Home Blog Page 10

தூங்கிய சிறு பொழுதில்

0

ராம்

மாம்பலம் ரயில்நிலையத்தில் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு நான் படியிறங்கிக்கொண்டிருக்கிறேன். தாம்பரம் போகும் ரயில் ஏற்கனவே பிளாட்ஃபாரத்தில் நின்றுகொண்டிருக்கிறது. எட்டு மாதங்களுக்கு முன்பு என்றால் ஓடிப்போய் ஏறியிருப்பேன். கொரோனா லாக்டவுனில் வீட்டில் சிக்கி சுகவாசியாகிவிட்ட இந்த உடம்பு இப்போது என் பழைய வேகத்திற்கு ஈடுகட்ட மறுக்கிறது. இந்த ரயில்நிலையப் படிகளை ஏறி இறங்குவதற்குள் எவ்வளவு வியர்வை, எவ்வளவு மூச்சிறைப்பு! “நாளேலேந்து எக்ஸர்ஸைஸ் பண்ணணும்” என்ற தினசரி மந்திரத்தை இன்றைய பொழுதிற்கு ஒருமுறை முணுமுணுத்தபடி என் நடையை இயன்ற அளவு துரிதப்படுத்துகிறேன்.

படியிறங்கிக் கொண்டே “ரயிலேறிவிட்டேன். முக்கால் மணி நேரத்தில் வீட்டில் இருப்பேன்” என்று மனைவிக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தியைத் தட்டிக்கொண்டிருக்கிறேன். “ஆஃபீஸ்லேந்து கெளம்பும்போது ஸ்வீட் வாங்கிட்டு வரணும்னு ஞாபகம் இருந்துச்சு, வீட்டுக்கு வரதுக்குள்ள மறந்துருச்சு”, “ஃபோன் ஸைலண்ட்டுல இருந்துச்சு மா, அதான் உன் தம்பி கால் பண்ணினப்ப எனக்கு தெரியல… வேணும்னே எடுக்காம இருப்பேனா?”, “மால் எதுலயுமே டிக்கெட் இல்ல மா, எதாவது தியேட்டர்ல டிக்கெட் புக் பண்றேன்… ஷாப்பிங்லாம் இன்னொரு நாள் தனியா கூட்டிட்டு போறேன்” என்பது போன்று கணவர்களுக்கு மனைவிகளிடம் சரளமாக வரும் சில்லறைப் பொய்களில் ஒன்று கிளம்புவதற்கு முன்னரே கிளம்பிவிட்டேன் என்று சொல்வது.

அந்தக் குறுஞ்செய்தியை நான் அனுப்பும் முன் என் கைப்பேசி கையிலிருந்து பறந்து சென்று கடைசிப் படியில் ஒருமுறை விழுந்து குதித்து பிளாட்ஃபாரத் தரையில் நிலைகொள்கிறது. என் கையிலிருந்து அதைத் தட்டிவிட்டவனோ என் பறக்கும் கைப்பேசியையும் முந்திக்கொண்டு கடைசி நாலைந்து படிகளை ஒரே தாவில் குதித்து ரயிலை நோக்கி ஓடுகிறான்.

“அறிவுகெட்ட மு…”

சத்தமாக யாரையும் திட்டிப் பழக்கப்படாத என் வாயில் ஒரு நல்ல கெட்ட வார்த்தை கூட அகப்படவில்லை. கைப்பேசிக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலை ஒருபுறமும் இந்த ரயிலை விட்டால் அடுத்த ரயில் பயங்கரக் கூட்டமாக வருமே என்ற கவலை இன்னொரு புறமும் என்னை இம்சை செய்ய, கைப்பேசியைத் தரையிலிருந்து வழித்தெடுத்துக்கொண்டு அவசரமாக ரயிலேறுகிறேன்.

கூட்டம் அதிகம் இல்லை, ஆனால் காலி இருக்கைகளும் அதிகம் இல்லை. ரயில் ஏறியவுடன் வலப்பக்கம் திரும்புகிறேன் – ஒரு காலி இடம் தெரிகிறது. அதை நோக்கி நான் அடி எடுத்துவைக்கும் அதே நொடியில் என் கைப்பேசி மீண்டும் கையிலிருந்து பறக்கிறது. ரயில்நிலையப் படிக்கட்டில் என்னை இடித்த அதே அறிவுகெட்ட மு-தான். ரயிலில் ஏறியவுடன் இடப்பக்கம் போயிருப்பான் போல. அங்கு உட்கார இடம் ஏதும் இல்லாததால் என்னை முந்திக்கொண்டு இந்தப் பக்க இருக்கைக்குப் பறக்கிறான். ஆனால் இந்த முறை என் கைப்பேசி ரயில் தரையில் மோதும் முன் அவன் அதை ஒரு காலால் எத்தி லாவகமாகப் பிடித்துவிட்டு என் கையில் திணிக்கிறான். “சாரி பாஸ்…” என்று முணுமுணுக்கும் அவன், என்னை ஒருமுறை பார்த்துவிட்டு “…சார்” என்று அதை மாற்றிவிட்டு என் கடுகடுப்பான முகத்தைக்கூடச் சட்டை செய்யாமல் நான் பார்த்துவைத்த இருக்கையில் சென்று அமர்கிறான். “பாஸ்”-இலிருந்து நான் ஒரு நொடியில் “சார்”-ஆக மாற்றப்பட்டது என் கடுப்பை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. நான் சில வருடங்களுக்கு முன்பு “அண்ணா”விலிருந்து “அங்கிள்”-க்கு பதவி இறக்கப்பட்டபோது ஆங்கிலக் கலாச்சாரத்தின் மீது உண்டான காரணமற்ற கோபத்தைப் போல இப்போதும் இந்த “பாஸ், ஜீ” கலாச்சாரத்தின் மீது ஒரு எரிச்சல் வருகிறது. ஆனால் இப்போதும் அவனைத் திட்ட ஒரு வார்த்தை வந்து தொலைய மாட்டேன் என்கிறது.

ரயில்நிலையத்தில் விழுந்ததில் என் கைப்பேசியின் முகத்திரையில் சிலந்தி வலை அப்பியது போல விரிசல்கள் விழுந்திருப்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். எப்படியும் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் மாற்றலாம் என்று நினைத்திருந்தது தான், இருந்தாலும் அதை நானே உடைத்திருந்தால் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அந்த அறிவுகெட்ட மு-வை முறைத்துப் பார்த்தபடியே அவன் இருக்கைக்கு அருகே செல்கிறேன் – அவனுடன் சண்டை போடும் நோக்கம் எதுவும் இல்லை; அடுத்த நிலையங்களில் கூட்டம் ஏறும்பொழுது முடிந்தவரையில் ரயில்பெட்டியின் வாயில் அருகே நிற்காமல் இருப்பது நல்லது என்பது என் எண்ணம். தோளில் இருக்கும் பையைக் கழற்றி கால்களுக்கு நடுவே வைத்துவிட்டு அவனை முறைத்தபடியே நிற்கிறேன். என் முறைப்பை அவன் உணர்வானா, என்னைப் பார்ப்பானா என்ற ஒரு ஆர்வம் மட்டும் எனக்குள் இருக்கிறது.

சுமார் எட்டு மாதங்களாக வெட்டப்படாத கேசத்தை அடக்க ஒரு பேண்டு அணிந்திருக்கிறான் அவன். இருபதிலிருந்து முப்பத்தைந்து வரை என்ன வயதாகவும் இருக்கலாம் அவனுக்கு – அவன் தாடியும் தலைமுடியும் வயதை எளிதில் கணிக்க முடியாதபடி செய்திருக்கின்றன. இருக்கையில் உட்கார்ந்தவுடன் அவனது தோள்பையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தலையை பின்னால் சாய்த்துக் கண்ணை மூடிவிட்டான். இனிமேல் முகத்தை இவ்வளவு கடுகடுப்பாக வைத்துக்கொண்டு பயனில்லை என்று புரிந்து அந்த இருக்கையில் உள்ள மற்றவர்களைக் கவனிக்கிறேன். அறிவுகெட்ட மு-விற்கு இடப்புறத்தில் வெள்ளைச்சட்டை அணிந்த ஒரு பருமனான மனிதர்; அவருக்கு அடுத்து, அவ்வளவு ஒல்லியாக இல்லாவிட்டால் அந்த வெள்ளைச்சட்டை ஆசாமியின் சகோதரரோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருந்தார் ஒரு சந்தனச் சட்டை ஆசாமி.

“வெள்ளம் வந்து ரெண்டு மாசம் கூட ஆவல, வெய்யிலு கொளுத்த ஆரம்பிச்சுருச்சு பாத்தீங்களா” – சந்தனச் சட்டை.

“இது என்ன புதுசாப்பா? வருசா வருசம் ஜனவரி முடிஞ்ச ஒடனே ‘இந்த வருசம் போன வருசத்த விட வெயில் ஜாஸ்தி ல?’ன்னு பேச ஆரம்பிச்சுருவானுங்க… எல்லா வருசமும் அதே வெயில்தான்… வெயில்ல வேல செய்யுறவனுக்குதான அதெல்லாந் தெரியும்” – வெள்ளைச் சட்டை. ஆனால் அந்த ஆசாமியைப் பார்த்தால் வெயிலில் வேலை செய்யும் பேர்வழி போலத் தெரியவில்லை. வெயிலில் வேலை செய்பவர்களை மேய்க்கும் ஆளாய் வேண்டுமானால் இருக்கலாம்.

இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமானவர்களாகத் தோன்றவில்லை.

அறிவுகெட்ட மு-வின் வலப்பக்கம் மூன்று பள்ளி மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இருக்கலாம் அவர்களது வயது. எனக்கு கொரோனாவிற்கு முந்தைய உடல்வாகு இருந்திருந்தால் அவர்களைச் சற்றே நகரச் சொல்லி இருந்த கொஞ்சம் இடத்தில் அமர்ந்திருப்பேன், ஆனால் பருத்துவிட்ட என் உடல் அதற்கும் வழி செய்யவில்லை. அந்த மூன்று மாணவர்களும் பென்சிலில் கோடு கிழித்தது போல் ஒல்லியாக இருந்தாலும் அவர்களது குரல் அவ்வளவு மெலிதாக இல்லை. அதில் ஒருவன் “ஒருத்தனுக்கு ஒருத்தியின்னு பளமொளி… ஆனா பத்து பேர மேனேஜ் பன்றா கனிமொளி” என்று தலையையும் கைகளையும் ஆட்டிக்கொண்டு நண்பர்களின் எக்காளச் சிரிப்பிற்கு இடையே சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறான். ரயில்பெட்டியில் இருக்கும் அனைவரும் அந்தப் பாடக மாணவனை ஒரு எரிச்சல் கலந்த சிரிப்புடன் பார்த்துவிட்டுத் திரும்புகிறார்கள் – அறிவுகெட்ட மு-வைத் தவிர. அவனது வலது காதருகில் அமர்ந்து ஒருவன் சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறான்; ஆனால் ரயில் சைதாப்பேட்டை நிலையத்தைத் தாண்டும்பொழுது அவன் தூங்கிப் போயிருக்கிறான். பொறாமையாகத்தான் இருக்கிறது.

சைதாப்பேட்டை ரயில்நிலையத்தைத் தாண்டியவுடன் அடையாறு ஆற்றைத் தாண்டும்போது தினம் இருமுறை அனுபவித்துப் பழகிப் போயிருக்கும் நாற்றம் ரயிலின் இரு பக்க ஜன்னல்களின் வழியாகவும் பெட்டியை நிறைத்து வெளியேறுகிறது.

“கடல போட ஒருத்தன், செலவு பண்ண ஒருத்தன்,

வண்டி ஓட்ட ஒருத்தன்…”

அந்த ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ பாடல் இன்னும் விரசமான வரிகளைத் தொட்டுப் போய்க்கொண்டிருக்கும்போதே அந்த மெட்டு எனக்கு எங்கு பரிச்சயமானது என்ற சிந்தனை எனக்குள் ஓடுகிறது. இவன் பாடுவதை நிறுத்தினால் ஒரு நொடியில் கண்டுபிடித்துவிடலாம் என்பது போல அவ்வளவு அருகில் இருந்தும் பிடிபடாமல் இருக்கிறது அந்த மெட்டு. ஏதோ ஒரு கிராமிய அல்லது தெம்மாங்கு மெட்டு என்று மட்டும் தோன்றுகிறது – ஆனால் நினைவிற்கு வரும் “ராமன் ஆண்டாலும்”, “வெத்தலயப் போட்டேண்டி”, “தண்ணித் தொட்டி தேடி வந்த”, “நம்ம சிங்காரி சரக்கு”, “எதுக்கு பொண்டாட்டி” போன்ற எந்தப் பாட்டும் அந்த மெட்டுக்குப் பக்கத்தில் கூட வரவில்லை. அதற்குள் சந்தனச் சட்டை மனிதரின் குரல் என் கவனத்தை அவர் பக்கம் ஈர்க்கிறது.

“யாரு சார் இப்போ ஒளுக்கமா இருக்கானுங்க? எல்லாரும் திருட்டுக் கம்மனாட்டிங்கதான். நம்மளும் இந்த கம்மனாட்டி இல்லேன்னா அந்த கம்மனாட்டின்னு ஓட்டுப் போட்டுட்டு இருக்கோம்”

“அப்டில்லாம் சொல்லிர முடியாதுப்பா… அவ்ளோ செலவு பண்ணி எலக்சன்லாம் ஜெயிச்சி அங்க போயி ஒக்கார எவ்ளோ தெறம வோணும் தெரியுமா? சும்மா இங்க இருந்துட்டு நாம என்ன வோணா சொல்லிரலாம். அவனுங்க எடத்துல இருந்தாதான தெரியும் அவன் கஷ்டம் என்னாண்ட்டு… திருடுறானுங்கதான், இல்லேண்ட்டு சொல்லல… ஆனா அவனுங்க திருடாம இருந்தா பொளெக்க முடியாது பாத்துக்க… இன்னுஞ் சொல்லப் போனா ஆச்சி செய்யிறதுக்கு அதெல்லாம் தேவ… திருடுறது, பொய் சொல்லுறது, கால வாருறது, ஏன் ஆளத் தூக்குறதுகூட வெச்சுக்கோயேன்… இதெல்லாம் தெரிஞ்சாதான் நம்பளயும் அவனால நல்லா ஆள முடியும் பாத்துக்க” – வெள்ளைச் சட்டை.

“இதென்னங்க புதுசாச் சொல்றீங்க… அப்போ காந்தீ, காமராசருல்லாம் நம்மள ஆள முடியாதாக்கும்? சும்மா இப்போ இருக்கற கம்மனாட்டிங்களுக்கு இவ்ளோ நியாயம் பேசுறீங்க” – சிரித்துக்கொண்டே கேட்கிறார் சந்தனச் சட்டை.

“காந்தியும் காமராசரும் இருந்தப்போ நம்ம என்ன கண்டோம் அவனுங்க உத்தமங்களாண்ட்டு? நாலு பேரு சொல்றதக் கேட்டுட்டு அவனுங்க மகானுங்கண்ட்டு நம்பளா நம்பிக்கிட்டு இருக்கோம்… காந்தி பத்தி ஒண்ணு சொல்றேன், கேக்குறியா? அந்த ஆளு ஆப்பிரிக்காவுல இந்த மாரி ட்ரெயினு ஒண்ணுல ஃபர்ஸ்ட்டு கிளாஸ் பெட்டியில போனப்போ அந்த ஆளு கறுப்பண்ட்டு களுத்த புடிச்சு வெள்ல தள்ளிட்டானுங்க… ஒடனே இந்தாளு பெரிய ஆளாயிட்டாரு… ஆனா நெசமா என்ன நடந்துச்சுண்ட்டு தெரியுமா? அந்த ஊருல ஃபர்ஸ்ட்டு கிளாஸ் டிக்கெட்டு வெள்ளக்காரங்களுக்கு மட்டுந்தான் தருவானுங்களாம்… நம்ம ஆளு தேர்டு கிளாஸு டிக்கெட்ட வெச்சுக்கிட்டு ஃபர்ஸ்ட்டு கிளாஸ் பெட்டியில போயி ஒக்காந்தா களுத்தப் புடிச்சுத் தள்ளாம என்ன பண்ணுவாங்கன்றேன்! பண்ணது சில்றத்தனம்… ஆனா பெரிய ஆளாயிட்டாப்புல…”

‘அடடா, அப்படியா! இது தெரியாமல் போய்விட்டதே!’ என்று எண்ணியபடி காந்தியின் மிகப் பிரபலமான ரயில் பயணத்தைப் பற்றியும் எனக்கு இத்தனை நாளாய்த் தெரியாமல் போன இந்த ‘தேர்டு கிளாஸ்’ சமாச்சாரத்தைப் பற்றியும் கூகுளில் படிக்க என் கைப்பேசியை எடுக்கிறேன். திரையை உயிர்ப்பித்தவுடன் என் மனைவியின் வாட்ஸப் உரையாடல் திரை முன்னால் வருகிறது. நான் மாம்பலம் ரயில்நிலையப் படியில் இயற்றிய குறுஞ்செய்தி அனுப்பப்படாமல் இருக்கிறது… இப்போது ரயில் பழவந்தாங்கலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. “முக்கால் மணி நேரத்தில்” என்பதை “அரை மணி நேரத்தில்” என்று மாற்றிவிட்டு அந்தக் குறுஞ்செய்தியை அனுப்புகிறேன். பள்ளி மாணவர்களில், ஜன்னலருகே அமர்ந்திருந்த பையன் இப்போது “கும்பலா சுத்துவோம்… அய்யோ யம்மானு கத்துவோம்” என்று மெட்டே இல்லாமல் ஏதோ ஒரு பாடலைக் கத்திக்கொண்டிருக்கிறான். மற்ற இருவரும் இருக்கையிலும் ரயில் பெட்டியின் தகரச் சுவரில் தாளம் போடுகிறார்கள். இதற்குள் வெள்ளைச்சட்டை ஆசாமி காந்தியைத் தாண்டி காமராசருக்கு வந்திருக்கிறார்.

“… வெறகுக்கு வளி பண்றேண்ட்டு கருவேல மரமா கொண்டு வந்து வெப்பானுவ? வெவசாய நெலமாக் கெடந்த ராம்நாடுல்லாம் இப்போ காஞ்சு கெடக்கு… படிக்காத மேதன்ட்டு பேரு வந்தா ஒடனே மேதாவின்ட்டு நெனப்பும் வந்துருமோ… நாலு ஆளுங்க கிட்டே கேட்டுட்டு பண்ணுவம்னுட்டு ஒண்ணு வேணாம்? அந்தக் கருவேல மரத்த எறக்குமதி பண்றேண்ட்டு அந்தாளு எவ்ளோ முளுங்கினாருன்னு யாரு பாத்தா? பாருப்பா… நாம அந்த காலத் தலெவருங்க பத்தி கேக்குறது படிக்கிறதுல்லாம் பாதிக்கு மேல கத தான்… இப்போம்பாரு… இன்னும் அம்பது வருசங் களிச்சு இப்போ நீ கம்மனாட்டின்ட்டு கூப்பிடுறியே… அவனுங்கதான் உத்தமத் தலெவருங்களா இருப்பானுங்க, நமக்கு காந்தி, காமராசரு மாரி…” சொல்லிவிட்டு, கூத்தடித்துக்கொண்டிருந்த பள்ளி மாணவர்களே திரும்பிப் பார்க்கும் அளவு ஒரு சிரிப்பு சிரிக்கிறார்.

‘டப் டப்’

பலத்த கைத்தட்டலுடன் தன் வருகையை அறிவித்தபடி திருநங்கை ஒருவர் இந்தப் பெட்டிக்கும் அடுத்த பெட்டிக்கும் நடுவே இருக்கும் சிறிய வழியிலிருந்து வெளிப்படுகிறார். இத்தனை நேரம் அங்கு ஒரு வழி இருந்ததையே கவனித்திராத எனக்கு அந்த நுழைவு கொஞ்சம் திகைப்பாகத்தான் இருக்கிறது. அந்த கைத்தட்டல் கேட்டவுடன் வெள்ளைச்சட்டையின் சிரிப்பும் மாணவர்களின் கத்தலும் சட்டென்று அடங்குகின்றன. சந்தனச் சட்டை ஆசாமி தன் சட்டைப்பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து அந்த திருநங்கையின் முகத்தைக் கூடப் பார்க்காமல் நீட்டுகிறார். அதை வாங்கிக்கொள்ளும் கை அடுத்து வெள்ளைச்சட்டையிடம் திரும்புகிறது. ‘நான் அவருடன் வந்தவன்’ என்பது போல வெள்ளைச்சட்டை ஆசாமி சைகை செய்ய, அதைச் சட்டை செய்யாமல் அந்த கை அவரது மார்பை நோக்கிக் கிள்ளுவது போல நகர்கிறது. விருட்டென்று தன் சட்டைப்பையில் கையை நுழைத்து வெளிவந்த நோட்டுகளில் மிகச்சிறியதை அவர் தேர்வு செய்யும்முன் திருநங்கையின் கை மிகவும் நெருங்கிவிட்டதால், அவசரமாகக் கையில் சிக்கிய முதல் நோட்டான இருபது ரூபாய் நோட்டு ஒன்றை அவர் நீட்டுகிறார். இதற்கு மத்தியில் நான் வெகு உஷாராக என் பின் பாக்கெட்டிலிருந்து தோல்பையை எடுத்து அதிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை உருவித் தயாராக வைத்திருக்கிறேன். என் பக்கம் முகம் திருப்பாமலேயே அந்தத் தாளை என் விரல்களிலிருந்து விடுவித்துவிட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் அறிவுகெட்ட மு-வைத் தொந்தரவு செய்யாமல் பள்ளிச் சிறுவர்களிடம் நகர்கிறார் அந்த திருநங்கை. அந்த அறிவுகெட்ட மு- மீது எனக்குள் மீண்டும் பொறாமை கொப்பளிக்கிறது.

திருநங்கையார் அந்தச் சிறுவர்களிடமும் எவ்வளவு தேறுமோ அதைப் பெற்றுக்கொண்டு என்னைத் தாண்டி மற்ற இருக்கைகளுக்குச் செல்ல, சிறுவர்கள் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் ஏதோ கிசுகிசுவென்று பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் கண்கள் குவியும் இடத்தையும் நமட்டுச் சிரிப்பையும் பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. சற்றே நகர்ந்து அந்த மாணவர்களின் பார்வைக்கோட்டில் திருநங்கை விழாதவண்ணம் நிற்கிறேன். அடுத்த சில நொடிகளில் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் என்றே மறந்தவர்களாய் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த ஏதோ சினிமாப் படப் போஸ்டரைப் பார்த்துவிட்டு ‘குத்துவிளக்கு குத்துவிளக்கு’ என்று இன்னொரு விரசமான பாடலைக் கத்தத் துவங்குகிறார்கள். இது கொஞ்சம் பழைய பாடலாயிற்றே, இந்த வயது மாணவர்களுக்கு இந்த பாட்டு எப்படி பரிச்சயம் என்று சிந்திக்கிறேன்.

இதற்குள் ரயில் குரோம்பேட்டைக்கு வந்திருக்கிறது. இந்த பெட்டியிலிருந்து பாதி கூட்டம் வெளியேறுகிறது, ஆனால் சுற்றிப் பார்த்தால் ஒரு இருக்கை மட்டுமே காலியாகி இருக்கிறது – சந்தனச் சட்டை ஆசாமிக்கு எதிரே உள்ள இருக்கைதான் அது. என்னைச் சுற்றி அத்தனை பேரா நின்றுகொண்டிருந்தார்கள் என்று ஒரு நொடி யோசித்துவிட்டு அந்த இருக்கையை நோக்கி நகர்கிறேன். நான் ஒரு அடிதான் எடுத்து வைத்திருக்கிறேன், அதற்குள் ஒரு பெண்ணின் கைப்பை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. ஜன்னல் அருகே அமர்ந்திருக்கும் நபரிடம் ரயிலுக்கு வெளியிலிருந்து ஏதோ ஒரு பெண் அந்த இருக்கையைப் பிடிப்பதற்காகக் கொடுத்திருக்கும் பைதான் அது. அந்த ஆசாமியும் ஒரு பெண் கேட்டவுடன் மறுக்காமல் செய்துவிட்டார் போல.

“லிஸன்… நா ட்ரெயின்ல ஏறிட்டேன்… சிக்னல் கெடெக்காது… ஐ கான்ட் டூ திஸ் நவ்” என்று வேகமும் கோபமும் கலந்த குரலில் தன் அலைபேசியில் பேசிக்கொண்டு அந்தப் பெண் இந்தப் பெட்டியில் ஏறுகிறாள். முப்பது வயது கூட இருக்காது. மிக லட்சணமான முகம். கண்களைத் தாண்டி உதட்டை வருடிக்கொண்டு தொங்கிய ஒரு கூந்தல் கற்றையை விலக்கிவிட்டபடி தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த இருக்கையில் அமரும் அப்பெண்ணின் கண்களில் நீர் துளிர்த்திருக்கிறது.

‘இன்னும் ரெண்டு ஸ்டாப் தான, இப்ப உக்காந்தா என்ன இல்லேன்னா என்ன’ என்று எண்ணியபடி தாராளமாக அந்த இடத்தை அந்த பெண்ணுக்கு ‘விட்டுக்கொடுக்கிறேன்’. ரயிலில் ஏறும் முன்பே துவங்கிய கைப்பேசி உரையாடலைத் தொடர்ந்தபடி கால் மேல் கால் போட்டு, கைப்பேசியைத் தாங்கிய அவளது இடது கையின் முழங்கையை தன் இடது முழங்காலில் முட்டுக்கொடுத்து அமர்ந்திருக்கிறாள். முன்னே நீட்டிக்கொண்டிருக்கும் காலில் மெட்டி இல்லாததைக் கவனித்துவிட்டு ஏன் என் கண்கள் அந்த விவரத்தைக் கவனித்துப் பதிவு செய்கின்றன என்று ஒரு நொடி சிந்திக்கிறேன்.

“எவ்ளோ தடவப்பா சொல்றது? உனக்கு… நா சொல்றதக் கொஞ்சம்… நா… சரி, சொல்லு” அவளது குரல் நீளமாக இழுக்கப்படும் தங்க நூல் போல எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் ஒரு கனத்துடன் ஒலிக்கிறது. அந்த அழைப்பிற்கு அந்தப் பக்கம் இருப்பது ஒரு காதலனா, நண்பனா அல்லது தந்தையா என்று தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம் மேலெழ இன்னும் கூர்ந்து கவனிக்கிறேன்.

அதற்குள் “… நமக்கு தெரிஞ்ச ஆளுதான்… பரமக்குடிக்காரரு… நல்ல மனுசன்தான், என்ன குடி கொஞ்சம் ஓவரு… பகல், ராவு என்னேரமும் குடி… அவரு வேலயும் அப்டி பாத்துக்க… மனுசனுக்கு ஆஃபு போட்டாதான் கை நெலயா நிக்கும் பாத்துக்க… ஆனா வெள்ளிக்கெளமயானா பாட்டிலு தொட மாட்டாரு… ம்… எதுக்கு அவரப் பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்?” என்று வெள்ளைச் சட்டை ஆசாமி கேட்க, தன் நினைவுகளில் தொலைந்து போயிருந்த சந்தனச் சட்டை, “ம்… அது…” என்று யோசிப்பது போல் பாவனை செய்தபடி நேரம் கடத்துகிறார்.

“மச்சி… எறங்கின ஒடனே ஒன் ஆளப் பாக்க ஓடீறாத… யென் டூசன் ஃபீசும் ஒம் பேக்லதான் இருக்கு” அந்த சிறுவர்களில் இடது பக்கத் தலை வெகுவாக மொட்டையாகவும் வலது பக்கத்தில் பரட்டையாகவும் முடி வைத்திருந்தவன் கட்டைக்குரலில் ஜன்னல் அருகே இருக்கும் அவன் நண்பனிடம் கூறுகிறான்.

“ஆ… அதான்… தான் யாருன்ட்டு வெளிய சொல்லாத சாமிங்க… அந்தாளு எப்டின்ட்டு தெரிஞ்சுக்க… குடில இருந்தா மனுசன் ஆளத் தொளச்சுப் பாத்துறுவாரு… ஒருத்தன் புளுகுறானா, எதுனா மறெக்குறானாண்ட்டு பேச்ச வெச்சே சொல்லிறுவாரு பாத்துக்க…” வெள்ளைச் சட்டை தான் விட்ட இடத்தைப் பிடித்துவிட்டார்.

“… ஆல்ரைட்… இப்பயாவது நா சொல்றதக் கேக்கறியாப்பா?” அந்த பெண்ணின் குரல் மீண்டும் என் கவனத்தை அவள் பக்கம் ஈர்க்கிறது.

“… செல பஞ்சாயத்துக்குன்ட்டு அவர அளெக்கிற ஆளுங்கல்லாம் உண்டு… ஏன் நானே ஒரு மொற ஒரு பரதேசி மவனுக்குக் கடன் குடுத்துட்டு திருப்பி வாங்க முடியாம அலெஞ்சுட்டு இருந்தப்போ… காசெ வாங்கினவன் வாங்கவே இல்லென்ட்டு புளுகினான்… அவரெ அளெச்சி அவரு முன்னாடி சொல்லச் சொன்னப்போ ஒரு நிமிசத்துல அவம் புளுகுறான்ட்டு சொல்லிட்டாரு… ஆனா ஒண்ணு பாத்துக்க… வெள்ளிக்கெளம அவரால அதெப் பண்ண முடியாது… அந்தாளுக்கே அவரு சத்தி தெரியாது பாத்துக்க…” வெள்ளைச் சட்டையின் குரல் மீண்டும் இடைமறிக்கிறது.

“நீ சொன்னதுலாம் எனக்கு புரிஞ்ச்சுப்பா… நா ஒண்ணும் கவனிக்காம இல்ல… நீ சொல்றத கேட்டுட்டு ஒடனே ஒத்துக்கணுமா? நா சொல்றதக் கொஞ்சம் கேளேன்பா… நா… ஹலோ?”

ரயில் தாம்பரம் நிலையத்தை நெருங்கும்பொழுது என் மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது.

“ஹலோ… சொல்லும்மா… ஆல்மோஸ்ட் தாம்பரம் வந்துட்டேன்…”

இதற்குள் நான் கவனித்துக்கொண்டிருக்கும் பெண்ணின் குரல் சற்றே உயர்கிறது.

