Home Blog Page 6

காதோதிகள்

0

ம.கண்ணம்மாள்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, என்னுள் ஒரு விருப்பமிருந்தது. அது என்ன விருப்பம்? கனவு என்று சொல்லலாமா? ஆமாம். சரி என்ன கனவு? அது மிக எளிமையானது. அரசியலில் நான் உச்சம் தொடவேண்டும். இப்போதும் என்னைச்சுற்றி மிகப்பெரும் கூட்டமுள்ளது. இது போதாது. இன்னும் வேண்டும். அவர்களோடு நான் கீழிறங்கி நடக்க வேண்டும். இசை கேட்க வேண்டும். இசை என்பது வெறும் சந்தோஷமல்ல. போராடுவதற்காகவும் இசையை அடிக்கடி கேட்கலாம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இசைக்கலைஞர்கள் போராட்டக் குணமிக்கவர்கள். எனக்கும் போராட்டக் குணமுண்டு. நானொரு அரசியல் இசைப் போராட்டக் கலைஞன்.

*****

என் வீடு அன்று நிரம்பி வழிந்தது. சோர்வாக நான் ஆகிடக்கூடாது. ஆண்கள், பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்த தாய் மகளிர்கள், சட்டென்று என்னைப் பார்த்து சிரிப்பை உதடுகளுக்குக் கொண்டு வந்த தந்தையன்கள், சிறிதே வெட்கப்பட்டு கண்ணைச் சுருக்கிய முதுமகளிர்கள் …… அப்பப்பா……… ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். ஒவ்வொருவருராக அழைத்துப் பேசினேன். பட்டா பெறுவதிலிருந்து, பிறப்புச்சான்றிதழ், சினிமாவே கதியெனக் கிடக்கும் வளரிளம் பெண்ணுக்கு வேலை தருவது, வங்கிக்கடன் வாங்குவது, இது போல எல்லாமே சொல்லப்பட்டு வந்த போது, லாரி லாரியாகச் செங்கற்களும், ஜல்லிக் கற்களும், சிமெண்ட் மூட்டைகளும் கொட்டி பெருங்கட்டிடமொன்றிற்கு என்னுள் அஸ்திவாரம் தோண்டிய அந்த வற்றல் தொற்றலான ஒரு உருவம் நடு இரவில் புதைந்து போயிருந்த மெத்தையிலிருந்து விழித்தெழச் செய்தது.

“அய்யா சீக்கிரமா அமைச்சர் ஆகிடுங்க”

சில நாட்களில் அஸ்திவாரம் பலரால் தோண்டப்பட்டது.

நானும், அஸ்திவாரமும் சிறிது சிறிதாக உறவாட தொடங்கினோம்.

*****

கூட்டம் அதிகம் கூடும் மாலை வேளை. எப்போதும் போல் என்னைச் சுற்றி பேப்பர்கள், விவாதங்கள் மற்றும் அதற்கான காரியவாதிகள் சூழ்ந்திருந்தார்கள். ஒவ்வொருவராக, நகர்ந்து வர, வற்றல் தொற்றல் உருவம் என் முன் வந்தது. கனவில் கண்ட அதே முகம். நல்ல உயரம். கையைத் தர முனைந்தேன். இரும்புப்பிடியாகப் பிடித்தது. கார்டொன்றை எடுத்து நீட்டியது. “அமைச்சராகக்கடவாய்” என்றிருந்தது. கார்டை சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். யாரும் கவனிக்கவில்லை. வேகமாக நடந்து, கடந்து சென்றது. நானும் வெளியில் வந்தேன்.

“டிரைவர், எங்கண விட அண்ணே” என்றார்.

கேள்வியை காதில் ஏற்றாததால், அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தேன்.

மெதுவான தொனியில் இசைக்குள் மூழ்கத் தொடங்கினேன்.

*****

மறுநாள் விடியலில் மழை கொட்டத் தொடங்கியது. அந்த அழகான வீட்டில் வளர்ப்புப் பிராணி 

She – ன் சத்தத்தில் கண் விழித்தேன்.

She, அம்மாவைக் கூப்பிடு என்றேன். வெளிர் கத்திரி நிறத்தில் என் மனைவி தெரிந்தாள். பளீரிடும் நிறம். சோர்வில்லாத முகம். அன்றைய நாளுக்கான பணியில் தன்னைப் பொருத்திக் கொண்ட பரபரப்பு.

“கையை என் நெற்றியில் வைத்தாள். காய்ச்சல் இல்லல்ல…”

மிகமிக மெதுவாக நெற்றியில் முத்தமிட்டாள்.

பளாரென உராய்ந்துக் கொண்ட என் உடலை அசட்டைச் செய்து விட்டு, லாவகமாக எழுந்தேன்.

*****

அனாதைக் குழந்தைகளுக்கு எங்கக் கட்டிடத்தில் இடமில்லை சார். ஏற்கனவே இடம் பத்தல. எதாவது ஏற்பாடு பண்ணித் தாங்க சார்… பிச்சைக் காரங்களும் தங்கியிருக்காங்க… உங்களைப் போல பெரிய மனுஷங்க தான் உதவி பண்ணனுமென சொல்லிக் கொண்டே போனவரை, அழுத்தமாகப் பார்த்ததில், பேச்சை நிறுத்தினார்.

ஆமாம்… என்ன சொன்னீங்க… அனாதைக் குழந்தைகள்..

அனாதைன்னு சொல்ல நீங்க யார்?

நம்மளோட டோட்டல் நெகடிவ்வும் அது தான். அம்மா, அப்பா இல்லாத பிள்ளைங்கன்னு சொல்லலாம். அப்படி சொல்லறதுக்கு என்ன?

இன்னொரு வார்த்தை சொன்னீங்கல்ல… பிச்சைக்காரங்கன்னு..

உங்க வீட்டு சோத்துக்கு வந்து நின்னா பிச்சைக்காரங்க இல்ல சார்.

அப்படி பார்த்தா இங்க எல்லாருமே ஏதோவொரு வகையில பிச்சை எடுக்கிறவங்க தான்… வயித்துப்பசி மட்டும் பிச்சை இல்லை. எல்லாமே பிச்சை தான்..

சாப்பிட இல்லாதவங்க… வழி இல்லாதவங்க… இப்படிச் சொல்லப் பழகிக்குங்க..

கரும்புச்சக்கைப் போல அரை நொடி உணர்ந்தேன். 

சரிங்க… என அவரைப் பார்த்தேன்.

நான் பார்த்துக்கிறேன்… நான் பார்த்துப்பேன்.. வாங்க…

வந்தவரிடமிருந்து பெறப்பட்ட கெட்டியான காகிதக்கோப்பு என் மேஜையின் நடுவில் வந்தது.

இரவு நெருங்கத் தொடங்கிய நேரம். ஆரஞ்ச் வெண்ணிற விளக்குகளுக்கு நடுவில் கார் நிதானப்படுத்திக் கொண்டு நகர்ந்ததில், சாலைகளிலிருந்த மக்களின் மேல் கவனம் திருப்பினேன்.

நொடியில் துளைத்து, துல்லியமாகக் கவனிக்கும் பார்வை என்னுடையது.

ஏன் இவ்வளவு கூட்டம் இன்னைக்கு என்றேன்….

என் வேலையைத் தினமும் நடைமுறைப்படுத்தும் பணியாளன். அண்ணே என்றதில், 

சொல்லு தம்பி என்றேன்…

ரெண்டொரு நாளில் தேர்தல் தேதி சொல்லப்போறாங்க

அண்ணே. அதான் எல்லாக் கடைகளிலும் கூட்டம் தள்ளுது. அப்புறம் பணம் சரளமாக கொண்டுட்டு வரமுடியாதுல்லண்ண..

ஆமாம் என்றதில் என் உடல் முடிகள் நெட்டையாகின.

நான் எதற்குப் பயப்படணும்?

ஏன் பயப்படணும்?

அண்ணே என்ற குரல் கேட்டு, 

மறுபடியும் சொல்லு தம்பி…

நீங்க சீட் கேளுங்கண்ணே…

திரும்பி பின் சீட்டைப் பார்த்து சிரித்தேன்…

பாத்துக்கலாம் தம்பி… பார்த்துக்கிறேன்…

முக்கால் பங்கு பயணம் முடிவுற்ற நிலையில் சன்னமான இசை என்னை மறைத்துக்கொண்டது.

*****

விடியற்காலை 3.24 போல கண் விழித்தேன். சில நாள்கள் அப்படி அதுவாகவே அமைந்துவிடும். ஆனால், எனக்கு எதுவும் சிக்கலில்லை.

பக்கத்திலிருந்த கையை மிகப் பொறுமையாக ஒத்தி வைத்தேன். 24 வருடங்களாகப் பார்க்கும் கை அது. என்னுள் விரிந்துக் கிடக்கும் மற்றொரு உலகை, என் உள்ளேயும் வெளியேயுமான ஆழமான, பள்ளமானக் குழிகளை சீராட்டும் அக்கறைக் கொண்ட கையை கரிசனமாகப் பார்த்தேன்.

இந்த வாழ்க்கையே, தேவைக்காக தான் எனத் தோன்றியது.

புதிதாகக் கட்டப்பட்ட வீடு ஆகையால், பெரிய மாடி, கூடவே நிறைய மலர்த்தொட்டிகள். தரையில் உடலைக் கிடத்தினேன்.

என்னவிதமான சில்லிப்பு… தரை என்னை வியாபித்துக் கொண்டது. புரண்டு, உருண்டு மல்லாக்கப்படுத்ததில், விடியலுக்கான தயார் நிலைத் தென்பட்டது. சிறிதேயான காற்றில் உடல் சொக்கிக்கிடந்தது. இந்த இடம் மிக அனுகூலமான இடம். என் நிறைவுகளை அள்ளித் தந்து, சுய சோதனைக்கு உட்படுத்தும் இடம். கண்ணுக்கு இதமான உவப்பைப் பருகத் தொடங்கினேன். வானில் தெரிந்த சில மேக நகர்வுகள், ஒரு சில விண்மீன்களைக் கூர்மையாகப் பார்க்கத் தொடங்கியதில் என்னை விட்டுச் சென்ற அம்மாவும், அப்பாவும் இருப்பது போல பிரமை. சிறு வயதிலிருந்தே இறப்பென்றால் பயம். அம்மா கையைப் பிடித்து இறுக்கிக்கொள்வேன். பயப்படக்கூடாது தம்பி… அவங்க வானத்துக்குப் போயிட்டாங்க… அவ்வளவு தான்… பின் வந்த நாட்களில் இறப்புப் பற்றி தெளிந்த அறிவுக் கிடைத்தாலும், என்னை நானே புத்தாக்கிக் கொள்ள அடிக்கடி சொல்லும் வார்த்தை, “இறப்பு இனிது”

அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆண் பிள்ளைக்கு அம்மா மேல தான ஒட்டுதல் இருக்கும்னு சொல்லும் போது, அப்பாவின் மீதும், என சொல்வதைக் கேட்டு, வீட்டில் கீறிச், கிச்கிச், ஆ… ஹா ஹா என பல சிரிப்புகள் எழும். ஏன் இவர்கள் இப்படி சிரிக்கிறார்களென யோசித்ததில்லை. அப்பாவை நினைக்கும்போதெல்லாம். எந்தக் கரடுமுரடான ஒலியும் எனக்குக் கேட்கவில்லை. மாறாக, மெல்லிய சாக்ஸபோன். அதிகம் பேசமாட்டார் பேசினால், பேச்சில் அலசல் தெரியும். பெரும்பாலான நேரங்களில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேன். அந்த அனுசரணையான உடம்பும், பூசினாற் போன்ற பளபளக்கும் கன்னங்கள், அடர்நிறச் சட்டைகள் இயற்கையாக அமைந்த செழிப்பான கேசம் என்னை உற்றுப்பார்க்க வைத்திருக்கிறது.

“வயிறு நிறைய புள்ளைக்கு சோறு போடு” இது என்னைப் பல நாள் சிரமப்படுத்தியிருக்கிறது. வயிறு பெரிசா இருக்கான்னு தொட்டு தொட்டுப் பார்த்து சாப்பிட சொன்ன அப்பாவை யாருக்குத் தான் பிடிக்காது? 

பின்னொரு நாளில் அறியாத பருவத்தில், பசி என்னை வழிமறித்து அபகரித்துக் கொண்டது.

உப்பிக்கிடந்த வயிறு, ஒட்டிப் போய் வற்றியது. 

நானும், அம்மாவும் ஒரு மதிய வேளையில், வயிறு நிறைய சோற்றினை அள்ளித் தின்றுக் கொண்டிருந்தபோது, சுவாதீனமாக உள்ளே நுழைந்தவர்கள், அப்பாவின் உடலைக் கிடத்தினார்கள். எங்களின் அனுமதியின்றி இறப்பு உள்நுழைந்தது.

அலுவலகத்தில் பணம் கையாடல் எனும் பெருங்குற்றச்சாட்டு, சக ஊழியர்களின் அவஸ்தைகள், கை கட்டி நின்று தன்னை நிரூபிக்கத் தவறிய நிமிடங்கள், இறப்பினைத் தானாக அழைத்து வந்துவிட்டது.

அப்பா, நல்லவர் என்பதை விட, பிறரின் பொருளுக்கு ஆசைப்படாதவரென தெருவே கத்தியதில், பீறிட்ட அழுகையினை அப்பாவுக்குத் தாலாட்டு ஆக்கினேன். 

அன்றிலிருந்து, இறப்பு என்றால் பயம். அப்பா, வானத்தில் தெரியுறார் பார்…. என வருத்தமும் வேதனையும் சேர அம்மா சொல்வதில் எவ்வளவு துயர்…

பின்னாளில் எனக்கு நேரிட்ட அனுபவங்களில் வருத்தமும், வேதனையும் எப்படியிருக்குமென்பதனை, ஒட்டிய வயிறில் கை வைத்து அழுத்திக் கொண்ட போது தெரிந்துக் கொண்டேன்.

ஆனாலும், “இறப்பு இனிது” என்றே சொல்வேன்.

*****

என்னைக் கொஞ்சம் அனுசரித்துக் கொள்ளுங்கள். இறப்புக்கதை நிறைய என்னிடமிருக்கிறது. ஆனால், சொல்ல நேரம் இது அல்ல. மெலிதாகச் சிரித்து, குறைந்த வெளிச்சத்தில் துழாவத்தொடங்கியதில், சொந்த உபயோகத்திற்கான என் அறை அழைத்தது. மிக அழகான அறை அது. முழுவதும், மீதியுமாகச் செதுக்கும் சிற்பக்கூடம் அது. மூளையைக் கொஞ்சம் வேலையும் வாங்கும். வாழ்க்கைக்கான நுகர்பொருள் கலாச்சார மனப்பான்மைக் கொண்ட தேடலுக்கான விசாலத்தில் மறுபடியும் மல்லாக்கக் கிடந்தேன்.

கண் விழித்த போது, கடுமையாக உழைக்கத் தயாரானேன். உச்சக்கட்டமாக உழைப்புத் தெரிந்தது. வேறெதுவும் என்னை அமுக்கவில்லை. எந்த அந்நிய வாடையும் என் மீதில்லை.

அந்தரங்கத்தை விட்டு வெளியே வந்த போது, சென்னை செல்ல ஆயத்தமானேன்.

நினைவுகளைத் தள்ளிவிட்டு, காரில் உதிரி, உதிரியாக இசைத்த இசையில் என் மனம் ஒருங்கே அமைதியானது.

*****

சென்னை போன்ற வெளியூர்கள் செல்வதெல்லாம் மிக இரகசியமாக வைத்துக்கொள்வேன். அரசியலில் எனக்கு எதிரிகள் அதிகம். ஆனால், நான் மிக இயல்பாக வாழ்கிறேன். தலைமைக்குப் பயந்து, கட்சியின் மூத்தவர்களை மதித்து நடப்பவன். ஆனால், மிகக் குறைந்த நாட்களுக்குள் பல பொறுப்புகள் தானாகவே வர எதிரிகள் வந்தடைந்தார்கள். அதை என் மனம் ஏற்க மறுத்தது. மனதினடியில் மூச்சுத் திணற வைத்தது. தினந்தோறும் சொல்லிக் கொள்ளும் இரு தூண்டுக் காரணிகளை வாய் முணுமுணுத்தது.

1. எல்லோருக்கும் நல்லவனாக வாழமுடியாது.

2. நல்லவன்னு சொல்றதுக்காக, நீங்கள் சொல்வதையெல்லாம் என்னால செய்ய முடியாது.

என்னப்பா… நல்லாருக்கியா? என்ற ஒரிரு வார்த்தைகளுக்குள் மிக மிக எதேச்சையாக விஷயம் சென்னையில் சொல்லப்பட்டது. MLA சீட் கிடைப்பது அவ்வளவு எளிதும் அல்ல. ரொம்ப மெனக்கெடணும். 

பார்க்கலாம்.. பார்த்துப்பேன்… 

காதிலொலித்த இசைத்தளத்தில் மெல்ல மூழ்கினேன்.

*****

முன்பை விட வேகமாக பணியில் இயங்கினேன். ஓர் ஓரமாக மனதில் துளிர்விட்ட ஆசை, நிலம் பார்க்கும் செடியாக, வெளிவரத் தொடங்கியது. எந்த கிரீடமும் எனக்குளில்லை. ஆனாலும், நிறைய போராட்டங்கள். வெட்கமும், ஆணவமுமில்லாத ஒரு மனநிலையில் உழைப்புப் புரட்டிப்போட்டது. அம்மாதிரியான நேரத்தில் லேசான துன்புறுத்தல்களை என் உடல் தாங்கிக் கொண்டது.

*****

நான் மிக சாதாரணமானவன். இந்த வெளியுலகத்தின் மேல் மிகுந்த பற்றுடையவன். ஒரு போதும் அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள விரும்பியதில்லை. என்னுள் நல்லது × கெட்டது என எதுவும் இல்லை. எப்போதுமே எனக்கு, ஒரு கேள்வி எழும். என் நலம் விரும்புபவர்கள் கேட்கக் கூடியக் கேள்வி அது,

“நீ ஒரு அரசியல்வாதி தான். ஆனால், அரசியல் செய்யத் தெரியாதவன்”.

இதை கேட்டு கேட்டு பெரும் மனவுளைச்சலில் தவித்த நாள்களுண்டு. தீர்வாக, உளவியல் நிபுணரையும் சந்தித்தேன். முடிவாக, நானறிந்தது.

“விளையாட்டு மட்டும் இருந்தால் போதாது. விளையாட மிக பொருத்தமான அழகான மைதானம் வேண்டும்” அவ்வளவுதான்.

அனைவரையும் அன்பாக பார்க்குமெனக்கு நான் சார்ஜ் ஏற்றப் பயன்படும் ஒரு கருவியென பயன்படுத்தப்படுவதாக விமர்சனம் வருவதை பொறுத்துக்கொண்டேன்.

காரணம் ஸிம்பிள். 

என் இளவயது சூழலும், பசியில் துவண்ட போது அடைக்கலம் தந்த சில நல்ல மனித உடல்களும் மட்டுமே. பதவியைத் தாண்டி, அப்பதவியை ஆக்கப்பூர்வமாகக் கொண்டு எளியோருக்கு உதவ நினைத்ததுதான். திரும்பவும் சொல்கிறேன். சிறு வயதில், பசியின் பொருட்டு இறப்பினைப் பயத்தோடு அணுகியிருக்கிறேன். கிடைத்ததென்னவோ தோல்வி. என்னளவில் திரும்ப திரும்ப சொல்லிக் கொள்வது “இறப்பு இனிது”. 

காரினுள் நுணுக்கமாக ஒலிக்கப்பட்ட இசைக்குறிப்பினுள் துவளத் துவள மிதந்தேன்.

*****

நள்ளிரவைக் கடந்த பொழுதில் நன்கு அடைக்கப்பட்ட பிரமாண்ட செங்கல், சிமெண்ட் கலவைக்கு முன்னால் அவர்கள் தோரணையாக அமர்ந்திருந்தார்கள்.

அந்த ஊரின் பெரும் பதவிக்காரர் மற்றும் மூத்தக் கட்சிக்காரர்கள், அவர்களின் காதோதிகள் குழுமியிருந்தனர்.

அவர்கள் முன்னால் சாத்தியங்கள் சந்தேகமாகி விரிவாகிப் பரந்து ஆக்கிரமித்துக் கிடந்தது.

மண்மேட்டில் தெரிந்த இருட்டு ஆபத்தாகப்பட்டது.

பெரும்பாலும் இந்த உலகின் ஆபத்தானவைகளை இருட்டில் தான் மனித உடல்கள் நடைமுறைப்படுத்துகின்றன.

என்னாய்யா… என்னா நிலவரம்… 

காதோதி -1 வாய்திறந்தார்

நமக்குக் கிடைக்கிறது கஷ்டம்ன்னு பேசிக்கிறாங்கய்யா.

இருக்கட்டும்ய்யா.. தமிழ்நாடு முழுக்க அதே நிலமதான். பள்ளம் யாருக்கு யார் தோண்டுறதுண்டு இருக்குல்ல.

மறுபடியும்,

காதோதிகள் – 2,3,4 வாய் திறந்தனர். 

அண்ணே… பள்ளமானாலும் குழி நாம தான் தோண்டனும். மாவட்டம்ல என்ன நடக்குது.. தெரியல.. ஊர் பூரா பேசிக்கிறாங்க..

அடப்போய்யா… பினாத்தாதே… கற்பனை பண்ணாதே…

தலைமை யாரை நிக்க வச்சாலும் ஜெயிக்க வைக்கணும். தலைமைக்கு யார் பதில் சொல்றது?

காதோதிகள் வாய் மூடியது.

மண்மேட்டில் தெரிந்த இருள் சிரித்தது. யார் கண்ணுக்கும் தெரியவில்லை.

*****

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் தடதடக்கும் தாக்குதல்களை பிரச்சாரமாகக் கொண்டது. நான்கு முனைப்போட்டிகளாக உருமாறியது. இலக்கை நோக்கியப் பயணத்தில் களத்தில் வெற்றி நூலைப் பிடிக்க, சிக்குகளைக் களையத்தொடங்கினர்.

*****

இந்நிலையில் நான் சார்ந்திருந்த கட்சியின் வேட்பாளராக பெரும் போட்டிக்கு இடையில் அறிவிக்கப்பட்டேன். என் ஊரில் பெரும்பான்மையாக நான் மையப்படுத்தப்பட்டு, எதிர்கட்சிப் பிரச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி பேசப்படும் முதல்நிலைக் கட்சி வேட்பாளனாகக் களத்தில் நின்றேன். கட்சியைத் திட்டியதோடு, தனிமனித தாக்குதலும் தொடர்ந்த போதும், தைரியமாகச் சுற்றி சுழன்றேன். தினந்தோறும் மக்களைச் சந்தித்தல், வார்டு வார்டாக பிரச்சாரம் என ஓய்வில்லாமல் பறந்ததில், என் முன்னால் தேர்தலில் வெற்றி ஒன்றே பெரிதாக தெரிந்தது. மற்றக் கட்சியினர் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் என்னைத் தரம் தாழ்த்திய போதும், நான் மறுப்பு அறிக்கை விடவில்லை. விளக்கம் கொடுக்க வேண்டி தேவை எனக்கு இல்லை எனக் கருதினேன்.

*****

என்னைச் சுற்றியிருக்கும் புதிர்களை நானே அவிழ்த்தலென்பது என்னால் முடியாதது. நான் என்பது நானே தான். நானொரு வித்யாசமானவன். சொல்லப்போனால், நான் நிற்கும் இடத்தில் நானே பிரதானமாக தெரிவேன். வெகு மக்கட்திரள் என்னை உற்றுநோக்கும். வழிநெடுகிலும் தோள் தாங்கிய மாலைகள், போர்த்தப்பட்ட சால்வைகள், மலர்த்தூவல்கள் என் ஊரில் இதுபோல முன்பும், இப்போதும், வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. இனியும் அதுபோல கிடைப்பது சற்றே கடினம் என உணர்ந்திருக்கிறேன்.

இங்குள்ள கைக்கூலிகள், எதன் பொருட்டும் வசை பாடித்தீர்க்கும் மனித உடல்களின் மனஅடியோட்டம் என்பதை நானறியாமலில்லை. இருப்பினும், அமைதி காத்தேன்.

மனித வாழ்வு, இப்பெரும் உலகம், உயிர்களின் வலி அதன் உள்ளீடாகவுள்ள வன்முறை, அழிவு இதெல்லாம் மனதிலோடியது.

இவற்றை, அடையாளம் காண வேண்டியாவது சிறிது அரசியல் தெரிய வேண்டும்.

இசை ஒரு ஒழுங்குடன் ஒலிக்கத் தொடங்கியது. கண் மூடி சிறையுண்டுக் கிடந்தேன்

*****

நாள்தோறும் என் கட்சிக்கான பணி, டிரெய்லராக என்னுள் ஓடியது. திசை திருப்பும் திகில் கூட்டமாக எதிர் சவுடால்கள் ஊரையே துவம்சம் செய்ததைக் கண்டு அயரவில்லை. அவ்வளவு குழப்பங்கள், நெருக்கடிகள் தொடர்ந்தன. ஊழல்… ஊழல்… என்ற கூக்குரல் ஓலத்தில், எந்தப் பின்வாங்கலும் என்னிடமில்லை. எந்தக் கொள்ளையும் நான் அடிக்கவில்லை…

என் சொத்துகள் குறித்து வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும். வருமானத்திற்கு உட்பட்ட சொத்துகள் பற்றிய முழுவிவரம் மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதில் சொத்துகள் பற்றிய போதுமான உண்மைகள் இல்லையெனவும், மக்களுக்கு இது பற்றிய முழுமைகள் தெரிவிக்க வேண்டுமெனவும், எதிர்கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரத்தில் படபடத்தனர்.

இதெல்லாம் சொல்லிக்கொண்டு, ஆதாரம் காண்பித்து, மறு அறிக்கை விட்டு, என்னை நல்லவனாக்க நான் முயலவில்லை.

அரசியலில் தவறுகள் அதிகம். ஊழல்கள் உண்டு. இவ்விரண்டையும் எந்த அரசியல்வாதி, தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் எவ்வளவு செய்கிறார்களென்பதே விஷயம். அரசியலின் இரு கண்கள் தவறும் ஊழலும். இந்த இரு கண்களையும் விரல் விட்டு நோண்டிக் கண்ணையே பிய்த்து எடுக்கும் மனித உடல்கள் இங்கிருக்கின்றன. அவர்களுக்குத் துணை போகும் ஆண், பெண் மனித உடல்கள், காலத்திற்கேற்ப வாழ்ந்துக் கொண்டுதானுள்ளார்கள். ஆனாலும், இவற்றையெல்லாந் தாண்டி அடிப்படையான அறம் என்பது ஒவ்வொருவரிடமும் வேண்டும்.

பத்து மணிக்குள்ளான பிரச்சாரம் முடித்து, கண்ணை மூடிய போது மேலுள்ள விஷயங்கள் மனதில் தோன்ற, வெப்பத்தில் நனைந்தேன்.

நடுத்தரமாக சத்தமிட்ட இசையில், சிறிது சிறிதாக குளிரத் தொடங்கினேன்.

*****

அவர்கள் தெளிவாகப் பின்னிரவில் கூடியிருந்தார்கள். கட்டட வேலை நடந்துக்கொண்டுள்ள இடம் அது. மணல் நிரப்பல் பட்டும், படாமலும் உதிர்ந்துக்கிடந்தது. குழிகளில் நீர் நிரம்பியிருந்ததில் தெரிந்த நிறத்திற்கு வண்ணம் சொல்ல முடியாது. அந்த இருட்டு மண்மேடு பின்னொரு நாளில் ஒரு வெளிச்சமுள்ள அறையாக மாறக்கூடும். எங்கு பார்த்தாலும் சிமெண்ட், கற்கள், சலிக்கப்பட்ட மணல் துகள்கள், கம்பிகள் எனக் கலவையாகயிருந்ததைத் தாண்டி, சமதளமான மனையொன்று இருந்தது. சுற்றிலும் நல்ல விலையுயர்ந்த நாற்காலிகள். இந்த நாற்காலிக்குத்தான், மனித உடல்களின் இவ்வளவு ஆட்டமும். யார் அமர்வது என்ற கேள்வியில் நாற்காலிகளின் தரம் ஆட ஆரம்பிக்கின்றது. காட்சிகள், அதற்கான படப்பிடிப்புகள், ஒப்பனைகள், பேச்சுகள் என அனைத்தையும் கொக்கிப்போட்டு இழுத்து, குழியில் தள்ளும் மலைப்பாதை வளைவுகள் இங்கு பேரதிகம். எல்லா வளைவுகளையும் உதறித்தள்ளும் ஒரு மனித உடல் தான் அரசியலுக்கு அவசியமாகின்றது.

இப்போது,

நாயகமாக நடுவிலிருந்தவர், என்னாய்யா…. என்னா சந்தேகம் உனக்கு? என்றார்.

காதோதி -1 இல்லைங்க அய்யா… நமக்கு சீட் தரல…

காதோதி – 2 நாம ஏமாந்துட்டோம்ய்யா…

அது அப்படியல்லய்யா… உங்களுக்குப் புரியாது. நான் இல்லன்னா என்ன? கட்சி நம்மோடது. யார் நின்னாலும் ஜெயிக்கணும். தலைமை தான் நமக்கு முதல்ல. நம்ம ஜாதிக்காரன் இல்லன்னா என்ன? அதெல்லாம் பார்க்ககூடாது. ஓட்டு பிரியக்கூடாது. போய் வேலையைப் பாருங்க. எனக்கு ஜெயிக்கணும். அவ்வளவு தான்…

அய்யா…

சொல்லுப்பா…

“என்ன… இப்படி சொல்லி அனுப்பிட்டீங்க…”

ஆமாய்ய… அப்பதானே அது பரவும்… நான் கோவமாருக்கேன்னு வெளியில சொல்ல முடியுமா? தமிழ்நாடு முழுக்க ஜாதிக்காரன் தான் சீட்கேக்கிறான். எனக்கு சீட் இல்ல. விரோதம் மாறாது.” 

“சற்று தூரத்தில் உயரத் தெரிந்த கான்கிரீட் கம்பிகளை எக்கிப் பார்த்துக்கொண்டே,” பேச்சை நிறுத்தி யோசித்து,

உனக்குத் தெரியாதுய்யா…

வலிக்குது… உள்ளாற பிசைஞ்சு பிசைஞ்சு வலிக்குது…

இருளின் மரங்களின் நிழலில் ஏதோ அசைவது போல் தெரிந்தன.

மனுஷங்க இல்லாத இடத்துக்குப் போக தோணுது….

வெளில தலைக்காட்டமுடியல. கேட்டா இதெல்லாம் கட்சியில சாதாரணம்ங்கறானுங்க… எது சாதாரணம்? என் ஜாதிக்காரனுக்கு என்ன பதில் சொல்றது?

இப்போது மரங்களின் நிழலில் அசைவில்லை. 

இப்போ நான் தனியாள் ய்யா… எவனும் கூட இல்ல…

பத்து பேர் கூட இருந்து பழகிட்டா, அது இருவது பேரா இருந்தா தான் அன்னைய நாள் நல்லாருக்கும். அது ஒரு மனுஷபோதை. சுத்திலும் கூட்டத்தோட பொழுதக் கழிக்கிறது. மனுஷங்க இருந்தா சோறு, தண்ணி வேணாம். பெரும் ராஜபோகமான சுகம் அது. அனுபவிச்சா மட்டுமே புரியும்.

இப்போ, சல்லித்தனமா ஒரு மனுஷபயல் கூட கிட்டக்க இல்ல.

டென்ஷன் ஆகாதீங்க அய்யா…

இப்போது எதிரே தெரிந்த இருளில் எச்சலனமுமில்லை. 

சரியான நேரத்துல என் குறுக்கால வந்துட்டான். எனக்கு சமாதானமாகல. எப்படி நான் அரசியல்ல இனி வேலை பார்க்குறது?

“இதெல்லாம் சகஜமா எடுத்துகலாம்ய்யா.. கோவப்படாதீங்க. உடம்புக்கு ஆகாது. விடுங்கய்யா..”

“மனசு ஆறல எனக்கு… எழுந்து நின்று எரியும் விளக்கை உற்றுப் பார்த்தவாறு, “ம்.. ஹீ.. ம்..” என்றார்.”

நீண்ட வரிசையான வாகனங்களின் காத்திருப்பில், உள்ளே உட்கார்ந்திருக்கும் ஒரு மனித உடலின் தள்ளாமை “ம்..ஹீ..ம்” வில் தெரிந்தது.

இருள் இன்னமும் அவர்களைப் பார்த்தபடி அமைதி காத்தது.

*****

தேர்தல் தேதி நெருங்கியது. நாடே திருவிழாவைக் கொண்டாட பரபரத்தது.

வாழ்ந்து, கெட்ட, வாழப்போகும் மனித உடல்கள் சிந்திப்பதை ஒத்திப்போட்டன.

எங்குப் பார்த்தாலும் தேர்தல் வாக்குறுதிகள், செயல்படுத்தப்படவிருக்கும் நலத்திட்டங்கள், தொழில் வாய்ப்புகள், தடையற்ற நீர்வசதி போன்ற பற்பல வண்ணம் கொட்டிய கலவைச் சாந்தாய் தொடர்ந்த பிரச்சாரத்தில் நாடே சாயம் பூசிக் கிடந்தது.

நிற்க கூட நொடியின்றி காற்று போல புகுந்து புகுந்து மக்களைச் சந்தித்தேன். தேர்தல் விதிமுறைகளை மிகவும் கவனத்தில் கொண்டிருந்தேன். செல்லுமிடமெல்லாம் எனக்குச் சாதகமாகயிருந்தது. துளிகூட வெற்றியைப் பற்றி கவலைப்படாமலிருக்க என்னோடிருந்தவர்கள் கூறியதை உள்வாங்கி, கணிசமாக வந்திடுமா? என்றேன்.

அதிருப்தி வேண்டாம்ன்ணே…. என்றார்கள். நாங்கள் சாட்சி… கையும் களவுமா வெற்றி உறுதி என கை உயர்த்தியதில், முகம் பீதி களைந்தது.

