Home Blog Page 8

தேசியம் பற்றிய அம்பேத்கரின் கோட்பாடும்; விமர்சனங்களும்!

ரூபன் சிவராஜா

சாதி ஒழிப்பு | சமூகநீதி | விடுதலை| சமத்துவம்

ம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar: 1891–1956) எனும் பேராளுமை குறித்தும் அவருடைய கருத்தியல், கோட்பாடு, தத்துவம், தலைமைத்துவப் பண்பு, சமூகநீதிக் களம், அரசியற் செயற்பாடுகள் குறித்துப் அறிவதற்கும் விவாதிப்பதற்கும் பெரும் பரப்புகள் உள்ளன. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சட்டமேதை, நவீன இந்தியாவின் தேச உருவாக்கச் சிற்பிகளில் ஒருவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டங்களை நெறிப்படுத்திய புரட்சியாளர் எனவாகப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட ஆளுமை. புரட்சியின் அடையாளமாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் தத்துவ, கோட்பாட்டுக் குரலாகவும் வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட ஆளுமை அவர். இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டம், தேச உருவாக்கத்திலும் அம்பேத்கரின் பங்கு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கான தலித் தலைவர்கள், பிரதிநிதிகளின் எதிர்வினைகள், அவரது தேசியவாதக் கருத்துக்களை மீளாய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் உட்படுத்துவதற்குரிய வெளிகளைச் சமகாலத்தில் ஏற்படுத்தியுள்ளன. 

அம்பேத்கரின் சிந்தனைகள், குறிப்பாக அவரது தேசியம், தேசம் குறித்த பார்வைகள் வெறும் கருத்துக்கள் அல்லது அபிப்பிராயங்கள் மட்டுமல்ல. அவை மாறிவரும் சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழமைவிலும் வரலாற்றுப் போக்கிலும்; பேண்தகு (Sustainable) கூட்டுச் சித்தாந்தத்தின் (Collective ideology) வெளிப்பாடாகத் திகழ்வன. நவீன இந்தியச் சித்தாந்தங்களில், அம்பேத்கரே தேசியம், தேசம் குறித்த தீர்க்கமான கோட்பாட்டினை உருவாக்கியதோடு, இந்தியச் சூழலுக்கு ஏற்ப அவற்றை விமர்சனப்பூர்வமாகப் பயன்படுத்த முயன்ற முதன்மைச் சிந்தனையாளர். தேசியம் குறித்த அம்பேத்கரின் நிலைப்பாடுகள், கருத்தியல்கள் மீது இந்தக்கட்டுரை கவனம் குவிக்கின்றது. அதற்கு அடிப்படையாக தேசம் (Nation), தேசியம் (Nationalism), அரசு (நாடு – State), தேசிய அரசு (Nation-states) குறித்த புரிதல்கள் அவசியப்படுகின்றன.

தேசம், தேசியம், அரசு (நாடு), தேசிய அரசு 

இன்றைய உலக நடைமுறையில் ஐ.நா அவையில் உறுப்புரிமை வகிக்கும் நாடுகள் அனைத்தும் தேசிய அரசுகளாகவே கருதப்படுகின்றன. இருந்தபோதும் அவற்றில் சில மட்டுமே தமது மக்களிடை ஒரு தேசிய இனத்தினை மட்டும் கொண்ட நாடுகளாகும். தேசிய அரசு என்பது, மக்கட்தொகை முழுவதும் அல்லது மக்களின் பெரும்பகுதி ஒரேயொரு ஆள்புலத்தை அல்லது நிலப்பரப்பினையும் (Terrotority), ஒரே மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஆட்சி அலகினைக் கொண்ட அமைப்பாகும். 20ஆம் நூற்றாண்டில்தான் ‘தேசிய அரசு’ என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. குறிப்பாக ஐ.நா உறுப்புநாடுகளில் பல்வேறு மாநில அரசுகளைக் கொண்ட அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை வேறுபடுத்தி விளிக்கும் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டது. சிறுபான்மையினர் மீதான அரசியற் கவனம் (Political Attention) பல நாடுகளில் அதிகரித்துவரும் புறநிலையில் ‘தேசிய அரசு’ என்ற சொல்லாடல் குறைந்தளவு பயன்பாட்டுக்குரியதாக மாற்றியுள்ளது. ஒரு அரசு ஒரேயொரு தேசிய இனத்தையோ அல்லது ஒரேயொரு இனக்குழுவையோ மட்டும் கொண்டிருக்காதவிடத்து ‘தேசிய அரசு’ என்ற விளிப்பு பொருத்தமற்றதாகுகின்றது. 

வரலாற்று ரீதியாகப் பார்க்கின் ஒரு தேசிய இனம் (சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதன் மூலம், By asserting the right to self-determination) தன்னைத் தானே ஆளும் உரிமை ஊடாகத் தனி அரசினை (தேசிய அரசு) அமைக்க முடியும் என்ற சிந்தனை 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம்பெற்றது. ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சிக்கான தொடக்கத்தினையும் இது தோற்றுவித்தது. 1789இன் பிரெஞ்சுப் புரட்சி அதனை உச்சமாக வெளிப்படுத்திப் பாதையைச் செப்பனிட்டது. இரத்தம் சிந்திய புரட்சியின் வழி மக்கள் மன்னராட்சியை வீழ்த்தி அதற்குச் சாவுமணி அடித்தனர். மக்களாட்சிக் கருத்துகளும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிற நாடுகளுக்கும் படிப்படியாகப் பரவின. 

தேசிய அரசு என்ற எண்ணக்கருவினது ஜனநாயகமயமாக்கலுக்கான அடித்தளமாக ஆள்புலம் (நிலப்பரப்பு) ஒரு தேசிய இனத்தினைக் கொண்டிருக்கவேண்டும் அல்லது அந்த நிலப்பரப்பில் வாழக்கூடிய அனைத்து இனக்குழுக்களும் சமத்துவத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வரலாற்றுப் போக்கில் அத்தகு சமமாக நடத்தப்படுதல் நிகழத்தவறிய அம்சமாகும். பெரும்பான்மை இனங்களும் குழுமங்களும் சிறுபான்மையினரைக் கருத்திலெடுக்காது அதிகாரத்தைத் தமது கையிலெடுத்தன, தமக்கான தேசிய அரசுகளை நிறுவின. இன, மொழி, சமய, பண்பாட்டு வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் வாழ்ந்த நாடுகளில் முரண்பாடுகள் தோன்றின. அந்த முரண்பாடுகள், வன்முறைகள், ஒடுக்குமுறைகளின் வழியாக பெரும்பான்மையினராற் கையாளப்பட்டன. 

***

தேசம் (Nation) என்பது பல பொருள்களை உடையது. பொதுவான அல்லது கூட்டுச் சமூக பண்பாடு அடையாளம் கொண்ட மக்கள், அல்லது அத்தகு அடையாளம் கொண்ட மக்களை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு தேசம் எனப்படுகிறது. ‘Nation’ பிரெஞ்சுச் சொல். அது ‘Natio என்ற இலத்தீன் அடியிலிருந்து உருவானது. அதன் பொருள் ‘பிறப்பு’. காலப்போக்கில் அச்சொல், பண்பாட்டு அடையாள அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ‘தேசம்’ என்ற கருத்தாகவும் பரஸ்பர நம்பிக்கை, ஒருமைப்பாட்டு உணர்வினை (கூட்டுணர்வு) அடிப்படையாகக் கொண்ட வரலாற்று ரீதியான பண்பாட்டின் அர்த்தத்தைக் கொடுக்கின்ற அகநிலைப்பட்ட ‘தேசம்’ எனும் கருத்தாகவும் மாற்றமடைந்தது (பயன்படுத்தப்பட்டது). 

மொழி, பண்பாட்டு அம்சங்கள் மற்றும் அதிகம் அகநிலைப்பட்ட கூட்டுணர்வுகளின் அடிப்படைகளோடு தேசியவாதம் (Nationalism) ஒரு அரசியல் இயக்கமாகவும் வளர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சிக் காலங்களில் ‘தேசம்’ என்பது பொதுமையான சட்டங்களின் கீழ், சட்டமன்றத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ‘அரச அதிகாரம்’ மக்களாட்சி முறைமைக்குள் கொண்டுவரப்பட்டது. உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜெர்மன் போன்ற நாடுகள் அவற்றின் எல்லைகளுக்கு வெளியில் வாழ்ந்த மக்களையும் தேசிய இனங்கள் என்று கருதின. ஹிட்லர், மிக்லோஸ் ஹோர்தி (Miklós Horthy – ஹங்கேரி) போன்றவர்கள் எல்லைகள் தாண்டிய பேரினமாக தமது இனங்களை ஒருங்கிணைக்கும் முனைப்புக் கொண்டிருந்தனர்.

18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி, ‘தேசிய அரசு’ கருத்தியலும் உருவாக்கமும் முதன்மை அரசியல் அமைப்பாக உருப்பெற்றது. சோவியத் ஒன்றிய வீழ்ச்சியின் பின் (செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, உக்ரேன், ஜோர்ஜியா, அர்மேனியா, போஸ்னியா, மொன்ரநீக்ரோ) புதிய தேசிய அரசுகள் (தனி அரசுகள்) உருவாகின. யுகோஸ்லாவியா உடைவினால் அதன் தேசிய இனங்கள் மத்தியில், குறிப்பாக போஸ்னியாவில் பாரிய மோதல்கள் ஏற்பட்டன. அதேவேளை நிலைபெற்றுவிட்ட ஜனநாயக நாடுகளில் தேசியத்திற்கான முக்கியத்துவம் அருகவும் தொடங்கிற்று. புலப்பெயர்வு, குடியேற்றம் நாடுகளை அதிகளவில் பல்லின தேசங்களாகவும் தேசியங்களாகவும் (Multinational States, Nations and Nationalities) மாற்றியுள்ளன. ஒப்பீட்டளவில் தேசிய அரசுகளினது உள்ளார்ந்த அர்த்தம் சில பகுதிகளில் வெகுவாகக் குறைந்துள்ளன. சில பகுதிகளில் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக அவற்றின் நடைமுறைப் பெறுமதி குறைந்துள்ளன.

அம்பேத்கரின் தேசியவாதம்

தேசியவாதம் குறித்த அம்பேத்கரின் பார்வை வேறுபட்டது. அகவயப்பட்ட அல்லது கோஷவயப்பட்டது அல்ல. அது கோட்பாட்டு ரீதியான ஆழமும் நுண்ணறிவின் பாற்பட்டதும், விமர்சனபூர்வமானதுமாகும். அரசியலமைப்புச் சபையின் இறுதி உரையில் (25.11.1949) இந்தியத் தேசியம் தொடர்பான அம்பேத்கரின் துல்லியமான விமர்சனம் வெளிப்பட்டது. ‘இந்தியா சமூக மற்றும் உளவியல் அடிப்படையில் இன்றும் ஒரு தேசமாக இல்லை, ஆயிரக்கணக்கான சாதிகளால் பிளவுபட்ட ஒரு சாதியத் தொகுப்பாகவே உள்ளது (Collection of castes divided by ‘thousands of castes’ ) நாம் ஒரு தேசம் என்று நம்புவதன் மூலம், நாங்கள் ஒரு பெரும் மாயையைப் (Great Delusion) பேணிக்கொள்கிறோம். சாதிய உணர்வு அடிப்படையிற் தேசிய விரோதமானது. ஏனெனில் அது ஒருமைப்பாடுமிக்க வாழ்வமைவதற்குத் தடையாகச் செயற்படுகின்றது என்றார்.

பல ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிந்த மக்கள் எப்படி ஒரு தேசமாக இருக்க முடியும்? நாம் சமூக மற்றும் உளவியல் உணர்வில் இன்னும் ஒரு தேசமாக இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தால் நமக்கு நல்லது. அப்போதுதான் நாம் ஒரு தேசமாக மாறுவதின் அவசியத்தை உணர்ந்து, அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றித் தீவிரமாகச் சிந்திப்போம். சமூக வாழ்விற் சாதிகள் பிரிவினையை ஏற்படுத்துவதால் அவை முதலிற் தேச விரோதமாக உள்ளன. சாதிகள் தமக்கிடையேயான பொறாமைகள், விரோதங்களைக் கொண்டியங்குவதால் அவையும் தேச விரோதமாக உள்ளன.’

அவர் இந்தியாவின் இருப்பை நிராகரிக்கவில்லை. ஆனால் அது உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு தேசம் என வாதிட்டார். சமூக ஒருமைப்பாட்டினை உணரச்செய்வதே ஒரு உண்மையான தேசத்தை (Real nation) உருவாக்குவதற்கான முதற்படி என அவர் நம்பினார். ஒரு தேசம் ‘சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். அந்தச் சகோதரத்துவத்தினை சாதிய முறையை ஒழிக்காமற் சாத்தியப்படுத்த முடியாது என்றும் வாதிட்டார். அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதை அடுத்து இந்தியா முரண்பாடுகளின் சூழலுக்குள் நுழையும், அது ‘ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு’ என்ற அடிப்படையில் ஜனநாயக அரசியற் சமத்துவத்தினைக் கொண்டிருந்தாலும், சமூக மற்றும் பொருளாதார அசமத்துவம் தொடரும் என்பதைச் சுட்டிக்காட்டினார். அம்பேத்கரின் பார்வையில், ஒரு தேசமாக இருப்பது என்பது ‘சமூகக் கூட்டுணர்வினை’ குறிக்கின்றது. சாதி ரீதியிலான பாகுபாடுகள்; நீக்கப்பட்டு, சமூக, பொருளாதார மற்றும் அரசியற் சமத்துவம் நிலைநிறுத்தப்பட்ட பின்னரே உண்மையான தேசிய உணர்வு உருவாகும் என்பது அவரது வலியுத்தலாக இருந்தது. இது இந்தியா முழுவதும் நிலவிய சமூகப் பிளவுகளை நோக்கிய அம்பேத்கரின் விமர்சனத்தின் ஒரு பகுதியாகும். 

சாதி ஒழிப்பு: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

ஒரே நிலத்திலும் ஒரே நிர்வாக எல்லைகளுக்குள்ளும் (ஆள்புலம் – Territory: Geographical and administrative boundaries) வாழ்வது மட்டும் ஒரு மக்களை ‘தேசம்’ என்று ஆக்கிவிடாது. தேசம் என்பது நாடு (State) என்ற அர்த்தத்தில் அல்லாமல் ‘Nation’என்ற அர்த்தத்திலேயே இக்கட்டுரையிற் பயன்படுத்தப்படுகின்றது. சாதியக் கட்டமைப்புகள், குறிப்பாக சமூகத்தின் படிநிலைப் பிரிவுகள், ஒரு தேசத்திற்கு அவசியமான கூட்டுணர்வு (Consciousness of kind) உருவாகுவதைத் தடுக்கின்றன என்று அவர் திடமாக நம்பினார். உண்மையான தேசம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும். அவை சாதிய அமைப்போடு இணங்கிப்போக முடியாத அம்சங்கள் என்பதை ‘Annihilation of Caste’ என்ற நூலில் வலியுறுத்துகிறார். தேசியம் குறித்த அவருடைய நுண்பார்வையின் அடிப்படை இதுதான். அதாவது தேசியம் என்பது மனிதர்களைக் கூட்டுணர்வோடு ஒன்றுபடுத்தவேண்டியது, ஆனால் அதற்கு முரணாக சாதியப் படிமுறைகள் பிளவுபடுத்துகின்றன. எனவே சாதிய அமைப்பு முறை தேசிய விரோதமானது என்பதை உடைத்துப் பேசினார்.

அம்பேத்கர் அவர்களுடைய ‘சாதி ஒழிப்பு’ நூல் மிக முக்கியமானது. முதலாளித்துவ உலகில் கொம்யூனிச அறிக்கை (Communist Manifesto) எத்தகு முதன்மையானதோ, அதே வகையில் இந்திய சாதிய ஒழிப்புப் போராட்டங்களுக்கு அம்பேத்கரின் இந்நூல் அவசியமானது என்று கூறியுள்ளார் ‘The Persistence of Caste’ நூலின் ஆசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே. 1936 இல் எழுதப்பட்ட இந்தநூல், இந்து மதத்தையும் அதன் சாதிய அமைப்பையும் மிகத் துணிச்சலாகக் கண்டிக்கிறது. படிநிலையான மற்றும் சமத்துவமற்ற சமூக அமைப்பை அங்கீகரிக்கும் இந்து வேதங்கள் குறித்து ஒரு அறிவார்ந்த விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. நவீன இந்தியாவில் சாதி எவ்வாறு நிலைத்திருக்கிறது என்பதையும் மதவாதம் மற்றும் அறியாமையினால் சூழப்பட்ட அரசியல் போராட்டத்தில், அம்பேத்கரின் அறிவாற்றலும் புலமையும் எவ்வாறு வெளிச்சம் பாய்ச்சின என்பதையும் அந்நூலின் வழி பகுத்துணரலாம்.

அம்பேத்கரின் தேசியவாதம் சமூகத்தை அடித்தளமாகக் கொண்டது. உண்மையான தேசியவாதம் என்பது நாட்டின் மீதான பற்றுணர்வை மட்டும் மையப்படுத்தியதல்ல, சமூகத்திலுள்ள அனைத்து மக்கள் குழுமங்களுக்கும் சமமான உரிமைகளை வழங்குவதற்கான கூட்டு நெறியியல் பொறுப்பையும் அது உள்ளடக்கியது என அவர் நம்பினார். அவரது பார்வையில், இந்தியா ஆழமாக வேரூன்றிய சாதியப் படிநிலைகளைக் கொண்ட வர்க்க அமைப்பின் மீது கட்டப்பட்ட ஒரு சமூகமாக இருந்தது. இது சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் முரணானது. குறிப்பாக சமத்துவமும் சகோதரத்துவமும் ஜனநாயகத்திற்கு அவசியமான இரு முக்கியக் கொள்கைகள் என்பதை வலியுறுத்திய அவர் சாதியச் சமூக அமைப்பு ஜனநாயகத்திற்கும் பெரிய தடையெனச் சுட்டிக்காட்டினார்.

தேச உருவாக்கத்திற்கான அடிப்படை நிபந்தனைகள்

பெரிய சமூகக் குழுக்கள், குறிப்பாக தலித்துகள், அடிப்படை மனித உரிமைகளில் இருந்து வஞ்சிக்கப்பட்டவர்களாக இருக்கும் வரை – பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியிலிருந்து அரசியல் ரீதியாக விடுபட்டாலும் கூட இந்தியா உண்மையான ஒரு தேசமாகக் கருதப்பட முடியாதது என்றும் அவர்; வலியுறுத்தினார். தேசியவாதம் என்பது கொலனித்துவ ஆதிக்கமான வெளி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அதேவேளை சாதிய, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென்று கருதினார்.

அரசியல் விடுதலையில் அதாவது பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிரான சுதந்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்திய இந்திய கொங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை போதுமானதல்ல எனவும் சில நேரங்களில் அதன் அணுகுமுறை தவறானதும்கூட என அவர் வாதிட்டிருக்கின்றார். அது சுதந்திரத்தின் சமூக அடித்தளத்தை கவனத்திலெடுக்கவில்லை என்பது அவரது நிலைப்பாடு. சமூக சமத்துவமும் சமூகத்தில் உள்ள கூடுதற் பலவீனமான குழுமங்களின் பாதுகாப்பும் தேச உருவாக்கத்திற்கான (Nation Building) அடிப்படை நிபந்தனைகளாக அவர் முன்வைத்தார். கொங்கிரஸிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தார் என்பதோடு பெரும்பான்மை அலையையும் அவர் ஆதரிக்கவில்லை. இந்தியத் தேசிய கொங்கிரஸின் தேசிய விடுதலைப் போராட்டத்திற் கலந்துகொள்வதில்லை எனும் அவரது தீர்மானம் பல சமயங்களிற் தேசிய விரோதமாகப் புரிந்துகொள்ளப்பட்டது. கொங்கிரஸ் தலைமை சமூகத்தின் உயரடுக்குகளை முதன்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தியது. பிரித்தானிய வெளியேற்றத்திற்குப் பின் – சமூக மறுசீரமைப்பு நிகழாத புறநிலையில் – இந்த உயரடுக்குச் சமூகங்கள் தலித் மக்கள் மீது ஒடுக்குமுறைகளைத் தொடர்வதற்குரிய வெளியை வழங்கும் என எச்சரித்தார். ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கனை வழங்கக்கூடியதும் அரசியல் உரிமைகளையும் தகுந்த நிறுவனமயப்பட்ட வரைபுகளை உறுதி செய்வதும் முக்கியமெனக்கருதினார். அவற்றுக்கு உரிய கட்டமைப்புசார் (Structural) மாற்றங்கள் இல்லாமல், கொலனித்துவத்திலிருந்து பெறப்படும் விடுதலை மேலோட்டமானதாகவே இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய இனம் (Nationality) மற்றும் தேசியவாதம் (Nationalism) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைத் தெளிவாக விளக்குகிறார். ‘தேசிய இனம்’ என்பதை, பொருளாதார மற்றும் சமூக வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றாக இணைக்கும், அதே வேளையில் ஏனைய குழுக்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு உளவியல் ரீதியான பிணைப்பு மற்றும் கூட்டுணர்வு என்று விவரிக்கிறார். அந்த உணர்வானது ஒரு நிலப்பரப்பு அடிப்படையுடனும், ஒரே தேசமாக வாழ வேண்டும் என்ற அரசியல் அபிலாசையுடனும் இணையும்போது ‘தேசியவாதம்’ உருவாகிறது என்கிறார். மேலும் அது சாதி, மொழி அல்லது மதம் என எதனையும் பொருட்படுத்தாமல் அனைத்துக் குழுக்களையும் சமமானவர்களாக அங்கீகரிப்பதையே முன்நிபந்தனையாகக் கொண்டுள்ளது.

கொலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு – சட்ட நிர்வாகத்திற்கு ஆதரவு 

சமூகப் பிரச்சினைகளை, குறிப்பாகச் சாதிய முறைகளைக் கையாளுவதிற் பிரித்தானிய ஆட்சியாளர்கள் காட்டிய தயக்கத்தை மிகக் கடுமையாக விமர்சித்தார். கொலனித்துவ சக்திகளின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய போதிலும், சமூக விவகாரங்களில் பிரித்தானியர் கடைப்பிடித்த ‘நடுநிலை’ வகிபாகம் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை தொடருவதற்குக் காரணமாக அமைந்ததாக அம்பேத்கர் கருதினார். ஆயினும் இந்தியத் தேசிய கொங்கிரஸ் மீதான அவரது விமர்சனம் மேலும் கூர்மை மிக்கதாக இருந்தது. ஏனெனில், கொங்கிரஸ் (தேசிய) தலைவர்கள் தலித்துகளின் அவலநிலையைக் காண மறுப்பதாக அவர் கருதினார். சமூகப் படிநிலையில் வரலாற்று ரீதியாகக் கடைநிலையில் வைக்கப்பட்டவர்களின் நலன்களைப் பாதுகாக்காத பட்சத்தில், உருவாகப்போகும் புதிய அரசுக்கு (சுதந்திர இந்தியா) சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்கமுடியாது என்பது அம்பேத்கரின் கருத்தாகும்.

அம்பேத்கர் சுயநல நோக்கங்களைக் கொண்டவர் என்றும், அவர் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்பட்டார் என்றும் சில தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டார். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தை எதிர்த்தவராகவும், உண்மையான தேசப்பற்று இல்லாதவராகவும் அவரால் அம்பேத்கர் சித்தரிக்கப்பட்டார். இத்தகு விமர்சனங்கள் ஒருதலைப்பட்சமானவை என்ற கருத்துகள் சமூக வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகின்றது. தலித் மக்களின் சமூகக் கட்டமைப்புச் சூழலை புறக்கணிக்கின்ற வகையிலான விமர்சனங்கள் இவை என்பதையும் ஆய்வுகள் சுட்டுகின்றன.

அம்பேத்கர் இந்தியாவின் சுதந்திரத்தை ஒருபோதும் எதிர்த்தவரில்லை. மாறாக நாட்டின் சுதந்திரம் என்பது சலுகை பெற்ற உயரடுக்கினருக்கு மட்டும் உரித்துடையதாக அல்லாமல், அனைத்து மக்களையும் அது எட்டவேண்டும் என்பதையே அவர் கோரினார் என்றும் பல ஆய்வாளர்களும் தலித் தலைவர்களும் எடுத்துரைத்துள்ளனர். அம்பேத்கரை விமர்சிப்பவர்களுக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள், அம்பேத்கரின் கருத்துக்கள் பரவலான முக்கியத்துவம் பெற்றுள்ளமையையே எடுத்தியம்புகின்றன. குறிப்பாக 1990 களில் உருவான அம்பேத்கர் கொள்கை சார்ந்த அரசியல் இயக்கங்களின் எழுச்சிக்குப் பின், இது மேலும் வலுவடைந்தது. இந்தியாவின் சமூகநீதி தொடர்பான வரலாற்று மற்றும் நவீன கால சவால்களைப் புரிந்து கொள்வதற்கு அம்பேத்கரின் சிந்தனைகள் மிகவும் அவசியமானவை என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

சமூக விடுதலை 

ஒத்துழைப்பு என்பது (Collaborating) பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தலித் உரிமைகளுக்காக அம்பேத்கர் அரசாங்கப் பதவிகளை ஏற்றதை ஷோரி விமர்சித்ததைக் குறிக்கிறது. சமூகக் கட்டமைப்பு சாதிய ஒடுக்குமுறையைக் குறிக்கிறது. அம்பேத்கரிசம் (Ambedkarite): அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைகளைப் பின்பற்றும் அரசியல் மற்றும் சமூகப் பார்வைகளைக் குறிக்கிறது. அம்பேத்கரின் தேசியம் சமூக விடுதலை (Social Liberation), சமத்துவத்தை இலக்காகக்கொண்டது. சமூக ஏற்றத்தாழ்வுகளைப் புறக்கணிக்கும் எந்தவொரு அரசும், அரசியல் சுதந்திரம் பெற்றிருந்தாலும், ஒரு ஜனநாயகச் சமூகமாக இருக்க முடியாது என்று அவர் கருதினார். விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான (காங்கிரஸ் போன்ற) இயக்கங்களை அவர் எதிர்த்தபோதிலும், சுதந்திரம், தேசியம் என்பதன் உண்மையான அர்த்தத்தை விரிவுபடுத்த அவரது விமர்சன நிலைப்பாடுகளும் பணிகளும் உதவின.

தேசியம் என்பது நாட்டை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து விடுவிப்பது மட்டுமல்ல, தேசத்திற்குள் இருக்கும் அனைத்து மக்களும் அச்சம், ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதுமே என்பதை அம்பேத்கரின் பார்வை தெளிவுறுத்துகிறது. உள்வாங்கல் அணுகுமுறை (Inclusive Approach), சமூகநீதியுடன் கூடிய இந்தியாவை உருவாக்குவதில் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராக அம்பேத்கர் திகழ்கிறார்.

விமர்சனங்களும் கேள்விகளும்

அம்பேத்கரின் கொலனியாதிக்க எதிர்ப்பு என்பது தேச உருவாக்கம் எனும் பெரும் இலக்கின் ஒரு பகுதி மட்டுமே. தலித் தலைவர் என்ற அடையாளம் மூலம் அவரை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்குகின்ற பிரயத்தனம் இந்தியச் சூழலில் நிகழ்ந்து வந்திருக்கின்றது. இது நவீன தேச உருவாக்கத்திற்கான செயற்களத்தில் அவர் உருவாக்கிய அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு நோக்குகளின் பரந்த பரிமாணங்களை இருட்டடிப்புச் செய்வதாகும். ஜனநாயகம், சமத்துவம், சமூக மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது தேசியவாதம், தேசம் குறித்த சிந்தனைகள் ஒரு முழுமையான கோட்பாட்டுப் பார்வையாக வடிமைக்கப்பட்டதாகும்.

இந்திய சமூகத்தையும் தேசியக் கருத்தியலையும் ஆழமான சவாலுக்கு உட்படுத்தினார், கூர்மையான பல கேள்விகளை எழுப்பினார். தேசம் என்றால் என்ன? இந்தியா ஒரு தேசமா? அல்லது ஒரு தேசமாக மாறிக் கொண்டிருக்கிறதா? இந்தியாவின் தேச உருவாக்கத்தின் தடைக்கற்கள் எவை? ஒரு தேசம் எப்படி உருவாகிறது? இந்தியாவுக்கு எவ்வகையான தேசியவாதம் பொருத்தமானது உட்பட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு கோட்பாடு, தத்துவம், அரசியல், நடைமுறை விளக்கங்களையும் வழங்கினார்.

அவரது பார்வையில், இந்தியா பல கலாச்சாரங்கள், பல இனங்கள், பல மதங்கள் கொண்ட நாடு. அத்தோடு சமூக ஒழுங்கின் ஆழமான கட்டுப்பாடுகளால் நிரம்பியிருந்தது. இந்த சமூகக் கட்டமைப்பு மக்கள் குழுமங்களுக்கிடையில் எதிர்மறை உணர்வுகளை, பொறாமையை, சமூகக் கூட்டுச்சிந்தனையின் பற்றாக்குறைகளை உள்ளிருத்தியிருந்தன. தேசத்தை விட சாதிய உணர்வுகளுக்குக் அதிகம் கட்டுப்பட்டிருந்தன. அம்பேத்கரின் கருத்துப்படி, இந்துக்கள் ஒரு சமூகத்தை உருவாக்க முடிந்தாலும், உண்மையான அர்த்தத்தில் ஒரு தேசத்தினை உருவாக்க முடியாது என்பதாகும்

தேசியம் – விளிம்புநிலைத் தேசியம்

அம்பேத்கர் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பார்வையில் விளிம்புநிலைத் தேசியம் (Subaltern Nationalism) எனும் ஒரு புதிய தேசிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார். விளிம்புநிலைத் தேசியவாதக் கருத்தியலானது, சமூக அடையாளம், பொருளாதார மறுபங்கீடு (Economic Redistribution) மற்றும் அரசியற் பிரதிநிதித்துவம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கியது. அவருக்கு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் பிரித்தானிய ஆட்சியை அகற்றுவது மட்டுமல்ல, இந்தியாவின் உள்ளார்ந்த சமூகக் கட்டமைப்புகளில் ஆழமாகப் பதிந்திருந்த ஒடுக்குமுறை, அநீதி, தீண்டாமை மற்றும் சமத்துவமின்மையை முறியடிப்பதையும் அடிப்படை இலக்காகக் கொண்டது. விளிம்புநிலைத் தேசியம் என்பது மேற்தட்டு வர்க்கத்தினரால் முன்னெடுக்கப்படும் அதிகாரத்துவத் தேசக்கட்டமைப்பிற்கு மாற்றாக, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை முதன்மைப்படுத்தும் ஒரு கருத்தியலாகும். மேல்தட்டு தேசியத்திற்கு எதிரான பார்வை எனவும் வரவிலக்கணப்படுத்தலாம்.

பொதுவாகத் தேசியம் என்பது ஒரு நாட்டின் எல்லை, மொழி, மத, பண்பாடு, அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையும். ஆனால், விளிம்புநிலைத் தேசியம் என்பது அந்தப் பாதுகாப்பிற்குள் ஒளிந்திருக்கும் அல்லது உள்ளுறைந்திருக்கும் சாதி, வர்க்கம் மற்றும் பாலினப் பாகுபாடுகளைக் கேள்வி கேட்கிறது. ‘விடுதலை என்பது யாருக்கானது என்ற கேள்வியே இதன் அடிப்படை. தமிழகத்தைப் பொறுத்தவரை விளிம்புநிலைத் தேசியம் முக்கியமாக இரண்டு தளங்களில் செயல்படுகிறது எனலாம். ஒன்று திராவிடத் தேசியம். இது வடமொழி, பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகத் தமிழர்களின் அடையாளத்தை முன்னிறுத்தியது. இதனுள்ளும் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் குரல்கள் எந்தளவிற்கு உள்வாங்கப்பட்டன என்ற விமர்சனங்கள் நிலவுகின்றன. மற்றையது ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்கள். பெரியார், அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் முன்வைத்த தேசியம் இதில் முக்கியமானது. அவர்கள் சாதி ஒழிப்பு, சமூகநீதி இல்லாத சுதந்திரம் முழுமையான தேசமாகாது என்ற நிலைப்பாட்டினை முன்வைத்தவர்கள். இந்திய அளவில் காயத்ரி ஸ்பிவாக் (Gayatri Spivak) மற்றும் ரணஜித் குகா (Ranajit Guha) போன்றோர் இக்கோட்பாட்டை வளர்த்தெடுத்தனர். வரலாற்றின் கீழடுக்கிலிருந்து (History from below) சமூகத்தைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினர். 

மார்க்சிய மற்றும் மேற்கத்திய நவீன சிந்தனையாளர்களின் தாக்கம்

தேசியக் கருத்தாக்கம் தொடர்பான அம்பேத்கரின் நிலைப்பாடுகளில் மேற்கத்திய நவீன சிந்தனையாளர்களான கெல்ல்னர், அன்டர்சன் மற்றும் ஹாப்ஸ்பாம் (Ernest Gellner, Benedict Anderson, and Eric Hobsbawm) ஆகியோரின் தாக்கம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. தேசியவாதம் தொடர்ச்சியான சமூக ஒருங்கிணைப்பைக் கோருகின்றது என்ற கெல்ல்னரின் கருத்தும் – தேசத்தினைக் ‘கற்பனை செய்யப்பட்ட சமூகமாக’ விளக்கும் அன்டர்சனின் கோட்பாடு – தேசிய மரபுகளை உயரடுக்கினரே உருவாக்குகின்றனர் என்பதை விளக்கும் ஹாப்ஸ்பாமின் புரிதலுமான பார்வைகள் அனைத்தும் அம்பேத்கரின் ஆய்வுகளில் பிரதிபலிக்கின்றன. 

மார்க்சிய அடிப்படைகளையும் அம்பேத்கரின் தேசியக் கோட்பாடுகளிற் தரிசிக்கலாம். மார்க்சியம், தேசியத்துவத்தை ஒரு முதலாளித்துவச் சித்தாந்தமாகவே (Bourgeois ideology ) பார்க்கின்றது. அது வர்க்கச் சமூகங்களுக்கிடையிலான வேறுபாடுகளை ஒளித்து, முதலாளித்துவ சக்திகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான அடிப்படை மோதலிலிருந்து கவனத்தைத் திருப்பப் பயன்படும் கருவியாகவவே கருதுகின்றது. ஒட்டுமொத்தமாக தேசியவாதம் என்பது வர்க்க முரண்பாடுகளை இருட்டடிப்புச் செய்யும், முதலாளித்துவ அதிகாரத்தை நியாயப்படுத்தும், தொழிலாளர் வர்க்கத்தினைத் தேசிய எல்லைகளின் அடிப்படையில் பிளவுபடுத்தும். அதேவேளை மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ், தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியங்களைப் பலவீனப்படுத்தும் போதும், சர்வதேச தொழிலாளர் ஒற்றுமைக்கான வெளிகளை உருவாக்கும் போதும் அவை முற்போக்கான வகிபாகத்தைக் கொண்டிருக்க முடியும் என்று கருதினர். அந்த அடிப்படையில் அவற்றை அங்கீகரித்துள்ளார்கள்.

வர்க்கப்போரபட்டம் – உற்பத்தி உறவுகள்

மார்க்சியத்தின் கோட்பாட்டுச் சாரம் வர்க்கப் போராட்டமாகும். அதன்படி உற்பத்தி சாதனங்களுடனான மனிதர்களின் உறவின் அடிப்படையில், சமூகம் பல்வேறு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம், உற்பத்திச் சாதனங்களைக் கட்டுப்படுத்துவதோடு, பிழைப்பிற்காகத் தனது உழைப்பை விற்கும் தொழிலாளர் வர்க்கத்தை (Proletariat) சுரண்டுகிறது. இந்தச் சூழலில், தேசியம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தால் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுவது எனும் உண்மையான பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு காரணியாகவே பார்க்கப்படுகிறது

கொலனித்துவத்திற்கு உட்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட தேசங்களின் தேசிய விடுதலை இயக்கங்கள், ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டங்களிற் காத்திரமான முக்கியப் பங்காற்ற முடியும். ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கத்திற்குச் சவால் விடுப்பதன் மூலம், இந்த இயக்கங்கள் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைவதற்கும், சுரண்டலை எதிர்ப்பதற்கும் உரிய சூழலை உருவாக்குகின்றன. இத்தகைய இயக்கங்கள் சமத்துவத்திற்கான (Socialism) உலகளாவியப் போராட்டத்திற்குப் பங்களிக்கும் ஆற்றல் கொண்டவை என்று மார்க்ஸும் ஏங்கெல்ஸும் கருதினர். தேசிய விடுதலை இயக்கங்களின் வெற்றி, தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சமதர்ம சமூகத்தை அமைப்பதற்கான களத்தை உருவாக்குகிறது என்பதும் மார்க்சின் சிந்தனையாகும். 

இந்த அடிப்படையில் இந்திய விடுதலைப் போராட்டத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டால், தேசியம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக (வர்க்க) போராட்டத்திற்கு இடையிலான சிக்கலான உறவைப் புரிந்துகொள்ளலாம். 1947 இல் பிரித்தானிய ஆட்சி முடிவுக்கு வரக் காரணமான இந்திய விடுதலைப் போராட்டம், கொலனியாதிக்கத்திற்குச் சவால் விடுத்த ஒரு தேசிய விடுதலை இயக்கமாகும். இது பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களைத் தேசிய அடையாளத்தின் கீழ் ஒன்றிணைத்தது. கொலனித்துவ ஆட்சிக்கு எதிராக கூட்டுணர்வு நிலவியபோதிலும், இந்தியச் சமூகத்திற்குள் வர்க்க, சாதியப் பிரிவினைகள் தெளிவாகத் தெரிந்தன. இந்தத் தேசிய கொங்கிரஸ் இயக்கத்தின் தலைமை அம்பேத்கர் கூறியது போல உயரடுக்குகளின் கைகளில் இருந்தது. ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களைக் காட்டிலும் தங்கள் சொந்த வர்க்க நலன்களுக்கே அவர்கள் முன்னுரிமை அளித்தனர் என்பதை மார்க்சியப் பார்வையாக நோக்கலாம். சுதந்திரத்திற்குப் பிறகும், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முதலாளித்துவ வர்க்கமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்பட்டவர்களும் விவசாயிகளும் தொடர்ந்து சுரண்டலுக்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாகினர். தேசிய விடுதலை இயக்கங்களின் வழிநடத்தலிலும் தேசியம் என்பது முதலாளித்துவ நலன்களுக்கே சேவை செய்யக்கூடும் என்ற மார்க்சியப் பார்வையை இது பிரதிபலிக்கிறது.

ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைக் கோரிக்கைகள்

ஆதிக்கச் சாதிகள் தலித்துகளுக்கு உண்மையான அரசியல் அதிகாரத்தைத் தாமாக முன்வந்து ஒருபோதும் வழங்கமாட்டார்கள் என்று அம்பேத்கர் வாதிட்டார். எனவே, சமூகநீதியை உறுதி செய்வதற்காக அவர் தனி வாக்காளர் தொகுதிகள் (Separate electorates), சுய-பிரதிநிதித்துவம் (Self – Representation) மற்றும் வலுவான அரசியலமைப்பு உரிமைகளைக் கோரினார். தாழ்த்தப்பட்டவர்கள் வரலாற்று ரீதியாகத் தனிநபர் சுதந்திரம், சொத்துரிமை, பொது நிறுவனங்களில் பங்கேற்பு அல்லது அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற எந்தவொரு அடிப்படைச் சிவில் உரிமைகளும் இருந்ததில்லை என்பதை வலியுறுத்தினார். இதுவே அவரது தேசியத் திட்டத்தின் (National Project) மையக்கருவாக இருந்தது.

பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமது மேலாதிக்கத்தை நிறுவிய போதும் மத்தியிலும், அவர்கள் ஒரு கூட்டுநிர்வாகத்தையும், நவீன அரசியல் நிறுவனங்களையும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற முறையான கருத்தாக்கத்தையும் அறிமுகப்படுத்தியதை அம்பேத்கர் அங்கீகரித்தார். இது (இந்திய மக்களிடையே) ஒருவித பொதுவான நலனை உருவாக்கியது. அவர் பிரித்தானிய ஆட்சி நிரந்தரமாக நீடிப்பதை விரும்பவில்லை. மாறாக, தேசியம் என்பது பேண்தகு வகையிலும் உள்ளடக்கியதாகவும் மாறுவதற்கு நிபந்தனையாக, இந்தியா தன்னைத்தானே உள்ளகச் சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தவேண்டும் என்ற வலுவான கருத்தினைக் கொண்டிருந்தார்.

பேண்தகு நிலையும் உள்ளடக்கலும் கூட்டுப்பண்பும்

அம்பேத்கர் இந்து மதத்தை விட அதிக சமத்துவமான மற்றும் சமூக நோக்குடைய ஒரு அமைப்பாக பௌத்தத்தைக் கருதினார். அவர் கருத்துப்படி பௌத்தம் என்பது சமத்துவம், கூட்டுப்பண்பு (Collectivism), தார்மீகப் பகுத்தறிவு மற்றும் படிநிலைப் பாகுபாடுகள் இல்லாத வாழ்க்கையை ஊக்குவித்தது. இந்த விழுமியங்களினால் ஈர்க்கப்பட்டு, 1956 ஆம் ஆண்டு அம்பேத்கரும் இலட்சக்கணக்கான தலித்துகளும் பௌத்த மதத்திற்கு மாறினார்கள். உணர்ச்சிவயத் தேசியத்தை விட அறிவுப்பூர்வமான ஜனநாயகத்தையே அவர் முதன்மைப்படுத்தினார். அறிவார்ந்த தேசியவாதத்தின் (Intellectual Nationalism) மிக முக்கியமான அம்சம் இது. கடந்த காலத்தைப் பெருமைப்படுத்துவது, தனிநபர் வழிபாடு, மதம், கலாச்சாரம் சார்ந்த தேசியவாதம் ஆகியவற்றை அம்பேத்கர் கடுமையாக விமர்சித்தார். இத்தகைய நடைமுறைகள் விமர்சனப்பூர்வமான சிந்தனையை மந்தப்படுத்தி, அதிகாரத்தை குருட்டுத்தனமாகப் பின்பற்றும் மந்தைகளாக மக்களை மாற்றுகின்றன என்று அவர் கருதினார். அவரைப் பொறுத்தவரை, ஒரு தேசம் என்பது புராணங்கள், கலாச்சார பாரம்பரியம் அல்லது வீரபிரதாப பிம்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்படாமல், அரசியல் மற்றும் சமூகக் கொள்கைகளின் அடிப்படையிற் கட்டமைக்கப்பட வேண்டும்.

இந்தியா அரசியலமைப்பு ரீதியாக மதச்சார்பற்ற ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. இப்போது இந்த சமநிலை ஆபத்துக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா மதவாத அரசு அமைந்த பிற்பாடு, இந்து தேசியவாதிகளின் அரசியல் ஆதிக்கம், நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்தை பலவீனப்படுதியுள்ளது. 2014இல் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த காலத்தில் மதச்சார்பின்மை பாரிய அச்சுறுத்தற் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. அம்பேத்கர் முன்வைத்த தேசியம் என்பது இந்திய அளவிலும், தமிழகம் உட்பட்ட மாநிலங்கள் அளவிலும் முன்னெப்போதையும் விட இன்று மிகவும் அவசியமானவை. இந்தியாவில் மட்டுமன்றி பல்தேசிய இனங்களைக் கொண்டதும் சிறுபான்மையினரும் வெவ்வேறு இனக்குழுமங்களும் அரசியல், சமூக, பண்பாட்டு, இன, மொழி எனவான எந்தவொரு ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்ற தேசங்களுக்கும் அவசியமானது, பொருத்தமானது. தேசியமும் மனிதாபிமானமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, மாறாக ஒன்றையொன்று இட்டுநிரப்புபவை.

உசாத்துணை:

  • A Study of Dr. B.R Ambedkar‟s Idea of Nationalism in the Context of India’s Freedom Movement | Rashmin C Bhatt

[International Journal of Latest Technology in Engineering, Management & Applied Science (IJLTEMAS) | Volume VII, Issue VII, July 2018]

  • Dr. Ambedkar’s Thoughts on Nationalism | Manish Kr. Pandey

[Dept. of Political Science, Shri Rawatpura Sarkar University, Raipur, CG., India]

  • Ambedkar and Indian Nationalism: An overview | Dr. C. Vinod Kumar | Indian Streams Reasearch Journal |

[Dr. C. Vinod Kumar: Academic Counselor, Dept. of Political Science, Centre for Distance Education | Acharya Nagarjuna University, Andhra Pradesh.]

  • Marx and National liberation | Jack Woddis | Marxism Today | June 1965
  • Nation, Nation state, Nationalism | www.snl.no | The Norwegian Encyclopedia
  • Hindutva on the March | Achin Vanaik | Jacobin.com | 30.08.2019
  • Nationalism and religious intolerance have taken power in India (Nasjonalisme og religiøst trangsyn har fått makten i India) | Nicolay Paus| Aftenposten | 08.10.2003

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் – svrooban@gmail.com

நீங்கள் யார்? (அம்பேத்கர் காட்டிய மானுடத்தின் விடுதலைப் பாதை)

0

நிர்மல்

மானுட விடுதலை

‘மனிதன் எதிலிருந்து விடுபட வேண்டும்?’ என்ற கேள்விக்கு, வரலாறு பலவிதமான பதில்களைத் தந்துள்ளது. ‘‘மீண்டும் மீண்டும் பிறந்து, மீண்டும் மீண்டும் துன்பம் அனுபவித்து, மீண்டும் மீண்டும் இறந்து போகும் சுழற்சியிலிருந்து விடுபட்டு, நிரந்தர அமைதியை அடைய வேண்டும்’’ என்பது சிலரின் விருப்பம். அதாவது, பிறப்பு & இறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுதலை.