“… ஸீ, திஸ் இஸ் ஒய் ஐ டின்ட் வான்ட் டு டூ திஸ் நவ்… ஹலோ? ஹலோ? ஹலோ?” ஒவ்வொரு ‘ஹலோ’விற்கும் அவளது குரல் உரத்துக்கொண்டே போகிறது. அலைபேசியின் துணை இல்லாமலேயே மறுபக்கம் இருப்பவரிடம் தன் கருத்தைப் பதியப்படுத்தத் துடிக்கும் ஆதங்கம் அந்தக் குரலில்.

“இல்லம்மா… ட்ரெயின்ல வேற யாரோ ஃபோன்ல பேசிட்டு இருக்காங்க… இரு, நான் தள்ளி வரேன்” என் இரு கால்களுக்கு நடுவே வைத்திருக்கும் பையை எடுத்துக்கொண்டு ரயில்பெட்டியின் வாயில் பக்கம் நகர்கிறேன்.

“… இப்பக் கேக்குதா? ம்… சொல்லு… ஸ்வீட்டா? ஓ, காலேல சொன்னேல்ல… அத்த வந்தாச்சா? ஓ, ஓக்கே… நான் இங்க ஸ்டேஷன் கிட்ட எங்கயாவது வாங்கிட்டு வரேம்மா… என்ன? ம்… லட்டு வாங்க மாட்டேன், டோன்ட் ஒர்ரி…”

வெகுநேரம் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் ரயில் நிற்க, உள்ளிருக்கும் சலசலப்பிற்கு ஈடுகொடுத்து வெளியில் புலப்படுகிறது தாம்பரம் ரயில்நிலையம். ரயில் நின்றதோ இல்லையோ எனக்குப் பின்னாலிருந்து வேகமாக வெளியேறுகிறது ஒரு சிறிய உருவம்.

“டே இவனே… இருடா… அவ யாரயும் இளுத்துட்டு ஓடீருக்க மாட்டா… டே, என் டூசன் ஃபீசுடா” அந்த உருவத்தைப் பின்தொடர்கிறது ஒரு குரல்.

இந்த மாலையிலேயே மூன்றாவது முறையாக என் அலைபேசி கையிலிருந்து தட்டப்படுகிறது. இப்போது தட்டிவிடுவது அந்த அறிவுகெட்ட மு- இல்லை; அந்த பாதி மொட்டை பாதி பரட்டைத் தலைப் பொடியன்தான் இப்போது குற்றவாளி.

“அறிவுகெட்ட மு…!” இன்னும் அந்த வசைக்கு என் வாயிலிருந்து சிறந்த முடிவு அமைந்த பாடில்லை.

கீழே விழும் என் அலைபேசி ஒருவர் காலில் விழுகிறது. சட்டென்று அதைக் குனிந்து எடுத்துத் தருபவன் அறிவுகெட்ட மு-தான் – இப்போது ரயிலை விட்டு இறங்கி ஓடிய பொடியன் அல்ல, முதல் இரண்டு முறை என் கைப்பேசியைத் தட்டிவிட்ட பழைய அறிவுகெட்ட மு-.

ஒரு புன்னகையுடன் என்னிடம் அதை நீட்டுகிறான். “அவனுக்கு உங்க ஃபோன தட்டிவிட்டோம்னு கூட தெரியாது சார். வால் பசங்க”

நானும் அதை ஒரு புன்னகையுடன் பெற்றுக்கொண்டு ரயிலை விட்டு இறங்கி அவனுக்கு எதிர் திசையில் நகர்கிறேன்.

அவனைப் பார்த்து ஏன் சிரித்துத் தொலைத்தோம் என்று ஒரு புது எண்ணம் என்னை உறுத்த, என் மேலேயே உள்ள எரிச்சலுடன் வேகமாக டூவீலர் ஸ்டேண்டு நோக்கி நடக்கிறேன், சற்று முன்பு என் மனைவி நினைவுபடுத்திய விஷயத்தை மறந்து.

* * *

ஒன்றரை நாட்கள் தொடர்ந்து கம்பெனியிலேயே இருந்துவிட்டு இப்போதுதான் ரூமுக்குப் போகிறேன். அசதியில் கண்ணைக் கட்டுகிறது. மகாவிடம் வேறு ரயிலேறியவுடன் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். இந்த ரயிலைப் பிடிக்க ஓடிய ஓட்டத்தில் மூச்சு பிடித்துக்கொண்டு வயிற்றில் தையல் போட்டது போல ஒரு சிறிய வலி. என் மடியில் வைத்திருக்கும் தோள் பையைக் கட்டிக்கொண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கையில் சாய்கிறேன். நான் இங்கு உட்கார்ந்திருப்பது குற்றம் என்பது மாதிரி யாரோ என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.

“சாரி சார். நைட்டு ஃபுல்லா அந்த ரெண்டாவது டர்னிங் மிஷின் சர்வீஸ் பாத்துட்டு இருந்தேன். இப்பதான் சூப்பர்வைஸர்ட்ட சொல்லிட்டு வந்து கொஞ்சம் கால் வலிக்குதுன்னு ஒக்காந்தேன்… ஒரு அஞ்சு நிமிஷம் சார்…” ஃப்ளோர் மேனேஜரின் அறையில், அதுவும் அவரது இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கும் நான் என் முன் கோபமான முகத்துடன் நின்றுகொண்டிருக்கும் ஃப்ளோர் மேனேஜரிடம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். என் குரல் எனக்கே கொஞ்சம் தொலைவாய் ஒலிக்கிறது.

“நீ ஒம்பாட்டுக்கு ஓட்டீ க்ளெய்ம் பண்ணீட்டு டூட்டி டைம்ல வந்து தூங்கிட்டேன்னா இன்னிக்கி வேல எங்க நடக்கறது? ஒண்ணு லீவு சொல்லீட்டு வீட்ல போயி தூங்கு, இல்ல வேலயப் பாரு… இப்டி கண்ட டைத்துல ஒக்காந்துட்டு இருந்தா மத்தவங்களும் ரிலாக்ஸ் ஆயிருவாங்கல்ல”

“சாரி சார்… நாம் போறேன்…” எழுந்து அவர் தொந்தி படாமல் மேசைக்கும் அவருக்கும் நடுவே உள்ள இடைவெளி வழியே புகுந்து அந்த அறையை விட்டு வெளியேறுகிறேன்.

“ஏய், நில்லுப்பா… கொஞ்சம் அந்த வெள்ளம்லாம் வடியட்டும்… இப்பதான் வெயில் வந்திருக்கு, ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணிட்டுப் போ… வெள்ளம் வடிஞ்சதும் அந்த லேத்த மொதல்ல பாரு… எங்கல்லாம் தண்ணி தேங்கியிருக்குமோ”

அவரது அறைக்கு வெளியே உள்ள மிஷின் ஷாப்பில் தரையிலிருந்து ஒரு அடிக்கு பழுப்பும் கருப்புமாக தண்ணீர் ஓடுக்கொண்டிருக்கிறது.

“நான் இப்பவே போயி லேத்தப் பாக்கறேன் சார்” என்று சொல்லிவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் தண்ணீரில் இறங்கி நடக்கிறேன். எண்ணெயும் குப்பைகளும் கலந்த தண்ணீரின் நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. நான் அந்த லேத் மிஷினை அடைந்து அதில் எங்கெல்லாம் தண்ணீர் புகுந்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கையில் தரையில் தண்ணீர் வடிந்து வெயிலில் தரை காய்ந்திருக்கிறது. ஒரு கையை மிஷினுக்குள் நுழைத்து ஒரு நட்டைத் திருகிக்கொண்டிருக்கும்பொழுது என் கைப்பேசியில் ஒரு அழைப்பு வருகிறது.

சூப்பர்வைஸரும் மேனேஜரும் சுற்றி எங்கும் இல்லை என்று உறுதி செய்துகொண்டு கைப்பேசியை எடுத்துப் பார்க்கிறேன். மகா.

“எப்போ கால் பண்ணினதுக்கு எப்போ திருப்பி கால் பண்ற… எப்பப் பாத்தாலும் கால் வெய்ட்டிங்!” எரிந்து விழுகிறேன்.

“ஹேய், நீ எப்ப கால் பண்ணின? இத்தன நேரமா ஒரு ரிப்ளை இல்லேன்னு நான்தான் ஒனக்கு கால் பண்ணினேன்”

“கத வுடாத… எவன் கூடல்லாம் கடல போட்டுட்டு இருந்த?” கேட்கும்போதே அந்த கேள்வி என் வாயிலிருந்துதான் வருகிறது என்று என்னால் நம்ப முடியவில்லை.

“ச்சீ… நீ எப்ப இப்டில்லாம் பேச ஆரம்பிச்ச?” அவள் குரலில் இருந்த கோபம் எங்கள் இணைப்பை எரித்துத் துண்டித்தது போல மௌனமாகிறது என் கைப்பேசி.

விருட்டென்று எழுந்திருக்கிறேன். கையை மிஷினுக்குள் வைத்திருந்தேனே என்று நினைவு வரும் அதே நேரம், வலது காலின் பெருவிரலில் ஒரு வலி. மிஷினுக்குள் கையை வைத்துக்கொண்டே எழுந்தேன் அல்லவா, அதனால்தான் காலில் அந்த வலி என்று உறைக்கிறது. என் அலைபேசியை கால்சட்டைப் பையில் வைத்துவிட்டு நிமிரும்பொழுது திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள சிறு திடலில் கூடியிருக்கும் கூட்டத்தில் இருக்கிறேன்.

மைக்கைப் பிடித்துக்கொண்டு அவசியமில்லாத உரத்த குரலில் கூவிக்கொண்டிருக்கிறார் வெள்ளைச்சட்டை அரசியல்வாதி ஒருவர். தெரிந்த முகம்தான். பத்தாம் வகுப்பில் என் பெஞ்ச்சில் என்னுடன் அமர்ந்திருந்த பாலாதான் அவன். இப்போது அவன் மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவன் சட்டமன்ற உறுப்பினராகிவிட்டான் எனவும் எங்கோ கேள்விப்பட்டதாக நினைவு. அவனைப் பார்த்து சிரித்தபடி கையசைக்கிறேன்.

என்னைப் பார்த்தவுடன் சிடுசிடுப்பான முகத்துடன் கூட்டத்தை நோக்கி ஏதோ ஆவேசமாகப் பேசுகிறான். அவன் சொல்வது என் மனதில் பதியும் முன்பு அவனே என் முன் நிற்கிறான்.

“உன்னை எல்லாம் யாருடா இங்க விட்டது” என்று உறுமியபடி என் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறான்.

அவன் தள்ளும்பொழுதே அந்தத் திடல் ரயில்பெட்டியாக மாறுகிறது. ஐயோ, ரயிலிலிருந்து தள்ளிவிடுகிறானே என்று பதைபதைக்கும் அதே நொடியில் ரயிலிலிருந்து வீசப்பட்டு பக்கத்துத் தண்டவாளத்தில் எதிர் திசையில் போய்க்கொண்டிருக்கும் ரயிலில் புகுந்து விழுகிறேன்.

கீழே விழுந்திருக்கும் என்னைத் தூக்கிவிடக் குனிபவர் வெள்ளை வேட்டியும் மேலுடம்பிற்கு வெறும் துண்டையும் மட்டுமே போர்த்திய ஒரு ஒல்லி உருவம்.

இந்த மனிதரை இப்படி எளிமையாக வைத்திருக்க இந்தியா நிறைய செலவழித்தது என்று எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோமே என்று எண்ணியபடி எழுந்திருக்கிறேன். எழுந்து நிமிரும்போது மீண்டும் பாலா என் முன் நிற்கிறான்.

“டேய் முரளீ, எப்பிட்றா இருக்க? என்ன அடயாளொந் தெரீதா?”

“நான் அந்த ட்ரெயின்ல போணும்டா, என்ன ஏன்டா இந்த ட்ரெயினுக்கு தள்ளி வுட்ட?” அவனை நான் அதட்டலாகக் கேட்கிறேன்.

“அந்த வண்டில நெறய முள்ளு மரொன்டா… நீயே பாரு” என்று பக்கத்துத் தண்டவாளத்தில் போகும் ரயிலைச் சுட்டிக் காண்பிக்கிறான்.

அவன் சொல்வது உண்மைதான். அந்த ரயில் பெட்டிகளில் அடர்த்தியாக முள் மரங்கள் கிளைகளை நீட்டி வளர்ந்திருக்கின்றன.

“சொன்னேம் பாத்தியா” என்று சொல்லிவிட்டு கடகடவென சிரிக்கிறான்.

டப் டப்

பக்கத்து ரயிலிலுருந்து இந்த ரயிலின் தண்டவாளம் வரை நீண்ட முள் கிளையொன்று இந்த பெட்டியின் அகண்ட வாயில் வழியாகக் நுழைந்து பாலாவை முகத்தில் இரண்டு முறை அறைகிறது. அடி விழுந்த நொடியில் அவன் சிரிப்பு அடங்குகிறது.

ரத்தக் கீற்றுகள் விழுந்த அவன் முகத்தைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கிறது.

“நீயும் தாம்பரம்தான் போறியா? அப்பொ டைம் இருக்கு, வா அந்த சீட்டுல போயி ஒக்காரலாம்” என்று அவனை என்னுடன் கூட்டிச் சென்று ஒரு இருக்கையில் அமர்கிறேன்.

பல வருடங்களுக்கு முன் எங்கள் பள்ளி ஆண்டுவிழா ஒன்று நிறைவுக்கு வரும்போது தான் ஒரு பாடல் பாடுவதாகச் சொல்லிவிட்டு பாலா மேடையில் சென்று ‘குத்துவிளக்கு குத்துவிளக்கு’ என்ற விரசமான பாடலை மைக்கில் பாடத் தொடங்கியதும் அவனை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றதும் நினைவுக்கு வருகிறது.

“ஸ்கூல் ஆனுவல் டேல ஸ்டேஜ்ல போயி நீ குத்துவிளக்கு சாங் பாடின ஞாபகம் இருக்கா?” என்று சிரித்துக்கொண்டே கேட்கிறேன்.

உடனே அவன் முகம் கறுத்துவிடுகிறது.

“மவனே, பாடினது நீயி, பனிஷ்மென்ட்டு வாங்கினது நானு… அன்னிக்கி என்ன அடி தெரியுமா?”

“என்னடா சொல்ற? நீதானடா ஸ்டேஜ் ஏறி பாடின…”

“கொய்யால… அது நீடா… டீச்சருங்க தூக்கிட்டு போனதுதான் என்னைய”

குழம்பிப் போய் ரயிலுக்கு வெளியே பார்க்கிறேன். அங்கு நின்றுகொண்டிருப்பது மகாவேதான்.

என்னைப் பார்த்தவுடன் ரயிலில் ஏறிவிட்டாள்.

“ஹே மகா! நானே ஒனக்கு கால் பண்ணணும்னு இருந்தேன்”

“இங்க சிக்னல் கெடைக்காது… ஐ கான்ட் டூ திஸ் ரைட் நவ்”

“கோச்சுக்காத டீ… நைட்டு எக்கச்சக்க வேல… வெள்ளம் வேற வந்துருச்சு… தூங்கக் கூட இல்ல தெரியுமா?”

அவள் என்னை நம்பிக்கையே இல்லாமல் பார்க்கிறாள்.

“நெஜமா டீ… வேணும்னா பாலாவையே கேளு” என்று என்னருகில் இருப்பவனைக் கைகாட்டுகிறேன்.

என்னருகில் பாலா இல்லை. காவி அணிந்த ஒரு சாமியார் அமர்ந்திருக்கிறார்.

“சார்… ஐயா… இங்க பாலா இருந்தானே… எறங்கி போய்ட்டானா?” என்று அவரிடம் கேட்கிறேன்.

“நான்தான்டா பாலா… மற களென்டுருச்சா ஒனக்கு?” அவர் பேசும் குரல் பாலாவுடையதுதான்.

“நீங்க… நீ ஏன்டா காவி போட்டுருக்க?”

“இது வெள்ளடா வெண்ண!”

“நீ சாமியார் வேஷம் போட்ருக்கறது ஒனக்கே தெரியலயா?”

“நா சொல்றதக் கொஞ்சம் கேக்கறியா?” மகாவின் குரல் கேட்க, அவள் பக்கம் திரும்புகிறேன்.

அவள் நான்கு இருக்கைகள் தள்ளிப் போய் அமர்ந்திருக்கிறாள். போதையில் தள்ளாடியபடி ஒரு ஆள் அவளருகே வந்து அமர்கிறான். முகம் சுளித்து அவள் அதே இருக்கையில் தள்ளி அமர்கிறாள்.

“சரி, எம் பைசாவ எடு, நாம் போவணும்” பாலா சாமியாரின் குரல் என்னை மீட்கிறது.

“என்ன பைசா?”

“ஒம் பைல இருக்கு பாரு, அதுதான்”

என் பையில் முன் பகுதியைத் திறக்கிறேன், அதில் கத்தையாகப் பழைய ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்!

“என் டூசன் காசு. அதக் குடு, நாம் போறேன்”

“ஆல்ரைட்… இப்பயாவது நா சொல்றதக் கேக்கறியா?” திடீரென ஒலிக்கும் அவள் குரலில் கோபம் தெரிகிறது. இன்னும் நான்கு இருக்கைகள் தள்ளிப்போய் அமர்ந்திருக்கிறாள் மகா. அவள் முகத்தில் என்ன உணர்ச்சி இருக்கிறது என்பதே தெளிவாகத் தெரியவில்லை.

“இது என் காசுடா பாலா” அவளைக் கவனிக்காமல் பாலாவிடம் சொல்கிறேன்.

அந்தக் குடிகாரர் சத்தமாகத் தும்மிவிட்டு இடவலமாகத் தலையாட்டிவிட்டு, பாலாவைக் கைகாட்டி “அது அவன் காசு தம்பீ… பொய் சொல்லாதீங்க” என்கிறார்.

“அவர் கிட்ட ஏதோ சக்தி இருக்கு, முல்ஸ்… சொல்றதக் கேளு” மகாவின் குரலில் கொஞ்சம் கெஞ்சல் தெரிகிறது.

“பட் இது என் காசு மகா!”

“நீ சொல்றத கேட்டுட்டு ஒடனே ஒத்துக்கணுமா? நா சொல்றதக் கொஞ்சம் கேளேன்… நா… ஹலோ?” மகா எழுந்து நிற்கிறாள். ரயில் பெட்டியில் நான் இருக்கும் இருக்கைக்கும் மகா நிற்கும் இடத்திற்கும் இடையே பல இருக்கைகள் முளைத்து மகா வெகுதூரம் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறாள்.

“மகா, எங்க போற? நில்லு… இது பாலாவே இல்ல, ஏதோ போலி சாமியார்… அவன் ஒரு குடிகாரன்… நான் சொல்றதக் கேளேன்”

“… ஸீ, திஸ் இஸ் ஒய் ஐ டின்ட் வான்ட் டு டூ திஸ் நவ்… ஹலோ? ஹலோ? ஹலோ?” மகா மேலும் மேலும் தள்ளிப்போக, அவள் குரலில் ஒரு பீதி ஒலிக்கிறது.

“மகா!” கத்தியபடி ஓடத் தொடங்குகிறேன். வலது கால் ஒரு கல்லில் தடுக்க, பெருவிரலில் விண்ணென்று ஒரு வலி. கல் தடுக்கி விழும் நேரத்தில் விழிக்கிறேன்.

சுற்றிப் பார்க்கிறேன். மகா, பாலா, சாமியார், குடிகாரர், எவருமே இல்லை. தாம்பரம் ரயில்நிலையம் வந்துவிட்டது.

என் காலைக் குனிந்து பார்க்கிறேன். பெருவிரலில் இருந்து ரத்தம் கசிந்து காய்ந்திருக்கிறது. நகம் பெயர்ந்திருப்பது போலத் தோன்றுகிறது. நான் இந்த ரயில் ஏறி இந்த இருக்கைக்கு வரும்போது ஒருவரது அலைபேசியைத் தெரியாமல் தட்டிவிட்டதும் அதைக் காலால் எத்திப் பிடித்ததும் நினைவிற்கு வருகிறது. அப்போது ஆன காயமாகத்தான் இருக்கும்.

‘எறங்கினதும் மகாவுக்கு ஃபோன் பண்ணணும்’ என்று நினைத்துக் கொண்டே பையை மாட்டிக்கொண்டு இறங்கத் தயாராகிறேன்.

ரயில் நின்றதும் நிற்காததுமாக இரண்டு சிறுவர்கள் ரயிலை விட்டு குதித்து வெளியேறுகிறார்கள். கால்மீது ஏதோ விழுந்து சுளீரென்று வலிக்கிறது.

“அறிவுகெட்ட மு…!” என் அருகில் நிற்பவர் அந்தச் சிறுவர்களைத் திட்டுகிறார்.

குனிந்து என் கால்மீது கிடக்கும் அலைபேசியை எடுக்கிறேன். அலைபேசியால் ஆன காயத்தை ஒரு அலைபேசியே புண்படுத்துகிறது என்பதை நினைக்கும்போது சிரிப்பு வருகிறது.

“அவனுக்கு உங்க ஃபோன தட்டிவிட்டோம்னு கூட தெரியாது சார். வால் பசங்க” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அவரிடம் அந்த அலைபேசியை நீட்டுகிறேன்.

ரயிலை விட்டு இறங்கி வலது காலை ஊன்றும்பொழுது வலி தொடை வரை பரவுகிறது. சற்றே நொண்டியபடி மகாவை அழைக்க என் கைப்பேசியை எடுக்கிறேன். அவளிடமிருந்து நான்கு அழைப்புகளும் பல குறுஞ்செய்திகளும் வந்திருக்கின்றன நான் தூங்கிய சிறு பொழுதில்.

* * *

  • அன்று வீடு சென்றடைந்தவுடன் வழக்கம்போல என் பையை வாங்கிக்கொள்ளும் என் மனைவி வாசலிலேயே வைத்து பையைத் திறந்து அதில் ஸ்வீட் பாக்ஸ் இல்லாததைக் கவனித்து என்னை மீண்டும் வந்த வழியே அனுப்புவாள்.
  • நான் மகாவை அழைக்கும்பொழுது அவளும் ரயில் நிலையத்திற்கு வெளியில் இருப்பதாகக் கூறி நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் பேக்கரிக்கு வரச் சொல்வாள். தூக்கம் போதாமல் இருக்கும் அசதியும் அவள் குரலில் இருக்கும் கோபமும் என்னை வாட்ட நான் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுவேன். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ரத்தம் காய்ந்த கால் பெருவிரல் விண்விண்ணென்று வலிக்க நான் பாதி நொண்டியபடி நடந்து வருவதைப் பார்த்ததும் உர்ரென்று கோபமாக நின்றுகொண்டிருக்கும் மகாவின் முகம் கவலையில் கரையும். அந்த முகமாற்றத்தில் என் தூக்கமின்மையையும் கால் வலியையும் மறந்து ஆறுதல் புன்னகை ஒன்றை உதிர்த்தபடி அவளிடம் விரைவேன்.
  • இந்த ரயில்பயணம் நடந்த புதன்கிழமைக்கு அடுத்த மூன்றாவது புதன்கிழமையன்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதிசயமாக வார நாளில் ஒரு விடுமுறை வரும். அன்று சன் டிவியில் ஒளிபரப்பும் பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர் காந்திக்கு வெளிநாடுகளில் இருந்த செல்வாக்கைப் பற்றிப் பேசுகையில் காந்தியின் பிரபலமான ரயில் பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுவார். அப்போது நான் அம்மா பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நிகழ்ச்சியில் பாதி கவனம் செலுத்திக்கொண்டு அடுத்து வாங்கவேண்டிய புதிய அலைபேசிக்கான தேடுதலை மேற்கொண்டிருப்பேன். திடீரென ரயிலில் வெள்ளைச் சட்டை மனிதர் சொன்ன கதை நினைவுக்கு வர, அடுத்த அரை மணி நேரத்திற்கு அந்தச் சம்பவத்தைப் பற்றிய ஆய்வு ஒன்றில் அகப்பட்டு கூகுளில் மூழ்குவேன். ஆய்வின் முடிவில் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் கருப்பர்களுக்கு முதல் தரப் பெட்டிகளில் பயணம் செய்யத் தடை எதுவும் இல்லை என்றும், அந்த சம்பவம் நிகழ்ந்து பதினைந்து வருடங்கள் கழித்தே வெள்ளையர்கள் அல்லாதோர் முதல் தரப் பெட்டிகளில் பயணம் செய்யத் தடை விதித்து சட்டம் பிறப்பிக்கப்பட்டது என்றும் அறிந்துகொள்வேன். அதற்குள் என் மனைவி மதிய உணவு தயார் என்று அழைக்க, காந்தியின் பயணம் பற்றிய என் ஆய்விற்கு முன் நான் மேற்கொண்டிருந்த புதிய அலைபேசி பற்றிய ஆய்வை மறந்துவிடுவேன்.
  • கால் பெருவிரலில் ஏற்பட்ட காயம் எப்போதும் போடும் மருந்துகளுக்கு ஆறாமல் ஒரு வாரத்திற்குப் பின்னும் வீங்கிக்கொண்டே போவதைப் பார்த்து மகா என்னை ஒரு மாலை வேளையில் ஒரு சிறிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வாள். கால் மணிநேரத்திற்கும் குறைவான அந்த ஆட்டோ பயணத்தில், சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காதது போலவும் ஒரு காலையே அகற்றவேண்டும் எனக் கூறி காக்கி உடையணிந்த மருத்துவர்கள் மகாவிடம் கையெழுத்து வாங்குவது போலவும் கனவு காண்பேன். நான் கனவிலிருந்து திடுக்கிட்டு எழவும் ஆட்டோ ஓட்டுநருக்கு வழிகாட்ட மகா கையை நீட்டவும் சரியாக இருக்க, அவள் கையில் பற்றியிருக்கும் அலைபேசி நழுவி காயம்பட்ட என் காலிலேயே விழும்.
  • ஒரு வழியாக தமிழ்ப் புத்தாண்டு முடிந்தவுடன் வரும் சனிக்கிழமை மீண்டும் புதிய அலைபேசி பற்றிய நினைவு வந்து, ஆய்வு செய்து, அதற்கு அடுத்த சனிக்கிழமை ஒரு அலைபேசியைக் கையில் பெறுவேன். இப்போதிருக்கும் அலைபேசிக்கு இன்னும் ஆயுள் உள்ளதே என்றும் அம்மாவின் தற்போதைய அலைபேசி பழுதாகும்போது இதைக் கொடுக்கலாம் என்றும் எண்ணிக்கொண்டு என் துணிகள் இருக்கும் அலமாரியில் அதை பத்திரப்படுத்துகையில் அறிவுகெட்ட மு-வின் நினைவு வரும். அப்போது அவன் முகம் மட்டுமல்ல, அவன் மேல் நான் கொண்ட வன்மத்தின் சாயல் கூட மறந்து மறைந்திருக்கும் என் அப்போதைய கவலைகளின் பின்னணியில்.

***

ராம் – சென்னையில் ஆங்கிலத் துணைப் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் மொழிபெயர்த்து இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை அண்மையில் முடித்து, மொழிபெயர்ப்பு, புனைவாக்கம் ஆகிய தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : ram.mech.sharma@gmail.com

ராசாத்தி

0

ராஜேஷ் வைரபாண்டியன்

ராசாத்திக்கு அந்த விடியல் சாவு செய்தி வந்த வீட்டின் முதல் காலை போல இருந்தது. சூரியன் கிழக்கில் தென்பட ஆரம்பித்திருந்தது. ஆனாலும் அவள் மனசுக்குள் இன்னும் இரவின் குளிர் படர்ந்திருந்தது. கிழக்கே வானம் செம்மஞ்சளாக விரிந்தது. தினமும் அழகாகத் தோன்றும் அந்த நிறம் இன்று அழகாக இல்லை. இன்று அவள் ஊரை விட்டுப் போகிறாள். 

வீட்டின் முன் அவள் வரைந்த கோலத்தில் காகங்களும் சிட்டுக்குருவிகளூம் நடந்து திரிந்து கோலத்தை அழித்திருந்தன. அந்தக் காலடி அவள் வாழ்க்கையை யாரோ மெதுவாக அழித்துப் போகிற மாதிரி இருந்தது. சமையலறையில் அம்மா பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தாள். “இன்னும் நேரமிருக்கே ராசு ” என்றாள் அம்மா. சில “இன்னும்” கள் நம் ஆறுதலுக்காக சொல்லப்படுவதில்லை. அவை நம்மை நின்ற இடத்திலிருந்து தள்ளி விழ வைக்கத் தான் சொல்லப்படுகின்றனவோ எனத் தோன்றியது.

ராசாத்தி கிணற்றடிக்கு வந்தாள். கடைசி முறையாக தண்ணீரை இறைக்க. வாளி மேலே வந்தவுடன் அதில் தெரிந்த முகம் தண்ணீருக்குள் கரைய முயற்சி செய்தது. இந்த கிணறு தான் அவளுக்கு அம்மா. இந்த தண்ணீரில தான் அவளது முதல் அழுகை, முதல் வெட்கம், முதல் ஆசை, முதல் பயம் எல்லாமே கரைந்திருந்தது. கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தாள். கிணறும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. ‘என்னை மறந்துருவியா?’ என்றாள். கிணறு மெளனித்திருந்தது. 

புளியமரத்தடிக்கு வந்து நின்றாள். இலைகள் காற்றில் நடுங்கின. அந்த நடுக்கம் இறந்தவளின் வளையல் சத்தம் போல கேட்டது. “நீ போகாதே” என மரம் சொல்வது போலிருந்தது. இந்த மரம் அவள் திருமணத்தைப் பார்த்திருக்கிறது. அவள் கண்ணீரும் அதற்கு தெரியும். அவள் மௌனமும் புரியும். மனிதர்களுக்கு நினைவுகள் கனமாக இருக்கும். மரங்களுக்கு நினைவுகள் வேர் மாதிரி பூமியெங்கும் பரவி இருக்கும். எவ்வளவு இழுத்தாலும் வெளிய வராது.

