Home Blog Page 5

குரங்கின் பாதம்

0

டபிள்யு. டபிள்யு. ஜேக்கப்ஸ்

தமிழில்: சுபஶ்ரீ முரளிதரன்

பாகம் 1

வெளியில் இரவு நேரம் குளிர்ச்சியாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது. ’லபர்னம் வில்லா’ வின் வரவேற்பறையில் திரைச்சீலைகள் இறக்கிவிடப்பட்டு, கணப்புத் தீ பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. தந்தையும் மகனும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் முதலாமவருக்கு, ஆட்டத்தைப் பற்றிய அடிப்படையான யோசனைகள் இருந்தும், தனது ராஜாவை தேவையற்ற அபாயத்திற்கு நகர்த்தியதில், கணப்பு நெருப்பின் பக்கமாக அமர்ந்து பின்னிக்கொண்டிருந்த நரைத்த தலைமுடியுடைய அந்த முதியவளுமேகூட அவரை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டது. 

தான் செய்த அபாயகரமான தவறைத் தாமதமாக உணர்ந்த அவர், தன்னுடைய மகனை அதை கவனிக்கவிடாமல் செய்வதற்காக,”காற்றின் சத்தத்தைக் கவனி” என்று திரு.ஒயிட் கூறினார். 

”நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்றபடி சதுரங்கப் பலகையைப் கூர்ந்து நோக்கியவனாக, தன்னுடைய கையை நகர்த்திக்கொண்டே,”செக்” என்றான்.

”அவர் இன்றிரவு வருவார் என்று நான் நினைக்கவே இல்லை” சதுரங்கப் பலகையின்மீது அவருடைய கையை நிலைநிறுத்தியவராகக் கூறினார்.

”மேட்” என்றான் மகன்.

”இப்படி வெளியில் தொலைதூரமான இடத்தில் வாழ்வதில் இருக்கும் மோசமான நிலை இதுதான்” என்று திடீரென சத்தமாகக் கூறினார் திரு.ஒயிட்.”வாழத்தகுதியில்லாத, சேறும் சகதியுமாக இருக்கும் இடங்களிலேயே மோசமானதாக இதுதான் இருக்கும். வழியெங்கும் சேறாகவும், தெருவெல்லாம் வெள்ளப்பெருக்காகவும் இருக்கின்றது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தத் தெருவில் இரண்டு வீடுகளில் மட்டுமே குடித்தனங்கள் இருப்பதால், அதை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள் போலும்” 

”கவலைப்படாதீர்கள் செல்லம்” என்று அவர் மனைவி ஆறுதலாகக் கூறினார்.”அடுத்த ஆட்டத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”

திரு. ஒயிட் திடீரென ஒரு கணம், தாய்க்கும் மகனுக்கும் இடையில் நடந்த புரிந்துணர்வுடனான பார்வைப் பரிமாற்றத்தில் தன் கவனத்தை செலுத்தினார். வார்த்தைகள் அவருடைய உதடுகளிலேயே மறைந்துபோக, அவருடைய சாம்பல்நிற தாடிக்குள், மெலிதாக அரும்பிய குற்றவுணர்வுடன் கூடிய ஒரு அசட்டுச் சிரிப்பை மறைத்துக் கொண்டார். 

வாசற்கதவு சத்தமாக அறைபட்டதையும், காலடித்தடங்கள் கதவை நெருங்கி வருவதையும் கவனித்தவராக”அவர்தான் வந்துவிட்டார்” என்றார் திரு. ஒயிட்.

வரவேற்கும் விதமான பதற்றத்தில் எழுந்துகொண்ட அந்த முதியவர், கதவைத் திறந்தபடி புதிதாக வந்தவரிடம் முகமன் தெரிவித்ததை கேட்க முடிந்தது. வந்திருந்த புதியவரும் முகமன் தெரிவித்ததைத் தொடர்ந்து, தன் கணவர் உயரமும் திடகாதிரமுமான, சிவப்பான முகத்தில் கூர்மையான கண்களைக் கொண்ட மனிதருடன் அறைக்குள் நுழைவதைக்கண்ட திருமதி வொயிட்,”லொக் லொக்” என்று இருமினார். 

”சார்ஜண்ட் மேஜர் மோரிஸ்” என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 

சார்ஜண்ட் மேஜர் கைகளை விலக்கிக்கொண்டு, கணப்பு தீயருகே தனக்கு வழங்கப்பட்ட இருக்கையை ஏற்றபடி, தன்னுடைய வரவேற்பாளர், விஸ்கியையும் டம்ளரையும் எடுத்து வருவதையும், செம்பு கெட்டிலை நெருப்பின்மீது வைப்பதையும் நிறைவுடன் கவனித்தார். 

மூன்றாவது கோப்பையின் முடிவில் அவருடைய கண்கள் பிரகாசிக்க, பேசத்துவங்கினார். அந்த சிறிய குடும்பம், பல்வேறு நாடுகளில் பயணப்பட்டு வந்திருக்கும் அந்த விருந்தினர், தன் அகன்ற தோள்களை நாற்காலியில் சாய்த்துக்கொண்டு, பயங்கரமான காட்சிகள், வீரதீர செயல்கள், போர்கள், ப்ளேக் தொற்று போன்றவற்றைக் குறித்தும், விசித்திரமான மனிதர்கள் குறித்தும் பேசிக்கொண்டிருந்ததை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர். 

”இருபத்தியோரு ஆண்டுகள் ஆகிவிட்டது” என்று திரு. ஒயிட், தலையை ஆட்டியபடி தன் மனைவி மற்றும் மகனிடம் சொன்னார்.”அவர் அங்கிருந்து வெளியேறியபோது, கிட்டங்கியில் வேலைப் பார்க்கும் இளைஞனைப் போல இருந்தார். இப்பொழுது இவரைப் பார்” 

பெரிதாக அவருக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை” என்று திருமதி. ஒயிட் பணிவுடன் கூறினார்.

”நானும் இந்தியாவிற்குப் போக விரும்புகிறேன்” என்றார் அந்த முதியவர்.”வெறுமனே சற்று சுற்றிப்பார்க்கலாம் என்பதற்காகத்தான்” 

”நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பதுதான் நல்லது” என்று தன் தலையை ஆட்டியபடி சார்ஜண்ட் மேஜர் கூறினார். அவர் காலிக்கோப்பையை கீழே வைத்தார். மெல்லிய பெருமூச்சுடன் அதை எடுத்து மறுபடியும் கவிழ்த்தார்.

”அங்குள்ள பழமையான கோயில்கள், துறவிகள் மற்றும் மந்திரவாதிகளைப் பார்க்க விரும்புகிறேன்” என்றார் அந்த வயோதிகர்.”நீங்கள் அன்றைக்கு குரங்கின் பாதம் என்று எதைப்பற்றியோ சொல்லவந்தீர்களே மோரிஸ், அது என்ன?”

”ஒன்றுமில்லை” என பதற்றத்துடன் சொன்னார் அந்தப் படைவீரர்.”அப்படி கேட்பதற்கு அது ஒன்றும் அவ்வளவு மதிப்பானதல்ல” 

”குரங்கின் பாதமா?” என்று திருமதி ஒயிட் ஆர்வமாகக் கேட்டார்.

”அது மாயாஜாலம் என்று சொல்வீர்களே அதுபோலான ஒன்றுதான்” என்று சார்ஜண்ட் மேஜர் வெடுக்கென உரைத்தார்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேருமே ஆர்வமாக முன்னால் வந்தனர். வந்திருந்த விருந்தினர் கவனமின்றி காலியான கோப்பையை உதட்டருகே கொண்டு சென்றுவிட்டு, அதை மறுபடியும் கீழே வைத்தார். அவருக்கு விருந்தளிப்பவர் அந்தக் கோப்பையை மீண்டும் நிரப்பினார்.

”பார்ப்பதற்கு” கையை பாக்கெட்டில்விட்டு துழாவியபடியே,”இது ஒரு விலங்கின் சாதாரணமான உலர்ந்துபோன சிறிய பாதம்”

தன்னுடைய பாக்கெட்டிலிருந்து எதையோ வெளியே எடுத்துக் கொடுத்தார். திருமதி. ஒயிட் முகச்சுளிப்புடன் பின்வாங்கினார், ஆனால் அதை வாங்கிய அவர் மகன் ஆர்வத்துடன் ஆராய்ந்தான்.

”இதில் என்ன சிறப்பு இருக்கிறது?” என்று கேட்டவராக, தன் மகனிடமிருந்து வாங்கி, அதனை ஆய்வு செய்தபின் மேசைமேல் வைத்தார்.

”அது ஒரு வயதான துறவி மந்திரம் செய்திருப்பது” என்றார் சார்ஜண்ட் மேஜர்.”அவரை மிகவும் புனிதத்துவம் வாய்ந்தவர். விதிதான் ஒரு மனிதனின் வாழ்க்கையை ஆள்கிறது, எவர் அதன் குறுக்கே வருகிறார்களோ அவர்கள் துயரத்தை அடைகிறார்கள்” என்பதை நிரூபிக்க விரும்பினார். அவர், மூன்று வெவ்வேறு நபர்கள் அதிலிருந்து மூன்று வரங்களை பெறமுடியும் வகையில் இதனை மந்திரித்து வைத்திருக்கிறார்” என்றார்.

 அவர் சொன்னவிதம் கேட்டுக்கொண்டிருந்தவர்களை மிகவும் ஈர்க்கச் செய்வதாய் இருந்ததில், அதுவரையிலும் சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்தவர்கள், இப்பொழுது லேசாக புன்னகைப்பதுகூட பொருத்தமற்றது என்பதாக கருதினர். 

“நீங்கள் ஏன் உங்களுக்காக மூன்று வரங்களை கேட்கக்கூடாது?” என ஹெர்பர்ட் ஒயிட் சாதுர்யமாகக் கேட்டான்.

அந்த வீரர், நடுத்தர வயதினர் துடுக்குத்தனமான இளைஞர்களை எப்படியான பார்வைப் பார்ப்பார்களோ, அப்படிப் பார்த்தவராக,”நான் பயன்படுத்திவிட்டேன்” என்றபோது அவருடைய சிவந்த முகம் வெளிறிப்போயிருந்தது.

“உங்களுடைய அந்த மூன்று வரங்களும் பலித்ததா?” என திருமதி. ஒயிட் வினவினார்.

“நிறைவேறியது” என்றார் சார்ஜண்ட். அதை சொன்னபோது அவர் கையிலிருந்த கண்ணாடிக் கோப்பை அவருடைய வலுவான பற்களில் மோதிக்கொண்டிருந்தது.

“வேறு யாராவது முயன்றார்களா?”, அந்த மூதாட்டி தொடர்ந்து கேட்டாள்.

“ஆம். முதலாமவனுக்கு மூன்று வரங்களும் நிறைவேறியது” என்பதே பதிலாக வந்தது.”அவன் கேட்ட முதல் இரண்டு வரங்கள் என்ன என்று எனக்குத் தெரியாது, ஆனால், மூன்றாவது வரம் மரணத்துக்கானது. அப்படித்தான் இந்த பாதம் என்னிடம் வந்து சேர்ந்தது” என்றார்.

அவருடைய குரலில் தெரிந்த அதிகப்படியான கவலை, அவர்களிடையே அமைதியை ஏற்படுத்தியது. 

“உங்களுடைய மூன்று வரங்களும் கிடைத்து விட்டதால் இனிமேல் இது உங்களுக்கு பயனில்லாதுதானே மோரிஸ்” என அந்த முதியவர் கேட்டார்.”இதை எதற்காக வைத்திருக்கிறீர்கள்?” 

அவர் தலையை ஆட்டினார்.”பகட்டிற்குத்தான் என்று நினைக்கிறேன்” என மெதுவாகக் கூறினார்.”எனக்கு இதை விற்றுவிடும் எண்ணம்தான் இருந்தது. ஆனால், நான் அதை விற்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே இது எனக்கு போதுமான அளவிற்கு துன்பத்தைத் தந்துவிட்டது. மேலும் இதை மக்கள் யாரும் வாங்க மாட்டார்கள். இதை ஒரு மாயாஜாலக் கதை என்றுதான் சிலர் கருதுகிறார்கள்; வாங்க நினைக்கும் வேறுசிலர், முதலில் இதைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு பிறகுதான் பணம் தருவோம் என்கிறார்கள்”. 

”உங்களுக்கு மேலும் மூன்று வரங்கள் கிடைக்குமென்றால்” என்று அந்த முதியவர் கூர்ந்து சார்ஜன்ட் மேஜரை நோக்கியவராக”நீங்கள் அதைப் பயன்படுத்துவீர்களா?” எனக் கேட்டார்.

“எனக்குத் தெரியாது” என்றார் அந்த சார்ஜண்ட்.”எனக்குத் தெரியாது”

அந்தப் பாதத்தை எடுத்து, அதை தன் ஆட்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் நடுவில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்தவர், அதைத் திடீரென நெருப்பில் தூக்கிப் போட்டார். ஒரு சிறிய சத்தம் எழுப்பியவராக, வொயிட் குனிந்து அதைப் பறித்தார். 

“அது எரிந்துபோகட்டும் விடுங்கள். அதுதான் நல்லது” என்று தீவிரத்துடன் சொன்னார்.

“உங்களுக்குத் தேவையில்லையென்றால் மோரிஸ்” என்ற திரு ஒயிட், “அதை எனக்குத் தாருங்கள்” எனக் கேட்டார்.

“நான் தரமாட்டேன்” என்று அவரின் நண்பர் சிடுசிடுப்புடன் பதிலளித்தார். “நான் அதை நெருப்பில் போட்டுவிட்டேன். நீங்கள் அதை எடுத்து வைத்துக்கொண்டால் அதற்குப் பிறகு நடப்பவற்றுக்கு என்மேல் பழிபோடாதீர்கள். விவேகமுள்ளவராக நடந்துகொண்டு, அதை மீண்டும் நெருப்பிலேயே போட்டுவிடுங்கள்” 

“ஒயிட் தன் தலையை அசைத்தவராக, அவர் கையிலிருந்ததை நெருக்கமாக வைத்து சோதித்தார். “இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?” என்று விசாரித்தார்.

“உங்கள் வலதுகையில் இதைப் பிடித்துக்கொண்டு, சத்தமாக நீங்கள் வேண்டுவதைக் கேளுங்கள்” என்றார் சார்ஜண்ட் மேஜர். “ஆனால், நான் அதன் விளைவுகள் குறித்து உங்களை எச்சரிக்கிறேன்”

“அரேபிய இரவுகள் கதைகள் போல இருக்கிறது” இரவு உணவை எடுத்து வைத்துக்கொண்டே சொன்னார் திருமதி ஒயிட்.”எனக்கு நான்கு ஜோடிக் கைகள் வேண்டும் என்று கேட்டுவிட நினைப்பீர்கள்தானே?”

அவரது கணவர் அந்த தாயத்தை தன் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தவுடன், அந்த மூவரும் வெடித்து சிரிக்கையில், சார்ஜண்ட் மேஜர், முகத்தில் எச்சரிக்கை மின்னும் பார்வையுடன் அவரது கையைப் பற்றினார்.

”எதையாவது கேட்க விரும்பினால்” எனக் கடுமையான தொனியில், “விவேகத்துடன் கேளுங்கள்” என்றார்.

திரு ஒயிட், அதைத் தன் பாக்கெட்டில் போட்டபடியே, அமர்வதற்கான இருக்கைகளை போட்டவராக, தன் நண்பரை சாப்பாட்டு மேசைக்கு உண்பதற்கு வருமாறு அழைத்தார். இரவு உணவின் பரபரப்பில், அந்த தாயத்து சற்று மறக்கப்பட்டது என்பதுடன், அந்த மூவரும் வந்திருந்த ராணுவ வீரரின் இந்திய பயணத்தின் சாகசங்களை ஆர்வத்துடன் இரண்டாம் கட்டமாகக் கேட்கத்துவங்கினர்.

“அவர் நமக்கு சொன்ன கதைகளைவிட, இந்த குரங்கின் பாதம் பற்றியதில் அதிக உண்மை இல்லையென்றால்” விருந்தினர் கடைசி ரயிலைப் பிடிக்க வேண்டி கிளம்பவும், அவரை அனுப்பிவிட்டு கதவை சாத்தும்போது ஹெர்பர்ட், “அதனால் நமக்கு பெரிய லாபமில்லை” என்றான்.

“நீங்கள் இதற்காக அவருக்கு ஏதாவது கொடுத்தீர்களா?” என திருமதி ஒயிட் தன் கணவரிடம் நெருங்கி வந்து விசாரித்தார்.

“கொஞ்சமாக” என்று மெல்லிய வெட்கத்துடன் பதிலளித்தார். “அவர் அதை எதிர்பார்க்கவில்லை, நான்தான் அவரை வாங்கிக்கொள்ள வைத்தேன். அவர் அதை தூக்கியெறிந்துவிடும்படி மீண்டும் வற்புறுத்தினார்”. 

“ஒருவேளை” என ஹெர்பெர்ட் பயந்தவனைப்போல நடித்தவனாக சொன்னான். “ஏன் நாம் ஒருவேளை பணக்காரர்களாகவும், புகழும் மகிழ்ச்சியும் உடையவர்களாகவும் ஆகிவிடலாம். முதலில் நீங்கள் பேரரசனாக ஆகிவிட வேண்டும் என்று கேளுங்கள், பிறகு அம்மாவால் உங்களை ஆட்டிப் படைக்க முடியாது”

அவன் மேசையைச் சுற்றி ஓடினான். திருமதி. ஒயிட் நாற்காலியின் உறையை கையில் எடுத்துக்கொண்டு அவனை தூற்றியபடியே துரத்தினார்.

திரு. ஒயிட் தன் பாக்கெட்டிலிருந்து அந்த குரங்கின் பாதத்தை வெளியில் எடுத்து, சந்தேகத்துடன் அதனைப் பார்த்தார். “எனக்கு என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை என்பதுதான் நிஜம்” என்று மெதுவாகக் கூறினார். “எனக்கு வேண்டிய எல்லாமே என்னிடம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது”

“இந்த வீட்டின் கடன் மட்டும் முடிந்துவிட்டால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்தானே?” என அவரின் தோள்மீது கையைப்போட்டிருந்தபடி கேட்டான் ஹெர்பர்ட். “அப்படியானால் இருநூறு பவுண்டுகள் கேளுங்கள். அது போதும்”

 அவனுடைய தந்தை, தன் பேதமையை நினைத்து வெட்கியவராக, அந்த தாயத்தைக் கையிலெடுத்தார். அவருடைய மகன் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு, தன் தாயாரைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, பியானோவில் சில பிரமாதமான இசைக்குறிப்புகளை வாசித்தான்.

”நான் இருநூறு பவுண்டுகளை வரமாக வேண்டுகிறேன்” என்று அந்த முதியவர் தெளிவாகக் கேட்டார்.

அவரது வார்த்தைகளைத் தொடர்ந்து பியானோவிலிருந்து ஒரு பயங்கரமான சத்தம் எழுந்தது. அந்த சத்தத்தை, முதியவரிடமிருந்து வந்த விம்மல் சத்தம் இடைமறித்தது. அவருடைய மனைவியும் மகனும் அவரை நோக்கி ஓடினர். 

“அது அசைந்தது” கீழே கிடந்த அந்தப் பொருளை சற்று அருவருப்புடன் நோக்கியவராக கத்தினார். “நான் வரத்தை கேட்கவும், அது என்னுடைய கைகளில் பாம்பைப்போல முறுக்கிக்கொண்டது”

“அப்படியா, பணம் எதையும் காணோமே” என்றபடி அதைக் கையிலெடுத்து மேசைமீது வைத்தபடி, “அதை ஒருபோதும் நான் பார்க்கப் போவதில்லை என்று பந்தயம் கட்டுகிறேன்” என்றான்.

“அது உங்களுடைய கற்பனையாக இருக்கும்” என்று அவர் மனைவி பதற்றமாக சொன்னார். 

அவர் தன் தலையை குலுக்கினார். “போகட்டும் விடு. எந்தக் கெடுதலும் நடக்கவில்லை, ஆனால் இது எனக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது”

இரண்டு ஆண்களும் புகைப்பிடித்து முடித்திருக்க, அவர்கள் அனைவரும் மீண்டும் நெருப்பருகே சென்று அமர்ந்தனர். வெளியில் எப்பொழுதையும்விட பலமாக காற்று வீசிக்கொண்டிருந்தது, மாடியில் கதவுகள் அடித்துக் கொண்டதில் ஏற்பட்ட சத்தம் அந்த முதியவரை பதற்றமுற வைத்தது. வழக்கத்திற்கு மாறாக, மூவருக்குள்ளும் மனச்சோர்வுடன் கூடிய அமைதி நிலவியது. அது அந்த முதிய தம்பதியர் அன்றைய இரவுத் தூக்கத்திற்காக தங்கள் படுக்கைக்கு செல்ல எழுந்து கொள்ளும்வரை நீடித்தது.

“உங்கள் படுக்கையின் நடுவில், பணம் ஒரு பெரிய மூட்டையில் கட்டப்பட்டு கிடக்கப்போகிறது என்று நினைக்கிறேன்” என இரவு வணக்கம் தெரிவிக்க வந்த ஹெர்பர்ட் கூறியதோடு, “உங்கள் அலமாரியின் மீதிருந்து ஒரு பயங்கரமான உருவம் உங்களுடைய அந்த சட்டவிரோதமான பணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்” எனக் கிண்டலாகச் சொன்னான். 

அவன் தனியனாக இருளில் அமர்ந்தபடி, அணைந்து கொண்டிருந்த நெருப்பையும் அதில் தோன்றிய முகங்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கடைசியில் ஒரு மனிதக்குரங்கின் முகம் பயங்கரமாகத் தெரிவதை வியப்புடன் பார்த்தான். அது மிகவும் தெளிவாகத் தெரியத் துவங்கியதும், சற்றே அசௌகரியமான சிரிப்புடன், அதன்மீது தண்ணீர் ஊற்றிட நினைத்து, மேசையை நோக்கி தண்ணீர் நிரம்பியக் கோப்பையை எடுக்க வேண்டி, கையை நீட்டினான். அவனது கரங்கள் அந்த குரங்கின் பாதத்தைப் பற்றிக்கொண்டது. ஒரு சிறிய நடுக்கத்துடன் அவன் தன் கோட்டில் கையைத் துடைத்துக் கொண்டு படுக்கைக்குச் சென்றான்.

பாகம் 2

அடுத்தநாள் காலை, கூதற்கால சூரியனின் கிரணங்கள் சாப்பாட்டு மேசையின்மீது படர்ந்தபோது, அவர் தான் பயந்ததை நினைத்து சிரித்துக்கொண்டார். அந்த அறையில் முந்தைய நாளில் இல்லாதவிதமாக இதமான காற்றும், சூழலும் நிலவியது. அந்த அழுக்கடைந்து சுருங்கிப்போன குரங்கின் பாதம், அதன் மகிமைகளின்மேல் எந்தவிதமான நம்பிக்கையின் அறிகுறியும் இல்லாததாய் அலட்சியமாக ஓரத்தில் கிடந்தது. 

”எல்லா வயதான ராணுவத்தினரும் இதே மாதிரிதான் இருப்பார்கள்போல” என்றார் திருமதி. ஒயிட்.”நாமும் இப்படி அவர் அபத்தமானவைகளை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தோமே! இந்தக் காலத்தில் எப்படி வரங்களை பெறமுடியும்? அப்படியே இருந்தாலும், இருநூறு பவுண்டுகள் உங்களுக்கு என்ன கெடுதலை ஏற்படுத்திவிட முடியும்?”

”வானத்திலிருந்து அவர் தலைமீது விழுந்தால் கெடுதல் ஏற்படக்கூடும்” என்றான் ஹெர்பர்ட் விளையாட்டுத்தனமாக.

”மோரிஸ் எல்லாம் இயல்பாகத்தான் நடக்கும் என்று சொன்னார்” என்றார் அவனது தந்தை. “விரும்பினால் அதை நீங்கள் எதேச்சையாக நடந்தவற்றோடு பொருத்திக் கொள்ளலாம்” என்றும் கூறினார். 

”சரி. நான் வருவதற்குள் பணத்தை செலவழித்துவிடாதீர்கள்” என சொல்லியவாறே மேசையிலிருந்து எழுந்தான். “அது உங்களை பேராசைகொண்ட அற்பனாக மாற்றிவிடக்கூடுமோ என பயமாக இருக்கிறது. பிறகு நாங்கள் உங்களை கைவிடவேண்டியிருக்கும்”

அவனது தாயார் சிரித்தபடியே அவனைk கதவுவரைக்கும் தொடர்ந்தவர், அவன் தெருவின் கோடிக்கு செல்லும்வரை கவனித்துக் கொண்டிருந்தார். பின்பு சாப்பாட்டுமேசைக்கு வந்தவர் தன் கணவரின் பேதமையை நினைத்து சிரித்தபடி இருந்தார். என்றாலும் தபால்காரர் வந்து கதவைத் தட்டியதும் விரைந்து கதவுப்பக்கம் போகத்தான் செய்தார். அவர் கொண்டு வந்தது ஒரு தையற்கடையின் கட்டண ரசீது என்பதைப் பார்த்துவிட்டு, ஓய்வுபெற்ற எல்லா சார்ஜண்ட் மேஜர்களையும் கடுமையான சொற்களால் குறிப்பிட்டார்.

”ஹெர்பர்ட் கலாய்த்து பேசுவதற்கு, அவன் வீடு வந்ததும் இன்னும் நிறைய இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்” என்று இரவு உணவிற்காக அவர்கள் இருவரும் அமர்ந்தபோது குறிப்பிட்டார்.

“அப்படித்தான் நினைக்கிறேன்” என்றார் கோப்பையில் தனக்காக பியரை ஊற்றிக்கொண்டே, திரு ஒயிட். “ஆனால் அது என் கையில் அசைந்தது என்பது சத்தியமானது”

“அப்படி உங்களுக்குத் தோன்றுகிறது” என்றாள் அந்த மூதாட்டி ஆறுதலாக.

“நான் அது அசைந்தது என்கிறேன்” என்றார். “தோன்றவெல்லாம் இல்லை. நான் அதை… என்ன விஷயம்?”

அவர் மனைவி பதிலெதுவும் சொல்லவில்லை. அவர் வெளியில் ஒரு மர்மமான மனிதனின் நடமாட்டத்தையும், அவன் உள்ளே நுழைய தயக்கம் காட்டுவதாகத் தோன்றியதையும் கவனித்தவராக இருந்தார். அந்த இருநூறு பவுண்டுகள் பற்றிய நினைவுகள் மனதில் நின்றதில், அந்த அந்நியன் நன்றாக உடுத்தியிருப்பதையும், பளபளப்பான புதிய பட்டுத் தொப்பி அணிந்திருந்ததையும் கவனித்தார். அந்த மனிதர் மூன்றுமுறை கதவருகே சென்று ஒருகணம் நின்றுவிட்டு மீண்டும் வந்தார். நான்காவதுமுறை அதன்மீது கையை வைத்து, சடாரெனெ அதைத் திறந்துகொண்டு, பாதையில் நடக்கத் தொடங்கினார். அதேவேளை திருமதி. ஒயிட், தன் கைகளை பின்னால் கொண்டு சென்று, தான் அணிந்திருந்த ஏப்ரனின் கயிறுகளைத் தளர்த்திக்கொண்டு, அந்த முக்கியமான வஸ்துவை நாற்காலியின் மெத்தைகளுக்கு அடியில் தள்ளினார்.