‘‘சாதி, இனம், பாலினம், மதம் உள்ளிட்ட பிறப்பியல் சார்ந்த அடையாளங்களின் பெயரில், மனிதனை மனிதனே தாழ்த்தும் சமூக அமைப்புகளிலிருந்து விடுபட்டு, மரியாதையுடனும் சம உரிமையுடனும் வாழ வேண்டும்’’ என்பது சிலரின் விருப்பம். அதாவது, சமூக அடக்குமுறையிலிருந்து விடுதலை. 

‘‘ஆசை, பற்று, கோபம், விரக்தி, சலிப்பு, வஞ்சனை, பயம் உள்ளிட்ட மனம் சார்ந்த தாக்கங்களிலிருந்து விடுபட்டு, உள்ளுணர்வின் சமநிலையை அடைய வேண்டும்’’ என்பது சிலரின் விருப்பம். அதாவது, உலகப் பற்றிலிருந்து விடுதலை.

‘‘கடன், வறுமை, உழைப்புச் சுரண்டல், வாழ்வாதார அச்சம் ஆகியவற்றிலிருந்து மீண்டு, பாதுகாப்பும் நியாயமான வளப் பகிர்வும் பெற்று வாழ வேண்டும்’’ என்பது சிலரின் விருப்பம். அதாவது, பொருளாதாரச் சுமையிலிருந்து விடுதலை.

மேலும், ‘‘சிந்தனை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றில் பதிந்த அடிமைத்தன உணர்வுகளிலிருந்து மீண்டு, தன்னாட்சியுடனும் கண்ணியத்துடனும் வாழ வேண்டும்’’ என்பது சிலரின் விருப்பம். 

இவ்வாறு மானுட விடுதலையானது அவரவர் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, பல வடிவங்களில் உள்ளதால், இதுபோன்ற விடுதலைகளைக் குறித்து, காலம் காலமாக மனித சமூகம் பல்வேறு வழிகளில் சிந்தித்துள்ளது. மேலும், தனது சிந்தனைகளை வெறும் கோஷங்களாக மட்டுமல்லாது, நடைமுறைப்படுத்தக்கூடிய வழிமுறைகளாகவும் மானுட சமூகம் வடிவமைத்துப் பார்த்துள்ளது. 

எடுத்துக்காட்டாக, வர்க்கப் போராட்டத்தையும், பொருளாதார அமைப்பின் மாற்றத்தையும் அறிவியல் பூர்வமாக விளக்கி, ‘‘பொருளாதார விடுதலையே அனைத்து விடுதலைகளுக்கும் அடிப்படை’’ என்று வாதிட்டார் கார்ல் மார்க்ஸ். 

‘‘வெளிப்புற மாற்றங்களுக்கு முன்பாக, நம் அகத்தில் மாற்றம் தேவை. அறம் மற்றும் தர்மத்தின் அடிப்படையில் வாழ்வியலை மாற்றுவதன் மூலம் ‘சுயராஜ்யத்தை’ வென்றெடுக்கலாம்’’ என, நம் தேசப் பிதா மகாத்மா காந்தி அவர்கள் முன் வைத்த வாழ்வியல் முறையும் மானுட விடுதலைக்கானதே. 

அதேபோல், சாதி, இனம் அல்லது பிறப்பின் அடையாளத்தை வைத்து உருவாக்கப்படும் மேல் – கீழ் எனும் பாகுபாட்டை உடைத்து, மனித கண்ணியத்தையும் சம உரிமையையும் நிலைநிறுத்துவதற்காக, சமூக நீதி இயக்கங்கள் முன்னெடுக்கிற முயற்சிகளும் மானுட விடுதலைக்கானதே. 

மேற்கண்டவற்றிலிருந்து விலகி நின்று, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்றுரைத்து, வாக்குரிமை மற்றும் தனிநபர் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம், அரசியல் விடுதலையை உறுதி செய்தது ஜனநாயக அரசியலமைப்பு. 

இப்படியாக ‘மானுட விடுதலை’ என்ற இலக்கை நோக்கி, உலகில் பலவிதமான சிந்தனைகளும், அதை முன்னெடுக்கும் விதத்தில் பற்பல கட்டமைப்புகளும், முறைகளும் உருவாக்கப்பட்டு, இன்றைக்கும் அந்தப் பயணம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

நீ யார்?: 

 ‘‘சமூக மரியாதை, கல்வி, அதிகாரம், சொத்து, அரசியல் பங்கு உள்ளிட்ட அடிப்படை வாழ்க்கை முறையில், தங்களுக்கான உரிமைகளற்ற மனிதர்கள், மேல்சாதியினருக்குச் சேவை செய்து வாழ வேண்டியவர்களாகவே படைக்கப்பட்டவர்கள். அரசியல் அதிகாரம் அல்லது மத அதிகாரம் பெறும் வாய்ப்புகள் வழங்கப்படாமல், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து, அடிமைகளாக சித்தரிக்கப்பட்ட மனிதர்களுக்கு ‘சூத்திரர்கள்’ என, பெயர்.

 ‘சூத்திரர்கள்’ என அழைக்கப்பட்ட இம் மக்கள், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெரிய எண்ணிக்கையில் இருந்தும், சமூக மரியாதை, கல்வி வாய்ப்பு, அரசியல் அதிகாரம், மதப் பெருமை உட்பட பல உரிமைகளில் இருந்து நீண்ட காலம் விலக்கப்பட்டிருந்தனர். 

இப்படியானவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு வந்தார்கள் அல்லது தள்ளப்பட்டார்கள்? 

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்காகவே டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள், சமூகம் கட்டமைத்து வைத்திருந்த ‘புறக்கணிப்பு’ என்ற கோட்டையை தனது அறிவாயுதத்தால் உடைத்து, அதன் உள்ளே சென்று, பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, தொடர் ஆய்வுகளைச் செய்து, அறிவார்ந்து உருவாக்கிய படைப்புதான் ‘சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ & -ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணத்தவர் ஆனார்கள்?’ என்கிற புத்தகம்.

 ‘‘The book is written for the ignorant and the uninformed Shudras, who do not know how they came to be what they are. The Shudra is punished just because he was a Shudra. This is a mystery which requires to be solved.’’ என்கின்றன அந்தப் புத்தகத்தின் ஞானமிகு வரிகள்.

அதாவது, தங்களை யாரென்று தெரியாத, அறியாமையில் உள்ள சூத்திரர்களுக்காக இந்தப் புத்தகம் எழுதப்பட்டது என்பதை முதலில் தெளிவுப்படுத்துகிறார் அம்பேத்கர். 

‘ஒரு சூத்திரன், தான் சூத்திரனாகப் பிறந்ததாலேயே தண்டிக்கப்படுவது என்பது, கடவுள் உருவாக்கிய நியதி’ என்று, ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வந்ததை, தன் அறிவுப் புலமையால் உடைப்பதே இந்தப் படைப்பின் நோக்கம். அதனால்தான், நூலின் தொடக்கத்திலேயே, ‘சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ- ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணமாக ஆனார்கள்?’ என்ற கேள்வியைத் தெளிவாக முன் வைத்து, இந்தியத் துணைக்கண்டத்தில் பின்பற்றப்பட்டு வந்த வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சூத்திரங்கள், ஸ்மிருதிகள் உள்ளிட்ட பல நூல்களையும் வாசித்து, அவற்றை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு, அவற்றில் கூறப்பட்டுள்ள கதைகள், பழக்க வழக்கங்கள், சமூக நடைமுறைகள், புராணக் குறிப்புகள் அனைத்தையும் ஆழமாக ஆய்வு செய்து, தன் அசாத்தியமான ஆராய்ச்சி உழைப்பின் விளைவாக இந்த நூலைப் படைத்துள்ளார்.

‘சூத்திரர்கள் யார்?’ என்ற கேள்விக்கு தனது நூலில் அம்பேத்கர் தந்துள்ள விளக்கம் வியக்க வைப்பதோடு, சிந்திக்கவும் தூண்டுகிறது.

‘‘முந்தைய கால இந்தியாவில், இந்தோ – ஆரிய சமுதாயத்தில், பிராமணர்கள் மற்றும் சத்திரியர்கள், வைசியர்கள் என்ற மூன்று வருணங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்தன. அப்போது சூத்திரர்கள் தனி வருணமாக இல்லை. அவர்கள் சத்திரிய வருணத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தனர்.

ஒரு கட்டத்தில், சத்திரிய மன்னர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு நீண்டு கொண்டே சென்றது. அந்த மோதல்களின் விளைவாக சத்திரிய இனத்தவரின் உட்பிரிவாக வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தினருக்கு, உபநயனம் செய்ய பிராமணர்கள் மறுத்தனர். உபநயனம் செய்யும் உரிமை மறுக்கப்பட்டதால், அந்த மக்கள் பொது சமூகத்தில் தங்களுக்கான மரியாதையை இழந்து, வைசியர்களுக்கும் கீழே தள்ளப்பட்டு நான்காவது வருணமாக, அதாவது ‘சூத்திரர்கள்’ என, மாற்றப்பட்டனர்’’ என, அந்தப் புத்தகத்தில் தக்க சான்றுகளோடு பகிரும் அம்பேத்கர், மேலும் ஒரு முக்கியமான வேறுபாட்டை உரிய ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார். 

முற்கால இந்தோ- ஆரிய சமுதாயத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ‘சூத்திரர்’ என்ற சொல்லின் பொருள், பிற்காலத்தில் அதாவது ஆரியர் – மற்றவர்களோடு கலந்த பின் உருவான இந்து சமுதாயத்தில் பயன்படுத்தப்பட்ட அதே சொல்லின் பொருளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறார். ஆரம்ப காலத்தில் ‘சூத்திரர்’ என்ற சொல், ஒருவகை குறிப்பிட்ட மக்களைச் சுட்டிக்காட்டும் பெயராகவே இருந்தது. ஆனால், காலப்போக்கில், இந்து சமுதாயத்தில் அந்தச் சொல் பல்வேறு கீழ்த்தர சமூகக் குழுக்களை குறிக்கும் பொதுப் பெயராக மாற்றப்பட்டது. நாளடைவில், ‘கலாசார, பொருளாதார ரீதியில் கீழ்நிலையில் இருக்கிறார்கள் என்று கருதப்பட்ட பல இன மக்களும், பல இன குழுக்களும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ‘சூத்திரர்கள்’ என்ற பொது வட்டத்திற்குள் அடைக்கப்பட்டார்கள்.

அம்பேத்கரின் ஆய்வுப்படி, ‘‘பிற்காலத்தில் ‘சூத்திரர்கள்’ என்று அழைக்கப்பட்ட மக்கள், ஆரம்ப காலத்தில் ஆரியர்களால் புறக்கணிக்கப்பட்ட சூத்திரர்களுடன் தொடர்பில்லாதவர்கள். என்றாலும், கால மாற்றத்தில், பொருளாதாரப் பின்னடைவு, தொழில் வாய்ப்பு மற்றும் கல்வி அறிவின்மை, ஏழ்மை, வறுமை, அறியாமை ஆகியவற்றின் பிடியில் சிக்கி உழன்ற மக்களும், முற்கால சூத்திரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, சமூக தாழ்வுக்கும் தண்டனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். ஆக, சரியான பிடியின்றி வாழ வழியற்றுத் தவித்த அப்பாவி மக்களை, ஆரம்ப கால சூத்திரர்களுடன் இணைத்து, சம்பந்தமில்லாத குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தது இந்த சமூக நடைமுறைதான்’’ என வருந்துகிறார்.

 மேலும், ‘சூத்திரர் என்பவர் யார்?’ என்கிற கேள்விக்கு, தனது ஆழமான ஆய்வின் மூலம் பதிலுரைக்கிறார் அம்பேத்கர். அதாவது, ‘‘ஜாதி அமைப்பு தெய்வீகமானது அல்ல. அது வரலாற்றில் உருவான அதிகாரப் போராட்டத்தின் விளைவு. அது ஒரு சமூகக் கட்டுமானம். அதற்கும் வேதத்தில் சொல்லப்படுவதற்கும் சம்பந்தமில்லை’’ என, வர்ண அமைப்புக்குப் பின் உள்ள வேதம் சார்ந்த, மதம் சார்ந்த அதிகாரத்திலிருந்து மனிதர்களை விடுவிக்கிறார். இதன் மூலமாக ‘‘வர்ண அமைப்பு என்பது மாற்ற முடியாதது அல்ல. மாற்றக் கூடியதே’’ என்பதை நமக்குப் புரிய வைக்கிறார்.

பொதுவாக இறைவன் படைத்ததை மாற்ற மனிதர்களுக்கு உரிமை கிடையாது என்கிற நம்பிக்கை மிக வலிமையானது. சாமியே அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதுக்கு பிறகு அதை என்ன செய்ய என நிலைமையை ஏற்றுக் கொண்டு காலாங்காலமாக வாழப் பழகியவர்களுக்கு அம்பேத்கரின் இந்த அறிவுச் செயல் எவ்வளவு பெரிய திறப்பு. 

மானுட விடுதலையின் முதல் படியாக இருப்பது ‘நாம் யார்?’ என்பதை அறிதல். அதற்கு, நம் வரலாற்றை அறிதல் வேண்டும். நம் மீது முத்திரை குத்தி, ஒட்டப்பட்டுள்ள பெயர்களின் பின்னால் உள்ள உண்மையைத் தேட வேண்டும். இதுதான் அடிப்படை. அம்பேத்கரின் இந்த நூல் அதற்கான அழைப்பாக உள்ளது. 

 ‘‘Intellectual liberation begins with one simple question: Know who you are” என்ற கேள்வியைத் தனது நூல் மூலமாகத் தொடுக்கிறார் அம்பேத்கர்.

‘‘அரசியல் சுதந்திரம் அல்லது பொருளாதார சுதந்திரம் வருவதற்கு முன், மனித மனம் முதலில் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும்’’ எனக் கூறும் அம்பேத்கர், ‘‘மனிதர்கள் இடையிலான சமத்துவமின்மை இயற்கையானது அல்லது தெய்வீகமாக நிர்ணயிக்கப்பட்டது என்று நம்பிக் கொண்டிருக்கும் வரை, எந்தச் சமூக சீர்திருத்தமும் இங்கே நிலைத்து நிற்காது’’ என்கிறார். அதனால்தான், மனிர்களின் உள்ளத்தில் புதைந்து கிடக்கிற அடிமைத்தனத்தை உடைத்து, அவர்களிடையே விமர்சன சிந்தனையை உருவாக்குவதற்காக திட்டமிட்ட முறையில் செயல்பட்டார். இந்த அறிவுச் சுதந்திரப் போராட்டத்தை அவரது பணிகளின் பல தளங்களில் காணலாம்.

மானுட விடுதலைக்காக புத்தகங்கள் எழுதுவதோடு மட்டும் நிற்கவில்லை. அறிவியல் சிந்தனை பரவுவதற்கான மேடைகளையும் உருவாக்கினார் அம்பேத்கர். ‘Mooknayak’, ‘Bahishkrit Bharat’, ‘Janata’ ஆகிய இதழ்களைத் தொடங்கி சமூக பிரச்னைகள், அரசியல் சிந்தனைகள், அரசியலமைப்பு கருத்துகள் உள்ளிட்ட பலதரப்பு விஷயங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சென்றார்.

 இப்படி நான் யார் என்கிற அறிவும் தனிநபர் விழிப்புணர்வு மட்டும் ஒடுக்குமுறைகளை உடைக்கப் போதுமானதல்ல. ஒருவர் மனதளவில் அநீதியை உணரத் தொடங்கினாலும், சமூகத்தில் நீண்ட காலமாகப் பதிந்துள்ள பழக்கங்களும் மரபுகளும் அந்த ஒடுக்குமுறையை தொடர்ந்து உயிர்ப்புடன்தான் வைத்திருக்கும். அதனால்தான் சாதி அமைப்பு, இனவெறி, பாலின அடுக்குமுறை, மாற்றுத் திறனாளிகளின் மீதான அவமதிப்பு மற்றும் பல்வேறு சமூகப் புறக்கணிப்புகள் என்பது, நமது அன்றாட சமூக செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து மறுபடியும் உருவாக்கப்படுகின்றன. அப்படியென்றால் மானுட விடுதலையின் இரண்டாம் படி “சமூக விடுதலை”.

சமூக விடுதலை: 

1935ஆம் ஆண்டு லாகூரில் நடைபெறவிருந்த ‘ஜாத்பட் தோடக் மண்டல்’ என்ற உயர் சாதி இந்துக்களின் மாநாட்டில் தலைமை உரையாக வாசிக்கப்படுவதற்காக ‘சாதி ஒழிப்பு’ (Annihilation of Caste) என்ற உரை நடைக் கோர்ப்பு டாக்டர் அம்பேத்கரால் எழுதப்பட்டது. அந்தக் கோர்ப்பில், அம்பேத்கர் குறிப்பிட்டிருந்த சில கருத்துகள், மாநாட்டில் பங்கேற்க இருந்த சிலருக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே, அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. பின்னர் அந்தக் ‘கோர்ப்பு உரை’ புத்தகமாக வெளியிடப்பட்டு, அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

சாதி அமைப்பை அடிப்படையாக விமர்சித்தும், அதை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் தெளிவாக வலியுறுத்தி விளக்கும் இந்த நூல், இன்று வரை பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது. ‘சாதி ஒழிப்பு என்றால் என்ன, அதன் மூலம் உருவாக வேண்டிய சமூகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், மனிதர்களின் பொது நலனுக்காக சாதி ஒழிப்பு ஏன் அவசியப்படுகிறது?’ என, பல கேள்விகளை அம்பேத்கர் இந்த நூலில், அடிப்படையிலிருந்து விளக்குகிறார். 

மேலும், அந்த நூலில், யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைக்காமல், மிகவும் வலுவான தர்க்கங்களுடன் தனது கருத்துகளை முன்வைக்கும் அம்பேத்கர், தனது வாதத்தை ‘‘சமூகம் என்றால் என்ன?’’ என்கிற, மிக அடிப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்குகிறார்.

ஒரு சமூகம் என்பது வெறும் மக்கள் கூட்டம் அல்ல. மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடி, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வாழும்போது தான் அது உண்மையான சமூகமாகிறது. பரஸ்பர தொடர்பு, அனுபவப் பரிமாற்றம், ஒன்றிணைந்த வாழ்க்கை.- இவையே சமூகத்தின் அடிப்படை. இந்தக் கருத்தை விளக்குவதற்காக அம்பேத்கர் ஓர் அறிவியல் உவமையைப் பயன்படுத்துகிறார். அந்த உவமைக்காக அவர் பயன்படுத்தும் சொல் ‘Social Endosmosis’.

‘Endosmosis’ என்பது உயிரியல் அறிவியலில் பயன்படும் ஒரு கலைச்சொல். உயிரணுக்களின் ஊடுருவும் படலம் வழியாக வெளிப்புற சூழலிலிருந்து திரவம் அல்லது துகள்கள் உள்ளே செல்லும் செயல்முறையை ‘Endosmosis’ என்று அழைக்கிறார்கள். இந்தப் பரிமாற்றமே உயிரணு உயிருடன் இருக்க உதவுகிறது. வெளிப்புறத்துடனான இந்தப் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டால், அந்த உயிரணு செயலிழந்து விடும். இந்த அறிவியல் கருத்தை அம்பேத்கர் சமூகத்திற்கு உவமையாகப் பயன்படுத்துகிறார். 

ஒரு சமூகமும் இதேபோல் மனிதர்கள் இடையே நடைபெறும் அனுபவ பரிமாற்றத்தின் மூலம் தான் உயிருடன் இருக்க முடியும். மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து வாழும்போது சிந்தனைகள், பழக்கங்கள், உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவை பரிமாறிக் கொள்ளப்படும். இந்த இயல்பான பரிமாற்றமே சமூகத்தை வளர்ச்சியடையச் செய்கிறது. இதுவே அவர் கூறும் ‘Social Endosmosis’. ஆனால் ‘‘இந்திய சமூகத்தில் உள்ள சாதி அமைப்பு இந்த இயல்பான ‘Social Endosmosis’ பரிமாற்றத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது’’ என்று அம்பேத்கர் கூறுகிறார். 

சாதியே ஒவ்வொரு மனிதக் குழுவையும் தனித்தனிப் பிரிவுகளாக மாற்றுகிறது. திருமணம், உணவு, உறவு, கல்வி, தொழில் போன்ற அனைத்திலும் தடைகளை உருவாக்குகிறது. இதனால், மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடவும், அனுபவங்களைப் பகிரவும் முடியாத நிலை உருவாகிறது. அதனால் தான் ‘‘இந்து சமூகம் என்று ஒன்று இல்லவே இல்லை; பல சாதிகளின் தொகுப்பே இந்து சமூகமாக உள்ளது’’ என, அம்பேத்கர் ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதியும், தன்னை மற்ற சாதிகளிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டே வாழ்கிறது. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ‘நாம் அனைவரும் ஒரே மதத்தின் உறுப்பினர்கள்’ என்ற உணர்வு உருவாகவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொருவரிடமும் ‘நாம் இந்தச் சாதியினர்’ என்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது. இதன் விளைவாக அவர்களுக்குள் இருக்க வேண்டிய பொதுநல உணர்வு சிதைந்துவிடுகிறது. இப்படி சாதி அடிப்படையிலான சிந்தனை கொண்ட மனிதர்களிடமிருந்து சமூக ஒற்றுமை உருவாக முடியாது. இவர்களிடையே மனிதர்களுக்கான இயற்கையான திறன்களும் விருப்பங்களும் சமூக விதிகள் என்ற பெயரில் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

சாதிய கட்டமைப்பில் வாழ்வதாலேயே, ஒருவர் தனது வாழ்க்கையின் நோக்கத்தையும் செயல்களையும் சுதந்திரமாக தீர்மானிக்க முடியாத நிலை உருவாகிறது. அம்பேத்கரின் பார்வையில் இது ஒரு சமூக அடிமைத்தனமாகும். எனவேதான், ‘‘சமூக அமைப்பை மாற்றாமல் அரசியல் முன்னேற்றம் சாத்தியமில்லை’’ என்கிறார். 

‘‘அரசியல் அமைப்புகள் எதுவாக இருந்தாலும் அவை சமூக அமைப்பின் மீது தான் நிலைநிற்கின்றன. சமூகத்தில் சமத்துவம் இல்லாத நிலையில் அரசியல் ஜனநாயகம் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை வழங்க முடியாது. பலர் நினைப்பது போல, முதலில் அரசியல் சுதந்திரத்தைப் பெற்று, பின்னர் சமூகச் சீர்திருத்தத்தைப் பற்றி பேசுவது சரியான வழி அல்ல. அரசியல் சீர்திருத்தத்திற்கு முன் சமூகச் சீர்திருத்தம் அவசியம்’’ என, மானுட விடுதலைக்கான இரண்டாம் படியை நமக்கு விளக்குகிறார் அம்பேத்கர்.

ஒரு சமூகம் விடுதலை பெற, தனிநபர் விழிப்புணர்வு மட்டும் போதாது. சமூக சீர்திருத்தமும் மட்டும் போதாது. அந்த சமூகத்து மனிதர்கள் தங்களது வாழ்க்கையை பாதிக்கும் அரசியல் சார்ந்த முடிவுகளில் பங்கேற்கக்கூடிய அமைப்புகளும் அவர்களுக்குத் தேவை. ஜனநாயகம் சார்ந்த அமைப்புகள், அரசியலமைப்பு சட்டங்கள், ஆட்சி அதிகாரங்களில் பங்கு உள்ளிட்டவையே அதற்கான கருவிகள். 

‘‘அரசியல் அதிகாரம் இல்லாமல் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்களது சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், தங்களை மேம்படுத்தவும் முடியாது. சமூக ஒடுக்குமுறையை வெறும் நெறிமுறை பேச்சுகளால் மட்டும் உடைக்க முடியாது. அதற்கு அரசியல் அதிகாரமும், சட்ட அமைப்பும் தேவை’’ என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார் அம்பேத்கர். அதனால்தான் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

அரசியல் விடுதலை

1947ஆம் ஆண்டில், இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது, அதில் ‘அடிப்படை உரிமைகள்’ குறித்து பரிந்துரைகள் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவிற்கு அம்பேத்கர் ‘States and Minorities’ என்ற ஆவணத்தை சமர்ப்பித்தார். இந்த ‘அடிப்படை உரிமைகள்’ என்ற கருத்துருவாக்கம் முதலில் திட்டமிடப்பட்டபோது, அது தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான பாதுகாப்புகளை விளக்கும் ஓர் அறிக்கையாக மட்டுமே முதலில் இருந்தது. ஆனால், அம்பேத்கர் அதைக் கடந்துச் சென்றார். அவர் சமர்ப்பித்த ஆவணம் ஒரு சிறிய அரசியலமைப்பு வரைவு போல அமைந்திருந்தது.

அந்த ஆவணத்தில் அவர் ஒவ்வோர் இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினருக்கான பாதுகாப்புகள், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான சிறப்பு பாதுகாப்புகள் போன்றவற்றை விரிவாக முன்வைத்தார். இதை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் ஒரு முன்னுரையும் (Preamble) வரைந்து வைத்தார். அதில் ‘‘இந்தியா ஓர் ஒன்றிய நாடாக அமைந்து, இங்கே வாழ்கிற அனைத்து குடிமக்களுக்குமான வாழ்க்கையானது சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை, மதச்சார்பின்மை, சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்’’ என்று அவர் கூறினார்.

‘அரசியல் உரிமைகள் மட்டும் போதாது; அவற்றைப் பாதுகாக்கும் அமைப்புகளும் தேவை’ என்பதே அம்பேத்கர் இந்த ஆவணத்தில் மிக முக்கியமாக வலியுறுத்திய விஷயம். அதனால்தான் நீதித்துறைக்கான பாதுகாப்பு, அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் அமைப்புகள், சிறுபான்மையினரின் உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் போன்றவற்றையும் அவர் முன்மொழிந்தார்.

இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருந்த கருத்துகளில் பலவும், இந்திய அரசியலமைப்பில் இடம் பெற்றன. அடிப்படை உரிமைகள், சட்டத்தின் முன் சமத்துவம், மதசார்பின்மை, தீண்டாமை ஒழிப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற அம்சங்கள் அனைத்தும் அம்பேத்கரின் சிந்தனைச் செயல்பாடுகளுக்கு நெருக்கமானவை. அவை இந்திய அரசியலமைப்பு வாயிலாக அதிகாரம் மிக்க அடிப்படை சட்டங்களாக உருவாகவும் அவர் துணை நின்றார். 

அம்பேத்கரின் அரசியல் பணி, இந்திய அரசியலமைப்பை எழுதுவதில் மட்டும் முடிவடையவில்லை. அவர், தான் முன்னெடுத்த பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை உருவாக்க முயன்றார். ‘Independent Labour Party’ மற்றும் ‘Scheduled Castes Federation’ போன்ற அரசியல் அமைப்புகளை உருவாக்கி, தாழ்த்தப்பட்ட சமூகங்களின் அரசியல் குரலை வலுப்படுத்தினார். தேர்தல் அரசியலில் பங்கேற்று, சட்டமன்றங்களில் அவர்களின் பிரச்னைகளை முன்வைத்தார். ‘பூனா ஒப்பந்தம்’ உட்பட பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகளிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

அம்பேத்கர் மேற்கொண்ட இவ்வித எல்லா முயற்சிகளின் நோக்கமும் ஒன்றுதான். அது – பழைய சமூக ஒழுங்கை தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றி, அதை சட்ட ரீதியாக மாற்றுவது.  இந்தியாவின் பழைய சமூக அமைப்பு, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்தது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு, அந்த பழைய அமைப்பை மறுபரிசீலனை செய்து, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். எந்தக் குடிமகனும் சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட முடியாது’ என்று அறிவித்தது. அவர் பழைய இந்தியாவை வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்றி, புதிய இந்தியாவிற்கான அடித்தளத்தைக் கட்டமைத்தார். 

என்றாலும், மானுட விடுதலைக்கான தனது பயணத்தில், இதை, இறுதி நிலையாக அவர் பார்க்கவில்லை. அதனால்தான், ‘அரசியல் ஜனநாயகம் மட்டும் விடுதலைக்குப் போதாது’ என்று அவர் எச்சரித்தார். ‘சமூகத்தில் வறுமை, பொருளாதார அநீதி, வேலை வாய்ப்பு சமமின்மை ஆகியவை தொடர்ந்தால் அரசியல் சுதந்திரம் முழுமையடையாது’ என்பதை உணர்ந்தே, ‘அரசியல் ஜனநாயகத்துடன் சேர்ந்து பொருளாதார ஜனநாயகமும் அவசியம்’ என்றார் அம்பேத்கர்.

பொருளாதர விடுதலை:

அம்பேத்கரின் எழுத்துக்களைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தபோது, ‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ என்று, அவரால் எழுதப்பட்ட புத்தகம், அவரைப் பற்றிய வழக்கமான புரிதல்களிலிருந்து விடுவித்து, முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் சிந்திக்கத் தூண்டியது.

அதுவரையில், ‘சமூக சீர்திருத்தவாதி’ அல்லது ‘அரசியல் சிந்தனையாளர்’ என்ற கோணத்திற்குள் நான் புரிந்து வைத்திருந்த அம்பேத்கர், ‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ என்ற நூல் வாயிலாக, ‘நான் வேறானவன், மனித விடுதலைக்கு வேரானவன்’ என, ஒரு பொருளாதார அறிஞராக மிளிர்கிறார். பொருளாதாரக் கோட்பாடுகள், புள்ளிவிவரங்கள், நாணயக் கொள்கைகள் உட்பட பல்வேறு சிக்கலான கருத்துக்களால் நிரம்பியுள்ள இந்தப் புத்தகம், சாதாரண வாசகர்களுக்காக எழுதப்பட்டதல்ல.

பொருளாதார முனைவர் பட்டம் பெற, ஓர் ஆய்வு கட்டுரையாகத்தான் அம்பேத்கர் இந்த நூலை எழுதி உள்ளார். எனவே, இந்த நூலில் உள்ள பல பொருளாதார விளக்கங்கள் அனைவருக்கும் புரிய வாய்ப்பில்லை. அப்படிப் புரியவேண்டுமானால், பின்னாளில் அந்த நூலைப் பற்றி எழுதப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகளையும் ஆராய்ச்சிகளையும் படிக்க வேண்டும். அந்தப் புரிதலின் மூலம் அம்பேத்கர் முன்வைத்த பொருளாதாரக் கோட்பாட்டை அறிய முடிகிறது.

‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ என்ற ஆய்வுக் கட்டுரை நூல் வாயிலாக, அம்பேத்கர் இந்திய நாணய அமைப்பின் வரலாற்றை மிக ஆழமாக ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக, ‘இந்தியத் துணைக்கண்டத்தில் பணம் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டது?’ என்பதைக்கூட, பல்வேறு கால கட்டங்களாகப் பிரித்து ஆராய்கிறார். முகலாயர்களுக்கு முந்தை காலம், முகலாய ஆட்சி, அதன் பின்னர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி ஆகிய காலங்களில் இந்திய நாணய அமைப்பு எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை வரலாற்று ஆதாரங்களுடனும், புள்ளிவிவரங்களுடனும் விளக்குகிறார். ரூபாயின் மதிப்பு எவ்வாறு மாற்றமடைந்தது, அந்த மாற்றங்கள் பொதுமக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தன என்பதையும் தெளிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

அந்த ஆய்வுப் புத்தகத்தில் அம்பேத்கரின் முக்கியமான விமர்சனங்களில் ஒன்று ‘Gold Exchange Standard’ எனப்படும் நாணய முறையைப் பற்றியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட இந்த முறை, ரூபாயின் மதிப்பை நேரடியாக தங்கத்துடன் இணைக்காமல், வெளிநாட்டு நாணயங்களின் மூலம் தங்கத்துடன் இணைக்கும் முறையாக இருந்தது. அம்பேத்கரின் பார்வையில் இந்த முறை பெரும்பாலும் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் வணிகர்களுக்குப் பயனளித்தது. ஆனால், இந்தியாவில் வாழும் பெரும்பாலான பொதுமக்களுக்கு இது பெரிதாக உதவவில்லை.

அம்பேத்கரின் கருத்துப்படி, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் மிக முக்கியமானது விலை நிலைத்தன்மை. பணத்தின் மதிப்பு நிலைத்திருக்காமல் பொருட்களின் விலை அதிகமாக ஏறி இறங்கினால், அதன் தாக்கத்தை முதலில் அனுபவிப்பவர்கள் ஏழைகள்தான். ஆகவே, நாணயக் கொள்கையின் முக்கிய நோக்கம் வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தைப் பாதுகாப்பது அல்ல; பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையில் பணத்தின் வாங்கும் திறனை நிலைப்படுத்துவதாக அது இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

அம்பேத்கரின் பொருளாதார சிந்தனை நாணய அமைப்பை மட்டும் பற்றியதல்ல. அவர் அரசின் நிதி நிர்வாகம் பற்றியும் ஆழமாகச் சிந்தித்துள்ளார். ‘ஒவ்வொரு மாநிலத்திற்கும் அல்லது மாகாணத்திற்கும் தங்களுடைய நிதி நிர்வாகத்தில் ஓரளவு சுயாட்சி இருக்க வேண்டும்’ என்று அவர் வாதிடுகிறார். 

மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை தெளிவாகக் கண்ட அம்பேத்கர், ‘இந்திய விவசாயத்தில் காணப்படும் சிறிய மற்றும் சிதறிய நிலப்பகுதிகள் நாட்டின் உற்பத்தித் திறனை குறைக்கின்றன’ என்று சுட்டிக்காட்டினார். இதற்குத் தீர்வாக நிலங்களை ஒருங்கிணைப்பதும், கூட்டுறவு விவசாய முறையையும் அவர் முன்வைத்தார். அவரது பார்வையில் ‘‘சமூகத்தில் நிலச் சுவான்தாரர்கள் இருக்கக்கூடாது, குத்தகை விவசாயி இருக்கக்கூடாது, நிலமற்ற தொழிலாளி இருக்கக்கூடாது. நிலம் சமூக அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்பட்டு, கிராம மக்கள் கூட்டாகச் சாகுபடி செய்யும் அமைப்பு உருவாக வேண்டும்’’ என்று அவர் விரும்பினார்.

இதனுடன் சேர்ந்து, இந்தியாவின் வளர்ச்சிக்குத் தொழில் மயமாக்கல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். தொழிற்சாலைகள் வளர்ந்தால் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்வாதாரம் அமையாமல் தொழிற்சாலைகள் மூலமும் வேலை வாய்ப்பை பெற முடியும் எனக் கருதிய அம்பேத்கர், கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தை விமர்சிக்கிறார். அதேவேளையில், முழுமையான கம்யூனிச முறையையும் அவர் ஆதரிக்கவில்லை. அதற்குப் பதிலாக, முக்கியமான தொழில்களை அரசு உருவாக்கி அரசே அதை நடத்த வேண்டும். இதன் மூலமாக ஜனநாயக அரசின் சார்பில் சமூகநீதி பொருளாதாரம் (Democratic State Socialism) என்ற பாதை உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் சிந்தித்தார்.

அம்பேத்கரின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பெண்களின் பொருளாதார பங்கு மிகவும் முக்கியமானவை. தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையும், வேலைநிறுத்த உரிமையும் அவர்களுடைய கண்ணியமான வாழ்வுக்கு அவசியம் என்று அவர் கருதினார். அதேபோல் பெண்களின் பொருளாதார நிலை உயராமல் ஒரு சமூகமும் முழுமையாக வளர முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பொருளாதார சிந்தனைகளின் அடிப்படையில் அம்பேத்கர் ஒரு முக்கியமான உண்மையை சுட்டிக்காட்டுகிறார். அதாவது, சாதி அமைப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சினை மட்டும் அல்ல; அது ஒரு பொருளாதாரத் தடை. சாதி என்பது வேலைகளைப் பிரிப்பதல்ல; அது மனிதர்களைப் பிரிக்கிறது. சாதி அமைப்பு பல சமூகக் குழுக்களை பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க முடியாதபடி கட்டுப்படுத்துகிறது, பொருளாதார ஏற்றத்தை அனைத்து வகையிலும் தடுக்கிறது’’ என்பதைத் தீர்க்கமாகச் சொன்னவர் அம்பேத்கர்.

மொத்தத்தில் பார்க்கும்போது, அம்பேத்கரின் பொருளாதார சிந்தனையானது, சாதி என்ற வட்டத்திற்குள் எதையும் அடக்காமல், சமத்துவமும் நடுநிலையும் கொண்ட புதிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கான முன்னெடுப்பாக, முயற்சியாகத் தெரிகிறது. அவரது பொருளாதாரக் கண்ணோட்டம் முழுமையான முதலாளித்துவத்திற்கும் முழுமையான கம்யூனிசத்திற்கும் இடையிலான ஒரு சமநிலையைத் தேடுகிறது. அதனால்தான், அரசின் பொறுப்பு, சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இணைக்கும் ஒரு பாதையை அவர் முன்வைத்தார்.

‘‘வளர்ச்சி என்பது சிலருக்கான செழிப்பல்ல; சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்களும் அதில் பங்கேற்கும் போதுதான் அது உண்மையான வளர்ச்சியாகும்’’ என்று அவர் நம்பினார்.

அம்பேத்கரின் இந்த பொருளாதார ஆய்வு வெறும் கல்வியியல் ஆய்வாக மட்டுமே இருந்ததில்லை. இந்திய நாணய அமைப்பை பற்றிய அவரது ஆய்வுகள், பின்னர் நடைபெற்ற விவாதங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. பல ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல, இந்தியாவின் மத்திய வங்கியான ‘Reserve Bank of India’ உருவாக்கப்படுவதற்கான ஆணி வேராகவும் அமைந்தது அம்பேத்கரின் ‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ என்ற நூல்தான்.

என்றாலும், ‘‘பொருளாதார மாற்றம் மட்டும் மனிதனை முழுமையாக விடுதலை செய்யாது. அப்படியான மாற்றம் சமூக அநீதி என்ற சட்டத்தால் மனித விடுதலைக்கு சவாலாக மாறலாம். மேலும், பொருளாதார வறுமைக் கொள்கைகளால் அந்த விடுதலையின் அளவு குறைக்கப்படலாம். எனவே, மனித மனதில் பதிந்திருக்கும் தாழ்வு உணர்வுகள், புனிதமாக்கப்பட்டு நம்பவைக்கப்பட்ட அநீதிகள், மதத்தின் பெயரில் நிலைத்திருக்கும் அடக்கு முறைகள் ஆகியவை தொடர்ந்தால், மனித விடுதலை ஒருபோதும் முழுமையடையாது’’ என வலியுறுத்தும் அம்பேத்கர், உண்மையான மானுட விடுதலைக்காக மேலும் மிக தனித்து வழி ஒன்றையும் காட்டுகிறார். அது “ இறை நெறி”.

இறை நெறி: 

“மனித சமூகம் காலம் காலமாகத் தன் இறை நம்பிக்கைகளை எந்த அளவுக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ, அதற்கு நிகராக மீண்டும் மீண்டும் அவற்றைப் பரிசீலிக்கவும் செய்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, உலக அரசியல் மாற்றங்கள், சமூகப் போராட்டங்கள், நீதி மற்றும் சமத்துவம் குறித்து எழும் கேள்விகள் ஆகியவை, மதம் என்ற அமைப்பை விமர்சனப் பார்வையில் அணுக, மனிதனைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன.

இப்படியான விமர்சனங்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை; அவை பெரும்பாலும் நசுக்கப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன. ‘இது ஒன்றும் புதிதல்ல’ என்று, பழமையோடு கலந்து அதன் வீரியம் நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது. இருப்பினும், புதிய அறிவு மற்றும் சமூக அனுபவங்களைக் கொண்டு, மனிதர்கள் தங்கள் நம்பிக்கைகளை இன்றளவும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டத்தில் இப்படியான பல முயற்சிகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்திருந்தாலும், பெரும்பாலும் அவை சமய அமைப்புக்குள்ளிருந்தே எழுந்திருக்கின்றன. குறிப்பாக, தங்கள் வாழ்க்கையை இறைவனுக்காக அர்ப்பணித்தவர்களாலேயே இத்தகைய சீர்திருத்தக் குரல்கள் ஒலித்துள்ளன. ஐயா வைகுண்டர், வள்ளலார், சுவாமி விவேகானந்தர் உட்பட பல ஆன்மிகச் சான்றோர் பெருமக்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாவர்.

ஓர் எழுத்தாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் நம்மால் அறியப்பட்ட அம்பேத்கர் ‘புத்தரும் அவரது தம்மமும்’ (The Buddha and His Dhamma) என்ற நூலையும் எழுதி உள்ளார். அந்நூலை வாசித்து பார்க்கும் பொழுது, நவீன இந்தியாவிற்கான அரசியலமைப்பைத் தந்த அண்ணல் அம்பேத்கர் ஆன்மிக அண்ணலாக உருமாறி நமக்கு காட்சித்தருகிறார். கிட்டத்தட்ட பழைய முறைகளை ஒழித்து, புதிய வழிமுறையைத் தரும் இறை தூதராக நமக்கு முதலில் தெரிகிறார்.

‘புத்த தம்மம்’ நூலில், புத்தரின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் அவர் கூறவில்லை. புத்த சமயத்தைப் பற்றி மட்டும் விளக்கவும் இல்லை. மாறாக, புத்தரின் ஞானத்தை தனது வாசிப்பின் மூலம் மிகத் துல்லியமாக இன்றைய காலத்திற்கு துலக்கிக் காட்டுகிறார். அந்நூலைத் தொடர்ந்து வாசிக்கும்போது, அவர் செய்ய முயற்சிப்பது சமய மறுவாசிப்பு மட்டுமல்ல, அதைவிட மேலான ஆழமான ஒன்று என்பது நமக்குப் புரிய ஆரம்பிக்கிறது. மேலும், தன்னை இறை தூதராகவோ, சீடராகவோ யாரும் புரிந்துகொள்ளக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு இந்தப் புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். 

தவிர, இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது, புத்தரை ஒரு பாரம்பரிய சமய குருவாக நாம் பார்க்காமல், அவருக்குள் இருந்த மானுட விடுதலை மீதான வேட்கையை நமக்குள் கடத்துகிறார் அம்பேத்கர். அதாவது, புத்த சமயத்தின் வரலாறு மற்றும் இறையியலுக்குள், மனித விடுதலைக்கான வழிமுறைகள் எவ்வளவு அடைக்கப்பட்டுள்ளன என்பதை, தன் எழுத்துகள் மூலம் ஒளி பாய்ச்சி நமக்குள் கடத்தும் புரட்சிக ஆன்மிக சிந்தனையாளராக பரிணமிக்கிறார் அம்பேத்கர்.

இந்தப் புத்தகத்தில், ‘மதம்’ என்ற தர்மத்தை, புதிய கோணத்தில் ஆராய்ந்துள்ள அம்பேத்கர், தனது பார்வையில் ‘‘மதம் என்பது மறுமை உலகைப் பற்றிய நம்பிக்கைகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது மனிதன் எப்படி வாழ வேண்டும், மற்ற மனிதர்களுடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும், சமூகத்தில் நீதி எப்படி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் ஒரு வாழ்வியல் நெறி’’ என்று உரைக்கிறார்.

விதி, ஆன்மா, பிறப்பு போன்ற மாயக் கருத்துக்களை மையமாகக் கொண்ட மதமாக புத்தம் விளங்கவில்லை. அது, மனித அனுபவத்தையும் நெறியையும் மையமாகக் கொண்ட ஒரு வாழ்வியல் சிந்தனை முறையாக உள்ளது. அதனால் தான் அம்பேத்கர் புத்தரின் போதனைகளை மீண்டும் மீண்டும் வாசித்து, அவற்றில் மனித விடுதலைக்கான ஒரு நெறி வகுக்கப்பட்டுள்ளதை நமக்குக் காட்டுகிறார். குறிப்பாக கர்மா, அஹிம்சா, மற்றும் சமயத்தின் சமூகப் பங்கு போன்ற கருத்துகளை அவர் புதிய பார்வையில் விளக்குகிறார்.

புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகள், அவருடைய போதனைகள், சங்கத்தின் உருவாக்கம், தம்மத்தின் அடிப்படை நோக்கங்கள் போன்ற பல கருத்துகளை ‘The Buddha and his Dhamma’ நூல் மூலமாக அம்பேத்கர் விளக்கிச் சொல்கிறார். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விவாதங்களில் சில இடங்களில் அவர் பாரம்பரிய விளக்கங்களை ஏற்றுக்கொள்கிறார்; சில இடங்களில் அவற்றை விமர்சனமாக மறுபரிசீலனை செய்கிறார். அவற்றுள் குறிப்பாக ‘கர்மா’ பற்றிய அம்பேத்கரின் பார்வை மிகவும் வித்தியாசமானதாகவும், சிந்திக்கத் தூண்டும் வகையிலும் இருக்கிறது.

