Home Blog Page 2

மறைப்பு

0

தொ. பத்தினாதன்

சென்னையில் பழமையான, ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டலில் 2001ல் பணிக்குச் சேர்ந்திருந்தேன். இதற்கு முன் இரண்டாண்டுகளுக்கு மேல் ஓட்லில் வேலை செய்த அனுபவம் இருந்தது. இது அந்தத்துறை சார்ந்த படிப்பினால் இல்லாமல் அனுபவத்தில் கிடைத்த வேலை. ஆரம்பத்தில் அப்படி இப்படி இழுபட்டாலும் சில மாதங்களில் வேலையில் சற்று ஆர்வமிருந்தது என்னவோ உண்மைதான். என் இயல்பிற்கு சற்று விலகியதாக இருந்தாலும் தின்பதற்கு சோறு வேண்டும் என்பதால்தான் இந்தத் துறைக்குள் வந்தேன். அது விருப்பத்தால் ஆனது இல்லை. 

அன்று எங்கள் பேங்குவட் பிரிவில் அதிகமான நிகழ்வுகள் இருக்கவில்லை. சில பணியாளர்கள் விடுமுறையில் இருந்தார்கள். ஆறாவது மாடியில் உள்ள ரீஜென்சி ஹாலில் நடந்த மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கான கான்பிரன்ஸ்க்குப் பொறுப்பாக நான் இருந்தேன். எண்ணிக்கையும் அதிகமில்லை, 20 முதல் 25 பேர்தான். சக பணியாளர் கிச்சா நீலகிரி ஹாலில் நடந்த சிறிய கெட்டுகெதர் பார்ட்டியில் இருந்தான். காலை ஏழு மணிக்குக்கு எனக்கு டூட்டி போடப்பட்டிருந்தது. டூட்டிக்கு போனதும் செக்கியூரிட்டி ஆபீஸில் சாவியை வாங்கி வந்து ஹாலைத் திறந்து லைட்டு போட்டுவிட்டு, முதல் வேலையாக இன்டர்காமில் ஹவுஸ்கீப்பிங்கை கூப்பிட்டு கிளீன் பண்ணச் சொன்னேன். இரவு பணியில் இருந்தவர்கள் அதைச் செய்திருக்க வேண்டும். ஏனோ விடுபட்டிருக்கிறது. அதே இன்டர்காமில் மெயின்டனன்ஸை அழைத்து ஏசி போடச் சொன்னேன். இதெல்லாம் அவர்கள் சொல்லாமலே செய்யும் வேலைதான். யு சேப்பில் கிளாஸ் வைக்கப்பட்டிருந்தது. ரீ கவுண்டரில் கப்பு சாசர் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சுகர் கியூப் இல்லை. பொபே கவுண்டரில் பியூல் இல்ல. எதுவெல்லாம் இல்லை என்று பார்த்துக் கொண்டிருந்தேன். மேலோட்டமான பார்வையிலயே என்னவெல்லாம் தேவை, செய்யவேண்டும் என்பது தெரிந்துவிடும் அளவுக்கு எனக்கு அனுபவம் ஏற்பட்டிருந்தது.

ஹவுஸ்கீப்பிங்கில் இருந்து ஒரு பொடியன் வேக்கம் கிளீனருடன் பதற்றமாக ஓடி வந்தான். பின்னாடி மகா பட்டுச் சேலையில் தளதளவென்று வந்தாள். அவளுக்கும் காலை டூட்டி என்பதால் பளிச்சென்று இருந்தாள். காலையியே அவளைப் பார்ப்பது இன்றைய பொழுது உட்சாகமாக அமையும் என்று எண்ணினான். 

“ஏன் இரவு டூட்டிக்காரர்கள் சுத்தம் செய்யவில்லை” என்று கேட்க நினைத்தது, ஹவுஸ்கீப்பிங் சூப்பர்வைசர் மகாவைப் பார்த்ததும் அடங்கிபோயிருந்தது. கமுக்கமாக சிரித்தேன். மகா மலையாளப் பெண். 

“ராத்திரி இருபத்தாறு ரூம் செக்கவுட் இருந்தது. ஆனதால கிளீன் செய்ய நேரம் கிட்டில்லா. செக்கின் வேற இருந்ததாக இரவு சிஃப்டு சூப்பர்வைசர் லாக் நோட்ல எழுதியிருக்கு…” 

என்று இரவு சுத்தம் செய்யாததற்கான காரணத்தை சீரியசாக சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் மலையாளம் கலந்த தமிழ் பேச்சு கொள்ளை அழகு. நான் அதை ரசித்துக் கொண்டிருந்தேனே தவிர அவள் சொன்ன விளக்கம் என் கவனத்திற்கு வரவில்லை. அவள் சொன்ன காரணங்களுக்கு பதிலும் சொல்லவில்லை. ஹாலுக்குள் சுத்தம் செய்யும் பொடியன் இருக்கிறான் என்பதும், நாங்கள் பணியில் இருக்கிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஹவுஸ்கீப்பிங் போய் கார்பெட்டுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தான். இது சிறிய ஹால் என்பதால் இதனைச் சுத்தம் செய்வதற்கு அதிக நேரமெடுக்காது. 

எல்சிடி புராஜக்டருடன் வந்த மெயின்டனன்ஸ் பொடியன் அதனை செட் பண்ண ஆரம்பித்தான். 

“சுரேஸ் முதல்ல ஏசிய போட்டுட்டு வந்து அத செட் பண்ணுங்க அப்பதான் கெஸ்ட் வர்றப்ப நல்ல கூலிங்கா இருக்கும். காலையிலயே அவன் வர்றப்ப ஏசி சரியா இல்லன்னா இன்னைக்கு பூரா அவன் மூஞ்சிய காமிப்பான்”. 

மகா விமானப் பணிப் பெண்கள் போல பட்டுச்சேலையில சுத்தி சுத்தி வந்தாள். எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் காலையில் உள்ள வேலைப் பரபரப்பு இருந்தது. கெஸ்ட் வர்றதுக்குள்ள எல்லாம் பெர்பக்டாக இருக்க வேண்டும். எனக்கு முதல்ல யு சேப்பில் தண்ணீர் வைக்க வேண்டும், ரீ கவுண்டரில் சுகர் கியூப், சுகர்பிரி வைக்க வேண்டும். அதற்குப் பிறகு பொபே கவுண்டரில் உள்ள பெண்டிங் வேலைகளைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் ஒன்பது மணிக்கு கெஸ்ட் வந்தப்பிறகு செய்ய முடியாது. மீட்டிங் ஆரம்பமானால் ஹாலிற்குள் எதுவும் செய்ய முடியாது. அது அவர்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும். உடனடியாக கீழ்த் தளத்தில் உள்ள எங்கட ஸ்டோர் ரூம் போய் விடுபட்ட மற்றும் தேவையான பொருட்களை எடுத்து வர வேண்டும். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. பேக் ஏரியாவில நிற்கிற ட்ராலியில் ஒரே தடவையில எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்திவிடலாம். எதையாவது மறந்து போனால்தான் பிரச்சனை. மகா ஹாலுக்குள் ரூம் ஸபிரே அடித்துக் கொண்டிருந்தாள். ஏசி போடப்பட்டிருந்தது. குளுகுளு என்று வந்த ஏசிக் காற்றுடன் ரூம்ஸ்பிரே வாசனையும் கலந்து வந்து கொண்டிருந்தது மகாவைப் போலவே. 

பேக் ஏரியா வந்து எங்களுக்கான சர்வீஸ் லிஃப்டுக்காக காத்திருந்தேன். காலை என்பதால் அது மேலும் கீழுமாக தாவிக் கொண்டிருநதது. லிஃப்ட் பட்டணை விடாமல் அழுத்திக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் கீழ்த்தளத்திலிருந்து லிஃப்ட் மேல் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் கிருத்திகா வந்தாள். திருச்சியில் உள்ள ஜென்னீஸ் கேட்ரிங் கல்லூரியில் படிக்கும் அவள் மூன்றுமாத பயிற்சிக்காக வந்திருக்கிறாள். சிரித்த முகத்துடன், 

“குட் மோணிங்”

 என்றாள். லிஃப்ட் கீழே போய்விடாமல் ஒரு கையால் கதவைப் பிடித்துக் கொண்டே, 


“கிருத்தி ஒனக்கு கிச்சா கூடத்தானே டூட்டி போட்டிருக்கு பின்ன எதுக்கு இங்க வந்திட்ட”

“உங்ககூட வேல பாக்கிறேன் என்று நா அவரிட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன்”. 

“அவன் என்ன சொன்னான்” 

“சரி ண்ணுட்டார்” 

“சரி நீ ஹாலுக்குள்ள பொபே கவுண்டர்ல இருக்கிற கிளாத் நாப்கின்ன மடிச்சு வை நா ஸ்டோர் போயிட்டு வாறன்”. அவள் ஹாலுக்குள் போனாள். நான் லிஃப்டில் கீழே இறங்கினேன்.


வைற் போடு மார்க்கர் எல்லாம் ரெடியாக இருந்தது. கெஸ்ட் வந்தார்கள். கேப்டன் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். கெஸ்ட்டிடம் எத்தனை மணிக்கு ரீ பிரேக், எப்போது லஞ்ச் என்பதைக் கேட்டார். 


“சுதாகர் சரியாக ஒன்பது மணிக்கு மீட்டிங் ஆரம்பமாகும். பத்தரைக்கு டேபிள்ல ரீ சர்வீஸ் பண்ண வேண்டும். ரீ பிறேக் இல்லை. லஞ்ச் ஒண்டரைக்கு ரெடியா இருந்தால போதும்”

என்று கேப்டன் சொல்லிட்டு போய்விட்டார். மீட்டிங் ஆரம்பமானதும் பேக் ஏரியாவில பேசும் சத்தம் உள்ள கேட்காத அளவில் தணிந்த குரலில் கிருத்திகாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். உள்ள டார்க்கெட் அச்சீவ் பண்ணாதவர்களைப் பார்த்து ஏரியா மேனேசர் ஆங்கிலத்தில் கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டுவது கேட்டுக் கொண்டே இருந்தது. 


லிஃப்ட் மேலே வந்துகொண்டிருந்தது. மேனேசர் வரலாம். செக்யூரிட்டி வரலாம். கேப்டன் வரலாம். அதனால் நாங்கள் பேசாமல் இருந்தோம். ஆனால் கிச்சா சாவகாசமாக மேல வந்தான். 


“அடே வாட்டர் ஜக்கெல்லாம் இங்க கொண்டு வந்து வச்சிருக்க”. 

“மெதுவா பேசு உள்ள மீட்டிங் நடக்குது. நா ரெண்டுதா கொண்டு வந்தேன் டைனஸ்ரி ஹால்ல பாரு”.

“அதுசரி கிருத்திகா உங்கூடத்தான் வேலை செய்வேன் என்று அடம்பிடிக்குது”. 

சொல்லிக்கொண்டே அவளைப்பார்த்து சிரித்தான். நான் கிருத்திகாவ பார்த்தேன். நீள்வட்டமான முகம். மாநிறத்தில் இருந்தாள். பயந்த பெண் மாதிரித் தெரியவில்லை. 

“சார் நேத்து அவருக்கூடத்தானே டூட்டி பார்த்தேன்…” அவள் சொல்லி முடிக்கும் முன் கிச்சா குறுக்கிட்டான் 

“அதனால” 

“நீ அந்தப் பொண்ண மெரட்டியிருப்ப அதனால இங்க ஓடி வந்திருக்கும்” கிருத்திகாவைக் காப்பாற்ற நான் குறுக்கிட்டேன். 

“என்னமோ பண்ணித் தொலைங்க”. உரையாடல் நீடிக்கவில்லை கெஸ்ட் கண்ணாடி டோர் வழியாகக் கூப்பிட்டான் நான் உள்ள போனேன். கிச்சா வந்த லிஃப்டிலயே இறங்கிவிட்டான்.


மதியம் லஞ்சு முடிஞ்சதும் கேப்டன் சொன்னார், 

“அவங்க இரவு காக்டைல் டின்னர் கேக்கிறாங்க. நீ டூட்டிய கண்டினியூ பண்ணு நாளைக்கு லீவு எடுத்துக்க”

“அட பாடையில போவாங்களே முன்னாடியே சொல்லித் தொலச்சிருக்கலாமே” 

உடனே வாயில் அப்படித்தான் வந்தது. ஏனெனில் எனக்கு மட்டுமல்ல மகாவுக்கும் அது ஏமாற்றமாக இருக்கும். ஆனால் கேப்டனிடம் சொல்லவில்லை. எங்களுக்கு இது புதுதில்லை. டூட்டிக்கு போற நேரம்தான் எங்களுடையது. டூட்டி முடிச்சு வெளியே வருவதை நாங்கள் முடிவு செய்ய முடியாது. இந்தப் பேங்குவட் பிரிவின் வேலையே அப்படித்தான். மறுக்கவா முடியும். ஓவர் டைம் வேலை செய்தால் அதற்கான விடுமுறை எடுக்கலாம்தான். கிச்சா அவனுடைய நிகழ்வு முடிந்ததும் மேலே டின்னருக்காக வந்தான். கிருத்திகா நான்கு மணிக்கு டூட்டி முடித்துவிட்டு போய்விட்டாள். எதிர்பாராத நிகழ்ச்சி என்பதால் கேப்டனும் இருந்தார். ஏசியில உக்கார வைத்து நாக்கைப் பிடுங்குகிற மாதிரி திட்டிட்டு, ஆட்டு இறைச்சி பிரியாணியும், கூடவே சாராயமும் கொடுத்து அனுப்பும் இந்த மாதிரி மருந்துக் கம்பனிகள். 


ஹாலின் பின் பகுதியில் டின்னருக்காக எல்லாம் தயார் செய்து வைத்திருந்தோம். ஆறு மணிக்கு மீட்டிங் முடிந்தது. ஏழு மணிக்கு லிக்கர் சர்வீஸ் பண்ண ஆரம்பித்தோம். எட்டு மணிக்கு கிச்சா கிச்சனில் இருந்து புஃட்டு பிக்கப் பண்ணி ரெடியாக வைத்திருந்தான்.

மேனேசருக்குப் பயத்தில் பட்டும் படாமலும் பெரும்பாலான பையகள் இரவு ஒன்பது மணிக்கே சாப்பிட்டு புறப்பட்டார்கள். பத்து மணிக்கு மருந்துக் கம்பனி மேனேசர் அங்கேயே ரூமில் தங்கியிருப்பதால் பில்லில் கை எழுத்துப் போட்டு ரூம் பில்லுடன் சேர்க்கச் சொல்லிட்டு போய்விட்டார். அவர் காலை பிளைட்டில் ஐதராபாத் போகவேண்டுமாம். டார்க்கட் அச்சீவ் பண்ணிய சீனியர் நான்கு பேரும் உட்கார்ந்துவிட்டார்கள். அதுவரை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தவர்கள் நாக்கில் சொட்டு சாராயம் பட்டதும் தமிழில் பேச ஆரம்பித்தார்கள். நாங்க எப்படா போய்த் தொலைவாங்க என்று காத்துக் கிடக்கிறோம். காலை ஏழு மணிக்கு பணிக்கு வந்ததில் இருந்து இதே முகங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஹாலுக்குள் நிண்டால் முகத்தில் லேசான புன்னகை போன்ற தோற்றம் இருக்கும். கொடுக்கப்பட்ட பயிற்சிகள் அப்படி. வெளிய வந்தால் முகம் கடுகடுன்னு இருக்கும். நல்ல போதையில் சலம்பிக்கொண்டு இருக்கிற இந்த நான்கு பேரைக் கிளப்புவது எப்படி. பில்லில் சைன் வாங்கினதும் கேப்டன் ஆபீஸில் போய் உட்கார்ந்துகொண்டார். கெஸ்ட் போனால்தான் அவரும் வீட்டுக்குப் போக முடியும். நானும் கிச்சாவும் உச்சபட்ச கடுப்பில் உள்ளுக்குள் புகைந்துகொண்டு நின்றோம். 


“எக்ஸ்கியூஸ் மீ எனக்கு ரூத் பிக் வேணு” என்று ஒருத்தன் ரூத்பிக் கேட்டான். எங்களுடைய கெட்ட நேரம், அதுவும் நிகழ்வு முடியும் நேரத்தில் ஆரம்பமானது. லஞ்சுக்கு மட்டும் கொண்டு வந்த ரூத்பிக் காலியாகியிருந்ததால், கிச்சா ஸ்டோருக்கு ஓடினான் ரூத் பிக் எடுக்க. இருவர் எழுந்துபோவதற்கு தயாரானார்கள். ஒருத்தன் அடுத்தவர்களை பேசவிடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். நல்ல போதையில் இருந்தார்கள். ரூத்பிக்கை மறந்து விடுவான் என்று நினைத்தேன். கிச்சா போன பின் இரண்டு தடவை கேட்டுவிட்டான். நிகழ்வு ஆறாவது மாடியில் நடக்கிறது. கிச்சா கீழ் தளத்துக்கு சர்வீஸ் லிஃப்டில் போய் எங்கட ஸடோர் ரூமில் இருந்து எடுத்து வரவேண்டும். ரூத்பிக் இல்லையென்றால் உயிர் போய்விடும் போலத் திரும்பத் திரும்ப கேட்கிறான். நானும்,

“கெட்டிங் சார், கெட்டிங் சார்” . என்கிறேன்.


எனக்கு வதக்வதக் என்றிருந்தது. ரூத்பிக்தானே காலையிலயே ட்ராலியில ஒரு டப்பாவைத் தூக்கிப்போட்டுட்டு வந்திருக்கலாம். லஞ்சு மட்டும்தானே என்று நினைத்து கொண்டு வந்த ரூத் பிக் முடிந்துவிட்டது. அதனால் பல்லுக்கிடையில சிக்கிய இறைச்சி மாதிரி ஆகியிருக்கிறது எங்கள் நிலைமை. தொடர்ந்து பிஸ்னஸ் தரும் பெரிய கம்பனி அது. ஏதாவது சிறிய கம்ப்ளைண்டும் பெரிய இச்யூவாக மாறிவிடும். இது இங்கு குடித்துவிட்டு இருக்கும் சீனியர்களுக்கும் தெரியும். கிச்சா எப்போது வந்து தொலைவான் என்றிருக்க, 


“பிளடி பக்கர் எங்கடா ரூத்பிக்” 


என்று கத்த ஆரம்பித்தான். அவனுடைய மேனேசர்மேல் உள்ள கடுப்பில் என்னைத் திட்டுகிறானோ தெரியவில்லை. அவனுக்கு சார்பாக மற்றவனும் சரளமான கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பித்தான். மற்ற இருவர் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச்செல்ல முயன்றார்கள். நான் சிலையாக அசையாமல், பேசாமல் நின்றேன். முகத்தில் வெளிப்படையாக எந்த மாற்றங்களும் இல்லை. பிக்கோஸ் “கெஸ்ட் இஸ் ஆல்வைஸ் ரைட்” என்று எங்கள் பேக் ஏரியாவில் ஒரு பிறேம் பண்ணிய படம் ஆணி அடித்து மாட்டப்பட்டிருந்தது. 

அவனே என் கால மிதிச்சுட்டு என்னைய திட்டினாலும் அதே கெஸ்ட் இஸ் ஆல்வைஸ் ரைட்டுத்தான். அதுதான் விருந்தோம்பல் துறையின் தாரக மந்திரம்.

***

மாதம் ஒரு ரெயினிங் எங்களுக்கு நடக்கும். வெளிய இருந்து ரெயினரை அழைத்து ரூமில் தங்க வைத்து எங்களுக்கு வகுப்பெடுப்பார்கள். பாடி லாங்குவேஜ், குவாலிட்டி புஃட், குவாலிட்டி சர்வீஸ், ரெலிபோன் மேனஸ் போன்ற ஏதாவது ஒரு வகுப்பு இருக்கும். “ஓட்டலோட ஸ்டாண்டட் கீழ் நிலைப் பணியாளர்களிடமும் இருக்கணும்” என்று எங்கட பிரிவு மேனேசர் அடிக்கடி சொல்லுவார். நாங்கள்தானே வாடிக்கையாளர்களிடம் நேரடியான தொடர்பில் இருப்பவர்கள். அதுவும் டூட்டி முடிந்த பிறகுதான் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ நடக்கும். எங்களுக்கு கடுப்படிக்கிற காரியம் இது. ரெயினர் வாங்கிற காசுக்கு பிரமாதமாக ஆங்கிலத்தில் வகுப்பெடுப்பார். புரிகிறதோ இல்லையோ, புரிந்த மாதிரியான பாவனையில் கூட்டத்தோடு உட்கார்ந்திருப்பேன். நான் அனுபவத்தில் வேலைக்குச் சேர்ந்தவன் என்பதால் எவ்வளவு வேலை செய் என்றாலும் செய்வோம். இதுபோல படி, எழுது என்றால் தொடை நடுங்கும். வாய் திறக்காது. ரெயினர் எழுப்பி கேள்வி வேறு கேட்பான். இது ஒரு அவஸ்த்தை. வகுப்பிற்கு போகாமல் தவிர்க்கவும் முடியாது. 


குவாலிட்டி சர்வீஸ் ரெயினிங் முடித்து அவசரமாக வீட்டுக்கு புறப்பட்ட நேரத்தில் எச்சார் ஆபீசர் கூப்பிட்டு கவரைக் கையில் கொடுத்தார். நான் இங்கு பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் எனது ரெயினிங் பீரியட்டை மீண்டும் ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்வதாக கவரில் இருந்த கடிதத்தில் நாகரீகமாக, அலங்காரமான வார்தைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இரவு தூக்கமே வரவில்லை. என்னால் அதனை ஏற்கவே முடியவில்லை. எனக்கு பிறகு வந்தவர்கள் பணி நிரந்தரம் ஆக்கப்பட்டிருந்தார்கள். வேலைண்ணா சுதாகர கூப்பிடு என்று சொல்லும் மேனேசரா இப்படி செய்தார்? உண்மையில் அவர் நல்ல மனிதர்தான். வேலை செய்பவர்கள் யார். வேலை செய்யாதவர்கள் யார் என்றும் அவருக்குத் தெரியும். கீழ் நிலைப் பணியாளர்களை சமநிலையாக கையாள்வதில் கைதேர்ந்தவர்தான். எப்படி இவர் எனது அப்பிரிசியல் லெட்டர ஹெச் ஆருக்கு அனுப்பினார். வேலையில் ஆர்வமில்லாமல் இருந்தது. வேலைக்கு வரவே பிடிக்கவில்லை. மனநிலை சோர்ந்திருந்தது. தாங்க முடியாத வருத்நம் மேலிட்டது. மற்றவர்கள் மாதிரி வேற ஓட்டலில் வேலைக்குப் என்னால் போக முடியாது என்பது தனிக் கதை.. சமநிலை தவறியிருந்தேன். 


மகா சொன்னாள் 

“நீ வேற ஓட்டல்ல வேலைக்கு ட்ரை பண்ணு” 

என்று. நான் மகாவிடமாவது உண்மையச் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்ல முடியாத அளவுக்கு எனக்கு என்னதான் பிரச்சனை?. என்னை வெளிப்படுத்துவதில் அப்படி என்ன தயக்கம். இப்படி பல கேள்விகள் எழுந்துகொண்டிருந்தது என்பதை விட குழம்பிப் போயிருந்தேன்.

***


டைனஸ்டி ஹாலில் எனக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. கிச்சா கையாமுய்யா என்று வந்தான். இவன் என்னைவிட சீனியர். 

“இங்கபாரு கிச்சா சும்மா கத்தாம போய் கேப்டனிட்ட சொல்லு”. 


கேப்டன் வந்தார். மேனேசர் காதுக்குத் தகவல் போனது. ஒரு வாரமாக எந்த நடவடிக்கையும் இல்லை. குறுக்க மறுக்க போகும்போது மேனேசர் கவனிப்பது தெரிந்தது. சூடு தணியட்டும் என்று நினைக்கிறாரா அல்லது வேலை செய்ய மறுக்கிறான் என்றது உண்மையா என்று செக் பண்ணுகிறாரா என்றும் தெரியவில்லை. நடக்கிறது நடக்கட்டும் வேலை செய்வதில்லை என்று பிடிவாதமாக இருந்தேன். இது வேலை செய்யாமைப் போராட்டம். இப்படிச் செய்வது எனது சக்திக்கு மீறிய செயல். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சில விடயங்களில் ஒரு விதமான குருட்டுத்தைரியம் வந்து ஏறி நிற்கும். அது விளைவுகளை அந்த நேரத்தில் ஆராயாது. ஹாலிற்குள் சும்மா நிற்பேன். முற்றிலுமாக ஒரு வாரம் எந்த வேலையும் செய்யவில்லை. டூட்டிக்குப் போவது, கேன்டீனில் சாப்பிடுவது, டூட்டி முடியும் வரை ஹாலுக்குள் நிற்பது, எங்கட ஸ்டோர் ரூம்லயோ, லாக்கர்லயோ உட்காருவது. இப்படியே ஒரு வாரம் ஓடியது.


“அடே உன்னை எஃப் அன்டு பி (food and beverage manager) மேனேசர் ஆபீஸ் வரட்டாம்” 

லாக்கர் ரூம்ல தம்மடிச்சிட்டு இருந்த என்னிடம் கிச்சா வந்து சொன்னான். உள்ளுக்குள் ஏற்பட்ட பதற்றத்துடன் அலுவலகம் போனேன். கோட்டு சூட்டில் அவர்கள் உட்காந்திருக்கும் தோரணையே மிரட்டுவதாக இருந்தது.

அலுவலகத்தில் எங்கள் பிரிவு மேனேசரும் இருந்தார். கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தேன். ஏசியிலும் எனக்கு வியர்த்திருந்தது. அதிகபட்சமாக வேலையிலிருந்து நீக்குவார்கள். எனக்கு இந்த மடம் இல்லை என்றால் என்ன ஒரு சந்தை மடம் இல்லாமலா போய்விடும் என்று மனதை தேற்றிக் கொள்ள முயன்று கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் மேனேசர் தன்மையாகப் பேசினார். அது அட்வைஸ் பண்ணுவதாகவே இருந்தது. பேசாமல் நின்றேன். எங்கள் பிரிவு மேனேசர் தமிழில் நேரடியாகவே ஆரம்பித்தார். 


“இங்க பாரு சுதாகர் உன்னை வேலைய விட்டுத் தூக்கிட்டு பத்திரிக்கையில ஒரு விளம்பரம் கொடுத்தால் அந்த வேலைக்கு நூறுபேர் கேற்றடியில வரிசையில் நிப்பான்…” 


என்று ஆரம்பித்தார். அவர் குரல் வழமைக்கு மாறாக தடித்திருந்தது மட்டுமில்லாமல் எச்சரிக்கையாகவும் இருந்தது. 


“நீ வேலை செய்யாதது மத்த பணியாளரையும் பாதிக்கும்” 


என்றவரிடம், ஒரு கோரிக்கை மட்டும் வைத்தேன். எனது ரெயினிங் பீரியட் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டதற்கு ஒரு வலுவான காரணம் அவர்களிடத்தில் இருந்தது. அவர்கள் முன் இருந்த மேசை மேல் இருந்த என்னுடைய பைலில் முறையாக படித்ததற்கான பள்ளிச் சான்றிதழ்கூட இருக்கவில்லை. படிக்கிற பதினாறாவது வயதிலதான் இந்த நாட்டிற்கு உயிர் வாழ வந்தேன். கொஞ்சமாவது படித்திருக்கலாம்தான். சில மாதங்களில் ஊருக்கு போய் படிக்கலாம் என்ற எண்ணம் அப்போது தடுத்திருக்கலாம். அல்லது படிப்பபதற்கான சரியான ஆவணங்கள் இல்லாததும் காரணமாக இருக்கலாம். (எப்படி எந்த முறையான படிப்பு சான்றிதழ் இல்லாமல் இங்கு பணியில் சேர்ந்தேன் என்பது தனிக்கதை). ஆனாலும் அவர்கள் என்னை வேலையை விட்டுத் தூக்கவில்லை. காரணம் என்னுடைய வேலை அவர்களுக்குப் பிடித்திருந்தது. என்னுடைய உழைப்பை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் என் கோரிக்கையை ஏற்று ரூம் சர்வீஸ் டிப்பாட்மென்டுக்கு மாத்தினார்கள்.


***


ஓட்டல் நிர்வாகத்துடன் விமான நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் போட்டிருந்தது. அதனால் எப்போதுமே பிளைட் பைலட்டுடன் சேர்த்து பத்துப் பன்னிரெண்டு ஏர் ஹோஸ்டஸ் ரூமில் ஓய்வில் இருப்பார்கள். ஒரு பேச் டூட்டிக்குப் போனால் அடுத்த பேச் வந்திறங்கும். வாழ்க்கை நிச்சயமில்லை என்பதாலோ என்னவோ, இவர்களுக்கு தனித்தனியான ரூம் இருந்தாலும் பெரும்பாலும் அவர்களின் வயதுக்கு ஏற்ப ஆண் பெண் என சோடியாக சேர்ந்து இருப்பார்கள். இவர்கள் காட் லிக்கர், புஃட்டு எல்லாம் ரூமுக்கே ஆடர் பண்ணுவார்கள். பன்னிரெண்டு ரூமில் இருந்தும் ஆர்டர் வரும். சில வேளைகளில் இரண்டு பேச் தங்கியிருக்கும்போது ஆர்டர்கள் அதிகமாகவே வரும். இந்த ரூம் ஆர்டர்களுக்கு போவதற்கு நாங்கள் விரும்புவதற்கு காரணம் அவர்கள் டிப்ஸ் தருவார்கள். அவர்கள் விமானத்திற்குள் என்ன செய்வார்களோ அதைத்தான் நாங்கள் இங்கு செய்யிறம். சில நாட்களாக நான் ஒரு கொள்கை முடிவில் இருந்தேன். எனக்கு ஏன் இப்படியான யோசனைகள் வருகிறது என்பதற்கான சரியான காரணங்களை எனக்குத் தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. ஒரு வேளை பிறவிப் புத்தியோ என்னவோ. வேறு ஏதாவது காரணங்கள்கூட இருக்கலாம். பெரும்பாலும் இரண்டு ரூமில் இருந்து வரும் ஆர்டர்களை ஒரு ரூமிற்கு கொண்டுவரச் சொல்வார்கள். ஆண்மட்டும் ரூம் வாசலியே ஆர்டரை வாங்கிக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு வந்து பில்லில் கையெழுத்திடுவார்கள். இந்த மாதிரியான ரூமிற்குள் பக்கத்து அறை பெண் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் வரச் சொன்னால் அன்றி நாங்களாக ரூமிற்குள் செல்லமாட்டோம். இப்படியான ஒரு லஞ்ச் ஆர்டருடன் 103 ம் இலக்க ரூமிற்குச் சென்றேன். அவர் உள்ளே அழைத்து டீப்பாயில் புஃட் ட்ரேயை வைக்கச் சொன்னார். கட்டிலில் போர்வையால் உடல் முழுவதும் போர்த்தியபடி படுத்திருந்தபடியே தலையை மட்டும வெளியே நீட்டி ஒரு பொண்ணு தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தது. சாருக்கான், கஜோல் தொலைக்காட்சி திரையில் தெரிந்தார்கள். டீப்பாயில் புஃட்டை வைத்ததும் பில்லை போள்டருடன் கொடுத்தேன். பில்லை சரி பார்க்காமலே பில்லில் கை எழுத்துப் போட்டதும் நூறு ரூபாயை பில் போல்டருக்குள் வைத்தார். 


“நான் டிப்ஸ் வாங்குவதில்ல எனக்கு வேண்டாம்” என்றேன்.

அவர் முப்பது வயது மதிக்கத்தக் நார்த் இந்தியன் மாதிரித்தான் இருந்தார். 


“பிளடி பெக்கர் கெட்டவுட் ஃபறம் த ரூம்” என்றார். 

தலையை தொங்கப் போட்டபடி வெளியே வந்தேன். அவருடைய அணுகுமுறை சங்கடத்தை ஏற்படுத்தியது. நான் டிப்ஸ் வாங்காதது அவருக்கு அவமரியாதையாக இருந்திருக்கலாம். எனக்கு இது சுயமரியாதையாக இருக்கக்கூடாதா? நான் நிர்வாகம் தரும் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். அது போதுமே எனக்கு. பின் எதற்கு டிப்ஸ்? சில கெஸ்ட் பாராட்டினார்கள். சிலர் முகம் சுழித்தார்கள். இவனைப்போல் சிலர் பிச்சகார நாயே வெளியே போ என்றார்கள். எனக்கு இது ஒரு விளையாட்டு மாதிரி இருந்தது. 


இப்போதெல்லாம் நான் டிப்ஸ் தரும் ரூம்களுக்கு ஆர்டர் கொண்டு போவதில்லை. எங்களுக்கு பெரும்பாலும் தெரியும் எந்த ரூமிலிருந்து டிப்ஸ் வரும் என்று. என் உடன் வேலை செய்யும் சக பணியாளருக்கு சந்தோசம். எனது டிப்ஸ் தரும் ரூம் ஆர்டர்களுக்கெல்லாம் அவனே போவான். அவனுக்கு இரட்டிப்பு வருமானம். அதனால் நான் உள்ளுக்குள் இருக்கும் மேனேசர் அலுவலகம், என்ஜினியர் அலுவலகம், ஆடிட்டிங் அலுவலகம், எச்சார் ஆபீஸ், ஜெனரல் மேனேசர் அலுவலகம் அவர் தங்கியிருக்கும் பிளாட்டுக்கெல்லாம் உணவு, பானம் காவிக் கொண்டு திரிந்தேன். இந்த வேலையை சக பணியாளர்கள் விரும்புவதில்லை. ஒரு தடவை சர்வீஸ் பண்ணவும், மறுதரம் அதனைக் கிளியர் பண்ணவுமாக இரண்டு தடவைகள் செல்ல வேண்டும். எந்த விதமான கூடுதல் வருமானமும் வராது. இது ஒரு அடிசனல் வருமானம் இல்லாத வேலை. ஒரு பைத்தியகாரனாக பலரும், விதிவிலக்கானவனாக சிலரும் ஓட்டலில் பார்க்க ஆரம்பித்தார்கள். ஜிஎம் பிளாட்டுக்கு தொடர்ந்து வருவதை கவனித்த அவர் அலுவலகத்தில் எதுவும் பேசமாட்டார். இரவு உணவுக்கு முன் இரண்டாவது லார்ஜ் விஸ்கியோடு அவர் பிளாட்டுக்கு போகும்போது, அல்லது கடைசியாக கிளியரன்சுக்கு போகும்போது சில வார்த்தைகள் அக்கறையாகப் பேசுவார். அவ்வாறான நேரங்களில் நான் அவரிடம் தமிழில் பேசுவேன். ஒரு நாள் 


“லண்டன்ல வேலை செய்திருக்கிறேன். அப்போ எங்கூட இலங்கைத் தமிழர்கள் சிலர் வேலை செய்தார்கள். சில நண்பர்கள்கூட இப்பவும் இருக்கிறார்கள். நீங்க பேசும் சில வார்த்தைகள் இலங்கைத் தமிழ்போல் இருக்கிறது” என்றார்.


அந்த கும்பகோணத்துக்காரர். சந்தேகத்தால் இல்லாமல் இயல்பானதாக அவர் உரையாடல் இருந்தாலும் எனக்கு பதற்றம் தலைக்கேறியிருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல மறைத்து வைத்திருந்த இரகசியம். உண்மையைச் சொல்லியிருந்தால் வேலை கொடுத்திருப்பார்களா. 


நிதானமாக,

“சார் நான் நாகர்கோவிலில் கொஞ்ச நாள் இருந்தேன். அவங்க மலையாளம் கலந்த தமிழ் பேசுவார்கள் அது எனக்கும் வந்திருக்கலாம்”, 

என்றேனே தவிர நான் ஒரு இலங்கை அகதி என்பதை ஓட்டல் நிர்வாகத்துக்கு முற்றிலுமாக மறைத்திருந்தேன். 2005ம் ஆண்டு நடுப்பகுதியில் நானாக ராஜனாமா செய்து ஓட்டலைவிட்டு வெளியேறியபோது எனது பணி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. மகா புரமோசனில் வேறு ஓட்டலுக்கு வேலைக்குச் சென்றிருந்தாள். 

***

தொ.பத்தினாதன்: இலங்கை மன்னார் மாவட்டம், வட்டக்கண்டல் என்ற ஊரில் பிறந்தவர். 1990களில் நிகழ்ந்த இரண்டாம் கட்ட போரில் அகதியாக தமிழகம் வந்தார். தமிழகம் வாழ் இலங்கை அகதிகள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். காலச்சுவடு பதிபகத்திலும் திரைத்துறையிலும் பணி செய்தார். தன்வரலாற்று நூலான போரின் மறுபக்கம் பரவலான கவனத்தை ஏற்படுத்திய நூல். சிறுகதைகளும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: pathixyz@gmail.com.

மொழிகடந்த ஒளி: காஷ்மீரி சைவமும் தமிழ் சித்தாந்தமும்

0

அ. முனவர் கான்

காஷ்மீரி மொழியின் வாய்மொழி மரபு மிகவும் வண்ணமயமானதும் சிக்கலான தன்மையைக் கொண்டதுமாகும். இது பல்வேறு நாட்டுப்புற வடிவங்களைக் கொண்டுள்ளது. காஷ்மீரி இலக்கியத்தின் மிகச்சிறந்த பிரதிநிதித்துவ இலக்கிய வடிவம் நாட்டுப்புற இலக்கியவடிவமே. சோமதேவர், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் தனது ‘கதாசரித சாகரம்’ (Kathasarit Sagar) நூலுக்காகப் பல்வேறு காஷ்மீரி இலக்கிய வடிவங்களைக் கொண்ட கதைகளையும், பலதரப்பட்ட கதைக்களங்களையும் சேகரித்தார்.

காஷ்மீரி மொழி தனது நாட்டுப்புற மரபை வெறும் பாதுகாப்பாக மட்டும் வைத்திருக்கவில்லை; மாறாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனை வளப்படுத்தி, மாற்றியமைத்தும் வந்துள்ளது. இது சமூக மாற்றம், நடத்தை முறைகள், நம்பிக்கைகள், அடக்கப்பட்ட ஆசைகள், ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், ஆழ்மனதின் ஏக்கங்கள், கூட்டுப் பங்களிப்புள்ள கனவுகள் ஆகியவற்றின் பல பரிமாணங்களைப் பிரதிபலிக்கிறது.

காஷ்மீரி நாட்டுப்புற இலக்கியம் என்பது எழுதப்படாத வரலாற்றின் ஒரு புதையலாகும். இது வாழ்க்கையைப் பல்வேறு வண்ணங்களிலும் உணர்வுகளிலும் சித்தரிக்கிறது.

‘கூட்டுக் குடும்பம்’ போன்ற பல சமூக அமைப்புகளின் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. சாதாரணப் பெண்களையும் மேல்தட்டுப் பெண்களையும் சித்தரிப்பதோடு, அவர்களின் நடத்தையில் உள்ள முரண்பாடுகளையும் இது வெளிப்படுத்துகிறது.

‘கானா தாமாதி’ (Khaana Daamaadi – மாப்பிள்ளை மாமனார் வீட்டோடு தங்கும் முறை) மற்றும் தத்தெடுப்பு போன்ற உள்ளூர் பழக்கவழக்கங்களின் பிரதிபலிப்புகளும் இதில் உள்ளன.

காஷ்மீரி நாட்டுப்புறப் பாடல்கள், குறிப்பாகக் காஷ்மீரிப் பெண்களின் உணர்ச்சிகள், கனவுகள், துயரங்கள் மற்றும் ஆசைகளைச் சித்தரிப்பதில் மிகவும் செழுமையாக உள்ளன. இப்பாடல்களில் பெண்கள் தங்களின் உறவுகளின் சிக்கலான நிலைகளோடு சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் அனைத்து விழுமியங்களையும் கடைப்பிடித்து மதிக்க வேண்டும்; மேலும், கல்லைப் போலச் சுயநலமற்றவர்களாகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விடியற்காலம் முதல் அந்தி சாயும் வரை அவர்கள் வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பலதார மணம், ஆரம்பகாலத் திருமணம் (குழந்தைத் திருமணம்), மேல்தட்டு முஸ்லிம்களிடையே நிலவிய பர்தா முறை, விதவைக் கோலத்தின் சாபங்கள் போன்றவற்றுக்கான ஏராளமான சான்றுகளை இப்பாடல்களில் எங்கும் காண முடிகிறது.

காஷ்மீரி மொழியின் முக்கிய இலக்கிய ஆளுமையான லல்லாவின் படைப்புகளை, எம். கோபாலகிருஷ்ணன் ‘கொடுங்காற்றில் ஒரு விளக்கு’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

லால் டெத் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பாந்த்ரேதனுக்கு அருகிலுள்ள செம்போராவில் பிறந்தார். பதாம்போராவில் (இன்றைய பாம்பூர்) அவருக்குத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு வழக்கப்படி அவருக்கு ‘பத்மாவதி’ என்று பெயரிடப்பட்டது. ஆனால், அவர் ‘லால்’ என்றே அறியப்பட்டார்; இது அநேகமாக அவருடைய பெற்றோர் வைத்த பெயராகவும், ‘லலிதா’ (செல்வத்தின் தேவி) என்பதன் சுருக்கமாகவும் இருக்கலாம்.

