இந்த நுண்ணறிவு புத்தகம் இரண்டு கவர்ச்சிகரமான துறைகளை ஆராய்கிறது, ஒவ்வொரு மனிதனின் உந்துதல்களையும் ஆராய்ந்து இறுதியில் அவர்களின் முயற்சிகள் மற்றும் அபிலாஷைகள் மிகவும் வேறுபட்டவை அல்ல என்பதை வெளிப்படுத்துகிறது.

ரிச்சர்ட் தன்னுடைய ஒயின் வர்த்தகத்தில் ஒரு மாவீரன். அவர் சிறந்த மது பாட்டிலைத் தயாரிப்பதற்காக நடைமுறைகளைப் பற்றிய சமகால ஞானத்திற்கு முரண்படத் தயாராக இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை, மதுவின் தரம் முழுமையான முன்னுரிமையாகும், எனவே விரிவாக்கம் அல்லது தரத்தை நீர்த்துப்போகச் செய்தல் அல்லது வெவ்வேறு செயல்முறைகள் மூலம் அவர் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்றாலும், அவர் அதைத் தேர்வு செய்யவில்லை. ரிச்சர்டின் திராட்சைத் தோட்டத்தை (மான்ட்பெனால்ட்)கொடிகளின் வளர்ச்சி மற்றும் அறுவடையின் காலங்கள் என்று அழகிய சித்தரிப்பால் நமக்கு மிகப் பரிச்சயமான இடமாக மாற்றுகிறது இப்புத்தகம்.

அதே போல் எட்டியென் ரிச்சர்டிக்கு தன் கலையை கற்பிப்பது வைன் தயாரிக்கும் பக்கங்களை விட சற்று குறைவாக உள்ளது. ஆனால் அப்பக்கங்கள் அவரின் நுண்ணறிவை நிரூபிக்க போதுமானது. மேலும் எட்டியென் அவருக்கு சிறந்தவற்றில் சிறந்தவற்றை வழங்குகிறார். “வாட்ச்மேன்” , “மவுஸ்” என்று பெரும்பாலான பிரெஞ்சு காமிக் புத்தங்களை அவருக்கு அறிமுகம் செய்கிறார். ரிச்சர்ட் அச்சுப்பொறிகள், வெளியீட்டாளர்கள், காமிக்-கான் மற்றும் சில பிரபலமான பிரெஞ்சு இல்லஸ்ட்ரேட்டர்களைப் பார்க்க அழைத்துச் செல்லப்படுகிறார். இம்மானுவேல் கிபர்ட் (Emmanuel Guibert), “தி ஃபோட்டோகிராஃபர்” இன் ஆசிரியரை இருவரும் பார்க்க செல்லும் பக்கங்கள் சுவாரசியமானவை.

அவர்கள் ஒன்றாக நேரத்தைச் செலவிடும்போது – ரிச்சர்டின் திராட்சைத் தோட்டத்தில் எட்டியென் வேலை செய்கிறார், ரிச்சர்ட் காமிக்ஸ் படிக்கிறார் மற்றும் படைப்பாளர்களைச் சந்திக்கிறார் – இதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் காண்கிறார்கள். உதாரணமாக, அச்சுப்பொறியில் ஒரு பிஸியான நாளைக் கழித்த பிறகு, ரிச்சர்ட் இது தனது மதுவை பீப்பாயில் அடைப்பதற்கு எடுத்துச் செல்வது போல் இருப்பதைக் காண்கிறார். உங்களுடைய சொந்த வேலையை முடிக்க நீங்கள் வேறொருவரின் வேலையைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற உண்மை விளங்குகிறது.

கிராஃபிக் நாவல்களை உருவாக்குவதற்கும் (எழுதுதல், வரைதல், அச்சடித்தல் மற்றும் வாசகர்களுக்கு விநியோகித்தல்) மற்றும் ஒயின் தயாரிப்பதற்கும் (புளிக்கவைத்தல், பாட்டிலில் அடைத்தல் மற்றும் விநியோகம் செய்தல்) ஆகியவற்றுக்கு இடையே வெளிப்படையான ஒற்றுமைகள் உள்ளன. ஒவ்வொன்றும் எளிதில் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு வேலை. ஒவ்வொன்றும் ஒரு கலை வடிவமாகும், அதை பலர் கலையாக அங்கீகரிக்கத் தவறிவிட்டனர். ஒவ்வொன்றும் எஜமானர்கள், சாதாரணமானவர்கள் மற்றும் விசித்திரமானவர்கள் என பலவகைப்பட்டவர்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

“தி இன்ஷியேட்ஸ்” இல் காமிக்ஸ் உலகம் மற்றும் வைன்-ஐப் பற்றி  நிறையக் கற்றுக்கொள்கிறோம். திராட்சை தோட்டத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் நொடிகள், மெக்கானிக்கல் ஸ்ப்ரேயரில் நீட்டப்பட்ட குழாய்கள், குறுக்கு நெடுக்காக அமைந்திருக்கும் கொடிகள் என்று தத்ரூம்பமான விவரணைகள் மூலம் புகைப்படங்களுக்குப் பதிலாக வரைபடங்களைப் பார்க்கிறீர்கள் என்பதை எளிதில் மறந்துவிடக்கூடிய பிரேம்கள் புத்தகத்தில் உள்ளன. எட்டியென் ஒரு பார்வையாளர் மட்டுமல்ல, ஒரு பங்கேற்பாளர் என்பதால் வரைபடங்கள் மிகவும் உண்மைத்தன்மை நோக்கி நகர்வது நம்மையும் அதில் கரைக்க முயல்கிறது. எட்டியென் மற்றும் ரிச்சர்ட்க்கு நடக்கும் தொழில்நுட்பம் மற்றும் தத்துவம் தொடர்பான உரையாடல்கள் ஒருபோதும் பாசாங்குத்தனமாக இல்லை. திராட்சைத் தோட்ட பணிகளைக் கொண்ட படங்கள் ஜென் போன்ற தருணங்களை நமக்குப் பரிசளிக்கிறது.

இப்புத்தகத்தின் பிரெஞ்சு பெயர் “Les Ignorants” தமிழில் அறியாமை என்று அர்த்தம் கொள்ளலாம் ஆனால் ஆங்கிலத்தில் “The Initiates” என்று பெயர் வைத்துள்ளனர். இப்பெயர்கள் எதிர் அர்த்தம் தருவதாக இருந்தாலும் அதன் அடிப்படைக் கொள்கை ஒன்றுதான் என்று புத்தகம் படிக்கையில் புரிகிறது. இவ்விருவர்களின் சட்டை கறைகள், புருவங்களில் சிந்தும் வியர்வை, வயலில் முளைத்த புல் ஆகியவற்றைக் நுண்ணியமாகக் காண்கிறோம். திராட்சைத் தோட்டங்களில் பறவைகள் மற்றும் ஒயின் கிளாஸ்களின் சத்தத்தைத் தெளிவாகக் கேட்கிறோம். எட்டியென், ரிச்சர்டின் ஆர்வத்தையும் நாம் உணர்கிறோம். இதுவே இப்புத்தகத்தின் சாதனை என்பேன் நான்.

சிந்தனையைத் தூண்டும் இந்த கிராஃபிக் நாவல், மற்றவர்களுடனான நமது உறவுகளைப் பரிசீலிக்க இடைநிறுத்துகிறது. மற்றும் நாம் யார், நாம் என்ன செய்கிறோம், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை எவ்வாறு உணர்கிறோம் அவற்றுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கும்படி கேட்கிறது. “பயணம்” எப்பொழுதும் நமக்குக் கற்பிக்க ஆழமான ஒன்றைக் கொண்டிருப்பதை இந்த கிராபிக் நாவல் நமக்கு உணர்த்துகிறது. தங்கள் தொழிலைப் பயிற்சி செய்யும் இடத்திற்கு முன்னும் பின்னுமாக பயணம் செய்கையில், அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் மட்டும் இல்லாமல் அவர்களின் வளர்ச்சியை அழகாக நமக்கு படம் பிடித்து காட்டுகிறது இதன் பக்கங்கள். 

சாம்பல் மற்றும் கறுப்பு நிற நிழல்களில் கூட, கலைஞர் சூரிய ஒளியையும், நன்றாக பழுத்த திராட்சைகளையும், மேசை விரிப்பில் இருக்கும் ஒயின் கறையையும் வெளிப்படுத்த முடிகிறது. முழுக்க முழுக்க கிரேஸ்கேல் (greyscale) என்றாலும் கூட கலைப்படைப்பு மிக அருமையாக இருக்கிறது. எட்டியென் மற்றும் ரிச்சர்ட் இருவரும் தங்கள் தொழில் ஞானத்தைப் நமக்கு போஷிக்கிறார்கள், அவர்கள் இருவரும் ஊட்டமளிக்கிறார்கள். இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம், நீங்கள் ஊட்டமடைவீர்கள், உங்கள் சொந்தத் திறமை மற்றும் உழைப்பால் பெற்ற நுண்ணறிவை மற்றவர்களிடம் வளர்ப்பது எப்படி என்பதை அறிந்துகொள்வீர்கள்.

இந்த புத்தகம் உங்கள் கையில் ஒரு வைன் கோப்பையுடன் ஒரு மாலைவேளையில் சிறந்த கிராபிக் நாவல்களைப் படிக்க உற்சாகப்படுத்தும் என்பதை உறுதியாக என்னால் சொல்லமுடியும். 

***

கார்த்திக் – தொழில்நுட்பத்துறையில் வேலை பார்த்துவரும் இவர். சென்னையில் பணி நிமித்தம் வசித்து வருகிறார். “ஒரு ஃபிலிஸ்டைனின் கிறுக்கல்கள்” நூலின் ஆசிரியர். கிராஃபிக் நாவல்கள் மற்றும் ஜப்பானிய மங்கா மீது ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு – gkarthik.mic@gmail.com

அவதானிப்புகள் ஏதுமற்ற உறக்கம்

0

லட்சுமிஹர்

யாரும் வழி சொல்வதில்லை :

ஒவ்வொரு முறை அப்பாதையைக் கடக்கும் போதும் எண்ணற்ற வேண்டுதல்களை நினைத்துக் கொள்வது வழக்கமே. அதுபடி இன்று நடக்கவிருக்கும் தேர்வில் எப்படியாவது படித்த கேள்விகளை விடத் தெரிந்த கேள்விகள் வர வேண்டும் என்று மனதிற்குள் முனகிக் கொண்டாள். இன்று சனிக்கிழமை. அவ்வழியில் சாமி கும்பிட ஆட்கள் வர ஆரம்பித்திருந்தனர். சிறுவயது முதல் முனியப்பன் கோவிலுக்குச் செல்லும் அப்பாதையில் அவள் நடந்தது கிடையாது. இப்போது எங்கு நிற்கிறாளோ அதே இடத்தில் நின்று கொள்வது அவளின் எல்லையாக மட்டும் இல்லாமல் அங்கு இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பொருந்துவதாக இருந்தது. சிறு வயதில் அதைச் சுற்றி இருந்த கேள்விகளுக்கு யாரும் பெரிதாகப் பதில் கொடுக்க ஆர்வம் இல்லாதவர்களாகவே இருந்தனர் என்பதைத் தாண்டி அந்த கேள்வி பயனற்றது என்பதாகவே அனைவரது பாவனைகளும் இருந்தன. நாளடைவில் என்ன நடந்து கொண்டிருந்ததோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு அவளும் வந்திருந்தாள். அவளுக்கு சிரமமும் இருக்கவில்லை. அனைவரைப் போலவும் அதில் நம்பிக்கையும் கொள்ளத் தொடங்கிவிட்டாள். நம்பிக்கை அவளது கேள்விகளையெல்லாம் மறையச் செய்திருந்தது. அப்பாதையின் வழியே சென்ற பெண்கள் பற்றி உலவும் கதைகளை ஆர்வமாகக் கேட்பது தொடங்கி அதைத் தன் பாணியில் தனது பள்ளி தோழியரிடம் சொல்லிப் புகழ் பெறத் தொடங்கியிருக்கும் சமயத்தில் அவள் புனைந்த ஓர் கதை பள்ளியில் எங்கும் பரவலாகப் பேசப்பட்டது.

அக்கோவிலுக்கு அவ்வூரில் உள்ள பெண்கள் யாரும் வழி சொல்ல மாட்டார்கள் என்று. அக்கிராமத்துப் பெண்கள் அதைச் செய்தது இல்லை என்றும் இன்றுவரை அது அப்படியாகவே நடந்தேறிக் கொண்டிருப்பதாக அவள் சொல்லும் போது உடன் இருந்த மாணவிகளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. சிலர் அங்குக் கண்டிப்பாக, திருட்டுத்தனமாகக் கூட சென்று வந்துவிட வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். கண்டிப்பாக முடியாது என்று இவள் மறுத்திருந்தாலும் அவர்களின் அடாவடி நின்ற பாடாக இல்லை. அக்கோவிலுக்குள் பெண்கள் அனுமதியே இல்லை. அதற்குப் பின் எண்ணற்ற வரலாற்றுக் கதை உள்ளது எனக் கூறினாள். அதைக் கேட்டு இப்போது அவளை அவளது தோழிகள் நச்சரிக்க தொடங்கியிருந்தனர்.

