Home Blog Page 9

காலமும் வெளியும்

0

ப்ரைன் முகி

தமிழில்: சங்கரன் ரவிச்சந்திரன்

(ஆங்கில தத்துவவியலாளர் ப்ரையன் முகியின் (Bryan Magee) நூல் “அறுதியான கேள்விகள்” ( Ultimate questions) உள்ள கட்டுரையின் மொழியாக்கம்.)

மனித நாகரீகம் என நாம் அழைப்பது சற்றேறக்குறைய ஆறாயிரம் வருடங்களாக இருந்து கொண்டிருக்கிறது. இக்கால அளவு மிக நீண்டது என நினைக்கப் பழகியுள்ளோம். நம்மில் சிலருக்கு இதன் வெளிறிய சுருக்கமே நினைவில் இருக்கும். நான் வசிக்கும் பகுதியில், மானுட நாகரீகம் பொதுவாக பழைய ஏற்பாட்டில் துவங்குகிறது. அதனுடனேயோ அதைப் பின்தொடர்ந்தோ வந்த கிரேக்கம், பின்னர் வந்த ரோம் – இவை ஒவ்வொன்றும் நூற்றாண்டுகள் நீடித்திருந்தன. பிறகு மத்திய காலத்தின் ஆயிரம் ஆண்டுகள் மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் நிறைவுற்று, சீர்திருத்தக் காலகட்டத்திற்கு நகர்ந்தது. அங்கிருந்து அறிவொளிக் காலகட்டம், தொழிற்புரட்சிக் காலகட்டம், கற்பனாவாத காலகட்டம் என நகர்ந்து நவீன காலகட்டத்திற்கு‌ள் நுழைந்து இன்று இங்கு வந்து நிற்கிறது. இதே அடர் காலஓட்டத்தில் புவியின் மறுபக்கங்களில் நாங்கள் அறிந்திராத நாகரீகங்கள் – சீன, ஜப்பானிய, இந்திய, மத்திய ஆசிய, மத்தியக் கிழக்கு, தென்னமேரிக்க மற்றும் மெக்ஸிகோ எனத் தோன்றி மறைந்திருக்கின்றன. இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வுகள் கடலில் பனிப்பாறைகள் நகர்வது போல் வெறுமனே கால நகர்வில் நிகழ்ந்தன என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இப்படி சிந்தித்துப் பாருங்கள். இன்று மிக அதிகமாகவும் முன்பு மிகக் குறைந்த அளவிலேனும் நூறாண்டுகள் வாழும் மனிதர்கள் எவரேனும் இருந்து கொண்டே இருப்பார்கள். அவ்வாறான மூன்று பேரை நானே அறிவேன், அதில் இருவர் புகழ் பெற்றவர்கள் – அரசியல்வாதி இம்மானுவேல் ஷின்வெல் மற்றும் இசைப் புரவலர் ராபர்ட் மெயர். ராபர்ட் பிறந்திருந்த போது நூறாண்டுகள் அகவை தாண்டிய எவரேனும் நிச்சயம் இருந்திருப்பார் – அவரையும் என்னைப் போல் ஒருவர் அறிமுகம் செய்து கொண்டிருந்திருப்பார். அந்த மூத்தவர்கள் பிறந்த போதும் நூறாண்டுகள் தாண்டிய வேறு எவரேனும் இருந்திருப்பார்கள். இப்படியே ஒவ்வொரு தெரிந்த ஆட்களாக வைத்து இடையீடின்றி பின்சென்று பார்த்தால், ஒட்டுமொத்த நாகரீமே வெறும் அறுபது சொச்ச மனிதர்களுடைய ஆயுளுடன் முடிந்து விடுவதைப் பேரதிர்ச்சியுடன் காண்போம். அறுபது நபர்கள் என்பது எனது வரவேற்பறையில் நடக்கும் தேநீர் விருந்தினர்களின் எண்ணிக்கை. இருபது சொச்ச நபர்கள் இயேசுவிடமும் இருபத்து ஒன்றாவது நபர் சீசரிடமும் சென்று நிற்பார்கள். வெறும் பத்து பேர் 1066ம் ஆண்டுக்கும் நார்மன் படையெடுப்புக்கும் சென்று நிற்பார்கள். மறுமலர்ச்சி காலகட்டத்திற்குச் செல்ல வெறும் அரை டஜன் நபர்களே போதும்.

ஒரு முழு மானுட ஆயுளை வைத்து வரலாற்றை அளந்து பார்த்தால், மொத்த வரலாறுமே மிகச் சிறியது என்பதை உணர்வோம். வரலாற்று மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்கின்றன என்பதே இதன் பொருள். அரை டஜனுக்கும் குறைவான ஒரு கையளவு மானுடர்களின் மொத்த ஆயுளுக்குள் மகத்தான பேரரசுகள் தோன்றி, வாழ்வாங்கு நிறைந்து மறைந்திருக்கின்றன. நாளை என்பது மறுநாளால், அடுத்த மற்றும் பின்வரும் ஆண்டுகளால், நூற்றாண்டுகளால், ஆயிரமாண்டுகளால், இருபதாயிரம், இரண்டு லட்சம், இருபது லட்சம் ஆண்டுகளால் ஒருபோதும் எந்தவொரு இடையீடும் இல்லாமல் பின்தொடரப்படும். இன்னும் சொல்லப்போனால், புவி மற்றும் பிரபஞ்சத்தின் மற்ற உறுப்புகளது ஆயுளைப் பார்க்கும் போது, இந்த காலகட்டமெல்லாம் மிகக் குறுகியது எனலாம். இங்கு அல்லது பிரபஞ்சத்தில் வேறெங்கும் மானுடர்கள் இருக்கும் வரை, அங்கிருந்து துவங்கி இங்கு இன்று வந்து முடியும் ஒரு இடையீடற்ற தொடர் வரலாற்றைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் என்ன ஆவார்கள் – முடிவற்ற கால ஓட்டத்தில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? மிக நீண்ட நெடும் எதிர்காலத்தில், தமக்குத் தேவையெனில் பேரறிவு பெற்றிருக்கக்கூடிய மானுடர்கள், அதற்கான துவக்கத்தில் இருக்கும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? மானுட நாகரீகத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலான மிகச்சிறிய காலகட்டத்தினது அளவின் பலநூறு மடங்கு தொலைவில் இருப்பவர்கள், அதுவரையிலான நிகழ்வுகளின் ஒளியில் இன்றிருக்கும் நம்மை எப்படிக் காண்பார்கள்?

வேகமாக கையைத் தூக்கி எதிர்ப்புத் தெரிவிக்கும் சில வாசகர்களையாவது கற்பனையில் காண்கிறேன். “இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் எப்படி சிந்திப்பது? இவற்றை கைக்கொள்வதற்கான கருத்தியல் அடிப்படைகள் என என்ன இருக்கிறது? வெறும் இரண்டு அல்லது மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சாக்ரடீஸ் அல்லது ப்ளேட்டோ போன்ற பிதாமகர்களாலேயே இன்று நடப்பதையோ அவர்கள் காலத்திலிருந்து இன்றுவரையிலான வரலாற்றையோ சிறிதேனும் ஊகிக்க இயலவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதைவிட பலமடங்கு பெரிய எதிர்காலம் குறித்து எந்தவிதமான பொருளுள்ள கற்பனைகளை நம்மால் கொடுக்க இயலும்? அது வெறும் பாழ் மட்டுமே. உடனடி எதிர்காலம் குறித்து மிகச்சிறிய ஊகங்களையே நம்மால் நிகழ்த்த இயலும் – அவையும் பெரும்பாலும் தவறாக இருக்கும் என்பதே வரலாறு நமக்குச் சொல்வது. உண்மை என்னவென்றால், எதிர்காலம் குறித்து நமக்கு எதுவுமே தெரியாது, எதுவும் தெரியப்போவதில்லை – மீச்சிறு தடயம் கூட கிடைக்கப்போவதில்லை. நீங்கள் சொல்லும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் (சிந்திக்கக் கூடாது என்றில்லை – அவ்வாறு சிந்தித்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி சிந்திப்பதற்கான வழி என எதுவும் இல்லை, அதனுடன் சேர்த்து சிந்திக்கவும் எதுவும் இல்லை) உடனடி சிறு எதிர்காலத்திற்குள் வழுக்கிச் செல்லும் நமது நிகழ்காலத்தில் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை”.‌

எனது பதில்: அமானுஷ்யமானதோ, புலன்கடந்ததோ, ஆன்மீகமான எதையுமே அல்லாமல் சாதாரண அன்றாட நிகழ்வுகளையே நான் முன்வைக்கிறேன். இன்றைய சூழ்நிலை நாம் எதிர்பார்க்கும்படி இப்படியே தொடரும் என்றால் என்ன நிகழும் என்று தான் கேட்கிறேன். இந்த தொடர்ச்சி நிற்பதற்குத் தான் அமானுட குறுக்கீடுகள் ஏதாவது – காலம் உறைந்து நிற்பது போல – தேவை. எதாவது விண்கல் மோதியோ சூரியன் குளிர்ந்து அமைந்தாலோ புவி தனது சுழற்சியை நிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு உண்டு என்பது உண்மையே. ஆனால் அவை நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகோ நிகழமுடியாமையின் ஓரத்திலோ தான் இருக்கும். அத்தகைய‌ நிகழ்வுகளையும் மானுடம் முன்னரே அறிந்து கொண்டு பெரும்பாலும் தப்பித்து விடும். உதாரணமாக, அணு ஆயுதங்கள் மானுடத்தின் பெரும் பாதுகாவலாக இருக்கலாம். மாபெரும் விண்கல் ஒன்று புவியின் மீது மோத வருவதாக வானியலாளர்கள் கூறினால் அணு ஏவுகணைகளை வைத்து அதனை தகர்த்துவிட இயலும். அந்த ஏவுகணைகளும் இயல்பான காலப்போக்கிலேயே இப்போது இருப்பவற்றை விட பலமடங்கு வலிமை வாய்ந்தவையாகவும் இருக்கும். மறுபக்கம், அதே ஆயுதங்களை வைத்து மானுடம் தன்னைத்தானே அழித்துக் கொண்டு வரலாற்றையே முடிவுக்கு கொண்டுவரவும் கூடும். ஆனால் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்கான நமது ஒவ்வொரு நகர்வும், பிழைத்திருப்பதற்கான சிக்கல்களைக் களைவதற்கானதாகவே இதுவரையிலும் இருந்திருப்பதால் முற்றழிவிற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. புவியில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தின் ஆழ்விரிவுகளில் மானுடம் வாழ்ந்திருக்கும் என்பதே கண்கூடான சாத்தியம். புவி வாழத்தகுதியற்றதாக மாறிய பின்னர் வேறு வழியில்லாமலோ அல்லது மிக நல்ல வாழ்விடம் வேறெதாவது கிடைத்தாலோ மானுடம் அங்கு சென்று விடும். எப்படியென்றாலும் அவர்களது கடந்த காலம் நம்முடையதுடன் தொடர்ச்சியானதாகவே இருக்கும். அவர்களது காலத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் நம்மைவிட மிக ஆழமாகவே அவர்களின் கடந்த காலத்தினை அறிந்திருப்பார்கள்.

நமது சொந்த கடந்தகாலத்தினைப் பற்றிய அறிதல் மிக விரிவானது என நினைத்துப் பழகிவிட்டோம். கடந்த ஆயிரமாண்டுகளில், நிகழ்காலத்திற்கு மிக அருகில் வர வர வரலாறு அடர்விரிவுடன் திகழ்கிறது. இருபதாம் நூற்றாண்டு பற்றிய நமது அறிதல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிவானது. ஆனால் இந்த அறிதல் வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யாருக்குமே அறியக்கூடுவதாக இருந்திருக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காலத்தில் அவர்களது இடம் அவ்வறிதலைத் தடைசெய்துவிட்டது. அவர்களைப் பொறுத்தவரை, நமக்கு எப்படி எதிர்காலம் பாழாகத் தெரிகிறதோ அதே போல் தான் இருபதாம் நூற்றாண்டும் தெரிந்திருக்கும். கால ஓட்டத்தில் மானுடத்திற்கு எப்போதுமே நிகழ்காலத்தையல்ல – தனது கடந்தகாலத்தை மட்டுமே தெரிந்து கொள்ள அமைந்திருக்கிறது. ஆனாலும் கடந்த – நிகழ் – எதிர்கால நிகழ்வுகள் அனைவருக்கும் சமமாக அதே வரிசையில் நிகழ்கின்றன. எதிர்கால நிகழ்வுகள் குறித்து மானுடத்திற்கு மிகச்சிறிதாகவோ அல்லது முற்றிலும் தெரியாததாலோ அவை நிச்சயமாக வறண்டு தெளிவற்றதாக இருக்கவேண்டும் என்பதில்லை. மாறாக, வறண்டு தெளிவற்று இருப்பது நாமே. நமது அறிதல் – அறிதலின்மையே பாழ். எதிர்காலம் நிறைவானதாகவே இருக்கிறது – அது என்னவென்று நாம் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. அந்நிறைவை நிகழ்த்தும் நிகழ்வுகள் கடந்தகாலத்தியவை போலவே உறுதியான, தெளிவான, திட்டவட்டமானவையே(specific). 

நாம் தெரிந்தும் புரிந்தும் கொள்ளக்கூடுவன எவையுமே கால ஓட்டத்தில் நமது இடத்தினைப் பொறுத்து (அதன் தாக்கத்தை மீறி தெளிவாகக் காண இயலாதவாறே) அமைகின்றன. நமது தற்போதைய வரலாறையும் உடனடி எதிர்காலத்தையும் மட்டுமல்லாது தற்போதைய சமூகத்தின் தற்போதைய அறிதலையுமே அது கட்டுப்படுத்துகிறது. (வேறு எந்தக்) கோணத்திலும் நம்மால் கண்டறிந்து உணர இயலாது. காலத்தின் எந்த இடத்திலும் நமது சமூகம் – அதன் கட்டமைப்பு வரைவிலிருந்து ஸ்தூல நிகழ்வு வரையிலும், கலை-அறிவியலிருந்து உணவு-உடை வரையிலும், பொருளாதாரத்திலிருந்து சமயம் வரையிலும், போர்த்திட்டங்களில் இருந்து போக்குவரத்து வரையிலும், நடத்தையிலிருந்து மொழி-பயன்பாடு வரையிலும் – நூறு வருடங்களுக்கு முன்போ பின்போ மாறாமல் உள்ளபடியே நீடிப்பதில்லை. இதனாலேயே மிகப் பெரும்பான்மையினர் இடத்தைப் போலவே காலத்திலும் எல்லைக்குட்பட்டதாக இருக்கிறார்கள் – தங்களது கால எல்லைக்குள் குறுக்கிக் கொண்டு அதையே தமது உலகாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த குறுகலுக்கு நேர் எதிரான ஒன்றே உண்மைக்கு அணுக்கமானது என அமையும். அவர்களது காலம் அடித்துச் செல்லப்பட்டு வெறும் நினைவுகளாகவே – தொடர் விரிவிலுள்ள காலத்தில் தொடர் விலகலில் இருக்கும் சிறுதுண்டு என்று தான் – எஞ்சப் போகிறது. எவருடைய நினைவிலாவது அது‌ ஒரு தீற்றலாக மட்டுமே இருக்கும். இன்னும், வரலாற்றாசிரியர்களைத் தவிர்த்து எவருக்குமே அது ஆர்வமூட்டுவதாகவும் இருக்காது‌ .

எவ்வாறாயினும், நம் ஒவ்வொருவருக்குமே மிகக் குறுகிய காலத்தில் முழு வாழ்க்கையையும் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. நமக்கான முழு ஒதுக்கீடும் அவ்வளவே. வாழ்வு என நாம் அறிந்து கொண்டிருப்பதில், நமது எல்லைகளுள், காலம் ஒன்றே மிகக் கொடூரமானதும் எந்த வடிவிலும் மிக ஆபத்தானதுமாகும். பிரபலமான வரிகளில்,

தொடர் நீரோட்டமென காலம் 

அதன் புதல்வர்களை சுமந்து விலகுகிறது.

பறந்து கனவென மறக்கப்பட்டு 

 நாளின் துவக்கத்தில் இறக்கிறார்கள்.

இதிலிருந்து விடுதலை என்பதே இல்லை. பருவுலகில் நம்முடையவை, நாம் யார் என அமைந்தவை, அனைத்தும் நேரத்துடன் முற்றாகவே பறிக்கப்படும்.

நாம் மகிழ்ந்திருக்கும் இக்கணத்தில், வெளி சார்ந்த நமது நகர்வுகள் மிகச்சிறிய இடத்திற்குள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதால், அந்த பரிமாணத்தில் நமது எல்லைகள் மிகக் கொடூரமானவை. புவியின் மேற்பரப்பில் மட்டுமே வாழுமாறு உயிரியல் ரீதியாக மிகக் குறுகலாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், நாம் வாழும் சூழலை அப்படியே புற உதவியுடன் கைக்கொள்ளாமல் அதிஉயர விண்ணுக்கோ ஆழமாக மண்ணுள்ளோ சென்றால் இறந்து விடுவோம். மேலோ கீழோ நாம் வெகுதூரம் என எங்கும் செல்லவில்லை. புவியைத் தவிர்த்து மானுடம் இங்கிருந்து வெறும் 240,000 மைல்கள் தொலைவிலுள்ள நிலவில் மட்டுமே காலடி வைத்துள்ளோம். கட்புலனாகும் பிரபஞ்சம் 1,000,000,000,000,000,000,000,000 மைல்கள் தொலைவுக்கு விரிந்துள்ளது. கட்புலனாகாத பிரபஞ்சம் இன்னமும் பெரும் தொலைவில் – மைல்களில் அல்லாது “லட்சக்கணக்கான பூஜ்ஜியங்கள்” நிறைந்த – ஒளியாண்டுகளில் அளவிடப்படும் தொலைவுகள் விரிந்திருக்கும் என இங்கிலாந்தின் வானியல் கனவான் கூறுகிறார். நமது சூரிய குடும்பமே இதில் ஒரு தூசி என அமைந்துள்ளது. இந்த சூரிய குடும்பத்தையே தாண்டிச் செல்ல இயலாதவாறு தான் மனித வாழ்வும் விண்ணின் மாபெரும் தொலைவுகளும் அமைந்துள்ளன.

காலம் மற்றும் வெளி(space) குறித்த கோட்பாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதாகத்தான் யேல் பல்கலையின் பட்டமேற்படிப்பில் எனக்குக் கற்பிக்கப்பட்டது. வெளி கோட்பாடு இல்லாமல் காலக் கோட்பாட்டையோ அல்லது அதன் நேர்மாறானதையோ விளக்குவது சாத்தியமே அல்ல. ஐன்ஸ்டைனுக்குப் பிறகு காலமும் வெளியும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் சொற்களில் ஒன்றுடன் ஒன்று “விளக்கவியலா ஆழ்தொடர்பினை” கொண்டிருக்கின்றன. இந்த ஆழ்தொடர்புகள் புரிந்து கொள்ள மிகக் கடினமானவை. ஆனாலும் சிந்தித்துப் பார்ப்போம்.

நூறு ஆண்டுகள் பயணம் செய்து நம்மை வந்தடையும் ஒளியை உமிழும் விண்மீன் ஒன்றை தொலைநோக்கி வழியாகக் காண்பதாக வைத்துக் கொள்வோம். நாம் காண்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த விண்மீனையே. நானறிந்த வரை இப்போது அந்த விண்மீன் அதேயிடத்தில் அப்படியே இருக்கும் என உறுதியாகக் கூற இயலாது. இந்த நூறாண்டுகளில் அது வேறு இடத்திற்கு நகர்ந்திருக்கலாம். வெடித்துச் சிதறியுமிருக்கலாம். எது நிகழ்ந்தாலும் என் விழித்திரையில் வந்து படும் ஒளி நூறு ஆண்டுகளுக்கு முன்னரே விண்மீனிலிருந்து கிளம்பிவிட்டது. ஆனால், இதற்கும் நான் பார்க்கும் மற்றவற்றிற்கும் பெரிய வேறுபாடு என எதுவும் இல்லை. இந்த அறையில் ஒருவரைப் பார்க்கிறேன் என்றால் அவர் “இப்போது” எப்படியிருக்கிறார் என்பதையல்ல, கடந்தகாலத்தின் ஒரு தொலைவில் – ஒளி அவரிடம் இருந்து என்னிடம் வருவதற்கான கால அளவு தொலைவில் இருப்பது. நமது அன்றாட வாழ்வில் இந்த தொலைவுகள் பிரித்து அறிய முடியாத அளவு மிகக் குறுகியவை என்பதால் அதை நாம் அறிவதேயில்லை. ஆனாலும் அவை இருக்கின்றன. அதன் ஒரு பின்விளைவு இதோ:

நாம் முன்பு பேசிக் கொண்டிருந்த விண்மீனில் இருந்து ஒரு உயிரினம் தொலைநோக்கி வழியாக நம்மைப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். நமது நூறாண்டிற்கு முந்தைய புவியையே அதனால் காண இயலும். ஒருவேளை, மனித நடமாட்டத்தையே காணக்கூடிய அதிநுண் தொலைநோக்கி அதனிடம் இருந்தால், நமது “நிகழ்காலத்தில்” அமர்ந்து கொண்டு, நிகழ்ந்து கொண்டிருக்கும் முதலாம் உலகப் போரைக் கண்டுகொண்டிருக்கும். அது காண்பது ஒளிப்பதிவையோ ஏதோவொரு வகையில் நிகழ்வுகளை மீண்டும் நிகழ்த்தும் வகைமையிலோ அல்ல – போர்க்களத்தில் ஒரு அதிகாரி காண்பதையெல்லாம் தானுமே காணும். இருவருமே ஒரே வேகத்தில் செல்லும் ஒரே ஒளியலைகளைப் பெற்று காண்கிறார்கள். தொலைநோக்கியை பயன்படுத்தும் உயிரினம், களத்தில் இருக்கும் அதிகாரியைப் போலவே நிகழ்வுகளை நேரடியாகக் காண்கிறது. 

நமது இதே நேரத்தில் இரண்டாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள விண்மீன் ஒன்றிலிருந்து ஒரு பார்வையாளர் இன்னமும் அதிநுண் திறனுள்ள தொலைநோக்கியை வைத்து நம்மைக் கண்காணிததால் இயேசு சிலுவையில் அறையப்படுவதையே காண்பார். நமக்கு சிறிது அருகிலுள்ள இன்னொரு விண்மீனிலிருந்து பார்த்தால் ஹேஸ்டிங்ஸ் யுத்தத்தினை நேரடியாகக் காண்பார்கள். இன்னும் சற்று அருகிலுள்ள விண்மீன் என்றால் பதினாறாம் நூற்றாண்டில் எலிசபெத் மகாராணி லண்டன் தெருக்களில் ஊர்வலம் செல்வதைக் காண்பார்கள். மனித வரலாறு மட்டுமல்லாது ஒட்டுமொத்த வரலாற்றையுமே வெவ்வேறு தொலைவில் உள்ள விண்மீன்களில் உள்ள பார்வையாளர்களால் நேரடியாக ஒரே நேரத்தில் காண இயலும். இதில் எந்தவொரு அமானுஷ்யமும் இல்லை. முழு வரலாற்றையும் ஒன்றாக ஒரே நேரத்தில் காணக்கூடியவரே கடவுள் என்னும் கருத்து நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் மனிதர்களின் ஒரு குழு – வெவ்வேறு தொலைவில் உள்ள விண்மீன்களில் சரியான தொலைநோக்கு உபகரணங்களைப் பொருத்தினால் இதையே நிகழ்த்த முடியும். கால ஓட்டத்தில் தொடர்ந்து நிகழும் ஒன்றுடன் தம்மைத் தாமே அக்குழுவினர் தொடர்புறுத்திக் கொள்வதைத் தவிர காலப்பயணமோ மாயமந்திரங்களோ இதில் ஏதும் இல்லை. 

முற்றிலும் அறிவியல் அடிப்படையில், இயற்பியலைப் பொறுத்தவரை புறவயமாக “இன்று” என எதுவும் இல்லை என ஐன்ஸ்டைன் நம்பினார். “இன்று” என்பது காணப்படும் பொருளைச் சார்ந்து காண்பவரது இடத்தைப் பொறுத்தது. ஆனால், காண்பவரைச் சார்ந்தே “இன்று” என்பது அமையும் என்றால், “நேற்று”ம் “நாளை”யும் அவ்வாறு காண்பவரைச் சார்ந்தே அமையும். ஐன்ஸ்டைன் வெளிப்படையாகவே சொல்லி விட்டார்: நடந்தவை – நடக்க இருப்பவை என்னும் கருத்துகள் புறவயமானவை என மனித மனத்தில் ஆழப் பதிந்திருந்தாலும், அவை கற்பனையே. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும் “இன்று” என்பது மக்கள் வாழும் போதும், “நாளை” என்பது வாழ்ந்து முடித்தவர்களுக்கும் , “நேற்று” என்பது இனி வாழப் போகிறவர்களுக்கு என அமையும். ஆனால் வரலாற்றின் நிகழ்வுகளும் அதன் ஒழுங்கும் அனைவருக்குமே ஒன்றாகத் தான் இருக்கும். காலம் குறித்த இவையனைத்தையும் உண்மையென ஐன்ஸ்டைனும் ஏற்றுக் கொள்கிறார். நிகழ்வுகளுக்கு காலத்தில் ஒரு ஒழுங்கும் – லௌகீகமான (temporal) ஒரு ஒழுங்கும் உண்டு. ஐன்ஸ்டைன் இதையும் மறுக்கவில்லை. அவர் சொல்வது, இந்த லௌகீகமான ஒழுங்கில் சிறப்பாக “இப்பொழுது” என எந்தவொரு தருணமும் இல்லை. வேறுவிதமாகக் கூறினால், கால ஒழுக்கு அல்ல கால வரிசை என்பதே புறவயமானது‌. நமது அனுபவத்தின் ஒரு பண்பே கால ஒழுக்கு என்பது. ஐன்ஸ்டைனுக்குப் பின்னர் வந்த விஞ்ஞானிகளில் கிட்டத்தட்ட அனைவருமே இது எதுவுமே மாயம் அல்ல – முற்றிலும் அறிவியல்பூர்வமானதே என நிறுவினர். உண்மையில் காண்ட்டுடன் (Immanuel Kant) தத்துவவியலாளர்களே இந்த முடிவுக்கு முதலில் வந்தவர்கள். ஆனாலும் தத்துவ ஊகங்களுக்கு அறிவியல் அடிப்படையும் சரியாக அமைவது உலகளாவிய மாற்றத்திற்கு வழிவகுத்தது. 

ஆழ்மர்மமென அமைந்திருக்கும் காலத்தினுடைய இயல்பினது முக்கிய கூறுகள் இன்றளவும் இயற்பியலாளர்களிடையே பெரும் விவாதங்களைக் கிளப்பி விடுகின்றன. இதில் இயற்பியலாளராக இல்லாமல் அறிவியல் அடிப்படையில் வாதிட முயல நான் அறிவிலி அல்ல. ஆனால், அறிவியலாளர்களிடையே நிலவும் இந்த சச்சரவு, காலம் குறித்த சிக்கல்கள் சமயத்தையோ தத்துவத்தையோ சார்ந்ததாக இல்லை என்பதைக் காட்டுகிறது. அதற்கான தீர்வுகளும் நமது பொதுப்புத்திக்கு எளிதானதாகவோ, அதை வைத்தோ அமையப் போவதில்லை – உண்மையில் நேர்மாறாகவே அமையும். அத்தீர்வுகள் நமது பொதுப் புத்தியை மிரளச் செய்கின்றன.

காலமும் வெளியும் ஒருவகையில் பருப்பொருளுக்கு அவையின்றித் திகழ முடியாத வகையில் அடிப்படை கட்டமைப்பாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு தனி பருப்பொருளுக்கும் காலத்திலும் வெளியிலும் ஒரு இடம் உண்டு. மேலும், அனைத்து பொருட்களுமே நிலையற்றவை: தத்தமது இருப்பில் வெளிப்படுகின்றன, இடைநில்லா தொடர் மாற்றத்திற்கு உட்படுகின்றன, சடாரென்றோ மெதுவாகவோ இருப்பில் இருந்து மறைந்துவிடுகின்றன. இதற்கு நமது உடல்களும் விதிவிலக்கல்ல. கலலேயோ கூறியபடி, நாம் அமரர்கள் என்றால் இவ்வுலகில் இருக்கவே முடியாது. மனித உடலினது இருப்பின் ஆயுட்காலம் அது செல்லக்கூடிய தொலைவின் எல்லைகளை வரையறுப்பதால், ஏதேனும் ஒரு தருணத்தில் இவையெல்லாம் என்ன என்பதை ஓரளவிற்கு தெளிவாகவே ஊகிக்க இயலுகிறது. உதாரணமாக, எந்தப் பொருளும் ஒளியை விட வேகமாகச் செல்ல முடியாது எனவும் எந்தவொரு மனிதனும் இருநூறு வருடங்களுக்கு மேல் வாழ முடியாது எனவும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியெனில், புவியில் இல்லையென்றாலும் தொடங்கிய இடத்திலிருந்து எந்தவொரு மனிதனும் இருநூறு ஒளியாண்டுகள் தாண்டி எங்குமே பயணிக்கவே இயலாது. ஒருவேளை ஒளியின் வேகம் அதன் திசைவேகத்தை மட்டுப்படுத்தவில்லை என்றாலும், தொடர்ந்து வரும் ஆயுட்காலங்களில் நிகழ்த்தப் படும் தொடர் பயணங்கள் ஊழியூழிக் காலங்களுக்கு மனிதனை பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் கட்டிவைத்திருப்பதாகவே அமையும்.

பருப்பொருட்களை நம்மைச் சார்ந்த அதன் அளவினை வைத்தே அறிந்து கொள்கிறோம். புவியை விட பலகோடி மடங்கு பெரிய விண்மீன்களில் துவங்கி அணுத்துகள்களின் அடிப்படை உறுப்புகள் வரை அவை நீண்டிருக்கின்றன. ஒரே அளவுள்ள பிரபஞ்சத்தைப் பற்றிய நமது பார்வை, நம்முடன் பொதுப்பண்புகளைக் கொண்டிருக்கும் பிற உணர்வுறு இருப்புகளிலிருந்து இருந்து முற்றிலும் வேறானதாகவே இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு புல்தரை என்பது காலடியில் இருக்கும் ஒரு விரிப்பு என நமக்குத் தோன்றலாம். அங்கு புற்களில் வாழும் எறும்பிற்கு அந்தப் புல்தரை ஒவ்வொரு வகையிலும் முற்றிலும் வேறானதாகவே இருக்கும். ஆயினும் அந்த வேறுபாடுகள் பார்வைக் கோணம், இடம் மற்றும் அளவீடுகளை மட்டுமே பொறுத்தது. அந்த உணர்வுறு இருப்புகளையும் நம்மையும் சேர்த்து மொத்த பருப்பொருட்களுமே ஒரே வஸ்துவால் ஆக்கப்பட்டவை.

நாம் இறந்தாலோ, ஏதேனும் பருப்பொருள் அழிந்தாலோ, அணுக்கள் சிதறிப் பரவி விடுகின்றன – அதன் இருப்பு தீர்ந்து மறைவதில்லை. நமது இருப்பிற்கு முன்பு அவை வேறு திட திரவ வாயுக்களின் உறுப்பாக இருந்திருந்து, தற்காலிகமாக உங்களது மற்றும் எனது உருவாக்கத்தில் பங்கெடுத்து, சிதறிப் பரவி வேறொன்றின் உருவாக்கத்தில் பங்கெடுக்கச் செல்லும். அனைத்து பருப்பொருட்களும் நிலையற்றவையே‌ – தற்காலிக ஏற்பாட்டில் அமைந்தவை. அதன் உறுப்புகளோ அணுக்கள் மட்டுமே அழிவற்றவை.

அதிபிரம்மாண்ட சீட்டுக்கட்டு ஒன்றினை நிறுத்தாமல் அடுக்கிக் கலைத்துக் கொண்டே இருப்பது போல் அனைத்து பொருட்களும் ஒரே அடிப்படை உறுப்பினால் உண்டாக்கப்பட்டுள்ளது என்பது திகைப்பூட்டுவது என்றாலும் ஒரு உண்மை. நிச்சயமின்மைக் கொள்கையை துளிம இயக்கவியலில் ( Quantum mechanics) அறிமுகப்படுத்திய ஹைசன்பர்க், “எப்போதுமே இருப்பது அதே பருப்பொருள், எந்தவொரு பொருளுக்கும், தனிமங்களுக்கும், தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் அதே மூலக்கலவைகள் , பருப்பொருளின் பல்வேறு பகுதிகளுள் செயல்படும் விசைகளுமே அறுதியாக அனைத்துவிதமான பொருட்களிலும் உள்ளன…. பருப்பொருளின் ஒருமை என்பதற்கான அறுதி சாட்சியம் இதோ உள்ளது. அனைத்து அடிப்படை துகள்களும், ஆற்றல் என்றோ பிரபஞ்ச பருப்பொருள் என்றோ அழைக்கப்படும் ஒரே வஸ்துவால் உண்டாக்கப்பட்டவை. அவையனைத்தும் பருப்பொருளின் வெவ்வேறு வடிவிலான வெளிப்பாடுகள் மட்டுமே “ . அடிப்படை துகள்களின் ஆயுள் என்பது கற்பனைக்கெட்டாத வகையில் நீண்டது – அவை ஒவ்வொன்றும் பலநூறு கோடி பொருட்களின் – உயிர்ப்பொருட்கள் உட்பட – உறுப்பாக இருந்திருந்த பின்னரே நமது ஒரு பகுதியாக அமைந்திருக்கும். மனித உடலை உண்டாக்குவதற்கான துகள்களது அதிபிரம்மாண்டமான எண்ணிக்கையும், இனப்பெருக்கத்தின் உயிர்வேதியியல் விளைவுகளும் நமது ஒவ்வொரு துகளும் நிச்சயமாக இன்னொருவருடையது என்பதைக் காட்டுகிறது. ஒருவகையில், நாம் ஒவ்வொருவரும் மறுபிறப்புகளே. நான் சொல்லியபடி, நாம் ஒவ்வொருவரும் ஒரு தற்காலிக அமைப்பு மட்டுமே.

அறிவியல் இவற்றை அணுக்கள் துகள்கள் என விளக்குவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஷேக்ஸ்பியர் இதன் சாரத்தை அறிந்திருந்தார் (அவர் அனைத்தையும் அறிந்தாருந்தார் என சிலநேரங்களில் ஒருவர் நினைக்கலாம்.) ஹாம்லெட்டின் ஒரு கணத்தில் இளவரசன் கூறும்/ பாடும் வரிகள்: 

மேலாதிக்க சீஸர் இறந்து மண்ணாகி விட்டார் 

ஆவி வெளியேறாமல் ஒரு துளையை அடைத்திருக்கலாம்

ஆ! உலகை ஆச்சரியப்படுத்தும் புவி

குளிரின் களங்கத்தை வெளித்தள்ள ஒரு சுவரை ஒட்டியிருக்கலாம்! 