சங்கடமாகத் தெரிந்த அந்த அந்நியனை அறைக்குள் அழைத்து வந்தார். அந்த அறையின் நிலைமைக்காகவும், தன் கணவர் தோட்டவேலைக்காக பயன்படுத்தும் அங்கிக்காகவும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவர் அந்த மூதாட்டியை ஓரப்பார்வையால் பார்த்துக்கொண்டிருந்தார். அவர், தான் வந்த விஷயத்தை சொல்வதற்காக ஒரு பெண் எவ்வளவு நேரம் பொறுமை காக்க முடியுமோ அவ்வளவு நேரம் பொறுமையோடு இருந்தார். வந்தவர் ஆரம்பத்தில் அமைதியாகவே இருந்தார்.
“என்னை அழைத்து பேசச் சொன்னார்கள்” என்று கடைசியாக சொல்லியபடி தன் கால்சட்டைப் பையிலிருந்து ஒரு பருத்தித் துண்டை எடுத்தார். “நான் மா அண்ட் மெகின்ஸ் நிறுவனத்திலிருந்து வந்திருக்கிறேன்” என்றார்.

அந்த மூதாட்டி திடுக்கிட்டவராக, “என்னவாயிற்று?” என மூச்சுத்திணறியபடி கேட்டார். “ஹெர்பர்டுக்கு ஏதாவது நடந்துவிட்டதா? என்னது அது? என்னவாயிற்று?” 

அவருடைய கணவர் இடைமறித்தார். “இரு இரு அம்மாவே” என்றார் அவர் பதற்றத்துடன். “உட்கார்ந்துகொள், மோசமாக எதையும் நினைக்காதே. நீங்கள் ஏதும் மோசமான செய்தியைக் கொண்டுவரவில்லைதானே, நான் சரியாகத்தான் நினைக்கிறேன்” என்றபடி அவரை ஏக்கத்துடன் பார்த்தார்.

“என்னை மன்னிக்கவும் —-” என்று தொடங்கினார் வந்திருந்தவர்.

“அவனுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா” எனத் தாயார் பதற்றமாக கேட்டார்.

“மிகவும் மோசமாக” என்று ஆமோதிப்பதாக தலை குனிந்தார். “ஆனால், அவருக்கு எந்த வலியும் இல்லை” என அமைதியாக சொன்னார்.

“ஓ, கடவுளுக்கு நன்றி” என்று தன் கைகளைக் கோர்த்தபடி, “அதற்காக கடவுளுக்கு நன்றி! நன்றி —–”

அந்த வார்த்தைகளில் இருந்த பயங்கரத்தின் அர்த்தம் அவரை மெல்லத் தாக்கியதில் அவர் உடைந்துபோனார். அதோடு, வந்திருந்தவர் முகத்தைத் திருப்பிக் கொண்டதில் அவருடைய பயம் உறுதிப்பட்டது. அவர் தன்னுடைய மூச்சைப் பிடித்துக்கொண்டு, மெதுவாகப் புரிந்துகொள்ளும் அவருடைய கணவரின் கரங்களில் தனது நடுங்கும் கரங்களை வைத்தார். அங்கு நீண்டதொரு அமைதி நிலவியது.

“அவர் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார்” எனக் கடைசியில் அந்த நபர் மெதுவாகக் கூறினார்.

 அவர் ஜன்னல் வழியாக வெறித்துப்பார்த்தபடி, தன் மனைவியின் கரங்களை, தனது கரங்களுக்குள் அழுத்திக்கொண்டு நாற்பது ஆண்டுகளுக்குமுன், அவர் காதலித்தபோது செய்ததைப்போலவே அழுத்தமாக பற்றிக்கொண்டிருந்தார். 

“எங்களுக்கென இருந்தது அவன் மட்டும்தான்” என்று மெதுவாக வந்திருந்தவரைப் பார்த்து திரும்பியபடி சொன்னார்.

வந்திருந்தவர் இருமியபடி எழுந்து மெல்ல ஜன்னலருகே சென்றார். “உங்களது இந்த பெரிய இழப்பிற்கு நிறுவனம் வருத்தம் தெரிவிக்க சொல்லியிருக்கிறது” என்று பார்வையை எந்த பக்கமும் திருப்பாமல் தெரிவித்தார். “நான் நிறுவனத்தாரின் கட்டளைகளுக்கு அடிபணியும் பணியாளன் மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” 

எந்த பதிலும் வரவில்லை; அந்த மூதாட்டியின் முகம் வெளிறிப்போயிருந்தது, கண்கள் வெறித்தபடியிருக்க, அவரது மூச்சு சத்தமின்றி வந்துகொண்டிருந்தது: அவரது கணவரின் முகத்தில், அவர் சார்ஜண்ட் மேஜராக இருந்து, முதல்முறை போரை சந்தித்தபோது தோன்றிய அதே அதிர்ச்சி தெரிந்தது. 

“மா அண்ட் மெக்கின்ஸ் எல்லாப் பொறுப்புகளையும் மறுத்திருக்கிறது” என்று தொடர்ந்தார் வந்திருந்தவர். “அவர்கள் எந்தவித பொறுப்பையும் ஏற்கவில்லை என்றாலும் உங்களுடைய மகனின் சேவையை மனதில் கொண்டு, உங்களுக்கு ஒரு தொகையை இழப்பீடாக வழங்க முன்வந்திருக்கிறது”

திரு ஒயிட் தன் மனைவியின் கைகளை விட்டுவிட்டு, எழுந்து நின்று பயம் கலந்த பார்வையுடன் வந்திருந்தவரைப் பார்த்தார். அவரது உலர்ந்த உதடுகள் வார்த்தைகளை கோர்த்தது. “எவ்வளவு?”

“இருநூறு பவுண்டுகள்” என்பதே பதிலாக வந்தது.

அவருடைய மனைவியின் அலறலைக்கூட அறியாதவராக, மயக்கத்துடன் புன்முறுவல் செய்தபடி, பார்வையற்றவரைப்போல கைகளை நீட்டிக்கொண்டு தரையில் நிலைகுலைந்து விழுந்தார்.

பாகம் 3

இரண்டு மைல்களுக்கு அப்பால் இருந்த புதிய கல்லறைத் தோட்டத்தில், அந்த முதிய தம்பதியர் தங்கள் மகனை அடக்கம் செய்துவிட்டு, நிழலும் அமைதியும் படர்ந்த தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். எல்லாம் விரைவாகவே முடிந்துவிட்டது. முதலில் அவர்களால் அதை உணர்ந்துகொள்ளக்கூட முடியவில்லை. ஏதோ நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடனேயே இருந்தனர். ஏதோ ஒன்று, அந்த முதியவர்களின் இதயங்களால் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் பாரத்தை லேசாக்கும் வகையில் நடக்கப் போகிறதென்று எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். 

ஆனால், நாள்கள் கடக்க ஆரம்பித்தன, எதிர்பார்ப்புகள் குறையத்தொடங்கி, நடந்ததை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வழிவகுத்தது. அந்த முதிய தம்பதியர் நம்பிக்கை இழந்துபோய் அதை ஏற்றுக்கொண்ட மனோபாவம், சிலசமயம் அது உணர்ச்சியற்ற மனநிலை எனத் தவறாக கருதப்பட்டது. இப்பொழுதெல்லாம் அவர்களுக்குள் பேசிக்கொள்ள எதுவுமே இல்லையென்பதால் அவர்கள் பேசிக்கொள்வதேயில்லை. அவர்களுடைய நாள்கள் நீண்டு சலிப்பானதாய் மாறிப்போயிருந்தது.

ஒரு வாரத்திற்குப் பிறகு தூக்கத்திலிருந்து திடீரென விழித்த அந்த முதியவர், கையை நீட்டியபோது, படுக்கையில் தான் மட்டும் தனியாகப் படுத்திருந்ததை கண்டார். அந்த அறை இருட்டாக இருந்தது, ஜன்னல் பக்கத்திலிருந்து மெலிதாக அழுகை சத்தம் கேட்டது. அவர் படுக்கையைவிட்டு எழுந்து அதனை செவிமடுத்தார்.

“திரும்பி வா” மென்மையாக அழைத்தார். “உனக்கு குளிராக இருக்கும்”

“என் மகனுக்கு இன்னும் அதிகமாக குளிரும்” என்ற அந்த மூதாட்டி மீண்டும் அழத்தொடங்கினாள்.

அந்த அழுகை அவருடைய காதுகளை எட்டாமல் போனது. அவருடைய படுக்கை வெம்மையாகவும், அவரது கண்களில் தூக்கம் அழுத்தவும் செய்தது. அவர் அவ்வப்போது விழித்தபடி தூங்கிக் கொண்டிருந்தவர், அவரது மனைவியின் பெரிய அழுகை சத்தத்தில் முற்றிலுமாக விழித்துக்கொண்டார். 

“பாதம்” என்றபடி பெரிதாக அழத்தொடங்கினார் அந்த அம்மையார். “அந்த குரங்கின் பாதம்!”

அவர் பதற்றமாக எழுந்தார். “எங்கே? எங்கே அது? என்னவாயிற்று?”

அவருடைய மனைவி அறையில் அவரை நோக்கி தட்டுத்தடுமாறியபடி வந்தார். “எனக்கு அது வேண்டும்” அமைதியாக கேட்டார். “நீங்கள் அதை அழித்துவிடவில்லையே?”

“அது வரவேற்பரையில், மேல் பலகையில் இருக்கிறது” என்று வியப்பு மேலிட பதிலளித்தார். “ஏன்?”

அவர் அழுவதையும் சிரிப்பதையும் ஒன்றாகச் செய்தார், குனிந்து அவர் கன்னங்களில் முத்தமிட்டார்.

“அதைப் பற்றிய நினைவு வந்தது. எனக்கு ஏன் முன்பே நினைவுக்கு வரவில்லை? நான் ஏன் அதைப் பற்றி யோசிக்கவேயில்லை?” என்று வெறிகொண்டவராகப் பேசினார்.

“எதைப் பற்றி நினைக்கவில்லை?” என திரு. ஒயிட் வினவினார்.

“மற்ற இரண்டு வரங்களை” என்று உடனேயே பதிலளித்தார் அவர் மனைவி. “நாம் ஒன்றைத்தான் பயன்படுத்தினோம்”

“அது போதாதா?” அவர் கடுமையாகக் கேட்டார்.

“இல்லை” அவர் ஒருவிதமான களிப்புடன் கத்தினார். “நமக்கு இன்னும் ஒரு வரம் மிச்சமிருக்கிறது. சீக்கிரம் கீழே சென்று அதை எடுத்து வந்து நம் மகன் மீண்டும் உயிருடன் வரவேண்டும் என்ற வரத்தை கேளுங்கள்”

அந்த மனிதர் கட்டிலில் அமர்ந்து, நடுங்கும் தன் கால்களிலிருந்து போர்வையை விலக்கினார். “கடவுளே! நீ பைத்தியமாகிவிட்டாய்” எனத் திகிலடைந்தவராய் கத்தினார். 

“அதைக் கொண்டு வாருங்கள்” அவருக்கு இரைத்தது. “அதை சீக்கிரமாக எடுத்து வாருங்கள், வரத்தை கேளுங்கள் ——- என் மகன், என் மகன்”

அவருடைய கணவர் தீக்குச்சியை உரசி மெழுகுவர்த்தியை ஏற்றினார். “படுக்கைக்கு திரும்பி வா” தளர்ந்துபோனவராக அழைத்தார். “நீ சொல்வது என்னவென்று உனக்குத் தெரியவில்லை”

“நாம் கேட்ட முதல் வரம் கிடைத்ததுதானே” என அவசர அவசரமாகக் கேட்டார். அந்த மூதாட்டி. “அப்படியானால் ஏன் இரண்டாவது கூடாது?”

“அது எதேச்சையாக நடந்தது” அந்த முதியவர் திணறினார்.

“போய் எடுத்து வாருங்கள், வந்து வரத்தைக் கேளுங்கள்” அவர் மனைவி உற்சாகத்தில் நடுங்கியபடி கத்தினார்.

அந்த முதியவர் திரும்பி அவளைப் பார்த்தார், அவர் குரல் நடுங்கியது. “அவன் இறந்து பத்து நாள்கள் ஆகிவிட்டது, மேலும் — இதை நான் உன்னிடம் சொல்ல விரும்பவில்லை, அவனை அவனுடைய உடையைக் கொண்டுதான் அடையாளம் காணமுடிந்தது. அப்போதே உன்னால் அவனைப் பார்க்க முடியவில்லை எனும்போது இப்பொழுது எப்படி?”

“அவனைத் திரும்பக் கொண்டுவாருங்கள்” அந்த மூதாட்டி கரைந்தபடி அவரைக் கதவுப்புறமாக இழுத்துச் சென்றார். “நான் பாலூட்டி வளர்த்த என் மகனைப் பார்த்து நானே பயப்படுவேனா?” 

அவர் இருட்டில் கீழிறங்கி வரவேற்பறைக்குச் சென்றார். அங்கிருந்த கணப்பு அடுப்பின் மேல்பக்கமிருந்த அலமாரியை அடைந்தார். அந்த தாயத்து அதன் இடத்திலேயே இருந்தது. அவர் கேட்பதற்குள்ளாகவே, அது சிதைந்துபோன அவரின் மகனை அவர் அறையைவிட்டு வெளியேறுவதற்குள்ளாகவே கொண்டுவந்து நிறுத்திவிடுமோ என்ற பயங்கரமான அச்சம் அவருக்கு ஏற்பட்டதில், அவருக்கு மூச்சடைத்து விட்டது. அறையைவிட்டு வெளியேறும் வழிகூட தெரியாமல் போனது. நெற்றி, வியர்வையில் குளிர்ந்திருக்க, மேசையை சுற்றிக்கொண்டு, சுவரைப் பிடித்தபடியே குறுகலான நடைபாதையில் அந்த அருவருப்பான பொருளைப் பிடித்தபடி நின்றார். 

அவர் அறைக்குள் நுழைந்தபோது, அவருடைய மனைவியின் முகமுமே மாறிவிட்டிருந்ததாகத் தோன்றியது. அது வெளிறிப்போய் எதிர்பார்ப்பு நிரம்பியதாய் காணப்பட்டது. அச்சத்தில் இருந்த அவருடைய கண்களுக்கு அது இயற்கைக்கு மாறாக இருப்பதாகத் தெரிந்தது. அவர் தன் மனைவியைப் பார்த்து பயந்தார்.

“வரத்தை கேளுங்கள்” அவருடைய மனைவியின் குரல் அழுத்தமாக வந்தது.

“இது முட்டாள்தனமும், மோசமானதும்” என்று கூறிய அவர் தளர்ச்சியடைந்தார்.

“கேளுங்கள்” அவருடைய மனைவி மீண்டும் வலியுறுத்தினார்.

அவர் தன் கையை உயர்த்தி, “என் மகன் மீண்டும் உயிருடன் வரவேண்டும்” என்றார்.

அந்த தாயத்து தரையில் விழுந்தது, அவர் அதை அச்சத்துடன் பார்த்தார். பிறகு நடுங்கியபடி நாற்காலியில் புதைந்து கொண்டார். அந்த மூதாட்டி எரிச்சலெடுக்கும் கண்களுடன், ஜன்னலை நோக்கி நடந்து சென்று அதன் திரையை விலக்கினார். 

அந்த முதியவள் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பதை அவ்வப்போது கவனித்தபடி, அவர் உடல் குளிர்ந்துபோகும்வரை அங்கேயே அமர்ந்திருந்தார். சீன மெழுகுவர்த்தித்தாங்கியின் விளிம்புவரை எரிந்து முடிந்திருந்த மெழுகுவர்த்தியிலிருந்து எழுந்த ஜுவாலை, அது முற்றிலும் அணைந்து போவதற்குமுன் சுவரிலும் விட்டத்திலும் அசையும் நிழல் பிம்பங்களை பிரதிபலித்தது. அந்த முதியவர், அந்த தாயத்து தன் வேலையை செய்யவில்லை என்பதில் ஏற்பட்ட சொல்லமுடியாத ஒருவித நிம்மதி உணர்வுடன், தன் படுக்கையை நோக்கி நகர்ந்தார். ஒரு நிமிடம் கழித்து, அந்த மூதாட்டி மௌனமாகவும் உணர்ச்சியற்றவளாகவும் படுக்கைக்குத் திரும்பி வந்தார்.

 இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல், கடிகாரம் துடிப்பதைக் கேட்டபடி அமர்ந்திருந்தனர். படிக்கட்டில் ஏதோ சத்தம் கேட்டது. கீச்சென ஒலியெழுப்பியபடி சுவர் பக்கமாக ஒரு எலி ஓடியது. அங்கு நிலவிய இருள் கொடுமையானதாகத் தோன்றியது. சற்றுநேரம் படுத்தபடி கிடந்தவர், தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்துப் பற்ற வைத்தார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மெழுகுவர்த்தியை எடுத்துவர கீழே சென்றார். 

அவர் கடைசி படிக்கட்டை அடைந்தபோது தீக்குச்சி அணைந்துபோய்விட்டது. மற்றொன்றை பற்றவைக்க நிதானித்தார். அதேநேரம் மிகவும் மென்மையாக, கிட்டத்தட்ட கேட்கமுடியாத அளவிற்கான ஒலியில் முன்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

அவர் கையிலிருந்து தீக்குச்சிகள் நடைபாதையெங்கும் விழுந்து சிதறின. அவர் அசைவற்று நின்றார், அடுத்த சத்தம் கேட்கும்வரை அவருடைய மூச்சே நின்றுபோனதுபோல் இருந்தது. அவர் திரும்பி சட்டென தன்னுடைய அறைக்குள் நுழைந்து, தன் பின்னாலிருந்த கதவை சாத்திவிட்டார். மூன்றாவது முறையாக வந்த சத்தம் வீடு முழுவதிலும் கேட்டது. 

“என்னதது?” என அந்த மூதாட்டி கேட்கத் தொடங்கினாள்.

“ஒரு எலி” குரல் நடுக்கமெடுக்க அந்த முதியவர் பதிலளித்தார். “ஒரு எலி படிக்கட்டில் என்னைக் கடந்து சென்றது”

அவரது மனைவி அதைக் கேட்டுக்கொண்டே படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். ஒரு பலமான சத்தம் வீடெங்கிலும் எதிரொலித்தது. 

“அது ஹெர்பர்ட்” 

அவர் மனைவி கதவை நோக்கி ஓடினார். ஆனால் அவருடைய கணவர் அவருக்கு முன்னால் தன் மனைவியின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு நின்றிருந்தார்.

“நீ என்ன செய்யப் போகிறாய்?” கரகரப்பான குரலில் கிசுகிசுத்தார்.

“அது என் மகன், அது ஹெர்பர்ட்!” இயந்திரத்தனமாக தன்னை விடுவித்துக்கொள்ள போராடியபடி கத்திக்கொண்டிருந்தார். “அவன் இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டேன். நீங்கள் எதற்காக என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்னைப் போகவிடுங்கள் நான் கதவைத் திறக்க வேண்டும்”

“ஐயோ கடவுளே, அதை உள்ளே விடாதே” அந்த முதியவர் நடுங்கியபடி கரைந்தார். 

“உங்கள் சொந்த மகனைப் பார்த்து பயப்படுகிறீர்கள்” சிரமத்துடன் கத்திக்கொண்டே, “என்னைப் போகவிடுங்கள். நான் வருகிறேன் ஹெர்பர்ட், நான் வந்துகொண்டிருக்கிறேன்”

இன்னொருமுறை கதவுத் தட்டப்பட்டது, மற்றுமொருமுறை. அந்த மூதாட்டி சடாரென தன்னை விடுவித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினார். அவருடைய கணவர் அவரைப் பின்தொடர்ந்து, மாடிப்படி சந்திப்பில் நின்றபடி, கீழே இறங்கிக் கொண்டிருந்த அவருடைய மனைவியிடம் மன்றாடினார். அவருக்கு சங்கிலி அசைந்தாடும் சத்தமும் அதைத் தொடர்ந்து தாழ்ப்பாள் நிதானமாகவும் உறுதியுடனும் விலக்கப்படும் சத்தமும் கேட்டது. பின்னர் அந்த மூதாட்டியின் குரல் மூச்சுத் திணறலுடன் வெளிப்பட்டது. 

“இந்த தாழ்ப்பாள்” சத்தமாக அழைத்தார். “எனக்கு எட்டவில்லை. கீழே வாருங்கள்”

ஆனால், அவருடைய கணவர் தரையில் முழங்காலிட்டு ஆவேசமாக அந்த பாதத்தைத் தேடிக்கொண்டிருந்தார். வெளியிலிருக்கும் அது உள்ளே வருவதற்குள் கண்டுபிடித்துவிட வேண்டும். வீடெங்கும் துல்லியமான தட்டல் சத்தம் தொடர்ச்சியாக எதிரொலித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி நாற்காலியை கதவுப் பக்கமாக இருந்த நடைபாதையில் இழுத்துச் செல்லும் சத்தம் கேட்டது. அதே சமயம் தாழ்ப்பாள் மெதுவாக இறங்கும் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்த அதே கணத்தில் அவர் அந்தக் குரங்கின் பாதத்தைக் கண்டுபிடித்து விட்டார் என்றதோடு, மூச்சிரைக்க பதட்டமாக மூன்றாவது வரத்தையும் கேட்டே விட்டார். 

 சடாரென தட்டல் சத்தம் நின்று போனது. அதன் எதிரொலி வீட்டிற்குள் இன்னமும் இருந்துகொண்டிருந்தது. அவருக்கு நாற்காலி பின்னால் இழுக்கப்பட்டு கதவு திறக்கப்பட்ட சத்தம் கேட்டது. வெளியிலிருந்து குளிர்ந்த காற்று படிக்கட்டுகளில் மோதி மேலெழுந்தது. ஏமாற்றமும் துயரமும் கலந்த அவருடைய மனைவியின் ஓலம் அவரைத் தன் மனைவியை நெருங்கவும், அவரைக் கடந்து கதவுவரை செல்வதற்குமான தைரியத்தையும் கொடுத்தது. எதிரில் மினுங்கிக் கொண்டிருந்த தெருவிளக்கு அமைதியாக வெறிச்சோடிக்கிடந்த தெருவின்மீது ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது. 

டபிள்யு. டபிள்யு. ஜேக்கப்ஸ் (1863-1943)- இங்கிலாந்தை சேர்ந்த சிறுகதையாசிரியர் மற்றும் நாடகாசிரியர். நகைமுரண்களான விஷயங்களையும் பகடிகளையும் திறம்பட கதைகளில் கையாள்பபவர். இவருடைய ஆகச் சிறந்த சிறுகதை “Monkey’s  Paw” அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.

***

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. காஃப்காவின் “உருமாற்றம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

மதிப்பிற்குரிய பெண்

0

கேட் சோப்பின்

தமிழில்: அருந்தமிழ் யாழினி

ன் கணவனுடைய நண்பரான கவர்னேயில் இரண்டு நாளோ அல்லது ஒரு வாரமோ அவர்களுடைய தோட்டத்தில் தங்கப்போகும் செய்தியறிந்ததிலிருந்து திருமதி பரோடா கொஞ்சம் கோபத்தோடு இருந்தார். 

குளிர்காலம் முழுவதும் விருந்தோம்பலிலும் பெரும்பாலான நேரம் நியூ ஆர்லீனிலும் கழிந்திருந்த காரணத்தால் இப்போது எந்த இடையூறும் இல்லாமல் தன் கணவனுடன் ஓய்வு நேரத்தை கழிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கணவருடைய நண்பர் கவர்னேயில் இங்கு ஒரு வாரம் தங்கபோவதாய் சொன்னது அவருக்கு கோபத்தை வரவழைத்தது. 

அந்த நண்பரைப் பற்றி நிறைய கேட்டிருக்கிறாளே தவிர அவரைப் பார்த்ததில்லை. அந்த நண்பர் கணவருடைய கல்லூரித் தோழன். இப்போது பத்திரிகையாளராக இருக்கிறார். நகரவாசியும் கூட. அந்த காரணத்தினாலே அவரை இதற்கு முன்பு சந்தித்ததில்லை. ஆனால் திருமதி பரோடா அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை தன்னுடைய ஆழ்மனதில் வரைந்து வைத்திருந்தாள். ஒல்லியாக, உயரமாக நம்பிக்கையற்ற கண் கண்ணாடியை போட்டுக்கொண்டு பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளை வைத்துக்கொண்டு கற்பனை செய்யும் போதே அவரை இவளுக்கு பிடிக்கவே இல்லை. கவர்னெயில் கொஞ்சம் ஒல்லி தான் ஆனால் உயரமாகவோ நம்பிக்கையற்றவராகவோ இல்லை. கண்களில் மூக்கு கண்ணாடியோ பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளோ கூட வைத்திருக்கவில்லை. சொல்லப்போனால் முதலில் அவரைப் பார்க்கும்போது இவளுக்கு பிடித்திருந்தது. 

அவரை எதனால் இவளுக்கு பிடித்திருந்தது என அறிய முற்படுகையில் கூட அவளால் அது சரியாக சொல்ல முடியவில்லை. அவளது கணவன் கேஸ்டன் சொல்லி இருந்ததைப் போன்ற அறிவாளித்தனமான நம்பிக்கைக்குறிய பண்புகள் எதுவும் அவரிடம் அவளால் கண்டறிய முடியவில்லை. மாறாக அவரை வீட்டில் இருப்பது போல் சௌகரியமாக உணர வைக்கும் வகையில் அவள் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பேச்சிற்க்கும் இசைந்து கொடுத்தவராக கேஸ்டனுடைய வெளிப்படையான விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வது போன்று அமைதியாக இருந்தார். எந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணிடம் எதிர்பார்க்கும் அத்தனை குணநலங்களோடு அவர் இருந்தார். ஆனால் அவர் வெளிப்படையாக அவளுடைய அனுமதிக்காகவோ மதிப்பு பெற வேண்டும் என்பதற்காகவோ எதையும் செய்யவில்லை. 

அந்த நிலத்தில் குடியேறிய பிறகு, அங்கிருக்கும் விரிந்த வராண்டாவில் எழுப்பப்பட்டிருக்கும் கொரிந்திய தூண்களுடைய நிழல்களின் கீழ் அலாதியாக அமர்ந்துக்கொண்டு கேஸ்டனினுடைய கரும்பு விவசாயம் பற்றிய அனுபவங்களை சிகரெட் பிடித்துக் கொண்டு கேட்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பெரிய கரும்பு தோட்டத்தின் வழியாக கதகதப்பான வாசனை மிக்க வெல்வட்டின் மிருதுவான தொடுதலை போன்று வரும் காற்றை அனுபவித்த வாரே “ இதுவல்லவோ வாழ்க்கை” என்று ஆழமான திருப்தியுடன் கூறினார். மேலும் அவரையே சுற்றி சுற்றி வந்த பெரிய நாய்களுடன் பழகுவது மகிழ்ச்சி தந்தது. அவை அன்பாக அவரின் கால்களை உரசிக்கொள்ளும். இப்போது அவருக்கு மீன் பிடிப்பதில் விருப்பமில்லை. கிரோஸ்பெக் பறவைகளை வேட்டையாட கேஸ்டன் அவரை அழைத்தப்போதும் அதில் பெரிய ஆர்வத்தையும் அவர் காட்டவில்லை. 

 திருமதி பரோடாவிற்கு கவர்னெயிலுடைய குணாதிசயம் விடுகதையாகவே இருந்தது. ஆனால் அவளுக்கு அவரைப் பிடித்திருந்தது. அவர் உண்மையாகவே அன்பானவராகவும் தீங்கற்றவராகவும் இருந்தார். அத்தனை நாளை அவள் அவரோடு சேர்ந்து கழித்தப் பிறகும் கூட முன்பு அவரைப் புரிந்து கொள்ள முடியாததை போலவே இப்போதும் இருந்தது. எனவே அவள் குழப்பம் அடைவதை விட்டுவிட்டு கோபத்தோடு இருந்தாள். இந்த மனநிலைக்காகவே அவளின் கணவனையும் வந்திருந்த விருந்தினரையும் தனியாகவே விட்டாள். 

