Home Blog Page 4

அங்குமிங்கும்

0

தென்றல் சிவக்குமார்

ருத்துவமனைக்கு வெளியில் சுமார் ஐநூறு பேர் நின்றிருந்தார்கள். சாலையின் மறுபுறத்துக் கடைகளின் காம்பவுண்டு சுவர்கள் மீதெல்லாம் கேமராக்கள் நெருக்கியடித்து நின்றிருந்தன. வாரம் ஒருமுறை பயணிக்கும் அதே சாலை; இந்தச் செய்தியும் தொடர்ந்து கவனிக்கும் ஒன்றுதான்; ஆனால், இரண்டையும் இதுவரை இணைத்துப் பார்த்ததே இல்லை. கண்களைத் திருப்பு, ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டு என்ற அறிவின் கட்டளையை மீறி, மற்ற கண்களுக்குத் தென்படாமல் தப்பிப் பறக்கும் அந்த ஆன்மா என் கண்களைத் தழுவுமோ என்று பரிதவித்தபோது, பாலத்தின் பக்கவாட்டுத் தொங்கல் சுவர் தென்பட்டது. 

பாலத்தில் ஏறிப் போகவேண்டுமே? இப்படிப் போனால் எவ்வளவு தூரம் சுற்றவேண்டுமோ? எப்படித் தவறியது? யாரையாவது வழி கேட்கலம் என்று நினைத்தபடி, பக்கவாட்டில் தென்பட்ட சிறிய தெருவுக்குள் வண்டியைத் திருப்பினேன். ‘நிர்மலா ட்ரெஸ்ஸஸ்’ என்ற போர்டு தென்பட்டது. சட்டென்று ஒரு ஆசுவாசம் பரவியது. வழி தவறிவிடவில்லை. இந்தக் கடைக்கு ஒருமுறை பிந்துவுடன் அவள் வழி சொல்லச் சொல்ல இதே வண்டியை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். 

வண்டியைச் சாய்த்து நிறுத்திவிட்டு, இறங்கி நெல்சன் மாணிக்கம் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அவ்வளவு பெரிய சாலை மக்கள் கூட்டத்தால் திணறிக்கொண்டிருந்தது. டபுள் மாஸ்க் அணிந்த போக்குவரத்துக் காவல் குழுவினர் மிடுக்காக, அதட்டி, மிரட்டி, நல்லதனமாக, மன்றாடி, கடைசியில் தாங்களும் கண்ணீரைத் துடைத்தபடி மெல்ல மெல்ல கூட்டத்தைக் கலைத்துக்கொண்டிருந்தனர். மருத்துவமனையைச் சுற்றிய கூட்டம் சிந்திச் சிதறி இந்தச் சந்துக்குள்ளும் கொஞ்சம் பேர் நின்றிருந்தார்கள். நிர்மலா கடையில் வேலை செய்யும் பெண்கள் நான்கு பேரும் வாசலில் மௌனமாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுள் மஞ்சள் சுடிதார் அணிந்திருந்தவள் நீலச் சேலை உடுத்தியவள் மேல் சாய்ந்தவாறு நின்றிருந்தாள். எதற்காக நடக்கிறேன் என்று எனக்குத் தெரியாததைப் போலவே எதற்காக நிற்கிறோம் என்று இந்தப் பிள்ளைகளுக்கும் தெரியாதுதானே. அத்தைக்கும் செய்தி தெரிந்திருக்கும். அவ்வளவு ரசித்துக் கொண்டாடிய குரல்.. சீக்கிரம் அவ்விடம் போய்ச் சந்திக்கலாம் என்று நினைத்துக்கொள்வாரோ என்னவோ.. ‘எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும்… அணையா விளக்கே…’ கடவுளே!

அனிச்சையாகக் கன்னத்தைத் துடைத்தபோதுதான் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பது உறைத்தது. இப்படித் தருணங்களில் உடனே பரவும் கூச்சத்தை இப்போது காணவில்லை. சாலை வரை நடக்கும் எண்ணம் அப்படியே வடிந்தது. திரும்பி நடந்து, வண்டியைக் கிளப்பிக்கொண்டு சாலைக்குள் திரும்பியபின், அனிச்சையாக ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தேன். ஓர் இளைஞன் கண்ணீர் பொங்கப் பொங்க நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தான். அவன் தலையைக் கோதி, விசிறிவிட வேண்டும் போலிருந்தது. இப்படி எத்தனை போலிருந்ததுகளை எத்தனை எளிதாக வண்டியை நகர்த்திக் கடந்துவிடுகிறோம்.

***

பிருந்தா அத்தையை பேலியேட்டிவ் கேர் சென்டரில் சென்று முதல் முறை பார்த்தபோது வாடி என்று சொல்லாமல் வாம்மா என்றார். கையை வயிற்றின் மீது கட்டிக்கொண்டு பேசினார். முகத்தில் புன்னகை இல்லாதது பரவாயில்லை, அதை நான் எதிர்பார்த்திருக்கவும் இல்லை. ஆனால் கண்களில் இருந்த அந்நியமும், எச்சரிக்கை உணர்வும் என்னைச் சீண்டின. மறுமுறை போகக் கூடாது என்ற முடிவு தன்னால் ஐந்தாம் நாள் தளர்ந்து, ஆறாம் நாள் காணாமல் போய், ஞாயிற்றுக்கிழமை மறந்தே போய்விட்டது. 

மூன்றாம் வாரம் போனபோது உம்மென்று உட்கார்ந்துகொண்டு ஐந்து நிமிடங்கள் நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருந்தார். பிறகு, “ஏண்டி, க்ரௌண்ட் ஃப்ளோர்ல இருக்கற நிர்மலாவ அவங்க பசங்களே கொண்டாந்து விட்டாங்களாமே, சொந்தப் பசங்களும் இப்படிப் பண்ணுவாங்களா?” என்றார். கண்ணில் அந்நியத்தன்மைக்கு பதில் வியப்பும் தீவிரமும். நான் உடைந்து அழுதேன். அத்தையை அவருடைய மூத்த தாரத்துப் பிள்ளைகள் அங்கே அனுப்பியிருந்தார்கள். அழுது முடிக்கும்வரை அப்படியே இருந்தார். நான் துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, அவர் கட்டிலின் பக்கத்திலிருந்த மேஜையிலிருந்து தண்ணீர் சொம்பை எடுத்தேன். அத்தையால் அவ்வளவு விரைவாக எழுந்து வந்து அத்தனை வலுவாக என் கையிலிருந்து தண்ணீரைப் பிடுங்க முடியும் என்று நான் துளியும் எண்ணவில்லை. இப்போது யோசித்தாலும் அதை நம்பமுடியவில்லை. ஒரு கணத்தின் முடிவில் தண்ணீர் அவர் கையில் இருந்தது. “எரும மாடே இவ்ளோ தூரம் வரியே, தண்ணி பாட்டில் கொண்டுவர மாட்டியா? நாப்பத்து மூணு வயசாச்சுல்ல?” அத்தை குரல் அழுகையை நோக்கி நகர, அப்போதும் அவர் என் வயதைத் துல்லியமாகச் சொன்னதை உணர்ந்ததும் நான் வெடித்துச் சிரித்தேன். கைப்பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தேன்.

“பைத்தியம், அழுத ஒடனே சிரிக்கறத பாரு, வயச சொல்லிட்டேன், அதான?” நான் தண்ணீரை விழுங்க முடியாமல், வாயைக் கையால் மூடிக்கொண்டு மேலும் சிரித்தேன். “துப்பித் தொலைக்காத… பொற ஏறப்போவுது…” என் பிருந்தா அத்தை! எனக்கு மேலும் மேலும் முகம் மலர்ந்தது, அத்தைக்கும். அதன் பிறகு, எத்தனாவது வாரமாக வருகிறேன் என்று எண்ணுவதை வலுக்கட்டாயமாகத் தவிர்த்து, பயிற்சி செய்து மறந்தேன்.

***

அத்தை கொஞ்சம் பேசியதுமே மூச்சு வாங்கியது. பக்கவாட்டு மேசை மேலிருந்த அவருடைய தண்ணீர் சொம்பை எடுத்துக் கொடுத்தேன். வேண்டாம் என்று மறுத்துத் தலையசைத்தார். ஆனால் வாங்கிக் கையில் வைத்துக்கொண்டார். தண்ணீரைப் பார்க்கப் பிடிக்காததைப் போல முகத்தைச் சுளித்தார். 

“சொர்க்கத்துல கச்சேரி ஆரம்பிச்சிருக்கும்… செல்வி சந்தோஷமா கேட்டிட்டிருப்பா… இல்ல?”

“ஃபோன்ல எதாச்சும் பாட்டு போடவா அத்த?”

“இன்னிக்கு வேணாம்… அடுத்த வாரத்துலேருந்து…” தான் சொன்னதைக் கேட்டு தானே திகைத்ததைப் போல பேச்சை நிறுத்தி, தண்ணீர் குடித்தார்.

“நாளைக்கும் வரவா?” 

“ச்ச… அதெல்லாம் வேணாம்… அடுத்த வாரத்துலேருந்து கேக்கறதுக்கு திராணி இருக்கற வரைக்கும் நீ வரப்பலாம் பாட்டு கேப்போம், என்ன…?”

“ம்ம்… சௌம்யா ஃபோன் பண்ணா அத்த… இன்னிக்குப் போறியான்னு என்னைக் கேட்டா… ஃபோன்ல நீங்க பேசறது அவளுக்கு சரியா கேக்கறதில்லையாம்… அதான் பாத்துட்டு வந்து சொல்லுப்பா… நான் புதன் வியாழன்ல போய் நேர்ல பாக்கறேன்னு…”

“உஷா… அவ இதை எப்படி சொல்லிருப்பான்னு எனக்குத் தெரியும். எவ்ளோ வாட்டமா எனக்குன்னு வளச்சு சொல்றே? நல்லவேளை உங்கம்மா உன்னை வக்கீலுக்குப் படிக்க வெக்க மாட்டேன்னு பிடிவாதமா சொன்னது நல்லதாச்சு…” சொல்லும்போதே சிரித்தபடி மேலும் மூச்சு வாங்கினார். நான் அத்தைக்குப் பழிப்புக் காட்டினேன். அத்தையின் படுக்கைக்கு வலப்புறம் இருந்த மங்கிய ஜன்னல் கண்ணாடியில் சின்னச் சின்னச் சதுரங்களாலான பழிப்புக் காட்டும் என் முகம் தெரிந்தது. நானும் சிரித்துக்கொண்டேன்.

அத்தைக்கு காபி கொண்டுவந்த சிந்து சிஸ்டர், “என்ன, யாரோட மாமியாரைப் பத்திப் பேசறீங்க?” என்று கேட்டுப் புன்னகைத்துவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் திரும்பிச் சென்றார். “அத்த… அடுத்த வாரம் ரெண்டு நாள் வொர்க் ஃப்ரம் ஹோம் இருக்கும். இங்கே வந்து வேலை பாத்துக்கவா? மத்த நேரம் பேசிட்டு இருக்கலாம்ல?” 

அத்தை உடனடியாகத் தலையை ஆட்டினார். ஓரளவுக்கு சீராகவே வளர்ந்து ‘பொம்’மென்றிருந்த அவரது தலைமுடி எழுந்து அமைந்தது. “சிலசமயம், யாராச்சும்… நான் இல்லடி… மத்தவங்க யாராச்சும் வலியில அனத்துறது உன்னை வேலை பாக்க விடாது. இப்படி வாரம் ஒருமுறை வரது நல்லாருக்குடி.” எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் பெருமூச்சு வந்து தொலைக்கிறது.

அத்தையிடம் சொல்லிக்கொண்டு, கீழே வந்து லெட்ஜரில் கையெழுத்துப் போடும்போது, “இன்னும் எத்தன?” என்று ஒரு சத்தம் கேட்டது. விதிர்விதிர்த்து நிமிர்ந்து பார்த்தேன். சிந்து சிஸ்டர் என் தோளைத் தட்டி, “நிர்மலாம்மா மாத்திரை முழுங்க ரொம்ப சிரமப்படறாங்க.. அவங்கதான்..” என்றார். மனத்துக்குள் ஒரு வண்டு குடையத் தொடங்கியது. மறுபடியும் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தபிறகுதான் உடல் உதறல் நின்று சமன் பெற்றது. வண்டி ஓடவேண்டுமே. 

***

சிவப்பைப் பூசிக்கொண்டு ‘நீ எடுத்துப் பேச வேண்டியதில்லை’ என்ற தோரணையிலேயே ஒலிக்கும் விளம்பர அழைப்பால் தூக்கம் கலைந்தது. கால்களைக்கூடச் சரியாக நீட்டாமல் அப்படியே உறங்கியிருக்கிறேன். சாப்பிட்ட ஞாபகமும் இல்லை. உடை மட்டும் மாற்றிவிட்டேன் போல. கட்டிலின் மூலையிலேயே அத்தை ‘நல்ல கலர் காம்பினேஷன்’ என்று சொன்ன லேவண்டர் சுடிதார் சுருண்டு கிடந்தது. அதை எக்கி எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். இதை மட்டும் தனியாக அலசிவிடலாம், மிஷினில் போடவேண்டாம் என்று தோன்றியது. வாளியில் போட்டுவிட்டு, பால் பாக்கெட்டை எடுத்துக் காய்ச்சப் போனபோதுதான் மணி பார்த்தேன். மதியம் மூன்று. சமையலறையில் ஃபில்டரில் காப்பிப்பொடியை நிரப்பி, அப்படியே விட்டிருந்தேன். நல்லவேளை, அடுப்பில் எதுவும் இல்லை.

மீண்டும் அலைபேசி ஒலித்தது. சிவப்பு நிறம் இல்லை. பால் பாக்கெட்டிலிருந்து பாதியைப் பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்துவிட்டு, அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். பிந்து என்று நான் அழைக்கும் பிருந்தா. அத்தையின் பெயரோடு வந்தடைந்த, அல்லது நான் கண்டடைந்த தோழி. எடுத்து, “என்னய்யா, வீட்ல யாரும் இல்லையா? ஞாயித்துக் கெழமையும் அதுவுமா ஃபோன் பண்றே?” என்றபடியே ஃபில்டரில் வெந்நீரை ஊற்றினேன். பிருந்தா, “உஷா, எனக்கு உடனே ஒரு கைனிக் டாக்டரை பாக்கணும், ப்ளீடிங் ரொம்ப அதிகமா இருக்கு. கேஎஸ் ஹெல்த் சென்டருக்கே போகலாம், ஆனா நீ வந்து கூட்டிட்டுப் போனா நல்லாருக்கும். என்னால வண்டி ஓட்டவோ, வண்டியில உக்காந்து வரவோ நிச்சயமா முடியாது,” என்றதும் மனத்துக்குள் மறுபடியும் அதுவே குடையத் தொடங்கியது. 

எப்படியோ பிந்துவால் ஏற்ற இறக்கம் அற்ற குரலில் இப்படியானதைக்கூட சொல்ல முடிகிறது. எனக்குத் தொண்டை அடைத்தது. செருமிக்கொண்டு, “எனக்கும் ஆட்டோதான் பெட்டர். ஒரு காபி மட்டும் குடிச்சுட்டு வந்துடறேன். ஆட்டோ ஏறிட்டு சொல்றேன். ரெடியா இரு…” என்றேன்.

ஆட்டோவில் ஏறியும் மனம் பொங்கியபடியே இருந்தது. பதட்டம் இல்லாமல்தான் பேசினாள் என்றாலும் பிந்துவைப் பற்றிய கவலையும் அழுத்தியது. “இன்னும் எத்தன?” குடையும் வண்டின் சத்தம். தலையைத் திருப்பிக்கொண்டபோதுதான் இவ்வளவு நேரம் சாலையைப் பார்த்தபடி வந்தது புரிந்தது. ஆட்டோவைச் செலுத்திய பெண், சுடிதார் மேல் காக்கி சட்டை அணிந்து, கைகளில் கண்ணாடி வளையல் அணிந்திருந்தாள். பத்து அல்லது பதினைந்து நிமிடப் பயணம். அவளிடம் பேசலாமா என்று யோசித்தேன். அதற்குள் அவளுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. நானும் பிந்துவை அழைத்துப் புறப்பட்டுவிட்டதைச் சொன்னேன். நான் பேசிவிட்டு வைத்ததும், ஓட்டுனர், “பாட்டு போடலாமா மேம்?” என்றாள்.

இத்தனை வயதில் முதல் முறையாக, பாட்டு என்ற சொல் பனிக்கூர் போலச் சொரேரென்று ஒலித்தது. என் மௌனத்தை என்னவாகப் புரிந்துகொண்டாளோ, அவளாகவே, “ஆளு போயிட்டாலும் பாட்டு நம்மகூட இருக்குதானே மேம்?” என்றாள். பாட்டிலிலிருந்து ஒரு வாய் தண்ணீரை முழுங்கிவிட்டு, “ஆமாம்பா… பாட்டு போடுங்க…” என்றேன். அவளது சேமிப்பிலிருந்து மூன்று பாடல்கள், மூன்றாவது பாடல் முடிவதற்குள் பிந்து வீட்டை அடைந்துவிட்டோம். இறங்கிக்கொண்டு, “அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க…” என்றபோது சத்தமில்லாமல், ‘எந்த நாள் உந்தன் நாளோ?’ என்று முணுமுணுத்தபடி தலையசைத்தாள்.

ஹாலில் பிந்துவின் கணவர் மட்டும் அமர்ந்திருந்தார். சங்கடமான புன்னகையுடன், “வாங்க, ரெஸ்ட் ரூம்ல இருக்கா…” என்றார். அறைக்குள் போனேன், ஒரு நிமிடத்தில் குளியலறையிலிருந்து வெளியே வந்த பிந்து மிகவும் அயர்ந்து போயிருந்தாள். “போலாம்,” என்று மட்டும் சொன்னாள். ஹாலுக்கு வந்து, அவள் கணவரிடம் தலையசைத்துவிட்டு, பதிலுக்கு ஒரு தலையசைப்பைப் பெற்றுக்கொண்டு, வெளியேறினோம். ஆட்டோவில் ஏறுவதற்குள்ளாகவே வீட்டு டிவி உயிர் பெற்று, எதோ செய்திகள் உடைவது கேட்டது. நான் பிந்துவைப் பார்த்தேன். பல் தெரியும்படி சிரித்துக்கொண்டிருந்தாள்.

எங்களுக்குப் பிடித்த ஷோபா டாக்டர்தான் புறநோயாளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். உடனடியாக டி அன்ட் சி, அனேகமாக எண்டோமெட்ரியல் பாலிப் இருக்கிறது, அதனை பயாப்ஸிக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லிவிட்டார். “வினீத் வரட்டும், அனஸ்தீஷியா கொடுக்கற வரைக்கும் நீயும் இரு. அப்பறம் வீட்டுக்குப் போ. நாளைக்கு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. போனப்றம் ஃபோன் பண்றேன். இன்னிக்கு அத்தையை பாக்க வேற போயிருப்ப… அலைச்சல்தான்… ஆனா, ஐ டுக் திஸ் லிபர்ட்டி யா… எனக்கு வேற வழி இல்ல…” பிந்து இன்னதுதான் சிக்கல் என்று தெரிந்ததும், இன்னும் தெளிவடைந்து, தன் இயல்பான அழுத்தத்துடன் சொன்னாள்.

மறுநாள் அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு, பிந்து சொன்னதை மீறி கேஎஸ் மருத்துவமனைக்குச் சென்றேன். வரவேற்பில் பிருந்தா என்று பெயர் சொல்லி, அறை எண் விசாரித்தபோது துணுக்கென்றது. வண்டு விழித்துக்கொண்டது. வேறு யாரையும் கேட்கப் பிடிக்காமல், அம்புக்குறிகளையும் அறை எண்களையுமே பார்த்தபடி போனேன். பிந்து கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க, கட்டிலின் மேல் ஃபைல்களுடன் ஒரு பையும், இன்னொரு சிறு பையும் இருந்தன. என்னைப் பார்த்ததில் அவளுக்கு வியப்பொன்றும் இல்லை. ஆனால் இப்படி அலையாதே என்று திட்டாமல் கண்கள் மின்ன என்னைப் பார்த்துப் புன்னகைத்தது எனக்கு வியப்பாக இருந்தது.

“வினீத்துக்கு முன்னாடி நீ வந்துடுவேன்னு இப்பதான் நெனச்சேன்…” 

“இதெல்லாம் பெருமையா? கடமை…” 

“யாருக்கு?”

என்னிடம் பதிலில்லை.

“சரி, சரி, முழிக்காத… பாலிப் பயாப்ஸிக்கு அனுப்பிட்டாங்க… ரிசல்ட் வர ஏழிலிருந்து பத்து நாள் ஆகுமாம். வினீத் வந்து இன்ஷுரன்ஸ் க்ளியர் பண்ணதும் டிஸ்சார்ஜுன்னு சொன்னாங்க…”

“சரி… ரிசல்ட் வாங்க நானும் வரேன்…”

“ம்… சரி, அவரு வரதுக்குள்ள டக்குனு சொல்லு… இந்த சண்டே, ரெண்டு பேருமா போய் உங்க அத்தையைப் பாப்போமா?”

பிருந்தாவை நான் மறுத்துப் பேசிய மிக அரிய தருணம். அவளைத் தவிர்த்துவிட்டு நான் மட்டும்தான் அந்த ஞாயிறு அத்தையைப் பார்க்கப் போனேன். அத்தைக்கு மூச்சிரைப்பு அதிகரித்திருந்தது. கவனமாக, பிருந்தாவைப் பற்றிய பேச்சைத் தவிர்த்தேன். கீழே வந்து சிந்து சிஸ்டரிடம், “அத்தைக்கு இன்னிக்கு ரொம்ப மூச்சு வாங்குது…” என்றபோது, “ம்ம்… இந்த முறை ட்ரீட்மெண்ட் அவங்களால தாங்க முடியல… தளர்ந்திருக்காங்க…” என்றார். நான் கையெழுத்தைப் போட்டுவிட்டு, ‘ஆனால்…’ என்று தொடங்கி அவர் எதாவது நற்செய்தியைச் சொல்வார் என்று காத்திருந்தேன். ஆனால் அவர் வழக்கமான புன்னகையுடன் தலையசைத்தார். 

***

பிந்துவின் பரிசோதனை முடிவுகளைப் பரபரவென்று புரட்டியபோது எங்கள் கண்ணில் பட்டவரை எதுவும் பயப்படும்படி இல்லை. டாக்டர் ஷோபா சொன்ன, “நத்திங் டு வொர்ரி…” அவ்வளவு ஆறுதலாக இருந்தது. அவர் பிந்துவிடம் மருத்துவ ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஒலிநீக்கி வைத்திருந்த என் அலைபேசி அதிர்ந்தது. சௌம்யா. “எக்ஸ்கியூஸ் மீ,” என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியில் வந்து அழைப்பை எடுத்தேன். எந்தச் சம்பிரதாயச் சொற்களுமின்றி, “இந்த வாரம் பிருந்தாம்மாவைப் பாக்க போறப்ப பச்சைக்கல் நெக்லஸ் எங்கே வச்சிருக்காங்கன்னு கேட்டுட்டு வாப்பா… சுபாவுக்குக் குடுத்துட்டாங்களான்னு தெரியல…” என்றபோது வண்டு காதுகளைத் துளைத்தது. மண்டை இங்கிலீஷில் பதில் சொல் என்றது. 

அருகில் வந்த பிருந்தா நான் சொன்ன ஒற்றைச் சொல்லைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்து, பிறகு என் தோளைத் தட்டிப் புன்னகைத்தாள். வரிசையாக இணைந்திருந்த நாற்காலிகளில் ஒன்றில் சரிந்து உட்கார்ந்தேன். பிருந்தா பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள். மீண்டும் சௌம்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. நான் துண்டித்தேன். ஒலியைக் கூட்டத் தொடங்கியபோது சிந்து சிஸ்டரிடமிருந்து அழைப்பு வந்தது.

***

தென்றல் சிவக்குமார்  – சென்னையில் வசித்து வருகிறார். ‘எனில்’ என்ற கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்தது. தாமரைச் செல்வி என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். மின்னஞ்சல் முகவரி : thendralsivakumar@gmail.com

ஆரவாரமற்ற அமைதியின் தேடல்

0

மாயச்சேலை நூல் விமர்சனம்

ம.சோனியா

மிழ்ச்சிறுகதைக்கு கனமான வரலாறு ஒன்று உருவாகிவிட்டது. பிற உலக மொழிகளில் எவற்றுடனும் ஒப்பிடத்தகுந்த உயர்ந்த இடத்தில் தமிழ்ச்சிறுகதை இன்று கோலோச்சிக் கொண்டிருக்கிறது. நவீன இலக்கியத்தின் முக்கியமான இச்சிறுகதை வடிவமானது மக்களால் நேரடியாகப் படிப்பதற்காக எழுதப்படுகின்றன. அவை மக்களின் வாழ்வியலை நேரடியாகப் பேசுகின்றன. அந்தவகையில் சமகால மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளக் கதைத்தொகுப்பு தான் ‘மாயச்சேலை’. தொன்மம், மாயயதார்த்தம், புராணம் உள்ளிட்ட பல பரிமாணங்களில் கதையைப் புனைவாசிரியர் அணுகியுள்ளார். எழுத்தாளர் சைலபதி நவீன இலக்கியப் பரப்பில் அறியப்படும் முக்கியமான சமகாலப் படைப்பாளர். இவர் தொன்மவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் தாக்கத்தை இத்தொகுப்பில் அமையப்பெற்றுள்ளப் பெரும்பாலான கதைகளின் வழியாகவும் அறியமுடிகிறது.

‘மாயச்சேலை’ இச்சிறுகதை தொகுப்பானது மொத்தம் பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கியிருக்கிறது. துறவுக்கும் இயல்பான மனித வாழ்வியலுக்கும் உள்ள முரண்பாடுகளை நேர்த்தியாக மொழிப்படுத்தியிருக்கும் ‘பித்து’ இத்தொகுப்பின் முக்கியமான கதையாக இருக்கிறது. இது தவிர ‘பெண்ணுலகம்’, ‘அவனும் இன்னொரு அவனும்’, ‘அடுத்த ரயில்’, ‘ஆசையோடு சேர்த்த தயிர்’ முதலியனவும் இத்தொகுப்பில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கதைகளாக அமைந்திருக்கின்றன.

மகாபாரதத்தின் ஒரு பகுதியான ‘துகிலுரித்தல்’ நிகழ்வை மையமிட்டு நகரும் கதை ‘மாயச்சேலை’. இக்கதையின் ஆரம்பமானது கதை கேட்பதில் ஆர்வமுள்ள பேத்திக்குப் பாட்டி கதைக்கூறுதல் என்கின்ற உத்தி முறையில் அமைந்திருக்கிறது.இருப்பினும் கதையானது முடிவில் பேத்திக்கு மனதில் எழுகின்ற எண்ணங்களால் ஓர் உச்சத்தை அடைந்திருக்கிறது. இயல்பாக பெண்களுக்கு இருக்கக்கூடிய புடவையின் மீதான மோகத்தைப் பாரதக் கதையினைக் கொண்டு எடுத்துக்காட்டப்பட்டுள்ள விதத்தை அழகாக மொழிப்படுத்தியிருக்கிறார் புனைவாசிரியர். 

‘பித்து’ என்னும் கதையானது சம்முகம் செட்டியாரின் துறவுநிலைப்பற்றும், இறுதியில் அது பைத்தியக்காரத்தனம் என்று மாறுகின்ற மனநிலையையும் எடுத்துக்காட்டுகிறது. உறவிடமிருந்து விலகி அம்மாவின் இறப்பைக் கூட பொருட்படுத்தாது, சுற்றி அலைந்து திரியும் பைத்தியக்காரச்சாமி மூலம் துறவு வாழ்வானது நேர்த்தியாகத் தொழிற்பட்டிருக்கிறது. வேட்டிக்கும் உறவுக்குமான ஊசலாட்டங்களை இடையிடையே சம்முகம் செட்டியாரின் நினைவலைக்குள் வந்து போகும் தெய்வானை ஆச்சியின் வழியாக புனைவு நிறுவ முயன்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக மனித வாழ்வியலையும் துறவு வாழ்வியலையும் இரு துருவங்களாக நிறுத்தி ஆராயப்பட்டுள்ள கதையாக இதனைப் பார்க்க முடிகிறது.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் மையம் கொண்டிருக்கும் முக்கியமான விடயம் சில கதைகள் பெண்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. உதாரணமாக ‘பெண்ணுலகம்’ என்னும் கதையானது முழுக்க முழுக்க பெண்களின் கூட்டுக் குரலாக ஒலிப்பதைக் காணமுடிகிறது. சந்தேகப்படுகின்ற ஆண்களிடம் சிக்கித் தவிக்கும் பெண்களின் மாறாட்டங்களை புடம்போட்டு காட்டுவதாய் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பெண்களிடமும் உள்ளே கனன்றுக் கொண்டிருக்கும் கதைகளை,“அவர்கள் ஒவ்வொருவரிடமும் இப்படி ஒரு கதை இருக்கத்தான் இருந்தது. அத்தியாயம் முன்னோ பின்னோ, குழம்பிய அதே கதை காயம்பட்ட கதை” என்ற வரிகளின் மூலம் அவர்களின் வலியுணர்வுகளைப் புரிந்துகொள்ளும் படி கடத்தியிருக்கிறார். இதனூடே வைத்து வாசிக்கப்பட வேண்டிய கதைதான் ‘அடுத்த ரயில்’. அவன், அவள் என்ற பெயர்ச்சுட்டா மாந்தர்களின் வழியே கதை நகர்ந்திருக்கிறது. இக்கதையில் வரும் அவளைத்தான் நொடிக்கு நொடி மாறுகின்ற ஆண்மைக் குணத்தைச் சற்று உரசிப் பார்த்துவிட்டு இயல்பாக கடந்துச் செல்லும் பாத்திரமாக பிரதியாசிரியர் படைத்திருக்கிறார். இக்கதையில் பெயர்ச்சுட்டப்பட்டவளாய் காட்டப்பட்டிருக்கும் பூரணி பாத்திரம் ஏமாற்றப்பட்டவள் அல்ல மாறாகக் கணவனால் ஏமாறுபவளாக காட்டப்படுகிறாள். காத்திருப்பின் ஏமாற்றங்களையும், தனிமைத் தரும் வலிகளையும், ஓர் ஆரவாரமற்ற அமைதியின் தேடலையும் நுணுக்கமாக இக்கதையில் புனைவாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘அலசல்’ கதையையும் கவனிக்க வேண்டும். இக்கதை சந்தர்ப்பச் சூழ்நிலையால் மனைவியிடம் மறைத்து வைத்திருந்த கணக்கு வழக்குகளைக் கூறி மாட்டிக்கொள்ளும் நண்பனின் நிலை மற்றும் மரணபீதியால் உழலும் நண்பனின் நிலை என இவ்விரு நண்பர்களின் எதிரெதிரானச் சூழலைப் பகடித்தன்மையுடன் காட்டியிருக்கிறார். இக்கதையில் வரும் பெண்ணும் தன் கணவனால் ஏதோ ஒரு வகையில் ஏமாறுபளாகவே காட்டப்படுகிறாள். இருப்பினும் இக்கதைகளின் வாயிலாக நின்று பிரதியாசிரியர் ஆண்களின் மாயத்திரையை விலக்கிக்காட்ட முயன்றிருக்கிறார்.

மாய யதார்த்தம் என்பது புனைவிலக்கியத்தில் காணப்படும் ஒரு முக்கியமான கதை சொல்லும் உத்தியாகும். இதில் யதார்த்தமான வாழ்க்கைச் சூழல்களும், மாயமான அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. யதார்த்தமான ஒரு கதைக்குள், யதார்த்தம் கடந்த விந்தையான சங்கதிகள் வருவது மாயயதார்த்த கதைகளின் பொருத்தப்பாடு ஆகும். இந்த வகைமைக்குள் வைத்து புனையப்பட்டுள்ள கதைதான் ‘வேதாளம்’. காதல் விரக்தியினால் தற்கொலைக்குத் துணியும் கதிர் என்னும் இளைஞனுக்கு வேதாளம் தனது காதல் அனுபவத்தைக் கூறி தெளிவுப்படுத்தும் நிலையை எடுத்துக்காட்டுகிறது. சாதிப்பிரச்சினையால் காதல் கூடாமையின் காலங்காலமான இருப்பையே இக்கதையும் பேசியிருக்கிறது. தொடக்கத்தில் கதையானது வாசகருக்கு அலுப்பூட்டும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திப்பினும் கூட முடிவானது பெரும் தாக்கத்தை வாசகரிடையே ஏற்படுத்தி நகன்றிருக்கிறது. இதனடிப்படையிலே காதல் சேராமையை மையப்படுத்தியிருக்கும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு சிறுகதையான ‘புயல் பற்றியச் செய்திகள்’ என்ற கதையையும் நோக்க வேண்டும். இவ்விரண்டு கதைகளுக்கும் சாதிப்பிரிவால் காதல் கூடாமல் போவது பிராதானமான பொருளாக இருந்தாலும் கூட, கதை நகர்வானது பெரிய மாற்றத்துடனே கடத்தப்பட்டிருக்கிறது. இக்கதையில் வரும் அருள், செல்வி ஆகியோரின் உண்மையான காதல் உணர்வுகளும் இயல்பான காதலுக்குரிய அம்சங்களுடன் பொருந்திப்போயிருக்கின்றன. தொடக்கத்தில் முடிவடையும் காதல் கதையானது, இறுதியில் ஒரு கனத்த தாக்கத்தை வாசகரிடையே ஏற்படுத்திச் சென்றிருப்பதன் மூலம் ஓர் அருமையான இடத்தை அடைந்திருக்கிறது. 

  பொதுவாக ஒரு சம்பவத்தை விட அச்சம்பவத்தில் மனித மனம் படுகின்ற அல்லற்பாடுகளையும் அல்லது அதனால் ஏற்படுகின்ற தாக்கங்களையும் காலந்தோறும் நம் மனம் மறவாது அசைப்போட்டுக் கொண்டே இருக்கும். ஏதோ ஒரு நிகழ்வின் ஊடாக அச்சம்பவம் மனதைத் துருத்திக் கொண்டு வெளிவரும். அந்தவகையில் கடந்த காலத்தில் நடந்த அதே துயர சம்பவம் பிறிதொருவனுக்கு நடக்கின்ற நிலையில் அச்சூழலை நினைவின் அலையிலிருந்து மீட்டெடுக்கும் கதையாக ‘அவனும் இன்னொரு அவனும்’ கதை புனையப்பட்டிருக்கிறது. இக்கதையில் காட்டப்பட்டிருக்கும் இருவரின் மனவலிகள் வேறு வேறாக இருப்பினும் கதை நடந்தேறும் சூழலின் ஓர்மைத் தன்மையை கச்சிதமாக வடித்துக்காட்டியிருக்கிறார் புனைவாசிரியர்.

பழமை வாய்ந்த நிகழ்வுகளையும், தெய்வீகக் கதைகளையும், சமயம் சார்ந்த செய்திகளையும் கூறும் மரபுக்கதைகள் புராணம் என்றாகின்றன. ‘ஆசையோடு சேர்த்த தயிர் ’ என்ற கதையானது புராண அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது. ஈசனின் திருவிளையாடலாக காட்டப்பட்டுள்ள நிகழ்வானது ஓர் உயிர்ப்புடன் வெளிப்பட்டிருக்கிறது. உயிர் சுமக்க ஆசைகொண்டு தயிர் சுமந்து வாழும் உமையம்மையாக உருக்கொண்டிருக்கும் குமாராயி கதாபாத்திரம் வழியாக கதையானது நேர்த்தியாக நகர்கிறது. பூமியில் தனியளாக வாழும் குமாராயிக்கு சமூக்கத்தினர் கொடுக்கும் அல்லற்பாடுகளும், குழந்தையில்லாமல் தவிக்கும் சங்கரபட்டரின் குடும்பம் மட்டும் அளிக்கும் ஆறுதல்களும் இக்கதையில் கவனம் பெறுகின்ற முக்கிய இடங்களாக அமைந்திருக்கின்றன. இறுதியில் தெய்வீக நம்பிக்கையூட்டும் மனநிலையுடன் கதையினை முடித்திருப்பதன் மூலம் பிரதியாசிரியரின் ஆன்மீக நம்பிக்கையினையும் யூகிக்க முடிகிறது. 

‘மாயச்சேலை’ என்ற தொகுப்பானது மனிதர்களின் வாழ்வியலை சிற்சில கதாபாத்திரங்களின் துணைகொண்டு நேர்த்தியான முறையில் பதிவு செய்திருக்கிறது. புரிந்துகொள்ளும் படியான சிக்கனமான முறையில் எளிமையான சொற்சேர்க்கைகளுடன் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதைகளையும் புனைவாசியர் அணுகியிருக்கிறார். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மைக் கதைகள் முடிவின் மூலமே ஒரு பெரும் கவன ஈர்ப்பை பெறுவனவாகின்றன. இத்தொகுப்பை வெறும் புனைவு என்று கடந்துச் செல்ல முடியாத அளவிற்கு சில கதைகள் ஆழமானத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதும் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.எழுத்தாளர் சைலபதி சமகாலச் சூழ்நிலையை கவனத்தில் கொண்டே இப்பிரதியை கையாண்டுள்ளமையை உணரமுடிகிறது. அந்த வகையில் நிகழ்கால மனித வாழ்வியலைப் பிரதிபலித்து நிற்கும் ‘மாயச்சேலை’ சமூகத்தினரால் வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பாக இருக்கக்கூடும்.

***

ம.சோனியா: சென்னை மாநிலக்கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக பயின்று வருகிறார்.‘சு.வேணுகோபால் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்’ என்னும் பொருண்மையின் கீழ் ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இந்து – தமிழ் திசை, காலச்சுவடு, உங்கள் நூலகம் முதலிய இதழ்களில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியும் வெளிவந்திருக்கின்றன. மின்னஞ்சல்: msoniya118@gmail.com

மனோவியல்

0

கேத்ரீன் மான்ஸ்ஃபீல்டு

தமிழில்: பாலா இளம்பிறை

வள் கதவைத் திறந்த அந்த தருணத்தில் அங்கே அவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். எப்போதுமில்லாதது போல் அன்றைக்கு மிகுந்த கனிவை அவன் முன்னே வெளிப்படுத்தினாள். அவளைப் பின் தொடர்ந்து ஸ்டுடியோவுக்குள் வரும் அவனும் அவ்வாறே நடந்து கொண்டான். அங்கே வந்ததற்காக மிகுந்த மகிழ்ச்சியடைந்தவனாகவே தெரிந்தான். 

“பிஸி இல்லையே?”

“இல்லை. சும்மா ஒரு டீ சாப்பிடலாம்னு.” 

“யாருக்காகவும் காத்திருக்கலையா?”

“யாருக்காகவும் இல்ல.” 

“வாவ். நல்லது.” 

அவன் தன்னுடைய கோட்டையும் தொப்பியையும் வெகு சிரத்தையாக ஓரிடத்தில் வைத்தது நீடித்தது போக, எதற்கும் நேரம் ஒதுக்கிச் செலவழிக்க ஏதுவாகவே இருப்பவன் போலத் தோன்றினான், அல்லது அங்கிருப்பவர்களிடமிருந்து என்றென்றைக்குமாக விடைபெற்றுச் சென்று விடுபவனாகவும். நேரே அங்கிருக்கும் கணப்பு அடுப்புக்கு அருகே வந்து சுடர் விட்டு எரிந்து நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கும் நெருப்பின் தழல் மீதாக கைகளை நீட்டினான்.ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த நெருப்புக்கு நடுவே அவர்களிருவரும் சிறிது நேரம் அமைதியாயிருந்தனர்.ஆயினும் இன்னமும் அவர்களுடைய உதடுகளின் மீது சுவையேற்றிக் கொண்டிருக்கும், ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டிய வாழ்த்துக்களின் சொற்கோர்வையின்அதிர்வை இரசித்துக் கொண்டிருந்தனர்.இருவரது உள்ளுக்குள்ளும் அந்த முணுமுணுப்பு தொடர்ந்தது : 

“எதற்காக நாம் பேச வேண்டும். இது போதாதா?”

“ஹாங்.இது போதும்கறதுக்கும் மேல.இந்த ஒரு நொடியை நான் இதுவரைக்குமே அனுபவிச்சதில்ல”

“எவ்ளோ நல்லாருக்கு உன் கூட இது மாதிரி இருக்குறதுக்கு..” 

“நல்லாருக்கா..”

“ஆமா.போதும்கறதுக்கும் மேல..”

ஆனால் அவன் உடனடியாய் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தாள்.

“சிகரெட் ஏதும் இருக்கா? கெட்டில்’ஐ தயார் பண்ணிட்டு வர்றேன். டீ குடிக்கணுமா உனக்கு?”

“இல்லை. குடிக்கணும்னு இல்ல.” 

“நல்லது. எனக்கு வேணும்.” 

“ஓ. உனக்கு.” அவன் அங்கிருந்த ஆர்மீனியன் தரைவிரிப்பை இழுத்து விட்டு அங்கே அழுத்தமான அசைவு கொடுக்காத சுருள் சுருளான சாம்மியர் விரிப்பை அதற்கும் கீழாக சரித்துவிட்டான். “நீ ஒரு சுத்தமான குட்டி சீனப் பெண்.”

“ஆமாம்,நான்,” சிரித்தாள். “நான் தேநீரை எப்போதும் இரசிக்கிறேன். வலிமையான மனிதர்கள் வைன்’ஐ விரும்புவதைப் போல்.” 

அவள் ஆரஞ்சு நிற அடிப்பாகம் கொண்ட அங்கிருந்த விளக்கை ஏற்றினாள். திரைச்சீலையை இழுத்து விட்டுவிட்டு டீ மேசையை முன்னுக்கு இழுத்தாள். டீ கெட்டிலில் இரண்டு பாடும் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. கணப்பு அடுப்பின் நெருப்பு படபடத்தது. அவன் உட்கார்ந்து கொண்டு கைகளால் கால் முட்டிகளை நீவிக் கொண்டிருந்தான். அவளோடு அமர்ந்து தேநீர் அருந்தும் நிகழ்வானது ஒரு மகிழ்வான தருணம். மேலும், சுவையான சத்தான உணவுகளை எப்போதும் கைவசம் வைத்திருப்பவள் அவள். கவர்ந்திழுக்கும் அழகான சாண்ட்விட்ச்கள். இனிப்பும், சுவையான பாதாம் குச்சிகளும். அதோடு கூடவே சுவை மிகுந்த அடர் நிறத்து கேக் -ஆனாலும், அங்கிருக்கும் மது கொஞ்சம் இடறலாக இருக்கலாம். அவன் நிறைவு செய்ய விரும்பினான். மேசையை இலேசாகச் தள்ளிவிட்டு வெளிச்சத்திற்கு நேரே அவர்களது இரண்டு நாற்காலிகளும் இழுத்து வைக்கப்பட்டன. அவன், உடனடியாய் அங்கிருந்த புகைக்கும் குழாயை எடுத்து புகையிலையை நிரப்பினான். அடிக் கிண்ணத்தில் புகையிலையை அழுந்த நிரப்பிக்கொண்டே சொன்னான் :

“போன தடவை நாம பார்த்துகிட்டப்போ. நீ கடைசியா சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன். எனக்கும் அது போல தோணுச்சு.”

ஆம். அதற்காகத் தான் அவன் காத்திருந்தான் – அவளும் தான். ஆம், ஆவி பறக்கும் தேநீர்க் குடுவையை அவள் உலாத்துவது போல் ஒரு சுற்று சுற்றி கலக்கிக்கொண்டு திரும்பியபோதுதான் பார்த்தாள், அவனுக்குப் பின்னால் சாய்ந்து நின்று கொண்டிருக்கும் அந்த மற்ற இருவரையும். தனது இருக்கையில் ஒய்யாரமாய் சாய்ந்து அமர்ந்து கொண்டிருக்கும் அவன் அவளது நிம்மதியைப் பறித்துக் கொண்டிருந்தான். பூண்டு, வெண்ணெய், பார்லி சாஸ் கொண்டு தயார் செய்யப்பட்ட நத்தைக் கறி பதார்த்ததை – ‘எஸ்கார்கோ’வை அவன் முன்னால் மேசையில் நேர்த்தியாய் சுருளாய் வைத்துவிட்டு நீல நிற கைப்பிடிகள் கொண்ட நாற்காலியில் தானும் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அந்தச் சித்திரமானது மிகத் தெளிவாய்,மிகத் துல்லியமாய் தேநீர்க் கெட்டிலின் நீல நிற மூடியில் வரையப்பட்டிருக்க வேண்டும். இன்னமும் அவளால் அவசரப்படாமல் இருக்க முடியவில்லை. கிட்டத்தட்ட அவள் கத்திச் சொல்லியிருக்க வேண்டும் – “கொஞ்சம் டைம் வேணும்.”அவள் தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளவேணும் நேரம் வேண்டும். தொடர்ந்த இந்தப் பரிச்சயமான நேர்த்தியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நடைமுறை செயல்களில் இருந்தெல்லாம் தன்னை விடுவித்துக்கொள்ள காலம் வேண்டுமென்று விரும்பினாள். வயதுக்கேற்ற அழகான எல்லா விசயங்களோடும் தன்னிச்சையாய் அவளைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் இந்த அனைத்தும் அவளது வாழ்வின் ஒரு பகுதியாகி – குடும்பப் பாரம்பரியம் போல் – குடும்பத்தினர் அனைவரும் அறிந்துகொண்ட பிறகும் – தன்னுடைய தீவிரமான உணர்வுகளை மிக நீண்ட உரிமை கோரல்களாக அவள் இதுவரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள். ஆனால், அவர்கள் இப்போது செல்ல வேண்டும். கட்டாயமாய் ஏதாவது செய்தாக வேண்டும். அவர்களிருவரும் அடித்துச் செல்லப்பட வேண்டும். தூக்கி எறியப்பட வேண்டும். துரத்தப்பட வேண்டும். கட்டளைக்கு இணங்கி நிழல் படிந்த மாடிப்படிகளைப் பிடித்துக்கொண்டு எந்தவொரு முணுமுணுப்புமில்லாமல் உடைமைகளை எடுத்துக்கொண்டு உறங்கச் செல்லும் குழந்தைகளைப் போல் அவர்கள் செல்ல வேண்டும்!

இந்தச் சிறப்பான வியப்பூட்டும் குண நலன்களோடு கூடிய அவர்களது நட்பானது அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் ஒப்புவிக்கத் தலைப்பட்டதில் இருந்தது. மிக நீண்ட புல்வெளியின் நடுவே இருக்கும் இரண்டு திறந்த நகரங்களைப் போல் அவர்களது இதயமானது ஒருவர் மற்றவருக்காய் விசாலமாய்த் திறந்து கிடந்தது. தன் விருப்பத்தில் வெற்றியடைந்த ஒருவன் அவளுக்குள் நுழைவது போன்ற மாயங்கள் ஏதுமில்லை. கண்களால் கவர்ந்திழுக்கும் தந்திரங்கள் ஏதுமில்லை. காமத்தின் சுழல்கள் கதிர்களாய் அங்கேதும் தோன்றியிருக்கவில்லை. கொட்டிக்கிடக்கும் பூவிதழ்கள் மீது நடந்து சென்று அவனுக்குள் தஞ்சம் புகும் நிகழ்வுகள் ஏதும் அவள் பொருட்டு நடக்கவில்லை. இல்லை. அவர்கள் ஒருவர் மீதொருவர் ஆர்வம் மிக்கவர்களாகவே இருந்தனர். சிரத்தையானதொரு பயணம் மேற்கொள்பவர்களாய் இருந்தனர். அறிந்துகொள்ள வேண்டியது எது என்பதையும், புரிதல்கள் பொருட்டும் மறைந்திருக்கும் எண்ணற்றவற்றைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் மிக்கவர்களாகவும் இருந்தனர். இந்த முழுமுதல் அற்புதமான வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதென்பது – அவனுக்கு அவள் மீது முற்றிலும் உண்மையாக இருக்க வேண்டிய நம்பிக்கையையும் – அவளுக்கு அவனுடனான உறவின் மீதான உறுதியான அக்கறையையும் பிடிப்பையும் உறுதி செய்து கொள்வதுமாகும்.


இதில் முக்கியமான விசயம் என்னவெனில் அவர்களிருவரும் தங்களது சாகசப் பயணத்தை எந்தவித இடையூறுகள் இல்லாமலும் முட்டாள்தனமான உணர்வுச் சிக்கல்கள் ஏதுமில்லாமலும் தொடர்வதற்கு ஏதுவான வயதில் அவர்கள் இருந்தனர். உணர்ச்சி மேலீடு எதையும் சிதைத்து விட்டிருக்கும். அதையெல்லாம் தாண்டிய நிலையில் அவர்களிருவரும் புரிதலோடிருந்தனர். மேலும், அந்த வகையான உணர்ச்சி மேலீடுகள் ஏதும் அவர்களிடத்தில் இப்போது இல்லை. அதையெல்லாம் கடந்து விட்டிருந்தனர். அவன் தன்னுடைய முப்பத்தொன்றாவது வயதில் இருந்தான். அவள் முப்பதில். அவர்களிருவருக்குமான சொந்த அனுபவங்களும் தனிப்பட்டவைகளாய் இருந்தன. அவை மேலோங்கியதாய் இருவருக்கும் தனித்தனியாய் வேறுபாடுகள் நிறைந்ததாய் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இது அறுவடைக்கான காலம் – ஆம். அறுவடை. உண்மையில் அவனுடைய நாவல்கள் மிகப் பெரியவை இல்லையா? அவளுடைய நாடகங்களும் அப்படியே.  உண்மையான ஆங்கில நகைச்சுவையின் நேர்த்தியான உணர்வானது அவளைத் தவிர வேறு எவருக்கும் இருந்திருக்குமா? பொறுமையும் அக்கறையுமாக அந்த கேக்’கை அவள் துண்டுகளாக்கினாள். அவனும் ஒரு துண்டுக்காக அவளருகே நகர்ந்தான்.

”எவ்ளோ நல்ல விசயம் இதுன்னு, நீ உணர்றியா”, மன்றாடுகிற தொனியில் கேட்டாள்.“நல்ல கற்பனைத் திறத்தோடு இதைச் சாப்பிடு. முடிந்தால் கண்களைச் சுழற்று – உயிர் மூச்சில் அதன் சுவையை உணர்ந்துகொள். இந்த சாண்ட்விட்ச் ஒண்ணும் ஹேட்டர்ஸ்’ பேக்’ல வெச்சு பத்திரமா எடுத்துட்டு வந்ததில்ல. இந்த கேக் எப்படின்னா, இறை நூலோட பழைய ஏற்பாட்டில குறிக்கப்பட்டிருக்கிற ஒரு வகையான கேக். கடவுள் சொன்னார் : அப்பமானது அப்படியே இருக்கட்டும். அது ஏற்கனவே அங்கேயே இருந்தது தான். அது நன்மை பயக்கக் கூடியதாய் இருந்ததை அந்த இறைவனே கண்டுகொண்டார்.”

“நீ எனக்கெதுவும் வேண்டுகோள் வைக்க வேண்டியதில்ல”, என்றான். “உண்மையிலேயே உனக்கு அது தேவையில்லை. எனக்கொரு விசித்திரமான உணர்வு எப்போதும் உண்டு. அதை நான் கவனிச்சிட்டே இருக்கேன். நான் இங்கே என்ன சாப்பிடறேனோ, அதுபோல வேறெங்கேயும் எனக்குக் கிடைச்சதில்ல. நான் நினைக்கிறேன், ரொம்ப நாளா தனிமையிலேயே இருக்கிறது – அப்புறம் ஏதாவது படிச்சிட்டு இருக்கும்போதே சாப்பிடுறது -என்னோட பழக்கம்னா சாப்பாட்டை,‘ஆமா அது சாப்பாடு’ அப்படின்னு நினைக்கிறது –ஏதோ அங்கே சாப்பிடுறதுக்கு இருக்கு, சில நேரங்கள்ல – ‘சாப்பிட்டாகணும்’ – ஆமா, அங்கே எதுவும் இல்லாட்டியும்.”, அவன் சிரித்தான். “உனக்கு அது அதிர்ச்சியளிக்கக் கூடியதா இருக்கு. இல்லையா?”

“உள்ளுக்குள்ள”, என்றாள்.

“ஆனா இங்கே பாரேன்”, தன்னுடைய கோப்பையைத் தள்ளி வைத்துவிட்டு வேகமாகப் பேசினான். “பொதுப்படையான வெளியுலக வாழ்க்கை, வெளியூரில் தங்கியிருந்த அனுபவமெல்லாம் எனக்கு எதுவும் இல்ல. பொருட்களின் பெயர்கள் எதுவும் கொஞ்சம் கூடத் தெரிவதில்லை. மரங்கள் மற்றவைகள். நான் ஒருபோதும் இடங்களையோ தளவாடங்களையோ இல்லைன்னா மக்கள் எப்படி இருப்பாங்களோன்னோ யோசிச்சதே இல்லை. ஒரு அறை என்பது எனக்கு மற்றொரு அறையைப் போலவே. அது போலத் தான் நான் உட்கார்றதுக்கு ஒரு இடம் – படிக்க – இல்லைன்னா பேச – ஒண்ணு தவிர்த்து,” கொஞ்சம் நிறுத்தினான். முற்றிலும் புதிதான அப்பாவியாய் சிரித்துக் கொண்டே சொன்னான், “இந்த ஸ்டுடியோவைத் தவிர்த்து.” சுற்றிலும் பார்த்துவிட்டு அவளை திரும்பிப் பார்த்தான். அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்துவது போல் நகைத்தான். தான் வந்து சேர வேண்டிய இடம் ஏற்கனவே வந்துவிட்டதோ என்கிற பரிதவிப்பும் பரபரப்புமாய் கண் விழித்துப் பார்க்கும் ஒரு இரயில் பயணி போலிருந்தான் பார்ப்பதற்கு.

“இங்கே இன்னொரு விசித்திர விசயம். நான் கண்ணை மூடினாலும், இங்கே இந்த இடத்துல இருக்கிற ஒவ்வொண்ணையும் அக்கு வேறா ஆணி வேறா என்னால பார்க்க முடியும். இப்போ நான் ஒண்ணு நினைச்சுப் பார்க்கிறேன். உணர்வுபூர்வமா நான் இதுக்கு முன்னால இதை நினைச்சுப் பார்த்ததில்ல. எப்பவாவது நான் இங்கே இல்லாம இருந்தாலும், மனசுக்குள்ளேயே நான் இங்கே ஒரு சுற்று வந்துட்டுப் போயிடுவேன் – நீ உட்கார்ந்திருக்கிற சிவப்பு நிற நாற்காலியை சுத்தி வருவேன் – அந்த கருப்பு மேசையில இருக்கிற கிண்ணத்துல என்ன பழங்கள் இருக்குன்னு பார்ப்பேன் – அதை மெதுவா தொடவும் செய்வேன் – எப்படின்னா, தூங்கிட்டிருக்கிற குழந்தையோட தலையை மெதுவா தடவிக் கொடுப்போமே, அப்படி.”