ஏனோ அவர்களது கேள்விகளுக்கு மனம் ஒவ்வாமல், இக்கதைகளைக் குறித்து அவர்களிடம் பேசுவதை தவிர்த்து வரத் தொடங்கியிருந்தாள். அதுவே சரியென அவளுக்குப் பட்டது. திடீரென்று மனதிற்கு இன்று நடக்கப் போகும் தேர்வு நினைவுக்கு வர மனம் அனைத்திலிருந்தும் விடுபட துடித்து முழு கவனமும் தனது பாடத்திற்குள் செல்ல அனுமதித்தாள். சமீபத்தில் தான் அப்பாதையின் முன் இருந்த பேருந்து நிறுத்தத்தை சுமார் இரண்டு கிலோமீட்டர் தள்ளி அமைத்திருந்தனர். முன்பு இருந்த பேருந்து நிலையம் அவளுக்கு ஏற வசதியாக இருந்தது. இப்போது நடக்க வேண்டும், நடந்தே தீர வேண்டும். நடக்க நடக்க களைப்புற தொடங்கியிருந்தாள்.

அவை பழக்கப்பட்டுவிட்டன :

அங்கும் இங்கும் அலைந்து திரிந்து எடுத்த புகைப்படங்களைக் கோவிலின் மூலையில் உட்கார்ந்து பார்த்து வந்தான். எப்போதும் எடுக்கும் புகைப்படங்களாகவே அவை இருந்தது அவனுக்குப் பெரிய திருப்தியைக் கொடுக்கவில்லை. எதையாவது புதிதாகக் காட்சி சட்டகத்துக்குள் புகுத்த அவன் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. முடிந்த அளவு புது முயற்சியைக் கைக்கொள்ள வேண்டும். பெரிதாகத் தொழிற்நுட்பம் சார்ந்து இல்லாமல் அவை கருத்தியல் ரீதியில் இவ்விடத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே அவனது முடிவாக இருந்தது. எப்போதும், எங்கு புகைப்படம் எடுக்க கிளம்பினாலும் அதற்கு முன் சிறு தயாரிப்புகளைச் செய்வது வழக்கம் தான். அது ஒர் வகையில் இது நாள் வரை அவனைத் தேற்றிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அந்த முன்னேற்பாடுகள் அவனை ஒற்றைப் புள்ளியை நோக்கி நகர்த்துவதாகவே இருப்பதால் அவைகளெல்லாம் இப்போது பயனற்றதாக தோன்றியது. அச்சூழலில் இன்னும் தன்னை எப்படியாவது தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தான்.

மீண்டும் தான் எடுத்த புகைப்படங்களில் தனது குறைகளைக் கவனிக்கத் தொடங்கினான். வெட்டுவதற்காக வரிசையில் ஆடுகளைப் பிடித்துக் காத்திருக்கும் ஆட்களின் முகபாவனைகள், சிதறுண்டு கிடக்கும் தலைகள், அதன் சூடேறிய ரத்தம், கோவிலினைச் சுற்றி உள்ள ஒரே மாதிரியான மரங்கள். அம்மரங்களில் இருக்கும் மனித முகங்களின் பிரதிபலிப்புகள், எங்கும் ஆண்கள் மட்டும் நிரம்பி வழியும் வாசம், பெண்கள் படாத அந்நிலத்தின் வாகு, நிதானமான கறிகளைத் தின்னும் நாய்கள், எப்போதும் கேட்கும் பட்டாசு சத்தம், காவல் தெய்வத்துக்குப் படைத்த கிடாவின் சமையல் முறைகள், அசைவ விருந்து என அவனது புகைப்படங்கள் ஓரளவு அதன் சூழலை முழுவதும் கைகொள்வதாக இருந்தது. இருந்தாலும் மனதிற்குள் இதையெல்லாம் சேர்க்க மையப் புள்ளியாக அல்லது தனித்துவமான கதை சொல்லும் புகைப்படங்களின் தொகுப்பாக இதை மாற்ற முயன்று கொண்டிருந்தான். இனியும் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தால் ஆகாது, எதையாவது ஒன்றை எடுத்தாலொழிய ஒன்றும் பயன் இல்லை என்று தெரிய வர. அவன் தனது புகைப்படக்கருவியுடன் அடுத்த புகைப்படத்திற்கு முன் நகர்ந்தான். முன்பு பதியப்பட்டிருந்த காட்சிகள் அனைத்தும் அங்கு ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்து மும்முரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் எதைக் கைக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு முதலில் அந்த மும்முரத்திலிருந்து வெளியேற நினைத்தான். ஆம் அது அவனை மேலும் கீழும் இழுப்பதாகப்பட்டது. அதனால் முதலில் அவனது பார்வை அதிலிருந்து துண்டிக்கப்பட்டது. அதன் விளைவாக ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடிய மனநிலைக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். என்னவோ அவன் கண்கள் அங்குச் சுற்றித் திரியும் நாய்களின் பக்கம் திரும்பியது . அவனைப் போல அவை பெரும் பதற்றம் இல்லாமல் சுற்றி வந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். சுற்றி அலைந்த நாய்கள் மட்டுமே இப்போது கண்களுக்குப் புலப்பட்டது. அவைகளை நொடிக்கு ஒரு முறை வெடிக்கும் வேட்டின் சத்தத்திற்குத் துளியும் பயப்படாமல் சுற்றிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. இதுவரை பட்டாசுகளுக்குத் தெறித்து ஓடும் நாய்களைத் தான் கண்டிருக்கிறான். இவ்வளவு நிதானமான நாய்களை கவனித்தது இல்லை அல்லது கண்டது இல்லை. இப்போது நாயகர்களாக நாய்கள் உருப்பெறத் தொடங்கினர். அவைகளின் நிதானத்திற்குக் காரணம் அங்கு நிரம்பி வழியும் உணவுகளாகக் கூட இருக்கலாம் இல்லை அச்சத்திற்கு அவை பழக்கப்பட்டதாகக் கூட மாறியிருக்கலாம். இதுவரை தேடிக்கொண்டிருந்த தனித்துவமான கருவைத் தான் கண்டுகொண்டு விட்டதாகப்பட்டது. எங்கும் நாய்கள் ஒய்யாரமாகச் சுற்றிக் கொண்டிருந்தன.

கிடையின் நடை :

இருவரும் சேர்ந்து அம்மதிய பொழுதுகளில் நடக்கத் தொடங்குவது வழக்கம். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் நட்பு எப்போது வேண்டுமானாலும் பகையாக மாறலாம் என்பதால் பெரும்பாலும் அந்நடை அமைதியைக் கொண்டிருக்கும். அது இதுநாள் வரை நன்மையையே கொடுத்திருக்கிறது. ஆதலால் தங்களால் முடிந்தளவு அதைக் காப்பாற்றி வந்தனர். அதனை மீறியும் சில நாட்களில் பேச்சு சண்டையில் போய் முடிவடைவதைத் தடுக்க இயலாது.

என்றும் இல்லாத அளவு இன்று வெயில் உச்சியில் ஏறியிருந்தது. எப்போதும் நடக்கும் பாதை ஆகையால் எந்த ஏற்ற இறக்கங்களுக்கும் கால்கள் தானாகப் பழகியிருந்தது. அவர்களின் கண்களோ நேர் ஈட்டி பார்வைகளாகச் சென்றடைய வேண்டிய கோவிலிலேயே மையம் கொண்டிருந்தது. நடையில் ஒருவருக்கு ஒருவர் மிஞ்சியோ அல்லது பின்னடைந்தோ செல்வது ஒர் நாளும் நிகழ்ந்தது இல்லை. சரியான வேகத்தை இத்தனை வருட நடையில் எட்டியிருந்தனர். காலை முதல் சாப்பிடாத களைப்பு கோவிலை நெருங்க நெருங்க அதிகரித்துக் கொண்டே சென்றது. அப்படியான தருணங்களை கைக்கொண்டு விட முடியாமல் பேச ஆரம்பித்தே சண்டையில் போய் முடிந்திருக்கிறது. இப்போது அத்தருணம் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறது அதை எப்படியாவது கடந்து விட வேண்டும் என்று தங்களுக்குள் முயன்று பார்த்துக் கொண்டிருப்பதை இருவரும் உணர்ந்தனர்.

பேசக் கூடாது ..பேசக் கூடாது என்று தான் அவர்களின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. தான் முதலில் பேசிவிடக்கூடாது என்பதில் ஒருவருக்கொருவர் தீர்க்கமாக இருந்தனர். அந்த முதல் பேச்சின் பலியை இனிமேலும் தான் சுமக்கக் கூடாது என்பதே எண்ணம். அதில் தோற்றிடாது முயன்று கொண்டிருப்பதை ஒருத்தர் இன்னொருத்தரைக் கவனிக்காதபடி பார்த்துக் கொண்டனர். யார் பேசப் போவது…பசியோ நடக்க நடக்க ஏறிக் கொண்டே சென்றது. இப்போது என்ன செய்ய ஒருவர் மீது ஒருவர் பலி போடத் தயாராக இருந்தனர். அதற்கான காரணங்களை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் அல்லது முதலில் மற்றொருவரைப் பேச வைத்து பலியைப் போட வேண்டும். அதைச் சாத்தியப்படுத்த தங்களுக்குள் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருக்க வயிறோ எதையும் யோசிக்க விடாமல் அவர்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருப்பதாகவே இருந்தது. நினைவு தெரிந்த நாள் முதல் இந்நடையை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் சண்டையை அறிந்த ஊரார் அனைவரும் அவர்களிடமிருந்து விலகியே இருந்தனர். எவ்வாறு அவர்கள் மீண்டும் ஒன்றாகிவிடுகிறார்கள் என்பதைப் பற்றியும் யோசித்து இருக்கின்றனர். கோவிலின் அருகில் நெருங்கியதற்கு சுவடாய் வெட்டிய கிடாயின் வாசம் இருவரின் சுவாசத்திற்குள் புகுந்தது. அது அவர்களை முன் நோக்கி நடக்க விடாமல் செய்தது. சாப்பிடப் போகும் கிடையின் உருவம் அவர்களுக்கு முன் வந்து கொண்டேயிருந்தது. இருவரும் ஒவ்வொருவரின் கிடையினை கற்பனை செய்து கொண்டனர். ஒருத்தர் இன்னொருத்தரிடம் இருந்து அந்த கற்பனையை மறைக்கச் சிறிய புன்னகையைப் பயன்படுத்தினர். பசி ஏறிக் கொண்டே சென்றது…

அசைவத் துணுக்கு :

சிறுவயது முதல் இதை மட்டுமே செய்து வருவது இக்காலகட்டங்களில் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறதா… என்பதே அவனது பந்தியில் அமர்ந்து உண்டவர்களின் புகாராக இருந்தது. இது நாள் வரை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது அவனுக்கே அது தோன்றியதால் மண்டைக்குள் போட்டு சுழற்றிக்கொண்டிருந்தான். கோவிலின் அருகில் சமைக்கத் தேவையான பாத்திரக் கடையையும், சமையல் ஆட்களையும் இயக்கி வருகிறான். தன் தந்தை வழி வந்த இத்தொழிலில் தற்போது வரை எந்த வித தொய்வும் இல்லை. நாள் ஒன்றுக்கு இருபது கிடா வெட்டுக்கள் சாதாரணமாகக் கடந்து போகும். அதில் அவனே நான்கைந்து பேரின் சமையலைப் பிடித்து விடுவது அவனுக்கு லாபத்தையே கொடுத்தது. பல காலங்களாக அங்கு இயங்கி வருவதால் அங்குத் தனி மௌசும் இருந்து வந்தது எனலாம். ஆனால் இப்போது அதைச் செய்வதில் ஈடுபாடு குறைந்தவனாக இருக்கிறான். அதற்கான காரணத்தைச் சொல்லி இங்கு யாருக்கும் புரிய வைக்க முடியாது என நினைத்தவன் தன்னுள்ளேயே உழட்டிக் கொண்டிருக்க அவனின் அசைவ விருந்தை பற்றிய குறைபாடுகள் எங்கும் பரவுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பரவும் அச்செய்தியை நிறுத்துவது என்பது சிரமமான காரியமாக இருக்கும் அது மட்டும் இல்லாமல் அதில் உண்மை இருப்பதால்,ஏற்றுக்கொள்வதைத் தாண்டி எதுவும் அவனால் செய்ய முடியவில்லை.

சமீப நாட்களில் ஆர்டர் குறைந்து கொண்டு போவது அங்கு அவனுக்கு இருக்கும் மௌசு போவதை அப்பட்டமாக காட்டியது. வெறிச்சோடி கிடக்கும் எதிர்க்கடைகளின் தற்போதைய வியாபாரமும் , அசைவ மணமும் அவனை வருத்தப்படச் செய்து கொண்டு இருந்தது. அதிலிருந்து வெளியேற ஒரே வழி மீண்டும் அச்சுவையைக் கொண்டு வருவது தான் என எண்ணி எவ்வளவோ முறை முயன்றும் அச்சுவையை மீண்டும் கொண்டு வரமுடியவில்லை. இது அம்முனியப்பன் தனக்குக் கொடுத்த தண்டனையாகவே நினைத்துக்கொண்டான். அதில் அவனுக்கு கோபமே எழுந்தது. முனியப்பனை மீறி அச்சுவையைக் கொண்டு வருவதென்பது முடியாத ஒன்று என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

தனது காதலியிடம் என்ன பதிலைச் சொல்ல முடியும். அவள் இல்லாத இனிவரும் நாட்களை எண்ணிப் பார்த்திருக்கவில்லை. அவளின் இளமையை அனுபவித்தவனுக்கு அதை மீண்டும் அனுபவிக்கவே எண்ணம் ஓடியது. அவளை ஏமாற்றி விடக்கூடாது தன்னுடனையே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவனின் பிரச்சினை அங்கிருந்தே ஆரம்பித்தது. அவனது நினைப்பையெல்லாம் அவளே கைவசம் வைத்திருந்தாள். தன் உணவில் சுவை இல்லாமல் போனதற்கு அவளின் நினைப்பு தான் காரணமா என்று அங்கு அதற்கு முன் சுகபோக வாழ்வில் திளைத்திருந்த ஆண்களிடம் சொன்ன போது, அவனைப் பார்த்து எல்லோரும் கேலி செய்தனர். ‘நான் மூணுபிள்ள பெத்தவன்’ என்று ஒருவர் சொல்லும் போது, இரண்டையும் தானே ஒப்பிட்டுக் குழப்பிக் கொண்டிருப்பதாக அவனுக்குப் பட்டது. என்ன செய்தாலும் அவனால் பழைய பாணிக்குத் திரும்ப முடியவில்லை. நேராக முனியப்பனிடம் ஓடிப் போய் மனதில் இதுவரை ஓடிக் கொண்டிருந்த விசயத்தையெல்லாம் மொத்தமாக ,முறையான அடுக்குகள் இல்லாமல் கூறி முடித்தான். அது அவனுக்குச் சிறு மகிழ்வைக் கொடுத்தது. சாமியைப் பார்த்துவிட்டு வெளியேறியவன் கண்களில் வேண்டுதலுக்குப் பலி கொடுக்க வரிசையில் காத்திருந்த ஆடுகளை கவனித்தான். முதன் முறை அவளுடன் சேர்ந்த இடம் அவள் வீட்டின் கெடையில் தான்.. அதை அறிந்தது போல அவனுக்கு ஞாபகப்படுத்திய ஆட்டினை கொண்ட முதலாளியின் சமையல் ஆர்டரை வாங்கினான். இனி அது வெட்டப்படும் வரை காத்திருப்பதாக முடிவெடுத்தான். 