‘‘மனிதன் ஏழையாகப் பிறப்பதும், தாழ்ந்த நிலையில் வாழ்வதும், உடல் குறைபாடுகளுடன் பிறப்பதும் கடந்த பிறவிகளின் பாவத்தின் விளைவு என்ற கருத்து, சமூக அநீதியை நியாயப்படுத்தும் ஒரு தத்துவமாக மாறிவிட்டது’’ என அவர் வாதிடுகிறார். 

‘‘கர்மா என்பது, விதி அல்லது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை அல்ல; மனித செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் இடையிலான ஒழுங்கான தொடர்புதான் கர்மா. இதனால்தான் மனிதன் தன் வாழ்க்கையை மாற்றும் பொறுப்பை மட்டுமல்லாது அதற்கான வாய்ப்பைப் பெற்றவனாகவும் மாறுகிறான்’’ என்கிறார் புத்தர்.

அதேபோல் ‘எதையும் கொல்லக்கூடாது’ என்கிற அஹிம்சா நெறியை, ‘அனைவரையும் அன்புடன் பாருங்கள்; அப்போது கொல்ல வேண்டும் என்ற விருப்பமே உங்களுக்குள் எழாது’ என்கிறார் புத்தர். இதை ‘புத்தரின் தம்மம்’ வழியாக, ஓர் அற நெறியாக நமக்கு விளக்குகிறார் அம்பேத்கர்.

‘புத்தரின் தம்மம்’ மனிதர்களுக்கிடையில் சமத்துவத்தை உருவாக்கும் ஒரு நெறியாக அம்பேத்கரால் விளக்கப்படுகிறது. சாதி, பிறப்பு, விதி போன்ற கட்டுப்பாடுகளை உடைத்து, மனிதன் தனது கண்ணியத்தையும் சுயமரியாதையையும் உணர உதவும் ஒரு நெறியாக அது அமைந்துள்ளது.

இதனால் அம்பேத்கரின் பார்வையில் ஆன்மிக விடுதலை என்பது உலகை விட்டு துறவு செய்வது அல்ல. மாறாக, பயம், விதி, மூடநம்பிக்கை, தாழ்வு உணர்வு ஆகியவற்றிலிருந்து மனிதனை விடுவித்து, ஒவ்வொரு மனிதருக்கும், தன்னுடைய வாழ்க்கையை சிந்தனையுடனும் பொறுப்புடனும் அமைத்துக்கொள்ளும் திறனை வழங்குகிறது. அதனால்தான் அம்பேத்கரின் சிந்தனையில் ‘புத்தரின் தம்மம்’ ஒரு சமய போதனை மட்டும் அல்ல; அது மனித கண்ணியம், சமத்துவம், கருணை, சிந்தனைச் சுதந்திரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு விடுதலை நெறி ஆகிறது.

அம்பேத்கரின் மானுட விடுதலைக்கான சிந்தனை என்பது நூல்களில் மட்டும் எழுதப்பட்ட கோட்பாடு அல்ல. அது, அவருடைய வாழ்நாளில் அனுபவித்த ஒடுக்கு முறைகள் என்ற நெருப்பில் உழன்ற வலிகளால் வடிவமைக்கப்பட்ட உண்மைகளின் தொகுப்பு. அதனால் தான் அவரது சிந்தனை பல சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களையும் தாண்டி நிற்கிறது.

அவர் ஒரு சமூகத்தின் வலியை, உலக மக்கள் அனைவரது கண்ணியத்திற்கும் பொதுவான மொழியாக மாற்றியவர். எனவேதான், தலித் சமூகத்துக்கோ, இந்தியாவுக்கோ மட்டும் சொந்தமானவர் என்பதோடு இல்லாமல், ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சொந்தமானவர் ஆகிறார்.

உலக வரலாற்றில் பல சிந்தனையாளர்கள் மனித விடுதலைக்காகப் போராடியுள்ளனர். சிலர் பொருளாதார சமத்துவத்துக்காக, சிலர் அரசியல் சுதந்திரத்துக்காக, சிலர் மத சீர்திருத்தத்திற்காக அல்லது சமூக சமத்துவத்திற்காகப் போராடி உள்ளனர். 

ஆனால், அனைத்து மனித சமுதாயமும் முழுமையாக விடுதலையாக வேண்டுமெனில், ஒரு துறையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டால் போதாது. மனித விடுதலை என்பது ஒரே ஒரு கதவு திறப்பால் நிகழ்வதல்ல. மனித மனம், சமூக அமைப்பு, பொருளாதார நிலை, அரசியல் அதிகாரம், சட்ட பாதுகாப்பு, நெறி மற்றும் மத அடித்தளம் என,- இவை அனைத்திலும் மாற்றம் ஏற்படும் போதுதான் ஒரு சமூகம் உண்மையான சுதந்திரத்தை அடைகிறது.

எனவே, ஒரு சமூகம் தனக்கான ஒடுக்கு முறையிலிருந்து மரியாதைமிக்க வாழ்க்கைக்குச் செல்ல வேண்டும் எனில், அதற்கான மாற்றம் பல தளங்களில் நிகழ வேண்டும். அறிவு, சமூக உறவுகள், பொருளாதார அமைப்பு, அரசியல் நிறுவனங்கள், மற்றும் நெறி மதிப்புகள் ஆகிய அனைத்திலும் மாற்றம் அவசியம். எனவே, விடுதலைக்கான சூத்திரம் என்பது, விடுதலை = அறிவு + மரியாதை + பொருளாதார பாதுகாப்பு + அரசியல் அதிகாரம் + அறநெறி இறை உணர்வு என்பதாக இருக்க வேண்டும்.

மற்றொரு விதமாகச் சொன்னால், மக்கள் சுதந்திரமாக சிந்திக்கும் இடம், மரியாதையுடன் வாழும் இடம், அவமதிப்பின்றி உழைக்கும் இடம், அதிகாரத்தில் பங்கேற்கும் உரிமை கொண்ட இடம், மற்றவர்களை சமமான மனிதர்களாக ஏற்றுக்கொள்ளும் இடமே, ஓர் உண்மையான விடுதலைச் சமூகம் வாழும் இடமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து, மானுட விடுதலைக்கான உண்மையான முன்னெடுப்புகளைச் செய்துள்ளார் அம்பேத்கர்.

இந்தப் பார்வையில் பார்க்கும்போது அம்பேத்கரின் வாழ்க்கை மிகவும் வியப்பூட்டும் ஒன்றாகத் தோன்றுகிறது. அறிவு மற்றும் கல்வி வழியாக மன விடுதலையை உருவாக்கிய அம்பேத்கர், சமூக அவமதிப்புக்கு எதிராக போராடினார். பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் பிரச்னைகளை ஆராய்ந்தார். ஜனநாயக அரசியல் அமைப்புகளையும், அதற்கு வேண்டிய சட்டங்களையும் வடிவமைத்தார். இறுதியில் புத்த மத நெறிகளை முன்வைத்து ஆன்மிக மாற்றத்திற்கான வழியையும் காட்டினார்.

ஒற்றை மனிதன், இவ்வளவு தளங்களில் ஒரே நேரத்தில் செயல்படுவது வரலாற்றில் மிகவும் அரிதான ஒன்று. மனித சமூக விடுதலைக்குத் தேவையான அனைத்துக் கூறுகளையும் தனக்கான வாழ்க்கையில் சிந்தித்து, வடிவமைத்து, செயல்படுத்த முயன்ற ஓர் அற்புதமான மனிதர் நம் நாட்டில் தோன்றியிருக்கிறார். இந்தத் தோன்றலை அவதாரம், மெசியா, இறை தூதர், சித்தர், யோகி, புனிதர் அல்லது காலத்தின் தேவை கருதி இயற்கையால் அனுப்பி வைக்கப்படும் அரிதான மனிதர் என, வரலாற்று நூல்கள் உரைக்கின்றன. 

‘‘மனிதரின் புகழல்ல; அவர் காட்டிய பாதைதான் முக்கியம்’’ என்றுரைக்கும் அம்பேத்கரின் வாழ்க்கை ‘‘விடுதலை என்பது ஒரு தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது மனித வாழ்க்கையின் பல துறைகளில் ஒரே நேரத்தில் கட்டப்பட வேண்டிய ஒரு முழுமையான அமைப்பு’’ என்ற மிகப் பெரிய பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது. அந்தப் பாடத்தின் மீதான சிறிய ஒளிப் பாய்ச்சலே இந்தக் கட்டுரை! 

ஜெய்பீம்!

***

நிர்மல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல்எனும் ஊருக்கு அருகில் உள்ள திருவழுதிவிளைஎனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கத்தார்தேசத்தில் பெட்ரோ கெமிக்கல்துறையில் பணி செய்து வருகிறார். காணாமல் போன தேசங்கள்’, ‘நிலமும் பொழுதும்’, ‘குன்றாவளம்’ , “சகாக்கள் “ , “ மக்களாகிய நாம்”, “அறியாத உறவுகள்”, “இடுக்கண் படினும்ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: nirmalcb@gmail.com

தற்காலத்தில்தான் படைப்பாளி புலனடக்கம் மிகுந்தவனாக இருக்க வேண்டியிருக்கிறது

0

நேர்காணல்: கணேஷ் பாபு

நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி

கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். புனைவுகளின் வழியே யதார்த்தத்தின் மீதான புதிய பரிமாணத்தை தொடர்ச்சியாக காட்டிவருபவர். கதைகளின் முடிவில் நிலை நிறுத்தப்படும் படிமங்கள் வாழ்வின் யதார்த்தங்களுக்கு புதிய அர்த்தங்களை வழங்குகின்றன. தொன்மக் கதைகளைக் கையாளும் போதும் சமகால யதார்த்த வாழ்வை பரிசீலிக்கும் கருவியாக அவை பயன்படுத்தப்படுகின்றன. “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது. கவிதை சார்ந்து ரசனைக் கட்டுரைகளையும், நூல் மதிப்புரைகளையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இந்த நேர்காணல் அவருடைய புனைவு நுட்பங்கள் இன்னமும் சற்று அருகில் சென்று அறிய உதவியாய் அமையும்.

கேள்வி: கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்கியது ?

பதில்: கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்த எனக்கு, நாங்கள் வசிக்கும் தெருவில் இருந்தே முடிவற்ற கதைகள் கிடைக்கத் தொடங்கின. அந்தத் தெருவில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கதைசொல்லி. நாங்கள் வசித்தது ஒரு காம்பவுண்ட் வீடு. பல்வேறு பொருளாதார படிநிலைகளிலும் உள்ள மனிதர்கள் அங்கே வசித்தார்கள். மாலை வேளைகளில் திண்ணைகளிலும் முற்றத்திலும் பெண்கள் ஒன்று கூடுவார்கள். அது மெகா சீரியல்கள் முளைத்திராத காலகட்டம் என்பதால் தெருப் பெண்கள் யாவரும் அவரவர் குடும்பக் கதைகளையும் அடுத்தவர் கதைகளையும் பேசத் துவங்குவார்கள். பேச்சின் சுவாரஸ்யத்தில் அருகில் குழந்தைகளும் சிறுவர்களும் இருப்பதையெல்லாம் பொருட்படுத்தமாட்டார்கள். நல்லதும் கெட்டதும் அந்த உரையாடல்களில் பொங்கி வரும். அவற்றில் வெளியே சொல்ல முடிந்த மற்றும் சொல்ல முடியாத கதைகள் யாவும் காற்றில் குதித்து ஆகாசத்தின் மீதேறி வானை இருள வைக்கும். அக்கதைகளின் சுவையறிந்த நிலவு புன்னகைத்தபடியே சஞ்சரித்துச் செல்லும். இரவு வளர வளர, கண் இமைகளைத் தூக்கம் கனக்க வைக்கும், கற்பனையைக் கதைகள் கனக்க வைக்கும். எம்.பி.பி.எஸ் படிப்பை முடிக்க முடியாமல் மூன்றாம் வருடத்திலேயே வெளியேறிவிட்ட ஒரு டாக்டர் இருந்தார். தெரு மனிதர்களுக்கெல்லாம் அவர்தான் ஆஸ்தான வைத்தியர். ஒரு சிறிய பெட்டியில் ஊசி மருந்து மாத்திரைகள் வைத்திருப்பார். சும்மா சொல்லக்கூடாது, சட்டத்தின் பார்வையில் அவர் போலி மருத்துவராக இருந்தாலும், அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளும், ஊசியும் வேலை செய்தன. கைராசியான மருத்துவர் என்று பெயரெடுத்தார். விடுமுறைக் காலங்களில் அவர், அருகில் உள்ள சிறுவர்களை அழைத்துப் பேச்சுக் கொடுப்பார். பல கதைகளைச் சொல்வார். இன்று நினைத்துப் பார்க்கையில், அவரது பெட்டிக்குள் மாத்திரைகளைக் காட்டிலும் கதைகளே அதிகம் இருந்ததாகத் தோன்றுகிறது. மற்றபடி, அம்மா, பாட்டி போன்றவர்கள் எல்லாம் நீண்ட கதைகள் சொல்வார்கள். தொலைக்காட்சி இல்லாத காலங்களின் மாலை வேளைகள் ஆசிர்வதிக்கப்பட்டவை. கதைகளைச் சுமந்துவந்த சுபமுகூர்த்த வேளைகள் அவை. மீண்டும் ஒருபோதும் தோன்ற முடியாதவையும்கூட. இப்படித்தான் கதைகள் எனக்கு அறிமுகமாயின. அதன்பின், வாசிப்புப் பழக்கம் ஏற்பட்ட பின்னர், அருகில் உள்ள கிளை நூலகத்தில் சென்று கதைகள் படிக்கத் துவங்கினேன். சிறுவர் மலர், அம்புலி மாமா போன்ற இதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. சிறுவர் மலரில் எல்லாச் சிறுவர்களையும் போல படக்கதைகளே முதலில் என்னைக் கவர்ந்தன. பலமுக மன்னன் ஜோ, பேய்ப்பள்ளி, எக்ஸ்ரே கண் சிறுவன் போன்ற படக்கதைகளை ஆர்வமாக வாசிப்பேன். அதன்பின், சிறுவர் மலரில் வரும் இரண்டு பக்கக் கதைகளையும் வாசிப்பேன். கதை முடிந்ததும், கடைசிப் பத்தியில் கதையின் நீதியை உணர்த்தும் வகையில், “சிறுவர்களே…” என்று துவங்கி நீதி போதனை செய்வார்கள். அந்தப் பத்தியை மட்டும் வாசிக்காமல் கடந்து விடுவேன். 

கே: முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து ?

ப: கல்லூரி பருவத்தில் இருந்தே எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைத் தீவிரமாக வாசிக்கத் துவங்கினேன். விகடனில் வெளியான அவரது “துணையெழுத்து” என்னைக் கிறங்கடித்தது. ஒன்றுக்குப் பலமுறை அந்தக் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசித்தபடியிருப்பேன். அவரைச் சந்திக்கமாட்டோமா என்ற ஏக்கம் உண்டானது. சிங்கப்பூருக்கு பணி புரிய வந்தபிறகும் அந்த ஏக்கம் தொடர்ந்தது. நாம் ஒன்றை மெய்யாகவும் தீவிரமாகவும் எண்ணத் தொடங்கினால், பிரபஞ்சம் அதற்கு பதிலளிக்கும் என்பார்கள். 2012 ஆம் ஆண்டில் எஸ்.ரா சிங்கப்பூருக்கு வருகை தந்தார். சிங்கப்பூரில் அவர் இரண்டு நாட்கள் சிறுகதைப் பயிலரங்கை நடத்தினார். அந்த இரண்டு நாட்களும் அவர் பல்வேறு சிறுகதைகளை அறிமுகப்படுத்தினார். சிறுகதைகளை எழுதும் முறைகள், வெவ்வேறு கதை சொல்லல் முறைகள், வடிவங்கள் என சிறுகதைகளின் நுட்பங்களையும், இலக்கிய வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்தினார். ஒரு கனவு நனவானதைப் போல நான் விரும்பிய ஆசிரியருடன் நேரடியாகப் பொழுதைக் கழிக்கவும், கதைகளைக் கேட்கவும் வாய்த்த அந்த இரண்டு நாட்கள் என் வாழ்வில் முக்கியமான நாட்கள். அதுவரை வாசகனாக இருந்த என்னை எழுத்தாளனாமாற்றிய நாட்கள் அவை. அந்தப் பயிலரங்கின் முடிவில் நான் ஒருபக்கச் சிறுகதை ஒன்றை எழுதினேன். சிறந்த கதைகளில் ஒன்றாக அக்கதையை அவர் தேர்வு செய்தார். அதன்பின் இன்று வரை தொடர்ந்து சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறேன். முதல் சிறுகதை மட்டுமல்ல, இன்று வரை எழுதும் கதைகளும் உணர்த்துவது ஒன்றுதான், படைப்பு என்பது எதிர்பாராமையோடு விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் போன்றது. துவக்குவது மட்டும்தான் நம்மைச் சார்ந்தது. ஆனால், அது எங்கே செல்லும், எப்படி முடியும் என்பது நம் கைகளில் இல்லை. பறவையின் காலைப் பிடித்துக் கொண்டு பறப்பதைப் போலத்தான். ஆகாயம் அளாவும் அதன் சிறகுகள் வழியாக படைப்பாளி தனக்கேயுரிய பிரத்யேகமான சில காட்சிகளைத் தரிசிக்கிறான். நல்லூழாக, அதை வாசகனிடம் பகிர்ந்து கொள்ள அவனால் இயல்கிறது. ஒவ்வொரு கதையை எழுத அமரும்போதும் இனம்புரியாத பயமும், எழுதி முடித்த பின்னர் மாபெரும் மனநிறைவும் ஏற்படுகிறது. கதையின் வெற்றி, தோல்வி, வாசிக்கிறார்கள், வாசிக்கவில்லை என்பதையெல்லாம் தாண்டி, படைப்பின் இந்த இனிய அவஸ்தைகள்தான் தொடர்ந்து எழுத வைக்கின்றன. 

கே: அறிவு – அனுபவம் – மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது ?

ப: என்னுடைய நோக்கில் இந்த வரிசையைத் தலைகீழாக்கிப் பார்க்கவே விரும்புவேன். மொழி-அனுபவம், கடைசியாகத்தான் அறிவு. மொழியும் அனுபவமும் சரிவிகிதத்தில் கலந்தாலே நல்ல படைப்பினை உருவாக்க இயலும். எழுத்தாளன் என்பவன் மொழியில் புழங்குபவன். ஆகையால், சொல்ல வேண்டியதைச் சிறப்பாகவும் அழகாகவும் சொல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான். சொற்களைத் தேர்வு செய்தல் என்பது எழுத்தாளனின் முதற்பெரும் கடமை. வெறுமனே ஒன்றைத் தட்டையாக யதார்த்தவாத முறையில் சொல்வது என்பது எனக்கு உவப்பில்லாதது. யதார்த்த மொழியில் எழுதப்படும் செய்தித்தாள் கட்டுரைகள், பத்திரிகை கட்டுரைகள் இவையாவற்றையும் வாசித்துவிட்டே ஒரு இலக்கிய வாசகன் இலக்கியக் கதைகளை வாசிக்க வருகிறான். அங்கும் அவனுக்கு அதே முறையிலான கதைகளைச் சொல்வது என்பது அவனைச் சலிப்படைய வைக்கும். கூடவே, எழுத்தாளனுக்கும் ஒரு சவால் வேண்டுமல்லவா? எத்தனை காலம்தான் பழகிப்போன மொழியில், சளசள என எழுதிக்கொண்டிருப்பது. கவித்துவமாக, மொழியின் பல்வேறு அடுக்குகளினூடாக கதைசொல்லலை நகர்த்திச் செல்ல வேண்டியது எழுத்தாளனின் சவால். வாசிப்புக்கு இடையூறின்றி அதை நிகழ்த்தத் தெரிந்தால் எழுத்து முதல் கட்டத்தைக் கடந்து விடுகிறது. அதற்காக, வெறுமனே மேலோட்டமான மொழி அலங்காரங்களுடன் நின்று விடலாகாது. அதையும் நல்ல வாசகன் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவான். வாழ்க்கையின் ஆழத்தையும் தீவிரத்தையும் சொல்வதற்கு அந்த மொழி பயன்படவேண்டும். எவ்வளவு அழகாகவும் கவித்துவமாகவும் சொல்லப்பட்டாலும் கதையில் ஆன்மா என்பது இல்லையானால் அது வெறும் மொழிவிளையாட்டாக நின்றுவிடும். சாமியாடி வேடமிட்டவன் மேல் தெய்வம் இறங்கிவர வேண்டும். இல்லையெனில் வெறும் கேலிக்கூத்தாக முடிந்துவிடும் ஆபத்து இருக்கிறது. அழகும் ஆழமும் இணைந்தே பயணிக்கவேண்டும்.. இப்படிப்பட்டதொரு கதை சொல்லல் முறையைத்தான் நான் பயன்படுத்த முயல்கிறேன். அனுபவங்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஏராளமான அனுபவங்கள் இருக்கக்கூடும். ஆனால், பிரத்யேகமாக நாம் மட்டுமே அடையும் சில அனுபவங்கள் இருக்கும். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய “சிதம்பர நினைவுகள்” நூலை இங்கே நினைவுகூரலாம். அவையாவும் ஒரு கவிஞனுக்கு நேர்ந்த பிறிதொன்றில்லாத அனுபவங்கள். அத்தகைய அனுபவங்களையே மொழியின் வாயிலாக அள்ளியெடுக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதையே என் படைப்புச் செயல்பாடுகளிலும் பிரதிபலிக்க முயல்கிறேன். 

கே: ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்யேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளை சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங்கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம் ?

ப: தாய் தந்தையரின் சாடைகளை ஏந்தித்தான் நாம் பிறக்கிறோம். அது நம் பரம்பரைக் கண்ணியின் புறவயமான தடயங்கள். அதுபோலவே நம் அகத்தை உருவாக்கும் முதன்மையான அம்சங்களாக சொந்த ஊரும் அந்த ஊரில் நாம் கழிக்கும் பால்யமும் திகழ்கின்றன. அவை நம் படைப்புலகில் நம்மையறியாமலே பாதிப்பைச் செலுத்தக்கூடிய அகவயமான கண்ணிகள். ஒவ்வொரு கதையை எழுதும்போதும் மனம் தானே காலத்தின் பின்னால் போய் ஒருபோதும் புறவயமாகச் சென்றடைய முடியாத அந்த பொன்னான பால்ய காலத்தில் தகைவு கொள்கிறது. அதிலிருந்து சில விஷயங்களையாவது நினைவு கூராமல் மேலும் எழுத முடிவதில்லை. ‘வெயிலின் கூட்டாளிகள்’ என்ற கதையில் என் பால்யத்தின் சில துளிகள் விழுந்திருக்கின்றன. சிங்கப்பூருக்கு வந்தபின்னர் எழுதத் துவங்கியதால், சிங்கப்பூர் சூழல் சார்ந்த கதைகளையே அதிகம் எழுதியிருக்கிறேன். ஆனாலும், பால்யம் ஒரு ஒளிமிக்கத் தீவாக, தொலைதூர வெயிலில் எனக்காக மின்னிக்கொண்டிருப்பதை உணர்ந்தபடிதான் இருக்கிறேன். சொந்த ஊரையும் அதில் கழித்த இனிமையான பால்யத்தையும் ஒவ்வொரு எழுத்தாளரும் எழுத வேண்டும் என்கிறார் கவிஞர் ரில்கே. ஒரு நாவலாகவே அவையாவற்றையும் எழுதிவிடும் திட்டம் இருக்கிறது. விரைவில் அம்முயற்சியைத் தொடர்வேன். 

கே: உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய படைப்பு என்று உண்டா ?

ப: முன்னரே சொன்னதுபோல எஸ்.ராமகிருஷ்ணனைப் படித்து வளர்ந்தவன் நான். அதற்கு முன்னரே வாசிக்க ஆரம்பித்தாலும் தீவிர இலக்கிய வாசிப்பு எஸ்.ராவில் இருந்தே துவங்கியது. அதன்பின் ஜெயமோகனின் கதைகள். இரண்டும் வெவ்வேறு வகையிலானவை. வெவ்வேறு அழகியல் அம்சங்கள் உடையவை. எஸ்.ராவின் “பால்ய நதி”, “வெளியில் ஒருவன்”, “வெயிலைக் கொண்டு வாருங்கள்” போன்ற சிறுகதைத் தொகுப்புகளுக்கு இணையாகவே ஜெயமோகனின் “திசைகளின் நடுவே”, “மண்”, “ஆயிரங்கால் மண்டபம்” போன்ற தொகுதிகள் என்னை ஈர்த்தன. இன்றளவும் இவர்கள் இருவரின் தாக்கம் என் கதைகளில் ஆழமாக இருக்கிறது. இவர்களின் படைப்புகளே என்னை எழுதத் தூண்டின. மேலதிகமாக, கோணங்கியின், “மதினிமார் கதை”, “உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை”, “பொம்மைகள் உடைபடும் நகரம்”, “கொல்லனின் ஆறு பெண்மக்கள்” போன்ற தொகுப்புகள் என் மொழியில் கவித்துவம் கூடுவதற்கு ஆதர்சமாக இருந்தன.

கே: எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார் ?

ப: முந்தைய பதிலில் சொன்னதுபோல, எஸ்.ராமகிருஷ்ணன். அதன்பின் ஜெயமோகன் மற்றும் கோணங்கி. இவர்கள் எழுதிய பெரும்பாலான புனைவுகள் என் நூலகத்தில் எப்போதும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும். மனம் சோர்வுற்றாலோ, எழுத்தில் ஏதேனும் சந்தேகம் தோன்றினாலோ, இன்றளவும் இவர்களின் கதைகளை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்துக் கொள்வேன். வாசிப்பிலும் எழுத்திலும் எனக்கான வாழ்நாள் கையேடுகளாக இவர்களின் படைப்புகளே உதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று சிகரங்களே என்னுடைய பார்வைவெளியை நிறைத்து நின்றிருக்கின்றன. 

கே: சிறுகதைக்கான கருவை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ? 

ப: என் வாழ்விலிருந்தும் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்துமே பெரும்பாலான கதைகளைப் பெறுகிறேன். முற்றிலும் கற்பனையிலேயே பெற்ற கதைகளும் உண்டு. ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் “அம்மா, சிரிங்க” என்று சொல்வதைக் கேட்டேன். ஏனோ எனக்கு அது சாதாரணமான வார்த்தைகளாகத் தோன்றவில்லை. அதை வைத்தே ஒரு கதை எழுதினேன். வெயிலில் நடந்து கொண்டிருந்தபோது என் முன்னே என் நீண்ட நிழலுருவம் சாலையில் தோன்றியது. அந்த நிழல் ஒரு கதையைக் கொடுத்தது. அலுவலகமும் நண்பர்களுடனான உரையாடல்களும் சில கதைகளைக் கொடுத்திருக்கின்றன. முற்றிலும் கனவில் ஒரு கதை தோன்றியிருக்கிறது. முழுக் கதையும் கனவில் தோன்றியது. விழித்தப்பின் அதை நினைவில் வைத்து எழுதியது மட்டுமே நான் செய்தது. எழுதுபவர்களுக்குத் தெரியும் இவையெல்லாம் அதிசயங்கள் அல்ல. படைப்பாளியின் மனம் சூல் கொள்ளத் தயாராக இருக்கும் தருணங்களில் கதை எப்படியாவது அவனுக்குள் நுழைந்து விடும். கதைகளைத் தேட வேண்டியதில்லை. அவை நம்மைச் சுற்றியிருக்கின்றன. உண்மையில், இதுவரை எழுதியதைக் காட்டிலும் அதிக கதைகளுக்கான கருக்கள் அன்றாடம் தோன்றியபடியே இருக்கின்றன. அவற்றையெல்லாம் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதுவதும் உண்டு. எஸ்.ரா தனது எழுதும் அறையில் ஒரு வெள்ளைப் போர்டு வைத்திருப்பார். அதில் அவர், தான் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலும், எழுத வேண்டிய கதைகளையும் பட்டியலிட்டு வைத்திருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கவிஞர் சாம்ராஜ் வீட்டுக்குப் போயிருந்தபோது அவரது அறையிலும் அது போன்ற வெண்பலகை இருந்ததையும் அதில் அவரது வாசிப்பு மற்றும் எழுத்துத் திட்டங்களைக் குறித்து வைத்திருப்பதையும் பார்த்தேன். நானும் என் எழுதும் அறையில் அது போன்ற ஒரு வெண்பலகையை வைத்திருக்கிறேன். வாசிக்க வேண்டிய நூல்களையும், எழுத வேண்டிய கதைகளின் கருக்களையும் அதில் குறித்து வைத்திருக்கிறேன். அன்றாடம் கண்ணில் பட்டுக்கொண்டே இருப்பதால் அதைச் செய்யாமலிருக்க முடியாது. அசுர வேகத்தில் எந்திரம் போன்று நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்வில் என் வாசிப்பையும் எழுத்தையும் தக்கவைத்துக் கொள்தற்கு, இந்த வெண்பலகை உதவிபுரிகிறது. 

கே: சமகாலக் கதைகளில் வரலாறு – தொன்மம் – நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இதன் தாக்கம் உண்டு. இவை தற்செயலா அல்லது காரணார்த்தத்துடனான செயல்பாடா ?

ப: வரலாறும் தொன்மங்களும் எழுத்தாளனுக்கு முடிவற்ற கதைக் கருக்களை அளிப்பவை. ஆகையால், எழுதுபவர்களுக்கு இவற்றின் மேல் தீராத மயக்கம் இருப்பது இயல்புதான். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. புத்த ஜாதகக் கதைகளில் எனக்கு ஈர்ப்பு அதிகம். அதில் ஒன்றை “பிடிகடுகு” என்ற கதையாக எழுதினேன். “இட்டசித்தி” போன்ற வேறு சில கதைகளிலும் தொன்மங்களை விரிவாக்கி எழுதியிருக்கிறேன். நவீன வாழ்வை இன்றளவும் நம் இந்தியக் காவியங்களையும் தொன்மங்களையும் அறிந்து கொள்வதற்கு நம் பண்டை இலக்கியங்கள் துணைபுரிகின்றன. ஆகவே மீண்டும் மீண்டும் அவற்றை வாசிக்கிறேன். புறவயமாகப் பார்க்கையில் வரலாறும் தொன்மங்களும் இறுக்கமான தோற்றத்தை அளிப்பவை. ஆனால் அவை கதைக்குள் வரும்போது, நெகிழ்ந்து கொடுப்பவை. அவற்றை வைத்து ஒரு படைப்பாளி எந்த திசைக்கும் ஆழமாகப் பயணிக்க முடியும். நம்முடைய நவீன மனதையும், வாழ்க்கையையும் மேலும் துலக்கமாக அறிந்து கொள்வதற்கு வரலாறு தொன்மங்கள் போன்றவை உதவி செய்கின்றன. நமக்கே நம்மைக் காட்டும் கண்ணாடிகள் அவை. ஆகவே அவற்றின் வாலைப் பிடித்து கூடவே பறந்து கொண்டிருக்கிறேன். 

கே: சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்பிராயம் ? நீங்கள் ரசிக்கும் சில சமகால படைப்புகள் குறித்து

ப: இது மூத்த எழுத்தாளர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி அல்லவா. பரவாயில்லை, இவான் கார்த்திக்கின் “பவதுக்கம்” சமீபத்தில் என்னைக் கவர்ந்த படைப்பு. பா. திருச்செந்தாழையின் கதைகளை விரும்பி வாசிக்கிறேன். ஜே.பி. சாணக்யாவின் கதைகள் மீது எப்போதும் மாறாத ஈர்ப்பு உண்டு. சாம்ராஜ், சுனில் கிருஷ்ணன், வே.நி.சூர்யா ஆகியோரின் படைப்புகளை விரும்பி வாசிக்கிறேன். மலேசியாவில் கே. பாலமுருகன், ம. நவீன், சிங்கப்பூரில் கனகலதா, சித்துராஜ் பொன்ராஜ், உமா கதிர், ரியாஸ் ஆகியோரின் கதைகள். நாவல்களில் சித்துராஜ், ரமா சுரேஷ் ஆகியோரின் படைப்புகள் ஈர்க்கின்றன. 

முந்தைய தலைமுறைப் படைபாளிகளுக்கு உலக இலக்கிய நூல்கள் மற்றும் தமிழின் தலைசிறந்த படைப்புகள் கிடைப்பது அரிதாக இருந்தது. க.நா.சுவின் பட்டியலை வைத்துக்கொண்டு நூல்களைத் தேடித் தேடி வாசித்திருக்கிறார்கள். ஆனால், இன்றைய படைப்பாளிகளுக்கு உலக இலக்கியச் சிகரங்களும், தமிழ் கிளாசிக் படைப்புகளும் விரல் நுனியில் கிடைக்கின்றன. சென்னைப் புத்தகக் கண்காட்சி, கன்னிமரா நிரந்தர புத்தகக் கண்காட்சி, பிற நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகள், இவை தவிர பல்வேறுபட்ட மின் நூலகங்கள் வாயிலாக முக்கியமான நூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்க முடிகிறது, கிண்டிலிலும் தற்போது முக்கியமான இலக்கியப் படைப்புகள் கிடைக்கின்றன. முந்தைய தலைமுறையைக் காட்டிலும் தற்போது அதிகமாக வாசிப்பதற்கும், பயணம் செய்வதற்குமான வாய்ப்புகள் பெருகிக் கிடக்கின்றன. ஒத்த மனமுடைய நண்பர்களைக் குழுவாக சேர்த்துக் கொண்டு வாசிக்கவும் விவாதிக்கவும் பயணம் செய்யவும் முடிகிறது. கூகிள் மீட், ஜூம், கிளப்ஹவுஸ் செயலிகளின் வழியாகவும் வாசிப்பு, விவாதம் ஆகியவற்றைத் தொடர முடிகிறது. தூரமும், பிரிவும் தங்கள் அர்த்தத்தை மெல்ல இழந்துகொண்டிருக்கின்றன. படைப்பாளிகள் நிறைய எழுத முடிகிறது. படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை வெளியிட ஏராளமான இணைய இதழ்கள் பெருகிவிட்டன. சுயமாகவும் வலைப்பூக்களைத் தொடங்கி எழுத முடிகிறது. முன்போல நூல்களைப் பிரசுரிப்பதும் சவாலானதாக இல்லை. ஆனால், இதன் மறுபக்கம், சமூக ஊடகங்களும், காணொளிகளும், கட்டற்ற தகவல் பெருக்கமும், படைப்பாளிக்கு சவாலாக இருக்கின்றன. அவனது நேரத்தை அவனையுமறியாமல் திருடிக் கொள்கின்றன. வேறு எக்காலத்தை விடவும் தற்காலத்தில்தான் படைப்பாளி புலனடக்கம் மிகுந்தவனாக இருக்க வேண்டியிருக்கிறது. எல்லாத் திசையிலும் விசையுடன் தன்னை இழுக்கும் இந்த மேனகைகளிடமிருந்து தனக்குள் இருக்கும் விஸ்வாமித்ரனைக் காக்க வேண்டிய கட்டாயம் படைப்பாளிக்கு இருக்கிறது. 

கே: உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் ? எழுதும் செயல்பாட்டிற்கு தனிப்பட்ட முறைமைகளை பின்பற்றுகிறீர்களா ?

ப: தினமும் எழுதுவதற்கு முயற்சிப்பேன். குறைந்தது ஒரு பக்கமாவது எழுத வேண்டும் என்பதே லட்சியம். ஆனாலும், சிங்கப்பூரின் அவசர வாழ்க்கையில் பெரும்பாலும் அது இயல்வதாக இல்லை. அது சவாலானதாகவே இருக்கிறது. ஆனாலும், கூடுமானவரை முயல்கிறேன். வாசிக்காத நாள் என்பது இல்லவே இல்லை. எல்லா நாளும் குறைந்தது ஒரு மணி நேரம் வரை வாசிக்க இயல்கிறது. வாசிப்பும் படைப்புக்கு இன்றியமையாதது என்பதால், அதையும் படைப்புச் செயல்பாட்டின் ஒரு கண்ணியாகவே நான் கருதுகிறேன். வார இறுதிகளில் நிறைய எழுத முடிகிறது. கதையின் சுருதி ஏறிவிட்டால், வார நாட்கள் வார இறுதி என்றெல்லாம் பேதம் இல்லை. தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன். அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டும் எழுதுவதுண்டு. எல்லா நாளும் இலக்கியத்தில் இருக்க வேண்டும் என்பார் ஜெயமோகன். வாசிப்போ, எழுத்தோ, இலக்கியத்தில் அன்றாடம் இருந்து கொண்டிருக்கிறேன். எழுதும்போது புனைவு அபுனைவு என்றெல்லாம் நேரம் வகுத்துக்கொள்வதில்லை. நான் அபுனைவும் அதிகம் எழுதுபவன். அந்தந்த வேளையில் என்ன தோன்றுகிறதோ, அது கோரும் வடிவத்தில் எழுதத் தொடங்கி விடுவதுண்டு. மற்றபடி, எழுதுவதையெல்லாம் புத்தகமாக பிரசுரம் செய்வதில் ஆர்வமாக ஈடுபடுவதில்லை. இன்னும் மூன்று புத்தகங்கள் போடுமளவிற்கான கதைகளும் கட்டுரைகளும் கைவசம் இருக்கின்றன. திடீரென்று ஞானம் பெற்றுப் பிரசுரித்தால்தான் உண்டு. 

கே: உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து

ப: அடுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிடும் திட்டம் இருக்கிறது. நவீன கவிதைகள் குறித்த எனது கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்க வேண்டும். இந்த இரண்டு புத்தகங்களையும் இந்த ஆண்டு வெளியிட வேண்டும். ஒரு நாவலுக்கான கருவையும் மனதுக்குள் அசைப்போட்டுக் கொண்டிருக்கிறேன். அதையும் எழுதத் தொடங்க வேண்டும். இப்போதைக்கு இதுதான் திட்டம். 

இது தவிர சிங்கப்பூரில் வெளியான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் குறித்த ஒரு நூலும், ‘சிங்கப்பூரில் பெண்ணெழுத்து’ என்ற கருவில் ஒரு நூலும், சிங்கப்பூர் ஆங்கில இலக்கியம் குறித்த ஒரு நூலையும் எழுதும் திட்டம் உண்டு. ‘எழுது, அதுவே அதன் ரகசியம் ‘என்பார் சுந்தர ராமசாமி. எழுத எழுத எண்ணித் தீராத ரகசியங்கள் காணக் கிடைக்கின்றன. 

***

நேர்கண்டவர் – கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.

நிஜங்கள் கற்பனையை விட மிகையானவை, இரக்கமில்லாதவை, பாராபட்சமற்றவை

0

நேர்காணல்: ஹேமி கிருஷ்

நேர்கண்டவர்: கிருஷ்ணமூர்த்தி

ஹேமி கிருஷ் சமகால எழுத்துலகின் தனித்துவமான கதைகளால் முத்திரை பதித்தவர். வாழ்வனுபவங்கள் வடுக்களாக மாறுவதற்கு ஒப்ப கதைகள் படிமங்களாக மாறும் தன்மையை இவருடைய சிறுகதைகள் பிரதிபலிக்கும். மனித உணர்வுகளின் அலைக்கழித்தல்களை வேறு வேறு பருவங்களில் இட்டு அதன் வெளிப்பாடுகளை கதைகளில் தெளிவுற எழுதுபவர். நெட்டுயிர்ப்பு, மழை  மற்றும் களித்தான் ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகள். இந்த நேர்காணல் அவருடைய கதைகளை இன்னமும் சற்று அருகில் சென்று அறிந்துகொள்ள உதவியாய் இருக்கும்.

1. கதைகளுடனான பரிச்சயம் எங்கு தொடங்கியது ?

நான் மூன்றாவது படிக்கும்போது முதன் முதலில் என் அப்பா புத்தகம் பரிசளித்தார். ரஷ்ய எழுத்தாளர் யூரி அலேஷா எழுதிய மூன்று தடியர்கள் ( The Three Fat Men) எனும் குழந்தைகளுக்கான மொழிப்பெயர்ப்பு நாவல். சுமார் 200 பக்கங்கள் இருக்கும். ஆனால் அந்த நாவல் எத்தனை முறை படித்தும் அந்த வயதில் எனக்கு புரியவில்லை. எப்படியாவது படித்துவிட வெண்டும் என நினைத்து பத்திரமாய் பாதுகாத்தேன். பல வீடுகள், ஊர்கள், நாடு மாறியும் இன்றும் 38 வருடங்களாக என்னுடன் அது பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது. என அப்பாவின் தீவிர வாசிப்பு எல்லாம் இலக்கியம் சம்பந்தப்பட்டதாகவே இருந்ததால் அவரிடமிருந்தே என் வாசிப்பும், கதைகளும் என்னை வந்தடைந்திருக்கின்றன.

2. முதல் சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து ?

சிறு வயதிலிருந்தே கதை, கவிதை டைரி எழுதுவது என கிறுக்கிக்கொண்டே இருப்பேன். அவற்றை கதை என்றோ கவிதைகள் என்றோ சொல்லிக்கொண்டதில்லை. விகடன். காம் என்னும் மின்னிதழில் வந்த தாத்தா வீடு என்னும் சிறுகதைதான் எனது முதல் கதை. முதல் கதை என்பதால், அதற்கு வந்த பாராட்டுகளை இன்றும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்

3. அறிவு – அனுபவம் – மொழி ஆகியவற்றின் இணைவு புனைவுக்கு வழிவகுக்கிறது. உங்கள் கதையுலகில் இம்மூன்றின் தாக்கம் எப்படி பாதிக்கிறது ?

ஒரு சிறுகதை எழுத நிச்சயம் நல்ல அறிவும் அதனை இயக்கும் கருவியாக பிரத்யேக மொழியும் அவசியம். என்னைப் பொறுத்தவரை அறிவும் அனுபவமும் ஒன்றுதான். அனுபவத்தின் வழியாகத்தான் அறிவை காண முடியும். அப்படி எழுதப்படும் ஒரு கதைக்கு தீட்டப்பட்டும் அழகான வண்ண அலங்காரம்தான் நாம் கையாளும் மொழியாக பார்க்கிறேன். ஆனால் ஒரு நல்ல கதை உள்ளார்ந்த திருப்தி அடைவதற்கு இவை மூன்றும் போதாது மனதினில் ஒரு பேருணர்ச்சி உருவாதல் வேண்டும். ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கும்போதே மெல்ல அதிர்ந்துகொண்டிருக்கும் ஒரு உணர்ச்சி அலையே பிராதனம். அக்கதை எழுதி முடித்தபின்பு அவ்வுணர்விலிருந்து விடுபடும் அனுபவத்தை நாம் பெற்றால், கதை நம் வசப்பட்டிருக்கிறது. இல்லையெனில் அக்கதை கைவிடப்பட்டிருக்கிறது.

4. ஊரும் பால்யமும் எழுத்தாளர்களுக்கு பிரத்யேகமானவை. வெறும் தகவல்களாக அல்லாமல் கேள்விகளை சுமக்கும் தர்க்கங்களாக தேக்கங்கொள்பவை. உங்கள் சிறுகதைகளில் அதன் தாக்கம் ?

இருக்கிறது. எங்கு தொடங்குகிறோமோ அதன் வேரிலிருந்துதானே தர்க்கங்கள் உருவாகிறது. என்னுடைய பல கதைகளின் உருவாக்கம் அங்கிருந்தே தொடங்கியிருக்கிறது. குறிப்பாக குற்றம், கயலின் நீள் கூந்தலும் ஊர் மக்களும், போன்ற கதைகளில் அதன் தாக்கத்தை என்னிடம் நெருக்கமானவர்கள் உணர்ந்தார்கள். நாம் எதையெல்லாம் சரி தவறு என நினைத்தோமோ அதன் பிம்பங்கள் பின்னாளில் சரிவதை கண்கூடாக்க காணும்போது அவற்றை கதைகளாக முன்னிலைப்படுத்த மனம் தயங்குவதில்லை.

5. உங்கள் வாசிப்பில் எழுதுவதற்கு உந்தித் தள்ளிய படைப்பு என்று உண்டா ?

பல மகத்தான படைப்புகளைப் படிக்கும்போது வியந்திருக்கிறேன். கோபல்லபுரத்து மக்கள், பொன்னியின் செல்வன், கரைந்த நிழல்கள், ஏழாம் உலகம், துயில், பாகிரதியின் மதியம், வெக்கை, சாயாவனம், என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அவற்றை உந்துகோலாக நான் நினைத்ததில்லை . படைப்பு தன்னியல்பில்தான் வெளிவரவேண்டும்.

6. எழுத்தில் உங்களுக்கான ஆதர்சம் யார் ?

ஆதர்சம் என்று எவருமில்லை. ஆனால் இமையம் மற்றும் வண்ணதாசனுடைய எழுத்துக்கள் மிக பிடிக்கும். இருவரும் வெவ்வேறு போக்கு கொண்ட எழுத்தாளர்கள். ஒருவரது கதைகள் வாழ்க்கையின் தீவிரத்தன்மையை எடுத்துச் சொல்லும், மற்றொருவரின் கதைகள் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் ஓசையை போல் ஆசுவாசத்தை தரும். 

7. சிறுகதைக்கான கருவை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ?

நிஜங்கள் கற்பனையை விட மிகையானது, இரக்கமில்லாதது, பாராபட்சமற்றது. நான் பார்த்த, கேட்ட மனிதர்களிடமிருந்தோ, என்னிடமிருந்தோ மட்டுமே கதைக்கான கரு உருவாகியிருக்கின்றன. ஏதோ ஒன்று மனதின் அடியில் படிமம் போல தங்கிவிடும். அவற்றை செதுக்கி கூர்தீட்டினால் நல்ல படைப்பாக்க வெளிக்கொணர முடியும்.