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஊன்றிக் கவனித்தான். மூலையில் பொருத்தப்பட்டிருந்த விளக்கின் மீது அந்தப் பார்வை நிலைத்திருந்தது. தலையை ஒருக்களித்துப் படுத்து உதடுகள் திறந்த நிலையில் இருக்கும் குழந்தையானது தனது கனவில் இனிய ஓசையொன்றைக் கேட்பது போலிருந்தது அது.

“எனக்கு அந்த சின்னக் குழந்தையை ரொம்பப் பிடிச்சிருக்கு”, அவள் முணுமுணுத்தாள். அதன் பிறகு இருவரும் அமைதியானார்கள். 

இருவருக்குமிடையே புதுவிதமானதோர் அமைதி நிலவியது.அவர்களின் முகமன் வரவேற்புகள், வாழ்த்துகளுக்குப் பிறகு வெளிப்பட்ட திருப்திகரமான இடைவெளி அளவுக்குக் கூட குறைந்தபட்சமாக அங்கே எதுவும் இல்லை.

“சரி, நாம இப்போ திரும்பவும் ஒண்ணா சேர்ந்திருக்கோம், அப்புறம் நாம போன தடவை விட்ட இடத்துல இருந்தே ஏன் தொடங்கக் கூடாதுங்கறதுக்கு எந்தக் காரணமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.” அந்த அமைதியானது அங்கே அவர்களைச் சூழ்ந்திருக்கும் வெம்மையிலும் மற்றும் தகதகக்கும் கணப்பு அடுப்பின் வெளிச்சத்திலும், மெல்லிய மங்கலான விளக்கொளியிலும் கூட அடக்கப்படலாம். எத்தனையோ தடவைகள் சுலபமாய் நமக்கு காணக் கிடைக்கின்ற -கரையோரமாய் வந்து உடைந்து போகின்ற சிற்றலைகள் எதையாவது வீசியெறிந்துவிட்டுப் போகுமே அதுபோன்றதொரு வேடிக்கை நிகழ்வாகக் கூட ஒரு சலசலப்பை உண்டாக்கி இருந்திருக்கலாமோ. ஆனால்,காலங்கள் முடிவுறாத உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்தச் சிறுவனின் தலையானது அறிமுகமில்லாத இந்தக் குளத்தில் விழுந்து கிடக்கிறது -அலைகள் நுரைப்பெருக்குடன்வெளியே வழிந்தோடுகின்றன – வெளியே – இன்னும் வெளியே – கடக்கமாட்டாத எல்லைகளுக்கெல்லாம் அப்பால் – மின்னிக் கொண்டிருக்கும் ஆழ்ந்த இருளுக்குள்; 

அதன் பின் இருவருமே அந்த அமைதியைக் குலைத்தனர். அவள் சொன்னாள், “நான் அந்த நெருப்பைத் தணிக்க வேண்டும்.”, அவன் சொன்னான் : “நான் புதிதான ஒன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..”.இருவருமே தங்களது வார்த்தைளில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். இருவருக்குமான விடுதலை. அவள் கணப்பு அடுப்பின் நெருப்பைத் தூண்டினாள், மேசையை பின்னுக்கு இழுத்து வைத்தாள், பிறகு நீல நாற்காலியை முன்னிழுத்து அதில் சுருண்டு படுத்துக் கொண்டாள். அவனும் மெத்தை இருக்கையில் தலையணையை இழுத்துப் போட்டுக்கொண்டு பின்னால் சாய்ந்து படுத்துக் கொண்டான். சீக்கிரம்! சீக்கிரம்! திரும்பவும் அது நடவாமல் அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

“போன தடவை நீ விட்டுட்டுப் போன புத்தகத்தைப் படிச்சேன்.” 

“ஓ. அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

அவர்கள் வெளியே சென்று வந்தனர். வழமை போலவே எல்லாமும் சாதாரணமாகவே. ஆனால், அப்படித்தான் இருந்ததா? ஒரு சிறிய விசயத்திற்கு கூட அவர்கள் தீவிர அவசரம் காட்டியிருந்தார்களா – துரித பதில்களுக்கு பழக்கப்பட்டவர்களா அவர்கள் – ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் தயார் நிலையில் தான் இருக்கிறார்களா ? உண்மையிலேயே வெகு அழகாக நகலெடுக்கப்பட்ட ஒரு சம்பவத்தை விட மேலானதாகத் தான்  அந்த நிகழ்வு இருந்ததா ? அவனது இதயம் துடித்தது; அவளது கன்னங்கள் வெம்மையேறிக் கிடந்தன. மேலும் மடத்தனமான ஒன்று எதுவென்றால், அவர்கள் எங்கே இருந்தார்கள் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அல்லது என்ன நடந்தது என்றும் உணரமுடியவில்லை. அவற்றை மீட்டுருவாக்கி திரும்பிப் பார்க்க அவளிடம் நேரம் இருந்ததில்லை.மேலும், இதுவரை அவளுக்கு நிகழ்ந்தவைகள் போலவே இப்போது மீண்டும் நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் தடுமாறினர் – அலைக்கழிக்கப்பட்டனர் – உடைந்து போயினர் – அமைதியாயினர். மீண்டும் அவர்கள் இருளைப் பற்றிய கட்டுகளற்ற கேள்விகள் எழுப்பும் தங்களது உணர்வுகளை அறிந்தேயிருந்தனர். மீண்டும் அவர்கள் இருவரும் வேட்டைச் சமூகத்தின் இரண்டு பிரதிநிதிகளாய் இருக்கின்றனர் – தங்களது இணக்க வெம்மைக்குள் அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கிறார்கள் -ஆனால்,ஒரு பலத்த சூறைக்காற்றின்அதிர்வுக்கு அப்பால் எழும் ஓர் ஓசையை நடுக்காட்டிலிருந்து கேட்கிற அனுபவம் – அழுகையைக் கேள்வியெழுப்புவது போன்றதாய்.

தலை நிமிர்ந்தாள், “மழை பெய்யுது”, என்று முணுமுணுத்தாள். மேலும் அவளுடைய குரலானது அவன் ஒரு நாள் சொன்னானே, “அந்தச் சின்னஞ் சிறு குழந்தையை நான் இரசிக்கிறேன்”,என்று, அது போன்றதொரு முணுமுணுப்பு. 

அவர்கள் ஏன் அதற்கு இடம் கொடுக்கவில்லை – விளைவுகள் என்னவாயிருந்திருக்கும் – மேலும் என்னதான் நடக்குமென்றும் பார்க்கவில்லை? ஆனால், இல்லை. மாயங்களும் சிக்கல்களுமானதுமான நிலையில் அவர்கள் சிக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியும் – அவர்களின் உன்னதமான நட்பென்பது அபாயத்தில் இருந்தது என்பதைபோதுமான அளவுக்கு உணர்ந்துகொள்ள கற்றுத் தேர்ந்திருந்தனர். அவள் – அவள் மட்டுமே அழிக்கப்பட்டிருப்பாள் – அவர்கள் அல்ல – மேலும் அவர்கள் அதற்கொரு காரணியாகவும் இருந்திருக்க மாட்டார்கள்.

அவன் எழுந்தான். புகைப் பைப்பினை தட்டினான். தலைமுடிக்குள் விரல் விட்டு கோதிக் கொண்டான். “எனக்கு வியப்பா இருக்கு. ரொம்பத் தாமதமா நான் உணர்றது என்னன்னா, இந்த நாவலோட எதிர்காலப் போக்கு உளவியல் சார்ந்த நாவலா இருக்குமா – இல்லைன்னா அப்படி எந்தத் தாக்கமும் இல்லாமப் போயிடுமா. அதாவது –‘உளவியல்’‘உளவியல் சார்ந்தவை’ இப்படியானவற்றோடு இலக்கியத்துக்கு ஏதாவது ஒரு வகையில் தொடர்பிருக்கிறதா என்று எவ்வளவு உறுதியா உன்னால இதைச் சொல்ல முடியும்?”

“மர்மங்கள் நிறைத்து உருவமற்றவைகளை உருவாக்கம் செய்யும் இன்றைய இளைஞர்கள் ரொம்ப சாதாரணமா உளவியல் பகுப்பு வேலைகளைச் செய்யும் முயற்சிகளில் குதித்து விட்டார்கள் என்று நீ உணர்கிறாய் என்பதைத் தான் சொல்கிறாயா?”

“ஆமா. நான் அப்படித்தான் நினைக்கிறேன். இன்னும் நான் என்ன நினைக்கிறேன்னா, இந்தத் தலைமுறை இதைத் தெரிஞ்சிருக்குறதுல ஒரு படி மேல தான் – அதாவது அது ரொம்ப பலவீனமா இருக்கு – அதை குணமாக்குறதுக்கான ஒரே வாய்ப்பு என்னன்னா அதுக்குள்ளேயே போய் அதுக்கான அறிகுறிகளை உணர்ந்துக்கறது தான். அதை ஒரு முழுமையான ஆய்வா செய்யணும் – அதாவது, அதைப் பின் தொடர்தல் – பிரச்சினையின் வேரைத் தேடிக் கண்டுபிடித்தல்.” 

“ஆனா.. என்ன சொல்ல.,” “எவ்வளவு மோசமான கருத்தில்லாத பார்வை.”,அவள் புலம்பினாள்.

அவன் சொன்னான். “அது மட்டுமில்ல,” “இங்கே பார்..” பேச்சு தொடர்ந்தது. இப்போது அவர்களுக்கு உண்மையிலேயே வெற்றி பெற்றுவிட்டதாகவே தோன்றியது. அவனுக்காக பதில் சொல்லுகையில் நாற்காலியைத் திருப்பி அவனைப் பார்த்தாள். அவளுடைய புன்னகை பேசியது. “நாம் வெற்றி பெற்றுவிட்டோம்.” அவனும் புன்னகையுடன் திரும்பினான், நம்பிக்கையுடன். “முழுமையாக.” 

ஆனால் அவர்களின் புன்னகை அவர்களை இடைமறித்தது. அது வெகு நேரம் நீடித்தது. அதுவொரு அசட்டுச் சிரிப்பாக மாறியது.அசட்டுச் சிரிப்புடன் மேலும் கீழுமாய் அலைக்கழியும் நகைக்கும் இரண்டு சிறிய பொம்மைகளாக அவர்கள் தங்களைப் பார்த்துக்கொண்டனர். 

“என்ன பேசிக்கொண்டிருந்தோம்?” அவன் ஒரு கணம் யோசித்தான். அவன் மிகவும் சலித்துப் போய்விட்டான். கிட்டத்தட்ட அவனுக்குள் முனகிக்கொண்டான். 

“என்ன மாதிரியான ஒரு காட்சியை நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டு விட்டோம்”, அவன் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தான். அவள் அவனைக் கஷ்டப்பட்டு திரும்பிப் பார்த்தாள் – ஆம் – கஷ்டப்பட்டு – தனக்கான தளங்களை அமைத்துக்கொண்டு அதற்கேற்ப அதனை நோக்கி ஓடுகிறாள் –இங்கே ஒரு மரத்தை வைக்கிறாள் – அங்கேயொரு கொத்து மலர்ச்செடி – மேலும் இங்கே மினுமினுக்கும் மீன்கள் நிறைந்த குட்டை. இவ்வாறாக அவர்கள் திகைப்பில் ஆழ்ந்திருந்தனர். 

கடிகாரமானது ஆறுமுறை ‘பிங்’ஙென ஒலித்து முடிந்தது. நெருப்பு மென்மையாய் படபடத்தது. எவ்வளவு முட்டாள்கள் அவர்கள் – அழுத்தமான – மந்தமாகி தேங்கிப்போய் – முதிர்நிலையில் – அதே சமயம் அறிவுக்கூர்மை மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள்.

அந்த அமைதியானது இப்போது ஓர் உன்னதத்தில் இலயிக்கும் கம்பீரமான இசையைப் போல் தோன்றியது. அது துயரம் கப்பியது – அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டிருக்கும் கொடுமையான நிலை அவளுக்கு – அவன் இறந்து போய் விடுவான் – ஆம், அந்த அமைதியானது உடைந்து போனால் அவன் இறந்து போய் விடுவான். ஆனாலும், அதை உடைப்பதற்காக ஏங்கினான். பேச்சால் அல்ல. அதாவது வழக்கமான எரிச்சலூட்டுகிற உரையாடலாலும் அல்ல. அது எப்படியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்கு வேறொரு வழியும் இருந்தது. அந்த வழியில் அவன் முணுமுணுக்க விரும்பினான். “நீயும் அதை உணர்கிறாயா? அதில் உனக்கு ஏதாவது புரியும்படியாய் இருக்கிறதா?”

அதற்குப் பதிலாக, அதிர்ச்சியளிக்கும் விதமாக – அவன் தனக்குள்ளே வந்து விழும் தகவலைக் கேட்டுணர்ந்தான்: “நான் போக வேண்டும்; ஆறு மணிக்கு ப்ராண்ட்’ஐ சந்திப்பதாய் சொல்லியிருக்கிறேன்.”

சொல்லவேண்டியவற்றை சொல்வதற்குப் பதிலாக வேறொன்றைச் சொல்வதற்கு எந்தப் பிசாசு அவனைத் தூண்டியது? குதித்தெழுந்தாள். நாற்காலியிலிருந்து விடுபட்டாள். அவள் அழுவது அவனுக்குக் கேட்டது: “பிறகென்ன, நீ கட்டாயம் அவசரமாய் போகத் தான் வேண்டும். அவர் நேரம் தவறாதவர். இதை ஏன் நீ என்னிடம் முன்னேயே சொல்லவில்லை?”

“நீ என்னைக் காயப்படுத்தி விட்டாய்; என்னைக் காயப்படுத்தி விட்டாய்! நாம் தோற்றுவிட்டோம்!”அவனது தொப்பியையும் கைத்தடியையும் அவனிடம் கையளித்தபோது, அவளது உள்ளுணர்வு அவளை எள்ளி நகையாடியது. பிறிதொரு சொல்லுக்காக அவன் ஒரு கணம் கூட கொடுக்கவில்லை. நடைபாதையைக் கடந்து சென்று அந்தப் பெரிய வெளிப்புறக் கதவைத் திறந்தான்.

அவர்களால் ஒருவரையொருவர் அவ்வாறு பிரிந்திருக்க முடியுமா?அதெப்படி அவர்களால் முடியும்? அவன் படிக்கட்டில் நின்றான். அவளோ கதவின் கைப்பிடியைப் பிடித்தவாறு உள்ளே நின்றுகொண்டிருந்தாள். அப்போது வெளியில் மழையாய் இருக்கவில்லை. 

“நீ என்னைக் காயப்படுத்தி விட்டாய்; என்னைக் காயப்படுத்தி விட்டாய்,” அவளது இதயம் சொன்னது. “நீ ஏன் போகக் கூடாது? இல்லை – போகக் கூடாது. அமைதியாய் இங்கேயே இரு. இல்லை – போ!” அதன்பின் அந்த இரவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் சரிந்து செல்லும் அழகிய படிக்கட்டுக்களையும், நெருக்கமாய் முகிழ்த்து படர்ந்து பரவிக் கிடக்கும் ஐவி கொடிகளால் இருண்டு கிடக்கும் வாசல் புறத்துக் கூரையையும், செறிந்து உயர்ந்து நிற்கும் மரங்களைத் தாண்டித் தெரியும் பளிச்சிடும் நட்சத்திரங்கள் நிறைந்த பரந்து விரிந்த வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய கருத்து சரியே. அவன் ஏதொன்றையும் பார்க்கவேயில்லை. துன்பியல் நிகழ்வொன்று நிகழ்ந்துவிட்டது.அவன் தவறவிட்டு விட்டான். ஏதும் செய்ய முடியாத அளவுக்கு இப்போது எல்லாமும் மிகத் தாமதமாகிப் போய் விட்டது. அவ்வளவு தாமதமாகிப் போய் விட்டதா?ஆம், அப்படித்தான். முகத்திலறையும் வெறுக்கத்தக்க குளிர்ந்த காற்று தோட்டத்தில் கிளர்ந்தெழுந்தது. சபிக்கப்பட்ட வாழ்க்கை இது! நாசமாய்ப் போகட்டும்! அவளுக்குள் நிகழும் – ‘குட் பை; அடுத்த சந்திப்பு நிகழும் வரைக்கும்’ – என்கிற கதறலை அவள் உள்ளுக்குள் கேட்டாள். கதவு பாடாரென சாத்தப்பட்டது. 

ஸ்டுடியோவுக்குள் வேகவேகமாக ஓடி வந்தவள், மிகவும் விசித்திரமாய் நடந்து கொண்டாள். “ஓ!. என்ன கொடுமை! என்னவொரு முட்டாள்தனம்! என்னவொரு அறிவீனம்!” கட்டிலின் அடிப்பாகத்து சுருள் மெத்தையை இழுத்துவிட்டு முடங்கிக் கொண்டாள். எந்தச் சிந்தனையும் இல்லை. ஆத்திரம் அடங்காமல் அப்படியே கிடந்தாள். எல்லாம் முடிந்து விட்டது. எது முடிந்து விட்டது? ஓ. ஏதோவொன்று முடிந்துவிட்டது. அவனைத் திரும்பவும் அவளால் ஒருபோதும் பார்க்க முடியாது. நெடீய நேரம் (அல்லது பத்து நிமிடங்கள் இருக்குமா) அந்த இருண்ட பள்ளத்தாக்குக்குள் கழித்த போது திடீரென்று உள்ளுக்குள் பொறி தட்டியது – மணி அடித்தது. ஆம் – நிச்சயமாக அது அவன் தான். அதற்குத் தகுந்தாற்போலவே அதன் போக்கிலேயே சிறிதளவே அதற்காக தன்னுடைய எண்ணத்தைச் செலுத்தி, அதை அப்படியே விட்டிருக்க வேண்டும். அவள் பதிலுக்காகப் பறந்தாள்.

கதவின் அருகே வயதான முதிர்கன்னி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள் – அவளை ஒரு பரிதாபமானகாரமான கடவுளாக அவளே உருவாக்கி வைத்திருந்தாள் (அவள் ஏன் அந்தச் சமயத்தில் அங்கே நின்றிருக்க வேண்டும் என்பதை இறையே அறியும்) மிகவும் பரிதாபகரமான முறையில் அவளால் பெண் தெய்வமாய் வழிபடப்பட்டு வருபவள். அவள் கதவைத் திறந்த போது, அந்தப் பெண் தெய்வமானவள் தனது தொடர் வழக்கமாக அவள் பக்கம் திரும்பி மணியை அடித்துவிட்டு சொல்ல ஆரம்பிப்பது வழக்கம். “பிரியத்துக்குரியவளே,. என்னை இப்படியே அனுப்பி விடு!”ஆனால் அவள் அதைச் செய்ய மாட்டாள். ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விதியின்படி அவளை உள்ளே வரச்சொல்லி அழைத்து அங்கிருந்த எல்லாவற்றையும் இரசிக்க அனுமதிப்பாள். பிறகு, கொஞ்சமாய் வாடிப் போயிருந்தாலும் அவள் கையளிக்கும் பூங்கொத்தை மிகுந்த கனிவோடு பெற்றுக்கொள்ளவும் செய்வாள். ஆனால் இன்றோ,

“ஓ. என்னை மன்னித்து விடுங்கள்,” கதறாத குறையாக சொன்னாள். “கூட ஒருத்தர் இருக்கிறார், என்னோட. கொஞ்சம் மரச் சிற்ப வேலைகள்ல பரபரப்பா இருக்கோம். என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு பிஸி ஆயிட்டேன்.”

“பரவாயில்லை கண்ணே. ஒண்ணும் பிரச்சினையில்லை டார்லிங். அதைப்பத்தின கவலையெல்லாம் வேண்டாம்”, தூய அன்போடு பேசினாள் அவள்.  

“நான் சும்மா இந்தப் பக்கமா போயிட்டிருந்தேன், உனக்கு என் தரப்பிலே இருந்து கொஞ்சம் நம்பிக்கையைத் தரலாமேன்னு நினைச்சேன் – அதுக்காகத் தான் இந்த ஊதா நிற மலர்கள்.” அரதப் பழசான கம்பிகள் கொண்ட ஒரு பெரிய குடையோடு தடுமாறியபடியே அவள் இறங்கினாள்.“நான் மலர்களை இங்கேயே வைக்கிறேன். வீசுற காத்துல இருந்து பூக்களைக் காப்பாத்தறதுக்கு இதுதான் சரியான இடம். இங்கே தான் வைக்கிறேன்.”வாடிய ஒரு சிறிய பூங்கொத்தை உதிர்த்துத் தள்ளினாள். 

ஒரு கணம் அந்த ஊதா நிற மலர்களை அவள் வாங்கிக்கொள்ளவில்லை.  ஆனால் அவள் கதவின் பின்னாலிருந்து கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்தபோது விசித்திரமான சம்பவமொன்று நிகழ்ந்தது. மீண்டும் அவள், அழகாகச் சரிந்து கிடக்கும் படிக்கட்டுக்களையும், ஐவி கொடிகளால் சூழப்பட்டிருக்கும் இருண்ட தோட்டத்தையும் வில்லோ மரங்களையும் பரந்து விரிந்த பளிச்சென்ற வானத்தையும் கண்டாள். கேள்வி போல் தொக்கி நிற்கும் அந்த மௌனத்தை அவள் மீண்டும் உணர்ந்தாள். ஆனால், இந்தமுறை அவள் தயங்கவில்லை. முன்னோக்கி நகர்ந்தாள். அங்கே சூழ்ந்திருந்த எல்லையற்ற அந்த அமைதிக் கடலில் ஒரு சிறு அதிர்வையும் ஏற்படுத்தி விடுவோமோ என்று அச்சம் கொண்டவளாய், மென்மையாகவும் இதமாகவும் அவள் தனது தோழியைக் கட்டியணைத்தாள்.

இந்த நன்றியுணர்ச்சியால் நெகிழ்ந்து போயிருந்த அவளது தோழி மனமுவந்து, “என் அன்பே” என்று முணுமுணுத்தாள். “உண்மையை சொல்லப்போனால் அவையெல்லாம் ஒன்றுமேயில்லை. ஒரு சின்னஞ் சிறிய நாணயக் குவியல்களைப் போன்றதொரு சிறிய எளிமையான அற்பமானதொரு கூட்டம்.” 

ஆனால் அவள் பேசப்பேச இன்னுமின்னும் இதமாய் – மென்மையாய் – திடமாய் அவள் ஓர் அரவணைப்பில் மூழ்கினாள். மிக அழகான தழுவல் அது. அத்தகையதொரு மகிழ்வான அழுத்தத்தால் அரவணைப்பால் நெடு நேரம் சிறைபிடிக்கப் பட்டிருந்த அந்த பாவப்பட்டவளின் மனமானது உண்மையிலேயே நிலைகுலைந்து போயிருந்தது. அப்போதைக்கு இலேசாக நடுங்கிக் கொள்வதற்கு மட்டுமே அவளிடம் சக்தி இருந்தது. அவள் தள்ளாடிப் போனாள்; நடுக்கம் கலந்த குரலில், “அப்படியானால், நான் இங்கே இருப்பதிலே உனக்கு அவ்ளோ பெரிய தொந்தரவு ஏதுமில்லை தானே?” என்று கேட்கும் அளவுக்கு மட்டுமே அவளிடம் அப்போது தெம்பு இருந்தது.

“இரவு வணக்கம், தோழியே,” என்றாள் வந்திருந்தவள். “சீக்கிரமே மீண்டும் வாருங்கள்” என்றாள் இவள். 

“ஓ.கண்டிப்பாக. நிச்சயமாக.”

இந்த முறை அவள் ஸ்டுடியோவை நோக்கி மெதுவாகத் திரும்பி நடந்தாள். அறையின் நடுவில் கண்களை பாதி மூடிய நிலையில் நின்றிருந்த போது, மிகவும் இலேசாக உணர்ந்தாள். ஒரு குழந்தையின் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்பவள் போல், தளர்ந்து ஓய்வெடுப்பவள் போலிருந்தாள். மிக இலேசாகவும் புத்துணர்வுடன் இருப்பது போலவும் உணர்ந்தாள். சுவாசிப்பது கூட மகிழ்ச்சியாய் இருந்தது;

கட்டில் மெத்தையின் கீழ்ப்புறத்தில் இருந்த சுருள் விரிப்பானது அழுக்காய் இருந்தது. இருக்கை மெத்தைகள் “கோபமுற்ற மலைகளைப் போல் காட்சியளிக்கின்றன” அவள் அப்படித்தான் அவற்றைச் சொன்னாள். எழுதும் மேசைக்கு செல்லுமுன் அவைகளை ஒழுங்குபடுத்தினாள். 

“உளவியல் நாவல் குறித்த நமது உரையாடலைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்,” என்று அவள் படபடத்தாள். அவசர அவசரமாய் எழுதிக்கொண்டாள். “உண்மையிலேயே இது மிகவும் சுவாரசியமானது”.. உரையாடலானது இப்படியாகத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 

கட்டக் கடைசியாக அவள் இப்படி எழுதினாள்: “இரவு வணக்கம், தோழியே. சீக்கிரமே மீண்டும் வாருங்கள்”

கேத்ரீன் மான்ஸ்ஃபீல்ட்– நியுஸிலாந்து நாட்டில் பிறந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர். சிறுகதை எழுத்தாளர். புகழ்பெற்ற டி.எச்.லாரன்ஸ், விர்ஜினியா வுல்ஃப் ஆகியோரின் சமகாலத்தவர். உளவியல் கூறுகள் நிரம்பிய நவீன சிறுகதைகளை எழுதியவர். 34 வயதில் காச நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.

***

பாலா இளம்பிறை– இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும். மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com

நுட்பமான பெண் உலகின் (உளவியலின்) சித்தரிப்பு

0

ஆனந்த பிரகாஷ்


வாசக மனம் என்பது எவ்வளவு நுட்பமானதோ, அதே அளவுக்கு விந்தையானதும்கூட. ஒரு சில சமயங்களில் ஒரு எழுத்தாளரின் முழுப் படைப்புலகும் அவனை அறிந்துகொள்ளவும், கொண்டாடவும், தனக்குப் பிடித்தமான, ஆதர்ச எழுத்தாளராக ஏற்றுக்கொள்ளவும் தேவைப்படுகிறது. சில சமயங்களில் ஒரே ஒரு கதைகூட போதுமானதாக இருந்து இவை அனைத்தையும் நிகழ்த்திவிடுகிறது. அது அப்போதைய வாசக மனம், அந்தக் கதை நிகழ்த்தும் உரையாடல், கதை கடத்தும் உணர்வுகள், வாசகன் அதனோடு ஏற்படுத்திக் கொள்ளும் விவாதம், தன்னோடு அந்தக் கதையின் ஊடாக நிகழ்த்தும் உரையாடல், கதைக்கும் வாசிப்பவனுக்கும் இடையேயான நுட்பமான தொடர்புச் சங்கிலி எனப் பல காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன.

அப்படி மிகச் சமீபத்தில், வாசகசாலை ஒரு குழுவாக நடத்தும் ஆண்டுக்கு நூறு சிறுகதைகள் வாசிக்கும் நிகழ்வில், முழுக்க முழுக்க இளம் படைப்பாளிகளின் சிறுகதைகளை வாசித்து விவாதிக்கும் குழுவொன்றில் படித்த காலாதீதம் என்ற ஒரே கதை என்னை மிகவும் கவர்ந்து இழுத்தது. அந்தக் கதையின் வழியாகவே அருணா சிற்றரசுவையும், அவருடைய வேறு தொகுப்புகள் வெளிவந்திருக்கிறதா என்ற தேடலிலும் என்னை முழு மூச்சாக இறங்கச் செய்தது. ஒரு கதையிலேயே என்னை இவ்வளவு கவர்ந்திழுத்த எழுத்து நடை அது.

காலாதீதம் வாசித்து முடித்தவுடன் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் மெளனியின் அழியாச் சுடர்கள். எழுத்தில் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் தனிப்பட்ட உத்தி. பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் எழுத்துகளாகவே விவரிக்கப்படுவது பல கதைகளின் வடிவமாக இருக்கிறது. மெளனியின் கதைகள் இதிலிருந்து வேறுபடுகின்றன. மெளனி கடத்தும் உணர்வுகள் வெறும் எழுத்துகளாக மட்டுமே இருப்பதில்லை. அவர் முழுக்க முழுக்க கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள உலகத்தை, இயற்கை, சத்தம், இரவு, ஒளி, கோவில்கள், சிலைகள் முதலிய புற உலகின் இயல்புகளையும் வடிவங்களையும் கொண்டு கதாபாத்திரங்களின் அக உலகைச் சித்தரிக்கிறார்.

அப்படிப்பட்ட நடையில், கதாபாத்திரம் அனுபவிக்கும் உணர்வுகள் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் இருந்தாலும், வாசக மனம் அந்த நுட்பமான சித்தரிப்பின் வழியாக அவனுடைய உணர்வுகளைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்கிறது. உதாரணமாக, கதாபாத்திரத்தின் தனிமையை தனிமை என்று நேரடியாகச் சொல்லாமல், இயற்கையின் முன்னால் அவனை நிறுத்திக் காட்டுவதன் மூலம் அந்தத் தனிமையை வாசகனும் தன்னுள் உணர்கிறான். கிட்டத்தட்ட காலாதீதம் என்னை ஆட்கொண்டதும் இப்படியான ஒரு மொழி நடையால்தான். அப்போது தொடங்கிய தேடலின் கண்டடைவே, அருணா சிற்றரசுவின் இதுவரை வெளிவந்துள்ள முதல் தொகுப்பான அருகன்.


அருகன் தொகுப்பு குறித்து அருணா எழுதிய ஏற்புரையும், அதற்கான முன்னுரையும் மிகவும் சுவாரசியமானவை. தன்னுடைய எழுத்தின் மீதான உறுதியும், வெறுமனே எழுதி வைத்த எதுவும் இலக்கியமாகிவிடாது. நிகழ்த்தப்பட வேண்டிய கதைகள்தான் இலக்கியமாகும் என்ற புரிதலும் அந்த முன்னுரையில் தெளிவாக வெளிப்படுகின்றன.

அப்படியே நிகழ்த்தப்பட வேண்டிய கதைகளாகத்தான் அருகன் தொகுப்பிலுள்ள கதைகளும் வந்து இருக்கின்றன. தொகுப்பின் எல்லாக் கதைகளும் நிகழ்கின்றன. எங்கும் மிகை உணர்வோ, அருணாவின் குரலோ, கதாபாத்திரங்களின் மீது வஞ்சனையோ, பரிதாபமோ, கோபமோ, கழிவிரக்கமோ இல்லை. கதை நிகழ்கிறது, கதாபாத்திரங்களும் அதற்கேற்ப இயங்குகின்றன.

தொகுப்பின் முதல் கதையாக தலைப்புக் கதையே இடம்பெற்றிருப்பது ஒரு புதுவிதமான அணுகுமுறை. அதே நேரத்தில், அதுவே இத்தொகுப்பின் மீது வாசகனுக்கான ஆர்வத்தைத் தூண்டும் கதையாகவும் அமைந்துள்ளது.

முதல் கதையான அருகன் சுயநினைவின்றி பல வருடங்களாக, பல தலைமுறைகளாக அதே வயதுடனும் அதே தோற்றத்துடனும் அந்த ஊரின் கோவிலருகே இருக்கும் மடத்தில் வாழும் நேமி என்ற நேமிநாதனையும், அவனைச் சுற்றி நிகழும் அமானுஷ்யங்களையும், அவன் பின்னாலிருக்கும் மர்மத்தைக் கண்டடையத் துடிக்கும் மாதவனையும் மையமாகக் கொண்டு, காலப் பிரக்ஞையை மீறி நூற்றாண்டு இடைவெளியில் புள்ளிகளை இணைத்து, புதிர்களை அவிழ்க்கும் ஒரு மாயஎதார்த்தச் சிறுகதையாக விரிகிறது.

யார் இந்த நேமி? யார் இந்த மாதவன்? யார் அந்தப் பொன்னிற முகம் தெரியாத பெண்? எனப் பல புதிர்களை அடைகொண்டிருக்கும் இக்கதை, இத்தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளுள் ஒன்று. பல முடிச்சுகளோடு முடியும் இக்கதையின் முடிவு வெளிப்படையாகச் சொல்லப்படாமல் விடப்பட்டிருந்தாலும், அதன் தலைப்பு, அருகன் என்ற சொல்லின் பொருள், எதைக் கடந்தவன் அருகன் ஆகிறான், நேமி யார், மாதவன் யார் என்பன உள்ளிட்ட பல திறப்புகளை வாசகனுக்கே விட்டுச் செல்கிறது. அந்த வகையில், மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அருமையான சிறுகதை இது.

காலாதீதம் மற்றும் அருகன் ஆகிய இரு கதைகளையும் வாசித்த பிறகு, அருணாவுக்கு eternity அல்லது காலம் கடந்தமை, காலமற்ற நிலை ஆகியவற்றின் மீது ஒரு தனித்த ஈர்ப்பு இருப்பதை உணர முடிகிறது. அந்த ஈர்ப்பே அவரது கதைகளில் மீண்டும் மீண்டும் தோன்றும் முக்கிய அம்சமாகவும் மாறுகிறது.

அருணாவின் கதைகளுக்கும் கோவில்களுக்கும் ஒரு தனித்துவமான தொடர்பு இருப்பதை யூகிக்க முடிகிறது. அவரது கதைகளில் இடம்பெறும் கோவில்கள், சிற்பங்கள், மாளிகைகள் ஆகியவை வெறும் கட்டிடங்களாகவோ, அழகியல் பார்வைக்கான உருவகங்களாகவோ மட்டுமே நின்றுவிடுவதில்லை. அவை கடந்த காலத்தின் எச்சங்களாகவும், காலத்தை மீறி நிற்கும் சின்னங்களாகவும், காதல், ஏக்கம், பிரிவு, கண்டடைதல், நினைவின் சேகரம் போன்ற மனித அகஉணர்வுகளோடு தம்மை இணைத்துக் கொள்கின்றன.

அருணாவின் மொழி கச்சிதமானது. அதே சமயம், வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமான காட்சிமொழியைக் கொண்டது. காட்சிகளை அவர் வர்ணிக்கும் விதம் பல இடங்களில் அபாரமாக வந்து விழுகிறது. அவை வெறுமனே வாசிப்புச் சுகத்தை மட்டுமல்ல, வாசகனுடைய கற்பனையின் எல்லையையும் ஒரு படி மேலே நகர்த்துகின்றன.

உதாரணமாக, அருகன் கதையில் வரும் இந்த வரிகள்:

கடைக்கும் குளத்திற்கும் இடையிலான வீதி யாருமின்றி தனித்துக் கிடந்தது. ஆடாத ஊஞ்சல் ஒன்று கயிறுகளற்று நிலத்தில் கிடப்பது போல் நல்லதொரு அகலத்தில் வீதி. அவ்வீதியில் மெல்ல அவனின் சோம்பலை வைத்து குளத்திற்குள் ஆட்டினான் மாது. வீதி மெல்ல மேலெழும்பிய நேரத்தில் அதை மிதித்துக் கடந்தான் நேமி. ஊஞ்சல் உயிரிழந்தது.”

 
இப்படியான உயிரோட்டமான காட்சிப்படுத்தல்கள்தான் அருணாவின் கதைகளுக்கு தனித்துவமான கதைசொல்லல் வடிவத்தை வழங்குகின்றன.

தொகுப்பின் முதல் கதையாக அருகன் அமைந்திருப்பது தொகுப்பின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், அதற்கடுத்த கதைகள் மாயஎதார்த்த உலகிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைசொல்லல் வடிவங்களுக்குள் நகர்வது ஆரம்பத்தில் ஒரு சிறிய ஏமாற்றத்தை அளித்தது. எனினும், அந்த ஏமாற்றம் கதைகளின் தரம் குறித்ததல்ல. மாறாக, முதல் கதையால் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பின் விளைவாக மட்டுமே அதை உணர முடிகிறது.

மாயஎதார்த்தக் கதையிலிருந்து திடீரென பெண் உலகின் நுட்பமான உளவியல் பார்வைக்குள் விரியும் அடுத்தடுத்த கதைகள், அருகன் கதையிலிருந்து மனதை மெதுவாகப் பிரித்து புதிய வாசிப்பு மனநிலைக்குள் நுழைவதற்குச் சிறிது நேரத்தை வாசகனிடம் கோருகின்றன.

அருகன் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் ஆதாரச் சுருதியாக இருப்பது என்னவோ, காமமும், ஈர்ப்பும், மறைக்கப்பட்ட பாலியல் ரகசியங்களும்தான். தமிழில் எண்ணற்ற எழுத்தாளர்களால் பலமுறை எழுதப்பட்டு, வாசிக்கப்பட்டு, ஒருவகையில் சலிப்பை உண்டாக்கிய கூறுகளாக இவை மாறியிருந்தாலும், ஒவ்வொரு புதிய எழுத்தாளரும் அவற்றைத் தன்னுடைய தனித்த பார்வையிலும் கதைசொல்லல் முறையிலும் அணுகும்போது, அந்தக் கூறுகள் மீண்டும் புதிய சுவாரசியத்தைப் பெறுகின்றன. பொருள் பழையதாக இருந்தாலும், அதைப் பார்க்கும் பார்வை புதிதாக இருக்கும்போது, கதையும் புதிதாகவே மலர்கிறது.

பெரும்பாலான கதைகளின் பின்னணியில் இருப்பது பாலியல் சார்ந்த ரகசியங்களும் இச்சைகளும்தான் என்றாலும், எல்லாக் கதைகளையும் அந்த ஒற்றைத் தளத்திற்குள் மட்டுமே அடக்கிப் பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. கதைகளில் மறைக்கப்பட்ட மையப்பொருள் பாலியல் சார்ந்ததாக இருந்தாலும், கதை அதைக் கடந்து பல நுட்பமான வாசிப்புகளை நமக்கு வழங்குகிறது. அந்த மறைபொருளின் வழியாக ஒரு சமூகம், அதன் வாழ்வியல், சடங்குகள், மனதிற்குள் ஆழமாகப் பதிந்திருக்கும் பிற்போக்கான பழக்கவழக்கங்கள், அவற்றின் பெயரில் நிகழ்த்தப்படும் திட்டங்கள், அவை குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் நிற்கும் பேதைமையான குரல்கள், அதே சமயம் அவற்றை நிகழ்த்த மனித மனம் மேற்கொள்ளும் கணக்கிட்ட நகர்வுகள், கிராமியத் தெய்வங்கள், அவற்றைச் சுற்றியுள்ள சடங்குகள் எனப் பலவற்றை கதைகள் முன்வைக்கின்றன.

அருணா ஒவ்வொரு வரிக்குள்ளும் பலவற்றைச் சொல்லியும், சொல்லாமலும் மிக இயல்பாகக் கதையை நகர்த்திச் செல்கிறார். அந்த இடைவெளிகளை வாசகன் நிரப்பும் தருணத்தில்தான் கதையின் வாசிப்பு முழுமையான வடிவத்தை அடைகிறது. அந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு முன்னர் இருக்கும் கதை ஒன்றாகவும், அவற்றை நிரப்பிய பிறகு முழுமை பெறும் கதை வேறொன்றாகவும் மாறுகிறது. வாசகனை அந்தப் பணியில் பங்கேற்க அழைக்கும் இந்தக் கதைசொல்லல் முறை, இக்கதைகளின் மிக முக்கியமான பலங்களில் ஒன்று.

பாலியல் ரகசியங்களுக்குப் பின்னாலிருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தையும், பெண் உடலின் மீதான இச்சையையும் இருவேறு கோணங்களில் பேசும் கதைகளாக ஓங்குபனை மற்றும் மரிக்கொழுந்தன் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஓங்குபனை, பல ஆண்டுகளுக்கு முன் நிலவியதோடு, இன்னமும் சில இடங்களில் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆண் குழந்தை மனநிலையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அந்த மனநிலையின் வாயிலாக வெளிப்படும் ஆணாதிக்கம், ஒரு பெண்ணின் ஏக்கத்தைத் தனக்கான சபலமாக மாற்றிக்கொள்ளும் ஆண், அதற்குத் துணையாக நிற்கும் இன்னொரு பெண், எதையும் அறியாத சிறுமியின் வாழ்க்கைப் பலியாக்கப்படுவது எனப் பல அடுக்குகளை மிக நுட்பமாகக் கையாள்கிறது.

மரிக்கொழுந்தன் கதையும் கிட்டத்தட்ட இதே ஆண் சபலத்தையே பேசுகிறது. ஆனால் அதன் பரிமாணம் இன்னும் ஆழமானது. அண்ணனின் இறப்பைத் தனக்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்ளும் கொழுந்தன், குடும்பத்தைக் காப்பாற்றும் பெயரில் முடிவெடுக்கும் மாமியார் ஆகியவை கதையின் வெளிப்படையான தளமாக இருந்தாலும், அதன் உள்ளடுக்கில் கணவனை இழந்த பெண்ணின் மனநிலையும், உடல் சார்ந்த ஏக்கங்களும், புதிய வாழ்க்கையை நோக்கி நகரும்போது அவளுக்குள் நிகழும் மாற்றங்களும் மிக இயல்பாகப் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில், பெண்ணின் உளவியலையும் உடலையும் ஒரே நேரத்தில் நேர்மையாக அணுகும் கதையாக மரிக்கொழுந்தன் அமைந்திருக்கிறது.

அருணாவின் கதைகளின் மிக முக்கியமான சிறப்பம்சமாக நான் காண்பதும் இதுவே. அவரது கதைகளில் வெளிப்படும் பெண்ணியக் குரல், எந்த இடத்திலும் கதையையோ கதாபாத்திரங்களையோ மதிப்பீடு செய்ய முனைவதில்லை. கதை நிகழ்கிறது, கதாபாத்திரங்கள் தங்களுடைய இயல்பில் இயங்குகின்றன. அந்த நிகழ்வுகளின் வழியாக மட்டுமே அருணாவின் குரல் வெளிப்படுகிறது.

மரிக்கொழுந்தன் கதையில் கொழுந்தனின் சபலத்தையும் திட்டத்தையும் மட்டுமே பேசிச் சென்றிருந்தாலும் அது ஒரு முழுமையான கதையாக இருந்திருக்கும். ஆனால், அதற்குள் அந்தப் பெண்ணின் மனதையும் உடல் சார்ந்த தேவைகளையும் இணைப்பதன் மூலம், அந்தக் கதாபாத்திரம் ரத்தமும் சதையுமான பெண்ணாக நம்முன் நிற்கிறாள். அப்படியே அந்தப் பெண்ணின் குரலை எழுதும்போதும், முழுமையாக அவளுடைய குரலே வெளிப்படுகிறது. அதில் எழுத்தாளரின் உரிமைக்கோரலோ, கழிவிரக்கமோ, பரிதாபமோ, வெளிப்படையான தீர்ப்போ எதுவும் இல்லை. அதுவே அருணாவின் கதைசொல்லலின் மிகப் பெரிய பலமாக எனக்குத் தோன்றுகிறது.

தொகுப்பிலுள்ள மற்ற எல்லாக் கதைகளிலிருந்தும் தனித்துத் தெரியும் கதையாக உடற்றும் பிணியைக் குறிப்பிடலாம். தன் வாழ்வில் கணவனை இழந்து, தன்னுடைய ஒரே ஆறுதலாகவும் வாழ்க்கையின் பிடிப்பாகவும் இருக்கும் மகனும் இப்போது நோயில் விழுந்துவிட்டால், அந்தப் பெண் எந்த மனநிலையில் தன் வாழ்வோடு போராடுவாள் என்பதை வாழ்வின் எதார்த்தத்துடனும் பெண்ணின் உளவியல் நோக்குடனும் பேசுகிறது உடற்றும் பிணி.

அருகன் கதைக்குப் பிறகு, இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதையாக ஊமச்சியைக் குறிப்பிடலாம். பருவமடைவதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ருக்கு, விடுமுறைக்காக பெரியப்பா வீட்டுக்கு வருகிறாள். அவளுடைய பார்வையின் வழியாக அந்த ஊரில் நிகழும் சடங்குகள், கிராமத் தெய்வங்களின் பின்னாலிருக்கும் மர்மங்கள், அவள் பெரியப்பா வீட்டில் மறைந்து கிடக்கும் பாலியல் ரகசியங்கள் எனப் பலவற்றை மிக நுட்பமாகப் பேசும் சிறுகதை இது. இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், கதை மீண்டும் பாலியல் ரகசியங்களைப் பேசினாலும், அதன் அடியாழத்தில் அது எழுப்பும் கேள்விகள் மிக நுட்பமான வாசிப்புக்குரியவை என்பதுதான்.

ஆண் பெண் ஈர்ப்பை இரண்டு தலைமுறைகளின் வழியாக அருணா அணுகியிருப்பதும் சிறப்பானது. தான் ஒரு சிறுவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டதை ருக்கு பெரியப்பாவிடம் இயல்பாகச் சொல்வதும், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அவர் சமாதானப்படுத்துவதும், பெரியம்மாவிடம் மட்டும் சொல்லாதே அவளுக்கு இதெல்லாம் புரியாது என்று கூறுவதும், கதையின் பிற்பகுதியில் பெரியம்மாவின் பாலியல் ரகசியங்கள் ஊமச்சியின் வழியாக வெளிப்படும்போது, முற்பகுதியில் நாம் உருவாக்கிக் கொண்டிருந்த கதாபாத்திரப் புரிதல்களை தலைகீழாக்குகின்றன.

அதோடு, கிராமங்களில் நிகழும் சடங்குகள், தெய்வங்கள், அவற்றின் பின்னாலிருக்கும் மறைவான உண்மைகள் ஆகியவற்றையும் ஒரு சிறுவனின் பார்வையின் வழியாகத் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படுத்துகிறது இக்கதை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிதாகத் திறக்கும் பல நுண் அடுக்குகளைக் கொண்ட சிறந்த சிறுகதையாக ஊமச்சி எனக்குத் தோன்றியது.

மடக்கொடி ஒரு சிறுமியின் பால்யத்திலிருந்து அவள் பருவமடையும் வயதை அடையும் வரையிலான அவளுடைய அக உலகையும், அவளைச் சுற்றியுள்ள உறவுகளையும், பக்கத்து வீட்டுத் அத்தையையும், அந்த வீட்டிற்குள் நிகழும் சிடுக்குகளையும் பேசும் கதையாக அமைகிறது.

தேமாக்காதல் தன்பால் ஈர்ப்பு, அதன் பின்னாலிருக்கும் வெளிப்படாத உணர்வுகள், புரிதல்கள் ஆகியவற்றை ஆராயும் கதை. எழுதப்பட்ட விதத்தில் மிக நேர்த்தியான கதையாக இருந்தாலும், அதன் முடிவில் விடப்பட்ட இடைவெளி கதையின் மீது வேறொரு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

இலக்கியமாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும், என்னை எப்போதும் ஆழமாக யோசிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் உண்டு. எப்போதெல்லாம் காமத்தைப் பற்றிய தீவிரமான விசாரணைகள் ஒரு படைப்புக்குள் நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் அதனுடன் இறப்பு என்ற உணர்வும் அதே தீவிரத்துடன் விசாரிக்கப்படுவது ஏன்?

பலமுறை இதைப் பற்றி யோசித்திருக்கிறேன். காமமும் இறப்பும் இரண்டுமே மனித வாழ்வின் மிகத் தீவிரமான அனுபவங்கள் என்பதாலா? அல்லது இரண்டிற்கும் தெளிவாக வரையறுத்து விட முடியாத ஒரு எல்லையின்மை இருப்பதாலா? அல்லது காமமும் ஒருவகையில் சிறிய மரணத்தின் அனுபவமாக உணரப்படுவதாலா? இப்படிப் பல கேள்விகள் மனதில் எழுந்திருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்குத் தீனி போடும் கதையாக அமைந்துள்ளது தீஞ்சுவை. முழுக்க முழுக்க நாவின் சுவையை மையமாகக் கொண்டு, திருமணமான ஒரு பெண்ணின் மீது பரமசிவனுக்கு உருவாகும் நேசம், கதையின் முடிவில் அவள் கட்டியவனையும் மறந்து, கொண்டாடியவனையும் துறந்து இன்னொரு ஆணைத் தேடிச் செல்வது, இறுதியில் கணவனிடம் அவள் உதிர்க்கும் அந்த ஒரு வாக்கியம் இவை அனைத்தும் மனித மனங்களின் விசித்திரத்தையும், காமத்திற்கும் புலன்களுக்கும் இடையேயுள்ள நுட்பமான தொடர்பையும் ஆராய்கின்றன.

மைம்மா பாலியல் தொழிலாளியாக சமூகத்தால் பார்க்கப்படும் ஒரு பெண்ணின் மீதுள்ள பரிவையும், அந்தப் பரிவைக்கூட கேள்விக்குட்படுத்தும் சமூகத்தின் பார்வையையும் பேசும் சிறுகதை.

விளியறி ஞமலி நாய்களை விரும்பாத ஒரு பெண்ணின் வாழ்க்கைக்குள் நன்றியுள்ள ஒரு நாய் நுழைந்தால், அவளுடைய வாழ்வியல் எவ்வாறு மாறுகிறது என்பதை ஆராய்கிறது. தன் உயிரைக் காத்த நாயாக இருந்தபோதிலும், அந்தப் பெண்ணின் அகஉணர்வே கதையின் மையமாக உயர்ந்து நிற்கிறது. அதனால், மிக இயல்பானதாய் இருந்தும் மனதில் நீங்காத கதையாக மாறுகிறது ‘விளியறி ஞமலி’.

மொத்தத்தில் மேலடுக்கில் பாலியல் ரகசியங்களைப் பேசும் கதைகளாகத் தோன்றினாலும், அவற்றின் உள்ளடுக்கில் பெண் உலகின் நுட்பமான உளவியலையும், அதன் அடியாழங்களையும் அசைக்கும், கவனமான வாசிப்பையும் அவதானிப்பையும் கோரும் தொகுப்பாக அருகன் வந்திருக்கிறது.

அருணா முன்வைக்கும் குரலில் பெண்ணியப் பார்வைகள் ஆழமாக உறைந்திருந்தாலும், அதன் வீரியமோ, போக்கோ, குரலோ எந்த வகையிலும் கதையின் எதார்த்தத்துடனோ, சமூகத்தின் பிரதிபலிப்புடனோ, பெண்ணின் அகமன ஆசைகள் மற்றும் குமுறல்களைப் பதிவு செய்வதிலோ துளியளவும் சமரசம் செய்து கொள்ளவில்லை. அந்த வகையில், அருணாவின் எழுத்து தனித்துவமானது.

இத்தொகுப்பில் எனக்கு ஒரு சிறிய நெருடலாகத் தோன்றிய விஷயம், அருணாவின் கதைசொல்லல் வடிவம்தான். முடிவில் உச்சத்தை அடையும் கதைசொல்லல் வடிவம் என்பது தமிழ்ச் சிறுகதைகளில் மிகச் சிறந்த உத்திகளில் ஒன்று. அதன் வழியாக ஒரே கதைக்கு வேறொரு பரிமாணத்தை வழங்கவும், வாசகனை உச்ச உணர்வை நோக்கி நகர்த்தவும், கதையின் முற்பகுதியைத் தலைகீழாக்கவும், சொல்லாமல் விடுவதன் மூலம் பல புதிய திறப்புகளை உருவாக்கவும் முடிகிறது.

அருணாவின் இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் இதே வடிவத்தைப் பின்பற்றுகின்றன. முதல் சில கதைகளில் இந்த உத்தி ஏற்படுத்தும் தாக்கமும் பிரமிப்பும் மிக வலுவாக இருக்கின்றன. ஆனால், தொடர்ந்து பெரும்பாலான கதைகளும் இதே வடிவத்தில் நகரும்போது, ஆரம்பத்தில் இருந்த அந்தப் பிரமிப்பும் தாக்கமும் படிப்படியாகக் குறைந்து, ஒருவிதமான பரிச்சய உணர்வு மேலோங்குகிறது. அதுவே சில இடங்களில் வாசிப்பு இன்பத்தையும் சற்றே குறைக்கிறது.

இருப்பினும், காலாதீதம் போன்ற இன்னும் பல கதைகள் அருணாவிடம் தொகுப்பாக வரக் காத்திருக்கின்றன என்ற நம்பிக்கையை இந்தத் தொகுப்பு அளிக்கிறது. அப்படிப்பட்ட கதைகளுக்குத் தேவையான நேர்த்தியான மொழியும், வசீகரமான வர்ணனைகளும், நுட்பமான அவதானிப்பும், கதாபாத்திரங்களின் அக உலகை மிக இயல்பாகச் சித்தரிக்கும் திறனும் அருணாவின் எழுத்தில் மிகத் தெளிவாக தெரிகின்றன.

நவீனத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களில் தேர்ந்த ஒரு சிறுகதையாளருக்கான எல்லா அம்சங்களும் அருணா சிற்றரசுவின்  இந்தத் தொகுப்பில் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில், அருகன் நிச்சயம் வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

***

சு. ஆனந்த பிரகாஷ் – சொந்த ஊர் மதுரை. பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். தீவிர வாசகரும் புத்தக மதிப்புரையாளரும் (Bookstagrammer) ஆவார். தமிழ் மற்றும் உலக இலக்கியங்களை வாசித்து, அவற்றைப் பற்றிய தனது வாசிப்பு அனுபவங்களையும், மதிப்புரைகளையும் தனது Bookstagram பக்கமான @paperbacks_and_me இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். மின்னஞ்சல்: ananthaprakash11@gmail.com

நான் செங்குத்தானவள் – சில்வியா ப்ளாத்

0

அனுராதா ஆனந்த்

ச்சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன்
செம்பட்டு முடியுடன்
காற்றைப் போல ஆண்களை உண்பேன்”

சில்வியாவின் லேடி லாசரஸ் என்ற கவிதையின் இறுதியில் இடம்பெறும் வரிகள்.புதிய ஏற்பாட்டில் பெதனியின் லாசரஸை, இறந்து நான்கு நாட்களில் உயிர்த்தெழச் செய்யும் அற்புதத்தை நிகழ்த்துவார் ஏசு. அப்படி தன்னைத்தானே உயிர்த்தெழச் செய்பவள் என்பதை உணர்த்தும் வரிகள். மேலும் தீயில் கருகி சாம்பலான பின் அச்சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் திறன்கொண்ட ஃபீனிக்ஸ் பறவையையும் உணர்த்துகிறது. ப்ளாத்தின் கவிதைகளில் இப்படியான யுக்தியை —இருவேறு படிமங்களை தடையின்றி ஒருங்கிணைத்த வரிகள் பலவற்றை – வெகு இயல்பாகக் காணலாம். சில்வியாவின் கவிதைகளைப் படிப்பதென்பது நெருப்பை கையில் ஏந்துவதைப் போல, நம்மை சுட்டுப் பொசுக்கும் என்றாலும் நம்மையே துலக்கமாக காட்டும் பேரொளியாகவும் விளங்கும்.