நான்கு துண்டுகள் :  

‘ஆட்ட வெட்ட பயப்படும் மனுஷங்க எதுக்கு அத வேண்டிக்குறாங்க, அதுவும் உசுரு தான“ என்று தனக்குள் எப்போதும் புலம்புவது உண்டு. கிடைக்கும் நாட்கள் கோவிலுக்கு வந்து இப்பணியைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அலை மோதும் அப்போது நாலு காசு பார்க்க வேண்டும் அதற்கு எதையும் பலி கொடுத்து விட்டு போங்கள் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தான்.

நேற்றிக் கடனுக்காக வந்திருக்கும் சிலர் ஆடுகளை வெட்டுவதில் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பர். அவர்கள் எல்லாம் அவனையும் அவனைப் போல அங்கு இருப்பவர்களையும் தேடி வருவது வழக்கம். வெட்டுக்கு விலை பேசி அவர்களது வேண்டுதலை முடிக்கக் கூடியவனாகவே அவன் இருந்தான். சிலர் அவனது கூலிக்கு ஒற்று வராமல், ஆட்டின் தலையை தானாக வெட்ட முயன்று சரியாக சிதறாமல் பாதி வெட்டிய தலையுடன் எதிரில் தென்படும் யாரையும் கவனிக்காது முட்டி தள்ளி, ஓடும் அளவுக்கு ஓடிச் சோர்ந்து கீழே விழுவதைப் பார்க்க யாருக்கும் மனம் வராது. அதன் மீதி உயிரை நிறுத்த இவனைப் போன்ற சிலரே ஓடிப்போயாக வேண்டும். அதனால் என்னவோ அவர்களுக்கு அங்குத் தனி மரியாதை கிடைத்து வந்தது. ஒரே துண்டாக வெட்டும் பழக்கத்தினை இது நாள் வரை நன்கு பழகியிருந்தான். அக்கிழமைகளில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அதைச் செய்தாக வேண்டும் என்பதால் நேரம் போகப் போக அவனுடைய கைகளில் பலம் கூடிக்கொண்டே போகும். சிறு கருணை கூட காட்டாது துண்டாக்குவதில் தனது வாழ்வை நடத்திக் கொண்டிருந்தான். அப்படியான என்னுடைய வேண்டுதலில் அவனை சந்தித்தேன். அவனது கொடூர கைகளைக் கொண்டு பலி கொள்ளும் ஆட்டினை நினைத்து வருத்தப்பட்டேன். அதை அவனிடம் கூறிட விளைந்த போதே முன் சொன்ன வாக்கியத்தைச் சொன்னான்…” ஆட்ட வெட்ட பயப்படும் மனுஷங்க எதுக்கு அத வேண்டிக்குறாங்க, அதுவும் உசுரு தான..உங்களுக்கு உங்க உசுரு தான் முக்கியம்…”. அதன் பிறகு ஒவ்வொரு முறை வேண்டுதலில் போதும் அவனும் அவனது அருவாளும் என் நினைவில் வந்து போவதை நிறுத்த முயன்று கொண்டு இருக்கிறேன்.

ரிஷிவிதை :  

அங்கிருப்பவர்களுக்கு எத்தனை வருடங்கள் அவர் தவம் செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இதுநாள் வரை அவரின் சாபம் குறித்து அனைவரும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். சாந்தமாக யாரையும் தொந்தரவு செய்யாது இருந்தவரை மனைவியின் ஆசைக்கு, காட்டிற்குள் தண்டனை பெற்று வந்த ஓர் குடும்பம், அதனின் தலைவன், மாம்பழத்திற்கு குறி வைக்கப் போய் அது தவம் போலச் சொல்ல இயலாத முதல் சுதந்திர மனிதனின் கனவுகளைக் கலைத்தது. அவரின் கோபம் எய்தவனின் மீது திரும்பினாலும், அதற்குக் காரணமாக இருந்த ஆசை மீதே இருந்தது. அதைக் கைக்கொண்டுள்ள பெண் வடிவ ஒருத்தியின் மீது திரும்பியது. அக்கோபத்திலிருந்து தப்பிக்க அவர்கள் அக்காட்டினுள் ஓடிய ஓட்டத்தைக் கண்டு ரசித்தவர் எந்த சாபமும் கொடுக்கவில்லை. இனி யாரும் தன் சுதந்திரத்தைக் கெடுக்கக் கூடாது என அவ்வூரினுள் இருந்த முனியப்பனை ‘நான் கண்கள் திறக்கும் வரை காத்திரு’ என்று காவலுக்கு நிறுத்தி வைத்து கண்களை மூடிக்கொண்டார். ஓடியவர்கள் திரும்பிப் பார்த்ததாகத் தெரியவில்லை. அவரும் கண் திறக்கவில்லை. முனியப்பன் அங்கு இன்னும் காவலுக்கு நின்று கொண்டிருக்கிறார்.

***

லட்சுமிஹர் – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணிபுரிந்து வருகிறார். இதுவரை யாவரும் வெளியீடாக ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள், டார்லிங் எனப் பெயர் சூட்டப்பட்ட சிந்தாந்தம், கிளாஸிக் டச், கூத்தொன்று கூடிற்று என நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இதில் கூத்தொன்று கூடிற்று நூலுக்கு சாகித்ய அகாடமி – யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. மின்னஞ்சல்: latshmihar.malai@gmail.com

முத்துராசா குமார் கவிதைகள்

0

1)

உடுத்திய வெண்சீலையோடு
கூவாகம் நிலத்தில்
எனது கிழவுடல் மரித்து
பன்னெடுங்காலமாகிறது.
கூத்தாண்டவரின் தரிசெங்கும் கொதிக்கும்
பலி சேவல்களுக்குக்
கல்லடுப்பாக நான் பிறக்கும் போதெல்லாம்
உழுபூமிக்கடியில்
மக்காமல் நெளிகிறது சீலை.

2)

தனது சுடுமண் பிள்ளைக்குப்
பால் புகட்டியபடி
நவ்வா மரத்தடியில் கிடக்கிறாள்
உள்ளங்கையளவுள்ள டெரகோட்டா தாய்.
உதிரும் பழங்களில் ஒன்று
அவளது முலையொன்றை உடைக்க
மறுகாம்பில் மண்ணற்ற பாலைச் சுரக்கிறாள்.

3)

பம்பையாற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட
விளையாட்டுச் சாமான்களில்
பழமையான தாயக்கட்டைகள் சூதுபவள மணிகள்
சிமெண்ட்டாலான சேதக் கல்லறை
மிகவும் பிடித்திருந்தது.
சிலர் பூமாலைகளோடு
திசையெங்கும் கல்லறையைத் தேடித் திரிய
மணிகள் அணிந்து
என்னோடு தாயம் விளையாடுகிறாள்
கல்லறைப் பெண்.

***

முத்துராசா குமார் – மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலுள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையில் எழுத்தாளராகவும் இயங்கி வருகிறார். தமிழின் அச்சு, இணைய இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய எழுத்துகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில கவிதைகளும், சிறுகதையும் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல்: writermuthurasa@gmail.com

மீநவீனவாதம்: நவீனவாதத்துக்கும் பின்நவீனவாதத்துக்குமான மறுமொழி

0

பாரதிராஜா

மனித அகநிலைக்குத் திரும்பல் 

கிரெக் டெம்பர் (Greg Dember) | கிரெக் டெம்பர் எழுத்தாளரும் சிந்தனையாளரும் இசையமைப்பாளரும் ஆவார். மீநவீனவாத ஆராய்ச்சியாளரான இவர், லிண்டா செரியெல்லோவுடன் இணைந்து மீநவீனவாதத் திருப்பத்தை ஆவணப்படுத்தும் முன்னணித் தளமான ‘வாட் இஸ் மெட்டாமாடர்ன்’ (What Is Metamodern)-இன் ஆசிரியராக உள்ளார்.

*

உண்மை முதல் கலை வரை அனைத்தையும் விமர்சிக்கும் பின்நவீனவாதம் நம்மை ஓர் அறிவுப் பாலைவனத்தில் தள்ளியுள்ளது. நவீனவாதத்தின் அறிவியற் குறைப்புவாதத்தை மறுதலிக்கும் அதே வேளையில், பின்நவீனவாதத்தின் முரண்நகையான தொலைவிலிருந்து அகவயமான அனுபவத்தைப் பாதுகாக்கும் புதிய இயக்கமான மீநவீனவாதமே, ஒரு புதிய -வாதத்துக்கான (-ism) நமது தேவைக்கான தீர்வாகும் என்று கிரெக் டெம்பர் வாதிடுகிறார்.

மீநவீனவாதம், ஒரு கருத்தியல் வகையாக, அதன் ஏற்பு வளைவில் மிகவும் புதிதாக உள்ளது – பொதுவான பார்வையாளர்களுக்காக எழுதும்போது – புதிதாக ஒன்றையோ குறிப்பிட்ட எதையுமோ சொல்வதற்கு முன் அடிப்படைகளை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. மேலும், மீநவீனவாதம் எப்போதும் நவீனவாதத்துடனும் பின்நவீனவாதத்துடனும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாகப் புரிந்துகொள்ளப்படுவதால், அந்தச் சொற்களையும் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எனவே, இவை அனைத்தையும் முதலில் தெளிவுபடுத்திவிட்டுத் தொடங்குவோம்.

மீநவீனவாதம் என்பது பொதுவாக ஒரு பண்பாட்டுக் காலகட்டத்திற்கான பெயராகவும், அந்தக் காலகட்டத்தில் எழுந்த உணர்திறனைக் குறிக்கும் ஒரு சொல்லாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தக் காலகட்டம் (சமீபத்திய) புத்தாயிரமாண்டு தொடங்குவதற்குத் தோராயமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நிகழ்காலம் வரை தொடர்கிறது. இது பின்நவீனவாதத்திற்குப் பிறகு வருகிறது; ஒரு வகையில் பின்நவீனவாதத்திற்கு எதிர்வினையாக உள்ளது; இன்னொரு வகையில் பார்த்தால் தனக்கான பொருளைப் பெறுவதற்கே பின்நவீனவாதத்தைச் சார்ந்தும் உள்ளது. பின்நவீனவாதம், அதன் காலகட்டப்படுத்தலில் நவீனவாதத்துடன் இதேபோன்ற உறவைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் முந்தைய அறிவாற்றற் காலகட்டத்திற்கு எதிர்வினையாற்றுகிறது, அதன் மீது கட்டமைக்கிறது மற்றும்/அல்லது மறுக்கிறது. எனவே நவீனவாதத்தை விவரிப்பதில் தொடங்கி, பின்நவீனவாதம் வழியாக மீநவீனவாதத்துக்குத் திரும்பி, பின்னர் 2023-இல் மீநவீனவாதம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது பற்றிய சில எண்ணங்களைப் பகிர்ந்து, எதிர்கால வளர்ச்சிகள் குறித்து ஊகிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

நவீனம் (modern), நவீனத்துவம் (modernity), நவீனவாதம் (modernism) ஆகியவற்றை பல்வேறு, சில நேரங்களில் முரண்படும் வழிகளில் வரையறுக்கும் அளவிற்கு, நவீனவாதத்தை நவீனத்துவதிலிருந்து வேறுபடுத்துவோம். (நான் இங்கு உருவாக்கும் வகைப்பாட்டு வேறுபாடுகள் உலகளாவியவை அல்ல, ஆனால் அவை குறைந்தபட்சம் இந்தக் கட்டுரைக்குள் பொருந்துவ, எனவே வாசகர் நான் சொல்வது என்ன என்பதை மிகத் துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.) நவீனத்துவம் என்பது பெரும்பாலும் 17-ஆம் நூற்றாண்டில் அறிவொளி யுகத்துடன் தொடங்கிய நீண்ட வரலாற்றுக் காலத்திற்குப் பயன்படுத்தப்படும் சொல். மிகச் சுருக்கமாகக் கூறினால், நவீனத்துவம் மனிதகுலம் இயற்கையிலிருந்தும் மனிதகுலத்தின் கடந்த காலத்திலிருந்தும் விடுதலை பெறுவது பற்றியது – புதிய, சிறந்த செயல்முறைகளை நாடுவதும், அத்தகைய முயற்சி சாத்தியமானது என்ற நம்பிக்கையும் ஆகும். இதற்கிடையில், நவீனவாதம் (சமீபத்தில், இருபதாம் நூற்றாண்டிற்கு முந்தைய சில பத்தாண்டுகளில் தொடங்கி, நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏதோ ஒரு புள்ளி வரை தொடர்ந்தது) பெரும்பாலும் கலைகள், இலக்கியம், கட்டடக்கலை, தத்துவம் ஆகியவற்றில் நவீனவாதத்தின் குறிக்கோள்களின் குவிந்த வெளிப்பாட்டுடன் அவற்றின் தீவிரமாக்கலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இலக்கியம், கலைகளில் நவீனவாதத்திற்கான எஸ்ரா பவுண்டின் குரல் “புதிதாக்கு” என்பதே. பொதுவாக, கட்டடக்கலை, கலைகள், அல்லது மெய்யியல், அறிவியல் ஆகியவற்றில், நவீனவாதிகள் பொருள்களின் மேற்பரப்புகளில் சேர்ந்த கழிவுகளை உருவகமாகச் சுரண்டி, கீழே காணப்படும் ஆழமான, அடிப்படை உண்மைகளை வெளிப்படுத்த முயன்றனர். நவீனவாதம் இலட்சியவாதமாக உலகளாவிய கொள்கைகளைத் தேடியது, ஆனால் பெரும்பாலும் அணுவாக்கங்களின் வழியே இதைச் செய்தது. பொதுவாக, கலைகளிலும் மானுடவியலிலும் உள்ளவர்கள் பின்நவீனவாதம் பற்றியோ மீநவீனவாதம் பற்றியோ பேசும்போது, நவீனத்துவத்தை (முந்தைய, மிக நீண்ட காலம்) விட நவீனவாதத்தைத்தான் (குறுகிய, சமீபத்திய காலம்) அதோடு அதிகம் ஒப்பிடுகிறோம்.

