Home Blog Page 3

மறப்பது நன்றன்று

0

பிரானா

ரண்டு கைகளாலும் தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது. எனக்கு மேளச் சத்தம், சங்குச் சத்தம் இதெல்லாம் அறவே ஆகாது. ஆனால் இதையெல்லாம் நானே ஏற்பாடு செய்யும் நிலை வந்துவிட்டது. இப்போது ஐஸ் பெட்டிக்கு வேறு பணம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன். கையை மீறி மட்டுமில்லை, கழுத்தை மீறியும் செலவாகிக் கொண்டிருக்கிறது. ஆகட்டும், இவளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்.

ஒரு கணம் இங்கு வந்தே இருக்கக்கூடாது என்று தோன்றியது. மறுகணம், இதைச் செய்யாமல் வேறு என்ன மகத்தான காரியம் செய்ய இருக்கிறது என்ற கேள்வியும். எல்லாம் இந்தக் குடியைச் சொல்லவேண்டும். குடிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு சிரமம் கிடையாது. குடித்தால்தான் ஆழ்மன எண்ணங்கள் எங்கெங்கோ பாய்கிறதே. அதை செயல்படுத்தச்சென்று திருப்தியடையாமல் தோல்வியில்முடியும் ஒவ்வொரு புது அனுபவமும் “என்னதான் இருந்தாலும் அவளப் போல வருமா” என்ற மன ஏக்கத்தோடு முடிகிறது. அதனால்தான் இம்முறை அவளுக்கே போன் செய்தேன். சில நாட்களாக, நான் இதுபோன்று விஷயங்களில் ஈடுபடுவதில்லை. அதனாலே என்னவோ எனது குறி அடிக்கடி விறைப்பாக ஆனது. விந்து வெளியேறாததால் காந்தசக்தி கூடி கண்ணில் படும் பெண்கள் அனைவராலும் ஈர்க்கப்படுவது போல் உணர்ந்தேன். என்னுடைய இந்த சில நாள் ஒழுக்கத்திருத்தத்திற்கு காரணம் பணம்தான். பணப்பற்றாக்குறை அதிகரித்துவிட்டது.

ஏற்கனவே ஒன்றை அடைக்க இன்னொன்று என்று கடன் வாங்கி சுழற்சி முறையில் சமாளித்துக்கொண்டிருந்தேன். சற்று போக்குவரத்துமாய் இருந்ததால் இந்த சுழற்சியில் விரிசல்விழுந்துவிட்டது. அதனால், சிலநாட்கள் அடங்கியிருந்தேன். நான் கடன்பெற்றவர்கள்வேறு கடும் கோவக்காரர்கள். என்னைப்போல் சாது இல்லை. வட்டி ஒருநாள் தள்ளிச்சென்றதற்கே ரூம் தேடிவந்து மிரட்டினர். உண்மையை சொல்லப்போனால் அவர்கள் என்னை நிர்வாணப்படுத்தமட்டும்தான் இல்லை. அனைவரின் முன்னாலும் மானத்தையே வாங்கிவிட்டனர். இதனால்தான் அவசர-அவாரமாக ஒருவரிடம் சென்று முழுத்திறமையையும் பயன்படுத்தி என்னுடைய பரம்பரைப் பெருமைகளையும், வாக்குமாறா நேர்மையையும் சொல்லி, வார்தையாலே அவரது கால்களைக் கழுவி, சில வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்திட்டு பெரும் வட்டிக்கு ஒரு தொகையை வாங்கினேன். வாங்கிய கையோடு எனது கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும் கடனில் சிலவற்றை அடைக்க நினைத்தேன். 

ஆனால் அவரிடம் மூச்சுமுட்ட பேசியதில் மூத்திரமே வந்துவிட்டது. மூத்திரம்போனால் அப்படி ஒரு விறைப்பு. சரி, பணத்தில் கொஞ்சம் எடுத்து விரதத்தை முடித்துக்கொள்ள நினைத்தேன். நான் முடிவு செய்தவுடன் முதலில் நினைவுக்கு வந்தது அவள்தான். வேறுயாரிடமும் சென்று ஏமாற்றமடைய விருப்பமில்லை. உடனே அவளுக்கு போன் செய்தேன். எடுக்கவில்லை. 

நான் மூடிக்கொண்டு என் அவசரத்திற்கு வேறு யாருக்காவது போன் செய்திருக்கலாம். குறியைப் பிடித்துக்கொண்டு விடாப்பிடியாக அவளுக்கே தொடர்ந்து முயற்சிசெய்தேன். பல முறைக்கு பிறகு ஒருவன் எடுத்து அவள் இத்தனைநாள் மருத்துவமனையில் கிடந்து இன்றுதான் இறந்துவிட்டதாக சொன்னான். 

‘அவள் இல்லை …’

எனக்கு விறைப்பு அடங்குவதற்குள் வேறு நபர்களைத் தொடர்புகொள்ள நினைத்தேன். அதற்குள் டாஸ்மாக் வந்துவிட்டது. எனக்கு என்னுடைய அளவு நன்றாக தெரியும். யாரும் சொல்லவேண்டியது இல்லை. சரியாக அதில் நிறுத்திக்கொண்டால் ஒரு பிரச்னையும் வராது. ஆனால் ஒருநாள் கூட அந்த அளவில் நான் நிறுத்தியதில்லை. 

குடித்தவுடன், யாரிடம் போகலாம் என்ற பெரும் யோசனை. அவளைத் தவிர வேறுயாரால் இந்த விரதத்தை நிவர்த்திசெய்யமுடியும். அவளுக்கு போன் செய்தேன். நீண்டநேர போராட்டத்திற்குப்பின் ஒருவன் எடுத்தான். இறந்துவிட்டதாக சொன்னான். 

என் நெஞ்சை அடைத்தது. 

‘அவள் இல்லை… இனி எப்போதுமில்லை…’

“அவள சாவ விட்டுட்டு யார் மயிர புடுங்கிக்கின்னு இருந்த…” எனது போன் கட் செய்யப்பட்டது. 

வேறுயாரைத் தொடர்புகொள்வது. பெரும் யோசனை… குடித்தபடி யோசிக்கலாமென்று குடித்தேன். இந்த விரதத்தை முடிக்க புது இடங்களுக்கு சென்றால் மனம் திருப்தியடையாது. அவள்தான் சரியான ஆள். அவளுக்கு போன் செய்தேன். நீண்டநேரம் முயற்சிசெய்தேன். அவளை நேரில்பார்த்தால் அரையவேண்டும்போலிருந்தது. பல முயற்சிக்குப்பின் ஒருவன் எடுத்து அவள் இறந்துவிட்டதாக சொன்னான். 

‘அவள் இல்லை… எனக்கு இல்லை… யாருக்கும் இல்லை…’

அவசரத்துக்கு இல்லாமல் இப்படி போய்விட்டாளே. எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. 

“அவள சாவ விட்டுட்டு யாருத நக்கின்னு இருந்த…”

அவன் கோபப்பட்டு அசிங்க வார்த்தைகளால் என்னை மூழ்கடித்தான்.

“சாவு வீட்டுல என்ன பேசுறோம்னு தெரியாத தரங்கெட்ட நாயே… ஆம்பளயா இருந்தா நேர்ல வாடா…” என்று முடித்தான் 

“நா ஆம்பளன்னு நிரூபிக்க உனக்கு ஓகேனா… எனக்கு ஓகே… குளிச்சிட்டு, பவுடர் போடுட்டு ரெடியா இரு வரேன்” என்று புறப்பட்டேன். 

நான் சென்று பார்த்தபோது அவள் தனியாக படுத்திருந்தாள். இது அரிதுதான். தேடிவந்த என்னை ஏமாற்றத்தோடு ஒருநாளும் திருப்பியனுப்பியதில்லை. முதன்முறையாக பொறுப்பற்றவளாக தெரிகிறாள். என்னால் நடப்பதை நம்பமுடியவில்லை. தலைசுற்றுவது போலிருந்தது. என் நடையில்கூட நிதானமில்லை. அங்கு ஒருவன் ஆத்திரத்துடன் உள்ளேயும் வெளியேயும் நடந்துகொண்டிருந்தான். யாரையோ எதிர்பார்ப்பதுபோல் தெரிந்தது.

எங்கிருந்தோ வந்த ஒரு பெண் அவன் கையில் மஞ்சள் ரசீதுடன் பணத்தைக் கொடுத்துவிட்டு, 

“இவ்ளோதான் குடுத்தான்” என்று சொல்லிவிட்டு, அவளருகில் அமர்ந்து முந்தானையால் விசிறி ஈயை விரட்டினாள். 

நான் அவனை நிறுத்தி, “அவ ஏன் இப்படி படுத்திருக்கா…” என்றேன்.

“சாவு வீட்டுல என்ன கேள்விமயிறு இது… உங்களுக்குகெல்லாம் அறிவு பீ துன்னபோய்டுச்சா…”, என்று பல்லை கடித்துக்கொண்டு வாசலுக்குச்சென்று யாரையோ கடும் கோவத்தோடு எதிர்பார்த்தான். 

‘சாவு வீடா… அப்படியென்றால் அவள் இறந்துவிட்டாளா? இனி எல்லைகளைக் கடந்து இன்புற நான் எங்கு போவேன்.’

அவள் இல்லை… முன்பே தெரிந்திருந்தால் புது அனுபவத்தைத் தேடி வீணடித்த நேரங்களை அவளுடனே செலவளித்திருப்பேன். பலமுறை களைத்துப்போய் அவள் மார்பில் காதைப் பதித்ததுபோல் விழுந்து அப்படியே படுத்திருக்கிறேன். என் மூச்சின் வேகத்திற்கேற்ப அவளின் இதயத்துடிப்பும் பேசும். சிலமுறை வேகமாக அடித்துக்கொண்டு கூச்சலிடும். சிலமுறை நிறுத்தி நிதானமாக பேசும். ஆனால் அது நிற்கப்போவதை ஒருமுறைகூட சொல்லவில்லை.

என்னால் எனக்கு, எப்படியும் சமாதானம் சொல்லமுடியவில்லை. 

“எனக்கு அவ வேணும் …

எனக்கு அவ வேணும் …

எனக்கு அவ வேணும் …”

நான் என் பேன்ட் பட்டனைக் கழட்டினேன்.

வெளியே சென்றவன் விறுவிறுவென உள்ளே வந்து “என்ன பன்னிட்டு இருக்க?… எங்க தோணுதோ அங்கயே கழட்டிட்டு பேன்டுருவியா…” என்றான். 

நான் நினைவுத்தட்டி, “டிக்கெட் பாக்கெட்ல காசு எடுக்க…” என்று வார்த்தையை இழுத்தேன்.

அவன் “காசா…” என்றான். தலையை ஆட்டினேன்.

“எப்படி வாழ்ந்தவ… இப்ப பாரு நாலு பேர்கூட இல்லாம, எடுத்துப்போட காசு இல்லாம கெடக்குறா… ஆயிரம் பேர் போன் பண்றானுங்க, ஆனா விஷயத்த சொன்னதும் ஒரு பரதேசி எட்டிப்பாக்கள” என்று தலையைக் குனிந்தபடி கையைப் பிசைந்தான்.

நான் அவளுக்கென்று வைத்திருந்த காசை அவனிடம் கொடுத்தேன். அதை பெறும்போது அவனுடைய கண்களின் பார்வை என்னைப் பிரகாசமாகியது. அமர்ந்திருந்த பெண்ணும் நன்றி சொல்வதுபோல் தலையசைத்தாள். நான் இதெல்லாம் ஒரு விஷயமா என்பது போல அவன் தோளைத்தட்டினேன்.

போன் அடித்தது. அவன் அதை தூக்கியெறிந்தான்.

என் கையைப் பிடித்துக்கொண்டு, “நீ யாருனே தெரியல… இருந்தாலும் எனக்காக ஒன்னு செய்வியா?” என்றான்.

“ம்ம்…”

“நா கோவத்துல எவனையாவது கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிட்டா நீ அவள நல்லபடியா இருந்து அடக்கம் செய்றியா?…” என்று கேட்டான்.

“ஏன், அப்படி என்ன கோவம்…”

“சாவு வீடுன்னு பாக்காம போன் பன்னி அசிங்கமா பேசுது ஏதோ ஒரு அரிப்பெடுத்த நாதாரி” என்றான்.

நான் ஏதோ சிந்தனையில் தலையாட்டினேன். அவன் வாசலுக்கு சென்றான். ஏதோ சிந்தனையல்ல “சாவு வீடு” என்று அவன் சொன்னதுதான் உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.

 “சாவு…” அப்படி என்றால்.

அவள் இல்லை… இன்றும் இல்லை… நாளையும் இல்லை… என்னால் ஏனோ இதை நம்பமுடியவில்லை. “சாவு வீடு” என்று அவன் சொன்னாலும் அப்படியொன்றும் தெரியவில்லை. இதோ அவள் படுத்திருக்கிறாள். அவளருகில் ஒருத்தி அமர்ந்திருக்கிறாள். கொலைவெறியுடன் வெளியே இருக்கும் ஒருவன். நின்றுகொண்டிருக்கும் நான். மொத்தம் நாலுபேர். இப்பொழுது கூட மூன்றுபேர் என்று ஏன் மனம் நம்பவில்லை. 

வெளியே இருந்தவன் விறுவிறுவென உள்ளே வந்தான். ஒருகணம் அவள் கால்மாட்டில் நின்று “எப்படியெல்லாம் இருந்தவ… எல்லாமேபோய், இப்போ எப்படி இருக்கா… உடம்பவெட்சி சம்பாரிச்சத, உடம்பு நோவாம ஹாஸ்ப்பித்திரில புடுங்கிட்டானுங்க…” என்று புலம்பினான். கீழே கிடந்த போன் அடித்தது. அவன் அதை எடுக்காமல், “வந்துட்டான்… இன்னைக்கு செத்தான்…” என்று ஓடினான். அவன் கண்ணிலிருந்த வெறியும், கோவமும் அவன் ஏதோஒரு பெரிய ராட்சத உடலை கொண்ட மல்யுத்த வீரனை எதிர்பார்த்து செல்வதுபோல் தெரிந்தது. யார்தான் இந்த பைத்தியக்காரன், நான் இங்கு பலமுறை வந்திருக்கிறேன் ஒருமுறைகூட இவனைப் பார்த்ததில்லை. 

ஆனால் அவன் சொன்னது உண்மைதான், “எப்படி இருக்கா… நான் வந்தது தெரிஞ்சா இந்நேரம் இப்படியா இருப்பா… இவ்வளோ நேரம் என்ன இப்படி நிக்க விட்டிருப்பாளா.” ஒருவேளை அவள் நிஜமாகவே செத்துவிட்டாளா. அருகில்சென்று பார்த்தேன். அவளது முகம் சற்று மாறி சுவற்றில் மாட்டியிருக்கும் அவள் தகப்பனின் சாயலில் தெரிந்தது. ஒருநாளும் அது அப்படி தெரிந்ததில்லை. முகமாற்றமென்றால் பெரிதாகயில்லை பிறந்த குழந்தைக்கு லேசாக அடையாளம் தெரியுமே அதுபோல. இந்த முகமாற்றம் எனக்கும்-அவளுக்குமான பிணைப்பைச் சற்று தள்ளிவைத்தது.

அப்படியென்றால், அவள் இல்லையா… இறந்துவிட்டாளா…

“அவள் இல்லை…” என்று யார் சொன்னாலும், கண்ணால் கண்டாலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவள் சிலிர்த்துப்போக பல காரியங்களை அவள்மீது நான் செய்ததுண்டு. அவளாள் எனக்கு அணைத்து சந்தோஷமும் தரமுடியுமென்றால் தந்துவிடவேண்டியதுதானே. அது-என்ன-அது, கடவுளைப்போலவே அவளும் அனைத்தையும் வைத்துக்கொண்டு ஒன்றும் தராமல் என்னை சோதிக்கிறாள். நான் வேண்டுமானால் ஹைதராபாத் பிரியாணி வாங்கிவந்து அவள்முன் விரித்துவைக்கவா?… அவளுக்கு அது பிடிக்கும், ஒன்று வாங்கினால் இரண்டுபேர் சாப்பிடலாம். நான் எப்பொழுது வந்தாலும் வாங்கிக்கொண்டு வருவேன். “முன்ன மாதிரி டேஸ்ட் இல்ல, முன்னெல்லாம் எப்படி இருக்கும்ம்ம்ம்ம்…….”, என்று இழுத்து சொல்வாள். ஆனாலும் மிச்சம் வைக்காமல் தின்றுமுடிப்பாள். மறக்காமல் எலும்புடன் இருக்கும் கறியை எனக்கு கொடுப்பாள். 

“முன்னனா, எப்போ?… ”, என்று கேட்டால். “பல வருசத்துக்கு முன்ன, அப்போ அது சின்ன கடை.” என்று ஒரு பிறந்தநாளை குறிப்பிட்டு சொன்னாள். 

“அந்த ருசி இன்னமும் நாக்குல நின்னு நாட்டியமாடுதா?”, என்றதற்கு.

“சோறு போட்டவங்க கை ருசிய அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா…”, என்று ஒரு புருவத்தைத் தூக்கி வினாடிகளை நிதானமாக்கி கண்ணை மூடி திறந்தாள். 

நான் என்னவோ புரிந்ததுபோல சிரித்தேன்.

“பசிக்கு நாலுவாய் எதத் தின்னாலும் சரியாப்போகும். ருசிதான நிறைவதரும்… என்ன?… ” 

“சரிதான்” என்றேன். 

இதற்குமட்டும்மில்லை அவளிடம் வந்துவிட்டால் அவள் என்ன பேசினாலும் “சரிதான்” என்பேன்.

ஒருமுறை அவளைப் போலவே இருக்கும் ஏழு பேரில் ஒருத்தியைக் கண்டுபிடித்துவிட்டதாக சொன்னாள். “சரிதான்”, என்றேன். 

“என்ன நம்பாத மாதிரி சொல்ற? பசியப் பாக்காத…”, என்று அவள் உடலைக் காட்டி. “ருசியப் பாரு…” என்று என் ஆள்காட்டி விரலை பிடித்து அவள் மார்பை மூன்றுமுறை தட்டிக்காட்டி “சரியா…” என்றாள். “சரிதான்” என்றேன்.

“உனக்கு ருசி தெரிஞ்சா ஏழுல ஒன்னா தெரிவா” என்றாள். நான் தெரிந்துகொள்கிறேன் என்று மார்பகத்தோடு நெருக்கமாக வாயால் உரையாடினேன். நான் இடையூறு செய்ததாக உணர்ந்து பேசுவதை நிறுத்திவிட்டாள். 

என் கண்ணில் தெரிந்தவெறி, ‘உனக்கும் எனக்குமான உறவு பணத்துக்கும்-தேவைக்குமானது மட்டுமே’ என்று அவளிடம் ஒருகணம் சொல்லிவிட்டதோ என்னவோ… என்னிடம் சரணடைந்தது போல, “நம்ம தேவைக்கு இல்லாதது. அப்பறம் கிடைச்சா என்ன, கிடைக்கலனா என்ன…” என்று மகிழ்விக்க தொடங்கிவிட்டாள். நான் ஒரு மிருகத்தை போல புணர்ந்தேன். அவள் உடலையும், மனதையும் முழுவதாக என்னிடம் ஒப்படைத்ததைப்போல நிறைவு. 

அவள் ஏதோ மனதிலிருந்து பேசிக்கொண்டிருக்கும்போது தடுத்து மிருகத்தைப்போல நடந்துகொண்டேனோ என்று முடித்தபின் தோன்றியது. அவள் மனதார பேசிக்கேட்க இனி ‘அவள் இல்லை…’ 

நான்… அவள் மனம்… மிருகம்…

மிருகம்… நான்… மனம்… 

மனம்… மிருகம்… நான்… 

நான்… மிருகம்… மனம்… 

அவள்… மனம்… நான்… 

நான்… மிருகம்… அவள்… மனம்… 

மனம்… ஒரு மிருகம்… 

பசி… ருசி… ருசி… பசி… பசி… ருசி… ருசி… பசி… ஆயிற்று.

அவளிடம் என்ன ருசிக்கண்டு மிருகம் தேடிவந்தது. என்னவென்று விளக்கினால், “சை… இதுக்கானு…” பழிப்பார்கள். எனது உணவுமுறை வேறு, அவர்களது உணவுமுறை வேறு என்று எப்பொழுது புரிந்துகொள்ளப்போகிறார்கள்.

எனக்கு பசிக்கிறது. 

குடித்துவிட்டு வெறும் வயிறோடு இருப்பதால் பசியால் வயிறு எரிகிறது. பசி… உடலெங்கும் பசி… அவளுக்கு ஏன் இந்த அவசரம். அவளைத் தேடி நேரம்கெட்டநேரத்தில் நான் வருவேன் என்று தெரியாதா…?

அவளை ஒரு எத்து-எத்தவேண்டும் போலிருந்தது. ஆனால், என்ன பயன் அவள் என்னோடு பதிலுக்கு சண்டையிடப் போகிறாளா. ஒருவேளை நான் அடித்தால் திடிரென்று எழுந்து வழக்கம்போல் என் தலையில் ஒரு கொட்டு-கொட்டுவாளோ. 

அவள் நறுக்கென்று கொட்டும்-கொட்டு என் அம்மாவை நினைவு படுத்தும். என் அம்மா காரணமின்றி கொட்ட மாட்டாள். சிறு வயதில் ஒருமுறை அம்மாவிடம் இரண்டு கைகளையும் முடிந்தவரை அகல விரித்துக்காட்டி. “அம்மா எனக்கு கொழுகொழுனு குண்டு பொண்டாட்டிய கல்யாணம் செஞ்சிவைமா. இந்த உலகத்துலயே என் பொண்டாட்டிதான் பெரிய பொண்டாட்டியா இருக்கனும்மா…”, என்று கேட்டு கொட்டுவங்கினேன். பருவம் வந்தபின் கல்யாணமோகம் தெளிந்துவிட்டது. அதாவது கல்யாணம் ஒதுங்கிவிட்டு, மோகம் மட்டுமே ஆக்கரமித்துக்கொண்டது. எனது உடல் அவள் இல்லாததை ஏற்றுக்கொள்ளமறுத்தது. பாக்கட்டில் வைத்திருந்த பாட்டலை திறந்து அப்படியே குடித்தேன்.

வெளியே நின்றிருந்த அந்த வெறிபிடித்தவன் வந்து என் கைகளை பிடித்துக்கொண்டு, அவள் யாருமற்ற அனாதைபோல் கிடப்பதை நினைத்து வருந்தினான். “நம்ம மூனுபேர் தவிர ஒரு ஈ, காக்கா இருக்கா?…” என்று உருகிப் பேசினான். நான் அவனைக் கட்டிக்கொண்டேன். அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது. நான் குடித்த சாராயத்தை காட்டிலும் அவன் மீது நாற்றம் அதிகம். அவன் கொஞ்சம் குளித்து பவுடர் போட்டிருக்கலாம். நாற்றம் தாங்கமுடியவில்லை.

நான் எப்படியாவது ஊர்பார்க்கும்படி அவளை எடுக்க முடிவுசெய்தேன். அவனிடம் ஒரு தொகையை கொடுத்தேன். அவன் தேவையானதை செய்யச் சென்றான். அவன் பரபரவென தெருமுனைவரை சென்று கோவத்தோடு என்னிடம் ஏதோ சொல்ல திரும்பிவந்தான். அவன் வாய் திறக்கும்முன்னே எனக்கு அது புரிந்துவிட்டது.