1932 – 1963 முப்பது வருடங்கள் மட்டுமே குறைவாழ்வு வாழ்ந்தவர். அவரது 30 வயதுக்குள் ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒரு முறை இறந்து போனவள் என்று தன்னை பற்றி குறிப்பிடுகிறார். 10 வது வயதில் விளையாட்டாக நீரில் மூழ்கி இறப்பிற்கு அருகில் சென்றவர் பின்னர் 20 வது வயதில் ஒரு தற்கொலை முயற்சியிலிருந்து காபாற்றப்பட்டவர். 30 வது வயதில் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

அவரது வாழ்வை விட இறப்பால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கொடூரமான முறையினால் அறியப்பட்ட சில்வியா ப்ளாத்தின் உலகம் இருண்ட தனிமை, பெருத்த ஏமாற்றம், மறுக்கப்பட்ட நியாயமான அங்கீகாரம், அதனால் ஏற்பட்ட சுய சந்தேகம், அவரை விட்டு அகலாது தொடர்ந்த தோல்வி என்ற மனஉளைச்சல் தரும் புறவயமான காரணிகள் கொண்டது. கூடுதலாக கடுமையான, தயவு தாட்சண்யமற்ற சுயவிமர்சனம், அழுத்தத்தில் சிதைவுற்ற மிக மெல்லிய மனமும் அகவயமாக அவருக்கு பெரும் வாதையளித்தன.

 ஆனால் இந்த சிக்கல்கள் எதையும் பொருட்படுத்தாமல், அவரது படைப்புகளை மட்டும் தனியாக நோக்கினால், ஆங்கிலக் கவிதை புலத்தின் பாதையை மாற்றிய, வேறோர் உயரிய திறனளவை நிறுவ காரணமாக இருந்தவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. கவிதையென்ற வடிவத்தையே வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றவர்.

இந்த அபூர்வ, அதீத படைப்பூக்கத் திறனாலேயே அவர் இன்றும் படித்துத் தீராத கவிஞராகவும், பேசித் தீராத எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். இன்று அவரை அங்கீகரித்து, அவரது கூறுகளைத் தங்களது படைப்பில் இனங்கண்டு எடுத்தியம்புவதாகட்டும் அல்லது எதிர்மறையாக அந்த்த தீவிர இருண்மைகள் காணக்கிடைக்காத நவீனமானது தங்கள் எழுத்து என்று அவரை மறுதலிப்பதாகட்டும், இருவிடங்களிலுமே சில்வியா ஒரு நியதியை நிர்ணயித்து நிரந்தரமானவராக தன்னை இருத்திக் கொண்டுள்ளார்.

ஆரம்பகால கவிதைகள் முதல், இறப்பதற்கு முன், வாழ்நாளின் இறுதி எட்டு மாதங்களில் எழுதப்பட்ட படைப்புகள் வரை, சில்வியாவின் தனித்துவ பாணி என்று இன்று கொண்டாடப்படுபவை எல்லாமுமே அவரது வாழ்வின் சூழலையும், மனச்சிதைவையும், தற்கொலையையும் சேர்த்தே கருத்தில் கொண்டு பேசப்படுவது சில்வியா என்ற அதிசய மனுஷியின் ஒப்பற்ற கவிமனதிற்கு தகுந்த அங்கீகாரம் அளிக்க தவறுவதாகவே தோன்றுகிறது. படைப்பின் பேசுபொருட்கள், தீர்மானங்கள், முடிவுகள், பார்வைகள், மனித மதிப்பீடுகள் இவையெல்லாம் வேண்டுமானால் வாழ்வோடு தொடர்புடையவையாக இருக்கலாமேயன்றி அவரது படிமங்கள் உருவகங்கள் மற்றும் அதுவரையில் காணக்கிடைக்காத கவித்துவம் (கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நாவல் எல்லாவற்றிலும் தாராளமாக விரவிக் கிடக்கும்) எல்லாமும் மொழியின் பால் அவர் கொண்டிருந்த அசாதாரண திறத்தை எடுத்துக்காட்டுகின்றன.

அவரது கவிதைகளின் உள்ளீடுகளில் முக்கியமான தன்மையாக ஒப்புதல் வாக்குமூலம் (confessional) இருக்கிறது. சுயத்தை ஆழமாக வெளிப்படுத்தும் தன்மையிலான படைப்புகளின் மூலம் 1950களின் பிற்பகுதியிலும், 1960களின் முற்பகுதியிலும் அமெரிக்கவில் தோன்றிய இலக்கிய இயக்கமாக விளங்கியது இப்போக்கு. அதற்கு முன்னர் இல்லாத நவீன வகைமையான confessional poetry ‘நான்’ என்பதையும் ‘எனது’ எல்லா உணர்வுகளையும் உண்மைகளையும் தணிக்கை இன்றி முற்றிலுமாக பதிவுசெய்யும் போக்கை முன்வைத்தது. 1959 இல் வெளிவந்த அமெரிக்க கவிஞர் ராபர்ட் லோவெலின் ‘life studies’ என்ற கவிதை தொகுப்பு இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்த திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

சில்வியா என்ற பெண்ணின் குரலும் அவரது படைப்பில் தெரியும் மொத்த ஆளுமையின் குரலும் முற்றிலும் வேறானவை. இரண்டையும் குழப்பிக் கொள்வது அல்லது ஒன்றிலிருந்து ஒன்று, கொண்டும் கொடுத்தும் உறவாடியவை என்கிற நோக்கத்தில் அவரது படைப்புலகத்தை அணுகுவது முற்றிலும் தவறான பார்வையாகும். எழுத்தில் காணக்கிடைக்கும் ஆளுமையின் குரல் கவிதை என்ற வடிவத்தை, எழுத்தின் நுட்பத்தை, மொழியின் வார்த்தைகளின் ரகசியங்களை அறிந்த, வரிசைகளை கலைத்து கலைத்து, உடைத்து உடைத்து ஒன்று சேர்க்கும் முறைகளை, தன்னளவில் சோதனை செய்து அறிந்த, தெளிவுற கற்ற, ஒரு தீர்கமான குரல். சில்வியா என்ற பெண்ணிற்கு இருந்த தயக்கமும், சந்தேகமும், தாழ்வுணர்ச்சிகளும், தடுமாற்றங்களும் எல்லாவற்றையும் களைந்து அதற்குபதிலாக நிமிர்வையும் நம்பிக்கையையும் நிறைத்துக் கொண்ட குரல். எந்தப் படைப்பிலும் எந்தத் தருவாயிலும் ஒரு அபலைப் பெண்ணின் குரலாக, தன் புராணமாக, சுயநலமாக தன் மீது மட்டுமே கவனம் கொண்ட சுயமோகம் நிறைந்த கவிதையின் குரலாக ஒருபோதும் ஒலிப்பதில்லை.

சில்வியா அக்டோபர் 27, 1932-ல் மாஸசூசெட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் நகரில் பிறந்தவர். தாய் அவ்ரீலியா ப்ளாத் (1906–1994) ஐரோப்பாவின் ஆஸ்ட்ரிய நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். அப்பா ஓட்டோ ப்ளாத்(1885–1940) ஜெர்மானியர். பூச்சியியல் வல்லுனராக பாஸ்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பம்பில் பீஸ் (பெரிய கருவண்டுகள்) என்ற புத்தகத்தை எழுதியவர். சில்வியாவின் எட்டாவது வயதில் அவரது தந்தை நோய்வாயப்பட்டு இறக்கிறார்.

“அப்பா உங்களை நான் கொன்றிருக்க வேண்டும்
 அதற்குள் நீங்கள் முந்திக் கொண்டீர்கள்….
 உங்கள் ஜெர்மானிய மொழியில் உங்களுடன்
 பேசமுடியவில்லை.
 என் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
 முள் வேலியல் அமைந்த பொறியில் மாட்டிக் கொண்டது …
 தடுமாறினேன். பேசமுடியவில்லை
 எல்லா ஜெர்மானியர்களையும் உங்களைப் போல
 பாவித்தேன்.
 அந்த மொழியை ஆபாசமானதாகக் கருதினேன்.”

அவரது ‘அப்பா’ என்ற கவிதையில் தனது தந்தையைப் பற்றி எழுதுகிறார். அன்பைப் பகிர முடியாத கண்டிப்பான, தண்டனைகளைத் தவறாது தரும் தன் தந்தையைப் பற்றி கூறும் போது நாஸியான ஹிட்லருடன் ஒப்பிடுகிறார்.

‘லாசரஸ் அம்மையார்’யில் தந்தையைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.

“நான் உங்கள் வாழ்வின் ஆகச் சிறந்த படைப்பு
 நீங்கள் சமைத்த மகத்தான இசைக்கோர்வை.
 கூச்சலில் கரைந்து போகும்
 நீங்கள் பிரசவித்த பொன்சிசு”

கருவண்டுகள் தேனீக்களைப் பற்றியும் கவிதைகள் உண்டு. ‘தேனீ வளர்க்கும் பெட்டியின் வருகை’ என்ற கவிதையில் அந்த பெட்டி சவப் பெட்டியைப் போல் உள்ளதாக எழுதுகிறார்.

“நாற்காலியைப் போல சதுரமாக
 தூக்குவதற்கு கனமானதாக..
 உள்ளே இத்தனை இரைச்சல் இல்லாவிட்டால் இதை
 மீச்சிறிய மனிதனின் சவப்பெட்டி என்றோ
 சதுரமான குழந்தையின் சவப்பெட்டி என்றோ
 சொல்லலாம்…
 கதவுகளோ வெளியேரும் வழிகளோ இல்லை
 ஒரு கம்பிச் சட்டம் மட்டுமே
 நாளை அன்பான கடவுளாக அவற்றை விடுவிப்பேன்
 இந்தப் பெட்டி தாற்காலிகமானது”

1935-ல் சில்வியாவின் தம்பி வாரன் பிறக்கிறான். 1936-ல் மாஸாசூசெட்ஸ் மாகாணத்தில் வின்த்ராப் என்ற இடத்திற்கு, அவரது தாய் அவ்ரீலியாவின் பெற்றொர் வசிக்கும் இடத்திற்கு பக்கத்தில் குடியேறுகிறார்கள். அங்குதான் எட்டு வயது சில்வியாவின் முதல் கவிதை பாஸ்டன் ஹெரால்ட் பத்திரிகையின் குழந்தைகள் பிரிவில் பிரசுரமாகிறது. தொடர்ந்து பல குழந்தைகள் இதழ்களில் அவரது படைப்புகள் பிரசுரமாகின்றன. ஓவியத்திலும் தேர்ந்த கலைஞராக பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

நவம்பர் 5, 1940-ல் ஒட்டோ ப்ளாத் சிகிச்சை அளிக்கப்படாத சர்க்கரை நோயால் கால்கள் அழுகிய நிலையில் அதை நீக்க நடந்த அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்ட சிக்கலில் உயிரிழக்கிறார். அந்த சிறு வயதிலேயே தந்தையின் இழப்பிற்கு பிறகு யுனிட்டேரியனாக வளர்க்கப்பட்ட சில்வியா கடவுள் நம்பிக்கையற்றவராகிறார்.

1950-ல் வெல்லெஸ்லி பள்ளியில் தேர்ந்து பட்டம் பெறுகிறார். அந்நேரம் தி கிரிஸ்டியன் ஸயன்ஸ் மானிடர் என்ற இதழில் அவரது கவிதை பிரசுரமாகிறது.

1950-ல் ஸ்மித் காலேஜில் லிபரல் ஆர்ட்ஸ் பயில்கிறார். கல்லூரி இதழான ஸ்மித் ரிவ்யூவின் ஆசிரியராக பணியாற்றுகிறார். கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது பிரபல பத்திரிகையான ’மாத்ம்வாசில்’லில் கௌரவ ஆசிரியர் பதவி அவரை நாடி வருகிறது. அந்நேரம் ஒரு மாதம் நியூயார்க் நகரில் பணியாற்றுகிறார். அவரது பிரசுரமான ஒரே நாவல் ‘பெல் ஜார்’ -இல் நியூயார்க் அனுபவங்களை பகடியாக எழுதியுள்ளார். அந்த பெண்கள் பத்திரிகையில் வேலை செய்தது சில்வியாவிற்கு பெரும் ஏமாற்றத்தை தந்ததாக தனது டயரியில் குறிப்பிடுகிறார். (தனது பதினொராவது வயதிலருந்து தொடர்ந்து தன்குறிப்புகளை எழுதிவந்துள்ளார்)

பெல் ஜார் லண்டனில் 1963 ஜனவரி மாதம் ’விக்டோரிய லூகஸ்’ என்ற புனைப் பெயரில் பிரசுரமானது சில்வியா தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு. அதில் இடம்பெற்றிருந்த பாத்திரங்களில் பலர் தங்களை இனங்கண்டு கொள்ளக் கூடும் என்ற அச்சத்தில் அவர் புனைப்பெயரை எடுத்துக் கொண்டார். எனினும் அது பெரிய அளவில் பேசப்படும் என்பது பற்றிய எந்த சந்தேகமும் சில்வியாவிற்கு இல்லை. இதைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றும் அதன் உரிமைத் தொகையில் தன் பொருளாதார நெருக்கடியை தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் அதை பிரசுரித்தார். எனினும் அமெரிக்காவில் இதைப் பிரசுரிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.

“இங்கிருந்து வெளியேறும் நேரம் என் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை கிடைக்கப் பெறும் என்று நம்பிக்கைக் கொண்டிருந்தேன். என் மனதின் சிக்கல்களை ஆராய்ந்து அதற்கு தீர்வு சொல்வது தானே இங்குள்ள மருத்துவர்களின் கடமை. ஆனால் இப்போது எனக்கு தெரிவதெல்லாம் கேள்விக்குறிகள் மட்டுமே.” என்று பெல்ஜாரின் எஸ்தர் நாவலின் இறுதியில் சொல்கிறார்.

ஐம்பதுகளின் சமூக அரசியலைப் பகடி செய்த, பெண் உரிமை பேசிய எஸ்தர் க்ரீன்வுட் என்ற முக்கிய கதாபாத்திரம் சில்வியாவின் சாயலி்ல் இருப்பதை மறுக்கமுடியாது. மரத்தட்டுகளில் வைக்கப்படும் கேக் பேஸ்டிரி போன்ற இனிப்பு வகைகளைப் பாதுகாத்து அதே நேரம் காட்சிபடுத்தும் வண்ணம், ஆலய மணியின் வடிவத்தை ஒத்த தடிமனான கண்ணாடி மூடிகள் பெல் ஜார் என்று அழைக்கப்பட்டன. அதனுள் பாதுகாப்பாக இருந்து கொண்டு வெளி உலகை ஒரு பார்வையாளனைப் போல பங்கேற்காமல் கண்டு கழிக்க முடியும் என்று தன் வாழ்வை ஒட்டிய படிமத்தை எடுத்துறைக்க அந்தப் பெயரை பயன்படுத்தியுள்ளார். வேறொரு கோணத்தில் சுத்தமான வெளிகாற்று தரும் ஆசுவாசமின்றி தன் இனிப்பான ஆனால் திகட்டும் வாசத்திலேயே கிடந்து புழுங்கிப் புழுங்கிப் தவிக்கும் தன் அகவுணர்வையும் குறிப்பதாக அமைந்திருக்கிறது. பெண்ணாக இந்தக் குமைச்சல் எஸ்தரை கீழ் நோக்கி இழுக்கும் சுழலாக மனச்சிதைவிற்கு இட்டுச் செல்கிறது. தற்கொலை முயற்சியில் தோல்வியுற்று மனநல சிகிச்சை பெறுகிறார். இருந்தாலும் அவரை விடாது பின்தொடரும் இந்த பொல்லாப்பித்து எந்தேரமும் தன்னைத் தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் இந்தப் புதினம் முடிகிறது.

எஸ்தரின் குணவார்ப்பும், புத்திசாலித்தனமான கருத்துகளும் மனவோட்டமும் நம் வாசிப்பனுவத்தை வேறு தளத்திற்கு இட்டு செல்கின்றன. ஆண்களைப் பற்றியும், பெண்களைப்பற்றியும் அவர்கள் இடையில் உள்ள உறவைப் பற்றியும் எந்நாளைக்கும் பொருத்தமான விவரணைகளை எஸ்தரின் மூலமாக உலகிற்கு அளித்துச் செல்கிறார் சில்வியா. அது மட்டுமல்லாது பெருநகரத்தின் தனிமையும், அந்நியபடுத்துதலையும் அது எப்படி மனச்சிதைவிற்கு கொண்டு விடுகிறது என்பதையும் மிக உணர்வுப்பூர்வமாக எடுத்துறைக்கிறார். பெண்ணிற்காக தன் தேடலை முன்னெடுக்க இடம் கொடுக்காமல் சமூக பண்பாட்டு அரசியல், அவளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை எஸ்தர் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார். 

புனைப்பெயரில் இங்கிலாந்தில் வெளிவந்த போது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் அவரது இறப்பிற்கு பின் டெட் ஹ்யூக்ஸால் 1966-ல் இங்கிலாந்திலும், 1971-ல் அமெரிக்காவிலும் மறு பிரசுரம் செய்யப்பட்டது. அவரது அம்மா அவ்ரீலியா அமெரிக்காவில் வெளியடுவதை சில்வியா விரும்பியிருக்க மாட்டார் என்று இதைத் தடுக்க முயன்றார். ஆனால் டெட்டிற்கு இங்கிலாந்தில் வீடு வாங்குவதற்கு பணம் தேவைபட்டது. மேலும் சில்வியாவின் உடைமைகள் முழுவதும் கணவன் என்ற உரிமையில் டெட் ஹ்யூக்ஸிடம் தான் வழங்கப்பட்டது. அவரது இறப்பிற்கு முன்னதான டயரி குறிப்புகள் மற்றும் சில கவிதைகள் கதைகளை தீயில் இட்டு கொளுத்தியதாக (அவை வெளி வந்தால் பிள்ளைகள் சங்கடப்படுவார்கள், மேலும் அவை ஒரு பெண் எழுதக்கூடாதவைகள் அதனால் சில்வியாவின் மரியாதையை காப்பாற்றுவதற்காக அவற்றை அழித்ததாக) டெட் பல இடங்களில் கூறியுள்ளார்.

வெல்ஷ் மொழிக் கவிஞரான டிலன் தாமஸ் மேல் பெருமதிப்பும் அபிமானமும் கொண்டிருந்தார் சில்வியா. மாத்ம்வாசிலில் பணியாற்றிய நேரம் அவரை சந்திக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிடுகிறார். அவரது டயரிக் குறிப்புகளில் “என் வாழ்வினும் பெரிதான கவிஞர் டிலன்” என்று குறிப்பிடுகிறார். டிலன் தாமஸின்

‘எளிதாய் இந்த நல்லிரவிற்குள் சென்றுவிடாதீர்கள்
 மறைந்துகொண்டிருக்கும் ஒளியை எதிர்த்து ஆவேசங்கொண்டு
 போராடுங்கள்’

இறக்கும் தருவாயில் இருக்கும் தனது தந்தையிடம் மகன் சொல்வதாக அமைந்த இக்கவிதையையும் குறிப்பிட்டுள்ளார்.

டிலன் தாமஸை சந்திக்க முடியாத ஏமாற்றமும், ஃப்ராங்க் ஓ கானர் என்ற கவிஞரின் பயிற்சிப் பட்டறையில் (ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில்) அவருக்கு இடம் கிடைக்காத ஏமாற்றமும் சேர்ந்து ஒருவித சோர்வான மனநிலையில் 

“நான் என் கால்களில் கத்தியால் ஆழமாக கிழித்துக் கொண்டேன்… தற்கொலை செய்து கொள்ளும் மனத்திடம் உள்ளதா என்று பார்ப்பதற்கு சுழலும் சுகமான இருட்டினுள் நிம்மதியாக அமிழ்ந்தேன். உண்மையாக அந்த இருட்டு நிரந்தரமானதென்று நம்பினேன்”

என்று தனது டயரியில் எழுதியுள்ளார்.

“ஒரு கேவல் என்னுள் குடியிருக்கிறது
 இரவானால் இறக்கைகளை அடித்துக் கொண்டு வெளியில்
 பறந்து செல்கிறது
 காதலிப்பதற்கு ஏதாவது இருக்கிறதாவென
 அதன் கொக்கிகளினால் தேடியலைகிறது
 என்னுள் உறங்கும் இக்கருமையைக் கண்டு
 நான் பயந்து நடுங்குகிறேன்;
 நாளெல்லாம் அதன் மென் இறகுகளின்
 படபடப்பையும்
 விரோதத்தையும் எச்சரிக்கையுடன்
 கவனித்துக் கொண்டிருக்கிறேன்”

அடுத்த ஆறு மாதங்கள் மனநல விடுதியில் கரண்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாங்கமுடியாத வலியும் வாதையும் பயமும் நிரம்பிய அந்நாட்களைப் பற்றி மிக விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

(அந்நேரத்தில் நிறைய ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிபணிய வைக்க மனநல விடுதியின் சிகிச்சை முறைகளை சொல்லி பயங்காட்டியுள்ளனர். வேறு பெண்களை காதலித்த ஆண்கள், தங்கள் மனைவிகளை ஹிஸ்டீரியா பீடிக்கப்பட்டவர்கள் என்று பொய் சொல்லி இவ்விடுதிகளில் தள்ளி உள்ளனர். ஆண்கள் நிரம்பிய இச்சூழலில் கணவனின் வார்த்தை ஒன்றே போதுமானதாக இருந்ததுள்ளது. இவ்விடுதிகளில் ஆண்கள் எவரையும் காணமுடியாது, பெண்களாலேயே நிறைந்திருந்தது. ஹிஸ்டீரியா என்ற நோய் பெண்களை மட்டுமே தாக்கும் என்றும் நம்பப்பட்டது. பின்நாட்களில் இந்த இ.சி.டி சிகிச்சை முறை முற்றிலும் அறிவியல்பூர்மற்றது என்று நிரூபிக்கப்பட்டு கைவிடப்பட்டது )

சில்வியா நோயிலிருந்து தற்காலிகமாக மீண்டு ஜனவரி 1955-ஆம் ஆண்டு கல்லூரி திரும்புகிறார். முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை “மாயக் கண்ணாடி: டஸ்டாவேய்ஸ்கியின் இரு புதினங்களில் உள்ள இரட்டைகளைப் பற்றிய ஆய்வு” என்ற தலைப்பில் சமர்பிக்கிறார். சம்மா கம் லாட் என்ற முதன்மையான, இருப்பதிலேயே உயர்ந்த நிலையில் தேர்ந்த, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பலகலைகழகத்தில் முழு உதவித்தொகை பெற்ற மாணவியாக (இரண்டு மாணவிகள் மட்டுமே உள்ள வகுப்பு) சேர்கிறார். விடுமுறை நாட்களில் ஐரோப்பாவைச் சுற்றி பயணம் செய்கிறார்.

1956 பிப்ரவரி மாதம் கவிஞர் டெட் ஹ்யூக்ஸை சந்திக்கிறார்.

“சில இதழ்களில் டெட்டின் கவிதைகளை படித்திருக்கிறேன்; பிடித்திருந்தது அவரை சந்திக்க விரும்பினேன். ஒரு சிறிய விழாவில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். தொடர்ந்து பல முறை சந்தித்தோம். டெட் கேம்ப்ரிஜ் பல்கலைக்கு திரும்பினார். ஒருவருக்கு ஒருவர் நிறைய கவிதைகளை பரிமாறிக் கொண்டோம்… சட்டென்று திருமணம் செய்து கொண்டோம். இருவரும் அவ்வளவு எழுதினோம்… இது இப்படியே தொடர வேண்டும்….

டெட் ஒரு பாடகன், கதைசொல்லி, சிங்கம், உலகம் சுற்றுபவன், கடவுளின் இடிமுழக்கம் போல குரல் கொண்டவன்”

ஜீன் 16, 1956-ல் லண்டனின் ஸேன்ட ஜார்ஜ் தி மார்ட்யர் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். பாரீஸிலும் ஸ்பேயினிலும் தேன்நிலவு கொண்டாடினர்.

“உன் தெளிவான ஒளி உமிழும் கண்கள் போன்ற
 அழகான ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை
 அதை நான் காதலால் வண்ணங்களால் நிரப்ப வேண்டும்”

இருவரும் கல்லூரிக்குத் திரும்பினர். இந்த சமயத்தில் டெட்டிற்கு விய்ஜா பலகையை வைத்து ஆரூடம் பார்ப்பதிலும், சோதிடத்திலும் ஆர்வம் வந்தது. டெட் அதை சில நாட்கள் பயின்று வந்தார். தன் வாழ்வின் முடிவுகளை அதன் ஆரூடத்தின் பெயரில் எடுக்கத் தொடங்கினார். சில்வியாவும் கணவனுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்று அதில் ஆர்வம் கொள்ள முயல்கிறார்.

1957-ல் இருவரும் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தனர். தான் பயின்ற ஸ்மித் கல்லூரியிலேயே பணியில் அமர்ந்தார் சில்வியா. ஆசிரியப் பணியுடன் சேர்ந்து எழுதுவதையும் தொடர்ந்து வந்தார். 1958-ல் பாஸ்டன் நகருக்கு மறுபடி இடம் பெயர்ந்தனர். அங்கு ஒரு மருத்துவமனையின் மனநலப் பிரிவில் வரவேற்பாளாராக பணியில் சேர்ந்தார். இந்த இடமாற்றங்கள் எல்லாமுமே கணவன் டெட் ஹ்யூக்ஸின் வேலையின் நிமித்தமாக நடந்தவை.

சில்வியா எங்குமே தனக்கு வேண்டியதை அழுத்தமாகக் கூறிப் பெறமுடியாதவராக இருந்துள்ளார். கணவனுக்காக ஒவ்வொரு முறையும் தன் வாழ்வை, வேலையை மாற்றியமைக்க தயங்கவில்லை. ஒவ்வொரு முறையும் சில்வியா முதலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயதிற்கு உட்பட்டார். மேலும் ஒவ்வொரு இடப்பெயர்வும் தாங்கமுடியாத மன வாதையை அளித்துள்ளது. ஏற்கனவே மனச் சிக்கலில் உள்ளவர்களுக்கு ஒரு நிலையான இடமும் வேலையும் மிகவும் இன்றியமையாததாகும். ஒவ்வொரு முறையும் புது சூழலும் மனிதர்களும், தனது தகுதிக்கு சிறிதும் பொருந்தாத வேலையும் அவரது மன நோய் மேலும் தீவிரமடைய காரணமாக இருந்தன. ஆனால் விடாது ஒவ்வொரு முறையும் தன்னைத் தானே மீட்டெடுக்கவும் பெரு முயற்சிகள் மேற்கொள்கிறார். இங்கு ராபர்ட் லோவெல் நடத்திய வகுப்புகளில் சேர்ந்து தன் கவிமனதையும், இலக்கியச் செயல்பாட்டையும் தக்க வைத்துக் கொள்கிறார்.

உணர்வுப் பூர்வமான, சமகாலத்தைப் பேசிய லோவெல்(confessional poetry-இன் தந்தை) கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

“இந்த வாரம் எங்கள் வீடு விலைபேசப்பட்டது
 அந்நியர்களின் மத்தியில் விழித்தெழுந்தேன்;
 நான் ஒரு அறைக்குள் சென்றால் அது கூச்சத்தால்
 நெளிகிறது, சட்டென்று வெளியேறி வேறொர் அறைக்குப்
 பின்னால் ஒளிந்து கொள்கிறது”

-ராபர்ட் லோவெல்

இந்தச் செஞ்சுவர் வலியில் ஓயாமல் நடுங்குகிறது
 சிவந்த கையொன்று முட்டியதால், திறந்து திறந்து
 மூடுகிறது.

-சில்வியா ப்ளாத்

சில்வியாவின் பல்வேறு கவிதைகளில் , அவர் தேர்ந்தெடுக்கும் பாடுபொருட்களில் லோவெலின் தாக்கத்தைக் காணலாம்.

இந்த வகுப்புகளில் சில்வியா ஆன் செக்ஸ்டன் என்ற கவிஞரையும் சந்திக்கிறார். இருவரும் நெருங்கிய தோழிகளாகிறார்கள். கவிஞர் லோவெல், ஆன் இருவரும் பின்னால் புலிட்சர் பரிசை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில்வியா, லோவொல், ஆன் ஆகிய மூவருமே இந்த வகைமை (confessional poetry) கவிதைகளின் பிதாமகர்களாக கருதப்படுகிறார்கள்.

லோவவல்லும் ஆனும் சில்வியாவை எழுதத்தூண்டுகிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள். சில்வியாவால் இவர்களிடன் மனம் திறந்து பேச முடிகிறது. தன்னுடைய மனச்சிக்கல்களைப் பற்றி வெளிப்படையாக உரையாட முடிகிறது. முன்முடிவுகள் ஏதும் இல்லாமல் சில்வியாவை, தன் மனதிற்கு பிடித்தமான செயல்களைச் செய்ய, தன்னியல்பாக எழுத உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த காலகட்டத்திலும், இதைத் தொடர்ந்தும் சில்வியாவின் கவிதைகள் வேறு வண்ணம் பூசிக் கொள்கின்றன. அவரது குரல் தயக்கமின்றி ஓங்கி ஒலிக்கிறது. அதுவரை பேசாத தனது அகமனச் சிடுக்குகளை, வெளிப்படையாக கவிதைக்குள் வைக்கிறார்.

“நான் காகிதத்தாலான லாந்தர் விளக்கு — என் தலை
 ஜப்பானியத் தாளால் செய்த நிலவு
 என் தோல் அடித்துத் தட்டையாக்கப்பட்ட பொன்
 அதி மிருதுவானது, விலைமதிப்பற்றது”

ஆண் கவிஞர்களின் அடியொட்டியே பெண்களும் எழுத வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை என்றும், சில்வியாவின் பெண்ணியப் பார்வை கொண்டு, ஆன்மாவிற்கு உண்மையாக எழுதுவதே சிறந்தது என்றும், அது சிலருக்கு உவப்பானதாக இல்லையென்றாலும் அதைப் பற்றிய கவலைக் கொள்ள அவசியமில்லை என்றும் ஆன் தான் சில்வியாவிற்கு நம்பிக்கைத் தருகிறார். கவிதை புலத்தின் வேறு வேறு தளங்களில் உலவ தைரியமூட்டுகிறார் ஆன். சில்வியாவின் கவிதைகளில் ஒலிக்கும் ஆளுமை மிகுந்த குரலை, கண்டடைய தனக்கு உதவியவர் ஆன்தான் என்று தனது டயரியில் சொல்லியிருக்கிறார். தான் ஒரு கவிஞர் என்றும் எழுத்தாளர் என்றும் உணரத்தொடங்கியதே ஆனை சந்தித்த பின்னர்தான் என்றும் சொல்கிறார்.

“நான் செங்குத்தானவள்
 ஆனாலும் கிடைமட்டமாக இருப்பதையே விரும்புகிறேன்
 …
 மீச்சிறு வெளிச்சம் கொண்ட நட்சத்திரங்கள்
 நிறைந்த இவ்விரவில்
 மரங்களும் பூக்களும் தங்கள்
 குளுமையான சுகந்தத்தை
 சிதறுகின்றன
 …
 இப்படிப் படுத்திருப்பதே எனதியல்பாக இருக்கிறது
 வானமும் நானும் இயல்பாக உரையாடுகிறோம்
 …
 மரங்கள் எனை தொடத் தோதாக
 பூக்கள் என்னுடன் பேச ஏதுவாக

இவர்கள் இருவர் தந்த ஊக்கத்தால் தனது கவி பயணத்தில் பல சோதனை முயற்சிகளை செய்ததாகவும், தன் பார்வையும், தனது எழுத்தின் தன்மையும் மாறியதாக குறிப்பிடுகிறார். எனினும் இது வெகு நாட்கள் நீடிக்கவில்லை.

மறுபடியும் இடப்பெயர்வு செய்யவேண்டி வருகிறது. சில்வியாவும் டெட்டும் கனடா முழுவதும் ஊரூராக மாறி வசிக்கிறார்கள். தனது மனச் சிக்கலுக்கான சகிச்சையை மறுபடி தொடங்குகிறார். ஆனால் இந்த தொடர் இடப் பெயர்வுதான் தன்னை தனக்கே அறிமுகப்படுத்தியதாகவும் ஒரு கட்டத்தில் எழுதுகிறார் சில்வியா.

“எனக்கான பிரத்யேகமான பைத்தியக்காரத்தனத்தை, பித்தை, தனித்துவத்தை வெட்கமின்றி ஏற்கவும், பிரகடனபடுத்தவும் கற்றுத் தந்த வருடங்கள்”

1959-ல் லண்டனுக்கு திரும்புகிறார்கள். 1960 ஏப்ரல் மாதம், முதல் மகள் ஃப்ரீடா பிறக்கிறார். அதே வருடம் அக்டோபரில் தனது முதல் கவிதைத் தொகுப்பான – The Colossus-யை பிரசுரிக்கிறார் சில்வியா.

1961 ஆம் ஆண்டு இரண்டாம் முறை கரு உண்டாகி அது கலைந்துவிடுகிறத. தனது மனநல மருத்துவருக்கு எழுதிய கடித்த்தில் கணவன் டெட் ஹ்யூக்ஸ் தன்னை இரு தினங்களுக்கு முன் அடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“உங்களை பார்க்கப் பார்க்க அயர்ச்சியாக உள்ளது
 சுருக்கங்களுடன் தெளிந்த சிவப்பில்
 உதடுகளைப் போல அசைகிறீர்கள்
 இப்போது ரத்தம் வடியும் உதடுகள்
 ரத்தம் படிந்த பாவாடைகள்!”

அதே வருட ஆகஸ்ட் மாத்த்தில் தன்னுடைய நாவலான பெல் ஜாரை எழுதி முடித்துவிட்டார். லண்டனை விட்டு சிறு நகரமான டாய்டனில் குடி புகுகிறார்கள். இரண்டாவது மகன் நிக்கலஸ் 1962 ஜனவரியில் பிறக்கிறான். லண்டனுக்கு திரும்பிய காலம் முதலே அவரது கணவன் டெட் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இது நன்றாக அறிந்திருந்தும் சில்வியா, டெட் திருந்தி தன்னிடன் வருவார் என்று காதலோடு பொருமையாகக் காத்திருக்கிறார். ஆனால் வன்முறையும், விலகலும், அவமரியாதையும் வேறு பெண்களுடன் தொடர்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஜூன் 1962-ல் ஒரு சிறிய கார் விபத்தில் காயமடைகிறார் சில்வியா. இதைத் தனது டயரியில் தனது பல தற்கொலை முயற்சிகளில் ஒன்றெனக் குறிப்பிடுகிறார். அது விபத்தா அல்லது தற்கொலை முயற்சியா என்று தெளிவாகத் தெரியவில்லை.

அந்நேரத்தில் டெட் ஆசிய வீவில் என்ற பெண்ணை காதலிப்பதாக சில்வியாவிடம் கூறுகிறார். 1962 செப்டெம்பரில் டெட் ஹ்யூக்ஸூம் சில்வியாவும் பிரிந்து வாழ முடிவு செய்கிறார்கள். (சட்டபூர்வமாக இல்லாமல், தங்களுக்குள் எழுதப்படாத உடன்படிக்கையாக)

அக்டோபர் மாதம் தொடங்கி தனது இறப்பு வரைக்கும் கவிதைப் பிசாசால் ஆட்கொண்டது போல கவிதைகளை எழுதிக் குவிக்கிறார். அவர் இறப்பிற்கு பின் வெளியிடப்பட்ட ‘ஏரியல்’ என்ற தொகுப்பின் பொரும்பான்மையான கவிதைகள் இந்த காலகட்டத்தில் எழுதியவையே. இத்தொகுப்பின் கவிதைகள் கலோசஸ் என்ற முந்தைய தொகுப்பின் கவிதைகளிலிருந்து முழுமையாக மாறுபட்டவை. தன் அகத்தை, அதன் அழுக்குகளை, மனதின் பிரத்யேகமான சிக்கல்களை, உணர்வெழுச்சிகளை, மனதின் அதலபாதாள வீழ்ச்சிகளை அவருக்கே உரிய பிரத்யேகP பாணியில் கவித்துவமாக வெளிப்படுத்திய தொகுப்பு “ஏரியல்”.

“இரவெல்லாம் இப்படியே நான்கு கால் பாய்ச்சலில் ஓடுவேன்
 யோசனையற்று வேகமாக
 உன் தலை கல்லாகும் வரை
 உன் தலையணை சிறு மைதானமாகும் வரை
 குளம்படிகள் உன்னுள் திரும்பத் திரும்ப எதிரொலிக்க…”

“இறப்பென்பது
ஒரு கலை, எல்லாவற்றையும் போல 
அதில் கைதேர்ந்தவளாகி விட்டேன் 
அதை நரகமென்று உணரும் வகையில் செய்பவள்
அதை உண்மையென்று உணரும் வகையில் செய்பவள்”

1962-1963 இன் கூதிர் காலம் மிகக் கடுமையானதாக இருந்தது. இங்கிலாந்தின் 100 வருடத்தில் அப்படி ஒரு குளிரை பார்த்ததில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இரண்டு வயதும் ஒன்பது மாதமும் ஆன, அடிக்கடி உடல்நலம் குன்றி அழுதுக் கொண்டும் இறுமிக் கொண்டும் இருக்கும் இரண்டு சிறு குழந்தைகளுடன், தண்ணீர் குழாயில் கூட நீர் வராமல், ஐஸ் கட்டியாக உரைந்து போயிருந்த கடும் குளிரில், தொலைபேசி வசதியில்லாத வீட்டில், அமெரிக்காவிற்கு அம்மா வீட்டிற்கு திரும்பிச் செல்ல பொருளாதார வசதியன்றி, தன் குழந்தைகள் பராமரிப்பிற்கு கூட பணம் தராமல் காதலியுடன் உல்லாசமாக பக்கத்துத் தெருவிலேயே வசிக்கும் டெட் ஹ்யூக்ஸை பற்றிய மன உளைச்சலுடன், தனது மனச்சிதைவிற்கும் மருத்துவம் பார்க்க இயலாத சூழலில் சில்வியா உலகின் கவிதைப் போக்கையே மடைமாற்றும், காலத்திற்கும் நிற்கும் மிக உன்னதமான கவிதைகளை தட்டச்சுசெய்துகொண்டிருந்தார்..

1963 ஜனவரியில் தன்னுடைய மருத்துவரிடம் பேசியுள்ளார். கடந்து எட்டு மாதங்களாக உணரும் கடுமையான மன உளைச்சலைப் பற்றி கூறியுள்ளார். தூக்கமின்னையாலும் பீடிக்கப்பட்டுள்ளார். தூக்க மாத்திரைகள் எடுத்தும் எந்த பயணும் இல்லாது இருப்பதை குறிப்பிட்டுள்ளார். பத்து கிலோ உடல் எடை குறைந்து காணப்பட்டுள்ளார். மருத்துவர் சில்வியாவின் தோழரும் கூட அதனால் தினமும் அவரைச் சென்று பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். பின்னாட்களில் டெட் ஹ்யூக்ஸ் அந்த மருத்துவரின் தப்பான சிகிச்சையே சில்வியாவின் இறப்பிற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவர் இறந்த செய்தி வரும் வரை டெட் சில்வியாவையோ தனது பிள்ளைகளையோ சென்று பார்க்கவில்லை. சில்வியாவின் தனது டயரி குறிப்புகளில் டெட்டை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது பற்றி எழுதி உள்ளார்.

எது எப்படியோ பெப்ரவரி 11, 1963 காலை ஒன்பது மணிக்கு அவரது வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது சில்வியா அடுப்பினுள் தலை வைத்த நிலையில் இறந்து கிடந்தார். அடுப்பின் வாயூ அடுத்த அறைக்கு போகாதவாறு துவாலைகள் டேப்புகள் கொண்டு இண்டு இடுக்குகளை அடைத்துள்ளார். அவருக்கு அப்போது 30 வயது. (ஆறு வருடங்கள் கழித்து ஹ்யூக்ஸின் காதலி ஆசிய வீவிலும் இதே போல அடுப்பை திறந்து விட்டு விஷ வாயுவினால் தற்கொலை செய்து கொண்டார்)

ஹெப்டோன்ஸ்டாலில் சென் தாமஸ் தி அபோஸில் ஆலய கல்லறைத் தோட்டத்தில் சில்வியாவின் கல்லறை உள்ளது.

அவரது மகள் ஃப்ரீடா ஹ்யூக்ஸ் ஓவியர் மற்றும் எழுத்தாளர். மகன் நிக்கோலஸ் மார்ச் 16, 2009-ல் அலாஸ்காவில் தற்கொலை செய்து கொண்டார். அவரும் தீவிர மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அறுபதுகளின் இறுதியில் அவரது தொகுப்பு கொலாசஸ் மற்றும் வேறு கவிதைகள் வெளிவந்த போதே சில்வியா பல விருதுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். ஆனாலும் 1965 யில் பிரசுரமான தொகுப்பு ஏரியல் தான் உலகமெங்கும் அவரது புலமையை எடுத்துச் சென்றது.

“இது மூன்றாவது முறை
 என்ன ஒரு அவலம்
 ஒவ்வொரு தசாப்தத்தையும்
 அழித்து நிர்மூலமாக்குகிறேன்

ஆயிரம் வெளிச்ச இழைகள்
 வேர்கடலை கொரிக்கும் கூட்டம்
 முண்டியடித்துக் கொண்டு வரும்”

பத்து வயதில் ஒரு முறை, இருபதாவது வயதில் ஒரு முறை 30 வயதில் பலமுறைகள் என ஒவ்வொரு தசாப்தத்திலும் தான் மேற்கொண்ட தற்கொலை முயற்சிகளைப் பற்றிப் பேசுகிறார் லாசரஸ் அம்மையார் என்ற கவிதையில்.

“ஒரு வருடம் அல்ல ஏழு வருடங்களாக
 என் ரத்தத்தை குடித்த அந்த சாத்தான்
 உங்கள் அடையாளத்தைக் கொண்டிருந்தது”

அப்பா என்கிற கவிதையில் தன் தந்தையையும் கணவனையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

விடியல் கானம் என்ற கவிதை ஒரு கலைஞனின் வெளிப்பாட்டு சுதந்திரத்தைப் பற்றிய மிக உன்னதமான கவிதையாக இன்று வரை புகழப்படுகிறது

“காதலினால் உருவானவன் நீ
 தடித்த பொன் கடிகாரத்தைப் போல
 தலைகீழாகப் பிடித்து உன் பாதங்களை
 தட்டினாள் மருத்துவச்சி
 உணர்வற்ற உன் அழுகை
 இப்பிரபஞ்சத்தின் அங்கமானது….

சதுர ஜன்னல் வெளுத்து
 நட்சத்திரங்களை முழுங்குகிறது
 உயிரெழுத்தின் சுத்தமான ஒலிகள்
 ஒரு பலூனைப்போல மேலெழும்புகின்றன”

கவிஞராக பரவலாக அறியப்பட்ட சில்வியா ப்ளாத் கவிதைகளை மிஞ்சும் அளவு உரைநடைகளும் எழுதியுள்ளார். எண்ணிக்கையில் எழுவதிற்கும் அதிகமான பிரசுரிக்கப்படாத சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது தட்டச்சுப் பிரதியின் நகல்கள் இன்றும் பல நூலகங்களில் காணக்கிடைக்கின்றன. இந்தியானா பல்கலைக்கழகத்தின் லில்லி நூலகத்திற்கு சில்வியாவின் அம்மா அவ்ரீலிய ப்ளாத் வழங்கிய ஆவணங்களில் 70 சிறுகதைகள் 1960 யில் தொடங்கி அவரது இறுதி காலம் வரை எழுதியவை. அவரே எல்லாவற்றையும் நிராகரித்திருந்தார்.

பெல் ஜார் என்ற நாவல் வருவதற்கு முன் ‘stone boy with a dolphin’ என்ற நாவலின் பெரும்பான்மை பிரதி இன்றும் இருக்கிறது. பெல் ஜாரிற்கு பிறகு 130 பக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்ட, Double exposure என்று தலைப்பிடப்பட்ட நாவல் ஒன்று மர்மமான முறையில் 1970 களில் தொலைந்து போனது. டெட் அந்த நாவலின் 130 பக்கங்கள் மட்டும் உள்ளதென்று சில்வியாவின் இறப்பிற்குப் பின் சொன்னார். 2 வருடங்கள் போனதும் அதில் 60 பக்கங்கள் மட்டுமே உள்ளதென்றார். சிறிது வருடங்களுக்குப் பின் 20 பக்கங்கள் கூட இருக்காது அது நாவலாகவோ, சிறு கதையாகவோ மாற்ற முடியாத கரட்டு வடிவம் என்று கூறிவிட்டார்.

ஜானி பானிக் அண்ட் தி பைபில் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற சிறுகதைகள் மற்றும் குறுங்கதைகள் கொண்ட தொகுப்பு டெட்டின் முன்னுறையுடன் 1977-ல் வெளியிடப்பட்டது. அதில்,

“இந்தத் தொகுப்பில் சில்வியா நிராகரித்த கதைகள் சிலவற்றைச் சேர்த்திருக்கிறேன். அவர் தேர்ந்த கதைகள் சிலவற்றை நான் நிராகரித்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“சில்வியா ஒரு கவிஞர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது அதுவும் அவரது வாழ்நாளின் கடைசி ஆறு மாதங்களில் எழுதிய கவிதைகள் மூலமாக மட்டுமே இன்றும் பேசப்படுகிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று எழுதியுள்ளார் டெட்.

அதன் இரண்டாவது பிரசுரத்தில் மேலும் பல கதைகளையும் சேர்த்திருந்தார். தொகுப்பின் தலைப்பாக இருக்கும் சிறு கதையில் தன்னுடைய பதற்றத்திற்கு (panic) ஜானி என்ற பெயரிட்டு அதையும் ஒரு பாத்திரமாக சமைத்திருப்பார்.

“பயம்; அது ஒன்று மட்டுமே நம் காதலுக்குத் தகுதியானது
 பயத்தை காதலிப்பதே நம் ஞானத்தின் தொடக்கம்
 பயம் மட்டுமே நம் காதலுக்கு தகுதியானது
 பயம், பயம் மேலும் பயம் எல்லாவிடங்களிலும் பிரவகிக்கட்டும்”

“நான் தொலைந்து விட்டேன் என்று நம்பிய தருணத்தில் ஜானி பானிக்கின் முகம் விதானத்தில் பல வண்ணங்களில் மிளிர்ந்தது. அவனது தாடி மின்னலைப் போன்றது. அவனது கண்களில் மின்னல்; அவனது வார்த்தை பிரபஞ்சத்தில் உணர்வேற்றி ஒளியூட்டுகிறது. மின்னலை ஒளிவட்டமாகக் கொண்ட அவனது நீல நாக்குத் தேவதைகள்
 வெளியெங்கும் வியாபித்திருக்கிறார்கள்.
 அவனது காதல் இருபது மாடி பாய்ச்சல், கழுத்தில் கயிறு, இதயத்தில் கத்தி.
 அவன் தனக்குண்டானவர்களை மறப்பதில்லை.

என்று அந்த சிறுகதையை முடித்துள்ளார். இதில் தன் பயங்களும், பதற்றங்களும் தன் வாழ்வை, எண்ணத்தை, எழுத்தை எவ்வாறு தீர்மானிக்கின்றன என்பதை மிகத் தெளிவாக விளக்கியிருப்பார்.”

1971-ல் வின்டர் ட்ரீஸ் மற்றும் க்ராசிங் த வாடர் என்ற கவிதைத் தொகுப்புகள் வெளியிடப் பட்டன. 1981-ல் தி கலெக்டெட் பொயம்ஸ் என்ற தொகுப்பை டெட் தன் திருத்தங்களோடு வெளியிட்டுள்ளார். இதில் 1956 முதல் இறுதி காலம் வரை அவர் எழுதிய கவிதைகள் அனைத்தும் உள்ளன. 1982 ஆம் ஆண்டு இந்தத் தொகுப்பு புலிட்சர் பரிசு பெற்றது. சில்வியா இறப்பிற்கு பின் புலிட்சர் விருது பெற்ற முதல் படைப்பாளியாவார். ஆனால் 2006-ல் ஆனா ஜார்னி என்ற வர்ஜீனிய பல்கலைகழக மாணவி “ஆன்வி” என்ற சில்வியாவின் இதுவரை வெளிவராத சொனட் வகை கவிதை ஒன்றைக் (சில்வியா ஸ்மித் கல்லூரியில் இருந்த காலகட்டத்தில் எழுதியது) கண்டெடுத்தார். 2007-ல் அந்தக் கவிதை இணைய பத்திரிகை ஒன்றில் பிரசுரமானது.

சில்வியாவின் தாய் அவ்ரீலியா 1975-ல் அவரது கடிதங்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து லெட்டர்ஸ் ஹோம்: கரஸ்பாண்டன்ஸ் 1950- 1963 என்று புத்தகமாக வெளியிட்டார். 1950 யிலிருந்த அவர் எழுதி வந்த டயரி குறிப்புகள் 1980-ல் டெட் ஹ்யூக்ஸின் திருத்தங்களுடன் தி ஜார்னல்ஸ் ஆஃப் சில்வியா ப்ளாத் என்று வெளியடப்பட்டன. ஆனால் அதில் சிலவற்றை டெட் தர மறுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.

1959இல் சில்வியா குழந்தைகளுக்காக எழுதிய “இட் டஸன்ட் மேட்டர் சூட்” என்ற கதை 1996இல் வெளிவந்தது. 2003இல் அவரது வாழ்வு ஒரு திரைப்படமாக வெளிவந்தது. க்வினித் பால்ட்ரோ சில்வியா இன் பாத்திரைத்தை ஏற்று நடித்துள்ளார்.

1998இல் டெட் ஹ்யூக்ஸின் இறப்பிற்கு பிறகு 2000 தில் ஆங்கர் புக்ஸ் என்ற நிறுவனம் “தி அன்அப்ரிஜிட் ஜர்னல்ஸ் ஆஃப் சில்வியா ப்ளாத்” என்று டெட்டின் தலையீடு இல்லாமல் வெளியட்டது. இந்தப் புத்தக வெயீட்டை ஆங்கில இலக்கிய உலகு ஒரு உன்னத இலக்கிய செயல்பாடாக கொண்டாடியது. இதில் பாதிக்கும் மேல் புதிதாக வெளிவருபவை. முதல் முறையாக எந்தத் தணிக்கையும் இல்லாமல் சில்வியா என்ற மாபெரும் கவிஞரின், எழுத்தாளரின், மனுஷியின் உண்மையான முகத்தை உலகிற்கு காட்டிய நூல் இது.

சில்வியா ரேடியோவிற்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒரு கவிஞர் எதற்காக நாவல் எழுதவேண்டும் என்று கேட்கப்பட்ட போது,

“கவிதை என்பது ஒரு கறாரான வடிவம் – ஒரு சர்வாதிகாரியைப் போன்றது இவ்வளவு தூரம் தான் செல்லலாம், இவ்வளவு விரைவாகச் செல்லவேண்டும் இவ்வளவு இடம் தான் எடுத்துக் கொள்ளலாம் என்ற எழுதாச் சட்டதிட்டங்கள் நிறைந்தது. நான் ஒரு பெண். வெளிப்பார்வைக்கு அற்பமாகத் தோன்றுபவை, முக்கியமற்றவை, சாரமற்றவை எல்லாம் எனக்கு முக்கியம். அன்றாடங்களும், அன்றாடப் பொருட்களும் எனக்கு தேவை. உதாரணத்திற்கு பல்துலக்கியை எப்படி கவிதைக்குள் கொண்டு வர முடியும் ஆனால் நாவலில் பல்துலக்குதலை , பல்துலக்கியைப் பற்றி எழுதலாம். அதனால்தான் நாவல் எழுதினேன்”

என்று தேவையில்லாத கேள்விகளுக்கு பகடியாக பதில் தந்திருக்கிறார். அன்றாடங்களை தனது கவிதைகளில் பல இடங்களில் கையாண்டிருக்கிறார். அன்றாடங்களை உன்னதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

“ஒரு சோப்புக்கட்டி
 ஒரு தங்க மோதரம்
 ஒரு தங்கப் பல்

இச்சாம்பலில் இருந்து
 உயிர்த்தெழுவேன்
 செம்பட்டு கேசத்துடன்”

பெல் ஜார் நாவலில் “இங்கு நான் சந்திக்கும் ஒவ்வொருவரும், பெண்ணின் ஆளுமையை, நம்பிக்கையை, அவளடைந்த வெற்றிகளை குறைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆண்கள் செய்யும் மிகச்சாதாரணமானவற்றை எல்லாம் ஊதிப் பெருக்குகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார் சில்வியா. இன்று வரை இந்த முரண்களும், இரட்டை மதிப்பீடுகளும் முழுவதுமாக நீங்கவில்லை. கேட்லின் மோர் எழுதிய “How to be a woman” மற்றும் டினா ஃபேயின் “Bossy pants” போன்ற சம கால நாவல்கள் சில்வியாவின் பெல் ஜார் விட்ட இடத்திலிருந்து தொடங்குபவையாக விளங்குவதிலிருந்து இதைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடிகிறது 

“இறந்து பிறந்தவை
 இக்கவிதைகள் வாழவில்லை…..
 உயிரோடிருந்தால் நன்றாக இருக்கும்
 உயிரோடிருந்தவைகள்தாம்
 இப்போது இறந்துவிட்டன
 அவற்றின் தாய் கிட்டதட்ட இறந்துவிட்டாள்
 அவளது கவிதைகள் பொருளற்று விழிக்கின்றன
 அவளைப்பற்றி பேச மறுக்கின்றன”

மிகக் கொடூரமான தனது வாழ்வை மிக உன்னதமான கவிதைகளாக மடைமாற்றம் செய்கிறார்

“மடங்கிய விரலொன்றைப் போலத் தூங்கினேன்

நான் முதலில் பார்த்தது காற்று மட்டுமே வேறொன்றுமில்லை 

…என் விரல்கள் கண்ணாடியைப் போல பளபளப்பாக வளர்ந்தன மார்ச் மாத மரங்களைப் போல கிளைத்துக் கிளைத்துப் படர்ந்தேன். வளர்ந்தேன்”

 வசிக்கும் இடத்தின் நிலவியலே மனதின் நிலவியலை நிர்ணயம் செய்கிறது. மனதின் நிலவியலே எழுத்தின் நிலவியலை நிர்ணயம் செய்கிறது. மொழிதிறத்தாலும் கவித்திறத்தாலும் அற்புத ரசவாதங்கள் செய்து காலத்திற்கும் நிற்கும் கவிதைகளை உரைநடையைப் படைத்தது மட்டுமல்லாமல் நவீனக் கவி உத்திகளை கண்டெடுத்த சில்வியா, தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட எட்டா உயரத்தின் உன்னத இலக்குகளை எட்டிப் பிடித்திருக்கிறார்.