8. சமகாலக் கதைகளில் வரலாறு – தொன்மம் – நவீன வாழ்க்கை எனும் இணைவை வெகுவாகக் காணமுடிகிறது. உங்களுடைய சிறுகதைகளிலும் இவை வெளிப்படவில்லை எனினும் அவை குறித்த உங்களின் பார்வை என்ன ?

புதுமைப்பித்தனில் தொடங்கி இன்று ஜெயமோகன், பா வெங்கடேசன் வரை வரை இவற்றை கையாள்வதை பார்த்து வியந்திருக்கிறேன். தொன்மம் அல்லது வரலாற்றுக் குறியீடுகளைக் கொண்டு ஒரு நவீன வாழ்வியலை படைப்பாக கொண்டு வருவது நம்மை நாமே இன்னும் பரிசோத்தித்துக்கொள்வது போன்று. இன்னும் அது போன்ற படைப்புகளை நான் எழுதவில்லை. அதற்கு என செயல்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அந்த விருப்பமிருக்கிறது.

9. சமகால எழுத்துலகம் குறித்த உங்கள் அபிப்பிராயம் ? நீங்கள் ரசிக்கும் சில சமகால படைப்புகள் குறித்து

நிறைய இளம் எழுத்தாளர்களின் வருகை மிக அவசியமானது. எதிர்காலத்தில் இலக்கியம் என்று ஒன்றில்லாமல் போய்விடுமோ என்ற கவலை உண்டாகிறது. தமிழின் வளம் பிரமாண்டமானது. வற்றாத ஆறு போல்லல்லவா ஓடிக்கொண்டிருக்க வேண்டும், ஆனால் நீர் வற்றிய நிலத்தில் ஆங்காங்கே தென்படும் நீரூற்று போல் தமிழ் இலக்கியம் இருக்கிறது. ஆங்காங்கே உருவாகியிருக்கும் சிறு குழுக்கள்தான் இன்றைய இலக்கியம். ஒரு சாரார் தங்களுக்குள்ளே இலக்கியம் பேசி தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள். ஒரு சாரார் ஒருவர் மாற்றி ஒருவர் புகழ்ந்துகொள்கிறார்கள். இன்னொரு கூட்டத்தில் புலம்பல்களாக ஓங்கியிருக்கின்றன. இன்னொரு கூட்டம் அனைத்தையும் செவிமடுத்து தங்கள் பணியை செய்துகொண்டிருக்கின்றன. இங்கு தான்தான் இலக்கியம் என்று ஒரே ஓருவர் தனித்து நின்று மார்தட்டுவது, கொச்சையாக சொல்லவேண்டுமெனில் ஆளில்லால டீக்கடையில் டீ ஆற்றுவது போல. சுயநலமற்ற பரந்துபட்ட செயல்பாடுகள் அடுத்த தலைமுறையை வழிவகுக்கச் செய்யும். அதை மூத்த எழுத்தாளர்கள் இளையோர்களிடம் சமரசம் செய்துகொள்ளாமல் கண்டிப்புடன் படைப்புகளை சீராய வேண்டும். படைப்பாய்வுகளை தீவிரப்படுத்தப்ப வேண்டும். இது நடக்குமா என தெரியாது. நடந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவேன். சமீபமாக குறிப்பாக பெண் எழுத்தாளர்களின் வருகை மகிழ்வாக இருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸ் போன்ற பெண்ணிய தளங்கள் முக்கியமானது கூட. பெண்களின் இலக்கிய பங்களிப்பு எப்போதும் இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது என்ற எண்ணம் தோன்றிக்கொண்டேயிருக்கும். அவ்வகையில் பெண்களால் பெண்களுக்காக ஒரு இலக்கிய அமைப்பு உருவாக்கி அதனை வெற்றிகரமாக நடத்துவது புத்துணர்வை தருகிறது. சமகால படைப்புகளில் என்.ஸ்ரீராமின் படைப்புகள் என்னை கவர்ந்திருக்கின்றன. கொங்கு மக்களின் அடையாளங்களையும், தொன்மங்களையும் நிலத்தின் தன்மை மாறாத அம்மக்களின் வாழ்வியலையும் அவரின் கதைகளில் காணலாம். ஜா தீபா, பொன் முகலி, சுஜாதா செல்வராஜ் என எல்லாருடைய படைப்புகளையும் அவ்வப்போது வாசிக்கிறேன்.

10. உங்களுடைய அன்றாடத்தில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் ? எழுதும் செயல்பாட்டிற்கு தனிப்பட்ட முறைமைகளை பின்பற்றுகிறீர்களா ?

பெண்ணெழுத்து சற்று சவால்கள் நிறைந்தது. அன்றாடம் எனக்கு அமைந்திருக்கவில்லை.  அலுவலகத்தில் நாள் முழுக்க வேலை செய்துவிட்டு வீடு வரும்போது எழுத மனம் பரபரக்கும். ஆனால் வீடு நுழைந்ததும் வீட்டு வேலைகள் வரிசையில் நிற்கும். இது வீட்டில் நாள் முழுக்க வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும். வேலைகளை முடித்தபின் சோர்வையும் மீறி எழுத உந்தும்போது ஒன்றன் பின் ஒன்றாக ஏதாவது இடையூறுகள் வரும். எனக்கு காலநிலை, மனநிலை இரண்டும் ஒத்துப்போகும் சமயம் எழுதுவதற்கான சிறந்த சமயமாக கருதுகிறேன். இப்போது வேலைக்கு செல்லாததால், வீட்டில் யாருமற்ற தருணங்களை பயன்படுத்திக்கொள்கிறேன். அதனால் இரு தொகுப்புகளையும் வெளியிட்டேன். தனிப்பட்ட செயல்பாடுகளென்று எதையும் நிர்ணயிப்பதில்லை. ஒரு கதை எழுதத்தொடங்குகையில் நல்ல இசையையும், ஒரு கோப்பை காபியும் எப்போது என் வசம் வைத்திருப்பேன். 

11. உங்களுடைய அடுத்த படைப்புகள் குறித்து?

கடந்த ஒரு வருடமாக ஒரு சிறுகதைக் கூட எழுதவில்லை. அதற்கான சூழ்நிலையை நான உருவாக்கிக் கொள்ளவில்லை. பல வருடங்கள் கழித்து இந்தியா வந்ததால் எதையும் எண்ணாத , சமூக வலைதளங்களிலும் ஈடுபடாத எனக்கென்ற பிரத்யோக தருணங்களாக சென்ற வருடம் அமைந்தது. நிறைவாக இருந்தது. கதைகள் அதன் போக்கில் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். இருப்பினும் சிறுகதைதான் எழுதவில்லையே தவிர, வேறு சிலவற்றை எழுதிக்கொண்டுதானிருந்தேன். எழுதுவதை விட இயலாது..அடுத்த படைப்பை பற்றி இன்னும் யோசிக்கவில்லை.

***

நேர்கண்டவர் – கிருஷ்ணமூர்த்தி – சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தனியார் தொழில்நுட்ப நிறுவனத்த்தில் பணியாற்றுகிறார். சென்னையில் வசித்து வருகிறார். சிறுகதை, நாவல், நூல் மதிப்புரைகள் என்று தொடர்ச்சியாக எழுதி வருகிறார். மின்னஞ்சல்: krishik10@gmail.com.

அலை

0

மாஜிதா

ண்டன் பிளக் பிரைர் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி இடது பக்கமாக திரும்புகையில் தேஷான் வெற்றுப் புன்னகையுடன் நின்றிருந்தான். சட்டென்று ஜாக்கெட்டில் இருந்த கையடக்கத் தொலைபேசியை எடுத்து நேரத்தினை உறுதி செய்துகொண்டதும் மனதில் பற்றியிருந்த பதற்றம் கரைந்து சென்றது. தேஷான் போகலாம் என்பதுபோல் தலையை அசைத்து ரயில் நிலையத்தினைக் கடக்கும் இடது பக்க பாதை வழியாக ஸெளத் பாங்க் நிலையத்தினை நோக்கி நடந்தான். நான் எவ்வித சலனமுமின்றி அவனது கட்டளைக்கு அடிபணிபவன்போல் பின்தொடர்ந்தேன். 

தேஷான் என்னுடைய ஒரெயொரு நண்பன். ஆரம்பப் பாடசாலையிலிருந்து தொடங்கிய சினேகிதம் பின்னர் பியானோ வகுப்பு, மெட்ஸ் கிளப் என அவனுக்கும் எனக்கும் ஒரே விருப்புக்கள். வகுப்பறையில் குழப்பம் விளைவிக்கும் மாணவர்கள் பற்றிய கணிப்பீடு எனக்கும் தேஷானுக்கும் ஒரே தரத்தில் இருந்தது. கவிதை எழுதுவதில் மரபுக்கவிதை மட்டும் தான் என்பதை நானும் அவனும் கராறாகவே கடைப்பிடித்தோம். எங்களது பிறந்த நாள் பரிசுகளாக மைக்கல் ரோஸனை பரிமாறிக் கொண்டோம். பின்னர் உயர்தரம், பல்கலைக் கழகம் என நாங்கள் இருவரும் ஒரே கோட்டில் பயணித்ததால் அந்த நட்பு நீடித்தது. நடுவே தேஷானின் பெற்றோரிடையே ஏற்பட்ட விவாகரத்து அதனைத் தொடர்ந்து அவனது அம்மா சொந்த நாடான கென்யாவிற்கு சென்றமை என்னுடைய குடும்பத்துடனும் தேஷானுக்கு நெருக்கம் ஏற்பட வாய்ப்பளித்தது. நான் மென்மையான செயற்பாட்டு ஆட்டிஸம் உடையவன் என்று அறியப்பட்டவன், சில விடயங்களில் என்னால் தனித்து இயங்க முடியாத சந்தர்ப்பங்களில் தேஷான் பின்னால் நிற்பான். என்னையும் மீறி எழும் கோபங்கள் அவனுக்கு பொருட்டேயல்ல. எப்போதும் அரவணைக்கும் கரங்கள் தேஷானிடம் மட்டுமே உண்டு.

நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்ற சாட்சியங்கள் முக்கியமானவை. நான் கூறவிருக்கும் வாக்கு மூலங்கள் எனது வழக்கின் மைல் கல். அவை சம்பந்தமாக எனது சட்டத்தரணி லூயிஸ் ஏற்கனவே என்னுடன் உரையாடி ஆவணங்களை தயாரித்து விட்டார். மருத்துவர்கள், உளவளவாளர்கள், எல்லோரும் எனக்கு மிகவும் கவனமாக சிகிச்சை அளித்து வருகின்றார்கள். நான் வேலை செய்யும் நிறுவனத்தின் சில ஊழியர்கள் என்னுடன் நெருக்கமாக உள்ளார்கள். என்னுடைய பெயரின் மீது ஊடகங்களின் கண்கள் முற்றுகையிட்ட வண்ணமேயுள்ளன. ஆதரவாக இன்ஸ்டகிராம் முழுவதும் ஒரே முழக்கங்கள். எல்லாவற்றினையும் ஒருங்கிணைப்பவன் தேஷான் தான். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த வழக்கு சார்ந்த சம்பவங்கள் என்னுடைய மனநிலையை மிகவும் பாதித்து வருகின்றன. ஏதாவது ஆபத்து நடந்து விடலாம் என்ற பய உணர்ச்சி துரத்தி வருகின்றது. ஆகவே எதற்கும் ஒரு தடவை மிஸ்ட்டர் லூயிஸை சந்தித்து வெள்ளோட்டம் போல் ஆவணங்களை சரி பார்ப்போம் என்ற திட்டத்தினை தேஷான் முன் வைத்தான். மிஸ்டர் லூயிஸின் காரியாலயத்தில் சந்திப்பதை விட சௌத் பேங்க் செண்டரும் இதனைச் சூழ்ந்துள்ள தேம்ஸ் நதியும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த சந்திப்பு இங்கே திட்டமிடப்பட்டது. 

நானும் தேஷானும் பிளக் பிறைர் ரயில் நிலையத்தினை கடக்கையில் வலது பக்கமாக தேம்ஸ் நதி கோடை வறட்சியில் தளர்ந்து மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. கனமற்ற காற்று நதியில் படர்ந்திருந்தால் அலைகள் மேலே எழுவதற்குரிய சக்தியை இழந்து தள்ளாடின. நதியின் இரு பக்கச் சுவர்களின் கொட்டுக்களிலும் பாசி படர்ந்து செயலற்றுப் போயிருந்தன. நீரில் புதைந்திருந்த பிளக் பிரைர் பாலத்தின் சிவப்பு நிறத்தூண்கள் சூரிய வெளிச்சத்தில் ஒளி பெற்று அரண்மனைக் கோபுரங்கள் போல் எழுந்து நின்றன. 

நடை பாதையில் ஒரு இளைஞன் துண்டொன்றை விரித்து அமர்ந்து வயலின் இசைத்துக் கொண்டிருந்தான். சிலர் நாணயங்களை அவனுக்கு முன்னால் வீசிச் சென்றார்கள். 

விஞ்சானி குணே….விஞ்சானி குணே….

பதுங்கியிருந்து அம்பு எய்வது போல் சட்டென்று எனது பெயர் முக்கியத்துவம் தொனித்த குரலில் ரகசியமாய் அவ்விடத்தில் விரைந்து வந்தது. நான் அடிபட்டவன் போல் விம் என்ற இதய ஒலியுடன் உடனே திரும்பிப் பார்த்தேன். அவர்கள் என்னுடைய வயதை ஒத்தவர்கள். சிலரின் முகங்களில் வெவேறு வடிவிலான அனுதாப அலை, அதில் ஒரு பெண் என்னை நோக்கி பச்சாதாபத்துடன் உதட்டை விரித்தாள். இன்னுமொருத்தி அவளுக்குப் பக்கத்தில் நின்றவனிடம் குணே … என்று உச்சரித்து ஏதோ ரகசியமாய் கிசு கிசுத்தாள். எனது உடல் முழுவதும் வலியில் உழல்வைத்து போல் நடுக்கமுற்றது. கண்கள் நிலைகொள்ளாமல் தவித்தன. அங்கே நின்றிருந்த அனைவரையும் நோக்கி நான் குணே அல்ல குணேரிஸ் என்று கூறி கத்த வேண்டும் போல் இருந்ததது. பக்கத்தில் நின்றிருந்த தேசான் உடனே எனது தோள்பட்டையை பிடித்து அவனது பக்கம் என்னைத் திருப்பினான். பின்னர் அவனது கைகளால் என்னுடைய கைகளைச் சேர்த்து இணைத்து மசாஜ் செய்வது போல் உருவினான். அப்பொழுது அவனது கைகளில் இருந்த வெம்மை என்னுடைய நரம்புகளுக்குள் மெது மெதுவாக பாய்ந்து செல்ல என்னுடைய பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இளகியது. சில நிமிடங்கள் கழித்து நான் அமைதியானேன். “குணேரிஸ்! எல்லாம் சரியாகி விடும்,வா, நேரமாகுது”, தேசான் அழுத்தமாகக் கூறியதும் என்னுடைய நிதானம் பலம் பெற்றது. அப்பா என்னை அழைக்கும் பொழுது அவருடைய குரலில் தவழ்ந்து வரும் கனிவும் உறுதியும் தேசானில் நுழைந்து விட்டதைப் போல் ஒரு கணம் உணர்ந்தேன். நான் மீண்டும் உயிர் பெற்றவன் போல் கண்களை உயர்த்திப் பார்த்தேன். தேசான் வா என்று மீண்டும் கூறி புன்னகைத்தான். நான் பெருமூச்சு விட்டபடி நடந்தேன்.

 குணேரிஸ்! இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு உன் பெயரின் பின்னால் இருக்கும் மன சஞ்சலங்கள் தெரியாது. குணேரிஸ் என்று உச்சரிப்பதை விட குணே என்று சொல்வது அவர்களுக்கு இலகுவாக உள்ளது. இந்தக் காரணத்தினை ஏற்றுக் கொள்ள உனக்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கும். ஆனால் இப்பொழுதைய நிலையில் கலங்கி விடாதே. மனதை கொஞ்சம் திடமாக வைத்துக் கொள்ள முயற்சி செய். அது இருக்கட்டும், உனது “zero 2” நல்ல விற்பனையில் இருக்குதல்லவா? சார்ள்ஸ் ஸீபின் zeroவை விட, ராயல்டீ கிடைக்கும் பொழுது என்ன செய்வதாக திட்டமிட்டிருக்கின்றாய்? ஏதாவது யோசித்துப் பார்த்தாயா? தேசான் என்னைத் திசை திருப்புவதற்காக முயன்று கொண்டிருந்தான். பார்க்கலாம். இன்னும் முடிவில்லை ஏதாவது தொண்டு நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்க வேண்டும் என்று அம்மா கூறுகின்றாள். அந்த உரையாடலுக்குள் செல்ல வேண்டுமென நினைத்தாலும் மனம் அதுவே செல்வது போல் குணே, குணேரிஸ் என்ற இரு சொற்களையும் அரற்றத் தொடங்கியது. அந்த நாட்களில் அம்மா அப்பா இருவரினதும் பலமும் பலவீனமுமாக இந்த இரண்டு சொற்களும் அவர்கள் இருவரையும் ஆட்சி செய்தன. 

நான் பத்து வயதாக இருக்கையில் எனது பெற்றோரின் சொந்த நாடான இலங்கைக்குச் சென்றிருந்தோம். அம்மா பிறந்த ஊரான கண்டியின் தலதா மாளிகையில் அவளது பெற்றோர் வசித்து வந்தனர். அம்மா வளவ் என்ற உயர் சாதியைச் சேர்ந்தவள். அப்பா ஹேன எனும் ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்தவர். இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ளும் பொழுது அம்மாவின் பெற்றோர் விரும்பவில்லை. தாத்தாவும் பாட்டியும் என்னை முதன் முறையாக சந்திக்கையில் குணே என்று செல்லமாக அழைத்தார்கள். அவர்கள் என்னை அப்படி அழைப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. குணே என்று கூறும் பொழுது உடலை இரண்டாக வெட்டுவது போல் இருந்தது. 

ஒரு தடவை நான், தாத்தா பாட்டியுடன் தலதா மாளிகாவிற்குச் சென்றிருக்கையில், குணே! இது நமது வம்சத்தின் மிகப் புனிதமான இடம், நீ பெரியவன் ஆனதும் நமது கிராமத்திற்கே வந்து விட வேண்டும். நமது குலத்தின் பெயரை பாதுகாக்க வேண்டும் என்று போதிக்கலானார். நான் ஆத்திரம் தாங்காது என்னுடைய பெயர் குணே அல்ல. குணேரிஸ் என்று அவர்கள் முன் சத்தமாக கூறி அழுதேன். அங்கே நின்றிருந்த அனைவரின் கண்களும் என்னை நோக்கித் தாவின. தாத்தாவுக்கு என் மீது கோபம் பொங்கி எழுந்தது. இவனும் இவனுடைய அப்பா மாதிரித்தான் இருக்கான் என்று கூறி என்னைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றார். பாட்டி அமைதியாக என்னை அவளது மடியில் உட்கார வைத்து எனது தலையைக் கோதி நான் பிறந்து பெயர் சூட்டுகையில் தாத்தா, ரஸனாயக என்ற தனது குலப் பெயரை எனது பெயருடன் இணைக்க வேண்டும் என்று வாதிட்டதாகவும் அதற்கு அப்பா இணங்கவில்லை என்றும் ஆகையால் தான் குணே என்று செல்லமாக அழைப்பதாகக் கூறி சமாதானம் செய்தாள். 

பாட்டியின் கூற்று என்னை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கியது. இந்த விடயத்தினை அறிந்த அப்பா, தாத்தாவுடன் சண்டையிட்ட பின்னர் உடனே என்னை மீண்டும் லண்டனுக்கு அழைத்து வந்தார். பின்னர் நான் இலங்கைக்கு செல்வதை மறுத்தேன். அன்றிலுருந்து தான் அம்மா அப்பா இருவருக்குமிடையில் பூசல் ஆரம்பித்தது. 

குணேரிஸ்! மிஸ்டர் லூயிஸ் லாக்கம்பாஸ் முன்னால் நிற்பதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அங்கேயே வெளியில் இருக்கும் மேசையொன்றில் அமரச் சொன்னேன். உனக்கு ஓகே யா, தனது கையடக்கத் தொலைபேசியில் தட்டச்சு செய்தவாறே தேசான் கேட்டான். நான் தேசானை நோக்கி புன்னகைத்தேன்.

அன்று மாலை பி. எப். ஐ மெக்ஸில் Song of the Sea பார்த்த பின்னர் என்னையும் அக்காவையும் அம்மா வழமையைப் போல் லாகம்பாஸிற்கு அழைத்து வந்தாள். அப்பொழுது அம்மாவும் அப்பாவும் பிரிந்து ஐந்து வருடங்களாகிவிட்டிருந்தன. நான் பதின்ம வயதிற்கு அண்மையில் இருந்தேன். மீசை மெல்லிய பென்சில் கீறலைப் போல் அரும்பியிருந்தது. ஏதோ ஒரு பெரிய பாராங்கல்லை தலையில் சுமந்து திரிவது போல் மன அழுத்தம் மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்த காலம். என்னால் எதிலும் மனதைக் குவிக்க முடியவில்லை. யாருடைய முகத்தினையும் நான் நிமிர்ந்து பார்ப்பதில்லை. அன்றைய கட்டத்தில் நான் ஆட்டிஸம் மதிப்பீட்டுச் செயல் முறையிற்கு உள்ளாகியிருந்தேன். என்னுடைய அக்கா ஏடி. எச். டி. என்ற செயற்பாடு உடையவள். எங்கள் இருவரின் மீதும் அம்மாவின் முழு ஆன்ம சக்தியும் உரமாக வேரூன்றி இருந்தது. 

அக்காவிற்கு இயல்பிலேயே ஞாபகமறதி அதிகமாக இருந்தாலும் அவளுக்குள் மாபெரும் கற்பனைத் திறன் ஊற்றெடுத்தது.அக்காவின் கண்களில் தெரியும் சாந்தமான ஒளி, உதடுகளின் அசைவு எல்லாம் குழந்தைத் தன்மையை ஒத்ததாக இருக்கும். ஆனால் யாராவது ஒரு உரையாடலை தொடக்கி வைத்தால் அல்லது அவள் எதையாவது சிந்திக்க முற்பட்டால் தனக்குள் ஒரு மாபெரும் புத்தகப் பையைச் சுமந்து திரிபவள் போல் பேச ஆரம்பித்து விடுவாள். இதுவரை அக்கா எழுதிய நாவல்கள் அனைத்தையும் வாசித்துப் பார்த்தால் அவளுக்குள் இருந்து பிறிதொருத்தி எழுந்து வந்திருப்பது போல் தோன்றும்.

 அன்று லாக்கம்பாஸில் எனக்குப் பிடித்த இறால் வறுவலும் ஒலிவ் சாலட்டும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு தேம்ஸ் நதியில் மிதக்கும் சிறிய படகுகளை ஒன்றன் பின் ஒன்றாக நானும் அக்காவும் ஆராயத் தொடங்கினோம். அலைகள் திரண்டு ஆடைகளைப் போல் படகுகளை சூழ்ந்து கொண்டிருந்தன. அக்கா நதியினை கூர்ந்து நோக்கி விட்டு எதையோ பார்த்துவிட்டவள் போல் திடீரென்று அம்மா! Song of the Sea யில் வருகின்ற சிறுமியைப் போல் நானும் செல்கியாக மாறிவிடப் போகிறேன் கண்களை சிமிட்டி பட படவென்று கூறி முடித்தாள். அந்த நேரத்தில் தான் அம்மாவிற்கு செல்கியின் கதையைச் சொல்ல ஆர்வம் எழுந்தது.. ஸ்கொட்லர்ந்தின் வடக்குத் தீவுகளினை நோக்கி அம்மா சரடுகளை விரித்து வைத்தாள். நானும் அக்காவும் அம்மாவின் ஒவ்வொரு சொற்களையும் இணைத்து தனித்தனியாக செல்கியை கனவு கண்டு கொண்டிருந்தோம். அலைகள் எம்பி எம்பிக் குதிக்க செல்கியின் உலகம் என் முன்னால் வந்து நிற்பது போன்று உணர்ந்தேன். 

 லாக்கம்பாஸை நெருங்குகையில் இசை தத்தளித்தது. ஸ்பானிய சிவப்பு நிற கார்னேசன் மலர்கள் நிரம்பிய பூச்சாடிகள் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் மண் சாடிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கலவையான உணவுகளின் வாசனை, கண்ணாடிக்குடுவைகளின் கிளிங் என்ற ஒலிகள், சிரிப்பும் உரையாடலும் என லாக்கம்பாஸ் பர பரப்பாக இருந்தது. 

மிஸ்ட்டர் லூயிஸ் இடது பக்கத்தில் இருந்த கடைசி மேசையில் தேம்ஸ் நதியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். எங்களைக் கண்டதும் ஹலோ! வாருங்கள் என்று கூறிச் சிரித்தார். அன்று மிஸ்ட்டார் லூயிஸ் எப்பொழுதும் போல் இல்லாது வெள்ளை நிற கொரொக்கோடைல் டீசேர்ட் அணிந்து சாதாரணமாக வந்திருந்தார். வழமையாக மிஸ்ட்டர் லூயிஸ் அவரது காரியாலயத்தில் இருக்கும் பொழுது பேசுகின்ற கறார்த்தன்மை இப்பொழுது அவருடைய குரலில் இருக்கவில்லை. மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அவரிடம் ததும்பிக் கொண்டிருந்தன. நானும் தேசானும் மிஸ்ட்டர் லூயிஸின் இடதும் வலதுமாக அமர்ந்து கொண்டோம். நீங்கள் இருவரும் என்ன சாப்பிடப்போகிறீர்கள் ? முதலில் டோப்பாஸும் பியரும் எடுத்துக் கொள்வோமா ?மிஸ்ட்டர் லூயிஸ் தனது இரு கை விரல்களையும் ஒன்றுடன் ஒன்றாக பிண்ணி முகத்தில் குத்தி வைத்த படி என்னையும் தேசானையும் நோக்கி இயல்பாகக் கேட்டார். மிஸ்ட்டர் லூயிஸின் எளிமையான தோற்றமும் பாசாங்கில்லாத நடத்தையும் மனதில் இருந்த இறுக்கத்தினை தளர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கையை வருடத் தொடங்கியது.

நீங்கள் இருவரும் நேற்றைய பி் பி.ஸி. செய்தியில் ட்ரம்பின் உரையைக் கேட்டீர்களா?  

இதனைக் கூறும்பொழுது மிஸ்ட்டர் லூயிஸின் முகத்தில் ஏளனமும் கிளர்ச்சியும் ஒருங்கே கூடியிருந்தது. நானும் தேஷானும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.

கர்ப்பிணிகள் தைலனோல் சாப்பிடுவதால் தான் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் ஏற்படுதாம். ஆகவே தைலனோல் சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமாம், எந்த வித நிரூபனமுமின்றி ஒரு அறிக்கையை ட்ரம்ப் வெளியுட்டிருக்கார், முட்டாள்! முட்டாள்! மிஸ்ட்டர் லூயிஸ் வாய் திறந்து உரக்கச் சிரித்தார். ஓஹ் மை கார்ட்! தேசான் மேசையில் கையை அடித்தான். அந்த ஆளை மன நல விடுதியில் நிச்சயம் சேர்க்கணும், இல்லாட்டி அமெரிக்கா நாசமாயிடும் மிஸ்ட்டர் லூயிஸ் எச்சரிக்கை அடைந்தவர் போல் மேலும் தொடர்ந்தார். சில நிமிடங்கள் எங்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அந்த நேரத்தில் பியர் கோப்பைகள் காலியானது. மிஸ்ட்டர் லூயிஸ் தொண்டையை செருமிக் கொண்டார். வெறுமையாக இருந்த பியர் கோப்பையில் சட்டென்று அவரது கண்கள் நிலை கொண்டிருந்தன. இனித்தான் உரையாடல் சூடு பிடிக்கும் என்பதை ஊகித்துக் கொண்டேன். நாங்கள் அனைவரும் மௌனத்தில் ஆழ்ந்தோம். மிஸ்ட்டர் லூயிஸின் சட்டக்குரல் உயிர் பெற்றது. 

மிஸ்ட்டர் குணேரிஸ்! நாளைய தவணைக்கு எல்லா தகவல்களும் பக்காவாக உள்ளன. வழக்கின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் விரிவாக குறிப்பிட்டு உங்கள் பக்க நியாயங்களை வரிசைப்படுத்தியுள்ளேன். எல்லாவற்றினையும் நீங்கள் மீண்டும் ஒரு முறை அசை போட்டு தொகுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக இப்படியான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் பக்கம் தான் சம்பவங்கள் செறிவாக இருக்கும். நீங்கள் தேவையற்றது என்று கருதும் விடயம் கூட எங்களுக்கு தேவையானதாக இருக்கும். எனவே தன்னை ஒரு நிலைக்கண்ணாடியாக நினைத்துக் கொண்டு உங்களது தகவல்களை விபரிக்க வேண்டும். அப்பொழுது தான் என்னுடைய விவாதத்தில் பலம் செறிவு கொள்ளும். பின்னர் நானும் நீங்களும் இரு பக்கங்கள். இந்த இரண்டுமே ஒரு வழக்கின் வெற்றியில் முக்கியமானது. ஒரு இசை அரங்கு மாதிரி. ஆகவே என்னுடைய வேலை இசை அமைப்பது. குரல் உங்களுடையது. மிஸ்ட்டர் லூயிஸ் மேலும் தொடர்ந்தார்.. நான் அசையாமல் அவரின் முகத்தினையே பார்த்துக் கொண்டிருந்தேன். மிஸ்ட்டர் லூயிஸின் கண்களும் அவர் பேசிக் கொண்டிருக்கும் சொற்களைப் போல மிகத் துல்லியமாக இருந்தன. 

இந்த வழக்கினைப் பொறுத்தவரை எல்லை என்ற ஒன்றே கிடையாது. சில வேளைகளில் நீதிபதி உங்களை பேச அழைத்தால் நீங்கள் தாராளமாக மனம் திறந்து பேசுங்கள். தயக்கம் ஏற்பட்டால் எழுதியும் கொடுக்கலாம். ஏனெனில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியும் நீங்கள் தான். உங்களுடைய கூற்றிலிருந்து தான் நீதிபதி ஊகங்களை உரசிப் பார்ப்பார். மானுட சக்தியில் கற்பனையை எல்லைப் படுத்த முடியாது. கற்பனை விரிய விரிய அதன் கேள்விகளும் நீளும். உங்களுடைய மொழியில் கூறுவதாக இருந்தால் பூச்சியத்திலிருந்து இராச்சியம் உருவாகுவது போல என்று வைத்துக் கொள்ளலாம். மிஸ்ட்டர் லூயிஸ் பயில்களை என்னிடம் நீட்டினார். 

ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் சங்க உறுப்பினர்கள் மாலை ஐந்து மணிக்கு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆய்வு மையத்தில் கூடியிருந்தார்கள். நாசாவின் தலைமை நிறுவனத்தில் நடைபெறும் “விண்வெளிக்கலம் 2028” சம்பந்தமான ஆராய்ச்சியில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் சார்பில் நான் உட்பட ஆறு விஞ்ஞானிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தோம். எங்களது பணிகள் சம்பந்தமாக ஆராய்ந்து மூன்று மாத பயிற்சிகளுடன் வாஷிங்டன் அனுப்புவதற்கான கலந்தாலோசனைக்காவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக இப்படியான ஆய்வுகளுக்கு தெரிவு செய்யப்படுபவர்களின் தகைமை மிகவும் வீரியமாக அமைய வேண்டும். அதே வேளை கொஞ்சம் பாவனை, செல்வாக்கு, மேட்டிமைத் தனம், மேல்மட்ட விஞ்ஞானிகளுடன் சிறந்த சிநேகம் போன்ற இத்தியாதிகள் செல்வாக்குச் செலுத்தும். அதையும் தாண்டி பொதுவில் சமத்துவம் என்ற நல்லதொரு பெயரை நிலை நாட்ட விண்வெளி அறிவாற்றல் நிபுணத்தவம் உள்ள ஓரிருவர் உள்ளே சேர்க்கப்படுவார்கள். அப்படித்தான் நானும் ரவி நாயரும் உள்ளே தள்ளப்படோம். அச்சமயத்தில் நான் விண்வெளிக்கல ஆய்வுத் துறையில் நான்கு கட்டுரைகளை வெளியிட்டிருந்தேன். விஞ்ஞானி ஐன்ஸ்டைனின் புகழ் பெற்ற பொருண்மை – ஆற்றல் சமன்பாட்டிற்கு எழுதிய எனது விரிவான கட்டுரை மூலம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச இளம் விஞ்ஞானிகள் மன்றத்தின் மகாநாட்டில் அணு ஆயுத தயாரிப்பு தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்தன. 

அந்த வட்ட மேசையில் என்னுடைய இருக்கைக்கு பக்கத்தில் அர்ஜூன் அமர்ந்திருந்தான். எங்களுக்கு எதிரில் எமிலி அமர்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்தாற் போல் ஜெனிஃபர், ஒலிவியா, லின்டா ஆகியோர் இருந்தார்கள். அவர்களில் ஒலிவியா தவிர மூவருமே கேம்பிரிஜ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள். ஒலிவியா பிரித்தானிய விண்வெளியின் செயலாண்மையில் பணிபுரிபவர். அவ்விடத்தில் இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் கைகளை அசைத்து ஹாய் கூறி நட்பு பாராட்ட நான் மட்டும் என்னுடைய உலகத்தில் தனிமையில் அமிழ்ந்திருந்தேன். உயர் மட்ட விஞ்ஞானி மிஸ்ட்டர் வெல் அறையினுள் நுழைந்ததும் மௌனம் சில்லிட்டது. 

கூட்டத்தில் தலைமை தாங்கிய மிஸ்ட்டர் வெல் தனது கண்ணாடிச் சில்லு வழியாக அனைவரையும் உற்று நோக்கினார். அக்கணத்தில் அவரது வளைந்த நெற்றி மடிந்து நிமிர்ந்தது. எல்லோரும் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் தருணம் எழுந்தது. ஒவ்வொருவரும் தமது திறமைகளை வெவ்வேறு விதங்களில் விபரித்தார்கள். இப்படியான பாசாங்கினை என்னால் வரவழைக்க முடியவில்லை. என்னைப் பற்றி இங்கிருப்பவர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். பின்னர் அறிமுகம் என்ற பெயரில் எதற்கு இந்த விளம்பரம் ? ஹலோ நான் விஞ்ஞானி குணேரிஸ். கவிழ்ந்திருந்த தலையை நிமிர்த்தாமல் விறைப்பாகக் கூறி முடித்தேன். என்னிடம் இருந்த சொற்கள் அவ்வளவு தான். இப்பொழுது எனக்கு இருமுனையைப் பிறழ்வு குறைபாடு இருப்பதை எல்லோரும் உறுதி செய்தியிருப்பார்கள். அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை.

ஆய்வுக் குழுவின் நோக்கம், திட்ட வரைவு பற்றி மிஸ்ட்டர் வெல் மேலும் தொடர்ந்தார். விஞ்ஞானிகளே! இந்தக் குழுவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயமும் அடங்கியுள்ளது. அதாவது பெண்கள் பெரும்பான்மையான இடம்பெற்றிருக்கின்றார்கள். எனவே இது பெண்களின் ஆளுமை வெளிப்படும் தருணம். நிச்சயம் இந்தக் குழுவினர் சிறந்ததொரு ஆராய்ச்சி முடிவை உலகிற்கு தருவார்கள் என்று நம்புகின்றேன். மிஸ்ட்டர் வெல் மிகையான வியப்புடன் ஒரு மேடைப் பேச்சாளரைப் போல உரையாற்றினார். அந்த நேரத்தில் அவருடைய கண்ணாடி ஏறி இறங்கியது. செவிமடுத்துக் கொண்டிருந்த பெண் விஞ்ஞானிகள் அனைவரும் மாபெரும் சாகசக்காரர்கள் போல் பவ்வியமாக புன்னகைத்தார்கள். நான் கொஞ்சம் குழம்பிப் போனேன். இது என்ன வகையான வேடிக்கை என்று புரியவில்லை. பிரதிநிதித்துவம் என்ற பெயரில் இத்தகைய வெற்றுத் தத்துவத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆற்றலும் ஆளுமையும் யாரிடம் உள்ளதோ அவர்களே தகுதியானவர்கள். இவை எதையும் என்னால் வெளிப்படையாக பேச முடியவில்லை. அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். ஆனால் என்னுடைய கொந்தளிப்பின் சீற்றம் ரொக்கட் வேகத்தில் அதிகரித்தது. அப்பொழுது மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த கட்டற்ற கேள்விகளை அசாதாரணமான எனது தனிமையால் கட்டுப்படுத்திக் கொண்டேன். 

ஆய்வு வேலைகள் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் தொடங்கியிருந்த பொழுதிலும் ஆய்வகத்தின் புதிய சூழலுக்கு நான் முழுதாக பழக்கப்படவில்லை. மத்திய லண்டனின் கட்டிடங்கள் நிரம்பி வழியும் சாலையில் கண்ணாடிக்குவளையை கவுட்டு வைத்தாற் போன்ற கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் ஆய்வகம் அமைந்திருந்தது. ஆனால் வீதியில் செல்பவர்களுக்கு கட்டிடத்தின் உள்ளே நிகழ்பவை தெரியாத வகையில் கனத்த கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. கட்டிடத்திற்குள் நுழைந்தால் வெளியில் ஒரு உலகமும் உள்ளே வேறொரு வாழ்க்கையும் நிகழ்ந்து கொண்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். எங்கள் அனைவருக்கும் தனித்தனி அறை. அங்கே உட்பட நவீன வசதிகளுடன் கூடிய நிலையடுக்குகள். சுவர்களில் விண்வெளி சம்பந்தமான பட வரைபுகள் அதற்கேற்றாற் போல் மின் விளக்குகள். மெல்லிய ஓசையும் எழாத தூய அமைதி. சில வேளைகளில் இரவா பகலா என்ற உணர்வின்றி இந்த ஆய்வகமே ஒரு விண்வெளிக்கலம் போல தோன்றும். எனவே இந்த உலகத்தினைப் பற்றிய எந்தவொரு பிரக்ஞையுமின்றி நம்மை முழுமையாக விண்வெளியில் இணைக்கும் ஒரு ஏற்பாடு போல் தோன்றியது. 

ஆய்வுக்குழுவில் நான் தெரிவு செய்யப்பட்டதை விடவும் அதிகம் பெண்கள் அக்குழுவில் இடம் பெற்றிருப்பதை அறிந்த அம்மா மிகவும் புல்லரிப்பும் பர பரப்பும் அடைந்தாள். அக்கா மட்டும் விழிப்புற்றுவள் போன்று சற்று அதிர்ந்து ஓஹ்! அப்போ நீயும் அர்ஜூனும் ஆசியர்கள். எதற்கும் கொஞ்சம் விழிப்பாயிரு என்று தனது வெகுளித்தனமான பார்வையால் எச்சரிக்கை செய்தாள். அக்கா அன்று நினைத்த ஆருடம் அவ்வளவு விரைவில் பலிக்குமென்று நான் நம்பியிருக்கவில்லை. 

 அம்மா வேலை செய்யும் பெண்கள் நிறுவனங்களில் இவை சம்பந்தமாக சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கட்டுரைகள் வெளிவந்தன. ஒவ்வொரு நாளும் சாப்பாட்டு மேசையில் எனது ஆய்வுக்கு குழுவில் உள்ள பெண் விஞ்ஞானிகளைப் பற்றி ஆர்வமாய் விசாரிப்பது அம்மாவின் வழமையான செயற்பாடாகியது. ஆண் பெண் சமத்துவம் தொடர்பில் ஏற்கனவே நானும் அம்மாவும் பல முறை விவாதித்து இருக்கின்றோம். எங்கள் இருவருக்கும் இடையில் அக்கா நடுவராக இருப்பாள். எனினும் அம்மாவின் வரலாறும் அவள் சந்திக்கும் பெண்களின் வாழ்க்கைகளும் மிகவும் கொடூரமானவை. அவள் பார்த்த, கேட்ட, துயருற்ற கதைகளை ஒரு சொல் மீதம் வைக்காமல் பரிமாறுவாள். இறுதியில் நானும் அக்காவும் அமைதியாகி அம்மாவின் அன்பில் கரைந்து விடுவோம்.

எங்களது பயிற்சிக்கான அலகுகள் நாசா விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் அன்றைய வாரத்தின் வெளியீடுகளை பரிசோதிப்பதற்காக எங்களது குழுவில் உள்ள அனைவரும் ஒன்று சேர்வோம். ஒரு தடவை பயிற்சி அலகு தொடர்பில் இருந்த சில எதிர்மறை விளக்கங்களை நான் சுட்டிக் காட்டுகையில் வேண்டுமென்றே சம்பந்தமில்லாமல் லிண்டா எதிர்ப்புத் தெரிவித்தாள். அந்த நேரத்தில் எமிலி நீ என்ன பெரிய முதன்மை விஞ்சானியா எனக் கிண்டலாகக் கூறினாள். அதனை செவிமடுத்த ஜெனிஃபரும் லிண்டாவும் சிரித்தார்கள். பக்கத்தில் இருந்த அர்ஜுனும் ஒலிவியாவும் எதுவும் பேசவில்லை. என்னுடைய தலை சூடேறியது. மேசையில் கைகளால் பலமாக அடித்தேன், பின்னர் அங்கிருந்து வெளியேறினேன். அப்பொழுதும் அந்த மூவரும் சிரித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

என்னுடைய அறைக்குள் நுழைந்த பொழுதுதான் சற்று தணிந்திருந்தேன். ஆனால் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்தது. எமிலிக்கு நான் ஏன் பதில் சொல்லாமல் நகர்ந்தேன், அவர்களின் சிரிப்பிற்கு எதிராக நான் ஏதாவது செய்திருக்க வேண்டும், அவமானத்தால் இதயம் விம்மத் தொடங்கியது. மனம் மீண்டும் மீண்டும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டேயிருந்தது. முடிவில் ஏதோவொரு உண்மையின் அருகாமையை துல்லியமாகப் புரிந்து கொண்டேன். ஆய்வு வேலைகள் தொடங்கியதிலிருந்தே லிண்டா, எமிலி, ஜெனிஃபர் ஆகிய மூவருமே சற்று கர்வமாகவே தென்பட்டார்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் அதிகாரம் தடித்திருந்தது. சில ஆலோசனை விடயங்களில் வேண்டுமென்று என்னையும் அர்ஜூனையும் தவிர்த்தார்கள்.

நீ ஏன் தலையைச் சுற்றி துணியால் கட்டியிருக்கின்றாய்? இப்படி எந்நேரமும் தலையில் துணி இருப்பதால் ஆறுதலை அடைய முடியுமா? சாப்பாட்டு அறையில் அர்ஜூனைப் பார்த்து லிண்டா கேட்டாள். அவளின் பார்வையில் தீவிரம் எரிந்து கொண்டிருந்தது. ஆமாம், இப்படி துணியால் கட்டிக்கொண்டு இருப்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது, தலையே கழன்று விடும் பதிலுக்கு எமிலியும் சேர்ந்து ஒப்புவித்தாள். அர்ஜூன் ஏதோ பதிலளிக்க முயலுகையில் அவனை நான் முந்திக்கொண்டு என்ன?… என்ன வகையான கேள்வி இது? முட்டாள்தனம் ! லிண்டாவையும் எமிலியையும் நோக்கி நான் சத்தமாகக் கத்தினேன். அவர்கள் மீண்டும் ஏதோ சொல்ல முனைகையில் இடையில் அர்ஜூன் வேண்டாம் என்பது போல் கைகளால் சைகை செய்து  தலைப்பாகை அணிவது சீக்கியர்களின் கலாச்சாரம், நாங்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் பொழுதே தலைப்பாகை அணியத் தொடங்கி விடுவோம், எளிமையாக பதிலளித்தான். அவர்கள் இருவரின் கருத்துக்களிலும் இருந்த அபத்தத்தினை அர்ஜூன் நிச்சயம் புரிந்திருப்பான். அவர்கள் காட்டும் ஒவ்வாமையை அவன் அமைதியாக கடந்து செல்ல விரும்பினான். என்னால் அர்ஜூன் போல் நிச்சலனமாக வாழ முடியாது. எல்லாவற்றிற்கும் தகுந்த பதிலடியை நான் கொடுத்து வந்ததால் அவர்களின் மொத்த எதிர்ப்பும் என்னை நோக்கியே திரும்பியிருந்தது.

மூன்றாம் வாரத்தில் ஆய்வகத்தில் நுழைந்ததும் சந்திரனில் காலடி எடுத்து வைத்தது போன்ற உணர்வு என்னுள் மலர்ந்து விட்டிருந்தது. ஆய்வுக்குள் முழுமையாக என்னை இறக்கிக் கொண்டேன். மூளையே உடலாக மாறி விட்டிருந்தது. கரோலின் ஹெர்ச்சல், எட்வின் ஹுபல் போன்றோரின் விண்கல ஆய்வேடுகளை முழுமையாக வாசிக்கத் தொடங்கினேன். ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட விண்கலங்களின் செயற்பாடுகளை நுணுக்கமாக ஆராய்ந்தேன். மனதிற்கு புதிய திசைகள் தென்படத் தொடங்கின. ஆய்வகமே எனது சொந்த வீடாகவும் அங்கே போகாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்திருந்தேன். மாத இறுதியில் எங்களது ஆராய்ச்சியின் குறிப்புகளை சமர்ப்பிக்கையில் எனது அறிக்கை முதன்மையிடத்தில் இருப்பதாக நாசாவிலிருந்து செய்தி வந்தது. அந்தச் செய்தியினை அறிந்த லிண்டா, எமிலி, ஜெனிஃபர் மூவரின் முகங்களும் வாட்டம் கண்டன. 