தன்னுடைய எந்த செயல்களையும் கவர்னேயில் பெரிதாக ஈடுபாட்டு காட்ட வில்லை என்று அறிந்ததும் அவள் சில விஷயங்களை செய்யத் துவங்கினாள். அவரோடு சோம்பேறித்தனமாக ஆலைக்கு செல்வதும் நதிக்கரையோரமாக நடப்பதுமாக செய்து கொண்டிருந்தாள். அவரை அறியாமலேயே அவர் தன்னை சுற்றி உருவாக்கிக் கொண்டிருந்த கண்டு கொள்ளப்படாத அந்த மனநிலைக்குள் அவள் நுழைய தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தாள். 

உங்களுடைய நண்பர் எப்போது கிளம்புகிறார்? என அவளின் கணவரிடம் கேட்டாள். “என்னுடைய பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அவர் என்னை மிகவும் வெறுப்படைய செய்கிறார்”. 

“அன்பே எனக்கு புரியவில்லை, அவன் வந்து ஒரு வாரம் தானே ஆகிறது. அவர் உனக்கு எந்த தொந்தரவும் தரவில்லை தானே?” 

“இல்லை.. மற்றவர்களைப் போல அவர் அப்படி இருந்திருந்தால் எனக்கு அவரைப் பிடித்திருக்கும். அவருக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்திருக்க முடியும்.” 

காஸ்டன் தன்னுடைய அழகான மனைவினுடைய முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தி கொண்டு கவலை நிறைந்த அவளுடைய கண்களை கனிவோடு உற்று நோக்கினான். அவர்கள் மிக இயல்பாக திருமதி பரோடாவினுடைய அறையில் தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

“நீ எப்போதும் ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறாய் என் அழகே. என்று அவன் அவளிடம் கூறினான். 

நீ எந்த சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்வாய் என்பதை என்னால் சில நேரம் கணிக்கவே முடியாது”, என அவளை முத்தமிட்டு கண்ணாடி முன் நின்று தனது கழுத்துப்பட்டையை சரி செய்ய திரும்பினார். 

“இங்கே பார் என் அன்பே”, என்று அவன் தொடர்ந்து கூறலானான். “நீ கவர்னெயில் பற்றி தேவையில்லாமல் கவலைப்படுகிறாய். அவன் பெரிதாக எதையும் எதிர்பார்க்கும் ஆளில்லை”. 

“அவன் அப்படித்தான். நிறைய வேலை செய்து நொடிந்து போயிருக்கிறான் அதனால் தான் கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக இங்கே வரச் சொன்னேன்.”

“அவர் நன்கு சிந்திக்க கூடிய மனிதர் என்று தானே சொன்னீர்கள் குறைந்தபட்சம் கொஞ்சமாவது சுவாரசியமானவராக இருப்பார் என்று எதிர்பார்த்தேன்”, என்று கவலை தோய்ந்த சமாதானமடையாதவளாய் கூறினாள். 

“சரி நாளை காலை நான் நகரத்துக்கு சென்று எனது வசந்தகால உடைகளை சரி செய்யப்போகிறேன். கவர்னேயில் இங்கிருந்து கிளம்பி விட்டால் எனக்கு தகவல் சொல்லுங்கள். நான் அத்தை ஆக்டேவின் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன்”. 

அன்று இரவு அவள் தனியாக நடந்து சென்று ஓக் மரத்தின் கீழ இருக்கக்கூடிய ஒரு நாற்காலியின் மீது அமர்ந்தாள். அவளுடைய நோக்கங்களும் எண்ணங்களும் இந்த அளவு குழப்பமாக இருக்கும் என அவள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. அவற்றிலிருந்து பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை என்றாலும் அப்போது அவளுக்கு புரிந்த ஒரே விஷயம் காலையில் எப்படியாவது இந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுதான். 

அந்த கற்கள் நிறைந்த நடை பாதையில் யாரோ நெருங்கி வரும் காலடித்தட சத்தம் திருமதி பரோடாவிற்கு கேட்டது. அந்த இருட்டில் யார் என்று சரியாக கணிக்க முடியவில்லை சிகரெடினுடைய சிவப்பு கங்கு மட்டுமே தெரிந்தது. அது கவர்னேயில் என்று அவளுக்கு தெரிந்தது. ஏனென்றால் அவளது கணவன் சிகரெட் பிடிக்க மாட்டான். அவள் அங்கிருப்பது யாருக்கும் தெரிய கூடாது என்று நினைத்தாள். ஆனால் அவளுடைய வெள்ளை உடை அவளது இருப்பை காட்டிக் கொடுத்தது. அவர் சிகரெட்டை கீழே போட்டுவிட்டு அவளது அருகில் உட்கார்ந்தார், அவளுக்கு அங்கு உட்காருவது பிடிக்குமா பிடிக்காதா என்கிற உணர்வு கூட இல்லாமல் . 

உங்களது கணவர் இதை உங்களிடம் கொடுக்க சொன்னார் திருமதி பரோடா என்று கூறி அவள் தலையையும் தோள்களையும் மூடிக்கொள்ள பயன்படுத்தும் மெல்லிய வெள்ளை துண்டை அவளிடம் கொடுத்தான். அவள் அதை முறுமுறுத்தவாறு நன்றி எனச் சொல்லி வாங்கி தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டாள். 

அந்த கால நிலையில் வீசும் இரவு காற்றின் அசாதாரணமானத் தன்மையை பற்றி தனது தெரிந்த விஷயத்தை அவன் கூறினான். கூறியவாறு அவனுடைய பார்வை இருளை நோக்கி சென்ற போது தனக்குத் தானே பேசிக் கொள்வது போல மெதுவாகப் பேசினான். 

“தெற்கில் வீசும் காற்றின் இரவு .. சில பெரிய நட்சத்திரங்களின் இரவு .. இன்னும் அசைந்தாடும் இரவு…”

இந்த இரவைப் பற்றிய அவனுடைய குறிப்புகளுக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. சொல்லப்போனால் அது அவளுக்காக சொல்லப்பட்டதும் இல்லை. 

கவர்னெயில் நம்பிக்கை அற்ற மனிதரோ தன்னுணர்வுள்ள மனிதரோ அல்ல. அமைதி அவருடைய இயல்பு அல்ல. சூழ்நிலையின் மற்றும் மனநிலையின் வெளிப்பாடு. திருமதி பரோடாவிற்கு அருகில் அமர்ந்த தருணத்தில் அவருடைய அமைதி மெல்லக் கரைந்து போனது. அவர் சுதந்திரமாகவும் ஆழமாகவும் பேசினார். தயக்கம் நிறைந்த மதுவான அவருடைய குரல் கேட்க அவ்வளவு இனிமையற்றதாக இல்லை. அவர் காஸ்டனுடன் நெருங்கி பழகிய கல்லூரி நாட்களை பற்றி பேசினார். தீவிரமான தெளிவற்ற லட்சியங்களும் நோக்கங்களும் நிரம்பிய நாட்களைப் பற்றி பேசினார். இப்போது இந்த வாழ்க்கையினுடைய ஒழுங்கு அமர்வுகளை தத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை மட்டுமே எஞ்சியிருந்தது. வெறுமனே வாழ அனுமதிக்க வேண்டும் என்கிற ஆசை அதற்கிடையில் இப்பொழுது அவர் சுவாசித்துக் கொண்டிருக்கும் இவ்வாழ்வின் சுவை அவ்வப்போது கிடைத்தால் போதும் என்கிற மனநிலை. 

அவர் கூறுவதை அவளது மனம் தெளிவற்றதாகவே உணர்ந்து கொண்டிருந்தது. அந்த கணத்தில் அவரின் மனதை விட அவளின் உடல் உணர்ச்சிகளே மேலோங்கி இருந்தது. அவன் கூறிய வார்த்தைகளைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை. அவரின் குரல் ஒலிகளை மட்டுமே அவள் பருகிக் கொண்டிருந்தாள். அந்த இருளில் தன் விரல்களை நீட்டி மெல்லிய தொடுதலால் அவரது முகத்தையோ உதடுகளையோ தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. அவனுக்கு நெருக்கமாக சென்று அவனுடைய கன்னத்தையொட்டி ஏதாவது கிசுகிசுக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. ஆனால், அவள் ஒரு மரியாதைக்குரிய பெண்ணாக இல்லையெனில் அவள் அதை செய்திருப்பாள். 

அவரிடம் நெருங்க வேண்டும் என்கிற உணர்வு அதிகரிக்கும்போது அவரிடமிருந்து இன்னும் தூர விலகினாள். மரியாதைக் குறைவாக தோன்றாத அளவிற்கு அங்கிருந்து எழுந்து அவரை அங்கே தனியாக விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள். அவள் வீட்டை அடைவதற்கு முன்பாகவே கவர்னேயில் இன்னொரு சிகரட்டைப் பற்ற வைத்து இரவைப் பற்றிய அவனது குறிப்பை முடித்திருந்தான். 

திருமதி பரோடாவிற்கு அந்த இரவு அவளை ஆட்கொண்ட அந்த முட்டாள்தனத்தை குறித்து தன்னுடைய கணவரிடம் கூற வேண்டும் என்கிற ஆசை மேலெழுந்தது. அவளுடைய கணவன் சிறந்த நண்பன் என்றாலும் கூட அந்த ஆசைக்கு அவள் செவிமடுக்கவில்லை. மரியாதைக்குரிய பெண் என்பதை தாண்டி விவேகம் உள்ள பெண்ணும் கூட. வாழ்க்கையில் நிகழும் சில போராட்டங்களை மனிதர்கள் தனியாக தான் சந்திக்க வேண்டும் என்கிற தெளிவு அவளுக்கு இருந்தது. 

கேஸ்டன் காலையில் எழுந்திருக்கும் போது அவனுடைய மனைவி ஏற்கனவே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டிருந்தாள். நகரத்திற்கு செல்லும் அதிகாலை தொடர் வண்டியில் ஏறியிருந்தாள். கவர்னேயில் அந்த வீட்டிலிருந்து கிளம்பும் வரை அவள் அந்த வீட்டிற்கு வரவே இல்லை. 

அடுத்த கோடை விடுமுறைக்கு கவர்னேயிலை திரும்ப அழைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. கேஸ்டனுக்கு அவரை அழைப்பதில் விருப்பமும் இருந்தது. ஆனால் அவனது மனைவியினுடைய எதிர்ப்பால் அந்த முடிவு கைவிடப்பட்டது. எப்படியோ அந்த ஆண்டு முடிவதற்கு முன்பாகவே கவர்னேயிலை திரும்ப அழைக்கலாம் என்று முழு மனதாக அவள் சொல்லியதைக் கேட்க கேஸ்டனுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

“அவர் மீது இருந்த வெறுப்பை நீ மாற்றிக் கொண்டதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனது அன்பே.. அவன் உண்மையில் அதற்கு தகுதியானவன் அல்ல”, என்று கேஸ்டன் கூறினார். 

ஆஹா என்று மகிழ்ந்தவாறு அவனது உதட்டில் நீண்ட முத்தத்தை பதித்துவிட்டு “நான் எல்லாவற்றையும் கடந்துவிட்டேன் நீங்கள் அதை பார்ப்பீர்கள். இந்த முறை நான் அவரிடம் நன்றாக நடந்து கொள்வேன்”.

கேட் சோப்பின் (Kate Chopin) (1850–1904) – அமேரிக்க சிறுகதையாசிரியர். பெண்ணியச் சிறுகதைகள்ளின் முன்னோடியாக கருதப்படுபவர்.

***

அ. அருந்தமிழ் யாழினி – சென்னையிலுள்ள தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும், அகில இந்திய வானொலியின் RAINBOW FM 101.4 ல் பண்பலைத் தொகுப்பாளராகவும் இருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றவர். மொழியாக்க முயற்சிகளை ஆர்வமாக மேற்கொண்டு வருகிறார். மின்னஞ்சல்: aruntamilyazhiniaravindan@gmail.com

குவைத்து அப்புலு

0

நாகேந்திர காசி

தமிழில் : ஸ்ரீநிவாஸ் தெப்பல

கணபதி நவராத்திரி மூன்றாவது நாள் இரவு.கோதாவரி நதியின் வசிஷ்டா கிளையாற்று பகுதிக்கு அடிவாரத்தில் இருக்கும் மணல் திட்டு. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை குதூகலத்துடன் சாக்குப் பைகளையும், முக்காலிகளையும் எடுத்துக்கொண்டு ‘காக்கிநாடா கங்காதர் மியூசிக்கல் நைட்டை பார்ப்பதற்கு  நீர்த்துறைக்கு அருகிலுள்ள சென்டருக்கு வந்தனர். வேலைகளுக்குச் சென்ற சில ஆண்கள் சாராயக்கடையில் ஒரு மூன்று அவுன்ஸ்களை குடித்துவிட்டு, பெட்டிக் கடையில் முறுக்கை வாங்கிச் சாப்பிட்டு கொண்டு, சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு அதன் மீது அமர்ந்தனர். தாவணி அணிந்த இளம் பெண்களை, கைலிகள் அணிந்த இளசுகள் பின் தொடர்கையில், ஊராட்சித் தலைவரின் வீட்டில் விருந்தை முடித்துவிட்டு ஆர்கெஸ்ட்ராகாரர்கள் மேடைக்கு வந்தனர்.

ஆர்கெஸ்ட்ரா கண்டசாலாவின் பாட்டுடன் தொடங்கியது. அனைவரின் மத்தியிலும் கட்டுக்கடங்காத உற்சாகம் பொங்கி வழிந்தது, பாட்டுகளுக்கு விசில்கள், கூச்சல்கள் இணைந்ததால் நீர்த்துறை முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

சௌதாமினி முக்காலியைக் கொண்டு வந்து ஜெயாவின் அருகில் அமர்ந்தாள்.

“என்னடீ சௌதா, அந்தக் கனகரத்தினம் இருக்கா பாரு, மருமகள குவைத்து அனுப்புறாளாம்” என்றாள் காதில் ஜெயா.

“என்னது, உண்மையா?” ஆச்சரியமாகப் பார்த்தாள் சௌதாமினி.

“உண்மை தாண்டீ, காலையில களைப் பறிக்கப் போகையில, வயல்ல பொம்பளைங்க கூட்டம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.”

“மருமகள கண்ணுக்குள்ள வச்சி பாத்துபான்னு எல்லாரும் சொல்லிப்பாங்க இல்ல. போதாதக்கு களைப் பறிக்கக் கூட அனுப்ப மாட்டா, அப்படிப்பட்டவ குவைத்து அனுப்புறாளா! பணம் நிறையக் கிடைக்கும் போலடீ. நம்ம கூடப் போகலாம்டீ, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே? ஒரு வாரம் கூலி செஞ்சா திங்கட்கிழமை சந்தைக்கே சரியா இருக்கு.”

“என்னது, குழந்தைகளையும், புருசனையும் விட்டுபுட்டு, ஊர் பெயர் தெரியாத, மொழி தெரியாத நாட்டுல இருக்கணும்னா என்னால முடியாதுடி சௌதா. ஆனாலும் உங்க அண்ணன பிரிஞ்சு என்னால தனியா இருக்க முடியாதுடி” என்றாள் வெட்கப்பட்டுக் கொண்டே ஜெயா.

“அய்யே! பாருடா இதோட வெட்கத்த, சப்பிப் போட்ட மாங்கொட்டையாட்டம் மூஞ்சிய வச்சிக்கிட்டு.”

“ஆனாலும் போகல! சேட்டுக்கு ரெண்டு மூணு பொண்டாட்டிங்க, ஒரு பத்து பிள்ளைங்க இருப்பாங்களாம். அவங்களுக்கு எல்லா வெட்டி வேலையும் செய்யணுமாம், நம்ப வேலை பிடிக்கலைன்னா பாலைவனத்துல ஒட்டக சாணம் அள்ளவுடுவாங்கலாம், தெரியுமா ஒனக்கு?” என்றாள் ஜெயா.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்டீ?”

“எங்க ஊர்ல ஒருத்தி அப்படித்தான் போயிட்டு வந்தா. கொஞ்ச நாளைக்கி நோய் வாய்ப்பட்டு இறந்து போயிட்டா” என்றாள் ஜெயா. 

“அப்படி எதுக்கு நினைக்கணும். ஒரு வேலை நம்மளுக்கு எல்லாம் நல்லபடியா நடந்து, பணத்தை நல்லா சம்பாதிக்கலாமோ, என்னமோ”

“அடி சக்காளத்திங்களா! பாட்டக் கேட்க விடுங்கடி” எனப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவி இருவரையும் நோக்கி, வாயில் சுருட்டை பற்ற வைத்தவாறு, மறுபடியும் அந்தப் பக்கம் திரும்பினாள்.

“அடியாத்தி, இந்தக் கிழவி ஆரம்பிச்சுட்டாடி சௌதா, நம்ம நாளைக்கி பேசிக்கிலாம்டீ” என்றாள் ஜெயா சிரித்தபடி.

சௌதாமினிக்கு மூளையில் குலவை குடையத் தொடங்கியது.

சிரஞ்சீவி பாட்டிற்கு யாரோ பத்து ரூபாய் மொய் கொடுத்தனர். ஒரு ஜோடியின் நிழல் படகுகளின் துறைமுகத்து அருகிலுள்ள ஒரு குடிசைக்குள் நுழைந்தது.

அன்றிரவு வீட்டுக்குச் சென்றபின், அப்புலு மடக்குக் கட்டிலில் படுக்கையில், பிள்ளைகள் தூங்கி விட்டார்களா, இல்லையாயெனப் பார்த்துவிட்டு, மண்ணெண்ணெய் விளக்குத் திரியைக் குறைத்து, படுக்கையில் அப்புலுவின் பக்கத்தில் வந்து சேர்ந்தாள் சௌதாமினி. கோழிக்குஞ்சை பாம்பு கவ்வுவது போல் இறுக்கமாகக் கட்டி அணைத்தான் அப்புலு.

“பொறு முதல்ல, அதுக்காக வரல. உன் கூட ஒரு விஷயத்த சொல்லனும்” என்றாள் மோவாய் அருகில் தலையை வைத்தவாறு.

“என்ன?” என்றான் தோளின் மீது ரவிக்கையை வருடியவாறு.

“அது வந்து, சொன்னதுக்கு அப்புறம் திட்டக் கூடாது” என முணுமுணுத்தாள்.

“அடை காக்குற கோழியைப் போல என்னடி அந்தக் கூவல் சத்தம்? விஷயம் என்னனு சொல்லு?” என்றான் கழுத்தில் தடவியவாறு.

“குவைத்துப் போனா எப்படி இருக்குமானு. பிள்ளைகள நல்லபடியா படிக்க வைக்கலாம், ஒரு அஞ்சு குழி இடத்தை வாங்கி வீடு கட்டிக்கலாம்…”

“நிப்பாற்றியா, உன் நச்சரிப்பே! இந்த யோசனைய ஒனக்கு யாருடி ஏத்தி விட்டா? எட்டி ஒதச்சனா குப்பையில போய் விழுவ. வாய மூடிக்கிட்டு தூங்கு” எனத் திரும்பிப் படுத்தான்.

“ஆ…தூங்கலெனா கோதாவரி ஆத்துல குதிப்பேன்னு நெனக்கிறியா? கொஞ்சம் மூளையோட யோசிச்சுப் பாரு, ஒரு ரெண்டு வருஷம் எப்படியாச்சும் பொறுத்துக்கிட்டோம்னா வாழ்க்கை எப்படி இருக்கும்னு யோசிக்கச் சொல்லுறேன். ஏன் நான் ஒருத்தி மட்டுமா நல்லா இருப்பேன்? நம்ம பிள்ளைகளுக்காகத் தான இந்த ஏக்கம் எல்லாம்” எனச் சௌதாமினி கட்டிலிலிருந்து கீழே இறங்கினாள்.

அப்புலு எதுவும் பேசவில்லை. கொஞ்சம் சத்தமாகப் பேசினாலே சௌதா எப்போதும் திருப்பிப் பேசமாட்டாள்.

சௌதாமினிக்கு வயசு முப்பதுக்குள்ளே தான் இருக்கும். மாநிறம், வட்டமான முகம். வெளிர் மஞ்சள் நிறp புடவையைக் கட்டி, கண்ணுக்கு மைத்தீட்டி, தலையில் கனகாம்பரத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்தால், அப்புலுவுடன் சேர்ந்து, பல இளவட்டத்திற்கு அன்னிக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஊரில் பல பேர் கண்கள் சௌதாவின் மீது விழுகுதெனக் கல்யாணமான ஆரம்பத்திலேயே அப்புலுவுக்குப் புரிந்து விட்டது. அதனால் தான் ரசிக்கும் சீமான்களின் வீட்டிற்கும், பெரிய மைனர்களின் வயல்களுக்கும் எப்போதும் வேலைக்கு அனுப்பியதில்லை. அதற்கான காரணம் என்னவென்று சௌதாவிற்கும் தெரியும், அந்த ஊர்காரர்களுக்கும் தெரியும்.

அப்புலு செய்யாத வேலை இல்லை. தேங்காய் இறக்கவும், உரிக்கவும், வயல் வேலைகளுக்கும் செல்வான். அப்பா காலமானார். அப்புலுவின் அம்மாவும், தங்கையும் இரண்டு தெரு தள்ளி இருக்கிற வீட்டில் வசிக்கிறார்கள். புது குடியிருப்பில் இடத்தை எழுதிக் கொடுத்ததில் அப்புலு, செங்கல் வீடு கட்டிக்கொண்டு அதில் குடியேறி குடித்தனம் நடத்துகிறான்.

அன்று வாரச் சந்தை, இருவரின் மத்தியிலும் ஒரு வாரமாகப் பேச்சுவார்த்தைக் கிடையாது என்பதை நினைவு படுத்தினாள்.

இரண்டு மடவை மீன்களும், குழந்தைகளுக்கு மிக்சர் பொட்டலங்களும், சௌதாவிற்கு பிடிக்குமென இஞ்சி பக்கோடாவையும் கட்டிக்கொண்டு சாயங்காலத்திற்கு வீட்டுக்கு வந்தான் அப்புலு. சௌதா அடுப்பு அருகில் வடித்த சாதத்தை எடுத்துக்கொண்டிருந்தாள். பிள்ளைகள் இருவரும் மண்ணெண்ணெய் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பேப்பரில் சினிமா படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் மிக்சர் பொட்டலங்களைக் கொடுத்தான்.

சௌதாவை நோக்கிப் பார்த்தான். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு இருந்தாள். தனது அரை டவுசரிலிருந்து இஞ்சி பக்கோடா பொட்டலத்தை வெளியே எடுத்து, அடுப்பு அருகில் அமர்ந்திருந்த சௌதாவை நோக்கி வீசினான். சௌதா எதுவும் பேசவில்லை. சற்று நேரம் அப்படியே வாசலில் உட்கார்ந்தான். ஆனாலும் அவள் பேசவில்லை. வெறுப்பு அடைந்து சாராயக் கடைக்குச் சென்றான்.

வீட்டுக்குத் திரும்பி வருகையில், பிள்ளைகள் சாப்பிட்டுத் தூங்கியிருந்தார்கள். சௌதா ஒருத்தி மட்டும் வீட்டு அருகிலுள்ள கொய்யா மரத்தின் அருகில் அமர்ந்தாள்.

“சோறு சாப்டியா?” எனக் கேட்டான். சௌதாமினி எதுவும் பேசவில்லை.

“ஒன்னத்தான், இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அலட்டிக்கிற. சரி எப்படியோ நீ நினைச்சதே செய். ஆனா ஒன்னு என்கூட பேசாம மட்டும் இருந்திடாத. உயிர் துடி துடிச்சு போயிடும்.”

சௌதா அந்த வார்த்தைக்கு நெருங்கி வந்தாள். அப்புலு தோளில் இருந்த துண்டை எடுத்து “கால கழுவிக்கோ, சாப்பாடு சாப்பிடலாம்” என்றாள். இருவரும் அன்று மீன் குழம்பை மிச்சம் வைக்காமல் காலி செய்துவிட்டு, அன்றிரவு முழுக்க கண்விழித்து இருந்தனர். விடிவதற்குள் சௌதாமினி நினைத்ததை சாதித்து விட்டாள்.

“முதல்ல பாஸ்போர்ட் ரெடி செய்யணும். மெடிக்கல் டெஸ்ட் செய்றதுக்கு பம்பாய்க்கு அழைச்சுட்டு போகனும். அதுக்கப்புறம் விசா. எல்லாம் சேத்து ஒரு பதினஞ்சு ஆயிரம் வரை செலவாகும் சரியா?” என்றான் ராஜோலுவிலிருந்து வந்த ஏஜென்ட் தாத்தாராவ்.

அப்புலு பதினைந்து ஆயிரம் கிட்டயே நின்று விட்டான்.

“சம்பளம் எவ்வளவு வருங்க?” எனக் கேட்டான் அப்புலு.

“அது இப்போ தெரியாது அப்புலு, போற வீட்டைப் பொறுத்து, எஜமானப் பொறுத்து இருக்கும். ஒங்க பொண்டாட்டியோட வேலையைப் பொறுத்தும் இருக்கும்” என்றான் சௌதாமினியை ஒரு மாதிரியாகப் பார்த்து.

சட்டெனச் சௌதாமினி தோளில் முந்தானையை சரி செய்து கொண்டாள்.

அன்று பணத்தைப் பற்றி ரொம்பவே யோசித்தார்கள் இரண்டு பேரும்.

“சரி விடு, மைனர் கிட்ட வாங்கிக்கிறேன். உன்னோட தாலிய அடகு வைக்கலாம், என்ன சொல்ற?” 

“எங்க அண்ணன் கிட்ட ஒரு ஐயாயிரம் ரூபாய் கேட்கிறன். அப்புறம் கொடுத்துக்கலாம்” என்றாள்.

“இந்தக் குழந்தைகள என்ன செய்ய? துடி துடுச்சுப் போயிடு வாங்க போல” என்றான்.

“நீ அப்படி முன்னாடியே பதட்டப்படாத. பெரியவனுக்குப் பத்து வயசு ஆகுது. அவன் ஏங்கமாட்டான். ஒங்க அம்மா கிட்ட அவனக்கு நல்லாவே பழக்கம். லோவதல்லிய மட்டும் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கணும். அது வயசுக்குவர இன்னொரு நாலு வருஷம் ஆகும். உங்க தங்கச்சி இருக்கா இல்ல, அவ ஒத்தாசைக்கு இருப்பா. கண்ண மூடித் திறக்கறதுக்குள்ள நாலு வருஷம் கடந்துடும். ஏக்கம் எல்லாம் ஒங்களுக்கு மட்டும் தானா? எனக்கு இருக்காதா பின்ன? நான் என்ன பொறந்ததுலிருந்து ஊர் ஊரா திரிஞ்சவளா? நீங்க இங்க எப்படி இருக்கீங்களோன்னு எனக்கு மட்டும் இருக்காதா?” எனப் புடவைத் தலைப்பை வாய்க்குக் குறுக்காக வைத்துக் கொண்டு அழுதாள்.

ஏஜென்ட் தாத்தாராவ் வாரத்துக்கு ஒரு முறை வந்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு போகிறான். கடனை வாங்கி,  பணத்தைக் கட்டி, ஆகமொத்தம் எப்படியோ சௌதாமினி குவைத்துக்குக் கிளம்பும் நாள் வந்தது.

“அப்புலு, முதல்ல பம்பாய்க்குப் போயி மெடிக்கல் டெஸ்ட் செய்யணும். ஒரு ரெண்டு நாள் கழிச்சு விமானத்த ஏத்திட்டு நான் திரும்பி வருவேன். ஒங்க முதலாளி வீட்டு நம்பர் கொடுத்திருக்கெல்ல, அதுக்கு போன் செய்றேன். நீ பதட்டப்படத் தேவையில்லை. இந்தக் கையால எத்தனை பேர் அனுப்பி இருப்பேன். யம்மா சௌதாமினி, சீக்கிரம் கிளம்பு” என்றான் டீ அருந்தியவாறு. 