 அவரது ஆளுமையின் விஸ்தீரணமும், ஆழமும், கவித்திறனும் இன்னும் முழுதாக பேசப்படவில்லை என்பதே உண்மை.

***

அனுராதா ஆனந்த் – சென்னையில் வசித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இலக்கிய பங்களிப்புகளை மொழிபெயர்ப்புகளின் வழியேவும் நேரடிப் படைப்புகளின் வழியேவும் செய்துவருகிறார். இதுவரை ஒன்பது மொழிபெயர்ப்பு நூல்களும் “மயிற்பீலி” எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியிருக்கிறது. அச்சிறுகதைத் தொகுப்பிற்காக ஜெயந்தன் விருது வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னஞ்சல்: anuradha_anand@yahoo.com

என் கவிதைகள் உள்ளத்தில் அமைதி பரப்பும் சுடரின் நிழல்!

0

நேர்காணல் : கார்த்திகா முகுந்த்

நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்

கார்த்திகா முகுந்த் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்தவர். தற்சமயம் பெங்களூரில் கணவர் மற்றும் மகளோடு வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 6 கவிதைத் தொகுப்புகள், சிறார் கதைகள் தொகுப்பு ஒன்று, ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றன. கல்கி, தமிழ்வெளி போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். கார்த்திகாவை திரு. லக்ஷ்மணன் அவர்கள் வழியாக தெரியும். இவளுக்கு இவள் என்றும் பெயர் என்ற இவருடைய முதல் தொகுப்பு 2010-இல் வெளியாகியது. அதன் பின்னர் ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான், துமி, க்ளாட் மொனேயின் மரத்தடிப் பெண், என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது, ஜிக்ஸா துண்டுகளைத் திருடிச் செல்பவர்கள் ஆகிய தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. கார்த்திகா இவற்றின் வழியே நவீன கவிதையுலகில் நீண்ட பயணம் செய்துள்ளார். அவருடைய தொகுப்புகளிலிருந்து நேர்காணல் செய்தால் நன்றாக இருக்குமென்று யோசித்தேன். அதன் வழியே எனக்கும் கார்த்திகாவுக்கும் மிக நல்ல உரையாடல் நிகழ்ந்தது அற்புதமானது. இதுவரை இவருடன் மிகவும் குறைவாகவே உரையாடியிருந்த நான் இவரை இப்போது அணுக்கமாக உணரத் தொடங்கி விட்டேன்.

கேள்வி: உங்கள் கவிதைகளை எங்கிருந்து தொடங்கினீர்கள்? இலக்கியத்துக்குள் நுழைந்தது எப்படி? சமகாலக் கவிதை உலகில் உங்கள் பயணம் எத்தகையது?

பதில்: கவிதை எழுதத் தொடங்கியது எப்போது என்றால், பதினைந்து வயதில் பள்ளிக்கூடங்களுக்கிடையே நடந்த ஒரு போட்டிக்காக எழுதியபோதுதான். ஆனால், கவிதைகளில் ஈடுபாடு வந்தது எப்போது என்று சொல்லவேண்டுமெனில் அதற்கும் மிக இளம் வயதில், முதன்முதலாகப் பள்ளியில் சேர்ந்தபோது என்று இப்போது தோன்றுகிறது. Prodigy என்பது போன்ற நோக்கில் இதைக் கூறவில்லை. உங்கள் கேள்விகளை வாசித்தபோது என் வாழ்வில் வெகுதூரத்துக்கு அவை என்னைத் திரும்பிப் பார்க்கவைத்தன. அதை வைத்தே கூறுகிறேன்.

முதன்முதலாகப் பள்ளியில் என்னைச் சேர்த்தபோது – அந்த விஜயதசமியில் பள்ளியில் சேர்ந்த ஒரே குழந்தை நான்தான். மற்றவர்கள் ஓரிரு மாதங்களாக ஏற்கெனவே வரத் தொடங்கியிருந்தார்கள். அரிச்சுவடி தொடங்கிய நாள், ஒரு விளையாட்டு போலச் சென்றுவிட்டது. ஆனால், நிஜமாகப் பள்ளிக்குச் செல்லவேண்டிய நாளில், நானும் பல குழந்தைகளைப் போலவும், அழுதும் புரண்டும் வகுப்புக்கு வெளியே நின்று போராட்டம் நடத்தினேன். என்னை வாசற்படியிலேயே அமர சுந்தரவல்லி டீச்சர் அனுமதித்தார். எனக்கு என்ன வேண்டும், ஏன் அழுகிறேன் என்று என்னிடம் கேட்டார். நான் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று அவரிடம் சொன்னேன். எதற்கென்று கேட்டார். தண்ணீர் குடிக்க என்று சொன்னேன். அதற்காக என்னை அனுப்பிவிடுவார் என்று எண்ணியதை நினைத்தால் இப்போது சிரிப்பாக வருகிறது. ஆனால், அன்று மெய்யாகவே அவ்வாறு நம்பினேன். அவர் என்னை மெல்ல அணைத்துக்கொண்டு, அவர் நீரருந்த வைத்திருந்த செம்பிலிருந்து எனக்கு நீர் புகட்டினார். அக்கணத்திலிருந்து எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. மறுநாளிலிருந்து நான் பள்ளிக்குப் போக விரும்பிய முதல் காரணம் அவர் என்றால், இரண்டாவது காரணம் பள்ளியில் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப் பாடல். நான்காவது, ஐந்தாவது படிக்கும் அக்காக்களும், அண்ணன்களும் ஒன்றாகச் சேர்ந்து நின்று பாடும் பாடலை, மற்ற குழந்தைகள் எங்கள் வகுப்பில் நின்று பாடவேண்டும். அப்படி அத்தனை பேர் ஒன்றாகச் சேர்ந்து பாடியதை முதன்முதலாகக் கேட்டபோது எனக்கு அது ஏதோவொரு மிகப் பெரிய அதிசயமான விஷயமாக இருந்தது. 

‘நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்’ என்கிற பாடல். அது நாவுக்கரசர் தேவாரம் என்பதோ, அதன் பொருளோ அப்போது தெரியாவிட்டாலும், அதைப் பாடுகையில் எழும் ஓசைநயம் என்னை ஈர்த்திருக்கிறது என்று பின்னர் உணர்ந்திருக்கிறேன்.

அது போல, என் அம்மா பூஜை செய்யும்போது பாடும் பாடலின் இரு வரிகள் என்னை மிகவும் ஈர்ப்பவை. ‘சொல்லுக் கடங்காவே பரா சக்தி சூரத் தனங்க ளெல்லாம்’, ‘சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்’ – இவ்விரண்டு வரிகளும் எப்போது வருமெனக் காத்திருப்பேன். சில நாட்கள் நேரமில்லாவிடில், சஷ்டிக் கவசத்துடன் நிறுத்திக் கொள்வார். ஆனால், இந்தப் பாடல் பாடினால்தான் ஆயிற்று என்று நான் அடம்பிடித்து அடியும் வாங்குவதுண்டு. அந்த அளவுக்கு ஏனோ இவ்விரண்டு வரிகளும் என்னை ஆட்படுத்தியிருந்தன. பின்னால்தானே தெரிந்தது, அது பாரதியின் மாயமென்று.

அப்போதிலிருந்து, பாடப் புத்தகங்களில் இருக்கிற செய்யுள்களும் காப்பியப் பாடல்களும், சங்கப் பாடல்களும் மதிப்பெண்களுக்காக என்பதைத் தாண்டி மிகவும் விரும்பிப் படிப்பேன். நாமும் அதுபோல் எழுதவேண்டும் என்று எண்ணிப் பார்ப்பேன். எவ்வளவோ நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கவிதை இப்போதும் நம்மை இவ்வளவு ஊன்றி வாசிக்க வைக்கிறதே… இதுபோல் நாமும் செய்யமுடிந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணியிருக்கிறேன். உண்மையாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் அன்றி, அது ஒரு ஆசை என்கிற அளவில்தான் அப்போது இருந்தது. போட்டிக்காக எழுதிய கவிதைகூட, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பள்ளிக்குப் பரிசுகளை வாங்கியிருந்த காரணத்தால், இதையும் என்னால் செய்யமுடியும் என்று எங்கள் தலைமை ஆசிரியை ஊக்கிய ஒரே காரணத்தால் எழுதியதுதான். தொடர்ச்சியாக எழுதிப் பழகத் தொடங்கியது, ஒரு சுயநலத்துக்காக என்று சொல்லலாம். 

பொறியியல் படிப்பில் சேரவிருந்த சமயம், குடும்பச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடியால், பள்ளியிறுதியுடன் படிப்பைக் கைவிடும் நிலை. வேலையில் சேர்ந்துவிட்டேன். நிறையப் படிக்கவேண்டும், ஆய்வுப் படிப்புகள் மேற்கொள்ளவேண்டும் என்றெல்லாம் கனவுகள் கண்டுகொண்டிருந்த பெண் நான். இந்தத் திடீர் நிகழ்வுகள், மாற்றங்கள் என்னை மிகவும் பாதித்தன. மிகவும் தனியாக உணர்ந்தேன். உள்ளொடுங்கிப் போனேன். உடலும் நலிந்தது. அதனால் அல்ஸர் பிரச்னை ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சையளித்த மருத்துவர் என் பின்னணியைக் கேட்டபிறகு சொன்னார்,

‘நண்பர்கள் மட்டும்தான் நண்பர்கள் என்று இல்லை. நீ யாருடனாவது பேச வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைப்பதை ஒரு குறிப்பேட்டில் எழுது. பிறகு அப்படியே தொடர்ந்து எழுதிக்கொண்டிரு’ என்றார்.

அவர் சொன்னபடியே, நெஞ்சை முட்டும் உணர்வுக் கொந்தளிப்பு ஏற்படுகையில் எல்லாம் எழுதி வைக்கத் தொடங்கினேன். அது எனக்கு ஒரு ஆசுவாசம் அளிப்பதை உணர்ந்தேன். பின்னர், தொலைநெறியில் தமிழிலக்கியம் பயிலத் தொடங்கியபோது, தீவிர இலக்கியம் அறிமுகமாயிற்று. அதன் தாக்கத்தால், எழுத வேண்டும் என்ற ஊக்கம் அதிகரித்தது. 

எம்.ஃபில்., முடித்திருந்த சமயத்தில் கல்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. நிறைய படைப்புகளை வாசிக்கவும், அவற்றை பத்திரிக்கைக்காகத் திருத்தவும், கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே காரணிகளாக அமைந்தன.

சமகாலக் கவிதையுலகில் என் பயணம் எத்தகையது என்று கேட்கிறீர்கள். அதை ஒரு பயணம் என்று கொண்டால், அதிகம் கவனம் ஈர்க்க விரும்பாத ஒரு அமைதியான வழிப்போக்கி நான் என்று நினைக்கிறேன். எனக்கு நானே சொல்லிக்கொள்வதையே பல வேளைகளில் எழுதி வைக்கிறேன். ‘சத்தமாகச் சிந்தித்தல்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பிரயோகம் இருக்கிறதே… அதுபோல், நான் எழுதிச் சிந்திக்கிறேன் என்று சொல்லலாம். அப்படி எழுதி முடித்ததோடு, எனக்கு அதனோடு ஒரு தொடர்பும் இல்லாமலாகிவிடுகிறது. ஆனால், சில சமயங்களில், என் எழுத்து பிரசுரமாகி, அது சில மனிதர்களைத் தொட்டுவிடவும் செய்யும்போதுதான், அது எனக்கு மட்டுமானதில்லை என்கிற ஒருவித… அதை எப்படிச் சொல்வது… பொறுப்புணர்வு என்று சொல்லலாம்… – அல்லது ஒரு வித ஆச்சர்யம் என்றும் சொல்லலாம். 

கவிதைகள் நம் மொழியில் அதிகம் எழுதப்படுகின்றன. நானொருத்தி கவிதை எழுதுவதாலோ எழுதாததாலோ பெரிதாக ஒன்றும் குறைந்துபோய்விடப் போவதில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும், நான் எழுதுகிறேன். எழுதாமல் என்னால் இருக்க முடிவதில்லை.சிலவேளை, தொடர்ந்து பல மாதங்கள்கூட எழுதாமல் இருப்பேன். சொல்லப்போனால், என் முதல் தொகுப்புக்கும், இரண்டாவது தொகுப்புக்கும் இடையே பத்தாண்டுகள் இடைவெளி. ஆனால், எழுதாமல் இருக்கும்போதும், சில சமயம் எழுதுவதைப் பற்றியே சிந்தனை இருக்கும். பழக்கத்தாலோ என்னவோ… எங்கே சுற்றியும் எழுத்திடம்தான் நான் திரும்பிவர வேண்டியிருக்கிறது. தொகுக்கப்படுவதோ, வெளியிடப்படுவதோ குறித்து நான் எண்ணுவதேயில்லை. எழுத்து என் மனசின் வீடு. அது அங்கே திரும்பி வருவது இயல்பு. அதற்கு வேறு ஒரு பிரகடனமும் தேவையில்லை என்று நினைக்கிறேன். 

கே: பத்திரிக்கையில் பணி புரிந்திருக்கின்றீர்கள், சமகால இலக்கிய இதழ் ஒன்றில் ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கின்றீர்கள். இதன் பொருட்டு படைப்பாளிகள் பலரின் கவிதைகளை, தேர்ந்தெடுக்கும் பொருட்டும் மெய்ப்பு பார்க்கும் பொருட்டும் வாசிக்க வேண்டியிருந்திருக்கும். இவை உங்கள் கவிதைகளை எவ்வாறு பாதிக்கின்றன? குறிப்பாக அயல் தேசத்துக் கவிதைகள் உங்கள் கவிதைகளை எப்படி மாற்றுகின்றன? வசந்தகால கான்லெஸ், முராகமியின் கண்ணாடி போன்ற கவிதைகள், கிழவனும் கடலும் கதையை கவிதையாக்கியிருப்பது, கின்ட்ஸுகி என்ற ஜப்பானியக் கலையில் உடைந்த பாண்டங்களை மீட்டுருவாக்கம் செய்வது போல உங்களை நீங்களே வனைந்து கொள்வதைக் கவிதையாக எழுதியிருப்பது அபாரமானது. உங்களின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று ‘கின்ட்ஸுகியும் ஒரு பாண்டமும்’. இவையெல்லாம் கவிதையுள் வந்தமர்ந்தது தற்செயலானதா?

ப: ஆசிரியர் குழுவில் இருந்தாலும், பிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கும்போது, முதலில் ஒரு வாசகியாகவே அவற்றை வாசிப்பேன். கவிதையின் சமகாலப் போக்குகள் குறித்த ஒரு கண்ணாடியாக அவை இருக்கும். அயல்தேசத்துக் கவிதைகளாயினும், கலாசார வேறுபாடுகள் தவிர்த்து, கவிதை மொழி எவ்விதம் இயங்குகிறது என்பதே என்னை அதிகம் ஈர்க்கும். அவை என் கவிதைகளை நேரடியாகப் பாதித்திருக்கின்றன என்று சொல்லமுடியாது. ஆனால், கவிதையில் சாத்தியங்கள் குறித்த புதிய எண்ணங்களை அவை தந்திருக்கின்றன. புதிய முறைகளில் எழுதிப் பார்க்கும் உத்வேகம் அவை மூலம் சில சமயம் கிட்டுகின்றது.

கிழவனும் கடலும், முராகமியின் கண்ணாடி போன்றவை சில அனுபவங்களால் தூண்டப்பட்டவை. முராகமியின் கண்ணாடி, என் மகள் பிறந்திருந்த சமயத்தில் ஏற்பட்ட ஒரு வினோதமான சுவாரஸ்யமான அனுபவத்தால் தூண்டப்பட்டது

கிழவனும் கடலும் கவிதை முதலில் ஒவ்வொரு பகுதியாக, பலமுறை எழுதப்பட்டது. ஒரு முறை, அந்த நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ கைமறதியாக வைத்துத் தொலைத்துவிட்டேன். அப்போது, முதல் பகுதி, ‘கிழவனை எங்கோ கடலோடு தொலைத்துவிட்டேன்…’ என்று சில வரிகள் எழுதியிருந்தேன். பின்னர், தற்செயலாக, காரின் முன்னிருக்கையின் பின்னாலிருந்த பையில் வைத்திருந்தது, திரும்பக் கிட்டியது. அத்தோடு, அது கவிதையாகும் உத்தேசம் நின்றுவிட்டது. 

பிறகு, சில வாரங்களுக்குப் பின், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த துக்க சம்பவம் நேரிட்டது. அது நிகழ்ந்த நான்கு தினங்களுக்குள், டைட்டானிக்கின் மூழ்கிய பகுதிகளைப் பார்வையிடச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகிய துக்க சம்பவம் நிகழ்ந்தது. இரண்டுமே, கற்பனைக்கெட்டாத தீவிரத் தன்மை கொண்ட நிகழ்வுகள்தான்; என்றாலும், சில ஊடகங்கள் அவ்விரண்டு நிகழ்வுகளையும் அணுகியதிலிருந்த பாரபட்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு பகுதியாக எழுதப்பட்ட, அகதியும் கடலும் கவிதையின் பின்னணி இதுதான். தற்செயலோ அல்லது ஆழ்மனவோட்டத்தின் விளைவோ… இவ்விரண்டு கவிதைகளும், intertextual படைப்புகளாக, வேறு பிரதிகளின் மேலாக அமைந்துவிட்டன.

ஆனால், வசந்தகால கான்லெஸ் மற்றும் கின்ட்ஸுகியின் கதை வேறு. ஓவியம் மற்றும் புகைப்படக் கலை, நிட்டிங் மற்றும் அது போன்ற பல்வேறு கைவினைக் கலைகளில் இருக்கும் ஈடுபாட்டால், அவை தொடர்பான சில குழுக்களில் உறுப்பினராக இருக்கிறேன். அதில் ஒரு குழுவில்தான் கின்ட்ஸுகி குறித்த ஒரு சிறிய கட்டுரையை வாசித்தேன். வாசிக்கும்போதே, ஏனோ, அது மனித மனங்களைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. எவ்வளவு தீவிரமான விளிம்பில் நிற்கும்போதும், எப்போதும் தீர்வுகளில் நம்பிக்கை கொண்டவள்தான் நான். அதனால், எனக்கு அந்தக் கலை ஒருவித மகிழ்ச்சியையும் ஆசுவாசத்தையும் அளித்தது. அதன் அடையாளமாகவே அதை எழுதினேன்.

வசந்தகால கான்லெஸ், யுகேயில் வசிக்கும் ஒரு தோழி கெல்லி மென்ஸிஸின் அனுபவத்தினால் ஏற்பட்ட தாக்கம். புதிய உடைகள் வடிவமைக்க நிட்டிங் பாட்டர்ன்களை எழுதும்போது, அது பலதரப்பட்ட உடலமைப்புக்குப் பொருந்தும் வகையில் வெவ்வேறு அளவுகளுக்கு சிறுசிறு மாற்றங்களுடன் எழுதுவோம். அப்படி எழுதிய புதிய பாட்டர்ன்கள் சரியாக உள்ளனவா எனச் சோதிக்க இதுபோன்ற சிறு குழுக்களில் அழைப்பு விடுப்போம். நேரமிருக்கும் பிற உறுப்பினர்கள் அவர்கள் பாட்டர்ன்களைப் பின்னிப் பார்த்து, அது பிழையின்றி இருக்கிறதா என உறுதிசெய்வோம். அப்படி பாட்டர்ன்களைப் பகிரும்போது, அது போல் ஒன்றை வடிவமைக்க எது தூண்டுதலாக இருந்தது போன்ற விவரங்களைப் பதிவிடுவோம். அப்படித்தான், கெல்லி அந்த வயல்களைப் பற்றிய படங்களைப் பகிர்ந்து, அதிலிருந்து அந்த பாட்டர்ன் வடிவமைக்க, தமக்கு யோசனை தோன்றியதைக் கூறியிருந்தார். அருமையான படங்கள் அவை! அவற்றோடு அவர் அந்தக் காட்சி குறித்து வர்ணித்திருந்த விதம் என்னையே கெல்லியாக மாற்றிவிட்டது. அவர் வளர்ந்த இடத்தினருகேதான் இந்த கான்லெஸ் நதி ஓடுகிறது. கெல்லியை கான்லெஸ்ஸினருகே எண்ணிப் பார்த்தபோது, அதை ஒரு கவிதையாக மாற்றி அவருக்குப் பரிசளிக்கத் தோன்றியது. தமிழில் எழுதி, ஆங்கிலத்துக்கு மாற்றி அவருக்கு அனுப்பி வைத்தேன். பின்னர், தமிழ் வடிவம் ஒரு இதழிலும் பிரசுரமானதால், தொகுப்பிலும் இடம்பெற்றுவிட்டது. இதுதான், வசந்தகால கான்லெஸ் இங்கு வந்த பின்னணி.

இவ்வாறான அனுபவங்களும், அயல்தேசக் கலைகளும், intertextual முயற்சிகளும் – என் கவிதைகளில் வந்து சேரும்போது, முன்னரே சொன்னது போல், என் எழுத்தில் புதிய சாத்தியங்களைக் காட்டுகின்றன. சில சமயம், இவற்றை நான் எழுதினேன் என்று அல்ல, இவை தம்மைத் தாமே எழுதிக்கொண்டனவோ என்று தோன்றும். ஒருவேளை, இவை நானறியாமல் என்னில் சில புதிய பரிமாணங்களையும் உண்டாக்கி இருக்கலாம். 

கே: ‘பழைய பகல்களின் வெளிச்சம் – என் / பால்யத்தின் வெளிச்சம்.’ உங்கள் கவிதைகளில் பால்யத்தில் வாழ்ந்த அனுபவித்த விஷயங்களின் மயக்கம் அல்லது கடந்த கால நினைவுகளில் அலைவுறும் நிகழ் காலத்தின் நிதர்சன ஏக்கங்கள் நிறைந்திருக்கின்றன. ‘ஏழாம் பக்கத்தில் எப்போதும் இளமையாக இருக்கும் ஊர்’ – இது ஏக்கத்தின் சாயலா இல்லை கடந்தகாலத்தின் மகிழ் தருணத்தில் உறைந்த கணத்தை மீட்டெடுக்கும் முயற்சியா? ‘இனி எப்போதும் நனைய முடியாத கடந்தகால மழை’ என்ற துயரம் ‘இன்றின் மழையை எப்படிக் காண்பது’ என்ற பயமாய் ஏன் மாறுகிறது? இப்படி நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் அலைவுறுதலை பல கவிதைகளிலிருந்து எடுத்து சொல்லி விடமுடியும். அந்த அனுபவங்கள் சார்ந்து சொல்ல முடியுமா? காலம் ‘ஊஞ்சல் போல பின்னாலும்/ ஒருமுறையேனும் வரக்கூடாதோ!’ என்ற ஏக்கம் எப்போதிருந்து தொடங்கியது?

ப: காலம் பின்னால் வரக்கூடாதா என்ற அந்த ஏக்கம் மிக இளம்வயதிலேயே இருந்திருக்கிறது. அப்படி ஏற்பட முக்கியமாக இரண்டு சூழல்கள் காரணமாக அமைந்தன. என் பத்தாவது வயதில், வீட்டில் நிறைய நேரம் நான் தனியாக இருக்கவேண்டிய சூழல் திடீரென ஏற்பட்டது. அது எனக்கு எதிர்கொள்ளத் தெரியாத பெரும் அதிர்ச்சியாக இருந்தது அப்போது.

நான் ஆறாவது வகுப்பில் சேர்ந்த சமயம், பள்ளிக் கட்டிடங்கள் பற்றாக்குறையால், ஏழாவதும், ஆறாவதும், பகுதி நேர வகுப்புகளாக நடந்து வந்தன. அம்மாவும், அப்பாவும் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அக்கா பள்ளி சென்று விடுவார். நான் மத்தியானம் பள்ளிக்குச் செல்லும் வரை வீட்டில் தனித்திருக்க வேண்டும். அது என்னை மிக மிக பாதித்தது. பாதுகாப்பான வளவில்தான் குடியிருந்தோம் என்றாலும், எனக்கு மிகுந்த அச்சமும் பதற்றமுமாகவே இருக்கும். எனக்கு எப்படியிருக்கிறது என்று கேட்கவோ, கவனிக்கவோ யாருக்கும் நேரமில்லை. நானே தலை சீவி, உணவு எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட்டு, தனியாக எப்படியோ நேரத்தைக் கடத்தவேண்டும். சில சமயங்களில், முன்னர் எங்கள் வீட்டில் பணியாற்றிக்கொண்டிருந்த மகமாயி என்கிற ஆச்சி வருவார். அவரைக் கண்டால் போதும், அவர் மடியில் விழுந்து அழத் தொடங்கிவிடுவேன். அவர் என் அழுகையை அமர்த்தி, எனக்குத் தலை சீவி விட்டு, உணவு பிசைந்து கையில் போட்டு என்னைச் சாப்பிட வைப்பார். நான் அவரோடு அவர் வீட்டுக்கு வந்துவிடுகிறேன் என்று அழுது அடம்பிடிப்பேன். ‘ஒரு வருஷம்தானே… சரியாப் போயிடும் பாரு’ என்று ஆறுதல் சொல்வார். எனக்கு இன்னும் ஐந்தாம் வகுப்பிலேயே இருந்திருக்கக் கூடாதா… அல்லது அதற்கும் முன்னால் போய் முதலிலிருந்து மறுபடியும் வளரக் கூடாதா என்றெல்லாம் இருக்கும்.

அடுத்தது, என் பன்னிரண்டாவது வயதில், எங்கள் அம்மா எங்களைப் பிரிந்து தனித்துச் சென்றபோது. அம்மாவுக்கு அதற்கான காரணங்கள் இருந்திருக்கலாம்; ஆனால், அம்மா என்னைத் தேடவேயில்லை, என்னைப் பிரிந்து அவரால் இருக்கமுடியும் என்பது, அந்தச் சிறு வயதில் எனக்கு மிகுந்த துயரைத் தந்தது. எப்படியாவது, ஏதாவது நடந்து எங்கள் வாழ்க்கை முதலிலிருந்து மீண்டும் மகிழ்ச்சியாகத் தொடங்கக்கூடாதா என்ற தீராத ஏக்கம் அப்போது ஏற்பட்டது. அப்படி நாங்கள் திரும்பிப் போகவென ஒரு நாளையும் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அந்த நாளில், விடிகாலையில், அம்மாவும், அப்பாவுமாக என்னையும், அக்காவையும் பள்ளியில் கொண்டு விட ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றனர். வீட்டுக்குள் காலை வெயில் வந்து கொண்டிருக்கிறது. வானொலியில் ஏதோ பாட்டு. நான் சீருடை அணிந்துகொண்டு ஜம்மென்று நிற்கிறேன். கனவின் வெளிச்சத்தில் போல் ஒரு மயக்கப் பளபளப்புடன் அந்த நாளை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். நான் திரும்பிப் போய் எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்க விரும்பும் நாட்களில், அந்த அழகிய காலைக்குத்தான் முதலிடம்.

நினைத்துப் பார்த்தால், என் மனசின் ஒரு பகுதி என் சின்ன வயசிலேயே தங்கிவிட்டது என்று தோன்றுகிறது. அதை என்ன செய்தும் நிகழ்காலத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. அங்கே ஏதோ தீராத கணக்கு ஒன்று அதற்கு இன்னும் இருக்கிறது. என்னவோ நிகழ்ந்து, ‘உம்… நீ இனி அடுத்த கட்டத்துக்குச் செல்’ என்று என்னை என்னிடம் அனுப்பி வைக்கும் அதிசயம் எதுவோ அங்கே இன்னும் நிகழக் காத்திருக்கிறது. ரொம்ப இனிப்பாக, ரொம்பக் கசப்பாக, ரொம்ப வெளிச்சமாக, ரொம்ப இருட்டாக, வேறு எங்கும் கிட்டாத ஒரு குளிர்ச்சியும், அமைதியும் அங்கே இருக்கின்றன. அதற்காகவே நான் அங்கே மீண்டும் மீண்டும் திரும்பிப் போகிறேன். 

‘மண்டவெல்லமொன்றைத் தன்னந்தனியாகப் புற்றுக்கு உருட்டிப் போகும் ஓரெறும்பு நான்’ என்று ஒரு வரி எழுதியிருக்கிறேன் அல்லவா… என் மண்டவெல்லம்தான் என் பால்யம். அதை என்னால் என்னோடு உருட்டிக்கொண்டு வர முடியவில்லை. அதனால், என் ஞாபகங்களுக்கு அடிக்கடி சென்று அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசித்துப் பார்த்துத் தீர்க்கப் பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஆனால் ஒரு விஷயம். ‘என் ஊர்’ எழுதியதற்கும் இந்த ஏக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் ஊர் என்று குறிப்பிட்டிருப்பது, இரண்டாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் நான் படித்த ‘என் ஊர்’ என்ற பாடத்தை. அது இடம்பெற்றிருந்தது, ஏழாம் பக்கத்தில். அதில் ஒரு அழகிய ஓவியமும் இடம்பெற்றிருக்கும். வரிசையாக ஓட்டு வீடுகள் அமைந்த ஊரின் பறவைப் பார்வை ஓவியம் என்று சொல்லலாம். நான் அப்போது அந்த ஓவியத்தை, என்னுடைய அம்புப் பெரியம்மை இருந்த மீனாட்சிபுரத்தின் படம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது மட்டுமென்ன, இப்போதும் அப்படித்தான் எண்ணுகிறேன். அதை என் ஊர் என்று உரிமையாக எண்ணக் காரணம், அவர்கள் வீட்டில் அடிக்கடி நின்று வளர்ந்தது மட்டுமல்ல; தாமிரபரணி நாங்கள் வசித்த டவுனை விட, அவர்கள் ஊருக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்ததும்தான். ‘என் ஊர்’ – மகிழ்ச்சியான ஞாபகங்களின் அடையாளம்.

மகிழ்ச்சியோ, துக்கமோ… அலையடித்து ஓய்ந்ததும் ஞாபகங்களாகக் கரைசேர்கிற சிப்பிகள்தானே… அவற்றைச் சேர்த்து வைத்து அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொள்வதும் இயற்கைதானே..! 


கே: உங்கள் பல கவிதைகளில் காட்சிப் படிமங்கள் அபாரமாய் அமைத்தெழுதப்பட்டிருக்கின்றன. சூரியனைக் கிழிக்கும் கட்டுமரம், சூரிய வெளிச்சத் துண்டுகளை ஏந்தி வரும்/ ஏந்திச் செல்லும் கடலலை, கடலில் செதில் செதிலாய் உதிரும் சூரியன், ‘துடிக்கும் மணிக்கழுத்தை/ அடிக்கடி அடிக்கடி திருப்பி/ இறகுகள் கோதிக்கொள்ளும்’ புறாக்கள், இது போன்றவற்றை உதாரணத்துக்குச் சொல்லலாம். அதை நீங்கள் பார்க்கும் போதே எழுதுவீர்களா அல்லது காட்சி ஆழ்மனத்தில் புதைந்து கொண்டு பின் எப்போதேனும் கவிதையாகி வருமா? மேலும் ‘சைக்கிள் பூட்டை மெதுவாக விடுவித்து/சத்தமின்றி உருட்டித் திருப்பி/ஒற்றைக் காலால் மிதித்து/உருளத் தொடங்குகையில்/ஏறியமர்ந்து செல்ககையில்/ஒரு பூ காற்றில் செல்வதுபோல் இருக்கும்’ இது போல பால்யத்தில் கண்ட காட்சிகளை, அந்த வயதில் பயம் கொண்டதை கவிதைக்குள் ஏற்றியிருப்பது எப்படி நிகழ்ந்தது? ‘இரண்டு மஞ்சள் யானைகள்…/எடுத்து உயர்த்தவும்/இடித்து நகர்த்தவும்/ எங்களாலாகுமென்று/இரும்புத் துதிக்கை நீட்டி முழக்கும்/இயந்திர யானைகள்’ –  JCB வாகனங்களை யானையாகவும், இந்த நகரத்தை கான்கிரீட் காடாகவும் பார்த்த பிரமாதமான சித்திரம் இயற்கையின் மீது உங்களுக்கு அக்கறையைப் பேசுகிறது. இயற்கைக்கும் உங்களுக்குமான பிணைப்பை இது போல இன்னும் சிலவற்றிலிருந்தும் காட்ட முடியும். இதெல்லாம் கவிதையுள் எப்படி சாத்தியமாகிறது?

ப: இவ்வளவு விஷயங்கள் ஒரு கோணத்தில் ஒன்றாகத் தொடுக்கப்பட்ட ஒரு கேள்வி. ஒவ்வொன்றாகப் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். முதலில் காட்சிகள், காட்சிப் படிமங்கள் பற்றி. காட்சி ஞாபகங்கள் எப்போதும் எனக்கு அதிகம். எதுவுமே காட்சியாக என்னை மிகவும் தாக்கும்; ஆழமாகப் பாதிக்கும். சிறு குழந்தையாக இருந்த சமயத்தில் நிகழ்ந்தவை கூட எனக்கு ஞாபகத்தில் உள்ளன.

நான் அதிகம் சேட்டை செய்யும் குழந்தை; வேலையாக இருக்கும் நேரங்களில் என் அம்மா எப்போதும் ஒரு தூணில் என்னைக் கட்டிப் போட்டிருப்பார். ஒரு ஓட்டுக்கையின் உள்புறம் அமைந்த தூண்களில் ஒன்று. அதற்கும் எங்கள் வீட்டுக்கும் இடையில் ஒரு வெளி தார்சால்; முற்றம் என்று சொல்வது போல். அந்தத் தூணில் இருந்து, வீட்டுப் பட்டாலையைப் பார்க்கலாம்; ஓட்டுச் சாய்வுக்குள், தூணுக்கு எதிரில், தண்ணீர் நிரப்பிய கொப்பரைகள் ஒரு கல் சுவரின் கீழே வரிசையாக இருக்கும். அதில் வெயில் சாயும்போது, கற்சுவர்களில் அழகழகாக வெளிச்சம் வட்டமிடும். அதையே பார்த்துக்கொண்டு இருந்த ஞாபகம் இருக்கிறது. அந்தக் கற்சுவரின் மென்பச்சை கலந்த பழுப்பு நிறமும், அதில் கிட்டுகிற குளிர்ச்சியும்கூட இதை எழுதும்போது என்னால் உணரமுடிகிறது. 

அது போலவே, வானத்தையும் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பேன். வானின் நீலமோ, அல்லது மேகங்கள் விதவிதமாகப் போவதோ, கீச்சிட்டுக்கொண்டே மிதப்பது போல் பறக்கும் கழுகு, கருடன் போன்ற பறவைகளோ… எதன் மீது ஈர்ப்பென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஒன்று ஞாபகம் இருக்கிறது. எப்போதாவது நமக்கும் இறக்கைகள் முளைக்கும்; அப்போது நாமும் இந்தப் பறவைகள் போல மேலேயிருந்து கீழே பார்க்கலாம் என்பது போல் பின்னர் சில சமயங்களில் ஒரு மெல்லிய நம்பிக்கை இருந்திருக்கிறது. 

இதுபோல் பல ஞாபகங்கள், காட்சிகளாகவே எனக்கு உள்ளன. எங்கள் பக்கத்து வீட்டுத் தட்டி ஆச்சியுடன் எனக்கு ரொம்ப சிநேகம். தினமும் ஒருமுறையாவது அவர் வீட்டில் போய், அவர் கையால் அச்சு வெல்லம் வாங்கித் தின்பேன். அவர் என் அம்மா ஏசுவார் என்று மறுப்பார். இருந்தாலும், நான் முரண்டு பிடித்து வாங்கித் தின்னுவேன். அப்படியொரு முறை, ஆச்சி எனக்கு வெல்லம் தந்துகொண்டிருந்தபோது, என் அம்மா ஆச்சி வீட்டின் ஒரு மூலையில் தட்டியை விலக்கிக்கொண்டு, வெளியில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஒரு புன்னகை. எனக்கு ‘அம்மா ஒன்றும் கோபப்படவில்லை’ என்ற ஆசுவாசம் ஏற்பட்டது. இது போல் காட்சிகளாக ஞாபகங்கள் பதிவதால், பின்னர் எப்போதேனும் எழுதும் கவிதைகளில்கூட அவற்றை என்னால் மீட்டெடுத்து எழுத முடிந்திருக்கிறது.

இப்போதும்கூட, வானம், வெயில், விதவிதமான ஒளிப் பிரதிபலிப்பு என்றால் எனக்கு அதிலொரு சுவாரஸ்யம், ஒரு லயிப்பு, ஒரு சுகம், ஒரு அமைதி. என்னுடைய ஞாபகங்கள், அனுபவங்கள்தாம் என்றில்லை; வாசிக்கும்போது கூட, காட்சி விவரணைகள், காட்சிப் படிமங்கள் என்றால் அவை என் மனசில் அதிகம் தங்கியிருக்கும்.

நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தபோது ஒரு முறை, – என் அக்காவின் தமிழ்த் துணைப்பாடப் புத்தகத்திலா அல்லது வேறெங்கேயோவா என்று நினைவில்லை – ‘மழை’ என்ற கதை வாசித்தேன். (பின்னர்தான் அது அசோகமித்திரனின் கதை என்று தெரிந்துகொண்டேன்.) ‘சட்டை சிறியதாகப் போகுமா, அப்பா?’ என்று அவன் கேட்கும் கேள்வி எப்படி இன்றும் புதிது போல் மனசில் நிற்கிறதோ, அதுபோலவே கருமேகங்கள் உயர்ந்து வரும் காட்சியை அவன் காண்பதும், மழை முடிந்த காலையில் எருமைகள் சுத்தமாகிப் போவதைக் காண்பதும், வாசல் மரத்தடியில் அந்தச் செடி இன்னும் கொஞ்சம் வளர்ந்திருப்பதைக் காண்பதும்… இந்தக் காட்சிகளெல்லாமும்கூட மனத்துக்குள் அப்படியே விரிந்து பதிந்திருக்கின்றன. புதுமைப்பித்தன் பொய்க்குதிரையில் சொல்லியிருப்பாரே… ‘கனவின் நிலவு போலும் மென்மையாக…’ என்று… இதுபோல் ஒரு வரியை வாசித்தபிறகு, அதை எப்போதேனும் மறக்கமுடியுமா, சொல்லுங்கள்.

ரூமியின் ஒரு கவிதையில், ‘What stops us from joining the dance the dust particles do? Look at the subtle motions in sunlight’ என்று இறப்பைப் பற்றி எழுதியிருப்பார். இறப்பை எவ்வளவு அழகான ஒரு அனுபவமாக எண்ண வைக்கின்றன இந்த வரிகள். இதுபோன்ற படிமங்கள் எப்போதும் என்னைச் சட்டென்று ஆட்கொண்டுவிடுகின்றன. மனசுக்குள் காட்சிகளாக அப்படியே படிந்துவிடுகின்றன.

சங்கிலி பூதத்தார் கவிதையில் அந்தப் பயத்தை உணர்த்த முடிந்திருப்பதும், அந்தக் காட்சி ஞாபகத்தின் புண்ணியத்தில்தான். எப்போதும் ஆராதனை வந்து ஆடும் அவரையே பார்த்திருந்துவிட்டு, ஒருமுறை அவர் சாவதானமாக சைக்கிளில் ஏறிச் செல்வதைப் பார்த்தபோது, அது அவர்தான் என்பதையே நான் நம்பமறுத்தேன். அவ்வளவு உக்கிரமாக அவர் ஆடும் காட்சி மனத்தில் பதிந்திருந்ததுதான் காரணம்.

இயற்கை சார்ந்த கவிதைகளைப் பற்றிக் கேட்டிருந்தீர்கள். இயற்கை தன் மொத்த ஆகிருதியில் இருக்கும் இடங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆறு, கடலை விட மலைகள் காடுகளென்றால் ஒரு தனி ஆச்சர்யம். அதுபோன்ற அடர்ந்த காடுகள் வழியே போகும்போது, நாம் வெறும் மனுஷி… இவ்வளவு பெரிய அற்புதத்தின் முன் அற்பத்திலும் அற்பம் என்ற எண்ணம் மேலெழும். காடு, மலை சார்ந்த இடங்களுக்குப் போகும்போதெல்லாம் எனக்குக் குதூகலமும், இதுபோல் ‘தத்துவ’ விசாரமும், வேடிக்கை பார்த்துத் தீரா ஆர்வமுமாக ஒரே உணர்வுக் கலவையாக இருக்கும். நான் இயற்கையின் ஒரு சிறிய கைக் கருவி என்று தோன்றும். காடுகளில் அவ்வளவு உயர்ந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது, மிகமிக லேசாக, சொந்த வீட்டுக்கு வந்தது போல் இருக்கும். குறிப்பாக, முதுமலையைக் கடக்கும் சமயங்களில் நான் அடிக்கடி ஒன்று சொல்வேன்: “அடுத்த பிறப்பு ஒன்று நானே தேர்வு செய்யமுடியுமானால், இந்த மலையில் இந்தக் காட்டிலொரு மரமாகத்தான் நான் வந்து பிறப்பேன்”. ஒரு மரம் இந்தப் புவிக்கு ஆற்றமுடிந்த நன்மையில் ஆயிரத்தில் ஒரு பங்கு சிறு நன்மை என்னால் செய்யமுடியுமானால், நான் ஆறறிவுடன் பிறந்ததற்கு ஏதோ ஒரு பலனென்று எண்ணியிருக்கிறேன். 

அப்படிப்பட்ட ஒரு பயணம் முடிந்து திரும்பிவரும்போது எழுதிய கவிதைதான், நீங்கள் குறிப்பிட்ட ஜே.ஸி.பி. கவிதை. எப்போதும் முதுமலை வழியாகக் கடக்கும்போது, நிறைய மிருகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டும். ஏதில்லாவிட்டாலும், நிறைய மான்கள் மற்றும் ஓரிரு யானைகளையாவது பார்க்காமல், பயணம் நிறைவுற்றதில்லை. ஆனால், ஏனோ அம்முறை ஒரு யானை கூட பார்க்கக் கிட்டவில்லை. பெங்களூர் வரும் வரை அதுவே நினைவாக இருந்தது. பெங்களூருக்குள் நுழையும்போது நல்ல மழை. போக்குவரத்து நெரிசலில், ஒரு கட்டுமானப் பணி நிறுவனத்தின் இரண்டு ஜே.ஸி.பி.களைக் கண்டபோது, என் ஏக்கத்துக்கு ஒரு சிறிய நிவாரணமாக அவற்றை யானைகளாகக் கற்பனை செய்தபோது எழுதிய கவிதை அது.

‘Our Town’ என்ற நாடகத்தில் ஒரு பாத்திரம் பேசும் வரி: ‘Oh earth! You are too wonderful for anybody to realise you!” அது மிகவும் சத்தியம். நாம் எவ்வளவு முயன்றாலும், இயற்கையின் முழுமையான ரகசியங்களை, சக்தியை, அழகை நம்மால் எழுதிவிட முடியாது.

கே: ‘எளிய இரவு/கனத்துக்கிடக்கிறது இன்று/சிறு மரக்குச்சியிழுக்கும் திருவைக்கல்லென’ – இது பிரிவுத்துயருணர்த்தும் வரிகளென்றாலும், மரக்குச்சி, திருவைக்கல் காலச்சுழற்சியின் குறியீடாக, நம்மால் கைவிடப்பட்ட வரலாற்றை கவிதையில் பொதித்து அதன் பயன்பாட்டை நீட்டிக்கும் முயற்சியாக, ‘சிறு குச்சிதான்; ஆனால் அதுவே திருவைக் கல்லை இயக்கும் சூத்திரதாரி’ என்ற தத்துவ விசாரமாக வடிவமைத்த கற்பனை எங்ஙனம் எழுதப்பட்டது?

ப: திருவைக் கல் எங்கள் வீட்டில் அன்றாடப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அது போன்ற சிறிய இயந்திரங்கள் மீது, எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கும் ஈர்ப்பைப் போலவே எனக்கும் இருந்திருக்கிறது. பின்னாட்களில், நானே அதைப் பயன்படுத்திய அனுபவமும் உண்டு. அதன் பின்னால் இருக்கும் அறிவியல் தத்துவம்தான் அப்போது மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கிற்று. ஆனால் கவிதையில் இவ்விதம் அதனைப் பயன்படுத்தியது, என்னை அறியாமல் நிகழ்ந்ததுதான். மனம் இப்படிப்பட்ட தொடர்புகளை எப்படி ஏற்படுத்திக்கொள்கிறது என்பது வினோதம்தான். 

கனத்துக் கிடக்கும் இரவை இழுத்துச் செல்வதைக் கற்பனை செய்தபோது, சட்டெனத் திருவைக் கல் என்று தோன்றியது.

இக்கவிதையில் என்று மட்டுமில்லை; வேறு சில கவிதைகளிலும் எளிமையான ஏதேனும் ஒரு விஷயம்தான் என்னை முதலில் எழுதத் தூண்டியிருக்கும். ஆனால், பிறகு அதுபோல் இருக்கும் பெரிய விஷயங்களைக் குறித்து சிந்தனை போய்க்கொண்டேயிருக்கும். அது எப்படியோ அந்தக் கவிதையில் வந்து சேர்ந்துவிடும். இது என்னையறியாமலே நிகழ்வதை, பல கவிதைகளில் உணர்ந்திருக்கிறேன். ஒரு வகையில், ஏதோ ஒரு பெரிய விஷயத்தின் எளிய கூறுகளை, அல்லது மாதிரிகளைக் கண்டுகொள்வது – சில சமயங்களில் அது ஒரு பாவனையாகக்கூட இருக்கலாம் – ஒரு புதிரை விடுவிப்பது போல் எனக்கு சுவாரஸ்யம் தருகிறது என்று நினைக்கிறேன்.


கே: மேய்ப்பரும் ஆட்டுக்குட்டிகளும் நிறைந்திருக்கும் கவிதைகளும் இருக்கும் அதே தொகுப்பில் காந்திமதியின் தாய்மையைத் தரிசிக்கும் கவிதைகளும் காட்சியாகின்றன. வெட்டவெளியில் எப்போதும் வசிக்கும் சின்னப் பிள்ளையாரின் எளிமையைப் பேசும் கவிதையிருக்கும் அதே தொகுப்பில் ஆடி தை மாதங்களில் வீட்டினுள் வழிபடப்படும் முறுக்கிய சேலையின் வடிவில் இருக்கும் கன்னி தெய்வத்துக்கும் இடமிருக்கிறது. வானம் பார்த்த மொட்டை மாடி உலவும் கவிதைவெளியில் வீட்டுக்குள்ளேயே சுழலும் மின்விறிசிக்கும் இடமுண்டு. வெயிலைக் கொண்டாடும் விந்தை நிகழ்ந்திருக்கும் கவிதையுலகுக்கு நிகராக மழை தூறிக்கொண்டு வசீகரத்தையும் வெறுப்பையும் ஒரே விதமாகப் பார்க்கும் மாயமும் நிகழ்கிறது. ‘நீர்காணா சங்குபுஷ்பம்’ வறட்சியின் இழப்பின் குறியீடாகும் கவிதையில் ‘ஆலம்பூ ஒன்று நீலத்தில் பூத்திருக்கிறது’ என்ற நீர்மையும் நிறைவும் பதிவாகிறது. இப்படி முரண்களை எல்லா முனைகளிலும் வெவ்வேறு கவிதைகளில் வெவ்வேறு மனநிலையில் புனைவது படைப்பாளியின் குணாதிசயங்களில் ஒன்றோ?

ப: அவற்றை முரண்கள் என்ற நோக்கில் நான் காண்பதில்லை; அப்படியொரு தொனி அதில் வந்திருந்தாலும். அவை வாழ்க்கையின் இயல்பான கூறுகளாகவே எனக்குத் தோன்றுகின்றன.  ஆறாம் வகுப்பிலிருந்து என் பள்ளித்தோழி முத்துவேணி. அவள் சாமி கும்பிடும்போது என்ன சொல்லிக் கும்பிடுவாள் என்று ஒரு முறை அவளிடம் கேட்டேன். அவள் விவிலியத்திலிருந்து ஒரு வசனம் சொல்லிக் காட்டினாள். ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்’ என்கிற வசனம். ‘அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் நடத்தி அமர்ந்த தண்ணீரண்டையில் நிறுத்துகிறார்’ என்று சொல்லும்போது, அது அப்படியொரு காட்சியாகவே மனத்தில் பதிந்துவிட்டது. மிக அழகிய ஒரு வழிபாடாகத் தோன்றியது அது. 

எப்படி அவள் வழிபாடு குறித்த ஆர்வம் எனக்கிருந்ததோ, அது போலவே, நாங்கள் நெல்லையப்பர், காந்திமதியம்மை கோயில்களுக்குச் செல்கையில் அவளும் எங்களுடன் வருவாள். மேய்ப்பரோ, காந்திமதியோ, சின்னப் பிள்ளையாரோ, கன்னியாக வணங்கும் என் பாலா அத்தையோ… தெய்வமென்று நினைத்தால் நமக்கு அது தெய்வம். அதன் மூலம் நாம் பெறும் அனுபவங்கள் வெவ்வேறு. என்றாலும் அது எப்படியெப்படியோ நம்மை வடிவமைக்கிறது. அதன் வெளிப்பாடாக, அவை கவிதைகளில் அப்படி இயல்பாக வந்து அமைந்திருக்கலாம். முரண்களைப் புனைந்து காட்டவேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டதில்லை.

சங்குபுஷ்பம் கவிதை, ஒரு உபதேச நோக்கு சத்தமாக வெளிப்பட்டுவிட்டதோ என்று நானே என்னுள் அதிகம் நொந்துகொண்ட கவிதை. ஆனால், அதை ஒரு காட்சிப் படிமமாக மாற்றியதால், அவ்விதம் அது தொனிக்கவில்லை என்பதை உங்கள் கேள்வியின் மூலம் உணர்கிறேன்.

கே: ஆலம் பூ வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும். நீங்கள் எழுதியிருக்கும் நீல ஆலம் பூ ஒரு புனைவா? 

ப: நீர் பாய்ச்சப்படாத கொடியில் பூத்திருந்த சங்கு புஷ்பம்தான், அந்த நீல ஆலம் பூவும். நீ நினைத்தால் எந்தச் சூழலிலும் பூக்கலாம் என்ற ஒரு வெளிச்சத்தைத் தந்ததால் அது ஆலம் பூ. வேர் நெகிழ்ந்தாலும் விழுதூன்றிப் படரும் தருவல்லவா அது?! பிடிவாதமாக வேர் பிடித்து வளர்ந்து வந்த அந்த மெல்லிய கொடியிலும் ஒரு ஆலமரத்தின் பலம் இருப்பதாகத் தோன்றியது. அது பற்றியே அதனை நீல ஆலம்பூ என்று குறிக்க நினைத்தேன்.

கே: ‘பால்யங்களைப் பதியனிடும் கண்ணாடி’, உங்களது கவிதைகளின் உச்சம். ஏழு கண்ணாடி ஏழு தலைமுறையைக் குறிப்பதா? பால்யங்களை கண்ணாடி வழியே பதியனிடுதல் – இந்தப் பதமே அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. கிஜோ முராகமி ‘இலையுதிர் காலக் கண்ணாடியின் பால்யம் நினைவுகள்’ என்பதைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட கவிதை, காலத்தை உதிர்த்து மூன்று தலைமுறைக்கு முன் சென்று மூன்று தலைமுறையை முன் நோக்கி குழந்தைபோல் மாறும் நொடியைப் பதிவு செய்யும் கவிதை எழுதிய அனுபவத்தைப் பற்றிப் பகிருங்கள்.

ப: முன்னொரு முறை குறிப்பிட்டபடி, தற்செயலாக intertextual ஆக அமைந்த கவிதை இது. மனிதர்களுக்கு ஏழு பருவங்கள் இருப்பதாக, தமிழிலக்கிய மரபில் கூறப்படுகிறது. அதனடிப்படையில்தான் ஏழு கண்ணாடிகள் என்று குறிப்பிட்டுள்ளேன். ஆனால், முராகமியின் கவிதையுடன் ஒப்பிட்டு இதை ஏழு தலைமுறைகளாகப் பார்ப்பதும், அல்லது வேறு எந்த விதமாகப் பொருள்கொள்வதும் வாசிப்பவரின் சுதந்திரம்தான். அதன் மூலம் ஒரு கவிதைக்குப் புதிய பரிமாணங்கள் கிடைக்கின்றன அல்லவா? இந்தக் கவிதைக்கு என்று மட்டுமல்ல; நவீன கவிதைகளுக்கு இது பொதுவாகப் பொருந்தும் என்றே எண்ணுகிறேன். எதையும் அப்படியப்படியே பொருள் கொள்ளக்கூடிய – லிட்டரல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்களே – அப்படியான ஒரு மனப் பழக்கம் எனக்குண்டு. பால்யத்தைப் பதியனிடுதல் என்ற பதமும் அதிலிருந்தே தோன்றியது. ஒரு செடியைப் பதியனிடும்போது, அந்தச் செடி ஒரு தொட்டியில் இருக்கும். அதை வளைத்து இன்னொரு தொட்டியில் அதன் நுனி மட்டும் வெளித் தெரியுமாறு, மண்ணுக்கடியிலாக அதைக் கொண்டு சென்று அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். சில நாட்களில் இந்தப் புதுச் செடி வேர் பிடித்துவிடும். ஆனால், உண்மையில் அது முந்தைய செடியின் ஒரு கிளைதான். நாமும், ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு தோற்றம் கொள்கிறோம். அதைத்தான் ஏழு கண்ணாடிகள் மூலம் குறிப்பிட விரும்பினேன்.