அம்மா காபி கொண்டு வந்தாள். காபி சூடாக இருந்தது. ஆனால் அவளுக்கு அது பிரிவின் சுவையை நினைவூட்டியது. “நல்லா இருக்கணும்ப்பு” என்றாள் அம்மா. அந்த வார்த்தைகள் ஆசீர்வாதம் போலில்லை. “நீ போக வேண்டிய அளவுக்கு நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?” என அம்மாவின் கண்கள் கேட்டது. ராசாத்தி பதில் சொல்லவில்லை. சில கேள்விகளுக்கு பதில் இல்லை. அவை கேள்வியாக எப்போதும் இருப்பதே நல்லது.

அவள் வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தாள். கதவு, திண்ணை, சுவர் அனைத்துமே அவளைப் பார்த்துக்கொண்டிருந்தன. அந்த பார்வை மண்ணில் புதைக்கப்படும் முன் இறந்த உடம்பை பார்க்கும் கண்களை ஒத்து இருந்தது. இன்று அவள் போகவில்லை. இன்றிலிருந்து அவள் மெதுவாக மறையப் போகிறாள்.

சூரியன் உச்சிக்கு வந்தபோது, ராசாத்திக்கு நேரம் அவளைத் தவிர்த்து ஓடியது போலிருந்தது. காலையிலிருந்து உடம்பு எங்கும் நகரவில்லை. ஆனால் மனம் மட்டும் எங்கோ தொலைந்திருந்தது. இரண்டு தெரு தள்ளியிருக்கும் அம்மன் கோவிலுக்கு போனாள். கோயில் மணி ஒலித்தது. விளக்கு ஏற்றினாள். தீபம் நடுங்கியது. அந்த நடுக்கம் அவள் ஏற்றுக்கொண்ட வாழ்க்கையைப் பிரதிபலித்தது. அம்மனைப் பார்த்து எதுவும் கேட்கவில்லை. கேட்டால் அவள் தருவாள். அவள் தருவது திரும்பவும் வாங்கிக்கொள்கிற மாதிரி தான் இருக்கும். அவளுக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான் வேறு எதுவும் வேண்டாம். இந்த ஊரைவிட்டு மட்டும் என்னை அனுப்பிவிடாதே அம்மா என்றாள். அம்மன் பதிலேதும் சொல்லவில்லை.

கோயில் திண்ணையில் உட்கார்ந்தாள். அருகில் ஒரு மூதாட்டி பிச்சிப்பூ கட்டிக்கொண்டிருந்தாள். பூவின் வாசனை இறந்த உடம்பின் மேல் வைக்கப்படும் பூவின் வாசனையை ஒத்திருந்தது. மூதாட்டி அவளைப் பார்த்து சிரித்தாள். “எங்கம்மா போற?” என்றாள். “நகரம்” என பதிலிட்டாள் ராசாத்தி. அந்த வார்த்தை வாயிலிருந்து வெளியே வந்ததும், அது அவளுக்குள் ஏதோவொன்று மெளனமாய் உடைந்து சரிவது போலிருந்தது.

வீட்டுக்குத் திரும்பினாள். சுவரைத் தடவினாள். இந்த சுவரில் தான் அவள் உயரம் குறிக்கப்பட்டது. இந்த சுவரில் தான் அவள் முதல் கோபம் கிறுக்கல் சித்திரமாய் பதிந்திருந்தது. இந்த சுவரில் தான் அவள் கணவனின் நிழல் கடைசியாக விழுந்தது. நகரத்திலும் சுவர் இருக்கும். ஆனால் அதில் நானிருக்க மாட்டேன். அங்கே என் நிழல் மட்டும் தான் இருக்கும். கையில் ஒட்டியிருந்த சுவரின் சுண்ணாம்புப் பூச்சை பார்த்துக்கொண்டே தனக்குள் பேசிக்கொண்டிருந்தாள். சற்று நேரம் கழித்து பைகளைக் கட்டத் துவங்கினாள். இரண்டு பைகள். அவளுடைய முழு வாழ்க்கை அவற்றுக்குள் அடங்விடும். 

அம்மா சாப்பாடு வைத்தாள். அவள் சாப்பிடவில்லை. தொண்டையில் இறங்கவில்லை. “அங்க போனதும் நல்லா சாப்பிடு ராசு” கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடியே அம்மா சொன்னாள்.

உறவினர்கள் யாரும் வரவில்லை. எல்லாருக்கும் அவரவர் உலகம். அவரவர் வாழ்க்கை. பிரிகின்ற அன்று ஒருநாள் மட்டும்தான் அதுவொரு பெரிய விஷயமாகத் தோன்றும். பிறகு அது பழைய செய்தி போல ஆகிடும். ராசாத்தி மட்டும் அந்த வீட்டில் நிற்கும் கடைசி மனுஷி போல இருந்தாள். வீடு அவளை பார்த்துக்கொண்டிருந்தது. “நீ இல்லாமல் நான் எதுக்கு?” எனக் கேட்டது வீடு.

இரவு இறங்கியபோது, ராசாத்திக்கு அந்த இருட்டு, மண்ணில் மெதுவாக இறங்கும் சவப்பெட்டி போல இருந்தது. வெளியில் விளக்குகள் எரிந்தாலும், அவளுக்குள் ஒரு விளக்கு கூட எரியவில்லை. பகல் முழுக்க இருந்த சத்தங்கள் எல்லாம் மங்கிப் போனது. இப்போது அவளுடைய மூச்சு மட்டுமே அவளுக்கு கேட்டது. 

அப்போது பக்கத்து வீட்டு லட்சுமி வந்தாள். கையில் வெற்றிலைப் பாக்கு. முகத்தில் அந்த ஊருக்கே உரிய சிரிப்பு, கேள்வி கேட்க வரும்போது மட்டும் வரும் சிரிப்பு.

“என்ன ராசாத்தி… உண்மையிலேயே போறியாக்கும்?”, என்றாள்.

“ஆமா லட்சுமிக்கா”, என்றாள். முதல் முறை அவள் வாயிலிருந்து அது உறுதியாக வெளியே வந்தது.

“அவந்தான் திரும்ப வரலல்லா… பொறவு எதுக்குளா நீயும் ஊரவிட்டு போறங்குத…கஷ்டமாயில்லையா?”

லட்சுமியின் குரலில் கருணை இல்லை. அது ஊரில் சுற்றும் பழைய கேள்வியின் எதிரொலிதான்.

ராசாத்தி முதன்முறையாக நேராக அவளைப் பார்த்தாள். 

“நான் கஷ்டப்படல. காத்திருந்தேன்”

லட்சுமி சிரித்தாள். “அதுதானே கஷ்டம்.”

அந்த சிரிப்பு ராசாத்தியின் மனதை அறுத்தது. அவள் எழுந்து நின்றாள். உடம்பு நடுங்கவில்லை. குரல் மட்டும் கொஞ்சம் தாழ்ந்தது.

“இந்த ஊர்ல நான் காத்திருந்தவளா மட்டும் தான் இருக்கணுமா?
நான் வேற எதுவும் இல்லையா?”

லட்சுமி பதில் சொல்லவில்லை. அந்தக் கேள்வியின் ஆழம் லட்சுமிக்கு புரியவுமில்லை. அங்கே மௌனம் மண்ணில் விழுந்த மழைத்துளிபோல மெதுவாக பரவியது.

“நான் போறேன். அவனைத் தேடி இல்ல. என்னைத் தேடி.”

அது முதல் முறையாக ராசாத்தி தன்னைப் பற்றி உரக்க சொன்ன வாக்கியம். 

லட்சிமி கிளம்பியதும் வீட்டுக்குள் வந்து பைகளை அடுக்கியபோது, ஒரு பழைய புகைப்படம் கீழே விழுந்தது. தரையில் விழுந்த அந்த புகைப்படம் ஒரு இறந்த பறவை போல புரண்டு கிடந்தது. அவள் அதை எடுக்கவில்லை. பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்தப் படத்தில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு ஆண். அவன் முகம் இப்போது அவளுக்கு சரியாக நினைவில்லை. ஆனாலும் அந்த சிரிப்பு மட்டும் ஞாபகம் இருந்தது. 

அவன் ஊரிலிருந்தபோது எல்லாம் இப்படித் தான். சிரிப்பு, கனவு, நகரம். “நாம வேற எங்கயாவது போலாம் ராசாத்தி” என அடிக்கடி சொல்வான். அந்த “வேற எங்கயாவது” தான் இப்போது ராசாத்திக்கு பயமாக இருந்தது. அவன் முதலில் தனியாகப் போனான். அவள் மட்டும் இங்கே இருந்தாள். காத்திருந்தாள். அந்தக் காத்திருப்பு யாருமற்ற ரயில் நிலையத்தில் தனித்து நிற்கும் வலியை அவளுக்கு கொடுத்திருந்தது.

முதல் வருடம் அவன் கடிதம் எழுதினான். இரண்டாம் வருடம் கடிதங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. மூன்றாம் வருடம் மெளனம். எதுவும் தெரியவில்லை. ஊரிலிருந்து யாரோ சொன்னார்கள் அவனுக்கு அங்க வேற வாழ்க்கை இருக்காம். ராசாத்தி எதுவும் கேட்கவில்லை. கேட்காத கேள்விகள் தான் சில நேரம் நம்மை உயிரோட உலவச் செய்கிறது.

அம்மா மட்டும் எல்லாம் தெரிந்தவள் ஆனாள். “அவன் வரமாட்டான்” என்றாள் ஒருநாள். அந்த வார்த்தை அவள் உயிரின் வேரில் விழுந்த அமிலச்சொட்டாக இருந்தது. அவள் பதில் சொல்லவில்லை. சில உண்மைகள் எதிர்த்தால் உடையும். ஏற்றுக்கொண்டால் மெதுவாக மரிக்கும். ராசாத்தி மெதுவாக மரித்துப்போக முடிவு செய்தாள்.

அதன் பிறகு ஊரில் எல்லாம் மாற ஆரம்பித்தது. அவள் “அவனுக்காக காத்திருந்தவள்” ஆனாள். பெண்களின் பார்வை, ஆண்களின் கள்ளப்பார்வை. எல்லாமே அவளைச் சுற்றி ஒரு தெரியாத வட்டம் போட்டது. அந்த வட்டம் ஒரு கண்ணுக்குத் தெரியாத சிறை. அவள் அதன் வெளியே இருந்தாலும் உள்ளே இருப்பது போலானது வாழ்வு.

அந்தப் புகைப்படத்தை மீண்டும் பார்த்தாள். அவன் முகம் இப்போதும் அவளுக்கு சரியாக நினைவில்லை. ஆனாலும் அவன் இல்லாத வாழ்க்கை மட்டும் தெளிவாக இருந்தது. அவன் போனது நகரத்துக்கு. அவள் இப்போது போவதும் அதே நகரத்துக்கு. ஆனால் அவனைத் தேடி அல்ல. அவனிடமிருந்து தப்பிக்க. அந்தக் காத்திருந்தவள் எனும் சொல்லிலிருந்து விடுபட. 

இடம்பெயர்வு என்பது ஊரிலிருந்து நகரத்துக்கு போவது அல்ல. ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவுக்கு தப்பிக்க முயல்வது. ஆனால் எந்த நினைவிலிருந்தும் தப்பிக்க முடியாது. நினைவுகள் நம்முடன் எப்போதும் பயணம் செய்யும்.

ராசாத்தி புகைப்படத்தை எடுத்து பைக்குள் வைத்தாள். அவள் அவனை மறக்கவில்லை. அவள் அவனை மன்னிக்கவும் இல்லை. அவளால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான், அவன் இல்லாத வாழ்க்கையை ஏற்றுக்கொண்டது.

அந்த தருணத்தில் தான் அவளுக்கு புரிந்தது. இவள் ஊரை விட்டு போகிறாள் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவள் ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்குள் தப்பிச் செல்கிறாள்.

அம்மா அவளுடைய பைகளை வாசலுக்கு கொண்டு வந்தாள். இருவரும் பேசவில்லை. பேசினால் குரல் உடைந்து போகும். மௌனம் தான் சில நேரம் பெரிய தைரியம். அம்மாவின் கண்கள் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்த பார்வை எதுவுமே செய்ய முடியாத பார்வை.

ராசாத்தி திண்ணையில் உட்கார்ந்து கடைசியாக வீட்டை பார்த்தாள். சுவர், கதவு, மாடம், பின்வாசல் எல்லாமே அவளை அடையாளம் காண்பது போல தோன்றியது. இந்த வீட்டில் அவள் சிரிப்பு இன்னும் சுவருக்குள் மறைந்து இருக்கும். அவள் அழுகை இன்னும் காற்றில் மிதந்து இருக்கும். அவள் மட்டும் இங்கிருந்து நீங்கிச் செல்கிறாள்.

அம்மா அவளுடைய நெற்றியில் குங்குமம் வைத்தாள். “ நல்லா இரு ராசு” என்றாள். ராசாத்தி அம்மாவின் கையைப் பிடித்தாள். அந்த வயது முதிர்ந்த கை மழையில் நனைந்த மண் போல மென்மையாகவும் கனமாகவும் இருந்தது. 

வீடு நீங்கினாள்.

பேருந்து நிறுத்தம் வந்தாள். பேருந்து வருவதற்காக நின்றிருந்த மற்றவர்கள் யாரும் அவளைப் பார்க்கவில்லை. அவள் அவர்களைப் பார்க்கவில்லை. எல்லாரும் தத்தம் வாழ்க்கைக்குள் மூழ்கி இருந்தார்கள். 

பேருந்து வந்தது. அது பெரிய விலங்கு போல வாய்திறந்து நின்றது. அதன் உளளே வெளிச்சம் இருந்தது. அந்த வெளிச்சம் அவளுக்கு அறுவை சிகிச்சை அறையின் ஒளி போல தெரிந்தது, உள்ளே போனால் வலி இருக்கும், வெளியே நின்றால் மரணம் இருக்கும். ராசாத்தி ஒரு நொடி தயங்கினாள்.

திரும்பிப் பார்த்தாள். ஊர் அங்கேயே இருந்தது. அசையவில்லை. அழவில்லை. விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நாய்கள் படுத்திருந்தன. மரங்கள் காற்றில் ஆடின. எல்லாமே இயல்பாக இருந்தது. அவள் மட்டும் இயல்பாக இல்லை. அந்த தருணத்தில் தான் உணர்ந்தாள். ஊர் அவளை விட்டுப் போகவில்லை. அவள் தான் ஊரை விட்டுப் போகிறாள். ஆனால் ஊர் அவளுக்குள் இருந்து போகவில்லை.

பேருந்தின் படிக்கட்டில் காலடி வைத்தாள். உள்ளே ஏறினாள். பேருந்தின் கதவு மூடியது. பேருந்து நகரத் தொடங்கியது. சன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஊர் மெதுவாக பின்னால் நகர்ந்தது. உண்மையில் நகர்ந்தது ஊர் இல்லை. பேருந்தின் சன்னலை வேகமாக மூடிவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள் ராசாத்தி.

***

ராஜேஷ் வைரபாண்டியன் – தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். அனைத்து வகைமைகளிலும் சேர்த்து பதினோரு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. ‘உதிரிகள்’ எனும் சிற்றிதழை நடத்தி வருகிறார். 2018 வரை ‘நிலாரசிகன்’ என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதினார். புன்னகை இலக்கிய விருது, உயிர்மை சுஜாதா சிற்றிதழ் விருது, உயிர்மை சுஜாதா கவிதை விருது, பிரமிள் கவிதை விருது, ஸீரோ டிகிரி இலக்கிய விருது ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: svprajesh@gmail.com

எங்களைப்போல் ஒருவன்

9

அப்பு சிவா

ஸ்வாதியின் பிறந்தநாளின்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. நான் செல்வா. ஸ்வாதி என் ஸ்வீட் அரக்கி. காலேஜ் தேர்ட் இயர் பிஸிக்ஸ். 

சென்ற மாதம் என் பிறந்தநாளில் அவளது பாக்கட் மணியிலிருந்து ஒரு அழகிய ஆன்ட்ராய்ட் ஃபோன் பரிசளித்தாள். எனக்கு அதேபோல் கொடுக்க விருப்பமில்லை, தவிர அவளுக்கு இதுபோன்ற பரிசுகள் ஆர்வமூட்டுவதில்லை. சென்ற ஆண்டு நாங்கள் பழகிய முதல் பிறந்த நாளின்போது அவளது ஃபோட்டோவை அழகிய பென்ஸில் ட்ராயிங் ஆக ஒரு ஆப்-ல் டிசைன் செய்து ப்ரேம் போட்டு பரிசளித்தபோது அவ்வளவு மகிழ்ச்சியடைந்தாள். என் நண்பன் ரவிசங்கரிடம் கேட்டபோது அவனது லேப்டாப் கொடுத்தான். அதில் ஃபோட்டோஷாப், மார்ஃபிங்க் போன்ற பலவிதமான டிசைனிங் சாஃப்ட்வேர்களை நிறுவியிருந்தான். ஓரளவுக்கு எனக்கு அதில் பரிட்சயம் இருந்ததால் வேலையை ஆரம்பித்தேன்.

அவளது முகம் ஃபோட்டோவில் அழகாக இருந்தாலும், டிசைன் செய்யும்போது எனக்கு முழு திருப்தி வரவேயில்லை. இரவு நெடுநேரம் சென்றபின் திடீரென்று அந்த ஐடியா தோன்றியது. என் முகம் மெதுவாக அவள் முகமாக மாறுவதாய் வடிவமைத்தேன். அதைத் திரும்பத் திரும்ப போட்டு ரசித்துக்கொண்டிருந்தபோது, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் இதுபோல் முகம் வருமா என்று தோன்றியது. என் முகத்திலிருந்து ஸ்வாதியின் முகம் மாறிவரும் நடுப்பகுதியில் நிறுத்திப்பார்த்தேன். நான் மீசை இல்லாமல் இருப்பதாலும், இருவருக்கும் சற்று சதுரவடிவ முகம் என்பதாலும், மிகச்சரியாக பாதியில் தோன்றிய முகம் அட்டகாசமாக ஒரு புதிய முகத்தைக் காட்டியது. எங்கள் இருவரின் கண்களும், உதடும், நெற்றியும், மூக்கும் மிகச்சரியாக பொருந்தி வந்த அந்த முகம், சட்டென்று பார்க்கும்போது எங்களை விட்டுவிலகி வேறு ஒரு நபராகவே காட்சியளித்தது. இது நான் சொன்னால் தவிர யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதுவே அவளுக்கு சரியான பரிசாக பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டேன்.

அன்றிரவே அவளுக்கு ஃபோன் செய்து முதல் வாழ்த்தை பகிர்ந்து கொண்டபோது அவள், 

“என்னடா கிஃப்ட் செய்திருக்க….”என்றாள். 

“டைம் இல்லப்பா… நாளைக்குதான் ரெடி பண்ணனும்”என்றேன்.

“போடாங்… பொய் புழுகி…. சரியான கள்ளாட்டை….”என்றாள். செல்லமாக பேசும்போது புதுப்புது வார்த்தைகளாக கற்றுத்தருவாள். இன்று கள்ளாட்டை. கள்ள ஆட்டமோ..

மறுநாள் நாங்கள் எப்போதும் காலையில் பார்த்துக்கொள்ளும் மரத்தடியில் காத்திருந்தேன். அவளுக்கு பிடித்த இளநீல நிற சட்டையும் காக்கியும். கடந்து சென்ற நண்பர்கள் “ஸ்வாதிய க்ளாஸ்ல பாத்துக்கலாம் வாடா” என்றதை தலையசைத்து புன்னகைத்தேன். 

தூரத்தே அவள் வருவது தெரிந்தது. ஜில்லென்றிருந்தது. லேசான கருமை பூசிய அடர் நீலவண்ண சுடிதார். அழகு. அவள் பக்கத்தில் யாரோடோ பேசிக்கொண்டு வந்தாள். அருகில் வர அதிர்ந்துபோனேன். பக்கத்தில் வந்தவுடன் ,

“ஹாய்… பப்பி…. எப்படா வந்த..”என்றாள்.

எனக்கு அவளுடன் வந்த நபரை பார்த்தவுடன் தலை சுற்றி கீழே விழும் உபாதை ஏற்பட்டது. களிமண் நிலத்தில் நிற்க வைத்து, கீழே தண்ணீர் ஊற்றி கால்களை உள்ளுக்குள் இழுப்பதுபோன்று கால்கள் நழுவின.

“யேய்… என்னாச்சுப்பா..”

“வந்து … ஹேப்பி பர்த்டே சொன்னதுக்கு தாங்க்ஸ்…”என்று உளறினேன்.

“லூசாடா நீ…. நாந்தாண்டா சொல்லணும்…”

“நீ வேற .. நா வேறயா….”

“டயலாக் உனக்கு செட்டாவுல…”

“இது ….. ?”

“ஓ .. இவனா.. பஸ்ல பேக் வச்சிட்டு தடுமாறிட்டு இருந்தான். நான் சீட்ல இருந்தேனா… பேக் வாங்கி ஹெல்ப் பண்ணினேன். நம்ம காலேஜ் ஸ்டாப்பிங்க் சொல்லத்தெரில… டிக்கட் வாங்கிகொடுத்தேன்.. நார்த்ல இருந்து ஏதோ ட்ரான்ஸ்பர்ல வந்திருக்காங்கலாம். நேத்துதான் ஜாய்ன் பண்ணிருக்கான். நம்ம க்ளாஸ்… ஆச்சரியமாயிடுச்சு…”

“வாங்க … நானும் உங்க க்ளாஸ்தான். செல்வா, ….. செல்வகுமார்… உங்க பேரு..?”என்றேன்.

“செல்வா, அவனுக்கு தமிழ் தெரியாது. ஹிந்தி, இங்லீஷ் தான்.”என்றாள் ஸ்வாதி.

“ஹாய்… ஸெல்வா… ஐ’ம் ராகுல்”என்றான் அவன்.

நான் கைகொடுத்தேன். என் கை நிஜமாகவே ஜில்லிட்டது.

“எங்கடா கிஃப்ட்.. ?”என்றாள் ஸ்வாதி.

“சொன்னேனே… இன்னும் வாங்கலடீ…”என்றேன். நம்பாமல் என்னை உறுத்துப்பார்த்தவள், “நீ இன்னிக்கு சரியில்ல.. சம்திங்க் ராங்…” என்றவாறு வகுப்பறைக்குப் போவதாக கையசைத்துவிட்டுச் சென்றாள்.

நான் அவர்கள் போவதை வெறித்துப் பார்த்துக்கொண்டே என் பேக்கில் வைத்திருந்த அந்த படத்தை எடுத்துப்பார்த்தேன். அதில் ராகுல் முகம் தெரிந்தது. அதே கண்கள், மூக்கு, சிரிப்பு. அப்படியே மரத்தடியில் உட்கார்ந்தேன். எவ்வளவு நேரமென்று எனக்கே தெரியவில்லை.

***

அதன் பின் சில மாதங்கள் எனக்கும் ஸ்வாதிக்கும் நெருக்கம் குறைந்து போனது. அவளுக்கும் ஹிந்தி சுமாராய் தெரியுமாதலால் ராகுலுடன் மிக அதிக நேரம் செலவிட ஆரம்பித்தாள். என்னோடு பேசுவதை அவள் தவிர்த்தது எனக்கு மிகப்பெரும் மனவேதனையை அளித்தது.எனினும், எப்போதும் போல காலேஜ் செல்வதும், காலேஜ் முடிந்தவுடன் நேராக வீடு வந்து படிப்பதில் கவனமுமாக  இருந்தேன்.

ஆனால் நான் கவனிக்காத நேரத்தில் ஸ்வாதி என்னையே பார்த்துக்கொண்டிருப்பதையும், சில நேரங்களில் என்னைப்பற்றி என் நண்பர்களிடம் விசாரிப்பதையும் கேள்விப்பட சில நேரங்களில் தனிமையில் அழகூட நேரிட்டது. ஆனால் அவளை நெருங்கி பேச முற்பட முனையும்போதெல்லாம் எங்கிருந்தோ வரும் ராகுல் அவளிடம் ஒட்டிக்கொள்வான். நான் விலகிவிடுவேன்.

அப்படித்தான் ஒருநாள் அவள் லீவாய் இருக்கும் ஒரு சமயத்தில் ராகுல் என் அருகில் வந்து அவளைப்பற்றி ஹிந்தியில் விசாரித்தான். எனக்கு எப்படித்தான் அவ்வளவு கோபம் வந்ததோப “போடாப்…. பேய்ப்பயலே…”என்று சத்தமிட்டுவிட்டேன். அவன் சட்டென்று அதிர்ந்து பின் தூரச்சென்று என்னைப்பார்த்து லேசாக புன்னகைத்தவாறு செல்வதாய் தோன்றியது.

அதன்பின் மிக சாதாரணமாய் எப்போதும் போல் நடந்துகொள்ளும் அவன், நான் பார்க்கும் சமயங்களில் மட்டும் ஒரு மர்மப்புன்னகை புரிவதாகவே தோன்றியது. அதுவும் அவன் ஸ்வாதியுடன் இருக்கும் சமயங்களில் நான் பார்க்க, வேண்டுமென்றே நெருக்கம் காட்ட ஆரம்பித்தான்.

சக நண்பர்களுக்கு ஸ்வாதியை நன்கு தெரியுமாதலால், அவள் பிறரிடம் பழகுவதோ, ராகுலுடன் பழகுவதோ வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால், எனக்கும் அவளுக்கும் இடையே ஊடல் இருப்பதை ஜாடைமாடையாக பேச ஆரம்பித்தார்கள். என்முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம், அல்லது ஸ்வாதியின் ஃபோட்டோவை பார்த்தால்கூட அவற்றைமீறி அவன் முகம் முன்வந்து சிரித்தது. எங்கிருந்து எப்படி வந்தான், ஏன் வந்தான் என என் மனம் முழுதும் ஆக்ரமிக்க ஆரம்பித்தது. இப்படியே சிலநாட்கள் இருந்தேனெனில் நிஜமாகவே முழு பைத்தியம் ஆகிவிடுவேனென தோன்றியது. அந்த டிசைனை நான் உருவாக்கியிருக்கக் கூடாதெனவும், அல்லது ஸ்வாதியிடம் காட்டியிருக்கவேண்டும் எனவும் பலவாறு என்னையே குழப்பிக்கொண்டேன்.

ஆனால் இதற்கு முடிவு எப்படி, என்னவென்று புரியாத சூழலில் என்.ஸி.ஸி ல் பத்துநாள் கேம்ப் க்காக பீகார் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

***

முதல் நாளிரவு வீட்டில் என் பொருட்களை பேக் செய்துகொண்டிருந்தேன்.

“டேய்… ஸ்வாதி வந்திருக்காடா… என்னம்மா கொஞ்ச நாளா ஆளயே காணோம்..?”என்ற அம்மாவின் குரல் கேட்டது. 

“இல்ல ஆண்ட்டி, கொஞ்சம் வீட்ல வேலை அதிகமாச்சு… அதான்”, ஸ்வாதியின் குரல்.

எனக்கு முதல் தடவையாக அவளிடம் பேசுவது போன்ற நடுக்கம், ஏற்பட்டது.

“வா ஸ்வாதி… உட்கார்…”என்றேன்.

“கெஸ்ட் மாதிரி ஆயிட்டேன்.. இல்லடா…” என்றாள். அதை சொல்லும்போது அவளின் குரல் உடைந்ததைக் கவனித்தேன்.

உள்ளே வந்த அம்மா, “சரி பேசிட்டிருங்க… நான் போய் பால் வாங்கிட்டு வரேன்…” என்றவாறு வெளியே கிளம்பினார்.

“சொல்…” என்றாள்.

“என்ன சொல்ல…” என்றேன்.

“லூசாடா… பைத்தியக்காரா… பத்து நாள் வெளியூர் போற… எங்கிட்ட சொல்லத்தோணலயா… தனியா நான் என்னடா பண்ணுவேன்…”

“இத்தனை நாள் பேசிட்டா இருந்த… ?”

“அது …… சொல்லக்கூடாதுன்னு பாக்கறேன்.. உங்க அக்கா ஊர்பூரா சொல்லியிருக்கா… என்னாலதான் நீ படிக்காம இருக்கியாம்… இல்லாட்டி… கோல்டு மெடல் புடுங்கிடுவியாம்… அங்க போய் கேளு… வந்திட்டான்”

“என்னடி புதுசா சொல்ற… அட கிறுக்கி, அதனாலதான் பேசாம இருந்தியா…”

“வேறென்ன… கள்ளகாதலன் வச்சிருக்கேன்னு நெனச்சியாடா பேமானி..?”

“ச்சீ… வாய மூடு.. சரி காலைல கிளம்பறேன்”

“இரும்மா டீ போட்டுத்தரேன்..” அம்மாவின் குரல் கேட்டது.

“நான் குனிந்தவாறே , இந்த ராகுல் பய வர்லயா…” என்றேன்.

“இல்லடா… அவங்கூட பேச யாருமில்லயா… நொய் நொய்னு என்னையே சுத்தி சுத்தி வரான். அவனை பாத்தா பாவமாவும் இருக்கு, சில நேரம் உன்னை மாதிரியே இருக்கான்னு அவனை பாத்து பேசிட்டிருப்பேன். நீதான் பேசறதில்லயே… என்னை என்ன பண்ணச்சொல்றே…” என்றாள்.

நிமிர்ந்தேன், சட்டென்று என் அருகில் வந்தவள் எதிர்பாரா ஒரு முத்தத்தை என் கன்னத்தில் கொடுத்துவிட்டு, “ஆண்ட்டி, தோ… நான் வந்து ஹெல்ப் பண்றேன்..”என்றபடி வெளியேறினாள்.

அன்றிரவு , பன்னிரண்டு மணியளவில் பஸ் ஏறினேன். ரயில்வே க்ராஸிங் தாண்டும்போது பேக்ல் கையில் தட்டுபட்ட அந்த மார்ஃபிங் புகைப்படத்தை இரண்டாக கிழித்தெறிந்தேன். பத்து நாட்கள் மிகக்கடுமையாகவே போனது. போனால் ராகுலிடம் பேச சில ஹிந்தி வார்த்தைகளையும் கற்றுக்கொண்டேன். பத்து நாள் கேம்ப் முடிந்து வீட்டுக்கு ஒரு சாயந்திர வேளையில் வந்து சேர்ந்தேன். 