*****

கோடிகளைத் தன்னுள் சுமக்கப்போகும் அந்தப் பெருங்கட்டடத்தில் மணல் கொட்டிக் கிடந்த மௌனமான ஒரு முன்னிரவுப்பொழுது, பரந்துபட்ட இடம் ஆட்கள் தென்படவில்லை. சரிந்துக்கிடந்த மணல் குவியலில், ஈரமிருந்தது. வரிசையாக இரு பக்கமும் நிறைய செடிகளை வைத்திருந்தார்கள். செடியின் பச்சையும், பூவின் மொட்டும் அழகழகான நிறத்தில் தலையசைத்ததில், சிறு குழந்தையின் நளினம் தெரிந்தது. இன்னும் சில வருடங்களில் வளர்ந்த மரமும், மலருமான அவ்விடத்தின் ரம்மியத்தில் மனித உடல்கள் தம்மை ஆசுவாசப்படுத்தும் ஒரு பேரிடமாக அது மாற வாய்ப்புண்டு. அந்த நீண்ட வழித்தடத்தின், உட்புறத்தின் பெரிய கனமான இரும்புக் கதவை உள் தள்ளி அவர்கள் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டே கொட்டாவி விட்டுமாக அராஜக பண்ணையார்த்தனத்தில் காட்சித் தந்தார்கள்.

காதோதிகள் வழக்கம் போல் அன்றன்றைய செய்திகளை ஒப்புவித்தது, நட்ஸ் கலந்த ஐஸ்கிரீமை குடுவையில் வழங்கியது போலிருந்தது.

ஆனாலும், அது சுவைக்கவில்லை.

காதோதிகள் – 1 

அய்யா… என்னா பேசமாட்டேங்கறீங்க.. அடக்காதீங்க அய்யா.. கொட்டித் தீர்த்துடுங்க…

காதோதிகள் – 2, 3

அய்யா.. ஒன்னும் நடக்கல.. இன்னும் கவலப்படாதீங்க சீட் தரல அவ்வளவு தான… தமிழ்நாட்டுல நாங்க யாருன்னு காட்டுறோம்.. நம்ம ஜாதியைப் பத்தி அப்ப தெரிஞ்சுப்பானுங்க..

யாருட்ட கெத்து காட்டுறது…

இங்கிருக்கும் மனித உடல்களுக்குள் இருக்கும் எண்ணக் கழிவுகளை எந்த அறிவியல் யுகத்திலும், எவ்வளவு சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் வந்தாலும் நீக்க முடியாது.

“எண்ணக்கழிவுகள் +ஊறிப்போன அங்கலாய்ப்புகள் = மனித உடல்கள்”

இது தான் கடைசிவரை என உறுதியிடலாம்.

ஒவ்வொரு மனித உடலும், அடுத்த மனித உடலை எப்படிச் சாய்க்கலாம், புகழினைத் தடுக்கலாம், வளரவிடக் கூடாது, நம்மைத்தாண்டி போய்விடக் கூடாது, கூடவே இருந்துக் கொண்டே பாதாளத்தில் தள்ளுவது போன்ற சல்லிசான வேலைகளில் தம்மைச் செப்பனிட்டுக் கொள்கிறார்கள்.

திடீரென, ஒரு காதோதி கத்தியது. பெரும் குரலில்.

உங்கள தான்யா நாற்காலில உட்கார வப்போம். எவன் ஜெயிக்கிறான்னு கணக்கெடுத்தா என்ன? எந்த டீம் வேலைப் பார்த்து சொன்னா என்ன?

நாங்க என்ன பராக்கு பார்க்க இருக்கோமா? கட்சிக்கு வேலை பார்ப்போம். ஆனா, என்னா வேலைன்னு வெளில தெரியாது…

நாங்க இருக்கோம்.. தைரியமா இருங்க… காதோதிகளின் ஏகோபித்த சவலையொலியில் அந்த இடம் உறங்க முடியாமல் முழித்தது.

*****

தேர்தல் நாளன்று விடியும் முன்னே கண் விழித்தேன். மாடிக்குச் செல்ல வேண்டுமென தோன்றியதை எந்தக் குறுக்கு விசாரணைக்கும் இடம் தராமல் செய்தேன். குலதெய்வக் கோயில் வழிபாடு முடித்து, வெளியே வரும் போது, மனது மிகவும் விரும்பும் நறுமணம். கமழ்ந்து கிளர்த்தியது. எல்லாவிதமான தடைகளைக் களையும் என்னைக் கைத்தூக்கக் கூடியதொரு பற்றினை உணர்ந்தேன். என் மனத்தின் உள்வரை சென்று என்னையே மறந்தாற் போல, சுகந்தமான நல்ல மனநிலையைத் தந்தது ஏகாந்தமடையச் செய்யும் மதர்த்தலான வெறியில், நல்ல நேரத்தில் என் வாக்கினைப் பதிவு செய்து, அப்போதே வெற்றியானது போல பெரும் மகிழ்ச்சி, நடையில் பக்குவம். பேச்சில் கனிவு. செயலில் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளல் என முழுவதுமாக உருமாறி முதிர்ச்சி பெற்று நின்றேன். எல்லாரிடமும் பொதுப்படையாக பேசினேன். எந்த மறைவுமில்லை.

அண்ணே… நிறைய பத்திரிக்கைகள், மீடியாக்களில் நம்ம ஊர் வெற்றின்னு வந்திருக்கு… அண்ணே.. MLA ஆகிட்டா வேலை ஒன்னு வாங்கித்தாங்க..

உதவியாளனை அன்பாகத் தட்டிக்கொடுத்தேன். 

பார்த்துக்கலாம்.. பார்த்துப்பேன்… 

காரின் மிதமான நகர்வில், கோர்க்கப்பட்ட இசைக்கோவை அதிர்வில் கண்கள் அழுந்த உறங்கினேன்.

*****

அன்று தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள். என்னிடம் எப்பதற்றமுமில்லை. சஞ்சலமுமில்லை. சுமார் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆரம்பக்கட்ட முடிவு தெரியக்கூடும். விளையாட்டாக, ஒரு ஆபத்துடன் விளையாடிவிட்டேன். ஆனால், அது பிடித்திருந்தது. அது கனவும் கூட. தலையில் கனம் ஏற்றிக் கொள்ளாத கனவு. சிரித்துக்கொண்டேன்.

*****

தொடர்ந்து எனக்கான எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தது. புரியவில்லை. உயரமான மலையுச்சியில் பிடித்தமன்றி நிற்பது போல உணர்ந்தேன். எதிர்கட்சியின் வெற்றிக் குரலில் என்னுள்ளே ஏதோ பிறாண்டியது. கொட்டும் குருதியோடு அவ்விடத்தைவிட்டு அகன்றேன்.

மிக மிக மிகத் துல்லியமாக, சரியாக போட்டுக்கொடுத்த வரைபடக் கணக்கின்படி என் வெற்றி காவுக்கொடுக்கப்பட்டது.

******

தன்னிச்சையாக காருக்குள் உட்கார்ந்தேன். என் அருகில் ஒரு மனித உடலும் இல்லை. என்னைப் பார்த்து ஒதுங்கிக் கொண்டனர். பார்வையைத் தவிர்த்தனர். உதவியாளன் கூட அருகில் வரவில்லை. மிகச் சரியாக பெரும் கடப்பாறையால் என் முதுகைப் பிளந்திருந்தார்கள்.

*****

எப்பொழுதும் போல காலை விடிந்தது. யாரோ பார்க்க வந்திருப்பதன் அறிகுறியாக, she விடாமல் உணர்த்திய சத்தம் கேட்டு வெளியில் வந்தேன். அதே வற்றல் தொற்றலான உருவம் நின்றிருந்தது. அதன் கண்களில் எனக்குக் கொட்டியதைப் போலவே குருதிக் கொட்டியது. என் கைகளில் குருதி நனைத்த ஒரு கார்டொன்றை மறுபடியும் தந்துவிட்டு நகர்ந்து நடந்து மறைந்தது.

கார்டில் “அனைத்தையும் மற” இப்படிக்கு அஸ்திவாரம் என எழுதப்பட்டிருந்தது.

***

ம.கண்ணம்மாள் – மருதநிலம் தஞ்சையைச் சொந்தமாகக் கொண்டவர். 25 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக பணி மேற்கொண்டு வருகின்றார். அதோடு, பொதுவெளியில் கவிதை, கட்டுரை, சிறுகதை என இயங்குதலோடு, சீர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருக்குறள் அக மெய்ப்பாடுகள், இலக்கண உரைகளில் சமுதாயம், முப்பெரும் கவிஞர் பாக்களில் மெய்ப்பாடுகள், பாவலரேறு ச.பாலசுந்தரம் போன்ற நூல்களையும், ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் திருக்குறள் விளக்கம்’ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். சீர் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் பங்குக் கொண்டுள்ளார். சன்னத்தூறல், அதகளத்தி, உடல்கள் – கால்கள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி : kannamano07@gmail.com

டோடோ

1

ரம்யா அருண் ராயன்

ப்பா சங்கடப்பட்டிருப்பாரோ…?

இருக்கலாம்… 

பொதுவாக மாலை நேரம் ஒரு ஆசுவாச நடைக்காக வெளியில் சென்றால், இரவு எட்டுமணிக்கு வீடு திரும்புவதுதான் அப்பாவின் வழக்கம். நேற்றிரவு அவர் வெளியில் சென்றிருந்த சமயத்தில்தான் கட்டுமானப் பொறியாளரை வரவழைத்தோம், அப்பாவை யார் நேற்று மட்டும் அவ்வளவு விரைவில் வீடு திரும்பச்சொன்னது?

          அப்பாவின் காலத்திற்குப்பிறகு இந்த வீட்டை இடித்துவிட்டு, நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கட்டி வாடகைக்கு விடுவதற்கான வரைவுத்திட்டத்தை இப்போதே உறுதிசெய்து வைத்துக்கொள்ளலாம் என்பது என் முடிவு. நாங்கள் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிலிருந்து விடுப்பில் வந்திருக்கிற இது போன்ற வாய்ப்பு இனி மூன்று ஆண்டுகள் கழித்துதான் எங்களுக்குக் கிடைக்கும். இப்போதே திட்டமிட்டால்தானே நிதி ஒதுக்கீட்டிலிருந்து சகலத்தையும் குழப்பமின்றி செய்ய இயலும்?

           அப்பா என்னை நிச்சயம் தவறாகத்தான் நினைத்திருப்பார். அவரை அருகில்தான் நிற்கிறார் என்றறியாமலே பொறியாளரிடம்,

 “அப்பா சாகுறதுக்கு எப்படியும் இன்னும் நாலு வருசமாட்டு ஆயிரும், அதுக்கேத்தாப்ல வீட்டோட ரெனோவேஷன ப்ளான் பண்ணுங்க என்ஜினியர் சார்!” என்றல்லவா கூறிக்கொண்டிருந்தேன் நான்…? 

பொறியாளர், அப்பா நிற்பதை முகக்குறிப்பால் உணர்த்தியபோதுதான் எனது முட்டாள்தனம் எனக்குப் புரிந்தது, 

  நான், 

“டடா…! அதுவந்து…” 

என்று தயக்கத்துடன் பேசுவதற்குள், இறுக்கமான பாறையில் பூத்த ஒற்றைப்பூ போன்ற அவரது வழக்கமான இளமுறுவலுடன் தனது அறைக்கு விரைந்துவிட்டார் அப்பா. 

            எங்களுடையது பதினான்கு சென்ட் அளவுடைய வீடு, அப்பா ஒருவர் மட்டிலுமாக தனியாய் வசிக்க இது மிகப்பெரியதுதான். ஆனாலும் அப்பா இந்த வீட்டையும், இதிலிருக்கிற ஒவ்வொரு கதவையும், சுவரையும், தரையையும், அவற்றிலிருக்கிற நினைவுகளையும் மிக நேசிக்கிறார் என்பதால், வீட்டை புனரமைத்துக் கட்ட அவரிடம் நானோ என் மனைவியோ இதுநாள் வரையில் வலியுறுத்தியதே இல்லை. ஆஸ்திரேலியா வந்து எங்களோடு தங்கிக்கொள்ளவும் அப்பாவுக்கு சம்மதமில்லை.

            பதினைந்து வருடங்களுக்கு முன்பு, எங்கள் மூத்த மகள் வெலன்டினா பிறந்த சமயத்தில் அப்பா எங்களுடன் சிறிதுகாலம் ஆஸ்திரேலியா வந்து தங்கினார். அந்த காலகட்டத்தில், அப்பா தொடங்கிவைத்த ஒரு விவாதம்தான் அதன்பிறகு அவரையும் என்னையும் ஒருவொருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளாதவர்களாய் ஆக்கிவைத்தது. அம்மா எனது பத்து வயதிலேயே மரித்துவிட்டபிறகு அப்பா, என் வீட்டில் வேலையாளாக இருந்த ரஞ்சம்மாவின் துணையோடேயே என்னை வளர்த்தார். நாளாக நாளாக ஊரே அவர்கள் இருவரையும் இணைத்துவைத்து கதை பேசியபோதும் நான் ரஞ்சம்மாவின்மேல் பெருமதிப்பு வைத்திருந்தேன். நானும் வளர்ந்து வெளிநாட்டு வேலை, திருமணம், குடும்பவாழ்க்கை என்றெல்லாம் ஆகிவிட்ட அத்தனை வருடம் கழித்து, அந்த வயதில், அப்பா அப்படி ரஞ்சம்மாவை இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்து என்னிடம் சம்மதம் கேட்பார் என நான் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. 

           அன்று ஆத்திரத்தில் அவரிடம் கத்தியது மட்டுமல்லாமல், தொலைபேசியில் ரஞ்சம்மாவிடமும் அவ்வளவு கோபத்தையும் இரைந்து தள்ளினேன். அத்தோடு ரஞ்சம்மா எங்கள் வாழ்விலிருந்து விலகிக்கொண்டாள். 

          அதற்குப்பின் நான்கு வருடங்கள் கழித்து கிறிஸ்டினா பிறந்தபோது, அப்பா ஆஸ்திரேலியா வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவுமில்லை, நான் அவரை அதற்காக வலியுறுத்தி அழைக்கவுமில்லை. தனியாளாய் இந்த வீட்டில் அவர் வசிக்கிறதற்கு, பகலுக்கு ஒருவரும் இரவுக்கு ஒருவருமென இரண்டு ஆண் பணியாட்களை நியமித்திருக்கிறார். அவரது வங்கிக்கணக்கில் தேவைக்கு அதிகமாகவே தோப்பு வருமானத்தின் பணம் நிறைந்திருக்கிறது.  

             நேற்றிரவு நான் பேசிய வார்த்தையின் பொருட்டு அப்பாவின் மனநிலை என்னவாக இருக்குமென சிந்தித்து உறக்கம் வராத பொழுதில், அப்பாவிடம்  மது உள்ளதா எனத் தேடினேன். மதுப்புட்டிகளை உட்கூடத்தின்  அலங்காரப்பலகையில் அப்பா அடுக்கி வைக்கிற அழகே அலாதியானது. ஆஸ்திரேலியாவிலிருந்து எப்போதும் நாங்கள் வரும்போது என்ன வாங்கிவரவேண்டும் எனக்கேட்டால், “வைய்ன் ஹோல்டர் மட்டும் போதும்” என்பார் அப்பா. எத்தனையோ விலையுயர்ந்த நவீனமான மதுப்புட்டித்தாங்கிகள் வழக்கத்திலிருந்தாலும், ஆஸ்திரேலியாவில் மலிவாகக் கிடைக்கிற ஒரு வகை மரக்கட்டையாலான மதுப்புட்டித்தாங்கி மீது மட்டும் அவருக்கு தணியாத மோகம். முக்கால் முழ நீளத்துக்கு, கரும்புத்துண்டம் போன்ற தடிமனுடன் இருக்கிற அந்த மரக்கட்டையின் அடிப்பகுதி சாய்தளமாய் செதுக்கப்பட்டிருக்கும், சாதாரணமாகவெனில் அதை நேராய் நிறுத்த இயலாது, ஆனால் அந்தக்கட்டையின் துளையில் மதுப்புட்டியின் கழுத்துவரை கிடைமட்டமாய் நுழைத்தால், சமநிலையில் நிறுத்தலாம். அந்த சமநிலையின்மீது ஏனோ அப்பாவுக்கு பெருவிருப்பம். முப்பதுக்கும் மேற்பட்ட ‘வைன் ஹோல்டர்’களை மதுப்புட்டிகளுடன் நேர்த்தியாக நிறுத்தியிருந்தார் அப்பா. ஆனால் அதில் எந்த மதுப்புட்டியும் திறக்கப்படவே இல்லை. அவருக்கென்று பார்த்துப்பார்த்து பரோஸா பள்ளத்தாக்கின் ஷிராஸ் திராட்சை ரசத்தை நான் வாங்கி வந்தாலும் அவர் அதனைச் சுவைப்பதே இல்லை என இப்போதுதான் புரிந்தது எனக்கு,  இவ்வளவு வயதேறிய திராட்சைரசம் அதன் அசல் விலையைவிட எவ்வளவு மடங்கு அதிகமென கணக்கிட்டுப் பார்த்தது என் மனது. கடைசியில், சமீபமாய் தேதியிடப்பட்ட திராட்சை ரசம் ஒன்றைப் பருகிவிட்டு, தாங்கியின் சமநிலைக்காக புட்டியில் நீர் நிறைத்து வைத்துவிட்டு உறங்கினேன்.

        இன்று காலையிலிருந்து அப்பாவின் அறைக்குள் வெலன்டினாவும், கிறிஸ்டினாவும் புத்தக அலமாரியை அடுக்குவதற்கு உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள். அப்பாவின் அறை, பேத்திகளின் சிரிப்பாலும், ஆங்கிலச்சாயலடிக்கிற தமிழாலும் நிறைந்திருக்கிற இதுதான் சரியான சந்தர்ப்பம். அப்பா இப்போது மிகவும் நெகிழ்ந்த நிலையில் இருப்பார். இன்று அப்பாவிடம் எனது நேற்றைய வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்துவிடவேண்டும், சொத்து கனிந்துவருகிற சமயத்தில் அதுவே சரியாய் இருக்கும்.  

           அப்பா ஒரு புத்தகப்பிரியர். அவரது அறையின் ஒருபுறச்சுவர் முழுவதும், புத்தகங்கள் வைக்கிற சட்டகங்களைப் பொருத்தியுள்ளார், அதில் விநோதம் என்னவெனில், புத்தகங்களுக்கு அவர் இட்டிருக்கிற உறைதான். புதுப்புத்தகம் வாங்கியவுடனேயே முதலில் வெண்தாள் கொண்டு அட்டையிடுவார், அதன் முதுகுப்பகுதியில் கறுப்பு மை கொண்டு நூல் மற்றும் நூலாசிரியர் பெயர் எழுதி, மீண்டும் ஒரு கண்ணாடிக்காகிதத்தால் அட்டையிடுவார். கறுப்பு-வெள்ளை சீருடையில், உயரவாரியாய் அமர்ந்திருக்கிற பள்ளிப்பிள்ளைகள் போன்ற ஒழுங்குடன் அவரது சட்டகங்களில் புத்தகங்கள் இருக்கும். வாரம் ஒருமுறை நிச்சயமாக அவற்றிற்கு தூசு தட்டுவதும், மாதம் ஒருமுறை புத்தகங்களை அதன் இடத்திலிருந்து கலைத்து அடுக்குவதும் அவரது வாடிக்கை. 

        சற்று தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்துகொண்டே, “உள்ளே வரலாமா டடா…?” என்றேன். அவரது பதிலுக்கு முன்பே, இழுப்பறை மேசையின் முன்னிருந்த மரநாற்காலியை இழுத்து அமர்ந்துகொண்டேன். பிள்ளைகள் நிமிர்ந்து புன்னகைத்துவிட்டு, மீண்டும் வேலையில் இறங்கினர். நான் கட்டிலில் அமர்ந்திருந்த அப்பாவைப் பார்த்தேன், அவரது முகத்தில் நேற்றைய நிகழ்வின் சுவடு இருந்தாற்போன்றே இல்லை. அவர் என் இருப்பைப் பெரிதாய் கண்டுகொள்ளாததுபோல், “இன்னுமா கிடைக்கல?” என்றார் பேத்திகளிடம். 

வெலன்டினா, “நோ தாத்தா! அந்த புக்கோட பார்ட்-ட்டூ கிடைக்கவே இல்ல” என்றாள்

          கிறிஸ்டினா, “தாத்தா… யாருக்காச்சும் வாசிக்க குடுத்துட்டு திருப்பி வாங்க மறந்துட்டீங்களோ?” எனக் கேட்டாள். 

வெலன்டினா, “ஆஹாஹா… தாத்தாதான…? அவராச்சு… அப்டி குடுக்குறதாச்சு… சான்ஸ்லெஸ்… அதுவும் அவரே இன்னும் வாசிக்காத புத்தகத்த அப்டி குடுப்பாரா?” என்றுவிட்டு, “தாத்தா…! அந்த பார்ட்-ட்டூ நானே ஆன்லைன் ஷாப்பிங் பண்ணிக்கலாம்ட்டு இண்டர்நெட்ல தேடுனா, அவுட் ஆஃப் ஸ்டாக்னு வருது… ஏர்லி செவன்ட்டீஸ்ல எழுதப்பட்ட புக் போலருக்கு, அவ்ளோ பழைய புத்தகத்த ஏன் தாத்தா படிக்காம வச்சீங்க?” என்றாள்

“என்னவோ விட்டுப்போச்சு…” உதட்டைப் பிதுக்கியபடி சொன்னார் அப்பா

“பார்ட்-ஒன் என்ன கதை?”, கேட்டாள் கிறிஸ்டினா

“அதுவா… அது ஒரு தீவோட கதைடா… சுருக்கமா சொல்லட்டா? ‘கர்னி’ன்னு ஒரு முத்து வளம் நெறஞ்ச தீவுநாடு… அங்க ஐரோப்பிய நாடுகள் போட்டிபோட்டுக்கிட்டு பலவருசமா ஆதிக்கம் செலுத்துறாங்க… அடிமைத்தனத்துக்கு எதிரான புரட்சிய, அங்க ‘சிபு’ன்னு ஒரு இளைஞன் ஆரம்பிச்சு வைக்கிறான்… அவன்பின்னால் இளைஞர்கள் ஒன்னுசேருறாங்க. எரியுறத பிடுங்கிட்டா கொதிக்கிறது அடங்கிரும்ல்ல..? அதான்…. சிபுவ நாடுகடத்திட்டா சரியாகிரும்னு ஆட்சியாளர்கள் நெனச்சாங்க. மரக்கலன்ல ஏத்திட்டுவந்து இன்னோரு குட்டித்தீவுல விடுறாங்க… அவன் அங்க அலைஞ்சு திரியுறான்… அப்ப அங்க அவன் அந்த பெரிய பறவைய பார்க்குறான்… கிட்டத்தட்ட சிபுவோட இடுப்பு உயரத்துக்கு இருந்துச்சு அந்தப் பறவை… அதோட இனமே அழிஞ்சு போச்சுனு உலகமே நினைச்ச பறவை அது…” என்று நிறுத்திய அப்பாவிடம்,

“அது என்ன பறவை?” ஆவலாய்க் கேட்டாள் கிறிஸ்டினா.

          என் மகள்களுக்கு விதவிதமான பறவைகளின் மீது ஆர்வமுண்டு. செப்டம்பர் மாதம் ஆனதுமே, ஆஸ்திரேலியாவில் அவரவரது பைனாக்குலர்களை ஆயத்தம் செய்து வைத்துக்கொள்வோம், பறவை பார்த்தலுக்காக ககாடு தேசிய பூங்காவுக்கு நிச்சயமாய் வசந்தகாலத்தில் ஒருமுறையாகிலும் சென்றுவருவோம். மாக்பி வாத்துகள், ப்ரோல்காஸ், எக்ரெட்ஸ், கூகபுராஸ் என்று ஏராளம் பறவைகளால் எங்கள் புகைப்படத்தொகுப்பு நிறைந்திருக்கிறது. 

           அழிந்த இனப் பறவை என்னவாக இருக்கும் என அறிந்துகொள்கிற ஆர்வம் மின்னுகிற முகத்தோடு தாத்தாவைப் பார்த்துக்கொண்டிருந்த பேத்திகளிடம், 

  “அந்த பறவையோட பேர் சொல்லாமதான் அந்த முதல் பாகம் முடிஞ்சு போச்சே…” என்றார் அப்பா குழந்தைத்தனமாய் முகத்தை வைத்துக்கொண்டு. 

 “ஒருவேளை கவாய்ஓஓ பறவையா இருக்குமோ? அது அழிஞ்சுபோன இனம்தான்” என கிறிஸ்டினா கேட்டதற்கு வெலன்டினா, “வாய்ப்பில்ல… கவாய்ஓஓ சின்னதால்ல இருக்கும்…?!! இது பெருசா சிபுவோட இடுப்பு உயரத்துக்கு இருக்கும்ன்றாங்கல்ல… அதுமட்டுமில்லாம, கவாய்ஓஓ ட்வென்ட்டியத் செஞ்சுரியோட எய்ட்டீஸ் வரைக்கும் இருந்த பறவை… ஆனா இந்த கதை செவன்ட்டீஸ்ல எழுதிருக்காங்க… தவிர, போர்ச்சுக்கீஸ் காலனி ஆதிக்கம் கதையோட பின்னணினு தாத்தா சொல்றாங்கல்ல… இந்தியாவுல போர்ச்சுக்கீஸ் ஆதிக்கம் செலுத்துன பதினஞ்சாவது நூற்றாண்டு மாதிரியான காலகட்டத்துல நடக்குறது மாதிரிதான் இந்த கதையை எழுதிருப்பாங்களா இருக்கும்” என்றாள். அப்பா பெருமித புன்சிரிப்புடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

“அப்டின்னா அது என்ன பறவையா இருக்கும்? கரோலினா கிளி… மோவா… குர்லூ… டோடோ…” என்று கிறிஸ்டினா அடுக்கிக்கொண்டே போக, வெலன்டினா சட்டென்று, 

“டோடோ…?….!!! தாத்தா… டோடோவா இருக்குமோ? அது பெரிய பறவைதான்… மொரீஷியஸ் தீவுல இருந்த பறவை” என ஆவலுடன் கேட்ட கேள்விக்கு அப்பா, “அப்டியே வச்சுக்கலாமா…?” என்றார் குதூகலமாய்.

          மகள்கள் என் அப்பாவின் அறையில், பேச்சாலும் கதையாலும் பாய்ச்சியிருக்கிற புத்தொளியில், நான் ஏந்திவந்த மன்னிப்புக்கோரல் என்கிற மெழுகுவர்த்தியின் சுடரொளி எனக்கே மங்கலாகித் தெரிந்தது. 

“தாத்தா… நான் பார்ட்-ட்டூ கதைய என் கற்பனைல சும்மா யோசிச்சு சொல்லட்டா? நான் எங்க விடுறேனோ அங்க கிறிஸ்டினா… அவ விடுற இடத்துலருந்து நீங்க ஆரம்பிச்சு கதைய முடிச்சு வைக்கனும்… சரியா?” என்ற வெலன்டினாவும், “இது நல்லாருக்கு…” என்று குதித்த கிறிஸ்டினாவும், அவர்களது மகிழ்வான உலகத்தில் என் அப்பாவுக்கு இடம் தந்திருக்கிற அளவுக்கு எனக்கு இடம் தரவில்லை என்பது புரிந்ததும் அந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிடலாமா எனத் தோன்றியது எனக்கு. அதற்குள், வெலன்டினா கதையை ஆரம்பித்தாள். 

          சிபு, அந்த பெயரற்ற குறுந்தீவுக்கு மிக அருகில், மரக்கலனிலிருந்து கடலில் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடப்பட்டான். அவனது கைகால்களைக் கட்டாமல் கடலில் தள்ளுமளவு அந்த கப்பலின் மாலுமி கருணையோடிருந்தார். நீந்திக் கரையேறினான் சிபு. அவனது ஆடைகளிலும் தலையிலும் வழிந்தோடிய உப்புநீர் கனமாய் இருந்தது. அவ்வளவு கனமான நீராலும் அணைக்க முடியாத புரட்சித்தீ அவனது மனதில் பற்றியெரிந்து கொண்டிருந்தது. தீவிற்குள் நடந்தவனுக்கு அந்த சுதந்திரக்காற்று பிடித்திருந்தது. ஆனமட்டும் அலைந்துபார்த்தான், பெருங்குரலில் கத்திப்பார்த்தான், மனித சஞ்சாரமே இல்லை. மரங்களும், சிறு குன்றுகளும், புதர்களுமென நிறைந்திருந்தது தீவு. கடற்கரைப்பகுதியில் மட்டுமே பாறைகளுக்கிடையில் ஆங்காங்கு திட்டுத்திட்டாய் மணற்பரப்பு இருந்தது. 

         பழங்களும், கிழங்குகளும், கடலருகில் ஊற்று தோண்டினால் நன்னீருமென அவன் உயிர் வாழ்வதற்கு எந்த இடைஞ்சலும் இல்லை, ஆனால் தாய்மொழியை வாய்விட்டுப்பேச யாருமற்ற நிலை மட்டும் பெரிய தண்டனையாய் தோன்றியது அவனுக்கு. சூரிய உதயப்பொழுதில் தீவின் ஓரிடத்திலிருந்து கடற்கரையோரமாக பாறைகளின் மேலேறுவதும் கீழிறங்குவதுமாக நடக்க ஆரம்பித்தால், தீவினை முழுசுற்று சுற்றி அதே இடத்திற்கு, சூரியன் உச்சிவானுக்கு வரும்நேரத்தில் வந்துவிட முடிந்தது. அவ்வளவுதான் அந்தத்தீவின் மொத்த பரப்பளவு. 

        பத்து நாட்கள் கழிந்தபிறகும் எந்த விலங்குகளையும், ஊர்வனவற்றையும்கூட அவனால் காண இயலவில்லை. இந்தியக்கடலின் மத்தியில் இருக்கிற அந்தத் தீவுக்கு, அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பைத் தாண்டி விலங்குகள் குடியேற வேண்டுமெனில் அவனைப்போல் அவற்றையும் யாராவது நாடு கடத்திதான் கொண்டுவர வேண்டும் என்பது சிபுவுக்குப் புரிந்தது. ஆனால் வலசைப் பறவைகளும், தாவரங்களும், பூச்சியினங்களும் ஏராளமாய் இருந்தன, அவை பறவை எச்சங்களின் மூலமாக இங்கு பரவியிருக்கலாம் என நினைத்துக்கொண்டான்.   

            சிபு பன்னிரெண்டாவது நாளில் நெருப்பை உருவாக்கினான். அதுவரை பழங்களை உண்டவன், கடற்கரை மணலில் அலை இழுக்கும்போது புதைகிற மட்டிக் கிளிஞ்சல்களைச் சேகரித்து அன்றுதான் உண்ணத்தொடங்கினான். வேகவைத்ததும் தானாகவே திறந்துகொள்கிற மட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு தன் நாட்டு மக்களின் நினைவு வரும். ஆட்சிபுரிவோரின் சூழ்ச்சியால் செயற்கையாய் உருவாக்கப்பட்ட பஞ்சத்தில், இலவசமாய் கிடைக்கிற கஞ்சிக்கும் ரொட்டிக்கும், தம்  வாயைப்பிளந்துகொண்டு அவர்கள் தம்மைக் கையளிப்பதை நினைக்கும்போதெல்லாம் அவன் சத்தமாக தாங்கள் உருவாக்கிய புரட்சிப்பாடலைப் பாடுவான். காற்றின் ஏதோ ஒரு மூலக்கூறு இந்த புரட்சியுணர்வை தன் மக்களிடம் சுமந்துசெல்லும் என அவன் நம்பினான். 

              அன்று, மட்டிக்கிளிஞ்சல்களுக்கு மாற்றாக மீன்கள் ஏதாவது பிடிக்க முடியுமா என கடலுக்குள் இறங்கியவன் மடிநிறைய பாறைக்கிளிஞ்சல்களை எடுத்துவந்தான். அன்றுதான் அவன் குன்றின் சரிவிலிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து வந்த ஒலியை கவனித்தான்…. “டோ… டோ… ” என புறா குனுவதுபோல், ஆனால் அதைவிட கனமான ஒலி. 

‘என்ன ஓசை அது…?’ செவிப்புலனைக் கூர்மையாக்கினான். 

‘டோ…டோ….’ மீண்டும் கேட்டது அதே ஒலி

‘டோடோ பறவையின் ஒலி… எனில்… டோடோ பறவைகள் இந்தத்தீவில் இருக்கின்றனவா? நான் சிறுவனாய் மொரீஷியஸ் தீவில் சில ஆண்டுகள் வசித்தபோது இந்த ஓசையை கேட்டிருக்கிறேன்’ சிந்தித்தபடியே சிபு டோடோ பறவையைத் தேடினான்.

          சொல்லிக்கொண்டிருந்த வெலன்டினாவை என் அப்பா இடைமறித்தார் “கதையோட காலகட்டத்த வச்சு யோசிச்சோம்ன்னா, மொரீஷியஸ் தீவோட அப்போதைய பேர் செர்னே தீவுடா பாப்பா” என்றார். 

           சம்மதமாய் தலையசைத்தபடி வெலன்டினா மீண்டும் கதையைத்தொடர்ந்தாள்.

          நாவின் சுவையரும்புகளின் மீது டோடோ இறைச்சியின் சுவையை ஈரமாய் சிபுவின் மூளை கிளர்த்தினாலும், அவனது பகுத்தறிவு டோடோ இருப்பை நம்ப மறுத்துச் சிந்தித்துக் கொண்டிருந்தது.

 ‘செர்னே தீவில் முன்பெல்லாம் எவ்வளவு டோடோக்கள் இருக்கும்…? அதன் இறைச்சி எவ்வளவு சுவை…? அதைப்பிடிப்பதுவும் மிக எளிது. மூன்றுமாத கன்றுக்குட்டி ஒன்றை வெட்டினால் எவ்வளவு இறைச்சி கிடைக்குமோ அவ்வளவு இறைச்சி ஒரே டோடோ பறவையில் கிடைக்கும், அதுவும் எளிதில் வேகிற மென்மையான பறவை இறைச்சி’

  ‘ஆனால் இப்போது செர்னே தீவிலேயே அந்த பறவையினம் அழிந்துவிட்டது எனக் கேள்விப்பட்டேனே?’ 