அவர் சிறு வயதிலேயே சித்த ஸ்ரீ காந்தா (பிரபலமாக ‘செதமால்’ என்று அழைக்கப்படுபவர்) என்பவரால் யோகக் கலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அவருடைய குடும்ப வாழ்க்கை அமைதியானதாக அமையவில்லை. எனினும், ஆரம்பகால ஆன்மீகப் பயிற்சிகளும், அவருடைய தூய்மைப்படுத்தலும் (Sublimation) அவரின் ஆன்மீக அனுபவத்திற்கு மிகுந்த தீவிரத்தை அளித்தன.

அவர் கவித்துவமான ஆன்மாவோடு பிறந்தவர்; இயல்பான மொழித்திறனும் கொண்டவர். எனவே, அவருடைய அனுபவம் ஆக்கப்பூர்வமான மொழியில் வெளிப்பட்டதால், அவருடைய ‘வாக்குகள்’ (Vaakhs – கவிதைகள்) எப்போதும் அழியாத புதுமையையும் உத்வேகத்தையும் கொண்டுள்ளன. 14 ஆம் நூற்றாண்டின் மொழி மாற்றத்தை அவர் பிரதிபலிக்கிறார்; அவருடைய வாக்குகள் நவீன காஷ்மீரி மொழியின் விடியலைக் குறிக்கின்றன.

அவருடைய கவிதைகள் காஷ்மீரி மொழிக்கு எண்ணற்ற மரபுத்தொடர்களையும் சொற்றொடர்களையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தத்துவ சிந்தனைகளையும் வழங்கி, அதன் வெளிப்பாட்டு அழகைக் கூட்டுகின்றன. அவரே நவீன காஷ்மீரி மொழியை உருவாக்கியவர் ஆவார். அவரது பிறவித் தொடர்புத் திறன் (Communicative skills) காரணமாக, அவருடைய வாக்குகள் சாதாரண வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் ஒரு சிறந்த இலக்கியப் புதையலாகக் கருதப்படுகின்றன.

“அவர் ‘வாக்கு’ என்ற வடிவத்தை மறுசீரமைத்த விதம், இந்த வகையிலான அனைத்துப் படைப்புகளையும் மதிப்பிடுவதற்கான ஒரு தரநிலையாக மாறியது.”ஒலியியைபு (Assonance), உள் எதுகை-மோனைகள் (Inner rhymes), ஆழமான பொருள், பிம்பங்கள் (Images), போதனை அல்லாத தன்மை, உள் கவித்துவ முரண்பாடு அல்லது சுய நாடகம் (Auto-drama)

ஆமி பனா சோத்ராஸ் நாவி, சாஸ் லமான் ஆதி போஸி தை மியோன் மேதி தியி தார் ஆம்யான் டாக்யான் போனி சும் ஷாமான் ஸுவ் சும் பிரமான் கரா கட்ஸாஹா

முறுக்கேறாத கயிறைக்கொண்டு கடலின் குறுக்கே என் படகை செலுத்துகிறேன் எனக்கு அவன் செவிகொடுத்து கடப்பதற்கு உதவுவானா? அல்லது பாதி சுடப்பட்ட மண்கோப்பையிலிருந்து கசியும் நீரைப்போல நான் வழிந்து போவேனா? அலையும் பாவப்பட்ட என் ஆன்மாவை அவன் வீடு சேர்த்திடுவானா? 

தன் ஆயுள் முடிவதற்குள், இறைவனை அடைந்து தன் ஆன்மா வீடுபேறு (முக்தி) பெற வேண்டும் என்ற தீவிரமான ஆன்மீக ஏக்கத்தை லால் டெத் இதில் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

லால், சைவ மதத்தின் ‘திரிகா’ (Trika) பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய ஆன்மீக அனுபவங்கள் அவருடைய தீவிர சாதனாவிலிருந்து (வழிபாட்டுப் பயிற்சி) வந்தவை; திரிகாவைத் தவிர வேறு எந்த தாக்கமும் அதில் இல்லை.

அவருடைய வாக்குகளின் அடிப்படையில், அவர் பைத்தியக்காரியாகவோ, ஆடைகளின்றி அலைந்தவராகவோ அல்லது ஒழுக்கமற்றவராகவோ இருக்கவில்லை என்று உறுதியாகக் கூறலாம். அவர் தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் சாதனாவில் உயர்ந்த நிலையை அடைந்ததால், மத சடங்குகளுக்கும் மூடநம்பிக்கை சார்ந்த பிடிவாதங்களுக்கும் எதிராக இருந்தார். ‘சித்தம்’ (உணர்வு/மனம்) என்பதைக் கட்டுப்படுத்தி, அதனைச் ‘சூன்யத்தில்’ (Positive Void – நேர்மறையான வெற்று நிலை) லயிக்கச் செய்வதே அவருடைய ஆன்மீக அனுபவத்தின் உச்சமாகும் 

ஒரு பெண் கவிஞராக, புறத் தூய்மையை விட மனத்தூய்மைக்கே அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். தன் உடலையும் மனதையும் தவம் மற்றும் ஆன்மீகப் பயிற்சியால் தேய்த்துச் சுத்தமாக்கிய பிறகே, தனக்குள் ஒரு புதிய மாற்றத்தைக் கண்டதாக அவர் குறிப்பிடுகிறார். பிரிவினையற்ற அத்வைத நிலையை இப்படி கூறுகிறார் 

“நான் யார் நீ யார் ஒருபோதும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை

அசிங்கம்பிடித்த இந்த உடலின் மீது ஆசைகொண்டிருந்த என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை,

நீதான் நான் நான்தான் நீ என்பதை.

எப்போதும் நான் சந்தேகப்பட்டது, நான் யார்? நீ யார்? என்றுதான்.”

“நான் யார்”, “நீ யார்” என்ற அடிப்படை வினாக்களுடன் தொடங்குகிறார். இது சாதாரண மனிதன் தன்னைத் தேடும் ஆன்மீகப் பயணத்தின் முதல் படியாகும்.

உடல் மீதான பற்று: “அசிங்கம்பிடித்த இந்த உடலின் மீது ஆசை கொண்டிருந்த என்னால்” என்பதில், உடல் என்பது அழியக்கூடியது மற்றும் அசுத்தமானது என்ற ஆன்மீகக் கண்ணோட்டம் முன்வைக்கப்படுகிறது. அழியும் உடலே “நான்” என்று நாம் நம்புவதால் தான், ஆழமான உண்மைகளை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

“நீதான் நான், நான்தான் நீ” என்பதுதான் இந்தக் கவிதையின் உச்சகட்ட உண்மை. பிரபஞ்சத்தின் ஆதி சக்தியும் (இறைவன்) மனிதனும் (நான்) வேறல்ல; இரண்டும் ஒன்றே என்பதை உணரும்போது பிரிவினை மறைகிறது.

இதுவரை “நான் யார்”, “நீ யார்” என்று பிரித்துப் பார்த்துச் சந்தேகித்துக் கொண்டிருந்த மனம், இப்போது அந்த இரண்டிற்கும் இடையே உள்ள ஒருமையை உணர்ந்துவிட்டது. இந்த வரிகள் நம்மைச் சுற்றியுள்ள மாயையைக் களைந்து, நமக்குள் இருக்கும் இறைத்தன்மையைக் காணத் தூண்டுகின்றன.

“புசித்துக்கொண்டேயிருப்பது எங்கும் உன்னை இட்டுச் செல்லாது
உணவை மறுத்து விரதமிருப்பின் ஓங்குவது உன் அகங்காரம் மட்டுமே.
பசித்துப்புசிப்பின் சமநிலை கூடும்
உன் தொடுகையில் திறக்கும் மூடிய கதவுகள்.”

இந்த வரிகள் உணவை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி, மனிதனின் ஆசைகளுக்கும் செயல்களுக்கும் இடையே இருக்க வேண்டிய மத்திய வழி (Middle Path) அல்லது சமநிலையைப் பற்றிப் பேசுகின்றன.

எப்போதும் உலக ஆசைகளையோ, உணவையோ நுகர்ந்து கொண்டே இருப்பது ஒருவனை ஆன்மீக ரீதியாக முன்னேற்றாது; அது தேக்க நிலையையும், சோம்பலையும் மட்டுமே தரும்.

ஆசைகளை முற்றிலும் ஒடுக்குகிறேன் என்ற பெயரில் கடுமையான விரதங்களை மேற்கொள்வது பெரும்பாலும் நிஜமான ஞானத்தைத் தராது. மாறாக, “நான் உணவை வென்ற தியாகி” என்ற நுணுக்கமான அகங்காரத்தை (Ego) மட்டுமே வளர்க்கும். தேவை அறிந்து, பசிக்கும் போது மட்டும் உண்பது உடல் மற்றும் மன ரீதியான சமநிலையைத் தரும். எப்போது செயல்பட வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்ற விவேகம் இதனால் உண்டாகும்.

 ஒருவன் இந்தச் சமநிலையை அடைந்துவிட்டால், அவனது ஆற்றல் சிதறாது. அத்தகைய தெளிவான நிலையில் அவன் எதைத் தொட்டாலும் அது வெற்றியாகும். இதுவரை அவனுக்கு முடக்கப்பட்டிருந்த ஆன்மீக ரகசியங்களும், வாய்ப்புகளும் தானாகவே திறக்கும்.

“புதிய மனம் புதிய நிலவு பெருங்கடல் புதிதாகியிருப்பதை கண்டேன் நான்
என் தேகத்தையும் மனத்தையும் தேய்த்து சுத்தமாக்கிய பிறகு
லல்லாவாகிய நான் அத்தனைக்கத்தனை புதிதாகியிருக்கிறேன்

இங்கு “புதிய நிலவு”, “புதிய பெருங்கடல்” என்று கவிஞர் குறிப்பிடுவது, புற உலகம் மாறிவிட்டது என்பதல்ல; அந்த உலகத்தைப் பார்க்கும் அவருடைய பார்வை மாறிவிட்டது என்பதைக் குறிக்கிறது. மனம் தூய்மையடையும்போது, அதே உலகம் புதியதாகவும், தெய்வீகமானதாகவும் காட்சியளிக்கும். “என் தேகத்தையும் மனத்தையும் தேய்த்து சுத்தமாக்கிய பிறகு” என்பது வெறும் குளியலைக் குறிப்பதல்ல. ஒரு மனிதன் தன் உள்ளத்தில் இருக்கும் அகந்தை, ஆசை, பொறாமை ஆகியவற்றைத் துடைத்து எறிவதைக் குறிக்கிறது.

இங்கே “லல்லா” என்பது வெறும் பெயரல்ல, அது ஒரு ஆன்மீக நிலை (State of Being). பழைய “நான்” என்ற உலகியல் அடையாளம் இறந்து, மனதில் எந்தப் பாரமும் இல்லாத ஒரு தூய்மையான புதிய நிலை பிறப்பதையே இது காட்டுகிறது. “உன் மனம் மாறினால், நீ வாழும் உலகமே மாறும்” என்பதே இதன் மையக்கருத்து. வாழும்போதே ஜீவன் முக்தி

“இவ்வுலகம் முழுதும் அவன் விரித்திருக்கிறான் தன் மெல்லிய வலையை
உன் குருதியிலும் எலும்பிலும் ஆழ ஊடுருவியுள்ள அவனை
உயிருடனுள்ள இப்போது உன்னால் காண முடியாவிடில்
செத்துப் போன பின் எதிர்பார்க்காதே தனியே உனக்காக தரிசனம் தருவான் என.”

இறைவன் எங்கோ தொலைவில் உள்ள சொர்க்கத்தில் இல்லை. இந்த உலகம் முழுவதிலும் ஒரு மெல்லிய வலை போல அவன் தன் இருப்பைப் படரச் செய்துள்ளான். அதைக் காணப் பக்குவமான மனம் தேவை. இறைவன் உனக்கு வெளியேயோ அல்லது சிலைகளிலோ மட்டும் இல்லை; அவன் உன் உடலின் ஒவ்வொரு துளியிலும், இரத்தத்திலும், எலும்பு மஜ்ஜையிலும் உயிர்ச்சக்தியாக ஊடுருவி இருக்கிறான்.

மரணத்திற்குப் பிறகு கிடைக்கும் மோட்சத்தை விட, உயிருடன் இருக்கும் போதே இறைவனை உணர்வது அவசியம். நீ உயிருடன் இருக்கும்போதே உனக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணரத் தவறினால், இறந்த பிறகு உனக்காகத் தனியே எந்தத் தரிசனமும் கிடைக்காது. வாழும் போதே அடையும் “ஜீவன் முக்தி” அல்லது விழிப்புணர்வே சிறந்தது என்பதை இக்கவிதை ஆணித்தரமாகச் சொல்கிறது.

எல்லைகளற்ற ஆன்மீகப் பயணத்தை

“எனக்கு இப்படி நடக்குமென்று நான் நினைக்கவேயில்லை:

ஒரு கொண்டலாத்தி தன் அலகால் என் நகங்களைக் கொத்திவிட்டது
என் கனவுகளின் உண்மை ஒரே வரியில் என்னுள் தைத்தது
லல்லாவாகிய நான் குளத்தில் மிதக்கக் கண்டேன்
கண்ணுக்குத் தெரியவில்லை கரை.” என்கிறார் 

தனது வாழ்வில் நிகழ்ந்த ஒரு மிகப்பெரிய ஆன்மீக விழிப்புணர்வை வியப்புடன் தொடங்குகிறார்.

சூபித்துவ இலக்கியங்களில் ‘கொண்டலாத்தி’ (Hoopoe) பறவை ஞானத்தைக் கொண்டு வரும் தூதுவனாகக் கருதப்படுகிறது. அது நகங்களைக் கொத்துவது என்பது, கவிஞரின் புற அடையாளங்கள் அல்லது உலகப் பற்றுகளைச் சிதைப்பதைக் குறிக்கிறது.

‘குளம்’ என்பது இங்கே பிரபஞ்ச அறிவையோ அல்லது இறைத் தன்மையையோ குறிக்கிறது. ஞானம் எனும் கடலில் மிதக்கும்போது எல்லைகளே இருப்பதில்லை. ஆரம்பமும் முடிவும் அற்ற அந்தப் பரம்பொருளோடு தான் கலந்துவிட்டதை ‘கரை தெரியவில்லை’ என்பதன் மூலம் லல்லா உணர்த்துகிறார்.

“நொடி நேரம் மூச்சை தொண்டைக் குழியில் நிறுத்திவைத்தேன்
உள்ளுக்குள் ஒளிர்ந்த அசையா சுடர் விளக்கு உண்மையில் நான் யாரெனக் காட்டியது
சிக்கென அதை கைப்பற்றி பொத்தி வைத்துக்கொண்டேன் என்றென்றைக்குமாய்.”

“வேறெதன் மீதும் நம்பிக்கையை கட்டி எழுப்பவில்லை, வேறெதையும் நான் நம்பவுமில்லை
என் சொற்களே எனக்களித்தன நானருந்தும் அமுதை
எனக்குள் பதுங்கிய இருளை அகற்றி
அதைச் சுருட்டி கீழே அடித்துத் துவைத்துச் சுக்குநூறாகக் கிழித்து எறியும் ஆற்றலை எனக்களித்ததும் என் சொற்களே.”

 மூச்சை ஒரு கணம் நிலைநிறுத்தும் போது (பிராணாயாமம்), சிதறி ஓடும் மனம் ஒருமுகப்படுகிறது. அப்போது உள்ளுக்குள் ஓர் ஒளி பிறக்கிறது. அந்த அக ஒளி, உடல் கடந்த ஆன்மாவைத் தரிசிக்கச் செய்து, “உண்மையில் நான் யார்” என்ற உண்மையை உணர்த்துகிறது.

கவிஞர் வெளி உலக அதிகாரத்தையோ, மனிதர்களையோ சார்ந்து தன் வாழ்வை அமைக்கவில்லை. துன்பமான நேரங்களில் அவருக்கு மன அமைதியையும், புத்துணர்ச்சியையும் தந்தது அவர் படைக்கும் சொற்களே (வாக்கு).

தன் உள்ளத்து இருளை அல்லது தீமைகளை வெறும் மென்மையாக அகற்றாமல், அதை அடித்துத் துவைத்து, சுக்குநூறாகக் கிழித்து எறியும் ஒரு பெரும் போர்க்குணத்தைத் தனக்குச் சொற்கள் தந்ததாகக் குறிப்பிடுகிறார். படைப்பாளிக்குத் தன் எழுத்து என்பது ஒரு தற்காப்புக் கலை மற்றும் இருளை விரட்டும் பேரொளி. 

பூக்களை கொய்வது யார்? தொடுத்து மாலையாக்குவது யார்? எந்த மலர்களைக் கொண்டு அவனை அர்ச்சிப்பது? எந்த நீரைக் கொண்டு அவனை அபிஷேகம் செய்வது? எந்த மந்திரம் கொண்டு உள்ளுக்குள் உறையும் அவனை எழுப்புவது? இறைவன் நமக்கு உள்ளேயே உறைந்திருக்கும் போது (உள்ளுக்குள் உறையும் அவனை), அவனுக்குப் புறத்தே பூக்களைக் கொய்து அர்ச்சனை செய்வதோ, நீர் கொண்டு அபிஷேகம் செய்வதோ, மந்திரங்கள் ஓதி எழுப்புவதோ தேவையற்றது. மனமே மலராக, உடலே கோயிலாக மாற வேண்டும் என்ற அக வழிபாட்டுத் தத்துவத்தை இக்கவிதை பேசுகிறது.

லால் டெத்தின் இந்த வரிகள் திருமூலரின் புகழ்பெற்ற ‘உடம்பே ஆலயம்’ தத்துவத்தோடு நேருக்கு நேர் பொருந்திப் போகின்றன.

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.”  பூ, நீர் கொண்டு புற வழிபாடுகள் செய்வதை விட, நம் உள்ளத்தையே கோயிலாகவும், நம் உயிரையே சிவலிங்கமாகவும் கருதி வழிபட வேண்டும் என்ற திருமூலரின் சிந்தனையும்

“கோயில்ஆவ தேதடா குளங்களாவ தேதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.” “உள்ளுக்குள் உறையும் அவனை எழுப்புவது எது?” என்ற லால்டெத்தின் கேள்விக்கு, கோயில்-குளங்களைத் தேடாமல் மனத்துள்ளே தேடச் சொன்ன உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் கடுமையாகச் சாடிய தமிழ் சித்தர் சிவவாக்கியாரின் வரிகளும் லால் டெத்தின் வரிகளில் அப்படியே எதிரொலிக்கின்றன. 

“வேறெதன் மீதும் நம்பிக்கையை கட்டி எழுப்பவில்லை வேறெதையும் நான் நம்பவுமில்லை என் சொற்களே எனக்களித்தன நானருந்தும் அமுதை எனக்குள் பதுங்கிய இருளை அகற்றி அதைச் சுருட்டி கீழே அடித்துத் துவைத்து சுக்குநூறாகக் கிழித்து எறியும் ஆற்றலை எனக்களித்ததும் என் சொற்களே…”

இக்கவிதையில் லால் டெத், தான் எந்தவொரு புற உலக நம்பிக்கைகளையும் மூடநம்பிக்கைகளையும் சார்ந்து வாழவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். அவரது ஆன்மீகத் தேடலில் அவருக்குக் கிடைத்த ‘சொற்கள்’ (இறைவனின் திருநாமம் அல்லது மந்திரம்) தான் அவருக்குப் பேரமுதமாக அமைந்தன. அந்தப் புனிதமான சொற்களே அவருக்குள் பதுங்கியிருந்த அறியாமை என்னும் இருளை அகற்றி, அதைச் சுருட்டி, அடித்துத் துவைத்து, சுக்குநூறாகக் கிழித்து எறியும் பேராற்றலைத் தந்தன என்று லால் டெத் விவரிக்கிறார்.

சொற்களின் தூய்மையையும், சொல்லற்ற மௌன நிலையின் பேராற்றலையும் பாடிய தமிழ் ஆன்மீகப் பெரியோரான தாயுமானவர் 

“சொல்லுகைக்கு ஓர்தரம் இல்லை; குணமில்லை; துக்க சுகம் இல்லை; இல்லை; பந்தமுடன் வீடும் இல்லை… சொல்லும் பொருளும் அற்றுத் தூவெளியாய் நின்றநெறி…” என்கிறார்.

இங்கே லால் டெத் கூறியது போல, தமக்குக் கிடைத்த இறைவார்த்தைகளை அமுதாகக் கொண்டு தன்னுள் இருந்த அறியாமை இருளை வெல்வதற்கும், தாயுமானவர் காட்டும் ‘சும்மா இருக்கும்’ மௌன நிலைக்கும் ஆழமான ஒற்றுமை உள்ளது. இரு வேறு ஞானிகளும் மொழியைக் கடந்து நிற்கும் ஆன்மீக ஒளியைச் சொல்லின் துணை கொண்டே நமக்கு உணர்த்துகின்றனர்.

தமிழ் மரபில் ‘சொல்’ அல்லது ‘நாதம்’ என்பது இறைவனின் வடிவமாகக் கருதப்படுகிறது. “வாக்கினால் இருள் அகலும்” என்ற கோட்பாடு தமிழ் ஞான மரபில் மிக முக்கியமானது. சொற்கள் வெறும் மொழியல்ல, அது ஆன்மாவைச் சுத்தி செய்யும் ஆயுதம் என்பதை இந்த இரு மரபுகளுமே ஆழமாக வலியுறுத்துகின்றன.

காஷ்மீரத்து லால் டெத்தும், தமிழ்நாட்டுச் சித்தர்களும் வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு மொழிகளில் வாழ்ந்திருந்தாலும், அவர்களின் ஆன்மீக அனுபவம் ஒன்றாகவே இருந்துள்ளது. சடங்குகளை மறுத்தல், அகத்தே இறைவனைக் காணுதல், ஞானத்தின் வழியே அறியாமை இருளைப் போக்குதல் ஆகிய புள்ளிகளில் காஷ்மீரி சைவ மரபும் தமிழ் ஆன்றோர் மரபும் அழகாகக் கைகோர்க்கின்றன. 

“புசித்துக் கொண்டேயிருப்பது

எங்கும் உன்னை இட்டுச் செல்லாது

உணவை மறுத்து விரதமிருப்பின்

ஓங்குவது உன் அகங்காரம் மட்டுமே.

பசித்துப்பு புசிப்பின்

சமநிலை கூடும்

உன் தொடுகையில் திறக்கும்

மூடிய கதவுகள்.”

உண்மையான தேவை அறிந்து (பசித்து) எதையும் நுகரும்போதுதான் வாழ்வில் சமநிலை (Balance) உண்டாகும். அந்தச் சமநிலையை அடைந்த மனிதனின் தொடுகையால், வாழ்வில் மூடியிருக்கும் எல்லா அறிவின்/வெற்றியின் கதவுகளும் தானாகத் திறக்கும். வள்ளலார் பசியின் கொடுமையையும், அதை முறைப்படுத்துவதையும் பற்றிப் பாடும்போது:

“பசியினால் இளைத்து நெஞ்சம் பதைபதைத்துச் சோர்ந்துளாரைக்
கண்டு என துள்ளம் பதைத்தது…”

அதே நேரத்தில், ஆன்மீகச் சாதனைக்கு உணவுக் கட்டுப்பாடு (மிதமான உணவு) எவ்வளவு முக்கியம் என்பதைத் தனது ‘உபதேசப் பகுதி’யில் வள்ளலார் தெளிவுபடுத்துகிறார்: அளவுக்கு அதிகமாக உண்பது அறியாமையை வளர்க்கும் (புசித்துக் கொண்டேயிருப்பது எங்கும் இட்டுச் செல்லாது). அதே சமயம், பட்டினி கிடந்து உடலை வாட்டுவது ஆன்மீகத்திற்கு உதவாது. “மிதமான, சாத்வீகமான உணவை” முறைப்படி உண்பதே ஆன்ம லாபத்திற்கு வழிவகுக்கும் என்கிறார்.

இந்தக் கவிதை உடலின் நுகர்வு மற்றும் சமநிலையைப் பற்றியது என்றால், கீழ் வரும் கவிதை பிராணாயாமம், தியானம் மற்றும் ‘நான் யார்’ என்ற ஆத்ம தரிசனத்தைப் பேசும் மிக ஆழமான ஆன்மீகக் கவிதை

“நொடி நேரம் மூச்சை
தொண்டைக் குழியில் நிறுத்திவைத்தேன்
உள்ளுக்குள் ஒளிர்ந்த அசையா சுடர் விளக்கு
உண்மையில் நான் யாரெனக் காட்டியது.
சிக்கென அதை கைப்பற்றி
பொத்தி வைத்துக்கொண்டேன்
என்றென்றைக்குமாய்”

லல்லா “மூச்சைத் தொண்டைக் குழியில் நிறுத்திவைத்தேன்” என்று கூறுவதையே திருமூலர் “காற்றைப் பிடிக்கும் கணக்கு” என்கிறார். அப்படிச் செய்யும்போது உள்ளே தோன்றும் “அசையா சுடர் விளக்கை” திருமூலர் கபாலத்துள் தோன்றும் “சுடர்வடிவாகிய சோதி” என்று ஒப்பிடுகிறார். மாணிக்கவாசகர் இறைவனின் திருவடியைக் கண்டவுடன் அதை எப்படி “சிக்கெனப் பிடித்தேன், இனி உன்னை விடமாட்டேன்” என்கிறாரோ, அதேபோல லல்லா தன்னுள் கண்ட ஆத்ம சுடரை “சிக்கெனக் கைப்பற்றிப் பொத்தி வைத்துக் கொண்டேன்” என்கிறார்.

லல்லா தனது கவிதைகளில் “நான் யார், நீ யார்” என்ற சந்தேகங்கள் மறைந்து, இறுதியில் “நீதான் நான்” என்ற அத்வைத நிலையை எட்டியதாகக் குறிப்பிடுவது, ரமண மகரிஷியின் “நான் யார்?” என்ற சுய விசாரணை மற்றும் அகந்தை அழிவு (Ego dissolution) கொள்கையோடு அப்படியே இணைகிறது. அதேபோல், தன் தேகத்தையும் மனத்தையும் தேய்த்துச் சுத்தமாக்கியதாகவும், இறைவன் மனிதனின் இரத்தத்திலும் எலும்பிலும் ஊடுருவி இருக்கிறான் என்றும் லல்லா கூறுவது, உடலை இறைவனின் தங்குமிடமாகக் கருதி, “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்” என்று பாடிய திருமூலரின் ‘காய சித்தி’ யோக நெறியை நினைவூட்டுகிறது. 

மேலும், உலக ஆசைகளில் மூழ்குவதும் தவறு, உடலை வருத்திக் கடும் விரதம் இருப்பதும் தவறு எனக் கூறி, “பசித்து புசிப்பதே சமநிலை” என்ற லல்லாவின் மத்திய வழி (Middle Path) போதனை, போலிச் சடங்குகளை மறுத்து இயல்பான வாழ்வியலை வலியுறுத்திய தமிழ் சித்தர்களின் தத்துவத்தை ஒத்துள்ளது. 

இறுதியாக, லல்லா பிராணாயாமம் மூலம் மூச்சை அடக்கித் தன்னுள் ‘சுடர் விளக்கைக்’ கண்டதாகக் கூறுவதும், தனது வாக்குகளையே இருளகற்றும் அமுதாகக் கருதுவதும், மூச்சுக் காற்றை ஒழுங்குபடுத்தும் கலை மற்றும் “ஐந்தெழுத்து” மந்திரத்தின் மூலம் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்ற திருமூலரின் திருமந்திரப் போதனைகளோடு இணைந்து, வடக்கிலும் தெற்கிலும் நிலவிய ஞான மரபுகளின் ஆழமான ஒருமையைப் பறைசாற்றுகின்றன.

வெளி உலகம் மாறுவதால் ஒருவருக்கு அமைதி கிடைப்பதில்லை. ஒரு மனிதன் தன் தேகத்தையும் மனத்தையும் அகந்தை மற்றும் ஆசைகளில் இருந்து சுத்தமாக்கும் போது, அவனது பார்வையில் இந்த உலகமே புதியதாகத் தெரிகிறது. லல்லா ஒரு பெண் கவிஞர் மற்றும் யோகி என்பதால், அவருடைய கவிதைகளில் ஒருவிதமான தாயுள்ளமும் நேரடி அனுபவமும் கலந்திருக்கும். 

அந்த வகையில், ரமணரின் அமைதியும், திருமூலரின் உடல்-ஆன்மத் தொடர்பும், சித்தர்களின் சமநிலை வாதமும் லல்லாவின் கவிதைகளுக்கு மிகச் சிறந்த தமிழ் இணைகளாகத் திகழ்கின்றன. லல்லா காஷ்மீரி மொழியில் பாடியதும், திருமூலரும் ரமணரும் தமிழில் போதித்ததும் ஒரே பிரபஞ்சப் பேரறிவைத்தான். லல்லா விவரிப்பது போல, ஆன்மீகம் என்பது சடங்குகளிலோ, தூரத்துச் சொர்க்கத்திலோ இல்லை. அது நம் மனதைத் தேய்த்துச் சுத்தமாக்கி, நம் இரத்தத்திலும் எலும்பிலும் ஓடும் உயிர்ச்சக்தியை இப்போதே, வாழும்போதே உணர்வதில்தான் இருக்கிறது. இருள் சூழ்ந்த உலகியல் வாழ்வில், குழப்பங்கள் எனும் கொடுங்காற்றில் அணையாமல் எரியும் “ஞான விளக்காக” லல்லாவின் ‘வக்’ பாடல்கள் இன்றும் ஒளிர்கின்றன.

இதனை எம். கோபாலகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்துள்ள விதம், வெறும் வார்த்தை மாற்றமாக இல்லாமல் ஓர் ஆன்மீகப் பரிமாற்றமாகவே அமைந்திருக்கிறது. லால் டெத்தின் கவிதைகளில் தத்துவம் இருக்கும், ஆனால் அது கடினமான சொற்களால் ஆனதாக இருக்காது. 

“உள்ளே தேடினேன், என்னை நானே கண்டுகொண்டேன்; அங்கே நான் மட்டுமே இருந்தேன், வேறொன்றுமில்லை. யார் இங்கே பார்ப்பவர்? யார் இங்கே பார்க்கப்படுபவர்? எல்லாம் ஒன்றாகிப் போன அந்தப் பெருவெளியில்.”

இந்த வாக்கில், ‘திரிகா சைவத்தின்’ அத்வைத நிலை (தான் வேறு, இறைவன் வேறு அல்ல என்ற நிலை) விவரிக்கப்படுகிறது. கோபாலகிருஷ்ணன் ‘பெருவெளி’ (Shunya/Void) என்ற வார்த்தையைக் கையாண்ட விதம் அற்புதம். காஷ்மீரி சைவத்தில் ‘சூன்யம்’ என்பது வெறும் வெற்று இடமல்ல, அது எல்லையற்ற ஆற்றல் நிறைந்த ஒரு நிலை. அதைத் தமிழில் மிகச் சரியாகக் கொண்டுவந்துள்ளார்.

லால் டெத் ஒருபோதும் வெளிவேஷச் சடங்குகளை மதிக்கவில்லை. உருவ வழிபாட்டையும், விலங்கு பலியிடுவதையும் அவர் கடுமையாக எதிர்த்தார். இக்கருத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது, நம் ஊர் சித்தர்களின் (சிவவாக்கியர், திருமூலர் போன்றோரின்) குரலை கோபாலகிருஷ்ணனின் வரிகளில் நாம் கேட்க முடிகிறது.

“ஓ ஓதுவாரே! கல்லால் ஆன சிலைக்கு நீ ஏன் உயிரற்ற பொருளைப் பலியிடுகிறாய்? அந்தக் கல்லுக்குப் பசி உண்டா? தாகம் உண்டா? உன் மனதை இறைவனுக்குப் பலியாகக் கொடு; அதை விடுத்து ஆட்டையும் மாட்டையும் ஏன் வெட்டுகிறாய்?”

இந்தக் கவிதையில் உள்ள சாடல், தமிழ்நாட்டின் சித்தர் பாடல்களோடு அப்படியே பொருந்திப் போகிறது. தமிழ் மனநிலைக்கு ஏற்ப, அந்தத் தார்மீகக் கோபத்தை (Righteous anger) மொழிபெயர்ப்பில் குறையாமல் கடத்தியுள்ளார்.

இறைவனை வெளியில் தேடி அலைந்து, இறுதியில் அவன் தனக்குள்ளேயே இருப்பதை உணர்ந்த லால் டெத்தின் தவிப்பை கோபாலகிருஷ்ணன் மிக அழகாகத் தமிழ்ப்படுத்தியுள்ளார்.

“காடுகளையும் மலைகளையும் தேடி அலைந்தேன், கால்கள் ஓய்ந்து, கண்கள் மங்கிப் போயின. இறுதியில் என் இதயக் கமலத்தைத் திறந்து பார்த்தேன்; அங்கே, எனக்காகக் காத்திருந்தான் என் நாதன்.”

‘இதயக் கமலம்’, ‘நாதன்’ போன்ற வார்த்தைகள் தமிழ் பக்தி இலக்கிய மரபிற்கு (சைவத் திருமுறைகள்) மிகவும் நெருக்கமானவை. காஷ்மீரி மொழியின் ஆன்மீகக் குறியீடுகளைத் தமிழ் பக்தி மரபோடு இணைத்து, ஒரு சொந்த மண்ணின் பாடலைப் படிப்பது போன்ற உணர்வை கோபாலகிருஷ்ணன் ஏற்படுத்தியுள்ளார்.

சிவமும் சக்தியும் ஒன்றே, பிரபஞ்சம் முழுவதும் அவனின் நடனமே என்பதை லால் டெத் பாடிய வரிகளின் மொழிபெயர்ப்பு:

“அவனே சூரியன், அவனே சந்திரன்; அவனே காற்றாகவும் நீராகவும் இருக்கிறான். அவனே படைப்பவன், அவனே அழிக்கிறவன்; இதை உணர்ந்துகொண்டால், உனக்கு மரணமேது?”

லால் டெத்தின் ‘வாக்குகள்’ காஷ்மீரி மொழியில் எப்படி ஒரு புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோலத் தமிழில் சித்தர்களின் பாடல்கள் புரட்சியை ஏற்படுத்தின. கோபாலகிருஷ்ணன் லால் டெத்தின் கவிதைகளுக்குத் தமிழ் சித்தர்களின் பாணியிலான (Siddhar Style) ஒரு வடிவத்தைக் கொடுத்துள்ளார். இதனால் கவிதைகள் அந்நியப்பட்டுப் போகாமல், நம் பாடல்களாகவே மாறுகின்றன.

லால் டெத்தின் தனிமை, அவரது இல்லற வாழ்க்கையின் துயரம், இறைவனுக்காக அவர் உருகிய ஆன்மீகக் காதல் ஆகிய உணர்ச்சிகள் (Emotions) துளிக்கூட வீரியம் குறையாமல் தமிழில் கொண்டுவரப்பட்டுள்ளன.

காஷ்மீரி சைவத்தின் மிகக் கடினமான தத்துவக் குறியீடுகளை (Chitt, Shunya, Anahata) தமிழ் வாசகர்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் சொற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

எம். கோபாலகிருஷ்ணன் அவர்களின் மொழிபெயர்ப்பு காஷ்மீரின் பனிமலைகளில் உதித்த ஒரு ஞானப் பேரொளியைத் தமிழின் மென்காற்றில் கலக்கச் செய்த ஒரு உன்னதமான கலைப்படைப்பு!

கொடுங்காற்றில் ஒரு விளக்கு -லல்லாவின் கவிதைகள். 

எம். கோபாலகிருஷ்ணன்.

பதிப்பகம் :நூல்வனம் 

Reference :

Lal Ded: The Great Kashmiri Saint-Poetess – Dr. S.S. Toshkhani

I, Lalla: The Poems of Lal Ded by Ranjit Hoskote

***

அ.முனவர் கான் –  தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். சமீபத்தில் “காபி ஆறுவதற்கு முன்” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் முகவரி: amkhansrv@gmail.com

கலை இலக்கிய விமர்சனம்: தரமதிப்பீட்டைக் கடந்த சமூக அழகியல் நடைமுறை!

ரூபன் சிவராஜா

டைப்புகளின் வடிவங்கள் எவையாக இருப்பினும், அவை வாசிக்கும் ஒரு புத்தகம் பற்றியோ, பார்க்கும் ஒரு திரைப்படம் பற்றியோ, அரங்கப்படைப்புகள், நாடகங்கள் குறித்தோ, ஓவியங்கள், சிற்பங்கள் பற்றியோ எழுதுவதற்கு அடிப்படையாக அப்படைப்புகள்; மனதில் ஏதேனும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும். அனுபவத்தினைக் கடத்தவேண்டும், அல்லது அவற்றின் பிரதிபலிப்பு கவனத்தை ஈர்ப்பதாக, சமூகப் பயன்பாடு மிக்கதாக, கலைத்துவ அழகியல் மிக்கதாக என அதன் ஏதோ ஒரு படைப்பாக்கக்கூறு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். மனித மனங்களை, வாழ்வை, மனிதர்களுக்கிடையிலான உறவைப் பிரதிபலிக்கவேண்டும். மனிதர்களுக்கும் – சமூகத்திற்கும், மனிதர்களுக்கும் – அரசியலுக்கும், மனிதர்களுக்கும் – இயற்கைக்கும், மனிதர்களுக்கும் – உலகத்திற்கும் இடையிலான எனவான ஏதோவொரு உறவு சார்ந்த அம்சங்களைக் கொண்டதாகவும், தாக்கங்களைச் செலுத்துவதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய அக-புறத் தாக்கங்களுடைய அளவுகோலின் அடிப்படையிலேயே கலை இலக்கியங்கள் சார்ந்த விமர்சனங்கள் எழுதப்படுவதற்கான உந்துதல் ஏற்படுகின்றது.

கலை என்பது மனித மனதின் வெளிப்பாடு, கலை அகம் சார்ந்தது, சுயம் சார்ந்த தேடலோடு தொடர்புடையது. ஒரு மனதை, அதன் உணர்வை இன்னொரு மனதுக்கு புலப்படுத்தும் மொழி. ஆழ்மன உணர்வினைக் கருத்து நிலையுடனும் அழகுத் தன்மையுடனும் சாத்தியமான வடிவங்களைத் தெரிந்தும் புதிதாகக் கண்டடைந்தும் வெளிப்படுத்துவது கலைகளினதும் படைப்பாக்கங்களினதும் அடிப்படை அம்சம் என்றாகின்றது. ஆத்மார்த்தமான ஈடுபாடு, படைப்பாற்றல், மீறல், துணிவு என்பன நல்ல படைப்பாளிக்குரிய அடையாளங்கள்.

கலை இலக்கிய விமர்சனம் என்பது கலையின் தரம், வடிவம், பேசுபொருள், சமகாலப்பொருத்தம், சமூக, வாழ்வியல் பிரதிபலிப்பு ஆகியன குறித்த மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது. கலை இலக்கிய வரலாற்று அறிவையும் சமகாலக் கலை இலக்கியம் பற்றிய புரிதலையும் அடிப்படையாகக் கொண்டது. அத்தோடு ஆக்ககர்த்தாவின் நோக்கம் (பேசுபொருள்), வெளிப்பாட்டு உத்திகள், படைப்பின் அழகியல், கலைத்துவம், மற்றும் படைப்பாக்கச் செயற்பாட்டின் நோக்கத்தை நிறைவு செய்வதற்கான அம்சங்களையும் உள்ளடக்கியதாகும்.

அறிமுகம்

இந்த கட்டுரை கலை இலக்கிய விமர்சனத்தின் அடிப்படை இயல்பை ஆராய விழைகிறது. ஒரு படைப்பின் தரத்தை மதிப்பிடுவதற்கு அப்பால் விமர்சனம் எவ்வாறு படைப்பு, வாசகர், விமர்சகர் மற்றும் பொதுவெளி ஆகியவற்றுக்கிடையில் அர்த்தமுள்ள உரையாடல் வெளியினை உருவாக்குகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது. மனித அனுபவத்தில் கலை இலக்கியம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் விமர்சனத்தின் அவசியத்தையும் விவரிக்கிறது. அதற்குத் துணையாக ஐரோப்பிய கலை மற்றும் இலக்கிய விமர்சனத்தின் வரலாறு, அதன் வளர்ச்சி, தரம் குறித்த விவாதங்கள், காலப்பரிமாணம், அழகியல் மதிப்பீடு, விமர்சனத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் சமூகப் பரிமாணம் ஆகியவற்றை ஆராய்கிறது. அதன்பின் கிறிஸ்டோபர் ஜூல்-லார்சன் (Kristoffer Jul-Larsen), போர்தியு (Bourdieu), கந்த் (Kant), ஹாபர்மாஸ் (Habermas) போன்ற சிந்தனையாளர்களின் பார்வைகள் மற்றும் மார்க்சிய இலக்கிய விமர்சன மரபின் கோட்பாட்டுப் பங்களிப்புகள் வழியாக விமர்சனத்தை சமூக, வரலாற்று மற்றும் கலைத்துவ அழகியல் நடைமுறையாகப் புரிந்துகொள்ள முயல்கிறது.

கலை மற்றும் இலக்கிய விமர்சனம் என்பது வெறும் தரமதிப்பீடு மட்டுமல்ல; அது படைப்புக்கும் விமர்சகருக்கும் பொதுவெளிக்கும் இடையில் ஓர் அர்த்தமுள்ள வெளியை அல்லது பிணைப்பினை உருவாக்கும் சமூக மற்றும் அழகியல் நடைமுறையாகும்.