ஸ்வாதி என் வீட்டில்தான் இருந்தாள். என்னை பார்த்த அவளின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். தனியே மாட்டினால் கட்டிப்பிடித்து அழுதுவிடுவாள் போல தோன்றியது. ஒருமணி நேரம் பேசிவிட்டு கிளம்பும்போது சொன்னாள்,

“அந்த ராகுல் இறந்துட்டான்பா…. கேள்விபட்டியா ?”

அதிர்ந்துபோனேன்..

“என்ன ஸ்வாதி சொல்ற… எப்படி ?”

“நீ கேம்ப் கிளம்பின இல்ல…. அன்னிக்கு ராத்திரி… நம்ம ரயில்வே க்ராஸிங்….. ல தாண்டியிருக்கான். ரயில் வந்தத கவனிக்கல.. சரியா பன்னண்டு மணியிருக்கும்… ரெண்டா போயிட்டான்… ஸ்… கொடூரம்”என்றாள்.

***

அப்பு சிவா – இயற்பெயர் அ.சிவக்குமார். சேலத்தை சேர்ந்தவர். ஓவியர், எழுத்தாளர். சிறார் இதழ்களுக்கு, கதைகளுக்கு படம், அட்டைப்படம் வரைந்து கொடுப்பது உண்டு. நான்கு நாவல்கள், இரண்டு சிறார் புத்தகங்கள், ஒரு சிறுகதைத்தொகுப்பு அச்சில் வெளிவந்துள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.  பூஞ்சிட்டு எனும் சிறார் இணைய இதழில் ஆசிரியர் குழுவில் 6 ஆண்டுகளாக செயல்படுகிறார். மின்னஞ்சல்: appusiva.artist@gmail.com

இகல்

0

தேவிலிங்கம்

த்தனை நபர்களும் நெருக்கியடித்துக்கொண்டு ஒரே காரில் செல்வதை நினைத்தாலே மூச்சுத்திணறியது. வேறுவழியின்றி அப்பா, அம்மா, இன்னும் நெருங்கிய உறவினர்கள் இருவரோடு இந்தச் சிறிய காரில் பயணம் செய்ய ஒப்புக்கொண்டாள். அவளுக்கு எங்குச் சென்றாலும் தாராளமாகத் தங்கு தடையின்றி வீசிக்கொண்டிருக்கும் காற்று வேண்டும். இல்லையெனில் குமட்டி ஓங்காரித்துக்கொண்டு வரும். முகத்தைப் பட்டுஇழைகள் வருடுவதைப் போன்ற மெல்லிய காற்று. ஆளை அப்படியே தள்ளிப்பார்க்கும் ஆடிக்காற்று. மலை பிரதேசங்களில் முகத்தைச் சிலீரென உறையவைக்கும் பனிக்காற்று. காற்றில் தான் எத்தனை வகைகள்? உள்ளிருக்கும் இறுக்கத்தைக் குறைக்கக் காருக்கு வெளியே பார்த்தவளின் கண்களுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்லும் இளைஞனின் முடியை இழுத்து ஒரு குழந்தைக் காற்று வம்பிழுப்பதைக்கண்டு தன்னைமீறி புன்னகைத்துக்கொண்டாள். எதையோ சொல்ல நினைத்து திரும்பிப்பார்த்த அம்மா இவள் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துத் திகைத்ததும் முகத்தைச் சட்டெனத் துக்ககரமாக வைத்திருப்பதைப் போலொரு பாவனையோடு இருக்கையில் சாய்ந்துக்கொண்டாள். சன்னலோர இருக்கைதான் வேண்டுமென அடம்பிடித்துப் பிடிவாதமாக அமர்ந்திருந்த சின்னவளை இழுத்து, கலைந்திருந்த தலைமுடியினைக் கைகளால் கோதி சரி செய்தாள் .

அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த மகிழினி, சுற்றிலும் நிலவிவந்த அமைதியினை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் கண்களைச் சுழற்றி, இறுக்கமாக அமர்ந்திருந்த தாத்தா பாட்டி உறவினர்கள் அனைவரையும் மெல்ல ஒரு பார்வை பார்த்தது. எவர் முகத்திலும் துளிக்கூடச் சிநேகமான பாவனை இல்லாதது கண்டு கொஞ்சம் திகைத்தது. பின் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக “அம்மா பசிக்குதும்மா எதாவது வாங்கிக்கொடு” என்றது.

கிளம்பும் அவசரத்தில் குழந்தைகளுக்கு எதுவுமே கையில் எடுத்துவராதது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் எனத் தன்னை நொந்துக்கொண்டாள். சஞ்சய் வந்திருந்தால் இப்படி யோசித்துக்கொண்டிருக்கவே தேவையில்லை. எங்கு எதைக் கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுத்துவிடுவான். அவனோடு செல்கையில் இதுவரை அவளையோ குழந்தைகளையோ பசி எனக் கேட்கவே விட்டதில்லை. அதற்கு முன்பே அனைத்தும் வந்துவிடும். அவசரத்திற்கு “நீ முதலில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போ! பின்னால் வந்துவிடுகிறேன்” என அனுப்பி வைத்துவிட்டான்.

திருமணத்திற்குப் பின்பு சில சொகுசுகளுக்கு மனம் பழக்கப்பட்டுவிட்டிருந்தது. அதொரு பழக்கப்பட்ட கடிவாளக்குதிரை. வெளியே வந்தால் குழந்தைகளை சஞ்சய் கவனித்துக்கொள்வான். எந்தக் கவலையும் இன்றி அவள் சிறுபிள்ளையைப்போல அண்ணாந்து வானத்தைப் பார்த்துக்கொண்டே பயணத்தை ரசிக்கத்தொடங்கிவிடுவாள்.

இப்பொழுது என்ன செய்வதெனத் தெரியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த யாழினிக்கும் பசியெடுக்க ஆரம்பித்துவிடும். அப்புறம் இருவரும் அழ ஆரம்பித்துவிடுவார்கள். இத்தனை நேரம் குழந்தைகள் பசியைப் பொறுத்துக்கொண்டிருந்ததே மிகப்பெரிய விசயம். காரை நிறுத்தச்சொல்லி உணவுகள் வாங்கச்சொல்லுவது எப்படி என யோசித்தாள்.

நொடிக்கூடத் தாமதிக்காமல் ஊருக்கு சென்றுவிடும் அவசரமும் அவசியமும் அனைவரது முகத்திலும் தெரிந்தது. காரை பின்பற்றித் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்துக்கொண்டிருந்ததால் வெகு வேகமாக ஊரை நோக்கி சென்றுவிடும் முனைப்பில் அனைவருமே இருப்புக்கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். 

இதுவரை இந்த வழியில் வந்ததே இல்லை. இருபக்கமும் செம்மண் நிலங்கள். மக்களின் வசதிக்காக, தேவைக்காக, இந்த நெடுஞ்சாலைகள் போடப்பட்டபிறகு பயணங்களில் அந்நியத்தன்மை ஒட்டிக்கொண்டது. முன்பு நிறுத்தங்களில் பேருந்திலிருந்து எட்டிப்பார்த்தால் வீடுகளில் எரியும் குண்டுபல்புகளும் அதற்குக் கீழே சிலேட்டில் குனிந்து எதையாவது எழுதிக்கொண்டிருக்கும் சின்னக்குழந்தைகளும் கண்ணுக்குத் தென்படுவார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் சிவப்போ பழுப்போ கறுப்போ தவறாமல் கழுத்தில் தொங்கும் மணியோடு ஒரு நாய்ப் படுத்துக்கொண்டிருக்கும். அந்தச் சித்திரம் அத்தனை வசீகரமானதாக இருக்கும். இப்பொழுது இரையை உண்ட ஜீரணமாகாத நீண்ட சர்ப்பங்களெனப் பயமுறுத்தும் கரிய சாலைகள் அவ்வளவுதான்.

தூரத்தில் ஒரு சின்ன டீக்கடை தெரிந்தது. இனியும் தாமதிக்ககூடாதென “அப்பா புள்ளைங்களுக்குப் பசி வந்துட்டு… டீ குடிச்சிட்டு போலாம்பா…” என்றாள். அப்பா முன் இருக்கையிலிருந்து தலையைத் திருப்பிப் பின்னால் அமர்ந்திருக்கும் அம்மாவைப் பார்த்தார். அம்மா புடவைத்தலைப்பை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு மூக்கை உறிஞ்சியப்படி ”எனக்கு எதுவும் வேணாம்… இப்படிப்பட்ட நிலமையில பச்சை தண்ணிக்கூட என்பல்லு மேல படாது அக்கா! நீயும் அத்தானும் போயி டீக்குடிச்சிட்டு வாங்க… மலரு, நீயும் போயி புள்ளைங்களுக்கு எதாவது வாங்கிக்கொடு…”எனச் சொல்லிவிட்டு சன்னலுக்கு வெளியே பார்வையை இலக்கில்லாமல் அலையவிட்டாள்.

“வானதி… சும்மா எதாவது பேசிட்டு இருக்காத… நீயும் இறங்கு, சுகர் ஏறிட்டுன்னா மயக்கம் வந்துடும்… நாம இனி எப்ப சாப்பிடப்போறோமோ தெரியல…“ எனச் சொல்லியபடியே, டிரைவரிடம் காரை கடையின் அருகில் நிறுத்த சொல்லிவிட்டு கதவைத்திறந்து இறங்கிக்கொண்டார் அப்பா.

“இவுங்கள்லாம் என்ன மனுசங்களோ தெரியல… எப்படித்தான் இவுங்களுக்கெல்லாம் இப்படிபட்ட நிலமையிலையும் பசிக்குதோ? பசி… பசின்னு பொழுதானைக்கும் பசிதான்… கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா பாரு…“ என அம்மா வாயிக்குள் முணுமுணுப்பது காதுக்குள் விழுந்தது. அது ஏனோ தெரியவில்லை ஈசல்கள் பறக்கும் பொழுது அதன் முடிவை நினைத்து நாள் முழுக்க வருத்தப்படுபவளுக்கு எதுவும் சங்கடமாகத் தோன்றவில்லை. கடமைக்காக இந்தப் பயணம் செல்வதாகத்தான் தோன்றியது. எந்த ஒட்டுதலுமின்றி, கடமைக்காக உறவுகள். கடமைக்காகச் செயல்கள். கடமைக்காகப் பேச்சுக்கள். இத்தனை நாட்கள் ரத்தம் கசிந்துக்கொண்டிருந்த வடு இப்பொழுதுதான் ஆறியதாகப்பட்டது. மனசு ஓர் இறகாகி லேசாகக் காற்றில் பறப்பது போல இருந்தது.

பின்னால் வந்துக்கொண்டிருந்த ஆம்புலன்ஸும் இவர்கள் நின்றதைக் கண்டு அருகில் வந்து நின்றது. டிரைவரும் கீளினரும் இறங்கி கடையை நோக்கிவந்தார்கள். பிளாஸ்டிக் தன்மை வந்துவிட்ட உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முகங்கள். இந்த வேலையில் காலப்போக்கில் அவர்களுக்கு இப்படியான தன்மை வாய்த்திருக்கக்கூடும். ஆம்புலன்ஸின் பின்புறக்கதவைத் திறந்து தினேஷ் இறங்கி ஓடிவந்தான்.

“அத்தை… அத்தை… அம்மாவுக்கு அந்த வண்டியில உட்காரமுடியலையாம்… மயக்கமா வருதாம்… இறங்கி இந்தக் காருக்கு வந்துடவான்னு கேக்குறாங்க…“ எனப் பதறியபடியே அம்மாவைப் பார்த்துக் கேட்டான். நிமிர்ந்து தினேஷைப் பார்த்தாள். அவனுடைய இமைகள் மெலிதாக வீங்கி பளபளத்தன. அழுதிருக்கக்கூடும். எப்படியாக இருந்தாலும் அவனுக்கு அப்பா.

“என்னாது மயக்கமா வருதா? என் அண்ணனோட சேர்ந்து சொத்தையெல்லாம் அழிச்சி கூத்தடிச்சி அவன ஒண்ணுமில்லாம செல்லாக்காசாக்கி கொன்னுட்டு… இப்ப புருஷன் செத்ததுக்கு அப்பறம் உங்க அம்மாவுக்குப் புருசன் ஒத்துக்க மாட்டேங்குதோ… அப்பமட்டும் இனிச்சிது… இப்ப கசக்குதா? புருஷன் செத்து பொணமா வரப்பக்கூட உங்க அம்மாவுக்குச் சொகுசு கேட்குதோ? அதெல்லாம் இங்க இருக்கிறவங்களுக்கே இடம் இல்லை… அங்கையே உட்கார்ந்து வர சொல்லு” எனச் சொல்லிவிட்டு காரைவிட்டு இறங்கி விறுவிறுவென டீக்கடை நோக்கி நடந்தாள் அம்மா.

அத்தைகள் அன்பாகப் பேசியே பழகிய காதுகளுக்கு இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது கடினமாகத்தான் இருக்கும் தினேஷுக்கு. தந்தையை இழந்த துக்கமும் தனியாக நிராதரவாகத் தந்தையின் பிணத்தோடு பயணிக்கும் தாயின் நிலைமையும் வேலைக்குச் செல்லாமல் சொகுசாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் அவனுக்கு எப்படிபட்ட மனநிலையைத் தந்திருக்கும் என யோசித்தாள். பாவமாக இருந்தது.

வனிதா மாமி மிகவும் சுத்தம் பார்ப்பவள். கழுவிய வீட்டில் யாராவது அழுக்கு காலை வைத்துவிட்டாலே மீண்டும் நாலு முறை வீட்டை கழுவுவாள். தினமும் மூன்று முறை குளிப்பாள். ஆறுதடவை சாமிக் கும்பிடுவாள். தேய்த்த பாத்திரங்களை மீண்டும் மீண்டும் தேய்த்து வைப்பாள். ஆனால் ஒன்றுமட்டும் புரியவில்லை. இவ்வளவு சுத்தம் பார்ப்பவள், ஊர் முழுக்கப் பெண் தொடுப்புகளோடு திரியும் மகேந்திரன் மாமாவை எப்படி அனுமதித்தாள்? ஏன் பெண்கள் அனைவருமே ஆண்கள் விசயத்தில் மெழுகுப்போல உருகிவிடுகிறார்கள்? ஏன் அவர்களது அண்மையை மட்டுமே துணையென நம்புகிறார்கள்? பெண்களுக்கு ஆண்கள் ஏதாவது ஓர் உறவில் அவர்களோடு இருந்தே ஆகவேண்டுமா என்ன?

“அம்மா பாவம்மா வனிதா மாமி…” என மெதுவாக அவள் சொன்னது அவளுக்கே காதில் சரியாக விழவில்லை. அம்மா திரும்பி ஓர் அதிகாரமான பார்வை பார்த்தாள். 

“என்னது பாவமா? அகங்காரம் புடிச்ச நாயி அவ… அண்ணனுக்குக் கல்யாணம் ஆன புதுசுல நீங்கள்லாம் சின்னக்குழந்தைங்க… இடுப்புல ஒண்ணு, கையில ஒண்ணு வச்சிட்டு இரண்டு நாள் எங்க அம்மாவீட்ல தங்கிறதுக்குப் போனேன்… ஒருவாய் சோறு கூட ஒழுங்கா போடமாட்டா… ஏன் அண்ணி இப்படிச் செய்றீங்கன்னு கேட்டதுக்கு… இது என் வீடு, இந்தக் கேள்வி கேக்கிற அதிகாரத்தையெல்லாம் உன் வீட்ல போய் வச்சிக்கன்னு சொன்னா… தரித்திரம் புடிச்ச மூதேவி… இவ காலடி எடுத்து வச்ச நேரம், எங்க அம்மா வீடே ஒண்ணுமில்லாம போயிட்டு…“ எனச் சொல்லிவிட்டு அழுதபடியே அருகில் சுட்டு அடுக்கப்பட்டிருந்த வடைகளில் ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் வைத்து மெல்லத் தொடங்கினாள்.

“அப்படி அக்கறையா இருந்தா, நீ போயி ஆம்புலன்ஸ்ல உட்கார்ந்து வர்றீயா?” என வாயில் மென்றுக்கொண்டிருந்த வடையோடு கேட்டதைப் புரியாதது போலவே புருவத்தை உயர்த்திக் கேள்விக்குறியாகப் பாவித்தபடியே அவசர அவசரமாக நகர்ந்து குழந்தைகளின் கைகளைப் பிடித்துச் சற்றுத் தூரத்தில் தெரிந்த கழிப்பறையை நோக்கி நகரத்தொடங்கினேன்.

 வனிதா மாமியைப் பார்த்த முதல் தருணம் ஒளிப்பட்டதும் கிணற்றுக்குள் பதிந்திருக்கும் பாசிப்படர்ந்த பாத்திரங்கள் மின்னுவது போல நினைவிலாடியது. அப்பொழுது L.K.G படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். பாலர் பள்ளியில் “வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே…” எனச் சலங்கை ஒலி படத்திலிருந்து ஆடியபாடலுக்கு அணிந்திருந்த அழகான நீலநிற மேக்ஸியைத்தான் அன்று அணிந்திருந்தாள். வனிதா மாமியின் திருமணப் புகைப்படங்களில் முழுக்க இடுப்பை வளைத்து நடனமாடியபடியேதான் நின்றுக்கொண்டிருக்கிறேன், மனதிற்குள் பாடல் ஓடிக்கொண்டே இருந்திருக்கும் போல! 

வெள்ளை வெளேரென மாவு பொம்மை போல அத்தனை அழகாக இருந்தாள் மாமி. கைகால்கள் எல்லாம் நீட்ட நீட்டமாக! அவளருகில் நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். ஒருவார்த்தைகூட அவள் கடிந்து பேசியதாகவோ சச்சரவுகள் செய்ததாகவோ நினைவுகள் இல்லை. ஒருவேளை அப்பொழுதெல்லாம் சிறு பிள்ளைகள் கூடினால் விளையாட்டுகள்தான் பிரதானமாக இருக்கும். இப்பொழுது உள்ளது போலவா அலைபேசியை வைத்துக்கொண்டே திரிவார்கள்? நொண்டிக்கோடு, குரங்குப்பெடல் சைக்கிள், உப்புமூட்டை, பச்சைக்குதிரை, கண்ணாம்பூச்சின்னு எவ்வளவு விளையாட்டுகள்? எல்லாமே பழங்கதைகளா மாறி வருசங்களாகிருச்சி! அப்படி விளையாட்டுச் சுவாரஸ்யத்தில் ஒருவேளை மாமியின் உண்மையான இயல்புகளையும் குணக்கேடுகளையும் கவனிக்காமல் விட்டிருப்பேனோ? இப்பொழுதுக்கூட மாமி எங்குப் பார்த்தாலும் “மலர் எப்படி இருக்க? நல்லாருக்கீயா?” என விசாரிப்பதில் பொய்மை இருப்பதாகத் தோன்றாது. ஆனால் அதற்காகவெல்லாம் ஆம்புலன்ஸில் பிணத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து வருவதை யோசிக்க முடியவில்லை. பிணமா? அதைத் தாண்டி மகேந்திரன் மாமாவைப் பற்றி நினைக்க ஒன்றுமே இல்லையா?

மகேந்திரன் மாமா ஏற்காட்டில் மரங்கள் ஏற்றுமதி தொழில் செய்தபொழுது ஒரேயொருமுறை விடுமுறைக்குச் சென்றிருந்தாள். எங்குப் பார்த்தாலும் மலர்ந்திருக்கும் வண்ணப்பூக்கள். உதட்டை உலர வைக்கும் குளிர். திகைப்பூட்டும் மலைவழிபாதை பயணங்கள். எதைக் கேட்டாலும் தின்பதற்கு வாங்கித்தரும் மகேந்திரன் மாமா என உறவினர்கள் சொல்வதைக்கேட்டு அடம்பிடித்து ஏற்காடுச் சென்றாள். பத்து வயதில் பார்ப்பவை அனைத்துமே மிக அழகாக வசீகரமாகத் தோன்றும். தகவல்கள் தரும் குழப்பங்களின் தீர்வை மனம் தேடிக்கொண்டேயிருக்கும். தீர்வுகள் இன்னும் குழப்பும்.

அன்றையப்பொழுது பெரும்பாலும் பயணத்திலேயே முடிந்ததால் அடுத்த நாள் மலையைச் சுற்றிப் பார்க்கும் ஊதாக்கனவுளோடு சீக்கிரமே உறங்கச் சென்றுவிட்டாள். மாமா இன்னும் வந்திருக்கவில்லை மாமாவின் குழந்தைகள் இருவருக்கும் நடுவில் படுத்துக் கதைகள் பேசியபடியே உறங்கிவிட்டாள். அவளுக்கு விழிப்பு வரும்போது, நேரம் சரியாகத் தெரியவில்லை. நெஞ்சின் மீது எதுவோ பாரமாக இருந்தது. ஊறும் கைகளும் சிகரெட் வாடையும் அது மாமாதான் என உணர்த்தியது. எழுந்திருக்கவோ கைகளைப் பிடித்துத் தள்ளிவிடவோ தோன்றாமல், சில வினாடிகள் அதிர்ச்சி! அது ஒரு மரண அதிர்ச்சி! அதன் பயங்கர அதிர்வுகள் வாழ்நாள் முழுவதும், இன்றுவரை தொடர்வதை என்னால் உணர முடிகிறது.

தனியாகச் செல்ல பயம். எந்த ஆணைப் பார்த்தாலும் நடுக்கம். குழந்தைகளை யாரிடமும் எதற்காகவும் ஒருமணிநேரம் விட்டுச்செல்லக்கூடத் தயக்கம். வாழ்க்கையில் மனிதர்கள் மீது நம்பிக்கை இழப்பதை போலொரு நிகழ்வு பெரும் துயரம். அதற்குப் பின் வந்த வருடங்கள் நரகமானவை. உள்ளத்தையும் உடலையும் வெறுக்கவைத்தவை. உறவுகளின் மேல் பிடித்தம் இல்லாமல் செய்தவை.

அடுத்த நாள் விடிந்ததும் ஒரே அழுகை. எந்தக் காரணமும் யாரிடமும் சொல்லவில்லை. வனிதா மாமி எவ்வளவோ கெஞ்சியும் சாப்பிடவில்லை. ஊருக்கு போக வேண்டும், அப்பாவிடம் செல்லவேண்டும் என்ற வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் பேசவில்லை. வனிதா மாமி அன்று மதியமே கிட்டுத் தாத்தாவோடு ஊருக்கு அனுப்பிவைத்தாள். பேருந்து நிலையத்திற்கு எங்களை அனுப்பி வைக்க வந்தவள், ”ஏன் மலரு லீவு முழுக்க இங்க தான இருக்கப் போறேன்னு வந்த? புள்ளைங்கல்லாம் ஆசையா இருந்துதுங்க… எங்கிட்ட சொல்லு என்னாச்சு?” என்றவள் அழுதழுது வீங்கிப்போயிருந்த எனது கண்களைப்பார்த்து, “மாமாவ உனக்குப் பிடிக்கலையா?” எனக் கேட்டுவிட்டுக் கண்களை அமைதியாக ஊடுருவிப்பார்த்தாள். இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அவளுக்கு எதுவோ தெரிந்திருக்கலாம் எனத் தோன்றியது. 

கார் புறப்படத் தயாரானது. தேநீரை அவசரமாகக் குடித்தவள், அப்படியே யதார்த்தமாக ஆம்புலன்ஸை பார்த்தாள். நிழலாகக் கலைந்த தலையோடு அதே அழகோடு வனிதாமாமி அமர்ந்திருந்தாள். பளிங்கு உருண்டை நீக்கப்பட்ட காகிதங்கள் போல மனம் பயணங்களின் காட்சிகளில் பறக்க கெஞ்சியது. மாமி பிணத்தின் பக்கத்தில அமர்ந்து வரட்டும். அதுதான் சரி!

***

தேவிலிங்கம் –இயற்பெயர் விஜிதேவி ராமலிங்கம். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை. தற்போது குடும்பத்துடன் வேதாரண்யத்தில் வசித்து வருகிறார். இரண்டு சிறுகதை தொகுப்புகள், கவிதை மற்றும் நாவல் எழுதியிருக்கிறார். நெருப்பு ஓடு எனும் நாவல் ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது. இவரது மூன்று நூல்கள் வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களால் முனைவர் படிப்பின் ஆராய்ச்சி நூலாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவருக்கு ரமேஷ்பிரேதன் நினைவு பரிசு விஷ்ணுபுரம் அமைப்பினரால் வழக்கப்பட்டுள்ளது.  இணைய இதழ்கள் வார மாத இதழ்களில் கவிதைகள் சிறுகதைகள் எழுதிவருகிறார்.கலகம் இணைய இதழ் வாசகசாலை இணைய இதழ் குங்குமம் ஆனந்த விகடனில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவருகின்றன. மின்னஞ்சல்: devilingam0205@gmail.com

தேர் பொம்மை

1

ந.சிவநேசன்

    மேற்குத் தெருவிலிருந்து திரும்பி வடக்குத் தெரு முனையில் தேர் வளைந்து கொண்டிருந்தது. பின் சக்கரத்தில் கட்டையைப் போட்டதில் கொஞ்சம் ஆடி அதிர்ந்து நிற்பது உச்சியை மச்சுவீட்டு மூலையிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. முரளி தேர்வீதிக்கு போகலாமா என யோசித்தான். கேட் வீட்டையும் திரும்பிப் பார்த்தான். கேட் வீட்டுக்காரப் பையன் திரும்ப வெளியில் வரவில்லை. அந்த வீட்டுக் கறிக்குழம்பு வாசனை வித்தியாசமாக கமழ்ந்தது. மூக்கில் ஏற ஏற இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமென மணத்தது. அம்மாவும் நன்றாகத் தான் குழம்பு வைப்பாள். ஆனால் இந்த வீட்டு வாசனை ஏன் நம் வீட்டுக்குழம்பில் வரவில்லை எனக் கேட்பான். 

“ந்தந்த வீட்டுக்குழம்பு மணக்குறது வெளியத் தெரியாதுடா. பக்கத்து வீட்டுக் குழம்பு, எதிர்த்த வீட்டுக் குழம்பு வாசனை தான் மூக்குக்கு ஒனக்கையா இருக்கும்” என ஏன் அப்பாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் எனத் தெரியவில்லை. 

அவர்கள் பட்டை இலவங்க சேர்மானங்கள் நிறைய போடுவார்களென பின்னொரு நாளில் பாட்டி சொன்னாள். லேசாக கதவு திறப்பது தெரிந்து கேட்டுக்கு அருகில் சென்றான். இவனுக்காகவே காத்திருந்தது போல அந்தப் பையன் இரண்டு கைகளையும் பின்புறமாக வைத்துக் கொண்டு வெளியே வந்தான். 

இவன் பார்க்கும்படி ஹெலிகாப்டரை வெளியே எடுத்தான். அது நிஜமாகவே வானத்தில் பறந்ததை முரளியால் இன்னமும் நம்பமுடியவில்லை. ஆயா சோடாப்பூ வாங்கி வரச் சொல்லி கடைக்கு அனுப்பிய போது ரகுவைப் பார்த்தான். அவனும் நம்பவில்லை. 

“நெஜமாவே மேல பறந்துச்சாடா? மரத்துல ஏதாவது நூலு கட்டியிருப்பாங்க. நீ சரியா கவனிச்சிருக்க மாட்ட” என்றதும் அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. 

“அடடா.. அத கவனிக்காம விட்டுட்டமே.. அந்த கேட்டு பையன் நல்லா ஏமாத்திட்டான். இந்த தடவ கண்டுபுடிச்சி ஐய்யாருக்கு மூக்க உடைக்கணும் “ 

நேராக ஓடிப்போய் கேட்டைப் பிடித்தபடி நின்றபோது பொடணியில் அடி விழுந்தது. “அட எருமமாடு.. எங்கடா சோடாப்பு?” 

திரும்பவும் கடைக்கு ஓடி வாங்கிவந்துத் தந்துவிட்டு கேட்டுக்கு அருகில் வந்து நின்றுகொண்டான். நிஜமாகவே அதில் நூல் எதுவும் கட்டப்படவில்லை என அறிந்தபோது இன்னும் வியந்தான். உற்று கவனித்தான். உண்மையில் இறக்கை ஒருபக்கம் சுற்ற ஹெலிகாப்டரும் எதிர்திசையில் சுற்றியது.

 “இப்படி வண்டியே சுத்துனா உள்ள எப்படி உக்காந்து ஓட்டுறது? மயக்கம் வந்துடாது..” இதெல்லாம் ஒரு வண்டியா என்றபடி வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டான். ஆயா புகைக்கு கண் கசிகிற நேரத்திலும் தன்னையறியாமல் ஊதாங்குழலில் கொஞ்சம் விசில் சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தாள். அவன் அந்தப் புகைக்கும் எழுந்து கொள்ளவில்லை. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அவனை அதன் இருப்பு இழுத்தது. கேட்டால் தருவானா எனத் தெரியவில்லை. நின்று பார்த்துக்கொண்டாவது இருப்போமே. 

இவன் வருவதற்காகவே காத்திருந்தது போல நின்றிருந்த அந்தப் பையன் சட்டென ஹெலிகாப்டரை பறக்கவிட்டான். முரளி கேட்டை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான். சிவப்பு கலர் ஹெலிகாப்டர். கைக்கு அடக்கமாக கதாநாயகன்கள் காலால் தொங்கிக் கொண்டு போவார்களே.. அந்த மாதிரி ஸ்டைலாக இருந்தது. 

அவன் விரலுக்குள் ரிமோட் கண்ட்ரோல் வைத்திருப்பது போல குறிப்பிட்ட தூரம் சென்றதும் இறக்குகிறான். நினைக்கிற பாதையில் நினைக்கிற உயரத்தில் செலுத்தி ஏற்றுகிறான். கொய்யா மரங்களும் சன்னமல்லிச் செடிகளும் நிறைந்திருக்கிற அத்தோட்டத்து சேற்றில் ஹெலிகாப்டர் விழுந்துவிடுமோ என இவன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அது பாதை விலகி தோட்டத்துக்கு வருகிற பைப்புக்கு நேர் பறந்து நீரில் விழுவது போல் வந்தது. 

“போச்சு… போச்சு..” என இவன் அலறிக்கொண்டிருக்கும்போதே அவன் ஓடிவந்து பிடித்துக் கொண்டான். இவனை ஒரு நொடி பார்த்து திரும்பிக் கொண்டான். எள்ளலோடு சிரித்தது போலிருந்தது. 