 அதற்கு முன்னரே ஹாம்லெட் க்ளாடியஸ் அரசரிடம் கூறுகிறார் – “அரசனை உண்ட புழுவினை தூண்டிலாக்கி ஒருவன் மீனைப் பிடித்து உண்ண முடியும்“. தான் தூண்டிலாக்கப்படுவதை அறிந்த மன்னன் ”நீர் சொல்வதன் அர்த்தம் என்ன?” என்று வினவினான். ஹாம்லெட்டின்‌ விடை –     “ஒன்றுமில்லை. ஒரு யாசகனின் குடல் வழியாகவும் அரசன் முன்னேறக்கூடும் என உங்களுக்குக் காட்ட விரும்பினேன்” 

இந்த பார்வைக் கோணங்கள் ஒவ்வொன்றுமே நம்மைப் பற்றிய சரியான நோக்குகளுக்குள் உள்ளிழுக்கப்பட வேண்டியவை. ஆனால் அவற்றின் பட்டியல் ஒருபோதும் முடிவடையாத ஒன்று. பிரபஞ்சத்தின் போக்கில் இமைக்கணம் மட்டுமே வாழ்ந்து கண்காணாமல் புதைக்கப்படுகின்ற நமக்கு, அறிதலுக்கு முன், அறிந்து கொள்ள என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம் என எப்படி நம்புவது? மானுடன் அறிந்து கொள்ள ஏதுவான கருத்துக்களாகவே ஒவ்வொன்றும் இருக்கின்றன – எனவே அறிய முடியாதது என எதுவுமில்லை – என்னும் கூற்று அறிவுமதிப்பற்றது. முன்னோடி விஞ்ஞானியும்‌ கறாரான பொருள்முதல்வாதி என நான் நம்பும் ஜெ எஸ் ஹல்டேன் ( ஜெ பி எஸ் என் பரவலாக அறியப்பட்டவரின் தந்தை) ஒருமுறை கூறினார்: “ பிரபஞ்சம் நாம் நினைப்பதை விட ஆச்சரியமானது மட்டுமல்ல. நமது நினைப்பின் எல்லையைத் தாண்டியும் ஆச்சரியமானவை.” மிகக்கூரிய பகுத்தறிவாளனும் உள்வாங்கிக் கொள்ளவேண்டிய கருத்து இது.

நிதர்சனத்தை அறிவுப்பூர்வமாக கைக்கொள்ள ஒருபோதும் மானுடனால் இயலாது என்பதே இதுவரையிலான அனைத்து கூறுகளையும் வைத்துப் பார்க்கையில் வரும் முடிவு. புதிய கண்டறிதல்கள் தொடர்ந்து நிற்காமல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில நமது சிந்தனையையே மாற்றுகின்றன. கண்டறியப்பட வேண்டியவையும்‌ முடிவற்றவையாக எப்போதும் உள்ளன. இந்நூலை‌ எழுதிக் கொண்டிருக்கும் வேளையிலும் அறிவியல் தொடர் ஓட்டத்திலேயே இருக்கிறது. சமகால கண்டறிதல்களை ஒரு பார்வையாளர் அதன் முக்கியத்துவம் கருதி புரிந்துகொள்வதற்குள் அவை புதிய முன்னகர்வுகளால் திசைமாறி விடுகின்றன. தன்னைச் சுற்றியுள்ள உலகை அறிந்து தனது அறிதலால் கைக்கொள்ள நினைக்கும் ஒருவர் தொடர்ந்து தான் கால்வாரப்படுவதைப் உணர்வார். தமது முந்தைய நோக்கின் போதாமையை உணர்ந்து போராடி வெளிவரவதற்குள் புதிய நோக்கின் போதாமைகள் வெளிப்பட்டுவிடுகின்றன. இந்த சுழற்சி முடிவற்றது.

உலகம் மீதான அறிவுப்பூர்வமான ஆதிக்கத்தை மானுடம் பெறவே முடியாது என நிற்கும் மற்றொரு தடை – அனைத்தையும் உள்ளிருந்து அகவயமாக மட்டுமே புரிந்து கொள்ள இயலாது என்பதே. ஒவ்வொன்றும் புறவயமாகவும் காணப்பட வேண்டும். மக்கள், சமூகங்கள், தேசங்கள், நிறுவனங்கள், சிந்தனைகள், நம்பிக்கை சார்ந்த அமைப்புகள், பொருட்கள் என அனைத்திற்குமே இது பொருந்தும். எனவே, இந்த தேடலில் இருப்பவரது ஒரு கால் தொடர்ந்து ஒரு பொறியில் சிக்கியிருக்கும். பிரபஞ்சத்தினை அறியும் முயற்சியில் அதிலிருந்து வெளியே செல்ல இயலாது. காணும் இவ்வுலகினை அறிய இதிலிருந்து வெளியே செல்ல இயலாது. மானுடன் என நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு மானுடத்திலிருந்து வெளியேற இயலாது. வெளிப்படையாக, நாம் எதையுமே அறிந்து கொள்ள இயலாது என நான் சொல்லவில்லை. நிச்சயமாக எல்லாவற்றையும் நம்மால் அறிய இயலாது. 

Bryan magee – ப்ரையன் மேகி ஆங்கில தத்துவவியலாளர், அரசியலாளர், பிபிசியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுள் ஒருவர்.  தத்துவம்,  குறிப்பாக மேலைத் தத்துவத்தினை அதன் தீவிரம் குறையாமல் நூல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக பொது வாசகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தியவர். மேலைத் தத்துவ அறிமுகம், ஷோப்பனோவர், வாக்னர் குறித்த அவரது நூல்கள் பெரும் புகழ் பெற்றவை. 2019ல் மறைந்தார்.

***

சங்கரன் ரவிச்சந்திரன் – மென்பொறியாளரான சங்கரன்  ரவிச்சந்திரன் அறிவியல், தத்துவம், இலக்கியத்தில் ஈடுபாடு உடையவர். ஜெயமோகன், புதுமைப்பித்தன் , க நா சு, கந்தர்வன் முதலானோர் ஆதர்ச எழுத்தாளர்கள்.  கார்லோ ரொவெல்லியின் Seven Brief lessons in physics நூலை “இயற்பியலின் ஏழு சுருக்கக் குறிப்புகள்” என தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். சொல்வனம், அகழ் மின்னிதழ்களிலும் மொழியாக்கங்கள் செய்து வருகிறார். ஈரோட்டை பூர்வீகமாகக் கொண்டவர் சென்னைக்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார்.  மின்னஞ்சல்: shankaraner.b@gmail.com

அடங்கிக் கிடக்கும் தகிப்பின் சாட்சி

0

ஆதவன் சரவணபவன்

னிதன் சிரிக்கும் விலங்கு என்ற சொலவடை போல அவன் தேடும் விலங்கு என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் தேடிக்கொண்டிருக்கிறான். பொருளாக, வேலையாக, நிலமாக, வளமாக அதற்கான காரணங்களையும் வைத்திருக்கிறான். தேடலின் அந்தம் அதிகாரமாக அவனுள் உருக்கொள்கிறது. அதிகாரம் அடிமைப்படுத்துகிறது. அடிமைப்படுத்தப்படுதலின் வழியே துன்பத்துக்கு ஆளாகும் மனிதர்களின் எதிர்வினையாக போராட்டமும் அதைப் பற்றி வரும் சுதந்திர தாகமும் என்று மனித நாகரீகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் இந்த அதிகாரமும் அடிமைப்படுத்தலும் நடந்துகொண்டே இருந்தது. இதுவொரு முடிவில்லாத சுற்றோட்டம். ஆண்டாண்டு காலமாக வெவ்வேறு பரிணாமங்களாக மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் படிகளில் நடந்தன. இன்றும் நடக்கின்றது. இனியும் நடக்கும். இருவேறு காலகட்டங்களில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை சமாந்தரமாகச் சொல்லும் புதினம் கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய தரூக் நாவல். இலகு மொழியில் சிக்கலில்லாமல் வாசகனைத் தன்னுடன் இழுத்துச் செல்லும் நுட்பத்தைக் கொண்டிருக்கும் கதையமைப்பு. 

இங்கிலாந்தில் இருந்து கைதிகளை அடிமைகளாக புதிய நிலத்தைத் தேடிச் செல்லும் முதல் குழுவின் கண்டுபிடிப்பான அவுஸ்திரேலிய நிலம். அங்கே நிலைநிறுத்தும் இங்கிலாந்து அரசியின் அதிகாரம். முதன்முதலில் அந்தக்குழுவில் நிலத்தைத் தேடிச் சென்ற வில்லியம் என்ற இங்கிலாந்து அரசின் உத்தியோகத்தன் பார்வையில் நகரும் கதை ஒருபுறம். மனித வாழ்வுக்கு அடிப்படையான உணவை உற்பத்தி செய்யும் நிலவியலை காணும் பயணமாக மேம்போக்காக பார்த்தாலும் உண்மையில் நிலத்தைக் கையகப்படுத்தும் பேரவா இங்கிலாந்துப் பேரரசுக்கு இருந்தது. நிலத்தின் உரிமை அதன் மேல் கீழாக இருக்கும் வளங்களின் உரிமைக்கான முதல்படி. 

இன்னொருபக்கம் சமகாலத்தில் சிட்னியில் IT நிறுவனத்தில் வேலைக்கு மனைவியுடன் வந்திருக்கும் இந்திய முஸ்லீம் இளைஞன் காசிம். புதிய நிலத்தில், புதிய கலாச்சாரத்தில் வாழும் சூழலில் காசிம் எதிர்கொள்ளும் வாழ்க்கைப்பாடுகளை படர்க்கையில் கதாசிரியர் சொல்கிறார். 

இந்த இரண்டு களங்களையும் தொடுக்கும் ஜெட்டா என்ற தருக் பழங்குடி வம்சாவழிப் பெண். 

சொந்த நிலங்களை விட்டு துரத்தப்படும் மாந்தர்களை மட்டுமல்ல அங்கீகாரம் கிடைக்காமல் நிறவெறியால் உடைந்து போகும் மனித மனங்களை வாசகனின் முன் நிறுத்தும் காத்திரமான புதினம்.

காசிமுக்கு ஜெட்டா மேல் எழும் காதல் பல கேள்விகளை எழுப்புகிறது. இருவரும் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவள் சமூகத்தின் மீது நிகழ்ந்த அடக்குமுறைகள் இன்னும் தொடர்வதை ஒரு நூலின் வழி அவனுக்குச் சொல்கிறாள். அதை வாசிப்பதால் ஏற்படும் கரிசனை ஈர்ப்பாக மாறுகிறது. தனக்கு நிகழும் இனவெறித் தாக்குதல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் அவனுள் பரிதாபமும் அன்பும் பொங்கி எழுகிறது.

அவனுக்கு சொந்த நாட்டிலும் வேலை பார்க்கக் கூடிய தரமான கல்வி அறிவு இருக்கிறது. அவுஸ்திரேலியாவில் வேலை செய்யப் பிடிக்கவில்லை என்றால் அவனால் இலகுவாக ஊருக்குப் போயிருக்க முடியும். ஆனால் ஏதோ ஒன்று தொடர்ச்சியாக தொந்தரவு செய்து மனைவியிடமும் சொல்லாமல் அந்நியத்தனமாக உணர்கிறான். மனதுள் எழும் தொடர்ச்சியான அந்தரிப்பும் அமைதியின்மையும் காசிம்மை நிதானமில்லாத நிலைக்குத் தள்ளுகிறது. ஒரே ஆறுதலாக இருக்கும் ஜெட்டா மேலான காதல் புறக்கணி உதிரிகளின் பிணைப்பாக மேலெழுகிறது. 

நாவலின் முக்கியமான கட்டத்தில் வாசிப்பின் நடுவே சம்பவம் ஒன்று நினைவில் வந்தது. ஒருநாள் எனது தமிழ்நாட்டு நண்பனுடன் சிங்கப்பூரின் food court என்னும் திறந்த உணவகத்தில் பேசிக்கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் இவ்வாறான உணவுக்கடைகளின் தொகுதி பிரபலம். பல வகையான உணவுக்கடைகள் இருக்கும். சீன, மலே, இந்திய மற்றும் மேலைநாட்டு உணவகங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் பலதரப்பட்ட மக்களையும் காணலாம். ஒரு வெள்ளைக்காரர் எங்களை அணுகி “ஹாய்” என்றார். நானும் பதிலுக்கு “ஹாய்” சொல்லி முடிப்பதற்குள் கையை நீட்டி கைலாகு கொடுத்தார். 

“நான் நினைக்கிறேன் விலாசம் பக்கத்தில் தான் இருக்கிறது. இந்த அடுக்குமாடிக் கட்டடத்துக்குப் போகும் பாதை எது?” என்று கேட்டு கைபேசித்திரையைக் காட்டினார். நான் அந்த விலாசத்தில் இருந்த அடுக்குமாடி இலக்கத்தைப் பார்த்து அவருக்கு இலகுவாகப் போகும் நடைபாதையைக் காட்டினேன். நண்பருக்கும் எனக்கும் சேர்த்து நன்றி சொல்லிவிட்டுச் சென்றார். 

நண்பன், “எடுத்த எடுப்பில் கைகொடுக்கக் கூடாது. ” என்றான். எனக்குப் புரியவில்லை.

“ஒரு நாகரீகம் தானே” என்றேன். 

“நான் ஒரு ஏழுவயசுச் சிறுவனிட்ட இப்படித்தான் கேவலப்பட்டன்” என்று தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்தான். இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் மலானா (Malana) என்ற கிராமத்துக்கு உல்லாசப் பயணியாகச் சென்றிருக்கிறான். அந்தக் கிராமம் இன்னும் பழமை மாறாமல் இருக்கிறது. அங்கே வசிக்கும் மக்கள் தங்களை அலெக்சாண்டருடைய படைவீரர்களின் வழித்தோன்றல்களாகக் கருதி வாழ்கிறார்கள். வழிவழியாக அந்த வரலாறு கடத்தப்படுகிறது. பழமை மாறாத மக்கள் சில முன்னேச்சரிக்கையான பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கங்களை ஊட்டி வளர்க்கிறார்கள். 

வெளியில் இருந்து வருபவர்களுக்கு கைலாகு கொடுக்கக் கூடாது என்ற சட்டத்தை கிராமத்து மக்கள் கைக்கொள்கிறார்கள். வெளியாட்களுடன் தொடுகையை முற்றுமுழுதாகத் தவிர்க்கிறார்கள். நண்பன் இவ்வாறு தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை என்னுடன் பகிர்ந்தான்.

நாகரீகம் என்பது பாதுகாப்பைச் சிதைப்பதல்ல. நோய்க் காவிகளாக மனிதனின் நகர்வுகள் இன்னொரு மனித சமூகத்தில் இவ்வாறான சமூக பொருளாதார சுகாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்ற புள்ளியில் மானுட அறத்தைக் கேள்வி கேட்கிறது இந்த நாவல். 

கதையை வாசித்துக் கொண்டிருக்கையில் சில சந்தேகங்கள் முளைத்தன. குறிப்பாக முஸ்லிம் இளைஞனுக்கு அவனது மத அனுட்டானங்கள் வாழ்வின் முக்கிய பங்கு வகிக்கும். இங்கே காசிம் தினம் தொழுபவனா நோன்பு இருப்பவனா என்ற எந்த விபரங்களும் கொடுக்கப்படவில்லை. குல்லா அணிந்த இஸ்லாமியனாக இருந்திருந்தால் அவன் மீதான வெறுப்புக்கு சிலவேளை இனவுணர்வை விட மத வெறுப்பு கூட காரணமாக இருந்திருக்கலாம். அவனது வழிபாட்டுக் கூறுகள் நாவலின் எந்த பகுதியிலும் உள்வரவில்லை. முஸ்லிம்களின் முக்கிய கடமைகளை அவன் கைக்கொள்ளாததற்கு சரியான காரணத்தை ஆசிரியர் கொடுத்திருக்கவில்லையோ என்று தோன்றியது. இதே காசிம் போல் இன்னொரு வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் இந்த பாத்திரம் பொருந்தியிருக்கும் போது ஒரு இஸ்லாமிய குடும்பமும் அந்த குடும்பத்தில் பிறந்த காசிமும் இங்கே பிரதானமான பாத்திரங்களாக வந்திருப்பதின் தாக்கம் இல்லாமல் போய்விடுகிறது. 

ஒருவகையில் தந்தை ஊரில் பூர்வீகமாக வாழும் மனிதரின் வீட்டைச் சுவீகரிக்கும் கர்மா தான் காசிம்மின் நிலைக்கு காரணமாக இருக்குமோ என்றும் சிந்திக்க வைப்பதை தவிர்க்கமுடியவில்லை. 

இரண்டு ஆண்களில் ஒருவன் அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாது தப்பியோடுகிறான். மற்றவன் அநியாயத்தின் முன் மண்டியிடுகிறான். நாவலின் இன்னொரு பலம் நிலவியலை தத்ரூபமாக கொண்டுவந்தது. 

நிறைந்த வாசிப்பனுபவத்தைக் கொடுத்த புதினம் இந்தத் தருக்.

***

ஆதவன் சரவணபவன் – யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொறியியலாளரான இவர் சிங்கப்பூரில் இருபது வருடங்களாக குடும்பத்துடன் வசித்துவருகிறார். 2021 இல் இருந்து சிறுகதைகள் எழுதிவரும் இவரின் படைப்புகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை குல்லமடை, ஒற்றை மைனா ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல்: athavannithun12@gmail.com

திகைப்பின் பெருங்கடல்

0

தென்றல் சிவக்குமார்

ணிமேகலா தெய்வம் தன்னை மணிபல்லவத் தீவில் ஓர் அணியைப் போல நிறுத்தி நீங்கியபோது மணிமேகலை ஒரு கணம் திகைத்திருக்கக் கூடும். மேகலையின் செய்யுள் மேற்கோளுடன் தொடங்கும் வாசு முருகவேலின் ‘மணிபல்லவம்’ நாவலில் திகைப்பு அலையலையாக எழுந்து வீசுகிறது.

செய்யுள் முடிந்து நாவலைத் தொடங்கி வைக்கும் முதற்சொல் ஷோபா. சின்னதொரு சுருக்கென்ற உணர்வுடனே எப்போதும் இந்தப் பெயரை அணுக முடிகிறது, எதோ ஓர் அபிமானம், அன்பென்று சொல்லத்தக்க ஒரு மனநிலை, இந்தப் பெயருக்குரியவளின் குணம் தெரியுமே என்கிறாற் போல் ஒரு நினைப்பு.

தன் தேநீரில் எவ்வளவு கசப்பு இருக்கலாம் என்ற முடிவைத் தானே எடுக்கும் ஷோபாவின் சொற்களற்ற வாழ்க்கை, அவள் வீட்டு கேட்டின் மீது ஓயாது விழுந்துகொண்டிருக்கும் ரோஸ் நிறக் கடிதாசிப் பூக்கள் என்று இந்தச் சித்திரம் தொடங்குவதே ஆழமான கோடுகளால்தான். 

பாதுகாப்பு, காவல் என்ற சொற்களின் அர்த்தங்களும் அனர்த்தங்களும் மணிபல்லவம் நெடுக சொல்லாமல் சொல்லப்படுகின்றன. 

புத்தருக்கு நிச்சயம் பாதுகாப்பு தேவை என்று கடற்படை நினைத்துக்கொண்டது முதலே ஊர் சனங்கள் தங்கள் முடிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று” – முதல் அத்தியாயத்தின் சில வரிகள் இவை. நீண்ட பிரதான வீதி, பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுக்கப்படும்போது எவ்வளவோ தொலைவு சுற்றிக்கொண்டு போக வேண்டியிருப்பதைப் பற்றிக்கூட யாரும் யாருடனும் பேசிக்கொள்ளாத, எளிய, ஊர் சனங்கள்.

அதற்கு முன்பாக, காதலர்கள் ஓரிரவை வெளியில் கழித்துவிட்டால் அவர்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்துவிடும் எளிய ஊர் சனங்கள், அறிவிக்கப்படாத அழகுராணிப் போட்டிகளை அரவணைத்துச் செல்லும் எளிய ஊர் சனங்களாக இருந்தவர்கள், இப்போது வந்தடைந்திருக்கும் எளிமை எத்தனை வித்தியாசமானது.

சுவாமிநாதனின் சிங்கள அறியாமையும், அறிந்துகொள்ளும் முயற்சிகளும், கொத்தலாவவின் ஷோபா பற்றிய அறிதல் தனக்கு உண்டு என்று காட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சியும் வந்து சேரும் இடம், எத்தனை நுட்பமான ஆனால் அழுத்தமான காட்சி. மஞ்சள் ரோஜா நீண்டிருக்கும் பனையோலைத் தொப்பி, காதலின் சமாதானக் கிரீடம் எனும் இடத்திலிருந்து முட்கிரீடமாக மாறுவதன் கனம் கொடியது. தொப்பியைத் தலையில் சுமந்திருக்கும் சுவாமிநாதனின் கண்களில் பண்டார கண்ட பிசாசு எது? பந்துல தேரர் எந்தப் பேய் பிசாசுகளிடமிருந்து காக்கவென்று சுவாமிநாதனுக்குக் கையில் வெள்ளை நூலைக் கட்டினார்?

அறிந்த கதைகள்தான் என்று எத்தனை கதைகளைக் கடந்துவிடுகிறோம்? சந்திரிகாவின் கதை தெரியும்தானே என்று சொல்லிக்கொண்டு எளிதாகத் தவிர்க்கலாம். ஆனால், ஷோபா சாய்ந்துகொள்ளும் தனிமையின் மரக்கதிரைக்கும், சந்திரிகா ஓய்ந்து சரியும், சிறிமாவுக்கு அருகிலிருக்கும் மரக்கதிரைக்குமான ஒப்பீடு தவிர்க்க முடியாதது.

இன்னும் சொல்லப் போனால், கைகளைப் பரப்பி ஷோபா வீட்டுக்கு வெளியே விழுந்துகிடந்த பண்டாரவின் சைக்கிளுக்கும் ஷோபாவின் சைக்கிளுக்கும் இடையிலும், அவை சுமந்து வரும் மீன்களுக்கு இடையிலும் கூட வித்தியாசங்கள் உண்டு, அல்லவா?

இலங்கைக்கு நயினாத் தீவு குட்டித் தீவு, உலகுக்கு இலங்கையே குட்டித் தீவுதான் என்று சொல்லப்படும்போது, பெருங்கடலுக்கு இவ்வுலகே குட்டித் தீவுதான் என்பது சொல்லாமலே விளங்கிவிடுகிறது. 

வாசு முருகவேலின் ‘மூத்த அகதி’ வாசித்தபோது, ‘இத்தனை பகடியை என்ன செய்ய?’ என்கிற திகைப்பு ஏற்பட்டது. பகடி கிட்டத்தட்ட இல்லை என்றாலும், புன்னகைத்துவிட்டதும் ஏற்படும் குற்ற உணர்வு இல்லை என்றாலும், ஓர் ஈழத்து நூல் ஏற்படுத்தும் தொந்தரவை, திகைப்பை ‘மணிபல்லவம்’ ஆழ்ந்து நேர்த்துகிறது.

சித்தானந்தன், தான் ஒரு கொலைக்கான சாட்சி என்பதையும், அதனால் தனக்கு எதுவும் நேரலாம் என்பதையும் புரிதுகொள்ளும் அதே நேரத்தில், உண்மையில் அந்தக் கொலையைப் பற்றித் தன் அறிவுக்கு எதுவுமே எட்டவில்லை என்பதை நினைத்துக் குழம்பும் இடம் இந்த நாவலுக்கு மிக முக்கியமான பார்வையை அளிக்கிறது. போலவே, இராணுவப் பயிற்சியைப் பற்றி நினைக்கும் பண்டார, ‘அவ்வளவு பயிற்சி போதுமானதா என்பதைப் பற்றிக் கேள்வி கேட்பதற்கான சிந்தனை வருவதற்கும் அங்கு எந்த வாய்ப்புகளும் இருக்கவில்லை,’ என்றே நினைக்கிறான். இராணுவமும், இயக்கமும் யாரை யாராக மாற்றுகின்றன என்பதற்கான திறப்பு இங்கிருக்கிறது.

அழகன் விஜய குமாரதுங்க நடித்த தமிழ்த்திரைப்படம் என்பதை வாசித்தவுடன் பாடல்கள் நினைவுக்கு வந்தன. படத்தின் பெயரை யோசித்துக் கண்டடைகையில் நேர்ந்ததும் அதுவே: ‘நங்கூரம்.’ சரிதான்.

ஒருபோதும் போர்க்களம் போகவேண்டிய அவசியம் இல்லாத ஜனாதிபதிதான் பண்டாரவை போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தார்.” இந்த விதிக்கு ஆட்படாத போர்க்களம் ஏது! 

ஷோபா என்பவள் ஒரே ஒருத்தி அல்ல; பண்டார என்பவன் ஒரே ஒரு ‘சின்னவன்’ அல்ல; படகு ஆடிக்கொண்டிருக்க, இடமும் வலமுமாக உயிரற்று உருண்ட சிறுமகவு ஷோபா ஒருத்தி ஈன்ற மகவு மட்டுமல்ல. எந்த எண்ணால் பெருக்கிச் சொல்வது என்று மட்டுமே தெரியாத கணக்கு அது, நிச்சயமாக இராணுவம் எழுதிய கணக்கும் அல்ல.

ஒரு காவல்கோபுரக் காவலனின் நிழல் நீரில் விழ, அவன்(அதன்) மார்பில், போர்க்களத்துடன் தொடர்பற்ற பெண்ணும், குழந்தையும் பிணங்களாக விழும் காட்சி, காவல் மற்றும் பாதுகாப்பு பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தை வரைந்திருக்கிறது, அந்தப் பக்கத்தைப் புரட்டவும், அடுத்த பக்கத்தை வாசிக்கவும் முடிகிறது என்பதே ஒரு பெருந்திகைப்பாகத்தான் இருக்கிறது.

இந்த நாவலுக்குள், பரபரக்கும் ஓர் இளைஞன் (பண்டார) இருக்கிறான், அவனுக்குள் இயல்பான உற்சாகம் இருக்கிறது, கதைகளைக் கட்டும் ஆர்வம் இருக்கிறது, நசுக்கப்படுபவனோடு தோழமை கொண்டாட அவனால் முடிகிறது, சட்டென்று எதிர்பாராமல் எதையோ செய்துவிடவும் இயல்கிறது. இந்தச் சித்திரத்தை மட்டும் விரித்துத் தீட்டும்படி, மேலிருந்து தொங்கும் பச்சைக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு அவன் விமானத்தில் பயணிப்பதில் தொடங்கி ஏனைய எதுவும் நடவாதபடி இவ்வுலகம் இருந்துவிடாதா என்ற ஏக்கம், மணிபல்லவத்தை வாசித்ததும் மனமெங்கும் பரவுகிறது. 

வாசு முருகவேல் இந்த நாவலைத் தன் தீவை நான்கு பக்கமும் சூழ்ந்து கிடக்கும் கடலில் கலந்திருக்கும் அனைவரின் செந்நீருக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார், நேர்த்தியான சமர்ப்பணம். 

***

தென்றல் சிவக்குமார்  – சென்னையில் வசித்து வருகிறார். ‘எனில்’ என்ற கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்தது. தாமரைச் செல்வி என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். மின்னஞ்சல் முகவரி : thendralsivakumar@gmail.com

எதிர் தொன்மத்தைக் கட்டமைத்தல்

0

டோனி பிரஸ்லர்

நாம் அனைவருமே ஏதோவொரு தருணத்திற்காக காத்திருக்கிறோம், மேலும் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். இன்பமே, உற்சாகம் தரக்கூடிய உணர்வு என்றாலும், சொர்க்கம் எப்படியிருக்கும் என்கிற கேள்வி போர்ஹேஸ் உட்பட யாரையும் விட்டு வைக்கவில்லை. சொல்ல போனால், நாம் நமக்கான அர்த்தங்களை, அனுபவங்களை, கடவுளை, நம்பிக்கையை, பாடல்களை சதா தேடிக்கொண்டே இருக்கிறோம். 

தமிழ் நிலத்திற்கு அன்னியமான டேனிஷ் சமூகத்திலிருந்து, தரங்கம்பாடியில் ஓர் கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. அதுவும் உலகிலேயே இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டையாக சொல்லப்படுகிறது. மயிலன் ஜி சின்னப்பன் எழுதிய நீஸெவின் வேர்க்கனி நாவல், 17ஆம் நூற்றாண்டு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கடற்பயணத்தை மையமாகக் கொண்டது.

நாவல், டேனிஷ் கோட்டையை ஒரு புதிராக கட்டமைக்கிறது. அதற்கு கொடுக்கப்பட்ட விலையென்ன என்பதே, அதன் கலை நியாயத்திற்கு(poetic justice) அளிக்கப்பட்ட பணியென சொல்லலாம்.

வணிகத்தின் பெயரால் எழுந்த பிரார்த்தனைக்கும், கலை நுண்ணுணர்வு தரும் கூர்மையான விசாரணைக்கும் இடையே செல்லும் ஒரு கடல் பயணத்தில் – பயம், நோய், ஏக்கம், காதல், காலனியாதிக்கம் என புதிய சாகசங்களுக்கு தன்னையே ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் கதாபாத்திரங்கள்.

தன் நம்பிக்கையின் மீது தீராத பிரியமிருப்பவர்களாக, ஆழமான மனத்திட்பம் கொண்டவர்களே ஆவார்கள். ஏனெனில், வாழும் காலம் முழுக்க அந்நம்பிக்கை, அவர்களிடம் மீண்டும் மீண்டும் கேள்விக்கு உள்ளாகும், மறுதலிக்க இயலாமல் சூழலின் மாற்றத்திற்கு உட்பட வேண்டிய ஒவ்வொருவரும் நம்பிக்கையின் புதிர்மையை சீர் செய்ய தலைப்படுவர். அந்த நுண்ணுணர்வு தரக்கூடிய ஊக்கத்தால், மனதின் தீவிர எழுச்சியை ஒருவரால் கவனித்து கூர்ந்து பார்க்கவும், திக்கு தெரியாத பயணத்தின் போது, மனம் கொள்ளக்கூடிய அலைக்கழிப்பின் தீவிரத்தை உக்கிரமாக உணரவும் முடியும். மயிலனின் எழுத்தை அவ்வாறே உணர்கிறேன்.

ஏற்கனவே இதற்கு பழக்கப்பட்டது போல கதாபாத்திரங்களுக்கான முன் அனுமானமும், கதையோட்டத்திற்கு பின்பான யூகமும் உற்சாகம் தருவதாக உள்ளது. 

நாவல் தொடங்கும் பின் மதிய உரையாடலில் பீடிகை ஒன்று துலக்கம் பெறுகிறது.

நீஸெ நம்முடைய டானிஷியத் தொன்மத்தின் நல்லாவி, மனித உருவங்கொண்ட ஒரு மிகச் சிறிய நுண்ணுரு.” என்று nissey என்கிற தொன்ம கதாபாத்திரம், நேதா மற்றும் விர்கஸ் நண்பர்களிடையே ஆத்மார்த்தமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதற்கு சான்றாக கலை சார்ந்த உரையாடல் விளங்கும். அடுத்து, கிழக்கிந்திய நிறுவனம் என்கிற கனவின் நீட்சியாக டேனிஷ்க்காரர்கள் கிளம்புகிறார்கள். வணிக கனவும், காதலின் உள்முரண் மோதலும் மிக்க விதிக்காக தங்களது திட்டங்களை வகுக்கிறார்கள்.

சரளமான தெளிந்த மொழி நடை மிக்க வேறொரு காலத்தில் செல்லும் கடற்பயணத்தில், பெருங்குழப்பத்தை உண்டாக்கும் நோய் பீடித்தும், பயம் முற்றி போயும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் கப்பலில் எவ்வித ஏற்றதாழ்வும் இன்றி அனைத்து நம்பிக்கையும் சீர்க்குலைகிறது. இப்பயணம் எதற்கு என்ற புதிர்மையில் அழுத்தமான நிசப்தம் கேட்கிறது. 

இரண்டாவதாக துலக்கம் பெறும் வசனம். “காதல் ஓர் ஆகச்சிறந்த புத்திக்கொல்லி“. காதல், ஒரு வினை வேகம் தரக்கூடிய விஷயமாக ஊடு பிரதியாக இயங்குகிறது. கதாபாத்திரங்களில், போர்ப்படை தலைவனோ, கலைஞனோ, பாதிரியோ, கொள்ளையனோ, அரசனோ, எவராயினும் தானறிந்த வாழ்வின் அர்த்தமும் பற்றும் அற்றுப்போகும் போது தன்னழிவுக்கு தன்னை ஒப்புக்கொடுகிறார்கள்.

அதிகாரிக்கு, அவனது அதிகாரம் பசியை தீர்க்கிறது. அவனுக்கு குற்றமே உடைமை, ஆனால் குற்றவுணர்வு இல்லை. அதிகாரத்திற்கு கலக்கம் கொள்ளும் மனசாட்சி கிடையாது.

தன் மீது குற்ற உணர்வு கொள்ளும் நேதா என்பவனோ, ஒரு குற்றமும் அறியாதவன். குற்றவுணர்வால் புழுங்கி உழல்கிறான். மனசாட்சி படைக்கப்பட்டவனாக இருக்கும் இவனே, கதையின் நுண்ணுணர்வு மிக்க வேலைப்பாடாகவும் இருக்கிறான்.

அதிகாரம் என்பது ஒரு மனிதனை மட்டும் மாற்றுவதில்லை. அவன் வாழும் நிலத்தின் வரலாற்றையே மாற்றிவிடுகிறது. ஏக்கம் கொண்டு வரும் நோய்களின் ரகசிய பிரேமையை கூட கண்டுகொள்வதில்லை. அதிகார தீவிரம் உண்டாக்கும் போக்கு காரியத்தைத் தவிர வேறெதையும் சட்டை செய்வது இல்லை.

நீஸெவின் வேர்க்கனி என்பது என்ன ?

நீஸெ என்பது டேனிஷ் மக்களின் ஆன்மாவை பிரதிபலிக்கும் தொன்ம கதாபாத்திரம். நீஸெவானது பயிரிடும் நிலங்களை பாதுகாத்து வைக்கும், மிருகங்களை கவனித்துக் கொள்ளும். நீஸெ மீது யாரும் அக்கறை காட்டவில்லை என்றால் கோபமடைந்து, பயிர்களை அழித்து, மிருகங்களை துன்புறுத்தும், துரோகம் செய்யும். 

ஆகவே, டேனிஷ் நிலத்தின் தொன்ம பாதுகாவலன் நீஸெ. விவசாய நிலத்தின் வேர்கனியே சீனிக்கிழங்கு. சீனிக்கிழங்கு (பூஞ்சை ஏறும் கிழங்கு) வேர்க்கனியாக உருவகப்படுத்தப்படுகிறது.

பூஞ்சை ஏறும் கிழங்கையும், கதையின் மனதை உசுப்பும் குற்றவுணர்வையுமே, அதிகார அடக்குமுறையை எதிர்க்கும் ஆயுதமாக மயிலன் கட்டமைக்கிறார்.

சொல்லப்போனால், mythological fiction ஆக மாறியிருக்க வேண்டிய கதையாடல், ஒரு புதிய திசையை இங்கே நிர்ணயிக்கிறது. இது நவீன புனைவின் எல்லையை விரிவாக்குகிறது. தமிழின் முதல் MYTHPUNK என்கிற சாத்தியத்தை இப்புனைவு பிரதி உண்டாக்குகிறது. எதிர் தொன்ம கட்டமைப்பு கொண்ட கதைக்கூறலாக கலைத்து அடுக்குவதால், மனித இயல்புகளை உள்ளடக்கிய கதையோட்டமாக, நவீன புனைவாக்கத்தின் அதிர்வுகளுக்கு செல்திசை கொடுக்கும் என்று தாராளமாக நம்பலாம்.