“நீ போய் ஆக வேண்டியத பாரு… அந்த லவடா வந்தா, அவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் கொன்னு வாசல்ல போடுறேன். பழிய நீ ஏத்துக்க… இன்னைக்கு அவன் பொணத்த தாண்டித்தான், அவள எடுத்துன்னுபோறோம்.”

என்று அவன்மேல் சத்தியம் செய்தேன்.

“நீ வரும்போது மறக்காம சரக்க புடிச்சினு வா…” என்றேன்.

அவன் மனமுருகி மீண்டும் ஒருமுறை என்னைக் கட்டிக்கொண்டான்.

சிறிது நேரத்தில் பந்தல், ஷேர், ஐஸ்பேட்டி, பேண்ட் வாத்தியம், பட்டாசு என்று அனைத்தையும் ஏற்பாடு செய்தான். சங்கு சத்தம் ஏதோ ஓலத்தை காதில் சொன்னது. ஆனாலும் ‘அவள் இல்லை…’ என்பதை மனம் உணரவில்லை. 

அவளருகில் அமர்ந்திருந்தவளும் அவளையே பித்துபிடித்ததைப்போல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு அசைவில்லை. 

நாங்கள் எதிர்பாராத நேரத்தில் லட்சுமி அம்மா வந்தாள். அவளுக்கு மாலை போட்டாள். வணங்கினாள். காலில் சலங்கையை கட்டினாள். அவளுடன் வந்தவன் ஏதோ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்தபோது சத்தம் கேட்டு வந்ததாக சொன்னான். 

அவள் சலங்கையை கட்டி மெல்ல பாட ஆரம்பித்தாள். கூட்டம் எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. நிற்க இடமின்றி காலை மிதித்தனர்.

அவள் பாடி இந்த வரியில் நிறுத்தினாள். மேளம் நின்றது. இடமே அமைதியானது.

“பொய்யான ஊரில் பிறந்து… பொய்யான ஊரில் வாழ்ந்து…

மெய்யான ஊரத்தேடி… அந்த சொர்க்கலோகம் போனாயோ ”

அமைதியில் லட்சுமி அம்மாவின் கனத்த குரலில் இந்த வரிகளைப் பாடும்போது, அவள் பொய் நாடகத்திலிருந்து விடுபட்டு மெய் ஜோதியில் கலக்க அனைவரையும் விட்டு சென்றதை உணர்த்தியது.

‘அவள் இனி இல்லை…’ என்பதுபோல் மனம் பெரும் பாரமடைந்தது. என்னால் எச்சி விழுங்க முடியாமல் தொண்டை வலித்தது.

மேளம் சில வினாடி அடித்து நின்றது. மீண்டும் அமைதியில் அதே வரிகள். பாடி உச்சம் தொட்டு திருப்தியடையாததுபோல் மீண்டும்-மீண்டும் அதே வரிகள். 

ஆனால் அவளின் ஒப்பாரியால் அதன் கனம் கூடிக்கொண்டே போனது.

கூடிய பெரும் கூட்டத்தில் பலருக்கு கண் ரப்பையில் கண்ணீர் ததும்பவும், உதடுகள் விம்மி வெடிக்கவும் எந்நேரமும் தயாராக இருந்தது. 

அமைதி…

மீண்டும் அதே வரிகள். அவள் அந்த வரியில் உச்சத்தை தொட்டுநின்றதும், “ஐயோ… போய்டியே…” என்று அவள் அருகில் இருந்தவள் வாய் பிளந்து அழத் தொடங்கினாள். ஜனத்திரள் “ஓஓ…” என்று கதறியது. அவள் பாடல் உயிரெடுத்து சென்ற எமனையே பிடித்திழுத்துவந்து மாரடித்து அழுதாட செய்துவிட்டது 

நான் அடக்க முடியாத ஆதங்கத்தில் அவள்மீது ஏறி அமர்ந்து கன்னத்தில் அறைந்து, கழுத்தை நெரித்து “எந்திரிடி முண்ட…” என்று கதறினேன். அந்த கோவக்காரன் என்னைப் பிடித்து இழுத்தான். என் பிடியிலிருந்து அவளை யாராலும் பிரிக்கமுடியவில்லை. என்னைப் பிரிக்க நினைத்து இழுத்ததில் அவளது ஜாக்கெட்டும், புடவையும் பிய்த்துகொண்டுவந்தது. இறுதியில் ஒரே ஒரு முத்தம் குடுத்துவிட்டு நானே விலகிவந்தேன். முத்தத்தில் அவ்வளவு வறட்சி.

நான் என்னிடமிருந்த அனைத்தையும் அவளுக்காக அளித்தேன். மாட்டு வண்டியை அலங்காரம் செய்து, வெடிவெடிக்க மேளதாளத்தோடு ஆடிக்கொண்டு அந்த தெருவே இழுத்துச்சென்றனர். அவள் அருகிலிருந்த பெண், அவளை கொண்டு சென்ற வண்டியின்பின்னே உருண்டு புரண்டு அழுதாள். நான் அவர்களோடு போகவில்லை. அவளை அடக்கம் செய்வதை பார்க்கும் சக்தி எனக்கில்லை. பசியால் தலை கிறுகிறுத்தது. நான் புறப்படநினைத்தேன். சுற்றும்-முற்றும் பார்த்தேன். அந்த பெண்மட்டுமே இருந்தாள், “நா கிளம்புறேன்” என்றேன். 

“சாவு வீட்டுல சொல்லிட்டு போக கூடாது” என்றாள். சிரித்தேன்.

“இவ்வளவு பன்னிருக்க ஒரு காப்பியாவது குடிச்சிட்டு போலாம்ல…” என்றாள். 

“எனக்கும் பசிதான்” என்றேன்.

என்னை வீட்டில் அமர்த்திவிட்டு “சாவு வீட்டுல அடுப்பு பத்தவைக்க கூடாது” என்று கடையிலிருந்து காபி வாங்கிவந்தாள். மிதமான சூட்டில் ஆற்றி தந்தாள். “நீ இல்லனா இன்னைக்கு என்ன ஆகியிருக்கும்னே தெரியல…” என்றாள். ஒரே மடக்காக குடித்துவிட்டு எழுந்தேன். சட்டென்று என்னை அணைத்துக்கொண்டாள். அது சில நொடிகள், சரியாக சொன்னால் ஆறு நொடிகள். வேறு என்ன சொல்ல. பசி போதுமென்றானது. முதன்முறையாக அளவு தெரிந்து அதோடு நிறுத்திக்கொண்டேன். அவள் சொன்னபடி ஏழு பேர் இருப்பது உண்மைதானோ… என்னவோ… சோறு போட்ட கைருசி அவ்வளவு சீக்கிரம் மறக்குமா என்ன… ஏனோ ஒரு நிறைவு. வீட்டிற்கு சென்றேன்.

நான் வீட்டையடையும்முன் கடன்காரர்கள் வீட்டு வாசலில் காத்திருந்தனர். வழக்கமாக பல பொய் கதைகளை சரளமாக சொல்லி அவர்களையே கண்ணீர்விட செய்வேன். ஆனால், இன்று அப்படி ஏதும் செய்யத் தோணவில்லை. 

நான் உண்மையை சொன்னேன். அவர்களுக்கு கொடுப்பதற்காக நான் வாங்கிய கடன் தொகையையும் அவள் நினைவு அனைத்தையும் மறக்கடித்து, இறுதியில் அவளை அடக்கம்செய்ய அனைத்தையும் செலவளித்ததை சொன்னேன்.

அதற்காக வீதியில் அனைவரின் முன்னால் என்னை அடித்து அம்மணமாக்கி வாழ்நாள் முழுவதும் மறக்காதபடி செய்துவிட்டனர்.

***

பிரானா – சென்னையில் வசிக்கிறார். இவரது கதைகள் வல்லினம், சிறுகதைகள், மயிர் உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: prn0054@gmail.com

கண்ணகியின் பாதையில்

0

G. சியாமளா கோபு

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் காவியத்தலைவன் கோவலன் பாட்டுடைத் தலைவி கண்ணகி. மன்னர்களை அன்றி சாதாரண மனிதர்களைப் பற்றிப் பாடியதால் சிலப்பதிகாரம் மக்கள் காப்பியம் என்றும் போற்றப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூறாண்டில் இளங்கோவடிகள் என்னும் சமணத்துறவியால் எழுதப்பட்டது. உ. வே சாமிநாத அய்யர் 1892 இல் பதிப்பித்தார். 

பூம்புகார் நகரில் சோழ மன்னனுக்கு இணையாக செல்வமும் செல்வாக்கும் பெற்ற சாத்து வணிகம் செய்கின்ற மாசாத்துவானின் மகன் கோவலனுக்கு மாரிப் போல் வாரி வழங்கும் மாநாயக்கன் மகள் கண்ணகியை திருமணம் செய்கிறார்கள். சராசரி மனிதர்களுக்கே உரிய ஆசாபாசங்கள் மட்டுமல்ல சஞ்சலமும் சலனமும் அதீத கலாரசனையும் கொண்ட கோவலன் நாட்டிய மங்கை மாதவியிடம் மையலுற்று தன்னுடைய சொத்து செல்வம் செல்வாக்கு எல்லாவற்றையும் இழந்து ஒரு இந்திர விழா நாளில் மனஸ்தாபம் ஏற்பட்டு தன் மனைவி கண்ணகியிடம் திரும்புகிறான். தான் மதுரைக்குச் சென்று வியாபாரம் செய்து பொருள் ஈட்டி வருவதாக சொல்லி கிளம்புகிறான். இனியும் உம்மை பிரிந்து இருக்க ஏலாதென்று மணநாளில் தன் கரம் பற்றியவன் கரத்தை தானும் பற்றி அவனோடு கிளம்புகிறான் கண்ணகி. 

மாளிகையின் வாசல் மரக்கதவு மிகப் பிருமாண்டமானது. அதில் கவரிமான் ஆட்டுக்கிடாய், அன்னபட்சிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. பித்தளையில் கனமான நாதாங்கியை எடுத்து பாரமான கதவை இழுத்து திறந்து கொண்டு வெளியேறினார்கள் இருவரும். 

கோவலனுடன் கண்ணகி தன் வீட்டுக் கதவை திறந்து கொண்டு வெளியே கிளம்பும்போது தொடங்குகிறது அவளுடைய பயணம். இருவரும் ஊரில் உள்ள எல்லா கோவில்களையும் வணங்கி விட்டு ராஜபாட்டை வழியாக செல்லாமல் காவிரியின் வடகரையே வழியாக செல்கிறார்கள் ஒரு சோலையில் இளைப்பாறி செல்வதற்காக தங்குகிறார்கள். கண் அசந்தவள் விழித்ததும் கணவனிடம் கேட்கிறாள் “மதுரை புதூர் யாது?” என்று. புகார் நகரை விட்டு கிளம்பி ஒருநாள் பயணம் கூட முடியாத நிலையில் இன்னும் முப்பது காத தூரம் பயணம் செய்ய இவளால் இயலுமா என்று அவள் மேல் பச்சாதபம் கொள்கிறான் கணவன் கோவலன். எனவே இலகுவாக இருக்கட்டுமென அஞ்சாறு காதம் என்று சொல்கிறான்.

வழிப்பயணத்தில் கவுந்தியடிகள் என்னும் சமண பெண் துறவியை சந்திக்கிறார்கள். கோவலன் தன் கதையை சொல்லி மதுரைக்குப் போகும் வழியை கேட்க, தானும் மதுரைக்கு தான் செல்வதாக சொல்லி தன்னுடன் அவர்களை அழைத்துச் செல்கிறார். சோர்ந்து போகும் போதெல்லாம் ஆறுதல் கூறுகிறார். “தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி” என்றும் கற்புக்கரசி என்றும் கண்ணகியை போற்றுகிறார். மூவரும் உறையூர் வந்து சேர்கின்றனர். அங்கே சமணப் பள்ளியான நிகந்த மடத்தில் தங்குகிறார்கள். 

அப்போது திருவரங்கத்திலிருந்து திருவேங்கடம் செல்லும் மாங்காட்டு மறையோனை சந்திக்கிறார்கள். கோவலனுக்கு நிமித்தம் சரியில்லை என்றும் இப்போது மதுரைக்குச் செல்வது அவனுக்கு ஆபத்தாக முடியும் என்று பூம்புகார் திரும்பிச் செல்லும்படியும் அறிவுரை கூறுகிறார். ஆனால் அதை மறுத்து தங்களுக்கு மதுரைக்குச் செல்லும் வழியை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறான் கோவலன். 

உறையூரிலிருந்து கொடும்பாளூர் சென்று விட வேண்டும். அங்கிருந்து திரிசூலத்தின் மூன்று முனைகள் போல மதுரைக்கு மூன்று வழிகள் செல்லும். ஒன்று காட்டு வழி ஒன்று பாறைகள் நிறைந்த வழி மற்றொன்று நல்ல பாதை அதாவது கொடும்பாளூரிலிருந்து மதுரைக்கு கிழக்கு புறமாக அழகர் மலை வழியாக நுழைவதற்கான வழி சிறந்தது என்று சொல்கிறார். மேலும் உறையூரிலிருந்து கொடும்பாளூர் செல்லும் வழியில் அடர்ந்த காடுகள் இருப்பதால் அங்கே வன தேவதைகள் உண்டு என்றும் அவை நமக்கு வேண்டியவர்களைப் போன்ற உருவத்தில் வந்து நம்மைத் திசை திருப்பி விடும் என்றும் சொல்லி சொல்கிறான். 

காட்டுப் பாதையில் மாதவியின் தோழி வயந்தமாலையை சந்திக்கிறார்கள். மாதவி கருவுற்றிருப்பதையும் கோவலன் நினைவாகவே இருக்கிறாள் என்றும் மாதவியின் துயர் கண்டு வருந்தி அமளிமிசை வருந்துத நின்றவளாக மாதவியின் தாய் ஊருக்கு திரும்பி வரும்படியும் சொன்னதாக சொல்லி அவனைப் புகார் அழைக்கிறாள். ஆனால் கோவலன் அதை மறுத்து விட்டான். வன தேவதை தான் வயந்தமாலையின் வடிவில் வந்தவள். வழியில் கோசிகமணி மாதவியிடமிருந்து கடிதம் கொண்டு வருகிறான்; புகார் நகரத்துச் செய்திகளைக் கோவலனிடம் பகர்கின்றான். கோவலனைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சென்று அவன் பெற்றோர்களிடம் சேர்ப்பிக்கிறான். கோவலனைத் திருத்துகிறான். “மாதவி தீதிலள்” என்பதை அறிய வைக்கிறான். தன் தீமையை உணர வைக்கிறான். அவன் கோவலனுக்கு ஊர்ச் செய்திகளை உரைத்து ஆறுதல் தருகிறான். 

கொடும்பாளூர் வந்த மூவரும் அங்கிருந்து கிழக்கு கோட்டைக்குள்ளே நுழைகிறார்கள். இன்றைக்கும் கொடும்பாளூர் மதுரைக்கு செல்லும் வழியில் ஒரு சிறு கண்ணகி கோயில் உள்ளது. கவுந்தியடிகள் இருவரையும் மதுரையின் புறச்சேரியில் தன் மகள் மாதரியிடமும் ஐயையிடமும் அவர்களை ஒப்படைக்கிறாள். அறத்துடன் வணிகம் செய்திட வேண்டும் என்று அறிவுரை கூறுகிறாள். அங்கே கோவலனும் கண்ணகியும் இன்புற்று வாழ்கின்றனர். மதுரையை சுற்றிப் பார்த்து வந்த கோவலன் வணிகம் செய்திட சிறந்த ஊர் என்று மதுரையை புகழ்ந்து சொல்கிறான். அவளும் தன் காலில் அணிந்திருந்த சிலம்பு ஒன்றைக் கழட்டி அதை விற்று முதலாக கொண்டு வணிகம் செய்ய அனுப்புகிறாள். அரசி கோப்பெருந்தேவியின் கால் சிலம்பு ஒன்றை அரண்மனை பொற்கொல்லன் திருடியிருப்பான். அதைக் கோவலன் திருடி விட்டான் என்று வீண்பழி சுமத்த அரசன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன் கோவலனைக் கொன்று விட ஆணையிடுகிறான். தன் கணவன் வீண்பழி சுமத்தப்பட்டு இறந்து விட்ட செய்தியறிந்த கண்ணகி சினம் கொண்டு தன் கையில் தன்னுடைய மற்றொரு சிலம்பை ஏந்தி அரண்மனை சென்று வாதிடுகிறாள். தன் தவறை உணர்ந்த பாண்டியன் “யானோ அரசன், யானே கள்வன்” என்று அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறக்கிறான். அவன் மனைவியும் “கணவனை இழந்தோருக்கு காட்டுவது இல்” என்று தானும் கணவன் பாதம் விழுந்து இறந்து போகிறாள். சினம் தணியாத கண்ணகி தன் இடது முலையை திருகி எரிந்து மதுரை எரிந்து போகட்டும் என்று சாபமிடுகிறாள். அதே சினத்துடன் செல்லும் திசையறியாது நடப்பவளை மதுரை மாநகரின் வனதேவதை ஆற்றுப்படுத்தி பதினான்கு நாட்களுக்குப் பிறகு அவள் கோவலனுடன் சேர்ந்து விடுவாள் என்று சொல்கிறது. 

கண்ணகி, நெடுவேல்குன்றம் சென்று மலர் நிறைந்த ஒரு வேங்கை மரத்தின் அடியிலே நின்றனள், மதுரைமா தெய்வம் கூறியதைப் போலவே, வானுலகத்திலிருந்து தேவருடன் கோவலன் வர, அவனுடன் அவளும் விமானம் ஏறி வானகம் நோக்கிச் சென்றனள். அக்காட்சியைக் குறவர் குடியினர் கண்டனர். அவர்கள் அடந்த வியப்போ பெரிது! அதனால், அவளைத் தம் குலதெய்வமாகவே கொண்டு வழிபட்டுப் பணிந்து போற்றலாயினர். இந்தக் காப்பியத்தை எழுதிய இளங்கோவடிகளாரின் மூத்த சகோதரன் அரசன் சேரன் செங்குட்டுவன், பத்தினியாளான கண்ணகிக்கு இமயத்திலேயிருந்து கொணர்ந்த கல்லிலே படிவம் சமைத்து, அதனை முறைப்படி, விழாக்கோலத்துடன் தெய்வமாக போற்றிக் கொண்டாடினான். 

சேரன் செங்குட்டுவன் உண்டாக்கிய கண்ணகியின் சிலையும் கோவிலும் இன்று எங்குள்ளது என்பதை சிலப்பதிகாரத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்ட கரந்தை தமிழ்சங்கத்தில் பேராசிரியர் சி. கோவிந்தராசனார் கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்து, இவ்வுலகிற்கு அறிவித்தப் பெருமைக்கு உரியவர். கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியே பயணித்து, பதினேழு ஆண்டுகள் நடந்து, கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்த ஆய்வாளர் இவர்.

(சி. கோவிந்தராசனார்)

கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும், செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று அழைக்கப்பட்ட பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார். கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணாம்புக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும், நிலப் பரப்பே காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில், பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார். பிறகு மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார். வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதைக் கண்டு கொண்டார்.

மேல் சுருளி மலையை அடைந்து ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதிசெய்தார். சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னும் பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும், அருவியின் பெயரால் சுருளிமலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

சுருளி மலைத்தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.

கீழக் கூடலூருக்குத் தெற்கே உள்ள பெருமாள்கோயிலில் கல் வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்தார். கி.பி.14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூசைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்த பொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை, கவுந்தி அடிகள், இடையர் குல மகளான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது. 

1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள், மங்கல தேவி மலையின் மேற்பரப்பிற்குச் சென்றார். கோரைப் புற்காடு எட்டடி உயரத்தற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது. 200 அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில் மதிற்சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது. செடி கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக்கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்தது. கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகானப் படிக்கட்டு. அதற்கு முன்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டு குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில், கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை. சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்த இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள். மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.

உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலது காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை. அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுபுற மார்பு சிறிதாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், பேராசிரியர் சி. கோவிந்தராசனார் அவர்கள், முதல் முதலில் கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றிய செய்தியை உலகிற்குத் தெரியப் படுத்தினார்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்பு பற்றி, சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், இளங்கோவடிகள் சிலைத்திறப்பு விழாவின்போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். 

மதுரையில் இச்செயல் நடந்து பாண்டிய நெடுஞ்செழியன் மரணமடைந்த போது அவன் தம்பியும் அடுத்த இளவரசனுமான வெற்றிவேற் செழியன் கொற்கையில் முகாமிட்டிருந்தான். அவன் மதுரைக்கு விரைந்து வந்து ஆட்சிப் பொறுப்பேற்று நடந்ததை விசாரணை செய்து காரணமான பொற்கொல்லனையும் அவனது பரிவாரங்களான ஆயிரம் பேர்களையும் தூக்கிலிட்டான். கண்ணகிக்கு நடுகல் எடுத்து வழிபாடு செய்தான் என்றும் கூறுகின்றனர்.

செவி வழி செய்திகள்.

மதுரைக்குள் நுழைந்தபோது கவுந்திஅடிகள் மாதரி என்னும் இடைக்குல மங்கையிடம்தான் கண்ணகியை ஒப்படைத்துச் சென்றார் என்கிறது சிலப்பதிகாரம். கண்ணகி தன் ஒரு மார்பை பிய்த்து எறிந்து மதுரையை எரித்தபின் ஆங்காரத்தோடு அமர்ந்த இடமே இன்றைய வடக்கு மாசி வீதி. இடது மார்பில் ரத்தத்தோடும் கண்களில் சினத்தோடும் உடல் நடுங்க அமர்ந்திருந்த கண்ணகியை இடைக்குல மங்கையர் ஆறுதல் படுத்தினர். ஒரு பெண் கண்ணகி மார்பில் வெண்ணெயை எடுத்துப் பூசினாள் . வெண்ணெய் உருகி எரிச்சல் குறைந்த கண்ணகியின் மார்பின் மீது பறையர் குலப் பெண் ஒருத்தி தனது முந்தானையால் விசிறி பின் கிழித்துக் கட்டினாள். இதன் பிறகு இளநீர், பானகம், மாவுப் பொருள்களை பருகவும், உண்ணவும் கொடுத்தனர். இதனால் மனமும் உடலும் குளிர்ந்த கண்ணகி இடையர்குலப் பெண்களைப் பார்த்து “எனது நெருப்பால் எந்தத் தெரு வெந்தாலும் இடைச் சேரி வேகாது” என்றும் பறையர் குலப் பெண்ணிடம் ‘பார் மதுரை எரிந்தாலும் பறையர் தெரு எரியாது’ என்றும் கூறி வாழ்த்தியதாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன.

பழங்காநத்தம் அருகில் கடச்சனேந்தல் அதாவது கடை சிலம்பு ஏந்தல் என்னும் ஊரில் இருவரும் இன்புற்று வாழ்ந்த வீடு இன்றும் சிதலமடைந்து இருக்கிறது.