“நிறையா உயரம் பறக்குமா? “ 

“ண்ணா… இன்னும் எவ்வளவு உயரம் பறக்கும்?” 

இவன் கத்திக்கேட்டும் அவன் காதில் விழவேயில்லை. அம்மாவிடம் சொன்னால் “அவங்க தான் கேட்டுக்கு உள்ள இருக்காங்களே.. எப்படி விழும்?” என மீண்டும் பொடி வைத்துப் பேசுவாள்.

அவள் தான் ஆஸ்பத்திரியில் இருக்கிறாளே.. அதை கூட கேட்க முடியாது.எட்டிப் பார்த்து தேர் வடக்கு வீதியின் பாதி தூரம் வந்திருக்கிறது எனத் தெரிந்து கொண்டான். சுங்கானும் ரகுவும் முன்பே தேரிழுக்க, தேருக்கு முன்பாக நடனமாட வரச் சொல்லிவிட்டுப் போனார்கள். செண்டை மேளச்சத்தம் கேட்டு உள்ளுக்குள் ஆடுகிற உடலை அடக்கிக்கொண்டான். அங்கே போகணும் போலவுமிருந்தது. விலையை மட்டும் கேட்டுவிட்டுப் போகலாம் என முடிவெடுத்தான். 

“இது எவ்வளவு ண்ணா?”

அந்தப் பையன் கையில் இப்போது ரிமோட் இருந்தது. ரிமோட்டை இயக்கியதும் ஹெலிகாப்டர் கேட்டுக்கு வெளியே பறந்தது. இவன் எட்டிப் பிடிக்கிற உயரத்தில் பறந்தும் பிடிக்க முயற்சிக்கவில்லை. அவன் போக்கு காட்டுவான் எனத் தெரியும். 

“என் வயசு தான் இருக்கும்.. ஒண்ணு ரெண்டு கூட இருக்கலாம்…” என மதிப்பிட்டான். வசதியானவர்கள் எல்லோருமே தன்னைவிடப் பெரியவர்களாக இருப்பதாகப்பட்டது.

தலைக்கு மேலேயே பறந்து கொண்டிருப்பது எரிச்சலைத் தந்தது. இவன் கையை நீட்டினால் ஹெலிகாப்டர் உள்ளே போய்விடும் என்பதால் அசுவாரசியமாக எட்டிப் பிடிப்பது போலக் குதித்தான். சட்டென அந்தப் பையன் வண்டியை உள்ளே இழுத்துக் கொள்ள முரளி தெரிந்தது தான் என்பதுபோலப் பார்த்தான். வேலிக்கு உள்ளே சென்றபிறகு ஹெலிகாப்டர் மீதான ஆசை கூடியிருந்தது.

“இது எவ்வளவு ண்ணா?”

அந்தப் பையன் தெரியாதது போல “எது?” என பறப்பதையே பார்த்துக்கொண்டு கேட்டான். 

“இந்த பொம்ம.. ஹெலிகாப்டர்..”

“தெரியலையே… எங்கப்பா பெங்களூர்ல இருந்து வாங்கிட்டு வந்தாரு” 

“அதானே பாத்தேன்…நம்ம ஊர் பக்கம் இந்த பொம்மைய பாத்த மாதிரி தெரியலையே” என யோசித்தான். பெங்களூர் எங்கே இருக்கிறதென அவனுக்குத் தெரியவில்லை. ஆத்தூருக்கு அந்தப்பக்கமாகத் தான் இருக்க வேண்டும். இருபத்தியொண்ணாம் நம்பர் பஸ்ஸில் ஏறினால் கூட அந்த ஊருக்குப் போய்விடலாம். பஸ் டிக்கெட் பன்னிரெண்டு ரூபாயிருக்கும். பள்ளிச் சீருடையிலேயே போனால் காசு கேட்கமாட்டார்கள். எப்படியும் பஸ் ஸ்டாண்டிலேயே பொம்மை கடைகளிலிருக்கும். வாங்கிக் கொண்டு அதே பஸ்ஸில் ஏறிக் கொள்ளலாம். துணைக்கு வேண்டுமானால் ரகுவை கூட்டிக்கொள்ளலாம். அவன் சும்மா வருவானா? பாவம். வேண்டுமானால் அவனுக்கு மூன்று முறை மட்டும் ஓட்டிப்பார்க்கத் தருவதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். எல்லாம் சரி… எவ்வளவு காசு என்று இந்தண்ணன் சொல்ல மாட்டேன் என்கிறாரே..

பத்து ஐஸ் காசுகளை வைத்தால் ஒரு செருப்பு வாங்கலாமென பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லியிருக்கிறார். இவனிடம் கார் பொம்மை, குதிரை பொம்மையெல்லாம் இருக்கிறது. எல்லாம் உடைந்திருக்கிறது. அவையெல்லாம் போன வருடம் அப்பா சபரிமலை போய்வந்தபோது வாங்கி வந்தவை. எவ்வளவு குடித்தாலும் அவனுக்குத் தேவையானதை மட்டும் வாங்கித் தந்துவிடுகிற அப்பா.

அவன் அப்பாவை நினைத்து வருந்தினான். அப்பா மட்டும் பாக்கு மரம் ஏறிக் கீழே விழுந்து இடுப்பு உடைத்துக் கொள்ளாமல் இருந்தால் இந்நேரம் இப்படி நின்றிருக்க வேண்டியதில்லை. அம்மா சில நேரம் பேரம் படியாமல் போய் பொம்மை வாங்கித் தராமல் வெள்ளரிப்பிஞ்சோடு வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவாள். அப்பா அப்படி கணக்கு பார்க்க மாட்டார். அப்பா எப்போது வீட்டுக்குத் திரும்புவார் என யோசித்தான். வீட்டுக்குத் திரும்பினாலும் எழுந்து நடப்பது சிரமமென சண்முகம் மாமாவிடம் ஆயா நேற்று சொல்லிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. அப்படியென்றால் அம்மா மட்டும் இனிமேல் பாக்கு உரிக்கப் போவாளாயிருக்கும். அப்படியென்றால் யாரிடம் கேட்பது என யோசித்தான். விளங்கவில்லை. 

“ண்ணா… நான் ஒரு தடவ அது பாத்துட்டு தர்றேன். தர்றீங்களா?”

அவன் ஹெலிகாப்டரை பத்திரமாக சன்னல் திட்டின் மீது வைத்துவிட்டு பந்தை எடுத்து சுவற்றில் அடிக்கத் தொடங்கினான். இவன் இரண்டாவது முறையும் கேட்டபோது அசட்டையாக தலையாட்டினான். சிவப்பு ஹெலிகாப்டரின் வடிவத்தை கண்களில் நன்றாக ஊன்றிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து வீட்டுக்கு வந்தான். 

ஆயா இவன் அரவம் கண்டு தட்டில் நான்கு இட்லி வைத்து தக்காளி சாம்பார் ஊற்றினாள். ஆயா அம்மா போலில்லை. ஆயா வைக்கிற குழம்பில் தீய்ந்த வாடை வீசும். அவன் பேருக்கு இரண்டு வில்லைகளை பிட்டு வாயிலிட்டுக் கொண்டு தேர்க்காசு கேட்டான். 

ஆயா முதலிரண்டு முறை மௌனமாக பாத்திரங்களை என்னவோ பண்ணிக்கொண்டிருந்தாள். 

திரும்பவும் நச்சரிக்கத் தொடங்க “நாளைக்கி கறி எடுத்து ஆக்குறேன். இப்ப தின்னு” என முனகினாள்.

“தேர்க்காசு தரலன்னா சாப்பிட மாட்டேன் போ” என தட்டை நகர்த்திவிட்டான்.

“அட நக்கியார… திங்கிற தட்ட நவுத்தி விடுறியா? திரும்ப அந்த தட்ட தேடுவடி.. “ 

“தேர்க்காசு தர மாட்டங்குறல்ல… “ 

“அப்பன் குடிச்சிட்டு போய் மரம் ஏறி விழுந்து அங்க ஆஸ்பத்திரில இடுப்பொடஞ்சு கெடக்கான். பொழப்பு என்னாவுமோ ஏதாவுமோனு கெடக்குறேன். தேர்க்காசு வேணுமா தேர்க்காசு?” 

அவனுக்கு அழுகை வந்தது. கையைக் கழுவாமல் ட்ரவுசரில் துடைத்துக்கொண்டு எழுந்து ஓடுவதைப் பார்க்க பாவமாக இருந்தது. “டேய் பையா.. டேய் டேய்..” என்றபடி சுருக்குப்பையை எடுத்துக்கொண்டு பின்னாலேயே வந்தாள். 

“போ…” பிடிவாதமாய் அவள் தந்ததை வாங்க மறுத்து தேர்வீதி பக்கம் ஓடினான். 

அவள் “இந்தாடா.. இருக்குறது தான் தரமுடியும்.. அப்புறம் என்னமோ பண்ணு” என்றபடி கல் திட்டின் மீது வைத்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள்.

“என்னா இந்த பையன் வேற இப்படி எளவெடுக்குது?” என முணுமுணுத்துவிட்டு “நல்ல நாள்ல…. மாரியாயி…” என தேரிருக்கும் திசையில் திரும்பி கன்னத்தில் போட்டுக் கொண்டாள். மாரியாயி தேர். நாளை முனியப்பன் தேருக்கு கறி எடுத்தாளாவது சண்முகத்திடம் ஆஸ்பத்திரிக்கு கொடுத்தனுப்பலாம். 

முரளி கேட் வீட்டைப் பார்த்தான். அந்தப் பையனைக் காணோம். சிவப்பு ஹெலிகாப்டரும் காணோம். சோறுண்ண உள்ளே போயிருப்பார்கள். அவன் ஒரம்பரை பையன். எப்படியும் முனியப்பன் தேர் முடித்தபிறகு தான் ஊருக்குப் போவார்களாயிருக்கும். இன்றைக்கு ஆர்க்கெஸ்ட்ரா நாளை தான் முக்கிய தினமென்பதால் நாடகம் போடுவார்கள். பார்த்துவிட்டு மறுநாள் தான் போவார்களாயிருக்கும். அதற்குள் அந்தப் பையனை கூட்டாளி சேர்க்க முடியுமா என யோசித்தான். திரும்பி ஆயாவைப் பார்த்தான். அவள் சுருக்குப்பையில் ஏதோ பண்ணிக் கொண்டிருந்தாள். இவன் ஜோப்புக்குள் கைவிட்டு கோலிக்குண்டுகளை எடுத்தான். இரண்டையும் கைகளில் உருட்டிக்கொண்டே மீண்டும் வீடு நோக்கி வந்தான். நினைத்தபடியே கல்திட்டில் வைத்திருந்த ரூபாய் கீழே விழுந்துக் கிடந்தது. பத்து ரூபாய். காலை இடித்துக்கொண்டது போல “ஆ..” என கத்தியபடி கீழே குனிந்துத் திரும்பி ஆயாவைப் பார்த்தான். அவள் இவனுக்கு வாகாகத் தலையைத் திருப்பிக் கொண்டாள். சட்டென காசை எடுத்துக்கொண்டு தேர்வீதி நோக்கி ஓடினான்.

ரகுவிடம் பொம்மை தானாகவே பறப்பதைச் சொன்னபோது முதலில் நம்பவில்லை. சுங்கான் இடையில் வந்து அப்படியொரு பொம்மை புதிதாக புழக்கத்தில் வந்திருப்பதைத் தெரிவித்தான். 

“இங்க போட்டுருக்கிற கடைல இருக்குமாடா?”

“இருந்துச்சு. சாமி ஊர்வலத்தப்பயே ஸ்கூலுக்கு முன்னாடி கடைல பார்த்தேன். கடைக்காரரு அத மேல கீழ பறக்கவிட்டு வேடிக்கை காமிச்சிட்டு இருந்தாரு”

முரளிக்கு உடனே அங்கு போகவேண்டும் போலிருந்தது. போய்? ஆயா குடுத்த பத்துரூபாய். தன்னிடம் ஒரு பதினைந்து ரூபாய் இருக்கிறது. இதை வைத்து அப்பொம்மையை வாங்க முடியுமா? கடைக்காரரிடம் கேட்டுப் பார்க்கலாம். 

ஐஸ்வண்டிக்காரர் குவாட்டர் பாட்டில் பழைய இரும்பெல்லாம் வாங்குகிறாரே. அப்படி இவரும் வாங்கினால் பரவாயில்லை. வீட்டிலிருக்கும் எதையாவது? வீட்டில் அப்படி எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. டயர்கள் அத்துப்போய் பழைய சைக்கிள் மட்டும் கிடக்கிறது. 

ரகு அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகச் சிரித்தான். 

“ஒரு பொம்மைக்கோசரம் யாராச்சும் சைக்கிள போடுவாங்களாடா? அந்த பொம்மைய இனிமே வாங்கவே முடியாதா? பெரிய இந்த ஹெலிகாப்டர்.. இப்ப ஆட வரப்போறியா இல்லையா?” 

முரளிக்கு மனசே கேட்கவில்லை. சும்மா ஒப்புக்கு கொஞ்ச நேரம் ஆடினான். தேரிலிருக்கும் சாமியைப் பார்த்து வேண்டிக் கொண்டான். விலை விசாரிக்க பள்ளிக்கூடம் இருக்கிற மேற்கு வீதிக்கு நெரிசலில் சிக்கி மீண்டு ஓடினான். தீர்த்தம் தெளித்ததும் வாகனத்தில் சாலையை குளிர்விக்க ஊற்றியதுமாக ஜில்லிட்ட ஈரம் கால்களை நனைத்திருந்தது. கடையில் ரகு சொன்ன ஹெலிகாப்டர் பொம்மைகள் தொங்கிக் கொண்டிருக்கிறதாவெனப் பார்த்தான். கடைக்காரர் உள்ளேயிருந்து டப்பாவை எடுத்து வந்துக் காட்டினார். பெரிய விலை அதிகமான பொம்மையெல்லாம் தொங்கவிட மாட்டார்கள் என்பது உரைத்தது. பயம் கூடி விலை கேட்டான். 

சொன்ன விலையை அவன் கணக்கு போடவே ஐந்து நிமிடம் ஆனது. நிச்சயம் நம்மால் முடியாதெனத் தோன்றியது. 

“நாளைக்கி வருவீங்களாண்ணா?”

“எத்தன மணிக்கு வருவீங்க?” 

“இத மட்டும் எடுத்து வைக்கிறீங்களாண்ணா? நாளைக்கி வந்து வாங்கிக்கிறேன்”

கடைக்காரர் “இப்ப வாங்கலியா நீ?” என்பது போலப் பார்த்தார். 

அவனுக்கு அழுகை வருவது போலிருந்தது. பக்கத்து கடைக்காரர் பேர் சொல்லி அழைக்க ஆச்சரியமாக அருகில் சென்றான். அது சேகர் சித்தப்பா. சித்தப்பா சுற்றுப்புறக் கிராமங்களில் விசேஷமென்றால் கடை போடுவார். மீதி நேரம் பார் ஒதுக்கச் செல்வார். ஒரு கயிற்றுக்கட்டிலில் குளுவான்கள் தின்கிற தீனிகள், விலை மலிவான பொம்மைகள் பரப்பியிருக்கும். 

உள்ளூர் ஆளிடம் தலையாட்டிச் சிரிப்பவர்கள் யாரும் பொருள் வாங்கமாட்டார்கள். அல்லது கடனாக வாங்கிக்கொண்டு அப்புறம் வருவதாகச் சொல்வார்கள். பொம்மைகளை மளிகை சாக்கில் கட்டிக்கொண்டு எக்ஸெலில் கட்டிலை இறுக்கிக் கொண்டு போகையில் அவனுக்கு பாவமாக இருக்கும்.

“வெலையாட லாயக்கி இல்லாத பொம்மைலாம் ஏன்டா விக்கிறாரு?”

“ஆமாடா.. ஒரு துப்பாக்கி கூட இல்லடா. பூராம் பீப்பி, மேளம், பாப்பா பொம்மை..”

அவர்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

“என்னா சித்தப்பா?”

“என்ன பொம்மடா வாங்க வந்த?”

அவர் கட்டிலைப் பார்த்தான். வழக்கம் போலானவையே இருந்தன. “அதெல்லாம் ஒண்ணுமில்ல சித்தப்பா. சும்மா வேடிக்க பாக்க வந்தேன்”

“இந்த பொம்மை ஏதாச்சும் வாங்கிட்டு போடா” என்றவரைப் பார்க்க பாவமாக இருந்தது. 

“பொம்மைலாம் விளையாட நான் அறியாக் குழந்தையா சித்தப்பா?” என்றபடி அங்கிருந்து ஓடினான்.

இராத்திரிக்கு ஆர்க்கெஸ்ட்ராவில் ரகுவும் சுங்கானும் துணி போட்டு வைத்துக் கொண்டு இவனை அழைத்தார்கள். அங்கேயும் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஒரு அக்கா பழைய பாட்டாக பாடிக்கொண்டிருந்தது. அங்கிருந்து கண்களை விலக்கி கோபுரத்தின் மீதிருந்த சீரியல் பல்புகளின் ஒளி நடனங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். தூக்கம் சொக்க கொஞ்ச நேரம் கழித்து எழுந்து வீட்டுக்கு ஓடினான். கேட்டு வீட்டுப் பையன் இப்போதும் ஹெலிகாப்டரோடு விளையாடிக் கொண்டிருந்தான். அதிசயமாக இருந்தது. இப்போது மினுக் மினுக்கென வெளிச்சம் வேறு பரப்பியபடி அது பறந்து கொண்டிருந்தது. பகலிலேயே எரிந்திருக்கும் போல… இருட்டில் தான் நன்றாகத் தெரிந்தது. 

நாளைக்கு எப்படியாவது வாங்கியே தீருவதென மனம் அடித்துக் கொண்டது. அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்யலாம் என யோசித்தான்.

ஆயா தட்டை எடுத்து வைத்துவிட்டுத் தூங்கியிருந்தாள். மதியத்து இட்லி கீழேயும் சூடான இட்லி மேலேயும் ஒரு குண்டானில் இருந்தது. தூங்குவதற்கு முன்பு சண்முகம் மாமாவை நாளை சந்திப்பதென முடிவு செய்து கொண்டான். 

காலை எல்லோரது வீட்டிலும் பரபரப்பாக இருந்தார்கள். அம்மா அதிகாலையில் யார் வீட்டிலும் போய் காசுக்கு நிற்கக் கூடாதென சொல்லியிருக்கிறாள். நேராக கடைக்கு ஓடினான். கடைக்காரர் அந்த நேரத்திலேயே திறந்து வைத்து மும்முரமாக வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார். அவன் பதட்டமாக பெட்டியைப் பார்த்தான். நேற்று மூன்று இருந்ததில் இப்போது ஒன்று குறைந்திருந்தது. 

கோயிலைச் சுற்றிலும் கிடா வெட்டி ஓடிய இரத்தம் அவனது துரித நடைக்குத் தடையாக இருந்தது. தாண்டித் தாண்டிச் செல்லும் போது தேர்களைப் பார்த்தான். மாரியாயி தேர் ஓடி முடித்தக் களைப்பில் நின்றிருக்க முனியப்பன் தேர் தன் முறைக்குத் தயாராக அலங்காரம் பண்ணிக் கொண்டு நின்றிருந்தது. பொம்மைய வாங்கிட்டா அப்புறம் தேரைக் கொண்டாடி விடலாம்..

வீட்டில் மாமாவைக் காணவில்லை. பொடக்காலியில் கோழி அரிந்து கொண்டிருந்த அத்தையிடம் கேட்டான். 

“பஸ் ஸ்டாண்டுல நிப்பாரு.. ஏன்டா மருமவனே?”

பதில் சொல்லாமல் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினான். நல்லவேளையாக பதினாலாம் நெம்பர் இன்னும் வந்திருக்கவில்லை. சண்முகம் மாமா கையில் ஒயர் பையோடு நின்றிருந்தார். இவன் ஓடிப்போய் மூச்சு வாங்க நின்றதை ஆச்சரியமாகப் பார்த்தார். 

“ஏன்டா.. ஆயா உன்னையும் கிளம்பி போகச் சொன்னுச்சா? “

அவனுக்கு கேட்டது புரியவில்லை. 

“இல்ல மாமா”

“பின்ன என்னடா? 

“தேர்க்காசு குடு மாமா… பொம்மை வாங்கணும்”

சண்முகம் மாமா எரித்துவிடுவது போலப் பார்த்தார். “அடத் தாயாளி… உங்க ஆயா கெஞ்சுதேன்னு நோம்பிய விட்டுட்டு உங்கப்பனுக்கு கறிச்சோறு கொடுத்துட்டு வரலாம்னு போய்ட்டு இருக்கேன். அப்பன பாக்க ஆஸ்பத்திரிக்கு வருவன்னு பாத்தா பொம்மை கேட்குதா பொம்ம?”

முரளி இப்படித் திட்டுவாரென எதிர்பார்க்காமல் நிலைகுலைந்தான். என்ன செய்வதெனத் தெரியாமல் அப்படியே நின்றான்.

“உங்கப்பாவ பாக்க வர்றியா இல்லையாடா? நான் கூட்டிட்டு போறேன். வரியா?” அவர் அழுத்தந்திருத்தமாகக் கேட்டார். 

அவனுக்கு நெஞ்சை என்னவோ பண்ணுவது போலிருந்தது. “நான் வரல்ல மாமா..” எனப் பின்னால் நகர்ந்தான்.

சண்முகம் மாமாவுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. கொஞ்சம் தன்மையாக சொல்லியிருக்கலாமோ என யோசித்தார். பொங்கல் வைக்க விறகுக்கட்டுக் கூடையோடு நடந்து செல்கிற சனங்கள். ஏதேனுமொரு பொம்மையோடு ஐஸ்குச்சிகளோடு கடக்கும் பிள்ளைகள். அறியா பையனுக்கு என்ன தெரியும் பாவம்? 

“டேய் நீ வர வேணாம்.. இந்தா..” என அவன் கையில் இருபது ரூபாயைத் திணித்தார். அவன் கஷ்டப்பட்டு சிரித்தான். 

“தேர் முடிஞ்சதும் அப்பாவ பாக்க வருவியாம்.. சரியா?” என்றதற்கு தலையாட்டிவிட்டு ஓடினான். மொத்தம் நாற்பத்தைந்து ரூபாய்கள். கடைக்காரர் சொன்ன விலையிலிருந்து நாற்பத்தைந்தை கழிக்க முயற்சித்தான். முடியவில்லை. நோட்டு பேனா இருந்தால் கழிக்கலாம். அதிலும் கடன் வாங்க வந்தால் இடறும். ரகு சுங்கானெல்லாம் அவனை மாதிரியே தலையைச் சொறிவார்கள். சுரேஷ் நன்றாகப் படிப்பான். அவனிடம் கேட்கலாமென்றால் அசலூர்க்காரன். தினமும் பதினாலாம் நெம்பரில் அவன் அக்காவுடன் வந்திறங்குவான். போய் கடைக்காரரிடம் தந்தால் மிச்சம் எவ்வளவு வேண்டுமென சொல்லப்போகிறாரென தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டான். இருந்தாலும் இந்தக் காசு பத்தாதென எதுவோ சொல்லிக் கொண்டே இருந்தது. கோயிலின் வடக்கில் எல்லோரும் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள். திருநீறு வாசனையை ஆழ்ந்து நுகர்ந்தபடி கோயிலுக்குள் சென்றான். “முனியன் சாமி.. எனக்கு எப்படியாச்சும் அந்த பொம்மை கிடைக்கணும்”

“அந்த பொம்மை என்றால் சாமி எதை நினைத்துக் கொள்ளும்?”

“ஆங்.. ஹெலிகாப்டர் பொம்மை”

“ஆனால் தரையில் ஓடுகிற ஹெலிகாப்டர் பொம்மையும் இருக்கிறதே..”

கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.

“சாமி.. கேட்வீட்டுக்கார பையன் வச்சிருக்குற மாதிரி பறக்குற, சிவப்பு கலர் ஹெலிகாப்டர்.. இராத்திரில ப்ளூ கலர் லைட் எரியுற ஹெலிகாப்டர்.. எப்பயுமே உடையாம ஓடுற ஹெலிகாப்டர்.. யாருமே கடன் கேட்க கூடாது.. அந்த மாதிரி ஹெலிகாப்டர்..

(சாமி அப்புறமா தரலாம்னு நினைச்சதுன்னா..?)

இப்பவே.. ஆமா.. இன்னிக்கே எனக்கு வாங்கி குடுத்துட்டீன்னா.. ஆமா.. அந்தக் கடைல இன்னிக்கே வாங்கி குடுத்துட்டீன்னா… எங்க ஸ்கூல்ல காமராஜர் பிறந்த நாளுக்கு ஓவிய போட்டி வைப்பாங்க. அதுல உன்னய நான் வரையறேன் சாமி. ஆமா.. கண்டிப்பா வாங்கிக் குடுத்துடு சாமி”

பூசாரி நீட்டிய திருநீற்றுக்கு நெற்றியை பயபக்தியுடன் கொடுத்தான். சாமியை கீழே விழுந்து கும்பிட்டு வெளியே வந்தான். பொங்கல் வைக்கிற இடத்தில் நின்றிருந்த சனங்களைப் பார்த்தான். போன தேருக்கு அம்மாவோடு விறகுக்கட்டு தூக்கி வந்து பொங்கல் வைத்தது ஞாபகம் வந்தது. அம்மா துளுமாவு படைத்துத் தந்ததை வாயெல்லாம் பூசிக்கொண்டது தோன்றிக் கொண்டே இருந்தது. எல்லோரும் சிறப்பு எடுக்கிற தட்டு வைத்திருந்தார்கள். அதில் தேங்காய் பழங்களோடு துளு மாவும் இருந்தது. நமக்கு மாவு தருகிற சொந்தக்காரர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்து வைத்துக் கொண்டான். கோயிலில் படைக்கும் போது அருகில் போய் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தால் அவர்களாகவே அழைத்து மாவு தந்துவிடுவார்கள். பொங்கல் சருவங்களைத் தாண்டி அவர்களை பார்த்துக் கொண்டே நடந்தான். பெயர் தெரியாத ஒரு சொந்தக்காரர் “அப்பா எப்படிடா இருக்காரு?” எனக் கேட்டார். அவருக்கு தலையசைத்துக் கொண்டே கடந்து வந்தான். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் சிநேகமாய் சிரித்தார்கள். பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் சுமதி அக்கா நின்றிருந்தாள். சுமதி அக்கா அவனுக்கு தூரத்து பெரியப்பா வீட்டு அக்கா. அவளுக்கும் கும்பக்கொட்டாய் கணேசன் மாமாவுக்கும் நடுவில் என்னமோ இருப்பதாக பெரிய அண்ணன்கள் பேசிக் கொண்டார்கள். அதுவும் முரளியை வைத்தே பேசிக் கொண்டார்கள். 

“இவன் என்னடா சுமதி வீட்டுக்கும் கும்பக்கொட்டாய்க்கும் ஒரு நாளைக்கு ஏழு தடவ ஓடுறான் ஒடியாறான்…”

சுமதியக்கா அவர்கள் வீட்டில் ஒப்புட்டு சுட்டால் கிண்ணத்தில் போட்டுத் தரும். இவன் ஓடிப்போய் கணேசன் மாமா வீட்டு கரண்ட் கொட்டாயில் வைத்துவிட்டு வருவான். கணேசன் மாமா புதுத்துணி வாங்கித் தந்தனுப்புவார். இவன் அதை சுமதி வீட்டுக் கரண்ட் கொட்டாயில் வைத்துவிட்டு வருவான். யார் தந்தனுப்புகிறார்களோ அவர்கள் முரளி கையில் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் தருவார்கள். சுமதி அக்கா வீட்டில் கோயிலுக்கு, கல்யாணத்துக்கு போகிற நாளில் அக்கா வீட்டு கரண்ட் கொட்டாய்க்கு வெளியே இவன் காவலிருக்க வேண்டும். பேசி முடித்து வெளியே வரும்போது அன்றைக்கு மட்டும் பத்து ரூபாய் கிடைக்கும். 

இப்போது சுமதியக்கா வேறொரு மாமாவோடு நிற்கிறாள். மே மாதம் லீவுக்கு தாத்தா வீட்டுக்கு போயிருந்தபோது கல்யாணம் முடிஞ்சிருக்கும். பாவம் கணேசன் மாமா… என்னவோ நேற்றைய அழுகை இன்றைக்கும் தொற்றிக்கொள்ளும் போலிருந்தது. சாமிகிட்ட வேண்டுதல் வச்சிருக்கோம், அழக்கூடாதென தேற்றிக் கொண்டே சுமதி அக்காவுக்கு அருகில் போனான். 

“அக்கா… “

சுமதி அக்கா இவனைப் பார்த்ததும் பதட்டமடைந்தது போலிருந்தது. அந்த மாமாவிடம் “சொந்தக்கார பையன்” என சிரித்துவிட்டு அவன் நெருங்கும் முன்பே தள்ளிக்கொண்டு ஓரமாய் வந்தாள். மணிபர்ஸ் திறந்து இருபது ரூபாய் ஒரே நோட்டாக எடுத்துத் தந்தாள். 

“போய் பொம்ம வாங்கிக்கோடா.. “ எனக் கெஞ்சுவது போலப் பார்த்தாள். 

அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டே ஓடினான். இதேபோல கணேசன் மாமாவையும் பார்த்தால் தேவலாம் என்றிருந்தது. அவன் நினைத்தபடியே வடமேற்கு மூலையில் கணேசன் மாமா இன்னொரு அக்காவோட நின்றிருந்தார். 

“அட.. மாமாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சாட்டங்குது..” 

இவன் அருகில் செல்லும் முன்பே கணேசன் மாமா அவனைப் பார்த்துவிட்டிருந்தார். அந்த அக்காவை அழைத்துக்கொண்டு அவசரம் அவசரமாக ஓடிப்போய் பைக்கில் ஏறிக் கொண்டதும் இவன் நடையைத் தாமதித்தான். இன்னுமொரு இருபது ரூபாய் கிடைத்திருக்க வேண்டியது… சட்டைப்பையை தடவிக்கொண்டே கடைக்கு ஓடினான்.