எங்கள் மகள் பிறந்திருந்த சமயத்தில், எனக்கு எந்தக் கண்ணாடியில் பார்த்தாலும், என் முகம் ஒரு குழந்தையின் முகம்போலவே தோன்றத் தொடங்கியிருந்தது; ஏனென்று தெரியவில்லை. ‘என்னடா இது… முராகமியின் கண்ணாடியில், வயதாகும்போது பிம்பத்தில் தந்தையின் முகம் தெரிகிறது. என் முகம் குழந்தையாக இருந்தபோதிருந்த முகமாக மாறிவருகிறதே…’ என்று வேடிக்கையாகத் தோன்றியது. அதனால்தான் அதில் வந்த இலையுதிர்காலம் என் கவிதையில் வசந்தகாலமாக மாறியது. 

ஆனாலும், எனக்கு நான் குழந்தையாக இருந்தபோது, என் தாயின் முகம் எப்படியிருந்திருக்கும், அவர் குழந்தையாக இருந்தபோது என் ஆச்சியின் முகம் எப்படியிருந்திருக்கும் என்கிற கேள்விகளெல்லாம் தோன்றத் தொடங்கின. அப்போதுதான் ஒவ்வொரு தலைமுறையும் பதியன் போடப்பட்டு, அதிலிருந்து மீண்டும் பதியனிடப்பட்டு வரும் நீண்ட சங்கிலித்தொடர்… எல்லாம் ஒரு முதல் ஆதிச் செடியிலிருந்து என்கிற ஒரு சின்னக் குமிழ் அப்போது தெறித்ததுதான்.

கே: ‘கர்ப்பக்கிருஹத்துக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது’ – நீங்கள் எழுதிப் பார்த்திருக்கும் பெண்ணியம் வித்தியாசமானது. குடும்பத்தலைவியாய் இழந்து பெற்றதை அவ்வளவு நாசூக்காய்ப் பேசும் கவிதை. இதைப் பதிவிட்ட மனநிலையைப் பற்றிச் சொல்ல முடியுமா? அதே போல் இன்னொன்று, “நான் கடவுள் இல்லை/தோசைகளை மட்டுமே சிருஷ்டிப்பவள்/அதுவும் சாயாத கல்லில்’ இதுவும் பெண்ணியக் கவிதை. மேலும் இது ‘பூமி இருபத்து மூன்றரைப் பாகை சாய்ந்துள்ளதுதான்’ என்ற அறிவியல் பௌதீக உண்மையைப் பேசுகிறது. இதைச் சார்ந்தும் சொல்லுங்கள். மேற்சொன்ன கவிதைகள் பெண் உலகுக்கே உரிய கவிதைகள் என்றாலும், உங்களில் பெரும்பாலான கவிதைகள் வீட்டுக்குள் இருக்கும் வெளியை விட வெளியுலகில் காணும் கிடைக்கும் அனுபவங்களைப் பதிவிடுகிறது. அகத்தனிமையை அதிகம் பேசும் கவிதைகள் புற உலகக் காட்சிகளில் திளைப்பது எதிர்த் துருவத்தில் இயங்கும் அனுபவங்களைத் தருகிறது. இது எப்படி சாத்தியமானது?

ப: பெண்ணியம் எழுதவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை அன்று இக்கவிதைகள். ஆனால், பின்னர் அந்தச் சாயல் அதில் ஏற்பட்டுவிட்டது இயல்பாக நிகழ்ந்ததுதான். முந்தைய பதிலில் சொன்னபடி, எதையும் லிட்டரலாக இடையீடு செய்யும் தன்மை என்னிடம் உண்டு. (சில சமயங்களில் அது வெளியுலகுடன் இயங்குகையில் இடைஞ்சலாகவும் இருப்பதுண்டு.) 

என் பால்யம் நெல்லையப்பர்-காந்திமதியம்மை கோயிலைச் சுற்றியே அமைந்தது. அனேகமாக, நிறைய மாலை நேரங்கள் அந்தக் கோயில்களுக்குச் செல்லாமல் நிறைந்ததில்லை. அவர்களை தெய்வங்கள் என்பதைவிட, அன்றாடம் சென்று காணும் ஒரு உறவாகவே அப்போது நினைத்திருந்தேன். ஏதேனும் வேலைகளினூடே தற்செயலாக, ஊர் ஞாபகங்கள் எழும்போது, அந்த ஞாபகமும் அப்போது செய்துகொண்டிருக்கும் வேலையும் தொடர்பாக இது போன்ற வினோதக் கற்பனைகள் தோன்றும். அப்படியொன்றுதான், காந்திமதியம்மையும், இதுபோல் அடுப்பில் கல்லைப் போட்டுவிட்டு வந்து பிராகாரப் பலகணி வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தால்… என்ற கற்பனை தோன்றியது. பெண்ணிய நோக்கில் அமைந்துவிடும் என்று உண்மையில் அப்போது தோன்றவில்லை.

தோசைக் கவிதையும் அப்படியே. பெண்கள் என்றால் சமையல் செய்யவேண்டும் என்ற ரீதியில் இதைச் சொல்லவில்லை; ஆணோ, பெண்ணோ… சமையலை உயிர்வாழத் தேவையான ஒரு அடிப்படைத் திறனாகத்தான் பார்க்கிறேன். ஒருவேளை அது இளமையிலிருந்து சமையலுக்கு சுயச்சார்புடன் இருந்துவிட்டதால் எழுந்த எண்ணமாகக்கூட இருக்கலாம். என் அப்பா சமைப்பதைப் பார்த்துத்தான் நானும் சமைக்கக் கற்றுக்கொண்டேன். அவர் இரவுப் பணிக்குச் செல்லும் காலங்களில், நான் காலை, மதிய உணவு தயாரித்துக்கொண்டு, பணிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்ததால், பதினேழு வயதிலிருந்தே அது ஒரு இயல்பான அடிப்படையான திறனாகவே பழகிவிட்டது. அன்றாட உணவு என்றில்லை; சில சமயம் தீபாவளி, திருக்கார்த்தியல், பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில்கூட, அவர் பணிக்குச் செல்லவேண்டியிருக்கும். எங்கள் ஊரிலெல்லாம், கார்த்தியல் பெரிதாகக் கொண்டாடுவோம். அதுபோல, வீட்டு வாசல்களில் வைத்துப் பொங்கல் விடுவதே வழக்கம். நம் வீட்டில் மட்டும் இதெல்லாம் செய்யாமல் இருப்பதா என்கிற ஒரு தீவிரத்தில் அவற்றையெல்லாம் செய்து கற்றுக்கொண்டேன். எல்லாம் செய்துவிட்டு, தனியாக அமர்ந்து சாப்பிடும்போது, எது எப்படியானாலும் நமக்கு ஒன்றும் குறைந்துவிடவில்லை என்கிற ஒரு சின்னப் பெருமிதம் இருந்தது ஞாபகமிருக்கிறது. காரணம், அந்த ஒரு திறனைக் கற்றுக்கொள்ள முயன்றதுதான்.

ஆனால், நீங்கள் கேட்க விரும்பும் கோணம் விளங்குகிறது. சமைப்பது மற்றும் சாப்பிடுவதில் அப்போது பெண்களுக்கு ஒரு நெருக்கடியும் கட்டாயமும் இருக்கத்தான் செய்தன; இப்போதும்கூட இருக்கின்றன. எங்கள் குடும்பங்களிலேயே, ஒன்றாகக் கூடும் சமயங்களில், ஆண்கள் முதலில் சாப்பிடுவார்கள். பிறகு பெரியவர்கள் சொல்வார்கள்: ‘ஆம்பளைப் பிள்ளைங்க முதல்ல சாப்பிடட்டும். அப்புறம் பொம்பளைப் பிள்ளைங்க சாப்பிடுங்க…’ என்று. ‘ஏன் எனக்கு மட்டும் வயிறு பசிக்காதா..?’ என்று எதிர்த்தும் நின்றிருக்கிறேன். திறன் என்று கற்றுக்கொள்வது வேறு; ஆனால், நீ பெண்ணென்பதால் இப்படியிரு என்று சொன்னால், என்னால் அப்படியிருக்க முடிந்ததில்லை. ஆண், பெண் என்று பார்ப்பதில் எனக்கு எப்போதும் குழப்பம் இருந்திருக்கிறது. என்னால், மனிதர்கள் என்றுதான் யாரையும் எண்ணமுடிந்திருக்கிறது; இப்போதும் அப்படித்தான். 

‘அவர் ஆண். அவர்தான் அதைச் செய்யவேண்டும்…’ அல்லது ‘செய்யக்கூடாது’ என்பதோ, அல்லது ஒரு பெண் என்பதால், இவர்கள் இப்படியிப்படியிருக்க வேண்டும் என்று சொல்வதோ, அதன் தாத்பர்யம் நிஜமாகவே எனக்கு விளங்குவதில்லை. நாமெல்லாரும் அடிப்படையில் மனிதர்கள்தானே..? 

இந்த மனநிலைதான், வீட்டைவிட வெளியிலடையும் அனுபவங்களை அதிகம் எழுதவைக்கிறதோ… என்னவோ..! நீங்கள் குறிப்பிட்ட தோசைக் கவிதையிலே, சாய்ந்திருக்கும் பூமியின் கோணம் பற்றிக் குறித்திருப்பதைக் கேட்டீர்கள். சாய்ந்திருக்கும் பூமியே இவ்வளவு நிலையாகச் சுற்றுகிறதே… நாம் கல்லை நேராக வைக்க இவ்வளவு போராடுகிறோமே என்று ஒருமுறை சலிப்பான எண்ணம் தோன்றியது. அதுபோன்ற விஷயங்களில் ஒரு கட்டாயமான பிடிவாதம் எப்போதும் எனக்குண்டு. தோசைக் கல்லென்றால், சரியாக மையத்தில் இருக்கவேண்டும், பேனாக் கூடு என்றால், பேனாக்கள் ஒரு பிரிவில், பென்சில்கள் ஒரு பிரிவில், இன்னபிற ஒன்றில்… சரியாக இருக்கவேண்டும், செருப்பைக் கழற்றிவிட்டால் இரண்டும் சரியாக இணையாக சீராக இருக்குமாறு கழற்றி வைக்க வேண்டும் – இப்படிச் சின்ன சின்ன விஷயங்களில் ஏதோவொரு ஒழுங்கைக் கையாள்வதில் ஒரு பிடிவாதம். அதனால், அந்தக் கல்லை நிலைநிறுத்தப் போராடிய சிறு சலிப்பு, அவ்வளவு பெரிய விஷயத்தை அதில் இணைத்ததில் முடிந்தது. இதென்றில்லை… வேறு சில கவிதைகளிலும், அதில் அறிவியலோ அல்லது வேறு எத்துறையோ தொடர்பான ஒரு விஷயம் என்னையறியாமல் நினைவுக்கு வந்ததென்றால், அதனைச் சேர்த்து எழுதவே முயற்சிப்பேன். என் மனம் அப்போது இப்படி இயங்கிற்று என்று எனக்கே பின்னால் நினைவூட்டிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக அத்தகைய கவிதைகளை எண்ணுகிறேன்.

இது போல் பிற துறை விஷயங்களை இணைத்துச் செல்லும் சில கவிதைகளுக்காக, சில நாட்கள் வாசித்து ஆராய்வதும் அதன் மூலம் அது பற்றிய பல விஷயங்களை நான் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களும் நேர்ந்திருக்கின்றன. இதெல்லாம், கவிதை எழுதும் அனுபவம் என்பதைவிட, அம்முயற்சியால் நான் கற்றுக்கொள்ளும் அனுபவம் என்று சொல்லலாம்.


கே:அவள் கதைகளில் உலவும் / அத்தனை பேரும் நானே!’ வளரும் மகளும் குழந்தைமை மனம் மாறாத தாயும் அவள் வளர வளர, இவள் மனம் நகராத காலத்தில் சூல் கொண்டு தவிக்கும் பல கவிதைகளை உங்கள் துமி தொகுப்பில் பார்க்கிறேன். அதே நேரம் தாய் தன் மகளின் வளர்ச்சியை வியந்து நோக்கும் தருணங்களும் அந்தத் தொகுப்பில் உண்டு. குழந்தைமை மனம் கொண்ட தாய்க்கு தாய்மை மிகக் கடினமான பொறுப்பு என்பதாக தொனிக்கும் குரலும் உண்டு. தாய்க்கும் மகளுக்குமான உரையாடல்கள் எல்லாமே கவிதையாக விரிந்த விந்தை நிகழ்ந்தது எப்படி? அதே நேரம் நீங்கள் பால்யத்தில் பார்த்த கேட்ட அனுபவித்ததை அந்தக் காலத்துக்குள்ளேயே மையமிட்டுக் கிடக்கும் உங்கள் மனத்தை தற்காலத்துக்குப் பொருத்திக் கொள்ளும் முரண் வெளியாகும் கவிதைகளும் உண்டு. ஒரே மனுஷி தாயாகவும் அதே கணம் தன்னை குழந்தையாகவும் பதிவிடும் படைப்பாளி, வாசகர்க்குச் சொல்ல நினைப்பது என்னென்ன?

ப: கொஞ்ச காலத்துக்கேனும் முற்றமுழுக்க நம்மை மட்டுமே சார்ந்து வாழும் ஒரு சின்ன உயிர் என்பது மிகப் பெரிய பொறுப்பு. பெற்றோராக எப்படி இருக்க வேண்டுமென யாரும் நம்மை ஆயத்தம் செய்ய முடியாது. அதற்கு எந்தக் குறிப்புப் புத்தகமும் கிடையாது; உதவாது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு குடும்பமும் தனித்துவமானது. குழந்தை வளர்ப்பும், விழுந்து எழுந்து நடக்கக் கற்றுக்கொள்வது போல்தான்; ஆனால் என்ன… அதனை இன்னொரு சின்ன உயிருடன் சேர்ந்து நாம் செய்யவேண்டும். மனத்தளவிலும், உடலளவிலும் நாம் ஏற்கவேண்டிய மாற்றங்கள், எவ்வளவு எதிர்பார்த்திருந்தபோதிலும், அதற்கும் அதை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதற்கும் இடையில், நாம் நம்மையே மீண்டுமொரு முறை கட்டமைத்துக்கொள்வது போன்ற செயல்முறை அது.

அதனைக் கவிதைகளில் பதிவு செய்யும்போது, பெற்றோர் என்கிற பொறுப்பிலிருந்து கொஞ்சம் மாறி நின்றுகொண்டு, அந்த அனுபவங்களைத் திரும்பிப் பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. நீங்கள் சொல்வது போல், குழந்தைமை மனநிலை என்று கொண்டால் (அது பற்றிய விரிவான பார்வையை அடுத்த பதிலில் தருகிறேன்.) அது பல வேளை எனக்கு இந்தப் பொறுப்பை லகுவாக்கியிருக்கிறது. குழந்தையோடு குழந்தையாக இருக்கவேண்டும்; தாயாக மாற வேண்டிய நேரங்களில் அந்த இடத்துக்குத் திரும்ப வேண்டும். இந்த நுட்பம் பிடிபட்டுவிட்டால் போதும்.  பால்யத்தில் மையமிட்டிருக்கும் மனம் தற்காலத்துக்கு அதைப் பொருத்திப் பார்க்கும் முரண் என்று கேட்டிருக்கிறீர்கள். சிலபல கவிதைகளில் இது நேர்ந்திருக்கிறது. ஆனால், ஞாபகங்களை மீட்டிப் பார்த்தல் அல்லது ஒப்புநோக்குதல் என்ற முறையில் அமைந்ததாக அவற்றைச் சொல்லலாம். 

இப்போது, இதில் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டுமென்றால், குழந்தைகள் பற்றி எழுத, கவிஞர்களாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை என்பேன். இயன்ற அளவு அவர்களுடனான உங்கள் தருணங்களை, உங்களுக்குக் கைவரும் மொழியில் பதிந்து வையுங்கள். அது புத்துணர்வு தரும் ஒரு அனுபவம். 

உங்களுடைய குழந்தைகளாக இருந்தால், அவர்களுடன் மெய்யாக நேரம் செலவழியுங்கள். அவர்களை அவதானியுங்கள். அவர்கள் குழந்தைகள் என்றாலும், சிறிய மனிதர்கள்தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு; அதை வெளியிட அவர்களுக்கு இடம்தர வேண்டும். இயல்புக்கு மாறாக அவர்கள் இருக்கும்போது, அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்று கேட்கவேண்டும். சிலவேளை, அவர்களுக்குச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், பெரியவர்களைக் காட்டிலும் தீவிரமாக உணர்வுகளை உள்வாங்குவார்கள் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். என் குழந்தை – அப்போது அவளுக்கு ஆறு வயது – ஒருமுறை பள்ளியிலிருந்து வருகையில் ஏதோ சிறு காயம்பட்டுக்கொண்டு வந்திருந்தாள். ஆனால், எப்படியென்பது அவளுக்கே தெரியவில்லை. என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ள, அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டபோது, அவள் அழத் தொடங்கிவிட்டாள். பள்ளிச்சூழல் பாதுகாப்பாக இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன்… ஆனால் அவள் அவ்வளவு அழ என்ன காரணம் எனக் கேட்டபோது, நான் அவள் சொல்வதை நம்பவில்லை என்பதால் அவளுக்கு அழுகை வருகிறது என்றாள். குழந்தைகளின் உணர்வுகள் எவ்வளவு நுட்பமானவை என்பதை நான் அறிந்துகொண்ட தருணங்களில் ஒன்று அது. சிலசமயம், அவர்களுக்கு அவற்றைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவற்றை அடையாளம் காண நாம் அவர்களுக்குக் கற்றுத் தரமுடியும். வளரும் காலத்தில், வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைப் பகிர முடியாத சூழல் அமைந்தால், அது அவர்கள் வாழ்வில் நெடுங்காலம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

‘சிக்கல் தேவதை’ போன்ற சில கவிதைகளில், குழந்தைகள் மனம் செயல்படும் நுட்பங்களை இதுபோல் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன். அவர்களுடன் நாம் செலவிடும் தருணங்களை, அனுபவங்களை, முடிந்த அளவு பதிந்து வைக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். நம் பதிவுகள் நமக்கும் அவர்களுக்குமிடையிலான உறவின் வலிமையான இழையாக எப்போதுமிருக்கும். பின்னாளில் நாமே அதை வாசித்துப் பார்க்கலாம்; நாம் முன்னர் காணத் தவறவிட்டிருந்த புதிய உலகங்களை அது திறந்து காட்டும். ஏனெனில், குழந்தைகள் ஒரு நாள் நுட்பமான மெல்லியல் தன்மை கொண்ட செடியாக இருப்பார்கள். மறுநாளே வளர்ந்து அழகிய மரமாகக் கிளை பரப்பி நிற்பார்கள். அவர்கள் உலகில் காலத்துக்கு நமதைக் காட்டிலும் இரு மடங்கு சக்கரங்கள். அது வேகமாகத் தாண்டிச் செல்லும் முன், படம் பிடித்து வைத்துக் கொள்வதே நம்மால் செய்யமுடிந்தது.

கே: உங்கள் கவிதைகளில் நிறைய குழந்தைகள் வருகின்றார்கள். நீங்களும் பல கவிதைகளில் சிறுமியாக வருகின்றீர்கள். ‘சிக்கல் தேவதை’ , ‘கல்லு முத்தம் – சின்னக் கூழாங்கல் முத்தம்’ – இது போல இன்னும் பல கதைகளும் உங்கள் மகள் உங்களுக்குச் சொல்கிறாள். வளர்ந்து இந்த உலகின் கோர முகத்தைக் கண்ட பின்னரும் குழந்தைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? இது இயல்பானதா அல்லது இயல்பை விட்டு விலகிய நிலையா? குழந்தைகளோடு இருக்கும் விந்தையுலகை எழுதுவதற்கும் குழந்தைப் பருவத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்களை எழுதுவதற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? அதில் சந்தித்த சவால்கள் என்ன? ‘மணித்தக்காளிக் கொத்தைப் பறிப்பது போல் மிக எளிதானதா’ அது அல்லது ‘கழற்சிக்காய் ஆட்டத்தில் எல்லாக் கற்களையும் அள்ளியெடுப்பது’ போல கவனநேர்த்தி கொண்டதா?

ப: என் சில கவிதைகளில் குழந்தைகள் வருகின்றார்கள். சிலவற்றில் என் பால்யம் குறித்து எழுதுவதால், நானே சிறுமியாக வருகிறேன். இதில், குழந்தைமையைத் தக்க வைத்துக் கொள்வது என்றால் என்ன? குழந்தைகள் வெளிப்படைத் தன்மை மிக்கவர்களாயிருக்கிறார்கள். உணர்வுகளை உடனுக்குடன் வெளியிடுகிறார்கள். அநேகமாக எல்லாவற்றின் மீதும் நேர்மறைப் பார்வை; எல்லாம் நல்லது என்கிற நம்பிக்கை. உலகின் மீது எப்போதும் புதிதான ஆர்வத்துடன் அதை அணுகுகிறார்கள். – இது போல இன்னும் சில குணங்கள். ஆனால், பெரியவர்களானதும் இவற்றில் விட்டுவிட வேண்டிய குணம் என்று என்னால் எதையும் காண முடியவில்லை. நண்பர்களும், குடும்பத்தினரும் என்னைப் பற்றி அடிக்கடி வைக்கும் அவதானம் இது: ‘நீ குழந்தை போல் இருக்கிறாய்.’ அந்த அவதானத்தை என்னால் மாற்றமுடிவதில்லை. சில சந்தர்ப்பங்களில்… – வெளிப்படைத் தன்மையுடன் அணுகுவது, அப்படியில்லாத சில சங்கேதங்களை விளங்கிக்கொள்வதில் குழப்பம் போன்றவற்றால் – வெளியுலகுடன் ஊடாடுகையில் இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்தேயிருக்கிறேன். உலகின் கோரமுகம் என்று நீங்கள் சொல்லும்போதே எனக்கு ஒரு பயம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சமூகச் சூழலில் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நம் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று சில நண்பர்கள் எங்களுக்குள் உரையாடிக்கொண்டுதானிருக்கிறோம்.

என் மகளை தனக்கென சுதந்திரமாகச் சிந்திக்கத் தெரிந்த பெண்ணாகத்தான் வளர்க்கிறோம்; தேவையான நேரங்களில் எப்போதும் அவள் அணுகும் தூரத்தில் ஒரு அரணாக இருந்துகொண்டு உலகை அவள் பார்வையில் கண்டறிய முடிந்த அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். அவர்கள் குழந்தைத்தன்மையைச் சிதைக்காமல், தற்போதைய சமூகச் சூழலுக்கு ஏற்ற வகையில் பிள்ளைகளை ஆயத்தமாக்குவது நிச்சயம் ஒரு சவால்தான். அடிப்படை சரி தவறுகள் தெரிந்த மனசுக்கு, அதன்படி நடக்கவேண்டும் என்று நிற்கும் மனசுக்கு ஒரு விதத் துணிச்சல் உண்டு. அது சுற்றியுள்ளவர்களைப் பல சமயங்களில் ஆச்சர்யப்படுத்தும். அவளை அப்படியிருக்கத்தான் ஊக்குகிறோம். சொற்களின் மூலம் அச்சுறுத்துபவர்களோ, பூடகமாக நம்மைத் தாழ்த்திப் பேசுபவர்களோ… அல்லது பெர்சனல் ஸ்பேஸ் என்கிற நம் எல்லைக்குள் நுழைந்து நம்மை அச்சுறுத்தப் பார்ப்பவர்களோ… இவை போன்ற சூழல்களை நானும் சந்தித்திருக்கிறேன்; அமைதியான முறையிலும், உறுதியாகவும் அவற்றைக் கையாண்டும் இருக்கிறேன். 

இதைச் சொல்லி வருகையில், எனக்கொன்று ஞாபகம் வருகிறது. என் அப்பா விளையாட்டாக என்னை ‘நீ ஒரு ராஜபாளையம்’ என்று அடிக்கடி சொல்வார். ‘குழந்தை போல் அன்பு காட்டுவாய், ஆனால் உனக்கென்று இருக்கும் சில எல்லைகளை யாரும் தாண்டப் பார்த்தால், விழுந்து கடித்துவிடுவாய்’ என்று. ஆனால், இந்தக் குணம், என்னைத் தற்காத்துக்கொள்ள பல சமயங்களில் உதவுகிறது. ஏனெனில், நல்லதை மட்டும் காணும் மனம் நமக்கிருந்தாலும், உலகம் எல்லாவித மனிதர்களும் – அற்ப, ஈன புத்தி கொண்ட மனிதர்கள் உட்பட – உள்ளடக்கியதுதான். அப்படி ஒரு ஆள், ஒருமுறை பேருந்தில் என்னிடம் அத்துமீற முயன்றபோது, எதிர்த்துக் கண்டித்தும் விலகாதபோது, கையில் வைத்திருந்த புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பால் தாக்கியிருக்கிறேன். எனக்கென்று இல்லை; வேறு யாருக்கேனும் இதுபோன்று நிகழும்போதும், அச்சமயங்களில் நான் அஞ்சியோ, ஒதுங்கியோ போவதில்லை; குரலெழுப்பத் தயங்குவதும் இல்லை.

ஆனால், இதெல்லாம், அந்தந்தத் தருணங்களில்தான். மறுகணமே, நான் என் இயல்புக்குத் திரும்பிவிடுவேன். ரொம்பவும் கோபமாக, சோகமாக இருப்பதெல்லாம் எனக்கு ஒத்துவருவதில்லை. எவ்வளவு தீவிரமான சிக்கலோ, துக்கமோ, அந்தச் சூழலிலும், உள்ளே இன்னொரு மனசு, இதிலிருந்து மீண்டு எப்படிப் பழைய நிலைக்கு வருவது என்றே சிந்தித்துக் கொண்டிருக்கும். மகிழ்ச்சிதான் என் இயல்பான மனநிலை என்று தோன்றுகிறது. அது நான் எழுதும் முறையையும் பாதிக்கிறது. சோகக் குறிப்பு கொண்ட கவிதையாக இருந்தாலும், மறுவாசிப்பு செய்து எடிட் செய்கையில், எப்படியோ அதில் மகிழ்ச்சியின் அல்லது நம்பிக்கையின் சிறுகுறிப்பு வந்து சேர்ந்துவிடுகிறது.

ஒருமுறை, திருமண நிகழ்வொன்றில் சந்தித்த ஒரு பெண் கூறினார்: “அண்மையில் இவ்வளவு content ஆக உணரும் ஒருவரைப் பார்த்து வெகு காலமாயிற்று” என்று. ஒருவேளை அதுதான் என்னில் குழந்தைமையாகப் பார்க்கப்படுகிறதோ என்று அப்போதுதான் தோன்றியது. குழந்தைகள் அதுபோன்ற மனநிலையில்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நேற்று, நாளை பற்றிய கவலைகள், எதிர்பார்ப்புகள் இல்லை. அவர்கள் உலகம் எளிமையானது. ‘இன்று, இப்போது’ – இதில் சுழல்வது. எனக்கும் என்னவோ குழந்தைகள் மற்றும் முதியவர்களோடு உணரும் நெருக்கம், மத்திய வயதினருடன் உணர முடிவதில்லை. அவர்களோடு பழகுவதை மிகவும் சிக்கலான விஷயம் போல் உணர்கிறேன். குழந்தைகளோடு இருக்கும் உணர்வை எழுதுவது, அவர்களை நெருங்கிக் கவனிப்பதில் கிடைக்கும் அவர்கள் தரும் எதிர்பாரா ஆச்சர்யங்களை, ஒரு அழகான சாட்சியமாகப் பதிவது எனத் தொடங்குவதுதான். சில வேளை அது வேறு கோணங்களில் நீண்டு விடுவதுமுண்டு.

குழந்தைப் பருவத்தைத் திரும்பிப் பார்த்து எழுதுவதென்பது, பல சமயங்களில் அவ்வளவு சுகமான அனுபவமில்லை. அந்தத் தருணங்களில் மீண்டும் வாழ்வது போன்ற ஒரு வலி, எழுதும் சமயங்களில் ஏற்படும். ஆனால், எழுதித் தீர்ப்பது அதைக் குணப்படுத்துவது போலுள்ளது. நான் அவற்றைத் தாண்டி வந்து, திரும்பிப் பார்த்து, அவற்றைப் பதிவு செய்ய முடிகிறது என்பது, அவை நடந்து முடிந்த நிகழ்வுகள் என்கிற ஒரு உறுதியை கொஞ்சகாலத்துக்கேனும் தருவதாக உணர்கிறேன். குழந்தைகளின் விந்தையுலகை எழுதுவது ஒரு சாட்சியம்; குழந்தைப் பருவத்தை எழுதுவது ஒரு குணமடைதல். இரண்டும் என் கவிதைகளுக்கு வேறு வேறு பரிமாணங்களைத் தருகின்றன. 


கே:  புதிர்கள் உங்களது கவிதையுள் பல விதமாய்ப் பரிமளிக்கின்றன. பின்னலைப் பின்னும் போது சில புதிர்களைப் போட்டு விடுகின்றீர்கள். நீங்களே ஜிக்ஸா புதிராகின்றீர்கள். இன்னொரு கவிதையில். ‘ஜிக்ஸா துண்டுகளைத் திருடிச் செல்பவர்கள்’ என்ற முழுத் தொகுப்பும் பல்வேறு மனப்புதிர்களைப் பேசுகின்றன. கவிதைக்குள் வாழ்க்கைப் புதிர்களுக்கு விடை தேடும் எண்ணம் எப்படி எழுந்தது? புதிர்களை, சிக்கல்களை கவிதைக்குள் எளிதாக்கி வைத்துக் கொள்ளும் முயற்சியாக இதைப் பார்க்கலாமா?

ப: புதிர்கள் என்றால் எனக்கு அதீத ஈடுபாடு. 1000 துண்டு ஜிக்ஸா புதிர்கள், எண்களே இல்லாமல் குறிப்புகள் மட்டும் இருக்கும் கில்லர் ஸுடொக்கு புதிர்கள் எல்லாம் நேரம் காலம் தெரியாமல் செய்து கொண்டேயிருக்கமுடியும் என்னால். வீட்டுக்கு மேஜை போன்ற பொருட்கள்கூட, சில சமயம் பாகங்களும், அவற்றை இணைக்கும் படிநிலைக் குறிப்புகளும் தரும் கடைகளில் வாங்கி, நானே அவற்றை வீட்டில் கொண்டு வந்து முழுமையாக்குவேன். இதெல்லாம் ஏனோ உலகைக் கொஞ்சம் புதுமையாக, இன்னும் வெளிச்சமாக ஆக்குகின்றன எனக்கு. எவ்வளவு சிறியதாக இருந்தாலும், ஒரு புதிரைத் தீர்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அந்தக் கணத்தில் மிகப் பெரியது.

என் பெரியப்பா (அம்மாவின் அக்காள் கணவர்) காவலராக இருந்தார். அவர்தான் இதற்குப் பிள்ளையார் சுழி. அவர், தங்கள் பயிற்சித் தேர்வில் கேட்கும் நிறைய புதிர்க் கேள்விகளை குழந்தைகளான எங்களிடம் போட்டுக் கேட்பார். மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

போலவே, இன்னொரு விஷயமும் அப்போது என்னுள் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த ஈடுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம். என் அப்பா, வீட்டு உபயோகப் பொருட்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தாமே சரி செய்வார். மேஜை விசிறி, வானொலிப் பெட்டி, சிறிய அலாரம் கடிகாரம் – இது போல. எனக்கு அப்போது அது பெரிய சாகசமாகத் தோன்றியிருக்கிறது. அப்பா வீட்டில் இல்லாத சமயங்களில், நானாகவே வானொலியைக் கழற்றி அவர் செய்வதுபோல் நானும் செய்வதாக பாவனை செய்துகொண்டு திருகுதாளங்கள் செய்து வைப்பேன்; பின்னர் அடியும் வாங்குவேன். பெரியவளானதும், அது போன்ற பணியொன்றில்தான் ஈடுபட வேண்டுமென்று மிகத் திட்டவட்டமாக இருந்தேன். அப்படி நடவாதபோதும், புதிர்கள் மேல் ஏற்பட்ட நாட்டம் மட்டும் விட்டுப் போகவில்லை. 

வாழ்வில் எதிர்ப்படும் பிரச்னைகளும், நமக்குப் புதிர்கள் என்பதே என் எண்ணம். ஏதேனும் சிக்கலோ, பிரச்னையோ… மனம் குழம்பி நிற்கும்போது, என்ன பிரச்னை என்பதை எழுதி வைத்துக்கொள்வேன். அப்போது எனக்கு அது குறித்த தெளிவு கிடைக்கும். தீர்க்க முடியாத ஏதாவது வருத்தம் மேலிடும் உணர்வு என்றாலும், அதை எழுதி வைத்துவிட்டால், மனசு அமைதியுற்று கொஞ்சம் நிலைபெறும். அதுவே என் கவிதைகளிலும் வெளிப்படுகிறது. கவிதையாக எழுதும்போது, தெளிவும், அமைதியும் மட்டுமன்றி, அதையொரு படைப்பாக மாற்றிய சிறிய மகிழ்ச்சியும் கூடக் கிட்டும். கவிதையும் புதிரும்கூட ஒன்றுதான். சில வேளை கவிதை புதிராக இருக்கிறது; சில வேளை புதிருக்கு விடையாக இருக்கிறது.

கே: உங்கள் கவிதைகளுக்கு மனதின் சத்தத்தை மௌனத்தின் பல வடிவில் மொழியாக்கம் செய்கின்றீர்கள். அங்கே மௌனம் அறையாகிக் கதவடைத்து நிற்கிறது, மௌனம் மின்மினியாக ஜ்வலிக்கிறது, மௌனம் ஆடைகளின் பூசப்படவேண்டிய வர்ணமாகிறது. இன்னொரு கவிதையில் ‘ஒரு மலை/ எவ்வளவு மௌனித்திருக்கிறது/எவ்வளவு தனித்திருக்கிறது’ என்று பிரகடனம் செய்கின்றீர்கள். இவ்வளவு மௌனத்தை கவிதையுலகு தாங்குமா?

ப: நான் எழுதுவதையே கவிதையுலகு தாங்கும்போது, இவ்வளவு மௌனத்தைத் தாங்க இயலாதா?! வேடிக்கைக்காகச் சொன்னேன். ஸ்தூலமான உணர்வுகளை எழுதுவதில் உள்ள வசதி இது. மௌனமும் பல சமயம் பல உணர்வுகளின் பிரதிபலிப்புதானே! அது என்னவென்று கற்பனை செய்ய இன்னும் ஏராளமான சாத்தியங்கள் உள்ளன எனும்போது, சில சமயம் அந்த மறுக்கமுடியாத உண்மை என்னை வாயடைக்கச் செய்துவிடுகிறது. 

தடயமின்றி மௌனமாக ஒழுகிச் செல்லும் மெல்லிய நீர்த்தடம் நம் வாழ்வு. ஏதேனும் ஒரு சிறிய வெளிச்சம் அதனைக் கடக்கும்போது, சிறுகணம் அது ஒளிர்கிறது, தன் இருப்பை, தன் பொருளை, தன் பயனை தனக்கே ஞாபகமூட்டிக்கொண்டு. சில சமயம் அந்தச் சிறிய வெளிச்சம் ஒரு கவிதையாக வருகிறது. ‘ஒரு கடைசி வரி தோன்றிவிட்டது மனத்தில்’ கவிதையில் வரும் ‘ஆயிரம் பதினாயிரம் இலைகளின் அபூர்வ மௌனம்’ போல் இருக்கிறது அப்போது.

கே: ‘நெற்றியில் வெட்டுத் தழும்போடு/நெல்லையப்பர்’, ‘சிறுவீட்டுப் பொங்கல்’, குடிக்கன்னி வழிபாடு, இசைத் தூண்கள் – இவற்றைப் பற்றி குறிப்புகள் கவிதை நெடுகக் கிடக்கின்றன. இவை எல்லாம் நெல்லை மண்ணின் கலாசாரம், பண்பாடு, தொன்மம் சார்ந்த நம்பிக்கைகளை, சடங்குகளை, கதைகளைப் பதிவிடுகின்றன என்று நினைக்கிறேன். அதைப் போல உங்கள் கவிதைகளில் நெல்லை மண் மணக்கும் வட்டாரச் சொற்களும் உண்டு. (ஆமை வடை அதை நாங்கள் மசால் வடை/பருப்பு வடை என்போம், பன்னீர்ப் பூக்கள் இதை நாங்கள் மரமல்லி என்போம், கழற்சிக்காய் இந்த வழக்கு திருச்சியிலும் அதற்கு வடக்கேயும் இல்லை; கல்லாங்கா ஆடுதல் என்போம். அதே போல அசேதனமாய் இந்த வார்த்தையும் திருச்சிக்குத் தெரியாது.) இதை எல்லாம் சார்ந்து சொல்லுங்கள்.

ப: ஆமாம். நெல்லையப்பரின் நெற்றித் தழும்புக்கு ஒரு கதை இருக்கிறது. எங்கள் ஊர்த்தல புராணம். சிறு வயதில், தினமும் கோயிலுக்குப் போனாலும், போகுந்தோறும் கேட்க விரும்பும் கதை அது. அங்குள்ள இசைத் தூண்கள் இப்போது கம்பிகளுக்குள் அடைபட்டுவிட்டன.  ஞாபகத்தில் இருக்கும் எல்லாமே இப்போது வேறாக மாறிவிட்டன. அந்த ஏக்கம், என்னுடைய ஊரின் மேல் இருக்கும் தீராத ஏக்கம், இது போன்ற கவிதைகள் எழுதும்போது கொஞ்சம் நிறையும்; சில சமயம் பெருகவும் செய்யலாம். ஆனால், இது என்றும் தீராத ஏக்கம்தான். 

என் ஊர் என்று பிரியத்தோடும், வாஞ்சையோடும் நினைப்பது, நான் சின்னவளாக இருந்தபோது கண்ட அந்தத் திருநெல்வேலி டவுனை. அந்தக் காலத்திலிருந்து எங்கள் ஊர் இப்போது வெகுதூரம் நகர்ந்துவிட்டது. ஆனால், என் ஞாபகங்களில் இருக்கும் திருநெல்வேலியை அடிக்கடி எடுத்து எடுத்துப் பார்த்துக் கொள்வேன்; பார்க்கும் சமயம் இருக்கும் மனநிலைக்கேற்ப, இவை போன்ற கவிதைகளாக அவை மாறும். இப்படியெல்லாமும் இருந்தது என்று பதிந்து வைத்துக்கொள்கிற ஒரு வாய்ப்பு எனக்கு.

வட்டாரச் சொற்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். எங்கள் ஊர்த் தமிழை விடுங்கள்… பொதுவாகத் தமிழில் பேசவே நாங்கள் இருக்குமிடத்தில் வாய்ப்பு குறைவு. முகுந்தின் தாய்மொழி கன்னடமாக இருந்தாலும், வீட்டில் தமிழ்தான் அதிகம் புழங்கும். ஆனால், மகளோடு மட்டும்தான் திருநெல்வேலித் தமிழ்ப் பழக்கம். அது இயல்பாக அமைந்துவிட்டது. அதுபோல்தான் கவிதையிலும்; எங்கள் வட்டாரச் சொல்லைச் சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. அது இயல்பாக அமைந்துவிடுவதுதான். பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் சொல் வேறாக இருக்கலாம் என்ற எண்ணம் அப்போது தோன்றுவதில்லை. கழச்சிக்காய்க்கு வேறு பெயர்கள் இருக்கின்றன என்பது உங்கள் கேள்வியின் மூலம்தான் அறிந்துகொண்டேன். பழந்தமிழ் இலக்கியங்களில், இவ்விளையாட்டு ‘கழங்காடுதல்’ என்றே குறிக்கப்படுகிறது. அதுதான் கழற்சிக்காய் என்றானதால், அதை ஒரு பொதுவான பயன்பாடு என்றே நான் கருதி வந்தேன். இதில் ஒரு விசித்திரமாக, கன்னடத்தில் ஆமவடை, ஆமவடை என்றுதான் வழங்கப் பெறுகிறது.

கே: ‘பிச்சி மனங்களுக்குத் தேவை/கன்னத்தில் அறைந்து/கயிற்றைக் கழற்றச் சொல்லும்/கவுண்டமணிகள் மாத்திரமே!’ – உங்கள் தொகுப்பில் பித்துமை பற்றிப் பேசும் கவிதைகளை இவ்வளவு அப்பட்டமாய்ப் பதிவிட வேண்டுமா என்றே தோன்றுகிறது. இதைச் சார்ந்து சொல்லுங்கள். ‘பதியன்’ கவிதையில் பெண் மன உலகை, பழைய வீட்டின் வேப்பங்கொம்பில் சிக்கிய மனம், புது வீட்டில் விட்டுச் செல்லப்பட்ட இளம்பாகல்கொடியின் நுனியில் ஒட்டியிருக்கும் இன்னொரு மனத்தோடு உறவு கொள்வது அபூர்வமானது. நகரத்து இயந்திர வாழ்வில் இத்தகைய மனத்தை, குணத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் இருக்கும் சிக்கல்கள், சவால்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

ப: உடல் சார்ந்த பிணி மற்றும் உபாதைகளைப் பற்றிப் பேசுவது எப்படி இயல்பானதோ, அதுபோன்றே மனநிலை மற்றும் அது சார்ந்த பிரச்னைகள் பற்றிப் பேசுவதும் இயல்பாக வேண்டும் என்பதுதான் என் நோக்கம். கவிதை என்பதே அகவெளிப்பாட்டின் ஒரு வடிவமல்லவா? 

‘முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்’ என்று ஔவையார் எழுதிய ஒரு சங்கப் பாடல் உள்ளது. எத்தகைய பித்து நிலையில் நிற்கும் ஒரு தலைவியின் குரலாக அது உள்ளது… அவள் மனவெழுச்சியின் தீவிரத்தை எவ்வளவு தயக்கமின்றி அவர் ஒரு பாடலாக்கியிருக்கிறார். ஒரு கவிஞரோ அல்லது வேறு எந்த வடிவத்தில் எழுதும் படைப்பாளியோ… மனித உணர்வுகளை இதுபோல் நேர்மையாக வெளிப்படுத்துவதற்கு, எதிர்வினைகள் பற்றிய அச்சமும் தயக்கமும் தடையாக இருந்துவிடக்கூடாது. படைப்பு வெளியில் மனநிலை பற்றி எழுதுவதற்கு ‘இதை நம்முடன் தொடர்புபடுத்திய கண்ணோட்டங்கள் எழுமோ…’ என்பது போன்ற நெருக்கடிகள் இல்லாத சூழல், அதை எழுத நினைப்பவர்களுக்கு அமைய வேண்டும். 

‘பதியன்’ கவிதையைக் குறிப்பிட்டு, நகரத்து வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்துக் கேட்டிருக்கின்றீர்கள். நகரம் என்றில்லை… வேறு எங்கும் இதுபோல் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். எனக்கு இருக்கும் சிக்கல்களில் ஒன்று, சிநேகமாக இருக்க விரும்புவதும், அன்பை எதிர்கொள்ளத் தெரியாததும்தான். முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும், எதிரில் வந்தால் அவர்களை நோக்கிப் புன்னகைப்பேன். அவர்களும் புன்னகைப்பார்கள். இந்த அளவிலேயே அந்த சிநேகம் இருக்கும்வரையில் என்னால் இயல்பாக இருக்கமுடியும். ஆனால், நான் நட்பானவள் என்று என்னிடம் உண்மையில் அன்பு பாராட்டத் தொடங்கினால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற திகைப்பு ஏற்பட்டுவிடும். பொதுவாக, எல்லாவற்றையும் நல்லதாகப் பார்க்கும் குணம் உண்டு எனினும் பிறரின் அன்பை இயல்பாக ஏற்றுக்கொள்வதில் மட்டும் எனக்கு எப்போதும் சிரமமுண்டு… அது எப்போதேனும் நம்மைக் காயப்படுத்தி விடும் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். ஆனால், எனக்கு நம்பிக்கை ஏற்படும் இடத்தில் இயல்பாக அன்பை ஏற்றுக்கொண்டு குதூகலமாக இருப்பேன். முன்னர் சொன்னது போல், நாங்கள் இப்போது இருக்குமிடத்தில், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் நட்புதான் எனக்கு அதிகம். அதனால், என் கவிதைகளிலும் அது அவ்விதமே வெளிப்படுகிறது. அதற்கு நான் வசிக்குமிடம் ஒரு தடையாவதில்லை. மனம் லயிக்கும் இடம் நம் வீடு; புறக்காரணிகள் செய்வதற்கு அங்கு அதிகம் வேலைகள் இல்லை. 

கே: உங்கள் இசையறிவைக் காட்டும் கவிதை ‘தலைமுறை’, ‘ரோவன் மரங்களில் ஹாலுசினேஷன் தொட்டில்கள்’, ‘எதுவோ என் மூளையை நிரலமைத்திருக்கிறது’ போன்ற கவிதைகள்; பின்னலாடை புனைவதைப் பற்றி பல கவிதைகளில் குறிப்பிருக்கிறது; அது போல நீங்கள் பூப்பின்னல் வேலை செய்வது பற்றியும் எழுதியிருக்கின்றீர்கள்; நீங்கள் ஓவியம் வரைபவரும்கூட. அதைச் சார்ந்த குறிப்புகளும் சில கவிதைகளில் உண்டு. சிறுகதைகளும் சிறார் சிறுகதைகளும் எழுதியிருக்கின்றீர்கள். நிறைய கவிதைகளும் எழுதியிருக்கின்றீர்கள். இப்படிப் பல்கலை வித்தகராக இருப்பது கொடுப்பினையா அல்லது எந்தக் கலைக்கும் முழு நேரத்தையும் ஒதுக்க முடியவில்லையே என்பதொரு சுமையா? சமகாலத்தில் இந்த எல்லாத் துறைகளிலுமிருந்து இயங்கி வருபவர்களிடமிருந்து நீங்கள் எதைப் பெறுகின்றீர்கள்? முக்கியமாக சமகால கவிதைகளில் நீங்கள் எதை அவதானிக்கின்றீர்கள்?

ப: இசை பயின்றவள் இல்லை நான். அதனால், இசையறிவு என்று சொல்ல முடியாது; ரசனை என்று சொல்லலாம். பல வகையான இசையும் எனக்குப் பிடிக்கிறது. பாடல்கள் என்று இல்லை; வாத்தியக் கருவிகள் மட்டும் கொண்ட இசையும் பிடிக்கும். அது எந்த அடிப்படையில் என்று எனக்கே தெரியாது. அதனால்தான், என்னுடைய ஒரு ப்ளே லிஸ்ட்டில் இருந்த பாடல்களெல்லாம், ஒருநாள் வரிசையாக வானொலியில் ‘மோகன ராகப் பாடல்கள்’ என்கிற குறிப்பில் ஒலிபரப்பானபோது, ஆச்சர்யத்தை விட ஒரு வகையில் அதிர்ச்சியாக இருந்தது ஞாபகம் இருக்கிறது. 

நீங்கள் சொல்வது போல், பல விஷயங்களில் எனக்கு ஈடுபாடு இருக்கிறது. உங்கள் கேள்வியில் இடம்பெறாத வேறு சிலவும் உள. புகைப்படங்கள் எடுப்பது, கீ போர்ட் வாசிப்பது போல் சில. சிறு வயதில் எல்லாக் குழந்தைகளிடமும் கேட்பது போல், நான் பெரியவளானதும் என்ன செய்யப் போகிறேன் என்று யாராவது கேட்டால், ‘நான் நிறைய நிறையப் படிப்பேன்… புதுசு புதுசாக எல்லாவற்றைப் பற்றியும் படிப்பேன். எப்பவும் படிச்சுக்கிட்டேயிருப்பேன்…’ என்று சொல்வேன். அது ஒருவகையில் உண்மையாகிற்று என்று தோன்றுகிறது. ஆனால், அதையொரு சுமையாக நான் எப்போதும் எண்ணுவதில்லை. எனக்கு எதையேனும் புதிதாகக் கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும். புதிய மொழிகள், புதிய கலைகள்… இப்படி. அதில்லாவிடில், எதையேனும் புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கவேண்டும் – எழுதுவது, ஓவியம், புகைப்படங்கள் எடுப்பது அல்லது கைவினைக் கலையில் ஏதேனும் செய்வது… எல்லாமே இந்த மனநிலையால்தானே தவிர, பல்கலை வித்தகியெல்லாம் இல்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், எதையேனும் க்ரியேட் செய்யாமல், அல்லது கற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது, உண்மையில் நான் இருப்பதாகவே தோன்றுவதில்லை; அவ்வளவுதான். இவையிரண்டில் ஒன்று இல்லாவிடினும் என்னால் நிலைகொள்ள முடியாது. தட்டழியுதல் என்றும், பொசமுட்டுதல் என்றும் பதங்கள் எங்கள் ஊரில் பேச்சுவழக்கில் உண்டு; எதுவும் செய்யாமல் சும்மாயிருக்க வேண்டுமென்றால் அப்படித்தானிருக்கும் எனக்கு. 

மருத்துவமனைகளிலோ, வேறு எங்கோ காத்திருக்க வேண்டுமென்றால், வாசிப்பதற்குப் புத்தகம், அல்லது வரைய ஒரு சிறு நோட்டுப் புத்தகம் – இப்படி ஏதேனும் ஒன்றைக் கையோடு கொண்டு செல்வேன். இல்லாவிடில், என்னை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று எனக்கே தெரியாது.

இதுபோன்ற துறைகளில் இயங்கி வருபவர்களிடமிருந்து என்ன பெறுகிறேன் என்றால், முக்கியமாக எவ்வளவு புதிய சாத்தியங்கள் உள்ளன என்பது குறித்த அறிவு. மேலும், மேற்குறிப்பிட்ட துறைகள் சார்ந்து இயங்கும் சில குழுக்களில் உறுப்பினராக இருக்கிறேன். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு சில நல்ல நண்பர்களை அடையும் வாய்ப்பும் அதனால் எனக்குக் கிட்டியிருக்கிறது. தனிப்பட்ட நட்பு ஏற்படும்போது, எவ்வளவு ஊக்கத்துடன் அவர்கள் தங்கள் துறையில் இயங்குகிறார்கள் என்பதை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள முடிகிறது. அது எனக்கு ஊக்கமாகவும் இருக்கிறது. சில சமயங்களில் அவர்களோடு சேர்ந்து கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

வசந்தகால கான்லெஸ் எழுத உந்துதலாக இருந்த கெல்லி யு.கே.யைச் சார்ந்தவர். நிட்டிங் வடிவமைப்பாளர். அவருடைய பல புதிய பாட்டர்ன்களைச் சந்தைப்படுத்தும்முன் சோதித்துப் பார்க்க நான் டெஸ்ட் நிட்டராக இருந்திருக்கிறேன். ஒஹையோவில் லிடியா என்றொரு தோழி, ஓவியங்கள் சார்ந்த ஒரு குழுவில் அறிமுகமானவர். கோவிட் ஊரடங்குக் காலத்தில், அவர் பயிலத் தொடங்குவதாக இருந்த போர்ட்ரெய்ட் ஸ்கெட்ச் பயில என்னையும் ஊக்கி, ஒவ்வொரு நாளும் பாடங்களையும் என்னுடன் பகிர்ந்து வந்தார். உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்துகொண்டு, இருவரும் ஒன்றாகப் பயின்றது, ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

இதனால், பல விஷயங்களில் மனம் ஈடுபடுவது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதாக மட்டும் இல்லாமல், வாழ்வில் அழகிய பெறுமதி மிக்க பல விஷயங்களைக் கொண்டுவருவதாக உள்ளது எனக்கு. ஒன்றிலிருந்து இன்னொன்று… அதிலிருந்து வேறொன்று என ஓடிக்கொண்டேயிருக்கையில், கொஞ்சம் எழுதவும் செய்யலாம்; நிறையக் கற்றும் கொள்ளலாம்; இந்தச் சகட யோக மனசினால் கிடைக்கும் பரிசு இதுதான்.

தமிழில் சமகாலக் கவிதைகளில், இது போல் வேறு துறை சார்ந்த கோணத்திலிருந்து எழுதுபவர்கள் இருக்கிறார்கள். கவிஞர் ரவிசுப்பிரமணியன் கவிதைகளில், இசை சார்ந்த ப்ரயோகங்களையும், கோணங்களையும் பார்க்கமுடியும். இசையின் சில கவிதைகளிலும் பாடல்கள் மற்றும் இசை சார்ந்த ரசனை உள்ளோடிக்கொண்டிருப்பதைக் காண முடியும். கௌரிப்ரியாவின் கவிதைகளில் அவர் பணியாற்றும் மருத்துவத்துறை சார்ந்த சில அனுபவங்கள் கவிதையாகும் விதம் ஆச்சர்யப்படுத்தும். இதுபோல் இன்னும் பலரும் இருக்கலாம். இதன்றியும், பொதுவான ஒரு கவிதை வாசகியாக, எளிய மொழியில் ஆழ்ந்த உணர்வுகளைத் தூண்டும் கவிதைகளை சமீபகாலங்களில் அதிகம் வாசிக்கிறேன். முகுந்தின் பல கவிதைகளும்கூட எளிய கூறுமுறையிலிருந்து கிளைப்பவையே. அதுபோன்ற அனுபவம் தரும் கவிதைகளை இப்போது அதிகம் வாசிக்கமுடிகிறது. இயல்பான மொழியில் பகிரப்படும் நுட்பமான அனுபவங்கள் தீவிரமான தாக்கம் ஏற்படுத்துகின்றன. மேலும், மரபு வடிவங்கள், குறிப்பாக சங்க இலக்கியத்தை வாசிக்கும் அனுபவங்களை நவீனப்படுத்தித்தரும் கவிதைகளையும் காண முடிகிறது. தம் சிலபல கவிதைகளில் பெருந்தேவி அச்சித்திரங்களை நவீன உலகின் பின்னணியில் வரைந்து காட்டுகிறார். 

பல்வேறு பின்னணிகளில், தமக்கென ப்ரத்யேகப் பாணிகளில், நிறைவான வாசிப்பனுபவம் தரும் கவிதைகளை எழுதும் பலர் சமகாலத்தில் இருக்கிறார்கள். 

எளிமையின் அழகியலையும் கவிதையின் உள்ளார்ந்த தீவிரத்தையும் ஒன்றாகக் கொண்டாடி வரும் காலமாக இதனை நான் உணர்கிறேன்.