  ‘கண்டத்திட்டுகள் கடலிலிருந்து மேலெழுந்து செர்னே தீவு தோன்றி, அங்கு தாவர வளர்ச்சிகள் ஏற்பட்ட காலத்தில், அதில் தரையிறங்கிய புறாக்கள் அங்கிருந்து செல்ல மனமில்லாதபடிக்கு தாவர உணவு செழித்த நிலமாய் செர்னே இருந்திருக்கிறது. விலங்குகளாலோ மனிதர்களாலோ ஆபத்துகள் ஏதுமற்ற காரணத்தால் அவை அங்கேயே தங்கியும்விட்டன. அவற்றிற்கு இரைதேடவோ… வேட்டைக்கு பயந்தோ… பறக்கும்தேவை இருக்கவில்லை… அவ்வளவு ஏன்…? விரைந்து ஓடுகிற அவசியம்கூட இல்லாதிருந்திருக்கிறது. உண்டு கொழுத்த உடலைத் தூக்கிப் பறக்கவும் அந்த இனத்திற்கு சோம்பலாக இருந்திருக்கிறது. பற்பல நூறாண்டு பரிணாம வளர்ச்சி, அவற்றை கொழுத்த உடலும் குறுகிய இறக்கையும் கொண்ட டோடோ இனமாக மாற்றியிருக்கிறது. அதன் அலகுகள் மட்டும் விதைகளை உடைத்து உடைத்து உண்டதால் மிக வலிமையுடைய வளைந்த அலகாக பரிமாண வளர்ச்சியடைந்திருக்கிறது. உணவை வயிற்றில் அரைக்க உதவியாய் சிறு சிறு கூழாங்கற்களையும் உணவோடு விழுங்கி கழிவோடு வெளியேற்றுமே தவிர, செரிமானச்சூட்டுக்காகக்கூட அவை விரைந்து நடக்காது. எதிலிருந்தும் தப்பிக்கப்பழகாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததால் செர்னே தீவில் ஐரோப்பிய தேசத்தினர் குடியேற்றத்திற்குப் பிறகு, அந்த இனமே வேகமாய் வேட்டையாடப்பட்டு அழிந்துபோனது’ 

‘அந்தப்பறவை இங்கு எப்படி?’ 

‘ஒருவேளை இந்தத் தீவில் தரையிறங்கிய புறாக்களுக்கும், அதே பரிணாம மாற்றம் ஏற்பட்டிருக்குமோ?’ 

‘எனில் எவ்வளவு டோடோக்கள் இங்குள்ளன?’ 

‘நிச்சயமாக நிறைய இல்லை, இருந்தால் கண்ணில் பட்டிருக்குமே இத்தனை நாளுக்குள்…’ 

   கிளிஞ்சல்கள் சிலவற்றை டோடோவின் சத்தம் எழுந்த மரத்தின் முன், பாறைமீது எறிந்தான். ஆவலோடு மரத்தின் பின்னிருந்து இரண்டு டோடோக்கள் முன்வந்து அவற்றை அலகால் எடுத்து பாறையில் மோதியுடைத்து சதையை உண்டன. உண்டுவிட்டு அவனைப் பார்த்தன. அவை இன்னும் முழு பிராயத்தை எட்டாத பருவத்திலிருந்தன என சிபு கணித்தான். 

 ‘ஒருவேளை இவை முட்டைக்குள்ளிருந்து வெளிவருவதற்கு முன்பு, இந்தத் தீவிற்கு வலசை வந்த ஏதேனும் ஒரு பறவையினம் பரப்பிய, ஏதேனும் ஒரு நோய்த்தொற்றால் மற்ற டோடோக்கள் அழிந்திருக்குமோ?’ என எண்ணியபடியே கையில் வைத்திருந்த மீதி கிளிஞ்சல்களையும் எறிந்தான் சிபு. அவை ‘ட்டுர்ர்… ட்டுர்ர்…’ என உற்சாக ஒலியெழுப்பிக்கொண்டே கிளிஞ்சல்களை ஒவ்வொன்றாய் தின்று முடித்தன. ஆனால் சிபு அவற்றின் அருகில் நெருங்கவே இல்லை.

           மறுநாளும் கடலில் நீந்திச்சென்று, பாறைக்கிளிஞ்சல்களை எடுத்துவந்தான். இம்முறை அவன் கடலிலிருந்து வெளிவருவதற்கு முன்பே டோடோக்கள் குன்றின் சரிவிற்கு வந்துவிட்டன. ‘இன்றும் இரண்டு டோடோக்கள் மட்டுமே வந்துள்ளன எனில், மொத்தமே இந்தத்தீவில் இரண்டுதான் எஞ்சியிருக்கின்றனவா? இந்த டோடோக்களுக்கு நான் ஒரு காலத்தில் டோடோ இறைச்சியை விரும்பி உண்டவன் என்பது தெரியுமா? ஒருவேளை என்றாகிலும் ஒருநாள், என் பசி என்னையும் ஒரு வேட்டை விலங்காக்கி இவற்றைக் கொல்லுமோ…?’ என்று எண்ணியபடியே கடற்கரையிலிருந்து டோடோக்களின் அருகில் வந்தான். பாறைக்கிளிஞ்சல்களை இம்முறை அவன் பாறைமீது எறியவில்லை, மாறாக பாறைமீது வைத்தான். அவையும் அவனுக்கு அவ்வளவு அருகில் நெருங்கி வந்தன. 

“மனிதர்களை இவ்வளவு நம்பாதே டோடோ!” என்று சத்தமாகக் கத்தினான் சிபு. அவை திடுக்கிட்டு நிமிர்ந்தன, ஆனால் பயப்பட்டு ஓடவில்லை. அந்த பறவைகளின் அசட்டுத்தனம், அவனது நினைவில் தாய்நாட்டையும், அதன் மக்களையும் ஒரு மங்கலான சித்திரம்போல் விரித்தது. 

‘இந்த டோடோக்களைப்போலவே என் இனமும் என் கர்னி தீவில் தப்பிக்கவோ, எதிர்க்கவோ முயலாமல் இருக்கிற இனமாக இருக்கிறதே…? செர்னே தீவில் டோடோக்கள் அழிந்ததைப்போன்று என் இனமும் எனது கர்னி தீவில் அழிந்துவிடுமா…?’

 ‘நான் என் தாய்நாட்டிற்கு மீள்வேனா… அல்லது இப்படியே மடிவேனா…? என் உடலாகிலும் கர்னி தீவில் கரையொதுங்குமா? நான் நலிவுற்றுக் கொண்டிருக்கிறேன்… இத்தீவில் நான் அழிகிற இனம். இந்த டோடோக்கள் ஆணும் பெண்ணுமாய் இருக்கின்றன… இவைதான் இங்கு நிலைக்கப்போகிற இனம்…’

  ‘இப்பறவைகளுக்குத் தேவையான நல்ல புரதத்தை நான் வழங்குகிறேன்… கடற்சிப்பிகளைக் கொணர்ந்து இவற்றை இரையூட்டுவேன்… என்னால் இயன்றது இதுதான்… இவற்றின் இனப்பெருக்க காலம் வருவதற்காக காத்திருப்பேன் நான்… இவை எழுப்பப்போகிற வேட்கையொலியால் இத்தீவின் வசந்தம் செழிக்கட்டும்… வலசைப்பறவைகள் இங்கு விருந்தாளிகள்தான்… டோடோக்களே இத்தீவின் அடையாளம்… பூர்வகுடிகள்…’ என்றெல்லாம் ஏதேதோ சிந்திக்துக் கடந்தன சிபுவின் நாட்கள். 

         அப்படியும் இப்படியுமாய் அத்தீவிற்கு அவன் வந்து அறுபது நாட்கள் ஓடியிருந்தன. இதற்குள் நான்கு மழைநாட்களில் ஏற்பட்ட நடுக்கம், அவனை ஒரு பாறைப் பிளவைத் தங்குமிடமாகத் தேர்ந்தெடுக்க வைத்திருந்தது. கடல்நீரினாலும் சூரிய வெப்பத்தினாலும் அவனது ஆடைகள் இற்றுப்போய் ஏறத்தாழ நிர்வாண கோலமாகியிருந்தான். அவன் அமர்ந்திருக்கும்போது அவனது கையிலிருந்து கிளிஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு டோடோக்கள் பழகியிருந்தன.

        அன்று சிபுவிற்கு பலத்த காய்ச்சல் வந்தது. கடலுக்கோ கிழங்கெடுக்கவோ அவனால் செல்ல இயலவில்லை. பலவீனமான கரங்களால் அவ்வப்போது நெருப்பிற்கு மட்டும் விறகு தள்ளிக்கொண்டிருந்தான். பசியில் தன் விரல்களைத் தானே சுட்டுக் கடித்துவிடலாமா என்பது போன்று இருந்தது. கண்கள் திகுதிகுவென எரிந்தன.

        டோடோக்கள் பழக்கப்பட்ட நேரத்து கிளிஞ்சல் உணவுக்கான பசியில் ‘ட்ர்ர்… ட்ர்ர்…’ என ஒலியை எழுப்பியபடி அவனைச் சுற்றிச்சுற்றி வந்தன. அச்சத்தம் அவனது தலைக்குள் இரண்டு டோடோக்களை நான்கு எட்டு பதினாறு என குரல்களால் பெருக்கிக்கொண்டே போனது. மனது மனிதக் குரலுக்காக ஏங்கியது. இந்த டோடோக்கள் பறக்கமுடியாமல் ஆனதைப்போல் நானும் பேசமுடியாமல் ஆகிவிடுவேனா என மனது தவித்தது. சூட்டுக்காக நெருப்பருகில் கிடந்த கூழாங்கல்லை அவன் எடுத்து கைக்குள் பொத்தியபோது, கிளிஞ்சல் என எண்ணியதோ… என்னவோ… பெண் டோடோ வந்து அவனது கையைக்கொத்தி, நழுவி கீழே விழுந்த கல்லை விழுங்கியது. சிபுவின் ஆத்திரம் தலைக்கேறியது. அந்த பெண் டோடோவின் கழுத்தை வளைத்து முறுக்கி கொன்று தள்ளிவிட்டான். அதன் உடல் தரையிலும், கால்களிரண்டும் நெருப்பிலும் இருக்கும்படி விழுந்தது பெண் டோடோ. ஆண் டோடோ ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தது.

         பெண் டோடோவின் கால்கள் நெருப்பில் வேகிற மணமும், இறைச்சியிலிருந்து மெல்லியதாய் வழிகிற கொழுப்பும் அவனது பசியைப் பல மடங்கு கிளர்த்தியது. டோடோவை இழுத்து, வெந்த அதன் கால் இறைச்சிப் பகுதியை உண்டான். அவனது நாவு உயிர்பெற்றதைப் போன்று இருந்தது. மெதுவாய் எழுந்து நெருப்பின் இருபுறமும் மரக்கவைகளை நட்டு, டோடோ உடலை அதில் தொங்கவிட்டு நெருப்பில் வாட்டினான். காய்ச்சல் தீர்வதற்கும் இறைச்சி தீர்வதற்கும் சரியாய் இருந்தது. 

             அன்றிரவு கடைசி துண்டம் இறைச்சி அவனது வாயிலிருந்தது. அப்போது, அந்த ஒலியைக் கேட்டான், ஆண் டோடோ தனது இனப்பெருக்க காலத்திற்கான முதல் வேட்கையொலியை எழுப்பியது. 

           வெலன்டினா கதையை நிறுத்தினாள். ஒரு கனத்த மௌனம் நிலவியது. எனக்கும் அப்பாவுக்கும் இடையிலிருந்த இறுக்கவுணர்வு இன்னும் அதிகமாகியிருந்தது. அடுத்து கிறிஸ்டினா கதையைத் தொடர்வதற்காக யோசித்துக்கொண்டிருந்தாள். அந்த அறையின் மௌனம் எனக்கு காதை அடைத்தது. ஆனால், அந்த அறை இந்த மௌனத்திற்கு வருடமுச்சூடும் பழகியதுதான் என்கிற உண்மை, என் இதயத்தின் மீது ஏதோ ஒரு பலமான பளுவை ஏற்றி வைத்தது. செய்வதறியாது, மேசையின் இழுப்பறையை தற்செயலாய் திறந்தது எனது கை. தீவின் கதை இரண்டாம் பாகம் புத்தகம் இழுப்பறைக்குள் இருந்தது. 

  “டடா…” 

அவசரமாய் அழைத்தேன், இழுப்பறையை இன்னும் அதிகமாகத் திறந்தபடியே. 

  “டோடோன்னா கூப்ட்ட என்னை…?” 

என்றபடியே தலையை குறுக்குவாட்டில் அசைத்தபடி, அப்பா ஒரு திடமான புன்னகையுடன் இழுப்பறையை மூடினார்.

***

ரம்யா அருண் ராயன் – தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ‘வீரபாண்டியன் பட்டணம்’ எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக கோவை மாவட்டத்திலுள்ள அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  பணிபுரிகிறார். ‘செருந்தி’ எனும் கவிதைத்தொகுப்பு, ‘கழி ஓதம்’, ‘ட்ரெமோலோ’ எனும் இரு சிறுகதைத்தொகுப்புகள் ஆகியவை இவரது படைப்புகள் ஆகும். மின்னஞ்சல் முகவரி: rayenramya@gmail.com

எதிர்வினை

0

கந்தசாமி சித்தையன்

மூங்கிலால் செய்யப்பட்ட பெரிய ஏணியில் முக்கால் உயரத்தில் லுங்கியும் பனியனும் அணிந்துகொண்டு மொரமொரவென இருந்த புதிய கட்டிடத்தின்  வெளி சுவற்றினை உப்பு காகிதத்தால் வரக் வரக் என நாசியில் கான்கிரீட் துகள் ஏற தேய்த்து கொண்டிருந்தான் முத்துசாமி. உள் சுவரில் லேசான மணலும் வெளிச்சுவற்றில் அதை விட கொஞ்சம் தடிமனான மணலும் பூசப்பட்டு இருந்ததால் வண்ணம் பூசுவதற்கு வசதியாக சுவற்றினை அழுத்தித் தேய்த்தான். 

 ஏணியை அடியில் பிடித்துக்கொண்டிருந்த காளியப்பன் “யன்னா முத்துசாமி கௌருமெண்டு வேலைக்கு போவியா இல்ல இப்படியே எங்க கூட வேலைக்கு வந்து காலத்த ஓட்டிடுவியா” என்று கொஞ்சம் நக்கலாக கூறினான். 

காளியப்பன்தான் அவனை வண்ணம்பூசும் வேலைக்கு அழைத்துவந்தவன். இருவருக்கும் சமவயதுதான், இருபத்தி ஐந்து இருக்கும். முத்துசாமி இரண்டு மாதம் பெரியவன் என்று காளியப்பனின் அம்மா அடிக்கடி கூறிக்கொண்டு இருப்பார்.

முத்துசாமி, முதுநிலை இயற்பியலும் இளங்கலை கல்வியியலும் முடித்தவன். ஊரில் அவனை பெரும்பாலும் “வாத்தியாருன்னுதான் கூப்பிடுவாங்க”, அதை கேட்கும் போதுதான் அவன் ஆசிரியருக்கு படித்ததையே உணர்வான். பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் ஐந்து மதிப்பெண் எடுத்த மாணவர்களில் அவனும் ஒருவன். சேலம் அரசு கலைக்கல்லூரியில் அவனுக்கு இலவசமாக இயற்பியல் துறையில் இடம் கிடைத்தது. அரசு மாணவர்விடுதியில் சேர்ந்து படித்தான். அங்கேயே முதுநிலைப் படிப்பிற்கும் இடம் கிடைத்தது. அதே கல்லூரி அதே விடுதி என ஐந்து ஆண்டுகள் அங்கேயே இருந்து முதுநிலை முடித்தான். 

அவன் ஊர் அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் இளங்கலை சேர்ந்தான். அவன் தாய் ஐம்பதாயிரமும் தந்தை ஐம்பதாயிரமும் என தங்கள் வாழ்நாளில் சேர்த்த மொத்தப் பணத்தையும் தந்து சேர்க்கைக்கு உதவினார்கள். 

“எங்ககிட்ட இருக்கிறது அவ்வளவு தான் உசரா பொழச்சிக்க” என்றார்கள். 

 ஐந்தாண்டுகாலம் சேலத்தில் திருமண மண்டபம், உணவங்களில் உணவு பரிமாறும் வேலை செய்து படித்ததால் வீட்டில் அவன் பணம் பெற்றதேயில்லை. இலவச மாணவர்விடுதி, அரசு கல்லூரி என்பதால் சிறிய சிறிய செலவினங்களை அவனே பார்த்துகொள்வான். பெருந்தொகை என்பதால்தான் பெற்றோரிடம் கையை நீட்டும் நிலை அவனுக்கு. பணம் வாங்கும்போதே அவர்களின் சேமிப்பை அவர்களுக்குத் தெரியாமல் திருடுவதுபோல் அவனுக்கு இருந்தது. 

கல்வியியல் படிப்பின் இடையில் அரசு பள்ளிக்கு பயிற்சிக்குச் செல்லும்போது “வாத்தியார் வேல கிடைச்சிடுச்சின்னு” ஊரில் பேசினார்கள். அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் கடினமான ஒரு பகுதியை இயற்பியல் பாடத்தில் முடித்ததுபோல் முத்துசாமிக்கு இருந்தது. 

டிஎன்பிஸ்சி நடத்திய குரூப் ஒன்று முதல் நிலை நான்கு வரை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகள், மத்திய அரசின் ரயில்வே தேர்வுகள் என முத்துசாமி எழுதாத தேர்வு கிடையாது. கடைசியாக அரசாங்கத்தின் அலுவலக உதவியாளர் பணி கிடைத்தால் கூட செல்லத் தயாராகத்தான் இருந்தான். அவன் அனைத்துத் தேர்வுகளிலும் தோல்வி அடைவதை சகிக்க முடியாமல் ஒருநாள் தந்தை சின்னக்கண்ணு அவனிடம் பொருமினார். 

“இருபத்தி அஞ்சு ஆகப்போவுது இன்னும் ஊட்டிலேயே இப்படியே குந்திக்கிட்டு இருந்தா வெளங்கிடுமா, இவன்சோடு ஆளுதான் காளியப்பன் ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பனாகிட்டான், மரம் வெட்டி சேத்து வச்சி இருந்த மொத்த பணத்தையும் முடிச்சிட்டான், கண்டாரஓலி பையன்” 

தாய் அப்படி பேசாதே என்று தடுத்தால் தகப்பன் ஒருநாள் அமைதியாக இருப்பார், மறுநாள் முகத்தைக் காட்டுவார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முத்துசாமி அப்பனின் ஐம்பதாயிரத்தை முதலில் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, காளியப்பனிடம் வண்ணம் பூசும் வேலைக்கு வந்து விட்டான். வேலைக்குப் புதுசு, அதனால் சுவற்றினை சுத்தம் செய்யும் பணியினைக் கொடுத்தான் காளியப்பன். 

முத்துசாமி வேலையில் கெட்டிக்காரன்தான் ஒரே மாதத்தில் வண்ணம்பூசும் வேலையைக் கற்றுக்கொண்டான் பிசிறு தட்டாமல் சுவற்றில் பலநாட்கள் பணி செய்தவன் போல வண்ணம் தீட்டுவான். 

நகரத்தில் காளியப்பன் பெரிய இரண்டு அடுக்கு மாடிவீட்டினை வண்ணம்பூசும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்திருந்தான். அந்த வீடு ஆசிரியரின் வீடு. அதற்குப் பணி செய்ய ஐந்து ஆட்களை அழைத்து வந்திருந்தான் அதில் முத்துசாமியும் ஒருவன். 

கருங்கல்லை அரைத்து வண்ணம் பூசியதுபோல் இருந்த வீட்டைப் பார்த்து காளியப்பன் “யன்னா முத்து வூட்டுக்கு நல்லா தண்ணீ வுட்டுருப்பாங்க போல நல்லா கருகருன்னு இருக்குது” என்றான். 

“அவ்வளவு வேல வாங்கி இருக்காரு வீட்டுக்காரரு. வாத்தியாரு வூடு அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த முடியாது. எத்தன பசங்கள மேய்க்கிறாரு!” நாற்பது நாள் பள்ளியில் பயிற்சிக்கு சென்று ஆசிரியர்களின் மனநிலையை நன்றாக அறிந்த முத்துசாமி கூறினான். 

தண்ணீரை சுவற்றில் நன்றாகப் பீய்ச்சி அடித்து ஈரம் காய்ந்தவுடன் வெள்ளைச் சுண்ணாம்பினை அடித்தார்கள், சனி ஞாயிறுகளில் ஆசிரியரைப் பார்க்கலாம், வண்ணப்பூச்சுகள் வழிந்து இருப்பதைப் பார்த்த ஆசிரியர் காளியப்பனிடம் “பாத்து காளியப்பா இத்தன நாள் வேலையில் இருந்ததுக்கு இந்த வீடுதான் மிச்சம்”என்பார். 

வீட்டுகாரர்களிடம் பெரிதாக செலவு வைக்காத காளியப்பன், “சார் மத்த ஆளுங்க மாதிரி வூட்டுக்காரங்க டவுசர உருவுர ஆள் நான் கிடையாது” என்பான். 

அந்த ஆசிரியர்தான் முத்துசாமியை விசாரிக்கும்போது அவனுடைய கல்வி நிலையை அறிந்து, இன்னும் இரண்டு மாதத்தில் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வர இருப்பதையும் இப்படியே வேலை செய்துகொண்டு இருந்தால் படிக்க முடியாது என்றும், வேலையை விட்டுவிட்டு ஏதாவது பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தால்தான் போட்டித் தேர்வினை வெல்ல முடியும் என்று துறையில் மூத்தவர் என்ற முறையில் அவனுக்கு அறிவுரை புகட்டினார். 

இதுவரை சாம்பாதித்திருந்த முப்பதாயிரத்தில் பத்தாயிரத்தை தந்தையிடம் கொடுத்து சில மாதங்கள் வாயடைக்க வைத்தான். சேலத்தில் ஒரு போட்டித்தேர்வு மையத்தில் சேர்ந்து அங்கேயே படிப்பவர்கள் ஐவர் சேர்ந்து அறை எடுத்துத் தங்கி தவம் போல படித்துத் தேர்வானார்கள். 

முத்துசாமி அவன் ஊர் அருகே உள்ள மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் முதுநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தான். அவன் உடையில் வறுமை தெரிந்தது. அணிந்திருந்த வலது காலணியில் பெண்ணின் நெற்றியில் இடப்பட்டு இருக்கும் குங்குமப் போட்டு போல சுவற்றில் அடித்த சிகப்பு வண்ணம் ஒட்டி இருந்தது. பணியேற்பின் முதலாம் நாளில் அவனுடைய உடையைக் கண்டு சக ஆசிரியகள் பரிதாபப்பட்டார்கள். 

அனைத்து ஆசிரியை ஆசிரியர்களுக்கும் தவறாமல் வணக்கம் வைத்து விடுவான். ஒரு வருட காலம் அவனிடம் மற்றவர்களை மதிக்கும் போக்கு இருந்தது. அதன் பிறகு அவனிடம் நடை உடை பாவனை அனைத்தும் மாறியது. யாராவது எப்ப கல்யாணம் பெண் பார்த்துவிடலாமா? என்றால் 

“பொண்ணு பீஜீ ஆசிஸ்டண்ட்டா இருக்கணும்”, அதுவும் நேரடி நியமனம் என்றால் பரவாயில்லை என்பான். 

முதுநிலை ஆசிரியை கிடைக்காதபோது அதேநிலையில் கூட்டுறவு துறையில் அதிகாரியாக இருக்கும் பெண்ணை திருமணம் முடித்தான். அவனின் கர்வம் மூளையை மட்டுமல்ல உடல் முழுமையையும் போர்த்தியது. 

அந்தப் பள்ளியிலேயே அவன் தான் பெரியவன் என்று நினைத்தான். அவன் எடுக்கும் பாடம்தான் உயர்ந்தது என்பான். அப்படித்தான் ஒருநாள் அரையாண்டு விடைத்தாளைத் திருத்திக்கொண்டிருந்த முதுநிலை தமிழ் ஆசிரியரிடம் “என்னங்க ஆக்கா ஈக்கீதான சொல்லி கொடுக்கிறீங்க, அதத்தானே அவனுங்களும் எழுதி இருப்பானுங்க அந்த பேப்பர போயி இவ்வளவு மெனக்கெட்டு திருத்துறீங்க”என்றான். 

“உங்க இயற்பியலும் ஆக்கா ஈக்கீயால எழுதினதுதான் மறந்துடாதீங்க சார்” என்று வாயடைத்தார் தமிழ் ஆசிரியர். 

இடைநிலை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்த வேதியியல் ஆசிரியரை ஓர் நாள் அழைத்து “அவனுங்க செகன்டரி கிரேடு சார், ஆறாவது ஏழாவது பசங்களுக்கு பாடம் நடத்துற ஆளுங்க, அவனுங்க கிட்ட நாம சரிசமமாக நின்னு பேசலாமா, நம்ப கேடர புரிஞ்சிசிக்கவே மாட்டேன்கிறீங்களே” என்பான். 

அப்பள்ளியில் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஓய்வறை ஒன்றுதான், அந்த அறையில் திருப்புத்தேர்வு ஆங்கில வினாத்தாளை கொண்டு வந்து சந்தேகம் கேட்ட மாணவனிடம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த பட்டதாரி ஆங்கில ஆசிரியரிடம் நமட்டுச் சிரிப்போடு “உங்களுக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுமா” என்பான். 

பன்னிரென்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடக்கும் போது அனைத்து ஆசிரியர்களுக்கும் உணவு கொடுத்து வந்ததை “நம்ப எக்ஸாம் நம்ப பிராக்டீக்கல் எதுக்கு மத்த வாத்தியாருங்களுக்கு சோத்தபோடனும்” என்று பேசி அந்த முறையை முழுமையாக மாற்றினான். 

பதினொன்று பன்னிரெண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் அவனுக்கு வணக்கம் வைத்தால் கூட ஏளனப் பார்வையோடு கடப்பான், மேல்நிலை மாணவர்கள் இருக்கும் கட்டிடத்தில் மற்ற கீழ்நிலை மாணவர்களைப் பார்த்தால் “உங்களுக்கு இங்க என்னடா வேல” என்று கடிந்து கொள்வான். 

இந்த பள்ளியில் உயர்ந்த நிலையில் இருக்கும் பணிநிலை முதுநிலை ஆசிரியர் நிலைதான். எனவே மற்ற ஆசிரியர்களும் நாமும் ஒன்று கிடையாது அவர்களும் நாமும் ஒரே அறையில் அமர்ந்து இருப்பது நம் பதவிக்கு இழுக்கு என்று அடிக்கடி சக முதுநிலை ஆசிரியர்களிடம் கூறி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டு தனி அறையினை அவர்களுக்கு மட்டும் பெற்று, மற்ற ஆசிரியர்களிடம் இருந்து முதுநிலை ஆசிரியர்களை முழுவதுமாகப் பிரித்தான். 

“இந்தப் பள்ளியோட போர்ட பாத்தீங்களா மேல்நிலையின்னுதான் எழுதி இருக்கும். அந்த மேல் நிலைக்கு பாடம் எடுக்கிற ஆசிரியர்கள் நாமதான் எப்பவும் மேல. இனிமேல் எந்த வாத்தியாருங்களுக்கும் வணக்கம் வைக்காதீங்க” என்று சக முதுநிலை ஆசிரியர்களின் மனதில் பிரிவினையை உண்டாக்குவான். மற்ற ஆசிரியர்களிடம் வணக்கம் வைத்து பேசிக்கொண்டிருந்த முதுநிலை ஆசிரியர்களை தனிமைப்படுத்துவான். எதற்கு வம்பு எனறு அவன் போக்கிலேயே அவர்கள் போக ஆரம்பித்தனர். சக மனிர்களைவிட பதவிதான் அனைத்து நிலைகளிலும் மேலானது என்று நினைத்தான். 

முதுநிலை ஆசிரியர் சங்கத் தலைவர் பள்ளி வந்து முதுநிலை ஆசிரியர் ஓய்வு அறையில் சந்திப்பு நடத்தியபோது முத்துசாமி அவரிடம் 

“முதுநிலை ஆசிரியர்களுக்கு நீங்க என்ன செஞ்சிங்க? இந்த பள்ளியில்தான் நான் அவர்களுக்குத் தனி அறை வாங்கிக் கொடுத்திருக்கேன்” என்றான். 

தலைவர் “இங்க பாருங்க முத்துசாமி எத்தனையோ பிரச்சன ஆசிரியர்களுக்கு இருக்கு, அதை எல்லாம் இந்த தலைமை ஆசிரியருங்க செய்து கொடுக்க மாட்டாங்க, வாத்தியாருங்க நாம ஒன்னா இருந்தா அவர்களுக்குப் பிடிக்காது அதனால தான் நீங்க கேட்டவுடன் அவரு உங்களுக்கு தனி அறை கொடுத்துட்டார்.

உங்களுக்கு தனிக் கழிப்பிடம் கொடுப்பாரா? அதுக்கு செலவாகும் கொடுக்க மாட்டார், உங்க எல்லாத்துக்கும் தனி தனியாக சேர் டேபிள் கொடுப்பாரா? உங்க அறைக்கு மின் விசிறி வசதி பண்ணித் தருவாரா? அதை எல்லாம் தர மாட்டார், நாம பிரிஞ்சி இருந்தா அதிகாரத்துக்கு கொண்டாட்டம், நாம்ப நமக்குள்ளயே நீ பெரியவன் நான் பெரியவன்னு இருக்கிறதுனாலதான் அவரு அங்க ஆபீசுல ஜாலியா இருக்காரு. வர்ற பண்ட் எல்லாம் எப்படி வாய்க்குள்ள போட முடியுமோ அப்படி போட்டுக்கிறாரு நம்மைப் போன்ற தொழிலாளர்களுக்கு எதிரி அதிகாரம் தான், சக ஆசிரியர்கள் கிடையாது முத்துசாமி” என்றார். 

சந்திப்பு முடிந்து சங்க தலைவர் சென்றவுடன் சக ஆசிரியர்களிடம் “இந்த சங்கத்துக்காரனுங்க எப்பவுமே இப்படிதான், நாம்ப மட்டும் ஏதாவது தனியாக செஞ்சா பிடிக்காது” என்றான். 

தன் மகனின் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு காளியப்பன் பள்ளிக்கு வந்தபோது, அவன் யார் என்று தெரியாதது போல முகத்தைத் திருப்பிக்கொண்டான் முத்துசாமி. 

“பணம் பதவி வந்த உடனே கூட வேல செஞ்சது எல்லாம் மறந்து போச்சு பாரு அவனுக்கு, என்ன இருந்தாலும் படிச்சவன் அவன் பாதையில போயிட்டான், படிக்காத நானுதான் கடைசி வரைக்கும் இந்த பெயிண்ட் டப்பாவையே தூக்கிக்கிட்டு சுத்தனும் நீ இத பாத்தாவது புத்தியா இருந்துக்கோ”  அவனுக்கும் தனக்கும் இருந்த அறிமுகத்தினை தன் மகனிடம் வீட்டிற்கு வரும்போது காளியப்பன் கூறினான்.

பட்டதாரி நிலையில் இருந்து முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களை தனக்கு நிகராக அவன் பார்க்கவில்லை, மாறாக, அவர்களிடம் கொஞ்சம் விலகி இருந்தான் “அவுங்கயெல்லாம் நம்பள மாதிரி நேரடியாகவா வந்தாங்க பின் வாசல் வழியாக வந்தவங்கப்பா” என்பான். 

முத்துசாமிக்கு இது போதவில்லை, இருக்கும் முதுநிலை ஆசிரியர்களை விட நான் திறமையானவன், அதை நிரூபிக்க ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருப்பான். அரசு பொறியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கான தேர்வினை எழுதித் தேர்வானான், அந்தத் தேர்விற்குப் பிறகு அவன் அறையில் இருந்த முதுநிலை ஆசிரியர்களை அவன் பார்க்கும் பார்வை வேறாக இருந்தது. அந்தப் பார்வையில் உங்களை விட நான் பெரிய ஆசிரியர் என்ற கர்வம் இருந்தது. 

தடையின்மை சான்று பெற்றுக்கொண்டு அன்று நடந்த பிரிவு உபசாரவிழாவில் முத்துசாமி முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் அவன் ஒரே மாதிரிதான் பார்த்தான். ஏன், தலைமை ஆசிரியரையும் சேர்த்துத்தான். புது உடையில் டக் செய்துகொண்டு மிக நேர்த்தியாக இருந்தான். அனைவரிடமும் புன்னகை மட்டுமே செய்தான். அப்புன்னகையில் நீர் கலந்த மோர் போல கலப்படம் தெரிந்தது. 

பொறியில் கல்லூரியின் அலுவலகத்தில் பணி ஏற்பு செய்துவிட்டு, பேராசிரியர்களின் ஓய்வறைக்கு வந்தான். இரண்டு பேராசிரியர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் டேபிளின் மேல் அவர்களின் பெயரோடு சேர்த்து M. E., P.hD., என்ற பட்டம் கொண்டு நீலநிற பெயர் பலகையில் வெள்ளை நிறத்தில் எழுதி கண் திருஷ்டி பொம்மைபோல் வலது மூலையில் இருந்தது. 

ஒரு பேராசிரியர் “ஓ நியூ அப்பாயின்மெண்ட்டா! ஃபர்ஸ்ட் இயர் அசிஸ்டண்ட் புரபொசர் தான? அங்க உட்காருங்க”, ஒரு மூலையில் இருந்த சேர் டேபிளை காட்டினார். அந்த இடம் அந்த அறையில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுபோல இருந்தது. 

பொறியியல் கல்லூரியில் பொறியியலில் முதுநிலை முடித்தவர்கள் மட்டும்தான் கடைசி மூன்றாண்டுகளுக்கும் பாடம் எடுப்பவர்கள். சொல்லப் போனால் மூத்த பேராசிரியர்கள். அறிவியல் கணிதம் போன்றவற்றில் முதுநிலை பட்டம் பெற்று வந்தவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும்தான் பாடம் எடுக்க முடியும். அவர்கள் சின்ன பேராசிரியர்கள். 