விமர்சனத்தின் வரலாறு: ஒரு சுருக்கம்

ஐரோப்பியக் கலை விமர்சனத்தின் தொடக்கப்புள்ளி மறுமலர்ச்சிக் காலத்தில் (The Renaissance: 1450 – 1600) தோன்றியது. 17ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு கலைக் கழகங்களில் (art academies) கலைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த விவாதங்கள், பின்னர் கட்டுரைகளாகவும் உரையாடல்களாகவும் இலக்கிய வடிவம் பெற்றன. 18ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியக் கண்காட்சிகள் (exhibition activity) பொதுவானதாக மாறிய பிறகே, இன்று நாம் அறியும் வழக்கமான கலை விமர்சனம் தோன்றியது. பாரிஸில் 1746 இல் நடந்த கண்காட்சி குறித்து எழுதப்பட்ட லா ஃபான்ட் டி செயின்ட்-யென்னின் (La Font de Saint-Yenne) ‘Réflexions’ என்பதே இவ்வகையிலான முதல் கலை விமர்சனமாகக் கருதப்படுகிறது. பத்திரிகைத்துறையின் வளர்ச்சியால் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் கலை விமர்சனம் இலக்கியப் பரப்புகளில் பிரதான இடத்தைப் பிடித்தது. கலைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு தத்துவார்த்தப் பாலமாக விமர்சகர்கள் செயற்பட்டனர். விமர்சனச் செயற்பாட்டினூடு புதிய கலை வடிவங்களை ஆதரிப்பதிலும் பொதுமக்களின் கருத்துக்களை உருவாக்குவதிலும், கலை இலக்கியங்கள் குறித்த கருத்துருவாக்கங்களிலும் முதன்மையான பங்கினை விமர்சகர்கள் வகிக்கத் தொடங்கினர்.

காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறிவரும் இலக்கிய முக்கியத்துவம், பெறுமதி குறித்த அளவுகோல்களின் அடிப்படையில், இலக்கியப் படைப்புகளை மதிப்பிடுவதும், ஒப்பிடுவதும், அவற்றின் அழகியல், நுகர்வுச்சுவை குறித்த மதிப்பீடுகளை முன்வைப்பதும் கலை இலக்கிய விமர்சனத்தின் முக்கிய பணி. அவை தருணங்களில் அவற்றின் பயன்பாட்டுப்பெறுமதி சார்ந்த நோக்கங்களான அறிவுசார் பண்படுத்தல், அறிவுத் தேடலை முன்னிறுத்தியதாகவும், வேறு சில தருணங்களில் கட்டமைப்பு, மொழிநடை, வெளிப்பாட்டுச்சீர்மை, படைப்புநேர்த்தி உள்ளிட்ட அழகியல் அளவுகோல்களை முன்னிறுத்தியும் இயங்குகின்றது. புத்தகங்கள் அவற்றின் இலக்கியப் பெறுமதியையும் பேசுபொருளையும் மையமாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன. எதன் பொருட்டு, எந்த விளைவு கருதி அவை உருவாயினவோ, அந்தச் சமகாலச் சூழல் மற்றும் சமூக வாழ்வியலுடன் ஒப்புநோக்கியும் புத்தகங்கள் மதிப்பிடப்படுகின்றன.

கலை உலகில் மதிப்பீடு சார்ந்த பொதுச்சொல்லாக ‘தரம்’ விளங்குகின்றது. அதன் அளவுகோல்கள் மாறுபட்டாலும், தரம் எனும் கருத்தாக்கத்திற்கு ஒரு துல்லியமான உள்ளடக்கத்தை வழங்குவது கடினமானது எனும் போதும் மதிப்பீடு, விமர்சனம் என்று வரும்போது குறித்த கலை இலக்கியத்தின் தரம் பற்றிய மதிப்பீடு முக்கியமானது. தரம் என்பது இரண்டு தளங்களில் இயங்குகின்றது. ஒன்று படைப்பின் ஆக்க உத்திகள், கலைத்து அழகியல் கூறுகளின் தரம். மற்றையது கருத்தியல்(பேசுபொருள்) சார்ந்தது.

காலப் பரிமாணம் (Time/Temporal perspective)

சமகால கலையைத் தரமதிப்பீடு செய்வது கடினம் என்கிறார் நோர்வேஜிய கலைத்துறை வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான ஜோருன் வெய்பெர்க் (Jorunn Veiteberg). தரம் குறித்த துல்லியமான ‘தீர்ப்பை’ வழங்குவதற்கான நிபந்தனையாகக் கால இடைவெளி அவசியமாகிறது. இன்று உலகளவில் போற்றப்படும் பல்வேறு உலகக் கலைஞர்கள், படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் (மொனே – Monet), டெகாஸ் – Degas, ரெனுவார் – Renoir) மற்றும் வான்கோ (Van Gogh) தங்களின் சமகாலத்தில் நிராகரிக்கப்பட்டவர்களாக அல்லது கவனிக்கப்படாதவர்களாகவே இருந்தனர் என்பதை அவர் இதற்குச் சான்றாகக் காட்டுகிறார். கலையின் தரத்தினை ஒப்பீட்டு மற்றும் அதன் சமகாலச் சூழலின் அடிப்படையிலேயே மதிப்பிட முடியும் என்று அவர் கருதுகிறார்.

வாழும் காலத்தில் நிராகரிக்கப்பட்ட உன்னத படைப்பாளிகள் பலரை நமது தமிழ்ச் சூழலிலும் நாம் எடுத்துக்காட்டாகக் கூறலாம். பிந்திய உதாரணமாகப் பாரதியை, புலமைப்பித்தனைக் குறிப்பிடலாம். 

மற்றுமோர் கலைத்துறை வரலாற்றாசிரியர் டொம்மி சோர்போ (Tommy Sørbø) ஒரு சாராம்சவாத (essentialist) நிலைப்பாட்டுடன், ‘தரம்’ என்பது படைப்பிற்குள்ளேயே அமைந்திருக்கும் ஓர் உள்ளுறை பண்பாக இருக்க வேண்டும் என்கிறார். கலை என்று அழைக்கப்படும் ஏனையவற்றை கருத்தியல் கலை (conceptual art) என விமர்சிக்கிறார் 

கலையின் ஜனநாயகமயமாக்கலும் சமூகவியல் மாற்றங்களும்

பொதுவாக உலகளவில் 1970கள் வரை, எது நல்ல கலை, எது நல்ல ரசனை என்பது குறித்த பரந்த உடன்பாடு உயரடுக்குக் கலாச்சாரத்தின் ஆதிக்கத்தால் தீர்மானிக்கப்பட்டது. 1970 களுக்குப் பின் இந்நிலை மாற்றமடையத் தொடங்கியது. கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதாகவும் ஜனநாயகப் பண்புடையதாகவும் மாறியதுடன், காலப்போக்கில் பல்வேறு கலை, இசை, இலக்கிய வடிவங்களை உள்ளடக்கியதாக அது விரிவடைந்தது. அதிகமானோர் உயர்கல்வி பெற்று கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்;. அதே நேரத்தில், அவர்கள் பாரம்பரிய முதலாளித்துவ (bourgeois) கலாச்சாரத்திற்கு அப்பால் விரிந்த முன்னுரிமைகளைத் தம்மோடு கொண்டு வந்தனர்.

சமகால விமர்சனங்களில் படைப்பின் அசல் தன்மை (originality), அறிவுசார் அம்சம் மற்றும் பார்வையாளரின் மீது படைப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் போன்ற அளவுகோல்களே தர நிர்ணய அடிப்படைகளாக இருக்கவேண்டுமென்ற வலுவான பார்வை நிலவுகின்றது. இதனை இன்னொரு வகையில் சொல்வதானால் இன்றைய கலை விமர்சனம் என்பது வெறும் தீர்ப்பு வழங்குவதை விட, கலையுடனான ஊடாட்டத்தை விளக்குவதிலும் கடத்துவதிலும் வியாக்கியானங்களை முன்வைப்பதிலுமே கூடுதல் கவனம் செலுத்துகிறது.

பரந்த தேடலும் அறிதலும் அனுபவத்தின் ஊடாகவும் கலை இலக்கியப் புரிதலை வளர்த்துக்கொள்வது ஒரு விமர்சருக்கு இன்றியமையாததாகும். விமர்சகர் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பது ஏற்புடைய கருத்து அல்ல. ஒரு காற்பந்துப் போட்டியைப் புரிந்துகொள்வதற்கு அதன் விதிகளை அறிந்திருக்க வேண்டியது எத்தகைய அவசியமோ, அதைப் போலவே கலையை மதிப்பிடுவதற்கும் இரசிப்பதற்கும் அறிவும் அனுபவமும் இன்றியமையாதவை ஆகும்.

விமர்சனப் பார்வைகள், கோட்பாடுகள், எல்லைகள்

இலக்கிய விமர்சன ஆய்வுத்துறையில் பல்வேறு வகையான பார்வைகள், கோட்பாடுகள் உள்ளன. இவை நமக்கான சாத்தியப்பாடுகளின் எல்லைகளை (வாய்ப்புகளை) விரிவாக்குகின்றன. பெரும்பாலும் இலக்கிய விமர்சனத்தின் மீதான ஆர்வம், முற்றிலும் நேர்மாறாகத் தோற்றம்காட்டும் இரண்டு பார்வைகளுக்கு இடைப்பட்ட புள்ளியிலேயே வெளிப்படுகிறது. ஆனால், உன்னிப்பாகக் கவனித்தால் அவை ஒன்றையொன்று இட்டுநிரப்புவதைக் கண்டடையலாம். அதாவது அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். சமூகவியல் சார்ந்த அதிகாரப் பார்வையும், முற்றிலும் முறைசார்ந்த/அழகியல் தர நிர்ணயப் பார்வையும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட எல்லைக்குட்பட்டவை (deterministic). 

கலை இலக்கிய விமர்சனம் குறித்த ஒரு வரைவிலக்கணத்தை பின்வருமாறு முன்வைக்கின்றார் கிறிஸ்டோபர் ஜூல்-லார்சன் (Kristoffer Jul-Larsen). இவர் மேற்கு நோர்வே அறிவியல் பல்கலைக்கழகத்தில் (Western Norway University of Applied Sciences) இலக்கியத்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஆசிரியர் கல்வித் திட்டங்களில் இலக்கியம் கற்பித்து வருகிறார். இலக்கியமானது பரந்த பொதுவெளியை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதில் அவர் கவனம் செலுத்துகிறார்;. மேலும் இலக்கிய விமர்சனம் மற்றும் விமர்சனப் பொதுவெளி சார்ந்த ஆய்வுகளோடு, ஓவியக் கலை மற்றும் அல்-புனைவு இலக்கியங்களின் (non-fiction) விமர்சகராகவும் செயற்பட்டு வருகிறார். 

இவர் பின்வரும் விமர்சனக் கோட்பாடுகளை முன்வைக்கின்றார்:

  1. விமர்சனம் ஒரு தனித்துவமான செயற்பாடு (criticism as an autonomous act)
  2. விமர்சனம் என்பது செயலுக்கான ஒரு முரண்பாட்டு வடிவம் (criticism is a paradoxical form of action)
  3. விமர்சனத்தின் இன்றியமையாத இலக்கு, அதன் வெளியை (Space) கட்டமைப்பதாகும். அந்தக் கட்டமைப்பானது இரண்டு அழகியல் உலகங்களை மூன்றாவது ஒன்றிற்குள் கடத்துவதன் (பகிர்வதன்) மூலம் வெளிப்படுகிறது.

இம்மூன்று கோட்பாடுகளையும் அவர் பின்வருமாறு விவரிக்கின்றார். 

கோட்பாடு 1 – விமர்சனம் ஒரு தனித்துவமான செயற்பாடு

விமர்சனம் என்பது வெறும் அதிகாரப் பிரயோகமோ அல்லது வெறும் மதிப்பீட்டுச் செயலோ அல்ல. தனக்கே உரிய பகுத்தறிவைக் கொண்ட ஒரு விமர்சகரால் மேற்கொள்ளப்படும் ஒரு குறிப்பிட்ட செயற்பாடாக, அது அதன் விதிகளின்படி வரையறுக்கப்பட வேண்டும். அந்த விமர்சன உறவே விமர்சனத்தின் பொருள் சார்ந்து (இலக்கியத்தின் தரம்சார் அனுபவத்தை) சிந்திப்பதை சாத்தியமாக்குகிறது.

அதில் அவர் இலக்கிய விமர்சனத்தின் தன்மை மற்றும் இயங்குதளம் பற்றி விவாதிக்கிறார். விமர்சனம் என்றால் என்ன என்பது குறித்த இரண்டு அடிப்படை வேறுபட்ட பார்வைகளை ஒப்பிடுகிறார். இரண்டு எதிரெதிர்க் கண்ணோட்டங்கள் (Two Contrasting Perspectives) அவை.

ஓன்று சமூகவியல் சொல்லாட்சிக் கண்ணோட்டம் (அதிகாரக் கண்ணோட்டம்). மற்றையது அழகியல் (தரம்) கண்ணோட்டம்). சமூகவியற் கண்ணோட்டத்தின் மையக்கருத்தானது விமர்சனம் என்பது நடுநிலையான தரம் சார்ந்தது அல்ல, மாறாக அது அதிகாரம் மற்றும் சமூக நிலையை நிலைநிறுத்துவது சார்ந்தது.இது இலக்கியத்தை ஒரு ‘சமூக ஆற்றல் களமாகப்’ பார்க்கின்ற பிரெஞ்ச் சமூகவியலாளரும் மானுடவியலாளருமான பியர் போர்டியூவின் (Pierre Bourdieu) சமூகவியற் கோட்பாட்டு பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. அழகியற் கண்ணோட்டமானது, தத்துவவியலாளர் இம்மானுவேல் கந்த் (Immanuel Kant) அவர்களின் அழகியற் கோட்பாட்டை இது குறிக்கிறது. விமர்சகர் தனிப்பட்ட அல்லது அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையாகச் செயற்படுதல் என்பது இதன் மைய அணுகுமுறை.

இலக்கிய விமர்சன ஆய்வுத்துறையில் பல்வேறு வகையான பார்வைகள், கோட்பாடுகள் உள்ளன. இவை நமக்கான சாத்தியப்பாடுகளின் எல்லைகளை (வாய்ப்புகளை) விரிவாக்குகின்றன. பெரும்பாலும் இலக்கிய விமர்சனத்தின் மீதான ஆர்வம், முற்றிலும் நேர்மாறாகத் தோற்றம்காட்டும் இரண்டு பார்வைகளுக்கு இடைப்பட்ட புள்ளியிலேயே வெளிப்படுகிறது. ஆனால், உன்னிப்பாகக் கவனித்தால் அவை ஒன்றையொன்று இட்டுநிரப்புவதைக் கண்டடையலாம். அதாவது அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

சமூகவியல் சார்ந்த அதிகாரப் பார்வையும், முற்றிலும் முறைசார்ந்த அழகியல் தரநிர்ணயப் பார்வையும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட எல்லைக்குட்பட்டவை (deterministic). 

சமூகவியற் பார்வையில் விமர்சனம் என்பது ஒரு சமூகக் களத்தில் அதிகாரத்தையும் தகுதியையும் பெறுவதற்கான ஒரு தந்திரோபாயக் கருவியாகக் குறைத்து மதிப்பிடுகிறது. இந்த மூடிய அமைப்பு சமத்துவமின்மையை மூடிமறைத்து, அதை மீண்டும் உருவாக்குகிறது என்று எழுத்தாளர் கருதுகிறார். இது ஆராய்ச்சியாளரை விதிகளைத் துல்லியமாகக் கண்டறியும் ஒரு ‘மேலாதிக்க’ நிலையில் வைக்கிறது. அதே நேரத்தில் விமர்சனம் என்பது ஒரு உண்மையான செயற்பாடாக மறைந்துவிடுகிறது. இதனால் வாசகர்கள் படைப்புடன் உரையாடுவதை விடுத்து, அதிகாரப் போட்டிகளின் செயலற்ற பார்வையாளர்களாக மாறும் நிலை ஏற்படுகிறது என்கிறார் லார்சன்.

தூய அழகியற் பெறுமதி சார் பார்வையின் (critique of the purely aesthetic value-judgment perspective) அடிப்படையிலான விமர்சனம், உதாரணமாக ஒரு புத்தகம் சிறந்ததா இல்லையா என்ற எளிய கேள்வியாக மட்டுமே வரையறுக்கிறது. இந்த அணுகுமுறை விமர்சன நுண்ணறிவை விமர்சகரின் இயற்பண்புகள் அல்லது தனிப்பட்ட உணர்திறனாகக் குறைக்கிறது. இது விமர்சனச் செயற்பாட்டைப் பற்றி விவரிப்பதற்குப் பதிலாக, ஒரு தனிநபராக விமர்சகரை வகைப்படுத்தும் உயிரியல் ரீதியான அணுகுமுறைக்கே இட்டுச்செல்லக்கூடியது. 

எழுத்தாளர் எரிக் பிஜெர்க் ஹாகனின் (Erik Bjerck Hagen) கூற்றுப்படி, ஒரு விமர்சகர் எழுதும் தருணத்தில் சமூகவியல் அதிகார அமைப்புகளைப் பற்றி சிந்திப்பதில்லை. அவர் தன்னை முற்றிலும் சுதந்திரமானவராகவே உணர்கிறார். நாம் அழகியல் ரீதியாக வர்க்கமற்ற சமூகத்தில் வாழ்வதால், சமூகவியல் பகுப்பாய்வுகள் இலக்கிய விமர்சனத்திற்குப் பயன்படாது என்பது ஹாகனின் கருத்து. சமூகவியல் பார்வைகளை ஏற்புடையவை போன்று தோன்றினாலும், உண்மையில் அவர் ‘அழகியல் வர்க்கமற்ற சமூகம்’ என்ற வாதத்தின் மூலம் சமூகவியல் நுண்ணறிவுகளை நிராகரிக்கிறார். அவரது இந்த அணுகுமுறை வெறும் போலி வெளிப்படைத்தன்மையே என்று லார்சன் விமர்சிக்கிறார்.

கோட்பாடு 2: விமர்சனம் என்பது செயலுக்கான ஒரு முரண்பாட்டு வடிவம் (criticism is a paradoxical form of action)

விமர்சனத்தின் தனித்தன்மையானது, ஒரு முரண்பாடுகள் நிறைந்த உறவில் பங்கேற்பதன் மூலம் வரையறுக்கப்படும் ஒரு விமர்சனக் காரணியின் (critical subject) இருப்பைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. விமர்சனம் என்பது ஒரு முரண்பாடான செயல் வடிவமாகும்

எத்தகையதொரு காரணி? இது எத்தகையதொரு உறவு?

இதற்கான ஒரு தொடக்கப்புள்ளியை வொல்ஃப்காங் வான் கொதே (Goethe) அவர்களின் மேற்கோள் ஒன்றிலிருந்து நாம் கண்டடைநயலாம் என விவரிக்கின்றார் லார்சன். ஜோஹான் வொல்ஃப்காங் வான் கொதே (Johann Wolfgang von Goethe, 1749 – 1832) ஒரு ஜெர்மன் எழுத்தாளரும் தத்துவவியலாளருமாவர். ஜெர்மன் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளராகவும், உலக அளவில் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். அவர் 1819இல் நாடகாசிரியரும் விமர்சகருமான யோஹான் ஃபிரீட்ரிஹ் ரோச்லிட்ஸுக்கு (Johann Friedrich Rochlitz) எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ‘மூன்று வகையான வாசகர்கள் உள்ளனர்: 

முதல் வகையினர் எந்தவொரு மதிப்பீடும் செய்யாமல் வெறுமனே வாசிப்பின் இன்பத்திற்காக வாசிப்பவர்கள். 

இரண்டாம் வகையினர் வாசிப்பின் இன்பத்தை நுகராமல் வெறுமனே மதிப்பிடுபவர்கள்;.

இவ்விருவருக்கும் இடையில், வாசிப்பின் இன்பத்தை நுகர்ந்துகொண்டே மதிப்பிடுபவர்களும், மதிப்பிட்டுக்கொண்டே வாசிப்பின் இன்பத்தை நுகருபவர்களுமான மூன்றார் வகையினர் இருக்கிறார்கள்.

இவர்களே உண்மையில் ஒரு புதிய கலைப்படைப்பை உருவாக்குகிறார்கள்.’ வாசகப் பிரிவின் மூன்றாம் வகையினரான இந்த ‘இடைநிலையைச்’ சுட்டிக்காட்டுவது, விமர்சனத்தின் முரண்பாடான வடிவத்தின் ஒரு கூற்றினைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. அதே வேளையில், விமர்சகரை ஒரு பிறவி மேதை அல்லது ஆற்றல்மிக்க தனிநபராகக் காணும் சிந்தனையோடு இது மிகவும் நெருங்கிப் போவதால், விமர்சனத்தை ஒரு செயற்பாடாக விளக்குவதற்கும் வியாக்கியானப்படுத்துவதற்கும் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவது கடினமாகிறது என்கிறார் Jul-Larsen. 

கலை விமர்சனத்தின் எழுச்சி மற்றும் விமர்சகரின் செயற்பாடு குறித்து ஜெர்மனிய தத்துவவியலாளர் ஜூர்கன் ஹாபர்மாஸ் (Jürgen Habermas) இப்படி விளக்குகிறார்: 

‘விமர்சகர் என்பவர் ஒரு விசித்திரமான, முரண்போக்கு பணியைக் கொண்டிருக்கிறார். அவர் தன்னைப் பொதுமக்களின் பிரதிநிதியாகவும் அதே நேரத்தில் அவர்களுக்கு கற்பிப்பவராகவும் தன்னை உணர்கிறார்’. 

ஹாபர்மாஸின் இந்த விளக்கம் முக்கியமானது. அவர் விமர்சகரின் வரலாற்று ரீதியான தோற்றத்தை வலியுறுத்துகிறார். கொதே முன்வைக்கின்ற வாசகரது முரண்பாடான செயல்களான ‘இன்பம் நுகர்தல் மற்றும் மதிப்பிடுதல்’ என்பது, விமர்சன நிறுவனத்தின் முதன்மைச் செயற்பாடுகளான ‘பிரதிநிதித்துவம் மற்றும் கல்வியூட்டல்’ என்ற வடிவில் வெளிப்படுத்தப்படுகிறது. ஹாபர்மாஸ் இதனை ஒரு முரண்போக்குப் பணி என்று அழைக்கிறார்;. இந்த அடிப்படையான முரண்பாட்டை இல்லாது ஒழிக்கும் முரண்போக்கின் நகர்வுகள் மூலம் இக்கேள்வியை விளக்கிவிட முடியாது என்கிறார் Kristoffer Jul-Larsen. ஹாபர்மாஸ் சித்தரிக்கும் இந்த முரண்பாடான உறவை ஒருபோதும் தீர்க்க முடியாது. அது அடிப்படையிலேயே ஒரு முரண்பாடான சிக்கலாகும் (paradoxical). Kristoffer Jul-Larsen அவர்களின் புரிதலின்படி, கல்வியூட்டலும் பிரதிநிதித்துவமும் விமர்சகரின் வகிபாகத்தின் இக்கட்டான முடிச்சினைத் தவிர வேறெந்தவொரு பொதுவான புள்ளியிலும் சந்தித்துக்கொள்ள முடியாது.

விமர்சகரின் முரண்பாடு என்பது ஒரே பொதுமக்களுக்கு ஒரே நேரத்தில் பிரதிநிதியாகவும் கல்வியூட்டுபவராகவும் செயற்படும் அவரது இரட்டை வகிபாகத்தில் அடங்கியுள்ளது. இது பல இணையான முரண்பாடுகளை உருவாக்குகிறது. விமர்சகர் சமூகத்தின் (பொதுமக்களின்) ஒரு பகுதியாக இருக்க வேண்டும்; அதே நேரத்தில் அவர்களுக்குக் கல்வியூட்டுபவராகவும் செயற்பட வேண்டும். அவர் தாக்கம் செலுத்தும் ஒரு காரணியாகவும் இருக்கிறார், அதே வேளையில் அத்தாக்கத்திற்கு உள்ளாகும் பொதுமக்களின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார். விமர்சகர் ஒரே நேரத்தில் இலக்கிய அனுபவத்திற்குள் முற்றிலும் மூழ்கிய ‘விமர்சனமற்றவராகவும்’, அதே நேரத்தில் அதனை மதிப்பிடுவதற்கேற்ப விலகி நிற்கும் ‘விமர்சனக் கூர்மையுள்ளவராகவும்’ இருக்க வேண்டும் (மதிப்பிடும் போதே இன்பம் நுகரும் ‘கொதே’யின் முன்மாதிரி வாசகரைப் போல). இந்த இரட்டை நிலையானது, பிளாட்டோ விவரிக்கும் ஜனநாயகக் காரணியின் (democratic subject) தன்மையோடு ஒத்துப்போகிறது. அதாவது, பிறப்பு அல்லது தகுதிகளின் அடிப்படையில் அமையும் அதிகாரத்திற்கு மாறாக, தீவிரமான சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஆளுபவராகவும் ஆளப்படுபவராகவும் இருக்கும் நிலையாகும். 

அனுபவ ரீதியான விமர்சகர்கள் பெரும்பாலும் தங்களது அறிவு மற்றும் தனிப்பட்ட திறன்களின் மூலமே தங்களை நிலைநிறுத்த முயல்கிறார்கள். இந்த முரண்பாடான உறவைத் தவிர்த்துவிட்டு விமர்சன நிறுவனத்தை (The institution of criticism) புரிந்து கொள்ள முடியாது என்றே Kristoffer Jul-Larsen வாதிடுகிறார். இந்த முரண்பாடு என்பது நடைமுறையில் தீர்க்கப்படக்கூடிய ஒரு இலட்சிய இலக்கு அல்ல, மாறாக விமர்சனம் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான அடிப்படைத் தத்துவமாகும். கலைப்படைப்பின் தனித்துவத்தையும் அந்நியத்தன்மையையும் தன்னிச்சையான வாசிப்பின் மூலம் விமர்சகர் கடத்தும் கணப்பொழுதுகளில் மட்டுமே இது முதன்மையாக வெளிப்படுகிறது.

கோட்பாடு 3: விமர்சனத்தின் இலக்கு, ‘வெளி’யைக் கட்டமைத்தல்

விமர்சனத்தின் முதன்மைப் பணி என்பது அதற்கேயுரிய ஒரு சமூக வெளியை வடிவமைப்பதாகும் (The configuration of one’s own space). இரண்டு அழகியல் உலகங்களை ஒரு மூன்றாவது உலகிற்குக் கடத்தும் ஒரு சமரசப் அணுகுமுறையின் மூலமே இவ்வடிவமைப்பு நிகழ்கிறது. அழகியல் அனுபவத்தைக் கடத்துவதென்பது, ஒவ்வொரு படைப்பும் கொண்டுள்ள தரம் குறித்த உள்ளார்ந்த முன்வைப்பிற்கும், இலக்கிய நிறுவனம் வலியுறுத்தும் பொது உடன்பாட்டிற்கும் (consensus) இடைப்பட்ட ஒரு பதட்டத்திற்குள் ஊடாடுவதாகும். இலக்கியப் படைப்பின் தனித்துவம் (singularity), வாசகர்-பார்வையாளரின்(நுகர்வோர்) விளக்கம் மற்றும் சமூக அனுபவம் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்திலேயே விமர்சன வெளி வடிவமைக்கப்படுகிறது. இதனால் விமர்சனம் என்பது ஒரு கட்டுப்பாட்டுக் கருவியாகவும், படைப்பு முழுமைபெறும் இடமாகவும், பொதுமக்களின் எதிர்வினை வடிவம் பெறும் தளமாகவும் ஒரே நேரத்தில் செயற்படுகிறது.

ஏலவே கட்டமைக்கப்பட்ட ஒரு பொதுவெளியில் இயங்குவதற்குப் பதிலாக, விமர்சனம் என்பது இன்னும் முழுமைபெறாத ஒரு சமூகத்தில் தொடர்ந்து புதிய நிலைகளை உருவாக்குவதற்கான ஒரு போராட்டமாகும். ஓர் அழகியல் நிகழ்வின் மீதான விமர்சகரின் மகிழ்ச்சி அல்லது வெறுப்பின் வெளிப்பாடானது, மனிதகுலத்தின் அனைத்து அழகியல் உலகங்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு பிணைப்பிற்கான பிடிவாதமான வலியுறுத்தலைத் தன்னுள் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்புச் செயல்முறையின் வெளி நிறுவனமயமாக்கப்பட்டு விடுகிறது (institutionalised). இது விமர்சனத்தை ஒரு சமூகவியல் மற்றும் அணியிலக்கண விளையாட்டுக்குள் முடக்கி, ஒரு ஒற்றைத் தீர்ப்பை நோக்கிய குறுகிய தேடலாக அதைச் சுருக்குகிறது.

இந்த மூன்று கோட்பாடுகளின் விளைவானது, இலக்கிய விமர்சனம் என்பது ஒரு குறிப்பிட்ட தனித்துவமான நடைமுறையாக (specific practice) என்னவாக இருக்கிறது என்பதையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. அத்தோடு பிரதிநிதித்துவம் மற்றும் கல்வியூட்டல் சார்ந்த ஒரு கருவியாக விமர்சனம் கொண்டுள்ள இந்த முரண்பாடான நிலை விமர்சனத்திற்கு ஒரு கடத்தும் கருவியாகச் செயற்படும் ஆற்றலை வழங்குகிறது. விமர்சனம் என்பது அதன் இறுதிநோக்கில் படைப்பிற்கும் வாசகருக்கும் இடையில் மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு இடையிலும் பிணைப்பை ஏற்படுத்துகிறது.

மார்க்சிய இலக்கிய விமர்சனம்

மார்க்சியத்தின் செல்வாக்கிற்கு உள்ளாகாத சமூக, அறிவியற் துறைகளைக் காண்பது அரிது. விமர்சன அணுகுமுறை சார்ந்த மார்க்சிய நிலைப்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மார்க்சிய இலக்கிய விமர்சனம் (திறனாய்வு) என்பது இலக்கியப் படைப்பை ஒரு குறிப்பிட்ட பொருளாதார மற்றும் சமூகச் சூழலின் வெளிப்பாடாகப் புரிந்துகொள்கிறது. அத்தோடு வரலாற்று ரீதியானதும்; கருத்தியல் விமர்சனம் சார்ந்ததுமான ஒரு இலக்கியச் சமூகவியலாகச் (sociology of literature) செயற்படுகிறது. நெறிமுறைகளையும் சமூகப் பார்வையும் (Basic Principles and Social View) அடிப்படையாகக் கொண்ட கருத்தியலைத் தாங்கி நிற்கும் இலக்கியம் (Literature as a Bearer of Ideology) மார்ச்சியப் பார்வையில் முதன்மையானது. அடித்தளமும் மேல்கட்டுமானமும் (Base and Superstructure) என்ற கருத்தியல் இங்கு முக்கியமானது. கார்ல் மார்க்ஸின் கூற்றுப்படி, அனைத்துச் சமூகங்களும் ஒரு பொருள்சார் மற்றும் பொருளாதார அடித்தளத்தைக் (உற்பத்தி அமைப்பு) கொண்டுள்ளன. இதன் மீது கலை, மதம், சட்டம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுக் கட்டமைப்புகளின் மேற்கட்டுமானம் எழுகிறது. அடித்தளமும் மேற்கட்டுமானமும் ஒரு சிக்கலான, ஒன்றில் மற்றொன்று செல்வாக்குச் செலுத்தும் வகையில் (இயங்கியல் – dialectics) இணைந்துள்ளன. இதில் நிகழும் பண்பாட்டு மாற்றங்கள் காலப்போக்கில் பொருளாதாரக் கட்டமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது மார்க்சிய சிந்தனை..

கலை மீதான நெறிமுறை சார் பார்வை (A normative view of art):

மார்க்சியக் கோட்பாட்டின் வரம்பிற்குள், படைப்பிலக்கியங்கள் எவ்வளவு தூரம் அரசியல் ரீதியாகச் செயற்படக்கூடியன என்ற அடிப்படையிலேயே பெரும்பாலும் அவற்றின் பெறுமதியும் தரமும் அளவிடப்படுகின்றன. வறியோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் (முதன்மையாக உழைக்கும் வர்க்கத்தின்) நலனுக்காக வர்க்க முரண்பாடுகள், அதிகார உறவுகள் மற்றும் சமூக மோதல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதே கலையினதும் எழுத்தாளரினதும் மிக முக்கியமான பணியாகும். சமூகத்தின் முரண்பாடுகளை மறைத்து, தொழிலாளர்கள் தங்களின் புறநிலை சார்ந்த வர்க்க நலன்களுக்கு ஏற்பச் செயற்படுவதைத் தடுக்கும் ஒடுக்குமுறைச் சித்தாந்தங்களை வெளிப்படுத்துவதன் மூலம், வாசகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களை அணிதிரட்டவும் இலக்கியம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போலி விழிப்புணர்வை அம்பலப்படுத்துதல் (exposure of false consciousness) எனப்படுகிறது.

சமூக மற்றும் பொருளாதார உற்பத்தி உறவுகளைப் பற்றிய விரிவான, யதார்த்தமான சித்தரிப்புகளை வழங்குவதற்கான பரந்த வெளியைக் கொண்டிருப்பதால், யதார்த்தவாத நாவல்கள் (realistic novels) மார்க்சிய விமர்சகர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்றன. அதே வேளையில், கவிதை போன்ற வடிவங்கள் யதார்த்தத்திலிருந்து தப்பித்தோடும் ஒரு முதலாளித்துவ வர்க்கச் செயற்பாடு (bourgeois escapism) என்றும் சில மார்க்சிய அறிஞர்களால் விமர்சிக்கப்படுகின்றன.

மார்க்சிய கலைக் கோட்பாட்டுச் சிந்தனை மரபு

மார்க்சிய கலைக் கோட்பாட்டின் முக்கிய சிந்தனையாளர்களின் கூற்றுகளை முன்வைத்து மார்க்சிய விமர்சன அணுகுமுறையின் முதன்மையான தத்துவார்த்தப் போக்குகளைப் புரிந்துகொள்ளலாம். சமூக முரண்பாடுகளை மூடிமறைப்பதற்கும், மக்களைக் கீழ்ப்படிதலுக்குள் வைத்து கையாளுவதற்கும் (manipulate) சாதகமான முறையில் வெகுஜனக் கலாச்சாரத்தையும் பொழுதுபோக்கையும் நவீன முதலாளித்துவம் நுகர்பொருட்களாகப் பயன்படுத்துகின்றது என்று அடோர்னோ, ஹோர்க்ஹைமர் (Adorno, Horkheimer) போன்ற சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டினர். ஆனபோதும் தியோடர் டபிள்யூ. அடோர்னோ (Theodor W. Adorno) நவீனத்துவ மற்றும் பரிசோதனை முயற்சிக் கலைகளை (modernist and experimental art) ஆதரித்தார். ஏனெனில் அத்தகைய கலைகள் தங்களின் எதிர்மறைத் தன்மையின் (negation) மூலம் தற்போதுள்ள சமூக ஒழுங்கிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன என்று அவர் கருதினார். இலக்கியத்தின் உண்மையான சமூகக்கூறு அதன் வடிவத்திலேயே (form) அமைந்துள்ளது என்று ஹங்கேரிய விமர்சகரான கியோர்ஜி லூகாச் (György Lukács) கருதினார். நவீனத்துவத்தின் துண்டாடப்பட்ட மற்றும் அகவயமான உலகப்பார்வைக்கு (subjective worldview) ஒரு மாற்றாகவும், ஒரு முழுமையாகவும் (totality) அவர் யதார்த்தவாதத்தை (realism) முன்னிறுத்தினார்.

லூசியன் கோல்ட்மன் வலியுறுத்துகின்ற மரபணு சார்ந்த அமைப்பியல்வாதம் (Lucien Goldmann – Genetic Structuralism):

லூசியன கோல்ட்மேன் ‘வடிவ ஒத்திசைவு’ (structural homology) என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார். ஒரு இலக்கியப் படைப்பின் வடிவத்திற்கும், எழுத்தாளர் சார்ந்திருக்கும் சமூக வர்க்கத்தின் மன அமைப்புக்கும் (உலகப்பார்வைக்கும்) இடையே கட்டமைப்புசார் ஒருமித்த தன்மை இருப்பதாக அவர் வாதிட்டார். ரேமண்ட் வில்லியம்ஸ், கலாச்சாரப் பொருள்முதல்வாதம் (Raymond Williams and cultural materialism) குறித்துப் பேசுகின்றார். கலாச்சாரம் என்பது வெறும் மேல்நிலைக்கட்டமைப்பின் ஒரு செயலற்ற விளைவு அல்ல, மாறாக கலாச்சாரம் என்பதே ஒரு பொருள்வயச் செயற்பாடு (material activity) என்று வில்லியம்ஸ் வாதிட்டார்.

லூயிஸ் அல்தூசர், பியர் மஷேரி (Louis Althusser and Pierre Macherey)

கலை என்பது சித்தாந்தத்திற்குள் (ideology) கட்டுண்டு இருக்கும் ஒரு வடிவம் என்றும், அதே நேரத்தில் அது சித்தாந்தத்திலிருந்து ஒரு தூரத்தைப்பேணி நின்று, அச்சித்தாந்தத்தின் தன்மையை நாம் உணரச் செய்கிறது என்றும் அல்தூசர் விவரித்தார். சித்தாந்தத்தின் இருப்பு என்பது உரைநடையின் (text) ‘அர்த்தமுள்ள மௌனத்தில்’, அதாவது அவ்வுரையால் எதைச் சொல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறதோ அதில் மிக முக்கியமாக உணரப்படலாம் என்பதை மஷேரி அழுத்தமாகக் கூறினார். இக்கோட்பாடு, அழகியல் அளவுகோல்களைப் புறக்கணித்து வரலாற்று ரீதியான கருத்தியல்மயப்படுத்தலுக்கும் கோட்பாட்டு உள்ளடக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு என கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. அழகியல் நோக்கில் படைப்பினது சிக்கல்கள் மற்றும் கலைத்துவத்தினை கவனம் கொள்ளாத அணுகுமுறை என்றும் ‘இலக்கியத்தை அதன் இயல்பான தன்மையிலேயே’ சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்றும் விமர்சிக்கப்படுவதுண்டு.

விமர்சனம்: மனம், சமூக அனுபவம், வரலாறு, அரசியல் மற்றும் அழகியலுக்கிடையிலான உறவு

கலை மற்றும் இலக்கிய விமர்சனம் என்பது ஒரு படைப்பின் தரத்தை மட்டும் அளவிடும் செயற்பாடு அல்ல என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. ஒரு படைப்பு மனித மனம், சமூக அனுபவம், வரலாற்று நினைவு, அரசியல் உணர்வு மற்றும் அழகியல் உணர்ச்சி ஆகியவற்றுடன் எந்தவிதமான உறவை உருவாக்குகிறது என்பதை ஆராய்வதே விமர்சனத்தின் அடிப்படை நோக்கமாகும். அதனால் விமர்சனம் என்பது படைப்புக்கும் வாசகருக்கும் இடையே நிற்கும் ஒரு வெளிப்புற தீர்ப்பு அல்ல. படைப்பை வாசிப்பு, விவாதம் மற்றும் பொதுவெளி வழியாகத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு அறிவொழுக்கச் செயற்பாடும் நடைமுறையுமாகும்.

காலவோட்டத்தில் இலக்கியத்தின் மதிப்பீடுகள் மாறுகின்றன என்பதையும், ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட படைப்புகள் பின்னர் உன்னதமானதும் முன்னோடியானதுமான கலைச்சான்றுகளாக அங்கீகரிக்கப்படலாம் என்பதையும் உலக மற்றும் தமிழ்க் கலை வரலாறு பதிவுசெய்துள்ளது. இதனால் தரம் என்பது நிலையான, ஒற்றைத் தீர்மானக் கருதுகோள் அல்ல. காலம், சமூகச் சூழல், வாசக அனுபவம் மற்றும் விமர்சனச் செயற்பாடு ஆகியவற்றின் வழியாக மறுமதிப்பீடு செய்யப்படும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

விமர்சனம் சுயாதீனமான செயற்பாடாகவும், அதே நேரத்தில் முரண்பாடுகளால் நிரம்பிய செயல் வடிவமாகவும் விளங்குகிறது. விமர்சகர்கள் பொதுமக்களின் பிரதிநிதியாகவும், அவர்களுக்குப் புதிய வெளிகளைத் திறந்து காட்டும் கல்வியாளராகவும் செயற்படுகிறனர். மார்க்சிய இலக்கிய விமர்சனம் இலக்கியத்தை சமூக அமைப்பு, வர்க்க உறவுகள், கருத்தியல் மற்றும் அதிகாரச் சூழல்கள் ஆகியவற்றோடு இணைத்து வாசிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இவ்விரு பார்வைகளும் சேர்ந்து, விமர்சனம் என்பது தனிப்பட்ட இரசனையின் வெளிப்பாட்டு வடிவம் அல்ல, அது சமூக, வரலாற்று, படைப்பாக்க மற்றும் அழகியல் சார் பொறுப்புகளுடன் கூடிய செயற்பாடு என்பதை உணர்த்துகின்றன.