கே: உங்கள் கவிதைகளில் கனவில் வரும் காட்சிகளை அப்படியே எழுதி இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதன் உச்சம் ‘என் கனவு எழுதிய ஒரு பருத்திச் செடி’. இந்தக் கவிதையில் இறுதி இரண்டு வரி தவிர கவிதை வரிகளாவே கனவில் வந்தன என்று அடிக்குறிப்பு இடப்பட்டிருக்கிறது. இந்த அளவுக்கான கவிதைப் பித்து உணர்த்துவது என்ன? கனவில் கூட கவிதை எழுதும் கவிஞரை உங்களுள் கண்ட தருணம் எப்படியிருந்தது?

ப: 2024-இல் எழுதப்பட்ட பல கவிதைகள், தூக்கத்தினிடையே எழுந்து எழுதப்பட்ட கவிதைகள். தூக்கத்தில் மங்கலான கோட்டுச் சித்திரம் போல சில சமயம் யோசனைகள் தோன்றும்; உடனே எழுந்து அதனை எழுதி வைப்பேன். சிலவற்றை, பின்னர் திருத்தியும் எழுதுவேன். ஆனால், நீங்கள் குறிப்பிடும் கவிதை மாறுபட்டது. இது ஒரு யோசனையாகவோ, கருப்பொருளாகவோ தோன்றவில்லை. ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட வடிவத்திலேயே கனவில் வந்தது. அது எனக்கே ஒரு வினோதமான அனுபவம்தான். ஆனால், விழிப்பு நிலையில் எழுதுவதற்கும் கனவில் எழுதுவதற்கும் அதிக வித்தியாசமில்லை என்பதே என் எண்ணம். நாம் விழிப்பு நிலையில் கவிதையெழுதும்போதுகூட, நாமாக இருந்தா எழுதுகிறோம்? எனக்கு அப்படித் தோன்றுவதில்லை. எழுதும்போது நாம் வேறு யாரோவாக இருக்கிறோம்; அல்லது ஒரு trance நிலை என்று வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் எழுதி முடித்தவுடன், பல சமயங்களில், அதனுடன் எந்தத் தொடர்பையும் உணர முடிவதில்லை. ஒவ்வொரு சமயம், என்ன நினைத்து அப்படி எழுதினோம் என்பது எனக்கே புதிராக இருப்பதும் உண்டு. சில சமயம் எழுதக் கூடாமல் கை நழுவிப் போவதும் உண்டு. விழித்தெழும்போதே ஏதோ ஒரு வரி தோன்றும். தூக்கத்தில் அவ்வளவு பெரியதொரு உண்மையைச் சொல்லும் பொருள் தருவதான வரி போலத் தோன்றும். ஆனால், உண்மையான பொருள் தரும் சிந்தனைகள் சட்டென மறந்து போய்விடுவதைக் கண்டிருக்கிறீர்களா… சில சமயம் ஊற்று நீர் பொங்கி அந்த ஊற்றிலேயே மறைந்துவிடும். அது போல் இந்தச் சிந்தனைகளும் மனசின் ஆழத்தில் தோன்றி மீண்டும் அங்கேயே போய் மறைந்துகொள்ளும். அதனால், விழித்திருக்கும்போது எழுதுவது, தூக்கத்தினிடையில் எழுந்து எழுதுவது அல்லது கனவில் எழுதுவது – எல்லாமே ஒரு வகையில் எனக்கு ஒன்றுதான்.


கே: தொழிற்நுட்பம் (chat GPT) மற்றும் மருத்துவச் சொற்கள் (ஹாலுசினேஷன், Alexithymic) போன்ற சொற்களும், கடல் கடந்த இலக்கியத்தின் மீதான தாக்கத்தால் எழுதிய கவிதைகளும், அந்தந்தச் சொற்களின் அடியாழம் உணராதபோது சம்பந்தப்பட்ட கவிதானுபவம் உணரப்படமால் போய் விடுமோ என்ற சந்தேகம் உங்களுக்கு எப்போதாவது எழுந்திருக்கிறதா? அடிக்குறிப்புகள் தாண்டி அந்த அனுபவத்தைக் கடத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சி என்ன?

ப: நீங்கள் குறிப்பிடுவது போன்ற துறை சார்ந்த நுட்பமான சொற்களைச் சில கவிதைகளில் பயன்படுத்துகிறேன். Chat GPT அது எழுதப்பட்ட காலம் சார்ந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் அமைந்தது. மேலும், கவிதையில் நான் விரும்பும் உள்ளடக்கத்தைக் கடத்தத் தேவைப்படும்போது, துறை சார்ந்த சொற்களைப் பயன்படுத்துகிறேன். அது ஒரு பரிசோதனை முயற்சியாகப் பார்க்கப்படலாம். என்னைப் பொருத்த அளவில், கவிதைக்கு அது தேவையாக இருந்தது; அவ்வளவுதான். மட்டுமன்றி, இது போன்ற சிக்கல்களற்ற ஒரு கவிதையை வாசிக்கும்போதுகூட, ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு வித வாசிப்பனுபவத்தைத் தரலாம். இச்சொற்கள் வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, அது பற்றி அவர்கள் தேடிக் கண்டறியலாம்; அல்லது இது எனக்கான கவிதையன்று என அவர்கள் விலகிச் செல்லலாம். அது வாசிப்பவரின் சுதந்திரம். அப்படிப்பட்ட சொற்களுக்கு ஒரு எளிய அறிமுகமாகத்தான், அடிக்குறிப்புகளைத் தருகிறேன். அதை விரித்தெழுதுவதோ அல்லது அதை வாசகர்கள் விளங்கிக்கொண்டு வாசிக்கவேண்டும் என்ற நோக்கில் செய்யப்படும் வேறு எந்த முயற்சியுமோ, அவர்களின் வாசிப்பனுபவத்தில் குறுக்கீடு செய்துவிடும் என்றே எண்ணுகிறேன். அப்படி இடைப்படுவதை நான் விரும்புவதில்லை.

கே: நீங்கள் பல கவிதைகளில் ஒரு வரியையோ அல்லது வார்த்தையையோ இரண்டு முறை அல்லது மும்முறை சொல்கின்றீர்கள். சில கவிதைகளில் முதல் பத்தி, இரண்டாம் பத்தி – இரண்டும் ஒன்றாக இருக்கின்றன; மீதிக் கவிதை வேறாக இருக்கிறது. உங்களது கவிதைகள் free format-இல் இருப்பது, நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட கவிதை சொல்லும் முறையா? கவிதையின் வடிவம் சார்ந்த உங்கள் பார்வையைச் சொல்லுங்கள்.

ப: எங்கள் திருநெல்வேலி டவுன் நேதாஜி சந்தையில் மைய நூலகம் இருந்தது. அங்கே பொருநை வாசகர் வட்டம் என்ற அமைப்பு இருந்தது. நானும் அதில் உறுப்பினர். வாரம் ஒருமுறை வாசகர் வட்டக் கூட்டம் நடக்கும். அதில் ஒரு முறை, ஒரு மூத்த உறுப்பினர் சொன்னார்: “புதுக்கவிதை பக்கோடா போன்றது. ஒவ்வொன்றும் தன் வடிவத்தைத் தானேதான் தேர்ந்தெடுக்கும்’ என்று. இப்போது அதுதான் ஞாபகம் வருகிறது. எழுதி முடிக்கும் வரையிலும், இது இவ்வடிவத்தில் வரவேண்டும் என்ற எந்த நோக்கும் முன்னிற்பதில்லை. நான் உணர்ந்தது முழுமையாக என் மனத்தில் இருந்த அளவுக்கு அதே தொனியில் வெளிப்பட்டிருக்கிறதா என அதில் மட்டுமே என் முதற் கவனம் இருக்கும். அதற்காக, சில முறை, பல முறை எடிட் செய்வதும் உண்டு. நான் பகிர விழைந்தது அதே ரீதியில் எழுத்தாகவில்லை எனக் கைவிட்ட கவிதைகளும் உண்டு.

இருமுறை மும்முறை மீளெழுதப்படும் வரிகள், அது அப்படித்தான் தேவையென என் மனசுக்குத் தோன்றும். சொல்லிப் பார்ப்பேன்; சில சமயங்களில் அது பிடிவாதம் பிடிக்கும். சரியென அப்படியே விட்டுவிடுவேன். வடிவம் சார்ந்த என் பார்வை என்றால், எல்லாவிதப் பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும். எனக்கு மரபு பிடிக்கும். சந்தம் பிடிக்கும். என் முதல் தொகுப்பின் ‘அண்ணன்களாகிவிட்ட அண்ணன்கள்’ போன்று சில கவிதைகள் சந்தத்தில் முயன்று பார்த்திருக்கிறேன். ஆனால், சந்தத்துக்கு குழந்தைப் பாடல்கள் ஒரு நல்ல வாய்ப்பு; உள்ளடக்கத்துக்கும், குழந்தைகளை ஈர்ப்பதற்கும். அப்படி எழுதியதில் ஒன்றிரண்டு தும்பியில் வெளியாகியிருக்கின்றன. சித்திரக் கவி பிடிக்கும். ஓரிரு கவிதைகள் சித்திரக் கவியாக எங்கள் தனிப்பார்வைக்கான கையெழுத்துத் தொகுப்பில் எழுதி வைத்திருக்கிறேன். நூல் வடிவமைப்பில் அது எவ்விதம் பொருந்தும் என்கிற தயக்கத்தால், இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படவில்லை.

ஆனால், வடிவம் எதுவாயினும், கவிதை கடத்தும் உணர்வுதான் முக்கியம். அது நம் மனத்தின் மனத்திலிருந்து வெளிப்படும்போது, வடிவம் பொருட்டாவதில்லை.

கே: உங்கள் மொத்தக் கவிதையுலகை உங்கள் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘எடையற்ற நிழல்’ என்ற பதத்துக்குள் அடக்கிவிட முடியும். உங்கள் கவிதைகள் வழியாக நீங்கள் எதையும் சுமக்கவோ சுமத்தவோ நினைக்கவில்லை. அது நிழல் போல எடையற்று எப்போதும் உடனிருக்கும்; ஆனால் எல்லாச் சமயத்திலும் வெளிப்படாது. இந்தக் கவிதைகளை எழுதி முடித்த பின்னர் நீங்கள் என்ன உணர்கின்றீர்கள்? அவற்றை வாசிப்பவர்களுக்கு அவை என்னவாக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றீர்கள்?

ப: எப்போதும் எழுதி முடித்தவுடன், ஏதோ ஒரு நிறைவான உணர்வும் இருக்கும்; அதே வேளை, அதிலிருந்து சட்டென்று ஒரு விலக்கமும் தோன்றும். சில சமயம், நான் எழுதி முடித்து நானே வாசித்ததும், அதன் வேலை முடிந்தது என்று தோன்றும். முகுந்தின் தூண்டுதல் இல்லாவிட்டால், இவற்றையெல்லாம் நூலாக்கம் செய்யும் எண்ணம் தோன்றியிருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், எப்போதேனும் என் கவிதையை வாசித்தவர்கள் அது பற்றி ஓரிரு வார்த்தைகள் பகிரும்போது, நாம் நம்மையறியாமல், இன்னொருவர் வாழ்வில் ஒரு சின்னஞ்சிறிய பகுதியாகி அவர்களைத் தொட்டிருக்கிறோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி. 

என் கவிதைகள் வாசிப்பவர்களுக்கு வாழ்வின் இனிமையை எடுத்துக்காட்ட வேண்டும்; நம் பூமி என்கிற அற்புதத்தை, அதில் நாம் வாழக் கிட்டிய பெறுமதியை நினைவூட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். என் கவிதையை வாசித்த நாளில், அதனால் அவர்கள் முகத்தில் ஒரு புன்னகையோ, மனசில் மகிழ்ச்சியின் ஒளியோ தோன்ற வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், ஒரு பறவை என்னைவிட இதை அதிகம் சாதித்துவிட இயலும். பறவைகள் நம்மிலும் உயர்ந்த கவிஞர்கள். அவற்றுக்கு அன்றாடம் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அத்தனையும் சத்தியம்; அத்தனையும் உள்ளத்தில் அமைதி பரப்பும் ஒரு சுடர். என் கவிதைகள் அச்சுடரின் ஒரு நிழலாக இருந்தால்கூட, என் எண்ணம் கைகூடிவிடக் கூடும். 

கே: உங்களது கவிதைகள், உங்களை அமைதியான, கூச்ச இயல்புடைய, தனிமையை நாடுகிற ஒருவரென அடையாளப்படுத்துகிறது. உள்முகச் சிந்தனையாளராகவே உங்களைக் காட்டித் தருகிறது. ஆமவடை என்ற படிமம், ‘அடிக்கடி உடைக்கப்பட்ட மட்பாண்டம்’ என்ற படிமம், ‘கிறுக்கு பிடித்த சுவர்’ என்ற படிமம் எல்லாம் குறிப்பது அதுவே. எந்தச் சொல்லையும் புன்னகையில்லாமல் சொல்ல முடியாத உங்களது கவிதையுலகில் வெறுப்பின்மை, தாய்மை, எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு – இவையே பிரதானமாய் இருக்கின்றன. காய்கறி வண்டியிலிருந்து சிதறும் தக்காளிக்குப் பதறும், குட்டிப் பூனைகளின் பிரிவுக்கு தாய்ப் பூனையிடம் மன்னிப்பு கேட்கும் தூய மனமும் கொண்டது உங்கள் கவிதை மனம். அதற்கு தங்கரளியும் ஈர்க்குச்சியும் போதுமானதாக இருக்கிறது நினைவுகளைக் கொண்டாட. கையடக்க வான் கலைடாஸ்கோப் என்று உங்களை சுயப்பிரகடனம் செய்து கொள்கிற கலைமனம் உங்களது. அப்படிப்பட்ட நலம் சூழும் மனம் மொட்டை மாடியில் கட்டப்பட்ட ஆட்டுக்குட்டியென தனிமைக்குத் திரும்புவது ஏன்? ‘ஆயிரமாயிரம் ஒளிர்தனிமலர்களை’ அவை பூத்த போதும் அது எப்போதும் சூடவிரும்பவது ஒளிகுறைந்த வெளிச்சத்தை, அந்த மனத்தை சிக்கல் தேவதை விதவிதமான அலைவுறுதலுக்கு உட்படுவது ஏன் என்ற கண்டடைதலை நோக்கியே உங்கள் கவிதையுலகம் விரிகிறது. ‘மனசின் இருண்ட ஆயிரங்கால் மண்டபம்’ அதில் ‘தொலைதலும் மீள்தலும் ஒன்றுதான்’ என்று சொல்லும் உங்கள் கவிதைகளில் அகத் தனிமைக்குப் பெரிய இடமுண்டு. அது கண்டறியும் பெரிய சித்தாந்தம் தத்துவம் “காலைச் சூரியன் ஒன்றே/ என் தோசைகளுக்கு நிகரானது.’ இந்த பிரம்மாண்ட தன்னம்பிக்கைக்கு வந்து சேர்ந்ததைச் சார்ந்து சொல்ல முடியுமா?

ப: தனிமை பற்றி அவ்வளவா எழுதியிருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.  காட்சி விவரிப்புகள், காட்சிப் படிமங்கள் கொண்ட கவிதைகளை எழுதும்போதோ அல்லது இயற்கையை உற்றுநோக்கும் கவிதைகளை எழுதும்போதோ, அதில் தனிமையுணர்வின் தொனி சேர்ந்துவிடலாம். தனிமை ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு பொருள் தரக்கூடிய நுட்பமான உணர்வு என்பதால் எழுதியவரின் சுய அனுபவமாக இடையீடு செய்யப்படும் வாய்ப்பு அதிகம். ஆனால், எப்போதும் அது அப்படியிருக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. நீங்கள் சொல்வது போலவே, பலரும் என்னை அன்பான நட்பான மனுஷியாகவே காண்கிறார்கள். அது ஒருவகையில் உண்மையும்கூட. மீண்டும் மீண்டும் என்னைக் காயப்படுத்தியவர்களிடம், அந்த வலிக்கு அஞ்சி விலகியிருந்தாலும், அவர்கள் மீதும் எனக்கு எப்போதும் அதே அன்புதான். எனக்கு எல்லாரையும் பிடிக்கிறது. உலகத்தில் உள்ள எல்லாமே பிடிக்கிறது. 

சில மாதங்களுக்குமுன் ஒரு முறை, நாங்கள் கடைவீதியிலிருந்து திரும்பிவரும்போது, ஒரு சின்னஞ்சிறு நாய்க்குட்டி ஒன்று எங்களுடன் வந்துவிட்டது; சொல்லப்போனால், என் மகளின் பின்னாலேயே வந்தது. அதை எங்கள் குடியிருப்பின் சார்பாக இப்போது வளர்த்து வருகிறோம். குடியிருப்புக் காவலர்கள் அறை அருகே அதற்கு இருக்கை. அதன் பெயர் பிங்க்கி. சில சமயம் காலை நடையில், அது எங்கள் அருகே வந்து அமரும். அதைத் தடவிக் கொடுக்கும்போது, உலகில் உள்ள எல்லாவற்றின்மீதும் ரொம்ப ரொம்ப அன்பாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அன்பு தளும்பும்போது எல்லாருக்கும் அப்படித்தான் மனசு குழம்பும் போலும்; ஆனால் அதில் ஒரு நிறைவு.

என் நட்பு வட்டம் குறுகியதுதான்; ஆனால், அவ்வளவு தனிமையான ஆள் இல்லை நான். வீட்டிலும் நெருங்கிய வட்டத்திலும் எப்போதும் ஒரே குதூகலமாக இருப்பேன். அதற்கு எனக்குச் சிறிய காரணங்கள் போதும்; சில சமயம் காரணமே தேவையில்லை. என்னைப் பாதுகாப்பாக உணரவைக்கும் சிறிய வட்டத்துக்குள் இருப்பதால், தனிமையை நாடும் ஆள் போன்ற தோற்றம் வந்திருக்கலாமே தவிர, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு quirkiness இருக்கலாம்; அப்படியொரு தன்மை கொண்ட சாதாரண ஆள்தான் நானும். 

அம்மாவைத் தேடி ஒருமுறை போய், அவளைக் கட்டிக்கொள்ள நினைத்து, அவருடைய வெறுப்பான பார்வைதான் திரும்பக் கிடைத்த அதிர்ச்சி. அதற்குப் பெரியவர்களின் உலகில் ஏதோவொரு காரணம் இருந்தது, என் தவறு ஒன்றும் இல்லை என்று அதை ஏற்றுக்கொண்டு தாண்டி வர எனக்கு வெகு காலம் ஆனது. அந்த அனுபவங்கள், அன்பை நான் அணுகும் தன்மையை எப்படிப் பாதித்திருக்கின்றனவோ, அதே அளவுக்கு என்னை உறுதியானவளாகவும் ஆக்கியிருக்கின்றன. 

இவ்விரண்டுமே என் கவிதைகளின் தன்மையைப் பாதிக்கின்றன என்று நினைக்கிறேன். தனிமையையும், மகிழ்ச்சியையும் இணையான முறையில் எழுத முடிவது அதனால்தான். எதையும் தாண்டி வந்து என்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்ற உறுதியான எண்ணம்தான், கவிதைகளில் அப்படி அதீத தன்னம்பிக்கையாக வெளிப்படுகிறது போலும்.

முகுந்திடம் நான் அடிக்கடி ஒன்று சொல்வேன்: ‘இருக்கும் ஒரு வாழ்வின் மதிப்பையறிந்து, மகோன்னதங்களை உத்தேசிக்க வேண்டும். நான் இங்கு இருந்தேன் என்பதற்கு அடையாளமாக மிகப்பெரிய ஏதோவொன்றை விட்டுச் செல்ல வேண்டும்’. இதுவும் ஒரு பிரம்மாண்ட தன்னம்பிக்கை போல் தொனிக்கிறதல்லவா… ஆனால், என் வாழ்வில் இதுதான் மிகச் சிறிய ஆசை!

***

லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்த இவர் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com

அஞ்சலி: நிஜந்தன்

0

ம. பாரத்

திட்டம் தயார்!

நாளைக்கு என் நெற்றி முழுவதும் திருநீறு பூசுவேன்; வட்டமான சந்தனத்தை நடுவில் வைத்துக்கொள்வேன். தொலைவதற்கு முன்பு, அனைவரையும் இறுதியாக அணைத்துக்கொள்வேன். யாருடைய அழுகையெல்லாம் முடிந்துபோயிற்றோ, யாருக்கெல்லாம் பதற்றம் தீர்ந்துபோயிற்றோ மீண்டும் அதற்கெல்லாம் உயிர்தர நான் முயற்சி செய்வேன்.

முடிந்தவரையில், எதிர்காலமொன்றில் உங்களைச் சந்திப்பேன். அதுவரையில் நான், என்னுடைய தடயத்தை அதிர்ச்சியோடு விட்டுச் செல்வேன்.

  • பிறழ் நாவலில் நிஜந்தன்

கடந்த ஏப்ரல் 12 இரவு 11 மணி போல நிஜந்தனின் உறவினர் இருவரை மருத்துவர் அழைப்பதாக வாசலில் காத்திருந்தவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அது கோவை அரசு மருத்துவமனையின் ஐ சி யூ பிரிவு. 99 சதவீதம் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்ததால் அனைவருக்குமே அதீத பதற்றம். ஜெயசீலனும் பார்த்திபனும் உள்ளே சென்றனர். அப்போது நிஜந்தனுக்கு CPR கொடுத்து கொண்டிருந்தனர். கடந்த சில மணி நேரங்களில் நான்கு முறை CPR கொடுத்து விட்டோம் என்றும் இனி கஷ்டம் என்றும் மருத்துவர்கள் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் சொல்வது புரிந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியாத ஜெயசீலன் மருத்துவர்களிடம் நிஜந்தனைப் பற்றி புலம்பியபடி இருந்தார். “நெறய படிப்பான் டாக்டர். புக்ஸா படிப்பான். நெறயா புக்ஸ் படிச்சி படிச்சே இப்படி ஆகிட்டான் டாக்டர்” எனப் புலம்பியபடியே இருந்தான். நிஜந்தனின் மரணத்திற்கு ஏதோ ஒருவகையில் அவனது அதீத வாசிப்பே காரணம் என ஜெயசீலன் நம்பினான். 

ஆம், நிஜந்தனை பலருக்கும் ஒரு நல்ல வாசகனாகதான் அறிமுகம். அவனது நண்பர்கள் குழுவில் பலர் அவனை அப்படியானவனாகத் தான் அறிமுகம் செய்வதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு நல்ல வாசகனாக அவன் அவனை தக்க வைத்துக் கொள்ள பல போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு நடுத்தர குடும்பத்தின் மனநிலையில் “இப்படி கத புத்தகமெல்லாம் காசு கொடுத்து வாங்கி படிக்கணுமா நிஜந்தா” எனப் புலம்பல்களாக ஆரம்பித்து, “புத்தகத்தை எல்லாம் தூக்கி வீசிவிடுவேன்” என கோப வார்த்தைகள் வரை நீண்டிருக்கின்றன. 

பின் நாட்களில் மனநோயின் பிடியில் அவன் சிக்கி உழன்ற நேரங்களில், அந்தப் போராட்டம் இன்னமும் அதிகமானது. மருத்துவர்களின் பரிந்துரையின்படி திரைப்படங்களையும், புத்தகங்களையும் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது. சில நாட்கள் அமைதியாக இருந்தான். நண்பர்களின் அழைப்புகளின் போது, “என்னால படிக்க முடியல, படம் பார்க்க முடியல” என புலம்பியபடி இருப்பான். அப்போதும் தான் முன்பு வாசித்த புத்தகங்களைப் பற்றி நண்பர்களோடு உரையாடியபடியே இருந்தான்.

தொடர்ந்த சிகிச்சையில் மருத்துவர்களின் அனுமதியோடு மீண்டும் வாசிக்க ஆரம்பித்தான். ஆனாலும் சோகம் கொள்ளச் செய்கிற, மனதைக் கனக்கச் செய்கிற எதையும் வாசிக்க கூடாது என்பது நிபந்தனை. அப்படியான புத்தகங்களை தேர்வு செய்து வாசித்தான். அப்படியாக தொடர்ந்த வாசிப்பு அவனது விருப்பமான புத்தகங்களையும் வாசிக்க வழி செய்தது. அ-புனைவுகள், அரசியல், புனைவுகள் என அவனது வாசிப்புப் பட்டியல் மிகப் பெரியது. 

தொடர்ச்சியான மருந்துகளும், ஷாக் ட்ரீட்மென்ட்டும் அவனுக்கு அதிகமான ஞாபக மறதியை ஏற்படுத்தியது. வாசித்த புத்தகமெல்லாம் மறந்துவிட்டது. பிடித்த புத்தகங்களை எல்லாம் திரும்பவும் வாசித்தான். திரும்பத் திரும்ப வாசித்தான். அப்படியான வாசிப்பு சோர்வை தரவில்லையா என கேட்டால், “ஒவ்வொரு முறையும் அப்புனைவுலகில் புதிதாக பிரவேசிக்க முடிகிறது” என உற்சாகமாக பதில் சொல்லுவான். 

வாசிப்பின் வழியாகவே நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறான். எளிய குடும்பத்திற்கான மருத்துவ உதவிகள் பலவும் நிஜந்தன் என்னும் வாசகனுக்கு கிடைத்தது. பல புத்தகங்களையும் நண்பர்கள் அனுப்பினர். அப்படியாக புத்தகங்கள் கொரியரில் வருகிற நேரங்களில் உற்சாகமாக இருப்பான். அவனை சந்திக்கிற அனைவருக்கும் புத்தகங்கள் மேல் ஆர்வம்கொள்ளச் செய்யும் அவனது பேச்சு. அவனது கைப்பேசி அழைப்புகள் பலவும், பல மணிநேரங்களாக புத்தகம் சார்ந்த உரையாடல்களாகவே இருக்கும். 

தன் அன்றாட நாளை மனிதன் எதிர்காலத்தை வைத்தே கடத்துகிறான். ஆனால் நிஜந்தன் தன் இறந்த காலத்தின் மனவேதனைகளை இலக்கியத்தில் தொலைத்து, அந்த நொடி வாழ தனக்குப் பிடித்தமான ஒரு வாழ்வை புனைவுகளின் உதவியோடு தேர்ந்து கொண்டான்.

ஒவ்வொரு முறையும் மருத்துவத்திற்காக வெளியூர் செல்லும் நேரங்களில் பயண காலத்திற்கேற்ப அத்தனை புத்தகங்களைத் தூக்கி செல்பவன், அத்தனையையும் படித்து முடித்து, நண்பர்களிடம் புத்தங்களை அனுப்ப சொல்லி படித்துக் கொண்டிருப்பான். பா. வெங்கடேசன், மண்ட்டோ, ஷோபா சக்தி, கோபிகிருஷ்ணன், ஜெ. பிரான்சிஸ் கிருபா, ஜெயமோகன் என அவனுக்கு விருப்பமான எழுத்தாளர்கள் பலர். விசித்திரத் தோட்டம் நாவலை திரும்பத் திரும்ப வாசித்தவன், கன்னி நாவலின் பாண்டியை கடைசி வரையும் நினைவு கூர்ந்தபடியிருந்தான். மனரீதியான பாதிப்புகளின் போதெல்லாம் பாண்டியுடன் அவன் தன்னைப் பொருத்தியிருக்க கூடும். கன்னி நாவலின் தாக்கம் பிறழ் நாவலில் அதிகமிருப்பதையும் உணர முடியும். ஆனாலும் பாண்டியைப் போல முழுவதும் தன்னுலகில் மட்டும் மூழ்கிவிடமால், தன்னைப்பற்றியும் சமூகத்தைப் பற்றிய மிகத் தெளிவான கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தான். 

புத்தகங்கள் மட்டுமில்லாது தொடர்ந்து எழுதியும் கொண்டிருந்தான். நக்கலைட்ஸ் சேனலில் பல கான்செப்ட் எழுதியிருக்கிறான். அவனது எழுத்தில் வெளிவந்த Back to School நிறைய பாராட்டுகளைப் பெற்றது. நக்கலைட்ஸ் சேனலின் நண்பர்கள் அவன் தொடர்ந்து எழுத ஊக்கப் படுத்தியபடி இருப்பார்கள். நண்பர் மித்துனுடன் இணைந்து திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதவும் தொடர்ந்த உரையாடலில் இருந்த நிஜந்தனுக்கு, நடிகர் ஷோபாவின் வாழ்வைத் திரைக்கதையாக்க மிகுந்த ஆசையிருந்தது. அதற்கான முன்தயாரிப்புகளில் சில நாட்களாக தன்னை ஈடுபடுத்தி, அவனளவில் பெரும் தேடலில் தன்னைத் தொலைத்து இருந்தான். 

பிறழ் நாவல் வெளிவருகிற தயாரிப்புகளில் இருக்கும்போதும், வெளிவந்த போதும் உற்சாக மிகுதியோடு இருந்தவன், சென்னை புத்தகக் காட்சியின்போது நிகழ்ந்த வெளியீட்டில் நிறைய நண்பர்களை சந்தித்தபடி சந்தோசமானவனாய் இருந்தான்.

(வீட்டிற்கு எதிரிலிருந்த மரத்தடியை காம்யூ தோட்டம் என அவன் பெயரிட்ட) வீட்டிற்கு வெளியே இருக்கிற சக்கரைப்பழ மரத்தின்கீழ் நாற்காலி போட்டு அமர்ந்தபடி இன்றும் அவன் வாசித்து கொண்டிருப்பதுபோல இருக்கிறது. என்னுடைய தம்பி என்பதெல்லாம் தாண்டி, ஒரு வாசகனாக அவனிடம் கற்றுக் கொள்ள எனக்கு நிறைய இருக்கிறது. ஒரு வாசகன் என்பதாக தன்னை அடையாளம் கொள்ளவே அவனும் விரும்புவான். 

(கட்டுரையாக்க உதவி: ரதியழகன் பார்த்திபன்)

ம. பாரத் – நிஜந்தனின் உடன்பிறந்த அண்ணன். கோயம்பத்தூரில் Tax practitioner ஆக உள்ளர். மின்னஞ்சல்: manobharath30@gmail.com

வரலாற்று துயரங்களும் தலைமுறை கடந்த அஞரும்

0

மா.க.பாரதி

ரலாற்றில் பெரும் அநீதிகள் இழைக்கப்படும்போது – அது காலனியம், போர்கள், ஆக்கிரமிப்புகளாகட்டும், சாதி-மத-இன ஒடுக்குமுறைகளாகட்டும், மனிதர்களால் உருவாக்கப்படும் பஞ்சங்களாகட்டும் – உடனுக்குடனாக பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பல உபாதைகள் ஏற்படுவது பற்றி அறிந்திருப்போம். சமகாலத்திலும் இவை ஓய்ந்தபாடில்லை. பாலஸ்தீனத்தில் அடிக்கடி வானிலிருந்து குண்டு மழை பொழிவதைக் கேட்டுப் பழகியிருக்கும் மக்கள், அங்கிருந்து புலம்பெயர்ந்தாலும் இரவு நேரத்தில் இல்லாத குண்டுச் சத்தம் கேட்டு எழுந்து அலறுவதைப் பதிவு செய்திருக்கின்றனர். ரபீப் ஜியாதாவின் (Rafeef Ziadah) We teach life, sir என்னும் அற்புதமான நிகழ்த்துகலைக் கவிதை, அந்த வலிமிகுந்த நினைவோட்டங்களைப் பதிவு செய்கிறது:

“I wish I could just run barefoot in every refugee camp and hold every child, cover their ears so they wouldn’t have to hear the sound of bombing for the rest of their life the way I do”

மேற்கத்திய தத்துவ மரபில் தெகார்தே இருமைவாதத்தை முன்வைத்தார். உடலையும் மனதையும் இரு துருவங்களாகக் கருதினார். மனம் பருப்பொருளல்லாத ஒன்று; உடல் ஓர் இயந்திரம் என்னும் நோக்கே அதன் சாரம். தத்துவ ரீதியில் இதற்கான எதிர்ப்புகள் பல காலமாக இருந்து வந்தாலும், மரபியல், நரம்பியல் துறைகளில் நடந்துவரும் ஆய்வுகள் இந்தப் பிரிவினையை முழுமுற்றாகத் தகர்க்கின்றன. மனதின் ஆழத்தில் நிகழும் பெருந்துயரமும் அதிர்ச்சியும் மனதுள்ளேயே இருந்துவிடுவதில்லை. உடலின் செல்களுள் வேதியியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது. மன அழுத்தங்கள் உடலைப் பாதிப்பது பற்றியும், உடல் நோய்கள் மன நிம்மதியைப் பாதிப்பது பற்றியும் மருத்துவ அறிவியல் பேசுகிறது. பெருந்துன்பங்களுக்கு ஆளாவோர்க்குத் தம் உடல்நிலையும் மனநிலையும் மட்டும் பாதிப்பதன்றி, அத்துன்பங்களின் சுவடுகள் அவர்களது அடுத்தடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் வல்லமை கொண்டவை என்பதை மேல்மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன. இக்கட்டுரை மேல்மரபியல் ஆய்வுகளை அறிமுகப்படுத்தும் நோக்கைக் கொண்டுள்ளது. (ஒரு அறிவியல் ஆசிரியரின் இலாவகத்தை இக்கட்டுரை பெற்றிருக்க வாய்ப்பில்லை. காரணம், நான் வரலாற்று ஆய்வாளன்.) இத்தகைய அறிவியல் ஆய்வுகள் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும், நம் சமகாலத்தைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு வழித்தடம் அமைத்துக் கொடுக்கின்றன. ஒரு வகையில் இந்நெடிய வரலாற்றில் நம்மையும் நமது சமூகத்தையும் எப்படி இருத்திப் புரிந்துகொள்வது என்பது பற்றிய ஒருவிதத் தெளிவை இந்த அறிவியல் ஆய்வுகள் எனக்குக் கொடுத்துள்ளன. மேலும், இத்தகைய ஆய்வுகளைச் சாதிச் சமூகத்தில் முன்வைக்கும்போது அதற்கெனத் தனியே சிந்திக்கும் வேலையையும் சேர்த்தே கொடுக்கிறது. மரபியலை வைத்துக்கொண்டு நம் ஊரில் அந்தக் காலத்தில் பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே, இக்கட்டுரை அதைப் பற்றியும் இறுதியில் சில வார்த்தைகளைப் பேசுகிறது. 

சமூக ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் இணையத் தொடர்களிலும் உளவியல் தொடர்பான உரையாடல்கள் பெருகியுள்ளன. நல்ல விஷயம். உளவியல் பிரச்சனைகள் உடல் ரீதியான அசௌகரியங்களையும், சமயத்தில் நோய்களையும் தர வல்லன என்பது ஓரளவு பொது அறிவாகிவிட்டது. மேலும், சில தீவிர உளவியல் நெருக்கடிகள் நம்மை ட்ராமாவுக்குள் (Trauma – அஞர்) தள்ள வல்லவை. அதிர்ச்சியும் வருத்தமும் பதற்றமும் உச்சம் பெறும் நிலையாக ட்ராமாவை வரையறுக்கலாம். நம்மை உளக்குலைவுக்கு உள்ளாக்கும் இத்துன்பங்களின் தடங்கள் நீங்காமல் PTSD (Post-Traumatic Stress Disorder) ஆக வடுவாக மாறுவதும் உண்டு. ஒரு பெருந்துன்பத்துக்குப் பிறகு, அதன் வடு ஆறாமல் நினைவுகளாகவும் (Memories), கனவுகளாகவும் (Dreams and Nightmares), அச்ச உணர்வாகவும் மாறி நமது அன்றாட வாழ்வையே பாதிக்கும் நிலையை PTSD என உளவியல் அறிஞர்கள் வரையறுக்கின்றனர். நிறைய உளவியலாளர்கள் இப்படிப்பட்ட ட்ராமாக்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் (Intergenerational trauma) என்று பல காலமாகச் சொல்லி வருகின்றனர். நமக்கு இந்தச் சொல்லாடல்கள் எல்லாம் ஓரளவு பழக்கமானவை தான். எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் நமது பெற்றோரின் ட்ராமா நம்மை பாதித்திருக்கும். பெற்றோர் தமது வாழ்வில் நிகழும் துயரங்களைச் சரியாகக் கையாளாமல் விட்டு, அதைக் குழந்தைகள் மேல் ஒரு வகையில் ஏற்றிவிடுவது உண்டு. பெற்றோருடனே நாம் இருப்பதால் அவர்களது நடத்தை மூலம் நம்மிடம் வந்து சேர்வதுண்டு. குழந்தைகளிடம் இவ்வாறு ஏற்றப்படும் ட்ராமாவை அவர்கள் சரியாகக் கையாளாமல் விட்டால் அது அவர்களது குழந்தைகளுக்கும் கடத்தப்படும் என்பது உளவியலாளர்கள் கருத்து. இதைப் பற்றிப் படிக்கப் படிக்க ஏதோ ஒரு வம்சாவழியினருக்கே விட்ட சாபத்தைப் படிப்பது போலத்தான் உணர்ந்தேன். 

நம்மூர்க் கதைகளில் ஏதோ ஒரு பெண்ணுக்கு ஒரு அநீதி நடந்திருக்கும். அதனால் கோபமுற்ற அப்பெண்ணோ அப்பெண்ணின் பேயோ அந்த அநீதி இழைத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் பரம்பரைக்கே சாபமிட்டுவிடுவாள். அதனால் அப்பரம்பரையினரே ஏதோ ஒரு வகையில் அந்தப் பாதிப்புகளைத் தாங்கியிருப்பார்கள். அக்கோபத்திலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் அப்பெண்ணைத் தெய்வமாகவோ யட்சியாகவோ வழிபடுவர். பல ஆணவக் கொலை அம்மன்கள் இப்படி வழிபடப்படுபவர்கள்தான். தமிழ்க் கதைகள் மட்டுமன்றி புராண இதிகாசங்களிலும், பேய்க் கதைகளிலும் இந்த trope-ஐ நாம் பார்த்திருப்போம். Intergenerational trauma, Transgenerational trauma போன்ற பதங்களைப் பார்க்கையிலோ அவற்றைப் பற்றிப் படிக்கையிலோ இந்தப் பேய்க்கதையும் அதன் சாபமும்தான் நியாபகத்துக்கு வருகிறது. சமீபத்தில்கூட ஜெயமோகனின் ”ஓநாயின் மூக்கு” என்னும் அட்டகாசமான சிறுகதையும் இப்படிப்பட்ட சாபத்தை மையமிட்டு வந்ததுதான். கதைக்குள்ளேயே அதற்கு ஒரு பகுத்தறிவுவாத விளக்கமும் வைத்திருப்பார். 

சாபத்தையும் ட்ராமாவையும் இணைப்பதற்குக் காரணமுண்டு. மனிதர்கள் பரிணாம வளர்ச்சியினால் பெற்ற ஒரு பெரும் சொத்து pattern recognition. கற்காலத்தில் ஒரு புதர் அசைந்தால் அதை சிங்கம், புலி, பாம்பு என்று கருதி அங்கிருந்து ஓட்டம் பிடிப்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அங்கு இம்மிருகங்கள் எதுவும் இல்லையென்றாலும் அதைப் பார்த்து ஓடுவதால் தான் அப்படிப்பட்டோரின் சந்ததியினர் பிழைத்திருக்கின்றனர். அப்படி பயப்படுபவர்கள் தாம் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்வார்கள். சமயத்தில் அங்கு எதுவும் இல்லை என்று நினைத்து ஆயாசமாக அமர்ந்திருக்கும்போது மெய்யாலுமே சிங்கம், புலி, பாம்பு வந்து பாயுமல்லவா? அப்படி ஆயாசமாய் இருப்போர் அடுத்த தலைமுறையைக் காண இயலாது. எனவே, பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வு விதிகளின் அடிப்படையில் நாம் எல்லோரும் pattern recognition செய்து தப்பிப் பிழைத்தோரின் சந்ததியினரே. அந்த உணர்வே நம்மை இல்லாத இடங்களிலும் ஒரு pattern-ஐக் காண வலியுறுத்துகிறது. பரம்பரைச் சாபத்துக்கும் intergenerational trauma-வுக்கும் நாம் முடிச்சுப் போடுவது இந்த pattern recognition-ஆல்தான். ஒரு சாபம் இருப்பதாலேயே அதை நினைத்து மனம் வெதும்பி அச்சாபத்தை நாமே நிறைவேற்றி விடுவதும் உண்டு (Manifesting a curse). சில கிரேக்கக் கதைகளில் அசரீரி வாக்கைப் (prophesies) பொய்ப்பிக்க எடுக்கும் நடவடிக்கைகளே அந்த வாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம் போய் முடியும். பல தலைமுறைகளாக நம்மை வாட்டும் வாதைகளை விளக்க முற்படும் மனிதர்கள், அவற்றை சாபமாகவோ அசரீரி வாக்காகவோ புரிந்து கொள்வர். விளக்க இயலாத நிகழ்வுகளை ஏதோ ஒரு வழியில் மொழிக்குள் கொண்டுவருவதன் மூலம் அதை விளங்கிக் கொள்ளவும் கையாளவும் இயலும். 

உளவியல் ஆய்வுகள், அதிலும் குறிப்பாக பெருந்துயரங்களைக் கண்டோரையும் அவர்களது குழந்தைகளையும் ஆய்வு செய்யும் உளவியல் வல்லுனர்கள், இதை intergenerational trauma என்று வகைப்படுத்தினர். அத்துயரங்களையே சந்திக்காத அடுத்தடுத்த தலைமுறையினரும் இந்த PTSD-யை அனுபவிப்பதைப் பார்த்த அறிஞர்கள் அதை transgenerational trauma என்று அழைத்தனர். இந்த ட்ராமா எப்படி தலைமுறை தாண்டிக் கடத்தப்படுகிறது என்ற கேள்வியை யூத இன அழித்தொழிப்பிலிருந்து (Holocaust) தப்பிப் பிழைத்த யூதர்களையும் அவர்களது பிள்ளைகளையும் ஆய்வு செய்தோர் முதன்முதலில் ஆய்ந்தனர். பின்னர் வியட்நாமில் பணிபுரிந்த அமெரிக்க இராணுவத்தினர் வீடு திரும்பியதும் அவர்கள் சந்தித்த உளப் பிரச்சனைகளை ஆய்வு செய்தோர் PTSD பற்றிய புரிதல்களை நமக்கு அளித்தனர். அந்தத் துன்பங்களை நேரில் சந்திக்காத அடுத்த தலைமுறையினர் எவ்வாறு அதனால் எழும் மனச் சிதைவுக்கு ஆளாகின்றனர் என்பதை விளக்க முற்பட்ட உளவியல் வல்லுநர்கள், அத்துன்பத்துக்கு ஆளான பெற்றோரின் நடத்தைகளால் (behaviour) உந்தப்பெற்றே பிள்ளைகள் அவ்விளைவுகளைக் காண்கின்றனர் என முடிவுரைத்தனர். ஏற்கனவே சொன்னதுபோல், அத்துன்பங்களால் மன அழுத்தத்துக்கும் ட்ராமாவுக்கும் ஆளான பெற்றோர், குழந்தைகளிடம் கடுமையாகவும் கண்டிப்புடனும் அதீத பாதுகாப்புணர்வுடனும் நடந்துகொள்வார்கள். அவர்களை அறியாமலேயே உலகம் மீதான பயத்தையும் பதற்றத்தையும் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவர். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் வெகுகாலமாய் இவ்வளர்ப்பு தந்த ட்ராமாவால் மன நோய்களுக்கு ஆளாகித் தவிப்பர். பின்னர் அது அடுத்த தலைமுறையினரையும் அவ்வாறே பாதிக்கும். மீள இயலாத சுழற்சியாக இத்துன்பங்களும் ட்ராமாக்களும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அத்தொடர்ப் பின்னலில் யாரேனும் ஒருவர் இதைக் கண்டுகொண்டு உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், அப்பிரச்சனையின் மூலத்தை அறிந்து கையாண்டு கட்டுப்படுத்துவர். அதன் மூலம் அதற்கடுத்த தலைமுறையினர் அத்துன்பங்களிலிருந்து விடுபடலாம். இவ்வாறு பெற்றோரின் நடத்தைகளால் (behavourial transmission) குழந்தைகள் தாங்கள் சந்திக்காத துயரங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றனர் என்றே உளவியல் ஆய்வுகள் நம்பி வந்தன. இது உண்மைதான். ஆனால், கடந்த முப்பது வருடங்களில் வளர்ச்சி பெற்ற மேல்மரபியல் துறை (Epigenetics), வெறும் நடத்தைகள் மட்டுமல்லாமல் உயிரியல் ரீதியாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு ட்ராமா கடத்தப்படுகின்றன என்று ஒரு குண்டைப் போட்டது. 

ஓரளவு நமக்குத் தெரிந்த விஷயத்திலிருந்தே தொடங்குவோம். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோருக்கு ஓரளவு அறிமுகமான ஒன்றையே எடுத்துக்காட்டாகப் பார்ப்போம். கடந்த சில நூற்றாண்டுகளாகப் பெரும் பஞ்சங்களைச் சந்தித்த பகுதி நம்முடையது. 18, 19-ம் நூற்றாண்டுகளில் இந்தியா சந்தித்த பஞ்சங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சென்ற நூற்றாண்டில் கூட, சுதந்திரத்துக்கு கொஞ்சம் முன்பாக 1943-ம் வருடம் வங்காளப் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தில் கிட்டத்தட்ட 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். நமது சென்னை மாகாணத்தில் 1876-78 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தில் 80 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்று வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். நான்கிலொரு பங்கு மக்கள் இப்பஞ்சங்களால் மாய்ந்தனர். ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் மிச்சமுள்ள பல இலட்சம் மக்கள் பாதிக்கபட்டிருக்கின்றனர். காலனியத்துக்கு முன்பும் மழை பொய்த்துப் பஞ்சங்கள் வந்திருக்கின்றன. எனினும் அவை யாவும் இவ்வளவு பரந்துபட்ட பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. காரணம் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த மக்களை அவை பாதிக்கும். அதில் பலர் இறந்தும் போவார்கள். அப்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள். பஞ்சம் பிழைத்தல் என்னும் சொல் தமிழில் பெரும் புழக்கத்தில் இருந்து வருகிறது. இன்றும் விளையாட்டாகவேனும், தமது ஊர்களை விட்டு சென்னை தில்லி போன்ற பெருநகரங்களுக்கு வருவோர் “பஞ்சம் பிழைக்க வெளியூர் வந்திருக்கோம்” என்று சொல்வதுண்டு. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் கணக்கிலடங்காதவை. ஆனால், அன்றைய அரசுகளும் வணிகர்களும் ஊர்த்தலைவர்களும் நிலச்சுவான்தார்களும் செல்வந்தர்களும் வெவ்வேறு வகைகளில் பஞ்சங்களை அணுகியிருந்துள்ளனர். 

தார்மீகமாக எளிய மக்களுக்குச் செய்ய வேண்டியனவற்றை அவர்கள் கொஞ்சமேனும் செய்திருக்கிறார்கள். பஞ்சங்கள் இயற்கையாக வருவதுமுண்டு. மழை பொய்த்தால் வருபவை அவை. செயற்கைப் பஞ்சங்கள்தான் இன்று உலகில் நாம் அதிகம் காண்பவை. பண்டைக் காலத்திலும் போர்களாலும், சரிவர ஆட்சி நடத்தாததாலும் பஞ்சங்கள் தோன்றியுள்ளன. பழங்காலத்தை பொற்காலமாக நான் கட்டமைக்க முயலவில்லை. எனினும் அந்த தார்மீக உணர்வைப் பற்றிப் பேசியாக வேண்டும். அப்படிப்பட்ட தார்மீக உணர்வால் உந்தப்பெற்ற பலரும் எளிய மக்களுக்குக் கஞ்சித் தொட்டி வைத்துள்ளனர். மக்களைக் கொடூரமாகச் சுரண்டிப் பிழைத்த நிலச்சுவான்தார்களும்கூட பஞ்ச காலத்தில் மக்களுக்கு நெல் மூட்டைகளை அவிழ்த்துத் தந்திருக்கிறார்கள். இதனால் ஓரளவேனும் சாவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இந்த தார்மீக உணர்வு புரவலர் மனநிலையிலிருந்து வருவது. மக்களைப் பாதுகாக்கும் பங்கை செல்வந்தர்கள் தமதாக எடுத்துக்கொண்டு, அதன் மூலம் தமது அதிகாரத்தை இருத்தி வைத்துள்ளனர். நிச்சயம் பிரச்சனைக்குரியதுதான். எனினும் இந்த தார்மீக உணர்வுதான் பலரையும் வரலாற்றில் காப்பாற்றியுள்ளது. இந்த தார்மீக உணர்வை அறக்கணக்கு (Moral Economy) என்று ஏழை மக்கள் புரிந்து வைத்திருந்தனர் என்று ஈ.பி. தாம்சன் கூறுகிறார். 

எனினும் நவீன காலனிய ஆட்சி, சுரண்டலையே மையமாகக் கொண்டிருந்ததாலும், இங்கிலாந்து நாட்டின் செல்வாக்கை மேம்படுத்துவதற்காகவே ஆட்சி நடத்தப்பட்டதாலும், பஞ்சத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பெரிதாகக் கவலைப்படாமல் ஆட்சி நடத்தியுள்ளனர். வட்டார அளவில் பல காலனி அதிகாரிகள் இதைப் பற்றி முறையிட்டாலும், மேலிடத்தில் பெரிய அளவு தாக்கத்தை இவை ஏற்படுத்தவில்லை. நவீன முதலாளியமும் இலாப வேட்கையும் இந்த தார்மீக உணர்வை அழித்தொழித்தது. மேலும், மையப்படுத்தப்பட்ட அரசு முடிவுகளால் ஒரு பெரும்பகுதி முழுவதுமே பஞ்சத்தில் வீழ்ந்த வரலாறும் உண்டு. எனவே காலனியம் வேர்கொண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுக்க பல்வேறு பஞ்சங்களை நாம் சந்தித்துள்ளோம். தொன்றுதொட்டு வந்த அறப் பொருளியலின் வீழ்ச்சியை எளியோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் உலகம் முழுக்கவே முதலாளித்துவ ஆட்சிக்கும் காலனியாதிக்க ஆட்சிக்கும் எதிராகப் பல்வேறு கலகங்கள் நிகழ்ந்துள்ளன. நமது சென்னை மாகாணத்திலும் அரிசிக் கலகங்கள் நிகழ்ந்துள்ளதாக டேவிட் அர்னால்ட் குறிப்பிடுகிறார். இது நிற்க. இப்பஞ்சங்களால் உடலும் உள்ளமும் மானமும் குறுகி நின்றமை குறித்தே வள்ளலார் வருந்துகிறார். சத்திய தருமச் சாலை நிறுவி வந்தோர்க்கெல்லாம் உணவிட்டுக் காப்பாற்றியுள்ளார். பசி எவ்வளவு தூரம் உடலையும் மனதையும் உருக்குலைக்கிறது என்பது பற்றித் தமது ஜீவகாருண்ய ஒழுக்கம் நூலில் உருகி உருகி விவரித்துள்ளார் வள்ளலார். இப்பசியும் பஞ்சமும் நம் மனதிலும் உடலிலும் ஆழமான பல தடங்களை விட்டுச் சென்றுள்ளன. 

இன்றும் இந்தியர்கள் மட்டுமன்றி தெற்காசிய மக்கள் பலரும் Thin Fat Phenotype என்றொரு விநோதமான உடற்கூறு உள்ளதென்று ஆய்வாளர்கள் பலர் சொல்கின்றனர். சர்க்கரை நோய், அதீத கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு போன்ற நோய்களை நாம் அதிக உடல் எடைகொண்டோருடன் தொடர்புபடுத்துவது வழக்கம். ஆனால் பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்கும் பல இந்தியர்களுக்கும் இந்நோய்கள் வருவதை இன்று நாம் காண்கிறோம். அதற்குக் காரணமாக இதுகாறும் நாம் சொல்லி வந்த காரணங்கள் – நவீன வேலைகள் தரும் மன அழுத்தம், சரியான உடற்பயிற்சி இல்லாமை, நல்ல உணவுப் பழக்கம் இல்லாமை – அதனோடு அதீத துரித உணவுகளை உட்கொள்வது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணாமை, நேரம் தவறித் தூங்குவது, நவீன உலகத்தின் நுகர்வுப் பண்பாட்டுக்கு அடிமையாதல் போன்றவையே. இவை எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடான இங்கிலாந்தில் இருக்கும் ஒருவருக்கும் இந்தியாவில் அதே அளவு உடல் எடையும் BMI-யும் உள்ள ஒருவருக்கும் உடல்ரீதியில் பல வேறுபாடுகள் உள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஒரே BMI இருந்தாலும், தெற்காசியாவைச் சார்ந்தவருக்கு அதிகக் கொழுப்பு இருக்கிறது. இதற்குக் காரணம் மேற்சொன்னவை மட்டுமல்ல. மிக அடிப்படையான காரணமுள்ளது. மேல்மரபியல் – Epigenetics. 

உயிரியலுக்கு அடிப்படையானது மரபணு – DNA. இந்த மரபணு தான் குரோமோசோம்களாக அடுக்கப்பட்டிருக்கும். தாயிடமிருந்து 50 சதவிகிதமும் தந்தையிடமிருந்து 50 சதவிகிதமும் குழந்தைக்குக் கடத்தப்படுகிறது. இந்த மரபணு தான் பல தகவல்களை உள்ளடக்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது. மரபணுக் குறியீட்டு வரிசை (Genetic Code Sequence) மூலமே தலைமுறை கடந்து பல உயிரியல் பண்புகள் கடத்தப்படுகின்றன. கண்களின் நிறம், உடல் தோற்றம், மயிர் நிறம், உயரம், பருமன் முதல் தூக்கத்தில் வரும் குறட்டை வரை இந்த மரபணுக் குறியீடுகள் மூலமாகவே பெற்றோரிலிருந்து குழந்தைகளுக்குக் கடத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட மரபணுக் குறியீடுகள் எளிதில் மாற்றமடையாது. ஆனால், சில உட்காரணிகளாலும் புறக்காரணிகளாலும் இவை மாற்றமடையவும் சிதிலமடையவும் வாய்ப்புள்ளது. மரபணுக்கள் தம்மைத் தாமே பிரதி செய்துகொள்ளும் இயல்புடையது. அவ்வாறு பிரதி செய்யும்போது ஏற்படும் சில குளறுபடிகளால் மரபணு மாற்றம் பெறும். சூரியனில் இருக்கும் யூ.வி. கதிர்கள் (Ultraviolet Rays) முதற்கொண்டு பல்வேறு கதிர்வீச்சுகள் (Radiation), புகைப்பிடித்தல், அதீத மாசுபாடு, சில இரசாயனங்கள் போன்றவற்றால் மரபணுக் குறியீடு மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை யாவும் மரபணுவை, அதாவது DNA-வின் Genetic Code-ஐயே மாற்றும் வல்லமை பெற்றது. இதுவன்றி மேல்மரபணு என்று இன்னொரு சமாச்சாரம் உள்ளது. 