மயிலன் பின்னுரையில் சொல்வது போல, 

மிச்சமிருக்கும் நாளில் மனிதன் தன்னால் இயன்ற எதையேனும் முயன்று தனக்குத் தன்னையே நிரூபித்துக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது. 

‘தனக்குத் தன்னையே’ என்ற ‘தளர்வகற்றும் சித்திரவதையின்’ மற்றொரு விளைவுதான் இந்தப் படைப்பும்”. 

Citation: நீஸெவின் வேர்க்கனி – மயிலன் ஜி சின்னப்பன் : சால்ட் பதிப்பகம் 

***

டோனி பிரஸ்லர் – கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார்.  2023ல் பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பின் ஆசிரியராகவும், 2024ல் ககனம் என்ற கவிதைத்தொகுப்பும் வெளியிட்டுள்ளார். நவீன தமிழ் புலத்தை சேர்ந்தவர். மின்னஞ்சல் : tonypresslers@gmail.com

கரடுமுரடான கருணையும், கனிந்த மௌனமும்

0

அ.முனவர் கான்

ணிப்பூர் மாநிலம் இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மணிப்பூரி மொழி ‘மெய்திலோன்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள திபெத்தோ-பர்மிய மொழிகளிலேயே, 2000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட, ஆழமான இலக்கிய வரலாற்றைக் கொண்ட ஒரே மொழி மணிப்பூரி மட்டுமே.

மணிப்பூரியில் சிறுகதை வடிவம் 1930-களில் தொடங்கியது. ஆரம்பகாலத்தில் இவை ‘யகைரோல்’ (1929) போன்ற இதழ்களில் வெளிவந்தன. காதல், சமூக விழுமியங்கள், பெண்களின் பிரச்சனைகள், தார்மீக ஒழுக்கம் சிதைவது போன்றவற்றை இவை பேசின.

R.K. ஷீதல்ஜித் சிங்: இவரே மணிப்பூரி சிறுகதையின் தந்தை எனலாம். இவரது ‘லெய்கோன்னுங்டா’ (1946) தொகுப்பு மிக முக்கியமானது. இவர் தியாகத்தை, அன்பை மையமாக வைத்து எழுதினார். R.K. இளங்பம்: பெண்களின் உணர்வுகளை, அவர்களின் துயரங்களைப் படம்பிடித்தார். யதார்த்தவாதக் காலமான 1960 – 1970 காலகட்டத்தில் சிறுகதைகள் கற்பனை உலகிலிருந்து விலகி, நிஜ வாழ்க்கையின் கசப்பான உண்மைகளைப் பேசத் தொடங்கின. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஏமாற்றங்கள், ஊழல், பொருளாதாரச் சரிவு போன்றவை கதைகளின் கருப்பொருளாயின.

M.K. வினோதினி: ‘நுங்கைராக்தா சந்திரமுகி’ (1965) மூலம் சமூக யதார்த்தத்தைக் காட்டினார். N. குஞ்சமோகன்: ‘இலிசா அமகி மஹாவ்’ (ஒரு இலிசா மீனின் சுவை) என்ற இவரது கதை மிகவும் பிரபலம். இது ஏழை மக்களின் வறுமையையும் ஆசையையும் தத்ரூபமாக விவரித்தது. ஈ. தினமணி: இவர் சமூக அநீதிகளை அங்கதச் சுவையுடன் (Satire) நையாண்டி செய்து எழுதினார். 

1974 – 1990 வரையிலான காலம் நவீன மற்றும் புரட்சிகரக் காலம் எனப்படுகிறது, இக்காலகட்டத்தில் ‘மெயிரிக்’ (Meirik 1974-ல் -) என்ற இதழ் தொடங்கப்பட்டது. இது மணிப்பூரி இலக்கியத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. எழுத்தாளர்கள் சிறுகதைகளில் உருவகம், குறியீடுகள், கனவுருப்புனைவு, நாட்டுப்புறக் கூறுகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும், தங்களின் படைப்பு வடிவம் மற்றும் வெளிப்பாடுகளில் தத்துவார்த்த மற்றும் உளவியல் ரீதியான பார்வைகளை அதிகளவில் புகுத்தினர். சுரண்டலுக்கு எதிரான கோபம், வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி ஆகியவை முதன்மை பெற்றன.

1990-களுக்குப் பிறகு, மணிப்பூரி சிறுகதைகள் உலகளாவிய சிந்தனைகளை நோக்கி நகர்ந்தன. தனது கலாச்சார அடையாளத்தை மீட்டெடுப்பது, இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்களை, அமைதியற்ற சூழலை இவை விவரிக்கின்றன. கே. பிரியகுமார், எல். பிரேம்சந்த், சந்தோஷ் குமார், ஜிம் வுங்ரம்யாவோ காசோம் போன்றோர் இன்றைய சமூகச் சிக்கல்களைத் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

மணிப்பூரி சிறுகதைகள் வெறும் கதைகளாக மட்டும் இல்லாமல், அந்த மாநிலத்தின் அரசியல் மாற்றம், வறுமை, கலாச்சாரப் போராட்டம் ,மக்களின் மனநிலை ஆகியவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்யும் ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.

ஜிம் வுங்ரம்யாவோ காசோம்(Jim Wungramyao Kasom), மணிப்பூரின் உக்ருல் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர், புகைப்படக் கலைஞர். தற்போது டெல்லியில் வசிக்கிறார். வடகிழக்கு மாநில மக்களின் உண்மையான விளிம்புநிலை அனுபவங்களை உலகிற்குத் தெரியப்படுத்துவதில் மிகுந்த அக்கறைக் கொண்டவர். ஜிம் வுங்ரம்யாவ் காசோம் மணிப்பூரின் தங்குல் நாகா (Tangkhul) சமூகத்திலிருந்து ஆங்கிலப் புனைகதை எழுதிய முதல் எழுத்தாளர்

காசோமின் எழுத்தில் மணிப்பூரின் மலைகள் வெறும் பின்னணி மட்டுமல்ல, அவை கதையை நகர்த்தும் ஒரு உயிருள்ள கதாபாத்திரம். ஒருபுறம் அமைதியான மூடுபனியும், செம்மண்ணும்; மறுபுறம் அந்தப் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இராணுவப் படைகள் என முரண்பட்ட சூழலை அவர் அழுத்தமாகப் பதிவு செய்கிறார். 

‘தி லாஸ்ட் ஃப்ரீ நாகா’ நூல், மணிப்பூரின் ‘தங்குல்’ நாகா மக்களின் வாழ்க்கையை 12 சிறுகதைகள் வழியாக மிக நுணுக்கமாக விவரிக்கிறது. இயற்கை எழில், பாரம்பரியக் கதைகள், அரசியல் மோதல்களுக்கு இடையிலான வாழ்க்கையை இக்கதைகள் முன்வைக்கின்றன.

‘தி லாஸ்ட் ஃப்ரீ நாகா’ என்பது வெறும் கதைகளின் தொகுப்பல்ல; அது அரசியல் வரைபடங்களால் பிரிக்க முடியாத மக்களின் ஆன்மா, நிலத்தின் மீதான காதல் பற்றிய ஆவணம். வன்முறை நிறைந்த சூழலிலும் மனிதநேயம், கடின உழைப்பு, குடும்பப் பிணைப்பு எவ்வாறு உயிர்வாழ்கிறது என்பதை இது உலகிற்கு உரக்கச் சொல்கிறது. இவருடைய கதைகளின் கருப்பொருள்களாக அடையாளம், நினைவுகள், பாரம்பரியம் vs நவீனமயமாக்கல், இராணுவ அடக்குமுறையின் தாக்கம் என்பவற்றைச் சொல்லலாம்

மழைக்கால மனிதநேயம், பனி போன்ற கதைகளில், இயற்கை மனிதர்களுக்கிடையிலான அரசியல், இன வேறுபாடுகளைத் தற்காலிகமாக அழித்து, அனைவரையும் “பிழைப்புக்காகப் போராடும் மனிதர்களாக” மாற்றுகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள தங்குல் நாகா ஆண்கள் மிகக் குறைவாகவே பேசுகிறார்கள். தந்தையர்கள் தங்கள் அன்பை வார்த்தைகளால் சொல்லாமல், ஒரு கத்தியைத் தீட்டுவதிலோ அல்லது கடினமான மலையேற்றத்தில் மகனுக்கு வழிவிடுவதிலோ காட்டுகிறார்கள்..நகரத்தில் இருக்கும் மகன் அனுப்பும் ‘தபால் அட்டைகள்’ (Postcards) ஒரு வகையான மௌனமே. அவன் தனது கஷ்டங்களை மறைத்து, பாட்டிக்குப் பிடித்தமான பொய்களைச் சொல்ல அந்த மௌனத்தைப் பயன்படுத்துகிறான்.

ஒவ்வொரு கதையிலும் ஒரு நுணுக்கமான இழப்பு இழையோடுகிறது. பாட்டிக்குத் தேவைப்படாத ‘அடையாள அட்டை’, பேரனுக்குத் தேவையாகிறது. இது ஒரு சமூகத்தின் “தூய்மையான சுதந்திரம்” காலப்போக்கில் அதிகார அமைப்பிற்குள் நசுக்கப்படுவதைக் காட்டுகிறது. ‘தி ரிவர் தட் பெண்ட்ஸ் டைம்’ கதையில், நவீன நகர வாழ்க்கையில் தொலைந்துபோன தன் வேர்களைத் தேடும் ஒரு இளைஞனின் தவிப்பு, இன்றைய தலைமுறையின் பொதுவான சிக்கலாகும்.

‘சால்ட்’ கதை ஒரு தனிமனிதனின் மனசாட்சிக்கும், அவனைச் சுற்றியுள்ள வன்முறைச் சூழலுக்கும் இடையிலான மோதலைச் சித்தரிக்கிறது. மலையில் வாழும் ஒரு மனிதன், நவீன உலகின் சிறு வசதிகளான ‘உப்பு’ மற்றும் ‘சர்க்கரை’யை நுகரத் தொடங்கும்போது, அவனை அறியாமலேயே நவீன உலகின் விதிகளுக்குள், அதன் மோதல்களுக்குள் இழுக்கப்படுகிறான்.

தனது முன்னோர்களின் வீரத்தையும் சுதந்திரத்தையும் தன்னுள் சுமக்க விரும்பும் அவன், அதே வேளையில் “கொலை செய்ய மறுக்கிறான்”. போர் நிலவும் ஒரு பகுதியில் ‘நடுநிலை’ என்பது சாத்தியமே இல்லை என்பதை ஆசிரியர் இதில் உணர்த்துகிறார். அமைதியை விரும்புவதே ஒரு பெரும் போராட்டமாக அங்கு மாறிவிடுகிறது.

‘தி கசின்ஸ்’ கதையானது நாகா கலாச்சாரத்தில் தந்தை – மகன் உறவு மற்றும் சகோதரத்துவத்தைப் புரிந்துகொள்ள இக்கதை மிக முக்கியமானது. இக்கதையில் வரும் இரு தந்தையர்களில் ஒருவர் ‘உயரமானவர், இன்னொருவர் குள்ளமானவர். இருவரும் தங்கள் மகன்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். அவர்கள் வார்த்தைகளால் அன்பு செலுத்துவதில்லை. செங்குத்தான மலைப்பாதையில் அவர்கள் நடக்கும் வேகமும், மூச்சும் உடல்மொழியே மகன்களுக்குப் பாடமாக அமைகின்றன. இராணுவச் சோதனைச் சாவடிகள் வரும்போது, தந்தையர் தங்களை ஒரு கேடயமாக மாற்றிக்கொண்டு மகன்களைப் பாதுகாக்கிறார்கள்.

“ஆண்கள் அழுவதில்லை, அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் அல்லது உழைக்கிறார்கள்” என்ற நாகா சமூகத்தின் ஆணாதிக்கமற்ற, ஆனால் கண்டிப்பான பிணைப்பை இது விளக்குகிறது.

தபால் அட்டைகள் கதையில் நகரத்தில் வாழும் ஒரு இளைஞன் தனது கிராமத்திற்கு அனுப்பும் தபால அட்டைகள் ஒரு முக்கியமான ‘குறியீடு’. நகரத்தில் அவன் அனுபவிக்கும் இனவெறி, தனிமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை அந்த அட்டைகள் சொல்வதில்லை. மாறாக, டெல்லியின் அழகிய இடங்களைச் சித்தரிக்கும் அட்டைகளை அனுப்பி, தான் “நலமாக” இருப்பதாகப் பொய் சொல்கிறான். புலம்பெயர்ந்த இளைஞர்கள் தங்கள் குடும்பத்தின் கௌரவத்திற்காகச் சுமக்கும் “மௌனமான பாரத்தை” இது காட்டுகிறது.

‘சீசன் ஆஃப் சிக்காடாஸ்’ கதையில் வரும் “கங்கயே” என்ற தொன்ம உயிரினம் நாகா மக்களின் ஆன்மீகத் தேடலைக் குறிக்கிறது. வன்முறையில் காணாமல் போனவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்கள் என்னவானார்கள் என்று தெரியாத குடும்பங்களுக்கு, அவர்கள் ‘கங்கயே’ எனும் உயிரினங்களாக மாறி காடுகளில் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒரு மருந்தாக அமைகிறது. இது இயற்கையோடு இணைந்த ஒரு மரணக் கோட்பாடு. நிலம் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை என்ற கருத்தை இது வலியுறுத்துகிறது.

ஜிம் காசோம் தனது கதைகளை வெறும் துயரமான கதைகளாக மட்டும் எழுதவில்லை. மாறாக வறுமையிலும் வன்முறையிலும் நாகா மக்கள் தங்கள் கண்ணியத்தை எப்படிக் காக்கிறார்கள் என்பதையும் அவர்களின் உழைப்பு எப்படி ஒரு வழிபாடாக மாறுகிறது என்பதையும் நிலம் என்பது அவர்களுக்கு வெறும் சொத்து அல்ல, அது அவர்களின் ஆன்மாவின் ஒரு பகுதி என்பதையும் அழுத்தமாகக் பதிவு செய்கிறார்’

‘தி லாஸ்ட் ஃப்ரீ நாகா’வில் வரும் பாட்டி கதாபாத்திரம் வெறும் ஒரு முதியவர் மட்டுமல்ல, அவர் “வரலாற்றுக்கு முந்தைய நாகா சுதந்திரத்தின்” எஞ்சியிருக்கும் ஒரே அடையாளம். அவருக்குத் தன் பெயர், குலம், நிலம் தெரியும். ஆனால் அரசோ அல்லது ராணுவமோ கேட்கும் ‘அடையாள அட்டை’ (Identity Card) அவருக்குத் தேவையில்லை. அடையாளம் கடந்தவர் அவரைப் பொறுத்தவரை, ஒரு மனிதன் யாரென்பதை அவனது உழைப்பும் நேர்மையும் மட்டுமே தீர்மானிக்கிறது.

பாட்டி பிரார்த்தனை செய்வது வேலைக்காகவோ பணத்திற்காகவோ அல்ல; தன் பேரன்களின் கால்கள் மலையேற வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக. அதாவது, “வாழ்க்கை கடினமானது, அதை எதிர்கொள்ளும் வலிமையைப் பெறு” என்ற யதார்த்தத்தை அவர் போதிக்கிறார்.

புதிய உலகிற்கும் பழைய உலகிற்கும் இடையே உள்ள இடைவெளியை இவர் காட்டுகிறார். இவர் இறக்கும்போது, அந்தத் தூய்மையான “கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமும்” மறைந்துவிடுகிறது. 

 நாகா சமூகத்தின் தந்தையர் ஒரு பாறையைப் போன்றவர்கள். அவர்கள் அன்பைக் கொட்டுவதில்லை, ஆனால் நிழலாகப் பாதுகாக்கிறார்கள். ‘தி ரிவர் தட் பெண்ட்ஸ் டைம்’ கதையில், மகன் நகரத்திலிருந்து வந்தாலும் தந்தை அவனிடம் அதிகம் பேசுவதில்லை. ஆனால், மீன் பிடிக்க வலை வீசும் நுட்பத்தைக் கற்றுத்தருவதன் மூலம், தன் முன்னோர்களின் வாழ்வாதாரத்தை அவனுக்குக் கடத்துகிறார். கார் ஹார்னை இரண்டு முறை அடித்து விடைபெறும் தருணம் மிக முக்கியமானது. “நான் உன்னை நேசிக்கிறேன், பத்திரமாகப் போ” என்று சொல்லத் தெரியாத அல்லது சொல்ல விரும்பாத ஒரு சமூகத்தின் மௌனமான ஆசி அது.அவர் தன் மகனுக்கு ஒரு ‘மலை மனிதனாக’ இருப்பதன் கௌரவத்தைக் கற்றுக்கொடுக்கிறார். அவர் ஒருபோதும் அழுது தன் கஷ்டங்களைக் காட்டுவதில்லை; மாறாக, ராணுவச் சோதனைச் சாவடிகளில் அவர் காட்டும் உறுதி மகனுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது.

பாட்டி நவீன உலகின் இரைச்சல்களை (அரசியல், ஆவணங்கள்) மௌனத்தால் புறக்கணிக்கிறார். தந்தை தன் பாசத்தை மௌனத்தால் ஆழப்படுத்துகிறார். இவர்கள் இருவருமே “மௌனத்தை” ஒரு ஆயுதமாகக் கொண்டவர்கள்.

ஜிம் காசோம் தனது புகைப்படக் கலையில் கூட, இத்தகைய மௌனமான மனிதர்களின் முகச் சுருக்கங்களையும், அவர்களின் கரடுமுரடான கைகளையும் படம்பிடிப்பதில் ஆர்வம் காட்டுவார். அந்தப் புகைப்படங்களின் ‘இலக்கிய வடிவம்’தான் இந்த கதாபாத்திரங்கள்.

இந்தக் கதாபாத்திரங்களின் வழியாக, மணிப்பூர் மக்களின் இன்றைய வலிகளை நம்மால் உணர முடிகிறது. குறிப்பாக ‘பெட்டி’ கதையில் வரும் அந்த இளைஞன், நகரத்திற்குச் செல்லும்போது இந்தப் பாட்டியின் நினைவுகளையும் தந்தையின் மௌனத்தையும் எப்படிச் சுமந்து செல்கிறான் என்பது மிக உருக்கமானது.

அரசு மற்றும் இராணுவக் கண்காணிப்பு (AFSPA-வின் தாக்கம்), நாகா மலைப்பகுதிகளில் நீண்டகாலமாக நிலவும் இராணுவ இருப்பு (Military presence) கதைகளில் ஒரு கறுப்பு நிழலைப் போலத் தொடர்கிறது. சாலைகளில் ராணுவ வாகனங்கள் செல்வதும், இளைஞர்கள் அடிக்கடி சோதனையிடப்படுவதும் அங்கு “இயல்பான” ஒன்றாக மாறிவிட்டது. ஒரு சுதந்திரமான மலை மனிதன் தனது சொந்த மண்ணிலேயே தனது அடையாளத்தை நிரூபிக்க ஒரு காகிதத்தை (ID Card) நம்பியிருக்க வேண்டிய அரசியல் அவலம். அமைதியாக நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை.

‘ஒரு கிராமத்துச் சிறுவனின் கனவு’ கதையில் வரும் இளைஞன், முதல்முறை இராணுவச் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதையே தனது ‘முதிர்ச்சி’ (Adulthood) என்கிறான். அதாவது, அங்குள்ள இளைஞர்கள் இயல்பான விளையாட்டுகளால் வளர்வதை விட, ‘சந்தேகம்’ மற்றும் ‘சோதனை’களால் சீக்கிரம் முதிர்ச்சியடைகிறார்கள். ஒரு சிறுவன் தன் உடலை ராணுவத்தினர் சோதிக்கும்போதுதான் தான் ‘பெரியவன்’ ஆகிவிட்டோம் என்று உணர்வது அந்த நிலத்தின் அரசியல் எவ்வளவு ஆழமாக ஒரு குழந்தையின் மனதைச் சிதைக்கிறது என்பதைக் காட்டுகிறது

நாகா தேசிய இயக்கம் மற்றும் அவர்களது சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் இக்கதைகளில் நேரடியாகக் கூறப்படாவிட்டாலும், அதன் வலிகள் ஊடாடுகின்றன.

இன்று விண்ணுலகம் எதைச் சமைத்துக் கொண்டிருக்கிறதோ?’ கதையில், போராட்டத்தில் இறந்த மகன் ஒரு வீரனாக அல்லது தியாகியாகப் பார்க்கப்பட்டாலும், அவனது தாய்க்கு அவன் ஒரு ‘இழப்பு’ மட்டுமே. அரசியல் லட்சியங்களுக்காகக் கொடுக்கப்படும் ‘உயிர் விலை’ என்பது குடும்பங்களுக்குள் ஏற்படுத்தும் ஆறாத வடுவை இது பேசுகிறது.

 வேலையின்மை மற்றும் அரசியல் பதற்றம் காரணமாக நாகா இளைஞர்கள் டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்வதை ஒரு ‘தவிர்க்க முடியாத அரசியல் இடப்பெயர்வு’ என்று சொல்லலாம்.அவர்கள் அங்கு எதிர்கொள்ளும் இனவெறி மற்றும் அந்நியப்படுதல் போன்றவை தபால் அட்டைகள் மூலம் குறியீடாகச் சொல்லப்படுகின்றன. நவீனமயமாக்கல் vs பூர்வீக அடையாளம் என்பதும் ஒரு வகையான ‘கலாச்சார அரசியல்’தான்.

மணிப்பூரில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் நிலம் தொடர்பான சிக்கல்களை ‘பழமையான வன்மம்’ என்று ஆசிரியர் அழைக்கிறார். ஆசிரியர் வன்முறையை வெறும் துப்பாக்கிச் சத்தமாக மட்டும் பார்க்கவில்லை. அது அந்த நிலத்தின் பாறைகளிலும், காற்றிலும் உறைந்திருப்பதாகக் கூறுகிறார். பல தலைமுறைகளாகத் தொடரும் இனக்குழு மோதல்கள், “தந்தையர்கள் தொடங்கிய போரை மகன்கள் தொடர வேண்டிய கட்டாயத்தை” உருவாக்குகின்றன

“தந்தையரின் பேய்கள் மகன்களைத் துரத்துகின்றன” என்ற வரி, அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாறைக்குப் பின்னால் நடந்த ஒரு கொலை அல்லது ஒரு துரோகம், இன்றும் அந்தப் பாதையில் நடக்கும் ஒரு இளைஞனின் மனதை அச்சுறுத்துகிறது. அங்கு அரசியல் மோதல்கள் எப்படித் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

ஆசிரியர் எந்த ஒரு அரசியல் தரப்பையும் ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ இல்லை. மாறாக, அவர் மனிதாபிமானத்தின் பக்கமிருந்து பேசுகிறார்:

நதிக்கும் மழைக்கும் எல்லைகளோ, அடையாள அட்டைகளோ தெரியாது; ஆனால் மனிதர்கள் வரைந்த வரைபடங்கள் அந்த நிலத்தைப் பிளவுபடுத்தியுள்ளன. இது தான் இயற்கைக்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாடு வன்முறைக்கும் கிளர்ச்சிக்கும் நடுவே, ஒரு சராசரி மனிதன் தனது ‘தா’ (Dao -பாரம்பரியக் கத்தி) -வுடன் காடுகளுக்குச் சென்று மீன் பிடிப்பதும், உழைப்பதும் ஒரு மிகப்பெரிய ‘அரசியல் எதிர்ப்பு’ தான். அமைதியாக இருப்பதே அங்கு ஒரு பெரும் போராட்டம்.

மணிப்பூர் மற்றும் நாகா மலைப்பகுதிகளில் வன்முறை என்பது ஏதோ ஒரு நாள் நடக்கும் நிகழ்வு அல்ல; அது மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.

காணாமல் போனவர்களின் கதைகள் இங்கு ஒரு மௌனமான வன்முறையாகத் தொடர்கின்றன. அவர்கள் எங்கே போனார்கள், எப்படி இறந்தார்கள் என்று தெரியாமல் காத்துக்கிடக்கும் கண்களில் அந்த வன்முறை நிலைத்திருக்கிறது. வன்முறை என்பது போர்க்களத்தில் மட்டும் இல்லை; அது ஒரு மகனை இழந்த தாயின் சமையலறையிலும் இருக்கிறது. ‘விண்ணுலகம் எதைச் சமைத்துக் கொண்டிருக்கிறதோ’ கதையில், அந்தத் தாயின் கற்பனை என்பது நிலத்தின் வன்முறையிலிருந்து தப்பிக்க அவர் கண்டறிந்த ஒரு வழியாகும்.

வன்முறை ஒரு பக்கம் இருந்தாலும், அங்கிருக்கும் மனிதர்களிடையே ஒரு விசித்திரமான, அதே சமயம் ஆழமான அன்பு இருக்கிறது. இதைத்தான் ஆசிரியர் ‘கரடுமுரடான கருணை’ என்கிறார்.

தந்தையர் மகன்களைக் கட்டிப்பிடித்து அன்பு செலுத்துவதில்லை. ஆனால், மலைப்பாதைகளில் மகன்களுக்கு முன்னால் நடந்து காற்றைத் தடுப்பதும், ஆபத்து வரும்போது கேடயமாக நிற்பதும் அவர்களின் ‘கரடுமுரடான அன்பின்’ வடிவம். தந்தை தன் மகனிடம் பேசும் குறைவான வார்த்தைகளில் ‘அதிகாரத்தை’ விட ‘அக்கறை’ அதிகமாக இருக்கும். தன் மகனின் பாதுகாப்புக்காகத் தனது பாரம்பரியக் கத்தியை (Dao) தீட்டுவதும், அவன் நகரத்திற்குச் செல்லும்போது உணர்ச்சிகளைக் காட்டாமல் காரின் ஹாரனை இருமுறை அடிப்பதும் அந்தக் கரடுமுரடான அன்பின் உச்சம்.

இந்தப் புத்தகத்தின் மிகச் சிறந்த பகுதியே, இந்த வன்முறைக்கும் கருணைக்கும் இடையே உள்ள முரண்பாடுதான். ஜிம் காசோம் சொல்வது போல, “மழைக்கு அரசியல் தெரியாது.” அது ஒரு ராணுவ வீரனையும் நனைக்கும், ஒரு கிளர்ச்சியாளனையும் நனைக்கும். அதேபோலத்தான் இந்தக் கருணையும். வன்முறையால் சூழப்பட்ட ஒரு நிலத்தில், ஒரு அந்நியனுக்குப் புகலிடம் கொடுப்பதும், அவருக்குத் தேநீர் தருவதும் சாதாரண செயலல்ல—அது ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சி. மழைக்கால மனிதநேயம் கதையில், மழையில் சேற்றில் சிக்கிய ஒரு வாகனத்தை மீட்க, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் ஒருவர் உதவுகிறார். அவர் நீண்ட உபதேசங்களோ அல்லது அறிமுகமோ செய்து கொள்வதில்லை. 

அவர்கள் “நீங்கள் யார்? எந்த ஊர்?” என்று விசாரிக்க மாட்டார்கள். அந்த உழைப்பே அவர்களுக்கு இடையிலான பிணைப்பு. அந்த உதவி என்பது வார்த்தைகளால் ஆனது அல்ல; அது தோள்களின் உழைப்பால் ஆனது. மலைவாழ் மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள். “சோம்பேறித்தனம் பாவம்” என்ற அவர்களது கொள்கையே ஒருவரையொருவர் கைவிடாமல் உழைப்பதற்குக் காரணமாகிறது.

மலைகளில் ஒரு வழிப்போக்கனுக்கு நெருப்பு மூட்டித் தருவதும் (Meiphu), ஒரு கோப்பைத் தேநீர் வழங்குவதும் சாதாரண செயலல்ல. இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஒரு அந்நியனைத் தங்களது நெருப்பு மூட்டிக்கு அருகில் அமர வைப்பது மிகப்பெரிய மௌனமான மனிதாபிமானம். விருந்தோம்பலை ஒரு வழிபாடாகக் கொண்டவர்கள்.

வன்முறையையும் சந்தேகத்தையும் மட்டுமே பார்த்த கண்களுக்கு மத்தியில், ஒரு அந்நியனிடம் காட்டப்படும் அந்த ‘கரடுமுரடான கருணை’ தான் நாகா மக்களின் உண்மையான பலம். வன்முறை என்பது திணிக்கப்பட்டது, ஆனால் கருணை என்பது பிறவிக்குணம்.

“வன்முறை உன்னை நிலத்திலிருந்து பிரிக்க முயல்கிறது, ஆனால் இந்தக் கரடுமுரடான கருணைதான் உன்னை மீண்டும் உனது வேர்களுடன் பிணைக்கிறது” என்பதே காசோமின் இறுதிச் செய்தி.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தப் புத்தகம் ‘மணிப்பூர்’ என்ற பெயரைக் கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வரும் ‘துப்பாக்கிகள்’ மற்றும் ‘வன்முறை’களுக்குப் பின்னால் இருக்கும் ‘மனித முகங்களை’ அரசியல் தெளிவுடன் காட்டுகிறது

ஜிம் காசோம் தனது புகைப்படக் கருவி வழியாகப் பார்ப்பது போலவே, இந்தப் புத்தகத்திலும் ‘வன்முறை’ என்பது அந்தப் புகைப்படத்தின் இருண்ட பின்னணியாகவும் ‘கருணை’ என்பது அதன் மேல் விழும் ஒரு மெல்லிய ஒளிக்கீற்றாகவும் இருக்கிறது., அவரது எழுத்துக்கள் மிகத் துல்லியமான காட்சிகளை உருவாக்குகின்றன. ஒரு முதியவரின் முகச் சுருக்கம், கார் ஹார்ன் அடிக்கும் சத்தம், காற்றில் மிதக்கும் வெட்டுக்கிளிகளின் இசை என வாசகர்களை அந்த மலைகளுக்கே அழைத்துச் செல்கிறார். அவரது கதைகள் ஒவ்வொன்றும் ஒரு “இலக்கிய புகைப்படச் சுருள்” போலத் தொகுக்கப்பட்டுள்ளன.

நூல் மற்றும் நூலாசிரியர் குறித்த தகவல்:

THE LAST FREE NAGA — JIM WUNGRAMYAO KASOM,
pub: Speaking Tiger -2025 

OTHER WORKS:

 HOMECOMING &OTHER STORIES (2020) – மணிப்பூரின் மலைப்பகுதிகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் ஏற்படும் இடப்பெயர்வுகள் குறித்த ஆழமான பதிவாகும். 

CRADLING MEMORIES OF MY LAND (2023) – சொந்த மண்ணின் நினைவுகளைப் பாடும் கவிதைத் தொகுப்பு. 

***

அ.முனவர் கான் –  தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். சமீபத்தில் “காபி ஆறுவதற்கு முன்” என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல் முகவரி: amkhansrv@gmail.com

கவிதைக்குள் வரும் நாணயத்திற்கு பக்கங்கள் இரண்டல்ல, முடிவிலி..

1

நேர்காணல் : மதார்

நேர்கண்டவர்: லாவண்யா சுந்தரராஜன்

விஞர் மதாரை கடந்த ஒரு வருடமாக அறிந்து வருகிறேன். முதல் சந்திப்பிலேயே பழக எளிமையானவர், நேர்மையாகப் பேசும் குணம் கொண்டவர், எந்த இலக்கியத் திமிரும் அற்றவர் என்பது தெளிவாகப் புரிந்தது. தனது ஒரு கவிதையில் “நான் ஒரு குழந்தை” என்று சுயப் பிரகடனம் செய்து கொள்ளும் மதார், கவிதைகளிலும் அதே குழந்தைத்தன்மையைக் கொண்ட நேர்மறை அலைகளை வெளிப்படுத்துகிறார்.

மதாரின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய காட்சிகளில் காணப்படும் தரிசனங்களை நிரந்தரமான படிமங்களாக மாற்றுகின்றன. அவை கற்பனைச் செறிவும் சிந்தனையின் ஆழமும் கொண்டவை. அவரது கவிதைகளில் கள்ளமின்மை முழுவதும் பரவி நிற்கிறது. இதுவரை வெயில் பறந்தது, மாயப்பாறை ஆகிய இரு கவிதை நூல்கள் எழுதியுள்ளார்.

இந்தக் கவிதைகள் அனைத்தும் எளிய மொழியில், வெள்ளை மனதுடன் வாசகரோடு உரையாடுகின்றன. அதே சமயம், அவற்றின் உள்ளார்ந்த பரப்பும் உணர்வுகளின் பிரமாண்டமும் வாசகரை ஆழமாகத் தொட்டுச் செல்கின்றன.

கேள்வி: உங்களது கவிதைகள் எங்கிருந்து தொடங்கின? அவற்றின் பயணம் எதை நோக்கியதாக இருக்கிறது?

பதில்: பள்ளிப் பருவத்திலேயே கவிதைகள் எழுதத் துவங்கிவிட்டேன். அப்போது மொழி இல்லை துடிப்பான மனம் இருந்தது. வளர்ந்தபிறகு மொழி வந்துவிடுகிறது ஆனால் அந்த மனதைத் தான் தொலைத்து விடுகிறோம், கவிதையில் மொழியும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இரண்டும் நன்றாக இருக்கும்போதே செழுமையான கவிதை பிறக்கிறது. இந்த இரண்டையும் ஒரு சமரசத்துடன் கொண்டு செல்வதையே கவிதைகளில் தொடர்ந்து முயன்று வருகிறேன். 

கே: உங்களது கவிதைகளில் புறக் காட்சிகளை அடுக்குகிறீர்கள் ? அதை வாசிக்கும் வாசகருக்கு சில அகக்காட்சிகள் அதோடு இணைகின்றன ? திடிரென ஒரு வெடிப்பு வியப்பு நிகழ்கிறது உதாரணத்துக்கு பந்து கவிதையில் 

“தான் இன்னாருக்கு சொந்தம்

 என்று 

அறிந்து கொள்ளாத பந்து 

பூமியைப் போலவே இருந்தது”

அதே போலவே புறக்காட்சிகளை ஒரு துவலையின் மீதேற்றி சொல்கின்றீர்கள். அந்த கவிதை இப்படி முடிகிறது

“இறுதிப் போரில் கலந்துகொள்ளும் 

வீரனின் முகக்களையோடு 

காற்றில் சடசடத்து தன்னை சேனை பிடிக்கிறது 

அருவியறை கதவு திறந்து 

நடந்து வருகிறான் 

துவட்டுனன்”

இந்த வெடிப்பு வியப்பு சார்ந்து சொல்லுங்கள்

ப: சமீபத்தில் எழுதிய ஒரு கவிதையோடு இதை ஒப்பிட்டுச் சொல்லலாம் என நினைக்கிறேன். 

அள்ளி 

உண்ணத் தெரியாத 

மாடு 

வாயை மட்டும் 

அருகில் 

கொண்டு போக 

ஊட்டியே விட்டது 

புல்வெளி 

என் மகனுக்கு சோறூட்டும்போது அருகில் ஒரு மாடு புல் தின்னும் காட்சியைப் பார்க்க நேர்ந்தது. நான் மகனுக்கு சோறு ஊட்டுவது போல புல்வெளியும் மாட்டுக்கு புல்லை ஊட்டிவிடுவதாக நினைத்தேன். மிக இயல்பான ஒன்றாகவே நினைத்து எழுதினேன். ஆனால் நண்பர் ஸ்ரீநிவாச கோபாலன் இதை தற்குறிப்பேற்ற அணி என்று சுட்டினார். எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு ஒரு வாசகனாக வாசிக்கையில் அது சரியென்றே தோன்றியது. நிறைய கவிதைகளில் இப்படி உணர்ந்ததுண்டு. கைக்குட்டை பறக்கிற கவிதையும் இதே போல இயல்பாக எழுதிய கவிதைதான். ஆனால் எழுதி முடித்து வாசிக்கிறபோது நீங்கள் குறிப்பிடுவது போல அதில் ஒரு வியப்பு, வெடிப்பு தென்படுகிறது. இது ஏன் நிகழ்கிறது, எப்படி என்று புரியவில்லை. ஒருவேளை அந்தக் குறிப்பிட்ட கணத்தில் இயல்பும் வியப்பும் தராசின் ஒரே தட்டில் சந்திக்கின்றனவோ என்னவோ.. 