சில இடங்களில் கண்ணகிக்கு எழுப்பிய கோயில்களில் கண்ணகியின் படிமம் ஒரு முலை இல்லாத நிலையிலேயே அமைக்கப்பட்டு ஒற்றை முலைச்சியம்மன் என்று அழைக்கப்பட்டு வணங்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்தவர்கள் ஒரு சிலை என்பது எல்லா உறுப்புக்களோடும் அமைய வேண்டும். இவ்வாறு இடது மார்பு இல்லாமல் அங்கஹீனமாக இருப்பதால் இதனை வைக்கக் கூடாது. “அங்க சிதைவு ஆகம மரபு ஆகாது” என்று கூறியதால் இச்சிலைகள் அகற்றப்பட்டு வேறு சிலைகள் இடம் பெற்றன.

பழங்கானத்தம் அருகில் உள்ள கருமாரியம்மன் கோவில் கண்ணகி கோயிலாகும். இங்கு கோவில் புதுப்பிக்கும் பணியின் போது சிதிலமடைந்த கண்ணகி சிலை ஒன்றும் (வட்டக்காதணியுடன்) கிடைக்கப்பெற்றது. மேலும் தோண்டுகையில் தலையுள்ள சிலை மட்டும் தனியாக கிடைத்தது. இங்கு கண்ணகிக்கு வெண்ணெய் பூசும் நிகழ்வு நடைபெறுகின்றது. கண்ணகி தன் நீதி கேட்கும் முன் ஒற்றைகால் சிலம்பினை கழற்றிய இடமாக இது அறியப்படுகின்றது. கடசிநேந்தல் மதுரை செல்லாத்தம்மன் கோவிலும் கண்ணகி கோவிலே. இக்கோவிலானது, கவுந்தியடிகள் கண்ணகியை இடையர்குலத்தில் அடைக்கலமாக தங்கி இருந்த இடமே இன்றைய செல்லத்தம்மன் கோவில். கோவலன் பொட்டலில் உள்ள தலைவெட்டிய இடத்தை தோண்டும்போது அங்கும் ஒரு கண்ணகி சிலை கிடைத்தது. இன்றும் அக்கோவிலில் அச்சிலை இருப்பதைக் காணலாம்.

மதுரையை எரித்த பின் கண்ணகி மதுரையின் பல பகுதிகளுக்கும் சென்று அரற்றி வெதும்பினாள். அவ்வாறான ஒரு இடமே இன்றைய மதுரையின் தெப்பக்குளம் மாரியம்மன் எனும் வண்டியூர் மாரியம்மன் கோவிலாக மாறி உள்ளது. இங்கும் கண்ணகி சிலை போலவே மாரி சிலையும் வடிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள நின்ற கோல காளி சிலையும் கண்ணகியாகவே கருதப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். எப்படி கண்ணகி மதுரையில் இழந்த கணவனை எங்கே மீட்டேடுத்தாளோ அதைப் போல கண்ணகி கோயிலுக்கு வந்து சென்றால் தாங்கள் இழந்த செல்வம் செல்வாக்கு குடும்ப மகிழ்ச்சி அனைத்தையும் திரும்பப் பெறுவோம் என்பது நம்பிக்கை.

சாதாரணப் பெண்ணாக கணவனைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவளாக புகாரிலிருந்து கிளம்புகின்ற கண்ணகி, மதுரையில் அதிகாரத்திற்கு எதிர்த்து நீதி கேட்டு சிங்கப்பெண்ணாக பயணம் மேற்கொள்கிறாள். மீண்டும் பயணித்து நெடுவேல் குன்றத்தில் தன் கணவனுடன் சொர்க்கம் அடைந்து தெய்வப் பிறவியாகி இன்றளவும் கொண்டாடப்படுகிறாள். இதுதான் சிலப்பதிகாரம் சொல்லும் கண்ணகியின் பாதை. 

***

G.சியாமளா கோபு  – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) 36 வருடங்கள் சமூக செவிலியாக பணி ஓய்விற்குப் பிறகு இப்போது முழு நேர எழுத்தாளர். அநேக சிறுகதைகள் வல்லினம் திண்ணை பதாகை குட் புக் My vikatan Pustaka கல்கி குவிகம் நுகர் இ மேகசின் வெளி வந்திருக்கிறது. வானதி பதிப்பகம் ஒரு வரலாற்று நாவல் அருணோதயம் 16 நாவல்கள் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கலைமகள் ராணிமுத்து மற்றும் இதழ்களில் என் சிறுகதைகள் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல்: naviragopu@gmail.com

செம்மீன்

1

சித்ரா சிவன்

சென்னை நுங்கம்பாக்கம். ‘யெல்லோ ட்ரீ’ கலைக்கூடத்தின் குளிரூட்டப்பட்ட நீண்ட வளாகம் அமைதியாக இருந்தது. இளவேனிலின் ஓவியங்கள் சுவர்களில் தொங்கிக்கொண்டிருந்தன. கேன்வாஸ்கள் முழுக்கத் தென் தமிழகத்தின் காய்ந்த செம்மண் நிலமும், பாழடைந்த சாமிகளின் சிலைகளும், எரியும் சூரியனும் அடர் வண்ணங்களில் தீட்டப்பட்டிருந்தன. அந்த வறட்சிக்கு நடுவே, ஒரே ஒரு ஓவியம் மட்டும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. அது, ஒரு சிறிய கண்ணாடித் தொட்டிக்குள் இருக்கும் ஒற்றைச் செம்மீன், வறண்ட நிலத்தின் நடுவே வைக்கப்பட்டிருப்பது போன்ற சித்திரம். காற்றில்லாத வெற்று வெளியில் செவுள்களை அசைத்துத் தவிக்கும் ஒரு மீனின் அனாதிரூபம் அது.

அங்குதான் அவள் சக்தியை முதன்முதலில் பார்த்தாள்.

அவன் ஒரு முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க மனிதன். கசங்கிய பருத்திச் சட்டையும், கத்தரித்து விடப்படாத தாடியும், கலைக்கூடத்தின் பளபளப்பிற்குச் சற்றும் பொருந்தாத தோற்றமும் அவனிடம் இருந்தன. அவன் அந்தச் செம்மீன் ஓவியத்தின் முன்னால் அரை மணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்தான். பிறகு சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தவளிடம் அருகில் வந்தான். ’பஃபட் சொன்ன ‘பழக்கத்தின் தளைகள்’ ஞாபகம் வருது இல்ல…’ என்று மெல்லிய குரலில் கேட்டான். ’ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே வாழ்ந்து பழகின உயிர்… வெளியில இருக்கிற பிரம்மாண்டமான உலகத்தைப் பார்த்துப் பயப்பட ஆரம்பிச்சிடும். இந்த மீனைப் போல…’

இருபத்து இரண்டு வயதான இளவேனில், நுண்கலையில் முதுகலை முடித்துவிட்டுத் தன் முதல் தனிநபர் கண்காட்சியை நடத்தியவள். அவளுக்கு அந்தப் பெயர் ஆச்சரியத்தைத் தந்தது. வாரன் பஃபட்-ட சொல்றீங்களா? என்று கேட்டாள். 

’நான் வாசிக்கிறது வழக்கம் தான்… என் பேரு சக்தி… தேனி பக்கம் ஒரு சின்ன கிராமத்துல இருந்து வர்றேன். எங்களுக்கு கொஞம் நஞ்சை நிலம் இருக்கு… ஆனா இப்போ சென்னை ஐடி கம்பெனில வேலை. ஒரு செயற்கையான மீன் தொட்டிக்குள்ள அடைபட்டுக் கிடக்கிற மாதிரிதான் இருக்கு என் வாழ்க்கையும்…’

அன்றிரவு இளவேனிலின் இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் வந்தது, ’உங்க ஓவியங்கள்ல மண்ணோட மணம் இருக்கு… ஆனா அது அந்த ஆர்ட் காலரி ஏசி ரூம்ல மூச்சு திணறிக் கிடக்கிற மாதிரி தோணுச்சு… அந்த மீன்… அது தொட்டிக்குள்ள இல்ல, நம்ம எல்லாரோட மனசுக்குள்ளயும் நீந்திட்டு இருக்கு…’

அடுத்த இரண்டு வாரங்கள், அவர்கள் இருவருக்குமான உலகம் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகளுக்குள் சுருங்கியது. சக்தியின் மெசேஜ்கள் மிகவும் ஆழமானவையாக இருந்தன. அவன் சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டினான், நவீனக் கோட்பாடுகளைப் பேசினான், தன் மடிப்பாக்கம் அறையில் வளர்க்கும் மீன் தொட்டியைப் பற்றி விவரித்தான், ‘என்கிட்ட மூணு தங்கமீன்கள் இருக்கு… வெளி உலகத்தோட சத்தமே இல்லாத ஒரு அமைதியான உலகம் அது… ஆனா, அந்தத் தொட்டிக்குள்ள ஒரு தனி ஒழுங்கு இருக்கு. நீங்க தண்ணிய மாத்தும்போது அந்த மீன்கள் உங்க விரல்களை வந்து தொடும் பாருங்க… அது ஒரு அமானுஷ்யமான மௌன உரையாடல்…’ இளவேனில் அவனைக் குறித்து தன் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கினாள். பெருநகரத்தின் நெரிசலில் சிக்கியிருக்கும் ஒரு மென்மையான தத்துவவாதி, ஒரு தேர்ந்த வாசகன், கண்ணாடித் தொட்டியின் மௌனத்தை ரசிக்கும் சாதுவான மனிதன். 

அவளது தோழி ரம்யா, ’அவன் உன்னைவிட பன்னிரண்டு வயசு மூத்தவன் இளா… கொஞ்சம் பாத்துக்கோ. இந்த சோஷியல் மீடியா ஆளுங்க நிஜத்துல வேற மாதிரி இருப்பாங்க…’ என்று எச்சரித்தபோது, ’வயசுங்கிறது வெறும் நம்பர் ரம்யா… அவரோட சிந்தனை ரொம்ப முதிர்ச்சியானது. ஒரு மீன் தொட்டியோட மௌனத்தைக் கொண்டாடுற ஒருத்தரால யாருக்கும் தீங்கு செய்ய முடியாது…’ என்றாள்.

நெடுநாட்களுக்குப் பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை தியாகராயநகரில் இருக்கும் ஒரு பாரம்பரியமிக்க உணவகத்தில் நேரில் சந்திக்கலாம் என்று சக்தி அழைத்தபோது இளவேனில் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டாள்.

ஆனால், நேரடிச் சந்திப்பு அவளுக்கு ஒரு விசித்திரமான அதிர்ச்சியைத் தந்தது.

உணவகத்தின் நெரிசலில், அவசர அவசரமாக சாப்பாடு பரிமாறப்படும் சத்தத்திற்கு நடுவே, சக்தி மிகவும் சுருங்கிப்போய்க் காணப்பட்டான். மெசேஜ்களில் சரளமாக ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசியவன், நேரில் மிகக் குறைவாகவே பேசினான். அவன் காபி குடித்த விதம், வேலையாளை அலட்சியமாக அதட்டிய விதம் எல்லாமே அவளுக்கு அசௌகரியத்தைத் தந்தது. அவளது ஓவியங்களைப் பற்றி அவன் பேசவே இல்லை. மாறாக, ஆபீஸில் இருக்கும் மேளாலர் தன்னை எப்படி நடத்துகிறார் என்ற புலம்பலே அவனிடம் இருந்தது.

அவள் கற்பனை செய்து வைத்திருந்த ஆழமான தத்துவவாதி அங்கே இல்லை. ஒரு எளிய, சற்றே விரக்தியடைந்த மனிதனே அமர்ந்திருந்தான். ஆயினும், இவ்வளவு நாட்கள் செயலிகளின் செய்திகளில் காட்டிய அந்த மென்மையான மனிதனைத் தேடினாள். அவளது மனம் அவனது தற்போதைய அசட்டுத்தனங்களை நியாயப்படுத்த முயன்றது. ’அவருக்குப் புதிய இடம், அதான் படபடப்பா இருக்காரு. ஒருவேளை அவரோட அந்த அமைதியான மீன் தொட்டிக்கு முன்னாடி உட்கார்ந்தா பழையபடி மாறிடுவாரோ’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“நம்ம எங்கேயாவது தனியாப் போய் பேசலாமா? இங்கே ரொம்ப சத்தமா இருக்கு. எனக்கு இந்த சத்தம் தலைவலியைத் தருது,” என்றான் சக்தி, காபி பில்லைக் கொடுக்கும்போது.

“சரி, வேளச்சேரில இருக்கிற ஒரு அமைதியான காபி ஷாப் போலாமா?” என்றாள் இளவேனில்.

“ஏன் தேவையில்லாம காசு செலவு பண்ணிக்கிட்டு? மடிப்பாக்கத்துல என் ரூம் இருக்கு. அங்கே போகலாம். அமைதியா இருக்கும். நீங்க என் மீன்களையும் பார்க்கலாம்,” என்றான்.

இளவேனில் ஒரு கணம் தயங்கினாள். ஒரு ஆணின் அறைக்குத் தனியாகச் செல்வதில் இருக்கும் ஆபத்துகளைப் பற்றிச் சமூகம் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தது. ஆனால், அவனது மெசேஜ்களின் ஆழமும், அந்தத் தொட்டி மீன்களின் மௌனமும் அவளது எச்சரிக்கை உணர்வை மழுங்கடித்தன. “சரி, உங்க மீன் தொட்டியைப் பார்த்த மாதிரி இருக்கும்,” என்று சிரித்தாள்.

மடிப்பாக்கத்தின் குறுகலான சந்து ஒன்றில் இருந்த அந்த ஒற்றை அறை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அவர்கள் வந்தபோது இரவு எட்டு மணி ஆகியிருந்தது. அறைக்குள் நுழைந்ததும் இளவேனில் சுற்றிலும் பார்த்தாள்.

அறை முழுக்க ஒட்டடைகளும், காய்ந்த துணிகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும் சிதறிக்கிடந்தன. புத்தகங்கள் எதுவும் கண்ணில் படவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமாக, அங்கே எந்த மீன் தொட்டியும் இல்லை. ஒரு மூலையில், தூசி படிந்த ஒரு வெற்றுப் பிளாஸ்டிக் வாளி மட்டுமே கிடந்தது. அதில் காய்ந்த பாசி படிந்திருந்தது.

“உங்க மீன் தொட்டி எங்கே?” என்று கேட்டாள் இளவேனில். அவளது குரலில் ஏமாற்றமும் லேசான பயமும் கலந்திருந்தது.

சக்தி தன் சட்டையைக் கழற்றி ஒரு நாற்காலியில் போட்டுக்கொண்டே, “ஓ… அதுவா? அது ஆபீஸ்ல இருக்குன்னு சொன்னேனே… ஞாபகம் இல்லையா?” என்றான். அவன் குரலில் இருந்த மென்மை மறைந்து, ஒருவித அதிகாரத் தோரணை வந்திருந்தது.

“இல்லை, நீங்க உங்க ரூம்லதான்…” என்று தொடங்கினாள் இளவேனில். அவளுக்குள் ஒரு பயம் மெல்லத் தலைதூக்கியது. அவன் தன் அறையில்தான் மீன் தொட்டி இருப்பதாகச் சித்தரித்திருந்தான் என்பது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. அந்த வெற்று வாளி, அவனது பொய்களின் குறியீடாக அவளுக்குத் தோன்றியது.

“சரி, அதை விடு. தண்ணி வேணுமா?” என்று கேட்டுவிட்டு அவன் அவளருகே வந்து சோபாவில் அமர்ந்தான்.

அடுத்த சில நிமிடங்கள் இளவேனிலுக்கு ஒரு நரகமாக மாறியது. சக்தி அவளைப் பாராட்டத் தொடங்கினான், ஆனால் அது அவளது கலையைப் பற்றியது அல்ல; அவளது உடலைப் பற்றியது. அவளது கைகளைப் பற்றினான். அவளது விரல்கள் நடுங்குவதை அவன் கவனிக்கவில்லை, அல்லது கவனிக்க விரும்பவில்லை.

அவளுக்கு அந்த இடம், அந்த மனிதன், அவனது வேர்வை மணம் என எதுவுமே பிடிக்கவில்லை. அவளது மனம் அலறியது: ‘இங்கிருந்து ஓடிவிடு. இவன் நீ நினைத்த மனிதன் அல்ல. இவன் உன்னை ஒரு சிறிய தொட்டிக்குள் அடைக்கப் பார்க்கிறான்.’

ஆனால் அவளால் எழ முடியவில்லை.

அவள் வளர்ந்த விதம், பெண்களுக்குக் கற்பிக்கப்படும் “நாகரிகம்”, ஒருவரை அவரது முகத்திற்கு நேரே அசிங்கப்படுத்தக் கூடாது என்ற சமூகப் பயிற்சி அவளை இருக்கையோடு சேர்த்துக் கட்டியிருந்தது. ‘இப்போது திடீரென எழுந்து போனால், அவன் தன்னை எப்படி நினைப்பான்? இவ்வளவு தூரம் வந்துவிட்டு அவமதிப்பது போல் இருக்குமோ? அவன் கோபப்பட்டு கத்தினால் என்ன செய்வது?’ என்ற பயம் அவளைப் பக்கவாதமுற்றவள் போல் மாற்றியது. ஒரு பெண்ணின் “வேண்டாம்” என்ற வார்த்தையை விட, ஒரு ஆணின் ஈகோ காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்தச் சமூகம் அவளை எவ்வளவு கவனமாக வளர்த்திருக்கிறது என்பதை அவள் அந்த நொடியில் உணர்ந்தாள்.

அவன் அவளை நெருங்கி முத்தமிட முயன்றபோது, அவள் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளது உடல் விறைத்துப் போனது. அது மறுப்பின் வெளிப்படையான அறிகுறி. ஆனால் சக்தி அதை, பெண்களுக்கே உரிய “நாணம்” என்று தனக்குள் மொழிபெயர்த்துக் கொண்டான்.

அவள் அந்தச் சோபாவில் கிடக்கையில், தன் நிலை அந்த ஓவியத்து மீனைப் போலவே இருப்பதை உணர்ந்தாள். கண்ணாடித்தொட்டிக்குள் இருக்கும் மீனுக்குத் தண்ணீர் இருக்கும், ஆனால் சுதந்திரம் இருக்காது. அதன் உலகம் வெளியில் இருப்பவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. இப்போது அவளது உடலும், அவளது மௌனமும் அவளது கட்டுப்பாட்டில் இல்லை. அந்த உறவில் அவளுக்கு எள்ளளவும் விருப்பமில்லை, ஆனால் அவன் அதை முடிக்கும் வரை அவளது உடல் ஒரு உயிரற்ற மரக்கட்டையைப் போலக் கிடந்தது. அவளது மௌனம் அவனால் சம்மதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரவு பத்து மணிக்கு அவள் தன் விடுதிக்குத் திரும்பும் ஆட்டோவில் அமர்ந்திருந்தபோது, அவளது கண்கள் கலங்கவில்லை. மாறாக, அவளுக்குள் ஒரு வெற்றுத் தனிமை படர்ந்திருந்தது. தன் உடலை விட, தன் மனதின் உள்ளுணர்வை தானே கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவளை வாட்டியது. ஆட்டோவின் ஜன்னல் வழியே தெரிந்த சென்னையின் விளக்குகள், தண்ணீருக்குள் தெரியும் மங்கலான பிம்பங்களைப் போல அவளுக்குத் தோன்றின.

அடுத்த இரண்டு நாட்களுக்குச் சக்தியிடமிருந்து தொடர்ச்சியாக மெசேஜ்கள் வந்தன. ‘ஞாயிற்றுக்கிழமை இரவு மறக்க முடியாதது’, ‘நீ என் தொட்டியின் அழகான மீன்’. இளவேனில் எதற்கும் பதிலளிக்கவில்லை. மொபைல் திரையில் அவனது பெயர் தோன்றும் போதெல்லாம் அவளுக்கு மூச்சுத் திணறுவது போலிருந்தது. தண்ணீரே இல்லாத வெற்றுத் தரையில் தூக்கிப் போடப்பட்ட மீனைப் போல அவள் தவித்தாள்.

மூன்றாம் நாள், அவளது நிலையைப் பார்த்த ரம்யா அவளது மொபைலைப் பறித்தாள்.

“இளா, என்னடி இது? பிடிக்கலனா பிளாக் பண்ண வேண்டியதுதானே? ஏன் இப்படிப் பயந்து சாகுற? அவன் என்ன பெரிய இவனா?” என்று கேட்டுவிட்டு, அவளது வாட்ஸ்அப் கணக்கிலிருந்து, ‘சக்தி, எனக்கு உங்களை முகத்திற்கு நேரே பிடிக்கவில்லை என்று சொல்லத் தெரியவில்லை. அன்றிரவு நடந்தது என் விருப்பப்படி நடக்கவில்லை. இனி எனக்கு மெசேஜ் செய்ய வேண்டாம்’ என்று டைப் செய்து அனுப்பிவிட்டு, அவனைத் தட்டாமல் பிளாக் (Block) செய்தாள். அனைத்து சமூக ஊடகங்களிலும் அவனது கணக்குகள் முடக்கப்பட்டன.

அடுத்த இரண்டு வாரங்கள் அமைதியாக நகர்ந்தன. இளவேனில் மெல்லத் தன் ஓவியங்களுக்குள் திரும்ப முயன்றாள். ஆனால், அவளது தூரிகை இப்போது அடர் வண்ணங்களைத் தொட மறுத்தது. அவள் வரையும் கோடுகள் யாவும் ஏதோ ஒரு கூண்டின் கம்பிகளாகவோ அல்லது தொட்டியின் விளிம்புகளாகவோ மாறின.

ஒரு சனிக்கிழமை மாலை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அதே கலைக்கூடத்திற்கு வெளியே தோழியுடன் இளவேனில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது சாலையின் எதிரே சக்தி நிற்பதை அவள் கண்டாள். அவன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது முகம் விகாரமாக மாறியிருந்தது. அவனது அந்த ‘பண்பட்ட வாசகன்’ பிம்பம் முற்றிலும் உதிர்ந்துபோயிருந்தது. தனக்குத் மறுப்பு தெரிவிக்கப்பட்டதை, ஒரு சிறு பெண் தன்னை நிராகரித்ததை அவனது ஆண் ஈகோவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் அவளைப் பார்த்த பார்வை, ஒரு தூண்டில் காரன் இரையைக் கூர்ந்து நோக்குவதைப் போல இருந்தது.

அவள் பயத்துடன் ரம்யாவின் கைகளைப் பற்றிக்கொண்டு வேகமாகத் தன் ஸ்கூட்டரை நோக்கி நடந்தாள்.

அவள் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிய அந்த விநாடியில், அவளது மொபைல் அதிர்ந்தது. புதிய ஒரு எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. வண்டியை ஓட்டிக்கொண்டே ரம்யாவிடம் மொபைலைக் கொடுத்தாள்.

“யார்ன்னு பாரு ரம்யா,” என்றாள் இளவேனில், அவளது குரல் நடுக்கத்தை மறைக்க முயன்று.

ரம்யா மொபைலைத் திறந்து பார்த்துவிட்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள். பின்னர் மெதுவாக வாசித்தாள்.

அதில் எந்தத் தத்துவமும் இல்லை, சங்க இலக்கியமும் இல்லை, மீன் தொட்டிகளின் மௌனமும் இல்லை. ஒரே ஒரு வார்த்தை மட்டும் தூய தமிழில் எழுதப்பட்டிருந்தது:

“தேவடியா.”