திங்களன்று நாசாவின் பேராசிரியர் ரொபேர்ட் ஆய்வகம் வந்திருந்தார். அப்பொழுது எங்களனைவருக்கும் இடையில் உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வழமையைப் போலில்லாமல் வலதும் இடதுமாக என்னருகில் ஜெனிஃபரும் லிண்டாவும் வந்து அமர்ந்தார்கள். உரைகளுக்கு நடுவே அவர்கள் இருவரும் கண்ணால் பேசிக் கொள்வதும் சிரிப்பதும் எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. நேரம் செல்லச் செல்ல அவர்களின் நடத்தைகள் தீவிரமானதால் எனது கவனக்குவிப்பு குறைந்து சென்றது. பின்னர் லிண்டா எனது கால்களை அவளது கால்களால் மெதுவாக உரச ஆரம்பித்தாள். நான் எவ்வளவோ விலகியும் அவள் வேண்டுமென்று புன்னைகைத்தவாறு அதே செயலை தொடர்ச்சியாக செய்யத் தொடங்கினாள். ஒரு வித பதற்றத்தால் அடிக்கடி சிறு நீர் கழிப்பதற்காக அறையை விட்டு வெளியே செல்வதும் வருவதுமாக இருந்தேன். அந்த நேரத்தில் எமிலியும் மலசல கூடத்தின் முன்னால் வந்து சென்றாள். இடைவேளையின் பொழுது மீண்டும் நான் உரையாடல் அறையில் நுழைகையில் எமிலி தனது கையில் இருந்த தண்ணீர் போத்தலைக் காட்டி ஐன்ஸ்டைனின் ஆண் குறி என்றதும் அங்கிருந்த லிண்டாவும் ஜெனிஃபரும் சத்தமாகச் சிரித்தார்கள். என்னைக் கண்டதும் அவர்களது சிரிப்பு மேலும் வலுப்பெற்றது. என்னருகில் நின்ற அர்ஜூன் உன்னைத்தான் ஐன்ஸ்டைன் என்று பெயரிட்டுள்ளார்கள் மெதுவாகக் கூறினான். அதனைக் கேட்டதும் வியர்வை அருவி போல் உடலிலிருந்து வெளியேற குமட்டலும் அருவருப்பும் அடைந்தேன்.

ஒரு வாரம் வீட்டின் அறையை விட்டு நான் வெளியே வரவேயில்லை. காய்ச்சலும் தலையிடியும் இடைவிடாது தொடர்ந்தன. இரவுகளில் தண்ணீர் போத்தலும் ஆண்குறியும் என மாறி மாறி கெட்ட கனவுகள் என்னைப் பயமுறுத்தின. ஏதோ என்னைச் சுற்றி நடந்து விட்டது என்பதை அம்மா ஊகித்தாள். சில நேரங்களில் என்னிடம் கேட்கவும் செய்தாள். ஆனால் நடந்தது எதனையும் அம்மா நம்ப மாட்டாள் என்று நினைத்து அவளிடம் சொல்வதைத் தவிர்த்தேன். பின்னர் அவளேதான் என்னை வற்புறுத்தி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தாள்.

ஜூன் 24ம் திகதி நான் அரை மனதுடன் மீண்டும் ஆய்வகம் சென்றேன். அங்கே யாரையும் சந்திக்கக் கூடாது என்ற வழி நெடுகிலும் கடவுளை வேண்டிக் கொண்டேன். இடையில் எனது மின்னஞ்சலை திறந்து பார்த்த பொழுது எமிலி, லிண்டா, ஜெனிஃபர் மூவரும் நாசாவிற்கு தயாரித்து அனுப்பிய ஆய்வறிக்கையைப் பாராட்டி நாசா தலைமையகத்திலிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. அதனை வாசித்த பொழுது எனது தலையே சுற்றியது. நான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஆய்வின் மூலங்கள் அதே வடிவத்தில் அவர்கள் மூவரின் அறிக்கையில் ஒவ்வொரு பகுதியாக சேர்க்கப்பட்டிருந்தன. எப்படி இதை செய்திருப்பார்கள் என்ற பதை பதைப்புடன் அவசரமாக ஆய்வகத்தினை அடைந்து நேராக எனது அறைக்குச் சென்று கடவுச் சொல்லை அழுத்தி கதவினைத் திறக்க முயன்றேன். கதவு அசையவில்லை. உடல் சிலிர்த்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் பலன் எதுவுமில்லை. கடவுச் சொல் மாற்றப்பட்டிருந்தது. அப்பொழுது தான் தலைக்குள் மின்னல் வெட்டியது. இறுதியாக நான் ஆய்வகத்திலிருந்து வெளியேரும் பொழுது அறையை மூடாமல் சென்றிருக்கிறேன். உடனே ஆய்வகத்தின் பாதுகாப்பாளர் அறையை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்பதை விசாரித்த பொழுது என்னுடைய அறைக்கு பக்கத்தில் இருந்த ஸீ ஸீ டீ வீயை யாரோ செயலிழக்க செய்திருப்பது தெரிய வந்தது. என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள பல முறை அவர்கள் முயன்று கொண்டிருந்தார்கள்.  இதற்கிடையில் பாதுகாப்பாளர் உதவியுடன் கதவினைத் திறந்து உள்ளே சென்றேன். அறையின் ஒழுங்குகள் தலைகீழாக குழம்பியிருந்தன. ஏற்கனவே நான் கணனியில் தயாரித்து வைத்திருந்த ஆராய்ச்சி ஆவணங்கள் அளிக்கப்பட்டிருந்தன. அப்படியே நான் சரிந்து விழுவது போல் உணர்ந்தேன். என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் தவித்தேன். நான் தள்ளாடிய படி அறையை விட்டு வெளியேறுகையில் எமிலி முன்னால் நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் உடல் விறைத்து திகிலுற்றது. அவளது முகம் சூன்யக் கிழவியின் முகத்தைப் போல் விகாரமடைந்திருந்தது. எமிலி ஏளனமான புன்னகையுடன் எனது அருகில் நெருங்கி தோள்களை கைகளால் அமிழ்த்தினாள். நான் அவளை விட்டு விலக முயற்சித்தும் அவள் என்னை இறுகப் பிடித்து எனது உதட்டில் அவளது உதட்டினை வைத்து என்னுடன் ஒரு இரவு உன்னால் இருக்க முடியுமா? அப்படியென்றால் இனி உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன். மிகவும் ரகசியமாகக் கூறிவிட்டு அவ்விடத்தினை விட்டு அவசரமாக நகர்ந்தாள்.

 என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே கழிப்பறைக்குள் ஓடிச் சென்று உதடுகளை பல முறை கழுவினேன். அவளது உடலிலிருந்த பேர்பியூம் வாசனை எனது ஆடையில் ஒட்டியிருந்தது. அதனை சுவாசிக்கையில் வாந்தி பீரிட்டது. எல்லாம் சேர்ந்து உடல் தீப்பிடித்து எறிவது போல் அல்லது ஒவ்வொரு உறுப்புக்களும் உடைவது போல் வலியில் துடித்தேன். கழிப்பறையிலிலிருந்து வெளியேறுகையில் யாரோ என்னை கொல்ல முயற்சிப்பது போல் பயம் முற்றியிருந்தது. அவசரமாக ஆய்வகத்தினை விட்டு வெளியேறினேன். அந்த இடமே மறந்து விட்டது போல் இருந்தது. எந்தப் பக்கம் செல்வது என்று தெரியவில்லை. தலை விறைத்து கல்லாகிவிட்டிருந்தது. மீண்டும் யாரோ பின்தொடர்கிறார்கள். எமிலியைப் போன்ற உருவங்கள், அங்குமிங்குமாக வீதியில் ஓடினேன். எவ்வளவு தூரம் அதன் பிறகு என்ன நடந்தது எவ்வளவு நாட்கள் என்று தெரியவில்லை. மனநல மருத்துவ மனையின் சிகிச்சைப் பிரிவில் கண்கள் திறக்கும் பொழுது கோலொம்பியா பல்கலைக்கழத்தில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்த தேசான் உட்பட அம்மாவும் அக்காவும் நின்றிருந்தார்கள்.   

சரி, நான் இப்பொழுது புறப்பட வேண்டும், மிஸ்ட்டர் லூயிஸ் புறப்பட எத்தனிக்கையில் எனது தொலைபேசி ரீங்கரித்தது. அம்மா என்றேன். மிஸ்ட்டர் லூயிஸ், சரி அழைப்பை எடுங்கள் என்றார். நான் தொலை பேசியினை அழுத்தியதும் குணேரிஸ் !அம்மா பட படப்புடன் குரலை உயர்த்தினாள். என்ன நடந்தது? நான் அதிர்ச்சியடைய, இப்பொழுது எனக்கு ஒலிவியா போன் பண்ணியிருந்தாள். அங்கே உனக்கு எதிராக நடந்த அனைத்திற்கும் சில சாட்சியங்களை நாளை அவளால் கூற முடியுமாம். மிஸ்ட்டர் லூயிஸ் முதலில் அவளைக் கேட்ட பொழுது அவளுக்கு தயக்கம் இருந்தததாம். அதனால் இப்பொழுது தன்னால் உனக்கு உதவி செய்ய முடியும் என்று சொன்னாள், உனக்கு மூன்று பெண்கள் அநீதி இழைத்து விட்டாலும் அந்த அநீதிக்கெதிராக ஒரு பெண் சாட்சி சொல்ல வருவது நல்லது தானே! அம்மா தயங்கித் தயங்கி சொற்களை அடுக்கினாள். அவளது குரலில் ஈரம் படிந்திருந்தது. நான் எதுவும் பேசாமல் தோலை பேசியைத் துண்டித்தேன். 

உன்னுடைய அம்மா இப்பொழுது பெண்களுக்கெதிராக திரும்பியிருக்கும் பிரச்சாரத்திற்குப் பயந்து ஒலிவியாவை நம்புகிறாள். எனக்கும் உனது அம்மாவின் பதட்டம் புரிகிறது. ஆனால் எனது வாடிக்கையாளரின் நலனும் வழக்கும் மிக முக்கியம். திடீரென்று ஒலிவியா களத்தில் குதிப்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. இது எதிராளிகளின் ஏற்பாடாகக் கூட இருக்கலாம். ஆகவே ஒலிவியாவின் சாட்சியங்கள் தேவையில்லை. இவற்றை அம்மாவிடம் சொல்லி விடு, தைரியமாக இரு. நாளை சந்திப்போம், மிஸ்ட்டர் லூயிஸ் எனது தோள்களைத் தட்டி விடைபெற்றார். மேசையில் நானும் தேசானும் மட்டும் எஞ்சியிருந்தோம். மிஸ்ட்டர் லூயிஸ் சொல்வது தான் சரி, ஒலிவியாவின் சாட்சியத்தில் ஏதோவொரு திட்டம் இருக்கு. சரி நாம் கிளம்புவோம், தேசான் எழுந்ததும் நீ வெளிக்கிடு, நான் கொஞ்சம் இங்கே இருந்து விட்டு வருகிறேன். நான் அமர்ந்திருந்தேன். உண்மையாகவா? உன்னால் தனியாக வீடு செல்ல முடியுமா? ம்ம், எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுகிறது. ஓகே காலையில் வீட்டிற்கு வந்து இருவரும் ஒன்றாக நீதிமன்றம் போவோம். தேசான் சில எட்டுகள் வைத்தவன் எனது தனிமையின் உள்நோக்கத்தினை புரிந்து கொண்டவன் போல் மீண்டும் என்னருகே வந்து தயவு செய்து அம்மாவிடம் எப்படியாவது ஒலிவியாவைப் பற்றி கூறி விடு, தேசான் நகர்ந்தான்.

லாகம்பாஸில் நான் ஒரு லடே கோப்பியை ஓடர் செய்து குடித்தேன். தேம்ஸ் நதியின் குளிர்ந்த காற்று இருளின் அடர்த்திற்கேற்ப சற்று கனமாக மாறிக் கொண்டிருந்தது. எனது ஜாக்கட்டின் சிப்பரை கழுத்து வரை இழுத்து தலையை மூடிவிட்டு புறப்பட்டேன். அம்மா தொலைபேசியில் மீண்டும் அழைத்தாள். தயக்கத்தில் உடனே அந்த அழைப்பை துண்டித்தேன். நிச்சயம் அவள் எனது பதிலை எதிர்பார்க்கிறாள், ஆனால் மிஸ்ட்டர் லூயிஸின் கருத்தை அவளுக்குக் கூறும் அளவு மன வலிமை என்னிடம் இல்லை. ஏனெனில். இந்த உலகத்தில் நான் பார்க்கும் அன்பு அவளின் கண்ணீரில் மட்டுமே புதைந்துள்ளது. நாளை ஒலிவியாவின் சாட்சியங்களை நான் ஏற்றுக்கொள்ளாமல் வெற்றியீட்டினால் அம்மா எப்படி புரிந்து கொள்வாள். அல்லது ஒலிவியாவின் சாட்சியங்களில் எனது வழக்கு உடைந்து போனால் என்னவாகும். வழக்கின் ஒவ்வொரு அசைவும் என்னை ஏறிட்டுப் பார்ப்பது போல் இருந்தது. வீடு செல்வதா இல்லையா என்று குழம்பினேன். எனது நடை தளர்ந்ததும் நதியிலிருந்து வீசிய பலமான காற்றால் தலையை மூடியிருந்த ஜாகெற்றின் கொழுவி நழுவியது. காரணமேயில்லாமல் வலது பக்கமாக திரும்பிய பொழுது நதியில் இருண்மை விழுந்து கருமையின் ஒளி பரவியிருந்தது. அதன் அலைகளில் இருந்து வந்த மெல்லிய இரைச்சல் கரையை அடைகையில் கண்ணாடித்துண்டுகளில் விழுவது போல் ஒலி எழுப்பின. நதியினைச் சுற்றிக் கட்டியிருந்த சுவரினை நெருங்கிய பொழுது நீரின் குளிர்ச்சியான மணத்தினை சுவாசித்து உள்ளே இழுத்தேன். ஒரு புதுவிதமான இன்ப உணர்ச்சி என்னைத் தாக்கின. நதியின் அடுத்த கரையில் லண்டனின் வெஸ்ட் மினிஸ்ட்ரை சுற்றியிருந்த கட்டிடங்களில் இருந்த மின்விளக்குகள் மின் மினிகள் போல் ஒளிர்விடத்தொடங்கின. அந்தக் கணத்தில் விண்வெளியின் கூரையில் அமர்ந்து நட்சத்திரங்களைப் பார்ப்பது போல் குறு குறுப்பு ஏற்பட்டது. அதே பரவசத்துடன் நான் நதியினை மேலும் நெருங்கினேன். அலைகள் உருமாறத் தொடங்கின. மீண்டும் அம்மாவின் ஏக்கம். அலையின் விளிம்புகள். செல்கி கதைகள் மாறி மாறி எழுந்தன. திகைப்பு முட்ட நதியின் முகத்தினை கூர்ந்து பார்த்தேன். அம்மாவின் கதைகளில் இருந்தவாறே அந்த அலைகளில் அன்பும் கருணையும் ததும்பி வழிந்தன. அதோ செல்கியின் உருவம், அலைகளுக்குள் அவள் ஒரு பேரரசியாக வீற்றிருக்கிறாள். திகிலுற்ற எனது கண்கள் செல்கியை தேடுகின்றன. நேரம் செல்லச் செல்ல செல்கி என் சிந்தனையை துளைத்து அதன் எல்லையை அடைந்து கொண்டிருந்தது. இவ்வுலகில் நான் எப்பொழுதும் அடையாத இன்பம் அந்த அலையின் கைகளில் விரிந்து தவழ்ந்தன. பரவசம் முற்றிக் கனியும் தருணம். திடீரென்று எனக்குள் இருக்கும் அந்த சிறுவன் மலர்ந்த சிரிப்பை வெளியே எடுத்தான். அவனது கைகளை இணைத்து சங்கினை ஊதினான். செல்கி அன்புடன் அரவணைத்து கொண்டாள்.   

***

மாஜிதா – இலங்கையின் ஒட்டமாவடியில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் வசித்துக் கொண்டு, சட்டத்துறையில் பணியாற்றுகிறார். இவரது சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. மின்னஞ்சல்: fhaniffa449@gmail.com

வரலாற்றை வழிமறிக்கும் ஆவணங்கள்

0

அருண் பிரகாஷ் ராஜ்

வீன தமிழக வரலாற்றின் வெவ்வேறு கூறுகளைப் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு நாளேடுகளும், இதழ்களும் முக்கியமான சான்றுகளாக அமைகின்றன. குறிப்பாக, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய பல்வேறு சாதி மற்றும் மத சங்கங்கள், சீர்த்திருத்த அமைப்புகள், தேசிய, திராவிட மற்றும் இடதுசாரி அரசியல் இயக்கங்கள் முதலானவை குறித்து ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு, அந்தந்த இயக்கங்களை சார்ந்தவர்கள் நடத்திய பத்திரிகைகளே பெரும் கருவூலமாக திகழ்கிறது. இதுவரை, நவீன தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றை பற்றி வெளியான பெரும்பாலான முக்கியமான ஆய்வுகள் இயக்கங்களின் பிரச்சாரப் பத்திரிகைகளையே மூலச் சான்றாக (primary source) கையாண்டிருப்பதோடு, நவீன தமிழகத்தின் பிரதான ஆளுமைகளான பாரதி, பெரியார், அயோத்திதாசர், ஜீவானந்தம் போன்றவர்களின் எழுத்துக்களும், சிந்தனைகளும்கூட இதழ்களில் இருந்தே எடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டிருக்கின்றன. 

இவ்வாறு, நவீன தமிழகம் பற்றியான வரலாற்றாய்வில் இதழ்களுக்கு இன்றியமையாத இடமிருந்தாலும், செறிவான ஆய்வு நோக்கில் தமிழ் இதழியல் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. எனினும், அத்தகைய தமிழ் இதழியல் வரலாற்றை எழுதுவதற்கு பெருந்துணை புரிந்திடும் வகையில், தமிழில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் வெளியான ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் பற்றிய அடிப்படை விவரங்களை தொகுத்து, ஆவணப்படுத்துவதற்கு சில குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்திருக்கின்றன. அத்தகைய முயற்சியில், அ.மா.சாமி, மா.சு. சம்பந்தன், இ. சுந்தரமூர்த்தி, மா.ரா. அரசு போன்றவர்களின் பங்களிப்பு மகத்தானது. இருபதாம் நூற்றாண்டில் வெளியான் இதழ்கள் குறித்து ரா.அ. பதமநாபன், கல்பனாதாசன் ஆகியோர் எழுதிய நூல்களும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இம்முன்னோடிகள் எழுதிய/தொகுத்த நூல்கள் தமிழ் இதழியலின் அனைத்துப் போக்குகளையும் முழுமையாக அடையாளம் காட்டவில்லை. குறிப்பாக தமிழ் சூழலில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, சமகாலம் வரை தலித்துகளால் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் பற்றி மிக குறைவாகவே, நான் இங்கு குறிப்பிட்டுள்ள இதழியல் ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 

அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி, 1990களில் இருந்து, எழுச்சிப்பெற்ற ’தலித் இலக்கியம்’ எனும் வகைமை தமிழ் அறிவுலகில் பெரும் தாக்கத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. சிறுகதை, நாவல், கவிதை போன்ற புனைவு வடிவங்களோடு, திறனாய்வு, தன்-வரலாறு, வரலாறு போன்ற அபுனைவு வடிவங்களையும் உள்ளடக்கியே இக்காலகட்டத்தில் தலித் இலக்கியம் வளர்ந்தது என கூறலாம். குறிப்பாக, சமகாலத்தில், சாதி ஒழிப்பில் திராவிட இயக்கங்களிடம் இருக்கும் போதாமைகளை உணர்ந்த தலித்துகள், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பாகவே, தமிழ் நாட்டில் சாதி எதிர்ப்பு இயக்கத்தை தலித்துகளே முன்னெடுத்தார்கள் எனும் வரலாற்றையும் நினைவுக்கூறத் தொடங்கினார்கள். அத்தகைய சந்தர்ப்பத்தில்தான், ’தமிழன்’ இதழ்களில் இருந்து அயோத்திதாசரின் எழுத்துக்களை தொகுத்து வெளியிட்டார் ஞான அலோசியஸ். அவ்வெளியீடு, தலித்துகளின் வரலாற்று ஓர்மையை இன்னும் கூர்மைபடுத்தியது. விளைவாக, ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. இராஜா, சகஜானந்தர், எல்.சி. குருசாமி போன்ற தலித் ஆளுமைகள் மறு-கண்டுபிடிப்பு செய்யப்பட்டு, அவர்களைப் பற்றிய தேடல்களும், ஆய்வுகளும் நடக்கத் தொங்கின. 

நவீன தமிழகத்தில் தலித்துகளின் வரலாறு குறித்து நடந்துவரும் ஆய்வுகளில், ஜெ. பாலசுப்பிரமணியத்தின் ”சூரியோதயம் முதல் உதய சூரியன் வரை’ எனும் நூல் மிக முக்கியமானது. 1869ல் இருந்து 1943 வரை, அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை சேர்ந்த தமிழ் தலித்துகளால் நடத்தப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களை பற்றிய விவரங்களைத் திரட்டித் தொகுத்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். தலித்துகளை பற்றி பொது சமூகம் கட்டமைத்திருக்கும் அத்தனை பிம்பங்களையும் கட்டுடைக்கும் வகையில், 19ம் நூற்றாண்டு தமிழகத்தில், நவீனத்துவம் முகிழ்ந்த தருணத்திலேயே தலித்துகளிடையே எவ்வாறு வளமானதொரு அறிவுச்சூழல் நிலவியது என்பதை இந்நூலினூடாக நிறுவியுள்ளார். மேலும், இந்நூலானது வெறும் இதழ்களை பற்றிய வரலாறாக மட்டும் நின்றுவிடாமல், அவ்விதழ்களை நடத்திய ஆளுமைகள் மற்றும் இயக்கங்களின் வரலாறாகவும் விரிவடைந்து, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில், தலித்துகளிடையே எவ்வாறு பலதரப்பட்ட சிந்தனைப் போக்குகளும், சமூக-அரசியல் பார்வைகளும் நிலவிவந்தன என்பதைக் கவனப்படுத்துகிறது. 

’சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை’ நூலின் இரண்டாம் பாகம் என்றே, பாலசுப்பிரமணியம் சமீபத்தில் வெளியிட்ட ‘தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்’ நூலை குறிப்பிடலாம். இந்திய அரசியலில் அம்பேத்கரின் வருகைக்கு முன்னால், தலித் மற்றும் சாதி எதிர்ப்பு அரசியலானது பிராந்தியத்தன்மை கொண்டதாக இருந்தது. 1920களில் இருந்து தன்னுடைய பொது வாழ்க்கையைத் தொடங்கும் அம்பேத்கர், தான் உருவாக்கிய இயக்கங்களினூடாக, தலித்துகளுக்கான அரசியலை தேசிய அளவில் வளர்த்தெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். 1930களிலேயே தமிழகத்தில் உள்ள தலித் அமைப்புகளிடையேயும், ஏனைய சீர்த்திருத்த இயக்கங்களிடையேயும் அம்பேத்கர் பரீட்சையமானவராக இருந்திருக்கிறார். எனினும், அம்பேத்கர் அக்காலகட்டத்தில் ஏற்படுத்தியிருந்த ’சுதந்திர தொழிலாளர் கட்சி’ போன்ற அமைப்புகள் தமிழகத்தில் கிளைப் பரப்பியிருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், 1942ல் அவர் உருவாக்கிய ’அகில இந்திய செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன்,’ இங்குள்ள தலித்துகளிடையே குறிப்பிடத்தக்க அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று துணிந்து கூறலாம். தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில், ஃபெடரேஷனின் கிளைகள் ஏற்படுத்தப்பட்டதோடு, தமிழ் நாட்டை சேர்ந்த என். சிவராஜ் போன்றவர்கள் ஃபெடரேஷனின் அகில இந்திய தலைவர்களாகவும் செயலாற்றியிருக்கிறார்கள். மேலும், அகில இந்திய செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனுக்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்திரிகைகளும் நடத்தியிருக்கிறார்கள். 

தன்னுடைய, ‘தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்’ நூலில், ஃபெடரேஷனுக்கு ஆதரவாக தமிழில் வெளியான சமத்துவம், உதயசூரியன், சமத்துவ சங்கு, உரிமை, தொண்டு, விடுதலை முரசு ஆகிய இதழ்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாலசுப்பிரமணியம். இந்நூலில் இறுதியாக குறிப்பிடப்பட்டிருக்கும், ‘மதுரகவிஞன்’ எனும் பத்திரிகை மட்டும், செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன் மறைந்து பல ஆண்டுகள் கழித்து (1972ல்) முருகேச பாகவதாரால் தொடங்கப்பட்ட அம்பேத்கரிய இதழாக இருக்கிறது. இவ்விதழ்களை நடத்தியவர்களின் பின்புலத்தையும், இதழ்களின் உள்ளடக்கத்தையும் விரிவாக பதிவு செய்வதனூடாக, தலித் வரலாற்றில் மட்டுமின்றி, நவீன தமிழக வரலாற்றிலும் அதிகம் பேசப்படாத கீழ்காணும் விசயங்களை இந்நூலினூடாக பாலசுப்பிரணியம் கவனப்படுத்தியிருக்கிறார் :

  1. தேசிய அரசியலில் அம்பேதகாரின் இடம் என்னவாக இருந்தது எனும் விவாதத்தில், ஒரு சாரார் அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாளில் பிராந்திய அளவிலான தலித் தலைவராக (அதிலும் குறிப்பாக அவர் பிறந்த மகத் சாதியின் தலைவராக) மட்டுமே இருந்தார் எனவும், அவரது மரணத்திற்கு பிறகுதான் தேசிய அளவிலான தலித் எழுச்சிக்கு அம்பேத்கரது பிம்பம் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறுவதுண்டு. அத்தகைய வாதத்தை மறுதளிக்கும் வகையில், எவ்வாறு அம்பேத்கரும், அவரது அகில இந்திய செடியூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த தலித்துகளிடையே பெரும் தாக்கத்தை 1940களிலும், 1950களிலும் ஏற்படுத்தியிருந்தனர் என்பதை இந்நூல் ஆதாரப்பூர்வமாக நிறுவியிருக்கிறது. உதாரணமாக, ஃபெடரேஷனின் மாநில தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீராசாமியின் தொண்டு இதழானாது, அம்பேத்கரை ’பாபாசாஹிப்’ என அழைக்க வேண்டும் என்றும், கடிதம் எழுதுகையில் ‘ஜெய் பீம்’ என தொடங்கி முடிக்க வேண்டும் என்றும் தனது வாசகர்களை வலியுறுத்தியிருப்பதும்; அம்பேத்கரின் மறைவையொட்டி பல்வேறு தமிழ் தலித் இதழ்கள் வெளியிட்டிருக்கும் உணர்ச்சிகரமான இரங்கல் குறிப்புகளும் அம்பேத்கர் மீது பெரும்மதிப்பும், பக்தியும், பற்றும் கொண்டவர்கள் அவரது வாழ்நாளிலேயே தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. 
  1. ஃபெடரேஷன் இயங்கிய காலகட்டத்தில் (1942 – 1957), பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை, பாகிஸ்தான் பிரிவினை, அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம், இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாததால் தனது அமைச்சர் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தது போன்ற தேசிய அளவில் முக்கியத்துவமுடைய பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. பாலசுப்பிரமணியத்தின் நூலானாது, தமிழகத்தை சேர்ந்த தலித்துகள் அத்தகைய தேசிய நிகழ்வுகளை பற்றி எத்தகைய பார்வையினைக் கொண்டிருந்தார்கள் என்பதையும், அந்நிகழ்வுகளுக்கு தங்களது பத்திரிகைகளினூடாக எவ்வாறு எதிர்வினையாற்றினார்கள் என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. 
  1. இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இதழ்கள், செடியூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனின் பிராந்தியத் தலைவர்களாலும், ஆதரவாளர்களாலும் தொடங்கப்பட்டிருந்தாலும், அவை யாவும் ஒரே தன்மையோடு விளங்கவில்லை. மாறாக, இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியரின் பின்னணி, பத்திரிகை வெளியான ஊர் மற்றும் காலக்கட்டம் போன்ற அம்சங்களும் இவ்விதழ்களின் தன்மையைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. இதை விளக்க ’உதயசூரியன்’ பத்திரிகையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ’வட-ஆற்காடு தோல் பதனிடும் தொழிற் சங்கம்’ எனும் அமைப்பின் சார்பாக 1939ல் தொடங்கப்பட்ட உதயசூரியன், 1948 வரை வெளியானது. அரசியல் ரீதியாக உதயசூரியனின் ஆசிரியர் ஜெ.ஜெ. தாஸ் ஃபெடரேஷனை ஆதரித்தாலும், தொழிற்சங்கத்தின் சார்பாக வெளியாகும் இதழ் என்பதால், சாதியை எதிர்த்த அளவிற்கு வர்க்க பேதத்தையும் மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறது உதயசூரியன். தோல் பதனிடும் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மட்டுமின்றி, பீடி சுற்றுபவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களின் மீதும் அக்கறை கொண்டிருந்தது. மேலும், கம்யூனிச அரசியலின் மீதான தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் காரல் மார்க்ஸ், லெனின் போன்ற உலகலாவிய இடதுசாரி ஆளுமைகள் பற்றி கட்டுரைகள் வெளியிட்டதோடு, புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளாரான் மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை தமிழில் மொழிப்பெயர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டது உதயசூரியன். மேலும், லெனினையும் அம்பேத்கரையும் ஒப்பீடு செய்யும் கட்டுரையொன்றையும் இவ்விதழ் வெளியிட்டிருந்தது. இத்தகைய இடதுசாரி சார்பானது தமிழகத்தின் வெளியான மற்ற ஃபெடரேஷன் ஆதரவு பத்திரிகைகளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அம்பேத்கருமேகூட கம்யூனிசம் மீது எதிர்மறையான பார்வையைதான் கொண்டிருந்தார் என்பது அவரின் Buddha or Karl Marx எனும் நூலை வாசித்தவர்களுக்குத் தெரியும். எனவே, தமிழக அம்பேத்கரியர்களிடையே எத்தகைய மாறுபட்ட சிந்தனை போக்குகள் இருந்திருந்தன என்பதை பாலசுப்பிரமணியத்தின் நூல் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 
  1. தலித்துகளுக்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையிலான உறவு குறித்தான விவாதத்தில் சில புதிய தரவுகளையும், பார்வைகளையும் வழங்கியிருப்பதை இந்நூலினுடைய மற்றொரு முக்கிய பங்களிப்பாக கருதலாம். தலித்துகளுக்கும், திராவிட இயக்கத்திற்குமான உறவு சற்று சிக்கலானது. பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் வகையில் நீதி கட்சியானது பார்ப்பனரல்லாத அனைத்து சாதிகளையும் ஒன்றிணைக்க முயற்சித்தது. ஆரம்பத்தில் எம்.சி. ராஜா போன்ற தலித் தலைவர்கள் நீதி கட்சியில் இணைந்தாலும், விரைவில் அக்கட்சியானது பிராமணரல்லாத சாதி இந்துக்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதை உணர்ந்து, அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். தலித் விசயத்தில், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் நிலைப்பாடு நீதி கட்சியை காட்டிலும் மாறுபட்டதாக இருந்ததது. சாதி ஒழிப்பிலும், தீண்டாமை ஒழிப்பிலும் பெரியார் அதிக அக்கறை காட்டினார். 1930களில், அம்பேத்கர் வலியுறுத்திய இரட்டை வாக்குரிமையை தீவிரமாக ஆதரித்த சுயமரியாதை இயக்கம், பூனா ஒப்பந்தத்தின் போது காந்தியை கடுமையாக எதிர்த்தது. மேலும், அம்பேத்கரின் மரணம் வரை, அவருக்கும், பெரியாருக்கும் பரஸ்பர மரியாதையும், நல்ல நட்பும் தொடர்ந்திருக்கிறது. 

பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் கடைசி வரை சீரான உறவு தொடர்ந்தாலும், தமிழகத்தை சேர்ந்த அம்பேத்கரியர்களுக்கும், பெரியாருக்கும் சிக்கலற்ற உறவு நீடித்ததாக தெரியவில்லை. மெட்ராஸ் மாகாண செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனின் காரியதரிசிகளில் ஒருவரான வி.நயினான் என்பவர் தான் எழுதிய ‘தீப்பொறி’ எனும் நூலில், பெரியாரின் சுயமரியாதை இயக்கமானது தலித்துகளுக்கு அணுக்கமானதாக இருந்தது எனவும், நீதி கட்சிக்கு அவர் தலைவரானதை தொடர்ந்து தலித் பிரச்சனைகளுக்கு போதுமான அக்கறை செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட, இதே கருத்தை தமிழ்நாடு ஃபெடரேஷனின் தலைவராகவும், கடலூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஆ. இரத்தினம் என்பவர் நடத்திய ‘உரிமை’ இதழும் வெளியிட்டிருக்கிறது. உரிமையில் வெளியான கட்டுரையொன்று, சுயமரியாதை இயக்கமானது தலித்துகளின் உழைப்பினால் வளர்ச்சியடைந்தது என்றும், 1944ல் அது திராவிடர் கழகமாக பரிணமித்த பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வசம் அவ்வியக்கம் சென்றுவிட்டதாகவும் விமர்சித்ததோடு, தலித்துகள் தங்களது ஆதரவை இனி திராவிடர் கழகத்திற்கு வழங்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது. இதே போல, 1940களில் வெளியான உதயசூரியன் போன்ற பிற அம்பேத்கரிய இதழ்களும் திராவிட இயக்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருப்பதை பாலசுப்பிரமணியம் கவனப்படுத்துகிறார். அவற்றில், திராவிட இயக்க இதழ்களை தலித்துகள் ஆதரிப்பதை போல, திராவிட இயக்கத்தவர்கள் தலித்துகள் நடத்தும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து, அவர்களது கருத்தை புரிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை; பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் அளவிற்கு திராவிடர் இயக்கம் தலித்துகளின் மீது சாதி இந்துக்கள் நிகழ்த்திடும் வன்முறையை எதிர்ப்பதில்லை ஆகிய விமர்சனங்கள் இன்றளவும் பொருந்துவதாக இருக்கிறது. 

திராவிட இயக்கத்தின் மீது எல்லா அம்பேத்கரிய இதழ்களுக்கும் ஒரே மாதிரியான பார்வை இருக்கவில்லை என்பதையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறார் பாலசுப்பிரமணியம். 1956ல், திருச்சியில் இருந்து எம். சிங்காரம் என்பவரால் தொடங்கப்பட்ட ‘விடுதலை முரசு’ எனும் ஃபெடரேஷன் சார்பு இதழ், பெரியார் பிறந்தநாள் சிறப்பிதழை வெளியிட்டு, அவரை போற்றும் விதமான கட்டுரைகளையும் அதில் பிரசுரித்திருக்கிறது. 

  1. 1940களுக்கு பிறகான திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும், பிராமண எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, தனி நாடு கோரிக்கை, மாநில உரிமை, தமிழர் பெருமிதம் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டிருந்தன. இதன் காரணமாகவே, தலித்துகள் திராவிட இயக்கத்தின் தன்மை சுயமரியாதை இயக்கத்திற்கு பிறகான காலகட்டத்தில் மாறிவிட்டதாக விமர்சித்தனர். இந்தி எதிர்ப்பு போரை நடத்திய திராவிட இயக்கம், ஏன் தீண்டாமைக்கு எதிரான போரை நடத்தவில்லை என்று முறையிட்டனர். சாதி எதிர்ப்பு மீதான கவனமும், அக்கறையும் திராவிட இயக்கத்திற்கு குறையத் தொடங்கியதன் விளைவாக திராவிட இயக்க இதழ்களும்கூட அன்றாட சாதியப் பிரச்சனைகளை, குறிப்பாக தலித்துகளின் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்முறைகள் பற்றிய செய்திகள் வெளியிடுவதை குறைத்துக் கொண்டது. திமுகவின் முதல் இருபது ஆண்டுகளில், அக்கட்சியை ஆதரித்து ஏறக்குறைய நூறு பத்திரிகைகள் வெளியானாலும், அவை எதார்த்ததில் நிகழும் சாதிய அடுக்குமுறைகள் குறித்து எவ்வித விவாதத்தையும் முன்னெடுக்கவில்லை. எனவே, செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனை சார்ந்தவர்கள் நடத்திய இதழ்களே தமிழ்நாட்டில் தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைகள் குறித்தும், அவர்களது சமூக – பொருளாதார சூழ்நிலை குறித்தும் அக்கறையோடு பதிவு செய்ததாக எழுதுகிறார் பாலசுப்பிரமணியம். 

இவ்வாறு, நவீன தமிழக வரலாற்றில் நாம் அதிக கவனித்திடாத விசயங்களை, தமிழ் அம்பேத்கரிய இதழ்களை அறிமுகம் செய்வதனினூடாக நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார் பாலசுப்பிரமணியம். முற்றிலும், வேறொரு கோணத்தில் இருந்து இருபதாம் நூற்றாண்டு தமிழக வரலாற்றை வாசிப்பதற்கான சாத்தியங்களை இந்நூல் வழங்குகிறது. தவிர, இனிவரும் காலங்களிலும், தமிழ் இதழியல் வரலாற்றை முழுமையாக எழுதிட முயற்சிப்பவர்களுக்கு, தலித் இதழியல் பற்றிய ஜெ. பாலசுப்பிரமணியத்தின் நூல்கள் இன்றியமையாததாக இருக்கும். 

***

அருண் பிரகாஷ் ராஜ் – வரலாற்று துறை ஆய்வு மாணவர், தில்லி அம்பேத்கார் பல்கலைகழகம். இவர் எழுதிய சிறுகதைகள் கணையாழி, அகநாழிகை  இதழ்களிலும், வாசகர்சாலை இணையதளத்திலும் வெளியாகியுள்ளது. மயிலை சீனி வேங்கடசாமியின் சமணமும் தமிழும் எனும் நூலை நண்பருடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மின்னஞ்சல் : arunprakashrajn@gmail.com

மரபுக்கும் நவீனத்துக்கும் அப்பால்: அம்பேத்கரின் தலித் மெய்யியல் கட்டமைப்பு

0

இரா.முரளி

மௌனத்தை உடைத்த குரல்

2500 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மண்ணிலே நசுக்கப்பட்டு, அடிமைகளாய் தீண்டத்தகாதவர்களாய் இருந்த ஒரு பெரும் சமூகத்தின் விடுதலைக் குரலை உலகின் காதுகளில் முதன் முதலில் ஒலிக்கச் செய்தவர்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். ‘தலித்’ அடையாளம் என்பது சமூக ஒடுக்குதலின் சின்னமாக இருந்த இடத்தில், அதையே சுயமரியாதை மற்றும் அதிகாரமளித்தலின் அடையாளமாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் மேற்கத்திய நவீனத்துவக் கருத்தாக்கங்களை இந்திய சூழலுக்கேற்ப மறுவிளக்கம் செய்து, சமூக மாற்றத்திற்கான ஒரு தனித்துவமான மெய்யியலை அவர் உருவாக்கினார் . மனித மாண்பைக் காப்பது, சாதிகள் ஒழிப்பு, சமூக நீதி, சமூக நீதிக்கானப் பகுத்தறிவு பெறுதல், சமத்துவத்தின் அடிப்படையில் திறன் வளர்த்தல், சமத்துவம், ஜனநாயகம் பேணுதல் போன்ற சமூக விழுமியங்களின் அடிப்படையில் அவருடைய மெய்யியல் கோட்பாடு உருவாக்கப்பட்டது.

பொதுவாக இந்தியாவைப் பொறுத்தவரை மெய்யியல் என்பது பேருண்மையை அறியும் வழிமுறையாகவே பல நூறு ஆண்டுகளாகக் கருதப்பட்டும், சொல்லப்பட்டும் வருகின்றது. மானுட விடுதலையின் தொடக்கம் மனதின் விடுதலை, அக விடுதலையில் இருப்பதாக இந்தியாவின் பெரும்பான்மையான மெய்யியல் பள்ளிகள் வலியுறுத்துகின்றன. இந்தப் பிரகடனத்தின் ஓங்கிய ஒலி, கணிசமான மக்களின் மனித மாண்பைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை என்பது அடிப்படை முரண் ஆகும். ஆன்மீக விடுதலையைப் பல்வித பனுவல்களிலும், பயிற்சிகளிலும் பேசியவர்கள் தீண்டாமை எனும் விலங்கு பூட்டப்பட்டு, நசுக்கப்பட்ட மண்ணின் பூர்வ குடிகளின் விடுதலைக்கான எந்த வழிகாட்டுதலையும் முன்வைக்கவில்லை என்பதைவிட அந்த விலங்கைப் பூட்டியவர்களே அவர்கள்தான் என்பதும் கொடுமையானது. மனு சாதிய கட்டமைப்பை இறுக்கமான புனிதமான இறைத்தன்மை கொண்டதாக ஆக்கினார். இந்நிலையில் ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக் குரலை, வெறும் முழக்கமாக ஒலிக்காமல், ஒரு மெய்யியல் கோட்பாட்டுடன் எழுப்பினார் அம்பேத்கர். 

அம்பேத்கரின் கோட்பாடு என்பது மேற்கத்திய சிந்தனைகளின் நேரடிப் பிரதி அல்ல; மாறாக, இந்திய சூழலின் சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு ஆக்கப்பூர்வமான தொகுப்பாகும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஜான் டூயியின் மாணவராக இருந்த அவர், மார்க்ஸ், ரஸ்ஸல், நீட்சே போன்ற சிந்தனையாளர்களின் கருத்துக்களைத் தமது சொந்த அனுபவம் மற்றும் புத்த தத்துவத்துடன் இணைத்து ஒரு தனித்துவமான மெய்யியலை உருவாக்கினார்.

விண்ணிலே விடியல் காண்பது பற்றியும், மண்ணிலே மனிதர் படும் துன்பங்கள், துயரங்கள் எல்லாம் கர்ம வினைப்பயன் என்றும், படும் துன்பங்கள் எல்லாம் மாயை என்றும் அறிவுறுத்துவதே பெரும்பாலான இந்திய மெய்யியல் கோட்பாடுகளின் அடிநாதமாக இருந்தது. இன்றும் இருக்கின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், இந்த மாயை மற்றும் கர்மா போன்றவை கூட தலித்துகளுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் மீட்சிக்கு அருகதையற்ற இனத்தவர்கள் என்று கருதப்பட்டதாகும். பிற்காலத்தில் ஒரு சில தலித்துகளை ஆன்மீக மீட்சிக்காக அங்கீகரிக்கும் தேவை ஏற்பட்டது என்பது விதிவிலக்காகும். இவற்றிலிருந்து சாருவாகமும், பெளத்தமும் விதிவிலக்கானவையாக இருப்பினும், சாருவாகம் மானுட விடுதலைக்கான கோட்பாடாக எழுச்சி பெற்றதாகத் தெரியவில்லை. எது சரியான அறிவு என்ற அளவிலேதான் அதன் தேடல் அமைந்துள்ளது. பெளத்தம் வேத மரபை நிராகரிப்பதின் மூலம் எல்லா மனிதர்களுக்கான மாண்பையும் மண்ணில் நிலை நிறுத்த முயன்றது எனலாம். அதற்கான அடிப்படை அம்சமாக ஆன்மா என்பதை அது நிராகரித்தது எனலாம். மனிதருக்குள்ளான ஏற்றத் தாழ்வுகளை அது எதிர்த்தது. ஆனாலும் வைதீக மரபின் எதிர்ப்பினாலும், சதியினாலும் அது உருமாறியும், துவண்டும் போனது. இந்த நிலையில் இந்தியாவில் தலித்துக்களின் விடுதலைக்கான மெய்யியல் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவர்தான் அண்ணல் அம்பேத்கர். அவர் துவண்டு போன பெளத்தத்தின் சாரத்தையே தலித் விடுதலைக்கான மெய்யியலின் மையமாகக் கண்டார். இந்தியவில் சாதியம் தனி நபர் மீட்சி சார்ந்ததே தவிர சமூக விடுதலை சார்ந்ததல்ல என்றார் அம்பேத்கர். அது தோழமை உணர்வை வலியுறுத்துவதும் அல்ல என்றார்.

அம்பேத்கரின் தத்துவத்தின் வடிவமைப்பு மரபுக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலும் அதற்கும் அப்பாற்பட்ட நிலையிலும் அமைந்துள்ளது. இந்திய சமுதாயத்தில் சாதி அடிப்படையிலான அடிப்படை வாதத்தையும், பிளவுபட்ட அடையாளங்களையும் உருவாக்கிய மரபுகளை மீறி அவற்றைக் கடந்து செல்லும் ஒரு விமர்சன கோட்பாடாக அது விளங்குகிறது.அது நவீன காலத்தின் விழுமியங்களான பகுத்தறிவு (rationalism), மதச்சார்பின்மை (secularism), மற்றும் சமூக ஜனநாயகம் (social democracy) ஆகியவற்றின் துணையுடன் நடைபெறும் மாற்றத்துடனும் இணைந்துள்ளது. இந்த விழுமியங்கள் மேற்கத்திய நவீன பண்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருந்தாலும், இந்தியப் பண்பாட்டின் நேர்மறையான வேர்களை இழக்காமல் அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் அம்பேத்கரின் தத்துவம் அமைகிறது.