மொத்தம் அறுபத்தைந்து ரூபாய்கள். கடைக்காரர் கேட்ட தொகைக்கு பாதியைக் கூட நெருங்கவில்லை. ரகு சொன்ன மாதிரி பெரிய இந்த ஹெலிகாப்டரா? என விடவும் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. 

கேட்டுப்பையனுக்கு இணையாக ஹெலிகாப்டர் விடவே முடியாதா என யோசித்தான். அன்றைய பகல் வீட்டுக்கும் தேர்வீதிக்குமாக வெறுமையாகக் கழிந்தது. தெரிந்த சொந்தக்காரர்களிடம் அம்மா சொன்னதாகச் சொல்லி கடன் கேட்கலாமா என யோசித்தான். எந்நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டேயிருக்கிற அம்மாவின் கெச்சலான அடி மார்பெலும்புகள் வெளியே தெரிகிற தேகம் நினைவுக்கு வந்ததில் முடிவை மாற்றிக் கொண்டான். 

இன்னும் சற்றுநேரத்தில் தேரிழுக்கத் தொடங்கிவிடுவார்கள். ரகுவிடம் “நீ கொஞ்சம் காசு போடுடா.. ரெண்டு பேரும் சேர்ந்து ஹெலிகாப்டர் ஓட்டலாம்” என கேட்டுப் பார்த்தான். அவன் சிம்பிளாக “ஆனா எனக்கு குச்சி ஐஸ் தான்டா பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் பன்னெண்டு சாப்டுருக்கேன். இன்னும் எட்டு சாப்டணும்னு எனக்கும் சுங்கானுக்கும் போட்டி” என்றபடியே டாட்டா காட்டிவிட்டு ஓடினான்.

பாட்டுச் சத்தம் நின்று தேரிழுக்கத் தொடங்கிவிட்டார்கள். முரளி அந்தக் கடையையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கடைக்காரர் பொருள் வாங்கிக்கொண்டிருந்தவரிடம் “இந்தப் பய நேத்துலருந்து கடையவே சுத்தி சுத்தி வர்றான்” என்று சிரித்துவிட்டு இவனிடம் “ஹெலிகாப்டர்லாம் வித்துடுச்சுடா தம்பி..” எனச் சொன்னார். 

முரளி சேகர் சித்தப்பா கடையைப் பார்த்தான். பெரிதாக ஒன்றும் வியாபாரம் ஆனது போல் தெரியவில்லை. அருகில் சென்றதும் சித்தப்பா கையை நீட்டினார். அவன் தந்ததை எண்ணிப் பார்த்துவிட்டு “எதுடா வேணும்?” என்றார்.

குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை, பீப்பி, பாப்பா பொம்மைகள், ஒன்றிரண்டு தகரக் கார்கள். இரண்டு மூன்று ஜேசிபி வண்டிகள் புதிதாக வாங்கிப் போட்டிருந்தார். அவராகவே எடுத்துத் தந்தார். 

“இந்த பொம்மை நூறு ரூபாடா. உனக்கோசரம் தொண்ணூறுக்கு தர்றேன்” 

அவன் அந்த ஜேசிபியை வாங்கிப் பார்த்தான். கொட்டாய் கட்ட எப்போதோ அப்பா வாங்கிப் போட்டிருந்த மணல் மேடு ஞாபகம் வந்தது. ஆனால் தொண்ணூறு ரூபாய் இல்லாததன் வெறுமையை முகத்தில் காட்டினான். 

“இந்த காசுக்கு ஜேசிபி வராதா சித்தப்பா?”

“இதுக்கு வராதுடா.வேணும்னா எடுத்துட்டு போ. இன்னும் இருவத்தஞ்சு ரூவா நாளைக்கி இல்லனா நாளாரன்னிக்கு குடு” 

முரளி திடமாய் தலையாட்டினான். “இல்ல சித்தப்பா. இந்த காசுக்கு எது வரும்? 

சித்தப்பா சின்னக் குழந்தைகள் விளையாடுகிற பொம்மைகளைக் காட்டினார். 

“வேணாம் சித்தப்பா” என்றவனிடம் காசை தரப்போனவர் ஒரு நொடி யோசித்தார். சாக்குப் பையிலிருந்து ஒரு பச்சை நிற ஜேசிபியை எடுத்தார். 

“சரக்கு போட்டவன் ஏமாத்திப்புட்டான்டா. இதுல ஒரு சக்கரம் உடைஞ்சிருக்கு. இத வேணும்னா வச்சிக்கிறியா?”

முரளி அதை வாங்கிப் பார்த்தான். அழகாக நிஜமான ஜேசிபி போலவே இருந்தது. சின்ன சக்கரங்களில் ஒன்று உடைந்திருந்தது. 

“சரி மாமா..”

தேரை சனிமூலையில் நிறுத்தி மறுபூஜை போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் நிலைக்குப் போய்விடும். முரளி அருகில் செல்லாமல் தொலைவிலிருந்தே பார்த்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிவிடும். திரும்பி வீட்டுக்கு வரும்வழியில் கவரைப் பிரித்து வீசிவிட்டு செட்டியார் கடையிலிருந்து பொறுக்கிவந்த சோடா மூடியை எடுத்து ஓரங்களில் நசுக்கித் தட்டையாக்கினான். கேட்டு வீட்டைக் கடக்கும் போது கவனித்தான். அந்தப் பையனைக் காணவில்லை. 

வீட்டுக்குள் போய் உடைந்த சக்கரத்தை கழட்டி எறிந்தான். சக்கரக் கம்பியில் அளவு பார்த்து கோணி ஊசியை நெருப்பில் காட்டி சோடா மூடியில் துளையிட்டான். சக்கரக் கம்பிக்குள் செருகி மெழுகை உருக்கி மறுபக்கம் ஒட்ட வைத்து “உஃப்.. உஃப்” என ஊதிக் காயவைத்து ஓட்டிப்பார்த்தான். வண்டி சோடாமூடி இருக்கிற பக்கம் சாய்ந்து சாய்ந்து நகர்ந்தும்கூட பார்க்க அழகாகத்தான் இருந்தது. 

வெளியே எடுத்து வந்து மணல் மேட்டில் மணல் அள்ளிப் பார்த்தான். நன்றாகவே வேலை செய்ததில் கொஞ்சம் உற்சாகம் பிறந்தது. நாளை பள்ளிக்கு கிளம்புவதற்குள் பாதை அமைத்துவிட்டால் சாயுங்காலம் வந்தவுடன் விளையாடலாமென யோசித்துக் கொண்டே திரும்பினான். 

அந்தப் பையன் கேட்டருகில் நின்றபடி இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். இவன் அவனிடம் ஹெலிகாப்டரைத் தேடி காணாதது கண்டு அருகில் போனான். 

“ஜேசிபியா அது? எவ்வளவு?” 

அவனே முதலில் பேசியதில் முரளி பெருமிதமாய் “ஆமா.. எங்கம்மா வாங்கித் தந்துச்சு. எவ்ளோனு தெரியல” என்றான்.

 “எங்க உங்க வண்டிய காணோம்?”

அவன் முகத்தில் வருத்தம் தெரிந்தது. “ஹெலிகாப்டர் கொய்யா கிளைல மாட்டி உடைஞ்சிடுச்சு. ஓட மாட்டேங்குது” 

“அடடா.. எப்படிண்ணா? நீயி மரத்துக்கிட்ட வுடும்போதே நினைச்சேன் மாட்டிக்கும்னு” 

“ஆமா.. எங்கப்பா அடிச்சிட்டாரு. ஜேசிபி அதுவே ஓடுமா?” 

“இல்ல கைல ஓட்டுறது தான்” என்றவன் தயங்கியபடி கேட்டான். “நான் ஜேசிபி தர்றேன். நீங்க அந்த வண்டி தர்றீங்களா? பாத்துட்டு தர்றேன்” 

“ஆனா அது ரிப்பேர் ஆகிடுச்சே?”

முரளி சிரித்தான். “பரவால்ல குடுங்க பாத்துட்டு தர்றேன்” 

அவன் உள்ளே ஓடிப்போய் ஹெலிகாப்டரை எடுத்து வந்து கேட் கம்பி சந்தில் நீட்டினான். இவன் அதை ஜாக்கிரதையாக வாங்கியபடி ஜேசிபியைத் தந்தான். 

அவ்வண்டியின் நான்கு இறக்கைகளில் ஒன்று பிய்ந்திருந்தது. ப்ளூ லைட் முன்பை விடக் குறைவான ஒளியை சிரமப்பட்டுத் தந்து கொண்டிருந்தது. பட்டனை அணைத்து அழுத்திப் பார்த்தும் உள்ளிருந்த மெஷின் இயங்குவது போலத் தெரியவில்லை. முரளி அதன் இறக்கைகள் சுழலாத போதும் மேலும் கீழும் அசைத்து ஓட்டினான். “விர்ர்ர்…. டபடபடபடப… விர்ர்ர்ர்ர்…. “என ஓசை எழுப்பியபடியே செலுத்திக் கொண்டு ஓடினான். இப்போது கொஞ்சம் ஹெலிகாப்டர் போலத் தெரிந்தது. 

***

ந.சிவநேசன் – சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூர். பள்ளி ஆசிரியர். விவசாயத்திலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம். கவிதைகள் காலச்சுவடு, அகழ், நீலம், புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், குமுதம் தீராநதி, கணையாழி,  கல்வெட்டு, தகவு, நுட்பம், கீற்று, சொல்வனம்  போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும் பல்வேறு இணைய, இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். தெற்கு ஜன்னல் சிறுகதை தொகுப்பு நூல். கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல், ஞௌ போல வாழ்பவர்கள் ஆகியவை கவிதை நூல்கள். மின்னஞ்சல் : nsivanesan1988@gmail.com

“மாபெரும் சகமனிதன்”

0

ம.கண்ணம்மாள்

ப்பெரும் பரப்பில் மிகப்பெரிய செயலொன்றினை காலம் நினைவு கூர்ந்தால், தவிர்க்கவே முடியாத பெயராக, டாக்டர் பாபாசாஹெப் என்ற பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் உருவம்தான் கண்முன் தோன்றும். இவ்வுருவத்தின் வழி நிலைத்த பற்றுகொண்டு, முழுமையாக சரணடைந்து திருமணம் புரிந்து, அவரின் பணியின் பொருட்டு நிழல்போலத் தொடர்ந்து நடந்து வாழ்ந்த வெளிப்பாடுகளின் சுயசிந்தனை சவிதா அம்பேத்கர் எழுதிய ’பாபாசாஹெப் டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை’ (தமிழில் த. ராஜன்) எனும் இந்நூல்.

சவிதா அம்பேத்கரைப் பொறுத்தவரை, நிறைவென்பது, “உடல், பேச்சு, உள்ளம் எல்லாவற்றையும் ஒன்றாக்கி அவருக்கு சேவை புரிந்தேன். அவரை வழிபட்டேன். மகத்தான சகாப்தத்தை வரையறுக்கும், உலகின் மகிமையாக இருந்த இந்த மனிதருடன், என்னுடைய வாழ்க்கை நிரந்தரமாக பிணைக்கப்பட்டு விட்டது. இதைவிட நிறைவான வாழ்க்கை வேறு என்ன இருந்துவிட முடியும்?” என்ற வாக்கியங்களோடு சொற்களானது உள்ளிழுத்துக் கொள்கிறது. சக மனிதர்களுக்காக அம்பேத்கர் ஆற்றிய, பெருஞ்சிறப்புமிக்க செய்கைகளெல்லாம், பரந்து கிடக்கும் கட்டற்ற நிலப்பரப்பில், அவர் புகழ் பேசுகின்றது. இதற்கெல்லாம் காரணமாக அம்பேத்கரின் குரலையும் பேனாவையும் சொல்லலாம். சமத்துவம் சுதந்திரம் சகோதரத்துவம் ஆகிய மூன்று கொள்கைகளின் வழியாக, பௌத்தத்தைத் தழுவி ஒரு போதிசத்துவர் ஆனவர்.

மிக ஆழமான கடல் போன்ற அவர் வாழ்க்கையில், கடலின் மேலெழும் சிறு நீர்க்குமிழியான ஒரு பெண், நம்பகமும் நேர்மையுமாக தான் கடந்த வாழ்நாட்களைப் பொருத்தப்பாட்டுடன் விவரித்து செல்கின்றார். இரத்தினகிரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அம்பேத்கரும் சவிதாவும். அவர் தந்தை பணியின் தொடர்பாக பம்பாய்க்கு இடம் பெயர, உறவினர்களும் அங்கிருந்தபடியால், அங்குதான் ஷாரதா பிறக்கின்றார். அவர் பிறந்தபோது அவருக்கு ஷாரதா என்றே பெயரிட்டிருந்தனர். நல்ல பள்ளிக்கல்வியுடன், உயர்கல்வியும் முடித்து குடும்பத்தினர் விருப்பப்படி மருத்துவராக மாறும் சவிதாவின் செயற்பாட்டினால்தான், டாக்டர் அம்பேத்கர் தனக்கிருந்த உடற்பிணியோடு கொஞ்சம் அதிகமான காலம் உயிர்வாழ முடிந்தது. 

இவர் தங்கியிருந்த கிராண்ட் மருத்துவக் கல்லூரிக்கு எதிரில், மணிபவன் என்ற இடத்தில்தான் காந்தியடிகள் தங்கியதையும், அங்குச் சென்று அவரைச் சந்தித்த அம்பேத்கரின் நினைவுகள் பற்றியும், பின்னொரு நாளில் தன்னிடம் பாபாசாஹெப் பகிர்ந்ததாக மருத்துவரான சவிதா தொடர் நிலைகளின் வழி குறிக்கின்றார்.  இவ்வாறான சூழலில் சவிதா அம்பேத்கரை எப்பொழுது சந்தித்தார்? எனப் பக்கங்களைத் தாண்டும்போது தோன்றியது.

இந்த சந்திப்பு குறித்து பலவகையான வதந்திகள், பல மனித உடல்களின் கட்டுக்கதைகளாகப் பரவிக் கடந்தது. அது சொல்பவரையும் கேட்பவரையும் பொறுத்ததாக நாம் எடுத்துக் கொள்ளலாம். 1947 இன் தொடக்கத்தில், அம்பேத்கரைப் பற்றி அதிகம் தெரியாத சவிதாவுக்கு, குடும்ப நண்பர் ராவ் என்ற மனிதரது இல்லத்தில்தான் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பொதுவாக அறிவு மிக்க ஆணின் பேச்சு எதிர்பாலினத்தவரை சற்றே அசைக்கும். அது சவிதாவுக்கும் நடந்துள்ளது. டாக்டர் அம்பேத்கரின் புலமை, படிப்பு, முற்றிலும் மாறுபட்ட ஆளுமைத்தனம், அவரின் பெரிய நெற்றி, ஒளி கக்கும் கண்கள், அதிநவீன கச்சிதமான உடையோடு தோற்றமளித்த அவர், பெண்கள் முன்னேற்றம் பற்றி உரையாடத் தொடங்கியபோது அந்த உரையாடல் இவருக்குப் பற்பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஏதுவாகியிருந்திருக்கின்றது. முதல் சந்திப்பிலேயே, பௌத்தம் குறித்த சிந்தனைகள், அதன் தொடர்பான விவாதங்கள், அதற்கு எடுத்துவைக்கப்பட்ட தரவுகளென கூர்பகுப்பாய்வுக் களத்தில் இருவரும் நின்றுள்ளனர். அதன்பின் நடந்த சந்திப்புகள் அடிக்கடி தற்செயலாக நிகழ்ந்தன. அம்பேத்கரிடமிருந்த அறிவுப் பொக்கிஷம், சவிதாவினுள் சிறிதுசிறிதாக அதிகரிக்கத் தொடங்கியது. இச்சமயத்தில் அவரின் உடல்நலம் பற்றி சவிதா பேசவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நூலில் பெரும்பான்மையாக பாபாசாஹெபின் உடல்நலக் குறைவு, அதைப் பொருட்படுத்தாமல், மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டும் அக்கறை கொண்ட ஒருமனிதராக நடமாடுகிறார். 1947 இல் ஆகஸ்டு 15 இந்தியா சுதந்திரம் பெற்றதோடு நேரு தலைமையிலான அமைச்சர்கள் குழுவில், முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற பாபாசாஹெபின் தோள்கள், அவரின் இறுதிநாள் வரை சமத்துவத்தை நிலைநாட்ட இயக்கம் தொடங்கலும், அதன் தொடர்பான சிந்தனைகள், வாசிப்புகள், எழுத்துகள் என ஓய்வற்ற நிலையிலேயே நாட்கள் நகர்ந்துள்ளன.

சகமனிதர்களின் விழிப்புணர்வுக்காக, ”மூக் நாயக்” என்ற பத்திரிகையைத் தொடங்கியதும், அதில் எழுதப்பட்ட எழுத்துக்கள், பத்திரிகையில் பணிபுரிந்தவர்களோடு நடந்த கடிதப்போக்குகள், பதில்கள், உடல்நலம் பேணலில் பெரும் சிக்கல்கள், பிணியின் வீரியத்தால் ஏற்பட்ட மௌனங்களென கடிதங்கள் பெரும் பங்கு வகித்ததை புரிதலாக காட்டியுள்ள பாங்கு எண்ணத்தக்கது. அதில் ஒரு கடிதம் இப்படி செல்கின்றது. “என்னுடைய உடல் நலம் பற்றி நீங்கள் கவலைக் கொள்ள வேண்டாம். என்னுடைய உடல்நலம் மீது நான் கவனக்குறைவாக இருக்கவில்லை. அதே நேரத்தில் என்னால் வேலையைவிட, உடல் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தர முடியாது”, என்பதாக சொல்லியிருப்பதை வாசிக்கும்போது இன்னும் கொஞ்ச நாட்கள் சாஹெப் வாழ்ந்திருந்தால், சகலருக்காகவும் பல அரியனவற்றை அசாதாரணமாக செய்திருப்பார். சொல்லப்போனால் சாஹெபின் வாழ்க்கையை பொதுவாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை எனப் பகுக்கலாம். இதனுள் பொதுவாழ்க்கையில்தான் பெருங்காலங்களை கழித்து சென்றிருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.

ஒரு சிறு மனித உடல் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து, பொதுவாழ்க்கைக்கு நகரக் காரணம் என்ன? எனக் கேட்டால், அதற்கான பதில் இந்நூலில் இருக்கின்றது. “தீண்டாமை என்ற கொடூரமான வழக்கம் உருவாக்கிய படுகாயங்களால், டாக்டர் சாஹெப் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே அவதிப்பட வேண்டியிருந்தது. அது அந்தக் குழந்தையின் மனதில் ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றது. ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும்போதும், எதிரே தீண்டாமை வந்து நின்றது. அவர் தன்னுடைய பால்ய காலத்தையும், மாணவப் பருவத்தையும், பொல்லாத சூழ்நிலைகளில் கழிக்க வேண்டியிருந்தது. மிக இளம் வயதிலிருந்தே அவருடைய மனம் கடுமையான தாக்குதலுக்கு ஆளானது” என்பதை நோக்கும்போது மனிதர்களின் சமத்துவத்தை மேம்படுத்தவென்று, அவர் பல திட்டங்களை முன்கொணர்ந்தது நினைவில் வருகின்றது. அதையெல்லாம் செயலாற்றிய இடமாக திகழ்ந்த சாஹெபின் ”ராஜ் கிரஹா” என்றழைக்கப்பட்ட அவரது இல்லமும் தனிச்சிறப்புக் கொள்கின்றது. 

டாக்டர் அம்பேத்கரின் வாழ்நாள் தொகுப்பு முழுவதுமே, ஒட்டுமொத்த போராட்டம்தான். இளம் வயது மசூர் நிகழ்வு, பரோடா அத்தியாயம், சிடன் ஹாயில் நடந்த கசப்புகள், தந்தை மரணம், காலா ராம் கோயில் சத்யாகிரகம், வட்ட மேஜை மாநாடு, பூனா ஒப்பந்தம், இணையர் ரமாபாய் மரணம் போன்ற பல தளங்களில் நடந்தவைகள் பெரும் சவாலாக மாறி, அவரை அலைக்கழித்துள்ளன. தான் செல்லும் வழியின், ஒவ்வொரு அடியிலும் பற்பல கசப்புகளை விழுங்கி நடந்த அம்பேத்கருக்கு மஹத் சத்யாகிரகமும், மனு ஸ்மிருதி எரிப்பும், பொதுவெளியில் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தன. ஆனால், காலச்சூழல் அவருக்குத் துணிச்சலுடன் எதிர்கொள்ள வழிகாட்டியது. 

இதனிடையில், டாக்டர் அம்பேத்கருக்கு உடல்நலனில் ஏற்பட்ட பெரும் பின்னடைவினால் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாள்தோறுமான இன்சுலின், தவறாத உடற்பயிற்சி, திட்டமிடப்பட்ட உணவு முறைகள் எனத் தகவல்களும் அறிவுறுத்தல்களுமாக மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கத் தொடங்கினர். பார்க்கப்போனால் இந்நூல் தொகுப்பில் அம்பேத்கரின் உடல்நிலை, நமக்கு பெரும் அச்சுறுத்தலையும் பதைபதைப்பையும் ஏற்படுத்துகிறது. அளவே இல்லாத அறிவுத் திறனோடு பிறந்து, சமூகத்துக்காக பாடுபடும் ஒரு மனித உடலில், பிணி எடுத்த விஸ்வரூபங்கள் அடக்கமுடியாத அயர்ச்சியை தருகின்றது. அதே அயர்ச்சிதான், அம்பேத்கருக்கும் ஏற்பட்டு வினாவாக அவர்முன் உருமாறி நின்றது. “இதை நான் எவ்வாறு கையாளப்போகிறேன் என்பதே அது”. வீட்டில் உள்ளவர்களால் தன்னை நிர்வகிக்க முடியாத சூழல், செவிலியரை வைத்துக் கொள்ள இயலாத சூழல் இவைப்போன்றவற்றால், சவிதா கொடுத்த எந்த மருத்துவ ஆலோசனகளையும் அம்பேத்கர் ஏற்க இயலாத கையறுநிலை அவரை இறுக்கியது. தனியராகயிருந்த சாஹேப்பின் வீட்டிலேயே தங்கிக்கொண்டு சிகிச்சைத் தருகிறேன் என சவிதா சொல்வதற்கு, சாஹேபின் பதில், “பாருங்கள் டாக்டர், நான் தனியன். முற்றிலும் தனித்திருக்கிறேன். முற்றிலும் தனிமையில் வசிக்கிறேன். ஒண்டியான ஆள். இளமையும் அழகும் கொண்ட ஒரு மருத்துவர், என்னை கவனித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஊருலகம் என்ன சொல்லும்? உங்கள் அக்கறையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நீங்கள் சொல்வது சாத்தியமே இல்லை”, என்ற இம்மறுப்புக்குப் பின்னாலான காலங்களில், நடந்த இருவருக்கும் இடையிலான பெரும் பெரும் உரையாடல்கள், அர்ப்பணிப்பான பங்களிப்புகள், தன் மகன் யஷ்வந்த், அண்ணன் மகன் முகுந்த் ஆகியோரை வளர்க்கும் பொறுப்பு, தன்னை எந்நேரமும் பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு அன்புக்காக ஏங்கியபோது, சவிதாவிடம் அந்த திருமண விண்ணப்பத்தைக் கோருகின்றார். “டாக்டர் சாஹெப் ஒரு வார்த்தை சொன்னால் போதும், இலட்சக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணிப்பார்கள். ஆனால், அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் அவர் முற்றிலும் தனியர்தான்”, என்பதை இதன் வழியே திண்ணமாக அறியலாம். இதனை சவிதாவும் அறிந்திருந்ததால்தான் ’உங்களை கவனித்துக் கொள்ளக்கூடிய ஒருவர் நிச்சயம் தேவை’ என்று கூறியபோது, “எனக்கு உகந்த நபரை உங்களிடமிருந்து தொடங்குகிறேன்”, என்றதில் மிகமிக ஒரு மதித்தலுடனான அன்பு வெளிப்படுகின்றது. அதனாலேயே, அவ்வன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிதும் இசைவான மனநிலையினைத் தெரிவித்த விதம் வாசிப்போரும் மனநிறைவு கொள்ள வைக்கின்றது. “நான் டாக்டர் சாஹெபின் வாழ்க்கையுடன் ஒன்று கலந்து, அவருக்குள் என்னைக் கரைத்துக் கொள்வேன்”, என்பதில் மதிப்பும் மரியாதையும் திரும்பவும் சாஹெபுக்கு சவிதாவால் அளிக்கப்படுகின்றது.

இருவரின் நல்ல மறுமொழிகளும், விரும்பத்தக்க பரிசோடு, அம்பேத்கரின் இருப்பின் முடிவை அடைவதாக, நிம்மதி, கௌரவம் தரும் நிலையாக மாறிப்போனது. இந்த நிலைப்பாட்டின் பெரும் பங்களிப்பு என்னவென்றால், இருவருக்குமிடையே நடந்த கடிதத்தொடர்பாகும். இப்படைப்பிலும் கடித்தத் தொடர்புகள், இருவருக்குமுள்ள தனிப்பட்ட உறவுகள், தேவைகள் மற்றும் அவசியங்களை சார்ந்து சென்றுள்ளது.

இக்கடிதங்களின் வெளிப்படைத் தன்மையினை, தனிப்பட்ட கடிதங்கள் எல்லாவற்றையும் அப்படியே பிரசுரிக்க வேண்டுமென, பன்னாட்களாக பலரும் வலியுறுத்தி வந்தனர். தெரிந்த, தெரிந்திராத பல விஷயங்களுக்கு வெளிச்சம் கிடைக்குமெனவும் நினைத்தனர். அவற்றைக்கடந்து, அம்பேத்கரைப் பற்றி புரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் நடைபெறும் சூழலில் இவை தேவையானதும்கூட என்றுணர்ந்தாலும் சில அந்தரங்கமாக இருப்பவை. அவற்றை வெளியிட வேண்டுமா என்ற தயக்கமும் சவிதாவுக்கு ஏற்பட்டது. அன்பிற்காக ஏங்கிய அம்பேத்கர் பற்றிய நினைவுகளை சம்பந்தப்பட்ட இருவரும் தங்களின் கைகளால் எழுதிய எழுத்துக்கள் புலப்படுத்துகின்றன.

மாணவராயிருந்தபோதே அம்பேத்கருக்கு உறவினரான ரமாபாயோடு திருமணம் நடைபெற்று, தந்தையை இழந்ததோடு குடும்பப் பொறுப்புகளுடனே தன் கல்விக்கான பொறுப்பு முழுவதையும் அவர் ஏற்க வேண்டிய நிலை வந்தது. பின் உயர்கல்விக்காக இங்கிலாந்து, அமெரிக்காவில் இருக்க வேண்டிய சூழல், வேலைப் பார்த்த பரோடா அரசுடன் ஏற்பட்ட எதிர்மறையான அனுபவங்களென பம்பாய் திரும்பினார். 1920 – 1923 வரை எம்.எஸ்.சி, டி.எஸ்சி, பார்-அட்-லா படிப்பை முடிப்பதற்காக, அவர் இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் சென்றார். 1924 ஆம் ஆண்டிலிருந்து, பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மஹத்தின் சாவ்தார் ஏரி சத்யாகிரகம், நாசிக்கின் காலா ராம் கோயில் நுழைவு சத்யாகிரகம், வட்ட மேஜை மாநாடுகள் மூன்று, பூனா ஒப்பந்தம் போல்வன, அடுத்தடுத்து நடந்தன. வழக்கறிஞர் தொழில், வாசிப்பு, எழுத்து, சந்திப்புகள், மாநாடுகள், சுற்றுப்பயணங்கள் என நேரம் செலவழிந்தது. அம்பேத்கர் தன்னுடைய பெரும்பாலான நேரத்தை பரேலிலுள்ள ’தாமோதர் ஹால்’ அலுவலகத்தில்தான் கழித்தார். நேரம் வாய்க்கும் போது, இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு சென்று வந்துள்ளார். 1935 இல் ரமாபாய் காலமானார். குழந்தைகளின் அன்பும் பூரணமாகக் கிடைக்கப்பெறவில்லை. யஷ்வந்த் 1912 டிசம்பரில் பிறந்து, உடல்நிலை சரியிலாமல் வளர்ந்ததும், பின் பிறந்த குழந்தைகள் உயிர் மறைந்து போனதும், அம்பேத்கரின் வாழ்வில் சோகமான நேரமாகும். மனைவி, அக்கா, அண்ணன் என்ற தொடர் மரணங்களால் துவண்டிருந்த அவரை பலர் வற்புறுத்தியபோதும், அவரால் இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்க முடியவில்லை. அச்சூழலில் சவிதாவின் சந்திப்பும், மருத்துவ அறிவுரையும், இணையான சமூக உரையாடலும், கல்வி பற்றிய விவாதங்களும் நிகழ்ந்து மற்றொரு அன்பிற்கு ஆட்பட்டார். 

அம்பேத்கரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் ஏப்ரல் 14க்குப் பின், ஏப்ரல் 15 திருமண நாளாக நிச்சயிக்கப்பட்டது. அதற்கிடையில் அவர்களுக்குள் தொலைபேசி பேச்சுகள், கடிதங்கள், இதையுந்தாண்டி லெட்டர் பேட் வழி எழுதப்பட்ட கடிதங்களென நாள்கள் நீண்டன. 1948 ஏப்ரல் 15 வியாழனன்று, நெருக்கமான நண்பர்கள், உறவுகள் சூழ அம்பேத்கர் சவிதா இணையர்களின் திருமணம் நிகழ்ந்தது. துணை பிரதமர், நண்பர் நவல் பத்தேனா, வெளிநாட்டு பத்திரிக்கைச் செய்திகள், போன்ற வாழ்த்துகளோடு நன்றாக வாழத்தொடங்கிய பொழுதுகள் இருவருக்குமே மிக அழகானவை. அம்பேத்கருக்குப் பிடித்த உணவு வகைகள் பரிமாறுதல், முழுவதுமாக அவரை அருகிலிருந்து கவனித்தல், இடையில் அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையிலிருக்க நேரிடுதலென நாட்கள் கழிந்தன. இப்படியாகத் தொடர்ந்த நாட்களில், ஒடுக்கப்பட்டவர்களிடையே, கல்வியைப் பிரபலப் படுத்துவதன் வழியாகவும், பரப்புவதன் மூலமாகவும் மட்டுமே, அவர்களுடைய முன்னேற்றம் சாத்தியப்படும் என்பதை டாக்டர் சாஹெப் மிகத் தெளிவாக உணர்ந்து, 1928 இல் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்காக கல்வி சங்கத்தை நிறுவி, இரண்டு விடுதிகளையும் தொடங்கியுள்ளார். அதேபோல பம்பாயில் சித்தார்த் கல்லூரியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, மராத்வாடாவை மிகவும் பின்தங்கிய பகுதியாகக் கருதி, அங்கும் ஒரு கல்வி நிறுவனத்தை அம்பேத்கர் நிறுவ விரும்பினார் என்பதை சவிதா பதிவு செய்துள்ளார். 