சௌதாமினி அழுதவாறே கிளம்பினாள். பிள்ளைகள் இருவரும் தாயைக் கட்டி அணைத்து அழுகையில் அங்கு இருக்கும் அனைவரின் கண்களும் கசிந்தன. 

“ஒங்க அம்மா உங்களுக்கு நிறைய துணிமணிங்க, பொம்மைங்க வாங்கிட்டு வருவா, அழுவாதீங்க” என அவர்களின் பாட்டி, அத்தை, சுற்றி இருக்கும் சொந்தக்காரர்களென அனைவரும் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லுகின்றனர். நல்லது கெட்டது பகிர்ந்து கொள்ளும் தோழி ஜெயா வாசலில் நின்று கண்ணீர் மல்க அழுதாள்.

அப்புலு மட்டும் தென்னை மரத்தில் சாய்ந்து மும்மிடிவரத்து பாலயோகியைப் போல் அமைதியாக வெறித்தபடி சௌதாமினியை நோக்கினான்.

ஊர் சென்டருக்கு அருகில் ஒரு பத்து பேர் கூட்டம் கூடினர். பேருந்து வந்தது. பிள்ளைகளின் கதறல் சத்தம் மேலும் கூடியது. அப்புலு வேறேதும் பேசவில்லை. சௌதாமினி பேருந்தில் ஏறிக் கிளம்பினாள். அன்று முதல் அப்புலு அந்த மணல் திட்டுப் பகுதியில் ‘குவைத்து அப்புலு’ ஆகிவிட்டான். 

சௌதா சென்றபிறகு, அப்புலுக்கு காலையில் அடுப்பங்கரையில் காணும் சௌதா இனி இல்லை. பண்டிகைக்கு வீட்டைச் சாணி பூசூம் சௌதா இனி இல்லை. ராமலா மீன் (ஆந்திராவில், ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டும் கிடைக்கும் அரியவகை மீன்)  குழம்பு சமைக்கும் சௌதா இனி இல்லை. இருட்டியதும், இதயத்துடிப்பைப் பகிர்ந்து கொள்ளும் சௌதா இனி இல்லை. பித்து பிடித்துப் போனான். ஆனால், பிள்ளைகளைக் கண்டு ஆறுதல் கொள்வான்.

சௌதா, கிழிந்த ரவிக்கைகளைத் துணி கொடியிலிருந்து அகற்றினான். வீட்டில் கட்டில் அருகில் இருந்த இரண்டு வாயில் புடவைகளை எடுத்து ட்ரங்க் பெட்டியில் வைத்தான். அடுப்பின் அருகில் சௌதா காட்டன் சேலை துண்டு அழுக்குத் துணியாக இருந்ததை எடுத்துத் தோட்டத்தில் தூக்கி எறிந்தான். சௌதாவிற்கு சம்பந்தப்பட்ட பொருட்களை அனைத்தும் கண்ணில் படாமல் செய்தாலுமே, கூரை விளிம்பில் ரயில் வண்டு பூச்சியைப் போல் துயரம் வட்டமாகச் சுழற்றிக்கொண்டு மேலும் இறுக்கமானது.

சில நாட்களிலேயே சாதத்தை வடிப்பதில் தேர்ச்சி பெற்றான். குழம்புகளைப் பதமாகக் கொதிக்க வைக்கிறான். குழந்தைகள் துயரப்பட்டு சாப்பாட்டை சாப்பிடவில்லை என்றால் அது இதுயென கதைகள் சொல்லி அவர்களைக் கொஞ்சிக் குலவுகிறான். அப்புலுவின் அம்மா,  தங்கச்சி, எல்லாரும் வீட்டுலயே இருந்து நல்லது கெட்டது பார்த்துக் கொண்டனர். இரண்டு நாட்கள் கழிந்தது. இன்னும் போன் வரவில்லை. இருட்டும் வரை எஜமானின் வீட்டிலேயே இருந்து விட்டு வருகிறான். ‘போன் வந்தா உனக்குத் தாக்கல் சொல்லுறன்’ என்றாலும் காதில் வாங்காமல் அங்கேயே காவல் காக்கிறான்.

ஒரு வாரம் கழிந்தது. போன் வரவில்லை. ஊரில் எல்லோரும் என்ன ஆனதெனக் குவைத்து அப்புலுவைக் கேட்கத் தொடங்கினர்.

ஒரு வாரம் ஆனாலும் எந்தத் தகவலும் இல்லை.

அப்புலு குட்டிப் போட்ட பூனையைப் போல்  திரிந்தான். மனம் ஏனோ  துடிடித்துப் போனது.

எப்படியோ ஏஜென்ட் தாத்தாராவ் முகவரியைக் கண்டுபிடித்து ராஜோலு சென்று விசாரித்தால்  ‘பம்பாய் போயிருக்கான், இன்னும் வரல’ எனச் சொன்னார்கள்.

சோர்ந்து போய் வீட்டுக்குத் திரும்பினான்.

பிள்ளைகள் கேட்டால் ‘உங்க அம்மா நல்லாதான் இருக்காளாம். உங்கள விசாரிச்சாளாம். உங்கள நல்லா சாப்புட்டு, நல்லபடியா பள்ளிக்கூடத்துக்குப் போயி படிக்கச் சொல்லி இருக்காம்’ எனச் சொல்லிக்கொண்டு கண் கலங்கினான். அதைக் கண்டு பிள்ளைகளும் அழுதார்கள். அப்புலுவின் தாய் வந்து “டேய், அப்புலு அப்படி அழுகாதடா. பிள்ளைங்கள பாரு எப்படி இருக்காங்கன்னு, இப்ப என்னாச்சு, போன் பண்ணுவா விடு. பாவம் புள்ள அங்க என்னென்ன பாடு படுதோ என்னவோ?” என்று அறைக்கு அழைத்துச் சென்றாள்.

ஒரு வருடம் ஆனது, ஆனாலும் எந்தத் தகவலும் இல்லை. எல்லோரும் குவைத்து அப்புலுவைப் பார்த்து இரக்கப்பட்டனர்.

இறந்துவிட்டதாகச் சில பேர், அந்தத் தாத்தாராவுடன் ஓடி விட்டதாகப் பலரும் கிசுகிசுத்தனர். அந்தப் பேச்சுகள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, குவைத்து அப்புலுவின் காதில் ஒலித்தன. குவைத்து அப்புலு அன்று முதல் குடிக்கு ஆளானான்.

***

ஒருநாள் அப்புலு மகள் லோவதல்லிக்கு பெரும் காய்ச்சல் வந்தது. அப்புலு வேலைக்குச் சென்றான். மகன் பள்ளிக்கூடத்திற்குச் சென்றான். அக்கம் பக்கத்து வீட்டில் வசிக்கும் எல்லோரும் அவரவர் வேலைகளுக்குச் சென்றனர்.

லோவதல்லி கட்டிலில் படுத்துக்கொண்டு, துணிக் கொடியில் இருந்த இரண்டு துண்டுகளை இழுத்துக் கொண்டு கால்களின் இடுக்கில் வைத்துக்கொண்டு அழுகிறாள். இருட்டுகையில் வீடு திரும்பினான் அப்புலு.

 “இருட்டுடிச்சு, இன்னும் விளக்கேத்தி வெக்காம என்னமா இன்னும் படுத்துகிட்டு இருக்க, தம்பி எங்க?” என்று லோவதல்லி பக்கம் வந்து பார்த்தான். பிள்ளை முனகலிட்டபடி இருந்தாள். தலையில் கையை வைத்து பார்த்தான், உடல் தீயாகக் கொதித்தது.

“ஜுரமா? பாட்டி இன்னும் வீட்டுக்கு வரலயா? இரு, ஆர்.எம்.பி. டாக்டரை அழைச்சிட்டு வரேன்” என விளக்கு புட்டியை ஏற்றினான். 

வெளிச்சத்தில் மகளின் கால் அருகில் துணி துண்டுகள் நனைந்தபடி அகப்பட்டன.

அப்புலுவின் மகன் வந்தான்.

“டேய், நீ போய்ப் பாட்டிய அழைச்சுட்டு வா” என்றான் பதற்றத்துடன். 

அக்காவின் அருகில், குருதி கசிந்த துணிகளைக் கண்டு,

“பாட்டி” என அழுது கொண்டே ஓடினான். அப்புலுவின் அம்மா வந்தாள். 

“புள்ளையோட தாய்மாமனுக்கு தாக்கல் சொல்லு. புள்ள சமஞ்சிருக்கா. தடுக்கு பாயி பேணினா, அதுல உட்கார வைக்கலாம்.” 

“லோவதல்லி வயசுக்குவர நாலு வருஷம் ஆகும்” எனச் சொன்ன சௌதாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன அப்புலுக்கு.

அத்தை வந்து “இரு நான் புட்டு சமைச்சு எடுத்துட்டு வரேன்” எனக் கிளம்பினாள்.

சௌதாவின் தோழி ஜெயா வந்து துணிகளை மாற்றி, அடுப்பைப் பற்ற வைத்து, சோறு சமைத்து வடித்தாள்.

அப்புலு, ஊருக்குள் சென்று எள்ளு பொடி, மரச்செக்கு எண்ணெய் எடுத்து வந்து வீட்டில் வைத்தான். மகள் ஒருத்தியே பாயில் உட்காருகையில், தடுக்குகளின் இடுக்குகளிலிருந்து பார்த்து மகிழ்வான்.

இருட்டியபின் அப்புலு வாசலில் தண்ணீர் தெளித்து, கோலமில்லாத வாசலில், தென்னை மரத்தில் சாய்ந்து, யார் கண்ணிலும் படாமல் கதறிக் கதறி அழுவான்.

ஏழாவது நாள் அன்று, ஊரில் மணல் திட்டுப் பகுதியில் வசிக்கின்ற எல்லோரையும் அழைத்து விருந்து வைத்தான்.

அன்று முதல் குடிப்பதை நிறுத்திக் கொண்டான். ஊர் சுற்றுவதை நிறுத்திக் கொண்டான். தனக்காகத் தான் வாழ்வதையும் நிறுத்திக் கொண்டான்.

சௌதாமினி என்ன ஆனாளோ யாருக்கும் தெரியவில்லை.

அந்தத் தாத்தாராவையும் அந்த ராஜோலில் மறுபடியும் பார்க்கவில்லை.

சௌதாமினியின் அண்ணனும், சில ஊர்ப் பெரியவர்களும், போலீஸ் கேசைப் பதிவு செய்தனர். ஆனாலும், எந்தப் பலனும் இல்லை. அப்புலு முழுமையாக மாறிவிட்டான். எவ்வளவோ உஷாராக நாள் முழுக்க வேலை செய்து, பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மா இல்லாத குறையை இல்லாமல் வளர்ப்பதைக் கண்டு அந்தத் தீடையில் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் கூட குவைத்து அப்புலுவின் பெயர் சனங்களுக்குத் தெரிந்து விட்டது.

அதன்பின் பிள்ளைகளுக்கு, அவர்களின் அம்மா நினைவுக்கு வருவில்லை. அப்புலு மகனுக்கும், மகளுக்கும் ‘அம்மா இனி வராது, நம்ம தான் இருக்கணும்’ என அவர்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தினமும் கூறுவான். வந்தால் நமது அதிர்ஷ்டம் என நினைப்பான் மனதில். சுற்று வட்டாரத்து ஊர்களில் யாராவது குவைத்து சென்று வந்தால் விசாரிப்பான். இரண்டு மூன்று முறை யாருக்கும் தெரியாமல் ராஜோலு சென்று வந்தான். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை, இருவரும் என்ன ஆனார்களென நினைக்கையில், சிலமுறை பித்துப் பிடிப்பது போல் இருக்கும். ஓடிவிட்டாளென நினைக்காமல் இறந்து விட்டாளெனச் சமாதானப்படுத்திக் கொள்வதில் தான் சற்று மனதுக்கு லேசாகவும், இதமாகவும் இருக்கும்.

காலம் குவைத்து அப்புலு சந்தோஷமாக இருந்த நொடிகளின் மத்தியில் நிற்கவில்லை, அப்படியென நெஞ்சை நொறுக்கிய கணங்களிலும் நிற்கவில்லை.

குவைத்து அப்புலுவை மறுபடியும் திருமணம் செய்யச் சொல்லிப் பலரும் ஆலோசனை கூறினார்கள். தீடையிலிருந்து இரண்டு மூணு சம்பந்தம் கூட வந்தது. ஆனால், நங்கூரம் போட்ட கப்பலைப் போலப் பிள்ளைகளுக்காகத் துடிப்பாக இருந்து விட்டான்.

“அப்புலு! மவ வளர்ந்துட்டாடா. இனி மாப்புளய பார்க்க தொடங்கிடு சரியா?” என்றால் வரன் பார்க்கத் திரிகிறான். மகன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபின், பாலிடெக்னிக் பரீட்சையை எழுத வைத்து, காக்கிநாடா அரசு கல்லூரியில் சேர்த்தான். லோவதல்லிக்கு எந்த வேலையும் சொல்லாமல் அனைத்துமே அப்புலுவே பார்த்துக் கொள்கிறான். குவைத்துப் போகச் செய்த கடன்கள் எல்லாவற்றையும் தீர்த்தான்.

கொஞ்ச நாளைக்கு அப்புலுவின் அம்மாவும் இறந்து விட்டாள். தங்கைக்கு அருகிலுள்ள தீடையில் மாப்பிளை கொண்டு வந்து கல்யாணம் கட்டியபின் அவளும் சென்று விட்டாள்.

தினமும் மகளுக்குத் துறைமுகத்திலிருந்து சிற்றுண்டிகள் பொட்டலங்களைக் கொண்டு வந்து, குழம்பை சமைத்து மகளுக்கு ஊட்டி, அவனும் சாப்பிட்டுப் படுப்பான். தினமும் படுத்தபின் ஒரு மணி நேரம் சௌதாவைப் பற்றிச் சிந்திப்பான்.

தூக்கத்திலேயே அழுவான்.

தூக்கத்திலேயே துயரப்படுவான்.

அதே தூக்கத்தில் மறந்து, மல்லி பூபோல் காலையில் சிரித்து வேலைக்குச் செல்வான்.

அப்படியொரு பத்து வருடங்கள் கழிந்த பின், ஒரு அடை மழையின் பொழுது, எந்த வித ஆள் அரவமும் இல்லை. வீடுகளிலிருந்து எழுந்து வரும் மூடு பனியில் எதுவும் தெரியவில்லை. கோதாவரி கொந்தளித்தபடி இருந்தது. கோதாவரி பாலத்தில் எந்தவித ஆள் அரவமும் இல்லை. துறைமுகத்தில் மட்டும் இரண்டு மூன்று மீனவர்கள் வலையை விரிக்கின்றனர்.

“ஆத்தா! அப்படி சென்டர் வரைக்கும் போயிட்டு வரேன்” என மகளிடம் சொல்லி அப்புலு வெளியே வந்தான். சென்டரில் சோடா கடை அருகில் உட்கார்ந்து, கடைக்காரனிடம் பேசுகையில் யாரோ வந்து  “டேய்! குவைத்து அப்புலு! சௌதாமினி வந்திருக்காடா” என்றார்கள்.

அப்புலு பதறி, கோதாவரியை காட்டிலும் கொந்தளித்தான். ஒரு நிமிஷம். துண்டைத் தலையிலிருந்து எடுத்து, கழுத்தில் போட்டுக்கொண்டு அதுவரைக்கும் குடிக்கத் தவறிய புகையிலை சுருட்டை பற்றவைத்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வீட்டுக்கு நகர்ந்தான். வீடு உடனே வந்து விடும் என்ற பயம் மேலும் அதிகரித்தது. முதல்முறையாக வீடு இன்னும் கொஞ்ச தூரம் இருந்தா நல்லா இருக்கும் என நினைத்தான். என்னையும், என் பிள்ளைகளையும் விட்டு எங்கேயோ போயிட்டா. இறந்து போயிட்டா என்ற யோசனையோடு சமாதானப்படுத்திக் கொண்டு, அதை நம்பி அந்தக் கற்பனையிலேயே இத்தனை நாளும் வாழ்ந்ததினால், அந்தச் சிந்தனை கொடுத்த ஆனந்தம் சௌதாமினியைப் பார்க்க வேண்டுமென்ற வேட்கையைக் கிட்டத்தட்ட கொன்றுவிட்டது. அதனால் தான் வீடு தூரமாக இருந்தால் நல்லா இருக்குமென நினைத்தான். பலமாகக் குணமடைந்த சிராய்ப்புகளின் மீது, புதிதாக அமைத்துக்                    கொண்ட வாழ்க்கையின் வேட்கைகளின் மீதும் இப்படி சில பலவீனமான நொடிகள் மீண்டும் காயம் செய்வதை அப்புலுவினால் தாள முடியவில்லை.

அதனால்தான் வீடு இன்னும் சற்றுத் தொலைவில் இருந்தால் நன்றாக இருக்குமென நினைத்தான். சௌதாமினி எப்படி வருவாளெனக் கற்பனை செய்ய முடிந்தது.  அந்தக் கற்பனையைத் தாங்கிக் கொள்ளும் துணிவு இல்லாததினால், இறந்து விட்டாள் என்ற பொய்யை அதிகமாக நேசிக்கிறான்.

உண்மையில், சௌதாமினி பற்றி ஒரு வருடத்திற்கு முன்பே மேலோட்டமாக அப்புலுவிற்குத் தெரியும்.  கணக்கிட்டுப் பார்க்கவும், வருத்தப்படவும் எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை, ஒரு நொடி முன்பு வரை.

காலடிகள் நின்று விட்டன.

அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் எல்லாம் சௌதாமினியைக் காண கூட்டம் கூடினர். வீடு காலியாக இல்லை. அப்புலுவைக் கண்டு யாரும் பேசவில்லை. வெளியே நிற்கிறான். வாசலில் இரும்பு செயரின் மீது வெள்ளை சட்டை அணிந்த ஒருவன் யாருடனும் பேசாமல் உட்கார்ந்திருக்கிறான்.

அப்புலுவிற்கு அந்த ஏஜென்ட் முகம் நன்றாகவே தெரியும். அவனைக் கண்டான். அவனும், இவனைக் கண்டான். அவ்வளவுதான், எந்தவித வார்த்தைகளும் இல்லை. உள்ளே சென்றான். சௌதாமினி மகளைப் பற்றிக்கொண்டாள். மிகவும் மெலிந்து இருந்தாள். நகங்களுக்கு வண்ணம் தீட்டினாள். கழுத்தில் இரண்டு வடம் சேயினை அணிந்திருந்தாள். ஜிகினா சேலையைக் கட்டி, முகத்திற்குப் பௌடரை அப்பியிருந்தாள். வீடு முழுக்க சென்ட்டின் வாசம்.

அப்புலுவைப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. அப்புலுவும் எதுவும் பேசவில்லை. 

வீட்டிலிருந்து வெளியேறி, அப்படியே கோதாவரி ஆற்றங்கரைக்குக் கிளம்பினான்.

சௌதாமினி மகளுக்குச் செயின் தந்து, பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கையில் வைத்து “ஜாக்கிரதை!” என முத்தமிட்டு அழுது கொண்டே கிளம்பினாள். அவளின் அம்மா திரும்பி வந்தாளென மகனுக்குத் தெரிந்தது. ஆனாலும் பொருட்படுத்தவில்லை.

இத்தனை வருடங்களாகச் சௌதாமினி என்ன ஆனாளெனத் தெரியாதவர்களுக்கு ஒரு விடை கிடைத்தது.

அவ்வப்போது வந்து பிள்ளைகளைப்  பார்த்துச் சென்று விடுவாள். பிள்ளைகளும் ஏதோ விருந்தாளியைப் போலப் பார்ப்பார்கள். ‘குவைத்’ என்ற ஊரின் பெயர், தனது பெயரின் முன்பு அடைமொழியாக வந்து சேர்ந்தது தவிர, குவைத்து அப்புலு வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. சௌதாமினி ஏன் இப்படிச் செய்தாளென இன்றுவரை அவளைத் தவிர, மூன்றாவது நபருக்குத் தெரியாது.

நாகேந்திர காசி – 1983 இல், ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடாவில் பிறந்தார். விண்வெளி பொறியாளராகப் பணிபுரிந்து, தற்போது தெலுங்கு திரைத் துறையில் முழுநேர எழுத்தாளராகப் பணியாற்றுகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நல்ல வந்தெனா’ நான்கு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றது. இதுவரை புஷ்பா 2, ஹாய் நன்னா, கொட்டபொம்மலி (நாயட்டு ரீமேக்), ஸ்ரீதேவி சோடா சென்டர், பலாசா ஆகிய படங்களுக்கு வசனம், திரைக்கதை எழுதியிருக்கிறார்.

ஸ்ரீநிவாஸ் தெப்பல – 1989 இல் பிறந்த இவர், ஆந்திரப் பிரதேசம்  மாநிலத்தில், விசாகா மாவட்டத்தில், ‘துனி’ என்னும் ஊரைச் சேர்ந்தவர். சிறுவயதுலிருந்து சென்னையில் வசித்து வருகிறார். கணினி அறிவியல் படித்த இவர், வரைகலை வடிவமைப்பாளராக ஆறு ஆண்டுகள் பணி புரிந்து, தற்போது திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணி புரிந்து வருகிறார். ‘இவன்தான் பாலா’, ‘மாயப்பொன்’ தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு ‘முக்குளிப்பான்’ ‘கரடி’ என்னும் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் மொழிபெயர்த்துவருகிறார். Contact : 9363580434 Email : srinivasprasthanam@gmail.com

மௌனத்தின் சுடரும், ஜன்னலின் வெளிச்சமும்

0

அ.முனவர்கான்

ட்டாம் நூற்றாண்டின் சூஃபி ஞானி ராபிஆ அல்-அதவியாவையும், இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கவிஞர் ஃபோரூக் ஃபாரோக்சாத்தையும் ஒப்பிடுவது ஒரு சுவாரஸ்யமான ஆன்மீக மற்றும் இலக்கியப் பயணமாகும். காலத்தால் ஆயிரம் ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், இருவருமே பாரசீக நிலப்பரப்பின் மிகச்சிறந்த பெண் குரல்களாகத் திகழ்கின்றனர்.

மௌனத்தையும், இறைவனிடம் முன்வைக்கும் நேரடி வினாக்களையும் கொண்டது ராபிஆவின் மொழி; அது அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் “ஆன்மீகத் துணிச்சல்”. நவீன பாரசீகக் கவிதையில் ஒரு மைல்கல்லாக விளங்குவது ஃபோரூக்கின் மொழி; அது மரபுசார்ந்த யாப்பிலக்கணங்களை உடைத்து, ஒரு பெண்ணின் அந்தரங்க உணர்வுகளைப் பொதுவெளியில் பேசிய முதல் துணிச்சலான குரல்.

ராபிஆ அல்-அதவியா (கி.பி. 714–801) ஈராக்கின் பஸ்ராவில் வாழ்ந்த புகழ்பெற்ற சூஃபி ஞானி ஆவார். இஸ்லாமிய சூஃபித்துவ வரலாற்றில், இறைவனைத் தூய அன்பால் நேசித்த மிக முக்கியமான பெண் துறவியாக இவர் போற்றப்படுகிறார். உலகியல் பற்றுகளைத் துறந்து, இறைவனின் நினைவிலேயே வாழ்ந்த இவரது வாழ்க்கை, இன்றும் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்குப் பெரும் வழிகாட்டியாக உள்ளது.

ஆன்மீகத்தை ஒரு வியாபாரமாகப் பார்க்காமல், தூய அன்பின் வெளிப்பாடாகப் பார்ப்பதே ராபிஆவின் தத்துவத்தின் அடிப்படையாகும். “இறைவனை நரகத்தின் பயத்தினாலோ அல்லது சொர்க்கத்தின் ஆசையினாலோ வழிபடக்கூடாது; இறைவனை அவன் என்பதற்காக மட்டுமே நேசிக்க வேண்டும்” என்பதே இவரது போதனையின் சாராம்சம்.

இறைவனை அடைவதற்கு எவ்வித நிபந்தனைகளும் இருக்கக்கூடாது என்பது அவர் கருத்து. சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற பேராசையோ அல்லது தண்டனைக்கு அஞ்சும் நிலையோ ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கும் தடைகளாகும். தன்னலத்தை முழுமையாக அழித்து, இறைவனின் விருப்பமே தனது விருப்பமாக மாறும் நிலையை அடைவதே உண்மையான பக்தி. இதயம் என்பது இறைவனின் இருப்பிடம்; உலகியல் ஆசைகள், வஞ்சகம் மற்றும் சுயநல எண்ணங்களால் நிறைந்த இதயத்தில் இறை அன்பு தங்குவதில்லை. எனவே, இதயத்தை அனைத்துப் பற்றுகளிலிருந்தும் தூய்மைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ராபிஆ, மிகவும் எளிமையான துறவற வாழ்க்கையைக் கடைபிடித்தார். உலகியல் இன்பங்களை விட இறைவனின் நினைவே மேலானது என்பதைத் தனது அன்றாட வாழ்வின் மூலம் அவர் தெளிவுபடுத்தினார். 

இன்றும் சூஃபித்துவத்தில், அன்பு மற்றும் பக்தி மார்க்கத்திற்கு ராபிஆவின் போதனைகளே மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்படுகின்றன. அவர் மனித குலத்திற்கு விட்டுச் சென்ற மிக முக்கியமான செய்தி: “அன்பே இறைவனின் வழி.”

ஃபோரூக் ஃபாரோக்சாத் (1935–1967) நவீன பாரசீகக் கவிதையுலகின் மிக முக்கியமான, துணிச்சலான பெண் கவிஞர். ஈரானிய இலக்கிய வரலாற்றில் பெண்களின் குரலை, உணர்வுகளை மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான புரட்சிகரமான கருத்துகளைப் பதிவு செய்த முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.

பாரம்பரிய கவிதை வடிவங்களிலிருந்து விலகி, ‘வசன கவிதை’ முறையில் எழுதிய இவரது கவிதைகள் பெண்களின் காதல், ஏக்கம், தனிமை மற்றும் சமூக ஒடுக்குமுறைகளை வெளிப்படையாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசின. ஈரானின் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பில், ஒரு பெண்ணின் அக உணர்வுகளைக் கவிதைகளாகப் பதிவு செய்தது அக்காலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன் வாழ்வின் அனுபவங்களையே அவர் கவிதைகளாகப் படைத்தார்.

“மற்றொரு பிறப்பு” (Another Birth – Tavallodi Digar): இது இவரது மிக முக்கியமான கவிதைத் தொகுப்புகளில் ஒன்று.”குளிர்ந்த காலத்தின் தொடக்கத்தை நம்புவோம்” (Let Us Believe in the Beginning of the Cold Season): இவரது மறைவுக்குப் பின் வெளியான இத்தொகுப்பு, அவரது முதிர்ச்சியான கவிதை ஆளுமையைக் காட்டுகிறது. “பாவம்” (The Sin / Persian: Gonāh): பாரசீக இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இக்கவிதை மிகுந்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

ஒரு பெண் தனது விருப்பத்தை, உணர்வுகளை, உடல் சார்ந்த இன்பத்தை வெளிப்படையாகப் பாடுவது எப்படிச் சமூகத்தால் “பாவம்” என்று முத்திரை குத்தப்படுகிறது என்பதை “பாவம்” கவிதை விவரிக்கிறது.

 காதலும் இன்பமும் கலந்த ஒரு தருணத்தை எவ்வித ஒளிவுமறைவுமின்றி அவர் வர்ணிக்கிறார். அந்த உணர்வு அவருக்கு ஒரு புதிய சுதந்திரத்தையும், அதே நேரத்தில் சமூகக் கட்டுப்பாடுகளால் உருவான ஒருவித குற்ற உணர்ச்சியையும் அளிக்கிறது.