தமிழ் இலக்கியப் பொதுவெளியின் சூழலில் விமர்சனச் செயற்பாட்டின் அவசியம் இன்னும் அதிகமாக உள்ளது. தாயகம், புலப்பெயர்வு, போர், நினைவுகள், இன, மொழி, சமூக ஒடுக்குமுறை, மொழி, அடையாளம், சமூகநீதி, பெண்ணியம், மற்றும் பாலினம் போன்ற அனுபவங்கள் இன்று தமிழ் இலக்கியத்தின் முக்கிய அடுக்குகளாக உள்ளன. இவ்வகைச் சிக்கலான அனுபவங்களை வாசிக்கவும், புரிந்துகொள்ளவும், விவாதிக்கவும் வலுவான விமர்சனப் பண்பாடும் தொடர் செயற்பாடுகளும் அவசியப்படுகின்றன. விமர்சனம் இல்லாத இடத்தில் படைப்புகள் தனித்தனியான அனுபவங்களாகச் சிதறியும் கவனப்படுத்தலின்றியும் போகும் அபாயமுண்டு. விமர்சனச் செயற்பாடு, பொதுவான சிந்தனை, வரலாறு, சமூகப் போக்கு மற்றும் சமூக உரையாடலின் பகுதிகளாக மாறுகின்றன. கலை மற்றும் இலக்கிய விமர்சனம் என்பது படைப்பை மதிப்பிடுவதற்காக மட்டுமான வடிவம் அல்ல. படைப்புகள் மீதான கேள்விகளை எழுப்பவும், மறுவாசிப்பு-மறுபரிசீலனை செய்யவும், அதன் சமூக மற்றும் அழகியல் அர்த்தங்களை விரிவுபடுத்தவும் வழிசமைக்கும். திறந்த உரையாடல் வெளியைச் சாத்தியப்படுத்தும். விமர்சனமானது இலக்கியத்தின் வாழ்வைத் தொடரச் செய்யவும் – வாசகச் சமூகத்தை உருவாக்கவும் – பொதுவெளியை ஆழப்படுத்தவுமான படைப்பாற்றல் மிக்க அறிவுசார் செயற்பாடாகும்.

உசாத்துணை:

What is Literary Criticism? Three Theses | Kristoffer Jul-Larsen | 04.06.2013 | https://jullarsen.org/2013/06/04/hva_er_litteraturkritikk/

What Is Actually Good Quality in Art? | Siw Ellen Jakobsen | 23.09.2016 | www.forskning.no

Marxist Literary Research | Helge Ridderstrøm | Oslo-Met | 17.06.2025 | https://www.litteraturogmedieleksikon.no/gallery/om_leksikonet.pdf

***

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் – svrooban@gmail.com

யானை செய்த கொலை

0

அப்பு சிவா

த்தனை மணிக்கு பாத்தீங்க?” என்றார் இன்ஸ்பெக்டர் ரிஷி. 

“காலையில் எப்பவும் வாக்கிங் போறது அவனோட பழக்கம் சார். சரியா ஆறுமணிக்கு கிளம்புவான், ஒரு மணி நேரம் போவான். எப்பவாவது நானும் கூட போவேன். இன்னிக்கு கொஞ்சம் லேட்டாதான் நான் கிளம்பினேன். வந்து பார்த்தா…” அழுதபடி சொன்னார் சுந்தரராஜன்.

இரவு பெய்த மழையில் தரை ஈரமாக இருந்ததால் முழங்காலை ஊன்றாமல், அப்படியே குத்துக்காலிட்டு பார்த்தார் ரிஷி. இறந்தவரின் வயது ஐம்பதைத் தாண்டும் என நினைத்தார். தலை முழுதாக நசுங்கியிருந்தது. அதோடு பாதி பூமிக்குள் புதைந்தும் இருந்தது. தலை புதைந்திருந்த ராஜேஷ்வரின் மீத உடல் வெளியே குப்புறக் கிடந்தது. நல்ல காஸ்ட்லியான வாக்கிங் உடை, ஷூ, வாட்ச். இன்னமும் கும்பல் சேரவில்லை. சேர்வதற்குள் ஃபாரன்ஸிக் வந்துவிட்டால் பரவாயில்லை என நினைத்தார். 

சுற்றுப்புறத்தை கவனித்தார் ரிஷி. அவர்களின் தடங்கள் போக யானையின் காலடித்தடம் தெளிவாக பதிந்திருந்தது. தூரத்தில் புதர் மறைவில் எகிறி விழுந்து லேசாக உடைந்திருந்த செல்போனை எடுத்து ஜீப்பில் போட்டார். கும்பல் சேர ஆரம்பித்திருந்தது. இந்த மலைக்காட்டுப்பகுதியில் ஓய்வுக்காக ஒதுங்கி வாழும் பணக்கார மனிதர்கள் வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போய்த்தொலையக்கூடாதா என எரிச்சலாக வந்தது.

காலை எழும்முன் எழுப்பிய முதல் ஃபோன்கால் அது. மினிஸ்டர் பேசினார். உடனே கவனிக்கச்சொன்னார். மீடியாவுக்கு செய்தியை பரவவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கச்சொன்னார். ரிஷியின் சரகத்துக்கு உட்பட்ட மலைப்பிரதேசம் அது. இங்கே மினிஸ்டரின் பிரம்மாண்ட கெஸ்ட்ஹவுஸ் இருப்பதை ஏற்கனவே அறிந்திருந்தார் ரிஷி.

“யார் மினிஸ்டருக்கு ஃபோன் செய்தது?” என்றார் ரிஷி சுந்தராஜனிடம்.

“நான்தான் சார், அவரும் எங்களோட நெருங்கிய ஃப்ரெண்டு, நாங்க எல்லாம் ஒன்னா படிச்சவங்க, அதான்… எனக்கு வேற வழி இல்லாம… தப்பா சார்?”

“இல்லல்ல, சும்மா கேட்டேன். வேற யாராவது இவரோட சொந்தக்காரங்க இருக்காங்களா?”

“இல்ல சார், ராஜேஷ் தனியாள். அவன் வைஃப் நாலு வருஷம் முன்ன இறந்துட்டாங்க. குழந்தைங்க கிடையாது. ஊருக்குள் ரெண்டு காம்ப்ளக்ஸ் இருக்கு, அதுபோக ஷேர்மார்க்கெட்டிங்ல நல்ல திறமையா முதலீடு செஞ்சு நெறைய சம்பாதிப்பான். மாசம் சில நாளாவது இங்க வந்து ரெஸ்ட் எடுப்பான். வந்த இடத்தில்…” அழுதபடியே சொன்னார் சுந்தர்ராஜன். கிட்டத்தட்ட ராஜேஷ்வரின் வயதுதான் அவரும். அருகில் பயந்து இருந்த அழகான அவரது மனைவிக்கு அவரைவிட பத்து வயதாவது குறைவாக இருக்கும்.

“ஆமா சார், வந்தார்னா அப்படி கவனிப்பார். செலவுக்கு கணக்கு பாக்காம காசு தருவார். கஷ்டம்னு ஒருத்தர் எதுவும் சொல்லிடக்கூடாது. உடனே பையில் இருப்பதை குடுத்து உதவுவார்” என்றான் அருகில் இருந்த ராஜேஷ்வரின் பணியாளர். முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். அவனிடம் விசாரிக்க ஆரம்பித்தார் ரிஷி.

“உங்க பேரு?”

“இந்திரன் சார்”

“எவ்வளவு நாளா இங்க வேலையில் இருக்கீங்க?”

“இந்த வீடு கட்டியதில் இருந்தே இங்கதான் சார் இருக்கேன். சொந்தக்காரங்க மாதிரி பாத்துப்பார் சார்” என்று சொல்லும்போதே கண்கள் கலங்க ஆரம்பித்தன அவனுக்கு.

“சரிசரி, இயற்கையை என்ன செய்ய முடியும், இது போல இங்க ஏற்கனவே நடந்திருக்கா?”

“இல்ல சார், நான் பிறந்ததே இங்கேதான். அப்போ எல்லாம் சின்னச்சின்ன குடிசைகள் போட்டு இருப்போம். மலையில் கிடைக்கும் தேன், மிளகு எல்லாம் எடுத்துட்டுப்போயி ஊருக்குள் வித்துட்டு வந்து அமைதியா இருப்போம். அப்பப்போ யானைகள் வரும். ஆனா அதோ, மலைக்கரடு தெரியுது பாருங்க… அந்த வழியா போகும். சிலநேரம் மட்டும் குட்டிங்க வழிதவறி இந்தப்பக்கமும் வரும். ஆனா யாரையும் தாக்கினது இல்லை. “

அவரிடம் வேறு எதுவும் பெயராது என்பதால் அடுத்து இருந்தவர்களிடம் மெதுவாக விசாரிக்க ஆரம்பித்தார். எல்லோருமே ராஜேஷ்வரின் இறப்புக்கு அதிர்ந்துபோயிருந்தார்கள். நல்ல மனிதர்களுக்கு நல்லசாவு வந்திருக்கக்கூடாதா என்பதாக இருந்தது அவர்களின் பேச்சு. ஃபாரன்ஸிக் ஆட்கள் வந்து அவர்களின் ஃபார்மலிட்டியை முடிக்க இரண்டுமணி நேரம் ஆகியது. ராஜேஷ்வர், அரசின் பிண அறையை நோக்கி பயணமானார். 

இறக்கத்தின் இரண்டாவது வளைவில் ராஜேஷ்வரின் பங்களா. ஜீப்பை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கீழிறங்கியவர் முதல் வளைவில் இருந்த ஒரே ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தி டீயும் சிகரெட்டும் வாங்கிக்கொண்டு சற்றே பெருமூச்சு விட்டார். டீ முடித்து சிகரெட்டை பற்றவைக்கும்போது தூரமாக இந்திரன் நிற்பதை பார்த்தார் ரிஷி. அவனை அழைத்தார். வேகமாக அருகில் வந்து தயங்கி நின்றான் இந்திரன்.

“சொல்லுங்க சந்திரன், டீ சாப்டறீங்களா?” என்றார் ரிஷி.

“வேணாம் சார், நான் இந்திரன் சார். அங்கே பேசினீங்களே…”

“ஓ, இந்திரன்… சொல்லுங்க”

தயங்கினான். அவன் தோள் மேல் கைபோட்டு அணைத்தபடி நடந்தார் ரிஷி. மெல்லிய குரலில் பேசினான் அவன்.

“வெளிய சொல்லவேணாம் சார், நான் சின்னபிள்ளையில் இருந்து இங்கேதான் இருக்கேன். யானையால் யாரும் அடிபட்டதில்லை. அப்போ அப்போ நரிகள் வரும், பாம்புகள் கடிச்சுகூட சிலர் இறந்திருக்காங்க. காட்டு உள்ள சிறுத்தைகள் இருக்கிறதா சொல்லிக்குவாங்க. ஆனா யாரும் பார்த்ததில்லை”

“சரி, என்ன சொல்ல வறீங்க?”

“அவர் யானையால் சாகலை சார், சில நாளாவே தனக்கு ஏதோ ஆபத்து இருக்கிறதா புலம்பிகிட்டே இருந்தாரு. ராத்திரி எல்லாம் தூங்காம இருந்தாரு. யாராலயோ அவருக்கு இது நடந்திருக்கும்னு தோணுது சார்”

“என்ன…? கொலையா? என்ன சொல்றீங்க”

“ஒரு யூகம்தான் சார், எனக்கு முழுசா சொல்லவரலை. தெரியலை. ஏதோ தோணுச்சு சார்”

பேசிக்கொண்டே குறுக்காக இறங்கி அந்த பங்களாவை நெருங்கினார் ரிஷி. யாருமற்ற தனிமையும் பிரம்மாண்டமும் இணைந்த பங்களா அது. அழகாக இருந்தது. இப்போது கொஞ்சம் அமானுஷ்யமாகவும் இருந்தது. இனி வரவேவராத தனது ஓனரை அதுவும் தேடும் என்று ரிஷிக்கு சம்மந்தமில்லாமல் தோன்றியது. முன்புறம் அவ்வளவு பூச்செடிகள். கேட்டில் இருந்து சில நிமிட நடையில் வாசல். இந்திரன் கதவைத் திறக்க கைவைக்க முயல, அதுவாகவே திறந்தது.

உள்ளிருந்து வெளியே வந்தார் சுந்தர்ராஜன். அவர்களைப்பார்த்து அதிர்ச்சியாக நின்றார்.

“என்ன சார்? என்ன பண்றீங்க இங்க?” என்றார் ரிஷி. அவருக்குள் ஒரு பதட்டமும் கோபமும் வந்தது.

“வந்து… அவனுக்கு தூரத்து சொந்தம் சிலர் இருக்காங்க சார். அவங்களுக்கு சொல்லலாம்னு… அவன் செல்லில் நேம்ஸ் இருக்கும், அதான் அவன் செல்லைத்தேடி, அதுக்குள்ள சத்தம் கேட்டு வெளியே வந்தேன்” என்றார் அவர்.

“சார், உங்களுக்கு புரியலையா, இதுக்குமுன்ன நீங்க எப்படி வேணா இருக்கலாம். இப்போ இதுபோல எல்லாம் நீங்க பண்ணியிருக்கக்கூடாது. முதல்ல இங்க ஒரு பாதுகாப்பு போடச்சொல்லணும். ஆமா… செல்லு கிடைச்சதா?”

“இல்ல சார்…” 

அவரை விலக்கி வீட்டுக்குள் நுழைந்தார் ரிஷி. பின்னாலேயே வந்த இந்திரன் ஒவ்வொரு அறையையும் சொல்லிக்கொண்டே வந்தான். எல்லாம் ஆடம்பரம். இந்திரனை சுந்தர்ராஜனுடன் இருக்கச்சொல்லிவிட்டு தனியே ஆராய்ந்தார். படுக்கையறை தலையணையின் கீழ் அந்த ஆபாச புத்தங்கங்கள் இருந்தன. ஞானம், செக்ஸ், தியானம், கவிதை என கலப்பான புத்தங்கங்கள் நிறைய அடுக்கி இருந்தார். இன்னொரு அறையில் ஒரு அலமாரி நிறைய வெளிநாட்டு மதுபானங்களும் உட்கார்ந்து சாப்பிட அழகான டேபிள் சேரும் இருந்தன. பின்புறம் நிழற்குடை போன்ற அமைப்பும் அருகே ஒரு பெரிய நீச்சல்குளமும் இருந்தது. பலகோடிபெறும் பங்களா என்று தோன்றியது. செல்லில் உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே வெளியே வந்தார் ரிஷி.

நான்கு நாட்கள் கடந்திருந்தன. எதுவும் சாட்சி கிடைக்கவில்லை. அதற்குள் முகநூல், இன்ஸ்டாகிராம் இன்னபிற தளங்களில் எல்லாம் விஷயம் கசிந்திருந்தது. ‘யானையின் வழித்தடத்தில் ஆக்ரமிப்பால் நிகழ்ந்த யானைக்கொலை’ ‘யானைகளின் வழித்தடங்களில் கட்டிய கட்டிடங்களை இடிக்கவேண்டும்’ என பரவலாகப் பதிவுகள் கூடவே இணைந்த அந்த இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளின் விளம்பரங்கள். மினிஸ்டர் தினமும் நேரம் குறித்துவைத்துகொண்டு ரிஷியை அவசரப்படுத்தினார்.

“சார், இன்னும் ரெண்டே நாள் குடுங்க, கேஸ் முடிச்சுடறேன்”

“என்னபா நீ புரிஞ்சுக்காம பேசற. ஏதோ தடுக்கி விழுந்தான். செத்தான் அப்படி போட்டு எதாவது முடிய்யா. இல்லாட்டா அடையாளம் தெரியாத வாகனம் அப்படி போடு. இதெல்லாம் நான் சொல்லிக்கொடுக்கணுமா, இல்ல யானைதான் போட்ருச்சுன்னாவது முடிப்பா. முடியலை என்னால”

“இது வேற எதோ கொலை போல தெரியுது சார். அதான்… அதில்லாம அவர் வீடு ஒன்னும் யானை வழித்தடத்தில் இல்லை”

“யோவ், எனக்கும் புரியுதுயா, ஆனா என் கெஸ்ட் ஹவுஸ் அங்கதானே இருக்கு. வழித்தடம்னு சொல்றாங்க. அது வேற அங்கங்கே போட்டு என்னை தாளிக்கறாங்க. அப்பவே சொன்னேன் ராஜேஷ்கிட்ட, நீ தனி ஆள்தானே, உன் வீட்டை எனக்கு வித்துடு, உனக்கு வேற இடத்தில் இன்னும் பெரிய பங்களா தரேன்னு… சாகும் வரை வீட்டை யாருக்கும் தரமாட்டேன்னுட்டான்”

“அதான் இப்ப செத்துட்டாரே சார்”

“கம்முனு இருய்யா, நீ வேற… அது பழிவாங்கும் பங்களா போல… யாருக்கு வேணும் அது”

திரும்பத்திரும்ப போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை படித்தார் ரிஷி. முக்கிய பாயிண்டுகளைத் தனியே எழுதினார்.

  1. உடலில் எந்த நோய்க்கூறுகளும் இல்லை. ஆரோக்யம்.
  2. திடீரென பின் மண்டையில் தாக்குதல். வளைவான இரும்பு போன்ற உலோகத்தால் தாக்கியது போல மண்டை உடைந்து உடனே மரணம்.
  3. இறந்த உடலை கீழே கிடத்தி அதன்பின் தலையை ஈரமான நிலத்தில் அழுத்தி பின்னர் பெரிய அகலமான யானையின் கால் அளவுள்ள கனமான பொருளால் அழுத்தப்பட்டுள்ளது. 
  4. புதைந்த அளவும், அழுத்தமும் கவனிக்கையில் அது யானையால் ஏற்பட்டதாக்க கருத இடமில்லை.

குழப்பமாகவும் தெளிவற்றும் இருந்த மனதில் சுந்தர்ராஜனின் முகம் வந்துவந்துபோனது. செல்போனை எதற்காக தேடினார் என்று கேள்வி எழுந்தது. சட்டென அன்று ஒரு செல்போனை எடுத்து ஜீப்பில் போட்டதும் அலைச்சலில் அதை மறந்தே போனதும் நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து அதை எடுத்து வந்தார். சார்ஜ் போட்டார். ஆன் ஆனது.

அதிர்ந்துபோனார் ரிஷி. உள்ளே அவ்வளவும் ஆபாசப் படங்கள். சில அந்த வனப்பகுதியைச்சேர்ந்த முகங்கள். சிறுபெண்கள்கூட. அவர்களின் முகங்களில் பயம் இருந்தது. தவிர வழியில் வேலை செய்யும் பெண்கள், நடந்துபோவோர் வருவோர் என ஆபாச வக்ரமாய் எடுத்துவைத்திருந்தார் ராஜேஷ்வர். அன்று கும்பலில் எல்லோரும் பார்த்த பார்வை ‘இவருக்கா இந்த நிலைமை?’ என்றா அல்லது ‘இவனுக்கு இதான் சரி’ என்றா என சந்தேகம் தோன்றியது. நகர்த்திக்கொண்டே வந்தவர் தொடர்ந்து வந்த படங்களைக்கண்டதும் திடுக்கிட்டார்.

ராஜேஷ்வரின் தனி அறையில் சுந்தரராஜனின் மனைவியுடன் நெருக்கமாக இருந்தார் அவர். இருவரும் சிரித்தபடி இருந்தனர். அந்தப்பெண் சற்றே வலுக்கட்டாய சிரிப்பு. பார்க்கக்கூடாத நிலையில் இருந்தனர். 

ஜீப்பை கிளப்பினார் ரிஷி. சுந்தரராஜனின் வீட்டை அடைந்தார். அவர் இல்லை. அவர் மனைவி இருந்தார்.

“அவருக்கு போன் செய்யவா சார்” என்றார் அந்தப்பெண்.

“மெதுவா வரட்டும்மா, சும்மா ஃபார்மாலிட்டி விசாரணைதான். ராஜேஷ்வர் எப்படி குணம்?”

“ரொம்ப் நல்ல டைப் சார். இவர்கூட படிச்சவர். சின்ன வயசில் இருந்தே ஃப்ரெண்டாம். நல்லவிதமா பழகுவார்.”

“ஓ, உங்களுக்கும் சுந்தரராஜனுக்கும் வயசு வித்தியாசம் நிறைய இருக்கும் போலயே, எப்படி?”

“நாங்க லவ் மேரேஜ் சார், கல்யாணமே வேண்டாம்னு இருந்தார் இவர். நாந்தான் இவரை லவ் பண்ணினேன். பிடிவாதமா வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”

“நிஜமாவா, சந்தோஷமா… அதாவது வீட்டை எதிர்த்து சந்தோஷமா இருக்கீங்களா?”

“ஆமா சார்”

“ஆனா முகத்தில் அப்படி தெரியலையே… வேற எதாவது பிராப்ளம் இருக்கா?”

“வந்து… அவர் ஃபர்னிச்சர் ஷோரூம் வச்சிருக்கார் சார். ரெண்டு வருஷமா கடன் நிறைய ஆகிப்போச்சு. இந்த வீட்டையே விக்கற நிலமை. சொல்லபோனா ஒருநாள் தற்கொலை வரை போயிட்டார். அப்போ இறந்த ராஜேஷ்வர்கிட்ட சொன்னேன். அவர்தான் கடனை அடைச்சு, மெதுவா குடுத்தா போதும்னு ஆறுதல் சொல்லி இவரை தேத்தினார்.”

“ஓ, உங்ககிட்ட எப்படி பேசுவார் ராஜேஷ்வர்?”

“அதுவந்து, நல்லவிதமாதான் பேசுவார் சார். அதுவும் இவர்கூட இருக்கும்போது பேசக்கூடமாட்டார்”

பரபரப்பாக உள்ளே வந்தார் சுந்தரராஜன். அவர் முகம் வெளுத்திருந்தது. 

“செல்ஃபோன் கிடைச்சிட்டது சுந்தரராஜன் சார்” என்றார் ரிஷி. அதிர்ந்துபோய் பார்த்தார் சுந்தரராஜன். புரியாமல் விழித்தாள் அவர் மனைவி.

“ஆனா, முழுசா சேதம். ஆகாதாம், எதுவும் எடுக்கமுடியாதாம். அவங்க சொந்தக்காரங்க காண்டாக்ட் தேடினீங்கல்ல, அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போக வந்தேன்”

நிம்மதிப்பெருமூச்சு எழுந்தது சுந்தரராஜனிடம். அவர் மனைவியை அவர் பார்த்த விதத்தில் ஒரு அமைதியும் காதலும் இருந்தது. மனைவியின் மேல் அவருக்கு இருந்த பாசமும், அவர்மேல் அந்தபெண்ணுக்கு இருந்த அன்பின் எல்லையும் புரிந்தது. 

ஜீப்பைக் கிளப்பி மெதுவாக ஊர்ந்தார் சாலையில். முடித்துவிடலாம் என்று தோன்றியது. வழியில் தோட்டங்களில், எஸ்டேட்களில் வேலை செய்யும் பெண்களைக் கவனித்தார். தேயிலை பறித்தனர், பூச்செடிகளைத் திருத்தினர். உடலை வருத்தி வேலை செய்தனர். கூரை வேய்ந்தனர். டேம்பர் போல வைத்து தரையைச் சமப்படுத்தினர். ஊருக்குள் வேலை எதுவும் செய்யாமல் குவியும் பணத்தை மட்டுமே வைத்து சிலர் செய்யும் காரியங்களை ஒப்பிடும்போது தேவதைகளாக தெரிந்தனர் அவர்கள். ஓரிடத்தில் வண்டியை கைகாட்டி நிறுத்தினான் இந்திரன். இறங்கினார் ரிஷி.

“சொல்லுங்க சந்திரன், என்ன இங்க?”

“எங்க வீடு இங்கதான் சார். வாங்க ஒரு டீ சாப்ட்டு போவீங்களாம்”

கூரை வீடு. ஆனால் உள்ளே அழகாக இருந்தது. தன் மகளின் படத்தை காட்டி அவள் நீச்சல் போட்டியில் மாநில அளவில் சாம்பியன் ஆன சர்டிபிகேட்டை, நாளிதழ் புகைப்படத்தை மகிழ்வாக காட்டினான். மனைவி வெளியூர் சென்றிருப்பதாகவும் தனக்கு சமைக்க வரும் என்றும் சொன்னான். நல்ல டீ போட்டு கொண்டுவந்தான். ‘சமைக்கவா?’ என்றதை மறுத்தார் ரிஷி.

“அப்புறம் சார்… கண்டுபிடிச்சிட்டீங்களா?”

“இல்ல சந்த்… சாரி இந்திரன். இது ஏதோ பெரிய இடத்து விவகாரம் போல இருக்கு. யானைக்கொலைன்னு கேஸை முடிக்கச்சொல்றாங்க”

“யார் சார்?”

“குறிப்பிட்டு சொல்ல முடியாது. இங்கேயும் நீங்க சொன்ன மாதிரி சிலர் மேல டவுட். பட்… அவ்ளோதான். பிரஷர் ஓவரா இருக்கு”

“ஆனா, அது யானை இல்ல சார்”

“உங்களுக்கும் எனக்கும்தான் தெரியும். வெளிய உளறிட்டு இருக்காதீங்க” கிளம்பினார் ரிஷி. அவர் ஜீப்பில் ஏறியதும் வீட்டுக்குள் சென்றான் இந்திரன்.

வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்யும்போது மினிஸ்டரின் கால் வந்தது. இறங்கி பேச ஆரம்பித்தார்.

“ஆமா சார், முடிச்சிட்டேன் சார். யானைதான் சார். சரிங்க சார். ஒன்னும் பிரச்சினை வராது சார்” சொல்லிவிட்டு செல்லை வைக்க, அங்கே கவனித்த ஒரு ஆள் அருகில் வந்தார்.

“என்ன சார், இந்திரன் வீட்டுக்கா?”

“ம், ஆமாங்க…”

“சரிங்க சார். நல்லாதான் இருந்தான். பொண்ணு செத்துபோனதும்தான் அப்போ அப்போ தண்ணி சாப்டுவான். மத்தபடி நல்லவன்தான்”

“என்ன? அவர் பொண்ணு இறந்துட்டாங்களா? எப்படி?”

“போன மாசம் இவனுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அப்போ இவங்க முதலாளி வந்திருந்தார். அவரோட வீட்டை துடைச்சு க்ளீன் பண்ண, சமைக்கன்னு அந்த பொண்ணு அங்க போச்சு. விளையாட்டுப்பிள்ளை. தோட்டத்தில் க்ளீன் பண்ணும்போது அங்க இருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்து செத்துப்போச்சு”

“என்ன சொன்னீங்க… குளத்திலயா, வெளியே வரலையா?”

“நீந்த தெரியாதுல்ல, சின்னப்பிள்ளைல்ல” சொல்லிவிட்டு அவர் கிளம்பினர்.

நின்றபடி இந்திரனின் வீட்டை உறுத்துப்பார்த்தார் ரிஷி. வெளியே வந்த இந்திரன் அவர் போகாததைக்கண்டு அசையாமல் நின்றான். அவன் கையில் ஒரு நீண்ட இரும்புக்கம்பி இருந்தது. அதன் முனையில் வளைவாக குமிழ் போல இருந்தது. அடித்தால் கண்டிப்பாக தலை உடையும் போல இருந்தது அது. இந்திரன் அதை கூரையின் ஒரு பக்கம் சொருகினான். அங்கே இருந்து ரிஷியையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனை அருகில் அழைத்தார் ரிஷி. அவன் வரும்போது கவனித்தார். வீட்டின் இடதுபுறம் அந்த டேம்பர் போன்ற கருவி இருந்தது. மூங்கில் வைத்து அடிப்புறம் நல்ல வட்டமான அகலமான இரண்டடி உயரமான மரம் இணைக்கப்பட்டிருந்தது. மண்தரையை தட்டி சமப்படுத்த கிராமத்தில் பயன்படுத்தும் அமைப்பு. அதன் அடிப்புறம் கண்டிப்பாக ஒரு யானையின் காலடி அளவு இருந்தது.

அருகே வந்த இந்திரன் பேசாமல் நின்றான்.

“சந்திரன், ஒரு கதை சொல்லவா…”

“சார்…”

“ஒரு ஊர்ல ஒரு ராத்திரி திருடன் திருடன்னு ஒருத்தன் கத்தினானாம். எல்லோரும் வீட்டைவிட்டு ஓடிவந்து அவனோட சேர்ந்து திருடனை தேடினாங்களாம்… ஆனா திருடன் கிடைக்கவேயில்லையாம். ஏன் சொல்லுங்க?”

“சார்…”

“ஏன்னா அந்த திருடனே முதலில் கத்திய அவன்தானாம்.” சொல்லிவிட்டு கடகடவென சிரித்தார் ரிஷி. பேயறைந்தார்போல இருந்தான் இந்திரன்.

“இந்த கதையை இப்போதான் மினிஸ்டர் சொல்லி, கொலைகாரன்னு யாரும் இல்லை, யானை கொன்னுச்சுன்னு கேஸை முடின்னுட்டார். அதனால் சந்திரன், எல்லோர்கிட்டயும் அப்படியே சொல்லுங்க. உளறாதீங்க”

“சரிங்க சார், அப்புறம் நான் சந்திரன் இல்ல சார். இந்திரன். ,முழுப்பேர் கஜேந்திரன்” என்றான் அவன். 

***

அப்பு சிவா – இயற்பெயர் அ.சிவக்குமார். சேலத்தை சேர்ந்தவர். ஓவியர், எழுத்தாளர். சிறார் இதழ்களுக்கு, கதைகளுக்கு படம், அட்டைப்படம் வரைந்து கொடுப்பது உண்டு. நான்கு நாவல்கள், இரண்டு சிறார் புத்தகங்கள், ஒரு சிறுகதைத்தொகுப்பு அச்சில் வெளிவந்துள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.  பூஞ்சிட்டு எனும் சிறார் இணைய இதழில் ஆசிரியர் குழுவில் 6 ஆண்டுகளாக செயல்படுகிறார். மின்னஞ்சல்: appusiva.artist@gmail.com

விமர்சனக் கலை

0

கிருஷ்ணமூர்த்தி

தீவிர தமிழிலக்கிய வாசகர்களுக்கு விமர்சனக் கலை க. நா.சு வின் நூலை நினைவூட்டும். படைப்பை ஆணுகுவதற்கான எண்ணற்ற வாசலை அந்த நூலில் சுட்டிக்காட்டியிருப்பார். கலை இலக்கியத்திலும், சமூகவியல் வாழ்விலும் விமர்சனம் அத்தியாவசியமான ஒன்றாகிறது. பெரும்பாலான நேரங்களில் குறைகளைச் சுட்டுவது மட்டுமே விமர்சனமாகக் கருதப்படுகிறது. நிறைகளின் வழியே வாழ்க்கையை அல்லது படைப்பை கூர்மையாக அவதானிப்பதற்கான கருவியாகவும் விமர்சனம் திகழ்கிறது. பல்துறை சார் அறிவுகளையும் தேற்றங்களையும், கோட்பாடுகளையும் கருவிகளாகக் கொண்டு படைப்பையும் அதன் வழி வாழ்க்கையையும் சீர் தூக்கிப் பார்க்கிறது. அவற்றில் முரண்கள் எழும்போது எதிர்மறை விமர்சனமாகவும், நுட்பங்கள் சிறப்பாக கையாளப்பட்டிருக்கும்போது நேர்மறை விமர்சனமாகவும் பதிவாகின்றன.

விமர்சனங்களை முன்வைப்பவர்கள், எதிர்கொள்பவர்கள் எனும் அம்சத்தில் அதன் நுகர்வுத் தன்மை அடங்கியிருக்கிறது. சிறுபத்திரிக்கைகள் தீவிரமாக இயங்கிவந்த காலத்தில் காத்திரமாக வெளிப்பட்ட விமர்சனங்கள் படைப்பின் நிலைத்த தன்மைக்காக குரல் கொடுத்தன. அவை மொழியின் செல்வப்பெட்டகமாக இலக்கியம் அமைய வேண்டும் எனும் உயரிய நோக்கில் வெளியாகின. அதன் அளவுகோல்கள், குரலின் தன்மை, உள்ளடக்கத்தின் தீவிரம் இப்போது அதே விகிதத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியான ஒன்றே. அனைத்தின் மீதான நுகர்வு மன இயங்கியலில் நிதானமாக எடுக்க வேண்டிய தீவிர உரையாடல் களத்தை நாம் இழந்திருக்கிறோம். காலத்தைக் கடந்து எனும் சொற்பதம் அர்த்தமற்று போயிருக்கிறது. மீச்சிறு கணத்தில் அடுத்த்தை நோக்கித் தாவும் மனதுடன் நிதானமான விமர்சனப்போக்கு சமர் புரிகிறது. எதிர்மறை விமர்சனங்கள் நம்மை பதற்றாத்திற்கு உள்ளாக்குகின்றது. நொடி நேரத்தில் இருமையான (நல்லது/கெட்டது) விமர்சனங்களே போதுமானவையாக இருக்கின்றன. வாழ்வின் நுட்பங்களைப் பேசும் கலைப்பெட்டகங்களுக்கு அவை ஒத்துவராது. சமூகத்தின் கண்கொண்டு கலையையும், கலையின் கண்கொண்டு சமூகத்தையும் பார்க்க வேண்டிய நுட்பத்தை காலம் மறந்து வருகிறது. நுட்பமான விமர்சனக் கலை எழ வேண்டிய தேவையும் இப்போது இருக்கிறது.

இருப்பவற்றை புரிந்துகொள்வதிலிருந்து தொடங்குகிறது விமர்சனத்திற்கான பயணம். அவ்வகையில் தொல்காப்பியம், சமூகம், நவீன இலக்கியம், சங்க இலக்கியத்தின் கூறுகள் என்று பல அம்சங்களில் விமர்சனக் கருவிகளை சிறப்புப் பகுதிகளாக இந்த இதழில் பேசியிருக்கிறோம். சமகாலக் கவிஞர்களின் அக உலகை உரையாடலாக்கும் விதமாக இம்முறை கவிஞர் யதிராஜ் ஜீவாவை லாவண்யா சுந்தரராஜன் நேர்காணல் செய்திருக்கிறார். சமகால எழுத்தாளரான பிரமிளா பிரதீபனின் நேர்காணல் சமகாலத்தில் புனைவின் மீதான பார்வை என்னவாக இருக்கிறது எனும் பொது கேள்விக்கான பதிலை விரிவு செய்கிறது. சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, கவிதை, சமகால நூல்களுக்கான மதிப்புரைகள், மறைந்த இயக்குனர் பாரதி ராஜாவிற்கான அஞ்சலி, ஆதவன் சிறுகதைகளில் இடம்பெறும் பெண்களின் இலக்கியத்தன்மை, என்று நிறைவான இதழாக தயாராகியிருக்கிறது.

மீள்வருகையின் இரண்டாம் ஆண்டை இந்த இதழோடு தொடங்குகிறோம். இதுவரையிலும் இந்த இதழிலும் பங்களித்த படைப்பாளுமைகளுக்கு எங்களது அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

காலன்

0

ஆர்.சங்கரநாராயணன்

உணவுக்கூடத்தின் புகை 

போர்க்களம் என்பது வீரர்களுக்கு மட்டுமல்ல.

போர்க்களத்தின் பின்னே ஒரு நெருப்பு தொடர்ந்து எரிகிறது. அது வாள்களின் ஒளியல்ல. நிறைவடையாத வயிறுகளில் எரியும் நெருப்பை நிரப்பும் அவிசு. மண் பானைகள் வரிசையாய் நிற்கின்றன. அரிசி அளக்கும் கைகள் நடுங்குவதில்லை . நடுங்க நேரமில்லை. வியர்வை முகத்தில் வழிகிறது, கழுத்தில் வழிகிறது, முதுகில் வழிகிறது. அந்த வியர்வை எந்த வீரகாவியத்தின் அடியிலும் இடம் பெறவில்லை. எந்தச் சூதரும் அதற்கு ஒரு பாடல் எழுதவில்லை. பாடல் வாளுக்கும் வில்லுக்கும், கதைக்கும், அவற்றை ஏந்தும் கைகளுக்கும் தான். அந்தக் கையின் வியர்வைக்கு அல்ல. வாளுக்குப் பின்னால் நிற்கும் உடலுக்கு அல்ல. அந்த உடலுக்கு உணவூட்டும் நெருப்புக்கு அல்ல.

அந்த நெருப்பின் ஆழத்தில் அவன் இருந்தான்.

அவனைப் போன்றவர்களுக்கு பெயர் இல்லை. பெயர் என்பது அதிகாரம். பெயர் என்பது ஆடம்பரம். பின்னொரு நாள் ஒரு பெயர் உருவாகும். காலத்தின் மண்ணிலிருந்து அது முளைக்கும். ஆனால் விதை முளைக்கும் முன்பு மண்ணுக்கு அடியில் இருட்டில் கிடக்கும்.

பாண்டவர் படையின் உணவுக்கூடம். ஆயிரக்கணக்கான வீரர்களின் பசியைப் பின்னாலிருந்து தாங்கும் நெருப்பு. அவன் அந்த நெருப்புக்குத் தண்ணீர் கொண்டு வருபவன். விறகு வெட்டுபவன். சாம்பலை வாரிச் சொரிபவன். உணவு தயாரிப்பவர்களுக்கு உதவி செய்பவன் — ஆனால் தயாரிப்பவன் அல்ல. உண்பவர்களுக்குச் சமைப்பவன் — ஆனால் உண்பவன் அல்ல.

இந்த இரட்டை விலக்கங்களின் நடுவில் அவன் நின்றான். அங்கே நிற்பதில் அவனுக்கு வியப்பு இல்லை. பிறந்தது முதல் அந்த இடமே அவன் இடம். இடைவெளிகளில் வாழும் ஒரு இனம் உண்டு. வரலாறு முழுவதும் அந்த இனத்திற்கு எந்தவிதமான அங்கீகாரமும் இல்லை.

ஒரு எள் விதை மண்ணுக்கு அடியில் விதைக்கப்படும்போது அது இருட்டை அறியும். குளிரை அறியும். மண்ணின் அழுத்தத்தை அறியும். முளைவிடும் என்று தெரியும். ஆனால் எந்தப் பருவமழையில், எந்தக் காலை வெளிச்சத்தில், எந்தப் பூமியின் வெடிப்பில் என்று தெரியாது. தெரியாமலேயே பொறுத்திருக்கும். பொறுமை என்பது பலவீனமல்ல. அது விதையின் ஆயுதம்.

விடியற்காலையில் நெருப்பு மூட்டும்போது புகை கண்களைச் சூழ்ந்து கொள்ளும்.

அவன் இமை மூடமாட்டான். புகையை நேருக்கு நேர் பார்ப்பான். புகை அவனுக்குப் பழகிய துன்பம். உலைக்களத்தின் கண்ணீர். அவனை வாட்டும் முன்னமே அவன் அதனுள் புகுந்துவிடுவான் . ஒரு தேர்ந்த நீச்சல்காரன் அலையின் அடிவாரத்தில் நுழைவதுபோல் புகையின் அடியில் நுழைவான். வலியை எதிர்கொண்டு, அங்கேயே உறைந்து, மௌனமாய் அதை வழியனுப்பும் திறமை. இந்தத் திறமைக்கு யாரும் பெயர் வைக்கவில்லை. கவிதை வாளின் வீச்சுக்கு எழுதப்படும். நெருப்பின் முன் நிற்கும் இமைகளுக்கு அல்ல. வேதியர் வளர்க்கும் யாகத்திற்கும் இந்த நெருப்பிற்கும் வேறுபாடு இல்லை.

துரோணரின் குருகுலத்தில் எத்தனையோ பருவங்கள் அவன் இருந்தான். பாத்திரம் கழுவும் கைகள். விறகு அடுக்கும் தோள்கள். நதிக்குச் சென்று திரும்பும் கால்கள். சமையல்காரர்களுக்கு ஏவலன். ஒரு நிழலுக்குள் இன்னொரு நிழல்.

சத்திரிய மாணவர்கள் அவனைக் கடந்து செல்கையில் அவர்கள் கண்கள் வெறுமையாய் இருக்கும். ஒரு கருவியைப் பார்ப்பதுபோல், சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள் போல் அந்தப் பார்வை இருக்கும். ஒரு கருவிக்கு விழிகள் இருக்காது. ஒரு கருவிக்கு நினைவு இருக்காது. ஒரு கருவிக்கு வலி தெரியாது.

அவனுக்கு விழிகள் இருந்தன. மிகக் கூர்மையான விழிகள். பார்த்து, பதித்து, புதைத்து வைக்கும் விழிகள். உள்ளே ஒரு களஞ்சியம் வளர்ந்து கொண்டிருந்தது. வருடங்களாய்ச் சேர்த்த செல்வங்கள் அதில் குவிந்தன. அந்த விழிகள் பார்த்த ஒவ்வொன்றும் உள்ளே ஒரு விதையாக மாறியது. விதை என்பது முடிவல்ல. காத்திருத்தல்.

குருகுலத்தின் மண்

அதிகாலை. பொழுது வெடிக்கும் தருணம்.

குருகுலத்தின் முற்றத்தில் வழக்கமான புழுதி கிளம்பிக் கொண்டிருந்தது. நாள்தோறும் கிளம்பும் புழுதி. வழக்கமான காலை. வழக்கமான நிசப்தம்.

அப்போது முதலில் வந்தது ஒரு நிழல்.

கிழக்கு வாசலில் நீண்ட கருமையான நிழல் தரையில் படர்ந்தது. கதவின் மேல் சட்டத்தை அந்த நிழலின் தலை தொட்டது. ஒரு கணம் நின்றது. பின் உயரம் மேலும் நீண்டது. நிழல் மட்டும் வந்தது. நிழலுக்குப் பின் உடல் வந்தது.

அவன் உள்ளே வந்தான்.