கே: “சொந்த ஊருக்கு திரும்புவது பைத்தியத்திலிருந்து தெளிவது” – இந்த கருத்தாக்கத்தை நீங்கள் ஒரு கவிதையில் வாசகர் அதிர அதிர முன் வைக்கிறீர்கள். அது எழுதியதற்கு பின்னால் இருக்கும் அனுபவம் சார்ந்து சொல்லுங்கள். போலவே “பார்வைத் தெளிவெனும் அச்சம் என் வீட்டு பரணில் கிடைக்கிறது” இதை ஒரு கோட்பாடாக, முரணாக முன் வைக்கின்றீர்களா ? இதை இப்படி எழுதிப் பார்க்க காரணமென்ன?

ப: முதல் கவிதையின் பின் உள்ள அனுபவம் அசலானது தான். சொந்த ஊர் மீதான ஏக்கம் முற்றி இருந்த வாதையின் நாட்கள் அவை. அப்போது ஒரு சீனக் கவிதை என் நினைவில் அடிக்கடி வந்து வந்து போகும். “ஊருக்குத் திரும்பியபின் என் மண்டையை ஓடையில் கிடத்தி குளிர்ந்த நீரில் அதை நனைப்பேன்” என்று சொல்வது தான் அந்தக் கவிதை. எப்போதோ படித்த கவிதை என் வாழ்வனுபவத்திற்கு பக்கத்தில் வந்து நின்றபோது நான் அதை நெருக்கமாக உணரத் தொடங்கினேன். அதன் பாதிப்பும், வாழ்வனுபவம் தந்த அனலும் ஒன்றிணைய முகிழ்த்ததே என் கவிதை. 

பார்வைத் தெளிவெனும் அச்சம் – அதுவும் அசலான அனுபவத்தில் இருந்து உருவான கவிதையே. மூக்குக் கண்ணாடி அணிய மறந்த ஒருவன் பைக் ஓட்டும்போது அவனுக்குக் கிடைக்கும் அனுபவமே கவிதை. உண்மையில் மூக்குக் கண்ணாடி அணியாமல் நான் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது தோன்றிய கவிதைதான் அது. வழியில் ஒரு பேக்கரியில் நிப்பாட்டி கவிதையை எழுதி முடித்தேன். அதில் வரும் மேடை பயம் விலக பள்ளி நாடகமொன்றில் கண்ணாடியைக் கழற்றிவிட்டு நடித்தேன் என்ற வரியும் உண்மையிலேயே பள்ளி படிக்கும்போது நான் செய்த ஒன்றுதான். இயல்பிலேயே நான் அச்சம் கொண்ட குழந்தையாய் இருந்தேன் என்று அந்தக் கவிதை எனக்குக் காட்டித் தந்தது.

இரண்டு கவிதைகளிலும் உள்ள முரணாக நீங்கள் குறிப்பிடுவது முதல் கவிதை பைத்தியத்திலிருந்து தெளிவது பற்றியது, இரண்டாவது தெளிவு வேண்டாம் என சொல்வது. ஆனால் அடிப்படையில் இந்த இரண்டு கவிதைகளுமே வெவ்வேறானவை. ஒன்று நரகத்தில் இருப்பது, இன்னொன்று சொர்க்கத்தில் வசிப்பது. நரகத்தில் இருப்பவனுக்கு ஒரே பிரச்சினைதான் – நரகத்தில் இருப்பதுதான் அந்தப் பிரச்சினை. சொர்க்கத்தில் வசிப்பவனுக்கும் ஒரே பிரச்சினைதான் – பிரச்சினை என்னவென தெரியாமல் இருப்பதே அது. இரண்டு பேருக்கும் ஒரே தீர்வைச் சொல்வது சரியாக இருக்காது. 

கே: உங்களது கவிதைகளில் சில மாய எதார்த்தம் சாய்வு கொண்டவை. “டெய்ரி மரம்”, “கப்பி” போன்ற கவிதைகள் மீ-எதார்த்த கருத்தாக்கம் கோட்பாடுகளில் கவிதை எழுதும் சவால் எப்படிப்பட்டது ?

ப: ஒரு கவிதையைத் துவங்கும்போதும் அதை எழுதும்போதும் இன்ன விதத்தில் இதை எழுதிவிட வேண்டும் என்ற நினைப்பே எனக்கு இருந்ததில்லை. ஒரு கவிதை அது உருவாகும்போதே தன்னளவில் அதற்கான வழியைத் தானே தேர்வு செய்து கொள்கிறது என்றுதான் நினைக்கிறேன். கவிதையை மர்மப்படுத்துவதற்காக இதை நான் கூறவில்லை. ஒரு கவிதையைக் கொண்டு செல்ல பல்வேறு வழிகள் கவிஞனின் முன் வந்து நிற்கும். அந்தக் கவிதைக்கு எது தேவையோ அதை சரியாகத் தேர்வு செய்வதே கவிஞன் முன் உள்ள பெரும் சவால். தூதுவர்களுக்கு இறைவனிடம் இருந்து வந்து சேரும் அசரீரி போல கவிஞனுக்கு கவிதையில் ஒரு தருணம் உண்டு. ஆம் நான் கவிதையை மர்மம் தான் படுத்துகிறேன் போல! இறைவனிடம் பிரார்த்திக்கும் தருணங்களில் ‘நல்ல கவிதைகளைக் கொடு இறைவா’ என்று கேட்பேன். நம்மை மீறிய ஒன்றைத் துணையாகக் கொள்வது நம் படைப்பு செயல்பாட்டுக்கு உதவும் என்பது என் எண்ணம். பாரதியின் பெருவிசைக்குப் பின் காளியும், ரூமியின் ஆழத்துக்குப் பின் அல்லாஹ்வும் இருந்திருக்கலாம். இதற்கு விதிவிலக்கான கவிஞர்களும் ஏராளம் பேர் இருந்திருக்கிறார்கள்.

கே: “வெயில் பறந்தது” வார்த்தை பிரயோகமும் கற்பனையும் எங்கிருந்து ஊற்றெடுத்தது? “வெயில் கழுவுதல்”, “வெயில் தும்மிய ஈரம்” போன்றவையும் வெயிலை குளிப்பாட்டும் சித்திரமும், வெயிலை காப்பி போல ஆற்றும் சிந்தனையும் அபூர்வமானது. வெயிலின் பாதிப்பு கவிதையாகும் விஞ்ஞானம் பற்றியும், வெயில் மீதான உங்கள் பற்று சார்ந்தும் இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள்.

ப: கன்னி நாவலில் ஒரு இடத்தில் பிரான்சிஸ் கிருபா பாளையங்கோட்டை வெயிலை எந்த சிறப்பு உருவகமும் செய்யாமல் வெறுமனே ‘பாளையங்கோட்டை வெயில்’ என்றே குறிப்பிட்டிருப்பார். வானில் மேகங்களற்ற தூய வான் நீலத்தை பார்ப்பதற்கு ஒப்பானது பாளையங்கோட்டையின் வெயிலை அனுபவிப்பது. தேவிபாரதியின் நொய்யல் நாவலில் சூறைக் காற்று ஒரு கதாபாத்திரமாகவே ஊருக்குள் வாழ்வது போல பாளையங்கோட்டை வெயில் ஒரு பாத்திரமாகவே ஊருக்குள் நடமாடுகிறது என்று நினைக்கிறேன். உண்மையில் எனக்கு மழைதான் பிடிக்கும் என்று நம்பியிருந்தேன். அதைத்தாண்டி வெயில் மீதான என் காதலை அறியாமல் நான் எழுதிய கவிதைகளே எனக்கு உணர்த்தின.

கே: உங்கள் கவிதைகளில் மழையும் வருகிறது. மழை வரும் போதெல்லாம் சிறுவர்களும் வருகின்றார்கள். இந்த இணைப்புக்கு ஏதேனும் காரணங்கள் உண்டா? 

ப: மழை கவிதைக்குள் வந்ததும் ஒரு குதூகலம் வந்துவிடுகிறது. கூடவே ஒரு பொறுப்பும் வருகிறது, மழையை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள நம்பி ஒப்படைத்துப் போகவே நான் அங்கு சிறுவர்களை அழைத்து வருகிறேனோ என்னவோ.. 

கே: உங்கள் கவிதைகளில் பிரத்தியேகமான சிறுவர் சிறுமியர் உலகமுண்டு. அதை எழுதும் போது நீங்கள் உங்கள் பால்ய பருவத்தை அந்த அனுபவத்தோடு எப்படி பொருத்திப் பார்க்கின்றீர்கள்? நட்சத்திரத்தை எண்ணும் கவிதையிலும், மதுக்குவளை பறக்கும் கவிதையிலும் மரமும் சிறுவனும் கவிதையிலும் ஒரு மாயாஜாலம் நடப்பது குறைந்த வார்த்தைகளில் எவ்வாறு சாத்தியமானது? 

ப: சிறுவர் சிறுமியர் உலகம் சார்ந்த கவிதைகளில் நான் என் பால்யத்தைக் கொண்டு வரவில்லை என்று நினைக்கிறேன். மாறாக எழுதும் கணத்தில் நான் சிறுவனாகவே இருக்கிறேன். என் பால்யம் அது இப்போதில் இருந்துதான் எழுதப்படுகிறது. கவிதைக்கு முன்னும் பின்னும் கவிதை உள்ளது. நான் எனக்குத் தேவையான கவிதையை அதன் நடுவிலிருந்து எழுதுவதால் குறைந்த வார்த்தைகளில் கவிதை சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன். நான் என் பெரும்பாலான கவிதைகளில் ஏதோ ‘ஒன்றைத்’ தான் பார்ப்பதாக நினைக்கிறேன். அந்த ஒன்றை முழுமையாகப் பார்க்க முயல்கிறேன். இதுவும் கூட குறைவான சொற்பிரயோகத்திற்கு காரணமாக இருக்கலாம். 

கே: பெரியவர்கள் கர்வத்தை விட்டொழிந்து குழந்தையின் உலகத்தில் அது பேசும் மொழியில் நுழைந்து கொள்வது விசித்திரமானது இதை கவிதைக்குள் எப்படி கொண்டு வந்தீர்கள்? அது கொடுக்கும் சொல்லை அதனிடமே தூக்கி போடும் பந்து விளையாட்டு எப்படி சாத்தியமாயிற்று?

 ப: முன்னரே சொன்னது போல நான் என்னை பெரியவனாகவே உணர்ந்தது இல்லை. என் பணிச் சூழலும் குடும்பப் பொறுப்புகளும் என்னை பெரியவனாக்குகின்றன. ஆனால் நான் அங்கும் ஒரு சிறுவன் நாடகத்தில் மீசை வைத்து வேஷ்டி சட்டையெல்லாம் அணிந்து நடிப்பது போலத்தான் சமயங்களில் விளையாடிப் பார்க்கிறேன் என்று தோன்றும். தற்போது இந்த மாதிரி நேர்காணல்களுக்கெல்லாம் பதில் சொல்வதால் கொஞ்சம் பெரியவனாகி விட்டேனோ என்னவோ.. 

கே: சிறுவயதின் வட்டப்பாதை வளர்ந்த பின் இரு துருவ ஊசலாட்டமாய் மாறுவதை வளர்ச்சி என்பீர்களா அல்லது வாதையா? எல்லோர் கனவிலும் நாம் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற ஏக்கத்தை மட்டுமா இது சொல்கிறது?

ப: நமக்குள் இருக்கிற குழந்தை முற்றாக அழியுமேயானால் அது வாதைதான். சிறுவன் வளரும்போது சிறுவன் வளரலாமே ஒழிய அழியக்கூடாது. நாம் எல்லோருமே நம் அகச் சிறுவனை அரவணைத்தேதான் வளர்கிறோம். அதனால்தான் மட்டுமே நாம் மனிதர்களாக இருக்கிறோம். இந்தக் கவிதை ஒரு எச்சரிக்கையைத் தருகிறது என்று சொல்லலாம். குழந்தையாக ஆக முடியாவிட்டாலும் குழந்தையாக ஆகாததின் ஏக்கம் கூட நம்மை குழந்தையாக வைத்திருக்கும். 

கே: மனதளவு இன்னும் பால்யத்துள் இருக்கும் சிலரது படைப்பில் சிறார் உலகம் உன்னதமாக எழுதப்பட்டிருக்கும் உதாரணத்துக்கு யூ மா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவலைச் சொல்லலாம். உங்கள் கவிதையில்

மரம் நிற்கிறது

அதைக் கடந்து 

ஒரு பேருந்து செல்கிறது

அழிரப்பரைப் போல

இந்த வரிகளை வாசிக்கும் போது உங்கள் மனதுக்குள் வாழும் சிறுவனே இந்த காட்சியை இப்படிப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. பெரிய அனுபவங்களை சந்தித்து விட்ட பின்னர் குழந்தைமையை தக்கவைத்துக் கொள்வதில் இருக்கும் சவால்களை சொல்லுங்கள். 

 ப: என்னுடைய முதல் தொகுப்பான வெயில் பறந்தது வெளிவந்தபோது அதற்காக எனக்கு விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது. அப்போது அந்த விருதை ஒட்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெளிவந்த கடிதங்களைப் படித்தபின்னர் தான் நான் என்னுடைய கவிதை உலகம் என்பது இன்ன இன்ன விஷயங்களைச் சுற்றி எழுதப்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன். கள்ளமின்மையும், குழந்தைமையும்தான் என் பிரதான அம்சங்கள் என அறிந்துகொண்டது அப்போதுதான். பிறகு இந்த கள்ளமின்மை, குழந்தைமை கவிதைகள் சார்ந்த விமர்சனங்கள் தமிழ்ச் சூழலில் தொடர்ந்து முன் வைக்கப்பட்டன. ஒரு படைப்பாளியாக என் படைப்புக்கு எந்த விமர்சனம் வந்தாலும் அது எனக்கு மகிழ்வாகவே இருக்கும். ஆனால் ஆரம்பத்தில் அவற்றில் எவற்றை எடுக்க வேண்டும், எவற்றை எடுக்கக் கூடாது என்கிற தெளிவு என்னிடம் இல்லை. பெரிய மனுஷனாக உருவெடு, அரசியல் கவிதைகளை எழுதிப்பார் போன்ற விமர்சனங்கள்.. ஒரு தொகுப்புக்கும் அடுத்த தொகுப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது கவிஞர்கள் வட்டத்துக்குள்ளே மிக ஆழமாகப் பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் மிகவும் பயந்தேன். நாமும் எப்படியாவது அரசியல் கவிதைகளை எழுதி வயசுக்கு வந்துவிடலாமா என்றெல்லாம் அப்போது எண்ணிக் கொண்டிருந்தேன். அச்சமயம் கவிஞர் லட்சுமி மணிவண்ணன் கூறிய அறிவுரை எனது மனத்தடையை நீக்கிவிட்டது. ‘எப்படிப் பார்த்தாலும் கவிதை ஒரு பயணம்தான், கவிஞன் தன் வாழ்வை அது என்னவோ அதை உண்மையாய் எழுதினாலே அது உண்மையான கவிதையாக இருக்கும்’ என்று கூறினார். அது எனக்கு மிகுந்த ஆசுவாசத்தை அளித்தது. நீங்கள் சொல்வது போல பெரிய ஆளாக ஆவது அல்ல, குழந்தையாகத் தொடர்வதே சவாலானது என்பதை உணர்ந்து கொண்டேன். 

பெரிய அனுபவங்களுக்கும் குழந்தைமைக்கும் தொடர்பு உள்ளதாகவே நான் நினைக்கிறேன். ஞானிக்கும் சிறுவனுக்கும் வயது வித்தியாசம் மட்டுமே உள்ளது என்று நம்புகிறேன். 

கே: உங்களின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று முதன் முதலில் கிருஸ்மஸ் ஸ்டார் பார்க்கும் சிறுமி என்ற கவிதை இதில் ஊடாடும் சிறுமியின் அறியாமை, கடவுளின் அற்புதம், அந்த கவிதை கொடுக்கும் positive அனுபவம் அபாரம். இது ஒரு மீ எதார்த்த பாணி கவிதை ஆனால் இது அப்படியே நடந்திருக்க கூடும் என்று எண்ணச் செய்யும் கவிதை. இதை எழுதிய தருணத்தை கொஞ்சம் சொல்லுங்கள். 

ப: சிறிய வயதில் நான் எதிர்கொண்ட பெரும் ஆச்சரியங்களில் ஒன்று -கிறிஸ்துமஸ் ஸ்டார் எப்படி ஒளிர்கிறது என்பதுதான். கேள்விகளிலேயே இரண்டு உண்டு. ஒன்று வெறும் கேள்வி, இன்னொன்று வியப்பான கேள்வி. முதல் வகைக் கேள்விகளுக்கு நான் விடை தேடுவேன். இரண்டாவது வகை கேள்விகளுக்கு விடையைத் தேடாமல் அதை ஒரு கனவாக எனக்குள் தேக்கி வைத்துக் கொள்வேன். பள்ளிக் காலங்களில் எனக்கே தெரியாமல் இதை ஒரு பயிற்சியாக நான் செய்து வந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். கிறிஸ்துமஸ் ஸ்டாரின் ஒளி குறித்தான இந்தக் கனவே நீங்கள் குறிப்பிடும் கவிதையாய் பின்னர் முகிழ்த்தது. அதில் வரும் விண்மீன்கள், வானம், ஏசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் தாத்தா, விவிலியச் சொல்லாடல், நள்ளிரவு, ஜெபம் ஆகிய அனைத்துமே நான் கனவாகத் தேக்கி வைத்தவையே. இவை யாவும் சரியான விகிதத்தில் கலந்தபோது உருவானதே அந்தக் கவிதை. (ஓரளவு சரியாக சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்) 

கே: பலூன் பற்றி எனக்கு தெரிந்து மூன்று கவிதைகள் உள்ளன. அக விடுதலை, பலூன் தாத்தா, பலூனுக்குள் ஒரு பலூன் என்று தொடங்கும் கவிதை. மூன்றுமே ஒவ்வொன்றும் வெவ்வேறு விதத்தில் அற்புதமானவை. அகவிடுதலை ஒருவாறு தத்துவம் பேசும் கவிதை போலிருந்தாலும் அதற்குள்ளும் ஒரு சிறிதளவான குழந்தைமை, பரவசம் (அ) ஆசுவாசம் தெரிகிறது. மற்ற இரண்டு பலூன் கவிதைகளுமே சிறார் உலக கவிதைகள் அல்லது பலூனை குழந்தைகளின் வஸ்துவாக பாவிக்கும் கவிதைகள். பலூன் கவிதைகளை எழுதும் போது எதை உணர்ந்தீர்கள்?

ப: பாவண்ணன் தன் கட்டுரையில் சிறுகதைக்குள் ஒரு ரயில் வரும்போது அந்தக் கதை என்னவாக மாறுகிறது என்பதை எழுதியிருப்பார். ஒரு சிறுகதையின் கதைத் தன்மையையே மாற்றிவிடும் சாத்தியம் அதற்கு உண்டு. ரயில் கதைகள் உருவாக்கித்தரும் மனநிலை தனித்துவமானது. அது போலவே கவிதைக்குள் ஒரு பலூனின் இருப்பு என்று கருதுகிறேன். வெறும் ‘பலூன்’ என்று குறிப்பிட்டாலே அது பல்வேறு விஷயங்களின் குறியீடாக இருப்பதைப் பார்க்கலாம். இத்தகைய பளு நிறைந்த சொல்லை (இன்னொரு உதாரணம் மரம்) கவிதையில் பயன்படுத்துவது கவிதையைத் தேய்வழக்காக்கும் என்பதே நவீன வாதம். ஆனால் நான் அத்தகைய எடையிலிருந்து அதை விடுவிக்கவே என்னுடைய பலூன் கவிதைகளில் முயன்றுள்ளதாக நினைக்கிறேன். இந்தக் கருத்தாக்கத்தை அடிப்படையாக வைத்து ‘கவிதையின் கருவிகள்’ என்ற சிறிய கட்டுரையையும் முன்னர் எழுதிப் பார்த்திருக்கிறேன். 

கே: தவளைக் கல் எரிவதைப் பற்றி சில கவிதைகளில் எழுதியிருக்கின்றீர்கள். சிறுவயதில் விளையாடிய அல்லது இந்த கால குழந்தைகள் விளையாட வேண்டிய outdoor விளையாட்டுகளைப் பற்றிச் சொல்லுங்கள். முதலில் தவளைக் கல் விளையாட்டைப் பற்றி அது தந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள். அதன் பிறகு சிறுவயதில் நீங்கள் விளையாடிய விளையாட்டுகளையும்.

ப: சிறுவயதில் அல்ல சமீப கால கட்டங்களில் தான் நதிக்குச் செல்கையில் தவளைக்கல் விளையாடியிருக்கிறேன். அது ஒரு விளையாட்டு கூட இல்லை, ஒரு மனநிலை. ஒரு பெரிய மனிதன் போல நிற்கும் ஆற்றை விளையாட அழைத்து நண்பனாக்கும் முயற்சி. 

 சிறுவயதில் எல்லா குழந்தைகளையும் போலத்தான் நானும் விளையாடியிருக்கிறேன். பிரத்தியேகமான விளையாட்டு என்று எதையும் தனித்துவமாக குறிப்பிட இயலுமா எனத் தெரியவில்லை, ஆனால் நீங்கள் கேட்டதும் சட்டென நினைவுக்கு வருவது – பிளாஸ்டிக் கவரில் கொஞ்சம் மணலைப் போட்டு அதைத் தூக்கி வானத்துக்கு வீசுவது. அப்போது அது எழுப்பும் ஒலி வித்தியாசமாக இருக்கும், மேலும் ஒரு தினுசாக அது பறக்கும். எடையும் எடையின்மையும் இணைந்த வெளியில் அது பறந்து கீழே விழுவதைப் பார்க்க பெரும் பரவசமாக இருக்கும். 

கே: இண்டிகேட்டர் கவிதையின் (அ) பகுதியில் அழகான காட்சியும் இக்கால கல்வி முறையின் சாபக்கேட்டையும் ஒருங்கே சொல்வது போலிருக்கிறது. இரண்டைப் பற்றியும் சொல்லுங்கள்.

ப: இண்டிகேட்டர் கவிதையை முதலில் நான் ஒரு காட்சியாக மட்டும் பார்த்தேன்.என்னைத் தாண்டிய ஒன்று எப்போதுமே கவிதையில் நிகழ வேண்டுவேன். அந்தக் கவிதையிலும் அப்படி ஒன்று நிகழ்ந்துள்ளதாக உணர்கிறேன். அதில் வரும் கனத்துத் தொங்கும் முதுகுப்பை என்ற வரி மொத்த கவிதையின் பொருளையும் மாற்றிவிடுகிறது. அது திட்டமிடாமல் போகிற போக்கில் எழுதியது. ஒன்றைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வரும்போது அது நம் தன்-முனைப்பில்லாமலேயே நம் படைப்புகளில் ஏறிக்கொள்கிறது.  

கே: கவிதைகளுக்குள் இழையோடும் துயரத்தை புதைத்த சில கவிதைகளை எழுதியிருக்கின்றீர்கள். நட்சத்திரத்தை எண்ணுபவர்கள், இடையனும் ஆடும், முழுதாக கரைந்த ரப்பர் போன்ற கவிதைகளில் கவியும் துயரம் எதை குறிக்கிறது?

ப: துயரம் கவிகளின் பிரதான கச்சாப் பொருள். ஒரு கவிஞரின் தனித்துவமாக அவர் தன் கவிதைகளில் துயரத்தை எவ்விதம் எழுதுகிறார் என்பதையே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். துயரம் ஒரு பெருந்தாய் போல. வாழ்க்கை, தத்துவம், மரணம், மகிழ்ச்சி என அனைத்தையும் அரவணைத்துக் கொள்கிறது. கவிஞர் இசையின் ஒரு கவிதை

ஒரு பந்தென இருக்கிறோம்

கடவுளின் கைகளில் 

அவரதைத் தவறவிடுகிறார் 

தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத் 

தன் பாதத்தால் தடுத்து 

முழங்காலால் எற்றி 

புஜங்களால் உந்தி 

உச்சந்தலை கொண்டு முட்டி 

இரு கைகளுக்கிடையே 

மாறி மாறித் தட்டி விளையாடுகிறார் 

மறுபடியும் பாதத்திற்கு விட்டு 

கைகளுக்கு வரவழைக்கிறார் 

‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை;

உன்னைக் கைவிடுவதுமில்லை’ 

பிதாவே!

தயவு பண்ணி எம்மைக் கைவிடும் 

இந்தக் கவிதையை எழுதியவர் இசைக்குப் பதிலாக பிரான்சிஸ் கிருபா என வைத்துக் கொண்டால் என்ன நிகழ்கிறது.. மொத்த துயரமும் வேறொன்றாக ஆகிறது. இசையின் துயரத்தை பகடியால் கடந்து விடலாம். கிருபாவின் துயரத்தை செறிப்பது மிகச் சிரமம். அதே போல கல்யாண்ஜியின், 

இருந்து என்ன ஆகப் போகிறது 

செத்துத் தொலைக்கலாம் 

செத்து என்ன ஆகப் போகிறது 

இருந்து தொலைக்கலாம் 

என்ற வரிகளை எழுதியவர் நகுலன் என வைத்துக் கொண்டால் கவிதையின் தொனியே மாறிவிடுகிறது. 

என்னுடைய கவிதைகளில் துயரம் என்பதை நேரடியாக அல்லாமல் வேறொன்றாகவே எழுதிப் பார்த்து வந்துள்ளேன். தனி மனிதனின் துயரை அரிதாகவே எழுதியிருக்கிறேன். என கவிதைகளில் வரும் மனிதனுக்கு துயரம் தன்னைப் பார்க்கும்போது வருவதில்லை. விண்மீனைப் பார்க்கும்போது வருகிறது, ஈர மணலை பார்க்கும்போது வருகிறது. எதையாவது ஒன்றைத் தொலைக்கும்போது அல்ல, ஒன்றைத் தேடும்போதே அவன் துயரமடைகிறான். 

கே: மரமும் கதவும், பலூன் கவிதைகளில் ஒரு சிறுகதைத் தருணமிருக்கிறது அதை நீங்கள் எப்போதேனும் விரித்தெழுத யோசித்தது உண்டா? உங்களது இலக்கிய ரசனை சார்ந்து சொல்லுங்கள். கவிதை அல்லாத பிற வடிவங்களை எப்படி அணுகுகின்றீர்கள் ?

ப: கவிதையாக நிறைவாக அமைந்த கவிதைகளை அப்படியே விட்டுவிடுவேன். சரியாக வராத கவிதைகளை குறுங்கதைகளாக ஆக்கலாமா என யோசித்ததுண்டு. சிலவை பொறிகளாக மட்டும் இருக்கும், கவிதையாக ஆகியிருக்காது. சிறுகதை மிகுந்த சவாலான வடிவம். அதில் பிரக்ஞை பூர்வமாக நிறைய விஷயங்களை எழுத்தாளன் செய்ய வேண்டியிருக்கும். 

கவிதைக்கு பிறகு நான் பெரிதும் விரும்பி வாசிப்பது நாவல்களை. சிறுகதைகளையும் கட்டுரைகளையும் சீராக வாசிப்பேன். படைப்பாளி தன்னை விட தனக்குள் கமழும் வாசகனுக்குத் தீனி போடுவது முக்கியமானது, இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட. அதற்காக இயந்திரகதியில் படிக்க வேண்டும் என்றில்லை, வாசிப்பதை முழுதாக அனுபவித்து இன்புறவேண்டும். எழுத்தில் கவிதை அல்லாமல் நாவல் மேல் மோகம் உண்டு. இதுவரை எழுதிப் பார்த்ததில்லை, சில சிறுகதைகள் எழுத முயன்று சரியாக வரவில்லை. 

கே: உங்கள் கவிதைகளில் தொடர்ந்து யாராவது எதையாவது தேடிக் கொண்டிருக்கின்றார்கள். மூங்கில் தேடும் மூங்கில் காடு போல இந்த தேடலின் பிண்ணனி என்ன? இடையனை தொலைத்த ஆடு, ஆட்டை தொலைத்த இடையன் இருவரும் தேடுவதும் தப்பிப்பதுமாக இருப்பது எந்த விதமான குறியீடு?

ப: அடிப்படையில் எல்லா கவிதையுமே ஏதோ ஒன்றைத் தேடுகிறது, இதில் முரண் என்னவென்றால் கவிதை எதையும் தொலைக்கவில்லை, ஆனால் அது எதையோ தேடிக் கொண்டே இருக்கிறது, கண்டுபிடிக்கிறது. ராமாயணத்தில் எல்லோரும் சீதையைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதியைத் தேடிக்கொண்டே இருக்கிறாள். நீலகண்டப் பறவை தேடப்படுகிறது. குட்டி இளவரசன் தேடுகிறான். தேடும் கணம் கவிதையின் கணமாகிறது. 

இடையனும் ஆடும் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறியீடாகிறது. இடையனும் ஆடும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விஷயங்களைக் கவிதை கையாளும்போது அவற்றின் அதிகபட்ச நிகழ்தகவை நிகழ்த்திப் பார்க்கிறது. ஒரு நாணயத்தைத் திருப்பித் திருப்பிப் பார்ப்பது மட்டுமே கூட கவிதைக்குப் போதுமானது. ஏனென்றால் கவிதைக்குள் வரும் நாணயத்திற்கு பக்கங்கள் இரண்டல்ல, முடிவிலி.. 

கே: சில கவிதைகளில் யூகிக்க முடியாத பிரம்மாண்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். பூனையின் கண்களை ஒரு கிரகமாகப் பார்ப்பதும் பூமியையும் நிலவையும் அளக்க சென்டிமீட்டர் அளவுகோல் போதும் என்று சொல்லுமிடமும். எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது? “ஆகாசத்தின் கதவா என் எளிய ஜன்னல்”, இந்த கவிதை கொண்டிருக்கும் எளிய பிரம்மாண்டம் தற்செயலானதா?

ப: ஆர். அபிலாஷ் மொழிபெயர்த்த ஜேம்ஸ் வில்லியம் ஹேக்கெட்டின் ஒரு கவிதை 

எல்லையற்ற பரப்பு சீக்கிரமே சலிக்க 

காட்டுப் பூக்கள் மற்றும் அவற்றின் 

அதிசயங்களிடம் மண்டியிடுகிறேன் 

பிரம்மாண்டம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். பிரம்மாண்டம் அதன் அளவிலோ பயன்பாட்டிலோ இருபபதில்லை. பிரம்மாண்டம் என்பது தூரமாக இருப்பதுவும் இல்லை. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த முக்கியமான படம் – மெட்ராஸ் மேட்னி. அதன் இறுதிக் காட்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒரு சாதாரண மிடில் கிளாஸின் வாழ்விலும் அதிசயங்கள் இருக்கின்றன என்ற வசனத்துடன் கேமராவின் கோணம் தரையில் ஓடும் ஆட்டோவில் இருந்து வானத்திற்கு ஏறும். நான் பார்த்த எந்த பிரம்மாண்ட படங்களின் பிரம்மாண்ட காட்சிகளை விடவும் ஒரு படி மேலான காட்சி அது. பிரம்மாண்டம் என்பது மனதை நிறைத்து விடுவது. அது எப்படியும் இருக்கலாம். 

ஆகாசத்தின் கதவு கவிதையில் வரும் பிரம்மாண்டம் தற்செயலானதே. 

கே: உங்கள் கவிதைகளில் எல்லாப் பொருட்களுக்கும் உயிர் உள்ளது அது சில நேரம் மனிதர்களுடன் பேசுகிறது சில நேரம் மனிதர்களை விஞ்சியும் செல்கிறது இதை எப்படி புரிந்து கொள்வது?

 ப: கவிதையில் எல்லாவற்றிற்கும் இடம் உண்டு. உயிர் உண்டு. உலகியலில் ஒவ்வொன்றின் சரியான இடத்தையும் கவிதையில் மட்டும்தான் ஒருவன் அறிய முடியும். 

 உங்களது இந்தக் கேள்வியை கவிதைத் தொகுப்புகளின் தலைப்புகளை வாசிக்கும்போது நான் உணர்ந்ததுண்டு. மிக மிக சாதாரணமான ஒரு சொல்லை, சொற்றொடரை கவிதைத் தொகுப்பொன்றின் தலைப்பாக வைக்கும்போது அது கூடுதல் அர்த்தம் பொதிந்ததாக, கூடுதல் மர்மம் நிறைந்ததாக மாறிவிடும் விந்தையைக் கவனிக்கலாம். உதாரணத்திற்கு ‘கல்’ என்பதை ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பாக வைத்தால் அது அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு படிமம் என்ற தகுதியை எட்டி விடுகிறது. மேலும் ஒரே நேரத்தில் அது மிக மிகத் தனிமையான ஒன்றாகவும், அனைத்தின் சாரமான ஒன்றாகவும் திகழும். உலகியலில் வரும் ‘கல்’ என்ற சொல்லுக்கு இந்த அந்தஸ்து கிடைப்பதில்லை. 

கவிதைக்குள் வரும் பொருட்கள் கவி ஆளுமையின் பிரதிநிதியே. நாற்காலியில் அமர்ந்திருக்கும் மனிதனோடு பேசுவதை விடவும் ஒரு நாற்காலியோடு பேசுவதையே கவிஞன் விரும்புவான். அவனுக்குப் பொருள் வெறும் பொருள் அல்ல, கவிதா கணத்தின் பெரும் வாய்ப்பு..  

கே: மதநம்பிக்கைகளை அல்லது அதீத நாடகீய மதச் சடங்குகளை கேள்வி கேட்கும் கவிதைகளை எழுதியிருப்பது தைரியகரமானது. உதா:இசபெல்லாவின் இரவுகள், நீரோ நீ வாசி, சஜ்தாவில் குழந்தை போன்றவை. அதை சார்ந்த எதிர்வினைகளை எதுவும் வந்ததா? அப்படி எதிர்வினையாற்றப்பட்டால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? 

ப: நீங்கள் குறிப்பிடுகிற மூன்று கவிதைகளுமே அந்த நோக்கில் எழுதப்பட்டவை அல்ல. ஒரு கவிதை வெவ்வேறு தளங்களில் வாசிக்கப்படுவது மகிழ்ச்சிதான்.

கே: உங்கள் கவிதைகளில் பெண்களின் நடமாட்டம் குறைவு, அம்மாவாக, மனைவியாக, குழந்தையாக சில இடங்களில் பெண்கள் வருகின்றனர் ஆனால் மழையிலிருந்து மகனுக்கு வாங்கிய பொம்மையை பாதுகாக்கும் கவிதையில் பிறர் பார்வையில் நீங்கள் தாய்மையை உணர்கின்றீர்கள். இயல்பாய் எப்போதேனும் தாய்மையை, பெண்மையை உங்களுக்குள் உணர்ந்ததுண்டா? இன்னொரு கவிதையில் தாய் முலையூட்டும் முப்பது நொடிகளுக்கு முன்னர் குழந்தைக்கு முத்தம் கொடுத்து இந்த அன்பும் அந்தக் குழந்தையின் உடலில் சேரும் தானே என்று ஏக்கத்தோடு கேட்கின்றீர்கள். இது பெண் உலகை முழுமையாய் உணர முடியாத்தன் வலியென்று எடுத்துக் கொள்ளலாமா?