முதலாமாண்டு வரும் மாணவர்கள் வந்த புதிதில் கல்லூரியின் கட்டமைப்பு பற்றித் தெரியாமல் முதலாமாண்டில் பாடம் எடுக்கும் பேராசிரியர்களுக்கு பெரும் மரியாதை கொடுப்பார்கள், முதலாமாண்டின் இரண்டாம் செமெஸ்டர் வந்தால் முத்துசாமிக்கு கல்லூரியில் நடப்பது கொதிக்கும் பாறையில் நடப்பதுபோல் இருக்கும். வர வர மாமியா கழுதைப்போல் ஆனாள் என்கிற கணக்காய் வகுப்பறையில் மாணவர்கள் கூட அவன் உள் நுழையும் போது எழ மாட்டார்கள். முதலாமாண்டு வரைக்கும் தானே அவர்கள் அதனால், மாணவர்களே அவர்களைப் பெரிதாக மதிப்பதில்லை. தொடர் தேவை இருந்தால் தானே மதிப்பு மரியாதை எல்லாம். மற்ற பேராசிரியர் முதலாமாண்டு பேராசிரியர்களைக் கண்டால் ஏதோ மலத்தைப் பார்ப்பதுபோல முகத்தைத் திருப்பி கொள்வார்கள். இவன் தான் முதல் வணக்கம் சொல்வான். தன்னை எந்த மூத்த ஆசிரியராக நினைத்துக்கொண்டு அனைவரையும் புறக்கணித்தானோ அந்தப் புறக்கணிப்பு முத்துசாமிக்கு நடந்தது. 

அன்று இயற்பியல் துறையில் இருக்கும் கட்டிடங்களுக்கு வண்ணம்பூசும் பணி நடந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு அறையிலும் வாசற்படியின் மேல் சுவற்றில் இயற்பியல் அறிஞர்களின் வாசகங்களை எழுதிக்கொண்டு இருந்தார்கள். ஓய்வறையின் வெளியே இருந்த புங்கன் மரத்தடி நிழலில் நின்று கொண்டு விழுந்திருந்த பூக்களை வேடிக்கை பார்த்துகொண்டு சிறு நடை நடந்து கொண்டிருந்தான். முத்துசாமியின் அந்த நடையில் சோம்பல் இருந்தது,  இவரோடு பள்ளியில் முதுநிலை வேதியல் ஆசிரியராகப் பணி புரிந்தவர், மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வாங்க வந்தவர், முத்துசாமியைப் பார்க்க இரண்டு மாணவர்களோடு அங்கு வந்தார். 

“எப்படி இருக்கீங்க பேராசிரியர் சார்?”

“ஏதோ இருங்கங்க சார்” பள்ளியில் இருந்த சத்தம் முத்துசாமியின் பேச்சில் இல்லை. 

“நீங்க நல்லா இருக்கீங்களா?” 

“நல்லா இருக்கேன் சார்”

“அப்புறம் ஸ்கூல் எல்லாம் எப்படி போகுது?” 

“பேனல் கேட்டு இருக்காங்க சார், வர்ற ஜூன்ல ஹெச்சம் வந்திடும், அப்புறம் என்ன முப்பது வாத்தியாருங்க தினமும் கூப்பிட்டு வணக்கம் வைப்பார்கள். ஆபீஸ் வேல, பிடீஏ எஸ்ம்சின்னு அப்படியே ஓட்ட வேண்டியது தான், நீங்களும் நம்ப பேட்ச் தானே!

ரேங்க்ல முன்னாடி வேற போன வருஷமே உங்களுக்கு ஹெச்சம் கிடைச்சிருக்கும், என்ன இருந்தாலும் நீங்க காலேஜ் வாத்தியாருங்க சார்!

இங்க எப்படி சார் போகுது?”

நமட்டு சிரிப்பு சிரித்த முத்துசாமி வேதியியல் ஆசிரியரையும் மாணவர்களையும் பார்த்துவிட்டு ஓய்வறையின் சுவற்றைப் பார்த்தான் ‘எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு’-நியூட்டன். என்று வெள்ளை நிறத்தில் புதிதாக எழுதப்பட்டு இருந்தது.  

***

கந்தசாமி சித்தையன் – சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி இவரின் பூர்வீக கிராமம். அரசுபள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரின் முதல் படைப்பு சேலம் மேற்கு பகுதியில் குலதெய்வ விழாவாக கொண்டாடப்படும் தெவவிழாவினை தெவம் என்ற பெயரில் நாவலாக எழுதியுள்ளார்.அந்நாவல் யாவரும் வெளியீடாக கடந்த 2025ம் ஆண்டு வெளிவந்தது.இப்பொழுது சிறுகதைமீது நாட்டம் கொண்டு கதைகளை எழுதிவருகிறார். மின்னஞ்சல்:   ksamyslm1992@gmail.com

ஃப்ளாட் 404

0

பிரியா பாஸ்கரன்

ருசலேம் நகரின் அந்தப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு, நரைத்த கிழவனைப் போலக் கூன் விழுந்து நின்றிருந்தது. அதன் 404-வது ஃப்ளாட் ஒரு சாதாரண வீடல்ல. அது எஸ்தர் தனக்குத்தானே கட்டிக்கொண்ட ஒரு மௌனக் கோட்டை. வெளியே பெய்யும் பெருமழை, பழைய நகரத்தின் கற்கள் மீது மோதித் தெறிக்கும் சத்தம், ஏதோ ஒரு பெரும் அழிவுக்கான முன்னறிவிப்பைப் போலத் தொனித்தது. 

ஜன்னல் கண்ணாடிகளில் வழிந்தோடும் மழைத்துளிகள், ஏதோ ஒரு வினோதமான மொழியில் எஸ்தருக்குச் செய்தி சொல்ல முயன்றன. எஸ்தர் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் எதையும் பார்க்கவில்லை, மாறாக எதையோ தேடிக்கொண்டிருந்தன. அவளது நீண்ட விரல்கள் மடியில் இருந்த பழைய பைபிளின் அட்டையை மெல்ல வருடிக்கொண்டிருந்தன. அந்தப் பைபிள் பல ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை, ஆனால் அதன் ஒவ்வொரு பக்கத்தின் துக்கமும் அவளுக்கு மனப்பாடம். அந்த அறையின் சுவர்களில் படிந்திருந்த கறை கூட அவளுக்கு கதையொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தது.

அந்த அப்பார்ட்மெண்டில் எப்போதும் மெல்லியதொரு நறுமணம் வீசும். அது சாதாரண ஊதுபத்தியின் மணம் அல்ல. பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, லெபனோன் மலைகளிலிருந்த கேதுரு (Cedar) மரங்களின் மணம். விவிலிய காலத்தில் சாலொமோன் மன்னன் தனது தேவாலயத்தைக் கட்டப் பயன்படுத்திய அதே புனிதமான மரத்தின் மணம் அது. எஸ்தரின் தந்தை ஒரு தொல்பொருள் ஆய்வாளர். அவர் லெபனோனின் கடவுளின் கேதுருக்கள் காட்டில் இருந்து கொண்டு வந்ததொரு சிறிய கேதுரு மரப் பெட்டியைத்தான் எஸ்தர் தனது உயிருக்கு மேலாகப் பாதுகாத்து வந்தாள். தாவீது, எஸ்தரின் கணவன் அடிக்கடி சொல்வான், “எஸ்தர், கேதுரு மரம் அழியாதது. காலவோட்டத்தில் எல்லாம் அழிந்தாலும், இந்த மரத்தின் மணம் துரோகத்தை அடையாளம் காட்டும்.”

தாவீது திடீரென காணாமல் போனது விபத்தல்ல. அது திட்டமிடப்பட்ட, மிகக் கொடூரமான சதி. தாவீது ஒரு மேதை, அவனது விரல்கள் வயலினில் விளையாடும்போது கல்வாரி மலையின் காற்று கூட அசைவற்று நிற்கும். ஆனால், அவனது இசைக்குப் பின்னால் ஓர் அபாயகரமான ரகசியம் இருந்தது.

உண்மையில், தாவீது அந்தச் சபையின் பழங்கால ஆவணக் காப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தான். விவிலிய காலத்துச் சுவடிகளை ஆய்வு செய்யவும், சிதைந்த இசைக் குறிப்புகளை மீட்டெடுக்கவும் அந்தச் சபை அவனது அறிவைப் பயன்படுத்திக் கொண்டது. அந்தப் புனிதமான ஆவணங்களுக்கு நடுவேதான், அதே சபை பல நூற்றாண்டுகளாக மறைத்து வந்த இருண்ட பக்கங்களை அவன் கண்டடைந்தான்.

அந்தச் சபை என்பது வெறும் ஆன்மீக இடமல்ல. அது உலக நாடுகளையே ஆட்டிப்படைக்கும் ஒரு நிழல் அரசு. அவர்கள் பழைய எருசலேமின் பூமிக்கு அடியில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாலொமோன் மன்னனின் பொக்கிஷங்களை வெளிநாடுகளுக்குக் கடத்திக் கொண்டிருந்தார்கள். புனிதமான அந்தப் பூமிக்கு அடியில் அவர்கள் தோண்டிய ஒவ்வொரு குழியும், பல மனிதர்களின் கல்லறைகளாக மாறின. 

அவர்கள் அவனை ஒரு சாதாரண ஊழியனாகக் கருதித் தங்கள் ரகசியங்களுக்கு அருகில் அனுமதித்தார்கள். ஆனால், ஒற்றனாக மாறிய தாவீது அந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுத்த ரகசியச் சுருள்கள், சுரங்கங்களின் வரைபடம் மற்றும் பணப் பரிமாற்ற இரகசியங்களை தனது இசை மெட்டுகளின் அதிர்வெண்களுக்குள் குறியீடுகளாகப் பதித்து வைத்திருந்தான். தாவீதின் இசை என்பது ஒரு மொழியாக மாறியிருந்தது. அதை எஸ்தரால் மட்டுமே வாசிக்க முடியும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், அமைதியான பௌர்ணமி இரவில், தாவீது தனது கடைசி நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பினான். அன்று இரவு முழுவதும் அவன் வயலினை மீட்டவில்லை, மாறாக எஸ்தரின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். “எஸ்தர், இது நமக்கான கடைசி விருந்து. நாளை விடியும் போது நாம் இந்த நகரத்தில் இருக்க மாட்டோம்,” என்று சொன்னான். 

அவனது குரலில் ஒருவிதமான பயமும், அதேசமயம் ஒரு பெரும் விடுதலையின் நிம்மதியும் இருந்தது. ஆனால் அன்று இரவு, அவர்களது வீட்டின் கதவைச் சில முகமூடி மனிதர்கள் காலால் உதைத்துத் திறந்தார்கள். அவர்கள் அந்த அதிகாரச் சபையின் கூலிப்படையினர். தாவீது தப்பியோட முயலவில்லை. 

அவன் எஸ்தரின் காதில் மட்டும் ஒன்று சொன்னான். “வாக்குத்தத்தம் உன் இதயத்தில் இருக்கிறது, அதை யாரிடமும் தந்துவிடாதே.” அவன் காரில் ஏற்றப்பட்டான். எஸ்தர் அந்தக் காரின் பின்னால் தெருக்களில் அலறிக்கொண்டு ஓடினாள், அவளது கால்கள் இரத்தமாகின. அன்றிலிருந்து இன்று வரை, அவன் மரித்த லாசரு போலத் திரும்பவே இல்லை.

எஸ்தர் ஏன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள்? ஐந்து ஆண்டுகளாக அவள் ஏன் அந்த 404-வது ஃப்ளாட்டை விட்டு வெளியே வரவில்லை? அது பயத்தினால் அல்ல, கண்ணுக்குத் தெரியாததொரு சிறையில் அவள் வைக்கப்பட்டிருந்தாள். தாவீது அந்த இரகசிய இசைக் குறிப்புகளை எஸ்தர் வைத்திருப்பதாக அந்தச் சபை நம்பியது. அவர்கள் அவளைக் கொல்லவில்லை, ஏனெனில் அந்த ஆதாரங்களை எங்கு எப்படி இரகசியமாக தாவீது வைத்துள்ளான் என அஞ்சினார்கள்.

அதற்குப் பதிலாக, அவளைச் சுற்றி வேவு பார்க்கும் வலையொன்றை உருவாக்கினார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒவ்வொரு மனிதரும் அவளைக் கண்காணிக்க அந்தச் சபையால் ஊதியம் பெற்று நியமிக்கப்பட்ட ஓநாய்கள். அவளது பால்காரன் முதல் அந்த குடியிருப்பின் காவலாளி வரை அனைவருமே அந்தச் சபையின் ஒற்றர்கள்.

மின்தூக்கி மேலே வரும் சத்தம் கேட்டது. அது முதியவர் ஒருவரின் முனகலைப் போலக் கரகரப்பாக இருந்தது. கதவு மெல்லத் திறந்தது. அந்தோணி உள்ளே வந்தான். அவன் வெறும் காவலாளி அல்ல, அந்தச் சபையின் சுத்திகரிப்பாளன். பல கொலைகளையும், இரகசியப் புதைப்புகளையும் அடையாளம் தெரியாமல் அழித்தவன் அவன். அவனது கையில் இருந்த சாவிக்கொத்து, மரண தண்டனையொன்றின் தீர்ப்பைப் போலச் சத்தமிட்டது. “அம்மா, இன்று இரவு காற்று பலமாக இருக்கிறது. ஜன்னல்களைச் சாத்தி வையுங்கள். சில பழைய ஆவிகள் உள்ளே வரப் பார்க்கின்றன,” என்றான் அவன் ஏளனமாக. 

பெண்களின் கழுத்துக்கு கீழே குறுகுறுவென பார்க்கும் அவனது கண்கள், எஸ்தரின் கழுத்தில் லாவகமாக அந்த லாக்கெட் படிந்திருக்கும் மார்பகங்களை கழுகைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த லாக்கெட் அவளுக்கு தாவீது கடைசியாகக் கொடுத்த பரிசு, அதில் அவன் ஒரு மைக்ரோசிப்பை ரகசியமாக ஒளித்து வைத்திருந்தான் என்பது எஸ்தருக்கே தெரியாது.

அவனுக்குப் பின்னால் சாமுவேல் நுழைந்தார். அவர் அந்த ஊழல் சபையின் ப்ரெயின், அந்தத் தொல்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன். அவர் தனது விலையுயர்ந்த கருப்பு கோட்டை உதறிக் கொண்டே எஸ்தரின் முன் அமர்ந்தார். 

“எஸ்தர், இன்னும் எத்தனை காலம் இந்த வனாந்தரத்தில் கழிக்கப் போகிறாய்? உனது இளமை இந்த நான்கு சுவர்களுக்குள் வீணாகிக் கொண்டிருக்கிறது. 

நாங்கள் செய்த தவறுகளை நீயும் தாவீதும் சாட்சியங்களாக மாற்றி வைத்திருக்கிறீர்கள். அந்த ஆதாரங்கள் அடங்கிய அத்தனை இரகசியங்களையும் கொடுத்துவிடு. அதற்கு பதிலாக உனக்கு புதியதொரு வானத்தையும் புதியதொரு பூமியையும் நான் காட்டுவேன். நீ விரும்பும் உலகத்தை நான் உன் காலடியில் வைப்பேன்,” என்றார் அவர்.

எஸ்தர் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்கள் உலர்ந்து போயிருந்தன. “சாமுவேல், நீங்கள் தேடும் இரகசியங்கள் என்னிடம் இல்லை. நீங்கள் என்னைச் சுற்றிலும் காவல் வைக்கலாம், ஆனால் என் நினைவுகளை உங்களால் சிறைபிடிக்க முடியாது. இந்த நரகமே எனக்குப் போதும்,” என்றாள் உறுதியாக.

மூன்றாவதாக மரியா வந்தாள். அவள் எஸ்தரின் தோழியாக நடித்த ஒரு யூதாஸ். எஸ்தரின் மௌனங்களைக் கேட்டு, அவளது கண்ணீரைத் துடைப்பது போல நடித்து, அவளது ஒவ்வொரு அசைவையும் சாமுவேலுக்குத் தெரிவிப்பதே அவளது வேலை. ஆனால் இன்று மரியாவின் முகம் வெளிறிப் போய் இருந்தது. அவளது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. “எஸ்தர்… கீழே… கீழே ஏதோ நடக்கிறது. காவலாளிகள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள். அவர்களின் கழுத்துகள் மெல்லியதொரு வயலின் நரம்பால் அறுக்கப்பட்டிருக்கின்றன. இது மனித வேலை போலத் தெரியவில்லை,” என்று அவள் அலறினாள்.

சரியாக நள்ளிரவு 12 மணி. மழையின் வேகம் ஒரு நிமிடம் நின்றது, பின் மீண்டும் ஒரு பெரும் இடியுடன் பெய்யத் தொடங்கியது. 404-வது ஃப்ளாட்டின் கதவு தானாகவே பெரும் சத்தத்துடன் திறந்தது. உருவமொன்று உள்ளே நுழைந்தது. அவன் நனைந்திருந்தான். அவனது கையில் ஒரு பழைய வயலின் இருந்தது. அந்த உருவம் மெல்ல வெளிச்சத்திற்கு வந்தது. அவன் முகம் மனித முகமாகவே இல்லை. பெரும் தீ விபத்தொன்றில் சிதைந்து, தசைகள் உருகிப் போயிருந்தன. அவனது கண்கள் மட்டும் எரியும் இரண்டு கரிக்கட்டைகளைப் போலச் சிவப்பாக மின்னின. சாமுவேல் தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்தான், ஆனால் அவனது கைகள் நடுங்கின. “நீ… நீ எப்படி உயிரோடு இருக்க முடியும்? அந்தச் சுரங்கத்தில் கந்தகத்தை ஊற்றி உன்னை எரித்ததை நானே என் கண்ணால் பார்த்தேனே. கந்தக நெருப்பில் இருந்து யாரும் தப்ப முடியாதே!” என்று கத்தினான்.

தாவீது ஒரு அடி முன்னே வந்தான். அவனது ஒவ்வொரு அடியிலும் தரையில் கருகிய தடம் விழுந்தது. அவன் பேசத் தொடங்கினான். அவனது குரல் ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து வருவது போலக் கரகரப்பாக இருந்தது. “சாமுவேல்… அந்தச் சுரங்கத்தில் நீங்கள் புதைத்தது என்னை அல்ல, என் அடையாளத்தை. நீங்கள் எரித்த கந்தகக் குழியில் நான் சாகவில்லை, மாறாக அந்த நெருப்பிலேயே நான் வாழ்ந்தேன். அந்தச் சபை திருடிய பொக்கிஷங்களுக்கு நடுவிலேயே நான் ஐந்து ஆண்டுகள் பிணமாகக் கிடந்தேன். நீங்கள் எதை எடுக்க வந்தாலும், அதை நான் தடுத்தேன். அந்த இருட்டில், எலிகளையும் பூச்சிகளையும் தின்று, என் ஈரலில் பழிவாங்கலை மட்டும் வளர்த்துக் கொண்டு காத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் அந்த நெருப்பு என்னைச் சுட்டபோது, நான் எஸ்தரின் பெயரை மட்டுமே முணுமுணுத்தேன். இன்று அந்தச் சுரங்கம் முழுவதையும் வெடிவைத்துத் தகர்த்துவிட்டு வந்திருக்கிறேன். உங்கள் சபை இப்போது ஒரு சாம்பல் குவியல்.”

தாவீது தனது வயலினைத் தாடையில் வைத்தான். அது மரத்தால் ஆனது அல்ல, கருகிய மனித எலும்புகளால் செய்யப்பட்டது போலத் தெரிந்தது. அவன் வயலினை மீட்டத் தொடங்கினான். அந்த இசை கூர்மையானதொரு கத்தியைப் போல அறையிலிருந்தவர்களின் காதுகளைக் கிழித்தது. அது இசையல்ல, அது ஒரு நியாயத்தீர்ப்பு. “எஸ்தர்… சாவியைக் கொடு,” என்றான் தாவீது.

எஸ்தர் நடுங்கும் கைகளால் தன் கழுத்தில் இருந்த லாக்கெட்டைப் பிடுங்கி எறிந்தாள். அதற்குள் இருந்த அந்த மைக்ரோசிப்பில், அந்தச் சபை செய்த அத்தனை கொலைகளும், அவர்கள் கடத்திய சிலைகளும், அவர்கள் புதைத்த பிணங்களின் இடங்களும் வீடியோ ஆதாரங்களாக இருந்தன. “தாவீது… இதற்காகவா இத்தனை காலம் என்னைத் தனியே தவிக்கவிட்டாய்? இந்தத் தனிமை என்னை ஒவ்வொரு நாளும் கொன்றதே” என்று எஸ்தர் கண்ணீர் விட்டாள்.

“தனிமைதான் உன்னை உயிரோடு வைத்திருந்தது எஸ்தர். நான் உன்னிடம் வந்திருந்தால் அவர்களோடு சேர்ந்து உன்னையும் எரித்திருப்பார்கள். நான் ஒரு சாட்சியாக மாறிக் கொண்டிருந்தேன். இதோ பாரு, இந்த ஓநாய்களின் ஆட்டம் முடிந்தது,” என்று சொல்லிவிட்டு இசையின் வேகத்தைக் கூட்டினான். அந்த இசையின் அதிர்வில் அறையில் இருந்த கண்ணாடிகள் வெடித்துச் சிதறின. அந்தோணி தனது காதுகளைப் பொத்திக்கொண்டு தரையில் விழுந்து துடித்தார். சாமுவேல் தப்பியோட முயன்றான், ஆனால் அந்த இசையின் ஒவ்வொரு நரம்பும் அவனை ஒரு சிலந்தியின் வலையைப் போலக் கட்டிப்போட்டன. அந்த இசையின் வேகத்தில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்களில் இருந்த பூச்சுகள் உதிர்ந்து, அதற்குப் பின்னால் இருந்த பழைய எலும்புக்கூடுகள் வெளியே தெரிந்தன. அவையெல்லாம் அந்தச் சபையால் மறைக்கப்பட்ட உண்மைகள்.

திடீரென்று பெரும் மின்னல் ஒன்று அறைக்குள் பாய்ந்தது. முழு அறையும் வெள்ளை நிற வெளிச்சத்தில் மூழ்கியது. ஒரு கணம் அந்த வெளிச்சத்தில் தாவீதின் உருவம் சிதைந்து, ஆவியாகக் கரைவது போலத் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் எஸ்தர் சிரிப்பதைக் காண முடிந்தது. அது ஒரு விடுதலையின் சிரிப்பு.

மறுநாள் காலை. 404-வது ஃப்ளாட்டின் கதவு பாதி திறந்த நிலையில் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. காவல்துறையினர் உள்ளே நுழைந்தபோது அங்கே யாருமே இல்லை. சாமுவேல், அந்தோணி, மரியா என எவருடைய தடயமும் அங்கில்லை. ஆனால் தரையில் ரத்தத்தால் ஆன கறை படிந்த கால்தடங்கள் ஜன்னலை நோக்கிச் சென்று மறைந்திருந்தன. மேசையின் மீது அந்த வெள்ளி லாக்கெட் திறந்தே கிடந்தது. ஆனால், அதற்குள் இருந்த மைக்ரோசிப் எரிக்கப்பட்டுச் சாம்பலாகக் கிடந்தது. தாவீது கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்ட அந்த ஆதாரங்கள் இப்போது ஒரு சாம்பல் குவியல் மட்டுமே.

காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு எஸ்தரின் அறைக்கதவு தானாகவே திறப்பதும், எஸ்தர் யாரிடமோ பேசுவது போலக் கைகளை அசைப்பதும் பதிவாகியிருந்தது. ஆனால் கேமராவில் தாவீதோ, சாமுவேலோ, அந்தோணியோ தெரியவில்லை. எஸ்தர் ஒருத்தி மட்டுமே அந்த அறையில் இருந்திருக்கிறாள். அவள் யாரிடமோ லாக்கெட்டைத் தூக்கி எறிவதும், பின் காற்றில் கை கோர்த்து ஜன்னல் வழியாக வெளியே குதிப்பதும் பதிவாகியிருந்தது. அவள் குதித்த அந்த நான்காவது மாடிக்குக் கீழே தேடியபோது அவளது உடல் கிடைக்கவில்லை. அங்கே ஒரு பழைய வயலின் வில் மட்டும் பாதியாக உடைந்த நிலையில் கிடந்தது.

காவல்துறை அதிகாரி அந்த அறையின் ஜன்னல் ஓரத்தில் நின்றிருந்தார். வெளியே இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது. அவரது கையில் இருந்த அந்த உடைந்த வயலின் வில்லின் ஒரு பகுதியில் மட்டும் கருகிய வாசனை அடித்தது.

கண்காணிப்பு கேமராவின் பதிவை மீண்டும் ஒருமுறை பார்த்தார். எஸ்தர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தபோது, அவளது முகம் பயத்தில் இருக்கவில்லை. மாறாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் துணையின் கைகளைப் பற்றிக் கொண்ட ஒரு குழந்தையின் பரவசத்தோடு இருந்தது. அவள் குதித்த அந்த நான்காவது மாடியின் கீழே எவ்வித அடையாளமும் இல்லை. உடல் இல்லை, ரத்தக்கறை இல்லை, அந்த உடைந்த வில்லைத் தவிர வேறெதுவுமே இல்லை.

அதிகாரி தனது கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார். மழையில் நனைந்த அந்தப் பழைய கட்டிடத்தின் சுவர்களில் விசித்திரமானதொரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை அவர் கவனித்தார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு செங்கல்லிலும் ஒரு மெல்லிய இசைக் குறிப்பு செதுக்கப்பட்டிருந்தது போலத் தெரிந்தது.

திடீரென, அந்த அதிகாரியின் காதுகளுக்குப் பின்னால் மெல்லிய மூச்சுக் காற்று பட்டது. அத்தோடு அந்த லெபனோன் கேதுரு மரங்களின் நறுமணம் அறையை நிறைத்தது. யாரோ ஒருவன் வயலினை மீட்டத் தொடங்கும் அந்த ஆரம்ப அதிர்வு காற்றில் பரவியது. பயத்துடன் அவர் திரும்பிப் பார்த்தார். அறை காலியாக இருந்தது.

ஆனால், அந்த அறையின் சுவரில் படிந்திருந்த கறை இப்போது ஒரு செய்தியாக மாறியிருந்தது. அதில் ரத்தத்தால் அல்ல, வெறும் ஈரத்தால் ஒரு வரி எழுதப்பட்டிருந்தது.

“அன்பு எதையும் உடைமையாக்குவதில்லை, அது தன்னைத் தவிர வேறெதையும் தருவதுமில்லை.”

அடுத்த நொடி, அந்த 404-வது ஃப்ளாட்டின் விளக்குகள் ஒரே நேரத்தில் அணைந்தன. சத்தமாக நீண்ட வயலின் இசை ஒலிக்கத் தொடங்கியது. காவல் அதிகாரி வெகு வேகமாக அந்த அறையிலிருந்து வெளியே வந்தார். இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே அந்த அதிகாரச் சபை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நகரத்தின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து துடைத்தெறிந்தது. ஆனால், எருசலேமின் காற்றிலிருந்து அந்தப் பழங்காலத்து மணத்தை மட்டும் யாராலும் அழிக்க முடியவில்லை.

இன்றும் எருசலேம் நகரின் அந்தப் பழைய குடியிருப்பில் மழை பெய்யும் போது, 404-வது ஃப்ளாட்டிலிருந்து வயலின் இசை மெல்லியதாகக் கேட்கிறது. அந்த இசையில் ஒரு ஆணின் குரலும், ஒரு பெண்ணின் சிரிப்பும் கலந்திருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த அறைக்குள் நுழைய யாருக்கும் துணிவில்லை. 

அந்த ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பார்த்தால், இன்றும் மழைத்துளிகள் அந்தப் பழைய கதையைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. நீதியின் வாக்குத்தத்தம் நிறைவேறியதா என்பது அந்த மழையைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

***

பிரியா பாஸ்கரன் – இயற்பெயர் பத்மப்ரியா பாஸ்கரன். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக வடஅமேரிக்காவில் வசித்து வருகிறார். மரபிலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையிலான பல்வேறு இலக்கிய வடிவங்களில் இயங்கி வருகிறார். முன்னணி பத்திரிக்கைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. சேலம் தமிழ் இலக்கியப் பேரவையில் பாரதியார் விருதும், படைப்பு குழுமத்தின் சிறந்த படைப்பாளி விருதும், தமிழால் இணைவோம் உலகத் தமிழ் களத்தின் தங்கமங்கை விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருது, வல்லினச் சிறகுகளின் மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதை 80 விருது, இலங்கை மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டு காலண்டிதழின் பிரமிள் விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தேசிய விநாயகம் விருது ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: priya@baskarans.com

தயாபரி

1

ஐ.கிருத்திகா

பூமி சுற்றுவதை உணர முடியும், அபூர்வமாய் சில தருணங்களில். உடலை நிதானித்து அமைதியாயிருக்கும் ஏதோ ஒரு நொடி அதை உணரலாம். பூமி அதற்கொரு வாய்ப்பை நமக்கு வழங்கும். அதுவாக வழங்காவிடில் நாமாகப் பெறமுடியாது. அனுபவங்கள் அப்படி வாய்ப்பவை. மலரும் கூட மணக்காது, பழமும் கூட ருசிக்காது, அவை தயை புரியாவிடில். அததற்கென்று தனித்தன்மை உண்டு. அதனாலேயே ஒவ்வொன்றும் சோபிக்கின்றன. அத்தனித்தன்மையே அவற்றின் பலம். ஒளி மிகுந்த தருணத்தில் அதனை அனுபவிக்கும் பாக்கியம் நமக்கு வாய்க்கும். 

‘மலர்கள் எப்போதும் மணக்கின்றனவே, பழங்கள் சதா ருசிக்கின்றனவே…..?’

‘அவை ஒளிமிகுந்த தருணங்களை வாழ்வாகக் கொண்டுள்ளன. அவை தயாபரிகள்…’

அவன் எழுந்தான். வேட்டியில் ஒட்டியிருந்த தூசு, தும்புகளைத் தட்டிவிட்டான். அது சாயரட்சை நேரம். மணி அடிக்கும் ஓசை கேட்டது. அவனைக் கடந்து சிலர் விரைந்தனர். சாயரட்சை மனிதர்கள் என்றே அவர்களை அடையாளமாய் மனதிற்குள் பதிந்து வைத்துள்ளான். 

தினமும் வருவார்கள். சாயங்காலமானா சாமியைப் பார்க்கணும் என்ற கொள்கையுடையவர்கள். ஈசன் முன் நின்று,

“நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க”என்றோ,

“பெற்ற தாய் தனை மக மறந்தாலும்….”என்றோ உருகுபவர்கள். 

“இன்னிக்காவது வீட்டுக்கு வாயேன்டா. உனக்குப் பிடிச்ச கொழுக்கட்டை செய்யறேன். “

எதிரே வந்த அம்மா பாவமாய் சொன்னாள். அவன் பேசாமலிருந்தான். 

“வரமாட்டியா……அந்த சிவனே கதின்னு இங்கயே கெடந்து ஒழல்றியே. உனக்கு சலிக்கலையா….?”

“தினமும் காலை விடிகிறது, அந்தி மறைகிறது, இருள் கவிழ்கிறது. அதற்காக நாளைக்காவது ஒரு பூகம்பம் வரணும் என்று யாராவது நினைப்பார்களா….”

அவன் மென்னகையோடு கடந்துவிட்டான். அம்மா வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

சாயரட்சை முடிந்து எல்லோரும் சென்றபின் அவன் ஈசன் முன் இருப்பான். கூட்டம் ஒவ்வாமை.

 ‘சுடரில் 

ஒளிரும் திரிசடையனே…….’

அவன் அமைதியாக நின்றான். கைகள் கூப்பவில்லை. உள்ளே கடலலை ஆர்ப்பரிக்கவில்லை. லிங்கனைப் பார்த்த கண் இமைக்கவில்லை. ஒரு வஸ்திரம், முப்பட்டை, உச்சியில் ஒரு முழம் பூ……. எங்கும் நிறைந்திட்ட பரம்பொருள், அவனுள்ளும்…….. தன்னைத்தானே வணங்கிக்கொள்வதா என்றெண்ணிய நாளிலிருந்து கை கூப்புவதை விட்டுவிட்டான். சுந்தரேசனை, சொக்கனை, அண்ணாமலையானை, உமையொரு பாகனை அவன் எவ்விதம் நோக்குவான்.

சிரிக்கும் குழந்தையைப் பார்ப்பதுபோல் பரவசப்பட்டு, நெடுநாள் பிரிந்திருந்த காதலியைக் காண்பதுபோல் கசிந்துருகி, உதவி செய்த ஒருவனை நோக்குவதுபோல் நன்றியுடன்………

நின்ற இடம் மறந்துபோகும். பாதங்களுக்குக் கீழே கருங்கல் தரை குளிர்ந்து கனிந்து கதகதப்படையும். அரைமணியா, ஒருமணி நேரமா…. அளவு தெரியாது. காட்சிகள் எதுவும் கண்ணுக்குப் புலப்படாது. நிலைத்த கண்களுக்கு தீப்பிழம்பாய், தங்கத்தின் ஜொலிப்பாய் லிங்கசொரூபன் காட்சி தருவான். 

“தென்னாடுடைய சிவனே போற்றின்னு சொல்லுடா, அதுபோதும்”என்பாள் அம்மா. 

அவன் நெற்றி சுருங்க நிமிர்ந்து பார்ப்பான். 

“அது வாயில வரலன்னா நமசிவாய சொல்லு. அவ்ளோதான்…”

சில்லிடும் விரல்களால் பின்னந்தலை வருடுவாள்.

“நீ போறது பத்தாதுன்னு அவனையும் இழுத்துகிட்டுப் போறியே….இந்த வயசுல அவனுக்கு இதெல்லாம் தேவையா…?”

அப்பா ஒரேயொருமுறை சலித்துக்கொள்ள அம்மாவின் தலை தீர்மானமாய் அசைந்தது.

“கோயிலுக்குப் போனா மனசு ஒழுங்குப் பட்டுடும். தப்பு செய்ய அஞ்சும். அங்க, இங்க அலைஞ்சு திரியாது. அதை ஆரம்பத்துலேர்ந்தே கொண்டு வரணும். இப்ப விட்டுட்டு வளர்ந்த பிறகு பிடிச்சு இழுத்தாகூட வராது. எதிர்காத்து மாதிரி முட்டி, மோதி தள்ளி விட்டுட்டு போயிக்கிட்டே இருக்கும். “

அம்மாவுக்கு தன் அபிப்ராயத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை. அப்பா விட்டுவிட்டார். அவர் எப்போதுமே அப்படிதான். அலட்டிக்கொள்ள மாட்டார். 

சிறுவயதில் அம்மாவுடன் கோயிலுக்குப் போவது அவனுக்குப் பிடித்தமானதாகவே இருந்தது. சிலீரென்ற தரையில் கால் பதிய நடப்பான். வெயில் நேரத்தில் அம்மா தூக்கிக் கொள்வாள். வளர்ந்தபின் அவளை எதிர்பார்க்காமல் தானாகவே செல்ல ஆரம்பித்தான். 