*

பின்நவீனவாதம் என்பது உலகளாவிய கதைகளின் மீதான அவநம்பிக்கையும் சூழமைவு (context), உறவுமுறை (relationality), அமைப்புகள் (systems) ஆகியவை மீதான கவனக்குவிப்பும் ஆகும்.

*

எவ்வாறாயினும், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எப்போதோ, பல்வேறு கலைகளிலும் பண்பாட்டு அரங்குகளிலும் பின்நவீனவாத உணர்திறன் தோன்றத் தொடங்கியது. தற்காலத்தில், பலர் – தவறாக, என்பேன் – குறிப்பாக பின்நவீனவாதத்தை ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பரிந்துரைக்கும் இடதுசாரி சமூக நீதி இயக்கங்களுடன் அடையாளப்படுத்துகின்றனர். குறைவாகப் பிரதிநிதித்துவம் செய்யப்படும் குரல்களில் ஆர்வம் காட்டுவது உண்மையில் பின்நவீனவாதத்தின் ஒரு பகுதிதான், ஆனால் அது ஒரு பகுதி மட்டுமே. பொதுவாக, பின்நவீனவாதம் என்பது பொதுமைப்படுத்தப்பட்ட கதைகள் மீதான அவநம்பிக்கையும், சூழமைவு, உறவுமுறை, அமைப்புகள் ஆகியவற்றின் மீதான கவனக்குவிப்பும் ஆகும். நவீனவாதம் குறிப்பிட்ட பொருள்களை நெருக்கமாக ஆய்வு செய்து “உண்மைகளைத்” தேடும் இடத்தில், பின்நவீனவாத அணுகுமுறை அந்தப் பொருள்களை இணைக்கும் சூழமைவில் கவனம் செலுத்துவது. பின்நவீனவாதக் கலைப்படைப்புகள் என்று பார்த்தால், பார்வையாளர்/வாசகர்/கேட்போருக்கு அவர்கள் அனுபவிப்பது உண்மையில் ஒரு கலைப்படைப்பு என்பதையும், எனவே கலைப்படைப்பு, படைப்பாளி, பார்வையாளர்கள், சமூகம் ஆகியோருக்கு இடையேயான உறவின் பிரதிபலிப்பு பற்றிய ஆய்வைக் கமுக்கமாகத் தொடங்குவதையும் நினைவூட்டுவதில் முக்கிய அழுத்தம் இருந்தது. “ஆதிக்கம் செலுத்துபவர்கள்” பற்றிய அழுத்தத்தைக் குறைப்பதுடன் சூழமைவில் ஆர்வம் காட்டுவது, பெண்கள், வெள்ளையரல்லாத மக்கள், பாலியற் சிறுபான்மையினர், அதாவது இடதுசாரிகளால் பொதுவாக ஆதரிக்கப்படும் குழுக்களின் உரிமைகளைப் பற்றிய கவலைக்கு அடிக்கடி வழிவகுத்தாலும், பின்நவீனவாத வலதுசாரி என்று ஒன்றும், அதனினும் பரவலாக அரசியலற்ற பின்நவீனவாதம் என்று ஒன்றும் உள்ளது.

*

கலைஞர்களும் அவர்களின் பார்வையாளர்களும் பின்நவீனவாதத்துடன் வந்த பெரும்பாலானவற்றைக் கண்டு சலித்துப்போயிருந்தனர்.

*

2000-ஆம் ஆண்டுவாக்கில், மற்றோர் உணர்திறன் தோன்றியதாகப் பல அறிஞர்கள் கூறுகின்றனர் – அதைத்தான் நாம் மீநவீனவாதம் என்கிறோம். கலைஞர்களும் அவர்களின் பார்வையாளர்களும்  பின்நவீனவாதத்துடன் வந்த பெரும்பாலானவற்றைக் கண்டு சலித்துப்போயிருந்தனர்: அக்கறை அல்லது எளிதில் காயப்படும் உணர்வுகள் குறித்த வெட்க உணர்வு, தனிப்பட்ட அகநிலையை மறுப்பது போலவும் விழுமியங்களிலும் நம்பிக்கை அமைப்புகளிலும் உறுதிப்பாடு காட்டுவதில் அளவுக்கதிகமான எச்சரிக்கையான அணுகுமுறையும். 2010-இல், முந்தைய பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்த்த அறிஞர்கள் டிமோதியஸ் வெர்முலன், ராபின் வான் டென் அக்கர் ஆகியோர் கல்வித்துறையில் நிலவும் பின்நவீனவாத மாதிரிகளைப் பொறுத்தமட்டில் விவரிக்க முடியாத பண்பாட்டு வெளிப்பாடுகளைக் கண்டனர். ஓவியம், திரைப்படம், இலக்கியம், இசை, கட்டடக்கலை ஆகியவற்றில், அவர்கள் “நவீனவாத ஆர்வத்துக்கும் பின்நவீனவாத நகைச்சுவைக்கும் இடையில், நம்பிக்கைக்கும் சோகத்திற்கும் இடையில், அனுபவமற்ற எளிமைக்கும் அறிவுக்கும் இடையில், பரிவுக்கும் பற்றின்மைக்கும் இடையில், ஒற்றுமைக்கும் பன்மைக்கும் இடையில், முழுமைக்கும் துண்டுபடுத்தலுக்கும் இடையில், தூய்மைக்கும் தெளிவின்மைக்கும் இடையில் அலைபாயும்” உணர்திறனை ஏற்படுத்தும் படைப்புகளைக் கண்டனர். *ஜர்னல் ஆஃப் எஸ்தெடிக்ஸ் & கல்ச்சர்* (Journal of Aesthetics & Culture)-இல் எழுதிய அவர்களது கட்டுரையில் இந்த உணர்திறனுக்கு மீநவீனவாதம் (metamodernism) என்று பெயரிட்டனர். மற்றவர்கள் இந்தச் சொல்லை முன்னதாகப் பயன்படுத்தியிருந்தாலும், இதுதான் முதல் முறையாகக் கவனத்தைப் பெற்று, முதலில் கல்வித்துறையிலும் பின்னர் அதற்கு அப்பாலும் ஓர் உரையாடலைத் தூண்டியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும், கலை இதழியலாளர்களும் சமகாலப் பண்பாட்டின் பல அரங்குகளில் மாறிவரும் அழகியலுக்கு விளக்கமளிக்க வெர்முலன், வான் டென் அக்கர் ஆகியோரின் மீநவீனவாதக் கருத்தாக்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

மீநவீனவாதப் பண்பாட்டுக் கலைப்பொருள்களுக்கான சில எடுத்துக்காட்டுகள்: தொலைக்காட்சியில், ‘பஃபி தி வாம்பயர் ஸ்லேயர்’ (Buffy the Vampire Slayer), ‘கம்யூனிட்டி’ (Community), ‘ஃப்ளீபேக்’ (Fleabag), ‘அட்லாண்டா’ (Atlanta) ஆகியவை; திரைப்படத்தில், மிராண்டா ஜூலையின் ‘மீ அண்ட் யூ அண்ட் எவ்ரிஒன் வி நோ’ (Me and You and Everyone We Know), வெஸ் ஆண்டர்சனின் படைப்புகள் அனைத்தும், மிகச் சமீபத்தில், கிரேட்டா கெர்விக்கின் ‘பார்பி’ (Barbie) ஆகியவை; இலக்கியப் புனைகதைகளில், டேவ் எக்கர்ஸின் ‘எ ஹார்ட் பிரேக்கிங் வொர்க் ஆஃப் ஸ்டேகரிங் ஜீனியஸ்’ (A Heartbreaking Work of Staggering Genius) , ஜேடி ஸ்மித்தின் நிறையப் படைப்புகள், ஜெனிஃபர் ஏகனின் நிறையப் படைப்புகள் ஆகியவை; பொது இசையில், எலியட் ஸ்மித், சைல்டிஷ் காம்பினோ, பில்லி ஈலிஷ் போன்ற கலைஞர்கள்.  

எனக்கு, இவை அனைத்திற்கும் பொதுவாக இருப்பதாகப் படுவது என்னவென்றால், இவை அனைத்தும் அகநிலை என்பது முக்கியமானது என்ற கருத்தை வலுப்படுத்துகின்றன. பொதுவாக எந்த வகையான அறிவுசார் வாதத்தின் மூலமாகவும் அல்லாமல், மாறாக இணையான சிக்கலான உணர்வைத் தூண்டுவதன் மூலம் அதைச் செய்கின்றன: விளையாட்டுத்தனமான முரண்பாட்டைப் பின்னல் அல்லது மனிதனாக இருப்பதன் நுணுக்கங்களில் உள்ளவற்றைக் கூச்சமற்ற  மகிழ்ச்சியுடன் பரிசோதனை செய்தல் மூலம்.

*

நவீனவாதம், புறநிலை, உலகளாவிய உண்மைகளைப் பின்தொடர்வதற்கான தேடலுடன் மனிதகுலத்தை முன்னோக்கிச் செலுத்துவதில் மூழ்கியிருந்தது, பின்நவீனவாதம், நவீனவாதத்தில் இல்லாதவற்றுக்குக் கவனத்தை ஈர்ப்பதில் மூழ்கியிருந்தது: சூழமைவு (context), உறவு (relationship) ஆகியவை பற்றிய விழிப்புணர்வு.

*

நவீனவாதம், புறநிலை, உலகளாவிய உண்மைகளைப் பின்தொடர்வதற்கான தேடலுடன் மனிதகுலத்தை முன்னோக்கி நகர்த்துவதில் ஆர்வமாக இருந்தது என்றும், பின்நவீனவாதம், நவீனவாதத்தில் இல்லாதவற்றுக்குக் கவனத்தை ஈர்ப்பதில் ஆர்வமாக இருந்தது என்றும் கூறலாம்: சூழமைவு (context), உறவு (relationship) ஆகியவை பற்றிய விழிப்புணர்வு. எனவே, மீநவீனவாதத்தின் கவனம்,  பின்நவீனவாதத்தின் சார்பியல்வாதம், நவீனவாதத்தின் குறைப்புவாதம் ஆகியவற்றின் பொருள்-தாழ்த்தும் “பக்க விளைவுகளுக்குப்” பிறகு, இந்த அகநிலை அல்லது உணரப்படும் அனுபவத்திற்கான இடத்தை மீட்டெடுப்பதில் உள்ளது. கலைகளிலும் பொதுப் பண்பாட்டிலும் இருந்து பெறப்பட்ட மீநவீனவாத உணர்திறனின் எடுத்துக்காட்டுகளின் பட்டியல் நான் இணைந்து தொகுக்கும் வாட் இஸ் மெட்டாமாடர்ன்? (What is Metamodern?) என்ற இந்த வலைத்தளத்தில் கிடைக்கிறது.

சிலர் கேட்கலாம்: பின்நவீனவாதத்தின் குறைபாடுகளுக்கு ஒரு புதிய -வாதத்தைக் கண்டுபிடித்துப் பதிலளிக்க வேண்டியது ஏன்? வெறுமனே ஏன் நவீனவாதத்திற்குத் திரும்பக்கூடாது? சமூகம் ஒட்டுமொத்தமாகச் செய்வதற்கு தனிப்பட்ட எவரும் “பொறுப்பல்ல” என்பதைச் சுட்டிக்காட்டுவது இந்தக் கேள்விக்கு விடை அளிப்பதற்கான ஒரு வழி.  நவீனவாதத்திற்கும் பின்நவீனவாதத்திற்கும் இடையில் ஒரு புதிய வழியில் செலுத்தும் ஒன்றிற்குச் செல்வதற்குப் பதிலாக, நேரடியாக நவீனவாதக் கதைகளுக்கும் அழகியலுக்கும் திரும்புவது சமூகத்திற்குச் சிறந்த யோசனையாக இருந்திருக்குமா? இருக்கலாம். ஆனால் சமூகம் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. பின்நவீனவாதம் பற்றிய புலமைத்துவம் போலவே, மீநவீனவாதப் புலமைத்துவமும் பண்பாடு பற்றிய கவனிப்பு, அறிவிப்பு, கோட்பாடுகளை உருவாக்குதல் ஆகியவற்றில்தாம் கவனம் செலுத்துகிறது. பரிந்துரைகள் வழங்குவதில் அன்று.