ப: ஆண் குழந்தையைக் கொஞ்சவும் நான் ‘அழகி’ என்ற வார்த்தையையே பயன்படுத்துவேன். அதே போல குழந்தையைக் கொஞ்சும் தந்தை யாவருமே தாய்தான் என்பது என் எண்ணம். தாய் என்பதை ஒரு பாலினமாக அல்லாமல் ஒரு பண்பாக, தகுதியாக இவ்விடத்தில் நான் சுட்ட விரும்புகிறேன். 

பெண்மையை உணராத ஆண் இருக்க முடியுமா.. நிச்சயம் வாழ்வின் ஏதோ ஒரு கணத்திலாவது கட்டாயம் உணர்ந்தே இருக்க முடியும்.

முத்தம் கவிதையில் பெண் உலகை புரியாத வலி இல்லை. ‘நீ அவன்கிட்ட இத கொடுத்துடு’ என்ற பரிவுதான்.

கே: நிறத்தின் மணம் நுகர முடியவில்லை என்றொரு கவிதையில் சொல்கின்றீர்கள், அதே போல செடியின் நிழலில் தெரியாத பூவின் நிழல் அதன் மேலிருக்கும் பனியின் நிழல் அதை காண வேண்டும் என்கின்றீர்கள். இதெல்லாம் கனவுலகத்தின் நிகழ்பவையா? கனவில் கண்ட மூலப்பிரதியை வைத்துக் கொண்டு நனவை மெய்ப்புப் பார்க்கும் இந்த பணி பைத்தியக்காரத்தனத்தின் உச்சமா? கவிஞர்கள் இப்படித் தானோ என்ற கேள்வி வந்தால் அதற்கு உங்கள் பதில் என்ன? 

ப:கவிதையில் கனவுலகம், இயல்புலகம் என்ற பிரிவில்லை – கவிதை உலகம் அவ்வளவுதான். கவிதைக்கு உள் இருக்கும்போது நமக்கு இந்த பேதங்கள் தோன்றுவதில்லை. கவிதைக்கு வெளியில் வந்து யோசிக்கும்போது இவை தோன்றுகின்றன. கவிதையின் உள் உலகத்தை வெளி உலகமாயும் சிருஷ்டித்த கவிகளையே நாம் மகாகவிகள் என்கிறோம். தினமும் ஒரே பாடலையே பாடிக்கொண்டிருக்கிற குயில் பைத்தியமென்றால், அடர் சிகப்பில் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிற பூ பித்தின் வடிவமென்றால் கவிஞனும் பித்தன்தான்.. 

கே: தன்னந்தனியாக நின்று எரியும் நெருப்பு கிழிவின் ஓசையும் கேட்கும் நுட்பத்தை எங்கிருந்து பிடித்தீர்கள். நெருப்பை நேர்மறையாகவும் பார்க்கலாம் எதிர்மறையாகவும் காட்டலாம். ஆனால் நெருப்புக்கு சொந்தமாய் ஒரு உணர்வுண்டு என்றுணர்த்தும் கிழியும் நெருப்பென்ற படிமம் எதை காட்டுகிறது? 

ப: க. மோகனரங்கன் மொழிபெயர்த்த அப்பாஸ் கியரோஸ்தமியின் ஒரு கவிதை 

நன்மைக்கும் 

தீமைக்கும் அப்பால் 

நீல நிறமாக இருக்கிறது 

வானம் 

இதை கவிதையாக மட்டுமல்லாமல் கவிதை உத்தியாகவும் கொள்ளலாம். கவிதையில் ஏதோன்றின் பண்பு நலன்களையும் அழித்துவிடும் வசதி உள்ளது. ஏதொன்றையும் புத்தம் புதிதாய் பிறப்பெடுக்க வைக்க கவிதையால் முடியும். ‘நூறு நூறு புலன்கள் முளைத்த புத்துயிரி நான்’ என்று கவிஞர் சபரிநாதன் குறிப்பிடுகிறாரே.. 

கே: உங்கள் பெரும்பாலான கவிதைகளில் காட்சிகள் கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்கின்றன. இதெல்லாம் திட்டமிடாமல் எழுத முடியுமா? உதா: “நான் அமரச் சென்ற நாற்காலியில் கத்தரி நிறப் பூ”, “மணல் ஓவியத்தில் கண்களில் கட்டெறும்பை ஊர விடுவது” “மஞ்சள் பூவனம் போல் ஆட்டோ ஸ்டேண்ட்” “நீர் நிலவில் ஒரு தவளை குதித்தெழ” “மழை காய்த்த பட்டு போன மரம்” இதை பின்புலமான விஷயங்களைச் சொல்லுங்கள். உங்கள் கவிதைகளை காணும் எல்லா காட்சிகளிலிருந்தும் படம் பிடிக்கின்றீர்களா? அந்த அளவுக்கான நுட்ப ரசனை கவிதை தொழிற்படுதலுக்கு தேவைப்படுகிறதா? சமகால கவிதைகளை இந்த நோக்கில் ஆராய்ச்சி செய்திருக்கின்றீர்களா?

ப: கவிதையில் எதையும் திட்டமிட்டு எழுதுவதில்லை. நமக்கு ஒரு கனவு வரும்போது அதில் நனவின் துணுக்குகளும் சேர்ந்தே கூட்டுக் கலவையாக நிகழுமல்லவா அதுதான் இந்தக் கவிதைகளிலும் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையை இதில் பின்பற்றலாம். ஒட்டுமொத்த சமகால கவிதைகளையும் இவ்விதத்தில் ஆராய்ச்சி செய்வது பொருத்தமாக இருக்காது. 

கவிதைக்கு வலு சேர்ப்பவை படிமங்கள் தான். அதற்கு கவிஞன் உணர்வுத்தளம், காட்சித் தளம் என்ற இரண்டிலும் துடிப்போடு இயங்க வேண்டியுள்ளது. இந்த இரண்டிற்கும் மொழி வாயிலாக தன்னால் இயன்ற அதிகபட்சத்தை தந்துவிடவே கவிஞன் கவிதையில் முயல்கிறான். 

கே: இதயம் எதோ காரணத்தால் நின்று போன சில நொடிகளில் CPR என்ற செயல்முறையில் இதயத்தை மறுபடி துடிக்க செய்ய முடியும். அந்த செயல்முறையை தண்ணீர் குதித்தாடும் தவளையாக காட்டியிருப்பது வித்தியாசமான கவிதை. இதை மருத்துவ அறிவியல் கவிதைக்கு அருகே வைக்கலாம். தவளையின் துள்ளலை இதயத் துடிப்போடு ஒப்பிட எப்படித் தோன்றியது.

ப: இடைவிடாமல் குதித்துக் கொண்டே செல்கிற தவளையை நான் பார்த்ததே இல்லை, பெரும்பாலும் ஓரிடத்தில் நின்று கொண்டேயிருக்கிற அல்லது அரிதாகக் குதிக்கின்ற தவளைகளைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இடைவிடாது குதித்துக் குதித்துச் செல்கிற தவளையை பார்ப்பதற்கு நான் கவிதையை விட்டால் வேறெங்கே போக முடியும்? அப்படி பார்க்க முனைந்தபோது தோன்றியதே அந்தக் கவிதை. 

கே: “ஜெகஜ் ஜோதியாய் நடக்க ஒளிர வேண்டுமென்ற அவசியம் இல்லை”இது வாழ்க்கையின் எல்லா அவநம்பிக்கையும் போட்டு உடைத்து சுக்குநூறாக்கும் கருத்தாக்கம். கிண்டல் தொனிக்கும் கருத்தியல் கத்தி கொண்டு கொல்ல துடிப்பவரை எள்ளி நகைக்கும் இறுமாப்பு. இதை எப்படி எழுதத் தோன்றியது? உங்களின் சில கவிதைகளில் நம் முன்னோடி கவிஞர் சிலரின் தாக்கம் இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. இந்த தாக்குதலை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?

ப: மழையில் நடக்கும் தீக்குச்சி கவிதை மீதான உங்கள் வியப்பு அப்படியே தொடர ஏதும் சொல்லாமல் அதை அப்படியே விட்டுவிடுகிறேன். இந்தக் கவிதையுமே கூட எந்த அதீத உணர்வெழுச்சியும் இல்லாமல் மிக இயல்பான ஒரு தளத்தில் எழுதிய கவிதைதான். அந்த இயல்புதான் உணர்வெழுச்சியா.. தெரியவில்லை..

எனக்கு என் அப்பாவின் ஜாடை இருக்கலாம். ஆனால் நான் என் அப்பா அல்ல. துவங்கும்போது ஒரு பிடிமானத்திற்கு நம் அபிமானிகளை பிடித்துக் கொள்வதில் தவறொன்றுமில்லை, அவர்களே நாம் சுயமாக நடப்பதற்கும் கற்றுத் தந்துவிடுவார்கள். நான் என் அசலான கவிதைகளைக் கண்டடைய நண்பரும் பதிப்பாளருமான ஸ்ரீனீவாசகோபாலனின் அக்கறையே முதன்மையான காரணம். 

***

லாவண்யா சுந்தரராஜன்: முசிறியில் பிறந்தார். தற்போது பெங்களூரில் மென் பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். மின்னஞ்சல் முகவரி : lavanya.sundararajan@gmail.com

லட்டு எனும் அரசியல் விமர்சகன்

0

நிஜந்தன்

ட்டுவை நான் திரும்பவும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. லட்டுவுக்கு வயதாகியிருந்தது. லட்டு என்று உடனே அடையாளம் காண முடியவில்லை. பேச்சுவாக்கில் லட்டு என்று உறுதி ஆனது. லட்டுவை அப்படிக் கற்பனை செய்ய முடிந்திருக்கவில்லை. காலம் கடந்தால் லட்டு என்ன, யாராக இருந்தாலும் மாற்றம் வந்திருக்கும்.

லட்டுவுக்கு சுமார் ஐந்து வயதிருக்கும்போது முதலில் எதிர்ப்பட்டான். மிகவும் குறும்பான சிறுவனாகத் தெருவில் திரிந்தான். அப்போது அவன் முதல் வகுப்புப் படித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். அல்லது அதற்குக் கீழ் வகுப்பில் இருந்திருக்கலாம். பெரும்பாலும் அவன் கால் சட்டை அணியாமலேயே திரிந்தான். சாலைகளில் மலம் கழித்தான். வீடுகளின் முன்பாக மலம் கழித்தான். வீட்டுப் பெண்கள் கடும் கோபம் அடைந்தார்கள். சிலர் அவன் மீது தண்ணீர் தெளித்து அனுப்பினார்கள். அவன் வந்து மலம் கழித்துவிடாமல் இருக்க வீடுகளின் வாசல்களில் தனியாகக் கவனம் செலுத்தினார்கள். 

லட்டு பல நிறங்களில் மலம் கழித்தான். ஒரு முறை ரோஸ் வண்ணத்தில் அவன் கழித்த மலம் தெருவோரங்களில் காய்ந்தது. ஒரு முறை அவன் அடர் பச்சை நிறத்தில் மலம் கழித்தான். சாலை முனைகளில் இருந்த தண்ணீர் அடிக்கும் பம்புகளின் அடியில் அவன் குதம் கழுவினான். தண்ணீர் பிடிக்க வந்த பெண்மணிகள் அவனை அடித்துத் துரத்தினார்கள். அவர்களிடம் லட்டுவின் தாயார் செல்லமாகச் சண்டை போட்டாள். 

லட்டு குடியிருந்த வீட்டில் ஏராளமான குடித்தனங்கள் இருந்தன. அங்கு பல வீடுகளுக்கு ஒரே கழிவறை இருந்தது. அதனால் லட்டு சாலையோரங்களை கழிவறையாகப் பயன்படுத்தினான். இதனால் பலரின் வெறுப்பை அவன் ஈட்டிக்கொண்டான். எப்போதும் மோசமான வயிறு கொண்டிருந்த அவன் எப்போது பள்ளிக்குப் போனான், எப்படி வகுப்பில் இருந்தான் என்பது வியப்பு ஏற்படுத்தியது.

ஒரு நாள் அந்தச் சூழலில் இருந்து லட்டு காணாமல் போனான். அல்லது நான் அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தேன்.

ஆனால் லட்டு என்ற பிம்பம் மட்டும் எப்போதும் நினைவில் பதிந்து போயிருந்தது.

பல ஆண்டுகள் கழித்து லட்டுவை மீண்டும் சந்திக்க நேரிடும் என்று நினைக்கவில்லை. 

ஒரு அழகுப் பொருள் அங்காடி முன்னால் லட்டு எதிர்ப்பட்டான். என்னைப் பார்த்ததும் அவன்தான் வந்து பேசினான். அப்போது அவன் லட்டு என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவனை அறிந்தவன் என்றுகூட அவனுக்குத் தெரியவில்லை.

அந்த அங்காடியின் கீழ்ப்பகுதியில் ஒரு உளவியல் சிகிச்சை மையம் இருந்தது. அங்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் அந்த வளாகத்தில் நிற்பது வழக்கமாக இருந்தது. அப்படி ஒருவன் நின்றுகொண்டிருக்கிறான் என்று நான் கடந்து போக நினைத்தேன். யாரோ ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு லட்டுவிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஒரு தொலைக்காட்சி நெறியாளனாக, வலைக்காட்சி தொகுப்பாளனாக, அரசியல் விமர்சகனாக என் முகம் சமூகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது.

ஓரமாக நின்றுகொண்டிருந்த லட்டு என் முன்னால் ஏறக்குறையக் குதித்தது போல வந்து நின்றான்.

லட்டுவுக்கு வயதாகியிருந்தது. கண்ணாடி அணிந்திருந்தான். நெற்றி முன்னால் முடிக் கற்றை விழுந்தது. அதுதான் அவனை லட்டு என்று எனக்கு அடையாளம் காட்டியது. பிறகு அந்த முன்பற்கள் அவனை எனக்கு அவன்தான் என்று நிரூபித்தன. சுமார் முப்பது ஆண்டுகள் கழித்துப் பார்த்தபோதும் லட்டுவின் அடிப்படைகள் அப்படியே இருந்தன. 

நேராக அவன் என்னிடம் கேள்விதான் கேட்டான். 

‘ஏன் சார், ஊடகங்களில் சர்ச்சையாகப் பேசினால் ஜெயிலில் போட்டுவிடுவார்களா?’ என்று அவன் கேட்டான்.

எனக்கு உடனே புரியவில்லை.

அவன் என் முகத்தை அடையாளம் கண்டுகொண்டு ஊடகங்களில் கருத்துச் சொல்வது பற்றித்தான் கேட்கிறான் என்று புரிந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னாலும் அவன் லட்டு என்று எனக்கு அடையாளம் தெரிந்ததுதான் எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளித்தது.

அவன் பேசிக்கொண்டே போனான். 

‘சார், நான் யூட்யூபில் பேசுகிறேன். என் ப்ளாக்கில் கருத்துப் போடுகிறேன். இந்த அரசியல்வாதிகள் எல்லாம் செய்யற காரியத்தைக் கழுவி ஊற்றுகிறேன். ஆனால் அப்படிச் செய்தால் கைது செய்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். உண்மையா சார்?’ என்று மிகுந்த அப்பாவியாக அவன் கேட்டான்.

அவனிடம் ஒரு இயல்பின்மை இருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவன் கழுத்து இறுக்கமாக இருந்தது. கண்களில் சோர்வு இருந்தது. அவன் உளவியல் சிகிச்சை மையத்திற்கு வந்திருந்தவன் என்று பார்த்தவுடன் புரிந்தது.

அவனைப் பதிவு செய்துகொள்வதிலேயே என் கவனம் இருந்தது. 

‘நீங்க சங்கர்தானே’ என்றேன் நான்.

‘எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?’ என்று லட்டு ஆச்சர்யப்பட்டான்.

அவன் பெயர் சங்கர் என்று என் நினைவுக்கு வந்ததுகூட ஆச்சர்யம்தான்.

லட்டு என்ற சங்கரை யாரால் மறக்க முடியும்?

இயற்கை உபாதையை வைத்துக்கொண்டு ஒரு தெருவையே கதிகலங்க வைத்தவன் அல்லவா அவன்? அவனை என் பிற கதைகளில்கூட பயன்படுத்தியிருந்த நினைவு எனக்கு உண்டு. அவன் சிறிய வயதில் இருந்த உயரத்திற்கு இப்போது அதிக உயரமாகி இருக்க வேண்டும். ஆனால் ஏதோ காரணத்தால் நடுத்தர உயரத்திலேயே அடங்கிவிட்டான்.

‘தெரியும்’ என்றேன் நான்.

அவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

‘சார், நீங்க புரசைவாக்கத்தில இருந்தீங்களா?’ என்றான் அவன்.

‘ஆம்’ என்றேன் நான்.

‘நான் சின்னக் குழந்தையா இருந்தபோது அங்கே இருந்தேன்’ என்றான் அவன்.

‘ஆம்’ என்றேன் நான்.

நீ சின்னக் குழந்தையா இருந்தபோது செய்த அட்டூழிங்கள் கொஞ்சமா, என்று நான் நினைத்துக்கொண்டேன்.

‘சார், நான் இந்த அரசியல்வாதிகளை போட்டுப் பிழிஞ்சு எடுக்கறேன் என் வீடியோவுல எல்லாம். அதனால எனக்குப் பிரச்சனை வருமா?’ என்று கேட்டதையே அவன் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘அளவாப் பேசினா, ஒன்னும் ஆகாது’ என்று நான் கூறினேன்.

‘அந்த அளவுதான் என்னன்னு தெரியலை சார். இந்த அரசியல்வாதிங்க செய்யற அட்டூழியம் கொஞ்சமா சார்’ என்றான் அவன்.

நான் அமைதி காத்தேன்.

‘அப்புறம், இந்த சினிமாக்காரங்களைப் பத்தியும், நிறையப் பேசறேன் சார். அவுத்துப் போட்டுட்டு ஆடறது. பிறகு பத்தினிங்க மாதிரி பேசறது. குடிச்சுட்டு சுத்தறது. பிறகு உத்தமனுங்க மாதிரி அறிவுரை கொடுக்கறது. இதை எல்லாம் எதிர்த்து நான் குரல் கொடுக்கறேன் சார்’ என்றான் அவன்.

‘அதையும் நாகரீகமா செய்யுங்க’ என்று நான் சொன்னேன்.

‘உக்காந்து பேசலாமா சார்’ என்றான் அவன்.

அருகில் இருந்த நீண்ட படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டோம். எதிரில் இருந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐடி ஊழியர்கள் மெதுவாக இறங்கி நடந்து சென்றார்கள். நிலையத்திற்குள் எதிரொலித்த அறிவுப்புக் குரல் கொஞ்சம் மனதைக் கலங்கடித்தது.

‘இங்கே எங்கே வந்தீங்க?’ என்று நான் கேட்டேன்.

எனக்கு ஆவல் தாங்க முடியவில்லை.

‘எனக்கு கொஞ்சம் பிரச்சனை சார்’ என்றான் அவன்.

நான் எதுவும் சொல்லவில்லை.

அவன் உடனே இறுக கண்களை மூடிக்கொண்டான். 

‘வாழ்க்கையில் நான் கண்ட பிரச்சனைகளை சொன்னால் நீங்க அழுதுடுவீங்க சார்’ என்று சொல்லிவிட்டு அவன் கண்களை மூடிக்கொண்டான். 

‘என்ன ஆச்சு’ என்றேன் நான்.

அவன் வெகு நேரம் பேசவில்லை.

‘காலாற நடந்து போய்ட்டு வரலாமா’ என்றான் அவன்.

சாலையில் போக்குவரத்து படு வேகமாக இருந்தது. கிளை சாலையில் இறங்கி நடந்தபோது அவன் அடிக்கடி இருமிக்கொண்டான். துக்கம் தொண்டையை அடைத்தது என்று புரிந்தது. 

’சார், நான் ஒரு பொறுப்பான பிரஜை சார்’ என்றான் அவன்.

அதுதான் குழந்தை காலத்திலேயே தெரியுமே என்று நான் நினைத்துக்கொண்டேன்.

‘சார் நான் என் மனைவியைக் கொலை செய்யலாம்னு முடிவு பண்ணேன் சார்’ என்று அவன் அதிர்ச்சி அளித்தான்.

ஏன் என்பது போல்தான் நான் அவனைப் பார்த்தேன். அவன் என் அதிர்ச்சி பாவனையை ரசித்தவன் போல இருந்தான்.

‘ஆமாங்க சார். ரொம்ப இம்சை பன்றா. தாங்கல சார். என் அரசியல் விமர்சனங்களைப் பார்த்து இந்த அரசியல்வாதிங்க எனக்கு மிரட்டல் கொடுக்கற மாதிரி ஆயிடுச்சு சார்’ என்றான் அவன்.

‘அப்படியா’ என்றேன் நான்.

‘ஆமாங்க சார். நேரா பயமுறுத்த மாட்டாங்க. இலேசாத்தான் மிரட்டல் வரும். தெரிஞ்சவங்க மாதிரி வந்து, இப்படி எல்லாம் பேசுனா அவ்வளவுதான்னு அன்பா மிரட்டுவாங்க சார்’ என்றான் அவன்.

அவன் கொஞ்சம் கற்பனை செய்துகொள்கிறான் என்று எனக்குப் புரிந்தது.

‘சார், அது மட்டும் இல்ல சார். ஒரு நாள் என் கனவுல ஒரு அரசியல்வாதி வந்து என் காலை வெட்டிட்டாரு சார்’ என்றான் அவன்.

நான் சிரித்துவிட்டேன்.

‘சார். என் வாழ்க்கைப் பிரச்சனை பத்திப் பேசறேன். நீங்க என்னடான்னா, சிரிக்கறீங்க’ என்றான் அவன். 

‘இல்லை சாரி, சொல்லுங்க’ என்றேன் நான்.

ஒரு இருள் சாலை வந்துவிட்டது. வாகனப் போக்குவரத்தும் குறைந்துவிட்டது. ஓரிரு இரு சக்கர வாகனங்கள் மட்டும் போய்க்கொண்டிருந்தன. ஏதோ கிராமத்திற்கு வந்துவிட்டது போல இருந்தது. அடர்ந்த மக்கள் தொகையும், வாகன நெரிசலும் இருந்த நகரப் பகுதிக்கு அருகே இப்படி ஒரு கிராமத்தன்மை கொண்ட இடம் இருந்தது ஆச்சர்யம் அளித்தது.

‘சார். என் மனைவியும் என்னை மிரட்டத் தொடங்கிட்டா சார்’ என்றான் அவன்.

‘அது எப்படி. நீங்க சொன்ன புரிஞ்சுக்க மாட்டாங்களா?’ என்றேன் நான்.

’இல்லை சார். அரசியல்வாதிங்க சில பேர் கிட்ட போட்டுக் கொடுப்பவளே இவள்தான் சார்’ என்றான் அவன்.

’சே’ என்றேன் நான். கொஞ்சம் பாவனை கூடிவிட்டது போல் இருந்தது.

’சார். கேலி பண்றீங்களா’ என்று மிகுந்த வருத்தத்துடன் கேட்டான் அவன்.

’இல்லைங்க சங்கர். நான் வருத்தமாத்தான் சொன்னேன்’ என்றேன் நான்.

‘அதனால்தான் எனக்கு ரொம்ப மன உளைச்சல் சார். என் மன நிம்மதிக்காகத்தான் நான் அந்த ஆலோசனை நிலையத்திற்கு வர்றேன் சார்’ என்றான் அவன்.

‘என்ன சொன்னாங்க?’ என்றேன் நான்.

அவன் அமைதியாக இருந்தான். அதற்குள் ஒரு விளையாட்டு மைதானம் அருகே நாங்கள் வந்துவிட்டிருந்தோம்.

அங்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். உயர்ந்த கோபுர விளக்குகளிலிருந்து ஒளி வெள்ளம் பாய்ந்தபடி இருந்தது. சிறுவர்களின் உற்சாகம் மயக்கும் வகையில் இருந்தது. அப்போதும் லட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். என் காதில் அதிகமாக விழவில்லை.

‘சார் எனக்கு மன அழுத்தம் தீருமா?’ என்றான் லட்டு.

‘தீரும்’ என்று நான் கூறினேன். தூரத்தில் ஒரு சிறுவன் அடித்த பந்து சிக்சரை எட்டுமா என்பதிலேயே என் கவனம் இருந்தது.

‘என் மனைவியைக் கொன்றுவிடுவேனோ என்று பயமாக இருக்கு’ என்றான் அவன்.

‘கொல்ல மாட்டீங்க’ என்றேன் நான். அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்து காட்ச் ஆகிவிட்டது. நான் உரக்க, ‘அவுட்’ என்று கத்திவிட்டேன்.

‘அவுட்டா சார்’ என்றான் லட்டு.

’ஆம்’ என்றேன் நான்.

‘சார் எனக்கு வயிறு வலிக்குது. டாய்லெட் போகணும்’ என்றான் அவன். முகத்தில் பதற்றம். கழுத்தில் வியர்வை வழிந்தது அவனுக்கு. ரொம்பவும் அவசரம் என்று புரிந்தது.

பக்கத்தில் எங்கு பொதுக் கழிவறை இருந்தது என்று தெரியவில்லை. அருகில் மாநகராட்சி கழிவறை ஏதாவது இருக்கும் என்று தோன்றியது. அவனை அழைத்துக்கொண்டு நானும் தேடினேன். அவன் மிகுந்த பதற்றத்தில் இருந்தான். ஒரு கை அவனுடைய வயிற்றைப் பிடித்தபடியே இருந்தது. அவன் முகம் கழுத்திலிருந்து கீழே தொங்குவது போல் மாறிவிட்டது. அவனால் அடக்க முடியவில்லை. தொலைவில் ஒரு இடிந்த கட்டிடம் போல் தெரிந்தது. வேகமாக அங்கு நடந்து சென்றபோது அது ஒரு கழிவறை என்று புரிந்தது. அவன் உடனே உள்ளே சென்று பார்த்தான். 

‘ஐயோ தண்ணீ வரலை’ என்று வேகமாக அவன் வெளியே வந்தான். அந்த தெரு நீண்டுகொண்டே போனது. 

‘ஏதாவது ஒரு ஹோட்டலுக்குப் போயிடலாம்’ என்றேன் நான்.

‘ம், சரிங்க சார்’ என்றான் அவன்.

வெகு தூரம் நடக்க வேண்டியிருந்தது. தொலைவில் சாலைகள் மின்னுவது தெரிந்தது. அங்கு சென்றுவிட்டால் ஏதோ ஒரு உணவகம் அகப்படும். லட்டுவும் ஆசுவாசப்படுத்திக்கொள்வான்.

நடக்க நடக்க அந்த சாலை நீண்டுகொண்டே போனது. அவனுக்கு வயிற்று வலி அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. அவன் முகத்தில் துயர ரேகைகள் வளர்ந்து வந்தன. அவன் நேரடியாக என்னிடம் கேட்டான்.

‘நான் இந்த தெருவிலேயே போய்விடட்டுமா?’ 

’அடி பின்னிடுவாங்க. அவ்வளவுதான். ஓட ஓட விரட்டி அடிப்பாங்க’ என்றேன் நான்.

‘என்னால தாங்க முடியல’ என்றான் அவன்.

‘கொஞ்சம் தாங்கிக்கங்க’ என்றேன் நான்.

அவன் அமைதியாக வந்தான்.

நான் பேச்சை மாற்ற நினைத்தேன். 

‘எந்த அரசியல்வாதியை இனி திட்டுவதாக உத்தேசம்’ என்றேன் நான்.

அவன் உற்சாகம் அடைந்தான். பேசினால் போதும் என்று உணர்ந்தவனாக அவன் ஆனான். அவனுடைய வயிற்று வலி மறந்துவிட்டவன் போல அவன் மாறினான்.

‘யார் அடுத்த முதல்வர்னு சொல்லிக்கிறாங்களோ, அவங்க அத்தனை பேரும் என்கிட்ட திட்டு வாங்குவாங்க சார்’ என்றான் அவன்.

‘ஏனாம்’ என்றேன் நான்.

அவன் பாட்டுக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கினான். முதலமைச்சர் ஆக நினைப்பவர்களுக்கு அடிப்படை கொள்கை இல்லை, மக்கள் நலன் சார்ந்த நோக்கம் இல்லை, சமூகப் பொறுப்பு இல்லை என்று அவன் பேசிக்கொண்டே போனான். சாலையும் நீண்டுகொண்டே போனது. போகிற போக்கில் அவன் கழிவறைக்குப் போக வேண்டும் என்பதையே மறந்துவிட்டிருந்தான்.

ஒரு நாள் அவன் வீட்டில் கழிவறையில் அமர்ந்திருந்தபோதுதான் அந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது என்று அவன் அதிர்ந்து கூறினான். அப்போது நாங்கள் ஒரு தெரு விளக்கின் கீழே நின்றுகொண்டிருந்தோம். அவனுடைய தலை மீது ஒளி பாய்ந்து அவன் ஒரு அறிஞன் போலத் தோன்றினான். இத்தனை அறிவொளி மிக்க ஒருவனை வெறும் கழிவு நீக்குபவன் போலப் பார்த்துவிட்டேனே என்று நான் நினைத்துக்கொண்டேன். 

அன்று அவனுடைய வீட்டுக் கதவு தட்டப்பட்டது. இரண்டு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவன் கருப்பு நிறப் பேண்டும் வெள்ளை நிறச் சட்டையும் அணிந்திருந்தான். மற்றவன் நீல நிற ஜீன்ஸும், பழுப்பு நிற சட்டையும் அணிந்திருந்தான். இருவரும் உயர்ந்து கனத்திருந்தார்கள். கதவு திறந்த லட்டுவின் கண்களை அவர்கள் விடாமல் பார்த்தார்கள். அவனும் பார்த்தான். அவனை அவர்கள் தாக்கிவிடுவார்கள் போல இருந்தது. வயிற்றிலிருந்து முழுக்கக் கழிவு நீங்கியிருக்கவில்லை. அவனுக்கு வயிறு வலித்தது. அவர்கள் ஏதாவது கூறினால் அவன் வாசலிலேயே கழிவு நீக்கிவிடுவது போலத்தான் அப்போது இருந்தான். வந்தவர்கள் அதிகம் பேசவில்லை.

அவன் உற்றுப் பார்க்க முடியாமல் கொஞ்சம் பார்வையை விலக்கிக்கொண்டான். அவர்களில் ஒருவன் பேசினான்.

‘என்னா, யூட்யூப் எல்லாம் பலமா இருக்கு?’ என்றான் அவன்.

‘ம்’ என்று மட்டும் சொல்லி வைத்தான் லட்டு.

‘பாத்து, பல்லு விழுந்துடப் போவது’ என்று சொல்லிவிட்டு மற்றவன் சிரித்தான்.

லட்டு சிரிக்க முடியவில்லை.

அவர்கள் சிரித்தபடியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் ஏறிப் பறந்துபோனார்கள்.

அப்போது தொடங்கிய நடுக்கம்தான். அவனைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. இனி அவன் எந்த வீடியோவும் போடக் கூடாது என்று அவனுடைய மனைவி உத்தரவு போட்டுவிட்டாள். அவளுக்குத் தெரியாமல் அவன் ஏதோ ஒரு ஐடியில் வீடியோ போட்டாலும் அவளுக்குத் தெரிந்துவிடுகிறது. அவனை மிரட்ட அவள்தான் ஆட்களை வீட்டுக்கு அனுப்புகிறாள் என்று அவன் நினைத்துக்கொண்டான். அவளுடைய இம்சை தாங்காமல் அவளைக் கொன்றுவிடலாம் என்றுகூட அவன் நினைக்கத் தொடங்கிவிட்டான். ஆனால் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் தீர்வு காண வேண்டும் என்றுதான் அவன் உளவியல் ஆலோசனைக்கு வந்திருந்தான். வந்த இடத்தில் அவன் என்னைச் சந்தித்துவிட்டான். 

இனி அரசியல் விமர்சனங்கள் செய்தால் மிரட்டல் நிச்சயம் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. அப்படி இல்லை என்று நான் சொன்னாலும் அவன் நம்பும் நிலையில் இல்லை. அவனுக்கு அரசியல் விமர்சனம் செய்யும் விருப்பம் இல்லை என்று நான் உணர்ந்தேன். அதை நிறுத்திக்கொள்ள அவனுக்கு ஒரு சாக்கு வேண்டியதாக இருந்தது. அதற்காக அவன் இப்படி உளவியல் ஆலோசனை என்றெல்லாம் அலைகிறான் என்று நான் நினைத்துக்கொண்டேன். அவன் உள்ளூரச் சிரித்துக்கொள்வதை நான் கவனித்தேன். அவனும் அதைப் பதிவு செய்துகொண்டான். இனி அரசியல் விமர்சனங்களை அவன் நிறுத்திக்கொள்வான் என்றுதான் தோன்றியது.

’அதுதான் இல்லை’ என்றான் அவன்.

அப்போது ஒரு பைக் வேகமாகச் சாலையில் வந்தது. ஒதுங்கி இடம் கொடுக்கலாம் என்று நினைத்தால் அந்த பைக் எங்கள் அருகில்தான் வந்து நின்றது.

என்னைப் பார்த்ததும் பைக்கில் வந்தவர்கள் அடையாளம் கண்டுகொண்டு ஏதோ கொஞ்சம் தயங்கினார்கள். ஆனால் அவர்கள் லட்டுவைப் பார்த்த விதம் அபாயகரமானதாக இருந்தது.

ஒருவன் பைக்கிலிருந்து இறங்கி லட்டு அருகே சென்றான். லட்டு கண்களில் கிலேசம் படர அவனைப் பார்த்தான். 

’நீதான் சங்கரா?’ என்றான் அவன்.

‘ஆமாங்கண்ணா?’ என்றான் லட்டு.

‘என்னடா லோமாங்கண்ணா’ என்று அவன் லட்டுவை ஒரு அறை விட முயற்சித்தான்.

‘அண்ணா. இல்லைங்கண்ணா’ என்று லட்டு அழுதுவிட்டான். அவன் சிறு வயதில் ஒரு முறை அழுததுதான் என் நினைவுக்கு வந்தது.

‘கொன்னுடுவேன்டா’ என்றான் லட்டுவை அடிக்க வந்தவன்.

‘இல்லைங்கண்ணா, இல்லைங்கண்ணா. இனிமே என் யூட்யூப் சேனல்ல யாரையும் திட்டிப் பேச மாட்டேன் ணா’ என்றான் லட்டு.

‘இன்னாது. யூட்யூப் சேனலா? அது இன்னாது? டேய் ரூட்டை மாத்தறியா? என்று அடிக்க வந்தவன் மீண்டும் பாய்ந்தான்.

லட்டு வெடவெடத்துப் போனான். அவனுடைய கை கால்கள் நடுங்கின.

‘ஆமாங்கண்ணா. யூட்யூப் சேனல்ல எந்தக் கட்சியையும் இனி திட்ட மாட்டேன் ணா’ என்றான் லட்டு மிகவும் பவ்யமாக.

‘டேய். நீ யாரை திட்டினா என்ன, திட்டாட்டி என்ன? எனக்கு என்ன மயிராப் போவது’ என்று வந்தவன் மீண்டும் சீறினான்.