இளவேனில் வண்டியின் வேகத்தை அதிகரித்தாள். நுங்கம்பாக்கத்தின் போக்குவரத்து நெரிசலுக்குள் அவளது ஸ்கூட்டர் மறைந்தது. அவளது மனதில், தான் வரைந்த அந்தச் செம்மீனின் ஓவியம் முற்றிலும் சிதைந்துபோயிருந்தது. கண்ணாடித்தொட்டிகள் உடைந்து போகும்போது, மீன்கள் சுதந்திரம் அடைவதில்லை; அவை தரையில் விழுந்து மூச்சுத் திணறி இறக்கின்றன என்பதை அவள் உணர்ந்தாள். ஆனால், அந்தத் திணறலிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கரைசேர வேண்டும் என்ற ஒற்றை வெறியோடு அவள் வண்டியை இருளுக்குள் செலுத்தினாள்.

***

சித்ரா சிவன் – கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிற்றுளி கலை இலக்கிய இதழின் உதவி ஆசிரியர், தமுஎகச-வின் பெண்கள் கிளை செயலாளர். அம்முராகவ் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆதிலா, ஒளவையின் கள் குடுவை, பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை, உண்மை முனங்கினாலே போதும், அத்தினி என நான்கு நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது. ஸீரோ டிகிரி இலக்கிய விருது, ஜெயந்தன் நினைவு விருது, கலை இலக்கிய பெருமன்ற விருது, செளமா இலக்கிய விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். மின்னஞ்சல் : chitrasivan786@gmail.com

கௌரி ப்ரியா கவிதைகள்

0


கௌரி ப்ரியா

1) தழும்புகளின் படல்

நீள் துயில் வேண்டி
குளிகைகளை விழுங்கியவள்
அதிர்ந்ததிர்ந்து அடங்கிய
நிலம் போலக் கிடக்கிறாய்

குலைந்த இருப்புப் பாதையின்
குறுக்குக் கட்டைகளென
முன்கையில் அடுக்கடுக்காய்
சுயம் சிதைக்க முற்பட்ட
தயக்கத்தின் கீறல்கள்

நார் முகை அணுக்கள்
இழைத்திழைத்து நெய்திருக்கும்
தழும்புகளின் வேலி
எதனை அஞ்சி, பெண்ணே..

எழுந்து வருவாயா?

படல் மேல் கொடிகளாய்ப்
படர்ந்து நீவ
நேயத்தின் விரல்கள் நீளுமந்நாளில்
பூக்களை அதன் மேல்
பச்சை குத்திக் கொள்வாயா?

2) சுயம்பு

கதியின்மை என்பதொரு தீப்பொறி.
அந்நியமாய்க் கருதும் பார்வையொன்றில் உதிக்கும்
சிறு பொறி.

கதியின்மை என்பது
வளரும் பிழம்பு.
அளக்கும் பார்வைகளில்
அழுந்தி அழுந்தி
அடிக்கடல் சென்றேகும் பிழம்பு.

கதியற்ற தனியள்
ஓர் எரிமலை.
அழுத்தம் விடுத்து
கடல் பிளந்து
மேலெழும் எரிமலை.

கதியற்றுக் குளிர்ந்த எரிமலை ஒரு தீவு.
நடுக்கடலில்
நடுங்கி மாயும் தனித்தீவு.
என்றாலும் மீண்டு
சூரியனை மோகிக்கும் தீவு.

கடலிடைத் தீவெல்லாம் சுயம்பு.
கல்லென்போர்
கல் என்க
கடவுளென்போர்
கடவுள் என்க..
கடலிடைத் தீவெல்லாம் காதற்ற சுயம்பு.

3) தூமலர்

அறுவை சிகிச்சையில்
முலை அகற்றப் பட்டவளை
அனுமதி பெற்றே
நலன் விசாரிக்கச் செல்லுங்கள்.

சென்றே விட்டீர் எனில்
போர்த்திய விலாவிலிருந்து
நீளும் குழாய் வழியே
நெகிழிப் பைக்குள் சேகரமாகும்
அவளது குருதியை வெறிக்காதிருங்கள்

தனது தாய்ப்பால் சுரப்பின் போதாமை ஒருநாள்
கூடத்துப்
பேசுபொருள் ஆனதை..
பேருந்து நெரிசலில் ஒரு கை
ரவிக்கையின் மேல் படர்ந்ததை..
இன்னும் எதையெதையோ
அவளுக்கு நினைவூட்டலாம்
அனுமதியற்ற உங்கள் வருகை.

உணவு சுமக்கும்
தூக்குச் சட்டிகள்
காப்பீடு குறித்த உபதேசங்கள் எதையும் கேட்பதில்லை அவள்

தற்காலிகக் கரிசனங்களை
முழக்கும் பறைகள்
அறுபட்ட தனது
மார்புத் தோலால் ஆனதாய்
உறக்கத்திலும் அதிர்கிறாள்.

அணுகிச் சென்று
முகர வேண்டாம்.
கானகத்துச் சிறுவெண்மலராய்
அவள்
சூடியிருப்பது
எவருடனும் பகிர விரும்பாத
வேதனையின்
தூய்மை.

***

கௌரி ப்ரியா : சென்னையில் வசிக்கிறார். தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வருகிறார். ஆழியின் மகரந்தம் எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. மின்னஞ்சல்: ggowripriya07@yahoo.co.in

அ-புனைவில் புனைவின் சாத்தியங்கள்

0

ஆர்.கே.ஜி

நான் புனைவுகளின் உலகத்தில் வாழ்பவன் என்பதால், அ-புனைவு ஆக்கங்களை என் புனைவு உலகத்திற்குள் பொருத்தும் நோக்கில் மட்டுமே பெரும்பாலும் அணுகுவேன். தீவிரமான அ-புனைவு நூல்கள், என்னைப்போன்ற ஒருவனை, யதார்த்தத்திலிருந்து விடுபட்டு கற்பனை உலகிற்குள் நுழைய உதவுகின்றன. அந்த வகையில் நான் வாசித்து மகிழ்ந்த நூல், வெங்கட் அவர்கள் எழுதிய ‘ஒளியிலிருந்து இருளுக்கு.’

இப்புத்தகத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, வெங்கட் அவர்கள் குறித்து ஒரு சிறிய அறிமுகம். 

வெங்கட் அறிவியலை மிகுந்த நம்பிக்கையோடு அணுகுபவர். தனியார் நிறுவனத்தில் தலைமை அறிவியல் அதிகாரியாகப் பணியாற்றுவதோடு, கனடா மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். பல வருடங்களாக அதிக தம்மட்டம் இல்லாமல் தமிழ் படைப்புகளைத் தொடர்ந்து வரும் வெங்கட், சமீபத்தில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (Tamil Literary Garden) தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். 

ஒளியிலிருந்து இருளுக்கு நூலை வாசிக்கும் காலத்தில் தான், ஆண்டி வியர் (Andy Weir) நாவலின் தழுவலானப் ‘பிராஜெக்ட் ஹைல் மேரி’ (Project Hail Mary) திரைப்படத்தைக் காண நேர்ந்தது. 

திரைப்படத்தின் களமும், அறிவியல் தர்க்கங்களுக்கு உண்மையாகப் படம் அமையப் படைப்பாளர்கள் எடுத்துக் கொண்ட முனைப்பும் வியப்பைத் தரக் கூடியது. ஆண்டி வியர் அத்திரைப்படத்தின் மையக் கதாபாத்திரமான, வேற்று கிரக வாசி ‘ராக்கி’ (Rocky) உருவானது குறித்து நியூ யார்க் டைம்ஸ் இதழில் பகிர்ந்தவை:

இதழாளர்: ராக்கி என்ற கதாபாத்திரத்தை நீங்கள் எப்படி உருவாக்கினீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள பல வாசகர்கள் விரும்பினர். நீங்கள் ஒரு புதிய உயிரின வகையை உருவாக்கியுள்ளீர்கள். அதற்கான மொழி, தகவல் தொடர்பு முறை, உணவு உட்கொள்ளும் விதம், உறக்கம், கழிவு வெளியேற்றம் எனப் பல்வேறு கருத்துப்படிவங்களை நீங்கள் கற்பனை செய்து வடிவமைத்ததை நாங்கள் புத்தகம் வாசித்து அறிந்து கொண்டோம்.

ஆண்டி வியர்: எனக்கு ‘ஊக அடிப்படையிலான உயிரியல்’ (Speculative biology) என்றால் பிடிக்கும். அதற்கெனவே அர்ப்பணிக்கப்பட்ட தனி ‘ரெடிட்’ (Reddit) பக்கங்கள் உள்ளன. அத்துறை மிகவும் வசீகரமானமானது. 

அந்த உயிரினத்தின் கிரகத்தைப் பொறுத்தவரை, நான் நிஜத்தில் உள்ள ஒரு புறக்கோளைத் (Exoplanet) தேர்ந்தெடுத்தேன். அது தனது நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால், அங்கு திரவ நிலையில் நீர் எப்படி இருக்க முடியும் என்பதை விளக்க வேண்டியிருந்தது. 

அங்கு அதிக வெப்பம் இருக்கும்; ஆனால் வளிமண்டல அழுத்தம் மிக அதிகமாக இருந்தால், நீரை மிக அதிக வெப்பநிலையிலும் திரவ நிலையில் வைத்திருக்க முடியும். சரி, அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்றால், அங்கு மிகவும் அடர்த்தியான வளிமண்டலம் இருக்கிறது என்று அர்த்தம். அடர்த்தியான வளிமண்டலம் இருந்தால், ஒளி மேற்பரப்பு வரை முழுமையாகச் சென்றடையாமல் போகலாம். அப்படியென்றால், பார்வைத் திறன் போன்றவற்றை அந்த உயிரினம் பரிணாம வளர்ச்சியில் பெற வேண்டிய அவசியமும் இருக்காது.

இப்படிப் படிப்படியாக அந்த உயிரினத்தை நான் உருவாக்கினேன். நான் குறிப்பாக இருந்தது, அந்த கதாப்பாத்திரம் முற்றிலும் வேற்றுலகத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதுதான். ‘ஸ்டார் வார்ஸ்’ (Star Wars) அல்லது ‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) போன்ற படைப்புகளில் வருவது போல, வெறும் உடை அணிந்த மனிதனைப் போல இருக்கும் வேற்றுலக உயிரினமாக அது இருக்க நான் விரும்பவில்லை. அந்தத் தொடர்களை நான் குறை கூறவில்லை; அவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அறிவியல் புனைகதையை யதார்த்தமான கண்ணோட்டத்தில் அணுகும்போது, ஒரு வேற்றுலக உயிரினம் நமது சூழலில் வசதியாக இருக்க முடியும் என்றோ அல்லது அதற்கு நேர்மாறாக இயங்க முடியும் என்றோ நான் நம்பவில்லை.

இப்படி, கடும் தர்க்கங்களின் மூலம், ஆண்டி வியர் தனக்கானக் கற்பனை உலகைக் கண்டடைகிறார். இன்றைய நவீன அறிவியல் புனைகதைகள் பெரும்பாலும், இப்படி அறிவியலை தர்க்கத்தின் அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. அறிவியல் புனைவு போக, கற்பனை (Fantasy), அழிவுகாலத்திற்குப் பிந்திய புனைவு (Apocalyptic), திகில் புனைவு (Horror), மாற்று வரலாறு (Alternate history), மாய யதார்த்தவாதம் (Magical realism) போன்ற ஊகப் புனைவு (Speculative fiction) நூல்களுக்கும், அ-புனைவு ஒரு குடையாக அமையலாம். 

என் நோக்கில், வெங்கட் அவர்களின் அறிவியல் கட்டுரைகள் நம் தமிழ் உலகில் அ-புனைவு, புனைவை சந்திக்கும் சாத்தியம் கொண்டவையாகப் பார்க்கிறேன்.

இப் புத்தகம் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியிருந்தாலும், கீழ்க்கண்ட தலைப்புகள் என் சிந்தனைப் போக்கை விரிவுபடுத்த உதவின.

  • இண்டிகோ ஒரு நிறத்தின் வரலாறு
  • இஸ்லாமியக் கலைகளில் உயர்கணிதக் கோட்பாடுகள்
  • ஆளற்ற போர்முனைகளில் முகமற்ற போர்வீரர்கள்

குறிப்பாக, இன்றைய இன்றைய போர் நுட்பம் குறித்த கட்டுரை.

போரிடச் செல்வது என்பதன் நடைமுறையும் இப்பொழுது மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. தன் வீட்டிலிருந்து காலை உணவு அருந்தி விட்டுக் காரில் ஏறிக் குழந்தைகளைப் பள்ளியில் இறக்கி விட்டு குளிரூட்டப்பட்ட அறையில் கணினித் திரையின் முன் அமர்ந்து பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் குட்டி விமானத்தைத் தொலைவில் இயக்குவது போர்வீரனின் தினசரி வேலை என்று ஆகியிருக்கிறது. இயற்கையின் நிர்பந்தங்கள் கலைத்துப் போடப்படுகின்றன.

2025 ஜூன் முதல் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இரானின் மீது ‘ஆபரேஷன் மிட்னயிட் ஹாம்மர்’ (Operation Midnight Hammer) என்று பெயரிடப்பட்ட தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போரில், இரானில் பெரும்பாலும் பறவிகளாலான நள்ளிரவுத் தாக்குதல்கள் நடக்கின்றன. அமெரிக்கப் பகலில், குளுகுளு அறைக்குள் இருந்து கொண்டு, இடது கையால் கோக் அருந்தியவாறு, வலது கை விசைப்பலகையை இயக்க குண்டு பொழியும் சாத்தியம் மெய்ப்படுகிறது. எட்டுமணி நேரப் போருக்குப் பின் மீண்டும் காரேறி, வயலின் பாடம் முடித்த குழந்தையைத் திரும்ப அழைத்து வீடு வந்து, மனைவியுடன் உணவருந்திப் பின்னிரவில் களித்திருப்பது எந்திரன் மூலம் போரை நடத்தும் அன்றாட வாழ்வாகியிருக்கிறது.”

இன்றைய நவீனப் போர்கள் போர்க்களத்திலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, திரைகளுக்கு முன்னால் நடத்தப்படுவதால், போருக்குப் பிந்தைய மன உளைச்சல் (PTSD) போன்ற சவால்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றன. ஒரு ஆயுத மோதலுக்குத் தயாராவதாலோ அல்லது அதில் வாழ்வதாலோ ஏற்படக் கூடிய உளவியல் மற்றும் உடல் ரீதியான துன்பங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. கவலைக்கோ அல்லது மன அழுத்தத்திற்கோ இடமில்லை.

மேற்பரப்பில், இது ஒரு பெரிய முன்னேற்றம் போல் தோன்றினாலும், இது உண்மையில் பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பார்வையைக் குருடாக்குகிறது. மனிதர்கள், எந்த வருத்தமும் இன்றிச் சுடப்படக்கூடிய கருப்பு-வெள்ளைப் புள்ளிகளாக மாறுகிறார்கள். போர் உருவாக்கும் கோரத்தை, இனி எந்த குருசேத்திரக் களத்திலும், எந்தப் பார்த்தனும் பார்க்கப் போவதில்லை. 

இந்த நெருக்கடிகளை அடையாளம் கண்டு ஒரு எழுத்தாளன் ஒரு மாற்று இருத்தலியல் நாவலை உருவாக்கலாம். கணினி வழியாக அனைத்து உணர்வுகளிலிருந்தும் தள்ளிப் போகும், எந்த நேரடி உணர்வும் தொட முடியாத ஒரு மனிதனின் வெறுமையை விரிவாக எழுதலாம். இது போல புனைவிற்கானப் பல சாத்தியங்களை இந்நூலில் எளிமையாகக் கண்டடைய முடிந்தது.

அனைத்தையும் புறம்தள்ளி, மனிதனின் ஒவ்வொரு தேடலுக்கும் அறிவியல் விடை என்று கூறி அறிவியலை மதமாக்கும் (Scientology) பொது மனப்பான்மையை நான் தனிப்பட்ட முறையில் நம்புவதில்லை. அறிவியல், இலக்கியம், தத்துவம், பயணம் ஆகிய அனைத்தும் உண்மையை நோக்கிச் செல்வதற்கான வெவ்வேறு கருவிகள். 

என் அளவில், இவ்வகை நூலுக்கான இடம், எவ்வளவுப் பேசப்பட்டும் ஒதுங்கி நிற்கும் வாழ்வின் முழுமையானப் பொருள் எது என்கிறப் போதாமை தான். அறிவியலின் வழியாக சில இடைவெளிகளை நிரப்பிக் கொள்ள, இந்நூல் ஒரு வாய்ப்பாக அமைகிறது. 

திறவுகளைத் தந்த வெங்கட் அவர்களுக்கு என் நன்றிகள். வாழ்த்துக்கள் ஒரு சகப் பயணியாக. 

***

ஆர். கே. ஜி – இயற்பெயர் ராம் கார்த்திக் கணேசன். 2013 ஆம் ஆண்டு கனடாவின் கனகார்டியா பல்கலைக்கழகத்தில், இயந்திர பொறியியல் துறையில், முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது டொரோண்டோவில் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் நவீன இலக்கியக் குரல்களுள் ஒன்றான இவரின் நாவல்கள், ‘பாடுவான் நகரம்’ மற்றும் ‘அகம்’, யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன. இவர் மொழிபெயர்த்த ‘கிருஷ்ணர்கள்’, கறுப்பினக் கவிஞர்களின் கவிதை தொகுப்பு, 2026ல் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்னஞ்சல்: ramkarthiksgm@gmail.com

கார்த்திகா முகுந்த் கவிதைகள்

0


கார்த்திகா முகுந்த்

னங்களை ஒழித்துப் போடுவதுபோல்
மனசில் அடிபிடித்த ஞாபகங்களைத்
தோண்டித் தோண்டி
ஒரு அட்டைப் பெட்டியில் போடத் தொடங்கினேன்

மலையாகக் கனக்கும் ஞாபகங்கள்
மஸ்லின் துணியாக மடித்து மடித்துப் போட
பெட்டி நிரம்புகிறது

எனக்கான ஒரு இணையற்ற பரிசு
வழுக்கும் காகிதங்களைக் கொண்டு
அழகாகப் பொதிகிறேன்
பிரியம் மீதூறுகிறது

கைக்குழந்தையைச் சிங்காரிப்பது போல்
மென்னிறப் பட்டு ரிப்பனைக் கொண்டு கட்டுகிறேன்

பெட்டிக்குள்ளே என்னவொரு கலகலப்பு
ஏதோ ஆனந்தக் குதூகலம்
சிறு ஸாட்டின் துண்டைப் பூவாக நெய்து
உச்சியில் நிறுத்தி முத்தமிடுகிறேன்

தள்ளி நின்று பார்க்கிறேன் பெட்டியை
ஈற்றைக் காணும் பசுவின் சிலிர்ப்பு

ஜீனியைப் பெட்டியில் அடைத்த அக்கணத்தைச் சுழற்றி
சுண்டு விரலில் மோதிரமாக அணிகிறேன்.
துக்கங்களின் என்னவொரு எழில்!


ஓட்டை விழுந்த படகில்
என்னைக் கட்டிப் போட்டிருக்கிறது
திசைகளற்ற கடல்
மிதந்துகொண்டே போகிறேன்
விழித்துக் கொண்ட அறிவு
வெறும் நங்கூரமாகக் கனக்கிறது

என்னைப் படகோடு கட்டியிருப்பது எது?

சில சமயம் நான்
வெயிலைத் தின்னும் தாவரம்
அப்போது உலகம் மிக எளிமையானது

அலையோசை என்னை விழுங்கப் பார்க்கிறது
அறிவைக் கைவிடுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு
தாவரமாக என்னைக் கனவு காண்கிறேன்

எல்லாப் புதிர்களின் விடைகளையும் தன்னுள் வைத்துள்ளது
கனவின் மென்குளிர் காற்றில் அசையும்
அச்சிறு செடி.

படகு போய்க்கொண்டிருக்கிறது
என்னைக் கட்டிப் போட்டிருக்கிறது.

கனவின் மென்குளிர் காற்று
கனவின் மென்குளிர்
கனவின் கனவு
கனவு.


கங்குப் பொறிகள் காற்றில்
அங்குமிங்கும் எதையோ தேடி
அலைந்து திரியும் ஓரிரு கணங்கள்
நாம் கூடுதலாகச் சொற்ப நேரம்

யுகாந்திரங்கள் தீராமல் நின்றெரியும்
மாயநெருப்பின் பெருநடனம்
தலைமுறைக் கண்ணிகள் கிணுகிணுங்க
அதன் அடவுகளின் ஓரிரு தெறிப்புகள்

என்னமாய் ஒளி சிந்தி
மினுங்கித் தீர்ந்துபோக வேண்டும் நாம்!


பத்ரதீபத்தைக் கையிலேந்தி
எளிதாகச் சுழற்றுகின்றனர் சிலர்

எண்ணெய் தளும்பும் சிற்றகலைக்
காற்றுக்கு மறைக்கத் திண்டாடுகிறேன் நான்

வல்லாட்டு போல் வாழ்வைச் சுருட்டி
உருமாலை கட்டிக்கொள்கிறார்கள் சிலர்

ஆற்றங்கரையிலிருந்து வீடு திரும்பும் சிறுமி நான்
காற்று படபடத்தும் ஈரத்துண்டாக
தலைக்கு மேல் விரிக்கிறேன் என் வாழ்வை

கப்பலும் சிப்பியும்
சொல்லப்போனால் ஒன்றா வேறா…
ஆனால்
நான் லேசாகக் கடலை ருசித்துப் பார்க்கிறேன்.

***

கார்த்திகா முகுந்த்: பிறந்த ஊர் திருநெல்வேலி. தற்போது குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தும் பணியில் உள்ளார். பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர். கம்பளி ஆடை வடிவமைப்பு (Knitting), பூப்பின்னல் (Crotchet), புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள். வெளியாகியுள்ள படைப்புகள்: ஆறு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு. மின்னஞ்சல்: karthika.mukil@gmail.com

வாழும் வரலாற்றைப் போற்றுவோம்

0

சிவகுரு நடராஜன்

ரு வாழும் வரலாற்று ஆளுமையின் மகத்தான சாதனைகளை, மக்கள் பணிகளை, காந்திஜி, வினோபாவின் கனவுகளை சாத்தியமாக்கிய ஒருவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது ஏற்படும் உணர்வுகளை எழுத்துக்களால் விவரிக்க இயலாது. 

இப்படியும் ஒரு சாதனையாளர் நம் காலத்தில் எந்த விளம்பரமும் இல்லாமல், இன்றும் தன்னால் ஆன மக்கள் பணிகளை எளிமையாக தன் ஆசான் வழிகாட்டி உருவாக்கிய பல்கலைகழகத்திலேயே தங்கி செய்து கொண்டிருக்கிறார் என்பதும் ஒரு மலைப்பான விசயமே. அந்த சாதனையாளர் மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். 

அவரைப் பற்றிய ஒரு வரலாற்று ஆவணமே சுதந்திரத்தின் நிறம் எனும் அற்புத படைப்பு. எப்படி காந்தி ரிச்சர்ட் அட்டென்பரோ எனும் இயக்குனரால் இந்திய வெள்ளி திரைக்கு வந்தாரோ அது போல கிருஷ்ணம்மாளும் லாரா கோப்பா எனும் இத்தாலியர் மூலமாகவே ஆவணம் ஆக்கப்பட்டார். 