1950-களின் ஈரானிய ஆணாதிக்க சமூகத்தில், ஒரு பெண் தனது பாலியல் விருப்பங்களைப் பற்றி இவ்வளவு துணிச்சலாகப் பேசியது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அக்கால இலக்கியவாதிகளும் சமூகமும் இதை ஒரு “தவறான செயலாக” பார்த்தனர்; ஆனால் ஃபோரூக் அதை ஒரு கவிதையாகப் படைத்து, பெண்ணின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார். பல நூற்றாண்டுகளாகத் திரைக்குப் பின்னால் மறைக்கப்பட்டிருந்த பெண்ணின் உணர்ச்சிகளை, உலகிற்கு உரக்கச் சொன்ன முதல் கவிதைகளில் இதுவும் ஒன்று.

பாரசீகக் கவிதைகளில் வழக்கமாகப் பெண்கள் காதலிக்கப்படுபவர்களாகவே சித்தரிக்கப்பட்டனர். ஆனால், ஃபோரூக் தான் காதலிப்பவராகவும், தனது இன்பத்தை அனுபவிப்பவராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். இது இலக்கிய ரீதியாக மட்டுமின்றி, கலாச்சார ரீதியிலும் ஒரு பெரிய புரட்சியாகக் கருதப்பட்டது. 

“Sin” (Gonāh) என்பது வெறும் கவிதை அல்ல; அது ஃபோரூக் ஃபாரோக்சாத் என்ற பெண்ணின் தைரியமான அறிக்கை. சமூகத்தின் பார்வையில் அது “பாவமாக” தெரிந்தாலும், ஃபோரூக்கின் பார்வையில் அது ஒரு பெண்ணின் இயல்பான உணர்வுகளின் வெளிப்பாடாகவும், தன்னைத் தானே கண்டறியும் பயணமாகவும் இருந்தது.

கவிஞர் மட்டுமல்லாது, இவர் ஒரு திறமையான திரைப்பட இயக்குநரும் கூட. தொழுநோயாளிகள் பற்றிய இவரது ஆவணப்படமான “தி ஹவுஸ் ஈஸ் பிளாக்” (The House is Black), ஈரானியத் திரையுலகின் மிகச்சிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, தனது 32-வது வயதிலேயே ஒரு கார் விபத்தில் இவர் காலமானார். ஃபோரூக் வெறும் கவிஞர் மட்டுமல்ல, அவர் ஈரானியப் பெண்களின் சுதந்திரக் குரலின் அடையாளம். இன்றும் நவீன பாரசீகக் கவிதையை வாசிக்கும் எவருக்கும் இவரது கவிதைகள் ஒரு தவிர்க்க முடியாத அனுபவத்தைத் தரும்.

தடையற்ற சுதந்திரம், ‘காதல்’ எனும் புரட்சிகர ஆயுதம், இருத்தலியல் தாகம், படிமங்களின் வலிமை போன்றவற்றை ராபிஆ மற்றும் ஃபோரூக் ஆகிய இருவரின் கவிதைகளிலும் தென்படும் பொதுவான இழைகள் எனலாம்.

சமூகக் கட்டுப்பாடுகள், திருமண பந்தம், மத நிறுவனங்களின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு, இறைவனுடனான நேரடித் தொடர்பை ராபிஆ தேர்ந்தெடுத்தார். அவருக்கு “சுதந்திரம்” என்பது ஆன்மீக விடுதலையாக இருந்தது. ஆணாதிக்கச் சமூகம் பெண்ணின் மீது சுமத்தியிருந்த விலங்குகளைத் தனது கவிதைகளால் ஃபோரூக் உடைத்தெரிந்தார். “பாவம்” போன்ற கவிதைகளில் தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பதிவு செய்ததன் மூலம் தனிமனித சுதந்திரத்தை அவர் முன்னிறுத்தினார்.

 ராபிஆவின் ‘இறைக்காதல்’ நரக பயத்தைக் கடந்தது. “நரகத்தை எரிக்கவும், சொர்க்கத்தை அழிக்கவும் விரும்புகிறேன்” என்ற அவரின் கூற்று, காதலை ஒரு தூய்மையான, கணக்கற்ற உணர்வாக மாற்றியது. காதலை அதன் உடல் மற்றும் மன ரீதியான அனைத்துப் பரிமாணங்களிலும் கொண்டாடிய ஃபோரூக், “மீண்டும் பிறப்பு” கவிதையில் காதல் ஒரு பெண்ணை எவ்வாறு மறுவடிவமைப்பு செய்கிறது என்பதைப் பாடினார். இருவருமே காதலை ஒரு கலகமாகவே பார்த்தனர்.

 ராபிஆவின் ‘இஷ்க்’ சமூகத்தின் போலித்தனமான மதச்சடங்குகளுக்கு எதிரான கலகம். “கடவுளை நரகத்திற்கு அஞ்சி நேசிப்பவன் வியாபாரி” என்று அவர் சாடியது அக்கால ஆணாதிக்க மத போதகர்களை உலுக்கியது. ஃபோரூக்கின் காதல், உடலைச் சிறைபிடித்த சமூக விழுமியங்களுக்கு எதிரான கலகம். “நான் பாவம் செய்தேன், இன்பம் நிறைந்த பாவம்” என்று அவர் எழுதியபோது, அது ஈரானியச் சமூகத்தில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

“என்னுள் இருப்பவன் நீயே” என்று இறைவனுடன் ஒன்றிணைவதைத் தேடி, புற உலகைப் புறக்கணித்து அகத்தின் ஆழத்திற்குச் சென்றார் ராபிஆ. “ஜன்னல்” கவிதையில் சொல்வது போல, உலகைப் பார்ப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் ஒரு திறப்புக்காக ஏங்கினார் ஃபோரூக். ராபிஆ இறைவனைத் தேடிய அதே தீவிரத்தோடு, ஃபோரூக் வாழ்வின் அர்த்தத்தைத் தேடினார்.

 நெருப்பு, தண்ணீர், ஒளி போன்ற இயற்கைப் படிமங்களை ஆன்மீக நிலைகளை விளக்க ராபிஆ பயன்படுத்தினார்; மண், செடி, பறவை, இருள் போன்ற படிமங்களைப் பயன்படுத்தி நவீன வாழ்வின் விரக்தியையும் நம்பிக்கையையும் ஃபோரூக் படம்பிடித்தார்.

ராபிஆ அல்-அதவியாவின் “நிபந்தனையற்ற காதல்” மற்றும் ஃபோரூக் ஃபாரோக்சாத்தின் “மீண்டும் பிறப்பு” ஆகிய இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும், “தன்முனைப்பு அழிந்து, ஒரு புதிய அடையாளத்தைக் கண்டடைதல்” என்ற புள்ளியில் ஆச்சரியப்படும் விதமாக ஒன்றிணைகின்றன.

இறைக்காதலில் தன்னை முழுமையாகக் கரைத்துக்கொண்ட ராபிஆ, “நான்” என்ற அகந்தை அழியும் போதுதான் உண்மையான இறைத்தன்மை வெளிப்படும் என்றார். உலகியல் ஆசைகளைத் துறப்பது அவருக்கு ஒரு வகையில் மரணம், பிறிதொரு வகையில் மறுபிறப்பு. சூஃபித்துவத்தில் மரணம் என்பது ‘அல்-லிகா’ (Al-Liqa) – அதாவது காதலன் (இறைவன்) தனது காதலியைச் சந்திக்கும் ஒரு திருமண விழா போன்றது. ராபிஆவிற்கு மரணம் என்பது ஒரு பயங்கரமான நிகழ்வு அல்ல; அது உலகியல் திரைகளை விலக்கிவிட்டுப் பேரொளியைக் காணும் ஒரு வாசல். தனது இறுதி நாட்களில், “எனது மரணம் என்பது எனது உண்மையான வாழ்வின் தொடக்கம்” என்று அவர் நம்பினார். அவர் உலகைத் துறந்தது ஒருவகையான ‘இறப்பிற்கு முன் மரணித்தல்’ (Moutu Qabla an Tamoutu) ஆகும்.

அதே சமயம், தனது “மீண்டும் பிறப்பு” கவிதையில், “எனது முழு இருத்தலும் ஒரு இருண்ட மந்திரம்” என்று தொடங்குகிறார் ஃபோரூக். ஃபோரூக்கிற்கு மரணம் என்பது ஒரு நிழலைப் போன்றது; அது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் தொடர்கிறது. ஆனால், அவர் மரணத்தை ஒரு தோல்வியாகப் பார்க்கவில்லை. மாறாக, பழைய சமூகக் கட்டமைப்புக்குள் வாழ்ந்த ஒரு பெண் இறந்து, கவிதை மற்றும் காதலின் வழியே ஒரு புதிய மனுஷியாக உருவெடுப்பதையே இக்கவிதை பறைசாற்றுகிறது. “பறவை இறக்கக்கூடும், ஆனால் பறத்தலை நினைவில் கொள்” என்ற அவரது வரி, உடல் அழிந்தாலும் ஒருவரின் ஆக்கப்பூர்வமான செயல் மரணத்திற்குப் பின்னும் வாழும் என்ற ‘இருத்தலியல் நம்பிக்கையை’ காட்டுகிறது.

ராபிஆவிற்கு நேற்று, இன்று, நாளை என்ற காலக் கணக்குகள் கிடையாது; இறைவனுடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் நித்தியமானது. “நேரம் கடந்துவிட்டது, கடிகாரம் அடித்துவிட்டது” என்று பாடும் ஃபோரூக், ஒரு மலர் விரிவதைப் போல அல்லது ஒரு கவிதை பிறப்பதைப் போல, காலத்தின் பிடியிலிருந்து விடுபட்டு ஒரு நித்தியமான கணத்தில் வாழ்வதைப் பற்றிப் பேசுகிறார்.

நரகத்தின் நெருப்புக்கோ, சொர்க்கத்தின் நிழலுக்கோ அஞ்சாத ஒரு காதல் மற்றும் எவ்வித நிபந்தனையுமற்ற அர்ப்பணிப்புதான் ராபிஆவை ஒரு ஞானியாக்கியது. ஃபோரூக்கோ தனது உணர்வுகளைச் சமூகத்திற்கு ஒளிக்காமல், அதன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் காதலை ஒரு புனிதமான செயலாக முன்வைத்தார். “வாழ்க்கை என்பது ஒரு நீண்ட தெரு, அங்கே ஒரு பெண் தினமும் தன் பையோடு கடந்து செல்கிறாள்” என்ற வரிகள், வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.

ராபிஆ, ஃபோரூக் ஆகிய இருவருமே சமூகத்தின் இரைச்சல்களிலிருந்து விலகி, ஒரு ‘ஆக்கப்பூர்வமான தனிமையை’ தங்களுக்குள் வரித்துக்கொண்டவர்கள். ஆனால், அந்தத் தனிமையின் தன்மையும் அதன் இலக்கும் மாறுபட்டவை.

அவர்களின் ‘தனிமை’ குறித்த பார்வையை இப்படிக் கூறலாம் ராபிஆவிற்குத் தனிமை ஒரு தவம். அவர் உலகத்தை வெறுக்கவில்லை, மாறாக இறைவனை முழுமையாக நேசிக்கத் தனிமை தேவை என்று கருதினார். ராபிஆவின் தனிமையில் இறைவன் மட்டுமே உரையாடுகிறான். “எனது தோழன் எப்போதும் என்னுடனேயே இருக்கிறான்” என்பது அவரது நிலைப்பாடு. இது ஒருபோதும் ‘தனிமை உணர்வு’ அல்ல; இது ஒரு துளி கூட வருத்தமோ அல்லது ஏமாற்றமோ இல்லாத ‘ஏகாந்தம்’. ராபிஆவின் தனிமை ஒரு பூட்டிய அறை போன்றது; அதன் கதவுகள் உலகிற்கு மூடப்பட்டிருக்கும், ஆனால் அதன் கூரை இறைவனின் வானத்திற்குத் திறந்திருக்கும்.

ஃபோரூக்கின் தனிமை ஒரு கலகம். ஆணாதிக்கச் சமூகம் ஒரு பெண்ணின் மீது திணிக்கும் போலித்தனமான உறவுகளிலிருந்து தப்பிக்கும் இடமாக அவர் தனிமையைப் பார்த்தார். ஃபோரூக்கின் தனிமையில் ஏக்கமும், வலியும், சமூகத்தின் மீதான விமர்சனமும் கலந்திருக்கும். “தனிமை என்பது ஒரு கறுப்புச் சுவர்” என்று அவர் பாடினாலும், அந்தச் சுவருக்குப் பின்னால்தான் உண்மையான ‘தான்’ இருப்பதை உணர்ந்தார். “மீண்டும் பிறப்பு” கவிதையில் அவர் சொல்வது போல, ஒரு ஜன்னலோரம் அமர்ந்து உலகை அதன் நிஜத் தன்மையோடு பார்ப்பதற்கான அவகாசமே அவரது தனிமை. ஃபோரூக்கின் தனிமை ஒரு ஜன்னல் போன்றது; அதன் வழியே அவர் தன்னைத்தானே பார்த்துக் கொள்கிறார், அதே சமயம் வெளியுலகின் அநீதிகளையும் அவதானிக்கிறார்.

“இறைவா, என் அறைக்குள் நீ இருக்கும்போது எனக்கு உலகம் எதற்கு?” என ராபிஆ கேட்கையில், “தனிமையே, நீதான் என் உடலின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே கண்ணாடி” என்கிறார் ஃபோரூக். ராபிஆவின் தனிமை ‘கடவுளைக் காணும் ஒரு வழி’ என்றால், ஃபோரூக்கின் தனிமை ‘தன்னைக் கண்டடையும் ஒரு வெளி’. ஃபோரூக்கின் “மீண்டும் பிறப்பு” கவிதையில் 

“நான் ஒரு சிறிய ஜன்னலை அறிவேன், 
அங்கே காதலும், அமைதியும், 
மண்ணின் ஈரமும் கலந்திருக்கின்றன. 
அந்த ஜன்னல் வழியே, 
நான் மீண்டும் பிறக்கிறேன்…” -என்று அந்த ஜன்னலை “கவிதை மற்றும் சுதந்திரம்” எனக் கூறுகையில், ராபிஆ அந்த ஜன்னலை “இறைவனின் திருமுகம்” என்கிறார். 

ராபிஆ, ஃபோரூக் ஆகிய இருவருக்குமே ‘உடல்’ என்பது வெறும் சதைப்பிண்டம் அல்ல; அது ஒரு தளம். ஆனால், அந்தத் தளத்தை அவர்கள் கையாண்ட விதம் நேர் எதிர்மறையானது.

ராபிஆவின் சூஃபித்துவப் பார்வையில், உடல் என்பது ஆன்மா தங்கியிருக்கும் ஒரு தற்காலிகக் கூண்டு. இறைவனுடனான ஒன்றிணைப்பிற்கு (Fana) உடல் சார்ந்த இச்சைகளும், லௌகீகத் தேவைகளும் பெரும் தடைகளாக அவர் கருதினார். பசி, உறக்கம், வலி போன்ற உடலின் மொழிகளை மௌனிக்கச் செய்வதன் மூலம் ஆன்மாவின் மொழியைப் பெருக்க முடியும் என்பது ராபிஆவின் வழி. 

“நான் ஒரு பெண்” என்ற உடல் சார்ந்த அடையாளத்தையே அவர் கடந்தார். சூஃபி மரபில் “ஆணாக மாறிய பெண்” என்று ராபிஆ போற்றப்படுவது, அவர் தனது பாலின அடையாளத்தைத் துறந்து ‘தூய ஆன்மாவாக’ நிலைபெற்றதைக் குறிக்கிறது. அவருக்கு விடுதலை என்பது உடலிலிருந்து ஆன்மா பெறும் விடுதலை.

ஃபோரூக்கிற்கு உடல் என்பது ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு நிலப்பரப்பு. நூற்றாண்டுகளாக ஆணாதிக்கச் சமூகம் பெண்ணின் உடலை ஒரு நுகர்வுப் பொருளாகவோ அல்லது மூடி மறைக்கப்பட வேண்டிய ‘பாவத்தின் ஊற்றாகவோ’ பார்த்தது. ஃபோரூக் அதைத் தலைகீழாக மாற்றினார்.

 உடலின் இச்சைகளை, ஸ்பரிசத்தை, வேட்கையை அவர் பாடியபோது, அது ஆபாசமாக அல்லாமல் ஒரு ‘இருத்தலியல் உண்மையின்’ வெளிப்பாடாக இருந்தது. “நான் ஒரு பெண், எனக்கு உடல் இருக்கிறது, அதற்கு உணர்வுகள் உண்டு” என்று பிரகடனப்படுத்தியதன் மூலம், மறைக்கப்பட்ட பெண்மையின் குரலுக்கு அவர் வடிவம் கொடுத்தார். அவருக்கு விடுதலை என்பது உடலின் வழியே அடையும் விடுதலை.

ராபிஆ ‘உடலைத் துறப்பதன்’ மூலம் அன்றைய மத நிறுவனங்கள் விதித்த சட்டங்களை உடைத்தார். ஃபோரூக் ‘உடலைக் கொண்டாடுவதன்’ மூலம் சமூகம் விதித்த தார்மீகச் சங்கிலிகளை உடைத்தார். இருவரும் தங்களைச் சுற்றியிருந்த அதிகார அமைப்புகளை நிராகரித்தனர். ராபிஆ உலகை நிராகரித்தார்; ஃபோரூக் உலக நியதிகளை நிராகரித்தார். ராபிஆவின் ‘இறைக்காதல்’ நரக பயத்தைப் பொருட்படுத்தவில்லை; ஃபோரூக்கின் ‘பாவம்’ சமூகத்தின் பழிச்சொல்லைப் பொருட்படுத்தவில்லை. இருவருமே அச்சமற்ற நிலை என்ற புள்ளியில் சந்திக்கிறார்கள். இந்த அச்சமின்மையே உண்மையான விடுதலை.

எனது வாழ்வின் ரகசியம் – ராபிஆ அல்-அதவியா

ஓ இறைவா!
எனது வாழ்வின் இரகசியமும்
என் இதயத்தின் அழியாத இன்பமும் நீயே.
என் ஆழத்தின் வேட்கையும் நீதான்;
என் அகத்தின் தாகம் தீர்க்கும் அருவியும் நீயே.
உலகில் உள்ள சகலப் பொருட்களையும்
உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்;
ஆனால், நீயோ—
அனைத்திற்கும் மேலான உன்னதப் பரிசு.
என் தனிமையின் இனிமையே!
நான் எங்குச் சென்றாலும்
உனது பேரொளி எனக்குத் துணையாக இருக்கிறது.
உன் நினைவுகள் மட்டுமே என் இதயத்தில்
இடைவிடாத நடனத்தை நிகழ்த்துகின்றன.
உன்னை நேசிப்பதை விட,
உன்னை அறிவதை விட,
எனக்கு வேறு என்ன பேரின்பம் இருந்துவிடப் போகிறது?
இந்த வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும்
உன் அருகாமையை உணர்வதே
என் இருப்பின் ஆகச்சிறந்த இரகசியம்.
ஜன்னல் – ஃபோரூக் ஃபாரோக்சாத்
எனக்கு ஒரு ஜன்னல் போதும்—
ஒரு ஜன்னல் மட்டுமே போதும்;
அதன் வழியே நான் உலகைப் பார்க்கிறேன்,
உலகம் என்னைப் பார்க்கிறது.
அந்த ஜன்னல் ஒரு திறப்பு;
வார்த்தைகள் வந்து விழும் ஒரு வெளி.
அங்கே சூரியன் தன் கரங்களை நீட்டி
என் அறையின் இருளைக் கலைக்கிறான்.
பறவைகள் பாடும்போது,
அந்த ஜன்னல் ஒரு இசைக் கருவியாகிறது.
மழை பெய்யும்போது,
அது என் கண்ணீரின் சாட்சியாகிறது.
வாழ்க்கை என்பது—
இந்தச் சிறிய ஜன்னலோரம் அமர்ந்து
காலத்தின் நதியைக் காண்பதுதான்.
இங்கேதான் நான் மீண்டும் பிறக்கிறேன்;
இங்கேதான் என் இருப்பு
ஆகாயத்தின் நீலத்தோடு கலக்கிறது.

(நீள் கவிதையான ஜன்னல் கவிதையிலிருந்து சில வரிகள்)

பழைய அடையாளங்கள் அழிந்து, ஒரு புதிய கவித்துவ ஆளுமையாகப் பிறப்பது என்பது ஒருவகையான ஆன்மீக ரசவாதம்தான். ராபிஆ மற்றும் ஃபோரூக் – காலம், மதம், வாழ்வியல் சூழல் என இவர்களுக்கிடையே பல நூற்றாண்டுகளும், முற்றிலும் மாறுபட்ட உலகங்களும் குறுக்கிடுகின்றன. ஒருவர் பாலைவனத்தில் இறைவனைத் தேடித் தவம் புரிந்தார்; மற்றொருவர் நவீன நகரின் இரைச்சலில் தன் அடையாளத்தைத் தேடிப் போராடினார். ஆனால், இவர்களுடைய ஆன்மாவின் வேட்கை ‘சுதந்திரம்’ என்ற ஒரே புள்ளியில் சங்கமிக்கிறது.

ராபிஆ இறைவனை “நீயே என் இதயத்தின் ரகசியம்” என்று அழைத்த அதே தீவிரத்தோடு, ஃபோரூக் தனது காதலையும் வாழ்வையும் அணுகுகிறார். ராபிஆவின் ‘இஷ்க்’ எனும் தத்துவத்தை ஃபோரூக் லௌகீக உலகிற்கு இடமாற்றம் செய்கிறார். ராபிஆவின் தீவிரமான மொழிநடை, ஃபோரூக்கின் கவிதைகளில் ஒரு நவீன ஆன்மீகத் தன்மையைத் தோற்றுவிக்கிறது.

ராபிஆவின் வாழ்க்கை அன்றைய ஆணாதிக்க மத போதகர்களுக்கு எதிரான ஒரு கலகம். ஃபோரூக்கின் கவிதைகளில் இருக்கும் ‘துணிச்சல்’, ராபிஆ போன்ற பெண் ஞானிகள் ஏற்படுத்தி வைத்த ‘பாரசீகப் பெண் கலக மரபின்’ தொடர்ச்சிதான். ராபிஆ எப்படி “சொர்க்கத்தின் மீதான ஆசை வியாபாரம்” என்று சாடினாரோ, அதே தொனியில் ஃபோரூக் சமூகத்தின் போலி அறங்களை எள்ளி நகையாடுகிறார். நிறுவனமயப்பட்ட அமைப்புகளை ஒரு பெண் கேள்வி கேட்கும் அந்த ‘ஆன்மீகத் துணிச்சல்’ ராபிஆவிடமிருந்து ஃபோரூக்கிற்குத் தடையின்றி கடத்தப்பட்டிருக்கிறது.

ராபிஆவின் கவிதைகளில் வரும் ‘ஒளி’ (Nur), ஃபோரூக்கின் கவிதைகளில் ‘ஜன்னல் வழியே வரும் சூரியனாக’ உருமாற்றம் பெறுகிறது. இருவருமே அறியாமை அல்லது சமூக ஒடுக்குமுறை என்னும் இருளுக்குள் ஒரு திறப்பைத் தேடுகிறார்கள். ராபிஆவின் ஆன்மீக ரசவாதம் (Alchemy), ஃபோரூக்கின் கவிதைகளில் மானுட உணர்வுகளின் ரசவாதமாகத் திரட்சியடைந்துள்ளது.

இறுதியில், இந்த இரு பெண் ஆளுமைகளும் உலகுக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான்: “சமூகமோ, மதமோ அல்லது சம்பிரதாயங்களோ உங்களைச் சிறைபிடிக்க முயன்றால், உங்களது அகத்திற்குள் ஒரு ஜன்னலைத் திறந்து கொள்ளுங்கள்.”

ராபிஆ அந்த ஜன்னல் வழியே இறைவனின் பேரொளியைக் காண்கிறார்; ஃபோரூக் அதே ஜன்னல் வழியே தன் கவிதைகளுக்கான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறார். ராபிஆ ஒரு ஆதி-புள்ளி என்றால், ஃபோரூக் அதன் விரிவு. இருவரும் பார்த்தது ஒரே ஒளியைத்தான். அவர்கள் காட்டிய அந்த விளக்கு, இன்றும் சுதந்திரத்தைத் தேடும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.

அ.முனவர் கான் –  தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். சமீபத்தில் “காபி ஆறுவதற்கு முன்” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் முகவரி: amkhansrv@gmail.com

வாழ்வின் நிலையாமையை முற்றாகப் பற்றி சுழலும் அன்றாடத்தின் நிலையான கதைகள்

0

ஆனந்த பிரகாஷ்

ழைக்கண் – மொத்தம் ஒன்பது, வெவ்வேறு களங்களில், வெவ்வேறு வீச்சுகளில், வெவ்வேறு அன்றாடத் தருணங்களால் பின்னப்பட்ட அன்றாடத் தெறிப்புகளின் கதைகள். ஒவ்வொரு கதைகளும் தன்னளவில் தனித்துவமான கதைகள் என்றாலும், எல்லாவற்றையும் இணைக்கும் மையச் சரடாக எதையேனும் சொல்ல முடியுமானால் அது வாழ்வின் நிலையாமை என்ற இடத்தில் போய் கச்சிதமாய் பொருந்தி நிற்கிறது.


நிலையாமை என்பது வெறும் நேற்று இருந்த நிலை இன்றைக்கு இல்லை என்றளவில் சுருக்கிக் கொள்ளாமல் – நேற்று இருந்த பொருளாதாரம் இன்றில்லை, நேற்று இருந்த உடல்நிலை இன்றில்லை, நேற்று இருந்த உடல் இன்றில்லை, நேற்று இருந்த உறவு இன்றில்லை, நேற்று இருந்த மனம், மனநிலை இன்றில்லை என சதா மாறிக்கொண்டே இருக்கும் அத்தனை நிலையாமையையும் கருப்பொருளாக மாறி உணர்வுகளுக்கும், சூழல்களுக்கும், வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் நிலையாமையால் மாறிப்போகும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் சரியே பொருந்திப் போகக்கூடிய ஒன்றாக எல்லா கதைகளிலும் கச்சிதமாக வெளிப்படுகிறது.

வாழ்க்கையின் நிலையாமை, அதன் இரக்கமற்ற கொடூரம், அதை எந்த விதத்திலும் எதிர்நிற்க முடியாத மனிதர்களும், எதிர்க்க முடியாமல் பலியாகிப் போகிற மனிதர்களும் இடம்பெறுகிறார்கள். உடலாகவும் சரி, உயிராகவும் சரி, உணர்வாகவும் சரி, உறவாகவும் சரி, இப்படி எல்லாமும் வாழ்க்கையின் நிலையாமை என்ற மறுக்க முடியாத ஒன்றால் பலியாகிப் போகிற எதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது ஒன்பது கதைகளும்.

செந்தில் ஜெகன்நாதனின் மொழி – எந்த பூச்சும் இல்லாத, எந்த சிடுக்குகளும் இல்லாத அன்றாடத்தின் மொழி. அன்றாடத்தின் கதைகளாக விரியும் கதைகளுக்கு அன்றாடத்தின் மொழி கச்சிதமான ஒரு கதைசொல்லல் வடிவத்தைக் கொடுக்கிறது. அன்றாடத்தின் இந்த சிடுக்கற்ற மொழிதான் அவர் கதைகளின் உயிர்நாடியாக இருந்தாலும், அதே அன்றாடத்தின் மொழி ஒரு சில கதைகளின் வீச்சையும், வீரியத்தையும் குறைத்து எடுத்துக்கொண்டு போய் வாசகனுக்கு சேர்க்கிறதோ என்று ஒரு சில கதைகளில் ஐயமும் தோன்றுகிறது.