மரபுவழி (heriditary) கடத்தப்படும் மாற்றங்கள் எல்லாம் மரபணு மாற்றம் மூலமோ மரபணுக் குறியீட்டு மாற்றம் மூலமோ மட்டுமே நிகழ்வனவல்ல. அதைச் சுற்றி இயங்கும் பிற சாதனங்களால் மாற்றம் நிகழ்வதைப் படிக்கும் துறை மேல்மரபியல் ஆகும். Epi என்ற பதத்தின் பொருள் “அதன் மேல்,” “அதற்கு மேல்,” “அதனோடு இணைந்த” என்பதாகும். Epicentre என்பது மையத்துக்குச் சற்று மேல் என்பதாகும். மரபணுவில் உள்ள கார்பன் கலவைகள் மாற்றமடைவது மூலம், ஒவ்வொரு மரபணுவும் எவ்வெவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் என்பது மாற்றமடையும். இதை Gene Expression என்பார்கள். மரபணு மாறாமல் இந்த மேல்மரபணு மாற்றம் பெறுவது ஒரு சில விளைவுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும். கடந்த முப்பது வருடங்களில் பல்வேறு ஆய்வுகள் மூலம் பல்வேறு பாலூட்டிகளின் உடலில் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றிய சீரிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. 

இந்த மேல்மரபணுச் செயல்பாட்டால்தான் இந்தியர்களுக்கும் பிற தெற்காசியர்களுக்கும் பல உடல் நோய்கள் வந்தவண்ணமுள்ளன என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே சொன்னதுபோல் காலனியத்தின் தாக்கத்தால் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் பல பஞ்சங்களையும் அதன் விளைவாக ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் சந்தித்து வந்துள்ளோம். நம் மூதாதையர்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர்களது உடல் மிகக் குறைந்த ஊட்டச்சத்தை எவ்வாறு எல்லாப் பகுதிகளுக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற பிரச்சனையைச் சந்தித்தது. மூளை வளர்ச்சிக்கு மிக அதிக அளவிலான சக்தி தேவைப்படுகிறது. அவ்வாறு மூளைக்குச் செல்லும் சக்தி அதிகரித்தால் உடலில் பிற பகுதிகளுக்கு அதிகம் சக்தி செல்லாது. அன்றைய தாது வருடப் பெரும்பஞ்சத்தின்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களில் உடல் சூம்பிப் போன நிலையில் உள்ள குழந்தைகளையும் பெரியவர்களையும் காண இயலும். மூளைக்குச் செல்லாமல் பிற பகுதிகளுக்கு அச்சக்தியைச் செலவிட்டால், மூளை வளர்ச்சி குன்றியோராக அக்குழந்தைகள் வளரும். இவ்வாறு பல விதங்களில் ஊட்டச்சத்தை ஒவ்வொரு சூழலுக்கு ஏற்பவும் அவர்களது உடல்கள் ஒதுக்கீடு செய்து வந்தன. நிலவும் சூழலுக்கு ஏற்ப மரபணு வெளிப்பாடுகள் மாற்றம் பெறுகின்றன. உடலில் குளுக்கோஸ் அளவைச் சேமித்து வைத்து, முக்கியத் தேவைகளுக்கு மட்டுமே கொடுக்கும் வண்ணம் அம்மேல்மரபணுச் செயல்பாடுகள் அமைந்தன. அடுத்த சந்ததியினர் உருவாவதற்கு பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டு அடிப்படையில் ஏற்பட்ட அனுகூலங்கள் இவை – Evolutionary advantages. அம்மேல் மரபணுக்கள் அவ்வாறு செய்யவில்லையெனில், அடுத்த தலைமுறை என்ற ஒன்றை நம் முன்னோர்கள் கனவுகண்டிருக்கக் கூட இயலாது. மூளை வளர்ச்சியை ஓரளவு பிரதானப்படுத்தியதால், அப்பஞ்சத்தில் பாதிக்கப்பட்டோருக்குப் வேறு பல பக்க விளைவுகள் உண்டாயின. பல உறுப்புகள் செயலிழந்தன; உடல் தசைகள் சரிவர வளர்ச்சி பெறவில்லை; உடலின் செல்களால் இன்சுலின்களைச் சரிவரக் கையாள இயலவில்லை (Insulin resistance – இன்சுலின் எதிர்ப்பு). பிற உடல் பாகங்களுக்கு இன்சுலின் சரியாகச் செல்லாததால்தான், மூளைக்கு குளுக்கோஸ் சென்று பிற உடல் உறுப்புகள் ஏதாவது ஒருவகையில் செயல்பட வாய்ப்புகள் அமைந்தன. மேலும், உடலுக்குக் கொழுப்புச் சத்து அவசியமாகையால், அவை அடிவயிற்றுப் பகுதியில் அதிகமாகச் சேமிக்கத் தொடங்கின (Visceral Fat deposition in abdomen). பரிணாம வளர்ச்சி விதிப்படி, கொடூரப் பஞ்ச காலங்களில் உயிர் பிழைப்பதற்கு இப்படிப்பட்ட செயல்பாடுகள் தேவைப்பட்டன. 

பஞ்ச காலம் முடிந்து உபரிகளின் காலம் உடனடியாக வந்துவிடவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகும் வறுமையின் பிடியில் தான் பெரும்பான்மை மக்கள் இருந்து வந்துள்ளனர். இன்றும் கூட ஏழ்மையிலும் வறுமையிலும் உழலும் மக்கள் அதிகம் உள்ள நாடாகத்தான் இந்தியா உள்ளது. அரசுத் திட்டங்களாலும் நவீன வாய்ப்புகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக நடுத்தர வர்க்கம் பெருகத் தொடங்கியது. கடந்த முப்பது ஆண்டுகளில்தான் இன்று நாம் காணும் பெருவளர்ச்சி சாத்தியமானது. என்னுடைய பாட்டி நீர் எடுப்பதற்காக நெடுந்தூரம் கடந்து ஒரு நிலவுடைமையாளர் வீட்டில் வரிசையில் நின்றதை இன்றும் கூறுவார். ஒரு நாளைக்கு ஒரு வேளை இரு வேளை என்று மட்டுமே உணவுண்டு வந்தவர்கள் நமக்கு முந்தைய தலைமுறையிலும் கூட மிக அதிகம். மூன்று வேளை உணவு என்பது மிகப் பெரும்பான்மையோருக்கு இந்தத் தலைமுறையில் தான் சாத்தியமாகியுள்ளது. அதிலும் கடந்த முப்பது வருடங்களில் பெருகிய உணவுக் கலாச்சாரம் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. புதிது புதிதான வாய்ப்புகள், அதன் மூலம் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள், அது கொணரும் புதிய நோய்கள் என்று இவை பற்றிய உரையாடல்களை நாம் நிறையக் கேட்டாயிற்று. எனினும், கடந்த சில வருடங்களில்தான் இந்த நெடிய வரலாற்றின் உடலியல் தாக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டுப் பொதுவெளியில் உரையாடப்படுகிறது. 

அடுத்த தலைமுறையை உறுதிசெய்யும் இந்த பரிணாம வளர்ச்சி அனுகூலங்களே இப்போது நமக்குத் தொந்தரவாக மாறி வருகின்றன. கொஞ்சம் கொழுப்புச் சத்து சேர்ந்தாலும் நமது அடிவயிற்றில் சேமித்து வைப்பதற்கு நமது மேல்மரபணு பயிற்சி பெற்றிருக்கிறது. பஞ்ச காலம் முடிந்து மூன்று வேளையும் கார்போஹைட்ரைடு நிறைந்த அரிசிச் சோறு சாப்பிடும் நிலைக்கு வந்தாயிற்று. மேலும் துரித உணவுகளும் சிற்றுண்டியும் தின்பண்டங்களும் அதிகம் உண்கிறோம். திடீரென்று அதிகரித்த உணவு நுகர்வுக்கு ஏற்றாற்போல் நமது உடலுழைப்பு அதிகரிக்கவில்லை. உடலுழைப்புக்கு மாற்றாக உடற்பயிற்சிகள் இருந்து வந்தாலும் அதுவும் திடீரென்று அதிகரித்த உணவு விகிதத்துக்கு ஏற்றாற்போல் வளர்ச்சிபெறவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் மேலும் பல வாழ்க்கை முறை மாற்றங்களும் இவற்றோடு இணைந்துகொண்டன. பஞ்சங்களுக்குப் பழக்கப்பட்ட இந்திய உடல் உபரியால் தவிக்கின்றன. பொருள் – சர்க்கரை நோய், கல்லீரல் பிரச்சனை போன்ற பலவும் இந்த உபரியால் மட்டும் நிகழ்ந்தவையல்ல. பஞ்சத்திலிருந்து உபரிக்கு திடீரென மாற்றம் பெற்றதால் நிகழ்ந்த ஒன்று. இவை இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான வளர்ச்சியன்று. காலனியத்தால் சுரண்டப்பெற்று விடுதலை பெற்ற பின் ஓரளவு பொருளாதார வளர்ச்சி பெற்ற பின்காலனிய நாடுகள் பலவற்றில் வாழும் மக்களுக்கும் இத்தகைய உடல் சார்ந்த பிரச்சனைகள் வந்தவண்ணமுள்ளன. 

பல மேற்கத்திய நாடுகளிலும் ஏழ்மையும் ஊட்டச்சத்துக் குறைபாடும் வரலாறுதோறும் இருந்து வந்தாலும், காலனியாதிக்க நாடுகளின் ஏழ்மையும் காலனியாதிக்கத்துக்குட்பட்ட நாடுகளின் ஏழ்மையும் வித்தியாசமானவை. ஒப்பீட்டளவின் தீவிரத்தன்மை கொண்டனவாய் மூன்றாம் உலக நாடுகளின் ஏழ்மை உள்ளது. புதிய செய்தியல்ல. மேற்சொன்ன எடுத்துக்காட்டை இந்தப் பின்னணியில் விளங்கிக் கொள்ள வேண்டும். அதை யுட்கின்-யஜ்னிக் முரண்பாடு (Yudgin-Yajnik Paradox) என்பர். யஜ்னிக் என்னும் இந்திய அறிவியல் அறிஞர் தமது நண்பரான யுட்கின் என்னும் இங்கிலந்து அறிஞருடன் எடுத்துக்கொண்ட உடற்கூறு ஆய்வின் முடிவுப்படி, இருவருக்கும் ஒரே அளவு BMI இருந்தாலும், இந்தியரது உடலில் ஒப்பீட்டளவில் அதிகக் கொழுப்புள்ளது தெரியவந்துள்ளது. உபரிக் கொழுப்புக்கு உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போன்றவை முக்கியக் காரணங்களாக இருப்பினும் வரலாற்று ரீதியில் அவரது இந்திய மூதாதையர்கள் சந்தித்து வந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை முக்கியக் காரணமாக முன்வைக்கிறார். யஜ்னிக் பிறந்தபோது அவர் குறைந்த எடையுடைவராக இருந்தது இதற்கொரு சான்றாகும். உடல் எவ்வாறு பஞ்சத்தை எதிர்கொள்ளத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதோ, அதேபோல மனமும் வன்முறையை எதிர்கொள்ளத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. உடல் சேமிக்கும் கொழுப்பு (Visceral Fat), மனதின் அதீத விழிப்புணர்வுக்கு (Hyper-vigilance) இணையானது.

காலனியம் கொடுக்கும் ட்ராமா எத்தகையது? நிச்சயமாக காலனியம் உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உளவியல் சார்ந்தும் பல நெருக்கடிகளையும் தடங்களையும் தழும்புகளையும் விட்டுச் சென்றேயுள்ளது. அதுவும் நேரடியாக அதன் வன்முறைக்கு ஆளானவர்களும் அவற்றைக் கண்ணுற்றவர்களும் பல்வேறு உடல்-மன உபாதைகளுக்கு (Psycho-somatic illness) ஆளாவதைப் பற்றி உளவியலாளரும் அரசியல் அறிஞருமான ஃப்ரான்ஸ் ஃபனோன் குறிப்பிடுகிறார். அச்சூழலுக்கு உட்பட்டோரை தம்மைத் தாமே மனித நீக்கம் செய்யும் நிலைக்குக் காலனியம் தள்ளுகிறது. அல்ஜீரிய இளைஞர்கள் பலருக்கு வயிற்றுப் புண் (Stomach ulcers) உண்டாயின; பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சனைகள் உருவாயின; விசாரணைக் கூடங்களில் (Interrogation centres) சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோருக்கு இளமையிலேயே முடி நரைத்துப் பல நரம்பியல் பிரச்சனைகள் உண்டாயின; அகதிகள் முகாமில் தங்கும் குழந்தைகள் பலருக்கும் அதீத இரைச்சல்களால் பயம் வந்தது (Noise phobia); அது மட்டுமல்லாமல், இந்த வன்முறைகளை நிகழ்த்துவோருக்கும் பல உளவியல் பிரச்சனைகள் வருவது பற்றியும் ஃபனோன் குறிப்பிடுகிறார். அதனால் தான் காலனிய நீக்கம், வன்முறைக்கு உட்பட்டோரை மட்டுமல்லாமல் வன்முறையாளரையும் விடுவிக்கும் என்று அவர் முன்மொழிந்துள்ளார். 

போர் வன்முறைகளும் பஞ்சங்களும் ஒரு தலைமுறையை மட்டுமல்லாது அடுத்தடுத்த தலைமுறையையும் பாதித்து வருகின்றன. இது தொடர்பான முன்னோடி ஆய்வு டச்சுப் பஞ்சக் குளிர்காலத்தின் போது நிகழ்ந்தது (Dutch Famine Winter). இரண்டாம் உலகப்போரின் இறுதியில் (1944-45) ஜெர்மனி நெதர்லாந்துப் பகுதியை ஆக்கிரமித்தது. போரின் கொடூரத்தோடு கடும் பனிக்காலமும் இணைந்ததால் இரண்டு வருடங்களுக்கு இந்தப் பஞ்சம் நீடித்தது. ஐரோப்பாவில் மிகச் சமீபத்தில் நிகழ்ந்த பஞ்சமாகையால், அதன் விளைவுகளைப் பற்றி அதிக அளவிலான ஆய்வுகள் எளிதாக நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 30,000 பேர் இந்தப் பஞ்சத்தால் மரணமடைந்தனர். 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர். அப்போது கர்ப்பிணிப் பெண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அடுத்த ஐம்பது ஆண்டுகள் – அவர்களது முதல் தலைமுறையையும் இரண்டாம் தலைமுறையையும் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தியதால் பல முக்கிய விஷயங்கள் நமக்குத் தெரிய வந்துள்ளன. பஞ்சத்தின்போது கர்ப்பிணிகளாக இருந்த பெண்களின் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், இருதய நோய், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற பல உடல் உபாதைகள் இருந்தன என்று கண்டுபிடிக்கப்பட்டன. அது மட்டுமன்றி புறச்சூழல்களுக்கேற்பத் தம்மைத் தகவமைத்துக்கொண்ட மேல்மரபணுக்களின் செயல்பாட்டால், அப்பஞ்சத்தில் பாதிக்கப்பட்டோரின் பேரப்பிள்ளைகளுக்கும் உடல் உபாதைகள் கடத்தப்பட்டன. குறிப்பாக அளவுக்கதிகமான கொழுப்பு உடலில் சேர்ந்துள்ளதைச் (Adiposity) சமீபத்திய ஆய்வுகள் நமக்கு வெளிக்காட்டுகின்றன. 

அதேபோல யூத இன அழித்தொழிப்பிலிருந்து தப்பித்தவர்களை ஆய்வு செய்த போது அவர்கள் PTSD-யால் பாதிக்கப்பட்டுது தெரியவந்தது. உடலில் பலவித ஹார்மோன்கள் இருப்பது நமக்குத் தெரியும். அதில் கார்டிசாலும் (Cortisol) அட்ரினலைனும் (Adrenaline) மன அழுத்ததிற்கான ஹார்மோன்கள். ஆபத்துகளைச் சந்திக்கையில் இவ்விரு ஹார்மோன்களும் அதிகமாகச் சுரக்கும். அட்ரினலைன் சுரக்கும்போது இருதயம் வேகமாகத் துடித்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உடனடியாக fight or flight response-ஐ இயக்கும் ஹார்மோன் அதுதான். கார்டிசால் அளவு நெடுநாளைய மன அழுத்தத்தையும் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் ஹார்மோன். அது அதிகரித்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து மன அழுத்தத்தம் அதிகரிக்கும். இவ்விரு ஹார்மோன்களும் ஆபத்துக்காலங்களில் நம்மை எச்சரிக்கையுணர்வுடன் வைத்திருக்கின்றன. இன அழித்தொழிப்பு, போர் வன்முறைகள் போன்றவை மிகக் கொடூரமான ட்ராமாவைத் தரும் வல்லமை படைத்தவை. இதனால் மனிதர்கள் பாதிக்கப்படும்போது, கார்டிசால் அளவும் அட்ரினலைன் அளவும் எப்போதும்போல் அதிகரிக்கும். ஆனால் நெடுங்காலம் இவை தொடரும் பட்சத்தில் கார்டிசால் நம்மைப் பாதுகாக்க வேண்டி, தாம் சுரப்பதைக் குறைத்துக் கொள்ளும். அதீத அளவு இந்த ஹார்மோன்கள் சுரக்குமானால், சமாளிக்க இயலாத அளவு உடல் உபாதைகள் பெருகுமாதலால், உடல் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ள இந்த ஹார்மோனைப் பயன்படுகிறது. மன அழுத்தம் இருப்போருக்கு வழக்கமாக அட்ரினலைன் அளவும் கார்டிசால் அளவும் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால், ட்ராமா முடிந்து PTSD-யால் பாதிக்கப்பட்டோருக்குக் கார்டிசால் அளவு குறைந்து காணப்படும். மேற்பார்வையில் முரண்போலத் தெரியும் இந்த அளவுக் குறைபாட்டுக்கு இதுதான் காரணம். 

இத்தகைய சூழலில் சிக்கிய யூதர்களையும், அமெரிக்க இராணுவத்தினரையும், 9/11 தாக்குதலில் சிக்குண்டு தப்பித்தவர்களையும் ஆய்வு செய்ததில் அவர்களுக்கு PTSD இருப்பதையும், கார்டிசால் அளவு குறைந்ததையும் பதிவு செய்துள்ளனர். இவர்களது அடுத்த தலைமுறையினரில் பலருக்கும் கார்டிசால் அளவு குறைந்திருப்பதும் தொடர் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் பொருள் அவர்கள் எல்லோரும் PTSD-யால் பாதிக்கப்படுவார்கள் என்பதல்ல. ஒருவேளை அவர்கள் தங்கள் வாழ்வில் துன்ப துயரங்களைச் சந்திக்கையில், குறைவாக உள்ள கார்டிசால் அளவால் அவர்களது மன அழுத்தங்களைக் கையாள இயலாது. அதனால் அட்ரினலைன் அளவு அதீதமாக அதிகரிக்கும். எனவே, குறைந்த கார்டிசால் அளவு உள்ளவர்கள் PTSD பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதே இந்த ஆய்வுகள் சொல்லும் முடிவு. முப்பது வருடங்களாகத் தான் இந்த ஆய்வுகள் சீரிய முறையில் நடந்து வருகின்றன. இன்னும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டால் இதன் தீவிரத்தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவரும்.

மனிதர்கள் மேல் இது பற்றித் தொடர் ஆய்வுகள் நடத்த இயலாத காரணத்தால் (!), ஆய்வகங்களில் விலங்குகள் மீது வழக்கம்போல் பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டன. அதில் குறிப்பிட்ட ஒரு ஆய்வு அடுத்தடுத்த தலைமுறைக்கு ட்ராமா கடத்தப்படும் பாங்கினை விளக்கத் தலைப்பட்டது. ஒரு எலியை எடுத்துக்கொண்டனர். செர்ரிப் பூவின் வாசத்தை நுகர வைத்து அதன் காலில் மின்சாரம் பாய்ச்சினர். சில நாட்கள் தொடர்ந்து அவ்வாறு நுகர வைத்து மின்சாரம் பாய்ச்சியவுடன், அந்த வாசத்தை நுகர்ந்த அடுத்த நொடியே அதன் உடல் நடுக்கம் பெறுவதைக் கவனித்தனர். இப்படியே சில நாட்கள் அதன் கால்களில் மின்சாரம் பாய்ச்சி அதைப் பெண் எலியுடன் புணரவிட்டனர். அதன் அடுத்த தலைமுறை எலி அந்த சுகந்தத்தை நுகர்ந்த உடனேயே நடுங்கத் தொடங்கி விட்டது. அதற்கடுத்த தலைமுறை எலியும் இவ்வாறு நடுக்கம் பெற்றதையும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், மேல்மரபணு மூலம் கடத்தப்படும் உணர்வுகளையும் ட்ராமாவையும் பற்றிய முடிவுகளை அவர்கள் வெளியிட்டு விவாதித்து வருகின்றனர். இவை யாவும் முடிந்த முடிபுகள் அல்ல என்பதை அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் மூன்றாம் தலைமுறை எலிகளுக்கு அந்த சுகந்தத்தின் மீதிருந்த பயத்தைப் போக்குவதன் மூலம் இந்த தொடர்பு வலை அறுபடுவதையும் பதிவு செய்துள்ளனர். 

முதல் தலைமுறையினருக்கு ஏற்படும் தீவிர மன அழுத்தம் அடுத்தடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும் வல்லமை கொண்டதாய் இருக்கின்றன. அதற்கு தம்மைத் தாமே தகவமைத்து அடுத்த தலைமுறையின் இருப்பை உறுதி செய்யும் பரிணாம வளர்ச்சிச் செயல்பாடு அடிப்படைக் காரணமாக உள்ளது. முதல் தலைமுறையின் சூழலால் உந்தப்பெற்ற மேல்மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்கும் இவ்வாறு நிகழும் என்ற எச்சரிக்கையுணர்வால், மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்திக் கடத்துகிறது. எனினும், சூழல் மாற்றம் பெற்ற போதும், மேல் மரபணுச் செய்லபாடுகள் உடனடியாக மாற்ற பெற இயலாமையால் பல நேரங்களில் அவை உடல் உபாதைகளாக மாற்றம் பெறுகின்றன. சமூகப் பொருளாதார சூழ்நிலைகள் உயிரியலோடு எந்த அளவு உரையாடுகிறது என்பதை மேல்மரபியல் ஆய்வுகள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன. 

இதைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கையிலும் நண்பர்களோடு உரையாடியபோதும் மிக முக்கியமான கேள்வியொன்று எழுந்தபடியே இருந்தது. குறிப்பாக இந்தியாவில் நாம் உள்ளபோது இப்படிப்பட்ட முடிவுகள் சாதிகளைப் பற்றியும் ஒரு சாதிக்குள் திருமணம் நடப்பது பற்றியும் அது எவ்வாறு அவ்வச் சாதிகளின் செயல்பாடுகளையும் துன்ப துயரங்களையும் வடிவமைக்கிறது என்பது அந்த கேள்வி.

இது பற்றி ஒரு சில விஷயங்களை மட்டும் சொல்லிக் கட்டுரையை முடிக்கிறேன். சில முக்கியமான திறமைகள் மரபியல் ரீதியாகக் கடத்தப்படுவது உண்மையே. சிலருக்கு ஓசை மிகத் துல்லியமாகக் கேட்கும். சிலருக்கு இயல்பிலேயே நினைவுத் திறனிருக்கும். சிலரது உடல் தடகளத்துக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவற்றை மரபியல் அனுகூலம் (Genetic Advantages) என்று அறிவியல் அறிஞர்கள் வரையறுப்பர். ஆனால் இத்தகைய இயற்கைத் திறமைகள் எந்தவொரு சமூகத்தவரோ சாதியினரோ இனத்தவரோ முழுமையாக உரிமை கொண்டாட இயலாது. எல்லா நாடுகளைச் சார்ந்தவர்களிடமும் இனங்களைச் சார்ந்தவர்களிடமும் இத்தகைய இயற்கைத் திறன்கள் உள்ளன. காலனிய ஆதிக்கவாதிகளும் சாதியவாதிகளும் இத்தகு திறன்கள் ஒரு சில சமூகத்தவரிடம் மட்டுமேயுள்ளன என்று அறிவியலுக்குப் புறம்பான முறையில் 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டிலும் பேசி வந்தனர். ஆனால், தற்போதைய பல ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால் மனிதர்கள் அனைவரின் மரபணுவும் 99 சதவிகிதத்துக்கு மேல் ஒத்த தன்மையுடையது என்பதாகும். அந்த ஒரு சதவிகித வேறுபாடும் கூட இனத்துக்கு இனமோ சாதிக்குச் சாதியோ அதீத அளவு மாறுபடாது. சாதியோ இனமோ, ஒரு சமூகத்துக்குள்ளேயே இருக்கும் மரபியல் வேறுபாடு, ஒரு சமூகத்தவருக்கும் வேறொரு சமூகத்தவருக்கும் உள்ள வேறுபாட்டை விட அதிகம் என்றே ஆய்வுகள் நமக்குச் சுட்டிக் காண்பிக்கின்றன. எனவேதான் இனங்களும் சாதிகளும் உயிரியல் யதார்த்தமில்லை; சமூக யதார்த்தம் என்ற வாதங்கள் வலுப்பெற்று வருகின்றன. சமூகப் பொருளியல் ரீதியில் மனிதர்களுக்குள் வேறுபாடுகள் நிலைநிறுவப்படுவதே உண்மை. இனம் பற்றிய உரையாடல் நடைபெறும்போது வெளித்தோற்றத்தில் தெரியும் உடலின் நிறம் முக்கியப் பங்கு வகிப்பது உண்மையே. அது மரபியல் ரீதியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. அதற்கு பல நூறு தலைமுறைகள் வாழ்ந்து வந்த புவியியல் அமைப்பு, சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள மெலனின் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகள் போன்ற பல சமூக-உயிரியல் செயல்பாடுகள் காரணமாகின்றன. வெறும் மரபியல் செயல்பாடுகள் மட்டுமே வேறுபாடுகளை உற்பத்தி செய்யக் காரணமாக இருப்பதில்லை. 

அன்றைய காலனியாதிக்கக் காலகட்டத்தில் இந்திய இராணுவத்தில் யார்யாரெல்லாம் சேரத் தகுதியானவர்கள் என்ற பேச்சு எழுந்தபோது, மராத்தியர்களும், ராஜபுத்திரர்களும், பஞ்சாபிகளும் இயல்பிலேயே வலுமிக்கோராகவும் ஆண்மைகொண்டோராகவும் கருதப்பட்டதால் அவர்களை இயல்பிலேயே போர்த்திறன் கொண்ட இனங்கள் (Martial Races) என்று வரையறுத்தனர். மாறாக வங்காளிகளும் தென்னிந்திய பிராமணர்களும் பெண்மைத்தன்மை பெற்றவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கு இராணுவங்களில் பெரிதாக இடம்தரவில்லை. ஒருவர் வளரும் சூழ்நிலையில் அவர்கள் பயிற்றுவிக்கப்படும் திறன்கள் பல இயல்பிலேயே வருவனவல்ல. காலனியாதிக்க காலத்தில் போர்களில் ஈடுபட்டு வந்த பல இனங்களை இவ்வாறு வகைப்படுத்துவது ஆங்கிலேயர்களுக்கு எளிதானதாக இருந்து வந்தது. மேலும், அன்றைக்கு அரசுப் பதவிகளில் அதிகம் இருந்து வந்த பிராமணர்கள் தம்மையும் தம் சாதியையும் இயல்பிலேயே அறிவுத் திறம் கொண்டவர்களாகச் சித்தரித்துக் கொண்டனர். அக்காலத்தில் இன அடிப்படையிலான போலி அறிவியல் கோரல்கள் (Pseudo-scientific claims based on race) இருந்துவந்ததால், அத்தகைய பார்வையை இந்திய சாதி-மதங்களின்மேல் வெள்ளை ஆதிக்கவாதிகள் செலுத்தியதில் வியப்பில்லை. கறுப்பினத்தவர் இயல்பிலேயே மூளை வளர்ச்சி அதிகம் இல்லாதவர்கள்; அடிமை எண்ணம் கொண்டவர்கள். வெள்ளை இனத்தவர் பிறரை ஆளும் திறன்களை இயல்பிலேயே கொண்டவர்கள்; அறிவில் உச்சம் பெற்றவர்கள் போன்ற அறிவியலுக்குப் புறம்பான பல பார்வைகளை அவர்கள் கொண்டிருந்தனர். இத்தகைய இனவாதப் பார்வையே பிற்காலத்தில் ஒவ்வொரு சாதியாரிடமும் ஒவ்வொரு இயற்கைத் திறன் உள்ளது என்கிற மேலாதிக்கக் கோட்பாடு வளர்வதற்குக் காரணமாக இருந்தது. 

வறுமை நிலையில் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் பல தலைமுறைகளை வைத்திருக்கும்போது அது மரபணு வெளிப்பாட்டை எப்படி பாதிக்கும் என்பதை மேல்மரபியல் ஆய்வுகள் நமக்குச் சுட்டிக்காண்பிக்கின்றன. மேலும், மரபணு வெளிப்பாடும் முடிந்த முடிபாக அல்லாமல் சூழலுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்ளும் வல்லமை பெற்றதால், நல்ல சூழல் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து சரியான ஊட்டச்சத்தையும் திறன்கள் வெளிப்படுத்துவதற்கான வெளியையும் உருவாக்கிக் கொடுத்தால், அந்த மரபணு வெளிப்பாடு மாற்றம் பெறும் என்பதுமே அறிவியல் கூறுகிறது. இளையராஜாவுக்கு ஓசையைப் பிரித்தறியும் திறன் சராசரி மனிதர்களை விட அதிகமாக உள்ளது. அதை Perfect Pitch என்பார்கள். ஆனால் அவருக்குச் சிறுவயதில் ஊட்டச்சத்து சரியான அளவுக்குச் செல்லவில்லையெனில், அவரது மரபணு வெளிப்பாட்டை மேல்மரபணுக்கள் நிறுத்தி வைத்து அவர் உயிர்பிழைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டிருக்கும். மேலும் இத்தகு திறனை வெளிப்படுத்த வெளிகள் அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் அவர் இசைமேதையாக உலவியும் இருக்க இயலாது. அதனால்தான் குழந்தை வளர்ப்புப் பற்றிப் பேசும்போது எல்லா விதமான துறைகளையும் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதன் முக்கியத்துவத்தை இன்று பேசி வருகிறோம். 

சமூகநீதி வட்டாரங்களில் நாம் கேள்விப்படாதது ஒன்றுமல்ல. காலம் காலமாக கல்வியறிவு பெற்ற சமூகம் கல்வியில் முன்னணியில் புதிதாய் ஏழ்மையிலிருந்து எழும் சமூகம் கல்வியில் ஓரளவு பின்தங்கி இருப்பதும் சூழலைப் பிரதானப்படுத்தியதே என்பது இன்றைக்குப் பொது அறிவாகிவிட்டது. அதிலும் கல்வி கற்பதற்கான சரியான சூழலை வீட்டில் அமைக்கவில்லையெனில் அது முன்னேற்றத்தை எவ்வாறு தடுக்கும் என்பதும் நமக்குத் தெரியும். சூழல் சரியாக அமையும்பொழுது இயல்பிலேயெ உருவாகும் ஒரு சில திறமைகள் வெளிச்சம் பெறும். சாதியவாதிகளுடன் போராடி வருவதால் சமூகநீதி வட்டாரங்களில் இருக்கும் நாம் ”இயல்பிலேயே” என்ற பதத்தை என்றும் சந்தேகத்துடனேயே பார்த்து வருகிறோம். Nurture vs. Nature என்னும் பழங்காலச் சண்டையில் என்றும் Nurture பக்கமே நாம் நின்றுவருகிறோம். Nature என்று சொன்னால் அதைச் சாதியவாதிகள் தங்களுக்கான வாதமாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் எழுவது இயல்பே. எனினும், Nurture vs Nature என்ற உரையாடல் பெரும்பாலும் காலாவதியாகி Nature through Nurture என்னும் இடத்துக்கு இன்று வந்தடைந்திருக்கிறோம். இயல்பிலேயே மரபணுக்கள் சில திறன்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் வழங்கினாலும், சரியான சூழல் இல்லையெனில் மரபணு வெளிப்பாடு அடங்கிவிடும். இது Nature பக்கம் நிற்பது கிடையாது. இயற்கையும் சூழலும் என்றென்றும் முடியா உரையாடலில் இயங்கி வருகிறது. இத்தகு திறன்கள் எந்தவொரு சமூகத்தவரின் தனிச்சொத்தல்ல. அந்த ஒரு சதவிகித வேறுபாடுகள் தான் மானுட குலத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரிச் செயல்பாடுகளில் இயங்க முதன்மைக் காரணமாக இருக்கிறது. அந்த வேறுபாடுகள் இல்லையெனில் உலகம் சுவாரஸ்யமற்றுப் போய்விடும். 

இது நிற்க. மிக முக்கியமான இன்னொரு கேள்வியொன்றும் உள்ளது. எனில் ஒரே சாதிக்குள் திருமணம் செய்யும் வழக்கம் நமக்குச் செய்வதுதான் என்ன? சாதி மேலாதிக்கக் கருத்தியலுக்கு முற்றிலும் மாற்றான ஒன்றே இங்கு நடந்து வருகிறது. ஒரே சாதிக்குள்ளும் வட்டத்துள்ளும் தொடர்ந்து திருமணம் செய்து இனப்பெருக்கம் செய்வது பலவித மரபணுக் கோளாறுகளையே வெளிப்படுத்துகின்றன. மரபணு வேறுபாடுகள் அதிகம் இல்லாத ஒரே சாதிக்குள் இனப்பெருக்கம் நிகழும்போது இருவருக்கும் பொதுவாக உள்ள மூதாதையர்களின் மரபணுக் கோளாறுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவது இலகுவாக மாறுகிறது. ஆந்திராவில் உள்ள ஒரு வைசியச் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட மரபணுக் கோளாறு உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு ட்ராமா அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதுபோல் குணங்களும் குணநலன்களும் கடத்தப்படுவது இல்லை. ஆரோக்கியமான மரபுவழிக் கடத்தல் என்று சொல்லப்படுவது பாதிப்புகளின்றி நடுநிலையான மரபுவழிப் பரிமாற்றமேயாகும். Healthy transmission of genes implies neutral inheritance rather than the transmission of advantages or disadvantages. 

சாதி-மத ரீதியில் ஒடுக்கப்பட்டு வரும் மக்கள் என்றும் விழிப்புநிலையிலேயே இருந்துவர வேண்டியுள்ளதால் அவர்களது உடலிலும் உள்ளத்திலும் எத்தகைய நோய்கள் குடிகொண்டிருக்கின்றன என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அந்த அச்சம் கடத்தப்பட்டுக்கொண்டே வரவேண்டிய சூழல் வேறு. பொதுவான கதையாடல் கூறுவதுபோல, தலித்துகள் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் ஒடுக்கப்பட்டோராய் இருந்ததில்லை. எவ்வாறு வளமும் பஞ்சமும் இடத்துக்கு இடமும் காலத்துக்குக் காலமும் மாற்றம் பெற்று வந்திருக்கிறதோ அதே போல சமூகச் சூழ்நிலைகளும் மாற்றம் பெற்று வந்திருக்கின்றன. இத்தகைய ஒடுக்குமுறைகள் வரலாற்றுக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஏதோ ஒரு புள்ளியில் இத்தகு வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் தொடங்கியிருக்கின்றன. எனில், சமூக அரசியல் ரீதியில் இத்தகைய ஒடுக்குமுறைகளை நிச்சயம் ஒழித்துக்கட்ட இயலும். அதே போலத்தான் – இச்சூழல்களால் உண்டான மன அழுத்தங்களும் ட்ராமாவும் ஒரு கட்டத்தில் முடிவுக்குக் கொண்டுவர இயலும். அதற்கு மனநலத்தைப் பேணுவது மட்டும் தீர்வு கிடையாது. சமூகப் பொருளியல் விடுதலையுடன் சேர்ந்த மனநல விடுதலைதான் முழுத் தீர்வாக இருக்க இயலும். 

ட்ராமாக்கள் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவது என்றைக்கும் முடிந்த முடிபாக இருக்கவேண்டியதில்லை. நம் வாழ்காலத்திலேயே ஒவ்வொருவரது ட்ராமாவும் ஓரளவேனும் சீர்செய்ய இயலும். அதற்குத் தகுந்தாற்போல சிகிச்சை எடுத்துக்கொள்வதும் மருந்துகள் உட்கொள்வதும் ஓரளவேனும் நம்மைச் சீர்செய்ய உதவும். மேலும், மேல்மரபியல் சூழலுக்கு ஏற்பச் செயல்படும் தன்மையுடையதால், சூழலை மேம்படுத்துவதன் வழியாகவும் சரியான சிகிச்சை வழியாகவும் மாற்றம் பெறும் என்று அறிஞர்கள் உரைக்கின்றனர். நம் மேல் விழும் வடுக்கள் மாற்ற முடியாதவை அல்ல. இதை Epigenetic Reversibility என்கிறோம்.

மேற்சொன்ன சமூகப் பொருளியல் காரணங்களால் ஏற்படும் ட்ராமாக்களை வெறும் மருந்து மாத்திரைகளாலும் தனிநபர் சிகிச்சைகளாலும் மட்டுமே மாற்ற இயலாது. காசாவில் ஆக்கிரமிப்பு நடந்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வெறும் மருந்து மாத்திரைகள் கொடுத்துச் சரிசெய்துவிட முடியாது. அதனால் தான் உளவியல் நலன் என்பது ஆழமான சமூக அரசியல் பிரச்சனையாக இன்று கருதப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ நற்சூழல் அமைத்துக் கொடுப்பது சமூகப் பொருளியல் விடுதலை மட்டுமல்ல; அது அவர்களது அடுத்த தலைமுறையின் உயிரியல் விடுதலையுமாகும். நற்சூழ்நிலை, சத்தான உணவு, வன்முறையற்ற வாழ்வு ஆகியவை அந்த மேல்மரபணு சுவிட்சுகளை (Switches) மீண்டும் இயல்பு நிலைக்குத் திருப்ப வல்லவை. 

References

  • Arnold, David. “Famine in Peasant Consciousness & Peasant Action: Madras 1876-78.” In Subaltern Studies: Writings on South Asian History and Society, edited by Ranajit Guha. 3. Oxford University Press, 1994.
  • González-Rodríguez, Patricia, Jens Füllgrabe, and Bertrand Joseph. “The Hunger Strikes Back: An Epigenetic Memory for Autophagy.” Cell Death & Differentiation 30, no. 6 (2023): 1404–15.
  • Jawaid, Ali, Martin Roszkowski, and Isabelle M. Mansuy. “Transgenerational Epigenetics of Traumatic Stress.” In Progress in Molecular Biology and Translational Science. Elsevier, 2018.
  • Kaur, Harjyot, and Pooja Jaggi. “Intergenerational Trauma in the Context of the 1947 India–Pakistan Partition.” Psychological Studies 68, no. 3 (2023): 374–87.
  • Kwon, Diana. “Borderline Personality Disorder May Be Rooted in Trauma.” Scientific American, January 1, 2022. https://www.scientificamerican.com/article/borderline-personality-disorder-may-be-rooted-in-trauma/.
  • Li, Yanping, Yuna He, Lu Qi, et al. “Exposure to the Chinese Famine in Early Life and the Risk of Hyperglycemia and Type 2 Diabetes in Adulthood.” Diabetes 59, no. 10 (2010): 2400–2406.
  • Mandal, Shreya. “Reading the Silence of the Bengali Diaspora: Bibliotherapy and the Inheritance of the 1943 Bengal Famine.” Psychology Today, June 8, 2025. https://www.psychologytoday.com/us/blog/bipoc-mental-health/202505/reading-the-silence-of-the-bengali-diaspora.
  • Sharma, Dinesh C. “Genetic Isolation in Casteist India Could Render Some People More Vulnerable to Disease.” The Wire: Science, July 19, 2017. https://science.thewire.in/science/caste-founder-events-endogamy-recessive/.
  • Thompson, E. P. “The Moral Economy of the English Crowd in the Eighteenth Century.” Past & Present, no. 50 (1971): 76–136.
  • Wells, Jonathan C. K., Emma Pomeroy, Subhash R. Walimbe, Barry M. Popkin, and Chittaranjan S. Yajnik. “The Elevated Susceptibility to Diabetes in India: An Evolutionary Perspective.” Frontiers in Public Health 4 (July 2016).
  • Yajnik, Chittaranjan S., and John S. Yudkin. “The Y-Y Paradox.” The Lancet 363, no. 9403 (2004): 163.
  • Yehuda, Rachel. “How Parents’ Trauma Leaves Biological Traces in Children.” Scientific American, July 1, 2022. https://www.scientificamerican.com/article/how-parents-rsquo-trauma-leaves-biological-traces-in-children/.
  • Yehuda, Rachel, Nikolaos P. Daskalakis, Amy Lehrner, et al. “Influences of Maternal and Paternal PTSD on Epigenetic Regulation of the Glucocorticoid Receptor Gene in Holocaust Survivor Offspring.” American Journal of Psychiatry 171, no. 8 (2014): 872–80.
  • Yehuda, Rachel, and Amy Lehrner. “Intergenerational Transmission of Trauma Effects: Putative Role of Epigenetic Mechanisms.” World Psychiatry 17, no. 3 (2018): 243–57.
  • Ziadah, Rafeef, dir. We Teach Life, Sir. n.d. Accessed May 20, 2026. https://www.youtube.com/watch?v=aKucPh9xHtM.

***

மா.க. பாரதி –  கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக டில்லியில் வசித்து வருகிறார். அசோகா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவராகப் பணிபுரிந்து வருகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூக-சமய வரலாற்றை ஆய்வு செய்கிறார். மின்னஞ்சல் : barathyganesan96@gmail.com

கோபால் ஹொன்னால்கெரே கவிதைகள்

0


தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்

ஒரு ஜதை புதிய காலணிகளை எப்படி அடக்கியாள்வது
(திருமலேஷ்-க்கு)

அவற்றை ஒன்றாக வைக்காதீர்கள்
அவற்றைத் தங்களுக்குள் பேச அனுமதிக்காதீர்கள்
அவை ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிக்கக்கூடும்

சுவர்-கடிகாரம், சட்டப்புத்தகங்கள், நாட்காட்டி, தேசியக்கோடி,
காந்தியின் புகைப்படம் அல்லது செய்தித்தாளுக்கு அருகில்
ஒருபோதும் அவற்றை விட்டுப்போகாதீர்கள்
சுதந்திர தினம், சத்தியாகிரகம், விடுமுறைகள்,
வேலை நேரங்கள், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊழல் குறித்து
அவை தெரிந்து கொள்ளக்கூடும்

உங்களுடைய ஆலயத்துக்கு அவற்றை எடுத்துச் செல்லாதீர்கள்
நீங்கள் மிகவும் பலவீனமானவர் என்பதையும்
உங்கள் கடவுள் போலியானவர் என்பதையும்
உடனடியாக அதைத் தெரிந்துகொண்டு
அவை உங்களை கடிக்கக்கூடும்

உங்களுடைய உணவு-மேசைக்கு அருகில்
ஒருபோதும் அவற்றை எடுத்துச் செல்லாதீர்கள்
அவை உணவளிக்கும்படி கேட்கக்கூடும்
அல்லது உங்களின் செழுமையான இரவுணவின் மீது
அவற்றின் கொள்ளிக்கண்களை வைக்கக்கூடும்

முதலில் அவற்றை சிறிய நடைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்
பிறகு மெல்ல மெல்ல தூரத்தை அதிகரியுங்கள்
தாங்கள் பார்க்கும் வேலையின் அளவு யாதென்பதை
ஒருபோதும் அவை அறிந்துகொள்ளக்கூடாது

அவற்றின் இறுக்கமான வார்களை தளர்த்தி விடுங்கள்
அவற்றை மகிழ்ச்சியாக உணரவிடுங்கள்
அவை பெரிதாக வளர்ந்து வருகின்றன
கரடுமுரடாக இருக்கும் வார்களின்மீது
சிறிதளவு பழைய எண்ணெயை ஊற்றிவிடுங்கள்
தங்களுக்கு அபிஷேகம் நடப்பதாக அவை எண்ணிக் கொள்ளட்டும்

தற்போது அவை
உங்களின் கொழுத்த கால்களுக்காக
கூடுதல் நேரமும் பணிபுரியத் தயாராயிருக்கும்
அற்புதமான அடக்கஒடுக்கமான பணியாளர்கள்

*

ஒரு கோரிக்கை

புத்தர்
கிறிஸ்து
கிருஷ்ணர்
மஹாவீர்
முகம்மது
மோசஸ்
நானக்
ராமர்
ஜராதுஷ்ட்ரர்

நான் உங்களை வணங்குகிறேன்
புதிய காற்றால் நிரம்பிய
பச்சைவண்ண பலூன்களால்
இம்முறை எங்களை ஆசிர்வதியுங்கள்

*

ஆந்தை

ஒரு கண்ணை மட்டுமே திறக்க
நம்மால் ஆகாது
ஆனால் ஒருகண்ணை மட்டும் மூடமுடியும்
அந்த முதிய ஆந்தையை எனக்கு ரொம்பப் பிடிக்கும் –
ஒரு நீதிக்கதையில் வரும் ஞானி
ஒரு சிறிய பிரச்சனையோடு
ஒரு முயல் அவரிடம் வரும்பொழுது
அவர் ஒற்றைக்கண்ணை
மட்டுமே திறக்கிறார்
ஏனென்றால் அதைப் புரிந்துகொள்ள
இரண்டு கண்கள் தேவையில்லை

ஆந்தை ஓர் எளிய தந்திரத்தை மெல்ல கிசுகிசுக்கிறது

    குரூரமும் ஆற்றலும் நிறைந்த சிங்கத்தை
    முயல் ஒரு கிணற்றுக்கு அழைத்துச்சென்று
    அதற்குள் எட்டிப்பார்த்து குதிக்கச் சொல்கிறது
    சிங்கத்துக்கோ படுபயங்கர அச்சம்
    அது சொல்கிறது: என்னைக் காட்டிலும்
    ஆற்றல்மிகுந்த இன்னொரு மிருகம் உள்ளே இருக்கிறது
    அதுவும் என்னைப் பார்த்து கர்ஜிக்கிறது
    முயல் சொல்கிறது: முட்டாள்
    உன்னுடைய புலன்களை பயன்படுத்து
    அந்த மற்றொரு மிருகம் உனது நிழல்தான்
    அந்த கர்ஜனையும் கூட உனது குரலின் எதிரொலிதான்
    ஆகவே சிங்கம் அதில் சமாதானமாகி
    கிணறு பாதுகாப்பான இடம்தான் என்பதை ஏற்றுக்கொண்டு
    உள்ளே குதிக்கிறது

நம்மால் வெளிச்சத்தை நோக்கி ஒற்றைக்கண்ணை மட்டும் திறக்கமுடியாது
ஆனால் தகுந்த காரணத்தோடு ஒற்றைக்கண்ணை மூடிக்கொள்ளமுடியும்

அவளுடைய இறந்து-பிறந்த / இன்னும்-பிறக்காத குழந்தைகள்

தனது உணர்வுகளை அவள் எப்போதும் அவனிடம் சொன்னதில்லை
ஒவ்வொரு இரவும் ஒரு மாத்திரையை விழுங்குவாள்
அவர்களிருவரும் திருமண வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

தனது உணர்வுகளை அவனும் கூட எப்போதும் அவளிடம் சொன்னதில்லை
ஒவ்வொரு இரவும் ஒரு கேப்சூலை விழுங்குவான்
அவர்களிருவரும் திருமண வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

ஒருமுறை
ஒரு மனநல ஆலோசகரை பார்ப்பதற்காக
அவன் வெளியூர் சென்றிருந்தபோது
அவள் மிகவும் தனிமையாகவும் நம்பிக்கையிழந்தவளாகவும் உணர்ந்தாள்
அவனுடைய போத்தலில் இருந்த அத்தனை கேப்சூல்களையும் எடுத்து
அவற்றின் உள்ளிருந்த மருந்துகளை வெளியே வீசியெறிந்தாள்
அவள் பேசி விரும்பிய அனைத்தையும் பேசிவிட்டு
கேப்சூல்களை அவை முன்பிருந்ததுபோலவே மூடி
மீண்டும் போத்தலுக்குள் வைத்துவிட்டாள்

ஒரு மருந்துபோத்தலைப் போலவே
அந்த போத்தல் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தது
ஒரு பச்சநிற அடையாளச்சீட்டுடன்
“ரீனோ-13 ஆண்மைக்கான மருந்து”
ஆனால் உண்மையான மருந்தென்பது
அந்த காலி கேப்சூல்கள்தான்
மௌனத்தால் நிரப்பப்பட்ட கேப்சூல்கள்
அவள் பேசிய வார்த்தைகளால் ஆன மௌனத்தால்.

*

எறும்பு

நீங்கள் முற்றிலும் அகந்தை பீடித்த ஒரு தலைமுறை
உங்களுடைய எறும்பு-தின்னி நாவின் மூலம்
பேசிக்கொண்டே போகிறீர்கள்.
கவனியுங்கள்:
என்னுடைய வெண்ணை-கத்தியின்
வெண்ணைக்குள்
ஓர் எறும்பு சிக்கிக்கொண்டது,
ஒரு தீக்குச்சியின் உதவியோடு
அதை நான் மேலே தூக்கினேன்.
ஒரு சின்னஞ்சிறிய உயிருக்கு
அதன் சின்னஞ்சிறிய வாழ்வை வாழ
நான் ஒரு சின்னஞ்சிறிய உதவி செய்திருக்கிறேன்.

உங்களைக் காட்டிலும் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
என்னைக் காட்டிலும் அந்த எறும்பு மகிழ்ச்சியாயிருக்கிறது.

தன்னுடைய வாயில்
ஒரு சிறிய சர்க்கரைத்துளியை தூக்கிக்கொண்டு
அந்த எறும்பு
தனது எறும்புப்புற்றுக்குச் செல்கிறது.
எறும்புகள் தங்களால் இயன்றளவுக்கு வேலைகளைச் செய்கின்றன.
தங்களுக்குத் தேவையானதைப் பெறுகின்றன.
ஆனால் மார்க்ஸ் யார் என்றோ
அல்லது மாவோ யார் என்றோ
அவற்றுக்குத் தெரியாது.

***

கோபால் ஹொன்னால்கெரே (1942-2003) கர்நாடகத்தைச் சேர்ந்த கவிஞர். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதியவர். மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதனில் நுண்கலைகள் பயின்றிருக்கிறார். இலக்கியத்தை உண்மையாக நம்பும் எல்லாக் கலைஞர்களையும் போலவே யதார்த்த வாழ்வின் சுழல்களில் சிக்கிச் சீரழிந்தவர். மொத்தம் ஆறு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால் அவருடைய வாழ்நாளில் அவை பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஹொன்னால்கெரே இறந்தபிறகு அவருடைய மொத்தக் கவிதைகளையும் அவரின் நண்பர் ஜெயசீலன் தொகுத்து பொயட்ரிவாலா மூலம் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். சிறுபிள்ளை விளையாட்டு என்று கருதப்பட்ட முதல் தொகுப்பு மட்டும் முழுக்கவே இந்தத் தொகுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஹொன்னால்கெரே பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் – அற்புதம்.


கார்த்திகைப் பாண்டியன் – 1981 ஆம் வருடம் மதுரையில் பிறந்த கார்த்திகைப் பாண்டியன் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். எஸ்.ராமகிருஷ்ணனை தனது ஆதர்சமாகக் கொண்டவர். 2011 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். அத்துடன் மொழிபெயர்ப்பிலும் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், பத்து மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. – மின்னஞ்சல்: karthickpandian@gmail.com

ஒரு முட்டையின் வெற்றி

0

ஷெர்வுட் ஆண்டர்சன்

தமிழில்: பாலா இளம்பிறை

னக்கு நினைவு தெரிந்து, இயல்பிலேயே எனது தந்தை கருணை மிகுந்தவர். எப்போதும் மகிழ்வோடிருக்கும் மனநிலையை தக்கவைத்துக் கொண்டிருந்தவர் என்றே நினைக்கிறேன். அவர் தன்னுடைய முப்பத்தி நான்கு வயது வரை ஓஹியோ மாநிலம் பிட்வெல் நகரத்தில் தாமஸ் பட்டர்வொர்த் என்கிற நிலக்கிழாரின் நிலத்தில் விவசாயக் கூலியாக இருந்தார். அவருக்கென்று சொந்தமாய் ஒரு குதிரையும் இருந்தது. சனிக்கிழமை மாலைகளில் நகரத்திற்குச் சென்று ஏனைய விவசாய ஊழியர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் அளவளாவி வருவதும் வழக்கம். அப்போதெல்லாம் கணக்கில்லாமல் பீர் குடிப்பதும் பென் ஹெட் சலூன் வாசலில் கூடுவதுமாக அந்த இடமே விவசாயிகளால் நிறைந்திருக்கும். மதுக்குவளைகளின் உரசலும் உரத்த பாடல்களுமென்று அந்த நேரங்களெல்லாம் அமர்க்களமானவை. இரவு பத்து மணிக்கு மேல் குதிரை வண்டியை அந்த ஆள் அரவமற்ற கிராமத்து சாலையில் தன்னந்தனியாய் குதிரையையும் தொந்தரவு செய்யாமல் மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து, எப்போதும் போல் படுக்கைக்குச் செல்வார். அதுவே அப்போது அவருடைய என்றன்றைக்குமான வாழ்வு. அதற்கு மேல் பெரிய ஆசைகளெல்லாம் எதுவும் அவரிடம் இருந்ததில்லை.  

அம்மாவை திருமணம் செய்த போது அவரது வயது முப்பதைந்து.. அப்போது அம்மா ஒரு கிராமப்பள்ளியின் ஆசிரியர். அதற்கடுத்த ஆண்டிலேயே இயற்கையின் சுழலில் இருந்து வெளிவந்த திருப்பமாய் எனது அழுகை சத்தமும். இருவருக்குமிடையே தருக்கங்கள் விவாதங்கள் என்று ஏதோ நடந்திருக்க வேண்டும். அவரவர் லட்சியங்களுக்கான பயணங்களைத் தொடர்ந்தார்கள். வெகுசீக்கிரத்தில் முன்னேற வேண்டும் என்கிற அமெரிக்கர்களின் வலுவான இயல்புகள் அவர்களையும் உள்வாங்கிக் கொண்டது. 