’பின்னே எதுக்குங்கு கோபம்?’ என்றான் லட்டு.

‘டேய். நேத்தைக்கு எங்க வீட்டு முன்னாலே ஏண்டா வந்து ரெண்டுக்கு போன?’ என்றான் அடிக்க வந்தவன்.

‘இல்லைங்க’ என்றான் லட்டு.

‘இனிமே இப்படி ஏதாவது பண்ண. கொன்னுடுவேன் பாத்துக்க?’ என்றான் அடிக்க வந்தவன்.

லட்டு மிகவும் அமைதியாக நின்றான். 

வந்தவர்கள் மீண்டும் படுவேகமாக பைக்கில் பறந்தார்கள்.

‘இவங்கதான் உங்கள மிரட்டுனவங்களா லட்டு?’ என்றேன் நான்.

‘லட்டு. அது என் சின்ன வயசுப் பேரு. அதை வச்சுக் கூப்பிடறீங்க?’ என்றான் லட்டு.

’லட்டு, லட்டுதானே’ என்றேன் நான்.

‘ஆமா. இப்போ வயிறு ரொம்ப வலிக்குது. என்ன செய்ய?’ என்றான் லட்டு.

’கொஞ்ச தூரத்துல ஒரு ஹோட்டல் வந்துடும். போகலாம்’ என்றேன் நான்.

’முடியாது’ என்று அவன் உறுதியாகக் கூறினான்.

அந்த இடம் அவ்வளவாக இருட்டாக இருக்கவில்லை. ஒரு நவீன குப்பைத்தொட்டி அங்கு இருந்தது. அதில் ‘மட்கும் குப்பை,’ ‘மட்காத குப்பை’ என்று எழுதி இருந்தது. லட்டு அந்த குப்பைத்தொட்டி பின்னால் சென்று மறைந்து அமர்ந்துவிட்டான். எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. 

நான் மெதுவாக நடந்து சென்றேன். முக்கியச் சாலை வந்துவிட்டது. வாகனங்கள் இரைச்சலுடன் வேகமாக நகர்ந்தன. சின்னச் சின்னதாய் உணவகங்களும் அங்கு இருந்தன. கொஞ்சம் பொறுத்திருந்தால் அதில் ஒன்றை லட்டு பயன்படுத்தியிருக்கலாம். அவனுடைய தொடக்க காலப் பழக்கம் இப்போதும் போயிருக்கவில்லை. அவன் வேகமாக வந்து என் பின்னால் மெதுவாக நடந்தான். நான் அவனிடம் எதுவும் பேச விரும்பவில்லை.

‘கழுவுனீங்கா?’ என்று மட்டும் கேட்டேன். 

‘ம் ஆமா. அங்கேயே ஒரு பைப் இருந்தது’ என்று அவன் மிகுந்த பெருமையுடன் கூறினான்.

மீண்டும் எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. அவன் மீது மல நாற்றம் வீசியது. அவனிடம் நான் எதுவும் பேசவில்லை. நடையாகவே மீண்டும் நாங்கள் சந்தித்த இடத்திற்கே வந்துவிட்டோம். அந்த வளாகம் சற்று இருட்டாக இருந்தது. நேரம் போனது தெரியாமல் லட்டுவுடன் நான் பயணப்பட்டிருந்தேன். அந்த வளாகத்தில் இருந்த உளவியல் ஆலோசனை மையத்தில் இன்னும் கூட்டம் இருந்தது. எங்கிருந்தோ வேகமாக வந்த பெண் லட்டுவின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தாள். 

‘என்னா, எங்கே சுத்தப் போயிட்டே’ என்று அவள் கோபமாக சத்தம் போட்டாள்.

‘இல்லை. சாரோடப் பேசிட்டு இருந்தேன். அரசியல் விமர்சனம் செய்தால் மிரட்டல் வருதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்’ என்றான் அவன் மிகவும் சாந்தமாக.

அந்தக் கணத்தின் நெருக்கடி உணர்ந்து அந்தப் பெண் சற்று அமைதியாக முயன்றாள். அவள் லட்டுவின் மனைவி என்று புரிந்தது.

‘சாரி சார்’ என்று அவள் என் கண்களைச் சந்திக்காமல் சொன்னாள். 

லட்டு ஒரு திருடன் போல முழித்துக்கொண்டே இருந்தான். ஒரு முறை அவன் உரக்கமாக ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி, ‘ஒழிக ஒழிக’ என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான்.

‘பிறகு ஒழிக்கலாம். நீ வா. உனக்குத்தான் அடுத்து டாக்டர் மீட்டிங்’ என்றாள் அந்தப் பெண்.

’ஒன்னு கக்கூஸ் போறது, இல்லாட்டி யாரையாவது பிடிச்சு திட்டறது’ என்று கொஞ்சம் அழாத குறையாக அந்தப் பெண் பொதுவாகக் கூறினாள். அது எனக்கான பேச்சாகத்தான் இருந்தது. 

நான் அவளையே கவனிப்பதைப் பார்த்துவிட்டு அவள் நேரடியாக என்னைப் பார்த்தே பேசினாள்.

‘சும்மா, அரசியல் அரசியல்னு அலையறாருங்க. கண்டவனைத் திட்டிப்புட்டு வீணா வீட்டுக்கு பிரச்சனையாக கொண்டு வராறு. யாராவது வந்து மிரட்டினா உடனே கக்கூஸுக்குப் போயிடறாரு’ என்று அவள் புகாராகச் சொல்லி முடித்தாள்.

நான் எதுவும் பேசாமல் அவளையே கவனித்தேன்.

‘இவரை இப்போ சைக்காலிஜிஸ்ட் கிட்ட அழைச்சுட்டு வந்திருக்கேன். ஒன்னு இந்த திட்டற புத்திய நிறுத்தணும். இல்லாட்டி கக்கூஸ் போறதை நிறுத்தணும்’ என்று சொல்லிவிட்டு அவள் கொஞ்சம் சிரித்தாள்.

அப்போது அவன் வேகமாகச் சொன்னான்.

‘ஏய் போதும் நிறுத்து. இங்கே பக்கத்துல எங்கே கக்கூஸ் இருக்கு. அவசரமா வருது’ என்று அவன் பலமாகச் சொன்னான்.

நான் வாய் விட்டுச் சிரித்துவிட்டேன்.

‘சார். அரசியல்வாதிகளைத் திட்டினா அடிப்பாங்களா சார்’ என்று அவன் எதுவும் தெரியாதவன் போல என்னிடம் கேட்டான்.

‘இல்லை’ என்று நான் சொன்னேன்.

‘தூ’ என்றாள் அவனுடைய மனைவி.

‘என்ன பெயரில் நீங்கள் அரசியல் விமர்சனம் செய்கிறீர்கள்’ என்று அவனிடம் நான் கேட்டேன்.

‘கசக்கும் லட்டு’ என்றான் அவன். 

***

நிஜந்தன் எழுதிய முதல் சிறுகதை 1984ல் ‘கணையாழி’ இதழில் வெளியானது. 1985ல் தி.ஜா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற அவரது படைப்பு வெளியானது. 1990களின் தொடக்கத்தில் நாடகங்கள் எழுதி, அவற்றை நிஜந்தன் மேடையேற்றியிருக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு 12 நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு நாடகத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு வெளியாகி இருக்கின்றன. நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலுக்கு 2014ல் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது. 37 ஆண்டு காலம் தொலைக்காட்சி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக, தலைமை செய்தி ஆசிரியராக, விவாத நெறியாளராக நிஜந்தன் பணியாற்றியிருக்கிறார். தற்போது வலைக்காட்சிகளில் நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். திரைப்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நிஜந்தன் நடித்து வருகிறார். மின்னஞ்சல்: knijanthan@gmail.com

ஸ்காச்சில் கரையும் ஐஸ் க்யூப்ஸ்

1

சாருக் செல்வராஜ்

வன் இப்படித்தான் கூறினான்: “மரணத்திற்கு நான் தான் காரணம்.”

நகரத்தின் மத்தியில் வளர்ந்து வரும் கட்டிடங்களுக்கு முன்னதாக பெரும் கட்டடமாக அந்த அலுவலகம் இருக்கும். நான் எப்போதும் ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அலுவலகம் செல்வேன். வீட்டில் இருந்து அதிகபட்சம் முப்பது நிமிடங்கள் ஆகும். ஆனாலும், “சக பணியாளர்கள்” என சொல்லப்படும் யாருக்கும் என் வீடு எங்கு இருக்குமெனத் தெரியாது.

வீட்டை விட்டு வெளியேறி துல்லியமாக இன்றோடு பதினேழு வருடங்கள் ஆகின்றன. ஒன்பது வருடங்கள் தனியே வசித்தேன். பின் மீண்டும் நான்கு வருடங்களாக தனியாகவே வசித்து வருகிறேன். நிறைய சலிப்பூட்டிய வாழ்க்கையை நிறைய கேள்விகளுக்குள் வைத்ததில் எதுவும் மீதமில்லை. இப்படித்தான் பெரும்பாலான கேள்விகள் பதிலின்றி அர்த்தமற்ற சுழலில் இருக்கின்றன. நகரத்தின் இடுக்குகளிலும் சுழலும் சக்கரங்களிலும் சிக்கி அவை மறுகணமே காணாமல் போகின்றன. சில நேரங்களில் நான் ஏன் வெளியேறினேன் என்பதும் கூட மறந்துவிட்ட நாட்கள் உண்டு.

எனது அலுவலகத்தில் எப்போதும் வலது பக்கம் இருக்கும் லிப்ட் இல்லாததால், இதுவரை செல்லாத இடது பக்க லிப்டில் செல்ல முடிவு செய்தேன். பதினோறாவது தளத்தில் எனது அலுவலகம். லிப்ட் நேராக நான் அழுத்திய பதினோறாவது தளத்தை விட்டு, நான் கவனிக்காத நேரத்தில் மொட்டை மாடியில் நின்றது. இந்த நான்கு வருடங்களில் அன்றுதான் மொட்டை மாடிக்கு முதல் முறை சென்றேன். எந்த ஒரு ரம்மியமும் இன்றி காணப்பட்டது. அலுவலத்தில் உடன் பணியுரியும் சிலர் இளைப்பாருவதாக அடிக்கடி மாடிக்கு செல்வார்கள். என்னை வற்புறுத்துவதும் உண்டு. சிகரெட் பிடிக்க அதிகமாக எல்லோரும் இங்குதான் கூடுவார்கள். மீண்டும் பதினோராவது தளத்திற்கு செல்ல பொத்தானை அழுத்தினேன். அலுவலகத்திற்கு சென்று இருக்கைக்கு விரைந்தேன்.

உடைந்த கட்டிடங்கள், நிலைகுலைந்து போன நகரம், அலைக்கழியும் மக்கள், இரத்தம் படிந்த சுவர்கள், சிதறிக்கிடந்த உடல்கள், தண்ணீருக்கும் உணவுக்கும் செத்து மடிந்த குழந்தைகள் என இவற்றையே அன்று அரை நாள் முழுவதும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. எங்களின் துரதிஷ்டம் அன்று இங்கு ஒரு உயிர் பலி கூட நடக்கவில்லை. காலையில் இருந்து அலுவலகம் மந்தமாக இருந்தது. எல்லோரும் சோர்ந்து காணப்பட்டனர். பரபரப்பாக இருக்கும் அலுவலகம் அன்று மகிழ்ச்சி இல்லாது இருந்தது. 

ஃபீல்டில் இருக்கும் ஒவ்வொருவருக்காக அழைப்பு சென்றன. 

எல்லோரும் ஒரே பதில், “எந்த நாயும் சாகல சார், என்ன பண்ண?” 

“ஸ்டோரி கிடைச்சா உடனே அடிக்கிறேன்”, என எல்லோரும் சொல்லி வைத்தற்போல் பேசினார்கள்.

காலை 11 மணி போல் ஒரு அழைப்பு.

“சார் ஸ்கூல் வேன் ஆக்சிடென்ட். ஆனா ஸ்பாட் டெத் இல்ல. 3 குழந்தைங்க போக வாய்ப்பு உண்டு. இப்போதைக்கு ட்ரைவர் காலு மட்டும் போனதால அதையும் குழந்தைங்க வீடியோவும் அனுப்புறேன். ‘உடனே ஏர்ல விடுங்க ரத்தம் வலிய வலிய இருக்கும்’ என சொல்லி விட்டு கட் செய்தார் அந்த ரிப்போர்டர். அவர் இந்த சேனலுக்காக வேலை செய்பவர் அல்ல. சொல்ல போனால் இந்த சேனலுக்கென ரிப்போர்ட்டர்ஸ் கிடையாது. மத்த நிறுவனங்களின் ரிப்போர்டர்கள் எங்களுக்கே செய்தி அனுப்புவார்கள். கொலை, கொள்ளை, வெட்டு, விபத்துக்கென மட்டும் உலகில் தனித்துவமாக செயல்படும் நிறுவனம் எங்களுடையது. எங்களுக்கு யார் வேண்டுமெனாலும் செய்தி அளிக்களாம். செய்தியின் தன்மையைப் பொறுத்து பணம். உலகத்தில் எப்படி எங்கு சாவு வந்தாலும் அது எங்களுக்கான செய்தி. உடனடியாக அவர் அளித்த செய்தியை ப்ரேக்கிங் என ஒளிப்பரப்பானது. அனைவர் கண்களிலும் அன்றைய நாள் அப்போதுதான் புதிதாக தொடங்கிய மகிழ்ச்சி. அன்றைய நாள் தொடங்கியதென நிம்மதியுடன் அந்த செய்தியை ஒன்றன் பின் ஒன்றாக அப்டேட் செய்தபடியே இருந்தனர். அப்போதுதான் டீம் ஹெட் அலுவலத்தில் நுழைந்தார்.

 “எத்தன பேரு அவுட்?”

“இப்பவரைக்கும் யாருமே இல்ல.”

“சீரியஸ் கேஸ்ல மூனு குழந்தைங்க இருக்காங்க. போறதுக்கான வாய்ப்பு இருக்கு. டிரைவருக்கு மட்டும் இப்போதைக்கு கால் போயிட்டு, எல்லாம் லைவ் ரன் ஆகிட்டு இருக்கு எதும் மிஸ் ஆகல.” 

“குட் ஃபாலோ அப்” என சொல்லி விட்டு அவருடைய கேபின் சென்றார். 

வீட்டை விட்டு வெளியேறிய இத்தனை ஆண்டுகளில் இது எனக்கு ஐந்தாவது நகரம். ஒவ்வொன்றிலும் காலம் வேகமாகச் சுழல்வதை கவனிக்கத் தவறியதில்லை. இப்போது வசிக்கும் வீட்டின் உரிமையாளரின் முகம் கூட மறந்துவிட்டது. மாதாமாதம் அக்கவுண்டில் இருந்து பணம் அவருக்கு சென்று விடும் என்பதால், ஒன்று இரண்டு முறைக்கு மேல் அவரிடம் இருந்து அழைப்புகள் வந்ததில்லை. இரண்டு பெட்ரூம் கொண்ட நல்ல விசாலமான வீடு. தனியாக இருப்பதற்குத் தேவையான அனைத்தும் கொண்டிருந்தது. வீட்டில் இருந்து முப்பது நிமிடம் நடந்தால் ஒரு உணவகம். அங்கு உணவருந்த தினமும் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்து சென்று வருகிறேன். குளிர்ந்த காலத்தில் அவ்வழியே சரியான நடைபயிற்சி கொள்ளும் இடமாக இருக்கும். வழியில் எப்போதும் பூத்திடாத ஒரு மரம். அதன் கீழ் ஒரு இருக்கையும் இருக்கும். யாரும் அமரமாட்டார்கள் என்பதால், அது பெரும்பாலும் என்னைப்போலவே இருக்கும். கடந்து செல்லும் போது என்னை நானே வேடிக்கை பார்ப்பதாக உணர்வேன். எப்போதாவது சாலைகளில் பூக்கள் படிந்த காரினை பார்ப்பதுண்டு. மிகவும் அரிதாக, தாமாக உதிர்ந்த பூக்கள் இரவின் குளுமையில் காரின் மீது படிந்திருக்கும். அப்போதெல்லாம் நான் இந்த பூக்காத மரத்தையும், இருக்கையையும் நினைத்துக்கொள்வேன். அந்த வீதியில் பெரும்பாலான வீடுகள் விளக்கு எரிந்து மட்டுமே கண்டிருக்கிறேன். அங்கிருந்து மனித நடமாட்டம், அதன் அசைவுகள் என எதும் இருக்காது. அதிகம் அமைதியுடன் இருக்கும் வீதி வருடத்திற்கு ஒரு முறை மக்கள் கூட்டத்தில் வழியும். வீடுகள் சிதலமடையாது இருக்க காரணம் அதுதானே என நினைத்துக்கொள்வேன். கொஞ்சம் தூரம் செல்ல வீதியின் முடிவில் இரண்டு பெண்கள் ஒருவருவருக்கொருவர் தழுவிக்கொண்டிருந்தனர். சத்தங்கள் எழவில்லை. 

Generated image thumbnail

ஆண்டின் முடிவில் புத்தாண்டு ஆடை உடுத்தும் நகரம் இந்த வருடமும் அதற்குத் தயாராகியது. அந்த நாட்களில் வீதியெங்கும் விழாக்கோலம் நிறையும். வெவ்வேறு கலாச்சாரம் கொண்ட உடல்கள், ஆடைகள். அங்கு கிடைக்கும் புகழ்பெற்ற பியர் அருந்தக் கூட்டம் கூட்டமாக கூடுவதை நான்கு முறையும் பிரம்மிப்புடன் கண்டிருக்கிறேன். இந்த வருடம் அத்தனை பேர் கூடி ஒன்றாக பாட்டில் திறக்கும் ஓசை கேட்க ஆவலாக காத்திருந்தேன். அப்போதும் அந்த பூக்காத மரத்தின் இருக்கையில் என்னைத் தவிர யாரும் அமரப் போவதில்லை. நான் இந்த இரவு முழுவதும் அனைவரையும் வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருப்பேன். மனித உடல்களால் கட்டடங்கள் முளைத்து, அதில் இருந்து வெளியேற விரும்பத் தெரியாதவனாக நான் இருப்பேன். கொஞ்சம் பியர்கள் என் மீது தெளிக்கும். சில உடல்கள் கட்டியணைத்துவிட்டு செல்லும். ஏழு நாட்களுக்கு முன்னதாக விழா தொடங்கி விடும் என்பதால் நாளுக்கு நாள் அங்கு புதிய முகங்கள் தோன்றும். நான் அதன் தொடக்க புள்ளியில் இருந்து முற்று பெற்று காற்றில் கரையும் வரை பார்த்திருக்கிறேன். அந்த நாட்களில் அலுவலத்தில் தொடர் விடுமுறை எடுத்துவிடுவேன்.

ஒவ்வொரு இரவிலும் தேர்ச்சி பெற்றவன் போல் உறங்கி, மற்றொரு இரவில் தோல்வியுற்றவனாகப் படுக்கையில் உடலை கிடத்துகிறேன். முன் எப்போதும் இல்லாத தேவைகள் என்னை இந்த அறையின் இரவுகளை விடாப்படியாக கழிக்க வைக்கின்றன. வரும் வழியில் தழுவும் உடல்கள் இல்லை. அடர்ந்த பனி, உடலை இறுக்கியது. வீட்டை அடைந்து நட்சத்திரங்களை எண்ணுவதற்காக அறையின் ஜன்னல்களை திறந்தபடியே வைத்து உறங்குவேன். பின் அதிகாலை எழுந்து மூடிவிட்டு மீண்டும் படுக்கைக்கு சென்றுவிடுவேன். இதற்கிடையில் எப்போதும் வந்து போகும் ஒரு வயது முதிர்ந்த பூனை.

*

மனிதனாக உருமாறும் பூச்சியையும் பூனையையும் கொன்று தின்று வாழும், சூனியம் நிறைந்த கண்களை வாழ்வில் அப்போதுதான் பார்த்தேன். கூட்டத்தின் அத்தனைக் கண்களிலும் அவள் உருவம் பச்சைக்குத்தியது போலப் படிந்திருந்தது. அனைவரின் கண்களிலும் அவள் அவர்களின் ரசனையில் உறைந்திருந்தாள். அவள் அங்கு எல்லோரையும் வசீகரித்து வைத்திருந்தவள் போல இருந்தாள். அவள் கையில் இருந்த குடுவையில் ஒவ்வொருவராக சென்று விழுந்தனர். ஒரு ஒரு மிடறாக அவளை விழுங்குவதுபோல எல்லோரின் குரல் வளையமும் ஏறி இறங்கியது. அவளின் உடலின் உஷ்ணம் என்னை நெருங்குவதை நான் சிறிது நேரத்தில் தெரிந்துக்கொண்டேன். தூரத்தில் இருந்தவள் காற்றில் மிதந்து வந்து என் மடியில் படிய படரவேண்டும் என எண்ணினேன். பின்னால் இருந்து ரிக்கி என்னை உலுக்கினான். அவன் எவ்வளவு குடித்தாலும், போதை கண்களிலும் பேச்சிலும் தெரியாதது போல சமாளிக்கத் தெரிந்தவன். நிதானத்தில் இருக்கக் கூடிவன். நான் ஒன்னுமில்லை என்பதை போல தோள்களை சிமிட்டினேன். அவனிடமிருந்து கண்கள் அவளையே நோட்டமிட்டபடி இருந்தது. என் உடல் மேசை மீதிருந்த அவளின் குவளையில் ஏறி குதிப்பதை கண்டேன். கண்கள் உஷ்ணத்தில் உறுத்தியது. என் பள்ளித் தோழி என்று சொன்னது எனக்கு முதலில் விளங்காததால் ரிக்கியை பார்த்து என்ன என்று கேட்டேன்.

மதுமிதா என அவளைக் காட்டி என் பள்ளித் தோழி என கூறினான். அவனாக நம்பரை எனக்கு வாட்ஸ்அப் செய்தான். இத்தனை ஆண்டுகளில் அவனுக்கு இப்படியொரு தோழி இருப்பது தெரியாது. எங்கள் மேசையில் இருந்த இன்னோரு காலி இருக்கையில் அப்போது அவளாக வந்து அமர்ந்தாள். என்னை நானே அறிமுகம் செய்து கொண்டேன். மென்மை நிறைந்த கை அவளுடையது. அவள் பாதமும் கூட. என் உலகில் நானாக ஒருவரை அத்துமீறி நுழையும் வழிகளை அப்போதுதான் முதல் முறையாக ஏற்படுத்தினேன். அவளுக்காக சிவப்பு கம்பளம் விரிக்கவும் தயாராகிவிட்டேன் என அவள் உணர்ந்தது போல மெல்ல சிரித்து பேசத் தொடங்கினாள். அவள் முகம் என்னை வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்தது. நான் குடிப்பதைத் தவிர என்னை எப்படி மறைத்துக்கொள்வதென தெரியவில்லை. 

இரண்டு மாதங்கள் கழித்து அவனிடம் நான் கூறிய போது அவன் கேட்டான்: “இப்படியான ஒரு முட்டாள்தனத்தை யாரும் செய்யமாட்டார்கள், உனக்கு எப்படி இவ்வளவு துணிவு?” என் கண்களில் அவள் நிறைந்திருப்பதாக தெரிவித்தான். நான் சிரித்துக்கொண்டேன். உண்மையில் அவள் எல்லோர் கண்களிலும் நிறைந்திருக்க கூடியவள். 

விடுதிப் பணியாளரிடம் “ஒன் மோர் ஸ்காட்ச்”, என்றான். “முடிவு செய்துவிட்டாயா? அப்படித்தானே?”, என மீண்டும் கேள்வி எழுப்பி என் கண்களைப் பார்த்தான். நம்பர் கொடுத்தற்கு வருத்தப்படுவதா இல்லை சந்தோசப்படுவதா எனத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவன் கொடுக்காவிட்டாலும் அன்று நானாக அவளிடம் கேட்டு பெற்றிருப்பேன். அல்லது அதற்கான வழியைக் கண்டிபிடித்து அதில் சென்றிருப்பேன். 

பிறகு அனைத்திற்கும் பணம் செலுத்தி விட்டு வெளியேறும் போது, இறுதியாக அணைத்துகொண்டவன் திரும்பிப் பார்க்காமல் சென்றான். நான் என் அக உலகத்தில் முதல் முறையாக அனுமதித்தது அவனை மட்டும் தான்.

ரிக்கியை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். முற்றிலும் எல்லாவற்றிலும் தொடர்பறுந்து நிற்கிறேன். நான் அவள் வீட்டுக்கு இடம்பெயர்ந்த நாள் முதல் மூவரும் அவ்வப்போது ஒன்றாக மது அருந்துவோம். ரிக்கிக்கு அப்போது வெளிநாட்டில் இருந்து சில வாய்ப்புகள் தேடி வந்தன. எங்களை அதிகம் நேசித்தான். அவள் பிரிந்த பிறகு என்னுடனேயே தங்கினான். 

*

மணி 6 இருக்கும் அந்த நேரத்தில் நடுவே வெளிறியிருந்தது வானம். அவசரமாக எல்லோரும் கூடினார்கள். அன்று நகரம் முழுவதும் அதுவே முக்கிய செய்தி.

பூட்டிய வீட்டில் இருந்த சடலம் மூளை முழுவதும் அழுகியிருந்தது.

வாடகை செலுத்தாததால் வந்த வக்கீல் நோட்டீஸ், வீட்டின் வெளியே அதற்கென இருந்த பெட்டியில் மூன்று மாதங்களாக கிடந்தது. அதன் பின்னும் வாடகை போய் சேரவில்லை. எனது எண்ணிற்கு அழைத்தும் பயனில்லாததால், முதலில் அக்கம் பக்கத்தில் விசாரணை செய்தனர். அவர்கள் யாருக்கும் அவ்வளவாக என்னைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. எனக்கும் அவர்கள் அப்படித்தான். பின் நேராக என் அலுவலகத்திற்குச் சென்றபோது, நான் வேலைக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாக ஆவதாக தெரிவித்துவிட்டனர்.

இறுதியாக வீட்டின் கதவு போலீஸாரால் உடைக்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிற்கும் அவ்வளவு தூரமில்லை. ஆனாலும் கெட்ட வாசனையோ அல்லது வேறு எந்த அடையாளங்களும் யாருக்கும் தெரிவிக்காததால், ஒருவருடத்திற்கு மேலாக உடல் அழுகி உள்ளே புழுக்களுக்கு இறையாகியுள்ளது. இத்தனை வருடங்கள் சம்பாதித்த பணம் அக்கவுண்டில் இருந்ததால் வீட்டின் உரிமையாளர் தாமதமாக முடிவு எடுத்தார். அலுவலகத்தில் “Abscond” என மார்க் செய்திருக்கலாம்.

*

“அவள் சென்ற பிறகு தனிமைக்கு அஞ்சவில்லை. சில ஆண்டுகள் நெடிய உறக்கத்தில் இருந்ததாக அவன் எனக்குச் சொன்னான்.”

அப்போது கண்களில் அவள் நிறைந்திருப்பதை கண்டேன். குளிர்ந்த நீரில் முகம் கழுவியது போல, அவன் உடல் குளுமையாகக் காதலை உணர்த்தியிருந்தது. அதிகம் வெளி உலகத்தை தனது அருகில் அனுமதிக்காத ஒருவனால் உலகைக் கட்சிதமாக முடித்துக்கொள்ள முடியும் என சொல்வான்.

“விடுதலை” என்ற சொல்லுக்கு அர்த்தமற்ற உலகில் மனித உடல் பின்னப்பட்டு இருப்பதாக சொன்னவன், இறுதியாக இப்படித்தான் கூறினான் 

“என் மரணத்திற்கு நான் தான் காரணம்.”

நான் இருவருக்கும் சேர்த்து இரண்டு ஸ்காட்ச் சொன்னேன்’’. 

*

நாங்கள் எங்களுக்குள்ளாக பேசிக்கொள்வோம். இந்த விடியலுக்கு முன்னான வானத்தில் ஒரு உடல்மேல் இன்னொரு உடல் பரவிருக்கும். அதற்கு கடவுள் என பெயர் சூட்டும் முன் ஒருவரை ஒருவர் கொல்லத்துணிய வேண்டும் என. கண்களை மூடிக்கொண்டு என் மேல் இயங்கும் உடலை எனது புலன் உணர்வால் உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு விடியலுக்கு முன்னாலும் ஜன்னலை அடைக்க அவள் போகும் போது உடலால் வானம் நிறைந்து இருக்கும்.

***

சாருக் செல்வராஜ்: பணி நிமித்தமாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். முன்னதாக யாவரும் பதிப்பகத்தில் பணிபுரிந்தார். யாவரும், உயிர்மை மின்னிதழ்களில் கவிதை வெளிவந்துள்ளன. மின்னஞ்சல்: sharukhraj1999@gmail.com

உடைந்த குடை

0

கார்த்திக் பிரகாசம்

“பிறரை மலர்ந்த புன்னகையுடன் சந்திப்பதும் தர்மமேயாகும்”
நபிகள் நாயகம்

ந்த முதியவர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று கருதியிருக்கக் கூடும். பரவாயில்லை. அதற்காக அவரையொன்றும் குறை நினைக்கக் கூடாது. அதே வேளையில், இந்த பிரபஞ்சத்தின் அனைத்து மனித சரீரங்களுக்கும் சுய விருப்பத்தின் பொருட்டோ, முன் திட்டமிட்ட காரணத்தின், நம்பிக்கையின் பொருட்டோ அல்லது ஏதேனும் அடையாள வெளிப்பாட்டின் பொருட்டோ மண்ணில் தோன்றிய மறுகணத்திலேயே ஒரு குறிப்பிட்ட பெயரிட்டு அழைக்கும் வழமையின் மூலமாக அத்தசைப்பிண்டத்தை மட்டுமே “நான்” என்கிற உய்த்துணரப்பட்ட ஊகத்தின் நம்பிக்கை வெளிப்பாடாக முன்னிறுத்தும் பௌதீக கருதுகோளின்படி சொரூபமான இச்சரீரத்தின் புறவய தோற்றத்தை மட்டும் அந்த முதியவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அம்மாதிரியான எண்ணத்திற்குப் பொறுப்பாளியாக்கி விட்டு “நானான நான்” தப்பிக்க முடியாது. 

எனக்கு நன்றாகத் தெரியும். தசைப்பிண்டத்தால் ஆன நான் வேறு. உடைந்து உடைந்து ஒன்றுசேரும் கடல் அலையைப் போன்று அதே தசைப் பிண்டத்துக்குள் ஓய்வொழிச்சலின்றி சதா விழிப்புற்றிருக்கும் உறக்கம் தொலைத்த நானான நான் என்பது வேறு. நான் என்பது ஒன்றாகவும், அதற்கு நேர்மாறானதாய் முற்றிலும் வேறொன்றாகவும் வாய்த்திருக்கிறது நானான நான். மற்றவர்களைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது. சுய அபிமானத்தைப் பொதுமைப்படுத்தவும் நான் விரும்பவில்லை. என்னளவில் மட்டும் இதனை நிச்சயமாகச் சொல்கிறேன். ஏனென்றால் புறத்தில் மிகத் தெளிந்த புத்தியுடையவன் போல் காட்சியளிக்கும் நானோ, மனக்கிடக்கைக்குள் இரைந்து கிடக்கும் சிதறல் மூட்டைகளின் அலங்கோலமான கூடாரம். சஞ்சலம் என்னும் பழம்பெரும் கோட்டையின் சிதைந்த மதிற்சுவர்களுக்குள் குடியிருக்கிறது எனக்கு வாய்த்த நாடோடி மனம். இத்தனை ஆண்டுகளில் – பிறந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன – என்னைத் தவிர நானான நானை வேறாரும் கண்டதில்லை. பெற்றெடுத்தவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இல்லையென்றால் பாசம் என்கிற பெயரில் ஒட்டுதலற்ற வாழ்கையைப் பரிசாகத் திணித்ததோடு மட்டுமின்றி இப்படியொரு திருமணத்தையும் நடத்தி வைத்து வாழ்க்கையைப் பாழாக்கியிருக்க மாட்டார்கள். நானான நானைக் கண்ட சொற்பத்தின் சொற்பமான ஓரிருவரும் நேர்மையாக விலகிச் சென்றுவிட்டனர். இக்கணத்தில் அவர்களைப் பேரன்புடன் தழுவி முத்தமிட விரும்புகிறேன். மறுபக்கம், என்ன ஆறுதல் சொல்லிச் சமாளிக்க நினைத்தாலும், வாழ்வின் அந்தந்த பருவங்களில் தற்செயலாகச் சந்தித்து இயற்கையின் வசத்தால் சில பல காலம் ஒன்றாகப் பங்கீட்டுக் கொள்ள நேர்ந்த எவருக்குமே அது அவசியப்படவில்லையே என்கிற மனக்குறை அவ்வப்போது தோன்றும். ஆனால் அதற்குள் செல்ல வேண்டாம். இக்கதையின் சாராம்சத்திற்குச் சம்பந்தமில்லாத சமாச்சாரம் அது. நானுக்கும், நானான நானுக்கும் மத்தியில் கோரமாகச் சிதிலமடைந்து கிடக்கும் சீரான உடற்கட்டில் ஆங்காங்கே முளைத்திருக்கும் இலக்கற்ற முட்புதர்களைப் போன்ற ஆழமானதும், கூரானதுமான சிதறல்களின் கூடாரமே பகுமானமான இந்த தசைப்பிண்டம்.