283 பக்கங்கள் கொண்ட ஒரு அற்புதமான, அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்.  அவசியம் நம் இல்லத்து வளரும் தலைமுறைக்கு படிக்க வேண்டும் எனும் எண்ணத்தை உருவாக்க வேண்டிய நூல் .

தடைகளைத் தகர்த்து…..

கிருஷ்ணம்மாள் 1926 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் பிறந்தவர். மிக ஏழ்மையான ஒரு கூலி தொழிலாளியின் மகளாக பிறந்தவளுக்கு தன் தாயிடமிருந்தே பெண்கள் நலன் , அவர்களின் மேன்மைக்காக உழைக்க வேண்டும் எனும் எண்ணம் உருவாகியுள்ளது என பதிவு செய்கிறார் நூலாசிரியர். இந்த புத்தகம் கிருஷ்ணம்மாள் பற்றிய நூல் மட்டுமல்ல. அவரின் வழிகாட்டி, இணையர், தன்னலமற்ற களப்போராளி, மக்கள் தொண்டர், இந்தியாவின் வரைபடத்தின் பாதியை நடந்தே சென்றவர். விளம்பர வெளிச்சம் தன் மீது படாமல் பார்த்துக் கொண்டவர்.

காந்திஜியின் முக்கிய சீடரான வினோபாவின் வாழ்வியல் நெறிகளை ஏற்றுக்கொண்டு அதில் சிறிதும் பிசகாமல், தன் முழு வாழ்வையும் மக்களை ஒற்றுமைபடுத்துவதிலும், பூதான இயக்கத்தின் கொள்கைகளைப் பிரபலப்படுத்தியவர். 

சிறு வயதிலேயே காந்தியத்தின் மீது பற்றும், அளவிலா காதலும் கொள்கிறார். அதனடிப்படையில் தன் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும் எனும் கொள்கைப் பிடிப்போடு இயங்குகிறார். தமிழ்நாட்டிலிருந்து காந்தியைக் காண வேண்டும் எனும் எண்ணத்தோடு செல்கிறார். அங்கு காந்தியை சந்தித்த தருணத்திலிருந்து தான் எப்படி மாறினேன் என்பதை மிக எதார்த்தமாக அவரின் பேட்டியின் மூலமாக பதிவிடுகிறார்க. ஒரு பெரும் அனுபவத்தை நமக்கும் கற்றுத் தரும் பகுதி அந்த நீண்ட பதில் 

படித்து பாருங்கள். ஒரே ஒரு உதாரணம். வடமாநிலங்களில் காந்திஜி பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டவர். அப்படி அவர் பயணித்த போது அவரோடு இணைந்து நடந்தே சென்று பாபுவின் உறுதியான தொண்டராக மாறுகிறார். ஒரு கட்டத்தில் இமய மலையில் உள்ள கைலாஷ் மானசரோவர் சிகரத்துக்கு நடந்தே செல்கிறார். என்னே ஒரு மனத்திடம். அந்த நீண்ட பதிலில் அவரின் சுவையான அனுபவங்களையும் சேர்த்தே சொல்கிறார். பயணமாக செல்லும் இடங்களில் எப்படி உணவை தேடிக் கொண்டார்கள், வெவ்வேறு மனிதர்களோடு உரையாடி காந்தியக் கொள்கைகளை எப்படி உள்வாங்கினார், பின்பற்றினார். போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்ற போது பட்ட துயரங்கள், எதிர் கொண்ட சவால்கள் என எல்லாமே நெகிழ்ச்சி தரும் பதிவுகள். இந்த பக்கங்கள் எல்லாவற்றிலும் ஒரு ஜீவனுள்ள உரையாடலை நம்மால் உணர முடியும். 

இப்படி மக்கள் பணிகள் செய்து கொண்டிருந்த ஜெகந்நாதனை தமிழ்நாட்டுக்கு போ, அங்கே போய் பட்டியலின மக்களுக்கான சேவைகளைத் தொடங்கு, ஒரு பள்ளி உருவாக்கு, அந்த மக்களைக் கல்வியறிவு பெற்றவர்களாக மாற்று எனும் அன்புக் கட்டளை விதித்தார் காந்திஜி. இட்ட பணி செய்வேன், மகாத்மா சொன்னதை செய்வேன் எனத் தமிழகம் திரும்புகிறார். இங்கே வந்து காந்திய நெறிகளை கற்று தரும் ஒரு ஆசிரமத்தை உருவாக்குகிறார். 

அன்னையின் போராட்ட வாழ்வின் பாதைகள்: 

கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து அதையே தனக்கு சாதகமாக்கிய வரலாறு அன்னைக்கு உண்டு. இரவு முழுதும் படிக்க, பள்ளியிலிருந்து திரும்பிய பின் அம்மாவுக்கு உதவி., மீண்டும் படிப்பு எனத் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து உருவான ஒரு பட்டதாரி.( இப்போதும் கூட அடக்குமுறைகள் அம்மக்கள் மீது தொடருகிறது. எண்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என சிந்தித்து பாருங்கள்.) 

இளம் வயதிலிருந்தே வடலூர் இராமலிங்க அடிகளாரின் அறம் சார் கொள்கைகளின் மீது ஈர்ப்பும், பற்றும் ஏற்படுகிறது. அதனின் தொடர்ச்சியாக காந்தியடிகளின் அகிம்சை வழி சுதந்திர போராட்டங்கள் அவரைக் கவர்கிறது. கல்லூரி முடித்து பெண் விடுதலை, மேம்பாடு, குறித்த ஒரு புரிதல் இருந்ததால் அவர் இந்த பணிகளுக்காக தன்னை அர்பணித்து கொண்ட மரு. சவுந்தரம் அவர்களின் தொடர்பு கிடைக்கிறது. அதுவே அன்னையின் வாழ்வின் ஒரு மிக முக்கியத் திருப்புமுனை. 

அன்றைய சூழலில் சவுந்தரம் அம்மாவோடு இணைந்து மிக முக்கியமானப் பணிகளை செய்கிறார். உதாரணமாக, பொருளாதார மற்றும் குடும்ப நெருக்கடிகளால் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட பெண்களை இரவு நேரத்தில் சந்தித்து, முறையான மாற்று ஆலோசனைகளையும் வழங்கி அவர்களிடம் நம்பிக்கையை உருவாக்கி அந்த இழி தொழிலிருந்து பலரை மீட்டு எடுத்துள்ளார். 

தன் ஆதர்ச நாயகன் காந்தியைப் பார்க்க வேண்டும் எனும் தீரா ஆசை கொண்டிருந்தார். பெருவாய்ப்பாக அந்த மாமனிதரோடு ஒரு வாரம் பயணிக்க முடிந்தது என் வாழ்வின் முக்கிய தருணங்கள் என்கிறார் அன்னை. அது மட்டுமா? அவரின் தென் மாவட்ட சுற்று பயணத்தில் அவருக்கு அன்றாட உதவிகள் செய்ய வாய்ப்பும் கிடைத்தது. குறிப்பாக பழனி முருகன் கோவிலில் காந்திக்கு முன்னால் பாட்டு பாட வாய்ப்பு கிடைத்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க லட்சிய தம்பதிகளாக இருந்த இவர்கள் எப்படி வாழ்விணையர்களாக மாறினார்கள் என்பதை மிக அழகுற பதிவு செய்துள்ளார்கள்.

இந்த புத்தகம் வெறும் இருவரின் வாழ்க்கை வரலாற்று நூல் மட்டுமல்ல. வாசகனுக்கு இந்தியாவில் எப்படியான ஆளுமைகள் இருந்துள்ளனர் என்பதை நமக்கு சொல்லும் படைப்பு. 

ஜே.சி. குமரப்பா எனும் அபூர்வ மனிதரை பற்றி நாம் அறிந்திருப்போம்..ஆனால் அவரின் அறிவுத்திறன்த, விவசாயம் பற்றிய அவரின் புரிதல், அணுகுமுறை, கிராமப்புற மேம்பாடு காந்திய வழியில் எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்த ஒரு ஆளுமை பற்றிய தகவல்கள். 

அந்த மகத்தான மனிதரின் கிராமப்புற வளர்ச்சி கண்ணோட்டங்கள் அன்னையை வெகுவாகக் கவர்ந்தது. அதோடு மட்டுமல்லாமல் அதை அந்த எளிய மக்களுக்கு கடத்துவது என்பதை புரிந்து கொண்டு அதற்கான செயல் வடிவத்தை உருவாக்கியவர் அன்னை. அது குறித்த தெளிவான பார்வையும் அவர் கொண்டிருந்தார். 

இரு பெரும் மக்கள் சேவகர்கள்:

விளம்பர வெளிச்சம் படாத அன்னையும் ஜெகன்நாதனும் எப்படி வாழ்க்கையில் இணைந்தார்கள் என்பதே ஒரு சுவையான விசயம். அதை அவர்கள் இந்தப் பேட்டியின் மூலமாக பகிர்ந்து கொள்வது மிக அலாதியானது. போராட்டமும், மக்கள் பணியுமே முன்னுரிமையாகக் கொண்டு பயணிக்கும் இவர்கள் என்னென்ன தியாகம் செய்தார்கள், எப்படி ஒரு மகத்துவம் மிக்க வாழ்வை உருவாக்கி கொண்டார்கள் என்பதை மிக நேர்த்தியாக , பதிவு செய்துள்ளார் லாரா கோப்பா. 

ஒரு லட்சிய தம்பதிகளின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமான வாழ்வியல் முறை. ஜெகந்நாதன் ஐயா வினோபாவின் பூதான இயக்கத்தின் முன்னணி படை வீரர்.  அந்த இயக்கத்தில் அன்னையும் இணைகிறார். இயல்பாகவே இருவருக்கும் கருத்தொற்றுமை இருந்ததால் இணையர்களாக மாறும் தருணங்கள், எளிய திருமணம், திருமணம் முடிந்த கையோடு இயக்கத்தில் பங்கேற்க செல்லும் இணையர், அதற்கு பிறகு சரியாக ஒராண்டுக்கு பிறகே சந்திப்பு. சம காலத்தில் கிருஷ்ணம்மாள் ஆசிரியர் பயிற்சிக்கு படித்து முடிக்கிறார். முடித்த கையோடு பூதான இயக்கத்தில் பங்கேற்க இணையர் காசிக்கு அழைக்கிறார். இதெல்லாம் படித்த போது மெய் சிலிர்த்தது. 

தமிழ்நாட்டில் பூதான இயக்கம்:

 வினோபா துவக்கிய பூதான இயக்கம் வட மாநிலங்களில் நிலவுடைமையாளர்களோடு ஒரு பெரும் உரையாடலை உருவாக்கியது. அவர்களின் மனமாற்றத்தை உடனடியாகக் காண முடிந்தது. தாமாகவே முன்வந்து நிலங்களைக் கொடுத்து அது ஏழை விவசாயத் தொழிலாளிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. (இதில் சாதுரியமாக சிலர் தரிசு நிலங்களாக இருந்தவற்றை கூடத் தானம் எனும் பெயரால் கொடுத்தார்கள்.) இந்த பூதான இயக்கத்தைத் தமிழ்நாட்டில் துவக்கிட, ஒழுங்கமைத்திட முன்னணியில் நின்று பணியாற்றிவர் ஐயா ஜெகன்நாதன் அவர்கள். 

நல்ல நேர்த்தியான தயாரிப்பு, திட்டமிடல், பங்கேற்போரின் பட்டியல், பயண நிகழ்ச்சி என எல்லாமே ஐயாவின் ஏற்பாடுகள் தான். 1952 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பூதான இயக்கம் துவங்கியது. முதலாவதாக ராமநாதபுரம் இராஜாவை சந்தித்தனர். நீண்ட உரையாடலுக்குப்பின் தன் கட்டுப்பாட்டிற்குள் இருந்த 1000 ஏக்கரைத் தருகிறார். ஒரு மாத பயணத்தின் முடிவில் 3500 ஏக்கர் நிலம் கிடைக்கிறது. 

இவர் (ஐயா ஜெகந்நாதன் ) ஒரு பக்கம் மற்றொரு பக்கம் இணையர் கிருஷ்ணம்மாள் விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு சரியான நேரத்தில் சரியான கூலித் தொகையைக் கொடுக்காமல் இருக்கும் பண்ணையார்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது, அகிம்சை வழியில் இயக்கம் நடத்துவது, எனப் பல வடிவங்களில் மக்களைத் திரட்டுவது ஒரு புறம், மற்றைய நேரங்களில் அதே பண்ணையார்களோடு பூதான இயக்கத்தைப் பற்றி பேசுவது என இரண்டு பணிகளையும் ஒருங்கே செய்தார். 

நூலாசிரியர் லாரா இப்படி குறிப்பிடுகிறார்: கிருஷ்ணம்மாள் ஒரு அருவி போல, அது பின்னர் சிற்றருவிகளாக, ஓடைகளாக, வெவ்வேறு வடிவங்களில் பாய்ந்து போகிறதோ அதைப்போல அக்காலத்தின் நினைவுகள், கடந்து வந்த மனிதர்கள் என எதையும் விடுபடாமல் தெளிவாக இணைத்து சொல்லுவார். 

கிருஷ்ணம்மாள் எனும் சமரசமில்லா போராளி:

ஐயா ஜெகந்நாதன் தலைமையில் நடைபெற்ற பூதான இயக்கம் வினோபாவின் எண்ணப்படி நடக்கவில்லை. மாறாக, மக்களின் போராட்ட இயக்கமாகவே மாறியது. போராளி கிருஷ்ணம்மாளின் முக்கிய போராட்டம் நிலத்துக்கான உரிமை கோரும் போராட்டங்களே. அதில் வத்தலக்குண்டு போரட்டமும், இராமநாதபுரம் பிரச்சனையும் மிக முக்கியமானவை. அவை இரண்டும் மிக விரிவாகப் பதிவாகியுள்ளது. 

அதே போல விளை நிலத்தை , நிலத்தடி நீர் ஆதாரத்தை பாழாக்கும் இறால் பண்ணை அகற்றும் போராட்டங்கள் அனைத்துமே பெரும்பான்மை பெண்கள் பங்கேற்கும் போரட்டங்களாக மாற்றினார். கிழக்கு கடற்கரையோர அனைத்து கிராமங்களிலும் இதற்கெனப் பிரச்சாரம் செய்தார். நீதிமன்ற வழக்கு, அரசுகளிடம் முறையீடு, அரசின் கொள்கை முடிவு தெரிய வேண்டுமென அறவழி இயக்கங்கள் என முன்னின்று போராடினார். ஐயா ஜெகந்நாதன் அத்துணை இயக்கங்களுக்கும் வழிகாட்டினார். 

அன்னை தனக்குப் பிடித்தமான பணியாகக் கருதியது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுதல், அவர்களுக்கு சுற்று சூழலை எப்படி சுகாதாரமாக வைத்து கொள்வது, துணிகளை துவைப்பது, எப்படி சமைப்பது போன்றவைகளைக் கற்று கொடுப்பது தான் என நூலாசிரியர் சொல்கிறார். 

அவரின் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானது நாகை மாவட்டம் வலிவலத்தில் நடந்த நில மீட்பு போராட்டம் தான். அந்த ஊரில் இருந்த உயர்சாதி பண்ணையார் தன் கிராம எல்லைக்குள்ளும், அங்கு உள்ள கோவிலிலும் பட்டியலின மக்களை அனுமதிக்க மாட்டார். கூலி உயர்வு, ஆலய நுழைவு, ஊருக்குள் நுழைவது என அம்மா நடத்திய அறவழி போராட்டம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

பின்னர் லாப்டி (உழுபவனுக்கே நிலம் சொந்தம்..LAND FOR THE TILLERS LAFTI) எனும் அமைப்பை உருவாக்கினார். அந்த இயக்கம் மூலம் 10000 பேருக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 

1968 கீழ்வெண்மணியில் நடைபெற்ற கொடூரம். இராமையாவின் குடிசையில் இருந்த 44 கூலித் தொழிலாளர்களை உயிரோடு பண்ணையார்கள் தீயிட்டு கொளுத்தினார்கள். அந்த மிருகத்தனமான செயல் நடந்த அடுத்த நாள் விடியற்காலை அம்மாவும் குன்றக்குடி அடிகளாரும் நேரடியாக களத்தில் நின்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். 

தேவனாம்பட்டினத்தில் இறால் பண்ணை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் குடிசைகளை அந்தப் பண்ணை முதலாளிகள் கொளுத்தினார்கள். அதற்கு எதிராக அறவழியில் போராடி உரிமைகளை மீட்டு எடுத்தார். காலனியாதிக்கம் செய்த கொடுமைகளை விட உலகமயமாக்கல் பன்மடங்கு அதிகமான தாக்குதலை நடத்தியுள்ளது.

சத்யா—பூமிகுமார்: 

அன்னையின் வாரிசுகள் சத்யாவும், மகன் பூமிகுமாரும் இந்த புத்தகத்தில் தங்கள் தாய் தந்தையரைப் பற்றி நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ள கடைசி கட்டுரைகள் வாசிப்பவர்கள் அத்தனை பேரையும் உலுக்கிவிடும். அதுவும் அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலை வாசித்த போது பக்கங்களைத் திருப்ப முடியாமல் கண்களில் பீறிட்டு கண்ணீர் கொட்டியது. 

திரு பூமிகுமாரின் அனுபவங்களும் அப்படியே. பள்ளியில் அவரை நோக்கி ஒருவர் நீ என்ன சாதி என வினவுகிறார். அதற்கு அவர் சிறிதும் கோபபப்டாமல் நான் பூதான சாதி என பதிலளிக்கிறார். இப்படிச் சொல்ல, சிலாகிக்க ஏராளமான விசயங்கள் அடங்கிய வரலாற்று பெட்டகம் தான் இந்த புத்தகம்.

இந்த புத்தகத்தின் இன்னொரு மிக முக்கியமான பகுதி நூலாசிரியர் ஐயா ஜெகந்நாதனிடம் பாகிஸ்தான் பிரிவினை, இந்து முஸ்லீம் ஒற்றுமை பற்றி கேட்டக் கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும். காந்திய வழியில் நின்று பிரச்சனைகளை அணுகும் அவரின் அனுபவமும், தொலைநோக்கு சிந்தனையும் அதில் வெளிப்பட்டது. அதே போல சாதிகள் பற்றிய அவரின் புரிதல், கிராம சுயராஜ்ஜியம் எப்படி சாத்தியமாகும் என்பதற்காக அவர் சொல்லும் வழிமுறைகளும்..

இப்படிப்பட்ட ஆங்கில மூல நூலை மிக எளிய மக்கள் மொழியில் மொழிபெயர்த்த திரு பி.ஆர். மகாதேவனுக்கு நன்றிகள். நூலை வெளியிட்ட குக்கூ ஐயா சிவராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

சுதந்திரத்தின் நிறம்

லாரா கோப்பா..

தமிழில் பி.ஆர். மகாதேவன்

தன்னறம் நூல்வெளி..

ரூ500/

***

சிவகுரு நடராஜன் – தஞ்சாவூரில் வசிக்கிறார். 30 ஆண்டுகளாக வாழ்வனுபவங்களையும், நூல் மதிப்புரைகளையும் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: sivaguru_1970@yahoo.com

அறிவியலின் விளையாட்டும் மானுடத்தின் இருப்பும்

0

ஆ.ஹரிகிருஷ்ணன்

மிழ் இலக்கியத்தில் அறிவியல் புனைவுக் கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் மிக சொற்பமே. இந்த தலைப்பை பேசியதும் நம் அனைவர் மனதிலும் முதலில் தோன்றும் முகம் சுஜாதா. அவர் எழுதிய அறிவியல் கதைகள் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட வேகப் புனைவுக் கதைகளாகவே இருக்கும். மேலும் நாம் பார்த்த திரைப்படங்களும் அதே தன்மையைக் கொண்டவை. டார்காவ்ஸ்கி, டென்னிஸ் வில்லினியுவ், ஜேம்ஸ் கேமரூன் போன்ற சில இயக்குனர்கள் அறிவியல் வளர்ச்சியை விட இயற்கையும் மனிதமும் முக்கியம் என்பதை தங்கள் படங்கள் மூலமாகக் கூறியிருப்பார்கள். மனித குலம் தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் அல்லது அதனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதே நேரத்தில் அதை எதிர்க்கும் முரணும் நம் மனதிற்குள் இருக்கிறது. உதாரணத்திற்கு நம் அனைவர் கையிலும் இருக்கும் ஏஐ செயலிகள். இப்படி தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இருக்கும் மனிதர்களின் வாழ்கைக் கதைளை வெறும் விண்கலங்கள் அல்லது வேற்று கிரகவாசிகள் என்று கூறாமல் அறிவியல் தொழில்நுட்பத்திற்கான தர்க்க விளக்கங்களையும் கூறி மனிதர்களுக்குள்ளான தத்துவார்த்தத்தையும் பேசும் கதைகள் தான் ரா.கிரிதரின் கண்ணிநுண் உயிர்த்தாம்பு தொகுப்பு. 

 மொத்தம் 6 சிறுகதைகளும் 4 குறுங்கதைகளும் கொண்ட இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளுக்கும் உள்ள ஒரு பொதுத்தன்மை ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அல்லது அதனைப் பயன்படுத்துபவர் ஆரம்பத்தில் அதன் மேல் உள்ள வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு அதனுள் முழுமையாக சென்று அதன் ஆதிக்கத்தில் சிக்கியும், பக்க விளைவுகளை நினைத்தும் மனிதன் தன்னிருப்பை தக்க வைத்துக்கொள்ளும் போராட்டத்தைத் தான் பேசிகிறது.

  உடம்பில் இருக்கும் உயிரணுவை வைத்து புது உறுப்பை உருவாக்குவது, கருவில் இருக்கும் சிசுவுக்கு தரக் கட்டுப்பாட்டு மையத்தில் சமூக ஒழுங்கு மதிப்பீடு நடத்துவது, கடலில் நகரும் காற்றாலை நகரம், கவிஞரை கேள்வி கேட்கும் ஏஐ என வியக்க வைக்கும் கருக்களும் அதற்கான எளிதான விளக்கங்களும் வாசிப்பவரை புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. என்னை மிகவும் ஈர்த்த கதைகள் இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது, சாம்பல் பூத்த நிலம், இயற்கைக்கு திரும்புதல். 

சாம்பல் பூத்த நிலம் எனும் கதையில் அணு ஆயுதப் போருக்கு பின் 2081 இல் உலகம் இரண்டு அரசுகளாக பிரிந்து இருக்கிறது. இயந்திரங்களும் ஹியூமன் ஆண்ட்ராயுடுகளும் நடத்தும் தர்க்க ரீதியான பயன் மதிப்பை மட்டுமே கொண்ட “மேல் அரசு”, மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு ஏற்ற சட்டங்களைக் கொண்ட ஆசிய நாடுகளின் கூட்டமைப்பை “கீழ் அரசு”. கதையின் நாயகி அபர்ணா, மேல் அரசின் மெய்நிகர் மையத்தில் தன் கருவில் இருக்கும் சிசுவின் சமூக ஒழுங்கு மதிப்பு சோதனைகள் செய்து சிசுவின் முப்பது வயது வரையிலான எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து, அதன் பயன்மதிப்பு குறைவாக இருந்தால் ஷாமன் எனும் ஹியூமனாய்டு அதை சமூகத்திலிருந்து நிராகரிக்க முனைய இயந்திரங்களின் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களுக்கு எதிராக மனிதனின் சுதந்திரத்தை நிலை நாட்ட அபர்ணா ஒரு தாயாக தன் குழந்தைக்காகப் போராடுகிறாள். அவள் பேசும் வசனங்கள் மிகவும் கூர்மையானவை. இன்று நாம் சிறு சிறு விஷயத்திற்கும் ஏஐ செயலியை நாடும் பொழுது எதிர்காலத்தில் நம் சந்ததியினர் இப்படி ஒரு நிலைமை சந்திப்பார்களோ என்ற பயமும் எழுகிறது. 

இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது எனும் கதையில் 2124ல் “கிரீன் ஹவுஸ்” எனும் கடலில் மிதக்கும் நகரத்தில் வாழும் ஆனந்த் பிறந்தது முதல் இங்கே வாழ்ந்து மிதக்கும் காற்றாலைகளால் வலசை மாறிய பறவைகளையும், கடல் வாழ் உயிரினங்களின் பாதிப்பும் கண்டு ஆற்றாமையால் அரசை எதிர்த்து குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்கிறான். இதனால் நிலம் என்றால் என்னவென்று காண வேண்டும் ஆசையால் தன் முன்னோர்கள் வாழ்ந்த முப்பந்தலுக்கு செல்ல விரும்பும் அவனது ஆசை நிறைவேறாமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டு என்பது தெரிந்தாலும் அவன் இயற்கைக்காகப் போராடுகிறான். “இயற்கையைப் பாதுகாக்க நினைக்கும் தொழில்நுட்பம் அதை மாற்றுவது மூலம் அழித்துக் கொண்டிருப்பது”, “புரிந்து கொள்ள இயலாத பிரபஞ்ச தரிசனம் ஒன்று உண்டு அதை நோக்கி நாம் இயல்பாக முன்னேறுகிறோம்” போன்ற வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது. முடிவிலா ஆற்றல் என்ற பெயரில் இயற்கையைச் சுரண்டும் பேராசைக்கு எதிராக, “முடிவிலா சக்தி மனிதனை அழிக்கும். நமக்கு முடிவில்லா சக்தியை விட முடிவில்லா மனிதத்துவம் தான் தேவை” என்ற மானுடக் குரலை ஆனந்த் ஒலிக்கிறான். 

எண் என்ப கதை கணிதத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு உள்ள செளரி எனும் விசித்திர சிறுவன் மற்றும் மஞ்சுள் பார்கவ் ஆகியோரின் மூலமாக கணிதத்தின் அழகியலைப் பேசுகிறது. கூட்டல் கழித்தல் தவிர்த்து algebra, trignometry ஆகிய மேலும் கடினமான கணிதம் பயில்வதால் என்ன பிரயோஜனம் என்ற கேள்வி நம்மில் பல பேருக்கு இருக்கும். அதற்கு மிகவும் அழகாக இதில் எழுத்தாளர் பதில் கூறியிருக்கிறார். ‘ஃப்ராக்டல்ஸ்’ (Fractals) மற்றும் வடிவங்களின் பின்னால் இருக்கும் பேரழகு, தபேலாவின் தாளக் கணக்குகளில் இருக்கும் கணிதத் தொடர்பையும் பேசுகிறார் எழுத்தாளர். 

எதிர்கால தொழில்நுட்பம், இயந்திரம், கணிதம் என்று மட்டுமல்லாமல் தத்துவார்த்த ரீதியாகவும் சில கதைகளைப் பேசுகிறது. இயற்கைக்கு திரும்புதல் எனும் கதை மொழி எவ்வாறு நமது சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்ற கருத்தை மிக நேர்த்தியாகக் கையாண்டுள்ளது. பல மொழிகளைக் கற்பது நம் சிந்தனையை வளர்க்கிறதா அல்லது நம் ஆழ் உணர்வுகளின் தீவிரத்தைக் குறைக்கிறதா என்ற விவாதத்தை டாக்டரின் கதாபாத்திரம் மூலம் ஆசிரியர் எழுப்பியுள்ளார். டாக்டர் சிவகடாட்சம் மற்றும் எழுத்தாளர் பஞ்சாபகேசன் இருவருக்குள் நடக்கும் உரையாடல்கள் வழியாக கதையின் அறிவியல் பின்னணியை மிக இயல்பாகவும் சுவாரசியமாகவும் கொண்டு போகிறார் எழுத்தாளர். இறுதியில் வரும் திருப்பம் இயற்கைக்கு திரும்புதல் எனும் தலைப்புக்கு மிக ஆழமான அதேசமயம் மிக அதிர்ச்சிகரமான அர்த்தத்தையும் தருகின்றது. 

அறிவியலின் தத்துவத்துடன் இயற்கையின் தத்துவம் சந்திக்கும் கதைதான் உயிர் தாம்பு. இயற்கையின் பரிணாம வளர்ச்சியைத் தொழில்நுட்பத்தின் மூலம் Override செய்ய முனையும் கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கும், இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ நினைக்கும் விஞ்ஞானியின் தார்மீகப் பொறுப்பிற்கும் இடையிலான முரண்பாடுதான் இக்கதையின் மையக்கரு. “இயற்கையை ஓவர்ரைட் செய்ய மனுஷனுக்கு அதிகாரம் இல்லை. அந்த செல் எந்த உறுப்பை உருவாக்கப்போகிறதுன்னு அதுக்குத் தெரிவதில்லை, ஆனால் அது தெரியாத உயிரணுக்களும் இல்லை” எனும் கூற்று அறிவியல் ஆய்வுகளுக்கு பின்னால் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்று எழுத்தாளர் கூறுகிறார். உயிர் அணுக்களின் பருவநிலை வளர்ச்சியை அவர் அம்மானை விளையாட்டுடன் ஒப்பிட்டு கூறும் இடம் தமிழ் மரபை அறிவியலோடு இணைக்கும் ஒரு உன்னத தருணம். 

ரா கிரிதரனின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் அறிவியல் கருத்துக்களை மட்டும் பேசாமல் தங்களின் தனிப்பட்ட கோபம், ஆசை, காதல், பயம், முரண் ஆகியவற்றை வெளிப்படுத்தும் எதார்த்த மனிதர்களாக இருப்பதால் வாசிப்பவரால் சுலபமாக அவர்களுடன் இணைந்துக் கொள்ள முடிகிறது. அறிவியல் கதைகள் எழுதும் போது அதற்கே உரிய தனித்துவமான பெயர்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் போது நேரும் கஷ்டங்கள் யாவும் இதில் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. சில இடங்களில் நாம் கூகுளின் உதவியை நாட வேண்டியுள்ளதே தவிர எல்லோரும் புரிந்து கொள்ளும் விதம் சுலபமாகவே எல்லா கதைகளையும் எழுதி உள்ளார். மேலும் அறிவியல் கதைகளோடு தமிழ் மரபு தத்துவம் ஆகியவற்றை இணைந்து எழுதியிருப்பது ஆசிரியரின் ஆழ்ந்த வாசிப்பும் சிந்தனையையும் காட்டுகிறது. 

  எதிர்கால உலக அரசியல், இயந்திரங்களின் ஆதிக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் குறித்த எச்சரிக்கை மணி நமக்குள் ஒலிக்க, அதே நேரத்தில் கதைகளில் வரும் அறிவியல் தகவல்களில் இருக்கும் அசாத்தியமான துல்லியமும் என்னை வியக்க வைத்தது. கதையின் எதிர்மறை அம்சம் என்று பார்த்தால் தத்துவார்த்த விவாதங்களும், அறிவியல், கணிதம் குறித்த விளக்கங்களுக்கும் ஆழ்ந்த வாசிப்பு தேவைப்படுகிறது. மேலோட்டமாக படிப்பவர்களுக்கு சற்று அயற்சியைத் தரலாம். 

 ரா. கிரிதரனின் ‘கண்ணிநுண் உயிர்த்தாம்பு’ வெறும் கற்பனைக் கதைகளின் தொகுப்பல்ல, அது மனித நாகரிகத்தின் எதிர்காலம் குறித்த பார்வையும் அவதானிப்பும். இயந்திரங்கள் மனிதனை ஆளத் தொடங்கும் காலத்திலும், மனிதத்தன்மையின் இறுதிப் புள்ளியாக எஞ்சி நிற்கப்போவது அவனது சுதந்திரமும், அறமும் தான் என்பதை இத்தொகுப்பு அழுத்தமாகப் பதிவு செய்கிறது. 

அறிவியல் புனைகதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்களும், தமிழின் புதிய இலக்கியப் போக்குகளைக் கவனிப்பவர்களும் தாராளமாக வாசிக்க வேண்டிய ஒரு மிக முக்கிய நூல் இது. ரா. கிரிதரன் தமிழ் இலக்கியத்தின் அறிவியல் புனைவு கதைத் துறைக்கு ஒரு பலமான அஸ்திவாரத்தை இப்புத்தகத்தின் மூலம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

***

ஆ.ஹரிகிருஷ்ணன் – கோவையில் தொழில் நடத்திவருகிறார். சமூக வலைதளங்கள் தன் வாசிப்பனுபவங்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். மின்னஞ்சல் முகவரி : harikrish556@gmail.com

கட்டற்ற சுதந்திரமும் அர்த்தமற்ற வெறுமையும்

0

ஆதவன் சரவணபவன்

நாவல்: இடபம் 

நூலாசிரியர்: பா கண்மணி 

பெயர் குறிப்பிடாத ஒரு பெண்ணின் கதை. இன்னொருவரின் தங்கியிராமல் சுதந்திரமாக வாழத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு முன்னகருகிறாள். தனித்து வாழும் அவளுக்கு பொழுது போக்கக் கைகொடுக்கும் பங்குச் சந்தை வியாபாரம். மேலதிக சேமிப்பை முதலிட்டு இலாபம் பார்க்க முனைகிறாள். டெக்கினிக்கல் (Technical) பண்டமென்டல் (Fundamental) பகுப்பாய்வுகள் வழி நிறுவனங்களுடைய பங்குகளின் விலைத் தளம்பலை விபரிக்கும் இடங்களில் அடிக்குறிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்தத் துறை சார்ந்த அனுபவமற்ற வாசகர்களுக்கு சிரமத்தைக் கொடுக்கலாம்.     நட்டமும் இலாபமும் மாறி மாறி தாண்டவமாடும் மாய உலகில் மன உளைச்சல் முற்றிக் கொண்டிருக்கிறது. ஆசுவாசமடைய சில ஆண்களுடன் உறவிலும் மதுவிலும் தன்னைத் தொலைத்துக் கொள்கிறாள். தேடிக்கொள்ளும் உறவுகளால் ஏற்படும் சந்தோசம் – துக்கம் என்ற இருமை நிலைகளை ஆராய்ந்தாலும் அதற்கு அப்பாற்பட்ட, சாமானியனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் கையை மீறிய நிலையில் தொழிற்படும் பங்குச் சந்தை போல அவள் தேடிக்கொள்ளும் உறவுகளும் இருக்கின்றன. இங்கே பங்குச்சந்தையென்பது ஒரு குறியீடு. மனிதன் மேல் திணிக்கப்பட்டிருக்கும் மதிப்பீடுகள் ஒழுக்கமான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவே என்று சொல்லப்படும் வியாக்கியானங்கள் ஒழுக்கம் என்பதை வரையறுப்பதில் பாரபட்சம் காட்டுகின்றன. 

பிரசித்தமான ப்னோப்டிகான் மாடல் (Panopticon model by Jeremy Bentham in 1787) சிறைச்சாலைகளுக்கும் பாடசாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் உருவாக்கப்பட்டது. அரை வட்ட வடிவமான அல்லது “ப” வடிவில் அறைகள் வரிசையாக அமைக்கப்பட்டு மையத்தில் கண்காணிப்பு கோபுரம் வைக்கப்பட்டிருக்கும். கைதிகளையும் மாணவர்களையும் உத்தியோகத்தர்களும் கண்காணிக்கும் அமைப்பு இன்றும் நடைமுறையில் இருக்கிறது. உதாரணத்துக்கு இந்த அமைப்பில் சிக்குப்படும் மனிதனின் நான் என்ற அடையாளம் அழிக்கப்படுகிறது. நான் சுதந்திரமாக எனது தனித்துவத்தை காப்பாற்ற முடியாமல் கண்காணிக்கப்படுகிறேன். இந்த இரண்டையும் செய்யும் சிறைச்சாலை தண்டனை பெற்ற கைதிகளுக்கு இருப்பது போல மிஷேல் பூக்கோ (Michel Foucault) எழுதிய ஒழுக்கமும் தண்டனையும் ஒப்பிடக் கூடியது. ஒழுக்கம் என்பது அதிகாரத்தின் கைகளால் சமூகத்தில் மறைமுகமாக கொண்டுவரப்பட்டிருக்கும் மதிப்பீடு. குடும்பம் ஒழுக்கத்தை எதிர் பார்க்கிறது. ஆணாதிக்கமோ குடும்பத்துடைய தலைவர்களின் ஆதிக்கமோ சாதீய ஆதிக்கமோ சமய ஆதிக்கமோ அவள் மீது திணிக்கப்படுவதை எதிர்க்கும் கலகக் குரலாக கட்டற்ற சுதந்திரத்தை யாசித்து அதை மெய்ப்பிக்க நடந்து கொள்ளும் அதீதமான பெண்ணாக அவளை உருவாக்கி இருக்கிறார் நாவலாசிரியர். 

நவநாகரீக உலகின் கட்டமைப்பும் முதலாளித்துவத்தின் எழிச்சியும் குடும்ப அமைப்பினை தேவையற்ற ஒன்றாக ஆக்கியிருப்பதன் ஒரு துளி அவள். உறவுகளும் குடும்ப அமைப்பும் சுமையாகத் தெரிகிறது. வேலை, நண்பர்களுடன் இரவுக் கொண்டாட்டம், வீடு, தூக்கம் மறுபடியும் காலையில் வேலை என்ற சுற்றோட்டம் வரையறுக்கப்பட்ட வாழ்வியல் முறையை உண்டாக்கி வைத்திருக்கிறது. அந்தச் சுற்றோட்டத்தைக் குழப்பும் பிரதானமான கூறு உறவுகள். உறவுகளால் கட்டமைக்கப்படும் குடும்பம் என்ற தொகுப்பு. குடும்பம் என்ற தொகுப்பில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பழமைவாதம் அந்தக் கட்டுப்பாடுகளை அதிகமாக பெண்கள் மேல் திணித்து வைத்திருக்கிறது. பெண்ணியம் சார்ந்த முன்னெடுப்புகள் இந்தக் கட்டுப்பாடுகளை உடைப்பது மட்டுமல்ல அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்த முயல்கிறது.  

படித்த, உலகம் தெரிந்த வேலை செய்யும் பெண் இவள். குடும்ப வாழ்க்கை தனக்கான சுயத்தைத் தொலைக்கும் கட்டமைப்பு என்ற புரிதலில் தனியாக வாழப் பழகிவிடுகிறாள். அந்தக் கட்டமைப்புக்குள் உழலும் பெண்களை கையாலாகாதவர்களாக பார்க்கிறாள். சம்பிரதாயங்களும் கலாச்சார நிகழ்வுகளும் பண்பாட்டு ஆடையான சேலையும் தொந்தரவாக தெரிகின்றன. சீனி மிதமிஞ்சிய பொங்கல் வியாதியைக் கொண்டுவரும் என்ற தெளிவுள்ளவள். யோகாவும் உடற்பயிற்சியும் செய்பவள். மதுவைச் சுவைப்பதையும் புகைப்பதையும் மன அழுத்தத்தைப் போக்க என்று கற்பிதம் செய்பவள். முரண்களின் தொகுப்பு அவள். பெண்ணுக்கும் கட்டற்ற சுதந்திரம் வேண்டும். சிறுவர்களின் கூச்சல் கூட அவளின் சுதந்திரத்தைப் பாதிக்கிறது. தெரிவுகள் அவளுடையதாக வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையில் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறாள். உடம்புக்கான தேவை உணவும் காமமும். விரும்பியபோது கிடைப்பதை நியாயப்படுத்தும் போது கலாச்சாரம் போலியான துதிபாடலாகத் தோன்றுகிறது. பங்குச்சந்தையில் கிடைக்கும் பெரு வெற்றியில் தனது வாழ்க்கையில் தன்னிறைவை அடைந்த களிப்பில் இன்னும் வீறாப்பாக தன்னை வெளிப்படுத்துகிறாள். அந்தப் பெரு வெற்றியும் நிதிநிலையில் மேன்மையும் திடமான தனது தனித்த வாழ்வின் வெற்றியாக மாற்றிப் பார்க்கும்போது எங்கிருந்தோ வரும் வெறுமை ஆட்கொள்கிறது. இவையெல்லாம் வெளிப்படுத்த முடியாத வெறுமையில் வெறுப்பைக் கொட்டும் நிலைக்கு அவளையறியாமல் வந்துசேருவதை இந்தப் புதினம் கேள்விகளுடன் எம்முன் வைக்கிறது. தனது தேவைகள் எல்லாம் நிறைவேற்றும் அனைத்தும் இருந்தும் வெறுமை ஆட்க்கொள்கிறது. அன்பும் பாசமும் தன்னைச் சுற்றி இல்லாமையை உணரும் போதும் விட்டுக்கொடுப்புகளை மதிக்காமல் அதை இயலாமையின் வெளிப்பாடாக நினைத்தவளுக்கு இறுதியில் அதுவரை சாதித்துப் பெற்ற சுதந்திரம் பொருளற்றதாக ஆகிவிடுகிறது. பிறழ்வு நிலைக்கு தன்னை அறியாமலே வந்திருக்கும் பெண் இனி வரப்போகும் தலைமுறைக்கான எச்சரிக்கை.  

மேலைத்தேச வளர்ந்த நாடுகளில் இருக்கும் தனித்து வாழ்வது என்ற முறைமை இன்னும் பெருமளவில் கீழைத்தேசங்களில் உள்வாங்கப்படவில்லை. முதலாளித்துவம் காட்டும் வசதிகள், வாய்ப்புக்கள் நம்பிக்கையைக் கொடுக்கின்றன. குடும்பம் சம்பாத்தியத்தை உறிஞ்சும் இயந்திரம். தனி மனிதனாக வாழும்போது மிதமிஞ்சிய செலவுகளுக்கும் செழிப்பான வாழ்க்கை முறைக்கும் அவன் நகர்கிறான். வளர்ந்த நாகரீகம் என்பது மேலைத்தேசத்து வாழ்க்கைமுறையைக் கைக்கொள்வது என்ற சிந்தனை பரவலாக இருக்கின்றது. அதை நோக்கிய ஓட்டம் மெதுவடைவதற்கு கீழைத்தேசங்களின் பண்பாட்டுக் கூறுகள் வேகத்தடைகளாக இருக்கின்றன. ஆசிரியர் சில இடங்களில் இந்த விடயத்தைத் தொட்டுக் காட்டுகிறார். அதிலிருந்து திமிறி எழுவதால் அவள் அதீதமான பெண்ணாக இருக்கிறாள். இருக்கும் காலத்தில் இன்னொருவரின் தங்கியிராமல் சுதந்திரமாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று வெளிப்படுத்தும் ஆசிரியர் அதன் போக்கு அர்த்தமற்றதாகவும் மனதளவில் தனித்து நிற்கையில் துயர் நிறைந்ததாகவும் காட்டுகிறார். தனித்திருத்தல் சுதந்திரம். கட்டற்ற சுதந்திரம் மனதுக்கு சுகமளிக்கிறது. தனித்திருத்தல் வெறுமையைக் கொடுக்கிறது. வெறுமை துயர் நிறைந்தது. எதைத் தெரிவு செய்வது என்பதில் முடிவெடுக்க வேண்டிய கடைப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு. 

***

ஆதவன் சரவணபவன் – யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் இருபது வருடங்களாக குடும்பத்துடன் வசித்துவருகிறார். 2021 இல் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் இவரின் படைப்புகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை குல்லமடை, ஒற்றை மைனா ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: athavannithun12@gmail.com

க.நா.சு: இலக்கியத்துக்கு அப்பால்

0

ஶ்ரீநிவாச கோபாலன்

.நா.சு.வுடன் முரண்படுபவர்கள் அவர் இலக்கியத்தை மட்டுமே முக்கியமாகக் கருதி செயல்பட்டார் என்பதை அவர்மீதான விமர்சனமாகச் சொல்வார்கள். இந்தக் விமர்சனம் எழுவதற்கான வித்து 1945ஆம் ஆண்டில் விழுந்தது. ‘தினசரி’ பத்திரிகையில் எழுதிவந்த தொடரில் ‘உபயோகமான இலக்கிய’த்தை நிராகரித்து க.நா.சு. ஒரு கட்டுரை எழுதினார். அக் கட்டுரை தன்னைச் சீண்டுவதாகக் கருதினார்  ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம். உடனே, க.நா.சு.வுக்கு மறுப்பு எழுதும் வேலையைப் புதுமைப்பித்தனுக்குக் கொடுத்தார். புதுமைப்பித்தனும் இதற்குமேல் எழுதுவதற்கு ஒன்றுமில்லை எனும் அளவுக்கு ஒரு கட்டுரையை எழுதி ஆசிரியர் இட்ட பணியை நிறைவேற்றினார்.[1]

இந்த விவாதத்தில் க.நா.சு., புதுமைப்பித்தன் இருவரின் கட்டுரைகளையும் கண்டு, புனைவெழுத்து அல்லாத பிற எழுத்துகளைக் க.நா.சு. புறந்தள்ளுகிறார் என்றும் புதுமைப்பித்தன் அரசியல், விஞ்ஞானம், வரலாறு போன்ற துறைகளிலும் அக்கறை கொண்டு அத்துறைகளிலும் புதிய நூல்கள் எழுவதை விரும்புகிறார் என்றும் சிலர் கருதுகிறார்கள். இந்த விவகாரத்தினால் க.நா.சு.வுக்கு ‘இலக்கியத் தூய்மைவாதி’ என்ற பெயரும் கிடைத்திருக்கிறது.

தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம் என்று தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த க.நா.சு., பிற துறைகளிலும் அக்கறை காட்டவில்லை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. இதற்கு மாறான கருத்தை வெளியிட்டுவந்தவர் க.நா.சு.வை நேரிலும் எழுத்திலும் நன்கறிந்து, அவரைப் பின்தொடர்ந்து செயல்பட்ட விமர்சகர் வெங்கட் சாமிநாதன். க.நா.சு இலக்கியம் மட்டுமே முக்கியம் எனத் தன் பார்வைக்கு திரையிட்டுக்கொண்டவர் அல்ல என்பதை வெ.சா. மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார். க.நா.சு என்கிற ஆளுமையின் ஆதார ஸ்ருதி இலக்கியம் மட்டுமல்ல, எல்லா கலைத் துறைகளும் சிந்தனைத் துறைகளும்தான் என்கிறார்.

ஓவியம், சிற்பம், திரை, நாடகம், நடனம், வரலாறு, நாட்டாரியல், இதழியல், பதிப்பு எனப் பல துறைகளிலும் பரந்துள்ள க.நா.சு.வின் பார்வை வெ.சா.வின் கூற்றுச் சான்று பகர்கின்றன.