ஔரங்காபாதின் மிலிந்த் அறிவியல் கல்லூரி விடுதி, கலை அறிவியல் கல்லூரி விடுதி, மிலிந்த் உயர்நிலைப்பள்ளி போன்றவற்றின் கட்டடங்களுக்கான திட்டங்களை அம்பேத்கர் தயாரித்துள்ளார் எனவும் அறிய முடிகின்றது. இவற்றையெல்லாம்விட, அம்பேத்கர் தன் விருப்பமாகப் பகிர்ந்ததை இப்படைப்பில், “அவர் ஆதரவற்றோருக்கான சேவையில் மிகுந்த மனநிறைவைப் பெறக்கூடியவர்” அவர் எப்போதும் சொல்வார், “ஆதரவற்றோரையும், ஏழைகளையும், மணமாகாத தாய்மார்களால் கைவிடப்பட்ட சிசுக்களையும், இல்லத்தில் வைத்துப் பராமரித்து அவர்களுக்கு சேவை புரிய வேண்டும் என்பது என்னுடைய ஆழமான விருப்பம்” என்ற கூற்றின் முலமாக உணரலாம். 

இதனைத் தொடர்ந்து டாக்டர் சாஹெப் இந்து சட்டத்தொகுப்பு மசோதாவைக் கையிலெடுத்தார். இந்துக்களுக்காக டாக்டர் சாஹெப் ஆற்றிய பணிகள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவர் செய்ததைவிட அதிகம். அரசமைப்பு எனும் மிகப்பெரும் பணி முடித்த பின்னரும், தன்னுடைய சட்ட அமைச்சர் பணியைத் தவறாமல் தொடர்ந்து வந்தார். 

“இந்திய அரசமைப்பின் சிற்பி” என்று அவர் இந்தியாமுழுவதும் போற்றிப் புகழப்பட்டது அவரின் கடும்முயற்சியால் மட்டுமே நடந்ததெனலாம். ’பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு (எஸ்.சி.எல்.ஃப்) என்பதும் டாக்டரின் பெரும் உருவாக்கமாயிற்று. அரசமைப்பு அவையில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 1948 நவம்பர் 4 அன்று அரசமைப்பு வரைவினை ஆலோசனைகளுக்காக முன்வைத்தார். இத்தொடர் பணிகளால் பாபாசாஹெபின் உடல் மீண்டும் நலிவுற்றது. சிறிது தேறி வந்ததும், பௌத்தம் தழுவுவதென முடிவெடுத்ததை,  “பௌத்தம் தழுவுவதென நாங்கள் முடிவெடுத்தோம். எங்களுடைய எஞ்சிய வாழ்நாளை பௌத்தர்களாகக் கழிக்க வேண்டும் என்பதே எங்கள் தீர்மானம்” என சவிதா கூறியுள்ளார்.

இதற்கிடையில், டாக்டர் அம்பேத்கர் தலேகான், ஹைதராபாத், ஓக்லா, பௌத்தம், கொழும்பு மாநாடு என ஒரு பயணப் பட்டியல் நீண்டது. தன் வேலையினூடாக சிலை வடிக்கவும் கற்றுக்கொண்டார். வாழ்நாள் முழுவதும் மாணவராகயிருந்து ஏதோவொன்றினை டாக்டர் சாஹெப் கற்றுக்கொண்டேயிருந்தார். சிலை வடித்தலும் அதனுள் அடக்கம்.

இவ்வாறான நாட்களை நாம் நகர்த்தி நகர்த்திப் பார்க்கும்போது, இந்துச் சட்டத் தொகுப்பு மசோதா பிப்ரவரி 5 அன்று தாக்கல் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டதாக அறியலாம். மிக நெருக்கடியான சூழ்நிலையில் டாக்டர் சாஹெப் பிப்ரவரி 5 1951 இல், இந்துச் சட்டத் தொகுப்பு மசோதாவைத் தாக்கல் செய்தார். ஆனால், மக்களவையில் மசோதா ஒத்திவைக்கப்பட்டதும், அமைச்சரவையில் தொடர அம்பேத்கருக்கு ஆர்வமில்லை. 

இத்தகையதான அம்பேத்கரின் வாழ்நாள் நகர்வில், தொடர்ந்து சவிதாவால் பதிவிடப்படும் செய்திகள் வாசிக்கும் நமக்கு முக்கியமானதாகவேயுள்ளது. பம்பாய் மாகாண எஸ் சி ஃப் நடத்திய பாராட்டுவிழா, 1952 முதல் பொதுத்தேர்தல், அரசமைப்பை உருவாக்கியவரின் தோல்வி, மராத்வாடாவுக்கான வளர்ச்சித் திட்டம், கொலம்பியா பல்கலைக்கழக அங்கீகாரம், பூனா சட்ட நூலகத்தில் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை. ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பாராட்டு, பம்பாயில் புத்த ஜெயந்தி என்றவாறு நிகழ்வுகள் கடந்து செல்ல, புத்தர், கபீர், பூலே மூவரையும் தன் ஆசான்களாக கருதியதையும் தெரிந்துகொள்ள முடிகின்றது. மற்றும், அம்பேத்கர், உலகம் முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக புத்த மிஷன் நிறுவப்பட வேண்டுமென்று பரிந்துரைத்ததையும், அதற்கான இலக்குகள் வரையறுத்ததையும் அறியமுடிகின்றது.

இம்மாதிரியான போக்கில், சவிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கரு ஒன்று உருவாகி, முழுமைப் பெறாமல் போன துயரமும் அவருக்கு ஏற்பட்டதை வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார். அம்பேத்கருக்கு பல இன்னல்கள் தொடர்ந்து ஏற்பட்ட நிலையில், அரசியலில் தோல்வி அடைந்து ஆர்வம் குறைந்தது. அதே நேரத்தில், ஒடுக்கப்பட்டோருக்காக அரசியலில் நீடிப்பது முக்கியமானதாக இருந்த போது, சவிதா சில வற்புறுத்தல்களை மேற்கொண்டு, தொடர் சொல்லாகி தன் இணையரிடம் தெரிவித்துள்ளார். அது “அரசியல் பணிகளில் ஈடுபடாமல் சமூகப்பணிகளை மட்டும் மேற்கொள்வோம். நீங்கள் அறிவித்துள்ளபடி பௌத்தப்பணியைக் கையில் எடுப்போம்” என்பதுதான். 

தொடர்ந்து கழிந்த நாட்களில் டாக்டர் சாஹெபின் உடல்நிலை பெரிதும் நலிவுற்றது. அவரின் விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும், எப்பொழுதும் மக்கள் நலனுக்காகவேயிருந்தன. டாக்டர் அம்பேத்கர் உலகின் ஆறு அறிவு ஜீவிகளில் ஒருவராகக் கருதப்படுவது மிகவும் இங்கு எண்ணத்தக்கது.

ரங்கூன் பௌத்த மாநாடு, அம்பேத்கர், நவினா மதமாற்றம், மத பணியில் ஈடுபடுதல் என்றெல்லாம், சுழன்ற நிலையில் அம்பேத்கரின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்விடத்தில் ஆக்சிஜன் எடுத்துக் கொண்டதையும், மதுவுக்கு அடிபணியாததையும் சவிதா நினைவுக் கொள்கின்றார். இச்சூழலிலும் கல்விப் பணி தொடர்பான செயல்பாடுகள், தூய்மையான தன்னலமற்ற பொதுகுணத்தோடு, பம்பாயில் கடைசி கூட்டத்தில் பங்கேற்றதையும் செய்தியாக நமக்குத் தருகின்றார்.

இவையெல்லாந்தாண்டி, தலித்துகளின் முன்னேற்றத்துக்கான பணி, அரசியல் தாண்டி சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான பணி, நாட்டில் ஆற்றிய பற்பல பணிகள் என பல தளங்களின் பொறுப்புகளைக் கொண்டாலும், வெளியிட்ட மற்றும் வெளியிடப்படாத நூல்கள் வழியாக, இச்சமூகத்திற்கு மிகப்பெரும் பொக்கிஷத்தை உருவாக்கிக் கொடுத்திருப்பதாக சவிதா மிகப் பெருமையாக அடையாளப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையினைத் தாண்டி, அம்பேத்கர் காத்மாண்டுப் பயணம், பௌத்த யாத்திரைத் தலங்களில் சுற்றுலா என தன் இறுதி நாட்களைக் கழித்த அப்பெருமகன், 1956 டிசம்பர் 5 அன்று. ”புத்தரும் அவர் தம்மமும்” நூலின் முன்னுரையில் சில திருத்தங்கள் செய்து, சில கடிதங்களை பார்வையிட்டு, வழமையாக இல்லாமல், அன்றிரவு சீக்கிரமே உறங்கச் சென்றார். அவ்விரவு அம்பேத்கரின் கடைசி இரவாக இச்சமூகத்தில் வாழ்வோருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நூலின் வழியே, நிறைவாக சவிதா அம்பேத்கர் சொல்லிக்கொள்வது, 

“என் வாழ்வின் ஒவ்வொரு சொல்லையும், என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும், உறுதிபடுத்தப்பட்ட சான்றுகளுடனும், சாத்தியமான இடங்களில் இயன்றவரை டாக்டர் சாஹெபின் வார்த்தைகளை முன்வைத்தும், இந்தப் புத்தகத்தில் நேர்மையான, உளமார்ந்த முயற்சியை நான் மேற்கொண்டிருக்கிறேன்”, என்பதுதான். 

***

ம.கண்ணம்மாள் – மருதநிலம் தஞ்சையைச் சொந்தமாகக் கொண்டவர். 25 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக பணி மேற்கொண்டு வருகின்றார். அதோடு, பொதுவெளியில் கவிதை, கட்டுரை, சிறுகதை என இயங்குதலோடு, சீர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருக்குறள் அக மெய்ப்பாடுகள், இலக்கண உரைகளில் சமுதாயம், முப்பெரும் கவிஞர் பாக்களில் மெய்ப்பாடுகள், பாவலரேறு ச.பாலசுந்தரம் போன்ற நூல்களையும், ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் திருக்குறள் விளக்கம்’ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். சீர் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் பங்குக் கொண்டுள்ளார். சன்னத்தூறல், அதகளத்தி, உடல்கள் – கால்கள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி : kannamano07@gmail.com

சிவபிரசாத் குறுங்கதைகள்

0

ரேக்ளா – Race

டே ராஜா!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ரேக்ளா வண்டியை ஓட்டியபடியே கை அசைத்தான் மகேந்திர பூபதி. அதில் அவனோடு ஒருவரும் அமர்ந்திருந்தார். அது அவனின் அப்பாவாக இருக்க வேண்டும். கொதித்து ஆறும் பாலின்மீது படர்ந்து பரவும் பாலாடை போல வெள்ளை நிறத்தில் பளபளக்க அந்த ரேக்ளா மாடு துள்ளிக் குதித்து ஓடியது. அதன் கம்பீரமும் வேகமும் பார்த்த உடனேயே மனதை ஈர்த்தன.

“டே பூபதி! உனக்கு ரேக்ளா வண்டியெல்லாம் ஓட்டத் தெரியுமா?” ஆச்சரியத்துடன் கேட்டபடி, வண்டியோடே நானும் ஓடினேன்.

“ஆமாம்டா ராஜா. நாளைக்கு ஸ்கூலில் பார்ப்போம்,” என்று கர்வமாகக் கத்தியபடி, வெள்ளைக் காளையில் அமர்ந்த இளவரசனைப் போலக் கடந்து போனான்.

மகேந்திர பூபதி என்னோடு ஆறாம் வகுப்பில் ஒன்றாகப் படிக்கிறான். வகுப்பில் அவன் தான் உயரமாகவும், அதற்கேற்றாற்போலப் பருமனாகவும் இருப்பான். அடர்த்தியான சுருள் முடியோடு மாநிறமாக இருப்பான். தினமும் அவன் நெற்றியில் அகன்ற கோடு போலச் சந்தனம், குங்குமம், அதற்கு மேல் மஞ்சள் என வைத்து வருவான். இரண்டு வருடங்களாக ஆறாம் வகுப்பிலேயே தோல்வியுற்றதால், மூன்றாம் வருடமாக எங்களோடு படித்தான். “இனி பள்ளிக்குப் போகமாட்டேன்” என்று அடம்பிடித்தவனை, “இந்த ஒரு வருடம் மட்டும் போ. இந்த வருடமும் தேர்ச்சி பெறவில்லை என்றால் பள்ளிக்கு வர வேண்டாம்” என அவன் அப்பா கட்டாயப்படுத்தியதால் வருகிறான்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றதும், மகேந்திர பூபதி ரேக்ளா வண்டி ஓட்டி வந்ததை வகுப்பில் இருந்தவர்களிடம் சொன்னேன். எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். யாரோ ஒரு மாணவன் வகுப்பு ஆசிரியர் சுதமதி டீச்சரிடம் சொல்ல, அவர் பூபதியை “ரேக்ளாக்காரன்” என்று கூப்பிட்டார். அவர் சொல்வதைப் பார்த்து வகுப்பே கூப்பிட ஆரம்பித்தது. இதனால் பூபதி கோபப்படுவான் என்று பார்த்தால், ஏதோ மாவீரன் என்ற பட்டம் கிடைத்ததைப் போலப் பெருமைப்பட்டான்.

பெரும்பாலான நாட்களில் காலையில் வந்துவிட்டு, மதியம் ஓடிவிடுவான். “அப்படி எங்கடா போற?” என ஒருமுறை கேட்ட போது, “ரேக்ளா மாட்டுடன் விளையாடப் போகிறேன்” என்பான். அவனின் அப்பா சாமி என்கிற பெருமாள் மதுக்கடை வைத்திருந்தார். அவர்களின் தோட்டத்தில் ரேக்ளா மாடு மேய்ந்துகொண்டு இருக்குமாம். அதைப் பராமரிக்க வேலை ஆள் கூட உண்டாம். என்னையும் மாட்டுடன் விளையாடக் கூப்பிடுவான். எனக்குப் போக ஆசைதான். ஆனால், எங்கள் ஊர் பையன்கள் என் அப்பாவிடம் சொல்லிவிடுவார்கள் என்பதால் மறுத்துவிடுவேன்.

பூபதியின் அப்பா ரேக்ளா பந்தயத்தின்மீது பைத்தியம் கொண்டவர். ஒருமுறை போட்டியின் போது வண்டியிலிருந்து விழுந்து பெரிய காயங்களோடு உயிர் தப்பினாராம். அதிலிருந்து அவர் போட்டியில் கலந்துகொள்வதில்லை. ஆனால், தன் மகன் பூபதியைப் போட்டிக்குத் தயார் செய்து வருகிறார்.

மகேந்திர பூபதி ஒவ்வொரு சனி, ஞாயிறும் காலை பத்து மணிக்கு வண்டியில் எங்கள் வீட்டைக் கடந்துப் போவான். அப்போதெல்லாம் என் பேரைச் சொல்லிக் கத்துவான். நான் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் என்னைப் பார்த்து மிக உற்சாகமாகக் கையசைத்துச் செல்வான். நானும் அவனின் வெள்ளைக் காளையின் வேகத்தை ரசித்தபடியே நின்றிருப்பேன்.

எனக்கு அவன் ரேக்ளா வண்டியில் ஏறி ஊரைச் சுற்றிப் பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் வகுப்பில் இன்னும் அவனோடு நெருக்கமாகப் பழகினேன். பள்ளியில் அவனோடே சேர்ந்து சுற்றினேன். ஒரு நாள் ரேக்ளா வண்டியில் என்னையும் கூட்டிப் போக வேண்டும் என்ற ஆசையையும் சொன்னேன்.

“சரிடா எங்க அப்பாகிட்டச் சொல்லுறேன்,” என்று சொன்ன பூபதி, அடுத்த நாளிலிருந்து ஏனோ என்னைத் தவிர்க்க ஆரம்பித்தான். சந்தோஷ் என்ற பையனோடு சேர்ந்து சுற்றினான்.

ஒரு நாள் சந்தோஷிடம் பூபதி என்னிடம் பேச மறுக்கும் காரணம் கேட்டேன்.

“கீழ்சாதிப் பசங்களை ரேக்ளா வண்டியில ஏத்தக் கூடாதுன்னு அவன் அப்பா சொல்லிட்டாராம்,” எனச் சொன்னான். ஒரு சிறுவன் சுமக்க வேண்டியிராத வடு ஒன்று என் மனதை அழுத்தியது. எனக்கு ஏமாற்றமாக இருந்தது. நானும் பூபதியோடு பேசுவதை நிறுத்திவிட்டேன்.

அந்த வருடமும் பூபதி ஆறாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், பள்ளியை விட்டு நின்றுவிட்டான். என்னுடைய அப்பாவின் பணிமாறுதல் காரணமாக நானும் சொந்த ஊரை விட்டு வந்து வேறு நகரத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்துவிட்டேன். அவனை இருபது வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் சந்தித்தேன்.

என்னுடைய கிராமத்திற்குப் போகும் கடைசி மினிபஸ்ஸைத் தவறவிட்டதால், ஏதேனும் கார் பேசிப் போகலாம் எனப் பார்த்தபோது, தூரத்தில் ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் நின்றிருந்தது. நான் அதன் அருகில் சென்று கூப்பிட்ட போது, உள்ளே இருந்து ஒரு பெரிய உருவம், வெள்ளை நிற வேட்டி சட்டையில் இறங்கியது. நெற்றியில் அகன்ற சந்தனக் கோடு, அதில் குங்குமமும் மஞ்சளும் வைக்கப்பட்டிருந்தது.

“நீங்க மகேந்திர பூபதி தானே?” எனக் கேட்டேன்.

“ஆமாம்,” என்று சொன்னவன், என்னை யாரென்று அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் யோசித்தான். என்னைப் பற்றிச் சொன்னதும் ஞாபகம் வந்தவனாகப் பிரியமுடன் கையைப் பிடித்து நலம் விசாரித்தான். நானும் அவன் குடும்பம் குறித்து விசாரித்தேன்.

“எல்லாம் போயி கடைசியில இந்த வண்டி மட்டும்தான் மிஞ்சிச்சு,” என்றான்.

வாடகைக்கு வண்டி வேண்டும் என்றதும் ஆர்வமாக வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். என்னையும் அமரும்படி சொன்னான். 

*

அரை டாக்டர்

​ஞாயிற்றுக்கிழமைக் காலை பதினோரு மணிக்கு பள்ளிக்கூட வராண்டாவில் சீட்டாட்டம் துவங்கியிருந்தது. ஜோயல் தாத்தாவோடு மோகன், தினகரன், சுபாஷ், கெளரிசங்கர் எல்லோரும் ரம்மி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

​“டே புல்லட்டு, தீப்பெட்டி இருக்கா?” என்று கேட்டபடி சுதாகர் வந்தான். சுபாஷை யாராவது ‘புல்லட்டு’ என்று பட்டப்பெயரில் கூப்பிட்டால் கோபம் வந்து கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்துவிடுவான். இன்று கொஞ்சம் நல்ல மனநிலையில் இருந்ததால், “இல்லடா நண்பா,” என்றான்.

​“யோவ் ஜோயலு, உன்கிட்ட இருக்கா?” என்று தாத்தாவிடம் கேட்டான்.

​“டே, அவரு நம்மகூட சீட்டாட வந்துட்டா, பேரச் சொல்லிக் கூப்பிடுவியா? கொஞ்சம் வயசுக்கு மரியாதை கொடுடா,” என்றான் கெளரி சங்கர்.

​“பாரு தீனா, நம்ம சயின்டிஸ்ட்டு கருத்துச் சொல்ல ஆரம்பிச்சுட்டான்,” என்று கேலி செய்தான்.

​கெளரி சங்கர் மீண்டும் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போது, “சரி விடுங்கப்பா. அவன் சொன்னா சொல்லிட்டுப் போறான். இதுக்காக சண்டை போட்டுக்காதீங்க,” என்று ஜோயல் தாத்தா சமாதானப்படுத்தி, சுதாகருக்குத் தீப்பெட்டியைக் கொடுத்தார்.

​மோகனுக்குப் பக்கத்தில் அமர்ந்தவன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த ‘வில்ஸ்’ சிகரெட்டை எடுத்தான். அதை ஸ்டைலாகப் பற்ற வைத்து, ஆழமாக இழுத்து புகையைச் சீட்டாடிக் கொண்டிருப்பவர்கள் பக்கமாய் விட்டான். “டே தொழுக்கா, புகையை அந்தப் பக்கம் போய் விடுடா,” மோகன் சற்றே எரிச்சலோடு சொன்னான். மீண்டும் இழுத்து வேண்டுமென்றே கூட்டத்தின் பக்கமாய் புகையை விட்டபடி, “இது அரசாங்க சொத்து. எங்கே வேணாலும் சிகரெட் பிடிப்பேன். உனக்குப் பிடிக்கலையா? நீ போய் அந்தப் பக்கம் விளையாடுடா,” என்றான்.

​சுதாகர், சீரகாப்பாடி விநாயகா மருத்துவக் கல்லூரியில் ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டெண்டாக வேலைக்குச் சேர்ந்து இன்னும் மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால் திமிராகப் பார்ப்பது, தெனாவெட்டாகப் பேசுவது என்று சுதாகர் ஆளே மாறியிருந்தான்.

​தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப் பண்ணிக்கொண்டிருக்கிறானோ? என்று நினைத்த தினகரன், “நண்பா, நீயும் விளையாட வாடா,” என்று கூப்பிட்டான். “இந்த பத்து ரூபா, இருபது ரூபா பெட்டுக்கெல்லாம் யாரு தினா விளையாடுவா? அம்பது நூறுன்னு பெட் வச்சா விளையாடலாம்,” என்றான்.

​“நீ என்னப்பா பெரிய கை. வேலைக்குப் போற. நாங்க படிச்சுக்கிட்டுதானே இருக்கோம். எங்களால் இதுதானே முடியுது?” என்று தினகரன், சுதாகரை வேண்டுமென்றே உயர்த்திப் பேசினான். சுதாகர் பக்கத்திலிருந்த தூண் மீது சாய்ந்துகொண்டு பெருமையாகச் சிரித்தான்.

​“ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டெண்ட் என்ன வேலை செய்யணும் நண்பா?” சுபாஷ் தன் பங்கிற்கு சுதாகரின் வாயைக் கிளறினான்.

​“அதுவா புல்லட்டு, ஆபரேஷன் நடக்குதுன்னா அறுக்கறதுக்கு, திரும்ப தைக்கறதுக்குத் தேவையான கருவிகள் ஊசி, மருத்துன்னு எல்லாத்தையும் நாங்கதான் ரெடி பண்ணி வைப்போம்” என்று ஆர்வமாகச் சொன்னான் சுதாகர்.

​“ஆபரேஷன் பண்றப்போ எத்தனை பேர் இருப்பீங்க நண்பா?” தினகரன் கேட்டான்.

​”மயக்க மருந்து கொடுக்கிற டாக்டரு, ஆபரேஷன் பண்ற டாக்டரு, சீனியர் சிஸ்டரு, ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டெண்ட்டுன்னு அஞ்சாறு பேருக்கு மேல இருப்போம் நண்பா.”

​“நீ எட்டாவது வரைக்கும் தான படிச்சிருக்க. எப்படி நண்பா சமாளிக்கிற?” என்று சுபாஷ் கேட்டதும், சுதாகர் சிகரெட்டை கடைசி முறை இழுத்து புகையை விட்டபடி, “அதெல்லாம் பார்த்துக்கிட்டேயிருந்து கத்துக்கிட்டா வந்திடும் புல்லட்டு,” சற்றே பெருமை பொங்கச் சொன்னான்.

​“அப்ப அஞ்சு வருஷம் எம்.பி.பி.எஸ். படிச்சு, ஒரு வருஷம் ஹவுஸ் சர்ஜன் முடிச்சு, திரும்ப எம்.எஸ். ரெண்டு வருஷம் படிச்சு, இரண்டு மூணு வருஷம் பிராக்டீஸ் பண்ணி வரதெல்லாம் வேஸ்டா நண்பா?” சுபாஷ் மனதுக்குள் சிரித்தபடியே கேட்டான்.

​“அவுங்க ஆபரேஷன் கத்துக்க பத்து வருஷம் கூட எடுத்துக்கலாம். ஆனா நானெல்லாம் இந்த மூணு மாசத்துக்குள்ளேயே நிறைய தெரிஞ்சுகிட்டேன் புல்லட்டு. ‘அரை டாக்டர்’ ஆயிட்டேன்னா பார்த்துக்கோ,” என்று பெருமை பொங்க சுதாகர் சொன்னான்.

​“என்னது, ‘அரை மெண்டல்’ ஆயிட்டியா?” கெளரி சங்கர் சிரித்தான்.

​உடனே சுபாஷ் தலையைக் கோணித்துக்கொண்டு நாக்கை வெளியே துருத்தி ஒரு நிமிடம் செத்துப்போனவன்போல செய்கை காட்டி, “இல்லப்பா, ‘அரை டாக்டர்’ ஆயிட்டானாம்.” அவன் செய்கையைப் பார்த்து எல்லோருக்குமே சிரிப்பு வந்துவிட்டது. வராண்டாவே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

​சுதாகர் மட்டும் சிரிக்கவில்லை. சிகரெட் துண்டைக் கீழே போட்டு மிதித்தவன், அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தான். அவன் குரல் சட்டென்று தணிந்து ஒரு குரூரமான அழுத்தத்தோடு வெளிப்பட்டது.

​“ஆமாண்டா… நான் ‘அரை டாக்டர்’ தான். ஆனா ஆபரேஷன் தியேட்டர்ல நான் என்ன பண்றோம்னு தெரியுமா? பிணத்தோட மண்டையை உடைச்சு மூளையை வெளிய எடுப்பேன். உடலை அறுத்துக் குடலை உருவிப் போடுவேன். ரத்த வாடைக்கு நடுவுல இதையெல்லாம் பண்றப்போ நீங்க இப்பச் சிரிக்கிற மாதிரியே நானும் சிரிப்பேன்,” என்று ஆவேசமாகச் சொன்னான்.

​சிரிப்பொலி சட்டென்று அடங்கியது. கையில் சீட்டுகளுடன் நண்பர்கள் ஒருவித நடுக்கத்தோடு சுதாகரைப் பார்க்க, அவன் விறுவிறுவென வராண்டாவை விட்டு இறங்கி நடந்தான். அந்தப் பள்ளிக்கூட வராண்டா ஒரு மயான அமைதியில் உறைந்தது.

*

கைப்பேசி

​ராஜாவிற்குச் சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் தன்னுடைய கைப்பேசியில் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. பார்த்துவிட்டுப் போகலாம் என அடக்கிக் கொண்டான். கைப்பேசியில் ‘லோ பேட்டரி’ எச்சரிக்கையும் வந்தது. ஆனாலும் கண்டுகொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தான். படத்தின் கடைசி கணத்தில் கைப்பேசி அணைந்து போனது. மிகுந்த எரிச்சலோடு கைப்பேசியைக் கீழே வைத்தவன், டார்ச் லைட்டைத் தேடினான். கிடைக்கவில்லை. பொறுமை இழந்தவனாய், தொலைக்காட்சி வைக்கப்பட்டிருக்கும் மர மேசையில் இருந்த எல்லாப் பொருட்களையும் கலைத்துப் போட்டு ஆராய்ந்தான். ஆனால், டார்ச் லைட் மட்டும் கிடைக்கவேயில்லை.

​கட்டிலில் படுத்துத் தன்னுடைய காதலியிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த வாசுவிடம் கேட்டான். “நான் பார்க்கல ராஜா. ஒருவேள செந்தில் எடுத்துக்கிட்டுப் போயிருக்கலாம்,” என்றான். செந்தில் இவர்களின் அறை நண்பன். இரவு உணவு வாங்கப் போயிருந்தான். இவர்கள் தங்கியிருப்பது மலை அடிவாரம். மூன்று பேரும் வெவ்வேறு மலை கிராமங்களில் ஆசிரியராகப் பணி புரிகிறார்கள். யாருக்கும் சமைக்கத் தெரியாது. இங்கு இருந்த ஒரு சின்ன உணவகத்தில் சாப்பிட்டு வந்தார்கள். அதன் உரிமையாளர், இரவு நேரத்தில் மட்டும் போதுமான வருமானமில்லை எனk கடை போடுவதை நிறுத்திவிட்டார். எனவே, ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிறிய நகரத்தில் இருந்த உணவகத்தில் உணவு ஆர்டர் செய்திருந்தார்கள்.

​இரவு எட்டு மணிக்கு வரும் தனியார் பேருந்தில் உணவுப் பொதியைக் கொடுத்து அனுப்புவார்கள். பேருந்து வரும் நேரத்திற்குப் போய் வாங்கி வர வேண்டும். இந்த வேலையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எனத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். இன்று செந்தில் வாங்க வேண்டிய நாள் என்பதால் சென்றிருந்தான்.

​ராஜாவிற்குச் சிறுநீர் முட்டிக் கொண்டு இருந்தது. எரிச்சலோடு பாயில் கிடந்த தலையணையை உதைத்தான். வேறு வழியில்லாததால், இருளிலேயே தைரியமாகப் போய்விடுவோமா என யோசித்தான். அப்போது தொலைக்காட்சிக்குப் பக்கத்தில் செந்திலின் கைப்பேசி சார்ஜில் போடப்பட்டிருப்பது கண்ணில் பட்டது. அதன் பாஸ்வேர்டு தெரியவில்லை என்றாலும், அவசரத்திற்கு எடுத்து டார்ச் லைட்டைப் போட்டுக் கழிப்பறையை நோக்கி ஓடினான்.