அவன் வெறும் உடல் அல்ல. அந்தத் தோற்றம் நீண்டு வளர்ந்த உறுதியான காஞ்சிர மரம் கைகளை விரித்து நின்றது போல இருந்தது. உயரம் வெறும் அளவு மட்டுமல்ல, அது ஒரு பிரகடனம். அவன் நிறம் மைக்கருப்பு. சூரிய ஒளியில் அவன் தேகம் மின்னின. அலைபாயும் அந்தக் கண்கள் அடர்ந்தவை, ஆழமானவை. அவனை நெருங்கும் ஒளிக்கதிர்கள் கருமைக்குள் ஒரு மங்கிய செம்மை இருப்பதைக் காட்டின. எங்கோ ஆழத்தில் எரிந்து கொண்டிருக்கிறான். மேலே அடங்கிய கொதிப்பு ஒரு எரிமலையின் மேற்பரப்பில் தெரியாது. ஆனால் உள்ளே இருப்பதை உடல் உணரும்.

அவன் நடந்தான். காற்று சிறிது பக்கவாட்டில் விலகியது. கண்ணுக்குத் தெரியாத காற்று எங்கும் உள்ளது. ஆனால் அந்த நடை காற்றையும் நகரும்படி செய்தது. அந்த மனிதனைக் கடந்து செல்லக் காற்றுக்கும் ஒரு தயக்கம் தோன்றியது.

துரோணர் நிமிர்ந்தார். கண்கள் வந்தவன் மீது பதிந்தன. ஒரு சிறிய அதிர்வு. உள்ளே ஒரு குளம் போன்ற ஆழம் இருப்பதை உணர்ந்தார். ஆனால் உடனே ஒரு மதில் எழுந்தது. குலம் என்னும் மதில். அதைத் தாண்டிப் பார்க்கும் மரபு இல்லை. மரபை மீறிய எதுவுமே இந்தப் பாரதவர்ஷத்தில் இல்லை.

“குலம் என்ன?”

குரல் நடுநிலையானது. ஆனால் “குலம்” என்ற சொல் மட்டும் சவுக்கின் முனைபோல் வந்து விழுந்தது.

அவன் பதில் சொன்னான்.

என்ன சொன்னான் என்று விவரிக்க வேண்டியதில்லை. சொல்ல அனுமதிக்கப்படாத ஒன்று. சொன்னாலும் மண்ணில் முளைக்க மறுக்கப்படும் ஒரு விதையின் பெயர்.

துரோணர் கேட்டார். தலையை மெதுவாய்த் திருப்பிக் கொண்டார். பின், திரும்பி நடந்தார். வார்த்தை எதுவும் பேசவில்லை. ஆனால் ஒரு முழுப் பேருரையை விடப் பெரிய மறுப்பு அந்த முதுகில் இருந்தது. சமையலறை வாசலில் நின்று கொண்டிருந்த பெயரில்லாதவன் அந்த முதுகைப் பார்த்தான்.

அது அவனுக்கு மிகவும் பழக்கமான ஒரு குரல். ஒரு கருவிக்கு வார்த்தைத் தேவையில்லை. உயர்குல வாசல்களில், வரவேற்பறைகளில், கேள்வி கேட்கும் தருணத்தில், உதவி கோரும் நேரத்தில் — பதில் இந்த முதுகே. வாழ்நாள் முழுக்க அவன் எத்தனையோ முதுகுகளைப் பார்த்திருந்தான். ஒவ்வொரு முதுகும் ஒரே கதை சொன்னது — நீ இல்லை. நீ வேண்டாம். நீ இங்கே வர முடியாது.

வந்தவன் சில கணங்கள் அப்படியே நின்றான்.

ஒரு மரம் வெட்டப்பட்ட பின்னும் உடனே விழுவதில்லை. வெட்டிய கோடரி விலகும். ஒரு இடைவெளி. அந்தக் கணத்தில் மரம் தான் நின்று வாழ்ந்த வருடங்கள் முழுவதையும் ஒரே சுவாசத்தில் சேகரிக்கும். படர்ந்த கிளைகளை. தழுவிய மழையை. வேரின் ஆழத்தை. பின் மிக மெதுவாய், அல்லது மிக வேகமாய், நிலத்தை நோக்கிப் பயணம் தொடங்கும். அந்த இடைவெளி அவனுக்கு வந்தது.

சுற்றும் மாணவர்கள். சிலர் ஏளனப் பார்வை. சிலர் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அர்ஜுனன் மட்டும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. இது அவனுக்குப் பொருட்டல்ல என்று காட்டிக் கொண்டான். அல்லது உண்மையிலேயே பொருட்டல்ல.

அவன் திரும்பினான். முகம் தெரியவில்லை. ஆனால் கழுத்தின் பக்கவாட்டுத் தசைகள் இறுகியிருந்தன. வலது கை விரல்கள் சிறிது நடுங்கியிருக்கலாம். அந்தச் சிறு அசைவுகள் மட்டுமே தெரிந்தன — முகத்துக்குப் பதிலாக அவை உண்மையைக் கூறின.

முற்றத்தைக் கடந்து, வாசலை நோக்கி அவன் நடந்தான். காலடித் தடங்கள் மழைக்கால மண்ணில் ஆழமாய்ப் பதிந்தன. அழுந்திய இடங்களில் நீர் கசிந்தது.

பெயரில்லாதவன் அந்தக் காலடித் தடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். கையில் மண்பானை இருந்தது. அதை உடைக்காத தூரத்தில், ஆனால் உடைத்துவிடக்கூடிய அழுத்தத்தில் இறுக்கிப் பிடித்திருந்தான். உள்ளே திரண்டிருந்த ஒரு வலி உடலின் ஒரு பகுதியில் தங்கி இளைப்பாற அந்த அழுத்தம் வேண்டியிருந்தது. பானை வெடிக்கவில்லை. மண்ணால் ஆனது. மண் தாங்கும். மண்ணால் ஆனவை எல்லாவற்றையும் தாங்கும்.

இரவு இருள் குருகுலத்தை மூடியிருந்தது. மாணவர்கள் உறங்கும் வேளை. ஆசிரியர் குடிலில் விளக்கு அணைந்து வெகு நேரமாகிவிட்டது. அந்த நிசப்தத்தில் ஒரு உருவம் வந்தது.

கருப்பு நாய். ஒல்லியான உடல் — ஆனால் அதன் உயரம் சராசரி நாய்களை விடப் பெரியது. விலா எலும்புகள் தோலுக்கு அடியில் அசைவது தெரிந்தது. ஆனால் உடலின் மெலிவைப் பார்த்து அதன் முழு இருத்தலைக் கணிக்க முடியாது.

காரணம் கண்கள்.

அந்தக் கண்கள் தேங்கிய இரு குளங்கள் போல இருந்தன. மேலே அமைதி. உள்ளே நீரின் நினைவு. நிரம்பியிருக்கும் ஒரு நீர்நிலை எப்படி இருக்குமோ அப்படி.

வாசலில் வந்து படுத்துக் கொண்டது.

ஏவலர்கள் கற்கள் வீசி விரட்டினார்கள். நாய் எழுந்து போனது. சிறிது நேரம். பின் மீண்டும் வாசலின் அதே இடத்தில் வந்து படுத்தது. மாற்று வாசல் இல்லை. மாற்று உலகம் இல்லை.

பெயரில்லாதவன் தொலைவிலிருந்து பார்த்தான். இந்த நாயும் நானும் ஒரே எல்லையில் நிற்கிறோம். வாசலுக்குள் நுழைய முடியாது. வெளியேயும் இடமில்லை. இடையே. எல்லைக்கோட்டின் மீது. தீட்டானவன். தீட்டான விலங்கு. இருவரும் ஒரே இடத்தில்.

நள்ளிரவு. எல்லோரும் உறங்குகின்றனர். தூக்கம் வராத அவன் எழுந்து வெளியே வந்தான். கொட்டடிக்கு அருகே கிடந்த பழைய மரத்துண்டில் நாய் சுருண்டு படுத்திருந்தது. அவன் மெதுவாய் நடந்து சென்று சற்றுத் தள்ளித் தரையில் அமர்ந்தான்.

நாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தது.

அந்தக் கண்கள்.

அந்தக் குளங்கள் அவனுக்குள் நுழைந்தன. யுகங்களைக் கடந்த காலம் . வர மறுத்த காலமும், வந்து கடந்த காலமும், இப்போது நிகழும் காலமும் ஒரே சமயத்தில் கலந்து நிற்கும் விழிகள். எல்லா முதுகுகளையும் பார்த்த கண்கள். எல்லா கற்களையும் ஏற்ற தோல். எல்லா வாசல்களுக்கும் வெளியே நின்ற கால்கள்.

காலம் அந்தக் கண்களில் இருந்தது. அந்த கண்களின் மொழிக்கு வார்த்தைகள் இல்லை.

பாண்டவர் படையின் புகை

குருகுலத்தில் கண்ட கருப்பு நாய் அவ்வப்போது மாலை வேளையில், ஒரு நதிக்கரையில், ஒரு சுடுகாட்டின் ஓரத்தில், எதிர்பாராத திக்கில் என மீண்டும் தோன்றும். வாழ்க்கையின் இடுக்குகள் வழியே அதன் வருகை நெய்யப்பட்டிருந்தது. ஒரு நூல் போல. அந்த நூலை யாரோ பிடித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

குருகுலத்தை விட்டு அவன் வெளியேறினான்.

ஓடுகின்ற நீர் கல்லைத் தேய்ப்பதுபோல் நாள்கள் மனிதனின் நிலையை மாற்றுகின்றன. மாற்றத்தின் தருணம் தெரியாது. அதன் விளைவு மட்டுமே தெரியும். ஒரு காலை அவன் வாசலை விட்டு வெளியே நடந்தான். திரும்பவில்லை. வாசலின் இந்தப் பக்கம் என்று இனி ஒன்றில்லை என்பதை அவன் உணர்ந்தான்.

நெடிய வழிகள். பல வேலைகள். ஆனால் எல்லாம் ஒரே தாழ்வரைக்குள். நெருப்பு, விறகு, நீர், உணவுத் தயாரிப்பின் வியர்வை. இவையாவும் அவன் வாழ்வின் மாறாத நேர்க்கோடுகள்.

யுத்தம் வரும் என்பது காற்றிலேயே தெரிந்தது. பறவைகள் வழக்கத்துக்கு மாறான பாதையில் பறந்தன. மண் ஒரு வித்தியாசமான மணத்தை வெளிப்படுத்தியது. அது விசும்பு திறந்து வரும் முதல் துளியை வாங்கிக் கொண்ட மண்ணின் வாசனை அல்ல. இது பாதாளம் எரிந்து வரும் புகை மணம். மழை வரும் முன்பு வானம் நிறம் மாறுவதுபோல், மொத்த நிலத்தின் முகமும் மாறியிருந்தது. நிலத்துக்கும் ஒரு முகம் இருக்கிறது. அது போர் வரும் முன்பு வேறுவிதமாக இருக்கும்.

சத்திரியப் படைகள் எல்லாத் திசைகளிலும் நகரத் தொடங்கின. தேர்கள். யானைகள். குதிரைகள். காலாட்கள். பேரிகை ஒலிகள் இரவின் நிசப்தத்தில் எட்ட வந்தன. ஒரு பிரம்மாண்டமான மரணத்துக்கான முன்னொலிகள்.

யுத்தம் சத்திரியர்களுக்கானது. ஆனால் சூத்திரர்களுக்கும் பணி இருந்தது. விறகு வெட்டுவதில் ஒரு வேகம், மலை நீரைச் சுமந்து வரும் சகிப்புத்தன்மை, பெரும் பானைகளைத் தலைக்கு மேல் தூக்கி வைக்கும் வலிமை, ஒரே சமயத்தில் ஐந்து அடுப்புகளைக் கண்காணிக்கும் கவனம் — இந்தத் திறமைகளுக்கு வம்சாவழி கேட்கப்படவில்லை. பசிக்குக் குலம் தெரியாது. நெருப்புக்குச் சாதி தெரியாது.

***

போர் தொடங்கியது.

பதினெட்டு நாட்கள்.

விடியற்காலையில் சங்கொலிகள். நெடுநேரம் கழித்து முதல் அம்பின் சத்தம். பின் மொத்தப் போர்க்களமும் இடிமுழக்கம்போல் எழும். இடையில் செய்திகள் பறவைகள்போல் பின்புறம் பறந்து வரும்.

அவன் கேட்பான். கேட்டுக்கொண்டே வேலை செய்வான்.

“பிதாமகர் வீழ்ந்தார்.”

அவனுக்குப் பெரிதாக எந்தச் சலனமும் இல்லை.

பின் — “துரோணர் வீழ்ந்தார்.”

செய்தி உணவுக்கூடத்தின் புகை வழியே வந்தது. அவன் கைகளில் விறகு வெட்டும் கோடரி விறகில் இறங்கியது. இரண்டு துண்டுகள். மூன்றாவது விறகை எடுத்தான். அடுத்த வெட்டு.

துரோணரின் முதுகு இப்போது மண்ணில் கிடக்கிறது. முதுகு மண்ணில் கிடந்தால் முகம் கீழே இருக்கும். யாரையும் நிராகரிக்க முடியாத நிலை. தரையே அவரை ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்க மறுத்தார்கள். தரை மறுக்காது.

கோடரி மேலே ஏறி இறங்கியது.

மூன்று நாட்கள் கழிந்தன.

“கர்ணன் இறந்தான்.”

செய்தி வந்தது.

கோடரி நின்றது.

மேலே தூக்கிய கை அப்படியே நின்றது. சூரியன் நண்பகலில் எரிந்து கொண்டிருந்தது. அவன் முகத்தில் வியர்வை. அடுப்பின் சூடு. ஆனால் இந்த நிறுத்தம் வெப்பத்தால் அல்ல.

கர்ணன். குருகுலத்தில் திரும்பி நடந்த மனிதன். காற்று விலகி வழிவிட்ட நடை. கழுத்தின் இறுகிய தசைகள். மழைக்கால மண்ணில் ஆழமாய்ப் பதிந்த காலடித் தடங்கள்.

விழுந்தான்.

மரம் வெட்டப்படும்போது கோடரியின் முனை பட்டவுடன் மரம் உடனே விழுவதில்லை. ஒரு இடைவெளி. அந்தக் கணத்தில் மரம் தான் வாழ்ந்த எல்லாக் காலங்களையும் ஒன்றாய்ச் சேகரித்து, நின்ற நிலத்தையும், படர்ந்த கிளைகளையும், தழுவிய மழையையும், வேரின் ஆழ ஞாபகங்களையும் ஒரு முறை தொட்டுப் பார்க்கும். பின் விழும்.

அந்த இடைவெளி இப்போது அவனுக்கு வந்தது. கோடரியை இறக்கவில்லை. மேலே தூக்கிய கை அப்படியே தங்கியது. நண்பகல் வெயில் அதன் மீது விழுந்தது.

“வில்வித்தையில் அவனுக்கு நிகர் யாருமில்லை” செய்தி சொன்னவன் தொடர்ந்தான். உணவுக்கூடத்தில் இன்னொருவர் சொன்னார். மூன்றாமவர் சொன்னார்.

இப்போது சொல்கிறார்கள் அவன் தன்னிகரற்றவன் என்று.

கோடரி மீண்டும் அசைந்தது. விறகு வெடித்தது. நெருப்பு எரிந்தது. சோறு பொங்கியது. வீரர்களின் பசிக்கு உணவு தயாரானது. யுத்தம் தொடர்ந்தது.

நாயின் மொழி

பதினெட்டாவது நாளின் சூரியன் மறைந்தபோது குருக்ஷேத்திரம் ஒரு பேரமைதியில் மூழ்கியது. ஊழ் யாருடைய கை வழியாக இறங்கி போயிருக்கிறது என்று தெரியவில்லை.

சங்குகள் ஓய்ந்தன. வாள்கள் அடங்கின. கூக்குரல்கள் காற்றில் கரைந்தன. எஞ்சியது மௌனம். அந்த மௌனம் வெறுமையல்ல — அது நிரம்பியிருந்தது. இறந்தோரின் மூச்சுகளால் நிரம்பியிருந்தது.

இரவில் உணவுக்கூடத்தின் கடைசி அடுப்பும் அணைக்கப்பட்ட பின் அவன் குருக்ஷேத்திரத்தின் விளிம்பை நோக்கி நடந்தான்.

கால்களுக்கு அடியில் உடைந்த தேர்களின் பாகங்கள். காய்ந்த குருதி மண்ணில் கரும்புள்ளிகளாய். ஓரிடத்தில் சிதைந்த கொடி. மற்றோரிடத்தில் ஒரு கேடயம் உடைந்து நிலவொளியைப் பிரதிபலித்தது. தொலைவில் சில நெருப்புகள் எரிந்தன. இறந்த உடல்களை எரிக்கிறார்கள். சடங்குகள். மந்திரங்கள். சத்திரியன் சூத்திரனை எரிக்கிறானா, சூத்திரன் சத்திரியனை எரிக்கிறானா — இந்த நெருப்பில் வித்தியாசம் தெரியாது. நெருப்பு பேதம் அறியாது.

நிலத்தில் எலும்புகள்.

வெண்மையானவை. கருமையானவை. முழுமையானவை. உடைந்தவை. எல்லாம் மண்ணுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.

அவன் கீழே பார்த்தான். ஒரு எலும்பு. வேறொரு எலும்பு. யாருடையவை? பெயருள்ளவர்களுடையதா, பெயரில்லாதவர்களுடையதா? உயர்குலத்தினரது என்று, கீழ்குலத்தினரது என்று?

மண்ணுக்குத் தெரியாது. மண் யாரிடமும் விவரம் கேட்பதில்லை. மண் தன் வேலையைச் செய்கிறது. விதை முளைக்கிறது. மண்ணுக்கு முன்னால் உயர்வு தாழ்வு என்பது வெறும் மேற்பரப்பின் மாயம்.

அந்த நிசப்தத்தின் விளிம்பில் இருளிலிருந்து ஒரு உருவம் பிரிந்து வந்தது.

கருப்பு நாய்.

குருகுலத்தின் இரவுகளில் சந்தித்த அதே நாய். ஆண்டுகள் வழிந்தோடியிருக்கின்றன. நாய் மாறவில்லை . அதன் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாய்க்குக் காலம் வேறு விதமாய் நகர்கிறது. அல்லது நாய்க்குக் காலமே இல்லை. அல்லது நாயே காலம்.

அது அவன் அருகே வந்து மெதுவாய் உடலை அவன் வலது கால் பக்கமாய்ச் சேர்த்துப் படுத்துக் கொண்டது.

அந்தக் கண்கள் அவன் இதுவரை காணாத ஒன்றைச் சொல்லும் வகையில் இருந்தன.

அந்த விழிகளுக்குள் இந்தப் பதினெட்டு நாட்களும் இருந்தன. துரோணரின் திரும்பிய முதுகு. கர்ணனின் விழுந்த நிழல். குந்தி தேவி தனியே நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி. சத்ரிய படைகளில் இருந்த ஒவ்வொரு முகமும் அலைகளாய் மிதந்தன. மொத்தக் குருக்ஷேத்திரமும் ஒரு நொடியில் கரைந்து மறைந்தது.

நாய் ஓசை எழுப்பியது.

அது குரைப்பு இல்லை. அலறல் இல்லை. அது ஒரு மெல்லிய, ஆழ்ந்த ஒலி. நெஞ்சின் கூட்டுக்குள் நுழைந்து எலும்புகளில் ஊடுருவும் ஒலி. காதுகள் கேட்கவில்லை. இருதயம் கேட்டது. உடல் கேட்டது.

அவன் உணர்ந்தான். உள்ளே வார்த்தைகள் உருவாகின. அவை நாயின் குரலில் இருந்தன அல்லது அவனது உள்ளத்தின் ஆழம் அந்த நாயின் மூலமாகப் பேசியது. எப்படியும், பொருள் ஒன்றுதான்.

“பார்.

முப்பத்தாறு அக்ஷௌகிணிகள். சத்திரியம் முடிந்தது. வாள் சுமப்பார் யாருமில்லை. தேசத்தைக் காப்பவர் யார்? வீரம் என்னும் தொழில் இனி ஒரு வெற்றிடம். வெற்றிடத்தைக் காற்று நிரப்பும். இனி இந்த வெற்றிடம் வாசலுக்கு வெளியே நிற்பவர்களால் நிரப்பப்பட வேண்டும். முதுகை மட்டுமே பார்த்துப் பழகியவர்கள் இதுவரை காத்திருந்தார்கள்.

காத்திருப்பது வேறு ஒன்றுமில்லை — அது ஒரு தகுதி. விதை மண்ணில் கிடந்து காத்திருப்பதைப் போல். அந்தக் காத்திருத்தலே அதன் வலிமை. அடைபட்ட காற்றைப் போல் வலிமையானது வேறொன்றும் இல்லை.”

அந்த வார்த்தைகள் காற்றில் கரையவில்லை. அவன் உடலுக்குள் இறங்கின. எலும்புகளுக்குள். இரத்தத்துக்குள். விதை மண்ணில் விழுவதுபோல்.

புதிய உலகு

யுதிஷ்டிரன் அரசவையில் விவாதம் தொடங்கியது.

குருக்ஷேத்திரத்தின் சாம்பலும் புகையும் இன்னும் முற்றாய் மறையவில்லை. ஆறுகளில் குருதி வற்றியிருந்தது. விதவைகளின் வெண்மை விரவிய நகரங்கள். ஆனால் யுதிஷ்டிரர் முடிசூடிய நாள்முதல் ஒரு கேள்வி பிறைபோல் மேலே எழும்பிக் கொண்டே இருந்தது.

தேசத்தைக் காப்பவர் யார்?

வாளெடுக்கச் சத்திரியர் இல்லை. முப்பத்தாறு அக்ஷௌகிணிகள் மண்ணுக்குள் போயின. எஞ்சியவர் சிலரே. தேசத்தின் எல்லைகள் நீண்டிருந்தன. பாதுகாப்பு என்பது வெறும் சுவர் இல்லை.

புதிய வீரர்கள். புதிய குலம். புதிய உதிரம்.

அந்தணர்களுக்கு ஏற்பு இல்லை என்றாலும், புதிய சத்திரியர்கள் உருவாகியே தீர வேண்டும்.

“வாள் பிடிப்பவன் சத்திரியன். குலம் இனித் தொழிலில் தங்கும். உதிரத்தில் அல்ல.”

*

காலன் வெட்ட வெளியில் நின்றான்.

குருக்ஷேத்திரத்தின் ஒரு விளிம்பு. போர் முடிந்து பல திங்கள் கடந்திருந்தாலும் இன்னும் காற்றில் புழுதி. எரிந்த மணத்தின் எச்சம். ஆனால் வட்டமிடக் கழுகுகள் இல்லை — விண் வெறும் விண்.

அவன் முன்னால் தரையில் ஒரு வில்.

யாருடையது? தெரியாது. கர்ணனுடையதா? வேறு யாருடையதாவது? யாருடையது என்பது பொருட்டல்ல. வில் என்பது வில். அம்பு என்பது அம்பு. தொழில் என்பது தொழில். குலம் என்பது — இனி — தொழில் மட்டுமே.

அவன் குனிந்து எடுத்தான்.

வில் கையில் அமர்ந்தது. நாண் விரல்களைத் தொட்டது.

விறகு உடைத்துக் காய்ந்திருந்த கைகள் அவை. குருகுலத்தின் இரவுகளில் எல்லோரும் உறங்குகையில் ஒரு குச்சியை வில்போல் பிடித்து நிலவைக் குறிவைத்த கைகள் இவை. யாரும் பார்க்காத வேளை. யாரும் அறியாத பயிற்சி. எந்தச் சான்றும் வேண்டியதில்லை — உடம்பின் ஞாபகமே போதும். கை மறக்கவில்லை.

நாணை இழுத்தான். வில் வளைந்தது.

வெற்று வானத்துக்கு எதிரே அம்பு ஒரு புள்ளியை நோக்கியது. குறி தெரியவில்லை — ஆனால் காலன் கண்கள் மூடவில்லை. அவன் வானத்தைப் பார்த்தான். அந்த வெற்று வெளியில் அவன் கண்களுக்கு ஒன்று தெரிந்தது.

கர்ணனின் காலடித் தடங்கள். மழைக்கால மண்ணில் ஆழமாய்ப் பதிந்த அந்தத் தடங்கள் — இப்போது வானத்தில். ஒரு பாதை. யாரோ ஒருவர் முன்பே நடந்து சென்ற பாதை. அந்தப் பாதையில் இப்போது இவன் நடக்க வேண்டும்.

தன் இலக்கு என்ன என்பதை கண்டு கொண்டான்.

நாணை விட்டான்.

அம்பு புறப்பட்டது. காற்றைக் கிழித்தது. வானில் மறைந்தது. எங்கே சென்றது என்று தெரியவில்லை. ஆனால் கை சரியாகப் பிடித்திருந்தது. உடல் சரியாக நின்றிருந்தது. விழிகள் சரியாகக் குறிவைத்திருந்தன.

காற்றில் ஒரு மாற்றம். பழைய வரிசைகள் கரையத் தொடங்கின.

விதை முளைத்தது.

நாய் அவன் பக்கத்தில் நின்றது. அசைவில்லாமல் காலத்தின் சாட்சியாக. அது குரைக்கவில்லை. அசையவில்லை. நின்றது.

அவன் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். குருக்ஷேத்திரத்தின் வானம் வேறாயிருந்தது. சாம்பல் நிறம் மெதுவாக விலகி ஒரு இளம் நீலம் திரும்பிக் கொண்டிருந்தது. மேகங்கள் கலைந்து வெறுமைக்குப் பதில் ஒரு சுத்தமான வெளி.

அந்த வெளியில் அவனும் இருந்தான். இப்போது.

நாய் மீண்டும் அந்த ஒலியை எழுப்பியது. வார்த்தையற்ற பெயர். காற்று அதை அருகே இருந்த புதர்களுக்குக் கடத்தியது. புழுதி எழுந்து கடந்து சென்றது.

காலன்.

***

மண் எல்லாவற்றையும் நினைவில் கொண்டது.

விதை விழுந்த இடம். வேர் இறங்கிய திசை. இருளில் கழிந்த பொறுமை. முதுகு காட்டிய நாட்கள். கோடரி நின்ற கணம். வில் கையில் அமர்ந்த நொடி.

மண் எல்லாவற்றையும் அறியும். ஆனால் மண் யாரிடமும் சொல்வதில்லை. மண்ணின் மொழி ஒன்றே ஒன்றுதான் — முளைத்தல்.

காலம் வரும்போது மண் தன் கதவைத் திறக்கும்.

காலன் நடந்தான். வில் கையில். நாய் பின்னால். குருக்ஷேத்திரத்தின் மண் அவர்கள் கால்களை அடையாளம் கண்டுகொண்டது.

இது தொடக்கம்.

***

ஆர்.சங்கரநாராயனன் – தென்காசி மாவட்டத்தை சார்ந்தவர். பணி நிமித்தமாக மும்பையில் வசித்து வருகிறார். 10 வருடங்களுக்கும் மேலாகத் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய செயல்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன் . 2017 ல் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எழுத்தாளர் நீலபத்மநாபன் அவர்களின் அறக்கட்டளை சார்பில் சிறந்த கவிதைக்கு வழங்கப்படும் “தலைமுறைகள் “ விருது எனது “மாயவிதைகள் என்ற கவிதைக்கு கிடைத்து. தொடர்ச்சியாக சிறுகதைகள், கவிதைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: rbisankar2009@gmail.com

பின்நவீனத்துவ சட்டகமும் ஒரு மரணமும்

0

கணேஷ் பாபு

சிங்கப்பூரின் முதல் பின்நவீனத்துவ நாவல் என சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய “விளம்பர நீளத்தில் ஒரு மரணம்” நாவலைக் குறிப்பிடலாம். பின்நவீனத்துவக் கூறுகளான மையமற்ற தன்மை, விளிம்பைக் கவனப்படுத்துதல், நேர்க்கோடற்ற வடிவம், மரபை உடைத்துப் பார்த்தல், எல்லாவற்றுக்கும் மேலாக சுவாரஸ்யமான கதை சொல்லல் என உள்ளும் புறமும் பின்நவீனத்துவத் தன்மைகளை முழுக்க உள்வாங்கி எழுதப்பட்ட நாவல். பின்நவீனத்துவ சிந்தனையாளரான ஜாக் டெரிடாவின் மேற்கோள்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பாக அமைந்திருப்பது நாவலுக்கு மேலும் ஒளிகூட்டியிருக்கிறது. 

முன்னுரையிலேயே தனது விளையாட்டைத் துவக்கி விடுகிறார் ஆசிரியர். தான் எழுதியிருக்கும் இந்த நூலைப் பற்றி முன்னுரையில் ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்து வாசித்தால், ஏமாற்றமே மிஞ்சும். அவர் சீன நாவலான “நீரின் கரை” யைக் குறித்தே முன்னுரையில் பேசுகிறார். அதற்கும் இந்த நாவலுக்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகத்தைப் பின்நவீனத்துவத்தை அறிந்த வாசகர்கள் எழுப்ப மாட்டார்கள் என்ற அவரது நம்பிக்கை இதில் புலப்படுகிறது. ஆம், மேலோட்டமாகப் பார்த்தால் தனது நாவலைக் குறித்து அவர் முன்னுரையில் எதுவும் சொல்லவில்லைதான். ஆனால், உண்மையில் தனது நாவலைக் குறித்துத்தான் அவர் முன்னுரையில் பேசியிருக்கிறார் என்று ஒருமுறை இந்த நாவலை முழுமையாக வாசித்த வாசகருக்குத் தெரிந்துவிடும். 

டெரிடா, சுசீலா இருவரும் காதலித்து மணமுடித்தவர்கள். டெரிடா சீன இனத்தவன், சுசீலா இந்திய வம்சாவளிப் பெண், இருவரின் வீட்டிலும் இத்திருமணத்தில் பெரிதாக விருப்பமில்லை. திருமண வாழ்வும் இவர்களுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. சுசீலாவும் அவளுடன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஜப்பானியப் பேராசிரியர் வாட்டாதாவும் காதலிக்கின்றனர். திருமணம் தாண்டிய உறவை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அதனால் மன உளைச்சலுக்குள்ளாகும் டெரிடா, வாட்டாதாவின் செய்கைகளால் மன உளைச்சலுக்குள்ளாகும் அவனது மனைவி யூரிகோ, இவர்கள் நால்வருமே பிரதான கதாபாத்திரங்கள். நாவல் இவர்களை மையமிட்டே நகர்கிறது. இவர்களைத் தவிர வாசுதேவன் என்ற துணைக் கதாபாத்திரமும் உண்டு. 

நாவலின் முதல் அத்தியாயத்திலேயே வாட்டாதா மரணமடைகிறார். அதனூடாகக் கிளைபிரியும் கதைப்போக்கு, அவரோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் பார்வையிலும் நீள்கிறது. பெரும்பாலான அத்தியாயங்கள் டெரிடாவின் பார்வையிலும், சில அத்தியாயங்கள் சுசீலாவின் பார்வையிலும், வாசுதேவனின் பார்வையிலும், பிற அத்தியாயங்கள் ஆசிரியரின் பார்வையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. சில அத்தியாயங்களில் பின்நவீனத்துவ நாவலுக்கேயுரிய சுதந்திரத்தோடு, மரணப் படிவம், செய்தித்தாள் விளம்பர விலைகளின் பட்டியல், கடிதப் பரிமாற்றங்கள், கல்யாண நாள் பார்த்துச் சொல்லலாமா என்ற தமிழ்த் திரைப்பாடலின் வரிகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. 

வாட்டாதாவின் மரணத்துக்குக் காரணமென்ன என்று போலீஸ் அதிகாரிகள் புலனாய்வு செய்கிறார்கள். வாட்டாதாவின் மரணத்தோடு துவங்கும் நாவல், அவருக்கும் சுசீலாவுக்கும் இடையேயுள்ள உறவையும், பிணக்கையும் ஆராய்கிறது. அதன்பின், சுசீலாவின் கணவனான டெரிடாவின் உணர்வுகள், அவனுக்கும் சுசீலாவுக்கும் இடையே நடந்த திருமணச் சடங்குகள், அதைத் தொடர்ந்த கோமாளித்தனங்கள், இருவருக்கும் இடையே மெல்ல மெல்ல உருவாகும் கசப்புகள், மறுபக்கம் வாட்டாதாவுக்கும் அவரது மனைவி யூரிகோவிற்கும் இடையேயான மனக்கசப்புகளும் குடும்ப வன்முறைகளும் காட்டப்படுகின்றன. இந்த இரு கதைகளுக்கும் நடுவே, பேராசிரியர் வாசுதேவனின் கதையும் சொல்லப்படுகிறது. தன் வாழ்வில் நேர்ந்த சில கசப்பான அனுபவங்களால் பெண்கள் குறித்த பிறழ்வான புரிதலை தனக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவனுக்கு ஒருகட்டத்தில் வாழ்வு குறித்த கண்ணோட்டமும் பிழையானதாக மாறிவிடுகிறது. கையளவு சவப்பெட்டி தயாரிப்பதே அவனது பொழுதுபோக்காக மாறிவிடுகிறது. தன்னைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்வையும் சவப்பெட்டிக்குள் அனுப்பிவிடுகிறான் இவன். ஒருவகையில், டெரிடா சுசீலாவின் வாழ்க்கை நரகமாவதற்கும், வாட்டாதாவின் மரணத்திற்கும் கூட இவனே காரணமெனலாம். இவன் டெரிடாவுக்கு குறுஞ்செய்திகள் வாயிலாக கொடுக்கும் அழுத்தங்களே அவனது வாழ்வைக் கெடுக்கின்றன. 

நாவலின் அடிநாதமாக நான் காண்பது, மையம் என்பதன் அர்த்தமின்மையும் அதைத் தொடர்ந்து மையத்தைச் சிதறடிப்பதுமே. திருமணம் என்ற மையம்,  திருமண வாழ்கையின் ஆதாரமான பரஸ்பர நம்பிக்கை என்ற மையம், குடும்பம் என்ற மையம், ஆண்பெண் உறவில் இணக்கம் என்ற மையம், இப்படி நம் வாழ்வில் எத்தனையோ மையங்கள் இருக்கின்றன. அந்த மையங்களின் பலத்தால்தான் வாழ்க்கை உறுதியாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்று நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த மையங்கள் என்பவை நிலையானதல்ல, அவை அழிந்தால் வாழ்வு என்னாகும் என்ற கேள்வியைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார் ஆசிரியர். பின்நவீனத்துவம் சொல்வதும் இந்த மையமழிப்புதானே. கிட்டத்தட்ட பின்நவீனக் கோட்பாடுகளை உரசிப்பார்த்துக் கொள்ள ஒரு நிகர் வாழ்க்கையையும் கதாபாத்திரங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சித்துராஜ். அது வெற்றிகரமாகவும் அமைந்திருக்கிறது. 

இடையிடையே, சிங்கை வாழ்வின் சில பண்பாட்டுத் தகவல்களையும், குறிப்பாக சீனர்களின் வாழ்க்கையைக் குறித்த நுண்தகவல்களையும் ஆசிரியர் அளித்திருக்கிறார். டெரிடா-சுசீலா திருமணத்தின் வாயிலாக சீனத் திருமண முறைகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல, சீன சந்திராயன வருடக் கணக்குகள், நீர் எலியின் வருடத்தில் பிறந்த டெரிடாவுக்கு எலியின் குணம் விரவியிருப்பதையும், கடல்நாகத்தின் வருடத்தில் பிறந்த சுசீலாவுக்கு அதன் குணங்களும் உள்ளோடியிருப்பதையும் சொல்வதன் மூலம், நுட்பமான உளவியல் பார்வைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல, அகலிகை கதையை ஒரு மாறுபட்ட கோணத்தில் அணுகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

அத்தியாயத்தின் தலைப்புகள் ஜாக் டெரிடாவின் பின் கட்டமைப்பு வாதம் குறித்த கட்டுரைகளில் இருந்தும் நேர்காணல்களில் இருந்தும் எடுத்தாளப்பட்டிருப்பதும், ஒவ்வொரு அத்தியாயமும் அந்தத் தலைப்பின் சாரத்துக்குப் பொருந்திப் போவதும் நன்றாக இருக்கின்றன. எனினும், இந்த நாவல் ஒரு பின்நவீனத்துவ நாவல்தான் என்று இத்தனை வலிந்து புறவயமாகக் காட்டிக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தத் தலைப்புகளைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும் நாவலை ஆழ்ந்து வாசிக்கும் வாசகருக்கு இது ஒரு பின்நவீனத்துவ நாவல்தான் என்பது கட்டாயம் தெரிந்துவிடும். அதுபோலவே, முக்கியக் கதாபாத்திரத்துக்கு டெரிடாவின் பெயர் வைத்திருப்பது, பிரதான கதாபாத்திரங்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவது (பெரும்பாலான பின்நவீனத்துவ அறிஞர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களே) போன்றவற்றையும் சொல்லலாம். சிறியதொரு தகவல் பிழையையும் பார்க்க முடிந்தது. நாவலின் ஓர் இடத்தில் (பக்:55) சுசீலாவின் தந்தை துவாஸ் அருகே இருக்கும் இரும்புப் பட்டறையில் தரக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணிபுரிவதாகவும், வேறொரு அத்தியாயத்தில் (பக்:110) அவர் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. 

யூரிகோ உண்மையில் தற்கொலை செய்துகொள்ளவில்லை, வாட்டாதாதான் அவளை மாடியில் இருந்து தள்ளிவிட்டிருக்கிறான் என்ற கோணமும் நாவலில் இடம்பெறுகிறது. அதுபோலவே, வாட்டாதாவின் மரணமும் கொலைதான் என்ற சந்தேகத்தையும் காவல் அதிகாரி ஜெ, முன்வைக்கிறாள். ஆனால், இவை நிரூபணமாகவில்லை. ஆக, ஒன்றன் பின் ஒன்றாய் மோதி நகரும் கதைப்போக்கின் முடிவில் வாட்டாதாவின் மரணத்திற்கு எந்த விதமான அர்த்தமும் இல்லை என்று முடிவாகிறது. விளம்பர நீளம் கூட அதற்கு இருப்பதில்லை. மரணம் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் எந்த விதமான அர்த்தமும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது நாவல். இப்படி ஒரேயடியாகத் தொகுத்துப் பார்க்கவும் தேவையில்லை என்றும் தோன்றுகிறது. ஏனெனில், எந்தவொரு நீதியையும் அர்த்தத்தையும் நிலைநாட்டுவதற்காக இந்த நாவல் எழுதப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது, இதை, இதன் இறுதி அத்தியாயத்தில் ஜெ சொல்லும் கதையிலிருந்து ஊகிக்கலாம். ஆதலால், இதை வாசிப்பவர்களும் வாசிப்புச் சுவாரஸ்யத்துக்காகவே இதை வாசிக்கலாம். ஆனால், அதையும் தாண்டி மனதில் சில அடுக்குகளை அசைத்துப் பார்க்க முயல்வதால் இது வலுவான படைப்பாகவும் நிலைகொள்கிறது. 

***

கணேஷ்பாபு – தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.மின்னஞ்சல்: ganeshmodec@gmail.com

நிவிர்த்தி

0

 சுதர்சன் ஹரிபாஸ்கர்

ந்தா பாருடி புள்ள. பொண்ணு வூட்டுக்காரவ்வொ அப்டித்தான் என்னம்மாச்சும் சொல்லுவாவ்வொ. நீ இதயெல்லா மனசுல ஏத்திக்காம கொஞ்ச நாளக்கி ஃபிரியா இரு”

சலனமே இல்லாமல் அமர்ந்திருந்த எனக்கு சித்தி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, சித்தப்பா இடைமறித்தார்.

“நீ செத்த செவனேன்னு இரு. யப்பாடி ஒனக்கு தோணுறத பண்ணுப்பாடி. நெதானிச்சு யோசி. அப்புறமா ஒனக்கு சரியா வர்றத்த பண்ணு”

 ”சரி சித்தப்பா. இப்ப வெளில கெளம்புறேன். ரெண்டு நாள் கழிச்சு வந்து எல்லாத்தையும் பேசிப்போம்”

 அப்பாவும் அம்மாவும் ஏதும் சொல்லாமல் குற்ற உணர்வுடன் இருப்பது அவர்களின் முகத்தில் தெரிந்தது

“யப்பா பெரியபுள்ள இவனுவளுக்காவ உன்ன டூர் போக வேணாம்னு சொல்லிட்டமேன்னு இருக்கு. அடுத்த வாரம் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லி அனுப்பிருக்கனும். இப்ப அவதி அவதியா வந்து கும்ப கூடி இஷ்டத்துக்குப் பேசிட்டு பதிலும் ஒன்னும் ஒழுங்கா சொல்லாம போவானுவோன்னு யாரு கண்டா. நீ வேற எங்கேயாச்சும் கெளம்பி பெய்ட்டு வா”

“இல்லம்மா. அவங்க சைட்ல இருந்து பாத்தா அவங்க கேட்டதெல்லாம் நியாயமா தான் தோணுது. நம்ம சைடுல நெறையா வீக் பாயிண்ட் இருக்கு. சொந்த வீடு இல்ல. சொந்த ஊருல பெருசா நமக்குன்னு ஒன்னுமில்ல. வேலைல ஓரளவு நல்ல சம்பாதிச்சாலும் அவங்க கேக்குறாப்ல பெரிய காலேஜுல ஆஹா ஓஹோன்னெல்லாம் ஒன்னும் படிக்கலதான.”

பெண் வீட்டார் கேட்ட கேள்விகளால் உள்ளுக்குள் அகங்காரம் கொஞ்சமாய் சுரண்டப்பட்டிருந்தாலும் உதட்டளவில் அம்மாவுக்காக சால்ஜாப்பு சொன்னேன். அப்பா எதுவும் சொல்லாமல் மூக்குநுணி கண்ணாடி வழி அலைபேசியைப் பார்த்தபடி சோபாவில் சாய்ந்திருந்தார். 