John Dewey

அம்பேத்கர் ஜன் டூயியின் மாணவர் என்பதால் அவரின் மெய்யியலை நடைமுறைத்துவம் (pragmatism) என்று சுருக்கிவிட முடியாது. அவரது அனைத்து எழுத்துக்களும் ஒரு தொகுதி நெறிமுறைக் கோட்பாடுகளைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வரலாற்று ரீதியாக அவரும் அவரது சமூகமும் சந்தித்தத் திரளான சமூக, பொருளாதார பாதிப்புக்களே அவரது நடைமுறைத்துவ அணுகுமுறைக்கு அடிப்படையாக அமைந்தன. அம்பேத்கரின் நவீனத்துவ மெய்யியல், மேற்கத்திய கருத்துக்களை இந்தியச் சூழலில் புகுத்திய ஒரு எளிய முயற்சி அல்ல. மாறாக, பகுத்தறிவு, சமத்துவம், சுதந்திரம் போன்ற உலகளாவிய மதிப்பீடுகளை இந்தியாவின் சிக்கலான சமூக அமைப்புகளுக்குள் பிரயோகித்து, ஒரு புதிய சமூக ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் உருவாக்கிய ஒரு ஆழமான மற்றும் தனித்துவமான சிந்தனைப் பள்ளி ஆகும். 
டூயியின் ‘ஜனநாயகம் மற்றும் கல்வி’ கொள்கைகளை தாழ்த்தப் பட்டோரின் விடுதலைக்கான கல்வியின் முக்கியத்துவமாக மாற்றினார். சாதி இல்லாத சமூகம் அமைக்க, டூயியின் கருத்துகளைப் பௌத்தத்துடன் இணைத்து தனது நவயான பௌத்தத்தை உருவாக்கினார் .
இந்தியாவில் ‘வர்க்கம்’ என்பது ‘சாதி’யின் வடிவத்தில் இருப்பதாக வாதிட்டார். சாதியை “உள்ளடங்கிய வர்க்கம்” (Enclosed Class) என்று அழைத்தார் . சாதியை ‘மேற்கட்டுமானம்’ என்று ஒதுக்கித் தள்ளிய அன்றைய இந்திய கம்யூனிஸ்டுகளை விட, சாதியையே இந்திய முதலாளித்துவத்தின் அடித்தளமாகக் கண்டார் . ஒரு சூத்திரரின் அந்நியப்படுதலையும் (alienation) ஒரு தொழிலாளி வர்க்க (proletariat) அந்நியப்படுதலாகக் குறைத்துப் பார்க்க முடியாது என்று அவர் விளக்கினார் . மார்க்ஸின் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ (dictatorship of the proletariat) கோட்பாட்டை அம்பேத்கர் ஏற்கவில்லை. அதற்கு மாற்றாக, அரசியலமைப்பு முறை மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் . அதே சமயம் சமூக ஜனநாயகத்தை இறுதி இலக்காகக் கருதினார். “அரசியல் ஜனநாயகத்தோடு மனநிறைவு அடைந்துவிடக்கூடாது. நமது அரசியல் ஜனநாயகத்தைச் சமூக ஜனநாயகமாகவும் மாற்றிட வேண்டும். அடித்தளத்தில் சமூக ஜனநாயகம் இல்லாது போனால் அரசியல் ஜனநாயகம் நீடித்து நிலைக்க முடியாது. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவமே வாழ்க்கையின் தலையாய கொள்கைகள் என்பதை அங்கீகரிக்கும் ஒருவித வாழ்க்கை முறையே சமூக ஜனநாயகம்” என்று அம்பேத்கர் விளக்கமளித்தார். வன்முறை வடிவிலான வலிமையைச் சார்ந்திருப்பது, வலிமை மூலம் ஒருவர் பாதுகாக்க நினைக்கும் இலக்குக்கே கேடாய் முடிந்துவிடும் என்று கூறி மார்க்ஸின் வன்முறைப் புரட்சி மற்றும் சர்வாதிகாரத்தை ஏற்காமல், அதே இலக்குகளை அமைதியான முறையில் அடைய பௌத்தமே வழி என்று தமது இறுதிக் கட்டத்தில் விளக்கினார் .இங்கு, அண்ணல் அம்பேத்கரின் கோட்பாடு, இத்தாலிய கம்யூனிஸ்ட் அண்டோனியோ கிராம்சியின் விளக்கங்களுடன் பொருந்தி வருவதையும் கவனிக்க வேண்டியுள்ளது. கிராம்சியும், அம்பேத்கரும் மார்க்சியத்தின் வர்க்கம் எனும் கோட்பாட்டிற்குள்ளாகவே சுழலாமல், அதைத்தாண்டி அவரவர் நாட்டிற்கான ஒடுக்கப்படும் சமூகத்தின் விடுதலைக்கான வழிகளைத் தேடினர். சமூகங்களின் அடி தட்டுக்களின் தன்மைகளை வெளிப்படுத்தினர். வெறும் பொருளாதார நெருக்கடியே புரட்சியைத் தீர்மானிக்கிறது என்னும் மார்க்ஸிய விளக்கத்திற்கு மாறாகப் பண்பாடு, கருத்துநிலை மேலாண்மை ஆகியனவும் புரட்சியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதான சிந்தனையை முன்வைத்தவா் அந்தோணியா கிராம்சியும் ஆவார். இருவருமே அடிப்படை பிரச்சினையை தீர்க்காமல் சமநீதிச் சமூகம் சாத்தியமில்லை என்றனர். அந்த வகையில் சாதியை ஒழிக்காமல் இந்தியாவில் சோசலிசம் கூட சாத்தியப்படாது என்ற அம்பேத்கரின் கருத்து கிராம்சியத்தின் தன்மை கொண்டது.

தாம் சொன்ன ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ ஆகிய கோட்பாடுகள் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து கடன் வாங்கப்பட்டவை அல்ல என்றும், அவை தமது குருவான புத்தரின் போதனைகளில் இருந்து பெறப்பட்டவை என்றும் அம்பேத்கர் விளக்கினார் . புத்த சங்கங்களின் நடைமுறைகளில் நவீன பாராளுமன்ற முறைக்கான அடித்தளங்கள் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டி, ஜனநாயகம் என்பது மேற்கத்தியரின் பிரத்யேக கண்டுபிடிப்பு இல்லை எனவும் நிறுவினார் . அவருடைய அரசியல் விளக்கங்கள் பற்றி நிறையவே பேசப்பட்டுவிட்டன. எனவே இங்கு அவர் முன்வைத்த தலித்துகளின் மாண்பு என்பது எதன் அடிப்படையில் விளக்கப்படுகின்றது என்று காணலாம். 

மனிதர் என்பவர் யார்? 

அம்பேத்கரின் தத்துவம் மேற்கிலிருந்து கிழக்கிற்கு நடந்த ஒரு எளிய பயணம் அல்ல. டூயியின் நடைமுறையியல், மார்க்ஸின் வர்க்கப் பகுப்பாய்வு, ரஸ்ஸலின் தனிமனித விடுதலைக் கருத்துகள் ஆகியவை அவருக்குக் கருவிகளாக இருந்தன. ஆனால், இந்தக் கருவிகளைக் கொண்டு அவர் இந்தியாவின் சாதிப் பிரச்சினைக்குச் செய்த அறுவை சிகிச்சைதான் அவரை ஒரு மாபெரும் மெய்யியலாளராக உயர்த்துகிறது. பௌத்தத்தின் மறுவிளக்கம் மூலம் அவர் கண்டடைந்த ‘மனுஸ்கி’ (மனித நேயம்) மற்றும் சமத்துவத்திற்கான தேடலே அவரது மெய்யியலின் உயிர்நாடியாகும் .

அம்பேத்கர் மனிதர்களை பகுத்தறிவு மற்றும் நெறிமுறை உணர்வு (reason and moral sensibility) கொண்டவர்களாகப் பார்க்கிறார். இந்த இரண்டு பண்புகளுமே ஒரு மனிதனுக்குத் தனித்துவமான கண்ணியத்தை (unique dignity) அளிக்கின்றன. ஒருவரது மனசாட்சி (conscience) சரி தவறைப் பகுத்தறியும் வழிகாட்டியாகச் செயல்படுகிறது. ஆனால், இந்தப் பண்புகள் எங்கிருந்தோ வந்த அருவமானவை அல்ல; அவை சமூகத்தில் ஒருவர் பெறும் அனுபவங்கள், கல்வி மற்றும் பகுத்தறிவு மூலம் வளர்க்கப் படுபவை என்கின்றார் அவர்.

‘ஆன்மீக’ தன்னுணர்வை நிராகரித்தல்

வைதீக கோட்பாடுகளின் விளைச்சலான மேல்சாதிகளின் ஆணிவேர் என்பது ஆன்மா என்ற ஒரு கருத்தாக்கமே என்று அம்பேத்கர் கருதினார். மேல்சாதி கட்டமைப்பான நான் எனும் சுயம் ஆன்மா எனும் தகுதியைக் கொண்டது. தலித்துகளின் சுயம் என்பது வெறும் “அதுவாக”க் கருதப்பட்டது. அது ஒரு அஃறினைதான். அதற்கு முக்திக்கு வாய்ப்பு கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பெரும்பாலும் “அது”, “அதுங்க” என்று உச்சநிலை உயர்சாதியினர் அழைப்பதை நான் கண்டிருக்கின்றேன்.(ஆதிக்கசாதியினர் கூட அவன், அவங்க என்றுதான் அழைப்பார்கள்.) ஏனெனில் அவர்கள் நிரந்தரமாக மாசு பட்டவர்கள் என்பது மனுவின் கோட்பாடாகும். இந்த மாசு என்பது இறைச்சி வகை உண்பதை அடிப்படையாகக் கொண்டு உருவக்கப்பட்டது என்கின்றார். இதை மறுத்து, தலித்துகளின் சுயம் என்பதும் மாண்புக்குரியது என்பதை உலகறியச் செய்ய ஒரு சரியான மெய்யியல் அடிப்படை தேவை என்பதும், அது பெளத்தம்தான் என்றும் அம்பேத்கர் கண்டார். ஆனால் மீண்டும் வேதாந்தக் கருத்துக்களுக்கான தர்க்க எதிர்வாதத்தை முன்வைப்பது என்பதை விட அவர் சமூக சூழலைக் கருத்தில் கொள்ளும் ஒரு தலித்திய அறிவுக் கோட்பாட்டை(Dalit Epistemology) முன்வைத்தார். இந்த அறிவுக் கோட்பாடு மரபுக்கும், நவீனத்துவத்திற்கும் இடைப்பட்ட ஒரு கோட்பாடு. 

தன் கோட்பாட்டில் அம்பேத்கர் கடவுள் மற்றும் ஆன்மா (soul) மீதான நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை . மனித முழுமை அடைதல் (human perfectibility) என்பது இந்த உலகிலேயே, இந்த வாழ்க்கையிலேயே சாத்தியமான ஒன்று என்று அவர் நம்பினார். ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட, சமூக சீர்திருத்தத்தில் ஈடுபடுவதே மேல் என்று கூறினார். தன்னை ஒரு கடவுளின் அவதாரமாக (avatar) சிலர் போற்றியபோது, அது வெறும் “இறையியல் முனைப்புகள்” (theological preoccupations) என்றும், இப்படிப்பட்ட சிந்தனைகள்தான் பிராமணியம் “இந்திய மனதைக் கெடுத்தது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார் .

தன்னுணர்வு 

இந்திய ஆன்மீகத்தில் தன்னுணர்வு என்பதே அடிப்படையாகும். இதை அறிவது உணர்வது, இதன் பிரபஞ்ச நீட்சியை உணர்வது, அந்த உணர்வின் உச்சத்தில் பிரபஞ்சத்துடன் ஐக்கியமாதல் போன்ற விளக்கங்கள் அதன் பிரதான கருத்தியல் ஆகும். இதிலிருந்துதான் தலித் சுயம் மறுக்கப்படுவதாக அம்பேத்கர் கருதியிருக்கக் கூடும். எனவே பெளத்தத்தின் அடிப்படையான ஆன்ம மறுப்பை இங்கு கையாள்கின்றார். அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறியதும் அது இந்த ‘தன்னுணர்வு’ பற்றிய அவரது புரிதலுக்கு ஒரு தெளிவான மெய்யியல் அடித்தளத்தை அளித்தது. பௌத்தத்தில், தன்னுணர்வு என்பது பகுத்தறிவு, ஒழுக்கம் (ethics) மற்றும் சமூக நீதி ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த ஒரு கருத்தாகும் . பௌத்தம் அவருக்கு ஒரு புதிய ஆன்மீக அடையாளத்தை (spiritual identity) அளித்தது, ஆனால் அது மாய உலகத்தை நோக்கியதல்ல, மாறாக இந்த சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதை நோக்கியதாக இருந்தது.

டாக்டர் அம்பேத்கரின் ‘தன்னுணர்வு’ (consciousness) பற்றிய விளக்கம், ஆன்மீக அருவ வடிவிலான (பொதுவாக ஆத்மா அல்லது பிரம்மம் சார்ந்த) கருத்துமுதல் வாதத்திலிருந்து (idealism) முற்றிலும் மாறுபட்டது. அவர் இதை ஒரு பௌதிக மற்றும் சமூகவியல் நிலைப்பாட்டில் (materialist and sociological standpoint) இருந்து அணுகுகிறார். அவரைப் பொறுத்தவரை, ஆன்மா என்பது பஞ்ச பூதங்களின் சுழற்சியால் உருவாவது ஆகும்.இறப்பிற்குப் பின்னால், ஒருவரது உடலை உருவாக்கிய பஞ்சபூதங்கள் (காற்று, நீர், பூமி, நெருப்பு, ஆகாயம்) பிரிந்து பிரபஞ்சத்தில் உள்ள மாபெரும் பஞ்சபூதங்களுடன் கலந்துவிடுகின்றன எனபதாகும். எனவே தனியாக ஆன்மா என்ற ஒன்று இல்லை. மேட்சமும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பது மனிதர் இந்த உலகிலே உருவாக்கிக் கொள்ளும் வாழ்க்கைதான் என்றார்.

அம்பேத்கரின் கூற்றுப்படி, தன்னுணர்வு என்பது ஒரு மனிதனின் வெறும் ‘ஆத்மா’வின் பிரதிபலிப்பு அல்ல; மாறாக, அது ஒரு சமூகக் கட்டுமானமும் (social construct) நெறிமுறை இலக்கும் (ethical goal) ஆகும். அவருடைய தத்துவத்தின் பின்னணியில் அதைப் புரிந்துகொள்ளலாம்:

அவர் தன்னுணர்வு (consciousness) என்பது சமூக ரீதியாக உருவாகும் ஒரு மனநிலை என்று வரையறுத்தார். அம்பேத்கரின் தத்துவத்தில், தன்னுணர்வின் மிக முக்கியமான வெளிப்பாடு ‘சுயமரியாதை’ (self-respect) ஆகும். இதிலிருந்து அவர் தலித் சுயம் என்பதை விளக்குகின்றார். தலித் சுயத்தின் (Dalit self) வளர்ச்சி, சமூகத்தில் நிலவும் சுரண்டல் மற்றும் இழிவுபடுத்தல்களுடன் (exploitation and humiliation) தொடர்ந்து கொள்ளும் போராட்டத்தின் மூலமே உருவாகிறது என்றார். இந்த விளக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் மீதான மதிப்பை உணர்த்தி, ஒரு புதிய சுய உணர்வை (new Dalit consciousness) உருவாக்கியது எனலாம் .

ஒரு துளி தண்ணீர் கடலில் கலந்து தன் அடையாளத்தை இழப்பது போல் அல்லாமல், “மனிதன் சமூகத்தில் தன் இருப்பை இழக்காமல், தன் சுயத்தின் வளர்ச்சிக்காக (development of his self) பிறக்கிறான்” என்று அம்பேத்கர் விளக்கினார். சமூகம் மற்றும் தனிமனிதன் இருவரின் வளர்ச்சிக்குமான உறவை இது சுட்டிக்காட்டுகிறது.

அம்பேத்கரைப் பொறுத்தவரை, தன்னுணர்வு (consciousness) என்பது ஒரு மாய அனுபவமோ அல்லது கருத்துமுதல் வாதத்தின் பகுதியோ அல்ல. அது, பகுத்தறிவு, சமூக அனுபவம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றால் கட்டமைக்கப்படும் ஒரு நெறிமுறை மற்றும் சமூக உணர்வு ஆகும். ஒரு மனிதன் தன்னை ஒரு கண்ணியமான, சுதந்திரமான ஆளாக உணர்வதே உண்மையான தன்னுணர்வின் தொடக்கமும், முடிவுமாகும். அம்பேத்கரின் இந்த பகுத்தறிவு சார்ந்த நிலைப்பாடு, அவரை பாரம்பரிய இந்திய மெய்யியலாளர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது. 

மனம்

இதைப் போன்றே மனம் என்பதும் இந்திய மெய்யியலில் முக்கிய பங்கை வகிக்கின்றது. இது பற்றி அம்பேத்கர் தனியாக நூல் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை எனினும், தன்னுடைய பெளத்த நிலைப்பாடிலிருந்து அவர் மனம் என்பது பற்றி விளக்கியுள்ளார். அதையும் தலித்திய மெய்யியலுக்கான ஒரு கூறாகவே விளக்குகின்றார். 

அவரின் கடைசிக் கால நூலான “புத்தர் மற்றும் அவரின் தம்மம்” (The Buddha and His Dhamma) என்பதில், புத்தருடைய போதனையின் முதன்மையான சிறப்பியல்பாக “மனமே அனைத்திற்கும் மையம்” (Mind is the centre of everything) என்பதையே குறிப்பிடுகிறார் . அம்பேத்கரைப் பொறுத்தவரை, மனம் என்பது ஒரு உறுப்பு மட்டுமல்ல; அது தனிமனித விடுதலைக்கும் சமூக மாற்றத்திற்குமான அடித்தளமாகும். தனிமனிதனின் சிந்தனை, உணர்வு, மற்றும் செயல்பாடு அனைத்திற்கும் மையமாக விளங்குவது மனமே ஆகும்.

அம்பேத்கரின் மிகவும் புகழ்பெற்ற கருத்துக்களில் ஒன்று, “ஆரோக்கியமான மனதினை உருவாக்குவதே மனித இருப்பின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்” (Cultivation of mind should be the ultimate aim of human existence) என்பதாகும். பகுத்தறிவு சார்ந்த உருவாக்கமாகவே அதை அவர் காண்கின்றார். குருட்டுத்தனமான பழக்கவழக்கங்களையோ, மூடநம்பிக்கைகளையோ கேள்வி கேட்கக் கற்றுக்கொள்வது, எந்த ஒரு விஷயத்தையும் ஆதாரங்களுடன் ஆராய்ந்து, உண்மையைக் கண்டடையும் திறனை வளர்த்துக்கொள்வது, சுயமரியாதையையும், நெறிமுறைத் தீர்ப்புகளை வழங்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வது போன்ற தன்மைகளையே மனதைச் செழுமையாக்கும் செயலாகக் கருதுகின்றார்.

மனமும் சமூக மாற்றமும்

அம்பேத்கரைப் பொறுத்தவரை, மனதின் வளர்ச்சி என்பது தனிமனிதனுக்கு மட்டும் உரியது அல்ல; அது ஒரு அரசியல் மற்றும் சமூகத் தேவையாகும். இப்படிப்பட்ட மனதை வளர்ச்சியுற வைப்பது என்பது கல்வியினால்தான் இயலும் என்பதை அவர் வலியுறுத்துகின்றார். கல்வியும் அறிவும் தான் ஒரு மனிதன் தனது உரிமைகளைக் கோரவும், சுரண்டலை எதிர்க்கவும் தேவையான ஆற்றலை அளிக்கும் என்ற அம்பேத்கர் இம்மாதிரி மனமே குடிமக்கள் பகுத்தறிவுடன் சிந்திக்கவும், தங்கள் தலைவர்களைக் கண்காணிக்கவும், ஜனநாயக நிறுவனங்களை வடிவமைக்கவும் உதவுகிறது என்றார். ஒரு வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டும் போதாது; சமூக மற்றும் அரசியல் உரிமைக்கான நீதியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்த ஆழமான மற்றும் முழுமையான நம்பிக்கை தேவை என்று அம்பேத்கர் வலியுறுத்தினார் . இந்த நம்பிக்கையை உருவாக்குவதும் மனமே.

இறந்துபோன சாத்திரங்களின் சொற்களை (Dead Letters) விட உயிருள்ள சிந்தனைக்கு (Living Word) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். மனித மனம் தொடர்ந்து வளரவும், மாறிவரும் காலத்திற்கேற்ப புதிய விளக்கங்களைத் தரவும் வேண்டும். பாரம்பரியம் என்பது குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்கானது அல்ல, விமர்சன ரீதியாக ஆராய்வதற்கானது என்பது அவரது நிலைப்பாடு. அவரைப் பொறுத்தவரை, மனிதன் மனதை செழுமையாக ஆக்கிக்கொள்ளும் போதுதான் உண்மையான சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் அடைய முடியும். அதனால்தான் அவர் “மாற்றத்திற்காக சிந்தியுங்கள்” (Think to Change) என்ற வாசகத்தையும் முன்னிறுத்தினார்.

சாதி உணர்வு என்பது கூட ஒரு மனநிலை (state of the mind). அதாவது, ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் கொண்டுள்ள உணர்வே அவனது சாதி அடையாளமாக மாறிவிடுகிறது என்கின்றார். எனவே, சாதியை ஒழிக்க வேண்டுமானால், மனிதர்களின் இந்த மனநிலையையும், தன்னைப் பற்றிய உணர்வையும் மாற்றியமைக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை ஒரு ‘சாதி மனிதராக’ (caste person) அல்ல, ஒரு தனித்துவமான மனிதராக (unique individual) உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் .

இப்படி மனதை விளக்குவதின் மூலம் அவர் புற உலக அருவமான, தனியான இருப்பு கொண்ட ஆன்மீக மனதை விலக்கி மூளையின் செழுமையான கூர்மையான, நுணுக்கமான பகுத்தறிவான செயல்பாட்டை முன்னிறுத்துகின்றார். இது இந்திய நாத்திக மெய்யியல் மரபின் அடிப்படையாகும்.

கர்மவினை (Karma) பற்றிய சமூக விளக்கம்

கர்மா பற்றிய அம்பேத்கரின் விளக்கம், அவரது மெய்யியலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். பாரம்பரியமாக கர்மா என்பது தனி மனிதனின் செயல்களுக்கான பலனை விளக்கப் பயன்பட்டது. ஆனால் அம்பேத்கர் அதை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அணுகினார்.

அம்பேத்கர் கர்மா என்பது ஒரு தனி மனிதனின் செயல்களுக்கு மட்டும் பலன் தருவதாக நம்பவில்லை. மாறாக, கர்மா என்பது சமூகத்தின் செயல்களிலும் (universal social actions) தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் கருதினார்.

பாரம்பரிய இந்து மதத்தில் கர்மா என்பது ஒருவரின் தற்போதைய நிலைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. அதாவது, “முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் இப்போது தீண்டத்தகாதவனாகப் பிறந்தாய்” என்ற விளக்கம் நிலவியது. அம்பேத்கர் இதைக் கடுமையாக எதிர்த்தார். அவரைப் பொறுத்தவரை, கர்மா என்பது விதி (fate) அல்ல; அது ஒவ்வொரு மனிதனும் செய்யக்கூடிய செயல் (action). எனவே, ஒவ்வொருவரும் தங்கள் செயல்களால் சமூகத்தை மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள். அம்பேத்கரின் பௌத்த நவீனத்துவம் (Buddhist modernism), கர்மாவை ஒரு மாய அல்லது உளவியல் நிலையாகப் பார்க்காமல், நெறிமுறை (ethics) மற்றும் நீதி (justice) சார்ந்த வாசிப்பாக மாற்றியது.

கர்மா, தன்னுணர்வு மற்றும் மனம் இவையே இந்திய ஆன்மீக தத்துவங்களின் அடிப்படை. பிறகுதான் பிரபஞ்ச ஆற்றல் என்பது வருகின்றது. அம்பேத்கர் சமூக மாற்றங்களுக்கான தடையாக இருந்த இந்த அடிப்படைகளையே தகர்த்துவிட்டார் எனலாம்.

டாக்டர் அம்பேத்கரின் கருத்துப்படி, கடவுள், ஆன்மா, மறு ஜென்மம் மற்றும் கர்மா போன்ற கருத்துகள் வெறும் மாயை அல்லது தத்துவ விசாரணைக்குரியவை மட்டுமல்ல; அவை சமூக அமைப்பின் அடித்தளத்தையே நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த கருத்துகள் ஆகும். இவற்றைப் பற்றிய அவரது நிலைப்பாடு பாரம்பரிய இந்து மெய்யியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அவர் இவற்றை பௌத்த தத்துவத்தின் வழியாக மறுவிளக்கம் செய்து, தனது சமூக நீதிக் கொள்கைகளுடன் இணைத்துப் பார்க்கிறார். இதன் அடிப்படையில் ஒரு தலித் ஆளுமை அல்லது சுயம் என்பதை அவர் கட்டமைத்தார்.

நவயானம் உருவாக்கம் : ஒரு புதிய தலித் சுயத்தின் தோற்றம் 

அம்பேத்கரின் தலித் சுய உணர்வு என்பது அவர் உருவாக்கிய கருத்தியல், அரசியல், சமூக மற்றும் ஆன்மீகப் போராட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய உணர்வுகளை ஊட்டி, அவர்களை வரலாற்றின் செயல்பாட்டாளர்களாக (agents of history) மாற்றிய ஒரு புரட்சிகரமான மறுவடிவமைப்பு ஆகும். ஆக மண்ணின் மீது ஆழமாக தன் மெய்யியலுக்கான கூறுகளை ஊன்றிய பின்தான் அவர் சமூக மாற்றத்திற்கான கூறுகளை செயல் திட்டங்களாக முன்வைத்தார். அதுமட்டுமல்ல, தத்துவத்திற்கும் சமூக செயல்பாடுகளுக்கும் உள்ள இணைப்பை வலுவாக்கினார். இதைப் பேசும்போது கம்யூனிசத்தை அவர் ஏன் நிராகரித்தார் என்ற கேள்வி எழும். ‘புத்தர் அல்லது கார்ல் மார்க்ஸ்’ (Buddha or Karl Marx) என்ற தனது நூலில் இந்த இரண்டு பாதைகளையும் ஒப்பிட்டு, இறுதியில் புத்தரின் பாதையே சிறந்தது எனும் முடிவுக்கு வந்தார்.

மார்க்ஸியம் முன்வைத்த பொருளாதார விடுதலை மட்டுமல்லாது, மனித சுயத்தின் ஆழமான விடுதலை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை ஒருங்கே வழங்கக்கூடிய ஒரு முழுமையான மாற்று மெய்யியலாக பௌத்தத்தை அவர் முன்மொழிந்தார். 

அம்பேத்கர் பாரம்பரிய பௌத்தத்தை மறுவிளக்கம் செய்து ‘நவயானம்’ (Navayana) அல்லது ‘புதிய வாகனம்’ ஒன்றை உருவாக்கினார். புத்தரின் மதத்தில் உள்ள ‘கர்மா’, ‘மறுபிறப்பு’ மற்றும் ‘நான்கு உன்னத உண்மைகள்’ போன்ற கருத்துகளை வலியுறுத்தாமல், ‘தம்மம்’ என்பதை சமூக ஒழுக்கம் மற்றும் போராட்டத்தின் நெறிமுறையாக வலியுறுத்தினார் . அம்பேத்கரின் மிக ஆழமான பங்களிப்பு, தலித் சுய உணர்வுக்கு ஒரு புதிய ஆன்மீகத் திசையை வழங்கியதாகும். இழிவுபடுத்தும் இந்து மதத்தை விட்டு வெளியேறி, சமத்துவம், கருணை மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பௌத்தத்தைத் தழுவுவதை அவர் விடுதலையின் பாதையாக முன்வைத்தார். 1956 இல் நடந்த “புத்தம் சரணம் கச்சாமி” என்பது ஒரு சமூகத்தின் கூட்டு விடுதலைக்கான (collective emancipation) ஒரு வரலாற்று அடையாளச் செயலாக மாறியது .

கருத்தியலை நடைமுறைச் செயல்பாடுகளுடன் இணைத்தார்.

நேரடிப் போராட்டங்கள்: மகத் சத்தியாகிரகம் (1927) பொதுக் கிணற்றுத் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான உரிமைக்காகவும், கலாராம் கோயில் சத்தியாகிரகம் (1930) கோயில் நுழைவுக்காகவும் நடத்தப்பட்டன. இவை வெறும் உரிமைப் போராட்டங்களாக மட்டுமின்றி, சுயமரியாதைக்கான அடையாளப் போராட்டங்களாகவும் (symbolic struggles) அமைந்தன .

அரசியலமைப்பு உத்தரவாதம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்பதால், சமத்துவம், வாய்ப்புச் சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை சட்டப்பூர்வமாக உறுதி செய்தார். இது தலித் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் (empowerment) ஒரு சக்திவாய்ந்த கருவியாக அமைந்தது .

இந்த அனைத்து முயற்சிகளின் ஒருங்கிணைந்த விளைவாக, நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த அவமானம் மற்றும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்ட ஒரு புதிய தலித் சுய உணர்வு உருவானது. 

சுயமரியாதை உணர்வு: தன்னைப் பற்றிய உணர்வு என்பது சமூக அனுபவங்களால் கட்டமைக்கப்படும் ஒன்று என்பதை அம்பேத்கர் உணர்த்தினார். அவரது தலைமையின் கீழ், தலித் மக்கள் தங்களை ‘பலவீனமானவர்கள்’ அல்லது ‘இரக்கம் பெற வேண்டியவர்கள்’ என்று பார்ப்பதை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளைக் கோரும் சக்தி வாய்ந்த அரசியல் ஆளுமைகளாக (powerful political subjects) தங்களை மறுவரையறை செய்துகொள்ளத் தொடங்கினர் . கல்வி, அரசியல் பங்கேற்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் மூலம், தங்கள் விதியைத் தாங்களே நிர்ணயிக்கும் ஒரு புதிய நம்பிக்கை உருவானது. ஒருவன் தன்னை ஒரு கண்ணியமான மனிதனாக உணர்வதே ஆன்மீகத்தின் தொடக்கம். தன்னை அவமானப்படுத்தும் எந்த ஒரு மதமோ, தத்துவமோ, அமைப்போ ஆன்மீகமானது அல்ல என்று அவர் முழங்கினார்.

தமிழ்நாட்டில் அயோத்திதாசர் அம்பேத்கருக்கு முன்பே தமிழ் பெளத்தம் என்பது பற்றி ஒடுக்கப்பட்டவர்களின் பூர்வீக மதமாக விளக்கியிருந்தார். அம்பேத்கர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். ஆனால் அவர் அயோத்திதாசர் குறித்து எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நவயான பெளத்ததிற்கு முன்பே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை பேசிய பெளத்தம் தமிழ்நாட்டில் இருந்தது என்பதை அம்பேத்கரே குறிப்பிட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

அம்பேத்கரின் மெய்யியல் வெறும் கல்வி சார்ந்த புலமை அல்ல; அது மண்ணின் மீது ஆழமாகப் பதிந்த, மானுட ரத்தத்துடன் ஒட்டிய தத்துவம். பகுத்தறிவு, சுயமரியாதை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவரது சிந்தனைப் பள்ளி, பாரம்பரிய இந்திய மெய்யியலின் ஆன்மீக நிலைப்படுகளுக்கும், மேற்கத்திய நவீனத்துவத்தின் பொருள்முதல் வாதத்திற்கும் இடையிலான ஒரு பாலமாக விளங்குகிறது. மாய உலகில் விடுதலை தேடுவதையோ, வெறும் பொருளாதாரத்தில் மட்டும் நின்றுவிடுவதையோ அவர் ஏற்கவில்லை. மாறாக, மனிதனின் இந்த உலக வாழ்விலேயே கண்ணியத்தையும், சமத்துவத்தையும், விடுதலையையும் அடைவதையே தனது புனித இலக்காகக் கொண்ட ஒரு ‘சமூக ஆன்மீகத்தை’ உருவாக்கினார். ஆகவே, அண்ணல் அம்பேத்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல, இந்திய நவீனத்துவ மெய்யியலை உலகிற்கு வழங்கிய மாபெரும் சிந்தனையாளர் ஆவார்.

***

இரா.முரளி – மேனாள் முதல்வராக மதுரைக் கல்லூரியில் பணியாற்றினார். இருத்தலியம், ஹேபர்மாஸ், அடர் னோ, நீலகேசி ஆகிய நூல்களின் ஆசிரியர். தொடர்ச்சியாக தத்துவ கட்டுரைகளை எழுதிவருகிறார். சாக்ரட்டீஸ் ஸ்டூடியோ எனும் யூடுயூப் சேனல் மூலம் தத்துவங்கள் சார்ந்த காணொளியை வழங்கி வருபவர். மக்கள் சிவில் உரிமைக்  கழகத்தின் (PUCL) மாநிலத் தலைவர் மற்றும் மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். மின்னஞ்சல்: royammurali@gmail.com

ஊர்மிளா பவாரின் வழி அண்ணல் அம்பேத்கரை அறிந்து கொள்ளல்

1

சித்ரா பாலசுப்ரமணியம்

ண்ணல் அம்பேத்கர் குறித்த புத்தகங்கள் சிலவற்றையே வாசித்திருக்கிறேன். அவருடைய புத்தரும் தம்மமும் என் மனதுக்கு மிக நெருக்கமான புத்தகம். எத்தகையதான மதம் மனிதர்களுக்குத் தேவை என்பதை அம்பேத்கர் அதில் விரிவாகவே விளக்கியிருப்பார். பல பக்கங்களில் அடிக்கோடிட்டு, அந்த வாக்கியங்களை அடிக்கடி எடுத்து வாசிப்பதுண்டு. தம் மக்களின் விடியலுக்கான வழியாக பௌத்தத்தைப் பார்த்த அண்ணல் அம்பேத்கர், அது குறித்த கருத்துகளை இந்நூலில் விரிவாக எழுதியிருப்பார்.

ஆனால், பௌத்த்திற்கு தம் மக்களோடு சேர்ந்து 1956 ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி மதம் மாறிய பிறகு ஏழு வாரங்களுக்குள் (1956,டிசம்பர் 6) காலமாகி விடுகிறார். பௌத்த மதம் சார்ந்து அவர் தம் மக்களைச் சீர்படுத்த விரும்பிய அத்தனை கனவுகளும் காற்றோடு கரைந்து போயின. அந்த மக்கள் அதை எவ்வாறு எதிர் கொண்டிருப்பார்கள், யார் அதன் பின் வழி நடத்தியிருப்பார்கள், ஐயங்கள் எழுமாயின் தீர்ப்பவர் எவரோ என ஏராளமான கேள்விகளை நான் கேட்டுக் கொள்வேன். ஆயினும் வேறு வேறு வாசிப்புத் தளங்கள் நோக்கி மாறி மாறிப் பயணிப்பதால் இந்தக் கேள்விகள் மனதில் கேள்விகளாகவே தங்கி நின்றன.


இந்த வருடத் தொடக்கத்தில், அதிக அளவிலான பெண்களின் தன்வரலாற்றுப் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற முடிவு எடுத்துத் தேடிய போது தான் The weave of My life :A Dalit woman’ s memoirs என்ற ஊர்மிளா பவாரின் தன்வரலாற்று நூல் குறித்து அறிந்து கொண்டேன். ஊர்மிளா பவார் தலித் பெண் எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர். மகாராஷ்டிராவின் கொங்கண் பகுதியைச் சேர்ந்த உள்ளடங்கிய மலை கிராமத்தைச் சேர்ந்தவரான அவர் Aaydan என்ற பெயரில் மராட்டிய மொழியில் எழுதிய நூலை மாயா பண்டிட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். Aaydan என்றால் முடைதல் என்ற பொருள். ஊர்மிளாவின் தாய், மூங்கில் கூடைகளைப் பின்னியே தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, குடும்பத்தைப் பார்த்துக் கொண்டதால் தன்னுடைய நூலுக்கு அதே பெயரையே வைத்து, தன் தாய் லட்சுமி பாய்க்கே இந்நூலைக் காணிக்கையாக்கியிருக்கிறார் ஊர்மிளா.

ஊர்மிளாவின் குழந்தைப் பருவம் தொடங்கி, பள்ளி, ஆர்வங்கள், காதல், திருமண வாழ்வு, கணவர், அவரின் குடும்பம், குழந்தைகள், வாசிப்பு அனுபவம், பணியிலமர்தல், எழுதத் தொடங்குதல், களப்பணி செய்யும் செயல்பாட்டாளராகவும் பெண்ணியவாதியாகவும் ரசமாற்றம் நிகழும் தருணங்கள் என விரிவாகவும் மிக வெளிப்படையாகவும் துணிச்சலோடும் இந்த நூலில் பேசியிருக்கிறார். அந்த வகையில் மிக வித்யாசமான வாசிப்பனுபத்தையும் வாசித்த பின்னும் கலவையான சிந்தனைகளையும் உண்டாக்கிய நூல் இது. ஒடுக்கப்பட்டவர்களிலும் மிக மோசமான ஒடுக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் ஒடுக்கப்பட்ட பெண்கள் தான். தலித் எழுச்சியிலும் தந்தைவழி மரபுச் சிந்தனைகளோடே பெண் அதே இடத்திலேயே நிற்க வைக்கப்படும், நடத்தபடும் தன்மையை ஊர்மிளா கேள்வி கேட்கிறார். ஊர்மிளாவின் எழுத்து அம்பேத்கரின் சமூக சந்தனையின் வெளிப்பாடு என்பதை இந்த நூலை வாசிக்கும் எவரும் உணர முடியும் . அவர் உண்டாக்கிய நேர்மறைத் தாக்கத்தை தன் வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் அனுபவப்பூர்வமாக ஊர்மிளா பரிசோதித்துப் பார்க்கிறார். போராட்டங்கள் அதிகம் எனினும் அவர் தன் முயற்சியில் விடாப்பிடியாக நிற்க அம்பேத்கரின் சிந்தனைகளும் சொற்களுமே துணை நிற்கின்றன. அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அம்மக்களின் வாழ்வில் அண்ணல் அம்பேத்கர் நிறைந்து நிற்கும் தன்மைக்கு இந்தப் புத்தகம் சிறந்த எடுத்துக்காட்டு. அதுவும் ஒரு பெண்ணின் மலர்ச்சி என்பது இதைக் கூடுதல் பொலிவாக்குகிறது. சிறுகதைகளோடு, அம்பேத்கரின் இயக்கத்தில் தலித் பெண்களின் பங்கு குறித்த நூல் ஒன்றினையும் ஊர்மிளா பவார் மீனாட்சி மூன் உடன் இணைந்து எழுதியிருக்கிறார். Aamhihi Itihass Ghadwala: Ambedkari Chalavalitil Streeyancha Sahabhag என்ற இப்புத்தகம் 1980 இல் சுகவா பிரகாஷன் வெளியீடாகவந்தது.

கொங்கண் பகுதியில் ரத்னகிரி மலைப்பகுதியை ஒட்டிய பன்ஸ்வாலே கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா. மகர் சாதியினைச் சேர்ந்தவர்களாகிய இவர்கள் இந்து வழிபாட்டையே கொண்டிருந்தனர். இவருடைய தந்தை அந்த கிராமத்தின் பூசாரியாகவும் இருந்தவர். ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றிருந்த அவர், சினால் என்ற மலை கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கான பள்ளியில் சிலகாலம் ஆசிரியராகவும் இருந்தவர். குழந்தைகளுக்குக் கல்வி வேண்டும் என்பதில் மிகத் தீவிரம் காட்டியவர். அடித்தோ மிரட்டியோ எவ்வாறாகவேனும் தன் குழந்தைகளையும் உறவினர் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விடுவார். எவ்வளவு அடம் பிடித்தாலும் எதுவும் நடக்காது. அந்தளவு கல்வியை ஊர்மிளாவின் தந்தை வற்புறுத்தியிருக்கிறார். இவற்றை எல்லாம் விவரிக்கும் போதே அன்றைய சமூக நிலையையும் விளக்கும் பல்வேறு செய்திகளை ஊர்மிளா விரிவாக எழுதிச் செல்கிறார். சிறிய தகவல்களாயினும் அவை ஆர்வமூட்டுவதாக அமைகின்றன. உதாரணத்திற்கு, இவரின் தந்தை ஆசிரியராக இருந்த பள்ளியில் பிராமண, பண்டாரி, குன்பி சாதியைச் சேர்ந்த குழந்தைகள் உடன் படித்தாலும் அவர்கள் ஒருபுறமாகவும் மகர் சாதிக் குழந்தைகள் ஒரு ஒதுக்குப் புறத்திலும் அமர வைக்கப்பட்டனர் என்ற தகவலையும் சொல்லிச் செல்கிறார். ஊர்மிளா 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர்கள் வசித்த கிராமத்தில், மகர் சாதியினர் ஊருக்கு நடுவில் பிராமண, பண்டாரி, குல்வாடி, குன்பி சாதியினருக்கு நடுவிலேயே வசித்திருக்கின்றனர். ஆனால், நீர் சேந்துவது ஒடுக்கப்பட்ட பெண்களுக்குக் கடுமையாக மறுக்கப்பட்ட ஒன்று. எனவே, ஊர்மிளாவின் வீட்டில் இருந்த கிணற்றில், இப்பெண்கள் எந்நேரமும் நீர் சேந்திக் கொள்ளும் ஏற்பாட்டை அவர் தந்தை செய்து வைத்திருந்தார். ஊர்மிளாவின் தந்தை, இவர் மூன்றாம் வகுப்பு பயிலும் போது 1954 இல் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார். தந்தையின் மறைவின் போது, சில கணம் அப்பாடா, இனி பள்ளி செல்லும்படி வற்புறுத்தல் இல்லை என மகிழ்ந்ததாகவும் ஆனால், அதன் பின்னரே கல்வி கற்பதற்காக ஊக்கம் தம்மை ஆட்கொண்டதாகவும் ஊர்மிளா எழுதுகிறார்.


தலித் மக்கள் இந்து சமயத்திலிருந்து பௌத்தம் தழுவுவதன் முன் நடந்த ஒரு சில சம்பவங்களையும் ஊர்மிளா பதிவு செய்கிறார். ஆற்றின் குறிப்பட்ட பகுதியில் மட்டுமே தலித் மக்கள் நீர் எடுக்கலாம் என வரையறுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலும் மராத்தா சவர்ணர்கள் தங்கள் மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்து அவற்றை நீராட்டுவார்கள். அவர்கள் அந்த இடத்தை விட்டு நீங்கும் வரை, அது எவ்வளவு நேரமானாலும் தலித் பெண்கள் பொறுமையோடு காத்திருந்து சகதியாகக் கலங்கிய அந்த நீரையே அள்ள வேண்டும். தலித் தரப்பினர் இது குறித்து கூடிப் பேசி பொருமுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவியலாத வகையில் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும் முதுகெலும்பு இல்லாதவர்களாகவும் இருந்தனர் என எழுதுகிறார் ஊர்மிளா.

ஊர்மிளாவின் தாய், பேய் பிசாசு பில்லிசூனியம் காத்து கருப்பு ஆகிய நம்பிக்கைகளை உடையவராக இருந்தவர். எனினும் பௌத்த மத மாற்றம் நிகழந்த பிறகு இவை பற்றி பேசுவதை அவர் நிறுத்திக் கொண்டார் என்கிறார் ஊர்மிளா. இவர் அண்ணல் அம்பேத்கரை அறிந்து கொண்டதே, அவர் காலமான செய்தியிலிருந்து தான். முதலில் அவரைப் பற்றியோ அவர் மதம் மாறச் சொன்னது குறித்தோ தங்கள் கிராமத்தினர் எதுவும் அறிந்திருக்கவில்லை என்றும் ஷிர்கோன் கிராமத்தைச் சேர்ந்த நாதுராம் கம்ப்ளே, பர்தவானே கிராமத்தைச் சேர்ந்த ஹரிபாவ் ஆயிரே, கேலேவைச் சேர்ந்த பாண்ட்யா சாவேகர், மிரேவைச் சேர்ந்த கோபால் மாஸ்டர் போன்ற செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து கிராம மக்களிடம் அம்பேத்கர் குறித்தும் மதமாற்றத்திற்கான அவசியத் தேவை குறித்தும் வற்புறுத்திக் கூறியதைப் பதிவு செய்கிறார். இவர்கள் தான் அம்பேத்கரின் மறைவுச் செய்தியையும் கொண்டு வந்தவர்கள். ரேடியோவில் அதைக் கேட்டதாகச் சொல்லி பெருங்குரலெடுத்து அழுது கொண்டே நாதுராம் கம்ப்ளே தம் வீட்டின் வராந்தாவில் அமர்ந்திருந்ததையும் கூடவே தம் தாய், அண்ணன் அ்அக்கா அனைவரும் தேம்பி அழுதபடி இருந்ததைப் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்த மாலையில் கண்ணுற்ற காட்சி தம் மனதில் நீங்காமல் ஆழமாக உறைந்துவிட்டதாகவும் ஊர்மிளா குறிப்பிடுகிறார். அடுத்த நாள் பம்பாய் சென்று அம்பேத்கரின் கடைசி முக தரிசனம் பெற வேண்டும் எனச் சொல்லிவிட்டு நாதுராம் கம்ப்ளே சென்று விடுகிறார். (இவருடைய குடும்பத்தினர் பம்பாய் சென்றதான பதிவு எதுவும் இல்லை). அதன் பின்னர், ரத்னகிரியின் கோகேட் கல்லூரி வளாகத்தில் சுற்றியிருந்த கிராமங்களிலிருந்தெல்லாம் தலித் மக்கள், மனிதக் கடலெனத் திரண்ட காட்சியை ஊர்மிளா விவரிக்கிறார். இவர்களின் குடும்பமும் அதிலொன்று. அந்தக் கூட்டத்தில் எவ்வாறெல்லாம் இனி நடந்துகொள்ள வேண்டும் என்ற குறிப்புகள் ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. புத்தம் சரணம் கச்சாமி என்பதை மந்திரம் போல மக்கள் முழங்கிக் கொண்டே இருந்தனர்.