உதாரணமாக எவ்வம் மாதிரியான கதைகளைச் சொல்லலாம். அக்கதை பேசும் பொருளும், அது தாங்கி நிற்கிற கணமும், வாசகனிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய உணர்வும் அதிகம் என்றாலும், ஏதோ ஒரு வகையில் அதன் வீரியம் குறைபட்டுப் போனதை வாசிப்பின் வழி அறிய முடிகிறது. அது எழுதப்பட்ட அன்றாடத்தின் மொழியில் குறைகள் ஏதும் இல்லை என்றாலும், அன்றாடத்தின் மொழியைத் தாண்டி அக்கதைக்கான பிரத்யேக கதைமொழி தேவைப்பட்டதோ என வாசிப்பின் முடிவில் யோசிக்க வைத்த கதையாக மாறிப்போனது எவ்வம் சிறுகதை.

செந்தில் ஜெகன்நாதன் தன் கதைகளுக்கான தலைப்புகளைக் கையாண்டு இருக்கும் விதமும் மழைக்கண்ணில் கவரக்கூடிய ஒரு அம்சமாக வந்திருப்பதை மறுக்க முடியாது. தன் கதைகளுக்கான தலைப்புகளை (எவ்வம், மழைக்கண், காகளம், நெருநல் உள்ளொருத்தி) குறளில் இருந்தும், சங்கத்தில் இருந்தும், பக்தி இலக்கியத்தில் இருந்தும் கையாண்டு இருந்தாலும், அது வெறும் சொல் அல்லது பெயர் என்றளவில் சுருங்கிக் கொள்ளாமல் அக்கதையின் மையத்தோடு இயல்பாய் பொருந்திப் போவதுதான் மிகச் சிறப்பான விஷயம்.

மழைக்கண்ணில் வரும் அத்தனை மாந்தர்களும் தள்ளி நின்று வெறும் கதையின் பாத்திரமாக மட்டும் நிற்காமல் நம்மோடு ஒட்டி நின்று பரிச்சயமான மனிதர்களாகவும், அவர்களின் கதைகள் நாம் கடந்து வந்த மனிதர்களின் கதைகளாகவும் நம்மிடம் வெளிப்பட்டு நிற்பதுதான் அக்கதைகளின் ஊடாக ஒரு பிணைப்பை வெகு விரைவாக நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது.

அன்பின் நிழல் – சுயம்புவாக வளர்ந்து வந்த அப்பாவிற்கும், ஒரு போதும் அன்பைப் பெறாத மகனுக்கும், வாழ்வின் நிலையாமைக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டமாக விரிகிறது அன்பின் நிழல். சுயம்புவாக வளர்ந்த அப்பாக்களுக்கு என்றே ஒரு தனிக் குணம் இருக்கிறது. அவர்களின் அகராதியில் அன்பு என்ற சொல்லுக்கு ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கிறதா எனப் பல சமயங்களில் யோசிக்க வைக்கும்படியான ஒரு குணம். அவர்களுக்கு தெரிந்த ஒரு அன்பின் வெளிப்பாடாகவும் வெளிவருவது குடும்பத்திற்கான பொருள் ஈட்டுவது என்றளவில் சுருங்கிக் கொள்ளக்கூடியது. அதிலும் கூட முழுக்க அன்பின் வெளிப்பாடு என்றும் நிறுத்திக்கொள்ள முடியாது. அதுவும் ஏதோ ஒரு வகையில் தன் இருத்தலை, அதிகாரத்தை நிரூபிக்கக்கூடிய ஒன்றாகவும் பல சமயங்களில் நிற்கக்கூடியது.

அப்படியான சுயம்பு அப்பாவின் வாழ்வில், நிலையாமையால் தன்னுடைய நிலத்தை இழந்து, குடிக்கு அடிமையாகி எல்லாருக்கும் ஒரு பாரமாகும் அப்பாவிற்கும் மகனுக்கும் இடையே நடக்கும் மொழிகள் பெரிதும் அற்ற ஒரு நிகழ்வாக விரிகிறது அன்பின் நிழல். அப்பா இறந்துபோய் இருந்தால் ஒரு வேலை தேவலை என நினைக்கும் மகன், கதையின் இறுதியில் குழந்தை போல படுத்து இருக்கும் அப்பாவின் நெற்றியில் வைக்கும் முதல் முத்தம், அதன் ஈரம் நமக்குள்ளும் காயாமல் இருப்பதுதான் இக்கதையின் வெற்றி.

எல்லா தந்தை, மகன் உறவும் அன்பினால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக வெளிப்படுவதை விட, பெரும்பாலும் அன்பின் நிழல்களாக மட்டும் வெளிப்படும் எதார்த்தத்தைக் காட்டுகிறது அன்பின் நிழல்.

அதற்கு சற்றே பொருத்தமான, ஆனால் முற்றிலும் வேறான ஒரு தந்தை, மகன் உறவைக் காட்டுகிறது எவ்வம். தனது வார இறுதி விடுமுறையைக் கூட தன்னிடமிருந்து பறித்துக்கொண்டு, சூதாட்டம் நடத்த அழைத்துச் செல்லும் குடிகார தந்தையையும், அதனால் தினம் தினம் ஒரு குடும்பம் படும் நெடுந்துயர் பற்றியும் பேசுகிறது எவ்வம்.

இப்படியான சூழலில் வளரும் குழந்தையின் உளவியலை வரிக்கு வரி அப்பட்டமாகப் பதிவு ஆக்குகிறது எவ்வம். அக்குழந்தைக்கு தன் குழந்தமையைத் தாண்டிய ஒரு பொறுப்பும் கூடவே வந்து விடுகிறது. அதைக் கண் முன்னே நிறுத்திக் காட்டுகிறது எவ்வம் சிறுகதை. தான் பணத்தை இழந்து பேருந்து நிறுத்தத்தில் கிடக்கும் அப்பாவைப் பார்த்து கண்ணை மூடியவனுக்கு – வெந்த கிழங்கு போல் இருக்கும் தன் தங்கையின் பாதம் மண்ணில் உரச இழுபடும் காட்சி தோன்றுவது ஒரு போதும் நிற்காத எவ்வத்தின் சாட்சி.

நித்தியமானவன் – சினிமா கனவு, ஊரை விட்டு ஓடி வந்து வாய்ப்பு தேடி அலைந்து திரிந்து நொந்துபோன மனிதர்களின் கதை, பல முறை படித்த ஒன்றுதான். இக்கதையும் பல கதைகளை மீண்டும் ஞாபகச் சேகரத்தின் அடியில் இருந்து புலிகலைஞன், கரைந்த நிழல் போன்றவற்றைத் தட்டி எழுப்பிய கதை. இன்றோடு தன் சினிமா கனவையெல்லாம் மூட்டை முடிச்சோடு கட்டி ஊரோடு போய் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று கடைசியாக பிணமாக நடிக்கப் போன ஒருவன், கலையின் தாகத்தால், ஆத்மார்த்த அர்ப்பணிப்பால் ஒரு நிமிடம் பிணமாக மாறி எல்லாரையும் வாயடைக்கச் செய்து என்றும் அழிக்க முடியாத நித்தியமானவனாக வாசிப்பவன் மனதில் உருமாறி நிற்கும் நித்தியமானவனின் கதை. கலை பெரும்பாலும் ஒரு கலைஞன் வாழ்வதற்கு தேவையான எதையும் கொடுக்காத சமயத்திலும், கலைக்கும் கலைஞனுக்கும் இடையே நிகழும் அந்த கணம், அந்த உரையாடல் முழுக்க முழுக்க அந்தரங்கமானது, ஆத்மார்த்தமானது.

முத்தத்திற்கு – சமீபத்தில் படித்த ஆதவனின் நிழல்கள் சிறுகதையை வெகுவாக நினைவூட்டிய ஒரு சிறுகதை. அக்கதையில் ஆதவன் நிகழ்த்திக் காட்டிய உச்சம் பிரமிக்க வைக்கக்கூடிய ஒன்று. கிட்டத்தட்ட அதே பாணியில் எழுதப்பட்ட, சற்று வித்தியாசமான ஒரு அருமையான கதை. குடும்பப் பொறுப்பின் காரணமாக பால்யத்தின் தேவைகளை எல்லாம் விட்டுவிட்டு, பால்யத்தின் இறுதியில் (40 வயதில்) மீண்டும் பால்யத்தின் வால் முளைக்கும் மனிதன் ஒரு முத்தத்திற்காக படும் அவஸ்தையையும், தனக்குள்ளாக நிறைக்கும் கேள்விகளையும், அந்த உணர்வை சக தோழர்களிடம் கூட வெளிப்படுத்த முடியாத வயதிற்கும் உணர்வுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தையும் பதிவு செய்யும் கதை.

தொகுப்பின் முத்தான, அருமையான கதைகளாக வந்து சேர்ந்திருப்பவை மழைக்கண், காகளம், நெருநல் உள்ளொருத்தி. மூன்று கதைகளையும் பற்றியும் எழுதவும் பேசவும் நிறைய இருப்பதால், அதைத் தவிர்த்து அந்தக் கதைகள் கொடுத்த தாக்கத்தை மட்டுமே பேசிக்கடப்பது சரியான அணுகுமுறை என்று நினைக்கிறேன்.

மழைக்கண் – பருத்தி விவசாயம் செய்து வாழும் விவசாயிகளின் வாழ்வில் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்தால், தோல் நோயால் அவதிப்படும் அம்மாவின் துயரையும், குடும்பம் படும் அவதியையும் உருக்கமாகப் பதிவு செய்த கதை. கதையின் இறுதியில் உடுத்துவதற்காக வாங்கி வந்த பருத்திச் சேலையைக் கட்டிப்பிடித்து கதறி அழும் அம்மாவின் முகத்திற்கு – பால்குடி புள்ளைப்போல பார்க்கிற பருத்திச் செடியின் முகம்தான் மனதிற்குள் வந்தது.

நெருநல் உள்ளொருத்தி – வாழ்வின் நிலையாமையை, அதன் முன்னால் தாய்மை கூட ஒரு பொருட்டல்ல என்கிற நிதர்சனத்தை எந்த பூச்சும் இல்லாமல் அப்பட்டமாகப் பதிவு செய்யும் கதை.

காகளம் – வெறும் சிடுமூஞ்சி முதலாளிகளை மட்டுமே தெரிந்த நமக்கு, சங்கீதத்தில் மிகுந்த பற்று இருந்த, சாந்தமே முகமான முதலாளியையும், வாழ்வின் தேவை கருதி அவரை ஏமாற்றிய ஒருவன் அவருடைய இறப்பிற்கு போய் நின்று பொங்கி வரும் குற்ற உணர்ச்சியையும், அதன் வழியாக விரியும் வாழ்க்கையையும் வாசிப்பை கதையினோடாக மட்டுமே கட்டிப்போட்ட கதை காகளம். இறந்து குளிர்பெட்டியில் சாந்தமே குடிகொண்ட முதலாளியைப் பார்க்கும் போது என் மனதிற்குள், கையில் செம்மறி ஆடுக்கு பதிலாக டேப் ரெக்கார்ட்டை கையில் வைத்து கருணையும் சாந்தமும் உருவான இயேசுவின் உருவப்படத்தை பார்த்தது போன்ற ஒரு எண்ணம்.

அதிலாமல் ஆடிஷன், நேசன் என இரு வேறு கதைகள். ஆடிஷன் – சினிமா கனவைக் கொண்டு முன்னேறி நிற்கிற மனிதர்களின் வாழ்வில் மீண்டும் ஒரு அலையடித்துப் போகிற பழைய காதலின் அலையைக் காண்பிக்கிற ஒரு கதை. நேசன் – நாலு கால் ஜீவனின் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அது காட்டுகிற அன்பின், நேசத்தின் முன்னால் ஒரு கணம் கரைந்து உருகுகிற கணவனின் கதை.

மொத்தமாக உணர்வுகளும், உறவுகளும், நிலையாமையும் என ஒன்றாக பின்னிப் பிணைந்த மனிதர்களின், வாழ்க்கையின், அன்றாடத்தின் தொகுப்பு. இதெல்லாம் கதையாகுமா என்கிற கேள்விக்கு, அன்றாடத்தின் அத்தனை அம்சங்களும் கதைக்கு உரியன எனக் கூறும் ஒரு தொகுப்பு மழைக்கண்.

செந்தில் ஜெகன்நாதனுக்கு சொல்வதற்கு நிறைய மனிதர்களும், கதைகளும், சம்பவங்களும் இருக்கின்றன. அதைப் புனைவாக்கும் மொழியும், நடையும், கலையும் அவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. அவரின் அடுத்த படைப்புகளை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிய ஒரு படைப்பு – மழைக்கண்.

***

சு. ஆனந்த பிரகாஷ் – சொந்த ஊர் மதுரை. பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். தீவிர வாசகரும் புத்தக மதிப்புரையாளரும் (Bookstagrammer) ஆவார். தமிழ் மற்றும் உலக இலக்கியங்களை வாசித்து, அவற்றைப் பற்றிய தனது வாசிப்பு அனுபவங்களையும், மதிப்புரைகளையும் தனது Bookstagram பக்கமான @paperbacks_and_me இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். மின்னஞ்சல்: ananthaprakash11@gmail.com

ஒளிரும் காதல்

1

கா.சிவா

ரமும் சாபமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான். மனிதர்களுக்கு கிடைக்கும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு என்பது ஒரு வகையில் வரம்தான். அதே சமயம் சாபமும்கூடத்தான். இரு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தபின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இயலாதென்பது இதிலுள்ள பொறி. தேர்ந்த பாதை சரியானதாக அமையாதபோது தேர்வு செய்த தன்மீதே கோபம் கொள்வதும் தவறவிட்ட பாதையின் மீது பெரும்பிரேமையும் தீராத ஏக்கமும் தோன்றுவதுதான் சாபம். 

 எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணின் மனையறம் நாவலில் மஞ்சள் குங்குமம், AVE MARIA, திருவஞ்சி, LUZ எனும் நான்கு தலைப்புகளிலான வெவ்வேறு மனிதர்களின் கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம் வருகிறது. எடுத்த முடிவால் அவர்கள் வாழ்க்கை வரமென ஆகியதா அல்லது சாபமானதா என்பதை விவரிக்கிறது நாவல்.

 எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் எழுதி சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மனைமாட்சி நாவலின் தொடர்ச்சி என மனையறம் நாவலைக் கூறலாம். காரணம் இருநாவல்களின் வடிவம். ஆனால், வடிவம் மட்டும்தான் ஒரேமாதிரியே தவிர கதைகளின் களங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அமைந்துள்ளன. 

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் சிறப்பு என்பது கதையை மிக நிதானமாக எந்தக் குழப்பமும் இல்லாமல் துல்லியமாகக் காட்டுவது. கலைத்துப் போடும் வடிவத்தாலும் திருகல் மொழியாலும் வாசகனைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல், தெளிவாக படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் யதார்த்தமான சிக்கல்களைக் கண்டு வாசகன் திகைப்படையுமாறு செய்கிறார்.

  மனையறம் நூலில் இடம் பெற்றுள்ள நான்கு கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்பானதாக உள்ளன. அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த LUZ கதையைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். 

  LUZ கதையின் களம் பெரும்பாலும் மலையும் மலை சார்ந்த இடங்களாக உள்ளது. இது சங்ககாலக் கவிதைகளில் குறிப்பிடப்படும் குறிஞ்சித் திணையின் நிலமாக உள்ளது. அதேபோல், அத்திணையின் உரிப்பொருளான புணர்தலும் புணர்தல் நிமித்தமும் இந்நாவல் முழுக்க விரவிப் பொருத்தமாக அமைந்துள்ளது. 

 விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ள விவேக் மற்றும் அம்மு இருவரும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள அருவிகளில் குளித்தும் இயற்கையை ரசித்தும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். இதை வாசிக்கும்போது சங்கக்கவிதைகளை உரைநடையில் வாசிப்பதுபோலவே உள்ளது. மொழியும், காட்சிகளின் வர்ணனைகளும் காட்டுக்குள் நின்று சாரல் திவலையை உணரும்படி செய்கின்றன. 

  ஊர் முழுக்க சொந்தக்காரர்கள் சூழ அமைந்துள்ளது விவேக்கின் வாழ்க்கை. நேரெதிராக நான்குபேர் மட்டும் கொண்ட சிறு குடும்பமே அம்முவிற்கு. இரு குடும்பங்களைப் பற்றி சிறு உரையாடல்கள் மூலம் விவரிக்கிறார் ஆசிரியர். அந்த சிறு உரையாடல்களே வாசகனுக்கு அவர்களின் வாழ்க்கையின் முழுச்சித்திரத்தையும் அளித்துவிடுகிறது. எம் கோபாலகிருஷ்ணனின் நுட்பமான எழுத்திற்கு சான்றாக இதைக் கூறலாம்.

  அம்முவும் விவேக்கும் அருவிகளில் நீராடியும், காட்டிற்குள் நடந்தும், சில்லென்ற காற்றை உணர்ந்தபடி வண்டியில் பிரயாணித்தும், ஒருவரையொருவர் சீண்டி கொஞ்சி விளையாடியும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். தொடர்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும்போதே மனித மனம் வேறொன்றை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறது. மகிழ்ச்சியை முழுதாக அனுபவிக்கும் இயல்பு மனிதனுக்கு இல்லை. அனுபவிக்கும்போதே சந்தேகம் ஊறத் தொடங்கிவிடுகிறது. இது எவ்வளவு நேரம் நீடிக்கும், அதன் பிறகு என்ன மாதிரியான துயரம் காத்திருக்கிறதோ முதலிய எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கிறது. ஏனென்றால் அவன் வாழ்வில் தொடர்ந்து இன்பத்தை அனுபவித்திருக்கமாட்டான். சற்றைக்கெல்லாம் அனுபவித்த இன்பத்திற்கு ஈடானதாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ துன்பம் வந்துவிடும். இதில் விசித்திரம் ஒன்றுண்டு, துன்பத்தில் இருக்கும்போது அடுத்து இன்பம் வரவிருக்கிறது என்ற எண்ணம் எழுவதில்லை. உலகில் அனைவரும் மகிழ்ந்திருக்க தனக்கு மட்டுமே இப்படி துன்பம் வாய்த்திருக்கிறது என இன்னும் அதற்குள் ஆழ்கிறான். 

 LUZ கதையில் தொடர்ந்துகொண்டிருக்கும் இன்பத்தைக் கண்டு அம்மு அப்படித்தான் பயப்படுகிறாள். எம்மாதிரியான துன்பம் நேரவிருக்கிறதோ என. ஆனாலும் அடுத்தடுத்து இனிய பொழுதுகள் தொடர்கின்றன. இப்போது, ஆசிரியர் எந்த மாதிரியான துயரத்தை இவர்களுக்கு அருளவுள்ளாரோ என்ற பதைப்பு வாசிப்பவர் மனதில் உருவாகிறது. கடைசியில் அந்த விபத்து ஏற்படுகிறது. அம்மு மீண்டு வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவாக உள்ள நிலையில் விவேக் எடுக்கும் முடிவு அவனுக்கு வரமாகிறதா சாபமாகிறதா என்பது கதையின் முடிவாகவும் நாவலின் முடிவாகவும் அமைந்துள்ளது. 

 இக்கதையில் என்னை மிகவும் கவர்ந்தது எம். கோபாலகிருஷ்ணனின் மொழி. தெள்ளிய நீரோட்டம்போல எந்த மயக்கமும் அளிக்காமல் வாசகனைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறார். காட்டின் மரங்களையும் அதன் குளுமையும் இருளுமான சூழலையும் அருவிகளின் நீர் தெறிப்பையும் காட்டிச் செல்கிறார். ரத்தம் உறிஞ்சும் அட்டைகள், குரங்கைப் புசித்து அதன் மண்டையோடுகளை ஒரேயிடத்தில் போடும் புலி, அவ்வப்போது வந்து வீட்டு வேலியை அசைத்துப் பார்க்கும் யானை போன்றவற்றை நேரில் காண்பதுபோலவே உணர வைக்கிறார். இப்படி இயற்கையுடன் இன்பத்தை துய்க்கச் செய்ததன் மூலமே அடுத்து வரும் அந்தத் துயரை தாங்க முடிகிறது. 

  விவேக் எடுக்கும் முடிவும் அதனை மாற்ற அவன் குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளும் யதார்த்தமாக உள்ளன. காதல் வேண்டும் வேண்டுமென ஏங்கும் மனதுதான், சில நேரங்களில் அபரிதமான அன்பைத் தாளமுடியாமல் தவிக்கிறது. அம்மு, விவேக் தன்மீது செலுத்தும் அன்பின் மிகுதியாலேயே அவன் மீது கோபம் கொள்வதும் அவனின் மாற்ற முடியாத உறுதியைக் கண்டு நெக்குருகுவதும் அழகு. காதலின் உன்னதம் என்பது காதலை விட்டுக் கொடுப்பதும் விலகாதிருப்பதும் எனத் தோன்றுகிறது. இரண்டும் எதிரெதிரானவை என்று தோற்றம் கொண்டிருந்தாலும் இரண்டும் ஒன்றுதான் என்பது மனதில் காதலை உணர்ந்தவர்களுக்குப் புரியும்.

 ஆசிரியர் எம். கோபாலகிருஷ்ணின் மொழிக்கு உதாரணமாக இந்தப் பத்தி: 

 //கீழ்வானில் வெட்டியடித்தது மின்னல். ஒருகணம் எங்கும் வெளிச்சம் பூத்து மறைந்தது. திடுதிடுவென தொலைவில் ஒலித்து மெல்லத் தேய்ந்து மறைந்தது இடியோசை. இருட்டும் வரைக்குமான அன்றைய நாளின் அலுப்பையும் வெம்மையையும் தணிவித்திருந்தது மழை. வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தில் மழை இப்போது வலுத்திருப்பதைக் காணமுடிந்தது. ஒவ்வொரு துளியையும் ஏந்திக்கொள்கிறபோது பூமி சிலிர்க்கிறது போலும். நிலம் சிலிர்க்கையில் தாவரங்கள் அசைகின்றன. இலைகளும் பூக்களும் அசையும்போது காற்று குளிர்கிறது. காற்றின் குளிர் மனிதர்களை அணைக்கிறது. மனிதர்கள் நனைகிறார்கள். ஒதுங்குகிறார்கள். கதவடைத்துக் கதகதப்பேற்றுகிறார்கள். யாவர்க்கும் யாவைக்குமாய் பெய்கிறது மழை// 

 இந்தப் பத்திக்குப் பிறகு தொடரும் விவேக் மற்றும் அம்முவிற்கு இடையேயான உரையாடல் மிகச் சிறப்பான உச்சமாக அமைந்துள்ளது.

 புனைவுகளை வாசிக்கும்போது அவ்வப்போது கண்கள் கசிவதுண்டு. ஆனால் மனம் இனிய பரவசத்தில் பொங்கி கண்ணீர் வழிந்தது இந்த நூலை வாசித்தபோதுதான். இந்நூலின் இறுதியில் LUZ கதையையும் திருவஞ்சி கதையையும் ஆசிரியர் இணைத்துள்ளார். அது எவ்வித செயற்கையான பிரயத்தனமுமின்றி அத்தனை பாந்தமாய் இயைந்துள்ளது. இரண்டு கதைகளும் அழகான முத்துச்சரம்போல இணைந்து எந்தப் பிசிறுமில்லாத முழுமையை அடைந்துள்ளன. அரவிந்தன் மற்றும் விவேக் கதா பாத்திரங்களின் ஒட்டுமொத்த ஆகிருதியைக் காட்டும் அந்தக் கணம் மனதில் பெரும் பரவசமெழுந்தது. கண்ணிலிருந்து வழிந்த நீர் நெஞ்சில் சொட்டியது. LUZ எனும் போர்த்துகீசிய சொல்லுக்கு ஒளி என்று பொருள் கூறுகிறது கூகுள். போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த அம்மு என அழைக்கப்படும் பெலிக்ஸ் -க்கு ஒளியானவன் விவேக் என்று தலைப்பு உணர்த்துவதாகக் கொள்கிறேன். 

 வாசிக்கும் அனுபவத்தை இனிமையானதாகவும் முடித்தபோது பரவசத்தையும் அளித்த எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றியும் பிரியமும். அவர் தொடர்ந்து எழுதவேண்டும் என வாழ்த்துகிறேன்.

***

கா. சிவா: சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவலாங்குடியில் பிறந்தவர். தற்போது சென்னையருகே உள்ள ஆவடியில் வசிக்கிறார். விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி, ஆழ்தலும் மிதத்தலும் ஆகிய நான்கு சிறுகதை தொகுப்புகளும் “கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு” எனும் கவிதைத் தொகுப்பும் “தண்தழல்” எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார். சரஸ்துதி எனும் நூல் தற்போது வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: sivaangammal1983@gmail.com

மறைக்கப்பட்ட மனிதர்களின் மௌன வரலாறு

0

இப்ராஹிம்

மிழ் இலக்கியத்தில் கிராமிய வாழ்வையும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு பல நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஒரு சமூகத்தின் வெளிப்புற வாழ்க்கையை மட்டுமே பதிவு செய்கின்றன. மனிதர்களின் உடல் உழைப்புக்குள் புதைந்து கிடக்கும் வரலாறு, அவர்கள் சுமந்து வாழும் மனவலி, சாதியின் மறைமுக ஆதிக்கம், இயற்கையோடு கலந்த வாழ்வு, மறுக்கப்பட்ட காதல்கள், சாபங்களாக மாறிய நினைவுகள் ஆகியவற்றை ஒரே வாழ்வியல் ஓட்டமாகச் சொல்லும் படைப்புகள் அரிது. எஸ். செந்தில் குமாரின் “கழுதைப்பாதை” அந்த அரிதான இடத்தை நிரப்பும் முக்கியமான நாவலாகத் தோன்றுகிறது. இந்த நாவலை வாசித்து முடித்தபின் மனதில் நீண்ட நேரம் தங்குவது அதன் கதை அல்ல; அந்தக் கதையின் வழியாக நம்முள் தேங்கிவிடும் வாழ்க்கையின் கனம்தான். இந்த நாவல் ஒரு மலைப்பாதையின் கதையைச் சொல்லவில்லை; அந்த பாதையில் உடலும் உயிரும் தேய்ந்த மனிதர்களின் மௌன வரலாற்றை பதிவு செய்கிறது.

இந்த நாவலின் மிகப்பெரிய பலம் அதன் கதையாடல் முறையில் தான் இருக்கிறது. இது ஒரு நேர்கோட்டுக் கதையாக நகர்வதில்லை. மாறாக ஒரு கதைக்குள் இன்னொரு கதை, அதன் உள்ளே ஒரு புராணம், பின்னால் ஒரு நினைவு, அதற்குள் ஒரு மனிதத் துயரம் என்று கிளைகளாக விரிகிறது. ஆனால் அந்த எல்லா கிளைகளுக்கும் வேராக இருப்பது மனித வாழ்க்கைதான். முதல் அத்தியாயத்திலிருந்தே செந்தில் குமார் இந்த உலகிற்குள் வாசகனை அழைத்துச் செல்கிறார். காப்பி பொதிகளை சுமந்து மலையிறங்கும் கழுதைகள், அவற்றோடு வாழும் மனிதர்கள், பாதையைச் சுற்றிய கதைகள், குலதெய்வங்கள், முதுவான் மக்களின் வாழ்வியல் — இவை அனைத்தும் சேர்ந்து நாவலின் மைய உணர்வை உருவாக்குகின்றன. நல்ல நாவல்கள் கதை சொல்லுவதில்லை; ஒரு உலகத்தை வாழவைக்கின்றன. கழுதைப்பாதை நாவலும் அதையே செய்கிறது.