“உங்கம்மா சொல்றத்த கேளுப்பா. நீ எங்க போறியோ போயிட்டுவா. வண்டில போறதா இருந்தா ஜாக்கிரதையா போ. அப்பப்ப போன் பண்ணு” 

“ஓக்கேப்பா. நான் உலகா மாமாட்ட பேசிருக்கேன். அவரப் போய் பாத்துட்டு அவரோட அப்டியே ரெண்டு நாள் சுத்திட்டு வரேன். பைக்லதான் போறேன்”

ஆமோதித்து தலையசைத்தார். நான் மாற்றுத்துணிகளை அள்ளி ஒரு நீளமான பயணப்பையின் உள்ளே திணித்துக் கொண்டிருந்தேன். வண்டியிலேயே போவதென்றால் இதை அப்படியே பின் சீட்டில் வைத்து கட்டிக் கொள்வது போதுமானது. 

“இப்பவே மணி மூனாவுது. இப்ப கெளம்புனாலும் நடுராத்திரிக்கு மேல ஆயிடுமேப்பா பரவால்லயா ? போன்ல சொல்லிட்டியா ? அவரு எங்க சீவில்லிப்புத்தூர் தான ?”

 ”பேசிருக்கேன்பா; அவரு வாசுதேவநல்லூர்னு நெனைக்கிறேன். மொதல்ல நான் கெளம்புறேன். போற வழில உங்களுக்கு அவருக்கு எல்லாருக்கும் போன் பண்றேன். சரியா ? வாடகைச் சேருக்கு ஆள் வருவான். செட்டில் பண்ணிருங்க. அம்மாட்ட காசு குடுத்துட்டுப் போறேன்” 

 நண்பர்களுடன் வெளியூர் செல்வதாகத் திட்டம் இருந்தது. திடீரென பெண் வீட்டிலிருந்து பத்து பேர் வருவதாக அம்மாவுக்கு ஃபோன் வர, நண்பர்களிடம் நான் வரவியலாத காரணத்தைச் சொல்லிவிட்டு வீட்டில் ஆகவேண்டிய வேலைகளைப் பார்த்துக் கொண்டு அம்மாவுக்கு உதவியபடி இருந்தேன். 

பெண்ணின் தாய் மாமன்கள் மூவர், அவர்களின் மனைவியர், பெண்ணைப் பெற்றோர், பெரியவர்கள் என ஒரு பெரும் கூட்டமே வந்திருந்தது. வந்தவர்களுக்கு காஃபி டிபன் தந்து சம்பிரதாய உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கையில், பெண்ணின் தாய்மாமன்களுள் ஒருவர் என்னைத் தனியே அழைத்துப் போய் வேலை, சம்பளம், படிப்பு, கடன்கள், சொந்த ஊர் சொத்து விவரம், எதிர்காலத்திட்டம் என கேள்விகளால் துளைத்தெடுத்தார். 

வீட்டிற்கு சென்றதும் சிறிது நேரம் பேச்சும் சலசலப்புமாக வந்திருந்த அனைவரும் சிறு குழுக்களாக அமர்ந்து பேசிகொண்டிருந்துவிட்டு, சீக்கிரமே நல்ல செய்தி சொல்கிறோம் என்றுவிட்டு புறப்பட்டனர் 

அதன்பின் என்னுடைய மனநிலையைப் பார்த்துவிட்டே வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் வந்து ஆறுதல் சொல்லத்துவங்கினர். எனக்குமே ஒரு தற்காலிக தப்பித்தல் தேவையாக இருந்தது. இப்போதைக்கு சுற்றி நடக்கிற அனைத்தையும் மறந்துவிட்டு எங்காவது சென்று வரலாம் என்பது மட்டுமே மனதில் ஒடிக்கொண்டிருந்தது.

தெருமுனையின் மெக்கானிக் ஷாப்பில் வண்டியை நிறுத்தினேன். “தம்பி டேய்.. செய்ன் கொஞ்சம் லூசா இருக்கு டைட்டு வை. அப்டியே ஏர் செக் பண்ணிட்டு க்ளட்ச்சு கேபிள், ஆக்ஸிலேட்டர் கேபிளை பாத்துரு.”

“ண்ணா.. போன ட்ரிப்பு முடிச்சு வந்து இன்னும் சர்வீஸ் பண்ணல…வரேன் வரேன்னு தட்டிக் கழிச்சுட்டே இருக்கீங்க. வண்டிய விட்டுட்டு என் வண்டிய எடுத்துட்டுப் போங்கண்ணா. பொறுமையா பாத்து வெக்கிறேன்”

“ஏய்… அதுகெல்லாம் டைம் இல்லப்பா. இப்போதைக்கு இருக்குறதப் பாத்து சரி பண்ணிவிடு. இந்த ட்ரிப்புக்கு தாங்கும்ல ? முடிச்சுட்டு வந்து பாத்துக்குறேன்.”

“இல்லண்ணா. பேக்வீல் அல்ரெடி நெறைய பஞ்சர் போட்டாச்சு. க்ளட்ச் ப்ளேட்டும் நெறையா தேச்சாச்சு, அதுவும் மாத்தனும். இப்போ டைம் குடுத்தா புது ட்யூப மட்டுமாவது மாத்திடுறேன்”

“இல்லப்பா. டைம் இல்ல. வந்து பாத்துக்குறேன். நீ மத்தத பாத்துட்டு ரெடி பண்ணு”

“இந்தவாட்டி எங்கண்ணா ட்ரிப்பு”

“தெர்லப்பா குற்றாலம் கிட்ட போறேன். அங்கருந்து ஃப்ரண்டு எங்க கூப்டுப் போறாரோ அங்க…”

“எங்கெங்கியோ போறீங்க வரீங்க. ஒன்னியும் வாங்கியாரதில்ல. சொம்மா வெறுங்கைய வீசிட்டு வரீங்க”

இவனுடைய சீண்டலையெல்லாம் பொருட்படுத்தி பதில் சொல்லுமளவு பொறுமையில்லாததால் முகம் பாராமல் தவிர்த்து நகர்ந்தேன்.

அடுத்த அரை மணிநேரத்தில் வண்டியிலிருந்த சின்னச் சின்ன பிரச்சனைகளை மட்டும் சரிபார்த்துவிட்டு வீடு திரும்பினேன். எல்லோரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்புகையில் மதிய வெய்யில் குறையத்துவங்கியிருந்தது. 

”வெளிச்சம் கொறையுறதுக்கு முன்னாடியே எவ்ளோ தூரம் முடியுமோ போயிரனும் ” 

மாலை சூரியன் மங்கி இருள் மெல்ல மெல்ல விரிய, மனம் முழுக்க பரவிக்கிடந்த ஆற்றாமையும், கையறு நிலையும் மூளைக்கு கோபத்தின் அறிவிப்பை அனுப்ப, வலது மணிக்கட்டு ஆக்ஸிலேட்டரை இன்னும் வலுவாக முறுக்க, நெடுஞ்சாலை எதிர்காற்றின் சீற்றமும் எஞ்சின் உறுமலும் ஹெல்மெட்டைத் தாண்டி காதுக்குள் ஊடுருவின. இரவு விராலிமலை தாண்டும் போது, ஒரு சாலையோரக் கடையின் முன் வண்டியை நிறுத்திவிட்டு, அருகே முகம் கை கால் கழுவிவந்து சாப்பிட அமர்கையில் உலகா மாமாவை அழைத்தேன்.

 உலகா மாமா நீண்ட நாட்களாக ஊருக்கு வரச்சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் அவர் உறவெல்லாம் இல்லை; எங்கோ ஒரு ஊரில் ஒரு கல்லூரிக்கால நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது அவனுடைய தூரத்து உறவினராக எங்களுக்கு அறிமுகமாகி பின் தொலைபேசியிலும் வாட்சப்பிலும் வாரம் தவறாது அழைத்துப் பேசுமளவு நெருக்கமாகிப் போனார். 

“சொல்றா தம்பு.. எங்க இருக்க ?”

“இந்தா விராலிமலைகிட்ட சாப்புட நிறுத்துனேன் மாமா. நடுராத்திரிக்கு மேல ஆயிரும்; நீங்க தூங்கிருங்க. நான் வந்துட்டு கூப்புடுறேன்”

“சரி சரி. பாத்து வா”

“ஆமா எங்க போறோம் ? எங்க தங்குறது ?எடம் நல்லாருக்குமா? “

“லேய்.. கேள்வி மசுறெல்லம் கேக்காம கம்முன்னு கெளம்பி வா. மத்த கதைய அப்புறம் பாத்துப்பம்” 

“சரி ரைட்டு” 

 முதுகு வலித்தது; தோள்பட்டையிலிருந்து பின்னங்கழுத்து வரையிலும் இரும்புக்கம்பியால் இணைத்து கட்டியதுபோல உணர்ந்தேன்.

”தம்பி.. சாப்புட என்னா வேணும் ? “

“தெரியலண்ணே. எது ஒடனே கெடைக்குமோ குடுங்க”

“சூடா இட்லி இருக்கு. கொண்டாறேன்”

 சாப்பிட்டு முடித்து கொஞ்சநேரம் அங்கிருந்த பலகையில் மல்லாந்து படுத்திருந்தேன். மனதுக்குள் கேள்விகளின் கூப்பாடு மெல்ல மெல்ல சத்தத்தைக் கூட்ட, மூடிய கண்களை எரிச்சலுடன் திறந்து உடலை நெளித்து, ஹெல்மெட்டை மாட்டி மீண்டும் கிளம்பினேன். வேகம்… வேகம்… இன்னும் வேகம். முன்னே நகர்ந்து கொண்டே இருப்போம். இருளினூடே வெளிச்சப்புள்ளிகளும் ஒளிக்கீற்றுகளுமாய் நாலா புறமும் கடந்தபடியே இருக்க, இதர வாகனங்களின் இரைச்சலைப் பொருட்படுத்தாது சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகளை மட்டும் கண்களால் பற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறியபடி இருந்தேன்.

எங்காவது செல்லவேண்டுமென யோசித்தவன் எங்கேயென யோசிக்கவில்லை. மனம் அதனை நினைக்கவுமில்லை. வெளியே போனால் போதும். இப்போதைக்கு கண்களின் முன்னே வேறெந்த பிரச்சனைகளும் வந்து நிற்கப்போவதில்லை. காதுகளில் யாருடைய குரலும் வந்து விழப்போவதில்லை. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் இடத்தில் நான் இல்லை. 

வாசுதேவநல்லூருக்குள் நுழைகையில் மணி நள்ளிரவு இரண்டரைக்கும் மேல். உலகா மாமா அனுப்பிவைத்திருந்த முகவரியையும், இருப்பிடத்தையும் வைத்துக் அவர் வசித்த தெருமுனை வரையிலும் சென்றுவிட்டு அவரை அலைப்பேசியில் அழைத்தேன்.

“மாமா, நீங்க அனுப்புன லொக்கேசன வெச்சு தெரு வரைக்கும் வந்துட்டேன். வீடு தெரியல வெளில வாங்க “

“இர்ரா இர்ரா. ந்தா வரேன்”

தெருமுனையிருந்து நான்கைந்து வீடுகள் தள்ளி ஒரு பெரிய மூன்று மாடி வீட்டின் கேட்டைத் திறந்து, காதில் அலைப்பேசியை வைத்து தலைசாய்த்தபடி இடுப்பில் வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு வெளியில் வந்தார். என்னைப் பார்த்துக் கையசைக்கவும், அழைப்பைத் துண்டித்துவிட்டு வண்டியை அவரருகில் சென்று நிறுத்தினேன்.

”என்ன கெளம்பாம இருக்கீங்க. சட்டுன்னு ரெடியாயி வாங்க அப்டியே போவோம்”

“எலேய் மணி என்னாகுது. நீ வேற. வந்து கம்முன்னு படுத்து தூங்கு. காலைல எழுப்புறேன்”

“இதுவேறையா..சரி. உங்க ப்ளான் தான. நீங்க சொல்றபடி தான்”

வீட்டின் முன்னறையில் பாய் விரிக்கப்பட்டு அதன் மேல் ஒரு கனமான போர்வை விரித்து தலையணை வைக்கப்படிருந்தது. அறையின் ஓரத்தில் பாதி தீர்ந்த்து போன ஸ்காட்ச் பாட்டில் ஒன்றும், ஒரு கண்ணாடிக் குவளையும், தண்ணீர் போத்தலும் இருந்ததைக் கண்டவுடன் அவர் இப்போது பயணப்படவேண்டாம் என்றதற்கான காரணம் புரிந்தது. குடும்பத்தினர் அனைவரும் எங்கோ வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னார். என் காதில் எதுவும் விழவில்லை. கவனித்து பதில் சொல்கிற மனநிலையும் இல்லை.

பல வருடங்கள் ஆஃப்ரிக்காவில் கப்பல் உடைக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக இருந்து பின்பு சவுதியில் எரிஎண்ணெய்க் கிணறுகளிலும், எரிவாயு நிறுவனங்களிலும் வேலை செய்து சம்பாதித்து ஆயிரங்களில் தொடங்கிய வாழ்க்கையை கோடிகளில் சேர்த்து வைத்துவிட்டு இப்போது பெயருக்கேற்றார் போல உலகைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். டெரிலின் வேஷ்டியும் கசங்கல் காட்டன் சட்டையுமாக, ஆளைப் பார்த்தால் வெகு சாதாரணமாகத் தான் தோன்றும். மற்றபடி அவருடைய குடும்பம் குழந்தைகள் பற்றிய தனிப்பட்ட விஷயங்களைப் பேசிக்கொண்டதில்லை.

உடைமாற்றி, துணிப்பையினை தலையணை அருகே வைத்து விட்டு முகம் கழுவி வந்து பாயில் சரிந்தேன். முதுகிலும் நெஞ்சிலுமாய் பாறாங்கற்களை சுமந்து கொண்டிருந்தாற்போல் வலித்தது.

“நீ இங்க தூங்குடா. நான் பக்கத்து ரூம்ல தான் இருப்பேன். காலைல எழுப்புறேன். குட்நைட்”

ட்யூப்லைட்டை அணைத்துவிட்டு அறைக்கு வெளியே சென்று கதவை சாத்திவிட்டுச் சென்றார். அரையிருளில் அமைதியடைந்து உறங்கவேண்டிய மனம் சஞ்சலப்பட்டு சத்தமிட்டு அலைபாய்ந்தபடியே இருந்தது. உண்மையில் எனக்கு என்னதான் வேண்டும் ? இந்தக் கேள்வி உள்ளுக்குள் எதிரொலித்தபடியே இருக்க, அதற்கான பதிலைத் தேடும் முயற்சி பலனற்றுப் போனது. அந்தந்த நேரத்தில் அதனை முடிவு செய்துகொண்டால் போதாதா ? எல்லாவற்றையும் எல்லாருக்காகவும் முன்கூட்டியே யோசிக்க வேண்டுமா ? நான் எதற்கு பிறருக்காகவும் பிறரைப்பற்றியும் யோசிக்க வேண்டும். உடல் களைத்திருக்க உள்ளமும் ஓடியலைந்து ஓய்ந்துவிட மெல்ல மெல்ல இரைச்சல்கள் மறைந்து கண்ணயர்ந்தேன்

“தம்பு… எந்திரி. குளிச்சுட்டு சட்டுன்னு கெளம்பு. நான் ரெடி. போவோம்”

மாமாவின் குரல் கேட்டு அரைவிழிப்பு நிலையில் எழுந்தமர்ந்து அருகிலிருந்த அலைப்பேசியில் நேரம் பார்த்தேன். ஏழேகால். சோம்பல் முறித்து எழுந்து குளித்துக் கிளம்பி வீட்டிற்கு வெளியே வருகையில் இன்னும் முழுதாக விடியாதது போன்ற மந்தமான வானிலை காணப்பட்டது. அவர் கொணர்ந்து நீட்டிய டீயைக் குடித்தபடி கேட்டேன்.

”இப்பவாச்சும் சொல்லுங்க. எங்க போறோம். எந்த ரூட்டு”

“அதெல்லாம் போவும்போது நீயே பாத்துக்க.”

வீட்டைப் பூட்டிவிட்டு அவரவர் மோட்டார் சைக்கிளில் இருவரும் கிளம்ப, அடுத்த நாற்பது நிமிடங்களில் கடையநல்லூரைத் தாண்டி, பின்பு செங்கோட்டையை நெருங்குகையில் குற்றாலத்திற்கு தான் போகப்போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், மாமா வண்டியைத் திருப்பாமல் தென்மலை நோக்கிச் செல்ல எனக்கு எங்கு செல்கிறோம் என்பது கொஞ்சம் புலப்பட்டது. முன்னால் கொஞ்சம் நிதானமாக சென்றுகொண்டிருந்த மாமாவின் வண்டியை வேகமாகத் தாண்டி சென்று, அவரது வண்டியின் வேகத்தை அதிகரிக்கும்படி சைகை செய்ய அவரை புத்தரைப் போல் கையுயர்த்தி தலைக்கவசத்தையும் இஞ்சின் உறுமலையும் தாண்டி கேட்கும்படி உரக்கச் சொன்னார்

“டேய் தம்பீ… பொறும”

எனக்கு எரிச்சலாக இருந்தது. 

“நான் முன்னாடி போறேன் நீங்க வாங்க” என்றுவிட்டு வண்டியை முறுக்க, அவருடைய வேகத்திலேயே பின்தொடர்ந்தார்.

வர்க்கலா ஊர்ச்சாலையில் நுழையும்போது மதியத்திற்குமேல் ஆகியிருந்தது. சாலையின் ஒரு பக்கம் சீரான ஓட்டத்தில் காயலும் மறுபக்கம் ஆர்ப்பரிக்கும் அலைகடலுமாக இருக்க, மதிய வெய்யிலைப் பொருட்படுத்தாது மனம் கொக்கரித்தது. வண்டியை ஓரம் நிறுத்தி கொஞ்சம் இளைப்பாற, பின்னே வந்த மாமாவும் சேர்ந்து கொண்டார். 

”எங்க தங்குறோம் “

“ஏதாவது பொம்பளப் புள்ளைய கூட்டிட்டு வந்திருந்தேன்னா நல்ல ஸ்டார் ஹோட்டல்ல தங்கிருப்பேன். நீதான. அதான் பீச்சுக்கு பக்கமா ஒரு பழைய ஷேக்ல சொல்லி வெச்சுருகேன். அது போதும்”

“ச்சைக். கஞ்சப்பய மாமா “

சிரித்துக் கொண்டோம். அடுத்த பதினைந்து நிமிடங்களில் அறைக்கு வந்து ஆளுக்கொரு பக்கம் விழுந்து உறங்கி, பின்பு மாலை எழுந்து கிளம்பி கடல்பார்க்க அமைந்திருந்த ஓர் உணவகம் சென்று அமர்ந்தோம். அவர் தனக்கு இரண்டு போத்தல் பியர் சொல்லி கொண்டார். எனக்கு வழக்கம் போல் தொடுகறி மட்டும் சொல்லிகொண்டேன். அரபிக் கடல் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. அலைகளும் காற்றும் உரசும் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டபடி இருக்க, அது விடுமுறைக் காலம் இல்லையென்பதால் பெரிதாக ஆட்கள் நடமாட்டமின்றி கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது.

”இப்ப சொல்றா. என்னா உன் பிரச்சனை “

“வீட்ல கல்யாணத்துக்கு பொண்ணு தேட்றாங்க மாமா. மேட்ரிமோனில பாத்த ஒரு பொண்ணு; எனக்கு ரொம்ப பிடிச்சுருந்துச்சு. பேசிப்பாத்து செட் ஆகும்னு தோணுச்சு. அவளுக்கும் அப்டித்தான்னு நெனச்சேன். நாங்க அவங்க வீட்டுக்கு போனப்பவும் பாஸிட்டிவ்வா தான் பேசுனாங்க. ஆனா அவங்க நம்ம விட்டுக்கு வந்தப்ப. ஆ ஊன்னு ஆயிரத்தெட்டு கேள்வி. இது இருக்கா, அது இருக்கா. எவ்ளோ சம்பளம், எவ்ளோ கடன், ஃப்யூச்சர் ப்ளான் என்ன, ஏன் மேல படிக்கல, ஏன் இன்னும் வீடு வாங்கலன்னு அடுக்கிட்டே போனாங்க. அவ்வளவு கோவம் வந்துச்சு. ஆனா எதுவும் காட்டிக்காம அமைதியா பதில் சொல்லிட்டேன். ஏன் இவனுவள்லாம் இப்டி இருக்கானுவொ ? பொண்ணப் பெத்தா என்னா வேணா பேசலாமா ?”

“..ம்ம்ம் சரி. இதானா ? நாங்கூட என்னவோன்னு நெனச்சேன்.”

“என்ன இப்டி சொல்றீங்க. பொண்ணுக்கும் எனக்கும் டேஸ்ட் ஒத்துப்போனா போதாதா ? இவங்க கேக்குறதெல்லாம் போகப்போக அப்டியே வாழ்க்கைல ஒன்னொன்னா வரத்தானே போகுது. எல்லாம் வாங்கத்தானே போறேன்”

”சரிடா பொண்ணப் பெத்தவங்க இதெல்லாம் கேக்க தான் செய்வாங்க. நானா இருந்தாலும் இதெல்லாம் கேப்பேன் தான். அதுல உனக்கு கோவம் வந்துருச்சா ? இதுல என்ன ஈகோ உனக்கு ?“

எனக்கு அழுகை வருவது போலிருந்தது. இவருக்கு நம்மைப் பற்றி என்ன தெரியும். நான் எவ்வளவு உழைத்து, எங்கிருந்து இங்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

“ஈகோல்லாம் இல்ல. ரொம்ப கேள்வி கேட்டதும் நம்ம மேல நம்பிக்கை இல்லையோன்னு கோவம் வந்துருச்சு. இவங்கன்னு இல்ல, ஊருக்குள்ள எல்லா பேரும் நம்மள கேள்வி கேட்டுகிட்டே இருக்கானுங்க. நான் ஒன்னுந்தெரியாதவனா ? இல்ல பொறுப்பில்லாதவனா ? வாழ்க்கைல எல்லாத்தையும் முன்கூட்டியே யோசிச்சு வெச்சு, இவனுங்க கேக்குற கேள்விக்கெல்லாம் கையில பதில ரெடியா வெச்சுருக்கனுமா என்ன ? நான் பாட்டுக்கு சுதந்திரமா என் விருப்பத்துக்கு வாழ்க்கைய வாழ்ந்துட்டுப் போறனே என்ன இப்ப”

படபடவென சொல்லி முடித்ததும் கொஞ்சம் இலகுவாக இருந்தது. ஆனால் மெல்ல எழுந்த கோபத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமலிருக்க முடியவில்லை. 

“சரி டென்ஷனாகாத விடு. வேற ஏதும் சாப்புட்றியா? இந்த விஷயத்த பேசப் புடிக்கலைன்னா வேற ஏதாவது பேசுவோம். கடசியா ஒன்னு மட்டும் சொல்றேன். உண்மையிலேயே சொல்லனும்னா உனக்கு எப்ப என்ன வேணும்னே உனக்குத் தெரியல. அதுதான் உன்ன சுத்தி இருக்கவங்கள ஒரு சந்தேகத்துலேயே வெச்சிருக்கு. நீயும் எல்லாத்தையும் போட்டு கொழப்பியடிச்சுட்டு சுத்திட்டு இருக்க“

இயலாமையும் அவமானமும் என்னை திணறடித்தன. உலகா மாமாவை எரித்து விடவேண்டும்போலக் கோபம் வந்தது. 

“எனக்கு டயர்டா இருக்கு. நான் ரூமுக்குப் போறேன்”

அவருடைய பதிலுக்குக் காத்திராமல் அறைக்கு வந்து சுருண்டு படுத்தேன். அறைக்கு வெளியே கடலலைகளின் ஓயாத சீற்றமும் இரைச்சலும் என் தலைக்குள் கேட்கத்துவங்கின. யாராரோ கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் பேரலையாய் உருமாறி என்னை இழுத்துச் செல்ல முயன்றபடி இருக்க ஒவ்வொரு முறையும் நிலைதடுமாறி நீருக்குள் மூழ்கி மூச்சடைத்து தத்தளித்து மேலே வரும்போதும் வேறொரு பேரலை என்னைத் துரத்திவந்தது. கால்களுக்கு கீழே மண்ணும் தரையும் மொத்தமாக நழுவிப்போக பிடிமானம் ஏதுமற்று அலைகளையே பற்றிக்கொண்டு மேலெழ முயல்கையில் நிலைகுலைந்து கிட்டத்தட்ட மூச்சு நின்றுவிட்டபோது நான் அதிர்ந்து கண்விழித்தேன். அறையின் மறுமூலையில் மாமா குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார். கைக்கடிகாரத்தில் பார்த்தால் மணி அதிகாலை மூன்றே முக்கால். வியர்வையில் நனைந்த பனியனை மாற்றி, தண்ணீரைக் குடித்துவிட்டு திரும்ப வந்து படுத்தேன். 

ஜன்னல் வழி வெய்யில் கீற்று முகத்திலறைய, கண்விழித்தால் மாமா அறையிலிருந்து கிளம்பிவிட்டிருந்தார். அவருடைய எண்ணுக்கு அழைத்தேன்.

“ குட்மார்னிங் மாமா. எங்க இருக்கீங்க? பீச்லயா ?

“குட்மார்னிங்டா. நேத்து சாயங்காலம் உக்காந்துருந்தோம்ல அந்த பாருக்கு பக்கத்துக் கடை, இங்க இங்க்லீஷ் ப்ரேக்ஃபாஸ்ட் நல்லாருக்கும். கெளம்பி வா”

“தோ ப்ரஷ் பண்ணிட்டு வரேன்”

நான் கிளம்பி அங்கு சென்று சேர்கையில் சாப்பிட்டு முடித்து ஒரு போத்தலுடன் கடைக்கு எதிரே கடல்பார்த்தபடி சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கையசைத்தார். 

“நீ சாப்ட்டு எறங்கி இங்க வா”

பரபரப்பாக உண்டு முடித்து கடற்கரையில் இறங்கினேன். கடுமையான வெயிலில்லைதான். ஆனாலும் கடல்காற்றைத் தாண்டிய கசகசப்பு. அருகில் ஒரு மணல் திட்டில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்து கடலை வெறித்தபடி இருக்க, அவரே மீண்டும் பேசினார்.

“என்னடா நேத்து சொன்னதுக்கு ஏதும் அஃபெண்ட் ஆயிட்டியா ?”

“இல்ல மாமா. சுத்தி எல்லாரும் காயப்படுத்துறாங்கன்னுதான் உங்க கிட்ட புலம்புனேன். நீங்களும் அதே மாதிரி பேசவும் கொஞ்சம் கோபம் வந்துருச்சு”

“சரி அதவுடு. டாபிக்க மாத்துவோம். இந்த ஆம்பளப் பயலுகள்ட்ட என்னத்த சுவாரஸ்யமா பேசுறது. எல்லாம் என் நேரப்பூனா“

“மாமா, ப்ளீஸ் ! “

“சரிடா. வாழ்க்கைல ஒனக்கு நடந்த சுவாரஸ்யமான விஷயம் எதாச்சும் இருந்தா சொல்லு ? “

“பெரிய சுவாரஸ்யம்லா இல்ல. ஒன்னு ரெண்டு இண்ட்ரஸ்டிங் கேரக்டர்கள வெவ்வேற காலகட்டத்துல சந்திச்சு பழகிருக்கேன். அவ்ளோ”

“இண்ட்ரஸ்டிங் கேரக்டர்னா ? பொண்ணுங்க தானே”

”யோவ் மாமா. ஆமாம் பொண்ணுங்க தான்”

“அவங்க யாரோடயாவது இப்ப காண்டாக்ட்ல இருக்கியா ?”

“இருந்தா நான் ஏன் அரேஞ்ச்ட் மேரேஜுக்கு ஓக்கே சொல்லி தேடப்போறேன்”

“அப்போ லவ் ஏதும் பண்ணதே இல்லையா நீ ? “

“லவ்வுங்குற கான்செப்ட் மேல எல்லாம் நம்பிக்கையே போயிருச்சு. காலேஜ் படிக்கும்போது இருந்த ரிலேஷன்ஷிப். ரொம்ப இழுத்துப் புடிச்சுப் பாத்தேன். ஒரு கட்டத்துக்கு மேல அவங்க ஃபேமிலி ஒத்துக்கவே மாட்டேன்னு ரொம்ப தகராறு பண்ணவும் இதுக்கு மேல முடியாதுன்னு உட்டுட்டேன்”

“ஹ்ம்ம்.. அப்போ படிச்சு முடிச்சு இத்தன வருஷமா வேல பாக்குறியே அங்க யாரும் செட்டாவலையா ?”

“என்னத்த செட்டாவுறது. நாந்தான் ஒன்றரை வருஷத்துக்கு ஒருவாட்டி கம்பெனி மாறிடுவனே. அப்புறம் எங்கிருந்து பாத்துப் பழக”

அவர் அடுத்த போத்தல் பியரைத் திறந்து கோப்பையை நிரப்பியபடி தொடர்ந்தார்

“பேஷனேட்டா உன் வாழ்க்கைல என்னதாண்டா பண்ணிருக்க ?”

“ட்ராவல் பண்ண ரொம்ப புடிக்கும். தோ உங்களப் பாக்க கெளம்பி வந்தேன்ல இந்த மாதிரி அடிக்கடி எங்கேயாச்சும் கெளம்பிப் போயிருவேன். கொஞ்சங் கொஞ்சமா பனி விலகுனாப்ல மனசு ஃப்ரீயாகி எல்லா பிரச்சனையும் தீந்துடும்”

“மயிர்ல ஃப்ரீயாவும். நீ கோச்சுக்கிட்டாலும் பரவால்ல நாஞ்சொல்றத குறுக்கப் பேசாம கேட்டுக்க. ஒன்னோட பிரச்சன என்னான்னே தெரியாம சுத்திட்டு இருக்க. வாழ்க்கைல எது மேலயாவது பிடிப்பு வேணும்டா. கஷ்டப்பட்டு மேல வந்தேன்னு சொல்ற. ஆனா எதுலயுமே கமிட்மெண்ட் இல்லாம இருக்க. உண்மைக்கு ட்ராவல்னு நீ சொல்லிக்கிறதெல்லாம் பச்சையான எஸ்கேப்பிஸம். உனக்கு முன்னாடி இருக்க பிரச்சனைகள்ல இருந்து தற்காலிகமா தப்பிச்சு ஓடிக்கிட்டே இருக்க. தூரமா வந்துட்டா பிரச்சனையெல்லாம் தீந்துடாது. திரும்பப்போகும்போது எல்லாம் அப்டியேதா இருக்கும். நீ ஓடுறது எனக்கெப்புடி தெரியும்னு கேட்டீன்னா, அதெல்லாம் தெரியும்டா. ஏன்னா நானும் உன்ன மாதிரியே ஒரு காலத்துல அங்க இங்கன்னு ஓடிட்டு இருந்தவன் தான். நின்னு நிதானிச்சு திரும்பிப் பாக்கும்போது காலம் ஓடிப்போச்சு. ஆனா என்ன ஒன்னு கைநெறைய காசு இருந்துச்சு. அதனா கால ஊணி நின்னுட்டேன்.”

”குடும்பத்துல இருக்கிறவனுகளே நம்ம முதுகுக்கு பின்னாடி வேற மாதிரி பேசுவானுங்க. எங்கெங்கேயோ என்னென்னமோ பண்ணும்போது என் கூட இருந்த ஃப்ரெண்டு கடைசில என்கிட்டயே லட்சக்கணக்குல ஏமாத்துனான். அவன்ட்டபோயி ஏண்டா இப்டி செஞ்சன்னு கேக்க எனக்கு மனசில்ல. மயிராப் போச்சு காசுதான சம்பாரிச்சுரலாம்னு ஒரு வைராக்கியம். காசு எல்லாப் பிரச்சனையையும் தீத்துருச்சான்னு எனக்குத் தெரியாது. ஆனா அப்போதைக்கு எனக்கு காசுதான் தேவைன்னு மட்டும் தெளிவா தெரியும்.”

என் மீதான பிறரின் எதிர்பார்ப்புகளையும், அழுத்தங்களையும், கேள்விகளையும் இவரிடம் எப்படி விளக்கிச் சொல்லி புரியவைப்பது? நினைக்கவே களைப்பாயிருந்தது.

இப்போது என்னிடம் ஏதும் பதிலில்லை. பேச நா எழவில்லை. கோபம் மொத்தமும் என்மீதே தோன்றியது. அந்த நொடியில் என்னை நான் அவ்வளவு வெறுத்தேன். கடலைப் பார்த்தபடி கண்கள் நிலைகுத்தியிருக்க மாமாவின் முகத்தை எதிர்கொள்ளத் துணிவின்றி உட்காந்திருந்தேன்.

“டேய். இங்க பாரு. கடல்ல எறங்குறியா”

”இல்ல, வேணாம்”

“சொல்றேன்ல சும்மா போ. எறங்கு”

உண்மையில் எதிரே இத்தனை ஆரவாரமான ஆழமான கடலிருந்தும் அதில் கால் நனைக்கும் எண்ணம் கூட எழவில்லை. இவர் சொன்னதற்காக எழுந்து கடல்நோக்கி நடந்தேன். கணுக்கால் வரையிலும் நீர் சூழ நின்றேன். அலைகள் மெல்ல மெல்ல என்னை அழைப்பதாகத் தோன்றியது.

“லேய். இன்னும் கொஞ்சம் உள்ள போ. இந்தக் கடலாயி சீறமாட்டா. தன்மையாதான் இருப்பா”

இப்போது இன்னும் கொஞ்சம் முன்னேறிச் சென்றேன். நீரளவு முழங்காலுக்கு மேல் இருக்க, அலையடிக்கும் பொழுது இடுப்பளவு நீர் சூழ்ந்தது. கொஞ்சம் மனக்கலக்கத்துடன் தயங்கி நின்றேன்.

”மாமா. இது போதும். இதுக்கு மேல வேணாம். எனக்கு நீச்சல் தெரியாது”

“தம்பு.. நாந்தான் இருக்கேன்ல. ஒன்னுன் ஆகாது எறங்கு. பாத்துக்குறேன்”

இப்போது நான் இறங்குகிறேனா அல்லது கடல் இழுக்கிறதா எனத் தெரியாமல் இன்னும் உள்ளே சென்றேன். மார்பளவு நீர். அலையடிக்கையில் கழுத்தளவு தொட்டுச் சென்றது. கால்கள் புதைவது போலத் தோன்றியது, கடலின் பாரம் மொத்தமும் நெஞ்சில் இறங்கினாற்போல் கனக்க, வாழ்வில் முதன் முறையாக வாய்விட்டு வெடித்து அழுதேன். அடுத்த அலையொன்று முகத்தில் மோதியது; கண்ணீர் மொத்தமும் கடல்நீராய்க் கரைய, கடலிடம் என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தேன். 

இப்போது கண்களைத் திறந்து கடலுக்கு அப்பாலான தொடுவானத்தை ஒரு முறை பார்த்துவிட்டு கண்களை மூடிக் கொள்ளவும் ஒரு பேரலை என் தலைக்கு மேல் உயர்ந்து வரவும் சரியாக இருந்தது. கால்கள் தரையில் பாவாமல் மிதக்க, எனக்கு ஒரு நொடி மொத்த வாழ்வும் கண்முன்னே வந்துபோக,என்னை முழுதாக மூழ்கடித்துப் புரட்டிப்போட்டு இழுத்தது அந்தப் பேரலை. கடல்நீரின் உப்பு, மூக்கிலும் வாயிலுமாக நெஞ்சுக்குள் நுழைய எரிச்சலில் கண்கள் திறக்க முடியாமல் என்னை கடலுக்குள் முழுதாக ஒப்புக்கொடுத்த வேளையில் யாரோ கொத்தாக என் தலைமயிரைப் பிடித்து இழுத்தாற் போல் தோன்ற அடுத்த நொடி எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு கடற் மணலில் விழுந்தேன்.

“போதும் வாடான்னு சொன்னனே. காதுல விழலயாடா”

பேசிபடியே மாமா ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.

கடலின் சத்தமோ, காற்றின் சத்தமோ கேட்காத, மரணம் போலொரு பேரமைதி.  சொற்களோ, காரணங்களோ. விளக்கங்களோ, கேள்விகளோ அற்றுப் போனாற் போலிருந்தது. ஆனால் முன்பிருந்த வெறுமை மறைந்திருந்தது.

மதிய உணவை முடித்து அறைக்கு திரும்பும்வரையிலும் மாமாவும் நானும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் குளித்து முடித்து கிளம்பியபடி துணிகளை பையில் அடைக்கும்போது தான் மாமா கண்விழித்தார்.

“என்னப்பா ? இப்பவே கெளம்புறீங்களா ?”

“ஆமா மாமா. நாளைக்கு ஆஃபிஸ் இருக்கு”

”ரைட்டு.நான் இன்னைக்கு இங்க தங்கிட்டு நாளைக்கு ஊருக்குப் போறேன். போகும்போது அப்பப்ப எனக்கு ஃபோன் பண்ணுங்க. பத்திரமா போய்ட்டு வாங்க”

எழுந்து வந்து முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு என் முகத்தைப் பார்த்தார்.

“ஓக்கே மாமா” அவருடன் கைகுலுக்கி விடைபெற்றேன்.

மீண்டுமொருமுறை அவரின் முகம்பார்த்து அவரது கையைப் பற்றிகொண்டேன். கண்கள் கலங்கினாற் போலிருந்தது

“அட நீ வேற” தோளோடு அணைத்துக் கொண்டார்

வர்க்கலாவை விட்டு வெளியே வருகையில் சாலையின் ஒரு பக்கம் காயலும் மறுபக்கம் கடலுமாய் இருக்கிற இடத்தில் ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி இருபக்கமும் பார்த்து தலைசாய்த்துவிட்டு புறப்பட்டேன். வரும்போது இருந்து கண்மூடித்தனமான வேகம் இப்போது தேவைப்படவில்லை. வழக்கத்தைவிட பொறுமையாகவே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். செங்கோட்டையில் வண்டியை நிறுத்தி நாட்டுக்கோழியும் பரோட்டாவும் சாப்பிட்டு மறுபடி இரவு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நிறுத்தி சின்னச் சின்ன பொட்டலங்களாய் ஒன்றரை கிலோ பால்கோவா வாங்கிக் கொண்டு திருமங்கலத்தில் ஒரு ரோந்துக்காவலருடன் பேசியபடி தேநீர் குடித்து, திருச்சிக்கு வெளியே நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநர்களுக்கான நிறுத்தகத்தில் கொஞ்சம் ஓய்வெடுத்து மறுபடி பயணத்தைத் தொடர்ந்து சென்னையின் எல்லைக்குள் நுழையும் முன்பே விடிந்துவிட்டிருந்தது. அதிகாலையும் ஊருக்குள் நுழைந்து பயணிகளை இறக்கிவிடும் பேருந்துகளின் அணிவகுப்பைக் கடந்து வீட்டின் அருகில் வருகையில், ஒர்‌ஷாப்பை திறந்து வண்டிகளை இறக்கி நிறுத்திக் கொண்டிருந்தவனின் அருகே வந்து வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினேன். 

“மார்னிங் ண்ணா.. அதுக்குள்ள ரிட்டன் வந்தாச்சா”

“ஆமா வேல இருக்கு. வண்டிய விட்டுட்டுப் போறேன். பொறுமையா பாத்து எல்லா வேலையும் முடிச்சுட்டு போன் பண்ணி சொல்லு. வந்து எடுத்துக்குறேன்”

பையை எடுத்து தோளில் மாட்டிக் கொள்ளும் முன்பு இரண்டு பால்கோவா பொட்டலங்களை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு வீடு நோக்கி நடந்தேன். 

”தாங்க்ஸ்ண்ணா ! ஒருவழியா மனசுவந்து வண்டிய வுட்டுட்டீங்க”

சிரித்தபடி அலைபேசியைத் திறந்து பல மாதங்களாக பதிலளிக்காத சில குறுந்தகவல்களைப் படித்து பதில் சொல்லிக் கொண்டே வீட்டையடைந்து அழைப்பு மணியை அழுத்த அப்பா வந்து கதவைத் திறந்தார்

“வாப்பா எப்பாடி. பைய இங்க குடு”

“அம்மா ஏந்திரிக்கலையாப்பா “

”எந்திரிச்சுட்டாங்க. மூஞ்சு கழுவிட்டு வர்ரேன்னு போயிருக்காங்க. சித்தி சித்தப்பால்லாம் நேத்தியே கெளம்பிட்டாங்க”

”சரிப்பா எனக்கு தூக்கம் வருது. போய் தூங்குறேன். அப்புறம் இந்தக் கல்யாண விஷயமா இப்போதைக்கு உடனே ஏதும் முடிவெடுக்க வேண்டாம்னு இருக்கேன்ப்பா. வந்தவங்கள்ட்டயும் நமக்கு விருப்பமில்லைன்னு தகவல் சொல்லிரலாம். ஒரு ஆறு மாசம் போகட்டும். புதுசா தேடவேண்டாம். நானே சொல்றேன்”

“நல்லதுப்பா. நீ யோசிச்சு முடிவெடுத்தா சரிதான்”

அறைக்குள் நுழைந்து கட்டிலில் சாய்கையில் சன்னலின் வழியே காலையின் வெளிச்சமும் வெம்மையும் நிறைந்திருந்தது. 