வரலாறு

இலக்கியத்துக்கு அடுத்தபடியாக க.நா.சு. மிகுந்த ஈடுபாடு காட்டிய துறை வரலாறு. “இலக்கியம் என்னுடைய முதல் ஆர்வம் என்றால் சரித்திரம் என்னுடைய இரண்டாவது ஆர்வம்” என்றும் நாகரிகம், இலக்கியம், கலை, பழக்க வழக்கங்கள், விஞ்ஞான வளர்ச்சி பற்றிய சரித்திர நூல்களைப் படிப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்றும் கூறியிருக்கிறார்.

க.நா.சு. நேரடியாகத் தமிழில் எழுதி வெளியான முதல் புத்தகமே ‘கவி ரவீந்திரநாத் தாகூர்’ (1941) என்ற வாழ்க்கை வரலாற்று நூல்.[2] ஹெலன் கெல்லரின் ‘என் கதை’ (1955), தோரோவின் ‘வால்டன் எளிய வாழ்க்கை’ (1956), ‘ஆல்பர்ட் ஸ்வைட்ஸரின் சுயசரிதம்’ (1958) ஆகிய தன்வரலாற்று நூல்களை ஐம்பதுகளிலேயே க.நா.சு. மொழிபெயர்த்திருக்கிறார். ‘தினமணி கதிர்’ இதழில் எழுதிய ‘இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள்’ என்ற தொடர் வெவ்வேறு துறைகளில் முக்கியப் பங்களிப்பாற்றிய தலைவர்கள், கலைஞர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் எடுத்துரைப்பதாக அமைந்தது.

மனிதகுல சிந்தனையின் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் நோக்கில் டி. எஸ். சொக்கலிங்கத்தின் ‘நவசக்தி’ பத்திரிகையில் எழுதிய கட்டுரைத் தொடர் ‘மனிதகுல சிந்தனை வளம்’. நாற்பதுகளில் எழுதப்பட்ட இந்தத் தொடர் 1966இல் நூலாக வெளியானது. ‘குங்குமம்’ இதழில் தானறிந்த பல எழுத்தாளர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ என்ற நூலாக வெளியானது. புதுமைப்பித்தனுடன் நெருங்கிப் பழகிய ‘மணிக்கொடி’ எழுத்தாளரான கி.ரா. என்கிற கி. ராமச்சந்திரன் பற்றி எழுதப்பட்ட ஒரே கட்டுரை க.நா.சு. எழுதியதுதான்.

இந்தியாவில் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் வரலாற்றை விவரிக்கும் க.நா.சு.வின் ஆங்கில நூல் The Catholic Community in India (1970). திருக்குறள் பற்றி Tiruvalluvar and his Tirukkural (1986) என்ற ஆய்வையும் எழுதிய க.நா.சு., பின்னர் ‘வள்ளுவரும் தாமஸும்’ என்ற வரலாற்றுப் புனைகதையையும் ‘ஞானரதம்’ இதழில் எழுதினார். அத்தொடர் ‘தாமஸ் வந்தார்’ (1988) என்ற புதுத்தலைப்பைப் பெற்று நூலானது. “மஹிஞ்சிதரேயைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதுபற்றிய நாவல் ஒன்று எழுதினால் என்ன” எனத் தோன்றியதால் உருவான நாவல் ‘மாதவி’. 1947 வாக்கில் ‘சந்திரோதயம்’ பத்திரிகையில் தொடராக வெளியிடப்பட்ட இந்த நாவல், பல வருடங்கள் கழித்து நூலாக்கம் பெற்று, ஒரே பதிப்புடன் மறைந்துவிட்டது.

க.நா.சு. எழுதிவைத்த வரலாற்று நூல்கள் சில இன்னும் அச்சேறாமலே உள்ளன. தஞ்சையை ஆண்ட மன்னர் ராஜா சரபோஜியைப் பற்றிய வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் க.நா.சு.வால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. அவை கையெழுத்துப்படியாகத் தங்கிவிட்டன.

நாட்டாரியல்

க.நா.சு. இளமைப் பருவத்திலேயே நாட்டாரியலில் விருப்பம் கொண்டிருக்கிறார். 1926ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே நாட்டுப்புறக் கதைகளை எழுதிவந்திருக்கிறார்.[3] அப்போதே அவர் எழுதிய தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆங்கிலத் தொகுப்பில் இடம்பெற்றதாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது[4]. க.நா.சு.வின் அந்தப் பிராயத்து எழுத்துகள் இனி கிடைப்பது அரிது. ஆனால் பிற்காலத்தில் ‘இலக்கிய வட்டம்’ என்ற தனது சிறுபத்திரிகையில் எழுதிய மதிப்புரைகள் நாட்டாரியலில் அவரது ஈடுபாட்டை நன்கு புலப்படுத்துகின்றன. நா. வானமாமலை வெளியிட்ட நாட்டார் பாடல் தொகுப்புகளைச் சிறப்பித்துக் கூறும் இரண்டு மதிப்புரைகளும் குறிப்பிடத்தக்கவை. ‘தமிழர் நாட்டுப்பாடல்கள்’ என்ற பெருநூலுக்கு எழுதிய மதிப்புரை இவ்வாறு தொடங்குகிறது: “ஏதாவது ஒரு பிராந்தியத்தில் வழக்கிலுள்ள பாடல்களைப் பிரதியெடுத்து வெளியிடுவது என்பது மிகவும் அவசியமான ஒரு காரியம். நாட்டு மக்களின் மனப்போக்கையும் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் நாட்டுப் பாடல்கள் தமிழ்நாட்டில் பலவும் உண்டு.”[5]

‘தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்ற சிறு தொகுப்பைப் பற்றிய மற்றொரு மதிப்புரையில்[6] நாட்டார் பாடல்கள் பற்றிய க.நா.சு.வின் முக்கியமான அவதானிப்புகள் உள்ளன. அப்பாடல்களைத் திரட்டுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய கடும் உழைப்பையும் அவர்களின் சிரமங்களையும் க.நா.சு. நன்கு உணர்ந்திருப்பதை இந்த மதிப்புரை காட்டுகிறது. நாட்டுப் பாடல்களைத் தொகுக்க முற்படும் சிலர் தங்கள் கைச்சரக்கையும் புகுத்திவிடும் வழக்கத்தை விமர்சித்து, நா. வானமாமலையின் தொகுப்பு அந்தப் போக்கிற்கு மாறாகவும் அவரது சிரத்தையான தேடலின் வெளிப்பாடாகவும் அமைந்திருப்பதைப் பாராட்டுகிறார். குறிப்பாக, அறுபதுகளில் தளர்நடை பயிலத் தொடங்கிய தமிழ்ப் புதுக்கவிதைக்கு இந்த நாட்டுப் பாடல்களை முன்மாதிரியாகவும் காண்கிறார்.

இரண்டு மதிப்புரைகளிலும் தமிழ்நாட்டில் பல வட்டாரங்களிலும் வழங்குகிற பாடல்கள் தொகுத்து நூலாக்கம் பெறவேண்டும் என்று தூண்டுகிறார்.

தமிழக மாவட்டங்களின் வரலாற்றை விவரிக்கும் வகையில் சோமலெ எழுதிய நூல்களை மதிப்பிடும்போது, நாட்டாரியலில் ஓர் உறுப்பான வட்டார வழக்குகளில் க.நா.சு. கொண்டிருந்த கவனமும் தெரிகிறது. “எனக்குத் தெரிந்த மாவட்டமான, என்னைப் பற்றிய வரையில் விரும்பி உட்கார்ந்து படித்த தஞ்சாவூர் மாவட்டத்தைப் பற்றிய வரையில் என் கண்ணில் தவறான தகவல் ஒன்றுகூடத் தேடியும், காணவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மொழி வழக்கிலுள்ள சில பிரயோகங்களைக்கூட எடுத்துச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.”[7] ஆர். ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ வெளியானவுடன் அதைத் தமிழின் ‘முதல் வட்டார நாவல்’ எனக் குறிப்பிட்டதிலும் வட்டார வழக்குகள் குறித்து க.நா.சு. கொண்டிருந்த ஈடுபாட்டை உணரலாம்.

நாடகம்

க.நா.சு. எழுதி அச்சில் வெளியான முதல் நூலான ‘பொம்மையா, மனைவியா?’ (1939) இப்சன் நாடகத்தின் மொழிபெயர்ப்பு. க.நா.சு. முதலில் பிறர் நூலுக்கு எழுதிய முன்னுரை ந. சிதம்பரசுப்பிரமணியனின் ‘ஊர்வசி’ (1944) நாடகத் தொகுப்புக்கு எழுதியதுதான். இவ்விரு நூல்களின் முன்னுரைகளிலும் நாடகங்கள் குறித்து தன் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். நாடகம் மேடையேறுவதற்கான அம்சங்களுடன் இருப்பதைவிட, இலக்கியப் பிரதியாக உருவம் பெற்றிருக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நோக்கில்தான் ‘நல்லவர்’, ‘ஊதாரி’ போன்ற நாடகங்களை எழுதினார்; பல நாடகங்களை மொழிபெயர்த்தார்.

கு.ப.ரா.வின் ‘அகலியை’[8] (1964), புரசு பாலகிருஷ்ணனின் ‘கிருஷ்ணகுமாரி’[9] (1964) ஆகிய நாடக நூல்களுக்கு எழுதிய மதிப்புரைகளில் அவை கதைகளாக மட்டுமே உருப்பெற்றிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘நாடகங்கள்’ என்ற சிறிய கட்டுரையில் தமிழ் நாடகங்களுக்கு அடிப்படையாக அமையவேண்டியவை அம்சங்கள் பற்றி எழுதியுள்ளார். தரமான சிறுகதைகள், புதுக்கவிதைகள் தோன்றுவதற்கான சூழலை எழுத்தாளர்களே உருவாக்கியது போல நாடகங்கள் விஷயத்திலும் முயல வேண்டும் என்கிறார். சிறுகதைக்கு புதுமைப்பித்தன் என்ற ஒரு மேதை தோன்றியதைப் போல, தமிழில் நாடக இலக்கியம் தழைப்பதற்கும் ஒரு மேதையின் தோற்றம் போதும் என்பது அவர் நம்பிக்கை.

தமிழ் நாடக வரலாற்றை விவரித்து எழுதப்பட்ட க.நா.சு.வின் ஆங்கிலக் கட்டுரை[10] குறிப்பிடத்தக்கது. 1967இல் வெளியான இந்தக் கட்டுரை சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் காணும் நாடகக் கூறுகள், கோயில் நாடகங்கள், நாடக சபாக்கள், திராவிட இயக்கப் பிரச்சார நாடகங்கள், வேம்பம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்ட முன்னோடிகளின் பங்களிப்புகள் எனப் பல புள்ளிகளைத் தொட்டுச் செல்கிறது. அந்தக் கட்டுரை தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் அன்றைய சூழலையும் சாடுகிறது. சோ. ராமசாமியின் நாடகங்களை நகைச்சுவைத் துணுக்குகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுபவை என எழுதும் க.நா.சு. அவற்றின் தயாரிப்புத் தரமும் மோசமானது என்கிறார். புதிய சோதனை முயற்சிகளுக்கு இடமில்லாத அளவுக்குத் தரமற்ற நாடகங்களுக்குப் பழகிப்போன ரசிகர்களையும் விமர்சிக்கிறார்.

சினிமா

க.நா.சு. சிறிதுகாலம் திரைப்படத் தணிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். அந்தக் காலத்தில் பல திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தில்லியில் வெங்கட் சாமிநாதனுடன் சேர்ந்து உலகத் திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் க.நா.சு.வை நடிக்க வைக்க முயற்சி நடந்திருக்கிறது. அவர் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை.[11]

திரைத்துறையுடன் இத்தகு உறவுகள் இருந்தாலும் க.நா.சு. சினிமா பற்றிய தனது அபிப்பிராயங்களை அதிகமாக வெளியிட்டதில்லை. 

இந்திய மொழிகளில் சினிமாவாக எடுக்கப்பட்ட நாவல்கள் பற்றிப் பேசும் கட்டுரை ‘இந்திய இலக்கியம்’ நூலில் உள்ளது. சிறந்த படைப்புகள் சினிமாவாக வந்துதும் உடனே இலக்கிய அந்தஸ்து பெற்றுவிடுவது பற்றியும், சினிமாவாக எடுக்கப்படாத சிறந்த படைப்புகளும் படைப்பாளிகளும் கவனம் பெறாதிருப்பது பற்றியும் க.நா.சு. கவலைப்படுகிறார். ஒரு சினிமாக்காரரை முதல்வராக்கிய தமிழகத்தின் நிலையையும் பற்றியும் பரிகசிக்கிறார்.

எண்பதுகளில் ‘குங்குமம்’ பத்திரிகை வெளியிட்ட சினிமா சிறப்பிதழில் க.நா.சு. எழுதிய ‘என். எஸ். கிருஷ்ணன் நகைச்சுவையில் சமுதாய நோக்கு’ என்ற கட்டுரை முக்கியமானது. என். எஸ். கிருஷ்ணனின் நடிப்பில் ஹாஸ்யத்தை மீறிய கனமும் ஆழமும் இருப்பதாகச் சொல்லும் க.நா.சு., சிதம்பரம் அருகில் நடந்த கிந்தனார் கதா காலட்சேபத்தைக் கேட்டது பற்றி நினைவுகூர்கிறார். அந்த நிகழ்ச்சி, நகைச்சுவையாகச் சொல்லப்பட்டது போலத் தோன்றினாலும் எவ்வளவு முக்கியமான விஷயம் எனச் சிந்திக்க வைத்தது என்கிறார். கலைவாணரை ‘அசாதாரணமான மேதை’யாகப் போற்றும் இந்தக் கட்டுரை, அவரது சமூதாய நோக்கையும் தன்மான உணர்வையும் எடுத்துக்காட்டுகிறது.[12]

சினிமாவுக்கும் க.நா.சு.வுக்குமான தொடர்பில் முக்கியமாகச் சொல்லவேண்டிய செய்தி ஜான் ஆபிரகாமின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ பற்றியது. 1977இல் நடந்த 25வது தேசியத் திரைப்பட விழாவில் அந்தப் படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வுசெய்யப்பட்டது. அந்த ஆண்டில் திரைப்பட விழாவுக்கான நடுவர் குழுவில் க.நா.சு.வும் இடம்பெற்றிருந்தார். ‘அக்ரஹாரத்தில் கழுதை’க்கு அங்கீகாரம் பெற்றதில் அவரது பங்கும் குறிப்பிடத்தக்கது.

இசை

“நான் செவிடன். அதாவது சங்கீதத்தைப் பற்றிய வரையில் நான் செவிடன். அரைச்செவிடு, கால்செவிடு கூட இல்லை; முழுச்செவிடுதான்”[13] என்று அறிவித்த க.நா.சு. இசை தொடர்பாக எழுதிய கட்டுரைகளும் சில உண்டு.

கல்கி எழுதிய கதைகளை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் நிராகரித்த க.நா.சு., தமிழிசை பற்றி அவர் எழுதிய கட்டுரைகளை அமோகமாகப் பாராட்டி எழுதுகிறார். ‘சங்கீத யோகம்’ என்ற தலைப்பில் வெளியான கல்கியின் தமிழிசை குறித்த விவாதக் கட்டுரைகள் பற்றி ‘படித்திருக்கிறீர்களா?’ தொடரின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

தியாகப் பிரும்மம், ஸ்வாதித் திருநாள், கோபாலகிருஷ்ண பாரதியார், வேதநாயகம் பிள்ளை ஆகியோர் பற்றி ‘தினமணி கதிர்’ தொடரில் எழுதினார். தமிழ் நாவல் முன்னோடியாக வேதநாயகம் பிள்ளை பற்றி எழுதிய க.நா.சு., தமிழிசையில் அவரது பங்களிப்பையும் தனிக் கட்டுரையாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘சங்கீதப் போராட்டம்’ என்ற க.நா.சு.வின் கதை மௌனி சொன்ன விஷயத்தை ஆதாரமாகக் கொண்டது. தனக்குப் பிரியமான வயலின்கார நண்பர் ஒருவரின் மறைவுக்குப் பிறகு, வேறு யாருடைய இசையையும் தன்னைத் திருப்திப்படுத்த முடியாது என்று சங்கீதம் கேட்பதையே நிறுத்திவிட்டாராம் மௌனி. இதையே கதைக்கருவாகக் கொண்டு எழுதப்பட்டதுதான் க.நா.சு.வுன் கதை.[14]

நடனம்

ருக்மிணிதேவி அருண்டேலுக்கு க.நா.சு. ‘ஞானரதம்’ இதழில் எழுதிய அஞ்சலிக் குறிப்பு நடனக்கலையுடன் அவருக்கு இருந்த பரிச்சயத்தைக் காட்டுவது. இந்த அஞ்சலிக் குறிப்பைப் படித்த வெங்கட் சாமிநாதன் க.நா.சு.வின் துல்லியமான மதிப்பீட்டை எண்ணி மலைத்துப்போய்விட்டாராம். “இவ்வளவு சுருக்கமாக, தீர்க்கமாக, பூரணமாக, அவர் சொல்லியிருப்பது மலைப்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. இவ்வளவுக்கும் இவ்விரண்டு குறிப்புகளும், அப்போதைய அவசரத்தில் ஒரு பத்திரிகை நடத்தும், அச்சுக்கு அனுப்பும் நிர்பந்தத்தில் நேரக்குறைவில் எழுதியவை என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.”[15]

நடனக்கலை மீது க.நா.சு. கொண்டிருந்த ஈடுபாடு அவரது புனைவுகளிலும் வெளிப்பட்டுள்ளது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு அவரது ‘ஆடரங்கு’ சிறுகதை. ஒரு சிறுமியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வை அவளது பார்வையிலேயே மிக நுட்பமாக விவரிக்கும் இக்கதை, நடனக்கலையை அவர் எவ்வளவு தூரம் அகவயமான அனுபவமாக உள்வாங்கியிருந்தார் என்பதைப் புலப்படுத்துகிறது.[16] இக்கதையை அவரே ‘The Debut’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார். இது சிறந்த இந்தியச் சிறுகதைகளில் ஒன்றாக வெவ்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது.

நவீனப் புனைவுகளில் மட்டுமின்றி, பண்டைய இலக்கியங்களில் உள்ள நடனக் கூறுகளையும் அவர் நுட்பமாக ஆராய்ந்துள்ளார். சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையொன்றில், ஆய்ச்சியர் குரவை பகுதியைத் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த கவிதைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் க.நா.சு., நடனக்கலையை இளங்கோவடிகள் நுட்பமாகக் கையாண்டிருக்கும் விதத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.[17]

ஓவியம், சிற்பம்

இலக்கியத்தில் இந்தியத்தன்மையை வலியுறுத்திய க.நா.சு., ஓவியத்திலும் அதைத்தான் விரும்பினார். ஓவியக்கலை பற்றிய தேனுகாவின் ‘வண்ணங்கள் வடிவங்கள்’ (1987) என்ற நூல் குறித்து க.நா.சு. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ‘தீபம்’ வெளியிட்ட கட்டுரையில், ஓவியக்கலை பற்றி எழுதுபவர்கள் அயல்நாட்டுத் தாக்கம் இல்லாமல், இந்திய மண்ணில் ஊன்றிய பார்வையுடன், நம் நாட்டுக் கலைஞர்கள் பற்றி எழுதவேண்டும் என்கிறார். காவிரிக்கரையில் அமைந்திருக்கும் கும்பகோணம் கலைக் கல்லூரி கலைஞர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது என தேனுகா கூறுவதை க.நா.சு.வும் ஆமோதிக்கிறார். ஓவியம், சிற்பம் குறித்த நல்ல நூல்களுக்கு இருக்கும் பஞ்சம் பற்றிக் குறிப்பிட்டு, தேனுகா ஒரு கலைஞரைப் பற்றி தனிநூல் எழுத முன்வர வேண்டும் என்கிறார்.[18]

ரவிவர்மா பற்றிய க.நா.சு.வின் கட்டுரை ‘இந்திய மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்கள்’ தொடரில் இடம்பெற்றது. அதில், கலைகள் மக்களை எட்ட வேண்டும் என்ற சித்தாந்தத்திற்கு ஏற்ப, சாமானிய மக்களை எட்டக்கூடிய சித்திரங்களை முதன்முதலில் தீட்டியவர் ரவிவர்மா என்கிறார்.

தமிழகக் கோயில் சிற்பங்கள் பற்றிய க.நா.சு.வின் ஆங்கிலக் கட்டுரையும் சிறப்பாகச் சொல்லவேண்டியது. ஆஸ்திரேலியப் பத்திரிகையொன்றில் வெளியான அந்தக் கட்டுரை உன்னதமான சிற்பங்களைத் தாங்கி நிற்கும் பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களைப் பற்றிப் பேசுகிறது. மாமல்லபுரம், மயிலாப்பூர், காஞ்சிபுரம், கும்பகோணம், மதுரை, சுசீந்திரம் ஆகிய இடங்களில் உள்ள கோயில் சிற்பங்களை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை அற்புதமான புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளது.[19]

இந்திய ஓவியங்கள், சிற்பங்களின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய ஆனந்த குமாரஸ்வாமியை ஈடிணையில்லாதவர் என்று வானளாவப் புகழும் க.நா.சு[20], புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி உள்ளிட்ட தன் இலக்கிய நண்பர்களோடு ஆனந்த குமாரஸ்வாமியின் பணிகளைப் பற்றி உரையாடியிருக்கிறார்.[21] ‘இலக்கிய வட்டம்’ பத்திரிகையை நடத்தியபோது அவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிட்டார்.[22]

தொகுப்பும் பதிப்பும்

செம்மையான பதிப்புகளை உருவாக்குவதில் க.நா.சு.வுக்கு இருந்த ஈடுபாட்டை அவரது எழுத்துகளில் பரக்கக் காணலாம். கம்பராமாயணப் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்த கருத்திருமனின் ‘கம்பர் – கவியும் கருத்தும்’ நூலுக்கான மதிப்புரை முக்கியமானது. சுலபமாக வாசிப்பதற்கு ஏற்ற அச்சாக்கம், கதைத் தொடர்ச்சியைத் தக்கவைக்கும் தொகுப்பு முறை, விமர்சனபூர்வமான முன்னுரை, பதிப்பாசிரியர் குறிப்புகள் என நூலின் சிறப்புகளை விதந்தோதுகிறார்.[23]

உ.வே.சா.வின் ‘தியாகராச விலாச’த்திற்கு எதிர்வீட்டில் வசித்தபோது எழுதப்பட்ட க.நா.சு.வின் கட்டுரையொன்று ‘கலைமகள்’ இதழில் வெளியானது. ஐயர் பதிப்பின் அருமையை உணர்ந்து, அவரது பணிகளைப் பற்றி ஜுரவேகத்தில் எழுதி முடித்து அனுப்பிய கட்டுரை அது.[24] “மேல்நாட்டுப் பதிப்பு முறை பாணிகள் அறியாத ஒருவர், எப்படியோ தமிழுக்கும் அற்புதமான பல பதிப்புகளைத் தந்துகொண்டிருந்தார். அப்பதிப்புகளின் தரத்தை எட்டிய அளவில், அவற்றுடன் ஒப்பிடக்கூடியனவாக அதற்குப் பின்னர் இதுவரை பதிப்புகள் வந்ததில்லை…”[25] என உ.வே.சா.வின் பதிப்புகளைப் பார்த்து வியக்கிறார்.