அதற்கும் அம்மாவே பொறுப்பேற்றிருந்திருக்க வேண்டும். ஒரு பள்ளி ஆசிரியையாக புத்தகங்களும் செய்தித் தாள்களுமாக அம்மா ஒரு தீவிர வாசகி என்பதில் எந்த ஐயமும் இல்லை. கார்ஃபீல்ட், லிங்கன் போன்ற அமெரிக்கர்கள் தங்களுடைய வறுமை நிலையிலிருந்து மீண்டெழுந்து எப்படி புகழுக்கும் பிரநிதித்துவத்துக்கும் உயர்ந்தனர் என்பதை ஒரு கதை சொல்லியாக அவள் என்னைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பக்குவப்படுத்தியதையும்.. நானும் ஒரு நாள் அவ்வாறே ஒரு தலைவனாக இந்தச் சமூகத்திற்கு பொறுப்பேற்பேன்.. நகரங்களை ஆள்வேன் என்பதெல்லாம் அவளுடைய கனவாய் இருந்திருக்கும் என்று உணர்வேன். அப்பாவை ஒரு பண்ணைத் தொழிலாளி என்ற நிலையிலிருந்து எப்படியாவது விடுபடச் செய்து, அவர் தனது குதிரையை விற்றுவிட்டாவது சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்று ஊக்குவித்தாள். உயரமும் மிடுக்கான தோற்றமும் அமைதியான சுபாவமும் நீண்ட மூக்கும் பழுப்பு நிறக் கண்களுமாக அம்மா ஒரு பேரழகி. அவளுக்கென்று பிரத்தியேக விருப்பமானது என்று எதுவுமில்லை. வாழ்வின் தீராத இலக்குகள் கொண்டவள் அம்மா என்பதே எனக்கும் அப்பாவுக்குமான கருத்து.   

இருவரும் துவங்கிய முதல் முயற்சி மோசமான தோல்வியிலேயே முடிந்தது. பிட்வெல்’லிருந்து எட்டு மைல் தொலைவில் க்ரிக் சாலையில் கல்லும் கரடுமாய் இருந்த நிலத்தை வாடகைக்கு எடுத்தனர். அதில் கோழி வளர்ப்பு தொடங்கியது. எனது பிள்ளைப் பருவமும் அங்கே தான் தொடங்கியது. அங்கேயிருந்து தான் வாழ்வின் தாக்கங்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆரம்பத்திலிருந்தே அங்கே பேரழிவின் அச்சுகள் பதிந்து கிடந்தன. வாழ்வின் இருண்ட பகுதியைக் காணும் ஒரு துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மனிதனாக – அதுவே எனது முழுமுதல் கணங்களாக. எனக்கான மகிழ்ச்சியான நாட்களாக.. சிறு வயதின் இன்பங்களாக அந்த கோழிப்பண்ணையில் கழிந்த தருணங்களையே எல்லா நேரங்களிலும் எண்ணிப் பார்க்கிறேன்.  

முன் பின் பழக்கமில்லாத இந்த மாதிரியான விசயங்களில் அனுபவமில்லாத ஒருவர் கோழி ஒன்றுக்கு ஏற்படக்கூடிய கொடிய பல துன்பங்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. கோழிக் குஞ்சானது முட்டையிலிருந்து வருகிறது, நீங்கள் ஈஸ்டர் வாழ்த்து அட்டைகளில் காண்பது போல சின்னஞ்சிறு பஞ்சுப் பொதியாக சில வாரங்கள் இருக்கிறது. பிறகு முற்றிலும் அம்மணமாக. கண்கள் வெளிறி அப்பாவின் நெற்றி வியர்வை சிந்திக் கிடைத்த மக்காச்சோளத்தையும் மாவையும் உண்டு. பிப் மற்றும் காலரா என்று சொல்லப்படும் இன்ன பிற நோய்களையும் பெற்றுக் கொண்டு. சூரியனை வெறித்துப் பார்க்கும் மூர்ச்சையுற்ற கண்களோடு நோயுற்று இறந்து போய் விட, அவற்றிலிருந்து சில சேவல்களும் பெட்டைகளும் தப்பிப் பிழைத்து இயற்கையின் மர்ம நோக்கங்களுக்கான சேவைகளுக்காக அடுத்தடுத்த வளர்ச்சி நிலையை அடையப் போராடுகின்றன. கோழியிலிருந்து முட்டைகள்.. பின் அதிலிருந்து பிறக்கும் கோழிகள் என்று முழுமையான ஓர் அதிபயங்கரச் சுற்று. இவையெல்லாம் நம்பமுடியாத அளவுக்கு சிக்கலான கருத்துகள். பெரும்பாலான தத்துவஞானிகள் கோழிப் பண்ணைகளிலிருந்து தான் வெளிவந்திருப்பார்கள் போல. ஒருவர் ஒரு கோழியிடமிருந்து மிக அதிகமாய் எதிர்பார்க்கலாம், ஆனால் ஏமாற்றமடையும் அளவுக்கு மனமுடைந்து போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. கோழிக்குஞ்சுகள் தங்களது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும்போது மிகப் பிரகாசமாய் கவனத்தை ஈர்ப்பவைகளாய் இருக்கின்றன, ஆனால் அவை பயங்கர முட்டாள்கள். அவைகள் மனிதர்களைப் போலவே இருப்பதால், மற்றவரோடு ஒப்பிட்டு தங்களுடைய மதிப்பீடுகளை குழப்பிக் கொள்பவையாக இருக்கலாம். நோய் தாக்கி அவைகள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லையென்றால், அவைகள் உங்களது எதிர்பார்ப்புகளையெல்லாம் மீறி முழுமையாக செழித்து வளர்ந்து வாகனத்தில் ஏற்றப்படும். பின் தன்னை வளர்த்தவருக்காகவே நசுங்கி உயிரிழந்து தனது உரிமையாளரிடமே சென்று சேரவும் செய்யும். 

பூச்சிகள் அவற்றின் இளமையைத் திண்ணுகின்றன. அரித்துத் தீர்க்கின்றன. நலம் காக்கும் உணவுக்கு அதிர்ஷ்டம் வேண்டும். கோழிகள் வளர்ப்பதின் மூலம் பிறக்கின்ற அதிர்ஷ்டங்களால் தத்துவங்கள் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டன என்பதையெல்லாம் என்னுடைய பின் நாட்களிலான வாழ்வின் போதே அறிந்து கொண்டேன். என்னுடைய விருப்பமென்பது, அறிவு மரத்தின் நல்லவை தீயவைகளை உண்டுவிட்ட கடவுள்கள் தான் அவற்றையெல்லாம் தயை கூர்ந்து படிக்க வேண்டும். குறைந்த அளவு எண்ணிக்கையிலான கோழிகள் வைத்திருக்கும் வெகு சாதாரண இலக்குகள் கொண்ட மனிதர்களுக்கு, அதுவொரு நம்பிக்கைக்குரிய இலக்கியம். அதனால் யாரும் வழிதவறிப் போகும் வாய்ப்புகளை கூடத் தவிர்க்கலாம். அது உங்களுக்காக எழுதப்பட்டதில்லை. அலாஸ்காவின் உறைந்த மலைத் தொடர்களில் தங்க வேட்டைக்குச் சென்று பாருங்கள். ஓர் அரசியல்வாதியின் நேர்மைக்குள் உங்களது நம்பிக்கையை பொருத்திப் பாருங்கள். உலகம் ஒவ்வொரு நாளும் மேம்பாடு அடைந்து வருகிறது. தீமைகளைத் தாண்டியும் நன்மைகள் வெற்றி பெறும் என்று நீங்கள் நம்பவேண்டும். ஆனால், கோழிகளின் உலகைப் பற்றிய இலக்கியம் அது என்கிற எண்ணத்தோடு நம்பிக்கை வைத்து அதை நீங்கள் படிக்கக்கூடாது. அது உங்களுக்காக எழுதப்பட்டதில்லை.  

இருந்தாலும் நான் உங்களை திசை திருப்பவே செய்கிறேன். நான் சொல்கிற கதைக்கு கோழி என்பது ஒரு முதன்மைப் பொருளே அல்ல. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அது முட்டையை மையப்படுத்தியதாகும். பத்து வருடப் போராட்டத்திற்குப் பின்னர் எனது பெற்றோர் தங்களது கோழிப்பண்ணையை வைத்து பணம் ஈட்டினர். பெரும் போராட்டம். பின் அந்தப் போராட்டத்தைக் கைவிட்டு மற்றொன்றுக்குத் தயாராயினர். ஓஹியோ மாநிலத்தின் பிட்வெல் நகரத்துக்கு இடம் பெயர்ந்து உணவகம் ஒன்றைத் தொடங்கினர். குஞ்சாகப் பொரிந்து வெளிவராத இன்குபேட்டர் நிலையின் கவலையாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறியதாக. அவர்களின் இரசனைக்குத் தகுந்ததாக, அழகாக. அரை நிர்வாணத்தோடு பஞ்சுப் பொதிகளோடு இருந்த சின்னஞ்சிறிய பெட்டைக் குஞ்சுகள் அதன் தன்மையிலிருந்து நழுவி இறந்த நிலைக்குச் சென்றுவிட்டன. எல்லாவற்றையும் ஒரு பக்கமாகத் தூக்கியெறிந்துவிட்டு உடைமைகள் அனைத்தையும் ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிரிக்ஸ் சாலையின் வழியாக பிட்வெல் நகரை நோக்கி நகர்ந்தோம். கடந்து போன நாட்களெல்லாம் தாண்டியதொரு நம்பிக்கையுடன் புதிய இடம் தரப்போகிற மேன்மையான, வளமான வாழ்க்கையை நோக்கியதொரு பயணம் அது.   

சோகம் அப்பிய முகத்தோடு பயணப்படும் ஒரு குழுவாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.. இல்லை.. அலங்காரத்தோடு சொல்லவேண்டுமென்றால், போர்க்களத்தில் இருந்து தப்பியோடும் அகதிகள் போல் அல்லாமல் என்று வைத்துக்கொள்ளலாம். அம்மாவும் நானுமாக சேர்ந்து சாலையில் நடைப் பயணம். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஆல்பர்ட் கிரிக்ஸ்’இடமிருந்து கடனாகப் பெற்ற வாகனத்தில் எங்களது உடைமைகள் அனைத்தும் இருந்தன. பக்கவாட்டில் அரதப் பழசான நாற்காலிகளின் கால்கள் முட்டிக்கொண்டு நின்றன. பின்னால் இருக்கும் பக்கவாட்டில் மேசைகளும் கோழிக்குஞ்சுகளை அடைக்கப் பயன்படுத்திய பெட்டிகளில் இருக்கும் சமையல் பாத்திரங்களும். அதற்கும் மேலே நான் குழந்தையாய்த் தவழ்ந்த சக்கரம் வைத்த வண்டி. அந்த வண்டியைப் பற்றி, தூளியைப் பற்றிப் பேசி அதற்குள் நாம் ஏன் இப்போது சிக்கிக் கொள்கிறோமென்று எனக்குத் தெரியவில்லை. அடுத்தடுத்த குழந்தைகள் பிறக்க, தவழ வாய்ப்புகள் இல்லாததாலோ என்னவோ, பயன்பாடின்றி சக்கரங்கள் உடைந்து போயிருந்தன. என்ன செய்வது மிகச் சிறிய அளவில் உடைமைகள் உள்ளவர்கள், அந்த சொற்ப சொத்துக்களில் ஒன்றிப் போய் விடுகிறார்கள். மீதமுள்ள வாழ்க்கையை மிகவும் சோர்வாக்குவதற்கு அதுவும் ஒரு காரணம், நிலைப்பாடு. 

வண்டியின் மேல் தளத்திலிருந்து அப்பா வண்டியை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வழுக்கைத் தலையோடு தனது நாற்பத்தைந்தாவது வயதில் இருந்தார், கொஞ்சம் சதைப்பற்றுடனும். அதுவும் ரொம்ப காலமாகவே இந்தக் கோழிகள் பராமரிப்பில் இருப்பதால் இயல்பான அமைதியுடனும் ஊக்கம் ஏதும் இல்லாமலும் இருந்தார். கடந்த பத்தாண்டுகளாக கோழிப்பண்ணைத் தொழிலிலும் அக்கம் பக்கத்துப் பண்ணைகளின் கூலித் தொழிலாளியுமாக இருந்ததில் சம்பாதித்த பெரும்பாலான தொகை கோழிகளை அதன் சீக்குகளில் இருந்து காப்பாற்றுவதிலும், அதற்கான மருந்துகள் வாங்கவும், அதாவது வில்மர்’இன் ஒயிட் காலரா க்யூர் அல்லது அம்மா அவ்வப்போது பார்த்து பரிந்துரைக்கும், பேராசிரியர் பிட்லோ’வின் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் அவை சார்ந்த தயாரிப்புகள் பற்றிய விளம்பரங்கள் அடங்கிய கட்டுரைகள் கொண்ட பத்திரிகைகளுக்காக செலவிட்டவை. அப்பாவின் காதுகளுக்கு மேலாக கொத்துக் கொத்தாய் சிறிய அளவிலான முடிக் கற்றைகள் இருக்கும். குளிர்காலத்தின் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் கணப்பு அடுப்புக்கு முன்னால் நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவை சிறு குழந்தையாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததெல்லாம் நினைவிருக்கிறது. அதெல்லாம் நான் புத்தகங்கள் படிக்கத் தொடங்கியிருந்த நேரம். எனக்கென்று கருத்துகள் உருவாகிக் கொண்டிருந்த நேரமும் கூட. அவருடைய வழுக்கைத் தலைக்கு மேலாக எப்படி முதிர்ச்சியான சிந்தனைகள் உருப்பெறுமோ அதைப் போன்ற கிளர்ந்தெழுகின்ற கற்பனைத் திறன், சீசர் எப்படி தனது படையணிகளை ரோமை விட்டு வெளிக்கிளம்பி திறந்த அகன்ற சாலைகளில் அதுவரை அவர்களுக்குத் தெரியாத உலக அதிசயங்களைக் காண்பிக்க வழி நடத்திச் சென்றானோ அது போன்றதொரு கிளர்ச்சி எனக்கு. அவருக்கோ காதுகளுக்கு மேலாக வளர்ந்திருந்த கொத்து மயிர்க் கற்றைகள் முன்பை விட அதிகமாக வளர்ந்து காடு போலிருப்பதாய் எனக்கு உணர்த்தியது. நான் அரை உறக்கத்தில் தளர்ந்த நடையில் கனவுக்குள் வீழ்கிறேன், நானொரு சிறு குழந்தையாய், சாலை வழியாக தொலை தூரத்தில் ஓர் அழகான இடம் நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அங்கே கோழிப்பண்ணைகள் இல்லை. முட்டைகளைப் பற்றிய தேடல்கள் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வை நோக்கிய பயணம்.

கோழிப்பண்ணையிலிருந்து நகரம் நோக்கி விரையும் எங்களைப் பற்றி யாரேனும் ஒரு கதை எழுதலாம். அம்மாவும் நானும் முழுவதுமாக எட்டு மைல்களை நடந்தே கடந்தோம். அவள் வண்டியிலிருந்து ஏதும் ஏடாகூடமாய் விழுந்து விடாதிருப்பதை உறுதி செய்துகொண்டே வந்தாள். நான் இந்த உலகத்தை பரவசத்தோடு பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்பாவின் அருகிலிருந்த இருக்கையில் அவருடைய விலைமதிக்க முடியாத பொக்கிசம் இருந்தது. அதைப்பற்றிச் சொல்கிறேன் உங்களுக்கு. 

நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியே வரும் ஒரு கோழிப்பண்ணையில், அதிசயிக்கத்தக்க சம்பவங்களும் சில சமயங்களில் நடக்கும். மனிதப் பிறப்புகளில் சில கோரங்கள் நிகழ்வதைப் போல கோழிகளிலும் உண்டு. அம்மாதிரியான விபத்துகள் அடிக்கடி நிகழ்பவை அல்ல. ஆயிரத்தில் ஒன்று இருக்கலாம். உங்களுக்கே தெரியும் – ஒரு கோழி என்பது பிறக்கும் போது கூடவே நான்கு கால்கள், இரட்டை சோடி இறக்கைகள், இரண்டு தலைகள், அல்லது வேறென்ன இல்லை – எதுவும் நிகழலாம். அந்த ஜந்துக்கள் வாழ்வதில்லை. நடுங்கித் தொலைக்கும் அவை உடனடியாக உற்பத்தியாளரின் கைக்குச் சென்று விடும். அந்தக் கடைநிலை உயிரினங்களுக்கு உயிர் வாழ்தல் சாத்தியமில்லையே என்கிற உண்மை அப்பாவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்திவிடும். அவருக்கு வினோத எண்ணம் ஒன்று உண்டு – அதாவது ஐந்து கால்களோடு கூடிய சேவலோ அல்லது பெட்டைக் கோழியோ அல்லது இரண்டு தலை கொண்ட சேவலோ பிறந்து விட்டால், அதிர்ஷ்டம் கூடி செல்வம் பெருகும் என்பதான நம்பிக்கை அது. அந்த அதிசயத்தை அப்படியே அங்கிருக்கும் மற்றைய உற்பத்தியாளர்களிடமும் கொண்டு சென்று காட்சிப்படுத்தி அதன் மூலம் செல்வம் பெருகும் உத்தியைத் தெரிவிக்க வேண்டுமென்ற கனவும் உண்டு அவருக்கு. 

கோரமான நிலையில் பிறந்தாலும் எங்களது கோழிப்பண்ணையில் கண் விழிக்கும் சின்னஞ்சிறிய உயிரினங்களை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவார் அப்பா. அவைகளுக்கு மதுவைக் கொடுத்துக் கூட தனித்தனி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்து காப்பாற்றினார். இப்போது நகரத்தை நோக்கிய நமது பயணத்தில் அவர் கொண்டு வரும் கோழிகள் கூட பெட்டிகளில் அடுக்கப்பட்டு அவருடைய ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. ஒரு கையால் சாட்டையைச் சொடுக்கி குதிரைகளை விரட்டிக்கொண்டே மற்றொரு கையால் அந்தப் பெட்டியையும் பிடித்துக் கொண்டிருக்கிறார். வரவேண்டிய இடம் வந்தவுடன் பெட்டிகள் கீழே இறக்கப்பட்டன. கண்ணாடி மூடிகள் பெட்டிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன. ஓஹியோ மாநிலத்தின் பிட்வெல் நகரத்தில் ஓர் உணவகத்தின் உரிமையாளராய் கழித்திருந்த இத்தனை நாட்களில், கோரமான உருவத்தோடு பிறந்த கோழிக்குஞ்சுகள் அனைத்தும் கண்ணாடிக் குடுவைகளில் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டு கடையின் வரவேற்பறைக்குப் பின்னால் இருந்த அலமாரி அறைகளில் வைக்கப்பட்டன. இந்தச் செயல்களை அம்மா அடிக்கடி எதிர்ப்பாள். ஆனாலும், தனது மதிப்பிற்குரிய பொருளின் மீதான நம்பிக்கையில் மிகுந்த உறுதிப்பாட்டோடு இருந்தார் அவர். அந்த உயிரினங்கள் ‘விலை மதிப்பில்லாதவை’ என்று அறிவிக்கவும் செய்தார். விநோதமானதும் அற்புதமானதுமான பொருட்களைப் பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு என்பார்.   

ஓஹியோ மாநிலத்தின் பிட்வெல் நகரத்தில் நாங்கள் உணவகத் தொழிலைத் துவக்கினோம் என்று சொன்னேனா? அது கொஞ்சம் மிகைப்படுத்தல் தான். அந்த நகரே கூட ஒரு குறுகிய மலையடிவாரத்தின் கீழ் சிறிய ஓர் ஆற்றின் கரையில் இருந்தது. இரயில் சாலை கூட அந்த நகரத்தின் வழியாகச் செல்லவில்லை. இரயில் நிலையமானது வடக்கே ஒரு மைல் தொலைவில் இருக்கும் பிகல்வில்லே என்ற இடத்தில் இருந்தது. அங்கே ஆப்பிள் சாறு நொதிக்கப்படும் ஒரு தொழிற்சாலையும் ஊறுகாய் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையும் ஏற்கனவே இருந்து. நாங்கள் வருவதற்கு முன்பே அவை வணிகத்தில் இருந்து விலகியும் விட்டன. பேருந்துகள் காலையிலும் மாலையிலும் உணவகம் இருக்கும் இடத்திலிருந்து டர்னர்ஸ் பீக் எனப்படும் சாலை வழியாக முதன்மைச் சாலையான பிட்வெல் நகருக்காக கீழே வந்து கொண்டிருந்தன. நகரத்தில் இருந்து வெளிச்செல்லும் இந்த மாதிரியான இடத்தில் உணவகம் துவக்குவது என்பது அம்மாவின் யோசனை. ஓர் ஆண்டாக இதைப் பற்றியே பேசி வந்த அம்மா ஒரு நாள் இரயில் நிலையத்துக்கு எதிரில் இருந்த ஒரு காலி கடை ஒன்றை வாடகைக்குப் பிடித்தார்கள். உணவகம் இலாபம் நிறைந்த தொழில் என்பது அம்மாவின் கருத்து. பயணம் செய்ய வரும் மனிதர்கள் இரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் எப்படியாவது வந்து காத்திருப்பார்கள்.. நகரத்து மக்களும் வருகின்ற இரயில்களுக்காக அங்கே வந்து காத்திருப்பார்கள். எப்படியும் அவர்கள் ஒரு ரொட்டித் துண்டுக்காகவும் ஒரு காஃபி’க்காகவும் அங்கே வந்து தான் ஆகவேண்டும். நான் இப்போது வளர்ந்து விட்டேன் அல்லவா, ஆகவே சொல்வதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இந்தப் பயண நேரத்தில் அவளுக்கு இருந்திருக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். ஆம், என்னுடைய வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறாள் இப்போது. என்னை நகரத்து பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்து அந்த நகரத்து மனிதர்களில் ஒருவனாக நான் என்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதே அவளது பேராவல்.   

அப்பாவும் அம்மாவும் பிகல்வில்லே’வில் எப்போதும் போலவே தங்களுடைய அதிகபட்ச உழைப்பை கொடுத்தார்கள். ஆரம்பத்தில் நாங்கள் தங்கியிருந்த இடத்தையே உணவகமாக உருமாற்றுவதற்கு மெனக்கெட்டோம். அதுவே ஒரு மாத காலம் எடுத்துக்கொண்டது. அப்பா அலமாரி ஒன்றைத் தயார் செய்து அதனுள் காய்கறிக் கூடைகளை அடுக்கினார். சிவப்பு மை கொண்டு தனது பெயரை பெரிதாக மேலே எழுதி வைத்தார். பெயருக்குக் கீழே ‘இங்கே சாப்பிடுங்கள்’ என்கிற கூர்மையான கட்டளையாக ஒரு வாசகம் – அந்த மாதிரியான நடைமுறைகள் அரிதாகவே அங்கே பேணப்படுவது. கண்ணாடிப்பெட்டி ஒன்றில் சிகரெட்டுகளும் புகையிலையும் அடுக்கப்பட்டது. சுவர்களையும் தரையையும் அம்மா தேய்த்துக் கழுவினாள். நகரத்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தேன். எப்போதும் தோல்வி முகத்தோடும் வருத்தத்தோடும் காட்சியளிக்கும் கோழிக்குஞ்சுகளை விட்டு கொஞ்சம் தள்ளியிருப்பது சற்றே மகிழ்ச்சியான விசயம் தான். இன்னமும் எனக்கு அவ்வளவு பெரிய மகிழ்ச்சி இல்லை தான்.  மாலையில் டர்னர்’ஸ் பீக் வழியாக வீடு வரும்போது நகரத்துப் பள்ளி மைதானத்தில் அன்றைய நாள் குழந்தைகளோடு நான் விளையாடிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பெண் குழந்தைகள் குழு ஒன்று துள்ளிக் குதித்து பாடிக் கொண்டிருந்தது. நானும் அதை முயற்சித்தேன். பனி மூடி உறைந்திருந்த இறக்கமான சாலையில் ஒரு காலால் துள்ளித் துள்ளி அழுந்தக் குதித்துக் கொண்டே வந்தேன். ‘ஹிப்பிட்டி ஹாப் – டூ த பார்பர் ஷாப்’ என்று கூச்சத்தோடு பாடிக்கொண்டே வந்தேன். திடீரென்று பாட்டை நிறுத்தி சந்தேகத்தோடு சுற்றிலும் பார்த்தேன். எப்போதைக்கும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியோடிருப்பது கொஞ்சம் பயமும் தந்தது. ஏதோ செய்யக்கூடாத ஒன்றை ஒருவர் செய்வதாக எனக்குத் தோன்றியிருக்க வேண்டும்.. அதுவும் தினசரி மரணத்தை விருந்தாளியாக வரவேற்றுக் கொண்டிருக்கும் ஒரு கோழிப்பண்ணையோடு வளர்ந்து வரும் எனக்கு அது பொருத்தமில்லாதது போலிருந்தது. 

இரவு வரை உணவகம் திறந்திருக்க வேண்டுமென்று அம்மா முடிவு செய்தாள். ஒரு சரக்கு இரயிலைத் தொடர்ந்து பயணிகள் இரயில் ஒன்று இரவு பத்து மணிக்கு வடக்கு நோக்கிச் செல்லும். வேலை முடிந்து பிகல்வில்லே’வில் பணி மாற்றம் செய்து கொள்ளும் இரயில் தொழிலாளர்கள் சூடான காபிக்காகவும் உணவுக்காகவும் எங்கள் உணவகத்துக்கு வந்தார்கள். சில நேரங்களில் அவர்களில் யாரேனும் ஒருவர் முட்டை பொரியல் வேண்டுமென்பார்கள். அவர்களே அதிகாலை நான்கு மணிக்கு திரும்பவும் வடக்கேயிருந்தும் கடைக்கு வந்தனர். சிறிதளவாக வணிகம் வளரத் தொடங்கியது. அம்மா இரவு நேரத்தில் தூங்கி எழுந்து கடையைப் பார்க்கத் துவங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறத் தொடங்கியவுடன், அப்பா தூங்கச் சென்று விடுவார். அம்மா இரவில் தூங்கி எழுந்து விட்டு வந்த படுக்கையிலேயே அப்பா காலையில் படுத்துத் தூங்க ஆரம்பித்து விடுவார்.. நான் வழக்கம் போல் பிட்வெல் நகரப் பள்ளிக்குச் சென்று விடுவேன். அம்மாவும் நானும் இரவில் உறங்க ஆரம்பித்த பிறகு வெகு நேரம் விழித்திருந்து அடுத்த நாள் மதிய உணவு வாடிக்கையாளர்களுக்காக சாண்ட்விச்’சில் வைக்கத் தேவையான இறைச்சி உணவை தயாரிக்கத் தொடங்கி விடுவார் அப்பா. உலகத்தில் போராடி முன்னேற அடுத்ததாக இன்னொரு யோசனையும் அவருக்கு வந்தது. ஆனாலும் அமெரிக்க மனப்பான்மை அவரைக் கட்டுப்படுத்தியது. அவருடைய இலட்சியங்கள் இன்னும் வளர்ந்தன.   

நீண்ட இரவுகளின் சிறிய ஆசுவாசத்தில் இந்த மாதிரியான சிந்தனைகளுக்கு அப்பாவுக்கு நேரம் வாய்க்கும். அதுதான் அவருக்கான வேலையில்லாத நேரம். கடந்த காலத்தில் ஒரு வெற்றியாளனாக இல்லாமல் எந்தவொரு மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாமல் துன்பப்பட்ட அவர் எதிர்காலத்திலாவது ஒரு நல்ல நிலையை அடைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைய வேண்டும் என்ற முடிவோடு இருந்தார். வேலைகள் முடித்து அதிகாலையில் மாடிப்படியேறி வந்து படுக்கையில் அம்மாவுக்கு அருகில் படுப்பார். அம்மா எழுவாள். வழக்கம் போல் அவர்கள் தங்கள் வளர்ச்சியைப் பற்றி பேசத் தொடங்கி விடுவர். படுக்கையின் ஓரத்தில் இருக்கும் நான் அவர்களது உரையாடலை கவனிக்கத் தொடங்குவேன். 

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியோடு சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்கிற கருத்தானது அப்பாவுக்கும் அம்மாவுக்குமான பொதுவானதொரு யோசனையாக இருந்தது. அவருடைய சொற்களை இப்போது சரியாக என்னால் நினைவு கூற முடியவில்லை. தனது நிகழ்ச்சிகளின் மூலமாக பொதுமக்களை மகிழ்ச்சிப்படுத்துபவர் என்று ஒருவரைப் பற்றிய பதிவை பொத்தாம் பொதுவாக சொல்லிச் சென்றவர், அவர். பிட்வெல் நகரத்தின் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வெகு அரிதாக ஒன்று கூடி எங்களது கடைக்கு வரும்போது, மகிழ்ச்சியான பிரகாசமான உரையாடல்களைத் தொடர்வது வழக்கம். அப்பாவின் வார்த்தைகளில் இருந்து நான் தெரிந்து கொண்ட ஒன்று என்னவென்றால் சொற்கள் அகமகிழ்ந்து வெளிப்பட வேண்டும். அதுதான் வாடிக்கையாளர்களை உள்ளிழுக்கும். அம்மாவுக்கு சந்தேகமாயிருக்கும். ஆனாலும் அவருடைய வார்த்தைகளால் யாரும் தளர்வடைவதில்லை. பிட்வெல் நகரத்தின் இளைஞர் கூட்டத்திற்கு அப்பாவும் அம்மாவும் பெற்றோர் மனப்பான்மையோடு பரிமாறுவது மிகுந்த உதவியாய், அனைவரையும் கவர்வதாய் இருக்கும் என்பது அப்பாவின் கருத்து. மாலை நேரத்தில் மகிழ்ச்சியான இளைஞர் குழுக்கள் டர்னர்’ஸ் பீக்’கில் ஒன்று சேர்ந்து பாடத் தொடங்க வேண்டும். அவர்கள் கூட்டமாய் சேர்ந்து எங்களுடைய இடத்தில் மகிழ்ச்சியோடு சத்தம் போட்டு சிரிக்க வேண்டும்.. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அங்கே பாடலும் விழாக் குதூகலமும் இருக்க வேண்டும். அப்பா இவற்றை விரிவாகச் சொன்னார் என்று நான் தட்டிக்கழிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல அதிகமாய் பேசிப் பழக்கமில்லாதவர் தான். “அவர்கள் ஏதாவதொரு இடத்துக்கு போகணும்னு விரும்புறாங்க.. ஆமா.. அவங்க கண்டிப்பா அதைத்தான் விரும்புறாங்க” என்றார். அப்பா திரும்பத் திரும்ப இதைச் சொன்னார். அவருக்கு எவ்வளவு தெரியுமோ, அதைச் சொன்னார். என்னுடைய சொந்தக் கற்பனைகள் மிச்சத்தை நிரப்பிக் கொண்டன.   

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு அப்பாவின் இந்தக் கருத்துக்கள், எங்கள் வீட்டிற்குள் அலைந்து திரிந்தன. வீட்டில் நாங்கள் அதிகமாக பேசிக் கொள்வதில்லை.. ஆனால் சோகமான பொழுதுகளை மீறி மகிழ்ச்சி எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்றே எண்ணினோம். அம்மா முடிந்த அளவுக்கு புன்முறுவலோடு சாப்பிட வருபவர்களைக் கவனித்தாள். அவர்கள் என்ன நானும் தான். ஆனால் அவர்களுடைய சம்பிரதாயமான புன்னகையை நான் கண்டு கொள்வேன். அப்பாவுக்குத் தான் வாடிக்கையாளர்களைப் புன்னகையோடு கவர்வதில் ஒருவிதக் கவலையும் நடுக்கமும் இருந்தது. சந்தேகமேயில்லை. அது அவருக்குள் எங்கேயோ ஒளிந்திருக்கிறது. காட்சி வடிவமைப்பவரின் உள்ளில் இருந்து இயக்கும் ஒரு சக்தியைப் போல. இரவில் பணி முடித்துத் திரும்பி வரும் இரயில்வே பணியாளர்களிடம் அவர் தனது திறமையைக் காட்டி தனது ஆற்றலை வீணாக்கவில்லை. ஆனால், அவர் தனது திறமையைக் காண்பிக்க பிட்வெல்’இல் இருந்து வரும் ஓர் இளைஞன் அல்லது இளைஞிக்காக அன்றைய தினம் காத்திருப்பதாகத் தெரிந்தது. உணவகத்தின் கவுண்டர் முகப்பில் முட்டைகள் நிரம்பிய ஒரு வலைப்பின்னல் கூடை எப்போதும் இருக்கும். மூளைக்குள் ஒரு மின்னலாய் பொழுதுப்போக்கு யோசனை ஒன்று தோன்றியவுடன் அது முந்திக்கொண்டு அவரது கண்களில் வெளிப்பட்டுவிடும். முட்டைகள் எவ்வாறு வளர்சிதை மாற்றம் பெற்று குஞ்சுகளாய் மாறுகிற தொடர்ச்சியைப் போல் அவருடைய யோசனைகளும் அவ்வாறே நிசப்தமாய் உருக்கொண்டு விடுகின்றன. ஏதோவொரு சூழலில் முட்டை வீணாகி விடுவதைப் போல் அவருடைய வாழ்வின் மீதான ஈடுபாடும் ஈர்ப்பும் கூட ஒரு கட்டத்தில் அழியவே செய்தது. ஒரு நாள் பின்னிரவில் கோபத்தில் அப்பாவின் தொண்டையிலிருந்து வெளிப்படும் உறுமல் சத்தத்தில் நான் எழுந்து கொண்டேன். நானும் அம்மாவும் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டோம். நடுங்கும் கைகளோடு தலைக்குப் பக்கத்தில் இருந்த விளக்கை ஏற்றினாள் அம்மா. கீழே உணவகத்தின் கதவு படாரென்று மூடப்பட்டு அப்பா வேகவேகமாக தடதடவென்று படிக்கட்டுகளை மிதித்துக்கொண்டு படியேறி வருகிறார். அவருடைய கையில் முட்டை ஒன்றை வைத்திருந்தார். ஏதோ குளிர்ச்சியான பொருள் ஒன்றை கையில் தாங்கியிருப்பது போன்று அவரது கை நடுங்கிற்று. பாதி மனம் பிறழ்ந்த ஒளி தெரிந்தது கண்களில். அவர் எங்களை வெறித்துப் பார்ப்பதிலிருந்து, அந்த முட்டையை அம்மாவின் மீதோ அல்லது என் மீதோ எறியப் போகிறார் என்று உறுதியாக நினைத்தேன். பின், மெதுவாக அந்த முட்டையை மேசை மீதிருந்த விளக்குக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு அம்மாவின் படுக்கைக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்தார். உடனே ஒரு சிறுவனைப் போல் கதறி அழத் தொடங்கினார்.. அவருடைய துக்கத்தில் பங்கு கொள்வது போல் நானும் அழுதேன். நாங்கள் இருவரும் மேல் மாடியில் இருந்த அறையை எங்களது கதறலால் நிரப்பினோம். அது ஒரு வேடிக்கையான நிகழ்வே. ஆனால், அதிலிருந்து நான் நினைவில் கொள்வதெல்லாம் அன்று அம்மா அவரின் வழுக்கைத் தலையை தொடர்ந்து ஆதுரத்துடன் தடவிக் கொடுத்ததைத் தான். அம்மா அவரிடம் என்ன சொன்னாள், எதைச் சொல்லி அவரிடமிருந்து கீழே நடந்தவற்றைக் கேட்டறிந்தாள் என்பதெல்லாம் எனக்கு மறந்து விட்டது. அவருடைய விளக்கம் கூட என்னில் இருந்து மறைந்து விட்டது. எனக்கு நினைவில் இருப்பதெல்லாம், அந்த விளக்கின் வெளிச்சத்தில் படுக்கை அருகே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பாவின் வழுக்கைத் தலைக்கு மேலே ஓடிய பளபளப்பான கோடுகள் தான்.    

கீழே என்ன நடந்ததென்றால், எனக்குத் தெரிந்தும், நானும் அங்கே ஒரு சாட்சியாக இருந்ததுமாக என்னால் விவரிக்க முடியாத சில காரணங்களாக – நான் ஒரு பார்வையாளனாக என் கண் முன்னே அப்பா அவமானப்பட்ட தருணம் அது. காலத்தோடு ஒருவர் விவரிக்க முடியாத சம்பவங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளவும் நேர்கிறது. தெற்கிலிருந்து கிளம்பி வரும் பத்து மணி இரயிலில் எதிர்பார்க்கப்பட்ட பிட்வெல் நகரத்து வியாபாரியின் மகனான இளைஞன் ஜோ கேன் அன்று மாலை பிகல்வில்லே’வுக்கு அப்பாவைச் சந்திப்பதற்காக வந்திருந்தான். மூன்று மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு எங்களைச் சந்திக்க எங்கள் இடத்திற்கு வந்த ஜோ தனது நேரத்தை தளர்வாய் செலவிடுவதற்கும் காத்திருப்பதற்கும் அந்தப் பயணம் அமைந்தது. அதற்குள் சரக்கு இரயிலும் வந்து விட்டது.. தொழிலாளர்கள் பயணிகள் என குழுவாக வந்தவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு விட்டது. ஜோ அப்பாவுடன் உணவகத்தில் தனித்து விடப்பட்டான்.  

எங்கள் இடத்துக்கு வந்து சேர்ந்த நேரம் முதலே அப்பாவுடன் இருந்த இளைஞன் ஜோ கேன் அப்பாவின் நடவடிக்கைகளால் நிச்சயம் குழப்பமடைந்திருக்க வேண்டும். அவனுடைய நோட்டங்கள் அவரைச் சுற்றிக் கொண்டேயிருந்ததால் அப்பாவும் கோபமடைந்திருக்க வேண்டும் என்பது அவனது எண்ணம். ஆம், நிச்சயமாய் உணவகத்தின் உரிமையாளர் திடமானதொரு மனக் குழப்பத்தில் இருப்பதை அவன் கண்டுகொண்டான். எனவே வெளியே செல்லத் திட்டமிட்டான். ஆனாலும் பெய்யத் தொடங்கிவிட்ட மழையின் ஊடாக நகரத்தை நோக்கிய ஒரு நீண்ட நடையோடும் பிறகு திரும்பவுதென்பதும் இசைவானதாகவும் இருக்கவில்லை. ஐந்து சென்ட் மதிப்புள்ள ஒரு சிகரெட்டை வாங்கி விட்டு ஒரு காஃபிக்காக ஆர்டர் செய்தான். அவனுடைய பாக்கெட்டில் இருந்த தினசரியை எடுத்து படிக்கத் தொடங்கினான். “சாயங்கால இரயிலுக்காக காத்திருந்தேன். தாமதமாயிடுச்சு,” இறைஞ்சிக்கொள்வது போல் சொன்னான். 

இதற்கு முன் இந்த நபரைப் பார்த்ததே இல்லை என்கிற தோரணையில் நெடுநேரம் ஜோ கேன் பேசுவதை இமை கொட்டாமல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார் அப்பா. பொதுவெளியில் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒருவனைப் போல் சந்தேகத்திற்கு இடமின்றி அவன் உறைந்து போயிருந்தான். வழக்கம் போல் வாழ்க்கையின் போக்கில் நிகழும் எத்தனையோ இடர்ப்பாடுகளை சந்தித்திருந்தாலும் அதற்கெல்லாம் மாறாக தற்போதைய நிகழ்வு ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது அப்பாவுக்கு. 

எந்தத் திட்டமும் இல்லாமல் இருக்கும் கைகளால் அவரால் இப்போது எதுவும் செய்ய முடியாது போலிருந்தது. ஏதோ ஓர் உந்துதலில் கவுண்டரில் கையை விட்டு நடுக்கத்தோடு ஜோ கேன்’க்கு கை கொடுத்தார். ‘எப்டி.. எப்டி இருக்கீங்க,” என்றார். ஜோ கேன் தினசரியை கீழே வைத்துவிட்டு அவரை உற்றுப் பார்த்தான். கவுண்டரில் இருந்த முட்டைக் கூடையை கவனித்துக்கொண்டே அவனுடன் பேசத் தொடங்கினார். “நல்லது..” தயக்கத்தோடே இருந்தது தொடக்கம். “நல்லது.. நீங்க கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்க இல்லையா?” அவன் கோபத்தோடிருந்தது தெரிந்தது. “அந்த கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஒரு மோசடிப் பேர்வழி” அழுத்திச் சொன்னார். “அவன்தான் ஒரு முட்டை தன்னுடையதான நிலையில் இருப்பதைப் பற்றி சொன்னான்.. ஆம்.. அவன் பேசினான்.. செய்தான்.. ஆம்.. பிறகு அவனேதான் முட்டையின் இறுதிப்பகுதியை உடைக்கவும் செய்தான்.” 

கிறிஸ்டோஃபர் கொலம்பஸின் இரட்டை நிலைப்பாடோடு அப்பா தன்னை நாடி வந்த விருந்தாளியின் முன்னால் நிற்பது போல் தோன்றியது. சபிப்பது போல் முணுமுணுத்தார். கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஒரு சிறந்த மனிதன் என்று குழந்தைகளுக்குக் கற்பிப்பது கூட தவறு. ஓர் இக்கட்டான சூழலில் ஓர் ஏமாற்று வேலையையே செய்தார், என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொன்னார். ஒரு முட்டையை தன்னுடைய நிலைப்பாட்டிலேயே நிறுத்தி வைக்கமுடியும் என்று அவன் தான் பிதற்றினான். அது ஒரு தந்திரம். கொலம்பஸைப் பற்றிய குற்றச்சாட்டுகளுடனேயே கூடையில் இருந்த ஒரு முட்டையை கையில் எடுத்துக்கொண்டு இங்குமங்கும் நடந்தார். உள்ளங்கைகளில் முட்டையை சுழற்றிக் கொண்டேயிருந்தார். இணக்கமாகப் புன்னகைத்தார். மனித உடலில் உருப்பெறும் மின்விளைவானது கையிலிருக்கும் ஒரு முட்டையின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார். அவர் ஒன்றை வலியுறுத்திக் கொண்டேயிருந்தார் – அதாவது முட்டையின் ஓட்டை உடைக்காமல் அதை இயல்பாய் சுழற்றிக் கொண்டிருக்கும் போதே அது தன்னிலையில் நின்று காட்டும். உடலின் வெப்பநிலையை சுமந்து கொண்டிருக்கும் தனது கையில் மெதுவாய் உருண்டு கொண்டிருக்கும் முட்டையானது ஒரு மைய ஈர்ப்பு விசையை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அவர் விவரித்துக் கொண்டிருந்ததை, ஜோ கேன் மெலிதான ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். “நான் இந்த மாதிரி ஆயிரக்கணக்கான முட்டைகளைக் கையாண்டிருக்கிறேன்” என்றார். “என் அளவுக்கு முட்டைகளைப் பற்றி வேறெவருக்கும் அதிகமாய்த் தெரியாது” 

முட்டையை கவுண்டரில் நிறுத்தி வைக்க முயற்சித்தார். ஆனால் அது ஒரு பக்கமாய் சாய்ந்தது. அந்த தந்திரத்தை மீண்டும் மீண்டும் முயற்சித்தார். ஒவ்வொரு முறையும் உள்ளங்கைகளில் உருளும் அந்த முட்டை உருவாக்கும் மின் விளைவுகளையும் ஈர்ப்பு விதிகளின் மகத்துவங்களையும் சொல்லிக் கொண்டேயிருந்தார். ஓர் அரை மணி நேர முயற்சியாக ஒரு முட்டையை நிற்க வைக்க அவர் எடுத்துக்கொண்ட பாடுகளை அவரது வாடிக்கையாளர் ரொம்ப நேரமாக கண்டுகொள்ளவே இல்லை என்பதையும் தெரிந்து கொண்டார். தொடர்ந்த தனது முயற்சிகளின் வெற்றியாக நிற்க வைக்கப்பட்ட முட்டையைக் கொண்டு ஜோ கேன்’இன் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கையில் அந்த முட்டை உருண்டு போய் ஒருக்களித்துக் கொண்டது.  

ஒரு வித்தைக்காரனின் பேரார்வத்தோடு இத்தனை நேரம் மேற்கொண்ட கடும் முயற்சியின் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் விட்டேத்தியாய் இருந்த அப்பா, இப்போது அலமாரி அறைகளில் இருந்த கோரமான இறைச்சி திணிக்கப்பட்ட குடுவைகளை எடுத்து வந்து வந்திருந்த விருந்தினருக்கு காட்டத் தொடங்கினார். தன்னுடைய மதிப்பு மிக்க பொக்கிசங்களை எடுத்துக் காட்டிக் கொண்டே, “எப்படி?!.. நீங்கள், ஏழு கால்கள் இரண்டு தலைகளைக் கொண்ட இவர்களைப் போல ஆக விரும்புகிறீர்களா?”. அவருடைய முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. கவுன்டர் அருகே செல்கையில் – சனிக்கிழமை தோறும் ஓர் இளம் வயது விவசாயியாக பேன் ஹெட் சலூனில் ஏற்கனவே பழக்கப்பட்ட மனிதர்கள் மத்தியில் மகிழ்ச்சியும் குதூகலமுமாய் எப்போதும் புழங்கும் மனிதர்களுள் ஒருவராக மிகவும் பழக்கப்பட்ட ஒருவனை அணுகுவது போல ஜோ கேன்’இன் முதுகில் செல்லமாகத் தட்ட முயற்சித்தார். கோரமான நிலையில் சிதைவுற்று குடுவைகளில் அடைக்கப்பெற்று சாராய திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும் பறவைகளைக் கண்ட நிலையில் விருந்தினனானவன் மிகுந்த சங்கடத்துடன் எழுந்து கிளம்பத் தயாரானான். கவுண்டரிலிருந்து எழுந்து வந்த அப்பா, அந்த இளைஞனின் தோள்களைப் பற்றி திரும்பவும் அவனை அந்த இருக்கையிலேயே அமர வைத்தார். இளைஞன் சிறிதே கோபமுற்றாலும் வலுக்கட்டாயமாய் அவரைப் பார்த்து புன்னகைத்து வைத்தான். பின் குடுவைகள் அனைத்தையும் அலமாரி அறைகளில் வைத்தார் அப்பா. எந்தவித சிரத்தையுமில்லாமல் அவனை தன்னுடைய செலவில் ஒரு காஃபியையும் சிகரெட்டையும் எடுத்துக்கொள்ள வற்புறுத்தினார். பிறகு, கவுண்டருக்குப் பின்னால் நகர்ந்து தவா ஒன்றை எடுத்து சிறிது வினிகர் ஊற்றி தனக்குள்ளாக ஓர் உறுதி எடுத்துக்கொண்டு புதிதாய் ஒரு அதிசயம் நிகழ்த்தத் தயாரானார். “வினிகர் இருக்கும் இந்த சட்டியில் நான் இப்போது இந்த முட்டையை வேக வைப்பேன். பிறகு அதை இந்த பாட்டிலின் கழுத்து வழியே உள்ளே தள்ளுவேன்.. பாட்டிலின் உள்ளே சென்ற பிறகு அந்த முட்டை பிறகு அதன் முந்தைய தன்மைக்கு வந்துவிடும். முட்டை ஓடும் முன்னிருந்ததைப் போல் உறுதியாகிவிடும். அப்புறம் அந்த முட்டை உள்ள பாட்டிலை நான் உங்களுக்குத் தந்துவிடுவேன். அதை நீங்கள் எங்கே சென்றாலும் கூடவே எடுத்துச் செல்லலாம். பாட்டிலுக்குள் முட்டை எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மக்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அவங்களுக்கு சொல்லாதீங்க. அதையெல்லாம் அவங்க யூகத்துக்கு விட்டுடுங்க. அதுமாதிரி தான் இந்த விளையாட்டுத்தனமான தந்திரங்களைக் கையாளணும்’.   

அப்பா அவனைப் பார்த்து கண்ணை சிமிட்டிச் சிரித்தார். ஜோ கேன் முடிவு செய்துவிட்டான். தன்னுடன் முரண்பட்ட இந்த மனிதன் கொஞ்சம் கிறுக்குத்தனம் கொண்டவர் ஆனால் தொந்தரவானவர் இல்லை. ஜோ தனக்குத் தந்த காஃபியை பருகிவிட்டு திரும்பவும் தினசரியை எடுத்து படிக்கத் தொடங்கிவிட்டான். வினிகரில் சூடாக்கப்பட்ட முட்டையை அப்பா ஒரு சிறிய கரண்டியில் எடுத்துக்கொண்டு கவுன்டர் வரை வந்து பிறகு பின்னறைக்குச் சென்று காலி பாட்டிலை எடுத்தார். தேடினார். தான் செய்த தந்திரங்களை தன்னுடைய வாடிக்கையாளர் சரிவரப் பார்க்காததால் அப்பாவுக்கு கொஞ்சம் கோபம் வந்தது. இருந்தாலும் அதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் மகிழ்ச்சியோடு தன்னுடைய வேலைகளைச் செய்தார். முட்டையை பாட்டிலின் கழுத்து வழியே உள்ளே தள்ளுவதற்கு வெகு நேரம் போராடினார். வினிகர் இருந்த சட்டியில் மீண்டும் முட்டையைப் போட்டு சூடு படுத்தத் தொடங்கி விரல்களை சுட்டுக் கொண்டார். இரண்டாவது முறையாக வினிகர் திரவத்தில் கிடந்த முட்டை கொஞ்சமாக மென்மை அடைந்ததேயொழிய இலக்கு நிறைவடையவில்லை. அவர் திரும்பத் திரும்ப அதற்காக உழைத்தார். ஆனால், தீர்மானிக்க முடியாத அவநம்பிக்கை ஒன்று அவரை ஆட்கொண்டுவிட்டது இப்போது. கடைசியாக தன்னுடைய முயற்சி நிறைவேறப்போகிறது என்று நினைக்கையில் தாமதமாய் வந்து கொண்டிருந்த அந்த இரயில் இப்போது நிலையத்துக்கு வந்துவிட ஜோ தன்னிச்சையாய் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான். அப்பாவும் தன்னுடைய இக்கட்டான இறுதி முயற்சியாக முட்டையோடு போராடி வெற்றி பெற்றுவிட வேண்டும். அதன் மூலம் தன்னுடைய பாரம்பரியமான விருந்தினர்களை மகிழ்விக்கும் கலையில் தான் வல்லவன் என்கிற தன்னுடைய பெயரை நிலைநிறுத்திவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். முட்டையை வலியிறுத்தினார், சங்கடத்தில் ஆழ்த்தினார். அதனாலெல்லாம் அது கசப்பான அனுபவமாகவேணும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர் அதில் உறுதியாய் இருந்தார். அதன் வெளிப்பாடாய் நெற்றி முழுவதும் வியர்வை படர்ந்தது. எதிர்பாராத விதமாய் அவர் கையிலிருந்த முட்டை உடைந்தது. உடைந்த முட்டையிலிருந்த திரவம் சிதறி அவருடைய சட்டை மீது தெரித்தபோது, கதவருகே நின்றிருந்த ஜோ திரும்பிப் பார்த்து சிரித்தான். 

கோபக்கனல் அப்பாவின் தொண்டையிலிருந்து பீறிட்டது. அலைவரிசையற்ற தெளிவற்ற சொற்கள் அவரது வாயில் நடனமாடின. ஆத்திரத்தில் கவுன்டரில் இருந்த கூடையில் இருந்து ஒரு முட்டையை எடுத்து கதவருகில் நின்றிருந்த இளைஞனை நோக்கி எறிய, அவன் தலையில் விழப்போனது தவறி வேறொரு பக்கம் விழுந்தது.  

நானும் அம்மாவும் இருந்த மேல் மாடிக்கு அப்பா கையில் முட்டையோடு வந்தார். அவர் எந்த நோக்கத்தோடு அங்கே வந்திருக்கிறார் என்பதை நான் அறியேன். மெதுவாக அந்த முட்டையை மேசையின் மீது வைத்துவிட்டு, நான் முன்பே விவரித்தது போல் கட்டிலின் முன்னே வருத்தத்தோடு மண்டியிட்டு அமர்ந்தார். பின் உணவகத்தை மூடிவிட்டு மேலே ஏறி வந்த அப்பா உடனேயே படுக்கச் சென்றார். நீண்ட நேரம் அம்மாவோடு முணுமுணுப்போடு விவரித்துக் கொண்டேயிருந்தார். போதுமான அளவுக்கு உரையாடிய பின்னர் அப்பாவும் அம்மாவும் அப்படியே உறங்கிப் போயினர். நானும் இந்நேரத்துக்கு உறங்கியிருக்க வேண்டும். ஆனால், உறக்கம் கலைந்து போனது. விடியற்காலையில் எழுந்த நான் நீண்ட நேரமாக மேசையின் மீதே இன்னமும் இருந்த அந்த முட்டையைப் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஏன் முட்டை வர வேண்டும் ? ஏன் அந்த முட்டை கோழியிலிருந்து வர வேண்டும்? பிறகு யார் அந்த முட்டையை அந்த கோழிக்குள் வைத்தார்கள்? கேள்விகள் என் இரத்த நாளங்களுக்குள் பாய்ந்து கொண்டிருந்தன. அவை அங்கேயே தங்கிவிட்டன. நான் கற்பனை செய்து பார்த்தேன்.. அதுவொரு சுழற்சியான கற்பனை.. ஏனெனில் அப்படிப்பட்டதொரு தகப்பனின் மகன் நான். எது எப்படியாயினும் பிரச்சினையானது தீர்க்கப்படாததாகவே என் மூளைக்குள் தங்கிவிட்டது. அதன் பின்னர் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். ஆனால் குறைந்தபட்சம் என்னுடைய குடும்பத்தின் கருத்தோடு நான் ஒத்திசைந்து போனால், பிறிதொரு ஆதாரமாக முற்றும் முழுதுமான அந்த முட்டையின் வெற்றியாகவே இதை நான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஷெர்வுட் ஆண்டர்சன் (1876–1941) : அமேரிக்க நாவல் மற்றும் சிறுகதையாசிரியர். யதார்த்தவாத கதைகளில் தனித்துவமான நடையால் கதைகளில் முத்திரை பதித்தவர்.

***

பாலா இளம்பிறை – இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும். மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com