***

சுதர்சன் ஹரிபாஸ்கர் – மின்னஞ்சல்: readridewrite@gmail.com

ஒரு மழை இரவு

1

மழைக்குருவி

ழை வரும் போலிருந்தது. இரவு மணி பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. ரத்தினத்துக்கு இன்றைக்கும் தூக்கம் வரவில்லை. அந்தக் கால டேப் ரெக்கார்டர் ஒன்று அவள் அருகிலேயே இருந்து பாடிக் கொண்டிருந்தது. ரேடியோ மோடில் வைக்கலாம். வைத்தால் இரவெல்லாம் எதையாவது பாடிக் கொண்டிருக்கும். ஆனால் ரத்தினத்துக்கு கேசட்டில் கேட்டால்தான் பிடிக்கும். கேட்டால் இப்படி சொல்லுவாள், “மழைக்காகவும் மின்னலுக்காகவும் என்னால் காத்திருக்க முடியாது. தோன்றும் போது இதயத்தினுள் மழை பெய்ய வேண்டும். கண் சிமிட்டும் போது மூளைக்குள் மின்னல் தெறிக்க வேண்டும்.”

அவளது அப்பாவும் சித்தியும் ஒரு கல்யாணத்திற்காக கொடைக்கானல் வரை போயிருக்கிறார்கள். வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். போகும் போதே அவளது சித்தி எச்சரித்துவிட்டுதான் போயிருந்தாள்.

“பாட்ட பாட்ட கேட்டுகிட்டு வீட்ட கண்டமேனிக்கு போட்டுருந்த.. கூய்மோள.. ஒன்னய உதுத்து உப்புமா கிண்டிருவன் ..”

சித்தி சொன்னது நினைவில் வந்ததும் ரத்தினத்திற்கு ஒரு நொடி கை கால்களெல்லாம் நடுங்கின. ரத்தினத்தையும் அழைத்துச் செல்லலாம் என்று அவளது அப்பா சொன்னபோது சுடுகாட்டுப் பேய் போல தங்குதங்கு என்று குதித்தாள் சித்திக்காரி. 

“இந்த நொண்டி நாய வச்சிக்கிட்டு தேர் இழுக்க சொல்தீயளா என்னிய..”

அப்பா சித்திக்காரியிடம் கெஞ்சலாகச் சொன்னார்.

“பிள்ளய நொண்டினு சொல்லாத அனிச்சோம்….”

“பிள்ள்..ளெ.. வயசு முப்பத்தி ரெண்டாச்சி.. இன்னோரு ஒரு நொண்டிப் பயலப் பாத்து இவள தள்ளி உடுததுக்கு துப்பு இல்ல.. வாய் மயிறு.. “

ரத்தினம் எப்போதும் ஒன்றை நினைத்து நொந்து கொள்வாள். சித்திக்கு எப்படித்தான் அனிச்சம் என்று பெயர் வைத்தார்களோ.. உண்மையில் ரத்தினத்தின் அம்மாதான் அனிச்ச மலர். அத்தனை மென்மையானவள். கோபத்தில் ஒரு சொல் சொன்னாலும் முகம் வாடிவிடும். மோப்பக் குழையும் அனிச்சம். இன்னொருத்தியின் வீட்டிற்கு தன் கணவர் போய் வருகிறார் என்பது தெரிய வந்த நாளில் அல்லிகுளத்தில் இன்னொரு அல்லியாய் மிதந்து கிடந்தாள். துக்கம் நடந்து மூன்று மாதத்திற்குள்ளாகவே ரத்தினத்தின் வீட்டில் கோரைப்பற்கள் முளைத்த இந்த அனிச்சம் பூ பூத்தது. 

வள்ளுவன் சொன்ன அனிச்ச மலருக்கு நேர் எதிரானவர் ரத்தினத்தின் அப்பா. அவள் சித்தி அனிச்சம் ஆயிரம் திட்டு திட்டினாலும் T.A.மதுரத்திடம் திட்டு வாங்கியும் சிரித்து கொண்டே இருக்கும் N.S.கிருஷ்ணன் போல, “என்ன அனிச்சோம்.. நீ இப்பலாம் பழைய மாரி திட்டமாட்டங்கியே.. யாம்..” என்று சொல்லி சிரிப்பார். இந்தக் கண்றாவிகளை காணச் சகியாமல் எங்காவது ஓடிவிட வேண்டும் போலிருக்கும் அவளுக்கு. தன்னால் எப்படி ஓட முடியும் என்பது நினைவுக்கு வந்ததும் அசட்டுச் சிரிப்பொன்றை மனதிற்குள் உதிர்த்தபடியே ரேடியோ முள்ளைத் திருக ஆரம்பிப்பாள். 

மாடியில் இன்னொரு டேப் ரெக்கார்டர் உண்டு. நேஷனல் பேனசோனிக். அது சித்தி அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்தது. அதியற்புதமாக பாடும். கீழே ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்திவிட்டு அதே கேசட்டை எடுத்துக் கொண்டு போய் நேஷனல் பேனசோனிக்கில் ஒலிக்கவிட்டால் அனுபவிக்கத் தகுந்த ஒரு துல்லியம் தெரியும். ஆனால் அந்த இசைத் துல்லியத்தை அனுபவிக்க ரத்தினத்துக்கு மட்டுமே தெரியும். எதற்காகவாவது சித்தியை தாஜா செய்ய வேண்டும் என்றால் அவளது அப்பா மாடியில் இருக்கும் டேப் ரெக்கார்டரில் இந்த பாட்டைத்தான் போட்டுவிட்டு ஸ்ரீநிவாஸோடு சேர்ந்து சித்திக்காரியை நோக்கிப் பாடுவார்.

அனிச்ச மலரழகே.. அச்சு அச்சு வெல்லப் பேச்சழகே..

இவளா அனிச்சமலர்.. இவள் பேச்சா அச்சு வெல்லத்தின் மதுரத்தை ஒத்தது.. அச்சுவெல்லத்தை வாயில் போட்டுக் கொண்டே கெட்ட வார்த்தை பேசுபவள்.

ரத்தினத்திற்கு அடிவயிற்றில் இருந்து பற்றிக் கொண்டு வரும். எப்பேர்பட்ட பாட்டு.. எத்தனை உயிர்ப்புள்ள வரிகள். எப்போதும் கனைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கழுதையை நோக்கி அந்த வரிகளைப் பாடுவதா. ச்சீ.. என்றிருக்கும் அவளுக்கு.

சித்திக்காக ஒரு கேவலமான பாடல் உலகத்தில் இதுவரை பிறக்காமலா போயிருக்கும் என்று ரத்தினம் எண்ணிப் பார்ப்பாள். ச்சே.. என்ன சிந்தனை இது. உலகில் இதுவரை பிறந்த எல்லா பாடல்களும் உன்மத்தமானவை. அச்சு வெல்லத்தின் மதுரம் நிறைந்தவை. 

ஒரு நாள் ராத்திரி கனவில் ரத்தினம் சாட்டையை சுழற்றி சுழற்றி சித்திக்காரியை வெளுத்தபடியே பாடினாள்.

“சண்டி ராணியே.. எனக்கு கப்பம் கட்டு நீ.. ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுப்பட்டு நீ.. “

இந்த நட்ட நடு ராத்திரியில் மிக மெதுவாக ஒலித்துக் கொண்டிருக்கும் டேப் ரெக்கார்டரில் அவள் எதிர்பார்த்த வரி இதோ வரப்போகிறது. ரத்தினம் தன் எல்போ கிரட்ச்சை அவசரமாக தன் இடது கைகளில் மாட்டிக் கொண்டு தத்தி தத்தி நடந்து போய் தன் வலது காதையும் கன்னத்தையும் டேப் ரெக்கார்டருக்கு அருகே வைத்தாள். இளையராஜா காதலாகி கசிந்துருகினார்.

“ரத்தினமே முத்தம் வைக்கவா.. அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா..”

அந்த வரிகளைக் கேட்டதும் அவள் கன்னங்கள் செந்தூரமென சிவந்து போயின., அந்தப் பாட்டில் வரும் நாயகியின் முக பாவனைகளோடு, கண்களை வலம் இடமென உருட்டி உருட்டி, இதழ்களை சுழித்து சுழித்து அடுத்த வரிகளை அவளே எஸ்.ஜானகியோடு சேர்ந்து பாடினாள்.

“வெட்கத்தயும் ஒத்தி வைக்கவா.. அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா..”

அவள் கண்களில் காதலின் மின்னொளி.

“ஓடி வா ஓடைப் பக்கம்.. ஒதுங்கலாம் மெதுவாக.. ” என்ற போது டேப் ரெக்கார்டரை செல்லமாக ஒரு இடி இடித்தாள். அது டேப் ரெக்கார்டரையா அல்லது இளையராஜாவையா அல்லது அந்த நாயகனையா என்பது தெரியவில்லை. 

இப்போது இளையராஜாவின் இளைய குரல் காதலையும் காமத்தையும் குழைத்து குழைத்து அவளின் தனிமையின் மீது ஏறி இறங்கி நர்த்தனம் ஆடியது. 

“காத்தடிச்சாஆஆ.. தாங்காதடிஈஈ… மல்லியப்பூஊஊ.. மாராப்பூ..”

படக்கென்று டேப் ரெக்கார்டரை நிறுத்தினாள். இளையராஜா ஏன் இப்படி பாடுகிறார். முதிர்கன்னிகள் முற்றாக இளையராஜாவை நிராகரிக்கத்தான் வேண்டுமா.. அடச்சே.. என்ன கேனத்தனமான சிந்தனை இது.. பெய்கின்ற மழைக்கு கானகம் தெரியுமா பாலை தெரியுமா.. அப்படித்தான்.. இளையராஜா ஒரு இசை மழை.. 

டேப் ரெக்கார்டரை ரேடியோ மோடுக்கு மாற்றினாள். அங்கே ஜேசுதாஸ் குழைந்து கொண்டிருந்தார்.

“காம லீலா வினோதம்.. காதல் கவிதாவிலாசம்.. படித்துப் படித்து எடுக்க எடுக்க..  ஓஹோ ஹோ..”

அடக்கடவுளே என்றெண்ணியபடியே ரேடியோவை ஆஃப் செய்தாள். இதே பாடல்களை பகல் வேளையில் ரத்தினம் கேட்டிருந்தால் இது போன்ற அகச்சிக்கல்கள் அவளுக்கு வராது. அவளுடைய இரவுகள் விநோதமானவை. இரவுகள் அவளுக்கு விசித்திரமானவை. 

நகர்ந்து போய் ஜன்னலைத் திறந்தாள். சில்லென்ற காற்று உள் நுழைந்தது. கூடவே மண்வாசனையும். ஏற்கனவே கொஞ்சம் மழை பெய்திருக்கும் போல. ஜன்னலின் கம்பிகளை பிடித்து ஒற்றைக்கால் கொண்டு எக்கித் தெருவில் மழை பெய்த அடையாளம் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தாள். நீர்க்குட்டைகள் எதுவும் தென்படவில்லை. ஆனால் தெரு மண் முழுதும் நனைந்திருந்தது. மெதுவாக பாடினாள்.

“மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. கண்ணா உன் பேரன்பிலே ஹோய்”

ச்சே.. என்ன வாழ்விது. கற்பனைகளால் நிறைந்த வாழ்வு. உலகில் எத்தனை கோடி ஆண்மகன்கள் இருக்கிறார்கள். எனக்கென்று ஒருவன் மட்டும் ஏன் இன்னுமில்லை. இத்தனை வயதுக்குப் பிறகும் ஏன் ஒரு ஆண் தன் வாழ்வில் வந்து சேரவில்லை. ஒருவேளை தன் வாழ்வில் ஆண் என்பதே கிடையாதா. காதலையும் காமத்தையும் பிசைந்து ஒரு வாய் ஊட்டி விட ஒருவன் வரமாட்டானா என்று அவள் எண்ணிய போது மாடியில் மெலிதாக பாட்டுச் சத்தம் கேட்டது.

“இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி..”

ரத்தினத்துக்கு பக்கென்று இருந்தது. மாடியில் எப்படி பாட்டு கேட்கிறது. அப்பாவும் சித்தியும் மாடியில் வசிக்கிறவர்கள்தாம். ஆனால் அவர்கள்தான் ஊருக்குப் போயிருக்கிறார்களே. மேலும் இந்த நள்ளிரவில் அப்பாவும் சித்தியும் வர வாய்ப்பே இல்லை. பூனை அல்லது எலியாக இருக்குமென சந்தேகப்பட்டாலும் அவைகள் எப்படி டேப் ரெக்கார்டரில் போய் சரியாக ப்ளே பொத்தானை அழுத்தியிருக்க முடியும். மேலேயிருக்கும் நேஷனல் பேனசோனிக்கில் ரேடியோ மோட் பட்டன் வேலை செய்யவில்லை என்று சித்தி புலம்புவதை பலமுறை கேட்டிருக்கிறாள். ஆக ஒலிக்கும் அந்த பாட்டு ரேடியோவில் இருந்து வர வாய்ப்பேயில்லை.

பாட்டு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. ரத்தினத்துக்கு வியர்க்க ஆரம்பித்தது. தன் வாழ்வில் முதன்முறையாக ஒரு பாடலை ரசிக்க முடியாமல் இருந்தது அவளுக்கு புதிதாய் இருந்தது. 

“நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம்தானா..” 

ஹரிஹரனின் குரல். நல்ல பாட்டு. ஆனால் இப்போது மிகவும் திகிலாக இருக்கிறது. பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் காதுகளினுள் புகாமல் அவளின் தலையைச் சுற்றிச் சுற்றி குருவிகள் போல் வட்டமடித்தன. அவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. ஒருவேளை பேயாக இருக்குமா.. ச்சே.. பேய்தான் கொடைக்கானல் போயிருக்கிறதே.. யாராக இருக்கும்.. என்னவாக இருக்கும்..

ஒருவேளை திருடனாக இருக்குமா. கூச்சல் போடலாமா. போட்டு என்ன ஆகப்போகிறது. மனைவி மக்களில்லாத பக்கத்து வீட்டு பஞ்சாட்சரம் மாமா ஆறு மணிக்கே அரை போதையில் இருப்பார். இடப்பக்க வீட்டு இசக்கியா பிள்ளை எலி அடிக்கவே எட்டு பேரைக் கூப்பிடுவார். எதிர் வீட்டில் முப்பது வருடங்களாக தனியாக இருக்கும் சச்சு பாட்டிக்கு கடந்த பத்து வருடங்களாக மனக்குழப்பம் வேறு. இந்த ஊரில் கடைசியாக ஒரு திருடன் வந்து போனதும் சச்சு பாட்டி வீட்டுக்குதான். கிழவியை மிரட்டுவதற்காக அடுப்பங்கரையிலிருந்த அரிவாள்மனையைத் தூக்கி வந்து காண்பித்த திருடனைப் பார்த்த கிழவி, அரிவாள்மனையை படக்கென்று அவனிடமிருந்து பிடுங்கி, “இதத்தான் காலைலருந்து காய் வெட்ட தேடிட்டு இருக்கேன்.. ச்செத்த மூதி.. இத எடுத்து என்னல பண்ணிட்டுருக்க..” என்ற போது திருடனே கொஞ்சம் பதறித்தான் போனான். 

“வந்தது வந்துட்ட.. போயிராத.. இருந்து ஒரு வா சாப்ட்டு போ..” என்ற கிழவியைப் பார்த்து ஸ்தம்பித்த திருடன் சில நொடிகளிலேயே ஓவென்று கதறி அழ ஆரம்பித்து விட்டானாம். கிழவி சமைக்கும் வரை காத்திருந்து சாப்பிட்டுவிட்டு கிழவியின் கைச்செலவுக்கும் இருநூறு ரூபாய் கொடுத்து விட்டு நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்த கதை ஊர் முழுவதும் பிரபலம். 

அன்பு இப்படிதான். செத்த மூதி. திடீரென்று மாயாஜாலம் செய்துவிடும்.

யாரைக் கூப்பிட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று முடிவுக்கு வந்த ரத்தினம் கதவைத் திறந்து மாடிக்குப் போய் பார்ப்பதா என்று யோசித்தாள். பார்த்தாலும் தன்னால் என்ன செய்ய முடியும். திருடன் ஒரு அடி அடித்தால் மூர்ச்சையாகி விடக்கூடிய உடம்பு அவளுக்கு. திருடனின் அடி சித்தியின் அடியை விட வலிமையாக இருக்குமா என்று யோசித்தாள். ஒருவேளை கத்தி வைத்திருந்து குத்திவிட்டால்.. இருக்கிற ஒரே ஒரு உயிரும் போச்சு. ஆனால்…

ஆனால் சித்தியிடமிருந்து விடுதலை. அதை நினைக்கும் போது அவளுக்கு பெரும் ஆசுவாசமாக இருந்தது. பெருமூச்சு விட்டாள். இரவுகள்தோறும் புரட்டியெடுக்கும் அகச்சிக்கல்களிடமிருந்து அக்கணமே விடுதலை. நான்கு சுவர்களெனும் சிறையில் இருந்து மாபெரும் விடுதலை. வாழ்வின் அத்தனை ரணங்களிலிருந்தும் ஒரு நொடியில் விடுதலை. இந்த வாழ்வின் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் யாராலும் தரமுடியாக விடுதலையை கேவலம் ஒரு திருடனால் தர இயலும் எனும் போது அவள் நினைத்துப் பார்த்தாள், ‘தனதிந்த வாழ்வென்பது எத்தனை பெரிய அபத்தம்..’ 

ஆனாலும் திருடன்தான் வந்திருப்பான் என்பதற்கு ஒரு நிச்சயமுமில்லை. வேறு ஏதேனும் ஒன்றாகக் கூட இருக்கலாம். நாம் தேவையில்லாமல் பயப்படுகிறோமோ என்று நினைத்து மெதுவாகக் கீழ் வீட்டுக் கதவைத் திறந்தாள். தெருவில் அவள் வீட்டருகேயிருந்த சோடியம் விளக்கை பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளியும் தெருவில் ஒரு மழை போல் பெய்து கொண்டிருந்தது.தெருவும் அவளைப் போலவே அனாதரவாய் கிடந்தது. 

தத்தி தத்தி நடந்து வந்து மேலிருக்கும் ஜன்னலைப் பார்த்தாள். ஜன்னலுக்குள் மெல்லிய மஞ்சள் நிற மின்சார விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. சித்தி விடிவிளக்கை போட்டுவிட்டே போய்விட்டாளா அல்லது மறந்திருப்பாளா அல்லது இப்போது யாரேனும் போட்டிருப்பார்களா.. ஆனால் உள்ளே யாரும் இருப்பது போல் தெரியவில்லை. 

பாட்டு இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உண்மையிலேயே மாடியில் திருடன் இருந்துவிட்டால் மாடிக்குச் செல்வது என்பது சாவை நேரே வரவழைப்பதற்கு சமம். சாவு என்ற சொல் நினைவுக்கு வரும்போதெல்லாம் சித்தியும் நினைவுக்கு வந்துவிடுவது இப்போது அவளுக்கு ஒரு குதர்க்கமான மனநிலையும் குருட்டு தைரியத்தையும் உண்டு பண்ணியது.

மாடிப்படிகளில் உட்கார்ந்து உட்கார்ந்து மெதுவாக மேலே சென்றாள். மேலே ஏறும் பொழுதே இதயம் அவளுக்கு வேகமாக துடிக்க ஆரம்பித்தது டம் டம் என்றொலிக்கும் அவளது இதயத்தின் ஓசை உள்ளிருக்கும் மேலே மட்டும் ஒரு திருடன் இருந்தால் அவனுக்கே கேட்டுவிடும் போல. அப்படி அதிர்ந்தது. வியர்த்து வியர்த்து உடுத்தியிருக்கும் சேலையைத் தவிர உள்ளிருக்கும் ரவிக்கையும் பாவாடையும் சன்னமாய் நனைந்திருந்தது. 

தடுமாறி மெதுவாக எழுந்து நின்றவள் இடது கையால் மெதுவாக கதவைத் தள்ளிப் பார்த்தாள். கதவு திறக்கவில்லை. கதவிலிருக்கும் பூட்டு துவாரத்தின் வழியாக ஒற்றைக் கண் கொண்டு பார்த்தாள். விடிவிளக்கின் மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் வீட்டின் உட்புறம் ஒரு அசையாத ஓவியம் போல தெரிந்தது. சுண்டுவிரலில் சிறிய வளையத்தோடு சொருகியிருக்கும் ஒற்றைச்சாவியை வலது கை விரல்களால் எடுக்கும் போது விரல்கள் அவளுக்கு அப்படி நடுங்கின. சாவியை கதவு துவாரத்தில் நுழைக்க முயன்று முயன்று தோற்றுப் போனாள். அவசரத்தில் அண்டாவில் கை போகாது என்றால் இவளுக்கு ஆகாயத்திலேயே கை போகாது. 

இன்னும் படபடப்பு அதிகமாக அதிகமாக இந்த படபடப்பினாலேயே அவளுக்கு செத்துவிடுவோம் என்று தோன்றியது. திடுக்கென்று சாவி, கதவு துவாரத்தில் மாட்டிக் கொண்டதும் அணிச்சையாக கை திருகி கதவு மடாரென்று திறக்க, பிடிமானம் இல்லாமல் அறையினுள் தடுமாறி பொத்தென்று விழுந்தாள். கீழே விழுந்ததும் அவளுக்கு பெரிய அதிர்ச்சி உண்டானது. இதயம் சரவெடியாய் அதிர்ந்தது. அவள் தலையினுள் பயம் தீப்பிடித்து எரிந்தது. தலை வெட்டுப்படப் போகும் ஆட்டுக்குட்டியைப் போல தலையை அங்குமிங்கும் சிலுப்பி சிலுப்பி திருப்பித் திருப்பி வேக வேகமாகப் பார்த்தாள். 

அங்கே யாருமே இல்லை. சரியாக அந்நேரத்தில் பாட்டும் நின்றது. எங்கிருந்தோ கறிக்குழம்பு மணம் ஜம்மென்று தூக்கியது.

நேஷனல் பேனஸோனிக்கில் இருந்து ஒரு வயதான பெண்மணியின் குரல் ஒலித்தது.

“பழனிபாரதியின் வரிகளில் ஒலித்த குரல்கள் சுஜாதா மற்றும் ஹரிஹரன். பாடலுக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா. படம் பூவெல்லாம் கேட்டுப்பார். நேரம் நள்ளிரவு மணி ஒன்று. நேயர்கள் கேட்டுக் கொண்டிருப்பது பண்பலை சில்வர். அடுத்த ஒலிபரப்பு அதிகாலை மூன்று மணிக்கு சுக ராகத்தில் தொடங்கும். வணக்கம். “

நிசப்தம். எங்கும் நிசப்தம். நிசப்தமும் அவளது காதில் கேட்பது போன்ற உணர்வு தொனித்தது. ஐந்தாறு நிமிடங்கள் அப்படியே கிடந்தாள். வியர்ப்பது நின்றது. கொஞ்சம் கொஞ்சமாக பயம் குறைந்தது. தவழ்ந்து தவழ்ந்து போய் சிறிய மர ஸ்டூலின் மேலிருந்த மண்பானையில் கடைசியில் கொஞ்சமேயிருந்த ஒரு குவளை குளிர்ந்த நீரை எடுத்து பருகினாள். நீர் தொண்டைக்குழியில் இறங்கும் மொடக் மொடக் என்ற சத்தம் கேட்டு அவளே அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தாள். இன்னொரு குவளை நீர் பருகினால் தேவலாம் போலிருந்தது. ஆனால் மண்பானையில் நீர் இல்லை. நேஷனல் பேனசோனிக் வானொலியின் அருகே ஒரு பிளாஸ்டிக் நாற்காலி இருந்தது. சித்தி எப்போதும் அதில் அமர்ந்துதான் வானொலியில் பாட்டு கேட்பாள். அதில் உட்கார்ந்து பார்க்கலாமா என்று நினைத்தாள். வேண்டாம்.. அதில் உட்கார்ந்தால் சித்தியின் குணாம்சங்கள் நமக்கும் ஒட்டிவிடும் என்றும் நினைத்தாள். 

குவ்வோ குவ்வோ என்று இரண்டு முறை மயில் அகவும் சத்தம் வெளியே கேட்டது. இந்த நேரத்தில் மயிலா என்று நினைத்தபடியே எழுந்து தத்தி தத்தி நடந்து வந்து கதவைப் பிடித்து நின்றபடி வெளியே பார்த்தாள். சச்சு பாட்டியின் வீட்டிற்கு பின்புறம் இருந்த மிகப் பரந்த நிலப்பரப்பு முழுதும் ஒரே இருட்டாகத் தெரிந்தது. மயிலும் தெரியவில்லை குயிலும் தெரியவில்லை. வானம் தன் தொண்டையைச் செருமுவது போல லேசான இடிச் சத்தங்கள் கேட்டன. மீண்டும் மழை வரும் போலிருந்தது. பெருமூச்செறிந்தாள். நுரையீரல் முழுவதும் மண்வாசனை பரவியது. மண்வாசனை மணக்க மணக்க அவளுக்கு மண்ணை அள்ளித் திங்க வேண்டும் போலிருந்தது. இடையிடையே கறிக்குழம்பு வாசனையும் வந்தது. எதிர்வீட்டில் இருக்கும் சச்சு பாட்டி கண்ட நேரத்தில் சமையல் செய்யக் கூடியவள். ஒரு நாள் சச்சு பாட்டி, அதிகாலை மூன்று மணிக்கு கீழ்வீட்டுக் கதவைத் தட்டி, “ரத்துனா.. இந்த டீய கொஞ்சம் சூடு பண்ணிக் குடேன்..” என்று கேட்டாள். ரத்தினம் அந்த பாத்திரத்தைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்தது ரசம். இப்போது கறிக்குழம்பு வாசனையும் மண்வாசனையும் மாறி மாறி மூக்கினுள் நுழைவது ஒரு விநோதக் கலவையாக இருந்தது.

ரத்தினம் வாசல் நிலையில் தலை சாய்த்தபடி அந்த இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இருட்டும் தன் வாழ்வும் வெவ்வேறல்ல என்பது போல அவளுக்குத் தோன்றியது.

அவளின் பின்புறமிருந்து மெதுவாக வந்த ஒரு கை அவளது மூக்கையும் வாயையும் இறுகப் பொத்தியது. இன்னொரு கை அவளது வயிற்றுப் பகுதியை இறுக்கப் பிடித்து அவளை அலேக்காக அப்படியே தூக்கியபடியே, ஒரு காலால் திறந்திருந்த கதவை மடார் என்று உதைக்க, கதவு ‘டம்’ என்ற சத்தத்துடன் மூடிக் கொண்டது. அவளை அப்படியே தூக்கிய அந்தத் திருடன், ரத்தினத்தோடு படபடவென்று பின் சென்று நேஷனல் பேனசோனிக்கின் அருகிலிருந்த நாற்காலியில் தொம்மென்று அமர்ந்தான்.. 

ரத்தினம் தன் தலையில் இடி விழுந்ததைப் போல உடம்பை பேயாய் உலுக்கினாள். ஆனால் அவனது பிடி இரும்புப் பிடியாயிருந்தது. அவளது மூச்சுக்காற்று போகும் அளவிற்கு மட்டும் இடைவெளி விட்டு வாயை இறுகப் பொத்தியிருந்தான். நாற்காலியில் அந்தத் திருடன் அமர்ந்திருக்க அவன் மேல் ரத்தினம் அமர்ந்து கிடந்தபடியே உம் உம் என்று அனத்திக் கொண்டேயிருந்தாள். அந்தத் திருடனோ சர்வ அமைதியாயிருந்தான். 

எது நடக்கக்கூடாதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அது என்னவாக இருக்கும் என்று நினைக்கும் போது ரத்தினத்துக்குள் பயத்தின் அமிலங்கள் நீரூற்றென சுரந்து கொண்டிருந்தன. மூன்று நான்கு நிமிடங்களுக்கு திருடன் மயான அமைதியுடன் அவளுடன் அப்படியே இருந்தான். ‘ம்..ம்..’மென அனத்துவதையும் உடலை உலுக்குவதையும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் நிறுத்தினாள். அவள் கண்களில் இருந்து நீர் மட்டும் தாரை தாரையாய் வழிந்து அவனின் கைகளை நனைத்தபடியே இருந்தது. அவன் அவள் காதில் மெதுவாகக் கேட்டான்.

“என்ன பவுடர்ட்டீ போடுத..? இந்தா மண மணக்கு..!”

அவள் அதிர்ச்சியானாள். ஏதோ பிசகு உண்டாகப் போகிறது. மீண்டும் உடம்பை உலுக்க ஆரம்பித்தாள். அவன் மீண்டும் அவள் காதில் கிசுகிசுத்தான்.

“யாத்தா.. கன்னம் பஞ்சு பஞ்சால்லருக்கு.. நொடிக்கு நூறு பாட்டுல்லா மண்டைல ஓடுது.. இப்ப தோணுதத பாடுதன்.. ஒடம்பாட்டாம கேளு.. ன்ன..” என்றபடியே தொண்டையைச் செருமிக் கொண்டு மெதுவாகப் பாட ஆரம்பித்தான். T.M.Sன் பாதி குரல் ஒலித்தது.

“தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்.. நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம்.. எங்கே நானென்று தேடட்டும் என்னை.. சிந்தாத முத்தங்கள் சிந்த.. எங்கே.. நானென்று தேடட்டும் என்னை.. சிந்தாத முத்தங்கள் சிந்த..”

அயோக்கியப் பயல்.. எத்தனை திமிர் இருந்தால் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் ஒருவன் இப்படிப் பாட முடியும். எல்லாம் திமிர்தான்.. வேறென்ன.. ஆண் என்கிற திமிர். அதுவும் திருடன் என்கிற திமிர். அதிலும் இந்த அர்த்த ராத்திரியில் நீ ஒரு பெண். அதிலும் ஒரு கால் விளங்காதவள். உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்கிற திமிர். திரும்பி அவன் முகத்தில் காறி உமிழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. 

இறந்து போன தன் தாயையும், தனியே விட்டுப் போன தன் தந்தையும் நினைத்துக் பொங்கிப் பொங்கி அழுதாள். திடீரென்று அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை சித்தி இங்கிருந்தால் என்னாகியிருக்கும். ரத்தினம் கீழே இருந்திருப்பாள். சம்பவம் சித்திக்கு நடந்திருக்கும். திருடனின் மடியில் சித்தி உட்கார்த்திருப்பதையும், சிந்தாத முத்தங்கள் சிந்த என்று திருடன் பாடுவதையும் நினைத்துப் பார்த்தாள். மனதிற்குள் சிரிப்பு வெடிக்க, குபீரென்று வெடித்துச் சிரித்தாள். இப்போதும் அவள் உடம்பு அழுவது போலவே குலுங்கியது. இப்போது திருடன் கொஞ்சம் பாவமாக பேசினான். 

“ஒடம்ப ஒடம்ப ஆட்டாதட்டீ.. நீ பயத்துல ஒடம்ப ஆட்டுத.. ஆனா ஒம் பெடக்ஸும் என் தொடையும் எங்க லவ் பண்ணீருமோன்னு எனக்கு பயமாயிருக்கு..” என்றான். ரத்தினத்தின் நீலக் கண்கள் பெரிதாக விரிந்து இதயம் ஹெவி பேஸில் டம் டம்மென அலர ஆரம்பித்தது.

அடப்பாவி.. இதற்காகத்தான் இத்தனை நிமிடங்கள் அவ்வளவு அமைதியாக அப்படியே இருந்தானா என்று நினைத்து மனதிற்குள் மீண்டும் கலவரமானாள்.

“இங்காருட்டீ.. களவாங்கது மட்டுந்தான் ஏந்தொழிலு. வேற எதுவும் கெடயாது.. பாவமாருக்கனுட்டு ஒன்னய உடுதன்.. கத்தி கலவரம் பண்ணீராத.. ன்னா..” என்றபடியே அவளைத் திடுமென்று விடுவித்தான். பயத்தினால் சட்டென்று எழுந்தவள் தாங்கிப் பிடிக்க எதுவும் இல்லாமல் இடதுபுறம் குப்புற விழுந்து வேக வேகமாக தவழ்ந்து போய் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள். தலையை நிமிர்த்தி அவனை பார்ப்பதற்கே அவளுக்கு பயமாய் இருந்தது. தான் பயப்படுவது அவனுக்கு அனுகூலமாகும் என்பதால் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளுடைய நீலக் கண்களைக் கண்டவன் முகமலர்ந்து சிரித்துப் பாடினான்.

“நீலம் கொண்ட கண்ணும்.. நேசம் கொண்ட நெஞ்சும்.. காலந்தோறும் என்னைச் சேரும் கண்மணி.. “

அவன் பாடியது கேட்டு தலை தாழ்த்திக் கொள்ளத்தான் அவள் முயன்றாள். ஆனால் முடியவில்லை.

மெல்லிய மஞ்சள் நிற விளக்கொளியில் அவன் முகம் இரவில் மலர்ந்த இளஞ்சிவப்பு காக்டஸ் மலர் போல விரிந்திருந்தது. மிலிட்டரிக்காரன் போல முடி வெட்டி இருந்தான். தீர்க்கமாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள். அது திருடனின் கண்களே இல்லை. முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் கண்களைப் பார்த்து இவன் சுட்டு விரல் நீட்டினால் விரல் பிடித்து அவன் வீட்டிற்குச் சென்றிடுவாள். அப்படியொரு கண்கள் அவனுக்கு. சுத்தமாக சவரம் செய்த தாடை. துளி தொப்பையும் அவனுக்கில்லை. ஏதோ பெண் பார்க்க வந்தவன் போல அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இதழ்களால் சொற்களைச் சொல்லாமல் கண்களால் சொற்களைச் சொல்லும் மாந்திரீகப் பார்வை அது. யாரோ ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரனின் முகம் அவள் நினைவில் மின்னி மறைந்தது.

சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு அவன் சாதாரணமாகக் கேட்டான்.

“சோறும் கறிக்குழம்பும் செஞ்சிருக்கேன்.. சாப்புடுதியா..” 

அவள் திடுக்கென்று அதிர்ந்தாள். 

“களவாங்குத வீட்ல ஏதாது சமச்சி சாப்டுதது இப்ப ட்ரெண்டு..” என்றான்.

சாப்பிட்டுவிட்டு போ என்று சச்சு பாட்டி சொன்னதும் கதறி அழுத திருடன் இப்போது அவளுக்கு நினைவுக்கு வந்தான். ஆனால் என்னமோ அவளுக்கும் இப்போது கதறி அழ வேண்டும் போல இருந்தது. பதின்மூன்று வயதில் அவள் பூப்படைந்திருந்த போது சேத்தூரிலிருந்து வந்திருந்த அன்னம்மா சித்திதான் இந்த வார்த்தையைக் கடைசியாக அவளிடம் கேட்டாள்.

“ஏப்பிள்ள.. சாப்டியா நீ..”

இப்போது ஒரு திருடன் கேட்டிருக்கிறான். அடுப்பங்கரைக்குச் சென்று ஒரு தட்டில் கறிச்சோறு போட்டு வந்து அவள் முன்னே வைத்துவிட்டுச் சொன்னான்.

“வயித்த அமுக்கி புடிச்சுருந்தப்போ ஒம் பசி எங்கையவே தின்றுருக்கும். பட்டினி கெடக்கியோ இல்லாட்டி வெரதமோ.. ?” என்றான்.

கண்களில் நீர் தழும்ப அவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள். 

“எங்க தாத்தாவோட தாத்தாவோட தாத்தா சொல்லிருக்காருவோ.. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்னு.”

அவள் மெதுவாக தலையைத் திருப்பி சோற்றுத் தட்டைப் பார்த்தாள். பொதிகை மலையின் நீரூன்றிய தாமிரபரணி இப்போது அவள் வாயில் சுரந்து கொண்டிருந்தாள்.

“நாட்டுக்கோழி கறிட்டீ.. ப்ரெஷ் கறி.. ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாலதான் கொன்னு உறிச்சது..”

அந்தத் தட்டை வேகமாக இழுத்து சோற்றை அள்ளி அள்ளி உண்ண ஆரம்பித்தாள். . 

“யாத்தாடி.. செத்து கித்துப் போயிராதட்டீ.. மெதுவா தின்னு..” என்றவனை அவள் கண்டு கொள்ளவே இல்லை. இன்னும் வேகமாக அள்ளி அள்ளித் தின்றபடியே வாயிலிருந்து தெறிக்கும் சோற்றுடனே தலை தூக்காமல் கண்களை லேசாய் வலப்புறம் சாய்த்து கேட்கக்கூடாத கேள்வி ஒன்றை அவள் கேட்டாள்.

“தொட்டுக்க ஒன்னும் செய்யலியா..?”

“கோபி மஞ்சூரியன் வேணா செய்யவா..!” என்று அவன் கேட்டதற்கு “ம்..” என்று தலையசைத்தாள். 

“அடங்கொம்மாள..” என்றவாறே வலது கையை ஆவேசமாய் தூக்கி ஓங்கி அறைய வந்தவனைப் பார்த்து வெளிறிப் போய் மிரண்டாள். ஆனால் அவன் அறையவில்லை. தன் இடது கையால் அவள் வலது காதை பிடித்துத் திருகி முன்னும் பின்னும் இழுத்தபடியே சொன்னான். 

“வீட்ல குண்டுமணி தங்கங் கூட இல்ல.. பீரோவ தெறந்தா கரப்பாம்பூச்சியா ஓடுது.. தூக்குவாளி சம்பட சட்டிலேருந்து ஜாமென்ட்ரி பாக்ஸ் வரைக்கும் தெறந்து பாத்துட்டேன்.. பத்து பைசா கூட இல்ல.. சரி கடுகு சீரகம் டப்பாலயாவது எதாச்சும் இருக்கும்னு அதுல கடுகு சீரகமே இல்ல.. ஏட்டீ.. இது வீடா.. இல்ல வீடு மாதிரியா..?”

அவளுக்கு சிரிப்பும் கண்ணீரும் காது மடலில் வலியும் ஒரு சேர வந்தது. கனத்த எரிச்சலோடு அவள் காது மடலில் இருந்து படக்கென்று தன் கையை எடுத்தான். அப்போது அவள் காதிலிருந்து ஜிமிக்கி கழன்று கீழே விழுந்தது. அவன் அதை டக்கென்று எடுத்து அந்த மெல்லிய மஞ்சள் விளக்கொளியில் பார்த்துக் கேட்டான்.

“இதாச்சும் தங்கமா..?”.

அவள் பதிலேதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள். 

“வெசம் வாங்க துட்டுல்லாம உசுரோடயிருக்கீய போல..நாசமத்து பேதீலதாம்ட்டீ போப்போது ஒங்குடும்போம்..” – அவன் சபித்தான்.

பின்னர் யோசித்தவளாய் அவள் அப்பா அவரது சிறுவயதில் இருந்து ஒரு உண்டியல் சேர்த்து வருவதாகவும் அது பரண் மேல் இருப்பதாகவும் சொன்னாள். அவன் பரண் மேல் ஏறி அந்தப் பெரிய மண் உண்டியலை தரையில் போட்டு உடைத்தான். உள்ளிருந்தவை அனைத்தும் பழைய ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசாக்கள்.

“அடத் தரித்திரச் சண்டாளமே..” என நொந்து போனான். 

அதில் வித்தியாசமான சில பைசாக்கள் இருந்தன. அதில் ஒன்றை எடுத்துப் பார்த்தான். ஒரு அணா என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதைத் திருப்பிப் பார்த்தான். ஈஸ்ட் இண்டியா கம்பெனி – 1818 என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அவன் கண்கள் அகல விரிந்து சிவந்தன.

“ஏ.. செறுக்கியுள்ளயலா.. இந்த உண்டியல எரநூறு வருசமா சேக்கிய போல.. தரித்திரத்துல குசேலர் குடும்பத்தையே மிஞ்சீட்டியளே.. நல்லவேள இத ஒடச்சேன்.. இதல்லாம் நெரம்பதுக்கு இன்னும் முந்நூறு வர்சமாது ஆவும்..”

அவள் சோகமாக முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டாள்.

அவன் சோர்வாக எழுந்து அடுப்பங்கரைக்குச் சென்று குழம்புச் சட்டியைத் தூக்கி வந்து இன்னும் கொஞ்சம் குழம்பையும் ரெண்டு துண்டு கறியையும் அவள் தட்டில் இட்டவனை விநோதமாகப் பார்த்தாள். 

அவனிடம் அவளுக்கு ஏதோ சொல்ல வேண்டும் என்றுத் தோன்றுகிறது. ஆனால் அது என்னது என்று அவளுக்குப் புரியவில்லை. அவன் அவளருகே வந்து குத்த வைத்து அமர்ந்தபடியே அவள் வலது காதை உற்றுப் பார்த்தான். அவளுக்கு காது மடல் கூசியது. அவன் தன் இடது கை விரல்களால் அவள் காது மடலின் ஓரத்தை மெதுவாகத் தடவிப் பார்த்தான். இப்போது அவளுக்கு உடலில் தலையில் இருந்து கால் வரை வலது புறம் மட்டும் சிலிர்த்து மயிர்க்கூச்செறிந்தது. தலையை நெளித்து அசைந்தபடியே யோசித்தாள். தன் காதை முரட்டுத்தனமாக திருகிய அதே கையா இது. கோழி இறகினால் காதை குடைந்தாற் போல் அல்லவா இருக்கிறது. அவள் அப்படி நெளிந்தாள்.

“திருகாணி காதுலதான் இருக்கானு பாத்தம்ட்டீ..” என்றான். 