இந்த நாவலின் மைய உருவகம் “பாதை”. அந்தப் பாதை வெறும் மண்ணாலும் கல்லாலும் ஆன வழித்தடமல்ல; தலைமுறைகளின் உடல் உழைப்பால் உருவான வரலாறு. அந்த பாதையில் கழுதைகள் நடக்கின்றன, தலைச்சுமைக்காரர்கள் நடக்கின்றனர், உப்பு சுமக்கும் மாடுகள் நகர்கின்றன, காதலர்கள் அலைகின்றனர், நோயுற்றவர்கள் டோலியில் சுமக்கப்படுகின்றனர். எல்லோரும் ஏதோ ஒன்றைச் சுமந்தபடியே பயணிக்கிறார்கள். அந்த சுமை வெறும் உடல் சுமை அல்ல; வறுமை, அச்சம், ஆசை, சாதி, குற்றவுணர்வு, நினைவு ஆகிய அனைத்தும் அதற்குள் இருக்கின்றன. “எல்லாப் பாதையும் ஒண்ணுதான்டா; நடக்குறவன்தான் வேறவேற” என்ற வரி இந்த நாவலின் முழு தத்துவத்தையும் சுமக்கிறது. மனிதர்கள் மாறுகிறார்கள், காலங்கள் மாறுகின்றன, ஆனால் பாதை மட்டும் மாறாமல் கிடக்கிறது. அந்தப் பாதையை உருவாக்கியவர்கள் மறக்கப்படுகிறார்கள்; ஆனால் அவர்கள் நடந்த தடம் மட்டும் நிலைத்து நிற்கிறது.

முதுவான் மக்களின் வாழ்க்கையை செந்தில் குமார் பதிவு செய்திருக்கும் விதம் இந்த நாவலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. அவர்கள் ஆய்வுப் பொருள்களாக இல்லாமல் உயிருள்ள மனிதர்களாக நமக்கு முன்னால் நிற்கிறார்கள். உணவைப் பகிர்ந்து உண்ணும் பழக்கம், கூவல் வைத்து எல்லோரையும் அழைக்கும் முறை, திருமணச் சடங்குகள், இயற்கையோடு இணைந்த நம்பிக்கைகள் — இவை அனைத்தும் கூட்டுவாழ்வு மையமாக இருந்த ஒரு சமூகத்தை நினைவூட்டுகின்றன. இன்றைய உலகில் மனிதர்கள் தனிமனித வாழ்க்கைக்குள் சுருங்கிக்கொண்டிருக்கும்போது, இந்த சமூகத்தில் “நான்” என்பதைக் காட்டிலும் “நாம்” என்ற உணர்வே அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவர்களுடைய வாழ்க்கை இயற்கையோடும் மற்ற மனிதர்களோடும் ஆழமாக இணைந்திருக்கிறது.

குறிப்பாக இந்த நாவலில் இயற்கை கையாளப்படும் விதம் மிகவும் தனித்துவமானது. மலை, ஆறு, காடு, மழை, காற்று, விலங்குகள் — இவை அனைத்தும் பின்னணியாக மட்டும் இல்லாமல் உயிருள்ள பாத்திரங்களாக இயங்குகின்றன. இந்த நாவலில் ஆறு வெறும் நீரல்ல; அது நினைவு. மலை வெறும் நிலப்பரப்பு அல்ல; அது வாழ்வு. காடு வெறும் இடமல்ல; அது பயமும் பாதுகாப்பும் சேர்ந்த உலகம். முதுவான் மக்களின் தெய்வங்களும் இதே இயற்கையோடு கலந்திருக்கின்றன. அவர்களின் கடவுள் கோவில்களுக்குள் அடைக்கப்படவில்லை; ஆற்றில், கல்லில், காட்டில், பாதையில் இருக்கிறார். இயற்கையோடு மனிதன் ஒன்றிணைந்து வாழ்ந்த காலத்தின் எச்சமாக இந்த நாவல் தோன்றுகிறது.

இந்த நாவலில் காதல் மிக மென்மையாகவும் அதே சமயம் மனதை தொந்தரவுக்குள் தள்ளவும் வைக்கிறது. காதல் இங்கு ஒருபோதும் முழுமையான சுதந்திரம் பெறுவதில்லை. அது எப்போதும் சாதி, குடும்பம், மரியாதை, சமூக அச்சம் போன்றவற்றின் கண்காணிப்புக்குள் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. செல்வம் – கோமதி உறவு இதற்கான முக்கியமான உதாரணம். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிராய் நேசித்தாலும், அந்தக் காதலுக்குள் சாதியின் அச்சம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களின் காதல் தனிப்பட்ட உணர்வாக இல்லாமல் சமூக கட்டமைப்புக்கு எதிரான போராட்டமாக மாறுகிறது. “நாம் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் மரணம் தான் வழி” என்ற மனநிலை காதலின் தீவிரத்தை மட்டும் அல்ல; சமூகத்தின் கொடுமையையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் அப்படி எல்லாம் அவர்கள் இருந்தாலும் இறுதியில் என்ன நடக்கிறது என்பது முற்றிலும் வேறு ஒன்றாக இருக்கிறது, இது தான் எதார்த்ததின் இயல்பாகவும் இருக்கிறது. 

அதேபோல் மணிப்பயல் – சரசு உறவு இந்த நாவலின் மிக முக்கியப் பார்வையை வைக்கிறது. இந்த நாவல் நடக்கும் காலம் ஓர் இடத்தில் மட்டும் கூறப்படுகிறது. அதாவது வெள்ளையர்கள் நாட்டை விட்டு சென்று ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கிறது. அப்போதைய காலத்தில் கணவனை இழந்து இருக்கும் சரசுவிடம் உடலுக்காக பலரும் விருப்பப்பட்டு வருவதும், அதை அவள் நிராகரிப்பதும், மணி தன்னை மனதால் நேசிக்கிறான் என்று அவனுடன் தொடர்பில் இருப்பது மிகவும் நுட்பமானது. ஆனால் சமூக மரியாதை, குடும்ப அச்சம், சாதி, சுற்றத்தாரின் பார்வை போன்றவை அந்த உறவை உடைத்துவிடுகின்றன. சரசுவின் வாழ்க்கை உடைந்து போகும் தருணங்களில் அது வெறும் காதல் தோல்வி அல்ல; ஒரு பெண்ணின் நம்பிக்கை சிதைவாக மாறுகிறது. இந்த நாவலில் பெண்கள் வெறும் துணைப் பாத்திரங்களாக இல்லை; அவர்கள் நினைவுகளின் சுமப்பாளர்கள். நாகவள்ளி, வெள்ளம்மா, அக்கம்மாள், கோமதி, சரசு — ஒவ்வொருவரும் தங்களுடைய காதல், துயரம், சாபம், காத்திருப்பு ஆகியவற்றோடு வாழ்கிறார்கள்.

பெண்களின் சாபங்கள் இந்த நாவலில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. ஆனால் அவை வெறும் மூடநம்பிக்கைகளாக வருவதில்லை. அதிகாரமற்ற மனிதர்களின் நீதிக்குரலாகவே அவை உருவாகின்றன. நேரடியாக பழிவாங்க முடியாதவர்கள் சாபத்தின் வழியாக தங்களுடைய வலியை வெளிப்படுத்துகிறார்கள். அந்த சாபங்கள் தலைமுறைகளைத் துரத்துகின்றன. குறிப்பாக பெண்களின் சாபங்கள் இந்த நாவலில் பெரும் அதிர்வை உருவாக்குகின்றன. அவர்கள் அனுபவித்த அநீதிக்கு எதிரான கடைசி குரலாகவே அந்த சாபங்கள் மாறுகின்றன. அதனால்தான் இந்த நாவலில் தெய்வங்களும் மனிதர்களும், சாபங்களும் வாழ்வும் ஒன்றோடொன்று கலந்துபோய் கிடக்கின்றன.

சாதி இந்த நாவலின் அடிநரம்பாக இயங்கிக்கொண்டே இருக்கிறது. வெளிப்படையாக இணக்கமாக வாழும் சமூகங்களுக்குள்ளும் திருமணம், உறவு, உரிமை போன்ற இடங்களில் சாதியின் உண்மையான முகம் வெளிப்படுகிறது. தானே ஒடுக்கப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்தாலும், இன்னொருவரை ஒடுக்க முயலும் மனநிலை இந்த நாவலில் தொடர்ந்து தெரிகிறது. சுப்பண்ணா போன்ற பாத்திரங்களின் வழியாக சாதி என்பது வெறும் வெளிப்புற ஆதிக்கம் மட்டும் அல்ல; அது மனிதர்களின் மனநிலையாக மாறிவிட்டது என்பதை நாவல் காட்டுகிறது. அதனால் இந்த நாவல் சாதியை வெறும் அரசியல் கோஷமாக பேசாமல், அது மனிதர்களின் உள்ளுக்குள் எப்படி ஊறியிருக்கிறது என்பதை இயல்பாக வெளிப்படுத்துகிறது.

உழைக்கும் மக்களின் வாழ்க்கையை இந்த நாவல் மிக ஆழமாக பதிவு செய்கிறது. ஒரு குவளை பால்காப்பி, ஒரு கரண்டி நெய், சாம்பார், சிறிது மரியாதை — இவையே அவர்களின் ஆசைகள். காப்பி தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கே காப்பி எட்டாத ஒன்றாக இருப்பது அந்த சமூக முரண்பாட்டின் உச்சம். தலைச்சுமைக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றிய அத்தியாயங்கள் இந்த நாவலின் இதயமாகவே இருக்கின்றன. அவர்கள் சுமந்த சுமைகள், அடைந்த அவமானங்கள், ஏமாற்றங்கள், ஒடுக்குமுறைகள் — இவை அனைத்தும் சேர்ந்து தான் அந்த “கழுதைப்பாதை” உருவாகியுள்ளது. இன்று அந்த பாதையில் கழுதைகள் நடக்கின்றன; ஆனால் அதன் அடியில் நூறு மனிதர்களின் வலி புதைந்து கிடக்கிறது.

குறிப்பாக கழுதைகள் இந்த நாவலில் மிக முக்கியமானக் குறியீடாக வருகின்றன. அவை வெறும் சுமை சுமக்கும் உயிர்கள் அல்ல; உழைக்கும் மக்களின் இன்னொரு உருவம். மூவண்ணா தன்னுடைய கழுதைகளைப் பிள்ளைகளைப் போல நேசிப்பது, அவற்றோடு பேசுவது, அவற்றின் துயரத்தை உணர்வது – இவை அனைத்தும் மனிதன் மற்றும் மற்ற உயிர்கள் இடையேயான ஆழமான உறவை நினைவூட்டுகின்றன. இது கழுதைகளோடு மட்டுமல்லாமல் ராவுத்தரின் மாடுகளும் அதனின் வாழ்வும் அந்த காற்றில் சுமந்து திரியும் அதனின் வாழ்வியல் எச்சமும் பல வருடங்கள் கடந்தும் அந்த பாதையில் நடப்பவர்களால் உணரப்படுகிறது, உரையாடவும் செய்கிறது. 

இந்த நாவலில் குற்றவுணர்வு மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. மனிதர்கள் தாங்கள் செய்த செயல்களை விட, தங்களால் நிகழ்ந்துவிட்ட விஷயங்களின் சுமையோடு வாழ்கிறார்கள். கடந்தகாலம் அவர்களை விடுவதில்லை. நினைவுகள் இந்த நாவலில் ஒரு தண்டனையாகவே செயல்படுகின்றன. அதனால்தான் பல பாத்திரங்கள் பிராயச்சித்தத்தை தேடி அலைகின்றன. மனித வாழ்க்கை என்பது வெறும் நிகழ்கால அனுபவம் அல்ல; அது நினைவுகளின் தொடர்ச்சி என்பதை இந்த நாவல் மிக ஆழமாக உணர்த்துகிறது.

செந்தில் குமார் இந்த நாவலை வெறும் சமூக நாவலாக எழுதவில்லை; ஒரு வாழ்வியல் ஆவணமாக உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக அவரின் மொழி இந்த நாவலின் மிகப்பெரிய பலம். செயற்கையான இலக்கிய மொழியைத் தேடாமல், மண்ணின் வாசனை கொண்ட மொழியில் அவர் கதையை நகர்த்துகிறார். நாட்டுப்புறக் கதைகள், பழமொழிகள், நம்பிக்கைகள், வாய்மொழி மரபுகள் அனைத்தும் அந்த மொழிக்குள் கலந்திருக்கின்றன. அதனால் இந்த நாவல் வாசிக்கப்படுவதில்லை; கேட்கப்படுகிறது என்ற உணர்வு உருவாகிறது. ராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்கதைகளில் இடமில்லாத மக்களே தங்களுக்கான கதைகளையும் தெய்வங்களையும் உருவாக்கிக்கொண்டார்கள் என்பதை இந்த நாவல் ஆழமாக உணர்த்துகிறது.

இவ்வளவு நிறைகள் இருந்தாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், என்னுடைய வாசிப்பனுவத்தில் பார்த்தபோது நாவலின் கதையாடலுக்கு அதில் உள்ள கிளைக்கதைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல அந்தக் கதைகளும் அந்த நாவலின் மய்ய நீரோட்டதில் பயணித்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதில் உள்ள சில கிளைக்கதைகள் அந்த நாவலின் மய்ய நீரோட்டலிருந்து விலகிச் செல்வது போல இருந்தது. அதேபோல் முதுவான் இன மக்களின் வாழ்வியலை படிக்கும்போது இன்னும் சற்று விரிவாக எழுதி இருக்கலாம் என்றும் தோன்றாமல் இல்லை. 

கழுதைப்பாதை வெறும் மலைவாழ் மக்களின் கதை அல்ல; வரலாற்றில் பதிவு செய்யப்படாத உழைப்பாளிகளின் நினைவகம். பாதைகளை உருவாக்கியவர்கள் மறக்கப்பட்டுவிடுகிறார்கள்; ஆனால் அவர்கள் நடந்த பாதைகள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அந்த பாதையில் இன்னும் வியர்வை, கண்ணீர், காதல், சாபம், குற்றவுணர்வு அனைத்தும் புதைந்து கிடக்கிறது. அந்த மௌனமான வாழ்க்கைகளை இலக்கியமாக மாற்றியிருப்பதில்தான் இந்த நாவலின் பெரும் பங்கு இருக்கிறது.

***

இப்ராஹிம் – முழுப்பெயர் முகமது இப்ராஹிம் அலி. சென்னையில் பட்டூர் என்ற கிராமத்தில் வசிப்பவர்‌. ஐடி துறையில் பணிபுரிபவர். தொடர்ந்து நூல் மதிப்புரைகள் எழுதி வருபவர். மின்னஞ்சல்: tech.ibrahim@outlook.com

ஈழம் பற்றிய உரையாடல்கள்!

0

இளங்கோ

ழம் சார்ந்த விவாதங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட அனுபவங்களால் கட்டியமைக்கப்பட்டிருப்பவை. தனிப்பட்ட அனுபவங்கள் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு அதைத்தாண்டி பொதுவான வெளிக்குள் ஈழம் சார்ந்த உரையாடல்களை நகர்த்தவும் வேண்டியிருக்கின்றது. தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்த விவாதங்கள் இரண்டு தரப்பினரை முதன்மையான எதிரிகளாகக் கட்டமைக்கின்றன. அவரவர்களின் தனிப்பட்ட அனுபவங்களின் நிமித்தம் அவர்கள் இலங்கையரசையோ அல்லது நீண்டகாலமாக போராட்ட களத்தில் இயங்கிய விடுதலைப்புலிகளையோ ஆதரிக்கவோ/எதிர்க்கவோ செய்வதாக விவாதங்கள் முடிந்து போகின்றன. ஆனால் அவ்வாறான ஒரு கறுப்பு வெள்ளைக்குள் ஈழம் சார்ந்த உரையாடல்கள் அமையமுடியாது என்பதுதான் யதார்த்தமாகும்.

ஆகவே ஈழம் சார்ந்த உரையாடல்களை எல்லாத் தரப்பினரும் பங்குபெறும் பொதுவான தளத்துக்குள் நகர்த்த வேண்டியிருக்கின்றது. அவ்வாறு நகர்த்தினால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கான சிந்தனைகளை முன்வைக்க முடியும். அதேவேளை தனிப்பட்ட அனுபவங்களினோடு கிடைக்கும் கசப்பான உண்மைகளையும் ஏற்றுக்கொள்ளுபவர்களாக அனைத்துத் தரப்பினரும் இருந்தாக வேண்டும்.

அதற்கு ஓர் உதாரணமாக ‘மாறிய நாட்களும் மாறாத சூரியனும்’ என்ற வயிரமுத்து திவ்வியராஜன் எழுதிய நூலைச் சொல்லலாம். 

இந்த நூலில் கடந்தகால கசப்பான உண்மைகளை, தனிப்பட்ட ஒருவரின் அனுபவங்களினூடாகப் பார்க்கின்றோம். அதேவேளை அந்தத் தனிப்பட்ட அனுபவங்களின் நீட்சியில் அதைப் பொதுத்துயரமாக ஆக்கி ஈழம் சார்ந்த உரையாடல்களை உருவாக்க முயல்கின்றதையும் இந்த நூலில் அவதானிக்க முடியும்.

*

திவ்வியராஜன் தனது சிறுவயது அனுபவத்தைச் சொல்லும்போது 1950களிலே இலங்கை இராணுவத்தால் ‘ஊரடங்குச் சட்டம்’ அமுல்படுத்தப்பட்டு மாலை ஆறுமணிக்குப் பிறகு வீட்டுக்குள் அடங்கிய தமிழ்ச் சமூகத்தின் சுவடுகளைப் பார்க்கின்றோம். அதன் பின்னர் தனிச்சிங்களச் சட்டத்தின் நிமித்தம் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குதல் நிகழ்ந்து, 1977 இல் ‘இனக்கலவரம்’ நிகழ்ந்தபோது ஒரு தமிழனாக கொழும்பில் அவர்பட்ட கஷ்டத்தின் அனுபவத்தை நாம் வாசிக்கின்றோம்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்து ஓர் அரசாங்க உத்தியோகத்தராக கொழும்பில் வேலை செய்யும்போது 1977 இல் இனக்கலவரம் நிகழ்கின்றது. தமிழராக இருந்து வேலைக்குப் போவது ஆபத்து என்று வீட்டுக்குள் அடங்கி இருக்கும்போது, இவரைத் தேடி அலுவலகம் வந்து நண்பரொருவரை அங்கே வேலை செய்தவர்களின் ஒருபகுதியினர் அறைக்குள் புகுத்தி அடித்துத் துவைக்கின்றது. இந்நிகழ்வை அறிந்த திவ்வியராஜன் அடுத்தநாள் அங்கே போய் இப்படிச் செய்வது நியாயமானதா என்று கேட்கும்போது, அந்த ‘காடையர்’ கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதைக் கண்டு அதிர்கின்றார்.

இப்படி ஒரு சிங்கள கம்யூனிஸ்ட் இனவாதியாக மாறினாலும், திவ்யராஜனையும் அவரது சகோதரரையும் கவனமாக பம்பலப்பிட்டி பிள்ளையார்கோயில் அகதிமுகாமிற்கு அனுப்பி யாழ்ப்பாணம் போகும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்பவர்களாக சிங்களவர்களே இருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் வந்து வடமராட்சியில் வாழும் திவ்வியராஜனை, 1984இல் இலங்கை இராணுவம் பல இளைஞர்களோடு சேர்த்து கைதுசெய்து பலாலி இராணுவமுகாமிற்கு அனுப்பி வைக்கின்றது. அப்போதே திவ்யராஜனுக்கு திருமணமாகி மகளும் பிறந்துவிட்டார். அப்படியான ஒரு குடும்பஸ்தவன் எப்படி இயக்கக்காரனாக இருப்பான், மேலும் தானொரு அரச உத்தியோகத்தன் என்று அனைத்து வகைகளிலும் ஆதாரம் காட்டியபோதும், திவ்வியராஜன்  கைதுசெய்யப்படுகின்றார்.

அங்கே கைதியாக இருக்கும் காலத்தில் தப்பியோடும் முயற்சியைச் செய்ய விரும்பும்போதும்,  தப்பும்போது இறந்துவிட்டால் தன் மனைவி/பிள்ளைகள் நிலை என்னவாகும் என்கின்ற யோசனை அதைத் தடுக்கின்றது.  அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்களை விசாரணையின்றி பூஸா முகாமிற்கு அனுப்பி வைக்கும்போது, ஓர் இராணுவ அதிகாரியின் கருணையில் இவர் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்புகின்றார்.

ஆனால் அந்த வீடு திரும்புதலும் நிம்மதியாக திவ்வியராஜனுக்கு இருப்பதில்லை. அவரது சகோதரர் அப்போது கிழக்கு மாகாணத்தில் நிலஅளவையாளராக வேலை செய்துகொண்டிருக்கின்றார். அவர் அங்கே ‘இனந்தெரியாத நபர்களால்’ கைதுசெய்யப்பட்டிருக்கின்றார் என்ற தகவல் இரண்டு வாரங்களுக்கு பின் திவ்வியராஜன் குடும்பத்தினருக்குக் கிடைக்கின்றது. தனது தம்பியைத் தேடி கிழக்கு மாகாணத்துக்குப் போகும் திவ்வியராஜன், அவரது தம்பியோடு பத்துப்பேர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிகின்றார். அப்படி ‘காணாமல் போன’ அந்தத் தம்பி பிறகு என்றென்றைக்குமாக திரும்பி வருவதில்லை என்பது அவ்வளவு துயரமானது.

*

இப்படியான துயரங்களோடு வாழும் திவ்வியராஜன் பிறகு 1987 ‘ஒபரேஷன் லிபரேஷன்’ என்ற இலங்கை இராணுவத்தின் யாழ் தீபகற்பகத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையால் மீண்டும் கைதுசெய்யப்படுகின்றார். வடமராட்சியில் பெருமளவு ஆளணியுடன் முன்னேறி வந்த இராணுவத்தைக் கண்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கி ஓடிவிட, இவரைப் போன்ற பல இளைஞர்கள் இராணுவத்தால் பிடிபடுகின்றார்கள். அங்கிருந்து இளைஞர்கள் பலரை சிங்களப் பகுதியில் இருந்த சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க,  திவ்வியராஜனைக் கைதுசெய்து வைத்த இரண்டு இராணுவத்தின் கருணையாலும், திவ்வியராஜனுக்குத் தெரிந்திருந்த சிங்களத்தாலும் தப்பிச்செல்ல விடப்படுகின்றார் திவ்வியராஜன். 

பின்னர் இந்திய இராணுவத்தால் திவ்வியராஜனுக்கு ஏற்படும் துயரம் இன்னொருவகையானது.  இந்திய இராணுவத்தினர் தமக்கு மரியாதையைக் காவலரணில் தரவில்லை என்பதற்காக இவரது சைக்கிளைத் தோளின் மீது சுமந்துகொண்டு ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாம்வரை போகச் சொன்ன சென்ற தண்டனைகள் எல்லாம் நடந்திருக்கின்றன.

இவ்வாறு ஒருபக்கம் இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் போன்றவற்றால் ஏற்பட்ட துயரத்தைச் சொல்கின்ற திவ்வியராஜன், இன்னொருபுறத்தில் நமது தமிழ் இயக்கங்கள் செய்த அட்டூழியங்களையும் அதே கசப்புடன் பதிவு செய்கின்றார். மாறி மாறி சகோதர இளைஞர்களைச் சுட்டுக் கொல்கின்றவை, போஸ்ட்கம்பங்களில் குற்றவாளிகள் என்று அறிவித்து மரண தண்டனை  கொடுப்பது…அதுவும் ஒரு இயக்க இளைஞன் தப்பியோடும்போது அவனின் தாயின் முன்னாலே இன்னொரு இயக்கம் சுட்டுக் கொல்கின்றமை எல்லாம் இந்நூலில் குறிப்பிடப்படுகின்றது.

அதுபோல அவ்வளவு சித்திரவதைகொடுத்து ‘துரோகி’ என்று நாற்சந்தியில் எழுதி வைத்துவிட்டு, சரி இத்தோடு அந்த இளைஞனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்து முகம் திரும்பும்பொழுதில் நெற்றிப்பொட்டில் அந்த இளைஞனைச் சுட்டுக்கொல்ல, ‘அய்யோ’ என்று அருகிலிருந்த ஒரு பெண்  தரையில் விழுவதும், இந்தக் கொலையை ஒரு பத்துவயதுச் சிறுவன் பார்த்துக்கொண்டிருப்பதுமென எமது இயக்கங்களின் இரத்தம் தோய்ந்த கரங்களின் வரலாற்றையும்  இதில் திவ்வியராஜன் சொல்கின்றார்.

இந்திய இராணுவ காலங்களில் தெற்கில் எப்படி ஜேவிபியினர் ஒடுக்கப்பட்டனர் என்றும், சிங்களப் பேரினவாதம் தனது சொந்தமொழி பேசும்  சிங்கள இளைஞர்களைக் கூட சும்மா விடாது என்பதற்கான சாட்சியங்கள் இவை என்று சொல்லும் திவ்வியராஜன், எப்படி அதற்கு முன்னர் 1970களில் இதே ஜேவிபியினரை ஒடுக்க சிறிமா அரசுக்கும் இந்திய இந்திராகாந்தி அரசு உதவியது என்பதையும் நினைவூட்டுகின்றார்.

இப்படி தனது சொந்த நலன்கள் என்று வரும்போது தமது உரிமைகளுக்காகப் போராடுபவர்களை துச்சம் என நினைக்கின்ற வல்லரசான இந்தியாவிடந்தான் நமது இயக்கங்கள் ஆயுதப்பயிற்சியை எடுக்கப் போயிருந்தார்கள், அதே இந்திய அரசு தீர்வைத் தருவார்கள் என்று எப்படி நம்பினார்கள் என்றும் திவ்வியராஜன் இடைநடுவில் கேள்விகளை எழுப்புகிறார்.

*

இலங்கையில் இந்திய இராணுவ வெளியேற்றத்தின்பின், பிரேமதாசா அரசுடன் மீண்டும் போர் தொடங்கியபின், திவ்வியராஜன் இனி இலங்கையில் இருப்பது சாத்தியமில்லை என்று தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்குப் படகில் இரகசியமாக ஏறுகின்றார். சாதாரணமாக இரண்டு/மூன்று மணித்தியாலங்களில் முடிந்துவிடும் படகுப் பயணம்,  கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் கடலுக்குள் நீடித்து திவ்வியராஜனும் அவரது குடும்பத்தினரும் எப்படியோ தப்பிப் பிழைத்து இந்தியாவின் கரைகளை அடைகின்றனர்.

அங்கிருந்து தமிழ்நாடு-கேரளா எல்லையில் அமைந்த தக்கலை அகதிமுகாமில் இவர்கள் (1990களில்) தங்க வைக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அந்த அகதிமுகாமில் இருந்த அனுபவங்களை திவ்வியராஜன் விபரிக்கும்போது, இதற்காகவா இந்தியாவுக்கு இவர்கள் தப்பிவந்தார்கள் என்கின்ற மனோநிலையே வாசிப்பவர்க்கு வரும். பிறகு ஒருமாதிரியாக அகதிமுகாமில் இருந்து வெளியேறி, 1994இல் திவ்வியராஜனும் அவரது குடும்பத்தினரும் கனடாவுக்கு வந்து சேர்கின்றனர்.