“நானும் வர்றேன்டா….”

அம்மா பரபரப்பாள். 

“நீ வா, நான் முன்னாடி போறேன்.”

அவன் சைக்கிளில் பறந்துவிடுவான். பின் அம்மா போகாத நாட்களிலும் போக ஆரம்பித்தான். 

“ஒரு தப்பு தண்டாவுக்குப் போறதில்ல. படிச்சோமா, கோயிலுக்குப் போனோமான்னு இருப்பான்.”

அம்மா பெருமைப்படுவாள். 

அக்கம்பக்கத்திலும், உறவுகளிலும் கூட அவனுக்கு நல்ல பெயர். அந்தப் பெயர் அவனை அசைத்து விடவில்லை. மண்டைக்குள் ஏறவில்லை. பெருஞ்சுடரின் முழுஒளியாய் அவன் நிறைந்திருந்தான். 

பற்றுக, பற்றற்று….

யாரோ ஒரு சந்நியாசி சொல்லிக்கொண்டே அவனைக் கடந்து சென்றார். அப்போது அவன் அந்த நிலைக்கு வந்திருந்தான். மனசு ஒருமுகப்பட்டு படிந்திருந்தது. 

உண்ணும் சோற்றில் லிங்கனைக் கண்டு நெகிழ்ந்த நேரமது. அவனுக்குள் அது எப்படி கலந்தது. மனம் திறந்தவெளியாய் கிடந்ததா…… அங்கே எதுவுமேயில்லையா…. அம்மாவின் சிறு விம்மலில் திரும்பியிருந்தால் திறந்தவெளி நிறைந்திருக்கும். அப்புறம் எங்கே பற்றுவது. ஆனால் அது சுத்தவெளியாயிருந்தது. சுத்தம்தானே சோறு போடும். சோறெல்லாம் சிவலிங்கன்…… அவனுக்கு சிலிர்த்துவிட்டது. 

அவனுள் நிறைந்தது அதுவா…. அதுவே அவனா…. அவன் மட்டுமா… அம்மாவும், அப்பாவும்தான். ஆடும், மாடும்தான். வேரும், விருட்சமும்தான். ஒட்டுமொத்த பிரபஞ்சமும்தான். அவன் இளசிலேயே தெளிந்துவிட்டான்.

“சதாசர்வ காலமும் கோயிலே கதின்னு கெடந்தா நல்லவாயிருக்கு. வயசுப்புள்ள ஆட்டம், பாட்டம்னு இருக்க வேணாமா…”

எல்லோரும் மாற்றி பேசினார்கள். அம்மா அழுதாள். அப்போதும் அப்பா வாய் திறக்கவில்லை. எது நடக்கணுமோ, அது நடக்கும். இதுதான் அவர் நினைப்பு. அசையாத மனம். அவனுக்கு அவரிடமிருந்துதான் வந்திருக்கும். பழுதற்ற வித்தின் இளங்குருத்து. அது தெளிவாயிருப்பது அதனியல்பு.

அறை குளிர்ச்சியாயிருந்தது. அவன் மனதைப்போல, அடர் வனத்தின் நடுவே குளிர்ந்த தடாகம் போல. வாடகையும் குறைவு. நகர்ப்புறத்திலிருந்து தள்ளியிருந்ததில் அப்படி. ஒருவேளை எளிமையான உணவிற்கும், அறை வாடகைக்கும் அவன் பார்க்கும் வேலை போதுமானதாக இருந்தது. 

பெரிய மளிகைக்கடை அது. அதில் பில் கவுண்டரில் அவன் இருப்பான். கைசுத்தம், வாய்க்கு வேலையே இல்லை. மௌனி…… சலசலப்பற்ற அமைதி. சும்மா இருக்கும் நேரங்களில் கண்கள் மூடி அமர்ந்திருப்பான். முதலாளி தொந்தரவு செய்யமாட்டார். எந்த கட்டுப்பாடும் கிடையாது. அவருக்கு அவனைத் தெரியும். அவரே நொடிக்கு நூறுமுறை நமச்சிவாய சொல்பவர். 

 ”ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கான். மேல படிச்சிட்டு பெரிய வேலைக்குப் போயிருக்கலாம். எப்படி, எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம். இந்தமாதிரி ஆகியிருக்கவேணாம். “

அம்மாவின் புலம்பல் ஓயவில்லை. அவன் இப்போதிருக்கும் நிலையே அவனது விதி என்று அப்பா புரிந்துகொண்டார். அதனால் நடப்பவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார். அவளிடம் சொல்லி விளங்கவைக்க முடியாது. அம்மாக்கள் அப்படியானவர்கள். தன் சூலில் வளர்ந்ததை தன்னுயிராய் கொள்பவர்கள். 

“குடி, பொம்பளைங்க சகவாசம்னு இல்லாம நல்ல வழியிலதானே போயிருக்கான். அந்த மட்டுமாவது திருப்தி பட்டுக்கம்மா…”

ஒரேயொருமுறை பொறுக்காமல் சொன்னார். அப்படியாவது சற்று தணிவாள் என்ற எண்ணம்.  அம்மாவின் அழுகையை அவனும் அறிவான். ஆடுபவள் அவளென்றால் ஆட்டுவிப்பவன் எவனென்று அவனுக்குத் தெரியும். இனி தெளிந்தது தெளிந்ததுதான். 

  அன்று பிரதோஷம். கோயிலில் கூட்டம் அள்ளியது. அவன் ஒரு தூணோரம் ஒதுங்கி நின்றிருந்தான். ஒன்பதிலிருந்து ஐந்துவரை கடையில் வேலை. அப்படி பேசித்தான் வேலைக்குச் சேர்ந்தான். ஐந்துக்குப் பிறகு ஆலயம். காலையிலும் எட்டேமுக்கால் வரை இருப்பு இங்குதான். 

நைவேத்யத்தில் ஒரு கரண்டி தொன்னையிலிருக்கும் அவனுக்காக. ஒருவேளை உணவு முடிந்தது. இன்னொரு வேளைக்கு இருக்கவே இருக்கிறது பாட்டி மெஸ். ஆக இரண்டு வேளைகள் என்பதே அவனுக்கு எதேஷ்டம். அவனுடைய மெலிந்த உடல் கண்டு அம்மா கண்ணீர் விட்டாள்.

“சரியா சாப்பிடாம எப்படி இளைச்சு போயிருக்கான் பாருங்க…….”

அப்பாவிடம் தேம்பினாள். அவன் உடல் தேயவில்லை. சிலை போல பொலிந்திருந்தான். 

பிரதோஷம் முடிந்து கூட்டம் கருவறைநாதனை வணங்கி சென்றபின் உள்ளே போக அவன் காத்திருந்தான். அப்பா எதிரே வந்து நின்றார்.

“மேல அவ்ளோ பெரிய ரூம் இருக்கு. வந்து தங்கிக்கயேன்டா. நாங்க உன்னை தொந்தரவு பண்ண மாட்டோம்.”

அம்மா தூது அனுப்பியிருக்கிறாள். தனக்காக இல்லாவிட்டாலும் அங்கு துடிப்பவளுக்காக இங்கு வந்து அவன் முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இது அவ்வபோது நடப்பதுதான். 

“வேணாம்…….”

நூலறுந்த பட்டம் மீண்டும் கைச் சிறைக்குள் அகப்பட எத்தனிக்குமா……………… காற்றுவெளியில் பறக்க விரும்புமா…… 

  எண்ணெயில் வழிந்த ஈசனவன் தீப ஒளியில் மினுங்கினான்.

“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! காவாய் கனகத்திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி! போற்றி! 

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி! 

பாகம் பெண்ணுருவானாய் போற்றி!”

பின்னாலிருந்து ஸ்பஷ்டமாய் ஒலிக்க அவன் அனிச்சையாக திரும்பிப் பார்த்தான். தொண்டைக்குள்ளிருந்து அபூர்வமாய் வெளிவரும் குரல்தான் அப்படி புடம் போட்டது போல் ஒலிக்கும். அவனைப் பார்த்தவர் தலையசைத்தார். காவி வேட்டி, சட்டை அணிந்திருந்தார். சுத்த நரை முகத்தை அலங்கரித்தது. ஒட்டிய உடலில் கண்கள் மிகுஒளியுடன் பளிச்சிட்டன. அவர் செல்ல அவன் பின்தொடர்ந்தான். 

வெளிப்பிரகாரத்து தூண் ஒன்றில் அவர் சாய்ந்தமர்ந்தார். தூணின் நாட்டியமங்கை தன் பதம் தவறும் பட்சத்தில் அவர் தலை தட்டுப்படுமே என்றஞ்சி ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி பதட்டத்தோடு நின்றிருந்தாள். 

அவரெதிரே அவன். சிறிதுநேரம் அவனை உன்னித்தவர், 

“யார் நீ…..?”என்றார்.

“என்னுள் அது, அதுவே நான்…..”

இரண்டு மாத்திரையளவில் நீ ஒலிக்கவில்லை. அதற்குள்ளே கேள்விக்கு விடை வந்துவிட்டது.

“இருவத்தஞ்சு இருக்குமா….?”

“ம்……”

“எதுக்கு இப்படி……?”

“இதுதான் சாசுவதம்…….”

அதன்பிறகு அவர் எதுவும் கேட்கவில்லை. அவனுக்கும் ஒன்றும் பேசத் தோன்றவில்லை. பிரபஞ்சத்தின் மௌனவெளியில் உயிருறைந்த இருபுள்ளிகளாய் அவர்கள் அவ்விடம் உறைந்திருந்தனர். 

நேரம் கரைந்தது. கணீரென்ற மணியோசையில் புள்ளிகள் மானுட உருக்கொண்டன. அவர், அவனை ஊடுருவிப் பார்த்தார். அவன் சிற்பமாய் சமைந்திருந்தான். சில மணித்துளிகளில் புரிந்து கொண்டு விட்டாற்போல் எழுந்தவர் நடந்தபடியே சொன்னார். 

“கோடியில ஒருத்தர் இப்படி பிறக்கிறதுண்டு. “

உதிர்ந்த வார்த்தைகள் காற்றில் விரைந்து கலந்தன.

“ஒத்தப் புள்ளைய பெத்து சதா கோயிலுக்கு இழுத்துக்கிட்டுப் போன. இப்ப கோயிலுக்கே குடுத்துட்ட. இத அந்த சாமி சகிக்குதே. அத சொல்லணும். “

பாட்டி புலம்பித் தள்ளிவிட்டாள். 

“முன்னாடியெல்லாம் இங்கேருந்து போவான், திரும்பி வந்துடுவான். இப்ப அங்கயே இருந்துட்டான். ஊர் ஒதுக்குப்புறமா ஒரு ரூம் புடிச்சு வச்சிருக்கான். தங்குறது, தூங்குறது எல்லாம் அங்கதான்.”

அம்மா அழுதாற்றங்கரையேறி இப்போது கோபாற்றங்கரையில் ஸ்திரமாய் நின்றுவிட்டாள். அவனைப் பற்றி பேசும்போதெல்லாம் குரலில் கடுமை மிகுந்திருந்தது.

“வம்சவிருத்தியாவ வேணாமா…… இப்படியே வுட்டுட்டா புள்ள போயிருவான். புடிச்சு வச்சு ஒரு கல்யாணத்தப் பண்ணுங்க. தெளிஞ்சிருவான்” என்று பெரியப்பா சொன்னார். குழம்பியதுதானே தெளியும். கண்ணாடியாய் தெளிந்தது இனி ஆவதற்கு என்ன இருக்கிறது.

கோயிலுக்கு அடிக்கடி வரும் அனைவருக்கும் அவனைத் தெரியும். பார்த்ததும் சிவசிவ…. என்பார்கள். பதிலுக்கு அவனும் சொல்வான். கோயிலின் ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கண்களை மூடிவிட்டானானால் சுற்றிலும் நடப்பது தெரியாது. நிர்மலமான மனதில் சுடர்விடும் பொட்டொளி அகன்ற ஜோதியாய் விரிந்து அவனை உள்ளிழுத்துக் கொள்ளும். அவனுள் உருவாகி,  அதனுள் அவன் நிறைந்து பாலிலிட்ட சர்க்கரையாக கலந்து ஒன்றுமற்று போய்விடுவான். 

அம்மா இழுத்து வந்தாளா அல்லது அதுவே ஈர்த்ததா…… அம்மா அவளாக இழுத்து வரவில்லை. அவள் கருவி…… கருவிகள் தன்னாலியங்கா….. இயக்க ஒரு விசை வேண்டும். அவ்விசை ஆட்டுவிக்க அவள் ஆடினாள். ஆக அதுவேதான் ஈர்த்தது. வளர்ந்த பாதங்கள் பிரகாரத்தரையில் பதிய, பதிய ஆண்மையும், அமைதியும் அவனுள் நிறைந்தன. நிறைகுடம் போல் அவன் தளும்பாதிருந்தான். 

கீழ் வீட்டுப்பெண் கல்லூரி மாணவி. பக்கவாட்டுப் பகுதியிலிருக்கும் கொடியில் துணி உலர்த்த வருவாள். உலர்த்தியபடியே படியிறங்கும் அவனை குறுகுறுவென்று ஈர உடுப்புக்குப் பின்னாலிருந்து பார்ப்பாள். தூயபொன்னாய் மிளிரும் முகத்தைப் பார்க்க சட்டென சிலிர்த்துப் போகும். 

‘பெண்மையை கிளர்ந்தெழ செய்யும் இந்த மனிதனுக்கு ஆன்மீகம் தேவையா……’என்று அவள் எண்ணிக் கொண்டாள். 

ஒருமுறை அவனும் எதேச்சையாக பார்க்க அவளுக்கு விதிர்விதிர்த்து விட்டது. அவன் இயல்பாக புன்னகைத்து நகர்ந்தான். அதனை எடுத்துச் செல்லவில்லை. புன்னகைக்க அவனுக்குப் பிடித்திருந்தது. உணர்வுகளிலே அது நல்லுணர்வு. அவ்வுணர்வை வெளிப்படுத்தும் போது ஆன்மா புத்துணர்ச்சி அடைவதாக அவன் நம்பினான். அதற்காக கண்டதற்கெல்லாம் புன்னகைக்கவில்லை. மனமிளகும் சமயம் அது வாய்த்து விடுகிறது. இப்போது அப்படித்தான் நிகழ்ந்தது. அவளின் மருட்சி குழந்தைத்தனமாய் இருந்ததில் மனம் இளகிவிட்டது. அவளோ நின்ற இடத்தில் கனவுகண்டு கொண்டிருந்தாள். 

     மழை வரும் போலிருந்தது. சாயரட்சை முடிந்ததும் எல்லோரும் அவசரமாய் கோயிலை விட்டு வெளியேறுவதில் முனைப்புடன் இருந்தனர். அவன் தெற்கு கோபுர வாசலோரமிருந்த மண்டபத்தில் அமர்ந்து அடுத்த நொடி ஆனந்தத்தை உள்வாங்கக் காத்திருந்தான்.

“மழை வர்றாப்ல இருக்கே. கெளம்பலையா……?”

ஒருவர் போகிறபோக்கில் கேட்டுவிட்டு எட்டி நடையைப் போட்டார். 

சன்னத்தூறல்கள் பெருகி பெருந்தூறல்களாய் விழுந்ததை அவன் ஆச்சரியம் தேங்கிய விழிகளோடு பார்க்கத் தொடங்கினான். இயற்கையை ரசிக்க மிகவும் இஷ்டம். 

அறை ஜன்னல் வழியாக அந்தப்புறம் பார்த்தால் பச்சைப்பசேலென்ற வயல்வெளி பட்டுப்பாய் விரித்தது போல மின்னும். அதன் அழகில் லயித்துப் போய்விடுபவன் சிலசமயம் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பான். கண்கள் பார்த்தபடி இருக்க சிந்தனை ஒருமுகப்பட்டு போகும். சிந்தாமல், சிதறாமல் குவியும் மனதுக்கு வயல் வெளி ஒரு தூண்டுகோல். ரசிக்கும் நிலையிலிருந்து அவன் மேலே, அதற்கு அப்பாலே போயிருப்பான்.

“அதெப்படி உட்கார்ந்தவுடனே மனசு குவிஞ்சிடுமா…… நம்பற மாதிரி இல்லையே. நானும் தியான வகுப்புக்குப் போயிருக்கேன். கண்ணை மூடின உடனே நினைப்பு எங்கெல்லாமோ சுத்தும். பத்து நிமிஷம் கூட தாக்குப்புடிக்க முடியாது. பயிற்சி பண்ணினாலொழிய வராதுங்கறாங்க. உனக்கெப்படி வந்துச்சு. அப்படியே சிலையாட்டம் உட்கார்ந்திருக்க….”

அம்மா அவனை நோகடிக்கும் நோக்கத்தில் ஒருமுறை குத்தலாக கேட்டாள். அவன் பதில் சொல்லவில்லை. நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாதபோது தர்க்கத்துக்கு இடம் கொடுப்பானேன். தவிர பார்க்கும் மனிதரெல்லாம் பரம்பொருள் அவனுக்கு. வினா தொடுக்கவும், விளையாட்டு காட்டவும் அவனை அசைப்பதற்குதான். அவனா அசைவான். கோடியில் ஒருத்தனாயிற்றே.

  மணி அடித்தது. உள்ளே சென்றபோது அம்மா பெயர், நட்சத்திரத்தை அர்ச்சகரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அன்று அவனுக்குப் பிறந்தநாள். வருடம் தவறாமல் அவன் பெயரில் அர்ச்சனை செய்து விடுவாள். 

கண்டதும் மெலிதாய் புன்னகைத்தாள். அவன் கண்களை மூடிக் கொண்டான். சற்றைக்கெல்லாம் குளிர்ந்த விரல் நெற்றியில் பட உடல் சிலிர்த்தது. அக்குளிர்ச்சி ஆன்மாவைத் தொட்டது. கண்கள் தானாக விரிந்தன. எதிரே நின்றிருந்தவள் கனிவுடன் நோக்கினாள் . 

“இருவத்தஞ்சு நெறைஞ்சிடுச்சு.”

பின்னந்தலையை வருடினாள். அவன் இமைக்காமல் பார்த்தான். அன்றைக்கு அம்மா அவ்வளவு துலக்கமாய் மின்னியது கண்களை கூசச் செய்தது. பழமாய் கனிந்த மனதின் வார்த்தைகள் மிகுந்த பலம் வாய்ந்தவை. கணக்கான வார்த்தைகளானாலும் இதயத்தை துளைத்து விடுபவை. 

“நீ ஜெயிச்சிட்டடா…… எப்பவும் இப்படியே நெறைஞ்சிரு……”

அழுத்தமாய் சொன்னவள் கண்கள் கலங்கவில்லை. நல்ல மணமான மல்லிகைப்பூ சூடி பூப்போலிருந்தவள் சற்றுநேரம் அவனையே உன்னித்துவிட்டு திரும்பி நடந்தாள். அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். தூரத்தில் நெல்மணியளவு சுடராய் அம்மா அசைந்து செல்வது தெரிந்தது. ஒளி மிகுந்த தருணங்களை தனதாக்கிக் கொண்டவள்……..தயாபரி…….

***

ஐ.கிருத்திகா – திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது கோவையில் வசிக்கிறார். 1998 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. நாய்சார் சிறுகதைத்தொகுப்பு வாசகசாலையின் சிறந்த சிறுகதைத்தொகுப்பு பரிசு பெற்றது. மின்னஞ்சல்:  kiruthigaiyyappan@gmail.com

சவக்குழி

0

சிபி சரவணன்

வெயில் மப்பும் மந்தாரமுமாக தன் உக்கிரத்தை வெளிபடுத்திக் கொண்டிருந்த சமயம் அய்யாவுவின் முந்திரித் தோப்பில் மைனாக்களின் ரீங்கார ஒலிகள் கேட்ட வண்ணம் இருந்தன. தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய அய்யாவு மண் பானையில் தண்ணீர் மோந்து கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்து தாகம் தணிய தண்ணீர் பருகிக் கொண்டிருந்தார். அவ்வப்போது முதுகைப் பிடித்து வலியில் உடலை வளைத்த வண்ணம் இருந்தார். 

அய்யாவு 70-வதை தாண்டிய சாயல் அவர் நரையிலும் உடல் தளர்விலும் நன்றாகவே தெரிந்தது. உழைத்து உழைத்து தசைகள் வலு ஏறி இருந்தன. ஆலம்பட்டி டெய்லர் தைத்து தரும் வெள்ளை பாலிஸ்டர் ஜிப்பா தான் அய்யாவுக்கு முதன்மையான அடையாளம். செம்மண் ஊறி, ஊறி நிறம் மாறிப்போன வெள்ளை வேட்டியை தான் அய்யாவு எப்போதும் உடுத்தியிருப்பார். இழுத்து வாரிய தலை முடியில் ஒரு பூ வந்து விழுந்தது கூட தெரியாமல், அய்யாவுவின் முதிர்ந்த கண்கள் செம்மண்ணையே பார்த்து கொண்டு இருந்தது. ஊர் முழுக்க பேர் போன ஜோடி என்றால் அய்யாவு, சின்னதாய் ஜோடி தான். அடிக்கடி அடித்து கொண்டாலும் கூட அவர்களுக்குள் இருக்கும் காதலை பொது வெளியில் கூட காணலாம். சின்னதாய் எப்போதும் அய்யாவுவின் கையைப் பிடித்து கொண்டே தான் நடப்பாள். சாலையில் அவர்களைக் கடந்து செல்லும் பெண்கள்,

“என்னத்தா.. இன்னும் வயசு முறுக்கு அடங்களையோ.. ஒன்னு மண்ணாவே திரியிறீக?”

“உனக்கேண்டி எரியுது.. ஏன் மாமனுக்கு நெஞ்சுல உரம் இருக்கு, அதென் ஏன் கைய பிடிச்சு கூட்டி வாராரு.. எங்க உன் புருசன் கஞ்சா குடிக்கிப் பய?”

என்றவாறு எகத்தாளமாகத் தான் கிழவி பேசுவாள். 

அய்யாவுக்கு, சின்னதாய் தான் தாய்மடி. சின்னப் பிள்ளை போல் எல்லாவற்றிற்கும் அவள் தயவைத் தான் நாடிக் கொண்டு இருப்பார். சாப்பாடு, தண்ணீர், துணி மணி இப்படி எது வேண்டுமென்றாலும் “சின்னாத்தா … சின்னாத்தா..”தான்.

“எப்ப பாரு வெள்ள வேட்டிய உடுத்தாட்டி வேற கைலி எடுக்க மாட்டியா?”

“அடியே.. பெரிய மனுசனுக்கு வெள்ள வேட்டி தான் அழகு”

“ஆமா பெரிய மனுஷன்”, எனப் புலம்பி கொண்டே செம்மண் கரையைத் துவைத்து கொண்டிருப்பாள். 

முதலில் அய்யாவு வீடு ஊருக்குள் தான் இருந்தது. அய்யாவு சின்னதாய்க்கு குழந்தை இல்லாததை ஊர் முழுக்கப் பேசிப் பேசி அவர்கள் ஒரு கட்டத்தில் வெறுத்து போய் தோட்டத்தில் சிறியதொரு வீட்டைக் கட்டி தங்கி விட்டனர். 

ஆடு மாடுகள், கொஞ்சம் சேவல்கள் எனக் காலம் அப்படியே இழுத்து கொண்டு சென்று விட்டது. ஊருக்குள் அவ்வளவாக செல்லாத அய்யாவுக்கு அங்கு நடக்கும் சங்கதிகளை எல்லாம் கொண்டு வந்து சேர்ப்பவர் முத்தையா தான். அய்யாவு மாடுகளிடம் பால் கறந்து கொண்டு போக வரும் அவர் தான் அய்யாவுக்கு மிக நெருக்கமான நண்பர். அய்யாவுவை விட முப்பது வயது இளையவராக இருந்தாலும் கூட, அய்யாவுவின் வாய்க்கு தோதான காது முத்தையாவிடன் இருந்தது. முத்தையா வாங்கி வரும் செய்யது பீடிகள் சின்னதாய் கண்ணில் பட்டு விட்டால் போதும் தாம் தூம் என சின்னதாய் குதிக்க ஆரம்பித்து விடுவாள் . 

“நீயெல்லாம் மனுசனா? உன்னை இதெல்லாம் குடிக்க விட்டு இருக்கவே கூடாது, நீ கிணத்துக்குள்ள உக்காந்து பீடி அடிக்கிறது எனக்கென்ன தெரியாதா?”

என வம்பாக சண்டைக்கு வருவாள். 

அய்யாவு தன் பாக்கெட்டில் இருந்த பீடி கட்டை தூக்கி வெளியே எறிந்தார். தீப்பெட்டியில் குச்சியை உரசி சின்னதாய் படத்துக்கு முன்னே உள்ளே தீபத்தில் பற்ற வைத்தார். சின்னதாய் இறந்து இதோடு மூன்று மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. அய்யாவுக்கு அந்த தோட்டத்து வீட்டில் வாழும் ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக இருந்தது. சரியான சாப்பாடு இல்லை, நல்ல தூக்கமில்லை. வீடு வீடாகவே இல்லை. சின்னதாயின் மிரட்டல் குரல்கள் ஒவ்வொரு சுவரில் இருந்தும் ஒலித்து கொண்டிருப்பதாக அய்யாவுவிற்கு தோன்றியது. கொட்டத்தில் உள்ள ஆடு மாடுகள் கூட தவிக்கத் தண்ணி இல்லாது பாடாய் பட்டு விட்டது.

திண்ணையில் சோர்ந்து உட்கார்ந்து இருந்த அய்யாவு முன் சாப்பாட்டு பாத்திரத்தை வைத்த முத்தையா, 

“என்ன மாமா ஒரு மாதிரி இருக்கீக.. உங்க தங்கச்சி கறி கஞ்சி ஆக்கி குடுத்து விட்டிருக்கா சாப்பிடுங்க”

“இருக்கட்டும்யா”

“அட ஆஸ்பத்திரியில எதும் சொன்னாகலா?”

“இன்னும் ஒரு மாசம் என் உசுருக்கு கெடுவுனு டாக்டர் சொல்லிடாக?”

“அப்படி என்ன ஆச்சு”

“பீடி குடிச்சு குடிச்சு நுரையீரல் சுத்தமா போச்சாம்.”

“ஓ.. இதுக்கு தே இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிருகியா..கவுர்மெண்ட டாக்டர் என்னைக்கு சரியா சொல்லிருக்கான்.. நாளு நாளு சேவல அடிச்சு சூப்பு வச்சு குடிச்சா நெஞ்சு சளியெல்லாம் வந்துற போது.. சரி சாப்பிடுங்க.. இந்தா வாரேன்”என முத்தையா பால் கறக்க சென்று விட்டார். 

தன் சாவு நெருக்கி விட்ட மனிதன் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்ற கூற்றுக்கு ஏற்ப அய்யாவுவின் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையாகக் கழிந்தது. 

முத்தையா வைத்து விட்டு போன பாத்திரத்தில் இருந்த கறி கஞ்சி கூட அப்படியே இருந்தது. 

மறுநாள் முத்தையா சைக்கிளை நிறுத்தி விட்டு பார்க்க அங்கே அய்யாவு வீட்டில் அவர் இல்லையென தெரிந்து குரல் எழுப்பிக் கொண்டே அங்கும், இங்கும் தேடிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு பின்னால் மண்வெட்டி வெட்டும் சத்தம் பயங்கரமாக கேட்டது. முத்தையா போய் பார்க்க அய்யாவு குழி வெட்டி கொண்டு இருந்தார். 

“இங்க என்ன மாமா செஞ்சுக்கு இருக்க?”

“நம்ம சாவுக்கு நாமளே குழி வெட்டி அதுல படுத்து பாத்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தேன் அதே தோண்டிக்கு இருக்கேன்.”

பேசிக்கொண்டு இருக்கும் போதே அய்யாவுவிற்கு இருமல் பின் மண்டையை அதிர வைத்தது. குவியல் குவியலாக சளியை கக்கினார். அதில் கொஞ்சம் இரத்த வாடையும் அடிக்கவே செய்தது.

“உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு, இங்குட்டு வா..”

அய்யாவு தோளைப் பிடித்து வம்பாக இழுத்துக் கொண்டுபோய் அவரை சுவரொட்டி உக்கார வைத்து விட்டு, முத்தையனும் உட்கார்ந்தார். 

“நேத்துல இருந்து கஞ்சி தண்ணி குடிக்காம இப்படி வெட்டிக்கு இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆவுறது…”

“இப்பல்லாம் எதும் சாப்பிட ஒப்பல மாப்புள, நாக்கு ருசி அத்து போய் கிடக்கு”

அவருக்கு பேசப் பேச இருமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. 

“உன்னேயெல்லாம் திருத்தவே முடியாது, இந்தா தண்ணிய குடி”, சொம்பைக் கொடுக்க அவர் வாங்கிக் குடித்தார். 

நாளுக்கு நாள் அய்யாவுவின் உடல் நலம் மோசமாகிக் கொண்டே போனது. தான் சாவுக்கு எத்தனை ஆழம் குழி தோண்ட வேண்டுமெனத் தெரியாமல், சாவுக்கு குழி வெட்டும் நபரை கூட்டி வந்து விசாரித்தார். அவருக்கு முன்பாகவே குழியில் படுத்து கொண்டு “சரியா இருக்காப்பா.. மண்டைக்கு ஒரு தலைகாணி வெட்டிருக்கேன் சரிதான?”

அய்யாவுவின் இந்த செயலைப் பார்த்த அந்த ஆள், அவருக்கு புத்தி கெட்டு போனதாக ஊர் முழுக்க பரப்ப ஆரம்பித்தார். 

சரியாக, உணவு இல்லாமல் அய்யாவுவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போனது. சமாதிக்கு கல்வெட்டு அடிப்பவரிடம் பெயர், முகவரி எல்லாம் கொடுத்து கல்வெட்டு செய்து வாங்கி வந்து வீட்டில் வைத்தார். அதனை வீட்டுக்குள்ளே தன் படுக்கை அருகே வைத்து கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தார். தோற்றத்தில் தன் பிறந்த நாளை ஜாகத்தை பார்த்து குறித்து கொண்ட அவர், இறப்பில் டாக்டர் சொன்ன கெடுவு நாளை கொடுத்து அச்சடித்துக் கொண்டார். 

சின்னமனூர் நகருக்கு போய், பிளக்ஸ் அடிக்கும் நபரிடம் உட்கார்ந்து தன் பெயரைக் கொடுத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கப்போக, இவரைப் பைத்தியம் என முதலில் அடித்து துரத்தி விட்டனர். பின்னர் தினமும் அங்கேயே நின்று, அவர்களிடம் கெஞ்சினார். 

“அய்யா.. எனக்கு யாருமில்லையா.. டாக்டர் எனக்கு கெடுவு வச்சுட்டாரு.. எனக்கும் சில ஆசையெல்லாம் இருக்குதுயா.. இதெல்லாம் ஒரு மனத் திருப்திக்கு தானே சாமி பாத்து செய்ங்க”

எனக் கெஞ்சவும், யாருமில்லாத நேரத்தில் அவரை வரச் சொல்லி டிசைன் செய்து பிளக்ஸ் அடித்துக் கொடுக்க, அதனை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். 

“முத்தையா. உன்னதே மல மாதிரி நம்பியிருக்கேன். நான் செத்ததுக்கு அப்பறம் இந்த வீடும், காடும் பொதுவுக்கு எழுதி கொடுக்கிறேன். நான் செத்த பிறகு ஏன் சமாதி மட்டும் கட்டி விட்டு, ஊருக்குள்ள பிளக்ஸ் வச்சிரு.. அவளுக்கு இதென் ஆச.. அவ எப்பவும் இதே சொல்லுவா.. நமக்கு யாரு இருக்கா.. உனக்கு ஒன்னுநா யாரு எடுத்து செய்வா, அவ ஆசையாச்சும் நடக்கட்டும் யா”

முத்தையாவால் எதுவும் பேச முடியவில்லை. 

“செய்றேன்.. ஆனா நீ இருக்க வரைக்கும் ஒழுங்கா சாப்பிடு. பரமசிவன் ஹோட்டல் புரோட்டா உனக்கு பிடிக்கும்னுதே வாங்கிட்டு வந்தேன்.”

என நீட்ட அவர் எதுவும் மறுப்பு சொல்லாமல் வாங்கி கொண்டார். டாக்டர் கொடுத்த கெடுவு நாட்கள் நெருங்கி கொண்டே வந்தது. ஆனால் அவர் சாவதற்கான எந்த வித சமிக்ஞையும் தெரியவில்லை. இதற்கும் டாக்டர் கொடுத்த மாத்திரையைக் கூட அவர் ஒழுங்காக சாப்பிடவில்லை. தினமும் சாவுக்கு தோண்டப்பட்டக் குழியைச் சுற்றி வருவார். தவறாது சின்னதாய் போட்டோவிற்கு மாலை போட்டு தீபம் ஏற்றுவார். ஆனாலும் கூட சாவு அவரை நெருங்குவதைப் போல் தெரியவில்லை. மருத்துவமனைக்கு போய் விசாரித்து விட்டு வரலாம் என்று கூட அவருக்குத் தோன்றியது. மேலும் வீட்டில் இருந்த மாடுகளை எல்லாம் விற்று காசாக்கி, முத்தையனிடம் கொடுத்து மகனின் படிப்பு செலவுக்கு வைத்து கொள்ள சொன்னார். தன் சாவிற்கு யாரும் வரக் கூடாது எனவும், உன் குடும்ப ஆட்கள் மட்டுமே எடுத்து செய்ய வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

அன்று தான் அவரது கடைசி நாள். அதாவது டாக்டர் கூறிய அந்த நாள். சாவு எப்படியும் இன்று இரவு நம்மை நெருங்கி விடும் என நினைத்த அய்யாவு கிணத்து மேட்டில் போய் குளித்து விட்டு வந்து, நல்ல இஸ்திரி போட்ட வெள்ளை வேட்டியை எடுத்து உடுத்தி கொண்டார். சின்னதாயின் போட்டோவை துடைத்து தீபம் ஏற்றி அவர் “இனிமே உனக்கு யாரு தீபம் ஏத்துவா, ஆமா நாந்தே மேல வரென்ல அங்க வச்சு உன்ன பாத்துக்கிறேன்”, என்றவாறு சின்னதாய் போட்டோவை தொட்டு முத்தமிட்டார். 