தமிழ்ப் பதிப்புலகில் நிகழ்ந்த பெரும் சாதனையாகிய ‘கலைக்களஞ்சியம்’ பற்றி ஆழமான பார்வைகளை முன்வைத்தவர் க.நா.சு. கலைக்களஞ்சிய உருவாக்கத்தை தொடக்கம் முதல் இறுதிவரை கவனித்து அதுபற்றித் தொடர்ந்து எழுதிவந்தார். ஆங்கிலக் கட்டுரைகளிலும் தமிழில் நிகழும் அப்பெரும்பணி குறித்துப் பதிவுசெய்தார்.[26]

செம்பதிப்புகளை மெச்சியதைப்போல், பிழை மலிந்த பதிப்புகள் வரும்போது அதைக் கடிந்தும் எழுதினார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தில் வடமொழிச் சொற்களை நீக்கி, ‘தூய தமிழ்ச் சொற்கள்’ பெய்து வெளியிட்டபோது, ‘இலக்கிய வட்ட’த்தில் அதனைக் கண்டித்து சிறுகுறிப்பை எழுதினார். உடனே கழகப் பத்திரிகையான ‘செந்தமிழ்ச் செல்வி’ அவர்மீது வசைமாரி பொழிந்து ஓய்ந்தது.[27] 

கட்டுரை நூல்களில் பொருத்தமான பிற்சேர்க்கைகள் அமைந்திருக்க வேண்டும் என்பதில் க.நா.சு. தனிக்கவனம் கொண்டிருந்தார். ‘இலக்கிய விசாரம்’ முதல் ‘கலை நுட்பங்கள்’ வரை அவரது பெரும்பாலான கட்டுரைத் தொகுப்புகளில் விரிவான பொருளடவைச் சேர்த்திருக்கிறார். (இன்று கிடைக்கும் மறுஅச்சுப் பிரதிகளில் பொருளடைவைக் காண்பது அரிது.) ‘இலக்கிய விசாரம்’ (1959) தான் க.நா.சு.வின் முதல் விமர்சன நூல். அந்தச் சிறிய 80 பக்க நூலில் அயல்நாட்டு எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ள நூல்கள், கலைச்சொற்கள் பற்றிய விளக்கங்களும் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியில் பொருள் அகராதியும் உள்ளது.

இத்தகு இணைப்புகள் நூல்களின் பயன்பாட்டை எளிமையாக்கும் என எண்ணினார். பிறர் எழுதிய நல்ல நூல்களிலும் தக்க இணைப்புகள் இருக்க வேண்டும் என விரும்பினார். சோமலெ எழுதிய மாவட்ட வரிசை நூல்கள் பற்றி எழுதும்போது, இந்த நூல்வரிசை நிறைவுறும்போது அகரவரிசை அட்டவணையுடன் ஓர் அனுபந்தம் தேவை எனப் பரிந்துரைக்கிறார். பிரம்மராஜனின் எஸ்ரா பவுண்ட் பற்றிய நூலில், ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், நூல் பட்டியல் போன்ற பிற்சேர்க்கைகளைப் பாராட்டிவிட்டு, பொருள் அகராதியும் இருந்திருக்கலாம் என்கிறார்.[28]

பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி முதலான நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளின் படைப்புகளுக்குச் சிறப்பான பதிப்புகளை வெளியிடுவதில் அவர் கொண்டிருந்த அக்கறையும் தனித்துவமானது. 1940இல் எழுதிய ஒரு கட்டுரையில் பாரதியார் பாடல்களுக்குத் திருத்தமான, பாடவேறுபாடுகளும் விளக்கங்களும் கொண்ட பதிப்பு தேவை என்கிறார்.[29] பாரதியின் கவிதைகளில் தனிச் சிறப்பு மிக்க படைப்பான ‘காட்சி’ என்ற காவியத்தைத் தாமே பதிப்பிக்கவும் முயன்றார். முந்தைய பதிப்புகளில் உள்ள பிழைகளைக் கவனித்து, பாரதியின் கையெழுத்துப்படியையே மூலபாடமாகக் கொண்டு ‘காட்சி’யைப் பதிப்பிக்கத் திட்டமிட்டார். இதற்காக, அப்போது சென்னை அருங்காட்சியகத்தில் இருந்த பாரதியின் கையெழுத்துப்படியின் நகலைப் பெற்றுவந்து பதிப்புப் பணியில் இறங்கினார். ஆனால் அந்தப் பதிப்பை வெளியிடுவதற்குக் காலம் அனுமதிக்கவில்லை. க.நா.சு. மறைவுக்குப்பின், புதுவை பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘பாரதியின் காட்சி’ என்ற நூல் அவர் விரும்பியபடி அமையவில்லை.

இன்று புதுமைப்பித்தன் கதைகளுக்குச் சலபதி உருவாக்கிய செம்பதிப்பு இருக்கிறது. அதற்கு முன்பு வெளியான புதுமைப்பித்தன் கதைத் தொகுப்புகளில் தழுவல் கதைகளும் கலந்திருந்தன. சிலர் புதுமைப்பித்தன் பற்றி அவதூறு பரப்புவதற்கு அந்தப் பதிப்புகள் இடமளித்துவிட்டன. இவை நிகழ்வதற்கு முன்பே, புதுமைப்பித்தன் கதைகளை வெளியிடும்போது தழுவல் கதைகளைப் பிரித்துக் காட்டிப் பதிப்பிக்க வேண்டும் என எழுதியவர் க. நா. சுப்ரமண்யம். “புதுமைப்பித்தனைப் பிரசுரிப்பவர்கள் எது அவர் கற்பனை, எது பிறர் கற்பனை என்று குறிப்பு சேர்த்துப் பிரசுரித்தால் வாசகர்களில் பின்வரும் தலைமுறைகளுக்குச் சௌகரியமாக இருக்கும்.” 1962இல் இதை எழுதியபோது தழுவல் கதைகளால் “அவர் [புதுமைப்பித்தன்] கற்பனைக்கு இழுக்கு ஒன்றுமில்லை” எனவும் குறிப்பிட்டார்.[30] 38 ஆண்டுகள் கழித்துதான், க.நா.சு. விரும்பியபடி தழுவல் கதைகளைத் தவிர்த்த, புதுமைப்பித்தன் கதைத் தொகுப்பு வெளிவந்தது.

ஓர் எழுத்தாளரின் மறைவுக்குப்பின், அவரது அனைத்து எழுத்துகளும் முறையாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவர வேண்டும் எனக் கருதியவர் க.நா.சு. இவ்வகையில், கு. ப. ராஜகோபாலனின் படைப்புகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெறவேண்டும் எனத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். இதை வலியுறுத்திச் சொன்னதோடு அமையாமல், மறுபதிப்புகளுக்கு அனுசரணையாகவும் செயல்பட்டார். “கு. ப. ராஜகோபாலன் இறந்து இப்போது (1959) பதினைந்து வருஷங்களாகிவிட்டன. இந்தப் பதினைந்து வருஷங்களில் அவருடைய புதுத் தொகுப்புகள் எதுவும் வெளிவரவில்லை” என்று எழுதினார்.[31] பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான், சி. சு. செல்லப்பா, சிட்டி முதலான சிலரது முயற்சியால் கு.ப.ரா.வின் தொகுக்கப்படாத படைப்புகள் அடங்கிய ‘சிறிது வெளிச்சம்’ (1969) தொகுப்பு வெளிவந்தது.

1930களில் ‘மணிக்கொடி’யில் சாகாவரம் பெற்ற பல கதைகளை எழுதியவர் மௌனி. ஆனால், அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1959இல்தான் வெளியானது. அதற்கு முன் அன்றைய இலக்கிய வாசகர்கள் மௌனியைப் பெயரவில்தான் அறிந்திருந்தனர். அவரது கதைகள் படிக்கக் கிடைக்கவில்லை. கிடைத்த இடங்களில் எல்லாம் மௌனியைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்த க.நா.சு.தான், ‘அழியாச்சுடர்’ என்ற தலைப்பில் அவரது கதைகள் முதன்முறையாகத் நூலாக்கம் பெற முக்கியக் காரணமானவர். அவர்தான் அந்த நூலுக்குத் தொகுப்பாசிரியர்.

க.நா.சு. தொகுப்பு நூல்களின் தேவை, முக்கியத்துவம் குறித்து எழுதிய முன்னோடியாகவும் திகழ்கிறார். 1959இல் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பை உருவாக்குவது பற்றி எழுதிய கட்டுரை பெரும் விவாதத்தைத் தூண்டியது. பிற்காலத்தில் இந்திய, தென்னிந்திய, தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து மூன்று தொகுப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அவை அனைத்திலும் விரிவான முன்னுரையும் கதாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய அறிமுகக் குறிப்பும் இடம்பெற்றுள்ளன. இறுதி நாட்களில், தேர்ந்தெடுத்த கவிதை, கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட விரும்பி அதற்கான ஆயத்தங்கள் செய்திருக்கிறார்.

இதழியல்

க.நா.சு. தமிழிலும் ஆங்கிலத்திலும் சொந்தப் பத்திரிகைகள் நடத்தியிருக்கிறார்; பிறர் நடத்திய பத்திரிகைகளுக்குச் சிறப்பாசிரியராகவும் செயல்பட்டிருக்கிறார். பல ஆண்டுகள் ஆங்கிலப் பத்திரிகைகளில் இதழாளராக இயங்கினார். அவ்வழியில் பிறமொழியினருக்குத் தமிழ்ச் சமூகத்தை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளை ஏராளமாக எழுதினார். ஆங்கிலத்தில் எழுதும்போது தன்னை ஓர் இதழாளராகவே முன்வைத்தார்.

தமிழ்ச் சிறுபத்திரிகை இயக்கத்தின் மூலவர்களில் ஒருவராக கருதப்படும் க.நா.சு., வெகுஜனப் பத்திரிகைகள் குறித்தும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது தொடக்ககால இதழியல் முயற்சிகளான ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’ இரண்டுமே வெகுஜனப் பத்திரிகைக்குரிய அம்சங்களுக்கு மத்தியில் இலக்கியத்தைப் புகுத்தும் நோக்கம் கொண்டிருந்தன. இந்த இதழ்களின் மூலம் தரமான படைப்புகளுக்கு இடம் கொடுக்கும் வெகுஜன இதழ் என்ற முன்மாதிரியை உருவாக்க நினைத்தார்.

வெகுஜனப் பத்திரிகைகளின் மலிவான உள்ளடக்கம் பற்றித் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால் வாய்ப்பு அமையும்போதெல்லாம் அந்த இதழ்களில் தானும் எழுதினார். அவ்வப்போது பிரபலப் பத்திரிகைகளில் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த இதழ்களில் ஒதுக்கப்பட்ட குறைவான பக்கங்களில் அவர் எழுதிய தொடர்கள் ஒவ்வொன்றுமே வாசகர்களுக்குப் புதிய சாளரங்களைத் திறப்பவை. ‘படித்திருக்கிறீர்களா?’ (சுதேசமித்திரன்), ‘முதல் ஐந்து தமிழ் நாவல்கள்’ (குமுதம்), ‘புகழ்பெற்ற நாவல்கள்’ (முத்தாரம்), ‘உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்’ (கல்கி), ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ (குங்குமம்), ‘இந்திய மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்கள்’ (தினமணி கதிர்) எனப் பல உதாரணங்களாகச் சொல்லலாம்.[32]

பத்திரிகைகள் சமூகப் பொறுப்புடன் உள்ளடக்கத் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என அழுத்தமாகச் சொல்லிவந்தவர் க.நா.சு. பத்திரிகைகள் பொழுதுபோக்குச் சரக்காக மட்டுமில்லாமல், அறிவூட்டும் சாதனமாகத் திகழ வேண்டும் எனப் பேசியும் எழுதியும் வந்தார். 1985இல் ‘துக்ளக்’ பத்திரிகையில் ‘பத்திரிகை விமர்சனம்’ என்ற தொடர் வெளிவந்தது. கேளிக்கை அம்சங்களால் நிறைந்திருக்கும் வெகுஜனப் பத்திரிகைகளை விமர்சித்து எழுதினார். விற்பனை, வாசகர் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்த தெளிவான புள்ளிவிவரங்களுடன் அன்றைய வெகுஜனப் பத்திரிகைகளின் வீச்சை வரையறுத்தார். அவ்விதழ்கள் தம்மை மேம்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமாகச் செயல்படுவதற்குப் பல யோசனைகளையும் பட்டியலிட்டார்.

இறுதிக்காலத்தில் தமிழ்ப் பத்திரிகைத் தர நிர்ணயம் ஸ்தாபனம் என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கினார்.[33]

*

க.நா.சு.வை ‘இலக்கியத் தூய்மைவாதி’ என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்குவது, அவரது ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் உள்வாங்கத் தவறியதன் வெளிப்பாடே ஆகும். 1945-ல் எழுந்த ‘உபயோகமான இலக்கியம்’ குறித்த விவாதம் அவருக்குச் சமூக யதார்த்தங்களிலிருந்து விலகியவர் போன்ற ஒரு பிம்பத்தை அளித்திருக்கலாம்; ஆனால், வரலாறு, நாட்டார் வழக்காற்றியல், நாடகம், சினிமா, நுண்கலைகள், இதழியல் என அவர் இயங்கிய தளங்கள் அனைத்தும், கலை, பண்பாட்டுத் தளங்களில் அவர் கொண்டிருந்த ஆழமான அக்கறையைக் காட்டுகின்றன.

ஒரு கலைப் படைப்பைத் துல்லியமாக மதிப்பிடுவதற்குத் தேவையான விரிவான வரலாற்று, அழகியல் பின்புலத்தை இந்தப் பிற துறை ஈடுபாடுகளே அவருக்கு வழங்கின. பாரதி, புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்புகளை உருவாக்க அவர் காட்டிய மெனக்கெடலும், வெகுஜன ஊடகங்களின் தரத்தை உயர்த்த அவர் முன்வைத்த சமரசமில்லாத விமர்சனங்களும் ஒரு முழுமையான அறிவுஜீவியின் அடையாளங்கள்.

வெங்கட் சாமிநாதன் கூறுவது போல், க.நா.சு.வின் ஆதார ஸ்ருதி இலக்கியம் மட்டுமே அல்ல; ஒட்டுமொத்த கலை, சிந்தனைத் தளங்களின் ஒருங்கிணைந்த இயக்கமே அவரது ஆளுமையை வடிவமைத்திருக்கிறது. இலக்கியத்திற்கு அப்பால் அவர் மேற்கொண்ட இந்தத் தேடல்களும் செயல்பாடுகளுமே, நவீனத் தமிழ் இலக்கிய விமர்சன மரபில் அவரை ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தியுள்ளன.

***

குறிப்புகள்:

  1. இந்த விவாதத்தைத் தொடர்புபடுத்தி புதுமைப்பித்தன் ‘க.நா.சு.வின் நிலைப்பாடுகளுக்கு எதிரான’வர் என்ற தோற்றத்தை எழுப்பும் முயற்சியும் நடக்கிறது. புதுமைப்பித்தனை வைத்து க.நா.சு.வுக்கு மறுப்புக் கட்டுரை எழுதி வெளியிட்ட டி. எஸ். சொக்கலிங்கம், இன்னும் காட்டமாக மற்றொரு கட்டுரை எழுதும்படி மீண்டும் அவரை வற்புறுத்தினார். எரிச்சலடைந்த புதுமைப்பித்தன் ‘தினசரி’ வேலையையே அத்தோடு விட்டொழித்தார். (மேலும் விவரமறிய தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாற்றில் ‘தினமணியும் தினசரியும்’ என்ற அத்தியாயத்தைப் பார்க்கலாம்.)
  2. தாகூர் பற்றிய க.நா.சு.வின் புத்தகம் அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரின் தொடர்ந்த வற்புறுத்தலால் எழுதப்பட்டது. க.நா.சு. தாகூரைப்பற்றி நூல் எழுத ஒப்புக்கொண்டது புதுமைப்பித்தனுக்குப் பிடிக்கவில்லை. கட்டாயத்தினால் எழுதிய அந்த நூல் க.நா.சு.வுக்கும் திருப்தி தரவில்லை. பின்னால் அதைப் பற்றிக் கூறும்போது ‘வெற்றி பெறாத நூல்’ என்றே குறிப்பிட்டார். (விவரமறிய க.நா.சு.வின் ‘புதுமையும் பித்தமும்’, ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ ஆகிய நூல்களைப் பார்க்கலாம்.)
  3. இலக்கியச் சந்திப்புகள், பேட்டி: க.நா.சு., பேட்டி கண்டவர்: கிருஷ்ணமணி, தீபம், செப்டம்பர் 1966, பக்.34
  4. D. Anjaneyulu, ‘Ka Naa Subramanyam: Critic as crusader’, Bhavan’s Journal, February 15, 1989, pp.64
  5. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 34, 26-2-1965, பக்.11-12
  6. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 7, 14-2-1964, பக்.12
  7. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 4, 3-1-1964, பக்.6
  8. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 23, 25-9-1964, பக்.12
  9. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 34, 26-2-1965 பக்.10-11
  10. Traditional Tamil Drama and The Present Impasse, Sangeet Natak, 1967
  11. சா. கந்தசாமி, ‘என்றும் இருப்பவர்கள்’, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், டிசம்பர் 2024
  12. இந்தக் கட்டுரை முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்த பிரதியில் சில பகுதிகளில் எழுத்துகள் தெளிவாகத் தெரியவில்லை. ‘சினிமா சிறப்பிதழ் 1933-1986’ என்ற குறிப்பிலிருந்து இக்கட்டுரை 1986இல் வெளியாகியிருக்கலாம் எனத் தெரிகிறது.
  13. க. நா. சுப்ரமண்யம், ‘படித்திருக்கிறீர்களா?’, அமுத நிலையம், நவம்பர் 1957
  14. தரும சிவராமூ (பிரமிள்), ‘வெய்யிலும் நிழலும்’, எழுத்து, இதழ் 48, டிசம்பர் 1962
  15. வெங்கட் சாமிநாதன், ‘சில இலக்கிய ஆளுமைகள்’, காவ்யா, 2001, பக்.92
  16. கல்கி வீட்டில் நடந்த பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘ஆடரங்கு’ சிறுகதை ‘கலைமகள்’ (மார்ச் 1942) இதழில் வெளியானது. கதையைப் படித்த கல்கி க.நா.சு.வுக்கு ஒரு கடிதம் எழுதிப் பாராட்டியிருக்கிறார்.
  17. Indian and Foreign Review, March 15, 1967, pp.8-10
  18. ‘தீபம்’, மார்ச் 1988, பக்.6-8
  19. S. Rajee, ‘The South Indian stone cutter at work’, Hemisphere, August 1964, pp.16-19. இது மனைவி ராஜி பெயரில் எழுதிய கட்டுரை. இக்கட்டுரையுடன் இடம்பெற்ற படங்களை எடுத்தவர் க.நா.சு.வின் மைத்துனர்களில் ஒருவரான வெங்கட்ராமன். 
  20. Ka Naa Subramanyam, ‘None Like Ananda Coomaraswamy’, Deccan Chronicle, 29 May 1988, pp.3
  21. கு. அழகிரிசாமி, பழ. அதியமான் (ப.ஆ.), ‘நான் கண்ட எழுத்தாளர்கள்’, மு.ப. ஜூன் 1961, காலச்சுவடு மு.ப. செப். 2022
  22. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 24, 9-10-1964
  23. ‘இலக்கிய வட்டம்’, இதழ் 1, 22-11-1963, பக்.12
  24. இந்தக் கட்டுரை கிடைக்கவில்லை. இதுபற்றிய குறிப்பு க.நா.சு.வின் ‘இலக்கிய சாதனையாளர்கள்’ (1985) நூலில் உள்ளது.
  25. ஶ்ரீநிவாச கோபாலன், ‘க.நா.சு. வாசித்த கலைக்களஞ்சியம்’, அம்ருதா, மே 2025
  26. ‘இலக்கிய வட்டம்’ ஆண்டு மலர் 1963 (பாரதி நினைவு); ‘பாரதி தோன்றிய காலம்’, எழுத்து பிரசுரம், மே 2024.
  27. 1963ஆம் ஆண்டு நடந்த தமிழ் எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்றில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ஆதரித்து க.நா.சு. ‘இலக்கிய வட்ட’த்தில் (இதழ் 2, 6-12-1963) சிறு குறிப்பு எழுதினார். அக்குறிப்பைக் கண்டித்த ‘செந்தமிழ்ச் செல்வி’ (ஜனவரி 1963) க.நா.சு.வைத் தாக்கி எழுதியது. அதற்கு ‘இலக்கிய வட்ட’த்தில் (இதழ் 6, 31-1-1964) துரை என்பவர் எழுதிய பதிலுரையும் வந்தது. “இதற்கு திரு. க.நா.சு.தான் காரணம் என்பது போல் தரக் குறைவான முறையில் அவரைத் தாக்கி எழுதி இருக்கிறது. இதை வரவேற்று எழுதியதைத் தவிர அவருக்கும் இந்தத் தீர்மானத்திற்கும் எவ்வித உறவுமில்லை. இரண்டு மாநாடுகளிலுமே அவர் கலந்துகொள்ளவில்லை. ஆகவே, கழகம் க.நா.சு. போன்றவர்களைத் தாக்கிவிட்டால் தன் தவறு மறந்துபோகும் என்று நினைக்கிறது போலும்!”
  28. ‘ஞானரதம்’, ஏப்ரல் 1986, பக்.34
  29. க. நா. சுப்ரமண்யம், ‘பாரதியாரைப் பற்றி ஒரு சம்பாஷணை’, ‘லோகோபகாரி’, 7-9-1940, பக்.61-66; ‘பாரதி தோன்றிய காலம்’, துரை லட்சுமிபதி (தொ-ர்), எழுத்து பிரசுரம், மே 2024.
  30. ‘எழுத்து’, இதழ் 37, ஜனவரி 1962
  31. இன்னும் நூல்வடிவம் பெறாத தொடர்களும் உள்ளன. ‘தாய்’, ‘ஓம்சக்தி’, ‘ஜனரஞ்சனி’ போன்ற இதழ்களில் வந்தவை இன்னும் தொகுக்கப்படவில்லை.
  32. ‘எழுத்து’ இதழ் 5, மே 1959
  33. தமிழ்ப் பத்திரிகைகள் தர நிர்ணய ஸ்தாபனம் (TAPSO) பற்றிய அறிவிப்பு. ‘ஞானரதம்’, ஏப்ரல் 1986

***

ஶ்ரீநிவாச கோபாலன்: 1994இல் பிறந்தார். திருநெல்வேலியில் வசிக்கிறார். பதிப்பாளர், பத்திரிகையாளர். க.நா.சு.வின் நூல்வடிவம் பெறாத படைப்புகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘நாரத ராமாயணம்’ (2021), ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’ (2022), ‘The Birth of a Poet’ (2024), ‘The Fall’ (2024), ‘சிரமமான காரியம்’ (2024), ‘என்ன ஆனந்தம்’ (2025), ‘உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்’ (2025) முதலிய நூல்களின் தொகுப்பாசிரியர் / பதிப்பாசிரியர். ‘புதுதில்லியில் புதுமைப்பித்தன் கருத்தரங்கு 1987’ (2025) என்ற குறுநூலையும் வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல் : sharetosrini@gmail.com