அப்போதும் இந்திய இமிக்கிரேஷன் அலுவலகர்கள் திமிர்த்தனமாகவே நடந்துகொள்கின்றார்கள். கனடாவுக்கு உரிய விஸாவுடன் (ஏற்கனவே அவரது தமக்கை முறையானர் கனடாவிலிருந்து ஸ்பான்ஸர் செய்கின்றார்) விமானநிலையம் போனபோதும், இது உரிய விஸாவல்ல என்று அந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். கிட்டத்தட சில வாரங்களுக்குப் பிறகே அது அசலான விஸா ஆவணம் என்று ஏற்றுக்கொண்டு இவர்களைக் கனடாவுக்கு அனுப்பிவைக்கின்றனர். அந்தளவுக்கு அந்த அதிகாரிகள் ஈழத்தமிழர் மீது வெறுப்புற்றிருந்தாலும்,  தனது தாய்/தந்தையரைப் போல தமிழகத்தில் பேணிக்காத்த சில குடும்பத்தவர்களையும், திவ்வியராஜன் பங்குபெற்ற தமிழ்நாடு முற்போக்கு  சங்க கலையிரவுகள் பற்றியும், பல தமிழ்நாட்டு இனிய மனிதர்கள் பற்றியும் இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார்.

இறுதியில் கனடா ‘வேற்றுமையில் ஒற்றுமை காணும்’ தன்மை இருப்பது போலவோ, அல்லது யார் முதலில் வந்தோம் என்ற தூய இனக்கூச்சல் இல்லாது எல்லோரும் அமைதியாக வாழ முடிவதைப் போல, ஏன் மூன்று/நான்கு இனங்கள் மட்டும் வாழும் இலங்கையில் அது சாத்தியமில்லாது போய்க்கொண்டிருக்கின்றது என்றும் யோசிக்கின்றார்.

அதேவேளை நாம் எமது உரிமைகளைக் கேட்கின்றபோது, நம்மளவில் சரியானவர்களாக இருக்கின்றோமா என்ற கேள்விகளையும் இந்த நூலில் திவ்வியராஜன் சுட்டிக்காட்டுகின்றார். முக்கியமாக வடமாகாணத்தில் இருந்து 70,000 இற்கு மேற்பட்ட முஸ்லிம்களை ஒரே நாளில் நாம் அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியதையும், கோயில்களில் அகதிகளாக மக்கள் தங்கியபோது நுழைவாயில் கதவுகளைத் திறந்துவிட மறுத்ததையும், அகதிகளாக தங்கிய தங்கள் கிணறுகளில் வந்து தண்ணீர் குடித்துவிடக்கூடாது என்று சாதிவெறியுடன் குப்பைகளை அந்தக் கிணற்றுக்குள் நிரப்பிய நிகழ்வுகளையும் கவனப்படுத்துகின்றார். நாம் தமிழர்களாக சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதேவேளை இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களைத் துரத்துவதும், நமக்குள்ளே சாதிய அடிப்படையில் மற்றவர்களையும் ஒடுக்கிக்கொண்டும் இருக்கின்றோம் என்றால், நாம் நம்மை நோக்கியும் பெருமளவான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கின்றது என்பதையும் இந்த நூல் கவனமாக பரிசீலனை செய்யச் சொல்கின்றது.

இந்த நூல் 2014இல் வெளிவந்திருக்கின்றது. இப்போது ஆயுதப்போராட்டம் முடிந்தே கிட்டத்தட்ட 17 வருடங்கள் கடந்துவிட்டன. நாம் இத்தனை ஆண்டுகளுக்குள் புதிய உரையாடல்களை நிகழ்த்தி அரசியல்/சமூகம் சார்ந்து எங்கேயோ நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் பழைய கதைபேசி புகழ்ந்து அல்லது திட்டி கடந்தகாலத்தில் மட்டுமாக உறைந்துவிட்டிருக்கின்றோம். அப்படி ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்தால், நாம் இப்போதும் அதே பழையபாணி அரசியல் சிந்தனைகளுக்குள்ளோ/ அரசியல் கட்சிகளுக்குள்ளோ அடைக்கலம் ஆகியிருக்கமாட்டோம்.

அதே பழைய கோஷம்! அதே பழைய பெருமிதம்! அதே பழைய இயக்கங்களின் ‘ஒற்றை’ அரசியல் பாதைகள்! ஆக நாம் அப்போதும் இப்போதும் ஏதோ ஓன்றுக்கான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோமே தவிர, ஒருபோதும் புதிய அரசியல் செல்நெறிகளை தொடங்கவோ, புதிய grass roots movements பற்றிச் சிந்திக்கவோ இல்லை என்பதே கசப்பான யதார்த்தம்.

ஆகக்குறைந்தது ஒற்றைக்கதையாடல்களினால் ஈழப்போராட்ட வரலாற்றைக் கட்டமைக்கும் ஆபத்தை, ஒருபக்க அரசியல் சார்பாக மட்டும் நின்று பேசுவதன் அபத்தத்தை, நமக்கு மென்குரலில் மறுத்து சொல்வதற்காகவேனும் இப்படி திவ்வியராஜன் போன்றோர் கடந்துவந்த அனுபவங்களினூடாக எழுதிய சில பனுவல்களாவது நம் கைகளில் இருக்கின்றன என்று இப்போதைக்கு நாம் கொஞ்சம் நிம்மதியடைய வேண்டியதுதான். 

***

இளங்கோ – யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் தவிர, ‘டிசே தமிழன்’ என்னும் பெயரில் கட்டுரைகளும், விமர்சனங்களும், பத்திகளும்  பல்வேறு இதழ்களிலும், இணையத்தளங்களிலும் எழுதி வருகின்றார். இதுவரை ஒன்பது நூல்கள் வெளியாகியுள்ளன. ‘மெக்ஸிக்கோ’ நாவல் பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டியில் 2019 -இல் பரிசையும், ‘நாடற்றவனின் குறிப்புகள்’ தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘ஏலாதி’ இலக்கிய விருதை 2008 -இலும் பெற்றிருக்கிறது. மின்னஞ்சல்: elanko@rogers.com

பிறழ்வின் நிறம்

0

கிருஷ்ணமூர்த்தி

யல்பிலிருந்து மாற்றம் கொள்ளும் நிகழ்வை, நடத்தையை பிறழ்வு என்று அர்த்தப்படுத்துகின்றனர். படைப்பாளர்கள் தங்களது படைப்புச் செயல்பாட்டை பல நேரங்களில் பிறழ்வின் விளைவாக குறிப்பிடுகின்றனர். மரியா வர்கஸ் யோசா எழுதும் செயல்பாட்டையே Rebel என்று குறிப்பிடுகிறார். அதாவது வாழும் அல்லது வசிக்கும் அமைப்பின் கட்டுக்கோப்பான சட்டகத்தை சகிக்க இயலாமல், அங்கு உரையாடுவதற்கு வாய்ப்பு அமையாமல் செல்லும்போது அந்த சட்டகத்தை எதிர்த்து பொதுவில் பேசத் தொடங்கும் செயலாக வர்ணிக்கிறார். இங்கு படைப்பு செயல்பாடு புரட்சி (Rebel) அல்லது பிறழ்வு என்று இருவேறு விதமாக அர்த்தப்படுத்தப்படுகிறது. 

சமூகத்தின், அமைப்பின் இயல்பு அதிகாரத்தால் தீர்மானிக்கப்படுகிறது. பல்வேறு கருத்தியல்களால் நிர்மாணிக்கப்படும் இயல்பு எல்லோருக்குமானதாக அமைவதில்லை. பலருடைய தனித்த இயல்பிற்கு முற்றிலும் முரணாக அமைப்பின் இயல்பு உருக்கொள்கிறது. அந்த நிலையில் தன்னுடைய அடையாளத்தை, இயல்பை, வாழ்வை தற்காத்துக்கொள்ள பொது நடத்தையிலிருந்து மாறுபட்டு நடந்துகொள்கின்றனர். சமூகம் அவர்களை அதிநாயகனாக கொண்டாடவோ அல்லது சமூக விதிகளுக்கு முரணாக இருப்பின் விலக்கி வைக்கவோ தயங்குவதில்லை. விலக்கி வைக்கப்படுபவர்களின் குரல்கள் காலத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் காணாமலாக்கப்படுகிறது. அவர்களுக்குள்ளாக இருக்கும் இயற்கையான சுயம் பேசப்படாமல் போகிறது. அவற்றைப் படைப்பு செயல்பாடு மட்டுமே வெளிக்கொணர்கிறது. சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களில் இருக்கும் பிறழ்வுகள் கருத்தியல்களால் அளக்க வேண்டியவையாகின்றன. படைப்பின் உட்கிடை இயல்பைப் பேசுவதன்று, இயல்பிற்கு முரணான அல்லது முரணாக சித்தரிக்கப்படும் சிக்கல்களை ஆராய்வது. உலகின் பல்வேறு முதன்மைப் படைப்பாளிகள் இதை சிரமேற்கொண்டு செய்திருக்கின்றனர். தமிழில் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் நிஜந்தன் ஒரே ஒரு நாவலை படைத்திருக்கிறார்.  சுய அனுபவங்களின் புனைவு வடிவமாக சித்தரித்திருப்பினும் இலக்கிய மதிப்பீடுகளில் குறைவின்றி சிறப்பான படைப்பாக “பிறழ்” அமைந்திருக்கிறது. அவருடைய இலக்கிய அலகை சிறப்பிக்கும் வகையில் சிறப்பிதழ் திட்டமிட்டோம். ஒரே படைப்பு வெளியிட்டிருக்கிறார் என்பதால் அவருடைய புனைவின் மையத்தை சிறப்பிதழின் நோக்கமாக தேர்ந்தெடுத்தோம். வேறு வேறு தளங்களில் பங்காற்றும் பிறழ்வை கொண்டுவருவதே திட்டம். பெருங்கனவுகள் உடைவதும் சிதிலங்கள் சிறப்புற வரலாற்றில் இடம்பெறுவதும் இவ்விதழுக்கும் நிகழ்ந்தது. மா.க. பாரதியின் கட்டுரை சமூக-பண்பாட்டு தளத்தில் பிறழ்வின் தடத்தை சிறப்பாக எடுத்துரைக்கிறது. அனுராதா ஆனந்தின் சில்வியா ப்ளாத் பற்றிய கட்டுரை இலக்கியத்தில் பிறழ்வின் இடத்தை அழகுற பேசுகிறது. இந்தத் திட்டம் நிறைவுறாத சிறப்புப் பகுதியாகவே எஞ்சுகிறது. எனினும் வெளியாகும் படைப்புகள் வாசகரின் மனதில் தீராத உரையாடலாக மாறும் என்று நம்புகிறோம். மறைந்த எழுத்தாளர் நிஜந்தனின் சகோதரர் எழுதியிருக்கும் அஞ்சலிக் குறிப்பு சிறப்புப் பகுதிக்கு அர்த்தம் கூட்டுகிறது.

***

கவிஞர் கார்த்திகா முகுந்த்தின் விரிவான நேர்காணல் கவிதை குறித்த பன்முகப் பார்வையை வழங்குகிறது. கவிதையாக்கம், கவிதையின் உட்கிடை ஆகிய விஷயங்கள் சார்ந்த உரையாடலை எழுப்பவல்லதாய் அமைந்திருப்பது வாசகர்களின் நல்லூழ். லாவண்யா சுந்தரராஜனின்  செயலூக்கத்திற்கு அன்பும் நன்றியும்.

***

கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்புகள், மதிப்புரைகள் ஆகிய வகைமைகளில் சிறப்பாக பங்களித்திருக்கும் அனைத்து படைப்பாளிகளுக்கும் அன்பும் நன்றியும். சமகால இலக்கியப் போக்கின் தடத்தை இன்னமும் சற்று விரிவடையச் செய்திருக்கிறது இவ்விதழின் படைப்புகள்.

உருகும் நிழல்

0

ஆர்.சங்கரநாராயணன்

டோக்கியோ, 1949.

மழை பெய்துவிட்டு நின்றிருந்தது. GHQ கட்டிடத்தின் ஜன்னல்களில் மங்கலான வெளிச்சம் மட்டும் இருந்தது. கீழே சாலையில் அமெரிக்க இராணுவ ஜீப்புகள் சென்றுகொண்டிருந்தன. அவற்றின் டயர்கள் தேங்கிய நீரை வெட்டிச்சென்ற சத்தம், இரவு முழுக்க நகரத்தின் மீது ஒரு சலிப்பான இசை போல ஒலித்தது.

ஒகாமோட்டோ கெஞ்சி இன்னும் அலுவலகத்தில் இருந்தான்.

அவன் முன் திறந்துகிடந்த வாக்குமூலத்தில் ஒரு ஜப்பானிய மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். இரண்டு மணி நேரமாக விசாரணை நடந்துகொண்டிருந்தது. அறைக்குள் புகை நிறைந்திருந்தது.

மருத்துவர் மெதுவாகச் சொன்னார்:

“நாங்கள் கைதிகளைப் பயன்படுத்தினோம்.”

கெஞ்சி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தான்:

SUBJECT STATES HE HAD NO DIRECT KNOWLEDGE OF HUMAN EXPERIMENTATION.

மருத்துவர் திடீரென்று அவனைப் பார்த்தார்.

“நான் அப்படி சொல்லவில்லை.”

கெஞ்சி கண்களை உயர்த்தவில்லை.

அமெரிக்க அதிகாரி கேட்டார்:

“What did he say?”

கெஞ்சி சிறிது நேரம் தாமதித்தான்.

“அவர் நேரடி தகவல் இல்லை என்றார்.”

மருத்துவர் நாற்காலியில் முன்னே குனிந்தார்.

“இல்லை,” என்றார் ஜப்பானியத்தில். “நான் பொய் சொல்லவில்லை.”

அமெரிக்க அதிகாரி எரிச்சலாகச் சொன்னார்:

“Tell him to answer properly.”

கெஞ்சி மருத்துவரைப் பார்த்தான்.

அந்த மனிதனின் உதடுகள் உலர்ந்திருந்தன. கைகள் நடுங்கின. ஆனால் கண்கள் மட்டும் அமைதியாக இருந்தன.

“உண்மையை எழுதுங்கள்,” என்றார் அவர் மெதுவாக.

கெஞ்சி ஒரு விநாடி தயங்கினான்.

பிறகு ஜப்பானியத்தில் சொன்னான்:

“அமைதியாக இருங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களை சோவியத்துகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.”

மருத்துவரின் முகத்தில் இருந்த நிறம் மெதுவாக மாறியது.

அவர் நாற்காலியில் பின்னால் சாய்ந்தார்.

அதற்குப் பிறகு அவர் எதுவும் பேசவில்லை.

***

அடுத்த சில நாட்கள் கெஞ்சியால் சரியாகத் தூங்க முடியவில்லை.

ஒவ்வொரு காலையிலும் interrogation room-க்குள் நுழையும்போது, அந்த மருத்துவர் மீண்டும் அங்கே உட்கார்ந்து இருப்பது போல அவனுக்குத் தோன்றும். காலியான நாற்காலியைப் பார்த்தவுடனே வயிற்றுக்குள் ஏதோ இறுகும்.

மூன்றாம் நாள் மிசாகோ மெதுவாகக் கேட்டாள்:

“அவர் இன்னும் கீழே இருக்காரா?”

“யார்?”

அவள் பதில் சொல்லவில்லை.

சிகரெட் சாம்பலை தட்டிவிட்டு மீண்டும் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.

அன்று மதியம், மிசாகோ தனது தட்டச்சுப் பொறியின் முன் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய இடது கை ஆள்காட்டி விரலில் ஒரு பழைய வடு இருந்தது. அதைக் கெஞ்சி முன்பு பார்த்ததில்லை.

“என்ன அது?” என்றான்.

“1945,” என்றாள். “யோகோஹாமா. எரிந்த வீட்டுக்குள் ஒரு குழந்தையைத் தேடிக்கொண்டிருந்தேன். உடைந்த கண்ணாடி.”

“குழந்தை?”

“இறந்துபோயிருந்தது.”

அவள் மீண்டும் சிகரெட்டைப் பற்றவைத்தாள்.

“நான் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அறிக்கையில் அதை  ‘தீ விபத்து’ என்று எழுதினேன்.”

***

அடுத்த வாரம் அந்த மருத்துவர் காணாமல் போனார்.

அதற்கான அதிகாரப்பூர்வ பதிவு:

TRANSFERRED FOR FURTHER QUESTIONING.

அந்த வார்த்தையை தட்டச்சு செய்தது கெஞ்சிதான்.

அன்று இரவு அவன் வீட்டுக்குப் போகவில்லை.

உனோ ரயில் நிலையம் அருகே ஒரு சிறிய மதுக்கடையில் குடித்துக்கொண்டிருந்தான். வெளியே ரயில் சத்தம். அருகில் அமெரிக்க வீரர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர்.

கெஞ்சி தனது கைகளைப் பார்த்தான்.

அவன் திடீரென்று தம்பி ஹிரோஷியை நினைத்தான்.

1943-ல் அவர்கள் கடைசியாகச் சண்டையிட்ட நாள்.

“நீ கோழை,” என்று ஹிரோஷி சொன்னான்.

“நீ முட்டாள்,” என்று கெஞ்சி பதில் சொன்னான். “இந்தப் போர் தோற்கும்.”

ஹிரோஷி சிரித்தான்.

“அப்படின்னா நீ ஏன் இங்கேயே இருக்கிறே?”

அதற்கு கெஞ்சி பதில் சொல்லவில்லை.

மூன்று மாதங்கள் கழித்து ஹிரோஷி மஞ்சூரியாவுக்கு அனுப்பப்பட்டான்.

அதற்குப் பிறகு வீட்டுக்கு வந்த கடைசி கடிதத்தில் இருந்த ஒரு வரி மட்டும் எப்பொழுதும் நினைவில் இருந்தது:

“குளிர் ஆரம்பிச்சுடுச்சு”

***

அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்தபோது மிசாகோ அவனைப் பார்த்தவுடன் கேட்டாள்

“நீ சரியா இருக்கியா?”

“ஆம்.”

“பொய்.”

அவள் சிகரெட் பற்றவைத்தாள்.

“இந்த கட்டிடத்தில் எல்லாரும் ஏதாவது translate பண்ணிக்கொண்டே இருக்காங்க,” என்றாள். “சிலர் கோப்புகளை  வேறு சிலர் தங்களை.”

***

அன்று மாலை லெப்டினன்ட் கர்னல் மார்ட்டின் அவனை அழைத்தார்.

அவருடைய அலுவலகத்தில் யமடா கோப்பு திறந்துகிடந்தது.

“உட்கார்,” என்றார் மார்ட்டின்.

கெஞ்சி அமைதியாக உட்கார்ந்தான்.

மார்ட்டின் நேராக விஷயத்துக்குப் போனார்.

“நேற்று interrogation-ல் தேவையில்லாத தயக்கம்  இருந்தது.”

“அவர் உண்மையைச் சொல்ல முயன்றார்.”

“Everybody says that.”

“அவர் பயந்திருந்தார்.”

“நாமெல்லாம் பயந்திருக்கிறோம்.”

மார்ட்டின் சிகரெட் பற்றவைத்தார்.

“Okamoto, நான் உன்னை ஏன் இங்கே வைத்திருக்கிறேன் தெரியுமா?”

கெஞ்சி பதில் சொல்லவில்லை.

“Because you understand ambiguity. Fanatics are useless in intelligence work.”

அவர் கோப்பைத் திறந்தார்.

“இந்தப் புகைப்படங்கள் வெளியே போனால் என்ன ஆகும் தெரியுமா? Soviet propaganda. Political instability. Panic.”

“அப்படின்னா நாம என்ன செய்கிறோம்?”

“Editing,” என்றார் மார்ட்டின். “History is always edited.”

கெஞ்சி திடீரென்று கேட்டான்:

“என் தம்பியும் edit செய்யப்பட்டானா?”

மார்ட்டின் அமைதியாகிவிட்டார்.

“என்ன?”

“Missing in Manchuria,” என்றான் கெஞ்சி. “அதன் அர்த்தம் என்ன?

இறப்பா, கைவிடப்பட்டனா அல்லது மறக்கப்பட்டானா?

மார்ட்டின் அவனை நீண்ட நேரம் பார்த்தார்.

“உன் பிரச்சினை என்ன தெரியுமா?” என்றார் மெதுவாக. “நீ language-ஐ moral thing என்று நினைக்கிறாய்.”

“அப்படியில்லையா?”

“இல்லை. அது tool.”

***

அன்று இரவு கெஞ்சி ஷிஞ்சூகுவுக்குச் சென்றான்.

கருப்புச் சந்தையில் அந்த வயதான பெண் இன்னும் இருந்தாள்.

“Translator,” என்று அவள் சிரித்தாள்.

“அப்படிக் கூப்பிடாதே.”

“அப்போ என்ன?  பிசாசா ?”

அவள் மேசைக்குக் கீழிருந்து ஒரு சிறிய அட்டைப் பெட்டியை எடுத்தாள்.

“இது உனக்கு பிடிக்கும்.”

கெஞ்சி அதைத் திறந்தான். அதற்குள் ஒரு செல்லுலாய்ட் மனிதத் தலை இருந்தது. முகத்தின் வலது பகுதி உருகியிருந்தது.

“எங்கிருந்து கிடைத்தது?”

“வடக்கிலிருந்து.”

“Unit 731-aa?”

அந்தப் பெண் உடனே அவனைப் பார்த்தாள்.

“அந்தப் பெயரை இங்கே சொல்லாதே.”

கெஞ்சி தலையை மீண்டும் பார்த்தான்.

அது பாதியிலேயே உருகிய முகம் போல இல்லை.

பாதியிலேயே அழிக்கப்பட்ட சாட்சி போல இருந்தது.

அவன் அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். அன்று இரவு அவனால் தூங்க முடியவில்லை.

அந்த மருத்துவரின் முகம் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.

“உண்மையை எழுதுங்கள்.”

***

அடுத்த நாள் காலை GHQ-வில் இரண்டு பேர் அவனுக்காகக் காத்திருந்தார்கள்.

ஒருவன் ராணுவ போலீஸ். மற்றவன் மெலிந்த அமெரிக்கர்.

“ஒகாமோட்டோ கெஞ்சி?” என்றார் அந்த மனிதர்.

“ஆம்.”

“நான் டாக்டர் ஃபெலிக்ஸ்.”

“மருத்துவரா?”

“சில நேரங்களில்.”

அவர்கள் அவனை ஏழாவது மாடிக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஜன்னல் இல்லாத அறை.

மேசையின் மீது மஞ்சள் நிறத் திரவம்.

ஃபெலிக்ஸ் நேராகக் கேட்டார்:

“அந்த மருத்துவர் உன்னிடம் என்ன சொன்னார்?”

கெஞ்சி அமைதியாக இருந்தான்.

“நீ mistranslate பண்ணினாய்,” என்றார் ஃபெலிக்ஸ். “ஆனால் முழுவதுமாக இல்ல.”

“என்ன அர்த்தம்?”

“நீ அவரைக் காப்பாற்ற முயற்சித்தாய். அதே நேரத்தில் உன்னையும் காப்பாற்ற முயற்சித்தாய்.”

கெஞ்சியின் தொண்டை உலர்ந்தது.

“அவர் இப்போது எங்கே இருக்கிறார்?”

ஃபெலிக்ஸ் பதில் சொல்லவில்லை.

அதற்குப் பதிலாக அந்தக் குவளையை அவன் பக்கம் தள்ளினார்.

“இதைக் குடித்துவிட்டு வீட்டுக்குப் போ,” என்றார். “கொஞ்ச நாள் தூங்கு.”

“அப்புறம்?”

“அப்புறம் தேவையில்லாத விஷயங்கள் நினைவிலிருந்து போய்விடும்.”

கெஞ்சி குவளையைப் பார்த்தான்.

பிறகு மெதுவாகத் தள்ளிவிட்டான்.

“நான் முடியாது.”

ஃபெலிக்ஸ் அவனை சில விநாடிகள் பார்த்தார்.

“People who keep digging,” என்றார் மெதுவாக, “usually disappear.”

***

அந்த இரவு கெஞ்சி வீட்டுக்குத் திரும்பவில்லை.

டோக்கியோ முழுக்க நடந்தான். அமெரிக்க ஜீப்புகள். ஜாஸ் இசை. தெருவோரத்தில் தூங்கும் குழந்தைகள். குடிபோதையில் சண்டையிடும் முன்னாள் வீரர்கள். ஒரு பாலத்தின் கீழ், ஒரு கொரிய தொழிலாளி தனது வீட்டுக்கான கடிதத்தை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“நீ ஜப்பானியனா?” என்று கேட்டான்.

“ஆம்.”

“இதுல என்ன எழுதிருக்குனு சொல்ல முடியுமா?”

கெஞ்சி கடிதத்தை எடுத்தான்.

அவனுக்கு கொரிய மொழி முழுமையாகத் தெரியாது.

ஆனால் சில வார்த்தைகள் புரிந்தன.

அம்மா.
திரும்பி வா.
குளிர்.

அவன் நீண்ட நேரம் அந்தக் காகிதத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு மெதுவாகச் சொன்னான்:

“அவங்க நீ உயிரோட இருக்கணும் னு சொல்றாங்க.

அந்த மனிதன் அழ ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து தனது coat-க்குள் இருந்து ஒரு சிறிய டப்பாவை எடுத்தான்.

“சூப்,” என்றான். “சாப்பிடுறியா?”

அவர்கள் இருவரும் பாலத்தின் கீழ் உட்கார்ந்து குளிர்ந்த சூப்பை பகிர்ந்து சாப்பிட்டார்கள். மேலே ரயில் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், தண்ணீர் சிறிது அதிர்ந்தது.

அந்த மனிதன் திடீரென்று சிரித்தான்.

“நான் வீட்டுக்குத் திரும்பும்போது,” என்றான், “என் அம்மா என்னை அடிப்பாள்.”

கெஞ்சி பல மாதங்களுக்கு பிறகு முதல் முறையாகச் சிரித்தான்.

***

அடுத்த வாரம் அவன் வேலைக்குப் போகவில்லை.

மூன்று நாட்கள் கழித்து military police அவன் அறைக்குச் சென்றார்கள்.

ஆனால் அவன் அப்போது நிலத்தடியில் இருந்தான்.

கழிவுநீர் சுரங்கங்களில்.

அங்கு மறக்கப்பட்டவர்கள் வாழ்ந்தார்கள்.

ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியர் ஒவ்வொரு இரவும் ஒரே ஹைக்கூவை நினைவுபடுத்த முயற்சிப்பார். முதல் இரண்டு வரிகள் மட்டும் அவருக்கு நினைவில் இருக்கும். மூன்றாவது வரிக்கு வந்தவுடன் நின்றுவிடுவார். பிறகு மறுபடியும் ஆரம்பிப்பார்.

கெஞ்சி அவரருகில் உட்கார்ந்தான்.

“என்ன அது?” என்றான்.

“தெரியவில்லை,” என்றார் ஆசிரியர்.

“மூன்றாவது வரி?”

“இல்லை. நான் ஏன் அதை நினைவில் வைக்க விரும்புகிறேன் என்றே தெரியவில்லை.”

***

1952-ல் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்த நாளில், சுரங்கச் சுவரில் யாரோ கரியால் எழுதினார்கள்:

நாங்கள் இன்னும் இங்கே இருக்கிறோம்.

கெஞ்சி நீண்ட நேரம் அந்த வார்த்தைகளைப் பார்த்தான்.

பிறகு கீழே எழுத எண்ணினான்.

ஆனால் அவன் கை மேலே போன இடத்தில் நின்றது.

இடது கை சற்று நடுங்கியது.

***

ஆர்.சங்கரநாராயனன் – தென்காசி மாவட்டத்தை சார்ந்தவர். பணி நிமித்தமாக மும்பையில் வசித்து வருகிறார். 10 வருடங்களுக்கும் மேலாகத் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய செயல்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன் . 2017 ல் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எழுத்தாளர் நீலபத்மநாபன் அவர்களின் அறக்கட்டளை சார்பில் சிறந்த கவிதைக்கு வழங்கப்படும் “தலைமுறைகள் “ விருது எனது “மாயவிதைகள் என்ற கவிதைக்கு கிடைத்து. தொடர்ச்சியாக சிறுகதைகள், கவிதைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: rbisankar2009@gmail.com