ஆனால் அந்த விடை ஒருவேளை இந்தக் கேள்வியைக்  கேட்கலாம்: கலைஞர்களும் பார்வையாளர்களும் பின்நவீனவாதத்தில் இருந்து நகர்ந்து நேரடியாக நவீனவாதத்திற்குத் திரும்பாமல் இருப்பதற்கு என்ன காரணம்? அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள்? சரிதான், மீநவீனவாதம் தோன்றும் வகையில் பின்நவீனவாதத்துக்கு ஒரு பாதைத் திருத்தம் தேவைப்பட்டது போல, பின்நவீனவாதம் தோன்றியதே நவீனவாதத்தின் குறைபாடுகளால்தாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஒருபோதும் நடக்கக்கூடாத ஒரு தவறான கண்ணோட்டம்/உலகக் கண்ணோட்டமாகக் கருதப்படுவதற்குப் பதிலாக, பின்நவீனவாதம் நவீனவாதத்தின் அதிகப்பிரசங்கித்தனத்துக்கும் குருட்டுப் புள்ளிகளுக்கும் தேவையான மறுமொழியாகவே தோன்றுகிறது. அதற்கே உரிய குறைபாடுகளுடன் கூடிய ஒரு மறுமொழி; அதனால்தான் மீநவீனவாதம்.

இங்கே நியாயமாகவே இன்னொரு கேள்வியை எவரேனும் கேட்கலாம்: மீநவீனவாதம் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் பின்நவீனவாதத்தின் அதிகப்படியான செயல்களுக்கு எதிர்வினையாகத் தோன்றியது என்றால், 2023-இலும் மீநவீனவாதம் இன்னும் தொடர்புடையதா? பின்நவீனவாதம் ஒரு கடந்த காலத்தின் பொருளாக இருக்கும் போது, அதற்கு இன்னும் ஏன் ஒரு மறுமொழி தேவைப்படுகிறது? இதற்கும், ஓர் இரண்டு பகுதிப் பதில் இருக்கிறது. 1) அதற்கு முந்தைய நவீனவாதத்தைப் போலவே, பின்நவீனவாதமும் முழுமையாக மறைந்துவிடவில்லை. ஓர் அழகியல் – சிந்தனை முறையாக, அது இன்னும் நாம் சுவாசிக்கும் “காற்றில்” உள்ளது, அது இன்னும் நமது கலையிலும் பொதுப் பண்பாட்டிலும் வெளிப்படுகிறது. எனவே நாம் பண்பாடு முழுவதும் அதற்கான மீநவீனவாத மறுமொழியைத் தொடர்ந்து கவனிக்க வாய்ப்பு உள்ளது. 2) எனவே, மேலும் சுவாரசியமான வகையில் எனலாம், கடந்த 25 ஆண்டுகளில், நாம் வாழும் உலகம், முன்னர் பெரும்பாலும் கலையில் மட்டுமே இருந்த உணர்வுகளை – நமது அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் வழிகளில் – மேலும் மேலும் உள்ளடக்கியுள்ளது. இணையத்தின் கலிடோஸ்கோப் வில்லைகள் மூலம் மெய்மை உடைக்கப்படும் உலகில்; போட்டி போட்டுக்கொண்டு வரும் எளிதில் திரிக்கப்படும் “உண்மைகள்”; தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சி (அவற்றில் செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய வெடிப்பும் அடங்கும்), வெறுமனே ஒதுக்கித் தள்ளிவிட முடியாத ஒரு மிகை மெய்மை (hyper reality)-யில் வாழும் மனிதர்களாக இருப்பதில் உள்ள உள்ளார்ந்த மர்மங்கள், குழப்பங்கள், விசித்திரங்களை ஏற்றுக்கொள்ள வழி காட்டும் திரைப்படங்கள், பாடல்கள், எண்ணற்ற பண்பாட்டு வடிவங்களுக்கான தேவை இப்போது இன்னும் அதிகமாக இருக்கலாம்.

2022-இல் பல விருதுகளை வென்ற திரைப்படமான ‘எவ்ரிதிங், எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything, Everywhere All at Once) மீநவீனவாதத் திரைப்படம் என்பதற்கான ஒரு நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டு. மனதை வளைக்கும் பல்லண்டம் (multiverse) பற்றிய (இது சமகால வாழ்க்கை மெய்மையின் உடைந்த தன்மைக்கான உருவகம்) ஆய்வுகளைக் கொண்ட இப்படம் இறுதியில் அன்பும் குடும்ப உறவுகளும் முக்கியமானவை என முடிவுக்கு வருகிறது. சமீபத்திய ‘ஸ்பைடர்வெர்ஸ்’ (Spiderverse) படங்களும் இதே போன்ற களத்தை உள்ளடக்கியன. பில்லி ஈலிஷின் இசையில் பலவீனத்தன்மையையும் குழந்தை போன்ற உற்சாகத்தையும் தியாகம் செய்யாத, தொழில்நுட்பத்தின் கடுமையான, பெரும்பாலும் வன்மையான அணுகுமுறையை உள்ளடக்கிய ஒரு புதுப்பிக்கப்பட்ட மீநவீனவாத அதிர்வு உள்ளது. மீநவீனவாத அழகியல் மிகை-உண்மை அதிர்வுகளுடன் பின்னிப்பிணைந்ததற்கான கூடுதல் எடுத்துக்காட்டுகளை நாம் தொடர்ந்து பார்ப்போம் என்று எண்ணுகிறேன், அதே நேரத்தில் வெஸ் ஆண்டர்சன், வில்கோ இசைக்குழு போன்ற செவ்வியல் மீநவீனவாதக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் முந்தைய வெளியீட்டோடு அழகியல் ரீதியாக தொடர்ச்சியான படைப்புகளைத் தொடர்ந்து உருவாக்குகிறார்கள்.

மீநவீனவாதம் விரிவடைவதற்கான மற்றொரு திசையை நான் காண்கின்றேன், அது மெய்யியல் நங்கூரப் புள்ளிகளை வளர்ப்பது. இதுவரை, மீநவீனவாதம் முதன்மையாக அழகியல், பண்பாட்டு வடிவங்களிலும், அந்த வடிவங்களைப் பற்றிய கோட்பாடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்ஸ், நீட்சே, ஃபிராய்ட், ஐன்ஸ்டீன் போன்ற சிந்தனையாளர்களாலும், பின்நவீனவாதத்தின் முன்னணி மெய்யியலாளர்களான (எடுத்துக்காட்டாக) ஃபூக்கோ, டெர்ரிடா, லியோடார்ட், பாட்ரிலார்ட், டெலூஸ் ஆகியோராலும் நவீனவாதம் தூண்டப்பட்டது போல, மீநவீனவாதம் மெய்யியல் நோக்கில் வளரத் தொடங்கியுள்ளது. 2000-களில் தோன்றிய பொருள் சார்ந்த இருப்பியல் (Object-Oriented Ontology) (OOO) அத்தகைய ஒரு வேட்பாளர், இதன் முன்னோடிப் பிரதிநிதிகள் கிரஹாம் ஹார்மன், டிமோதி மோர்டன் ஆகியோர். இந்த இருப்பியல் அணுகுமுறை மனிதர்களை மையமாகக் கொண்டில்லாமல், மாறாக பொருள்களை மையமாகக் கொண்டுள்ளது, அதாவது, இப்பொருள்களைக் கூறுகளாகச் “சிறுமைப்படுத்தும்” அணுகுமுறையையும் (நவீனவாதம்), அவற்றைச் சூழமைவுகள், தாக்கங்கள் ஆகியவற்றின் விளைபொருளாகப் “பெருமைப்படுத்தும்” விளக்கங்களையும் (பின்நவீனவாதம்) எதிர்ப்பவையாக இந்த அணுகுமுறை வரையறுக்கிறது. மனிதர்களைவிடப் பொருள்களின் மீது கவனம் செலுத்துவது, மீநவீனவாதத்தின் தனிப்பட்ட அகநிலை மீதான முக்கியத்துவத்திற்கு எதிரானது என்று ஒருவர் நினைக்கலாம் என்றாலும், அதை முகமையின் இருப்பிடத்தை மேலும் சாத்தியமான முகவர்களாக நீட்டிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன் .

*

நவீனவாதத்திற்கும் பின்நவீனவாதத்திற்கும் இடையிலான விவாதங்களைத் தாண்டி, “பணிவான அறிவு” என்று அவர் அழைக்கும் ஒன்றை அடைவதற்காக, புலமைத்துவத்துக்கும் அறிவுருவாக்கலுக்கும் ஒரு புதிய அணுகுமுறையை முன்மொழிவதே ஸ்டார்மின் திட்டமாகும்.

*

வரும் ஆண்டுகளில், OOO-வையும் தற்போதுள்ள 21-ஆம் நூற்றாண்டின் பிற மெய்யியல் இயக்கங்களையும் கூட மீநவீனவாத முன்மாதிரிகளாக ஆராயும் முயற்சிகளைக் காணலாம் என்று நம்புகிறேன். இது அவற்றைத் தோற்றுவித்த மெய்யியலாளர்களின் பணியாகவே இருக்க வேண்டிய தேவையில்லை, மாறாக இதுபோன்ற மெய்யியல் முன்னேற்றங்களை நிலைநிறுத்துவதற்காக மீநவீனவாதத்தின் வில்லையைப் பயன்படுத்தும் மற்றவர்களின் முயற்சியாக இருக்கலாம். இவை அனைத்துக்கும் மேலாக, தன்னைத் தானே மீநவீனவாதம் என்று வெளிப்படையாக அழைக்கும் ஒரு வளர்ச்சி மெய்யியலில் ஏற்பட்டுள்ளது. 2021-இல், ஜேசன் ஆனந்தா ஜோசப்சன் ஸ்டார்ம் தனது ‘மீநவீனவாதம்: கோட்பாட்டின் எதிர்காலம்’ (Metamodernism: The Future of Theory) என்ற நூலை வெளியிட்டார். நவீனவாதத்துக்கும் பின்நவீனவாதத்துக்கும் இடையிலான விவாதங்களைத் தாண்டி, “பணிவான அறிவு” என்று அவர் அழைக்கும் ஒன்றை அடைவதற்காக, புலமைத்துவத்துக்கும் அறிவுருவாக்கலுக்கும் ஒரு புதிய அணுகுமுறையை முன்மொழிவதே ஸ்டார்மின் திட்டமாகும்.

அதில் ஒருவர் தோராயமாக – ஆனால் நம்பகத்தன்மையுடன் – வரையப்பட்ட வகைகளின் அடிப்படையில் வலியுறுத்தல்களைச் செய்ய முடியும். தனது முன்மொழிவுகள் மானுடவியலிலும் சமூக அறிவியலிலும் புலமைத்துவத்தைப் பரவலாகப் பாதிக்கும் என்பது ஸ்டார்மின் நம்பிக்கை.

பொதுப் பண்பாட்டில் மீநவீனவாதம் பற்றிய ஒரு வழிகாட்டுப் பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட எனது வரவிருக்கும் நூலில், முன்மாதிரிகளின் நெருக்கமான வாசிப்புகளைக் கொண்டு, இந்நாட்களில் மக்கள் அடிக்கடிச் சொல்லும் கதைகளைப் பற்றிய ஒரு கதையைச் சொல்கிறேன். நவீனவாதத்தின் குறைப்பு, பின்நவீனச் சார்பியல், மிகை-நவீன முறிவு ஆகியவற்றின் முகத்தில் மனித அகநிலைக்கு முன்னுரிமை அளிக்கும் கதைகள். இந்தக் கதைகள் இன்னும் அதிகமாக வெளிவருவதையும், கல்வியாளர்கள், இதழியலாளர்கள் ஆகியோரின் படைப்புகளில் அவற்றைப் பற்றிய கூடுதலான கதைகள் வெளிப்படுவதையும் நாம் காண வாய்ப்புள்ளது. அதுதான் இப்போது நமக்குத் தேவை என்று தோன்றுகிறது.

Edited and compiled fromt the articles by Greg Dember

***

பாரதிராஜா – தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com

க. மோகனரங்கன் கவிதைகள்

2

1)

1) புன்கணீர்


முதன் முதலாக
முகம் பார்த்து
முழுதாய்
முப்பது வருடங்கள்
முடியப்போகிறது.
மூளை மடிப்புகளில்
ஒளித்து வைத்திருக்கும்
வடிவமதிலிருந்து
வதனம் உனது
எவ்வளவோ மாறியிருக்கலாம்;
இன்று
குரலென நினைவில்
எதிரொலிப்பதும்
எத்தனைக்கு
ஒத்துப்போகுமென
எனக்குத் தெரியாது.
எனினும்
எந்தவொரு சந்நிதானத்திலும்
எண்ணெய் இன்றி
அணையத் தவிக்கும்
விளக்கைப் பார்க்கும் போதெல்லாம்
நிறைவேறாத பிரார்த்தனை
நினைவில் மேலெழ,
கருவறைக்குள் உறையும்
இறையைப் பார்க்கவும் மறுத்து
முகத்தை திருப்பிக் கொள்வேன்.
அவ்வளவு ஒன்றும்
அதிகமில்லை;
எனது வேண்டுதல் மிகவும்
எளிமையானதுதான்.
என் நிலை
எதுவானாலும் குறையில்லை
எங்கோ தொலைவில்
கண் மறைவாக இருக்கும்
உன் பொருட்டு,
எல்லாமும் எப்போதும்
நலமென நம்பியிருக்கவே
நான் விரும்பினேன்.
உயிரை நனைக்கும்
அந்த ஈரச் சிரிப்பு
ஒருகாலுமுன் உதட்டிலிருந்து
உலராதிருக்க விழைந்தேன்.
அந் நிம்மதியையும் கூட
ஆகாதென்று ஊதியணைத்த
ஊழின் கருணையைக் கண்டு
திக்கித்து நிற்கிறேன்.
கதியின்றி
தம்மைத் தொழுபவர்களின்
நம்பிக்கையை
அடுத்திருந்து காப்பாற்றுவதால்
அல்ல, அவர்கள்
இடர்படும் வேளைகளிலெல்லாம்
இரக்கமின்றி
கைவிடுவதன் வழியாகவே
கடவுள் தன் இருப்பை
நிறுவிக்கொள்கிறார் போலும்.
வாழ்வின் அங்கதத்திற்கு
கண்ணில் நீர் வருமளவிற்கு
சிரிக்கத் தெரிந்தவர்கள்
வலிக்கு அழாதிருக்கப் பழகிக்கொள்கிறார்கள்.
தம் வருத்தங்களுக்கு
அர்த்தம் எதுவெனத் தேடி
சொற்களுக்குப் பின்னால்
அவர்கள் அலைகழிவதில்லை.