​அவர்கள் தங்கி இருந்த அறைக்கும் வெளியே கொஞ்ச தூரமாய்க் கழிப்பறை இருந்தது. மேற்கூரை இல்லாத கழிப்பறை. அதில் மின்விளக்கு வசதியும் இல்லை. கழிப்பறையின் பின்புறம் செடிகொடிகள் வளர்ந்து பெரிய புதர் காடாய்க் கிடந்தது. இரண்டு மூன்று முறை அதிலிருந்து பாம்பு வந்ததால், இரவில் போகும்போது டார்ச் லைட்டோடுதான் சென்றார்கள். வீட்டின் உரிமையாளரிடம் மின்விளக்குப் போடச் சொல்லியும் அவர் கண்டுகொள்ளவில்லை.

​ராஜா சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது, வலது காலின் பக்கத்தில் ஏதோ ஊர்வதைப் போல உணர்ந்தான். கைப்பேசியின் வெளிச்சத்தில் பார்த்தான். தேள் ஒன்று கால்களுக்கு இடையே இருந்தது. திடீர் வெளிச்சத்தின் காரணமாகத் தன் கொடுக்குகளைத் தூக்கியபடி ராஜாவின் கால் பக்கம் வந்தது. பதட்டத்தோடு வேகமாய் பின்னால் நகர்ந்தான். அங்கிருந்த இரும்பு வாளியில் இடித்துக் கீழே விழப் போனான். ஆனால், அதிர்ஷ்டவசமாக அருகிலிருந்த சிமெண்ட் தொட்டியின் சுவரைப் பிடித்துக் கொண்டான். இந்தப் போராட்டத்தில் அவனிடமிருந்த கைப்பேசி, மீன் நழுவி விழுவதைப் போலத் தொட்டிக்குள் விழுந்தது.

​கழிப்பறை முழுக்க இருள் சூழ்ந்த நிலையில், தொட்டித் தண்ணீரில் அவன் வலது கையை விட்டுத் தேடினான். அடி ஆழத்தில் கிடந்தது. பாசிகள் ஒட்டியிருந்த கைப்பேசியை எடுத்து, அவன் லுங்கியில் துடைத்தான். அதன் பொத்தானை வேகமாக அழுத்தி அணைத்தான்.

​எதிர்பாராமல் நடந்த தவறை நினைத்து மனம் படபடத்தது. கைகள் நடுங்க ஆரம்பித்தன. செந்தில் இந்தக் கைப்பேசியை வாங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை. நாற்பதாயிரம் மதிப்புள்ள கைப்பேசியை எட்டு மாதத் தவணையில் வாங்கி இருந்தான். தண்ணீரில் விழுந்த விஷயத்தைச் சொன்னால் என்ன நடக்கும் என்று நினைக்கவே பயமாக இருந்தது.

​ராஜா பணிக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. வாசுவின் நண்பன் என்பதால் அவனுடைய பரிந்துரையின் பேரில் இங்கே தங்கி இருந்தான். ஆனாலும், செந்தில் இவன் அறையில் தங்கி இருப்பதை முழு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜாவின் பள்ளித் தலைமையாசிரியருக்கும் செந்திலுக்கும் ஏதோ ஒரு பிரச்சினையில் மனவருத்தம். அக்கோவத்தைத் தேவையில்லாமல் ராஜாவிடம் காட்டிக் கொண்டிருந்தான்.

​ராஜா தன்னுடைய இஷ்ட தெய்வங்களை எல்லாம் வணங்கியபடி வாசுவிடம் ஓடினான். இவன் ஓடி வந்த வேகத்தையும், கலவரமான முகத்தையும் பார்த்து வாசு படுக்கையை விட்டு எழுந்தான். “ராஜா என்ன ஆச்சு? ஏதாச்சும் பாம்பைப் பார்த்துப் பயந்திட்டயா?” என்றான். ராஜா அவனிடம் விஷயத்தைச் சொல்லித் தன்னிடமிருந்த கைப்பேசியைக் காட்டினான். வாசு அதை வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தான். கைப்பேசியின் கவரெல்லாம் நனைந்து போயிருந்தது. அதைக் கழற்றிக் கைப்பேசியை ஆராய்ந்தான். தண்ணீர் உள்ளே போயிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தோன்றியது.

​”ராஜா, இப்போ ஆன் பண்ணினா போன் முழுசா கெட்டுப் போயிடும். இதைக் கடையில கொடுத்துதான் சரி பண்ணணும்னு நினைக்கிறேன்.” செந்திலிடம் இதை எப்படிச் சொல்லிச் சமாளிப்பது என்று இருவருமே கவலை கொண்டார்கள்.

​”செந்தில் போன் வாங்கி ஒரு மாதம் கூட ஆகலதானே. அப்போ வாரண்டி ஒரு ஆறு மாதத்திற்காவது இருக்காதா?” என்றான் ராஜா.

“இருக்கும். ஆனா, போன் தண்ணியில விழுந்தாலோ, டிஸ்பிளே போனாலோ வாரண்டி கிடையாதுன்னு நினைக்கிறேன்.”

“அப்போ, போனை இன்சூரன்ஸ் பண்ணி இருந்தா சரி பண்ணித் தருவாங்கதானே?”

“அட, நீ வேற. இன்சூரன்ஸ் மட்டும் பண்ணி இருந்தா புது போனே கூட வாங்கிக்கலாம். ஆனாலும், செந்தில் வச்சிருந்த புகைப்படங்கள், வீடியோ, முக்கியமான கோப்புகள் எல்லாம் இனி போயிடும். அதுதான் கொஞ்சம் கஷ்டம்.”

“தெரியாமல் செய்த தப்புதானே. எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்க மாட்டானா? சரி பண்ணுவதற்கான தொகை எவ்வளவு ஆனாலும் கொடுத்துடலாம்”

“புரிஞ்சுப்பானு தான் நினைக்கிறேன். ஆனாலும், உனக்கும் அவனுக்கும் இன்னும் சரியா ஒத்துப் போகல. உன்னால தான் இது ஆச்சுன்னு தெரிஞ்சா ஒருவேளை ரொம்ப பிரச்சினை பண்ணினாலும் பண்ணுவான். வேணுனா, நான் பண்ணினதா சொல்லிருட்டா?” என்றான் வாசு.

“இல்ல வாசு. நீ எதுக்கு ரிஸ்கு எடுக்குற? எது நடந்தாலும் அத நானே பாத்துக்கிறேன்,” என்றான் ராஜா.

​அப்போது செந்தில் ஒரு கையில் உணவுப் பொதியும், மறுகையில் டார்ச் லைட்டும் பிடித்தபடி அறைக்குள் நுழைந்தான். 

இட்லி

“இட்லீ…!”

என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாகக் கத்தினேன்.

என் சத்தம் கேட்டு இயற்பியல் ஆய்வகத்தின் ஜன்னல் வழியாகக் கலைவாணி டீச்சர் கோபமாகப் பார்த்தார். அவரைக் கண்டதும் என்னோடு நின்றிருந்த ஆதியும் கோவிந்தும் வேகமாக ஓட ஆரம்பித்தனர். நான் ஒன்றும் புரியாமல் பள்ளியின் மைதானத்திலேயே நின்றிருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து, பதினொன்றாம் வகுப்பு அண்ணன் வந்து, “ஏன்டா, டீச்சரையே பட்டப் பேர் சொல்லிக் கூப்பிடுறியா? உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று என் கைகளைப் பிடித்து இழுத்தான். வசமாக மாட்டிக் கொண்டதால் பிடிவாதம் செய்யாமல் அமைதியாகச் சென்றேன்.

சத்தமாகக் கத்துவதில் பந்தயம் வைத்திருந்தோம். என்ன சொல்லி கத்துவது என்று யோசித்த போது, ‘இட்லி’ என்று கத்த வேண்டும் என ஆதிதான் சொன்னான். உடனே கோவிந்தனும் ஏதோ புரிந்துகொண்டவன் மாதிரி தலையை ஆட்டினான். “முதலில் நீ கத்து,” என்றான் ஆதி. நானும் கத்தினேன். ஆனால், டீச்சரின் பட்டப் பெயரைச் சொல்ல வைத்து என்னை மாட்டிவிடுவார்கள் என்று நினைக்கவில்லை.

நான் இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு படித்தார்கள். நாங்கள் அனைவரும் ஒரே ஊர்க்காரர்கள். நான் அவர்களோடு ஒட்டிக்கொண்டு திரிந்தேன்.

“வாடா, நீதான் கத்தினவனா? எந்த கிளாஸ்?” கலைவாணி டீச்சர் கோபமாகக் கேட்டார்.

“ஆறாம் வகுப்புங்க டீச்சர்,” பயத்தோடே சொன்னேன்.

“புதுசா சேர்ந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகலை. அதுக்குள்ளே சேட்டையா?” என்று சொல்லியபடி என் சூத்தாம்பட்டையில் இரண்டு அடி வைத்தார். நான் வலி தாங்க முடியாமல் பின்புறத்தைத் தேய்த்தபடியே கத்தினேன். என் அலறலைக் கேட்டு வகுப்பில் அமர்ந்திருந்த அண்ணன்கள் எல்லாம் சிரித்தார்கள். அது எனக்கு அவமானமாக இருந்தது.

“நடந்தது என்னவென்று கேட்காமல் இப்படி அடிக்கிறீயே! நீ எல்லாம் ஒரு டீச்சரா?” என்று அழுது கொண்டே சொன்னேன்.

என்னுடைய அந்த வார்த்தைகளைக் கேட்டு ஏனோ டீச்சருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தன் கையில் வைத்திருந்த மூங்கில் பிரம்பைத் தன் மேசை மீது வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தவர், “சொல்லுங்க சார். என்ன நடந்தது?” என்று கேலியாய்க் கேட்டார்.

நான் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். ஆதி, கோவிந்தன் இருவரையும் பிடித்து வர ஆள் அனுப்பியவர், நான் இன்னும் தேம்பிக் கொண்டே இருப்பதைப் பார்த்து, மேசை மீது இருந்த இரண்டு சாக்லெட்டைக் கொடுத்துச் சமாதானம் செய்யப் பார்த்தார். நான் அதை வாங்க மறுத்து, தேம்பியபடியே நின்றேன். அந்தச் சாக்லெட் என் அவமானத்துக்கு விலையாகாது என என் மனம் அடம் பிடித்தது.

ஆதியையும் கோவிந்தனையும் இரண்டு அண்ணன்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். இருவரும் தலை குனிந்தபடியே கலைவாணி டீச்சர் முன்பு நின்றார்கள். அவர்களின் சூத்தாம்பட்டை டீச்சரின் பிரம்பால் பழுக்கப் போவதையும், இருவரும் அழுகப் போவதையும் எண்ணிச் சந்தோஷமாக இருந்தாலும், நண்பர்களை மாட்டிவிட்டது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

ஆனால், டீச்சர் ஏனோ அவர்களை அடிக்கவில்லை. ஐம்பது தோப்புக்கரணம் போடச் சொன்னார். ஆதியைக் கூப்பிட்டு ஏதோ கேட்டார். அவன் சொன்னதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தார். அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு, என்னை மட்டும் இருக்கச் சொன்னார். அவர்கள் போனதும்,

“டே தொப்புளான், இங்க வாடா,” என்றார்.

என் பட்டப் பெயரைச் சொல்லி டீச்சர் கூப்பிட்டதும், வகுப்பில் இருந்த அண்ணன்கள் எல்லாம் சிரித்தார்கள். எனக்குக் கூச்சமாக இருந்தது. ஆனாலும் அமைதியாக நின்றிருந்தேன்.

“தொப்புளான்!”

“டே தொப்புளான், கிட்ட வாடா,” கலைவாணி டீச்சர் இன்னும் கிண்டலாகக் கூப்பிட்டார்.

வகுப்பு முழுக்கச் சிரிப்பலை. நான் ஆத்திரம் தாங்காமல் “போடி இட்லி!” என்று கத்தியபடி, என் உயிர் பிடுங்கப்படுவது போல ஒரே ஓட்டமாக மைதானத்திற்கு ஓடினேன். நீண்ட தூரம் போய் யாராவது துரத்தி வருகிறார்களா எனத் திரும்பிப் பார்த்தேன். ஒருவரும் வரவில்லை.

அடுத்த ஒரு வாரம் கலைவாணி டீச்சர் கண்களுக்குப் படாமல் மறைந்து திரிந்தேன். ஒரு நாள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு லஞ்ச் பாக்ஸைக் கழுவிக்கொண்டிருந்தேன். அப்போது, “டே தொப்புளான்,” என்றக் குரல் கேட்டுத் திரும்பினேன். கலைவாணி டீச்சர் சிரித்துக்கொண்டே நின்றிருந்தார். அவரின் புன்னகை நிரம்பிய முகம் நம்பிக்கை தரவே, “குட் ஆப்டர்நூன் டீச்சர்,” என்று சொல்லியபடியே அருகில் சென்றேன்.

“என்னடா தொப்புளான், ஒரு வாரமா ஆள் கண்ணுலேயே படலை. ஸ்கூல் வரத்தானே செய்ற?” என்றார்.

நான் ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடியே நின்றேன். என் கையிலிருந்த லஞ்ச் பாக்ஸைப் பார்த்தவர்,

“மதியம் என்ன சாப்பிட்டே?” என்று கேட்டார்.

“இட்லிங்க டீச்சர்,” என்றேன்.

என் வலது கன்னத்தை மெல்லமாகக் கிள்ளி, “வெரி நாட்டி பாய்!” என்று இடது கன்னத்தில் செல்லமாக அடித்துச் சென்றார். 

***

சிவபிரசாத் – சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய சிறுகதைகளும் விமர்சனங்களும் தமிழின் முக்கியச் சிறுபத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. மறைந்த எழுத்தாளர் நஞ்சுண்டனின் கட்டுரைத் தொகுப்பான ‘காற்றின் நிழல்’ மற்றும் மொழிபெயர்ப்புத் தொகுப்பான “பால்மீசை” ஆகிய புத்தகங்களின் தொகுப்பாசிரியர். சொற்சுனை இலக்கிய அமைப்பின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இவர் சேலத்தில் வசிக்கிறார். மின்னஞ்சல்: Sivaprasath29@gmail.com

தாமரைபாரதி கவிதைகள்

0


கருஞ்சேற்று யானையின் தும்மல்

1.
பெயர் தெரியா மலை மரத்தில்
பெயர் தெரியாப் பூ மலர்தல்போல
பெயர் தெரியா அவனைக் கடந்து போகிறேன்.

2.
அடர் பனி வைகறை
இன்னும் உறக்கம்
நீளத்தான் வேண்டும்
கனவிலாவது நீளும்
அவனது சந்திப்பிற்காய்

3.
யாம்,
சந்திப்பின்
பிரக்ஞையிலூறிய
தகிப்பில் திளைக்க
திளைப்பில் தகிக்க
அவனோ
கருஞ்சேற்று
யானைக் கன்றாக
களிப்புறுகிறான்

4.
இவ்வளவு சீக்கிரமாகப்
பற்றிக்கொண்டானே
என்பதுதான்
அச்சுறுத்துகிறது
இவ்வளவு சீக்கிரமாகவே
பற்றுதலைக்
கைவிட்டுவிடுவானோயென்று

5.
கொஞ்ச நாள்கள் தொடர்பற்றிருப்பின்
எனக்கென்னவாயிற்றோ
என்றெல்லாம் விசனப்பட்டுக்கிடக்காதே
நானப்படியா விசனப்பட்டுக் கிடக்கிறேன் என்கிறான்
யாருக்கென்னவானால் எனக்கென்ன
என்றெல்லாம் நான் வாழவில்லையா
என்பவனைப் போட்டு மிதித்தாலென்ன?

6.
சனியன் பிடிச்ச
ஆன்லைன்
ஒரே ஒரு நாள் மட்டும்
உலகமெங்கும்
காலாவதியாகிடக்கூடாதா
என்றெண்ணுபவனை
இவ்வுலகு மன்னிக்குமா என்ன?

7.
போதுமிந்த அவஸ்தை
ஒரு தும்மலின் வேகத்தில்
சென்று விட வேண்டும்
அவனது நினைவுச்
சுவடேயற்ற
பிராந்தியத்துக்கு.


ஞாயிறின் பொலிவு
தைத்திங்கள்
பனிமுழு நிலவில்
மழை நனைத்த
வாழை இலையில்
வழிந்தோடும் திவலையென
பசுமையாய் நினைவினூடே
வந்து போகிறான்.
நாணல் தலைசாய்த்து
ஓடிய சிறுவாய்க்கால் கரையில்
அந்நிலவு சாட்சியாகப்
பிரியமாட்டேன்
என்றானே
இப்போதெங்கு போனான்?
தூரங்களே இல்லாத
ரம்மியமான இக்கனவு வழியே
காதகன் அவனைத்
தரிசித்துக் கிடப்பினும்
தற்கணத்தில் அருகினிலவன்
நனவென வரின்
இந்த ஞாயிற்றுக்கிழமையின்
பொலிவு மேலும் கூடுமே.


ஆட்டம்
வந்ததற்கும் போவதற்கும்
வழி அறிந்த நாம்தான்
இரண்டுக்கும் இடையில்
என்ன செய்வதென்று
அறியாமலே ஆடிக்கொண்டேயிருக்கிறோம்


வீடு பேறு
எல்லாவற்றையும் விட்டுச்
செல்வதற்காகத்தான்
எல்லாவற்றையும்
சேகரித்துக்கொண்டிருக்கிறோம்


மேகம்
தேவையற்றது
மனதில் நிரம்புகையில்
தேவையானது
மனதிலிருந்து நீங்குகிறது
மேகம் நீங்கிய மலையாக


சூர்ய விழி
மலையின் பின்னால் நீ
மறைவதாகப்
போக்குக் காட்டினாலும்
உனது குணப்பிரகாசம்
எமது விழிகளை
நோக்கித்தான்.

***

தாமரைபாரதி – மின்னஞ்சல்: thamaraibharadhi@gmail.com

நந்தன் கனகராஜ் கவிதைகள்

0

கற்களோடானது இவ் வாழ்வு

வேர்பிடித்து நிற்கும்
அம்மாவுக்கு
பாரம் கூடிய கிளை நான்

பெருங்காற்றுக்கு
கெடு சூழலுக்கு
காத்துக்கொண்டு நின்றாள்

எத்தனைமுறை
என் துண்டிப்பை நான்
விரும்பினேன்

வேரை விட்டு
கிளையை விட்டு
வெளியில் பறந்துருளும்
இலைகளாக
மாறிக்கொள்ள எண்ணினேன்

ஒரு
ஒரு
முறையும் வலி தான்

ஒவ்வொரு முறையும்
எல்லாமும் தாங்கினாள்

நிலம் பிடித்து
நீரிருப்பான வேர்களோடு
கிளைகளில் பூ மலர்வதும்
நானானேன்.


இந்த ஊருக்கு
பழுத்த உண்மைகளைக்
கற்றுக் கொடுத்தது யார்?
வளைவுகளில்
இடித்துக் கொண்டு
பாதைகளில் வழுக்கிவிழுந்து
நிஜத்தின் மீது
ஊர்ந்து கொண்டிருக்கும்
புழுவாகச் செல்ல
ஆரம்பித்து விட்டேன்.


என்னுடைய கிண்ணத்திற்கு
தினசரி அரிசி
உறுதி செய்யப்பட்டிருக்கிறது

அடுப்பில் ஏற்றினால்
பொலபொலவென
வெந்து விடுகிறது

கை கால்களை நீட்டி
மடக்கி
தோணுகிறதை யெல்லாம்
பேச முடிந்து

இவ் வாழ்வுதான்
எத்தனை
எளிமையாக
வந்து சேர்ந்திருக்கிறது

அம்மா
அரிசியில் கிடக்கும்
கற்களாகினாள்

ஊர்ந்து நெளியும்
வண்டாக அதில்
அப்பா மாறிப்போனார்

உண்ணும்போது
புரையேறினால்
ஞாபகமாய்
தலையில் தட்டிக் கொள்கிறேன்.


சிக்கிமுக்கிக் கற்களைக்
கைகளில்
ஏந்தியிருக்கிறேன்

மிகப் பழைய வாழ்வின்
திரண்ட வடிவம் இது

மிருதுவான குளிர்ச்சிக்கும்
உள்ளுறைந்த சூட்டிற்குமாக
யுகயுகமான சத்தம் கேட்கிறது

கற்கள் மண்டிய பாதையில்
நடக்கிறேன்

கற்களுரசி வரும் நீரைப்
பருகுகிறேன்

விளையாட்டின் போது
தலை மயிர்களுக்குள்
கல் நெருஞ்சிகள்
பூத்துக் கொள்வதை
அம்மா
ஒவ்வொரு நாளும்
வாரி யெடுத்துவிடுகிறாள்

கல்லுக்கும்
மண்ணுக்குமாக வளர்கிறேன்

கற்கள் கூடிக் கிடக்கும்
தானியங்கள்
இருப்பிருக்கிறது

யாரும் குறிப்பு சொல்லாமல்
கைகள் குவித்து
நடுகற்களை வணங்குகிறேன்

நாம் சந்திக்கும்போது
எனக்கொரு
கல் கொடுங்கள்.

***

நந்தன் கனகராஜ் – சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம். தனியார் நூற்பாலைகளில் பணி செய்து,தற்போது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ஆலோசகர். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள்,கட்டுரைகள் எழுதி வருகிறார். அகாலத்தில் கரையும் காக்கை (2020), மேழி நகரும் தடம்(2022), மலைச்சி (2024) ஆகிய கவிதை நூல்கள் வெளியாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவில் சிறந்த கவிதை நூலுக்கான விருது, சென்னை படைப்பு குழும கவிதை நூல் விருது, தமுஎகச அமைப்பின் மாநில இலக்கிய விருது ஆகியன பெற்றுள்ளார். செம்மலர் மாத இதழின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டு வருகிறார். இவரது கவிதைகள் மலையாளம்,ஆங்கிலம்,வங்காள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.மின்னஞ்சல்: skrnandhan@gmail.com

வ.அதியமான் கவிதைகள்

0

புணர்ச்சியை விடவும் அந்தரங்கமானதல்லவா?

து என்ன தெய்வம்?

அவனுக்கு
மன்னிக்கவும்
அவருக்கு

இதோ
நூறு ஜோடி கைகள்
நூறு ஜோடி கால்கள்
ஆயிரம் ஜோடி கண்கள்
ஆயிரம் ஜோடி காதுகள்
பத்தாயிரம் மூக்குகள்
முளைத்திருக்கின்றன

நம் சின்ன கண்களுக்குள் அடங்காத
பேருருவன்

நம்பவில்லையா நீங்கள்?

கொழுந்தியாளின் மகள்
உட்காரும் சடங்கு விழாவுக்கு
குடும்பத்தோடு
வெளியூர் சென்றிருக்கும்
நம்முடைய கணேசமூர்த்தியின்
(பத்திரமாய் பூட்டப்பட்டிருக்கும்) வீட்டுக்குள்
இந்த நடுநிசியில்
மையிருளில்
தன்னந்தனியாய்
திருடிக் கொண்டிருக்கும்
அவனை

மன்னிக்கவும்
அவரை

ஷ்ஷ்ஷ்…..
மூச்சுவிடும் சத்தம் கூட வராமல்
முழுசாய்
முழுசாய்
ஒரு முறை பாருங்கள்


மெய்யான குடிகாரர்கள், தான் நிற்கும் இடத்தை விட்டு சாகும் வரை ஓரங்குலம் கூட நகர மாட்டார்கள்

அப்பாடி
ஒரு வழியாக
இளம்பச்சை உதடுகள்
முளைத்துவிட்டன
எனக்கு

ஒரு தடையும் இல்லை
இனி நான்
பொழுதெல்லாம்
பொழுதெல்லாம்
அந்த சூர்யனை
உறிஞ்சிக்
குடித்துக் கொண்டே இருப்பேன்

சூர்யனே
முதல் போதை
சூர்யனே
உச்ச போதை
சூர்யனே
கடைசி போதையும் ஆகும்


ஒவ்வொரு கல்பறவைக்கும் ஒவ்வொரு ஆகாய கங்கை

சிறுவர்களால்
அந்தரத்தில்
வீசி எறியப்பட்ட
கணத்திலிருந்து
புத்தம் புது மாயச்சிறகுகள் இரண்டு
முளைத்து
வானில் பறந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு கல்பறவையும்
ஒவ்வொரு உயரத்தில்
ஒர் இமைக்கணம்
அசையாமல் நின்று
ததும்பி
மீளவும்
தரைக்கு திரும்புகிறது

அதென்ன ததும்பும் உயரம்?

முற்றிலும்
தன் சிறகுகள் அசையாத வானத்தில்
ஓர் செம்பருந்து
வெறுமனே நீந்திக் களிக்குமே
அந்த உயரம் தானே
அது?


நேற்றைய ஆடு இன்றைய விருந்து நாளைய மலம், வரிசை சரிதானே? ஓம் ஓம் ஓம்

நூறு வயிறுகளுக்குள்
இறங்கிச் சென்று
ஒய்யாரமாய்
அமர்ந்து கொண்டு
முதல் முறையாக
யோசிக்க தொடங்குகிறது
ஒரு ஆடு

ஒரு வேளை
கடவுள்
நம்மை
பலி ஆடாக
படைத்து விட்டாரா?


சரி, இரு சிறகுகளால் நடக்கத் தொடங்கினால் என்ன ஆகும்?

இடது பாதம்
எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்
காலடிகளை எல்லாம்
அக்கணமே
பழங்கதைகள் ஆக்கியபடி
தன் காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது
வலது பாதம்

போலவே
வலது பாதம்
எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்
காலடிகளை எல்லாம்
அக்கணமே
பழங்கதைகள் ஆக்கியபடி
தன் காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது
இடது பாதம்

இப்படியாகத்தான்
நான்
மூச்சிறைக்க
நடந்து…
நடந்து…
நடந்து…
நடந்து கொண்டிருப்பதை எல்லாம்
வெறும் பழங்கதைகளாய் ஆக்கி கொண்டிருக்கின்றன
இந்த எழவெடுத்த
பாதங்கள்


குட்டியூண்டு அரிசி மணிக்கு ஆயிரம் கால்களோ? ஆயிரம் கண்களோ?

அடுத்த ஊர் எதுவென்று அவனுக்கே தெரியாது
அவனொரு
இலக்கில்லா நெடுந்தூர பயணி

அவன் பயணித்துக் கொண்டே இருக்கும்
அத்தனை ஊர்களுக்கும்
அவனுக்கும் முன்னே
மிகச் சரியாக பயணித்து முடித்து
கொதி உலை வெந்து
பதமாகி காத்திருக்கின்றன
அவன் பெயர்
எழுதப்பட்டிருக்கும்
அரிசி மணிகள்


ஒரு வேளை, ஆகாயத்திலும் இல்லாமல் இருப்பவனோ?

எப்படியும் பிடித்து விட முடியும்
என்று
மெய்யாகவே நம்பி
நகரத் தொடங்கிவிட்ட
பேருந்தை நோக்கி
சிட்டாய் பறந்து
ஓடி வந்து கொண்டிருக்கும் ஒருவன்

அந்த சில கணங்களுக்கு

பேருந்துக்கு
உள்ளே இருப்பவர்களில்
ஒருவன் அல்லன்
பேருந்துக்கு
வெளியே இருப்பவர்களில்
ஒருவனும் அல்லன்

உண்மையில்
இந்த பூமியிலேயே
இருப்பவன்
அல்லன்


அலைகளுக்கு அடியில் இருக்கின்றன உங்கள் முகங்கள்

வாயாடி தண்ணீரே
ஓயாத உன் பேச்சை
கொஞ்சம் நிறுத்தேன்
ஒரே ஒரு நிமிடமாவது
நிறுத்து
அமைதியாய் இரு

ஏனா?

இப்போது
ஒரு முறை
என் முகத்தை
பார்த்துக் கொள்ள வேண்டும் போல
இருக்கிறது
எனக்கு

அதனால்


திகம்பர கதவுகள்

ஒருவர் பின் ஒருவராக
மூச்சிறைக்க ஓடி வருகிறார்கள்
நான்கு சீடர்களும்

அப்படியும்
இரு வினாடிகள்
தாமதமாகிவிட்டிருந்தது

இன்னும்
சூர்யன் முளைக்காத வெட்டவெளி
பசுங்கிளைகள் பரப்பி நிற்கும்
ஆலமரத்தடியில்
வகுப்பினை தொடங்கிவிட்டிருந்தார்
குருதேவர்

கிளைகளில்
ஓசை எழாது அமர்ந்திருக்கும் குருவிகள்
மலை உச்சி செம்பாறைகள்
இன்னும் அணையாது எரிந்து கொண்டிருக்கும்
சில நட்சத்ரங்கள்
புலரி வானம்
உடன்
மற்ற சீடர்கள்
எல்லோரும்
மிகச் சரியான நேரத்தில் வந்து
வகுப்புக்கு உள்ளே
அமர்ந்திருக்கிறார்கள்

நால்வரும்
தலைகுனிந்தபடி
வகுப்புக்கு
வெளியே
நின்று கொண்டிருக்கிறார்கள்

ஒரு முகமும்
தெரியவில்லை
ஒரு குரலும்
கேட்கவில்லை

இல்லாத பெருங்கதவுகள்
அறைந்து மூடப்பட்டுவிட்டன
அவர்களுக்கு


அத்தனை அம்மணங்களும் உங்கள் சின்ன கண்களுக்கு வெளியே தான் மதர்த்திருக்கின்றன

கடவுளே
என் பாதங்களுக்கு
கீழே
மட்டும் அல்ல
என் தலைக்கு
மேலேயும்
கோடான கோடி
வேர்களை
பரப்பி வைத்திருக்கும்
இந்த பூமியின் மீது தான்
இத்தனை காலமாய்
நான்
நடந்து கொண்டிருக்கிறேனா?

கழுத்து வலிக்க
அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருப்பவனின்
பால்முகம் கண்டு
மெல்ல சிரித்துக் கொள்கின்றன
உச்சி மலைக் காடுகள்

***

வ. அதியமான் – திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசித்து வருகிறார். குடைக்காவல் எனும் முதல் கவிதை தொகுப்பு சால்ட் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: vaadhiyamanrasan@gmail.com