அன்று நாள் முழுக்க முத்தையாவை எதிர்பார்த்து காத்திருக்க அவர் வரவே இல்லை. முத்தையாவிற்கு சமீப காலமாக அய்யாவுவின் முகத்தை பார்க்க சங்கடமாக இருந்தது. அதனால் தான் கூடுமான வரை அவரைப் பார்ப்பதை தவிர்த்து வந்தார். என்னதான் தான் மனிதன் என்றாலும் கூட சாவை எதிர்பார்த்து காத்திருக்கும் முகத்தைப் பார்ப்பது சற்று சங்கடமான காரியம் தான். காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த அய்யாவுக்கு பசி இருந்தாலும் கூட சாகப் போற உடம்புக்கு எதுக்கு ஆகாரம் என நினைத்தாரோ என்னவோ பேசாமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கண் அசந்தார். கனவில் சின்னதாய் நன்கு சிங்காரித்துக் கொண்டு அவரை நோக்கி நடந்து வருவது போல் தெரிந்தது. தூக்கத்தில் அய்யாவு லேசாக சிரித்துக் கொண்டார். பொழுது கசிந்து இருள் பரவ ஆரம்பித்தது. திடீரென தூக்கத்தில் இருந்து அய்யாவு எழுந்து பார்க்க தகரத்தில் ஆலங்கட்டி மழை டம் டம் என விழுந்து கொண்டிருந்தது. அய்யாவு லேசாக தலையை அசைத்து எழுந்து பார்க்க பேய் மழை பெய்து கொண்டிருந்தது. அய்யாவு மண்வெட்டியை எடுத்து கொண்டு ஓடினார். பின்னால் தனக்காக வெட்டப்பட்ட குழியில் தாரை தாரையாக நீர் குழியில் விழுந்து கொண்டு இருந்தது. அவர் தன் மண்வெட்டியால் மண்ணை ஒதுக்கி அடைப்பு போட்டு விட, ஓரளவு குழிக்குள் நீர் போய் நின்றது. ஈர துணியோடு வீட்டுக்குள் வந்த அய்யாவு மீண்டும் சாய்வு நாற்காலியில் படுத்து கொண்டார். உடல் நனைந்தது கூட தெரியாமல் அலுப்பில் படுத்த அய்யாவு நன்றாக தூங்க ஆரம்பித்தார். 

மழை மேய்ந்த இரவால், பொழுது மெதுவாகத் தான் புலர்ந்தது. வெயில் பட்டு திராட்சை பழங்களில் தேங்கி இருந்த நீர் தாரைகள் மின்ன தொடங்கின. முத்தையா சைக்கிளை நிறுத்தி விட்டு தயக்கத்தோடு வீட்டுக்குள் வந்தார். அவர் வீட்டில் இல்லாததை உணர்ந்த முத்தையா மெல்ல வீட்டுக்கு பின்னால் வந்தார். அங்கே அய்யாவு குழிக்கு முன்னால் குத்த வைத்து உட்கார்ந்து பீடி குடித்தார். முத்தையாவின் நடந்து வரும் சத்தம் கேட்டும், கண்டு கொள்ளாமல் அய்யாவு குழியைப் பார்த்த வண்ணம் இருந்தார். 

“என்ன முத்தையா ஆளக் காணோம். பாத்தியா நான் படுக்க வேண்டிய குழிய.. எல்லாம் தண்ணி.. வத்திரும்.. எப்படியும் வந்திரும்…”.

அவர் புலம்பிக் கொண்டே வீட்டுக்குள் போனார். அவரது வேட்டி சட்டை முழுதும் செம்மண் அப்பி இருந்தது. 

“ராத்திரி பூராம் மழையில ஊருணதுல கூத அடிக்குது. கொஞ்சம் கடுங்காப்பி போட்டுத் தாரியா”

எனக் கேட்டுவிட்டு வேட்டி சட்டையைக் கழற்றி வீசிவிட்டு உட்கார்ந்தார். அவர் டவுசரோடு திராட்சை கொத்துகளை பார்த்த வண்ணம் உட்கார்ந்திருக்க, கடுங்காப்பி அவர் கைக்கு வந்தது.

“இந்த கொடிய அரும்பாடு பட்டு வளத்தென்.. என்ன செய்ய.. நேரம்… வெக்காளி சாவு கூட நமக்கு தோதா வர மாட்டிங்கிது இல்ல..”

“சும்மா பொலம்பமா போய் வேலைய பாரு மாமா.. சாவெல்லாம் உன்னைய ஒன்னும் செய்யாது.. கருப்பன் உனக்குள்ள இறங்கிருக்கான் மாமா.. அவந்தே உன் உசுற பிடிச்சு வச்சிருக்கான். “

“என்னமோ.. சரி அந்த சேவலை எடுத்து போய் அடிச்சு கொழம்பு வச்சு கொண்டாரியா.. நாக்கு செத்து போய் கிடக்கு”

முத்தையா புன்னகையுடன் சேவலை பிடித்து கொண்டு வந்து சைக்கிளில் கட்ட, 

“முத்தையா.. வரும் போது ஒரு வைரத்த பிடிச்சுகுக்கு வா”

முத்தையா நக்கலாக அவரைப் பார்த்து சிரித்து கொண்டே அங்கிருந்து கிளம்பினார். 

அய்யாவு தனக்கு புது உயிர் வந்தது போல, துணி மணிகளை துவைத்து போட்டு, வீட்டினைக் கூட்டி பெருக்கி சுத்தம் செய்து விட்டு எப்போதும் போல சின்னதாய்க்கு சூடம் ஏற்றி வைத்துவிட்டு ரெடியாக உட்கார்ந்தார். பல நாள் பசி அவரை ஆட்கொண்டிருந்தது. இனி வாழ வேண்டும் முடிந்த வரை, ஆண்டு அனுபவித்து சாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் தோன்றியது. ரேடியோவை தட்டி சரி செய்து பாடலைப் போட்டு கேட்டார்.

மதியத்துக்கு மேல் வந்த முத்தையா பாத்திரத்தை ஓரமாக வைத்து விட்டு சரக்கடிக்க, கொஞ்சம் கறியை அள்ளி போட்டு கொண்டு வந்து உட்கார்ந்தார். இருவரும் எதுவும் பேசாமல் குடிக்க ஆரம்பித்தனர். இரண்டு குவாட்டருக்கு மேல் போனதால் அய்யாவு தன்னைத் தானே சிரிக்க ஆரம்பித்தார். ரேடியோவில் “இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன். நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று ..”பாடல் ஓட அய்யாவு சிரித்து கொண்டே அந்தப் பாடலைக் கேட்டார். முத்தையா தேவையில்லாமல் பேசி அவரது நினைவுகளை கிளற வேண்டாம் எனத் தோன்றியது. பின்னர் இருவரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். அய்யாவு தன் வாழ்நாளில் சோற்றைப் பார்க்காதது போல் சாப்பிட்டார். அவரது முகம் புதிதாக பிறந்த குழந்தையைப் போல் பிரகாசமாக இருந்தது. சாப்பிட்டு முடித்த பின்னர் இருவரும் திண்ணையில் உட்கார்ந்து பீடி பிடித்தனர்.

“இனி ஒண்ணும் செய்யாது மாப்புள.. எமன் வந்து என்ன செய்ய போறான். களவாணி பய டாக்ட்ரு.. ஒழுங்கா பள்ளி கூடம் போகல போல.. நாளைக்கு வரப்ப ரெண்டு பொட்டலம் பிடிச்சுக்கு வாப்பா.. அடிச்சு ரொம்ப நாளாச்சு”

“அதுக்கெண்ண.. உன் தங்கச்சி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மோனையா குழம்பு வச்சிபுட்டா..”

அய்யாவு தொண்டை கனக்க சிரித்தார். பின்னர் இன்னொரு பீடியை எடுத்து பற்ற வைத்து கொண்டே பின்னால் சிறுநீர் கழிக்க போனார். இவர் போகும் போதே முத்தையா போதையில் திண்ணையில் சாய்ந்து விட்டான்.. அய்யாவு தனக்கு தோண்டப்பட்ட சவ குழிக்கு அருகே நக்கலாக போய் நின்று வட்டம் போட்டு சிறு நீர் கழித்தார். பின்னர் திடீரென நெஞ்சை பிடித்து கொண்டு வாந்தி எடுத்தார். குழிக்குள் வாந்தி எடுத்து கொண்டே நிதானம் இல்லாமல் அதனுள் விழுந்த அவரின் மூச்சு அப்படியே நின்று போனது. வானில் இடி முழக்கம் இன்னும் கோரமாகக் கேட்டது. சட சடவென மழை துளிகள் விழ கரையோரம் இருந்த மண் திட்டைகள் மெல்ல கரைந்து குழிக்குள் போனது. முத்தையாவின் முகத்தில் ஈ மொய்ப்பது கூட அறியாது அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தான்.

***

சிபி சரவணன் –தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணி புரிகிறார். அஞர், எச்சிலை என்ற இரு நூல்களை எழுதி உள்ளார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.மின்னஞ்சல்: sibikannan555@gmail.com

சுடரேகிச் சுடர்க!

0

ந. சிவநேசன்

சேலம் வந்து சேர இன்னும் ஒரு மணிநேரம் இருந்தபோது அவன் வழக்கம்போல எதிர்பட்டான். ஒரு வாரத்துக்கு முன்புதான் அறிமுகம். என் இருக்கைக்கு அருகிலிருந்தவர் இறங்கிக் கொண்டதும் அந்த இடத்தில் ஆக்கிரமித்துக் கொண்டவன் சிரித்ததிலிருந்து தொடங்கியது. நன்றாக யோசித்துப் பார்த்தாலும் எது அவனுடனான முதல் உரையாடல் எனப் புலப்படவில்லை. கொஞ்ச நாட்களிலேயே நிறைய பேசிவிட்டதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். 

இன்று எதிரிருக்கை காலியாக இருந்ததில் அங்கு அமர்ந்து கொண்டு புன்னகைத்தான். அலுவலகம் சென்று வரத் தோதான நேரத்தில் இரயில் அமைந்து கொண்டது பெரிய வரம். இந்த ஒன்றரை மணி நேரப் பயணத்தில் அதிகம் போனை சொடுக்கிக் கொண்டே இருக்க முடியாதெனத் தேடினால் பெரிதாக உரையாடாமல் எல்லோருமே மௌனம் பழகியிருந்தார்கள். காரணமின்றிப் பேசிப் புன்னகைத்தது பண்டைய காலம் போல மாறி விட்டிருந்தது. 

நீண்ட நேரமாக வெளியே நகர்ந்து கொண்டிருந்த தென்னந்தோப்புகளைப் பார்த்துக் கொண்டே வந்தவன் சட்டெனத் திரும்பி ‘நீங்கள் மரணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்டான்.

என்னால் அந்தக் கேள்வியை உடனடியாக எதிர்கொள்ள முடியவில்லை. ஒருவாறாக சிரித்துக் கொண்டே எனக்குத் தெரிந்த தத்துவ வியாக்கியானங்களை அதற்குள்ளாகவே அலசி ‘அது தவிர்க்க முடியாத ஒன்று’ என்றேன். 

‘அதை ஏன் முதலில் தவிர்க்க வேண்டும்? அவ்வளவு கொடியதா என்ன?’ அவன் அடுத்த கேள்வியைக் கேட்டதும் நான் பார்வையைத் தவிர்க்க சன்னலை நோக்கினேன். ரயில் காவிரியின் பாலத்தின்மீது கடந்து கொண்டிருந்தது. நான் சட்டென சன்னலை உதாரணமாக்க நினைத்தேன்.

‘இந்த சன்னலின் கம்பிகளைப் பார்ப்பதும் அதற்கு வெளியே விரிகிற காட்சிகளைப் பார்ப்பதும் நேரத்துக்குத் தகுந்தவாறு மாறுகிற மனதின் விசித்திரங்களில் ஒன்று. மரணம் இந்தச் சன்னலின் கம்பியைப் போல. நாம் ஏன் அதனைத் தாண்டி விரிகிற வாழ்வில் கவனத்தை வைக்கக் கூடாது?’

அவன் எதுவோ சொல்ல வாயெடுத்து அமைதியானான். உண்மையில் அவன் பயணிக்கிற இந்த நாற்பது நிமிடங்கள் தான் அவனுடனான நட்பு எனக்கு. இந்த நாற்பது நிமிடங்கள் அவன் இல்லாதபோதும் சுவாரஸ்யமாகத் தான் நகரும். இருமருங்கிலும் விவசாய நிலங்களின் பசுமையும் நடுநடுவே தென்படும் சிற்றாறுகளும் மாத சம்பளக்காரனின் முதல் தேதியைப் போல இதமளிப்பவை.

தர்க்கரீதியான, எந்நேரமும் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தே தீரவேண்டுமென வாதம் செய்கிற நண்பர்களை எனக்கு அவ்வளவாக பிடிக்காது. அவர்களது கேள்விகளுக்கு விடைகள் தெரிந்திருப்பினும் கூட நான் பேச்சைத் தொடர்கிற சுவாரஸ்யமற்று எதுவும் விடை கூறாமல் இருந்துவிடுவேன். அவர்கள் அதே கேள்வியை அல்லது அதே கேள்வியை வேறு தொனியில் இரண்டு மூன்று முறைக் கேட்டுவிட்டு பிறகு அடிபட்ட முகத்தோடு சமாதானத்துக்கு வருவார்கள். சமாதானம் என்றால் ஒரு டீ இரண்டு வடை அல்லது ஒரு சிகரெட். சமயங்களில் இரயிலை விட்டு இறங்கியதும் ஸ்டேஷன் வாசலில் அசைவ உணவு. அதையும் தாண்டி இரவு மது அருந்தலாமா எனக் கேட்பவர்களும் ஓரிருவர் இருக்கிறார்கள். 

எனக்கு அப்போதெல்லாம் நீ இப்போது தான் என் வழிக்கு வந்திருக்கிறாய் எனப் பெருமையாக இருக்கும். எத்தனை பெரிய சிந்தனையையும் முடக்கித் தேவைகளுக்காக அடகு வைக்கும் அவர்களது தடுமாறுகிற இந்தநிலை தான் சுயம் என்பதாகத் தோன்றும். அப்படியானவர்களின் வரிசையில் தான் இவனையும் சேர்க்க நினைத்திருந்தேன். இவன் நாமக்கலில் ஏறி சேலத்தில் என்னுடன் இறங்குவான். பெரிய சிநேகமெல்லாம் ஆரம்பத்தில் இல்லை. ஒவ்வொரு முறையும் அவனே வலிய வந்து பேச்சைத் தொடங்குவான். 

முதன்முதலில் ‘இந்த ரயில் தேவையிலிருந்து புறப்பட்டு எல்லோரது வாசல் வரை செல்கிறது இல்லையா சார்?’ என்றபோது நான் கொஞ்சம் யோசித்தேன். 

‘ஆமா. எல்லாமே அவசரக் கோலம் தான். ஓடிக்கிட்டே இருக்கோம். ஆனா வாசல் மட்டுமில்லையே? அதைத் தாண்டி பிள்ளைகளின் வாழ்வு, எதிர்காலம் குறித்த பயம் எல்லாம் இருக்கிறதே’ என்றேன்.

அதற்கு அவன் எதுவும் பேசவில்லை. எதுவும் பேசாதது பதிலில்லை என்பதால் அல்ல.‌ அது எனது அறியாமையை தெளிய வைக்க முயற்சிக்காத ஒரு அலட்சியம் என்பது போல அவன் பார்வை இருந்தது. 

‘உன்னைப் பொருத்தவரை அதிக வலியைத் தருவது மரணமா அல்லது தொலைந்துப் போதலா?’

அடுத்த நாளிலிருந்து அவன் சட்டென ஒருமைக்குத் தாவியது எனக்குள் சிறு அதிர்ச்சியை உண்டுபண்ணியது. இருந்தாலும் அக்கேள்வியின் தாக்கத்தில் அந்தத் தொனி குறித்து அவ்வளவாக கவலை கொள்ளவில்லை. 

‘தொலைந்து போதல் என்கிற ஒன்று அறியாமல் நடந்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குடும்பம் குட்டி என்றிருப்பதை விடுத்து, அதாவது குடும்பம் என்ற அமைப்பை ஏற்றுக்கொண்டு அதிலிருக்கிற லாபத்தை மட்டும் அனுபவித்துவிட்டு, நாளடைவில் சலிப்பேறியதாகச் சொல்லி பரதேசி என்கிற போர்வையில் வேண்டுமென்றே காணாமல் போகிறவர்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள்’ 

என்னிடமிருந்து இப்படியொரு காட்டமான பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டான் என்கிற எண்ணத்தோடு அவனை உற்று கவனித்தேன். ஆனால் பெரிதாக முகத்தில் எந்த மாறுதலும் இல்லாதது ஆச்சரியத்தைத் தந்தது. 

‘ஒரு கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாகத்தான் வெளியேறியாக வேண்டுமென ஏதேனும் நியதியிருக்கிறதா? அதற்கு கூட்டுப்புழுவாக இருக்கையிலேயே வெளியேறி விடுகின்றத் தேவை இருக்கிறதென்றால் வெளியேறி விட வேண்டியதுதானே? அவ்வுயிருக்கென சுய பச்சாதாபங்கள் ஏதும் இருக்கவே கூடாதா? தியாகம் என்று சொன்னாலும் மனதுக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் வரை அது நிச்சயம் ஏதோவொரு வகையில் யோக்கியதன்மையை பாதிக்கிறது இல்லையா?’

மிக நிதானமான அக்கேள்வி கொஞ்சம் யோசிக்கச் செய்தது. ஆனால் சிகாமணி எதிரில் நின்றிருந்த நபர்களுக்கு நடுவே தலையை நீட்டியதும் அந்த நிதானத்தை சலனம் அசைத்தது. இப்போது என்ன பதில் சொல்லப் போகிறாய் என கூட்டத்தின் நடுவே அவர் நின்று சிரித்தது ஆத்திரத்தை உண்டு பண்ணியது. உடனே சூடு வைத்தாக வேண்டிய அவசரம் வந்து தொற்றிக் கொண்டது.

‘கூட்டுப்புழு எக்கேடோ கெட்டுப் போகட்டும் சார். அது எங்கே போனால் நமக்கென்ன கவலை? இனப்பெருக்கம் செய்கிற நோக்கத்தில் வதவதவென முட்டைகளைப் பெருக்கத் தெரிந்துவிட்டு அம்போவென காணாமல் போவதையா இயற்கை கற்றுத் தந்திருக்கிறது? ஆத்திரத்தைக் கிளப்பாதீர்கள் சார்’ 

 சிகாமணி இப்போது வாயை மூடிக்கொண்டு வெறிச்சென நிற்பதைப் பார்க்க சற்று ஆறுதலாக இருந்தது. 

‘நீங்களெல்லாம் மேலை நாட்டினரைப் பார்த்து இன்னும் நிறைய கற்க வேண்டும்’ என்றபடி அவன் தன் கழுத்துப்பட்டையைச் சரி செய்தான். 

இந்தமுறையும் நீங்கள் என்பது ஒருமை தான் என்பது புரியாமலில்லை. அவன் என்னைப் போன்ற கருத்தொருமித்தவர்களைச் சேர்த்து நீங்கள் என்கிறான். 

அலுவலகம் சென்றபிறகு இது குறித்து சகப் பணியாளன் நளனிடம் சொன்னேன். 

‘இப்படியாபட்ட பைத்தியங்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே போய் நீ வேறு ஸ்டேஷனில் இறங்கப் போகிறாய். அது மட்டும் நன்றாகப் புரிகிறது’ எனச் சிரித்தான். 

‘இது மாதிரியான சித்தாந்தங்களை கேட்கவெல்லாம் உனக்கு நேரமிருக்கிறதா? எனக்கு சீட்டுப் பணம் கட்டுவது குறித்தும், அடுத்த மாதம் இடம் வாங்கி வீடு கட்டுவது குறித்தும் யோசிக்கவே நேரம் போதவில்லை’ என்றான். 

அவன் சொன்னதும் தான் உரைத்தது. ரயிலில் பயணிக்கிற யாவரும் அவனை ஒரு பொருட்டாக மதித்ததாகவே தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவனது இருப்பு குறித்தும் ஒருவரும் அலட்டிக் கொள்ளவில்லை. இப்படியான நபர்களிடம் பேசுவதற்கான தொடர்பை நான் எப்படி எப்போது ஏற்படுத்திக் கொண்டேன்? 

சொல்லப்போனால் விதி, ஜாதகம் குறித்து கூட பெரிதான ஈர்ப்பில்லை. இறை நம்பிக்கை பற்றியும் வனிதாவிடம் தர்க்கம் செய்வேன். குறிப்பாக குழந்தை மரணங்களை முன்வைத்து அவளது வாதத்தை முடித்து வைப்பதில் அப்படியொரு நிம்மதி. ஆயினும் ஒரு கஷ்டம் என வரும்போது மீண்டும் ஓடி வந்து பாதங்களில் சரணடைந்து மன்னிக்கக் கோருகிற சராசரியான ஆத்திகனிடம் எதற்கு வாழ்வு குறித்த தர்க்கப்பாடுகள் வெளிப்படுகின்றன. அதிலும் இதற்கு முந்தைய நாட்களில் உறங்கிக் கொண்டே செல்கிற நேரத்தை இவனுக்காக செலவிடுகிறேன். 

ஆச்சரியமாக அவனது பெயரைப் பற்றி பலமுறைக் கேட்டபோதும் அவன் அதனைச் சொல்லாமல் மழுப்பிக் கொண்டே இருக்கிறான். ஓரிரு முறை கேட்டபிறகு வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லையெனில் அசௌகரியமாக உணர்கிறவர்களைப் போல நான் அதன்பிறகு கேட்பதை விட்டுவிட்டேன்.

‘பெயரில் என்ன இருக்கிறது? நீங்கள் சொல்வது போல் நம் குடும்பத்துக்கு நாம் யார் என்கிற அடையாளத்தில் தானே எல்லாம் இருக்கிறது?’ 

சீண்டுகிறான். சிகாமணி மீண்டும் எதிர் திசையில் ஆயில் அழுக்கோடு நின்றவாறு தன்னை காட்டிக் கொண்டார். 

‘நான் முன்பு சொன்னதையே தான் இப்போதும் சொல்கிறேன். பிரம்மச்சாரிகளின் தொலைதல் குறித்து எந்த மாற்றுக்கருத்தும் எனக்கில்லை. குடும்பமென்று அமைந்தபிறகு அதனைக் காப்பதை விட வேறென்ன அடையாளம் மனிதனுக்கு வேண்டியிருக்கிறது? இன்னும் சில வெட்கம் கெட்டவர்கள் இருக்கிறார்கள். மனைவி பிறகு பிள்ளைகளின் உழைப்பாலேயே சோறு தின்று உயிர் வளர்த்து பிறகொருநாள் போய் சேர்கிறவர்கள்’ நானும் சீண்டும் நோக்கத்துடன் பேசினேன். பிறகு இவ்வளவு வசையான சொற்கள் ஏன் என்னிடமிருந்து வெளிப்படுகின்றன? இவனாகவே பிடுங்குகிறானோ என்ற ஐயம் பலமுறை எழுந்ததைப் போல இப்போதும் தோன்றியது.

அவன் பெயரைத் தவிர மீதி விஷயங்களை என்னால் வாங்க முடிந்தது. 

நாமக்கலில் உள்ள நூற்பாலை ஒன்றில் தலைமை மெக்கானிக்காக பணிபுரிவதாகச் சொன்னான். ஆயில் கசிகிற, அழுக்கடைந்த உடைகளைக் கவனமாக வேறொரு பையில் தினமும் எடுத்துவந்துப் போகிற வழக்கம் கொண்டவன். எப்போதாவது தலைக்கு சாயம் இடுவானாயிருக்கும். கருமயிர் கொத்துக்கால்களில் வெண்மை முளைத்திருந்தது. நான்காம் வகுப்பு பயில்கிற ஒரே ஒரு மகன் இருக்கிறானாம். மனைவி வீட்டை நிர்வகிப்பவள்.

‘உங்களுக்கு ஊதியம் எவ்வளவு தருகிறார்கள்?’ 

‘மீண்டும் தவறான சொற்பிரயோகம். அவர்கள் என்னத் தருவது? ஒரு நாளைக்கு அருநூறு ரூபாயை நான் ஊதியமாகப் பெறுகிறேன்’ 

நான் சிரித்துக் கொண்டேன். அதை அவனும் உணர்ந்தது போல கூர்ந்து பார்த்தான்.

நான் இந்த ஒரு வார காலத்து நிகழ்வையும் அம்மாவிடம் சொன்னேன். அவளுக்கும் சிகாமணி தந்தையாயிருந்து சிகாமணி ஆன விஷயம் பிடிக்காது‌. ஆனபோதும் இப்போதெல்லாம் அவள் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. அவரை யாரிடமும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை உடையவள். அவர் எங்கே போனார் என்கிற விவரம் ஒரு செல்லரித்த நூலாய் பரணின் மீது கிடந்தது. ஆனால் அவள் விசேஷ நாட்களில் பூ வைத்துக் கொள்வதன் மூலம் அவர் உயிரோடிருக்கிறார் என்பதை எல்லோரிடமும் உணர்த்துகிறாள்.

அந்த நேரத்தில் விவரம் தெரியாதவர்கள் திரும்ப வந்துட்டாரா எனக் கேட்டிருக்கிறார்கள். 

‘ம்.. பெங்களூருல நண்பர் வீட்டுல தங்கி வேலை பாத்துட்டு இருக்காரே. பணம்லாம் அனுப்புவார்’ என்பாள் பாவனை மாறாமல். 

விதவைப் பெண்களை வைத்து அம்மை நோய் வந்தக் குழந்தைகளுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றும் வழக்கம் எங்கள் பக்கம் இன்னமும் உண்டு. ஏழு அல்லது ஒன்பது நாட்களில் அதைச் செய்வார்கள். ஒருமுறை உறவுக்காரப் பெண் தன் குழந்தைக்கு தண்ணீர் ஊற்ற அம்மாவை ஜாடையாக அழைத்தபோது செல்ல மறுத்துவிட்டாள்.

அப்பெண் நகர்ந்தப்பிறகும் நீண்ட நேரம் அமைதி. ‘அவர் செத்துட்டாருனே எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்களா?’ என எங்கள் முகங்களைப் பார்த்துக் கேட்கையில் நாங்கள் தலை குனிந்து கொண்டோம். அவ்வப்போது நடக்கிற சின்னச் சின்ன விபத்துகள், பணப் பிரச்சினைகள் குறித்து நளனிடம் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தேன். 

‘உங்க அப்பா வீட்டை விட்டுப் போய் எத்தனை வருஷம் ஆகுது?’

‘வர்ற மார்ச் வந்தா முழுசா இருபது வருஷம் முடியுது. அப்போ எனக்கு பதினேழு வயசு’ 

‘நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. பவானி, கொடுமுடி பக்கம் ஒருநாள் வீடு வாசல்லாம் கழுவிட்டு போய்ட்டு வா. அம்மாவ சும்மா கோயிலுக்குப் போகலாம்னு அழைச்சிட்டுப் போ. ஆத்தங்கரைல வச்சி அவருக்கு ஒரு காரியம் பண்ணி திதி கொடுத்துடு. அதான் குடும்பத்துக்கு நல்லது’ 

அவன் சொன்னது சரியாகப்பட்டபோதும் அவருக்காக நான் போய் காரியம் செய்வதை வெறுத்தேன். ஆனால் இதுகுறித்த எனது வெறுப்பும் அம்மாவுடைய வெறுப்பும் வேறுவேறாக இருந்தது. அம்மா அவர் இறந்துவிட்டதை மறுப்பதில் உறுதியாக இருந்ததால் கோயிலுக்கு வர மறுத்தாள். ஆனால் நான் அப்படியில்லை. அவர் குறித்த எதுவுமே ஒரு மறைக்கவியலா எரிச்சலை உண்டு பண்ணியது. கோயிலுக்குச் சென்றபோதும் அரைகுறை மனதோடு சடங்குகளைச் செய்ய மறுத்து நான் விலகி நின்றதை வனிதா புரிந்து கொண்டாள். எனக்கு பதிலாக அமர்ந்த என் மகனோடு அக்காவின் குடும்பமும் பங்கெடுத்தது. அம்மா கோயிலுக்கு வரவும் மறுத்து வீட்டிலிருந்தாள். நாங்கள் வீடு திரும்பி மூன்று நாட்கள் வரை அவள் எங்களிடம் பேசவில்லை. 

‘அம்மாவ விடுங்க. உங்க அப்பா இத்தனை வருஷம் வரைக்கும் உயிரோட இருப்பார்னு எப்படி நம்புறது? நாம காரியம் பண்ணது நல்லது தான்’ என வனிதா சமாதானம் செய்தாள்.

‘அப்படியே உயிரோட இருந்துருந்தா உங்க மேலலாம் கொஞ்சம் கூட பாசம் இல்லாமலா போயிருக்கும்? இத்தனை வருஷத்துல திரும்பி வந்துருப்பார்ல’ 

என்று அவள் தொடர்ந்து சொன்னபோது தான் அவர் மீது இன்னும் ஆத்திரம் உண்டானது. சிந்தனையில் உயிரோடிருக்கும் போதெல்லாம் அவர் வெறும் சிகாமணியாகவும், இறந்துவிட்டதாகத் நினைக்கும் போது அப்பாவாகவும் தோன்றத் தொடங்கியது அன்றிலிருந்து தான். 

அம்மா அவர் பற்றிய எந்த ஏக்கங்களையும் வெளிக்காட்டாமல் இருப்பதில் கவனமாக இருந்தாள். அவருக்கு சிறுவயதிலிருந்தே சாதுக்களுடன் நிறைய நட்புண்டு. காசி, கேதார்நாத் என திருநீறு கமழ சுற்றி வருவார். நான் சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே இல்லற சுகத்திலிருந்து விடுபடுவது குறித்து அவ்வப்போது பேச்சினூடாக தொட்டுச் செல்வார்.

‘இந்த வாழ்க்கை எதுக்கானதுனு நினைக்கிற? மத்தவங்களுக்கு உதவுறதா? கல்யாணம் பண்ணிட்டு குழந்தைங்க பெத்துக்கறதா? பொழுது இறங்குனதும் எங்க இருந்தாலும் குடுகுடுனு ஓடிவந்து வீட்டுக்குள்ள புகுந்துக்குறதா? எல்லாருக்கும் எல்லாமும் செஞ்சிட்டு எல்லாருக்காகவும் என்னை தியாகம் பண்ணிட்டனேனு புலம்பிக்கிட்டே கண்ண மூடுறதா? இதெல்லாம் வாழ்க்கை இல்ல’

நான் வேறு எது என்பது போல நிமிர்ந்து பார்த்தேன். 

‘இந்த நிலம் தான் வாழ்க்கை. இந்த மக்கள கூர்ந்து கவனிக்கிறது தான் வாழ்க்கை. ஒரே ஒரு தடவ பொறக்குறோம்.. மத்த உசுருங்கள விட தெளிவான சிந்தனையோட பொறக்குறோம். அந்த சிந்தனைய வச்சி பொறந்த இடத்தை இரசிக்கணும். மனுசங்க, அவங்க உணவு, அவங்க பழக்க வழக்கம் எல்லாத்தையும் நேரடியா போய் பாத்துட்டு வரணும். உலகம் முழுக்க சுத்த ஆயுசு போதாது. முடிஞ்ச வரைக்கும் உள்நாட்டுலயாவது பயணம் போகணும். ஒரு இடத்துல பொறந்து அதே இடத்துல கண்ண மூடுறதுல எனக்கு விருப்பமே இல்ல’ 

நான் எதிர்கேள்வி கேட்க பயந்து அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால் அக்கா அப்படியில்லை. 

‘அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? எங்களைலாம் பெத்துக்கிட்டீங்க.. இதெல்லாம் பண்ணாம எங்க வேணாலும் சுத்த வேண்டியது தானே?’ 

சிகாமணி அதற்குக் கோபப்படவில்லை. ரொம்பவும் நிதானமாகப் பேசினார். அம்மா அன்று இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அரிசி களைந்து கொண்டிருந்தாள். அன்றாடம் அவள் படுக்கையறையில் இவற்றைக் கேட்டதால் வந்த சலிப்பாகக் கூட இருக்கக்கூடும். ஆனால் முழுதாக விட்டுவிட்டுப் போவார் என்றெல்லாம் அவள் அப்போது நம்பியிருக்கவில்லை. 

‘அதுதான் நான் பண்ண பெரிய தப்பு. கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது. உங்களையும் பெத்துருக்கக் கூடாது. இப்பதானே அறிவு வருது?’ 

எங்கள் முகம் வாடக்கூடாதென சில சொற்களை அவர் சேர்த்துக் கொண்டார்.

‘ஒண்ணும் பிரச்சினையில்ல. கருமத்தாம்பட்டியில பூர்வீக நிலம் கேஸுல இருக்கு. அது சாதகம் ஆனதும் உங்க எல்லாரையும் சேர்த்தே பயணத்துக்கு கூட்டிட்டுப் போறேன். அப்படிலாம் யாரையும் அம்போனு விடமாட்டேன்’ எனச் சிரித்தது எங்களைக் கொஞ்சம் சமாதானமடையச் செய்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவர் பரதேசம் செல்கிற முனைப்பிலிருப்பதற்கான அறிகுறிகளை நாங்கள் உணர்ந்தோம். ஆயினும் எங்கே அசட்டையாக விட்டோமென இப்போது யோசித்தால் தெரியவில்லை. சட்டென ஒரு ஐப்பசி மாத பௌர்ணமி இரவில் காணாமல் போயிருந்தார். காணாமல் போயிருந்தார் என்பதைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியாதபடி நீண்டிருந்த அதன் பிறகான நாட்கள் அம்மா மீது சுமையாக அழுந்தியதில் அவள் முதலில் கவலையுற்றுப் புலம்பியபடியே இருந்தபோதும் வருமானம் வரத் தோதான சிறுதொழில்களில் இறங்கியபிறகு பெரும்பதட்டத்திலிருந்து முதலில் வெளியே வந்து எங்களையும் கை கொடுத்துத் தூக்கிவிட்டாள். 

ஏதேனுமொரு விசேஷ நாளில் திரும்பிவருவாரென்ற எங்கள் நம்பிக்கைகள் அதன்பிறகு காணாமல் போயின. எதேச்சையாக கோயில்களுக்குச் செல்கிறபோதும் பரதேசிகளின் பக்கம் அனிச்சையாக பார்வை திரும்பியது. நெருங்கிய வட்டாரங்கள் தங்கள் உறவுகளிடம் எங்களை அறிமுகப்படுத்தும்போது சிகாமணிக்கு நாங்கள் இன்னாரென குறிப்புணர்த்திய வாயோடு பின்னொட்டாக உணர்த்தவிருக்கிற சொற்கள் முதுகுக்குப் பின்னாலிருந்து எங்களை ஜாடையாக அழைக்கத் தொடங்கின. அப்போதிருந்து சிகாமணி அப்பா என்கிற நிலையிலிருந்து நழுவி வெறும் சிகாமணியாக எனக்குத் தோன்றத் தொடங்கினார். 