2) நம்பற்குரியது நம் நடிப்பு


இதற்கு முன்
இந்த மேடையில்
எத்தனையோ காலமாக
எண்ணிறந்த பேர்கள்
ஏற்று நடித்து வந்த
அவல நாடகம்தான்
அதே பாத்திரங்கள்
அட்சரம் பிசகாத வசனங்கள்
இப்போது நமது முறை
பார்வையாளராக அன்றி
பாத்திரமாக வேண்டும்
அவ்வளவுதான் வேறுபாடு
அவசரமாக
ஆடைகளை அணிகிறோம்
அசிரத்தையாக
அணிகளைப் பூணுகிறோம்
அலட்சியமாக
அடி எடுத்துவைத்து
அரங்கிற்குள் நுழைகிறோம்
திரை விலகத் தெரியும்
அரை இருளுக்கு
கண் பழகும்
கணப் பொழுதில்
மனம் மயங்குகிறது
வாழ்வு இதுவென.

***

க. மோகனரங்கன் கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசம்பட்டு என்ற கிராமத்தில் பிறந்தவர். நாமக்கல்லில் தொழில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றுகிறார். தமிழ்க் கவிஞர். கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கிவருபவர். தேவமகள் அறக்கட்டளை விருது மற்றும் கவிஞர் ஆத்மாநாம் விருது வென்றிருக்கிறார்.
மின்னஞ்சல்: mohankrangan@gmail.com

வடை கடை

0

அருண் பிரகாஷ் ராஜ்

1

திருமணத்திற்கு முன்பு நான் குறைந்தது பத்து கிலோவேனும் குறைக்க வேண்டும் என யாமினியின் அம்மா மிகவும் உறுதியாகக் கூறுவிட்டார். அவர்கள் கேட்டது அத்தனை அசாத்தியமான காரியமாக அப்போது எனக்குத் தோன்றவில்லை. வங்கிக் கணக்கு நிறைய சம்பாத்தியம் இல்லையென்றாலும், அவருடைய செல்ல மகள் விரும்பிவிட்டாள் என்பதற்காகவும், என்னுடைய அப்பா-அம்மாவின் குணத்திற்காகவும், யாமினியின் அம்மா திருமணத்திற்கு அனுமதி வழங்கினார். எங்களுடைய முதல் சந்திப்பில் இருந்தே எனது சற்றே பெருத்த தொந்தியை முறைத்துப் பார்த்த யாமினியின் அம்மா, அவரது கணவரின் மரணத்திற்கு காரணம் அதிகமாகிப் போன கொலஸ்ட்ராலும், சர்க்கரை நோயும்தான் என இரண்டாவது முறையாக அவர்கள் வீட்டிற்கு நான் சென்ற போது அறிவுரைக் கூறி நீண்ட வகுப்பெடுத்தார். முகூர்த்த தேதி குறித்ததுமே, எடையை நிச்சயமாக குறைக்க வேண்டும் என உத்தரவிட்டார் அவர். பதிலுக்கு நான் யாமினியிடம் திருச்சியில் இருக்கும் நல்ல உடற்பயிற்சி நிலையங்கள் பற்றிய விவரங்களைத் திரட்டித் தருமாறு கேட்டேன்.

காதலிப்பதற்கு முன்பு எழுபத்தைந்து கிலோ மட்டுமே இருந்த நான், யாமினியுடன் பழகத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தொண்ணூறு கிலோ தொட்டுவிட்டேன். ஆஸ்பத்திரிகளும், பள்ளிக்கூடங்களும் நிரம்பியிருக்கும் திருச்சி நகரத்தில், காதலிப்பவர்களுக்காக இருப்பது திரையரங்குகளும், உணவகங்களும் தான். சமீபத்தில் இங்கு பல பூங்காக்கள் திறக்கப்பட்டிருந்தாலும், அவை பெரும்பாலும் குடும்பமாக வாக்கிங் செல்வதற்குதான் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மாலை ஆறு மணிக்கு எங்களது அலுவலகப் பணி நிறைவடைந்ததும் தில்லை நகரில் இருக்கும் ஏதேனும் ஒரு உணவகத்தில் சந்திப்பதே வாடிக்கையாக இருந்தது. எனது எடையும் கூடி, தொப்பையும் லேசாக வெளியே தள்ளியது. ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, என்ன மந்திரமோ புரியவில்லை யாமினியின் எடையும், உடலமைப்பும் இரண்டாண்டுகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உறைந்துப் போய் இருந்தது.  

தினமும் ஏதேனும் நல்ல உணவகத்திற்குப் போய், வேண்டியதை ருசியாகத் தின்று பழகிய நாக்கிற்கு ஜிம் மாஸ்டர் பரிந்துரை செய்த டயட் அட்டவணையில் இருந்த உணவு வகைகள் கசத்தன. அலுவலகம் முடிந்தக் கையோடு, நேரே உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று ஒரு மணி நேரம் செலவிட்டப் பிறகுதான் நானும் யாமினியும் சந்தித்துக் கொண்டோம். ராமலிங்கா நகரில், அவளது வீட்டிற்கு அருகே இருக்கும் பூங்காவிற்கு கூட்டிச் செல்வாள். பூங்கா வாசலில் பானிப்பூரி, மிளகாய் பஜ்ஜி, பர்மா நூடுல்ஸ் முதலான தின்பண்டங்கள் விற்கும் கடைகள் கண், மூக்கு, நாக்கு என எனது ஐம்புலன்களில் மூன்றை லேசாக சுண்டி இழுக்கும். தன்னந்தனியே ஏழு பானிப்பூரிகளை விழுங்கிவிட்டு, எனக்கு புரதச்சத்து நிரம்பிய ஒரு பொட்டலம் சுண்டலோ, பட்டாணியோ இருபது ரூபாய்க்கு வாங்கித் தருவாள் யாமினி. அப்போதெல்லாம் அவள் மீது கோபம் பீறிட்டாலும், திருமணத்திற்கென அவளது அம்மா விதித்த கட்டளையை நினைத்து என்னை நானே சமாதனம் செய்துக் கொள்வேன்.

ஆனால், அவரது கட்டளை, யாமினியின் மீதான கோபத்தை அடக்கிக்கொள்வதற்கான ஆற்றல் கொண்டிருந்ததே தவிர, என்னுடைய நாக்கிற்கு கடிவாளமிடும் வல்லமையைப் பெற்றிருக்கவில்லை. நள்ளிரவில் திடீரெனத் தூக்கம் கெடும்போது, யாருக்கும் எந்த சத்தமும் கேட்காத வகையில், அலமாரியில் உள்ள சம்படத்தைத் திறந்து, கடலை மிட்டாயையும் ஒரு கை மிக்சரையும் அள்ளி வாயில் போட்டுக் கொண்டு மீண்டும் தூங்கிவிடுவேன். சரியாக அவற்றை மென்று விழுங்காததால், காலை எழுந்ததும் சில மிக்சர் துகள்கள், பல்லிடுக்கிலோ, நாக்கினடியிலோ ஒட்டிக்கொண்டிருக்கும். அலவலகத்திற்கு அம்மா இரண்டு சப்பாதிகளும் நிறைய காய்கறிகளும் சமைத்து டப்பியில் வைத்து அனுப்புவார். ஆனால், நண்பர்கள் ஆர்டர் செய்யும் பீட்சாக்களிலும், பர்கர்களிலும் பங்கு கேட்டுவிடுவேன். இவ்வாறு மற்ற சமயங்களில், கட்டுப்பாடின்றி எனது நாக்கு விருப்பப்பட்டதை சுவைத்தாலும், ‘ஜிம்முக்கு’ செல்லும் போது மட்டும் ஒழுக்க சீலனாக இருக்க முயற்சித்தேன். இத்தனைக்கும், சாஸ்திரி ரோட்டில் உள்ள எனது ஜிம் அமைந்திருக்கும் கட்டிடத்தில் கே.ஃப்.சி, ஹக்கீம் கல்யாண பிரியாணி உட்பட பல ருசிமிகு உணவுக் கடைகள் இருந்தன. ஜிம் கதவைத் திறக்கும் சமயத்தில் பொறித்த கேஃப்சி கோழியின் வாசம் நாசியை வருடும். குறைந்தது உடல் பயிற்சிக்காக சென்று திரும்பும் நேரத்திலேனும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதால் ஆசையை அடக்கிக் கொண்டேன்.

ஆனால், ஒரு மாதத்திற்குள் அந்த கட்டுப்பாடும் தகர்ந்துவிட்டது. ஒரு சனிக்கிழமை மாலை, ஜிம் வாசலில் – வாகனங்கள் நிப்பாட்டும் இடத்தில் – எனது ஸ்கூட்டியை நிறுத்த இடம் கிட்டவில்லை. ஜிம் இருந்த கட்டிடத்தில் உள்ள உணவு அங்காடிகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்ததால், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களீன் வண்டிகள்தான் வாகன நிறுத்தத்தை ஆக்கிரமித்திருக்க வேண்டும். அக்கட்டிடத்தின் செக்யூரிட்டி, சாலையின் எதிர்புறமாக விரியும் வீதியின் முனையில் ஸ்கூட்டியை நிறுத்தச் சொன்னார். அங்கிருந்த ஒரு டீக்கடையின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, சாலையை கடக்கக் காத்திருந்த சமயத்தில்தான், ஒரு பாட்டி தள்ளுவண்டியில் பல வகையான வடை, பஜ்ஜிக்களை நிரப்பி வைத்து விற்றுக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அருகில் சென்று, தற்போதுதான் சூடாக எண்ணையில் இருந்து எடுத்த பருப்பு வடையொன்றை வாயில் போட்டேன். நல்ல மொறு-மொறுப்பு. மறுநாளில் இருந்து, ஜிம் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தவற்கான இடம் இருந்தாலும், சாலையைக் கடந்து சென்று, அந்த தள்ளுவண்டி கடைக்கு பக்கத்தில்தான் வண்டியை நிப்பாட்டத் தொடங்கினேன். அந்த கடைக்காரப் பாட்டியிடம் இருந்து ஜிம்முக்கு போகும் போதும், வரும் போதும் ஒரு வடையை வாங்கி வாயில் போட்டுக் கொள்வது வழக்கமாகத் தொடங்கியது.

உடற்பயிற்சி செய்யத் தொடங்கிய மூன்றாவது மாதத்தின் இறுதியில் வெறும் இரண்டு கிலோ எடையை மட்டுமே குறைத்திருந்தேன். யாமினியின் அம்மா மிகவும் கவலைப்பட்டார். திருமணத்திற்கு இன்னும் நான்கு மாதங்களே இருந்தன. எனவே, கருவேப்பிலை பொடியை அவரே தயார் செய்துக் கொடுத்து, தினம் அதிகாலை சுடு நீரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் என்னை குடிக்கச் சொன்னார். சரியான உடற்பயிற்சி மேற்கொண்டும், மூன்று மாதங்களில் வெறும் இரண்டு கிலோ மட்டுமே குறைந்தது எனது ஜிம் மாஸ்டருக்கு சற்று வியப்பாக இருந்தது. எனக்கும் யாமினிக்கும், நான் தின்னும் தீனிக்கு எவ்வாறு இரண்டும் கிலோ குறைந்தது வியப்பை வழங்கியது.

2

நான் தினமும் தனது கடைக்கு வாடிக்கையாக வருவதைக் கவனித்த அந்த வடைக்காரப் பாட்டி என்னிடம் ஒரு நாள் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்.

“ஏம்பா, தம்பிக்கு எந்த ஏரியா?”

“வயலூர் ரோட்ல, குமரன் நகர் இருக்குதுல. அங்கதான் பாட்டி வீடு இருக்கு.”

“தினமும் இங்க வரீங்களேன்னு கேட்டேன்ப்பா. ஒன்னும் தப்பா எடுத்துக்காத”

“அய்யோ. அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி” என சொல்லிவிட்டு, சாப்பிட்ட வடைக்கான காசை நீட்டினேன். அதை வாங்கி வைத்துக்கொண்டப் பாட்டி, சில்லறை பாக்கி கொடுப்பதற்கு பதிலாக அடுத்த கேள்வியை தொடுத்தார்.

“தம்பிய பாத்தா நல்லா படிச்சவராட்டம் தெரியுத. என்ன வேல பாக்குறீங்க ?”

“நான் இன்ஜினியரா இருக்கேன் பாட்டி”

“சந்தோசம்யா, சந்தோசம்யா” என்றுக் கூறியவர், சில்லறையைத் தரவேயில்லை. எனக்கும் வாயைத் திறந்த பாக்கி காசை கேட்பதற்கு சற்றுக் கூச்சமாக இருந்தது. அப்படியே கிளம்பிவிட்டேன்.