கூட்டம் முடிந்து வீடு திரும்பியதும் செயல்பாட்டாளர்கள், ஒவ்வொரு வீடு தோறும் சென்று பூஜை அலமாரியில் சுவற்றில் இருந்த இந்துக் கடவுளர்களின் படங்கள், சிறு செப்புச் சிலைகள், பூஜைக்கான உபகரணங்கள் என அனைத்தையும் கூடையில் இட்டு, திரண்டு போய் ஆற்றில் அவற்றை வீசிவிட்டு வந்தனர். அம்மா அதனை மறுதலிப்பாள் என நினைத்த ஊர்மிளா, அவ்வாறு அவள் செய்யாதது கண்டு நிம்மதி அடைகிறார். ஆற்றை நோக்கித் திரண்டு சென்ற அம்மக்களின் கைகளில் இருந்த கூடைகளில் தெய்வப்படங்கள் இருந்தன. வழக்கமான பிரார்த்தனைப் பாடலின் இராகத்தில் புதிய சொற்களை இட்டு பாடிக் கொண்டே அவர்கள் சென்றனர். மராத்தி மொழியிலான அந்தப் பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பையே கீழே தருகிறேன்:


O ye Gods
Yes,that’s right Maharaja
Go back to your own place
Yes,that’s right Maharaja
You never did any good to us.
Yes,that’s right Maharaja
Now our lord Buddha has come.
Yes,that’s right Maharaja.
Now we aren’t scared of anyone.
Yes, that’s right Maharaja.

இதைப் பாடிக்கொண்டே ஆற்றை நெருங்கியதும் அம்பேத்கர் வாழ்க, இறைவன் புத்தர் வாழ்க என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

இந்த நிகழ்வின் முந்தைய நாளின் முன்னிரவில் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் கிராமத்தினரின் கூட்டம் நடைபெற்றது. அதில் தான் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது.

கடவுளர்களின் படங்கள் இருந்த இடத்தில் இப்போது அம்பேத்கரின் படமும் புத்தரின் படமும் மாட்டப்பட்டன. வீட்டின் முன் புத்தர் சிலை வைக்கப்பட்டது. மகர்களின் குடியிருப்பில் ஒவ்வொரு வீடாகச் சென்று, களப்பணியாளர்கள் புத்த வந்தனத்தைக் கற்றுத் தந்தனர். ஒவ்வொரு நாள் மாலையும் கூட்டமாக இவை பாடப்பட்டன. முதலில் அது குழப்பத்தையும் நகைப்பையும் உண்டாக்கினாலும் போகப்போக மக்கள் பழகிக் கொண்டனர். களப்பணியாளர்கள் கிராமம் கிராமமாகச் சென்று இவற்றைப் பயிற்றுவித்தனர். நல்லது கெட்டது சார்ந்த முந்தைய இந்து மதச் சடங்குகள் கைவிடப்பட்டன. புதிய சடங்குகள் கற்றுத் தரப்பட்டன. திருமண முறைகளிலும் பழைய சடங்குகள் கைவிடப்பட்டன. மணமகளும் மணமகனும் வெள்ளை உடையையே அணிந்தனர். திருமணப் பந்தலில் புத்தரின் படமும் அம்பேத்கரின் படமும் வைக்கப்படும். அவற்றுக்கு மாலைகள் இடப்பட்டிருக்கும். புத்த பிட்சு சடங்குகளைச் செய்வார். மணமக்கள் இருபத்தியிரண்டு உறுதிமொழிகளைச் சொல்வர். (அம்பேத்கர் உண்டாக்கியது) பின் கருக மணிக்குப் பதிலாக வெண்மணி மாலையில் தாலி அணிவிக்கப்படும். பின்னாட்களில் கருக மணியே மீண்டும் தாலியாக அணியப்பட்டதாக ஊர்மிளா குறிப்பிடுகிறார். கூடவே, தான் கிராமத்தை விட்டு நீங்கிப் பல வருடங்கள் கழித்து மீண்டும் சென்றபோது புற வளர்ச்சி பெற்ற கிராமங்களின் ஒடுக்கப்பட்டவர்களின் வீடுகளில் மீண்டும் பழையபடியிலான சமயச் சின்னங்கள் இடம்பெற்று விட்டதையும் சடங்குகளிலும் புற அடையாளங்களிலும் பழையமுறைக்கே மாறியதையும் குறிப்பிடுகிறார். போலவே, சாதிப் பின்னொட்டுகளிலும் மாற்றங்கள் உண்டாயின. மகர் என்ற பின்னொட்டைத் துறந்து பவார் (Pawar, Powar அல்ல காரணம் powar என்பது சக்கிலியர்களின் சாதிப் பின்னொட்டு) வைத்துக்கொள்ளப்பட்டது. மகர்களிலும் பிரதேசங்களை ஒட்டி, பல்வேறு பிரிவுகள் பீலே மகர், பான் மகர் என்பது போன்றவை இருப்பதையும் இவற்றில் இதைவிட இது தாழ்ந்தது, உயர்ந்தது எனப் பிரிவினைகள் இருந்தத்தையும் பவார் தயக்கமின்றிக் குறிப்பிடுகிறார். சாதிய ரீதியிலான பெயர்களைத் துறத்தல், சாதிப் பின்னொட்டுகளில் மாற்றங்கள், பண்பாட்டு அம்சங்களில் நேர்ந்த மாறுபாடுகள் எனப் பல தகவல்களையும் போகிறபோக்கில் ஊர்மிளா சொல்லிச் செல்கிறார். திருமணமாகும் போது, மணப்பெண்ணுக்குப் புதிய பெயரைச் சூட்டும் வழக்கத்தின்படி இவருக்கு இட்ட பெயர் தான் ஊர்மிளா என்பதும். வேறு ஒரு பெயரை மணமகன் வீட்டார் சொல்லும் போது, இராமாயணத்தில் இலட்சுமணனின் மனைவியின் பெயரான ஊர்மிளை தனக்கு மிகுந்த விருப்பமான பாத்திரம் என்பதால் அந்தப் பெயரையே தான் தேர்ந்தெடுத்ததாக ஊர்மிளா குறிப்பிடுகிறார்.

ஊர்மிளாவின் கணவரான ஹரிச்சந்திரா, அம்பேத்கர் கொங்கண் பகுதியில் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்தபோது பிறந்தவர் எனக் குறிப்பிடும் ஊர்மிளா, உள்ளூர் தலைவர்களான கல்சுல்கார், அருளேகர், கிர்லோஸ்கர், ஹட்கர், ஹிந்த்லேகர் போன்றோர் மிகப்பெரிய பிரச்சாரக் கூட்டங்களை ஒருங்கிணைத்ததையும், அந்தக் கூட்டங்களில் அம்பேத்கர் சாதி ரீதியிலான இழிவான தொழில்களை புறக்கணிக்க வேண்டும் என வற்புறுத்தியதற்கு இணங்க ஹரிச்சந்திராவின் தந்தை இனி அத்தகைய பணிகளை ஒருபோதும் செய்வதில்லை என உறுதி எடுத்துக்கொண்டதையும் சுட்டிக் காட்டுகிறார். கூடவே, கிராமங்களை விட்டு வெளியேறுங்கள், சாதிப் பாகுபாடுகள் ஊறியிருக்கும் கிராமங்கள் இம்மக்களின் மேம்பட்ட வாழ்விற்கு ஒருபோதும் துணை நிற்காது என்ற அறைகூவலையும் தாம் முழுமையாக நம்புவதாகக் குறிப்பிடுகிறார்.
ஊர்மிளாவின் கணவரும் அம்பேத்கரின் நேரடிக் கூட்ட உரைகளைக் கேட்டு வளர்ந்தவரே. அதைப் பற்றிக் கூறும் போதெல்லாம், ஊடுருவும் அம்பேத்கரின் கண்களையே தாம் பார்த்தது போல் உணர்ந்ததாகப் பதிவு செய்கிறார் ஊர்மிளா.

அதனாலேயே, இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை நாடி பம்பாய்க்கு நகர்கின்றனர்.
பம்பாய், ஊர்மிளாவிற்குப் பல கதவுகளைத் திறந்து விடுகிறது. மேடைக்கூச்சம் என்பதைப் பள்ளி நாட்களிலேயே அறியாத ஊர்மிளா, இங்கு அம்பேத்கரிய இயக்கங்களோடு அறிமுகமாகிறார். தனக்கு எழுதவும் வரும் என்பதையும் கண்டு கொண்டு சிறுகதைகளும் பத்திகளும் எழுதத் தொடங்குகிறார். அவை பத்திரிக்கைகளிலும் பிரசுரமாகின்றன. துப்புரவு பணியாளர்களுக்கான அமைப்பு, பெண்ணிய அமைப்புகள் எனப் பலவற்றோடு தம்மை இணைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று உரையாற்றவும் செய்கிறார். எனினும் தலித் அமைப்புகளிலும் ஆண்கள், பழையபடி தந்தைவழிச்சமூக மதிப்பீடுகளுடனேயே பெண்களை நடத்தும் வித்ததையும் சுட்டிக் காட்ட தயங்கவில்லை. பெண்கள் அமைப்புகளில் தொடர்ந்து பங்கேற்று கருத்துகளை முன்வைக்கும் முறை, இங்ஙனம் செயலாற்றும் விதம் எனப் பல்வேறு கூறுகளுக்கும் அண்ணல் அம்பேத்கரின் சொற்களே தமக்கு உந்துசக்தியாக இருந்ததாக ஊர்மிளா பல பக்கங்களில் எழுதியிருக்கிறார். பி.ஏ.படித்து முடித்த உற்சாகத்தில் எம்.ஏ பட்டத்திற்குப் பதிவு செய்து கொள்ளும் போது, இதுநாள்வரை உறுதுணையாக இருந்த கணவர் மிகக் கடுமையாக இதை எதிர்க்கிறார். நல்ல குடும்பம் என்பது பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்து கவனித்துக் கொண்டால் தான் தழைக்கும் எனப் பிடிவாதம் காட்டுகிறார். ஒவ்வொரு தினமும் சவாலானதாக இருந்தாலும் தன் அரசுப் பணி, எழுத்து, பட்டம் பெறும் முயற்சி, பெண்கள் குழுக்களில் பங்கேற்பு என அனைத்தையும் ஊர்மிளா, ஒரு சதாவதானியைப் போல கவனகரைப் போல கையாண்டிருக்கிறார். அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் என்ற சங்கப் பாடல் வரி நினைவில் எழுந்தது.

ஊர்மிளாவுக்கு மூன்று குழந்தைகள். அதில் தன் மகள் காதல் திருமணம் செய்ய முற்படுகையில் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, ஊர்மிளா தம் மகளுக்குத் துணை நிற்கிறார். ஊர்மிளாவின் கணவர் பவார் புற்றுநோயால் இயற்கை எய்தியபின் ஒரு விதவையாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாத, ஊர்மிளாவி்ன் தன்மானப் போராட்டம் வியக்க வைப்பது. கணவர் உயிருடன் இருந்த போது, மங்கல அடையாளம் என வற்புறுத்தப்பட்ட கருகமணி மாலையை அணியாத ஊர்மிளா, பின் அதைத் தன் அடையாளமென அணிந்துகொள்கிறார். இந்த முடிவை எடுக்க அவர் மனதில் நிகழ்ந்த போராட்டங்களையும் பதிவு செய்கிறார். கணவர் காலமானபோது, மனைவி தன் மங்கல அடையாளங்களை இழக்க வேண்டும் என்ற முந்தைய வழக்கமே, பௌத்த மதம் மாறிய தலித்துகளிடையேயும் கடைபிடிக்கப்பட்ட போது, ஊர்மிளா அதையும் அம்பேத்கரின் வார்த்தைகளைக் கொண்டே மறுக்கிறார்.

290 பக்கங்கள் கொண்ட இந்த தன்வரலாற்று நூலை வாசித்து முடித்த போது, பெருமூச்சோடு, தம் மக்களுக்கான அறிவு அரணாக நின்ற அண்ணல் அம்பேத்கரை, விழிகளில் இரண்டு சொட்டுக் கண்ணீரோடு நினைத்துக் கொண்டேன். தம் மக்கள் சுயமரியாதையோடும் நல்வாய்ப்புகளோடும் ஒழுக்கத்தோடும் வாழவேண்டும் என்று அவர் கண்ட கனவுகளும் பேசிய வார்த்தைகளும் எழுத்துகளும் இலட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகமளிப்பதாக என்றும் நிலைத்திருக்கும்.

***

சித்ரா பாலசுப்ரமணியன் – சென்னையில் வசிக்கிறார். பதினைந்து ஆண்டுகள் தமிழ் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அனைத்திந்திய வானொலியிலும், தூர்தர்ஷனிலும் செய்தி வாசிப்பாளராகவும் பணி செய்துள்ளார். காந்தி 150 இற்காக காந்தியர்களை நேர்காணல் செய்திருந்தது அவருடைய அரும்பணி. தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் எழுதியும் பேசியும் வருகிறார். மண்ணில் உப்பானவர்கள், செயலறம் ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். தன்னார்வமாக சங்க இலக்கிய வகுப்புகளையும் எடுத்துவருகிறார். மின்னஞ்சல்: chithra.ananya@gmail.com

ஆடும் குதிரையும் அதிர்ஷ்டமும்

0

டி.எச்.லாரன்ஸ்

தமிழில்: சுபஶ்ரீ முரளிதரன்

ரு அழகான பெண் எல்லா விதத்திலும் மேன்மைகள் வாய்க்கப் பெற்றவளாக தன் வாழ்க்கையைத் தொடங்கினாள். ஆனால் அவளுக்கு அதிர்ஷ்டம் மட்டும் இல்லாமல் இருந்தது. அவள் அன்பிற்காகவே திருமணம் செய்துகொண்டாள் என்றாலும், அந்த அன்பு அவளுக்கு மண்ணாகிப் போனது. அவளுக்கு அன்பான குழந்தைகள் இருந்தார்கள் என்றாலும், அவள் அவர்கள் தன்மீது திணிக்கப்பட்டவர்கள் என்பதாக உணர்ந்ததால், அவளால் குழந்தைகள் மீது அன்பு செலுத்த முடியவில்லை.

அவர்கள், அவள் தன்னுடைய பண்பில் பலவீனமானவளாக இருப்பதை அறிந்துகொண்டு விட்டவர்களாக, அவள்மீது வெற்றுப் பார்வையையே வீசினர். அவள் தன் பலவீனத்தை மறைத்துக்கொள்ளும் வழியைக் கண்டுபிடிக்க நினைத்தாலும் அதை எப்படி செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளுடைய பிள்ளைகள் அவளுக்கருகில் இருக்கும்போதெல்லாம், அவள் மனதிற்குள் ஒரு விதமான கடினத்தன்மை நிலவுவதாக உணர்ந்தாள். இது அவளை தொந்தரவு செய்வதாக இருந்தாலும், அவள் நடந்து கொள்ளும் விதம், அவர்கள்மீது அவள் அதிக அன்பு செலுத்துகிறாள் என்பதைப்போல, மிகவும் மென்மையையும் அக்கறையையும் காட்டும் விதமானதாகவே இருந்தது.

அவள் இதயத்தில் எவர்மீதுமே அன்பு செலுத்த முடியாத வகையில் ஒரு கடினத்தன்மை நிலவுவதை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். மற்றவர்கள் அனைவருமே “அவள் ஒரு சிறந்த தாய். அவள் தன் பிள்ளைகளை பெரிதும் நேசிக்கிறாள்”என்பார்கள். அவளும் அவளுடைய பிள்ளைகளும் மட்டுமே, அவள் அப்படியில்லை என்பதை அறிந்தவர்கள். அதை அவர்கள் தங்களின் பார்வை பறிமாற்றத்திலேயே அறிந்து கொண்டார்கள்.

அவளுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருந்தார்கள். அவர்கள் அழகிய தோட்டம் அமையப்பெற்ற அருமையான வீட்டில் வசித்தார்கள். அவர்களுக்கு நல்ல வேலையாட்களும் இருந்தார்கள் என்பதோடு, அருகாமையில் வசிக்கும் அனைவரை விடவும் சிறப்பான வாழ்க்கையை வாய்க்கப் பெற்றவர்களாக உணர்ந்தார்கள். 

அவர்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தாலுமே, ஒருபோதும் முழுமையான மகிழ்ச்சியுடன் அந்த வீட்டில் இருக்கவில்லை. அவர்கள் எப்பொழுதும் போதுமான பணம் இல்லாதவர்களாகவே இருந்தார்கள். தாய்க்கு சொற்ப வருமானமும், தந்தைக்கென்று ஒரு சிறிய வருமானமும் இருந்தபோதிலும், சமூகத்தில் அவர்கள் தங்கள் அந்தஸ்த்தை பேணும் அளவிற்கு அது போதுமானதாக இருக்கவில்லை. அப்பா நகரத்திலிருந்த ஏதோவொரு அலுவலகத்தில் வேலைப் பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு வெற்றிகரமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் அமைந்தபோதிலும், எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை. எப்பொழுதுமே பணப்பற்றாக்குறையின் நிமித்தமான ஒரு அழுத்தம் நிலவிக்கொண்டேயிருந்தது. எப்படியானாலும் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து பேணப்பட்டு வந்தது.

கடைசியில் அம்மா “என்னால் எதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்”என்றாள். ஆனால், அவளுக்கு எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று பலவாறு யோசித்து இதையும் அதையும் செய்துபார்த்த போதிலும், எதிலும் வெற்றி பெறமுடியவில்லை. அவள் அடைந்த தோல்விகள், அவள் முகத்தில் ஆழமான வரிகளை ஏற்படுத்தியிருந்தது. அவள் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும். அதற்கு அதிக அளவில் பணம் தேவை. அழகும் அதே நேரத்தில் விலையுயர்ந்த ரசனைகளும் கொண்டவரான அப்பா எதையும் உருப்படியாக செய்பவராக இருக்கவில்லை. அவரைப் போன்றே ரசனைகளோடு தன்னை உயர்வாக கருதிக்கொள்ளும் அம்மாவாலும் எதிலும் வெற்றிபெற முடியவில்லை.

அதனாலேயே அந்த வீடு பேசப்படாத வார்த்தைகளால் நிரம்பியதாக இருந்தது. “நிறைய பணம் இருந்திருக்க வேண்டும். நிறைய பணம் இருந்திருக்க வேண்டும்”. இதையேதான் குழந்தைகள், கிருத்துமஸ் காலத்தில் விளையாட்டு அறையில் விலையுயர்ந்த அற்புதமான விளையாட்டுப் பொருட்கள் நிரம்பியதாக இருக்கும்போதுமே கேட்க முடிந்தது. பளபளக்கும் ஆடும் குதிரை, அழகான பொம்மைவீடு என இவற்றிற்குப் பின்னால் மெல்லிய குரல், “அதிக பணம் இருக்க வேண்டும். அதிக பணம் இருக்க வேண்டும்” என்பதாக ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

ஆடும் குதிரையின் அசைவுகளிலும், சொல்லப்போனால், பொறுமையிழந்து அந்த மரக்குதிரை தன் மரத்தாலான தலையை விரைந்து செல்வதற்காக குனியும்போது அந்த குதிரைக்கும், புரிதலுடன்கூடிய சிரித்தபடி இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்து அமர்ந்திருக்கும் அந்த பெரிய பெண் பொம்மைக்கும், அது கேட்டபடியே இருக்கும். இந்த ரகசிய வார்த்தைகளைக் கேட்க நேர்ந்ததில் அந்த அப்பாவி நாய்குட்டி வழக்கத்தைவிட இன்னும் அப்பாவியாக தெரிந்தது. “அதிகப் பணம் இருக்க வேண்டும்”.

 இருந்தாலும் யாரும் அதை வாயால் சொல்லவில்லை. மூச்சு என்பது எப்பொழுதும் வருவதும் போவதுமாக இருக்கும் எனும்போது, எப்படி யாரும் நான் மூச்சு விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டேயிருக்க மாட்டார்களோ, அப்படித்தான் அந்த வார்த்தைகள் எங்கும் நிறைந்து இருந்தபடியால், யாரும் அதை வெளியில் சொல்லவில்லை. 

ஒரு நாள் பால்”அம்மா”என்றழைத்து. “நாம் ஏன் சொந்தமாக ஒரு கார் வைத்துக்கொள்ளக் கூடாது? நாம் ஏன் எப்பொழுதும் வாடகைக் காரையோ அல்லது மாமாவின் காரையோதான் பயன்படுத்த வேண்டும்?” என்று கேட்டான். 

 “ஏனென்றால் நாம்தான் நம் குடும்பத்தில் ஏழையானவர்கள்”என்றாள்.

 “நாம் ஏன் ஏழைகளாக இருக்கிறோம் அம்மா?”

 “உன்னுடைய அப்பா அதிர்ஷ்டமில்லாதவராக இருப்பதால்தான் என்று நினைக்கிறேன்”, எனக் கசப்புடன் நிதானமாக கூறினாள்.

 அந்த சிறுவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.

 “அதிர்ஷ்டம்தான் பணமா அம்மா?”என்று அச்சத்துடன் கேட்டான்.

“இல்லை பால். அது அப்படியில்லை. ஆனால் அதிர்ஷடம்தான் பணத்தை அடைய காரணமாக இருக்கிறது”.

“ஓ..”என்றான் அவன்.”அப்படியானால் அதிர்ஷ்டம் என்றால் என்ன அம்மா?”

“நான் சொன்னதுபோல, அதுதான் பணத்தை அடைவதற்கான காரணமாக இருக்கிறது. நீ அதிர்ஷ்டக்காரனாக இருந்தால் உன்னிடம் பணம் இருக்கும். அதனால்தான் பணக்காரனாக பிறப்பதைவிட அதிர்ஷ்டக்காரனாக பிறப்பது நல்லது. பணக்காரனாக இருந்தால் ஒருவேளை பணத்தை இழக்க நேரிடலாம் ஆனால், அதிர்ஷ்டக்காரனாக இருந்தால் எப்பொழுதும் அதிகப்படியான பணம் இருந்துகொண்டே இருக்கும்”.

“ஓ! அப்படியானால் அப்பா அதிர்ஷ்டசாலி இல்லையா?”

“மிகவும் அதிர்ஷ்டமில்லாதவர் என்றுதான் சொல்வேன்”என்றாள் கசப்புடன்.

அந்த சிறுவன் அவளை நிச்சயமற்ற பார்வை பார்த்தான்.

 “ஏன்?”என்று கேட்டான்.

“எனக்குத் தெரியவில்லை. ஒருவர் எதனால் அதிர்ஷ்டமானவர் மற்றவர் அதிர்ஷ்டமில்லாதவர் என்று யாருக்கும் தெரியாது”. 

“தெரியாதா? யாருக்குமேவா? யாருக்குமே தெரியாதா?”

“ஒரு வேளை கடவுளுக்குத் தெரியலாம். ஆனால் அவர் ஒருபோதும் யாருக்கும் சொல்ல மாட்டார்”.

“அவர் சொல்லத்தான் வேண்டும். உங்களுக்கும்கூட அதிர்ஷ்டம் இல்லையா அம்மா?”

“நான் அதிர்ஷ்டமில்லாதவரை திருமணம் செய்துகொண்டிருப்பதால் எனக்கும் அதிர்ஷ்டம் இருக்க முடியாது”

“ஆனால் உன்வரையில் நீ அதிர்ஷ்டமில்லாதவளா?

“திருமணத்திற்கு முன்பு நான் அதிர்ஷ்டமானவள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் மிகவும் அதிர்ஷ்டமில்லாதவள்தான்”

“ஏன்?”

“சரி. அதைவிடு. நான் அதிர்ஷ்டம் இல்லாதவளாகக்கூட இருக்கலாம்”என்றாள்.

அவள் அப்படித்தான் நினைக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்ள அந்த பிள்ளை அவளைப் பார்த்தது. ஆனால் அவள் உதட்டோரமாக தெரிந்த சில வரிகள் அவள் எதையோ அவனிடமிருந்து மறைப்பதை உணர்த்தியது.

“சரி. எப்படியோ நான் அதிர்ஷ்டமானவன்”என்று உறுதியாகக் கூறினான்.

“ஏன்?”என்று திடீரென சிரித்தபடி அவன் அம்மா கேட்டாள்.

அவன் தன் கண்களை அகல விரித்தபடி மீண்டும் அவளைப் பார்த்தான். அவன் எதனால் அப்படிச் சொன்னான் என்று அவனுக்குத் தெரியவில்லை. 

“கடவுள் சொன்னார்”என்று தான் பொய்யாக சொன்னதைத் தொடர்ந்தான்.. 

“அவர் சொல்லியிருப்பார் என்று நான் நம்புகிறேன் கண்ணே”.

“அவர் சொன்னார் அம்மா”.

“அட்டகாசம்” என்று தன் கணவருக்குப் பிடித்தமான ஒரு வார்த்தையை அவள் பயன்படுத்தினாள்.

அவள் தன்னை நம்பவில்லை. அல்லது அவன் சொன்னதற்கு கவனம் செலுத்தவில்லை என்பதை அவன் கண்டுகொண்டான். இது அவனை கோபப்படுத்தியதோடு அவளை நம்பவைக்க எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்க வைத்தது.

அவன் குழந்தைத்தனமாக அதிர்ஷ்டத்தை அடைவதற்கான ரகசியத்தை கண்டடைய வேண்டி, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், யாரையும் கவனிக்காமல் குழப்பத்துடனேயே இருந்தான். அவனுக்கு அதிர்ஷ்டம் வேண்டும். அவனுக்கு அது தேவையாக இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளும் பொம்மைகளோடு விளையடிக்கொண்டிருக்கும்போது, அந்த பெண்களுக்கு கவலையை ஏற்படுத்தும் விதத்தில், இவன் தன்னுடைய பெரிய ஆடும் குதிரையின் மீதமர்ந்து வெறித்தனமாக அதை செலுத்துவதுவான். காட்டுத்தனமாக ஓடும் குதிரையின் வேகத்தில் அவனது கருத்த தலைமுடி மேலும் கீழும் அசைந்து கொண்டிருக்க, அவன் கண்களில் வினோதமான ஜுவாலை தெரிந்தது. அந்த சின்னஞ்சிறு பெண்கள் அவனுடன் பேசவும் பயந்தனர்.

அவன் தனது வெறித்தனமான பயணத்திற்குப்பின் அதன்மீதிருந்து இறங்கி அந்த ஆடும் குதிரையின் முகத்தைப் பார்த்தவாறு நெடுநேரம் நின்றிருப்பான். அதன் கண்கள் அகன்றதாய் கண்ணாடிப்போல ஒளிர்ந்திட, சிவந்தவாய் சற்று திறந்தபடியாக அது காணப்பட்டது.”இப்பொழுதே! இப்பொழுதே அதிர்ஷ்டம் எங்கிருக்கிறதோ அங்கு என்னைக் கூட்டிச்செல்”என்று மௌனமாக உத்தரவிடுவான்.

அவன் தன் மாமா ஆஸ்காரிடம் தான் வாங்கியதைப்போன்றே குதிரையின் பிடரியில் சவுக்கால் அடிப்பான். அந்தக் குதிரையை பலவந்தப் படுத்தினால் மட்டுமே அது தன்னை அதிர்ஷ்டம் இருக்கும் இடத்திற்குக் கூட்டிச் செல்லும் என்று அவனுக்குத் தெரியும். எனவே அவன் அவ்விடத்தை அடைய வேண்டி அந்த குதிரையின்மீதேறி தன் வெறித்தனமான சவாரியைத் தொடர்வான். அவனால் அந்த இடத்தை அடைந்துவிட முடியும் என்று அவனுக்குத் தெரியும்.

“உன்னுடைய குதிரையை உடைத்துவிடப் போகிறாய் பால்”என்றாள் ஆயா.

“அவன் எப்பொழுதும் இப்படித்தான் ஓட்டுகிறான். இதை அவன் நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்”. என்றாள் அவன் சகோதரி ஜோன்.

அவன் அவர்கள்மீது மௌனமாக ஒரு கோபமான பார்வையை வீசினான். ஆயா அவனைக் கண்டிப்பதை நிறுத்தி விட்டாள். அவளால் அவனை எதுவும் செய்ய முடியாது. அவள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய வயதை கடந்து பெரியவனாகிவிட்டான்.

ஒரு நாள் அவன் தன் குதிரை சவாரியில் இருந்தபோது, அவனுடைய தாயாரும் மாமாவும் உள்ளே வந்தார்கள். அவன் அவர்களுடன் எதுவும் பேசவில்லை.

“ஹலோ, இளம் குதிரை வீரனே! வெற்றிபெறும் ஒன்றை செலுத்திக் கொண்டிருக்கிறாயா?”என்றார் அவன் மாமா.

“நீ இந்த ஆடும் குதிரையில் விளையாடும் வயதைக் கடந்துவிடவில்லையா? நீ ஒன்றும் இன்னும் சின்னப் பையன் இல்லை என்று உனக்குத் தெரியுமா?”என்றாள் அம்மா.

ஆனால், ஒன்றுக்கொன்று அருகருகாக அமைந்திருந்த பாலின் நீலநிறக் கண்கள் நேராக முன்னோக்கி பார்த்தபடியிருந்தது. அவன் தன் முழு வேகத்துடன் அதில் சவாரி செய்யும்போது யாரிடமும் பேசமாட்டான். அவன் தாயார் அவனைக் கவலைத் தோய்ந்த முகத்துடன் பார்த்தாள்.

ஒருவழியாக அவன் குதிரை சவாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.

“நான் அந்த இடத்தை அடைந்து விட்டேன்” என்று உற்சாகமாக தன்னுடைய நீண்ட கால்களை அகல விரித்தபடி நின்றவாறு கூறினான்.

“எந்த இடத்தை?”என்று அவன் தாயார் கேட்டார்.

“நான் எங்கு போகவேண்டுமோ அந்த இடத்திற்கு!’ என்றான் கடுமையாக.

“அது சரி மகனே! அந்த இடத்திற்குப் போய் சேரும்வரை நிறுத்த மாட்டாயா? அந்த குதிரையின் பெயர் என்ன?”என்று அவன் மாமா கேட்டார்.

“அதற்கு பெயர் இல்லை”என்றான்.

“பெயரில்லாமலே செல்கிறது சரிதானே?”என்று மாமா விசாரித்தார்.

“இல்லை. அதற்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. கடந்த வாரம் சன்சோவினோ என்று அழைக்கப்பட்டது. 

“சன்சோவினோவா? அது ஆஸ்காட்டில் நடந்த குதிரைப்பந்தயத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பெயர் உனக்கு எப்படித் தெரியும்?”என்று மாமா கேட்டார். 

“அவன் சதா குதிரைப் பந்தயத்தைப் பற்றியே பஸேட்டுடன் பேசிக்கொண்டிருக்கிறான்”என்றாள் ஜோன்.

ஆஸ்கருக்கு தன்னுடைய குட்டி மருமகன் குதிரைப் பந்தயத்தைப் பற்றிய அண்மைய செய்திகளைத் தெரிந்து வைத்திருக்கிறான் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. பஸேட் என்ற இளவயதுத் தோட்டக்காரனுக்கு போரின்போது இடதுகாலில் காயம் ஏற்பட்டிருந்தது. அவன் ஆஸ்கரின் கீழ் பட்டாளத்தில் பணியாற்றி வந்தான் என்பதால் அவர் மூலம் இந்த வீட்டின் தோட்டவேலையை பெற்றிருந்தான். பஸேட்டுக்கு குதிரைப் பந்தயத்தைப் பற்றி நிறைய தெரியும். அவன் குதிரைப் பந்தயத்துக்காவே வாழ்ந்தான். இந்த சிறுவனும் அவனோடு சேர்ந்து அதற்காகவே வாழ்ந்து வந்தான். 

ஆஸ்கர் பஸேட்டிடம் சென்று பேசினார்.

“சின்ன எஜமான் பால் என்னிடம் பந்தயத்தைப் பற்றி கேட்கிறார் என்பதால் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை”என்றான் பஸேட்.. அவன் முகம் ஏதோ மதக்கருத்துக்களைப் பற்றி பேசுவதுபோல மிகுந்த தீவிரத்தன்மையுடன் இருந்தது. 

“அவன் ஜெயிக்கும் என்று கருதும் எந்த குதிரையின் மீதாவது பணம் வைத்து பந்தயம் கட்டுகிறானா?”

“நான் அவரைக் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. அவர் இளவயது ஆட்டக்காரர். அவர் நல்லவர் ஐயா. அவருக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் அவரிடம் நீங்களே கேட்டு விடுகிறீர்களா? நான் அவரைப் பற்றி உங்களிடம் வெளிப்படுத்திவிட்டதாக அவர் நினைத்துவிடக்கூடும்.”

பஸேட் மிகுந்த தீவிரத்தன்மையுடன் பேசுவதாக ஆஸ்கருக்குத் தோன்றியது. அவர் தன் மருமகனிடம் சென்று அவனைத் தன்னோடு காரில் வெளியே கூட்டிச் சென்றார்.

“சொல்லு பால், பெரிய மனுஷனே. நீ எப்போதாவது குதிரையின் மீது பணத்தை பந்தயமாக வைத்திருக்கிறாயா?”என்று மாமா கேட்டார்.

சிறுவன் அந்த வடிவான மனிதரை உற்றுப் பார்த்தான்.

“நான் பந்தயம் வைக்கக்கூடாது என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?”என்று பதிலளித்தான்

“நான் துளியும் அப்படி நினைக்கவில்லை. அடுத்த வாரக்கடைசியில் லிங்கனில் நடக்கும் பந்தயத்திற்கு ஏதாவது ரகசியத் தகவலைத் தருவாய் என்றுதான் நினைத்தேன்”

ஆஸ்கரின் இடமான ஹேம்ஸ்பைரை நோக்கி கார் விரைந்து கொண்டிருந்தது.

“யாருக்கும் சொல்லமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து தருவீர்களா?”என்று மருமகன் கேட்டான்.

“நான் உனக்கு சத்தியம் செய்து தருகிறேன்”என்றார்.

“சரி, அப்படியானால் டஃபோடில்.”

“டஃபோடில்! எனக்கு சந்தேகமாக இருக்கிறது செல்லப் பையா. மிர்சாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“எனக்கு வெர்ற்றியாளரைத்தான் தெரியும். அது டஃபோடில்”என்றான் அந்த சிறுவன்.

“டஃபோடில் ஆ?”

மாமா சற்று நேரம் எதுவும் பேசவில்லை. டஃபோடில் அதிகம் அறியப்படாத குதிரை.

“மாமா”

“சொல்லு பையா”

“இதை மேற்கொண்டு வெளியே விடமாட்டீர்கள்தானே? நான் பஸேட்டுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்”

“பஸேட் கிடக்கிறான். அவனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”

“பஸேட்டும் நானும் கூட்டாளிகள். நாங்கள் முன்பிருந்தே கூட்டாளிகள் மாமா. அவர்தான் முதலில் எனக்கு ஐந்து ஷில்லிங்குகள் கடனாகக் கொடுத்தார். நான் அதைத் தோற்றுவிட்டேன். நான் அவரிடம் அது எனக்கும் அவருக்கும் இடையிலானது மட்டுமே என்று சத்தியம் செய்திருக்கிறேன். நீங்கள் எனக்கு ஒரு பத்து ஷில்லிங் நோட்டைக் கொடுத்தது நினைவிருக்கிறதா. அதிலிருந்துதான் நான் வெற்றிபெறத் தொடங்கினேன். அதனாலேயே நீங்கள் அதிர்ஷ்டக்காரர் என்று கருதுகிறேன். இந்த விஷயத்தை மேற்கொண்டு யாரிடமும் கொண்டு செல்ல மாட்டீர்கள்தானே?”

அந்த சிறுவன் தனது பெரிய கவர்ச்சிகரமான நீலக்கண்களால் கூர்ந்து பார்த்தான்.

“சரி பையா! உன்னுடைய ரகசிய தகவலை யாரிடமும் சொல்லவில்லை. டஃபோடில் தானே? என்றால் அதன்மீது எவ்வளவு பந்தயம் கட்டுகிறாய்?”

“அந்த இருபது பவுண்டுகளைத்தவிர எல்லாவற்றையும். அதை நான் பின்னர் தேவைக்கு வைத்துக்கொள்கிறேன்.”என்றான் அவன்.

மாமா அதை நகைச்சுவை என்றே நினைத்தார்.

“நீ தேவைக்காக இருபது பவுண்டுகளை வைத்துக்கொள்கிறாயா? அப்படித்தானே இளம் கனவுக்காரனே? அப்படியென்றால் எவ்வளவு பணத்தை பந்தயம் கட்டுகிறாய்?”

“நான் முன்னூறை கட்டுகிறேன். ஆனால் இது நம்மிருவரிடையே மட்டுமே இருக்கட்டும் மாமா. சத்தியம்?”, என்றான் அவன் தீவிரமாக.

மாமா சத்தமாக சிரித்தார்.

“இது நம்மிருவரிடையே மட்டுமே இருக்கட்டும். ஆனால், உன்னுடைய அந்த முன்னூறு எங்கு இருக்கிறது?”என்று கேட்டார்.

“பஸேட் என்னுடையதை வைத்திருக்கிறார். நானும் அவரும் கூட்டாளிகள்”.

“ஆம். நீங்கள் கூட்டாளிகள் தான் இல்லையா! பிறகு பஸேட் டஃபோடில்மீது எவ்வளவு கட்டுகிறார்?”

“அவர் என்னளவிற்கு அதிகமாக போகமாட்டார். அவர் நூற்றைம்பதுவரை போவார் என்று நினைக்கிறேன்”

“பென்னிக்களில் சொல்கிறாயா? என்று மாமா சிரித்தார்.

“பவுண்டுகள்! பஸேட் என்னைவிட அதிகமாக கையிருப்பு வைத்திருக்கிறார்” என்றவாறு அவன் மாமாவை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

வியப்பிற்கும் ஆச்சர்யத்திற்கும் இடையில் அவனுடைய மாமா அமைதியாக இருந்தார். அவர் மேலும் எதையும் பேசாமல், அவனை லிங்கன் பந்தயத்திற்கு அழைத்து செல்வதென முடிவெடுத்தார்.

“பையா, இப்பொழுது நான் மிர்சாவின் மேல் இருபது பவுண்டுகள் பந்தயம் வைக்கிறேன். உனக்காக நீ விரும்பும் ஒரு குதிரையின்மேல் ஐந்து பவுண்டுகள் பந்தயம் கட்டுகிறேன். உன் விருப்பம் எதன் மீது?”

“டஃபோடில், மாமா.”

“இல்லை. டஃபோடில்மேல் ஐந்து பவுண்டுகள் கிடையாது”

“என்னுடைய சொந்த பணமாக இருந்தால் நான் அதைத்தான் தேர்வு செய்வேன்”. என்றான் அந்த சிறுவன்.

“நல்லது! நல்லது! சரியாக சொன்னாய். எனக்காக ஐந்து பவுண்டுகளும் உனக்காக ஐந்து பவுண்டுகளும் டஃபோடில்மேல் கட்டுகிறேன்”.

அந்த சிறுவன் இதுவரைக்கும் பந்தய கூட்டத்தை நேரில் பார்த்ததில்லை. அவனுடைய கண்கள் நீல நிறத்தில் தீ போல எரிந்தன. அவன் வாயை இறுக மூடிக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்பிருந்த ஃப்ரென்சுக்காரன் ஒருவன் லேன்சலாட்டின் மீது பணம் கட்டியிருந்தான். அவன் பரவசத்தில் வெறித்தனமாக தன் கைகளை மேலும் கீழும் ஆட்டியபடி “லேன்சலாட், லேன்சலாட்”என்று கத்திக்கொண்டிருந்தான்.

டஃபோடில் முதலாவதாக வந்தது. அடுத்து லேன்சலாட்டும் அதற்கடுத்து மிர்சாவும் வந்தன. 

அந்த சிறுவன் தன்னுடைய சிவந்த கன்னங்களோடு, கண்கள் பளபளக்க வித்தியாசமாக அமைதியுடன் இருந்தான். நாலுக்கு ஒன்று என்ற கணக்கில் அவனுடைய மாமா, ஐந்து பவுண்டு நோட்டுகள் நான்கை கொண்டுவந்தார். 

“இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது”என்று அந்த சிறுவனுக்கு முன்பாக பணத்தை ஆட்டியபடி கேட்டார். 

“நாம் பஸேட்டுடன் பேசலாம். என்னிடம் ஆயிரத்து ஐனூறு இருக்கும் என்று நினைக்கிறேன். இருபது கையிருப்பாக இருக்கிறது. அதோடு இந்த இருபதும்”என்றான்.

அவனுடைய மாமா சில கணங்கள் அவனை அளந்தார்.

“இங்கே பார் கண்ணா! நீ பஸேட்டைப் பற்றியும் அந்த ஆயிரத்து ஐநூறு பற்றியும் உண்மையாக சொல்லவில்லை. அப்படித்தானே”என்று கேட்டார்.

“ஆம். நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். ஆனால் அது நம்மிருவருக்கும் மட்டும்தான் தெரியும். நீங்கள் சத்தியம் செய்திருக்கிறீர்கள்”

“எனக்கு நினைவிருக்கிறது பையா! ஆனால் நான் பஸேட்டுடன் பேசவேண்டும்”

“மாமா, நீங்கள் பஸேட்டுடனும், என்னுடனும் கூட்டாளியாக இருக்க விரும்பினால், நாம் மூவரும் கூட்டாளிகளாக இருக்கலாம். நீங்கள், நம் மூவரைத்தவிர வெளியில் வேறு யாரிடமும் சொல்லமாட்டீர்கள் என்று சத்தியம் செய்து தரவேண்டும். பஸேட்டும் நானும் அதிர்ஷ்டசாலிகள். நீங்களும் அதிர்ஷ்டசாலியாகத்தான் இருப்பீர்கள், ஏனென்றால் உங்களின் பத்து ஷில்லிங்கைக் கொண்டுதான் நான் ஜெயிக்க ஆரம்பித்தேன்.”

ஆஸ்கர் மாமா பஸேட்டையும் பாலையும் ஒரு மதிய நேரத்தில் ரிச்மண்ட் பார்க்கிற்கு கூட்டிச் சென்றார். அங்கு மூவரும் பேசிக்கொண்டார்கள்.

“இங்கே பாருங்கள் சார், அது எப்படியென்றால், சின்ன ஐயா பால் என்னை குதிரைப்பந்தய நிகழ்வுகள், அது சம்பத்தப்பட்ட கதைகளை சொல்ல வைப்பார். அவர் எப்பொழுதுமே நான் பணத்தை ஜெயித்தேனா அல்லது இழந்தேனா என்பதை தெரிந்து கொள்ளவே விரும்புவார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக நான் அவருக்காக ஐந்து ஷில்லிங்குகளை ஒரு குதிரையின்மீது கட்டுகிறேன். நாங்கள் தோற்றோம். பின்பு நீங்கள் கொடுத்த அந்த பத்து ஷில்லிங்குகளின் மூலம்தான், அவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அந்த பணத்தை நாங்கள் ’சிங்கலீஸ்’ மேல் கட்டினோம். அப்பொழுதிலிருந்து எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. சரிதானே பால்?”என்றார் பஸேட்.

“நாம் உறுதி என்று நம்பும்போது எல்லாம் சரியாகவே இருக்கும். எப்பொழுது உறுதி குலைந்து போகிறோமோ அப்பொழுதுதான் சரிந்துவிடுவோம்”, என்றான் பால்.

“ஓ, அப்படியானால் இனி நாம் கவனமாக இருப்போம்”என்றார் பஸேட்.

“ஆனால் நீ எப்பொழுது உறுதியாக இருப்பாய்?”மாமா புன்னகைத்தார்.

“அங்குதான் நிற்கிறார் பால். அது ஏதோ அவருக்கு இறைவனிடமிருந்து அருளாகக் கிடைத்திருக்கிறது. முன்பு டஃபோடில் என்றதைப்போல, இப்பொழுது லிங்கன். அது அத்தனை நிச்சயமானது”

“டஃபோடில்மீது நீ பந்தயம் வைத்தாயா?”என்று கேட்டார் ஆஸ்கர் க்ரெஸ்வெல்.

“ஆமாம் ஐயா. எனக்கு கொஞ்சம் கிடைத்தது”.

“அப்படியானால் என் மருமகனுக்கு?”

பஸேட் பாலைப் பார்த்தபடி எதுவும் பேசாமல் இருந்தார்.