வனிதாவிடம் சிகாமணி இரயிலில் தோன்றியது குறித்துச் சொன்னேன். ஏதேனும் பிரமையாயிருக்கும் என்றாள். அது வெறும் பிரமையென்று எனக்கும் தெரியும். இப்போதெதற்கு காரணமின்றி அப்பிரமை என்னைச் சூழ வேண்டுமென்பதே என் கேள்வியாக இருந்தது. 

அவன் வழக்கத்துக்கு மாறாக இன்று இரயிலில் எனக்கு முன்பாக ஏறிக் காத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவனைப் பார்த்துப் புன்னகைத்தபடி அருகில் நெருங்கியதும் அக்கேள்வியைக் கேட்பானென எதிர்பார்க்கவில்லை. 

‘அப்புறம் சிகாமணி விஷயத்தில் என்ன முடிவு எடுத்திருக்கிறாய்?’ 

குடும்ப விஷயங்களைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் பேசுவது பற்றிய அசூயை சட்டென என்னைச் சூழ்ந்தாலும் எனது பாரம்பரியம் குறித்தத் தகவல்கள் அவனுக்குத் தெரிந்தது மேலும் அவன் மீதான இரகசியத்தன்மையை அதிகரிக்கச் செய்தது. இருப்பினும் எங்கேயாவது அவர் உயிரோடிருப்பதற்கான சாத்தியங்களை அவனது கேள்வி மீண்டும் உயிர்ப்பித்ததில் ஆர்வமடைந்தேன். 

‘உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்?’ எனக் கேட்டதற்கு அவன் பதில் சொல்லவில்லை. 

‘நான் ஏற்கனவே கேட்டது தான். உன்னைப் பொருத்தவரை அதிக வலியைத் தரக்கூடியது மரணமா அல்லது தொலைந்து போதலா?’ 

இந்தமுறை அக்கேள்வியில் நான் தடுமாறினேன். சிகாமணி எங்கேயாவது வாழ்வது தெரிந்தால் இழுத்து வந்து நிறுத்தி நான்கு கேள்விகள் சூடாகக் கேட்டுவிட்டு கைபிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்று விடவேண்டும்.

தொலைந்து விடுபவர்களைப் பற்றி மீண்டும் வசை பாடினால் அவர் இருக்கிற இடத்தைச் சொல்லாமல் மறைத்து விடுவானென்கிற அபத்தமான அச்சம் உள்ளுக்குள் எழுந்ததை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். வாய் தன்னிச்சையாக மரணம் தான் என முனகியது. 

‘நல்லது’ என்றான். பிறகு நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. 

அலுவலகத்தில் இது குறித்து நளனிடம் கூறினேன். ‘இதெல்லாம் அவ்வளவு பெரிய ஆச்சரியமில்லை. நீ ஏற்கனவே உன் தந்தை காணாமல் போனது குறித்து அலுவலகத்தில் எக்கச்சக்கமாகப் புலம்பியிருக்கிறாய். தேநீர் கடைக்காரன் வரை உன் வரலாறு தெரியும். அவனுக்குத் தெரிந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?’ 

‘அப்படிப் பார்த்தாலுமே பொருத்தம் இல்லையே.. அவன் அறிமுகமாகி ஒரு வாரம் பத்து நாட்கள் தான் இருக்கும். பார்க்க நம்மைப் போலிருந்தாலும் பேச்செல்லாம் சித்தன் போலிருப்பதால் தான் அவனது சொற்கள் குறித்து யோசனையாக இருக்கிறது?’

‘உனது முகநூலில் அல்லது வலைதளத்தில் கூட நீ எழுதிய சுயபுராணத்தை அவன் படித்திருக்கலாம். இந்த காலத்தில் சர்வ சாதாரணமாக நான்கையும் ஏழையும் முடிச்சிட்டு பதினொன்று எனச் சொல்லிவிட முடியாதா?’

சித்தன் முகநூலெல்லாம் பயன்படுத்துவானா என்கிற எண்ணத்துக்கு நான் தாவியிருந்தேன்.

‘சிந்தையுடைத் திறப்பின் மந்தகதி அகல.. 

இத்திருமேனி தணல் சூழ நொந்தழியுமேகில் 

அந்தமொடுச் சுடரேகி.. 

எண்ணமெலாம் பற்றேவல் விதியேறி.. 

குற்றமகலக் குற்றமகல வருமுந்தன் நிழலொத்தே இப்பிறப்பு..’ 

சந்தேகமில்லை. சித்தன்தான். இன்னும் என்னென்னவோ பாடினான். நான் முடிக்கட்டுமென அமைதியாயிருந்தேன்.

‘மனித மனம் போல கெட்டழிகிற ஒன்று வேறெதுவுமில்லை. கெட்டழிந்த பின்பு அதை சரி செய்ய வேண்டி பரதேசம் செல்கிறவர்களை திட்டி என்ன ஆகப்போகிறது. அப்படியே கெட்டழிகிற மனதோடு அவர்களை குடும்பத்துக்குள் விட்டு வைத்தாலும் அது நலமென்றுக் கருதுகிறாயா? சுயநலமாகவே இருப்பினும் அதைத் திறந்து உடைத்து விலகிக் கொள்வது தானே நல்லது? கூடவே இருந்து மனம் ஒரு பக்கமும் உடல் ஒருபக்கமும் இழுக்க வாழ்ந்தழிவது நல்ல வாழ்வுக்கு உகந்ததா? 

அதனால் தான் சிகாமணி உங்களை விட்டுப் போய்விட்டார். இப்போதும் அவர் மீது கோபமாகத் தான் இருக்கிறாயா?’ 

என்னால் அக்கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் என் காதில் அவன் பாடிய குற்றமகல என்ற சொல் மட்டும் விடாப்பிடியாக ஒலித்துக் கொண்டே இருந்தது. 

‘மரணத்தருவாயில் அவர் நிச்சயம் உங்களை நினைத்துக் கலங்கியிருப்பார். ஒரேயொரு மன்னிப்புக்காக அவர் ஆன்மா ஏங்கியிருக்கலாம் என்பது குறித்து ஏதாவது யோசனை இருக்கிறதா?’ 

இதற்குமேலும் அவர் மரணித்துவிட்டார் என உனக்கெப்படித் தெரியும் எனக் கேட்பது அபத்தமாகத் தோன்றியது. மேலும் அவன் சொல்வதை மட்டுமே கேட்கப் பணிக்கப்பட்டிருக்கும் சீடனாக நான் அங்கு அமர்ந்திருந்தேன். அவன் பேசிக்கொண்டே போனது எதுவும் காதில் விழவில்லை. நிமிர்ந்து கூட்டத்தில் தென்பட்ட முகங்களைத் தேடினேன். அப்பா எங்கேயும் தென்படவேயில்லை என்பது மனதை அழுத்தியது. ரயில் அடுத்த ஸ்டேஷனைத் தொட்டிருந்தது. அதற்கு முன்பாகவே அவன் பேச்சை நிறுத்தியிருந்தான். என்னை யோசிக்க விடவேண்டுமென்பதற்காகவே அமைதியாக இருந்தது போலிருந்தது. 

நான் வீட்டுக்கு வந்தும் யாரிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கை கால் முகம் அலம்பி உடை மாற்றி அம்மாவின் அறைக்குச் சென்றேன். அவள் தொலைக்காட்சியில் ஒலிக்கிற ஏதோவொரு பாடலைக் கேட்டபடியே கீரை பறித்துக் கொண்டிருந்தாள். நான் வந்து நிற்பதைப் பார்த்து ஆச்சரியமாக ஏனென்பது போல முகம் காட்டினாள். மீண்டும் ‘என்னடா ஆச்சு?’ என்றபோது நான் எதுவும் பேசாமல் சுவரில் மாட்டப்பட்டிருந்த அப்பாவின் படத்தைப் பார்த்தேன். அந்தப் படம் பூக்கள், விளக்கின்றி இருந்தது. 

அப்பா பற்றிய எனது வசைகள் அவளுக்கு நினைவில் வந்திருக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தைக் கூட பலமுறை நான் அங்கிருந்து அகற்றி பரணில் போட்டிருக்கிறேன். ஆனால் இரண்டொரு நாட்கள் கழித்து அம்மா மீண்டும் அதையெடுத்து பழையபடி மாட்டிக் கொள்வாள். அப்பாவின் வாழ்வு குறித்து அவளும் நிறைய யோசித்து சலிப்பேறிப் போய் இனி யோசிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கக் கூடும் எனத் தோன்றியது. காத்திருத்தலின் சலிப்பு. என்னைப் போலவே அவளும் அப்படத்தைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் வேலையைத் தொடர்ந்தாள்.

‘நான் அப்பாவின் படத்துக்கு விளக்கேற்றலாம் என நினைக்கிறேன்’

நான் சொன்னதற்கு அவள் எந்தச் சலனத்தையும் காட்டவில்லை. நான் சற்றுக் காத்திருந்துவிட்டுத் திரும்பி நடந்தபோது ‘கடையில திரியும், பசு நெய்யும் வாங்கிட்டு வா’ என்றாள். 

***

 ந.சிவநேசன் – சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூர். பள்ளி ஆசிரியர். விவசாயத்திலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம். கவிதைகள் காலச்சுவடு, அகழ், நீலம், புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், குமுதம் தீராநதி, கணையாழி,  கல்வெட்டு, தகவு, நுட்பம், கீற்று, சொல்வனம்  போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும் பல்வேறு இணைய, இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். தெற்கு ஜன்னல் சிறுகதை தொகுப்பு நூல். கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல், ஞௌ போல வாழ்பவர்கள் ஆகியவை கவிதை நூல்கள். மின்னஞ்சல் : nsivanesan1988@gmail.com

தூஸ்ரா

0

பாலு

தொடக்க ஆட்டக்காரனாகக் களமிறங்கி பளபளப்பான புதுப் பந்தை அடித்து வெளுத்து சிதைக்க வேண்டும் என்பதே கோபாலுக்குப் பெரும் கனவாய் இருந்தது. ஆரம்ப ஆட்டத்தின் அறைகூவலைச் சந்திக்கவே அவன் விரும்பினான். இன்ஸ்விங்கையும் ஔட்ஸ்விங்கையும் கவனித்து அதற்குத் தகுந்தாற்போல் விளையாடுவதையே அவன் மனமும் உடலும் விரும்பியது. பயிற்சியாளரோ அவனை நெருக்கடியைத் தாங்கும் டெத் பேட்டராக உருவாக்க எண்ணினார். அவனின் அதிரடி ஆட்டத்துக்கு இறுதி ஓவர்களே தோதாக இருக்குமென்பதால், “நீ அன்-ஆர்த்தடக்ஸான ப்ளேயரு கோபால். பந்து கொஞ்சம் அடி வாங்கிச்சுன்னா டெத்ல நீதான்டா…” எனச் சக வீரர்களுமே ஊக்குவித்தனர். 

“நூறு பந்து போட்டா அதுல முப்பதையாவது சிக்ஸர் அடிச்சிருக்கணும். ஸ்விங்கு மயிறு மட்டையெல்லாம் எதுக்கு ஒனக்கு?” எனப் பயிற்சியாளர் கடுமையாகத் திட்டுவார் இவனை.

“அப்போ டெத்ல ரிவர்ஸ் ஸ்விங்கானா என்ன செய்ய, கோச்?” என முகம் சுளித்து முறுக்கிக்கொண்டு நிற்பான். அவர் சினமடைந்து பந்தை மட்டையை நோக்கி வீசியடிப்பார்.

“நெனவிருக்குல்ல? நாளைக்கு சேஷாத்ரி சாரை பார்க்கப் போறோம். கஷ்டப்பட்டு உனக்கு அங்கே சிபாரிசு வாங்கிருக்கேன். நீப்பாட்டுக்கு அவர்கிட்ட போய் இப்படியெல்லாம் பேசிட்டுக் கெடக்காதே” 

சேஷாத்ரி எம்சிசி வீரர்களின் ஞானப்பிதா. விளையாட்டுத்துறை மருத்துவரும்கூட. இழையோடத் தொடங்கிய நரையிலும் மைதானத்தில் அவர் கால்படாத நாளில்லை. சுழற்பந்து வீச்சாளருக்கு விளையாட வயதேது? நாற்பத்தைந்தை நெருங்கும் அவர், “என் வலதுகை விரல்களுக்கு வயசாகுற வரை விளையாடிட்டே இருப்பேன்” என்பார் இளம் வீரர்களிடம். தமிழ்நாடு ரஞ்சி அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என ஒரே சமயத்தில் இரு பெரும் பொறுப்புகளைத் தூக்கிச் சுமப்பதில் எந்த பாரமுமில்லை அவருக்கு.

செழித்து வளர்ந்த ஃபினிஷ்ஷிங் வீரனாய் மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்புக்குள் நுழைந்தான் கோபால். பயிற்சியாளர் அவனை சேஷாத்ரியிடம் அறிமுகப்படுத்தி ஒப்படைத்தார். கோபாலகிருஷ்ணன் சுவாமிநாதன் (22), அன்-ஆர்த்தடக்ஸ் இடதுகை அதிரடி பேட்டர். டாக்டர் சேஷாத்ரி பலநாட்களாய் இப்படியொரு வீரனைத் தேடிக்கொண்டிருந்தார். சம்பிரதாய அறிமுகங்கள் முடிந்ததும் கோபாலைத் தனியே அழைத்து வந்த பயிற்சியாளர் அவனிடம் சொன்னார்:

“பலருக்கு இங்கே நுழையுறது கனவு. சௌத் ஸோன் துலீப் ட்ராஃபில உன் ஆட்டத்தை சேஷாத்ரி சார் பார்த்துட்டு உன்னை மாதிரி ஒரு ப்ளேயர் வேணும்னு அவராவே கேட்டார். நம்மவருன்னு நீ சேஷாத்ரி சாரை ஈஸியாவும் எடுத்துக்க முடியாது. அவருக்கு கிரிக்கெட்தான் மூச்சு. மத்த கருமத்தைப் பத்தி அவருக்குக் கவல மயிறே இல்ல. இனி நீ அவர் பொறுப்பு. அப்டே புடிச்சு ரஞ்சி அது இதுன்னு ஆடி மேல வந்துக்கோ. ஏதோ என்னால முடிஞ்ச தூரத்துக்கு உன்னைக் கூட்டிட்டு வந்துட்டேன்” எனத் தீவிரமான பார்வையுடன் மெல்லிய குரலில் சொன்னார். 

மெட்ராஸ் க்ளப் வீரர்களுடன் பழகுவதில் கோபாலுக்குத் தாழ்வுணர்ச்சி இருந்தது. அவர்களின் ஆர்தடாக்ஸ் ஷாட்டுக்கு முன் தன்னைக் காட்டானாய் உணர்ந்தான். பயிற்சியில் அணியோடு ஐக்கியமாகாமல் தனித்து விடப்பட்ட ஆட்டைப் போல் சுற்றித் திரிந்தவனை கவனித்தார் சேஷாத்ரி.

“என்ன பிரச்சினை?”

“கவர் ட்ரைவ் ஆடுனா எட்ஜ் ஆகுது” 

“நியூ பால் ஆடுனதே இல்லையா?”

“அன்-ஆர்த்தடக்ஸ் ஹிட்டர்னு முத்திரை குத்திட்டாங்க. எனக்கு டெஸ்ட் ஆடணும். நான் நம்பர் சிக்ஸே இறங்கினாலும் எண்பது ஓவர் முடிஞ்சு நியூ பால் வந்தா அதை எதிர்கொண்டுதானே ஆகணும். என் கேமை மாத்தணும் சார்” எனப் பணிவுடன் சொன்னான் கோபால்.

“அதெல்லாம் தேவையில்லாதது. நீ ஒரு லெஃப்ட் ஹேண்ட் சீக்கா. அன்-ஆர்த்தடக்ஸா ஆடுறது ஒன்னும் கொலைக்குத்தமில்ல” எனச் சொல்லிப் புதுப்பந்தை எதிர்கொள்ளும் முறையை கோபாலுக்குக் கற்பித்தார். ஆரம்பத்தில் நிறையவே எட்ஜ் வாங்கினாலும் போகப் போக நடு மட்டையில் ஆடப் பழகினான். ஔட்ஸ்விங் ஆகும்பட்சத்தில் எம்மாதிரியான பந்துகளை விட வேண்டுமெனக் கற்பித்தார் சேஷாத்ரி. ஏற்பதைவிட விட்டொழிவதிலிருக்கிறது விளையாட்டின் ஆன்மா.

நேர்த்தியான மட்டையாளர்களைக் கொண்ட அணியை உருவாக்கி வைத்திருந்தாலும் கோபாலின் கரடுமுரடான ஆட்டமுறை சேஷாத்ரியை வெகுவாகவே கவர்ந்தது. வைதீகர்கள் கைவிடும்போது வேட்டையர்களே காப்பான்கள். இத்தனை ஆண்டு கிரிக்கெட் அனுபவத்தில் சேஷாத்ரி அதை நன்கறிந்திருந்தார். ஆகவே அவனை ஐந்தாம் எண் வீரனாய் ரஞ்சியில் களமிறக்கத் துணிந்தார். புதுவை, விதர்பா, ரயில்வே அணிகளுக்கு எதிராக முப்பது ரன்களை சராசரியாக வைத்திருந்தான் கோபால். தமிழ்நாடு அணியின் எல்லா வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டதால் ஒவ்வொருவரின் சிறு பங்களிப்பும் வெற்றிக்கு உதவியது. முன்கூட்டியே அரையிறுதியை எட்டிவிட்டதால் தயக்கத்தை உடைத்து சேஷாத்ரியிடம் போய் நின்றான் கோபால்.

“என்னை ஓப்பனிங் இறக்கிவிடுங்க சார்” 

“ஏன்? நீ ஔட்டானதும் டீமே கொலாப்ஸ் ஆகுறதுக்கா? அதெல்லாம் வேண்டாம். பின்னாடி ஆட ஆள் வேணும்”

“அதான் செமிக்கு போயிட்டோமே. இனி நடக்குற லீக் மேட்சுக்கு மட்டும் ஓபனிங் ஆடுறேன் சார். செமில நீங்க சொன்ன மாதிரியே பின்னாடி ஆடிக்கிறேன்” 

குழப்பத்தால் பீடிக்கப்பட்டவராய் முடிவெடுக்க இயலாமல் அங்குமிங்கும் நடந்தார் சேஷாத்ரி. கோபாலின் விடாப்பிடியான ஆர்வத்தால் அரை மனதோடு ஒப்புக்கொள்ளவும் செய்தார். விளையாட்டுக்குத் திறமையானவர்களைப் போலவே பிடிவாதக்காரர்களும் இன்றியமையாதவர்கள். 

“போர்க்களத்துல செத்தாலும் பரவாயில்லை. ஆனா ஜெயிச்சுட்டு செத்துடணும்னு அடம்பிடிப்பான் ஆஸ்திரேலியக்காரன். அதனாலத்தான் அவன் உலகத்துலயே நம்பர் 1 டீமா இருக்கான். இந்தியன்ஸுக்கு அந்த மைண்ட்செட் ஒத்துவராது. நம்மளுக்கு ரிசல்ட்டைவிட ப்ராக்ரஸ்தான் முக்கியம். ஆனா இங்கே டீமுக்கு ஒருத்தன் ஆஸ்திரேலியக்காரனா இருந்தாகணும். நம்ம டீம்ல கோபால் அந்த ரோலை எடுத்துப்பான்னு நம்புறேன்” என அணிச் சந்திப்பின்போது எல்லோர் முன்னிலையிலும் சேஷாத்ரி கூறினார்.

அவருக்கிருந்த சந்தேக உணர்வுகளைச் சிதறடிக்கும் வண்ணம் கோபால் பந்துகளைக் காற்றில் பறக்கவிட்டான். ஊசலாடும் பந்துகளை விட்டு, எளியவற்றை யூகித்து விளாசினான். களத்தில் அவன் ஓட்டமும் மெச்சும்படியாக இருந்தது. இரண்டை மூன்றாக்கும் ஆரோக்கிய உடற்கட்டு அவனுக்கு. அதைவிடச் சுழற்பந்து வீச்சாளர்களைச் சுக்குநூறாக்கும் வல்லமை படைத்திருந்தான். அப்போட்டியில் சதமடித்துவிட்டதால் சேஷாத்ரிக்கு முடிவெடுக்கும் நெருக்கடி உண்டாகிவிட்டது. ரஞ்சி அரையிறுதிச் சுற்றிலும் கோபாலைத் தொடக்க ஆட்டக்காரனாய் களமிறக்கிவிட நேர்ந்தது.

வெற்றிகரமான தொடக்க இணையை நாக்-ஔட் போட்டியில் பிரிப்பது சாமர்த்தியமான முடிவுதானா சேஷாத்ரி? தமிழ்நாடு இன்னும் எத்தனை ஆண்டுகள் இரண்டாவது ரஞ்சி கோப்பைக்காகக் காத்திருப்பது? தேர்வாளர்களின் காட்டமான கேள்விகளுக்கு இரட்டை சதத்தால் பதிலளித்தான் கோபால். நம்பிக்கையைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியோடு தன் வளர்ப்பு சோடைப்போகாது என்கிற கர்வத்தால் பூரித்து அதே விவேகத்தில் இறுதிச்சுற்றுக்குத் தயாரானார் சேஷாத்ரி.

தீவிரப் பயிற்சிக்கு இடைப்பட்ட சின்னஞ்சிறு இளைப்பாறலில் அவருக்கும் கோபாலுக்கும் அணுக்கம் அதிகரித்தது. வலைப்பயிற்சியில் அவரின் சுழற்பந்துகளை வலை கிழியுமளவு ஓங்கி அடித்துக்கொண்டிருந்தான். சுழற்பந்து வீச்சாளனின் உளவியல் முறையை அவனிடம் ஆத்மார்த்தமாக உரையாடினார் சேஷாத்ரி. ஃபீல்டிங் பயிற்சியின்போது நீல வானில் மேகங்களைத் தொட முயன்று தோற்றுக் கீழிறங்கி வந்த சிகப்பு பந்து அவன் கைகளில் வசப்படாமல் தொட்டியிலிருந்து துடித்தெழுந்து விழும் மீனைப் போல் நழுவியது. என்றுமில்லாமல் அதிகப்படியான பந்துகளை அணைக்க இயலாமல் தவித்து மைதானத்துக்கு நேர்ந்துவிட்டான். 

“என்னாச்சு?” என சேஷாத்ரி தூரத்திலிருந்து கூச்சலிட்டார்.

“சாரி சார்” 

“மைண்ட்ல என்னவோ ஓடிட்டு இருக்கு. அதான் இவ்ளோ கேட்ச் விட்ற. என்ன ஓடுது?” என்று அவனைத் தனியாக அழைத்து விசாரித்தார்.

“வீட்ல சண்டை சார். இந்தியா ஆட முடியலைன்னா ஏதாவது வேலைக்கு போ இல்ல பிசினஸ் ஆரம்பின்னு ரொம்ப நாளா டார்ச்சர். சாரி சார், ஃபைனல்ஸை வெச்சுக்கிட்டு இதெல்லாம் யோசிக்கக்கூடாதுதான். கொஞ்ச நேரம் ப்ரேக் எடுத்து வந்துக்கிறேன் சார். சரி ஆகிடுவேன்” எனப் புலம்பித் தீர்த்தான்.

“நான் ஏன் உன்னை ஓபனிங் ஆட வைக்க யோசிச்சேன் தெரியுமா? இந்தியால ஃபினிஷ்ஷர் ரோலுக்கு ஆளில்ல. நீதான் ஓபனிங் ஆட அடம்பிடிக்கிறே”

“நீங்க கேட்கிற ஃபினிஷ்ஷர் இந்தியாவுக்கு என்னைக்காவது ஒருநாள் கிடைப்பான் சார். டீம்ல இடம் கிடைக்கணும்ங்கிறதுக்காக நான் அல்லாத ஒருத்தனா ஆக முடியாதுல்ல”

“ஓபனிங்-க்கு ஏகப்பட்ட காம்ப்பட்டீஷன். இருக்கிற லெஜெண்ட்ஸை மீறி கால்தடம் பதிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? ரஞ்சில பார்த்தேல்ல? எத்தனை யங் ஓப்பனர்ஸ் சென்ச்சுரீஸா விளாசுனாங்கன்னு…”

“மத்தவங்களை விடுங்க சார். நான் என்ன பண்ணா எனக்கு சான்ஸ் கிடைக்கும்?”

“இதே ஃபார்ம்ல ஃபைனல்ஸ் ஆடு. டீம் ஜெயிக்கணும். மத்ததெல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம். கடவுளுக்கே கிரிக்கெட் டீம்ல சான்ஸ் இருக்கான்னு தெரியல.”

“டீம் ஜெயிக்கிறது உங்க பொறுப்பு. நம்ம பௌலர்ஸ் ஒத்துழைக்கணும். ஆனா என் ஃபார்ம் எங்கேயும் போயிடாது. இதே வேகத்தை ஃபைனல்ஸ்லயும் பார்ப்பீங்க. உங்ககிட்ட இன்னொன்னு சொல்றேன். கடவுளுக்கு இந்த பாக்கியம் கிடைக்குமான்னு தெரியல. ஆனா நான் கண்டிப்பா ஒருநாள் இன்டர்நேஷனல் ஆடுவேன்” எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டு ஃபீல்டிங் பயிற்சிக்கு விரைந்தான். இம்முறை பந்துகள் கைவசப்பட்டன.

சத்தியத்துக்கு இணங்க கர்நாடகாவுக்கு எதிரான இறுதிச்சுற்றில் கோபால் இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதமடித்திருந்தாலும் தமிழ்நாடு அணியால் கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை. ட்ரெஸ்ஸிங் அறையில் மொத்த அணியும் சோகத்தில் மூழ்கியிருக்க, கோபால் மட்டும் ஆசுவாசமாக தன் ஆட்டத்தின் காணொளியைப் பார்த்துக்கொண்டிருந்தான். வீரர்கள் வருத்தத்தில் விம்மியது கோப்பை நழுவியதற்காக மட்டுமல்ல; சேஷாத்ரி முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதற்காகவும்தான் என்பதை அறிந்ததும் கோபால் தன் ஆசுவாசத்தை எண்ணி வெட்கினான். பிற இளம் வீரர்கள் சேஷாத்ரியின் பாதங்களைத் தொட்டு வணங்கும் கடைசி வாய்ப்பாக அக்கணத்தை எண்ணிக்கொண்டபோது கோபால் மட்டும் அவரை ஆரத்தழுவித் தேம்பினான்.

“கமான் பாய்ஸ், எதுக்கு எல்லாரும் இவ்ளோ ஜலம் ஊத்துறீங்க? ஃபர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்டை அஃபீஷியலா ஆட முடியாது. அவ்ளோதானே? மத்தபடி வீக்கெண்ட் ஆனா க்ரௌண்டுக்கு வரத்தான் போறேன்” என வீரர்களை உற்சாகப்படுத்தினார் சேஷாத்ரி.

இளம் வீரர்களின் ஜெர்சியில் கையெழுத்திட்டதும் ட்ரெஸ்ஸிங் அறையிலிருந்து வெளியேறித் தனி ஆளாய் மைதானத்துக்குள் நுழைந்தார். ஆட்ட நாளுக்கு உண்டான உத்வேகத்தில் கை கால்களைத் தளர்த்தி மிதமான ஓட்டத்தில் பிட்ச்சை சென்றடைந்தார். புல்வெளியில் பறந்து விரிந்தோடிய கால்கள் பிட்ச்சுக்கு அருகே வருகையில் மெல்ல வேகமிழந்தது. பிட்ச் நடுவில் ஏற்பட்டிருந்த நரம்பைப் போலான விரிசலைத் தொட்டு வணங்கி பிரியாவிடை அளித்துப் புறப்பட்டுச் சென்றதை கோபால் தூரத்திலிருந்து பார்த்தான். தடுக்கி விழுந்தால் கடற்கரை இருப்பினும் சேஷாத்ரி ஒருநாளும் அங்கு சென்றதில்லை. ஆனால் ஓய்வு பெற்ற நாளில் நிசப்தமாய்க் கடலின் ஓசையைக் கூர்ந்து கேட்டார். மைதானத்தில் கிடைக்காத ஏதோவொன்றைக் கடலிடம் தேடினார். முடிவிலா நீண்ட வானையே அவரால் கண்டுகொள்ள முடிந்தது. 

சில தினங்களுக்குப் பின் முழுநேரமாக மருத்துவத் துறைக்கே திரும்பிவிட்டார். தசைப்பிடிப்போ, உள்காயங்களோ அல்லது உடலளவிலான அசௌகரியமோ ஏற்பட்டால் தமிழ்நாடு வீரர்கள் முதலில் சந்திப்பது சேஷாத்ரியைத்தான். ஒருமுறை இவரைக் காண மருத்துவமனை வரை தேடி வந்தான் கோபால்.

“அசரூதீன் பாய் கால் பண்ணாரு. அடுத்த மாசம் நடக்குற பாகிஸ்தான் டூர்ல நான் இருக்கேனாம்” 

மகிழ்ச்சி பொங்க அவன் நெஞ்சைத் தட்டிக்கொடுத்த சேஷாத்ரி, “ஃபர்ஸ்ட் மேட்ச் எங்கே?” எனக் கேட்டார்.

“சேப்பாக்லதான்”

“சொந்த மண்லயே டெபூ ஆகுற வாய்ப்பு எல்லாருக்கும் அமைஞ்சுடாது” 

“எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணணும்.”

“சொல்லு”

“சேப்பாக் பிட்ச்ல ஸ்பின் எப்படித் திரும்பும்னு உங்களுக்கே தெரியும். சக்லைன் முஷ்டாக் இங்கே வரான். எனக்கு அவனை அடிக்கணும். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் சார்”

சக்லைன் முஷ்டாக் அண்மையில் பந்துவீசிய காணொலி ஆவணங்களை பார்த்தார் சேஷாத்ரி. அவனுடைய கைவிரல்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து ஒன்றைக் கண்டடைந்தார். பந்தை ஆட்காட்டி விரலுக்கும் நடு விரலுக்குமிடையில் பிடித்துப் போட்டால் ஆஃப் ப்ரேக்; கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்குமிடையில் பிடித்துப் போட்டால் தூஸ்ரா.

“இனி தினமும் உனக்கு நெட்ஸ்ல போடுறேன். நீ முதல்ல பார்க்க வேண்டியது பந்தை இல்ல. என் கை விரலை. நான் எந்த விரலால பந்தை ரிலீஸ் பண்ணுறேன்னு பாரு. அதுக்கு அப்புறம் கவனத்தைப் பந்து மேல திருப்பி விளையாடு” என்றார் சேஷாத்ரி. 

அந்தி சாய்ந்ததும் அவனுக்கு நிறுத்தாமல் தூஸ்ரா, ஆஃப் ப்ரேக் என மாற்றி மாற்றி வீசுவார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனப் பண்டிகை பாராமல் பயிற்சி தொடர்ந்தது. அவனிடத்தில் சேஷாத்ரிக்குப் பிடித்ததே கற்றலின் சுயநலம்தான். கடைசி நாளின் பயிற்சி முடிந்ததும் பூரித்த கண்களுடன் தேகம் ததும்ப அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினான். 

“இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சுங்கிறது யுத்தம். ஜெயிச்சுட்டு வா” 

ஆட்ட நாளில் கோபாலைப் பதற்றமடையாமல் பார்த்துக்கொண்டார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அன்ஷுமன் கெயிக்வாட். சர்வதேச டெஸ்ட் போட்டியை ஆடும் பதற்றத்தைவிட மூத்த வீரர்களுடன் விளையாடும் பயமே மேலோங்கியிருந்தது. ஆனால் அந்த மனநிலை ஆட்டமுறையை சிதைக்குமென கேப்டன் அசாருதீன் அறிவுறுத்தியதால் கவனத்தைப் பந்தின்மீது மட்டுமே வைத்தான்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் முதலில் பேடிங்கை தேர்வு செய்தார். 238 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஓரளவு சுமாரான தொடக்கத்தைத் தந்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் கோபாலும் VVS லக்ஷ்மணும் களமிறங்கினர். களத்தை நோக்கி வரும்போது லக்ஷ்மண் அவனிடம், ‘முதல் ஓவரை வாசிம் அக்ரம் வீசுவான். நீ எதிர்கொள்கிறாயா? நான் எதிர்கொள்ளட்டுமா?’ என இந்தியில் கேட்டார். பின்வாங்கினால் தன்னைத் தன்னம்பிக்கை குறைவானவனாய் எண்ணிவிடுவாரோ என நினைத்துத் தானே தொடங்குவதாகச் சொன்னான்.

வாசிம் அக்ரம் வீசிய முதல் பந்தே நெஞ்சு வரையிலான பௌன்சர். பந்து மட்டையில் பட்டிருந்தால் அறிமுகப் போட்டியிலேயே தங்க முட்டையுடன் சென்றிருப்பான். வீசப்பட்ட வலையில் சிக்காததை எண்ணி ஏமாற்றமடைந்த வாசிம் அக்ரம், அவனை முறைத்தார். அப்போது ராகுல் டிராவிட் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது.