மறுநாள், வழக்கத்திற்கு மாறாக, ஒரு வடைக்கு பதில், இரண்டு வடைகளை பேப்பரில் மடித்துக் கொடுத்தார் அந்த பாட்டி. நான் அதை திரும்பித் தர முயன்ற போது, “சும்மா சாப்புடியா. நீ கூடுதலா காசெல்லாம் தர வேண்டாம்” எனக் கூறினார். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக இப்படி சாப்பிடுகிறோமே என்ற குற்றவுணர்ச்சியும், மெலிந்த தேகத்துடனுள்ள அந்த பாட்டியின் மீது மெல்லிய பாசமும் ஒரு சேர எழுந்தது. வடையை விழுங்கிவிட்டு கிளம்பும் நேரத்தில், மீண்டும் என்னை அழைத்தார் அந்தப் பாட்டி.

“தம்பி. எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யுறியாப்பா?”

“சொல்லுங்க பாட்டி. என்ன வேணும் ?”

”பாட்டிக்கு பிரஷர், சுகர் இருக்குப்பா. எனக்கு டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை எல்லாம் வாசன் மெடிக்கல்லதான் கெடக்கும் தம்பி. பாட்டியால அவ்வளவு தூரம் நடந்துப் போக முடியாது. எனக்காக இந்த மாத்திரையெல்லாம் ஒரு மாசத்துக்கு வாங்கிட்டு வர முடியுமா?”

என கேட்டுவிட்டு, ஒரு சிறு நோட்டையும் முந்நூறு ருபாய் பணத்தையும் நீட்டினார். அந்த நோட்டில் அவர் சாப்பிட வேண்டிய மருந்துக்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. மறுப்பேதும் கூறாமல், அவற்றை பெற்றுக் கொண்டு வாசன் மருந்தகத்திற்குச் சென்றேன். அவர் கொடுத்ததைக் காட்டிலும், இருநூறு ருபாய் கூடுதலாகவே மாத்திரைகளுக்குப் பணம் செலவானது. எனினும், வடைக்காரப் பாட்டியிடம் அதைப் பற்றி எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக, மாத்திரைகளுடன், அவற்றுக்கான ரசீதையும் சேர்த்துதான் அவரிடம் கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு மறுநாளேனும் அப்பணத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கைதான். ஆனால், அதைப் பற்றி பாட்டி எதையுமே குறிப்பிடவில்லை. மாறாக, ஒரு வடைக்கு காசு கொடுத்தால், அவர் எனக்கு மூன்று வடைகளை பேப்பரில் மடித்துக் கொடுத்தார். நான் கொடுத்த இருநூறு ருபாயை இப்படியாக பாட்டித் திருப்பிக் கொடுக்கிறார் என நினைத்துக்கொண்டேன்.

சில தினங்கள் கழித்து மீண்டும் தனக்கு ஓர் உதவி செய்யுமாறு என்னை வேண்டினார் அந்த வடைக்காரப் பாட்டி. இம்முறை மாத்திரைகள் அல்ல, பாலில் கலந்துக் குடிப்பதற்கு ‘என்சியூர்’ (Ensure) எனும் சத்து மாவை வாங்கித் தர வேண்டினார். கடுமையான உடல் சோர்வைப் போக்குவதற்கு, டாக்டர் தினமும் காலையும் மாலையும் என்சியூர் சத்து மாவைப் பால் அல்லது சுடு நீரில் கலக்கிக் குடிக்கக் கூறியதாகக் சொன்னார். நான் அதை வாங்குவதற்கு பணம் கேட்டதும்,

“வடை வித்து சம்பாதிச்ச காசெல்லாம் மத்த மருந்து வாங்குறதுக்கும், சமச்சி சாப்பிடுறதுக்குமே சரியாப் போவுது. இந்த ஒரு வாட்டி பாட்டிக்கு நீங்களே வாங்கி தாங்களே தம்பி”

என்று அவர் கூறியதும், எனக்கு ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது. சரியென மெடிக்கலுக்கு சென்று அந்த சத்துமாவுப் பொடியின் விலையை விசாரித்தேன். அரைக் கிலோ பாக்கெட் ஆயிரத்தி ஐநூறு ரூபாயாம். ’கூகுல் பே’ செய்துவிடலாம் என்று செல்போனை திறந்து, வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என ஒரு முறை சோதித்தேன். அன்றாடச் செலவு, திருமணத்திற்கான சேமிப்பு – இவைப் போக வெறும் நான்காயிரம் ரூபாய்தான் எஞ்சியிருந்தது. அடுத்த மாதம் சம்பளம் வரும் வரை இதை வைத்துதான் ஓட்ட வேண்டும். சம்பளம் போட்டதும் இந்த சத்துமாவு பொடியை வடைக்காரப் பாட்டிக்கு வாங்கிக் கொடுத்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

அடுத்த சில நாட்களாக, அந்த வடைக்காரப் பாட்டியின் கடைக்கு அருகில் வண்டியை நிறுத்த எனக்கு மனமில்லை. ஜிம் வாசலிலேயே வண்டியை நிறுத்தினேன். அவர் கேட்டதை வாங்கித் தர இயலவில்லை என்று லேசான குற்ற உணர்வுதான் இதற்கு பிரதான காரணம். ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு, நான் ஜிம் முடித்துவிட்டு வண்டியை எடுக்கும் போது, எதேச்சையாக சாலையின் மறுபுறம் இருந்த பாட்டியின் தள்ளுவண்டிக் கடையை பார்த்தேன். அங்கு அமர்ந்திருந்த பாட்டி, என்னையே தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்ததையும் கவனித்தேன். திடீரென கைகளை அசைத்து என்னை கூப்பிட்டார். நானோ, அவரது அழைப்பைக் கவனிக்காததுப் போல ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன். யாமினியிடம் இதை சொல்லி வருத்தப்பட்ட போது, அவர் கேட்ட என்சியூர் பொடிக்கு பதிலாக வேறு ஏதேனும் விலை மலிவான சத்து மாவையோ, பழங்களையோ வாங்கித் தர உபதேசித்தாள். அவ்வாறே மறுநாள் தெருக்கடையில் ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிக் கொண்டு போய் பாட்டியிடம் நீட்டினேன்.

“சாரி பாட்டி. நீங்க கேட்ட என்சியூர் பொடி பாக்கெட்டு வெல ரொம்ப அதிகம். எனக்கு அத வாங்கி தரது கஷ்டம். அதுக்கு பதிலா பழம் வாங்கியிருக்கேன். சத்துக்கு இத சாப்புடுங்க.”

“சரிப்பா, சரிப்பா. ஒரு பேச்சுக்குதான் தம்பி அதெ வாங்கித் தர சொல்லி கேட்டேன். அதுக்கு சங்கடப்பட்டுட்டா இத்தென நாளு கடை பக்கம் வரமா இருந்தீங்க.” என்று சொல்லி பழத்தை வாங்கித் தனது கூடையில் வைத்துவிட்டு அன்பாக சிரித்தார். பிறகு அவரே உரையாடலைத் தொடர்ந்தார்.

“தம்பி வீட்ல யாராரு இருக்கா?”

“நானு, அம்மா, அப்பா, தம்பி, அப்புறம் பாட்டி. மொத்தம் ஐஞ்சு பேரு”

“இன்னும் கல்யாணம் ஆவலயா தம்பிக்கு?”

“பொண்ணெல்லாம் பாத்தாச்சு பாட்டி, இன்னும் ரெண்டு மாசத்துல கலியாணம்”

“வீட்டுல பாத்தாங்களா, இல்ல நீங்களே பொண்ணு பாத்துட்டீங்களா?”

“எல்லாம் வீட்ல பாத்த பொண்ணுதான் பாட்டி” என அவரிடம் என்னுடைய காதல் கதையை விவரமாக சொல்வதற்கு மனமில்லாது பொய்யுரைத்தேன்.

“ரொம்ப சந்தோசம். பாட்டிக்கு மறக்காம பத்திரிகை வச்சிடுங்க. அப்புறம் கண்டிப்பா எனக்கு கல்யாணத்துக்கு கட்ட நல்ல பொடவை ஒன்னும் வாங்கித் தரணும்”

எனக் கூறியவாறு, நிறைய வடைகளை அள்ளி பொட்டலம் கட்டி எனது கையில் திணித்தார். வீட்டில் உள்ள அனைவருக்கும் அவற்றைத் தருமாறு வலியுறுத்திய அப்பாட்டி, அவ்வடைகளுக்கு காசு எதையும் வாங்கவில்லை. சின்ன சந்தோசத்துடன் நான் ஜிம்முக்குள் நுழைந்தேன். அன்று மாலை பூங்காவில் அமர்ந்தப்படியே நானும் யாமினியும் அந்த பாட்டி கட்டித் தந்த வடைகளைத் தின்று தீர்த்தோம்.

3

அடுத்த ஓரிரு வாரங்கள், அந்த வடைக்கார பாட்டியின் மீது எனக்கு எரிச்சலும் வெறுப்பும்தான் அதிகம் தோன்றியது. போன் ரீசார்ஜ் செய்வது, வீட்டிற்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவது, மருந்து வாங்குவது என ஓயாமல், தினமும் ஏதேனும் வேலை சொல்லிக் கொண்டேயிருந்தார். சில நேரங்களில் அதற்காக பணத்தைக் கொடுத்துவிடுவார். பல சமயங்களில் நான் தான் அவருக்காக செலவு செய்ய வேண்டியிருந்தது. இதை, அவர் தரும் ருசியான வடைகளுக்காக செய்கிறேனா, அல்லது அவரின் மீதுள்ள அன்பு அல்லது பரிதாபத்தால் செய்கிறேனா என சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. எரிச்சல் பட்டாலும், வெறுப்புத் தோன்றினாலும் அவர் கூறும் வேலைகளை ஏதோ மகுடியின் இசைக்கு ஏற்றவாறு ஆடும் பாம்பைப் போல நிறைவேற்றிக் கொண்டிருந்தேன்.

அன்றொரு நாள் மாலை, தள்ளுவண்டியில் வடைகள் எதையும் காணவில்லை. பாட்டி மட்டும் தனது நாற்காலியில் அமர்ந்திருந்தார். என்னைக் கண்டதும்,

“பாட்டிக்கு ரொம்ப ஒடம்பு முடியல தம்பி. சீதா லட்சுமி டாக்டர்ட்ட போயி ஊசிப் போடனும். நடந்துப் போகவும் தெம்பில்ல. பஸ் ஏறி போவலாம்னா, ரொம்ப கூட்டமா இருக்குப்பா. பாட்டிய கூட்டிட்டுப் போறீங்களா?” என கேட்டார்.

அன்று ஜிம் முடித்துவிட்டு என்னை நேரே அவளது வீட்டிற்கு வர சொல்லியிருந்தாள் யாமினி. பம்பாயில் இருந்து உறவுக்காரர்கள் சிலர் திருச்சிக்கு வந்திருப்பதால், அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்ய வேண்டும் என திட்டமிட்டிருந்தாள். வடைக்காரப் பாட்டி மருத்துவமனைக்கு அழைத்துப் போகச் சொன்னதும், சமீப நாட்களாக அவர் மீது எனக்கிருந்த வெறுப்பு மேலும் அதிகரித்தது. எனினும், முகத்தை சுளித்தப்படி பாட்டியை வண்டியில் அமரச் செய்து, அவர் கூறிய டாக்டரிடம் கூட்டிச் சென்றேன். போனதும், ஊசிப் போட்டுவிட்டு திரும்பிவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அந்த கிளீனிக்கில் நல்ல கூட்டம். டோக்கன் வாங்கி, வரிசையில் காத்திருந்து, டாக்டரைப் பார்த்து ஊசிப் போட்டு முடிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. மருத்துவமனையில் காத்திருந்த பொழுதெல்லாம், இனி தவறியும் அந்த பாட்டியுடன் எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது, அவர் கூறும் எந்த வேலையையும் செய்யக் கூடாது என தீர்மானம் எடுத்தேன். எனினும், பாட்டி உறையூரில் இருக்கும் தன்னுடைய வீட்டில் அவரை இறக்கிவிடுமாறு கேட்டதும் என்னால் மறுக்க முடியவில்லை. யாமினியிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கின. அரை மணி நேரத்தில் அவளது வீட்டிற்கு வந்து சேர்வதாக சொல்லிவிட்டு, பாட்டியுடன் உறையூரை நோக்கிக் கிளம்பினேன்.

ஏதோ குடிசையிலோ, சிறு ஓட்டு வீட்டிலோதான் அந்த பாட்டி தங்கியிருப்பார் என நினைத்திருந்த எனக்கு பெரும் வியப்பு காத்திருந்தது. நான் அவரை இறக்கிவிட்டதும், அகலமான திண்ணையும், பெரும் கல் தூண்களையும், கொண்டிருந்த ஒரு பெரிய வீட்டின் கதவுகளைத் திறந்தார் வடைக்காரப் பாட்டி. என்னை உள்ளே வரும்படி அவர் அழைத்ததும், ஒரு ஆர்வத்தில் நானும் அவரைப் பின் தொடர்ந்தேன். ஊருக்கு நடுவே, இத்தனை விசாலமான வீட்டில் அவர் தங்கியிருப்பது மிக விநோதமாகத் தோன்றியது. ஆனால், வீட்டினுள்ளே பொருட்கள் ஏதும் அதிகமாக இல்லை. நிறைய அறைகள் இருந்தாலும், ஒரு சிறிய கட்டிலும், பழைய டிவி பெட்டியும் தான் வரவேற்பு அறையை அலங்கரித்திருந்தன. சமையலறையை எட்டிப்பார்த்தேன். ஒரு பழைய அடுப்பும், சில சமையல் பாத்திரங்களும் மட்டும்தான் இருந்தன. எனது ஆர்வத்தை அடக்க இயலாமல் கேட்டுவிட்டேன்.