“எனக்கு ஆயிரத்து இருநூறு கிடைத்தது இல்லையா பஸேட்? நான் டஃபோடில்மேல் முன்னூறு கட்டுவதாக மாமாவிடம் சொன்னேன்”.

“சரிதான்”என்று தலையை ஆட்டினார் பஸேட்

“ஆனால் பணம் எங்கு இருக்கிறது?’ என்று மாமா கேட்டார்.

“நான் அதை பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கிறேன். சின்ன ஐயா பால் எப்பொழுது விரும்பினாலும் அதை எடுத்துக்கொள்ளலாம்”.

“என்ன, ஆயிரத்து ஐநூறு பவுண்டுகளா?”.

“அதோடு ஒரு இருபது! இப்பொழுது பந்தயத்தில் கிடைத்த இருபதுடன் சேர்த்து நாற்பது”. 

“வியப்பாக இருக்கிறது”என்றார் மாமா.

“சின்ன ஐயா பால் உங்களைக் கூட்டாளியாக சேர்த்துக் கொள்வதாக சொன்னால், உங்கள் இடத்தில் நான் இருந்தால் சேர்ந்து விடுவேன். மன்னித்துக் கொள்ளுங்கள்”என்றார் பஸேட்.

ஆஸ்கர் அதைப் பற்றி யோசித்தார்.

“நானும் பணத்தைப் பார்க்க விரும்புகிறேன்”என்றார்.

அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். பஸேட் அவரிடம், அவன் வென்ற ஆயிரத்து ஐநூறு பவுண்டுகளோடு கையிருப்பில் இருந்த இருபதையும் சேர்த்து காண்பித்தார். 

“இப்பொழுது பாருங்கள் மாமா, நான் உறுதியென்று சொன்னதும்“

 எல்லாம் சரியாக இருக்கிறது. நாம் முழுபலத்துடன் திடமாக இறங்கலாம். இல்லையா பஸேட்?”

“நாம் அப்படியே செய்யலாம் பால்”

“எப்போது நாம் உறுதியாக இருப்போம்?”என்றார் மாமா சிரித்தபடி.

“ஓ அதுவா, சில சமயங்களில் அந்த டஃபோடிலை சொன்னதுபோல நிச்சயமாக உறுதியாக இருப்பேன். சில சமயங்கள் எனக்கு யோசனைகள் இருக்கும் சில சமயங்கள் இருக்காது, அப்படித்தானே பஸேட்? அப்படியிருக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நாம் தோற்றுவிடுவோம்”

“அப்படியா, உனக்குத் தெரியுமா! நீ உறுதியாக இருப்பதாக, டஃபோடிலைப் பற்றி சொன்னதுபோல உறுதியாக சொல்வதற்கு உன்னால் எப்படி முடிகிறது கண்ணா?”

“ஓ அது எனக்குத் தெரியாது. எனக்கு உறுதியாகத் தெரியும் அவ்வளவுதான் மாமா”என்று சற்று அசௌகரியத்துடன் கூறினான்

“அது அவருக்கு கடவுளிடமிருந்து கிடைக்கிறது போல ஐயா”என்று பஸேட் மீண்டும் கூறினார். 

“அப்படித்தான் சொல்ல வேண்டும்”என்றார் மாமா.

அவர் கூட்டாளியானார். லெகெர் கப் நடந்தபோது, யாரும் பெரிதாக நினைத்துப் பார்க்காத ’லைவ்லி ஸ்பார்க்’ வெல்லும் என்பதை அவன் உறுதியாக சொன்னான். அந்த சிறுவன் அதன்மேல் ஆயிரம் கட்டச் சொல்லி வலியுறுத்தினான். பஸேட் ஐநூறும், ஆஸ்கார் க்ரெஸ்வெல் இருநூறும் கட்டினார்கள். லைவ்லி ஸ்பார்க் முதலாவதாக வந்தது, பந்தயம் ஒன்றுக்கு பத்து என்றதாக இருந்ததில், பால்க்கு பத்தாயிரம் கிடைத்தது.

“பார்த்தீர்களா”என்றான். “நான் அதைப்பற்றி அவ்வளவு உறுதியாக இருந்தேன்’.

ஆஸ்கர் க்ராஸ்வெல்க்கு இரண்டாயிரம் கிடைத்திருந்தது.

“இங்கே பார் கண்ணா, இந்த மாதிரியான விஷயங்கள் எனக்கு கவலையளிக்கிறது”என்றார்.

“அதெல்லாம் தேவையில்லை மாமா. நான் இன்னும் சற்று அதிக நாட்களுக்கு இதில் உறுதியைக் காட்டாமல் இருக்க வேண்டும்”

“ஆனால், உன்னுடைய இந்த பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்”என்று மாமா கேட்டார்.

“நிச்சயமாக சொல்கிறேன். நான் இதை அம்மாவிற்காகத்தான் தொடங்கினேன். அப்பா அதிர்ஷ்டம் இல்லாதவர் என்பதால் தனக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்று அம்மா சொன்னார். அதனால் ஒருவேளை நான் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், இது தன் முணுமுணுப்பதை நிறுத்திவிடக்கூடும்” என்றான்.

“எது முணுமுணுப்பதை நிறுத்திவிடக்கூடும்?”

“எங்கள் வீடு. அது முணுமுணுப்பதால் அதை எனக்கு பிடிக்கவில்லை”

“அது என்ன முணுமுணுக்கிறது?”

“எதனால்…. எதனால்…. எதனால் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுதுமே பணப்பற்றாக்குறை நிலவுகிறது தெரியுமா மாமா”என்று அந்த சிறுவன் பதட்டத்துடன் கூறினான். 

“எனக்குத் தெரியும் கண்ணா. எனக்குத் தெரியும்.”

“நாங்கள் கொடுக்க வேண்டிய பணத்திற்காக அம்மாவிற்கு வக்கீல் நோட்டீஸ்கள் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா மாமா?”

“அப்படி நடப்பது எனக்குத் தெரியும்.”என்றார் மாமா.

“முதுகுக்குப் பின்னால் மனிதர்கள் ஏளனமாக சிரிப்பதுபோல, வீடு முணுமுணுக்கிறது. அது பயங்கரமாக இருக்கிறது. நான் அதிர்ஷடசாலியாக இருந்தால்…”

“அதை நிறுத்தி விடலாம்”என்று மேலும் மாமா கூறினார்.

அந்த சிறுவன் எதுவும் பேசாமல், அவனது பெரிய நீலநிற கண்களால் அவரை வெற்றுப்பார்வையுடன் கவனித்தான். 

“சரி, இப்பொழுது நாம் என்ன செய்கிறோம்?”என்று கேட்டார் மாமா.

“நான் அதிர்ஷ்டக்காரன் என்பது அம்மாவுக்குத் தெரியக்கூடாது”என்றான்.

“ஏன் தெரியக்கூடாது?”

“அவர் என்னைத் தடுக்கக்கூடும்”

“எனக்கு அப்படித் தோன்றவில்லை”

“சரி கண்ணா. நாம் அவருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வோம்”.

அவர்கள் அதை சுலபமாக சமாளித்தார்கள். பால் தன் மாமாவின் ஆலோசனையின்படி அவரிடம் ஐந்தாயிரம் பவுண்டுகளைக் கொடுத்தான். அதை அவர் குடும்ப வக்கீலிடம் கொடுத்தார். அந்த வக்கீல் பாலின் தாயாரிடம் அவர்களது குடும்ப உறவினர் ஒருவர் அவரிடம் ஐந்தாயிரம் கொடுத்திருப்பதாக தெரிவிக்க வேண்டும். இந்தத் தொகையை, அவருக்கு வருடத்திற்கு ஆயிரம் என அடுத்து வரும் ஐந்து வருடங்களிலும் அவரின் பிறந்தநாள் அன்று கொடுக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டியது.

“ஆக, அவருக்கு அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளும், அவரின் பிறந்தநாளின்போது ஆயிரம் பவுண்டுகள் இருக்கும். இது அவருக்கு பின்னர் எந்தவிதத்திலும் கடினமானதாக அமைந்துவிடாது”என்றார் மாமா.

பாலின் தாயாருக்கு நவம்பர் மாதம் பிறந்த நாள். அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தும்கூட, சமீபகாலமாக அந்த வீடு எப்பொழுதையும்விட அதிகமாக முணுமுணுத்துக்கொண்டிருந்தது. பாலால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆயிரம் பவுண்டுகள் குறித்து தன் அம்மாவுக்கு எழுதப்பட்ட கடிதம் என்ன விளைவை ஏற்படுத்துமோ என்று மிகவும் கவலைப்பட்டான்.

குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடும் வயதைக் கடந்தவனாகிவிட்டான் பால். விருந்தாளிகள் இல்லாத நாட்களில், அவன் தன் பெற்றோரோடு உணவு எடுத்துக் கொள்வான். அவனுடைய அம்மா தினமும் நகரத்திற்கு சென்று வந்தார். தனக்கு நன்றாக ஆடைகள் வரைய வரும் என்பதை கண்டுபிடித்திருந்ததனால், முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை ஓவியராக வேலைப்பார்த்துவந்த தன்னுடைய தோழியொருவரின் அலுவலகத்தில் ரகசியமாக வேலைப் பார்த்து வந்தார்.

அவருடைய தோழி வருடத்திற்கு பல ஆயிரங்களை சம்பாதித்துக் கொண்டிருக்க, பாலுடைய அம்மாவுக்கு சில நூறுகளே கிடைத்தது. அதனால் அவர் வருத்தத்தில் இருந்தார். உண்மையிலேயே எதிலாவது தான் முதன்மையான இடத்தில் இருக்க வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். ஆனால் அவரால் ஆடை வடிவமைப்பு விளம்பரங்களில்கூட வெற்றியடைய முடியவில்லை. 

அவர் தன்னுடைய பிறந்தநாளன்று காலை உணவிற்காக கீழே வந்தார். அவர் அன்றைய கடிதங்களை படித்துக்கொண்டிருக்கும்போது அவர் முகத்தை கவனித்துக்கொண்டிருந்தான் பால். அவன் வக்கீலின் கடிதத்தைப் பார்த்தான். அதை அவர் படிக்கும்போது, அவர் முகம் இறுக்கமாகவும் உணர்ச்சிகளற்றதாகவும் ஆனது. அவருடை உதட்டில் ஒரு தீர்மானமான இறுக்கம் தோன்றியது. அதைப் பற்றி எந்த வார்த்தையும் பேசாமல், அந்த கடிதத்தை மற்ற கடிதக் கட்டுகளுக்கு அடியில் வைத்துவிட்டார். 

“உங்கள் பிறந்தநாளைக்கு வந்த கடிதங்களில் ஏதாவது நல்லதாக வந்திருக்கிறதா அம்மா?”என்று பால் கேட்டான்.
 

“சற்றே நல்லதாக வந்திருக்கிறது”என்ற அவள் குரல் உணர்ச்சியற்று உற்சாகமின்றி வந்தது. 

அவர் மேற்கொண்டு எதையும் சொல்லாமல் நகரத்திற்கு சென்றுவிட்டார். ஆனால், அன்று மதியம் ஆஸ்கர் மாமா வந்தார். அவர் பாலுடைய அம்மா வக்கீலிடம் நீண்ட உரையாடல் நடத்தியதாகக் கூறினார். அவர் நிறைய பேரிடம் கடன் பட்டிருப்பதால் மொத்தமாக ஐந்தாயிரத்தையும் தான் பெறமுடியுமா என்று கேட்டதாகக் கூறினார்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மாமா?”என்று அந்த சிறுவன் கேட்டான். 

“நான் அதை உன்னிடமே விட்டுவிடுகிறேன் கண்ணா”.

“ஓ.. அப்படியானால் அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். மீதம் இருக்கும் பணத்தைக் கொண்டு நாம் ஜெயித்துக்கொள்ளலாம்.”என்றான்.

“நாளை கிடைக்கும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் கலாக்காய் மேல் தம்பி”என்றார் மாமா.

“ஆனால் கிராண்ட் நேஷனல் (இங்கிலாந்தில் நடைபெறும் புகழ்பெற்றகுதிரைப் பந்தயம்) போட்டியில் லிங்கன் அல்லது டெர்பி இந்த இரண்டில் ஒன்றுதான் ஜெயிக்கும் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்”என்றான் பால்.

எனவே, ஆஸ்கார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாலின் அம்மாவுக்கு மொத்தமாக ஐந்தாயிரமும் கிடைத்தது. பிறகு மிகவும் விசித்திரமாக ஒன்று நடந்தது. மழைக்கால மாலை நேரத்தில் கேட்கும் நூற்றுக்கணக்கான தவளைகளின் சத்தத்தைப்போல வீட்டில் கேட்டுக்கொண்டிருந்த குரல் வெறித்தனமானதாக இருந்தது.

வீட்டில் புதிய பொருட்கள் இடம் பெற்றன, பால் தனிப்பட்ட ஆசிரியரிடம் வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். தொடர்ந்து வந்த இலையுதிர்காலத்தில் பால் ஈடனில் தன் தந்தை படித்த பள்ளிக்குச் சென்றான். குளிர் காலத்தில் மலர்கள் காணப்பட்டன. அவன் தாயார் தன்னுடைய பழக்கப்பட்ட பணக்கார வாழ்க்கையை வெளிக்காட்டினார். ஆனால், புதிய பொருட்கள் மற்றும் பூக்களுக்கு மத்தியில் வீட்டிலிருந்து கேட்ட குரல்கள், கத்தல்களாக வீட்டையே உலுக்குவதாக இருந்தது. “இன்னும் அதிக பணம் வேண்டும்!”என்று அவை கரைந்தன. “ஓ.. இன்னும் அதிக பணம் வேண்டும். இப்பொழுது… இப்பொழுது… இப்பொழுதே! இன்னும் அதிக பணம் வேண்டும். எப்பொழுதையும்விட இன்னும் அதிகமாக”.

 அது பாலை மிகவும் பயமுறுத்தியது. அவன் தன் ஆசிரியர்களிடம் கிரேக்கமும் லத்தீனும் பயின்றான், ஆனால், அவனது பரபரப்பான நேரங்கள் பஸேட்டுடனே கழிந்தது. கிராண்ட் நேஷனல் வந்து போனது அவனுக்குத் தெரியவே இல்லை. அவன் நூறு பவுண்டுகளை இழந்திருந்தான். அதற்குள் கோடைக்காலம் வந்துவிட்டது. அவன் லிங்கனை நினைத்து கவலையடைந்தான். அது வந்து போனதும் அவனுக்குத் தெரியவில்லை. அதில் அவன் ஐம்பது பவுண்டுகள் இழந்திருந்தான். 

“அது கிடக்கட்டும் விடு கண்ணா! நீ அதைப் பற்றி கவலைப்படாதே”என்று ஆஸ்கர் மாமா கூறினார். ஆனால் அவனுடைய மாமா சொல்வது எதுவும் உண்மையிலேயே அவன் காதில் விழவில்லை. 

“எனக்கு டெர்பி நடப்பது தெரிய வேண்டும். எனக்கு டெர்பி நடப்பது தெரிய வேண்டும்”அந்த சிறுவன் தன் பெரிய நீலநிற கண்கள் ஒளிர்ந்திட வெறித்தனமாகக் கூறினான். 

அவனுடைய அம்மா அவன் எவ்வளவு பதட்டமாக இருக்கிறான் என்பதை கவனித்தார். நீ உன் விடுமுறைக்கு கடல்புரமாக சென்று வருவது நல்லதாக இருக்கும். உனக்கு கடல்புரத்திற்கு செல்வது பிடிக்கும்தானே? நீ போவதுதான் நல்லது, எனக் கவலையுடன் அவனைப் பார்த்துக் கூறினார். 

 அந்த சிறுவன் விசித்திரமான தன் நீலக் கண்களை உயர்த்திப்பார்த்தான்.

“டெர்பிக்கு முன் என்னால் போக முடியாது அம்மா. என்னால் போகவே முடியாது”என்றான்.

“ஏன் முடியாது?”தான் எதிர்த்துப் பேசப்படுகிறோம் என்பதில் அவருடைய குரல் வலுவானதாக வந்தது.”ஏன் முடியாது? நீ அதைத்தான் விரும்புகிறாய் என்றால், உன் மாமா ஆஸ்காருடன் கடல்புரத்திலிருந்தே டெர்பியைக் பார்க்கப் போகலாம். நீ இங்கு காத்திருக்கத் தேவையில்லை. நீ இந்த பந்தயங்களில் அதிக அக்கறைக் காட்டுகிறாய். என்னுடைய குடும்பமே சூதாடிக் குடும்பம். அதனால் எத்தனை சேதங்கள் ஏற்பட்டது என்பது நீ பெரியவனாகும்வரை உனக்குப் புரியாது. அது அதிக சேதங்களை ஏற்படுத்தும். நான் பஸேட்டை வெளியேற்றிவிட்டு, உன் மாமாவிடம் அதைப் பற்றி விவேகமாக நடந்து கொள்வதாக சத்தியம் செய்துதரும்வரை பந்தயத்தைப் பற்றி பேசவேண்டாம் என்று சொல்ல வேண்டும். நீ கடற்புரமாக சென்று அதை மறந்துவிடு. நீ பதட்டமாகவே இருக்கிறாய்.”

“டெர்பி முடியும்வரை என்னை அனுப்பமாட்டேன் என்றால் நீங்கள் விரும்பும் எதையும் செய்கிறேன் அம்மா”என்றான்.

“எங்கிருந்து அனுப்பக்கூடாது? இந்த வீட்டிலிருந்தா?”

“ஆம்”என்றான்.

 “அட, என்ன விசித்திரமாக சொல்கிறாய் பையா. திடீரென்று இந்த வீட்டின்மீது உனக்கு இவ்வளவு அக்கறை வருவதற்கு என்னவாயிற்று? உனக்கு இந்த வீட்டைப் பிடிக்கும் என்று எனக்கு ஒருபோதும் தெரியாது”

 அவன் அவரைப் பேசாமல் பார்த்தான். பஸேட்டிடமோ அவன் மாமாவிடமோகூட இதுவரைக்கும் பகிர்ந்திராத ஒன்று அவனிடம் ரகசியத்துக்குள் ரகசியமாக இருந்தது. 

எந்த முடிவும் எடுக்காமல், முகத்தில் அதிருப்தியுடன் சற்று நேரம் நின்றிருந்தபின் அவன் அம்மா,”சரி நல்லது. டெர்பி முடியும்வரை நீ கடல்புரத்திற்குப் போக விரும்பாவிட்டால் போகவேண்டாம். ஆனால் நீ மனம் சோர்ந்து போகமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு. குதிரைப் பந்தயத்தைப் பற்றியும் அதன் நிகழ்வுகளைப் பற்றியும் அதிகம் யோசிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு”என்றார்.

“இல்லை அம்மா, அதைப்பற்றி நான் அதிகம் யோசிக்க மாட்டேன். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை அம்மா. நான் உங்கள் இடத்தில் இருந்தால் அதைப் பற்றி கவலைப் படவே மாட்டேன்”என்று தனக்கு குதிரைப் பந்தயம் ஒன்றும் அத்தனை முக்கியமானதில்லை என்பதாக சொன்னான். 

“நீ நானாகவும் நான் நீயாகவும் இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறேன்”,என்றார் அவன் அம்மா.

“நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அப்படித்தானே அம்மா”என்று அவன் மறுபடியும் சொன்னான்.

“அது தெரிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பேன்”என்று சோர்வான குரலில் கூறினார்.

“அப்படியானால் சரி. நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதாவது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்”என்று அவன் வலியுறுத்திக் கூறினான்.. 

“அப்படியா? அப்படியானால் நான் பார்த்துக் கொள்கிறேன்.”என்றார்.

 பாலினுடைய ரகசியங்களுள் ரகசியம் என்பது அவனுடைய மரக்குதிரை. அவன் இப்பொழுது தன்னுடைய விளையாட்டு நேரத்தில், ஆயா கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத வயதை எட்டிவிட்டான். அதனால் அவனுடைய அந்த குதிரையை அவன் மாடியிலிருந்த தன்னுடைய படுக்கையறைக்கு கொண்டு சென்றுவிட்டான். 

“நீ இந்த குதிரைமீது ஆடும் வயதை நிச்சயம் கடந்துவிட்டாய்”என்று அந்த நேரத்தில் அவன் அம்மா கூறினார்.

“நான் நிஜத்தில் ஒரு குதிரையை வைத்துக் கொள்ளும்வரை, என்னிடம் விலங்கைப் போல ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்”என்பதுதான் அவனுடைய பதிலாக இருந்தது. 

“அது உனக்குத் துணையாக இருப்பதாக உணர்கிறாயா”என்று சிரித்தார். 

“ஆமாம். இது மிகவும் நல்லது. எப்பொழுதும் நான் இங்கு இருக்கும்போது எனக்குத் துணையாக இருக்கிறது”என்றான் பால்.

எனவே இப்பொழுது சற்று பழையதாகிப் போயிருந்த அந்த மரக்குதிரை, அந்த சிறுவனின் படுக்கையறையில் நின்றிருந்தது.

 டெர்பி நெருங்கிக்கொண்டிருக்க அந்த சிறுவன் இன்னும் இன்னும் பதட்டமாகிக்கொண்டிருந்தான். அவனிடம் பேசிய எதுவும் அவனுக்கு கேட்கவில்லை. அவன் சோர்வடைந்தவனாக, விசித்திரமான பார்வை கொண்டவனாக ஆகியிருந்தான். அவனுடைய அம்மா உண்மையாகவே கவலைப்படத் தொடங்கினார். சிலசமயங்கள், அவனைப் பற்றி நினைத்து பதட்டமாகி வேதனைப்படும் கணங்கள் ஏற்படுவதுண்டு. உடனடியாக அவனிடம் சென்று, அவன் பத்திரமாக இருக்கிறானா என்று தெரிந்து கொள்ள விரும்புவார். 

டெர்பி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்குமுன், அம்மா ஒரு விழாவிற்கு சென்றிருந்தார். அங்கு இருக்கும்போது அவருக்கு பாலைப்பற்றிய ஒரு பதற்றம் தோன்றியது. விவேகத்தனம் என்பதில் நம்பிக்கைக் கொண்டிருந்தும், அந்த உணர்ச்சிகளுக்கு இடையில் அவரால் பேசவோ அதிலிருந்து வெளியேறவோ முடியவில்லை. நடனம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தைவிட்டு கீழிறங்கி வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டி வந்துவிட்டார். குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ஆயா அந்த நேரத்தில் அழைப்பு வந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்தார். 

“குழந்தைகள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா வில்மான்ட்?’ 

“ஆம். அவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள்.”

“பால் நன்றாக இருக்கிறானா?”

“அவர் நல்லபடியாகத்தான் தூங்கச் சென்றார். நான் மேலே சென்று பார்த்து வரட்டுமா?”

“வேண்டாம். தொந்தரவு செய்ய வேண்டாம். பரவாயில்லை. அலட்டிக் கொள்ளவேண்டாம். நாங்கள் சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிடுவோம்”. அவருக்கு தன் மகனின் தூக்கத்தை கெடுக்க விருப்பமில்லை. 

“மிகவும் நல்லது’ என்றார் ஆயா.

இரவு ஒரு மணி நெருங்கும்போது பாலின் அம்மாவும் அப்பாவும் வீடு வந்து சேர்ந்தார்கள். எல்லாம் அமைதியாக இருந்தது. பாலின் அம்மா தன்னுடைய அறைக்கு சென்று, தோலாலான வெள்ளை அங்கியை கழற்றினார். கீழே பாலின் அப்பா விஸ்கியையும் சோடாவையும் கலக்கும் சத்தம் கேட்டது. 

அவரின் மனதுக்குள் தோன்றிய விசித்திரமான உணர்வின் காரணமாக, அமைதியாக மாடியிலிருந்த அவருடைய மகனின் அறைக்குச் சென்றார். அவர் நடைபாதையில் செல்லும்போதே மெல்லிய ஒலியை கேட்டார். என்னது அது?

அதை கவனித்தபடி, அந்த இடத்திலேயெ நகராமல் நின்றார். ஒரு விசித்திரமான, கனத்ததாக ஆனால், அதிகம் ஒலியில்லாத சத்தம் கேட்டது. அவரது இதயம் அப்படியே உறைந்தது. அது ஒரு மெல்லிய சத்தம். என்றாலும் அது அவசரப்படுத்துவதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தது. பெரியதாக ஏதோ ஒன்று மூர்க்கமாகவும் அமைதியான அசைவுடனும் இருந்தது. அது என்னது? கடவுளே என்னதான் அது? அவருக்குத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு அந்த சத்தம் தனக்கு பரிச்சயமான ஒன்றாகத் தோன்றியது. அவருக்கு அது என்னவென்று தெரிந்திருந்தது. இருந்தாலும் அதை என்னவென்று சொல்ல முடியவில்லை. அது வெறித்தனமாக மேலும் மேலும் தொடர்ந்தது. 

கவலையிலும் அச்சத்திலும் உறைந்தவராக மென்மையாக கதவின் கைப்பிடியை திருகினார்.

அறை இருட்டாக இருந்தது. ஆனாலும், ஜன்னல் ஓரத்தில் முன்னும் பின்னுமாக ஏதோ அசைவது தெரிந்தது. அவர் வியப்புடனும் பயத்துடனும் கவனித்தார்.

“பால்!”நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”என்று அழுகையுடன் கேட்டார். 

“அது மலபார்! அது மலபார்!”அவன் விசித்திரமான சக்திவாய்ந்த குரலில் கத்தினான். 

அவன் மரக்குதிரையை தள்ளுவதை நிறுத்திவிட்டு, விசித்திரமாக ஒரு நொடி அவரை எந்த உணர்வுமின்றி கண்கள் ஒளிர பார்த்தான். பிறகு, தரையில் மோதி விழுந்தான். தாய்மையின் எல்லா உணர்வுகளும் உந்தித் தள்ள அவனை ஏந்திக் கொள்ள விரைந்தார்.

அவன் சுயநினைவற்றிருந்தான். மனநிலை பாதிக்கப்பட்டவனைப்போல அவன் அப்படியே சுயநினைவின்றியே கிடந்தான். அவன் தாயார், எந்த உணர்ச்சியும் இல்லாமல் உட்கார்ந்திருக்க, அவன் கட்டிலுக்கு இந்த பக்கமும் அந்த பக்கமுமாக உடலை தூக்கியெறிந்தபடி அரற்றிக்கொண்டிருந்தான். 

“மலபார்! அது மலபார்! பஸேட், பஸேட். எனக்குத் தெரியும். அது மலபார்”

அந்த சிறுவன் அரற்றிக்கொண்டே எழுந்திருந்து, மீண்டும் அந்த ஆடும் குதிரையின் மீதேறி அதை உறுதி செய்துகொள்ள முயன்று கொண்டிருந்தான். 

“மலபார் என்று அவன் எதை சொல்கிறான்?”என்று அம்மா கேட்டார்.

“எனக்குத் தெரியாது”என்று அப்பா உணர்வில்லாத குரலில் கூறினார்.

“அவன் மலபார் என்று என்ன சொல்ல வருகிறான்?”தன் சகோதரன் ஆஸ்கரிடம் கேட்டார்.

“அது டெர்பி பந்தயத்தில் ஓடக்கூடிய ஒரு குதிரை”என்பது பதிலாக வந்தது. 

அது தவறானது என்று தெரிந்திருந்தாலுமே, ஆஸ்கர் க்ரெஸ்வெல் பஸேட்டிடம் பேசி மலபாரின்மேல் தனக்காக, பதினாலுக்கு ஒன்று என்ற கணக்கில் பந்தயம் கட்ட சொன்னார். 

நோயின் மூன்றாம் நாள் மிகவும் முக்கியமானது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அன்று, அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்திருந்தார்கள். தன்னுடைய நீண்ட சுருட்டை முடியுடன்கூடிய தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தலையணையில் அசைத்துக் கொண்டிருந்தான். அவன் மறுபடியும் தூங்கவோ சுய நினைவிற்கோ வரவில்லை. அவனது கண்கள் நீலநிற கல்லைப்போல இருந்தது. அருகில் அமர்ந்திருந்த அவனுடைய அம்மாவின் மனமும் அதே போலவே கல்லாகியிருந்தது.

 அன்று மாலை ஆஸ்கர் வரவில்லை. பஸேட், தான் வரலாமா என்று கேட்டு செய்தி அனுப்பியிருந்தார். இதைக்கேட்டு பாலின் அம்மாவிற்கு கோபம் வந்தது என்றாலும், இன்னொருமுறை யோசித்துப் பார்த்து சம்மதம் தந்தார். சிறுவன் அதே நிலையிலேயே இருந்தான். ஒருவேளை பஸேட் அவனை நினைவுக்குக் கொண்டுவரக்கூடும்.

 பழுப்புநிற மீசையும், சிறிய கூர்மையான பழுப்பு நிறக் கண்களையும் உடைய குள்ளமான அந்த தோட்டக்காரர் அமைதியாக அறைக்குள் நுழைந்தார். பாவனையாக தன் தொப்பியை தொடுவதாக பாலின் அம்மாவிற்குக் காட்டிவிட்டு கட்டிலுக்கு அருகில் சென்று நின்றார். கண்களில் கண்ணீருடன், இறக்கும் தருவாயிலிருந்த குழந்தையைப் பார்த்தார்.

“சின்ன ஐயா! மலபார்தான் முதலாவதாக வந்தது. எல்லாம் சரியாகவே இருந்தது. சுத்தமான வெற்றி. நீங்கள் சொன்னதுபோலவே செய்துவிட்டேன். நீங்கள் எழுபதாயிரம் பவுண்டுகளுக்குமேல் ஈட்டியிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களிடம் எண்பதாயிரம் பவுண்டுகள் இருக்கின்றன. மலபார்தான் முதலில் வந்தது”

“மலபார்! மலபார்! நான் மலபார் என்றுதானே சொன்னேன் அம்மா? நான் மலபார் என்று சொன்னேனா? நான் அதிர்ஷ்டசாலிதானே அம்மா? எனக்கு மலபார்தான் என்று தெரியும்தானே அம்மா? எண்பதாயிரம் பவுண்டுகளுக்குமேல்! நான் அதை அதிர்ஷ்டம் என்கிறேன், நீங்களும்தானே அம்மா? எண்பதாயிரத்திற்குமேல்! எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்தானே? எனக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும். மலபார் முதலாவதாக வந்தது சரி. ஆனால் நான் உறுதி என்று நினைக்கும்வரை என் குதிரையின்மீதேறி ஆடிய பிறகு, நான் சொல்கிறேன். பஸேட், நீ விரும்பும் அளவிற்கு எவ்வளவு அதிகம் வேண்டுமானாலும் போகலாம். உன்னுடைய எல்லாப் பணத்தையும் அதில் போட்டாயா பஸேட்?

“நான் ஆயிரம் வைத்தேன் சின்ன ஐயா”

“என்னால் என் குதிரையை ஓட்டிக்கொண்டு அந்த இடத்தை அடைய முடியும், அப்பொழுதுதான் நான் முற்றிலும் உறுதியாக சொல்ல முடியும். முற்றிலும்! அம்மா. இதை நான் உங்களிடம் ஒருபோதும் சொன்னதேயில்லை அம்மா. நான் அதிர்ஷ்டசாலி!”

“இல்லை. நீ ஒருபோதும் சொன்னதில்லை.”என்றார் அம்மா.

அன்று இரவு அந்த சிறுவன் இறந்து போனான். 

அவன் இறந்து கிடக்கும்போது அவன் அம்மாவுக்கு அவரின் சகோதரனின் குரல் கேட்டது. “ஹெஸ்டர் உனக்கு எண்பதாயிரம் பவுண்டுகள் லாபமாக கிடைத்திருக்கிறது, ஆனால் அப்பாவி மகனை இழந்துவிட்டாய்”என்றார். ஆனால் அந்த அப்பாவி சிறுவன் தன்னுடைய ஆடும் குதிரையில் ஏறி வெற்றியாளனைக் கண்டுபிடிக்க இந்த உலகை விட்டு வெளியேறிப் போனதே நல்லது.

டி.எச்.லாரன்ஸ் (1885-1930) – இங்கிலாந்தை சேர்ந்த முன்னோடி கவிதை, நாவல் மற்றும் சிறுகதையாசிரியர். போரின் விளைவுகளையும், அந்நியமாதலையும், மனித உணர்வுகளின் சிக்கல்களையும் தன்னுடைய கதைகளின் வழியே ஆழமாக ஆராய்ந்தவர்.

சுபஶ்ரீ முரளிதரன் – சென்னையை பூர்வீகமாக கொண்டவர். சுற்றுப்புறத் தூய்மை மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்துப் பல நிகழ்வுகளைப் பள்ளி கல்லூரிகளுக்காக ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். வாசகசாலை அமைப்பின் கவிதை நிகழ்வுகளை அசோக் நகர் வட்டார நூலகத்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார். அவள் விகடனில் அறிமுக எழுத்தாளர்கள் வரிசையில் இவருடைய கதை வெளியாகி இருக்கிறது. அதுபோலவே கவிதைகள் சினேகிதி, துளிர், இருவாட்சி, வளரி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. காஃப்காவின் “உருமாற்றம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல் முகவரி : subhamsn@gmail.com

கோபால் ஹொன்னால்கெரே கவிதைகள்

1

தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்

ஏதோவொரு மனப்பீடிப்பு

ஒரு சிட்ரஸ் மலரின்
பாகங்களைக் கூறுபோட்டு
அதை நான் விளக்கும்போது
நன்கு பழுத்த அத்திப்பழத்தைப் போல
அவள் நாணுகிறாள்.
நான் அவளைத் திருமணம் செய்து கொள்ளவில்லை
ஆனாலும் அவள் மகளை
என் மகள் என்றே அழைக்கிறேன்.
ஒருமுறை கல்லிவரின் பயணங்கள் கதையை
சின்னப்பெண்ணுக்கு நான் சொன்னபோது
அவள் என்னிடம் இறுதியில் கேட்டாள்
“அப்பா, ஒருவேளை லில்லிபுட் இளவரசி
கல்லிவரோடு காதலில் விழுந்தால்
எவ்வாறு அவர்கள் திருமணம் புரிவார்கள்?”

கழுதைகள்

அனேகமாக இதுவொரு தொன்மக்கதை
எனக்கு அவரின் பெயர் நினைவில்லை
ஒரு திபெத்தியக் கவிஞர்
பொறுமையாக அமர்ந்து எழுதினார்
கவிதைகள் கவிதைகள் கவிதைகள்
அவருடைய வாழ்க்கை முழுவதும்
பிறகு
அவருக்கு எண்பத்தொன்பது வயதாகி
கண்ணாடி போன்ற வழுக்கைத்தலையோடு
மரணத்தை அண்மிக்கும் பொழுதில்
மூன்று கழுதைப்பொதி அளவில்
கவிதைகள் அவரிடமிருந்தன
பிரார்த்தனை சக்கரங்களைச் சுழற்றும்
ஒரு மடாலயத்திற்கு
அவற்றைத் தர அவர் விரும்பினார்
வாடகைக்கு எடுக்கப்பட்ட மூன்று கழுதைகளின் மீது
கவிதைகளை ஏற்றிக்கொண்டு
வாழ்க்கையைப் பற்றி யோசித்தவாறே
நடக்கத் தொடங்கினார்
உயிரை உறையவைக்கும் குளிர்காலம்
முதியவருக்கு உடல் நடுங்கத் தொடங்கியது
அவரால் நடக்க முடியவில்லை
ஒரு கழுதைப்பொதி அளவு கவிதைகளை எரித்து
தீயை மூட்டி
அதனருகே அமர்ந்து குளிர்காய்ந்தார்
மீண்டும் பயணத்தைத் தொடங்கும்வேளையில்
அவருக்குள் ஒரு சிந்தனை தோன்றியது
கழுதைகளைப் பார்த்தபோது
கழுதைகளைப் பற்றி அவரெழுதிய ஒரு கவிதை
அவருக்கு நினைவு வந்தது
குளிரில் கழுதைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன
மீண்டும் அவர் தீமூட்டினார்
மீதமிருந்த இரண்டு கழுதைப்பொதி அளவு
கவிதைகளைக் கொண்டு
இப்போது நெருப்பைச் சுற்றி
மூன்று கழுதைகளையும் நிறுத்திவைத்தார்
விமர்சகர்கள் சொல்கிறார்கள்
அவரது மறைவுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட
கவிதைகளில் இருந்து
நெருப்பில் கருகாத ஒற்றை வரி போதும்
அவருடைய ஒட்டுமொத்த ஞானத்தையும்
பறைசாற்ற
உங்களுடைய கழுதையைத்
தேடிக் கண்டுபிடித்து
உங்களுடைய பயணத்தைத் தொடருங்கள்

ஹனுமான்ஜி

வாயுதேவனுக்கும்
அஞ்சனைக்கும்
மகனாகப் பிறந்தவர்
அவருடைய குழந்தைப்பருவத்தில்
ஒருமுறை உதிக்கும் சூரியனை
பென்னம்பெரிய பழுத்த ஆப்பிள்
எனத் தவறாக எண்ணிக்கொண்டு
அதைப் பிடிப்பதற்காக
வானில் தாவிப் பறந்தார்
கடவுள்களைக் காட்டிலும்
அவருக்கு பலம் அதிகம்
தனது ஒட்டுமொத்த விருப்பங்களையும்
ஸ்ரீராமனுக்கு ஒப்புக்கொடுத்ததன் வழியாக
அந்த பலம் அவருக்கு வந்தது
மிகவும் சக்திவாய்ந்த
ஓர் உறுதியான பிரம்மச்சாரி
ஒருமுறை அவர் கடலை கடக்கும்போது
கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த
ஒரு தேவதை கர்ப்பம் தரித்தாள்
அவருடைய உதவியின்றி
ஸ்ரீராமனால் ஒருபோதும்
போரை வென்றிருக்க முடியாது
சிரஞ்சீவியாக அவர் வாழ்கிறார்
இரு புராணங்களிலும் தோன்றுகிறார்
இராமாயணத்தையும் மகாபாரதத்தையும்
இணைக்கும் ஒரு சங்கிலியாக
பாகவதர் சொன்னார்:
“எப்போதெல்லாம்
பகவான் ஸ்ரீராமனின் புகழைச் சொல்லும் பாடல்களை
பக்தர்கள் பாடுகிறார்களோ
கண்களில் கண்ணீரோடும்
கைகளை கட்டிக்கொண்டும்
யாருக்கும் தெரியாமல்
ஏதோவொரு மூலையில்
ஹனுமான்ஜி நின்றிருப்பார்.”

அவருடைய வாலால் எத்தனை நீளமாகவும் வளரமுடியும்
அதேபோலத்தான் அவருடைய ஆற்றலும் பக்தியும் பற்றிய கதைகளும்

மற்றொரு நாள்
ஹரிகதை சொல்லும் பாகவதரைச் சந்திக்க
நான் சென்றிருந்தபோது
ஒரு நாட்காட்டியைப் பார்த்தேன்
அதில் ஹனுமான்ஜி
சஞ்சீவினி மலையைத் தூக்கிச் செல்கிறார்
மலையின் உச்சியில்
ஒரு போத்தலின் படம்

மருத்துவர் பாபுராவ் படேலின்
சிவ சக்தி
கடவுள் அருளிய ஊட்டச்சத்து மருந்து
உற்சாகமும் ஆற்றலும் வீரியமும் தரவல்லது

500 மில்லி 1000 மில்லி
ஐந்து ரூபாய் உங்கள் மொத்தக் குடும்பத்துக்குக்கும்
ஏழு ரூபாய் ஐம்பது பைசா

உம்முடைய சித்தம் நிறைவேறுக

மழை பொழிந்தே தீரும்
மழை பொழிந்தே தீரும்
புலிகள், மயில்கள், யானைகள்,
மற்றும் சிங்கங்களின் வடிவங்களில்
பூங்காவில் உள்ள
வெட்டி சீர்செய்யப்பட்ட புதர்களின் மீது.

மழை பொழிந்தே தீரும்
மழை பொழிந்தே தீரும்
பிறகு அந்தப் புதர்கள் யாவும்
புதர்களாய் மாறும்.

நம்பிக்கை குறித்த ஒரு நம்பமுடியாத கதை

இந்தியாவைச் சேர்ந்த ஒரு முதியவர் நம்பினார்:
தனது இரவுணவுக்கான மேலாடையை அணியும்போது
தன்னுடைய பசியை அதிகரிக்க அது உதவும் என்பதை.
அவருடைய பசியை அது அதிகரித்தது.

அமைதியின் பச்சையம்
(தாமஸ் மெர்டனுக்கு)

தோட்டத்தில் போதிமரம் இயற்கையாக வளர்கிறது
அதன் சில கிளைகள் நீளமாகவுள்ளன
அதன் சில கிளைகள் குறுகியதாக உள்ளன
அதன் அமைதியின் பச்சையம் என்பதுதான்
புத்தரின் ஞானம்

மரம் பிராணவாயுவை வெளியிடுகிறது

ஓர் உற்சாகமான காலைநடையை
ஒவ்வொரு மனிதனும் பழகிக்கொள்ளவேண்டும்
அவனுடைய இலட்சிய உருவத்தை நோக்கி அல்ல
ஆனால் தனக்குள்ளாகவே மிகவும் ஆழமாக
ஓர் உற்சாகமான நடை
உதிரத்தில் உள்ள பிராணவாயுவை அதிகரிக்கும்
அவனுடைய மனம் மிகுந்த அமைதியில் ஆழ்ந்திடும்
பிறகு ஒட்டுமொத்த நாளும்
தனது சலசலக்கும் மனதை
அவன் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்
மேலும் அவன் பார்க்கலாம்
சொற்கள் என்பவை
வெளிப்படுத்துவதற்காக அல்ல
மாறாக ஒரு முதன்மையான அமைதியை
மீட்டெடுக்கும் போராட்டம் மட்டுமே.

பூமியின் மீது நிறைய நதிகள் ஓடுவதற்காக கடவுளுக்கு நன்றி

எல்லா நீரும்
மழைநீரே
மேலும் நீர் என்பது
ஒரு வரம்
இந்த ஆண்டை
நன்முறையில் கடப்பதற்காக
கடவுள் இந்திரனால் அனுப்பப்பட்டது.

    காதல் என்பது
        கவிதையைப் போல
            இந்தப் பிரபஞ்சத்தின்
        நீர்

கவிதை என்பது ஏற்கனவே
ஓர் உறக்கமின்மையால் பாதிக்கப்பட்டவனின்
கைகளில் சிக்கி
சாகுமட்டும்
நசுக்கப்பட்ட
ஒரு மூட்டைப்பூச்சி
(மற்ற மூட்டைப்பூச்சிகள்
யாவும் பிரார்த்திக்கின்றன
’ஓ கடவுளே, அவனுக்கு
காதலைக் கொடு
அவன் ஒரு பெண்ணை
காதலிக்கட்டும்
அவளை இந்தப் படுக்கைக்கு
அழைத்து வந்து
அவளோடு சேர்ந்து
நன்றாக உறங்கட்டும்.’)

உறக்கமின்றி பாதிக்கப்பட்டவன்
ஓரிரவில் திடீரென்று
யோசிக்கக்கூடும்
தன்னுடைய அறிவுத்திறனால்
காதலை இன்னும்
முக்கியமான சங்கதியாக மாற்றலாமென
ஆகவே
சூனியக்காரியின் மந்திர இரசாயனத்தில் இருந்து
ஒரு துளியை அவன்
நீருக்குள் வீசுகிறான் அது
அனைத்து ஆண்களையும் பெண்களையும்
சாத்தானைப்போல
மிகுந்த வளமானவர்களாக மாற்றுகிறது
அவர்களின் குழந்தைகள் என்பவை
வெறும் பாலியல் எண்ணங்களாக
அல்லது எந்த வாரிசுமில்லாத
கிறிஸ்துவைப் போல
பாழானவையாக இருக்கின்றன.
பூமியின் மீது நிறைய நதிகள் ஓடுவதற்காக
கடவுளுக்கு நன்றி.
அனைத்து ஆண்களும் ஒரே ஆதாரத்திலிருந்து
நீரருந்த வேண்டியதில்லை என்பதற்காகவும்
கடவுளுக்கு நன்றி.

***

கோபால் ஹொன்னால்கெரே (1942-2003) – கர்நாடகத்தைச் சேர்ந்த கவிஞர். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதியவர். மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதனில் நுண்கலைகள் பயின்றிருக்கிறார். இலக்கியத்தை உண்மையாக நம்பும் எல்லாக் கலைஞர்களையும் போலவே யதார்த்த வாழ்வின் சுழல்களில் சிக்கிச் சீரழிந்தவர். மொத்தம் ஆறு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால் அவருடைய வாழ்நாளில் அவை பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஹொன்னால்கெரே இறந்தபிறகு அவருடைய மொத்தக் கவிதைகளையும் அவரின் நண்பர் ஜெயசீலன் தொகுத்து பொயட்ரிவாலா மூலம் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். சிறுபிள்ளை விளையாட்டு என்று கருதப்பட்ட முதல் தொகுப்பு மட்டும் முழுக்கவே இந்தத் தொகுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஹொன்னால்கெரே பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் – அற்புதம்.


கார்த்திகைப் பாண்டியன் – 1981 ஆம் வருடம் மதுரையில் பிறந்த கார்த்திகைப் பாண்டியன் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். எஸ்.ராமகிருஷ்ணனை தனது ஆதர்சமாகக் கொண்டவர். 2011 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். அத்துடன் மொழிபெயர்ப்பிலும் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், பத்து மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. – மின்னஞ்சல்: karthickpandian@gmail.com