நான் வேளச்சேரியில் வசித்து வருகிறேன். நவம்பர், டிசம்பர் மாதங்களில் பரபரப்பாய் பேசப்படும் ராம் நகரின் இரண்டாவது தெருவிலிருக்கும் குறுகலான அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்றாவது தளம். மொத்த வியாபாரம் செய்யும் மளிகைக் கடையொன்றில் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோல்டு வின்னர் அட்டைப் பெட்டிகளைப் போன்ற குடியிருப்புகளில் காற்றும், வெயிலும் உட்புகுந்து செல்லும் ஆடம்பர வசதிகளையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு பிரத்தியேக எண். அவரவர்களுக்கான எண்களுக்குள் ஒவ்வொருவரும் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏதாவதொரு எண்ணுக்குள் அடைந்து கிடப்பதுவே தன்னடையாளம் என்கிற காலனிய காலத்து குணாம்சத்திலிருந்து நாம் இன்னும் மீண்ட பாடில்லை. B27 என்னுடைய பெட்டியின் எண். பத்து கோழிக்குஞ்சுகளும், ஓர் ஒண்டிக்கட்டை ஆளும், விருந்தாளியாக அவ்வப்போது வந்து செல்லும் இரண்டு பூனைகளும் தாராளமாகத் தங்கக் கூடிய அளவிற்கு வசதி உடையது. என்னை இன்னமும் பணியில் அமர்த்தியிருக்கும் அந்த அலுவலகம் சிறுசேரியின் தென்கோடி மூலையில் அமைந்துள்ளது. வேளச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து நேராகச் சென்று பழைய மகாபலிபுரம் சாலையைப் பிடித்தால் ஒரே வழி. நூல் பிடித்தது போல் நேர் சாலை. ஒரு இடத்தில்கூட வளையவோ, திரும்பவோ வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் அந்தப் பக்கம் தலை வைக்கவே மாட்டேன். காரணம் என்ன பெரிய காரணம். ஆயிரமாயிரம் ஈ பண்ணைகளை ஒரே சமயத்தில் சாலையில் கொட்டி விட்டதைப் போன்று ஒட்டுமொத்த ஜனமும் சாலையில் மொய்த்துக் கொண்டிருக்கும். அவ்வளவு நெரிசல். அலுவலகத்தை அடைவதற்குள் ஒரு மணி பதினைந்து நிமிடங்களிருந்து ஒன்றரை மணி நேரம் வரை குடி முழுகிப் போகும். ஆதலால் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். ஆனால், சில சமயங்களில் ஏதேனுமொரு காரணத்திற்காக – சில சமயங்களில் இன்ன காரணம் என்று பிடிபடாமல் – காரணமே இல்லாமலும் – சில வேளைகளில் வெறுமனே – சுயத்தை அற்பத்தனமாகத் தண்டித்து உய்ய வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பம் பீறிடும். அன்றைக்கு மட்டும் பழைய மகாபலிபுரம் சாலை வழியாக அலுவலகத்திற்குச் செல்வேன். மற்ற நாட்களில் ஈச்சங்காடு சென்று அங்கிருந்து வெள்ளக்கல், மேடவாக்கம் வழியாக சித்தாலப்பாக்கத்தைப் பிடித்து காரணை, தாழம்பூர் வழியாகப் போய் விடுவேன். இந்தப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்குக் குறைச்சலாக இருக்கும். அதிலும் மேடவாக்கத்தைத் தாண்டிவிட்டால் போதும். அதன்பின் நிற்காமல் நகர்ந்தபடி இருக்கலாம். சிக்னல் அவஸ்தை என்ற ஒன்றே இருக்காது. நாற்பத்தைந்து நிமிடங்களில், அதிகபட்சம் ஐம்பது நிமிடங்களுக்குள் அலுவலகம் சென்று விடலாம்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்த வழியாகவே சென்று வருகிறேன். ஆனால் இத்தனை நாட்களாய் இல்லாமல் இன்றுதான் அந்த முதியவர் கண்ணில் பட்டார். முழுமையாக முடிக்கப் பெறாத மேடவாக்கம் மெட்ரோ மேம்பாலங்கள் ராட்சத பறவையாட்டம் கனத்து வானம் என்றவொன்று இருப்பதையே மறைத்துக் கொண்டு அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன. சாலையின் மத்தியிலிருந்து இருமருங்கிலும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை, வெயிலில் துளிர்த்த பாலத்தின் மீப்பெரும் ஒற்றைத் துளி வியர்வையாய், ஒரு பிரம்மாண்டமான செயற்கை நிழலானது அதன் அறுபட்ட வடிவத்திலேயே ஈரமின்றி படர்ந்திருந்தது. அந்நிழல் விரிந்திருந்த பாதையிலிருந்து சற்றும் விலகாமல் அதனையே பின்தொடர்ந்த வாக்கில் தலையில் அவிழும் கணத்திலிருந்த உருமா கட்டுடன் பழைய சைக்கிளொன்றை உருட்டியபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். புதிதாய் எழுதப் பழகும் குழந்தையின் கிறுக்கலைப் போன்று ஒருவித அருவுருவ நிலையில் எழுதப்பட்டிருந்த “உடைந்த குடைகள் சரி செய்து தரப்படும்” என்கிற அட்டை சைக்கிளின் பின்புறத்தில் மாட்டியிருந்தது. 

கண்ட மாத்திரத்தில் மனதிற்குள் பொங்கியெழுந்த ஆச்சரிய உணர்வைக் கருவிழிகளின் உறைவிலே உணர முடிந்தது. அவ்வுணர்வின் துல்லியத்தன்மை தணிந்த சில நொடிகளில் சிரிப்பாக இருந்தது. ஆனால், சிரிப்பு ஒரு எண்ணமாக மனதில் உதித்ததே தவிர இதழ்களில் அரும்பவில்லை. “பாவம்…! உலகம் சுழன்றிடும் வேகம் அறியாத அந்தக் காலத்து மனிதராக இருக்கிறார்”. மனதாழத்தில் சதா உடைபடக் காத்திருக்கும் பரிதாப உணர்வுக்குமிழி தன்னிச்சையாக உள்ளத்தின் மேற்பரப்பில் மிதந்து வந்தது. பின்னே, உடைந்தவற்றை ஒட்ட வைக்கும் பழக்கம் மனிதர்களிடம் இன்னமும் இருக்கிறதா.? இதோ இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கால் பகுதியில் நுகர்விய பண்பாட்டைப் பிரதானமாகச் செரித்து விழுங்கியிருக்கும் நவீன மனிதக் குலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எந்தவொன்றும் பழுதாகிப் போகும் பட்சத்தில் மறுயோசனையே இன்றி தூக்கி கிடாசிவிட்டு புதிதாய் வாங்குவது தானே வழக்கம்.! அதற்குத் தானே அப்பியாச படுத்தப்பட்டிருக்கிறது! அதுமட்டுமில்லாமல் மாடர்ன் மெட்ரோ வர்க்கத்துக்கு உடைந்ததை ஒட்ட வைக்கும் காரியம் என்பது வீணாக நேரத்தை விரயமாக்கும் பிற்போக்குத்தனத்தில் சேர்த்தியாகும் சங்கதியல்லவா! ஒருவேளை அப்படியே ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அளவில் சிறியதான, பண மதிப்பிலும் குறைச்சலான, எளிதில் வாங்க முடிந்த சல்லிசான குடையைப் போய் ரிப்பேர் செய்வதற்காக வாசலில் நின்று யார் காத்திருக்கப் போகிறார்கள். தொடர்ச்சியாக உற்பத்தியான கேள்விகளை அசைபோட்டவாறே நூறு மீட்டர் வரை தன்னியல்பாகக் கடந்துவிட்டேன். சக்கரத்தில் கல் இடறியது போலச் சட்டென மனதில் ஏதோவொன்று உறுத்த வண்டியை நிறுத்தித் திரும்பி பார்த்தேன். நான் கடக்கும் போது இருந்த அதே இடத்தில் நின்ற வாக்கிலேயே நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். உள்ளுக்குள்ளிருந்து நானான நானின் மௌனக் குரல், “செயற்கையானது, நிலையற்றது எனத் தெளிவாக அறிந்திருந்த போதிலும் அது தோற்றுவிக்கும் தற்கண ஆசுவாசத்தின் பொருட்டான உள சாந்திக்காகச் சற்றிற்கேனும் அவசியப்படுகிறது”.

சாலையின் இடது ஓரத்தில் உறைந்து கிடந்த ஒரு மங்கலான கணத்தின் நுட்பம் தளர்ந்த சமயத்தில் வண்டியைத் திருப்பினேன். அதே சமயம் அவரும் மெதுவாக முன்னோக்கி நகர ஆரம்பித்தார். ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு ஒருவித பதற்றத்துடன் அவரருகில் சென்றேன். உண்மையில் நான் மட்டுமே அவர் முன் நின்று கொண்டிருந்தேன். கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக நான் புழங்கிக் கொண்டிருக்கும் மொழி, அடர் இருள் திரண்டிருக்கும் பாதாள கிணற்றில் தனியாளாக மாட்டிக் கொண்டு வீடு சேரும் விதி அறியாமல் அல்லலுறும் அபலையையொத்த நிலையில் எங்கேயோ சிக்கிக் கொண்டுவிட்டது. வார்த்தையே வரவில்லை. என்னவோ புதிதாக மொழி பழகும் மழலையைப் போல் நா குழறியது. வறண்ட நிலத்தில் விரவும் விரிசலைப் போன்று அவரது முகத்தில் குழப்பம் நீண்டு வளர்ந்தது. என்ன நினைத்தாரோ சட்டென இரு கரங்களையும் பற்றிக் கொண்டு “உடம்பு சரியில்லையா மகனே” என்றார். திடுக்குற்ற உடல் ஒருகணம் அதிர்ந்தடங்கியது. மகனே எனக் கேட்டதும் அப்பாவின் ஞாபகம் மின்னலிட்டது. ஒருமுறைகூட அவர் என்னைக் கட்டியணைத்தது கிடையாது. என் தோள்களை, கரங்களை ஒருமுறையேனும் ஆதுரமாகப் பற்றி இருக்கிறாரா என்றால் நிச்சயமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் அப்பா என்கிற உணர்வின் தொடுகையையே உணராதவனாகத்தான் இத்தனை வருடம் வளர்ந்து தொலைத்திருக்கிறேன். அவரின் எந்தவொரு இயல்பையும் பிரதியெடுத்தவனாக இருக்கவில்லை. ஒருபோதும் அப்படி இருக்க விரும்பவில்லை என்பதே நானும் நானான நானும் சங்கமிக்கும் முக்கியமான புள்ளி. கடைசி வரைக்கும் அவர் அப்பாவாக இருந்தார். நான் வெறுமனே மகனாக மட்டும் இருந்தேன். எல்லாமே இயந்திரத்தனமான சங்கதிகள். ஆனால், இந்த முதிய முகம் அறிமுகமில்லாத புதியவன் என்கிற தயக்கமோ, பதற்றத்தின் சலசலப்போ ஏதுமின்றி ஒரு மகோன்னத புன்னகையைப் பரிசாகத் தந்தது. இதுநாள் வரையில் கண்டிராத மிகவும் அபூர்வமான புன்னகை அது. மெய்சிலிர்த்து நின்றேன். ஒட்டு மொத்த கசடுகளும் ஒரு புண்ணியத் துளியில் அகன்றதைப் போன்று இயல்புக்கு மாறாய் லேசாகி மருவியது அகம். அத்தருணத்தில் மானுடத்தின் அத்துணைச் சங்கடங்களையும், அசுத்தங்களையும் தீர்க்கும் வல்லமை நிறைந்த ஓர் ஆன்மாவின் ஒளிக் கீற்றாக அந்தப் புன்னகை வெளிப்பட்டது.

முதுகில் மாட்டியிருக்கும் பையை ஒருமுறை நோட்டமிட்டார். பின்பு பேச்சற்று ஸ்தம்பித்துப் போய் நிற்கும் என்னைக் கனிவாகப் பார்த்தார். அந்த பார்வையின் மொழி, “உடைந்த குடை எங்கே? கொடு? சரிசெய்து தருகிறேன்” என்கிற அர்த்தம் பொதிந்த தொனியில் ஒளிர்ந்தது.

மோவாயை வெளியே தள்ளி உடலிலிருந்து முகத்தை மட்டும் தனியாக முன்னே நீட்டினேன்.

அதிர்ச்சியில் திகைத்த முதியவரின் கருவிழிகளில் குழப்பம் உருண்டது.

“பன்னெடுங்காலத்திற்கு முன்னர் உடைந்து போன எனக்குச் சொந்தமான சிரிப்பொன்று முகத்தில் சிதறிக் கிடக்கிறது. சரி செய்து கொடுங்கள்.” இதுதான் சந்தர்ப்பமெனப் பனிக்குடத்தை உடைத்துக் கொண்டு வெளியேற எத்தனிக்கும் சிசுவைப் போல உள்ளுக்குள்ளிருக்கும் நானான நான் சமயோசிதமாக “நானை”க் கருவியாக்கிக் கொண்டது. 

“பன்னெடுங் காலமா?” புருவத்தை உயர்த்தினார்.

“ஆமாம்” தயக்கமின்றி சொன்னேன்.

முதியவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆதலால் சிறிது நேரம் கழித்து நானே தொடர்ந்தேன். “சரி விடுங்கள். என்னைக் காலங்களுக்கு அப்பாற்பட்டவனாகப் பாவித்து கொள்வது எனது தனிப்பட்ட சுபாவம். இல்லை. மனோவியாதி. ஆனால் அந்தச் சிரிப்பு எனக்குச் சொந்தமானது. அதிலொன்றும் மாற்றமில்லை. உங்களால் நம்ப முடியாவிட்டாலும் கூட.” என சொல்லிக் கொண்டிருக்கும் போது நானான நான் கவனித்தேன். அம்முதிய முகத்தில் அந்த புன்னகை துளியும் மறையவில்லை. வற்றாத கருணை நதியைப் போலப் பாய்ந்தோடியது.

“உனக்குச் சொந்தமானது என்று எப்படிச் சொல்கிறாய்” வாழ்ந்து தீர்த்த மகோன்னத நிதானம். குழப்பம் உண்டாக்கியிருந்த ஓரிரு சலன ரேகைகள் தற்சமயம் அவரது முகத்திலிருந்து அகன்றிருந்தன. தடுமாற்றமின்றி கேட்டார். அக்குரலின் தன்மையானது குடையை விரிக்கும் கணத்தில் ஒரு சில நொடிகள் உரசி முத்தமிட்டுக் கொள்ளும் ஆரக்கால் கம்பிகளின் மென்மையான கீறலோசையை ஒத்திருந்தது.

“இழந்தவனுக்குத் தெரியாதா தனது உடைமை எதுவென்று?” சீண்டப்பட்ட கோப ஆவேசத்தில் சட்டென கேட்டுவிட்டு நானான நான் தொடர்ந்தேன், “சுய புராணம் பாடுகிறேன் என்று நினைத்து கொள்ள வேண்டாம். உங்களுக்கு நம்பகதன்மை ஏற்பட வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன். முன்பொரு காலத்தில் நான் மகிழ்ச்சியை உற்பத்திச் செய்பவனாக இருந்தேன். அன்று என்னுடன் இருந்த பல முகங்களும் என் இதழ்களில் மிளிர்ந்த புன்னகையைத்தான் பிரதியெடுத்து மற்றவர்களுக்குப் பரிசளித்து திரிந்தன ”.

“சரிதான்… ஆனால் நீ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் வெறுமனே உடைந்த குடைகளைச் சரி செய்யும் சாதாரணமானவன். இந்த உடைந்த புன்னகையைச் சரி செய்திடும் வித்தைகளில் எனக்கு அனுபவம் கிடையாது. அதுமட்டுமின்றி நானொன்றும் மெத்தப் படித்தவனும் அல்ல.” அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாக இந்தமுறை “நான்” முந்திக் கொண்டேன். “நானே கேட்க வேண்டுமென்று நினைத்தேன். இந்தக் காலத்தில் உடைந்த குடைகளை யார் மெனக்கெட்டு பத்திரப்படுத்தி அதைச் சரிசெய்ய வேறு காத்திருக்கப் போகிறார்கள்”.

எங்கே அவரின் தொழிலையும், நம்பிக்கையையும் இழிவுச் செய்வதாக நினைத்து விடுவாரோ என்கிற கடுமையில் “நானான நான்” உலைவுற்றேன். நான் மீது பயங்கரமான வெறுப்பு பீறிட்டது. ஆனால் அவரோ இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் சஞ்சலம் அடையும் பலவீனமான மனிதராக இருக்கவில்லை. 

எந்தப் புள்ளியில் நடக்க ஆரம்பித்தோம் என்பது ஓர்மையில் பதியவில்லை. பேசிக் கொண்டே சித்தாலப்பாக்கம் பிரிவு சாலைக்கு வந்திருந்தோம்.

“நான் குடைகளை நேசிக்கிறேன். தினமும் ஒரு குடை என் பசியை போக்கிவிடுகிறது. என் பசியையறிந்த குடை எனக்காக நித்தமும் எங்கோ காத்திருப்பதாக நம்புகிறேன். அது என்னை நோக்கி அழைக்கிறது. அசரிரீயின் குரலைப் பின்தொடர்வது போல தன்போக்கில் செல்கிறேன். ஒருநாளும் நான் பட்டினியில் காய்ந்த வயிற்றோடு வீடு திரும்பியதில்லை. மேலும், எனக்காகக் காத்திருக்கும் அந்தக் குடைகளைத் தேடியலைந்து கண்டுபிடிப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அது வெறுமனே வருமானமும், பசியும் சம்பந்தப்பட்ட காரியம் மட்டுமன்று.”

“ஒருவரின் பசிக்குப் போதும். உங்கள் குடும்பத்தினரின் வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள். இந்த வருமானம் எப்படிக் கட்டுப்படியாகும்” சராசரியான நானின் சராசரியான கேள்விக்கு மந்தகாசமாகப் புன்னகைத்தார். தலையைக் குனிந்து கொண்டேன்.

சிறு மௌனத்திற்குப் பின் கூறினார்.

“எனக்கு எழுபது வயதிற்கு மேலிருக்கும். சரியான வயது நினைவில் இல்லை. இருப்பினும் குடைகளைப் பற்றிய எல்லா சமாச்சாரங்களும் விரல் நுனியில் அத்துப்படியாக உள்ளது. எந்தவிதமான குடையாக இருந்தாலும் அதன் முறிவுகளை என்னால் ஆற்றுப்படுத்திவிட முடியும். ஆனால் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மழையோ, வெயிலோ குடைக்கு ஒரே நிறம். ஆனால், மனிதர்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை. ஆதலால், இப்போதெல்லாம் மனிதர்களைப் புரிந்து கொள்ள நான் முயல்வதே இல்லை” 

சற்று இடைவெளிவிட்டு நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தெறிந்தபடி, “சக துணையின் சிறு சிறு குறைபாடுகளையும் பூதாகரமாய் பொருட்படுத்தி, அதனைத் தம் கண்முன்னமே நேர் செய்து முடிக்க உள்ளூர விரும்பும் எந்தவொரு உறவும் நீண்ட காலத்திற்கு நீடிக்காது.” தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் கூறினார்.

சுய பிரக்ஞை பாதி அறுந்த நிலையில் தன்னிச்சையாக நானான நான் சொன்னேன்.

“குடையைச் சரி செய்வது போல அத்துணைச் சுலபமானதுமல்ல அது.”

ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.

சட்டென இருவருக்குமிடையே ஒரு கனத்த சூழல் அரங்கேறியது. மணி பன்னிரண்டை நெருங்கியிருந்தது. அலுவலகத்திலிருந்து மேலாளர் போன் செய்தார். ‘தவிர்க்க முடியாத சூழல் தாமதமாக வருவேன்’ என்று குறுஞ்செய்தி தட்டிவிட்டு போனைக் கட் செய்தேன். பிப்ரவரியின் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்தது. சூழலை இலகுவாக்குவதற்கு என்றில்லாமல் அந்நேரத்திற்குப் பட்டென மனதில் தோன்றியதை முணுமுணுத்தேன். அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை போலும். என்னவென்றார், 

“சுமை குறைவாக இருந்ததால்தான் போகும் பயணம் சுலபமாக இருக்கும்”. 

இந்த முறை சத்தமாகவே சொன்னேன்.

உருட்டிக் கொண்டிருந்த சைக்கிளைத் திடுக்கிட்டு நிறுத்தி என்னையே உற்று நோக்கினார்.

“என்ன” என்பது போல் புருவத்தை உயர்த்தினேன்.

“ஒன்றுமில்லை” என்று அவரும் அதைப் போலவே உதடுகளைப் பிதுக்கி தலையை ஆட்டினார். 

சில மீட்டர் தூரத்திற்கு எதுவும் பேசாமல் நடந்தோம். வியர்வையில் வெயிலின் உக்கிரமான மொழி உரைத்தது. காரணைச் செல்லும் மாநகர பேருந்தொன்று ஆயில் மில் வளைவில் பெருங்கூட்டத்தோடு நின்றிருந்தது. பயணச் சீட்டு வாங்கச் சொல்லி நடத்துநர் கத்தியது வெளியில் கேட்டது.

“இந்தப் பக்கம் ஏற்கனவே வந்திருக்கிறீர்களா.?” 

“இல்லை. இதுதான் முதல் முறை.” என்றார்.

சற்று சந்தேகமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் பொய் சொல்லவில்லை என்று நிச்சயமாகத் தோன்றியது. ஏனென்றால் இந்த வழியாகத்தான் இத்தனை வருடமாக அலுவலகத்திற்குப் போய் வருகிறேன். நானுமே இன்றுதானே இவரைப் பார்க்கிறேன். ஆகையால் அவர் சொல்வது கண்டிப்பாக உண்மையாகத்தான் இருக்கும்.

“இன்று இந்தப் பக்கம் வர வேண்டுமென்று ஏன் முடிவு செய்தீர்கள்?”

நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.

பதிமூன்று வருட அலுவலக பணியில் மொத்தமாகச் சேர்த்தாலும் இத்தனை கேள்விகளை எவர் ஒருத்தரிடமும் கேட்டதில்லை. அலுவல் சார்ந்து மட்டும்தான் என்று கிடையாது. பொதுவாகவே யாரிடமும் அதுவும் புதிதாய் சந்திக்க நேர்ந்த முன்பின் அறிமுகமில்லாத எந்தவொரு அந்நிய நபரிடமும் வழக்கமான அந்த சம்பிரதாய வார்த்தைகளைத் தாண்டி வேறெதைப் பற்றியும் பேசவோ ஓர் உரையாடலை முன்னெடுக்கவோ என்னால் முடியவே முடியாது. அப்படித்தான் ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் போகிற வழியில் தெரிந்த முகங்கள் ஏதேனும் தென்பட்டால் கூட கண்டுக்காதது போல் கடந்துவிட்டு மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்லும் அளவிற்குக் கூச்ச சுபாவமுடையவன். ஆனால் இவரிடம் ஏதோ பலவருடங்கள் நெருங்கிப் பழகிய பால்யகால நண்பனிடம் பேசுவது போலச் சகஜமாக எப்படி உரையாடுகிறேன் என்று எனக்கே வியப்பாக இருந்தது. 

அதே சமயம் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு நச்சரித்து இந்த மனுசனை எரிச்சல் ஆக்குகிறோம் என்று சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தேன். நற்பலனாக அவ்வெண்ணத்தை அவர் நெடுநேரம் நீடிக்க விடவில்லை.

“உண்மையில் ஒரு கேள்வியிலிருந்து இன்னொரு கேள்வியே பிறக்கிறது. பதில் பிறப்பதில்லை.. காரணம் என்ன தெரியுமா? ஒரு கேள்விக்குக் குறைந்தபட்சம் பத்துப் பதில்கள் உண்டு. எந்தவொரு பதிலையும் இதுதான் திட்டவட்டமானது எனத் தீர்மானித்துச் சொல்லும் சக்தி மனிதனுக்குக் கிடையாது.” 

குழப்பமாக இருந்தது. 

“மனிதனுக்குக் கிடையாதென்றால் பின்னே யாருக்கு உள்ளது?” என்றேன். தாடையில் சுருண்டிருக்கும் வெண் தாடியைத் தடவியபடி சொன்னார், 

“சூழ்நிலைக்கு….

எந்தவொரு கேள்வியும் அக்கணத்தின் பொருட்டு தனக்கு வேண்டிய தோதான பதிலைத் தானே கிரகித்துக் கொள்கிறது. சூழ்நிலை மாறினால் அந்தக் கேள்விக்கான பதிலும் மாறும். உன்னைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்று இந்தப் பக்கம் வந்திருக்கிறேன் என்பதே தற்போதைய சூழ்நிலை நமக்குத் தந்திடும் பதில்.”

எனது மறுத்துப் போன முகத்தில் அப்போது தோன்றியது புன்னகையே தானா..? 

சித்தாலப்பாக்கம் கணேஷ் நகரில் மாலை நடைபெறவிருக்கும் அரசியல் கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. குடிநீர் பந்தலில் நின்று தண்ணீர் குடித்தோம். இருவருக்குமே நல்ல தாகம். “மக்கள் நல அரசின் நவீன திட்டங்கள்” என அருகே அமைக்கப்பட்டிருந்த பதாகையில் ஆளுங்கட்சியின் சாதனைகள் குறித்த பெரும் பட்டியலுடன் முதலமைச்சரின் சிரித்த முகம் காணப்பட்டது.

தான்தோன்றித்தனமான போக்கில் கூறினேன்,

“மனிதனைச் சுற்றியுள்ள அனைத்தும் நவீனமடைந்து வருகிறது.” 

சொல்லி முடிப்பதற்குள்,

“மனிதன் அப்படியொன்றும் நவீனமடையவில்லை” என்றார்.

நான் திடுக்கிட்டு அதே இடத்தில் நின்றேன்.

ஓரிரு அடிகள் முன்னின்றிருந்த அவர் திரும்பிப் பார்த்து, “உண்மையில் மனிதனொன்றும் நவீனமடையவில்லை. மாறாகத் தனது கட்டுக்கோப்பான முலாம் பூசிய சமயத்திற்கு உகுந்த நடிப்பின் மூலம் தானும் நவீனமானது போல் நிறுவிக் கொள்ளப் பிரயத்தனப்படுகிறான். மேலும் அப்படி நடிப்பதுவே அவனுக்குப் போதுமானதாகவும் உள்ளது.”

நான், நானான நான் மௌனமாகப் பின்தொடர்ந்தேன். 

“உங்களுக்கு இன்னொரு சங்கதி சொல்லவா?” என் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. “மனிதனால் ஒருபோதும் நவீனன் ஆகவே முடியாது. ஏனென்றால் புதிய பாதையிலும் அவன் பழகிய பாதையின் சாயல்களையே வேறு வேறு ரூபத்தில் காணத் துடிக்கிறான். திரும்பத் திரும்பத் தேடுகிறான். நேர்ந்த எதையும் அவன் விட்டொழிக்கத் தயாராய் இல்லை. சுயத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்காகத் தன்னையே நெருப்பில் சுட்டுப் பொசுக்கிக் கொள்ளத் தயாராய் இருக்கும் தங்கத்தின் துணிவு மனிதனுக்கு ஒருபோதும் வாய்க்காது. நினைவுகளின் கௌரவச் சுகத்தில் வீழ்ந்து கிடக்கும் அவனின் அந்த மனமும், அதன் சிதறல்களும்தான் பழமைவாதத்தின் ஆகச் சிறந்த அத்தாச்சி.”

செயலற்றுப் போன சிந்தனைகளுடன் பிரக்ஞையின்றி பின்னால் நடந்தேன்.

வயிறு முட்டத் தண்ணீர் குடித்ததானாலோ என்னவோ இருவருக்குமே மூச்சு வாங்கியது. உருமா கட்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்தார். சுற்றிலும் இளைப்பாறுவதற்குப் பொட்டு நிழல் இல்லை. காரணைப் பேருந்து கடந்து சென்றது. அது கிளப்பிச் சென்ற மணற் புழுதியில் முளைத்தெழுந்தது போல் “தாத்தா… தாத்தா” என்று கத்திக் கொண்டே ஓடி வந்த சிறுவனின் குரல் கேட்டது.

ஒரே சமயத்தில் இருவரும் திரும்பிப் பார்த்தோம்.

“கொடை ரிப்பேர் பண்ணனும்… எங்க அம்மா உங்களைய கூப்ட்டாங்க.” சாலைக்கு அந்தப்பக்கம் இருந்த இளநீர் கடைக்கு நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் அந்தப் பெரிய குடையைச் சுட்டிக் காட்டி சொன்னான். அங்கிருந்தே அந்தச் சிறுவனின் அம்மா எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

மலர்ந்த பரவசத்துடன் முதியவர் என்னைக் கண்டார்.

சுருக்கங்கள் விழுந்த அம்முகத்தில் உடைந்த போன என்னுடைய புன்னகையின் துளிகள் மீட்சி கண்டன. எனது முதிய முகத்தைக் கண்ட திகைப்பில் வெலவெலத்து நின்றேன்.

***

கார்த்திக் பிரகாசம் – கல்குதிரை, தமிழ்வெளி, உதிரிகள், அகழ், நகர்வு, கலகம், வாசகசாலை முதலிய அச்சு, இணைய இதழ்களில் சிறுகதைகளும் மற்றும் கணையாழி, பேசும் புதிய சக்தி, சொல்வனம், நுட்பம் இதழ்களில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவரது “மீச்சிறு இருள்” என்ற சிறுகதைத் தொகுப்பை தேநீர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரி : karthiksona91@gmail.com

மொடாம்பால்

2

பாரத் தமிழ்

ல்ல நேரம் முடியரத்துக்குள்ள பொணத்த தூக்கியாகணும். சொன்னா கேளுங்கொ. மானம் வேற மகாதேவமல பக்கமா இருண்டினு வர்து. சத்த இப்படிக்கா வாங்கொ எல்லாரும். அழ்தது போறும். சாங்கியம் செய்யணுமா இல்லியா? யார்ரி அவளுங்கொ? வந்து இவங்களக் கொஞ்சம் அப்பிடிக்கா கூப்டுனு போயி ஓயப்படுத்துங்கடி” அம்சாவின் அங்கலாய்ப்பைப் புரிந்து கொண்ட போங்கு மூக்கி, மாரடித்து அழுதுகொண்டிருந்த ஐமாவையும் அமுதாவையும் இடுப்பைப் பற்றி தனியொருத்தியாய் இழுத்து வந்தாள். 

“அந்த சாணி சட்டிய எட்த்து ஒராளு அளவுக்கு பிசுறில்லாம ஒட்ட மொழுகி வுடு கலா” 

அம்சா, கிளியம்மாவின் இறுதிச் சடங்கைச் செய்யயும் முனைப்பில் முந்தானையை எடுத்துச் செருகியபடி மும்முரமாக இருந்தாள். பரபரப்பாகப் பிணத்தைச் சுற்றியிருந்தவர்களிடம் வேலை வாங்கிக் கொண்டு. 

“எப்பா! இந்தப் பூ மாலைங்கள ரெண்டு மூனு சைக்கிள்ள எட்த்து மாட்டுங்கொ. எல்லாத்தையும் தேர்ல கட்டனா பாரம் தாங்காது. தூக்குறவங்களுக்குத் தோள்பட்ட போயிறும்” 

இடது கையில் சிகைக்காய்த்தூள் நல்லெண்ணெய் வைத்துக் கொண்டு வலது கையில் தென்னந் துடைப்பத்தால் வாசலைப் பெருக்கிக் கொண்டே ஆணையிட்டாள். 

சுற்றியிருந்த வாலிபப் பயல்கள் நான்கைந்து நாற்காலிகளில் குவிந்து கிடந்த மாலைகளை அள்ளிக் கொண்டுபோய் சைக்கிள் கேரியர்களில் வைத்துக் கொண்டிருந்தனர். 

“மசமசான்னு நிக்காமா மொழுகுனதுல நாளாப்பக்கம் கம்பி இழ்த்துவுட்டு நடுவாப்பல சுக்க கோலம் போட்றி சொறாளு. த்திரி,.. எப்பிடி வேடிக்க பாக்குறாளுங்கொ பாரு, கொமுரிங்களாம் இவளுங்கொ. அட்ஜேய்,… நாய் நக்கன மூஞ்சி! அந்த மொகுமாவு டப்பாவ சின்னப்பையன் பொண்டாட்டி கிட்ட குட்த்துட்டு எங்கூட வா நீ. எம்மா வாசுகி! ஒடம்பு வளஞ்சி கொஞ்சம் சுருக்கா கோலம் போட்டு வெட்டுக்கத்திய எட்தா ஓடிப்போய்” 

அம்சா சென்னபடி ஆளாளுக்கு வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

மெழுகிய சாணிமீது கோலம் போட்ட இடத்தில் முடைந்த பச்சை தென்னங்கீற்றை வடக்குத் தெற்காகப் போட்டு உருண்டை சாணியில் ஊதுவத்தியை ஏற்றினாள் திருப்புதம். ஐஸ் பெட்டியின் மூடியை எடுத்துவிட்டு பிணத்தின்மீது தவலைத் தண்ணீரை ஊற்றி சிகைக்காய்க் கொண்டு தலையை கசக்கி விட்டாள் காமாட்சி. தொப்பக்கடையாக நனைந்த பிணத்திற்குப் பழைய புடைவையை அகற்றிவிட்டு புதுப் புடைவை கட்டிவிட பெண்கள் எல்லாம் கூடித் தடுப்புச் சுவராய் நின்று மறைத்துக் கொண்டனர். மஞ்சள் நிறப் புடவையை நான்கைந்து பெண்கள் கிளியம்மாவுக்குச் சுற்றி விட்டனர். குழைத்த மஞ்சளை முகத்திற்குப் பூசி விட்டு, நெற்றியில் திருநீறு பட்டை இழுத்து குங்குமத்தால் பொட்டும் இட்டு, உறைந்து போயிருந்த கைகள் கொள்ளும் அளவுக்குக் கண்ணாடி வளையல்களை அணிவித்தாள் அம்சா. அம்மா வீட்டுக் கோடி வந்ததும் காடாத் துணியைக் கிழித்து இரு கட்டை விரல்களையும் இணைத்துக் கால் கட்டுக் போட்டுவிட்டு, பன்னீர் தெளித்து சாம்பிராணி புகையை ஊதி பிணத்தின் மீது பரவ விட்டாள். அப்போதுதான் இழவு வீட்டிற்கான எல்லாத் தகுதிகளும் வாசனையாய்ப் பரவியது.

 அலங்காரம் செய்யப்பட்ட கிளியம்மாவுக்கு வயது எண்பதுக்குமேல். மஞ்சள் பூசியதும் எங்கிருந்துதான் அந்தக் கலை வந்து கவ்வியதோ அவள் முகத்தை! அப்படியே வருடி முத்தம் கொடுத்து அழுதாள் ஐமா. அவளை மீண்டும் விலக்கி ஓயப்படுத்திவிட்டு கிளியம்மா கழுத்திலும் காதுகளிலிலும் கிடந்த நகைகளைக் கழற்றிப் பால் சொம்பில் போட்டுக் கொண்டிருந்தாள் போங்கு மூக்கி. 

கல் வைத்த காளான் மூக்குத்தியை மட்டும் எரிக்கும்போது கிளியம்மா வாயிலேயே போடச் சொல்லி அம்சாவிடம் கொடுத்தான் வீரப்பன். 

“பங்காளிப் பைத்தாளி மரக்கா கோலம் சுத்தணும். ஒருவொரத்தரா வந்து ஊதுவத்தி வாங்கிக்குங்கொ” தன் கையில் பிடித்திருந்த ஒரு கொத்து ஊதிவத்தியைப் பந்தத்தால் கொளுத்தியபடி கூப்பிட்டாள் சத்தமாக. கொல்லிப் போடும் வீரப்பன் முதலில் வந்தான். அவனைத் தொடர்ந்து வந்த உறவினர்கள் கையில் தலா மூன்று ஊதுவர்த்திகளைக் கொடுத்து, மாலை அணிவித்து, திருநீறு இட்டு அவன் பின்னே சுற்ற விட்டாள். பதினோரு சுற்றுக்குப் பிறகு பாடையைத் தூக்கும் இறுதி பறையடிக்க சைகை செய்தாள். கெட்டுகான் தலைமையிலான இளைஞர்கள் பிணத்தைத் தூக்கித் தேரில் கிடத்தினர். வெடக் கோழி ஒன்றும் மூன்று உரிக்காத தேங்காய்களையும் தேரின் இடது கைப்பிடியில் கட்டிவிட்டு கொல்லிச் சட்டியை வீரப்பனிடம் எடுத்துக் கொடுத்தான் ஊறுகா நக்கி. 

 தேர் போகும் தெரு முழுவதும் புடவைகளை வரிசையாக விரித்து கிளியம்மாவின் இரு மகள்களும் மருமகளும் உருண்டு புரண்டினர். அவர்களைத் தாண்டித் தேர் போனது. கடைகளில் பணத்தாள் கொடுத்து மாற்றி வரப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயம் முதல் ஐந்து ரூபாய் நாணயங்களை வாரி வாரி தேர்மீது வீசினாள் அம்சா. காசு பொறுக்கும் தலைமுறை கடந்துபோன ஊரில், சில கிழடுகளும் குடிகாரர்களும் மட்டும் குனிந்து நாணயங்களைப் பொறுக்கிக் கொண்டே வந்தனர். பட்டாசு, வான வேடிக்கை, பறை சத்தங்களுக்கு இடையே யாருடைய ஒப்பாரி பாட்டும் எடுபடாமல் சுடுகாட்டை நோக்கிப் போய் கொண்டிருந்தது தேர். 