“ஏன் பாட்டி, இந்த வீடு யாரொடது?”

“இதுல என்னப்பா சந்தேகம். என் வீடுதான்”

“இவ்வளவு பெரிய வீடு இருக்கும்போது, ஏன் வடை வித்திட்டு இருக்கீங்க?”

“தங்குறதுக்கு வீடு இருந்தா போதுமாயா? சாப்பாட்டுக்கும், உடுத்துறத்துக்கும் வழி பண்ணனும்ல. அதான் வடைக் கடை போட்டிருக்கேன்.”

“ஏன், வீட்டில வேற யாரும் இல்லையா? வீட்டுக்காரரு, பசங்க இப்படி யாரும் இல்லையா உங்களுக்கு?”

“வீட்டுக்காரரு இருபது வருசத்துக்கு முன்னாடியே போயி சேந்துட்டாரு. மொத்தம் மூணு பசங்க எனக்கு. எல்லாரையும் ஒத்த ஆள வளத்து, கொஞ்சம் படிக்க வச்சு, வேலையும் வாங்கி கொடுத்தேன். அப்போ எல்லாம், எனக்கு உறையூர்லயே இந்த வீட்டையும் சேத்து நாலு வீடு இருந்துச்சு. மத்ததெ வாடகைக்கு விட்டுட்டு, அந்த காசுலதான் வீட்டையும், பசங்களையும் கவனிச்சிட்டு இருந்தேன். இப்படி அம்மா கஷ்டப்பட்டு நம்மல வளத்தாங்களேன்னு கொஞ்சம் கூட யோசிக்காம, என்னைய ஒரு வார்த்தை கேட்காம, அவுங்களே ஏதோ பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அப்புறம், சொத்த பிரிச்சிக் கொடுன்னு தகராறு பண்ணி, என்னோட மத்த மூணு வீட்டையும் புடிங்கிட்டானுங்க. இப்போ நான் இங்க தனியாதான் இருக்கேன். என்ன ஏதுன்னு கேக்ககூட யாரும் வரமாட்டாங்க. நான் செத்ததும் இந்த வீட்டை பங்குப் போட்டுக்கதான் கழுகு மாதிரி காத்துக் கெடக்காங்க”

என்று வடைப் பாட்டி சொல்லி முடித்ததும், எனக்கு அவர் மீது மீண்டும் பரிதாபம் தோன்றியது. அவர் முன்பொரு நாள் கேட்டதுப் போல, கல்யாணப் பத்திரிகை தரும்போது, ஒரு சேலையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். டாகடரிடம் கூட்டி சென்றதற்கு நன்றி சொன்ன பாட்டி, தேநீர் போட்டுத் தருவதாக சொன்னார். நான் அவசரமாக புறப்பட வேண்டும் என்றதும் ஒரு செம்பு தண்ணீர் கொடுத்தார். அதை குடித்துவிட்டு, அவரிடம் இருந்து விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினேன். வெளியே, எனது ஸ்கூட்டியின் அருகே தடிமனாக ஒரு ஆள் நின்றுக் கொண்டிருந்தார்.  என்னை கண்டதும்,

”சார். அம்மா ஒடம்புக்கு என்னாச்சுனு டாக்டர் சொன்னங்க?”

“நீங்க யாருங்க ? ஏன் பாட்டிய பத்தி விசாரிக்குறீங்க?”

”அந்த வடைக்கார அம்மாவோட ரெண்டாவது மகன்தான் சார் நானு. கொஞ்ச நாள் அம்மா உங்ககிட்ட தினமும் பேசுறதயும், இன்னைக்கு அவுங்கள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதையும் கவனிச்சேன். அதான் கேட்டேன் சார்.”

“பாட்டிக்கு உடம்புல சத்து கம்மியா இருக்காம். மத்தப்படி ஒன்னும் பிரச்சனை இல்லையாம். ஆனா, பாட்டிதான் நீங்க யாரும் அவுங்கள கவனிக்குறது இல்லன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க. பாவங்க பாட்டி. மூணு பசங்க இருக்கீங்க. கொஞ்சம் கவனிக்கலாம்ல. இந்த வயசான காலத்தில தனியா இருக்குது.”

“அட ஏன் சார். அம்மாதான், நாங்க அவுங்ககிட்ட பேசக்கூடாது, வீட்டுக்கு உள்ளேயும் வரக்கூடாதுனு உறுதியா இருக்காங்க. நாங்களும் எவ்வளவோ, பேசிப் பாத்துட்டோம், கெஞ்சிப் பாத்துட்டோம். எங்கள அவுங்க ஏத்துக்குறதா இல்ல.”

“கலியாணத்துக்கு பிறகு நீங்க எல்லாரும் சொத்தை அவுங்க கிட்ட இருந்து பறிச்சாத புலம்புறாங்களே!”

“அது சார். எங்க மூணு பேருக்கும் லவ் மேரேஜ். எங்க அம்மாவுக்கு மருமகளோடு சுத்தமா ஒத்து வரல. எங்க வைஃப்புக்கு, அம்மா அதிகாரம் பண்ணுறதும், வேல சொல்லுறதும் சுத்தமா புடிக்கல. தினம் தினம் ஏதாவது ஒரு சண்டை வீட்ல வெடிக்கும். திடீர்னு இருக்கிற சொத்தை எல்லாம் குழுமாயில் அம்மன் கோவிலுக்கு எழுதி வைக்கப் போறேன் சொல்லி பீதியக் கிளப்பிட்டாங்க. அப்புறம் சொந்தக்காரங்கள வச்சி, பஞ்சாயத்துப் பண்ணி எங்களுக்கு வர வேண்டிய வீட்டையும் சொத்தையும் வாங்கினோம் சார். அதுக்கப்புறம், எங்களோடு சுத்தமா அம்மா பேசுறதே இல்ல.”

இவ்வாறு அவர் சொன்னதும், அந்த வடை கடைக்காரப் பாட்டியின் மகன்களின் பக்கமும் நியாயம் இருப்பதாகவேத் தோன்றியது. ஆனால், பாட்டியின் வார்த்தைகளையும் அப்படியே நிராகரிக்க முடியவில்லை. இருவர் கூறுவதிலும் கொஞ்சம் உண்மையும், கொஞ்சம் பொய்யும், நிறைய மிகைப்படுத்துதலும் இருப்பதாகவே மனதிற்குப்பட்டது. ஆனால், அதைக் குறித்து ஆழமாக யோசிக்கவும், விவாதிக்கவும் எனக்கு விருப்பமில்லை. யாமினி காத்துக் கொண்டிருப்பாள். பாட்டியின் பையனிடம் இருந்து விடைப்பெற்றபோது, ஐநூறு ருபாய் தாளொன்றை எனது சட்டைப் பையில் திணித்தார். பாட்டியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றதற்காக இதைத் தருகிறேன் என்றார். நான் வேண்டாமென மறுத்ததை அவர் கேட்கவில்லை. கலவையான உணர்வுகளுடன்தான் அங்கிருந்துப் புறப்பட்டேன்.

அன்றிரவு யாமினி எனக்கு அறிமுகப்படுத்திய பம்பாய் உறவினர் ஒரு சித்த வைத்தியர். நான்கு மாதங்களாக நான் உடற்பயிற்சி செய்தும் எடையை குறைக்க இயலாததற்கு காரணம் என்னுடைய உணவுப் பழக்கம்தான் எனும் ரகசியத்தை என்னை சந்தித்த பத்து நிமிடங்களில் கண்டுப்பிடித்துவிட்டார். நாவடக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கொஞ்ச நேரம் பாடம் நடத்திவிட்டு, ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் அபாயங்களைப் பற்றியும் விளக்கினார். பிறகு, யோகா செய்வதால் விளையும் நன்மைகள் குறித்து ஒரு சிறிய சொற்பொழிவை நிகழ்த்தினார். கடைசியாக, தான் இணையத்தில் தினம் காலையும் மாலையும் யோக வகுப்புகள் எடுப்பதாகவும், அவற்றில் கலந்துக்கொண்டு, உணவு பழக்கத்தை சரி செய்துக்கொண்டாலே எடையை சுலபாகக் குறைத்துவிடலாம் என்றார். அவர் கூறியது அனைத்தையும் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த யாமினியின் அம்மா, நான் ஜிம்முக்குப் போவதை நிறுத்திவிட்டு, அவர் நடத்தும் யோகா வகுப்பில் உடனடியாக இணையுமாறு கட்டளையிட்டார். நல்லபடியாக, என்னுடைய உணவுப் பழக்கத்தை அவர் விமர்சிக்கவில்லை என நினைத்து பெருமூச்சுவிட்டேன்.

ஜிம்முக்கு செல்வதை நிறுத்திவிட்டதால், வடை கடைக்காரப் பாட்டியை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு அதன் பிறகு கிடைக்கவில்லை. ஓரிரு முறை அந்தப் பக்கம் வண்டியில் போகும் போது, சற்று தொலைவில் இருந்துதான் அவரைப் பார்க்க முடிந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டிற்கு சென்று கல்யாணப் பத்திரிகை கொடுக்கத் தொடங்கிய சமயத்தில் மீண்டும் அந்த பாட்டியின் நினைவு வந்தது. தனக்கு கட்டாயும் பத்திரிகை வைக்க வேண்டும் எனவும், அப்போது ஒரு புடவை வாங்கித் தர வேண்டும் எனவும் அவர் முன்பொரு முறை கேட்டதும் நியாபகத்திற்கு வந்தது. ஆனால், திருமணச் செலவு ஏற்கெனவே உச்சம் தொட்டிருப்பதால், அந்த பாட்டிக்கு வெறும் பத்திரிக்கை மட்டும் வைத்தால் போதும் என்று நினைத்தேன்.

வழக்கமாக அவர் வடை சுட்டு விற்றுக் கொண்டிருக்கும் இடம் வெறிச்சோடி இருந்தது. அந்த பாட்டியையும் காணவில்லை, அவரது தள்ளுவண்டியும் அங்கு நிற்கவில்லை. பக்கத்தில் இருந்த டீக்கடையில் விசாரித்த போது, அந்த பாட்டி உடம்பு சரியில்லாமல் வீட்டில் படுத்திருக்கிறார் என்று கூறினார். மகன்களும், மருமகள்களும் அவரைப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார். எனக்கு, அவரது வீடு வரை சென்று பார்க்க நேரமில்லை. முடிப்பதற்கான திருமண வேலைகள் நிறையவே மிச்சம் இருந்தன.

4

தேனிலவிற்கு கோவா சென்று, திருச்சிக்கு திரும்பிய நானும் யாமினியும் எங்களது புதிய இயல்பு வாழ்க்கையைத் தொடங்கியிருந்த சமயம் அது. எடையைக் குறைக்க யோகா எனக்கு துளியும் துணைப்புரியவில்லை என உணர்ந்ததும், மீண்டும் என்னுடைய பழைய ஜிம்முக்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தேன். இம்முறை எத்தனை மாதங்கள் நான் தொடர்ந்து வரப் போகிறேன் எனும் தொனியில் ஜிம் மாஸ்டர் என்னை பார்த்தார்.

ஜிம்முக்கு வெளியே வந்த போது, பாட்டியின் தள்ளுவண்டிக் கடை வழக்கமான இடத்தில் நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். ஆனால், பாட்டிக்குப் பதிலாக வேறொரு நடத்தர வயதுப் பெண் அந்த வடைக்கடையில் அமர்ந்திருந்தார். விசாரிப்பதற்காக அருகில் சென்றபோதுதான், அந்த தள்ளுவண்டியில் பாட்டிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அந்த பாட்டியின் பெயர் ருக்மணி என்பதை அந்த போஸ்டரில் இருந்துதான் தெரிந்துக் கொண்டேன்.  சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு அவர் இறந்திருக்கிறார் என்று அதில் எழுதியிருந்தது. நானும் யாமினியும் கோவாவில் இருந்த சமயம் அது.

அன்றிரவும், அடுத்த சில நாட்களும் எனக்கு சரியான தூக்கம் இல்லை. ஏதோ குற்றம் செய்துவிட்டோம் என்ற உணர்வு மன அமைதியையும், தூக்கத்தையும் சேர்த்துக் கெடுத்தது. அடுத்த திங்கட்கிழமை காலை, வீட்டில் இருந்து நேரே அலுவலகம் செல்வதற்கு பதிலாக, சாரதாஸ் ஜவுளிக்கடைக்கு சென்றேன். நல்ல காட்டன் புடவையை வாங்கிக் கொண்டு உறையூரில் இருக்கும் ருக்மணிப் பாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டினேன். வாயிலைத் திறந்த பாட்டியின் இரண்டாவது மகன், என்னை உடனே அடையாளம் கண்டுக் கொண்டார்.

சில மணித்துளிகள் அவரிடம் விசாரித்துவிட்டு, சுவரில் மாட்டியிருந்த ருக்மணி பாட்டியின் புகைப்படத்திற்கு அருகில் சென்றேன். வாங்கி வந்திருந்த சேலையை ஒரு மாலையைப் போல மடித்து, அதை பாட்டியின் போட்டோவில் சாத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

***

அருண் பிரகாஷ் ராஜ் – வரலாற்று துறை ஆய்வு மாணவர், தில்லி அம்பேத்கார் பல்கலைகழகம். இவர் எழுதிய சிறுகதைகள் கணையாழி, அகநாழிகை இதழ்களிலும், வாசக சாலை இணையதளத்திலும் வெளியாகியுள்ளது. மயிலை சீனி வேங்கடசாமியின் சமணமும் தமிழும் எனும் நூலை நண்பருடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
மின்னஞ்சல் : arunprakashrajn@gmail.com