வார்த்தைக்கு வார்த்தை ஏட்டீ ஏட்டீ என்றவன் சொல்லும்போது தனக்கு ஏன் கோபமே வரமாட்டேன் என்கிறது என்பது அவளுக்குப் புதிராக இருந்தது. மேலும் ஏட்டீ ஏட்டீ என்றவன் சொல்லும் போது உடம்பில் புதிய சுகம் பிறக்கிறது. 

திடீரென்று வானமே வெடித்துச் சிதறியது போல பெரும் இடியோசையொன்று வானில் முழங்கியது. இடிச் சத்தம் கேட்டு பதறிய ரத்தினம் சோற்றுக்கையுடனே படக்கென்று அவன் கையைப் பிடித்து அடுத்த நொடியே சுதாரித்து கையை எடுத்து, “ஸாரி..” என்றாள். சடசடவென மழை பெய்யும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. திறந்திருந்த ஜன்னலின் வழியே பார்த்தான். வெளியே மழை பொழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் எழுந்து ஒரு பாடலின் வரிகளை தற்கணத்திற்கு ஏற்றபடி மாற்றிப் பாடியபடியே ஜன்னலை நோக்கி சென்றான். 

“(அவள்)தொட்டாள் நான் மலர்ந்தேன்.. தொடாமல் நீ மலர்ந்தாய் ..”

ஆஹா.. ஏற்ற இறக்கத்தோடு என்ன அழகாக பாடுகிறான் என்று ரசித்தாலும் ரத்தினம் கொஞ்சம் முகஞ்சுழித்தபடியே, “அய்ய.. அப்பிடில்லாம் ஒண்ணுல்ல..” என்றாள். தட்டில் இன்னும் பாதிச்சோறு மிச்சமிருந்தது.

ஜன்னலின் வழியே பெய்யும் மழையைப் பார்த்தான். தெரு விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் கோடுகளாக கொட்டும் மழைத்துளிகள் தங்கம் போல் மின்னிக் கொண்டிருந்தன. எதிர்வீட்டு மாடியின் ஜன்னல் கண்ணாடிகளில் நீர்முத்துக்கள் கோலமிட்டு மெதுவாக கீழே வழிந்தோடிக் கொண்டிருந்தன. பகலாக மட்டும் இருந்திருந்தால் மரங்கள் நனைந்து அதன் இலைகள் இன்னும் அடர்பச்சையாக பளபளப்பாகத் தெரிந்திருக்கும் என்று நினைத்தபடியே அவன் மீண்டும் பாடினான். அது அத்தனை அற்புதமாக இருந்தது. 

“சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ.. சிலை வண்ணம் அங்கே.. கலை உள்ளம் இங்கே.. நிலை தன்னைச் சொல்ல தூதுவன் எங்கே .. பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடிவா..!” என்று மழையை நோக்கி இரு கைகளை நீட்டினான்.

ரத்தினத்திற்கு கண்களில் நீர் கோர்த்துவிட்டது. மழையை காதலி போல் நினைத்து அழைத்துப் பாடுகிறானே.. அவன் பாடும்போது ஆண் மயில் தோகை விரித்தாடுவது போல் அல்லவா இருக்கிறது. தன்னை அறியாமல் அவள் இதழ்கள் முணுமுணுத்தன.

“யாரோ இவன்.. யாரோ இவன்.. என் பூக்களின் தேனோ இவன்..”

 அவளின் முணுமுணுப்புச் சத்தம் கேட்டு அவன் திரும்பிய போது, திடுக்கிட்டு தலை குனிந்து மீண்டும் சோற்றை வேகவேகமாக அள்ளித் தின்ன ஆரம்பித்தாள்.

“விக்கி கிக்கி தொலைஞ்சிராதட்டீ.. ஒரு சொட்டுத் தண்ணியில்ல ஒன் வீட்ல..” என்று அவன் சொல்லி முடிக்கும் போது அவளுக்கு விக்கல் வர ஆரம்பித்தது. 

“நாசமா போச்சு..” என்றபடியே ஒரு சொம்பை எடுத்துக் கொண்டு மழைநீர் பிடிப்பதற்காக கதவைத் திறக்கப் போனான். வேகமாக அவனை நோக்கி வேண்டாம் வேண்டாம் என்று கையசைத்தாள். விக்கல் ஒவ்வொன்றும் பெரும் விக்கலாக இருந்தது. மழைத் தண்ணீர் குடித்தால் காய்ச்சல் வரும் என்று சைகைகளால் செய்து காண்பித்தாள். அவள் அருகில் வந்து அமர்ந்து, “மூச்ச நல்லா இழுத்து உடுட்டீ..” என்றான். அவள் மூச்சை பெரிது பெரிதாக இழுத்து விட, அவளின் மார்பகங்கள் விம்மிப் புடைத்து உள்வாங்கி விம்மிப் புடைத்து உள்வாங்க, அதைப் பார்த்தபடியே அவன் வாய்விட்டுப் பாடினான்.

“கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ..?” 

வரிகளின் அர்த்தம் புரியாமல் விக்கிக் கொண்டிந்தவளை திட்டிச் சொன்னான்.

“அடுத்த வரி நீதாம்ட்டீ பாடனும்.. ‘நானே தரும் காலம் வரும்.. ஏனிந்த அவசரமோ..”

சடக்கென்று அவள் புரிந்தவளாய் அவனை அறைவதற்காக வேகமாக சுழற்றிய அவளின் இடது கையை தன் இடது கையால் படக்கென்று பிடித்தான். அவளது இடது கை விரல்களை பார்த்தவன் ஆச்சரியமாய் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“எல்லா வெரல்லயும் நகம் பெருசு பெருசாருக்கு.. ஆனா யாம்ட்டீ நடு வெரல்ல மட்டும் நகத்தெ சுத்தமா வெட்டி வெச்சிருக்க..?”

ஏற்கனவே பெரிதாக விக்கிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது அது முரட்டு விக்கலாக மாறியது. உடம்பு அதிர அதிர விக்கினாள். அவளின் விக்கல் ஒலிகள் சரியான தாள சுருதியில் இயங்கும் ஒரு ரிதம் போல அவனுக்கு ஒலித்தன. தலையை அசைத்துக் கொண்டேயிருந்தவன் திடீரென்று பாட ஆரம்பித்தான்.

“கொக்கு சைவ கொக்கு.. ஒரு கெண்ட மீனக் கண்டு..”

அவள் எரிச்சலாகி அவன் தொடையில் எந்த உரிமையுடனோ ஓங்கி ஓங்கி அடித்து, எப்படியாவது இந்த விக்கலை நிறுத்துய்யா என்று சைகையினால் கெஞ்சினாள்.

அவன் மிகச் சாதாரணமாகக் கேட்டான்.

“மேட்டர் செய்வமா..? 

ஒரு பிரபஞ்சத்திலிருந்து இன்னொரு பிரபஞ்சத்துக்கு தூக்கி வீசப்பட்டவள் போல ரத்தினம் திடுக்கிட்டு அதிர்ந்து உறைந்தாள்.

“விக்கல் நின்றுச்சி..” என்றவன் எழுந்து போய் மீண்டும் மழை பார்க்க ஆரம்பித்தான். பனிமலையில் இருந்து பாலைவனத்துக்குள் விழுந்து மீண்டும் பாலைவனத்தில் இருந்து பனிமலைக்குத் திரும்பும் சாகசங்கள் எல்லாம் ஒரு நொடியில் நிகழ்கின்றனவே. இதற்கு பெயர் என்ன..? 

ஜன்னலில் இருந்து பார்வை விலக்காமல் அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“வந்ததுக்கு ஒரு பிரயோசனமுமில்ல.. செரி.. நா கெளம்பட்டா..”

அவள் பரிதாபகரமானதொரு அதிர்ச்சிக்குள்ளாகி, “அதுக்குள்ளயா..?” என்றாள். அவன் ஜன்னலில் இருந்து மெதுவாக தலை திருப்பி ஏதோ புரிந்தவனாய் அவளைப் பார்த்துக்கேட்டான்.

“ஏ..கிறுக்கு.. நா திருடன்ட்டீ..” 

அவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். ஏதோதோ சொல்ல வந்து ஒன்றும் சொல்ல முடியாமல் திக்கித் திணறித் தவித்தாள். அவள் இதழ்களின் விளிம்பில் ஆயிரமாயிரம் சொற்கள் இருந்தன. ஆனால் அவை ஒவ்வொன்றும், ‘நான் முதல்ல போகமாட்டேன்ப்பா .. நீ போ.. ‘ என்று பயந்தன. எதிர்வீட்டுத் திருடனிடம் சச்சுப் பாட்டி சொன்னதையே இந்தத் திருடனிடம் இவள் சொன்னாள்.

“ஒரு வாய் சாப்டுட்டு போங்களேன்..” 

அவளின் அருகே வந்தமர்ந்து அவள் கீழ் உதட்டை லேசாக சுண்டிவிட்டுக் கேட்டான்.

“ஒரு வாய்னா இந்த வாயா..!!”

இன்னும் சற்றைக்கெல்லாம் கிளம்பப் போகிறவன் ஏன் இப்படி ததும்ப ததும்ப காதல் பேசுகிறான். விவசாயம் செய்யப் போவதில்லை என்றால் ஏன் நிலத்தை இவ்வளவு ஆழ உழ வேண்டும். அவளுக்கு அவனுடனே போக வேண்டும் போல இருந்தது.

“சோறு எனக்கு மட்டுந்தான்ட்டீ வடிச்சேன். பாவம்.. ஒனக்கு நல்ல பசி.. எனக்கு ஆயிரம் வீடு இருக்கு.. ஒனக்கு இது மட்டுந்தான வீடு.. நீ சாப்ட்டா என்ன நா சாப்ட்டா என்ன..”

நீர் தழும்பும் தன் நீலக் கண்களோடு அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்.

“அப்பிடில்லா பாக்காதட்டீ.. ” என்றவன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். பெருமூச்சு விட்டபடி எழுந்தான். தன் இடது கையை அவளை நோக்கி நீட்டி, “எந்தி..” என்றான். அவள் அவனை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு டாட்டா காட்ட மாட்டியா..?” என்றான். அவள் கண்களிலிருந்து நீர் பொங்கி வழிந்தன.

சோற்றுப் பருக்கைகள் ஒட்டியிருக்கும் தன் வலது கையை பார்த்தாள். அவன் அவளது பின்னே சென்று ஒரு குழந்தையை தூக்குவது போல அவளைத் தூக்கி நிறுத்தினான். அவள் அவனது தோள்பட்டைகளை உரிமையாகப் பிடித்தபடியே தத்தி தத்தி நடந்து வந்தாள். வாசல் கதவைத் திறந்தான். மழை நின்றிருந்தது. சாரல் இன்னும் விடவில்லை. 

“கொஞ்சங்கூட தண்ணியில்லயே எப்படி கை கழுவுவ..?” என்றான். ஒரு குழந்தையைப் போல முகத்தை சுழித்துக் கொண்டு அவள் சொன்னாள்.

“எங்கூட்ல தண்ணீருக்குதான் பஞ்சம்.. கண்ணீருக்கு பஞ்சமில்ல.. கண்ணீராலேயே கழுவிக்குவேன்..”

 “லூசாட்டீ நீ..”

“திரும்ப வருவியளா..?” என்றாள்.

“ஒரு களவாணிப்பயட்ட கேக்குத கேள்வியா இது..?”

எதையுமே களவாடாமல் எதையோ களவாடியது போல ஒரு உணர்வு அவனுக்குள். மாடியில் இருந்து ஐந்தாறு படிகள் இறங்கியவன் திரும்பி அவளைப் பார்த்தான். சோடியம் விளக்கொளியில் அசையாமல் ஒரு மஞ்சள் ஓவியம் போல் நின்று கொண்டிருந்தாள்..மேலேறி வந்தவன், தனது வலது உள்ளங்கையை திறந்து காண்பித்தான். அந்த ஜிமிக்கி இன்னமும் அவன் கையில்தான் இருந்தது. அவளின் இடது காது மடலைத் தடவிப் பார்த்தான். அந்த ஜிமிக்கியை அவள் காதைப் பிடித்து திருகாணியில் பொருத்திக் கொண்டே அவளின் நீலக் கண்களைப் பார்த்து சொன்னான்.

“இந்த ரெண்டு கண்ணையும் அப்பிடியே அவிச்சு தின்றவா..!!”

அவள் தன் நீலக் கண்களால் அவனைப் பார்க்க பார்க்க அவனுடம்பில் நீலம் பரவிக் கொண்டிருந்தது.

“அப்பிடி பாக்காதட்டீ..” என்றான்.

“அப்பிடிதான் பாப்பென்..” என்றவளைப் பார்த்து அவன் பாடினான்.

“அப்படி பாக்கறதுன்னா வேணாம்.. கண்ணால தாக்குறது வேணாம்..!”

குபீரென்று சிரித்தாள். 

“என் வாழ்க்கைல இவ்ளோ அழகான ஒரு ஒரு மணி நேரத்த நா பாத்ததே இல்ல.. நா ரொம்ப பயந்த ஒரு மணி நேரமும் இதான்.. ரொம்ப சந்தோசமாருந்த ஒரு மணி நேரமும் இதான்..” என்றவளை அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

“எம் பேரு என்னன்னு கேகக்கவேயில்லியே..” என்றான்.

அவள் மெதுவாக அழகாகப் பாடினாள்.

“உன் பேரே தெரியாது.. உனைக் கூப்பிட முடியாது.. நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. அது உனக்கே தெரியாது..”

அவன் ஒரு படி மேலேறி அவளைப் பார்த்துச் சிரித்தபடியே கேட்டான்.

“ஏட்டீ.. கள்ளச்சி.. நீ இம்புட்டு நல்லா பாடுவியா..!!”

“இன்னொரு நாள் வாங்க..” என்றாள். 

“களவாங்கதுக்கு என்னருக்கு ஒன் வீட்ல..?” என்றதும் அவள் நீலக் கண்களிவிருந்து அவன் கண்களுக்கு மின்னலை பாய்ச்சியபடியே சொன்னாள்.

“ஏன்.. நா இல்ல..” 

“இப்பிடில்லா பேசாதட்டீ.. ” 

என்றவன் விறுவிறுவென படிகளில் கீழிறங்கினான். அவளைத் திரும்பிப் பார் திரும்பிப் பாரென்று அவன் மனம் சொன்னாலும் பார்க்காமல் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான். தெருவிளக்குகள் அணைந்து எரிந்து அணைந்து எரிந்து ஒருவனை வெளிச்சத்திலும் இருட்டிலும் மாறி மாறி காட்டிக் கொண்டிருந்தன. அவன் நடந்து போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். சோற்றுப் பருக்கைகள் ஒட்டியிருக்கும் வலது கையை நுகர்ந்து பார்த்தாள். இனி அவள் நுகரும் எல்லா கறிசோற்றின் வாசனைகளும் அவன் நிறைந்திருப்பான்.

அவன் நிச்சயம் திரும்ப வருவான் என்று அவள் நம்பினாள். இதுவரையிலும் வாழ்வில் தான் உணர்ந்திராத ஒரு அமைதி உள்ளத்தில் படருவதை உணர்ந்தாள். படிகளில் கீழிறங்கிப் பார்த்தாள். அவன் இன்னும் தெருமுனையைக் கடக்கவில்லை.

தெருமுனைக்கு சென்று நின்ற அவன் திரும்பி அந்த மாடி வீட்டைப் பார்த்தான். இன்னமும் அவள் அங்கேயே நின்று கொண்டிருப்பதும் இவனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. அவளுக்குக் கேட்காது என்றாலும் அவன் வாய்விட்டுச் சொன்னான்.

“அப்பிடி பாக்காதட்டீ..”

***

மழைக்குருவி – இயற்பெயர் அருண்குமார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் மூலமாக எழுத்தின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு மழைக்குருவி என்கிற புனைப்பெயரில் கவிதைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார். அச்சு இதழ்களிலும் மின்னிதழ்களிலும் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: mazhaikkuruvi@gmail.com

திருட்டுப் பூனைகள்

1

கண்ணன் விஸ்வகாந்தி

ல்லூரி முடித்த உடனேயே வேலைக்கு சேர்ந்து விட்டேன். சில காலம் விற்பனைப் பிரதிநிதியாக சொந்த ஊரான சேலத்திலேயே வேலை செய்தேன். பிறகு வேறு ஒரு தொடர்பின் வழியாக, யுபியெஸ் செய்யும் பிரபலமான ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. மின்வெட்டு அதிகமாக இருந்ததாலும், ஜெனரேட்டர்களின் விலையும் பராமரிப்பு செலவும் மிக அதிகமாக இருந்ததாலும், யுபியெஸ் பிரபலமடையத் தொடங்கியது. சென்னை பெருங்குடியில் யுபியெஸ் அசெம்பிள் செய்யும் பேக்டரியில் வேலை. பக்கத்தில் இருந்த வேளச்சேரியில் தங்கியிருந்தோம். அங்கிருந்து கம்பெனி பேருந்துகளும், அரசுப் பேருந்துகளும் இருந்தன. பதினைந்தே நிமிடங்களில் கம்பெனி. பெருங்குடியிலேயே டிபன் மற்றும் மதிய உணவு. அருமையான சுவையுடன் குறைந்த விலையில் கிடைத்தது. தொழில் கற்றுக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது.

கம்பெனிக்கு இருவர் பார்ட்னர்கள். இருவருமே சேலத்தைச் சேர்ந்தவர்கள். மோகன் அவர்கள் பேக்டரி இன்சார்ஜ் ஆகவும் இருந்தார். டெக்னிக்கலாக மிகவும் தேர்ந்தவர். அவர்தான் இந்த யுபிஎஸ்ஸின் பின்னிருந்த மூளை என்பார்கள். மற்றொருவர் பழனிசாமி அவர்கள். அவர்தான் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையைக் கவனித்து வந்தார். விற்பனை செய்வதில் மிகுந்த விற்பன்னர். இருவருமே அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜாம்பவான்கள்.

மோகன் மிகவும் சிக்கனமானவர். அப்போது மாருதி 800 மிகவும் பிரபலமான காராக இருந்தது. அவருடைய குடும்பத்தினர் நால்வரையும் வைத்து, அவரே செல்ஃப் டிரைவிங் செய்வார். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி, எதையும் கண்டு கொள்ளாமல் தனது இலக்கை நோக்கி அவருடைய பயணம் தொடர்ந்தது. கம்பெனியில் கடுமையான டெஸ்ட்டிங் இருந்தது. பல சமயங்களில், அவரே யூனிட் அருகில் அமர்ந்து, சரி செய்வதைப் பார்த்திருக்கிறேன். எளிமையும், திறமையும், சிக்கனமும் சரியான கலவையில் அமைந்த பேக்கேஜ் அவர்.

ஓரளவுக்கு கற்றுத் தேர்ந்தவர்களை, சென்னை மயிலாப்பூரில் இருந்த, யுபிஸ் சர்வீஸ் செக்ஷனுக்கு மாற்றுவார்கள். பாரி, சுப்பிரமணி போன்ற நல்ல நண்பர்களைப் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம். பாரி பின்னாளில் பேக்டரி இன்சார்ஜ் அளவுக்கு உயர் பதவி வகித்தார். சிறிது நாட்களில், சுப்பிரமணியும் சர்வீசில் என்னுடன் இணைந்தான். 

பேக்டரியில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தவனுக்கு, மிகவும் அலைச்சலான வேலை. சர்வீஸ் கிட்டை எடுத்துக் கொண்டு, பேருந்தில் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைந்து, பிரச்சினை என்னவென்று கண்டறிந்து, உடனே சரி செய்ய வேண்டும். மிகவும் பொறுப்பான, டென்ஷனான வேலை.

எங்கள் மேலாளராக இருந்த திருமூர்த்தி சார் மிகவும் நல்லவர். ஆனால் மிகவும் டென்ஷனாகக் கூடியவர். சரமாரியாக சிகரெட் பிடிக்கும் பழக்கமுடையவர். மீசையின்றி, மழுமழுவென்று இருப்பார். முடியில்லாமல், மீசையில்லாமல், ஹிந்திப் பட வில்லனைப் போன்ற தோற்றம். 

ஆரம்பத்தில் சிறிய யுபியெஸ்களை மட்டுமே சர்வீஸ் செய்து வந்தவனுக்கு, சற்றே பவர் அதிகமான யூனிட்களை பழுதுபார்க்கும் வாய்ப்புகளும் வந்தன. என்னுடன் வேலை செய்தவர்களில், நண்பர் சுப்பிரமணி மிகச் சிறந்த வேலைக்காரர். எவ்வளவு பெரிய யூனிட்டாக இருப்பினும், கடினமான பிரச்சினையாக இருப்பினும், விரைவாக முடிக்கும் ஆற்றலுடையவர். எங்களுடன் வேலை செய்த, சேலத்துக்காரரான மாரியப்பன் மற்றும் வட சென்னையைச் சேர்ந்த சூர்யாவும், கேரளாவைச் சேர்ந்த பிஜுவும் நண்பர்களானார்கள். மாரியப்பன் சரியான வேலைக்காரர். சூர்யா நல்ல துடியான பையன். நிறைய சந்தேகங்களைக் கேட்டு தொழிலை நன்றாகக் கற்றுக் கொண்டான். அப்போது வைகோ திமுகவிலிருந்த நேரம். அவருடைய பேச்சுக்கு, சூர்யா அடிமை. எப்போது அவரின் பேச்சு இருந்தாலும், சூர்யா அங்கிருப்பான். அவருடைய ரசிகனாகவே மாறியிருந்தான். நாங்கள் மாரியின் அறையில் சந்திக்கும் போதெல்லாம், வேலை சார்ந்த சந்தேகங்களைத் தவிர்த்து, வைகோ முழுமையாக ஆக்கிரமித்திருந்தார். சூர்யா இப்போது, ஏதாவது ஒரு கட்சியில் பெரிய பதவியில் இருக்கலாம்.

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் தான் எங்களுடைய அலுவலகம் இருந்தது. பலமுறை இசையமைப்பாளர் எம்எஸ்வி அவர்கள் ஆட்டோவில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். 

சில மாதங்களில் திருமூர்த்தி சார் மாற்றப்பட்டு, சுந்தர் சர்வீஸ் மேனேஜராக வந்தார். புல்கேண்டு சர்ட், பேகி பேண்ட், இன்செர்ட் செய்திருப்பார். விலையுயர்ந்த ஷுக்கள் என்று ஒரு திரைப்படக் கதாநாயகனாக தோற்றமளித்தார். அவருடன் சேர்ந்து நாங்கள் மூன்று பேர் என்ஜினியரிங் முடித்திருந்தோம்.

அவர் வந்து, ஒரு மாதம் ஓடி இருக்கும். ஒரு நாள் மாலை, அவருடைய கேபினுக்கு அழைத்தார். அன்றைய வேலையில் எதுவும் தவறு செய்யவில்லையே, எதற்கு அழைப்பு என்று பதட்டத்தோடு உள்ளே நுழைந்தேன்.

“வாங்க கண்ணன். எப்படி இருக்கீங்க. அப்பா, அம்மா எல்லாம் நல்லா இருக்கீங்களா? அப்புறம் வேல எப்படி போவுது?”, என்றார்.

“பரவாயில்லை சார். வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்க சார். வேலைல நெறய கத்துக்கிட்டே இருக்கிறேன் சார்”, என்றேன் நின்றபடியே.

“நல்லது. திருப்பதியில நமக்கு ஒரு பிராஞ்ச் இருக்குது. ஆரம்பிச்சிக் கொஞ்ச நாள் தான் ஆச்சு. பாத்துக்கிறதுக்கு நல்ல எஞ்ஜினியர் வேணும். ஒங்கள அனுப்பலாம்னு இருக்கிறோம். என்ன சொல்றீங்க?”.

எனக்கு சற்றே பதட்டமாக இருந்தது. இருப்பினும் இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், உடனே ஒப்புக் கொண்டேன். 

“சரிங்க சார். ஊருக்குப் போய் அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டு, அடுத்த வாரத்திலிருந்து ஜாயின் செய்கிறேன்”, என்றேன்.

“சரி. நல்லா பண்ணுங்க. ஏதாவது உதவி தேவப்பட்டா, தயங்காமல் கேளுங்கள்” என்றார்.

வெளியே வந்ததும், பாரி, மாரி, சுப்பிரமணி என்று எல்லோரும் கலாய்த்தனர். சுப்பிரமணி ட்ரீட் கட்டாயம் வேண்டுமென்றான். எப்படியோ நழுவி விட்டேன். மனசுக்கு சற்று கஷ்டமாக இருந்தது.

வீட்டில் சொன்னதும், அம்மா தான் தைரியம் சொன்னது: “நீ எங்க வேணா போ. ஆனா ஒழுக்கமா இருக்கனும்”. அப்பா வழக்கம் போல எதுவும் சொல்லவில்லை.

சென்னையில் இருந்த வரை, பெரிதாக எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் இது புது இடம். புது மொழி.

சேலத்திலிருந்து சென்னை. சென்னையில் இருந்து திருப்பதி. மிகவும் நீண்ட பிரயாணமாகத் தோன்றியது.

வெங்கட் என்பவரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்து இருந்தனர். திருப்பதியில் இறங்கியதும், ஒரு ஆட்டோவில் ஏறி, ஆங்கிலத்தில் முகவரியைச் சொல்லி, முகவரி எழுதிய பேப்பரையும் காண்பித்த பிறகு, “நீங்க தமிழா சார். தமிழில்லயே சொல்ல வேண்டியது தானே. எங்களுக்கு பல மொழிகள் தெரியும் சார். அதுவுமில்லாமல் சித்தூர் தமிழ்நாடு பார்டர் தான சார்”, என்று தெலுங்கு கலந்த உச்சரிப்பில் பேசினார். அவரிடம் பேசியபடியே சீனிவாசா நகருக்கு வந்து சேர்ந்தோம். பேசிய தொகைக்கு மேல் சற்று அதிகமாகவே கொடுத்து விட்டு, ஆட்டோவில் இருந்து இறங்கினேன். வீட்டு ஓனர் போல் தோற்றமளித்த பெண்மணியிடம், கம்பெனி பற்றி உடைந்த ஆங்கிலம் கலந்த தமிழில் சொன்னவுடன், “மேல தான் ஆபிஸ். வெங்கட் நல்ல தம்பி. ஆறு மாசமா இங்க தான் கம்பெனி நடக்குது”, என்றார் அவருக்குத் தெரிந்த தமிழில்.

படிகளின் வழியாக அழைத்துச் சென்று, கதவை லேசாகத் தட்டி,”வெங்கட் காரு. கம்பெனிக்கு கொத்தவாலு எவரோ வச்சுன்ட்டாரு”, என்றார். நல்ல உயரமாக, மாநிறத்தில், சுருட்டை முடியுடனுடனும், வாக்கெடுத்து சீவிய ஒருவர் தனது கையை நீட்டி,”This is Venky, Venkat. Welcome to Numeron” என்றார் ஆங்கிலத்தில். பதிலுக்கு வணக்கம் சொல்லியவுடன், அவருக்கு முன்பிருந்த சேரில் அமரச் சொன்னார். சற்று நேரம் பேசிய பிறகுதான் தெரிந்தது, அவர்தான் இந்த பிராஞ்ச் மார்க்கெட்டிங் இன்சார்ஜ் மற்றும் மேனேஜர் என்று. பார்ப்பதற்கு ஜென்டில்மேன் தோற்றம் மற்றும் நல்ல ஆங்கிலம், அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது.

ஹாலில் அலுவலகம். உள்ளறையில் படுக்கை. அட்டாச்டு பாத்ரூம். சர்வீஸ் கால்கள் குறைவாகவே இருக்கும் என்றும், ஏதாவது உதவி தேவையெனில் தயங்காமல் கேட்கவும் என்றும் சொன்னார். எல்லா மேலாளர்களும் சொல்லும் அதே வசனம்.

அவரது மேஜையில் ஒரு லேண்ட்லைன் போன் இருந்தது. பேசிக்கொண்டே இருபது நிமிடங்களில் இரண்டு பில்டர் சிகரெட்டுகளை ஊதித் தள்ளினார். ஆஸ்ட்ரே நிரம்பி வழிந்தது. அவரிடமிருந்து காட்டமான சென்ட் வாசனை வந்தது.

நியூமரான் கம்பெனிக்கு திருப்பதி அடிவாரத்திலேயே நிறைய வாடிக்கையாளர்களிருந்தனர். திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்பில் ஆரம்பப் பள்ளி முதல், எஞ்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜ் வரை நிறைய கல்வி நிறுவனங்கள் இருந்தன. ஏறக்குறைய எல்லாவற்றிலும் எங்கள் கம்பனியின் யுபியெஸ் இருந்தது.

வேலை சரியாக இருந்தது. தினமும் ஏதாவது ஒரு சர்வீஸ் கால் இருந்தது. திருப்பதி மட்டுமின்றி, கடப்பா, சித்தூர், நெல்லூர், மேல் திருப்பதி என அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று பிறகுதான் தெரிந்தது. சில நாட்களில், ஒரு நாள் சித்தூர் என்றால், மறு நாள் நெல்லூர் செல்ல வேண்டியிருந்தது.

பெரும்பாலான சர்வீஸ் கால்களை நானே முடித்து விடுவேன். சற்று கடினமான மற்றும் அதிக பலருடைய யுபியெஸ் அல்லது என்னால் முடிக்க இயலாத நிலை வந்தால், சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உதவி கேட்பேன்.

சர்வீஸ் கால்கள் இல்லாத நாட்களில் மிகவும் போரடித்தது. பல நேரங்களில் திருப்பதி அடிவாரத்தில் இருந்த தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிக்குச் சென்று விடுவேன். வெளியில் சாப்பிடுவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஏனெனில் ஆந்திர சமையலில் மிகுந்த காரமிருக்கும். சேராமல் போனால், உடனே அல்சர் தான். 

எப்படியோ உடல் நலம் குன்றாமல் நாட்கள் நகர்ந்தன. 

வெளியூர் செல்லாத நாட்களிலும், லோக்கல் சர்வீஸ் முடித்து விட்டு, அலுவலகம் திரும்பினாலும், வெங்கட் பெரும்பாலும் அலுவலகத்திலேயே இருந்தார். அவருக்கு ஏதாவது டார்கெட் இருக்கிறதா? அவர் ஏதாவது புதிய கஸ்டமரை சேர்த்திருக்கிறாரா என்று எதுவும் தெரியவில்லை. கேட்பதற்கு பயம். 

அவருடன் அலுவகத்தில் இருந்த நேரங்களில் தான், அவருடைய சுயரூபம் சிறிது சிறிதாக தெரிய வந்தது. பல நேரங்களில் அவர் போனில் பேசியபடியே இருந்தார். பெரும்பாலும் எதிர் பக்கத்தில் பெண்களின் குரலாகவே இருந்தது. பல பெண்களிடம் அவருக்கு பழக்கம் இருந்தது. அதை பெருமையுடன் கூறவும் செய்தார். ஒரு முறை பேசிக்கொண்டு இருக்கையில் ஆங்கிலத்தில் சொன்னார்:”எனது நண்பர்கள் தங்களின் பெண் நண்பர்களை எனக்குப் பரிச்சயம் செய்து வைக்கவே பயப்படுகிறார்கள். ஏனெனில் சில முறை பேசினாலே என்னால் பெண்களை எனது வலையில் விழ வைக்க முடியும்”. அவரது முகத்தில் பெருமை மிளிர்ந்தது. எனக்கோ அருவெறுப்பாக இருந்தது.

ஒரு விடுமுறை நாளன்று, மதிய வேளையில், ஒரு அழகான பெண்மணி தனது மகனுடன் அலுவலகத்திற்கு வந்தார். நல்ல உயரம். நாற்பது வயதிருக்கும். பணக்காரக்களை முகத்தில் தெரிந்தது. 

வெங்கட் என்னைப் பார்த்து, “ஓடிப் போய், இரண்டு கூல் டிரிங்க்ஸ் வாங்கி வா. அவசரம்” என்றார். நானும் வாங்கி வந்து டம்ளரில் ஊற்றி கொடுத்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டுப் பிறகு அப்பெண்மணி விடைபெற்றார். அவர்களது பேச்சில் மிகவும் அன்னியோன்யம் தெரிந்தது. அவர் சென்றதும், வெங்கட் என்னிடம் ஆரம்பித்தார்: “பக்கத்துத் தெரு தான். வக்கீல் மனைவி. பல முறை என்னோடு வந்திருக்கிறார். பெரும்பாலும் ஊருக்கு வெளியே சென்று விடுவோம். எனக்கு எல்லா இடங்களிலும் நண்பர்கள் இருப்பதால், பிரச்சினையே இல்லை”. சிகரெட்டை ஊதியபடியே சிரித்தார். 

எனக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை. தலையை மட்டும் நன்றாக ஆட்டி வைத்தேன். 

மற்றொரு முறை, நான் நெல்லூருக்கு சர்வீஸ் விசயமாகச் சென்ற போது, சேல்ஸ் சம்பந்தமாக அவரும் உடன் வந்திருந்தார். பேருந்தை விட்டு இறங்கியதும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து ஊதியபடியே, யாருடனோ பேச ஆரம்பித்தார். எனக்கு உடனே புரிந்து விட்டது. பத்து நிமிடத்திற்குப் பிறகு, வந்தவர் சிரித்தபடியே, “இங்க ஒண்ணு ரெகுலர். என்னய கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒரே அட்வைஸ். டைம் வேஸ்ட்”.

 நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்: ”அடப்பாவி யாரையுமே நீ விட்டு வைக்க மாட்டியா?”.

அவர் வேலையில் கவனம் செலுத்துவது குறைந்து, இப்படி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 

அன்று சனிக்கிழமை இரவு. மிகவும் டயர்டாக இருந்ததால், நான் படத்திற்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே தங்கி இருந்தேன். 

வெங்கட் வீட்டுக்குச் செல்லாமல், அலுவலகத்திலேயே இருந்தார். யாருக்கோ காத்திருப்பது போலிருந்தது அவருடைய முகம். சற்றே பரபரப்புடன் சிகரெட் மேல் சிகரெட் புகைத்துக் கொண்டே இருந்தார். 

நள்ளிரவு நெருங்கும் நேரத்தில், முதலில் இருவர் வந்தனர்.

 வெங்கட், “எல்லாம் நம்ம நண்பர்கள் தான். தூக்கம் வந்தா, ஹால்ல அப்படியே படுத்துக்குங்க”, என்றார். 

ஏதோ தவறு நடக்கிறது என்று மட்டும் மனசு சொன்னது. பயத்தில் எனக்கு தூக்கம் வரவில்லை.

சிறிது நேரம் கழித்து, யாரோ ஒருவர் போர்த்திய படியே, படியேறி வர, அவரின் பின்னால், மேலும் இருவர். 

போர்த்தியபடி வந்தவரை அப்படியே உள்ளறைக்கு அழைத்துச் சென்றனர். வெளியே ஹாலில் தண்ணி மற்றும் சீட்டுக் கச்சேரி ஆரம்பித்தது.

வெங்கட், “கண்ணன், வாங்க. ஒரு பெக் போடுங்க” என்றார். “இல்லை சார், பழக்கமில்லை” என்று மறுத்து விட்டேன். சீட்டாட்டத்தை மட்டும் தூக்கம் கலைந்த கண்களோடு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். காசு கட்டி சீட்டாடுவதை முதல் முறையாகப் பார்த்தேன்.

ஒவ்வொருவராக உள்ளறைக்குச் சென்று திரும்பினார்கள். வெங்கட்டை எல்லோரும் சார் சார் என்றனர். அவருக்கு அருகிலிருந்தவர் அவருக்கு ஊற்றிக் கொடுத்த படி இருந்தார். சற்றே வயதான ஒருவர் உள்ளே சென்று ஐந்தே நிமிடங்களில் திரும்ப வந்து விட்டார். எல்லோரும் அவரை கிண்டல் செய்து சிரிக்க ஆரம்பித்தனர். அவரும், “வயசாயிடிச்சில்ல” என்று ஒப்புக் கொண்டார். எனக்கு இப்போது தான் உள்ளே இருப்பது பெண்ணோ என்று சந்தேகமாக இருந்தது.

கதவு திறக்கும் போதும், மூடும் போதும், வந்த சத்தங்கள் உள்ளறையில் ஒரு பெண் இருப்பதை உறுதி செய்ய, எனக்கு திக்கென்றது. முதல் பயம், அப்பெண்ணின் வீட்டுக்குத் தெரிந்தால் என்னாவது? இரண்டாவது, வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்தால், உடனே காலி செய்யச் சொல்லி விடுவாரே? மூன்றாவது வீட்டு உரிமையாளர் மூலமாக கம்பெனிக்குத் தெரிந்தால் என்னாவது? வேலைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ? பயத்தில் குப்பென்று வேர்த்தது. நாக்கு வறண்டு போக, தண்ணீரை நிறைய குடித்து, சற்றே பயத்தைக் குறைக்க முயற்சி செய்தேன். திருப்பதி என்பது பல வெளி மாநிலத்தவர் வந்து செல்லும் புனிதமான இடம். அதனாலேயே பாலியல் குற்றங்களும் மலிந்திருந்தது என்று கேள்விப்பட்டேன். ஆனால் இப்படி ஒரு சம்பவத்தை வாழ்நாளில் எதிர்பார்க்கவில்லை.

சற்று நேரம் கழித்து, உள்ளறையின் கதவைத் திறந்து, ஒரு பெண் வெளியே வந்தார். சற்றே குண்டான, முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சுமாரான அழகுடையவர். ரவிக்கை ஏதும் அணியாமல் புடவையைக் கொண்டு, உடலைப் போர்த்தி இருந்தார். வயிற்றுப் பகுதி வெளியே தெரிந்தது. சட்டென்று கண்களை வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.

வெங்கட்டின் நண்பர்களில் ஒருவர் என்னைப் பார்த்து, “போறிங்களா சார் “ என்றார். எனக்குப் பயத்தில் கைகால்கள் நடுங்க, பேச நா எழவில்லை. “இல்ல சார், பழக்கமில்லை” என்றேன். 

அந்தப் பெண் வெகு சகஜமாக, எல்லோருடனும் சேர்ந்து அமர்ந்து கொண்டு, சீட்டாட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார். 

வெங்கட்டின் நண்பர் மீண்டும் என்னைப் பார்த்து, “இவளோட புருஷன் துபாயில் இருக்கிறான். வருஷம் ஒரு தடவ வருவான். இதுக்குப் பழக்கிவுட்டதே நான் தான்”, என்றார் பெருமையாக. எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அமைதியாக இருந்தேன். தூக்கத்தில் கண்கள் சொக்க ஆரம்பித்தன. 

வெங்கட் அவரது நண்பரிடம், “இவள கொண்டு போய் விட்டுட்டு வந்துரு. நாம் இன்னொரு ரவுண்டு கட்டிங் அடிச்சிட்டு, சீட்டு ஒரு ரவுண்டு முடிச்சிட்டு, தூக்கம் வந்தா கலச்சிடலாம்”, என்றார். 

மீண்டும் முக்காடு. வெங்கட்டின் நண்பருடன் அந்தப் பெண் புறப்பட்டுச் சென்று விட்டார்.

அவர் சிறிது நேரம் கழித்து வந்தபிறகு, தண்ணிக் கச்சேரி கலகலப்பாக மீண்டும் ஆரம்பித்தது. 

தூக்கத்தைக் கட்டுப் படுத்த முடியாமல், “வெங்கட் சார். நான் படுக்கறன்” என்று சொல்லி விட்டு, உள்ளறைக்குச் சென்று படுத்து விட்டேன்.

ஞாயிறன்றும் அலுவலகம் வந்து செல்வது வெங்கட்டின் வழக்கம். அடுத்த நாள் மதியம் வந்து, எதுவுமே நடக்காதது போல, சிகரெட் பிடித்தபடியே இருந்தார். எனக்கு தான் சற்று சங்கடமாக இருந்தது. அவர் மீதிருந்த மரியாதை சுத்தமாக இல்லை. ஆனாலும் அவருடன் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். 

சில மாதங்களில் வெங்கட்டுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஒரு சுபயோக சுப நாளில் அவருக்குத் திருமணம் நடந்தது. நானும் சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். அவர் தனிக்குடித்தனம் சென்ற போது, மெத்தையை வண்டியில் ஏற்றுவது வரை உதவினேன். 

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம். வெங்கட் அலுவலகம் வந்தார். சற்றே மௌனமாக இருந்தார். ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட்டுகள். ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. அவரே ஆரம்பித்தார்.

“கண்ணா, கல்யாணத்துக்குப் பிறகு, இந்த சம்பளம் பத்தல. வேலய விட்டுடலான்னு இருக்கிறேன். ஹைதராபாத்தில் என்னோட நண்பர் மூலமாக, ஹிந்துஸ்தான் லீவரில் வேலை. நல்ல சம்பளம்” என்றார்.

“ஒங்களுக்கு நல்லது தான் சார்”, என்றேன். 

இரண்டு மாதங்களில் அவர் வேலையை விட்டு விட்டார். பிறகு அவரைப் பார்க்கும் வாய்ப்பு இன்று வரை கிடைக்கவில்லை.

***

கண்ணன் விஸ்வகாந்தி – சேலத்தை சேர்ந்தவர். பெங்களூரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். சிறுகதை, கவிதை,நாவல் என்று தொடர்ச்சியாக முன்னணி இதழ்களில் பங்களித்து வருகிறார். அதீத்தின் பசி கவிதை நூலுக்காக சௌமா விருது பெற்றிருக்கிறார். மின்னஞ்சல்: vkannan10@gmail.com