‘களத்திலிருக்கும் வரை எதிராளியின் கண்களை எதிர்கொள்ளாதே. பந்தை நன்றாக எதிர்கொண்டுவிட்டு கண்களின் வலையில் வீழ்ந்த எத்தனையோ பேட்டர்களை பார்த்திருக்கிறேன். அவனைப் பழிவாங்க நினைத்தால் பந்தை விட்டு விளையாடு; அல்லது நடு பேட்டில் தொட்டு விளையாடு’

கடைசிப் பந்தில் சரியாக யூகித்த கோபால், லெக் சைடில் தட்டிவிட்டு மூன்று ரன்கள் ஓடினான். அந்த முன் மாலையில் ஒட்டுமொத்த சேப்பாக்கமும் தன் வீட்டுப் பிள்ளையின் முதல் சர்வதேச ரன்னுக்கு எழுந்து நின்று ஆரவாரம் செய்தது. அடுத்த ஓவரில் வக்கார் யூனிஸ் பந்தில் முதல் பௌண்டரியை அடித்தான். பிறகு வாசிம் அக்ரம் பந்துகளையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டான். இதனால் அவர், புதிய திட்டத்துக்குத் தள்ளப்பட்டு அவனுக்கு மட்டும் அரௌண்டில் இருந்து வீசினார். எனினும், அவன் மட்டை பௌண்டரியை நோக்கியே பந்துகளை விரட்டின. வெக்கையில் வழியும் வியர்வையைத் துடைத்தபடி குழம்பிப் போய் நின்றார் வாசிம். முதல் நாள் முடிவில் எட்டு ஓவர்களுக்கு இந்தியா 48 ரன்களுடன் அதிரடி தொடக்கத்தைத் தந்திருந்தது. அன்றிரவு கோபால் ஓட்டலில் ஓய்வெடுத்திருக்கும் சமயத்தில் சேஷாத்ரி அலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

“செம ஸ்டார்ட் கொடுத்திருக்கடா. டிவில பார்த்தேன். வாசிம் அக்ரமுக்கு மூஞ்சே இல்ல. பசங்கலாம் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? பார்த்தீங்களா சார், கோபால் போனதுமே இந்தியா ஆறு ரன்ரேட்ல ஸ்டார்ட் கொடுக்குது. இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் நடந்திருக்கான்னு கேக்குறாங்க. ஆனா உனக்கு இன்னும்கூட ஃபூட் மூவ்மன்ட் நல்லா வரணும். உனக்கு கால் ஆணி அடிச்ச மாதிரி ஒரே எடத்துல நிக்குது. மத்தபடி ரொம்ப நல்லா ஆடுற. நாளைக்கும் இதே வேகத்துல ஆடாதே. கொஞ்சம் விட்டு ஆடு. லக்ஷ்மண் கிட்ட கத்துக்கோ. வாசிம் அக்ரம் இன்னைக்கு சொதப்பியிருக்கலாம். நாளைக்கும் அப்படியே போடுவான்னு உத்தரவாதமில்ல” 

அவர் சொல்லுக்கேற்ப அடுத்த நாள் வாசிக் அக்ரம் அசுர ஆற்றலுடன் பந்துவீசினார். முதல் சில ஓவர்களில் லக்ஷ்மண் விக்கெட்டை எடுத்தார். அதற்கடுத்த ஓவரை வீச வந்தான் சக்லைன் முஷ்டாக். முதல் பந்தே வழக்கத்தைவிட பௌன்ஸ் ஆகி கீப்பரின் தோள்பட்டையில் அடித்துக் காயமேற்படுத்தியது. கூடுதல் பௌன்ஸால் அந்த ஓவரைத் தப்பித்தால் போதும் என்றிருந்தான் கோபால்.

அடுத்த ஸ்பெல்லில் கோபாலுக்கு வாசிம் அக்ரம் பந்துவீசக் காத்திருந்தபோது மொத்த சென்னை ரசிகர்களுமே கோஷமெழுப்பி ஊக்குவித்தனர். ஆனால் ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்கும் பொருட்டு வாசிம் வீசிய இன்ஸ்விங்கில் அரை சதமடிக்காமல் ஆட்டமிழந்தான். அவனுடைய நம்பிக்கையூட்டும் அறிமுகம் சென்னை ரசிகர்களுக்குத் திருப்தி அளித்ததால் கைதட்டலின் ஒலி கடல் வரை எட்டியது. 

அந்த இன்னிங்ஸ் முழுவதும் அவன் சக்லைன் முஷ்டாக்கின் ஆட்டத்தையே தீவிரமாக கவனித்தான். சச்சின், டிராவிட், அசாருதீன் ஆகிய முக்கிய புள்ளிகளை வீழ்த்தி ஃபைஃபர் எடுத்திருந்தான் சக்லைன். இந்தியா 254 ரன்களுக்கு ஆட்டமிழந்து 16 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததை எண்ணி ரசிகர்கள் ஆறுதலடைந்தனர். ஆனால் அடுத்த இன்னிங்ஸில் அஃப்ரிடிஹ்யின் அதிரடிக்கு அரங்கமே அமைதியானது. பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்தியாவுக்கு 271 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கோபால் களமிறங்கியதுமே பௌண்டரி அடித்து புத்துணர்ச்சியூட்டும் தொடக்கத்தைத் தந்தான். அவன் தயாராய் இருந்ததெல்லாம் வாசிம் அக்ரமுக்காக. வக்கார் யூனிஸை குறைத்து மதிப்பிட்டிருந்ததே அவன் செய்த பிழை. அவருடைய ஔட்ஸ்விங்கை சரியாக எதிர்கொள்ளாமல் இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தான். ஐந்து ரன்களில் அவன் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்த விக்கெட்டுகளை அணி இழக்கத் தொடங்கியது. 

விழுந்த மறுகணம் எழுந்தோடும் குதிரை என்பதை அந்த இன்னிங்ஸில் மீண்டும் நிரூபித்தார் சச்சின் டெண்டுல்கர். பாகிஸ்தானில் அஃப்ரிடி செய்ததை இந்தியாவுக்காக செய்து தந்தார் சச்சின். ஆனால் சக்லைன் முஷ்டாக் செய்த மாயாஜாலத்தால் இந்திய அணி விக்கெட்டுகளைத் தந்து தோல்வியைத் தழுவியது. இந்திய மண்ணில் அதுவரை நிகழ்ந்திடாத வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணமொன்று அரங்கேறியது. ஒட்டுமொத்த ரசிகர்களும் பாகிஸ்தானின் ஆட்டத்துக்கு எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினர். அவர்களின் பேரன்புக்குக் கைமாறு அளிக்கத் தெரியாமல் திணறிய பாகிஸ்தான் வீரர்கள், தொப்பிகளைக் கையிலேந்தி மைதானத்தைச் சுற்றி ஓடி வந்து ரசிகர்களுக்கு நன்றி பாராட்டினர்.

பாகிஸ்தானிடம் வீழ்ந்ததை எண்ணித் துயருற இந்திய அணிக்கு அவகாசமில்லை. மூன்றே நாட்களில் டில்லியில் இரண்டாவது (கடைசி) போட்டி ஆரம்பமானது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டாஸ் போடுவதற்கு முன் ஆடுகளத்தைப் பரிசோதித்த ரவி சாஸ்திரி, கங்குலியை அழைத்து, ‘டாஸ் வென்றால் அசாருதீனை பேட்டிங் தேர்வு செய்யச் சொல்’ என அறிவுறுத்தினார். 

சென்னையிலிருந்த பௌன்ஸுக்கு பாதிகூட டெல்லியில் இல்லாததை உணர்ந்த கோபாலும் லக்ஷ்மணும் நிறைய ஷாட்ஸ் ஆடினார்கள். இதுவும் சுழற்பந்துக்குத் தோதான் ஆடுகளம். சக்லைன் முஷ்டாக்கின் முதல் ஆஃப் ப்ரேக் பந்தில் கோபால் ஏறத்தாழ ஆட்டமிழந்திருப்பான். அதிர்ஷ்டவசமாக ஃபீல்டர் கேட்ச்சை விட்டதால் களத்தில் தொடர்ந்து நிற்பதற்கான வாய்ப்பு நீடித்தது. சக்லைன் வீசிய தூஸ்ராவை சேஷாத்ரி கற்பித்த முறையில் நகர்ந்து ஆஃப் திசையில் பௌண்டரிக்குத் தள்ளினான். அடுத்த ஸ்பெல்லில் எதிர்கொண்ட தூஸ்ராவையும் எல்லைக்கோட்டுக்கு அனுப்பி முதல் சர்வதேச அரை சதத்தை நிறைவு செய்தான். 

‘இந்த இடதுகை பேட்டருக்கு தூஸ்ரா வேண்டாம்’ எனப் பாகிஸ்தான் கேப்டன் வாசிக் அக்ரம், சக்லைனுக்கு அறிவுறுத்தியதை கோபாலால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. அதைத் தொடர்ந்து அவன் எதிர்கொண்ட எல்லாப் பந்துகளும் ஆஃப்-ப்ரேக்-ஆகவே வந்தன. அடுத்தடுத்த இரு பௌண்டரிகள் அடித்ததால் திட்டத்தை மாற்றிய சக்லைன், தூஸ்ரா வீசி ஸ்டம்புகளை பறக்கவிட்டான். கை விரல்களைக் காணாமல் கண்ணசந்த நேரத்தில் எல்லாம் நிகழ்ந்துவிட்டதாய் ஏமாற்றத்துடன் உணர்ந்த கோபால் அறுபது ரன்களுடன் மைதானத்தைவிட்டு வெளியேற மனமில்லாமல் நடைப்பிணமாய் பெவிலியனுக்கு திரும்பினான்.

இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் வெறும் 175 ரன்களுக்கு சுருண்டது. முதலில் செய்த தவறை கோபால் இரண்டாவது இன்னிங்ஸில் செய்யாமல் சக்லைன் முஷ்டாக்கின் விரல்களைப் பார்த்து ஆடினான். கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கு இடையிலிருந்து சுழன்று வந்த தூஸ்ரா பந்துகள் அனைத்தும் எவராலும் தடுக்க இயலாமல் மைதானத்தைவிட்டு வெளியே போயின. ஆனால் 96 ரன்களில் முஷ்டாக் அகமது பந்தை ஓங்கி அடிக்கப் போய் ஆட்டமிழந்தான். நடந்தது புரியாமல் திணறிப் போய் நின்ற அவன் அங்கிருந்து செல்லாமல் அந்தப் பந்தை வேறு எப்படி எதிர்கொண்டிருக்கலாமெனச் சிந்தித்தான். டெல்லி ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியதுமே அவன் தான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்து வெளியேறினான். 

‘நல்ல இன்னிங்ஸ்! வெற்றியை உறுதி செய்திருக்கிறாய்’ எனப் பயிற்சியாளர் பாராட்டினாலும் தான் சதமடித்து வெல்லாததை எண்ணி மனம் நொந்தான். இந்தியா 212 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாய் வென்றது. 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமநிலை அடைந்த நிலையில், நான்கு இன்னிங்ஸிலும் ஃபைஃபர் எடுத்த சக்லைன் முஷ்டாக் தொடர் நாயகன் விருது பெற்றார். 

தொடர் முடிந்ததும் கர்வத்துடன் சேஷாத்ரியின் வீட்டிற்குச் சென்றான். தன் ஆட்டத்தைப் புகழ்பாடித் தள்ளுவாரென எதிர்பார்த்து வந்தவனுக்கு அவரின் இறுகிய முகமே பதிலாய் கிடைத்தது. 

“நான் ஏதாவது தப்பா ஆடியிருந்தா சொல்லிடுங்க” 

“உன் கேம்ல எந்தக் குறையுமில்ல. ஆனா ஏன் நீ மட்டும் அடிச்சிருக்கே?” 

“நான் மட்டும் அடிச்சேனா? என்ன டாக் நீங்க? சச்சின், டிராவிட், கங்குலி, அசாருதீன்னு எல்லாரும்தானே அடிச்சிருக்கோம். மொத்த சீரிஸ்ல அவங்களையெல்லாம்விட நான் அதிகம் அடிச்சிருக்கேன். அப்படியே நான் மட்டும் அடிச்சிருந்தாலும் அதுல என்ன தப்பு?”

“நான் கேட்க வந்தது சக்லைன் முஷ்டாக்கை ஏன் நீ மட்டும் அடிச்சிருக்கே?”

“Because I got you, doc. அவனை அடிச்ச ரெண்டே கொம்பனுங்க நானும் சச்சினும்தான். சச்சின் பாய்கூட கொஞ்சம் தடுமாறினார்”

“சச்சின் ஒரு கடவுள். அவரை விட்டுடு. மத்தவங்க ஏன் அடிக்கல?”

“என்னைக் கேட்டா? நீங்க இந்தியாவுக்கு கோச் ஆகிடுங்க. சக்லைன் முஷ்டாக்னு ஒருத்தன் ஆள் அட்ரஸ்ஸே இல்லாம போயிடப்போறான்” எனச் சொல்லி சிரித்தான் கோபால்.

அதில் சிரிக்க ஒன்றுமில்லை எனும் விதமாய், “நீ ஏன் சொல்லிக்கொடுக்கல?” என வினவினார். 

“என்ன?”

“நான் உனக்குச் சொல்லிக்கொடுத்தேன்ல. நீ ஏன் மத்தவங்களுக்குச் சொல்லித் தரல?”

“நான் எப்படி டாக் சொல்லிக் கொடுக்கிறது? சுத்தி எல்லாரும் சீனியர்ஸ். நான் போய் முந்திரிக்கொட்ட மாதிரி சக்லைன் முஷ்டாக்கை எப்படி அடிக்கணும்னு பாடம் எடுத்துட்டு இருந்தேன்னா டெல்லிக்கு என்னைக் கூட்டிட்டுக்கூட போயிருக்க மாட்டாங்க.”

“டிரெஸ்ஸிங் ரூமை விடு. உன்னோட non striker-க்காவது சொல்லிக் கொடுத்திருக்கலாமே”

சொல்வதறியாமல் மௌனமாய் இருந்தான். பதிலை எதிர்நோக்கிப் புருவத்தை உயர்த்தினார் சேஷாத்ரி.

”நான் ஏன் டாக் சொல்லித் தரணும். நான் சொல்லிக் கொடுப்பேன், இவனுங்க சக்லைனை அடிப்பானுங்க. அப்புறம் நாளைக்கு என் பொசிஷனை அவனுங்க எடுத்துப்பானுங்க. நான் பென்ச்ல உக்காந்துட்டு தண்ணி தூக்கிட்டுப் போகணுமா?”

“நம்ம ஊர்ல பாகிஸ்தான்கிட்ட தோத்திருக்கோமே! எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா நமக்கு இது? ஒவ்வொரு தடவையும் பாகிஸ்தான் டூர் போகும்போதெல்லாம் கண்டிப்பா ஒத வாங்கிட்டு வந்துட்றோம். சரி அவனுங்களை இங்கே வர வைச்சு ஒதைக்கலாம்னு பார்த்தா இந்த தடவை அதுகூட முடியலையே. சீரிஸ் டிராதானே ஆகியிருக்கு. நீ ஏதோ ஜெயிச்சுட்ட மாதிரி குதிச்சுட்டே வர? அடுத்த ஒரு வாரத்துக்குத் தூக்கமே வரக்கூடாதுடா உனக்கு” 

“எனக்கு டீம் பத்தியெல்லாம் கவலை இல்ல. நான் ஜெயிக்கணும். அடுத்த பத்து வருஷத்துக்கு நான் இன்டர்நேஷனல் விளையாடணும்” 

“டீம் ஜெயிக்க வேணாம், தான் ஜெயிச்சா போதும்னு நினைக்கிற ஒருத்தவனுக்கு டீம்ல வேணா இடம் இருக்கலாம். என் வீட்ல இல்ல. நீ கிளம்பலாம்” எனத் தீவிரமாகச் சொல்லி எழுந்தார் சேஷாத்ரி. 

அப்படியொரு தாக்குதலை எதிர்பார்த்திடாதவனாய் அதிர்ச்சியுடன் எழுந்தான் கோபால். பார்வையால் அவரிடத்தில் மன்றாடினாலும் அவரின் பிடிவாத குணத்தை நன்கறிவான். அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடனான முக்கோண டெஸ்ட் தொடர் இருந்ததால் சக்லைன் முஷ்டாக்கை போலவே முத்தையா முரளிதரனை அடிக்கவும் சேஷாத்ரியிடம் தயாராக விழைந்திருந்தவனுக்கு தண்டனையாக அமைந்தது அவரின் கதவடைப்பு. கற்றலின் சுயநலத்தால் அவனிடத்தில் வசீகரிக்கப்பட்ட அவர், அவனுடைய வெற்றியின் சுயநலத்தை அருவருத்தார்.

குருவைப் பிரிவதும் அவரை மிஞ்சிச் செல்வதும் சீடனுக்கு இன்றியமையாததென அறிந்த கோபால், அடுத்த முக்கோணத் தொடருக்காகத் தீவிரமாய் பயிற்சி செய்தான். பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் அபாரமாய் விளையாடி ஃபார்மை விடாமல் பார்த்துக்கொண்டான். ஆனால் அணி மீண்டுமொருமுறை எதிராளியிடம் சொந்த மண்ணில் வீழ்ந்தது. இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் அதிர்ஷ்டவசமாக முரளிதரன் இல்லாததால் முதல் சர்வதேச சதத்தை எட்டினான். என்ன பயன்? போட்டி சமநிலையில் முடிந்ததால் இந்தியா தொடரிலிருந்து வெளியேறியது. இறுதிச்சுற்றில் பாகிஸ்தான் வென்றபோதும்கூட தொடர் நாயகன் விருது தனக்குக் கிடைக்குமா என ஏக்கத்துடன் காத்திருந்தான். 

சிறப்பாய் விளையாடியுமே அடுத்த மாதம் நடந்த மற்றொரு முக்கோண டெஸ்ட் தொடரில் அவன் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் ஒருநாள் முக்கோண தொடருக்காக சார்ஜா சென்று பாகிஸ்தானை அதிரடியாக எதிர்கொண்டு முதல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றான். ஆனால் இறுதிச்சுற்றில் தங்க முட்டையைப் பெற்றுவிட்டதால் இந்தியா மற்றுமொரு முக்கோண தொடரில் தோல்வியடைந்தது. 

1999 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே, கென்யா, இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக நன்றாக விளையாடினான். ஆனால் அவன் தந்திரங்கள் இம்முறை பாகிஸ்தானிடத்தில் சோபிக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதியிலேயே அவனுடைய பெயர் இந்திய அணியிலிருந்து காணாமல் போனது.

அதே வருடத்தில் கோபாலின் அன்-ஆர்த்தடக்ஸான ஆட்டத்தை ஒத்து விளையாடக்கூடிய ஒரு பேட்டர் இந்திய அணியில் அறிமுகமானான். அவன் பெயர் வீரேந்தர் சேவாக். முதல் ஓவரில் (முடிந்தமட்டில் முதல் பந்தில்) பௌண்டரி விளாசிவிடக்கூடியவன் என்கிற நற்பெயரை பெற்றான். நாளடைவில் சச்சினுக்குப் பிடித்தமான சக வீரனாய் மாறியதால் மும்பை லாபி கோபாலகிருஷ்ணன் சுவாமிநாதனைவிட வீரேந்தர் சேவாக்கையே தேர்வு செய்ய ஆரம்பித்தது.

கிரிக்கெட் மெல்ல மெல்ல தன்னிடமிருந்து விலகுவதை உணர்ந்த கோபால், ஒரு கிரிக்கெட் அகாடமியை தொடங்கி சிறார்களுக்கான பயிற்சியாளர்களை நியமித்துத் தொழில் தொடங்கினான். அணியின் நலனை எண்ணிக் கவலைகொள்ளாதவர்களை எண்ணி அணி கவலைகொள்வதில்லை. தேர்வாளர் குழுவில் ‘கோபாலகிருஷ்ணன்’ என்கிற பெயர் அதன்பிறகு ஒலிக்கவே இல்லை. அறிவிக்காமல் நேரும் ஓய்வு ஒரு வீரனுக்கான இழுக்கு. 

ஓரிரவு சேஷாத்ரி அவன் கனவில் தோன்றி, “நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கணும் கோபால். சொல்லிக் கொடுக்கிறது மூலமா என்னவாகும் தெரியுமா? உன் மைண்ட் க்ளியர் ஆகும். நானெல்லாம் ஒரு விஷயத்தைக் கத்துக்கொடுத்துட்டா நிம்மதியா உணர்வேன். மைண்ட் எம்ப்ட்டியானாதான் புது விஷயங்களைக் கத்துக்க மூளை ஒத்துழைக்கும். நானறிஞ்சது எனக்கு மட்டுமே உரியதுன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டா மூளை அழுகிப்போயிடும். உனக்கு கிரிக்கெட் அப்படித்தான் அழுகிப்போச்சு. நீ இன்டர்நேஷனல் விளையாடின ப்ளேயர். ஆனா இப்போ நீ யாருமே இல்ல. நான் ஒரு இன்டர்நேஷனல் மேட்ச்கூட விளையாடினதில்ல. ஆனா என்னால பல கிரிக்கெட்டர்ஸ் உருவாகியிருக்காங்க. இன்னைக்கும் பசங்களுக்கு நெட்ஸ்ல போவ்ல் பண்ணிட்டுத்தான் இருக்கேன். அந்த நிறைவு இருக்கே…! உனக்கு அப்படி ஏதாவது நிறைவு இருக்கா கோபால்?” எனக் கேட்டபோது அதிர்ந்தெழுந்தான்.

இத்தனை ஆண்டுகளாய் ஏன் அவரிடம் மனமிறங்கிப் பேசவே இல்லை? எது தடுத்தது? சர்வதேச வீரன் எனும் அகங்காரமா? அதற்கான தண்டனையை விதியே வழங்கிவிட்டதே! இன்னும் எது தன்னைத் தடுக்கிறதெனக் குழம்பியவன் உடனடியாக அவர் வீட்டுக்குச் சென்றான். 

கொடும்பனி பொழியும் அதிகாலையில் அவர் வீட்டின் கதவு பாதி திறந்திருந்தது. பயிற்சி உடையிலிருந்த சேஷாத்ரி காலணிகளையும் கழட்டாமல் சோஃபாவில் படுத்துறங்கிக்கொண்டிருந்தார். செல்லப்பிராணி நிலை தடுமாறி சோஃபாவை சுற்றிச் சுற்றி வந்தது. கோபால் அவரை எழுப்ப முயன்றான். சேஷாத்ரி தன் உறைந்த வலது கையில் கிரிக்கெட் பந்தை இறுகப்பற்றியபடி நித்தியமான துயிலில் ஆழ்ந்திருந்தார். பளபளப்பு ஓய்ந்த சொறசொறப்பான சிகப்புப் பந்து அவரின் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் இருந்தது.

***

பாலு – இயற்பெயர் பாலகிருஷ்ணன் கருணாநிதி. சென்னையைச் சேர்ந்தவர். ஊடகவியலாளராக பணிபுரிகிறார். இதுவரை ‘சொனாட்டா’ (2024), ‘ஸ்டேல்மேட்’ (2026) ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: krshbala99@gmail.com

டோனி பிரஸ்லர் கவிதைகள்

0


டோனி பிரஸ்லர்

வாழப்பழகுதல்

குழந்தை என்பது கதையில் வளர்ந்த மரம்
இருட்டு விலகாத பாதையில் முளைத்த
ஒரு செருப்பில்லாத பாதத்தை கொத்தும் முள்விதை

தனக்கு தானே பேசிக்கொண்டு
தன் மௌனத்தில் தடுமாறும் வார்த்தைகளால்
காணாமல் போகிற வரை
எரியும் தீக்குச்சிகளில் ஒன்று சேரும் நிழல்

நதியில் நீந்த முடியாதவனின் தத்தளிப்பாக
யார் துணையும் இல்லையென ஆன பிறகும்
பூக்களை போல் மலரும் உன்மத்தம் துள்ளும்
கரும்பாறையை போன்ற தவிப்பை
விரல் நுனிமேல் நகர்த்தி வைப்பதெப்படியென
புரியாமல் வெட்டவெளி வெளிச்சத்தில்
காணாமல் போகிற வரை
உறங்காத ஒரு உள்ளம் முழுதும் மூண்டெரியும் தீயை
நிலம் தன் பளுவால் மிதித்து அழிக்கிற போது
சுழலும் ஞாபகவெளியில்
காலம் தக்கவைக்கும் ஒளி

அவர்கள் விரல்கள் ஒரு பூவை ஏந்தினால்
அது பசியின் வலிமையுடைய விளையாட்டு

பூக்களை முழுச்சூடமாக மாற்றும் வித்தையை
ஒரு அரற்றலின் வழியாக மொழி அவர்களிடம் கற்கிறது

அதனால் இங்கேயே தங்க விரும்புகிறேன்
கிடைத்த இந்த வேஷத்தில்
அவர்களுக்கெல்லாம் வேடிக்கைக் காட்ட

*

பிரான்சிஸ் கிருபா கல்லறையிலிருந்து

அவன் உயிர் விரிந்து பரந்திருந்தது
சம்மனசுகள் அவனுடைய கன்னியின் வார்த்தைகளை மாற்றி மாற்றி மன்றாடினார்கள்

எங்கள் வார்த்தைகளை வாங்குவதற்ககோ முட்செடி தானிருந்தது

பசி என்பது காட்டுத்தீ கிடையாது வெறும் சாம்பல் என்றும்
எங்களை இவ்வூரை விட்டு போக வந்த வழியே திரும்பிப் போவது
எப்படியெனவும் அதுவே வழி சொன்னது

முட்செடிக்கு முன் கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்குமில்லை

மண் மேட்டில் வருவியிருந்த பொடி மண்ணை எடுத்து பிட்டு உண்டோம்
ஆணியடிக்கப்பட்டவனோடு சேர்ந்து வானத்தை பார்த்தோம்

நட்சத்திரங்களை விரும்பிய பத்தினி பாறையை எரிக்கிறது வேக்காலம்

பிழைக்க தெரியாதவன் உச்சிவெயிலை குடித்த படி இங்கே கிடக்கிறான்

*

கட்டளை

இயேசு காட்டிக்கொடுக்கபட்ட அந்த இரவில்,
மனிதன் தன்னை போல் பிறர் மீதும் அன்பு செலுத்த வேண்டுமென்று சொன்னார். அது வாழ்நாள் முழுக்க பின்பற்ற வேண்டிய முதலும் கடைசியுமான கட்டளை என்றும் சொன்னார்.

இந்த கட்டளை எனக்கு ஏன் மிகக்கடினமாக இருக்கிறது என்றால்,

ஒருவன் தன்னை தானே நேசிப்பது எப்படியென்று,
அந்த ஆள் சொல்லவே இல்லை.

*

குறைகளை கேட்கும் கனவான்

கடவுள் ஒரு பிரதிநிதி
ஊரின் மேன்மை குணத்தை உரைக்கும் ஆள்
ஒரு கடவுளை எதற்காக தேடுகிறார்கள் என்று புரிந்துவிட்டால்
அவ்வூரின் மக்கள் குணம் புலப்பட்டுவிடும்
ஒருவேளை கடவுள் இல்லாவிட்டால்
கொலை செய்யும் மனம் கொண்ட ஆட்கள்
அங்கே குறைவென அர்த்தம்
கடவுளைப் படைத்தது வணங்குவதற்காக அல்ல
ஊர்பழக்கம் என்னவென கண்டுபிடிப்பதற்காக
தூங்கும் போதும் ஒரு கண்ணை மூடாத அனாதைக்காக
யார் மீதும் நம்பிக்கையில்லாத குற்றவுணர்வின் இரக்கத்திற்காக
மனமும் கண்ணீருமே என்றுமுள்ள சாட்சியென குறிப்பெடுப்பதற்காக

கேட்கப்படாத குரல்களாக மௌனத்தால் மிதிக்கப்பட்டு
ஆணவத்தால் கொலைவாங்கும் நாதியற்றவர்க்கு
பூடம் எழுப்புவதற்காக

*

தானற்ற பிற

மீட்சி, யாருக்கு வழங்கப்படவில்லையோ அவருக்கே சொந்தமானது. ஏற்கபடாத மீட்சிகள், விதிகளின் விளையாட்டை நேரங்காலம் பார்க்காமல் உழைக்க வைக்கிறது. தூங்குவதற்கு அனுமதிக்கப்படாத விதியின் விழிகள், கருணையுடன் கைவிடுபவர்களின் சோர்வுக்காக காத்திருக்கிறது. வெட்டவெளியில் ஓய்வறியா பல பாதைகள் அதனதன் வழியே பசியின் பொருட்டு மூட்டை மூட்டையாக கட்டுக்கதைகளை பதுக்கி விளையாடும். கதைகளோ மறைவாய் பேசும் குரல்களின் ரகசியத்தில் உருவம் கொண்ட ஊரின் வரைபடத்தை உருவாக்கியது.

அதுவே மனக்கோட்டையின் திட்டம். குறுக்கு சாலைகள். குடியேற்றம். காட்டு எழில். பால்வாடி. மைதானம். மேம்பாலம். எழும் கிளர்ச்சியின் களம், வடிவமெடுக்காத உயிரினம். வடிவம் வடிவமற்றதை ஆக்கிரமிக்க மோதுகிற சுமைகளின் வடிவமே மனம். மோதலில் பிறக்கும் குழந்தையே கனவு. மண், வானமாக முன்பகையுடன் உறைந்த விரிசல் தழும்புகளாக, பிரிந்தே சேர்ந்து வாழும் எல்லைகளும் தொடுதலும் விலகுதலும் தோலுரித்து முற்றும் உருமாறும் உலகமனைத்தும் காணும் தீராத திருப்புமுனைகளின் திருவிழா.

***

டோனி பிரஸ்லர் – கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார். 2023ல் பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பின் ஆசிரியராகவும், 2024ல் ககனம் என்ற கவிதைத்தொகுப்பும் வெளியிட்டுள்ளார். நவீன தமிழ் புலத்தை சேர்ந்தவர். மின்னஞ்சல் : tonypresslers@gmail.com

சசி இனியன் கவிதைகள்

0


சசி இனியன்

கசப்பு

புணர்ச்சிக்குப் பின்
​அவள் உடல் நடுங்கியது,
மிகச் சிறிய உடல்.
உள்ளிருப்பது எல்லாம்
அசூயை
​காமத்தின் உடலியக்கம்,
காமத்தின் உன்மத்தம்,
பிசுபிசுப்பு.
​காதல்—
மரணம் வரை நீளும் கசப்பு.
​சுடுகாட்டில்
சதைத்துண்டம் இல்லை;
ஆனாலும்
சாம்பலை
குத்திக் குத்திக் கிளறுகிறீர்கள்.
​அங்கே எலும்பும்கூட
இல்லை.
​எங்கும் நிறைந்திருக்கும்
கசப்பு,
கசப்பு,
என்று என்னென்னவோ
பிதற்றினாள்.

​பின்பு நிதானித்து,
“காலமில்லா
மனித வாழ்வின்
நுகரவே முடியாத கசப்பை
என்ன செய்வது?”
என்று யாரிடமோ கேட்டாள்.
​பதிலுக்கு ஒரு குரல்:
“அது மானுடத்தின்
மிக நீண்டகால கசப்பு பெண்ணே!
​இனிப்பைப் போலவே
ருசிமிக்க கசப்பு,
அதை மென்று விழுங்க வேண்டும்.”
​”அதற்குப் பழகும் வரை?”
​”ஒன்பதிலிருந்து
பூஜ்யம்
வரை எண்ணிக் கழிக்கலாம்;
முடிந்தால்
எண்ணமற்று
இருக்க முயற்சிக்கலாம்.”

*

சுடர்

​கோபுரத்தின் மீது
​முச்சுடர் விளக்கு ஒளிர்கிறது;
அதை எத்தனை நேரம் பார்த்திருப்பேன்
எனத் தெரியாது.

​தீ
கைபிடித்து அழைத்தது;
சுடரின்
ஒளியில்
கரைந்து எரிகிறேன்.

​அது
உருகி அலறலாய் மாறுகிறது.
பின்பு பரிவின் குரல்,
தனக்குத்தானே ஆறுதல்
சொல்லிக்கொள்கிறது.

​நான்
மீண்டும் எரிகிறேன்.

​நான்
சுடரைத்தானே
பார்க்க வந்தேன்!

*

நவீன ஓவியன்.
பழகத் தொடங்கிய
ஓவியனின்
கித்தானில்—

​சிறிய வீடு,
அதற்கொரு சன்னல்,
மரம்,
சில பறவைகள்,
ஆண் பெண் முயக்கம்,
நாய்க்குட்டி,
நட்சத்திரம்,
சூரியன்.

​அதன் நிறங்களில்
எழுந்து வந்தது
புதியதொரு ஆன்மா.

​பின்பு
அது
படைத்தது,
இன்னொரு
பிரபஞ்ச மனம்,
பிரபஞ்ச இயக்கம்!

*

​கடவுள் அல்லாத ஒன்று.
ஒரு உலோகம்
அதிர்வது போல
என்
மனம் அதிர்கிறது.
​யாரோ அதை அதிர்வுறச்
செய்கிறார்கள்.
சில போது நானே
அப்படி ஆகிக்கொள்கிறேன்.
​சில சமயம்
மிக மெல்லிய அதிர்வு;
அது உயிரின் அதிர்வாகவும்கூட இருக்கலாம்.
அது என்னை நடுக்கமுறச் செய்கிறது.
​ஆனால்,
இவற்றையெல்லாம்
நான் உற்று கவனிக்கிறேன்.
​உள்ளிருந்து அதிர்வது போல
ஒளிர்கிறது
தூய ஆன்மா.
​ஆனால்,
அது கடவுள் அல்ல.

*

வேடதாரி
சொர்க்கம்,
சுகம்,
வெகுமதி
எல்லாமும் கிடைக்குமென்ற
எந்த உத்தரவாதமும்
வாக்குறுதியும்
கடவுளிடமிருந்து
அளிக்கப்படவில்லை.
​ஆனாலும்,
​கறுப்புப் பிசுக்கு ஏறிய
சிலையின்
முன் கண்ணீர் வடியக்
கை கூப்பி நிற்பவளை
என்ன சொல்லித் தேற்றுவது?
​உயிர் வாழ்ந்திருப்பதால்
உண்டாகும் துன்பத்திற்கு
நம்பிக்கை அளிப்பது போலவும்,
நம்பிக்கை அல்லாதது போலவும்
இருவேறு பாவனைகள்
கடவுளுக்கு எதற்கு?
​கடவுள்
ஒரு கபட வேடதாரி
என்று சொன்னால்,
கோபம் வருகிறது அவளுக்கு.
​பின்பு
அவளே
அவளைத் தேற்றி,
அழுத கண்ணைத் துடைத்துக்கொண்டு,
கறுப்புச் சிலையின்
முன்
தெத்துப்பல் தெரியச் சிரிக்கிறாள்.
​இப்பொழுது கறுப்பினூடே
மினுங்கும் மெல்லிய கோடு
பளிச்சென்று தெரிகிறது.

***

சசி இனியன் – இயற்பெயர் இரா.சசிகலாதேவி. சிதம்பரத்தை சேர்ந்தவர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுகூட நுட்புனர் ஆக பணி புரிகிறார். தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வருகிறார். நீலி வனம் அவருடைய கவிதைத் தொகுப்பு. மின்னஞ்சல்: sasiiniyan1978@gmail.com