நடுகாட்டான் சடங்குக்காக நடுகாட்டில் பிணத்தை இறக்கி வைத்ததும் கொண்டு வந்திருந்த புண்டாச் சோற்றை சட்டியோடு போட்டு உடைத்தாள் அம்சா. பூமாலை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டு உதிரிப் பூக்களை உள்ளங்கையில் வாரி வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பிணத்தின்மீது தூவியபடிச் சொன்னாள்,

அடேய்! மகா கணபதி, சித்தி கணபதி!

தேரில் வந்தவர்க்குச் சீரோங்கும் கதையச் சொல்ல,

கடமையும் குறிப்பெடுத்து கைக் கூப்பி நின்றேன் பாராய்..!

முந்திப் பிறந்தவன் நான்; பூநூல் தரித்தவன் நான்; சங்கப் பறையோன் நான்; ஜாதிக்கெல்லாம் முத்த ஜாம்பவன் நான்…!

முடிநூல், அடி நூல், தறிநூல் தறித்தவன் நான்…

கோசல நாட்டுத் தலைநகர் அயோத்தி மகராஜா அரிச்சந்திரனை வெற்றிகொண்ட வெட்டியான் நான்தான் சாமி!…

நீர் தோன்றி, நெடுங்கடல் தோன்றியது, ஊர் தோன்றி, உலகம் தோன்றியது.

அந்த ஊருக்கு மேலாக ஓர் ஆல விரிச்சம் தோன்றியது.

அந்த ஆலமரத்தடியிலே, ஒரு கன்னிப் புற்று தோன்றியது.

அந்தக் கன்னிப் புற்றினிலே ஒரு காராம் பசு பிறந்தது.

அந்தக் காராம் பசுவின் வயிற்றினிலே

ஒரு கமலக் கன்னி பிறந்தநாள்.

அந்தக் கமலக்கன்னி வயிற்றினிலே

ஓடப் பட்டதாக ஒன்பதாயிரம் கோடி, பறக்கப்பட்டதாகப் பனிரெண்டாயிரம் கோடி, நடக்கப்பட்டதாக நாநூறாயிரம் கோடி, தாவப்பட்டதாக ஓராயிரம் கோடி,

இப்படியாக எண்பதாயிரம் ஜீவராசிகளைப் படைத்தார் பிரம்மன்.

இந்த ஜீவராசிகளானது, பூமியிலே பெருகப் பெருக, பூமா தேவியால் பாரம் தாங்க முடியவில்லை.

அதனால் பூமாதேவியானவள், பிரம்மனிடம் சென்று ‘சாமி என்னால் பாரம் தாங்க முடியவில்லை’ ஏதாவதொரு உபாயம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டாள்.

‘என்னிடம் கேட்டால் உனக்கு உபாயம் கிடைக்காது. கைலாயம் சென்று சிவனிடத்திலே உன் குறையைச் சொல்!’ உபாயம் கிடைக்கும் என்றான் பிரம்மன்.

அப்போது, காலால் நடக்காமல், காற்றாய் பறந்தோடி, கைலாயம் சென்று ‘சாமி என்னால் பூமியின் பாரம் தாங்க முடியவில்லை’ என்று சிவனிடத்தில் முறையிட்டாள்.

அதைக் கேட்கும் நேரத்தில், கம்பு குப்பத்துக் கம்மாள பறையர்கள், காராம் பசுவின் காலைக் கட்டி, கழுத்தை அறுத்து, தோலை உரித்தார்கள். அதன் உயிரானதோ எமலோகம் சென்றது. காராம் பசுவின் மாமிசத்தை அனுமன், நீலன், அங்குஜன் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து ஐந்து பங்காகப் போட்டார்கள். அதிலே முதல் பங்கைச் சிவசக்தி எடுத்துக் கொண்டாள். இரண்டாவது பங்கை நாராயண மூர்த்தி எடுத்துச் சென்றார். மூன்றாவது பங்கைப் பிரம்மதேவன் எடுத்துச் சென்றார். நான்காவது பங்கை வீர ஜாம்பகன் எடுத்துச் சென்றான். ஐந்தாம் பங்கு யாரும் எடுக்காமல் இருந்தது. பார்த்தார் சிவபெருமான். இந்தப் பூமியிலே பூமாதேவியின் பாரத்தைத் தீர்க்க வேண்டும் என்றால், இந்தக் காராம் பசுவின் மாமிசத்தின் மகிமையை அறிய வேண்டும் என்றால், யாரைக் கேட்டால் தெரியும் என்று யோசித்து,

‘அடேய் வீரா ஜாம்பக்கா!’ என்று குரல் கொடுத்தார். குரலைக் கேட்டு, ஓடி வந்து, பாத நமஸ்காரம் செய்து, அழைத்ததன் காரணம் கேட்டான் வீர ஜாம்பகன்.

‘அடேய் வீர ஜாம்பகா!’

‘உனக்கு உன் தாய் பெயர், தந்தை பெயர் தெரியுமா?’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘சாமி எனது தாயார் சமுத்திரம். எனது தந்தை சூரியன். எனது பெயரோ வீர ஜாம்பகன்’ என்றான்.

‘அடேய் வீர ஜாம்பக்கா!’

பாருலகிலே, சிவசக்தி முதல் பங்கு எடுத்துச் சென்றாள். அந்தக் காராம் பசுவின் முதல் பங்கு யாருக்கடா உதவும்? என்றார் சிவபெருமான்.

சுவாமி! சிவசக்தி எடுத்துச் சென்ற முதல் பங்கானதோ மாமிசம். அது மந்திரம் கற்றவர்க்கும், தந்திரம் கற்றவர்க்கும், மாயாஜாலம் அறிந்தவர்க்கும் மையாகும் சாமி என்று சொன்னான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா!

அப்போது நாராயண மூர்த்தி எடுத்துச் சென்ற இரண்டாவது பங்கு யாருக்கடா உதவும் என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! நாராயணமூர்த்தி எடுத்துச் சென்ற பங்கானதோ கொம்பு; எலும்பு. அது சீப்பாகும்; சிமிழாகும்; சீர் பெற்று வாழ்கின்ற பெண்களுக்கெல்லாம் வர்ண டப்பியாகும் சுவாமி என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா!

அப்போது பிரம்மதேவன் எடுத்துச் சென்ற மூன்றாவது பங்கு யாருக்கடா உதவும் என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! பிரம்மதேவன் எடுத்துச் சென்ற பங்கோ வாலானது. அந்த வால், அரச பரம்பரைக்கும் அருள் கொடுக்கும் தேவர்க்கும், வீசும் வெண்சாமரமாகும் சுவாமி என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீரா ஜாம்பகா! நீ எடுத்து வைத்திருக்கும் நான்காவது பங்கு யாருக்கடா உதவும் என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! நான் எடுத்து வைத்திருக்கும் பங்கானதோ தோல். அது வாராகும்; வடமாகும்; வண்ணக் கயிறாகும்; வாசிக்கும் மேளம் ஆகும். வெண்கல தமுக்காகும்; ஆயிரம் பேருக்கு அங்குபடியாகும்; மூன்றாயிரம் பேருக்கு முதுகு பட்டையாகும் என்று சொன்னான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா!

யாருமே எடுக்காமல் இருக்கும் ஐந்தாவது பங்கானது யாருக்கடா உதவும் என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! யாருமே எடுக்காத ஐந்தாவது பங்கானது, சாணம். அதில் நீரிட்டுக் குழைத்துப் பூசி மொழுகினால்; சீர் கெட்ட வீட்டுக்குள் ஸ்ரீதேவி புகுந்து , மூதேவி விலகிடும். மீதமுள்ளதை எடுத்து உருண்டையாக உருட்டி வெயிலிலே காயவைத்து அக்கினியிலே இட்டு எரித்தால், நெற்றிக்கு நல் திருநீராகும் என்று சொன்னான் வீர ஜாம்பகன்.

அடேய் டேய் வீரா ஜாம்பகா!

காராம் பசுவின் மாமிச மகிமை அறிந்து கொண்டேன்.

அடுத்து, திசையின் திருப்பலன்கள் என்னடா என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! வடக்கே வள்ளல்கள் துறை; தெற்கே தேவர்கள் துறை; மேற்கே மேகவன் துறை; கிழக்கே ஜாம்பகன் துறை. அதாவது என்னுடைய துறையாகும் சாமி என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பக்கா! அப்போது நான்கு திசைகளின் முழு பலன் என்னடா என்று கேட்டான் சிவபெருமான்.

சுவாமி! வடக்கே மகாபாரதம் பிறந்தது, தெற்கே ராமாயணம் பிறந்தது, மேற்கே சாளவர்கள் அழிந்தார்கள், கிழக்கே சங்கும் சானார் கத்தியும் பிறந்தது என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீரா ஜாம்பக்கா! கிழக்கே பிறந்த சங்கும் சானார்க்கத்தியின் மகிமையும் என்னடா என்று கேட்டான் சிவபெருமான்.

சுவாமி! பிறந்தவுடன் தாய்க்கொடி அறுக்க சானாரக் கத்தியும், இறப்பவரின் ஈமச்சடங்கைச் சொல்ல சங்கும் வேண்டும் என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா!

கால் பிண்டம், வாய்க்கரிசி, வழி பிண்டம் இதையெல்லாம் வாங்கித் தின்று வயிறு பிழைக்கும் நீ ஒரு சுடு பறையன். உன்னைச் சோதித்துப் பார்த்தேனடா என்றார் சிவபெருமான்.

சுவாமி! நான் கால் பிண்டம், வாய்க்கரிசி வழி பிண்டம் இதையெல்லாம் வாங்கித் தின்றபோதிலும், கடமைக்குக் கட்டுப்பட்டு அடிமையாக இருக்கின்றவன். இவையெல்லாம் அறியாமல் எப்படி இருக்க முடியும் என்று கேட்டான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பக்கா!

இந்தப் பார் உலகத்திற்கும் பரலோகத்திற்கும் நான் பிறந்தேன். இந்த பூலோகத்தில் சுடு பறையனாய் நீ பிறந்தாய். இனிமேலும் நீ பறையன் அல்லன், பரமனின் ஜாதி என்று மங்கலம் பாடி வெண்கல பறை எடுத்துக் கொடுத்தார் சிவபெருமான்.

வெண்கலப் பறை வாங்கிய வீர ஜாம்பகன், அடியேனுக்கு என்ன கட்டளை என்று கேட்டான்.

எட்டுத்திக்கும் பதினாறு கோணம் சென்று இரவன்றும் பகலென்றும் பாராமல், பார் பொழிய, பூ மலர, பழம் உதிர.. பழம் உதிர… பழம் உதிர… என்று பூலோகத்திலே பறைசாற்றி விட்டு வா! அப்படிச் செய்தால், வயதானவர்கள் இறந்து, இந்தப் பூமியின் பாரம் குறைந்து, பூமாதேவி மகிழ்வாள் என்றான் சிவபெருமான்.

சுவாமி நான் பூமி பாரம் தீர்க்க பறைசாற்ற வேண்டுமென்றால், எதைத் தின்று? எதன் மீது ஏறி? எப்படிப் பறைசாற்ற வேண்டும்?

ஐங்கள்ளு சாராயமும், அரை கலன் கள்ளும் கலந்து வைத்திருக்கிறேன் அதை அருந்தி, வெள்ளை மதயானை மீதேறி, இந்தப் பாரெங்கும் பறைசாற்றி வாடா!

ஐயனின் வார்த்தைபடி, மதுவை அருந்தி, வெள்ளை மதயானை மீதமர்ந்து, அதிகாலை நேரத்திலே, காவி கோவணம் அணிந்து, அம்மனே…! அம்மனே…! அம்மனே…! என்று குரல் கொடுத்தான் வீர ஜாம்பகன்.

ஜாம்பகனின் குரல் கேட்டு, சக்தியோ கண்விழித்து, பச்சரிசி பல் கடித்து, பராசக்தியாய் எழுந்து நின்று, ஏழு கதவைத் திறந்து, எதிரே வந்து நின்றாள் காளி.

அவளைப் பார்த்தவுடன், சாராய நிலை மறந்து, கால் நடுங்கி, கரம் நடுங்கி, உடல் நடுங்கி நின்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீரா ஜாம்பக்கா!

வெள்ளியும் முளைக்கவில்லை, விடியற்காலை பிறக்கவில்லை, இந்த அன்னையை எழுப்பிய காரணம் என்னவென்று கேட்டாள் காளி.

தாயே ஆத்திரம் கொள்ளாதே! தேவர்கள் ஒன்று கூடி, வேதங்கள் பல ஓதி, வெண்கலப் பறை கொடுத்து, வீரப்பறையாலே சாற்றச் சொல்லி அனுப்பிவிட்டனர். பறைசாற்றுவதற்கு கனிப்பில்லாத காரணத்தால், கைச் சோர்ந்து நிற்கின்றேன் தாயே! என்றான் வீர ஜாம்பகன்.

ஜாம்பகனைப் பாவம் பார்த்து, அங்கே இருந்த வேங்கை மரத்தைத் தள்ளி, அடியும் நுனியும் கிள்ளி, மீதமுள்ளதைக் கனிப்பாகக் கொடுத்தாள் காளிகா தேவி.

காளியின் அருள் பெற்ற வீர ஜாம்பகன், போய்ச் சேர்ந்தான் கம்மாள தேசம். கம்மாளர் தேசத்திலே, கலசம்பறை சாற்றும் பொழுது, கனிப்பானது கீழே விழுந்தது.

அப்பொழுது ஒரு கன்னிப்பெண்ணானவள், குடத்தை எடுத்து, குளக்கரைக்குப் போனாள்.

கன்னிப் பெண்ணைப் பார்த்து, கையால் கனிப்பை எடுத்துத் தரும்படிக் கேட்டான் வீர ஜாம்பகன்.

கன்னிப் பெண்ணோ, வலது காலால் எடுத்து, இடது கையில் கொடுக்க, கோபமுற்று ஓங்கி ஓர் அடி அடித்தான் பறையை. செந்தாமரை பூத்தது. இரண்டாவது அடித்தான். ராஜ்யத்தை அடைந்தான். மூன்றாவது முறை அறைந்தான் பூலோகத்தைப் போய்ச் சேர்ந்தான். பூலோகத்தில், சாராய மயக்கத்திலே, கஞ்சா போதையிலே, தன்னிலை மறந்து, சுய நினைவு இழந்து, பூ உதிர…, பிஞ்சு உதிர…, காய் உதிர… கனி உதிர… ஆறு மாதத்துப் பிண்ட மலர் உதிர… மூன்று மாதத்துப் பிண்டம் முடங்கிவிட… ஒரு மாதத்துப் பிண்டம் ஒழிந்து விட… என்று சாற்றி வந்தான் வீர ஜாம்பகன்.

அதைப் பார்த்த சிவபெருமான், வீர ஜாம்பகனைத் தடுத்து நிறுத்தி,

அடேய் வீர ஜாம்பகா! ஏனடா இப்படிச் செய்தாய் என்று கேட்டார்.

சுவாமி! நீங்கள் சொல்வது போல் வாசித்தால், பூமாதேவியின் பாரம் குறையாது. பூவுலகம் நிலைக்காது, அடியேன் நானும் பிழைக்க முடியாது. எனவே என் இஷ்டத்துக்கு வாசித்தேன் என்றான் வீர ஜாம்பகன்.

நீ பிழைக்க வேறு என்ன வழி உண்டென்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! சின்னப் பசங்க செத்தா சின்னப் பிணம். பெரியவங்க செத்தா பெரிய பிணம். அரிச்சந்திர காசு ஆறு காசு. வாய்க்கரிசி வழிப்பிண்டம், முக்காட்டுச்சீலை, முழுசலை, இதெல்லாம் எனக்குச் சேரும் சாமி என்றான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா! பார் உலகிலே பாவ புண்ணிய காரியங்களை அறிய வழி என்னடா என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! கூலியைக் குறைத்தவன், குறைபடி இட்டவன், தாயை அடித்தவன், பங்கிலே பாதி எடுத்தவன், கடிக்கிற நாய் விட்டு வேடிக்கை பார்த்தவன், கறந்த பாலில் நீரிட்டு கலந்தவன், அண்ணன் தம்பிக்கு துரோகம் செய்தவன், பிறர் மனை புகுந்தவன், கோயிலை இடித்தவன், கொள்ளையடித்தவன், கொலை புரிந்தவன், பொய் சாட்சி சொன்னவன் இவர்கள் எல்லாம் பாவிகள் சுவாமி என்று சொன்னான் வீர ஜாம்பகன்.

அடேய் வீர ஜாம்பகா! இந்தப் பாவிகளுக்கு என்ன கட்டளை என்று கேட்டான் சிவபெருமான்.

சுவாமி! சொல்கிறேன் கேளுங்கள்.

பாம்பு குழி, பல்லிக்குழி, அட்டை குளி, அரணைக்குழி என்று நரகத்திலே தள்ளுவார்கள் என்று சொன்னான் வீர ஜாம்பகன்.

அப்படியென்றால் புண்ணியம் செய்பவர்களுக்கு என்னடா கட்டளை என்று கேட்டார் சிவபெருமான்.

சுவாமி! நான் புண்ணியம் செய்பவர்களைச் சொல்ல வேண்டுமென்றால், புண்ணிய காணிக்கை வேண்டுமென்றான் வீர ஜாம்பகன்.

போடுங்கம்மா… போடுங்க… புண்ணிய காசு போடுங்க…!

என்று அம்சா சொல்லி முடித்ததும், அவள் தரையில் விரித்திருந்த துண்டில், சில்லரைக் காசுகளையும் பணத்தாள்களையும் தூக்கி எறிந்தனர் ஊரார்; உறவினர் எல்லாரும்.

சடங்கு செய்து கொண்டிருந்தபோதே அம்சா எதிர்பார்த்தது போலவே மழை பிடித்துக் கொண்டது. நடு ரோட்டில் பிணத்தைத் தேரோடு விட்டுவிட்டு மரத்தடிகளை நோக்கி ஓடினர் பாதிப்பேர். பலர் பிணத்தோடு நனைந்து கொண்டிருந்தனர் செய்வதறியாது. மழை விட்டதும் பாடையைத் தூக்கலாம் என்று காத்திருந்தவர்கள் நம்பிக்கை இழக்கும் அளவுக்கு கொட்டோ கொட்டென்று ஓயாமல் பெய்து கொண்டே இருந்தது. இதற்கிடையில் சுடுகாட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளைக் காப்பாற்ற ஓடிப் போய்த் தார்ப்பாய் போர்த்தியிருந்தனர் குட்டையனும் மொட்டையும். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கடந்தும் மழை நிற்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. என்ன செய்வது என்று ஆளாளுக்குக் கேட்கத் தொடங்கினர். 

“இப்பதானே எரிமேட புதுசா கட்டி முட்ச்சாங்கொ? அதுல எட்த்துனு போயி கொளுத்துனா என்னா?” 

அம்சா சொன்னதும் மிரண்டு போனார்கள் எல்லாரும். “குடியான சுடுகாட்டுக்கு நம்ம பொணத்த எட்த்துனு போகலாங்குறியே, கொஞ்சமாவது அறிவு நெனவோடத்தான் பேசுறியா?”

கயாலு கேட்டான். 

“ஏன், எட்த்துனு போனா என்னா?”

இது நாய் நக்கன மூஞ்சி. 

“அதானே! எப்பவும் எட்த்துனு போலனா என்னா? இப்ப எட்த்துனு போவோம். மழ வுட்ற மாதிரி தெர்ல. இப்பிடியே ராவெல்லாம் பேஞ்சா என்னா பண்றது?” வாசுகி கேட்டாள். 

வாசுகி கேட்டதை வாலிபப் பயல்கள் ஆமோதித்து வரவேற்றனர். 

“குடியானவஞ் சுடுகாட்டுல நம்ம பொணம் போறது அவ்ளோ லேசுபட்ட வேல இல்ல. சொம்மா தெரியாம பேசாதீங்க! நமக்குன்னு சுடுகாடு கீறப்போ அங்க ஏன் போவானெ? பேசாம பொதச்சிப் புடலாம் கம்முனு இருங்கொ” ராமகிருஷ்ணன் சொன்னான்.

“ண்ணோவ், என்னா பேசற நீ? தலச்சம் பொணமிச்சே! இல்லாகாட்டி நீ சொல்றாப்டி பொதச்சிப் புடலாம். அம்சக்கா சொல்றதுல என்னா தப்பு?” மீண்டும் கேட்டாள் வாசுகி.

“என்னா தப்பா? ஜாதி சண்ட வந்து வெட்டுக் குத்து போலீஸ் கேசுன்னு லோலாய்ப் படணும் எம்மா அத்திய ஓசி”

“எத்தினி காலத்துக்குத்தான் இப்பிடியே பெய்ந்துறு கீறது? இந்த மழைல எவனும் வூட்டவுட்டு வர மாட்டான். நாம பாட்டுக்கு எட்த்துனு போயி எரிச்சிறலாம்” அம்சா தீர்க்கமாகச் சொன்னாள்.

“எம்மா தப்பும்மா! அவங்க கிட்ட கேட்டுப் பாக்கலாம். அட்லீசு தலிவுர கிட்டியாவது தகவல் சொல்லணுமில்ல? திர்ட்டாட்டமா தூக்கினுப் போக்கூடாது. சுடகாடு அவுங்குள்தாச்சே!”

“தீர்பட்டா ஓசிச்சி செய்ய இதுவொண்ணும் தேர்திர்னா இல்ல. சுருக்கா முடிக்கணும். அதெப்பிடி சுடுகாடு அவுங்குள்தாகும்? சுடகாட்ட எவனும் பட்டா பண்ண முடியாது. கவுருமெண்ட்டு கட்டுன எரிமேடயில எவன் வோணா எரிக்கலாம்தானெ?”

 ‘அதானே!’ என்று அம்சா வாதத்தையை மீண்டும் ஆமோதித்தது கூட்டம்.

 “உஸ்கோலு ஒண்ணுதாங் கீது. எல்லார் வூட்டுப் பசங்களும் போயி ஒண்ணா மண்ணா பழகி படிக்கல?

ரேஷன் கட ஒண்ணுதான். ஆம்பள பொம்பள வரிச மட்டும்தான் அங்கியும்!

பஸ்ல அவன் ஜாதி ஒரு பக்கம் நம்ம ஜாதி ஒரு பக்கம் ஒக்கார்றதில்லியே! 

ஊராஸ்பத்திரில டாக்டரா கீற தம்பி கூட நம்மாளுதானாம். வந்து ஒடம்புக்கு ஒண்ணுன்னா பாத்துனு போல அவங்கொ?

அட, குடிக்கிற தண்ணி டேங்க் ஒண்ணு, குடுத்தனும் கீற வூடு வாசலும் ஒண்ணு. அவுங்குள்து மெத்த வூடுன்னா, நம்புள்தும் மெத்த வூடு. அவங்கள வுட ஜாஸ்தியா நம்ப பசங்கதான் போலீஸுக்கும் பட்டாளத்துக்கும் போயி கீறானுங்கொ. அவங்க துன்ற சோத்ததான் நாமளும் துன்றொம். எதுல எண்ணா அவங்க நம்மளவுட மேல?” அம்சாவின் இந்தக் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆர்ப்பரித்து வாலிபக் கூட்டம்.

 ஆயிரம் பிணங்களுக்கும் மேல் கையாண்ட அம்சா, கோபால் செத்ததிலிருந்து வண்ணாந்தொழிலை வாழ்வாக்கிக் கொண்டவள். பெண்கள் சுடுகாட்டுப் பக்கம் போக உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் தன் கணவன் இறந்தபின் குழந்தைகளுக்காத் துணிந்து இந்த முடிவை எடுத்தாள். இந்தத் தொழில் மட்டும் அவளுக்குக் கிடைக்காமல் போயிருந்தால் இரண்டு மகள்களை வளர்க்க அவள் என்ன செய்திருப்பாள் என்று அவள் நம்பும் மாரியம்மாளுக்குத்தான் வெளிச்சம். வண்ணாங்மூட்டு ஆண்களுக்கே பண்ணை நிலங்களிலும் வேலை மறுக்கப்படும் சூழலில் கணவனின் தொழிலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அம்சாவால் ஆரம்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் ஆலம் சுற்றவும் நலங்கு வைக்கவும் கூட நா எழவில்லை. பதட்டத்தில் என்னென்னவோ பிதற்றினாள். எவ்வளவோ கேலி கிண்டலுக்கு ஆளானாள். சுபகாரியங்களை வர்ணனை சொல்லி மைக் பிடிக்க பல ஆண்டுகள் ஆனது அவளுக்கு. 

நடுக்காட்டில் சொல்லப்படும் அரிச்சந்திரன் கதையை மட்டும் கற்றுக் கொள்ள ஐந்தாறு மாதங்கள் பிடித்தன. அதை இரவுப் பகல் பாராமல் மனப்பாடம் செய்தாள். அவளது கணவன் இறந்தபோது, சடங்கு செய்ய ஆளில்லாததால், துக்கம் தொண்டையை அடைக்க, மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவ்வளவு துயரத்திலும் நடுக்காட்டான் கதையை முதல்முறையாகச் சொன்னாள். அதைப் பார்த்து அன்று அழாத ஆளே இல்லை. 

இப்போதெல்லாம் மாடு விடும் திருவிழாவிலும் கபடியிலும் அறிவிப்பு வர்ணனைகள் செய்யுமளவுக்கு கெட்டிக்காரியாகச் சுத்துப்பட்டு ஊர்களில் அவள் மட்டுமே தட்டுப்படுகிறாள். 

இளைஞர்கள் முடிவுக்கு வந்து விட்டனர். என்னவானாலும் சரி குடியான சுடுகாட்டில் கிளியம்மாவை எரிப்பதென்று. 

“ஏன் மார்கா! ஒரு வருஷத்துக்கு முன்னாடி நாம கும்புட்னுருந்த காளியம்மா கோயில யாருக்கும் சொல்லாம இதே மழக்காலத்துல ஜேசிபி வச்சி இட்ச்சி தரமட்டமாக்கல அப்பனோலியான் மக்கொ? அவங்களுக்கு ஒரு நாயம் நம்புளுக்கொரு நாயமா? சாமின்னு கூடப் பாக்காம கோயில இட்ச்சித்தள்ளிப்புட்டு இன்னும் வாந்திபேதி வராம தெனாவட்டாத்தானெ சுத்தினு கீறானுங்கொ? நாமென்ன சுடுகாட்ட துன்னவா போறோம்? பொணத்த எரிக்க அப்பிடிப் பெய்ப்புட்ணும்னு என்னா கீது?” அம்சா மீண்டும் சொல்ல,

‘அதானே! தூக்குங்கோ போவோம்’ என்றனர் பெரும்பாலான பெண்களும் இளைஞர்களும். 

வானம் இன்னும் இன்னும் இருட்டிக் கொண்டு இடி மின்னலுடன் ஓயாமல் பெய்து கொண்டிருந்தது. இனியும் தாமதிப்பது அர்த்தமற்றது என்ற முடிவுக்குப் பெரும்பாலானவர்கள் வந்து விட்டதினால் முதல்முறையாக குடியான சுடுகாட்டை நோக்கி நகர்ந்தது கிளியம்மாவின் தேர். 

எல்லார்க்கும் இனம் புரியாத பரவசம். இழப்பிலும் எதையோ சாதிக்கப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு. சோகம் மாறி புன்னகை பரவத் தொடங்கியிருந்தது. எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதில் மும்முரமாக வேலை செய்தாள் அம்சா. இதனால் வரப் போகும் எதிர்வினைகளை நினைத்துக் கிழடு கட்டைகள் நடுங்கிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் விசிலுடன் கூடிய குத்தாட்டத்தில் ஆர்ப்பரித்தனர். மழையில் நமுத்துப் போன பறைகளை நாக்கைக் கடித்தபடி வெறிகொண்டு அடித்துக் கிளர்த்தினர் பயல்கள். அதன் தோல்களுக்கான சூடு அவர்களின் எல்லை மீறலிலிருந்து கிடைத்திருக்க வேண்டும். 

புதிய எரிமேடையின் மத்தியில் இரண்டு லாரி டயர்கள் வைத்து, அதன்மீது பெரிய பெரிய கட்டைகளைக் கட்டில்போல் கட்டம்கட்டி கிளியம்மாவைக் கிடத்தினர். கிளியம்மாவின் நாளாப் புறமும் கெடவேலன் மரங்களைச் சார்த்திவிட்டு பிணத்தை வரட்டிகளால் அடுக்கிப் போரத்தினாள் அம்சா.‌ அதுவும் போதாதெனச் சிறு சிறு விறகுகளை எல்லா இடுக்குகளிலும் செருகினாள். வீரப்பன் கொண்டு வந்த கொல்லிச் சட்டியை வடக்குப் பார்த்து ஓங்கி உடைத்தாள். நிரப்பி வைக்கப் பட்டிருந்த மொடாம்பாலை தோள்மீது தூக்கிக் கொண்டு கிழக்கிலிருந்து தெற்காக, தெற்கிலிருந்து மேற்காக, மேற்கிலிருந்து வடக்காக என்று மூன்றுமுறை சுற்றி வந்தான் வீரப்பன். ஒவ்வொரு முறைக்கும் மொடாவை மேலிருந்து கீழாக வெட்டுக் கத்தியால் கொந்து போட்டாள் அம்சா. மொடாம்பால் பீய்ச்சியடித்து. 

பிணமானாலும் பெற்றத் தாய் என்பதால், கொள்ளி வைக்க கைகள் நடுங்கின. விறுவிறுவென வந்த அம்சா, வீரப்பன் கைகளைப் பிடித்து தானே கொள்ளி வைத்தாள். மண்ணெண்ணெய் கிடைக்காததால் தின்னர் ஊற்றியிருந்தாள் பிணத்தின் மீது. நாளாப் புறமும் தீ மளமளவெனப் பரவி அனலைக் கக்கியது. உப்பையும் சர்க்கரையையும் எரிதழலில் பிடிபிடியாய் அள்ளி எறிந்தாள். அது மீண்டும் படபடவென்று பொறித்து எரிந்து சிதறியது. 

கணவன் சாகும்வரை சுடுகாடு பக்கம் எட்டி இறங்கி பார்காமலிருந்த அம்சா, கடந்த பதினைந்து ஆண்டுகளில் பலவிதமான பிணங்களைப் பார்த்து விட்டாள். புதைக்கும் பிணங்களுக்கு மட்டும் குழிதோண்ட ராமகிருஷ்ணனையோ, சிகாமணியையோ துணைக்கு வைத்துக் கொள்வாள். எரிக்கும் பிணங்களுக்கு யார் உதவியையும் நாடியதில்லை இதுவரை. நடுராத்திரிவரை எரியும் பிணத்தோடு தனியாக மல்லுக் கட்டுவாள். அதிலும், நோய் வந்து மாத்திரை மருந்துகள் சாப்பிட்டு இறந்து போன பிணங்களை எரிப்பதென்றால் விடியற்காலை கூட ஆகிவிடும். சீக்கு வந்த பிணங்கள் சீக்கிரம் எரிவதில்லை. கொழுத்துப் பெருத்த பிணங்கள் என்றால் மூன்றே மணிநேரத்தில் சாம்பலாகி விடும். நாரும் நரம்புமாம் இருக்கும் கிழட்டுப் பிணங்கள்தாள் உயிரை வாங்கும். அவற்றின் தசைநார்கள் அவ்வளவு சீக்கிரம் எரியாது. பல நேரங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கட்டையிலிருந்து எரியும் பிணங்கள் சரிந்து கீழே விழும். வெந்தும் வேகாமலும் கிடக்கும் அதை மீண்டும் துடுப்புக் கொம்பால் குத்திக் கிழித்து எரிதழலில் தள்ள வேண்டும். குளிர்காலத்தில் எரிப்பதென்றால் பரவாயில்லை. வெயில் காலத்துப் பிணங்களை எரிப்பது சிரமமானது. அனல் ஆளை வாட்டும். கசகசவென்று வியர்த்துப் புடவை ஜாக்கெட்டெலாலாம் நனைந்து போகும். பிணம் வெடித்து வேகும் நெடி, மூக்கிலும் வாயிலும் நுழைந்து மண்டையைக் குடையும். சுட்ட கறியின் வாசம் பத்து நாளுக்கு ஆளை விட்டுப் போகாது. 

அதுவரை இருண்டிக் கொண்டிருந்த வானம் மெல்ல வழி வாங்கியது. கொஞ்ச நேரத்தில், கலக்கா அறுவடைக்குப் பின்னான தும்பைப் பூக்கள் முளைத்த நிலமாய் வெள்ளை வெளேரென்று பகல்போல் மாறியது. மஞ்சள் வெயிலும் காய்த் தொடங்கியது.

 சடங்கு முடித்துவிட்டு பெரும்பாலான சனங்கள் வீட்டிற்கே போய் விட்டிருந்தனர். சில இளைஞர்களும் உறவுக்காரப் பெண்களும் மட்டுமே அம்சாவுக்குத் துணையாக நின்றிருந்தனர். யார் வழியாகவோ தகவல் தெரிந்து கொண்ட பஞ்சாயத்துத் தலைவர், ஏழெட்டு ஊர்க்காரர்களோடு விரைந்து வந்து கொண்டிருந்தான். அவர்கள் வருவதைப் பார்த்தும் பொருட்படுத்தாமல் தன் வேலையில் விறுவிறுப்பாக இருந்தாள். அதற்குள் பாதி எரிந்து விட்டிருந்த கிளியம்மாவின் உடல் வெடித்து பட் பட்டெனச் சத்தமிட்டது. 

“ஏய், இந்தாம்மா அம்சா, நிப்பாட்டு! எவ்ளோ கொழுப்பிருந்தா இந்த வேலயப் பாப்ப?  உன்ன என்னா பண்றன் பாரு இப்ப” சொல்லிக் கொண்டே கையை ஓங்கியபடி அவளருகே ஓடினான் ஊர்த் தலைவர். அப்போதும் துடுப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவளாய் எரிதழலை நோக்கிப் பாய்ந்தாள் எவரையும் திரும்பிப் பார்க்காமல். 

நரம்புகள் வெந்து வெடித்ததினால், படுத்திருந்த பிணம் புடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தது. ஓங்கிய கையைக் கீழே போட்டவர்களாய் வாயடைத்துப் பார்த்தனர் அந்தக் காட்சியை. உட்கார்ந்த பிணத்தின் மார்பில் துடுப்புக் கோலால் ஓங்கி அடித்துக் கிடத்தினாள். உக்கிரமான அம்சாவின் உருவத்தையும், அவள் கையிலிருந்த உலக்கைப் போன்ற துடுப்பையும், பிணத்தை அடித்துக் கிளர்த்திய அவளது தைரியத்தையும் கண்ட பஞ்சாயத்துத் தலைவரும் உடன் வந்தவர்களும் வியர்த்துப் போனவர்களாய்  அப்படியே பின்வாங்கினர். 

***

பாரத் தமிழ் – வேலூர் மாவட்டம், கெம்மங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். குழந்தைகள் நலன் சார்ந்து இயங்கி வரும் இவர், ஆபத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கான குழந்தைகளை மீட்டிருக்கிறார். சிறார் சிறையில் பணிசெய்த அனுபவம் பெற்றவர். வரலாற்று ஆய்வாளர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘நிலமற்றவனை நனைக்கும் மழை’ ‘மரணத்தைச் சுமந்தலையும் எறும்பு’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் ‘டாஃபி’ ‘பொலி எருமை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.மின்னஞ்சல்: bharaththamizhselvi@gmail.com